உளமொழி பெயர்ப்பியலும்
மொழிபெயர்ப்பு உள்ளமும்

தி.கு.இரவிச்சந்திரன்

பகிரு

மொழிபெயர்ப்பு என்பது மாற்றுருவாக்கமே அன்றி வேறில்லை. அதாவது, (கருத்தியல் ரீதியில்) ஒரு மொழிக்கு மாற்றாக இன்னொன்றை வைப்பதாகும். இதனால், துல்லியமான மொழிபெயர்ப்புச் சாத்தியப்படாததாகிறது. காரணம், இதில் மொழி விளையாடுகின்றது.

- டெரிடா

பிற விலங்கினத்திடம் இருந்து மனிதனை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவது மொழி. ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்த மொழி உள்ளது. ஐந்தறிவு உயிரினங்களிடம் சங்கேத மொழி இருக்க, மனிதனிடம் மட்டும் குறியீட்டு வடிவில் மொழி விளங்குகின்றது. பிற உயிரினங்களில் மறைகுறிகள் (codes) மொழியில் இருக்கும். மறைகுறி என்றால் குறிப்பிட்ட ஒலிகளுக்கெனத் தனித்த உணர்வு அல்லது அர்த்தம் இருக்கும். இந்த ஒலி இதை மட்டும் குறிக்கும். வேறு எதையும் குறிக்காது. அப்படி எதையும் குறிக்காமல் ஒன்றை மட்டும் குறித்து நிற்பது மறைகுறியாகும். மாறாக, மனிதரின் மொழி மறைகுறி நிலையைக் கடந்து குறியீட்டமைப்பில் இயங்குகிறது.

குறியீடு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தப் புலப்பாட்டைக் குறிக்கும். கால, இட, சூழலுக்கு ஏற்ப இந்த அர்த்தம் அறியப்படும். இது மனித மொழிக்கு மிகப் பொருந்தும். அதாவது, ஓர் ஒலியமைப்பு பல அர்த்தங்கள் இருந்தாலும் அவற்றுள் ஒன்றை மட்டும் சூழலுக்கு ஏற்ப நாம் கையாளுகின்றோம். அடிப்படையில் குறியீடுகள் யாவும் இப்படித்தான் நடந்து வருகின்றன. சான்றாக, சிவப்பு வண்ணம் பல அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும் சூழலுக்கு ஏற்ப ஆபத்து, நிறுத்தம், கம்யூனிசம், கோபம், நெருப்பு, குருதி, விபச்சாரம் எனக் கொள்வோம். இப்படித்தான் மனித மொழியின் ஒவ்வொரு ஒலியமைப்பும் அர்த்தப் படுத்தப்படுகின்றது. அதனால், அர்த்தம் என்பது குறியீடு போன்று புறச்சார்புடையது. சொல்லின் அகத்தில் அர்த்தமில்லை. எனவே, மறைகுறியில் 1:1 பொருண்மை இருக்க, குறியீட்டில் 1:X அமையப் பெரும். அதாவது, மனிதமொழி பன்முகத்தன்மை கொண்டது.

மேற்கண்ட விளக்கங்களின் பின்னணியில் மொழி குறித்த அடிப்படையைப் புரிந்து கொள்ளலாம். ஓர் ஒலியமைப்பு மனிதரிடையே பல பொருண்மைகள் கொண்டிருக்கும். பிற உயிரினங்களில் ஒற்றைப் பொருண்மையே பெற்றிருக்கும். இதற்கு இயற்கைக் காரணம் உள்ளது. ஒலியை ஊகித்து ஒற்றை அர்த்தத்துக்கு மேல் சிந்திக்கப் பிற உயிரினங்களால் இயலாது. ஆனால், மனிதரிடையே இது சாத்தியம். காரணம், அவனின் மூளை அமைப்பும் அது தொடர்பான அறிவுத் திறனும் ஆகும். அதனால்தான், மனித மொழியைச் செயற்கை மொழி என்றும், பிற உயிரின மொழிகளை இயற்கை மொழிகள் என்றும் வழங்கப்படுகின்றன. உன்னித்து நோக்கின் எல்லாம் இயற்கையே ஆகும். மனித மனநிலை உயர்நிலையில் (உயர்திணை) இருப்பதால் மனித மொழிகளுக்கு உயர்நிலை அந்தஸ்து உள்ளது. அதனால்தான், மனித மொழிகள் யாவும் உயர்நிலை மொழிகள் (higher language) என்பர். உயர்திணை என்பது காலங்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கின்ற உயிரினம் எனப் பொருள்படும். பிற உயிரினங்கள் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் அதே இயல்பில்தான் இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. மனிதயினம் மட்டும் காலத்து வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் பெற்று உயர்ந்து வருகிறது. அதனால், மனிதயினம் உயர்திணை என்றாகிறது. இதற்கு மொழி வளர்ச்சி சான்று. ஆதி காலம் தொட்டு ஒரே மாதிரியான மொழிதலை விலங்குகள் (குரைத்தல், கனைத்தல், கூவுதல்... ) கொண்டிருக்க, மனிதன் மட்டும் மாற்று மொழிகளை வெளிப்படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. அதனால், அக, புற மாற்றங்களுக்கு மனிதயினம் எளிதில் ஆளாகி வருகிறது.

மனித இயல்பு படி, ஒலிகளை ஒன்றுக்கு மேல் அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதனால்தான், மொழியை ஒலிகளின் / குறிப்பான்களின் விளையாட்டு என்பர். ஒன்றை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நெகிழ்ச்சியானது மனித மொழி. இந்த நெகிழ்ச்சித் தன்மையை விளையாட்டுக்கு இணையாக மொழியியல் பார்க்கிறது. பின்நவீனத்துவ நோக்கில் குறிப்பான்களின் விளையாட்டே மொழி எனப்படுகிறது. இதன் நீட்சியாக, மொழிபெயர்ப்பைக் கூட விளையாட்டு என்பர். இத்தகு ‘ஒலித்தல்’ விளையாட்டு பிற உயிரினங்களுக்குத் தெரியாது. அதனால், பிற உயரினங்களில் இருந்து மனிதன் வேறுபட்டு இருக்கிறான். மேற்கண்ட பின்னணியில் மொழிபெயர்ப்புக் குறித்து இனி நாம் சிந்திப்போம்.

மொழிபெயர்ப்பு என்றால் என்ன, அதன் வரலாறு யாது, அதற்கான தகுதிகள் என்னென்ன...முதலியவற்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண் டும். ‘ஒரு மொழியில் இருக்கின்ற கருத்துகளை இன்னொரு மொழிக்குப் பெயர்த்தல் மொழிபெயர்ப்பு’ எனப் பொதுவில் வரையறுக்கலாம். அப்படித்தான் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றது. சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்கு வாக்கியம் என மொழி பெயர்ப்பதோடன்றி விவரிப்பு, சுருக்கம், தழுவல், மொழியாக்கம் எனப் பல வகைகள் இதில் உள்ளன. இவற்றில் தழுவல் என்பது தனித்த இலக்கியமாகவே (தழுவல் இலக்கியம்) கருதப்படுகின்றது. காரணம், இந்தத் தழுவலில் கூடுதலான சுயம் உள்ளது. தழுவல் இலக்கியங்களான கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, நளவெண்பா முதலிய படைப்புகளில் ஆசிரியரின் சுயம் பரவலாக உள்ளது. இது முழுமைக்கும் மொழிபெயர்ப்பல்ல. அதேவேளை, முதல் நூலுமல்ல. இதுவும் வழிநூல். அதாவது, பெயர்ப்பு மொழி. முதல் நூலில் மூலமொழியும் பெயர்ப்பு நூலில் பெயர்ப்பு மொழியும் இருப்பது கண்கூடு. அதனால், தழுவல் இலக்கியம் கூட ஒருவிதத்தில் பெயர்ப்பு நூலே ஆகும்.

மொழி பெயர்ப்பில் முதல் நூலின் மூல மொழியே ஆதாரம். இதை மூல மொழி (source language) என்பர். இதன் மொழிபெயர்ப்பு மொழியை இலக்கு மொழி (target language) என்பர். மூல மொழி படைப்பை இலக்கு மொழிக்குக் கருத்துகளைப் பெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மொழிபெயர்ப்பு நிகழ்கிறது. இந்தக் கட்டாயம் சமூகத் தேவையாகும். காரணம், ஒரு மொழி கருத்துகள் இன்னொரு மொழியினருக்குத் தேவைப்படுகின்றன. அதனால், மொழிபெயர்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது. இப்படித்தான், சமய நூல்கள் தொடங்கி, தத்துவம், இலக்கியம், அறிவியல் என அனைத்துத் தளங்களிலும் காலங்காலமாக மொழிபெயர்ப்பு நடந்து வருகின்றது. இதனால், தனித்தனித் தீவுகளாக இருந்த உலக மொழிகள் தற்போது கைக்கோர்த்து இயங்க வரத் தொடங்கி விட்டன. இந்த நூற்றாண்டை ‘மொழி பெயர்ப்பு நூற்றாண்டு’ எனக் கூறும் அளவுக்கு மொழிபெயர்ப்புகள் நடக்கப் போகின்றன. காரணம், இன்றைக்கு மொழிபெயர்ப்பின் தேவை அனைத்துத்துறைகளுக்கும் அவசியமாகி விட்டது. இலக்கியத்தில் சிறிய கவிதையிலிருந்து திருக்குறள் வரை நடக்கிறது. அறிவியலில் குறுந்தகவலில் இருந்து பெருங்கோட்பாடு வரை நடக்கிறது. நடப்பு வாழ்வியலுக்குத் துணுக்குக் கருத்திலிருந்து தத்துவம் வரை மொழி பெயர்ப்புத் தவிர்க்க முடியாததாகிறது. காரணம், சின்னச் செய்தியிலிருந்து வரலாறு வரை கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த மொழிபெயர்ப்பில் மொழியைப் பெயர்ப்பதாகத் தெரிந்தாலும் கருத்துகளைத்தான் இன்னொரு மொழிக்குப் பெயர்க்கின்றோம். எனவே, மொழிபெயர்ப்பு என்பது, கருத்துகளை இன்னொரு மொழிக்குப் பெயர்ப்பதைக் குறிக்கும். ஒரு செடியை வேர் மண்ணோடு பெயர்த்து வேறோர் இடத்தில் நடுதல் போன்றது. இந்தக் கருத்துக்குக் மொழி ஒரு கருவியே அன்றி வேறில்லை. நாம் தொடர் வண்டியில் பயணித்தாலும் பேருந்தில் பயணித்தாலும் நமது நோக்கம் அடைவிடம் நோக்கிய பெயர்த்தலே ஆகும். இந்த இடப்பெயர்வு கருத்துப் பெயர்வு போன்றது. வெற்று வண்டி பெயர்ப்பாகாது. அதில் பொருளோ பயணியோ இருக்க வேண்டும். இதன்படி, வெறும் மொழியைப் பெயர்ப்பது மொழிபெயர்ப்பு என்றாகாது. கருத்துப் பெயர்ப்பே மொழிபெயர்ப்பாகும். அதாவது, மொழி சார்ந்த கருத்து பெயர்ப்பே உண்மையான மொழி பெயர்ப்பாகும்.

மேற்கண்ட விளக்கங்கள்படி, வார்த்தை பெயர்ப்பு என்றென்றும் மொழிபெயர்ப்பாகாது. ஆனால், நவீன மொழியியல் கூற்றுப்படி, மொழியைப் பெயர்த்தாலே கருத்துகளும் பெயர்க்கப்பட்டு விடுகின்றன. இதுவும் ஒரு விதத்தில் உண்மை. காரணம், வாக்கியங்கள் தோறும் மொழிபெயர்த்தால் கருத்துகளும் தானாகப் பெயர்க்கப்பட்டு விடுகின்றன. இருப்பினும், இதில் ‘மொழிதல்’ அமைப்புச் சரியாக அமையப் பெற வேண்டும். அதற்காகக் கொஞ்சம் மொழியுடன் விளையாட வேண்டியுள்ளது. இலக்கியப் படைப்புப் போல் மொழிபெயர்ப்புக்கும் மொழிநடை மிக அவசியம்.

இது, எழுதுதலுக்கான (மொழிதலுக்கான) பொதுவான விதி. அதனால்தான், பின்நவீனத்துவவாதியான டெரிடா, எழுதுதல் / மொழிதல் எல்லாம் குறிப்பான்களின் விளையாட்டு என்பார். எனவே, மொழிபெயர்ப்பாளரிடம் எழுத்தாற்றல் இருக்க வேண்டிய தேவை உள்ளது. முடிவாக, மொழிபெயர்ப்பும் படைப்பாக்கமே என அறிந்தேற்கப்படுகின்றது.

மொழி இல்லையென்றால் எழுத்தும் அது தொடர்பான இலக்கியமும் மொழிபெயர்ப்பும் இல்லை. எழுத்து வடிவமற்ற மொழியில் எழுத்துருவுக்கு இணையாக ஒலியுரு செயல்படுகின்றது. மொழிக்குள் ஒலி உள்ளதுபோல், மொழிபெயர்ப்பில் மாற்றொலி பெயர்ப்பு அடங்கியுள்ளது. அதாவது. ஓர் ஒலியை இன்னொரு ஒலியாகப் பெயர்ப்பது நடக்கின்றது. சான்றாக, கம்ப்யூட்டர் என்கிற பொருளைக் குறிக்கின்ற computer இங்கே ‘கணினி’ என மாற்றொலி பெயர்ப்புச் செய்யப்படுகின்றது. இந்த வகையில் மொழிபெயர்ப்பு என்பது மாற்றொலி பெயர்ப்பாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

பொதுபுத்தியில் கருதுவதுபோல், மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அதையும் தாண்டிக் குடும்பம் முதல் சமூக நிறுவனங்கள் அனைத்தையும் கட்டமைக்கக் கூடிய ‘அடிப்படை அமைப்பு’ ஆகும். இந்த மொழியானது சமூகத்தில் இயங்க வருவதற்கு முன் உள்ளத்தில் இயங்குகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். காரணம், மொழி தோற்றத்துக்குப் பிறகே சமூகம் தோன்றிற்று. மொழிக்கு முந்தைய சமூகம் ஒன்று இருப்பின் அது நிறுவனமயமாக்கப்படாத சமூகமாக இருந்திருக்கும். விதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவே நிறுவனம் ஆகும். இதன்படி, குடும்பம் முதல் சமூகம் வரை நிறுவனம் என்றாகிறது. இவற்றின் விதிகளை மொழி விதிகள் தீர்மானிப்பதால் மொழியின்றி மனிதச் சமூகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், மொழிக்குப் பிறகே சமூகம்.

குழந்தைப் பருவத்தை உன்னித்தால் இந்த உண்மை விளங்கும். மொழி பழக்கத்துக்குப் பிறகே சமூக வழக்கத்துக்குக் குழந்தை வருகின்றது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற உளச் செயல்பாடுகளை ஒழுங்கு வடிவமைப்பதில் மொழி பெரும்பங்கு வகிக்கிறது. காரணம், மனிதரிடையே எண்ணங்கள் யாவும் தூய எண்ணங்களாக அன்றிக் கருத்துகளாக உள்ளன. எண்ணம் என்பது மொழியற்ற சிந்தை. கருத்து என்பது எண்ணமும் மொழியும் கலந்த நிலை.

(இதைத்தான் தொல்காப்பியர் ‘மனனே’ என்றார் போலும்). எண்ணத்துக்கு மொழி தேவையில்லை. பறவை விலங்குகள் இப்படித்தான் எண்ணுகின்றன. கைக்குழந்தை மனமும் மொழியற்ற எண்ணங்களையே கொண்டுள்ளன. மாறாக, மொழிப் பயிற்சி ஏற்பட்டவுடன் எண்ணங்கள் யாவும் கருத்துகளாக வெளிப்பட ஆயத்தமாகி விடுகின்றன. இதில் மொழி பெயர்ப்பு நடப்பதைக் காணலாம். எண்ணத்தின் மொழிபெயர்ப்புதான் கருத்து.

மேற்கண்ட விளக்கங்கள்படி, மனிதருள் கருத்தோட்டமே மேலோங்கியுள்ளது. மனிதரல்லாத உயிரினங்களிடம் எண்ணவோட்டமே உள்ளது. தொடக்கத்தில் இந்த எண்ணவோட்டத்தில் திளைத்த குழந்தை, மொழி ஊட்டத்துக்குப் பிறகு கருத்தோட்டத்துக்கு மாறி விடுகின்றது என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்து கொள்வோம். இந்தக் கட்டத்தில், குழந்தை மனத்தில் மாற்றம் நிகழ்வதை உளவியல் உறுதிபடுத்துகிறது. இந்த மாற்றம், புறத்திலிருந்து மொழியை உள்வாங்கிக் கொள்வதை ஆதாரமாகக் கொண்டு, சமூக விதிகளை மொழி வழியாக உள்வாங்கிக் கொள்கிறது. பிறகு, அவற்றுக்கு ஏற்ப இயங்கத் தொடங்கி விடுகின்றது. இந்நிலையிலான மனமே சமூக மனமாகும். மேலோட்டமாக, உள்ளத்தைச் சமூகக் கருத்துகள் இயக்குவதாகத் தெரிந்தாலும் மொழியே இயங்கு சக்தியாக இருப்பதைக் ஊகிக்க முடிகிறது. (இதை லக்கான் வலிந்து கூறுவார்). ஒட்டுமொத்த சமூகமே சொல்லாடல்களாலும் பனுவல்களாலும் நிறைந்துள்ளன. காரணம், மனம் முழுவதும் சொல்லாடல்களே நிரம்பியுள்ளன. இவற்றை லக்கான் ஆராய்ந்து பல சொல்லாடல்களை முன்வைப்பதைப் பார்க்கலாம். எனவே, மொழி என்பது அகநிலையின் இயங்கு சக்தி. இயற்கை மனிதனைச் சமூக மனிதனாக்கியதில் மொழியின் பங்கு முதன்மையானது என்பது வெள்ளிடை. இது,

குழந்தைப் பருவம் தொட்டே நடக்கின்ற ‘மனப் பழக்கம்’ ஆகும். இதனூடே பயணிக்கும் குழந்தை சமூக அடையாளங்களுடன் வாழத் துணிகிறது. எனவே, மொழியின்றி அமையாது (சமூக) உலகு.

சமூக இயல்பிலான மனிதமனம் ஒரு ‘மொழி மனம்’ ஆகும். அவன் வெளிப்படுத்துபவை யாவும் உளமொழியின் வகைக்கெழுக்கள் (derivatives) ஆகும். மொழியின்றி மனித மனமில்லை. இதை இன்னும் கூர்ந்தால், பேச்சு மொழியே உள்ளத்தின் அடிப்படை யாகும். பேச்சுக்கள் வழியாகத்தான் மொழியைக் குழந்தை உள் வாங்கிக் கொள்கிறது. அதனால், மனித மனம் ‘பேச்சு மொழிமனம்’ ஆகும். நாட்டார் வழக்காற்றின் அடிப்படை பேச்சு மொழியாக இருப்பதால், மனித மனம் மூலாதாரமாக ‘நாட்டார் மனம்’ (folk mind) விளங்குகிறது. இந்த நாட்டார் மனமானது, உறவுமுறை தொடங்கிக் குடும்பம், கலை, கடவுள், சமயம், சாதி, அறிவியல், நிறுவனம், தத்துவம் எனப் பல படைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இலக்கியம் ஆகும். மனிதனின் ஆகச் சிறந்த படைப்பு மொழி. அந்த மொழியின் ஆகச் சிறந்த படைப்பு இலக்கியம். இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பு மொழிபெயர்ப்பு ஆகும். காரணம், பிற கலைகளில் ஒருவரைப் போன்றே இன்னொருவர் செய்தால் பாராட்டப்படுவர். மாறாக, இலக்கியத்தில் அப்படி ‘டிட்டோ’ செய்தால் பாராட்டுக் கிடைக்காது. அதனால், மொழிசார் இலக்கியத்துக்குச் சிறப்பு மிகுதி. மாறாக, மொழிபெயர்ப்பில் ‘டிட்டோ’ ஆக்கம் பாராட்டுக்குரியது. எனவே, மொழிபெயர்ப்பு ஆகச் சிறந்த படைப்பு.

முன்பே கூறியபடி, மொழிபெயர்ப்பானது இலக்கியத்துக்கு இணையாக விளங்குகின்ற ஒரு படைப்புக் கலை. காரணம், இவ்விரண்டில்தான் மொழியின் ஆதிக்கம் மிகுதி. மேலும், மொழி பெயர்ப்பில் ‘டிட்டோ’ இருக்க வேண்டும். கருத்துசார் மொழி ஒப்புமை இருந்தால்தான் மொழிபெயர்ப்புச் சிறக்கும். அதனால்தான், இலக்கியம் அளவுக்கு மொழிபெயர்ப்புக்கும் நவீனக் கோட்பாடுகள் உள்ளன. சமூகவியல், அழகியல், மொழியியல், அமைப்பியல், பின்நவீனத்துவம், ஒப்பியல், பண்பாட்டியல் எனப் பல கோணங்களில் மொழிபெயர்ப்பை நோக்குகின்ற போக்கு உள்ளது. தற்சமயம் மொழிபெயர்ப்பு மீது பல பார்வைகள் இருந்தாலும் அவற்றைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பின் வரலாற்றுப் பார்வையை உள் வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

வரலாற்றுப்படி, இலக்கியம் தோன்றிய காலக் கட்டத்திலேயே மொழி பெயர்ப்பும் தோன்றிவிட்டது. வெளிப்படையாக இது தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் மொழிபெயர்ப்பு நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முயல்கின்றபோது மனத்துள் மொழிபெயர்ப்பே நடக்கிறது. புரிதல் என்பது மொழிபெயர்ப்பின் வழிப்பட்டதாகும். ஒருவிதத்தில் இலக்கியம் என்பதே யதார்த்தத்தின் மொழிபெயர்ப்பு ஆகும். நடந்த சம்பவங்களை எழுதும்போது வரலாறு தோன்றுகிறது. இங்கே, வரலாறு என்பது சம்பவங்களின் மொழி பெயர்ப்பு ஆகும். தத்துவம் தொடங்கி அறிவியல் வரை அனைத்திலும் மொழியாக்கமே நடக்கின்றது. அவற்றுள் இலக்கியமும் ஒன்று.

இலக்கியம் என்பது யதார்த்தத்தின் அல்லது கற்பனையின் முதல் கட்ட மொழியாக்கம் என்றால் மொழிபெயர்ப்பு என்பது இரண்டாம் கட்ட மொழியாக்கம் ஆகும். அதனால்தான், இலக்கியம் அளவுக்கு மொழிபெயர்ப்புக்கும் வரலாறு உள்ளது. இருப் பினும், செழுமையான ‘மொழிபெயர்ப்பு’ பல படிப்பினைக்குப் பிறகே கலை வடிவம் பெற்றது. அதாவது, எழுத்து வடிவிலான மொழிபெயர்ப்பானது பல கட்டங்களுக்குப் பிறகே முழு வடிவம் பெற்றது. பனுவல் ஆதாரம்படி, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க மொழிக் காப்பியமான ‘ஒடிசி’ இலத்தின் மொழியில் பெயர்க்கப்பட்டதே முழுமுதல் மொழி பெயர்ப்பு ஆகும். இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு வரலாறு உள்ளது.

தொல்காப்பியத்திலேயே மொழிபெயர்ப்புக் குறிப்பு உள்ளது. எனில், இலக்கணம் வார்க்கின்ற அளவுக்குத் தொல்காப்பியர் முன்பே மொழிபெயர்ப்பில் தேர்ந்த நிலை தமிழரிடைய இருந்திருக்க வேண்டும்.

மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூல்தாம் இருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்
வழி எனப்படுவது அதன் வழித்தாகும்
வழியின் வகையே நாள் வகைத்தாகும்
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே

(மரபியல்94-98).

தொல்காப்பியர் கருத்துப்படி, நூல்களில் முதல் நூல், வழி நூல் என இருவகை நூல்கள் உள்ளன. சுயமான படைப்பு முதல் நூலாகும். அதைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற பனுவல்கள் யாவும் வழி நூல் வகைப்பட்டவை ஆகும். தொல்காப்பியர் முடிபுபடி, தொகுத்தல் (பொருண்மைகளைத் தொகுத்தல்) விரித்தல் (விவரித்துக் கூறுதல்) தொகைவிரி (தொகுத்தவற்றை விவரித்துக் கூறுதல்) மொழிபெயர்த்தல் (பிற மொழியிலிருந்து மொழிபெயர்த்து வழங்குதல்) யாவும் வழி நூல்களாகும். சுருங்கச் சொல்லின், பொருளுரை, கருத்துரை, விளக்கவுரை, மொழிபெயர்ப்பு ஆகியவை வழிநூல்கள் என்கிறார் தொல்காப்பியர். இவற்றில் மொழிபெயர்த்தலை மட்டும் ‘அதர்ப்பட யாத்தல்’ வேண்டும் எனச் சிறப்பித்துக் கூறுகிறார். அதாவது, தன்மொழியின் இயல்புக்கு ஏற்ப ‘ஒழுங்குபட அமையப் பெயர்க்க வேண்டும்’ என்பது தொல்காப்பியர் வகுத்த விதி. எனவே, மொழிபெயர்ப்பு என்கிற கலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நடந்து வருகின்ற நூலாக்க வழக்கம் என்பதை அறியலாம். எனவே, மொழிபெயர்ப்பு வரலாறு உலகளாவிய பழமைக்கு இணையான நிலையில் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு இருப்பதைக் காண முடிகிறது. அக்காலத்தில் வடமொழி நூல்கள் மொழிபெயர்ப்பு இருந்தன. அதனால்தான், வடசொற்களைக் கையாள வேண்டிய வழிகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். மேலும், தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்பும் ‘தழுவல் இலக்கியங்கள்’ இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் புராணக் குறிப்புகள் இருப்பது சான்று. மேலும், என்ப, மொழிப, என்மனார் புலவர் முதலியவை ‘தழுவல்’ சார்ந்த சொற்கள் ஆகும். இலக்கணப் பனுவலிலும் தழுவல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை முந்தைய இலக்கணங்களையும் சங்க இலக்கியங்களையும் தழுவி வழங்கினார். எனவே, இதுவும் ஒரு விதத்தில் வழிநூலே ஆகும். நன்னூல் முதலிய பிற இலக்கண நூல்கள் யாவும் வழிநூல்கள் என்பதில் ஐயமில்லை.

இனி, மொழிபெயர்ப்புக் குறித்த நவீனப் பார்வைக்கு வருவோம். மொழியியல் கோட்பாட்டு அடிப்படையில் மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழிக்கானது ஆகும். அதாவது, மூல மொழி (source language) நூலை இலக்கு மொழி (target language) நூலாக்கம் செய்வதன் விளைவு ஆகும். மொழிபெயர்ப்பு ஆக்கும்போது இவ்விரண்டும் இணை நிலையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பண்பாட்டு வேறுபாட்டுக்கு ஏற்பச் சிலவும் இலக்கண வரம்புக்கு ஏற்பச் சிலவும் மாற்றம் பெறலாம்.

கருத்தியல் சிதைவு ஆகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மொழிபெயர்ப்பின் அடிப்படை விதி. இதைத் திறம்படச் செய்யும் மொழிபெயர்ப்பாளர் சிறப்பிற்குரியவர் ஆகிறார்.

மொழிபெயர்ப்பாளர்க்கென ஒருசில தகுதிகள் உள்ளன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கருத்துகளைப் பெயர்க்கின்ற ஆள் மொழிபெயர்ப்பாளர் எனப் பொதுவாகச் சுட்டினாலும், அவரின் பணி இத்துடன் முடிந்து விடுவதில்லை. காரணம், மொழி வழியிலான இந்தக் கருத்துப் பெயர்ப்பு மூலமாக அயற்பண்பாட்டைத் தனது சமூகத்துக்கு மொழிபெயர்ப்பாளர் அறிமுகப்படுத்துகிறார். இதனால், தேசிய அளவிலும் உலக அளவிலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண வாய்ப்பாகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தன்மொழியும் மூலமொழியும் முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது முதல் தகுதி. என்றாலும் வேறு சில தகுதிகள் இதற்கு இணையாகக் கருதப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, துறைசார் அறிவும் எழுத்தாற்றலும் அமையப் பெற்றிருக்க வேண்டும். இருமொழிப் புலமை மட்டும் மொழிபெயர்ப்புக்குப் போதுமானதாக இல்லை. இதுவே போதுமெனக் கொண்டால் இருமொழி முற்றறிந்த எவரும் மொழி பெயர்ப்பாளர் என்றாகலாம். நடப்பில் இதற்குச் சாத்தியமில்லை. ஒருவேளை, பேச்சுரைக்கு இது போதுமாகலாம். ஆனால், எழுத்துரைக்கு இது மட்டும் போதாது. காரணம், எழுத்துப் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். மொழிநடை மிக அவசியம். அதே வேளை துறைசார் புலமையும் இருக்க வேண்டும். சான்றாக, கவிதையை மொழிபெயர்க்க ஒருவருக்குக் கவி புனைவாற்றல் இருக்க வேண்டியது அவசியம். நாவலை மொழிபெயர்க்க வேண்டின் நாவல் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். இத்தகு பண்புகளின் தேவையை அறிவியல் நூல் மொழிபெயர்ப்பில் வெளிப்படையாகத் தெரிவதைக் காணலாம். கணினி அறிவு இருந்தால்தான் கணினி நூலை மொழிபெயர்க்க முடியும். வாசிப்புப் பழக்கம், எழுத்துப் பழக்கம் இவற்றுடன் துறையறிவு தேவை. இலக்கிய மொழிபெயர்ப்பாளர் இலக்கியவாதியாகவும் தத்துவ மொழிபெயர்ப்பாளர் தத்துவவாதியாகவும் அறிவியல் மொழிபெயர்ப்பாளர் அறிவியலராகவும் ஓரளவாவது இருக்க வேண்டியுள்ளது.

மேற்கண்ட விளக்கங்கள்படி, மொழிபெயர்ப்பில் பல வகைகள் உள்ளன. இலக்கிய மொழி பெயர்ப்பு, அறிவியல் மொழிபெயர்ப்பு, தத்துவ மொழிபெயர்ப்பு, செய்தி மொழிபெயர்ப்பு, வரலாற்று மொழிபெயர்ப்பு எனத் துறை வாரியாக மொழிபெயர்ப்பு வகைப் பெருகும். இவற்றுக்கெல்லாம் மொழிப் புலமையுடன் துறைசார் புலமையும் அவசியம். பொதுவில் மொழிபெயர்ப்பு என்றால் அறிவு சார்ந்த ஒன்று எனக் கருதுவோம்.

ஆனால், இது உளம் சார்ந்த படிமுறை என்பது தான் உள மெய்ம்மை. இதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

மொழிபெயர்ப்பு என்பது மொழி சார்ந்த கலை.

அந்த மொழியோ உளம் சார்ந்த நிலை. மொழி பெயர்ப்பின் ஆங்கிலச்சொல் ட்ரான்ஸ்லேஷன்.

இந்தச் சொல்லின் வேர்ச்சொல் ட்ரான்ஸ் (trans) ஆகும். இதன் நேரடி பொருள் மாற்று அல்லது பெயர்ப்பு. அதாவது, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவது அல்லது பெயர்ப்பதைக் குறிக்கும். ட்ரான்ஸ் எனும் வேர்ச்சொல்லைக் கொண்டு ஆங்கிலத்தில் பல சொற்கள்

உள்ளன. ட்ரான்ஸ்ஃபார்மேஷேன் (transformation), ட்ரான்ஸ்ஃபார்மர் (transformer), ட்ரான்ஸ் ஜென்டர் (transgender), ட்ரான்ஸ்ரெலிஜன் (transreligion), ட்ரான்ஸ்லிட்ரேஷன் (translitration), ட்ரான்ஸ் மிஷன் (transmission), ட்ரான்ஸ்கல்சர் (transculture), ட்ரான்ஸ்க்ரிப்சன் (transcription), ட்ரான்ஸ்ப்லான்ட் (transplant), ட்ரான்ஸ்சிஷன் (transition), ட்ரான்ஸ்போர்டேஷன் (transportation), ட்ரான்ஸ்வெர்ஸ் (transverse), ட்ரான்ஸ்வேல்யூ (transvalue), ட்ரான்ஸ் ஆக்ஷன் (transaction), ட்ரான்ஸ்சென்டன்ட் (transcendent) வரிசையில் ட்ரான்ஸ்லேஷன் (translation) ஒன்று. மருத்துவம், வேதியியல், சமூகவியல், இலக்கியம் எனப் பல தளங்களில் ட்ரான்ஸ்-(trans-) வேர் கொண்ட சொற்கள் உள்ளன. அவற்றின் அர்த்தம் துறைதோறும் தனித்து இருந்தாலும், அடிப்படை அர்த்தமாக ‘மாற்று அல்லது பெயர்ப்பு’ இருப்பதைக் காண முடிகிறது. மேற்கூறியவற்றில் மொழி சார்ந்த சொற்களான ஒலிபெயர்ப்பு (transliteration), மொழிபெயர்ப்பு (translation), எழுத்துப்பெயர்ப்பு (transcription) ஆகியவை குறித்து மட்டும் இங்குக் காணலாம்.

ஒலிபெயர்ப்பு என்பது ஒரு மொழி சொற்களை இன்னொரு மொழியில் அதற்குரிய உச்சரிப்புச் சாரத்தில் எழுத்துவதாகும். சான்றாக, sorry என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் ‘சாரி’ என எழுதுவதைக் காணலாம். கிரேக்க, லத்தின சொற்களைத் தத்துவமும் அறிவியலும் ஆங்கிலத்தில் எடுத்தாளும் போது அவற்றின் ஒலி அமைப்பை அப்படியே பயன்படுத்துவதைக் காணலாம். ஆங்கிலத்தில் dialogue, geography, grammar, architect, economy, telephone, democracy, galaxy, psyche, narcissus எனப் பல சொற்கள் உள்ளன. மேலும், ஆங்கிலத்தின் அறுபது விழுக்காடு சொற்கள் கிரேக்க, லத்தின ஒலிபெயர்ப்புச் சொற்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. abdomen, alter, absent, accept, attitude, animal, dominate, clamor, corona, digital, navy, perfect, solar எனப் பட்டியல் நீளும். பொதுவாக, தத்துவச் சொற்கள் கிரேக்கத்திலிருந்தும், அறிவியல் சொற்கள் இலத்தீனத்திலிருந்தும் ஆங்கிலம் பெற்றது. சில சொற்கள் கிரேக்கத்தில் இருந்து இலத்தீனம் வழியாக ஆங்கிலம் அடைந்தன. தமிழின் காசு (cash), கட்டுமரம் (catamaran), சுருட்டு (cheroot), கறி (curry) முதலியவை ஆங்கிலத்தில் உள்ளன. சம்ஸ்கிருத சொற்களான ஆத்மா, அலர்ஜி, யோகா, ஆரஞ்ச் முதலியவை ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. தமிழில் ‘அரபுதமிழ்’ இதற்கு நல்ல சான்று. அரபு சொற்களைத் தமிழில் எழுதுவதே இதன் சிறப்பு. சில திரையிசைப் பாடகர்கள் தமது தாய் மொழியில் பாடல்களை ஒலிபெயர்த்துப் பாடுவதைக் காணலாம். கணினியின் ‘ஒருங்கு குறி’ (unicode) இதன் அடிப்படையிலானதே ஆகும். இந்த ஒருங்கு குறி ஒலிபெயர்ப்பானது கணினி வளர்ச்சியில் ஒரு மைல்கல்.

அடுத்தது, மொழிபெயர்ப்பு. இது அனைவரும் அறிந்த ஒன்று. முன்பே கூறியபடி, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கருத்துருவில் பெயர்ப்பது ஆகும். ஒலிபெயர்ப்புக்கும் மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடு, முன்னது ஒலியை மட்டும் பெயர்க்க, பின்னது, பொருண்மையைப் பெயர்க்கும். இதுதான் நடைமுறையில் பரவலாக நடந்து வருகின்ற பெயர்ப்பாகும். அகராதி இதன் அடிப்படையிலானது. மொழிபெயர்ப்புக்கும் அகராதியே அடிப்படை. இறுதியாக, எழுத்துப் பெயர்ப்பு. இது ஒரே மொழியில் இருக்கின்ற பழைய எழுத்து வடிவங்களைத் தற்கால எழுத்து வடிவத்துக்குப் பெயர்ப்பதாகும். இதைப் ‘படியெடுத்தல்’ எனவும் சொல்லலாம். பேச்சு வடிவத்தை எழுத்து வடிவமாகவும், சுருக்கெழுத்து வடிவமாகவும் படியெடுப்பதும் இதனுள் அடங்கும். கல்வெட்டியல், சுவடியியல் முதலியவற்றைப் படியெடுத்தல் இதனுள் அடங்கும். இந்த எழுத்துப் பெயர்ப்பு ஒரே மொழி வட்டத்துள் நடக்கின்ற போக்காகும். மேற்கூறிய மூன்றில் மொழிபெயர்ப்பே ஆழமானது. கலை நுணுக்கம் மிக்கது. காரணம், இது படைப்புக்கு இணையானது.

மனித இனத்தின் வளர்ச்சியை அல்லது வரலாற்றை மொழிக்கு முன், மொழிக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்கப்பட வேண்டும். காரணம், மொழிக்குப் பிந்திய மனிதனிடம் விரைவான பல மாற்றங்கள் உள்ளத்தில் நடந்தன/ நடக்கின்றன. மின்சாரத்துக்குப் பிந்திய மனிதயினம் விரைவாக வளர்ச்சி அடைந்ததுபோல், அக்காலத்தில் மொழி செய்தது. இந்த மொழி சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முன்பாக உள மாற்றங்களை ஏற்படுத்தியது. மொழியின் முதல் கட்டுமானம் உள்ளம் என்பது லக்கானியம் கண்ட உண்மை. மொழிக்கு முந்தைய உள்ளம் தரிக்கெட்டு இயங்கி வந்தது. விலங்கோடு விலங்காக மனிதன் செயல்பட்டு வந்தான். உடல் நிலைத் தாண்டி எந்த முறைமையும் (தேவை, வெறி) அப்போது அவனிடம் இல்லை. விலங்குகளிடம் உள்ள முறைமை இப்படியானது. மொழி உருவாக்கத்துக்குப் பிறகு வாழ்க்கை முறைமைகள் பல உருவாயின. இவற்றின் கணம் (set) சமூகமானது. எனவே, சமூகம் என்பது மொழியின் உருவாக்கம் ஆகும். இதை லக்கான் வலிந்து கூறுகிறார். அவர் சுட்டுகின்ற குறியீட்டு முறைமை (symbolic order) என்பது சமூகத்தில் நிலவிவரும் குறியீடுகளின் ஒழுங்கைக் குறிப்பதாகும். சமுகத்தில் பொதிந்துள்ள வழக்கங்கள், விதிகள் எல்லாம் ஒழுங்குமுறைகள் ஆகும். இந்த ஒழுங்கு முறைகளை நேரடியாக மனிதன் உருவாக்கவில்லை. மாறாக, மொழி வழியில் உருவாக்கினான். நுண்ணிதின் கூறின், மொழியே தன்னியலாக இவற்றை உருவாக்கியது. ஃப்ராய்டிய நோக்கில் சமூகம் என்பது உள்ளத்தின் தயாரிப்பு ஆகும். லக்கானிய நோக்கில் சமூகம் என்பது மொழியின் தயாரிப்பு ஆகும். காரணம், இவர் நோக்கில் உள்ளம் (அகநிலை- subject) என்பது மொழியால் கட்டமைக்கப்பட்ட அமைப்பாகும். எனில், உளத் தயாரிப்பான சமூகம் என்பது மொழி உருவாக்கத்தின் ஒரு படிநிலையே அன்றி வேறில்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தச் செய்திகள் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ள எப்படி உதவும் என்பதை இனி நோக்குவோம். முன்பே கூறியபடி, மொழியால்தான் மனம் கட்டமைகிறது. மனம் முழுவதும் மொழியே நிரம்பியுள்ளது. மனிதருள் எண்ணங்கள் வெற்று எண்ணங்களாக இல்லை. மொழித்தலாக உள்ளன. எனில், உளச் செயல்பாடுகள் எல்லாம் மொழிச் செயல்பாடுகளாக விளங்குகின்றன. அதாவது, எண்ணங்கள் மொழியோடு கலந்து கருத்துருக்களாகின்றன. இதனால், அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் மொழிபெயர்ப்பாளராக விளங்குகின்றான். இந்த மொழிபெயர்ப்புக் கலையில் கைத்தேர்ந்தவன் சிறந்த மொழிபெயர்ப்பாளன் ஆகின்றான். இவனே சிறந்த மொழி மனிதன். சிறந்த சமூக மனிதன். கால்களைக் கொண்டோரால் ஓட முடியும் என்றாலும் ஒட்டப் பந்தயத்தில் பங்கெடுப்போர் மட்டும் ஆட்டக்காரர் ஆகிறார். அதேபோல், மொழியறிவு கொண்டோரெல்லாம் எழுத்தாளராவதில்லை. இருப்பினும், அந்த மொழியறிவு அடிப்படையாக அனைவரிடத்திலும் அடிப்படையாக இருப்பதுபோல் எழுத்தாளரிடமும் இருக்கும்/ இருக்க வேண்டும். இதே நிலைதான் மொழிபெயர்ப்புக்கும் உள்ளது.

மேற்கண்ட விளக்கங்கள்படி, மொழிபெயர்ப்பு என்பது மொழிமனிதனின் அடிப்படைப் பண்பாக உள்ளது. இதற்குப் பின்னணி உள்ளது. ஐம்புலன் வழியில் உணரப்படுகின்ற பொருட்கள் அனைத்துக்கும் பெயர் சூட்டவேண்டியது கட்டாயம். பெயரிலாப் பொருட்கள் சமூகத்தில் இருப்புக் கொள்ள முடியாது. அது செயல்பாட்டுக்கும் வர முடியாது. முன்பின் அறியாத பொருள் இருப்பின் அதற்கு உடனே நாம் பெயர் வைத்துவிடுவோம். (சான்று: மிளகாய்). அப்போதுதான், சமூகச் செயல்பாட்டுக்கு அந்தப் பொருள் வரும். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதும் இதன் அடிப்படையிலானதே ஆகும். இந்தப் பெயர்ச்சூட்டலில் மொழிபெயர்ப்பு நடப்பதைக் காணலாம். அதாவது, பொருள் (material) பெயராவதைக் காணலாம். வினைகளும் சொற்களாகின்றன. இதன்படி, பெயர்ச்சொல் வினைச்சொல் எல்லாம் மொழி பெயர்ப்புகளே ஆகும். அதாவது, ஒன்றை மொழியாகப் பெயர்த்தல் நடக்கின்றது. இந்தப் பெயர்ப்பு (பொருள் / வினை / சொல்) உள்ளத்தில் இருந்து தோற்றம் பெற்றவை. ஒவ்வொரு சொல்லும் ஏதோவொரு காலத்தில் விளைந்த உள நிகழ்வு ஆகும். அவை தலைமுறை வழிவழியாகக் கடத்தப்பட்டு வந்ததால் அவற்றின் இருப்பு இன்றளவும் நிலைத்து இருக்கிறது. இந்தப் பழைய ஒலியுருவைப் புதிய மனம் (குழந்தை மனம்) அறிந்தேற்க வந்துவிடுகின்றது. இந்த அறிந்தேற்பு மொழியறிவை உருவாக்கி வளப்படுத்துகின்றது. எனவே, மொழியறிவு என்பது மொழி வழி பெயர்ப்பால் உருவாகின்ற அறிவே அன்றி வேறில்லை.

மேற்கண்ட விளக்கங்கள்படி, குழந்தை மொழியைக் கற்றுக்கொள்வதன் வழியில் மொழிபெயர்ப்புப் பயிற்சியே எடுக்கிறது. மொழியை நன்கு கையாளத் தெரிந்த பிள்ளை அல்லது மனிதன் நல்ல மொழி பெயர்ப்பாளர் எனச் சொல்லலாம். உள மொழியியல் (psycholinguistics) கூற்றுப்படி, மொழியறிவு என்பது புலனுணர்வு போன்றது. இதுதான் உண்மையான ஆறாவது புலனறிவு. தொல்காப்பியர் கூறும்போது, ‘ஆறறி வதுவே அவற்றொடு மனனே’ என்றார். இங்கே, மனனே என்பது மனதையும் அது சார்ந்த மொழியையும் குறிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். லக்கான் கூறுவதுபோல், மனித அகநிலையை மொழி கட்டமைக்கிறது. இதைச் சற்று உன்னித்தால் மொழிபெயர்ப்பே அகநிலையைக் கட்டமைகிறது எனலாம். எண்ணங்கள், பொருட்கள், வினைகள் எல்லாம் உள்ளத்தில் மொழிகளாகப் (சொல்லாடல்களாக) பொதிந்துள்ளன. அதனால் தான், மனிதனின் சிந்தனையே ‘மொழித்தல்’ போன்றதாகிறது. அதாவது, மொழியால் மனிதன் சிந்திக்கின்றான். எனில், ஒவ்வொரு சிந்தனைக்கும் பின்புலமாக மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் உள்ளது. இங்கே, சொல்லாடல்கள் அனைத்தும் மொழியாகப் பெயர்க்கப்பட்ட அம்சங்களே ஆகும். இந்த மொழி தாய்மொழியா வேறுமொழியா என்பது தான் கேள்வி.

இப்போது முக்கியமான கட்டத்துக்கு வந்து விட்டோம். ‘தாய்மொழியில் மனிதன் சிந்திக்கிறான்’ என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு பொய் இதில் உள்ளது. காரணம், குடும்ப மொழியான தாய்மொழியில் நாம் சிந்திப்பதாக நினைக்கிறோம். ஆனால், பொதுவில் அப்படி நடப்பதில்லை. தமிழகத்தில் பிறமொழியினர் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் தாய்மொழி வேறாக இருக்கும். இருந்தாலும், அவர்களில் அதிப் பெரும்பான்மையினர் தமிழில் சிந்திப்பதைப் பார்க்க முடிகிறது. இங்கே, தாய்மொழி அடிப்பட்டு விடுகின்றது. காரணம், தமிழ்ச் சமூகத்தில் தமிழில்தான் அதிகமாக ஊடாட வேண்டியுள்ளது. இந்தச் சமூகப் பழக்கம் ‘மனப்பழக்கம்’ என்றாகித் தாய் மொழியைப் பின்னுக்குத் தள்ளி தமிழ் மொழி முன்னுக்கு வந்து விடுகின்றது. அதனால், அவர்களின் ‘சிந்தனை மொழி’ தமிழ் என்றாகிறது. இதேபோல் தமிழர்கள் பல தலை முறையாகப் பிற மொழிக் கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களின் சிந்தனை மொழி அந்தச் சமூக மொழியே அமையப் பெறும்.

தாய் மொழியைவிடத் ‘தன்மொழி’யே உள்ளத்தில் வீரியமாக இயக்கம் கொள்கிறது. இதுதான் சுயத்தின் மொழி (language of self) ஆகும். இந்தத் தன்மொழியாகப் பெரும்பாலும் தாய்மொழி அமையப் பெறலாம். சிலவேளை சமூக மொழி உள்வாங்கப்பட்டுத் தன் மொழி என்றாகலாம். இந்தத் தன்மொழிதான் சிந்தை மொழியாகவும் பேச்சு மொழியாகவும் வெளிப்படுகின்றது. உள்ளத்தில் பல மொழிகள் இருந்தாலும் எதில் மனம் சிந்திக்கின்றதோ அதுவே அன்னவரின் தன்மொழி (signifier) ஆகும். பாரதியாருக்குத் தமிழ், ஆங்கிலம், பிரஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், உருது, கன்னடம், மராத்தி முதலிய மொழிகள் தெரியும். அதனால், அவர் மனத்துள் இந்த மொழிகள் யாவும் குறிப்பிட்ட அளவிலான செயல்பாட்டில் இருக்கும். என்றாலும், அவரின் சிந்தை மொழி தமிழாகத்தான் இருந்திருக்கும். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்கிற அவரின் அனுபவ மொழியில் ‘தன்மொழி’ சிறப்பிக்கப்படுகின்றது. அதனால்தான், அவரால் செறிவானத் தமிழ்ப் படைப்புகளைக் கொடுக்க முடிந்தது. இந்தப் பார்வைப்படி, தாய்மொழிக் கல்வியைவிடத் தன் மொழிக் கல்வியே சிறந்தது. இந்தத் தன்மொழி அனைவரிடமும் பொதுவாக அமைந்திருப்பின் வலைப்பின்னல் உருவாக அது சமூக மொழி நிலை எய்தி விடுகின்றது. தன்மொழி ஒரு குறிப்பான் (signifier) என்றால் சமூக மொழி ஒரு குறிப்பான் சங்கிலி ((chain of signifiers)) ஆகும்.

சிந்தனையென்பது மொழியால் ஏற்படுவது. லக்கான் நோக்கில் இதைக் குறிப்பான் வழிச் சிந்தனை எனலாம். அதாவது, குறிப்பான்களே சிந்தனையைத் தீர்மானிக்கின்றன. இன்னும் ஆழமாக நோக்கின், நனவிலிக் குறிப்பான்களால் உருவாக்கப்படுவதுதான் சிந்தனை ஆகும். இந்த நனவிலிக் குறிப்பான்கள் நனவு நிலையில் பேச்சுகளாக (மொழிதல்) வெளிப்படுகின்றன. அதனால், நனவிலியின் மொழி பெயர்ப்பு தான் ‘நனவின் மொழிதல்’ எனக் கூறப் பொருந்தும். இதனைச் செய்வது ஈகோ ஆகும். இது சுயத்தின் அம்சம். அதனால், நனவில் மொழிதல் என்பது சுயத்தின் மொழிதல் என்றாகிறது. கனவை எடுத்துக் கொள்வோம். ஒருவருடன் நமது கனவைப் பகிர்ந்து கொள்ளும்போது மொழியால் விளக்குவோம். அதுவே மொழிபெயர்ப்பு ஆகும். இந்த மொழிக் கனவைத்தான் ஃப்ராய்ட் ஆய்வுக்கு உட்படுத்தினார். அவரின் கனவுக் பகுப்பாய்வு ஒரு விதத்தில் ‘மொழி ஆய்வு’ போன்றது. இதை அடுத்தக் (கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் லக்கான்). மனிதனை மொழிக்கு முன், மொழிக்குப் பின் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இதில், மொழி மனிதனே முழுமையானவன். மொழிதலின்றிச் சமூக மனிதனில்லை. இந்த மொழிதலானது தன்மொழி வழிப்பட்டதாகும். இதுதான் உணர்வுகளைக் கருத்துருக்களாகப் பிரதிபலிக்கிறது. எனில், நாம் மொழிவது எல்லாமே மொழிபெயர்ப்புதான் என்றாகிறது. எனவே, அடிப்படையில் மொழிதல் என்பதே மொழிபெயர்ப்பு ஆகும். கருத்து அல்லது எண்ணம் அனைவருக்கும் பொது. அதைத் தமிழன் தமிழில் உரைக்கிறான். ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் உரைக்கின்றான். சீனன் சீனமொழியில் உரைக்கிறான். எனில், அனைவரும் மொழிபெயர்ப்பாளர்களே ஆகும்.

எண்ணங்களின் மொழிபெயர்ப்புதான் பேச்சொலி ஆகும். இந்தப் பேச்சொலியானது தன்மொழி சார்ந்தது. எண்ணம் பொதுவாக இருந்தாலும் தன்மொழி (இலக்கு மொழி) வேறு. இது, நாடுதோறும் அல்லது மாநிலந்தோறும் வேறுபடலாம். உலகச் சிந்தனையாளர்கள் யாவரும் தன்மொழியில்தான் அறிவை வழங்கினர். திருவள்ளுவர், ஃப்ராய்ட், மார்க்ஸ், லக்கான் முதலியோர் தன்மொழியில் சொல்லாடல் புரிந்தது நமக்குத் தெரியும். இதை நாம் தாய்மொழி எனக் கருதுகிறோம். ஆனால், இது தன்மொழி என அறிவோம். காரணம், பிற மொழியறிவு இருந்தாலும் சிந்தை மொழியே படைப்பில் ஈடுபடும். அந்தச் சிந்தை மொழிதான் தன்மொழி. (உளமொழி அல்ல).

மேற்கண்ட விளக்கங்கள்படி, தாய்மொழி வேறு தன்மொழி வேறு எனப் புரிந்து கொள்ளலாம். தாய்மொழி (mother language) என்பது குடும்ப மொழி. தன்மொழி (self language) என்பது சுய மொழி. இது மனமொழிகளில் ஒன்று. சமூக மொழியே தாய்மொழியாக இருக்கலாம். அதேபோல் தன்மொழியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த இணக்கம் கட்டாயமில்லலை. மேலும், இவற்றில் தன்மொழியே சிந்தனை மொழி. இந்தக் தன்மொழி குழந்தைப் பருவத்தில் இருந்து மனப் பழக்கத்தால் உண்டாவதாகும். இதுவும் போலச் செய்தல் (imitation) போன்றதே ஆகும். மனிதனின் கலைப் படைப்புகள் யாவும் ‘போலச் செய்தலின்’ விளைவுகளே என்பார் ப்ளேட்டோ. இதன்படி, இலக்கியம் என்பது போலச் செய்தல் ஆகும். இதை ‘நிஜத்தின் நிழல்’ என்பார் அவர். எனில், மொழிபெயர்ப்பு என்பது ‘நிழலின் நிழல்’ ஆகும். பொதுவில் மொழிப் பழக்கம் என்பது போலச் செய்தலின் நல்விளைவே அன்றி வேறில்லை. குழந்தையானது போலச் செய்தல் வழியில்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கின்றது. மொழியும் இதில் அடங்கும். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பக் குழந்தையின் ‘தன்மொழி’ ஒன்று அமையப் பெறும். அது, பெரும்பாலும் சமூக மொழியாகவே இருக்கும்.

குறிப்பாக, வட்டார மொழியாக இருக்கும். அதனால் தான், மொழி வழி மாநில எல்லை வட்டாரங்களில் ‘தன்மொழி’ வேறுவிதமாக இருக்கும். அங்கே மாநில மொழியே தன்மொழியாக இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

பெரும்பாலும் தாய்மொழியே தன்மொழியாக இருக்கும் என்றாலும், இதைப் பொதுமையாகக் கருதிவிட முடியாது. அதேபோல் சமூகமொழியே தன்மொழி எனவும் பொதுவில் கொள்ள முடியாது. காரணம், தன்மொழி என்பது தனியர் வாழ்வைப் பொறுத்து அமையப்பெறும். தன்மொழி என்பது அடிப்படையில் எழுத்துப் பெயர்ப்பு என்றாலும் அதற்கு அப்பால் மொழிபெயர்ப்பாகவும் விளங்குகிறது. காரணம், மொழியால் பெயர்க்கப்படும் எல்லாம் மொழி பெயர்ப்பு என்கிற வட்டத்துள் வைக்கப்படுகின்றது. ஓவியத்தை மொழியாக்குவதும் எண்ணங்களை மொழியாக்குவதும் ஒன்றே. மனித மனம் என்பது குறிப்பான்களால் நிறைந்தது. எனில், இந்த மொழி மனம் அதன் இயல்பில் மொழிபெயர்ப்பு மனம் என்றாகிறது.

இறுதியாக, தன்மொழியை உறுதிப்பட அடையாளம் காண முடியுமா எனும் கேள்வி எழுகின்றது. முன்பே கூறியபடி, எந்த மொழியில் சிந்திக்கின்றோமோ அதுவே தன்மொழி ஆகும். அதுவே ஈகோ மொழியும் ஆகும். ஆழத்து உளவியல் வழிக் கூறின், கனவில் நாம் பேசுகின்ற மொழியே ‘தன் மொழி’ ஆகும். இதில் ஆழத்து உளவியல் பாங்கு உள்ளது. இந்த ஆழம் வரை ஈகோவும் சுயமும் பொதிந்துள்ளன. அதனால், தன்மொழி சார்ந்த மொழிபெயர்ப்புகள் நனவிலியிலேயே நடக்கின்றது. எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் மொழியாகப் பெயர்க்கப்பட்டு ஆழ்மனத்துள் அமைந்து விடுவதால் மொழிதல் ஒரு விதத்தில் மொழி பெயர்த்தல் என்றா கிறது. பேச்சுக்கு முன் உள்ளத்துக்கு உள்ளுக்குள்ளேயே மொழிபெயர்ப்பு நடப்பதை அறிய முடிகிறது. எனவே, மொழிபெயர்ப்பானது உளவியல்பின் சிறப்பம்சம் எனலாம். சிந்தனை, பேச்சு, செயல்கள் யாவும் மொழிபெயர்ப்பு அம்சங்கள் ஆகும். முடிவாக, தன்மொழி சார்ந்த மனம் ‘மொழிமனம்’ ஆகும். அது ‘மொழிபெயர்ப்பு மனம்’ என இப்போது நாம் தெளிவுறுவோம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer