சு. ராம்தாஸ் காந்தி கவிதைகள்


பகிரு

உன் பிள்ளைக்குக் கொடுத்த
முத்தங்களில் பிழையில்லாமல்
அதே நெத்தி தேர்ந்துதானே
எனக்கும் கொடுத்தாய்
படகும் கரையுமில்லாத
பெருத்த அலைக்கழிப்புகளின் போதெல்லாம்
மேடேறிய தாயாட்டின்
பதைப்பை உன்னிடம் கண்டிருக்கிறேன்
உயிரைக் கடித்துக் காமுறும் உடல் நொதியாற்ற
நீ பல்லைக் கடித்தபடி தாய்மையைத்
தள்ளி வைத்ததை கவனித்தவன் தானே நான்
கொதிக்கும் எச்சில் குமிழ்கள் அடங்கிய பின்
முந்தனையால் அக்கறையாய் முகம் துடைத்ததை
நான் எப்படி உணர
பார்ப்பவர்களின் ஊனம்
நம் நெருக்கத்தில் வாழுமென்றால்
அனைவரிடமும் என்னை
உன் காதலனென்றே சொல்.
பேரன்பெனும் விசையை
மை சுழற்றி எழுதும்
மாயமொழி எழுத்தாளனை
ஒரு மனக்கவலையோடு
பார்க்கப் போயிருந்தேன்
தேறுதலைப் போலவே
கண்களால் சிரித்தபடி பேசியவன்
பார்வை மறைந்த நிமிடங்களில் முதுகுப்புறம் அளந்து
குணங் கண்டறிதலின் நுணுக்கம் செய்திபடியிருந்தான்
பொன்னை வைக்குமிடத்திலொரு பூவாக
ஒரு கண்ணாடி டம்ளர் டீக்கும் வகை செய்யாதவன்
பேருந்து ஏறிய பிறகு அலைபேசியில் அழைத்து
புரோட்டா வாங்கித் தர நினைத்ததாகச் சொன்னான்
நிர்கதியாளனுக்கு அப்பத்தைப் புட்டு ஊட்டும்
கர்த்தரின் படத்தை இணைத்து
முகநூலின் பக்கத்தில் பேரன்பின் நீள் கவிதையைப்
பின்னத் தொடங்குகிறான் அந்த எழுத்தாளன்
ஊமைத் தொப்புளோடு உள்ளொடுங்கிய
வயிற்றைத் தடவிக்கொள்கிறேன் நான்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer