கீழாளன்

மலையாள மூலம்: ஷீபா இ.கெ. தமிழில்: மோ. செந்தில்குமார்

பகிரு

மொழியாக்கச் சிறுகதை

நாட்டு நடப்புபோல முகநூலில் அறிமுகமானான். சாட்டிங்கின் மூலமாக ஒருவருக்கொருவர் விருப்பங் களைப் பகிர்ந்து, நல்லது கெட்டதுகள் பொருந்திவரும் என உறுதியானபோது போன் நம்பர் கைமாறின. பிறகு நகரத்தில் ரெஸ்டாரெண்ட்டில் ஒருசந்திப்பும். அதற்கிடையில் எளிதாக ஜாதகக் குறிப்பைஏற்பாடு செய்து பொருத்திப் பார்த்தேன். ‘கடவுள்நம்பிக்கையற்றவர்’ என்றுதான் இரண்டு பேரு டைய புரொபைலிலும் காட்டியிருக்கிறோம். இருந் தாலும் காரியத்தோடு நெருங்கியபோது மனசுக்குள் ஓர் அச்சம். வாழ்க்கையல்லவா? எட்டிக் குதிக்கிற தல்லவா? கால் எங்காவது வழுக்கிவிட்டால்? இல்லாட்டியும், கீழே வலை கட்டியிருக்கா, போம் பெட்வச்சிருக்காங்களா என்பதெல்லாம் பார்த்துக் குதிப் பதே வழக்கம். பூனை மாதிரி யாக்கும் ருத்ரா என்று தான் அம்மா சொல்வாங்க. எப்படி விழுந்தாலும் நான்கு காலிலேயே விழுவேன். இதுவரைக்கும் குதித்தது தப்பிப்போனதுமில்லை என்பது  எனக்கே  உரித்தான   கர்வங்களிலொன்று.

இப்போதைய பிரச்சினை அனிலின் சாதிதான். சாதிமத பேதமில்லை என்று முகநூல் புரொபைலில் பதிவிட்டவள் இப்படிச் சொல்வதற்கு முடியாதென்பது தெரியும். ஆனால், இப்போது இது கீழ்ச்சாதியல்லவா. நம்பிக்கையற்றவன், நாத்திகன் என்றெல்லாம் எழுதி, பிடிக்கச்செய்ததனால் இதுவரைக் கும் இரண்டு பேரும் சாதிமதம் தொடர்பான விசயங் களை ஒருத்தரையொருத்தர் கேட்டுத் தெரிந்துகொண் டதில்லை. எல்லாம் முகநூலில்தான் தீர்மானம் செய்தோம். நேரில் கண்டபோது, அனில் நல்ல வெளுத்த நிறம். நானோ இருண்ட நிறக்காரி. உண்மையாகச் சொல்லவேண்டுமானால் அவனுடைய பொன்னிறத் தைப் பார்த்தபோது ஏதாவது  மேல்சாதியாக இருக்கும் என்ற தாழ்வு மனப்பான்மை கூட உண்டானது.

ஒரு தடவைகூட கீழ்ச்சாதியா இருக்குமோ என்றசந்தேகமே வந்ததில்லை. இப்போது பதிவுத் திருமணம் செய்யத் தீர்மானித்து முகநூலில் கல்யாணஅழைப்பிதழும் போஸ்ட் செய்தபோதுதான் ‘கீழாளன்’  வெளியே  வந்தான்.

‘கீழாளன்’ என்ற அந்தச் சொல்லை ஒரு நடுக்கத் தோடுதான் நினைத்துப் பார்த்தேன். அனிலுக்கு ஏதாவது அவசியம் வேண்டியிருந்ததா இந்த நேரத்துல இந்த விசயத்தைச் சொல்வதற்கு. இல்லாவிட்டாலும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விருப்பமில்லாதஉறவுதான். அவர்கள் சம்மதித்துவிடுவார்கள் என்பதாக  இருந்தது  கடைசிவரைக்குமான  எதிர்பார்ப்பு.

“இந்த விசயம் அக்காவுக்குத் தெரியுந்தானே, நம்மஅப்பாவும் அம்மாவும் முற்போக்குவாதிகள்னு சொன்னாலுங்கூட மனசுக்குள்ள பழைமைவாதிகள்தான். அதை வெளிப்படையா சம்மதிக்கறதுக்கு ஈகோஇடந்தராது.”

பத்ரா அதைச் சும்மாதான் சொன்னாள். அவளுக்கு உடன்பாடுதான். அனில் அவளுக்கும் முகநூல்நண்பன்தான். என்னவானாலும் கல்யாணம் உறுதிசெய்த விவரத்தை ‘ஸ்டேட்டஸ் அப்டேட்’ செய்தபோது நூற்றுக்கணக்கில் ‘லைக்’குகள் கிடைத்தன. ஏராளமான கருத்துகளும் வாழ்த்துகளும் கூடஉண்டு என்ற செருக்கோடு கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்திருந்தபோதொன்றும் இந்தக் கீழாளனை  நினைக்கவேயில்லையே.

இன்றைக்குக் காலையில்தான் அனில் கூப்பிட் டான்.

“ருத்ரா, என்னவானாலும் நமக்கு சாதியும் மதமும் இல்லாத வாழ்க்கைதானே. இருந்தாலும் இதுவரைக்கும் சொல்லாதிருந்த ஒரு விசயத்தையும்நான் சொல்லட்டா?”

எதாவது காதல் தோல்வியின் கதையாக இருக்கும் என்றே அப்போது எண்ணியிருந்தேன். அதுமட்டுமல்ல, பழைய கல்லூரி மேகஸின் எடிட்டர் ராஜிவ் மேனனைப்பற்றிய விசயம் சொல்லவேண்டுமாஎன்ற பயத்தோடு இருந்தேன். சொல்வதற்கும்கூட ஒன்றும் இருக்கவில்லை. கொஞ்சம் ஐஸ்கிரீமும் கடலைக் கொறிகளும் கடற்கரை நடையும் மட்டும் தானே இருக்கிறது என்று எண்ணிச் சொல்லாமல் இருந்தேன். ஆனால், அனில் சொன்னது அதைப் பற்றியதாக   இருக்கவில்லை.

“விசயம் என்னன்னா, நம்ம ரண்டுபேருக்கும் சாதியும் மதமும் ஒண்ணுமேயில்லை. இருந்தாலும், ருத்ரா மாதிரியல்ல நான். நாங்க கீழ்ச்சாதிக்காரங்க. அப்பாவும் அம்மாவும் ரண்டுதரம் கீழ்ச்சாதிக் காரங்க.” அவன் சற்று நிறுத்தி பதிலுக்காகக் காத் திருந்தான்.

மேல் சாதிக்காரியென்று அனில் எப்படித் தெரிந்து கொண்டான்?

‘ருத்ரா மேலேப்பாட்டு’ (குடும்பப் பெயர்) என்றுதான் முகநூலில் கொடுத்திருக்கிறேன். அனில் யூகிச்சிருப்பான். சிலநிமிட இடைவெளிக்குப் பிறகு அவன் சாதிப்பெயரையும் தெளிவாகச் சொன்னான். அவனது குரலில் நிறைந்து நின்றிருந்த சந்தேகம், என்னுடனான காதலினுடைய ஆழத்தை அளக்கப் போகிறான் என்று நினைத்துத்தான் அந்தச் சொற்களை மிகவும் லாவகத்தோடு காதில் வாங்கிக்கொண் டேன். கேலி பேசி அந்த உரையாடலை முடித்துவைக்கவும் செய்தான். சிந்திப்பதற்கு வேறுஎன்னவெல்லாம்  கிடக்கின்றன. அப்பாவும் அம்மாவும் அதிகமாகப் பேசுவதை  நிறுத்தி  மாதங்களாகி  விட்டன.

“நாங்க எதிர்க்கல. வீட்டைவிட்டு வெளியேற்றவும் மாட்டோம். ஆனால், கல்யாணம் செஞ்சுவைக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காதே. அதெல்லாம் உன்னோட இஷ்டம்போல. எங்களுக்கு இதுல துளியும் விருப்பமில்லை.” தீர்மானம் உறுதியானதென்று தெரிந்தபோது அம்மா இப்படிச் சொன்னாங்க. முனிசிபல் கௌன்சிலிங் மீட்டிங் என்று கூறி முகம் தராமல் அம்மா வேகமாக வீட்டைவிட்டுப் போகவும் செஞ்சாங்க. பத்தரைக்கு சப் ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போய்ச் சேரவேண்டும். முகநூல் நண்பர்கள் நிறையப் பேர் வருவார்கள். சிறியதாக ஒரு விருந்துக்கு ‘ஸவேரா’ வில்  சொல்லி  வைத்தாகிவிட்டது.

வீட்டுக்கு இனி எப்படித் திரும்பிப்போவது என் றொரு தவிப்பு உண்டு. அப்பாவும் அம்மாவும் இதுவரைக்கும் எதற்கும் எதிர்த்ததில்லை. ஆனால் இந்தவிசயத்தில் மட்டும் எதுக்காக அவங்களுக்குப் பிடி வாதம்? ஒவ்வொன்றாய் நினைத்துக் கூட்டிக் கழித்து படுக்கையில் மல்லாந்து கிடந்தேன். செய்வது சரியோ தவறோ. அனிலினுடைய கீழ்ச்சாதி விசயத்தை மீண்டும் நினைத்தேன். இல்லாட்டி எதற்காக இந்தச் சமாதானமின்மை. கல்லூரியில் படிக்கிற காலத்தில்எல்லாம் எந்தச் சாதியானாலென்ன என்று உறுதிப்பாட்டோடு வாதம் செய்துகொண்டு இருந்தேனே.

காலங்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து மிகவும் பரிச்சயமான ஒரு வாடை மூக்கைத் துளைத்துக் கொண்டு நுழைவதுபோலத் தோன்றியது. முன்பு பிள்ளைப் பருவத்தில் அம்மாவின் குடும்பத்தில் விடுமுறைக் காலத்தைக் கழிப்பதற்காகப் போகும்போது பரிச்சயப்பட்டிருந்த அந்த மனிதவாடை! கோரன்  தேங்காய் போட்டுவிட்டு இறங்கிவரும்போது இருக்கும் அதே வாடை. தென்னை மரம்ஏறுவதும் முற்றத்தைச் சரிசெய்வதும் வேலியடைப் பதும் புல்லு கொத்துவதும் எல்லாம் கோரன்தான். வாழை நாரின் கனத்தில் கட்டிவைத்த கால்கயிற்றை எடுத்துக் காலில் போட்டுக்கொண்டு, உயரம் காணமுடியாத தென்னையின் உச்சிக்குச் சரம் விட்டதுபோல ஏறுகின்ற கோரனை அசாதாரணமான அற்புதத் தோடுதான் பார்த்துக்கொண்டு நிற்பேன். ‘தேங்காய் விழும், தள்ளி நின்னுக்க’ என்று அம்மா எத்தனை கண்டித்தாலும் அந்த இடத்தைவிட்டு நகர்வதில்லை. காரணம், தென்னை மரத்தில் இருந்து இறங்கினால் கோரன் இளநீர் வெட்டி வழுக்கையை சிரட்டையில் வழித்தெடுத்துத் தருவான். பிறகு, சந்தன நிறமுள்ள குருத்தோலையை வைத்துப் பலவிதமான பொம்மைகளும் செய்வான். ஓலைப்பாய், பீப்பி, பந்து, பூக்கூடை.

ஸ்கூல் திறக்கும்போது நகரவாசிகளான வகுப்புத் தோழிகளைப் பொறாமைப்படுத்துவதற்குப் பயன்படும் அந்தப் பொம்மைகள். அதற்குப் பதிலாகரோசாப்பூவோ சாக்லெட்டோ தருகிறோமென்றுதோழிகள் கெஞ்சுவார்கள். விடுமுறைக்காலமொன் றில் ஓசையோடு பாய்கின்ற அம்பும் வில்லும் செய்து கொடுத்தான். அம்பெய்து பறவைகளை வீழ்த்தலாம் என்று கோரன் சொல்லிக்கொடுத்தான். கொஞ்சம் மெனக்கெட்டேன். ஆனால், ஒன்று கூடக்கிடைக்கவில்லை. இருந்தாலும் பெரிய தன்னம்பிக்கையோடு, ராமாயணம் சீரியலில் வருகிறமாதிரிஅம்பும் வில்லுமாக அந்த விடுமுறைக் காலத்தைக் கழித்ததை நினைத்துப் பார்க்கிறேன். அப்போதெல்லாம் எனது தனித்துவமான அகந்தையாக இருந்தான் கோரன். இப்படியிருந்தாலும்கூட கோரனுக்குப் பக்கத்தில் நிற்கும்போது மூக்கைப் பிடிச்சுக்கிட்டுத் தான் நிற்பேன். கோரன், வெய்யில் காலத்தில் பலமுறைக் கிணற்றடிக்குச் சென்று தலையில் தண்ணீரை ஊற்றிக் குளிரச் செய்வான். தினமும் பலமுறைக் குளிப்பான். உடைகளைத் துவைத்து வெய்யிலில் காயவைப்பான். இருந்தாலும் அவன் பக்கத்தில் போகும்போது ஒரு தனித்த வாடை மூக்கிற்குள் பாய்ந்தேறும். வியர்வையின், புல்லின், புதுநெல்லின், மண்ணின், கிழங்குகளின், மரத்துகளின், பச்சை இலையின் வேறுபடுத்தியறிய முடி யாத கலவையான வாடை.

“அது மண்ணோட மணந்தான் அம்மூ...”

கோரனின் மணத்தைப்பற்றிக் குற்றம் சொல்லிக் கொண்டு பாட்டியுடன் பகலுறக்கத்திற்காகப் படுத் திருக்கும்போதெல்லாம் அவங்க அமைதிப்படுத்தினாங்க. என்னைத்தவிர வேறு யாருக்கும் கோரனின் மணம் தொந்தரவு  செய்ததாகத்  தோன்றியது மில்லை.

“அவங்கிட்ட நல்ல ஒழுங்கும் சுத்தமும் இருக் குதுதானே ருத்ரா.” என்று அம்மா திட்டுவாங்க.

வேலைக்கு இடையில் தண்ணீர் குடிப்பதற்காக அடுக்களைக்கு வெளியே வருகின்ற கோரனின் கறுத்த உடம்பில் வியர்வையின் உப்புப் பரல்களைப் பார்க்கலாம். வடித்து எடுத்தால் உண்மையாகவே கல்லுப்புதான்! நிறைய மண் படிகள் ஏறிச் சென்றால்தான் கோரனுடைய வீட்டை அடைய முடியும். செம்பருத்திச் செடிகள் பூத்து நிற்கின்ற முற்றம் சாணமிட்டு மெழுகி சுத்தமாக்கப்பட்டுள்ளது. செங்களிமண்னைக் கொண்டு மினுக்கிய திண்ணையும் சிறிய மண் விளக்கினுடைய கரியடையாளமுள்ள வராந்தாவும். முற்றத்திலிருந்து கோரனின் மனைவி நீலி ஓலைத்தடுக்குப் பின்னிக்கொண்டிருப்பாள். வீட்டுக்குள் போவதற்கு பாட்டி அனுமதிப்பதில்லை.

“அவங்க எலியையும் கீரியையும் சுட்டுத் திங்கிற கூட்டம். எல்லாமே அசுத்தந்தான்.” என்றுதான் பாட்டிசொல்வாங்க. கோரன் நட்டு, தண்ணீர் விட்டு உண் டாக்கிய காய்கறிகளைக் கொண்டுதான் நாங்கள் உணவு உண்கிறோம். இளநீர் வெட்டுவதும் தேங்காய் உரிப்பதும் கோரன்தானே. அதில் அசுத்தியில்லையா என்று பாட்டியிடம் கேட்டதற்காக அம்மாவின் கை யால் வீங்குமளவுக்கு அடி கிடைத்ததுமுண்டு.

கோரனுடைய வீட்டுக்கும் இருக்குமோ அந்த ஆதிம வாடை? கடுகடுத்த அந்தப் பச்சிலைப் புல்மணம்? பாட்டி இறந்து, சொத்து பாகம் பிரித்ததோடு கிராமத்திற்கான யாத்திரைகள் நின்று நாங்கள்நகர நெரிசலில் உருகிக் கலந்தோம். கோவிலுக்குப்போகும் ஆச்சாரங்களும் மெதுவாக இல்லாமல் போனது. அப்பாவுக்கு முன்பே அப்படிப்பட்ட வழக்கங்கள் இல்லாதிருந்தது. பிறகு அரசியலில் பெயரெடுத்ததோடு அம்மாவுடைய பூசையறைநூலகமாக்கிப் புதுப்பிக்கப்பட்டது. அம்மா அந்த வருடம் முனிசிபல் கவுன்சிலருக்குப் போட்டியிட்டு ஜெயிச்சிருந்தாங்க. இப்படியிருந்தும்கூட கல்யாணத் துக்கு எதனால அவங்க முதுகைக் காட்டி நின்றாங்க என் பதைப் புரிஞ்சுக்கமுடியல.

“வேண்டாம்னு நாங்க சொன்னா அது உனக்குஏத்துக்க  முடியாதுங்கறதாலதான். நாம சேர்ந்து போற துக்கு ஆனதல்ல அது. என்னவானாலும் நீ மேலேப் பாட்டெ பொண்ணுங்கற நினைப்பு வேணும்.”

அம்மா இறுதிவார்த்தை என்பதுபோலச் சொன்னாங்க. ஒருவேளை, அனிலுடைய கீழ்சாதி விசயம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குமோ? முற்போக்குச் சிந்தனைகளைப் பிரசங்கம் செய்யக்கூடிய அரசியல் செயல்பாட்டாளரானதால் அந்தப் பெயரைச் சொல்லித் திருமணத்திற்குச் சம்மதம் இல்லையென்று சொன்னால் குழந்தைகள்கூட பரிகாசம் செய்வார்கள் என்று பயந்துதானோ? மொத்தத்தில் ஒரு கெட்டதனம். வழக்கமானதல்ல இதொன்றும். முடிவெடுப்பது, செயல்படுத்துவது. அதுதான் வழக்கம். இது ஒருவகையில், கல்யாண விசயம் என்பதனால் இருக்கலாம். எனக்கு நானே சமாதானப் படுத்திக்க முயற்சி செய்தேன். முகநூல் சுவரில் ஒருநாளும் மோசமான சித்திரங்களை போஸ்ட் செய்ததில்லை. வெளியே மரியாதைக்குரியவனாக நடித்து, யாருக்கும்தெரியாமல் ‘செக்ஸ் சாட்டில் விருப்பமுண்டா’, ‘ஏன்கல்யாணம் செஞ்சுக்கல’ தொடங்கிய இரட்டைமுகமுடைய மெஸேஜ்கள் அனுப்பியதில்லை. இதுமாதிரி காரணங்களை வைத்துத்தான் அனிலிடத்தில் விருப்பம் தோன்றியது.

வீட்டில் அம்மாவுக்கு கோயிலுக்குப் போவதும் கொஞ்சூண்டு வழிபாடுமெல்லாம் உண்டு என்று ஒருமுறை விளையாட்டாக அவன் சொன்னதை நினைக்கிறேன். அனிலின் அம்மாவுக்குத் திருமணத் திற்குச் சம்மதம்தான். போட்டோவை அவன் முக நூலில்  காட்டியிருக்கிறான்.

திருமணம் என்ற சடங்கு மனதைக் கொஞ்சமும் தீண்டாமல் ஒரு கனவுபோலத்தான் தோன்றியது. வாழ்க்கையில் மிகமுக்கியமான நாளாக இருந்தும் தனித்துவமாக ஒன்றும் தோன்றவில்லை. முகநூல் காரர் யாரோ போட்டோ எடுத்தார். வீட்டில் அனிலின் அம்மா நிலைவிளக்கோடு காத்திருந்ததைக் கண்டபோது  மனசு  கொஞ்சம்  குளிர்ந்தது.

“இதுதான் அவனோட அறை. மகளே போயி குளிச்சிட்டு வா.”

அம்மா வெளியே போனபோது அறையில் கொஞ்சம் கண்களை ஓடவிட்டேன். சுற்றிலும் தெய் வங்களின் சித்திரங்கள். கிருஷ்ணனும் சிவனும் மகா விஷ்ணுவும் எல்லாம் உண்டு. அசாதாரணமான ஒரு தடுமாற்றத்தோடு அவற்றை உற்றுப் பார்த்தேன். ஊதுபத்தி பற்றவைத்த அடையாளங்களை ஆங் காங்கே காணலாம். “எத்திஸ்ட்” என்று தன்னை சிறப்பிக்கின்ற, முகநூலில் மதம் தொடர்பான விமர்சனங்களுக்குக் கீழே பரிகாசம் நிறைந்த, கடுமையான கருத்துகளை எழுதுகின்ற அனிலினுடைய அறை தானா இது.

“அவனுக்கு இதிலெல்லாம் நிறைய நம்பிக்கை யுண்டு. எங்களுக்குக் கோயிலில் எப்பவும் ஒவ்வொரு வழிபாடு உண்டு.” அம்மா பெருமிதத்தோடு அறைக்குள் வந்தாங்க. அவங்க கையில்பால்  நிறைந்த  டம்ளர் இருந்தது.

அனில் அம்மா மாதிரியே. வெளுத்து, அதிகம் உயரமில்லாத அம்மாவைப் பார்த்தாலும் தோன்ற வில்லை ‘கீழாளன்’ என்று.

அறியாமல் வந்துபோன அந்தச் சொல்லை நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே வைத்து நெறித்து உடைப் பதற்கு முயற்சிசெய்தேன். சாதியிலும் ஆசாரங்களிலும் நம்பிக்கை வைத்திருப்பதால்தான் சமூகம்நசிந்துபோகிறது என்று பிரசங்கம் செய்கின்ற, சர்வீஸ்சங்கத்தின் அலுவலகத்தில் பதாகையின் சூட்டில் உறங்குவதற்குப் பேராசைப்படுகின்ற அனில்தானா இது. முகநூலில் பார்த்தது வேறு ஏதாவது அனிலோட புரொபைலா இருக்குமோ என்றெல்லாம் சந்தேகம் எழுந்தது. சட்டென நினைத்தேன், அனிலை மட்டும்குற்றம் சொல்வது எதற்காக. மனதில் இருந்து நிச்சயமாய் மாய்ந்துபோய்விட்டதென்று கருதியிருந்த நம்பிக்கைகளெல்லாம் துக்கங்களாக வந்து கூடியதனால்தானே குடும்பக் கோவிலுக்கு வழிபாடு நேர்ந்தேன். எல்லாம் மங்களகரமாக முடிந்தால்  தேவிக் கொரு  முழு மாலை!

இருந்தபோதிலும் அனிலுக்கு ஒன்று சொல்ல வேண்டுமென்று இருந்தது. (அனிலிடத்தில் நான்ஒருபோதும் அதொன்றும் சொல்வதற்கு உத்தேசிக்க வில்லை என்பது எனக்குத் தெரியும்.) ராத்திரி அதிக நேரம் கழித்துத்தான் அனில் வந்தான். இடவப்பாதி* (* இடவ மாதத்தின் நடுப்பகுதி. ஜூன் மாதம். தென் மேற்குப் பருவமழை தொடங்கும் காலம்.) உப்பிக்கொண்டு நிற்கும் வானம். அறையில் வழக்கத்துக்கு மாறான புழுக்கம் தோன்றியது.

“சாரி, ருத்ரா. ரொம்ப நேரமாச்சு. போரடிச் சுருச்சா?”

வெளுத்த முண்டும் ஜிப்பாவும் அணிந்து குளித்துசுத்தமாக உண்மையாகவே புது மணவாளனாக அனில்  உள்ளே  வந்தபோது  மனசு  சாந்தமடைந்தது.

“அந்தத் தலைவர்கள் போவதற்கு நேரமாயிருச்சு. பரவாயில்ல ருத்ரா, நமக்கு ஒரு வாழ்நாள் முழுவதும் பாக்கியிருக்குதானே.”

குறும்போடு அனில் நெருங்கி நின்றான்.

“இதா இப்படிப் பார்த்துட்டே இருக்கறதுக்கு, காதலிக்கறதுக்கு, அப்புறம்...”

அனில் இயல்பில் துளியும் ரொமாண்டிக் இல்லா தவன். எல்லாத்தையும் அறுத்து முறிச்சதுமாதிரி சொல்வதுதான் வழக்கம். நானும் அதுமாதிரியேதான். இருவருக்குமான விருப்பத்தைக்கூட ஒட்டு தல் இல்லாமத்தான் வெளிப்படுத்திக்கிட்டோம். முன்பு முடிவுசெய்திருந்த விசயத்தை நடை முறைப் படுத்துகின்ற வீரியத்தோடு.

அனில் மெல்ல விரலைத் தொட்டான். அவனுடைய சந்தன நிறமுடைய விரல்கள் என்னுடைய இருள்நிற விரல்களை மேலும் இருண்டதாக்கின. மெல்ல கையை விலக்கிக்கொண்டு அவமானத்தோடு முகம் தாழ்த்தியிருந்தேன்.

நான் இப்படியெல்லாம் ஆவது எதனால்? மனசு துடித்துக்கொண்டிருந்தது.

‘ருத்ராவுக்கு நாணமோ?’

காதில் கிசுகிசுத்தவாறே சேர்த்தணைத்தபோது ரகசியமாகக் கனவு கண்ட நிமிசமல்லவா திரண்டு வருகிறது என்று நினைத்துக்கொண்டு எல்லா அகங் காரங்களையும் மறந்துவிட்டேன், மெல்ல அவனு டைய  நெஞ்சில்  முகம்  சேர்த்தேன்.

திடுமென மூச்சறைகளைக் கிழிக்கும்படியாக புராதனமான ஒரு வாடை மூக்கிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது. மரச்சிராய்களின் புதுமணம்போல, அடித்து மிதிக்கப்பட்ட இளம்புற்களிலிருந்து எழுகின்ற புதுமணம்போல, உப்புப் பரல்கள் வெயிலில் கனம் வைப்பதுபோல வருடங்களுக்கு அந்தப்பக்கம் இருந்து புராதனமான அந்தப் பச்சிலைப்புல் மணத்தை மீண்டும் அறிந்தேன். கறுத்தசரீரத்தினூடாக வியர்த்து ஒழுகுகின்ற உப்புப் பரல்களோடு கோரன் தென்னை மரத்தில் இருந்து இறங்கி வருகின்ற வாடை. குருத்தோலைத் தடுப்பில் சுவாசம் அடக்கிப்பிடித்து இளநீருக்கு வேண்டிக்காத்திருக்கின்ற பழைய பெண் பிள்ளையானேன்நான். மனதை வெறுக்கச்செய்கின்ற அந்த மனிதச் சூரை எல்லா நரம்புகளையும் வீங்கி வெடிக்கச் செய்வதுபோல அறைக்குள்  நிறைந்தது.

அனிலின் இளஞ்சூடான கைகளைத் தட்டிவிட்டு விலக்கிக் கதவை இழுத்துத் திறந்துகொண்டு வெளியே ஓடிப்போனேன். ‘மேலேப்பாட்டெ பெண்ணாக்கும் நான்.’

என்னை நானே சமாதானம் செய்துகொள்ள முயற்சிக்கும்போது பதற்றத்தோடு அப்படி என்னவோ உரக்கச் சொன்னேன். வெளுத்த முகத்தில்படர்ந்து நிறையும் ரத்தச்சிவப்போடு கீழாளன் என்னைப் பார்த்துத் திகைத்து நிற்கிறான். அவனு டைய ஆதிம மனிதவாடை வீடுமுழுவதும் நிறை வதையறிந்து பயத்துடன் முன்வாசல் கதவைத் திறந்து மழைமேகம்  சூழ்ந்த  இரவுக்குள்  இறங்கினேன்.

முதலிரவில் வீட்டைவிட்டு வெளியேறுகின்ற ‘லைப் ஈவண்ட்’டிற்கு எவ்வளவு ‘லைக்கு’கள் நாளைக்கு முகநூலில் காத்திருக்கின்றன என்று ஒன்றும் அப்போது நினைத்ததேயில்லை. சுவாசம்கிடைக்கக்கூடிய இடத்தைத்தேடி நான் அலறிக் கொண்டு ஓடினேன்.

குறிப்பு:

இச்சிறுகதை டி.சி. புக்ஸ் வெளியிட்டுள்ள (2016) ஷீபா இ.கெ.வின் “கனலெழுத்து” என்ற சிறு கதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. (பக். 27-32.)

எழுத்தாளர் குறிப்பு:

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல் மண்ணாவில் பிறந்தவர். தந்தை இ.கெ. சூபி, தாய் கெ. ஆயிஷா.

பாஷாபோஷிணி சாகித்யாபிருசி விருது, வனிதைகதை விருது, மலையாள மனோரமா கதை விருது, பத்மராஜன் விருது, பொன்குன்னம் வர்க்கி கதை விருது, பாயல் புக்ஸ் கதை விருது, ரியாத் நியூ ஏஜ் கமலா சுரய்யா விருது, சாகித்யஸ்ரீ விருது, பஷீர் விருது முதலான பல விருதுகளால் சிறப்புபெற்றவர்  ஷீபா  இ.கெ.

வைடுகே (Y2K), நீலலோஹிதம், கனலெழுத்து (சிறுகதைத் தொகுப்புகள்), துனியா, ருதுமர்மங்கள், மஞ்சள் நதிகளுடைய சூரியன் (நாவல்கள்) அழிச்சு களையானாவாத்த ஆ சிலங்ககள் (நினைவுக்குறிப்பு), வசந்தத்தில் தரிசாகின்ற பூமரம் (குறுநாவல்) ஆகியன இவரது படைப்புகள்.

துனியா, நீலலோஹிதம் ஆகியன தமிழில் மொழியாக்கம் பெற்றுள்ளன. ஆங்கிலம், கன்னடம், தமிழ், அஸ்ஸாமி, மராத்தி மொழிகளில் இவரது படைப்புகள்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் எழுத்தாளர் கைஸ்ரா ஷஹ்ராஸின் (Qaisra Shahraz) ‘டைபூண்’ (Typhoon), அஞ்சலி ஜோஸப்பின் ‘சரஸ்வதி பார்க்’, வியட்நாம் நாட்டின் புத்த சன்யாசியும் சமாதான ஆர்வலருமான திச் நாத் ஹானின் (Thich Nhat Haan) ‘பிரமச்சாரி (ணி)’ (Novice), மொராக்கோ நாட்டு எழுத்தாளர் பாத்திமாமெர்நீஸின் (Fatima Mernissi) ‘முகபடத்தினப்புறத்தெ நேருகள்’ (beyond the wile) ஆகியவற்றை மலையாளத்திற்கு மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்.

கேரள பொதுக்கல்வித்துறையில் (General Education Department) முதுநிலை எழுத்தராகப் பணியாற்றுகிறார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer