செல்வசங்கரன் கவிதைகள்

அசகாய சூர சொரூபம்

கேமராவைப் பார்த்துச் சிரித்தபோது கேப்ச்சர் செய்யப்பட்ட
அந்தப் படம் கறுப்பு வெள்ளைக் கால படம்
கைகளில் தவழ்வதை முகத்திற்கு நேர் ஏந்தியதுமே சிரித்துவிடுவார்கள்
முதல் முறையாக தாங்குபவர்
ஒரு முறை அதுபோல சிரிக்காமல் அங்கிருந்து போக முடியாது
இதுவரை எத்தனைப் பேரைச்
சிரிக்கவைத்திருப்பார் என்ற விவரம் ஏதும் கிடைக்கவில்லை
முதன் முதலாக கேமராக்காரரைப் பார்த்துச் சிரித்திருக்கிறார்
அரும்பாடு பட்டே அந்தச் சிரிப்பை வரவழைத்தார் என
கேமராக்காரரின் அசகாயசூர சொரூபங்களை பெருசுகள்
நினைவிலிருந்து எடுத்து வந்தார்கள்
நவீன கேமராக்காரர்கள் மிகப் பழைய மாடலென தூக்கியெறிந்த
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கேமரா அது
கேமராக்காரருக்கு முன்னால் அந்தக் கேமராவே அதைப் பார்த்திருக்கிறது
அது பார்த்த இரண்டு இன்ச் அளவு காலம் கழித்தே
கேமராக்காரர் பார்த்திருக்கிறார்
அதற்கு பிராயச்சித்தமாக ஒளிப்பட நிலையத்தில் வைத்து அதைப்
பலமுறைப் பார்த்துக்கொண்டார்
அதிலிருந்து எல்லாரும் வந்து பார்க்க ஆரம்பித்தனர்
அவ்வளவு பிரசித்தம் அந்தப் படம்
ஆனாலும் காலங்காலமாகவே வருத்தம் தந்து வருகிறது என்கிற
மனக்குறையைத்தான் என்ன சொல்லி போக்குவதென்றே தெரியவில்லை
ஆமாம் ஆரம்பத்திலிருந்தே நம்மவர் யார் பார்த்தாலும் சிரித்துவிடுவதால்
அபிமானிகள் சில நேரங்களிலெல்லாம் நொறுங்கி விடுகின்றனர்
கொண்டாடிக் கொண்டாடி அலுத்தது தான் மிச்சம்
இன்றைக்கு சோகமாக அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டனர்
புகைப்படத்தில் இருப்பவர் கூடத்திலிருந்த சுவரைப் பார்த்து
ரொம்ப நேரமாக சிரித்துக்கொண்டிருக்கிறார்
நடுக்கூடத்தில் வைத்து அவரது பரிகாசம் வழக்கம் போல
களை கட்டிக்கொண்டிருந்தது.

கம்பெனி ரகசியம்

உள்ளாடை விளம்பரத்தில் வரும் மாடல்
வெறும் உள்ளாடையோடு ரேம்ப் வாக்கில் வர
அவனுக்கே கூச்சமில்லாத போது நமக்கென்ன கூச்சம்
புதிய உள்ளாடையில் பார்க்க எடுப்பாகவும் புடைப்பாகவும் இருந்தான்
இவனுக்கு இது சரியான வேலை தானே என்றால்
உடனே ஆமாம் போடுவார்கள்
உள்ளாடை மறைவிடங்களில் வைத்து அணியக்கூடியதென
இயக்குநர் எப்படியோ தெரிந்து வைத்திருந்ததால்
அதையெல்லாம் அவர் நமக்கு காட்டவில்லை
அப்பொழுது தான் தெரிந்தது உள்ளாடையில் மிக ரகசியம் காக்கிறார்கள்
பக்கோடா வாங்க போகிறேனென கூறி உள்ளாடை வாங்கி வருகிறார்கள்
கழட்டி கமுக்கமாக சட்டைக்கு கீழே தொங்கவிட்டுக்கொள்கிறார்கள்
சந்துகள் இருந்தால் தெரியாமல் காயப்போட்டு எடுக்கிறார்கள்
பெண்களுடையதென்றால் இன்னும் ரகசியம்
ஒட்டியிருக்கும் வீடுகளில் ஒரு ஜட்டியைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று
நானுமே உள்ளாடை என்று கூறி நாசூக்கு காண்பித்தது சிரிப்பு வருகிறது
வியாபாரத்தில் புனிதத் தன்மை கடைபிடிப்பவர்கள் மட்டுமே
உள்ளாடைப் பிரிவில் அமர்த்தப்படுகிற வழக்கம்
கடைத் தெருக்களில் இன்னுமே புழக்கத்தில் உள்ளது
நமது விளம்பரம் இபொழுது முடியப் போகிற தருவாய்க்கு வந்துவிட்டது
கம்பெனியின் டேஹ்லைனை மயக்குகிற குரலில் ஒலிக்கவிட்டார்கள்
சுகமான உள்ளாடையென எங்காவது கேட்டால் எனக்கு இப்பொழுதும்
ஜிவ்வென ஏறிக் கொள்கிறது.

கிர்ர்ர்...ர்

பலூனை ஊதி ஊதிப் பெரிதாக்க வேண்டும் சரியாயென
என்னை நோக்கி ஒரு பலூனை நீட்டியவன்
எந்தக் கலரை உப்…ப்பென ஆக்கவேண்டுமென்ற பொறுப்பை
அருகே ஒரு மேஸ்திரி போல இருந்து கவனித்துக் கொள்ள
எனக்கு வேறு வழியில்லை
பொடியன் அசந்த நேரத்தில் இஷ்டத்திற்கு ஒரு கலரைத் தூக்க
வித விதமாக மெனக்கெடவேண்டிய ஒரு கட்டாயம்
ஒரு லந்துத்தனம் ஒரு லாகிரித்தனம் ஒரு போக்கிரித்தனம்
ஒரு பச்சையை வாயில் வைத்துச் சப்பிய சமயத்தில்
என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டான்
ஆவேசத்தில் கத்தி ஊரைக் கூட்டப் பார்த்தவன்
ஊரில் உள்ளவர்களுக்கு அவ்வளவு வேலை என்றதும் தான் விட்டான்
ஊதும்போது உடைந்தவை கீழே சொங்கிபோலக் கிடந்தன
ஆவேசத்தில் கத்தியவனை அப்பொழுது மடக்கிவிட்டதால் இந்த முறை
பாருங்கள் உங்கள் யோக்கியதையை என்ற தொனியில்
உடைந்த ஒன்றைத் தூக்கியபடி நற நறவென பல்லைக் கடித்தபடி வர
உனது பற்களுக்குள் சண்டை மூண்டுவிட்டது பத்திரம் என்றதும்
அரண்டு பின் வாங்கினான்
மேலே பறந்தவைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி
எல்லாவற்றையும் முந்திக் கொண்டு பறந்த சிவப்பைக் காண்பித்து
அந்த சிவப்பு தான் நானென்று அவன் ஓயாமல் சொல்ல ஒருமுறை
ஊதும் போது உடைந்து கீழே குவிந்து கிடந்ததில் ஒரு சிவப்பை எடுத்து
இதுவுமா நீ என்றவுடன்
வந்த சொற்களை திரும்பவும் அவன் வாய்க்குள் இழுக்கவும்
அது வந்து எனக்குள் அமரவும் சரிக்குச் சரியாக இருந்தது
செய்யுஞ் சேவகத்தில் கொஞ்சம் சீரியஸ் தேவை
நானே ஊதிக்கிறேனென்று சொல்லி அவன் கிளம்பிவிட்டால்
ஒரு பலூனை ஊதிக்கொண்டிருக்கிற வைபவம்
நமக்கெல்லா கணமுமா அமைந்துவிடும்
டேய் பொடியா உன் சிவப்பைப் பார் இப்பொழுதும் அதுவே
சூப்பர்ஃபாஸ்ட் என அவனிடம் நான் சரண்டராகப் பார்க்க
அது என் கண்களுக்குச் சரியாக கன்வே ஆகாமலிருந்து
எனது கண்கள் இன்னும் முழுமையாக விரியாமலிருந்ததால்
ஒரு கணம் நிறுத்தி கைகளை வைத்து கண்களை நன்றாக அகற்றச் செய்ய
அது கிடக்கட்டுமென்றவன்
இந்தச் சிவப்பு மஞ்சள் பச்சையெல்லாம் மேலே ஒய்யாரத்தில்
அங்கிட்டு இங்கிட்டென ஆட்டி ஆட்டிப் பறக்கிறதல்லவா
அங்கிருந்து பலூன்களுக்கு இந்த வீடுகள் சந்துகள் பொந்துகளெல்லாம்
கூட அப்படித்தானே என்றான் பார்க்கலாம்
பிடரியில் எதுவோ வந்து ஓங்கி ஓங்கி அடித்தது போலிருந்தது
உங்கள் கால்களைக்கொண்டே இப்படி அடித்துக்கொண்டால்
பாவம் உங்கள் தலை என்னத்துக்கு ஆகும் நில்லுங்களென
பொடியன் எவ்வளவு சொல்லியும் நான் கேட்கவில்லை போல
அங்கிருந்தவர்கள் இப்பொழுது கூறுகிறார்கள்
அந்த நேரத்தில் என்ன நடந்ததென்றே எனக்குத் தெரியாது
தலை அப்பொழுது கிர்ர்ர்ர்ரென்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *