கோமரம்

தலைவர் போல, நடிகர் போல, வாரிசுகள்தான் அடுத்துப் பொறுப்பேற்பார்கள் கோமரம், சந்நதம், அல்லது ஆராசனைக்கும். நாம் குறித்த மூன்று சொற்களும் அர்த்தமாகவில்லை என்றால் மலையாளச்சொல் வெளிச்சப்பாடும் புரியாது உமக்கு. எனவே சாமியாடுதல் என்று சொல்லிச் சென்றுவிடலாம். வலிய சிவ வைணவத் திருத்தலங்களிலும் சாமியின் கருவறையில் நின்று முப்போதும் திருமேனி தீண்டுவதற்கும் பாரம்பரிய உரிமைகள் உண்டு எனச் செவிப்பட்டிருக்கிறேன்.

ஆனால் அவர்கள் சாமி ஆடுவதில்லை. நாட்டுப்புறங்களில் கோமரம் வந்து ஆடுவது என்பது வாரிசு உரிமை. இதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா என்று கேட்பீராயின் அப்பனுக்குத் தொண்டாற்றியவர்கள் மகனுக்கும் பேரனுக்கும் ஊழியம் செய்வதை மட்டும் அனுமதிக்கிறதா என்று திருப்பிக் கேட்பேன். சில கோயில்களில் பெண்களுக்கும் ஆராசனை வந்து சாமியாடுவார்கள் என்றாலும் பெரும்பாலான கோயில்களில் அவர்கள் பேயாடிகள்தான். சொல்லத் துணிந்தால் கண்ணுதலானே பேயாடி, தீயாடிதானே! என்றாலும் பெரும்பாலும் நாட்டில் ஆண் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் சாமி கொண்டாடி ஆண்தான்.

அன்று சுடலைமாடன், கழுமாடன், இயக்கி மாடன், புலைமாடன், சங்கிலிப் பூவத்தான், வைரவன், பூதத்தான், இயக்கி அம்மன், பேய்ச்சி அம்மன், முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், மாரியம்மன், காளியம்மன், வண்டிமலைச்சி அம்மன், உச்சிமாகாளி அம்மன், சந்தனமாரி, சூலைப்பிடாரி, கோம்பை, முத்துப்பட்டன், வன்னியன் முதலாய இருபத்தேழு சாமிகளின் கோயில்களைப் பேய்க் கோயில் என்றனர். தெய்வங்களை ‘வாதை’ என்றனர். இன்று ஸ்ரீ சுடலைமாடன் தேவஸ்தானம் ஆகிவிட்டது. சுடலைமாடனுக்கும் முப்புரிநூல் அணிவிக்கப்படும்.

அதுவோர் பக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு, என் அம்மை தனது தொண்ணூறாவது வயதில் காலமானபோது, மூத்த மகனாகிய நான் கொள்ளிவைத்து மொட்டை போட்ட தலையுடன் பதினைந்து நாட்கள் பிறந்த ஊரில் தங்கி இருந்தேன். ஊரில், வீட்டில் இருக்கும்போது நாம் சபாரி சூட்டில் இருப்பதில்லை. அரையில் ஒற்றை வேட்டி, கழுத்தில் கண்டமாலையாக வடசேரி ஈரிழை சுட்டித் துவர்த்து. வீட்டில் பொழுது போகாத வேளைகளில் தேரேகாலின் பாலத்துக் கருங்கல்லில் உட்கார்ந்து கிடப்பேன். கிழக்கே போகும் சாலை தாழக்குடிக்கு.

தெற்கே போகும் சாலை திருப்பதிசாரம். திருப்பதிசாரத்தின் தொல்பெயர் திருவண்பரிசாரம். நம்மாழ்வார் பாடிய வைணவத்தலம். என்ன பாடல் என்று கேட்டால் – நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் அவர் பாடிய 1296 பாடல்களில் தேட வேண்டும். திருவிருத்தம் – 100, திருவாசிரியம் – 7, பெரிய திருவந்தாதி – 87, திருவாய்மொழி – 1102 ஆக 1296 பாடல்கள். நம்மாழ்வாரைப் பெற்ற தாயார் காரிப்பிள்ளை பிறந்த ஊர் திருப்பதிசாரம், பெருமாள் பெயர் திருவாழிமார்பன். அர்த்தமாகவில்லை என்றால் ஸ்ரீநிவாஸன்.

நம்மாழ்வார் திருவாழிமார்பர் என்றே பாடுகிறார். காரிப்பிள்ளை பேறுகாலத்துக்குத் தாய்வீட்டுக்கு வந்திருப்பார். நம்மாழ்வாரும் அங்கு தானே சிரசு உதயமாகி இருப்பார்! தாழக்குடிக்கும் திருப்பதிசாரத்துக்கும் பிரியும் சாலையில், தேரேகாலின் மீது கட்டப்பட்ட பாலத்தின் வரிக்கல்லில், பரந்து படர்ந்து நின்ற ஆலமர நிழலில் அமர்ந்திருந்தேன். பரதேசம் புறப்படுவது வரைக்கும் அஃதென் தாய்மடி. ஆலமரத்துக்கு எதிரே சுடலை மாடன் பீடம். அவருக்கு மட்டும் கூரை இருந்தது. மற்ற சுற்றுபாடு வாதைகள் மழைக்கும் வெயிலுக்கும் காற்றுக்கும் கரைந்து கிடந்தனர். தேரேகாலின் வெள்ளம் பாயும் ஒலியிலும் ஆலமரத்து நிழலிலும் இளமஞ்சள் வெயிலிலும் இயைந்து வீசிய காற்றிலும் திளைத்து, சுடலைமாடனைச் சிந்தித்தவாறு இருந்தேன்.

திருப்பதிசாரம் சாலையில் இருந்து ஒரு பெண், அவள் மக்களான பன்னிரண்டும் பத்து வயதுமான சிறுமி, சிறுவனுடன் நடந்து வந்துகொண்டிருந்தாள். இறச்ச குளத்துக்கோ, புத்தேரிக்கோ, நாவற்காட்டிற்கோ குறுக்குவழியில் நடந்துபோகிறார்களாக இருக்கும். சிறுவர் இருவரும் சுடலைமாடனை வெறித்துப்பார்த்தனர். தாய் உடனே சொன்னாள், “அங்கிண பார்க்காத... சாத்தானுக்கக் கோயிலு...” என்று. மாற்று மதத்தவள் என்று பார்த்ததில் தெரிந்தது. எண்ணிக்கொண்டேன், வழிபடுபவரிலேயே சிலர் பேய்க்கோயில் என்கிறார்கள். மாற்று மதத்தவர் சாத்தானின் கோயில் என்று சொல்லக் கற்பிக்கப்பட்டிருப்பார்கள் போலும் என்று.

பேய்ச்சுரைக்காய், பேய்க்கரும்பு, பேய்த்துளசி, பேய்க்குமட்டி, பேயத்துமட்டி, பேய்ப்புடல், பேய்ப்பீர்க்கு எனப்பல செடி கொடிகள் உண்டு. உண்ணத் தகாதவை என்றுதானே பொருள்? பேய்க்கோயிலில் வாசிக்கப்படும் மேளங்களையும் பேய்க்கொட்டு என்றார்கள். இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் பேய்க்கும் நாய்க்கும் என்ன கொள்வினை – கொடுப்பினை? சிலருக்கு ‘நாய்க்குணம், பேய்க்குணம்’ என்பார்கள். சிலரை ‘நாயே பேயேண்ணு ஏசுகான்’ என்றார்கள். ‘அதென்ன நாய்ப் பறத்தம், பேய்ப்பறத்தம் ஒனக்கு?’ என்றனர். வெறிபிடித்த நாயைப் பேய்ப்பட்டி என்றார்கள். பந்து எறிந்து விளையாடும் ஆட்டத்துக்குப் பேய்ப்பந்து என்று பெயர்.

எதுவானாலும் ஆராசனை – கோமரம் – சந்நதம் வந்து ஆடுவது வேறு, பேயாடுவது வேறு. கோமரத்தாடிகள், ஆராசனைக்காரர்கள், சாமி கொண்டாடிகள் எனில் அன்றாட வாழ்க்கையில் அவர்க்குச் சில நியமங்கள் உண்டு. பிறந்த பிள்ளையைப் பார்க்கப்போவார்கள், செத்த துட்டி கேட்க இழவு வீட்டுக்கும் போவார்கள். ஆனால் – கை நனைப்பதை விடுங்கள்– பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கமாட்டார்கள்.

பாண்ட சுத்தி, கல்லெடுப்பு அடியந்திரம் கழிவது வரைக்கும் தீட்டு. தீண்டல் நாட்களில் வீட்டுப் பெண்கள் கூட அவர்கள் முன்னால் போகமாட்டார்கள். ஆற்றில், குளத்தில் கோமரத்தாடிகள் குளித்துத் திரும்பும்போது எத்துக்குத்தாகப் பெண்கள் – துணி துவைத்துக் குளிக்க, தண்ணீர் கோர என வருவார்கள் – எதிர்வந்தால், கோமரத்தாடிகள் கடந்து போகும்வரை ஒதுங்கி நிற்பார்கள்.

சொந்த வீட்டில் குளித்தல்லாமல் தீப்பெருக்கமாட்டார் மனையாட்டி. நேற்று வைத்தது, முன்தினத்து மிச்சம் மீதி எதுவும் கோமரத்தாடிக்குப் பரிமாறமாட்டார்கள். அடுத்த, எதிர்த்த வீடுகளில் இருந்து விசேடமாகச் செய்த பண்டம் பலகாரம் அவருக்குத் தின்னத் தரமாட்டார்கள். வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை போன்ற திவசங்களில் மீன் வாங்குவதில்லை. வீட்டில் சமைத்ததைப் பிறர் எச்சில்படுத்தும் முன் சாமியாடுபவர் சாப்பிட்டுவிடுவார்.

ஒரு சாமியாடியாக வாழ்வதென்பது சாமான்யமான காரியம் அல்ல. சாமியாராக வாழ்தல் அதனினும் எளிது. என்றாலும் சாமி கொண்டாடி வேறு, சாமியார் வேறு, சாமியாக இருத்தல் வேறல்லவா? தொழுத கையுடன் தன்முன்னால் வந்து நின்று வழிபடும் எத்தனை இரப்பாளிகளைச் சாமிகள் நேரிட வேண்டும்? ஒரு சாமி கொண்டாடி இறந்துவிட்டால், கால் கை இழுத்துக்கொண்டு முடங்கிப்போனால், நோய்ப்பட்டால், மூத்துத் தளர்ந்தால் அவரது மூத்த மகன் அல்லது அடுத்த மகனுக்குக் கோமரம் வரும்.

ஆண் வாரிசு அற்றுப்போனால் அவரது தம்பி மகன் தலையில் கோமரம் இறக்குவார்கள். அவரே ஒற்றைத்தனிமரம் என்றால் சகோதரி மக்களில் மூத்தவன்.ஈதென்ன இந்திய அரசியல் நிர்ணய சட்டமா திருத்தம் செய்ய மூன்றிலிரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர் கைதூக்கவேண்டும் என்பதற்கு?

மூப்பும் குறுகின காண் என்றுணர்ந்த ஆராசனைக்காரர், கால் கை திறனாக இருக்கும் காலத்திலேயே வாரிசுமேல் தனது கோமரத்தை இறக்கி வைத்து விடுவார். உரிமை வாங்கத் தயாராக இருப்பவர், ஆற்றில் குளித்து வந்து, ஈரவேட்டியின் மேல் ஈரத் துவர்த்தை முறுக்கிக் கட்டி, நீர் சொட்டச் சொட்ட வந்து நிற்பார். நீர் விட்டுக் குழைத்த திருநீறு மும்மூன்று விரல்களாக நெற்றி, தோள்பட்டைகள், மார் என உலர்ந்து வெளுக்கும்.

கோயிலின் மூத்த, பிரதான தெய்வத்துக்குச் சாமி ஆடுபவர், உரிமை பெறப்போகிறவர் தலைமேல் அபிடேக நீர் தெளித்து, திருநீறு பூசி, விக்கிரகத்தின் அனுமதி பெற்று, ஆராசனை வந்து, ‘ஓயேவ்’ என்று குரலெழுப்பி, வாரிசுக்கு சாமிவரத் தூண்டுவார். கோமரம் கைமாற்றப்போகிறவரும் தயாராக நிற்பார். கோமரம் வரப்போகிறவர் காதை மட்டுமல்ல, யாவர் காதையும் துளைக்கும்படி முரசும் தவிலும் உறுமியும் செண்டையும் மகுடமும் தப்பட்டையும் நாதசுரங்களும் துரிதத்தில் அடித்துக் கிழிப்பார்கள்.

தாங்கொணாத கணம் ஒன்றில் புதுக் கோமரத்தாடி மீது சாமி இறங்கும். உடலைச் சிலிர்த்து, முறுக்கி, முகத்தைக் கோணி, கண்களைத் தெறிக்கப் பார்த்து, கைகளைக் கோர்த்து மேலே தூக்கி, முன்னும்பின்னும் சாய்ந்து, ‘ஓயேவ்’ என்று குரல் கொடுப்பார்.

பிறகென்ன – இன்ஷா அல்லாஹ் – இன்னும் குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு அடுத்தச் சாமி கொண்டாடி தயார். எதுவானாலும் ஆராசனை ஆன பிறகே அவர் ஆடிப் பூ எடுத்து, மாலை அணிவிக்கப்பட்டு, சல்லடம் கச்சை கட்டப்பட்டு, மார்பிலும் குறுக்கிலுமாகப் பாய்ச்சல் கயிறு கட்டப்பட்டு, கையில் அவர் தேவதைக்கான ஆயுதம் வெட்டுக்கத்தியோ, சூலாயுதமோ, தண்டமோ, சங்கிலியோ, கழுவோ கொடுக்கப்பட்டு, திருநீற்றுக் கொப்பரை அளிக்கப்பட்டுப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்படுவார்.

புதிய கோமரத்தாடி சாமி வாகனத்தின் முன்னால் மற்ற கோமரத்தாடிகளுடன் மேளதாளத்துடன் நடக்கும்போது எல்லோர் வீடுகளிலும் சாமிக்குத் திருக்கம் சாத்துவார்கள். முன்னால் கும்பாட்டமும் நையாண்டி மேளமும் நடந்துகொண்டிருக்கும். புதிய கோமரத்தாடி வீட்டு வாசலில் நிற்போருக்கு திருநீற்றுப் பிரசாதம் நெற்றியில் பூசவோ, கையில் கொடுக்கவோ செய்யும்போது, பதவி துறந்த மூத்தபழம் கோமரத்தாடி கோயிலினுள் அவரது சாமி பீடத்தின் பக்கம் நின்று வருகிறவருக்குப் பிரசாதம் கொடுத்துக்கொண்டிருப்பார்.

அடுத்தக் கொடையில் இருந்து அவர் ஆளோடு ஆளாகக் கோயில் படிப்புரையில் சாதாரணமாக உட்கார்ந்திருப்பார். கோமரத்தாடி என்ன உக்கிரமாகச் சாமியாடினாலும் தன்னாள் வேற்றாள் தெரியும். நம்மைப் போலக் கிழிந்த நிக்கர் போட்டுக்கொண்டு மேல்சட்டை இல்லாமல் முன்னால் போய் நின்று கைநீட்டினால், ஒரு நுள்ளுத் திருநீறு உள்ளங்கையில் விரல் படாமல் போடுவார். சொக்காரன், கொண்டாங் கொடுத்தவன், குடும்பத்துக்காரன் போய் நின்றால் சாமி கொண்டாடி தம் கையினாலேயே முன்னால் அம்ச அடக்கமாய் நிற்பவர் உச்சியில் திருநீறு போட்டு நெற்றியிலும் பூசுவார்.

சிலசமயம் முணுமுணுப்பாக, “நல்லா படிக்கணும் கேட்டயா மக்கா” என்பார் சிறுவரிடம்.

சொந்த மகள், மகன், மருமகன், மருமகள், தம்பி தங்கைகள், அவர்தம் வாரிசுகள் என்றால் திருநீற்றை அள்ளி உச்சியில் ஐந்து விரல்களையும் அழுத்தி, பெருவிரலால் நெற்றியில் தீற்றி, அம்மனோ மாடனோ கொலுவிருக்கும் திசை நோக்கி வெறித்துப் பார்த்து, சற்றுநேரம் கண்மூடி நின்று ஏதோ முணுமுணுப்பார்.

சிலசமயம் சின்ன அதிர்வாக உடல் சிலிர்த்து, குரல் எழுப்பி, “போ! எல்லாம் சரியாகும்! நான் இருக்கேன்!” என்பார்.

சிலசமயம் அயல் அறியாவண்ணம், “ஏன் மக்கா? மருமகன் வரல்லியா? லீவு கெடைக்கல்லியா?” என்பார். கொடைக்குத் தாமதமாக வந்து சேர்ந்த கெட்டிக் கொடுத்த மகளிடம், கனிவும் பரிவும் சுரக்க. ஆறு கோமரத்தாடிகள் திருக்கம் சாத்தும்போது நின்றிருந்தாலும் அறுவரிடமும் பிரசாதம் வாங்கிப்பூசிக்கொள்வேன். என் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு கோமரத்தாடி வாழ்ந்தார். பாட்டா என்று அழைப்பேன். பலசமயம் அவருக்கு வீட்டுப் படிப்புரையில் அமர்ந்து வெற்றிலை தட்டிக் கொடுப்பேன் சிற்றுரலில். மூன்றுநாள் கொடை நடக்கும்போது, வீட்டுக்கே வராமல் கோயிலில் கிடையாகக் கிடக்கும் கோமரத்தாடி பாட்டாவுக்கு, அவர் மனைவி, என்னிடம் செம்பு நிறையப் பனங்கற்கண்டு போட்டுச்சுண்டக்காய்ச்சிய பால் கொடுத்துவிட்டார்.

“செம்பு நல்லா சுடும் மக்கா... பாத்து ரெண்டு கையிலேயும் பிடிச்சுக்கொண்டு போய்க்கொடு என்னா!” என்று அறிவுறுத்தி. சாமி வாகனத்துக்கு முன்னால் நடந்து ஊர்வலம் வரும்போது ஒருநாள் கொண்டு கொடுத்தேன். முகம் திருப்பி நின்று, பொறுக்கப் பொறுக்கக் குடித்துவிட்டுச் செம்பைத் தந்தார். செம்பொருள் அங்கதமும் பழிகரப்பு அங்கதமும் அறியா வயதெனக்கு.

காரியமாகத்தான் கேட்டேன், “வெத்தில தட்டி எடுத்தாரட்டா பாட்டா?” என்று.

அவர் முறைத்த முறைப்பு பாட்டாவா, கோமரத்தாடியா, சாமியேதானா என்பதறியேன் என்னைப் பெற்ற அம்மா மீது ஆணையாக!

நாஞ்சில் நாட்டில் எந்த ஊரில் எந்தக் கோயிலில் கொடை நடந்தாலும் ஓடியோடிக் கொடை பார்த்திருக்கிறேன். வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, நையாண்டி மேளம், கும்பாட்டம், ஆராசனை வந்த சாமி ஆட்டம், மயான கொள்ளை, உதிரம் குடித்தல், துள்ளுமறி என. கொடை முடிந்து இரவில் தனியாக ஊருக்குவர அஞ்சி கோயில் வளாகத்திலேயே படுத்து உறங்கிக் காலையில் எழுந்து பொடிநடையாக ஊர் திரும்பி இருக்கிறேன்.

இறச்சகுளம், தாழக்குடி, சந்தைவிளை, புத்தேரி, நாவல்காடு, தேரேகால்புதூர், வீம நகரி, திருப்பதிசாரம், வெள்ளமடம், ஈசாந்திமங்கலம், துவரங்காடு, மாத்தால், செண்பகராமன் புதூர் என. இரவு இரண்டுமணிக்குப் பசித்திருந்த வேளையில் படப்புச் சோறோ, பொங்கச்சோறோ, அரவணைப் பாயசமோ இரண்டு கை பரத்தி வாங்கித் தின்றிருக்கிறேன். நாஞ்சில் நாட்டின் சகலவிதமான சாமிகளையும் கும்பிட்டு நின்றிருக்கிறேன். பிரசாதம் வாங்கி நெற்றி நிறையப் பூசியிருக்கிறேன்.

ஆனால் உள்ளூரோ அயலூரோ எந்தக் கோமரத்தாடியும் என் நெற்றி தொட்டுத் திருநீறு பூசியதில்லை. ஒருவேளை என் அப்பனுக்கு இரண்டு கோட்டை விதைப்பாடு சொந்தமாக இருந்திருந்தால் செய்திருப்பார்கள். ஆனால் நான் கும்பிட்டு நின்ற ஏதோவொரு தெய்வம் என்னைக் காத்திருக்கிறது. இதுவரை எழுதிய இத்தனை சொற்களுக்குள் என் நான்கு சிறுகதைத் தலைப்புகள் ஒளிந்திருக்கின்றன. போதாதா?

எட்டுத் திசைகளிலும் திசைபலி செய்யப் போகும்போது குறுக்கே போகாமல், எதுப்புப் போகாமல், கோயில் நடையில் ஆட்டுக்கடாவோ, சேவல் கோழியோ, பன்றியோ பலி செய்யும்போது இருமாமல் தும்மாமல் மூச்சுப் பிடித்து நின்று, சாமி பீடங்களில் சைவப்படப்போ மாமிசப் படப்போ போடும்போது நள்ளிரவு ஒரு மணிக்குப் படப்புச்சோற்றின் மணத்தில் எச்சில் சுரக்காமல் காத்து, அப்படியே சுரந்தாலும் சாமிகள் ஊட்டெடுத்து முடியும்வரை உமிழ்நீர் விழுங்காமல் காத்து...

ஆத்திகமோ, நாத்திகமோ, சுயமரியாதையோ, பிறர் மரியாதையோ எந்த நல்ல காரியம் செய்ய முனைந்தாலும் எந்தக் காரியத்துக்கு வீட்டிலிருந்து வெளிக்கிட்டாலோ – பரீட்சைக்குப் போனாலும் பள்ளிக்குப் போனாலும் தீபாவளி அன்று காலை முதல் காட்சி எம்ஜியார் படத்துக்குப் புறப்பட்டாலும் குலதெய்வத்தை மனதில் நினைத்துக்கொள்வதில் தவறுவதில்லை.

அம்மனுக்கு நேர்ந்துகொள்வதும் உண்டு. அரிசிப் பாயசம், பஞ்சாமிர்தம், புட்டமுது, வடை, சுண்டல். ஏதோவொன்று, அல்லது அவற்றுள் சில, அல்லது எல்லாமும். கையில் வீச்சு இருப்பதைப் போல. யானை தூறியது என்று ஆடு தூறினால் அண்டம் கிழிந்துபோகாதா? ஏதோ ஒன்றிரண்டு நான் தருவேன், துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு ஒரு மாமன்ற உறுப்பினர் பதவி தா!

என்றாலும் சாமிகளின் நியமன உறுப்பினர்கள் தொந்தியும் பூரித்த உடலும் உள்ளவன் பிள்ளைகளுக்குத் தம்ளரில் ஊற்றும் அரிசிப் பாயசத்தில் அன்பைப் பொழிவார்கள். இராப்பட்டினிக்காரனின் அலந்த மக்களுக்குத் தரித்திரம் காட்டுவார்கள். அம்மன் முகத்தில் ஆடைக்கும் கோடைக்கும் கனிவான அருட் புன்னகைதான்.

ஒரு கோயில் கொடையின்போது – எந்தக்கோயில் என்றும், எந்த ஊரென்றும், என்ன சாமி என்றும் நினைவில் இல்லை. புதுக்கோமரத்துக்கு ஆராசனை வரத்திக்கொண்டிருந்தார்கள். கோயிலினுள் கட்டிச்சாம்பிராணிப் பாலின் புகை, களப சந்தன வாசனை, பரிமள புட்பங்களின் நறுங்கந்தம். காண்டாமணி முழக்கம். வெண்கலச் செண்டை. பூசாரிகளின் கை மணி. மேளக்காரர்களின் முழக்கம். உண்டு இல்லை என ஆதானிப்பட்டுக்கொண்டு ஓசையும் ஒளியும் புகையும் மணமுமாகப் பரபரத்தது உள் கோயில்.

வில்பாட்டுக்காரர்கள் வரத்துப்பாடி முடித்து ஓய்ந்திருந்தனர் வெறிதே! கோமரம் வாங்க நின்றவனுக்கு வெகு நேரமாயும் ஆராசனை வரக்காணோம். நாதசுரக்காரர் ஒருவர் காதைக் குறிவைத்து ஊதிக்கொண்டிருந்தார். உச்ச ஸ்தாயியில் துரித தாளத்தில் நாதநாமக்கிரியா. குளித்து ஒதுங்கி, விபூதிப் பட்டைகள் அடித்து, ஈரத்துணியுடன் கோமரம் வாங்க நின்றவனிடம் யாதொரு அளக்கமும் இல்லை. மலை கல்லுதான் மண்வெட்டி இரும்புதான் எனச்சாமியைப் பார்த்துக் கைகூப்பி நின்றான்.

இரண்டு தூண்கள் தள்ளி நின்று சாதாரணமாகச் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த அயலூர் சிறுப்பக்காரன் ஒருவனிடம் இருந்து, “ஓயேவ்... ஓயேவ்...ஓயேவ்....” என்று பேய்ப்பிளிறல் ஒன்று புறப்பட்டது.

உடம்பை அவனே ஒடித்துவிடுபவன்போல, முறுக்கி முறுக்கி நெளிய ஆரம்பித்தான். படமெடுத்த நல்லரவத்தின் சீற்றம் ஒத்திருந்தது அவன் பார்வையும் அசைவுகளும்.

வாரிசு உரிமைக் கோமரம் வாங்க நின்றவனைப் பிடிக்க இரண்டு பேர் நிற்க, அயலூரான் எந்த ஏந்தல் மாந்தலும் இன்றிச் சாமி பீடத்தைப் பார்த்து முகத்தை வலித்துச் சிரித்துக் கோணி, உருட்டி விழித்து ஆட ஆரம்பித்தான். இடையிடையே வன் கூக்குரல்,

“ஓயேவ்... ஓயேவ்... ஓயேவ்...”

எவரோ கேட்டார் – “ஏல இது யாரு? பூடம் தெரியாம சாமி ஆடுகது?”

பார்த்து நின்ற பக்கத்து ஆள் கேட்டார், “பாத்தா உள்ளூர்க்காரன் மாதிரியும் தெரியல்லே! வெளியூர் வரியா? யாரு வீட்டுக்காவது கொடை பாக்க வந்தவனா?” தணிந்த குரலில் அடுத்து நின்றவர் சொன்னார்,

“யாரு வீட்டுக்குண்ணா கேக்கேரு? எல்லாம் கோமரம் இறக்கப் போற கோமரத்தாடி வீட்டுக்கு வந்த பயதான்!”

“சரிடே! அவுருக்கு மகனுக்குச் சாமி வரமாட்டங்கு... இவுனுக்கு எப்பிடி வருகு?”

“இவுனும் ஒரு வாரிசுதான் வே!”

“சும்ம வேண்டாத்தனம் பேசப்பிடாது... இது சொக்களி பேசப்பட்ட காரியமாடே?”

“காரியமாட்டுத்தான் வே சொல்லுகேன்... கோமரத்தாடிக்கு தாடகைவிளையிலே ஒரு அச்சி உண்டும்லாவே! அவுளுக்கு மகன்லா!”

“அப்பம் சொந்த மகனுக்கு ஆராசனை வரல்லேண்ணா என்னா? இவுனுக்கு வருகுல்லா? பூவெடுக்கச் சொல்லி சல்லடம் கச்சை கெட்டீர வேண்டியதுதாலா!”

“அது எப்பிடி வே? நம்ம சாதிக்காரன் கோயில்லே மலையாளத்துப் பொம்பிளைக்குப் பொறந்தவன் சாமி ஆட முடியுமா?”

“ஓ! அதாக்குமா காரியம்?”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதான சாமிக்கு ஆடும் கோமரத்தாடி வெடுக்கெனச்சாடி இறங்கினார் ஆடுபவன் முன்னால். இன்னும் ஆடிக்கொண்டிருந்த அயலூர் இளைஞன் முகத்தில் தண்ணீரால் அறைந்தார்.

“போ... போ வெளீல... எங்க வந்து எறங்கீருக்க? யாருக்குப் பீடத்திலே யார் ஆடுகது?” எனக் குரல் எழுப்பி அதட்டினார்.

சுயம் திரும்பி வந்த இளைஞன் விழித்தான். தலையைக் குனிந்தவாறு உள்கோயிலில் இருந்து வெளி நடைக்கு இறங்கிப் போனான். அவன் கண்களில் துளையிடப்படாத முத்துக்கள் கோர்த்துச் சொட்டியதை சாமிகள் கண்டிருந்தன.

கண்டிருந்த ஊர் மக்களில் ஒருவர், தனது பக்கத்தில் நின்றவர் காதில் முணுமுணுத்தார் - “ஆனா கோமரத்தாடி மகனுக்கு ஆராசனை வரமாட்டங்கே! அதுக்கு என்ன செய்யப் போறாரு?” முணுமுணுப்பைக் கேட்டவர் திருப்பிக் கிசுகிசுத்தார்.

“அது எப்பிடிவே அவனுக்குச் சாமி வரும்?”

“ஏன் வராது?”

“போவும் வே! எல்லாத்தையும் தொறந்து பேசமுடியுமா?” என்று கையை மலர்த்தினார். வித்துப் பலம், பத்துப் பலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *