தொல்காப்பியமும் யூங்கியமும் :
சில இணைநிலைகள்

தி. கு. இரவிச்சந்திரன்

பகிரு

இலக்கியம் என்பது மூலப்படிவங்களில் கூட்டுச் செயல்பாட்டின் ஒற்றை வெளிப்பாடு

கார்ல் குஸ்தவ் யூங்

தொல்காப்பியம் - ஒரு பெட்டகம். பல்துறை அறிவுப்பெட்டகம். மொழி வடிவிலான கீழடி. இதைத்தோண்டத் தோண்ட பல புதைபொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் நவீன சாயல்கள் காணக் கிடைக்கின்றன. இவற்றுள் உளவியல் கருத்தாக்கங்களும் அடங்கும். இலக்கியங்களைக் கொண்டே இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றாலும் மானிடவியல், மொழியியல், இலக்கியவியல், கலையியல்,  பொருள்கோளியல், குறியியல் எனப் பல இதில் பொதிந்துள்ளன. தொல்காப்பியரின் நோக்கம் தமிழ் மொழியின் எழுத்து, சொல் இயல்புகளை விளக்குவதும் இலக்கியப் பாடுபொருள் நிலைகளை விளக்குவதும் ஆகும். அந்தப் பாடுபொருள் இலக்கணமான பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணைப் பற்றிய செய்திகளை ‘எள்ளிலிருந்து எண்ணெய் போல்’ இலக்கியங்கள் வழியாக வழங்குகிறார்.

அவ்வாறு இலக்கியங்கள் வழி பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் இலக்கியக் கோட்பாடுகளைக் கட்டமைக்கிறார். அந்த இலக்கியக் கோட்பாடுகளுள் சில நவீனத்துவக் கோட்பாடுகளுக்கு இணைநிலையாக உள்ளன. அவற்றுள் உளவியல் இணைநிலைகளை அடையாளம் கண்டவற்றை விவரிக்க இங்கே முயல்கிறேன். உளவியல் என்பது நவீன அறிவியலில் ஒரு பிரிவு. இதற்கு அதிகபட்சம் நூற்றி ஐம்பது வயதிருக்கும். ஆனால், தத்துவ வழியில் இதன் வயது இரண்டாயிரம் கடந்து இருக்கிறது. இதன்படி, உளவியலில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

ஒன்று, உளவியல் (Philosophical psychology). மற்றொன்று, அறிவியல்முறை தத்துவமுறை உளவியல் (Scientific psychology). தத்துவமுறை உளவியல் என்பது உலகளவில் சமய சிந்தனை மரபுகளாலும் கிரேக்கத் தத்துவச் சிந்தனை மரபுகளாலும் வளர்த்தெடுக்கப்பட்ட கருத்தியல் ஆகும். இருப்பினும், உளவியல் வரலாற்றை எழுதுவோர் கிரேக்கத்தில் இருந்தே தொடங்குகின்றனர். இதன்படி, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் தத்துவமுறை உளவியலுக்கு அடித்தளம் அமைத்தனர். உளவியல் குறித்து இவர்களே சொல்லாடினர். இருப்பினும், இவர்களுக்கு முன்னர் அல்க்மெயான் (Alcmaeon 600 BC) என்கிற கிரேக்க மருத்துவர், ‘உளவாழ்வு என்பது மூளையின் செயல்பாடே ஆகும்’ என்றார் (Schwartz,24). இதுதான் உளவியலுக்கான முதல் வித்து. இருப்பினும், தத்துவமுறை உளவியலின் தந்தை என்று சாக்ரடீஸ் அறியப்படுகிறார். காரணம், இவரே கிரேக்கத் தத்துவ உலகின் மூத்தவர்.

அதனால், தத்துவத்தின் தந்தை ஆகிறார். அவ்வழியில் தத்துவ உளவியலின் தந்தை என்றும் ஆகிறார். (சிலர் அரிஸ்டாட்டிலைக் கூறுவர். உள்ளம் குறித்து அதிகமாகப் பேசியதால் இவ்வாறு சொல்லப்படுவதுண்டு. சிலர் ப்ளேட்டோவைச் சுட்டுவர்). அறிவியல்முறை உளவியலின் தந்தை என்று வில்ஹெல்ம் ஊண்ட் (Wilhelm Wundt, 1832-1920) குறிப்பிடப்படுகின்றார். காரணம், அறிவியலின் நெறியியலான சோதனைமுறையை உளவியலுக்குப் பொருத்திப் பார்த்த முதல்வர் இவர். பொதுப்புத்தியில் சிக்மண்ட் பிராய்ட் ‘உளவியலின் தந்தை’ என இருக்கிறது. இது தவறு. இவர் உளப்பகுப்பாய்வின் தந்தை. காரணம், அது பொது உளவியலல்ல. உளவியல் வட்டத்துள் இருக்கின்ற ஆழத்து உளவியல்.

இந்த உளப்பகுப்பாய்வு ஒருவிதச் சிந்தனைப் பள்ளி. அந்த மரபில் பிராய்ட் தொட்டு யூங், சுல்லிவன், க்ளேயின், வின்னிகாட், ராங்க், பிரோம், எரிக்சன், லக்கான் முதலானோர் வருகின்றனர் (பார்க்க: மிட் செல் எழுதிய Freud and beyond). இவர்களுள் பிராய்ட், யூங், லக்கான் முதன்மையானவர். காரணம், இவர்களுள் அடிப்படை நோக்கம் ‘நனவிலி அறிதல்’ என்றாலும் அதற்கான வழிமுறைகள் தனித்துவமானவை. எனவே, இம்மூவரும் தனித்த சிந்தனை மரபைக் கொண்டவர்கள். இவர்களுக்கென்று வழித்தோன்றல்கள் உள்ளனர்.

இவர்களில் பிராய்ட் நெருக்கத்தில் லக்கான் இருக்க, கொஞ்சம் விலகியே யூங் இருக்கிறார். அதனால், யூங்கைத் தனியாகத்தான் அணுக வேண்டி உள்ளது. உளப்பகுப்பாய்வுத் தந்தை பிராய்டின் சீடரான யூங், கருத்து வேறுபாடு காரணமாக விலகிப் பகுப்பாய்வு உளவியல் (analytical psychology) ஒன்றைக் கட்டமைத்தார். அதில் நனவிலிக்குக் கீழே கூட்டு நனவிலி (collective unconscious) இருப்பதை ஆய்வுகள்மூலம் கண்டறிந்து வளர்த்தெடுத்த யூங், இந்தப்பகுதியை அடைய அல்லது ஆராய நேர்த்தியான அணுகுமுறைகளை வழங்கவும் தவறவில்லை.

இவரின் அணுகுமுறை கிட்டத்தட்ட பிராய்ட் அணுகுமுறை போன்று விளங்கினாலும் இதில் பயணிப்பது வேறுவிதமான அனுபவங்களையே தருகின்றது. அந்த வகையில் யூங்கியம் என்பது தனித்துவ அணுகுமுறையாக விளங்கி வருகிறது. பிராய்டியம் அளவுக்கு யூங்கியம் பிரபலம் இல்லையென்றாலும் உளப்பகுப்பாய்வில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, இலக்கியத் திறனாய்வில் இதன் போக்குக் கவனிக்கத் தக்கவையாக இன்றளவும் உள்ளன. தொன்மவியல் அணுகுமுறை இதன் இயைபு கோட்பாடாகும். மூலப்படிவத் திறனாய்வும் தொன்மத் திறனாய்வும் நெருக்கமானவை (Fray, 421-31). காரணம், மூலப்படிவங்களின் முதல் படைப்பாக்கங்களாகத் தொன்மங்கள் உள்ளன. அதனால், மூலப்படிவங்களின் சாயலிலேயே தொன்மங்கள் விளங்குகின்றன தொன்மங்களை யூங் கூட்டுக் கனவு (Collective dream) என்பார் (Walker, 91).

இலக்கியம் பற்றி யூங் கூறும் கருத்துகளை முதலில் காண்போம். தொடர்ந்து, தொல்காப்பியத்துடன் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கின்றன என்பதை ஆராய்வோம். யூங்கைப் பொறுத்தவரையில் இலக்கியம் என்பது புனைவு. அதனால் இது கனவுக்கு நிகரானது. இலக்கியமும் கனவும் ஒன்றென்பது பிராய்டின் வழி வந்த கருத்து. இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி வந்த யூங், இலக்கியத்தை மனித இனத்தின் பொதுக் கனவு என்பார்.

காரணம், இதில் தொன்மக்கூறுகள் பொதிந்துள்ளன. அதனால், தொன்மம் போல இலக்கியமும் கிட்டத்தட்ட கூட்டுக் கனவு ஆகும். எனில், படைப்பாளி நிலை என்ன ? அவன் ஒரு பிரதிநிதி. மனித இனத்துப் பிரதிநிதி. அவன் இலக்கியக் கூட்டுக் கனவின் பிரதிநிதி. அதனால், படைப்புச் செயல் என்பது தனிநிலைக்கு அப்பாற்பட்டது (Jung 1972, 185). சராசரி மனிதர்களிடம் இருக்கின்ற பொதுக் கனவையே படைப்பாளி தனது சாதுர்யத்தால் மொழியாக்கம் செய்கிறான். இது அவனுக்கே தெரியாது. காரணம், இந்தச் சாதுர்யம் நனவிலிநிலை சார்ந்தது. யூங்கிய மொழியில் கூட்டு நனவிலி சார்ந்தது. அப்படியென்றால், படைப்பாளி காண்கிற கனவு அவனுடையதல்ல. யூங்கின் இந்தக் கருத்து பிராய்டின் கருத்துக்கு மாற்றானது.

படைப்புக் குறித்தும் படைப்பாளி குறித்தும் பிராய்ட் ஆய்வு செய்கிறார். அவர் கூறும்போது, ‘படைப்பு என்பது படைப்பாளியின் தனிநிலையிலான பகற்கனவு’ என்பார். யூங்கிற்கு இதில் உடன்பாடே என்றாலும் அந்தக் கனவின் உள்ளடக்கங்கள் இனப்பொதுவிலானவை என்கிறார். அதனால், இலக்கிய உள்ளடக்கங்களை எவரும் உரிமை கொண்டாட முடியாது. இந்த இடத்தில் கூட்டு நனவிலி (collective unconscious) பற்றிய பின்னணியில் விளக்க வருகிறார் யூங். அறிவியல் முறையில் உள அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் பிராய்ட். அவரின் கட்டுமானம்படி, உள்ளத்தின் அடிப்பகுதியில் இருப்பது நனவிலி மனம்.

இதில் இருக்கின்ற வேட்கைகள் உணர்வுகள் கருத்துகள் எல்லாம் தனிமனித அனுபவங்கள் ஆகும். குறிப்பாகக் குழந்தைப் பருவத்து இன்ப, துன்ப அனுபவங்களின் தொகுதி ஆகும். இந்த அமுக்கத்தால் விளைந்த உளத்தளமாகும். பிராய்டின் உளப்பகுப்பாய்வுக்கு இதுவே ஆதாரம். மனித நடத்தைகளைப் பிறழ்நிலைக்கு ஆளாக்கின்ற உளப் பகுதியாக இது விளங்குகிறது. சராசரி மனிதரிடம் கூட இயல்பு பிறழ்ந்த நடத்தைகளே மிகுதி. நனவில் நாம் இயல்பானவர்கள் என்றாலும் கனவில் நாம் அனைவரும் பித்தர்களே என்பார் பிராய்ட் (SE,11,ஜீ.144).

இது முழுமைக்கும் உண்மை என்று உளவியல் ஏற்றுக்கொண்டுள்ளது. யூங்கிற்கும் இதில் உடன்பாடே என்றாலும் இயல்பு நிலைக்கும் பிறழ்வு நிலைக்கும் தனியர் நனவிலியை விடக் கூட்டு நனவிலியின் பங்கு மிகுதி என்பார். அதிலும், படைப்பாளி பற்றி பிராய்ட் கூறும்போது நரம்பு நோய்வாய்ப்பட்ட நபராகக் காண்கிறார். யூங் இதிலிருந்து வேறுபடுகிறார். அதாவது, பிறழ்நிலைக்குத் தற்காலிகமாகச் சென்று வருவது படைப்பாளியின் இயல்பு என்கிறார். வேறு விதமாகக் கூறின், படைப்பில் ஈடுபடும்போது கூட்டு நனவிலிக்குச் சென்று வருகிறார். அங்கேதான் பிறழ் நிலைக்கான உளச் செயல்பாடுகள் உள்ளன. அதனால், யூங்கின் மைய நோக்கு கூட்டு நனவிலி ஆகும். இந்தக் கூட்டு நனவிலி உள்ளடக்கங்கள் அகிலப் பொதுவானவை.

இருப்பினும், சாதி, மத, இனம், மொழி, தேசியம், இடம், காலம் என வரம்புகளைக் கடந்து, அனைத்து மனிதரிடத்திலும் கூட்டு நனவிலிக் கூறுகளான மூலபடிவங்கள் (archetypes) கனவிலும் படைப்புகளிலும் நடத்தைகளிலும் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும். இவற்றை நம்மால் மாற்றவோ அழிக்கவோ முடியாது. காரணம், இவை ஆதி கால மனிதரிடையே ஏற்பட்ட படிமங்கள் ஆகும். அதனால் இவற்றைத் தொல்படிமங்கள் என்பார் யூங் (Tacey,139).

ஆதிகாலத்து மனிதரிடையே இயற்கை வாழ்விலும் சமூக வாழ்விலும் ஏற்பட்ட அனுபவங்களின் பதிவுகள் தொடர்ச்சியாகக் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்ததால், ஒரு கட்டத்தில் மரபணுப்பதிவுகளாகி அதனூடே வம்சாவளியில் பரந்து இன்றளவும் செயலூக்கமாக விளங்கி வருகின்றன.

அதனால், இந்தப் பதிவுகளை உடலியற் சார்ந்த உளக்கூறுகள் எனலாம். இதன் விளைவாக, மரபணு அளவுக்கு இவற்றின் வீரியம் இருக்கிறது. ஆழத்து வீரியம் மிக்கவை தன்னியலாக (autonomous) வெளிப்பட்ட வண்ணம் உள்ளன. இத்தகு தன்னியல் வெளிப்பாடுகூடக் கால இடச்சூழலுக்கு ஏற்ப அமைகின்றது என்பது சிறப்பு. படைப்புச் செயலிலும் தன்னியல் உள்ளது. யூங்கைப் பொறுத்தவரையில் தன்னியல் சார்ந்த செய்நிலைக் கற்பனையும் (active imagination) படைப்புச் செயலும் (creative process) ஒன்றே ஆகும் (Chodorow,216). யூங் கருத்துப்படி, மூலப்படிவங்கள் யாவும் நனவு மனச் செயல்பாடுகளுக்கு ஆதாரமானவை.

நனவு மனம்தான் வாழ்வமைவு. மனித இருப்பு என்பதே நனவு இருப்பு ஆகும். (கோமா மனநிலையில் மனித இருப்புக்கு வாய்ப்பில்லை). இந்த நனவு வாழ்வில் மூலப்படிவங்கள் இருப்புக் கொள்கின்றன. நனவிலி வாழ்விலும் இவற்றின் இருப்பு உள்ளது. அதனால், நனவின் செயல்பாடுகளிலும் நனவிலி செயல்பாடுகளிலும் மூலப்படிவங்கள் உரிமையுடன் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. வேறுவிதமாகக்கூறின், நனவையும் நனவிலியையும் மூலப் படிவங்களே இயக்குகின்றன.

காரணம், இவையே இயங்குசக்திகள் ஆகும். அதனால்தான், நனவின் புனைவுகளிலும் நனவிலியின் கனவுகளிலும் மூலப்படிவங்கள் காணக் கிடைக்கின்றன. சான்றாக, நனவின் ஆக்கமான நவீன வீடு என்பது ஆதி மனிதனின் குகை எனும் மூலப்படிவத்தின் நவீன வடிவமாகும். அதேபோல். நனவிலி ஆக்கமான ஓவியம் ஆதி மனிதரின் பாறைக் ஓவியங்களின் நவீனப் பிரதிகள் ஆகும். எனவே, நவீனம் வரையிலான அனைத்து அல்லது பெரும்பாலான நடவடிக்கைகளிலும் மூலப்படிவங்களின் நகலாக்கம் (Phototype) இருக்கவே செய்கின்றன.

இது ஒருவிதத்தில் மனித நடத்தைகளை முறைமை (pattern) ஆக்குகின்றது. ஆதிச் சமூகம் தொட்டு மனிதன் ஒரே மாதிரி வாழ்ந்து வருகிறான் என்பது இதன் பொருள். கால, இட, சூழலுக்குஏற்ப இந்த முறைமைகளின் தன்மையில் மாறுபாடுகள் இருக்கும் என்பது வெள்ளிடை. உணவு மற்றும் ஆடையைக்கொண்டு இதைப் புரிந்து கொள்ளலாம். யூங் கூற்றுப்படி, மூலப்படிவங்கள் யாவும் கருத்துருக்கள் ஆகும். இதில் எண்ணமும் உணர்ச்சியும் கலந்திருக்கும். அதனால்தான், உணர்வெழுச்சிமிக்கப் படிமங்களாக இவை விளங்குகின்றன.

அதனால், மூலப்படிவங்கள் யாவும் கிட்டத்தட்ட உள்ளுணர்ச்சிகள் போலச் செயல்படுகின்றன என்பார் யூங் (Mattoon, 39). இவை நடப்பு வாழ்க்கையில் மட்டுமின்றிக் கனவு, புனைவு, படைப்பு என உள உருவாக்கங்கள் அனைத்திலும் முதன்மையாகப் பங்கு வகிக்கின்றன. இவை புதிய ஆக்கங்களையும் ஏற்படுத்த வல்லவை. ஆனால், அவற்றில் மூலப்படிவ அடையாளம் காண்பதரிது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்தப் போக்கைக் காணலாம். உளப்பகுப்பு ஆய்வில் யூங் கண்ட மூலப்படிவங்கள் பல.

அவற்றில் சில அவர்க்கு முன்பே சர் தாமஸ் ப்ரௌன் மற்றும் பிரான்சிஸ் பாக்கம் ஆகியோர் பதினாறாம் நூற்றாண்டில் கண்டனர். குறிப்பாகத் தமது எழுத்துகளின் மூலப்படிவ அடையாளங்களைக் கண்டு உள்ளனர். என்றாலும் மூலப்படிவக் கருத்தியலுக்கு பிளாட்டோ முன்னோடி. பிறக்கின்ற குழந்தை ஒருவித உள அமைப்புடன் பிறக்கின்றன என்பார். இதை அறிவியல்முறை உளவியலில் மெய்ப்பித்தவர் யூங் (Stevens, 39).

யூங்கிய இலக்கிய உளப்பகுப்பாய்வில் மூலப்படிவங்களைத் துப்பறிவது முக்கியமான பணி. படைப்பாளிக்கே தெரியாமல் வெளிப்படுகின்ற மூலப்படிவங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குள் நடக்கின்ற நேர் மற்றும் எதிர் ஊடாடல்களையும் இவற்றுள் பொதிந்துள்ள உள மெய்ம்மைகளையும் கண்டறிவது இந்தத் திறனாய்வின் சிறப்பு. அந்த வகையில் தொல்காப்பியத்தில் தென்படுகின்ற மூலப்படிவங்களைத் துப்பறிய முயல்கின்றேன். இது இலக்கியத் திறனாய்வு என்பதைவிட, இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலான ஒப்பியல் திறனாய்வாகக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக இணைநிலை ஆய்வாகக் (Parallalism) கருத வேண்டியுள்ளது. இதற்குமுன், தொல்காப்பியத்தையும் பிராய்டையும் ஒப்பிட்டு இணைநிலை ஆய்வுக்கு உட்படுத்தித் ‘தொல்காப்பியமும் பிராய்டியமும்’ என்கிற நூலை வழங்கியுள்ளேன் (2011). இங்கே, தொல்காப்பியமானது யூங்கியத்துக்கும் சவால் விடுகின்ற அளவில் இருப்பதைக் காட்ட விரும்புகிறேன். (தொல்காப்பியம் என்பதிலுள்ள ‘தொல்’ என்கிற சொல் தொன்மையைக் குறிப்பதாகும். இது கூட்டு நனவிலி, மூலப்படிவம் ஆகியவற்றை நினைவூட்டுகின்றது. அதனால், யூங்கியத்துக்கான களமாகத் தொல்காப்பியம் விளங்குகிறது என ஊகிக்கலாம்).

முதலில் தொல்காப்பியரின் உள அறிவு குறித்துக் கொஞ்சம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஐயத்திற்கு இடமின்றித் தொல்காப்பியம் என்பது பல்துறை அறிவுப்பெட்டகம் ஆகும். அவற்றுள் இலக்கியக் கோட்பாடு என்கிற பெயரில் உளவியல் கருத்தியல்கள் சிதறிக் கிடக்கின்றன. அவற்றைத் தொகுத்து நோக்கின் தொல்காப்பியர் ஓர் உளவியலர் என்பதை அறிந்தேற்கலாம். தத்துவ உளவியல் போன்றோ நவீன உளவியல் போன்றோ உளக்கருத்துகளைத் தொல்காப்பியர் வழங்கவில்லை.

அதாவது, அகத்தாய்வு செய்தோ (Self analysis) சோதனை ஆய்வுசெய்தோ (experimental) வழங்கவில்லை. மாறாக, தம் முன்னே பரவிக் கிடந்த இலக்கியங்கள் வழியில் உளவியலைக் கட்டமைக்கிறார். பொதுவாக, உளவியல் குறித்துச் சிந்திக்க உள்ளமே போதும். அதாவது, உள்ளம் ஒன்று நமக்கு உள்ளதென்கிற உணர்வே போதும். அது தன்னைப் பற்றிச் சிந்தித்துவிடும். அப்படித்தான் மனிதஇனம் காலங்காலமாகச் சிந்தித்து வருகின்றது. இருப்பினும், உள்ளம் இருப்பதை மனிதன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தான்.

மொழிபோல் இதுவும் இடையில் வந்த ஞானமே ஆகும். அப்படிக் கண்டறிந்த மனிதன் அந்த உள்ளத்தைப் புரிந்துகொள்ளப் பல வழிகளைக் கண்டான். அவற்றுள் ஒன்று இலக்கியம். இதை முதலில் அறிந்தவர் தொல்காப்பியர். அவருக்கு முன்பும் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் கண்டிருக்கலாம். இன்று கிடைக்கப் பெற்ற பனுவல்கள்படி, தொல்காப்பியரே இலக்கிய முறை உளவியலை இலக்கணக் கோட்பாடாகக் கண்டிருக்கிறார். இந்த இலக்கணக் கோட்பாடு தத்துவார்த்தமானதல்ல அறிவியல் வகைக்கு உட்பட்டதுமல்ல. இது முழுமைக்கும் இலக்கிய வழிக் கோட்பாடாகும். எனவே, தொல்காப்பியரை இலக்கியமுறை உளவியலின் தந்தை எனலாம்.

இலக்கியத்தைச் செய்யுள் என்பார் தொல்காப்பியர். செய்யப்படுவது செய்யுள். இதை மனத்தால் செய்யப்படுவது செய்யுள் என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதனால், செய்யுளில் உளக் கூறுகள் பொதிந்து கிடக்கும் என்பதில் ஐயமில்லை. நவீனக்கோட்பாடுப்படி, இலக்கியத்தைத் சமூகத் தயாரிப்பு என்பார் மார்க்ஸ். உளத் தயாரிப்பு என்பார் பிராய்ட். மொழித் தயாரிப்பு என்பார் லக்கான். இவை யாவும் கலந்த தயரிப்பே செய்யுள் என்கிறார் தொல்காப்பியர்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
 பாடல் சான்ற புலனெறி வழக்கம்

என்பது தொல்காப்பியம் (தொல். 999). நாடக வழக்கு என்பது புனைவியல் (romanticism) தொடர்புடையது. உலகியல் வழக்கு என்பது யதார்த்தம் (realism) தொடர்புடையது. இதை வேறுவிதமாகக் கூறின், புனைவியல் என்பது நனவிலி நிலை அதாவது, கனவுநிலை. இது பிராய்டுடன் இயைபாகிறது.

யதார்த்தம் என்பது நனவுநிலை அதாவது, சமூகநிலை. இது மார்க்ஸுடன் இயைபாகிறது. தொல்காப்பியத்தில் இவ்விரண்டும் பொருந்தி இருப்பதைக் காணமுடிகிறது. இலக்கியத்தின் உளநிலை அப்படிப்பட்டது. நனவும் நனவிலியும் ஒருமித்துச் செயல்படுவதன் விளைவு இலக்கியம் ஆகும். இதைத்தொல்காப்பியர் அறிந்து வைத்துள்ளார்.

‘இலக்கியத்தில் இருப்பதையே இலக்கணமா வகுத்துள்ளேன்’ என்று கூறும்படி ‘பாடலுள் பயின்றவை நாடுங்காலை’ (தொல். 949) என்கிறார். இதன்படி, இலக்கியம் என்பது தனி வழக்கு என அறிந்தவராகத் தொல்காப்பியர் விளங்குகிறார். மனம்பற்றிப் பெரிய விளக்கங்களைக் கொடுக்கவில்லை என்றாலும் நுண்குறிப்பாகச் சில இடங்களில் சொல்ல வருகிறார். மரபியலில் அறிவுக் கோட்பாட்டை (epistemology) முன்வைக்கின்றபோது இப்படிக் கூறுகிறார்.

 ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே
 இரண்டறிவதுவே அதனொடு நாவே
 மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
 நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
 ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
 ஆறறிவதுவே அவற்றொடு மனனே 

(தொல். 1526)

இதில் ஆறாம் அறிவு கவனிக்கப்படவேண்டியதாகும். ஆறாம் அறிவு என்று மனத்தைத் தொல்காப்பியர் ஏன் குறிப்பிடுகிறார்? இதைப் பார்ப்போம். ஆறு அறிவும் தனித்துவமானவை. இவற்றில் முதல் ஐந்தும் உடலியல் புலனுணர்வு சார்ந்த அறிவுகள் ஆகும். ஆறாம் அறிவு மட்டும் புலன் கடந்த மனம் சார்ந்த அறிவாகும். பொதுப்புத்தியில் நினைப்பது போல் அறிவு என்பது மனிதனுக்கு மட்டும் உரித்தானதல்ல.

புறத்தை உணர்ந்து உற்றறியும் தன்மை அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளன என்கிறது அறிவியல். இதைத் தொல்காப்பிய வரிகளில் காணலாம். மெய்யுணர்வு (ஐம்புலன்) என்பது அறிதலுக்கான கருவியே ஆகும். ஒவ்வோர் உயிரினமும் சுயஇயல்புகளுக்கு ஏற்ப புறநிலைகளை அறிகின்றது. அவ்வகையில் மனிதன் மனத்தால் புறத்தை அறிகிறான். புலன்கள் இரண்டாம் பட்சங்களே ஆகும். மனிதனிடம் புலன்கள் வழியில் மனம் இயங்குகின்றது. அப்படியென்றால், பிற உயிரினங்களிடம் மனம் இல்லையா? இருக்கிறது. அது அனுபவத்தொகுதியாக இருக்கின்றது. மாறாக, மனித மனம் மட்டும் கருத்துத் தொகுதியாக உள்ளது.

மொழியும் உணர்வும் கலந்த கலவையே கருத்தாகும். இந்தக் கருத்துச் சுயமாக உருவாக்கி இருக்கலாம். பிறரின் கருத்தாக இருக்கலாம். முன்னோரின் வழக்காறாக இருக்கலாம். மரபு வழியில் பெற்றதாக இருக்கலாம். யூங்கியம் சுட்டுகின்ற மூலப்படிவங்களாக இருக்கலாம். (மூலப்படிவம் என்பது கருத்துரு). மற்ற விலங்குகளுக்குப் பிறரின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு ஆய்ந்து நடந்து கொள்கின்ற பகுத்தறிவு இல்லை. எனவே, மனித மனம் பிற மனங்களிடம் இருந்து சிறப்பில் வேறுபட்டது. எனவே, மனமே ஆறாம் அறிவு என்றார் தொல்காப்பியர். சான்றாக, மழையை ஓர் நிகழ்வாக விலங்குகள் அறிய, மனிதன் மட்டும் உளக் கருத்துகள் வழியில் அறிகிறான். ‘மழை’ என்று பெயர் கொண்டு அது தொடர்பான பழைய கருத்துகளைச் சேர்த்து மழையை உள்வாங்கிக்கொள்கின்றான். இதுதான் மனிதனின் சிறப்பு. இதைத் தொல்காப்பியர் அறிந்தபடி ‘மனனே’ என்கிறார்.

மனித அகநிலையின் ஆறு வாசல்களில் மனம் முதன்மையானது. காரணம், மனத்தால் (மனுஷ்) நடந்து கொள்பவன் மனிதன். அதனால்தான் மனிதன் (மனதன், மனுஷன்) என்று பௌத்தம் கூறுகிறது. பாலி மொழியில் மனுஷ் என்றால் உள்ளம். புறநிலை ஒன்றைப் பிற விலங்குகள் உணரும்போது சுய அனுபவங்களைக் கொண்டே உறவாடும். இதில் தன்னிலை ‘மேலோங்கி’ இருக்கும். மாறாக, மனிதன் புறநிலை உறவு மேற்கொள்ளும்போது தன்னிலையுடன் பிறரின் கருத்துகளும் அறிதலில் ஈடுபடும். இதன்படி, பழைய கருத்துகளினூடே மனித புறநிலை உறவுகள் (object relations) நடக்கின்றன. இதை தொல்காப்பியர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார். அதனால்தான், ஆறாம் அறிவை ‘மனனே’ என்றார். இப்படி மனத்தின் முக்கியத்துவத்தை அறிந்த அவர், இலக்கியம் வழியில் மனத்தின் நிலைகளை ஆங்காங்கே விவரிக்கத் தவறவில்லை. மெய்ப்பாட்டியல் இதற்குச் சான்று. மெய்ப்பாடு என்றால் மெய்வழி உணர்வு வெளிப்பாடு என்பார் பாலசுந்தரம் (2012:  226). இவை இரண்டு பாங்குகளில் வெளிப்படுவதாகத் தொல்காப்பியர் கூறுகிறார்.

நகையே அழுகல் இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை

(தொல். 1197)

என்பது ஒருவகை. ‘ஆங்கவை ஒருபால் ஆக ஒரு பால்’ என்று ‘உடைமை’ முதல் ‘நடுக்கு’ வரையிலான முப்பத்திரண்டு உணர்வுகள் இரண்டாம் வகை. இவற்றில் முன்னதை முதல்நிலையாகவும் (Primary) பின்னதை இரண்டாம் நிலையாகவும் இலக்கியமுறை வழி நின்று நிறுவுகிறார். இது, இலக்கிய உளவியல் பற்றிய தொல்காப்பியரின் சிறப்புப்பார்வை.

இந்தப் பார்வைக்கு இணையான ஒரு கோட்பாடு நவீன உளவியலில் உள்ளது. அதாவது, மனித உணர்வெழுச்சிகள் இரண்டு வகைப்பட்டவை. ஒன்று, அடிப்படை உணர்வெழுச்சிகள் (basic emotions). மற்றொன்று, உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகள் (higher cognitive emotions). ஆனந்தம் (joy), வருத்தம் (distress), கோபம் (anger), அச்சம் (fear), வியப்பு (surprise), அருவருப்பு (disgust) ஆகியவை அடிப்படை உணர்வெழுச்சிகளாகும். காதல் (love), குற்றவுணர்வு (guilt), அவமானம் (shame), சங்கடம் (embarassment), கௌரவம் (Pride), ஏக்கம் (envy), பொறாமை (jealousy) ஆகியவை உயர்நிலை அறிமுறை உணர்வெழுச்சிகளாகும் (இரவிச்சந்திரன் 2013:8-32). இதே மாதிரியான பகுப்பைத் தொல்காப்பியர் அன்றே கண்டிருப்பது வியப்பு. இவ்விரண்டு கோட்பாடுகளுக்கும் இடையே சில உணர்வுகளும் ஒன்றிப்பாக இருப்பது இன்னும் வியக்கவைக்கிறது. (ஆனந்தம்=நகை, வருத்தம் = அழுகை...). உணர்வெழுச்சிகளில் இப்படியான பாகுபாடு இருப்பதைத் தொல்காப்பியர் இலக்கியம் வழியில் கண்டறிந்தார். இருப்பினும், இதில் உலகியல் வழக்கும் உள்ளது என்பதை அறியவும். காரணம், புலனெறிவழக்கம் என்பது நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்த ஒன்று.

நவீன உளவியல் சார்ந்த கருத்தியல்கள் சில தொல்காப்பியத்துடன் ஒத்தமைந்து இருப்பதைக் காணமுடிகிறது. அவற்றுள் யூங்கிய கருத்தாக்கங்களும் அடங்கும். பிராய்டின் வழியில் வளர்ந்தவர் யூங் என்றாலும் தமக்கெனத் தனித்த வழியைக் கண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. பிராய்ட் போல நனவிலி அறிதல் இவரின் நோக்கம் என்றாலும் தனியர் நனவிலியில் இருந்து கூட்டு நனவிலியை அடையாளப்படுத்தியவர்.

இந்தக் கூட்டு நனவிலி அகிலப் பொதுமையான கருத்துருக்களைக் கொண்டது. அதுவே பண்பாட்டுப் பொதுக்கூறுகளையும் ஏற்படுத்துகிறது. பண்பாட்டும் பொதுமையின் பின்னணியில் அகிலப் பொதுமை இருக்கிறது. அதேபோல் அகிலப் பொதுமையின் பின்னணியில் பண்பாட்டுப் பொதுமை இருக்கிறது. சான்றாக, திருமணம் என்பது அகிலப் பொதுமை. இதுவே பண்பாட்டுப் பொதுமையாக அந்தந்த இனத்தின் தனித்த வடிவமாக வெளிப்பாட்டு வருகின்றது. உணவுக்கலாச்சாரத்திலும் இதைக் காணலாம்.

உணவும் உண்ணல் முறையும் மூலப்படிவங்கள் என்றாலும் இவற்றின் வெளிப்பாடுகள் பண்பாட்டுக்கு ஏற்ப அமைகின்றன. கடவுள், உடை, மந்திரம், வீடு, திருமணம், சடங்கு, தொழில், தலைவன், தலைவி, அரசன், அரசி, ஞான முதியவர் எனப் புழக்கத்தில் உள்ள அனைத்துப் படிமங்களிலும் பண்பாட்டு அல்லது இனச் சார்பு இருக்கும். இவற்றின் மூலாதாரமாக அகிலப் பொதுவான மூலப்படிவங்கள் உள்ளன என்பதே யூங்கின் சாரம். இந்தத் சாரம் இலக்கியத்திலும் வெளிப்படும் என்பது அவரின் வாதம்.

காரணம், இனச் சூழல் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ற இலக்கிய மரபுகள் மாறுபடும். இருப்பினும், அதனூடே பொதிந்துள்ள மூலப்படிவங்கள் மூலப்பொருட்களாக (raw materials) விளங்குகின்றன. இந்த அடிப்படையில் தொல்காப்பியத்தில் மூலப்படிவங்கள் காணக் கிடைக்கின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரமே சிறந்த ஆய்வுக்களம். இதுவே தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபின் சாரம்.

இந்தப் பொருளதிகாரம் இனப்பொதுமைகளை வெளிப்படுத்துகின்றது. சங்ககாலத்தில் சேர சோழ பாண்டிய நாடுகளாகப் பிரிந்திருந்தாலும் இலக்கிய மரபும் பண்பாட்டு மரபும் பொதுநிலையில் இருந்தன. அவ்வகையில் இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியர் வகுத்து நமக்கு அளிக்கிறார். வேறுவிதமாகக் கூறின், இலக்கியங்களில் இருப்பதை ஆராய்ந்து பொதுமைக் கூறுகளை இலக்கண மரபாகப் படைத்திருக்கிறார். இந்த அணுகுமுறையே யூங்கிய அணுகுமுறையோடு ஒத்தமைந்துள்ளது.

பல உள்ளங்களை ஆராய்ந்து அவற்றின் பொதுமைக் கூறுகளைத் தொகுத்து உளவியல் மரபை யூங் ஏற்படுத்தியதும் பல இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றின் பொதுமைக் கூறுகளைத் தொகுத்து இலக்கிய மரபைத் தொல்காப்பியர் ஏற்படுத்தியதும் இணைநிலையானவை என்பதில் ஐயமில்லை. இவற்றில் ஒரே வேறுபாடு, அகிலப்பொதுமையை யூங் நோக்க, பண்பாட்டுப் பொதுமையைத் தொல்காப்பியர் நோக்குகிறார். இரண்டும் தனித்த மரபுகள் என்றாலும் வடிவம் (pattern) ஒன்றே ஆகும்.

அதனால், யூங்கியம் என்பது கூட்டு நனவிலி என்றால் தொல்காப்பியம் என்பது பண்பாட்டு நனவிலி எனலாம். இங்கே நனவிலி என்பது ‘மறைபொருள்’ என்பதல்ல. ஆழமான உள்ளத்தில் இருந்து வெளிப்படுகின்ற தன்மையைக் குறிக்கும். இலக்கிய மரபும் அப்படிப்பட்டதே ஆகும். அதனால்  தான் அகமும் புறமும் (காதல், வீரம்) இலக்கிய மூலப் பொருட்களாக இன்றளவும் விளங்குகின்றன. (திரைப்படம் சான்று). கூட்டு நனவிலி பற்றிப் பேசுகின்ற யூங், பண்பாட்டு நனவிலி பற்றி மறைமுகமாகப் பேசுகின்றார். குறிப்பாக, பண்பாட்டுச் சிக்கல் (Cultural complex) என்கிற அளவில் விவாதிக்கிறார். இதிலிருந்து யூங்கியவாதிகள் பண்பாட்டு நனவிலியை வளர்த்தெடுக்கின்றனர் (Singer,25). ஜோசப் ஹென்டர்சன் (Joseph Henderson) இதை விவரிக்க வரும்போது பண்பாட்டு நனவிலியை (cultural unconscious) வரையறுக்கிறார்.

இது ஒரு வரலாற்று நினைவகம். வெகுஜன மக்களின் பொதுமையான மனநிலையாகும். கூட்டு நனவிலிக்கும் பண்பாட்டு முறைமைக்கும் இடையே இருக்கின்ற பகுதியாகும். அதனால் இது நனவுடனும் நனவிலியுடனும் தொடர்புபட ஏதுவாகிறது. இருப்பினும், கூட்டு நனவிலியானது மூலப்படிவங்களைச் சார்ந்த பகுதி என்பதால் நிலம் சார்ந்த மொழிசார்ந்த தொன்மங்களும் சடங்குகளும் அதிலிருந்து உருவாகக் காரணமாகின்றது. மேலும், தனியர் உளவளர்ச்சியிலும் பங்கு கொள்கின்றது (மேலது). இங்கே தொன்மங்களுக்கு மாற்றாக இலக்கியங்களை வைத்துப் பார்க்கலாம். இலக்கியங்கள் யாவும் பண்பாட்டுத் தளத்தில் இருந்தே பிறக்கின்றன. உள்ளத்தில் பண்பாட்டுத் தளம் (cultural level) ஒன்று உள்ளது என்பதைக் கண்டவர் யூங்.

இந்தத் தளம் தனியர் நனவிலிக்கும் கூட்டு நனவிலிக்கும் இடையில் இருப்பதாக ஹென்டர்சன் கூறுகிறார் (மேலது). பொதுவில் இந்த மண்ணுக்கு சில சிறப்புகள் உள்ளன என்றோ நாம் கூறுவோமே... அவைதான் பண்பாட்டுச் சிக்கல் வகைக்குட்பட்ட உளத் தளம் ஆகும். உண்மையில் இந்த வார்த்தை நிலத்தைக் குறிப்பதல்ல. மாறாக, உளத் தளத்தைக் குறிப்பதாகும். அதுதான் யூங் கூறுகின்ற பண்பாட்டுத் தளம் ஆகும். ஹென்டர்சனின் பண்பாடு நனவிலியானது கூட்டு நனவிலியால் தாக்கம் பெறுவதாகும். காரணம், ஆழத்துப் பகுதியே மேல் பகுதியை ஆளுகைக்கு உட்படுத்தும் என்பது உள மெய்ம்மை.

இதன்படி, கூட்டு நனவிலி மனம் அதற்கு மேல் உள்ள பண்பாட்டு நனவிலி, தனியர் நனவிலி, நனவடங்கு, நனவு ஆகிய உளப் பகுதிகளின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்றது. இங்கே, அகிலப்பொதுப் பகுதியான கூட்டு நனவிலியானது பண்பாடு நனவிலியைத் தீர்மானிக்கிறது. வேறுவிதமாகக் கூறின், இந்தப் பண்பாட்டுத் தளத்தைக் (cultural level) கூட்டு நனவிலி தகவமைத்துக் கொள்கின்றது. இந்தத் தகவமைப்பை இலக்கியங்களில் காணலாம். சான்றாகக் கடவுள் மூலப்படிவம் பொது என்றால் அது சமய சமூகப் பண்பாட்டுக்கு ஏற்பத்தம்மை வெளிப்படுத்தும். சான்றுக்கு ஐந்திணை தெய்வங்களைக் கூறலாம். புறத்தில் வேறுபாடுகள் தெரிந்தாலும் அகத்தில் ஒரே தன்மையே (கடவுள் மூலப்படிவம்) உள்ளது. இதுதான் கூட்டு நனவிலிக்கும் பண்பாட்டு நனவிலிக்கும் இடையிலான அகமன உறவு (intrapsychic) ஆகும்.

பண்பாட்டுத் தளத்தின் பண்புகள் என்று சிலவற்றை குறிப்பிடுகிறார் ஹென்டர்சன். வல்லமை, திரும்பம், தன்னியல், கூட்டுநிலை முதலியவற்றைக் குறிப்பிடுகிறார் (மேலது, 26). இவை கூட்டு நனவிலி மூலப்படிவங்களின் பண்புகள் ஆகும். சான்றுக்கு ஒன்றைக் காண்போம். தொல்காப்பியத்தின் நில வகைமைகள் எனக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை உள்ளன. இது தமிழ்ப் பண்பாட்டுத்தளத்தின் மரபார்ந்த பதிவுகள் ஆகும். வேறு பண்பாட்டில் வேறுவிதமான நிலப் பகுப்புகள் இருப்பதை நாம் அறிவோம். நிலம் வேறு எனில் நிலப் பகுப்பும் வேறாகத்தான் இருக்கும். அதேபோல், காலத்தைப் பகுக்கின்ற முறையையும் சொல்லலாம். சிறுபொழுது பெரும்பொழுது பகுப்புகள் தமிழ்ப் பண்பாட்டில் இருப்பதுபோல் ஐரோப்பிய அல்லது சீனப் பண்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. தமிழில் இளவேனிற்காலம், முதுவேனிற் காலம், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என இருப்பது போல் ஐரோப்பாவில் வசந்தகாலம் (spring) கோடைக்காலம் (summer) இலையுதிர்காலம் (Autumn) பனிக் காலம் (winter) என்கிற காலப்பகுப்புகள் உள்ளன.

தொல்காப்பியர் சுட்டுகின்ற பகுப்புகளும் ஐரோப்பியர் சுட்டுகின்ற பகுப்புகளும் பண்பாட்டுத் தளத்தில் இருப்பவை. இவற்றின் மூலப்படிவங்கள் இரண்டு. ஒன்று, நிலம். இன்னொன்று, பொழுது. தொல்காப்பியரிடம் இத்தகு பார்வை உள்ளது. அதனால்தான் நிலமும் பொழுதும் முதற்பொருட்கள் என்கிறார். அதாவது, முழுமுதற்பொருட்கள் = மூலப் பொருட்கள். யூங்கிய மொழியில் மூலப்படிவங்கள் ஆகும். இத்தகு யூங்கிய மூலப்படிவப் பார்வை தொல்காப்பியரிடம் இலக்கிய மரபாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. அதாவது, அகிலப் பொதுவாக நிலமும் பொழுதும் இருக்க, பண்பாட்டுப் பொதுவாக மலை, காடு, வயல், கடல், பாலை ஆகியவையும் பெரும்பொழுது சிறுபொழுது ஆகியவையும் இருக்கின்றன.

இது இருவரின் கோட்பாடுகளுக்கு இடையிலான முதன்மையான இணைநிலை. அடுத்தது திணை. திணை என்பது (திணைக்குடிச்)சமூக அமைப்பு. இது பண்பாட்டு நனவிலியுடன் தொடர்புடையது. யூங்கிய மொழியில் இது பண்பாட்டுச் சிக்கல் (cultural complex) ஆகும். இந்த உளச் சிக்கல்தான் தனியர் உளநிலையையும் கூட்டு உளநிலையையும் இணைத்து இயக்குகின்றது. அதனால் மூலப்படிவங்கள் தனியர் நிலைக்கு ஏற்புடையதாகிறது (Stevens, 32). தொல்காப்பியர் சுட்டுகின்ற திணைக்குடிச் சமூகம் இதையே செய்கிறது. இதன் வழியே திணைசார் இலக்கிய மரபும் சிக்கலான அமைப்பாகிறது. அதாவது, அகில வெளியிலிருந்து (universal) சொந்த வெளிக்கு (personal) மூலப்படிவங்கள் தம்மைத் தகவமைத்துக்கொள்கின்றன.

யூங்கிய நோக்கில், திணை என்பது சொந்த வெளி ஆகும். குறிப்பாகத் தொல்காப்பியர் கால, இடம்சார்ந்த சொந்த வெளி என்றாகிறது. இதன்மூலம் சங்க இலக்கியப் புரிதல் சாத்தியமாகிறது. தொல்காப்பியத்தின் முப்பொருள் கோட்பாடு (முதல், கரு, உரி) ஐயத்திற்கு இடமின்றிப் பண்பாட்டுச் சிக்கல் ஆகும். இங்கே, முதற்பொருள் என்பது கூட்டு நனவிலி மூலப்படிவங்களையும் கருப்பொருள் என்பது மூலப்படிவங்களின் கருத்துருக்களையும் சுட்டு நிற்கின்றன. உரிப்பொருள் என்பது அந்தக் கருத்துருக்களில் கலந்துள்ள தனியர் உணர்வுகளைக் குறித்து நிற்கின்றன. எனின், இம்மூன்றும் பண்பாட்டு வகையில் தமிழரின் மூலப்படிவங்களாக விளங்குகின்றன.

எனவே, இவற்றைச் சங்க அக இலக்கிய மூலப்படிவங்கள் எனலாம். இலக்கிய மூலப்படிவங்கள் எல்லாம் பண்பாட்டு அர்த்தங்களைக் கொண்டவை என்பதால் பண்பாட்டு நனவிலிப் புரிதலின்றி மூலப்படிவங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

ஓர் இலக்கியத்துக்கு அகிலப் பொருண்மை, பண்பாட்டுப் பொருண்மை ஆகியவை உள்ளன. இவற்றில் அகிலப் பொதுவானவை உலகப் பொருண்மை எனவும் பண்பாட்டுப் பின்னணியிலானவை பண்பாட்டுப் பொருண்மை எனவும் கொள்ளலாம். திருக்குறள் உலகப் பொதுமறை என்றாலும் பண்பாட்டு இலக்கியமாகவும் உள்ளது. ‘தீயினால் சுட்டபுண்’ என்கிற குறள் அகிலப் பொது என்றால் ‘தெய்வம் தொழாஅள்’ என்கிற குறள் பண்பாட்டு நிலைக்கு உட்பட்டது. இதே மாதிரியான இரட்டைத் தளத்தில் சங்க இலக்கியங்கள் உள்ளன. இதை விளங்கிக் கொள்ளக் கருப்பொருள் கருத்தாக்கத்தை எடுத்துக் கொள்வோம்.

ஐம்புலன்களால் பெறப்படுகின்ற பொருட்கள், அகத்து உணர்வுகளான உரிப்பொருட்களுடன் கலந்த நிலையே கருப்பொருட்கள் ஆகும். இந்தக் கருப்பொருட்கள் திணைவாரியாக இப்படித்தான் புனையப்படவேண்டும் என்பது தொல்காப்பிய விதி. இந்த விதியை இலக்கியங்கள் வாயிலாக இலக்கணமாகப் பதிவு செய்கிறார் தொல்காப்பியர். தம் முன்னே இருக்கின்ற இலக்கியங்களின் சாரம் இந்தவிதி. இதைப் புலவர்களே உருவாக்கினர்.

தொல்காப்பியருக்கு முந்தைய இலக்கண ஆசிரியர்களும் இலக்கியத்தில் இருந்தே விதி வகுத்தனர். எனவே, புலவர்களே முழுமுதற் காரணம். அக உணர்வுக்கு ஏற்றப் புறப் பின்னணிகளை உருவாக்கவேண்டி இவ்வாறு செய்தனர். அதன்படி, கருப்பொருட்கள் சங்க அக இலக்கியத்தின் பொது மரபாயின. யூங்கிய நோக்கில் இவை பண்பாட்டுத் தளத்துக் கருத்துருக்கள் ஆகும். அதாவது, மூலப்படிவம் சார்ந்த படிமங்கள் ஆகும்.

இதுபற்றி மேலும் விளக்க வருகிறேன். பண்பாட்டு வாழ்வு நனவில் வெளிப்படையாகத் தெரிய இது எப்படி நனவிலி ஆகும் என்று கேட்கலாம். நனவின் செயல்பாடுகள் எல்லாம் நனவிலி தளத்தில் இருந்தே வருகின்றன. நனவில் கருத்துப்பதிவுகள் இல்லை. அதனால் சுய செயல்பாடுகள் இதற்கு இல்லை. உண்மையில் தனிநபர் அனுபவங்கள் நனவடங்கில் உள்ளன. பண்பாட்டு அனுபவங்கள் நனவிலியில் உள்ளன. இனப்பொது அனுபவங்கள் கூட்டு நனவிலியில் உள்ளன. இந்தக் கூட்டு நனவிலியே ஆதாரம் ஆகும்.

இதற்கு மூலப்படிவங்களே ஆதாரமாகும். இந்த வேறுபாடுகளை நன்கு புரிந்துவைத்துக் கொள்ளவேண்டும். மூலப்படிவங்கள் பற்றி யூங் கூறும்போது கூட்டு நனவிலியில் உள்ள உருதோற்றப் படிமங்கள் என்பார். இவை இயற்கையில் தென்படுபவையே என்றாலும் இவற்றில் அனுபவம் சார்ந்த உணர்வெழுச்சிகள் கலந்திருக்கும். அப்போதுதான் மனத்தில் இடம் கொள்ளும். உணர்வுகளற்ற பொருட்கள் மூலப் படிவங்கள் ஆகாது. அதேபோல், உணர்வுகளை வெளிப்படுத்தாத பொருட்கள் கருபொருட்கள் ஆகாது. ஏதோ விதத்தில் இயைபுடைய உணர்வு இவற்றில் இருக்கும்.

அதனால், மூலப்படிவச் சாயலில் கருப்பொருட்கள் இயங்குகின்றன.

மனிதனின் அனுபவம் சார்ந்த உணர்வெழுச்சியே இயற்கைப் பொருட்களைப் உளப் படிமமாக்குகின்றது. வெறும் காட்சிப் பொருள் படிமமாகாது. அது உள்ளத்தில் ஏதோ ஒன்றை செய்யவேண்டும். அப்படித் தொடர்ந்த செய்து வந்தால் நாளடைவில் படிமமாகி விடும். அடுத்தநிலையில் இது உளச்செயற்பாடுகளில் பங்காற்ற வந்துவிடும். இப்படித்தான் இலக்கியங்களில் படிமங்கள் வெளிப்படுகின்றன. காரணம், இலக்கியம் என்பது உளச் செயற்பாட்டின் ஒரு பாங்கு ஆகும். இது கனவுக்கு நிகரான உன்னதப் பாங்கு ஆகும். இதன் அடிப்படையில் கருப்பொருட்கள் படிமங்களாகின்றன. இவை மேலோட்டமாகப் பார்க்குபோது இலக்கியப் படிமங்களாகத் தெரிந்தாலும் யூங்கிய நோக்கில் மூலப்படிவங்களின் பிரதி(GF)கள் என்பது தெரியவருகின்றது. எப்படி?

கருப்பொருட்கள் யாவும் இயற்கைப் பொருட்களே ஆகும். இவை சங்க அக இலக்கியங்களில் வெற்றுப் பொருட்களாக அன்றி உணர்வுடைப் படிமங்களாக இயங்குகின்றன. இத்தகு ‘இயக்கவியல் பொருள் முதல்’ தன்மை (dialectical materialism) மூலப்படிவங்களின் முக்கியப் பண்பு ஆகும். சான்றாக, சூரியனை எடுத்துக்கொள்வோம். ஆதி மனிதனுக்கும் சூரியனுக்குமான உறவுகள் காலப்போக்கில் உணர்வெழுச்சி மிக்கப் பந்தமாகி உள்ளத்தில் பதிந்து விடுகின்றது.

அந்தச் சூரியனும் மன உணர்வும் கலந்து மூலப்படிவமாக அமைந்து, கடவுளாகவோ தந்தையாகவோ தலைவனாகவோ படிமம் கொள்கின்றது. இந்தப் படிமம் உளச் செயற்பாடுகளில் பங்குகொண்டு பல நிலைகளில் வெளிப்படத் தொடங்குகிறது. இதற்கு இலக்கியத்தளம் ஒரு வெளிப்பாட்டுத் தளமாகிறது. எனவே, அனுபவம் மூலப்படிவமாகி அதுவே படிமமாக வெளிப்படுகின்றது. மூலப்படிவம் என்பது கூட்டு நனவிலி. படிமம் என்பது பண்பாட்டு நனவிலி. இப்படித்தான் சங்கப் புலவர்களிடம் இருந்து கருப்பொருட்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு கருப்பொருட்களுக்கும் தனித்த மூலப்படிவப் பின்னணிகள் உள்ளன. காரணம், ஒவ்வொரு பொருளுடனான ஆதிமனிதனின் அனுபவங்கள் வெவ்வேறானவை. அதனால், அவை ஒவ்வொன்றும் தனித்த உள விழுமியங்களுடன் வெளிப்படுகின்றன.

மூலப்படிவங்கள் எல்லாம் உள விழுமியம் மிக்க உளப்படிவங்கள் என்பார் யூங். இதன்படி, யூங் சில மூலப்படிவங்களை முன் வைக்கிறார். சூரியன், சந்திரன், ஆறு, கடல், மலை, அருவி, பறவை, மாடு, மரம், நெருப்பு, காற்று, இசை, பூ, கடவுள், தாய், தந்தை, அரசன், அரசி, தலைவன், தலைவி, ஆண், பெண், குழந்தை, ஞானி எனக் காணக் கிடைக்கின்ற பொருட்கள் நபர்கள் எல்லாம் மூலப்படிவங்கள் ஆகின்றன.

இவை அனைத்தும் கூட்டு நனவிலிக்கு பொதிந்து இருப்பவை என்றாலும் இவை ஒரே மாதிரி அனைவரிடத்திலும் வெளிப்படும் என்றில்லை. சூழலுக்கு ஏற்ப பொருத்தமான மூலப்படிவங்களே வெளிப்படும். சான்றாக, மலைப் பிரதேசத்தில் வாழும் மனிதரிடம் மலை மூலப்படிவம் வீரியத்துடன் வெளிப்படும். கடற்கரை வாழ்வில் கடல் வெளிப்படும். இந்தப் பார்வையில் ஐந்திணையைக் காணலாம்.

திணைசார் கருப்பொருட்கள் பண்பாட்டுச் சூழல்சார்ந்த மூலப்படிவங்கள் என்றாகின்றன. இவை மூலப்படிவங்கள் அல்ல என்றாலும் மூலப் படிவப் பிரதிகளாகச் சங்க இலக்கியங்களில் வெளிப்பட்டுஉள்ளன. இந்தப் பண்பாட்டுக் பார்வையைத் தொல்காப்பியர் சங்க அக இலக்கியங்கள் வாயிலாகப் பெறுகின்றார். அந்த இலக்கியங்கள் புலவர்களால் ஆக்கம் செய்யப்பட்டவை.

அதனால்தான் ‘என்மனார் புலவர்’ என்று பல இடங்களில் தொல்காப்பியர் சுட்டுகின்றார். புலவர்களும் இதைத் திட்டமிட்டு வெளிப்படுத்தினாலும் கூட்டு நனவிலியே இதைத் செய்துள்ளது என்று யூங்கிய நோக்கில் துணியலாம். இருப்பினும், இப்படியான வெளிப்பாடுகள் தொடக்கத்தில் இயல்பிலேயே வந்திருக்கக் கூடும். பெருவாரியாக இவ்வாறு வெளிப்பட்டிருந்ததால் புலவர்கள் ஒன்று கூடி ஒரு வரையறை செய்து படைக்க முன் வந்திருப்பர்.

இதன் அடிப்படையில் பல புனைவுகள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த வழக்கம் நாளடைவில் இலக்கிய மரபு என்றானது. அதாவது, திணைசார் கருப்பொருட்கள் அமையும் நிலை எய்தியது. திணைசார் தெய்வம் (மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை). திணை சார் உணர்வு (புணர்தல், இருத்தல்,ஊடல், இரங்கல், பிரிதல்) திணைசார் உணவு (மூங்கிலரிசி, வரகு, செந்நெல், மீன், வழிப்பறி) எனத் திணைசார் வகைமைகள் உள்ளன. இவைபோல், மரம், தொழில், நீர், இசைக்கருவி, பண் என ஒவ்வொரு நிலையிலும் திணைசார் கூறுகள் தனித்து உள்ளன.

இவையாவும் புலவர்களின் கூட்டு நனவிலி படைத்த பண்பாட்டு நனவிலிப் படிமங்களாகும். அதாவது, மரம் என்பது மூலப்படிவம் என்றால், திணைசார் மரம் என்பது பண்பாட்டுப் படிவம் ஆகும். அதனால் ஒவ்வொன்றுக்கும் பின்புலமாக மூலப்படிவம் இருக்கும். இப்படித்தான் உலகப் பொதுவான கடவுள் மூலப்படிவத்தின் பண்பாட்டுப் படிமங்களாக முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை இடம்பெறுகின்றன. உலகப் பொதுவான உணவின் பண்பாட்டுப் பிரிவே திணைசார் உணவு ஆகும்.

உலகப் பொதுவான உடையின் பண்பாட்டுப் பிரிவே திணைசார் உடை ஆகும். உலகப் பொதுவான பூவின் பண்பாட்டுப் பிரிவே திணைசார் பூவாகும். இப்படிச் சொல்லிக்கொண்டு போகலாம் கருப்பொருட்கள் மட்டுமின்றி உரிப்பொருட்களும் மூலப்படிவங்களே என யூங்கிய நோக்கில் கூற இடமுள்ளது. குறிப்பாக, வெகுஜன உணர்வுகள் மூலப்படிவங்கள் நிலை எய்துகின்றன. இத்தகு மனம் சார்ந்த உணர்வுகளும் ஆதி மனிதனின் உருவாக்கங்களே ஆகும். குறிப்பாக, ஆதிக் குடும்பம் மற்றும் ஆதிச்சமூகம் தோன்றிய பிறகு ஆதி மனிதரிடம் உருவான பாசம், காதல், வீரம், இனப்பற்று, நகைப்பு, வெட்கம் முதலியவை கூட மூலப்படிவ மாதிரிகள் ஆகின்றன. இருப்பினும் இத்தகு உணர்வுகளுக்குப் பின்புலமாக உரு இருக்கவேண்டும். அப்போதுதான் மூலப்படிவம் என்றாகும். பக்திக்குக் கடவுள். காதலுக்குக் காதல் நபர் என இருக்கவேண்டும். இப்படியான ஆதி உணர்வுகள் காலங்காலமாகப் பின்பற்றி வர, காலப்போக்கில் கூட்டு நனவிலி நிலை எய்திவிடுகின்றன. அப்போது அவை மூலப்படிவம் ஆகின்றன.

இவை செயல்பாட்டுக்கு வர உரு அவசியம். அப்படிப்பட்டதே கருப்பொருட்கள் ஆகும். சான்றாக, பாசம் என எடுத்துக் கொண்டால் தாய் அல்லது தந்தை மூலப்படிவம் இருக்கும். பக்தி என்றால் கடவுள் இருக்கும். காதல் என்றால் எதிர்ப்பாலினம் இருக்கும். இலக்கியத்தில் கதைக்கரு நிலையில் அல்லது கவிதைக் களம் நிலையில் காதலோ வீரமோ பக்தியோ இருக்கும்.

மேற்கூறியவற்றில் காதல் மிகவும் கவனிக்கப்படவேண்டியது. இதுவே தொல்காப்பியரையும் யூங்கையும் மிக நெருக்கத்தில் வைத்துப் பார்க்கச் செய்கிறது. எனவே, காதலைச்சிறப்பு நிலையில் ஆராய வருகிறேன். யூங்கும் தொல்காப்பியரும் காதல் உணர்வுக்குச் சம அளவில் சிறப்பிடம் தருகின்றனர். உள்ளத்தின் அடிப்படை உணர்ச்சிகளுள் ஒன்றெனக் காதலை யூங் கூறுகிறார். தொல்காப்பியர் கூட இதையே உணர்த்துகிறார். அதனால்தான் பொருளதிகாரத்தில் அகம்சார்ந்த இயல்கள் என அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய ஐந்து உள்ளன (மாணிக்கம், 36).

புறத்துக்குப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இது இலக்கியம் வழியில் பெறப்பட்ட முடிபு ஆகும். சங்க இலக்கியத்தில் அகப் பாடல்களே மிகுதி. 2381 பாடல்களில் 1862 பாடல்கள் அகப் பாடல்கள் ஆகும். இதற்குப் புலவர்கள் காரணம். 473 புலவர்களில் 373 புலவர்கள் அகம் பாடியவர்கள் ஆவர். அதற்குக் காதல் அல்லது காம உணர்வின் ஆதிக்கமே காரணமாகும். பிராய்டின் வழியில் இதைப் புரிந்து கொள்வது எளிது. ஆனால், யூங் வழியில் இதை வேறுவிதமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆண்மை-பெண்மை பற்றிய யூங்கின் புரிதலைப் பார்த்தால் தொல்காப்பியரின் தலைவன் - தலைவி பற்றிய புரிதலை விளங்கிக்கொள்ளலாம்.

ஆண்மை - பெண்மை ஊடாடல்கள் குறித்து யூங் விரிவாகப் பேசும் அளவு தொல்காப்பியரும் பேசுகிறார். அவர் உளவியல் ரீதியில் பேசுவதை இவர் இலக்கிய ரீதியில் பேசுகிறார். வேறுவிதமாகக் கூறின், அறிவியல்முறை உளவியலில் யூங்கும் இலக்கியமுறை உளவியலில் தொல்காப்பியரும் விவரிக்கின்றனர். இவற்றுக்கு இடையிலான இணைநிலைகள் தொல்காப்பியரின் ஆழத்துப் பார்வை தெரிகிறது. யூங் ஆய்வுப்படி, உள்ளமானது ‘ஆண்மை - பெண்மை’ எனச் சரிசம அமைப்பில் இருப்பதாகும். இது இந்தியத் தத்துவத்தின் ஆன்மா அமைப்பான அர்த்தநாரீஸ்வரர் தாக்கத்தின் விளைவு ஆகும். தாவோயிசம் கூறும் ‘யாங் - யின்’ அமைப்பின் தாக்கமும் இதில் உள்ளது. (இது பற்றிப் பின்னால் விளக்க வருகிறேன்).

அகத்துள் இருக்கின்ற ஆண்மையை அனிமஸ் என்றும் பெண்மையை அனிமா என்றும் யூங் சுட்டுகிறார். அவர் கண்ட உள அமைப்பு: இந்தப் படம் யூங்கின் முழு உள அமைப்பை முன் வைக்கிறது. இதை ஆன்மாவின் உருத்தோற்றம் என்றும் கூறுவர். யூங்கிற்குக் கூட்டு நனவிலியே ஆதாரமாகும். அதன் ஆதாரம் அனிமா அனிமஸ் ஆகும். இதையே படம் உணர்த்துகின்றது. இதில், கூட்டு நனவிலியின் வேர் போல் ஆண்மை/ பெண்மை பிரிவு இருக்கிறது. அதாவது, உள ரீதியில் நாம் அனைவரும் இரட்டைப் பால்நிலை உடையவர்களே என்பார் யூங். எனில், உளச் செயல்பாட்டின் ஆதாரமாக அனிமா - அனிமஸ் இருக்கிறது என்று பொருள்.

இந்த அனிமா- அனிமஸ் பகுப்பு உளப்பாலியல் அமைப்பாகும். யூங்கின் பார்வையில் உடலியல் பால்நிலையை விட உளப் பாலியல் முதன்மையானது. இது பிராய்டின் வழித் தாக்கம் ஆகும். மனித மனம் இரட்டைப் பால்நிலை கொண்டிருப்பது என்பதை பிராய்டின் வழியில் யூங் ஏற்றுக்கொள்கிறார். (ஆனால், இயங்கியலில் சிறிது வேறுபடுகிறார்). மனித மனம் அடிப்படையில் இரட்டைப் பால்நிலையில் ஆனதே என்பது உளப்பகுப்பாய்வின் முக்கியக் கோட்பாடாகும். இதற்குப் பின்புலமாக இயற்கை அமைப்பு இருக்கிறது. உயிரினங்களின் (ஓரறிவு முதல் ஆறறிவு வரை) அடிப்படைப் பாகுபாடாக ஆண்மை, பெண்மை இருக்கிறது. இதை உருவாக்கிய இயற்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. அதுதான் இனப்பெருக்கம் ஆகும். காமத்தையும் பால்நிலையையும் அடிப்படையாகக் கொண்ட இரட்டைப் பால் நிலையை யூங் தமது மூலக் கோட்பாடுகளும் ஒன்றென இவற்றைக் கொள்கிறார். (பிராய்டிடம் இதுவேமூலக் கோட்பாடாகும்).

அனிமா - அனிமஸ் குறித்து யூங் விவரிக்க வரும்போது, ஆதிமனிதர்கள் கண்ட முதன்மையான கருத்துருவெனக் காட்டுகிறார். பிற விலங்குகளிடம் ஆண் பால்/ பெண்பால் என்கிற உடலியல் பாகுபாடு இருக்க, மனிதரிடம் மட்டுமே ஆண்மை – பெண்மை பாகுபாடு இருக்கிறது. காரணம், விலங்குகளின் காமம் உடலியல் சார்ந்தது (genetiality). மாறாக, மனிதரிடம் இருக்கின்ற காமம் உளவியல் சார்ந்தது (sexuality). இதை உளப் பாலியல் (psycho sexual) என்பர். இந்த மாற்றத்துக்குக் காமத்தின் மீதான ஆதிச் சமூகத்து அழுத்தங்கள் காரணமாகின்றன. இந்த அழுத்தங்களால் உடலியல் காமம் உளவியல் காமம் என்றாகித் திரிபடைந்து விடுகின்றது.

இந்தக்கருத்து பிராய்டிடமே இருந்த ஒன்று. இதிலிருந்து வளர்த்தெடுத்த யூங், ஆண்மை பெண்மை குறித்துத் தம்போக்கில் பேச வருகிறார். உடல்நிலையின் ஆணானவன் உளப் பெண்மையையும் பெண்ணானவள் உளஆண்மையையும் அழுத்தி மறைத்துக் கொள்கின்றனர் என்பார் அவர் (Stevens, 47). அந்த மறைவிடம் காமத்துணைக்கான (காதல், இல்லறம்) கருத்துருவாக அல்லது இருப்புவெளியாக அமைந்துவிடுகின்றது. இது முழுமைக்கும் உள இருப்புச் சார்ந்ததாகும். இதைப் பின்வரும் படம் விளக்கும் : இந்தப் படம் தாவோயிசத்தின் ‘யாங்-யின்’ அமைப்பாகும். இதைத் தமது கருத்தியலுக்கு யூங் தகவமைத்துக் கொள்கிறார். இந்த அமைப்பு மனித மனத்தின் அடிப்படை அமைப்பாகும். இதை அர்த்தநாரீஸ்வரர் அமைப்புடன் இணைத்துப் பார்க்கலாம்.

உளநிலையில் மனிதர் யாவரும் அர்த்தநாரி நிலையில் இருப்பதை யூங் மூலம் தெளிவுறலாம். ஆக, ஆணுள் பெண்ணுரு பெண்ணுள் ஆணுரு என உள்வெளி இருக்கவே செய்கிறது. இதை ஆதி மனிதர்கள் தங்களின் காதல் அனுபவங்களால் உருவாக்கினர். அன்றிலிருந்து காலங்காலமாகக் கடத்தப்பட்டு இன்று நம்மிடம் இயக்கம் கொள்கிறது. வள்ளலார் ஒருபடி மேலே போய் இது பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்கிறார்.

‘ஆணினுள் பெண்ணும் பெண்ணினுள் ஆணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி’

என்பது அவரின் வாக்கு. இதை அகத்தாய்வு செய்து வெளிப்படுத்துகிறார். இப்படியான அகத்தாய்வு உளப்பகுப்பாய்விலும் நடக்கின்றது. பிராய்டும் யூங்கும் சில கோட்பாடுகளைச் சுய பகுப்பாய்வு மூலம் கண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உளப்பகுப்பாய்வுக்கும் ஆன்மீகத்துக்கும் சுய ஆய்வு அவசியம். இல்லையென்றால் பயணிக்க முடியாது. அனிமா - அனிமஸ் குறித்து யூங் விவரிக்கும்போது அந்த இடத்தில் அகிலப்பொதுவான ஆதாம் ஏவாள் இருக்க, பண்பாட்டுத் தளத்தில் மன்மதன் ரதி இருக்கின்றனர்.

திரைப்பட நாயகர் நாயகிகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம். உலகளவிலான நாயக நாயகிகள், தேசிய அளவிலான நாயக நாயகிகள், மொழி அளவிலான நாயக நாயகிகள் அனிமா அனிமஸ் நிலையைப் பெறுகின்றனர். தொன்மங்கள், புராணங்கள், இலக்கியப் பாத்திரங்கள் அனிமா அனிமஸ் தளத்தில் அமைவதுண்டு. மேலும், சமூக அளவில் மேம்பட்ட ஆளுமைகள் அனிமா அனிமஸ் பிரதிகள் என்றாவதுண்டு. இதன்படி, அனிமஸ் என்கிற ஆணுருவில் விவேகானந்தர், அப்துல் கலாம் வருகின்றனர். பெண்ணுருவில் அன்னை தெரசா, இந்திராகாந்தி வருகின்றனர். ரோல் மாடல் ஆளுமைகள் எல்லாம் அனிமா அனிமஸ் ஆவது இயல்பு. இது இடத்துக்கு இடம் மாறுபடுவதுண்டு.

இவை ஒருபுறம் இருக்க, அனிமா அனிமஸ் உருக்கள் காதல் உறவில் முழு வீரியத்துடன் செயல்படுகின்றன. காரணம், காதல் உறவே இதன் முதன்மை நோக்கமாகும். ஆணிடம் உள்ள கற்பனைப் பெண்ணுரு அனிமா எனப்படுகிறது. பெண்ணிடம் உள்ள கற்பனை ஆணுரு அனிமஸ் எனப்படுகின்றது. இதன்படி, ஆணினுள் பெண்ணும் பெண்ணினுள் ஆணும் இருப்பது உறுதியாகிறது. இங்கே இரட்டைப் பாலுமை (bisexuality) காதல் தன்மையைப் பெற்றுவிடுகின்றது.

அதாவது, ஆணினுள் மறைந்து கிடக்கும் பெண்மை, காதல் பெண்ணாக வடிவம் கொள்கிறது. அதேபோல், பெண்ணினுள் மறைந்து கிடைக்கும் ஆண்மை, காதலனாக வடிவம் கொள்கிறது. எனவே, காதல் உறவு என்பது புறநிலை உறவுபோல் தெரிந்தாலும் அகத்துள் நடக்கின்ற அகமன உறவாகிறது. அதாவது, அகத்துள் அனிமா - அனிமஸ் இடையே நடக்கின்ற காதல் உறவுதான் புறத்தில் வெளிப்படுகின்றது. இது உளப்பகுப்பாய்வின் சிறப்புக் கருத்தாக்கங்களுள் ஒன்றாகும்.

காதலன்- காதலி என்பது அனிமஸ் – அனிமா இணைநிலை. இதன் மூல உணர்வு பால்நிலையாகும். காரணம், இரட்டைப் பால்நிலை என்பது காமத்துடனும் காதலுடனும் மிக நெருக்கமானதாகும். இதன்படி, அனிமா - அனிமஸ் மூலப்படிவங்களின் நேரடிப்பிரதிநிதிகளாக ஏவாள் - ஆதாம் இருக்கின்றனர். இந்தியப் பண்பாட்டுச் சூழலில் ரதி- மன்மதன் உள்ளனர். தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் வள்ளி-முருகன் வருகின்றனர். புகழ்பெற்ற இலக்கியப் பாத்திரங்கள் புராண நாயகர்கள் இவற்றில் அடங்குவர். (இராமன், கிருஷ்ணன், சீதை, கண்ணகி, இன்னும் பலர்). அந்த வகையில் தொல்காப்பியர் சுட்டுகின்ற தலைவன் - தலைவி ஐயத்திற்கு இடமின்றி அனிமஸ் அனிமா பிரதிகள் ஆகின்றனர். இதைப் பற்றித்தான் சிறப்புப் பார்வைகாக இங்குக் காண இருக்கிறோம் உண்மையில் சங்கப் புலவர்களே சிறப்புக்குரியவர்கள். காரணம், அவர்களே காதலைப் பொது உணர்வாகப் பார்த்து வார்த்துள்ளனர்.

காதலனையும் காதலியையும் சிறப்புப் பெயர்களில் பெரும்பாலும் கையாள்கின்றனர். ஊரன், நாடன், துறைவன், சுடர்த்தொடி, கிழவோன், கிழத்தி முதலிய பெயர்கள் தலைவன் தலைவியைக் குறிக்க வருவதாகும். காதலில் இயற்பெயரைப் புலவர்கள் சுட்டவில்லை. காரணம், காதல் உணர்வு அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்ந்துள்ளனர். இதையே தொல்காப்பியர் ஓர் இலக்கிய மரபாகப் பதிவு செய்கிறார்.

 மக்கள் நுதலிய அகனைந்திணையும்
 சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் 

(தொல். 1000)

என்பது தொல்காப்பியம். இப்படிக் கூறிய தொல்காப்பியர் புறத்திணைக்குப் பெயர் சுட்டுதல் வரும் என்கிறார்.

 புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
 அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே 

(தொல்.1001)

இதில் ஓர் உளவியல் மெய்ம்மை உள்ளது. புறத்திணை அம்சங்களான வீரம், ஈகை அனைவரிடத்திலும் இருக்கின்ற உளப்பண்புகள் இல்லை. அரிதான இந்தப் பண்புடைய ஆட்களின் பெயரைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்கிற நுண்ணியப் பார்வை தொல்காப்பியருக்கும் சங்கப் புலவர்களுக்கும் இருந்தன. ஆனால், அனைவரிடத்திலும் காதல் உணர்வு இருக்கவே செய்யும். அதை வெளிப்படுத்துகின்ற போக்கில் மாறுபாடு இருக்கலாமேயன்றிக் காதல் உணர்வில்லாமல் யாருமில்லை.

அப்படி இருக்கவும் முடியாது. இல்லறம் என்பதும் ஒருவித காதல் ஒழுக்கமே ஆகும். எனவேதான், காதல் உணர்வைப் பொதுப் பெயர்கள் (தலைவன் தலைவி) வழியில் புலவர்கள் வெளிப்படுத்த, அதைத் தொல்காப்பியர் இலக்கிய மரபாக்குகிறார். இது யூங்கிய பண்பாட்டு நனவிலி வெளிப்பாடாகும். அதாவது சங்ககாலத் தமிழர்ப் பண்பாட்டின் இலக்கிய மரபாகும். உலகளவில் காதல் இலக்கியங்களில் பெயர்ச்சுட்டிக் கூறா மரபு இருக்கிறது. ஆனால், தலைவன்-தலைவி என்று சுட்டாமல் உள்ளன. சங்கத் தமிழில் மட்டுமே தலைவன்-தலைவி உள்ளது. எனவே, இது யூங்கின் அனிமா - அனிமஸ் கருத்துருவின் வெளிப்பாடாகும்.

எனவே, தொல்காப்பியத் தலைவன், தலைவிமுறையே யூங்கிய அனிமஸ், அனிமா பிரதிநிதி ஆகின்றனர். அதாவது, தலைவன் என்பவன் சங்கத்தமிழ்ப் பண்பாட்டு அனிமஸ். தலைவி என்பவள் சங்கத் தமிழ்ப் பண்பாட்டு அனிமா.

அடுத்து, சிறப்புப் பண்புகள் குறித்துப் பார்ப்போம். காரணம், இந்த அனிமா X அனிமஸ் உறவுமுறை உளவாழ்வு அடிப்படையில் ஆனது. இதை உளவியல் தளத்தில் இருந்து பேசுகிறார் யூங். இதற்கு இணையாகத் தலைவன் X தலைவி என்பதும் உளவாழ்வுக்கு உரியதே என்பதை அகத்திணை என்கிற தலைப்பில் வைக்கிறார் தொல்காப்பியர். முதலில் யூங். அனிமா என்கிற பெண்ணுரு பெண்ணுள் சில பண்புகளையும் ஆணுள் சில பண்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், அனிமஸ் என்கிற ஆணுரு ஆணுள் சில உணர்வுகளையும் பெண்ணுள் சில உணர்வுகளையும் வெளிப்படுத்தும். இது ஒரு வித்தியாசமான பார்வை. அனிமா என்கிற பெண்ணுரு ஆடவரிடம் மனோபாவங்களுக்கு (moods) முன்னுரிமை கொடுக்கும். எதிர்வினை (reactions) புரியவைக்கும். துடிப்புகளை (impulses) உருவாக்கும். இதுவே பெண்டிரிடம் நம்பிக்கைகள் (beliefs), கடப்பாடுகள் (commitments), அகத்தூண்டல்கள் (inspirations) ஆகியவற்றை ஏற்படுத்தும். இதே மாதிரி அனிமஸ் என்கிற ஆணுரு முறையே பெண்களிடமும் ஆண்களிடமும் ஏற்படுத்தும் (Samuels,24). சில பண்புகள் பண்பாட்டுக்கு ஏற்ப அமைவதுண்டு. சான்று. நாற்பண்புகள்.

அனிமாவானது ஆடவரிடம் தர்க்கமற்ற மனோபாவங்களை (illogical moods) ஏற்படுத்த, அனிமஸானது பெண்டிரிடம் காரணமற்ற அபிப்பிராயங்களை (unreasonable opinions) ஏற்படுத்துகின்றன. இதனால், அனிமாவால் ஆடவர் மனம் இனம்புரியாத மனநிலையையும் அனிமஸால் பெண் மனம் விவாத நிலையில் கருத்துருக்களையும் ஏற்படுத்துகின்றன (Bennet, 12). இவற்றைத் தொல்காப்பியத்திலும் காண முடிகிறது.

 ஆண்மை, பெண்மை இரண்டுக்குமான தனித்த பண்புகளைக் குறிப்பிடும்போது,
 பெருமையும் உரனும் ஆடூஉ மேன 

(தொல்.1044)

என்று பெருமையும் வலிமையையும் ஆண்மை என்கிறார். அதேபோல்,

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப

(தொல்.1045)

என்று பெண்மைக் குணங்களாக அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலும்,

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான 

(தொல். 1155)

என்று பொருளியலில் குறிப்பிடுகிறார். இது கவனிக்கப்பட வேண்டியது. காரணம், ஆண்மைப்பண்புகளாகக் கருதி வருகின்ற சில பண்புகளைத் தொல்காப்பியர் இங்கே பெண்மை ஆக்குகிறார்.

முந்தைய நூற்பாவில் பெண்மைக்கான எதிர்மறைப் பண்புகளை ‘என்ப’ என்று பழைய கருத்தை வழி மொழிந்தவர் இப்போது தன்கருத்தாக ஆறு குணங்களை முன் வைக்கிறார். இவை ஆறும் நேர்மறைப் பண்புகள் ஆகும். இதன்மூலம் முந்தைய மரபைத் தொல்காப்பியர் கட்டுடைக்கிறார். இன்னொரிடத்தில்,

 கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
 மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
 விருந்து புறந்தருதலும் ஓம்பலும்
 பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் 

(தொல். 1098)

என்கிறார். இவையாவும் இலக்கியம் வழியில் தொல்காப்பியர் கண்ட தமிழுலக வழக்குகள் ஆகும். இவற்றில் ஒரு குறிப்பு உள்ளது. ஆண்மையை விடப் பெண்மை பற்றித் தொல்காப்பியர் அதிகம் பேசுகிறார். இதற்கு யூங்கிய நோக்கில் ‘அனிமா தாக்கம்’ அவரிடம் இருந்ததைக் காட்டுகின்றது. அதாவது, அவரின் அனிமா அவரை அதிகம் ஈர்த்துள்ளது எனலாம். இது எதிர்பாலின ஈர்ப்பில் விளைந்த விளைவு எனக் கூற இடமுள்ளது. யூங்கிடமும் இதே ஈர்ப்பு இருப்பதை அவரின் ‘அனிமா- அனிமஸ்’ சொல்லாக்கத்தைக் கொண்டு அளவிடலாம்.

அதாவது, அனிமஸ்- அனிமா (ஆணுரு-பெண்ணுரு) என்று சொல்லாமல், பெண்மையை முதலில் வைத்து அனிமா- அனிமஸ் என்று சுட்டியதில் அவரிடம் அனிமா ஈர்ப்பு மிகுந்த இருப்பதை அவர் நோக்கிலேயே அறிய முடிகிறது. (தலைவன் – தலைவி என்று தொல்காப்பியர் எங்கும் கூறவில்லை) முன்பே கூறியபடி, யூங்கின் அனிமா அனிமஸ் கருத்தாக்கத்துக்கு இந்திய ‘சிவசக்தி’ கருத்தாக்கம் முன்னோடி என்றாலும் தாவோயிசம் (Taoism) கூறும் யாங் (Yang) யின் (Yin) இருமைக் கோட்பாடு தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர் அனைவரிடத்திலும் இந்த ஆண்சக்தி (யாங்) பெண்சக்தி (யின்) கலந்தே உள்ளன. இவ்விரண்டும் பிரபஞ்ச சக்திகள். அண்டமே பிண்டம் என்பதன் வழியில் மனிதரின் நிலையும் இதுவே ஆகும். இவ்விரண்டும் சேர்ந்ததுதான் ஆன்மாவின் முழுநிலை (wholeness) ஆகும்.

இதை அடைய முழுமையான அனிமா அனிமஸ் சேர்கையால் முடியும். அதாவது, யாங்-யின் முழுநிலை சேர்க்கையால் முடியும். இவற்றில் யாங் வெளிப்பாடாக ஆண்மை பண்புகளும், யிங் வெளிப்பாடாகப் பெண்மை பண்புகளும் உள்ளன. பொதுவில், யாங் என்பது வெளிச்சத்தையும் யிங் என்பது இருளையும் குறிக்கும். இதை முறையே நனவு மற்றும் நனவிலி மனத்துடன் இணைத்துப் பேசுவர் (Coward,17).

இவ்விரண்டும் சேர்ந்ததுதான் முழுநாள். இனி, அனிமா அனிமஸ் கருத்தாக்கங்களுடன் தொல்காப்பியரின் ஆண்மை - பெண்மை (அல்லது தலைவன் - தலைவி) கருத்தாக்கங்கள் குறித்துக் காண்போம். தொல்காப்பியர் கூறும் ஆண்மையில் பெருமையும் வலிமையையும் உள்ளன. இதன் நீட்சியாக அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய நான்கும் ஆண் குணங்கள் என்கிறது தமிழ் மரபு. பெண்மையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளன. இதன்படி, சமூகத்து நிலையாக ஆண்மையும் இல்லத்து நிலையாகப் பெண்மையும் இருப்பதைப் பதிவு செய்கிறார் தொல்காப்பியர். யூங்கின் அனிமஸ் சமூகம் சார்ந்தது. அதாவது, நனவு சார்ந்தது. அவரின் அனிமா அகம் சார்ந்தது. அதாவது, நனவிலி சார்ந்தது.

ஆணின் ஈகோ நனவுக்கும் பெண்ணின் ஈகோ நனவிலிக்கும் எதிர்வினை (reactions) புரிய வேண்டியநிலையில் இருப்பதை யூங்கும் தொல்காப்பியரும் கூறுகின்றனர். இதை வேறு நிலையில் கூறின், ஆண்மை தர்க்கமானது; பெண்மை தர்க்கமற்றது. அதனால்தான் அறிவியல் ஆண்மையாகவும் கவிதை பெண்மையாகவும் கொள்ளப்படுகின்றன. இங்கே ஆண் / பெண் என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆணிலும் பெண்மை உண்டு. பெண்ணிலும் ஆண்மை உண்டு. இது இரட்டைப் பாலுமை (bisexuality) நிலைக்கு உட்பட்டது.

பெண்மையை உணர்வுகளாகச் சித்தரித்த தொல்காப்பியர் பெண்பாலினத்தின் பண்புகளாகச் ‘செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும்’ உள்ளன என்று இன்னோர் இடத்தில் கூறுகிறார் (தொல். 1155). இவை யாவும் தர்க்கவியல் சார்ந்தவை. யூங்படி, பெண்மை தர்க்கமற்றது. எனில், தொல்காப்பியப் பெண்மையை எப்படிப் புரிந்து கொள்வது? காரணம், ஒருபக்கம் தர்க்கத்துடனும் மறுபக்கம் அதர்க்கத்துடனும் பெண்மையை இணைத்துக் காட்டுகின்றார் தொல்காப்பியர்.

உண்மையில் செறிவு முதலான குணங்களைத் தொல்காப்பியர் பெண்மை குணங்களாகப் பொதுவில் வைக்கவில்லை. மாறாக, காதல் ஒழுக்கத்தில் இருக்கின்ற பெண்ணின் பண்புகளாகக் கூறுகிறார். அடக்கம், அமைதி, நேர்மை, சொல்வன்மை, நல்லன தீயன ஆராயும் அறிவு, பிறர் கண்ணுக்கு அருமை என இருப்பது பெண்பாலுக்கு உரியன என்கிறார். இவற்றில் அறிவு,செறிவு என்பன அவளின் ஆண்மை வெளிப்பாடு என்று யூங்கிய நோக்கில் கூறலாம். அதற்குக் காரணம் உள்ளது. யூங்கிய ஆய்வுப்படி, ஆண்மை பெண்மை கலந்த கலவையாக ஒவ்வொரு மனித மனமும் உள்ளது. அப்படிப்பட்டவரிடம் இருந்து இருவித பண்புகளும் கலந்தே வெளிப்படும்.

காரணம், மனித வெளிப்பாடுகள் யாவும் ஒட்டு மொத்த மனத்தின் புறத்தெறிவுகள் (projections) ஆகும். அதனால், சூழலுக்கு ஏற்பக் கூடியோ குறைந்தோ ஆண்மை- பெண்மை வெளிப்படும். இதை அறிவியல்முறையில் ஒரு கோட்பாடாக யூங் நிறுவுகிறார். இலக்கிய முறையில் தொல்காப்பியர் இலக்கணமாக நிறுவுகிறார். எழுத்துகளில் கவிதை என்பது பெண்மை. அறிவியல் என்பது ஆண்மை. கவிஞர்கள் தனியாகவும் அறிவியலர்கள் தனியாகவுமிருப்பர். ஆணிடம் உள்ள பெண்மை கவிதையாக வெளிப்படும் (பாரதியார்). பெண்ணிடம் உள்ள ஆண்மை அறிவியலாக வெளிப்படும் (மேரி க்யூரி).

கவிதை, அறிவியல் கலந்த சிந்தனையாளர்களையும் வரலாற்றில் (மார்க்ஸ், லக்கான், ஜூலியா கிறிஸ் தேவா, காயத்ரி சக்ரவர்த்தி) பார்க்கலாம். பெண்ணியக் கவிஞர்கள் இதில் அடங்குவர். காரணம், இவர்களிடம் பெண்ணியமும் கவிதையும் கலந்த வெளிப்பாடுகள் இருக்கின்றன. தமிழில் மாலதிமைத்திரி, சுகிர்தராணி, குட்டி ரேவதி முதலியோரின் வெளிப்பாடுகளில் இருபால்தன்மை உள்ளது என்று யூங்கிய நோக்கில் அறியலாம்.

(தத்துவவாதிகள் ஆண்மையையும் பெண்மையையும் சமமாகப் பெற்றவர்கள் எனலாம்). சங்க காலத்து ஆண் புலவர்கள் மனதளவில் பெண்மை சாயல் உடையவர்கள். அதனால்தான் அவர்களிடம் தலைவி, தோழி கூற்றுப் பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்பாற் புலவர்களிடம் ஆண் கூற்றுப் பாடல்கள் அல்லது புறப் பாடல்கள்யாவும் அவர்களில் ஆண்மை வெளிப்பாடுகள் எனலாம். புறப்பாடல்களை எதிர்ப்பாலின ஈர்ப்பின் வெளிப்பாடு எனவும் கொள்ள இடமுள்ளது. (தனி ஆய்வுக்கு உரியது). இறுதியாக ஒரு செய்தி. யூங் கூற்றுப்படி இரட்டைப்பால்தன்மை அனைவருக்குமான பொது மனநிலை.

இது உளப் பால்தன்மை பட்டது. இந்த மனோபாவத்தில் இருந்து ஒவ்வொருவரிடத்தில் இருந்தும் ஆண்மையும் பெண்மையும் மாறி மாறி நடத்தைகளாக வெளிப்படும். ஓர் ஆண் முழு ஆண்மையுடனும் ஒரு பெண் முழுப் பெண்மையுடனும் இயங்க வாய்ப்பில்லை. இதைச் சோதனைமுறை உளவியலில் யூங் காண, இலக்கியமுறை உளவியலில் தொல்காப்பியர் காண்கிறார். எனவே, தலைவி தலைவன் இருமையும் அனிமா, அனிமஸ் இருமையும் இணைநிலையாக இருக்கிறது என்பதே இந்த ஆய்வின் முடிவு. பெயர் சுட்டா மரபு இப்படியான இயைபை உறுதிபடுத்துகிறது.

இதைக் கொண்டு அனிமா, அனிமஸ் ஊடாடல்களைத் தலைவன் தலைவி உறவு முறைகளுடன் தொடர்புபடுத்தி ஆராயலாம். இது இந்த ஆய்வின் அடுத்தக் கட்ட வளர்ச்சி. குறிப்பாக ஐந்திணை உறவுகளில் நேர்மறைத் தன்மையும் கைக்கிளை, பெருந்திணை உறவுகளில் எதிர்மறை உறவுகளில் இடம் பெறுகின்ற விதங்களை யூங்கிய அனிமா, அனிமஸ் உறவுகளுடன் இணைத்துப் பேசவாய்ப்புகள் மிகுதி. இது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய களம் ஆகும். தொல்காப்பியத்திற்கும் யூங்கியத்திற்கும் இடையே இணைநிலை கருத்துகள் உள்ளன. இவற்றுக்குக் கூட்டு நனவிலி செயல்பாடுகளே காரணம் என்று யூங்கிய நோக்கில் புரிந்து கொள்ளலாம்.

நூல்கள்

 • இரவிச்சந்திரன் தி கு (2013) உணர்வெழுச்சி மிகச்சுருக்கமான அறிமுகம் (மொ.பெ). அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்.
 • மாணிக்கம், வ சுப (2007) தமிழ்க் காதல். மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
 • பாலசுந்தரம், ச (2012) தொல்காப்பியர் உரை: பொருளதிகாரம் தொகுதி 3. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
 • Bennet, E.A (1983) What Jung Really Said. Schocken Books. New York
 • Coward, Harold (1985) Jung and Estern Thought. State University of New York Press. Albany
 • Chodorow, Joan (2006) Active Imagination. Renos K. Papadopoulos (ed). The Handbook of Jungian Psychology. Routledge. London. pp. 215-28
 • Fray, Northrop (1972) Archetypal Criticism. David Lodge (ed). Twentieth Century Literary Criticism: A Reader. Longman. London pp. 421-431
 • Freud, Sigmund (1986) Standard Edition of Complete Psychological Works of Sigmund Freud. Vol.11. The Hogarth Press and the Institution of Psychoanalysis. London
 • Jung, C.G (1972) Psychology and Literature. David Lodge (ed). Twentieth Century Literary Criticism: A Reader. Longman. London pp. 175-188
 • Mattoon, Mary Ann (1981) Jungian Psychology in Perspective. The Fresh Press. New York
 • Mitchell, (Stephen A (1995) Freud and Beyond : A History of Modern Psychoanalytic Thought. Basic Books. New York
 • Samuels, Andrew (1986) A Critical Dictionary of Jungian Analysis. Routledge and Kegan Paul. London
 • Schwartz, Jeffery (2002) The Mind and the Brain : Neuroplasticity and the Power of Mental Force. Regan Books. New york
 • Singer, Thomas (2010) Cultural Complexes in Analysis Murray Stein (ed) Jungian Psychoanalysis : Working in the Spirit of Carl Jung. Open Court. Chicago
 • Stevens, Anthony (1999) On Jung. Princeton University Press. Princeton
 • Tacey, David (2012) The Jung Reader. Routledge. London
 • Walker, Steven F (2002) Jung and Jungian Myth : An Introduction. Routledge. London

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer