ஆனந்த் கவிதைகள்


பகிரு

இங்கேதான்

இங்கே இங்கே மட்டும்தான்
இருக்கிறது

எப்போதும் இப்போதாகவே இருக்கும் இங்கே
இங்கே மட்டும்தான் இருக்கிறது.

மலைகள் வளர்ந்துயர்ந்து
இருந்து கரைந்து போவதும்
பனிப்பாறைகள் கரைந்து
நதிகளாய் ஓடிக் கடலில் சேர்ந்து
வரண்டு போவதும்
இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது.

நீயும் நானும் பிறந்து இருந்து
மறைந்து போவதும்
இங்கேதான் நடந்துகொண்டிருக்கிறது.

எல்லாம் உருவாகி மாற்றம் கொண்டு
பின் மறைந்து போவதும் இங்கேதான்.

எப்போதும் இப்போதாக
இருக்கும் இங்கே
இங்கே மட்டும்
இருந்துகொண்டிருக்கிறது.

என் வீடு

வெய்யில் மழை இல்லாத
பகல் இரவு அற்ற
உள்ளும் வெளியும் கடந்த
அந்த இடத்தில்தான்
இருக்கிறது என் வீடு

ஆனால் ஒரு விஷயம்
என் வீடும் நானும்
ஒன்றுதான்

அதனால் நான் என் வீட்டினுள்
நுழைவதும் இல்லை
வெளியேறுவதும் இல்லை
அங்கும் இங்கும் இல்லாத
அந்த இடத்தில்
நான் நகர்வது கூட இல்லை

காலையும் மாலையும் காட்டும்
சூரியன் எழுவதும் விழுவதும்
என் ஆழ்வெளியில்தான்

பாத்தி கட்டிப் பயிர் செய்வதும்
காலத்தில் அறுவடை முடிப்பதும்
இலை உதிர்வதும்
மீண்டும் துளிர்ப்பதும்
வட்டத்துக்குள் இருக்கும்
உலகத்தினுள்ளேதான்

நானாக இருக்கும்
என் வீடும்
என் வீடாக இருக்கும்
பெரும்பாழ்வெளியும்
எப்போதும் இப்போதாக
இருக்கும் அந்த
மொழி கடந்த வானில்
மௌனம் காக்கிறோம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer