சுவர்க் கிறுக்கல்கள்

ஹூலியோ கொர்த்தஸார்
ஸ்பானிய மொழியிலிருந்து : பால் ப்ளாக்பர்ன்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : வி.பி.ராஜலட்சுமி

பகிரு

எத்தனையோ விஷயங்கள் ஒரு விளையாட்டைப்போல ஆரம்பித்து சமயங்களில் விளையாட்டாகவே முடிந்து விடுகின்றன. நீ வரைந்த படத்திற்கு அருகில் வேறொரு படத்தைப் பார்த்தபோது உனக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். முதலில் அது யதேச்சையாகவோ அல்லது திடீரென ஒரு மனவேகத்தினாலோ வந்திருக்கலாம் என நினைத்தாலும் இரண்டாம் முறைதான் அது வேண்டுமென்றே செய்யப்பட்டதை உணர்ந்து, பிறகு, அதை நிதானமாகப் பார்த்திருப்பாய். இன்னும் ஒருமுறை பார்க்கவென மறுபடியும்கூட வந்திருப்பாய். தகுந்த எச்சரிக்கைளுடன்தான். தெரு மிகத்தனிமையில் இருக்கும் தருணத்தில், பக்கத்துத் தெருக்களில் கண்காணிப்பு வண்டிகள் இல்லாதபோது, அக்கறையின்மையுடன் அதை அணுகி, சுவர்க்கிறுக்கலை தவறியும் முகத்துக்கு நேர் பார்த்துவிடாமல், ஆனால் எதிர்ப்புற நடைபாதையிலிருந்து அல்லது பக்கத்திலுள்ள கடையின் ஜன்னலைப் பார்ப்பது போன்ற பாவனையுடன் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகன்றுவிடுவாய்.

உன்னுடைய விளையாட்டு துவங்கியதே சலிப்புணர்வில்தான். உண்மையாய் அது ஒன்றும் நகரத்திலுள்ள விஷயங்களின் நிலமையை, ஊரடங்குச் சட்டத்தை, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், சுவர்களில் எழுதுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தொந்தரவளிக்கும் தடை உத்தரவை எதிர்த்த கண்டன உணர்வினால் அல்ல. சுவர்களில், வர்ண சாக்கட்டிகளைக் கொண்டு படம் வரைவது உனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. கலை விமர்சகர்கள் உபயோகிப்பதைப் போன்ற சுவர்ச்சித்திரம் என்ற சொல் உனக்குப் பிடிக்கவில்லை. மேலும் நீ வரைந்ததைப் பார்க்க அடிக்கடி வந்தாய். சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நகராட்சி வண்டி வந்து அதை அழிப்பதையும், அதை அழிக்கும் வேலையாட்களின் பிரயோஜனமற்ற அவமரியாதைகளையும் உன்னால் பார்க்க முடிந்திருக்கும். அவை அரசியல் சித்திரங்கள் இல்லையென்பதைப் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. தடை உத்தரவு எல்லாவற்றுக்கும் சேர்த்துதான். ஒரு குழந்தையானது வீட்டையோ, நாயையோ சுவற்றில் கிறுக்கத் துணிந்திருந்தால், அது கூட இதே போன்ற வசவுகளுடனும் அச்சுறுத்தல்களுடனும் அழிக்கப்பட்டிருக்கும். இனிமேலும் நகரத்தில் மக்கள், எந்தப்பக்கத்தை உண்மையில் பயம் பீடித்திருக்கிறது என்பதை நிச்சயமாக அறிந்திருந்ததாகக் கூற முடியாது. ஒருவேளை நீ உன் பயத்தைக் கடந்து வரவும், ஒவ்வொருமுறையும், அடிக்கடியும், படம் வரைவதற்கான சரியான இடத்தைப் பொறுக்கி எடுக்கவும் அதுதான் காரணம்.

நீ எந்த அபாயத்திற்குள்ளாவதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உனக்குத் தெரிந்திருந்தது. சுத்தம் செய்யும் வண்டிகள் வருவதற்குள் கடந்துபோகும் நேரத்தில் உனக்கென ஒரு சுத்தமான வெளி திறந்து கிடந்தது. அங்கு ஏறத்தாழ நம்பிக்கைக்கான இடம் இருந்தது. உனது படத்திலிருந்து நீ தள்ளியிருந்து பார்க்கும்போது, மற்றவர்கள் அதைக் கடந்து செல்லும்போது ஒரு பார்வையை வீசிச் சென்றதை உன்னால் பார்க்க முடிந்தது. யாரும் நின்று பார்க்கவில்லை. ஆனால், யாரும் அதை பார்க்கத் தவறவில்லை. சமயங்களில் அது ஒரு அவசரமான, அரூபமான இரண்டு வர்ணங்களிலான அமைப்பாகவோ, அல்லது ஒரு பறவையின் பக்கவாட்டுத் தோற்றமாகவோ, அல்லது பின்னிப்பிணைந்த இரண்டு உருவங்களாகவோ இருந்தது. ஒரே ஒருமுறை கறுப்புச் சாக்கட்டியைக்கொண்டு நீ ஒரு வாக்கியத்தையும் அதன் கீழ் எழுதினாய்: “இது எனக்கும் கூட வலிக்கிறது”. அது இரண்டு மணி நேரம் கூட இருக்கவில்லை. அந்த முறை காவல் துறையினரே அதை இல்லாமல் செய்தனர். அதன் பிறகு நீ வெறும் படங்களை மாத்திரம் வரைந்துகொண்டுபோனாய்.

உன்னுடையதற்கு அருகில் மற்றொரு படம் வந்த போது, நீ ஏறத்தாழ பயந்துபோனாய். திடீரென்று அபாயம் இரட்டிப்பாகிவிட்டது. உன்னைப்போல யாரோ ஒருவர் சிறைப்படுதலின் அல்லது அதைவிட மோசமானதின் விளிம்பில், கேளிக்கையில் ஈடுபடுமளவு நேர்ந்திருக்கிறது. அது ஒன்றும் சிறிதுபடுத்திவிட முடியாத அளவு - அந்த யாரோ ஒருவர் ஒரு பெண். அதை உன்னால் நிரூபிக்க முடியாது. ஆனால், வெளிப்படையான நிரூபணங்களை விடத் தெளிவாகவும், வித்தியாசமாகவும் அதில் ஏதோ இருந்தது. ஒரு எச்சம், கவர்ச்சிகரமான நிறங்களை நோக்கிய ஈர்ப்பு, ஒரு ஒளிவட்டம். நீ தனியாக நடந்து சென்றதாலோ என்னவோ, ஒரு ஈடு செய்யும் எண்ணத்தில் நீ அதைக் கற்பனை செய்திருக்கக்கூடும். நீ அவளை வியந்து பாராட்டினாய். அவளுக்காகப் பயப்பட்டாய். இது ஒரே ஒருமுறைதான் என்று நம்பினாய். ஆனால், அடுத்தமுறை, வேறொரு படத்தினருகில் வரைந்திருந்தபோது நீ உன்னையே மறந்துபோனாய். சிரித்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், அதே இடத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் உனக்கு வந்தது. ஏதோ போலீசார் குருடர்கள் அல்லது மடையர்கள் என்பதான நினைப்பில்.

வேறு ஒரு காலம் தொடங்கியது. ஒரே சமயத்தில் ரகசியமான இன்னும் அழகான, இன்னும் பயமுறுத்துகிற காலம். உன் வேலையைத் தட்டிக்கழித்துவிட்டு, விசித்திரமான வேளைகளில் அவளை ஆச்சரியப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் நீ வெளியே செல்வாய்.

உன் படங்களுக்கு நீ, ஒரே எட்டில் கடந்துவிடக்கூடிய தெருக்களையே தேர்ந்தெடுத்தாய். நீ, விடியும் நேரத்தில், அஸ்தமன நேரத்தில், அதிகாலை மூன்று மணிக்கு எனச் சென்று பார்த்தாய். அது சகிக்கமுடியாத முரண்பாடுகளின் காலம். உனது படத்தருகில் அவளது படம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஏமாற்று முறையும் காலியாய்க் கிடந்த தெருவும்.

பிறகு அங்கு எதையும் கண்டுபிடிக்காததும் இன்னமும் காலியாய் தோற்றமளித்தத் தெருவும். ஓரிரவில் அவளுடைய தனி ஓவியத்தை நீ கண்டாய். அவள் அதை சிகப்பு மற்றும் நீலநிற சாக்கட்டியில், ஒரு கார்ஷெட்டின் கதவில், கரையான் அரித்த பலகையும், துருத்திக்கொண்டிருக்கும் ஆணிகளையும் தனக்கு அனுகூலமாக்கிக்கொண்டு வரைந்திருந்தாள். அது எப்பொழுதையும்விட அவளாக இருந்தது அந்த வரைவமைப்பு, வர்ணங்கள், அத்துடன் அந்த வரைபடத்துக்கு ஒரு முறையீடு அல்லது கேள்வியின் பொருள் இருப்பதை, அது ஒரு வழியில் உன்னை அழைப்பதை உன்னால் உணர முடிந்தது.

நீ விடியும் நேரத்தில் திரும்பி வந்தாய். கண்காணிப்பாளர்கள் தங்களுடைய சப்தமில்லாத ரோந்துகளைக் குறைத்துவிட்ட பிறகு, மிச்சமிருந்த கதவுப் பகுதியில் நீ ஒரு அவசர கடல்காட்சியை பாய்மரங்களுடனும் அலை தாங்கிகளுடனும் வரைந்தாய். அதை அருகில் சென்று பார்க்கவில்லை என்றால் ஒருவர் அதை வெறும் தொடர்பற்ற கோடுகளின் விளையாட்டாகத்தான் கருதியிருக்க முடியும்.

ஆனால், அவளுக்கு அதை, எப்படிப் பார்க்க வேண்டுமென்று தெரியும். அந்த இரவு நீ இரண்டு காவலர்களிடமிருந்து மயிரிழையில் தப்பினாய். உன் அறையில் கோப்பை அடுத்து கோப்பையாக ஜின் அருந்தியவாறே அவளுடன் பேசினாய். நீ உன் வாய்க்கு வந்த எல்லாவற்றையும் அவளிடம் சொன்னாய் சப்தங்களினால் ஆன ஒரு வித்தியாசமான வரைபடம் போல, இன்னொரு துறைமுகம், பாய்மரங்களுடன். அவள் கறுப்பாகவும் அமைதியாகவும் இருப்பதாக நீ கற்பனை செய்தாய். நீ அவளுக்கென உதடுகளையும், முலைகளையும் தேர்ந்தெடுத்தாய். கொஞ்சமாய் நீ அவளைக் காதலித்தாய்.

உடனடியாக உனக்கு உதித்தது, அவளும் ஒரு பதிலை எதிர்பார்த்திருப்பாள் என்று. அவளும் தன்னுடைய படத்தினருகில் மறுபடியும் செல்வாள், நீ உன்னுடையதற்கு செல்வதைப்போல. மேலும் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அபாயம் அதிகரித்திருந்தாலும், நீ கார்ஷெட் வரை செல்ல, அந்த கட்டிடத்தைச் சுற்றி நடக்க, அந்த தெருமுனைக் காபி விடுதியில் இருந்து முடிவற்ற பியர்களைக் குடிக்கத் துணிந்தாய். அது அபத்தமானது. ஏனெனில், உன் படத்தைப் பார்த்து அவள் ஒன்றும் நிற்கப் போவதில்லை. வந்து போய்க்கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்கக் கூடும். இரண்டாவது நாள் விடியும்வரை நீ ஒரு சாம்பல் நிற சுவரைத் தேர்ந்தெடுத்து வெள்ளையில் ஒரு முக்கோணமும், அதைச் சுற்றி ஓக் இலைகளைப் போன்ற திட்டுக்களையும் வரைந்தாய். அதே தெருமுனை காபி விடுதியிலிருந்து உன்னால் அந்த சுவரைப் பார்க்க முடிந்தது. அவர்கள் அதற்குள் கார் ஷெட் கதவைச் சுத்தம் செய்துவிட்டார்கள்.

மேலும் ஒரு கண்காணிப்பாளன், ஆத்திரத்துடன், திரும்பத் திரும்ப வந்து போய்க்கொண்டிருந்தான். அஸ்தமன நேரம், நீ சிறிது பின்வாங்கிச் சென்றாய். அதைப் பார்ப்பதற்கான வெவ்வேறு புள்ளிகளைத் தேர்ந்தெடுத்தவாறு, ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்தவாறு, அவ்வப்போது கடைகளில் கொஞ்சம் ஏதாவது வாங்கிய படி, கவனத்தை அதிகம் ஈர்க்காமல் சென்றவாறிருந்தாய்.

அபாயச் சங்குகள் ஒலித்தபோது, பிரகாச விளக்குகள் உன் கண்களைக் கடந்து சென்றபோது மிகவும் இருட்டி இரவாகியிருந்தது. சுவருக்கருகில் ஒரு குழப்பமான கூட்டம், நீ ஓடினாய், எல்லா நல்லறிவின் முன்னிலையில் உனக்கு உதவிய எல்லாமுமாக இருந்தது. உனது அதிர்ஷ்டம், தெரு முனையில் திரும்பிய கார் ஒன்று, கண்காணிப்பு வண்டியைக் கண்டு பிரேக் போட்டு, அதனுடைய அகலம் உன்னை மறைத்தவாறு நின்றதுதான். உறையிட்ட கைகளினால் இழுக்கப்பட்ட முடியை, கூக்குரல்களை, வண்டியில் அவளைத் தூக்கி எறிவதற்கு முன்னால் துண்டித்தாற்போல் இமைப்பொழுது தெரிந்த நீலநிற அரைக்கைச் சட்டையை.

வெகுநேரம் கழித்து (அப்படி நடுங்குவது கோரமானது, சாம்பல் நிற சுவற்றிலிருந்த உன் படம்தான் இது நிகழக் காரணம் என்பதை நினைத்துப் பார்க்கக் கோரமாக இருந்தது) நீ மற்றவர்களுடன் கலந்து, நீல நிறத்தில் வரையப்பட்ட வெளிக்கோட்டினை, அவளது பெயரைப் போன்ற, அல்லது வாயைப்போன்ற ஆரஞ்சுநிற எச்சங்களை, அவளை எடுத்துச் செல்லுமுன் போலீசாரால் அழிக்கப்பட்ட அந்த துண்டிக்கப்பட்ட படத்தில் இருந்த அவளை நீ பார்த்தாய்.

உன் முக்கோணத்திற்கு பதில் கூறும் வகையில் ஒரு படத்தை, ஒரு வட்டம் அல்லது சுழல் வட்டம், ஒரு முழுமையான அழகான உருவத்தை ஒரு சரியான அல்லது எப்பொழுதும் அல்லது இப்பொழுது என்பதைப் போன்ற ஒன்றினை அவள் வரைய முயன்றிருந்ததை நீ புரிந்து கொள்ளுமளவு எச்சங்கள் விடப்பட்டிருந்தன.

உனக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். பிரதான பாரக்ஸில் நடந்துகொண்டிருந்தவை பற்றி கற்பனை செய்ய, உனக்கு தேவைக்கும் அதிகமாகவே நேரமிருந்தது. இந்த மாதிரியான ஒரு நகரத்தில், இது போன்ற விஷயங்கள் சிறிது சிறிதாக கசிந்து வெளிவந்தன. சிறைப்பட்டவர்களின் விதி பற்றி மக்களுக்கு உள்ளுணர்வு இருந்தது. அப்படிப்பட்டவர்களில்
ஒருவரை ஏதோ சமயத்தில் காண நேரிட்டால், யாருக்கும் உடைக்கத் துணிவு வராத மௌனத்தில் காணாமல் போன பெரும்பான்மையானவர்களைப் போல, இவர்களையும் பார்க்காமல் இருந்துவிடவே மக்கள் விரும்பியிருப்பார்கள்.

உன் கைகளையே நீ கடித்துக் கொள்வதற்கு, அழுவதற்கு, துண்டு கலர்ச் சாக்கட்டிகளை உன் காலடியில் போட்டு நசுக்குவதற்குத் தவிர, வேறு எந்த வகையிலும் ஜின் உனக்கு உதவியாக இருக்கப்போவதில்லை என்று உனக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது. உன்னை நீயே அதிகம் குடிப்பதில் அமிழ்த்திக்கொள்ளும் வரை.

ஆமாம், ஆனால் நாட்கள் கடந்தன. உனக்கு இனி மேலும் வேறுவிதமாக வாழ்வது எப்படி என்பது தெரியவில்லை. மறுபடியும் உன் வேலைகளை விட்டுவிட்டு தெருக்களில் கடந்து சென்றாய், நீயும் அவளும் படம் வரைந்த சுவர்களையும் கதவுகளையும் கணப்பொழுதில் பார்த்தவாறே.

எல்லாம் தெளிவாய், எல்லாம் சுத்தமாய். ஒன்றுமே இல்லை. பள்ளிக்கூடச் சிறுவன் வகுப்பறையிலிருந்து ஒரு துண்டு சாக்கட்டியைத் திருடி, அதை உபயோகிப்பதன் சந்தோஷத்தை மறுக்க முடியாததால், வெகுளித்தனத்துடன் வரைந்த ஒரு மலரைக் கூட காணமுடியவில்லை. உன்னாலும் மறுக்க முடியவில்லைதான். ஒரு மாதம் கழித்து விடியற்காலையில் எழுந்து கார்ஷெட் உள்ள அந்த தெருவுக்குத் திரும்பச்சென்றாய். கண்காணிப்பாளர் யாரும் இருக்கவில்லை. சுவர்கள் முழுவதும் துப்புரவாக இருந்தன. அவள் தனது படத்தை விட்ட இடத்தில், நீ ஒரு சாக்கட்டியை எடுத்து வரையத் தொடங்கியபோது, ஒரு வாசற்கதவிலிருந்து ஜாக்கிரதையுடன் ஒரு பூனை உன்னைப் பார்த்தது.

பலகைகளில் ஒரு பச்சை அலறல், அன்பு மற்றும் அடையாளம் காணுதலின் சிவப்பு ஜ்வாலை, இவற்றை சுற்றிப் போர்த்தியபடி நிரப்பினாய். உனது, அவளுடையது, மற்றும் நம்பிக்கையின் உதடுகளாக இருந்த ஒரு நீள்வட்டம். தெருமுனையில் கேட்ட காலடிச் சத்தம் மெத்தென்று கால் வைத்து காலிப் பெட்டிகளின் குவியலுக்குப் பின்னால் தஞ்சமடையும்படி உன்னை ஓடச் செய்தது. தள்ளாடியபடி ஒரு குடிகாரன் முனகலான பாட்டொலியுடன் நெருங்கி வந்தான். அந்தப் பூனையை உதைக்க முயன்று அந்தப் படத்தின் அடியில் தலைகுப்புற கீழே விழுந்தான். நீ மெதுவாய் அங்கிருந்து அகன்றாய், இப்பொழுது பாதுகாப்பாக. வெகு நாட்களாகத் தூங்கியிராததால்
முதல் சூரியனுடன் தூங்கிவிட்டாய்.

அன்று காலையே நீ சற்றுத் தள்ளியிருந்து பார்த்தாய். அவர்கள் அதை அழித்திருக்கவில்லை. நீ நண்பகலில் சென்றாய். நினைத்துப் பார்க்க முடியாதவாறு அது இன்னும் அங்கு இருந்தது. புறநகரில் ஏற்பட்டிருந்த கலவரம் (நீ புதிதாக வந்த தகவல்களைக் கேட்டிருந்தாய்) நகர கண்காணிப்பாளர்களை அவர்களது வழக்கத்திலிருந்து அகற்றியிருந்தது. அஸ்தமன நேரத்தின் போது நீ மறுபடியும் சென்றாய், நாள் முழுதும் அதை ஏகப்பட்ட மனிதர்கள் பார்த்தவாறிருந்தார்கள். திரும்பிச் செல்ல நீ காலை மூன்று மணிவரை காத்திருந்தாய். தெரு காலியாகவும் இருட்டாகவும் கிடந்தது. சற்று தூரத்திலிருந்தே, அங்கு இன்னொரு படம் இருப்பது உனக்குத் தெரிந்துவிட்டது. உன்னால் மட்டுமே அதை தனிப்படுத்திப் பார்த்திருக்க முடியும். அவ்வளவு சிறியதாய், உனது படத்திற்கு மேலே இடது பக்கமாய். நீ ஒரே சமயத்தில் தாகம் மற்றும் திகில் என்பதைப் போன்ற உணர்வுடன் அருகில் சென்றாய்.

ஒரு ஆரஞ்சு நீள் வட்டம் மற்றும் ஊதா நிறத்திட்டுகள். அதிலிருந்து ஒரு வீங்கிய முகம் எழும்பிப் பார்த்தது, ஒரு வெளித் தொங்கிய கண், முஷ்டிகளால் நசுக்கப்பட்ட ஒரு வாய். இவற்றைப் பார்த்தாய்.

எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும், ஆனால், நான் வேறு எதை உனக்காக வரைந்திருக்க முடியும்? என்ன செய்தி இப்பொழுது எந்த அர்த்தத்தைத் தரமுடியும்?

ஏதாவது ஒரு வழியில் நான் உன்னிடம் விடைபெற வேண்டும், அதே சமயத்தில் நீ தொடர்ந்து செய்யும்படி கேட்டுக் கொள்ளவேண்டும், நான் என்னுடைய புகலிடத்திற்குத் திரும்பிச் செல்லுமுன் உனக்கு
ஏதாவதொன்றை விட்டுச் செல்லவேண்டும்.

அங்கு இனிமேல் எந்த நிலைக் கண்ணாடியும் இல்லை. முழு முற்றான இருளில், இறுதி வரும்வரை ஒளிந்துகொள்ள ஒரு வெற்றிடம் மாத்திரமே உள்ளது. நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்தவாறு, பிறகு சில சமயங்களில், நான் உன் வாழ்க்கையைக் கற்பனை செய்தது போல, நீ இன்னும் வேறு படங்களைச் உருவாக்குவதாக, இரவில் வேறு படங்களை வரைய நீ வெளியில் செல்வதாகக் கற்பனை செய்தவாறு.

From Julio Cortazar’s We Love Glenda So Much and Other Stories.
Translated by Paul Blackburn.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer