குணா கந்தசாமி கவிதைகள்

1. வரவேற்பு

இன்னும் கொஞ்சம்
பச்சையை நோக்கிய உந்துதலோ வேறெதுவோ
அதனை வழிதவற வைத்துவிட்டது
நிமிர்கையில் தன் மந்தையைக் காணாத ஆட்டை
அச்சமே முதலில் பீடிக்கிறது
இதயத்தின் திடுக்கில் அதிரும் தவிப்பு
குரலில் கனத்து ஒலிக்கிறது
மேற்கில் நாலெட்டு கிழக்கில் நாலெட்டு
வடக்கில் நாலெட்டு தெற்கில் நாலெட்டு
நின்ற இடம் திரும்பி
பின்னும் திசை துழாவும் கண்களுக்கு
சட்டென்று புதிர்வழியாய் மாறிவிடுகிறது நிலம்
பொன்னந்தி மேகத்தில் உருப்பெறும்
ஒரு ஆட்டைக் கண்டு
துளிர்விடும் அதன் நம்பிக்கையை
ஏமாற்றிவிடுகிறது வந்து கவியும் இருள்
மந்தைக் கதகதப்புக்கான ஏக்கத்தோடு
புதர்தேடி ஒண்டுமதற்கு
பயமாகவும் இருக்கிறது
எல்லாம் புதிதாகவும் இருக்கிறது
பட்டியற்ற படுக்கையில்
அசைவாங்கும் ஆடு
அனிச்சையாய் தலையுயர்த்திப் பார்க்கையில்
கோடானு கோடி நட்சத்திரங்கள்
இரவின் பிரத்யேக ஒலிகள்
மெல்லப்போகும் நிலவின் நடை
வைகறை கடந்து சூரியன் ஏறுகிறது
தூரத்திலிருந்து மேய்ச்சலுக்குத் திரும்பும்
மந்தையின் வாசனை பிடிக்கும் ஆடு
மே மேவென்ற உற்சாகப் பாடலோடு
வேகமாக ஓடி வரும்போது
ஒரு கணம் உற்று நோக்கிய
ஆடுகள் அத்தனையும்
ஒரே நேரத்தில் புழுக்கை போட்டுவிட்டு
தலைகுத்திக்கொள்கின்றன.

2. HD

டயபர் அணிந்த
கொழுகொழு குழந்தைகளைக் கண்டால்
கனியாத மனமில்லை உலகில்
பாக்ஸர் ப்ரீஃப் போட்டிருக்கும்
ஆறுகட்டு இளைஞனின்
திமிறும் உடற்தசையை
பின்னிருந்து
தழுவும் கரங்களின் நகங்களில்
அழகிய பூச்சுடைய
பிகினிப் பெண்
இன்பத்தைப் பெருக்குவதற்கான
திரவியத்தையும் உறையையும்
பரிந்துரைக்கையில்
நீ நாவில் ஜலம் வைக்காமலா இருந்துவிட்டாய்
நோய்மையும் சலிப்பு மிகுந்த
நம் மூத்தோர்களைப் போலில்லாமல்
அந்த வயோதிகர்கள்
இளமை மிச்சத்தோடு
பீடு நடையிடுகிறார்கள்
நிலவெளியின் அபாயகரமான பிரதேசங்களில்
இரண்டு நான்கு சக்கர
வாகனங்கள் சாகசங்கள் புரிகையில்
பொடி எழுத்துக்களில் மறைகின்றன
பொறுப்புத்துறப்பு வாசகங்கள்
உண்ணுபவை உடுத்துபவை
உபயோகிப்பவை என
அன்றாடத்தை அழகூட்டும்
அத்தனையத்தனை பரிந்துரைகளோடு
இதோ திரையில் தோன்றிவிட்டாள்
உன் அபிமான நடிகை
தூய்மையும் மகிழ்ச்சியும்
வலிமையும் நிதியும் நிறைந்த
பொன்னுலகத்தின் மின்னொளி
வரவேற்பறையில் கசிகையில்
நான் பாலுணர்வுப் பூரிப்படைகிறேன்
என் வீட்டின் கரப்பான்களோ
உயிர் பயத்தில்
இன்னும் இருண்ட மூலைகளுக்கு
ஓடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *