நந்தாகுமாரன் கவிதைகள்

கனவுத் தகவல் பாதை (அல்லது) கவிதைப் பிசிறு
உன் ஸ்கலித மலரின் ஒளியில் விடிந்த
இந்த நீலத் தேநீர் கொட்டிய என் மேஜை நிழலின்
இரவில் நடந்த நம் ஜோடிப் பார்வைகள் ஜோடித்த
கோடிக் கனவின் நாடிச் சுத்தம்
இப்படியும் கூடி அழியும் இந்தக் காலம் எனும் சுழலின்
ஈர்க்கும் இசைக்கு தினமும் எடை பார்க்கும் அவன் எந்திரம்
யாருமற்றுத் தானே இயங்கிக் காட்டிய எண்
அவள் பேய் சரீரத்தின் சாராம்சம் தான்
அல்லது
தன்னைத் தானே உணர்ந்து புணர்ந்து மகிழ்ந்து
வாழும் உலகம் முழுவதும் அலங்காரம் ஆகும்
பலர் துயில் உரித்த இந்தக் கவிதையைப் பிடித்த
போல்ட்டர்கய்ஸ்ட்* பிசாசு தன் இஷ்டத்திற்கு
இடம் மாற்றித் தூக்கி எறிந்து விளையாடும்
இதே கவிதையின்
சொற்களின் பொறி ஒன்றுதான் இது எனக் காண்
ஏனெனிலோ
வல்லது
பொல்லாதது.

*போல்ட்டர்கய்ஸ்ட் - பொருட்களைத் தூக்கி எறிதல், உரத்த சத்தம் எழுப்புதல் மற்றும் உடல்ரீதியான இடையூறுகள் விளைவித்தல் போன்றவற்றை நிகழ்த்தும் ஒரு வகைப் பிசாசு

இவ்வார்த்தைகள் வேறு கவிதையினுடையவை
அல்லது
இறந்தவனின் ஆயுள்ரேகை
சிறகு முளைத்த சிறுத்தை
எந்திரக் குதிரைக்குப் பந்தய இணையாகும்
இந்தக் கானகம் தருவித்தப் பனிப்பொழிவின்
வண்ணவில் வரைபடம் காட்டிய
சில்மிஷப் பொக்கிஷத்தின் வேர் தேடி வந்த
வழிப்போக்கனின் தடமாகும் தடி செதுக்கிய பயணத்தில்
நீ எடுத்த அடியில் சிந்திச் சிதறும்
சற்றுமுன் உன்னைத் தாங்கிய
நிலத்தின் சலனம்
கனவின் பேரிருள் சொடுக்கிய
ஒளிப்படத்தின் கண நேர இளைப்பாறலுக்குத் தப்பி
காற்றின் உடலெங்கும் காரிருளின் கைகள் ஸ்ருஷ்டித்த
குமிழிக்குள் குறுகும் ஞாலத்தின் தலைவாசலில் இட்ட கோலத்தில்
சொல்லின் மாமிசம் தன் கண்விரிப்பின் புன்சிரிப்பில் பகிர்ந்த
காட்டேரியின் கோரப்பல் நுனி ரத்தத் துளிச் சொட்டு வீழ்ந்த
பச்சைகுத்திய இடது முலையின் மீது அமர்ந்து எனைப் பார்க்கும்
இந்தத் தமிழ் பேசும் டிராகன் அருகே ஓடும் ஆங்கிலத் துணைத் தலைப்பில்
மலரக் காத்திருக்கும் மொக்கின் மீது
அவிழக் காத்திருக்கும் அர்த்தம் நீ
அதன் மீதும்
சுழழக் காத்திருக்கும் காற்றின் மீது
கமழக் காத்திருக்கும் சொஸ்தம் நான்.
துள்ளும் சொல் (அல்லது) மொழி என் தோழி
மொழி என் தோழி
அல்ல எனினும்
வண்ணங்களின் அகழியில் மிதக்கும் தூரிகையின்
செயல்பாட்டில்
ஊனமுற்ற சொல் ஒன்றின் அர்த்த மருட்சி தரும்
தேர்ந்தெடுத்த விளம்பரங்களால் நிறைகிறது
என் சமூக ஊடகத்தின் பிரதி பிம்பம்
மூன்று முறை வடிகட்டிய
சொல் தரும் போதையின்
அமானுஷ்யம் இசைக்கும்
சுடரின் சுழலில்
துள்ளும் சொல்
அள்ளும் மிடறு
களிப்பின் மது தாங்கிய
ஒரு கோப்பையின் விளிம்பில் தளும்பும்
முத்தத்தின் தடத்தில் பயணப்படும்
கனவின் கால்கள் செல்லும் திசையெல்லாம்
கலவியின் வேர்களும் துணையாகின்றன
சித்தம் தன் அதிர்ஷ்டம் நல்கும்
சூட்சுமம் மறுத்து மாறுவேடம் தரித்து அதன்
அன்பின் நூதனம் காட்சி பெற
அங்கப்பிரதட்சணம் புரிகிறது
ட்ரோன்களின் பார்வையில்
லயம் கொள்ளும் சுயம்
தன் முக்கால ஊஞ்சல் இயக்கத்தில் விளைந்த
கொழிப்பில் கரைத்த செழிப்பின் வெடித் தீர்வாக
என் தலையைச் சுற்றி உள்ள வானத்தில்
பறக்கும் வண்ணக்கிளிகளின் மூக்குத்தி வைரமாகிறது
இந்த லட்சணத்தில் இருக்கும் இந்தக் கவிதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *