ஜீவன் பென்னியின் சிறிய உலகம்

தியாகராஜன்

பகிரு

கட்டுரை

ஜீவன் பென்னியின் கவிதை சார்ந்த அனுபவங்களும் பார்வைகளும் கோட்பாடுகளை உட்செரிக்க முயன்றவை. அவற்றின் தோல்விகளையும் அறிந்தவை. எந்த நியதிகளுக்கும் அப்பால் இயங்கும் வாழ்பனுவத்தை அதன் தன்மையுடனே பதிவு செய்ய முற்பட்டதுதான் அவருடைய கவிதை மொழியின் தொடக்கமாக இருக்குமென நினைக்கிறேன்.

எனினும் அன்றாடங்களின் மீது தாக்குறவு ஏற்படுத்தும் எந்தவொரு அறிவார்ந்த சிந்தனையையும் செயல்பாடுகளையும் அவர் அவதானிக்காமல் இருந்ததில்லை.

நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க முற்படுவோமாயின் பென்னியின் படைப்புகளில் காணப்படும் கவிதை சொல்லி மிகத் தாமதமாக உதிர்க்கப்படும் தத்துவங்களை எப்போதோ கடந்து அதன் தோல்விகளை ஆராய்ந்து அதிலிருந்து விலகி தூரத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் மனநிலையில் இயங்குவதைப் புரிந்துகொள்ளலாம்.

கவிதைகளில் தொடங்கும் எந்த நிகழ்வுக்கும் பௌதீக முடிவையோ தீர்வையோ மறுத்துவிடுவதிலிருந்தே இதனை உணர்ந்து  கொள்ளமுடிகிறது.

மேலும் காட்சிகளைச் சீராக அடுக்குவதிலும் ஜீவன் பென்னி நம்பிக்கையற்றவராகக் காணப்படுகிறார். இறைவனிடம் வைக்கப்படும் கடைசி நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகளைப் போலவே இவரது கவிதைகளில் மொழியானது கையாளப்படுகிறது.

நவீன தமிழ்க் கவிதையின் இயக்கப் பாதையில் ஜீவன்பென்னி சித்தாந்தவாதிகளின் பால் ஈர்ப்புக் கொண்டவரென்பது அவரது கவிதைகள் வழியே உணர்த்தப்படும் செய்தி.

யதார்த்த நிகழ்வுகளின் மீதான விலகலும் அனுபவமுமே ஒவ்வொருவருக்கும் கவிதையின் கச்சாப்பொருளாக இருந்தபோதிலும் வெளிப்பாட்டுமுறைமையின் மூலமே அவற்றின் மீதான படைப்பாளனின் நெருக்கத்தையும், தீவிரத் தன்மையையும் புரிந்துகொள்ளலாம்.

கவிதையென அறியப்பட்ட வடிவங்களிலிருந்தும் சொல் முறைமையிலிருந்துமே ஒவ்வொரு படைப்பாளனும் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் எத்தனை விரைவில் பழக்கப்பட்ட அந்தப் பாதையில் அவன் சலித்துவிடுகிறான் என்பதை வைத்தே அவனுடைய அடுத்தடுத்த நகர்வுகள் நிகழ்கின்றன.

‘நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது’ என்ற தொகுப்பிலிருந்தே ஜீவன் பென்னி தமிழ்க் கவிதை வெளியில் தனித்த அடையாளத்துடன்தான் தென்பட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேற்பட்டது அவரின் இலக்கியப் பயணம். நூல் மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பதிலும் அவரது பாணி தனித்ததுதான்.

பொதுவாக இலக்கியம் அல்லது படைப்பாளன் போன்ற கட்டமைப்புகளின் மீதான கேள்விகளிலிருந்தே அவரது அபுனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அதுவும் தனித்த புனைவு போலத் தென்படுவதுதான் அவற்றின் சிறப்பு.

நவீன கருதுகோள், இலக்கிய மதிப்பீட்டு அலகுகள் போன்றவற்றை வைத்து உரையாடாது எப்போதும் இலக்கியம் அல்லது வாழ்வின் மீதான அவரின் பார்வையிலிருந்தே அவை எழுதப்பட்டிருக்கின்றன.

மொத்தமாகத் தொகுத்துப் பார்க்க முற்பட்டால் அவற்றில்  இலக்கியத்திற்கான அழகியல் பார்வையே மேலோங்கி இருக்குமென்பது என் கருத்து.

அவரது மொழி தீவிரத்தையும் கவிதையின் இயங்கியலையும் கழித்துவிட்டுப் பார்த்தால் ஜீவன் பென்னியின் படைப்புலகம் வண்ணதாசன் பாணியிலான மிகைநவிற்சியின் வெளிப்பாடாகதான் இருந்திருக்கும்.

ஏனெனில் ஜீவன் பென்னியின் படைப்புலகமும் முழுக்க முழுக்க மனிதப் பிறவியின் ஆதார சுருதியாகக் கருதப்படும் அன்பும் அதற்கான தவிப்பும் அதில் நிகழும் புறக்கணிப்பும், நிராகரிப்பும்தான்.

என்றாலும் இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்த படைப்பாளி என்ற அடிப்படையில் இதனைத் தனக்கு மட்டுமேயான அந்தரங்கமாக முன்வைக்காமல் அதனை விளிம்புநிலையெனக் கருதப்படும் சமூகத்தின் அத்தனை அடுக்குகளுக்கும் விரிவாக்குகிறார்.

அதுவே அவரது கவிதையின் சிறப்பம்சமாக மாறுகிறது. இயல்பான காட்சி விவரணைகளைத் தவிர்த்துவிட்டு படிமக்கூறுகளிலிருந்தே தன் பாடுபொருளை உணர்த்த முற்படுகிறார்.

உதிர்ந்த இலைகள், இறகுகள், மீன்கள் போன்ற படிமங்களல்லாத பென்னியின் கவிதைகளைக் காண்பது அரிதுதான். சாராம்சத்தில் ஜென் கவிதைகள் போன்றும், புத்த தத்துவங்கள் போன்றும் காட்சியளிக்கக்கூடியது பென்னியின் கவிதைகள்.

பௌத்தம் குறித்த அதிகப் புரிதலென்பது இல்லாவிட்டாலும் ஒரு பொதுச் சமூகத்தில் புத்தர் என்ற சொல் பூசல்களைத் தவிர்த்த அமைதியின் குறியீடாகக் கொள்ளப்படுவதை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

மேலும் வாழ்வின் சாகரத்தில் ஞானத்தைத் தேடியடைய முடியும் என்று வலியுறுத்திய சமயமும் பௌத்தம் தான்.

வழிபாடுகளைக் கூறும் சமயங்களுக்கிடையே பௌத்தம் போதனைகளைத் தேர்ந்தெடுத்தது. அது உண்மை மற்றும் அன்பு குறித்ததாக இருந்தது. இன்றைக்கு ஜீவன் பென்னியின் கவிதைகளைச் சற்று விலகி நின்று வாசிக்கும் போது அவற்றில் ஒரு வாசகனாக என்னை ஈர்க்கச் செய்தது அனுபவத்தை முதன்மைப்படுத்தும் இந்தத் தன்மையாகதான் இருக்கும்.

‘புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருக்கக் கூடும்’ ‘புத்தனை சரிபாதியாக வெட்டிய மாலைநேர வானவில்’ போன்ற கவிதைத் தலைப்புகளின் மூலம் பென்னிக்கு புத்தர் குறித்த அவதானிப்பும் அத்தத்துவம் மீதான ஈர்ப்பும் இருப்பதை உணர முடிகிறது.

துரோகங்களை நேசிப்பவன் பழைய உதிரி காகிதங்களைச் சேகரிக்கிறான்
வேறேதுமில்லை
உதிரிகளாக்கப்பட்ட வொரு சந்தோசத்தை இரவு முழுவதும் ஒளித்து வைத்துக்கொண்டே
அலைகிறான்
விரல்களுக்குள் கூழாங்கற்களை ஒளித்து வைப்பது போல
முத்தங்களைக் கண்களில் பரவவிடுவது போல
பூஞ்சையொன்றின் செதில்களாகயிருக்கிறது துரோகங்களை நேசிப்பவனினுடல்
...........................
பழைய உதிரி காகிதங்களைச்  சேகரிப்பவன்  துரோகங்களையே  நேசிக்கிறான்
இரவுகளையே  நேசிக்கிறான்.

‘அளவில் சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ தொகுப்பில் காணப்படும் முதல் கவிதை இது.

துரோகம் என்பதை பேசும் ஞானக்கூத்தனின் கவிதையொன்றும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. வரிகள் மறந்து விட்டாலும் கிட்டத்தட்ட இப்படி இருக்கும் ‘துரோகத்தின் முதல் நாள் எவ்வளவு குருதி பெருக்கினாய்..

பின்னால் ஒரு ரப்பர் இதயம் போலப் பழகிக்கொண்டது’ துரோகத்தின் முதல் அனுபவத்தையும் வாழ்வு மெதுவாக அதற்குப் பழகிக்கொள்வதையும் இவ்வாறாக முன் வைத்திருப்பார்.

சென்ற தலைமுறையான ஞானக்கூத்தனின் பார்வைக்கும் பென்னிக்குமான இடைவெளியை இக்கவிதையின் வாயிலாக உணர்ந்துகொள்ளலாம். துரோகம் என்பதன் அனுபவத்தை நேரடியாக முன்வைக்காமல் அதன் அடர்த்தியை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது பென்னியின் கவிதை.

அதன் வலியை நேரடியாகப் பகிர மறுக்கும் கவிதை அதனை நிகழ்த்திக்காட்ட விரும்புகிறது ‘எவ்வளவு குருதி பெருக்கினாய்’ என்பதற்கும் ‘பழைய உதிரி காகிதங்களைச் சேகரிக்கிறான் வேறேதுமில்லை’ என்பதற்குமான இடைவெளிதான் பென்னியின் தனித்துவமாகும். சொல்லப்போனால் தமிழ் நவீனக் கவிதையின் வளர்ச்சியாகும்.

பழைய உதிரி காகிதங்கள் சேகரிப்பவன் என்னும் விளிம்பு நிலை வாயிலாகத் துரோகத்தை எளிமைப்படுத்துவதன் மூலம் துரோகத்தை அமைதியாக எதிர்ப்புணர்வின்றிச் சந்திப்பதன் வலியை அடர்த்தியுடையதாக்குகிறது.

தொடர்ந்த அடுக்கடுக்கான காட்சிகள் தங்களுக்குள் தர்க்கப்பூர்வமான பிணைப்பை கொண்டிராவிட்டாலும் ‘முத்தங்களைப் பரவவிடுவதுபோல’ என்ற உவமையாட்சியை ஒரு வாசகன் அனுபவிக்காமல் இருக்க முடியாது.

இவ்வாறு கவிதையின் உணர்வுப்பரப்பை விரிவடையச் செய்ததிலும் கவிதை வாசகனை மேலும் பக்குவப்பட்ட வாசிப்பிற்கு முன்னேற்றியதிலும் பென்னியின் தொகுப்புகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றன.

நகரமயமாதல் என்பதில் மனிதனின் ஆசாபாசங்கள் பாதிப்புறுவது ஒரு பக்கமெனில் அதன் மறுபக்கம் மண்ணின் பூர்வகுடிகளை அந்நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் அவனை நிலமற்றவனாக்குதல் போன்ற அநீதிகளும் நிகழ்த்தப்படுகின்றன.

தொண்ணூறுகளுக்குப் பிறகான தாராளமயவாத கொள்கையினால் இந்தியா போன்ற சந்தை மதிப்புமிக்க நாட்டில் தங்கள் உற்பத்தியை தொடங்க பெரும் நிறுவனங்கள் முனைப்புக் காட்டின (வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்திலிருந்தே இந்தியாவிற்கு இது தொடர்கதைதான்). பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலப்பரப்புகள் பெரும்பாலும் பழங்குடியினரிடமிருந்தே பறிக்கப்பட்டன.

ஜனநாயக அளவில் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கான வலுவான அரசியல் இயக்கங்களோ கட்சிகளோ இல்லாத நிலையில் அரசியந்திரத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது சிரமமில்லாத செயலாக அமைந்தது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு தேசிய கட்சியான காங்கிரஸ் மீது சமூக ஆர்வலர்கள் வைத்த விமர்சனங்களில் முக்கியமானது அது பழங்குடியினரை நடத்திய விதம்தான்.

இத்தகைய நிலையில் அவை இலக்கியங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்ச் சிற்றிதழ்கள் வழியை அறிமுகமான கோட்பாடுகளில் ‘மாயயதார்த்தவாதம்’ தொல்குடிகளின் கதைகள்தான் ஆதிக்க கருத்திற்கெதிரான அசல்கருவியாக இருக்க முடியுமென நம்பியது.

அவற்றை நவீன இலக்கியத்திற்கான அம்சங்களாகப் பயன்படுத்திக்கொண்டது. ‘பழங்குடிகளின் ஆறு பாடல்கள்’ என்ற பென்னியின் கவிதையை இந்தப் பின்புலத்தில் அணுகலாம்.

ஆனால் இக்கவிதையில் இடம்பெறும் நான்காவது பகுதியானது பொதுவாகக் கவிதைகளில் ஏற்றப்படும்  மிகையுணர்ச்சியாலும்  பாடுபொருளுக்கு  ஒவ்வாத  கற்பனைகளாலும்  இயற்றப்பட்டுள்ளது.

அப்படியாக அந்தக் கடைசிக் கையெறிகுண்டு
மிகக் கொடூரமாக நெருங்கி வரும்பொழுது
அவர்கள் கனவுதான் கண்டுகொண்டிருப்பார்கள்
இந்தக் கருமேகங்களெல்லாம் எப்படி மழையாகின்றதென்று
அந்தக்கரையில் முழுவதுமாகச் சரிந்து விழும்போதும்
அவர்கள் கனவுதான் கண்டுகொண்டிருப்பார்கள்
நிலங்களில் பயிர்கள் எப்படி முளைத்தெழுகின்றதென்று
வானைப்பார்த்தபடி மரணித்த பிறகும்
அவர்களின் கண்கள் கனவுகள் தான் கண்டுகொண்டிருக்கும்
வெட்டப்பட்ட பெரும் மரத்தின்
சிறு சிறு பொந்துகளிலிருந்த
கிளிக்குஞ்சுகள் பற்றி
சிசுவோடு கொல்லப்பட்ட நிறைமாத
காட்டெருதுகள் பற்றி.

பழங்குடியினர் பற்றிய நகரவாசிகளின் பொதுவான மதிப்பீடுதான் இந்தக் கவிதை.

பழங்குடியினர் பொதுவாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைத்து உயிர்கள் மீதும் காருண்யம் மிக்கவர்களாகதான் இருப்பார்களென்பது நம்முடைய ஆசையாகவோ கனவாகவோதான் இருக்க முடியும்.

மேலும் கவிதையோ பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கருணை சாயம் பூசுகிறது.

ஒருவேளை அவர்கள் இப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய உரிமைகள் பறிக்கப் படக்கூடாதென்பதுதான் நியாயமான குரலாக இருக்கும். ஆனால் கவிதை வாசிப்பென்பது பொதுவாக இம்மாதிரியான மென் உணர்வுகளை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது.

மொழியில் ஏற்படும் போதாமையின் கடைசி விளைவாகதான் கவிஞன் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறான். அது சமூகத்தில் அறம் சார்ந்த அனைத்து போலித்தனங்களையும் தன் மொழியலகாலேயே மீறுகிறது.

ஆனால் தமிழ்ச்சூழலில் கவிதை தணிந்த குரலில் பேசுவதாகவே புனையப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை முன்வைத்து சுகிர்தராணி அவர்கள் முகநூலில் எழுதிய கவிதையும் அப்படியான ஒன்றுதான்.

ஆனால் அது பல தோழர்களாலும் நவீன இலக்கியவாதிகளாலும் பகிரப்பட்டதும் விரும்பப்பட்டதும் தமிழ்ச்சூழலில் கவிதை என்னவாகப் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.

ஜீவன் பென்னியின் இக்கவிதையில் ஆறு பகுதிகள் (அ) பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் இதுபோன்ற பலவீனங்கள் இல்லாதவைதான் என்றாலும் இந்த நான்காம் பகுதி ஏனைய பகுதிகளின் மீதான நன்மதிப்பை குறைப்பதாக அமைகிறது.

அதிகமும் பெருநகரச் சூழலின் தாக்கத்தாலும், பிரிவின் வலியாலும் அதன் மௌனங்களாலும் நிரம்பியவை ஜீவன் பென்னியின் இரண்டாம் தொகுப்பான ‘அளவில் சிறியவை அக்கறுப்பு மீன்கள்’.

பரிச்சயமில்லாத ஒரு பெருநகரத்தில் நிகழும் தனக்கான சிறு பிணைப்பு திடீரென அஸ்தமிக்கும் அதிர்ச்சியும், நகர உருவாக்கத்தின் இயல்பான அந்நியமாதலும் பெரும்பாலான கவிதைகளில் பேசப்படுகின்றன. பென்னியின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘மிதங்களினாலான உதிரிகளின் வாழ்வு’.

‘உதிரிகளின் வாழ்வு’ என்பது ஒரு பின்நவீனத்துவப் பார்வையாகத்தான் விரிகிறது. இது குறிப்பாகத் தற்போது நவீன இலக்கியச் சூழலில் புழங்குபவர்களின் பொது ‘தன்னிலை’யாகவே மாறியுள்ளது.

சிறுகதை வடிவத்திலும் இதன் தாக்கம் அதிகமாகப் பிரதிபலிப்பது இக்கருத்தை உறுதி செய்கிறது. பொதுவாகப் பெரும் நிறுவனங்களின் காவலாளிகள், தூய்மைப்பணியாளர்கள் போன்றவர்கள் தற்காலச் சூழலின் விளிம்புநிலையினராகக் கருதப்படுகின்றனர்.

மேற்கத்திய பாணியில் தொடங்கப்படும் உணவகங்கள், அடுமனைகள், பழச்சாறகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் கீழ்நிலைப்பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் இதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்குமிடையே எப்போதும் நவீன தீண்டாமை கடைபிடிக்கவே படுகிறது.

ஒரு தொன்மம் வாய்ந்த சிறிய நகரத்திற்கும் வணிகத் தேவைக்காக உருவாக்கப்படும் மெட்ரோ நகரத்திற்குமிடையிலான பண்பாட்டு உறவுகளும், தொடர்புகளும் வெவ்வேறானவை.

இத்தகைய பொருந்தாத வேறு பாடுகள் புதிய விளிம்புநிலையினரை உருவாக்குகிறது. இலக்கியம் அவர்களை மையப்படுத்துகிறது.

எப்போதும் எச்சில்படிந்த காலிக்குவளைகளைக் கழுவிக்கொண்டிருப்பவன்
இம்மாநகரின் கடைசியான மீதியையே அருந்திக்கொள்கிறான்
எதுவுமற்ற அவன் வாழ்வின் எண்ணிலடங்கா சந்தோசங்களை
அவற்றிலிருந்தே தொடங்கிக்கொள்கிறான்
முழுவதும் அழுக்குகளப்பிய ஆன்மாக்கள் நிறைந்த இம்மாநகரைத்தான்
அவன் எப்போதும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்.

ஜீவன்பென்னி கனலி மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறுவது போலக் கவிதைக்கும் ‘ SURUVIVAL OF THE FITTEST ’ பொருந்துமெனில் ஜீவன் பென்னியின் கவிதைகள் அதில் நிச்சயம் உயிர்த்திருக்கும்.

நாற்கரச் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் உணவகத்திற்கு அழைக்குமாறு கையசைத்துக் கொண்டிருக்கும் நபர் குறித்த கவிதையும் இதேபோன்று தனித்துவம் வாய்ந்தது.

பொதுவாக அவரின் பணியை என்னவென்று அழைக்க முடியும் அவருக்குக் காவலாளி சீருடை கொடுக்கப்பட்டாலும் அவர் காவலாளியல்ல. ஏனைய வணிக நிறுவனங்களுக்கு உள்ளது போன்று அவர் விற்பனையாளருமல்ல.

நவீன சந்தைப் பெருக்கம் இத்தகைய புதிய வர்க்கத்தினரை  உருவாக்குகிறது.

சமகாலக் கவிதைகளில் பெரும்பாலும் இன்னும் விவரணை பாணியினைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் சூழலில் வாக்கியச் சிக்கனம் மூலம் கவிதையின் தொனியை அர்த்தச்செறிவுள்ளதாக்குகிறார் ஜீவன்பென்னி.

எந்த நவீன கவிதைக்கும் பின்னால் ஒரு கோட்பாடு இயங்கவே செய்கிறதென்று பிரம்மராஜன் கூறுவது போல ஜீவன் பென்னியின் கவிதைகளில் சமகால விளிம்புநிலைக் குறித்த பின்நவீனத்துவ வாசிப்புத் தென்படுகிறது.

இவையெல்லாம் கவிதையின் பாடுபொருள் மற்றும் பின்புலம் குறித்த புரிதல்கள் எனில் மறுபுறம் கவிதையின் தொடக்கம், முடிவு மற்றும் வாசகனிடம் ஆற்றும் வினை ஆகியவற்றைத் தனியே பேச வேண்டியுள்ளது.

பொதுவாகக் கவிதையை அவ்வளவு இனிமையாக, அவ்வளவு மென்மையாக, அவ்வளவு தனிமையாக என்ற ஒற்றை மையவாத சொல்லாடல்களுடன் முடிபுபடுத்துவதைத் தவிர்க்கலாம்.

இக்கட்டுரைக்காக மீண்டும் வாசிக்கும்போது இத்தகைய முடிவுகள் கவிதைக்கு அத்தனை அர்த்தப் பரிணாமத்தை வழங்குவதில்லை என்பது புலனாகிறது.

தன் ஆரம்பக் காலங்களில் காத்திரமாக இயங்க வந்த படைப்பாளர்கள் பலரும் தனது பிந்தைய தொகுப்புகளில் இத்தகைய எளிமையான புனைவுகளுடன் சிக்குண்டு விடுகின்றனர். ஒரு தேர்ந்த வாசகனுக்கு அதைவிடத் தீவிரமான முடிவு தேவைப்படுகிறது.

தன்னால் யூகிக்க முடியாத ஏதோ ஒன்றை கவிதை பொதிந்து வைத்திருப்பதாக ஆச்சர்யத்துடன் அவன் வாசிப்பை துவங்குகிறான் அத்தகைய இடத்தில் இதுபோன்ற முடிபுகள் அவனுடைய தேடலுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. மட்டுமில்லாமல் சமகாலத்தில் மனுஷ்யபுத்திரனுக்குப் பிறகு இச்சொற்களை அதிகம் பயன்படுத்துவது ஜீவன் பென்னியாகதான் தெரிகிறார்.

மனுஷ்யபுத்திரன் ஓரளவிற்கு வெகுஜனப் பரப்பிற்கான கவிஞராய் மாறிவிட்ட பிறகு இத்தகைய சொல்வழக்குகள் தேய்வழக்குகளாகவே பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு சமகாலப் புரிதலுடன் கவிதைப் படைக்கும் இளங்கவிஞர்கள் சிலர் தங்களது படைப்புகளில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

ஏனெனில் ஒரு சமகால வாசகனுக்கு இதைவிடத் தன்னை உருக்குலைக்கும் எத்தனையோ வகையான முடிபுகளைக் கொண்ட கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன.

அவன் இன்னும் ‘அவ்வளவு’ என்ற பாந்தமான சொல்லுடன் நிறைவடைபவனாக இருக்க முடிவதில்லை என்பதையும் இங்கு கூற வேண்டியுள்ளது.

வழக்கமான சொற்களையும், குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றிய கவிதைகளாகவுமே பார்ப்பதற்குத் தெரிந்தாலும். தனக்கென ஒரு படைப்பாளன் கொண்டிருக்கும் சிறிய உலகம் போலானதுதான் அவரது படைப்புகள்.

சருகுகளையும், மீன்களையும், செடிகளையும் இந்த அளவிற்குத் தன் கவிதைகளில் புழங்குபொருளாக்கிய தமிழ்க் கவிஞர் பிறிதொருவர் இல்லையெனலாம். ‘சிறிய சருகுகளிடம் உங்களைக் கொண்டு சேர்க்கும் / பாதைகள்தான் / புத்தம்’ என்கிறார் ஜீவன் பென்னி.

‘சிறிய இறகுகளின் திசைகள்’ பென்னியை முதன்முதலாகப் பரிச்சயம் செய்துகொள்ளும் வாசகனுக்கு  உவப்பாக இருக்கலாம். ஆனால் பொதுவாக நவீன கவிதைகள் அதன் கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கும் ‘தத்துவம்’ என்ற புள்ளியை தொட்டு நிற்பதாகவே இத்தொகுப்பு அமைந்துள்ளது.

ஆரம்பம் முதலே பென்னிக்குத் தத்துவச் சார்பு உண்டென்றாலும் இத்தொகுப்பு முழுக்க ஒரு போதனை அம்சமாகவே மாறி நிற்கிறது. தனது அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து அதனைத் தான் கண்டடைந்த தத்துவமாக்குதல் என்னும் எல்லைக்கு இக்கவிதைகள் நகர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட சமகாலத்தின் ஊடாட்டங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன. முற்றிலுமாகத் தன்னைக் காலத்திலிருந்து அவை துண்டித்துக்கொண்டுள்ளன.

‘கூழாங்கல் பேசுதல்’
நான் மிகச்சிறிய கூழாங்கல்லாயிருந்தபோதுதான்
இப்பிரபஞ்சம் உருவானது
ஆனால்
நான் இவ்வளவு பெரிய மலையாகிவிட்ட பிறகும்
அதன் காரணம்தான் தெரியவில்லை.

கூழாங்கல் என்னும் உருவகத்தைத் தவிர்த்துவிட்டு வாசித்தோமானால் நேரடியாகப் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியாதெனும் ஆன்மீக உபதேசத்தைதான் கவிதைப் பேச வருகிறது.

விளிம்புநிலை வாசிப்பென்பது முழுக்க முழுக்க அனைத்து பிரதிமைகளையும் மறுதளிப்பது புனிதமெனச் சொல்லப்பட்ட அனைத்தையும் கேள்வி  கேட்பது.

ஆனால் இப்பிரதியோ தன்னையொரு உபதேசமாகவே முன்வைத்துக்கொள்கிறது. அது நல்லொழுக்கம் சார்ந்த போதனை இல்லையென்றாலும் முதலில் தான் காணுமனைத்துக்கும் ஒரு ரகசியம் இருப்பதாக நம்புகிறது.

இரண்டாவது அவை புனிதமானதெனச் சொல்ல முற்படுகிறது. மேற்கூறிய கவிதையில் பிரபஞ்சம் குறித்துக் கூழாங்கல் புரிந்துகொள்ள வேண்டியது அது கூழாங்கல்லாய் இருப்பதற்கான ரகசியமாகதான் இருக்க முடியும் மாறாக அது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

‘பிரபஞ்சம்’ என்ற ஒன்றை தனது இருப்புக்கு மேலானதாக நம்பும் இதுபோன்ற ஆன்மீகவாதம் தான் நடைமுறையில் எளிய மக்களை நசுக்கும் அரசியல் வடிவங்களாக இன்று நிலைபெற்றிருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஜீவன்பென்னியின் முந்தைய தொகுப்புக்கு எதிரான மனநிலையாகவே அமைந்துள்ளது.

அவர் எப்போதும் ‘சிறிய’வைகளுக்கான கவிஞராக இருப்பதைதான் ஒரு வாசகனாக நான் விரும்புகிறேன்.

‘கூழாங்கல்லோடு பேசிக்கொண்டிருத்தல்’
நீ இவ்வளவு குளிர்ந்துவிட்டாய்
இந்நதியின் கரையொதுங்கும்போது காலத்தை எப்படி
புரிந்துகொள்வாய்?
நான் காய்ந்து மேலுமிறுகி
உன்  காலத்தைச்  சமன்  செய்துகொள்வேன்
ஆனால்
ஒருபோதும் அதைப் புரிந்துகொள்ள முயலவே மாட்டேன்.

மேற்கூறிய வகைமையின் நீட்சியாக எழுதப்பட்டிருந்தாலும் இது கவிதைக்கான உணர்வுகளைக் கையளிப்பதாக இருக்கிறது.

‘காய்ந்து மேலுமிறுகி காலத்தைச் சமன்செய்வது’ பொதுப்புத்திக்கு சாத்தியம் இல்லாத வடிவமாகும். காலம் குறித்துக் கூட்டு நனவிலியில் உருவாக்கப்பட்டிருக்கும் வரையறையினை மீறுகிறது. காலத்தைச் சமன்செய்வதில் இதுவரை அறிந்திராத வழியினைக் கண்டடைந்துள்ளது.

‘ஒரு போதும் அதைப் புரிந்துகொள்ளவே மாட்டேன்’ என்ற இறுதி வரி முழு நிறைவுடன் கவிதையை முடித்து வைப்பதாக இருக்கிறது. காலத்தைப் புரிந்துகொள்வதைக் கூழாங்கல் கைவிடுகிறது.

இதுவும் ஒருவகையிலான புத்தம்தான். எந்தவொரு மையமும் கவிதையாவதற்கும் கவிதையாகாது போவதற்குமான இடைவெளி மிகச் சிறியதுதான். அதைப் புரிந்துகொள்ளும் படைப்பாளன் தனது திருப்தியை அடைந்துவிடுகிறான்.

இக்கவிதை மட்டுமில்லாது தூரத்து அடரிருள், பூ-1, பூ-2 ஆகிய கவிதைகளும் இத்தொகுப்பில் மேற்கூறிய படைப்பாக்க அம்சங்களுடன் இருக்கின்றன. ஆனால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மேலும் தொடர்ந்து எழுத்துப் பயிற்சியால் வசப்பட்டுவிடும் கவிதை போன்ற வடிவங்களையும் இத்தொகுப்பில் காண முடிகிறது.

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே பென்னியின் ‘பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு’ என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தொகுப்புகளில் அவர் தனது தத்துவவிசாரங்களின் அளவினை படைப்பளவில் கட்டுப்படுத்துதல் சூழலுக்கு நல்லதென்ற ஒன்றை மட்டும் முடிவாகக் கூறலாம்.

எழுத்தை சுய அடையாளமாக மாற்ற முயற்சிக்காமல் எழுத்திற்காகத் தன்னைப் பொதுவாகத் திறந்து வைத்திருக்கும் படைப்பாளர்கள் சூழலில் வெகு குறைவாகதான் தென்படுகிறார்கள் எழுத்தின் திசைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதும் அதன் தூரங்களை மேலும் மேலும் தனது வாசிப்பால் புரிந்துகொள்வதுமான உயிரோட்டமான நிகழ்வை சிலரால் மட்டுமே தொடர்ந்து செய்யமுடிகிறது.

அந்த வகையில் ஜீவன்பென்னி நவீன இலக்கியச்சூழலுக்கு அவசியமான படைப்பாளர் ஆவார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer