சுஜீஷ் கவிதைகள்

தமிழில் மோ.செந்தில்குமார்

பகிரு

வெயில்

இல்லை, யாரும் குடித்திருக்கமுடியாது
வெயிலைக் குடித்த அளவுக்குத்
தண்ணீரை மட்டும்

ஈரத்தை மட்டும் உறிஞ்சிக்கொண்டு
வியர்வையின் உப்பை
கண்ணீரின் தாரையை
ரத்தத்தின் கரையை ஒதுக்கிவிட்டு
வறட்சியின் உருவத்தை
வரைந்தெடுக்கிறது வெயில்

இத்தனையதிகம் குடித்தும்கூடத்
தாகம் தீராத வெயில்
வேறுலகம் தேடிப் போகிறது
இருளில் ஆழ்கிறது இந்நிலம்.

நிழல்கள்

மறையும் சூரியனுக்கு நேராய்
நிழலையும் இழுத்துக்கொண்டு
மனிதக்கூட்டமொன்று நடந்துபோனது

அவர்களுக்குப் பின்னால் போன
பகலின் நிழலில்
இப்போது இந்த ஊர்

நான்குபுறமுமிருந்து வெளிச்சம் சிதறும்
இரவுத்தெருவின் நடுவில் நின்றேன் நான்
ஒளியால் திரண்ட என் நிழல்
நான்கு திசையிலும் வீழ்ந்தது

தெருவின் பரபரப்பிலிருந்து விலகி நடந்தேன்
வழியில் விளக்குக்குக் கீழே
தனது நிழலையே விரித்துப்போட்டுப்
படுத்துறங்குகிறார் ஒருவர்

உறக்கம் களைந்து அவர் விழிக்கும் நேரம்
இருளைத் துடைத்தெடுக்கும்
வெயிலுக்கு அஞ்சி
பார்க்கின்ற எல்லாவறின் பின்னாலும்
ஒளியும் நிழல்கள்.

பிறகு

தனித்து வாழ்ந்தவன்
சாவுக்குப் பிறகு
தனித்துக் கிடக்கும் வீடு

திறந்து கிடக்கும் ஜன்னல்
அனுப்பி வைக்கும் ஒளி
ஓவியம் தீட்டுகிறது உட்சுவரில்
வரும் வழியில் எதிர்ப்பட்ட
இலையில்லாத கிளையின் நிழலை

காற்றுயரும் நேரங்களில்
வீடும் பறந்துயரப் பார்க்கும்
ஜன்னல் பலகைகளின் சிறகடிப்போடு

மௌனம் நிறையும் அறைகளுக்குள்
புழுதிபோர்த்து உறங்கும் புத்தகங்களில்
ஓசையெழ முடியாத சொற்கள்

ஜாலவித்தைக்காரனின் கறுத்த கைக்குட்டையென
இரவு உலகத்தை மூடும்போது
இருட்டில் விழித்த கண்ணாய்த்
திறந்துகிடக்கும் ஜன்னல்
அதன் பலகைகள் அடைப்பது யார் - அவரின்
கண்ணிமைகளைப் போலவே.
சுஜீஷ்

கொச்சியில் வசிக்கும் மீனங்காடியைச் சேர்ந்த சுஜீஷ், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாவார். அவர் எழுதியுள்ள ‘வெயில்’ என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை இக்கவிதைகள். அவரது எழுத்து, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரது கவிதைகள் இந்திய இலக்கியம் (கேரள சாகித்ய அகாதெமி), கேரள கவிதை (ஐயப்பப் பணிக்கர் நிறுவனம்) முதலான பல தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இவர், மலையாளக் கவிதை இதழான thirakavitha.com-இன் நிறுவன ஆசிரியராவார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer