சுந்தர்பிச்சை கவிதைகள்


பகிரு

வெள்ளைப் பூசணி

நிர்வாணமாய்த் தெருவில்
சாலைகளை அளக்கும் விளையாட்டு
சின்னக்குறிகளை ஈக்கள் வட்டமிடுகின்றன
பெரியக்குறிகளைக் குளவிகள்
சுருங்கியவையோ கிட்டத்தட்ட தம்மை ஒளித்துக்கொண்டுவிட்டன
எங்கிருந்தெனத் தெரியாதபடிக்கு
ஒளிந்திருக்கும் ஸ்னைப்பர்கள் அவற்றை நெற்றிப்பொட்டில் சிதறடிக்கின்றனர்
விளைச்சல் நிலம் விட்டு
தார்ச்சாலைகளில் தாவிக்குதித்த அரிசிகளை நாம் அடிபடாமல் குனிந்து பொறுக்குகிறோம்
எனினும் நிமிர்கையில்
நசிந்த தக்காளிகளின் சிவப்பில் நம் இரத்தமும் கலந்துவிட்டது
ஒரு ஓவியன் யாவற்றையும்
சித்திரமாக்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறான்
அவன் தலைக்குமேல் ஒரு தும்பி பறக்கிறது
அவன் எழுந்தோடுகிறான்
தன் விருப்பக் கடவுளின் பெயரை உரக்க உச்சரித்தபடி
இப்போது முச்சந்தியில்
குங்குமம் தடவி சிதறடிக்கப்பட்டது வெள்ளைப் பூசணி.

சிரிக்கும் சுத்தி

பூட்டைத் திறந்து உள்நுழைந்தேன்
மூன்று எலிகள் அவசரகதியில் ஓடின
யாரிடம் சொல்லப் போகின்றன என் வரவை
யார் வந்து வரவேற்பார் எனை
திசையைப் பின்தொடர்ந்தேன்
அடக்கடவுளே
இவ்வளவு அவசரமாய்
மூட்டை முடிச்சுகளோடு
சுரங்கப் பாதையொன்றில் தப்பித்துப் போகுமளவிற்கு
என்னிடம் எதைக் கண்டு பயந்தன அவை
கண்ணாடிப் பார்க்கிறேன்
எப்படிப் பார்த்தாலும்
எத்தனைமுறைப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும் தெரிவது
அவமானங்களின் கரித்தூள் அப்பிய
அதே பழைய முகம்
துயரத்தின் அறைக் கம்பிகளுக்குப் பின்னால்
குறுக்கி ஒருக்களித்துப் படுத்திருக்கும்
அதே உடல்
அலமாரிப் பாத்திரங்களுக்குப் பின்
ஒளிந்திருந்த சூரிக்கத்தியை எடுத்துக்கொண்டு
வீடெங்கும் குதித்துக் குதித்துக் கத்தினேன்,
இப்போது என்னால் மட்டும் அந்தச் சுரங்கப்பாதையில்
நுழைய முடியுமேயானால்…
கண்கூசச் சிரித்தது கத்தி.

வாசலில் கட்டிப்போட்டிருக்கும்
மகிழ்ச்சியைப் பார்க்கும்
எதிர்வீட்டுக்காரன்
தன் தளர்வான மீசையை
வலுக்கட்டாயமாக முறுக்கி
அப்படி முறைக்கிறான்
பதிலுக்கிது
அவனுக்குப் பொச்சியைக் காட்டி
வாலாட்டி வெறுப்பேற்றுகிறது
காய்ப்புக் காய்ச்சிய
அவனுடைய முரட்டுக் கையில்
குத்து வாங்க எனக்கேது தெம்பு
அவிழ்த்து உள்ளே இழுத்து வரலாமென்று
அருகே செல்லும்போதெல்லாம்
அதன் கயிறு பாம்பாய் சீறுகிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer