ஜீவன் பென்னி கவிதைகள்


பகிரு

மிகப்பழைய அன்பென்னும் ஒரு காய்ந்த இலை

ஒவ்வொரு துண்டிலுமிருக்கும்
வாழ்வைப்போலொன்றையும் பேழையிலிருந்து எடுத்து நுகரவேண்டும்
ஒவ்வொரு பூவாய் எடுத்துத்தொடுத்தல்
எவ்வளவு அழகு
ஒரு புகைப்படத்தை எப்போதும் துடைத்துக்கொண்டிருக்கும் கைகளைப்
போலவேயிருக்கிற துனதன்பு.



ஒரு குற்றத்தை மிகச்சாதுர்யமாக
சிக்கல்கள் இல்லாதவாறு பிரித்துக்கொண்டிருக்கும்போது
சிறிய மலர்கள் பூத்துக்கொண்டிருப்பதை
யாரும் பார்க்கவில்லை
அதனால்தான் காலத்தில்
அது
இவ்வளவு அதிசயம்.

நிழலில் உலர்ந்திடும் வாழ்வு அவனுக்கு
பின்னெப்போதும் வரிசையில் வெறுங்கையோடு கலைந்திடும் கூட்டத்தில்
தனித்த முகம் அவனுடையது
கொஞ்சமாகத் தூங்கி வழிந்திடும் பகல்பொழுதில்
புனிதங்களற்ற மலர்களை யிரண்டிரண்டாக அடுக்கி
சிறிய விரல்களை வளைத்து இதயமொன்றை
திரும்பத்திரும்பச் செய்து காண்பிக்குமவனுக்கு
ஒவ்வொரு துண்டாகப் பகிர்ந்துகொண்டிருக்கும் அன்புகளை
நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல்களுமிருந்தன
மேலும்
எல்லா வழிகளிலும்
தொலைந்து போனவனின் சாயல்களுமிருந்தன.
உள்ளங்கையில் விழுந்திடும் பழுத்த இலையொன்று
வீடு திரும்புதலை கொஞ்சமாக ஞாபகப்படுத்துகிறது
அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும்போதுதான்
இப்பிரபஞ்சம் ஒரு காய்ந்த சமமற்ற கல் என சொல்லிக்கொள்கிறான்
நீங்களோ யின்னும் பிரார்த்தனைகளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.



கோடைகாலத்தில் உதிர்ந்திடும் இலைகளின் வாசனைகள்தான்
பேரன்பு
ஆம்
நம் காலத்தில்தான் அது
வெறும் சொல்லானது.

தூரத்தின் மிகக்கடைசிச் சொல்

தற்செயலான உடல்நலக்குறைவில்
நீங்களுணர்ந்து கொள்ளலாம்
தொட்டிச்செடிகளிலிருக்கும் சொற்களின் நெருக்கத்தை
அவைகளுக்கு உடல்களில்லை
ஞாபகங்களுமில்லை
வலிகளுமில்லை
அவைகளுக்கு அவ்வாறேயிருக்கச் சொல்லப்பட்டிருக்கிறது
அதன் காலத்தில்
அவைதான் புனிதமானது
அதன் பூக்கள்தான் மிகத்தனிமையானதும்
உங்களுக்கு.



வெறுப்பின் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து
அவ்வளவு அருகில் சென்று கொல்வதற்குப் பதிலாக
நீண்ட நேரம் ஓடக்கூடிய ஒரு இசைக்கோர்வையை
கேட்டுக்கொண்டிருக்கலாம்
காலம் இப்போது மலர்ந்து
நீண்ட வரிகள்படர்ந்திருக்கும் கடற்கறையின் சாயலிலிருக்கிறது
சற்று திருகி மூடப்பட்டிருக்கும் ஒரு மருந்துக்குப்பியை
அவசர அவசரமாகத் திறப்பதற்கு
நீங்கள் செல்லும் வெகுதூரத்தின் முடிவில்
பேரண்டம் சுருங்கி மிகச்சிறிய பொருளாகிக்கொள்கிறது
இப்போதும் உங்களுக்கு மிக அருகில்தான் உள்ளது
அக்கடைசி வாய்ப்பு
அவ்வுலகம்
அந்த இசைக்கோர்வையைத் திரும்பவும் சுழலவிடுகின்றது
தன்னை மறந்து
அந்த வீட்டின் தொட்டில் செடிகள் 1 மிமீ வளர்ந்திருக்கின்றன.

ஒருவர் கடலை நோக்கியும் மற்றொருவர் கரையை நோக்கியும்
பிரிந்து நடக்கும்போது
விலகிச்செல்வதன் பொருள் வெகுதூரமாகிறது
ஒரு அற்புதத்தைத் திட்டமிட்டு நடத்தும் பெரியவர்
சிறிய ஜன்னல்களிலிருந்து ஒலிகளைப் பரப்புகிறார்
இரவு முழுவதும் காய்ந்த சங்கு
வெய்யிலில் கடவுளொருவரைப்போல்
குழப்பமாகிக் கிடக்கிறது
காய்ந்த துணிகளை எடுத்து மடிக்கும் நினைப்பில்
சில பொருட்களை
சில சொற்களை மடித்து அடுக்கிக்கொண்டிருக்கிறது மனது
திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும்
அவ்வுணர்வை கச்சிதமான ஒலியாக்கிக் காற்றில் பரப்புகிறது
அக்குளிர்ந்த மணற்பரப்பு
அந்த யிரவின் நட்சத்திரங்கள் வெறுமனே ஜொலிக்கவில்லை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer