தலைவாசல் இதழ் 36

அனைவருக்கும் வணக்கம்

இவ்விடத்தில் இலக்கியம் பண்டுவது அவ்வளவு சிலாக்கியமானதாகயில்லை. எச்சுப்பண்ணாட்டாகவே எனக்குப்படுகிறது. ஊர் ஊருக்கு நன்நான்கு சந்தைக் கடைகள். அங்கு உற்பத்தியாகும் மலினப்பட்ட இலக்கிய சரக்கை விற்று முதலாக்க தொரசங்கட்டி ஒரு பட்டப்பகல் விளம்பரதட்டிபோல் நிற்கிறான் இலக்கியவாதி மானங்கெட்டு.

சின்ன கவுண்டர் படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் சலீம் கவுஸ் ஊர் ஜனங்கள் ஒவ்வொருவர் காலிலும் வீழ்ந்து அய்யா எனக்கு தண்டனை கொடுங்கய்யா தயவுசெய்து தண்டனை கொடுங்கய்யா என்று கெஞ்சி கதறுவதை போன்று இங்கே இலக்கியவாதிகள் ஊடகவெளி எதுவென்றே பொழுதிலும் இரவுபகல் எந்நேரமும் காசுவில் ஆறாம்பக்கம் வெளியானது ஆவியில் அறுபத்தி ஏழாம் பக்கம் சூடாக வெளிவந்தது என்று தங்கள் ஆக்கங்களை வாசிக்க கூவி கூவி அழைக்கிறார்கள், கொள்பவர்கள் யாரில்லாத போதும். படைப்பை வெளியிட்ட பரோபரகாரத்திற்கு ஆ.குழுவிற்கு அவர்கள் அப்பனாத்தாவிற்கு மாளாத நேர்த்திக்கடன் செலுத்தி மாய்கிறார்கள். விட்டால் மொட்டையடித்துக்கொண்டு கோவில் கோவிலாக அங்கபிரதட்சணம் செய்தாலும் செய்வார்கள். சொல்லி சொல்லியே நன்றி என்னும் உணர்வை கொன்றேவிட்டார்கள். தக்கப்படியான படைப்பைத் தெரிவு செய்து வெளியிடுவது அவன் வேலை, டூட்டி. கடமையை செய்பவனுக்கு இடையூறாக வலிவந்தமாக நீ ஏன் அவன் மேலே விழுகிறாய்?

ஆட தெரியாதவன்தானே மத்தளத்து மேல் விழ வேண்டும். தரமாகப் படைப்பது மனமுவந்து ஓர்மையுடன் வாசிப்பது என்பதெல்லாம் இலக்கியவெளியில் இனி காண்பதரிதுபோல.

என்னதான் ஆயிற்று நம்ம ஊர் இலக்கியவாதிகளுக்கு.அச்சில் பார்த்த அவசரத்தில் உடன் அங்கீகாரம் வேண்டுகிறது பேதை மனம். சுமை கால் பணம் சும்மாடு முக்கால் பணம். ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியின் அதிகாரபோதைக்கும் இவர்களது அங்கீகாரபோதைக்கும் துளியும் வித்தியாசமில்லை. சாமானத்தில் ஜிகினாவைத்து ஒன்றுக்கு போகாத குறையாக என்னவெல்லாம் செய்கிறார்கள்?

உன்னத கவிச்சிங்கமொன்று உள்ளது சென்னையில். திமுக அதிமுக என்றெல்லாமதற்கு பாகுபாடுகள் கிடையாது. பார்த்தால் பரமசாது பக்கம் போட்டு படுத்துக் கொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். யூலைத்திங்கள் இருப்பத்தியேழாம் திகதி வெளிவந்த பிரதிக்கு ஆகத்து ஒன்பதாம் தேதிக்கெல்லாம் ஐம்பது பெயர்கள் நூல் மதிப்புரை எழுதித் தள்ளிவிட்டார்கள். என்ன வேகம் என்ன தாபம். அன்பின் பிரவாகம் கங்குகரை காணாது பாய்கிறபோழ்து இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது.

பர்ராவை வாசிக்கிறேன். பாஷோவை உள்வாங்குகிறேன். போர்ஹேஸ், மார்க்கேஸ் என்றாலும் அப்படியே. இங்கே சில இலக்கிய குழுக்களுக்கு அயல் இலக்கியம் பேரில் பேய்க்காமமும் உள்ளூர் இலக்கியம் என்றால் குமட்டிக்கொண்டு வருகிற ஒவ்வாமையுமாக இருக்கிறது. சிரத்தையும் முனைப்பும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் உலக இலக்கியம் பெருசு உள்ளூர் இலக்கியம் சிறுசு என்ற பேதமின்றி வாசிக்கவொண்ணும்.

இலக்கியவாதி சமூகத்தின் கண்ணாடி
இலக்கியம் சர்வரோக நிவாரணி
வாசித்தல் மதிப்புறு செயற்பாடு
படைத்தல் அறிவு செயற்பாடு என்றெல்லாம் கற்பிதம்
செய்துக்கொண்டிருக்கிறது இந்த விளம்பரம் சூழ்
உலகு.

பாவலர் மொக்கை பழனிசாமிக்கு
பாசாபிமானம் தேசாபிமானம்
இலக்கியதாகமென்றெல்லா மெதுவுங் கிடையாது
மறிகள் வாசலில் புழுக்கையிடும் கடைகள்
லீபஸார் சேட்டுகளுக்கு இருக்கின்றார் போலே
அம்மாபேட்டை தனியார் விடுதியிலவருக்கோர்
நிலவறை காரியாலயமிருந்தது
வயிற்றுவலிக்கு கட்டிலை திருப்பி போடுபவர்கள்
இலக்கியந் தழைக்கவங்கே நித்தமும் வந்துபோவார்கள்
நாடோடி பாணர்கள் லௌலீக துறவிகளென்றாலோ
அபிஷேகம் ஆராதனை கும்பமேளா னிதக்குடி
கொண்டாட்டம்
இலவு வீட்டுக்கு காரனுப்பவேண்டுமா
ஏற்காட்டில் தேனிலவுக்கு அறையொதுக்க வேண்டுமா
என்ன சேவை வேண்டும் உங்களுக்கு
பத்துபேர் கொண்ட குழுவுக்கு ஒரு சிம் வீதமாக
அந்தரங்க அவசங்கள் மிகு பிரியங்கள் உடன்
பகிர்ந்தளிக்கப்படும்
முழுநேர பரிசாகரத்தில் நிபந்தனையற்ற அன்பில்
பிரதியுபகாரம் கருதா பெருந்தொண்டில்
முக்குளித்து இளைப்பாறும் இலக்கிய திரு உருக்கள்
நெய்வதை விடுத்து நினைத்துக்கொண்டாற்போல
மொ. ப. சா
எழுத்து ஆக்கமென்றேதோ அவ்வப்போது
உளறிக்கொட்டி கிளறி மூடுவார்
கண்டு காணாதவர்களதைப் பெண்டு பிடித்து
காடு மேடெல்லாம் இழுத்தடிக்க
எங்கும் பிரவாகித்தது இலக்கியப் பெருவெள்ளம்
பீடம் புடைத்து மேடாகி
நிறைந்த வெள்ளாமை மேலான அறுவடை
எண்ணமெல்லாம் பொய் எமனோலை மெய்
இப்படியாகத்தானே
நேரத்திற்கு அரைப்படி பால்குடித்த மதர்ப்பில்
தூங்கப்பூனை என்னை விட
பெரிய புளுத்தி இங்காரடா என்று
அந்த தூலத்திற்கும் இந்த தூலத்திற்கும்
ஆட்டம் போட
ஆடிக்கொண்டிருந்த பஞ்சைக்கயிறு அறுந்துவிட
குப்புற விழுந்த பாவை தன் சாவை
நல்ல விலைக்கு விற்றுவிட்டது
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
ஆதாயமில்லாது இந்த செட்டி ஆற்றைக்கட்டி இறைப்பானா என்று கேட்டால்
கோடுவிட்டு கோடு தாண்டா குருகுல வமிசம்
குறுக்கில் மிதித்துச் சொல்கிறது
நாய்தான் குரைக்கனும் கழுதைதான் கெனைக்கனும்.

உரியவர்களை உரிய இடத்தில் வைக்கும் பண்பு இன்றும் நமக்கு வாய்க்கவில்லை என்பது எண்ணி வெட்கப்படவேண்டிய சங்கதி. அரசு, அதிகாரம், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு என்று துறை எதுவென்றாலும் உணர்வாளர்களுக்கு இடமின்றி போவது தற்செயல் அல்ல. சீர்கேடுகள் யாவும் தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது. தகுதி திறமை என்பதையெல்லாம் நமக்கு வேண்டாத அலகுகள் ஆக்கி ஆண்டுகள் பலவாயிற்று. மற்றவை பேணுவது, எதிர்கொள்வது எல்லாம் பண்புகெட்ட செயல்களாகி விட்டது. சுயம், தனித்தன்மை, சொந்தகாலில் நிற்பது இவற்றை எல்லாம் வீசம் என்ன விலை என்று கேக்கிறார்கள்.

சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பருமரத்தை அண்டி வாழும் சமயோசிதம் இவைதான் நாம் உடன் பயில வேண்டிய, நெறிமுறைகள், படிப்பினைகள், வாழ்வாதார கூறுகள்.

சமரசமே ஜெயம்.

பராரி இலக்கியம் படைத்தலாகாதென்று நல்ஊழியஞ் சொன்னார் உலக இலக்கிய பிரகஸ்பதி ஒருவர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்.

பரவலான கவனம் பெற்றது சென்ற இதழ். பங்கு பற்றிய அன்பர்கள் யாவருக்கும் நன்றி.

இது இழப்புகளின் காலம். ஆளுமைகள் ஒவ்வொருவராக நம்மை பிரிந்தபடியே இருக்கிறார்கள்.

ந.முத்துசாமி, ஐராவதம் மகாதேவன், பிரபஞ்சன் ஆகியோருக்கு மணல்வீடு வாசகர் சார்பாக தனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *