ஜீவன் பென்னி கவிதைகள்


அதிசயங்களை எப்போதும் நாம் மிகப்பெரியதாகவே எதிர்பார்க்கிறோம்.

இந்தக் கடல் தன்னை மிகப்பெரியதாக நினைத்துக்கொண்டிருக்கும்போது
அதன் கரையில் சிறிய சிப்பிகள் தனியாக ஒதுங்கிக்கொள்கின்றன
இந்த நிலவொளி நமக்குப்போதுமானதாகயிருக்கிறது
இவ்வளவு நெருக்கத்தில் பிரகாசமான கதைகளேதும் இங்கிருந்ததில்லை

ஆழ்ந்த பிரார்த்தனையில் ஒரு நோய்மை முடிவுக்கு வருகிறது.
பிறகு அதன் தடத்தை மறைக்க வழியொன்றைத் தேடுகிறோம்
வெகுநாட்களுக்குப் பிறகு அப்பிரார்த்தனையையே மறந்திட
முயன்றுகொண்டிருக்கிறோம்
பிணியும் வலியும் இல்லாமல்
வாழ்வு வாழ்வைப் போலவேயில்லை

உனக்கு எரிவதற்குப் பிடித்திருக்கிறது
நீ எரிந்து கொண்டிருக்கிறாய்
உனது சாம்பல் வரும்போது
நானதில் சிறிது வாசனைகளைச் சேர்த்திருப்பேன்
உன்னை உணர்ந்திருந்ததைப் பிறகு எப்படிச் சொல்வேன் நான்

கடைசியாக இந்த நிலத்தில் ஒரு மரம் மீதமிருக்கிறது
அதன் இலைகள் பச்சையமற்றிருக்கின்றன
ஆழ்ந்து கவனித்த பிறகுதான் தெரிகிறது
அவை இலைகளில்லை
இன்னும்
அது மரமே யில்லை
இது நிகழ்காலமேயில்லை.

இந்த உலகம் எடையற்றிருக்கிறது
அதன் மலர்கள் பறிப்பவர்களற்றிருக்கின்றன
நமக்கான இதயம் மரக்கட்டையைப்போல் மாற்றப்பட்டுவிட்டன
பல நுட்பமான காரியங்களை இவ்வளவு சுருக்கமாகச் செய்து முடித்திருக்கிறது
ஒரு பிரத்யேகக்கணம்.

இந்த நகரத்தில் நாம் சேர்ந்திருக்கிறோம்
ஒரு புள்ளியைத் தான் நாம் வெகு நேரம் பார்த்துகொண்டேயிருக்கிறோம்
முன்பு தொலைத்திருந்த ஒரு சங்கு நம் கைகளில் சேர்ந்திருக்கிறது
இந்தக் கடல் அந்தக் காலத்தையும் சேர்த்துக் கொடுக்குமா
நாம் கடலையேப் பார்த்துக்கொன்டிருக்கிறோம்
அது ஒரு புள்ளியைப்போலவேயிருக்கிறது.


மெழுகுவர்த்திகள் அணையப்போகின்றன
தேவன்களின் வருகைகள் பற்றிய அறிவிப்புகள் மிகச் சூசகமானவை
அந்த யிருளில் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்
மிகச்சரியாகப் பாதையிலிருந்து ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறீர்கள்
பாடிக்கொண்டிருக்கும் தேவன்களின் பாடல்களில்
உங்களை எல்லோரும் உள்ளே கொண்டுவருகிறார்கள்.மகத்தான காரியங்களேதுமில்லாமல் அம்மலர் அசைந்துகொண்டிருக்கிறது
நாம் அதன் பிரமிப்பை இன்னும் புதிரானதாக்குகின்றோம்
ஒவ்வொரு நீதியின் கதைகளிலும் அதைச் சேர்த்துப்பார்க்கிறோம்
அதன் ஆற்றலைப் புனிதப்படுத்துகிறோம்
அதிசயங்களை எப்போதும் நாம் மிகப்பெரியதாகவே எதிர்பார்க்கிறோம்.

இப்பருவத்தின் கடைசிக் கோடையிது
மாபெரும் கதைகளனைத்தும் மெலிந்து சருகாகியிருக்கின்றன
அந்நிலம் தன் மூச்சுக்காற்றைப் பத்திரப்படுத்துவதில் மெனக்கெடுகின்றது.

இப்பருவத்தின் கடைசி மழையிது
ஒவ்வொரு படிக்கட்டாக மூழ்கடிக்கிறது நதி
அந்நிலம் தன் வசத்தத்தைத் தொடங்குவதில் கவனம்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *