கொடுப்பார் இலானும் கெடும்

நாஞ்சில்நாடன்

பகிரு

திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுதுபோக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர்தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை. சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள்.

பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக்காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப்போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத்தொழில் என்றான பிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.

பிறகு வேறென்ன செய்வது? திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி.பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.

புத்தக வாசிப்பு என்பது ஒரு Obsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப்புருச வெறியும் நமக்கு இல்லை.

திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, திருக்குறள் சொல் அகராதியும் மூலமும்” என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடிவாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருளும் பாடல்களுக்கு உரையும் இருக்காது.

எடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037 வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக்குறள்களில் உண்டு. பாடலின் முதல் தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம்.

இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A Word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ.மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.

இவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன? சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்?

திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி.பிள்ளை என்ற கோ.வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.

திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.

திருக்குறள் பொருட்பாலின் காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே என்றாலும். திரும்பத் திரும்பச் செவிமடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. பகல் வெல்லும் கூகையைக்காக்கை!’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக.

இந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

என்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.

  1. பரிமேலழகர்: வலி மிகுதியுடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு, பொருகின்ற தகர் தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மைத்து என்றவாறு.
  2. மணக்குடவர்: மன மிகுதியுடையவன் கால வரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும் என்றவாறு.
  3. பரிப்பெருமாள்: மணக்குடவர் உரையைப் போன்றே.
  4. பரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.
  5. காலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற் கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

என்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.

நாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுதுகிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.

மேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.

  • சாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கியிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.
  • நாமக்கல் கவிஞர்: ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.மேற்கண்ட இரு உரையாசிரியர்களும் தகர் என்ற சொல்லுக்கு ஆட்டுக்கடா என்ற தெளிவான பொருள் தந்துவிடுகிறார்கள். என்றாலும் இன்னும் சில உரையாசிரியர்களிடம் கேட்கலாமே என்று தோன்றியது.
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை: (வினை செய்தலின்கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.
  • தேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

தற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக்குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே! ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக.

இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.

Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.

G. Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping hack in order to charge its opponent.

Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.

V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy

மேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram  எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப்பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram  எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே தேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல் நூற்பா,

மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
யாத்த என்ப யாட்டின் கண்ணே!’

என்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடையவேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேராசிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.

மோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat  எனப் பொருள் தரும்.

தகர் எனும் சொல்லுக்கோ

  1. Sheep, ஆட்டின் பொதுச்சொல் (திவாகர நிகண்டு),
  2. Ram, செம்மறியாட்டுக் கடா (திவாகர நிகண்டு),
  3. Goat, வெள்ளாடு,
  4. ஆண் யாளி,
  5. ஆண் யானை, களிறு (பிங்கல நிகண்டு),
  6. Male Shark, ஆண் சுறா (சூடாமணி நிகண்டு)

எனப் பொருள் தருகின்றது.

மேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு.உதள் எனும் சொல்லுக்கு Ram, He - goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.

என்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள்,அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை - வெள்ளாடோ, செம்மறியாடோ - குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.

இன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.

திருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.

தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.

மேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று -

‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ,
வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம்
கைச்சிறகால்ப் பார்ப்பொடுக்கும்’

என்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ்வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.

பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே’ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.

மூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.

வெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.

ஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா - Mongoose. எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

எலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால் கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.

‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு
ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’

என்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.

நாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே! நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,

சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை 
வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!’

என்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.

விரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.

ஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.

எருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின் இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.

மொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர்வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.

வைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்!

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer