இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் கவிதைகள்

பிரிவறிதல்

சாகும்வரை வரக்கூடாது என்றிருந்தேன்
பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று
மரங்களைப் பார்க்க ஆசைப்படுவதாக உற்சாகமானார்கள்
உன்னைப் பார்க்கலாமென்றுதான் அந்த இடத்திற்கு நடந்தேன்

நீ இருக்கப்போவதில்லைதான் நானும் இருக்கப்போவதில்லை
ஸ்டீபன் ஹாக்கிங் கண்டுணர்ந்ததுதான்
இது ஒரு மகா எந்திரம்
சக்கரங்களில் நசுங்கிப் போகிறவர்களைப் பற்றி
விசனப்பட நேரமில்லையதற்கு

கைகோர்த்துக்கொண்டு கனவு காண்பது
பாதுகாப்பாயிருந்தது
நமக்குள் இருந்த நம்பிக்கை
புவியடுக்குகளில் நிலவும் மெல்லிய நிலநடுக்கங்கள் போல்
அனிச்சையாய் இந்த மரக்கிளைகளில் அசைந்தது
பேராசிரியர் குனிந்து கையொப்பமிடும்போது
சொல்லிடப்போறேன்
என்ற ஒற்றைச் சொல்லை நீ முகம், முழுக்க
அபிநயித்தாய்
வேண்டாமே என்ற ஒற்றைச் சொல்லை நான் என் முகத்தில்
பாவிக்க முயன்று தோற்றேன்
அதற்குண்டான உன் முகபாவத்தை
இந்தப் பவழமல்லி மரத்தில் விரல்களால் தேடுகிறேன்
மரங்களின் காதலன் நான் எனச் சிரிக்கிறேன்
இளைய மாணவர்கள்
வானத்தில் கட்டப்பட்ட மேல் கட்டுமானம்
தொடுக்கும் எந்தப் பேரழிப்பையும்
தாங்கி நிற்கின்றன மனசுகளின் இருப்பு
பூமியின் ஆகப்பெரும் இயங்குயிர் குழந்தை
திமிங்கலமெனப் பாசாங்கு செய்வதில் லாபமென்ன
பூமியின் ஆகப் பெரும் குழந்தையான மனசின்
ட்ரில்லியன் டன் சுமையைச் சுமக்கும்
மனிதக்கூட்டம் சாதிக்க இனியொன்றுமில்லை
விடைபெறலில் மிதக்கும் கண்களைப் பார்த்துச் சொன்னேன்
எந்தக் கண்ணீரிலும் கரையாத நினைவு அணு ஒன்றை
கண்களில் சுமந்து போகாதீர்கள்
கண்மணிகளே...

குயுக்தம்

இறைஞ்சுவதில் ஒரு மண்டலம் பயிற்சி பெற்றவர்கள்
சொல்லக் கேட்டு கேட்டுச்சொல்லி
ஒவ்வொருவராய் வருகிறார்கள்
கரகரவெனத் தீட்டப்படும் கத்தியை
இந்த வைகறைப் பனியில் மங்கலாகப் பார்த்துவிட்டு
தொர தொரவெனக் கிடாய் ஒன்று அழுவதாய்
காட்சியொன்று விரிய
என்னிடமும் குஞ்சுகள் இருக்கின்றன
நத்தைகளை அடிமடியில் வைத்திருக்கிறேன்
என் மேனியெங்கும் ‘பாசம்’ மிதந்தலைகிறது
இரக்கமற்ற பூமி தாங்குவதற்கீடாக
புதுப்புது ஜிஎஸ்டியால் என்னையும்
உறிஞ்சிக்கொண்டேயிருக்கிறது
வானத்திற்கும் வரி செலுத்தித் தொலைக்கிறேன்
பாருங்கள் மீன்கொத்திப் பறவைகள்
பசியோடு கிறங்குகின்றன
என்னிடமே வந்து நீங்கள் கேட்டவண்ணமிருந்தால்
எப்படி...
இறைஞ்சுவதில் முன்அனுபவமே இல்லாத குளம்
சாப்ளின் பகிர்ந்தது போல்
தண்ணீருக்குள் தண்ணீராய் அழுது தீர்த்தது
இறைஞ்சுவதற்கான பல பட்டறைகளில் கற்றவர்கள்
முகாம்களில் தங்கிப் பயின்றவர்கள் என வருவோரின்
சாமர்த்தியத்திற்கிணையான சமர்புரிய
அங்கேயே கிடைக்கும் குளம் யாதுமறியவில்லை
வெட்டிக் கொடுப்பதும் கட்டிக் கொடுப்பதும்
தாய்மையின் பெருங்கருணையென்ற பரப்புரை
அரசூடகங்களால் தீவிரமாக்கப்படுகிறது
தான் வெட்டுண்டும் கட்டுண்டும் போவதைத்
தடுக்கவோர் கரமின்றி
இறைஞ்சுவோர்க்கு வழங்கிவிட்டு
இறைஞ்சுவோர் கொண்டுசென்ற குளத்தின்
குறும்பகுதியொன்று சமுத்திரமாக வளரும்
வாய்ப்புளதான கற்பனையில் கிடந்தது அது.

மீனும் கடலும்

கவிதைக்குள் நீந்துவது வழக்கமாகிவிட்டிருக்கிறது
கடலில் மீன்கள் நீந்துவதைப்போல
மீன்கள் கடலைக் குடிப்பதில்லை
கடலும் மீன்களைத் தின்பதில்லை
மீனும் கடலும் ஒன்றாயிருக்கின்றன
கடலும் மீனும் வேறாய் நிற்கின்றன

அத்வைதம் துவைதம் விசிச்டாத்வைதமல்ல
பசிதான் பேசுபொருள்
மீன்கள் கடலைக் கண்டுபிடித்து
பிடித்துக் கடித்துத் தின்றுவிடலாமென்று
விரட்டிக்கொண்டோடுகின்றன
கடலும் தன்னைத் தான்குழைத்துத் திரித்து
மீனுண்ணச் சுழல்கிறது
இவைகளெல்லாம் அலைகளுக்குத் தெரிவதில்லை
திருநாவுக்கரசரைப் போன்றதொரு
பிரம்மாண்டப் பேருருக்கொண்ட காலம்
காலம் காலமாய்ச் சாகரத்தின் விளிம்பிலமர்ந்துகொண்டு
உழவாரப் படையொன்றால்
அலைகளைச் செதுக்கிக்கொண்டேயிருக்கிறது

சமுத்திரத்தை ஸ்படிகத் தெளிவாகப் பார்க்க
கவிதைக்குள்ளும் நானப்படித்தான்
நாளும் பொழுதுமாகத் திளைக்கிறேன்
ஒரு நாளும் ஒரு துளிக்கவிதையைக்கூட
பிய்த்துத் தின்றவனில்லை நானும்... நானும்

கவிதைகள்தாம் கார்டூனில் வரும் முயல்குட்டி
கேரட்டொன்றை மெல்வதைப் போல
என்னை மென்றுகொண்டேயிருக்கிறது
நாசமாய்ப் போக அது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *