கனவு வண்ணங்களால் நிறைந்தப் படகில் மிதக்கும் ஓவிய உலகம்

ஞா.கோபி

பகிரு

இன்றைய தமிழ் நவீன ஓவியர்களில் மிக நுண்ணியப் படிமங்களையும் புறப்பரப்பு வகைகளையும் ஓவியமாக்கி தொடர் கண்காட்சிகள் வழி உலகலாவிய பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறார் ஓவியர் வெங்கடேஷ். வெங்கடேஷ், புதுச்சேரி சேலியமேடு (பாகூர்) கிராமத்தை தன் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சிறு வயதுக் காலம் முழுக்க இயற்கையோடு இயைந்த சேலியமேடு கிராம வாழ்வே அவருடைய படைப்புகளுக்குப் பெரும் ஆதாரமாக இருப்பதாகச் சொல்வார். குறிப்பாக அவருடன் நெருங்கி ஓவியம் தவிர்த்து பேசியவர்களுக்கு மட்டுமே அந்த நினைவுகளை அவர் சொல்லியிருப்பார். இது, ஒருவகையில் எல்லா கலைஞர்களின் படைப்பிலும் முன் நிற்கும் படைப்பூக்க குணாம்சம்தானே என்று எளிதில் கடந்துவிட முடியாத அளவில் அவருடைய ஓவியங்கள் மாநிலம், நாடு, மொழி என்பனவற்றைத் தாண்டி படிமங்களாய் கிளைத்துக்கொண்டிருக்கின்றன என்பது அவருடைய ஓவிய வரிசைகளைக் காணும் எவருக்கும் கிட்டும்.

அதற்குப் பெரும் உதாரணமாக, அவருடைய படைப்புகளில் மைக்கேல் ஜாக்சனின் சுதந்திர மூச்சை, வாரணாசியின் இரவை, வெள்ளைநிறக் கனவுத்தாய்களின் பால் கனக்கும் முலைகளை, மாடு மேய்க்கும் கட்டியக்காரர்களை, பாலே நடனப் பாதங்களின் சக்தியை, பெண் வேடமிடும் நடிகன் முகத்தில் இறக்கியிருப்பது, கொடும் நோய் ஏற்படுத்தும் பெரும் வலிகளை, வெள்ளை நதியாய்த் தவழச்செய்வது போன்ற பெரும் படிமங்களையும் அதை அவர் பொருத்தியிருக்கும் தளங்களையும் காணலாம். அதோடு விஷேச பிடிவாதத்தோடு ஒவ்வொரு ஓவியத்திற்கும் அவர் எடுத்திருக்கும் நீண்ட கால அளவு நவீன ஓவிய மரபில் மிக முக்கியத்துவம் நிறைந்தது. அந்தக் கணங்களே அவரை, அவருடைய வாழ்வியல் துயருக்குள் மீண்டும் மீண்டும் கல்லெறிந்து விளையாடச் செய்கிறது. அவ்விளையாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் மாறி மாறி எழும் வளையங்களின் கனச்சுற்று அளவை உள்வாங்கி மிக நுட்பமான படிமமாகத் தீட்ட முடிகிறது. அந்த அவதானிப்பின் காரணமாய்தான், அவரின் படைப்புகள் அவரைப்போல் இவ்வுலகம் முழுக்க உள்ள மௌனமானவர்களின் மொழியாய் மாறி வண்ணங்களின் கூட்டுக் கணக்கில் வளர்ந்து எழுகிறது.

“உள்ளத்தின் கண்கொண்டு பார்த்ததை ஞாபக ரேகைகளினாலும் வண்ணங்களைக் கொண்டு தீட்டும் அனுபவமே ஓவியம்” எனப் பௌத்த ஞானி புத்தகோசர் சென்னது இங்கு நினைவுக்கு வந்து போகிறது. அவ்வகையில் வெங்கடேஷின் ஓவியத்தையும் அதை அவர் அணுகும் விதத்தையும் இந்திய கலை மரபில் முன்தோன்றிய தத்துவப்பார்வையின் நீட்சியாகவும் கூடப் பார்க்க பெரும் வாய்ப்புள்ளது. இந்தப் பின்னணியுடன்தான் ஓவியர் வெங்கடேஷ் படைத்த ஓவியங்களின் மொழி குறித்து மிக விரிவாகப் பேச வேண்டியத் தேவையும் எழுகிறது. ஓவியக் கல்லூரியில் முறையாகப் பல படிநிலைகளில் அவர் பயிற்சி எடுத்திருந்தாலும் தன்னார்வத்தொடர் தேடலுக்குப் பிறகே அவருடைய படைப்புவெளி அவருக்குக் கைவரப்பட்டிருக்கிறது. அதைதான் நாம் அவருடைய ஓவிய மொழியெனப் பார்க்க உதவுகிறது. அது, சொற்கோர்வைகளாலும் ஓசைகளின் ஒழுங்கமைவுகளாலும் ஆன படைப்பாய் மாறி நமக்குக் காண கிடைக்கிறது. அப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு படைப்பும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வாழ்வியல் பொருட்களின் புறநிலை அர்த்தங்களுடன் நம்மைத் தொடர்புபடுத்துகிறது. அத்தொடர்பு, ஓவிய மொழியின் ஆதாரக் குறியீடுகளால் ஆன கட்டமைப்புக் கூறுகளின் மூலம் மேலும் நம் முன் வலுவாய் எழுகிறது. அந்த எழுச்சி, மனித மனம் தன் அனுபவங்களின் பின்னணிக் கொண்டு தேடும் வாழ்வியல் அர்த்தங்களின் மீது மற்றுமொரு அனுபவமாய் மாறி புதிய அர்த்தங்களைக் கட்டமைக்கிறது.

வெங்கடேஷின் ஆரம்பகாலப் படைப்புகளை, தன்வாழ்வுசார் அனுபவங்களையும் உலகளாவிய ஓவியங்களின் வெளிப்பாட்டு நுட்பங்கள் குறித்த கற்றல் அனுபவத்தையும் இணைத்தல் முயற்சியின் விளைவாக எழுந்த ஒரு புதிய கலாச்சாரக் கூறுகளின் தாள அமைப்பென வகைப்படுத்தலாம். அதில் கிராமம் சார் வாழ்வியல் மாந்தர்கள்,விலங்குகள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் போன்றவைகளால் அமையப்பெற்றன. குறிப்பாக, அவை இந்திய கலை மரபு தொடர்ச்சிபோலக் கதைசொல்லல் தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். இவ்வகையில் இவரின், ஆரம்பக் காலப் படைப்புகளிலேயே ‘அழகியலை’ முன் வைத்த ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதையும் அனுபவம் கொள்ள முடிகிறது. அதன் காரணமாக அவர் ஓவியப்பரப்பாகத் தேர்ந்தெடுத்த கேன்வாஸ், அட்டை மற்றும் தாள்கள் போன்ற தளங்களிலிருந்தே புதிய வெளிப்பாட்டு நுட்பங்களை நமக்குக் காட்சியாக்கியிருக்கிறார். அதன் வழியேதான் படைப்பை தனித்த மொழியாக்கும் அணுகுமுறை அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் தொடர் ஓவிய வரிசை இவரின் இடைக்காலப் படைப்பில் குறிப்பிடத்தக்கது. ஜாக்சனின் கருப்பு நிறம், அவருடைய ஆடை அலங்காரம், குரலுடன்இணைந்த உடலின் சக்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தினைச் சுட்டி நிற்கும். உதாரணமாக, தங்க நிற வயல்வெளியில் தலையில் தொப்பியோடு பாடும் ஜாக்சனுடன் உரையாடல் நிகழ்த்தும் ஆப்பிரிக்க மர முகமூடியின் வாய் தங்கத்தில் ஜொலிக்கும். நிகழிடம் இரவு நேரத்தின் கருமை பூசிய ஆற்றங்கரையாய் இருக்கும். அதுவே அவருடைய முன் கால ஓவியங்களான ஆற்றங்கரைகளில் ஆடு மேய்க்கும் வெங்கடேஷின் கருமையான தன் உருவத்தினோடு உரையாடும் ஆடுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் வண்ணக்கோர்வையின் பொருத்தப்பாடும் அதே உணர்வு அதிர்வுகளைத் தரக்கூடியதே. மேலும், கரும்பு சோலைகளுக்கிடையில் மந்திரமாய்த் தோன்றி கடுமையான நோய்மையில் போராடிக்கொண்டிருக்கும் தன்னுருவத்தின் உடலை முத்தமிடுவதும் என்பனவையெல்லாம் அவர் நம்பும் அழகியல் முன்னிலைப் படுத்தப்பட்ட அரசியலை நோக்கிய நகர்தலாகவே உணரமுடிகிறது. இப்படியான பார்வை நிச்சயம் அவரின் ஓவியங்களின் புற அமைப்பு குறித்த ஒப்பீடு அல்ல. அவற்றின் அழகியல் வழி அவருடைய அகப்பயணத்தில் அவரிடமிருந்து எழும் புதிய வெளிப்பாட்டுக்கான ஓவிய மொழியின் சரளத்தன்மையை நமக்குக் கடத்துகிறது. இப்படி எனக்குக் கிடைத்த அனுபவம் ஒரு சுவைஞனாய் என் மன உலகின் கால மாறுபாட்டில் பலவாக மாறும் சாத்தியப்பாடுகளையும் அவை கொண்டுள்ளது என்பதுதான் சான்று.

கடந்த சில வருடங்களாக, இன்னும் நுட்ப அணுகுமுறையுடன் உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரின் உள் அடுக்குகளைக் கனவு படகுகளெனப் படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார். அவற்றினை அதன் உருவாக்க காலத்திலே நாம் உள்வாங்க வேண்டியதன் தேவை மிக அதிகம் இருக்கிறது. ஏனெனில் அப்படைப்பின் அணுகுமுறை இதுவரை உலக ஓவியர்கள் வாரணாசியைப் படைப்பாக்கிக் கொண்டிருக்கும் மொழியிலிருந்து முற்றிலும் புதிய பரிமாணத்தில் இருப்பது மிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்த வாரணாசி ஓவிய வரிசையின் அணுகுமுறையில் உள்ள அடிப்படை அம்சம் எதுவென்பது பற்றிக் கேட்டதற்கு வெங்கடேஷ் சொல்வதானது, “தென்னிந்தியாவில், புதுச்சேரி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனக்கு இறப்புச் சடங்கு என்பது என் வாழ்வியல் நினைவுகளில் உள்ள பெரும்பான்மையான ஒன்றாகும். அதாவது என் வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் இருக்கும் சுடுகாடு எங்கள் குடும்பத்திற்கு உரியது. அங்குதான் என் தாத்தா, பாட்டி மற்றும் என் அம்மா என அனைவரின் உடலும் சிதையூட்டப்பட்டது. அந்த இடம் எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரியது. மேல்ஜாதி இந்துக்கள் அவர்களுக்கான தனி இடத்திலேயே அவர்கள் உடல்களை எரிப்பர். எங்களுக்கான சுடு காட்டில் அவர்களின் உடல்களை எரிப்பதை பாவச்செயலாக எண்ணுவர். இது மனரீதியில் எனக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நீர், நிலம், காற்று, மண் மற்றும் தீ மீண்டும் மீண்டும் நமக்கு ஏற்றத்தாழ்வின் நிலையாமையை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இறப்பு எல்லோருக்கும் உரியதே. இயற்கையை உணராமலே இந்த வாழ்வின் இறுதிக்கு வந்து விடுகிறோமே! என்பதே அது. அந்தப் பாதிப்பிலிருந்தே இந்த வாரணாசி நகரை நான் பார்க்கிறேன். அங்கு நொடிக்கு நொடி நடைபெறும் உடல் எரியூட்டல் சடங்கில் நான் முன் குறிப்பிட்ட நீர், நிலம், காற்று, மண், தீ மற்றும் இதர சிறிது பெரிதுமான உயிரினங்கள் இச்சடங்குடன் இயைந்துக் கணத்துக்கு கணம் தம்மை மாற்றி நமக்கு அந்த நகரை வெவ்வேறு ரூபத்தில் காட்சியளிக்கிறது. அத்தகைய நொடி நேர வேறுபாட்டை நாம் பார்த்து வாழ்வின் அர்த்தம் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறோமா என்பதே என் கேள்வி. அவ்விதம் நான் அங்கிருந்து பார்த்து நான் உள்வாங்கியதை, வேறு ஒரு காலத்தில் அந்நகரை என்வெளிப்பாடாக என்னுடைய பெயிண்டிங் மற்றும் டிராயிங் வரிசைகளாகத் தற்போது வெளிப்படுத்தி வருகிறேன்”.

இந்த அடிப்படைப் புரிதலுடன் அவரின் தற்போதைய வாரணாசி ஓவிய வரிசையை அணுகும்போது, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இவருடைய நவீனதத்துவ மரபின் வெளிப்பாட்டு முறைமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. மரணம் உறுதியானது என்பதே இவர் ஓவியங்களில் கங்கை ஆற்று நீர். மரணம் உறுதியானது என்று தெரிந்தும் வாழும் வரையின் அதன் மீது பயணப்படுதலே கங்கையில் மிதக்கும் இவர் ஓவியப் படகுகள். அதன் மீது பயணிக்கும் மனிதர்கள் எப்போதும் மனிதர்களே. என்பதே இவர் படைப்பில் கங்கையின் இருப்பு. அந்தப் படகு பயணம் வழி, நம் நினைவில் நிற்கும் அழகியல் உணர்வுகளே அவ்வோவியங்களில் பறக்கும் பறவைகள். அதுபோல் கங்கை நதியை நமக்கு வானத்தின் நீட்சியாகப் பார்க்கத் தருகிறார். மேலும், அந்த ஓவியங்களில் பகல் வானத்தின் வெளிச்சம் மனித வாழ்வின் சந்தோஷத்தைப் போன்றது என்பதும், அனைவரும் விரும்பக்கூடிய அளவில் பெரும் வெளிச்சத்துடன் இருக்கும். அந்த வானம் பெருகி வழிந்து கங்கை நதியில் மிதக்கிறது. அப்படி மிதக்கும் அந்தப் பகலை, இரவு நேர வானம் நட்சத்திரங்களாக மாற்றி மீண்டும் கங்கை நதியிலேயே இறக்கி விடுகிறது. இதெல்லாம் மனிதர்களுக்கு நேரடியாகத் தெரியாதது. இப்படியான மாயம் நிகழும் அந்த இருள்நேர கணங்களைத்தான் இவர் தீட்டி வருகிறார்.

அவ்வோவிய வரிசையில் முதன்மைப் படிமமாக அரிச்சந்திரன், காளி, நாகா, சாது மற்றும் அகோரிகளுக்கு இணையாக அந்நகரத்தின் மூலை முடுக்குகளில் சிறுகுழுக்களால் வழிபடும் சிறு தெய்வங்களும் இடம் பெருகின்றன. இவைகள் அவரின் முற்கால ஓவியங்களைப் போலவே கதைசொல்லல் முறை தவிர்த்து அவை இடம்பெறுதல் எங்ஙனம் என்பதிலிருந்து எழும் அழகியலையே முன் வைக்கிறது. அதற்கு உதாரணமாக, “அரிச்சந்திரன்” எனும் தலைப்பில் அமைந்த ஓவியத்தில் அரிச்சந்திரனின் நிலையானது, அவனுடன் கலந்திருக்கும் அந்தகாலக் கட்டிடங்களும். அவன் உடலாகவே மாறும் கட்டிடங்களும் நம் பார்வையில் அரிச்சந்திரன் அந்தக் கால நிலப்பரப்பின் படிமமாக மாறுகிறான். அவன் எரிக்கும் உடல் விறகுகள் அரிச்சந்திரனின் உண்மைத் தன்மையும் அவனின் சோகமுமாக நமக்குப்பல சாத்தியங்களை உண்டு செய்கின்றன. அதன் மூலம் அவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய காலமே, நேற்றைய இன்றைய நாளைய மனிதர்களின் உடல்களை எரியூட்டிக்கொண்டிருக்கின்றன என்பதாக அதன் மொழி உணர்த்துகிறது.

அதுபோல் வாரணாசி வரிசையில் இடம்பெறும் கங்கை நதியைப்போல, படகுகளைப் போல, நட்சத்திரங்களும் கட்டிடங்களும் போல சில இடங்களில் இடம்பெறும் விறகு அடுக்குகள் முன் வைக்கும் ஓவியத்தத்துவமும் கவனிக்கத்தக்கதே. படிமங்களின் இடம் பெயர்தலில் அந்த விறகுகள் வாரணாசியை மட்டும் சேர்ந்ததில்லை. பல்வேறு பகுதியைச் சார்ந்த மரங்கள் என்பது போன்ற தோற்றத்தை உண்டு செய்கின்றன. அவை உணவாய் எடுத்த நீர் என்பது பூமிக்கடியில் ஓடும் ஒரு பொது நீர். அந்தப் பொதுத்தன்மை மிக்க மரங்கள்தான் சில காலம் மனித உடலாக இருந்து பின் வாழ்வின் இறுதிநிலையை எட்டும் மனித உடல்களை எரியூட்டுகின்றன என்ற நிலைக்கு நம்மைக்கொண்டு செல்கிறது. அவ்வாறாக நாம் உணரும் தேவை வருவதால், அவ்வோவியங்களில் இடம்பெறும் விறகு அடுக்கானது இந்திய நிலம் கீழிருந்து மேலேழுந்தவாரியாக நம் பார்வைக்கு அடுக்கி வைத்தது போல் வளர்கிறது. இப்படி என் பார்வையை உறுதி செய்யும் விதமாக, உரையாடலின் போது வெளிப்பட்ட வெங்கடேஷின் பார்வையும் இருந்திருக்கிறது. அது, “இயற்கையை மனிதனின் பேரால் அதன் இருப்பு நிலையை மாற்றிப் பல் ஆண்டுகாலமாக உடல்களை எரித்துக் கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் செயல்பாட்டால் நமக்கு முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த விறகினைக் கொண்டு எரியூட்டும் வேலை செய்யும் மனிதர்கள் படும் கஷ்டம் கூடத் தெரியாமல் சுயநலத்துடன் இங்குவந்து சென்று கொண்டு இருக்கிறோம். நான் அங்கு நடைபெறும் சடங்குகள் எதையும் நேரடித்தன்மையிலிருந்துக்கொண்டு பார்ப்பதில்லை அதனால்தான் அச்சடங்குகள் என் ஓவியங்களில் நேரடியாகப் பிரதிபலிப்பதுமில்லை”. என்பதுதான்.

அதுபோல் மேற்சொன்னவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இருள் உரையாடல்களின் சாட்சி போலச் சில ஓவியங்களை நாம் காண உருவாக்கியிருக்கிறார். அதிலொன்று, பறவையின் பார்வையில் தெரியும், கங்கை நதி படகு ஓவியம். படகில் பயணிக்கும் அந்த நகரமே முக்கியப்பாடுபொருள். அது மிதக்கும் நதி அலைகள் முழுக்கப் படித்துறைகளாகத் தோற்றம் கொள்வதும் அதில் வந்து கலக்கும் நட்சத்திரங்களின் மறு கரைகளெல்லாம் அவ்வோவியத்தின் மொழி பிரவாகத்திற்கான சாட்சியம். மற்றொன்று, அந்நகரத்து மாடு ஒன்றின் கண்களில் இறங்கிய நிலவு ஓவியம். அம்மாடு உடல் அந்நகரத்தின் நிலப்பரப்பாக மாறியிருக்கும் மந்திரப் பொழுதை கைப்பற்றியிருப்பார். இன்னொரு ஓவியம், மஞ்சள் நிற பூமியில் நடக்கும் அந்நகரத்து ஆடு தன் பின் உடலை கரைத்துக் கங்கை நதியின் படிக்கட்டுகளாக ஒழுக்கிக் கொண்டே செல்வதாக அசையும் காட்சியாகத் தோற்றம் தருகிறது. மற்றொன்று ஒரு ஆடும், நாகா சாது ஒருவரும் இணையும் சாம்பல் நிற ஓர் புதிய உலகம் உருவாகும் தருணம் ஏற்படுத்தும் சலனம் இதுவரை பேசப்படாத துறவின் தத்துவங்களைப் பேசத் துவங்குகிறது எனலாம். இது போன்ற தனித்தன்மைகள் எல்லாம்தான் வெங்கடேஷின் ஓவியங்களின் தன் மீறல் தன்மையையும் இந்தப் பொது உலகிற்கும் சொல்ல விழைகிறது. இவ்வகையில் இக்காலத்துக்கேற்ற புதிய காட்சி மொழியைத் தன் இடைவிடாத படைப்புகளின் வழி கொடுத்துக்கொண்டிருக்கும் அவருக்கு நாம் செய்ய என்னவெல்லாம் இருக்கிறது என்பதுதான், இனி பேச வேண்டியவை.

தமிழ் கூறும் நல்லுலகம் தன் ரசனைத்திறன் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத அளவில் முன்னேறியிருக்கிறது. முகபுத்தகத்திலும், அதில் பரவும் வீடியோக்களையும் கொண்டு சடுதியில் நிரந்தரப் பிரதேசம் அமைத்து, அங்கிருந்து இவ்வுலகின் எல்லாவற்றையும் கண்டும் ரசித்துக்கொண்டிருக்கிறது. அதற்கும் முதலீடு என்னவோ மனித சக்திதானே. அந்தச் சக்தியின் முதலீட்டில் நம் ரசனையின் மேம்பாடும் படைப்புத் தொழில் சார்ந்த அணுகுமுறையில் ஏதேனும் வளர்ச்சி நிகழ்கிறதா? என்றால், இருக்கிறது! ஆனால் இல்லை! என்ற திரிசங்கு நிலைதான். நம் மத்தியில் இவ்வளவு நெருக்கமாகக் காணக்கிடைக்கும் வெங்கடேஷின் ஓவியங்களை நாம் பார்க்கப்போவது எப்போது. அவருடைய புதிய ஓவியங்களை நான் பார்க்கக் கேட்கும்போது, தரையில் அவற்றை விரித்துக் காண்பித்தாலும் அவற்றைப் பார்ப்பதற்கான ஒளி வரும் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து வைப்பதும் கூடப் பேரனுபவம்தான். அவருடைய கலை வாழ்வையும் அதிலுள்ள நெருக்கடி நிலையையும் பற்றிப் பேசுவதுகூட நமக்குக் கிடைக்கும் வாழ்வின் அடுக்குகள் பற்றிப் புரிதலையும்தான். ஒரு அடி முன் வந்து வெங்கடேஷின் படைப்புகளை நேரில்பார்த்து உணரத் தொடங்குவீர்கள் எனில் அப்போது “நான் கலைஞனாய் இருப்பது புரட்சியின் அர்த்தம்தான்” எனச் சொல்லும் வெங்கடேஷ் எனும் சக மனிதனின் குரலும் அவர் படைப்பு மொழியிலிருந்து உங்களுக்குக் கேட்கும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer