துர்க்கை கவிதைகள்


பகிரு

நட்சத்திரங்கள் சிவந்திருக்கின்றன

நெடுந்தூரம் வந்துவிட்டோம்
இருட்டில்தான் எங்கள் பயணம்
பகலெல்லாம் அனல்காற்று
இரவெல்லாம் இளகி கொதிக்கும் சாலை
கூட்டம் கூட்டமாக நாங்கள்
சாலைகளில் விழிக்கிறோம் துயில்கிறோம்
எங்கள் வழித்துணை டிரான்சிஸ்டரில்
எஜமானர் அடிக்கடி நேரலையில் புன்னகைக்கிறார்
குருதி கொட்டிய படியே
வாழப் பழகுங்கள் என்கிறார்
இறுகித்தடித்த அப்புன்னைகயில் எதுவுமில்லை
அழுக்குத் துணிகள் அடங்கிய
பெட்டியின் மீது குழந்தை கந்தலாய் துயில்கிறது.
தோளில் அமர்ந்திருக்கும் மகள்
நட்சத்திரங்களை எண்ணியபடி வருகிறாள்
அப்பா! நட்சத்திரங்கள்
அங்குமிங்கும் அலைகின்றன
நாமும் நட்சத்திரங்களாக மாறுவோமா?
அலைவதே வாழ்க்கையானால்
இக்குருதி வழிப்பயணம் முடியும் முன்பே
நாம் நட்சத்திரங்களாக மாறியிருப்போம் மகளே!

கண் திறக்கும் நெல்மணிகள்

பால் பிடித்திருக்கும்
நெற்கதிர்களின் முனைகளால்
தங்காளின் அணங்கேறிய பிரதி
எழுதப்படுகிறது
சிறுமழை தன்னை
அழுது அழுது வாசிக்கிறது
மேற்கில் நீர்வற்றிய
கணவாய்க் குள்ளிலிருந்து
ஓடி வருகிறார்கள் குழந்தைகள்
அதிசயமாய் குறுங்கும்
பால்மணிகளை மென்றுகொண்டே
அமைதியாக நிரம்பியிருக்கும்
தங்காளின் கிணற்றுள்
நிலவு நீந்துகிறது
கிணற்றடி வரப்பில் பசியாறிய
வயக்காட்டு கிழவனின்
விரல்களின் நிழலைப் பருகியபடி
கண் சிமிட்டுகின்றனர்
மீன்களாக மாறிய குழந்தைகள்
இப்போது தங்காளின் கிணறு
அமைதியாக இருப்பதில்லை
மீன்குஞ்சுகளின் சிரிப்பொலியில்
எந்நேரமும் குதூகலிக்கிறது நீர்க்கிணறு.

உப்புநீர்

பள்ளி விட்டதும்
மறிக்குட்டியின் கீதத்தில்
திளைத்திருப்பாய் நீ!
உன் நீலநிறப் பாவாடையில்
சுருண்டு படுக்கும்
ஆட்டுக்கொச்சை வாசம்
அப்பாவின் தொப்பூளில்
தலை சாய்த்தபின்
உன் விடிவும் முடிவுமல்லாத
நித்திரையில் கிடக்கும்
கைகளில் ஊறிய வெண்பருக்கைகளுக்காக
மலையடியில் பறந்துவரும்
அலகுடைந்த காகம்
கனவில் மறியின் நினைவோடு
அம்மாவைத் தழுவும்
வளையல்கள் கீறிய கைகளில்
மஞ்சள் அரைத்து தடவுகிறாள்
புரண்டால் கழுத்தை அறுக்கும்
கண்ணீரில் சாயமிழந்த மஞ்சள்கயிறு
நீ! தலை சாய்ந்தாடும்
அப்பாவின் தொப்பூள்கொடி
சருகாகிப் பறந்தபின்
மீளாத உன் வருகைக்காக
மலையடியில் காத்திருக்கிறது
அலகுடைந்த காகம்...

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer