ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

மீட்பு

நீருக்குக் கீழ்
நீரைப் பற்றிய பிம்பங்கள்
அதன் நீர்மையைப் பற்றிச்
சேகரித்த குறிப்புகள்
பவளப் பாறையில் விமோசனத்திற்காக
ஏங்கிக் கிடக்கும்
கன்னிகையைப் பற்றிய சிந்தை
செவியடைத்த செயற்கை மோனத்தின்
அர்த்தப்பாடுகளுக்கு உரு
மிதத்தலில் எடையில்லை என்ற இயற்பிரக்ஞை
மூச்சடக்கி விளையாடுகையில்
எண்ணிக்கையின் இதயத்துடிப்பு
என எதுவுமே இல்லை
அங்கு இருப்பதெல்லாம்
வெளியை அடைய வேண்டுமென்ற துவா மட்டுமே
ஒன்றன் முழுமையிலிருந்து விடுபட்டு
மற்றொன்றின் பகுதியாகத் துடிக்கும் பரபரப்பு
இருத்தலில் இம்மியும் பிசகாமல்
காற்றை ஏந்தத் துடிக்கும் சுவாசப்பற்று
அந்த மட்டுமே மட்டுமே இந்த மீட்பின் இலக்கணம்.

விசும்புத்திரி

புழுக்கத்தில் கசியும்
வியர்வைப் பிசுக்கில்
ஊறிக் கிடந்தது அறை
ஆள் யாருமற்ற கூட்டிற்குள்
ஆற்றொண்ணாமல் திரியும் மனிதச் சூடு
யாருடைய இனங் காணுதலுக்கோ
கூரையைக் கிழித்து முன்னேற முயன்றபடி
விசும்பும் வெப்பப்பதம்
பந்தல் விரிப்பைப் போல்
நால் முனையையும் இணைக்கும்
ஸ்பைடர் சனல் திரிப்பில்
விழுங்க யாருமின்றிச் சிரிக்கிறது
சிறகொடிந்த சிற்றட்டான்
சன்னலுக்கு வெளியே
புல் தரையிலே கிடந்திருக்கலாம்
புதர்நுனிப் பெருந்துளிக்கு அஞ்சாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *