உறைபனியில் உனது ரத்தச் சுவடு

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்
மொழிபெயர்ப்பு: ரெங்கநாயகி

பகிரு

பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டு இருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்தபோது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நீனா தகாண்ட்டி உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்த படி இருக்க பைரனீஸ் மலைத்தொடர்களிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களைத் திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, அந்தச் சிவில் பாதுகாவல் அதிகாரி கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ் போர்ட்டுகளைப் பரிசோதித்தார். அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப்படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சயம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நீனா தகாண்ட்டி கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள். மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென்தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளைப் போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த
அந்த வெள்ளி நிறக் கார்: வறிய எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது.

அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும்,  மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நீனா தகாண்ட்டியின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.

முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக் கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ஹென்டேயில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கை இல்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக்கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னைப் பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்தக்காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிகச் சீற்றத்துடன் அலறினான்:

“Merde! Allez-vouz-en!”

“Shit! Whoever you are go away!”

காதுகள்வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டு இருந்த நீனா தகாண்ட்டி பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதிலளித்தான்: பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்கத் தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான்: அந்தப் பயங்கர இரவில் காயம்பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும். காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் பியாரிட்ஸ் என்றும், ஆனால் அந்த மத்திய குளிர் காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள பேயோன் பிரதேசம் செல்லும் வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டுபிடிக்க இயலாது என்று விளக்கினான்.

“மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.

“அது ஒன்றுமில்லை,”

நீனா தகாண்ட்டி புன்னகைத்துக்கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள்.

“அது வெறும் முள்.”

அவர்கள் பேயோனை - அடையும் முன்னரே மீண்டும் பனிமழை பெய்யத் தொடங்கியது. ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றிக் காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்குப் பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தை எல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது: திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.

ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே போர்டோ நகரை அடைந்துவிட விரும்பினான்.

‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப்பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில் - குறிப்பாகப் பனிக்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற பைன் மரங்கள் நிறைந்த மலை உச்சியின் விளிம்பு பகுதியில் - நீனா தகாண்ட்டி உற்சாகம் தீர்ந்துவிட்டிருந்தாள். எனவே பேயோன் நகருக்குப் பிறகு இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக்கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடுஇரவு நெருங்கும்வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்றுவிட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. போர்டோவின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்துவிட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரிஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான்: அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸ்டெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்-அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள் இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்க அந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவில்லை.

அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, கார்த்தஜீனா த இன்டியாஸ் -இல் மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கி இருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடைமாற்றும் அறைகளைப் புயல்போலத் தாக்கிய தருணத்தின்போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள். நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக்கொண்டும், உயர் ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள செயின்ட் பிளேய்ஸ் என்னுமிடத்தில் ஷேட்டல் லெனி - பள்ளியிலிருந்து வந்திருந்தாள். மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை.

சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்துவிட்டிருந்தாள் அவள். பக்கத்து உடை மாற்றும் அறைகளிலிருந்து கடற்கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப்போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை - அவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும்வரை கற்பனைக்கு எட்டக் கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும்வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்கத் தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான். அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்தப் புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது - அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல பினாட்டாக்களை (லத்தீன் அமெரிக்கத் திருவிழாக்களில் சிறுபரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் - அவற்றைக் கோலால் உடைத்து பரிசுகளைப் பெறவேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், அந்த இருவருமே குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர். ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக்கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நீனா தகாண்ட்டி அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாமல், நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான். தன் சிறுத்தைப் புலித்தோல் உள்ளாடையைக் கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்குறியைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.

“இன்னும் பெரிய, விரைப்பானவற்றை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக்கொண்டு. “ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும். ”

நிஜத்தில் நீனா தகாண்ட்டி ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம்வரை நிர்வாணமாக ஒரு ஆண் மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. பில்லி சான்ஷெஸால் என்ன செய்ய வேண்டும் என்று எண்ண முடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியைச் சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதுதான். மருத்துவமனைக்குத் தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்குக் காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் புணர்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக்கொண்டனர். கடினமான ஜூன் மாத பகல் நேரங்களை நீனா தகாண்ட்டியின் புகழ்பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகி இருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸ போனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்தத் தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் “லா மாங்கா”- மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நீனா தகாண்ட்டி இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல்மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது: மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது; அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்தச் சாக்ஸபோன் காலமுரண் மிக்கது என்றே நினைத்தார்கள். முதன்முறையாக அதைக் கேட்டபோது நீனா தகாண்ட்டியின் பாட்டி கூறினாள்:

“அது ஒரு கப்பல் போலச் சத்தமிடுகிறது.” சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நீனா தகாண்ட்டியின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள்.

“நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, “உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும்வரை”.

ஆனால் நீனா தகாண்ட்டியின் அந்தக் கப்பல் பிரிவு உபசாரப் பாடல்களும் மற்றும் அந்தக் காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸைச் சுற்றியிருந்த அந்தக் கோபம் மிக்க வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில் - இரண்டு புகழ் பெற்ற குடும்பப் பெயர்களின் சங்கமத்தில் பயந்துபோன மென்மையான ஒரு அனாதையைக் கண்டுபிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான் ஷெஸூம் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்குதடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்காலப் பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப் படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்துவிட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர் வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர் - உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் சாக்ஸபோன் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.

அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நீனா தகாண்ட்டியும் பில்லி சான்ஷெஸூம் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது. அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்புச் செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள்; பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன்முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா பீச் உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின்போது, மாறுவேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர்வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமைப் பெண்களின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனை போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாகப் புரிந்துகொள்ளும்வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறி மிகுந்த ஈடுபாடு போலவே, நீனா தகாண்ட்டி தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும் போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமானப் பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமானக் கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக்கொண்டு, களிப்பை விடச் சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து அப்பொழுதுதான் நீனா தகாண்ட்டி இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.

ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப்போன காதலர்களாக இருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்கோட்டை நீனா தகாண்ட்டியிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக்கொண்டிருந்த காரின், குறி இடப்படாத சாவிகளைப் பில்லி சான்ஷெஸூக்குத் தந்தார். மேலும் அந்தக் குளிர்காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ஷெர்லிங் - (மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.

நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நீனா தகாண்ட்டிக்காகக் காத்துக்கொண்டிருந்த அந்தத் தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நீனா தகாண்ட்டி பிறந்த போது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் - அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூடச் செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்டபோது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகரச் சாதுர்யத்துடன் கையாண்டாள்.

“நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், “அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள். ”

மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்தது - அது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக்கொண்டிருக்க வேண்டும் -அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்தப் புதிய காரின் மேல் தங்கள் கவனத்தைத் திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதைச் செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனைக் கவனிக்கவே இல்லை.

அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புறம் மாற்றி அமைத்துக்கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய ‘பென்ட்லி கன்வெர்ட்டிபிள்’ கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போலக் காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். அந்தக் காரின் மிகச்சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் அவர்கள் இருப்பதை அறியாமல். பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.

அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞான ஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப்படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத் தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாகத் திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் இருந்தான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள் — நடுப்பகல் பொழுதில் எரியவிடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்துச் சமுத்திரம் - இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறதியின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு திடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தைத் தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் உறைபனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியைத் தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன்  உருண்டான்.

அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற்பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நீனா தகாண்ட்டி தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவின்போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும்போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப்பாதைகளைக் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்தபோதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் பைர்ரனீஸ் மலைத்தொடர் பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக் கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப்படியாய்த் தங்கிப் போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் பீதிக் கனவின் மனப்பதிவில் கண் விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக் குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகி விட்டிருந்தது. காரின் டேஷ் போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள்பார்த்தபோது மணி மூன்று ஆகியிருந்தது. மனக் கணக்குப் போட்டவள் பிறகுதான் போர்டோ பகுதியையும் அதேபோல, லுவா - நதியின் நீண்ட வெள்ளப்பெருக்குத் தடுப்பு மதிலை ஒட்டி சென்றுகொண்டிருந்ததையும், அங்கோலேம் பகுதியையும், புவாட்டியரையும் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தாள் - மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலவொளி, அந்தக் கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக் கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நீனா தகாண்ட்டி பாரிசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்து விடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.

“நீ காட்டு மனிதன்” அவள் கூறினாள்.“நீ பதினோரு மணி நேரமாகக் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”

அந்தப் புதுக்காரின் போதை அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கி இருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரிஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். “அந்தத் தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றித் தெளிவாகக் கூறினான், “என்ன இருந்தாலும், கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். கண்டிப்பாகப் பத்து மணியாகத்தான் இருக்கும். ”

என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கி விடுவானோ என்று நீனா தகாண்ட்டிக்குப் பயமாகயிருந்தது. மாட்ரிட்டில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப்பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள்.

ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.

“உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.

ஆர்லியன்ஸூக்கு சற்று முன்னதாகவே அந்த மூடுபனி விலகியது. பனிபடர்ந்த வயல்வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்குவரத்து மிகவும் சிக்கலாக ஆகியது - காரணம் பாரிசுக்குச் சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லாப் பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச் செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நீனா தாக் கொண்ட்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதைக் குறிப்பால் உணர்த்திவிடக் கூடத் தைரியமின்றி இருந்தாள். முதல்முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்தக் குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்துச் சந்தோஷப்பட்டாள். இதைப்போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது அவள் கூறினாள்: “ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய்க் கொடுக்கும் ஒருவரைக்கூடக் காண முடியாது. தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள். காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாகக் கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப்பட்டிருக்கும். அந்தக் கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.

“நான் இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக்கக் கூடும் என்று”. அவன் கூறினான்: “இதே இடத்தில், நீ விரும்பினால்”.

நீனா தகாண்ட்டி அதுபற்றித் தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக்கொத்தான தொழிற்சாலைகளும், மிதிவண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும் காணப்பட்டனர் — குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.

“பாரிஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நீனா தகாண்ட்டி.    “மணமான ஜோடிகள்போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”

“இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது”, என்றான் அவன்.

“அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், “நாம் முதல்முறையாகத் திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”

விடியலுக்குச் சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களைக் கழுவிக்கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக்கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நீனா தகாண்ட்டி குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கி விட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையைக் குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடதுகைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்புக் கொண்டு நீரில் காயம்பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப் பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நீனா தகாண்ட்டி தன் கையைத் தொங்க விட்டாள் - வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக்கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்தச் சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். “யாரோ ஒருவர் நம்மைக் கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், “அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்தப் பனித் தரை மேல் படிந்த என் ரத்தச் சுவடைப் பின் தொடரவேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.

“கற்பனை செய்”, அவள் கூறினாள். “மாட்ரிட்டிலிருந்து பாரிஸ் வரையிலான வழி எங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”

மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்து இருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் - ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றைச் சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்கு உட்பட்ட விஷயம் அல்லவென்று. “நாம் கிட்டத்தட்ட போர்ட் த ஆர்லியன்ஸ் - இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், “நேரே மேலே போக வேண்டும், ஜெனரல் லெக்லெர் அவென்யூ - வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்தப் பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்”.

அந்தப் பயணத்தின் மிகச் சிரமமான பகுதி இதுதான். மத்தியச் சந்தைகளை அடைய முற்பட்டுக்கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ஜெனரல் லெக்லெர் அவென்யூ - நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களைச் சங்கிலி - தாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனைத் தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நீனா தகாண்ட்டி அவனை நம்பச் செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நீனா தகாண்ட்டி சுயநினைவு இழக்காமலிருக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

லியோன் த பெல்ஃபோர் - டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போலச் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை - மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரிஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் டென்ஃபெர் ரோஷரூ அவென்யூவில் போக்குவரத்துக் குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நீனா தகாண்ட்டி அவள் கணவனிடம் வலதுபுறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவமனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.

காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்ச்சர் வண்டியில் படுத்தபடி, பணிநேர மருத்துவருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்குப் பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையைச் சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான்: அது தளர்ச்சியடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையைப் பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதினராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோகநிறத் தோலுடனும். நீனா தகாண்ட்டி அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையைத் தன் கணவன் மேல் திருப்பினாள், “பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், “நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்று விடுவதுதான்.”

அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

“இல்லை குழந்தைகளே”, அவர் கூறினார். “இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விடப் பசியால் இறந்து போவான். ”

அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்தக் கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின்தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக்கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.

“நீ கூடாது”, அவர் சொன்னார். அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.

நீனா தகாண்ட்டி அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைக்கூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கை அசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் க்ளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.

“டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.

“எவ்வளவு நாளாய்?”

“இரண்டு மாதங்கள்”

இந்த தகவலுக்குப் பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. “நீ என்னிடம் சொல்வது சரிதான்”, அவர் கூறினார்.

பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நீனா தகாண்ட்டி அழைத்துச் சென்றிருந்த அந்தக் கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைக்கூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மரபெஞ்சில் உட்கார்ந்தான்.

அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அவன் அறியாது இருந்தான்.

பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்ட படி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நீனா தகாண்ட்டி 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல்நாள் இரவில், பில்லி சான் ஷெஸ் அவசர சிகிச்சைப் பிரிவு நுழை வாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நீனா தகாண்ட்டி மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்துகொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்தப் பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்த்தூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடன் ஆன ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.

அந்தப் பதிவேட்டில் நீனா தகாண்ட்டி இருப்பதை மறுஉறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசை கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ஹோட்டல் நிக்கோல் என்ற வாசகத்துடன் - அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்புப் பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக்கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ மச்சு அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவப் படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்குத் தவிர.

இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதி கொண்ட நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக் கூடிய ஒரு பிடெ - (பிறப்பு உறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர் இணைப்புக் கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.

அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்தக் கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த அந்த உலகின் புதிர்களைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒருபோதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளிவிடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப்பகுதி தேவையாயிருந்தது. மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்து இருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டுபிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்துகொண்டான். அதற்கெனத் தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலகக் கட்டுப்பாட்டில் இருந்த அந்தச் சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நீனா தகாண்ட்டியின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்த போது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. ஆனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை. காலைப் பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நீனா தகாண்ட்டியை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழை வாயிலின் வெளியே இருந்த அந்தச் செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான்.

எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நீனா தாக்கொண்ட்டேவைச் சேர்த்த அந்த ஆசிய டாக்டரைக் காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்ததால் அவனது கண்காணித்தலை முடித்துக்கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு சூடான பால் கலந்த காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான் -இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர்க் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்றபோது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப்பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடி யில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப்படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்தச் சுமை தூக்கும் கூலிக்கு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் த அவிலாவுக்குப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்தத் துணிகர மிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க, மேயரின் அலுவலகக் காரை ஏறக் குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழு நாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப் பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும் - காரணம் அவன் அதை  மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும் - இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, முதன்முறையாக நீனா தகாண்ட்டி பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் கார்த்த ஜீனாவில் பொதுச்சந்தையில் இருந்த ஒருபால் புணர்ச்சியாளர்களின் மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். அரூபாத் தீவிலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்தக் கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் கிடைத்த தேங்காய் சாதம் மற்றும் வறுத்த மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச்செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்தச் சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும் - அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டுப் பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.

அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் - எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும் - அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்தச் சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனது ஏழு வயதில், ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பைவிட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரிஸ் நகர மச்சு அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதைக் கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானித்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் - ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டுபிடித்திருக்கலாம் - சாவிகள் எல்லாம் நீனா தகாண்ட்டியின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடை மாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் “ஹலோ” - சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருந்தான். இதை உணர்ந்துகொண்டவன், வெண்ணெணை அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்க வில்லை. ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது: மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளைக் கேட்க வேண்டிய அவசியம் இன்றித் தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்துகொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனைச் சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சி யுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நீனா தகாண்ட்டியை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம்நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நீனா தகாண்ட்டி விடைபெற கை அசைத்துச் சென்ற அந்த நடைக்கூடத்தைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறை படிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன், அவன் நடந்து சென்றபோது ஏதோ கேட்டதைப் பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனைப் பின்தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியைத் திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சு மொழியில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்தக் காவலன் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட சுத்தியல் பிடியில் - இவன் கையைத் தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்கத் தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக்கொண்டிருக்க, உருளைக்கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போலத்  தூக்கி வீசினான்  அந்தத்  தெருவின்  நடுவில்.

அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதனாக இருக்கத் தொடங்கினான். அரசுத் தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நீனா தகாண்ட்டி அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்தத் தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றைத் தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ஆன்டஸ் பிர தேசத்துச் சொற்களை உடனே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப்பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணியின் கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாற வில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததைக் கேட்டான் அவன். மாண்புமிகு அரசுத் தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரைஎதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன்அனுமதியின்றி அவரைக் காண இயலாது, அதுவும் அசாதாரணமான அவசரச் சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதைக் கேட்டான். இந்த வழியிலும் நீனா தகாண்ட்டியைப் பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்தச் செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.

பாரிசின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான 22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ் - இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே கார்த்தஜீனா த இன்டி யாஸ் - இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன்முறையாகச் சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மேலும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது.

அரசுத் தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார் - அவரது கறுப்புக் காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் உடை மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி அமெரிக்காக்களுக்கு முரணாக அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றே இங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். “இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.

“போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். “அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”

வெளியே வந்தவன், பிளேஸ் த லா கன்கார்ட்-இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற்கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல் துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவைவிட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நீநா தாக்கொண்டேவைப் பற்றி நினைத்தபடி அந்தச் சைன் நதி- சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்குப் படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போலக் காட்சியளித்த அந்தச் சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளத்தின் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனைப் பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்து களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட் டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரிசின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.

பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்குச் சென்று உயர்ரகக் கான்யாக் - பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக்கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன்முறையாக இறப்பின் நிதர்சனத்தைப் பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்தத் தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையைப் பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குக் காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட் களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனைத் தற்காத்துக்கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, சுவர்க்காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நீனா தகாண்ட்டி பற்றி எண்ணிக் கொண்டும் செவ்வாய்க்கிழமைக்காகக் காத்திருந்தான். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த ரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.

மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும் செவ்வாய் விடிந்தது. ஆனால் மழையின்றி. ஆறு மணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்குப் பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நீனா தகாண்ட்டி எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரைச் சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புற முற்றத்தின் ஊடாக - பூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன் - அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின்தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவச் சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான். வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததைவிட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைக்கூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நீனா தகாண்ட்டி இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக்கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாகத் தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின்  ஜன்னல்கள்  ஊடே  நோக்கியபடி.

நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடனும் பரிசோதித்துக்கொண்டிருந்தார். பில்லி அந்தப் பகுதிக்குள் சென்றான், அந்தக் கூட்டத்தினின்று செவிலியர்களில் ஒருத்தியை விலக்கி விட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.

“ ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ” அவர் கேட்டார்.

பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.

“அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். “இதோ இங்கேதான், அந்தத் திருப்பத்தில்.”

பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நீனா தகாண்ட்டி ரத்தம் வருவது நிற்காமல் இறந்துவிட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான் ஷெஸூம் முன்பதிவு செய்து கொண்டிருந்த ஏதென்னே பிளாசாவில் - அவள் கணவனைத் தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும் இருந்தனர். ஏற்கனவே நீனா தகாண்ட்டி யின் பெற்றோர் பாரிஸூக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக்கிழமை அந்த அயல்நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசுத் தூதுவர் தாமே, பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரிசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடிநிலை அதிகார அறிக்கை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது.

மேலும் அந்த நாற்பது மணி நேரமும் ஃபிரான்சில் மிகவும் தேடப் பட்ட மனிதனாக இருந்தான் அவன் நீனா தகாண்ட்டியின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி கொண்ட ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டு பிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.

சனிக்கிழமை மதியம் நீனா தகாண்ட்டியின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் பாரிசுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நீனா தகாண்ட்டியின் காதலுக்கான தனிமை தந்த மனவேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்தத் தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்- வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற்பிரதேசத்துப் பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரிஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படித் தகுதிக்கு ஒவ்வாத ஷெர்லிங் - கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்கப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.

ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நீனா தகாண்ட்டியின் பெற்றோர் அந்தத் தேடுதலை நிறுத்தி விட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக் கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒருபோதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, அந்தச் சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்தத் துக்கமான ‘லா மாங்கா’ - கல்லறையில் - எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவுகோல்களைக்கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி எனக் கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தைப் பழி வாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி,மென்மையான பளீரென்று சிறுதுணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரிஸ் நகர தெருக்களில் விழாக்காலத் தோற்றமிருந்ததையும் கூட.

From Strange Pilgrims, Twelve Stories by Gabriel Garcia Marquez, translated from the Spanish by Edith Grossman, published by Vintage International, New York, 1993.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer