அமலன் ஸ்டேன்லி கவிதைகள்


பகிரு

வெறுமை

நெற்றிச்சுடர் சுமந்து
சீற்றம் கொண்டோடியது

திரும்பவே போவதில்லை
இனியொருபோதும் என்பதாய்
விரைந்து கடந்து
சடுதியில் மறைந்தது

அதிர்ந்த கருங்கற்களும்
சிதறிச்சேர்ந்த தும்புகளும்
தம்மிடம் அமைந்தன
நெடுந்தொலைவே
கடுந்தடமே
தற்காலத்தின் சில நொடிப்பொழுதை
வாரியெடுத்துப்போனதோ
வடக்கு நீளும்
அந்நீல இரயில்.

வலி

வயிற்றுப் பகுதியின் நுண்மயிர்க்
கற்றையொன்று பறந்து
சன்னலின் விளிம்பில் ஒட்டி
காற்றின் சன்னமாய்
அதிர்ந்து கொண்டிருந்தது

தட்டித்தட்டிக் கனப்படுத்தினாள்
செவிலிப்பெண்
முழங்கை இரத்த நாளத்தினூடே
ஊட்ட நீரேற்ற வேண்டி

மேலுமோர் சிறகு நெஞ்சமர்ந்து
காற்றின் இழுப்பில் தரைப்பட்டது
விரட்டக்கூட வலுவற்ற மக்கள்
கிடந்துபோகும்
சிகிச்சைக்கான அறைகளிவை

நகரத்தில் கவிந்திருக்கும் பச்சையம்
உயர்மாடியிலிருந்து
இரம்மியமாயும் இதமாயுமிருக்கிறது

ஒன்றிரெண்டென எழுந்து
தொகுப்பாய்ப்பறந்து
அண்மைய ஆற்றுப்பாலம் திரும்பி
மீண்டெழுந்து தத்தமது இருப்பில்
அமர்ந்தன புறாக்கள்

எனினும் விபத்தில் இறந்தவனுக்காக
தலையிலடித்தபடி புலம்பிக் கதறும்
உயர்பருத்திச் சேலைப் பெண்மணிக்கும்
கத்திப்புண் ஆறக்காத்திருக்கும் மகளுக்கும்
இப்புறாக்கள் தந்துபோகும்
ஆறுதல்தான் என்ன?

குறிச்சொற்கள்