க. வினோதா கவிதைகள்


பகிரு

1

 நேரலை சொட்டும் இணைவு ஓர்மைகளைத் துரத்தி 
 தர்க்கங்களைக் குனிந்து எடுத்து நிமிர்ந்து
 குறுக்கும் நெடுக்குமாக கரைக்கிறது 
 பெரு வரலாற்றில் செல்லும் பயணம்
 பழைய என்பதும் அவ்வப்பொழுது பொது வம்பு செய்ய 
 அகம் நுழைத்து அடைத்து வைத்துள்ள அத்தனையும்
 அழித்து வெற்று தளத்தில் வானம் வரைய நிறம் தேடியே 
 ஆட்டின் கொட்டாவியாக
 கச்சிதம் கலந்து வந்த பாதை விவாதம் புரிகிறது 
 புரியாத இடுக்குக்குள் சிக்கும் மொழிதலுக்குள் 
 நிகழ்ந்த பின் அசைபோடும் தளிர் நினைவுகள். 

2

பெரும்பசி வாயில் அள்ளித் திணிப்பது எல்லாமும் 
 கசிகிறது பிழைப்பு மண் கவ்வி 
 இரக்கம் துறவு பூண்டு 
 தோழியின் கூற்றில் இரவுக்குறி மறுத்து நிற்க
 பெருபேரமாகும் முனுமுனுத்த பின்முறை சொல்லல்கள் 
 கரை சேர்க்கும் முயற்சி 
 மண் நொறுக்கும் நுண்வாய் சிறு கறையான்கள் 
 சின்னோசைக்கே கண்ணயர்வு கொள்கிறது இதுக்கிடையில்
 நடுப்பகல் வெளியிலைக் கத்தியே கரைக்கிறது காகம் ஒன்று
 வரவு உணர்த்தும் சசிவுள் 
 பொருந்தியும் பொருந்தாமலும் அறம் பேசும் சூழலைப் 
 புறம் விழுங்க இடையில் வைக்க
 பொருத்தமான ஒரு சொல் மட்டுமே வேண்டும் 
 மெல்ல சூளுரைத்துத் திரும்ப. 

3

வரப்பொறுக்காத ஆள்காட்டி குருவிக் கூறும் தொலைந்த முகவரி 
 குஞ்சுடன் அலையும் வெள்ளைக்கோழிக் 
 கொத்தித் தின்னும் மேய்ச்சல் நிலமாகி கிடையாய் கிடக்க 
  உடலுள் கால் மட்டும் வளர்ந்து மெல்ல நடக்கச் சொல்லுகிறது
 பெயரில் புதைந்து அழுந்தும் ஆழம் நடுப்பகல் வெயிலால் நிறைய 
 எடுக்கும் நடு வினாக்கள் அப்படிக் கூட இருக்கலாம் 
 சுற்றம் நசுக்கி நிதம் தின்று மிஞ்சியவைகளையே எழுத 
 அதனுள்ளும் சிலேப்பியும் கெண்டையும் சுருண்டு கிடக்கின்றன போலும் 
 அவ்வப்பொழுது அவ்வளவுகளுக்குள் பொருளெல்லாம் குப்புற தொங்க
 தாவலிடுகின்றன வரிகளுக்கு இடையில் இருக்க மாட்டாத தவளைகள். 

4

சொதசொதநீர் தேரையின் பதிந்த இருப்புக்கிடையில்
 விரிந்த கிளையின் சிறு இலையென 
 மின்னி மறைகின்றன நினைவுகள் 
 கீழிறங்கி துண்டுத்துண்டாக சாய்கிறது சற்றும் எதிர்பாராமல்
 ஒற்றைகளில்
 பிரிந்த பகுதியாய் அடித்து வைத்தாற் போல் இருந்தும்
 கண்ணாடி காட்டும் பிம்பம் பாதி கழண்டு வெளியாக கிளம்ப
 மீதி ஆயுதப் போர்க் கற்று துடைத்து தூய்மை செய்கிறதாம்
 தெருவிளக்கு 
 வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு திரும்பும் வழக்கம் மட்டும் 
 ஓய்ந்த பாடியில்லை
  எனினும் இடம் தேட வேண்டியுள்ளது 
 கடந்து வந்த பாதையில் படிந்த நிழலை 
 எங்கு மாட்டுவதென்று. 

5

தொலைத்து வாயை மூடும் முன் 
 துண்டித்த சத்தம் காது அடைக்கிறது 
 முந்தேர்வு நடத்தி அனுமதிக்கப்பட்ட நண்டு 
 இருக்கும் மணல் குவித்து கிறுக்க
 மட்டும்களில் மிஞ்சும் சொல்லும்
 தலை ஒளிந்து பின்நின்று முகமாக கத்த தோன்றும் 
 குழந்தையின் தற்காலிகத் தவிப்பென 
  ஒற்றைச்சொல் வரக்காத்திருந்த நேரத்தில் 
 இடைச்சொற்கள் பின்முதுகில் ஏறிட 
 முன்தள்ளிச் செதுக்கும் தனிமையும் 
  ஊதா நிறத்தில் பின்னிரவுகளை அடைத்து வைத்துள்ளது வானம் 
 அவ்வப்பொழுது உள்ளாக மேலெழுந்து
 காலத்தைத் திட்டம் தீட்டி மர்மமாக கழிக்குமாமே 
 பின்போகி திட்டாகித் திடலான கதையோடு. 

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer