தலைவாசல்

அன்புடையீர், வணக்கம்.

ஆதாயவாதமும் சந்தர்ப்பவாதமும் அரசியலின் உடலும் உயிருமான ஜீவாதாரங்களாகிவிட்டன. குடியாட்சியின் நாயகர்களாகிய நாமும் சீர்கெட்ட இந்தச் செல்நெறிகளை நம் இயங்கு நெறிகளாக ஒரு மனதாகவே ஏற்றுக்கொண்டுவிட்டோம். இனியென்ன கேட்டுக்கேள்வி கட்டுத்திட்டம் ஏதுமில்லை. மனதை உலுக்கும் சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்திருக்க அங்கு ஆட்சி பரிபாலனம் செய்யும் பா.ஜ.க. அரசு அதைத் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு இரண்டும் இவ்விடயத்தில் காட்டும் மெத்தனம் அவற்றின் சுயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆண்டுக்கொண்டிருக்கும் சொந்த நகரம் லங்கா தகனம், அரசர் பெருமானுக்கோ சங்கீத கவனம். அல்லற்பட்டு ஆற்றாது கசந்து வந்த பழங்குடியினரின் துயர் துடைக்காது மன்னர்பிரான் விருந்துண்டு களித்திருக்க வெளிநாடு பறந்துகொண்டிருக்கிறார். மானங்கெட அங்குள்ளவர்கள் எழுப்பிய வினாக்களை எதிர்கொள்ள முடியாமல் தரையிறங்கி இப்போது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சினிமா வசனம் பேசுகிறார். என்ன சொல்வது இந்த இழிவான அழி வழக்கை... சொன்னால் வெக்கம் சொல்லா விட்டால் துக்கம். இதுவல்ல மக்கள் வேண்டுவது...

வாழ்மானங்கள் தொலைத்த சிறும்பான்மை இனம் எதுவென்ற பொழுதும் அது அதன் நெருக்கடி  இல்லாத, இயல்புநிலை கெடாத, அன்றாடங்களுக்குத் திரும்பும்படியான நிவாரண நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்கவேண்டும். வரலாற்றில் நெடிதும் பின்பும் நேர்ந்துவிட்ட பெரும்பிழைகளைக் களையும் படியான தீர்வுகள் காண உரிய வல்லுநர் குழுவை அமைத்து மூன்று இன மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து உற்ற தீர்வு காண வழிவகைச் செய்யவேண்டும்.

வேகும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று அப்பாவி பழங்குடியினரை தங்களுக்குள் அடிப்பட்டுச் சாக அனுமதித்தால், மதவாதத்தால் மக்களுக்குள் பிளவு உண்டாக்கி, கலவரங்களை உண்டுச்செய்து அவற்றை வேடிக்கை பார்த்தால், கோடிகளில் புரள தங்களுக்கு வேண்டிய போதை வஸ்துக்கள் வளர்க்க அவர்கள் நிழலடியை அபகரித்து மலினமான அரசியல் செய்தால்...

அறங்கெட்ட ஆட்சி திறன் கெட்டு அழியும்.

---

வேத இதிகாச காலந்தொட்டு இணையப் பெருக்கங்கண்ட இன்றைய காலம் வரை திட்டு திடுக்கென்றால் பொதுவெளியில் பெண்களை மான பங்கப்படுத்துவது, துயிலுரிவது, பாலியல் வல்லாங்கு செய்து கொலை புரிவது போன்ற ஆண்மையற்ற இழிச்செயல்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பது பகுத்தறிவுள்ள ஒவ்வொரு ஆடவனையும் வெட்கித் தலை குனியச் செய்கிறது. அவகேட்டுக்கு ஆளான ஒவ்வொரு தாய்க்குலத்தின் முன் ஆற்றுவது ஒன்றுமில்லாத கையாலாகாத நமது இருப்பு ஒரு பெரிய கேள்விக்குறி? அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல நிபந்தனையின்றித் தண்டிக்கத்தக்கவையும் கூட.

---

படிக்கட்டுகளில் உறைந்திருக்கும்  குருதிக்கறை, குடிக்கும்  குடிநீர்க்  குவளையில் மூத்திரம், பொது நீர்த்தொட்டியில்  கரைக்கப்பட்ட மலம்  இவை எல்லாம் மனிதச்  சிறுமைகளின்  உச்சம். சாதிய  வெறிக்கு வேறேதும்  சாயங்கள் பூசாமல், வாக்கு வங்கி  அரசியல் செய்யத்  தலைப்படாமல் நீதி ஒன்றை மாத்திரமே கருதி  வருத்தங்கண்ட மக்களுக்கு  தடங்கல்கள்  ஏதுமின்றி அதை வழங்கவேண்டியது முதல்வரின் தலையாயக் கடமை.

---

நூறு நாட்கள் ஏரி வேலைக்காரர்கள் கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஒழுங்கைகளை நிலை திருத்தி செப்பம் செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் உழக்குடியினருடன் சேர்ந்து விளை  நிலங்களைத் திருத்துதல், விதைத்தல், பயிரிடுதல், களையெடுத்தல், அறுவடை என எல்லா உழவர் பணிகளிலும் நிபந்தனைகளேதுமின்றி ஈடுபடுத்தப்பட வேண்டும்.

காலத்தில் வேண்டிய உதவி பணியாட்கள் இன்றி முழுமையான விவசாயம் செய்ய வழியின்றித் தவிக்கும் உழவர்களுக்கு இது உதவியாக இருக்கும். கண் முன்னர் விவசாயம் நசிந்து, அருகி, மறைந்து விடாதபடிக்கு காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நுகர்வோராகிய நமக்கு மெத்த உண்டு.

சூழியல், நீராதாரம் குறித்துச் சிந்திக்கிற யாவரும் அதே முக்கியத்துவத்துடன் உழவுதொழில் மற்றும் அது சார்ந்த உபதொழில்கள் நசிவுற்றுவிடாமல் மீட்டு எடுக்கச் சிந்திப்பது அவசியம். உற்றுழி உதவ உழவர்களுடன் இணைந்து நிற்கவேண்டியது நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.

சூப்பர் மார்கெட்டுகள், மெகா மால்களில் பாடம் செய்து பொதிகளில் வைத்து நிறை விலைக்கு விற்கும் பண்டத்தைப் பகுமானத்திற்கு வாங்கிப் பாவிப்பதற்குப் பதிலாக உழக்குடியினர் விளைவிக்கும் சிறுதானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவர்களாகச் சந்தைப்படுத்தும் எளிய சந்தைகளில் நேரிடையாக அவர்களிடம் வாங்கிப் பாவிக்கும் வழக்கத்தைச் சிரத்தையுடன் நாம் மேற்கொள்ள வேண்டும்.

---

எழுதுவது வாசிப்பது தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள் நம் இலக்கிய கர்த்தாக்கள். இப்போது அவர்கள் வேண்டி விரும்பி முண்டியடித்து மண்டி போட்டுச் செய்யும் பிரதான வேலை விளம்பரங்கள் செய்வது. திரள் கண்ட பக்கமெல்லாம் கொண்டை ஹார்ன் கட்டி தொண்டை வரளக் கத்துகிறார்கள். தரமுள்ள பொருளுக்குத்தான் விளம்பரம் தகுதி. தரங்கெட்டவற்றை விளம்பரஞ் செய்வது மல்லாந்து படுத்து மார் மீது எச்சில் உமிழும் மடமையே அன்றி வேறென்ன?

---

பத்திருபது வருடங்கள் இருக்கும் நிலை கெடாமல் ஓரிடத்தில் இருந்து வாட்டமாய்ப் பிட்டத்தை வைத்துத் தேய்க்கச் சிலாக்கியமான சர்க்கார் உத்தியோகம் போன்றதில்லை இலக்கியத் தளத்தில் களமாடுவது. அங்ஙனமே விருந்தாடி கேளிக்கைக்கு மாத்திரம் வந்து போகிற சமாச்சாரமுமில்லை இலக்கியம் புழங்குவது.

புதியன சிந்தித்தல், இலக்கிய மேம்பாடு, முன்னேற்றம், படைப்பு முனைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு, சோதனை முயற்சி, சொல் காமுறுதல், ஊடாடுவது, உரையாடுவது, விமரிசிப்பது, புதிய போக்குகள் சமைப்பது, இளையவர்தம் படைப்புகளை மதிப்பீடு செய்வது, ஏனைய பிற மொழி/ துறை புழக்கம் பரிவர்த்தனை என்றெல்லாம் ஆழ அகல கால் வைக்கவேண்டியிருக்கிறது.

பதினெட்டு வருடமாக ஒரு ஆகிருதி அவர் பாட்டுக்கு அவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று ஆலாபனை செய்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். நம்ம பாட்டுக்கு நாம எழுதினா அது நம்ம சொந்த டைரியாகத்தான் இருக்கமுடியும்.

எதனுடனும் இடையீடு செய்யவொண்ணாத அந்த இழிநிலை இலக்கியத்தில் இல்லை. தானே பேசி தானே சிரிப்பது பரிபக்குவம். இங்கே குப்பை போடும் எந்தக் கொம்பனுக்கும் அந்தக் கொடுப்பினை கிடையாது.

---

கோடம்பாக்கத்திற்கென்றே பிரத்தியேகமான குணக்  கேடுகள் பல உண்டு. அவையாவன ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது, அழுக்கைத் திரட்டிப் புழுக்கையாக்குவது, புழுக்கையைப் பொன்னாக்குவது, செத்தையைத் தூக்கி மெத்தையில் வைப்பது...

பொருண்மையில்லாத ஒன்றை கூட்டாகச் சேர்ந்து வெட்டி, ஒட்டி மகத்துவமானதாக்கி விற்றுப் பிழைப்பது வியாபாரமாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கென்றே ஒரு நெறி கண்டவர்கள் நம் தமிழர்கள். அறமெனப்பட்டதே இக வாழ்க்கை என்றானவன். நடிகனுக்கு இருநூறு கோடி சம்பளமாம் ஒரு படத்தில் சமுட்டிப் போட. இட்டுமுட்டு முட்டுவழிக்குப் போகப் பட்ட பாட்டுக்குத் தக்கன கூலிதான் தக்கும். விற்கிறதே, விலை போகிறதே என்று எப்படியும் விற்று முதலாக்கலாமா? ஒன்றுக்கு பத்து லாபமா? யாருடைய பணம் அது? ஒரு நடிகனை மானசீகமாக உறவு கொண்டாடி, வியர்வைச் சிந்தி உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவனை வாழவைக்கிற ரசிகப்பெரு மக்களின் பணமல்லவா அது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன், உறவாளியின் உதிரங் குடிப்பவன், பிள்ளைப்பாலில் குறியைத் தோய்ப்பவன் எப்படி அவனுக்கான தலைவனாக இருக்கமுடியும்? இப்படிப்பட்டவர்களையெல்லாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும். அன்றேல் மதிகேட்டுக்கு உற்ற மருந்து அன்றுமில்லை இன்றுமில்லை என்றுமே இல்லை.

---

மொழியும் கலையும் புழங்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நாட்டார் நிகழ்கலை கலைஞர்களுக்கு (பொம்மலாட்டம், தோற்பாவை நிழற்கூத்து, தெருக்கூத்து) நிகழ்வுகள் வழி வருமானம் பெற களரி அறக்கட்டளை நடத்தும் தொடர் இணைய நேரலை (FB LIVE) நிகழ்வுகளுக்குத் தங்களை அன்போடு வரவேற்கிறோம். தமிழ் கலையிலக்கிய அமைப்புகள்/ உணர்வாளர்கள் அவை /அவர்கள் நடத்தக்கூடிய விழாக்களில் எங்களுக்கு நிகழ்வு வாய்ப்பு வழங்கியோ (இணைய நேரலை - FB LIVE) அல்லது களரி அறக்கட்டளை நடத்தும் நிகழ்வு களுக்கு இயன்ற நிதியைக் கொடையாக வழங்கியோ தொடர் நிகழ்வுகள் இடையறாது நடக்க உதவ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்

ஹரிகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *