குரோசவா: கலையும் கரிசனமும்

ஸ்வர்ணவேல்

பகிரு

மிப்யுனேவை குரோசவா இயக்கிய படங்கள் பதினாறு. அதற்கான காலமென்பது 1948லிருந்து 1965 வரை. அதில் குரோசவாவின் ஆகச்சிறந்த படங்கள் அடங்கும். குறிப்பாக, மிப்யுனே காசநோயினால் அவதியுறும் காங்க்ஸ்டராக நடித்த ட்ரங்கன் ஏஞ்சல் (1948), தனது துப்பாக்கியை மக்கள்கூட்டம் நிறைந்த பஸ் ஒன்றில் பறிகொடுத்துவிட்டு அந்தப் பிக்பாக்கெட்டை துரத்தும் போலிஸ்காரராக நடித்த ஸ்ட்றே டாக் (1949). அந்தத் துப்பாக்கி ஒரு கொலைக்குக் காரணமாயிருந்தது தெரியவந்து குற்றவுணர்ச்சியில் மூழ்கும் அந்த டிடெக்டிவ் போலிஸ்காரரின் பழிவாங்கும் உணர்வுக்கும் அந்தப் பிக்பாக்கெட் குழுவினருக்கும் உள்ள இடைவெளியை குரோசவா கட்டவிழ்ப்பது அமெரிக்கப் பிலிம் நுவார் படங்களிலிருந்து அவரது படத்தை வித்தியாசப்படுத்தும்.

1950ல் குரோசவா-மிப்யுனே கூட்டணியில் உருவான சினிமா உலகின் என்றும் அழியாத காவியமான ராஷோமொன், போலவே 1954ல் குரோசவா உருவாக்கிய செவென் சாமுராய், 1957ல் மேக்பெத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற த்ரோன் ஆப் பிளட், இரண்டு குழம்பிய நிலையிலுள்ள விவசாயிகள் ஒரு மௌனம் சாதிக்கும் யுவதியையும் அவரது பாதுகாப்பளாரான சாமுராயையும் தங்க பெட்டகத்துடன் எதிரிகளின் எல்லைகளைக் கடக்க நகைச்சுவையும் சாகசமும் நிறைந்த நிகழ்வுகளின் மூலம் உதவும் ‘த ஹிட்டன் போர்ட்ரஸ்’ (1958). அது ஜ்யார்ஜ் லுகாஸின் ‘ஸ்டார் வார்ஸ்’க்கு (1977) உந்துதல் அளித்தது.

1960ல் வந்த ‘த பேட் ஸ்லீப் வெல்’ ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்டினால் அகத்தூண்டுதல் பெற்றது. தனது மாமனாரின் மேல் மிப்யுனே கொள்ளும் காழ்ப்பும் பழிவாங்க செய்யும் முயற்சிகளும் கடைசியில் அந்த மையக் கதாபாத்திரத்தின் தற்கொலையாக அரங்கேற்றப்படுவது குரோசவாவுக்கே உரிய படமாக அதை மாற்றியது. ஷேக்ஸ்பியரின் காப்பியத்தை அவர் ஆக்கபூர்வமாகத் தனதாக்கிக்கொண்டதை அது காட்டியது. சமீபத்தில் ஷேக்ஸ்பியரின் 400ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது அதிகமாக மீள்வாசிப்புக்கு உட்பட்ட படம் அது. குரோசவாவின் ஜெடாய்ஜெண்டாய்ஜிகியின் ஒத்திசைவை ஒபிலியா கதாபாத்திரம் (யொஷிகொ இவாபுச்சி) நடக்கும்பொழுது காணலாம். அவர் முன்னர் நடந்த விபத்தினால் பெரிய காலணி அணிந்து வரவேற்புக்கு வரும்பொழுது தடுக்கி விழப்போவதாகச் சித்தரித்திருப்பது குரோசவாவின் படங்களில் காயம்பட்ட அத்தகைய குதிரைகளின் குளம்புகளின் நினைவுறலுக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வந்த குரோசவா-மிப்யுனே கூட்டணியின் யோஜிம்போ (1961) மற்றும் சாஞ்சிரோ (1962) சாமுராய் வகையறாப் படங்களே. செர்ஜியோ லியோனின் பிஸ்ட் புல் ஆப் டாலர்ஸ்க்கு (1964) வழிவகுத்த யோஜிம்போவில் ஒரு கிராமத்திலுள்ள இரண்டு குழுவினரிடமும் பாதுகாப்புக்காகப் பணம் பெற்றுக்கொண்டு அவ்வெதிரி கோஷ்டிகளை மோதவிட்டு அந்தக் கூச்சலும் குழப்பமும் நிறைந்த சூழலை ரசிக்கும் கதாபாத்திரத்தை மிப்யுனே தரித்த விதம் மக்களைக் கவர்ந்தது. அதே வேளையில் செவென் சாமுராய்க்கு அடுத்தக் காலக்கட்ட வரலாற்றில் (1860) அது நம்மை அணுகி வரும்பொழுது சாமுராய்கள் வேலையிழந்து அறமிழப்பதையும் குரோசவா சுட்டத் தவறவில்லை.

போலவே சாஞ்சுரோவில் சாமுராயாக ஆசைப்படும் இளைஞனுக்கு, அவனது தவறாகக் கைது செய்யப்பட்ட அரசதிகாரியாகயிருக்கும் மாமாவை விடுதலை செய்ய உதவும் கதாபாத்திரம் மிப்யுனேவுக்கு. அவர் அந்த இளைஞன் மற்றும் அவனது எட்டு நண்பர்களை ஒருவழியாக்கி வாழ்வில் உறவு, வீரம், மற்றும் மனிதம்/விழுமியம் பற்றிய முக்கியக் கேள்விகளை எழுப்புகிறார். 1963ல் வந்த ஹை அண்ட் லோ பற்றி மேலே பார்த்தோம். 1965ல் அவர்கள் கூட்டணியில் வந்த மறக்கமுடியாத படம் ரெட் பியர்ட். காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் தனக்குச் சினிமா வரலாற்றிலேயே மிகவும் பிடித்தது என்று கூறிய படம்.

பல கதைகளை/அனுபவங்களை உள்ளடக்கிய கதையாடல்களாக ரெட் பியர்டை தொடர்ந்த படங்கள்தான் டொடெஸ்காடனும் ட்ரீம்ஸும். ரெட்பியர்டுக்குமுன் ரெட்பியர்டுக்குப்பின் என்று தனது படங்களை வகுத்துக்கொள்ளலாம் என்று குரோசவாவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ரெட் பியர்ட்டுக்கு பிறகு வரும் மைய கதாபாத்திரங்கள் எல்லாம் இருண்மையின் பிரதிபலிப்புகள்தான் ப்ரெஸ்ஸோனைப்போலப் பொதுவாக இருண்மையை நோக்கிய பயணமாகத்தான் பிற்கால மைய கதாபாத்திரங்களின் சித்தரிப்பு இருக்கிறது. குரோசவாவின் பயணம் மெதுவாகச் சவால்களை மீறி வாழ்க்கையின் மேல் இருந்த நம்பிக்கைகளை இழந்து கடைசியில் மடாடயோவில் வந்து முடிகிறது. மடாடயோ (Not yet - இன்னும் இல்லை அல்லது இன்னும் இறக்கவில்லை என்கிற தலைப்பைக்கொண்ட வயதான பேராசிரியரின் வாழ்வைப் பற்றிய அந்தப் படத்திற்குப்பின் நம்மைவிட்டு 1998ல் தனது 88வது வயதில் பிரிகிறார் குரோசவா. ரெட் பியர்டுடன் குரோசவா-மிப்யுனே உறவும் முடிவுக்கு வருகிறது.

ரெட் பியர்டில் குரோசவா தனது தத்துவார்த்தமான மனிதத்தின் சாத்தியங்களின் உச்சத்தை அடைகிறார் என்று சொல்லலாம். வயதான முனிவரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட செந்தாடி என்றழைக்கப்படும் அந்த வயது முதிர்ந்த டாக்டர் சில்மிஷம் நிறைந்த அதற்குமுன் நாம் பார்ந்த சாமுராயிலிருந்து (யோஜிம்போ, சாஞ்சிரோ) முற்றிலும் மாறுபட்டவர். மிருகத்தைப்போன்ற உடல்மொழியும் பாய்ச்சலும் ஆற்றலும் நிறைந்த ராஷோமொன் மற்றும் செவென் சாமுராய் மிப்யுனே கதாபாத்திரங்களிலிருந்தும்தான். அந்த வயதான கனிந்த செந்தாடி டாக்டருக்கும் அவரிடம் பயிலவரும் நகரத்தில் டச்சு மருத்துவப் பள்ளியில் நவீன பயிற்சிபெற்ற இளம் டாக்டரான நொபொரு யாஷுமோட்டொவுக்கும் இடையிலான முரண்களில் மூலமாக வெளியில் முரடாகத் தெரிந்தாலும் உள்ளே மென்மையும் அன்பையுமன்றி வேறெதும் அறியாத அந்த முதிய டாக்டர் மூலமாக வாழ்வு எவ்வளவு முக்கியமானது அதில் சேவையின், கருணையின் இடம் என்ன என்பதை வாழ்வின் சிக்கலை, சோகத்தை எதிர்கொள்ளாமல் உணர முடியாது என்று புரியவைக்கிறார் குரோசவா. தனது மனதுக்கு ஒவ்வாத தன்னிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனக்கேயுரிய (நொபொருவின் பார்வையில் சர்ச்சைக்குரிய) விதத்தில் சிகிச்சையளிக்கும் செந்தாடி முதியவரை மெதுவாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறான் நொபொரு. வாழ்வனுபவங்கள் மூலம், பல அன்றாட ஆயினும் வித்தியாசமான நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் ஆத்மார்த்த சிகிச்சைகளின் மற்றும் உதவிகளின் மூலம் நோய்க்கான சிகிச்சை உடலுடன் முடிவதில்லை எனபதை அவன் அறிகிறான். சமூக நீதியின் இன்றியமையாமையை உணர்கிறான். அவன் பயிற்சி முடிந்து கடைசியில் வசதியான படைத்தலைவருக்குப் பிரத்யேக மருத்துவராகும் வாய்ப்பை/ வாழ்வைவிட்டு மீண்டும் டாக்டரின் ஏழைகளுக்கும் சாதாரண மக்களுக்குமான மருத்துவ விடுதியை விரும்பி வந்தடைகிறான்.

ரெட் பியர்ட் படத்தின் மையமான பல நோயாளிகளின் கதைச்சரடு மிகையுணர்ச்சி சார்ந்து, ஆயினும் அதைக் குரோசவா வடித்திருக்கும் விதத்தினால், நாம் பார்க்கும்தோறும் அந்தக் கதைகளும் நிகழ்வுகளும் கண்களைக் கலங்க வைப்பது. டிக்கன்ஸிலும் மனம் லயித்த குரோசவாவை இங்கு நாம் காணமுடியும். மெலொடிராமாவை ரித்விக் கடக் போல, குரோசவா போலக் கையாள யார் இருக்கிறார்கள்? யாமமோடோவின் சிறுகதைகளுடன் தனக்கு அணுக்கமான தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தும் அகத்தூண்டலைப் பெறும் குரோசவா நமது மனதைக் கட்டிப்போடும் திரைக்கதையை நோயாளிகளின் வாழ்வின் மூலம் கட்டமைக்கிறார். நோபொரோவைப்போல நம்மையும் அந்தச் சிகிச்சையுலகத்திற்குள் அவர் உள்ளிழுக்கிறார் செந்தாடி எனப்படுகிற க்யோஜோ நீடே (டொஷிரோ மிப்யுனே) மூலமாக. படம் தொடங்கும் விதத்தில் அது மரபுக்கும் நவீனத்துவத்துக்குமான முரண்களைப்பற்றி இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம். கதையாடலின் போக்கு மனிதம் மற்றும் சமூகநீதி சார்ந்து படத்தை நகர்த்துகிறது.

நொபொரு மூலம் செந்தாடி என அழைக்கப்படும் டாக்டர் நீடே, நமக்கு ஒவ்வொரு நோயாளியையும் அவர்களின் பிரச்சினைகளையும் மீறி எளிதில் குணமாக்க முடியாத சீக்குகளிலிருந்து தப்பித்து ஓட வேண்டியதில்லை அவற்றைப் புத்தனுடைய கவனத்துடன் அணுகுவதே சிறந்த முறை என்று அவரது செயல்கள் மூலம் தெளிவுறுத்துகிறார். அதன் நீட்சியாகக் கருணை அவரிடம் தொடர்ந்து சுரக்கிறது. அதில் நொபொருவுடன் சேர்ந்து நாமும் கரைகிறோம். குரோசவா அவரது சாமுராய் படங்களைக்காட்டிலும் ஒரு லயமும் பதட்டத்திலிருந்து நீங்கிய ஒரு சந்தமும் ரெட்பியர்ட் கொண்டிருக்கும் என்று முதலில் அந்த மருத்துவ விடுதியின் கூரையில் தலைப்புகள் அவசரமற்று வந்து செல்லும் விதத்திலேயே அறிவித்துவிடுகிறார். போலவே, ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் காலவரையறையின்றிச் சிகிச்சை அளிப்பதும். முதலில் அங்குள்ள விளிம்புநிலை மனிதர்களின்மேல் கரிசனமற்ற நொபொரு யாசுமோட்டோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறான். அவன் அப்படி ஒரு நாள் சென்றுகொண்டிருக்கையில் தனது பாதையில் அங்கிருக்கும் குடிலிலிருந்து தப்பிக்க யத்தனிக்கும் ஒரு பெண்ணைக் காண்கிறான். பணக்காரத் தந்தையைக் கொண்ட அந்தப் பெண் ரெட் பியர்டிடம் சிகிச்சை பெற்றுவருகிறாள். உளநோயுற்ற அவள் தனது அழகினால் கடந்த காலத்தில் இருவரைக் கவர்ந்து கொன்றது தெரியவருகிறது. அவளுடைய நோயில் ஆர்வமில்லாத நொபொருவிற்கு, அவள் அவனது அறையில் திடீரென்று பிரவேசிக்கும்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படுகிறது. அன்றைய குரொசவாவின் படங்களில் நடித்துள்ள க்யோகோ ககாவாவின் அழகு அவனைக் கட்டிப்போடுகிறது. ரெட் பியர்டின் ஆலோசனையை மீறி அவர்களிருவரும் அணைந்து அணுக்கம்
கொள்கையில் அவள் அவளுடைய பெரிய கொண்டை ஊசியை எடுத்து அவன் கழுத்தில் சொருக வரும்போது ரெட் பியர்ட் அங்குப் பிரவேசித்து அவனைக் காப்பாற்றுகிறார்.

குரோசவாக்கேயுரிய நீண்ட நேர கால அளவைக்கொண்ட காட்சித்துண்டின் மூலம் வெவ்வேறு திசையில் பார்த்துக்கொண்டிருக்கும் அவர்கள் இருவரையும் சட்டகப்படுத்திப் பின்னர் அருகிலமர்வதை மத்திம மற்றும் அணுக்க அளவிலான வகையில் சித்தரித்து அவர் தனது தனித்துவம் நிறைந்த அழகியலில், பெர்க்மேன் போன்ற மேதைகளிலிருந்து மாறுபட்டு க்ளோஸப் / அணுக்கக் காட்சித்துண்டின் பிரயோகம் அரியது என்று சொல்லிச் செல்கிறார். அவளது வாழ்வில் கடந்த காலத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறையைப் பற்றி அவள் நினைவுகூறும்போது தன்னை மறந்து நொபொரு அவள் கதையில் ஒன்றுபட அவர்கள் தழுவிக்கொண்டிருக்கும் அந்தத் தருணத்தில் அவள் தனது கொண்டை ஊசியை எடுத்து அவனைத்தாக்க முற்படுகிறாள். அவள் தனது வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை நினைவு கூறும் அந்த நாடகீய தருணத்தில் ஷாட்டைக் கண்ணுக்குத் துருத்தாமல் கட் செய்வதைப்பற்றி ஆசான் பாடமெடுத்திருப்பார். ஓடும் கேமராவைக் கொண்டு அசைவை மையமாகக்கொண்டு கட் செய்வதில் மட்டுமல்ல அவரது நிகரில்லாமை, கேமரா அசையாமலிருக்கும்போது கூட அவரது மேதமை தனித்து நிற்கிறது.
இன்னொரு முக்கிய அழகியல் சார்ந்து அதிகம் பேசப்பட்ட உட்கதையைச் சொல்ல வேண்டுமென்றால் ரொகுசுகே மற்றும் அவரது மகள் ஓகுனியின் பிரிவைப்பற்றிய கிளைக்கதையைச் சொல்லவேண்டும். சிறு வயதில் தனது தந்தையைப் பிரிந்த ஓகுனி உயிருடன் இருந்தவரை அவரைச் சந்திக்க முடியாமல் போன சோகத்தை. ஓகுனி சிறுமியாக இருக்கும்போது தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிடும் தாயினால் அழைத்துச் செல்லப்படுகிறாள். பின்னர் அந்தக் காதலனை தன்னைவிட்டு ஓடிவிடாமல் கட்டிப்போட தனது மகளையே அவனுக்குக் கட்டிக் கொடுக்கிறாள் அந்தத் தாய். அதை அறியாத ஓகுனி தாயின் தொடரும் உறவின் ரகசியத்தை அறியும்போது அதிர்ச்சி அடைகிறாள். அச்சமயம் தனது மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான தனது கணவனை, தனது தாயின் கள்ளக்காதலனை அவள் கொன்றுவிடுகிறாள்.

ரொகுசுகே பலதடவை அழைத்தும் சிறுவயதில் அவரைத் தனியே விட்டுவிட்டு தனது தாயுடன் சென்றுவிட்ட குற்றவுணர்வினால் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த ஓகுனி, ரெட் பியர்டின் மருத்துவமனையில் தனது தந்தையின் உயிர் பிரிந்த பின்தான் அவரைச் சந்திக்கிறாள். தனக்குக் குற்றவுணர்வுதானே ஒழிய அவர்மேல் எந்தவித காழ்ப்புமில்லை என்று கதறுகிறாள். மீண்டும் இக்காட்சியை ஒரு நீண்டகால அளவைக்கொண்ட காட்சித்துண்டின் மூலம் சட்டகப்படுத்தும் குரோசவா, இப்போது தனது அழகியலின் முக்கிய அம்சமான டெலிபோட்டோ லென்ஸைக்கொண்டு ஓகுனி, நொபொரு, ரெட் பியர்ட் மற்றும் விடுதியிலுள்ளவர்களின் மேலுள்ள போகஸை கதையாடலுக்குத் தேவையான நுண்ணிய உணர்வுகளுக்கு ஏற்ப மாற்றிக் காட்சியைக் கட்டமைத்திருப்பார். நீண்டநேரக் காட்சிகள் எப்படிப் புனைவுலகுக்கு ஒரு யதார்த்தத்தன்மையை வழங்குகிறது என்று இங்குப் பார்க்கலாம். ஆந்த்ரே பாஜான் சொல்வதுபோல டீப் போகஸ் என்கிற வைட் ஏங்கில் லென்ஸை அத்தகைய நீண்டநேர காட்சித்துண்டுகளில் உபயோகப்படுத்தாத பட்சத்திலும். நகிஷா ஒஷிமா போன்ற மேதைகள் வைக்கும் குற்றச்சாட்டான குரோசவா ஜிடாய் ஜிகியை கையிலெடுத்துச் சமகாலப் பிரச்சினையை அணுகவில்லை என்பதை இத்தகைய காட்சிகள் கேள்விக்குட்படுத்துகின்றன. அத்தகைய விமர்சனங்களைக் கட்டவிழ்க்கின்றன. கிம்-கி-தக் போன்ற இயக்குனர்கள் அத்தகைய அழகியல் சார்ந்த சொல்லாடல்களை இன்றைய சமூகத்தின் மேல் ஒளிபாய்ச்ச விரித்தெடுத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

கீழைத்தேய கலைஞர்களின் அன்றைய சமூகத்தைப் பாலியல் எனும் ஆடியைக்கொண்டு பிரதிபலிக்கும் முயற்சியின் இன்றைய தொடர்ச்சிதான் அவர்களது சினிமா. குரோசவாவின் அழகியலும் அறமும் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகைச் சார்ந்தவை என்றபோதிலும். மேற்கில் ப்ராயிடிலிருந்து தொடங்கும் ஒரு வலுவான கண்ணி மகனுக்கும் தாய்க்குமுள்ள உறவை ஈடிபஸ் மற்றும் மகளுக்கும் தந்தைக்குமான உறவை எலெக்ட்ரா காம்ப்லெக்ஸ் என்ற பாலியல் ஆடிமூலம் அணுகி சுருக்கும்பொழுது, அதை வைத்து ரெட் பியர்டில் ஓகுனிக்கு தனது தந்தையான ரொகு சுகேயுடனிருந்த உறவை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. அதேவேளையில் அவளது கணவன் அவள்தந்தையா அல்லது தனது தாயின் கள்ளக்காதலன் என்பதால் (மாற்றாந்) தந்தையா? அவள் குத்திக் கொன்ற அவன் அவளுக்கு யார் என்ற கேள்வியை முன்னிலைப்படுத்தி ஃப்ராயிடை தனது புகழ் பெற்ற ‘கௌச்சுக்கு’ எதிரிலுள்ள இருக்கையிலிருந்து எழுப்புகிறார் குரோசவா. எல்லாவற்றையும் ரிடக்டிவாக மட்டுமே பார்த்தோமென்றால், மேற்கில் ஒரு ரசிகன் ரஷ்ய இயக்குனரான சௌகுரோவின் ‘பாதர் அண்ட் சன்’ (2003) போன்ற படத்தை எப்படி உள்வாங்க முடியும், குறிப்பாக அந்த மகனுக்கும் தந்தைக்குமுள்ள அதீத பாசத்தை/உறவை. போலவே அதிலிருந்து முற்றிலும் அழகியலால் மாறுபட்ட ‘பெண் ஒன்று கண்டேன்’ (படித்தால் மட்டும் போதுமா, 1962)போன்ற பாடலையும் அதனைப் பீம்சிங் அவர்கள் காட்சிகளாக வடித்திருக்கும் விதத்தையும், முக்கியமாக, சிவாஜி மற்றும் பாலாஜியின் இயல்பான, அணுக்கமான நடிப்பையும்.

ட்ரங்கன் ஏஞ்சலிலிருந்து குரோசவாவின் பல காட்சிகள் ஓர் ஓவிய நிச்சலனத்தில் தொடங்கி அசைவின் விசைகொண்டு எழுந்து மீண்டும் ஓவிய சீர்மையை / அமைதியை நாடுவதைப் பார்க்கலாம். செவன் சாமுராயின் பல காட்சிகள் அத்தகைய ஓவிய பின்னணியிலிருந்து வந்த குரோசவாவின் அழகியலுக்கு நல்ல உதாரணங்கள். நிழற்படத்திலிருந்து வந்த சினிமா, காலவெளியை தனது மூலப்பொருளாகக்கொண்டு வாழ்க்கையைப் பிரதிபலித்து, அதை மீறிய ஒரு இடத்திலிருந்து கருணையுடன் அணுக வழி வகுத்து, வாழ்வில் மாற்றத்தைத் தரவல்ல சாத்தியங்களை உள்ளடக்கியது என்று நம்பிய அன்றைய குரோசவாவின் மகுடம் ரெட் பியர்ட். அதன்பின் தேய்பிறைதான். ரானில் புத்தனற்ற உலகில் வாழ நாம் பழகிக்கொள்ளவேண்டுமென்ற இருண்மையை மையமாகக் கொண்டு அவர் தீட்டியிருக்கும் ஓவியத்தின் இறுதிக் காட்சிகளே அதற்குச் சாட்சி. ரெட் பியர்ட் எனப்படுகிற டாக்டர் நீடே மனிதம் சார்ந்த குரோசவாவின் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தின் உச்சம். உதாரணத்திற்கு, தஸ்தாவெஸ்கியிலிருந்து உந்துதல் பெற்ற ரெட் பியர்டிலுள்ள ஒரு உட்கதை. டாக்டர் நீடேவுடனான உறவிலுள்ள தொலைவு குறைய ஆரம்பிக்கும் போது நொபொருவும் அவருடன் நோயுற்றவர்களைப் பார்வையிடச் செல்கிறான். அப்போது பாலியல் தொழிற்கூடமொன்றில் 12 வயது சிறுபெண் ஒருத்தி தொடர்ந்து இயந்திரம்போல் தரையைத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவளை அங்கிருந்து சிரமத்துடன் மீட்டெடுத்து வந்த செந்தாடி அவளைப் பராமரித்து அவள் உடல்நலனை மீட்டெடுக்கும் பொறுப்பை நொபொரு வசம் ஒப்படைக்கிறார். இயந்திரமாக ஒடுக்கப்பட்டு இறுகிய அவள் அன்பினால் கசிந்து, பின்னர் நொபொரு உடல்நலமற்றிருக்கும் சமயத்தில் அவனைப் பராமரிக்கிறாள்.

குரோசவாவின் தனித்துவம் என்பது ஒடொயோ என்ற அந்தப் பெண்ணின் கதையுடன் சோபோ என்கிற சிறுவனின் கதையை ஒன்றிணைத்திருப்பதுதான். வறுமையில் வாடும் தனது குடும்பத்தினருக்காகச் சோபோ உணவைத் திருடுகிறான். அவனது நிலையை அறிந்து ஒடொயோ மற்றவர்களுக்குத் தெரியாமல் அவனுக்கு உதவிசெய்கிறாள். ஆயினும் ஒரு நாள் அவன் திருடியது தெரியவந்து குடும்பத்துடன் அவன் வீட்டிலுள்ளோர் தற்கொலை செய்வதற்காக விஷத்தை அருந்திவிடுகிறார்கள். அபாய கட்டத்தில் அங்கு வரும் சோபோவிற்காக ஒடொயோவும் அங்குள்ள தலைமைத் தாதியும் மற்றவர்களும் வித்தியாசமான பிரார்த்தனை ஒன்றைச் செய்கிறார்கள்.

ஜப்பானிய பண்பாட்டிலுள்ள நம்பிக்கையின்படி கிணற்றில் குனிந்து கீழுள்ள நீரைநோக்கி அவன் பெயரை உரக்கக் கூறிக்கொண்டிருந்தால் அவன் பிழைத்துவிடுவான் என்று நினைத்து, அவர்கள் அந்த மருத்துவவிடுதி வெளிமுழுவதும் சோபோ என்கிற அடிவயிற்றிலிருந்து எழும் ஒலியால் நிரப்பிவிடுகிறார்கள். கிணற்றில் அவர்கள் அவன் பெயரைசொல்லி அழைத்துக்கொண்டிருக்கும் வேளையில் குரோசவா தனக்கேயுரிய விதத்தில் அதைக் காட்சிப்படுத்தியிருப்பார். ஒடொயோவும் தலைமை நர்சும் அவன் பெயரைச் சொல்லி கதறும்போது கேமரா அவர்களின் தொடரும் கூக்குரலுடன் கீழே கிணற்றுக்குள் அதன் உள்சுவரை உரசி கொண்டு உள்ளிறங்கும்.

ஆயினும் பாதி தூரம் வந்தபின்பு கீழ்நோக்கி டில்ட் செய்து பார்க்கையில் சோபோவிற்காக ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மேலுள்ளவர்களின் பிம்பம் கீழே கிணற்று நீரில் தெரியும். தளர்வான அணுக்கக் காட்சியில் தொடங்கி வாழ்க்கையைச் சிறிது தூரத்திலிருந்து சட்டகப்படுத்தும் தன்மையுடைத்த குரோசவா தானும் நடுக்கிணற்றிலிருந்து சோபோவுக்காகத் தனது கேமராமூலம் வேண்டுதலிலிருப்பது தெரியவருகிறது. ரெட் பியர்டில் குரோசவாவின் தன்வரலாற்றை நேரடியாக நினைவுறுத்தும் கதை என்றால் அது சஹாச்சியினுடையது. முதியவரான சஹாச்சி அங்கு ரெட் பியர்ட்டின் ஆணையையும் மீறி தன்னுடைய உடல்நலத்தில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களுக்கு வேண்டியதைச் செய்கிறார். அவர்களுக்கு உணவிற்கும் கம்பளி போர்வைக்கும் பணம் கொடுத்து உதவி புரிகிறார். ஆயினும் இன்று படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அவரை அங்குள்ள அனைவரும் நலம் விசாரித்துகொண்டிருக்கும் தருணத்தில் அடர்த்தியான மழைபெய்கிறது. அந்த மழையினால் அருகாமையில் மலைச்சரிவு ஏற்பட்டு எலும்புக்கூடொன்று கிடைத்தாகச் செய்தி வருகிறது. அது தன்னுடைய ஆசை மனைவியினுடையது என்று கூறும் சஹாச்சி தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார். எப்படிக் கண்டதுமே காதல் ஏற்பட்டு, சிறிது தயங்கிய ஒனாகாவின் சம்மதம் பெற்று மணம் முடித்து இன்பமான மணவாழ்க்கை வாழ்ந்தாரென்று. திடீரென்று பூகம்பம் ஒன்று குறுக்கிட்டு தனது வீட்டை இழந்ததை, அந்தச் சிதைவுகளில் காணாமல்போன தனது மனைவியின் சடலத்தைப்பற்றி. பின்னர் ஒரு வருடம் கடந்தபின் அவர் ஒனாகாவை இன்னொருவரின் மனைவியாக ஒரு குழந்தையுடன் பார்த்து அதிர்ச்சியடைகிறார். இரவில் திடீரென்று அவருடைய வீட்டிற்கு வரும் ஒனாகா தனது செயலுக்கான காரணத்தைக் கூறுகிறார். எப்படித் தன் குடும்பத்துக்கு மிகவும் உதவிய ஒருவருக்குத்தன்னை மணமுடிக்கச் சம்பந்தம் செய்திருந்தார்கள் என்று. அதைமீறி தான் சஹாச்சியைக் கல்யாணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்ததை. ஆயினும் அந்தப் பூகம்பம் அவளுடைய நன்றிமறத்தலின் வார்த்தைத் தவறுதலின் அநீதியின் குரலாக ஒலித்ததை. அதைத் தான் சந்தோஷமாக வாழ உரிமையில்லை என்ற அறிவிப்பின் குறியீடாக எடுத்துக்கொள்ளும் அவள் தற்கொலை செய்துகொண்டதை சஹாச்சி கூறுகிறார். அதன்பின் அவருதவி செய்த அனைவரின் அருகாமையில் அவர் அமைதியாக இறக்கிறார். 1923ல் டோக்கியோவைத் தாக்கிய பூகம்பம் குரோசவாவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை தனது சுயசரிதையில் (Kurosawa, Akira, Something Like an Autobiography, Japan: Vintage, 1989 , / குரோசவா, அகிரா, சம்திங் லைக் என் ஆட்டோ பையோகிராபி, ஜப்பான்: விண்டேஜ், 1981) அவர் பதிவு செய்துள்ளார்.

டோக்கியோ - யோகோ ஹாமா நிலநடுக்கம் காண்டோ பூகம்பம் என்றும் அறியப்படுகிறது. செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி அன்று நடைபெற்ற நிலநடுக்கத்தினால் ஏறத்தாழ ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் பேர் உயிரிழந்தார்கள். 13 வயது சிறுவனாகத் தனது அண்ணனுடன் அங்குச் செல்லும் குரோசவா அந்தச் சிதிலத்தின் குரூரத்தை வாழ்வின் பேரிழப்பைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொள்கிறார். அவரது கலைவாழ்வுக்குத் தூண்டுதலாக இருந்த அவரது அண்ணன் “கண்ணைத் திறந்து பார்” என்கிறார். அப்படிக் கண்ணைத் திறந்தபின் பார்க்கும் இடம்தோறும் பிணங்கள் மண்டிக்கிடந்தன என்கிறார் குரோசவா. இடிபாடுகளில், பாலங்களில், தெருக்களில், ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களில், வீடுகளில், வீட்டின் மச்சுகளில், கூரைகளில்… இழப்புகளின் காரணகாரியத்தை அறிய முடியாத குரோசவா இயற்கையின் பெரும் சீற்றத்திற்கும் பெரும் கருணைக்கும் தம்மை விரும்பி அளிப்பதைத் தவிர இப்புவியில் நமக்கு வேறுவழியில்லை என்ற தியானிப்பில் இருக்கும்போது இருபது வருடம் கழித்து மற்றொரு பேரதிர்வு தாக்கிற்று. அது இரண்டாம் உலகப்போர். இந்தமுறை இயற்கையினால் அல்ல மனிதனால் அவன் அதிகார வெறியால் உண்டான நெருக்கடி. அதன் உச்சமாக ஹிரோசிமா நாகாசாகியில் விழுந்த அமெரிக்க அணுகுண்டு. ஆகஸ்ட் 6 மற்றும் 9ம் தேதி 1945 அன்று அந்தக் குண்டுவீச்சில் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் மக்கள் பலியானர்கள். அனேகமாக முற்றிலும் போரில் பங்கேற்காத சாதாரண மக்கள். அன்று 1923ல் கண்களை மூடிய குரோசவா மனிதத்தைத் தேடி 1965ல் ரெட் பியர்ட் முடியும் வரை ஒரு நீண்ட உள்நோக்கிய கடந்த கால அறங்களிலிருந்து தற்கால விழுமியங்கள்வரை தனக்கு ஆசுவாசம் தரக்கூடிய வெளியை தனது கதையாடல்களில் தேடினார். 1970லிருந்து தயாரிப்பாளரில்லாத இருத்தலியல் சிக்கல் அவரது அத்தகைய பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. கண்ணைத் திறந்த குரோசவா வாழ்க்கையின் இருண்மையைத் தனது கலைப்பொருளாக்கினார். அதனுடன் சேர்ந்தே அவரது சூழியல் சார்ந்த, ஹிரோசிமாவுக்கு முன்னரே 1923வது வயதிலிருந்தே அவரது ஆழ்மனத்தை ஆக்கிரமித்த, கரிசனம் மற்றும் அணு ஆயுத எதிர்ப்பு போன்றவை அவரது கருப்பொருளானது. உதாரணத்திற்கு, மிக முக்கியமாக ட்ரீம்ஸின் கடைசி மூன்று பகுதிகளான, மவுண்ட் ப்யுஜி இன் ரெட், த வீபிங் டீமன், மற்றும் வில்லேஜ் ஆப் த வாட்டர்மில்ஸ்.

இங்கு குறிப்பிட வேண்டியதென்னவென்றால் இவை நியூக்ளியர் அதிகார எதிர்ப்பும் சுற்றுச்சூழல் சார்ந்த பதட்டமும் அவர் ஆழ்மனத்தில் பல ஆண்டுகளாகக் கனன்று அவரைக் கனவுகளாக வாட்டிக்கொண்டிருந்தது என்பதுதான். ட்ரீம்ஸின் நீட்சியாக அதற்குபின் ராப்ஸடி இன் ஆகஸ்டை இயக்குகிறார். அதன் கதையாடல் நாகசாகியில் விழுந்த அணுகுண்டினால் பிரிந்த அமெரிக்கக் குடும்பம் ஒன்றைப் பற்றியது. குண்டுவெடிப்புக்குப் பிறகு சிதறிய குடும்பத்திலிருந்து சுஜிரோ அமெரிக்கா வந்துவிடுகிறார். ஆதலினால் ஜப்பானில் தன் பேரக்குழந்தைகளுடன் வாழும் கேனுக்கும் அமெரிக்காவில் வாழும் அவளது சகோதரன் குடும்பத்துக்கும் நெருக்கம் இல்லாமல் போகிறது. மேலதிகமாக, கேனின் கணவன் நாகாசாகி குண்டுவெடிப்பில் 1945லேயே இறந்துவிடுகிறார்.

அமெரிக்காவில் வாழும் அவளது சகோதரன் உடல் நலமில்லாத நிலையில் அவர் குழந்தைகள் அவளை அமெரிக்கா (ஹவாய்) வர அழைக்கிறார்கள். ஆயினும் அதை அவள் மறுத்துவிடுகிறாள். பின்னர் அவள் சகோதரன் இறந்த பல ஆண்டுகள் கழித்து அவரது (பகுதி அமெரிக்க-பகுதி ஜப்பானிய) மகனான க்ளார்க் ஜப்பான் வருகிறார். தனது அத்தையான கேனுடன் வருடந்தோறும் நிகழும் நாகசாகி அணுகுண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு மூத்தோர் சடங்குகளில் பங்கேற்கிறார். தனது வயதான அத்தையின் நினைவுகள் தப்புவதையும் அவர் இன்னும் தனது மாமா உயிரோடு வருவார் என்று அவரது துணிமணிகளைப் பாதுகாத்து வைத்திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்கிறார். தனது அத்தையிடம் மன்னிப்பைக் கோருகிறார். ஆயினும் படத்தில் நடந்த விடயம் நிஜ வாழ்வில் நடக்கவில்லை. காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்சிடம், அவர் சூட்டிங்கின்போது ஜப்பானில் குரோசவாவை சந்தித்தபோது அமெரிக்கா, ஹிரோசிமா நாகாசாகி குண்டுவெடிப்புகளுக்கு இன்றுவரை மன்னிப்புக்கேட்காதது தன்னை நெருடுவதாகக் கூறுகிறார். போர் நாடுகளுக்கு ஊடாகத்தான், மக்களுக்கு நடுவில் நடப்பதல்ல என்கிறார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer