ஜீவன் பென்னி கவிதைகள்


பகிரு

  
 மனப்பிறழ்வு - 1
  
 சந்தோசத்தின் இரண்டு மொக்குகளைப் பிய்த்திருந்தேன்
 வெறுமனே நிழலிலவற்றைக் காயவைத்திருக்கிறேன்
 எனக்கான பாடலில் வளர்ந்திடும் ஒரு செடியில் அதை
 எப்படியேனும் ஒட்டிவிட வேண்டும்
 ஞானம் சிறிய செடியொன்றைச் சிறியதாகவே வைத்திருப்பதில்லை.
 
மனப்பிறழ்வு - 1.1 

 இன்றைய பகலில் எல்லோரும் ஓவியம்போல நின்றிருக்கிறோம்
 நமக்கருகில் நடந்திடும் அதிசயத்தை நம்ப மறுத்து
 அக்காய்ந்தப் பூக்கள் அச்செடியினுடையது தானென
 திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்
 மனிதர்களே இருப்பவைகளில் மிகுந்த அச்சம் கொண்டவர்கள்.
  
மனப்பிறழ்வு - 2

 ஒரு புதிய தினத்தில் நாமெல்லோரும் அவனை மறந்துவிட்டிருந்தோம்
 அந்த இருப்புப்பாதையின் நடுவில் ஒவ்வொரு கட்டையையும்
 எண்ணிக்கொண்டே வந்து கொண்டிருந்தவன்
 சத்தமிடும் ரயிலொன்றைப் பொருட்படுத்தாமல் அதற்குள் நுழைந்து விட்டான்
 எந்தப் பெரிய இயந்திரமும் உணர்வுகளை நெருங்கிப் படித்ததில்லை.
 
மனப்பிறழ்வு - 2 .1

 இன்றைய யிரவில் நாமெல்லோரும் அவனை இழந்துவிட்டிருந்தோம்
 கடைசியாக அவனை எப்படியாவது திரும்பக் கொண்டு வந்திடும்
 அதிசயத்தை நிகழ்த்துவதற்கு அவர்களிடம் யாருமில்லை
 அறிவு ஒரு மோசமான துக்கத்தில் சீக்கிரம் சமாதானமடைவதில்லை
 வெள்ளைத்துணியில் முழுவதுமாகச் சுற்றி டோக்கன் மாட்டிய பிறகும் 
 மெல்லிய குரலில்
 அவன் எண்ணிக்கொண்டேயிருக்கிறான் அவ்விருப்புப்பாதையின் கட்டைகளை.

 மனப்பிறழ்வு - 3

 கடல் ஒரு சூன்யத்தைப் போலிருக்கிறது
 அதனலைகள் ஒரு கரத்தைப் பற்றியிழுக்கும்போது
 உதறிவிடும் அன்பை அருகினில் பார்த்துவிட்ட அவன்
 சட்டகமிட்டு அன்பைப் பயன்படுத்தும் இந்த உலகிலிருந்து
 தன் கைகளை நீட்டியபடியே அலைகளுக்குள் செல்கிறான்
 உள்ளிழுத்துக்கொள்ளும் கடல்
 அதன் ஆழத்திலிருக்கும் எல்லையற்ற அன்பைக் காண்பிக்கிறது
 ஒவ்வொரு அலைகளாக அவன் வந்துகொண்டேயிருக்கிறான்.
 
மனப்பிறழ்வு - 3 .1

 காலத்தில் அவனின்று ஒரு பெரும் அலை
 அவனுக்குத் தெரியும் அன்பைப் பெற்றுக்கொள்வதற்கும்
 வலியற்று அதைத் திருப்பிக் கொடுப்பதற்கும்
 பிறகு
 அன்பற்ற நிலத்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டு
 சிப்பிகளை ஒதுக்குவதற்கும்.

 மனப்பிறழ்வு - 4

 புனிதர்களின் பேருரைகளை வரிசைப்படுத்தியிருக்கின்றனர்
 அற்புதத்தையும் ஞானமென்பதையும் விளக்கிக்கொண்டிருக்கின்றனர்
 காலமென்பதையும் தூரமென்பதையும் குழப்பிக்கொள்கின்றனர்
 அவனோ...!
 இரவு சொல்லிக்கொண்டிருக்கும் ஆறுதல்களையே
 கேட்டுக்கொண்டிருக்கிறான்
 அவற்றிலிருந்தே அப்புனிதர்களை எளிதாக அடைந்திடலாமென்று
 எல்லோரையும் கேட்கச் சொல்லி மன்றாடிக்கொண்டிருக்கிறான்.

 மனப்பிறழ்வு - 4 .1

 அவனிடம் சொல்வதற்கென எந்த நீதியுமில்லை
 அவனிடம் காண்பிப்பதற்கென எந்த உலகமுமில்லை
 அவனிடம் நிகழ்த்துவதற்கென எந்த அதிசயமுமில்லை
 அவன் தன்னிடமிருந்த கூழாங்கற்களை அருகினிலிருந்த குளத்தில்
 வெறுமனே எறிந்துகொண்டிருக்கிறான்
 கற்கள் தீர்ந்துவிட்ட பிறகு
 அவனையே கிள்ளி கிள்ளி எறிகிறான்.

 மனப்பிறழ்வு - 5

 அவன் தன்னிழலுடன் பேசிப்பார்க்கிறான்
 மற்றெல்லாவற்றையும் விட மிக எளிதானதாகயிருக்கிற தது
 தனக்குப் பதிலாக நிழலை காப்பகத்தினுள் சுற்றி வரச்சொல்கிறான்
 சீக்கிரமாக ஒப்புக்கொண்டு செய்து காண்பிக்கிற தது
 பிறகு அறையின் இரும்புக் கம்பிகளை அறுக்கச் சொல்கிறான்
 எல்லாமும் முடிந்த பிறகு
 தன்னுடனே தப்பித்து வரச்சொல்கிறா னவன்
 நிழலோ
 கம்பிகள் அறுக்கப்பட்ட அறையினுள் அமைதியாக நின்றிருக்கிறது
 அதற்கு யாரயும் ஏமாற்றுவதற்குத் தெரியாது.

 மனப்பிறழ்வு - 5.1 

 காவலர்கள் நிழலை என்னவெல்லாமோ செய்துபார்க்கின்றனர்
 நிழலுக்கு வலிகள் புதிதாகவே தெரிவதில்லை
 அது தன் நண்பனை ஒரு போதும் காட்டிக்கொடுக்கவில்லை
 அதற்குத் தெரியும்
 நம்பிக்கையின் சிறந்த அறத்தைப் பற்றி. 

குறிச்சொற்கள்