சரசாயீ

1

மகிளாவை தூங்கவைக்கச் சொன்ன கதையில், அப்பா இருந்தார். போதைமலை அடிவாரத்தில் அவருக்கு மாப்பிள்ளை, சுபா என இரண்டு பசுங்கன்றுகள் இருந்தன. சுபா சாது, சப்பிய சாக்லேட் நிறம். கலப்பட வெள்ளையில் இருந்த மாப்பிள்ளை, சுபாவை விட குள்ளம். ஒருநாள் விடியலில், கட்டுத்தறியை ஒட்டிய படலுக்கடியில், சிறுபள்ளமொன்று நகங்களால் தோண்டப்பட்டிருந்தது. அப்பா பயந்துபோய் படலைத் திறந்து பார்த்தபோது சுபாவைக் காணவில்லை. மாப்பிள்ளை பயத்தில் ஓயாமல் அழுது கொண்டிருந்தது. அதற்கு தேங்காய் புண்ணாக்கும், தண்ணீரும் தந்து தடவிக் கேட்டபோது ‘செவப்பு’ என்று மட்டும் சொல்லி மீண்டும் அழத்தொடங்கியது. இதெல்லாம் அந்த சிவப்பு புலியின் வேலைதான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பா, புலியுடன் சண்டையிட்டு சுபாவை மீட்க மலையேறத் தொடங்கினார். அதுவரைக்கும் சுபாவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென பச்சாயியை வேண்டிக்கொண்டார்.

“அதாருப்பா” என்றாள்.

“சாமி.”

“நல்ல சாமியா அவங்க?”

“நல்லது பண்ணினதுனாலதான் சாமியானாங்க”

“என்ன நல்லது பண்ணாங்க?”

“செவப்புப்புலி கதை வேண்டாமா உனக்கு?”

“சரி சொல்லு”

அப்பா விஷம் தடவிய ஈட்டியொன்றை எடுத்துக்கொண்டு மலையேறத் தொடங்கினார். அவர் நடந்ததில், தண்ணீர்க் குடத்துத் தட்டுகள் தடுமாறி விழுந்தன. மலைக்கூடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குஞ்சுகளை பறவைகள் தங்கள் சிறகுகளுக்குள் ஒளித்துக்கொண்டன.

2

மகளுக்குச் சொன்ன கதையில், அப்பாவுக்கு இரண்டு தங்கைகள் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் அவருடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். சரசாவை மறந்ததைப்பற்றி அவளுக்கு எந்த குறையுமிருக்காது, அவள் தன்னை மறந்தவள். முழுமையான கதையாவதற்கு அல்லது கதையில் வருவதற்கு ஒருவர் இறப்பு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சரசாவுக்கு அப்படியில்லை, வாழும் போதே அவள் கதைகளால் ஆனவளாக இருந்தாள் அதனால் இறப்புக்குப்பிறகு அவளுக்குக் கதைகள் தேவைப்படவில்லை. என்றாவது ஒருநாள் மகிளாவுக்கு பகலில் சரசாவின் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

3

சரசா, அன்று அறிவியல் தேர்வுக்கு கிளம்பவேண்டும். செடிக்காட்டுக்கு வெளிக்குச்செல்ல வாசல் தாண்டியவள், தன்வெளி மறந்து தரையில் விழுந்தாள். சூழவரும் ஏதோவொன்றிலிருந்து விலகுவது போல கால்கள் உதைத்துக்கொண்டன. காலாவதியான இசைக்கருவியின் பேரிரைச்சல்போல அவளது அடிவயிற்றிலிருந்து அலறல் சப்தம் வெளிப்பட்டது. அவளது இறப்பின் முந்தைய கணம் வரை கேட்கவிருக்கும் கோர ஓலியை போதைமலை அடிவாரத்துக் காற்று தன் பெருந்தகடில் முதன்முறை பதிவு செய்துகொண்டது. ராட்சத பறவையொன்று அமர்ந்து பறந்த கிளையென அவளுடல் வலிப்பிலிருந்து அதிர்ந்து அடங்கியது. சாணிக்களம் சிறுநீரால் ஊறியிருந்தது. அவளை மறைக்க கயிற்றுக்கட்டிலை நிறுத்தி, அதில் ஜமுக்காளத்தை காயப்போட்டிருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து எழுந்தவளை, கைத்தாங்கலாக அவளது இரண்டாம் உலகிற்கு அழைத்துப்போனார்கள்.

பிறவி நோய்க்கு மட்டும் தான் முன்ஜென்மங்கள் உண்டு, சரசா பன்னிரண்டு வயதில் நோயுற்றவள் அதனால் அவளைப்பற்றி முன்கதைகள் மட்டும் உருவாக்கப்பட்டன.

4.பூதங்காக்கும் கிணறு

சாணாத் தெரு பள்ளிக்கூடத்திலிருந்து வரும் வழியில், கைவிடப்பட்ட கிணறு, இரவில் மட்டும் பெண்குரலில் பேசுவதாகவும், எப்போதாவது பாடுவதாகவும் ஊரில் ஒரு பேச்சுண்டு. பெயர் தான் சிற்றம்பலமே ஒழிய இராப்பகலாக அவர் காவல் காத்தது கிணற்றுக்கு வடக்கேயிருக்கும் பெருமாள் கோயில் மேட்டைத்தான். புரட்டாசி தவிர்த்து மற்ற நாட்களில் பெருமாளுக்கும் அவரை விட்டால் யாருமில்லை. கோயில் விளக்கை ஆனமட்டும் சிற்றம்பலம் அணைய விடுவதில்லை. அவர் இறந்த அன்று அணைய இருந்த விளக்கின் திரியை பெண்ணொருத்தி நாவால் ஏற்றிவைத்த கொஞ்சநேரத்தில் கிணற்றில் யாரோ குதித்த சப்தம் கேட்டதாகவும், சிற்றம்பலத்தின் உடலை கயித்துக் கட்டிலில் கிடத்தி கிணற்றை கடந்தபோது எடையற்றிருந்ததாகவும் கதைகள் உண்டு.

கிணற்றுநீரை குடிக்கும் திட்டத்தை, சரசாதான் முன்மொழிந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த தோழிகள் ஒன்பது பேரும், பலநாள் திட்டப்படி கிணற்றிலிறங்கி குடித்தனர். வீட்டிற்குத் திரும்பி, சுருண்டு படுத்ததில் பிழைத்தது நான்கோ ஐந்தோதான். அதில் சரசாவுக்கு மட்டும்தான் ஒரு மன்றாடலென, ஓலமென அடிவயிற்று அலறலோடு வலிப்பு வந்தது. போலியோ தாக்கி கொஞ்ச நாட்களிலேயே அவளது இடதுகால் சூம்பத்தொடங்கியது. அது முட்டியில் கட்டிய பட்டத்தின் வாலென நடக்கும்போது காற்றில் அசையத் தொடங்கியது.

5.பேரழகியின் பெரும்பாவம்

சரசாவின் அம்மாவுக்கு, மாணிக்கம் என்ற பெயரும் உண்டு. நாற்பத்து மூன்று விசேசங்களில் ஒரே அழகியாக இருந்ததினால் முத்தம்மா என்று பெயரை மாற்றி வைத்தார்கள். அந்த கல்யாணத்துக்கும் முத்தம்மா செல்வதாகத்தான் இருந்தது. வீட்டிற்குத் தூரமானதால், அவரது நான்குமாத தங்கைக்கு, காவலுக்கு இருத்திவிட்டு மொத்த ஜமாவும் உடையாப்பட்டிக்கு வண்டி கட்டிக்கொண்டு சென்றது. பாதி ஒப்பனையில் இருந்த கன்னியும் குழந்தையும் மட்டும் அவ்வீட்டில் தனித்து இருந்தார்கள்.

மழை அன்று சேதி சொல்வது போல அவ்வீட்டின் மீது உரத்துப் பெய்தது. விசேசம் முடிந்து மேட்டுக்காட்டுக்கு வண்டி வரும்போதே முத்தம்மாவின் அலறல் சப்தம் கேட்டது, குழந்தை ஒரு தற்காலிக மௌனசாட்சியாக இறந்து கிடந்தது.

காய்ச்சலால் ஓயாத அழுகை, மூச்சுத்திணறல் என்ற காரணம் அனைவருக்கும் புரிந்துகொள்ள எளிமையானதாக இருந்திருக்கலாம். குழந்தைக்குப் பெயரெதுவும் வைக்காததனால், புதைப்பதும், மறப்பதும் அவ்வளவு கடினமானதாக இல்லை அவர்களுக்கு. அதன் பிறகு அழகிப் பட்டியலில் வேறு யாரோ முதலிடத்திற்கு வந்தார்கள். முத்தம்மாவுக்கு திருமண பேச்சுகள் ஆரம்பமாயின.

6.கனவின் ஜனனம்

சரசா பிறந்த அன்றிரவு, பங்காளி வீட்டுப் பெண்ணொருத்தியின் கனவில் தோன்றினார் சரசாவின் பாட்டனார். கனவில், கிணற்றுக்குள்ளும் வெளியிலுமாக மழைபெய்து கொண்டிருந்திருக்கிறது. அவரது காலை தொட்டுவிட முடியாத அளவுக்கு வயிறு வீங்கிய கர்ப்பிணி ஒருத்தி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக்கொண்டிருந்தாள். அவளைக்கொண்டு கிணற்றை ஆழம்பார்க்க இருப்பவர்போல அவளது தலைமயிரை பிடித்துக் கொண்டிருந்தார் கிழவர். அலறி அடங்கிவற்றிய கொஞ்ச நேரத்தில் நைந்த துணியென அவளைக் கிணற்றில் வீசியெறிந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட வரவிருக்கும் தன் மாமனாரைப் பற்றிய கனவைக் கேட்ட முத்தம்மா இன்னமும் இறுக்கமாக சரசாவை தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள். அன்று சரசாவின் வயது ஒருநாள், புதிய இரண்டு ரூபாய்த்தாளை, தன் பிஞ்சுக் கையில் வைத்திருந்தாள்.

7.போதைமலையின் மகரந்தம்

சரசா பருவமெய்தியபோது, வயது பதினொன்று. பட்டாசாலைக்குக் கூட வரவிடாமல் பக்கவாட்டு அறையிலேயே அவளை வைத்திருந்தார்கள். நாள் முழுவதும் ஓயாமல் வெளியே பேச்சொலிகள் கேட்டுக் கொண்டேயிருந்தன. உறக்கம் கலைந்ததும், அவளுக்கு தாயமாட வேண்டும் போலிருந்தது.

வயதுக்கு வருவதற்கு முந்தைய நாள் தாயக்கட்டைகளை வாசற்படி கூரையில் சொருகி வைத்திருந்தாள். அதையெடுக்க எழுந்தபோது கால்களில் புளியங்கொட்டைகள் மிதிப்பட்டன. ஒவ்வொரு கொட்டையாக தரையில் தேய்த்து, பாதிசூடு ஆறியதும் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். அது அந்த இருளில் அவளுக்கு அவ்வளவு தேவையானதாக இருந்தது. தேய்த்த கொட்டைகளை பலமுறை உருட்டியும் தாயம் விழவில்லை.

முதல் தாயம் விழுந்தபோது பட்டாசாலையில் பூனை கத்தும் சப்தம் கேட்டது. முழுமையாக இருளில் நனைந்த நிறத்திலிருந்த பூனை சரசாவை பார்த்ததும் மேலும் பாவமாக கத்தியது. வெளியே பேச்சொலிகள் இல்லை. துணிந்து அடுப்படிக்கு சென்று பசும்பாலை எடுத்து வருவதற்குள், பூனை வாசல் தாண்டியது.சரசாவும் தன்னுணர்வு வரும் வரைக்கும் பூனை பின்னால் சென்றாள். இருளில் நனைந்தது போலவே பூனை யாருக்கும் தெரியாமல் இருளில் கரைந்தது. தன் அறைக்குள் வந்தமர்ந்தபோது தன்மீது ஏதோ ஒட்டியிருப்பது போல உணர்ந்தாள். நோயுண்டாக்கும் போதைமலையின் குருட்டு மகரந்தத்துக்கு ருதுவெய்திய பெண்பிள்ளைகளை அடையும் இறக்கையுண்டு.

8.எஞ்சியது

முத்தம்மா காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. போதாக்குறைக்கு, மேய்ந்துவிட்டு வந்த மாட்டை தண்ணிக்காட்டி கட்டுத்தறியில் கட்டாததற்கு கண்டபடி ஏசிவிட்டுப் போனார் சிதம்பரம். முதல் பிரசவத்துக்கு மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டினார், ‘சாப்ட்டியா?’ என்று எப்போதாவது கேட்டார். முதலில் மகன் பிறந்ததில் அவருக்குத் திருப்தி. அடுத்துப் பிறந்த இரண்டு பெண்களுக்கும் பெரிதாய் எதுவும் ஈடுபாடு காட்டவில்லை. மூன்றாவதாய் இப்போது சுமப்பதை அவருக்குச் சொல்லாமலேயே கலைத்து விடலாமா என்ற யோசனை காலையிலிருந்தே முத்தம்மாவுக்கு இருந்தது. கொய்யாப் பழங்களையும், விளக்கமாறுகளையும் கூடையில் கட்டிக்கொண்டு சந்தைக்கு செல்லும் வழியில் கரட்டாம்புத்தூரில் கருவைக் கலைக்க மருந்தூத்திக்கொண்டார். அது கருவை அடைவதற்குள் காய்ந்துபோனது. அன்றிலிருந்து ஏழு மாதங்கள் கழித்து எந்தக் குறையும் இல்லாமல் சரசா பிறந்தாள்.

9

நிலவுக்கும் தனக்கும் ஏதோ தொடர்பிருப்பதாக சரசா ஆழமாக நம்பினாள், மற்றவர்களும் நம்பினார்கள். அமாவாசை பௌர்ணமி நாட்களில் அவளது நோயின் உக்கிரம் மிக அதிகமானதாக இருந்தது. பழகியவர்களை மறந்தாள், தேங்காய் உரித்து மட்டையை வீட்டிற்குள் கொண்டுவந்தாள். இரவில் வெளிக்குச்சென்றவளை அழைத்துவர ஒருவர் பின்னாலேயே செல்ல வேண்டியிருந்தது. வலிப்பு வருவதற்கு சில கணங்களுக்கு முன்பு நிலவிலிருந்து ஒரு ஒளி பறவையின் எச்சம் போல தன் மண்டைக்கு வருவதாகவும், தான் எப்போதும் பகலிலும் கூட ஒரு மிக நீளமான ஒளிக்கம்பியுடன் நிலவுடன் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் சிகிச்சைக்காக இராயவேலூர் வரை அழைத்துச் செல்லப்பட்டபோது திரும்பத் திரும்ப மருத்துவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனவரைக்கும் செலவழித்தவர்கள், ஊர்திரும்பி, சரசாவின் மண்டைக்குத் தொப்பி செய்யலாமா என்று சிலகாலம் யோசித்தார்கள்.

ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு, வாசிக்க சரசாவிடம் நான்கைந்து புத்தகங்களும், காகிதக் கத்தைகளும் இருந்தன. அதன் எழுத்துகள் அவளுக்கு வலிப்பு வந்ததும் மறைய வல்லவை, அவள் மீண்டதும் தன்னைத்தானே வைத்து மீண்டும் அதே கதையை எழுதிக்கொள்பவை. ஒரே கதையை முதல் வாசிப்பென ஓயாமல் வலிப்புக்கு முன்னும் பின்னும் வாசித்துக்கொண்டிருந்தாள், அவளுக்கு அது பல உள்ளடுக்குகள் கொண்ட நாவல் போல அல்லது ஒவ்வொருமுறை வாசிக்கும்போது ஒரு பொருள் தரும் தத்துவ நூல்.

ஸ்பீக்கர் முத்துவுக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை, சரசாவை இரண்டாந்தாரமாக கட்டிக்கொள்ள அவனுக்கு உள்ளூர ஆசையிருந்தது. வலிப்பு வந்தால் நின்ற நிலையில் சரசா விழக்கூடியவள் என்பதால் பிள்ளைகளை சுமக்க முடியாது என்று உள்ளூர் மருத்துவர் அவளுக்குத் திருமணம் செய்யும் யோசனையை விரும்பவில்லை.

பட்டாசாலையில் தரையோடு தரையாக உட்கார்ந்து ஆட்டுவதற்கு ஏதுவாக உரல் பதிக்கப்பட்டிருந்தது. கச்சாயத்துக்கு, சொய்யானுக்கு, சட்னிக்கு என்று சரசாவின் பெரும்பாலான நேரம் உரலுக்கு முன்பாகத்தான் கழியும். உரலை ஒட்டி இடதுகாலை மடித்து வலதுகாலை நீட்டி உட்கார்ந்து சதா எதையாவது அரைத்துக்கொண்டேயிருப்பாள். அப்படிச் செய்யும்போது வலிப்பு வந்தால் இரண்டு கால்களுக்கு இடையேயிருக்கும் உரலை ஈன்பவள்போல உதைத்துக்கொண்டு அப்படியே மல்லாக்கச் சாய்ந்துவிடுவாள்.

சரசா பல உரல் குட்டிகளை ஈன்றெடுத்தவள். உரலின் ஆழம் வரைக்கும் தண்ணீர் விட்டு கையால் வழித்தும் தன் குட்டிகளில் ஒன்றைக் கூட அவள் கண்டதில்லை. சரசாவை, பெண் கேட்டு வந்தவர்களையெல்லாம் திருப்பி அனுப்பியதில் சாபமென புணர்ச்சியின் உச்சநேர முனகல் போல ஒவ்வொரு முறையும் இழுத்து அடங்கியது ஜன்னி.

குடும்பத்துக்கு வெளியே, இரண்டு ஆண்களை, சரசா மிகவும் விரும்பினாள். காந்தி ஜெயந்தியன்று தலைக்கு ஊற்றி பழனி முருகனை வேண்டி திருநீர் வைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தாள். பாவப்பட்டவளுக்கு மேற்கொண்டு செய்யும் பாவங்களால் பாதிப்பில்லை என்று நம்பியவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோழியையும் கொடுவாளையும் அவளிடம் கொடுத்தனுப்பினார்கள் செடிக்காட்டில், ஒத்தையடிப் பாதையில், தண்ணீர் எடுக்கப்போகும் பக்கத்துக்காட்டில் எங்காவது சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் ஜமுக்காளமோ புடவையோ காய்ந்தால் அதன் பின்னால் வலிப்பு வந்து சரசா மயங்கிக்கிடக்கிறாள் என்பதை ஊர்க்காரர்கள் ஒரு குறியீடு போலப் புரிந்துகொண்டார்கள்.

அன்று, சரசாவை நிழற்படம் எடுப்பதாக முடிவானது. காய்ந்த ஆலமர இலைபோல அவளுடலில் நரம்புகள் வெளியே தெரிந்தன. இறுக்கமான சட்டையின் வயிற்று பட்டன் போல உதட்டை உடைந்த பற்களுக்கு வெளியே இழுத்துச் சாத்தினாள்.

சூம்பிய காலை களவுப் பொருளென தரையைத் தொடும் சேலையைக் கொண்டு மூடினாள். மூன்று விரல்களால் பறித்தது போல கன்னங்கள் ஒடுங்கியிருந்தன. அண்ணன் மகளின் தங்க சங்கிலியைப் போட்டு எடுத்துக்கொண்ட படத்தில், வேறு யாரோ சரசாவுக்கு தெரிந்தார்கள்.

கண்ணாடியில் தெரிபவள், நிழற்படத்தில் இருப்பவள் இவற்றில் தான் யாரென்ற குழப்பம் அவளுக்கு இருந்துகொண்டேயிருந்தது. ஒருவழியாக, அது தான்தான் என்ற நினைப்பு வந்தபோது வலிப்பும் வந்தது.

காட்டை விற்றுக் கிளம்பும்போது அரை மணிநேர கற்பித்தலுக்கு பிறகு அண்ணனின் டிவிஎஸ் எக்ஸலில் மிகக் கச்சிதமாக அமர்ந்துகொண்டாள். வண்டி, ஐம்பத்து இரண்டு ஆண்டுகளாக அவள் பார்த்திராத ஒரு ஊருக்குள் நுழைந்தது. புதிய ஊரில், பழைய ஓட்டுவீட்டில் மலங்கழிக்க நாற்காலி போன்ற ஏதோவொன்றில் துளையிட்டு வைத்திருந்தார்கள். புது ஊரில், யாரிடமோ கைகூப்பி வணக்கம் வைக்கக் கற்றுக்கொண்டவள், மரணப்படுக்கையில் தன்னைக்காண வருபவர்களிடம் ஒரு வித்தை போல அதை செய்துகாட்டிக்கொண்டிருந்தாள்.

இரண்டு கைகளால் இழுத்து, உதடு பிரியாமல் பலூன் காற்றை வெளியேற்றும் சப்தத்தில் கடைசியாக ஒருமுறை சரசாவுக்கு வலிப்பு வந்தது. காட்டருவியை நிறைத்திட வைத்த ஒடுங்கிய குடமென அவளுடல் கடைசியாகத் துள்ளியது. சரசா, கன்னி கழியாமல் இறந்ததால் அவளுக்கு தொட்டில் கட்டித்தான் தூக்கவேண்டும் என்று யோசனை சொல்லப்பட்டது. கடைசியில் பாடை கட்டுவதாக முடிவானது. சரசாவை மருந்தூத்திக் கொன்றுவிட்டதாகவும், சவத்தேரில் அவள் உயிருடன் இருந்ததாகவும் தலை லேசாக
ஆடியதாகவும் சவ ஊர்வலத்தில் பேசிக்கொண்டார்கள். சுடுகாட்டில் சரசாவின் அண்ணன் காரியங்களை செய்தார். ‘சரஸ்வதின்னு பேரு வெச்சு வௌங்குன பொம்பளை ஒருத்தி உண்டா’ என்று சுடுகாட்டிலிருந்து திரும்பிவரும் வழியில், ஊர் பெரியவர் ஒருவர் யாரிடமோ கேட்டுக்கொண்டே வந்தார்.

10

மகிளாவை இந்த ஆண்டு பள்ளியில் சேர்ப்பதாக இருக்கிறோம். அன்று, செம்பருத்திச் செடி வைத்திருந்த மண் தொட்டிக்கு பொட்டு வைத்துக்கொண்டிருந்தாள். அது ஊரிலிருந்து அம்மா கொடுத்துவிட்டிருந்த செடி. மகிளா கைப்பிடித்து நட்டு வைத்திருந்தோம். நான் அருகே சென்றதும், ‘நெத்தில வெச்சுக்கோ’ என்று எதையோ கையில் கொடுத்தாள். நெற்றியில் வைத்ததும் தான் அது பாண்ட்ஸ் பவுடர் என்று தெரிந்தது.

‘என்ன தங்கம் பண்ற?’

‘சாமி கும்பிடறேன்’ என்றாள்.

‘என்ன சாமி இது?’

‘சரசாயீ. நீயும் கும்பிடு. கன்னத்துல போட்டுக்கோ.’

அந்த செம்பருத்திச் செடியை பயத்துடன் கும்பிட்டுக்கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *