சமிக்ஞை

மொழியாக்கச் சிறுகதை

நறுமணம் கமழ்ந்து இருண்டிருந்த தனது படுக்கை அறையில் இன்னமும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் அலங்காரி மர்ஷியோன் தெரேன்தான்.

தாழ்வான மெத்தென்ற படுக்கையில் மிருதுவான வெண்ணிறத் துகில்களின் நடுவே அவற்றுக்கு அணி சேர்ப்பது போலவும், முத்தமிடுவதுபோல் வருடிய நிலையிலும், விவாகரத்தான பெண்ணுக்குரிய ஆழ்ந்த சந்தோஷமான அமைதியான துயில் கொண்டிருந்தாள் அவள்.

வரவேற்பறையில் எழுந்த உரத்த குரல்களைக் கேட்டு விழித்துக்கொண்டவள், தன்னுடைய நெருங்கிய தோழி பரோன் தெ கிரான்ழெரி, உள்ளே தன் அறைக்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த வீட்டு வேலைக்காரியுடன் சண்டைபிடித்துக்கொண்டிருப்பதைப்  புரிந்துகொண்டாள்.

எனவே படுக்கையில் இருந்து எழுந்த மர்ஷியோன் கதவைத் திறந்து, திரைச் சீலையை விலக்கித் தன் முகத்தை - மேகக்கூந்தலில் ஒளிந்திருந்த முகத்தை - மட்டும் காட்டினாள்.

“என்ன விஷயம், ரொம்ப சீக்கிரமாகவே வந்து விட்டாயே?” என்று கேட்டாள். “இன்னும் ஒன்பது மணிகூட ஆகவில்லையே!”

முகம் வெளிறி, உடல் நடுங்கி, படபடப்புடன் இருந்த அழகிய பரோன் சொன்னாள்: “உன்னிடம் பேசவேண்டும். எனக்குப் பயங்கரமான விஷயம் நடந்துவிட்டது”

“உள்ளே வா டியர்”

அவள் உள்ளே போனாள்.

மர்ஷியோன் திரும்பவும் படுக்கைக்குப் போக, வேலைக்காரி, வெளிச்சமும் காற்றும் உள்ளே வருவதற்காக ஜன்னல்களைத் திறந்து வைத்தாள். பணிப்பெண் அறையைவிட்டுப் போனதும் மர்ஷியோன் கேட்டாள்:

“என்ன விஷயம், சொல்லு”

பெண்களை வசீகரமாகக் காட்டும் அழகொளிரும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தியபடியே அழுதாள் பரோன் தெ கிரான்ழெரி.

கண்கள் சிவந்துவிடக்கூடாது என்பதற்காகக் கண்ணீரைத் துடைக்காமலேயே விம்மினாள்:

“ஓ, டியர், எனக்கு நடந்தது அருவருப்பானது, மிகவும் அருவருப்பானது. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட நான் தூங்கவேயில்லை, என்ன உன் காதில் விழுகிறதா? ஒரு நிமிஷம் கூட. இதோ என் நெஞ்சு எப்படிப் படபடக்கிறது என்று பார்”

பெண்களின் இதயத்தை மூடி நிற்கும் உருண்டையான அங்கமாகிய, ஆண்களை மேலும் கீழே துழாவவிடாமல் திருப்தியோடு நிறுத்திவிடுகிற தன்னுடைய முலையின் மீது தோழியின் கையை எடுத்து வைத்தாள்.

அவள் இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.

அவள் தொடர்ந்தாள்:

“நேற்று சாயங்காலம் நான்கு மணிக்கு எனக்கு அது நடந்தது - அல்லது நாலரை மணி இருக்கும், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. உனக்குத் தெரியும் என் வீடு, அந்தச் சிறிய வரவேற்பறை அங்கே ஜன்னலோரம் உட்கார்ந்தபடியே செயிண்ட் லாஸார் வீதியில் வருவோர் போவோரைப் பைத்தியம்போல் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் உனக்குத்தெரியும்.

பக்கத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் எப்போதும் ஆரவாரமாக, பரபரப்பாக இருக்கும் - அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நேற்று, ஜன்னலோரம் போட்டிருந்த தாழ்வான நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளிக்காற்றைச் சுவாசித்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்.

நேற்று சாயங்காலப் பொழுது அருமையாக இருந்தது இல்லையா! திடீரென்று, எதிர்வரிசையில் ஜன்னலோரம் ஒரு பெண் - சிவப்பு உடையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். நான் இளஊதா உடையில் இருந்தேன். உனக்குத் தெரியுமல்லவா என்னுடைய அந்த அழகான இளஊதா உடை. அந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது.

ஒரு மாதமாக அங்கே வந்து குடியிருக்கிறாள்; ஒரு மாதமாகத் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதுவரை அவளை நான் பார்த்திருக்கவில்லை.

ஆனால் பார்த்தவுடேனே அவள் மோசமானவள் என்று தெரிந்துவிட்டது. என்னை மாதிரியே ஜன்னலின் ஓரமாக வந்து அவளும் வேடிக்கை பார்க்கிறாளோ என்றுதான் முதலில் நினைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய நடவடிக்கைகள் அவளை உன்னிப்பாகக் கவனிக்கும்படியாக எனக்கு ஆர்வத்தைத் தூண்டின.

முழங்கைகளை ஜன்னல் விளிம்பில் ஊன்றியபடி வீதியில் போய் வந்து கொண்டிருந்த ஆண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆண்களும் அவளைப் பார்த்தார்கள். எல்லாருமே, அல்லது கிட்டத்தட்ட எல்லாருமே.

வீட்டுக்குப் பக்கத்தில் வந்ததுமே ஏதோ காரணத்தால் அவள் அங்கே இருப்பது தெரிந்ததைப் போலவோ, அல்லது, உள்ளுணர்வால் அவளுடைய இருப்பை உணர்ந்து கொண்டது போலவோ, திடீரென்று தலையை உயர்த்தி, ரகசிய சமிக்ஞையைப்போல் வேகமாகப் பார்வையைப் பரிமாறிக்கொள்வார்கள்.

அவளுடைய சமிக்ஞை சொன்னது: ‘வருகிறாயா?’ அவர்களுடைய பதில்: ‘எனக்கு நேரமில்லை’ அல்லது ‘இன்னொரு நாள்’ அல்லது ‘என்னிடம் பணம் இல்லை’ அல்லது ‘என்ன துணிச்சல் உனக்கு!’.

அவளுக்கு அது வாடிக்கையான தொழிலாக இருந்தாலும், அதைச் செய்த விதம் எப்படி வேடிக்கையாக இருந்தது என்று உன்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

அவள் திடீரென்று ஜன்னலைச் சாத்திவிடுவாள், ஓர் ஆள் உள்ளே போவதைப் பார்ப்பேன்: தூண்டில் காரன் தூண்டிலை வீசி மீனைப் பிடிப்பதுபோல அந்த ஆளைப் பிடித்துவிட்டாள். பிறகு நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன், பதினைந்து - இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகவில்லை. நடந்தது எல்லாம் எனக்குச் சுவாரஸ்யமாக இருந்தது!

என்னை நானே கேட்டுக் கொண்டேன்:

‘ரொம்பச் சீக்கிரமாக அவளைப் புரிந்து கொள்ளும்படி செய்து விடுகிறாளே, எப்படி? சரி யாகவும் துல்லியமாகவும் செய்கிறாளே! தலைக்கு ஒரு அசைவைத் தருகிறாளா? அல்லது பார்வையில் கையசைப்பைக் காட்டுகிறாளா?’

என்னுடைய சிறிய பைனாகுலர் மூலம் உற்றுக் கவனித்தேன். எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. முதலில் ஒரு பார்வை, பிறகு புன்சிரிப்பு; ‘மேலே வருகிறாயா’ என்று கேட்பது போல் தலையைச் சற்றே பின்னோக்கி அசைத்தல்.

ஆனாலும் மற்றவர்களின் வெளிப்பார்வைக்குத் தெரியாமல், மிகவும் கவனமாக அதைச் செய்வதற்கு மிகவும் சாதுரியம் வேண்டும்.

திரும்பவும் என்னை நானே கேட்டுக் கொண்டேன்:

‘அவள் செய்வதுபோலவே என்னாலும் செய்ய முடியுமா?’

கண்ணாடிக்கு முன்னே நின்று செய்து பார்த்தேன் டியர். அவளை விட நன்றாகச் செய்தேன், ரொம்பவும் நன்றாகச் செய்தேன்! உற்சாகம் பொங்க திரும்பவும் ஜன்னலோரம் போய் உட்கார்ந்துகொண்டேன்.

அதற்குப் பிறகு அவளுக்கு வேறு ஆள் கிடைக்க வில்லை, பாவம் வேற ஆளே கிடைக்கவில்லை. அவளுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அப்படித்தான் பிழைப்பை நடத்த வேண்டுமென்றால் ரொம்பக் கஷ்டமானதுதான். கஷ்டமானாலும் வருகிற ஆள் அருமையாக இருந்துவிட்டால் அப்போதெல்லாம் சுவாரஸ்யமும் கூடிவிடும்.

பிறகு தெருவில் சென்றவர்கள் என்பக்கமாக வந்தார்களே தவிர, அவள் இருந்த பக்கமாகப் போக வில்லை. சூரியனும் மறைந்தது. பிறகு ஒவ்வொருவராக, இளைஞன், வயதானவன், கருத்தவன், வெளுத் தவன் என்று பல தினுசில் ஆட்கள் போனார்கள்.

கம்பீரமான ஒரு ஆள், நிஜமாலுமே வாட்டசாட்டமாக இருந்த ஒரு ஆள் டியர், என்னுடைய புருஷனை விடவும் அல்லது உன்னுடைய புருஷனைவிடவும் - அதாவது உன்னுடைய கடைசி புருஷன், அவனைத்தான் நீ விவாகரத்து செய்துவிட்டாயே - அழகாக இருந்தவன் வந்தான்.

எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்: ‘நான் சமிக்ஞை கொடுத்தால் அவன் புரிந்துகொள்வானா? நானோ கண்ணியமான பெண்மணி?’ அவனுக்குச் சமிக்ஞை காட்டவேண்டுமென்று மடத்தனமான ஆசை என்னைப் பிடித்துக்கொண்டது.

பொல்லாத ஆசை!

அந்த மாதிரியான ஆசையை யாராலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, தெரியுமா உனக்கு? எப்பவாவது அதுமாதிரி ஆசை எனக்கு வரும். அதெல்லாம் முட்டாள்தனமானது என்றுதானே நீயும் நினைக்கிறாய்? நம்மைப் போன்ற பெண்களுக்குக் குரங்கு மூளை என்று நினைக்கிறேன்.

ஒரு டாக்டர் கூட என்னிடம் சொன்னார், குரங்குகளோட மூளை நம்முடையது மாதிரியே இருக்குமாம். கல்யாணம் ஆனதும் சில மாதங்கள் நம்முடைய கணவர்களைப்போல இருக்கிறோம், அவர்களை ரொம்பவும் நேசிக்கிறோம்.

பிறகு நம்முடைய காதலர்களை, தோழிகளை, நம்மீது இச்சை கொள்கிற நல்லவிதமாகத் தெரிகிறவர்களை நேசிக்கிறோம். அவர்களின் பேசும் தோரணையை, எண்ணப்போக்கை, வார்த்தைகளை, பாவனைகளை, எல்லாவற்றையுமே நாம் பின்பற்றுகிறோம். ஆனால் அது ரொம்பவும் முட்டள்தனமானது.

“ஆமாம், ஆமாம்” என்றாள் மர்ஷியோன் பொறுமை இழந்தவளாக. “அதெல்லாம் சரி, என்னதான் நடந்தது? நீ மனத்தூண்டலுக்குப் பலி ஆகமாட்டாயே!”

டியர், எதையாவது செய்யவேண்டும் என்று மனத்தூண்டல் எனக்கு வந்தால், அதை நான் செய்து விடுவேன்.

அதனால் நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்:

‘ஒரு ஆளிடம் மட்டும் நான் முயற்சி செய்வேன், என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்ன ஆகிவிடும்? பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது! நான் புன்சிரிப்பைப் பரிமாறிக்கொள்வேன், அதோடு சரி, அதற்குப் பிறகு நான் மறுத்துவிடுவேன்’

அதனால் என்னுடைய விருப்பத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். நல்லவிதமான ஒரு ஆள், மிகவும் நல்லவிதமான ஆள் வேண்டுமே! திடீரென்று, உயரமான, நல்ல நிறமுள்ள, வசீகரமான தோற்றம் கொண்ட ஒரு நபர் வீதியில் வருவதைப் பார்த்தேன். உனக்குத்தான் தெரியுமே நல்ல நிறமான ஆட்களை எனக்குப் பிடிக்கும் என்று.

நான் அவனைப் பார்த்தேன், அவன் என்னைப் பார்த்தான். நான் சிரித்தேன், அவனும் சிரித்தான். நான் சமிக்ஞை செய்தேன், ஓ, மிகக் குறைவாகத்தான். தலையாலே சரி என்று பதில் சொல்லிவிட்டான் டியர்! வீட்டின் பெரிய கதவுக்கு முன் வந்துவிட்டான்.

அப்பொழுது என்னவெல்லாம் என் மனதில் ஓடியது என்று உனக்குத் தெரியாது. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்தேன். எப்படிப் பயந்து போனேன் தெரியுமா? ‘வீட்டுவேலைக்காரனிடம் - என் புருஷனின் விசுவாசியான ஜோஸப்பிடம் - வந்து பேசுவானே, அந்த நபரை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும் என்று ஜோஸப் நினைத்துக்கொள்வானே!’

என்ன செய்வது? ஒரு நொடியில் அழைப்பு மணியை அழுத்துவானே! நான் வாசலுக்குப் போய் அவனைப் பார்த்து, அவன் தவறுதலாகப் புரிந்து கொண்டதாகச் சொல்லி உடனடியாகப் போய்விடும்படி சொல்ல நினைத்தேன். பெண்களின் மீது,பரிதாபத்திற்குரிய பெண்களின் மீது, அவனுக்கு இரக்கம் வரும்  அல்லவா?

அவன் அழைப்பு மணியை அழுத்த எத்தனித்த அந்தத் தருணத்தில் ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். முட்டாள்போல உளறினேன்:

‘மிசியே, போய் விடுங்கள், தவறு செய்துவிட்டீர்கள், பெருந்தவறு. உங்களைப்போலவே இருக்கும் என் நண்பர் என்று உங்களை நினைத்துவிட்டேன். என்மீது தயவு செய்யுங்கள் மிசியே!’

ஆனால் டியர், அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டுச் சொன்னான்:

“ஓ, டியர், உன் கதை எனக்குத் தெரியும். உனக்குக்கல்யாணமாகிவிட்டது. அதனால் இருபது ஃபிராங் குக்குப் பதிலாக நாற்பது ஃப்ராங்க் வேண்டும் அதுதானே. அது உனக்குக் கிடைக்கும், உள்ளே இடத்தைக் காட்டுகிறாயா?”

‘அவன் என்னை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினான். பீதி அடைந்து நின்றிருந்த என்னை முத்த மிட்டு, இடுப்பில் கைவைத்து அணைத்துக்கொண்டே, திறந்திருந்த வரவேற்பறைக்குள்ளே நடத்தினான். சாமான்களை ஏலத்திற்கு விடுபவனைப் போலச் சுற்றி நோட்டம் விட்டான்.

‘உன் அறை நன்றாக இருக்கிறது, மிகவும் நன்றாக. ஜன்னல் வழி வியாபாரத்தைச் செய்கிற அளவுக்கு இப்போதுதான் உனக்கு அதிர்ஷ்டக் குறை ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது!’

திரும்பவும் நான் அவனிடம் கெஞ்சினேன்.

‘மிசியே, தயவுசெய்து போய்விடுங்கள்! என்கணவர் இப்பொழுது வந்துவிடுவார். சத்தியமாகச் சொல்கிறேன் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.’

ஆனால் அவன் அலட்டிக்காமல் சொன்னான்:

‘கிட்டே வா அழகியே, இந்தமாதிரி பேச்செல்லாம் நிறையக்கேட்டிருக்கிறேன். உன் புருஷன் வந்தால் அவனுக்கு ஐந்து ஃப்ராங் கொடுத்து வீதிக்கு அந்தப் பக்கம் உள்ள கஃபெயில் போய்க் குடித்துவிட்டுவரச் சொல்கிறேன்’

அங்கிருந்த ராவூலின் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இதுதான் உன் புருஷனா’ என்றான்.

‘ஆமாம் அவர்தான்’

‘ஆள் நன்றாக இருக்கிறார், பார்த்தால் எதற்கும் மசிகிறவர் போல் தெரியவில்லை. சரி, இது யார்? உன்னுடைய தோழிகளில் ஒருத்தியா?’

அது உன்னுடைய படம் டியர், கழுத்தைச் சுற்றி அலங்காரமாக இருக்கிற கவுன் போட்டு நீ இருக்கிற படம். என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கித் தடுமாறினேன்: ‘ஆமாம் அவள் என் தோழிகளில் ஒருத்தி’.

‘பார்க்க நல்லவிதமாக இருக்கிறாள், என்னை அவளிடம் நீ அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும்’.

அப்போது மணி ஐந்து அடித்தது. தினமும் ஐந்தரைக்கு ராவூல் வீட்டுக்கு வருவார். இந்த ஆள் போவதற்கு முன் அவர் வந்துவிட்டால் என்னாகும்?

என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்! அப்புறம், அப்புறம் என்புத்தி வேலை செய்யவில்லை. நான் யோசித்தேன் - யோசித்தேன் - அதாவது - அதாவது - அந்த ஆளிடம் இருந்து விடுபட நல்ல வழி - எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரமாக - ஆமாம், சீக்கிரமாகவே அது நடந்துவிட்டது - உனக்குப் புரிகிறதுதானே?

மர்ஷியோன் தெ ரேன்தான் சிரித்தாள், சிரித்தாள், பைத்தியம் போலத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, கட்டிலே ஆடும்படியாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஒருவழியாகச் சிரிப்பு அடங்கியதும் கேட்டாள்.

“ம், அது, அந்த ஆள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தானா?”

“ஆமாம்”

“அப்படி இருந்தும் அங்கலாய்க்கிறாயா?”

“ஆனால் - டியர், அவன் சொன்னான் - நாளைக்கும் வருவேன்னு சொன்னான் - அதே நேரத்திற்கு வருவானாம் - எனக்கு ரொம்பவும் கலக்கமாகிவிட்டது. சரிக்கட்டற மாதிரி எப்படிப் பேசுகிறான் தெரியுமா? பிடிவாதமாச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் என்ன செய்யட்டும்? சொல்லு”.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்து யோசித்த மர்ஷியோன், திடீரென்று சொன்னாள்:

“அவனைக் கைது செய்ய ஏற்பாடு பண்ணு”.

அதிர்ந்துபோன பரோன் தடுமாற்றமான குரலில் கேட்டாள்:

“என்ன சொல்கிறாய்? என்ன நினைத்துப் பேசுகிறாய்? அவனைக் கைது செய்யச் சொல்வதா? என்ன முகாந்திரத்தின் பேரில்?”

“அது ரொம்பச் சுலபம். போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப்போய், மூன்றுமாதமாக அந்த ஆள் உன்னைப் பின்தொடர்ந்து வருகிறான் என்றும், நேற்றுசாயங்காலம் திமிர் அடங்காதவனாக உன் வீட்டுக்குள் வந்துவிட்டான் என்றும் நாளைக்கும் திரும்பவும் வருவேன் என்று பயமுறுத்தி உள்ளதாகவும், அவனிடம் இருந்து சட்டப்படியான பாதுகாப்புத் தரும்படியும் கேள்”.

“ஆனால் டியர் அவன் ‘அதை’ போலீஸிடம் சொல்லிவிட்டால்...?”

“அவர்கள் அவனை நம்பமாட்டார்கள், முட்டாளாக இருக்கிறாயே, உன்னைத்தான் நம்புவார்கள்; யாரும் பழி சொல்லமுடியாத சமூக அந்தஸ்து உனக்கு இருக்கிறது”.

”ஆனாலும், அப்படிச் செய்ய எனக்குத் துணிச்சல் வரவில்லை”.

“துணிந்து செய் டியர், இல்லாவிட்டால் நீ ஒழிந்தாய்”

“அவனைக் கைது செய்தால், என்னை எப்படி எல்லாம் அவன் அவமானப்படுத்துவான் என்று யோசித்துப் பார்த்தாயா?”

“அவமானப்படுத்துவதற்குச் சாட்சிகள் வேண்டும். நிச்சயமாக அவனுக்குத் தண்டனை கிடைக்கும்.”

“என்ன தண்டனை விதிப்பார்கள்?”

“நஷ்டஈடு கொடுப்பதுதான். இம்மாதிரி விஷயங் களில், இரக்கமே காட்டமாட்டார்கள்.”

“ நஷ்டஈடுன்னு சொல்லும்போதுதான் ஞாபகம் வருகிறது - அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது - அந்த ஒரு விஷயம் தான். அவன் என் மேல் அங்கியில் நாற்பது ஃபிராங்க் வைத்துவிட்டுப் போய்விட்டான்”.

“ நாற்பது ஃபிராங்கா?”

“ஆமாம்”

“அதிகம் கிடையாதே”

“கிடையாது”

“அது ரொம்பச் சொற்பம். எனக்காக இருந்தால் என்னை அவமானப்படுத்தியது போல இருக்கும். சரி”

“சரி அந்தப்பணத்தை நான் என்ன செய்யட்டும்?” மர்ஷியோன் சில நொடிகள் தயங்கிவிட்டு, தீர்மானமான குரலில் சொன்னாள்: “டியர் - அந்தப் பணத்தைக் கொண்டு ஒரேயொரு கௌரவமான காரியத்தைச் செய்யலாம். அதைக் கொண்டு உன் புருஷனுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்துவிடு. அதுதான் நியாயமாக இருக்கும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *