ஜீவன் பென்னி கவிதைகள்


பகிரு

நகரம் அச்சத்தில் தன்னை மறைத்துக்கொள்கிறது

நகரம் தன் கனவை ஒரு முறை முழுவதுமாகக் கண்டுகொள்கிறது
அதன் தேவைகள் மிக அதிகமென்பதால்
அதற்கான நியாயங்களும் மெல்ல இறுகிவிட்டன
அதன் நிதானமான சங்கீதம் நம் ஆன்மாவைத் தூங்கவைக்கிறது.
ஆன் லைனில் பதியப்பட்டிருந்த உங்கள் தேவைக்கான
மிகச்சிறிய சந்தோசத்தை அழகிய பெட்டியில் சுற்றித்தர வேண்டுமதற்கு,
நகரம் தனக்கான காகிதங்களை மிகஅழகாக அடுக்கி வைத்திருக்கிறது
தானியங்கி இயந்திரங்களில் மடிக்கணினிகளில் மொபைல்களில்
கேஷ் பேக் உணவுப்பொட்டலங்களில் மற்றும் எல்லா நுகர்பொருட்களிலும்,
அவைகளுக்கு எப்போதும் எல்லாமும் ஒன்றன் பின் ஒன்றாகவே விழவேண்டும்.
நகரம் தன்னை முற்றிலும் மறைத்துக்கொள்கிறது
ஒவ்வொருமுறை நாம் திறக்கும் போதும்
மீதமிருக்கும் செடிகளிலும் மரங்களிலும் உடல்களிலும்.
நகரம் அதற்குத் தேவையான அச்சத்தைப் பத்திரப்படுத்திக்கொள்கிறது,
அதன் எல்லாக் கண்காணிப்புக் கேமிராக்களிலும்
பதிந்திருக்கும் அதன் மெலிந்த கண்ணீர் துளிகளின் வழியே
தன் கனவை ஒவ்வொருநாளும் முழுவதுமாகக் கண்டுகொண்டிருக்கிற தது
ஒரு மர்மத்தைப்போலவே,
எல்லாவற்றையும் வீழ்த்துதல் போலவே.
நகரம் ஒரு முறை தன்னையறியாமல் சிரிக்க முயன்றுகொண்டிருக்கிறது
அவ்வளவு எளிதாகத் தன்னைச் சரணடைய விடுவதில்லை யது
அப்பட்டமாக நகரைத் தூய்மையாக்குகிறது
அதன் ஆதாரமான இருப்பை வழித்தடத்தை
மேலும் கீழுமாக இடமும் வலமுமாக இடமாற்றி,
அது எல்லோரின் வாசனையையும் பின் தொடர்கிறது
அவ்வளவு அருகருகில் நகரவாசிகள் சந்தித்துக்கொள்ளாததை
புனைவைப் போல் செய்து காண்பிக்கிறது.
நெருக்கடிச்சாலையில் விரைந்திடும் ஆம்புலன்ஸுக்கென
மிகச்சிறிய பிரார்த்தனையைப் பாதையாக உருவாக்கித்தருகிறது அது.
நகரம் தன்னையறியாமல் ஒரு முறை சிரித்துவிடுகிறது
அதன் தானியங்கி கதவுகள் திறந்து மூடி வரவேற்றுக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற தடவைகள்.
அவ்வளவு எளிதாக யாரையும் சரணடையவிடுவதில்லை
நகரத்தின் அச்சிரிப்பு.
நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள்
எல்லோர் மீதும் விழுந்து உருள்கின்றன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer