அது ஒரு முத்தத்திலிருந்துதான் ஆரம்பித்தது.பெரும்பாலும் அது முத்தத்திலிருந்துதான் தொடங்கும். நாக்குகள் இரண்டு மட்டும் தொட்டுக்கொண்டிருக்க, எலாவும் சீகியும் கட்டிலில் நிர்வாணமாய் இருந்தனர். அப்போது அவள் ஏதோ குத்துவதுபோல உணர்ந்தாள்.
சீகி கேட்டான் “நான் உன்னைக் காயப்படுத்திவிட்டேனா?” அப்படி அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவள் இல்லையென்று தலையை ஆட்டினாள். பேசுவதை நீடித்தபடியே “உனக்கு ரத்தம் வருகிறது” என்றான். அவன் சொன்னது போலவே அவள் வாயிலிருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. “மன்னித்துவிடு” என்று சொல்லிவிட்டுச் சமையலறையில் வெறிப் பிடித்தவனாய் எதையோ தேடினான். குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து ஐஸ்கட்டிகள் உறைந்திருந்த தட்டை எடுத்து மேசையில் ஓங்கி அடித்தான். “இதோ, இவற்றை வைத்துக்கொள்” என்றவாறு நடுங்கிய கைகளில் சில ஐஸ்கட்டிகளை எடுத்து அவளிடம் கொடுத்தான். “உன் உதட்டில் வைத்துக்கொள். ரத்தம் நின்றுவிடும்.”இது மாதிரியான விஷயங்களில் சீகி எப்போதுமே சரியாக நடந்துகொள்வான். பட்டாளத்தில் இருந்தபோது மருத்துவ உதவியாளனாய் இருந்தான். பயிற்சிபெற்ற சுற்றுலா வழிகாட்டியும் கூட. “மன்னித்துவிடு. கடித்துவிட்டேன் போல. உனக்குப் புரியும்தானே, கட்டுக்கடங்காத உணர்ச்சியில்தான் என்று.” “பரவாயி...லை” என்றபடி அவனைப் பார்த்துபுன்னகைத்தாள். அவளது கீழ் உதட்டில் ஐஸ் கட்டி ஒட்டிக்கொண்டது.
“அதெ...ம் ஒ...மில்லை” என்று அவள் சொல்வது ஒரு பொய்தான். ஏனெனில் என்...மோ நடந்து இரு...றது. உடனிருப்பவர் தினம் தினம் நம்மை இப்படிக் காயப்படுத்திக்கொண்டிருக்க முடியாது. ஏதோ குத்துவதால் ரத்தம் கசிகிறது என்று உணர்ந்துவிட்ட பிறகும் கடித்துவிட்டதாகப் பொய் சொல்லுவதை ஏற்கவே முடியாது.
அதன்பிறகு, அவள் உதட்டில் வெட்டுக்காயம் இருந்ததால் சில நாட்களுக்கு அவர்கள் முத்தம் கொடுத்துக்கொள்ளவில்லை. உடலில் அதிக உணர்ச்சிமிக்க இடம் உதடுகள்தான். அந்த நிகழ்வுக்குப் பிறகு முத்தம் கொடுக்க வாய்ப்பிருக்கும் போதெல்லாம் மிகக் கவனமாக இருந்துகொண்டனர். அவன் தன்னிடமிருந்து எதையோ மறைப்பதாக அவனிடம் சொல்ல நினைத்தாள். ஒரு இரவில் அவள் அதை உறுதிபடுத்திவிட்டாள். அவன் வாயை திறந்தபடி தூங்கிக்கொண்டிருக்கையில் மெதுவாக நாக்குக்கடியில் விரல்களைவிட்டு பார்த்தாள். கண்டுபிடித்துவிட்டாள். அது ஒரு ஜிப். மிகச்சிறிய ஜிப். அவள் அதை திறந்தபோது சீகி ஒரு சிப்பியைப்போல முழுமையாகத் திறந்துகொண்டான். அதற்கு உள்ளே ஜுர்கன் இருந்தான். சீகியைப்போல அல்லாமல் ஜுர்கனுக்கு ஆட்டுத்தாடி இருந்தது. மிகக் கவனமாக அவனுடைய செவியின் பக்கவாட்டு மயிர்கள் மழிக்கப்பட்டு ஆண்குறி சுன்னத் செய்யப்படாமல் இருந்தது. அவன் தூங்கிக்கொண்டிருக்கையில் எலா அவனைக் கவனித்துக்கொண்டிருந்தாள். ஒரு அணக்கமும் இல்லாமல் சீகியை சுருட்டி மடித்துக் குப்பைத்தொட்டிக்குப் பின்னால் இருக்கும் சமையலறை அலமாரியில் மறைத்து வைத்தாள். அங்குதான் அவர்கள் குப்பைப் பைகளை வைப்பார்கள்.
ஜுர்கனுடனான வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அவனுடன் உறவு வைத்துக்கொள்வது அலாதியாக இருந்தது. ஆனால் அவன் அதிகம் குடித்தான். அப்படி அதிகம் குடிக்கும் போதெல்லாம் அமளி செய்து எல்லா வகையான இக்கட்டான சூழலுக்குள்ளும் இட்டுச்சென்றுவிடுவான். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவை விட்டுவிட்டு இங்கு வாழ வந்ததற்காக எலாவை குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குவதில் ஜுர்கன் விருப்பம் கொண்டிருந்தான். நாட்டில் ஏதாவது மோசமாக நடந்துவிட்டால், அது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் சரி தொலைக்காட்சியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும் சரி “உன்னுடைய நாடு போகிற போக்கைப் பார்” என்பான். அவன் பேசும் ஹிப்ரூ மொழி கேட்க சகிக்க இயலாததாய் இருந்தது. அவனுடைய ‘நீ’ எனும் சொல் ஒரு குற்றச்சாட்டாகவே எப்பொழுதும் ஒலித்தது. அவளுடைய பெற்றோருக்கு அவனைப் பிடிக்கவில்லை. சீகி, அதிகம் பிரியத்துடனிருந்த எலாவின் அம்மா ஜுர்கனை வேற்று ஜாதிக்காரன் என்றே அழைத்தாள். அவளுடைய அப்பா ஜுர்கனிடம் வேலை குறித்துக்கேட்கும்போதெல்லாம் ஜுர்கன் சிரித்துக்கொண்டே பதில் சொல்வான்.
“வேலை என்பது மீசை மாதிரி திரு.ஷிவ்ரோ. அது பழைய பாணியாகி வெகுகாலமாகிறது” அவனுடைய பதில் யாருக்கும் வேடிக்கையாகப்படவில்லை. குறிப்பாக இன்னமும் வேலை செய்துகொண்டிருந்த எலாவின் அப்பாவுக்கு.
கடைசியாக, ஜுர்கன் போய்விட்டான். டசல்டார்ஃபுக்கு* திரும்பிச்சென்று அங்கு இசையமைத்துக்கொண்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தான். அவளுடன் வாழ்ந்த நாட்டில், அவனால் பாடகன் ஆக முடியவில்லை. ஏனென்றால், தன்னுடைய உச்சரிப்பை அவர்கள் தனக்கெதிராக முன்வைத்ததாகவும், அங்குள்ளவர்கள் பாரபட்சமானவர்கள் என்றும், அவர்களுக்கு ஜெர்மனியர்களைப் பிடிப்பதில்லை என்றும் அவன் சொன்னான்.
ஜெர்மனியிலும் அவனுடைய விந்தையான சங்கீதமும் ரசனைகேடுள்ள வரிகளும் அவனை அவர்களிடமிருந்து விலக்கி வைத்துவிடும் என்றே எலா நினைத்தாள். எலாவை குறித்துக் கூட அவன் ஒரு பாட்டு எழுதியிருந்தான். ‘பெண் தெய்வம்’ என்பது அதன் தலைப்பு.
பாடல் முழுக்கவே புணர்ச்சி குறித்தும், அலைதடுப்புகளின் மீது எப்படிப் புணரலாம் என்பது குறித்தும் இருந்தது. உனக்கு வந்தபோது, அது ‘ஒரு பாறையின் மீது அலை மோதி உடைவது போன்றது’.இது அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த ஒரு வாசகம்.
ஜுர்கன் பிரிந்து சென்ற ஆறு மாதத்திற்குப்பிறகு, குப்பைப் பைகளைத் தேடினாள். சீகியைக்கண்டுபிடித்தாள். அந்த ஜிப்பை திறந்தது தவறாகக்கூட இருக்கலாம் என்று அவள் நினைத்துக்கொண்டாள். இருக்கலாம்தான். அப்போதிருந்த சூழ்நிலையில் அவளால் அதை அவ்வளவு உறுதியாகச் சொல்லிவிட முடியவில்லை.
அன்றைப் போலிருந்த மாலையில், அவள் பல் துலக்கிக்கொண்டிருக்கும்போது, ஏதோவொன்று குத்தியதால் ஏற்பட்ட வலியில், அந்த முத்தத்தை நினைத்துப் பார்த்தாள்.
நிறைய நீர் கொண்டு வாயைக் கொப்பளித்துவிட்டு, கண்ணாடியைப் பார்த்தாள். அந்த வடு இன்னமும் இருந்தது. நெருங்கிப் போய் நுணுக்கமாக நோக்கினாள்.
அவளது நாக்கின் கீழும் சிறு ஜிப் ஒன்று இருப்பதைப் பார்த்தாள். தயக்கத்துடன் விரல்களால் நோண்டிப் பார்த்தாள். தான் உள்ளுக்குள் என்னவாக இருப்பேன் என கற்பனைக் செய்தாள்.
அது அவளுக்குப் பெரிய நம்பிக்கையைக்கொடுத்தது. நடுவில் கொஞ்சம் கவலையையும் ஏற்படுத்தியது - முக்கியமாக, தோலில் இலேசான தவிட்டு நிறமுள்ள புள்ளிகளைக்கொண்ட கைகளைக் குறித்தும், வறண்ட மேனியைக் குறித்தும்.
எலா நினைத்துக்கொண்டாள், அவள் ரோஜா ஒன்றைப் பச்சை குத்தியிருக்கக்கூடும் என்று. அப்படியொன்று வேண்டும் என்கிற ஆவல் எலாவிடம் எப்போதும் இருந்தது. செய்து கொள்ளத்தான் தைரியமில்லை. அது மிகுந்த வலியைக் கொடுக்கும் என்று நினைத்துக்கொண்டாள்.
* டசல்டார்ஃ - ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் கலைத்துறை சார்ந்த பிரசித்திபெற்ற நகரம்.
உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்படும் போது,உங்களால் சுவாசிக்க முடியாது. உங்களால் மூச்சு விட முடியாதென்றால், நீங்கள் பேசுவதும் கஷ்டம். ஒரு சொற்றொடரை உருவாக்க நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்கள் நுரையீரல்களுக்குக் காற்றைக்கொண்டு வருவதுதான். அதுவொன்றும் பெரிதல்ல. மூன்றிலிருந்து ஆறு சொற்கள் / வார்த்தைகள்,
அவ்வளவுதான். நீங்கள் சொற்களின் மதிப்பை/ முக்கியத்துவத்தை அறிந்துகொள்வீர்கள். உங்கள் மண்டையில் உள்ள குவியலின் ஊடே களைத்துத்தேடுவீர்கள். மிக முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக்க
வேண்டும் - உங்களைப் பாதிப்பவைகளாகவும்.ஆரோக்யசாலிகள் மனசில் தோன்றுவனவற்றையெல்லாம் தூக்கிவீசட்டும், குப்பைகளை நீங்கள்
வெளியே வீசும் விதமாக. ஒரு ஆஸ்த்துமாக்காரன் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வதற்கும் மற்றும் ஒரு ஆஸ்த்துமாக்காரன் ‘ஐ லவ் யூ மேட்லி’ என்று
சொல்வதற்கும், ஒரு வித்தியாசமுண்டு. ஒரு சொல்லின் வித்தியாசம். ஒரு சொல்லென்பது நிறைய. அது நிறுத்து என்பதாக இருக்கலாம், அல்லது இன்ஹேலர் என்பதாகவும் இருக்கலாம். அது ஆம்புலன்ஸ் என்பதாகக்கூட இருக்கலாம்.
அவன் அவளிடம் கூறினான், தனக்கு முன்பொருமுறை தனிமையிலேயிருப்பதை விரும்பிய காதலி இருந்ததாக. அது மிகவும் சோகமானது, ஏனென்றால், அவர்கள் ஒரு தம்பதியினர், மேலும் தம்பதியினருக்கான வரையரைவில், ‘இணைந்திருப்பவர்கள்’ என்பது
பொருள். ஆனால், பெரும்பாலும் அவள் தனிமையில் இருப்பதையே விரும்புவாள். ஆகையால் ஒருமுறை அவன் அவளைக் கேட்டுவிட்டான், “ஏன்? என்னால்தானா இப்படி ?
”அதற்கு அவள் கூறினாள், “இல்லை, உனக்கும்
அதற்கும் சம்பந்தமில்லை, அது என்னால்தான், அது எனது பால்யகாலம் தொடர்பானது.”
அவனுக்கு உண்மையில் எதுவும் விளங்கவில்லை,அந்தப் பால்யகால விஷயம், அதனால் அவனது சொந்த பால்யத்திலும் இணையாக எதாவது கிடைக்குமா என்று முயற்சித்தான், ஆனால் வெறுமையாக வந்தான். இதைப்பற்றி அவன் அதிகமாக யோசிக்க யோசிக்க, அவனது பால்யம் யாரோ ஒருவரின் பற்களில் உள்ள சொத்தையைப்போன்று தோற்றமளித்தது - ஆரோக்கியமற்றது, ஆனால், பல் சொத்தைகள் பெரிய விஷயமில்லை - குறைந்தபட்சம் அவனுக்கு.
மேலும் அந்தப் பெண், தனிமையில் இருக்க விரும்புபவள், இவனிடமிருந்து ஒளிந்தபடியே இருந்தாள், எல்லாம் அவளது பால்யகாலத்தால்தான்.
அது அவனுக்கு எரிச்சலூட்டியது.
கடைசியில், அவளிடமே சொன்னான், “ஒன்று அது என்னவென்று என்னிடம் விளக்கு, இல்லையேல் நாம் தம்பதிகளாக இருப்பதை நிறுத்திக் கொள்வோம்”. அவளும் சரியென்றாள், பின்பு அந்தத் தம்பதியினர் பிரிந்துவிட்டனர்.
“அது ஒரு பெருஞ்சோகம்”, ஓகெட் சொன்னாள் சோகமானது அதே நேரத்தில் மனதைத் தொடுவதாகவும் உள்ளது”
“நன்றி”, நேஹும் கூறிவிட்டு பின்பு அவனது பழச்சாறை கொஞ்சம் பருகினான்.
ஓகெட் அவன் கண்களில், கண்ணீர் துளிகள் இருப்பதைக் கண்டாள். மேலும் அவனை வருத்தமடைய வைக்க அவள் விரும்பவில்லை, ஆயினும் இறுதியில் அவளால் பொறுத்திருக்க இயலவில்லை.
“ஆக இந்த நாள் வரை, உன்னை அவள் பிரிந்து செல்லக் காரணமான அவளது பால்யகாலத்தில் அப்படியென்ன இருந்தது என உனக்குத் தெரியாதில்லையா?” என்று கேட்டுவிட்டாள்.
“அவள் என்னைவிட்டுச் செல்லவில்லை”. “நேஹும் அவளைத் திருத்தினான். நாங்களே பிரிந்துவிட்டோம்”.
“பிரிந்துவிட்டீர்களோ? என்னமோ?” என்று ஓகெட் கூறினாள்.
“அது ‘என்னமோ’ ஒன்றும் கிடையாது”, நேஹும் அழுத்திச்சொன்னான்,” அது என் வாழ்க்கை. குறைந்தபட்சம் எனக்கு, அவையிரண்டும் கணிசமான வேறுபாடுகளாகத் தெரிகின்றன”.
“ஆக இதுநாள் வரையில் இவையெல்லாம் தொடங்குவதற்குக் காரணமான பால்யகாலத்தின் சம்பவம் குறித்து, உனக்குத் தெரியாதில்லையா?“.
ஓகெட் தொடர்ந்தாள்.
“அது எந்தவொரு சம்பவமும் இல்லை“ நேஹும்
அவளை மீண்டும் திருத்தினான். “யாரும் எதையும் தொடங்கவில்லை - யாருமில்லை இப்போது இங்கிருக்கும் உன்னைத்தவிர” .
பின்பு சிறு மௌனத்திற்குப் பிறகு, அவன் கூறினான், “ஆம், ஃப்ரிட்ஜிற்கு ஏதோவொரு வகையில் அதனோடு தொடர்புண்டு.”
நேஹுமின் காதலி சிறுமியாயிருந்தபோது, அவளின் பெற்றோர்கள் கொஞ்சம் கூட பொறுமை அற்றவர்களாக இருந்தனர். ஏனென்றால், அவள் குட்டியூண்டாகத் துறுதுறுவென்றிருந்தாள், மேலும் அவர்கள் ஏற்கனவே
வயதாகித் தளர்ந்திருந்தனர். நேஹுமின் காதலி, அவர்களுடன் விளையாடவோ, பேசவோ முயல அது அவர்களை மேலும் எரிச்சல் படுத்தியது. அவர்களிடம் உடல் வலுவுமில்லை. அவளை வாயை
மூட சொல்லுமளவுக்குக் கூட போதிய வலு அவர்களிடமில்லை. அதனால் அதற்குப் பதிலாக, வேலைக்குச் செல்லும் போதெல்லாம் அவளைத்தூக்கி
ஃப்ரிட்ஜின்மீது உட்கார வைத்துவிட்டுச் சென்றுவிடுவர். அல்லது வேறு எங்குச் சென்றாலுங்கூட. அந்த ஃப்ரிட்ஜ், மிகவும் உயரமாயிருந்தது. நேஹுமின் காதலியால் கீழிறங்கவும் முடியவில்லை. ஆதலால், நேஹுமின்
காதலி, அவளது பால்யத்தின் பெரும்பகுதியை ஃப்ரிட்ஜின் மேலேயே கழிக்கும் விதமாக அமைந்தது. ஆனாலும், அது மிகவும் ஆனந்தமான பால்யமாகும். மற்ற பிள்ளைகள் அவர்களது அண்ணன்மார்களிடம்
அடிஉதை பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில், நேஹுமின் காதலியோ, ஃப்ரிட்ஜின் மேல் விளிம்பில் அமர்ந்தபடி, அவளுக்குள் பாடிக்கொண்டாள்,
அவளைச் சுற்றிப் படர்ந்திருந்த தூசியின் மீது சிறு சிறு ஓவியங்களை வரைந்துகொண்டாள். மேலே அங்கிருந்தபடி பார்க்க, காட்சிகள் மிகவும்
அழகாயிருந்தன, மேலும் அவளது அடிப்பகுதி இதமாகவும் இளஞ்சூடாகவும், இருந்தது. இப்போது பெரியவளானதால், அந்தக் காலத்தை, தனித்திருந்த
அந்தக் காலத்தை, மிகவும் நாடினாள், நேஹும் அது அவளை எவ்வளவு வருத்தத்திற்குள்ளாக்கியது எனப்புரிந்துகொண்டான், மேலும் ஒருமுறை ஃப்ரிட்ஜின் மேலே வைத்து அவளைப் புணர முயற்சித்தான், ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை.
“இது ஒரு பயங்கரமான அழகானக் கதை”, என்று ஓகெட் கிசுகிசுத்தாள்... நேஹுமின் கைகளை அவளது கைகளால் உரசியபடி.
“ஆம்,” நேஹும் முணுமுணுத்தான், அவனது கையை எடுத்துக்கொண்டு. “ஒரு பயங்கரமான அழகானக் கதைதான், ஆனால் அது என்னுடைய கதையல்ல”.
வாழ்வெனும் இந்தப் பெருவெளியில் நமக்கு வந்து வாய்த்த ஐந்து புலன்களுமே, பாரதியார் வார்த்தைகளை வாங்கிச் சொல்வதென்றால், “விண்டுரைக்க முடியாத விந்தைகள்”தான். கூடவே புலன்களின் இயங்கு தளமாக அமையும் உடம்பு, விந்தையிலும் விந்தை என்றும் சொல்ல வேண்டும்; இவற்றிற்கெல்லாம் இன்னும் மேலாக, இந்த ரூப உடம்பின், இயங்கியலில் உற்பத்தியாகும் அரூபமான மனமெனும் ஒன்றும் (அது ஒன்றா?) பேராச்சரியம்; பெரு வியப்பு. அதனாலேயே இதை நவீன ஆய்விற்கு உட்படுத்திய நரம்பியல் மருத்துவர் சிக்மண்ட் பிராய்டு, கப்பலையே கவிழ்த்துவிடக்கூடிய, கடலுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் பனிமலை என இதை உருவகப்படுத்தினார்.
இவ்வாறு அதிசயத்தக்க இந்த மனம்தான் மானிடர்க்கு மாபெரும் தீர்க்க இயலாத பிரச்சினையாக முன் நிற்கிறது. மானுட சமூகமென்ற இரண்டாவது இயற்கையில் வந்தமைந்த குடும்பம், மதம், கல்வி, அரசு, நீதி, கலை இலக்கியம், சடங்கு, திருவிழா முதலிய அனைத்துமே மனமெனும் அடங்காப் பிடாரியை ஒழுங்குபடுத்த முயலுகிற மனித தந்திரங்களின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன. மனம் அப்படி என்னதான் செய்கிறது?
பாரதி சொல்லுகிறார்
மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்
என்று உறுதிமொழி கொடுக்கிறவர், தொடர்ந்து மனத்தோடு உரையாடுகிறார்; நெஞ்சே! உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிலை நிறுத்திடத் தீயிடைக் குதிப்பேன்; கடலுள் வீழ்வேன்; வெவ்விடம் உண்பேன்; மேதினி அழிப்பேன்; ஏதுஞ் செய்து உனையிடரின்றிக் காப்பேன்; மூடநெஞ்சே,முப்பது கோடி மு றையுனக்கு உரைத்தேன்; இன்னும் மொழிவேன்;வலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் ‘நமக்கேன்’ என்றிரு; பராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்; நமக்கேன் பொறுப்பு? “நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நான் எனும் எண்ணமே வெறும் பொய்” என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன் பதம். இனி எப்பொழுதும் உரைத்திடேன்; இதை நீ மறவாது இருப்பாய், மடமை நெஞ்சே! கவலைப்படுதலே கடுநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி; சிவனொரு மகன் இதை (இந்தப் புத்தியை) நினக்கு அருள் செய்கவே!” என்று விநாயகரை வேண்டுவது போன்ற ஒரு பாவனையில் தன் சொல் பேச்சுக் கேட்கா மனத்தோடு மன்றாடுகிறார் பாரதியார்.
இப்படித்தான் இங்கே தன் மனத்தோடு மன்றாடிய அனைத்தையும் ஒன்றுவிடாமல், தனக்கேயுரிய தனித்துவமான மொழியினால், படபடத்துக் கூக்குரலிட்டு ஓடும் முட்டைக்கோழியின் பின்னாலேயே ஓடிப்பிடிப்பது போலப் பிடித்து நமது வாசிப்பிற்குத் தந்திருக்கிறார். ரா.செயராமன். ஒரு தொகுப்பு அல்ல; மூன்று தொகுப்பு. மொத்தம் 397 தலைப்பில் கவிதைகள். ‘இருளின் குரல்’, ‘எனது உடலும் நான்களும்’, ‘வெற்றுக்கருவறையும் நிறைந்த சந்நிதியும்’ - ஆகிய மூன்று தொகுப்பும் ‘சிற்றேடு’ இதழ் வழியாக வந்துள்ளன. முறையான தமிழ்க் கல்வி கற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்; இலக்கணப் புலமை செறிந்தவர். மாணவராக ஆய்வு செய்துகொண்டிருக்கும்போதே பிரமிள், ரமேஷ் - பிரேம் ஆகியோர் பாணியில் கவிதை மோகம் கொண்டு தொகுப்பு கொண்டுவந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, கவிதை சமைப்பதற்குத் தேவைப்படும் நூறு விழுக்காட்டுத் தனிமையில் தன்னை தள்ளிக்கொண்டவர்; துண்டு துண்டாக நறுக்கிக் கொன்றுபோடும் தனிமை, வெறுமை, ஐயம், அச்சம், நம்பிக்கையின்மை, சுயவெறுப்பு, தாழ்வுணர்ச்சி, நிறைவின்மை, நிராகரிப்பு, காம வேட்கை, விடை அற்ற வினா, குறியில்லாத் தேடல், ஆற்றாமை, அமைதியின்மை, தேவையின்மை, போதாமை, தன்னைத் தனிவகையான உயிரியாக உணர்தல், பிளவுண்டு சிதறுதல், பேரழுத்தம், தன் இருப்பைப் பருஞ்சுமையாய் உணர்தல், இறப்பை நேசித்தல், கருத்துகளின் கொடூரம், பாதுகாப்பற்ற நிலை,சும்மா இருக்க இயலாமை, ‘நான்’ நடத்தும் லீலை, சலிப்பு, அன்பெனும் தந்திரம், நிச்சயமற்ற தன்மை, அறிதல் தரும் வலி, எண்ணங்களின் ஆக்கரமிப்பு, அனாதை நிலை, நன்மை x தீமை; ஒளி x இருள்; மையம் x விளிம்பு - முதலிய முரண்களுக்கு வெளியே தாவும் பேராசை முதலிய உணர்ச்சிகள் தன் மனமெனும் நாடக அரங்கில் நிகழ்த்தும் கூத்துகளை எல்லாம் தனக்கென்று எந்தப் பார்வையும் இல்லாத ஒரு பார்வையாளர்போல நுட்பமாகப் பார்த்து தன்மொழிக்குள் இடப்பெயர்ச்சி செய்துள்ள திறம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மொழிதான் அவரை எழுதுகிறது எனப்பட்டது.
சென்னையில் 2017 - ஜனவரி - ஒன்றாம் தேதி, ஒரு தனி அறையில் இருந்து வாசிக்கத் தொடங்கியவன் ஒரு வாரமாக அந்த வாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன். “நான் பிறந்த நாளும், ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்று என்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக’’ என்றொரு வசனம் பைபிளில் வரும். இப்படித்தான் துடிக்கிறார் செயராமன். நினைத்த நேரமெல்லாம் நம்முடைய காமத்தை தீர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக, இன்னொரு உடம்பை குடும்பம் என்ற பேரில் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தச் சமூக அமைப்பிற்கு வெளியே, தனியாய், தனித்தனியாய், தன்னந்தனியாய் வாழ்ந்து, தன் ஒரு உடம்பால் மட்டுமே வாழ்வில் நேரும் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்து தீர்க்குமாறு வந்து அமைந்த ஒரு வாழ்வு தரும் வலியையும், வதையையும் இந்த அளவிற்கு தமிழில் மொழிப்படுத்தியவர்கள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. தன் தனிமையை, இப்படியான ஒரு மொழியில் உரையாடுகிறார்
ஒரு சிறு சுடரை ஏற்றிப் பணிந்து தொழுது வணங்கத் தொடங்குகிறேன் திரியைச் சற்று உயர்த்தி சுடரையும் சற்றுப் பெரிதாக்கித் தொழுகிறேன் நெய்யைக் கொஞ்சம் ஊற்றிச் சுடரை வலுவாக்கிச் செழிப்பூட்டுகிறேன். ஒரு நீண்ட செந்நாக்குப்போல சுடர் துலாவித் துலாவி எரிந்துகொண்டிருக்கிறது ஒரு அகலை வாங்கி வந்து பெருஞ்சுடரை ஏற்றித் தொழுகிறேன். நான் எரிந்துகொண்டிருப்பது எனக்குப் போதாமல் இருக்கிறது இப்படிப் போகும் கவிதை இவ்வாறு முடிகிறது எரிவதற்கு முன்பாகவே எரிந்த பின்பு மிஞ்சும் கரிக்கட்டையைப்போல உணர்கிறேன். (ப. 18)
தனிமைக் கொடூரம் இப்படியொரு கவிதையைத் தருமானால், அந்தக் கொடுமையும் விரும்பத்தக்கதே என்றுபட்டது இதை வாசிக்கும்போது. (இரசிகமணி டி.கே.சி - யின் மகன் இறந்து, துக்கத்தில் இருக்கும்போது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ‘இரங்கற் கவிதை’ எழுதி டி.கே.சி-க்கு அனுப்பினாராம். அதைப் படித்து அந்தக் கவிதைச் சுவையில் மூழ்கிய டி.கே.சி ‘என் மகன் இறக்காவிட்டால்’ இப்படியொரு நல்ல கவிதை எனக்கு வாசிக்கக் கிடைத்திருக்காதே’ என்று மகிழ்ந்தாராம். என்னவொரு குரூரமான இரசனை வெறி!)
தனிமையில் எரியும் இந்த உணர்வுநிலையை, எரிந்து ஆவியாகும் தன்மையோடும் இணைகிறார்; ஆவியாகி, காற்றில் கலந்திருக்கும் ஒலியாகிவிடுகிறது உடல் அந்நிலையில் “மெல்ல எழுந்து சுழன்று நெளி யும், ஒரு நடன அசைவுபோல மென்மையான” கணத்தில் ‘ஒவ்வொரு உறுப்பின் வழியும் கிளர்ந்து எழும் அதீத இன்பத்தை’ அனுபவித்தாலும், அந்த “பேரின்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பலவீனனாக இருந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார். இந்த பலவீனம் மீண்டும் உடலை திருப்பிக்கொண்டு வருகிறது. ஆனால்,
“எரியும் தீயிலிருந்து விலகிவிடாதபடி ஒரு விறகை தள்ளிச் சேர்ப்பது போல என் உடலை நான் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறேன்’’ (ப - 38)
என்கிறார். இவ்வாறு தனிமையில் எரியும் இந்த மனநிலை, சுற்றியிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை அந்நியமாக்கிக்கொண்டு அநியாயத்திற்கு அவலங்களில் கிடந்து வறுபடுகிறது. நிலவு, காற்று, சூரியன் கூட அந்நியமாகிவிட்ட நிலையை இப்படி எழுதுகிறார்.
போதும் என்று இருக்கிறது நேற்றுப் பார்த்த அதே நிலவு இன்று பார்க்கிற அதே சூரியன் நாளைக்கும் அதுவேதான் வரப்போகிறது சுவாசித்த காற்றுதான் அதை மீண்டும் சுவாசிப்பது. எல்லோருடைய எச்சிலையும் தின்பதுபோன்றிருக்கிறது. (ப - 6)
இவ்வாறு எழுதிவிட்டு, “இல்லாதபோது தேடும் அக்கறையுள்ளவர் என ஒருவரைக்கூட மனதால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை” என்கிறார்; “யாருக்கும் பயனில்லாது போயிருக்கிற என்னை, எதைச் செய்து மதிப்புக்குரியதாக்குவது” என்று கேட்டுக்கொண்டு, “பேரிடியைப்போலக் கிளர்ந்து, உள்ளிருந்து புறம் எழும் இறப்புக்காகக் காத்திருக்கிறேன். மரண தண்டனைக் கைதியைப்போல எப்போது தூக்கிலிடப்படுவேன் எனத் தெரியாதிருக்கிறது” என முடிக்கிறார்; மற்றோர் இடத்தில்,
என்னைக் காயப்படுத்தி ஒரு துளிக் குருதியை எடுத்துச் சுவைக்காமல் என்னை விட்டுவிடமாட்டேன் போலிருக்கிறது. (ப - 39)
என்பவர்,
எங்கெங்கேயோ செல்லக் கருதிவிட்டு
எனக்குள்ளேயே சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறேன்.
என்னை உணர உள்ள
மேலும் ஒரு நிமிடத்தை வெறியோடு விரும்புகிறேன்.
எதுவுமாக இல்லாதிருந்துகொண்டு
எதாவது அறிவதும்
எதாவதாக இருந்துகொண்டு
எதுவுமாக இல்லாததை அறிவதும் என
நான் சிதைவும் பிளவும் பட்டிருக்கிறேன். (ப - 39)
என்று முடிக்கிறார். படைப்பாளி, இப்படிப் பிளவு படுதல் குறித்து, நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக் கூறியது நினைவுக்கு வருகிறது
“ஆளுமைப் பிளவு உங்களை அறிவுக்கூர்மையுடையவராக்குகிறது… ஆளுமைப் பிளவிற்காக கவலைப்படக்கூடாது. உங்களில் ஒரு பாதி, மற்றொரு பாதியை கொலை செய்வதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டால் உங்களிடம் ஒரேயொரு ஆன்மா மட்டுமே மிச்சமிருக்கும்; இது வியாதி வந்திருப்பதைவிட மோசமானது” (தீராநதி, சூன்,2008, ப - 47)
இப்படிப் பிளவுண்ட மனத்திற்குள்ளிருந்து உயிர் சுமக்கும் உன்னதங்களை எடுத்துத் தருகிறார் கவிஞர்.
இதற்கு மேலும் ஒரு இழிவு இருக்கிறது என நினைக்க முடியாதபோதும் அந்த இழிவை நாடுகிறேன் எது அழிக்கிறது எனக் கருதுகிறேனோ அதனிடம் என்னை காத்துக்கொள்வதற்காக வீழ்கிறேன் எனது ஆக்கங்களை எனக்கு நேரும் சிறு சிறு அழிவுகளிலிருந்து உருவாக்குகிறேன் துன்புறுத்தலையும் வலியையும் தவிர வேறு ஒன்றை என்னால் தேடிப்போக முடியாது. ஒவ்வொரு அங்கமாக நீ பிய்த்து உண்ணும்போது அடைத்துக்கொண்ட மலம் வெளியேறும் நிம்மதி கிடைக்கிறது.(ப - 83)
இவ்வாறு அழிவுகளிலிருந்து உயிர்ப்படையும் கவிஞர், மற்றொரு இடத்தில்,
‘உயிரோடு இருப்பது எதற்கோ செய்யும்
ஒரு பெரும் அநியாயம் என உறுத்துகிறது’ (ப - 75)
என்கிறார். தனிமையின் உக்கிரத்திற்குள் சிக்கிக்கொண்ட ஓர் உயிரின் அத்தனை வலிகளையும் வாதைகளையும்
வார்த்தையாக்கியுள்ளார். இவ்வாறு தன்னை வாட்டுவதைக் காட்சியாக்கும் கவிஞர், வெளியே புற உறவுகளோடான உறவையும் எப்படி சிதைத்து விளையாடுகிறது தனிமை என்பதையும் அவதானித்துப் பதிவுசெய்கிறார்.
தன் மேலான வெறுப்பின் உச்சத்தில் “எந்தச் சூழலிலும் ஒதுக்கிவிடாத, நூறு சதவீதம் தன்னைத் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்கிற, தன்னை எப்போதும் வெறுத்துவிடாத, தன் அழகற்ற வடிவத்தைக் கணக்கில் கொள்ளாமல் கொள்ளை ஆசை கொள்ளும் ஒருத்தர் கனவிலாவது கிடைக்கமாட்டாரா” என ஏங்குகிறார். இப்படி ஏங்குவது தனிமையின் ஒரு குணம், அதே நேரத்தில் நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்கும் தீவிர மனநிலையில், உறவு என்ற பேரில் ஓரிடத்தில் எப்படி நிலைபெற முடியும்? எனவும் கேட்கிறார்.
கூடவே, தன்னோடு உறவாடும் ஒருத்தர், நாலு பேருக்கும் நல்லவராக உறவாடுவதை தாங்கிக்கொள்ள முடியாத மனத்தின் கூறையும் அடையாளம் காணுகிறார்.
பலரையும் கட்டுவதற்கான தகுதிகளை
நீ நிறைய கொண்டிருப்பது
நமக்கு இடையில்
எந்த அழுத்தமான உறவும் இல்லாமலிருக்கக் காரணமாகிறது. (ப - 63)
என்கிறார். தொடர்ந்து தனக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கும் உறவுமுறைகளின் விசித்திரங்களையெல்லாம் நுட்பமாக அவதானித்து மொழிக்குள் கொண்டுவருகிறார் :
‘என் உடலின் நெருக்கத்தை
யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள்’
அந்த நெருக்கம் நிகழ்ந்தபோதெல்லாம் என்னை
வேறு எதுக்காகவோ சகித்துக்கொண்டவர்களாக இருந்தால்
என்னை ஏற்றுக்கொள்ளச் செய்கிற நெருக்கடியை
யாருக்கும் உருவாக்குவது எனக்கே வலிதருகிறது. (ப - 3)
என்று எழுதும்போது,
நூறு விழுக்காடு தனிமனித வாழ்வு
வாழ்வதற்கான ஒரு சமூகம் எங்கே இருக்கிறது (ப -52)
என்ற அவர் கேள்விக்கு, அவரே பதிலாக நூறு விழுக்காடு தனிமனித வாழ்வைப் பெற்றுவிட்டாரோ என்று கருதத்தோன்றுகிறது. இதை எப்படிச் சாதித்தார்? அவரே சொல்லுகிறார்
உறவுகளுக்கான தேவையற்று இருக்க
எனக்கான வழிகளை உருவாக்கி வந்திருக்கிறேன்.
என்னுடன் பிறந்த பசுந் தாவரங்களையும்
என்னுடன் பிறந்த நான்கு கால் விலங்குகளையும்
என்னைவிட மேன்மையடைந்த பறவைகளையும்
எனக்கான உறவுகளாக்கத் தவித்துக்கொண்டிருக்கவில்லை.
என்கிறார்; மேலும்,
எதனுடனான நெருங்குதலும்
என்னைப் பகிர்ந்து எடுத்துக்கொண்டுவிடக்கூடும். (ப - 20)
என்று யார்முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிக்கிறார்.
உனக்கு நானும் எனக்கு நீயும்
பயன்படப் போகும் முறையில் நம் உறவு இருக்கப்போகிறது
நட்பும் அறிதலும்
ஒரு பாசாங்கு போலத்தான் இளிக்கத் தொடங்குகின்றன. (ப - 21)
என்றுதான் அவரால் இந்த உறவுமுறைகளை புரிந்துகொள்ள முடிகிறது. “வல்லுறவு தன்னியல்பாகவும், அன்புறவு திட்டமிடப்பட்ட வன்முறையாகவும்” மாறிவிட்ட சூழலில், ‘தீமையும்’ தேவைதான் போலும் எனக் கருதுகிறார் :
கயமைகளை எதிர்கொள்வதற்கு
கொஞ்சம் நஞ்சும் வன்மமும் தேவை
சுற்றிலும் நிறைந்திருக்கிற கேடுகளால்
கருகி உதிர்ந்துவிடாமல் இருப்பதற்கு
துளி நஞ்சாகவாவது
இருந்துகொண்டுதான் இருக்கவேண்டியிருக்கிறது. (ப -61)
இவ்வாறு மனித உறவுகளின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் தன் தனிமை விசாரணை என்ற நோக்கில் நின்று மொழியாக்கிவிடுகிறார். தன்னையே தொல்லையாகக் கருதும் ஒரு மனத்திற்குச் சுற்றியுள்ள உறவுகளும்
‘பிச்சிப் புடுங்கலாகத்’ தெரிவதில் ஆச்சரியமில்லைதான். எனவே,
என்னைக் கைவிட்டுவிடுவதன் மூலமே
என்னுடையவைகளின் பிடுங்கல்களிலிருந்தும்
தொல்லைகளிலிருந்தும்
நான் விடுபட முடியும் எனத் தீர்மானிக்கிறேன்
ஒரு அனாதைக் குழந்தையைப்போல
என்னை யாருக்கும் எட்டாத ஒரு இடத்தில்
தூக்கி எறிந்துவிடுவது நிம்மதி தருவதாக இருக்கலாம். (ப - 120)
இவ்வாறு பிரதி முழுவதும், ஓர் அரண்மனைவாசி தனக்குள்ளே உரையாடி உரையாடி அரண்மனைக்கு வெளியே மாணிக்கவாசகராக மாறியது போல, இங்கே ஒரு பல்கலைக்கழகவாசியான செயராமனும், “வலிப்பு நோயால்
கடிக்கப்பட்ட பல்போல்”, ஒரு துளியையும் உள்ளே நுழைத்துவிடாமல் கண்காணித்துக்கொள்ளும் தனிமைக்குள் தன்னை தள்ளிக்கொண்டு மாணிக்க வரிகளை வானவெளியில் பறக்கவிடுகிறார்.
தனிமைக்குள் தணியாத சோகம் எங்கிருந்து ஊற்று எடுக்கிறது என்று பார்த்தால் நேற்று, இன்று, நாளை என்ற முக்காலத்தையும் இணைத்துக்கொண்டு மூர்க்கத்தோடு ஒரு சிறிதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேரிரைச்சலோடு அலை அலையாய் வந்த வண்ணம் இருக்கும் எண்ண ஓட்டங்களே ஆகும்.
எனவேதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவவாதிகள் எண்ணங்களிலிருந்து விடுதலை; அறிந்ததிலிருந்து விடுதலை; நினைவுகளிலிருந்து விடுதலை; கணங்களில் வாழ்தலென உரையாடுகின்றனர்.
தன்னையே அருவருப்பாகப் பாவித்து வெறுமை நெருப்பில் வறுபடும் இந்தக் கவிஞரும், எண்ணங்களில் இருந்து விடுபடலுக்கான எத்தனிப்பில் படாத பாடுபடுகிறார்.
தன்னைத் தானே துன்புறுத்தியும் தன்னைத் தானே நிராகரித்தும்
எதிலும் மன அமைதி இல்லாமல் இருக்கிறது.
…. …. …. ….
ஓட்டம் எடுப்பதா, நிற்பதா
புதைந்து போவதா, சிதைந்து போவதா
ஒன்றும் செய்யமுடியாது மயங்கி விழுகிறேன்
ஒரு விலங்காக உருமாறி
காட்டுக்குள் ஓடி எண்ணங்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறேன். (ப - 113)
என்றெழுதுகிறார்;
எண்ணங்களே இல்லாமல் மன நோயாளியாய் மாற விரும்புகிறார்; ‘என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்யத் தெரிந்த ஒரு கருவியாகிவிடத்தான் விரும்புகிறேன்’ (ப - 41) என்கிறார்.
மேலும்,
நட்டுவைத்த ஒரு கல்லைப்போல
இயல்பாய் இருந்துகொண்டிருக்கிற ஒரு பாறை போல
அப்படிக் கிடந்துகொண்டிருக்கலாம் போலிருக்கிறது
எங்கேயும் போகவேண்டாம் என்றும்
யாரையும் போய் பார்க்கவேண்டாம் என்றும் இருக்கிறது
இருந்துகொண்டிருக்கவேண்டுமா என்ற கேள்வி
எண்ணங்கள் இல்லாமல் போய்விடட்டும் என்ற ஒரு கருத்து
தன்னியல்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. (ப - 40)
என்கிறார்;
‘கடந்த கால உழைப்பு, சேமிப்பு, உறவு, உடைமை, நினைவு என எல்லாவற்றையும் இழக்க விரும்புகிறேன்’ (ப - 98) என்கிறார். ‘சும்மா இருக்கும் மனம், சாத்தானின் விளையாட்டு மைதானம்’ என்று பைபிளில் வரும்; அந்தச் சாத்தான் வேறு யாருமல்ல; இந்த எண்ணம்தான்; இது தனிமையில் மாட்டிக்கொண்ட யாரையும் என்ன செய்யும், ஏது செய்யுமென்று யார்தான் கணித்துவிட முடியும்? சாத்தான்களின் கைதான் எப்பொழுதும் ஓங்கியபடி நிற்கிறது; பாவம், இந்த மனிதஜீவிகள்.
‘இருளின் குரல்’ என்ற இந்த கவிதைத் தொகுப்பிற்கு, “புறவுரை” என்று இரண்டு பக்கம் தொடக்கத்தில் எழுதியுள்ளார். அதில் எழுதுகிறார்
“உடலின் மைய உணர்வு அதிகாரமா, காமமா என்பது கேள்வி.. காமம் தன்னை ஒத்த உடல்களை உருவாக்குகிறது. அதிகாரம் தன்னை ஒத்த உடல்களை தனது எல்லைக்குள் கொண்டுவருகிறது. இரண்டும் அதிகாரமாக இருக்கின்றன… இரண்டுக்கும் உடல்கள் தேவை… இறையருள் ஒரு புணர்ச்சியாக உடலில் வழிந்தோட ஏங்குகிறது. மனிதச் சேர்க்கை சிற்றின்பமாகிவிடுகிறது. விந்து கழிவுப்பொருளாகிவிடுமா. அதுவே பேரருளின் ஐக்கியத்திற்கான பயணத்தில் ஊர்தியாக இருக்கிறது. ஆனால் கண் இமைகளில் தெரியும் அன்புக்கான ஏக்கத்துடன் திரிவது ஒரு அவலம்; தெருநாயைப்போலத் தன் இயல்பு இழந்து யார் பின்பும் போக அது காத்துக்கொண்டிருக்கிறது. திரிந்து கொண்டிருக்கிறது.”
கவிதைக்கு வெளியே வெளிப்படும் இந்த தற்கூற்றில் ஓஷோ போல காமத்தை இறையெனும் பேரின்ப அனுபவத்தோடு இணைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் உடலெனும் அற்புதத்திலிருந்து உற்பத்தியாகும் அதிகபட்ச சுவையான காமத்தை, மனித சமூகம் எதிர்கொள்ளும் முறைமை சொல்லும் தரத்தில் இல்லை என்கிறார். அதற்காகத் தனது ஒற்றை உடலை மட்டும் கொண்டு இந்தக் கடலைக் கடப்பது
என்பதும் அவ்வளவு எளிதாக இல்லை என்பதைதான் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பலவும் பலவாறு பேசுகின்றன எனத் தோன்றுகிறது.
தனிமையோடு இரவு நேரமும் சேர்ந்துகொண்டால் மனிதத் தன்னிலைகளைத் துவட்டி எடுக்கும் இந்தக் காமமெனும் அடங்காப் பேரிச்சை படுத்தும் பாட்டை, உலகக் கலை இலக்கியங்கள் பலவும் பதிவு செய்துகொண்டேதான் வருகின்றன; ‘நான் படும் இந்த காமநோயைப் பற்றிப் பொருட்படுத்தாமல் ஊர் தூங்கும் இந்த இரவில், முட்டுவென் கொல், தாக்குவென்கொல் ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!’ எனத் துடிக்கிறாள் சங்க இலக்கியப் பெண் ஒருத்தி (ஔவையார், குறுந். பா 28); இடைக்காலத்து ஆண்டாள் “கோவர்த்தனைக் கண்டக்கால், கொள்ளும் பயனொன்றில்லாக் கொங்கை தன்னைக் கிழங்கொடும் அள்ளிப்பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனோ” - என்கிறாள். டால்ஸ்டாயின் கதைமாந்தர் (துறவியின் மரணம்) ஒருவர், பெருக்கெடுத்துக் கண்ணை மறைக்க முயலும் காம உணர்வைத் திசை திருப்பிவிடும் பொருட்டு, விரலை வெட்டி இரத்தம் பீச்சிடச் செய்யும் காட்சியைப் பார்க்கிறோம், கத்தோலிக்கப் பாதிரியாகப் பயிற்சி எடுக்கச் சேர்ந்த வாலிப உள்ளங்கள் எண்ணத்தாலும் காமம் தொட்டுத் தன்னை கர்த்தரின் விசுவாசத்தில் இருந்து விலக்கிவிட எத்தனிக்கிறதே என்று, சாப்பிடப்பயன்படும் முள் கரண்டியால் தொடைகளில் குத்தி இரத்தம் பீச்சிடச் செய்வதன் மூலம் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் கதைகளையும் கேள்விப்படுகிறோம். இந்தக் கவிஞர், இந்தத் தொகுப்பு முழுக்க, தனி உடலாய் சிக்கிக்கொண்ட தன்னைப் பாடாய்ப்படுத்தும் காம உணர்வின் திருவிளையாடல்களைத்தான் கவிதையாக்கிப் பார்க்கிறார். அரிஸ்டாட்டில் கூறியது போல, இலக்கியம் இங்கே கலங்கும் மனத்தை தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. கவிதைப் படைப்பினால் உறுப்பை வெட்டித் தூர எறிவதில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்.
என் உடலும் நானும் தனித்திருக்கிற
இந்த அந்தகாரக் குகையில்
காமத்தை உண்டு காமத்தையே சுவாசித்து
காமத்தையே கண்டு காமத்தையே தொட்டு
வேறு எதுவும் தெரியாதிருக்கிறேன்
என்னை வேட்டையாட வெறியோடு அலையும்
அதன்முன் என்னைப் பலியிட்டு அமைதியடைகிறேன். (ப - 30)
என்கிறார்; ஆனால் அமைதி அடைய முடிந்ததா என்றால் இல்லை.
ஒரு புற்றுநோயைப்போலக்
காமம் என் உடல் எங்கும் பரவியிருக்கிறது
… … …
என்ன பேசினாலும் என்ன செய்தாலும்
வேறு எதிலும் ஈடுபட முடியாதபடி
என் உடல் காமத்தால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. (ப -16)
இப்படி வீழ்த்துகிற அதே காமம்தான் உயிர்ப்பு தருகிற ஒன்றாகவும் மாறுகிறது. எதையும் பார்க்க முடியாததும் தன்னை மறுதலிக்கிறதுமான ஒரு மனச்சோர்வு வரும்போது மூலாதார நெருப்பு என காமம்தான் கிளர்ந்தெழுகிறது.இறப்பு எனும் பெரும் சவக்குழிக்குள் விழுந்துகொண்டிருப்பதாக உணரும்போதும் நான் என் காமத்தால் ஏந்தி மேலே கொண்டுவரப்படுகிறேன்.(ப - 46)
என்று காமத்தைக் கரையேற்றும் பேரருளாகப் பார்க்கிறார்; மேலும் “காமம் அற்று இருப்பது பெரிய விடுதலை” என்றாலும், அற்று இருக்க இயலாதே! என்ன செய்வது? காமமே காமத்தை அகற்றும் வழி என உணர்ந்து சரணடைந்துவிடுவதே வழி என்கிறார். ஆனால் “சலனப்படுத்தும் காமத்தை, சமநிலைப்படுத்தும் ஒரு உணர்வு கண்டுபிடிக்கப்படவில்லை; முயன்று விரைந்து எழும்போதெல்லாம், அது என்னை பக்கவாட்டில் திருப்பிவிடுகிறது; அல்லது ஒரு புழுவைப்போலக்கிடத்திவிடுகிறது” (ப - 44) என்கிறார்; இது மட்டுமா?
நஞ்சு சுரக்கும்போதெல்லாம்
அதைக் கக்காமல்
படிப்படியாக விழுங்கி துவண்டுபோகிறேன்.
யாரையும் என் வெறிக்கு இரையாக்காமல்
அது தின்ன என்னையே காவு கொடுக்கிறேன். (ப -75)
என்கிறார்; நாற்பது விழுக்காட்டு மனிதர்கள் தனி உடம்பாகவே வாழ்ந்து தீர்க்கும் பணக்கார மேலை நாடுகளில், இந்த அளவிற்கு இந்தக் காமம் படுத்துமா என்பது தெரியவில்லை; இங்குள்ள பண்பாட்டுப் பின்புலம் ஈவு இரக்கமற்றது; இளகும் தன்மையை இழந்தது. எனவே இத்தகைய கவிதைகள்தான் காப்பாற்றக் கைகொடுக்கின்றன போலும்:
இவ்வாறு காமத்தை ஒடுக்குவது தன்னையே தின்னக் கொடுப்பது என்பதை உணர்ந்த நிலையில், காமத்தால் கண்டு அடையும் உடல் புணர்ச்சி என்பது ‘ஒரு தவம்’ என கண்டுகொள்கிறார்.
வேறு எதையும் விட விலை மிகுந்தது என்ற போதும்
உடல்கள் ஒரு மருந்தாகப் பொருந்துகின்றன
… … …
உடல் எங்கும் படர்ந்து கிடக்கையில்
நான் எனது எல்லாவிதமான
நடுக்கங்களிலிருந்தும் மீட்சிபெறுகிறேன்.
பிதற்றல்களில் எல்லாவிதமான
அழுத்தமும் நெருடலும் கரைந்துவிடுகின்றன
புணர்ச்சியே ஒரு தவமாக இருக்கிறது
தசைகளின் தொடுதலில் மென்மையும்
மேனியிலிருந்து கிளர்ந்து எழும் மணமும்
துளிர்க்கும் வியர்வையின் சுவையும்
சிதறிக் கிடக்கிற என்னை
ஒரு மையத்திற்குள் ஈர்த்துக் குவிக்கின்றன
வேறு எந்த ஒரு இசையை விடவும்
உடல்கள் உராயும் ஓசை
மனம் ஒன்றிக் கேட்கத் தக்கதாயிருக்கிறது. (ப - 128)
இவ்வாறு காமத்தை, வாழ்வைக் கடந்து விடுதலை அடைவதற்கான ஒரு நெறிமுறையாகக் கண்டுகொள்ளும்போது, மனதில் உடல்கள் எதுவும் இல்லை
அங்கும் ஒரு ஒலி இசையாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அது மனதில் அன்புகளாகத்தான் இருக்கிறது (ப - 124)
இவ்வாறு இறுதியில் ‘இங்கே உங்களுக்கு வேலை, அன்பு செய்தல்தான் கண்டீர்’ என முடிக்கும்போது அவரது ஒற்றை உடல் வாழ்க்கை, அவருக்குள் ஒளியேற்றித்தான் இருக்கிறது எனக் கண்டுகொள்கிறோம். அதனால்தான் “நான் எரிந்துகொண்டிருப்பது, எனக்கு போதாமல் இருக்கிறது” என்று எழுதியவர் தொடர்ந்து,
மேலும் பெரிதாக
உயர்ந்து அகன்று எரிய ஆவலாக இருக்கிறேன்.
இருள் சூழ்ந்த நிலத்திற்கு
ஒளிதரும் பெருந்தீயாக
தொலைவு தெரியாத பெருவெளிக்கு
ஒளிதரும் பெருங்கோளமாக எரிய ஆவலாக இருக்கிறேன். (ப - 18)
என்ற நிலையை எட்ட முடிந்திருக்கிறது. செயராமன், வாழ்வு தனக்கு விதித்த தன் தனிமைச் சேற்றை, நீருற்றி கால்களால் மிதித்துப் பிசைந்து சக்கரத்தில் வைத்து உருட்டி அற்புதமான ஒரு கொள்கலமாக வடிவமைத்துவிட்டார்; அந்தக் கொள்கலன் முழுக்கப் பிரகாசிக்கும் கவிதைகள் பொங்கி வழிகின்றன. தனித்துவமான இந்தக் கவிதைகள் தமிழுக்குப் புதுவரவு. இவை நிறையப் பேசப்படவேண்டும். பார்ப்போம்.
நூல் விவரம் : ரா. செயராமன், இருளின் குரல், (2016) சிற்றேடு,
பெங்களூர் - 85. பக் - 134. விலை : 110.
இரயில் பாதையில் மலம் துடைத்து எறிந்த கல்லைப்போல உனது புறக்கணிப்பு மஞ்சள் திப்பியாக எவ்வளவு மிளிர்கிறது பார்.
சதைப் பகுதியாக
கூடவே வளர்ந்தவனை
நீங்கள் பிரிய நேரிடும்போது
தாரைத் தாரையாக
வழியும் கண்ணீரை
பொற்கிண்ணத்தில் பிடித்து
சூத்துக் கழுவிய பிறகு
சொல்லுவான்
அதிக உப்பு
‘அதுக்கு’ ஆவாதென்று.
அவளுக்கான அகலை அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன் எண்ணெய் வதப்பிலூறிய மெத்தான திரிகளின் நுனிகளைத் திருகி தீக்குச்சியைக் கொளுத்துகையில் தன்னிலை மறந்த பதட்டம் தொற்றிக்கொள்ள அச்செயலிலிருந்து தன்னிச்சையாக தன்னை விடுவித்துக்கொள்கிறாள் அக்கணத்தில் அவளறியாமல் கண்களிலிருந்து சொட்டிய நீர் அகலில் விழுந்து எண்ணெயோடு கலவாமல் மிதந்துகொண்டிருக்கிறது ஏற்றப்படாத சுடரென.
இன்னும் கொஞ்சம் பச்சையை நோக்கிய உந்துதலோ வேறெதுவோ அதனை வழிதவற வைத்துவிட்டது நிமிர்கையில் தன் மந்தையைக் காணாத ஆட்டை அச்சமே முதலில் பீடிக்கிறது இதயத்தின் திடுக்கில் அதிரும் தவிப்பு குரலில் கனத்து ஒலிக்கிறது மேற்கில் நாலெட்டு கிழக்கில் நாலெட்டு வடக்கில் நாலெட்டு தெற்கில் நாலெட்டு நின்ற இடம் திரும்பி பின்னும் திசை துழாவும் கண்களுக்கு சட்டென்று புதிர்வழியாய் மாறிவிடுகிறது நிலம் பொன்னந்தி மேகத்தில் உருப்பெறும் ஒரு ஆட்டைக் கண்டு துளிர்விடும் அதன் நம்பிக்கையை ஏமாற்றிவிடுகிறது வந்து கவியும் இருள் மந்தைக் கதகதப்புக்கான ஏக்கத்தோடு புதர்தேடி ஒண்டுமதற்கு பயமாகவும் இருக்கிறது எல்லாம் புதிதாகவும் இருக்கிறது பட்டியற்ற படுக்கையில் அசைவாங்கும் ஆடு அனிச்சையாய் தலையுயர்த்திப் பார்க்கையில் கோடானு கோடி நட்சத்திரங்கள் இரவின் பிரத்யேக ஒலிகள் மெல்லப்போகும் நிலவின் நடை வைகறை கடந்து சூரியன் ஏறுகிறது தூரத்திலிருந்து மேய்ச்சலுக்குத் திரும்பும் மந்தையின் வாசனை பிடிக்கும் ஆடு மே மேவென்ற உற்சாகப் பாடலோடு வேகமாக ஓடி வரும்போது ஒரு கணம் உற்று நோக்கிய ஆடுகள் அத்தனையும் ஒரே நேரத்தில் புழுக்கை போட்டுவிட்டு தலைகுத்திக்கொள்கின்றன.
டயபர் அணிந்த கொழுகொழு குழந்தைகளைக் கண்டால் கனியாத மனமில்லை உலகில் பாக்ஸர் ப்ரீஃப் போட்டிருக்கும் ஆறுகட்டு இளைஞனின் திமிறும் உடற்தசையை பின்னிருந்து தழுவும் கரங்களின் நகங்களில் அழகிய பூச்சுடைய பிகினிப் பெண் இன்பத்தைப் பெருக்குவதற்கான திரவியத்தையும் உறையையும் பரிந்துரைக்கையில் நீ நாவில் ஜலம் வைக்காமலா இருந்துவிட்டாய் நோய்மையும் சலிப்பு மிகுந்த நம் மூத்தோர்களைப் போலில்லாமல் அந்த வயோதிகர்கள் இளமை மிச்சத்தோடு பீடு நடையிடுகிறார்கள் நிலவெளியின் அபாயகரமான பிரதேசங்களில் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் சாகசங்கள் புரிகையில் பொடி எழுத்துக்களில் மறைகின்றன பொறுப்புத்துறப்பு வாசகங்கள் உண்ணுபவை உடுத்துபவை உபயோகிப்பவை என அன்றாடத்தை அழகூட்டும் அத்தனையத்தனை பரிந்துரைகளோடு இதோ திரையில் தோன்றிவிட்டாள் உன் அபிமான நடிகை தூய்மையும் மகிழ்ச்சியும் வலிமையும் நிதியும் நிறைந்த பொன்னுலகத்தின் மின்னொளி வரவேற்பறையில் கசிகையில் நான் பாலுணர்வுப் பூரிப்படைகிறேன் என் வீட்டின் கரப்பான்களோ உயிர் பயத்தில் இன்னும் இருண்ட மூலைகளுக்கு ஓடுகின்றன.
மகிளாவை தூங்கவைக்கச் சொன்ன கதையில், அப்பா இருந்தார். போதைமலை அடிவாரத்தில் அவருக்கு மாப்பிள்ளை, சுபா என இரண்டு பசுங்கன்றுகள் இருந்தன. சுபா சாது, சப்பிய சாக்லேட் நிறம். கலப்பட வெள்ளையில் இருந்த மாப்பிள்ளை, சுபாவை விட குள்ளம். ஒருநாள் விடியலில், கட்டுத்தறியை ஒட்டிய படலுக்கடியில், சிறுபள்ளமொன்று நகங்களால் தோண்டப்பட்டிருந்தது. அப்பா பயந்துபோய் படலைத் திறந்து பார்த்தபோது சுபாவைக் காணவில்லை. மாப்பிள்ளை பயத்தில் ஓயாமல் அழுது கொண்டிருந்தது. அதற்கு தேங்காய் புண்ணாக்கும், தண்ணீரும் தந்து தடவிக் கேட்டபோது ‘செவப்பு’ என்று மட்டும் சொல்லி மீண்டும் அழத்தொடங்கியது. இதெல்லாம் அந்த சிவப்பு புலியின் வேலைதான் என்பதைப் புரிந்துகொண்ட அப்பா, புலியுடன் சண்டையிட்டு சுபாவை மீட்க மலையேறத் தொடங்கினார். அதுவரைக்கும் சுபாவிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென பச்சாயியை வேண்டிக்கொண்டார்.
“அதாருப்பா” என்றாள்.
“சாமி.”
“நல்ல சாமியா அவங்க?”
“நல்லது பண்ணினதுனாலதான் சாமியானாங்க”
“என்ன நல்லது பண்ணாங்க?”
“செவப்புப்புலி கதை வேண்டாமா உனக்கு?”
“சரி சொல்லு”
அப்பா விஷம் தடவிய ஈட்டியொன்றை எடுத்துக்கொண்டு மலையேறத் தொடங்கினார். அவர் நடந்ததில், தண்ணீர்க் குடத்துத் தட்டுகள் தடுமாறி விழுந்தன. மலைக்கூடுகளில் தூங்கிக்கொண்டிருந்த குஞ்சுகளை பறவைகள் தங்கள் சிறகுகளுக்குள் ஒளித்துக்கொண்டன.
மகளுக்குச் சொன்ன கதையில், அப்பாவுக்கு இரண்டு தங்கைகள் என்று சொல்லியிருந்தேன். உண்மையில் அவருடன் பிறந்தவர்கள் மூன்றுபேர். சரசாவை மறந்ததைப்பற்றி அவளுக்கு எந்த குறையுமிருக்காது, அவள் தன்னை மறந்தவள். முழுமையான கதையாவதற்கு அல்லது கதையில் வருவதற்கு ஒருவர் இறப்பு வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. சரசாவுக்கு அப்படியில்லை, வாழும் போதே அவள் கதைகளால் ஆனவளாக இருந்தாள் அதனால் இறப்புக்குப்பிறகு அவளுக்குக் கதைகள் தேவைப்படவில்லை. என்றாவது ஒருநாள் மகிளாவுக்கு பகலில் சரசாவின் கதைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
சரசா, அன்று அறிவியல் தேர்வுக்கு கிளம்பவேண்டும். செடிக்காட்டுக்கு வெளிக்குச்செல்ல வாசல் தாண்டியவள், தன்வெளி மறந்து தரையில் விழுந்தாள். சூழவரும் ஏதோவொன்றிலிருந்து விலகுவது போல கால்கள் உதைத்துக்கொண்டன. காலாவதியான இசைக்கருவியின் பேரிரைச்சல்போல அவளது அடிவயிற்றிலிருந்து அலறல் சப்தம் வெளிப்பட்டது. அவளது இறப்பின் முந்தைய கணம் வரை கேட்கவிருக்கும் கோர ஓலியை போதைமலை அடிவாரத்துக் காற்று தன் பெருந்தகடில் முதன்முறை பதிவு செய்துகொண்டது. ராட்சத பறவையொன்று அமர்ந்து பறந்த கிளையென அவளுடல் வலிப்பிலிருந்து அதிர்ந்து அடங்கியது. சாணிக்களம் சிறுநீரால் ஊறியிருந்தது. அவளை மறைக்க கயிற்றுக்கட்டிலை நிறுத்தி, அதில் ஜமுக்காளத்தை காயப்போட்டிருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து எழுந்தவளை, கைத்தாங்கலாக அவளது இரண்டாம் உலகிற்கு அழைத்துப்போனார்கள்.
பிறவி நோய்க்கு மட்டும் தான் முன்ஜென்மங்கள் உண்டு, சரசா பன்னிரண்டு வயதில் நோயுற்றவள் அதனால் அவளைப்பற்றி முன்கதைகள் மட்டும் உருவாக்கப்பட்டன.
சாணாத் தெரு பள்ளிக்கூடத்திலிருந்து வரும் வழியில், கைவிடப்பட்ட கிணறு, இரவில் மட்டும் பெண்குரலில் பேசுவதாகவும், எப்போதாவது பாடுவதாகவும் ஊரில் ஒரு பேச்சுண்டு. பெயர் தான் சிற்றம்பலமே ஒழிய இராப்பகலாக அவர் காவல் காத்தது கிணற்றுக்கு வடக்கேயிருக்கும் பெருமாள் கோயில் மேட்டைத்தான். புரட்டாசி தவிர்த்து மற்ற நாட்களில் பெருமாளுக்கும் அவரை விட்டால் யாருமில்லை. கோயில் விளக்கை ஆனமட்டும் சிற்றம்பலம் அணைய விடுவதில்லை. அவர் இறந்த அன்று அணைய இருந்த விளக்கின் திரியை பெண்ணொருத்தி நாவால் ஏற்றிவைத்த கொஞ்சநேரத்தில் கிணற்றில் யாரோ குதித்த சப்தம் கேட்டதாகவும், சிற்றம்பலத்தின் உடலை கயித்துக் கட்டிலில் கிடத்தி கிணற்றை கடந்தபோது எடையற்றிருந்ததாகவும் கதைகள் உண்டு.
கிணற்றுநீரை குடிக்கும் திட்டத்தை, சரசாதான் முன்மொழிந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவந்த தோழிகள் ஒன்பது பேரும், பலநாள் திட்டப்படி கிணற்றிலிறங்கி குடித்தனர். வீட்டிற்குத் திரும்பி, சுருண்டு படுத்ததில் பிழைத்தது நான்கோ ஐந்தோதான். அதில் சரசாவுக்கு மட்டும்தான் ஒரு மன்றாடலென, ஓலமென அடிவயிற்று அலறலோடு வலிப்பு வந்தது. போலியோ தாக்கி கொஞ்ச நாட்களிலேயே அவளது இடதுகால் சூம்பத்தொடங்கியது. அது முட்டியில் கட்டிய பட்டத்தின் வாலென நடக்கும்போது காற்றில் அசையத் தொடங்கியது.
சரசாவின் அம்மாவுக்கு, மாணிக்கம் என்ற பெயரும் உண்டு. நாற்பத்து மூன்று விசேசங்களில் ஒரே அழகியாக இருந்ததினால் முத்தம்மா என்று பெயரை மாற்றி வைத்தார்கள். அந்த கல்யாணத்துக்கும் முத்தம்மா செல்வதாகத்தான் இருந்தது. வீட்டிற்குத் தூரமானதால், அவரது நான்குமாத தங்கைக்கு, காவலுக்கு இருத்திவிட்டு மொத்த ஜமாவும் உடையாப்பட்டிக்கு வண்டி கட்டிக்கொண்டு சென்றது. பாதி ஒப்பனையில் இருந்த கன்னியும் குழந்தையும் மட்டும் அவ்வீட்டில் தனித்து இருந்தார்கள்.
மழை அன்று சேதி சொல்வது போல அவ்வீட்டின் மீது உரத்துப் பெய்தது. விசேசம் முடிந்து மேட்டுக்காட்டுக்கு வண்டி வரும்போதே முத்தம்மாவின் அலறல் சப்தம் கேட்டது, குழந்தை ஒரு தற்காலிக மௌனசாட்சியாக இறந்து கிடந்தது.
காய்ச்சலால் ஓயாத அழுகை, மூச்சுத்திணறல் என்ற காரணம் அனைவருக்கும் புரிந்துகொள்ள எளிமையானதாக இருந்திருக்கலாம். குழந்தைக்குப் பெயரெதுவும் வைக்காததனால், புதைப்பதும், மறப்பதும் அவ்வளவு கடினமானதாக இல்லை அவர்களுக்கு. அதன் பிறகு அழகிப் பட்டியலில் வேறு யாரோ முதலிடத்திற்கு வந்தார்கள். முத்தம்மாவுக்கு திருமண பேச்சுகள் ஆரம்பமாயின.
சரசா பிறந்த அன்றிரவு, பங்காளி வீட்டுப் பெண்ணொருத்தியின் கனவில் தோன்றினார் சரசாவின் பாட்டனார். கனவில், கிணற்றுக்குள்ளும் வெளியிலுமாக மழைபெய்து கொண்டிருந்திருக்கிறது. அவரது காலை தொட்டுவிட முடியாத அளவுக்கு வயிறு வீங்கிய கர்ப்பிணி ஒருத்தி தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிக்கொண்டிருந்தாள். அவளைக்கொண்டு கிணற்றை ஆழம்பார்க்க இருப்பவர்போல அவளது தலைமயிரை பிடித்துக் கொண்டிருந்தார் கிழவர். அலறி அடங்கிவற்றிய கொஞ்ச நேரத்தில் நைந்த துணியென அவளைக் கிணற்றில் வீசியெறிந்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட வரவிருக்கும் தன் மாமனாரைப் பற்றிய கனவைக் கேட்ட முத்தம்மா இன்னமும் இறுக்கமாக சரசாவை தன் மார்போடு இறுக்கிக்கொண்டாள். அன்று சரசாவின் வயது ஒருநாள், புதிய இரண்டு ரூபாய்த்தாளை, தன் பிஞ்சுக் கையில் வைத்திருந்தாள்.
சரசா பருவமெய்தியபோது, வயது பதினொன்று. பட்டாசாலைக்குக் கூட வரவிடாமல் பக்கவாட்டு அறையிலேயே அவளை வைத்திருந்தார்கள். நாள் முழுவதும் ஓயாமல் வெளியே பேச்சொலிகள் கேட்டுக் கொண்டேயிருந்தன. உறக்கம் கலைந்ததும், அவளுக்கு தாயமாட வேண்டும் போலிருந்தது.
வயதுக்கு வருவதற்கு முந்தைய நாள் தாயக்கட்டைகளை வாசற்படி கூரையில் சொருகி வைத்திருந்தாள். அதையெடுக்க எழுந்தபோது கால்களில் புளியங்கொட்டைகள் மிதிப்பட்டன. ஒவ்வொரு கொட்டையாக தரையில் தேய்த்து, பாதிசூடு ஆறியதும் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். அது அந்த இருளில் அவளுக்கு அவ்வளவு தேவையானதாக இருந்தது. தேய்த்த கொட்டைகளை பலமுறை உருட்டியும் தாயம் விழவில்லை.
முதல் தாயம் விழுந்தபோது பட்டாசாலையில் பூனை கத்தும் சப்தம் கேட்டது. முழுமையாக இருளில் நனைந்த நிறத்திலிருந்த பூனை சரசாவை பார்த்ததும் மேலும் பாவமாக கத்தியது. வெளியே பேச்சொலிகள் இல்லை. துணிந்து அடுப்படிக்கு சென்று பசும்பாலை எடுத்து வருவதற்குள், பூனை வாசல் தாண்டியது.சரசாவும் தன்னுணர்வு வரும் வரைக்கும் பூனை பின்னால் சென்றாள். இருளில் நனைந்தது போலவே பூனை யாருக்கும் தெரியாமல் இருளில் கரைந்தது. தன் அறைக்குள் வந்தமர்ந்தபோது தன்மீது ஏதோ ஒட்டியிருப்பது போல உணர்ந்தாள். நோயுண்டாக்கும் போதைமலையின் குருட்டு மகரந்தத்துக்கு ருதுவெய்திய பெண்பிள்ளைகளை அடையும் இறக்கையுண்டு.
முத்தம்மா காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. போதாக்குறைக்கு, மேய்ந்துவிட்டு வந்த மாட்டை தண்ணிக்காட்டி கட்டுத்தறியில் கட்டாததற்கு கண்டபடி ஏசிவிட்டுப் போனார் சிதம்பரம். முதல் பிரசவத்துக்கு மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டினார், ‘சாப்ட்டியா?’ என்று எப்போதாவது கேட்டார். முதலில் மகன் பிறந்ததில் அவருக்குத் திருப்தி. அடுத்துப் பிறந்த இரண்டு பெண்களுக்கும் பெரிதாய் எதுவும் ஈடுபாடு காட்டவில்லை. மூன்றாவதாய் இப்போது சுமப்பதை அவருக்குச் சொல்லாமலேயே கலைத்து விடலாமா என்ற யோசனை காலையிலிருந்தே முத்தம்மாவுக்கு இருந்தது. கொய்யாப் பழங்களையும், விளக்கமாறுகளையும் கூடையில் கட்டிக்கொண்டு சந்தைக்கு செல்லும் வழியில் கரட்டாம்புத்தூரில் கருவைக் கலைக்க மருந்தூத்திக்கொண்டார். அது கருவை அடைவதற்குள் காய்ந்துபோனது. அன்றிலிருந்து ஏழு மாதங்கள் கழித்து எந்தக் குறையும் இல்லாமல் சரசா பிறந்தாள்.
நிலவுக்கும் தனக்கும் ஏதோ தொடர்பிருப்பதாக சரசா ஆழமாக நம்பினாள், மற்றவர்களும் நம்பினார்கள். அமாவாசை பௌர்ணமி நாட்களில் அவளது நோயின் உக்கிரம் மிக அதிகமானதாக இருந்தது. பழகியவர்களை மறந்தாள், தேங்காய் உரித்து மட்டையை வீட்டிற்குள் கொண்டுவந்தாள். இரவில் வெளிக்குச்சென்றவளை அழைத்துவர ஒருவர் பின்னாலேயே செல்ல வேண்டியிருந்தது. வலிப்பு வருவதற்கு சில கணங்களுக்கு முன்பு நிலவிலிருந்து ஒரு ஒளி பறவையின் எச்சம் போல தன் மண்டைக்கு வருவதாகவும், தான் எப்போதும் பகலிலும் கூட ஒரு மிக நீளமான ஒளிக்கம்பியுடன் நிலவுடன் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் சிகிச்சைக்காக இராயவேலூர் வரை அழைத்துச் செல்லப்பட்டபோது திரும்பத் திரும்ப மருத்துவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனவரைக்கும் செலவழித்தவர்கள், ஊர்திரும்பி, சரசாவின் மண்டைக்குத் தொப்பி செய்யலாமா என்று சிலகாலம் யோசித்தார்கள்.
ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு, வாசிக்க சரசாவிடம் நான்கைந்து புத்தகங்களும், காகிதக் கத்தைகளும் இருந்தன. அதன் எழுத்துகள் அவளுக்கு வலிப்பு வந்ததும் மறைய வல்லவை, அவள் மீண்டதும் தன்னைத்தானே வைத்து மீண்டும் அதே கதையை எழுதிக்கொள்பவை. ஒரே கதையை முதல் வாசிப்பென ஓயாமல் வலிப்புக்கு முன்னும் பின்னும் வாசித்துக்கொண்டிருந்தாள், அவளுக்கு அது பல உள்ளடுக்குகள் கொண்ட நாவல் போல அல்லது ஒவ்வொருமுறை வாசிக்கும்போது ஒரு பொருள் தரும் தத்துவ நூல்.
ஸ்பீக்கர் முத்துவுக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை, சரசாவை இரண்டாந்தாரமாக கட்டிக்கொள்ள அவனுக்கு உள்ளூர ஆசையிருந்தது. வலிப்பு வந்தால் நின்ற நிலையில் சரசா விழக்கூடியவள் என்பதால் பிள்ளைகளை சுமக்க முடியாது என்று உள்ளூர் மருத்துவர் அவளுக்குத் திருமணம் செய்யும் யோசனையை விரும்பவில்லை.
பட்டாசாலையில் தரையோடு தரையாக உட்கார்ந்து ஆட்டுவதற்கு ஏதுவாக உரல் பதிக்கப்பட்டிருந்தது. கச்சாயத்துக்கு, சொய்யானுக்கு, சட்னிக்கு என்று சரசாவின் பெரும்பாலான நேரம் உரலுக்கு முன்பாகத்தான் கழியும். உரலை ஒட்டி இடதுகாலை மடித்து வலதுகாலை நீட்டி உட்கார்ந்து சதா எதையாவது அரைத்துக்கொண்டேயிருப்பாள். அப்படிச் செய்யும்போது வலிப்பு வந்தால் இரண்டு கால்களுக்கு இடையேயிருக்கும் உரலை ஈன்பவள்போல உதைத்துக்கொண்டு அப்படியே மல்லாக்கச் சாய்ந்துவிடுவாள்.
சரசா பல உரல் குட்டிகளை ஈன்றெடுத்தவள். உரலின் ஆழம் வரைக்கும் தண்ணீர் விட்டு கையால் வழித்தும் தன் குட்டிகளில் ஒன்றைக் கூட அவள் கண்டதில்லை. சரசாவை, பெண் கேட்டு வந்தவர்களையெல்லாம் திருப்பி அனுப்பியதில் சாபமென புணர்ச்சியின் உச்சநேர முனகல் போல ஒவ்வொரு முறையும் இழுத்து அடங்கியது ஜன்னி.
குடும்பத்துக்கு வெளியே, இரண்டு ஆண்களை, சரசா மிகவும் விரும்பினாள். காந்தி ஜெயந்தியன்று தலைக்கு ஊற்றி பழனி முருகனை வேண்டி திருநீர் வைப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தாள். பாவப்பட்டவளுக்கு மேற்கொண்டு செய்யும் பாவங்களால் பாதிப்பில்லை என்று நம்பியவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் கோழியையும் கொடுவாளையும் அவளிடம் கொடுத்தனுப்பினார்கள் செடிக்காட்டில், ஒத்தையடிப் பாதையில், தண்ணீர் எடுக்கப்போகும் பக்கத்துக்காட்டில் எங்காவது சாய்த்து நிறுத்தப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலில் ஜமுக்காளமோ புடவையோ காய்ந்தால் அதன் பின்னால் வலிப்பு வந்து சரசா மயங்கிக்கிடக்கிறாள் என்பதை ஊர்க்காரர்கள் ஒரு குறியீடு போலப் புரிந்துகொண்டார்கள்.
அன்று, சரசாவை நிழற்படம் எடுப்பதாக முடிவானது. காய்ந்த ஆலமர இலைபோல அவளுடலில் நரம்புகள் வெளியே தெரிந்தன. இறுக்கமான சட்டையின் வயிற்று பட்டன் போல உதட்டை உடைந்த பற்களுக்கு வெளியே இழுத்துச் சாத்தினாள்.
சூம்பிய காலை களவுப் பொருளென தரையைத் தொடும் சேலையைக் கொண்டு மூடினாள். மூன்று விரல்களால் பறித்தது போல கன்னங்கள் ஒடுங்கியிருந்தன. அண்ணன் மகளின் தங்க சங்கிலியைப் போட்டு எடுத்துக்கொண்ட படத்தில், வேறு யாரோ சரசாவுக்கு தெரிந்தார்கள்.
கண்ணாடியில் தெரிபவள், நிழற்படத்தில் இருப்பவள் இவற்றில் தான் யாரென்ற குழப்பம் அவளுக்கு இருந்துகொண்டேயிருந்தது. ஒருவழியாக, அது தான்தான் என்ற நினைப்பு வந்தபோது வலிப்பும் வந்தது.
காட்டை விற்றுக் கிளம்பும்போது அரை மணிநேர கற்பித்தலுக்கு பிறகு அண்ணனின் டிவிஎஸ் எக்ஸலில் மிகக் கச்சிதமாக அமர்ந்துகொண்டாள். வண்டி, ஐம்பத்து இரண்டு ஆண்டுகளாக அவள் பார்த்திராத ஒரு ஊருக்குள் நுழைந்தது. புதிய ஊரில், பழைய ஓட்டுவீட்டில் மலங்கழிக்க நாற்காலி போன்ற ஏதோவொன்றில் துளையிட்டு வைத்திருந்தார்கள். புது ஊரில், யாரிடமோ கைகூப்பி வணக்கம் வைக்கக் கற்றுக்கொண்டவள், மரணப்படுக்கையில் தன்னைக்காண வருபவர்களிடம் ஒரு வித்தை போல அதை செய்துகாட்டிக்கொண்டிருந்தாள்.
இரண்டு கைகளால் இழுத்து, உதடு பிரியாமல் பலூன் காற்றை வெளியேற்றும் சப்தத்தில் கடைசியாக ஒருமுறை சரசாவுக்கு வலிப்பு வந்தது. காட்டருவியை நிறைத்திட வைத்த ஒடுங்கிய குடமென அவளுடல் கடைசியாகத் துள்ளியது. சரசா, கன்னி கழியாமல் இறந்ததால் அவளுக்கு தொட்டில் கட்டித்தான் தூக்கவேண்டும் என்று யோசனை சொல்லப்பட்டது. கடைசியில் பாடை கட்டுவதாக முடிவானது. சரசாவை மருந்தூத்திக் கொன்றுவிட்டதாகவும், சவத்தேரில் அவள் உயிருடன் இருந்ததாகவும் தலை லேசாக
ஆடியதாகவும் சவ ஊர்வலத்தில் பேசிக்கொண்டார்கள். சுடுகாட்டில் சரசாவின் அண்ணன் காரியங்களை செய்தார். ‘சரஸ்வதின்னு பேரு வெச்சு வௌங்குன பொம்பளை ஒருத்தி உண்டா’ என்று சுடுகாட்டிலிருந்து திரும்பிவரும் வழியில், ஊர் பெரியவர் ஒருவர் யாரிடமோ கேட்டுக்கொண்டே வந்தார்.
மகிளாவை இந்த ஆண்டு பள்ளியில் சேர்ப்பதாக இருக்கிறோம். அன்று, செம்பருத்திச் செடி வைத்திருந்த மண் தொட்டிக்கு பொட்டு வைத்துக்கொண்டிருந்தாள். அது ஊரிலிருந்து அம்மா கொடுத்துவிட்டிருந்த செடி. மகிளா கைப்பிடித்து நட்டு வைத்திருந்தோம். நான் அருகே சென்றதும், ‘நெத்தில வெச்சுக்கோ’ என்று எதையோ கையில் கொடுத்தாள். நெற்றியில் வைத்ததும் தான் அது பாண்ட்ஸ் பவுடர் என்று தெரிந்தது.
‘என்ன தங்கம் பண்ற?’
‘சாமி கும்பிடறேன்’ என்றாள்.
‘என்ன சாமி இது?’
‘சரசாயீ. நீயும் கும்பிடு. கன்னத்துல போட்டுக்கோ.’
அந்த செம்பருத்திச் செடியை பயத்துடன் கும்பிட்டுக்கொண்டேன்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாபு வேதியியல் பட்டதாரி. முப்பது ஆண்டுகாலமாக நுண் கலைத்துறையில் இயங்கி வருபவர், அவரது படைப்புகள் சர்வதேச கவனம் பெற்றவை, கலாமேளா, லலித் கலா அகாதமி முதல் பிரெஞ்சு பினாலே வரை அவரது படைப்புகள் காட்சிக்குட்படுத்தப்பட்டுள்ளன.
ஆரம்ப காலங்களில் மதுரையில், வைகை ஆர்ட் சொசைட்டி மற்றும் பரிணாமிகள் நடத்தும் கலைக்கண்காட்சிகளுக்கு செல்லும் வழக்கத்துடன் இருந்தவர். அங்கு புகழ்பெற்ற ஓவியர் எம்.ஜி.ரஃபிக்கை சந்தித்தது பெரும் திருப்பாக அமைந்திருக்கிறது. அதன் பிறகு 1994ல் கலையின் எதிர்காலத்தை நிர்மாணிக்கும் கலைஞர்களின் சங்கமமான பிரெஞ்சு பினாலேயில் அவரது படைப்புகள் காட்சிக்குட்படுத்தப்பட்டது பெரும் உத்வேகத்தைக்
கொடுத்துள்ளது.
மகிழ்ச்சிக்குரிய பால்யகாலத்தைக் கொடுத்த ஜெய்ஹிந்த்புரமும், வாழ்வு பெருகும் அதன் தெருக்களும்தான் தனது படைப்புகளுக்கான உந்துதலென்கிறார். அச்சுக்கூடம் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார். ஓவியம் வரைவது பொருளீட்ட அல்ல என்பவர், தனது படைப்புகளுக்கு தலைப்பிடுவதில்லை, மேலும் எந்த ஓர் ஒவியத்திலும் தனது பெயரையும் போட்டுக்கொள்வதில்லை
எனக்குத் தெரியும் காதலிகளே: காட்டுத்தனமான வாழ்க்கை காரணமாய் என் தலைமுடியை இழந்து கொண்டிருக்கிறேன், மேலும் நான் கற்களின் மேல் உறங்கவேண்டியிருக்கிறது. நான் மிக மலிவான ஜின்னைக் குடித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். மேலும் நான் நிர்வாணமாய் காற்றினூடாய் நடக்கிறேன்.
நான் தூய்மையாய் இருந்த காலம் ஒன்றிருந்தது காதலிகளே.
எனக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் என்னைவிட வலிமையானவளாய் இருந்தாள், எருதை விட புல் வலிமையாய் இருப்பதைப் போல: அது நிமிர்ந்து நிற்கிறது மீண்டும்.
நான் பொல்லாதவனாய் இருப்பதைக் கண்டாள். இருந்தும் என்னை நேசித்தாள்
பாதை எங்கே செல்கிறது என என்னைக் கேட்கவில்லை, அது அவளது பாதையாயிருந்தது. ஒருவேளை அது கீழ்நோக்கி செல்வதாக இருந்திருக்கலாம். அவள் உடலை எனக்குத் தந்தபோது அவள் சொன்னாள்: இதற்கு மேல் ஒன்றுமில்லை. மேலும் அவள் உடல் என்னுடலாயிற்று.
இப்போது அவள் எங்கேயிமில்லை, மழைக்குப் பிறகான மேகமென மறைந்து போனாள். நான் அவளைப் போகவிட்டேன், அவள் கீழ்நோக்கிச் சென்றாள், காரணம் அதுதான் அவளது பாதை
ஆனால் இரவில் சில சமயங்களில் நான் குடித்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கும்போது காற்றினுள் வெளிறிய அவள் முகத்தைப் பார்க்கிறேன். வலிமையானதாய் அது என்னை நோக்கித் திரும்பியிருக்கிறது, மேலும் காற்றில் அவளுக்குத் தலைவணங்குகிறேன்.
From Five Epistles
ஜூலை மாதத்தில் நீங்கள் என் குரலைக் குளங்களிலிருந்து தூண்டிலில் பிடிக்கலாம். கான்யாக் மது என் நாளங்களில் ஓடுகிறது. என் கை சதையால் ஆகியிருக்கிறது.
குளத்து நீர் என் சருமத்தை நிறம் மாற்றிவிட்டது, நான் ஒரு ஹேஸல் மரக்கிளை போல உறுதியாய் இருக்கிறேன், படுக்கைக்கு நான் சிறந்தவன் பெண்களே.
கற்களின் மேல் சிவப்புச் சூரியன் படும்போது நான் கிட்டார்களை விரும்புகிறேன். அவை விலங்குகளின் நரம்புகள், கிட்டார் ஒரு விலங்கினைப் போல பாடுகிறது, அது சிறிய பாடல்களை மெல்லுகிறது.
ஜூலையில் எனக்கு வானத்துடன் ஒரு காதல் சந்திப்பிருக்கிறது. நான் அதை நீலநிற குட்டிப் பையனே என்றழைக்கிறேன், மகிமைமிக்கதாய், வயலட் நிறத்தில். அது என்னை நேசிக்கிறது. அது ஆண் காதல்.
அது வெளிர்ந்து போகிறது என் நரம்பு விலங்கினை துன்புறுத்தி வயல்களையும் பசுக்களின் பெருமூச்சுகளாலும் ஆன சிற்றின்ப நடத்தையைப் போலி செய்கையில்
From Thirteen Psalms
எவ்வளவு பயமுறுத்துவதாய் இருக்கிறது இரவில் இந்தக் கரிய நிலத்தின் நடுமேடான முகம்
உலகின் மேற்பகுதியில் மேகங்கள் உள்ளன, அவை உலகிற்கு சொந்தமானவை.மேகங்களுக்கு மேல் ஒன்றுமில்லை
பாறைக்கற்கள் நிறைந்த வயலில் இருக்கும் தனித்த மரம் இதெல்லாம் பயனற்றது என்று கட்டாயமாய் நினைத்துக்கொண்டிருக்கும். வேறு மரங்களே இல்லை.
நாம் கவனிக்கப்படவில்லை எனத் தொடர்ந்து நினைக்கிறேன். இந்த இரவின் ஒரேயொரு நட்சத்திரத்தின் தொழுநோய்.
வஸ்துக்களை இணைக்க இன்னுமே கூட முயன்றுகொண்டிருக்கும் கதகப்பான அந்த கத்தோலிக்கத் தனமான காற்று.
நான் மிகவும் தனிமைப்பட்டுப்போனவன். பொறுமையே கிடையாது எனக்கு. நம் ஏழைச் சகோதரர் காட்ரெவார்டியு உலகைப் பற்றிக் கூறினார்: அதைக் கணக்கில் சேர்க்கவேண்டாம்.
நாம் பால்வெளிமண்டலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை நோக்கி உயர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். உலகின் முகத்தில் ஒரு மஹா அமைதியிருக்கிறது. என் இதயம் வேகமாய்த் துடிக்கிறது. மற்றபடி எல்லாம் சரியாக இருக்கிறது.
From Thirteen Psalms
எல்லாமே மாறுகிறது. உன் இறுதி மூச்சினை வைத்து நீ ஒரு புத்தம்புதிய தொடக்கம் செய்யலாம் ஆனால் என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. மேலும் நீ ஒருமுறை மதுவில் ஊற்றிய நீரை வடித்து அகற்ற முடியாது. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. நீ ஒருமுறை மதுவில் ஊற்றிய நீரை வடித்து அகற்றவியலாது. ஆனால் நீ செய்யலாம் ஒரு புத்தம் புதிய தொடக்கத்தை உன் இறுதி மூச்சினைக் கொண்டு.
Postlude
ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்வது
சாதாரண விஷயம்.
உங்கள் வீட்டு துணிவெளுக்கும் பெண்ணுடன்
இது பற்றி அரட்டையடிக்கலாம்.
எதிரான மற்றும் சார்பானவை பற்றி ஒரு நண்பரிடம் விளக்கம் தரலாம்.
எவ்வளவு வசீகரமாய் இருந்த போதிலும்
ஒருவித துன்பியல்தன்மை தவிர்க்கப்படுதல் வேண்டும்.
ஆனால் இதுபற்றி இன்னும் கூடுதலாக சொல்லப்பட
வேண்டியிருக்கிறது என நான் எண்ணுகிறேன்.
அந்த வழக்கமான லேசான வஞ்சனை பற்றி.
உங்கள் படுக்கை விரிப்பினை மாற்றுவதில் சலித்துப் போய்விட்டீர்கள்
அல்லது இன்னும் சிறப்பாய்
உங்கள் மனைவி உங்களுக்கு துரோகம் செய்துவிட்டாள்
(இது பொதுஜனங்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது
அவர்கள் அதுபோன்ற விஷயங்களால் ஆச்சரியப்படுகிறார்கள்
ஆனால் அது மிக உயர்ந்தது அல்ல)
எனினும்
அதில் ஒருவர் தன் உயர்ந்த மதிப்பீடுகளை
இட்டு வைத்துள்ளார் என்று
கண்டிப்பாய் தோன்றக்கூடாது
From Five Epistles
கருணையுடன் நீங்கள் அவனைத் தங்குவதற்கு வரவேற்றீர்கள் ஆனால் உங்கள் விருந்தாளியை சந்தோஷப்படுத்த எந்த இடமும் இல்லை அவன் கிளம்பிச் செல்லுமுன் எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்தான். அவசரத்தில் அவன் வந்தான் அவசரத்தில் அகன்று போனான். அவன் இருப்பதற்கு ஓரிடம் கூட உங்களிடம் இருக்கவில்லையா? மிக வறிய பிச்சைக்காரர்கள் கூட தம் விருந்தாளிக்கு கொஞ்சம் ரொட்டியைத் தருகிறார்கள். இங்கே ஓர் வீட்டுக்கோ அல்லது படுக்கைக்கோ தேவை ஏதுமில்லை மரத்தினருகில் ஒரு சிறிய பாதுகாப்பிடம். அது இல்லாமல் அவன் வரவு நல்வரவாக அவனால் கருத இயலாது உணர்ச்சியற்று வரவேற்கப்பட்ட அவன் போவது சாலச் சிறந்ததென நினைத்தான். அவனது இருப்பு நேரடி அவமரியாதையானதாய்த் தோன்றியது. எனவே அவன் அங்கே இருப்பதற்கான தைரியத்தை இழந்தான் அவனது விருப்பங்கள் இப்பொழுது அவனுக்கு ஒவ்வாதவையாய்த் தோன்றின. மேலும் அவன் அவசரம் எல்லாம் சமமாகப் பொருத்தமற்றதாய்.
From Poems of the Crisis Years 1929 - 1933
ஆம், நான் அறிவேன்: சந்தோஷமான மனிதனே விரும்பப்படுகிறான். அவன் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. அவன் முகம் வசீகரமாயிருக்கிறது. முற்றத்தில் உள்ள குன்றிய மரம் மண் ஊட்டமில்லாதது என்பதைக் காட்டுகிறது இருப்பினும் அதைக் கடந்து செல்பவர்கள் அது குன்றிப்போனதற்காய் நிந்திக்கின்றனர் மேலும் அது தகுதியானதுதான். சவுண்ட் கடல் பகுதியில் பச்சைநிறப் படகுகளும் நடனமிடும் பாய்மரங்களும் பார்க்கப்படாமல் போகின்றன அவை எல்லாவற்றிலும் நான் மீனவர்களின் கிழிந்த வலைகளையே பார்க்கிறேன். நாற்பது வயதான ஒரு கிராமத்துப் பெண் கூனி நடப்பதை மட்டுமே நான் ஏன் பதிவு செய்கிறேன். இளம்பெண்களின் மார்பகங்கள் எப்பொழுதும் போல் கதகதப்பாய் இருக்கின்றன. என் கவிதையில் எதுகை மோனை ஏறத்தாழ துடுக்குத்தனமாய்த் தோன்றும். எனக்குள்ளாய் போட்டியிடுகின்றன பூக்கள் மலரும் ஆப்பிள் மரத்தைப் பார்ப்பதில் உள்ள சந்தோஷம். வீட்டுக்கு வர்ணமடிப்பவனின் உரைகளால் உண்டான பயங்கரம். ஆனால் இரண்டாவதுதான் என்னை என் மேஜைக்குத் துரத்துகிறது.
From Poems written between 1938 and 1941
லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க குடிமக்களாய் ஆக முயலும் மக்களை விசாரணை செய்யும் நீதிபதியின் முன்னால் ஒரு இதாலிய உணவுவிடுதி உரிமையாளர் வந்து நின்றார். கடுமையான தனது தயாரிப்புகளுக்குப் பிறகும் புதிய மொழி அறியாமையால் தடைபட்ட போதிலும் தேர்வில் அவர் ஒரு கேள்விக்குப் பதில் அளித்தார்: 8ஆம் திருத்த மசோதா என்பதென்ன? தடுமாற்றத்துடன்: 1492 என்றார். சட்டத் தேவையானது விண்ணப்பதாரர்கள் மொழியை அறிந்திருக்க வேண்டுமென்றிருந்ததால் அவர் மறுக்கப்பட்டார். மூன்று மாத கால மேற்படிப்பிற்குப் பிறகும் புதிய மொழியின் அறியாமையால் தடைபாடுற்று அவர் இம்முறை இந்தக் கேள்வியால் எதிர்கொள்ளப்பட்டார்: உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்ற ஜெனரல் யார்? அவரது பதில்: (இனிய இயல்புடன், உரத்த குரலில்). மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட அவர் மூன்றாம் தரம் திரும்பி வந்து மூன்றாம்கேள்விக்குப் பதில் அளித்தார்: எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை எமது ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? மீண்டும் ஒருமுறை 1492 என்ற பதில். இப்பொழுது நீதிபதிக்கு அந்த மனிதனைப் பிடித்துப்போய்விட அவனால் புதிய மொழியைக் கற்கவியலாதென்பதை அறிந்தார். அவனிடம் கேட்டார் அவனது வருவாயை எப்படிச் சம்பாதிக்கிறான் என: கடின உழைப்பின் மூலமாய் என்றான் அவன். எனவே அவனது நான்காவது சந்திப்பில் நீதிபதி இந்தக் கேள்வியைக் கேட்டார்: அமெரிக்கா எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது? 1492 என்ற அவனது சரியான பதில் அளிப்பின் உறுதியின் மீது அவனுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டது.
From Poems Written between 1941 and 1947
காற்றுமிகு இந்த உலகின் சில்லிடும் கடுந்துயரினுள் நீங்கள் யாவரும் வந்து சேர்ந்தீர்கள் சர்வ அம்மணமாய் குளிரில் கிடந்தீர்கள் சகலத்திலும் வறியவர்களாய் ஒரு பெண் உங்களை ஒரு சால்வையால் சுற்றும்வரை.
எவரும் உங்களை அழைக்கவில்லை அருகில் அணுகச் சொல்லி ஒருவரும் சொல்லவில்லை ஒரு மனிதன் உங்கள் கையைப் பற்றும்வரை இந்த பூமியில் நீங்கள் அந்நியர்களாய் இருந்தீர்கள்.
காற்றுமிகும் இந்த உலகின் சில்லிடும் கடுந்துயரிலிருந்து நீங்கள் அனைவரும் பிரிகின்றீர்கள் அசுத்தத்திலும் அசௌகரியத்திலும் ஏறத்தாழ ஒவ்வொருவருமே இந்த உலகினை நேசித்திருக்கின்றனர் ஒருவர் மீது இரண்டு கை மண் வீசப்படும் வரை.
From Bertolt Brecht's Domestic Breviary (1927)
நமது நிலம் ஒரு களைப்புற்ற சூரியனுடன் உண்ணப்பட்டதால் அது துப்புகிறது எம்மை இருண்ட நடைபாதைகளின் மீதும் உறைந்த கற்பொடிகளைக் கொண்ட நாட்டுப்புற பாதைகளின் மீதும்.
வசந்தகாலத்தில் ராணுவத்தை உருகும் சகதி கழுவியது அது கோடை சிவப்பின் குழந்தை. பிறகு அக்டோபரில் திரள்பனி விழத் தொடங்கிற்று ஜனவரியின் காற்றுகளில் அதன் மார்பு உறைந்து மரித்தது.
அந்த வருடங்களில் விடுதலை பற்றிய பேச்சு வந்தது கெட்டிப்பனியால் வெடித்துப்போன உதடுகளிலிருந்து புலியினுடையதை ஒத்த தாடைகளுடன் மேலும் பலரை நீங்கள் கண்டீர்கள் சிவப்பு மற்றும் மனிதமையற்ற கொடியைப் பின்தொடர்ந்து.
வயல்களின் ஊடாய் நிலா சிவப்பாய் நீந்தியபொழுது ஒவ்வொருவரும் தம் குதிரைகளின் பக்கவாட்டில் ஓய்வுகொண்டனர் வந்து கொண்டிருக்கிற காலங்களைப் பற்றி அவர்கள் அடிக்கடி பேசினர் பிறகு குதிரைச் சவாரியால் சோர்ந்து உறங்கிப் போயினர்.
மழையிலும் இருளார்ந்த காற்றிலும் உறங்குவதற்கு சிறந்ததாய்த் தோன்றியது கடினப் பாறை. மழை எமது அழுக்கடைந்த கண்களைக் கழுவி வேறுபட்ட பாவங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும் சுத்தமாக்கியது.
இரவில் அடிக்கடி வானம் சிவப்பாயிற்று சிவப்பு விடியல் மீண்டும் வந்துவிட்டதென அவர்கள் எண்ணினர். அது ஒரு தீ, ஆனால் விடியலும் கூடவே வந்தது. விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை.
எனவே, அவர்கள் எங்கே இருந்தபோதிலும் சுற்றிலும் பார்த்து கூறினார்கள் : இது நரகம் என்று. காலம் கடந்து சென்றது. இருப்பினும் சமீப நரகம் என்றுமே இறுதியான நரகமாய் இருக்கவில்லை.
அவ்வளவு நரகங்கள் இன்னும் வரவிருந்தன. விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை. காலம் கடந்து போகிறது. ஆனால் சொர்க்கம் இப்பொழுது வருமானால் அந்த சொர்க்கங்களும் எந்த வேறுபாடுமின்றி இருக்கும்.
களைத்துப் போன இதயத்துடன் எம் உடல் உண்ணப்பட்டவுடன் ராணுவம் எம் சருமத்தையும் எலும்புகளையும் சில்லிடும் குளிரிலும் ஆழமற்ற குழிகளிலும் உமிழ்ந்துவிடுகிறது.
மழையினால் விறைத்துப்போன எமது உடல்களுடன் பனிக்கட்டியால் வடுபட்ட எம் இதயங்களுடனும் ரத்தக்கரை படிந்த எமது வெறுங்கைகளுடனும் நாங்கள் உமது சொர்க்கத்திற்குள் இளித்தபடி வருகிறோம்.
From Bertolt Brecht's Domestic Breviary (1927)
முதலில் மணல் மீதும் பிறகு பாறை மீதும் கட்டினேன் பாறை நொறுங்கி வீழ்ந்தபோது நான் இனியும் எதையும் கட்டவில்லை. பிறகு நான் அடிக்கடி கட்டினேன், மணல் மீதும் பாறையின் மீதும் அது வந்த விதத்திலேயே ஆனால் நான் கற்றுக் கொண்டுவிட்டேன். நான் என் கடிதத்தை நம்பி ஒப்படைத்தவர்கள் அதைத் தூர எறிந்துவிட்டனர். ஆனால் நான் யார் மீது கவனமே செலுத்தவில்லையோ அவர்கள் அதை என்னிடம் திரும்பக் கொணர்ந்தனர். அவ்வாறும் நான் கற்றேன். நான் கட்டளையிட்டது செய்து முடிக்கப்படவில்லை நான் வந்து சேர்ந்த சமயம் அது தவறானது என்பதைக் கண்டேன். சரியான விஷயம் செய்யப்பட்டிருந்தது. அதிலிருந்தும் நான் கற்றேன். வடுக்கள் வலி தருபவை. இப்பொழுது குளிர்ந்திருக்கிறது ஆனால் நான் அடிக்கடி கூறினேன்: சவக்குழி ஒன்று மாத்திரமே எனக்குக் கற்றுத்தர ஏதுமில்லாமல் இருக்கும்.
From The First Years of Exile 1934-1936
ஓ தொடங்குதலின் சந்தோஷமே அதிகாலையே எவர் ஒருவரும் பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று நினைவுகூறாத சமயம் வரும் முதற் புல்லே நீண்ட காலமாய் காத்திருந்து, அதன் ஆச்சரியத்துடன் வரும் புத்தகத்தின் முதல் பக்கமே அவசரமின்றி வாசி மிக விரைவில் படிக்கப்பட்டிராத பகுதி உனக்கு மிக மெல்லியதாகிவிடும். வியர்வை வழியும் முகத்தில் படும் தண்ணீரின் முதல் தெறிப்பே. அதிக வெப்பமடையாதிருக்கும் புதிய சட்டையே ஓ காதலின் தொடக்கமே தமது இடத்தை விட்டகன்று திரிபவர்களைப் பார் ஒரு கணம். பணியின் ஆரம்பமே. ஜில்லிட்ட யந்திரத்தினுள் எண்ணெய் ஊற்றுதல் முதல் தொடுதல் மற்றம் என்ஜின் உயிர்பெற்றுத் துடிக்கும் முதல் முனங்கொலி மேலும் புகையின் முதல் இழுவை நுரையீரல்களை நிரப்புதல். புதிய சிந்தனையே நீயும் கூடத்தான்.
From The Darkest Times 1938-41
ஃபின்லாந்தில் நாங்கள் அகதிகள். என் குட்டி மகள் எந்தக் குழந்தையும் அவளுடன் விளையாடவில்லை என்பதைப் பற்றி புகார் சொன்னபடி மாலையில் வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். அவள் ஒரு ஜெர்மன் தேசத்தவள் அவள் வருவது தாதாக்களின் தேசமான ஜெர்மனியிலிருந்து. ஒரு விவாதத்தின் போது நான் உரத்த சொற்களை பரிமாற்றும்போது நான் அமைதியாக இருக்கும்படி சொல்லப்படுகிறேன். இங்குள்ள மக்கள் தாதாக்களின் தேசமான ஜெர்மனியிலிருந்து வரும் ஒருவரின் உரத்த சொற்களை விரும்புவதில்லை. நான் என் குட்டி மகளுக்கு ஜெர்மனியர்களின் தேசம் தாதாக்களின் தேசம் என்பதை நினைவூட்டும்போது அவள் என்னுடன் சந்தோஷப்படுகிறாள் மேலும் அவர்கள் நேசிக்கப்படுதில்லை என்பதையும். இருவரும் சேர்ந்து சிரிக்கிறோம்.
விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்த நான் ரொட்டி வீணாய் வீசப்படுவதைக் கண்டு வெறுப்டைகிறேன் நான் போரை எவ்வளவு வெறுக்கிறேன் என்று நீங்கள் நன்றாய் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு பாட்டில் மது அருந்திபடி எமது ஃபின்லாந்து நண்பி விவரிக்கிறார் போர் எவ்வாறு அவளது செர்ரித் தோட்டத்தை நாசமாக்கியதென. நாங்கள் அருந்திக் கொண்டிருக்கும் மது அதிலிருந்து வருகிறது என்றாள் அவள். எங்கள் கோப்பைகளைக் காலி செய்தோம் நிர்மூலமாக்கப்பட்ட செர்ரி பழத்தோட்டத்தை நினைவில் நிறுத்தி மேலும் காரண அறிவின் பொருட்டும்.
இந்த ஆண்டு மனிதர்களால் பேசப்படப் போகிறது. இந்த ஆண்டு பற்றி மனிதர்கள் மௌனம் சாதிக்கப்போகிறார்கள். வயோதிகர் இளையோர் இறப்பதைக் காண்பர் முட்டாள்கள் அறிவார்ந்தவர்கள் இறப்பதை. இந்தப் பூமி இனியும் உண்டாக்குவதில்லை. அது விழுங்கிவிடுகிறது. வானம் மழையைப் பொழிவதில்லை இரும்பை மாத்திரமே.
From The Darkest Times 1938 - 41
சூய்யான் மாகாணத்திலிருந்து அக்டோபர் மாதத்தில் நாங்கள் கிளம்பினோம் நாங்கள் நேராக தெற்குதிசை நோக்கி விரைந்து பறந்தோம் மாகாணங்களின் ஊடாய் சில நாட்கள் எடுத்துக்கொண்டோம். விரைந்து பற சமவெளி காத்திருக்கிறது குளிர் அதிகரிக்கிறது மேலும் அங்கே கதகதப்பாய் இருக்கிறது.
சூய்யான் மாகாணத்திலிருந்து நாங்கள் புறப்பட்டோம், எங்களில் எட்டாயிரம் பேர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேராகப் பெருகினோம் நான்கு மாகாணங்களின் ஊடாய் அப்பால் வந்தோம் ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டு.
இப்பொழுது நாங்கள் சமவெளியின் மீதாய் பறந்து கொண்டிருக்கிறோம் ஹூனான் பிரதேசத்தில் எங்களுக்குக் கீழே பெரும் வலைகளைப் பார்க்கிறோம் மேலும் அறிகிறோம் ஐந்து நாட்களாய்ப் பறந்து எங்கே வந்திருக்கிறோம் என: சமவெளிகள் காத்துக் கொண்டிருந்தன வெதுவெதுப்பு அதிகரிக்கிறது ஆனாலும் எங்கள் மரணம் நிச்சயம்.
From Svendborg Poems
உனக்கான ஒரு இல்லம் அங்கே. உன் பொருள்களுக்கான ஓர் அறை உள்ளது. உனக்குப் பொருத்தமான வகையில் மரச்சாமான்களை மாற்றி வைத்துக் கொள். உனக்கென்ன தேவை என்பதை எங்களிடம் சொல். இதோ சாவி இங்கே தங்கிவிடு. நம் எல்லோருக்குமான முகப்பறை இருக்கிறது உனக்கான ஒரு படுக்கையுள்ள ஒரு அறையும் உள்ளது. முற்றத்தில் நீ எங்களுடன் இணைந்து பணிசெய்யலாம். உனக்கான சாப்பிடும் தட்டு உள்ளது எங்களுடன் தங்கு. இதுதான் நீ தூங்கும் இடம் படுக்கை விரிப்புகள் இன்னுமே சுத்தமாய் உள்ளன. அது ஒரே ஒரு தடவை மட்டுமே உறங்கப் பயன்பட்டுள்ளது நீ சுத்தம் பார்க்கிறவனாய் இருந்தால் அங்கே உள்ள பக்கெட்டில் தகரக்கரண்டியை அலசிவிடு அது புதியதைப் போலிருக்கும் நீ எங்களுடன் தங்க வரவேற்கிறோம். சீக்கிரம் அதுதான் அந்த அறை இல்லையென்றால் இரவு மட்டும் தங்கலாம் ஆனால் அதற்கு கூடுதல் செலவாகும் நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் சரி, எனக்கு உடல்நலக்குறைவில்லை வேறெங்கிலும் இருக்கும் அளவுக்கு சௌகரியமாய் இங்கே இருப்பாய் எனவே நீ எங்களுடன் இங்கே தங்கவும் செய்யலாம்.
From Poems written between 1926 and 1933
நான் கேள்விப்படுகிறேன் நியூயார்க் நகரில் குளிர்மாதங்களில் பிராட்வேயில் 26வது தெருவின் திருப்பத்தில் ஒரு மனிதன் ஒவ்வொரு மாலையிலும் நிற்கிறான் மேலும் அங்கிருக்கும் வீடற்றவர்களுக்கு வழிபோக்கர்களிடம் முறையீடு செய்து படுக்கைகளைப் பெற்றுத் தருகிறான் என. அது உலகை மாற்றிவிடாது அது மனிதர்களுக்கிடையலான உறவுகளை மேம்படுத்தாது சுரண்டலின் காலத்தை அது குறைக்கப் போவதில்லை. ஆனால் சில மனிதர்களுக்கு இரவுக்கான படுக்கை கிடைக்கிறது ஓரிரவுக்கு காற்றிலிருந்து தப்பிக்கின்றனர் அவர்கள் மீது விழ இருந்த பனி சாலைவழியில் வீழ்கிறது. இதைப்படித்தவுடன் புத்தகத்தை கீழே வைத்துவிடாதே மனிதா. சில மனிதர்களுக்கு இரவுக்கான படுக்கை கிடைக்கிறது ஓரிரவுக்கு காற்றிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர் அவர்கள் மீது விழ இருந்த பனி சாலை வழியில் வீழ்கிறது. ஆனால் அது உலகினை மாற்றிவிடாது அது மனிதர்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தாது அது சுரண்டலின் காலத்தைக் குறைக்காது.
From Poems written between 1926 and 1933
தீப்ஸ் நகரத்தின் ஏழு நுழைவாயில்களைக் கட்டியது யார்? புத்தகங்களில் நீங்கள் அரசர்களின் பெயர்களைக் காண்பீர்கள். பாறைகளின் திரள்களை அரசர்கள் இழுத்து மேலேற்றினார்களா? மேலும் பாபிலோன் பல முறை இடிக்கப்பட்டபோது அத்தனை முறை அதை மீட்டுயர்த்தியது யார்? என்னவிதமான தங்கமுலாம் பளபளக்கும் லிமா வீடுகளில் கட்டிடத் தொழிலாளர்கள் வாழ்ந்தார்கள்? சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டபோது கொத்தனார்கள் அந்த மாலை எங்கே சென்றனர்? மகத்தான ரோம் நகர் வெற்றி வளைவுகளால் நிறைந்துள்ளது. அவற்றை எழுப்பியவர்கள் யார்? யாரை எதிர்த்து வெற்றிபெற்றனர் சீசர்கள்? பாடல்களில் புகழப்பட்ட பைஸாண்ட்டியம் அதில் வசித்தவர்களின் மாளிகைகளாய் மட்டுமே இருந்ததா? கட்டுக்கதைகளின் அட்லாண்ட்டிஸில் கூட அதை கடல் கொண்ட இரவில் மூழ்கியவர்கள் தமது தமது அடிமைகளுக்காக இன்னும் கூக்குரலிட்டனர். இளம் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றார். அவர் தன்னந்தனியனாய் இருந்தாரா? கால் தேசத்தவர்களைத் தோற்கடித்தார் சீஸர். அவருடன் ஒரு சமையல்காரர் கூட இருக்கவில்லையா? ஸ்பெயின் தேசத்தின் ஃபிலிப் அரசர் அவரது போர்க்கப்பல் மூழ்கியபோது அழுதார். அழுதது அவர் மாத்திரம்தானா? ஃபிரெடரிக் ஏழு ஆண்டுகளின் போரில் ஜெயித்தார். அவர் தவிர வேறு யார் அதை ஜெயித்தது? ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றியாக இருக்கிறது. வெற்றியாளர்களுக்கு விருந்து சமைத்தவர்கள் யார்? ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு மாமனிதன். பணத்தைச் செலுத்தியவர்கள் யார்? அத்தனை அறிக்கைகள் அத்தனை கேள்விகள்.
From The First Years of Exile 1934-1936
நிஜத்தில் நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன். நேர்மையான சொல் முட்டாள்தனமானது. மிருதுவான நெற்றி உணராத்தன்மையை தெரிவிக்கிறது. சிரிக்கும் மனிதன் இன்னும் பயங்கர செய்தியைக் கொண்டவனில்லை. என்னவிதமான காலங்கள் இவை மரங்களைப் பற்றிப் பேசுவது ஏறத்தாழ குற்றமாகிறது? காரணம் அது பல்வேறு பயங்கரங்களைப் பற்றிய மௌனத்தை உணர்த்துவதுதானா? அதோ வீதியை அமைதியாகக் கடந்து செல்லும் மனிதன் ஏற்கனவே தனது உதவி தேவைப்படும் நண்பர்களின் அணுகுதலுக்கு அப்பால் சென்றுவிட்டான்? நான் என்னைப் பேணும் உணவை இன்னும் சம்பாதிக்கிறேன் ஆனால், என்னை நம்புங்கள், அது ஒரு விபத்து மாத்திரமே. நான் செய்யும் எதுவும் நிறைவான உணவை உண்ணும் உரிமையை எனக்களிப்பதில்லை. சந்தர்ப்பவசமானக நான் பிழைத்திருக்கிறேன் (என் அதிர்ஷ்டம் முறிந்தால் நான் தொலைந்து விடுவேன்) அவர்கள் என்னிடம் சொல்கின்றனர்: சாப்பிடு, குடி. அவையெல்லாம் கிடைத்திருப்பது பற்றி சந்தோஷப்படு. நான் உண்பதைப் பட்டினியில் கிடக்கும் ஒருவரிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும்போது நானெப்படி உண்ணவும் குடிக்கவும் இயலும் மேலும் அந்த கண்ணாடித் தம்ளர் குடிநீர் தாகத்தினால் சாகும் ஒருவருக்கு சேர வேண்டியதாய் இருக்கையில்? இருப்பினும் நான் உண்ணவும் குடிக்கவும் செய்கிறேன். நான் அறிவார்ந்தவனாய் இருக்க விரும்புவேன். புராதனப் புத்தகங்களில் விவேகம் என்னவென்று சொல்லப்பட்டிருக்கிறது: இந்த உலகின் சச்சரவுகளைத் தவிர்த்தல் மற்றும் உங்கள் குறைந்த காலத்தை பயமின்றி வாழ்தல் மேலும் வன்முறையின்றி ஒத்து வாழ்தல் தீவினைக்கு நல்வினையைப் பதிலாய்த் தருதல் உங்கள் விழைவுகளை நிறைவேற்றிக்கொள்ளாது மாறாக அவற்றை மறந்துவிடுல். இவை எல்லாம் புத்திசாலித்தனம் எனக் கருதப்பட்டது. இவற்றை என்னால் செய்யவியலாது: நிஜமாய், நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன்.
நான் நகரங்களுக்கு வந்தது ஒரு சீர்குலைவின் காலத்தில். அப்போது அங்கே பசி அரசோச்சியது. நான் மனிதர்களுக்கிடையே வந்து சேர்ந்த சமயம் கலகக் காலம் மேலும் நான் அவர்களுடன் இணைந்து கலகம் செய்தேன். இவ்வாறு எனக்கு இந்த பூமியில் அளிக்கப்பட்ட என் காலத்தைக் கழித்தேன். போர்களுக்கிடையே நான் என் உணவினை உண்டேன். உறங்குவதற்கு நான் கொலைகாரர்களுக்கிடையில் படுத்துக்கொண்டேன். காதலை நான் கவனமின்றிக் கையாண்டேன். மேலும் இயற்கையை நான் பொறுமையின்றி நோக்கினேன். எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தைப் போக்கினேன் இவ்வாறு.
என் காலத்தில் எல்லா சாலைகளும் சகதிக்குள் இட்டுச்சென்றன.
கசாப்புக்காரர்களிடம் என் நாக்கு என்னைக் காட்டிக்கொடுத்தது.
என்னால் செய்யவியன்றதெல்லாம் சொற்பமே.
ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்
நானின்றிப் பாதுகாப்பாய்:
அது என் நம்பிக்கையாய் இருந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
கழித்தேன் இவ்வாறு.
எமது படைப்பிரிவுகள் பலவீனமாய் இருந்தன.
எமது நோக்கம் தொலைவில் கிடந்தது.
என்னால் அதனை அடைய சாத்திமற்றிருந்தும்
அது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
போக்கினேன் இவ்வாறு.
வெள்ளத்திலிருந்து வெளிப்படப்போகிற நீங்கள் அதில் நாங்கள் மூழ்கிப்போனோம். நினைவிருக்கட்டும் எமது தோல்விகள் பற்றிப் பேசுகையில் இருண்ட இருண்ட காலத்திலிருந்தும் கூட நீங்கள் தப்பித்துவிட்டீர்கள். காரணம் எம் காலணிகளை மாற்றுவதைவிட அடிக்கடி நாங்கள் நாடுகள் மாறினோம். வர்க்கங்களின் யுத்தங்களின் ஊடாய் வெறும் அநீதி மாத்திரமே இருந்தபோது நம்பிக்கையிழந்தோம் மேலும் கலகம் ஒன்றுமில்லை. இருப்பினும் நாங்கள் அறிவோம்: வெறுப்பு, கீழ்மையைப் பற்றியது கூட தோற்றக்கூறுகளை கோணல்மாணலாக்குகிறது. அநீதிக்கு எதிரான கடுங்கோபம் கூட குரலைக் கரகரப்பாக்குகிறது. ஓ நட்பார்ந்த தன்மைக்கான அடித்தளத்தைத் தயார் செய்ய விரும்பிய நாங்களே நட்புடன் இருக்க இயலவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கான உதவியாளனாய் மாறும் காலம் வரும்போது எம்மைப் பற்றி எண்ணிப்பாருங்கள் பொறுமையுடன்.
Svendborg Poems (1939)
ஒரு புனைவெழுத்தாளருக்கும் விமர்சகருக்கும் 1947ல் பிறந்தவர் லிடியா டேவிஸ். முதல் வகுப்பில் ஆங்கிலமும் இரண்டாவது வகுப்பில் ஜெர்மனும் (ஆஸ்திரியாவில்) பயில வாய்த்தவர். கதையின் முடிவு என்ற நாவலும் (The End of the story, 1995), பல்வேறு வகைகளான தொந்தரவுகள் (Varieties of Disturbance, 2007), சாமுவேல் ஜான்சன் கடுஞ்சினத்திலிருக்கிறார் (Samuel Johnson is indignant, 2002), அனேகமாக நினைவில்லை (Almost No Memory, 1997), ணீஸீபீ பிரித்தாய்க (Break It down, 1986) ஆகிய நான்கு முழுநீள சிறுகதைத் தொகுப்புகளும் பல்வேறு சிறுதொகுப்புகளும் அடங்கியது அவரது படைப்புலகம்.
அவரது எழுத்துக்கள் வடிவ வகைப்படுத்தலுக்கு ஆகாதவை. எளிதாக அவரது சில புனைவுகளை கட்டுரையென்றோ கவிதையென்றோ அழைத்துவிடலாம். பெரும்பான்மையான அவரது கதைகள் அளவில் மிக மிகச் சிறியவை. அவரது கதைசொல்லிகளுக்கு பெரும்பாலும் மிகக்குறுகிய வாய்ப்புகள் கொடுக்கப் பெற்றாலும் அவை மிகக்கூறிய கவனம் கொண்டவை. கதைச்சொல்லிகளின் அவதானிப்புகளை, சமயங்களில் விளையாட்டாக, உணர்ச்சிகளற்றவை எனக்கூறிவிடலாம் மேலும் இந்த ஒரு காரணத்தைக் கொண்டே லிடியா டேவிஸ் கதைகளில் கணிசமான அளவிலான உணர்ச்சிக் கூறுகள் உட்பொருட்களாக இருப்பதைக் காணலாம்.
பிரெஞ்சு இலக்கியத்தையும் மெய்யியலையும் மொழிபெயர்த்திருக்கிறார், மார்சல் ப்ரௌஸ்டின் De cote de chez Swann-a Swann’s way என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார், அது பரவலான விமர்சக கவனத்தைப் பெற்றது. மரீஸ் ப்ளான்சாட், பியர் ழான் ஜுவோ, மிசெல் லெய்ரிஸ் போன்றோரது படைப்புகளையும் மொழிபெயர்த்த்ருக்கிறார்.
புனைவுக்கான மெக்கார்த்தர் ஃபெல்லோசிப் உட்பட எழுத்திற்கான முக்கியமான பல அமெரிக்க விருதுகளைப் பெற்றிருக்கிறார், பிரெஞ்சு அரசாங்கத்தின் எழுத்து மற்றும் கலைக்கான செவாலியே விருதும் பெற்றிருக்கிறார். நியூயார்க் அரசு பல்கலைக்கழகத்தின் அல்பானி பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் லிடியா டேவிஸ் வடக்கு நியூயார்க்கில் வசிக்கிறார்.
சாமுவேல் பெக்கெட், ஜேம்ஸ் ஜாய்ஸோடு விளாதிமிர் நபக்கோவையும் தனது ஆதர்சமாக கொண்டவர் லிடியா, நன்கு பியானோ வாசிக்கூடியவர் லிடியா. தன் எழுத்து இசைக்கு நெருக்கமாக ஒரு வடிவைக் கொண்டிருப்பதற்கு இம்மூவரையும் உதாரணமாகக் கூறுகிறார்.
ஆங்கில இலக்கணம் குறித்த மிக விஸ்தாரமான அறிவும் திறனுமுடையவர், வடிவம் என்பதன் கச்சிதத்தன்மையோடு, சிக்கனமான மிகச்சரியான சொற்பிரயோகங்களைக் கொண்ட கதைகளை எழுதும் அவர், எக்காரணம் கொண்டும் ட்வீட்டர் இலக்கியத்துடன் தனது உழைப்பை ஒப்பிட விரும்பாதவர். பெரும்பான்மையான அளவில் சிறிய மிகச்சிறிய கதைகளானாலும் சரி, ‘வீ மிஸ் யூ’ போன்ற அளவில் பெரிய கதைகளானாலும் சரி, வாசிப்பாளனின் கடின உழைப்பைக் கோருபவைகளாக அவை உள்ளன.
முழுக்க முழுக்க அமெரிக்க எழுத்து, எழுத்தாளர்களைக் கொண்ட உதாரணங்களால் மேற்கண்ட உரையாடல் நடைப்பெற்றாலும், நம் சூழலுக்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளும்போது, ஏன் இங்கு தயாரிக்கும் பட்டியல்களில் எதற்கு சில படைப்புகள் விடுபட்டு விடுகின்றன. தமக்கு உவப்பில்லா விஷயங்களை நாம் ஏன் தொடுவதே இல்லை என்பதும் விளங்க வாய்ப்பிருக்கிறது.
சிறுகதை என்பது வாழ்வில் உள்ள ஒரே ஒரு புள்ளியை எடுத்துக்கொள்வது என ஜெயமோகன், சிறுகதை - சமையல் குறிப்பில் குறிப்பிட்டிருப்பார், லிடியா டேவிஸின் கதைகள் அதைக் கடந்து வாழ்வின் ஒரு காற்புள்ளியாகவோ, அரைப்புள்ளியாகவோ, தொடர்புள்ளியாகவோ வடிவ விரிவு கொண்டுள்ளதை நாம் உணரலாம்.
மிஸஸ்.ஓர்லாந்தோவினுடய உலகம் இருண்ட ஒன்று. அவளது வீட்டிற்குள் அபாயமாகரமானவை என்னவென்று அவளுக்குத் தெரியும்: கேஸ் அடுப்பு, செங்குத்தான மாடிப்படிகள், வழவழப்பான குளியல் தொட்டி மற்றும் பல்வேறுவகைகளான மோசமான வொயரிங். அவளது வீட்டிற்கு வெளியே உள்ள அபாயங்களைச் சிறிதளவே அறிந்திருந்தாலும் அவை குறித்து அவளுக்கு முழுமையாகத் தெரியாது. மேலும் தனது அறியாமையினால் அச்சப்படுமவள், குற்றச்செயல், பேரழிவு குறித்த செய்திகளை அறிய பேரார்வம் கொண்டிருந்தாள்.
அவள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பினும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் போதுமானதாக இருப்பதில்லை. தீடீர் பசி, ஜலதோசம், அலுப்பு, மற்றும் கடுமையான இரத்தப்போக்கிற்கென அவள் தயாராக முயல்வாள். ஒரு பேண்டெய்டோ, ஊக்கோ, மற்றும் கத்தியோயின்றி அவள் இருந்ததே இல்லை. இருக்கும் பல்வேறு பொருட்களோடு, ஒரு முழம் கயிறு, விசில் மேலும் இங்கிலாந்தின் சமூக வரலாறும், (எப்போதும் நெடுநேரம் ஷாப்பிங் செய்யும் மகள்களுக்காக காத்திருக்கும்போது வாசிக்க) அவளது காரில் இருக்கும்.
பொதுவாக ஆண்கள் தன்னுடன் இருப்பதை விரும்பினாள்: ஓங்குதாங்கான ஆகிருதியாலும் உலகு குறித்த பகுத்தறிவு கண்ணோட்டத்தாலும் அவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பளிக்கின்றனர். தனது கேள்விகளுக்கு பதிலளிக்க தயங்கும் ஒருவன், சந்திப்பிற்கென முன்கூட்டியே மேசையை பதிவு செய்யும் ஆண், இவர்களது மதிநுட்பத்தை மெச்சுவதோடு மதிக்கவும் செய்வாள். வக்கீல்களை வேலைக்கு வைத்துக்கொள்வதில் நம்பிக்கை கொண்டிருந்த அவள் அவர்களுடனான உரையாடலில் மிகுந்த சௌகரியத்தைக் கொண்டிருந்தாள். ஏனெனில் அவர்களது சொற்கள் ஓவ்வொன்றும் சட்டத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டவை. ஆனால் நகருக்கு ஷாப்பிங் செல்ல வேண்டுமானால் தனித்து போகாமல் தன் பெண்களையோ அல்லது பெண் தோழியையோ அவளோடு வரக்கூப்பிடுவாள்.
நகரின் நடுவில், ஓரு முறை லிப்டில் வைத்து ஒருவனால் அவள் தாக்கப்பட்டாள். ஆளோ கருப்பினத்தவன், நேரமோ இரவு நேரம், இடமோ முன்பின் தெரியாதது. இவளோ அப்போது பருவப்பெண். இப்படித்தான் நெரிசல் மிக்க பேருந்திலும் பலமுறை தொந்தரவுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறாள். ஒரு முறை உணவகம் ஒன்றில், பரிசாரகனோடு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி விட்டது, கோபமடைந்த அவன், அவள் கைகளில் காப்பியை ஊற்றிவிட்டான்.
சுரங்கப்பாதையில் வழி தவறிச்செல்லும் அவள் நகரில் அதன் பாதாளத்துக்கு தூக்கிச் செல்லப்படுவோமோ என்று பயப்படுவாளே தவிர அந்நியப்பட்ட அந்த தாழ்ந்த வர்க்கத்திடம் வழிகேட்டுச்செல்ல மாட்டாள். பலதிறப்பட்ட குற்றங்களுக்கு திட்டமிடும் கருப்பினத்தவர்களை நடந்து செல்லுந்தோறும் கடந்து செல்வாள். அவர்களின் யாரேனும் ஒருவன் எந்த நேரத்திலும் இவளிடமிருந்தோ மற்றொருவளிடமிருந்தோ எதை வேண்டுமானாலும் அபகரித்துக் கொண்டுவிடலாம்.
வீட்டில், தன் பெண்களுடன் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசுவாள். அவளது பேச்சு யாவும் பேரழிவுக் குறித்த முன்னறிவிப்பாகவே இருக்கும். தனது மனநிறைவை வெளிப்படுத்த விரும்பமாட்டாள், ஏனென்றால் அவள் அதிர்ஷ்ட ஓட்டத்தை கெடுத்துவிடக்கூடும் என்று பயப்படுவாள். ஏதோவொன்று சிறப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்ல நேர்ந்தால், அதைக்கூற தனது குரலைத்தாழ்த்துவாள் மேலும் அதைக்கூறிய பின்பு தொலைப்பேசி மேசையில் முட்டிக்கொள்வாள். அவள் பிள்ளைகள் சொல்வதில் அவள் ஏதேனும் அச்சுறுத்தும் ஒன்றைக் கண்டுப்பிடித்துவிடுவாள் எனத் தெரிந்து, அவர்கள் மிகச்சொற்பமானவற்றையே இவளிடம் கூறுவார்கள். மேலும் அவர்கள் அவ்வளவு சொற்பமானவற்றை அவளிடம் கூறும்போது அவள் ஏதொவொன்று - அவர்களின் உடல்நலத்திலோ அல்லது அவர்களின் திருமணத்திலோ பிரச்சினையென்று பயப்படுவாள்.
ஒரு நாள் தொலைபேசியில் தன் பிள்ளைகளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தாள். ஷாப்பிங் செய்யத் தனியாக நகருக்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்திவிட்டு துணிக்கடைக்குள் செல்கிறாள். துணிகளைப் பார்க்கிறாள் ஆனால் எதையும் வாங்கவில்லை, இரண்டு துண்டு மாதிரிகளை மட்டும் எடுத்து அவளது பர்ஸில் வைத்துக்கொள்கிறாள். ஓரப்பாதைகளில் நிறைய கருப்பர்கள் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவளை நடுக்கமுறச் செய்தார்கள். காரை நோக்கிச் செல்கிறாள். அவளது சாவியை வெளியே எடுக்கையில், காரின் அடியிலிருந்து ஒரு கை அவளது கணுக்காலைப் பிடிக்கிறது. அவளது காரின் அடியில் ஒருவன் படுத்துக்கொண்டிருக்கிறான் தனது கருத்த கையால் இப்போது அவளது உறையணிந்த கணுக்காலை பிடித்துக் கொண்டு காரால் தடைப்பட்ட குரலில் அவளது பர்ஸைப் போட்டுவிட்டு விலகிப் போகச்சொல்கிறான். நிற்கவே முடியவில்லையெனினும், சொன்னபடியே செய்கிறாள்.
ஒரு கட்டிடத்தின் சுவரில் சாய்ந்து காத்திருந்தபடியே பர்ஸைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அது தடுப்பில் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. கொஞ்சம் பேர் அவளைப் பார்த்தனர். பின்பு காருக்கு நடந்துச்சென்றாள், ஓரப்பாதையில் மண்டியிட்டு கீழே பார்க்கிறாள். பின்னே தெருவில் தெரியும் சூர்ய வெளிச்சத்தையும் காரின் வயிற்றிலுள்ள சில குழாய்களையுமே அவளால் பார்க்க முடிந்தது. அவன் இல்லை. தனது பர்ஸை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செலுத்துகிறாள்.
அவளது கதையை அவளுடைய பெண்கள் நம்பவில்லை. ஏன் ஒரு மனுஷன் அந்த மாதிரி ஒரு விசித்திரமான விஷயத்தைச் செய்யவேண்டும், அதுவும் பட்டபகலில் எனக் கேட்டனர். அவன் அப்படியெல்லாம் சாதாரணமாக காற்றில் மறைந்து போயிருக்க முடியாது எனக்குறிப்பிட்டனர். அவர்களது நம்பிக்கையின்மையினால் கடுங்கோபமடைந்தாள். மேலும் அவர்கள் பட்டப்பகல், காற்றில் மறைவது என பேசும் விதம் அவளுக்கு பிடிக்கவில்லை.
கணுக்காலில் நடந்த தாக்குதலுக்கு பிறகான நாட்களில், இரண்டாவது சம்பவம் ஒன்று அவளை வருத்தமடையச் செய்தது. சமயங்களில் செய்வது போல மாலையில் தன் காரைச் செலுத்தி கடற்கரைக்கு அருகில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்துகிறாள், அப்போதுதான் அமர்ந்தபடி கண்ணாடி வழியே அஸ்தமனத்தைக் காணலாம். எனினும் இந்த மாலையில், எப்போதும் காணும் நிசப்தமான ஆளரவமற்ற கடற்கரையைப் பார்க்கவில்லை, தண்ணீருக்கு மேலே இருக்கும் மரப்பாலத்தைப் பார்த்தபடி இருக்கிறாள், சிறு கொத்தான மக்கள் மணலில் கிடக்கும் ஏதோவொன்றினைச் சுற்றி நின்று கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அவள் உடனடியாக ஆர்வமாகிவிட்டாள், ஆனால் அஸ்தமனத்தைப் பார்க்காமலும் மணலில் என்ன இருக்கு என்பதை போய்ப் பார்க்காமலும் சென்றுவிடலாமென்று அரை மனதாகத் தோன்றிக்கொண்டிருந்தது. அது என்னவாக இருக்குமென்று யோசிக்க முயன்றாள். அதுவொரு விலங்காக இருக்கலாம், ஏனென்றால் மக்கள் இவ்வளவு நேரம் வெறித்து பார்க்கிறார்களென்றால் ஒன்று அது உயிரோடு இருந்திருக்கவேண்டும் அல்லது உயிரோடு இருக்கவேண்டும். பெரிய மீனை கற்பனை செய்து கொள்கிறாள். அது கண்டிப்பாக பெரியதாக இருக்கவேண்டும், சிறிய மீன் என்பது அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை, அல்லது ஜெல்லி மீன் போன்றதோ இல்லை அதுவும் சிறியது. டால்பினை கற்பனைச் செய்கிறாள் மேலும் சுறாவை கற்பனைச் செய்கிறாள். அதுவொரு கடல் சிங்கமாகவும் இருக்கலாம். அது ஏற்கனவே இறந்திருக்கக்கூடும், அது இறந்துக் கொண்டிருக்கவும் கூடும் மேலும் இந்த கொத்தான மக்கள் அது இறப்பதை பார்த்துக் கொண்டிருக்க எண்ணக்கூடும்.
இப்பொழுது கடைசியாக மிஸஸ்.ஓர்லாந்தோவே தானே போய் பார்க்க வேண்டும். தன் பர்ஸை எடுத்துக் கொண்டு காரை அடைத்துவிட்டு, தாழ்வான கான்கிரீட் சுவறைக் கடந்து, மணலில் இறங்குகிறாள். உயர்ந்த ஹீல்ஸில் கடினமாக, கால்கள் வெகு அகலமாக, மெதுவாக நடக்கிறாள், பளபளக்கும் பர்ஸை அதன் பட்டையைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள், அது முன்னும் பின்னும் வெகுவாக ஊசலிடுகிறது. கடற்காற்று அவளது பூப்போட்ட ஆடையைத் தொடைக்கெதிராக அழுத்துகிறது. மேலும் அதன் ஓரம் மகிழ்வோடு அவளது முட்டியைச்சுற்றி படபடக்கிறது, ஆனால் அவளது இறுக்கமான வெள்ளி சுருள்கள் அசைவின்றி இருந்தது, அவள் முன்னோக்கி செல்லச் செல்லக் குழப்படைந்தாள்.
அவள் மக்களிடையே நுழைந்தபடி கீழே நோக்குகிறாள். மணலில் கிடப்பது ஒரு மீனோ அல்லது கடற்சிங்கமோ இல்லை அதுவொரு இளைஞன். அவன் பாதங்கள் ஒன்றிணைந்தும் கைகள் அவனுக்கு ஓரமாகவும் இருக்க மிக நேராக கிடக்கிறான், அவன் இறந்துவிட்டான். யாரோ அவனை செய்திதாள்களால் மூடியிருக்கிறார்கள் ஆனால் காற்று காகிதத்தாள்களை தூக்கிச்செல்கிறது, ஓவ்வொன்றாக சுருண்டு மணலில் சறுக்கியபடி சுற்றியிருக்கும் மக்களின் கால்களைச் சுத்திக்கொள்கிறது. கடைசியில் ஒரு மாநிறத்தவன், மிஸஸ்.ஓர்லாந்தோவிற்கு அவன் ஒரு மெக்ஸிகனைப்போல் தெரிகிறான், வெளிவந்து கடைசியான செய்திதாளையும் மெதுவாக எடுத்துவிடுகிறான், இப்போது அனைவரும் இறந்தவனை நன்றாகப் பார்க்கிறார்கள். அவன் மெலிதாக அழகானவனாக இருக்கிறான், அவனது சாம்பல் நிறம் அங்கங்கு மஞ்சளாக மாறத்தொடங்குகிறது.
மிஸஸ்.ஒர்லாந்தோ பார்த்தபடி ஒன்றியிருக்கிறாள். சுற்றியிருப்பவர்களைப் பார்க்கிறாள் அவர்களும் தம்மை மறந்து பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்க அவளால் முடிகிறது. மூழ்கிச்சாவது... இது மூழ்கிச்சாவதுதான்... இது தற்கொலையாகக்கூட இருக்கலாம். அவள் மணலில் தடுமாறித் திரும்புகிறாள். அவள் வீடு திரும்பியவுடன், உடனடியாக அவளது பெண்களை அழைத்து அவள் கண்டதைக் கூறுகிறாள். தான் இறந்து போன மனிதனை கடற்கரையில் பார்த்ததுலிருந்து கூறத் தொடங்குகிறாள், மூழ்கிச்செத்தவன், பின்பு திரும்பவும் முதலிலிருந்து தொடங்கி மேலும் நிறைய கூறுகிறாள். அவளது பெண்கள் அமைதியிழந்தனர் ஏனென்றால் ஒவ்வொரு முறை கதை சொல்லும்போது அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாகிறாள்.
அடுத்த சில நாட்களுக்கு, அவள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறாள். பின்பு திடீரெனக் கிளம்பி தோழி ஒருவருடைய வீட்டிற்குச் செல்கிறாள். அவளிடம் தனக்கு ஆபாசமாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தான் இரவு இங்கேயே தங்கிவிடுவதாகவும் சொல்கிறாள். மறுநாள் வீட்டிற்குத் திரும்பவும், சில பொருட்கள் காணாமல் போயிருப்பதால், யாரோ வீடு புகுந்திருப்பதாக எண்ணுகிறாள். பின்பு ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு இடத்தில் இருப்பதைக் காண்கிறாள், திருடவந்தவன் அங்கு இருக்கிறான் எனும் எண்ணத்தை அவளால் இழக்க முடியவில்லை.
திருடர்களுக்கு பயந்தபடியே வீட்டிற்குள் அமர்ந்து என்ன பிரச்சனையாகப் போகுதோ என்று காத்திருக்கிறாள். குறிப்பாக இரவில் அமர்ந்திருக்கும்போது, அடிக்கடி வினோதமான சத்தங்களைக் கேட்பதால் ஜன்னல் விளிம்புகளுக்குக் கீழே திருடர்கள் இருப்பதாக உறுதியாக இருந்தாள். பின்பு வெளியே சென்று அவளது வீட்டை வெளிப்புறமாகப் பார்க்கவேண்டும். இருட்டில் வீட்டை சுற்றி வருவாள், திருடர்கள் யாரையும் காணாமல் திரும்ப உள்ளே சென்றுவிடுவாள். ஆனால் ஒரு அரைமணி நேரம் உள்ளே உட்கார்ந்த பின்பு திரும்பவும் வெளியே சென்று வீட்டை சோதிக்க வேண்டுமெனத்தோன்றும்.
வெளியே போவதும் உள்ளே வருவதுமாகவும் இருந்தாள், அடுத்த நாளும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாகவும் இருந்தாள். அதன்பின்பு வீட்டினுள்ளேயே இருந்தபடி தொலைபேசியில் மட்டும் பேசிக்கொண்டு, கதவுகளிலும் ஜன்னல்களிலும் ஒரு கண்னை வைத்தபடியும், வித்தியாசமான நிழல்களுக்கு உஷாராகவும் இருந்தாள், மேலும் இதற்கு பிறகான கொஞ்ச காலங்களுக்கு, அதிகாலையில் மண்ணில் கால்தடங்களைத் தேடுவதற்குத் தவிர அவள் வேறு எதற்கும் வெளியேச் செல்வதில்லை.
குறுக்கி தைத்த யோனி
நுழைப்பதிலும் கடினம்
எடுப்பதிலும் கடினம்…
சூரனும் முருகனும்
நேருக்கு நேர்
சந்திக்கும் முச்சந்தி
முருகனுக்குள் சூரனும்
சூரனுக்குள் முருகனும்
சந்திகளில் மட்டும் தான் நேருக்கு நேர்
பின்பு
முருகனுக்கு பின்னால் சூரனும்
சூரனுக்கு பின்னால் முருகனும்
எல்லா நகர்வையும் கவனிக்கும்
குழந்தைகள்
பெரியவர்கள்
வீதிகள்
பாருங்கள் பெண்பூனையொன்றை அழைக்கும் ஆண்பூனை அழுத்தமான மியாவ் சத்தம்.
‘அச்சுக்கோட்டை மறைத்தவர்’ குறித்து நேரடியாகப் பேசத் தொடங்குகிறேன், தலைசிறந்த பிரபாகர் பார்வேயை நான் அப்படித்தான் குறிப்பிடுவேன்!
அவர் இனங்கண்டுக்கொள்ளக்கூடிய உலகிலிருந்து அதன் வெளி அடிப்படையில் விலகிச்சென்றார் இருந்தும் இனங்கண்டுக்கொள்ளக்கூடிய வடிவங்களையே பயன்படுத்தினார்; அந்த இனங்கண்டுக்கொள்ளக்கூடிய வடிவங்களைச் சிதைப்பதற்கான முயற்சியும் இருந்தது, இருந்தும் அந்த முழுவுரு அதனுள்ளே உட்பொதிந்திருந்தது; உட்பொருளில் தோய்ந்த சிறுகூறுகள் மூலம் ஒரு சந்தம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்த பிரயாணமும் அருவமாகுதல் நோக்கியே இருக்கிறது; அறிவார்ந்த மனதின் குறைப்பாடுகளைக் கடப்பதற்கே அந்த பின்தொடர்தல், இருந்தும் நமது காட்சி உலகின் தத்ரூப எச்சங்களைக்கொண்டு நம்மை நங்கூரமிடுகிறார். பரிந்துரைக்கும் விதமான ஒன்றாய் இருப்பினும் அது ஒரு விசாரணைக்குட்படுத்தும் கட்டமைத்தலாகும்! வெளிப்பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பவற்றிற்கும் அதற்கிடையில் இருப்பவைக் குறித்தும் நிறைய விஷயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை! இருந்தும், வெளிப்படுத்தப்படாத விஷயங்கள் கனவுலகையோ மாய உலகையோ பிரதிபலிப்பவையல்ல, அது அங்கே கண்முன்னே கிடக்கும் ஒன்றை நோக்க எனைச் செலுத்துகிறது.
அந்த சர்ரியலிச திருப்பங்களின் மூலம் அவரது உள் உலகத்தோடு எனக்கு ஒரு பிணைப்பிருப்பதாக எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். வெளிபடுத்தப்படுவற்றை கிரகித்துக்கொண்டிருக்கும்போதே, அங்கில்லாத அச்சுக்கோட்டை பிடித்துக்கொள்ள தொடரும் உந்துதலோடு நான் ஒன்றிவிடுகிறேன். அவரது ‘மாக்ரீட்தனமான அமைப்பு’ வேலைப்பாடுகளால் வசீகரிக்கப்பட்டாலும், அவரது உள்ளார்ந்த படிமங்களோடான எனது நெருக்கம் அவரது அனைத்து படிநிலைகளிலும் நான் உணர்ந்தவொன்றாகும்.
எப்பொழுதெல்லாம் நான் பார்வேயை சந்தித்தாலும், எனது கேள்விக்கான விடையை எப்படியாவது கண்டுபிடித்துவிட முயல்வேன், ‘அச்சுக்கோட்டை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார்'.
முதன்முதலில் அவரை சந்திக்கும்போது அவரது பெரும்பான்மையான ஓவியங்களைப் பார்த்திருக்கவில்லை. அது 1973ல்… சராயு மற்றும் வினோத் பாஹியின் இல்லத்தில் கோச்சீயின் (சதானந்த ரெகேயின் மராத்தி நாடகம்) நிகழ்த்துதலுக்குப் பிறகு. அங்கு ஜஸ்ராஜ், கெய்தாந்தெ, பார்வே, பிரஃபுல்லா, ஜிதேந்திரா அபிஷேகி மற்றும் பலர் பார்வையாளர்களாக இருந்தது நாடகத்தின் இயக்குநராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அரங்க வளைவுகளுக்கு அப்பாலுள்ள வெளிகளை சோதிக்க எடுத்த எனது முயற்சி அனைவராலும் பாராட்டப்பெற்றது. ‘நான்காவது காட்சியின்’போது ஏற்பட்ட மதுகளிப்பிலும், அதை ‘மது மற்றும் விவாதங்கள் அமர்வென்று’ அழைத்தோம், எனது நாடகத்தினை அழகியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியது தெளிவாக ஞாபகமிருக்கிறது. சிறிய வெளியிலே, த்வனியை / ஒலியை புதிய அணுகுமுறையில் கையாண்டது குறித்து ப்ரஃபுல்லாவும் அபிஷேகியும் வெகுவாக பாராட்டினர். கதையை சர்ரியலிச தன்மையில் அணுகியதை கெய்தாந்தேவிற்கு பிடித்திருந்தது. எனது படைப்பில் உள்ள காலவெளியின் ஊடாட்டம் குறித்து பார்வே பேசினார். நம் வாழ்வின் சிறுமையோடு இருத்தலிய இருப்பின் பெருங்களிப்பை இணைத்த விதம் குறித்து பரவசப்பட்டார். ‘கோச்சீயின் பல்வேறு கணங்கள், டாலியின் ‘உருகும் காலத்தை’ நினைவுபடுத்துகிறது’. பார்வேயின் இந்த வரியை என்னால் என்றுமே மறக்கமுடியாது! என்னுள் இருக்கும் ஓவியனை உயிர்ப்போடு இயக்கத்தில் வைத்திருப்பதற்கு பார்வேயும் கெய்தாந்தேவும் வாழ்த்தினார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பார்வேயும் கெய்தாந்தேவும் என்னுடைய படைப்புக்குறித்து அவ்வளவு பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இன்றைய கூட்டம் சிறப்பான விழாவாவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பார்வேயின் புகழ்வாய்ந்த மீபுனைவு படைப்பாக்கங்களின் கண்காட்சி… அவர் இறப்பிற்குப் பிறகு முதன்முறையாக சுமார் இருபத்தி நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெறுவதே வரலாற்றுச் சிறப்புடையதாகிறது! இந்தப் பெரும் நிகழ்வை ஒருங்கிணைப்பதற்கும் அதை திறந்து வைப்பதற்கு என்னை அழைத்ததற்கும் ஜெசலுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தச் சிறப்பான கண்காட்சியை நடத்த மூன்று தளங்களுக்கு உயர்ந்திருக்கும்
உங்களின் இந்த பிரம்மாண்ட வஸ்துவை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த என்.ஜி.எம்.ஏவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் எல்லோரும் எதற்கு நான் குறிப்பாக என்.ஜி.எம்.ஏ விற்கு நன்றியைத் தெரிவிக்கிறேன் என சிந்திக்கக்கூடும். மிகவும் முக்கியமான ஒரு கலைஞனின் படைப்புகளைக் காட்சிக்கு வைக்க தேசியக்கலைக்கூடம் தன் இடத்தை தருவதில் அப்படியென்ன சிறப்பிருக்கிறது? இது என்னை என் இரண்டாம் காரணம் நோக்கி இட்டுச்செல்கிறது, ஏன் இவ்விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக ஆகிறதென! முன்னர் குறிப்பிட்ட மாக்ரீடின் மேற்கோள் இரண்டினைக் குறிப்பிடுகிறேன். ‘கட்புலனாகிற விஷயங்கள் எப்போதும் மற்ற புலப்படக்கூடிய விஷயங்களை மறைத்துவிடும். நாம் காணுவதால் மறைக்கப்பட்டு விடும் விஷயங்களையே நாம் எப்போதும் காண விரும்புகிறோம்’. மேலும் மாக்ரீத் ஒரு முறைக்கூறியிருக்கிறார், ‘துயரமான உலகை எப்போதும் முழுதாக ஒளிரச்செய்வதால் நாம் பகல் வெளிச்சத்தைக் கண்டு அஞ்சக்கூடாது’
இங்கிருக்கின்ற புலப்படக்கூடிய விஷயங்களையும் அதனுள்ளே ஒளிந்திருக்கக்கூடிய புலப்படக்கூடிய விஷயங்கள் குறித்தும் குறிப்பிடுகிறேன்! இந்த கண்காட்சிதான் இங்கு நடக்கக்கூடிய கடைசி நிகழ்ச்சியென்று உங்களில் பலருக்கு தெரியாது. அதுவும் அந்த முடிவு ஒரு அரசாங்க அதிகாரியால் எடுக்கப்பட்டதோ அல்லது ஒழுக்கமான நடத்தையை கோரும் அரசு இயந்திரத்தின் செயல்பாடோ அல்லது ஒரு பக்க கருத்தியல்சார் சாய்வு கொண்ட கலைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோ அல்ல, மாறாக அம்முடிவு வட்டார கலைஞர்களின் ஆலோசனைக்குழுவால் எடுக்கப்பட்டது. 13 நவம்பர் 2018டோடு மும்பையிலும் பெங்களூரிலும் செயல்பட்டு வரும் கலைஞர்களின் ஆலோசனைக்குழு கலைக்கப்பெற்றதாக அறிகிறேன். நான் கேள்விபெற்றதை அதிகாரபூர்வமாக விசாரித்து அறிந்துகொள்ளும் வேலையில் இருக்கிறேன். எந்த கூட்டம் என்.ஜி. எம்.ஏ.வின் எந்த இடத்தில், அதாவது மும்பையிலா பெங்களூரிலா எங்கு நடக்குமென்பதை இதுநாள் வரையில் முடிவு செய்தது வட்டார கலைஞர்களின் ஆலோசனைக்குழு. ஒவ்வொரு குழுவும் மூன்று வருடங்களுக்கு செயல்பட்டது.
காலம் நிறைவடைகையில் புதிய உறுப்பினர்களால் குழு மறுஆக்கம் பெற்றுவந்தது. கண்காட்சியின் கருப்பொருள் / உள்ளடக்கம் ஆகியவற்றை முடிவு செய்வதிலும், யாருடைய படைப்புகள் காட்சிக்குட்படுத்துவது போன்ற முடிவுகளிலும் வட்டார கலைஞர்களின் நேரடியான பங்கேற்பு இருந்தது. 13ம் நவம்பர் 2018லிருந்து இத்தகைய அனைத்து முடிவுகளும் டெல்லியிலுள்ள கலாச்சார அமைச்சகத்தின் மூலம் எடுக்கப்படப் போவதாக அறிகிறேன். தற்போது பழைய குழுவின் காலம் அக்டோபர் 25, 2018 -டோடு முடிவடைந்ததற்கு பிறகு புதிய குழு கூட்டப்படவில்லை என்பதும் தெரிகிறது.
2017ல், என்.ஜி.என்.ஏ.வின் புதிய கிளைகள் கொல்கத்தாவிலும் வடகிழக்கிலும் திறக்கப்பட உள்ளதாகவும் மும்பை கிளை விரிவு செய்யப்பட உள்ளதாகவும் வெளியான தகவல்களை கேட்டபோது மனதிற்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது.
மேலும் நவம்பர் 13, 2018ல் இன்னொரு மோசமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது, ‘எதிர்காலத்தில் என். ஜி .எம்.ஏவின் சொந்த கலைச்சேகரிப்பைத் தவிர மற்றவற்றிற்கு மும்பை மையத்திலுள்ள மாடப்பகுதியில் ஆறில் ஒரு பங்கு இடம் மட்டுமே ஒதுக்கப்படும்’. அப்படியென்றால மீதமுள்ள பகுதியில் புதிய கலைஞர்களின் அல்லது சேகரிப்பில் இல்லாத பழம்பெரும் கலைஞர்களின் படைப்புகள் காட்சிக்குட்படுத்தபட மாட்டாதா?
இந்தப் புது கொள்கைக்குச் சான்றாக, மெஹ்லி கோபாய் மற்றும் சுதீர் பட்வர்தனுக்கான மார்ச் ஏப்ரல் 2019ல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆகையால், இந்த கண்காட்சியும் ரத்து செய்யப்படாமல் நடைபெறுவதற்கு, நாமனைவரும் சர்வல்லமைப் படைத்த அமைச்சகத்துக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். இன்று நம்முடன் இல்லாத மெஹ்லி கோபாயின் முன்னூறுக்கும் மேலான மிகச்சிறப்பான படைப்புகளைக் காண முடியாமல் போவது வருத்தத்திற்குரிய விஷயமாகும். அது நடந்திருந்தால் ஆசானுக்கான மிகச் சிறப்பானதொரு புகழஞ்சலியாக இருந்திருக்கும். சுதீர், என்னை மன்னியுங்கள், நீங்கள் எவ்வளவு பெரிய கலைஞனாகவும் இருக்கலாம், ஆனால் உங்கள் படைப்புகளும் கருத்தியல்களும் எங்களுக்கு பிடித்தமானவையாகவோ எங்களால் ஒப்புதல் பெற்றவொன்றாகவோ இல்லை.
ஏனிப்படியான தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுகின்றன? இந்தக் கட்டுப்பாடுகளுக்கு பின்னால் உள்ள உண்மையான நோக்கங்களென்ன? இது இன்னொரு அளவிலான கலைச்சுதந்திரத்தின் மீது செய்யப்படும் தணிக்கைமுறையல்லவா? இந்த பன்மை தேசத்தின் கூட்டாட்சி முறை மேல் நடத்தப்படும் இன்னொரு தாக்குதல் அல்லவா? பன்முக குரல்களையும் கலைச்செயல்பாடுகளையும் அழித்து தளரச்செய்யும் செயல்திட்டம் இன்னுமொரு நிறுவனத்தையும் முடக்கிவிட்டது. கலைவெளிப்பாட்டிற்கும் பலதரப்பட்ட கலைகளையும் காண்பதற்கான புனித இடம் என்.ஜி.எம்.ஏ.
அதன் மேலான ஆதிக்கமென்பது, யாரோவொருவர் சொன்னது போல இந்த ‘மானுடவியலுக்கு எதிரான போரின்’ சமீபத்திய பலியாகும்! நான் உண்மையாகவே கலக்கமாக உள்ளேன்… எங்கு போய் இது முடியப்போகிறது?
நாளுக்கு நாள் கொஞ்சகொஞ்சமாக ஆனால் இடையிறாது தொடர்ந்து இந்த சுதந்திர சமுத்திரம் குறைந்துக்கொண்டே வருகிறது… ஆனால் நாம் ஏன் இது குறித்து மௌனமாக இருக்கிறோம்? இந்த தன்னிச்சையான முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் அது குறித்து பேசவோ, எதிர்க்கவோ அல்லது ஒரு கேள்விகூட கேட்காததுதான் பெருங்கவலையாக இருக்கிறது!
இந்தச் சூழ்நிலையில் பார்வே என்ன செய்திருப்பார்? நம் முன்னே புலனாகிற விஷயங்கள் மூலம் மறைத்திருக்கும் விஷயங்களை நமக்குக்காட்டியிருப்பார். துவக்கவிழாவில் எதிர்பார்க்கப்படும் மேடை நாகரிகத்தை மீறியதற்காக ஜாசெல் என்னை மன்னிக்கவேண்டும் - ஆனால் உரக்கப் பேசுவதில் நம்பிக்கையுள்ளவன் நான். ஆகவேதான் இந்தச் சோகமான நீண்ட உரை!
குறிப்பு:
தேசிய நவீன கலைக்கூடம் நடத்திய ( National Gallery of Modern Arts - NGMA ) மராத்திய ஓவியர் பிரபாகர் பார்வேயின் கண்காட்சியில் அமோல் பலேகர் ஆற்றிய உரையில் தமிழ் வடிவம் இது. பலேகரின் உரையில் அவர் குறிப்பிட்டது போலவே பாதிக்கப்பட்டோர் உட்பட ஒருவரும் கலைச்செயல்பாட்டின் மேல் திணிக்கப்படும் கெடுபிடிகளை எதிர்த்து ஒரு கேள்விக்கூட கேட்டிராத சமயத்தில், இந்தச் சொற்கள் அதிகாரத்தை அதன் முகத்திற்கெதிராக, சிறந்த கலைஞனின் பாணியில் உண்மையின் வாயிலாக திடுக்கிடச்செய்தது. ‘உப்பிட்டு உண்பவன் கலைஞன்’ என்ற சொற்றொடருக்கு சான்றாகியது இந்த உரை.
காற்று அடிக்கடி மணக்கிறது காற்று அடிக்கடி நாறுகிறது மணக்கிறது என்றால் அமர்த்திப் பூத்த வாயுவின் துர்மணம் நாறுகிறது என்றால் நறும்பூவாசம் நறும்பூ நாறும் காட்டில் பாம்பாக மாறிப்பார்க்கும் ஸ்நேகத்தோழி படமெடுத்து ஆடலாம் பந்தல் புடலங்காயாய் தொங்கி மகிழலாம் போன்ற பல்வகை யோசனைகள் அவளைக் கிளச்சியுறச் செய்கின்றன பச்சை இளம்பாம்பென வசீகரமூட்டும் உடல்வாய்த்தால் அவன் மேனியைத் தீண்டி உயிர் மீதூர்ந்து இன்புறலாம் களிப்பான விளையாட்டாய் அவன் கண்களைப் பரித்துப் புசிக்கலாம் கண்கள் என்றால் பார்வை பார்வை என்பது பூரணத்தின் குறை குறை என்பது முழுமையின் மீச்சிறு அலகு அலகு என்பது மாளிகையின் சிறுசெங்கல் செங்கற்பார்வைகள் கட்டிய வெளிச்சத்தைத் தகர்த்து இருளாக்குகிறேன் வெளியாவும் வீடாகிறது இருள் என்றால் நித்ய எல்லையின்மை நான் சன்னமான நாவால் அவன் உயிரை உண்டு மகிழ்வேன் நித்ய எல்லையின்மையில் அவன் உடல்போல் ஒருதோதான பண்டம் வேறொன்று இருக்குமா ப்ரதர்.
தன்னை ரகசியமாகக் கருதாத
ஒரு ரகசியம் இருந்தது…
பல்லாயிரம் ரகசியங்களுக்குள் மறைந்து,
இருண்ட அறையில் விழும்
துண்டு நிலவு வெளிச்சம்போல
பளிச்சென்று…
நம் ரகசியப் பூனைக்குட்டி…
உனது கைகளுக்குள் ஓடிவரும்போது நிலா
எனது கைகளுக்குள் ஓடிவரும்போது சூரியன்
என் மடிந்த உள்ளங்கைக்குள்ளே
ரகசியத் தானியங்கள் இருக்கின்றன
பழக்கப்பட்ட ராஜாளி
என் மணிக்கட்டில் வந்தமரும்…
சிலந்தி இழுத்த நூலிழைக் கோட்டினில்
நிறுத்திவிட்டிருக்கின்றாய்
வறண்ட நாவை
கோடை வாட்டிச் செல்கிறது
சிவப்பு நிறம்
உடலின் உள்ளேயும் வெளியேயும்
தேங்குகிறது… பீறிடுகிறது…
கனவு…
ரயில் என விரைந்துவந்து
என் மீது ஏறிச் செல்கிறது
கேட்பதெல்லாம் பாதியை…
அல்லது
பாதியின் அரைப்பகுதியை
அரைப் பகுதியின் மீதியை…
மீதியில் எஞ்சுவதை…
அல்லது
தீர்ந்துபோனதின் தடத்தை…
இருந்தது என்பதன் நினைவை.
யானைக்கதன் கண் சிறிது
பூனைக்கதன் மயிர் பெரிது
பகற் வேட்டைக்குப் பயப்படும் கூகை
கரை முட்டைக்கஞ்சிடாது ஆமை
எறும்பாயெல்லாமுரை
உனக்கென்ன?
உட்தாழும் உனையறியும்
வெளித்தாழும் நினைத் தொழும்
எனக்கேன் குத்துகிறது
நற் காய்ச்சல் பாசி நெற்றாய்.
மகவீனும் மடவயிறே மடவயிறே
வீராப்பை விறைப்பாக்கு
ஆடையுள் மறையும் நூலே
மன அமயம் நீ கேளேன்
பழிச்சொல் பலவாறாயினும்
கிளிச்சொல் நமக்கிதுதான்
பாறையிலுங் கோழி கிண்டும்
நீரிலுங் கொக்கு நொண்டும்.
பிராயத்தில் பிளவுபட்ட நாக்கூர்
படர்ந்தும் மறந்தும் பழசையேற்கிறது
குரால்களின் கூட்டத்தில்
தப்புமொன்று
குத்துச்செடிக்கு தாழிடும் தாபங்கள்
தொட்டிச் செடிக்கு மாற்றப்படுகின்றன
ஆட்டெரு செம்மண் அடி மேல் மண்
காற்றோ கண்டபடி கத்தும்
பூவோ நின்றபடியே சுற்றும்.
வளைக்கரங்களின் பிடியில் களிறு
மூங்கில் குருத்தை தின்னமாட்டாது
முகந்திருப்புகிறது
நீயேயுரை முறிந்த மூங்கில்
கிளை பரப்புமா களை பரப்புமா?
பிணங் கனங் கொண்டிருக்கும் பிரியம்
நிறை குறைவடைந்தது என்னுடையதோ
மனங் குளிர மருகும் தளிர் தாகம்
அந்தியும் பொழுதும் பெருபெருக்கிறது
நினைவற்ற நிலவுகள் திரும்பத் திரும்ப
எனை மட்டுமேயேன் காய்கிறது
சருகுலர்த்தும் வெங்காயங்கள்
போன தடம் புலப்படும் பொழுதில்வருந் தடம்
காத்தோ காத்திருக்கும்.
கொட்டாவி விடுவதைப்போல சிறந்த கலை
உலகில் வேறேதும் உண்டா தெரியவில்லை
ஒவ்வொரு கொட்டாவியும்
மனிதர்களின் விசித்திர முகபாவங்களை
ஓவியங்களாகத் தீட்டிவிடுகின்றது
சில கொட்டாவிகள்
மனிதர்களின்
கௌரவ முகமூடிககளைக் கழற்றி எறிந்து விடுகின்றன
சிலர் கொட்டாவி விடுகையில்
இசையின் ஒரு துணுக்கு
சடாரெனச் சிதறும்
காண்டாமிருகத்தின்
குகை வாசலை நினைவுபடுத்திவிடும்
சிலரது கொட்டாவிகள்
வெளிப்புறப் பற்களின் வெண்மையில்
மயங்கி இருக்கையில்
சிலரின்
உள்புறப் பற்களின் கறைகள்
உறுத்தும்.
உதடுகள் கோணி உள்வாங்கும் கொட்டாவி மறைக்க
அஷ்ட கோணலாகிவிடும் அழகிய முகம்
திறக்கும் வாய்க்கு முன் சிட்டிகைபோட்டு
கட்டைவிரல் ஆள்காட்டி விரலால்
சங்கீதமெழுப்பும் சில இசைவல்லுநர்க் கொட்டாவிக்காரர்கள்
எனக்கொரு உபயோகமான யோசனை தோன்றுகிறது
எதற்கெடுத்தாலும்
சதா அண்டைநாட்டைப் போருக்கழைக்கும்
கோமாளி சர்வாதிகாரிகள்
போர்க்களத்திற்குப் போகும் வழியில்
அவர்களின் கண்ணில் படும்படி
கொட்டாவி நிபுணர்களைக் கூட்டிவர வேண்டும்.
அஷ்ட கோணல் முகம் பார்த்த அதிர்ச்சியில்
போரைக் கைவிட்டு
சமாதானமாவதற்கொரு சந்தர்ப்பம் வாய்க்கலாம்
துள்ளிவிளையாடும் ஆடுமாடுகளும் எல்லையற்றுத் திரிந்து மேய பசுங்கரடுகளும் கடுங்கோடையிலும் வற்றாத மடுக்களும் நெடிதுயர்ந்த நீர்மத்திகளும் சேகேறிய வன்னிமரங்களும் குடைவேலானும் காற்றின் சுவையை மாற்றிவிடும் எடத்தாரிகளுமாக நரிகள் ஊளையிட்டு இருள்மணக்கும் காட்டருகே முன்பொருகாலத்தில் எங்களுக்கு நிலமிருந்தது வயல்வெளிகள் இருந்தன நீர்நிலைகள் இருந்தன வெடிச் சத்தங்கள் கேட்டறியாத முன்பொருகாலத்தில் வானம் இருந்தது விடைத்த குறிகள் குண்டுமழை பொழிந்த காலத்திற்கு முன்பு சடைசடையாய்க் குலை தொங்கும் பனைபாடும் இசை இருந்தது சகுனிகளும் கண்ணன்களும் திருவிளையாடல் புரியும் முன்பு உறவுகள் எங்களுக்கானதாயிருந்தன திக்குத்தெரியாமல் நிலம்தேடி உப்புநீர்வெளியெங்கும் அலைந்தலைந்து பனித்தீவுகளில் பாலைவனங்களில் வெங்குளிரில் மாயும் முன்பு தளிர்நடுவே காதல் இருந்தது நிலவும் ஞாயிறும் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்த முன்பொருகாலத்தில் இருந்தது உலகமும்.
தன்னுள் தானே பூத்துக் காய்த்துக் கனியும்
உறங்காக் கருங்காலி நிழல்மரத்தில்
அவளும் அவளும்
ஓர் காட்டு முல்லைக்கொடி
அவனும் அவனும்
இடியும் மின்னலும் அடங்கமறுக்கும் காற்றுமென
சடசடத்து முளையரும்பிற்று கார்காலச் செவ்வி
தப்பிய பருவங்கள் வேர்பிடிக்கத் தொடங்கின
கொடிநிலவின் அரும்பிய
இசையொளிர் பாடலை
நீரெனப் பாய்ச்சி மீட்டும் நடுக்கமற்ற இரவு
சுரத்தானங்கள் தளிரின் ஆலத்திகளை மணக்கச்செய்து
கைவிடப்பட்ட பகலை ஒளிப்புள்ளியாக்கிச்
சூடிக்கொள்ளும் அவர்கள் கேசமெங்கும்
நீர்மை நீராலானாது
எதிர்த்தேறும் மீன்களின் துள்ளல்
வழியும் மடுவெங்கும்.
காகமொன்றின் மீதேற்றப்படும் புனைவின் வன்மம்
முகத்தில் காறி உமிழ்கிறது
விலங்கொன்றின்மீது படர்கையில்
அருவருப்பின் மொழியாகிறது
மற்றைமையைத் தின்றுவளரும் கவிதை
குரூரமாய் நாறுகிறது
பகல்கள் நிரம்பிவரும் அதிகாலை ஒரு நீண்ட ஆறு மணிக்கு வாசலாகிப் பார்க்கிறேன் என்ன பார்க்கிறேன் இப்போது இப்போதே சொல்லத் துவங்குவதற்குள் கோலம் முடித்து நீ எழுந்து நிற்கிறாய் கோலம் போட சிற்றகல் எடுப்பதற்குச் சற்றுமுன் வீட்டின் பின்புறம் ஓடும் தூங்கா நதி உன்னையும் குளிக்க விட்டிருக்கும் உனக்கும் சற்று முன்பே யாரும் கால் வைக்காத நீர்கொண்டு தன்னைத்தானே குளித்திருக்கும் நதி சலசலக்கும் அவ்விருளில் கலந்து போனது இன்னதென்று தெரிந்திருந்தால் எதிர் நிற்கும் உன்னிடம் இப்போது என்ன பார்க்கிறேன் என்பதைச் சுலபமாகக் கூறிவிடுவேன்
வதனங்கள் அறியாத துளியின் பெருந்துளையில் படிந்தும் பிரியாமலும் விடை பெறல் என்பது யாதென வினவுகின்றது வெட்டவெளியின் மௌனம் சுருள் கேசம் + மச்சம் = கடல் திறவா இமை + மச்சம் = தீச்சுடர் கடலும் தீச்சுடரும் வெடித்து அழியும் உலகில் இரண்டேயிரண்டு மீன்கள் மட்டும் நீந்துகின்றன.
* ++ ஏ னிவ் விமை துளிய ளவு பருகச் செ ம்புனலூற்றா யொ ளி யோடியோடிப் புகுகிற திவ னோரடி நின்றாறடி படுத்தெழு கிற தனியொ ரு நாளி ல் *
நழுவிச் சரியும் இருளின் இடைவேளையில் சற்றுமுன்புதான் புலர்ந்தது உலகின் முதல் பகல்பொழுது அருகருகே சாய்ந்தமர்ந்த தேகங்களுக்கு மத்தியில் நுழையும் அங்கு புதுக் கோப்பை இரண்டு வனைந்து தாங்குகிறது பீங்கான் குழைநிலம் வட்டப் பள்ளத்தாக்கு நிரம்ப சரிவுகளில் தேயிலைத் தோட்டம் மையத்தில் எலுமிச்சை எட்டிப் பார்க்க உள் புகுந்த அடிக்கரும்பு கலந்து, வளைந்து மிதமான வெம்மையுடன் எழுகிறது இரண்டிலும் ஒரே சூரியன் உதடுகள் தாமாகக் குவிகின்றன பிரபஞ்சம் வடிக்கும் முதல் தே நீர் இதுவேயென்று ம்… என்ன சுவை என்ன சுவை.
இத்தனை நாள் தலை வாருகையில் தலைமுடிதான் சீப்போடு வந்து தொலைத்தது இன்று பார்த்து தலையே கையோடு வந்துவிட்டது இனி கடன்காரன் கதவைத் தட்டினால் குதிருக்குள் ஒளியத் தேவையில்லை அடமானம் வைக்கவேண்டுமென்றால் பாத்திர பண்டங்களை உருட்டும் அவசியமில்லை அன்றாடப் பாடுகளில் அஞ்ஞாத வாசங்களில் கால்பந்தென உதைபடும் தருணங்களில் காலணி ஸ்டாண்டில் கழற்றி வைத்திடப் பரிந்துரைப்பேன் மையல் கொள்ளக் காலம் தவறினால் ஆங்காரம் கொண்டு தனங்களைத் திருகியெறியும் நேசம் மிகுந்த நாயகியை சாந்தப்படுத்த இனி ஆசைமுகத்தைக் கையளித்து வணிகம் திரும்புவேன்.
உத்தரத்தில் சுழல்கிறது காற்றாடி அட்டணங்காலிட்டுச் சிலைத்திருக்க மெல்ல மொக்கவிழ்கிறது அனந்தாதி பூடகங்கள் சீரான தாளகதியில் சிருஷ்டியின் தட்டாமாலை விட்டு விட்டுக் கேட்கிறது சுவர்க்கோழியின் பேச்சரவம் உற்றுணர்ந்தது யாரடி பயித்தியமே ஊழியின் மத்தியில் நிச்சலனம்.
“ஊருக்குள் எல்லாம் வரமாண்டேன் நானு. உம்பட பழைய ஊட்டுக்காரரு பாத்து எம்மேல கோவங்கீவம் வச்சிருந்து கைக்கி சிக்குனது எதாச்சிம் எடுத்து மண்டெப்போடா போட்டுட்டாருன்னா எனக்கு மண்டெ போச்சு!” என்ற கோவிந்தராசு தன் டிவிஎஸ் எக்ஸெலை செந்தாம்பாளையம் ஊர் முகப்பிலேயே நிப்பாட்டிக்கொண்டான். மயிலாத்தா சலித்துக்கொண்டே இறங்கிக்கொண்டாள்.
வானம் மாலை நாலு மணியைப் போல இடறிக் கொண்டிருந்தது. கருமேகங்கள் அவசரமாய் மேற்கே வேகமாய்ச் சென்றுகொண்டிருந்தன. கோவிந்தராசு மயிலாத்தாவை இறக்கிவிட்ட இடத்தின் தென்பக்கமாய், புதிதாய் கட்டப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டிருந்த கோவில் ஒன்றிருந்தது. கோவிலையொட்டி புளியமரங்கள் இரண்டு உயர்ந்து நின்றிருந்தன. வடபுறத்தில் பெரும் பாறை கிடையாய் நீண்டு கிடந்தது. அதில் பீர் பாட்டில்கள், குவாட்டர் பாட்டில்கள் என்று சிதறிக் கிடந்தன.
‘தாயோளிங்க குடிக்கறானுங்க… போத ஏறினப்புறம் பாட்டிலை எதுக்கு ஒடச்சி வீசிட்டு போறானுங்க? நாளையிம் பின்னியும் வந்து உக்கோந்து இங்க குடிக்கவே மாட்டானுங்களா?’ என்று கோவிந்தராசு சிதறிக் கிடந்த பாட்டில்களைப் பார்த்து மனதில் நினைத்துக்கொண்டான்.
“ஏண்டா பையா, ஊரு இன்னும் அங்க கெடக்குதுடா கெஸ்ஸு கெஸ்ஸுன்னு நானு இனி நடந்து போவணும். சாமம்னாலும் எம்பட ஊடு ஏறி செய்யறதுக்கு மட்டும் வீரனாட்டம் வந்துடறே! அதுக்கு வர்ற வீரம் இங்க ஊருக்குள்ள வண்டிய உடறதுக்கு வரலியா உனக்கு?”
“உம்பட ஊட்டுக்கார்ரு தான் பேங்க்கு நெம்பரு கேட்டாருன்னு சொன்னியே, அத குடுத்துட்டா அஞ்சு நிமிசத்துல போன்ல இருந்து பணத்தை அனுப்புனார்னா உனக்கு வந்துடும். இவ்ளோ தூரம் வரணுமா? நீ என்ன பேசுனாலும் நான் வரமாட்டேன். நம்மூருல எம்பட தலையச் சீவுறதுக்கு ஒருத்தனுமில்ல. இது அசலூரு! என்ன ஏதுன்னு ரெண்டு பேரு கேட்டாலும் பதிலு சொல்லணும். நீ போயிட்டு பணத்தை வாங்கீட்டு எனக்கு போனு பண்டு. நானு கொளத்துப்பாளையம் போயி ஒரு கட்டிங் போட்டுட்டு உக்காந்திருக்கேன்”
“எச்சா ஏத்தீட்டு வந்து என்னையக் கூட்டீட்டு போயி தள்ளீறாதெ சாமி! எங்கப்பன் எனக்கு பீ வழிச்சு கொட்ட மாட்டான். தாலியக் கழட்டி வீசிட்டு வந்துட்டேன்னு ரெண்டு வருசமா என்மேல காண்டுலயே இருக்கான்”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சரி நான் கிளம்புறேன்” என்று சொன்ன கோவிந்தராசு எக்ஸெல்லை முறுக்கிக்கொண்டு கிழக்கே சென்றான். மயிலாத்தா ஊர் நோக்கி சாலையில் நடந்தாள்.
மயிலாத்தாவுக்கு சொந்த ஊர் பெரிய வீரசங்கிலி. இங்கிருந்து இருபது கிலோ மீட்டர் வரும். இரண்டு வருடமாக சென்னிமலை செல்லும் பேருந்தில்தான் நாலு மாதத்திற்கொரு முறை செந்தாம்பாளையம் வந்துபோய்க் கொண்டிருந்தாள். கோவிந்தராசு இவளுக்குப் பழக்கமாகி ஒன்னரை மாதங்கள்தான் ஆகிறது. கோவிந்தராசு இவளை விட பத்து வயது சிறியவன். இவளைவிட அதிகமாய் தறிக்குடோனில் சம்பாதிக்கிறான். இவள் தறிக்குடோனுக்கு நூல் போடச் சென்று வருகிறாள்.இருவருக்கும் தொடுப்பான கதை கொஞ்சம் நீளமான கதை. அதில் மயிலாத்தாவின் காதலும் இருப்பதால்தான் நீளமான நெஞ்சை ஈரப்படுத்தும் கதை ஆயிற்று.
தறிக்குடோன்களிலோ, பஞ்சுக்குடோன்களிலோ, பனியன் கம்பெனிகளிலோ, கோழிப்பண்ணைகளிலோ,வரும் காதல்களில் நல்லனவும் கெட்டனவும் கலந்துதானிருக்கின்றன. நல்லவற்றையும் கெட்டனவற்றையும் மக்கள் பேச்சாய் பேசத்தான் செய்கிறார்கள். வீரசங்கிலி முழுக்க கோழிப்பண்ணைகள் நிரம்பியிருக்க, அதனால் ஊர் முழுக்க ஈக்களின் தொந்தரவு அதிகமாகி, பிரச்சினை, பேப்பர், கலெக்டர் வரை சென்றதெல்லாம் நடந்ததால் மக்கள் மனதில் பதிவான ஊர்தான் வீரசங்கிலி.
மூல நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு இருபத்தியெட்டாவது வயதில் ஆறு வருடங்களுக்கு முன்பாக புதுப்பெண்ணாக முருகேசன் வாத்தியாரைக் கட்டிக்கொண்டு செந்தாம்பாளையம் வந்தவள்தான் மயிலாத்தா. வந்த மறு வருடமே வாத்தியாருக்கு ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்துக் கொடுத்து நாற்பது வயது முருகேசனை மகிழ்ச்சிப்படுத்தினாள். பையனுக்கு சோமசுந்தரம் என்கிற பெயரை வைப்பதில் பிடிவாதமாக இருந்தாள் மயிலாத்தா. ஒழுக்கத்திலும் ஒழுக்கமான மற்றும் அடக்கத்திலும் அடக்கமான ஆசிரியர் அதையும் இவளின் விருப்பத்தின் பேரிலேயே விட்டுவிட்டார். அது ஏன்? என்றொரு கேள்வியைக் கூட அவர் தன் வீட்டினுள் வைக்கவில்லை. கட்டுப் பாட்டுக்கும், கடமைக்கும், கண்ணியத்துக்கும் பள்ளியில் பெயர் பெற்ற ஆசிரியர் அவர். ஊருக்குள் ஆசிரியர் என்றொருவர் இருக்கிறாரா? என்கிற சந்தேகம் ஊர் மக்களுக்கே உண்டு. தானுண்டு தன் வீடுண்டு தன் பள்ளியுண்டு என்றிருப்பவர் அவர்.
மலைமீது மாடு மேஞ்சாலும் மாட்டுக்காரன் பேரைத்தான் சொல்லும் என்றாற் போல, ஊருக்குள் சந்து சந்தாக மயிலாத்தா சுத்தினாலும் வாத்தியார் பொண்டாட்டி என்றாகிப் போனாள் நான்கு வருடத்தில். ஐந்தாவது வருடத் துவக்கத்தில் தான் உள்ளூர் பெரிய மனிதர்களிடம் சென்று, பஞ்சாயத்து கூட்டி தன்னை அத்துவிடச் சொல்லி வேண்டி விரும்பிக்கேட்டுக்கொண்டாள்.
அவளுக்கு முதலாக இந்த ஊரே பிடிக்கவில்லை. சென்னிமலை மாதிரியான குறுநகரத்திலேனும் வாழ ஆசை கொண்டு முருகேசனிடம் சொல்லிப் பார்த்தாள். முருகேசன் சென்னிமலையில் வாடகைப் பிரச்சினையிலிருந்து தண்ணீர் பிரச்சினை வரை எடுத்து இயம்பினார். ‘அப்ப சென்னிமலையில இருக்கறவங்க பூராம் மல்லவா குடிக்காங்க?’ என்று எகிறியும் பார்த்தாள். ‘சீவிச் சிங்காரித்து அன்ன நடை பயில இந்தக் கிராமம் சுத்தப்படுமா? நாலு பேர் பார்த்து வாய் பிளந்து ரசிக்க வேண்டாமா? வாத்தியானுக்கு ஆக்கிப்போட்டே காலம் போயிடும்போல? இப்படி ஒரு கஞ்சப் பிசினாறி வாத்தியானுக்கு வாழ்க்கைப்பட்டதிற்கு வீரசங்கிலியிலேயே குப்பை கொட்டிக் கிடந்திருக்கலாம்’ என்று பலவாறு சிந்திக்கத் துவங்கிய மயிலாத்தா ஒரு நாள் வாத்தியாரைப் பஞ்சாயத்தில் நிறுத்தியேவிட்டாள்.
வீட்டை விட்டு வெளியில் தலை காட்டும் சமயமெல்லாம் வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கை சட்டையோடே இருக்கும் முருகேசன் ஆசிரியர், அன்று கட்டம் போட்ட லுங்கியும், கட்டம் போட்ட அரைக்கை சட்டையும் அணிந்தபடி ஊர்க்காரர்கள் முன்பாகக் கைகட்டி நின்றிருந்தார். பஞ்சாயத்து தலைவருக்கே அவரைப் பார்க்கையில் பாவமாய் இருந்தது. ஓட்டுக்காக ஆசிரியர் வீடு சென்றால், ‘வீடு வரைக்கும் வரனுமுங்களா தலைவரே! உங்களுக்குப் போடாம யாருக்குப் போடப் போறேன் நானு!’ என்றே தன்மையாய் பேசுபவர் முருகேசன் வாத்தியார் அல்லவா! வாச்சது சரியில்லப்போல! என்றே எண்ணினார்.
முருகேசனுக்கு மூல நட்சத்திரத்தில் பொண்ணு கட்ட வேண்டாமென அறிவுறுத்திய பங்காளிகள் ஒவ்வொருவரும் மனதில் வந்து வந்து போனார்கள். அப்போதைக்கு கிடைத்ததே பெரும்பாடு என்றே கட்டிக்கொண்டார். பங்காளிகளில் இருவர் கூட்டத்தில் நின்று கொண்டுதானிருந்தார்கள். பங்காளிகள் இருவரின் மனைவிமார்களும் பெண்கள் கூட்டத்தினிடையே நின்றிருந்தார்கள்.
கூட்டத்தலைவர்கள் சரியான காரணத்தைக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள் மயிலாத்தாவிடம். எங்கே சின்னச் சின்ன விசயங்களாய் சொன்னால் பேசிச் சரிப்படுத்தி வாழத் தூண்டி விடுவார்களோவென அஞ்சி, ‘சாமத்துல இவரு தனியாப் போயி படுத்துக்கறாருங்க ரெண்டு வருசமா!’ என்று ஒரே போடாகப் போட்டாள். கூட்டத்தில் சலசலப்பு அதிகப்பட்டது. ‘நாம் பாத்துக்கறேன்’ என்றொரு சப்தம் ஆண்கள் கூட்டத்திலிருந்து வந்தது. பெண்கள் கூட்டத்திலும் சலசலப்பு கிளம்பிற்று. ‘சோறு இல்லீன்னாக்கூட இருந்துக்கலாமக்கா… ஆனா அது இல்லாம எப்பிடி இருக்குறது?’
ஒரு கட்டத்தில் முருகேசன் ஆசிரியர் மயிலாத்தாவுக்கு மூனு லட்சம் கொடுத்துவிடவேண்டுமென்று தீர்ப்பாயிற்று. மயிலாத்தா இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆளைவிட்டால் போதுமென்றிருந்தவளுக்கு போனஸ் கிட்டியது போல் ஆகிவிட்டது. பஞ்சாயத்தாருக்கு மனதில் கோவில் ஒன்றை உடனே கட்டி கும்பாபிஷேகம் நிகழ்த்தினாள்.
ஒன்னரை லட்சம் இந்த வாரத்திலேயே தந்து விடுவதாகவும், மேற்கொண்டு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இருபதாயிரம் தன்னால் கொடுத்து கணக்கை முடிக்க முடியுமென்றும் முருகேசன் சொல்லிவிட்டார். ஒன்னரை லட்சத்திற்கு எத்தனை சைபர்கள் வரும்? என்றே யோசித்தாள் மயிலாத்தா. மூன்று வயது சோமசுந்தரத்தை விருப்பப்பட்டவர்கள் வளர்த்தலாம் என்றபோது முருகேசன் முந்திக்கொண்டார். ‘நானே பாத்துக்கிறேன்.’ பஞ்சாயத்து அப்போதே கலைந்தது. மயிலாத்தா ஒன்னரை லட்சத்தை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு பேருந்து ஏறினாள் வீரசங்கிலிக்கு.
நான்கு வருடத்தில் வீரசங்கிலி ஊரே மாறிப்போயிருந்தது. விசயமங்கலம் சந்தைப்பக்கமாய் காய்கறி வாங்க சிங்காரித்துக்கொண்டு சென்றால், உதட்டுச்சாயம் அப்பின வெள்ளை வெளேர் ஒல்லிப்பிச்சான் பெண்களும் பையன்களும் இந்தியில் பேசிக்கொண்டு இவளைப் பாராமல் போய்க்கொண்டிருந்தார்கள். உத்திரப்பிரதேசத்தில் காய்கறி வாங்க வந்தவள்போல தவித்தாள். இதற்குப் பேசாமல் வீரசங்கிலியில் மளிகைக் கடையிலேயே அஞ்சு ரூவா அதிகமென்றாலும் சாமான்கள் வாங்கிக்கொள்ளும் முடிவுக்கு வந்தாள்.
வீட்டில் அப்பனும் ஆயாவும் ‘தொண்டு முண்டே, கூதிக் கொளுப்பெடுத்து பொச்சாட்டீட்டு ஏறீட்டு வந்துட்டா என்னையும் பாரு எங்கூதியையும் பாருன்னு!’ என்று தொட்டதற்கெல்லாம் பேச ஆரம்பிக்க தனி வீடு பார்த்துப் போய்விட்டாள். இவளுக்கும் பக்கத்து அறைகளில் ஒரீசாவிலிருந்து வந்த காதில் கடுக்கன் போட்ட, முக்கா கால் பேண்ட் போட்ட பையன்களாகவே தங்கியிருக்க கொஞ்சம் வெறுப்பாய்த்தான் இருந்தது.
என்னதான் அலங்காரமாய் அவர்கள் முன் நடமாடினாலும் அந்தக் கேனக்கூதிகள் வாய்பிளந்து பார்ப்பதில்லை. உள்ளூர்க்காரன்கள் லூசுப்பயல்களாய் இருப்பதால் அரைகுறை தமிழ் பேசும் சிவந்த தோல்காரன்களை உள்ளூர் பெண்களுக்குப் பிடித்துவிடும். அப்படியொருத்தி ஒரீசாக்காரனிடம் மயங்கி லோடு வயிற்றில் ஏற்றிக்கொண்ட சமயம் அவன் ஊரைவிட்டு சென்றிருந்தான். சின்னப்பிள்ளைகள் என்றால் வயிற்றில் லோடு ஏற்றிவிட்டு ஓடிவிடும் அவன்கள், முத்தின கத்திரிக்காய்களைச் சந்தைக்கடையில் கூட தொடுவதில்லை.
பெருந்துறைப்பகுதியில் ஓட்டுப்போட ஐடி கார்டு வைத்துக்கொண்டிருக்கும் வடமாநில வாண்டுகள் இருப்பதை அரசியல் நோக்கோடு பார்ப்பதற்கு அரசியல் பார்வை இங்கே யாரிடமுமில்லை. சாலையில் வாகன சோதனையில் சிக்கிய வடமாநிலத்தவன் தன் ஐடியை காட்ட, சந்தேகப்பட்ட அதிகாரி அவனது ஒரிஜினல் வண்டவாளங்கள் அனைத்தையும் பிடிங்கிப்பாக்க, அனைத்துமே போலி ஆதாரங்கள்தான். ஒரு கம்பெனியில் மூன்று வருடங்களாக அவன் உயர் பதவியில் வேலையில் இருக்கிறான்.
கூடிய சீக்கிரம் அவர்கள் தமிழகத்தை முழுமையாக அடைத்துக் கொள்ளப்போகிறார்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அவர்களோடு போராடிக்கொண்டிருக்கும் நிலைமையும் வந்துவிடலாம். அரசியல் தலைவர்கள் ஓட்டெண்ணிக்கையில் தன் கட்சி மட்டும் வெற்றிபெற்றால் போதுமென நினைக்கும் காலமிது. அவர்களையும் ஓட்டுப் போட வைத்து வெற்றிக் கொண்டாட்டங்களில் களிப்பவர்கள் நாளை அவர்களிடமே கையேந்தும் நிலைமையும் உருவாகலாம்.
முன்பாக இவள் நூல் போட்டுக்கொண்டிருந்த குடோன் ஓனரிடமே சென்று சேர்ந்துகொண்டாள். தறிக்குடோனில் இவளையொத்த வயதுக்காரிகள்தான் நூல் போட வந்து போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோருக்குமே கல்யாணமாகி குழந்தை குட்டிகள் இருந்தன. வயதுக்கு வந்த பிள்ளைகள் எல்லாம் ஊருக்குள் காலையில் வரும் வேனில் ஏறி பனியன் கம்பெனிகளுக்குச் சென்றுவிடுவதைக் கண்டாள். சம்பளம் இங்கே விட அங்கு அதிகமாம். இவளுக்கும் கம்பெனிக்குச் செல்ல ஆசைதான் என்றாலும் அங்கு போய் என்ன வேலை செய்வதெனத் தெரியாது. போக உடம்பு வேறு உருளைக்கட்டை போல உப்பிப்போய்விட்டது இந்த நான்கு வருடத்தில்.
முன்பெல்லாம் ஒல்லிப்பிச்சானாய் இருக்கையில் ஏதோவொரு நேரத்தில் ஒருமுறைதான் ஆய் வரும். இப்போது தினமும் மூன்று வேளையும் ஆய் வருகிறது. எதனால் என்றும் இவளுக்குத் தெரியவில்லை. குடோன் முதலாளிக்கி ஓதம்! என்று சரோசா சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். இவளுக்கு சிரிக்க முடியவில்லை. ஓதம் என்றால் என்ன என்று யாராவது சொல்லியிருந்தால் இவளும் சிரித்திருப்பாளோ என்னவோ!
இவள் அறையில் டிவி வாங்கி கேபிள் கனெக்சன் போட்டுக்கொண்டாள். காலை நேரத்தில் உடல் இளைக்க அதில் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள், தானும் அப்படியெல்லாம் செய்தால் உடல் இளைத்து பழைய மயிலாத்தாவாக வலம் வரலாமென நம்பினாள். ஒரு மாதம் போல கதவை உள்பக்கமாக தாள் போட்டுக்கொண்டு அம்மணக்கட்டையாய் வீட்டினுள் கைகளை கால்களை விரித்துச் சேர்த்தி, விரித்துச் சேர்த்திக் குதித்தாள். மூச்சு வாங்கிற்று. இருந்தும் போராடினாள்.
இடுப்பின் அளவைக் குறைக்க பெல்ட் விளம்பரம் செய்தார்கள். அதை ஆர்டர் போடத் தெரியாமல் தவித்தாள். முக அழகுக்காக சோத்துக்கத்தாழை பறித்து வந்து, தினமும் இரவில் படுக்கப் போகையில் பூசிக்கொண்டாள். தன்னை மட்டுமே விரும்பும் காதலன் ஒருவனை உள்ளூர்ப் பாதைகளில் தேட ஆரம்பித்தாள். அவன் குடோனிலேயே கோவிந்தராசு என்ற பெயரில் தறி ஓட்டிக் கொண்டிருந்தான்.
கோவிந்தராசு ஆறு மாதமாகத்தான் குடோனுக்கு தறியோட்ட வந்துகொண்டிருந்தான். குடோனில் இருபது தறிகள் ஓடிக்கொண்டிருந்தன. ‘ஓனரு இத்தன சம்பாதிச்சு என்ன பண்ண? ஓதமாப் போச்சே!’ என்றே சரோசா சொல்லிச் சிரிக்கிறாள். கோவிந்தராசுவை ‘தம்பி தம்பி’ என்றுதான் மற்ற பெண்கள் அழைத்தார்கள். கோவிந்தராசுக்கு இருபது வயதிருக்கும். ஆனால் இருபத்தி நான்கு என்கிறான். அவனை இவளுக்குப் பிடித்திருந்தது. சுறுசுறுப்பானவன். ஒரு நாள் கூட தலைவலி காய்ச்சல் என்று விடுப்பு எடுத்துக்கொள்ள மாட்டான்.
அவன் கையில் அகலமான தொடுதிரை செல்போன் இருந்தது. விலை பத்தாயிரம் என்றான். இவளிடம் இருப்பது ஒரு சோப்புப் பெட்டி. ஆயிரம் ரூவாய்க்கு வாங்கியது. குடோனுக்கு வருபவர்களில் தொடுதிரை செல்போன் வைத்திருப்பவன் அவன் ஒருவன்தான். வேலை செய்கையில் அவனது ஜட்டிப் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொள்வான். அவன்தான் நான்காவது மாதத்தில் தன் போனில் ‘சும்மா பாருங்க!’ என்று இவளிடம் மேட்டர் படம் காட்டினான். இவளோ, அப்படியெல்லாம் கேள்விப்பட்டது கூட கிடையாது. ‘யாரு இவிங்க ரெண்டு பேரும்? நெடச்சலாபாளையத்துக்காரியாட்ட சாடைத் தெரியுதே!’ என்றாள். கோவிந்தராசு சிரித்தான். இவள் அவனது கடைவாயைக் கிள்ளி,’தெரியலீன்னு தான கேக்கேன். அதுக்கென்ன இளிப்பு உனக்கு?’ என்றாள்.
இப்படித்தான் அந்த உறவு மிக மெதுவாக அவர்களுக்குள் உருவாயிற்று. கோவிந்தராசு உலக விசயமனைத்தையும் தன் போன் வழியாகக் கண்டு இவளுக்குச் சொல்லி ஆச்சரியப்படுத்தினான். ஆனால் இவளுக்கு ஆர்வமெல்லாம் ஒன்றிலேயே இருந்தது! ‘செய்யறதைப் பாக்கலாம்டா. நல்லா இருக்குது பாக்கப் பாக்க!’ என்றாள். கோவிந்தராசுவை இழுத்துக்கொண்டு ஈரோடு போய் அவனைப் போன்றே தொடு திரை போன் வாங்கிக்கொண்டாள். ஜியோ சிம் வாங்கிப் போட்டு ஒவ்வொன்றாய் பழக்கிவிட்டான். தெரியாமல் மேட்டர் படம் பார்க்கப் போய் எப்போது செல்லை எடுத்தாலும் அதுவே முன்னால் வந்து நிற்பதாய் அழுது வடிந்தாள் ஒரு நாள் அவனிடம். அவன் அதை சரிப்படுத்திக்கொடுத்தான்.
கோவிந்தராசு மீது இவள் கொண்ட காதல் ஒரு நாள் கட்டிலில் முடிந்தது. பின்பாக கோவிந்தராசு ருசி கண்ட மனிதனாகிவிட்டான். ‘பையா பையா’ என்றே வெளியிடங்களிலும், குடோனிலும் கோவிந்தராசை அழைப்பவள் தன் வீட்டுக்குள் அவன் வந்ததும் கொஞ்சட்டத்தை துவங்கிவிடுவாள். ‘மெதுவாங்க கோவிந்து!மெதுவா வலிக்குதுங்க கோவிந்து! குடோன்ல அந்த சரோசா கிட்ட நீங்க பேசனீங்கன்னா எனக்கு பத்தீட்டு வருதுங்கொ! கோவத்துல உங்களை கொன்னாலும் கொன்னுடுவேன் ஒரு நாளைக்கின்னு பயமா இருக்குதுங்கொ கோவிந்து… மெதுவாங்கொ! கிழிச்சிப்பிடாதிங்கொ!’ என்று பூனைக் குரலில் பேசுவாள். கோவிந்தராசு, தான் காரியத்தில் கெட்டிக்காரன் என்ற நம்பிக்கைகொள்வான்.
மயிலாத்தா செந்தாம்பாளையத்துக்குள் நுழைந்தாள். சேந்து கிணற்றுப் பக்கம் இரண்டு நாய்கள் படுத்துக்கிடந்தன. உள்ளூர் சின்ராசு சைக்கிள் கேரியரில் இரண்டு குடங்களில் தண்ணீர் பிடித்து முக்கி முக்கி அழுத்திச் சென்றார். மாகாளியாத்தா கோவில் கதவு திறந்திருந்தது. உள்ளே நடமாட்டம் தெரிந்தது. தெற்கு வீதிக்கு வந்து சேர்ந்தாள். கடைசி வீடு முருகேசனுடையது. பொம்மி வாசலில் படுத்திருந்தது இவளைக் கண்டதும் எழுந்து வாலை ஆட்டிக்கொண்டு வந்தது.
கதவு திறந்திருக்க வீட்டினுள் நுழைந்தாள். ஹாலில் டிவிப் பொட்டி துணி போட்டு மூடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் முருகேசனின் பைக் உள்ளே நின்றிருக்க வேண்டும். ஆனால் பைக் நிற்குமிடம் காலியாயிருந்தது. முருகேசன் இன்னும் வரவில்லை போலிருக்கிறது. அப்புறம் எப்படி வீடு திறந்து கிடக்கும்? என்ற கேள்வியோடே ஆடு திருட வந்தவள் போல பம்மினாள்.
சமையல் கட்டிலிருந்து சோமசுந்தரம் ஓடி வந்தான் வெளியே. இவளைப் பார்த்து ப்ரேக் போட்டது போல நின்றவன். ‘சின்னம்மா! எம்பட பழைய அம்மா வந்திருக்காங்க!’ என்று சொல்லிக்கொண்டே ‘பர்ர்ர்ர் பர்பர்’ என வாயில் பைக் சத்தம் குடுத்துக்கொண்டே வெளிவாசலுக்கு ஓடிப்போனான்.
சமையலறையில் சோமசுந்தரம் குடித்த காபி டம்ளரை கழுவி முடித்த சுகுணாவுக்கு வந்திருக்கிறவள் முருகேசனின் முன்னாள் மனைவி என்று தெரிந்தது. முருகேசன் அவளைப் பற்றி எல்லாமும் சொல்லியிருக்கிறான் சுகுணாவிடம். முக்கியமாக மயிலாத்தா ஒரு வாயாடி என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கான வாயை கடவுள் அவளுக்கு மட்டுமே படைத்திருப்பதாய் கூறியுள்ளான். மயிலாத்தா அவள் தேவைக்காக வீட்டுக்குள் வந்திருக்கிறாள். அது அவள் பாடு என்று முடிவெடுத்தவள் இரவு உணவுக்காக வெங்காயம் மிளகாய் நறுக்க கூடையோடு வெளியில் வந்து, ஷோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கொள்ளாமல் வெளிக்கதவுக்கருகாமையில் வெளிச்சம் வந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்.
சமையலறையிலிருந்து வந்தவள் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவள் பாட்டுக்கு சென்று அமர்ந்து வெங்காயம் நறுக்குகிறாளே என்று மயிலாத்தாவுக்கு எதாலோ அடித்தாற்போலிருந்தது. அவளோ சிவந்த நிறத்தில் ஒல்லிப் பிச்சானாய் இருந்ததும் கடுப்பாய் இருந்தது. முருகேசனுக்கு வந்த வாழ்வு மயிறைப் பாரப்பா! என நினைத்தபடி இவள் டிவியைப் பார்த்துப் போடப்பட்டிருந்த ஷோபாவில் அமர்ந்தாள். புதியவளின் கழுத்தை ஷோபாவில் அமர்ந்தபடி முகம் திரும்பிப் பார்த்தாள். தாலிக்கொடி இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாமல் போயிருக்கிறதே! வயது இருந்தால் முப்பதை தாண்டியிருக்கலாமென்ற முதிர்ச்சியை புதியவளின் முகத்தில் கண்டாள்.
“தேம்மிணி யாரு நீயி?” என்ற மயிலாத்தாவுக்கு இவள் பதிலேதும் சொல்லாமல் சூரிக்கத்தியில் வெங்காயத் தொப்பைகளை உரித்தபடியிருந்தாள்.
புதியவள் சுகுணா ஈங்கூர்க்காரி. அம்மாவுடன் தனித்துக் கிடந்த பாவப்பட்ட பெண். தெரிந்த ஆட்கள் பேசி முருகேசனுக்கு கட்டி வைத்துவிட்டார்கள். திருமணம் முடிந்து மூன்று மாதங்களாகிவிட்டது. முருகேசன், பையனின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு சுகுணாவைக் கட்டிக்கொண்டார். திருமணம் சென்னிமலை ஈஸ்வரன் கோவிலில் எளிமையாக முடிந்தது.
“காது கேக்கும்ல அம்மிணி உனக்கு? இப்பத்தானே சோமசுந்தரம் உனக்கு சொல்லீட்டு ஓடினானே! எந்தூரு நீயி? எப்ப கல்யாணமாச்சு?”
தொப்பை உரித்த வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக்கி சில்வர் தட்டில் போட்டபடி இருந்தாள் சுகுணா. இன்று தக்காளி போட்டு கூட்டாஞ்சோறு செய்துவிடுவதென்ற முடிவில்தான் இருந்தாள். முருகேசனுக்கு ஏழரை ஆனதுமே பசியெடுத்து விடும்.
“அடப் பேசுறக்கே காசு கேப்பியாட்ட இருக்குதா! என்ன இருந்தாலும் நாம் பாத்த பாம்பத்தான் நீயும் பாத்துட்டு இருக்கீங்கறதெ மறந்துறாதெ! ஆமா உங்கூட்டுல எத்தன பேரு? நம்ம சனமா நீயி?”
வெங்காயங்களை நறுக்கி முடித்தவள் வரமிளகாயை இரண்டாய்க் கிழித்து விதைகளை விரல்களால் தட்டி உதிர்த்தாள். ஒன்னரை டம்ளர் அரிசியை ஊற வைத்தால் போதும் இரவுக்கு. விதைகளை உதிர்த்துவிட்டு மிளகாயை காய்கறிகளுக்கு உபயோகிப்பதை அவல் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டாள் சுகுணா.
“ஊமச்சியா நீயி? அடப்பாவத்தெ, முருகேசனுக்கு வந்த கேடுகாலத்தைப் பாருங்கப்பா!” என்ற மயிலாத்தாவுக்குள் கோபம் சின்னக் கங்காய் வயிற்றில் கிளம்பியது. என்ன ஒரு தெனாவட்டு இருந்தால் ஒருவார்த்தைப் பேசாமல் எருமை மேல மழ பேஞ்சாப்டி உக்காந்திருப்பாள் இவள்? என்றே நினைக்க நினைக்க கோபத்தின் கங்கை ஊதிப்பெரிதாக்கியது போலாயிற்று.
சுகுணா மூன்று தக்கோளிப்பழங்களை தண்ணீரில் கழுவி எடுத்து கூடையில் போட்டு வந்திருந்தாள். அதை சின்னத் துண்டுகளாய் நறுக்கி தட்டை நிரப்பினாள். பின்னர் கூடையில் தட்டை வைத்து எழுந்தவள் நேராக சமையல் கட்டுக்குச் சென்றாள். இவள் தலை சமையல்கட்டுக்குள் மறைந்ததுமே மயிலாத்தாவுக்கு உச்சி மண்டைக்கு கோபம் சர்ரென ஏறிக் கொண்டது.
“என்னை என்ன பைத்தியகாரின்னு நினைச்சியாடி எருமைக்கிப் பொறந்தவளே? நாம்பாட்டுக்கு கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்றாளா ஒன்னா? ஏல எந்தூருன்னு கேட்டேன். அதுக்கு பதிலு சொல்றதுக்கென்ன உம்பட வாயிலிருந்து முத்தா உதுந்து போயிரும்? என்னா ஒரு அநியாயம்? அவனையெல்லா ஒரு மனுசன்னு கட்டீட்டு வந்து நிக்குற உனக்கு இத்தினி கூதிக்கொழுப்பாடி? அவன் கெட்ட கேட்டுக்கு ரெண்டாவது வேற கேட்டுருச்சோ? சொங்கி! வரட்டும் அவன் இன்னிக்கி!” மயிலாத்தா சமையல்கட்டு டெல்லியில் இருப்பது போன்று சப்தத்தை அதிகப்படுத்திப் பேசினாள்.
சுகுணா கருவேப்பிலையை தட்டில் உருவிப் போட்டுவிட்டு சமையலறையிலிருந்து வெளிவந்தவள் நேராய் வட பக்கத்து அறைக்குள் கதவைத் தள்ளிக்கொண்டு சென்றாள். அது அவர்களது படுக்கையறை. முருகேசனின் துணிகளையும், சோமசுந்தரத்தின் யூகேஜி துணிகளையும் கொஞ்சம் நேரம் முன்பு தான் அயர்ன் பண்ணி டேபிள் மீது வைத்திருந்தாள். பீரோவை நீக்கி அதனுள் மடித்து வைத்திருந்த துணிகளை பத்திரமாய் வைத்தாள்.
என்ன சத்தம் போட்டாலும் உரைக்கவே மாட்டேன்கிறதே இவளுக்கு? என்று நினைத்த மயிலாத்தா,
“எல்லாத் துணியையும் அவுத்துப் போட்டுட்டு நின்னாத்தான் அவனுக்கு மூடு வரும்பானே! நிக்கச்சொல்றானா? நிக்கச் சொல்லுவான். பின்ன கட்டீட்டு வர்றது எதுக்கு? பணத்தை உன்கிட்ட குடுத்துட்டு போவலியா வாத்தியாரு? பீரோவுல இருந்து எடுத்தா. நான் வாங்கீட்டுப் போறேன்! வாத்தியான் வந்தா, நானு ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணிப் போடுவேன்!”
சுகுணா பீரோவை சாத்தும் ஒலி மயிலாத்தாவுக்கு கேட்டது.
“எந்தூர்ல இசி தின்னுட்டு இருந்தவொ நீயி, செந்தாம்பாளையத்துக்கு பீ திங்க வந்திருக்கே? இவனை எங்க தாம் புடிச்சே? பையன் என்னுமோ என்னைய பழைய அம்மான்னுட்டு ஓடுறான். நீயி புது அம்மாவாடி? உன் ஜாமானும் புதுசா? வாத்தியான் சத்து செத்தவன்டி! சோமசுந்தரம் அவன் பையன்னு நினைச்சிட்டு நானே வளர்த்துறேன்னு சொல்லி வச்சிக்கிட்டான். சோமசுந்தரத்துக்கு அப்பன் வீரசங்கிலில இருந்தான். பாம்பு கடிச்சி செத்துட்டான். அவன் பேரயேதான் வச்சேன் நானு. என்னை என்ன கேனச்சீன்னு நினைச்சிட்டியா? ஊமக்கோட்டானாட்டம் ஊட்டுக்குள்ள சுத்தீட்டு இருந்தீன்னா நல்லவோன்னு நாஞ் சொல்லீருவனா? வகுந்து போடுவேன் வகுந்து!” மயிலாத்தா குரலை ஏற்றினாள்.
சுகுணா திடீரென படுக்கையறையிலிருந்து குண்டான் குண்டானென ஓடி வந்தவள் இவளைத் தாண்டி தெற்கு மூலையில் சாத்தி வைத்திருந்த விளக்குமாத்தை நோக்கி ஓடினாள். கையில் அதைத் தூக்கியதும் திருப்பிப் பிடித்துக் கொண்டு வந்து நாலு சாத்து சாத்தினாள் ஷோபாவில் அமர்ந்திருந்த மயிலாத்தாவை இந்த இடமென்று பாராமல்.
“ஐயோ கொல்றாளே! ஐயோ கொல்றாளே!” என்று அலறிக்கொண்டு எழுந்த மயிலாத்தா வாசலை நோக்கி ஓடினாள். விடுவேனா என்று சுகுணாவும் விளக்குமாத்தோடு பொறவுக்கே ஓடி வந்தவள் வாசலில் வைத்து மயிலாத்தாவின் முதுகில் ஒரு போடு போட்டாள்.
“வருவியாளே இனிமே இந்தப் பக்கம் நீயி? கொன்னே போடுவேன் கண்டாரோலி! எம் பிருசனை சத்துச்செத்தவன்னு சொல்றதுக்கு நீ யாருடி தொண்டு முண்ட?” பெரிதாய் சுகுணா சப்தமிட்ட போது சாலையில் தப்புறு குப்புறுவென ஓடிக் கொண்டிருந்தாள் மயிலாத்தா.
அமரர் சம்பத்தின் இடைவெளி அவரைப் போலவே சாவுடன் ‘சம்பாஷணை’யில் லயித்த உன்னதக் கலைஞர்களை நினைவுறுத்துகிறது. அதிலும் அத்தகைய உரையாடலில் ஈடுபட்ட சினிமாக் கலைஞர்களின் கையில் சம்பத்தைப் போன்றே மன உளைச்சல்கள் மருவி தத்துவார்த்தக் கதையாடல்களாக எண்ணங்களின் ஆறாக பிரவகிப்பதைப் பார்க்கலாம். இடைவெளியைப் போன்று பலவேளைகளில் அந்தப் பிரவாகத்தின் ஊற்று தன்வரலாறும் சுயானுபவமும் சார்ந்திருக்கும் அல்லது மனதின் மையத்திலிருக்கும் வெறுமையை நிறைவு செய்வதற்கு வற்றாத அருவியாகக் கொட்டும் வாழ்வின் சூச்சுமத்தைப் பற்றிய தத்துவ விசாரணையாக விரியும். நிரந்தரமில்லாத வாழ்வை நிரந்தரமாக முறித்துவிடும் அல்லது முடிவுக்கு கொண்டுவரும் சாவு மற்றும் அதற்கு என்ன என்கிற சாசுவதமான புதிரைப் புரிந்துகொள்ள, சில திறப்புகளைக் கொடுக்கலாம் என்கிற நம்பிக்கை அந்த பிரவாகத்தின் உந்துசக்தியாக உள்ளது. புதிரைக் கட்டவிழ்க்கவேண்டும் என்கிற தீவிரமான இச்சை வாழ்வைப் பற்றிய சஞ்சலம் சாவின் மேலுள்ள ஈர்ப்பாக, தவிர்க்க முடியாத எண்ணப்பிடிப்பாக, உருமாற உதவுகிறது. இருண்மையின் நட்சத்திரமான சாவு இருண்ட அழகியலின் படுகையாக இருப்பதினால் அத்தகைய நாட்டம் கூருணர்வு கொண்ட கலைஞர்களை உள்ளிழுக்கும் கருந்துளையாக உள்ளது புரிந்து கொள்ளக்கூடியதே.
ஒளியின் இன்மையே இருள் என்றறிந்திருக்கும் கலைஞர்கள் சுடர்விட்டு ஒளிரும் (காம) இச்சையில் மிளிரும் பொருண்மையின் குறியீடான தினவில் தோய்ந்த உடலைக் கொண்டு கைக்கெட்டாத சாவு எனும் இருண்மையை அலச முயல்கிறார்கள். ஆயினும் நொடிப்பொழுதில் நுண்ணிய எல்லைகளை அழித்து உடலின் காணமுடியாத நீட்சியே மனம் / மனதின் பருண்ம வடிவே உடல் என்ற உணர்வை அளித்திடும் சம்போகம். உடலைத் தட்டி கண நேரத்தில் மனதைப் பறித்துச்செல்லும் சாவுடனான சம்பாஷணைக்கு ஒரு துவக்கமாக மட்டுமே அமைவதை எண்ணி அத்தகைய கலைஞர்கள் துணுக்குறுகிறார்கள். அரிதாக சம்பத்தைப் போன்ற வெகுசில கலைஞர்களே விடாமல் சாவுடன் உரையாடி இருக்கிறார்கள். சிலர் அதை உருவமாக
வடித்திருக்கிறார்கள். வேறு சிலர் கதையாடலில் வரும் நிகழ்வை ஒட்டி சாவைப் பற்றிய நினைவோடையில் நீந்தியிருக்கிறார்கள். சாவு என்பதைப் பற்றி நமக்கிருக்கும் தோராயமான ஒர் தத்துவார்த்தப் புரிதலிலிருந்து பயத்தையும் சோகத்தையும் அதன் குரூரத்திலிருந்து வடிகட்டி நேயத்துடன் அலசியிருக்கிறார்கள்.
ஸ்வீடனைச் சேர்ந்த இங்மர் பெர்க்மேன், ஒரு மெடீவல் காலகட்ட பின்னணியில் அரங்கேறும், போர்வீரனுக்கும் சாவுக்குமான எதிர்கொள்ளலை அவர்கள் இருவரும் விளையாடும் செஸ் விளையாட்டை கொண்டு கட்டமைத்து காலக்கெடுவிற்கு பெயர்போன காலனை உருவகித்து இறப்பை நாம் ஏற்றுக்கொள்வதில் மதம் ஆன்மிகம் போன்றவற்றின் வியாக்கியானங்களின் போதாமையைச் சுட்டுகிறார். சாவின் சுவடுகள் நிறைந்த இப்பூமியில் அழிவிற்கு பின்னாலுள்ள இறைவனின்/ இயற்கையின் சீர்மை நிறைந்த ஒழுங்கமைதிக்கான நினைவேக்கம் அவரது செவெந்த் ஸீல் முழுவதும் விரவிக் கிடக்கிறது. அத்தகைய நினைவேக்கத்தினால் உன்னத கலைஞர்களுக்கேயுரிய சாவில் அமிழ்ந்துள்ள நிகழ்த்துக்கலை சார்ந்த சாத்தியங்களில் பெர்க்மேன் மனம் லயிக்கிறார். அவர் சினிமா வரலாற்றில் அரிதாகக் காணக்கிடைக்கும் உளவியல் வேட்கைக்கும் யதார்த்தத்துக்குமான நுண்ணிய இடைவெளியில் சிக்கலான உறவுகளின் சித்தரிப்புகளின் மூலம் ஊடுருவுவதை தனது ஆசிரியத்துவத்தின் தனித்துவமாகக் கொண்டவர் மட்டுமல்ல மாயத்துக்கும் மந்திரத்திற்கும் முதன்மையளித்து நாட்டாரியல் கதைகளின் மூலமாக திரண்டுவரும் நாடகவெளியை சினிமாவின் காலவெளிக் கூறுகளைக் கொண்டு உரசி உன்மத்தம் அடைபவரும் கூட.
பெர்க்மேனின் செவெந்த் ஸீல் / ஏழாவது முத்திரையில் க்ரூஸேட்ஸ் என்ற அறப்போரிலிருந்து நாடு திரும்பும் போர்வீரன் அண்டோனியஸ் ப்ளாக் காலன் தாண்டவமாடி ஓய்ந்த கொள்ளை நோயால் பீடிக்கப்பட்டு சோகத்துயர் கப்பிய வெளியில் பாவமன்னிப்பிற்காக தேவாலயம் சென்று அங்கு குற்ற ஏற்புரைக்குப்பின் திரைவிலகும்பொழுது தனது அருகாமையில் மதகுருவிற்கு பதிலாக தன்னைப் பின் தொடர்ந்து வந்திருக்கும் சாவு அமர்ந்திருப்பதை உணர்கிறான். தான் கடற்கரையில் தனிமையில் விளையாடிக்கொண்டிருக்கும் சதுரங்கத்தில் தன்னுடன் விளையாடி வெல்ல காலனுக்கு சவால் விடுகிறான். அவனது அறைகூவலை ஏற்றுக்கொண்டு அவனுக்கெதிரே அமர்ந்து சதுரங்கம் விளையாடும் கருப்பு அங்கியில் உள்ள சாவின் வெளிறிய தோற்றம் ஒரு புதைமறைவான கலக்கத்தை ஏற்படுத்தும் துறவியை ஒத்திருக்கிறது. அந்த சதுரங்க விளையாட்டு நீளும் அளவு அப்போர்வீரன் இந்த பூமியில் உயிருடன் நீடிக்கலாம். அத்தருணத்தில் தன்னைச் சுற்றி இறுக ஆரம்பிக்கும் காலத்தின் பிடி தற்காலிகமாகத் தளர்ந்து அதிர்ஷ்டவசமாக அவனுக்கு விதிக்கப்பட்டதைவிட கிடைத்த அதீத காலத்தில் ஒரு நற்செய்கையை செய்துவிடத் துடிக்கிறான். செவெந்த் ஸீலில் பெர்க்மேன் போரையும் வெஞ்சினத்தையும் ஆணாதிக்கத்தின் வன்முறையின் நீட்சியாக சித்தரிக்கிறார். ப்ளேக் நோயையும் வாழ்வின் மையத்திலுள்ள வெறுமையையும் அந்த இருண்ட கிணற்றில் ரீங்காரமிடும் ஓலத்தையும் மெடிவல் பீரியட் சார்ந்த க்ருஸேடின் காலகட்டத்தை தனது கதையாடலுக்கு பின்னணியாகத் தேர்ந்தெடுத்துக் கட்டமைக்கிறார். அக்கதையாடலின் முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றாக செப்படி வித்தைக்காரனான நடிகன் ஜாப்பின் குடும்பமும் உள்ளது. போர்வீரன் தனது எதிராளியான காலனை சதுரங்க விளையாட்டிற்குள் தனது தேர்ந்த காய்நகர்வு யுக்தியால் முழுவதுமாக உள்ளிழுத்து சாவின் பார்வையிலிருந்து ஜாப் அவனது மனைவி மியா மற்றும் இளங்குழந்தை மிகைல் தப்ப உதவுகிறான். மருட்சியின் குறியீடான போர்வீரன் அண்டோனியஸ் ப்ளாக்கின் அந்தச் செய்கை இரவின் போர்வையினால் மூடப்பட்ட செவெந்த் ஸீலின் சாவின் வாடை வீசும் இருளுலகை மானுடத்தின் ஒளியின் கீறலாக அன்பின் நுண்ணியவாசமாக வெட்டிச் செல்கிறது. அதுவே மேக்ஸ்வோன் ஸைடோ என்ற ஸ்வீடனைச் சார்ந்த நடிகர் போர்வீரன் அண்டோனியஸ் ப்ளாக் என்கிற பெர்க்மேனின் செவெந்த் ஸீலின் கதாபாத்திரம் மூலம் சினிமா வரலாற்றில் அமரத்துவம் அடைந்துவிட்டதற்கான பிரதான காரணம்.
ஒப்புநோக்க சம்பத்தின் சாவைப் பற்றிய இடையறா தியானத்தில் அத்தகைய கண்டுகளிப்பதற்குள் மறைந்துவிடும் மின்னல் மாதிரியான ஒளிக்கீற்றுக்கு இடமில்லை. சம்பத்தின் கலைநீச்சல் ஒருவகையில் பெர்க்மேனுக்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது என்று கூறலாம். சம்பத் சாவு நம்மை அணுகும்போது அதை சாதுர்யமாக கட்டிப்போட்டு காலத்தை தாழ்த்துவதில் அக்கறைக் கொள்வதில்லை. இடைவெளியின் ஆய்வுப்பொருளே சாவு என்றாகி விட்டபின் உருவத்திற்கும் அருவத்திற்கும் ஊடான வெளியில் இனம் விளங்காமல் நமது அகத்தைத் தொட்டுச் செல்லும் சாவை தளர்விலாமல்
பின் தொடரும் சம்பத், அதன் புதிரை உடனடியாக அவிழ்ப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார். சாவு சம்பத்தின் இடைவெளியில் பொருண்மையாக கருப்பு அங்கி அணிந்து நமது எதிரில் அமர்ந்திருக்கும் நமது நிலையின்மையின் குறியீடாக நமது நிரந்தர கலக்கத்தின் உருவகமாகத் திரண்டுவரவில்லை. மாறாக அது ஒலியில் ஒளிந்திருக்கும் சமிக்ஞையாக படிமங்களில் படர்ந்திருக்கும் தூரிகைக் கசிவாக இருந்துமில்லாமலும் இடைவெளிகளைக் கொண்டு ஊடு பாவுவதாக இருக்கிறது. சம்பத்தின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் டேப் ரெக்கார்டரின் மூலம் வெளிப்படும் அவரது உள்ளதிர்வுகள், சாவின் கதியினால் அலைக்கழிக்கப்பட்டு, எட்டிப் பாய்ந்து அதை உடனடியாக கட்டிபிடிக்க முடியாத பதட்டம் நிறைந்த
இயலாமையின் பிரதிபலிப்பாக உருக்கொள்கிறது. ஆயினும், தளராமல் மனதின் வேகத்திற்கு ஈடுகொடுத்து சாவைத் துரத்தும் சம்பத், அதைக் கடைசியில் கண்டடைகிறார். தூக்குக்கயிற்றின் முடிச்சின் வெளியிற்குள் குடியிருக்கும் அருவமான இடைவெளியாக, அதே வேளையில் பார்த்தசாரதிக் கோயிலின் அருகாமையில் தனது இல்லத்தில் உயிர் நீக்கும் தினகரனின் வயோதிகத்தில் தளர்ந்த பெரியப்பாவின் குரல்வளையைத் தொட்டுச் செல்லும், நமது கட்புலனுக்குள் சிக்கும் ஊறுணர்வாக. உடலிற்கும் மனதிற்குமான இடைவெளியில் கசியும் சாவு சம்பத்திற்கு காலம் தாழ்த்தி இறுதியில் தழுவவேண்டிய ஒன்றல்ல. சம்பத்தின் பார்வையில், பிறந்தவுடன் அது ஒன்றுதான் தவிர்க்க முடியாத உண்மை என்றாகிவிட்டபின், செவெந்த்ஸீலில் பெர்க்மேன் கட்டமைத்திருப்பதைப்போல அது நம்மைப் பின்தொடர்வதைவிட நாம் அதைப் பின்தொடர்வதே அர்த்தமுள்ளதாகிறது. மற்ற பின்தொடர்கையெல்லாம் வாழ்வின் மையத்திலுள்ள வியர்த்தத்தை எதிர்கொள்ளாமல் தள்ளிப்போடுவதே ஆகும்.
பெர்க்மேனின் படத்தில் கொள்ளை நோயும் க்ரூஸேட் போன்ற பல வருடங்கள் நீடித்த போர் மைய கதாநாயகனான அண்டோனியஸ் ப்ளாக்கின் பாவமன்னிப்பைக் கோரும் செயலுக்கு திரைச்சீலையாக அமைவதைப் போல, இடைவெளியின் கதாநாயகனான தினகரனின் சாவின் தன்மையைப் பற்றிய தத்துவார்த்தத் தேடலின் குவியத்திற்கும் வேகத்திற்கும் அவரது மனைவி பத்மாவின் பதட்டம் பின்னணியாக அமைகிறது. இரண்டு குழந்தைகளுடன் தரையில் கால் பதிக்காமல், சாவைப் பற்றிய, லௌகீக வாழ்விற்கு எந்த வகையிலும் உபயோகமற்ற ஆய்வில் ஈடுபட்டிருக்கும் தினகரன், தனது மனைவியை மனக் கலவரம் நிறைந்த சோகமான சூழலில் வைத்திருப்பது, பெர்க்மேனின் படத்திலுள்ள இருண்ட வானத்தினால் போர்த்தப்பட்ட விடியலின் அறிகுறியற்ற வெளியை நினைவுறுத்துகிறது. பத்மா, தினகரனுக்கு மூன்று உயிர்கள் அவரது சம்பளத்தை நம்பியிருப்பதை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துவது குழந்தைகள் எப்போதாவது தோன்றி மறைந்து தொலைவிலுள்ள நிகழ்வுகளாக குமிழ்ந்து மறையும் அவரது கற்பனாவாத மனவெளியின் சுமையைத் தாயாகத் தாங்குவதிலுள்ள வலியைப் புலப்படுத்துகிறது. ஒன்பதாவது படிக்கும் சரியான சொக்காய் நிக்கரில்லாத குமாரும், பட்டுப்பாவாடைக் கேக்கும் ஜெயஸ்ரீயும் அவரது எண்ண ஓட்டங்களுக்கு அலட்சியம் செய்ய வேண்டிய அபூர்வமான வேகத்தடைகளே.
கற்பனையில் சஞ்சரிக்கும் கலைஞர் தினகரனுக்கு தனது மனைவியின் இச்சையும் காமமும் உடலனுபவமும் தனி ஒரு குமிழாக, தான் எழுதும் சாவைப்பற்றிய நாவலில் குரல் தளர்வுறும் நேரங்களில் துல்லியமாகத் திரண்டுவரும் சுருதியாக ஒலிக்கிறது: “பத்மாவில் இயங்கறதுன்னா அது சொர்க்கம்தான்.” அதே வேளையில் பத்மாவின் வாழ்வு தனது குழந்தைகளின் வருங்காலத்தைப் பற்றிய கலக்கம் நிறைந்த நரகமாக ஏக்கமும் பசியும் இச்சையும் கலந்து ஓயாமல் ஒலிக்கும் (எண்ணிலடங்கா அத்தகைய தாய்மார்களின்) அடிவயிற்றின் குரலாக ஒலிக்கிறது. அங்கு காமம் பல பசிகளின் ஒரு இழைதான். அதை மட்டும் விலக்கி பூதக்கண்ணாடியால் பார்த்துக்கொண்டாடும் கலைஞன் சாவை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வதில் ஆச்சரியமில்லை. தன்னைச் சுற்றி மறைந்தும் மடிந்தும் சுழன்று கொண்டிருக்கும் பருண்மையான உலகின் தரையில் கால்பதித்து நிற்கும் பத்மா குழந்தைகளைச் சார்ந்து நிற்கிறாள். தனது வாழ்விலிருந்து மறைந்து கடந்தகால கனவாக மாறிப்போன கல்பனாவை விட்டு விலக முடியாத தரையில் கால் பதியாத தினகரன் இருப்பதை விட்டு இல்லாததில் நாட்டம் கொள்வதில் ஆச்சரியமேதுமில்லை. மறைந்த கனவை மறக்க முடியாத தினகரன் மடியப்போகும் இச்சைகளின் பெட்டகமான வாழ்வின் மறைதலில் ஆர்வம் கொள்வதும், அதன் சூக்குமங்களை ஆராய முற்படுவதும் புரிந்து கொள்ளக்கூடியதே. சாவு எனும் மேகத்தைத் துரத்தும் தினகரன், தான் வேலை செய்யும் தோல்கள் பதனிடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தொழிற்சாலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட ப்ளுகாலர் ஆபிஸ் வேலையிலிருந்து கடுமையான தோல்துண்டுகளை கட்டும்/பாக்கேஜ் செய்யப்படும் பகுதிக்கு மாற்றம்பெற்று அங்கு வேலை செய்கிறார். இயந்திரத்தனமான அப்பகுதியில் ஏற்றுமதிக்கு தயாராகவுள்ள தடிமனான தோல்துண்டுகளை கற்பனாதீத ஆளுமையான தினகரன் பொதிசெய்வது அங்குள்ளவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத புதிராகயிருக்கிறது.ஆனால் வாசகர்களாகிய நமக்கோ தினகரன் ஆபிஸிலிருந்து தொழிற்சாலைக்குள் பேக்கேஜ் பிரிவிற்கு வந்ததன் காரணம் புரிகிறது. சாவைப்பற்றி சதா துழாவும் அவரது காதுகளின் மூலம் பண்கள் தவறி அங்கு ஒலித்திடும் வீண்பேச்சும் வம்பும் எல்லா ஆபிசுகளையும் போல அதிகாரமும் ஆணவமும் அங்கும் அடுக்கதிகாரமாக கட்டமைக்கப்பட்டு தாண்டவமாடுவது தெரிகிறது. அத்தகைய சூழல் தினகரனை அந்நியப் படுத்தியிருப்பது இயல்பானதாகவும் தோன்றுகிறது.
ஆயினும் பதப்படுத்தப்பட்டு காயவைத்து தீட்டப்பட்ட தோல்கூறுகளுடன் நேரிடையாக அதை அளவு பார்த்து பேக்கேஜ் செய்வதின் மூலமாக தொடர்புகொள்வது தனது நினைவோடையின் பாய்ச்சலிற்கும் சாவின் ரகசியத்தின் திறவுகோலைக் கண்டடைவதற்கும் ஆபிஸில் அர்த்தமற்ற உரையாடலில் பங்கு கொள்வதைவிட இடையூறுகளற்று இலகுவானதாக இருக்கும் என்கிற தினகரனின் நம்பிக்கை, கலைஞனின் மனதின் பிறிதொரு பக்கத்தின்மேல் ஒளிப்பாய்ச்சுகிறது. தனது ஒன்பது வயது மகன் குமார், டி.எச்.லாரன்ஸைப் படிப்பதைக் கண்டு அலறும் வீட்டிற்குள் ஒடுங்கியிருக்கும் பத்மா தினகரனின் அடுக்கதிகாரத்தில் கீழ்மட்டத்தில் இருக்கிறார். அவரது வாழ்வு பற்றிய சஞ்சலங்கள் தனது கணவனின் வேலை, சம்பளம், குழந்தைகளின் வருங்காலம் சார்ந்ததாக இருக்கிறது. அதில் தஸ்தாயெவ்ஸ்கிக்கும் தோமஸ் ஹார்டிக்கும் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸிஸுக்கும் இடமில்லை. நாவலின் இறுதியில் தூக்குக்கயிறுக்கு நடுவே உள்ள இடைவெளிதான் மனிதன் கழுத்தில் சுருங்குகிறது என்ற தனது முடிவை அவர் பகிர்ந்துகொள்ளும் தருணத்தில் கூட, பத்மா, “போதும் என்னை குழப்பாதீங்கோ… டியர், நான் உன்னைத்தான் நம்பியிருக்கிறேன்” என்கிறார்.
கனவில் மிதக்கும் கலைஞனான தினகரனின் பார்வையில், பத்மா எதிர்பார்ப்பை மிஞ்சாது தானியங்கும் பாட்டைகளில் விதியை நம்பிப் பயணிக்கும் சாதாரண ஜன்மங்களில் ஒருவர். தானாக விரும்பி ஏற்றுக்கொள்ளும் தோல் துண்டுகளை எடைபோட்டு சிப்பமிடும் தொழிலை பத்மாவின் இயந்திரத்தனமான வாழ்வின் சுமைக்கு காரணமான தனது பொறுப்பிலா வாழ்க்கைமுறைக்கான தினகரனது குற்ற ஏற்புரையாகக் கொள்ளலாம்: “...தலைக்குள் ஆறேகால் நாலு நாலரை என்கிற தோல் பரப்பளவு ஒலித்ததும் டபடபவென்று அந்த நம்பரைப் பதிவாக்கும் இயந்திரத்தில் ஒலிக்கும் சப்தம், ‘சாவு என்பது வாழ்வுக்கு கருணாசமுத்திரம்’ ஒலியுடன் குழைந்து கலந்து போவதை உணர்ந்து விக்கித்து விடுவார்.” ‘படபடத்த ஃபாஸிட் இயந்திரத்தின் நடுவே தன் தலையில் (சாவைப்பற்றிய) டைரி குறிப்பு’ எடுப்பவராக இருக்கிறார் தினகரன். ஆயினும் மனம் கசிந்து பாவமன்னிப்பைக் கோருவதற்கு பதிலாக அந்த இறுக்கமான வெளி அவரை தொழிற்சாலையைவிட்டு வெளியே வந்தவுடன் சித்திரங்களினால் கட்டமைக்கப்பட்ட சீட்டாட்டம் மூலமாகச் சூதாடுவதற்கு உந்துகிறது. அந்தச் சூதாட்டக் கிடங்கின் சீட்டுகளில் தெரியும் வண்ணமயமான பிம்பங்களும், அதிலிருந்து அவர் பெறும் நிகழ்தகவு கோட்பாடுகளும் உடலை வருத்தியபின் புலனை விரித்து இன்பத்தை நுகரும் தற்காதலும் தன்வியப்பும் சார்ந்த தஸ்தாயெவ்ஸ்கி முதல் நீளும் சூதாட்டத்தில் லயித்து அதை நியாயப்படுத்தும் குடும்பத்தின்மேல் அக்கறையற்ற வக்கிர ஆணுலகமாக விரிகிறது. தரையில் கால் பதித்து, கட்டம் கட்டமாக கலக்கத்துடன் தனது நடையைக் கட்டும் பத்மாவிற்கு அங்கு இடமில்லை: “அதிகமாக சிந்திக்க வேண்டாம் என்று பெரும்பாலானோர் இருந்துவிடுவதை ஒரு பெண்மைத்தன்மை என்றே வைத்துக்கொள்ளலாம் என்றவருக்குப் பட்டது. பிரபஞ்ச அளவில் அதீத அரூப எண்ண விளையாட்டுகள், தேடல்கள் ஆண்களின் உலகமென அவர் கணித்தார். உதாரணமாக பெண்கள் ஒரு ஐன்ஸ்டீன் எல்லைக்கு எண்ணத்தை ஓட்ட முடியாது என்று அவர் நினைத்தார்.” சம்பத்தின் நாவலின் தனித்துவம், ஆணுலகம் பெண்ணுலகம் சார்ந்த இடைவெளியைக் கோடிட்டு பத்மா மற்றும் தினகரன் மூலமாக சாவின் பின்னணியில் வாழ்வையும் மற்றும் கலைக்கும் வாழ்விற்குமுள்ள இடைவெளியையும் ஒரு ஆணாதிக்க சமூகத்தின் அகவயப் பார்வையிலிருந்து அலசுவதில் இருப்பதாகக் கூறலாம்.
தினகரனுக்கு வாழ்க்கைப்பட்டதே பத்மாவின் கழுத்தில் போடப்பட்ட சுருக்காக நீள்கிறது. மணவாழ்க்கை எனும் புதைமணலில் அமிழ்ந்துகொண்டிருக்கின்ற பத்மா, தன் தலைக்குமேல் தொங்கும் அந்தத் தூக்குக்கயிற்றின் ஊடாக இருக்கும் இடைவெளி மனைவியென்கிற அடையாளத்தின் மூலம் தனது குரல்வளையை நெரிப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறார். அந்த இறுக்கம் தளர, தான் தினகரனை நம்பியிருப்பதையும் ஞாபகப்படுத்துகிறார். ஆகச்சிறந்த கலைஞனாக இருந்தாலும், பத்மா நிதம் நிதம் செத்துக்கொண்டிருப்பதில் தான் ஆற்றும் பங்கை அவதானிக்க தினகரனுக்கு அவகாசமில்லை. தனது அருகாமையிலேயே மணவாழ்வு எனும் பரிசோதனைக்கூடத்தில் தனது கட்டற்ற வாழ்க்கையின் பிரதிபலனாய் அணு அணுவாய் அழிந்துகொண்டிருக்கும், பாதுகாப்பிற்காக ஏங்கும் இயல்பான கனவுகளின் உருவகமாக விளங்கும் பத்மாவின் வாழ்வு ஒரு பொருட்டாகயில்லை. பொதுவாக ஆண்களுடனான சம்பாஷணைகளின் மூலம், அது நீண்ட நாள் உறவினனான தனது பெரியப்பாவின் மகனாகயிருக்கலாம் அல்லது, தான் தனது ஆய்வு சார்ந்து தற்காலிகமாக சந்தித்த கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த ரீடராக இருக்கலாம். சாவை அணுகும் தினகரனின் உலகில் - அது அவருடைய நனவுலகம் என்றாலும் நினைவோடை குவலயமானாலும் - ஆண்களின் மூலமாகவே சாவின் சமிஞ்கைகள் வெளிப்படுகின்றன. சதா செத்து மடிந்து கொண்டிருக்கும் பத்மா போன்ற பெண்களின் வாழ்வு அங்கு கணக்கில் கொள்ளத்தக்கதாக இல்லை. பத்மா போன்ற பெண்களின் வாழ்வில் வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளி புலப்படக் கூடியதாக இல்லைபோலும்.
ஆயினும் சம்பத்தின் இடைவெளியின் முக்கியத்துவம் அதன் நடையின் உண்மையிலிருக்கிறது. சொல்லாடல்களினால் சூழப்பட்ட இன்றைய உலகின் அரசியல் பொருத்தப்பாடுகளுக்கு அங்கு இடமில்லை. சாமர்த்தியமாக சொல்லாடல்களின் மறைப்பக்கங்களின் மூலமாக வெறுப்பைக் கக்குவதற்கும். பத்மாவுடனான அவரது உறவின் சித்தரிப்பு ஏதோ கருத்தியலின் வெளியே இருந்து பத்மா போன்றோரின் உலகை அனுசரணையாகப் பார்க்கும் பாசாங்கு அற்று தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலின் இருண்ட யதார்த்தமாகவும் இருக்கிறது. அத்தகையதோர் கருந்துளையின் புவிஈர்ப்பலைகள் சம்பத்தின் சாவைப் பற்றிய ஆய்வின் மர்ம நாடகத்திற்குத் தகுந்த பின்புலமாக அமைந்துள்ளது. வாழ்வின் விளிம்பில் நிற்கும் தனது பெரியப்பாவைப் பார்க்கச் சென்ற இடத்தில் தான் எண்ணியதைவிட அதிகம் காலம் தங்கவேண்டிய காரணத்தினால் தனக்கு துணிமணிகளை கொடுத்து அனுப்பும்படி தினகரன் பத்மாவிடம் தோலைபேசும் காட்சியை எண்ணிப்பாருங்கள்.
துணியைப் பற்றிய நினைவு வரும்போது உடலில் ஆரம்பித்து அதில் முடிந்துவிடுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் பத்மாவின் ஞாபகமும் கூடவே சேர்ந்துவருகிறது. தனது உடலின் சொகுசிற்கு ஒரு காரணி என்ற அளவில். இங்கு ஒரு முகவராக முன்னிறுத்தப்படும் பத்மா வரவேற்கப்படாத விருந்தாளியாக அண்டை வீட்டாரின் தொலைபேசி மூலம் பேசுகிறார். அந்த சங்கடமான தருணத்திலும் அவரது இருத்தலியல் கொந்தளிப்பு வார்த்தைகளாக வெடிக்கிறது. செத்துக்கொண்டிருக்கும் பெரியப்பா சாமர்த்தியமாக பணம் சம்பாதித்துவிட்டு கரையேறுவதைச் சுட்டிக்காட்டுகிறார்: “பணம் அன்பே, பணம்தான் காரணம். செத்துக்கிட்டு இருப்பவர் வட்டிக்கு விட்டு வட்டிக்கு விட்டு நிறைய பணம் பண்ணியிருக்கார். தலையணைக்குக் கீழே பார்த்தேளா? உங்களுக்கு ஏது அவ்வளவு சாமர்த்தியம் இருக்கப்போறது?… பிணம் கூட பணத்தில்தான் வேகும்.” “நீ பேசறது எல்லாமே எங்கிருந்தோ புஸ்தகத்திலிருந்து கடன் வாங்கினதுதான்,” என்று திட்டவட்டமாக கூறும் பத்மாவிற்கு இவ்வுலகத்திலிருந்து உடல் மறையும் விதத்தில் தினகரனைப் போல குழப்பமில்லை. அதே வேளையில் தினகரனுக்கு சாவைப் பற்றி இருக்கும் வேட்கையில் மறைந்திருக்கும் மிகுகற்பனையை இந்தக்காட்சி அம்பலப்படுத்துகிறது. சாவை கைக்கு அகப்படாத அரிய இடைவெளி என்றணுகும் தினகரனின் காட்சிக்கோணத்தை அதை இடைவெளிகள் நிறைந்த வாழ்வின் தொடர்ச்சியாக அணுகும் ‘சராசரி’ மனிதர்களின் இயல்புடன் ஒத்துப்பார்க்க வழிவகுக்கிறது. “போதும் நிறுத்து. உன் பேச்சைக்கேட்டு அச்சானியமா இது என்ன தலைவேதனை என்று வீட்டுக்காரி வந்துடப்போறா,” என்கிற தினகரனின் இங்கிதம் சார்ந்த பதட்டத்திற்கு யதார்த்தத்தில் ஊறிய பத்மா “சரி ஒழுங்காக வேலைக்குப் போங்கோ,” என்று எதிர்வினையாற்றுகிறார். பத்மாவின் உரையாடல் பெண்கள் தங்களது உடலின் மூலம் / மேல் எழுதிச் செல்லும் அரசியல் ஆண்களின் கற்பனாதீத தேடலைவிட அன்றாட வாழ்வின் அழகியல் நிறைந்து ஆழமானதாக மனதில் பதிவதைச் சுட்டுகிறது. ஒருவகையில் ‘நான் உங்களை நம்பி இங்கேயிருக்கிறேன்’ மற்றும் ‘சொக்காய்க்காகவும், நிக்கருக்காகவும், பட்டுப்பாவாடைக்காகவும் ஏங்கும் நாங்கள் இங்கேயிருக்கிறோம்’ என்கிற தொடர்ந்தொலிக்கும் பத்மாவின் மந்திரங்கள் “பிராமணனாகிய நான் எப்படி சாவை இவ்வளவு பெரிய விஷயமாக்கலாம் - சட்டை மாட்டிக்கொள்வது போல்தானே அது” என்கிற ஆணுலக பொறுப்புகளின் கனமிறக்கி உயரப்பறக்கும் பாசாங்கை புவியீர்த்து வேரறுக்கின்றன.
சம்பத்தின் இடைவெளி வானத்துக்கும் பூமிக்குமான சாவு சம்பந்தப்பட்ட சினிமாவின் மற்றுமொரு உன்னத கலைஞனின் பிம்பத்தையும் நினைவூட்டுகிறது. அது பிரஞ்சு இயக்குனரான ராபர் பிரஸ்ஸோனின், தஸ்தாயெவ்ஸ்கியின் சிறுகதையைத் தழுவி எடுக்கபட்ட 'Une Femme Douce,’/ ‘மென்மையான பெண்’என்கிற படம். 1969ல் எடுக்கப்பட்ட ப்ரெஸ்ஸானின் முதல் வண்ணப்படத்தில் மையக் கதாபாத்திரமான எல்லியின் எளிதில் கிரகிக்க முடியாத உள்ளுலகம் அவளது தற்கொலையுடன் ஆரம்பித்து ப்ளேஷ்பேக்கில் அவளது அடகுக்கடைக்கார கணவனான லூக்குடன் அவள் கழித்த வெறுமையும் குரூரமும் நிறைந்த நாட்களைக்கொண்டு கட்டமைக்கப்படுகிறது. லூக்கின் பார்வையிலிருந்து பின்னப்பட்டிருக்கும் கதையாடல் அவன் தனது மனைவியின் தற்கொலைக்கான காரணங்களை அறிய முற்படுவதை தனது மையச்சரடாகக் கொண்டுள்ளது. எல்லியின் அழகினால் கவரப்பட்ட லூக் அவளது விருப்பமின்மையை மீறி அவளை மணந்துகொண்டு தனது விருப்பு வெறுப்புகளை அவள் மேல் திணிக்க ஆரம்பிக்கிறான். அவனுக்கு இயல்பாகப்படும் செய்கைகள் அவளுக்கு சுகமளிக்காது அவனை வாட்டுகிறது. அவளது விரக்திக்குக்காரணத்தைத் தேட ஆரம்பிக்கும் லூக் அவளை ஆப்ராவிற்கு அழைத்துச் செல்கிறான். புத்தகம் மற்றும் இசையில் அவள் மணம் குவியச் செய்கிறான். அவளது நிரந்தர சோகத்தை வெல்ல நினைக்கும் அடகைத் தொழிலாகக் கொண்டுள்ள லூக் அவளை குரூரமாக ஒடுக்க ஆரம்பிக்கிறான். வெறுப்பின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட எல்லி, லூக்கைக் கொல்ல நினைக்கிறாள். ஆயினும் துப்பாக்கியின் விசையை அழுத்துவதில் செயலற்றவளாகி வாடி நின்றுவிடுகிறாள். பிரஸ்ஸானின் பல படங்களில் வருவதைப் போல பின்னர் சாவின் மூலம் தனது விடுதலையை அடைகிறாள் இலவம் பஞ்சினும் இலகுவான இதயம் கொண்ட எல்லி.
இங்கு சம்பத்தின் விடுதலையை நினைவுறுத்துவது எதுவென்றால் மென்மையான எல்லியின் சாவின் தருணத்தை பிரஸ்ஸான் கட்டமைத்திருக்கும் விதம்தான். தனது கணவனைச் சுடமுடியாமல் போனபின் தனது இயலாமையினால் ஏற்கனவே விரக்தியின் விளிம்பிலிருக்கும் எல்லி தனது அபார்ட்மெண்ட் பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, கால்களைக்கொண்டு மெதுவாக ஆடிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அத்தகைய உணர்வெழுச்சி மிகுந்த காட்சியில் எல்லியின் பாத்திரத்தில் நடிக்கும் மென்மைக்குப் பேர்போன பேரழகி டோமினிக் ஸேண்டாவின் முகத்தின் அணுக்கக் காட்சிக்கு பதிலாக பிரஸ்ஸான் தனகேயுரிய அழகியல்மூலம் அந்த மேல்மாடத்தில் ஆடிக்கொண்டிருக்கும் சாய்வு நாற்காலியின் கால்களை தனது காமெரா மூலம் அணுகி சட்டகப்படுத்துகிறார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பக்கவாட்டில் கீழேயிருந்து வானை நோக்கி எடுக்கப்பட்ட அதற்கடுத்த ‘லோ ஆங்கிள்
ஷாட்’டில் மென்மையாக எல்லியின் துப்பட்டா போன்ற மேலாடை ஸ்லோமோஷனில் நகர்ந்து நம்மை நோக்கி வருவதைக் காண்கிறோம். இந்த இரண்டு ஷாட்டுக்குமான இடைவெளி லூக் என்றென்றும் எல்லியின் மனதுக்குள் ஊடுருவ முடியாததின் குறியீடாக இருக்கிறது. பிரஸ்ஸானின் லௌகீகம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த சொல்லாடலின் நீட்சியாக உருக்கொள்ளும் இந்த படிமம் சம்பத்தின் இடைவெளியின் மறுபக்கமாக விரிகிறது. அது தூக்குக்கயிறுக்கு மேலேயிருந்து எடுக்கப்பட்ட பிம்பமாக மிளிர்கிறது. அதே வேளையில் சம்பத்தின் இடைவெளியின் மகத்துவம் லௌகீகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையிலான முரண்வெளிகளை மையமாகக்கொண்ட சாவு சார்ந்த சொல்லாடல்களை செர்ரிப்பழங்களும் புஷ்டியான குழந்தைகளும் நிறைந்த கற்பனாதீத ஆணுலகத்திற்கும், கணவனின் சம்பளத்தை எதிர்பார்த்து குடும்ப பாரத்தைச் சுமக்கும் பெண்ணுலகத்திற்கும் ஊடான கீறலாக வடித்திருப்பதுதான்.
சம்பத், பெஸண்ட் நகரின் அன்றைய அற்புதமான கடலில் நீந்துவதிலும், அங்குள்ள மணற்பரப்பில் ஓய்வெடுப்பதிலும், சாவைப்பற்றிய ரகசியத்தை அறிய குழந்தைத்துவம் நிறைந்த தனக்கேயுரிய பித்தில் தோய்ந்த மணற்கோட்டைகளை கட்டுவதிலும் மனம் லயிக்கிறார். இங்கு எனக்கு, சம்பத்தின் இடைவெளியை எனது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது தாமிரபரணியின் கடற்கரையில் அறிமுகம் செய்த நண்பர் ராமகிருஷ்ணனின் ஞாபகம் வருகிறது. அந்த காலத்திலிருந்தே சம்பத்தின் சிறுகதைகளைப் பற்றியும் அவரது ஒரே நாவலான இடைவெளியைப் பற்றியும் என்னிடமும் பூனே திரைப்பள்ளியை சார்ந்த எனது நண்பர்களிடமும் அவர் உரையாடியிருக்கிறார். உறுபசியில் வரும் கதாபாத்திரமான சம்பத்தும் அவரது பிறிதொரு கதையில் வரும் தினகரனும் எஸ்ராவிற்கு சம்பத்தின் மேலுள்ள நாட்டம் மற்றும் மதிப்பின் குறியீடாக இருக்கிறார்கள். சம்பத்தின் இடைவெளியை மையமாக வைத்து எஸ்.ராவின் கதைகளில் வரும் சாவின் மறைதலின் படிமங்களை அணுகுவது நமக்கு சில முக்கிய திறப்புகளை அளிக்கிறது. உறுபசியில் சம்பத் என்ற நண்பரின் இழப்பிற்குப் பின் அவருடன் கழித்த கடந்தகாலத்தின் நினைவேக்கத்தில் அழகர், ராமதுரை மற்றும் மாரியப்பன் தங்களது மலைப் பயணத்தின்போதும் பின்னர் அங்கு தங்கியிருக்கும் போதும் உரையாடுவதிலிருந்து நாவல் தனது கதையாடலுக்கான மையச்சரடை கட்டமைத்துக்கொள்கிறது. நேர்க்கோட்டில் பயணம் செய்யாத நண்பர்களின் நினைவுகளின் கோர்வையின் மூலம் நமக்குக் கிடைக்கும் சம்பத்தின் குணாதிசயங்கள் இடைவெளியின் நாயகனான தினகரனுடன் ஒத்தும், விலகியும் இருக்கின்றன. தமிழில் ஆர்வம் கொண்ட உறுபசியின் நாயகனான சம்பத் நாத்திகத்தில் நாட்டம் கொண்டு கம்பராமாயணப் பிரதியை எரிக்கிறான். தன்னுடன் ஒத்த கருத்துடைய யாழினி என்ற கல்லூரித்தோழியின் மீது மனம் பறிகொடுக்கும் சம்பத் அவளது தந்தையால் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமான மேடைப்பேச்சாளனாகிறான். அவனது உணர்வுபூர்வமான இயல்பு, குடிப்பதற்கும் கும்மாளத்திற்கும் இட்டுச் சென்று அவனை அலைக்கழிக்கிறது. நடைமுறை யதார்த்தத்தில் ஊறிய யாழினி, அவனை விட்டுவிலகி வேறொருவரை மணந்து கொள்கிறாள். தனது குடிப்பழக்கத்தால் மேடைப்பேச்சாளனாக நிராகரிக்கப்பட்டு சம்பத் வீட்டில் முடங்கிக் கிடக்கிறான்.
வெவ்வேறு நண்பர்களின் பார்வையில், வெவ்வேறு வண்ணங்களில் தீட்டப்படும் சம்பத்தின் பகுதி பிம்பங்கள் காலம் - வெளி மற்றும் காம இச்சை - மரணம் சார்ந்த படிமங்களாக உருக்கொள்கின்றன. முன்னும் பின்னும் நகரும் நினைவுகள் இடைவெளிகளைக் கொண்டு சம்பத்தின் வெவ்வேறான பிம்பங்களை மோதவிட்டு, பின் அவைகளை அடுக்கி உள்ளடுக்குகளிலுள்ள இடை வெளிகளை நிரப்புதலின் இயலாமையைச் சொல்கின்றன. கல்லூரி வாழ்க்கையின் நம்பிக்கையும் களிப்பும் நிராசையும் நிரம்பிய சம்பத்தின் வாழ்க்கை அவன் தங்கியிருக்கும் லாட்ஜுக்கு அருகேயிருக்கும் தொலைபேசிச் சாவடியில் வேலை செய்யும் ஜெயந்தியை மணந்துகொள்வதுடன் வேறு திக்கில் பயணிக்கிறது. எந்த வேலையிலும் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சம்பத் லாட்டரி சீட்டு வாங்குவதில் நாட்டமுள்ளவனாகவும் கரும்பு ஜூஸ் வியாபாரத்தில் ஆர்வமுள்ளவனாகவும் இருக்கிறான். தன் மனைவியுடன் சேர்ந்து பூந்தொட்டிகள் செய்து விற்கலாமென்று எண்ணுகிறான். திருமணத்திற்குப் பின் சென்னையில் ஒரு சிறிய அறையில் குடியேறி புலனாய்வு இதழ் ஒன்றில் பிழை திருத்துபவனாக வேலைக்கு அமரும் சம்பத் அங்கு செய்தியாய் குவியும் கொலை, கற்பழிப்பு, குரூரங்கள் தன்னை சூழ்ந்து அமிழ்த்துவதாக உணர்கிறான். தானே அவற்றில் பங்கு கொள்வதான அவனது பிரமையிலிருந்து ஆரம்பித்து, அவனது மனக்குமைதல், அவன் சிதைவிற்கு வழிவகுத்து நாற்பத்து இரண்டு வயதில் அவன் மறைவதற்கு காரணமாகிறது. நோயுற்ற காலங்களில் பொறுமையாக அவனைப் பராமரித்த ஜெயந்தி தன்னந்தனியாக அவன் சடலத்தைக் குளிப்பாட்டி அருகில் ஈரத்துணியுடன் அமர்ந்திருப்பது உணர்ச்சியற்ற வறண்ட யதார்த்த அழகியலுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ராமகிருஷ்ணனின் ‘உலர்ந்த’ சொற்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் உறுபசியின் அழகியல், சம்பத்தின் அலைக்கழிப்புகள் நிறைந்த திக்கில்லாத வாழ்வைப் பற்றிய யதார்த்த வர்ணனைகளுக்குத் தகுந்த யுக்தியாக இருக்கிறது.
இறுதியில் சம்பத் என்கிற ஒரு ஆளுமையின் முழுமையான சித்திரத்தையோ அல்லது அவனது வாழ்வின் மூலம் ஒரு புதிரவிழ்தலின் நிறைவையோ நமக்கு உறுபசி அழிப்பதில்லை. மாறாக நவீனத்துவத்தின் மையக் கூறான ‘க்ராண்ட் நெரேட்டிவ் மேலான நம்பிக்கை’ என்கிற பெருங்கதையாடலின் மீதான நம்பிக்கை இதில் இல்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற பெருங்கதையாடலின் சாரம் இங்கே பொருந்தாது. நாவலின் முற்பகுதியில் சம்பத் காம இச்சைகளின் கட்டற்ற பிடிக்குள் சிக்கியவனாக இளவயதில் இருப்பது யாழினி சாமர்த்தியமாக அவனைக் கழற்றிவிட்டு மேற்படிப்பிற்கு செல்வதற்குக் காரணமாக அமைகிறது. பிற்பகுதியில் ஜெயந்தியை மணந்தபின் அவனது தீவிர காமநாட்டம் அவள் நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்க துணைபுரிகிறது. ஆயினும் அது சிறிதுகாலமே நீடிக்கிறது. அதன்பின் அவன் நோயுற்று சிதைவுறுகிறான். அறம் விழுமியம் போன்ற பெருங்கதையாடல்களின் அச்சாணிகள் இங்கு முதன்மையை இழக்கின்றன. உறுபசியின் இந்த பின்நவீனத்துவ அழகியல், இடைவெளி என்கிற நாவலை வைத்து, அது சுயசரிதையை தனது கதையாடலின் மையசரடாக கொண்டிருக்கும் பட்சத்திலும், அதனாசிரியர் சம்பத்தின் வாழ்வைப் பற்றிய ஒரு முழு ஓவியத்தை நாம் அடைவதை கேள்விக்குள்ளாக்குகிறது. அழகர் கதை சொல்வதாக ஆரம்பித்து மாரியப்பனை கதைசொல்லியாகச் சுட்டி மீண்டும் அழகர் மூலமாக பயணிக்கிறது உறுபசி. நினைவுத் துண்டுகள் இடைவெளிகள் நிறைந்ததாகவே இருக்க முடியும். தனி ஒருவராக தினகரன் தனது தேர்ந்தெடுத்த நினைவுத் துண்டுகள் நிறைந்த ஓடையில் நீந்தும்போதும்.
உறுபசியில் குரூரமாக செயல்படும் சம்பத், இடைவெளியிலுள்ள தினகரனை விட பெரிதும் மாறுபட்டவன். லைட்டரிலிருந்து நேர்க்கோட்டில் எரியும் தீ தனக்குப் பிடிப்பதில்லை தீக்குச்சியை உரசும்போது உருவாகும் நெருப்பைப்போல அதில் ஒரு அலைதலும் நடுக்கமும் இல்லை என்று சொல்லும் உறுபசியின் நாயகன் சம்பத் நாவலின் ஆரம்பத்திலேயே தீப்பெட்டியில் தனது ஊரின் பெயர் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். அவனது சிவகாசி/கோவில்பட்டிக்கான ஏக்கம், தில்லியை அவ்வப்போது நினைவுகூறி கல்பனாவிற்கான தினகரனின் ஏக்கத்தைவிட வெகுவாக மாறுபட்டது. கற்பனாதீத தினகரன் ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸிஸின் முதல் இரண்டு அத்தியாயங்களை மீண்டும் படிக்க விழைபவர். மற்றும் தாமஸ் ஹார்டியின் பார் ப்ரம் த மேட்டிங் க்ரௌட்டை (ஜான் ஸ்லேஸிங்கர் 1967ல் இயக்கிய) இரண்டு தடவை திரையில் கண்டுகளித்திருக்கிறார். ஜூலி க்ரிஸ்டி ஒரு தலைமுறையின் இதயத்தை கொள்ளை கொண்ட அழகான நடிகை. ஆயினும் ஹார்டியின் நாவலுக்கு நிகரில்லாத ஸ்லேஸிங்கரின் படத்தை மூன்றாவது முறை பார்க்க முடியாது என்று சலித்துக்கொள்ளும் ரோமாஞ்சக மனமுடைய தினகரன் கல்பனா மீது காதல் கொண்டது இயல்பானதே. அந்த இளவயதில் காமப்பெருக்கினால் அள்ளிச் செல்லப்படாத தினகரன், சபலம் நிறைந்த சம்பத்தைவிட வித்தியாசமானவர்.
உறுபசியில் தன் மனைவியுடன் திரையரங்கிலிருந்து வரும் அழகரை எதிர்கொள்ளும் சம்பத், தன்னுடன் வந்திருக்கும் விபச்சாரியை அறிமுகப்படுத்துவதில் கூச்சமடைவதில்லை. பெருத்திருக்கும் அழகரின் மனைவியின் இடை கருத்தடை சிகிச்சையினால் இருக்கக்கூடுமோ என்கிற தனது ஊகத்தை இங்கிதமில்லாமல் அங்கு அறிவித்து அழகரைச் சீண்டிச்செல்லும் வக்கிரம் நிறைந்த சம்பத் மென்மையான தினகரனைவிட முற்றிலும் மாறுபட்டவன். மீண்டும் ஒரு தருணத்தில் சம்பத்தின் குரூரத்திற்கு அழகர் சாட்சியாக இருக்கிறான். அழகரை தனது சொந்த ஊருக்கு அழைத்துப் போகும் சம்பத் சிறு வயதில் கோவிலுக்குப் பொங்கல் வைக்கச் சென்றதை நினைவுகூறுகிறான். அவனது தோழியொருத்தியிடமிருந்து அவள் அணிந்திருந்த தனது உடையை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டது அவளது மரணத்திற்கு காரணமாக இருந்ததை குற்றஉணர்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறான். பின்னர் வீட்டில் அவனுக்கும் அவனது தந்தைக்கும் கைகலப்பு ஏற்பட்டு அவரை விறகுகட்டையால் தாக்குகிறான். இந்தக் காட்சியை சம்பத்தின் நாவலான இடைவெளியில், தினகரனுக்கும் இறந்துகொண்டிருக்கும் அவனது பெரியப்பாவிற்கும் இடையிலான காட்சியுடன் ஒப்பிட்டு நோக்க, இரண்டு கதாபாத்திரங்களுக்குமான இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. காம இச்சைகளில் மூழ்கித் துவளும் சம்பத்துக்கும் தினகரனுக்கும் தந்தையுருவங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டின் இறுகிய குறியீடுகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆயினும் அதை விறகுக்கட்டையுடன் எதிர்கொள்வதும், அது கரைந்துகொண்டிருக்கும் தருணத்தில் அதன் மூலம் சமூகத்தை மீறிய சாவின் இறுக்கத்தை ஆராய்வதும் அவர்களிருவரும் வெவ்வேறு துருவங்கள் என்பதை தெளிவாக்குகிறது.
சம்பத்தின் மறைவிற்குப் பின் ஜெயந்தியை சந்திக்கும் யாழினி, தனக்கு மகிழ்ச்சியையும் பீதியையும் அளித்த அவனது கட்டற்ற தாபத்தை நினைவுகூர்கிறாள். காமத்தினால் உந்தப்படும் தினகரனும் சம்பத்தும் கல்பனா மற்றும் யாழினி என்கிற கதாபாத்திரங்கள் மூலம் ஒன்றிணைவதாக ஒரு பிரமையை உறுபசி ஏற்படுத்தினாலும் அவர்களிருவரும் வெவ்வேறு தன்மையுடைத்தவர்களே. சம்பத்தின் அகால மரணம் அவரது வாழ்வை அறிந்துக்கொள்ள நம்மை பின்நோக்கிப் பயணிக்க வைக்கிறது. அத்தகைய பயணம் பழைய நிழற்படங்களின் தொகுப்பாக உருக்கொள்வது இந்த இரண்டு நாவல்களையும் ஒரு இழையாக இணைப்பதைப் போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. காமத்தை அணுகி சாவை அணுக்க வாசிக்கும் சம்பத்துக்கும், காம இச்சையின் மூலம் வாழ்வை ஆராயும் ராமகிருஷ்ணனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நெடுங்குருதியில் ரத்னாவதியின் மூலம் காமம் நீங்காத வெயிலாக காய்கிறது என்றால், யாமத்தில் அத்தர் என்கிற வாசனைத்திரவியமாக நம்மைச் சூழ்ந்து அது உள்ளிழுக்கிறது. சம்பத்திற்கோ உடலையும் மனதையும் எல்லைகளைக் களைந்து சங்கமிக்கச் செய்யும் காமம், நிரந்தர இடைவெளியைக் கொண்டு இயங்கும் சாவின் சூக்குமங்களின் திறவு கோலாகவும் இருக்கிறது. இந்த முரணியக்கமே காமத்தையும் சாவையும் ஒன்றை மற்றொன்றின் நீட்சியாக உன்னதக் கலைஞர்கள் இன்றளவும் வாசித்துத் தீராதவர்களாக இருப்பதின் காரணியாக உள்ளது.
தினமொரு வலையிழுத்து தினவெடுத்த தோள்களில் உலகத்துச் சுமையெலாம் ஒற்றையாய்ச் சுமந்த களைப்பொடு கீழ்திசை வான்மிசை களிம்பிட்டப்பிய கருமுகிற்றிருளில் நாளைய தேதியின் அநிச்சயம் கண்டுணர்ந்து சாவகாசமாய் உள்ளிழுத்த சல்லிசுப் புகையில் ஈர்ப்பற்று மணற்றரை மீதுறைந்து வெய்துயிர்த்துழல்கிறான் நெய்தற் கிழான்.
நியாயமாக
உன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்
உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது
காஃப்காவின் தரிசனத்துக்குப் பின்
பல பத்தாண்டுகள் போய்விட்டன
இன்று எல்லா வீட்டிலும்
எல்லோரும் பூச்சிகள்
எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக்கூட்டம்
பிறந்தவுடன் நடந்துவிடுகிறது உருமாற்றம்
உடனே தொடங்கிவிடுகிறது அதன் அரித்தல்
பிற பூச்சிகளிலிருந்து வானம் வரைக்கும்
முடியும்வரை
பெரிய பூச்சிகள் சின்னப் பூச்சிகள்
அப்பா பூச்சிகள் குழந்தை பூச்சிகள்
கல்லூரி பூச்சிகள் ஆஸ்பத்திரி பூச்சிகள்
மிகப் பிரமாண்டமான அரசாங்க விஷப் பூச்சி
அதன் வயிற்றுக்குள் கோடிப் பூச்சிகள்
நீயும் ஒரு சின்னப் பூச்சிதான்
ஊர்ந்து செல்லவில்லை
பறக்கவில்லை என்பதால்
இல்லை என்றாகிவிடாது
ஒரு பூச்சி என்றைக்குத்
தானொரு பூச்சி என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது.
சாத்தானின் ஆன்மா உறைந்து போய்விட்டது வகுப்பறையிலிருந்து அலுவலகத்துக்கு நூறு அடிகள் சாவின் போர்வை போல வெள்ளை நிலத்தில் சில தலைகள் நட்டுவைக்கப்பட்டிருக்கின்றன கண்களாலேயே புத்தகங்களை அவை புரட்டுகின்றன அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகள் அவற்றுக்கும் வாழ்க்கைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை அவள் தன் குதிகால்களை கவனமாகப் பதித்து நடக்கிறாள் சறுக்கிவிடாதபடிக்கு அவளுக்கும் இந்த நிலத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை துருவப்பனி வேக வேகமாக ஓடி வருகிறது கடலுக்கு யாரோ ஒருவர் அவசர அவசரமாக ஸ்டாப் என்கிறார் துருவப்பனிக்கும் கீழ்ப்படிதலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள் பார்க்க ஒன்றுமில்லை கடவுளின் அருட்கைகள் ஆளில்லா ரயில்வே கேட்களில் உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன.
ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்கவேண்டும்.
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்
என்கிறான் மகாகவி பர்ரா’
இந்நாள் வரை
கவிதையை கவிதையைவிட
தைரியமே காப்பாற்றியிருக்கிறது
வரலாற்றில்
கடக்க ஒரு மரப் பாலமும்
பேச சில மண்டையோடுகளும் இருந்தால்
போதாதா?...
பார்த்திருப்போம்
அவமானத்திலிருந்து தொடங்கும் பலருடைய நாட்கள்
அவமானத்திலேயே முடிகின்றன
சந்தேகத்தின் முன்னால் தூக்கம் கலைந்து
அதன் முன்னால் தூங்கச் செல்பவர்கள் உண்டு
சூரிய உதயம் அஸ்தமனம் எல்லாம்
வெகு சிலருக்கானவை
பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு
‘மனதிலிருந்து கூப்பிட்டாலும்’
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆட்கள் இருப்பவர்களுக்கு
வசதிகள் இருப்பவர்களுக்கு
குடும்பத்தில் நம்பிக்கை என்பது ஒரு வசதி
சூரியனின் காலை, மாலைக் காட்சிகளை
குடும்பமாக
பெரும்பாலும் தவறாமல் கண்டுவிடலாம்
மற்றபடி
சாட்டையை எப்படிச் சொடுக்கினாலும்
உன் குதிரை
அந்தியில் வந்து நிற்கப்போவதேயில்லை.
பங்குசந்தைச் செய்திகள் வெளிவரும் ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ் நியூஸ்’ஸின் 223ஆம் இதழினால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொருளை, தன் தாய்க்கு ஒரே மகனான சாஷா ஸ்மிர்நோவ் மிகக் கவனமாகத் தன் கக்கத்தில் தாங்கியபடி வந்தான். சோகமான முகத்துடன் இருந்த மருத்துவர் கோஷெல்கோவின் அலுவல் அறைக்குள் அவன் நுழைந்தான்.
“அட, தம்பியா வா! இன்று எப்படி? எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?” என்று அவனை மருத்துவர் வரவேற்றார்.
கண்களைச் சிமிட்டிய சாஷா, தன் மார்பின்மீது கைகளை அழுத்தி, நடுக்கத்துடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்:
“டாக்டர், அம்மா உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள். உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். அந்த அம்மாவின் ஒரே பையன் நான். என் உயிரை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள். அபாயகரமான நோயிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே என் அம்மாவுக்கும் எனக்கும் தெரியவேயில்லை.”
“உளறாதே” என்று இடைமறித்த மருத்துவர், உள்ளூர மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே, “என் இடத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.
“நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர், நீங்கள் செய்த சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லைதான் என்றாலும், அம்மாவும் நானும், அதாவது அவரது ஒரே பிள்ளையான நான் உங்களை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான். இதோ இந்தப் பொருளை எங்கள் சார்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு பழமையான வெண்கலக் கலைப்பொருள்; அற்புதமான கலை நயம், வேலைப்பாடு கொண்டது”.
“முடியாது. உண்மையாகத்தான் சொல்கிறேன். என்னால் இதனை…” எனப் புருவத்தை நெறித்தபடி மருத்துவர் மறுத்தார்.
“இல்லை. இல்லை நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என முணுமுணுத்தபடியே தான் கொண்டு வந்திருந்த பொருளைச் சுற்றியிருந்த தாளை பிரிக்கத் தொடங்கினான்.
“நீங்கள் முடியாது என்றால் அம்மாவுக்கும் எனக்கும் மனது புண்படும். இது ஒரு அருமையான பொருள். பழைய பொருள். வெண்கலத்தாலானது. அப்பா இறந்தவுடன் இது எங்களுக்குக் கிடைத்தது. இதனை விலை மதிப்பற்ற நினைவுப் பொருளாக நாங்கள் பாதுகாத்து வந்தோம். இது போன்ற பழைய வெண்கலப் பொருட்களை வாங்கி கலைப் பொருள் சேகரிப்பவர்களுக்கு விற்பதை என் அப்பா தொழிலாகச் செய்து வந்தார். இப்பொழுது அம்மாவும் நானும் அந்தத் தொழிலைப் பார்த்துக்கொள்கிறோம்…”
அப்பொருளைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்து முடித்தவுடன் அங்கிருந்த மேசை மீது அதனை எடுத்து வெற்றிகரமாக வைத்தான். மெழுகுவத்திகள் வைப்பதற்கென அழகாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட பழைய வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் பீடத்தில் இரண்டு பெண் உருவங்கள் பிறந்தமேனியாக காட்சியளித்தன. அவை எப்படி நின்றிருந்தன என்பதை விவரிக்குமளவு துணிச்சலோ, பாலுணர்வோ எனக்கு இல்லை. அந்த உருவங்கள் பசப்புகின்ற முறையில் சிரித்துக்கொண்டிருந்தன. மெழுகுவத்திகளைத் தாங்க வேண்டிய வேலையை விடுத்து அவை அந்தப் பீடத்திலிருந்துத் தாவிக் குதித்து இந்த அறை முழுவதும் மோசமான காட்சியை உண்டாக்கக்கூடும் என்பதைப் போல் தோன்றியது. அதை நினைக்கும் மாத்திரத்திலேயே, இனிய வாசகரே, உங்களுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து போய்விடும்.
அந்தப் பரிசுப் பொருளை ஒரு முறை நோட்டமிட்டவுடன், தன் காதின் பின் பகுதியை மருத்துவர் லேசாகச் சொறிந்துகொண்டார். தொண்டையை செருமிக்கொண்டு பெருமூச்சு விட்டார்.
“உண்மைதான். இது ஓர் அழகான கலைப்பொருள்தான். ஆனால், இதை நான் எப்படி வைக்க முடியும்? இது ரசனை என்று நீ சொல்ல முடியாது. அதாவது, கழுத்து தெரிய இறக்கி வெட்டப்பட்ட சட்டை ஒருபுறம் இருக்க, இது உண்மையில் எல்லை மீறிய…”
“எல்லை மீறிய என்றால், என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“உணர்வுகளைத் தூண்டும் அந்தப் பாம்புக் கூட இந்த அளவு பண்பாடு குறைவாக எதையும் நினைத்திருக்காது. மேசை மீது இத்தகைய சாதாரண அலங்காரப் பொருளை வைப்பதனால், இந்த வீடு முழுவதும் கெட்டு விடுவதாக நான் ஏன் நினைக்கவேண்டும்?”
“டாக்டர், கலை மீது ஏன் உங்களுக்கு இத்தகைய வினோதமான பார்வை இருக்கிறது?” சாஷாவின் மனவருத்தம் பேச்சில் எதிரொலித்தது.
“இது உத்வேகத்தை அளிக்கக்கூடிய வேலைப்பாடு உடையது. இதன் ஒட்டுமொத்த அழகையும் நேர்த்தியையும் பாருங்கள். அப்படியே பயபக்தி ஏற்பட்டு உங்கள் தொண்டை அடைக்கவில்லையா? இது போன்ற அழகை ரசிக்கும்போது இந்த பூமியில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு மறந்து போகும். அதோ அந்த அசைவைப் பாருங்கள் டாக்டர். அந்தத் தோற்றத்தை, முகபாவத்தைப் பாருங்கள்.” என்று சாஷா சொல்லிக்கொண்டே போனான்.
“நான் அதை மிகவும் ரசிக்கிறேன், பாராட்டுகிறேன்,” என்று சுதாரித்துக்கொண்ட மருத்துவர், “ஆனால் ஒரு விஷயத்தை நீ மறந்துவிட்டாய். நான் ஒரு குடும்பத்தலைவன். இங்கு வந்து விளையாடப் போகும் என் சிறு பிள்ளைகளைப் பற்றியும் பெண்கள் பற்றியும் யோசித்துப்பார்” என்றார்.
“உண்மைதான். சாதாரண மக்களின் பார்வையில், இந்த மாபெரும் கலைப்படைப்பு வேறு மாதிரியாகத்தான் தெரியும். ஆனால், டாக்டர், நீங்கள் இவர்களை விட ஒருபடி மேலே நின்று பார்க்கவேண்டும். குறிப்பாக, அம்மாவும் நானும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் மிகவும் வருத்தமடைவோம். நான் அம்மாவின் ஒரே மகன். நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். எங்களிடம் உள்ள மிகவும் மதிப்புவாய்ந்த பொக்கிஷத்தை உங்களுக்குத் தருகிறோம். இதனை ஜோடியாக தருமளவு எங்களிடம் இதேபோல் வேறு ஒன்று இல்லையே என்ற ஒரே குறைதான் எனக்கு இருக்கிறது” என்றான் சாஷா.
“நன்றி, தம்பி. அம்மாவை நான் மிகவும் கேட்டதாகச்சொல். ஆனால் என் இடத்தில் கொஞ்சம் இருந்து பார். இங்கு வரக்கூடிய குழந்தைகள், பெண்கள் பற்றி யோசித்துப் பார்…சரி, விடு, அது இங்கேயே இருக்கட்டும்! உன்னைச் சமாதானப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்” என்று மருத்துவர் கூறினார்.
“என்னைச் சமாதானம் செய்ய ஒன்றுமில்லை.” என சந்தோஷமாக சொன்ன சாஷா, “இதோ, இந்தப் பூச்செடியின் பக்கத்தில் இந்தக் கொத்து விளக்குத்தண்டை நீங்கள் வைக்கவேண்டும். என்ன, இது ஜோடியாக இல்லை! வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, சரி! போய் வருகிறேன் டாக்டர்!” என விடை பெற்றான்.
சாஷா சென்ற பிறகு, நீண்ட நேரம் அந்தக் கொத்து விளக்கையே உற்று நோக்கியபடி இருந்த மருத்துவர், காதின் பின்புறத்தைச் சொறிந்துகொண்டே யோசித்தார்.
“இது ஒரு அற்புதமான பொருள்தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதனை வாங்காமல்விட்டிருந்தால்தான் அவமானம். ஆனால், இதனை இங்கு வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹும்! பிரச்சனைதான்! யாரிடம் இதனைக் கொடுப்பது அல்லது தள்ளி விடுவது?” என யோசித்தார்.
நீண்ட நேர யோசனைக்குப் பின், அவருடைய சிறந்த நண்பரும் வழக்கறிஞருமான ஹர்கீன் நினைவுக்கு வந்தார். மருத்துவருக்கு நிறைய சட்ட உதவிகளைச் செய்தவர் அவர்.
“ஆம், இதுதான் சரியான தீர்வு” என மருத்துவர் முடிவெடுத்தார்.
‘நண்பர் என்ற முறையில் நான் தரும் பணத்தை ஏற்றுக்கொள்வது சங்கடமாக இருக்கும். ஆனால், இந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தால் அது முறையானதாக இருக்கும். ஆமாம், இந்தக் கொடூரமானப் பொருளை நேராக அவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் அவர் திருமணமாகாதவர்தானே. வாழ்க்கையினை அப்படி ஒன்றும் பெரிதாகச் சட்டை செய்யாதவர்’ எனப் பலவாறு சிந்தித்தபடியே இருந்தார்.
இதற்கு மேல் காலம் தாழ்த்தாமல், தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, அந்தக் கொத்து விளக்கை எடுத்துக்கொண்டு ஹர்கீன் வீட்டை நோக்கி விரைந்தார்.
அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், “வணக்கம்” என்றார் மருத்துவர். “நீ எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். நீ பணம் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பாய் என நினைக்கிறேன். இதோ இதுதான். உண்மையிலேயே இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.” என்று அப்பொருளை வழக்கறிஞரிடம் மருத்துவர் வழங்கினார்.
அந்தச் சிறு அன்பளிப்பினைப் பார்த்ததும் வழக்கறிஞர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.
“ஆமாம் நிச்சயமாக! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். அருமை! அபாரம்! இது போன்ற பொக்கிஷம் உனக்கு எங்கு கிடைத்தது?” என்று உற்சாகத்தில் குதித்தார் வழக்கறிஞர்.
தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் கொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே,
“நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடு. இதனை நான் வைத்துக்கொள்ளமுடியாது” என வழக்கறிஞர் கூறினார்.
“ஏன்? என்ன காரணம்?” எனப் பதறினார் மருத்துவர்.
எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்.
“இல்லை, இல்லை, இதை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசைவைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.” என்று வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.
“மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை…” என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.
நண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்கீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர், மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.
‘இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்லவிட்டிருந்தால் அவமானம்தான். ஆனால், இதை இங்கே வைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்துவிடுவதுதான் உத்தமம். ஆமாம், இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம். எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இதுபோன்ற பொருட்கள் பிடிக்கும்…’ என முடிவு செய்தார் வழக்கறிஞர்.
உடனடியாக அங்குப் புறப்பட்டுச் சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்தக் கொத்துவிளக்குத்தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப்பாக அன்று மாலை அளிக்கப்பட்டது. அன்று மாலை முழுவதும் அந்த நடிகரின் ஒப்பனை அறையில் இருந்த அன்பளிப்பினைப் பார்வையிட ஆண் பார்வையாளர்கள் மொய்த்தனர். அந்த ஒப்பனை அறை, ஆச்சரியத்தில் எழும்பிய உற்சாகமான ஆரவாரத்தாலும், குதிரை கனைப்பது போன்ற சிரிப்பொலியாலும் நிரம்பியிருந்தது. நடிகைகளில் யாராவது ஒருவர் உள்ளே வர கதவைத்தட்டினால், நடிகர் தன் காந்த குரலில்,
“தற்சமயம் வேண்டாம் டார்லிங், உடை மாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று சமாளித்துவிடுவார்.
நாடகம் முடிந்ததும் தன் தோள்களை வளைத்துக்கொண்டு, குழப்பத்தில் கைகளை உதறிக்கொண்டிருந்தார்.
“இந்தப் பாழாய் போன விகாரத்தை நான் எங்கு வைப்பது? நான் இருப்பதோ தனியார் விடுதியில். என்னைப் பார்க்க வரும் நடிகையை நினைத்துப்பார்க்கிறேன். சட்டென எடுத்து மேசைக்குள் போட்டு மூட இது ஒன்றும் புகைப்படம் இல்லை.!” எனப்புலம்பிக்கொண்டிருந்தார்.
அவரது உடைகளைக் களைய உதவி செய்து கொண்டிருந்த ஒப்பனைக்காரர், “ஏன் சார், இதை விற்றால் என்ன?” என்று கேட்டார். இந்தப் பகுதியில் இது மாதிரியான பழைய வெண்கலப் பொருட்களை வாங்கும் வயதான பெண் ஒருவர் இருக்கிறார். திருமதி.ஸ்மிர்நோவா என்று கேளுங்கள். எல்லோருக்கும் தெரியும்.” என அவருக்கு ஆலோசனை வழங்கினார்.
அவரது ஆலோசனைப்படியே நகைச்சுவை நடிகர் நடந்து கொண்டார்.
இரண்டு நாட்கள் கழித்து, பித்தநீர் குறித்த சிந்தனையில் இருந்த மருத்துவர், நெற்றியில் ஒரு விரலை அழுத்தியபடி, தன் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென கதவைத் திறந்துகொண்டு, சாஷா ஸ்மிர்நோவ் உள்ளே நுழைந்தான். உற்சாகமாகச் சிரித்தபடி வந்த அவன் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிந்தது. அவன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருள், செய்தித்தாளால் சுற்றப்பட்டு இருந்தது.
“டாக்டர்,” எனப்பேசத் தொடங்கும்போதே மூச்சு வாங்கியது. அப்படியே தொடர்ந்தான்.
“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை உங்களால் நம்ப முடியாது. எப்படியோ உங்களுக்கு அன்று கொடுத்த கொத்துவிளக்குத்தண்டுக்கு ஒரு ஜோடி கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு ரொம்ப திருப்தி. நான் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நீங்கள்தான் என்னைக் காப்பாற்றினீர்கள்…”
மிகவும் நன்றி விசுவாசத்துடன், அந்தக் கொத்துவிளக்குத்தண்டை மருத்துவர் முன் சாஷா வைத்தான். வாயைப் பிளந்த மருத்துவர், ஏதோ சொல்ல முயன்று பார்த்தார். ஆனால், வார்த்தை எதுவும் வரவில்லை.
வாயடைத்து நின்றார்.
இக்கதை முதன்முதலில் வெளிவந்த 1886-ஆம் ஆண்டிலேயே
பெரும் வரவேற்பினைப் பெற்றது.
ஆன்டன் செக்காவ் (1860-1904), ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார்.
பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய சிறுகதைகள், பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளன.
முதன் முதலில் 1886இல் எழுதப்பட்ட இக்கதை, 1967இல் வெளியான அவருடைய கதைகள் அடங்கிய பிரஞ்சு மொழியாக்கத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அன்புடையீர், வணக்கம்.
இரண்டாயிரத்து பத்தொன்பதில் இருக்கிறோம் நாம் ஏனைய பிற துறைகள் கண்டிருக்கும் உயரம் நம் எழுத்து துறையும் கண்டிருக்க வேண்டும். முழங்கால் மட்டமாவது ஏறியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். படைப்பாக்க செயற்பாடுகளுக்கான கற்கை நெறிகள் விளைந்து ஊடகச்சந்தைகளில் ஏகதேசமாக எங்கும் மலிந்து கிடக்கின்றன. மட்டுமல்லாது நம் மேசய்யாக்கள் உப்புக்கும் புளிக்கும் ஒலிவ மலையிற் கண்ணிருந்து உபதேசிக்கிறார்கள் கருத்தாய். ஒரு ஜமாவில் ஆடும் கூத்தாடி இன்னொரு ஜமாவில் உயிர் போகிறதென்றாலும் ஆடுவதில்லை. சொந்த ஜாதியில் மாத்திரம் கொண்டு கொடுத்து சம்மந்தம் கலக்கும் இவர்கள் கதைப்பது எப்போதும் குன்னூத்திநாயம். கதையோ கவிதையோ கட்டுரையோ நாவல் பகுதியோ ஒரிதழுக்கு இன்று வரும் படைப்புகள் அதிகமும்
உப்பு சப்பு இல்லாதவைகளாகவே உள்ளன. முன்னோடிகளை விஞ்சிய படைப்புக்களாக அவைகள் இருப்பதில்லை. ஒரு அச்சில் உருக்கி வார்த்தது போல சர்வம் நகல் மயம். சுட்டி ஒரு வார்த்தை சொல்வதற்கில்லை. நொய்யரிசிகள் கொதி பொறுப்பதில்லை. உடனே விடைத்துக் கொண்டுவிடுகிறார்கள் அல்லது தொடர்பறுத்துக்கொண்டு தூர்ந்து போய்விடுகிறார்கள் பசை தேடி. இந்தப் பிரகஸ்பதிகளை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணுவது மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வெட்டிவேலை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. தேடிக்காணாத விடாய்ப்புக்கு ஆறுதலாய் ஆதவனின் சிறுகதை இங்கே இவ்விதழில் மீளவும் பிரசுரம் காண்கிறது.
கூடிவிட்டது சந்தை துண்டுப்போட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்.
வாகன சாரதி முதல் வண்டியில் வைத்து பழங்கள் விற்கும் வேவாரி வரை முதல்வரோடு நேரடி டீலிங் வைத்திருக்கிறார்கள். அங்கன்வாடி ஆயா பணி நியமனமா, ஆசிரியை பணியிட மாறுதலா ஆய்வாளர் காவல்துறை பணி நியமனமா என்ன செய்யவேண்டுமுங்களுக்கு கைல காசு வாயில தோச.
அன்னாரது கைகளில் லட்சங்கள் வைத்து நேர்வழியில் காரியம் சாதிக்கிறார்கள். வருவாய் கோட்டாட்சியர் ஒருவர் ஆளும் கட்சியின் சார்பாக நடுசாமத்தில் வந்து ஓட்டுக்கு இவ்வளவு என்று கச்சிதமாக பணம் பட்டுவாடா செய்து கடமையாற்றுகிறார். வாசல் தாண்டி போய்விட்ட அரசியல்வாதியின் அல்லக்கை ஒருவனை தனது ஓட்டுக்கு காசு கொடுக்காத குற்றத்துக்கு நடுத்தெருவில் சட்டையைப் பிடித்து நாயம் கேக்கிறான் நமது குடிமகன். போடும் ஓட்டுக்கு கையேந்தும் வண்ணமாகத்தான் இருக்கிறது நமது பூளவாக்கு. தெருவெல்லாம் குப்பைக்கூளம் என்று வகை தொகை தெரியாது கூவும் நாம் நம்மிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ஆகாதா? தடங்கண்டு நெறி செல்ல நம்மை தடுப்பவர் யார்? நாம்தான் உக்காரச் சொன்னால்
படுத்துக்கொள்பவர்கள் ஆயிற்றே.
கேடெலாங் கூடித் திரண்டுக் கொண்டுகுடி கேடுட லெடுத்த வம்பன் கேட்டபேர் கண்டபேர் காதுகண் ணோவெடுக் கின்றவடி யுண்ட வம்பன் நாடெலா மிவனையு நாடலா மோவென்று நகையாட லுண்ட வம்பன் நாடோறு மாடுபோ லோடோடி யேதின்று நாவுருசி கண்ட வம்பன் மேடுமுட்டத் துருத் திக்குட் பருக்கைமிக வெட்டியே வீசு வம்பன் மெத்தவம் புற்றவடி யேனுமுமை நம்பினேன் மேன்மைதந் தாளு தற்கே மாடம்ப ஜம்பநடை யுள்ளநீர் பின்றொடர வள்ளலிறசூல் வருகவே வளருமரு ணிறைகுணங் குடிவாழு மென்னிருகண் மணியே முகியித்தீனே.
சென்ற இதழ் தலையங்கம் இலக்கிய தளமெங்கும் கால் பாவியிருக்கும் கயமைப்போக்குகள் குறித்த விமர்சனமாக எழுதப்பட்டிருந்தது. உருக்கின நெய் வார்த்து அமுது படைத்தாலும் கண்ட ஞாயந்தானே சொல்லவேண்டும். ஆனால் மாண்பமை எழுத்தாளர் பலருக்கு அது மனக்காயத்தை உண்டு செய்துவிட்டதாக அறிகிறேன். விலையில்லா கண்டனங்கள் பல வீடு தேடி வந்து மிரட்டியதுடன் வீட்டுப்பெண்டுகளை விலைக்கு விற்று இதழ் நடத்த புத்தியும் உரைத்தார்கள். எலும்புக்கேற்ற குரைப்பு இருக்கத்தானே செய்யும். நானொரு ஊரறிந்த வேசி (சூப்பர் ஐயிட்டம்) பல பேர் நாற்றங்களை கண்டுதான் தொழுவாடு நடக்கிறது. ஜல ஜலப்புக்கு அஞ்சாது நரி.
மற்றொன்று
உன்னதமானவரென்று சமூகத்தில் மகத்துவப்படுத்தும் ஓர் பிரகிருதியின் பிரலாபங்களை வேண்டுவோர் பிரதிகளில் எழுதி மதிப்பு கூட்டவேணும் அல்லது அவர் விட்டு சென்ற சேவையைத் தொட்டு தொடர வேணும் அல்லது மாநிலமெங்கும் சிலை வைத்து தொழுகைகள் வழிபாடுகள் நடத்தி வணங்கவேணும் அல்லது மஹாநுபாவரின் பெயரால் தாம் தொண்டில் பழுத்து தொங்கவேணுமே அன்றி, தீப்பாயாமல் கொக்கரிக்கக் கூடாது. அது சரி ஒப்பிலிக்கும் ஒசு பாடி தப்பிலிக்கும் எதற்கப்பனே பத்திர ஓலை.
வஞ்சிக்கப்பட்டவனின் குரல், ஏமாற்றப்பட்டவனின் குரல், இழந்தவர் தம் குரல் இப்படித்தான் ஒலிக்க வேண்டும் என்று சொல்ல எந்த கிரையஸ்தருக்கும் யோக்கியதை கிடையாது.
கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை, சூழலியல், சமூகம், அரசியல் ஆகிய துறைகளில் களமாடும் இளவல்களோடு அவரவர் களம் குறித்த பரிவர்த்தனை புரிந்துணர்வு வேண்டி ஒருங்கிணையும் முன்னெடுப்பாக தொடர் கலந்துரையாடல் ஒன்றை மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. (முறையான அழைப்பு
பிறகு) ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
இவண்
மு.ஹரிகிருஷ்ணன்
புகாரோவா என்றும் அறியப்பட்டது, முன்பாக வய்டூஹீ 14𝆩 10’ தெ, 141𝆩14’ மே 8 கி .மீ2 / 277 குடியிருப்பாளர்கள் 29 கி.மீ. டெபோடோ நோர்ட், 3,990 கி.மீ. ஹவாய், 920 கி.மீ. ஃபங்காடௌஃபா ஜனவரி இறுதி 1521: ஃபெர்டிணாண்ட் மக்கல்லனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கருதப்படுகிறது; 1977: விமான நிலையத்தின் திறப்பு
28 நவம்பர் 1520 அன்று அவர்கள் மாபெரும் பெருங்கடலை அடைந்து வடமேற்கு நோக்கி பயணிக்கத் தொடங்கிய போது, அவர்களுக்கு நறுமணப்பொருட்கள் தீவினை அடைய மிஞ்சிப்போனால் ஒரு மாதம் ஆகுமென்று கேப்டன்-ஜெனரல் ஃபெர்டிணாண்ட் மக்கல்லன் அறிவித்தார். யாரும் அதை நம்புவதில்லை மேலும். வாரக்கணக்காக நிலம் ஒன்றையும் பார்க்கவில்லை அவர்கள். பெருங்கடல் பரிபூர்ண அமைதியோடிருந்தது, அதன் நிலையுறைத்தன்மைக்காக பெயரிட்டார்கள் அதற்கு: மேர் பசிஃபிக்கோ. முடிவிலியின் கதவுகள் திறக்கப்பட்டது போல இருக்கின்றது அஃது, அதனூடாக அவர்கள் நேராக பயணித்துச் செல்கின்றனர். விரைவிலேயே திசைகாட்டியின் முள்ளுக்கு வடக்கை காட்டும் திறன் அற்றுப் போக, குழுவினருக்கு உண்பதற்கு உள்ளதும் போதுமானதாக இல்லாமல் போகிறது. தூசியைவிட சற்றே மேம்பட்டதான கப்பலின் பிஸ்கட் புழு அரித்தும் எலி புழுக்கைகளுடனும் இருக்கிறது, கூடாது குடிநீரானது முடை நாற்றம் வீசும் ஒரு மஞ்சள் திரவம். பட்டினி கிடந்த அவர்கள் மரத்தூளினையும் கயிறுகளை பாதுகாக்க பாய்மரக் கம்புகளில் சுற்றியிருக்கும் பட்டைகளையும் தின்கிறார்கள். பாறை போல கடினமாயிருக்கும் தோலினை கடலில் நான்கோ ஐந்தோ நாட்கள் முக்கி மிருதுவாக்கி, நிலக்கரியால் சுட்டு, தொண்டையில் அழுத்தி விழுங்குகிறார்கள். எலிகளை அவர்கள் கண்டுபிடித்த போது, வேட்டை தொடங்குகிறது. அரைப் பட்டினி மாதிரி வகைக்கு அரை தங்க நாணயம் வரை விலை கொடுக்கப்படுகிறது. சற்றும் பொறுமையில்லாத ஒருவன் தான் வாங்கியதை பச்சையாக விழுங்க, தாங்கள் பிடித்த ஓர் எலிக்காக இரு மாலுமிகள் மிகப்பெரும் சண்டையிட, கோடரி கொண்டு ஒருவன் மற்றவனைத் கொல்கிறான். தனித்து சிறையில் அடைக்கப்படவேண்டியவன் கொலைகாரன், ஆனால் யாருக்கும் தைரியம் இல்லாமல் போனதால் அவர்கள் அவனது கழுத்தை நெரித்து கப்பல் மேற்தட்டில் தூக்கியெறிகிறார்கள். ஒவ்வொரு தடவை ஒவ்வொருவர் இறந்துபோகும்போது, மக்கல்லன் அவசர அவசரமாக இறந்த உடலை பாய்மரத்துணியில் தைத்துச் சுற்றி பெருங்கடலில் வீசியெறிய ஏற்பாடு செய்கிறார், அவரது ஆட்கள் நரமாமிசம் புசிப்பவர்களாக மாறும் முன்பு, ஆவதைத் தடுப்பதற்கு. எஞ்சியிருப்பவர்கள் புதிதாக இறந்தவர்களை பொறாமை ஜொலிக்கும் கண்களோடு வெறித்துப் பார்க்கிறார்கள். ஐம்பது நாட்கள் கழித்து நிலத்தை கடைசியாக அவர்கள் கண்டபோது, நங்கூரம் இறக்க ஓரிடமும் இல்லை, தீவின் கரையில் அவர்கள் இறக்கிய படகுகள் அவர்களின் பசியினை தணிப்பதற்கு போதுமானதாக ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை. அந்தத் தீவுகளுக்கு அவர்கள் ஏமாற்றத் தீவுகள் என்று பெயரிட்டு, பயணத்தை தொடர்ந்தனர். கப்பல் சஞ்சிகையின் பராமரிப்பாளர், அன்டோனியோ பிகாஃபெட்டா எழுதுகிறார்: இனி நான் இனிமேல் எந்தவொரு மனிதனும் இத்தகைய கடற்பயணத்தை மேற்கொள்வான் என்று நம்பவில்லை.
தொலைதூரத் தீவுகளின் நிலவரைப்பட நூல்:
நான் சென்றிடாத ஒருபோதும் போகவே முடியாத ஐம்பது தீவுகள் - யூடித் ஷலான்ஸ்கி. ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்தில்: கிறிஸ்டைன் லோ.
தமிழின் குறிப்பிடத் தகுந்த ஒளிப்பதிவாளரான இரா.செழியன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘டு லெட்’ என்ற திரைப்படம் 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, 34 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் சினிமாவிற்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்றுள்ளது. ஈரானிய இயக்குநரான அஷ்கர் பர்ஹாதியால் ‘Pure film’ என்றும், இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனால் உணர்ச்சிகரமாகவும், அழகாகவும் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும், இலங்கையின் சிறந்த கலை இயக்குநரான பிரசன்ன விதுங்காவால் உண்மையான அக்கறையுடன் நேர்மையாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் ஆதிக்கம் வகிக்கும் வணிகத் திரைப்படம் என்ற வகைத்திணைக்கு மாற்றாக எடுக்கப்பட்டுள்ள ஓர் திரைப்படம் ‘டு லெட்’. அதாவது வணிகத் திரைப்படங்களின் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமற்று, மிக மெதுவாக நகரக்கூடிய, கதை என்கிற வழக்கமாகப் புரிந்துகொண்டுள்ள தன்மைகளான பாட்டு, நடனம், சண்டை, திருப்புமுனை போன்ற திரைப்பட வணிக அம்சங்கள் இல்லாத ஒரு திரைப்படம். வணிக அம்சங்களுக்கு எதிராக உலகெங்கிலும் நிகழும் ‘தற்சார்புத் திரைப்படம்' எனப்படும் Independent Film (தமிழில் இதை சுயாதீன சினிமா என்கிறார்கள், சுயாதீனம் என்கிற வடமொழிச் சொல்லை தவிர்க்க தற்சார்பு என்ற சொல் ஆளப்படுகிறது) வகையைச் சேர்ந்தது. ஆக, ‘டு லெட்’ படத்தின் முக்கியத்துவத்தை, அதன் சுவராஸ்யமற்ற தன்மையை அதாவது பொழுதுபோக்கற்றத் தன்மையை புரிந்துகொள்ள, தற்சார்பு திரைப்படம் என்கிற திரைப்படங்கள் பற்றிய புரிதல் அவசியம்.
1
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்கிற கருத்து முதலாளிய பொருளுற்பத்தி முறையுடன் தொடர்புடையது. முதலாளியம் தனது பொருட்களை விற்பதற்கான சந்தையாக சமூக வாழ்தளத்தை மாற்றுவதற்குத் தேவையான நுகர்வாளர்களை கட்டமைப்பது அவசியம். தனிமனிதர்களின் விருப்பை, சுவையை நுகர்விற்கான ரசனையாகக் கட்டமைப்பதின் வழியாக, அவர்களை நுகர்வாளர்களாக மாற்றுகிறது. கலை உள்ளிட்டவைகளை நுகர்பவர்களாக அவர்களை உருவாக்குகிறது. அதற்காக ஒரே வகையான ரசனையை ஆதிக்கம் கொண்டதாக, அதை ஏற்பதற்கான உடல்களாகவும் மாற்றுகிறது. இதன் ஒரு விளைவே திரைப்பட ரசனை ஒற்றையானதும், பொழுதுபோக்கும் சாதனமாகவும், நுகர்விற்கான மகிழ்வைத் தருவதாகவும் மாற்றப்படுகிறது.
திரைப்படம் உருவானபோது அது முழுக்க தற்சார்புத் திரைப்படத்தன்மைக் கொண்ட சில திரைப்பட ஆர்வலர்களின் வெளிப்பாடாகவே இருந்தது. அதன் சந்தை மதிப்பையும், புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கினால் கிடைக்கப் பெறும் இலாபத்தையும் கவனத்தில் கொண்ட முதலாளியம் அதை ஒரு வணிகப்பொருளாக மாற்றியது. அதற்கு எதிராக உருவாகிய பெரும்பாலான கலைத்திரைப்படங்கள், திரைப்படம் என்பதை ஒரு சமூக இடையீட்டுக் கருவியாகப் பயன்படுத்தின. அவை தொடர்ந்து வெகுசன ரசனையாக உள்ள ஆதிக்க ரசனை மீது ஒரு தாக்குதலைத் தொடுக்கின்றன. அவை கலை உணர்வை வடிவமைப்பதில்லை, மாறாக காட்சியின்பத்தின் வழியாக மூளையின் செயல்திறனை மாற்றுகின்றன.
திரைப்படம் ஒரு மாற்று கலைவடிவமோ, அல்லது கலையின் ஒரு தனிவகையோ அல்ல. திரைப்படம் ஒரு புதியவகை அறிதலை உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த வடிவம் மற்றும் வகையினம். ஆகையினால், திரைப்படத்தை கலையின் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கக்கூடாது, மாறாக மனித அறிதலின் ஒரு வகைமையை வெளிப்படுத்திய விஞ்ஞானத் தொழில்நுட்பமாகப் பார்க்க வேண்டும். ஆக, ஓவியம், சிற்பம், நாடகம், இசை, நாட்டியம் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்ட ஒரு வடிவமே திரைப்படம். வேறுவிதமாகக் கூறினால், திரைப்படம் இவ்வுலகை அறிவதற்கான பிறிதொரு கருவி.
இக்கூற்றைப் புரிந்துகொள்ள, தமிழின் குறிப்பாக திராவிட நாடுகளின் தொல்கூத்தான நிழற்பாவைக்கூத்தின் அடிப்படைக் கோட்பாடு உதவும். நிழற்பாவைக்கூத்து உலகின் பல பண்பாடுகளிலும் காணப்படும் ஒன்றுதான். இக்கூத்தின் அடிப்படை திரையின் பின் இயக்கப்படும் பாவைகளின் வழியாக கதையை திரைக்குப் பின் பாய்ச்சப்படும் வெளிச்சத்தின் வழியாக உருவாகும் நிழல்களின் ஒரு இயக்க பிம்பமாக நிகழ்த்திக்காட்டுவது. இதில் திரைக்குப் பின்னுள்ள பாவைகளைப் பார்ப்பதில்லை, மாறாக, அவற்றின் நிழல்களையே பார்க்கிறோம். இதில் அவர்கள் பயன்படுத்தும் உத்தி இன்றைய திரைப்படங்களில் பயன்படும் ஒளிப்பதிவு உத்திகள்தான்.
அதாவது தூரக்காட்சி (Long Shot), அண்மியக்காட்சி (Close-up Shot), இடைத்தளக் காட்சி (Mid Shot), உயரக் காட்சி (Vertical Shot), பக்கவாட்டுக் காட்சி (Horizontal Shot), இயக்க காட்சி (Moving Shot) என பல உத்திகள் அதில் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் ஒளிப்பதிவில் பயன்படும் இருள் - ஒளி (Lighting) மாறும் காட்சிகள் துவங்கி, பாட்டு, நடனம், சண்டைக்காட்சிகள், பின்னணி குரலாக வசனங்கள் (Dubbing), இசைக்கலப்பு (Music Mixing) என இன்றைய திரைப்பட உத்திகள் அனைத்தும் நிழற்பாவைக் கூத்தின் உத்திகளே. நிழற்பாவையில் நேரடியாக நிகழ்த்தப்படுகிறது என்றால், திரைப்படம் பதிவாக (ஒளிப்படலங்களில்) (Film) அல்லது எண்மக் கூறுகளில் (Digital) உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இரண்டு உருக்கள் தொட்டுக்கொள்ளும் காட்சிக்கும், சண்டையிடும் காட்சிக்கும் அவர்கள் பயன்படுத்தும் துரிதவேக தொட்டு விலகும் பாவைகள், மற்றும் தூரத்தில் வரும் உருவை சிறிதாக்கிக் காட்ட அவர்கள் அந்தப் பாவைகளைச் சாய்த்து உருவாக்கும் கோணம் என வாசிக்க பல உத்திகளைக் கொண்ட ஒரு தொல் பழங்காலத் திரைப்படமே நிழற்பாவைக் கூத்து.
ஆக, திரைப்படம் என்பது 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவான புதிய வடிவம் அல்ல. அது பழங்காலந்தொட்டு உருவாகி வந்துள்ள ஒரு காட்சி வடிவமே. இரண்டிற்கும் உள்ள தொழில்நுட்பங்களில் வேறுபாடுகள் உண்டு, ஆனால் உத்திகள் மற்றும் அவற்றின் கோட்பாட்டு பின்னணிகள் ஒன்றே. உடலுக்குள் அதாவது அகத்தின் மூளையின் காட்சி அரங்கில் நிகழ்வதை, புறத்தில் நிகழ்த்த முனைந்த ஒரு திரையியக்க வடிவமே. மூளை உருவாக்கும் கனவுகளின் ஒரு புறநிகழ்வியக்கமே இவற்றிற்கான அடிப்படை கோட்பாட்டு சட்டகத்தை தந்துள்ளது.
திரைப்படம் குறித்து பிரெஞ்சு சிந்தனையாளர் ஜீல் தெல்யுஸ் எழுதும்போது, அதை ஒரு அறிதல் முறையாக, தத்துவமாகவும், ஒரு தனி வடிவமாகவும் விளக்குகிறார். நிழற்பாவைக் கூத்து இக்கோட்பாட்டை ஒரு வகையாக புரிந்துள்ளது என்பதே இங்கு முக்கியம். இதன் பொருள், அறிவு என்பது குறுக்கும் நெடுக்குமாக வளரும் ஒன்றுதான். அதில் வளர்ச்சி என்ற தொடர்ச்சி எதுவுமில்லை. நாட்டார் மரபுகளை விட அறிவியல் மரபுகள் உயர்ந்தவை என்கிற கருத்தாக்கமும் காலனியம் உருவாக்கிய கருத்தாக்கமே.
திரைப்படம் ஒளிப்பதிவுக் கருவியின் சட்டகத்திற்குள் வரும் ஒரு இயக்க பிம்பமே என்கிறார் தெல்யுஸ். அதாவது அதை ‘ஷாட்’ என்பார்கள் திரைப்படமொழியில். திரைப்படம் என்பது துண்டிக்கப்பட்ட பிம்பம் (Sliced image). அப்பிம்பம் பார்வையாளர் வழியாக முழுமையானதாக மூளை என்கிற திரைக்குள் திரைப்படமாக ஓட்டப்படுகிறது. சட்டகத்திற்குள் வரும் காட்சியை, முன்னும் பின்னும் வரும் காட்சிகள், கதையாடல்கள் வழியாக சட்டகத்திற்கு வெளியே உள்ள பார்வையாளர் முழுமைப்படுத்தி அதன் தொடர்ச்சியை உருவாக்குகிறார்கள். ஒரு கடலைக்காட்ட கையளவு நீரைக் காட்டினால் போதும். பார்வையாளர் அதை கடலாக தனக்குள் காட்சிப்படுத்திக் கொள்ளமுடியும். திரைப்படம் புறத்தில் திரையில் நிகழ்ந்தாலும், அகத்தில் அது முழுமையானதொரு திரைப்படமாக மாற்றப்படுகிறது என்பதே அதன் முக்கிய வினை.
அதாவது, திரைப்படம் திரைக்காட்சி வழியாக நமது மூளைக்குள் நிகழும் ஒன்று. அதைப் புரிந்த முதலாளியம், அதனை முழுக்க ஒரு வணிகப் பண்டமாக மாற்றுகிறது. அதன் வழியாக லாபநோக்கு மட்டுமின்றி, தங்களது சுரண்டலை அறியமுடியாத மன அமைப்பையும் உருவாக்குகிறது. தனது விற்பனை வலைப்பின்னலுக்கு உகந்ததொரு பண்பாட்டையும் அது கட்டமைக்கிறது. காட்சியின்பத்தின் வழியாக மனிதர்களை நுகர்வு உடல்களாக மாற்றியமைக்கிறது.
இந்நுகர்வின் அடிப்படையான துரிதம், உணர்ச்சி தூண்டுதல், சுவராஸ்யம், இன்பம், விருப்பம், வேட்கை என அனைத்தையும் ஒற்றை திசைவழிப்படுத்துகிறது. இதற்கு எதிராக உருவான ஒன்றே கலைப்படங்கள் என்கிற இணை-சினிமா (Parallel Cinema), நியோ-ரியலிச-சினிமா (Neo-realistic Cinema), தற்சார்பு சினிமா (Independent Cinema or Indi-Cinema) ஆகியவை.
இந்தப் பிரிவினைக்காக வணிக சினிமா உருவாக்கிய ஒரு வகைத்திணையே உலகச்சினிமா (World Cinema) என்பது. குறிப்பாக மெயின் - ஸ்டிரீம் எனப்படும் மைய - நீரோட்ட திரைப்படங்களுக்கு மாற்றாக உருவானவை.
2
இவ்வகைத் திணை சார்ந்த உலகச்சினிமாக்களில் ஒன்றான தற்சார்புத் திரைப்படமாக சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’, இரா.செழியனின் ‘டு லெட்’. இதில் மனுசங்கடா தலித் மக்களின் சமூகப்பிரச்சனையை முன்வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் ‘டு லெட்’ கீழ்-மத்தியதரவர்க்கத்தின் வாடகை வீடு கிடைப்பதில் உள்ள சிக்கலை வைத்து எடுக்கப்பட்டது. குறிப்பாக சென்னை என்கிற பெருநகரில் உலகமயமாதலின் தகவல்-தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் ஏற்பட்ட வாடகை வீடுகளின் திடீர் வாடகை உயர்வால் பாதிக்கும் ஒரு சாமான்யக் குடும்பத்தின் கதை. யதார்த்தம் குறையாமல் நம் அருகில் நிகழும் ஒரு குடும்பத்தை அணுக்கமாகப் பார்க்கும் பார்வையில் எடுக்கப்பட்ட திரைப்படம். பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்தும், உணர்வுரீதியாக அவை திரைப்படத்திற்குள் வராமல் மிகவும் ஓர்மையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம். எளிமை, காட்சிகளின் உண்மைத்தன்மை, நம்பகமான கதையாடல், அதற்குத் தகுந்த பின்னணி ஓசைகள் என்பதே இத்திரைப்படத்தின் முக்கியமான உத்தி.
தற்சார்பு திரைப்படங்கள் குறைவான முதலீட்டில், ஒரு தனிப்பட்ட நபரின் விருப்பை வெளிப்படுத்தும், பிறரின் தலையீடோ, சமரசமோ இன்றி தன் விருப்பில் எடுக்கப்படும் திரைப்படம். இத்திரைப்படம் செழியன் அவர்களின் முதலீட்டில் (மனுசங்கடா போலவே, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் செழியனின் மனைவியே) மூன்று முக்கியப் பாத்திரங்கள், உண்மையான நிகழிடங்கள், இயல்பான கதையாடல் வழியாக எடுக்கப்பட்டுள்ளது. 1987இல் வெளிவந்த தேசிய விருதுபெற்ற பாலுமகேந்திராவின் ‘வீடு’ திரைப்படமும் இதுவும் ஒரே கதைக்களம் என்றாலும், உலகமயமற்ற சமூகத்தில் சொந்த வீடு கட்டும் வேட்கை, உலகமயம் கொண்டுவந்த வாழ்க்கை நெருக்கடியில் 20 ஆண்டுகளில் வாடகை வீடு பெறும் விருப்பாக குறைந்து, அதை அடைவதே சிக்கல் நிறைந்ததொரு வாழ்வாக மாறியுள்ளது என்பதே.
செழியன் தன் வாழ்வனுபவத்தை திரைப்படமாக்கியதாக கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை சென்னை என்கிற நகர்புலத் திணையின் முகத்தையும், அதன் உடலமைப்புகளையும் மாற்றியமைத்தது. சென்னை விரிவடைந்தது மட்டுமின்றி சென்னையின் மையங்களை நகர்த்தி அதன் பரப்பு வட்டத்தை அதிகப்படுத்தியது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள தகவல்நுட்பத் துறைசார்ந்த பணியாளர்களை ஈர்த்து, நெருக்கடியான ஒரு நகரமாக மாறியது. முதலாண்மை நிறுவனங்களும் (கார்பரேட் கம்பெனிகளும்), அதனால் உருவான துரிதகதி வாழ்வும் என சென்னை ஒரு பின்-நவீன நகராக மாறியது. அதனால், வீடுகளுக்கான வாடகைக் கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. இச்சூழலில் சினிமா என்கிற முறைசாரா தொழிலில் உள்ள ஒருவருக்கு வீடு பெறுவதில் உள்ள சிக்கலையும், அதன் சமூகக் கூறுகளையும் விவரிக்கிறது.
‘திரைஅரங்குகளை மனதில் வைத்து எடுக்கப்படவில்லை. குறிப்பாக திரைப்பட விழாக்களில் திரையிடும் நோக்கிலேயே எடுக்கப்பட்டது. காரணம் உலகத்தின் பலத் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்கிற கருத்தை மாற்றியமைக்க தமிழ் சினிமாவின் பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதே நோக்கம்’ என்கிறார் செழியன். அந்நோக்கத்தின் அடிப்படையில் இப்படம் உலகின் பல திரைப்படவிழாக்களில் பங்குபெற்று நிறைய விருதுகளையும் பெற்றுள்ளது. அவரது நோக்கப்படி தமிழ் திரைப்பட நகரான கோலிவுட் மற்றும் தமிழ் என்கிற மொழிப் பிரிவு குறித்து உலகத் திரைப்படத்தில் ஓரளவு பதிவை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
3
ஈரானிய திரைப்படங்கள் என்கிற ஒருவகைத் திணை உலகத்திரைப்பட வகைகளில் உண்டு. உலகத் திரைப்படங்கள் குறித்த ஆழ்ந்த புலமையும், அறிதலும் உள்ள செழியன், இத்திரைப்படத்தை ஈரானியத் திரைப்படம் போல எடுக்க முயன்றிருக்கிறார். ஆனாலும், அவை உருவாக்கிய சமூக உணர்வை, அழுத்தத்தை காட்சிப்படுத்த தவறியுள்ளது. ஈரானியத் திரைப்படத்தை உலக அளவில் திரும்பி பார்க்கச் செய்த திரைப்படமான ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’, ஏற்படுத்திய தாக்கம் இப்படத்தின் வடிவத்தில் பங்காற்றியுள்ளது. குறிப்பாக, சிறுவனாக வரும் பாத்திரம் அதன் விளையாட்டு இயல்பில் இதில் வெளிப்படுத்தப்படுவதும், பின் தங்கள் சூழுலை உணர்வதுமான காட்சிகளை சுட்டலாம்.
இத்திரைப்படத்தைப் போலவே மிகவும் கஷ்டத்தில் உள்ள ஏழ்மையான குடும்பச் சூழல் என்றாலும், கதையின் மையக்கருத்து ஈரானியப் படத்தில் ஓர் உலகளாவியப் பண்பைக் கொண்டிருந்தது. அத்திரைப்படம் சிறுவர்களின் பார்வையில் பந்தயம் கட்டப்பட்டு ஆடும் இந்த வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பதைத் தீர்மானிப்பது எது, என்பதை கேள்விக்கு உட்படுத்தியது. குழந்தைகளுக்கு சொர்க்கம் என்பது நமது பார்வையில் அவர்கள் மீது சுமத்தப்படும் வாழ்க்கை அல்ல. அவர்களுக்கு முதலாளியம் உருவாக்கிய வெற்றிக் களிப்பைவிட தேவைகளை நிறைவு செய்யும் வாழ்வே சொர்க்கம். அது ஒரு வகை தத்துவ நோக்கை முன்வைக்கிறது என்றால், இத்திரைப்படத்தில் சுத்தமாக எவ்வித தத்துவ நோக்கும் இல்லை.
‘டு லெட்’ குதிரைப்பட்டைப் பார்வைகொண்டு ஒரு தலைப் பட்சமாக வெளிப்படுகிறது. பிரச்சனையின் பல கோணங்களை காட்டாமல், ஒற்றைப்பார்வையை, அதாவது நாயகனின் வாடகைப் பிரச்சனையை அவனது பார்வையில் சுயநலத்துடன் நோக்கும் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது மிகப்பெரிய பலவீனம். வாடகை வீட்டின் உரிமையாளர்களை கொடுங்கோலராக சித்தரிக்கும் பார்வை முழுக்க நாயக மனோபாவத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையாளர்களுக்கு நியாய, அநியாயங்களை, அவர்களது பார்வைகள உருவாக்கிய சமூகப் பின்புலத்தைக் காட்டாமல், தனிப்பட்ட ஒரு சிக்கலாக இத்திரைப்படம் பேசுகிறது.
‘மனுசங்கடா’ படத்தில் காட்சி அமைப்புகள், கதையாடல் முழுக்க வில்லன்களைக் காட்டாமல், சாதி என்கிற நிறுவனத்தை வில்லனாக சித்தரிக்கும். இப்படம் வில்லன் - நாயகன் என்கிற வழக்கமான தமிழ் சினிமாக் கதையாடல் உத்தியையே பயன்படுத்துகிறது. பொதுவாக உலகத் திரைப்படங்கள் நிறுவனங்கள் மனிதர்கள் மேல் நிகழ்த்தும் வன்முறையையும், அதனால் உருவாகும் வாழ்க்கை சிக்கலையுமே பேசும். குறிப்பாக ஈரானியப்படங்களில் அந்த சமூகத்தின் மத அடிப்படைவாத சிக்கல், தனிமனித வாழ்வை அரசு இடையீடு செய்வது உள்ளிட்ட பிரச்சனைகள் திரைப்படத்தின் களனாக அதாவது பின்னணியாக அமைந்திருக்கும். நேரடியாக அவற்றை காட்டாது. ஒரு வகை அரசியல் அதனுள் உள்ளுரையாக அமைந்திருக்கும். ‘டு லெட்’, முழுக்க அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு திரைப்படமாக நேரிடையாக அதிகாரத்தை எதிர்க்காத ஒன்றாக அதன் முதலாண்மைப் பின் புலத்தைக் காட்டாத ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.
வாடகை வீடுகளின் நெருக்கடிகள் பற்றி குடும்பத் தலைவன் இளங்கோ (சந்தோஷ் ஸ்ரீராம்), குடும்பத்தலைவி அமுதா (ஷீலா ராஜ்குமார்), மகனாக உள்ள சிறுவன் சித்தார்த் (தருண்) பார்வையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தங்களது வாழ்வாதாரமாக வாடகை வீடுகளைக் கொண்டவர்களின் கண்ணோட்டம், சிக்கல்கள், அவர்களுக்கு உள்ள சமூக, அரசு சார்ந்த நெருக்கடிகள் குறித்த எந்தப் பதிவும் இல்லை. மனிதத்தன்மையற்றவர்களாக, கொடூரர்களாகச் சித்தரிப்பது திரைப்படத்தின் சமத்தன்மையைக் குலைப்பதாக உள்ளது. அவர்களும் கீழ் அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே. அவர்களும் இவ்வீடுகளை நம்பி பிழைப்பவர்களே. வீட்டைச் சிதைத்து அவர்களிடம் ஒப்படைத்தால், அது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும். வாடகை வருமானத்தில் அவ்வீடுகளைச் சரிசெய்தலுக்கும், அரசு வரிகளுக்கும், வீடு காலியாக உள்ளபோது ஏற்படும் நஷ்டங்களையும் அவர்கள் சமாளிப்பது என்பது உட்பட சமூக அழுத்தம் அவர்களுக்கும் உண்டு. குடிவைப்பவர்கள் காலி செய்ய மறுப்பதும், அதற்காக அவர்கள் படும்பாடு, காலி செய்பவருக்கு கொடுக்கும் ஈட்டுத்தொகை என பல பிரச்சனைகள் உள்ளன. வீட்டில் தங்குபவர் யார்? என்ன தொழில்? குடியிருப்போர் உருவாக்கும் சிக்கல்கள் உள்ளிட்டவையைச் சமாளிப்பது என்பதெல்லாம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.
உண்மையில் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கும் ஓரிரு வீடுகளைக் கட்டி தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டவர்களையும் பிரித்துப் பார்க்காத ஒரு பொதுமைப்படுத்தல் என்பது இத்திரைப்படத்தின் பலவீனமான அரசியல் பார்வை. சென்னை போன்ற பெருநகரை ஆக்ரமித்துள்ளவர்கள் இந்த கார்பரேட் ரியல் எஸ்டேட் முதலாளிகளே. உண்மையில் சூழல் சீர்கேடு, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரமானவற்றை அழித்து, பூர்வக் குடிகளை புலம்பெயரச் செய்து சென்னை நகரில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தாம்பரம் நெடுஞ்சாலை என சென்னையில் வலைப்பின்னலாக ஓடும் சாலைகள் நான்குவழி, எட்டுவழிச் சாலைகளாகி கார்ப்பரேட் கொடுங்கரங்களுக்குள் சிக்கியுள்ளது. இச்சூழலில ‘டு லெட்’ மத்தியதர வர்க்கத்திற்கு மத்திய தரவர்க்க சகமனிதனே எதிரி என்கிற இருமைப் பார்வையைச் சித்தரிக்கிறது. இது முழுக்க அரசியலற்ற ஒரு பார்வையில் வெளிப்படும் போக்கு. திரைப்படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் எழுத்துகளில் 2007-ஆம் ஆண்டு ஐ.டி. துறையின் வருகையால் உயர்த்தப்பட்டதால் உருவான பிற துறையினரின் வாடகைச் சிக்கல் என்பதை தவிர, ஐடி துறையினர் அல்லது அவர்களை குவித்த கார்ப்பரேட்டுகள் பற்றிய எந்த ஒரு காட்சிப் பதிவும் இல்லை.
இத்தகைய வாடகை வீடுகள் கிடைக்காத நிலை என்பதன் சமூக அழுத்தம், அதற்கும் அதிகாரத்திற்கும் உள்ள உறவு, அதற்கான நிறுவன ரீதியான காரணங்கள் உள்ளிட்டவை, அதன் பின்னுள்ள அதிகார நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதான எதிர்ப்பை உருவாக்காமல் இத்திரைப்படம் தனிப்பட்ட வாடகை வீடுகள் வைத்துள்ளவர்கள் மீதும், தகவல் தொழில்நுட்பத்துறையினர் அதிக வாடகை தந்து இவர்களுக்கு போட்டியாக உள்ளார்கள் என்பதாக மத்தியதரவர்க்கம், பிற மத்தியதரவர்க்கத்தை எதிரியாக காணும் வழக்கமான ஆளும் அமைப்புகள் உருவாக்கும் கதையாடலாகவே உள்ளது. இது வழக்கமான வணிகத் தமிழ் சினிமாவின் வாய்ப்பாடே (சூத்திரமே) தவிர, மாற்று சினிமாவிற்கான ஒரு அரசியலாகவோ, கதையாடலாகவோ இல்லை.
‘கடிகார மனிதர்கள்’ என்றொரு தமிழ்த் திரைப்படம் இதே கதையமைப்புடன், அதாவது வாடகைவீடு பிரச்சினைக் குறித்து வெளிவந்தது. உணர்ச்சி நாடகமான (melodrama) ஏற்படுத்தும் ஒரு பரிவுணர்ச்சியைக் கூட இப்படம் உருவாக்கவில்லை. வணிகத் திரைப்படங்கள் மக்களிடம் உருவாக்கும் சில பார்வைகள், உணர்வுகளைக் கூட இத்தகைய ‘தற்சார்புத் திரைப்படமான’ டூலெட் உருவாக்காத தன்மை ஏன்? அதற்கான காரணம் என்ன? ஒரு நல்ல திரைப்படமாக காட்சிகளை எளிமையாகவும் நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் தருவதில் உள்ள கவனமும், ஆர்வமும் ஏன் வணிக சினிமாக்கள் தரும் உணர்வெழுச்சியில் செலுத்தப்படுவதில்லை என்பதும் ஆய்விற்குரிய புள்ளி. வணிகச் சினிமாவின் மிகை உணர்வெழுச்சிகளுக்கு எதிரான தீவிரமான அரசியல் சார்ந்த உணர்வெழுச்சிகள் குறித்து தமிழ் திரை இயக்குநர்கள் சிந்திக்கவேண்டும்.
4
பெருநகர்மயமாதல் என்பதன் ஒரு பக்க விளைவு இத்தகைய வாடகைப் பிரச்சனைகள். ஆனாலும், இத்திரைப் படம் இப்பிரச்சனையின் வட்டாரத்தன்மையை அழுத்தமாகப் பதியவைத்துள்ளது. உண்மையில் படத்தின் உள்ளுறையான வட்டார பார்வைதான் இதை உலகத் திரைப்படமாக்கியுள்ளது. உலகத் திரைப்பட உருவாக்குநர்களுக்கும், விழாக் குழுவினருக்கும், ஆர்வலர்களுக்கும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் உணர்வு என்பது இந்த வட்டாரத் தன்மையினால் (nativity) வரும் ஒன்றே. அவ்வகையில் தமிழில் ‘டு லெட்’ ஒரு முக்கியமான திரையாக்கம்.
இத்திரைப்படத்தின் தாபஸ் நாயக்கின் பின்னணி இசை ஒரு முக்கியமான திரைப் பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. முழுக்க அன்றாட வாழ்வில் உருவாகும் ஓசைகளே இதன் பின்னணி இசையாகவும் முக்கியமான காட்சிகளில் பொருத்தமான தமிழ் பாடல்கள் வானொலி வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இசை திரைப்படங்களின் நான்காம் பரிமாணம் என்பார்கள். இத்திரைப்படத்தில் அது சரியாகக் கையாளப்பட்டுள்ளது. ‘டு லெட்’-டின் உண்மைத்தன்மைக்கு இவ்விசை பெரிய பங்களிப்புச் செய்கிறது.
பழைய வீட்டைக் காலி செய்வதற்குமுன் அடிக்கடி வீடு பார்க்க வரும் நபர்கள் தரும் தொல்லைகள், அதில் ஒரு காட்சி அவர்களது அலமாரியை திறந்து பார்ப்பார், அப்பெண்ணின் உள்ளாடைகள், நாப்கின் ஆகியவை கீழே விழும் காட்சி, அப்பெண் குளிக்கும்போது வீட்டை பார்க்க வருபவர்கள், போன்றவை சற்றே பாத்திரங்களிடம் பரிவுணர்ச்சி ஏற்படுத்தவும், வில்லனாக வீட்டு ஓனரை சித்தரிப்பதுமான காட்சியாக உள்ளது. நாயகி, நாயகன் திருமணம் குறித்த உரையாடல்கள், மற்றும் அப்பெண் மாதாவை வணங்குதல் வழியாக அது ஒரு வீட்டை மீறி வெளிவந்த காதல் கலப்பு மணம் என்பதைப் பதிகிறது.
‘டு லெட்’-டில் முக்கியமான காட்சிகள், ஒரு வீட்டைத் தேடிச்செல்லும்போது, அவ்வீட்டு ஓனர் வீடு தருவதாகக் கூறி வீட்டை பார்க்கச் சொல்வார், அவர்கள் வீட்டை உள்ளே போய் பார்க்காமல், அதாவது தனக்கு நிகழ்ந்தததைப் பிறருக்கு நிகழ்த்தாமல், சன்னல் வழியாக பார்ப்பார்கள். உள்ளே உடல் முடியாத இரு வயதானவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அணுக்கமாக கவனிக்கும் காட்சி. அந்த வீட்டை அவர்கள் வேண்டாம் என்பதாக விட்டுவிட்டதான புரிதல் உள்ளர்த்தமாகக் காட்டப்படுகிறது. அவர்கள் ஒரு லிப்ட் உள்ள வீட்டை பார்த்துவிட்டு வந்தபின், அவர்களது மகன் சித்தார்த் அந்த லிப்ட் வீட்டை போலச்செய்து விளையாடும் காட்சி, அவன் சுவர் முழுக்க தான் வரைந்த படங்களை அழிக்க முற்படும்போது அழிக்கமுடியாத சிரமத்தில், இனி புதுவீட்டில் அதை செய்யமாட்டேன் என்பது, ஈரானியப் படங்களில் வரும் சிறுவர்களின் மன உணர்வை உருவாக்கும் முதிர்ச்சியான காட்சிகள். சிறுவர்களின் உலகம் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது என்பது இத்திரைப்படத்தின் மற்றொரு நூழிலை.
இத்திரைப்படம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளும், ஒவ்வொரு முறை வீடு தேடி வெளியில் செல்லும்போதும் வெவ்வேறு ஊர்வலங்களைக் கடந்து செல்வதும் யதார்த்த காட்சியமைப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்டுக்குருவி வீட்டிற்குள் தன்னிச்சையாக பறக்கும் காட்சி அடிக்கடிக் காட்டப்படுவதும், அக்குருவி இறுதியில் மின்விசிறியில் அடிபட்டு வீழ்ந்துவிடுவதும் படத்தின் மையப்படிமமாக அமைக்கப்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகள், அதன் வாழிட அழிவினால், வீட்டிற்குள் வருவதும், அங்கும் இருப்புக் கொள்ள முடியாததால் பேனில் அடிபட்டு சாவதும் கதையின் கீழ் - மத்தியத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்வு அவலத்தை குறிநிலைப்படுத்துவதாகவும் அதே நேரத்தில், குருவிகள் வாழமுடியாத விரட்டப்பட்ட சூழலியல் சார்ந்த கருத்தாக்கமாகவும் குறிப்பீடாகிறது. ஒரு போலி ஐடி கார்ட் தயார் செய்து வீடு தேடுதல், அதில் பிரச்சினையாகி ஒரு சேட்டு வீடு தரமறுப்பதுடன் அவர்கள் வீடற்றுபோதலுடன் முடிகிறது.
இப்படியாக, மிகவும் நுணுக்கமான பல காட்சிகள் உள்ளன. உருவகமாகவும், குறியீடாகவும் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது இயக்குநரின் ஆழ்ந்ததொரு சினிமா பார்வையை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதுவே, இத்திரையாக்கத்தை ஒரு தூயதான கலப்பற்ற திரைப்படமாக ஆக்கியுள்ளது. படத்தில் மூன்று மனிதப் பாத்திரங்களைத் தவிர மூன்று அமனிதப்பாத்திரங்கள் கதைக்களனில் முக்கியமானவையாக வெளிப்பட்டுள்ளது. ஒன்று வாடகை வீடும் அதன் அடைப்பட்ட டாய்லெட், சிறுவனால் ஆர்ட் காலரியாக மாற்றப்பட்ட வீட்டுச்சுவர்கள், வீட்டிற்குள் அடிக்கடி பறக்கும் சிட்டுக்குருவி, முக்கியமான கட்டங்களில் எல்லாம் ஸ்டார்ட் ஆகாத மொபெட். இவை படத்தின் உள்ளர்த்தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடுகளாக வெளிப்பட்டுள்ளது. ஒரு புதிய வீட்டைத் தேடிச் செல்லும்போது இடதுகாலை வைக்க முனையும் ஷீலா, காலை மாற்றி வலது காலை வைத்தல், வாடகை வீடு தேடும் படலத்தில் வீட்டு ஓனர் சாதியை அறிய முயற்சிக்கும் காட்சியில் சொந்த ஊர் கேட்டு ஏரியாவை வைத்து தமிழக சாதியப் புவியியலின் (Caste Geography) அடிப்படையில் சாதியை அடையாளம் காண முயலும்போது, புரோக்கராக வரும் அருள்எழிலன், அவ்வீட்டில் மாட்டியுள்ள வ.உ.சி. படம் போட்ட நாட்காட்டியைப் பார்த்து, புள்ளைமார் என்று சட்டென்று கூறுதல், சில ஓனர்கள் இலங்கையா, முஸ்லிமா, சைவமா, தமிழில் பேசினால் வீடு தரமுடியாது என கதவை மூடுதல் இப்படியான காட்சிகளில் வாடகை வீடு பிடிக்க முனையும் ஐடி அல்லாத பிறர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இப்படத்தின் வழியாக பதிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு காட்சிகளில் மங்கலாக வந்துபோகிறார் வீட்டு ஓனராக ரவி சுப்ரமணியம். பெரும்பாலான வாடகை வீடுகளில் வீட்டு ஒனரம்மாதான் அதிக அதிகாரம் படைத்தவராக இருப்பதை சரியாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அனைத்திலும் முழுமையான கவனத்துடனும், திரைப்படத்தின் பின்னணி சூழலை ஓர்மையுடன் அமைத்து, இத்திரைப்படத்தை ஒரு தூயதான சினிமா அனுபவமாக ஆக்கியுள்ளார் இரா.செழியன். தமிழின் வணிகத் திரைப்படங்கள் மத்தியில் இத்தகைய முயற்சிகள், தமிழ்த்திரை ரசனையை மாற்றியமைப்பதற்கான முன்முயற்சிக் கொண்டவை. முற்றிலும் நுகர்வுமயமாகிவிட்ட வெகுசனப் பார்வையாளர்கள் மத்தியில் திரைப்படம் குறித்த, புதியதொரு பார்வையை உருவாக்க முயலும், இத்தகைய ‘தற்சார்பு திரைப்படங்கள்’, மாற்றம் வேண்டும் என்கிற சிந்தனையாளர்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டியது முக்கியம். இத்தகைய சிறுசூழல் சார்ந்த திரைஇயக்கங்கள் மேலும் வளரவும், பல்கிப்பெருகவும் வேண்டும் என்ற வகையில் இம்முயற்சி தமிழில் முக்கியமானது.
ஆன்ட்டியஸ் எனும் மல்யுத்த வீரனைப் பற்றிய குறிப்பு கிரேக்க தொன்மத்தில் காணப்படுகிறது. இவன் கிரேக்க ஒலிம்பியக் கடவுளான பொஸைடனுக்கும் கிரேக்கர்களின் மண்மாதாவான கையாவுக்கும் பிறந்த அரைஅரக்கன். மல்யுத்தத்தில் இவனை யாரும் வென்றிட முடியாது எனும் பெயர் பெற்ற பராக்கிரமசாலி. கவிதையில் இவனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டிருப்பவர் என்று சக கவிஞர் ஒருவரைப் பற்றி நோபல் பரிசு பெற்ற கவிஞர் சீமஸ் ஹீனி குறிப்பிடுகிறார். அவர்தான் ஸிபிக்நிஃப் ஹெர்பெர்த் எனும் போலந்து நாட்டுக் கவிஞர். “போலந்து நாட்டின் மிக மரியாதைக்குரிய, தாக்கம் செலுத்தும் கவிஞர்களுள் ஒருவர்” என்று இவரைக் கவிஞர் ராபர்ட் ஹட்ஸிக் வர்ணிக்கிறார். அகில உலகப்புகழ் பெற்ற கவி ஹெர்பெர்த் ஒரு நாடகாசிரியராகவும், கட்டுரையாளராகவும் கூடப் பிரபலமாகப் பேசப்படுபவர்.
பதினேழு வயதிலேயே இவர் கவிதைகள் எழுதத்தொடங்கிவிட்டார். என்றாலும் 1956 ஆம் ஆண்டு வரையில் அவற்றை அவர் வெளியிடவில்லை. நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் போலந்து நாட்டில் நிலவிய அரசியல் சூழலே இதற்கான முக்கியக் காரணம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இவருடைய சொந்த ஊரான லுவோவ் உக்ரேனிய நாட்டின் ஒரு பகுதியாகி, ரஷ்யர்களின் வசமாகிறது. ரஷ்யாவின் ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’யின் விளைவாக அவ்வூர்க்காரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து க்ராக்கோவ் நகருக்கு அருகிலுள்ள ப்ராஸ்ஸோவைஸ் எனும் நகருக்குக் கவிஞர் ஹெர்பெர்த் குடிபெயர நேரிடுகிறது. பொருளாதார நிபுணராக விளங்கிய ஹெர்பெர்த் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து வந்தார். போலந்து நாட்டின் கம்யூனிச ஆட்சிக்கு எதிராகவும் இவர் குரல் கொடுத்து வந்தார். கலையிலும் இலக்கியத்திலும் அப்பொழுது கட்டாயமாக்கப்பட்டிருந்த சமத்துவ யதார்த்தம் எனும் பாணியோடு இவருடைய எழுத்து நடைபொருந்திப் போகவில்லை. அதனால் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இவரால் ஒரு எழுத்தாளராக வாழ்க்கை நடத்த முடியாமல் போயிற்று. ‘1956 ஆம் ஆண்டிற்கு முன்னதாக எழுத்தாளராகப் பிரசுரம் செய்ய வேண்டுமென்றால், ஒருவர் தன்னுடைய ரசனையையே துறக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது’ என்று ஹெர்பெர்த்தின் மொழிபெயர்ப்பாளரும் நோபல் விருதாளருமான கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் குறிப்பிடுகின்றார். அதனால் 1953 ஆம் ஆண்டில் ஸ்டாலினின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகுதான் ஹெர்பெர்த் ஒரு கவிஞராகத் தலையெடுக்க முடிந்தது.
‘உலகப் போருக்கு முந்தைய ரொமாண்டிக் கவிதைகளுக்கு எதிரான நவீனப் போக்கிலிருந்து வேர் கொள்கிறது’ ஹெர்பெர்த்தின் கவிதை நடை என்று அவருடைய படைப்பை அறிமுகப்படுத்தும் தொகுப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவருடைய கவிதை நேரடியான மொழியில் பேசக்கூடியது. மிகத்தீவிரமான அறநெறி அக்கறைகளை வெளிப்படுத்துவது. நாஜிக்கள் மற்றும் சோவியத் சர்வாதிகாரிகள் ஆகியோருக்குக் கீழ் கிடைத்த அனுபவங்களால் உருப்பெற்றது. தான் அனுபவித்த அதிதீவிர அழிநிலை அனுபவங்களிலிருந்து ஆக்கபூர்வ தீர்மானங்களை மேற்கொள்ள ஹெர்பர்த் முயல்கிறார். உடன்பட இயலாததாகத் தோன்றும் எல்லைகளான, கடந்த
காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலும், அல்லலுக்கும் கவிதைக்கும் இடையிலும் அவர் பாலம் அமைக்கிறார். இருபத்தைந்து ஆண்டுக்கால வரலாறு பாய்ச்சியிருந்த வெளிச்சங்களை விமர்சன ரீதியாக மதிப்பிடவல்ல அதியுன்னதக் கவி என்று இவர் பெயர் பெற்றிருக்கிறார்.
நாஜிக்களின் ஆக்கிரமிப்பும், ஸ்டாலின் ஆட்சிக்கால அடக்குமுறையும் விதித்த தணிக்கை விதிகள் பிரசுரங்களை நசுக்கின. தமது மொழியை நாசமாக்கிய ஸ்டாலினை ‘மேதகு மொழியாளர்’ என்று ஹெர்பெர்த் நையாண்டி செய்கிறார். தனது படைப்புகளைப் பிரசுரிக்கப் பதினைந்து ஆண்டுக்காலம் காத்திருக்க நேர்ந்ததைக் குறித்து ஹெர்பெர்த்துக்கு எவ்விதப் புகாரும் இருக்கவில்லை. மாறாக, அந்தக் காலகட்டத்தை அவர் ‘விரதக் காலம்’ என்றே கருதுகிறார். புற உலக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தன்னுடைய மனோலயத்தைச் சீரமைத்துக் கொள்ளக் கிடைத்த அவகாசமாக அந்தப் பதினைந்தாண்டுக் காலகட்டத்தை அவர் பார்க்கிறார்.
தான் வாழ்ந்த காலத்தின் சாட்சியாகப் பார்க்கப்படும் ஹெர்பெர்த் ஓர் அரசியல் கவிஞர் என்றே கணிக்கப்படுகிறார். ஆனால், அரசியல் என்பது அனர்த்தம் தரும் சொல். ஏனெனில், இலட்சியங்கள் சிதைத்திருந்த ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளின் கவிதையை அந்தச் சொல் நினைவுக்குக் கொண்டு வருகிறது. சமகால வரலாற்றுச் சம்பவங்களை நேரடியாகக் கையாளும் எந்த ஒரு அரசியல் கவிஞனும் தோல்விக்கு இட்டுச் செல்லும் ஆட்டத்தையே வழக்கமாக ஆடுகிறான். ஒருவேளை அவனுடைய அறச்சீற்றம் அவனுடைய கவிதையை மூழ்கடித்துவிடுவதனால் இது நேரலாம். ஏனெனில், கவிஞனுடைய அறச் சீற்றமானது அவனுடைய கவிதையைச் சுயநேர்மை மிக்க, கணிக்க ஏதுவான, வீரிடலாக ஆக்கிவிடுகிறது. சமீப வரலாற்றின் கொடுங்கனாக்களைப் பேசுவதில் அது மும்முரமாக இருந்தபோதிலும், ஹெர்பெர்த்தின் கவிதையை மேடை முழக்கமாகப் பார்ப்பதற்கில்லை. பித்தேறிய நிலையையும், பேரழிவின் உக்கிரத்தையும் அடங்கிய, இயல்பான தொனியில் ஒலிக்கும் அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துவதில்லை. அவரை ஒரு முரண்நிலைக் கவிஞர் என்றும் தேவைக்கதிகமாய் உணர்வை வெளிப்படுத்தாதவர் என்றும் பிரபல அமெரிக்கக் கவி ராபர்ட் ஹாஸ் குறிப்பிடுகின்றார். உரத்த பொய்கள் நிறைந்திருக்கும் இவ்வுலகில் குறுக்கிவிட இயலாத உண்மையைச் சீரான குரலில் எடுத்தியம்புவதே ஒரு கவிஞனின் அசகாயப் பொறுப்பு என்பதைப் போல் எழுதுகிறவர் ஹெர்பர்த். மிகுந்த கவனத்துடனும், சந்தேக மனப்பாங்குடனும் எதிரணியிலேயே நிரந்தரமாக இருக்கும் தன்னுடைய இயல்பின் காரணமாக அரசியல் கவிஞர் எனும் அடையாளத்துக்கு ஹெர்பெர்த் உரியவராகிறார் என்று விமர்சகர் ஆல்வரஸ் கருதுகிறார். ஹெர்பெர்த்திடம் காணப்படும் எதிர்ப்புணர்வு முரட்டுத்தனமானதல்ல. நாஜிக்களின் ஆக்கிரமிப்பின்போது தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அவர் காட்டிக்கொண்டதில்லை. அதேபோன்று, ஸ்டாலின் காலத்திய அடக்குமுறையின் போதும் கூட, தன்னைக் கவனத்துக்குள்ளாகும் கத்தோலிக்கராகவோ, தேசியவாதியாகவோ அவர் காட்டிக்கொண்டதில்லை. ஹெர்பெர்த் சார்ந்திருக்கும் எதிரணியை ஒரு நபர் குழு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தான் உண்மை என்று கொண்டவற்றையும் தன்னுடைய நியதிகளையும் எவ்விதப் பிடிவாத நிலையின் முன்பாகவும் அவர் விட்டுக் கொடுத்ததேயில்லை. ஒரு கவிஞனுக்குரிய பங்கு பணி பற்றிய அவருடைய விளக்கங்களில் அவருடைய ‘அரசியல்’ மனோநிலையை நாம் காண வியலும். “போலந்து நாட்டில் கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் என்று கருதப்படுகிறார்கள்” என்று அவர் ஒரு முறை சொன்னார். கவிஞன் எனப்படுபவன் வெறும் சொல் உருவங்களை உருவாக்குபவனோ, மெய்மையைப் பிரதி எடுப்பவனோ இல்லை. ஒரு கவிஞன் மக்களின் அதியாழமான உணர்வுகளையும் அதியகலமான விழிப்புணர்வையும் வெளிப்படுத்துபவன். கவிதையின் மொழி அரசியலின் மொழியிலிருந்து மாறுபடுகிறது. என்ன இருந்தாலும், நாம் உணரக்கூடிய எவ்வித அரசியல் சிக்கலைக் காட்டிலும், கவிதை அதிகக் காலம் நீடித்து நிலைக்கக் கூடியது. மிக அகண்ட வெளியையும், அதி நீள கால ஓட்டத்தையும் கவிஞன் பார்வையிடுகிறான். தன் சமகாலத்திய இன்னல்களை அவன் நிச்சயமாகக் கவனித்துப் பதிவு செய்கிறான். ஆனால், அவன் உண்மைக்கு மட்டுமே பாரபட்சமாய் நிற்கிறான். அவன் சந்தேகங்களை எழுப்பி, நிச்சயமின்மைகளைச் சுட்டி, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறான்.” ஆனாலும் கூட, கவிதையின் தாக்கம் வரையறைக்கு உட்பட்டதே. கவிதை எழுதுவதின் மூலம் வரலாற்றின்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று நினைப்பது அகம்பாவம். வானிலையை மாற்றுவது காற்றழுத்தமானி இல்லை. இப்படியான கருத்துகளையே கவி ஹெர்பெர்த் கொண்டிருந்தார்.
ஒரு கவிஞருக்கான நோக்கம் குறித்தும், கவிதைக்கான பாடுபொருள் குறித்தும் ஹெர்பெர்த் கொண்டிருந்த கருத்துகள் தீவிரமானவை. என்றாலும் நகைச்சுவையையும் அங்கதத்தையும் அவர் மிகச் சாதுர்யமாகக் கலந்து எழுதுகிறார். அதிதீவிர கொள்கைப் பிடிப்போடு, குறும்புத்தனமான, மென்மையான அபத்தத்தையும், துடுக்கான புனைதிறனையும் முதலீடு செய்வதுதான் ஹெர்பெர்த்தின் கற்பனைத் திறனின் கவனிக்கத்தக்க அம்சம் என்று அமெரிக்கக் கவி லாரன்ஸ் லிபர்மேன் கருத்துத் தெரிவிக்கிறார். அரசியல் அடக்குமுறையைத் தடுத்தாட்கொள்ள ஹெர்பெர்த்துக்கு உதவும் கேடயம் தான் இந்த நகைச்சுவை கலந்த கற்பனைத்திறன். உண்மையில் கற்பனைத்திறமே அவர் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான கருவி. அவருடைய கவிதைக்கான படைக்கொட்டிலில் இருக்கும் அதிமுக்கிய ஆயுதமாக விளங்குவதும் அதுவே. அதேசமயம், அவருடைய தனித்துவமான அடையாளத்தைக் காத்துக்கொள்ள உதவும் கேடயமும் அதுவே. சர்வாதிகார தேவாலயமும், தேசமும் நடைமுறைப்படுத்தும் மனரீதியான அடிமைத்தனத்திற்கு எதிரான அரணாகவும் அவருடைய நகைச்சுவை கலந்த கற்பனைத்திறன் அவருக்குத் துணை நிற்கிறது. ஹெர்பெர்த்தின் நகைச்சுவையுணர்வை தேசத்தின் மனிதத்தன்மைக்கு எதிரான, பாகுபாடற்ற பொது மொழியைத் தடுத்தாட்கொள்ளும் வழி என்று இலக்கிய விமர்சகர் ஸ்டீஃபன் மில்லர் கருதுகிறார்.
நகைச்சுவையுணர்வைக் கொண்டிருப்பதென்பது ஒரு நபர் தனக்கென ஓர் அந்தரங்கமான மொழியைக் கொண்டிருப்பது. ஒரு நபரின் சுயம் ஒட்டு மொத்தமாய் அரசியல் வயப்படுவதைத் தவிர்ப்பது. ஹெர்பெர்த்துடைய கவிதைகளில் விவிலிய, கிரேக்க தொன்மக் குறிப்பீடுகள் இழையோடியவாறிருக்கும். தொன்மம் எனும் குவி ஆடி சமகால அனுபவத்தின் கண்ணைக்கூச வைக்கும் ஒளியை மட்டுப்படுத்தும் உபாயம். இது தன்னுடைய நிதானத்தையும் நகைச்சுவையுணர்வையும் இழந்து விடாதபடிக்கு ஒரு பார்வைத்தளத்தில் ஹெர்பெர்த்தை நிலைபெற உதவுகிறது.
குறிப்பான வரலாற்று நிகழ்வுகளின் கட்டுப்படுத்தும் எல்லைகளுக்குள் இருந்து தொன்மங்களின் பயன்பாடு ஹெர்பெர்த்தை விடுதலைப் படுத்துகிறது. அதே நேரத்தில், அங்கதத்தின் மெல்லிய எலும்புகளுக்குத் தொன்ம பயன்பாடு சதைப்பற்றைச் சேர்க்கிறது. அதைக் கபடம் நிறைந்ததாகவும், அதே சமயத்தில் நளினம் கொண்டதாகவும் மாற்றுகிறது. ஹெர்பெர்த்தின் கவி உணர்வுக்குக் கட்டியங் கூறுபவையாக அவருடைய ஐந்து கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு இக்கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.
தள்ளியும் போகாத பொழுதில்
காலத்தின் முதுகில்
சாய்ந்து கிடக்கிறான்
அரூபச் சித்தன்
சுகமாக இருப்பதால்
சும்மா இருக்கிறது
காலமும்
நாட்குறிப்பை நிரப்புவதற்காகவாவது
ஏதாவது செய்யமுடியுமா எனக் கேட்கிறான்
காலத்தின் காதுகளை வருடியபடி
அப்பொழுது
ஒரு மெல்லிசையைப்போல் கேட்கிறது
அவன் உயிரின் அமைதி
ஒரு பெருமழையைப்போல் பொழிகிறது
காலத்தின் சொர்க்கவாசல் தரிசனம்
உமையாள் தோன்றும் நீலவண்ணக் கவிதையில்
அகால முடிவிலியின் வெளி தீட்டப்படுகிறது
ஒரு ஓவியமாக.
எத்தனையோ விஷயங்கள் ஒரு விளையாட்டைப்போல ஆரம்பித்து சமயங்களில் விளையாட்டாகவே முடிந்து விடுகின்றன. நீ வரைந்த படத்திற்கு அருகில் வேறொரு படத்தைப் பார்த்தபோது உனக்கு வேடிக்கையாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். முதலில் அது யதேச்சையாகவோ அல்லது திடீரென ஒரு மனவேகத்தினாலோ வந்திருக்கலாம் என நினைத்தாலும் இரண்டாம் முறைதான் அது வேண்டுமென்றே செய்யப்பட்டதை உணர்ந்து, பிறகு, அதை நிதானமாகப் பார்த்திருப்பாய். இன்னும் ஒருமுறை பார்க்கவென மறுபடியும்கூட வந்திருப்பாய். தகுந்த எச்சரிக்கைளுடன்தான். தெரு மிகத்தனிமையில் இருக்கும் தருணத்தில், பக்கத்துத் தெருக்களில் கண்காணிப்பு வண்டிகள் இல்லாதபோது, அக்கறையின்மையுடன் அதை அணுகி, சுவர்க்கிறுக்கலை தவறியும் முகத்துக்கு நேர் பார்த்துவிடாமல், ஆனால் எதிர்ப்புற நடைபாதையிலிருந்து அல்லது பக்கத்திலுள்ள கடையின் ஜன்னலைப் பார்ப்பது போன்ற பாவனையுடன் பார்த்துவிட்டு உடனடியாக அங்கிருந்து அகன்றுவிடுவாய்.
உன்னுடைய விளையாட்டு துவங்கியதே சலிப்புணர்வில்தான். உண்மையாய் அது ஒன்றும் நகரத்திலுள்ள விஷயங்களின் நிலமையை, ஊரடங்குச் சட்டத்தை, சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், சுவர்களில் எழுதுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தொந்தரவளிக்கும் தடை உத்தரவை எதிர்த்த கண்டன உணர்வினால் அல்ல. சுவர்களில், வர்ண சாக்கட்டிகளைக் கொண்டு படம் வரைவது உனக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. கலை விமர்சகர்கள் உபயோகிப்பதைப் போன்ற சுவர்ச்சித்திரம் என்ற சொல் உனக்குப் பிடிக்கவில்லை. மேலும் நீ வரைந்ததைப் பார்க்க அடிக்கடி வந்தாய். சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நகராட்சி வண்டி வந்து அதை அழிப்பதையும், அதை அழிக்கும் வேலையாட்களின் பிரயோஜனமற்ற அவமரியாதைகளையும் உன்னால் பார்க்க முடிந்திருக்கும். அவை அரசியல் சித்திரங்கள் இல்லையென்பதைப் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. தடை உத்தரவு எல்லாவற்றுக்கும் சேர்த்துதான். ஒரு குழந்தையானது வீட்டையோ, நாயையோ சுவற்றில் கிறுக்கத் துணிந்திருந்தால், அது கூட இதே போன்ற வசவுகளுடனும் அச்சுறுத்தல்களுடனும் அழிக்கப்பட்டிருக்கும். இனிமேலும் நகரத்தில் மக்கள், எந்தப்பக்கத்தை உண்மையில் பயம் பீடித்திருக்கிறது என்பதை நிச்சயமாக அறிந்திருந்ததாகக் கூற முடியாது. ஒருவேளை நீ உன் பயத்தைக் கடந்து வரவும், ஒவ்வொருமுறையும், அடிக்கடியும், படம் வரைவதற்கான சரியான இடத்தைப் பொறுக்கி எடுக்கவும் அதுதான் காரணம்.
நீ எந்த அபாயத்திற்குள்ளாவதற்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று உனக்குத் தெரிந்திருந்தது. சுத்தம் செய்யும் வண்டிகள் வருவதற்குள் கடந்துபோகும் நேரத்தில் உனக்கென ஒரு சுத்தமான வெளி திறந்து கிடந்தது. அங்கு ஏறத்தாழ நம்பிக்கைக்கான இடம் இருந்தது. உனது படத்திலிருந்து நீ தள்ளியிருந்து பார்க்கும்போது, மற்றவர்கள் அதைக் கடந்து செல்லும்போது ஒரு பார்வையை வீசிச் சென்றதை உன்னால் பார்க்க முடிந்தது. யாரும் நின்று பார்க்கவில்லை. ஆனால், யாரும் அதை பார்க்கத் தவறவில்லை. சமயங்களில் அது ஒரு அவசரமான, அரூபமான இரண்டு வர்ணங்களிலான அமைப்பாகவோ, அல்லது ஒரு பறவையின் பக்கவாட்டுத் தோற்றமாகவோ, அல்லது பின்னிப்பிணைந்த இரண்டு உருவங்களாகவோ இருந்தது. ஒரே ஒருமுறை கறுப்புச் சாக்கட்டியைக்கொண்டு நீ ஒரு வாக்கியத்தையும் அதன் கீழ் எழுதினாய்: “இது எனக்கும் கூட வலிக்கிறது”. அது இரண்டு மணி நேரம் கூட இருக்கவில்லை. அந்த முறை காவல் துறையினரே அதை இல்லாமல் செய்தனர். அதன் பிறகு நீ வெறும் படங்களை மாத்திரம் வரைந்துகொண்டுபோனாய்.
உன்னுடையதற்கு அருகில் மற்றொரு படம் வந்த போது, நீ ஏறத்தாழ பயந்துபோனாய். திடீரென்று அபாயம் இரட்டிப்பாகிவிட்டது. உன்னைப்போல யாரோ ஒருவர் சிறைப்படுதலின் அல்லது அதைவிட மோசமானதின் விளிம்பில், கேளிக்கையில் ஈடுபடுமளவு நேர்ந்திருக்கிறது. அது ஒன்றும் சிறிதுபடுத்திவிட முடியாத அளவு - அந்த யாரோ ஒருவர் ஒரு பெண். அதை உன்னால் நிரூபிக்க முடியாது. ஆனால், வெளிப்படையான நிரூபணங்களை விடத் தெளிவாகவும், வித்தியாசமாகவும் அதில் ஏதோ இருந்தது. ஒரு எச்சம், கவர்ச்சிகரமான நிறங்களை நோக்கிய ஈர்ப்பு, ஒரு ஒளிவட்டம். நீ தனியாக நடந்து சென்றதாலோ என்னவோ, ஒரு ஈடு செய்யும் எண்ணத்தில் நீ அதைக் கற்பனை செய்திருக்கக்கூடும். நீ அவளை வியந்து பாராட்டினாய். அவளுக்காகப் பயப்பட்டாய். இது ஒரே ஒருமுறைதான் என்று நம்பினாய். ஆனால், அடுத்தமுறை, வேறொரு படத்தினருகில் வரைந்திருந்தபோது நீ உன்னையே மறந்துபோனாய். சிரித்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், அதே இடத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் உனக்கு வந்தது. ஏதோ போலீசார் குருடர்கள் அல்லது மடையர்கள் என்பதான நினைப்பில்.
வேறு ஒரு காலம் தொடங்கியது. ஒரே சமயத்தில் ரகசியமான இன்னும் அழகான, இன்னும் பயமுறுத்துகிற காலம். உன் வேலையைத் தட்டிக்கழித்துவிட்டு, விசித்திரமான வேளைகளில் அவளை ஆச்சரியப்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் நீ வெளியே செல்வாய்.
உன் படங்களுக்கு நீ, ஒரே எட்டில் கடந்துவிடக்கூடிய தெருக்களையே தேர்ந்தெடுத்தாய். நீ, விடியும் நேரத்தில், அஸ்தமன நேரத்தில், அதிகாலை மூன்று மணிக்கு எனச் சென்று பார்த்தாய். அது சகிக்கமுடியாத முரண்பாடுகளின் காலம். உனது படத்தருகில் அவளது படம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஏமாற்று முறையும் காலியாய்க் கிடந்த தெருவும்.
பிறகு அங்கு எதையும் கண்டுபிடிக்காததும் இன்னமும் காலியாய் தோற்றமளித்தத் தெருவும். ஓரிரவில் அவளுடைய தனி ஓவியத்தை நீ கண்டாய். அவள் அதை சிகப்பு மற்றும் நீலநிற சாக்கட்டியில், ஒரு கார்ஷெட்டின் கதவில், கரையான் அரித்த பலகையும், துருத்திக்கொண்டிருக்கும் ஆணிகளையும் தனக்கு அனுகூலமாக்கிக்கொண்டு வரைந்திருந்தாள். அது எப்பொழுதையும்விட அவளாக இருந்தது அந்த வரைவமைப்பு, வர்ணங்கள், அத்துடன் அந்த வரைபடத்துக்கு ஒரு முறையீடு அல்லது கேள்வியின் பொருள் இருப்பதை, அது ஒரு வழியில் உன்னை அழைப்பதை உன்னால் உணர முடிந்தது.
நீ விடியும் நேரத்தில் திரும்பி வந்தாய். கண்காணிப்பாளர்கள் தங்களுடைய சப்தமில்லாத ரோந்துகளைக் குறைத்துவிட்ட பிறகு, மிச்சமிருந்த கதவுப் பகுதியில் நீ ஒரு அவசர கடல்காட்சியை பாய்மரங்களுடனும் அலை தாங்கிகளுடனும் வரைந்தாய். அதை அருகில் சென்று பார்க்கவில்லை என்றால் ஒருவர் அதை வெறும் தொடர்பற்ற கோடுகளின் விளையாட்டாகத்தான் கருதியிருக்க முடியும்.
ஆனால், அவளுக்கு அதை, எப்படிப் பார்க்க வேண்டுமென்று தெரியும். அந்த இரவு நீ இரண்டு காவலர்களிடமிருந்து மயிரிழையில் தப்பினாய். உன் அறையில் கோப்பை அடுத்து கோப்பையாக ஜின் அருந்தியவாறே அவளுடன் பேசினாய். நீ உன் வாய்க்கு வந்த எல்லாவற்றையும் அவளிடம் சொன்னாய் சப்தங்களினால் ஆன ஒரு வித்தியாசமான வரைபடம் போல, இன்னொரு துறைமுகம், பாய்மரங்களுடன். அவள் கறுப்பாகவும் அமைதியாகவும் இருப்பதாக நீ கற்பனை செய்தாய். நீ அவளுக்கென உதடுகளையும், முலைகளையும் தேர்ந்தெடுத்தாய். கொஞ்சமாய் நீ அவளைக் காதலித்தாய்.
உடனடியாக உனக்கு உதித்தது, அவளும் ஒரு பதிலை எதிர்பார்த்திருப்பாள் என்று. அவளும் தன்னுடைய படத்தினருகில் மறுபடியும் செல்வாள், நீ உன்னுடையதற்கு செல்வதைப்போல. மேலும் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அபாயம் அதிகரித்திருந்தாலும், நீ கார்ஷெட் வரை செல்ல, அந்த கட்டிடத்தைச் சுற்றி நடக்க, அந்த தெருமுனைக் காபி விடுதியில் இருந்து முடிவற்ற பியர்களைக் குடிக்கத் துணிந்தாய். அது அபத்தமானது. ஏனெனில், உன் படத்தைப் பார்த்து அவள் ஒன்றும் நிற்கப் போவதில்லை. வந்து போய்க்கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்கக் கூடும். இரண்டாவது நாள் விடியும்வரை நீ ஒரு சாம்பல் நிற சுவரைத் தேர்ந்தெடுத்து வெள்ளையில் ஒரு முக்கோணமும், அதைச் சுற்றி ஓக் இலைகளைப் போன்ற திட்டுக்களையும் வரைந்தாய். அதே தெருமுனை காபி விடுதியிலிருந்து உன்னால் அந்த சுவரைப் பார்க்க முடிந்தது. அவர்கள் அதற்குள் கார் ஷெட் கதவைச் சுத்தம் செய்துவிட்டார்கள்.
மேலும் ஒரு கண்காணிப்பாளன், ஆத்திரத்துடன், திரும்பத் திரும்ப வந்து போய்க்கொண்டிருந்தான். அஸ்தமன நேரம், நீ சிறிது பின்வாங்கிச் சென்றாய். அதைப் பார்ப்பதற்கான வெவ்வேறு புள்ளிகளைத் தேர்ந்தெடுத்தவாறு, ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்தவாறு, அவ்வப்போது கடைகளில் கொஞ்சம் ஏதாவது வாங்கிய படி, கவனத்தை அதிகம் ஈர்க்காமல் சென்றவாறிருந்தாய்.
அபாயச் சங்குகள் ஒலித்தபோது, பிரகாச விளக்குகள் உன் கண்களைக் கடந்து சென்றபோது மிகவும் இருட்டி இரவாகியிருந்தது. சுவருக்கருகில் ஒரு குழப்பமான கூட்டம், நீ ஓடினாய், எல்லா நல்லறிவின் முன்னிலையில் உனக்கு உதவிய எல்லாமுமாக இருந்தது. உனது அதிர்ஷ்டம், தெரு முனையில் திரும்பிய கார் ஒன்று, கண்காணிப்பு வண்டியைக் கண்டு பிரேக் போட்டு, அதனுடைய அகலம் உன்னை மறைத்தவாறு நின்றதுதான். உறையிட்ட கைகளினால் இழுக்கப்பட்ட முடியை, கூக்குரல்களை, வண்டியில் அவளைத் தூக்கி எறிவதற்கு முன்னால் துண்டித்தாற்போல் இமைப்பொழுது தெரிந்த நீலநிற அரைக்கைச் சட்டையை.
வெகுநேரம் கழித்து (அப்படி நடுங்குவது கோரமானது, சாம்பல் நிற சுவற்றிலிருந்த உன் படம்தான் இது நிகழக் காரணம் என்பதை நினைத்துப் பார்க்கக் கோரமாக இருந்தது) நீ மற்றவர்களுடன் கலந்து, நீல நிறத்தில் வரையப்பட்ட வெளிக்கோட்டினை, அவளது பெயரைப் போன்ற, அல்லது வாயைப்போன்ற ஆரஞ்சுநிற எச்சங்களை, அவளை எடுத்துச் செல்லுமுன் போலீசாரால் அழிக்கப்பட்ட அந்த துண்டிக்கப்பட்ட படத்தில் இருந்த அவளை நீ பார்த்தாய்.
உன் முக்கோணத்திற்கு பதில் கூறும் வகையில் ஒரு படத்தை, ஒரு வட்டம் அல்லது சுழல் வட்டம், ஒரு முழுமையான அழகான உருவத்தை ஒரு சரியான அல்லது எப்பொழுதும் அல்லது இப்பொழுது என்பதைப் போன்ற ஒன்றினை அவள் வரைய முயன்றிருந்ததை நீ புரிந்து கொள்ளுமளவு எச்சங்கள் விடப்பட்டிருந்தன.
உனக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். பிரதான பாரக்ஸில் நடந்துகொண்டிருந்தவை பற்றி கற்பனை செய்ய, உனக்கு தேவைக்கும் அதிகமாகவே நேரமிருந்தது. இந்த மாதிரியான ஒரு நகரத்தில், இது போன்ற விஷயங்கள் சிறிது சிறிதாக கசிந்து வெளிவந்தன. சிறைப்பட்டவர்களின் விதி பற்றி மக்களுக்கு உள்ளுணர்வு இருந்தது. அப்படிப்பட்டவர்களில்
ஒருவரை ஏதோ சமயத்தில் காண நேரிட்டால், யாருக்கும் உடைக்கத் துணிவு வராத மௌனத்தில் காணாமல் போன பெரும்பான்மையானவர்களைப் போல, இவர்களையும் பார்க்காமல் இருந்துவிடவே மக்கள் விரும்பியிருப்பார்கள்.
உன் கைகளையே நீ கடித்துக் கொள்வதற்கு, அழுவதற்கு, துண்டு கலர்ச் சாக்கட்டிகளை உன் காலடியில் போட்டு நசுக்குவதற்குத் தவிர, வேறு எந்த வகையிலும் ஜின் உனக்கு உதவியாக இருக்கப்போவதில்லை என்று உனக்கு மிக நன்றாகவே தெரிந்திருந்தது. உன்னை நீயே அதிகம் குடிப்பதில் அமிழ்த்திக்கொள்ளும் வரை.
ஆமாம், ஆனால் நாட்கள் கடந்தன. உனக்கு இனி மேலும் வேறுவிதமாக வாழ்வது எப்படி என்பது தெரியவில்லை. மறுபடியும் உன் வேலைகளை விட்டுவிட்டு தெருக்களில் கடந்து சென்றாய், நீயும் அவளும் படம் வரைந்த சுவர்களையும் கதவுகளையும் கணப்பொழுதில் பார்த்தவாறே.
எல்லாம் தெளிவாய், எல்லாம் சுத்தமாய். ஒன்றுமே இல்லை. பள்ளிக்கூடச் சிறுவன் வகுப்பறையிலிருந்து ஒரு துண்டு சாக்கட்டியைத் திருடி, அதை உபயோகிப்பதன் சந்தோஷத்தை மறுக்க முடியாததால், வெகுளித்தனத்துடன் வரைந்த ஒரு மலரைக் கூட காணமுடியவில்லை. உன்னாலும் மறுக்க முடியவில்லைதான். ஒரு மாதம் கழித்து விடியற்காலையில் எழுந்து கார்ஷெட் உள்ள அந்த தெருவுக்குத் திரும்பச்சென்றாய். கண்காணிப்பாளர் யாரும் இருக்கவில்லை. சுவர்கள் முழுவதும் துப்புரவாக இருந்தன. அவள் தனது படத்தை விட்ட இடத்தில், நீ ஒரு சாக்கட்டியை எடுத்து வரையத் தொடங்கியபோது, ஒரு வாசற்கதவிலிருந்து ஜாக்கிரதையுடன் ஒரு பூனை உன்னைப் பார்த்தது.
பலகைகளில் ஒரு பச்சை அலறல், அன்பு மற்றும் அடையாளம் காணுதலின் சிவப்பு ஜ்வாலை, இவற்றை சுற்றிப் போர்த்தியபடி நிரப்பினாய். உனது, அவளுடையது, மற்றும் நம்பிக்கையின் உதடுகளாக இருந்த ஒரு நீள்வட்டம். தெருமுனையில் கேட்ட காலடிச் சத்தம் மெத்தென்று கால் வைத்து காலிப் பெட்டிகளின் குவியலுக்குப் பின்னால் தஞ்சமடையும்படி உன்னை ஓடச் செய்தது. தள்ளாடியபடி ஒரு குடிகாரன் முனகலான பாட்டொலியுடன் நெருங்கி வந்தான். அந்தப் பூனையை உதைக்க முயன்று அந்தப் படத்தின் அடியில் தலைகுப்புற கீழே விழுந்தான். நீ மெதுவாய் அங்கிருந்து அகன்றாய், இப்பொழுது பாதுகாப்பாக. வெகு நாட்களாகத் தூங்கியிராததால்
முதல் சூரியனுடன் தூங்கிவிட்டாய்.
அன்று காலையே நீ சற்றுத் தள்ளியிருந்து பார்த்தாய். அவர்கள் அதை அழித்திருக்கவில்லை. நீ நண்பகலில் சென்றாய். நினைத்துப் பார்க்க முடியாதவாறு அது இன்னும் அங்கு இருந்தது. புறநகரில் ஏற்பட்டிருந்த கலவரம் (நீ புதிதாக வந்த தகவல்களைக் கேட்டிருந்தாய்) நகர கண்காணிப்பாளர்களை அவர்களது வழக்கத்திலிருந்து அகற்றியிருந்தது. அஸ்தமன நேரத்தின் போது நீ மறுபடியும் சென்றாய், நாள் முழுதும் அதை ஏகப்பட்ட மனிதர்கள் பார்த்தவாறிருந்தார்கள். திரும்பிச் செல்ல நீ காலை மூன்று மணிவரை காத்திருந்தாய். தெரு காலியாகவும் இருட்டாகவும் கிடந்தது. சற்று தூரத்திலிருந்தே, அங்கு இன்னொரு படம் இருப்பது உனக்குத் தெரிந்துவிட்டது. உன்னால் மட்டுமே அதை தனிப்படுத்திப் பார்த்திருக்க முடியும். அவ்வளவு சிறியதாய், உனது படத்திற்கு மேலே இடது பக்கமாய். நீ ஒரே சமயத்தில் தாகம் மற்றும் திகில் என்பதைப் போன்ற உணர்வுடன் அருகில் சென்றாய்.
ஒரு ஆரஞ்சு நீள் வட்டம் மற்றும் ஊதா நிறத்திட்டுகள். அதிலிருந்து ஒரு வீங்கிய முகம் எழும்பிப் பார்த்தது, ஒரு வெளித் தொங்கிய கண், முஷ்டிகளால் நசுக்கப்பட்ட ஒரு வாய். இவற்றைப் பார்த்தாய்.
எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும், ஆனால், நான் வேறு எதை உனக்காக வரைந்திருக்க முடியும்? என்ன செய்தி இப்பொழுது எந்த அர்த்தத்தைத் தரமுடியும்?
ஏதாவது ஒரு வழியில் நான் உன்னிடம் விடைபெற வேண்டும், அதே சமயத்தில் நீ தொடர்ந்து செய்யும்படி கேட்டுக் கொள்ளவேண்டும், நான் என்னுடைய புகலிடத்திற்குத் திரும்பிச் செல்லுமுன் உனக்கு
ஏதாவதொன்றை விட்டுச் செல்லவேண்டும்.
அங்கு இனிமேல் எந்த நிலைக் கண்ணாடியும் இல்லை. முழு முற்றான இருளில், இறுதி வரும்வரை ஒளிந்துகொள்ள ஒரு வெற்றிடம் மாத்திரமே உள்ளது. நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்தவாறு, பிறகு சில சமயங்களில், நான் உன் வாழ்க்கையைக் கற்பனை செய்தது போல, நீ இன்னும் வேறு படங்களைச் உருவாக்குவதாக, இரவில் வேறு படங்களை வரைய நீ வெளியில் செல்வதாகக் கற்பனை செய்தவாறு.
From Julio Cortazar’s We Love Glenda So Much and Other Stories.
Translated by Paul Blackburn.
சாதத் ஹசன் மண்டோ என்கிற இலக்கிய ஆளுமையின் வாழ் - புனைவாக (Bio - Fic) வெளிவந்துள்ள ஒரு திரைப்படமே நந்திதா தாஸின் ‘மண்டோ’. மண்டோ பிரித்தானிய இந்தியாவில் பிறந்து வளர்ந்த தலை சிறந்த இலக்கிய ஆளுமை. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தால் 1947-ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் என்கிற இரண்டு நாடுகளின் மதவாத அரசியலால் தனது அடையாளம் எதுவென? தேடி அலைந்த, அரசியலால் அலைக்கழிக்கப்பட்ட ஒருவர்.“நான், அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்படும் ஒவ்வொரு தேவதூதர்களின் உடலிலும், ஒரே ஒரு முடிகூட இல்லாத அளவிற்கு மிகச் சுத்தமாகச் சிரைத்து விடுகிறேன்” என்று எழுதியவர் மண்டோ.மதம், இனம், மொழி என ஒரு உடலின் ஆற்றல்மையமாகக் கட்டப்பட்டுள்ள அடையாளங்களைத் தனது எழுத்துகளால் அறுவை சிகிச்சை செய்து அதன் அழுகலை வெளியில் எடுத்துப் போட்டவர் மண்டோ.
எஸ். ராமானுஜத்தால் மொழிபெயர்க்கப்பட்ட மண்டோ எழுத்துகள் குறித்த எனது திறனாய்வுக் கட்டுரையில் முதல் பத்தி இப்படித் துவங்குகிறது…
“பிரித்தானிய இந்தியாவிலிருந்து 1947-இல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரண்டு புதிய நாடுகள் உருவாக்கப்பட்டபோது (பிரிவினை - என்பது வகுப்பு வாத நோக்கில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் அதனைத் தவிர்ப்போம்) ஏற்பட்ட வகுப்புக் கலவரம் பற்றிய படைப்புகளில் முதலில் நினைவுகூரத்தக்க ஒரு படைப்பாளி சாதத் ஹஸன் மண்டோ. அவரது ‘டோபா டேக்சிங்’ என்கிற கதையில் வரும் பீஷான் சிங் - லாகூரில் மனநலக் காப்பகத்தில் இருந்துகொண்டு, தன் கிராமமான ‘டோபா டேக்சிங்’-கிற்குத் திரும்பவேண்டும் என்று இயற்கையான அடையாளத்தை மட்டும் வேண்டி வரலாற்றால் கட்டமைக்கப்பட்ட ‘இந்தியன்’, ‘பாகிஸ்தானி’ என்கிற அடையாளத்தை மறுத்ததைப்போல இறுதிவரை தனது அடையாள நெருக்கடியில் வாழ்ந்து மனச்சிதைவிற்கு ஆளானவர். இந்தியாவா? பாகிஸ்தானா? எங்குத் தன்னிச்சையாக இருக்க முடியும் என்பதே அவரது முக்கியப் பிரச்சினையாக இருந்தது. பாகிஸ்தானில் அவர் வாழ்ந்த இறுதி 8 ஆண்டுகளில், முழுக்க முழுக்கத் தன்னைப் போதைக்குள் திணித்துக் கொள்வதன் மூலம் நிரந்தரமான மயக்கத்தில் ஆழ்ந்து தனது உடலைக்கொண்டு அவர் இவ்வுலகிற்கு எதிராக நடத்திய கலகமே அவரது மரணம்.”
மேற்சொன்ன எனது கட்டுரையின் முதல் பத்திதான், நந்திதா தாஸின் ‘மண்டோ’ திரைப்பட இறுதிக்காட்சி. இத்திரைப்படத்தில் ‘டோபா டேக்சிங்’ என்ற தனது தாய்நிலத்தைத் தேடி அடையமுடியாமல் ‘நோ மேன் லேண்ட்ஸ்’ (No Man Lands) எனப்படும், இரு நாடுகளின் எல்லைக்கு நடுவில் இறந்து கிடப்பார் பீஷான் சிங். தேசியம் என்கிற கற்பிதத்தால் கட்டமைக்கப்படும் தேசம் என்கிற கற்பிதப் புவியியலிற்கு வெளியில் உள்ள ஒரு இடத்தில், தனது தாய்நிலத்தைத் தேடி அலைந்த, தேசம், தேசியம் என்கிற முதலாளிய அதிகார அரசியலால் வெற்று உடலாக்கப்பட்ட அந்த இறந்த உடலை ‘விரி - வெளியில் (ஜூம்-அவுட்)’ காட்டி, அதன் மீது மண்டோ என்ற பெயர் வருவதோடு திரைப்படத்தை முடிக்கிறார் நந்திதா. மண்டோ என்ற ஒரு படிமத்தைத் திறப்பதற்கான திறவுகோல்தான் அக்கதை. ‘டோபா டேக்சிங்’ வேறொன்றுமல்ல, மண்டோவின் அடையமுடியாமல் போன தனது கனவு நிலம் பற்றிய வேட்கை.
இந்தியா - பாகிஸ்தானைப் பிரிக்கும் கோடு மனநலக் காப்பகத்தின் நடுவில் வரையப்பட்டதால், இரண்டு நாடுகளின் மனநோயாளிகள் பரிமாற்றப்படுகிறார்கள். மண்டோவின் இக்கதையின் மிக முக்கியக் குறியீடு, ஒரு மனநலக் காப்பகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதை, இந்தியா, பாகிஸ்தான் என்பதாக வாசிக்கலாம். மனநலக் காப்பகத்தில் உள்ள பீஷான் சிங், இந்திய எல்லைக்கு மாற்றப்படுகிறார். அவருக்கோ தேவை அவரது ஊரான ‘டோபா டேக்சிங்’ தான். இரண்டு எல்லைக்கும் நடுவில் தனது ஊரை அங்கும் இங்குமாகத் தேடி அலைந்து இறந்துவிடுவார். மண்டோவின் இக்கதையைத் திரையில் அதன் அரசியல், அழகியல் நுட்பங்களுடன் கொண்டுவந்து திரைப்படத்தை முடிக்கிறார் நந்திதாதாஸ். திரைப்படத்தின் உடலரசியல் இங்கிருந்துதான் துவங்குகிறது. இன்றைய இந்துத்துவப் பாசிச இந்தியாவில் உன் அடையாளம் எது? இந்தியன், பாகிஸ்தான் இரண்டு அடையாளங்களும் கற்பிதமான ஒரு கோட்டால் உருவாக்கப்பட்டது. அதில் எது உன் அடையாளம்? என்ற கேள்வியுடன் திரைப்படம் முடிகிறது.
மனித உடல் குழந்தையாக ஒரு தாயின் வயிற்றில் கருவுரும்போதே அதன் நிலம், அதன் தேசம், அதன் தேசியம், மொழி ஆகிய அடையாளங்கள் அதன் உடலுடன் தாய்வழியாக சாராம்சப்படுத்தப்படுகிறது. இறுதிவரை இக்கருத்தியலால் ஆளப்படும் உடல், தனது இயற்கை என்ற தன்மையை இழந்த கருத்தியல் உடலாகக் கட்டப்பட்டுவிடுகிறது. ஒரு உடல் பிறக்கும் போது நாடற்றதான நாடோடி உடலாக இல்லாமல், இத்தகைய கருத்தியல் உடலாக மாற்றப்படுவதனால் உருவாகும் அடையாள வன்முறைக்கு எதிரானதே மண்டோவின் எழுத்துகள். சாராம்ச அடையாளங்களுக்கு எதிராகப் போராடிய ஒரு நாடோடித் தன்னிலை.
கருத்தியலுக்கு (Ideology) எதிரான நாடோடிவியலை (Nomadology), அதன் அழகியலை உயர்த்திப் பிடிக்கும் டெல்யுஸ் - கத்தாரியின் சிந்தனை அடிப்படையில் இப்படத்தை அணுகினால், மண்டோ தன்னை ஒரு நாடற்றவனாக ஆக்கிக்கொள்ளும் வேட்கையினால் அடைந்த வாழ்தலுக்கான போராட்டத்தை உணரமுடியும். நாடோடிவியல் மனநிலை என்பது ஒரு வகை ‘சீசாய்டல்’ (Sezoidal) மனநிலை என்கிறார்கள் டெல்யுஸ்- கத்தாரி இரட்டையர்கள். மண்டோ - வின் சீசாய்டல் மனநிலை எப்படி அவரது படைப்பாக்கத்தின் உற்பத்தி சக்தியாக இருந்தது என்பதையும், சீசாய்டல் என்பது ஒரு படைப்பாக்க சக்தி என்பதையும் உணர்த்துவதாக இத்திரைப்படத்தின் உள்ளோடும் தளத்தை வாசிக்க முடிகிறது.
மண்டோவின் பல செயல்கள், முடிவுகள் இப்படியான ஒரு காரணமற்ற வெளிப்பாட்டைக்கொண்டவையாகவும், ஒரு வித மனச்சிதைவு நிலையில் உருவாகும் உள்ளார்ந்த உருவெளித் தோற்றங்களும், இத்திரைப்படத்தில் நுட்பமான காட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளன.
ஒரு உடல் ஆளுங் கருத்தியலை ஏற்கலாம், எதிர்க்கலாம். ஆனால், கருத்தியலற்ற நாடோடியாக வாழமுடியாது என்பதே இந்நூற்றாண்டின் ஆகப்பெரும் அடக்குமுறை. அந்த அடக்குமுறையை உணர்வாக வடித்தவை மண்டோவின் எழுத்துகள். அவரது வாழ்வை, அவரது இலக்கிய எழுத்துகளின் வழி அணுகும் இத்திரைப்படம் அவ்வகையில் கருத்தியல் அரசியலுக்குப் பதிலாக நாடோடிவியல் அழகியலாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான முன்முயற்சி. (நாடோடிவியலின் அழகியலை உணர்வாக்கமாக மாற்றும் ஒரு திரைப்படம் ‘த எம்பராஸ் ஆஃப் த சர்பென்ட்’ (The Embrace of the Serpent) என்ற திரைப்படம். மேலதிக புரிதலுக்கு ‘நிழல்’ இதழில் வெளிவந்த எனது கட்டுரையில் வாசிக்கலாம்)
1947 - க்குப் பின் பாகிஸ்தானில் வாழும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ள ஒருவர், தனது தாய் புதைக்கப்பட்டுள்ள, தான் வளர்ந்த, தனக்கானதாகத் தனது கனவுகளை வடிவமைத்துக்கொண்ட இந்திய மண் குறித்த ஏக்கம் என்பதே நந்திதாவின் மண்டோ பற்றிய வாசிப்பாக வெளிப்படுத்துகிறது இத்திரைப்படம். வரலாற்றால் ஆதிக்கம் செய்யப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட மண்டோவின் வரலாறு அல்ல, மாறாக, ஒரு குறிப்பிட்டவகை அரசியல் கருத்தியலில் பயணிக்கிறது என்பதுடன், ஒரு வாழ் - புனைவிற்குள் சாத்தியமானவற்றை அழகுறக் காட்சிப் படுத்தியுள்ளது.
நந்திதாதாஸின் ‘மண்டோ’ பார்ப்பது, ஒரு வலி நிறைந்த அனுபவத்தைத் தருவதாக உள்ளது. இன்றைய அரசியல் சிக்கலுக்கு எல்லாம் அடிப்படையாக அமைந்த ஒரு கடினமான காலத்தின் உறைந்துபோன மனசாட்சியினை அகழ்ந்து காட்டியிருக்கிறார். 1946 - 1950 இந்தியா - பாகிஸ்தானின் பிரசவ வலியாகக்காலத்தில் உறைய வைக்கப்பட்ட, மனம்பிறழ்ந்த ஒரு மனசாட்சியின் நடுக்கம், நம்பி வாழும் பெரும்பான்மையான மக்கள் திரள், நம்பிக்கையைத் தகர்த்து வாழவிடாமல் வன்முறையில் அழித்தொழிக்கும், புலம்பெயர வைக்கும் ஒரு சிறுபான்மையின் பயமும், பதற்றமுமே மண்டோ என்கிற இத்திரைப்படம்.
மண்டோ 2015 -ல் பாகிஸ்தானிய இயக்குநர் ஒருவரால் திரைப்படமாக வெளிவந்தது - அதில் சில தவறான சித்தரிப்புகளும், புனையப்பட்ட வரலாறும் இருந்தது என மண்டோ குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதனால், நந்திதா, மண்டோ குடும்பத்துடன், அவரது பிள்ளைகள் நௌஷாத் மண்டோ, நுஷ்ரத் ஜலால், மண்டோ மனைவியின் சகோதரி ஆகியோருடன் பேசி, ஆய்வு செய்து, அவர்களது ஒப்புதலுடன் ஒரு திரைக்கதையாக உருவாக்கியுள்ளார். இது அவரது கனவுதிட்டமாக உருவான படம். மண்டோவி பல சிறுகதைகள் முழுநீளத் திரைப்படங்களாகவும், யூடியூப்பில் எடுத்துரைப்பு கதைகளாகவும் வெளி வந்துள்ளது.
நந்திதா, மண்டோவை திரைப்படமாக எடுக்க, இரண்டு காரணங்களைக் கூறுகிறார். (1) இன்றைய இந்திய வகுப்புவாத அரசியல் நிலை, கருத்து சுதந்திர மறுப்பு, இந்துத்துவப் பாசிசச் சூழல் (2) அவரது தந்தை ஜதின் தாஸிற்கும், மண்டோவிற்கும் உள்ள ஒப்புமையான வாழ்க்கை. வாழும் சமூகத்தின் அரசியலும், அவரது தன்னுணர்வும் இணையும்போது உருவாகும் ஒரு அற்புத சினிமாவே மண்டோ. தனது தந்தையின் நிழலை மண்டோவில் பார்த்தாக நந்திதா ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நேர்காணலில் கூறியுள்ளார். மண்டோவின் கட்டுரைகள், அவரைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போது அவர் தனக்கு மிகவும் பரிச்சயமானவராக இருப்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார். வளர வளரத்தான் அவரைப் போன்ற ஒருவராக வளர்ந்து வருவதை உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார். அவரது தந்தை ஜதின் தாஸ் ஒரு ஓவியர். அவரிடம் நிறைய மண்டோயாத் உள்ளதாகக் கூறுகிறார்.
மண்டோயாத் என்ற ஒரு புதிய சொல்லைப் பயன்படுத்தும் நந்திதா, அச்சொல்லிற்கு மண்டோ தன்மை அதாவது மண்டோனெஸ் (Mantoness) என்று குறிப்பிடுகிறார். உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான காஃப்கா, நவீனத்துவம் உருவாக்கிய அந்நியமாதல்,அதீத தனிமை உணர்வு, நிலைகொள்ள முடியாத பதற்றம், அது உருவாக்கும் அமுக்குப்பேய் போன்றதொரு மன அழுத்தம், அதீதமான உணர்வு, கையறுநிலை போன்றதொரு விநோதமான நினைவுகளால் ஆளப்படும் ஒரு மனநிலையும் அதனால் செயல்படும் தன்மையும் காஃப்காவின் கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டு, அது காஃப்காத்தன்மை என்பதைக் குறிக்கும் காஃப்காஸ்கோ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. மண்டோவின் செயல்பாடுகள், அவரது கதை மாந்தர்களின் பண்புகள், அவரை ஆட்கொண்ட உணர்வுகள், அதனால் வெளிப்பட்ட செயல்பாடுகளை மாண்டோயாத் என்கிற சொல்லால் குறிக்கிறார் நந்திதா.
அவரது தந்தை மண்டோ போல, கலை வியாபாரத்தில் ஈடுபடாதவர், முற்போக்கானவர் ஆனால் முற்போக்கு எழுத்தாளர் கழகத்தில் ஒருகாலத்திலும் சேராதவர். இருவரும் பணம் சம்பாரித்து அதன் மூலம் வாழ்ந்தாலும், பணம் என்பது அவர்களுக்கு ஒன்றுமேயில்லை அதாவது, பணம் அவர்களை ஊக்கப்படுத்தும் ஒன்றாக இல்லை. இருவருமே தங்கள் கலையின் மீது அதீத காதலுணர்வைக் கொண்டிருந்தனர். ஆழுணர்வு கொண்ட மனிதர்களாக இருந்தனர். நந்திதாவின் இவ்விளக்கத்திலிருந்து அவர் மண்டோயாத் என்று எதைக்குறிக்கிறார் என்பதை ஊகிக்க முடியும். தமிழ்ச்சூழலில் ஐரோப்பிய கற்பனாவாதம் உருவாக்கிய, படைப்பாளி என்பவன் கடவுள் என்ற கற்பனையில் அதி உச்சத்தில், குடிப்பது, வாழ்வைப் புறந்தள்ளுவது, தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தை உருவாக்கி சுயமோகத்தில் திளைப்பது என்கிற குறுங்குழுவாத படைப்பு மனநோயாக இதைக்கருதி விடக்கூடாது. மண்டோயாத் என்பது, இத்தகைய, உழைக்காமல் உச்சம்பெற விளையும் தமிழ் படைப்பாளிகளின் விட்டோத்தியான அங்கீகாரத்திற்கு அலையும் சோம்பேறி மனநிலை அல்ல. இத்திரையாக்கத்தின் வழியாக, நந்திதா, மண்டோயாத் என்கிற மண்டோ குறித்த ஒரு காட்சி வழியிலான பிம்ப உருவாக்கத்தை நிகழ்த்தியுள்ளார்.
புலம்பெயர்ந்தலைதல் என்பதன் வலி, ஏக்கம், விருப்பு ஒரு ஒளி - ஒலி பிம்பமாக விரிகிறது திரையில். இன்றைய பாசிசமயமாதலில், ஒரு முக்கியமான அரசியலைப் பேசுகிறது இப்படம். பெரும்பான்மை உருவாக்கும் சிறுபான்மையின் பயம், பதற்றம், நிலைகொள்ள முடியாத கொடுங்கனவுகளால். அது உருவாக்கும் அதீத பயமிரட்சியால் வாழும் ஒரு பாதுகாப்பற்ற மனநிலையை உருவாக்கிய மண்டோ எழுத்துகளின் காட்சி வடிவங்களைப் பார்வையாளருக்குள் காட்சிப்படுத்தியுள்ளார். நுண்தளத்தில் சிதையும் ஆழ்மனதின் பிளவுண்ட படைப்பாற்றலை விவரிக்கிறது.
ஒரு எழுத்தாளனை இத்தனை சுவராஸ்யம் மிக்கச் சினிமாவாகக் காட்டவேண்டும் என்றால், அதற்கான அர்ப்பணிப்பும், வாசிப்பும், தேடலும் மட்டுமின்றி, கலை இலக்கியம் குறித்த அழகியல் புரிதலுடன், அந்தக் கலைஞனாகத் தன்னையே உருவாக்கியும் கொள்ளவேண்டும். நந்திதா ஒரு சிறந்த சினிமா இயக்குநராக, எழுத்துக்கலையை, எழுத்தாளனின் வாழ்- புனைவை உருவாக்குவதில் சினிமா என்ற காட்சி-வடிவத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் பாரதியை சினிமாவாக்குதில் படைப்புகளை, காட்சியாக மாற்றி, பாரதி என்ற கவியாளுமையை அடையாளப்படுத்துவது முக்கியம். பாரதியை ஒரு வாழ்க்கை வரலாறாக எடுத்ததே அதன் தோல்வி எனலாம். பாரதியின் பாடல்களில் முக்கியமானவற்றைக் காட்சிகளாக்கியிருந்தால் பாரதி சிறப்பானதொரு திரையாக்கமாக வந்திருக்கும்.
மண்டோ-வை ரொமாண்டிசைஸ் பண்ணாமல், எழுத்தும் வாழ்வும் ஒரு மெல்லிய இழையாகப் பிரிந்து ஏற்படுத்தும் விருப்பிற்கும், வாழ்விற்கும் இடையிலான வன்முறை கலைஞனை அலைக்கழிக்கும் காட்சிகள், அவரது வாழ்வியல் தருணங்கள் உருவாக்கிய உணர்வை, அவரது ஐந்து சிறுகதைகளைக் காட்சிப்படுத்தி, அதன் புனைவாக்கமாக மண்டோவை முன்வைத்து நகர்கிறது இத்திரைப்படம். கதைகள் மற்றும் அவருடைய முக்கிய எழுத்துகளைக் காட்சிப்படுத்திச் சினிமா வாழ்- புனைவாக (பயோ - பிக்) மாறுவதில் கவனிக்க வேண்டிய அர்ப்பணிப்பான திரைக்கதையை வெளிப்படுத்தியுள்ளார் நந்திதா.
அவரது வாழ் தருணங்களில் மாற்றங்களை உருவாக்கியதாக, நந்திதாவின் திரை வாசிப்பாக முன்வைக்கப்பட்டுள்ள கதைகள் “தஸ் ருபியா கா நோட் (பத்து ரூபாய் நோட்டு), சா வாட் கா பல்ப் (நூறு வால்ட்ஸ் வெளிச்சம்), கூல் தோ (திற), தண்டா கோஷ் (சில்லிட்ட சதைப்பிண்டம்), டோபா-டேக்சிங்” மற்றும் மண்டோ, அங்கிள் சாமிற்கு எழுதிய கடிதங்களின் சில முக்கிய முஸ்லிம் முல்லாக்களைக் கிண்டலடிக்கும் பகுதிகள், அவரது தேர்வின் அரசியலையும் அழகியலையும் காட்சிப்படுத்துவதாக உள்ளது.
மண்டோவின் பத்து ரூபாய் நோட்டுக் கதையில் ஆரம்பமாகும் திரைப்படம், பார்வையாளர்கள் மத்தியில் மண்டோவின் வாழ்வா? கதையா? என்ற கேள்விக் குழப்பத்துடன் தனது முதல் பதிவை உருவாக்குகிறது. மண்டோவின் சிறுகதையைச் சத்தமாகப் படிக்கும் அவரது மனைவியின் பதற்றத்துடன் அவரது வாழ்தளக் காட்சியாகத் தொடர்கிறது. தனது கர்ப்பிணி மனைவியிடம் இக்குழந்தை சுதந்திர இந்தியாவில் பிறக்கும் என்று மகிழ்வோடு கூறும் மண்டோ, சுதந்திர இந்தியா ஒரு பிரிவினை இந்தியாவாக மாறுவதையும், அதுவே ஒரு கொலைக்களமாக மாறுவதையும் காண்கிறார். இப்படத்தில் காட்சியாக்கப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும், அதன் புனைவு உருவாக்கும் வாசிப்பின்பம் குறைபடாத வகையில் நுட்பமாகவும், அதன் இயல்போடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது முக்கியம். அக்கதையில் வரும் சிறுபெண், இறுதிவரை தனது குழந்தைமையுடன் இருப்பது நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வு முக்கியமானது.
மண்டோவின் வாழ்வா? அது சரியாகச் சொல்லப்பட்டதா? மண்டோவை அப்படியே பிரதிபலிக்கிறதா? மண்டோ குறித்த தரவுகள், நிகழ்வுகள் சரியா என்கிற கேள்விகளைத் தாண்டி மண்டோவை ஒரு பிம்பமாக்கல் வாசிப்பாக நிகழ்ந்துள்ளது. மண்டோவாக நடித்த நடிகர் நவாஸ்தீன் சித்திக்கும், அவரது மனைவியாக நடித்த ராசிகா துகால் இருவரும் அந்தப் பாத்திரங்களை உன்னதப்படுத்தியுள்ளனர். பாத்திரத்தை உன்னதப்படுத்துவது என்பது, அப்பாத்திரத்தின் இயல் முகத்தை நம்மிடம் இருந்து மாற்றி, அவர்களது பிம்பமாகத் தங்கள் முகத்தைப் பதிவாக்கிவிடுவது. மண்டோவின் மனைவி சபியாவின் ஆளுமை, மிக அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. இறுதிவரை கணவனின் இலக்கிய வாழ்விற்கு ஒரு அறம்சார் ஆதரவாளராக இருப்பதும், மண்டோ போன்ற ஒரு எழுத்தாளனின் மறுபக்கத்தில் இத்தகைய பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் பாத்திரம்.
மும்பையில் புதைக்கப்பட்டுள்ள தனது தாயின் சமாதியைக் காணும் மண்டோ கூறும் - ‘தனது இறப்பில் எழுதப்பட வேண்டிய வாசகம்’ யார் சிறந்த கதைசொல்லி, கடவுளா? மண்டோவா? (Who was the better storyteller : God or Manto?)’ என்று கூறும் காட்சி, ஒரு கதைசொல்லியாக, தான் கடவுளைவிடச் சிறந்த படைப்பாளியாக ‘சிருஷ்டிகர்த்தாவாக’ இருப்பதை உணர்ந்திருந்த மண்டோவின் மனநிலையைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஒரு காட்சியில் மண்டோவின் நண்பன் சியாம், தனது குடும்பம் முஸ்லிம் கும்பலால் தாக்கப்பட்டதை அறிந்து, கோபமாக மண்டோவிடம் “நான் உன்னையும் கொன்றுவிடுவேன்” என்று கூறுவான். அந்த காட்சியில் மண்டோவின் இறுக்கமான முகமும், அதில் ஏற்படும் பயத்தின் அதிர்வும், முதன்முறையாகத் தான் ஒரு முஸ்லிம் என்கிற அடையாள உணர்வை ஏற்படுத்தும். அதன் பின் அவர் பாகிஸ்தான் செல்வதாக முடிவெடுத்து கப்பல் ஏறச் செல்வார். சியாம், தான் அன்று கோபத்தில் பேசிவிட்டதாக, முடிவை மாற்றிக்கொள்ளும்படி மன்றாடுவான். மண்டோவே கற்பனை செய்யாத, விரும்பாத அந்த முடிவை நோக்கி அவரது மத அடையாளம் தள்ளும். தன்னைப் புரிந்த, தனது நெருங்கிய நண்பனே தனக்கு உருவாக்கியுள்ள அந்த அடையாளம், அது தனிமனித உடலின் ஆழ்தளத்தில் அழியாத ஒன்றாக இருப்பது என்பதை வெளிப்படுத்தும் காட்சி அது. அடையாளம் என்பது சமூகத்தின் இருமை - எதிர்வினால் கட்டப்பட்டு, எதிர்வை எதிர்கொள்ளும் போது வெளிப்படும் ஒன்று என்பதை வெளிப்படுத்தும் காட்சி. முஸ்லிம் என்பதற்கான எந்த மத ஆசாரங்களும், சடங்குகளும் இல்லாத, பிறப்பால் மட்டுமே முஸ்லிமாக உள்ள மண்டோ, முதன்முறையாகத் தனது மதம் தன்மேல் சுமத்திவிட்ட அடையாள நெருக்கடியை உணரும் தருணம். இன்றைய கைவிடப்பட்ட மனநிலையில் உள்ள, பெரும்பான்மை சமூகம் நம்மைக் காக்கும் என்கிற நம்பிக்கையில் வாழும் மதச் சிறுபான்மை முஸ்லிம்களின் அடையாள நெருக்கடியின் அரசியலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி அது.
இன்றைய இஸ்லாமியர்களின் வாழ்வதற்கான நம்பிக்கை - அண்டை அயலார்கள், நண்பர்கள், ஜனநாயக இடதுசாரி சக்திகள்தான். அவர்களே முஸ்லிம்களைக் கைவிடும் நிலை எப்படி அரசியலால் கட்டமைக்கப்படுகிறது என்பதை, அடையாள அரசியலின் வன்முறையை உணர்த்தும் காட்சி அது. நந்திதா முன்வைக்கும் முக்கியமான அரசியல் காட்சி. அதை மிக நுட்பமாக உணர்த்தும் வண்ணம், அதன் பிறகான மண்டோ கப்பல் ஏறும்வரை செல்லும் காட்சிகளின் தொடர்ச்சி அந்த உணர்வை நீட்டிச்செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது.
கலவரம் உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும்போது, மண்டோ காரில் அவரது நண்பரும் பிரபல நடிகருமான அசோக் குமாருடன், முஸ்லிம் குடியிருப்புக்குள் நுழைந்துவிடுவார்கள். முஸ்லிம் கும்பல் ஒன்று ஆயுதங்களுடன், காரைச் சுற்றிக்கொள்வார்கள். உள்ளிருக்கும் மண்டோ பயத்தில் மிரட்சியுடன் தொப்பி ஒன்றை தந்து அசோக் குமாரை பதற்றத்துடன் அணிந்துகொள்ளச் சொல்வார். அசோக் குமார் சிரித்தபடி அமைதியாக அதெல்லாம் வேண்டாம் என்று கண்ணாடியை திறந்தவுடன், அசோக் குமார்ஜி என்று தாக்கவந்த கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரைப் பத்திரமாக மாற்று வழியில் பாதுகாப்பாக அனுப்பிவைப்பார்கள். மண்டோவின் பயத்தில் உள்ள காரணமற்ற தன்மையும், கலைஞர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளவிதமும் அழுத்தமாகச் சொல்லும் காட்சி அது.
மண்டோ பாகிஸ்தான் செல்வதற்காகச் சியாமுடன் காரில் வரும்போது, அவருக்குப் பழக்கமான மும்பையின் சந்தில், பான் வியபாரி கோவிந்திற்குத் தான் ஒரு ரூபாய்த் தரவேண்டும் என்று அவனை மண்டோ தேடுவார். சியாம், அதை நான் தந்துவிடுகிறேன். உடனடியாகப் போகவேண்டும். இங்கு நீண்டநேரம் இருக்கமுடியாது என்பார். காரணம் கலவரங்கள் காட்டுத்தீயாக எங்கும் வெடிக்கும்நிலை இருப்பதால். இத்தனை நெருக்கடியிலும், மண்டோ அந்தக் கடனை நினைவுகொள்வது என்பது, அவரது மும்பை நகரபுலத்திணைக்குடியாக அவரது ஆழ்மனதில் பதிந்துவிட்ட, நினைவை குறியீடாகக் காட்டும் காட்சி அது. அவரது நினைவில் அந்தக் கோவிந்த் என்ற பெயர் தங்கியிருப்பது, மும்பை என்கிற நகராக மாறிய அவரது அக வேட்கையின் ஒரு வெளிப்பாடு. இப்படிச் சின்னச் சின்னக் காட்சிகளிலும் அதீத கவனமும், குறியீட்டுத் தன்மையும், ஆழ்ந்த பொருளும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மண்டோ நடந்துசெல்லும்போது டீக்கடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் அன்றைய தினசரியிலிருந்து மாண்டோவின் சாம் மாமனுக்கு எழுதிய கடிதங்களில் ஒன்றை வாசிப்பார். அதில் அமெரிக்கர்களிடம் மண்டோ வேண்டுவார், நல்லதொரு, வளவளப்பான கூலாங்கற்கள் போன்ற ஒன்றை அனுப்பி வையுங்கள் என்று. அத்தகைய கற்களைத் தமிழ் இஸ்லாமியர்கள் ‘டோலாக் கட்டிகள்’ என்பார்கள். இஸ்லாமியர்கள் சிறுநீர் கழித்தபின், எஞ்சி வெளிவரும் நீர் சொட்டுகளை அத்தகைய கற்களால் தேய்த்துச் சுத்தம் செய்யவேண்டும். இந்நடைமுறை குறித்த முஸ்லிம் முல்லாத்தனம் பற்றிய ஒரு அவல நகையோடு தனது விமர்சனங்களைக் கூர்மையாக வைத்திருப்பார் மண்டோ. பாகிஸ்தான் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக மாறிவிடும் அபாயம் குறித்த பல எச்சரிக்கைகளை மண்டோ அன்றே முன்னுணர்ந்து எழுதியிருப்பார் அக்கடிதங்களில். (சாம் மாமனுக்கு எழுதிய கடிதங்கள் எஸ்.ராமானுஜத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் வெளிவந்த என் முன்னுரையில் இதை விரிவாக விளக்கியுள்ளேன்)
அந்தக் காட்சியில் நந்திதா இரண்டு உணர்வுகளை ஒருசேர பதிவாக்கியிருப்பார். ஒன்று மண்டோவின் கடிதங்கள் குறித்த வாசிப்பு வழியான ஒரு காட்சி. அதே நேரத்தில் அருகில் மண்டோவே அதைக் கேட்டுக்கொண்டு, அவர்களிடம் தனது சிகரெட்டிற்கு நெருப்பு வாங்கிக் கொண்டு, எந்தவித சலனமும் இன்றி நகர்வார். அதுதான் மண்டோயாத் என்பது. ஒரு கவிதை நூலைச் சொந்த செலவில் போட்டுவிட்டு ஊரறிய அலறும் இன்றைய தமிழ் படைப்பாளிகளின் தன்முனைப்போடு இதை ஒப்பிட, மண்டோ ஒரு அசலான படைப்பாளியாக, தன் எழுத்தை வைத்து தனது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள விரும்பாத, எழுத்து என்பது தனது உருவாகுதலின் ஒரு செயல்பாடு என்பதைச் சுட்டும் காட்சி. மண்டோவை முழுமையாகப் புரிந்த ஒருவரால்தான் இப்படியான காட்சியை முன்வைக்க முடியும். உள்ளுணர்வுகளைக் காட்சியாக்குவதில்தான் சினிமா என்பது கதையிலிருந்து காட்சியாக மாறும் திரைக்கதையாகிறது.
பெண்கள், பெண் உடல்கள் மீதான வன்முறை என்பதன் அரசியலை மண்டோ தொடர்ந்து தனது படைப்புகளில் முன்வைத்தவர். “எல்லாப் பெண்களும் பாலியல் தொழிலாளிகள் அல்ல. ஆனால், எல்லாப் பாலியல் தொழிலாளிகளும் பெண்கள்தான்” என்ற அவரது அடிக்கோடிட்ட வாக்கியமே இத்திரைப்படத்தில் தொடர்ந்து காட்சிகளாக, மண்டோவின் சிறுகதைகளில் இருந்து தேர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பத்துரூபாய் நோட்டு, ஒரு நூறு வெளிச்சம், சில்லிட்ட சதைப்பிண்டம், திற என்கிற நான்கு கதைகளும் பெண் உடல், அதன்மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றியவையே. அவ்வன்முறை பாலியல் தொழிலாளி என்ற தனிமனித தேர்வாக இருக்கலாம் (நூறு வாட்ஸ் வெளிச்சம் கதை - தூக்கம் என்கிற இயல்புணர்வுக்கூட அனுமதிக்கப்படாத பெண் உடலை ஒரு பாலியல் களமாக மட்டுமே உணரும் சமூகம் பற்றிய சாட்டையடி கதை அது), அல்லது சமூக நிறுவனங்களாக இருக்கலாம் (திற - கதை. ஒரு சிறுபெண்ணைத் தொடர்ந்து ராணுவமோ அல்லது அடக்குமுறை நிறுவனம் ஒன்று பாலியல் புணர்விற்கு உட்படுத்தி, அப்பெண் உடலில் பாலின்பப் புழை என்பதைத் தவிர வேறு உணர்வே அற்றதாக மாற்றிவிட்ட நிலை), குடும்பமாகக் கணவன் - மனைவி பாலியல் உறவு (சில்லிட்ட சதைப்பிண்டம் - கலவரத்தில் ஒரு சிங், இறந்துபோன சிறுமியை கடைசி ஆளாகப் புணர்ந்து, அவளது சில்லிட்ட உடலால் ஆண்மை இழந்து போன கதை) இப்படி அனைத்திலும் பெண் உடல் என்பது ஒரு உயிராக, ஒரு உடலாக இல்லாமல் ஒரு பாலியல் களமாக மாற்றிவிட்ட சமூக அவலத்தை ஒரு பெண்ணிய நோக்கில் இத்திரைப்படத்தில் வலிமையாக முன்வைக்கிறார் நந்திதா.
ஹிப்புட்டுல்லா - என்பது மண்டோவின் ஒருவித வெளிப்படுத்த முடியாத அபத்த சூழலை குறிக்கும் சொல். அது சியாம் என்ற நண்பன் - ரயில் நிலையத்தில் படிக்கும் பேப்பரில் உள்ள ஒரு பெயர். அந்தப் பெயரின் வித்தியாசமான சப்தமே இருவரது வெளிப்படுத்த முடியாத ஒரு அபத்த உணர்வை குறிக்கும் சொல்லாக மாறிவிடும். அதை மிக நுட்பமாக, பல காட்சிகள் வழி சொல்லிச் செல்கிறது இத்திரைப்படம்.
ஒருமுறை நண்பன் சியாமை சந்திக்க ரயில் நிலையம் செல்லும் மண்டோ, சியாம் குடிக்கும் மட்டரகமான சிகரெட்டை எறியச் சொல்லிவிட்டு, உயர்வர்க்கம் குடிக்கும் தனது உயர்ரக சிகரெட்டைத் தந்து இதுதான் ஒரு பெரிய நடிகனாகப் போகும் நீ குடிக்கவேண்டும் என்பார். அதே காட்சி, பாகிஸ்தானில் மண்டோவை பெரிய நடிகனாக மாறிவிட்ட சியாம் பார்க்கும்போது, அவரது மட்டரகமான சிகரெட்டை குடிக்கவிடாமல் தனது உயர்ந்தரகச் சிகரெட்டை தருவான்.
இந்திய பாகிஸ்தான் உருவாக்கத்தில், இந்தியா பாகிஸ்தானை தனது கஜானாவில் உள்ள பணத்தைப் பிரித்துத் தராமல் வஞ்சித்து, பாகிஸ்தான் இன்றுவரை எழ முடியாத ஏழை நாடாக, அமெரிக்காவிடம் கையேந்தி, அமெரிக்கப் பொம்மையாக மாறியதற்கான ஒரு குறியீடாக இதை வாசிக்கலாம். பிரிவினைக்குப் பிறகான வாழ்க்கைத்தரம் தலைகீழாகிறது. அதற்கு ஒரு அரசியல் இருக்கிறது.
அவரது ‘தண்டாகோஸ்’ கதை, ஆபாசம் என்ற வழக்கில் அவர் வாதாடுவது முக்கியமான ஒரு காட்சி. எது முற்போக்கு இலக்கியம்? - அழுகிப்போன ஆபாசமிக்க வன்முறையான சமூகத்தைப் பேசுவது ஆபாசம் என்றால், ஆபாசமான இந்தச் சமூகத்தை என்ன செய்வது? என்பதே கேள்வி என வாதிடுவார். முற்போக்கு இலக்கியம் என்பது என்ன? என்பது குறித்த அவரது அந்த உரையாடல் இந்திய, தமிழ்ச் சூழலில் முற்போக்கு இலக்கியம் பேசுபவர்கள் அவசியம் கவனப்படுத்த வேண்டிய ஒன்று. மகளுக்கு மருந்து வாங்க முடியாமை - வருமானம் தராத தனது கட்டுரையைக் கிழித்துபோடுதல் - தாளமுடியாத வறுமையில் குடிப்பதற்குக் கூடக் காசற்ற நிலை - பாகிஸ்தான் காவல்துறை வீட்டிற்குள் நுழைந்து ஏற்படுத்தும் அராஜகம் - எனப் பல காட்சிகள் இதில் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. அவரது மனச்சிதைவிற்கான முதல் காட்சியின் துவக்கம், அதன்பின் மனநலகக் காப்பகத்தில் அடைபடுதல், அதோடு துவங்கும் ‘டோபா டேக்சிங்’ கதை - உண்மை எது? கதை எது? என்று பிரிக்க முடியாத ஒரு மயக்கத்துடன் சினிமாவின் இறுதிக்காட்சி முடிகிறது.
மண்டோ ஒரு புனைவா? வரலாறா? மனிதனா? எழுத்தாளனா? யார்? அவனது அடையாளம் என்ன? நமக்குள் மண்டோயாத் உள்ளதா? பெருகிவரும் இந்துத்துவப் பாசிசம் ஏற்படுத்தும் இந்திய மனிதர்களில், அறிவுஜீவிகள், படைப்பாளர்கள், எழுத்தாளர்களிடம் இந்த மண்டோயாத் உள்ளதா?
அது இல்லாவிட்டால் நாம் பாசிசத்தின் கரத்தை வலுப்படுத்தும் ஒரு அறிவதிகார சக்தியாக மட்டுமே இருப்போமா? போன்ற கேள்விகளை ஆழ்தளத்தில் வைத்துப் பேசுகிறது இத்திரைப்படம். படைப்பின் உணர்வு ஏற்படுத்த வேண்டிய மண்டோயாத் என்கிற மண்டோனெஸ் எனும், அதிகாரத்திற்கு எதிராக வாழ்தல், போராடுதல்.
மரணமுறுதல் என்கிற பண்பு ஒரு திரையாக்க பிம்பமாக நமக்குள் உருவமைப்பதே இப்படத்தின் வெற்றி. திரைப்படம் முடிந்து அரங்கில் நிலவும் அந்த அமைதிக்குள் ஒரு பெரும் அரசியல் மனநெருக்கடி உள்ளதை உணர முடிந்தது. அதைத்தான் இத்திரைப்படத்தில் உருவாக்கியுள்ளார் நந்திதாஸ், அர்ப்பணிப்புள்ள தனது கூட்டணியுடன் எவ்வித சமரசமுமின்றிக் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில்.
வரலாற்று ரீதியாக ஓர் அறிவார்ந்த சமூகத்தின் முன்பாக நிறுவவியலாத உள்ளீடுகளற்ற இந்துத்துவத்தைப் பலங்கொண்ட தத்துவமாக, ஒரு கட் புலனாகா மாயத்திரையில் வரைகிற பணியை அயராது செய்து வருகிறது பிஜேபி. அதன் வீச்சுக்கு முதலில் பலியாவது இளைஞர்கள்தான்.
முழுமுற்றாக நம் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிற அபாயகரமான சூழலில்தான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று அவ்வளவு தீர்க்கமாக, அந்த எளிய இதயங்கள் நம்பும்படியாக ஒருபுறம் மூளைச்சலவை நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.
இந்த நாடு இந்துக்களாகிய நம்வசம் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணில் நம் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது
இந்தத் தேசத்தைப் பூண்டோடு ஒழிக்க முஸ்லிம்கள் சதா சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்துக்களாகிய நாம் நமக்குள் பிளவுபட்டுக் கிடக்கிறோம்.
துலுக்கன்கள் நம் தலையின்மேல் ஏறி உட்காரப் போகிறார்கள், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பெரிய கரிய பூதமொன்று நம்மைக் கவ்வப்போகும் விபரந்தெரியாமல் திராவிடம் முற்போக்குச் சமதர்மம் கம்யூனிசம் பேசிக்கொண்டு அவர்களது சதிக்கு உடந்தையாகி நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறோமென்று பல்வேறு செய்திகளை ஒரு மந்திரம் போலவே பிஜேபியின் மூல அமைப்பான RSS ஓதிக்கொண்டிருக்கிறது.
இதில் செழுமையாக வெறியூட்டப்பட்ட சில இளைஞர்கள், கையில் குறுங்கத்தியை மட்டும் வைத்துக் கொள்ளவில்லையே தவிர, நெஞ்சில் அந்தத் தீயைச் சுமந்திருக்கிறார்கள். சில நேரங்களில், அந்தச்சூட்டைத் தொட்டுப்பார்த்து நான் கையை உதறியிருக்கிறேன். விடலைத்தனமான பெரும்பான்மைச் சமூகத்தின் அபிப்ராயங்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிற வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நாசகாரக் கருத்துகளைத் தெளிவாக ஒரு பாடத்திட்டம் போலவே RSS பாவித்து அவர்களிடத்தில் செயலாற்றுகிறது. இதன் மொத்த உருவமான எச்.ராஜாவின் கோபாவேசப் பேச்சு நமக்கு மயிர்கூச்செரியும் ஒவ்வாமையைக் கிளப்புவது உண்மைதான்.
எனினும், அந்தப் பேச்சினுள் வேறு சில அழுத்தமான உளவியல் உண்மைகளும் மறைமுக நோக்கங்களும் ஒளிந்திருக்கின்றன. அவர் போன்றவர்கள் உதிர்க்கும் கருத்துகள் போகிறபோக்கில் சொல்லப்படுகிற அல்லது வாய்தவறி வந்துவிழுகிற ஒன்றல்ல. பின்னால் திரண்டு வருகின்ற ஒரு கூட்டத்தின் முன்நின்று எப்படி லாவகமான சொற்களைப் பிரயோகித்தால் தன்பிம்பம் நிலைபெறும் அல்லது அக்கூட்டம் தூண்டப்படுமென்கிற ஆழமான உளவியல் புரிதலுடனே எச்.ராஜாவிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன.
“கோர்ட்டாவது மயிராவது… கோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது… நான் தரட்டுமா… லஞ்சம்… நான் தரட்டுமா… நான் தர்றேங்கறேன்…” எனச்சந்நதமேறி அவர் உறுமும்போது,“இப்படி முறையில்லாமல் பேசாதீர்கள்… இது சரியான பேச்சு இல்லை…” என அந்தப் போலீஸ் அதிகாரியும், மறுத்துக் குறுக்கிடுகிறார். ஆனால் ‘விஷயம்’ இந்த உரையாடல்களை நாம் காணும் ஒளிப்படக் காட்சியில் இல்லை.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே பாஜக தாம் முன்வைக்கிற பத்தாம்பசலித்தனமான அடிப்படைவாதக் கோட்பாடுகளுக்கெதிராக எந்தச் சக்தி முன்நின்றாலும் - அது பொதுமக்கள், காவல் துறை, கலை இலக்கிய அமைப்புகள், அரசு - சுத்திகரிக்கப்பட்ட தனது அக்மார்க் வன்முறையினாலோ அல்லது அப்படியொன்றை நிகழும்படி தூண்டச்செய்கிற விஷவிதைகளைத் தூவுவதன் மூலமோ மட்டுமே அவ்விஷயத்தை எதிர்கொள்கிற முரட்டுச் சித்தாந்தத்தை அது கறாராகக் கடைப்பிடித்து வருகிறது.
இந்திய அளவில் பாஜக தற்போது எதிர்கொள்கிற சவால்கள், குறைத்து மதிப்பிட முடியாதவைகளாகும். அரசின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு அடாவடியான எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவான குரல்களை அது மெல்ல மெல்ல இழந்தேவிட்டது எனலாம்.
2014ல் ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவுடன் குதியாளம் போட்டுக்கொண்டு வண்டியேறிய பாஜகவின் தேனிலவு துவக்கம் 2018ல் ‘அதுவொரு இனிய சுவை’ என அதன் பழைய ஞாபகங்களில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. இன்றைய அதன் மரத்த நாவுகளுக்கு அந்தச் சுவை இனிக்கவில்லையென்பது அடக்குமுறையின் கொடுங்கரங்களுடன் அது நாவைச் சுழற்றுவதிலிருந்தே அப்பட்டமாகத் தெரிகிறது.
மிகவும் வரிந்து கட்டிக்கொண்டு ஒரு தனிநபர் பிம்பச் செதுக்கலில் இறங்கி முட்டுக்கொடுத்த ஊடகங்கள் (அவைகள் ‘உண்மை’யான ஒரு மாற்றுக்கு அப்போது ஏங்கியவையாக இருந்தாலுங்கூட) ‘உண்மையின் கோரமுகத்தை’ தற்போது தரிசித்து விழி பிதுங்குகின்றன. எனினும், ஒரு முரட்டு விலங்கால் சுற்றி வளைக்கப்பட்டஒரு இரையைப்போல இதிலிருந்து தப்பித்து ஓடவும்
கயமைத்தனத்துடன் குறுக்கு வழி தேடுகின்றன. “நள்ளிரவில், இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார்…” எனத் தமிழில் கவிஞர் இசையின் கவிதையொன்று என் ஞாபகங்களில் தற்போது நிழலாடுகிறது. காந்தி கனவு கண்ட இலட்சிய இந்தியாவில், நள்ளிரவில் ஓர் இளம்பெண் ஆபரணங்களுடன் பயணிக்கிற ஒரு தேசத்தின் பாதுகாவலராக, புதிய விடியலை முன்மொழிபவராக, துயரங்களின் மீட்பராக அய்ம்பத்தாறு இஞ்சுகள் நெஞ்சு அகலம் கொண்ட ஓர் வாழும் இயேசுவாகவே மோடி இருப்பாரென்று அன்று வீதிக்கு வீதி கூவித் திரிந்த ஊடகங்கள் இன்று கனத்த மௌனம் சாதிக்கின்றன. அதன் நீட்சியாக, அந்த மௌனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பீடித்து, ஒவ்வொரு தனிமனிதரையும் நிராதரவின் கொடுந்துயரில் அமிழச் செய்துகொண்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்கள் “அது வெறுமனே அசைவற்ற தூண்கள்தான். அவை இனி வாய்திறந்து பேசப்பாவதில்லை” எனப் பிரதமர் முரசறைந்து அறிவிக்கவில்லையே தவிர யதார்த்தம் அவ்வாறே உள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பொன்று சமீபத்தில் நடந்து முடிந்தது.
அச்செய்தியை ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக வெளியிடுவதில் காட்டிய தயக்கம் மற்றும் சமூக நிர்பந்தத்தின் பேரில், அதுவொரு இயல்பான சந்திப்பென்றே பிறகு பூசிமெழுகிய விதம் சந்தேகத்துக்குரியது.
அந்த ரகஸ்ய சந்திப்பின் புகைப்படங்களைப் பிரதமர் அலுவலகம் வலைத்தளத்தில் கசியவிடுவதன் மூலம், ஊடகங்களைத் தங்கள் வசப்படுத்திவிட்டதான தோற்றத்தை தேசம் முழுதும் கட்டமைக்க முயன்றது. உண்மையும் அதையொத்தே நம்முன் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறது. இதைத்தாண்டி அரசை எதிர்த்து விமர்சிக்கிற மிகச்சில ஊடகங்களின் குரல்வளையை நோக்கி அரச பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள் நீளத் தயங்குவதில்லை.
இதெல்லாவற்றையும் விட, தற்போது, பிஜேபியை இயக்குகிற இந்துத்துவத்தின் தேவைகளோ மிகவும் வெட்ட வெளிச்சமானவை. நம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட துல்லியமான நகர்வுகளைக்கொண்டவை. தனது சித்தாந்த ரீதியான பலம் குறைந்திருப்பதாகக் கருதுகிற நிலங்களில் அல்லது தருணங்களில் பிரிவினையைத் தூண்டுகிற இழிந்த அரசியலையே அது முன்னெடுத்துச் செல்கிறது. அந்த அரசியலின் உடனடி சாத்தியம்
அல்லது அசாத்தியம் பற்றிய பாரதூரமான கவலைகள், அதற்கு ஒருபோதும் கிடையாது. மீண்டும் மீண்டும் விடாது கைக்கு அடக்கமான ஆயுதங்களுடன் அது நம்மை வழிமறித்து அச்சத்தையும் பீதியையையும் உருவாக்கும்.
இந்தப் பின்புலத்துடன் சேர்த்து வைத்துத்தான் எச்.ராஜா போன்றவர்களின் குரோதப் பேச்சினை நாம் புரிந்துகொள்ளவும்வேண்டும்.
ஒரு மேடையை அமைக்க அனுமதி இல்லையென மறுக்கப்படும்போது, சர்வாங்கமும் அதிர்ந்து, பிஜேபிக்கு இங்கு மேடையே இல்லையா, தாம் நம்புகிற இந்துத்துவத்திற்கு இம்மண்ணில் இடமேயில்லையா என்ற சுருதியிலான கொடுவியத்தலை (வியப்பை) ஆங்காரமாக வெளிப்படுத்துகிறது அவரது உடல்மொழி. அவ்வாறு காவல்துறை மறுப்பது, நடுவீதியில் வைத்து, தன்னையும் தனது கட்சியையும் ஒருசேர இழிவுபடுத்தும் செய்கையாகவும், ஒருகணமும் தாமதியாமல் அவ்விடத்தில் தன்னிலையின்றி எதிர்வினை புரிவதுபோல ஆனால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் இந்துத்துவத்தை இம்மண்ணில் நிலைநிறுத்த தான் எதுவும் செய்வேனென்றும், காவல் துறையினருடன், எனது இலஞ்சத்திற்குக் கட்டுப்பட நீங்கள் தயாராவென அவர் பேரத்தில் சாதுர்யம் காட்டும்போதும் அப்படியான இலஞ்சத்தின் மூலமாகவும்கூட நமது இலட்சியத்தை அடையமுடியுமென்ற நைச்சியமான செய்தியை தமது தொண்டர்களுக்கும் அவர் ஒரு குறிப்புணர்த்துகிறார்.
தான் அதிகாரத்திலிருக்கும் ஒரு தேசியக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் என்பதை ஆக்ரோசமாய் முண்டா தட்டி அறிவிக்கிறார். இதற்கு, ‘நான் சொல்வதைச் செய்… நான் சொல்வதை மட்டுமே செய்…’ என்ற கருத்தாக்கமே அடிநாதமாகும். அரசதிகாரம் கைவசப்பட்டிருக்கும் ஒரு குழுவோ அல்லது தனி நபரோ இக்கருத்தாக்கத்தை வலிந்து திணிப்பதைத்தான் ஃபாஸிசம் என்கிறோம்.
தற்போது உணர்ச்சி வேகத்தில் அச்சொற்கள் தம்மையறியாது வெளிப்பட்டதாகவும் நீதிமன்றத்தைஅவமானப்படுத்துகிற கெடு நோக்கமெதுவும் தனக்கில்லையெனக் குழைந்து நிற்கிறார். நீதிமன்றமும் சட்டத்தின் வழியல்லாமல் ஒரு நொடி அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பிறைஞ்சுகிற ஓர் எளிய உயிரியெனக் கருதி கலங்கி நிற்கிறது. மொத்த நீதிமன்றமுமே ஓர் பாவமன்னிப்புக் கூடாரமாகக் கணத்தில் மாறிவிடுகிறது.
நீதிபதியோ கர்த்தரின் வழி நின்று ஆசிர்வதிப்பதைப்போல மன்னிப்பை அந்தக் கெடு உள்ளத்தைச் சொஸ்தப்படுத்தி வழங்கி அமர்கிறார். எச்.ராஜாவை நீதியின் குளிர்காற்று ஒரு தென்றலென வருடிச்செல்கிறது.
நவீன பாஸிஸ்ட்டுகள் தம் அதிகாரம் நுழைய முடியாத இடமேதுமிருப்பின் அங்கு மண்டியிட்டு கால் நக்குகிற பிறகு கூடுமான இடைவெளி விட்டுத் துள்ளிக்குதிக்கிற புதிய வகைப்பட்ட அரசியல் அசைவினை முன்னெடுத்திருப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
சுபோ மஸ்து…
“பாசிச பாஜக ஆட்சி ஒழிக…” என்ற சோஃபியாவின் ஒற்றைக்குரலுக்கு அது காற்றில் கலந்து தேயும் வரைதான் அப்போது உயிர் இருந்தது. ஆனால் அக்குரல் ஓர் புயல்வேகத்தில் சென்று தமிழிசையின் காதுகளை முழுதும் அடைத்துவிட்ட பிறகு வேறெந்த வார்த்தைகளும் அவர் செவிக்குள் நுழையவில்லை. தமிழிசை அவ்விடத்திலேயே சிலையென உறைந்து நின்றுவிட்டார். அவரால் அச்சொற்களைக் கடந்து ஒரு அடிகூட நகரவியலவில்லை.
சிலகணங்களுக்குப் பிறகுதான் தாம் யார், தம் செல்வாக்கு, பதவி அந்தஸ்து, அதிஅதிகாரம் எல்லாம் ஒலியற்ற படக்காட்சிகளைப்போல் கண்ணுக்குள் வந்துபோகிறது. உடனேயே ‘பட்’ டென்ற ஓசையுடன் அவரது செவிகள் திறப்பதற்கு முன்னரே வாய்த்திறந்துகொண்டது. பிறகு அது மூடவேயில்லை. சோஃபியாவுக்கு ஒரு வலுவான தீவிரவாதப் பின்புலமிருப்பதான அடையாளத்தை உருவாக்க முனைந்து, அந்தப் பெண்ணை அலைக்கழித்து, வழக்குப் பதிவுசெய்து, மிரட்டிக் கூச்சலிட்டு, மீண்டும் அந்தக்கூச்சலை ஊடகங்களில் நியாயப்படுத்த முயன்று முட்டிமோதி, இறுதியாக, இந்தியா முழுமைக்கும் “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்ற கோஷத்தைக்கொண்டு சேர்த்த பிறகே அவர் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறார். காற்றும் சற்றே மெதுவாக வீசிக்கொண்டிருக்கிறது.
எனினும் இன்னொரு மன்னிப்பை தமிழிசைக்கும் வழங்குகிற அறக்கூடாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எனினும் நண்பர்களே, அரசதிகாரத்தில் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கேள்விகளும் விமர்சனங்களுமின்றித் தாம் விரும்பியபடி மட்டுமே தர்பார் நடத்தவும், எந்தவொரு மாற்றுக்குரலையும் அது வெளிப்படுகிற குரல்வளையை வெட்டுக்கை ஆணி பதித்த செருப்புக்கொண்டு நசுக்க முனைவதையும் ‘ஃபாஸிசம்’ என்ற சொல்லாலன்றி வேறு எப்படி அழைப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் அல்லது பரிந்துரைக்கிறார்கள்.
அப்படியொரு மேலான “வார்த்தை” இருப்பின் அதனைப் பாவிப்பதில் ஒருபோதும் நமக்கொன்றும் மனத்தடை இல்லையென்பதையும் சகலமானவர்களுக்கும் உரத்துச் சொல்லலாம்.
ஆமென்…
அனைவருக்கும் வணக்கம்
இவ்விடத்தில் இலக்கியம் பண்டுவது அவ்வளவு சிலாக்கியமானதாகயில்லை. எச்சுப்பண்ணாட்டாகவே எனக்குப்படுகிறது. ஊர் ஊருக்கு நன்நான்கு சந்தைக் கடைகள். அங்கு உற்பத்தியாகும் மலினப்பட்ட இலக்கிய சரக்கை விற்று முதலாக்க தொரசங்கட்டி ஒரு பட்டப்பகல் விளம்பரதட்டிபோல் நிற்கிறான் இலக்கியவாதி மானங்கெட்டு.
சின்ன கவுண்டர் படத்தின் இறுதிக்காட்சியில் நடிகர் சலீம் கவுஸ் ஊர் ஜனங்கள் ஒவ்வொருவர் காலிலும் வீழ்ந்து அய்யா எனக்கு தண்டனை கொடுங்கய்யா தயவுசெய்து தண்டனை கொடுங்கய்யா என்று கெஞ்சி கதறுவதை போன்று இங்கே இலக்கியவாதிகள் ஊடகவெளி எதுவென்றே பொழுதிலும் இரவுபகல் எந்நேரமும் காசுவில் ஆறாம்பக்கம் வெளியானது ஆவியில் அறுபத்தி ஏழாம் பக்கம் சூடாக வெளிவந்தது என்று தங்கள் ஆக்கங்களை வாசிக்க கூவி கூவி அழைக்கிறார்கள், கொள்பவர்கள் யாரில்லாத போதும். படைப்பை வெளியிட்ட பரோபரகாரத்திற்கு ஆ.குழுவிற்கு அவர்கள் அப்பனாத்தாவிற்கு மாளாத நேர்த்திக்கடன் செலுத்தி மாய்கிறார்கள். விட்டால் மொட்டையடித்துக்கொண்டு கோவில் கோவிலாக அங்கபிரதட்சணம் செய்தாலும் செய்வார்கள். சொல்லி சொல்லியே நன்றி என்னும் உணர்வை கொன்றேவிட்டார்கள். தக்கப்படியான படைப்பைத் தெரிவு செய்து வெளியிடுவது அவன் வேலை, டூட்டி. கடமையை செய்பவனுக்கு இடையூறாக வலிவந்தமாக நீ ஏன் அவன் மேலே விழுகிறாய்?
ஆட தெரியாதவன்தானே மத்தளத்து மேல் விழ வேண்டும். தரமாகப் படைப்பது மனமுவந்து ஓர்மையுடன் வாசிப்பது என்பதெல்லாம் இலக்கியவெளியில் இனி காண்பதரிதுபோல.
என்னதான் ஆயிற்று நம்ம ஊர் இலக்கியவாதிகளுக்கு.அச்சில் பார்த்த அவசரத்தில் உடன் அங்கீகாரம் வேண்டுகிறது பேதை மனம். சுமை கால் பணம் சும்மாடு முக்கால் பணம். ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியின் அதிகாரபோதைக்கும் இவர்களது அங்கீகாரபோதைக்கும் துளியும் வித்தியாசமில்லை. சாமானத்தில் ஜிகினாவைத்து ஒன்றுக்கு போகாத குறையாக என்னவெல்லாம் செய்கிறார்கள்?
உன்னத கவிச்சிங்கமொன்று உள்ளது சென்னையில். திமுக அதிமுக என்றெல்லாமதற்கு பாகுபாடுகள் கிடையாது. பார்த்தால் பரமசாது பக்கம் போட்டு படுத்துக் கொள்ளலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். யூலைத்திங்கள் இருப்பத்தியேழாம் திகதி வெளிவந்த பிரதிக்கு ஆகத்து ஒன்பதாம் தேதிக்கெல்லாம் ஐம்பது பெயர்கள் நூல் மதிப்புரை எழுதித் தள்ளிவிட்டார்கள். என்ன வேகம் என்ன தாபம். அன்பின் பிரவாகம் கங்குகரை காணாது பாய்கிறபோழ்து இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது.
பர்ராவை வாசிக்கிறேன். பாஷோவை உள்வாங்குகிறேன். போர்ஹேஸ், மார்க்கேஸ் என்றாலும் அப்படியே. இங்கே சில இலக்கிய குழுக்களுக்கு அயல் இலக்கியம் பேரில் பேய்க்காமமும் உள்ளூர் இலக்கியம் என்றால் குமட்டிக்கொண்டு வருகிற ஒவ்வாமையுமாக இருக்கிறது. சிரத்தையும் முனைப்பும் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் உலக இலக்கியம் பெருசு உள்ளூர் இலக்கியம் சிறுசு என்ற பேதமின்றி வாசிக்கவொண்ணும்.
இலக்கியவாதி சமூகத்தின் கண்ணாடி
இலக்கியம் சர்வரோக நிவாரணி
வாசித்தல் மதிப்புறு செயற்பாடு
படைத்தல் அறிவு செயற்பாடு என்றெல்லாம் கற்பிதம்
செய்துக்கொண்டிருக்கிறது இந்த விளம்பரம் சூழ்
உலகு.
பாவலர் மொக்கை பழனிசாமிக்கு
பாசாபிமானம் தேசாபிமானம்
இலக்கியதாகமென்றெல்லா மெதுவுங் கிடையாது
மறிகள் வாசலில் புழுக்கையிடும் கடைகள்
லீபஸார் சேட்டுகளுக்கு இருக்கின்றார் போலே
அம்மாபேட்டை தனியார் விடுதியிலவருக்கோர்
நிலவறை காரியாலயமிருந்தது
வயிற்றுவலிக்கு கட்டிலை திருப்பி போடுபவர்கள்
இலக்கியந் தழைக்கவங்கே நித்தமும் வந்துபோவார்கள்
நாடோடி பாணர்கள் லௌலீக துறவிகளென்றாலோ
அபிஷேகம் ஆராதனை கும்பமேளா னிதக்குடி
கொண்டாட்டம்
இலவு வீட்டுக்கு காரனுப்பவேண்டுமா
ஏற்காட்டில் தேனிலவுக்கு அறையொதுக்க வேண்டுமா
என்ன சேவை வேண்டும் உங்களுக்கு
பத்துபேர் கொண்ட குழுவுக்கு ஒரு சிம் வீதமாக
அந்தரங்க அவசங்கள் மிகு பிரியங்கள் உடன்
பகிர்ந்தளிக்கப்படும்
முழுநேர பரிசாகரத்தில் நிபந்தனையற்ற அன்பில்
பிரதியுபகாரம் கருதா பெருந்தொண்டில்
முக்குளித்து இளைப்பாறும் இலக்கிய திரு உருக்கள்
நெய்வதை விடுத்து நினைத்துக்கொண்டாற்போல
மொ. ப. சா
எழுத்து ஆக்கமென்றேதோ அவ்வப்போது
உளறிக்கொட்டி கிளறி மூடுவார்
கண்டு காணாதவர்களதைப் பெண்டு பிடித்து
காடு மேடெல்லாம் இழுத்தடிக்க
எங்கும் பிரவாகித்தது இலக்கியப் பெருவெள்ளம்
பீடம் புடைத்து மேடாகி
நிறைந்த வெள்ளாமை மேலான அறுவடை
எண்ணமெல்லாம் பொய் எமனோலை மெய்
இப்படியாகத்தானே
நேரத்திற்கு அரைப்படி பால்குடித்த மதர்ப்பில்
தூங்கப்பூனை என்னை விட
பெரிய புளுத்தி இங்காரடா என்று
அந்த தூலத்திற்கும் இந்த தூலத்திற்கும்
ஆட்டம் போட
ஆடிக்கொண்டிருந்த பஞ்சைக்கயிறு அறுந்துவிட
குப்புற விழுந்த பாவை தன் சாவை
நல்ல விலைக்கு விற்றுவிட்டது
செத்தும் கொடுத்தான் சீதக்காதி
ஆதாயமில்லாது இந்த செட்டி ஆற்றைக்கட்டி இறைப்பானா என்று கேட்டால்
கோடுவிட்டு கோடு தாண்டா குருகுல வமிசம்
குறுக்கில் மிதித்துச் சொல்கிறது
நாய்தான் குரைக்கனும் கழுதைதான் கெனைக்கனும்.
உரியவர்களை உரிய இடத்தில் வைக்கும் பண்பு இன்றும் நமக்கு வாய்க்கவில்லை என்பது எண்ணி வெட்கப்படவேண்டிய சங்கதி. அரசு, அதிகாரம், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு என்று துறை எதுவென்றாலும் உணர்வாளர்களுக்கு இடமின்றி போவது தற்செயல் அல்ல. சீர்கேடுகள் யாவும் தனி மனிதனிடம் இருந்தே தொடங்குகிறது. தகுதி திறமை என்பதையெல்லாம் நமக்கு வேண்டாத அலகுகள் ஆக்கி ஆண்டுகள் பலவாயிற்று. மற்றவை பேணுவது, எதிர்கொள்வது எல்லாம் பண்புகெட்ட செயல்களாகி விட்டது. சுயம், தனித்தன்மை, சொந்தகாலில் நிற்பது இவற்றை எல்லாம் வீசம் என்ன விலை என்று கேக்கிறார்கள்.
சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், பருமரத்தை அண்டி வாழும் சமயோசிதம் இவைதான் நாம் உடன் பயில வேண்டிய, நெறிமுறைகள், படிப்பினைகள், வாழ்வாதார கூறுகள்.
சமரசமே ஜெயம்.
பராரி இலக்கியம் படைத்தலாகாதென்று நல்ஊழியஞ் சொன்னார் உலக இலக்கிய பிரகஸ்பதி ஒருவர். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்.
பரவலான கவனம் பெற்றது சென்ற இதழ். பங்கு பற்றிய அன்பர்கள் யாவருக்கும் நன்றி.
இது இழப்புகளின் காலம். ஆளுமைகள் ஒவ்வொருவராக நம்மை பிரிந்தபடியே இருக்கிறார்கள்.
ந.முத்துசாமி, ஐராவதம் மகாதேவன், பிரபஞ்சன் ஆகியோருக்கு மணல்வீடு வாசகர் சார்பாக தனது நெஞ்சார்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
நாடகப் பாத்திரங்கள்:
இரோம் ஷர்மிளா : ஆயுதப்படைக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கிய 1958 சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி கால வரையறை அற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட, மணிப்பூரின் இரும்பு மனுஷி. இந்த நாடகத்தின் கதை உயிர் பெறும்போது, அதாவது 2010 இல் அவளது வயது 38.
இரோம் சாக்கி : ஷர்மிளாவின் தாயார். 2010 இல் 79 வயதானவள்.
இரோம் ஷர்மிளாவின் தாயார் இரோம் சாக்கி ஒரு தாழ்வான முக்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு முன்னால் ஒரு மண் சொடி அடுப்பு. ஒரு பானைச் சோறு அதில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அடுப்பிற்குப் பக்கத்தில் ஒரு காலியான கிண்ணமும் ஒரு சிறிய கோப்பையும் இருக்கிறது. அவளுக்கு இடதுகைப் பக்கத்தில் ஒரு திரை. அவளது புதல்வி ஷர்மிளா திரைக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருப்பது தெரிகிறது. ஷர்மிளாவுக்கு உணவைச் செலுத்த அவளது மூக்கில் வெள்ளைக் குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. அவள் அமர்ந்திருக்கிறாள், கால்களைக் குறுக்கிட்டு, கைகள் தொடை மீது, உள்ளங்கைகள் தலைகீழாகத் திரும்பி மேற்புறம் பார்த்தபடி, ஏதோ தியானத்தில் ஆழ்ந்திருப்பது போல் அவளது விழிகள் தாழ்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறாள்.
கதை சொல்லி:
அது 2010ம் வருடம். ஆயுதப்படைக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கிய சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தைத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டன. (10 வருடங்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறாள்.)
தற்கொலைக்கு முயற்சித்தார், ஆகவே செக்ஷன் 309ன் படி தண்டனை என்று கடந்த 10 வருடங்களாக நீதிமுறைக் காவலில் வைத்திருக்கிறார்கள் அவளை. இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் போலீஸ் கஸ்டடியில் ஜீவித்து வருகிறாள். அங்கே அவளை உயிரோடு வாழ வைக்க வலுக்கட்டாயமாக உணவை ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அதிகபட்ச காவல்காலம் ஒரு வருடத்தில் முடிந்துவிடுவதால் ஷர்மிளாவை விடுதலை செய்துவிடுகிறார்கள். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு புது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்துவிடுகிறார்கள். ஷர்மிளாவை மீண்டும் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுகிறார்கள். அவளது கண்களிலோ, இல்லை இந்த மணிப்பூரின் பார்வையிலோ, எந்தத் தீர்வும் தெரியாமல், முடிவே அற்றுப் போய் அவளது அவலம் வருடா வருடமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கதை அவளைப் பற்றியது அல்ல. அவளது தாய் இரோம் சாக்கியைப் பற்றியது. சாக்கிக்கு இப்பொழுது 79 வயதாகிறது. விசாலமான ஒற்றை அறை வீட்டில் அவளது பேரக் குழந்தைகளோடும் வாழ்ந்து வருகிறாள். குடும்பத்திற்குத் தேவையானவற்றைச் சமைப்பதில் தனது பெருவாரியான நேரத்தை செலவிட்டுவருகிறாள். ஏதோ சிலபேசப்படாத காரணங்கள். ஷர்மிளா உண்ணா விரதத்தைத் தொடங்கிய பின். ஷர்மிளாவும் சாக்கியும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. பேசிக் கொள்ளவும் இல்லை.
சாக்கி: ஷர்மிளா என்னுடைய கடைசிக் குழந்தை. என்னுடைய ஒன்பதாவது குழந்தை. அவள் பிறந்த பொழுது என்னுடைய முலைகள் (மார்பகங்கள்) வற்றிப் போயிருந்தது எனக்கு நினைவு இருக்கிறது. அவளுக்குப் பால் இல்லை என்னிடம். இம்பாலில் இருந்த எல்லா அம்மாக்களின் முலைப் பாலையும் உண்டு வளர்ந்தாள் அவள். அவள் மணிப்பூரின் புதல்வி. என் புதல்வி அல்ல. அதற்காக, என்னிடமிருந்து அவளை, மணிப்பூர் எடுத்துக்கொண்டுவிட முடியும் என்றா அர்த்தம்?
சிறிய மௌனம்
சாக்கி : (அவள் உண்ணாவிரதத்தைத் துவங்கிய நாள் எனக்கு நினைவில்லை. எல்லா நாட்களையும் போல் அதுவும்) பத்துவருடங்களுக்கு முன்னாள் ஒருநாள். அந்த நாள் காலை அவள் என்னிடம் வந்தாள். என்னுடைய ஆசீர்வாதத்தை வேண்டினாள். அவள் சொன்னாள், “நான் மணிப்பூருக்காக ஏதாவது செய்யப்போகிறேன்.” அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை என்னிடம் சொல்லவில்லை. (அவள் எதைத் துவக்கப்போகிறாள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால்...) நான் அவளைத் தடுத்திருப்பேனோ?
சாக்கி சோறு உள்ள பானையை எடுத்து அதன் நீரை ஒரு கிண்ணத்தில் வடிக்கிறாள். சோற்றுப் பானையை அடுப்பின் மீது திரும்ப வைக்கிறாள். பார்வையாளர்களுக்கு அதில் என்ன உள்ளது என்பதைத் தெரிவிப்பதற்காக, கிண்ணத்தைத் தட்டுகிறாள்.
சாக்கி : இது ஷர்மிளாவுக்காக. அவள் கூந்தலைக் கழுவிக்கொள்ள இதை நான் வாரம் ஒருமுறை அவளுக்கு அனுப்பி வைக்கிறேன். எங்களுக்கிடையே எஞ்சிக் கிடப்பது இது ஒன்றுதான். கஞ்சித் தண்ணீர்.
பானையில் இருந்த சோறு தயாராகிவிட்டது. சாக்கி, சிறிது சோற்றை எடுத்து தனது தட்டில் பரத்திக் கொள்கிறாள். அதை மடியில் வைத்துக்கொண்டு ஒரு வெற்றுப் பார்வை பார்க்கிறாள். ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயருகே கொண்டு செல்கிறாள். வாயைக் கைகள் நெருங்கும்பொழுது நிறுத்திவிடுகிறாள். கையிலிருக்கும் சோற்றைப் பேராவலுடன் பார்க்கிறாள்.
சாக்கி : ஒவ்வொரு கவள உணவும் நாவை நெருங்கும் பொழுதும், ஷர்மிளாவின் உதடுகள், இந்தப் பத்து வரு8டங்களில் ஒரு உணவைக்கூடத் தொடவில்லையே என்பது என் நினைவுக்கு வரும். பிறகு எப்படி ஒரு தாய் இது தெரிந்த பிறகும் உண்ண முடியும்?.
சாக்கி உணவுத் தட்டை தரை மீது வைக்கிறாள். அவளது விரல்கள் இப்பொழுது தொடையின் மீது இடம் பெறுகின்றன.
சாக்கி: அவள் எப்பொழுதுமே மாறுபட்டவள். அசாத்திய பிடிவாதம். குழந்தையாய் இருக்கையில், ஒரு நாள், வெறும் மரக்கறி மட்டுமே தான் உண்ணப் போவதாக முடிவு செய்தாள். அவளை, ‘ஏன்? எதற்காக? என்றெல்லாம் எங்களால் கேட்டுவிட முடியாது. யாராலும் முடியாது.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு கல்லூரிக்குச் செல்ல மாட்டேன் என்று முடிவு செய்தாள். யாராலும் அவள் மனதை மாற்றி ஒத்துக்கொள்ள வைக்க முடியவில்லை. இவளைப் போன்ற குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு தாய் என்னதான் செய்யமுடியும்?
சாக்கி : எனக்கு இந்த ஆயுதப் படை, சிறப்பதிகாரச் சட்டம், AFSPA, இது, அது எதுவும் தெரியாது. நான் படித்தவள் இல்லை. இரும்பு மனுஷியின் தாய் ஒரு சாமானியப் பெண்மணி (சிரிக்கிறாள்). ஆனால், இந்த AFSPA எங்களுக்கு என்னென்ன இழைத்தது என்று தெரியும் எனக்கு. இழவு ஒலிகளைச் செவியுறாமல் ஒருவர் இம்பால் வீதிகளைக் கடந்து செல்ல முடியாது. மணிப்பூரில் வீசும் காற்று கூட அவர்களது துயரம் தோய்ந்த கதைகளைக் கேட்டு இழவு கொண்டாடுகிறது. தனித்தனியே கிழித்தெறியப்பட்ட குடும்பம், படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மைந்தர்... சீரழிக்கப்பட்ட பெண்கள். நானும் ஷர்மிளாவின் அப்பாவும் எங்கள் குடும்பத்திற்குத் துயரம் நேராமல் இருக்கப் பெரும்பாடு பட்டோம். ராணுவம் எங்களைக் கடந்து சென்றபொழுது தலை தாழ்த்தி நின்றோம். ஒளிந்து, மறைந்து வாழ கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று இதே மிருகத்திற்கு எதிராக என் புதல்வி போர்ப்பிரகடனம் செய்திருக்கிறாள் (பரிகாசம் ஏதோ செய்கிறாள்).
சாக்கி : எல்லா அம்மாக்களும் என்னிடம் வந்து சொல்வார்கள், ‘சாக்கி, உனது புதல்விதான் எங்கள் ரட்சகர்’ ‘சாக்கி, உனது புதல்விதான் மணிப்பூரை இருண்டகாலங்களிலிருந்து மீட்டெடுப்பாள்’. சில கணங்களில் நான் என்னைப் பற்றிப் பெருமையாக உணர்வேன். அப்பொழுது என் புதல்வியின் முகம் என் விழிகளுக்கு முன்னால் வந்துபோகும். ஒருகாலத்தில் இளமையாகவும், அழகாகவும் இருந்த முகம். ஆனால் இன்று இந்த மணிப்பூர் அளிக்கும் அழுத்தத்தால் அந்த அழகிய முகம் சுருக்கங்கள் விழுந்து... கடந்த பத்துவருடங்களில் ஒவ்வொரு நாளையும் அவள் மருத்துவமனையிலேயே கழித்திருக்கிறாள். அவர்கள் அவளுக்கு எப்படி உணவு ஊட்டுகிறார்கள் தெரியுமா? மூக்கின்வழியே, ஒரு குழாய் மூலம்.. அரைச் சாவு அடைந்து விட்ட பெண் போல்... (பார்வையாளர்களை நேரடியாகக் கேள்வி கேட்பது போல்)
இது உங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் மனம் பெருமை கொள்ளுமா? ஷர்மிளா, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அது சுயநலமாகிவிடுமா?
ஓய்ந்துபோன சாக்கி, சிறிய இடைவெளிக்குப் பின், துயரத்தில் தலை தொங்கிப் போகிறது. விளக்குகளின் ஒளி குறைகிறது.
உறங்கவேண்டும் என்பது போல் ஷர்மிளா உடலை சாய்க்கிறாள். சில விநாடிகள் கழித்துச் சாக்கி மெதுவாக, தலையை நிமிர்த்துகிறாள். பேச ஆரம்பிக்கிறாள் (ஆனால் இம்முறை ஷர்மிளாவை நோக்கி).
சாக்கி : உன்னைச் சந்திக்கப் பத்து வருடங்களாக எனக்குத் தைரியமில்லை. ஷர்மிளா, உன்னைச் சந்திப்பதால் நான் அழுதுவிடுவேன் என்று எனக்குத் தெரியும். அப்போது நான் உன்னிடம் கேட்க நினைத்திருந்த அத்தனைக் கேள்விகளையும் கேட்டிருப்பேன் (குரலை உயர்த்தி). மணிப்பூர் உனக்குப் பாலை ஊட்டியிருக்கலாம், ஆனால், உன்னை பத்து மாதங்கள் கருப்பையில் சுமந்தவள் நான்தானே? தன்னுடைய பெண் ஒரு முழுமையான வாழ்வு வாழவேண்டும் என ஒரு தாய் நினைப்பது தவறா? இல்லை, தியாகிகளின் அம்மாக்களுக்கு அந்த உரிமை கிடையாதா?
சாக்கி, சில விநாடிகள் மௌனமாகினாள். தன்னுடைய சினத்தை எண்ணித் தானே திடுக்கிட்டுவிட்டாற்போல. மறுபடியும் அவள் பேசத்துவங்கும் பொழுது குரல் பலவீனமடைந்திருக்கிறது.
சாக்கி : அப்பொழுது சரியான வார்த்தைகள் வாயில் சிக்காமல் போயிருக்கலாம். தேற்ற முடியாத அளவு நான் அழுதுத் தீர்த்திருக்கலாம். நீ அப்பொழுது என்ன செய்திருப்பாய் ஷர்மிளா? நீயும் அழுதிருப்பாயா? நீ அழுதிருப்பாய் என நான் நம்புகிறேன். உன்னுடைய தீர்மானம் அப்பொழுது பலம் குன்றிப்போயிருக்குமோ? நீ என்னுடன் வீட்டிற்கு வந்திருப்பாயோ? நீ வந்திருப்பாய் என நான் நம்புகிறேன். நம் இருவருக்குந்தான் அது தெரியும். மணிப்பூர் தன்னுடைய தலைவியை இழந்திருக்கும். அதனால்தான் நீ என்னைச் சந்திக்கவேயில்லை.
சிறிய இடைவெளி. மீண்டும் சாக்கி பேசத் துவங்கும் பொழுது குரலில் ஓர் அவசரம் தெரிகிறது.
சாக்கி : ஆனால் இன்று எல்லாம் முடிந்துவிடும். நான் உன்னைச் சந்திப்பேன். AFSPA சட்டம் ரத்தாகி விடும். என் கையால் உனக்குத் தேனை ஊட்டி உண்ணா விரதத்தை முடித்துவைப்பேன்.
சாக்கி தேன் பாட்டிலை எடுக்கிறாள். அவள் தனது முகத்துக்கு முன்னால் அதை உயர்த்தி, அதை ஒரு பார்வை பார்க்கிறாள். சில ஸ்பூன்கள் அளவு தேனே கிண்ணத்தில் ஊற்றுகிறாள். லேசாகக் கலக்குகிறாள். சாக்கி எழுந்திருக்கிறாள். அவளையும் ஷர்மிளாவையும் பிரித்து நிற்கும் திரையை நோக்கி நடக்கிறாள். அவளுடைய கரங்களில் தேன் கிண்ணத்தையும், கஞ்சித் தண்ணீரையும் எடுத்து வருகிறாள் மெதுவாக.
தயக்கத்துடன் திரையை நீக்குகிறாள். ஷர்மிளா தலையைத்திருப்பி வந்திருக்கும் அம்மாவை ஆச்சரியத்துடன் நோக்குகிறாள்.
ஷர்மிளா : அம்மா?
சாக்கி : ஷர்மிளா, இன்று முதல் நம்மைப் பீடித்திருந்த துயரங்கள் நீங்கிவிட்டன. AFSPA ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. நீ வென்றுவிட்டாய்.
ஷர்மிளா : அம்மா...
சாக்கி இடைமறிப்பு செய்கிறாள்.
சாக்கி : எதுவும் கூறாதே குழந்தையே. இன்று முதல் எனக்கு ஓய்வு...
சாக்கி ஷர்மிளாவின் தலையை எடுத்துத் தொடை மீது வைத்துக்கொள்கிறாள். அவள் ஷர்மிளாவின் நாக்கில் ஒரு ஸ்பூன் தேனை ஊட்டுகிறாள். ஷர்மிளாவின் உடல் நடுக்கம் கொள்கிறது. அவள் பத்து வருடங்கள் கழித்து ஓர் உணவை ருசி பார்ப்பதால். சாக்கி இன்னொரு ஸ்பூன் தேனை ஊட்ட ஷர்மிளா மகிழ்ச்சியோடு ருசிக்கிறாள். அவள் முகத்தில் புன்னகை பரவுகிறது.
சாக்கி : இப்பொழுது உறக்கம் கொள் என் அருமைக் குழந்தையே. உனது கூந்தலை நான் கழுவுவேன்.
சாக்கி, ஷர்மிளாவினது கேசத்தை எடுத்து கஞ்சித் தண்ணீர் உள்ள கிண்ணத்தில் மூழ்கடிக்கிறாள். ஒரு கோப்பையை எடுத்து பெரிய கிண்ணத்தில் உள்ள கஞ்சித் தண்ணீரை எடுத்து ஷர்மிளாவின் தலை முழுவதும் ஊற்றுகிறாள். ஷர்மிளா மெதுவாக ஒரு மெல்லிய உறக்கத்தில் ஆழ்கிறாள்.
சாக்கி கேசத்தைக் கழுவும்பொழுது உணர்வு உந்தலால் தடுமாறும் குரலில் பேசுகிறாள்.
சாக்கி : எங்களை மன்னித்துவிடு ஷர்மிளா! நாங்கள் வேறுபட்டவர்கள் (உன்னைப்போல் இல்லை) நானும் உனது தந்தையும் சின்னஞ்சிறு சராசரி மனிதர்கள். நாங்கள் தியாகிகள் இல்லை. ‘எங்கள் குடும்பம் ஒரு இயல்பான வாழ்க்கை நடத்தினால் போதும்’ என இருப்பவர்கள். நாங்கள் உன்னைப்போல் இல்லை. ஷர்மிளா, எங்களை மன்னித்துவிடு.
--திரை--
1990க்குப் பிறகு, தமிழகம் பொருளாதாரத்தில், தொழில்துறையில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. வறுமை குறைந்து, தமிழகப் பொருளாதாரம் இந்தியாவின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக உருவெடுத்தது. ஆனால், இதற்கொரு பக்க விளைவும் இருந்தது.
நிலத்தடி நீர் மாசுபடுதலும், ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் என, தமிழகம் சூழலியல் சமன்பாட்டுச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தப் பின்னணியில், சூழலியல் சொல்லாடலின் தோற்றம், வரலாறு மற்றும் இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவம் பற்றிய ஒரு நேர்மறையான ஒரு அறிமுகத்தைச் செய்வதே இந்த நேர்காணலின் நோக்கம்.
எனவே, தமிழகத்தின் சூழலியல் சிந்தனையாளர், செயற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு.நித்யானந்த் ஜெயராமன் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.
1968 ல் புதுக்கோட்டையில் பிறந்த நித்யானந்த் அவர்களின் ஆரம்பக்கல்வி தந்தையின் மத்திய அரசுப்பணி காரணமாக, டெல்லி, குஜராத், பெங்களூரூ, மதுரை, என்று அமைந்தது. பள்ளி இறுதி மற்றும் தொழில்நுட்ப கல்வியைக் கோவையில் நிறைவு செய்த நித்யானந்த் பி.எஸ்.ஜி.யின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பள்ளி, கல்லூரிக்கு வெளியேதான் தான் படித்ததாகவும், அதுதான் தன்னில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூறும் நித்யானந்த் அவர்களுக்குச் சார்லஸ் டிக்கன்ஸ், டேவிட் காப்பர் ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட் ஆகியோரது ஆக்கங்கள் வழி தொடக்க நிலை வாசிப்பு அமைந்தது. மேலும் கல்லூரியில் வாசித்த கௌபாய் கதைகள் குறிப்பாக Louis L’amour இயற்கையைப் பற்றிய வர்ணனைகள்... செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களும் நிகழும் பண்பாட்டு மோதல்களைக் குறித்த அறிமுகத்தை அது தந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இசைக் குறித்தான அறிமுகத்திற்கு அந்தக் காலத்தில் எங்கும் எல்லாமும் இளையராஜாவாகவே இருந்தது என்றும் வீட்டில் முகமது ரஃபி, முகேஷ் போன்ற இந்திப்பாடல்களின் அறிமுகம் இருந்தது எனவும் கூறுகிறார். உலகளாவிய சூழலியல் இயக்கம், தமிழ்நாட்டின் அணுகுமுறை, அரசுகள் செய்ய வேண்டியவை என்ன? என விரிவாக...
பாலா: சுற்றுச்சூழல் பத்தின ஒரு அறிதல் எங்கே இருந்து ஆரம்பிச்சுது? கல்லூரியிலா இல்ல அதுக்கு முன்பேவா?
நி.ஜெ: அவேர்னஸ்ங்கறது முன்னாடியே இருந்துருக்கும். மதுரையில, என்னோட பள்ளி, ஒரு கம்மாய்க்குள்ள இருந்துச்சு. மழை வந்துட்டா, ஸ்கூலுக்குள்ள தண்ணி வரும். பாம்பு, தவளை, மீனெல்லாம் புடிப்போம்... அதே மாதிரி நாங்க இருந்த பி.டி.ராஜன் ரோடு, பி.என்.டி. காலனி, இந்தப் பக்கமெல்லாம், நிறையக் கம்மாய்ங்க இருக்கும். அங்க மீன் பிடிக்கக் காண்ட்ராக்ட் விட்டிருப்பாங்க. அங்கே திருட்டுத்தனமா மீன் பிடிக்கறதுங்கற மாதிரி குறும்பெல்லாம் பண்ணியிருக்கோம். அதெல்லாம், மனசுக்குள்ள என்ன சிந்தனைகளை உருவாக்குச்சுன்னு சொல்ல முடியாது. சூழலியல் அவேர்ன்ஸ்ங்கறது சூழலப் பாதுகாக்கறது மட்டுமில்ல. சூழலோட உங்களுக்கு ஏற்படற உறவும்தான்.
சூழலியல் செயல்பாடுங்கறத நவீன வாழ்முறையோட ஒரு வெளிப்பாடாத்தான் நான் பாக்கறேன். ஆனா, ஒரு பழங்குடி இனத்தைப் பாத்தீங்கன்னா, அவங்களோட மரபு, மதம், நம்பிக்கை, பொருளாதாரம் எல்லாமே ஒன்னோட ஒன்னு இணைஞ்சு பிணைஞ்சு இருக்கும். ஆனா, நாம, பொருளாதாரம் தனி, சூழலியல் தனின்னு பிரிச்சு கம்பார்ட்மெண்டுக்குள்ள போட்டு வச்சுருக்கோம். அதுதான் பிரச்சினை.
என்னோட சூழலியல் செயல்பாடுங்கறது காலேஜில தான் வந்துச்சு. 1988ஆம் ஆண்டுல ரஷியாவோட ப்ரீமியர் கோர்பச்சேவ் இந்தியாவுக்கு வந்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குக் கையெழுத்துப் போட. அதை எதிர்த்துக் கல்லூரியில் இருந்து 350 கையெழுத்தோட ஒரு மனு போச்சு. நானும் நண்பர்களும் இணைந்து செய்தோம்.
பாலா: அதை எதிர்க்கணும்னு உங்களத் தூண்டியது எது?
நி.ஜெ: 1984ல போபால் கேஸ் விபத்து நடந்துச்சு. 1986ல ரஷ்யாவில செர்னொபில் அணு உலை விபத்து நடந்துச்சு. அது பத்தி அப்போ யாருமே இங்கே பெரிசா பேசல. இந்தப் பின்னணியை வெச்சிப் பாக்கும்போது, கூடங்குளம் திட்டம் ஒரு அபாயமான திட்டமாத் தோணுச்சு. எனவே நண்பர்கள்ட்ட பேசி, இத எதுத்து 350 கையெழுத்தோட ஒரு மனு அனுப்பி வச்சோம்.
பாலா: அந்த இடத்துல இருந்து, இன்னிக்கு நாங்க பாக்கற நித்யானந்த் ஜெயராமன் எப்படி உருவாகி வந்தார்? இந்தப் பாதையில முக்கியமான நிகழ்வுகள் என்னன்னு சொல்ல முடியுமா?
நி.ஜெ: கல்லூரியில் படிச்ச 4 வருஷம் மிக முக்கியமான காலமா இருந்துச்சு. என்ன பண்ணக்கூடாதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருச்சு. அதே சமயம், எல்லா மத்திய வர்க்கத்துப் பசங்களுக்கு இருக்கற மாதிரி, அமெரிக்கா போகும் சூழல் அழுத்தமும் ஆசையும் இருந்துச்சு. உலகத்தப் பாக்கக் கூடிய ஆர்வம் ரொம்ப இருந்துச்சு. நான் படிச்ச கதைகளெல்லாமே - லூயி லாமோர் எழுதின இடங்கள் அரிஸோனா, நெவாடா மாதிரி இடங்களைப் பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. நேஷனல் ஜியாக்ரபி புஸ்தகம்... சில சமயங்கள்ல பாத்த டேவிட் ஆட்டன் பரோவோட படங்கள்... ஸோ, வெளியே போகனும்னு ஒரு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, இஞ்சினியரிங் படிச்சா வெளியே போக முடியாது. ஊர்சுத்தற மாதிரி ஒரு துறை இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. எனக்குக் கொஞ்சம் எழுதறதுல - ஆர்வம்னு கெடையாது, எழுதுவேன். அதச் சார்ந்த ஒரு படிப்பை எடுப்போம்னு ஜர்னலிஸத்தை ட்ரை பண்ணேன். ஒஹையோ யுனிவர்சிட்டில ஸ்காலர்ஷிப்போட இடம் கிடைத்தது. அந்தப் பல்கலைக்கழகத்துல இருந்த காலம், சூழலியல் பற்றிய எனது சிந்தனைகளை மாத்துச்சுன்னு சொல்லலாம். அப்போ எனக்குத் தெரியாது... ஆனா, இன்னிக்குத்திரும்பிப் பார்க்கும்போது புரியுது.
1990ல அலாஸ்கா போகனும்னு ஒரு ஆசை... துருவக்கரடி, கடல் நாய், அங்கே வாழ்ற திமிங்கிலங்கள், பெரும் பனிப்பாள வெளின்னு கேள்விப்பட்டு அங்கே போகணும்னும் ஆசை. கோடை காலத்துல அங்கே மீன் பிடித்தொழில் ரொம்பப் பிரசித்தம். அதிலும் ஸால்மன் மீன் பிடித்தல் ஒரு பெரும் தொழில். ஸால்மன் மீன்கள் கடலில் வாழும் மீன்கள். ஆனால், முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க, நல்ல நீரைத் தேடிவரும். கடலில் இருந்து, நதியை நோக்கி வரும். சுத்தமா,தூய்மையாக் கண்ணாடி மாதிரி இருக்கும் நீரில் அதன் இனப்பெருக்கம் நிகழும். அது கிட்டத்தட்ட ஆறுகள் உற்பத்தியாகும் இடத்துலதான் இருக்கும். அப்படி ஸால்மன் மீன்கள் போகிற வழியை மறித்துக்கொண்டு மீன்பிடி நிறுவனங்கள் தங்கள் படகுகளை நிறுத்திக் கொண்டிருக்கும்.
அந்த மீன்பிடிக் கப்பலில், நான் மூணு வாரம் வேலை செஞ்சேன். அது ஒரு லாட்டரி மாதிரி. அதுக்கு எட்டாயிரம் டாலர் ஊதியம் கெடச்சுது. அது அப்போ, பெரும்பணம். வந்த வேகத்துல செலவழிச்சுட்டேன் - அது வேற விஷயம்.
அந்த வேலை, மிகக் கடினமான வேலை - ஒரு நாளைக்கு 18 - 20 மணிநேரம் வேலை செய்யனும். ஏன்னா, மீன் கிடைக்கறப்போ, அத மட்டும்தான் நீங்க செய்யறீங்க. இது மாதிரி ஆயிரக்கணக்கான இயந்திரப்படகுகள் அங்கே இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும். அது ஒரு பெரும் இண்டஸ்ட்ரி. நம்ம ஊர்ல இருப்பது போல சிறு தொழில் கிடையாது. டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்படும்.
இப்போ பசிஃபிக் ஸால்மன் மீன் பிடித் தொழில் ஒட்டு மொத்தமா அழிஞ்சிருச்சு... அதுல என்னோட ஒரு சிறு பங்கும் இருக்குதுன்னு சொல்லிக்கலாம்.
வயித்துல முட்டைய வெச்சிகிட்டு, இனப்பெருக்கம் செய்ய வரும் மீன்களை, ஆற்றின் முகத்துவாரத்துல மறிச்சு, வலை கட்டி, டன் கணக்குல பிடிச்சு அழிக்கிறது - destructive form of fishing.
தவிர, நான் படிச்ச காலேஜ், ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள இடம். உலகத்துல பல்வேறு நாடுகள்ல இருந்து வரும் மனிதர்களச் சந்திச்சேன்... ஆனா, அங்கியுமே, வகுப்பறைக்கு வெளியிலதான், பல விஷயங்களைக் கத்துகிட்டேன்.
பாலா: நீங்க சரியாப் படிக்கலேன்னு சொன்னாக் கூட, தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜில படிச்சிருக்கீங்க. அப்புறம் ஒஹையோ பல்கலைக்கழகத்துல இதழியல் படிச்சிருக்கீங்க.. அங்கிருந்து, அப்படியே ஒரு உயர்வர்க்க கார்ப்பரேட் வேலையைத் தேடிட்டுப் போயிருக்கலாமே? எது உங்களை இந்தச் சூழலியலை நோக்கி இழுத்துச்சு? மாசா மாசம் கவலையில்லாம கெடைக்கற மாசச் சம்பளத்தை விட்டுட்டு, இப்படி ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. இது உங்களுக்கு ஒரு மனஅழுத்தத்தைக் கொடுக்கலியா?
நி.ஜெ: இது ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கற வழி.எனக்கு அமெரிக்காவில, காலேஜ் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, காலேஜுக்கு வெளியே, ரொம்ப impersonal. அது எனக்குப் பிடிக்கல. அதனால,அங்கேயிருந்து எப்டி சீக்கிரம் பொட்டியக் கட்டிட்டு கௌம்பலாம்னு யோசிச்சிட்டிருந்தேன். காலேஜ் முடிக் கும்போதே, கேம்பஸ் இண்டர்வியூல, ஹாங்காங்ல ஒரு வேல கிடச்சுது. ஏஷியன் ஸோர்ஸ்ஸ் மீடியா க்ரூப்புன்னு உலகத்துலேயே பெரிய வியாபாரப் பதிப்பகம். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். அவங்களோட கொள்கைன்னு பாத்தீங்கன்னா, “உலக வணிகம்; உலக அமைதி”. அது சும்மா குண்டுதான். சும்மா அப்படிச் சொல்லிக்கறது.
அங்கே 2.5 வருஷம் வேல செஞ்சேன். அப்போ ஒரு விஷயம் ரொம்பத் தெளிவாயிருச்சு... இந்த வேல நமக்கு ஒத்து வராதுன்னு. ஏகப்பட்ட சம்பளம். வேலையும் அதிகமாக் கெடையாது. மொத வருஷம் ரொம்ப ஜாலியா இருந்துச்சு... மத்யானம் 2 மணிக்குக் கௌம்பிப் போயிடலாம்... ஸ்விம்மிங் போலாம்... ஹாங்காங்ல சாப்பிட நெறய ரெஸ்டாரண்ட்ஸ் இருக்கு... பீச் இருக்கு...உல்லாசமாப் பொழுது போக்கிட்டுப் போயிடலாம். ஒன்றரை வருஷம் கழிச்சுத்தான் புரிஞ்சுகிட்டேன் - நம்மகிட்ட ஒரு சாதாரணத் தரத்தைத்தான் அவங்க எதிர்பாக்கறாங்கன்னுட்டு. அந்தத் தரத்துக்குத்தான் இந்தச்சம்பளமும். அதுவும் ஒரு நல்ல அனுபவம்தான். ஆனா,ஒரு கட்டத்துல, அங்க இருக்க முடியல. நம்ம ஊருக்குப் போகணும்னு தோனுச்சு. 1994ல அந்த வேலைய விட்டுட்டேன். வீட்டுல பயங்கரமா சத்தம் போட்டாங்க. ‘மடையனா நீ... மாசம் ஒரு லட்சம் சம்பளத்த விட்டுட்டு வரேன்னு..’. ஆனா, என்னோட பிரச்சினை என்னன்னா, என்னால அங்க இருக்க முடியல. பணம் தேவைக்கு அதிகமா இருந்தாக் கூட,ஏதோ மிஸ்ஸிங்... 94ல வந்துட்டேன். இங்கே வந்ததுக்கப்பறம், என்னோட முழுக் கல்வியும், இந்தியத் தெருக்கள்ல... வாய்க்கால்கள்ல... கடலோரத்துல, சாதாரண மக்கள்கிட்ட இருந்து எனக்குக் கெடச்சுது.
பாலா: இந்தியாவில ஏதும் வேலைல சேந்தீங்களா? இல்ல, சும்மாவே சுத்தினீங்களா?
நி.ஜெ: வரும்போது, என்கிட்ட கொஞ்சம் சேமிப்பு இருந்துச்சு. தனிப்பட்ட செய்தியாளரா வேலை செய்யலாம்னு ஒரு எண்ணம். ஆனா, இந்தியச் செய்தித்தாள்கள்ல அப்படி வேலை செஞ்சா பைசா கிடைக்காது. அதனால, அங்கிருந்து கௌம்பும் போதே, Far Eastern Economic Review அப்படீங்கற ஒரு பத்திரிகைக்கு அப்பப்போ இந்தியச் செய்திகள எழுதற தனிப்பட்ட செய்தியாளரா வேலை செய்யற மாதிரி ஒரு ஏற்பாட்டைச் செஞ்சிருந்தேன்.
அடுத்த 2-3 வருஷங்கள், அவங்களுக்கு, Asian Wall street Journal இன்னும் சில வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு, சின்னச் சின்னக் கட்டுரைகள் எழுதினேன். அவங்க ஒரு 100 டாலர் குடுத்தாங்கன்னா, எனக்கு 1 - 2 மாசச் செலவுக்கு ஆகும். அப்போ எனக்கு எங்காவது போகணும்னா - ஒதிஷாவுல சில்க்கா ஏரியப் போய்ப்பாக்கணும்னு தோணுச்சுன்னா, அதப் பத்தி கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு, யாருகிட்டையாவது ஃபிக்ஸ் பண்ணிட்டு, போயிட்டு வந்து ஒரு கட்டுரை எழுதிருவேன். அவங்க செலவுல அந்த எடத்தப் போயிப் பாத்துட்டு வந்துருவேன்.
பாலா: அந்த இடத்துல இருந்து, இப்போ நாங்கள் பார்க்கும் நித்யான்ந்த ஜெயராமன் எப்போ உருவானார்?
நி.ஜெ: நான் அப்பவே ஆரம்பிச்சிட்டேன். என்னோட முதல் வேலையே இறால் பண்ணையப் பத்தினதுதான்.இங்க வந்த உடனேயே, மெட்ராஸ்லா இக்ஷா (ICSA) மையத்துல ஒரு கூட்டம் நடந்தது. CASA - Campaign Against Shrimp Industry ன்னு ஒன்னு நடந்துச்சு. இன்னிக்கி என்னோட தோழர்களா இருக்கற சிலர், அப்போ, இத எடுத்து நடத்திட்டு இருந்தாங்க. அப்போ, ஜெகன்னாதன் கிருஷ்ணம்மாள் அவங்களோட போராட்டம் இறால் பண்ணைக்கெதிரான பெரிய போராட்டமா இருந்துச்சு.
இந்தச் சமயத்துல, தஞ்சாவூர்ல, எங்கப்பாவோட 60 ஆம் கல்யாணம் திருக்கடையூர்ல நடந்துச்சு. அத முடிச்சிட்டு, பக்கத்துல தஞ்சாவூர்ல இருக்கற ஒரு இறால் பண்ணைக்குப் போயிட்டு, அதப் பத்தி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கம்பெனிக்காரங்க கூட்டிட்டுப் போயி சுத்திக்காட்டினாங்க... பண்ணையைத் தாண்டி, ஊருக்குக் கக்கூஸ் கட்டிக் குடுத்திருக்கோம்... பில்டிங்குக்குச் கூரை போட்டுக் குடுத்திருக்கோம்னு சொன்னாங்க... நான் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டேன். அதை அப்படியே கட்டுரையா எழுதி, அந்த ஊர்ல இருக்கற ஒரு அம்மாகிட்டே காமிச்சேன்.
அந்த அம்மா கேட்டாங்க, ‘இதென்னப்பா இப்படி எழுதிருக்கே? இது உனக்கே நல்லாருக்கா’,ன்னு. நான் கேட்டேன், ‘ஏன் பாட்டி? நான் சரியாதானே எழுதியிருக்கேன்? அவங்க செய்ற தொழில்ல சில பாதிப்பு இருக்கதான் செய்யும்... அதுக்குப் பரிகாரமா ஊருக்கு சில நல்லது செய்றாங்கதானே? அதுக்கு அந்தம்மா கேட்டாங்க, ‘நாங்க உன்ன கக்கூஸ் வேணும்னா கேட்டோம்? குடிநீர் இல்லாம செஞ்சிட்டு,கக்கூஸ் கட்டிக் குடுத்து என்ன பிரயோசனம்’,னு இப்படிப் பல அனுபவங்கள்தான், ஒரு பிரச்சினையை, பல்வேறு பார்வைகள்ல பாக்கற ஒரு மனநிலைய எனக் குள்ள உருவாக்குச்சு. அங்கிருந்துதான், என் பயணம் மாறுச்சு.
பாலா: சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை, உலகளாவிய அளவில எப்போ / எங்க இருந்து துவங்குச்சு?
நி.ஜெ: இதன் துவக்கம் காலனியாதிக்கம் துவங்கின காலத்துல இருந்துன்னு சொல்லலாம். காலனி ஆதிக்க சக்திகள் உள்ளூர் மக்களின் நிலங்களைப் பிடிக்கத் துவங்கிய காலகட்டத்தில் ஏற்பட்ட மோதல்கள்ல இருந்தே அது வெளிப்பட்டுச்சுன்னு சொல்லலாம்.
நவீன சுற்றுச் சூழல் இயக்கம்னு பாத்தாக்கா, 1962ல ரேச்சல் கார்ஸன் எழுதின Silent Springனு சொல்லப்படுது. மனிதர்கள் ஓரு இடத்துல நிகழ்த்தும் ஒரு வினை, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தறப்பத்திப் பேசுது. மௌன வசந்தம்கற அந்த நூல்ல அவங்க பேசியிருக்கறது, மனிதர்கள் உபயோகிக்கும் செயற்கையான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பத்தி. அவை உயிர்களின் உடலுக்குள் சென்று, அவற்றின் இனப்பெருக்கத்தைத் தாக்கக் கூடியவை. காற்று, நீர் வழியாகப் பரவி, பல்லுயிர்ப்பெருக்கை அழித்து, நம் உணவுச்சங்கிலியைப் பாதிக்கக் கூடிய விஷங்கள். இதை, ஒரு நாட்டுச் சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்க முடியாது. எனவே, உலகளாவிய அளவில இயக்கங்கள் தோன்ற ஆரம்பிச்சுது. இந்தப் புத்தகம் விவாதங்களை எழுப்பினப்பவே அதற்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்தன. இவர்கள் மனித முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள்னு பலர் இவங்க மேல முத்திரைக் குத்தினாங்க.
(Rachel Carson என்பவர் ஒரு அமெரிக்கக் கடல் உயிரியல் விஞ்ஞானி. The Sea around us, The Edge of the Sea and Under the Sea Wind என்னும் மூன்று முக்கியப் புத்தகங்களை எழுதியவர். இவை அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1950 களின் இறுதியில், ரேச்சல், தன் கவனத்தை, சூழலியல் பாதுகாப்பை நோக்கித் திருப்பினார். வேளாண்மையில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் சூழலைப்பாதிக்கின்றன என நம்பினார். அவரது ஆராய்ச்சியின் விளைவாக, 1962 ஆம்ஆண்டு, The Silent Spring என்னும் புத்தகம் வெளியாயிற்று. இந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூச்சி மருந்துக் கம்பெனிகள் இதை எதிர்த்தன. இதன் விளைவாக டிடிடி (DDT) போன்ற பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டன. இந்தப் புத்தகம் தந்த எழுச்சியில் பல சூழலியல் பாதுகாப்புக் குழுக்கள் உருவாகின. அமெரிக்க அரசாங்கம் சூழலியல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க நேர்ந்தது - பாலா).
அதுக்குப் பின்னாடி, 1972 ல வந்த Stockholm Convention (United Nations Convention on Human Environment) அதை உலகளாவிய பேசு பொருளாக்கிச்சு. உலகநாடுகள் எல்லாம் ஒண்ணாச்சேந்து, இந்தப் பிரச்சினைய எப்படி அணுகலாம்கறதுக்கான அஸ்திவாரம்தான் அந்த மாநாடு.
பாலா: 1962 ல வந்த மௌன வசந்தம் ஏற்படுத்தின தாக்கத்தோட இயல்பான அடுத்தபடின்னு 1972 ஸ்டாக் ஹோல்ம் கன்வென்ஷனைச் சொல்லலாமா?
நி.ஜெ: அப்படீன்னும் சொல்லலாம். அதே சமயம், 70 கள்ல, போர்களுக்கு எதிரா, குறிப்பா வியட்னாம் போருக்கு எதிரா இளைஞர்கள் எழுச்சி பெரிசா இருந்துச்சு. ராக் இசை, இந்தச் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் பற்றிய நிகழ்வுகள்ல ஒரு முக்கிய அங்கமா இருந்துச்சு. சுற்றுச்சூழல் பிரச்சினைகள உருவாக்கும் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேக்கும் பெரும் சக்தியா எழுந்து வந்தாங்க. அவங்களுக்கு உலகளாவிய ஆதரவு இருந்துச்சு. ஸ்டாக்ஹோல்ம் கன்வென்ஷனின் பின்னணியில் இவையும் இருந்தன.
பாலா: இப்போ மறுபடியும் நீங்கள் இதுக்கு முந்தைய கேள்விக்குச் சொன்ன ஒரு பதிலப் பத்திப் பேசலாம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி - நார்மன் போர்லாக் - இந்திய பசுமைப்புரட்சிக்கு இவரோட பங்களிப்பு மிக முக்கியம். அவர், இந்திரா காந்தியின் புகழ்பெற்ற ஸ்டாக்ஹோல்ம் கன்வென்ஷன் உரையை வாழ்த்தி எழுதிய கடிதத்தில், சூழலியல் பாதுகாப்புக்காக இயங்குபவர்களை, ‘சூழலியல் தீவிரவாதிகள்’, எனக் குறிப்பிடுகிறார். நீங்கள் சொன்ன மாதிரி, ரேச்சல் கார்ஸன் போன்றவர்கள், சூழலியல் பாதிப்புகளை, அறிவியற்பூர்வமான ஆதாரங்களை முன்வைத்துதானே வாதாடினாங்க?
அரசோ, அல்லது அரசுத் தரப்பு விஞ்ஞானிகளோ, சூழலியல் பாதுகாப்புத் தரப்புகள் முன் வைத்த தரவுகளை, அறிவியற்பூர்வமாக எதிர்கொள்ளாமல், அவர்களுக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டியது எந்த அளவுக்குச் சரி?
நி.ஜெ: இதுக்கு உதாரணமா, கூடங்குளம் போராட்டத்த எடுத்துக்கலாம். 2013 தொடங்கி, பல வருஷமா நடந்துகிட்டு இருக்கு. இதை எதுக்கற மக்கள், ஒரு சாதாரணக் கேள்வியத்தான் கேட்டாங்க. இங்க, விபத்து நடந்தா,எங்கள எப்படிப் பாதுகாப்பீங்கன்னு. அணு மின் நிலையத்துல விபத்து நடக்காதுன்னு யாராலயும் உறுதி கொடுக்க முடியாது. அவங்ககிட்ட இதுக்குப் பதில் இல்லை.
அப்போ அந்த விவாதத்துக்குள்ளயே இறங்காம, உங்களுக்கு ஒரு முத்திரையக் குத்தி, திசை திருப்பிடறதுதான் சுலபமான வழி. நாங்க கேட்டது, விபத்து நடந்தா, எங்களுக்கு என்ன பாதுகாப்புன்னு. அவங்க பதில், உங்க போராட்டத்துக்கு அந்நிய நிதி வருது. நீங்க சிஐஏ, மாவோயிஸ்ட்’ங்கறது.
நான் கேட்ட கேள்வி அது இல்லையே. அவங்க அதுக்குப் பதில் சொல்ல ரெடியா இல்லை. சொல்லி மக்களை ஒத்துக்கொள்ள வைக்கும் பக்குவமும் அவங்க கிட்ட இல்ல.
பாலா: இப்படிச் சொல்லலாமா? புதுசா ஒரு தொழில் நுட்பம் வருது. அதோட எல்லா விளைவுகளையும் முழுசாத் தெரிஞ்சுக்காமலேயே, அதை மக்கள் மேலே திணிக்கற ஒரு மூர்க்கத்தனம்னு?
நி.ஜெ: எல்லா எல்லைகளையும் அறிய முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் புத்திசாலி கிடையாது. ஆனா,அறியமுடியாதுங்கறது தெரியற அளவுக்குப் புத்திசாலிங்க தான்... ஆனா, அத ஒத்துக்கறதுக்கு ரெடியா இல்லை.
நம்ம நாட்டோட ஒரு முக்கியமான விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா. அவர்கூடக் கூடங்குளத்துல, சொல்லக் கூடாத ஒன்ன சொல்லிட்டுப் போனாரு. இது 100% பாதுகாப்பானதுன்னு. 100% பாதுகாப்பு என்பது அறிவியல் தொழில் நுட்பச் சாத்தியமற்ற ஒன்று.
இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒரு தொழில் நுட்பம் வருதுன்னா, அதுல நன்மைகள் தீமைகள் என்னன்னு தெரியணும். ரெண்டாவது, இதன் நன்மைகள் யாருக்குப்போகுது, தீமைகள் யாருக்குப் போகுதுன்னு தெரியணும். அது அரசியல். அது தொழில் நுட்பம் இல்ல. அந்த அரசியல்லதான் நமக்குப் பிரச்சினை வருது.
பாலா: சூழலியல் பத்தின ஒரு அறிதலை ஊடகங்கள் எந்த அளவுக்குப் பொதுமக்கள்கிட்டக் கொண்டு போயிருக்குன்னு நெனக்கறீங்க?
நி.ஜெ: பெரும்பாலும், இதுல இருக்கற அடிப்படைப் பிரச்சினைகள யாரும் பேசறது கிடையாது. இன்றைய உலகச் சூழலியல் பிரச்சினைகளுக்கு நம்ம பொருளாதாரத்தோட வடிவமைப்புதான், முக்கியக் காரணம். உலகச் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணனும்னா, பொருளாதார வடிவமைப்பை மாத்தியாகணும். அதைப் பத்தி யாரும் பேசறது கெடையாது.
அதுக்குப் பதிலா என்ன பேசிட்டிருக்கோம்னா... நீ குப்பைய இங்க போடு... நீ சைக்கிள் ஓட்டு... நீ மாமிசம்திங்கறத நிப்பாட்டு... இது மாதிரியான தனிமனிதத் தீர்வுகள் உலகப்பிரச்சினைக்கு முடிவாகாது.
இப்ப காந்திஜிய எடுத்துக்குவோம். அவர் ஒரு எளிமையான வாழ்க்கைய முன்வச்சார். அது அவரது அரசியல். சமூகமே இந்த மாதிரி இருக்கணும்கற மாதிரியான ஒரு முழுமையான பார்வை. அந்த மாதிரி ஒரு எளிமையா வாழக்கூடிய சூழ்நிலை, இயல்பா வரணும்னு நெனக்கறேன். எடுத்துக்காட்டா, நெதர்லாண்ட் மாதிரி. அந்தநாட்டுக்குப் போனீங்கன்னா, பிரதமரும் அங்க சைக்கிள்ளதான் போறார்... அது மாதிரி. அப்படிப் போறது பெரிய தியாகம் கிடையாது. அப்படிப் போற மாதிரி ஒரு சூழல் அமைச்சிருக்காங்க. எனவே, சரியான வழிகளைச்செய்யற மாதிரி ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்கறதுதான் நல்ல அரசியல்.
பாலா: அடுத்தக் கேள்விக்கு வர்றேன் - மிக முக்கியமான சூழலியல் அறிஞர்கள் / செயல்பாட்டாளர்களை அறிமுகப்படுத்த முடியுமா?
நி.ஜெ: நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிக்கலாம். 18 ஆம் நூற்றாண்டுல, மத்திய இந்தியாவில் இருந்த பிர்ஸா முண்டா அப்படீங்கற பழங்குடியினத் தலைவர். வெள்ளையர்கள் வனப்பாதுகாப்பு சட்டம்னு ஒன்ன கொண்டு வந்து, வனப்பகுதிகளை, அங்கே இருந்த பொது இடங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்தார்கள். அப்ப, அதை எதிர்த்து ஒரு பெரும் குரலாக எழுந்தது பிர்ஸா முண்டாவோட குரல். அதுக்கடுத்து காந்தியைச் சொல்லலாம். அவங்க யாருமே புலியைக் காப்போம், திமிங்கிலத்தைக் காப்போம்னு பேசியவர்கள் கிடையாது. ஒரு அரசியல் பேசியவர்கள். அந்த வகையில மிக முக்கியமானவர் காந்தி. அப்புறம் அவருக்கு உந்துசக்தியாக இருந்த ஹென்றி டேவிட் தோரோவ (Henry David Thoreau) சொல்லலாம். அவர் walden’, ‘Civil Disobedience’, போன்ற முக்கியமான புத்தகங்களை எழுதியவர். அவர் அரசுக்கு வரிகட்டுவதையே ஒரு தவறான விஷயம்னு எதிர்த்துச் சிறை சென்றவர்.
அவருடைய நண்பர், ‘என்னப்பா ஜெயிலுக்கு உள்ளே என்ன செஞ்சிகிட்டிருக்கே’, ன்னு கேட்டதற்கு, ‘நீ ஜெயிலுக்கு வெளியே என்ன செஞ்சிட்டிருக்கே? நல்லவன்லாம் உள்ளே அல்லவா இருக்கவேண்டும்’, எனக் கேட்டவர். அந்த civil disobedience -ன் கருத்தியலைத்தான் காந்தி தன் வழியில் செயல்படுத்தினார். அதே போல, தொழிற்புரட்சி நடந்த நூறாண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடந்த back to the lands இயக்கத்தச் சொல்லலாம். அதுக்கடுத்ததா, ச்சிக்கோ மெண்டிஸ் (Chiko Mendes) ங்கற பிரேஸில் நாட்டுக்காரர். அவர் ஒரு ரப்பர் பால் சேகரிக்கும் தொழிலாளி. துவக்கத்துல பணியாளர்களோட நன்மைக்கும், பின்னர் அமேஸான் காடுகளைப் பாதுகாப்பதற்கும் போராடியவர்.
அடுத்து கென் சரோ விவா (Ken Saro Wiva) ன்னு சொல்லிட்டு, ஒரு நைஜீரியர். ஒரு முக்கியமான சிந்தனையாளர். நைஜீரியாவில் நைஜர் டெல்டா - நம்ம காவிரிடெல்டா மாதிரியான ஒரு இடம் - அங்கே பூமியில் இருந்து எண்ணெய் தோண்டியெடுப்பதை எதிர்த்துப்போராடியவர். பெரும் பன்னாட்டு எண்ணெய்க் கம்பெனிகள் - ஷெல் போன்றவை. அங்கே ஒகோனின்னுஒரு சமுதாய மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாங்க. அவர்களின் தலைவராக இருந்தவர்தான் இந்தக் கென் சரோ விவா. அவரை அங்குள்ள ராணுவ ஆட்சி ஒருநாள் தூக்கில் போட்டது.
இங்கே, இந்தியாவில சூழலியல் போராட்டங்கள் பல நடந்துள்ளன. சுந்தர்லால் பகுகுணாவோட சிப்கோ இயக்கம் , தேரி அணைக்கெதிரான போராட்டம். நர்மதை அணைக்கெதிராக மேதாபட்கர் நடத்திய போராட்டம். தேசிய மீன் தொழிலாளர் குழுமத்தை அமைத்து அவர்களுக்காகப் போராடிய ஃபாதர் தாமஸ் கொச்சேரி . அதே போலத் தமிழகத்துல நம்மாழ்வார் ஐயா அவர்கள். இயற்கை வேளாண் வழிமுறைகளை முன்வைத்து, அநேக இளைஞர்களை அந்தப் பாதைக்குத் திருப்பியவர்.
பாலா: ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, நவீனத்துவம் போன்ற மாற்றங்களை இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்ததனால், பின் தங்கியது. ஆனால், சூழலியலைப் பொறுத்தவரையில், இந்தியாவில், உலகெங்கும் நிகழ்ந்தது போல, இங்கும் நிகழ்ந்திருக்கிறது. இந்தியா சூழலியல் மாசுபாடுகளுக்கெதிரான போராட்டத்தில், மிக முக்கியப்பங்கு வகித்திருக்கிறது எனச் சொல்லலாமா?
நி.ஜெ: நிச்சயமாச் சொல்லலாம். அதைச் சூழலியல் போராட்டம்னு சொல்றத விட, வாழ்வியல் போராட்டம்னு சொல்லலாம்.
பாலா: நீங்கள் சொன்னதில் ஒன்றை நான் கவனித்தேன். சூழலியல்ங்கறது, தனித் தனிப் பிரச்சினையாக அணுகப் பட வேண்டிய ஒன்றல்லன்னு சொன்னீங்க.. அதாவது புலியை மட்டும் காப்பாத்தறது அல்லது சிங்கவால் குரங்கை மட்டும் காப்பாத்தறதுன்னு அதை அணுகக் கூடாது. மொத்த வனத்தையும் காப்பாத்தறதா நம் அணுகுமுறை இருக்கனும்னு சொன்னீங்க. முக்கியமான வாதம் அது. இந்த முழுமையான அணுகுமுறை, நவீனகாலத்துல, காந்தியில இருந்து துவங்குதுன்னு சொல்லலாமா?
நி.ஜெ: அது காந்திக்கு முன்னாடியே இருந்துது. ஆனா, காந்தி அதை ஒரு பெரும் இயக்கமாக வெளிப்படுத்தினார். பிர்ஸா முண்டா, சாந்தலி இனத்தினர் போராட்டம்னு முன்பே பல போராட்டங்கள் எழுந்துள்ளன. எப்போது வணிகத்துக்காக, நிலக்கரி தோண்ட ஆரம்பித்தார்களோ, அப்போது இருந்தே இது துவங்கிவிட்டது. பிர்ஸா முண்டா இருந்த இடமான சைபாசா என்னும் இடத்தில், நிலக்கரித் தோண்டும்போது, போராட்டம் துவங்கியது. பிர்ஸா முண்டா காலத்திலும் நடந்தது. இன்னும் சுரங்கங்கள் இருக்கின்றன. இன்றும் முண்டா இன மக்கள் போராடிக்கிட்டுத்தான் இருக்காங்க. அங்கேதான் இப்போது யுரேனியம் சுரங்கங்களும் இருக்கின்றன.
பாலா: உலகில் இன்று முக்கியமான விஷயம் - மக்கள்தொகை. 7.4 பில்லியன் மக்கள் இன்று உலகில் இருக்கிறார்கள். இவர்களின் உணவுத் தேவைக்காக, அடர் வனங்களைக் கொண்ட பிரேஸில், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில், அடர் வனங்கள், வேளாண்மைக்காக அழிக்கப்படுகின்றன. இதைச் சூழலியர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், மக்களின் உணவுத் தேவைக்காக வனங்களை, மாற்றி உபயோகிப்பதில் என்ன தவறு?
நி.ஜெ: முதல்ல ஒரு கேள்வி இருக்கு. இந்த உணவுத்தேவைங்கறது அடிப்படைத் தேவைக்கா? உல்லாசத்துக்கா? இல்ல ஆடம்பரத்துக்காங்கறது. இப்போது நமது உற்பத்தி, தேவைகளுக்கு அதிகமாகத்தான் இருக்கிறது. உணவுப்பிரச்சினை என்பது, மனிதர்களின் தேவைகளினால் உருவாகவில்லை. அதீத நுகர்வுக்கலாச் சாரத்தினால், குறிப்பிட்ட சதவீத மக்கள், மிக அதிக மான உற்பத்தியை நுகர்வதனால் வருவது. அந்த அதீத நுகர்வுக்காகக் காடுகள் அழிக்கப்படத் தேவையே கிடையாது.
பாலா: நம்முடைய உணவு உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்னும் வாதத்தை முன்வைக்கிறீர்கள். அது சரியா?
நி.ஜெ: உணவு உற்பத்தியல்ல பிரச்சினை, விநியோகம்தான். உணவை விநியோகம் செய்வதில் ஏகப்பட்டபிரச்சினைகள் இருக்கு. வங்காளப் பஞ்சமும், சென்னையில் வந்த பஞ்சமும், உணவு பற்றாக்குறையினால் வந்ததல்ல. திட்டமிடல் போதாதாலும், சரியாக விநியோகம் செய்யாததாலும், இயற்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நமது பொருளாதாரத்தை அமைத்ததாலும் வந்தது. கிராமங்களில் உள்ள உற்பத்திக்கான கட்டமைப்புகள் கைவிடப்பட்டதும் பெருங்காரணம்.
உலகத்தில் இருக்கும் சூழலியல் பிரச்சினைகளில், ஒரு சிறு சதவீதம்தான் நம் அடிப்படைத் தேவைகளினால் ஏற்படுது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் உண்ணப்படாமல் வீணடிக்கப் படுகின்றன. எனது நண்பர்கள் வீடுகளில், குளிர்சாதனப் பெட்டிகளில், அலமாரிகளில், ஏகப்பட்ட உணவுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். இதெல்லாம், நமக்குத் தேவையான உணவுன்னு சொல்லி நாம சேர்த்து வைக்கிறோம்.
இரண்டாவது - உலகத்துல பெரும் செயல்திறன் கொண்ட தாவரம் எண்ணெய்ப்பனை. ஏன் உலகம் முழுவதும் அதன் எண்ணெயைச் சாப்பிடனும்? அந்தந்த ஊர்களில் கிடைக்கும் எண்ணெயை உபயோகிக்கலாமே?
தமிழ்நாட்டுல ஒரு எண்ணெய்; கேரளாவில ஒரு எண்ணெய்; மேற்கு வங்காளத்துல ஒரு எண்ணெய்னு இருக்கற ஒரு அமைப்பை அழித்து, ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் பாமாயிலா (பனை எண்ணெயாக) homogenise செய்யறோம் - இது இன்னொரு பிரச்சினை.
பாலா: பாமாயிலப் பத்திப் பேசறப்போ, homogenization அப்படீன்னு ஒரு வாதத்தை வைக்கறீங்க. ஆனா, அரசு மற்றும் நிறுவனங்கள் தரப்பில் என்ன சொல்றாங்கன்னா, அது செயல்திறன் மிக்கத் தாவரம். உதாரணத்துக்கு, கடலைப் பயிர் ஒரு ஹெக்டருக்கு 600 கிலோ எண்ணெய் கொடுக்கும்னா, பாமாயில், ஒரு ஹெக்டருக்கு 5 டன் ஆயில் கொடுக்கும். இதுபோன்ற ஒரு முயற்சியை முன்னெடுக்கும்போது, உற்பத்தி அதிகமாகி, பொருள் விலை குறைந்து, அது மலிவாக எல்லா மக்களுக்கும் கிடைக்கும். இது மக்களுக்கு, குறிப்பாக ஏழைமக்களுக்குப் பயன் தரும் வழின்னு ஒரு வாதம் முன்வைக்கப்படுது. அந்த வாதம் சரிதானே? ஒரு புறம் பார்த்தால், தேவைக்கதிகமா உணவு உற்பத்தி செய்யறோம்னு சொல்றீங்க... ஆனால், அந்த உணவு எல்லோருக்கும் கிடைக்காமல் போகிறது. நம் ஊரிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும், 30 - 40% மக்கள் சரிவர உணவுகிடைக்காமல் இருக்கிறார்கள். எனவே இது போன்ற திட்டங்கள் அவசியம்... இந்த முரணை எப்படிப் பாக்கறீங்க?
நி.ஜெ: இதில முரண் ஒன்னும் இல்லை. இது தப்புக்கணக்குப் போடறதுனால வர்ற விஷயம். நீங்க விலை மலிவு அப்படீங்கற ஒரு வாதத்தை முன்வைக்கும்போது, அந்தக் கணக்கை எப்படிப் பாக்கறீங்கன்னு ஒரு விஷயம் இருக்கு. பாமாயிலுக்காக, அடர்த்தியான மழைக்காடு அழிக்கப்படும்போது, ஒரு மதிப்பு அழிகிறது. அதற்கு ஒரு விலை இருக்கிறது. அதை நாம் பாமாயில் உற்பத்தி விலையோடு சேர்த்துக் கொள்கிறோமான்னு ஒரு கேள்வி இருக்கிறது. முதல்ல அந்த அழிவின் மதிப்பை நாம் கணக்கிட முடியுமா என்பதை யோசிக்கணும்.
நீங்கள் ஒரு சாதாரணமான ஒரு மனிதன். உங்கள் முன்பு இருக்கும் காடு ஒரு மாபெரும் சூழல். அது கொடுக்கும் பொருட்கள் ஒன்றிரண்டல்ல. பல கோடி. அது உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. பலவிதமான உயிர்களுக்கும் சொந்தமானது.
பாலா: இந்தப் புள்ளியில் இருந்துதான் நாம் பேசுவதில்லையோ? இன்றைய நவீன உலகம் மனிதனை மைய மாக வைத்துப் பேசுகிறது. உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்னும் ஒரு பார்வையும் இருக்கிறதே.
நி.ஜெ: மனிதனை மையமாக வைத்துப் பேசுவதில் தவறில்லை. ஒரு பழங்குடி சமுதாயம் கூட மனிதனை மையமாக வைத்துதான் பேசுகிறார்கள். ஆனால், மனிதன் நீடிச்சு வாழணும்னா, வண்டு, பட்டாம் பூச்சி, தேனி, பாம்பு இவையெல்லாம் வேணும் என்பதை அவங்க நல்லாப் புரிஞ்சு வச்சிருக்காங்க.
இப்போ இருக்கற பிரச்சினை மனுஷங்கள மையமா வச்ச கண்ணோட்டம் கிடையாது. ஆனா, அது, இப்ப வாழற மனுஷங்கள மட்டும் மையமா வச்ச ஒரு கண்ணோட்டமா இருக்கறதுதான் பிரச்சினை. எதிர் காலத்தை நாம் கணக்கிலேயே எடுத்துக்கல.
எதிர்கால மனுஷங்கள நாம கணக்குல எடுத்துக்கிட்டோம்னா, இன்றிலிருந்து ஏழாம் தலைமுறையைக் கணக்கில் எடுத்துகிட்டோம்னா, கண்டிப்பா, இப்ப நாம செய்யறதைச் செய்ய மாட்டோம்.
இன்னிக்கு எனக்கு என்ன லாபம்னு பாக்கற ஒரு குறுகிய கண்ணோட்டம். அது துரதிருஷ்டவசமானது. அதற்கு நம் அரசியலும் ஒரு காரணம். தலைவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் தான். அதுக்குள்ளேயே அவர்கள் தங்கள் சாதனைகளைச் செய்து விட வேண்டும். 20 வருஷம் கழிச்சு, நல்லது நடக்கும்னு சொன்னா, அவருக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள். அதனால, அரசியல் தலைவர்களும் ஒரு நீண்ட கால நோக்கில் யோசிப்பதில்லை.
பாலா: நகரமயமாக்கல், நுகர்வைப் பல மடங்கு அதிகரிச்சிருக்கு. அடிப்படைத் தேவைகள் தாண்டி, நகரங்கள் கேளிக்கைகளுக்கு, பல மடங்கு சக்தியைச் செலவழிக்கின்றன. இந்தப் பின்னணியில், உலகின் பெரும் நகரங்களில், ஏதேனும் ஒன்று, நாம் செல்லும் திசை சரியில்லை. நமக்கான சக்தித் தேவையை, ஒரு நீடித்து நிலைக்கும் வகையில் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என முயற்சிகள் செய்திருக்கின்றனவா? உதாரணங்கள் உண்டா?
நி.ஜெ: நிறைய நகரங்களில் செய்கிறார்கள். ஆனால், அடிப்படைப் பிரச்சினையைப் பேசாமல், இந்த உதாரணங்களைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை. பல நகரங்கள் முன்னெடுப்புகளைச் செய்யறாங்க. குப்பையைத் தரம் பிரிக்கறாங்க. மக்கும் குப்பையை மக்க வைக்கிறாங்க. தண்ணீர் உபயோகத்தைக் குறைக்கறாங்க. இந்த மாதிரி பல நல்ல விஷயங்களச் செய்யறாங்க. ஆனா, அடிப்படையான பிரச்சினையான அதீத நுகர்வு இன்னும் மாறல.
இந்தச் சுழல்ல நாம எல்லோருமே மாட்டிக்கிட்டு இருக்கோம். இதை மாற்றாமல், நீடித்த தீர்வு சாத்தியமில்லை.
பாலா: இதோட தொடர்புடைய இன்னொரு கேள்வி. பல ஐரோப்பிய நாடுகள் - உதாரணமா ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் தங்கள் சக்தித் தேவைகள்ல 30 - 40% வரை, மாற்று வழிகள் - காற்று, சூரிய ஒளி போன்ற வழிகளில் பூர்த்திச் செய்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில், இந்தத் துறைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. புரட்சின்னே சொல்லலாம். இந்த வழிமுறைகளோட சாத்தியங்கள் என்ன? எல்லைகள் என்ன?
நி.ஜெ: அவங்க 30 - 40% மாறியிருக்காங்கறது தவறான விஷயம். நாம் ஆற்றல் அல்லது சக்தின்னு சொல்றது வெறும் மின்சாரம் மட்டும் கிடையாது. நான் சாப்பிடும் உணவும் ஒரு ஆற்றல்தான். அதை உற்பத்தி செய்யும் மண் அதற்கு மூலப்பொருள். அந்த மண் வளத்தைப் பாதுகாத்தால்தான் எனக்கு உணவும், அதிலிருந்து வரும் சக்தியும் கிடைக்கும்.
எனவே மின்சாரம் மட்டுமே சக்தி கிடையாது. மின்சாரம் மட்டும்னாக்க, அதில சூரியனைப் பயன்படுத்தி, காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறதுங்கறது ஒரு பக்கம். இப்ப மின்சாரத்தை மட்டுமே பேசுவோம் - மிக அடர்த்தியான ஆற்றல் கொண்ட நிலக்கரி, யுரேனியம் இவை மூலமாத் தயாரிக்கும் அளவுக்கு மின்சாரத்தை இந்த மாற்று வழிகள்ல இப்போ இருக்கற தொழில்நுட்பத்தக் கொண்டு தயாரிக்கச் சாத்தியமில்லை
பாலா: ஏன்?
நி.ஜெ: ஏன்னா, தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு இடம் இல்லை.
பாலா: ஐரோப்பிய நாடுகள்ல, வீடு, கட்டிடங்களின் கூரைகள் போன்றவற்றையெல்லாம் உபயோகிச்சு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்களே...
நி.ஜெ: அப்படி அனைத்து வழிகளை உபயோகித்தாலும், இன்றைய அதீத நுகர்வுத் தேவைகளுக்கு அவைபோதாது. ஸோ... மின்சாரம் எதில் இருந்து வருதுங்கறது மட்டுமே தீர்வு அல்ல. அது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. அந்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். சூரிய ஒளி அல்லது காற்றிலிருந்து வரும் மின்சாரத்தை நீங்கள் அடிப்படைத் தேவைகளுக்கோ அல்லது பொருள் உற்பத்திக்கோ பயன்படுத்துவது வேறு - ஒரு மாலுக்கோ அல்லது ஐ.பி.எல் மேட்ச் போன்ற ஆடம்பரத்துக்கோ பயன்படுத்துவது வேறு. ஆடம்பரத்துக்குப் பயன்படுத் தறதுக்கு, மின்சாரம் எந்த வழியில் வருகிறது என்பது முக்கியமில்லை. இந்தக் குறைபாடுள்ள ஒரு அமைப்புக்கு, மின்சாரம் காற்றில் இருந்து வந்தால் என்ன? அணு மின்நிலையத்தில் இருந்து வந்தாலென்ன?
பாலா: ஸோ, மாற்று வழி மின் உற்பத்தியினால் பெரிதான மாற்றங்கள் வராதுன்னு சொல்றீங்க...
நி.ஜெ: சின்னச் சின்ன மாற்றங்கள் வரும். அடிப்படைப் பிரச்சினையை உடனே மாற்ற முடியாது. மாற்றுவதற்கான கால அவகாசத்தை இந்த மாற்று மின் உற்பத்தி வழிகள் நமக்குக் கொடுக்கும்.
பாலா: பிரச்சினைகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்க இவை உதவும்னு சொல்லலாமா?
நி.ஜெ: பிரச்சினைகளைத் தள்ளிவைக்கல... இன்னும் நாம் பிரச்சினையை அங்கீகரிக்கவேயில்லை. இன்னும் பழைய கதையவேதான் சொல்லிக்கிட்டு இருக்கோம். மின்சாரம் இல்லாதவங்களுக்கு மின்சாரம் கொடுக்கறோம்னு சொல்ற அதே நாட்டுல, மாதம் 76 லட்சம் மின் கட்டணம் செலுத்தும் செல்வந்தர்கள் இருக்காங்க.
பாலா: சமீபத்துல, க்ரேட்டா துன்பர்க் - னு ஒரு ஸ்வீடன் நாட்டுப் பள்ளிச் சிறுமி, சூழலியல் செயல்பாட்டாளார, ராக்ஸ்டார் மாதிரி கிளம்பி வந்திருக்காங்க. Fridays for Future -னு ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க.. சில மாதங்கள் முன்னாடி, ஒரு ஐ.நா மாநாட்டுக்காக, ஐரோப்பாவில இருந்து அமெரிக்காவுக்கு, மாற்று சக்தியில இயங்கற ஒரு படகிலப் பயணம் போனாங்க. ஒரு பதின் பருவச் சிறுமியை, 53 வயதான நித்யானந்த் ஜெயராமன் ஏன் கொண்டாடறார்?
நி.ஜெ: நான் முன்பே சொன்ன மாதிரி, நம்மிடம் எதிர்கால மனிதர்களை முன்வைக்கும் பொருளாதாரம் கிடையாது. இன்னிக்கு வாழும் மனிதர்களை மட்டுமே முன்வைக்கும் பொருளாதாரம் மட்டுமே இருக்கிறது. அதற்கு மாறாக, அவர் எதிர்காலத்தின் பிரதிநிதியாக நம் முன்னால வந்து நிற்கிறார். ஏன்னா, எதிர்காலத்தின் பிரதிநிதியாக நம்முடன் பேச யாருமில்லை.
இது மிகவும் முக்கியமான விஷயம். குழந்தைகளை இதற்குள் கொண்டு வரும்போது - அவர்களுடைய எதிர்பார்ப்பும் இதற்குள் வருகிறது. இப்போ கொள்கை முடிவுகளை எடுப்பவர்கள் யாரும் இன்னும் 10 - 15 வருஷத்துக்கு அப்புறம் இருக்கப்போவதில்லை. அப்போது வருங்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தாங்கன்னு கேக்கறது ரொம்ப முக்கியம். இந்தக்கேள்வியை நான் கேட்கலாம். ஆனால், அது அவ்வளவு Effective - ஆ இருக்காது. அப்படி ஒரு கேள்வியை ஒரு பள்ளிச் சிறுமி கேட்பது மிகவும் சரியாக இருக்கும். அந்தச் சிறுமி, தானாக எழுந்து இந்த முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். பின்னாடி பல பேர்வந்து உதவியிருக்காங்க. தப்பே கிடையாது. அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
பாலா: அவங்களோட அந்தப் படகுப் பயணத்தை நீங்கள் எப்படிப் பார்க்கறீங்க?
நி.ஜெ: நல்ல விஷயம். ஏன்னா, இதை விமர்சிக்கறதுக்கு ஆயிரம் பேர் இருக்கிறாங்க. அவர் ஏரோப்ளேனில் போயிருந்தா, பெரிசா சூழல் போராளியா இருந்துக்கிட்டு, ஏரோப்ளேனில் போகிறார்னு சொல்லியிருப்பாங்க. அவங்க படகுல போனதுனால, உலகத்தைக் காப்பாற்றவில்லை. அது ஒரு செய்தியைச் சொல்வதற்காகச் செய்யப்பட்டது.
காந்தி அரையாடையை அணிந்துகொண்டு, எட்டாம் ஜார்ஜ் மன்னருடன் நின்றது மாதிரி. என்னிடம் செல்வமும், ஆயுதமும் இல்லையென்றாலும், என் மக்களின் பிரதிநிதியாக, உன்னுடன் சரிக்கு சரி நின்று பேச வந்திருக்கிறேன் எனச் சொல்லும் அரசியல் ஸ்டேட்மெண்ட்.
பாலா: இதுவும் அதே மாதிரியான ஒரு ஸ்டேட்மெண்டா?
நி.ஜெ: அதே மாதிரின்னு சொல்லமாட்டேன். ஆனால், ஒரு முக்கியமான ஸ்டேட்மெண்ட்.
பாலா: இன்னொரு தலைப்புக்குச் செல்வோம். சமீபத்துல சமூக ஊடகங்கள்ல எழுப்பப்படும் சர்ச்சை இது. இறைச்சி, குறிப்பாக மாட்டு இறைச்சி உண்பது, பூமி வெப்பமயமாவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பது. ஆனால், கால்நடை இறைச்சி உபயோகம், இந்திய ஆப்பிரிக்க நாடுகளில், வேறு மாதிரி உள்ளது. ஆப்பிரிக்காவின் பெரும் புல்வெளிகளில், மாடுகள் வளர்க்கப்படு கின்றன. அவை, அந்தப் பகுதி மக்களின் உணவுத்தேவைகளுக்காக மட்டுமெ இன்றுவரை கொல்லப்படு கின்றன. அவர்கள் ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவின் கதை வேறு. இந்தியாவில் பெரும்பாலும் கால்நடைகள் இன்று பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. பால் வற்றிய பின்பு, பொருளாதார ரீதியாக அவை பயன் இழந்த பின்பு அவை இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. அந்த இறைச்சியும், தோலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஐரோப்பிய / தென் அமெரிக்க நாடுகளில் அப்படியில்லை. இறைச்சிக்காக மட்டுமே மாடுகள் தொழிற் சாலை முறையில் வளர்க்கப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒரே மாதிரி பார்ப்பது சரியா? இதில், சைவம் - அசைவம் என்னும் வாதங்களும் வைக்கப்படுகின்றன. இதை எப்படிப் பார்க்கறீங்க?
நி.ஜெ: நான் திரும்பவும் சொல்கிறேன் - சுற்றுச் சூழல் என்பது தனியாக இயங்கும் ஒரு தளமல்ல. அது பொருளாதாரத்துடன், மக்கள் நம்பிக்கைகளுடன், மரபுகளுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் ஒன்று. ஆனால், ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கால்நடைகள் வளர்க்கப்படுவது வெறும் வணிக நோக்கத்துடன் மட்டுமே செய்யப்படுவது. அது மக்களோட வாழ்க்கையில், மரபுகளில் இணைந்ததல்ல. அது விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் ஒரு பொருள். அதோட சூழல் தாக்கம் மிக அதிகம். அது உண்மையான ஒரு விஷயம்தான்.
இறைச்சியை விடுத்து, சைவ உணவை ஒருவர் சாப்பிடலாமான்னா, செய்யலாம். ஆனா, இதுதான் ஒரே வழி, புரட்சின்னு சொல்றது - உள்ளூர்ல இருக்கற அரசியல், மரபு பற்றிய புரிதல் இல்லாத சமூகம் பேசும் பேச்சு.
இப்போது, இந்தியாவில், இந்தக் காலகட்டத்தில், உயர் சாதி ஆதிக்கம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், சைவம் - அசைவம் என்னும் வாதம் ஒரு அரசியல் பேச்சாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கான புரதத் தேவையை இன்னும் முழுமையாகப் பூர்த்திச் செய்யாமல், அதற்கான வழிவகைகளைச் செய்யாமல், உண்ணும் உணவுகளை நிறுத்துவது சரியல்ல. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யாமல், உண்ணும் உணவை மாற்றுவதால் ஒன்றும் நிகழப்போவதில்லை. இங்கே அதை மாற்ற முடியாது என்பதே உண்மை.
நமது ஊரில், கால்நடைகள், வாழ்நாள் முழுதும் உழைத்து, அவை பொருளாதார ரீதியாகப் பயன் தருவது நின்ற பின்பு, இறைச்சிக்காகப் பயன்படுகிறது. அல்லது அவ்வாறு பயன்படாத காளைக்கன்றுகள் இறைச்சிக்காக உபயோகப்படுகின்றன. இதைச் சுற்றி ஒரு பொருளாதாரம் இயங்குகிறது. இது பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற ஒரு பொருளாதாரமல்ல. பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்கள் இயங்கும் பொருளாதாரம். மாடுகள் பயன் தருவது நின்ற பின்பு, அவை பொருளாதார ரீதியாகப் பயன்படுவதே சரியானது. எல்லா மாடுகளுக்கும், ரிட்டயர்மெண்ட் இல்லங்கள் கட்ட முடியாது. அது பெரும் செலவைக் கோரும் செயல். நம்ம நாட்டில் இருக்கும் ஜாதீய ஒடுக்குமுறைகளையும், வேளாண் பொருளாதாரமும் புரியாதவர்கள் இது மாதிரிப் பேசறாங்க.
பாலா: மறுபடியும் இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்திய சூழலியல் இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள், வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
நி.ஜெ: ஒரு தலைவரைப் பத்தி நான் ஏற்கனவே பேசிட்டேன் - பிர்ஸா முண்டான்னு. அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில பிறந்தவர். மிகச் சின்ன வயதிலேயே இறந்துட்டார். 25 வயசு இருக்கும். அவ்வளவுதான். வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மிகப் பெரிய போரைத் தொடர்ந்தார். அதுக்கு முக்கியமாகப் பல காரணங்கள் இருந்தன. முண்டா இனம் என்பது ஒரு செழிப்பான இனம். வனத்துக்குள் வாழ்ந்தவர்கள். வெள்ளையர்கள் வந்தவுடன், நிலக்கரிச் சுரங்களுக்காக, வன நிலங்களும், பொதுவெளிகளும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அப்போ அங்கே இருக்கும் பழங்குடியினரிடம், உங்களுக்கு வேறு இடம் தருகிறோம். அங்கே வேளாண்மை செய்ய முடியும் எனச் சொல்லி, அவர்களுக்கான மாற்று நிலம் கொடுக்கப்பட்டது.
பழங்குடியினரின் வேளாண்மை வழிகள் வேறு. வனத்தையும் நம்பிருக்கும் முறை. சமவெளியில், பழங்குடியினர் வேளாண்மை செய்யத்துவங்கும் போது, அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உரசல்கள் ஏற்பட்டன. சமவெளியில், பழங்குடியினர், ஜமீந்தாரி முறைக்கு அவர்கள் வரி கொடுக்க வேண்டியிருந்தது. அந்த முறையில், பழங்குடியினர் பலர் தங்கள் நிலங்களை இழந்தனர். நிலமும் இல்லாமல், வனமும் இல்லாமல், பெரும்பாலான பழங்குடியினர் தங்கள் அடையாளைத்தையே இழந்தனர். அந்த மாதிரியான ஒரு காலத்தில் பிறந்தவர்தான் பிர்ஸா முண்டா.
அந்தச் சமயத்தில இந்திய வனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் வனம் மட்டுமல்லாமல், அதில் உள்ள புறம்போக்கு இடங்கள், வனத்தை ஒட்டியிருந்த விளைநிலங்கள் எல்லாமே கையகப்படுத்தப்பட்டன.
எப்படி, மலேசியாவில், பாமாயில்/ரப்பர் எஸ்டேட் களுக்காக, வனங்கள் அழிக்கப்பட்டனவோ, அதே போல, மரங்களுக்காக, இங்கே வனங்கள் அழிக்கப்பட்டன. வந்தவர்கள் அனைவருமே ஐரோப்பிய சூழலில் வன மரங்கள் வளர்ப்பில் திறன் பெற்றவர்கள். அவர்களில் முக்கியமானவர், டீட்ரிச் ப்ராண்டிஸ்ங்கற (Dietrich Brandis) ஜெர்மானிய மரவளர்ப்பு நிபுணர் (syliviculturist). அவருடைய நிபுணத்துவம் என்பது ஜெர்மனி போன்ற சூழலில் இருந்து பெறப்பட்ட நிபுணத்துவம். அங்கே உள்ள காடுகளில், பல சதுர கிலோமீட்டர்களுக்கு, ஒரே மர வகை வளரும். ஆனால், இங்கேயோ, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பல்வேறு மர வகைகள் வளரும் சூழல். அப்போ, அவர்கள் என்ன செய்கிறார்கள் - செயல்திறனை மேம்படுத்த, வனத்தை மொத்தமாக அழித்துவிட்டு, அதில் ஒரு வகை மரத்தை மட்டும் நடும் ஒரு தொழில்முறையைப் புகுத்துகிறார்கள். அது தைல மரமாக (Eucalyptus) இருக்கலாம் அல்லது டக்லஸ் ஃபிர் (Douglas fir) போன்ற மரங்களாக இருக்கலாம். இந்தத் திட்டத்திற்கான நிலம் தேடும் போதுதான், இந்த நிலங்களின் மீதான மோதல் வருகிறது.
பிர்ஸா முண்டா, ஆங்கிலேயேர்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் துவங்குகிறார். இரண்டு ஆண்டுகள் நீடித்த ஆயுதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இறந்து போகிறார்.
இன்றும் அவர் பெயர் பொதுமக்களால் நினைவு கூரப்படுவதாக உள்ளது. அவர் பற்றிய வீரகதைகளும், நாடோடிப்பாடல்களும் உள்ளன. அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது.
1857 ஆம் ஆண்டுச் சிப்பாய்க் கலகத்துக்குச் சில வருடங்கள் முன்பு, சந்தால் பழங்குடியினர் எழுச்சி ஒன்று நிகழ்கிறது. முர்மு (murmu) என அழைக்கப்படும் முர்மு சகோதரர்கள் இதை முன்னெடுக்கிறார்கள். கிட்டத்தட்ட 10 ஆயிரம் வீரர்களைத் திரட்டி அவர்கள் போராடுகிறார்கள். இந்தியாவில், சூழலியல் பிரச்சினை என்பது, அது 8 வழிச் சாலையானாலும் சரி, கூடங்குளமானாலும் சரி, அடிப்படையில், அது நிலப்பிரச்சினை தான். வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரச்சினைதான்.
பாலா: இப்போ, சமீப காலப் போரட்டத்துக்கு வருவோம். இங்கே கேரளாவில நடந்த அமைதிப்பள்ளத் தாக்குப் போராட்டத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க
நி.ஜெ: இது எனக்கு மிகவும் பிடித்த போராட்டங்கள் இரண்டு. ஒன்று அமைதிப் பள்ளத்தாக்கு, இன்னொன்று கோயல் கரோ (Koel Karo). ஏன்னா, இவை இரண்டுமே தலைவர்களில்லாத போராட்டங்கள். 1950/60 கள்ல இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்தப் பள்ளத்தாக்கில் ஒரு அணை கட்டப்பட்டு, இங்கிருந்து மின் உற்பத்தி செய்து, கேரள மாநிலத்தின் உபயோகத்துக்காக என முன்வைக்கப்பட்ட திட்டம் அமைதிப்பள்ளத்தாக்குத் திட்டம். வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்தவெளியில் வாழும் சிங்கவால்க் குரங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், இதைப்பற்றிப் பேசத்துவங்கினார்கள். நம் சென்னையைச் சேர்ந்த வன உயிரியல் காவலர் ராமுலஸ் விட்டேக்கர் (Romulus whitaker) - அப்போது இளைஞர் - அவர், அங்குள்ள பாம்புகள் மற்றும் பல உயிர்கள் பற்றியும் விரிவாக எழுதினார். பாம்பே இயற்கை வரலாற்றுக் குழுமம் (Bombay Natural History Society), உலகப் புகழ்பெற்ற பறவையியலாளர் - சலீம் அலி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டு, பல்லுயிர்ப் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, இந்த அணைக்கு எதிரான அறிவியல்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சூழலியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. அறிவியல் அறிஞர்களே, செயல்பாட்டாளர்களாக மாறிய ஒரு அற்புதமான தருணம். வழக்கமாக அரசு விஞ்ஞானிகள் முதுகெலும்பில்லாத ஆட்களாகத்தான் இருப்பார்கள். அரசு திட்டங்களுக்கு எதிராக எதுவும் பேச மட்டார்கள்.
எம்.எஸ் ஸ்வாமிநாதன் இதை ஆய்வு செய்து, இந்த இடம் பல்லுயிர்ப் பூங்காவாக மாற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறார். (பேராசிரியர் எம்.ஜி.கே மேனன் தலைமையில், மாதவ் காட்கில் போன்ற சூழலியல் அறிஞர்கள் ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு, அதன் பாதகங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டன - பாலா). இது இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு திட்டமாக மாறியது. கேரளாவில் பல போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கலைஞர்களும், கவிஞர்களும் இதில் இணைந்து, பெரும் மக்களியக்கமாக, அர்பன் போராட்டமாக மாறுகிறது. எப்படி மெரினாவில், ஜல்லிக்கட்டுக்காக, ஜல்லிக்கட்டையே பார்த்திராத இளைஞர்கள் அதற்காகப் போராடினார்களோ அதே மாதிரி.
இந்தத் திட்ட காலத்தில் பல பிரதமர்கள் வந்து போனார்கள், சரண்சிங்கில் துவங்கி. மொரார்ஜி தேசாய்,இந்தத் திட்டத்துக்குப் பெரும் ஆதரவாளர். ஆனால், இறுதியில் இந்திரா காந்தி வந்த பின்பு, அவர் இதில் தலையிட்டு, விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில், இந்தத் திட்டத்தைக் கைவிட முடிவெடுத்தார். அதன் பின் பலகாலம் கழிந்து, இது அதிகாரபூர்வமாகக் கைவிடப்பட்டது.
பாலா: 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டுக்கான ஆயத்தங்கள் நிகழ்வதைக் கண்ட காந்தியின் சீடர் மீரா பென், இந்த மாநாட்டில், இந்தியாவின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என இந்திரா காந்திக்குச் செய்தி அனுப்பினார். அதற்கான முதல்படியாக, இந்தியாவில் முதன்முறையாகச் சுற்றுச் சூழல் பற்றிய முதல் அறிவியல் கருத்தரங்கை விண்வெளி ஆராய்ச்சித் தலைவரான விக்ரம் சாராபாய் ஒருங்கிணைத்தார். அதன் பின் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் இந்திரா காந்தி பங்கு பெற்று, புகழ்பெற்ற அந்த உரையை நிகழ்த்தினார். அதற்குப்பின் தான் இந்தியாவில், தேசியப் பூங்காக்கள் நிறுவப்பட்டு, வனப்பாதுகாப்பு முறையாக முன்னெடுக்கப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், “Indira - A Life in Nature”, அப்படீங்கற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், சிப்கோ இயக்கம், அமைதிப்பள்ளத்தாக்கு, தேரி அணை போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுகையில், இந்திரா காந்தி, அதிகாரிகளைத் தாண்டி, அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பையும் எடுத்துச் செயல்பட்டார்னு சொல்றார். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?
நி.ஜெ: இப்ப இருக்கற தலைவர்களோடு ஒப்பிடுகையில், இந்திரா காந்தி, நிச்சயமாக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்கும், மக்களின் குரலுக்கும் இந்த விஷயங்களில் மதிப்பு கொடுத்தார்னு சொல்லலாம். அமைதிப் பள்ளத்தாக்குப் பிரச்சினையில், அறிஞர்களின் பரிந்துரையை மதித்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அது நல்ல விஷயம் அதே நேரத்தில், ஸ்டாக்ஹோம் போய் வந்த பின்பு, வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், தேசியப் பூங்காக்களும், வன விலங்குச் சரணாலயங்களும் அமைக்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்கள், அமெரிக்கா போன்ற நாடுகளில் தோன்றியவை. அங்கே அவற்றுக்கான உண்மையான காரணம், செவ்விந்தியர்களைப் பல இடங்களில் இருந்து அகற்றி, அந்தச் சூழலைப் பாதுகாக்கப் போகிறோம் என்னும் போர்வையில் கொண்டு வரப்பட்டவை. அதாவது, மனிதர்களும், இயற்கையும் ஒன்றிணைந்து வாழ முடியாது என்னும் ஒரு தவறான கண்ணோட்டத்தில் பிறந்த திட்டங்கள் அவை.
என்னைப் போல ஆட்கள், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தல் கடினம். ஆனால், வனங்களில் வாழும் பழங்குடியினம், அந்த இயற்கையோடு இணைந்து மட்டும்தான் வாழ முடியும்.
இந்தத் தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் எல்லாமே, வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திட்டங்கள். இறக்குமதி என்பதாலேயே, அவை தவறு எனச் சொல்ல மாட்டேன். நல்ல விஷயங்களும் உள்ளன.
ஆனால், இந்தத் திட்டத்தில் உள்ள பிரச்சினை என்னன்னா, இதில் பங்களிப்பு செய்த அறிவியல் அறிஞர்கள். நாம் அறிவியல் என்றாலே, ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களை - கல்லூரியில் படித்தவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் - ஜெய்ராம் ரமேஷின் புத்தகத்தை நானும் படித்தேன் - இந்திரா காந்தியைச் சுற்றி இருந்த அதிகாரிகள் / அறிஞர்கள் பலரும் சென்னையைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு வனப் பாதுகாப்பைப் பற்றி என்ன தெரியும்?
இந்தத் திட்டங்களைத் தீட்டுகையில், அங்கு வாழ்ந்த பழங்குடியினரின் தொழில்நுட்பங்களை, வனவியல் அறிவை நாம் கணக்கில் எடுத்தோமா? அதற்கு மதிப்புக் கொடுத்தோமா என்றால் - கண்டிப்பாக இல்லை.
நேர்மாறாக, இந்தச் சட்டத்தின் மூலம் உருவான, வனத்துறைதான் வனப்பாதுகாப்புக்குப் பெரும் எதிரியாக உருவெடுத்தது. வனத்துக்குள் வசிக்கும் பழங்குடியினருக்கு, அரசு என்றாலே, காக்கிச் சீருடை அணிந்து, கையில் லத்தி வைத்திருக்கும் ஒரு வில்லன். இந்தச் சட்டம்தான், பழங்குடியினரை வனச்சூழலில் இருந்து வெளியேற்றும் ஒரு போக்கைத் துவங்கி வைத்தது. ஒரு பெரும் கொடுமை அவர்களுக்கு நிகழ்ந்தது. அவ்வாறு செய்ய வேண்டும் என அந்தச் சட்டம் சொல்லவில்லை. ஆனால், அதை நிறைவேற்றிய விதத்தில், அந்தக் கொடுமைநிகழ்ந்தது.
அந்தச் சட்டத்தினால், வன எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. அதனால், பொதுச்சமூகம் பலனடைந்திருக்கிறது. ஆனால், அதுவரை வனங்களின் ஒரு பகுதியாக இருந்து, அதோடு ஒன்றிய ஒரு வாழ்க்கை முறையை, அந்தச் சூழலைப் பாதுகாத்து வந்த மக்களை, அந்தச் சட்டம் நிராகரித்து வெளியேற்றிவிட்டது. இது மிகப் பெரும் அநீதி.
பாலா: ராஜஸ்தானில், ராஜேந்திர சிங் என்பவர், இதுவரை, 9 ஆறுகளை மீட்டெடுத்து, அவற்றில் நீரோட்டத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்னு சொல்றாங்க. ராஜஸ்தான், இந்தியாவில் மிகக் குறைவாக மழை பெறும் மாநிலம். அங்கே, இதுபோன்ற ஒரு நேர்மறை நிகழ்வு நடந்திருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
நி.ஜெ: அது சாத்தியமான ஒன்றுதான். நதிகளில் மீண்டும் நீர் ஓட வைக்கணும்னா, அதற்குத் தேவையான, முன்பிருந்த சூழல்களை மறுஉருவாக்கம் வேண்டும். இதைச் செய்து, ராஜேந்திர சிங் வெற்றியடைந்திருக்கிறார் என்பது உண்மைதான்.
இதில் முக்கியமான பிரச்சினை என்னன்னா, நாம் ஆற்றில் இருக்கும் நீரைச் சுரண்டி எடுத்து விடுகிறோம். ஆற்றின் வழியில், பெரும் அணைகள், தடுப்பணைகள் எனக் கட்டி, ஆற்று நீரை வெளியேற்றிவிடும் போது, ஆற்றில் நீரோட்டம் எப்படி இருக்கும்? இதெல்லாம் செஞ்சிட்டு, நீங்க மரம் நட்டாலோ, பஸ்ஸை எரித்தாலோ, ஆற்றில் நீர் ஓடாது. ஆற்றில் நீர் ஓட வேண்டுமெனில், விவசாயத்துக்கு எடுத்து உபயோகப்படுத்தப்படும் நீரை, எடுக்காமல் அல்லது மிகக் குறைவாக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள நீரை ஆற்றில் ஓடவிடவேண்டும். விவசாயத்துக்கு, மிகக் குறைந்த நீர் உபயோகிக்கும் வழிகளைக் கையாள வேண்டும். நாம விவசாயம் செய்யும் முறைகளை மாற்றாமல், நம் பொருளாதார அமைப்பை மாற்றாமல், காவிரியில் தண்ணீர் ஓடாது.
பாலா: ஏழை மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளை அவர்கள் நிறைவேற்றும்போது, சூழலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனச் சொல்கிறார்களே? சென்ற வாரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கடற்பாசி சேகரிக்கும் பெண்கள், சென்னையில் ஒரு விழாவில், எப்படி அவர்கள் சூழலியலைப் பாதிக்காமல் கடற்பாசி சேகரிக்கிறோம் எனச் சொன்னார்கள். ஏழைகள் Vs சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு மோதல் உருவாகிறது. அவர்களால்தான், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகிறது என ஒரு கருத்து இருக்கு. இதை நீங்க எப்படிப் பாக்கறீங்க?
நி.ஜெ: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவுக்கு ஏழைகளிடம் சக்தி இல்லை என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாகத் தீபாவளிப்பண்டிகையின்போது, எந்தத் தெருவில் அதிகமாகக் குப்பை இருக்கும் எனப் பார்த்தாலே தெரிந்துவிடும். அதிகமாகப் பணம் இருக்கும் தெருவில் தான் அதிகமாகக் குப்பை இருக்கும். இன்றைய பணம் நாளைய குப்பை. சூழல்கேட்டிற்கு மிக முக்கியமான காரணம் அதீத செல்வம். இன்றைய சூழல்கேட்டுக்கு மிக முக்கியமான காரணம் பணக்கார நாடுகள்தான். அதே போல்தான் நீங்கள் இந்த விஷயத்தையும் பார்க்க வேண்டும்.
ஏழைகள் தாங்கள் வசிக்கும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்க மாட்டார்கள் எனச் சொல்லமாட்டேன். ஆனால், அந்தச் சூழலுக்குக் கேடு விளைந்தால், அதன் முதல் பலி அவர்கள்தான். நமக்கு, பத்துப்படிகள் தாண்டிதான், அதன் பாதிப்பு வரும்.
இந்தக் கடல்பாசி சேகரிக்கும் பெண்களுக்கு, கடல்பாசி என்பது வங்கி மாதிரி. அதில் இருக்கும் செல்வத்தை முழுவதும் வழித்து எடுத்துவிட்டால், அவர்களுக்கு அடுத்த நாளுக்கு ஒன்றும் இருக்காது. அவங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்ல வர்ல. புத்திசாலிகள். அவங்களுக்கு நாளைக்கும் வருமானம் வேணும்கறதுக்காக, அந்தச் சூழலை நீடித்து நிலைக்கும் வகையில், தங்கள் கடற்பாசி சேகரிக்கும் முறைகளை மாத்தி அமைச்சிக்கிட்டாங்க. இவங்க ஒரு சிறு குழுதான். இவங்களை விட்டிருவோம். ராமநாதபுரத்தில் இருப்பவர்கள், ராமநாதபுரத்தில்தான் இருப்பாங்க.
இப்போ ஸ்டெர்லைட் போன்ற ஒரு தொழிற் சாலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கும் தூத்துக்குடிக்கும் என்ன தொடர்பு? தூத்துக்குடியில் பிரச்சினை எனில், இன்னொரு இடத்துக்குப் போக முடியும். ராமநாதபுரம் கடற்பாசி சேகரிக்கும் பெண்களால் இடம் பெயர முடியாது. அவங்களுக்கு அதுதான் ஒரே வழி. அந்தச் சூழல் ஒழுங்காக இருந்தால்தான் உயிர்வாழ முடியும். பன்னாட்டு வணிகத்துக்கும், உள்ளூர் வணிகத்துக்கும் இதுதான் முக்கியமான வித்தியாசம். உள்ளூர் வணிகம், அந்த இடத்துடன் வேரூன்றிய ஒரு வணிகம். எனவே அது இருக்கும் சூழல் அழிந்தால், அந்த வணிகம் அழியும். மக்களும் அழிவார்கள்.
பாலா: இந்த நேர்காணலின், ஒரு சரடாக, நீங்கள்தொடர்ந்து ஒன்றைச் சொல்லி வருகிறீர்கள். இந்த உலகத்தில் மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியாகிறது. அதன் பகிர்வுதான் பிரச்சினை. உணவுப் பற்றாக்குறை என்னும் பிரச்சினை கூட, அது ஆடம்பரத்துக்கும் உல்லாசத்துக்கும் செலவிடப்படும் போதுதான் வருகிறதுன்னும் சொன்னீங்க. இந்த இடத்துல. காந்தியின், மிகப் புகழ்பெற்ற வாசகமான, ““The world has everyone’s need; But not enough for one man’s greed”, நினைவுக்கு வருகிறது. நவீன உலகில், சூழலியல்வாதம் காந்தியில் இருந்து துவங்குகிறதுன்னு சொல்லலாமா?
நி.ஜெ: நிச்சயமாகச் சொல்லலாம். கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்லணும்னா, அவர் வடிவேலு மீம்ஸ் மாதிரி. எல்லா விஷயத்தைப் பத்தி, எல்லாத்தையும் சொல்லிட்டார். மிக முக்கியமான விஷயம் என்னன்னா, மிக ஆழமான கருத்துக்களை, மிக எளிமையாகச் சொல்லியிருப்பதுதான். அவரது சூழலியல், பொருளாதார அடிப்படையைக் கொண்டது. Economic Perspective வைக் கொண்டதுதான், அவரது சூழலியல்.
ஜே.சி.குமரப்பா எழுதிய Economics of Permanence இதைத்தான் சொல்கிறது. அவரது எழுத்துகளில், சூழல் என்னும் வார்த்தை வருவதில்லை. ஆனால், அவர் சொல்லும் ஒவ்வொரு வாதத்திலும், சூழலும், அதன் பாதுகாப்பும் (நீடித்து நிலைக்கும் தன்மையும்) பின்னிப் பிணைந்திருக்கிறது.
பாலா: தமிழகத்தில், நம்மாழ்வார் மாதிரி, இயற்கை வேளாண்மையை முன்னெடுத்த ஒருவரை, அவரின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நி.ஜெ: அவரது பங்களிப்பை இரண்டு விதமாகப் பார்க்கமுடியும். இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மரபு / பண்பாடு என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கினார்.
பாலா: அது ஏன் முக்கியம்?
நி.ஜெ: ஏன் முக்கியம் என்றால், வேர் முக்கியம். வேரில்லாமல், எல்லோரும் எல்லா இடங்களிலும் சுற்றித்திரியும் வாழ்க்கையில் இருந்தால், சூழலைப் பாதுகாக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். இப்ப, தமிழகம் என்பது நமக்குச் சொந்தமான மண். இந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கு முக்கியமான மரபுகள் / பண்பாடுகள் முக்கியம். நம்மாழ்வார், நமது விவசாயம், உணவு, பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியலைப் பேசினார். தமிழ் தமிழ் என மார்தட்டிக் கொள்ளும் அடையாள அரசியல் அல்ல அது.
இரண்டாவது, அந்தப் பார்வையை அவர் யார்முன் வைத்தார், எந்தக்கட்டத்தில் இதைச் செய்தார் என்பது.அவர் உள்ளே வரும்போது, இங்கே தகவல் தொழில் நுட்பம் ஒரு பெரும் பாய்ச்சலில் இருந்தது. ஊரக, வேளாண் பின்னணியில் இருந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில், வேலை செய்யத் துவங்கி, பொருளாதார ரீதியாகப் பயன்பெற்ற காலம். அவர்களில், பலர், சில காலம் வேலை செய்யத் துவங்கியபின், பொருளாதார ரீதியாகப் பயன்பெற்றிருந்தாலும், ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தார்கள். சைபர் உலகக் கூலியாக வேலை செய்வதன் பொருளின்மையைப் பலர் உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் வேலையைத் தாண்டிய ஒரு தேடலில் இருந்த காலக் கட்டத்தில் நம்மாழ்வார் ஐயா வந்தார்.
முன்னே சொன்ன மாதிரி, 60களில் ராக் ம்யூசிக் எப்படி எழுந்து வந்ததோ, அப்படி எழுந்து வந்த ஒரு ராக்ஸ்டார் தான் இவரும். இந்தப் பாதிப்பில், இன்னும் பல நூறு இளைஞர்கள், வருடத்துக்கு ஒருமுறை வானகத்துக்குச் சென்று வருகிறார்கள். பல ஆயிரம் பேர், அவர் வழியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
பாலா: அவர் மீது, தமிழக அறிவியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் உர / விதை / பூச்சி மருந்து நிறுவனங்கள் தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவர் வாதங்கள் அறிவியல் பார்வைக்குப் புறம்பானவை. பல விஷயங்களை அவர் அறிவியலற்ற விதமாகப் பேசினார்னு சொல்கிறார்கள். அதை நீங்கள் எப்படிப் பாக்கறீங்க?
நி.ஜெ: அறிவியலை எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. பி.எச்.டி படிப்புதான் அறிவியலா? வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து வெளியே வருபவர்கள் மட்டும்தான் அறிவியல் அறிஞர்களா? அப்படீன்னா, ஒரு உழவர் அறிவியல் அறிஞராக இருக்க முடியாதா? ஒரு மீனவர் மீன் துறை அறிஞராக இருக்க முடியாதா? என்னும் கேள்விகள் எழுகின்றன. நீங்கள் முறையான கல்வி முறையில் படிப்பது மட்டுமே அறிவியல்னு சொன்னீங்கன்னா, அப்போ, அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.
என் பார்வையில் அப்படி இல்லை. தரவுகள் மூலம் நிருபிக்கப்படும் அறிவியல் மட்டுமே போதுமானதல்ல. இத்துடன் மரபுகளும் சூழலும் இணைந்துள்ளன. விவசாயம் என்பது, ஒரு தொழிற்சாலை போல, மண்ணில் இடுபொருள் இட்டு, தானியத்தை மட்டும் அறுவடை செய்வதல்ல. அதை நான் தானியம் மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்கவில்லை. அந்த மண் வளம் காக்கப்படனும். அதில் தானியமும் விளையனும். அதை நம்பியிருக்கும் மற்ற உயிர்களும் காக்கப்படனும். நெல் விளையும் பூமியில், நெல் மட்டுமே விளைவதில்லை. அதில் நண்டு இருக்கும், மீன் இருக்கும். அதைப் பிடித்து உண்பவர்களும் இருக்கிறார்கள். பூச்சி மருந்துகளின் உபயோகத்தால், அதில் உள்ள மற்ற உயிரினங்கள் இல்லாமல் போய் விடும். குட்டையான நெல் ரகங்கள் வந்த பின்பு, அதன் வைக்கோல் அளவு குறைந்து, மாட்டுக்கான தீவனம் கிடைப்பது குறைந்துவிடுகிறது. ஆடுமாடுகளின் கழிவுகளை நாம் உரமாகப் பயன்படுத்துகிறோம். அந்த ஒரு சுழற்சி பாதிக்கப்படுகிறது. தானிய உற்பத்தியை மட்டுமே நோக்கும் ஒரு குறுகலான கண்ணோட்டத்தில், இந்த அறிவியல்துறை செயல்படுகிறது. நம்மாழ்வார் சொல்லும் வழி, பரவலான கண்ணோட்டத்தைக் கொண்டது. அந்தப் பொருளாதாரம், வழக்கமான பொருளாதார பிரமிட் அமைப்பைக் கொண்டிருக்காது. அது, தட்டையாக இருக்கும். அதன் பொருள் என்னவெனில், உற்பத்தியின் மதிப்பு, பொருளாதார அடித்தட்டிலேயே இருக்கும். அதன் உபரி, மற்ற துறைகளில் நிகழ்வதுபோல சில தொழிலதிபர்களிடம் சென்று சேராது.
பாலா: காந்தியும் சரி, நம்மாழ்வாரும் சரி - நிலத்தைத்தானியம் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாக மட்டுமே பார்க்காமல், நிலத்துடன், மக்களுடன் இணைந்த ஒரு முழுமையான சூழலாகப் பார்க்கிறார்கள். ஆனால், இன்று உலகம், தனித்தனி கம்பார்ட்மெண்ட்களாகப் பிரிந்திருக்கிறது. Specialization என்பதே இன்று வழக்கமாகி விட்டது. இந்தச் சூழலில், மக்கள் திரும்பவும் ஒரு முழுமையான வாழ்க்கை முறைக்குத் திரும்புவது சாத்தியமா?
நி.ஜெ: அந்த முழுமையான நிலைக்குப் போக முடியாது. ஆனால், அந்தக் குறிக்கோளை அடைய நாம் புதிய வழிமுறைகளைச் சமைக்க முடியும். அங்கே போக முடியுமா முடியாதான்னு ஜோசியர்தான் சொல்ல முடியும். நான் என்ன சொல்கிறேன் என்றால் - அது சாத்தியமா இல்லையான்னு கூட இன்று தெரியாது. ஆனால், இன்று நாம் சென்று கொண்டிருக்கும் திசையில் பெரும் சிக்கல் உள்ளது என்று சொல்கிறேன். எனவே, இங்கே நம்மாழ்வார் முன்வைக்கும் வழி இதற்கான மாற்றாக இருக்கலாமா என்பதை யோசிக்கலாம். இதுமட்டும் தான் வழி என நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு மாற்று வழிக்கான தேடலில் நாம் இறங்கியே ஆகவேண்டும்.
பாலா: தமிழகத்தைப் பாதிக்கும் பெரும் பிரச்சினைகள் என்னென்ன? நீங்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவராக இருந்தால், அவற்றை எப்படி அணுகுவீர்கள்?
நி.ஜெ: எல்லா நிலைகளிலும் சமத்துவமும், ஜனநாயகமும்தான் அடிப்படைத் தேவை. உதாரணமாகச் சொல்லனும்னா, நான் வசிக்கும் இந்தத் தெருவில் குப்பை இருக்கிறது. என்னுடைய பார்வையில், அதற்கான தீர்வு,அதை அப்புறப்படுத்துவது. அந்தக் குப்பை அப்புறப்படுத்தப்பட்டுக் கொடுங்கையூர் செல்கிறது. கொடுங்கையூர்வாசிக்கு, என் தீர்வு, பிரச்சினையாக மாறுகிறது. என்னைப் போன்ற ஒரு மனிதருக்கு இருக்கும் அதிகாரம், கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கும் இருந்தால், இந்தத் தெருவில் இருக்கும் குப்பை கொடுங்கையூருக்குப் போகாது. இந்த நிலை வரும்போது, சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான தீர்வுகளை நாம் காணமுடியும். இன்னிக்கு நாம் தீர்வுன்னு சொல்ற விஷயங்கள் எல்லாமே, நம்ம பிரச்சினைகளை இன்னொருவர் தலையில் கட்டுவதாக உள்ளன. வனத்தைப் பாதுகாக்கனும் - பழங்குடியினரை தூக்கி வெளியில் போடு. எனக்கு அணுமின் நிலையம் வேணும் - கூடங்குளத்தில் ஏற்படுத்து. எட்டு வழிச்சாலை வேணும் - இன்னொருவர் வாழும் நிலத்தில் அமைத்துக் கொள். இப்படி ஒரு திட்டம் அமைக்கையில், அதை வேண்டும் எனச் சொல்லும் உரிமையும், வேண்டாம் எனச் சொல்லும் உரிமையும் இருக்கவேண்டும். இப்போது வேண்டும் எனச் சொல்லும் குரல் மட்டும்தான் ஓங்கி ஒலிக்கிறது. அது மாறனும். அவை ஜனநாயக முறையில் அனைத்துத் தரப்பாலும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவேண்டும். அப்படிஎட்டப்படும் முடிவுகளையே முன்னெடுக்க வேண்டும்.
பாலா: பொறுமையாக உரையாடியமைக்கு மிக்க நன்றி.
நி.ஜெ: நன்றி.
--
மயிலத்தின் மடியிலிருந்துதான் தொடங்கிற்று நடுநாட்டுப் பயிர்ச்செலவின் முன்னத்தி ஏர். அப்பொன்னேருழவன் இராசேந்திரசோழன் உழுப்படைச்சாலில் முகிழ்த்தது மகத்தான பாய்ச்சல்...
“கெடுவாய்ப்பான சூழல் நான் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்க இயலாமல் போன நிலை. அந்த ஏக்கத்தை மேலும் கூட்டியது தற்போது விருத்தாசலம் மணக்கொல்லையைச் சார்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மண்ணின் மணத்தோடும் வட்டார வழக்கோடும் உருவாக்கியிருக்கும் உன்னதப் படைப்புகள் ‘அஞ்சலை’, ‘நெடுஞ்சாலை’, ‘வந்தாரங்குடி’ முதலியவை.”இத்தகைய ஆதங்கத்தையும் ஏக்கத்தையும் மனம் நெகிழ்ந்த பாராட்டையும் எழுதிச் செல்கின்றது ‘இராசேந்திரசோழன் கதைகள்’ எனும் வரின் நூலிலான அவர் பின்னுரை. இவ்விரு நடுநாட்டுப் பயிர்ச்செலவின் படைப்பாளிகளையும் இனங்கண்டு வெளியிட்ட வகையில் ‘தமிழினி’ வசந்தகுமாரும் பதிப்பாளனுக்குள் உயிர்த்திருக்கும் தேர்ந்த வாசகன் போற்றுதலுக்குரியவனே. ‘கட் அவுட்’ எல்லாம் நிறுத்திப் படைப்பாளிகளைக் கொண்டாடிய வித்தியாசமான பதிப்பாளரவரே அன்றோ. இதே மூச்சில் அவரது வாசகத்தேர்வில் (கொங்குதேர் வாழ்க்கை) ஊடாடும் கநாசுத்தனமான ரசனையதிகாரம் விமர்சிக்கப்பட வேண்டியதே என்பதையும் சுட்டியாக வேண்டியுள்ளது. வேறுவார்த்தைகளில் கூறுவதானால் கநாசுவைப் போலவே அவரது தெரிவுகள் பெரும்பாலும் ஏற்கத்தக்கனவே. மாறாக விடுபடல்கள் ரசனையதிகார இருட்டடிப்பின் பாற்பட்டன எனலாம்.
இராசேந்திரசோழன் விருப்பம் சார்ந்து பதிவாகியிருக்கும் ஓர் இலக்கியத் தடத்தின் முன்னத்தி ஏராக அவரிருந்தார் எனும் அடையாளத்தைப் பதிவுசெய்யுமுகமாகவே இச்சுட்டிக்காட்டுதல். எனினும் இது மட்டுமே அவருடைய அடையாளம் இல்லை.
புனைகதையாளர் (சிறுகதைகள், குறுநாவல்கள்); நாடகாசிரியர், நெறியாளும் நிகழ்த்துக்கலைஞர், கட்டுரையாளர் (மெய்யியல், அரசியல், அறிவியல்), இதழாசிரியர் (‘பிரச்சினை’, ‘உதயம்’, ’மண்மொழி’), மார்க்சிய இயக்கக் களப்பணியாளர், மார்க்சிய இயக்க அமைப்பாளர் எனவாங்குப் பன்முகப் பரிமாணமானவை அவருடைய பங்களிப்புகள். இத்தகு புரிதல்களோடு அவருடைய இதர பரிமாணங்கள் அவருடைய சிறுகதைகளுக்கூடாக எவ்வாறு ஊடாடிக் கிடக்கின்றன எனவாங்கு அவருடைய சிறுகதைகள் மீதான என் வாசிப்பின் பிரதியாக இதனை முன்வைக்கின்றேன்.
அவருக்கென்றே வாய்த்த பிரத்தியேகமான நல்வாய்ப்புகள் இன்னதெனக் காணப்புகுமுன் இலக்கியவுலகில் அவரால் இயங்க இயலாமல் போன கெடுவாய்ப்பான சூழல் என்கின்றாரே. அதுகுறித்து அவருடைய சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தைக் காண்போம்.
“கட்சிப் பிரவேசத்திற்குப்பின் எழுத்து என்பது குறைந்து அருகிப்பின் படைப்பிலக்கியம் என்பதே முற்றாக இல்லாமல் களப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலைமைக்கு ஆளாகியது”
“மரம், செடி, கொடிகள், புல்பூண்டுகள், முட்புதர்கள் எனக் காடாய் மண்டிப் பலதரப்பட்ட ஜீவராசிகளும் வாழும் சரணாலயமாய்க் கிடந்த மூளை சுத்தமாய் வறண்டு மொசைக் தரைபோல் ஆக்கப்பட்டுவிட்டது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அசைவையும் இலக்கியமாகப் பார்க்கிற உணர்வே இற்றுப்போய் இலக்கியமாய் யோசிக்கிற மனநிலையே இல்லாத வறண்ட பாலைநிலம்போல் ஆகிவிட்டது.”
அவருடைய முதல் மூன்று கதைகள் முறையே ‘மனக்கணக்கு’, ‘பலவீனம்’, ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்’. இவற்றில் ‘பலவீனம்’ இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. (பெயர் மாற்றப்பட்டு இடம் பெற்றும் இருக்கலாம்). இக்குறிப்பைக் காணுமுன்பே ‘மனக்கணக்கை’ வாசித்தபோதும் ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரத்தை’ வாசித்தபோதும் அவை தொடக்கநிலை எழுத்தாகப்படவில்லை.
புதுமைப்பித்தனின் ‘அவதாரம்’ கதையில் பிறந்த உடனே தொப்புள் கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு நடை தொடங்கிய பாத்திரத்தைப் போன்றதே புதுமைப்பித்தனின் இலக்கியப்பிரவேசம், இராசேந்திரசோழனின் இலக்கியப்பிரவேசமும் இத்தகையதே. மூன்றாவது கதையான ‘எங்கள் தெருவில்...’ கதை அவருடைய சிறந்த கதைகளுள் ஒன்றாகும். அதுவே விகடன் தென்னாற்காடு மாவட்ட மலருக்காக நடத்திய வட்டார வழக்குக் கதைகளில் முதற்பரிசு வென்றதன் மூலம் அவருக்கு நாடறிந்த அறிமுகம் தந்ததாகும்.
‘செம்மலர்’, ‘கசடதபற’, ‘பிரச்சினை’ என மூவகை இதழ்கள் வாயிலாக வெளியான சிறுகதைகளை முன் வைத்து இம்மூன்றும் இதழ்கள் என்பதினும் அவரின் சிறுகதைச் செல்நெறிகளுக்கான முக்குறியீடுகள் என்பாரவர். இதனை இன்னும் விளக்கமாகக் காண்போம்.
1.’செம்மலர்’, ‘யுகவிழிப்பு’, ‘தமிழர் கண்ணோட்டம்’ மூன்றும் அரசியல் இயக்கச் சார்பான இதழ்கள்
2.‘கசடதபற’, ‘அஃக்’, ‘கணையாழி’, ‘கவிதாசரண்’ நான்கும் கலை இலக்கியச் சிற்றிதழ்கள்
3.‘பிரச்சினை’, ‘உதயம்’, ‘மண்மொழி’ மூன்றும் அவருடைய ஆசிரியத்துவ இதழ்கள்.
இவை தவிர ‘ஆனந்தவிகடன்’, சனரஞ்சக இதழ் ‘தீராநதி’ இடைநிலை இதழ் (இவ்வாறே ‘க்ரியா’, ‘தமிழினி’, ‘மங்கைப் பதிப்பகம்’ என வெவ்வேறு பதிப்பகங்கள் அவர் நூல்களை வெளியிட்டுள்ளன.) இலக்கியத்தரம் பேணா நிலைப்பாடுகளுடன் வெளியிட்ட இயக்கச் சார்பிதழின் அவருடைய கதைகள் விளாம்பழங்கள் போல்வன. கருத்தியல் இலக்கியக் கோட்பாடுகளுடன் முரண்பட்ட நிலையில் சிற்றிதழ்களில் வெளியான அவருடைய கதைகள் பன்னீர்ப்பழங்கள் போல்வன. இருவகைக் கனிகளிலுமே மேற்கூடும் உள்ளீடும் ஒட்டாமலே ஊடாடிக்கிடக்கக் கூடியனவாம். ஓட்டை உடைத்து விட்டெறிந்து உள்ளீட்டு விளாங்கனியை உண்போம். பன்னீர்ப் பழத்தைப் பிட்டு உட்கிடையான பெரியகொட்டையை (எலுமிச்சைஅளவே உள்ள கனி. பெங்களூருவில் மட்டுமே கிடைத்தது. பன்னீர் மணமும் அலாதியான தனிச்சுவையும் உடையது.) அவருடைய ஆசிரியத்துவ இதழ்களில் மட்டுமே அவரால் பூரண சுதந்திரத்துடன் எழுத முடிந்தது. அவற்றில் வெளியானவை சொந்த வீட்டுத் தோட்ட விளைச்சல்.
உண்மையை எழுதவேண்டும். உண்மையாய் எழுதவேண்டும் என்பதே கனவாகவோ இலட்சியமாகவோ தம்மை இடையறாது ஊடறுத்துக் கொண்டிருந்த உறுத்தலென்பாரவர். அதனையே இத்தகைய நல்வாய்ப்புகளும் கெடு வாய்ப்புகளும் அவருக்கு வாய்த்த மாதிரி மற்றவர்களுக்கும் நேர்ந்திராதென்றே எனக்குப் படுகின்றது. அவருடைய புனைவுக் கோட்பாட்டிற்கும் அல்புனைவு நிலைப்பாட்டிற்குமான அல்லாட்டங்கள் ஒரு கலைப்பயணிக்கும் களச்செயல்பாட்டாளனுக்கும் இடையிலான முரண்பாடுகளாய் அவரை முற்சுட்டியவாறு தேக்கமுறச் செய்துவிட்டன என்பேன்.
எழுதுகிற எழுத்தெல்லாம் எல்லா வாசகனுக்கும் புரியவேண்டும் என்ற கட்டாயமில்லை - இதுதான் அவருடைய புனைவுசார் கோட்பாடு. மறுபக்கம் அறிவைச் சனநாயகப்படுத்துவதொன்றே அதிகாரத்தை முறியடிக்கும் என்பதே அவருடைய புனைவுசாரா எழுத்திற்கான கோட்பாடென அவர் வாழ்க்கைக் குறிப்பில் காணக்கிடக்கின்றது.
“கட்டுரைகள் எழுதி எழுதி எதைச் சொன்னாலும் எல்லோருக்கும் நன்றாகப் புரியவேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் ஊறி அதுவே கெட்டித்தட்டிப்போன மனநிலை” என்றவர் எழுதிச் செல்கின்றார்.
இதுதான் அவருக்குள் இருக்கும் கலைஞனை அவருக்குள் இருக்கும் களப்பணியாளன் காயடித்து விடுகின்ற அவலம். தோப்புகளில் தனிமரமாய் என்பதே அவர் பின்னுரைத் தலைப்பு. இதன் வாயிலாக அவர் அரசியல் இயக்கப் படைப்பாளிகள் ஊடேயும் கலை இலக்கியச் சிற்றேட்டாளர் மத்தியிலும் இருமருங்குத் தோப்புகளிலும் தனிமரமாகவே இருந்ததைச் சுட்டுகின்றார்.
“70களில் எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலையிலேயே தற்போதும் இருக்கிறேன். அப்போது எப்படிச் சுற்றி நிலவும் இலக்கியப்போக்குகளில் தனியனாய் உணர்ந்தேனோ அப்படியே இப்போதும் உணர்கிறேன். இந்த 30 ஆண்டுகளில் இலக்கியம் பற்றிய கருத்தாக்கம் பெருமளவு மாறி வந்துள்ளது. ‘எழுத்தாளர்’, ‘பிரதி’, ‘வாசிப்பு’ என்பது பற்றிய புதிய சிந்தனைகள் முகிழ்த்துள்ளன எனில் பெரும்பாலானவற்றுடன் நான் முரண்பட்டே நிற்கின்றேன்.” - இதுதான் 17.12.2014 இலும் அவருடைய நிலைப்பாடாகும்.
இதில் தமக்கேதும் மனக்கலக்கமோ சஞ்சலமோ இல்லையென்னுமவர் இலக்கியம் பற்றிய தம் வருத்தம் மட்டுமே தமக்குண்டென்கிறார். பெருமளவில் மாறி வந்துள்ள கருத்தாக்கங்களை உள்வாங்கிக்கொள்ள முயலாமலேயே அவற்றுடன் முரண்பட்டு நிற்கிறேன் என்பது காத்திரமான அணுகுமுறையா? அறிதோறும் அறியாமை கண்டாலன்றோ அதனின்றும் விடுபட்டு, புதிய திறப்புகளைக் கண்டடைய முடியும். வேர் தேக்கத்திற்கான தொடக்கப்புள்ளி இக்கோளாறே என்பேன்.
வறட்டு ஆச்சாரவாதிகளுக்கும், சொந்த அனுபவமற்று ஒரு மோஸ்தராக மேலைநாடுகளைக் காப்பியடிக்கும் இலக்கியம் படைக்க முயலும் நவீனத்துவ, பின்நவீனத்துவவாதிகளுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையே இன்றைய இலக்கியத்திற்குத் தேவைப்படுவதாக அவருக்குத் தோன்றுகிறது. இங்கவர் காணத்தவறிய பக்கங்களைக் காண்போம்.
சோதனை முயற்சியில் ஒரு படைப்பாளி தோல்வியும் அடையலாம். போலியான இலக்கியங்கள் எம்முகாமிலும் காணக்கிடைப்பனவே. சோதனை என ஜோடனையால் மட்டுமே ஒரு படைப்பைத் தூக்கி நிறுத்திவிட இயலாது. உண்மையான படைப்பு அதற்குரிய இடத்தை அடைந்தே தீரும். அது உடனேயும் நிகழலாம். காலத்தினாலும் கண்டடையப்படலாம். அதற்கென வாசகர்களை அது கண்டடைந்தே தீரும்.
சமாந்தர இலக்கியப் போக்குகளை உள்ளவாறு இனம் காண எத்தனிக்காமலேயே தமக்கு எட்டாக்கனிகளைப் புறக்கணித்துத் தம்மைத்தாமே அவர் ஏமாற்றிக்கொண்ட கோளாறும் இப்புள்ளியில்தான். பெரும்பாலானவற்றுடன் எவ்வாறவர் முரண்படுகிறார் எனவும் முன்வைக்கவில்லை. குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில படைப்புகளைத் தவிர என விதந்தோதுவனவற்றுடன் அவர் எவ்வாறு உடன்பட்டார் எனவும் எடுத்துரைக்கவில்லை. பின் நவீனத்துவம் பற்றிய பிழைத்துணர்ந்த திரியான வெளிப்பாடாகக் காணக்கிடக்கும் அவருடைய நூலே (பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும்). இத்தொடர்பிலான அவர் தெளிவின்மைக்கும் மயக்கங்களுக்கும் போதுமான சான்றாதாரமாகும். இது பற்றி விரிவாக எடுத்துரைக்க இங்கே இடமில்லை. 70 - களின் நிலைப்பாடுகளிலேயே 2014இலும் இன்றளவுங்கூட அவர் நீடித்திருப்பதே அவரது தேக்கத்திற்கான முகாமையான காரணி என்பதை வலியுறுத்து முகமாகவே இதனைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.
--
தம் கதைகளுக்குத் தாமே ஒரு விமர்சகராய் நின்று தன் மதிப்பீடும் செய்துகொள்கின்றார். சொல்லப்பட்ட செய்தியளவிலும் செய்நேர்த்தியிலும் தட்டித்தட்டிப் பொறுக்கிப் பார்த்துக் கனகச்சிதமாய்ச் செதுக்கி உருவாக்கப்பட்ட விதைப்பயிர்களெனவும் விதைக்காகாது எனினும் தின்பதற்கு மிகவும் ருசியான நன்னிப்பயிறுகளெனவும் ஒரு பட்டியலும் இட்டுள்ளார். ஓரிரு கதைகளின் வேக்காடு போதுமானதாக இல்லை எனவும் சுயவிமர்சனம் செய்துகொள்கின்றார். அவரவர் வாசிப்பிற்கேற்ப இத்தகு நெத்துப்பயிறுகளையும் நன்னிப்பயிறுகளையும் வெவ்வேறானவையாக நாம் இனங்காண இயலும்.
என் வாசிப்பின் வசதி கருதி நானும் சில வகைப்பாடுகளை விதந்தோதி இனங்காண முற்படுகிறேன். இவ்வகைமைப்பாட்டுக்கூடே ஒரு கதையே வெவ்வேறு வகைமையிலும் பட்டடங்கக்கூடும்.
இத்தகைய கதைகளே இத்தொகுப்பில் கணிசமானவையாகும். இவையாவும் 1985 - 2011 காலப்பகுதிக்கு உட்பட்டவை. அவரது தேக்கத்திற்கு அப்பாற்பட்ட மீள்வரவானவை. முற்குறிப்பிட்ட மூன்றாவது செல்நெறியின் பாற்பட்டன. இவை பெரும்பாலும் கட்சிகட்டும் குதர்க்கம் / கட்டவிழ்க்கும் தர்க்கம் எனும் இருமை எதிர்வின் வெளிப்பாடுகள். இந்த வகையிலான இப்படைப்புகள் தனித்துவம் ஆனவையே.
1970 முதல் 1985 வரை ‘சி.பி.எம்.’மிலும் 1985 முதல் 2005 வரை ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியிலும் (இப்போது பொதுவுடைமையைக் கைநெகிழ்த்த ‘தமிழ்த்தேசியப்பேரியக்கம்’) களப்பணியில் ஊன்றி இயங்கினார். பின்னர் அதனின்றும் விலகி ‘தமிழ்த்தேச மார்க்சியக் கட்சி’யைத் தொடங்கி அதனுடன் ’மண்மொழி’ இதழையும் நடத்தினார். ஆகச் சற்றொப்ப நாற்பதாண்டுக் காலப் பொதுவுடைமை இயக்க வாழ்க்கையில் அவருக்கு அனுபவபூர்வமான புரிதல்கள் கட்சி அலுவலகம், கமிட்டிக் கூட்டங்கள் மாநாடுகள், மாதர்சங்கம், கட்சி இதழ் எல்லாவகையிலுமாக இத்தகு கதைகளுக்கான கச்சாப் பொருள்களாகியுள்ளன. ‘பக்தி மார்க்கம்’, ‘பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்’- பெயரீடுகளே அருமையான எள்ளல்கள். ‘தக்கார் தகவிலர்’ கதையில் ‘புரட்சித்தணல்’ மாத இதழில் ஆசிரியர் கூட்டத்தைச் சித்திரிப்பது. ஆசிரியர் குழு ‘தக்கார் தகவிலர்’ எனத் தெரிவுசெய்யும் இலட்சணத்தை வாசிக்கையில் பின்னுரை வரிகள் நம் மனத்தில் பளிச்சிடுகின்றன.
“செம்மலரில் நான்கைந்து கதைகள் வெளிவந்ததற்குள்ளாகவே செம்மலருக்கும் எனக்குமான சில கருத்துவேறுபாடுகள் தெரிந்தன. இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதல்களும் அவர்களுடைய புரிதல்களும் வெவ்வேறு விதமாய் இருந்தன.”
“நினைத்ததை இதில் எழுத முடியவில்லை. சுதந்திரமாய்ச் செயல்பட முடியவில்லை என்கிற ஆதங்கம் மட்டுமே இருந்தது”
‘பக்தி மார்க்கம்’, ‘மையம்’, ‘சவாரி’ மூன்று கதைகளுமே கட்சி நிலைப்பாடுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் நிர்வாகப் பொறுப்பினர் நியாயமாகக் கேட்கப்படும் வினாக்களுக்கும் உரிய முறையில் எதிர்கொள்ளாமல் மேலிருந்து திணிக்கப்படும் முடிவுகளுக்குச் சப்பைக் கட்டுக்கட்டி நியாயப்படுத்துவது, வாதகதிகளைத் திசைத் திருப்பிக் குதர்க்கமாகக் குற்றஞ்சுமத்த முனைவது, கட்சி அலுவலகம் கட்சி நிர்வாகம் எல்லாமே வலதுசாரிக் கட்சி நடைமுறைகள் போலச் சீரழிந்துபோன அவலத்தைச் சித்திரிப்பனவே. உதாரணத்திற்குப் ‘பக்திமார்க்கம்’ கூட்டணி அரசியலைத் தக்கவைத்துக் கொள்ளுமுகமாக 5+5 என்றொரு தேர்தலின் போதும், 5+5 என்று மறுதேர்தலின் போதும் நியாயப்படுத்த முனையும் சீரழிவின் சித்திரம். இவ்வகையில் ‘சவாரி’யில் வெளிப்படும் பகடி அங்கதங்கள் உச்சபட்சமானவை. அது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தபின் 2006 பிப்ரவரியில் ‘தீராநதி’ இதழில் வெளியானது. பரமார்த்தகுரு சீடர் கதையின் அதிநவீன வடிவமானது எனலாம்.
‘பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்’ மாநாட்டில் பங்கேற்க இயலாமல் போன ஏக்கத்துடன் போய்த் திரும்பி வந்த தோழருடன் மாநாட்டு அனுபவங்களைக் கேட்டறிகின்றபோது எதிர்கொள்ளநேரும் பெரிய ஏமாற்றங்களைச் சித்திரிப்பது என்றால் ‘வினை’ மாதர் சங்க மாநாட்டிற்கு மனைவியை அனுப்பிவைக்கும் தோழர் மனைவி மீண்டதும் எதிர்கொள்ள நேரும் சிக்கலைச் சித்திரிப்பது.
“தனியாய்த் தட்டித் தட்டித் தேற்றி உருவாக்கிய உணர்வுகள் சிந்தனைகளை ஆகர்ஷித்து வளர்த்தெடுக்கும் மையமாக மாநாடு அமையும் என்று பார்த்தால் அதோடுமட்டும் அமையாமல், இன்னொருபக்கம் அது ஏற்கெனவே வளர்த்தெடுத்து உருவாக்கி வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டு உடைத்து அல்லவா அமைந்துவிட்டது. இதெல்லாம் என்ன போக்கோ கண்றாவி”
‘பிரார்த்தனைகளும்...’ கதையிலும் இவ்வாறே மனம் கைக்க வைத்தது மாநாட்டு அனுபவம். ‘வினை’ கதையில் வினை என்பது அவன் சொந்தக்காசில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வது. மாதர்சங்க மாநாட்டிற்கு மட்டுமில்லை. இனி மனைவியை வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதா என மாறும் அத்தோழரை அல்லாட வைத்துவிடுகிறது. அதைக்கூடக் கொள்கை தொடர்பான பிரச்சினையாய் இருப்பதனால் அடுத்த முறை மேல்கமிட்டிக்குப் போகையில் மாவட்டச்செயலாளரைக் கேட்டு முடிவெடுக்கலாம் என நினைத்துக்கொண்டதாக நக்கல் முத்தாய்ப்புடன் முடிவடைகிறது ‘வினை’.
இக்கதைகள் பொதுவுடைமை இயக்கப்போக்குகளின் மீதான அரசியல்பகடி அங்கதக்கதைகள் என்றால் ‘கிட்டுதலும்’, ‘முனைப்பும்’ தனித்தமிழ் மீதானதாகவும் ‘நா’வன்மை நீர்த்துப்போன பட்டிமன்றம் வடிவம் மீதானதாகவும், அமைந்தியலும் பகடியாட்டக் கதைகளே. ‘வைபவம்’ திராவிட இயக்கக் கொள்கைக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடுகளை நாள்தோறும் பார்த்து எல்லாச் சடங்குகளுடனும் அய்யரை வைத்து நடத்தாமல் தலைவரை வைத்து நடத்தும் சுயமரியாதைத் திருமணத்தை நக்கலடிப்பது.
முகூர்த்தநேரம் முடியறதுக்குள்ள தாலிகட்டி முடிந்தபின் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர்ந்தன.
பின்வரிசையில் சிவப்புச்சொக்காய் போட்ட ஒரு இளைஞன்,
‘இப்பெல்லாம் இவரு ஒரு கல்யாணத்துக்கு எவ்ளோ வாங்குறாரு?’ என்றான்.
‘இருநூத்தி அம்பது ரூபா’
‘அய்யரு வந்தா எவ்வளவு குடுப்போம்’ என்றான்.
‘என்ன ஒரு அஞ்சு ரூபா, அரிசி, பருப்பு’
‘பரவால்ல... இவரு கல்யாணத்துக்கு அய்ம்பது பார்ப்பானையாவது ஒழிச்சி சமுதாயத்த சீர்த்திருத்துறாரு’ என்றான்.”
- இது 73இல் செம்மலரில் வெளியான கதை
- இது முதலாம் செல்நெறிக்கதை.
அய்யரை மட்டும் வைக்காமல் அய்தீகங்களைக் கறாராகக் கடைப்பிடிக்கும் வகையில் அது திராவிடக்கட்சியின் சீரழிவைச் சித்திரிப்பது வரை சரிதான். ஆனால் வெறும் தலைவர்க்கான தொகை அய்யர் தட்சணை ஒப்பீடாகச் சீர்த்திருத்தமுறையை நக்கலடிப்பது அக்காலக்கட்ட பொதுவுடைமைக்கட்சியரின் திராவிட இயக்க ஒவ்வாமையையும் அம்பலப்படுத்தக்கூடியதே!. இயக்க இதழ்சார் கதைகள் விளாம்பழங்கள் எனக் கண்டோம். அவற்றில் இவ்வாறான ‘வேழமுண்ட விளாங்கனி’களும் கிடக்கத்தான் செய்கின்றன.
திருமணமான பத்தாண்டுகளில் தன் குடும்பத்துடன் தனியே சுற்றுலா என்றெல்லாம் அவன் கூட்டிப்போனதே இல்லை. புரட்சி வந்து பொதுவுடைமைச் சமுதாயமும் மலர்ந்து தொழிலாளி வர்க்கமெல்லாம் ஜாலியாக இருந்தால் அப்போதுதான் அப்படிச் சுற்றுலா போகலாம் என்பதே அவன் நினைப்பு.
மனைவியின் நச்சரிப்புத் தாளாமல் வேலையற்ற சனி ஞாயிறு ஒன்றில் சென்னையிலேயே இரண்டு நாளும் தங்கி இடங்களையும் சுற்றிப்பார்த்து நண்பர்களையும் சந்தித்து வரலாமெனப் பயணப்பட்டார்கள்.
சென்னை வந்து மாநகரப் பேருந்தில் பயணித்தவாறே சட்டக்கல்லூரி, லைட் ஹவுஸ், குறளகம், சென்டரல் ஸ்டேசன், மாநகராட்சி அலுவலகம், இலங்கை வங்கி எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியதோடு அந்தந்தப் பகுதிகளில் நடந்தேறிய போராட்ட வரலாறுகளையும் எடுத்துரைக்கிறான். எங்கோ பார்த்தபடி அது அதற்கும் தலையாட்டி வருகிறாள் மனைவி.
இதான் பெண்கள் கிறித்துவக்கல்லூரி... அதான் டிபிஐ மாநிலக்கல்வி இயக்ககம், சாஸ்திரிபவன், மற்ற மற்ற அலுவலகங்கள், வள்ளுவர் கோட்டம், முற்போக்கு இதழ்களைப் போடும் ‘அலைகள்’ வெளியீட்டகம், ‘விஜயாவாகினி’ ஸ்டுடியோ என அவற்றின் மகாத்மியங்கள் ஆயிரக்கணக்கான போராட்ட வரலாறுகள் என எடுத்துரைப்புகள் தொடரலாயின. நண்பர் வீட்டிற்குப் போய்த் திரும்பினர். பீச்சிற்குப் போகலாம் எனும் மனைவியை அதெல்லாம் லக்கேஜ் இல்லாம கைய வீசிக்கினு எப்பனா வர்றப்பா பாத்துக்கலாம்னு மடக்கிவிட்டு நம்ம ஆள் ‘ஹிக்கின் பாதம்ஸ்க்குக்’ கூட்டிப்போயாயிற்று. அங்குள்ள குளிர்சாதன வசதி பீச்சில் கிடைக்காதாம். வெப்பக்காத்தா வீசுமாம். அடுத்தடுத்து நண்பர் வீடுகள் விருந்தென ஓடிப்போயின நாட்கள். ஊர்த்திரும்புகிறார்கள். வண்டி, வண்டலூரைத் தாண்டுகையில் ‘தோ தெரியுது பார், இதுதான் ஜூ... மிருகக் காட்சிசாலை உள்ள மிருகங்கலெல்லாம் இருக்கும்’ என்றானவன். ‘மிருகக்காட்சிசாலைன்னா மிருகங்கள் இல்லாம மனுஷங்களா இருப்பாங்க. வீணா வயிற்றெரிச்சலக் கௌப்பாம வாய மூடிக்கினு பேசாம வாங்க கம்முனு’ - அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். இக்கதையை வாசிக்கையில் கந்தர்வனுக்கு வண்ணதாசன் எழுதிய கடித வரிகள் மின்வெட்டலாயின:
“உங்களுடைய துணைவியாருக்கும் சற்று நெருக்கமான நேரம் ஒதுக்குங்கள்; ஸ்தாபனமோ, இலக்கியமோ அந்தப் பெண்களை அவர்களுடைய இடத்திலேயே விட்டு விட்டு நீ மட்டும் எங்களுக்குக் காரியம் பார் என்று சொல்லவில்லை.
நமக்கு வாய்த்திருப்பதெல்லாம் அருமையான மனுஷிகள் பூமி உருண்டையைப் புரட்டி விடுகிற நெம்புகோல்களுக்கு அடியில் அவர்கள்தான் செங்காமட்டை மாதிரி நசுங்கிக்கொண்டு கிடக்கிறார்கள். என்னையும் உங்களையும் அனுசரணையாயும் பத்திரமாயும் வைத்திருக்கிற பெண்களுக்கு நாம் அப்படியொன்றும் செய்துவிடவில்லை” (எல்லோருக்கும் அன்புடன், ப.95)
இயக்கம்சார் அனுபவங்களுடனே இவ்வாறெல்லாம் மனம் கைத்துத்தான் வெளியேற நேர்கின்றது. சுட்டெரிக்கும் உண்மைகள் இப்படியெல்லாந்தாம் நீறுபூத்த நெருப்பாக இராசேந்திர சோழன் கதைகளினூடே காணக்கிடக்கின்றது.
“சில காலம் கட்சியில் இருந்த தோழன். விரிந்த படைப்பாளி. யாரோ ஓர் அறிஞன் சொன்னதாக அடிக்கடி சொல்வான்: ‘எந்த இடத்தில் நீ கற்றுக்கொள்ள ஒன்றுமில்லையோ அந்த இடத்தைவிட்டு உடனடியாக வெளியேறி விடு’ என்று. ‘இப்ப கட்சியில நாம்பக் கத்துக்குறதுக்கு ஒண்ணுமில்லப்பா. கத்துக்குடுக்குறதுக்கும் ஒண்ணும் இல்ல. எதுக்குத் தெண்டத்துக்கு அதுல நாளத்தள்ளிக்கினு. பேசாம வெளியே வந்து உருப்படியா வேறவேல எதுனா இருந்தா பார்க்கலாம்’ என்பான்”.
‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’, ‘வான் சுதை வண்ணங்கொளல்’ என்னும் குறட்பாக்களும்; மூளைச் சோம்பேறிகளோடும் நிரம்பிய கோப்பைகளோடும் மல்லுக்கட்டி என்ன பயன்? எனும் திருமந்திரமும் மின்வெட்டாகின்றன.
“அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவார்க்கும் அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வார்அறி வோரே”
- திருமூலர்
--
“எழுபதுகளில் இப்படிப்பட்ட கதைகளைப் படித்த இலக்கிய விமர்சகர் ஒருவர் ‘தேவடியாள்’ பற்றிப் பாம்ப்லட் போடுகிற எழுத்தாளர் என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். சரி அவர்தான் அப்படி என்றால் நம்முடைய முற்போக்குகள் என்று சொல்லப்பட்டவர்கள் முகாமிலிருந்து வந்த விமர்சனம் அதைவிடச் சிறப்பு... ‘கோணல் வடிவங்கள்’ பற்றியும் ‘வானம் வெளிவாங்கி’ பற்றியும் அவர்கள் செய்திருந்த விமர்சனத்திற்கு, 15, ஜூன் ‘உதயம்’ இதழில் ‘சிகப்புக் காவிகள்’ என்கிற தலைப்பில் நான் பதில் எழுதியிருக்கிறேன்.”
“புரட்சிக்காரனுக்கு முக்கியமான ‘அயிட்டங்கள்’ எதுவும் இருக்கக்கூடாது அவன் ‘புரட்சி’ மட்டுமே பண்ணிக் கொண்டிருக்கவேண்டும். வேறு எதுவும் ‘பண்ணக்’கூடாது என்பது போன்ற மூடநம்பிக்கை”
இவ்வாறெல்லாம் எழுத்தாளர்களுக்கு இப்படி ‘தேவடியாள் பாம்ப்லெட்’ என முத்திரை குத்தப்படும் செக்ஸ் எழுத்தாளர் லேபிள் ஒட்டப்படுவதெல்லாம் ஒன்றும் புதிதில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், தஞ்சைப்பிரகாஷ் என வாழையடி வாழையாக வாய்க்கின்ற வழமையானதே.
இராசேந்திரசோழனின் காமத்திளைப்புப் பாலியல் கதைகளைப்
- என வகைப்படுத்தலாம்.
‘சிதைவுகள்’ கதை ‘விழிப்பு’ இதழிலும் ‘சில சந்தர்ப்பங்கள்’ செம்மலரிலும் வெளியாகின. சிதைவுகள் கதையால் ‘இமேஷ்’ பாழாகிவிடுமென்ற தோழர்கள் குறுக்கீட்டால் ஒரு பாரா சப்பைக்கட்டு போட்டு இதழில் வெளியிட்டதை இத்தொகுப்பில் நீக்கிவிட்டதாகப் பதிவு செய்துள்ளார். சிதைவுகளும் எதிர்பார்ப்புகளும் மணமான பெண்ணின் மீதான இளைஞனின் எதிர்பார்ப்புகள் வெவ்வேறு விதங்களில் சிதைவதைச் சித்திரிக்கப்பட்டனவே. சிதைவுகள் அவன் மனத்திலிருந்த அவளைப்பற்றி இமேஷ் அவளுடைய அவலங்களால் சிதைகிறது.‘எதிர்பார்ப்புகள்’ அவளை அடையும் நோக்கில் அவள் அவனைப் பொருட்படுத்தாமல் குழந்தையைப் புறக்கணிப்பதில் முடிகின்றது.
‘பாசிகள்’ குடும்பத்திற்குத் தெரியாமல் பாலியல் தொழில் புரியும் கதை அது அவருடைய ஆசிரியத்துவத்திலான ‘பிரச்சினை’ இதழிலேயே வெளி வந்தது.‘வானம் வெளிவாங்கி’ ‘அஃக்’ இதழில் வந்தபோதே வாசித்துள்ளேன். என் பார்வையில் அவருடைய சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்றே. ஒரு இதுவுக்கு இவ்வளவு. ஒருமணிக்கு இவ்வளவு. ஒரு நைட்டுக்கு இவ்வளவு எனப் பேரங்கள்; தொழில்போட்டி எனத் தொடரும் அக்கதை, மறுபடி ‘போட’ முடியாதபடிக்குச் சோர்ந்தோய்ந்த அவன் நிலையின் குறியீடே ‘வானம் வெளிவாங்கி’ எனும் அருமையான தலைப்பு.
“ஏதோ நீயும் தப்பு பண்ணிட்ட. நானும் தப்புப் பண்ணிட்டேன். போவட்டம். இதுவரிக்கும் நம்ம பழக்கமானதுலருந்து ஒம்புருஷன் வர்தப்பத்தி எப்பனா ஏதுனா நான் வாயத் தெறந்து கேட்டுருப்பனா. ஏதோ கட்னவனாச்சே; அது கூடம் அவனும் கண்டும் காணாத மாதிரி பெரும்போக்காப் போயிக்கினுகிறானேன்னு நானும் ஒண்ணும் கேட்டுக்கிறதில்ல இல்லியா”
இப்படியே ஒரு கதாபாத்திரம் தன் தொடுப்பிடம் அவளது கட்டுனவனுக்கும் இல்லாத ‘பொசசிவ்னஸ்’ உடன் உரிமை கொண்டாடித் தொடர்கின்றது; இத்தகைய கதைமுடிச்சையே வாய்ப்புணர்ச்சி மூலம் சோதிப்பாக ஜி.முருகன் ‘புது எழுத்தில்’ ஒரு கதையை எழுதியுள்ளார்.
“இத்தினி நாளு மாதிரி இப்படியே போய்க்னு இருந்துட்டா ஒண்ணும் வரப் போறதில்லை; ஒம் புருஷனைத் தாண்டி இன்னொரத்தங்கிட்டயும் போறன்னா, எனக்கு எப்படி இருக்குது தெரியுமா?”
- இதுதான் ‘கோணல் வடிவங்கள்’. இது ‘கசடதபற’வில் வெளியான கதை. ஆம். அந்த வடிவங்கள் அப்படிக் கோணல்மானலான வடிவங்களே. அது அதுக்கும் அது அதற்கான நியாயங்களும் உண்டுதானே?
இப்படிக் கண்டுங்காணாமாதிரி பெரும்போக்காக ஊடாடிக்கிடக்கும் வெவ்வேறு கதாபாத்திரங்களை இனிக் காண்போம்.
“புருஷன் பெரும்போக்கு, ரெண்டுங்கெட்டான். எதையும் வித்தியாசமாக எடுத்துக்கொள்வது கிடையாது என்பதெல்லாம் உண்மையிலேயே வாஸ்தவம்தான்” - இது ‘நாட்டம்’ கதாபாத்திரச் சித்திரிப்பு.
இவ்வாறே ‘ஊனம்’, ‘நாய் வேஷம்’ கதைகளிலும் வெவ்வேறான கதையாடலூடே ஊடாடும் கதாபாத்திரங்களும் “அவரு இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்கமாட்டாரு. ரெண்டுங்கெட்டான். எதுவும் தெரியாது... உங்களாட்டம் ஆம்பிளயா நான் எங்கியும் பாக்கல. இப்ப எதுக்கு இப்படி மூஞ்சத் தூக்கிவச்சிக்கினு இருக்குறீங்க” என்று கேட்டபடியே புள்ளாண்டனை உக்கிரத்தோடு நெருங்குகின்றாள் ‘நாட்டம்’ நாயகி.
இவ்வாறே ‘ஊனம்’ நாயகி சாந்தாவும் “நீங்க எப்பயாவது என்ன கெனவுல கண்டுருக்கீங்களா? எனக் கேட்பவளிடம், இது என்ன கேள்வி என ஒன்னைக் கேட்கிறான் அவன்.”
“இல்ல நேத்து ராத்திரி நான் ஒங்களப்பத்தி ஒரு கனவு கண்டேன்” என்பவளிடம் “என்னான்னு” கேட்கிறான் அவன்.
“ஒங்கள நான் வச்சிக்கினு இருக்குற மாதிரி” என்கிறாளவள்.
இவ்விரு கதைகளிலுமே நாயகியரின் இத்தகைய அத்துமீறல் அழைப்புகள் பொருட்படுத்தப்படவில்லை. சாந்தாவிடம் அவள் ‘இவரும் போக்கான’ கணவன் அவ காலத்தொட்டுக் கும்பிடறதா நெனைச்சுக்கச் சொல்லி நாளையிலர்ந்து யார்கிட்டயும் பேச்சு வச்சிக்கிறதில்லைனு மனசுல முடிவுபண்ணிக்க மன்றாடியும் அவளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. இறுதியில் அவன் தூக்கில் தொங்கி விடுகின்றான். (‘பேச்சு வச்சுக்கிறது’ என்பது தொடுப்பு வச்சுக்கிறதயக் குறிக்கும் தென் ஆர்க்காடு பேச்சுவழக்கில்)
‘நாய்வேஷம்’ கதையிலோ இருசப்பன் மனைவிக்கும் ஏகாம்பரத்திற்குமான தொடர்பு இருப்பது அவன் காதுபடவே ஏளனம் செய்யப்படலாகின்றது. ஏளனம் புரிவோரிடம் அப்படியெல்லாம் ஏதுமில்லையென்றே அசமடக்குவான் இருசப்பன், விடாக்கண்டனாக மணி அவனை இழுத்துக் கொணர்ந்து கையும் களவுமாய்ப் பிடிபட வைத்துவிடுகிறான்.
“நம்பப் பொண்டாட்டி அப்டியாக்கொந்தவ இல்லன்னு இத்தினி நாளா எதியும் கண்டுக்காம இருந்திட்டண்டி. அடி நாதாரி சிறுக்கி. இப்படியா பண்ணுவ நீ”
இப்படி வூடு கட்டுகிறான் இருசப்பன். அந்த அலம்பல் சற்றே ஓய்ந்து முடிந்ததும் அவள் அவன் தோளைத்தடவி,
“என்னாத வந்துடுத்து உனக்கு இன்னைக்கி. இத்தினி நாளா என்னைக்குமில்லாம” என்றதும் அவன் ஏதும் பேசாமல் அவளைக் கட்டிப்பிடித்து மடியில் முகம் புதைத்து அழுதான்.
‘சூழலி’லும் ‘அவரோட லோகத்’திலும் இல்லற உறவைக் கணவன் அறியாமல் மனைவி மீறுகிறாள்.
“இங்க நீயும் இல்ல. ஆத்துல நானும் இல்லியா. இந்த வேலைக்காரிக்குக் குளுர் உட்டுடுத்து. ஆரோ அவ அத்த மவனாம் சூளமேட்ல அவனைக் கூட்டு வச்சிக் கொஞ்சிக்கினு இருக்கிறா கூடத்திலே... இது என்னவீடா பார்க்கா. மொதல்ல பக்கட் ஜலத்த கொண்டாந்து அந்தக் கூடத்தக் கழுவி விடச்சொல்லு”
இதுதான் ஆத்துக்காரியின் கதை அறியமாட்டாத ‘அவரோட லோகம்’.
‘சூழலி’ல் ஹிண்டு பேப்பர் பார்க்க வரும் எதிர் வீட்டுப்பையனை அவள் சகோதரனாகப் பாவித்தே ‘வா, போ’ என ஒருமையில் அழைக்கிறாள். அவன்மீது மோதிக் கொள்ள நேர்ந்ததைக் கூட கணவனிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவரும் விகற்பமாகக் கருதவில்லை. பேப்பரில் ஏதோ காட்டுவதை எதேச்சையாகப்படுவது போல் அவன் முழங்கையைத் தொடுகிறாள். பின் அவள் குளித்து முடித்து வந்தபின் திடீரென அவள் மீது பாய்ந்தவன் முத்தமிடத் தொடங்கிவிடுகிறான். மறுப்பேதும் சொல்லாமல் இணங்கிவிடுகிறாள். இது தொடர்கின்றது. பணியிட மாறுதலாய் வேறு ஊர்க்குக் குடிபெயர்கின்றாள். இன்னொருவரை மனைவியுடன் தொடர்புபடுத்திக் கணவன் அய்யுறுகின்றான். தப்புச் செய்தபோதெல்லாம் நம்பிய கணவன் செய்யாத தப்புக்கு அய்யுறுவதை அவளால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இந்தச்சூழலில் எதிர்வீட்டுப் பையனும் பணிமாறுதலாகி அங்கேயே வருகிறான். அவனை இயல்பாக மகிழ்ந்து வரவேற்கும் கணவன் வீட்டில் சாப்பிடச் சொல்லிவிட்டு வெளியே போகிறார். இந்த நம்பிக்கையைக் குலைத்து மீண்டும் பாவப்பட்டவளாகத்தான் தயாராகவில்லையென உறுதி பூணுகிறாள் அவள்.
“ஒரு கோணத்தில் யோசிக்கக் கதைச்சம்பவங்களின் நிகழ்களம் அதாவது அதன் புறப்பரப்பு மிகக் குறுகியவரம்புக்கு உட்பட்டதாகவே தெரிகிறது... இப்படி இவை சுருங்கி இருந்தாலும் கதைகள் தொடும் அகப்பரப்பின் எல்லை விரிவானது. இதுக்கு முன் பலரால் தொடப்படாதது. இலக்கியச்சாரம் அகப்பரப்பே என்பதால், முன்னதன் குறையை இது நிவர்த்திச் செய்து விடும் என்று தோன்றுகிறது.”
இது அவருடைய சிறுகதைகள் பற்றிய அவரின் தன்மதிப்பீடு. அவர் சொல்லுமாப்போலே ‘கதை ஒன்று; சொல்லல் பல’ என வாங்கு ஒரு கதை முடிச்சையே வைத்து அவரால் வெவ்வேறு கதைகளை விதவிதமாகப் பின்னிக்காட்டிட முடிகின்றது என்பதற்கும் அவற்றிற்கூடாக அடிமனச்சலனங்களின் தருணங்களைக் கதையாக்குவதில் வல்லமை என்னும் பதிப்புக்குறிப்பிற்குமான நிரூபணங்களே அவருடைய காமத்திளைப்புப் பாலியல்கதைகள் எனலாம். முழுக்க முழுக்க நல்லனவாகவோ அல்லனவாகவோ வெறும் தட்டையான பாத்திரங்களாக இல்லாமல் அங்கவற்றின் குறைகளோடும் நிறைகளோடும் கலந்து கட்டியவாறே அவருடைய கதாபாத்திரங்கள் காணக்கிடக்கின்றன. உதாரணத்திற்கு ‘சூழலின்’ கதைசொல்லியான கதாபாத்திரம் எத்தகைய சூழலில் தவறிழைக்க நேர்கின்றது. எத்தகைய சூழலில் அதனின்றும் மீள நேர்கின்றது எனச் சித்திரித்துள்ள பாங்கில் சூழலும் அவருடைய சிறந்த கதைகளில் ஒன்றாக எனக்குப் படுகின்றது.
--
ஒரு பக்கம் யதார்த்தவாதமே காலியாகிவிட்டது என்னும் மரண அறிவிப்புச் சொல்லாடலும், மறுபக்கம் அதற்கென்றுமே சாவில்லை ‘பொருட்கு அழிவில்லை. நிலைமாற்றமே உண்டு’ என்னுமாப்போலே யதார்த்தவாதமே பன்முகமானதாக மாறி மாறி வடிவெடுத்து உயர்ந்திருக்கும் எனும் எதிரீடும் முன் வைக்கப் படலாகின்றன.
யதார்த்தவாத மரண அறிவிப்புச் சொல்லாடலைக் கேள்விக்கு உள்ளாக்குமுகமாக அது வெவ்வேறு வகையான லேபிள்களுடன் பிரமாண்டமான இலக்கியத்துவ ஜோடனைகள் செய்யப்பட்டு வெளியே வந்து நின்று சீனத்து யாளி மாதிரி நெளிந்து கொண்டிருக்கின்றது எனத் தொடர்வார் பிரமிள்:
“யதார்த்தவியலைப் பச்சைவெட்டான நிஜம் என்று கண்ட கணிப்பு காலாவதியாகிவிட்டது என்பதே சரியானபார்வை. வாழ்வின் நிஜத்தன்மையைச் சாதிக்கும் யதார்த்தவியல் மறையவில்லை, மறையாது, மறையவும் கூடாது” - ‘வெயிலும் நிழலும்’ (ப.520)
இதனை வேறுவிதமாக எடுத்துரைப்பார் எம்.ஜி. சுரேஷ்:
“யதார்த்தம் காலாவதியாகிவிடாமல் இருக்கும் பொருட்டுத் தன்னைப் புதுப்பித்தும் கொள்ளும்போது, அது பின்நவீன யதார்த்தமாக மாற்றங் கொள்கிறது.”
“நவீன யதார்த்தத்துக்கும் பின்நவீன யதார்த்தத்துக்கும் இடையே நிலவும் வித்தியாசம் இதுதான். நவீன யதார்த்தப் பிரதிகள் ஒற்றை அர்த்தம் (Univalent) கொண்டவை. பின்நவீன யதார்த்தப் பிரதிகள் பன்முக அர்த்தம் (Multivalent) கொண்டவை.”
- பின்நவீனத்துவம் (பக்.19 - 15)
யதார்த்தம் குறித்த இராசேந்திரசோழனின் புரிதல்கள் எவ்வாறு காணக்கிடக்கின்றன எனக் காண்போம்.
“எழுதும் எழுத்தெல்லாம், யதார்த்தமாகத்தான் இருக்கவேண்டும் என்றோ, யதார்த்தத்தைக் கடக்கவே கூடாது என்றோ கட்டுப்பெட்டித்தனமெல்லாம் கலைப்படைப்பில் எதுவும் கிடையாது. எழுத்தில் உண்மை இருக்க வேண்டும். அது எந்த வடிவு கொண்டால் என்ன என்பதே சரியான புரிதலாக இருக்கமுடியும்.”
“உண்மை என்பது யதார்த்த நிகழ்வுகளில்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. யதார்த்தம் கடந்த நிகழ்வுகளிலும் அது இருக்கலாம், இருக்கிறது. காரணம் நிஜவாழ்வின் யதார்த்தம் வேறு; கலைப்படைப்பின் இலக்கியப்படைப்பின் யதார்த்தம் வேறு”
இராசேந்திரசோழனுக்குள் இருக்கும் களப்பணியாளனான தோழனுக்கு வாய்த்திருக்கும் பின்நவீனத்துவம் குறித்த புரிதல் பிழைத்துணர்ந்த திரிபானவையே என்ற போதிலும், இராசேந்திரசோழனுக்குள் இருக்கும் படைப்புக் கலைஞனின் யதார்த்தவாதம் குறித்த புரிதல்கள் நவீனத்துவ, பின்நவீனத்துவச் சொல்லாடல்களைப் பாவிக்காமலே அத்தகு புரிதல்களுக்கு அண்மித்துவருகின்றன.
நவீனத்துவ, பின் நவீனத்துவ உத்திகளைச் சரிவர உள்வாங்கிக் கொள்ளாமலே அவை குறித்த ஓர்மையற்றே கூட ஒருவருடைய படைப்பிலவை ஊடாடியும் கிடக்கக்கூடும். அது நேரடித் தர்க்கமாக அல்லாமல் அதன்தாக்கம் வாய்க்கப்பெற்ற மற்றொரு எழுத்தாளரின் தர்க்கத்தால் பெற்ற ஆக்கமாகக் கூட அமையலாம்.
இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் எல்லாம்.இத்தகைய கூறுகளை எல்லாம் இனங்கண்டு எடுத்துரைத்தாக வேண்டியதே விமர்சனங்களின் கடமை என்கிற உள்ளார்ந்த புரிதலுடன் அதனையே இங்கும் நான் ஈடேற்றத் தலைப்படுகிறேன்.
“படைப்பு என்பதே ஒரு இசைக்கோவை போல எனக்கு நிகழ்கிறது. அக்கோவையில் தொடக்கம், முடிவு, ஏற்ற இறக்கங்கள் எல்லாம் ஒரே சீராக இறுதியாக்கப்பட்ட உருவ அமைதியில் இருக்க வேண்டும் என மனது விரும்புகிறது. இதனாலேயே ஒவ்வொரு படைப்பும் அதன் போக்கில் தன்னளவில் ஒரு வரைபடத்தை ஒழுங்குபடுத்தி நிறைவு செய்கிற வரைக்கும், குறிப்பிட்ட இடங்களில் கதையை மாற்றி மாற்றி அடித்துத் திருத்தி எழுதிக் கொண்டிருக்கவேண்டியது எனக்குத் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது”
- இது அவர்தம் படைப்புருவாக்க நெறிமுறை குறித்தான வாக்குமூலமாகும்.
இங்கு நவீன சிறுகதைக்கும் பின்நவீன சிறுகதைக்கும் இடையே அமைந்தியலும் வேறுபாட்டம்சங்களை விதந்தோதி இனங்காணலாம்.
“நவீன சிறுகதைக்கு ஆரம்பம். நடு, முடிவு ஆகிய அம்சங்கள் உண்டு. பின்நவீன சிறுகதைக்கு இது கிடையாது. நவீன சிறுகதைக்கு மையம் உண்டு. அதாவது கதைக்கரு என்று ஒன்று உண்டு. பின்நவீனச் சிறுகதைக்கு மையம் என்று எதுவும் கிடையாது”
- எம்.ஜி.சுரேஷ் (பறை-2015, ப.118)
இத்தகைய புரிதல்களுடன் இராசேந்திரசோழன் கதைகளில் காணக்கிடக்கும் நவீன யதார்த்தம், பின்நவீனத்துவ யதார்த்தக்கூறுகளை இனம் காணப்புகலாம்.
“ஒரு கதாபாத்திரத்தின் பலங்களோடு பலவீனங்களையும் சேர்க்கிறபோதே அது யதார்த்த கதா பாத்திரமாக உண்மைக்கு நெருங்கிவர முடிகிறது.”
“ரியலிசத்தின் பன்முகங்களாக இருக்கிற நியோ ரியலிசம், சர்ரியலிசம், ரொமான்டிஸம், மாடர்னிசம், போஸ்ட்மாடர்னிசம் என்கிற பன்முகங்களின் கலவையாக அல்லது கலவைகளுக்கிடையே அணுக்களின் நிற்காத பாதையற்ற பாதையின் ப்ரவ்னியன் நகர்வாய், இயக்கமாய் ரியலிசம் தன்னை நதியின் ஒருதுளியின் பயணிப்பாய் புதிது புதிதாய் தனதான இருத்தலை நகர்த்திக் கொண்டே இருக்கிறது”
- தி.குலசேகர் (படச்சுருள் - செப்.18)
திரைப்படங்களை முன்னிறுத்தித் தி.குலசேகர் எழுதிச் செல்வது இங்கு நோக்கத்தக்கது. இராசேந்திரசோழன் கதாபாத்திரங்களின் பாத்திர வார்ப்பைப் பேசுமுகமாக இதனை இங்கே எடுத்தாள நேர்ந்தது. அவருடைய கதாபாத்திரங்களை ஏலவே நாம் இனம் கண்டவாறு அவையாவும் அவ்வவ்வற்றிற்கே உரிய குறை நிறைகளோடு ஊடாடிக் கிடப்பன. பிம்பங்களைச் சிதிலமாக்குவன.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குவன. அரசியற் போலிகளை அம்பலப்படுத்துவன. இத்தகு பிம்ப உடைப்பும் கட்டவிழ்ப்பும் பின்னை நவீனத்துவக் கூறுகளேயாம்.
இத்தகைய புரிதல்களின் வெளிச்சத்தில் இங்கே விமர்சன யதார்த்தவாதக் கதைகள் என
இவற்றை வகைப்படுத்தலாம். அவருடைய பெரும்பாலான கதைகள் விமர்சன யதார்த்தவாதக் கதைகளே வகைமாதிரிக்குச் சிலவற்றையே எடுத்துக் காட்டியுள்ளேன்.
‘ஊற்றுக்கண்களும்’, ‘இடைவெளி’யும் வேலையின்மை, மன உளைச்சல்களின் வெவ்வேறு வித வெளிப்பாடுகள்.
‘மதராசும் மன்னார்சாமியும்’ போலீஸ் பொய்க்கேஸ் போட ஆள் பிடிக்கிற கதை என்றால் ‘பக்கவாத்தியமோ’ போலீஸ்க்கு ஒத்தூதுகிறக் கதை.
வீடிழந்தவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் அதிற்பாதியை மாரியம்மன் கோவில் கட்டுவதாகப் பறிக்கும் இடைத்தரகருக்கு எதிராக நீதிக்குரல் எழுப்பும் நாராயணனுக்கு நேரும் கதியை எடுத்துரைப்பதே ‘நீதி’.
“அந்த ஊரிலே போலீஸ் இருந்தது. ஆனால் அது யாருக்காகவோ. அதைவிட அதிசயம் நாராயணனை ஒற்றைப் புளியமரத்து முனீஸ்வரன் அறைந்துவிட்டதென்றோ; கோயிலுக்குக் காவு தரமாட்டேன் என்றதால் பாவம் அவனை மாரியாத்தாள் பழித்தீர்த்து விட்ட மண் என்றோ ஊர் மக்கள் பேசிக் கொண்டிருந்ததுதான்.”
நாராயணன் தீர்த்துக்கட்டப்பட்டதோ யாருக்காகவோ போலீஸ் இருக்கிறதல்லவா அந்த மகானுபவர்களால்தான். பழி புளியமரத்து முனி தலையிலும் மாரியாத்தா தலையிலும். ஆற்றங்கரையில் பிள்ளைகளால் சீண்டப்படும் பைத்தியக்காரப் பாட்டி ஆற்றில் விழுந்த ஒரு பிள்ளையைக் கரையேற்றி முதலுதவிகளும் செய்கிறார். அப்பாட்டியிடமிருந்து தன் மகனைப் பறிக்கும் அம்மா அவனிடம், ‘ஆரூடீ கண்ணு ஒன்ன கொளத்தில் பிடிச்சித் தள்ளினது’ எனக் கேட்க அது கிழவி பக்கம் கையைக் காட்டுகிறது. இதுதான் ஒரு மனவெளி மனுஷியின் கதையான ‘சடங்கு’.
‘பயன்கள்’ கிணற்றில் கண்டெடுக்கப்பட்டு எழுந்தருளிய இகமு. (இக்கட்டைக் களையும் முக்கூட்டு) விநாயகரால் அவரவர்கட்கும் நேர்ந்த பயன்களால் ராசியில்லாத அவருக்கு நேர்ந்த கதியைச் சித்திரிப்பது. ‘அண்ணா டீ ஸ்டால்’ அப்பாசாமி, பத்மநாபன் டீக் கடை, பெருமாள் பண்டிதர் ‘கிராப் ஷேவிங் பார்பர் ஷாப்’, ‘ஏக் மாரா, தோ துக்கடா’ சுபான்சாயுபு பெட்டிக்கடை, ஊருக்கப்பால் சாலையோரப் புளிய மரத்தடி என அவர்க்கு நேர்ந்த பாவபலன்களுக்கு எல்லாம் பிள்ளையார் ராசி இலட்சணத்திலென இகமு விநாயகர் அங்கங்கும் பந்தாடப்படுகின்றார் பரிதாபமாய்.
“இப்போது அது இவர்களையெல்லாம் விட்டுப்பிரிந்து வெகுதூரத்தில் தனியாகவும் நிராதரவாகவும் கிடந்தது. வழிப்போக்கன் எவனாவது அதன்மேல் சிறிதுநேரம் சும்மாவோ ‘தம்’ அடித்தோ குந்தி இளைப்பாறுகிறான். அல்லது மூட்டையை இறக்கி வச்சு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். சமயத்தில் எப்போதாவது சாலையிலே ஓடும் நாய் அதைப்பார்த்து நின்று சுற்றி வந்து காலைத் தூக்கி அதற்கு அபிஷேகம் செய்து விட்டுப்போகிறது”
இக்கதை எழுதப்பட்டது எழுபதுகளில். அந்த ராசியில்லாத பிள்ளையார் இப்போது வேறெங்கோ கோலாகலமாக எழுந்தருளிக் கொண்டாடப்பட்டிருப்பார். இகமு விநாயரைக் காக்க இன்றைக்கு இமமு இமக எனலாம் இருக்கவே இருக்கின்றனவே.
எல்லாரையும் எடுத்தெறிந்து கடாசும் கதாபாத்திரமான பவுனம்மா, கிழிசல் பாவாடையைத் தச்சுத் தரவும் பேன் பார்த்துவிடவும் ரவைக்குச் சினிமாவுக்குப் போகவும் கேட்கிற மகள்களின் இறைஞ்சுதல்கள்; ரவையூண்டு ரசம் வச்சுத்தரக் கேட்கும் கிழவி. கைமாத்துக்கு வந்து நிற்கும் தேவானை என அனைவரின் கோரிக்கைகளுமே பவுனம்மாள் வந்த வேகத்திலேயே மறுதலிக்கப்பட்டுக் கடாசி எறியப்படுகின்றன. அப்புறம் அவையாவுமே பவுனம்மாவாலேயே ஒவ்வொன்றாய் ஈடேற்றவும் படலாகின்றன. வேலைச்சுமையின் நெருக்கடியில் அவற்றை நிராகரித்தாலும் அப்புறம் ஈடேற்றும் தாய்மைப் பரிவின் அடையாளமே ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரமான’ பவுனம்மா.
பாத்திரப் பேச்சு வாயிலாகப் படைப்புருவாக்கம் எனும் உத்தி என்னவோ நம் பழந்தமிழ்மரபு தொட்டே பயின்று வரக்கூடியதே. உரையாடல்களாலேயே கதைப்பின்னல் நிகழ்த்துதல் குணச்சித்திர வாய்ப்பைப் புலப்படுத்தல் எனும் புதினப்படுத்தல் உத்தி தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், இமையம் கதைகளுக்கூடே வெவ்வேறு வகையில் அமைந்தியலக்கூடியது. அவ்வாறான கதைகளே ‘இழை’யும் ‘தனபாக்கியத்தோட ரவை நேரமும்’ அடிதடி அளவிற்கு வாக்குவாதம் முற்றினாலும் இயல்பாகவே சுமுகமான மாமூல் நிலைக்குத் திரும்பிவிடும் தம்பதியர் கதையே ‘தனபாக்கியத்தோட ரவ நேரம்’ (ரவ என்றால் கொஞ்சம் என்று பொருள். ‘இரவு’ என்றும் பொருள்) ‘இழையும்’ இவ்வாறே வாக்குவாத உரையாடலாகித் தொடர்ந்தவாறே ஊடியவாறே கூடலுமாகும் அருமையான இழை நெசவே.
‘சொல்லாதே காட்டு’ என்னும் நாடகீயச் சூட்சுமத்தை நாடகக் கலைஞனாகிய அஸ்வகோஷ் சிறுகதைகளுக்கும் மடைமாற்றி விடும்பாங்கு விமர்சன யதார்த்தவாதக் கதைகளினூடே விசையூன்றி வெளிப்படலாகின்றது. இவற்றிற்கு அப்பாலாக இராசேந்திரசோழன் வார்த்தைகளிலேயே பின்நவீனச் சொல்லாடல்களைப் பாவிக்காமலே கூறுவதானால் நிஜவாழ்வின் யதார்த்தங்கடந்த இலக்கிய யதார்த்த கதைகளாக
இவற்றை இனங்காணலாம்.
‘புரட்சிப்பயணமும்’, ‘சவாரியும்’ கட்சி நிர்வாகம், இயக்கப்போக்குகள் குறித்த அரசியற்பகடி அங்கத உருவகக் கதைகள். ‘குருவிவர்க்கத்திலும்’, ‘நாய்வேஷத்திலும்’ நினைவுகளினூடே குறியீடுகள் காணக்கிடப்பனவாம்.
‘நாய் வேஷம்’ ஏலவே பாலியல் கதைகள் பகுதியில் பார்த்த கதையே. பெரும்போக்கானவனாக மனைவியின் அத்துமீறலைக் கண்டுங்காணாமல் இருக்கும் இருசப்பன் கதையில் அவன் நினைவுகூர்வதாக வரும் பகுதியில் காணக்கிடக்கிறது குறியீடு. இருசப்பனின் பள்ளிப் பருவகாலம் அவனுக்குச் சரியான படிப்பு, எழுத்துவாசனை கிடையாது. எழுத்தெல்லாமே கோணல்மாணலாகத்தான். அவங்க வகுப்பு மானிட்டர் சக்தி அழகா முத்து முத்தா எழுதக்கூடியவன். இந்தா எனக்குத்தான் சரியாவே எழுத வரமாட்டுதே நீயே வச்சிக்க. யாருகிட்டயும் சொல்லாத என்று ரகசியமாக தன் நீட்டு மாவு பல்பத்தை யாருமறியாமல் சக்திக்கே கொடுத்துவிடுகிறான் இருசப்பன் - இதுதான் நாய்வேஷத்தில் காணக்கிடக்கும் குறியீடு.
‘குருவிவர்க்கம்’ கதையில் நண்பர்கள் வற்புறுத்தலினால் பந்தியில் அமர்ந்து பிசைந்த சோற்றை வாயில் வைக்கப்போகையில் திட்டி எழுப்பப்படுகிறான் ஒருசேரிப்பையன். மயிரைப் பிடித்துத் தூக்கிச் செருப்பாலடிக்கப் பட்டும் குண்டுக்கட்டாய் தூக்கிக் கடாசப்பட்டுக் காலால் எட்டி உதைக்கவும்படுகிறான். நினைவு மீட்டலில் மொட்டை மாடியில் காயப்போட்ட நெற்பரப்பில் சிட்டுக்குருவிகள் கொறித்துக் கொண்டிருக்கையில் கழுத்தில் கருப்பு வட்டமிட்ட ஒரு குருவியும் கொறிக்கின்றது. சிட்டுக்குருவிகள் அதன்மீது பாய்ந்து சின்னாபின்னப்படுத்துகின்றன அதனை. கதைசொல்லி வீடு திரும்பியதும் மொட்டைமாடிக் காட்சி மாறுகின்றது. காயப்போட்ட நெற்பரப்பில் இப்போது கருவட்டக் கழுத்துக் குருவிகள் நெற்கொறிக்கையில் தனியொரு சிட்டுக்குருவியும் வந்து கொத்தி அவற்றிடையே அகப்பட்டுத் தவிக்கிறது. ஆக இப்படியாக மாறி நடந்தேறுங்கதையே குருவி வர்க்கக் குறியீடு.
கரசேவை கதையிலோ அவருடைய கையே ஒரு தோழரிடம் உரையாடுவதான இயற்கை வரம்பிகந்த ஜாலயதார்த்தக் கூறு காணக்கிடைக்கின்றது. கையை அல்லக்கைகளின் குறியீடாகவும் வாசிக்கலாம்தான். கரசேவையினும் ‘நா’வன்மையில் ‘சர்ரியல்’ சித்திரம் கைகூடி வருவதாக அமைந்தியல்கின்றது. இது நீர்த்துப் போன பட்டிமன்ற வடிவத்தைப் பகடி பண்ணக்கூடிய அங்கத யதார்த்தக் கதை.
“நடுவர் பேசப் பேச அவரின் நாக்கு மக்களின் மேனி எங்கும் படர்ந்து அவர்களது ஒவ்வொரு உறுப்பையும் இதமாகத் தடவிக் கொடுத்தது. கன்னத்தில் நெற்றியில் முத்தியது. அவர்களின் இடுப்பை வயிற்றை வருடியது. அக்குளில் கழுத்துப்பகுதிகளில் கிச்சுக்கிச்சு மூட்டிக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தது”
“தன்மேல் வந்து படிந்துள்ள நாக்கு பற்றியோ அதன் செயற்பாடு பற்றியோ எந்தப் புரிதலும் அற்று இம்மாதிரி நிகழ்ச்சிகளில் இப்படி ஆகிப்போவது எல்லார்க்கும் இயல்பு என்பது போல் நண்பன் சுயபிரக்ஞை இழந்தவனைத் தன்னை மறந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தான்.”
‘இச்சை’, ‘நிலச்சரிவு’, ‘பரிணாமச்சுவடுகள்’ இம்மூன்றையும் வாசிக்கையில் இம்மூன்றுமே ஒட்டு மொத்தக்கதைகளில் இருந்தும் வேறுபட்டனவாய் எனக்குட்பட்டன. அதற்கு அப்புறம் பின்னுரையை வாசிக்கும் போதுதான் உண்மை பிடிபடலாயிற்று.
“சிதிலடைந்த உருவத்தோடு அல்ல. முழுமையான உருவ அமைதியோடு பூரணத்துவம் உள்ள சில கதைகளே எனக்குக் கனவாய் வந்திருக்கிறது. தொகுப்பில் உள்ள பரிணாமச் சுவடுகள், இச்சை, நிலச்சரிவு ஆகிய மூன்றுமே எனக்கு முழுக்கனவுகள். அவற்றை அப்படியே எழுத்து வடிவில் பதிவு செய்ததே என் பணி. இவை மட்டும் கனவாக வந்திராவிட்டால் இதுபோன்ற கதைகளை என்னால் இப்படி எல்லாம் கற்பனை செய்திருக்க முடியாது என்று தோன்றுகிறது”
ஆக இம்மூன்று கதைகளுமே அவருடைய கனவுகளை அவர் மொழிபெயர்த்த கதைகள் என்றாகின்றன.
‘நிலச்சரிவு’ கதையில் நிறைய விசித்திரக்காட்சிகள் காணக்கிடக்கின்றன. கன்னம் வைக்கும் கட்சிக்காரக்காரர்கள், ஜேப்படி செய்யும் போலீஸ்காரர்கள், மார்புக்கு மேல் துணியைக் கட்டிக் கொண்டு மஞ்சக்குளிக்கும் ஆண்கள், மார்புகளை மறைக்காமல் தார்ப்பாய்ச்சிக் கட்டியவாறு மற்போர்ப் பயிற்சி புரியும் பெண்கள்.
கனவின்மொழியான அதர்க்கம், நனவோடை (Stream of Conciousness) தொடர்பறு எழுத்து (Non-Linear writings) எனவாங்கு இவை அமைந்தியல்கின்றன.
“இடப்பெயர்ச்சி (Displacement) என்பது குறித்தல் ஒரு படிமத்திலிருந்து அதற்கு நெருங்கிய இன்னொன்றிற்கு இடம்பெயர்வதைக் குறிக்கின்றது” - க. பூரண சந்திரன் (அமைப்பு மையவாதமும் பின்னமைப்பு வாதமும், ப.74)
பிராய்டின் கனவுப்படிமச் செயல்முறைகளுக்குள் ஒன்றே இடப்பெயர்ச்சி என்னும் இக்கருத்தாக்கமாகும். பொய்த்த, ஈடேறா அழுத்தப்பட்ட மனப்பீடிப்பு கனாசஞ்சார இடப்பெயர்ச்சிகளுக்கூடாக மடைமாற்றிக் கொள்ளப்படுவதே இதன் உட்கிடையாகும்.
ஆகாயத்தில் பறப்பதான படிமம். அதன்பின் வெடித்துச் சரிந்த நிலப்பரப்பு மண்ணாய்ப் பொங்கி கடலலைபோலப் பின்தொடர்ந்து துரத்துதல் என ஒரு படிமத்திலிருந்து அய்ம்பூதத் தொடர்பான இன்னொரு படிமத்திற்கு இடம்பெயர்கின்றது. இத்தகு கனவிற்கு ஊடாகவும் பொய்த்த இயக்கவாழ்க்கைப் பீடிப்பு மீண்டும் மீண்டும் இடம்பெயர்வாகின்றது.
“இவனையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவனைத் தோழர் என்று அழைத்தார்கள். இவன் திகைத்துநோக்க, எதைப்பத்தியாவது பேசுங்களேன் தோழர். நேரத்த பயனுள்ளவகையில் கழிப்போம். சும்மா இருக்கிறதுக்கு ஒரு இலக்கிய வகுப்பு எடுங்களேன் என்றார்கள். இவன் இலேசாய்ச் சிரித்து எதுவும் வேண்டாம். பயணத்தைப் பயணத்தோட கழிப்போம் என்று அவர்களுக்குச் சொல்லி சன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான்.”
இதை வாசிக்கையில் சுற்றுலாவை உலா மகிழ்வாக அனுபவிக்கவிடாமல் இழுத்தடித்து மனைவிக்கு ஊடே வகுப்பெடுத்த ‘சென்னையில் பார்க்கவேண்டிய இடங்கள்’ கதைத் தோழர்தான் நினைவிற்கு வருவது தவிர்க்க முடியாதல்லவா?
“எப்படியாவது ஓடி உயிர் பிழைத்தால் போதும் என்கிற வேகத்தில் இவனோடு வந்த தோழர் இவனிடமிருந்து கையை உதறி, இவன் தோளைப் பிடித்து அழுத்திப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எங்கோ மிகவேகமாக ஓடத்தொடங்கினார். ஒருவனும் இவன் ஓடித் தப்பிக்கவேண்டும் என்கிற உயிராசையையும் மறந்து அப்படியே அசைவற்று நின்று, ஓடும் தோழரையே பார்த்துக் கொண்டிருந்தான். மனம் அதிர ‘தோழமை உணர்வு’ பற்றிப் புத்தகங்களில் படித்திருந்ததை ஞாபகம் செய்துகொண்டான். அந்தச் சூழலிலும் இவனால் சிரிக்க முடிந்தது ஆச்சரியம்தான். குதிகால் புட்டத்தில் இடிக்க ஓடும் தோழரையே அசைவற்றுப் பார்த்து இவன் மௌனமாய்ச் சிரித்தபடியே நின்றான்.”
இங்கே முரண்தொனியாக ‘தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ’ எனும் கம்பநாடனின் வரிகள் எனக்குள் மின்வெட்டி தொலைக்கின்றன. நட்டாற்றில் கைவிட்ட தோழர்களின் ‘தோழமை உணர்வு’களும்தாம்.
இவ்வாறு ‘நிலச்சரிவை’ வாசிக்கையில் நமக்கும்தான் நம் கால்களுக்குக் கீழே பூமி நழுவிடலாகின்றது. அவனால் ஆகாயத்தில் பறக்கமுடியுமென்ற போதிலும் நிலத்தோடு தொடர்புடைய உயரங்களை மட்டுமே நேசிக்கும் அவன் மீதான நேசம் நம்முள்ளும் கசிவதாகின்றது.
பொய்த்த இயக்க வாழ்க்கையின் ஈக அழுத்தப்பட்ட மனபீடிப்புக் கனாசஞ்சார இடப்பெயர்ச்சிகளுமே மடைமாற்றமாகும் பாங்கு இராசேந்திர சோழனுக்கு இக்கதையில் அருமையாக வாய்த்துள்ளது.
இத்தகு முழுக் கனவுகளாகவே காணவல்ல, அருமை அவருக்கு வாய்த்த கொடுப்பினை என்றால், இவற்றை உள்வாங்கிக் கதைகளாய் உருச்சமைப்பது மிகமிக அசாத்தியமானதே.
இராசேந்திரசோழனுக்கு இத்தகு கனாக்கள் இனியும் மேன்மேலும் வாய்ப்பதாகுக. அதனால் அருங்கொடையான கதைகளும் நமக்கு வாய்ப்பதாகுக. இத்தகு கனாசஞ்சார மடைமாற்ற இடப்பெயர்ச்சிகளால் தேக்கமெல்லாம் தகர்த்தெறிந்து அவருக்குள் இருக்கும் மகத்தான கலைஞன் உயிர்த்தெழுந்து மேலும் சாதனைகள் சாதிப்பானாகுக.
பல்வேறுவிதமான எல்லைகளையும் இடைவெளிகளையும் தடைகளையும் கடந்து உலகத்தை ஒன்றிணைப்பதிலும் உலகளாவிய இலக்கிய வளத்துக்கு உரமூட்டுவதிலும் மொழிபெயர்ப்பின் பங்கு மகத்தானது. மொழிபெயர்ப்பு ஒரு மறுபடைப்புச் செயல் என்பதாலும் மொழி, இன, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரு படைப்பை அதன் உயிர்ப்புக் குறையாது எடுத்துச் செல்வதாலும் மொழிபெயர்ப்பாளனின் இருப்பு மதிப்புடையது.
இதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்று இலக்கிய மொழிபெயர்ப்புக்கு வரையறை செய்வது இயலாத ஒன்று. காரணம், மொழிபெயர்ப்பு என்பது இரண்டு மொழிகளுக்கும் இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையே நடை பெறுவது. மாறுபட்ட மொழி, கலாச்சாரத்தைக் கொண்ட மூல மொழியிலிருந்து (Source Language) ஓரிலக்கியத்தை இலக்குமொழிக்கு (Target Language) மொழி பெயர்ப்பது மிகச் சிக்கலான பணியாகும். வாசகனுக்குத் தனது தாய் மொழியில் நெருடலின்றி ஒரு படைப்பை வாசித்த அனுபவத்தைத் தரும் மொழிபெயர்ப்புச் சிறப்படைகிறது.
மொழிபெயர்க்கப்படும் இலக்கியம், படைக்கப்பட்ட பண்பாட்டின் அரசியல், பொருளாதாரம், இனம், மதம், நம்பிக்கை, சடங்குகள், முதலான மிக நுட்பமாக வினைபுரியும் சமூகக் காரணிகளையும் படைப்பாளரின் கருத்தியல் பார்வையையும் அவ்விலக்கியம் சுட்டி நிற்கும் கருத்தின் அரசியலையும் அறிந்திருப்பதோடு இலக்குமொழியின் அரசியல் சூழலையும் அந்த இலக்கியம் முன்வைக்கும் கருத்தரசியல் இலக்குமொழி வாசகனுக்கு ஏற்கனவே அனுபவப்படாத ஒன்றென்றால் அது சரியான புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்பதையும் மொழி பெயர்ப்பாளர் நுட்பமாக உணர்ந்தவராக இருக்கவேண்டும். இது இலக்கியத்தின் படைப்புச் சூழல் சார்ந்த புற அறிவு.
அகநிலையில், அந்த இலக்கியப் பிரதியின் எடுத்துரைப்பு நுட்பம், சொற்களில் செறிவுற்றிருக்கும் உணர்வுகள், பயன்படுத்தப்பட்டுள்ள மொழி வழக்கு (பேச்சு வழக்கு/எழுத்து வழக்கு) ஆகியவற்றோடு அவ்விலக்கியத்தின் உயிர்ப்பான கரு ஆகியவற்றை நுணுக்கமாக அறிந்து சந்தேகம் கொள்ளும் இடங்களைக் குறித்து மூலமொழி எழுத்தாளனுடன்/வாசகனுடன் (வாய்ப்பு இருப்பின்) உரையாடித் தெளிவுபெற்று மொழிபெயர்க்கப்படும்போது மூலப்பிரதிக்கு நெருக்கமானதொரு மொழிபெயர்ப்பைச் செய்ய இயலும்.
நில, கால, மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள மொழிகளுக்கிடையே நிகழும் மொழிபெயர்ப்பில் இத்தகைய அடிப்படையான தன்மைகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வாறல்லாவிட்டால் மொழிபெயர்ப்பு ஓர் இலக்கியமாக இல்லாமல் அவ்விலக்கியத்தின் கருத்துவிளக்கமாக அமைந்துவிடவும், இலக்கியச்சீர்மையிழந்து வாசகனுக்குச் சலிப்பை உண்டாக்கக்கூடிய மொன்னையான ஒன்றாக மாறிப்போகும். அதோடு மட்டுமல்லாது மூலமொழி எழுத்தாளனுக்கும் அந்த இலக்கியப் படைப்புக்கும் மொழிபெயர்ப்புத் தீமை செய்துவிடும். ஒரு மொழிபெயர்ப்பு மூலத்துக்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் நம்பிக்கைத்துரோகம் செய்துவிடக்கூடாது என்ற கருத்துக்கு ஒவ்வொரு மொழி பெயர்ப்பாளரும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
மொழியமைப்பு, பண்பாட்டு நிலைகளில் நெருக்கமான தன்மை கொண்ட மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படவேண்டும். மேலோட்டமாக இலக்கு மொழிக்கு நெருக்கமானதாகப்பட்டாலும் மிக மெல்லிய வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் பெற்றிருப்பதாலேயே ஒரு மொழியும் பண்பாடும் தனித்து அடையாளம் காணப்படுகின்றது என்ற தெளிவோடு மூலமொழி இலக்கியத்தை அணுகவேண்டும். அவ்வாறன்றிச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் தோல்வியில் முடிகின்றன.
மலையாளம், தமிழுக்கு மிக நெருக்கமான மொழி மட்டுமல்ல தமிழின் கிளைமொழியும்கூட. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குப் புனைவுகளின் தனித்துவமான அடையாளங்களோடு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘பிரியாணி’ சிறுகதை கேரளத்தில் சிறப்பாகப் பேசப்பட்டது. அக்கதை 2017 இறுதியில் வாசித்ததாக நினைவு. நரம்புகள் மட்டுமே ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கப் பிய்ந்துபோன ஓர் இலையின் வடிவத்தைக் காண்பதுபோன்று உள் நாட்டுக்குள்ளேயே மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள ஒரு நிலத்துக்குப் புலம்பெயர்ந்த ஒருவனின் இருப்பையும் அதற்கு எதிர் நிலையில் பகட்டையும் நிறுத்திக் கதையாக்கியது பிரியாணி. இச்சிறுகதை, கே.வி.ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பில் சிறு நூலாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த ஒரு கதையை மட்டுமே தனித்த நூலாக்கியிருப்பது அந்தக் கதைக்குத் தரும் தனித்துவமான அங்கீகாரம் ஆகும். நூலின் முன்பகுதியில் பவா செல்லத்துரை எழுதிய ‘அந்தப் பின்னிரவில்’ என்ற தலைப்பிலான இருபக்கக் கருத்துரையில் “இக்கதையின் முக்கியத்துவம் கருதி இதன் பல ஆயிரம் பிரதிகளைச் சாத்தியமாக்கிய பாரதி புத்தகாலயத்தின் சமூக விரிவு நன்றிக்குரியது”. (ப.4) என்று குறிப்பிட்டிருந்தார்.
பீகாரில் கைவிடப்பட்ட நிலக்கரி நிறுவனத்தில் இருந்து நிலக்கரி எடுத்து நாற்பது கிலோமீட்டர் கொண்டுவந்து விற்று பத்து ரூபாய் சம்பாதித்துத் தனது கருவுற்ற மனைவியின் பாசுமதி அரிசி மீதான விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் ஐம்பது கிராம் வாங்கிக்கொடுத்துத் தின்ன வைத்தவன் கோபால் யாதவ். கேரளத்துக்குப் பிழைக்க வந்து வாடகை அறையெடுத்துத் தங்குவதற்கு முடியாமல் பதினைந்து ஆண்டுகளாக வறுமையில் வாடுபவன். பெரும் செல்வந்தரான களந்தன் ஹாஜியாரின் பேரன் ரிஸ்வானுக்கு நடந்த திருமண வரவேற்பு விருந்தில் மீந்துபோன பிரியாணியைக் குழி வெட்டி அதில் கொட்டி மூடுவதற்கான தற்காலிகப் பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். கோபால் யாதவின் உயரத்திற்கு ஆழமும் அகலமும் கொண்ட குழிவெட்டப் பணிக்கப்படுகிறான். அதில் மீந்த பிரியாணியை இட்டு மூடும்போது பசியால் இறந்த தன் மகளுக்காகவும் (மகளின் பெயர் பாசுமதி) ஒரு பிடி மண் எடுத்துக் கொட்டப்பட்ட பிரியாணியின் மீது போட்டு மூடுகிறான். தன் மகளையே குழியில் இட்டு மிதித்து மூடுவதாக உணரும் கோபால் யாதவின் மனநிலையோடு கதை முடிகிறது (இது கதையின் மீதான ஒரு பார்வைக்கோணம் மட்டுமே). மீந்துபோகுமளவுக்கு விருந்துக்கான உணவைத் தயாரிப்பதும், மீந்த உணவைக் குழி வெட்டி மூடுவதும், அவ்வாறு மூடுவதைச் செல்ஃபி எடுத்து மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதுமான பணச்செழிப்பால் உண்டான பகட்டு, பசிக்கவைத்துக் கொல்லும் வறுமை என்ற இருவேறு துருவங்கள் சந்தித்துக்கொள்ளும் நிதர்சனமான மனித உலகத்தை இக்கதை உரையாடலுக்குக் கொண்டுவருகின்றது.
எடுத்துரைப்பில் தேர்ந்த ஏச்சிக்கானம், கதை சொல்லலில் உண்டாக்கியிருக்கும் இடைவெளிகளும் ஒத்திப்போடல்களும் முடிக்கப்படாது விடப்பட்டவைகளும் வாசகன் அவனுக்கான பிரதியை உருவாக்கிக்கொள்ள இடம் தருகின்றன.
மூல மொழியில் வாசித்தபோது உண்டானதும், மனதுள் அது குறித்துத் தேங்கிக் கிடப்பதுமான மன உணர்வுகளை மொழிபெயர்ப்பு முழுமையாகத் தந்துவிட இயலாது என்ற போதும் மூலத்துக்கு மிகநெருக்கமான ஒரு பிரதியை உருவாக்குவதையே மொழிபெயர்ப்பாளர் சவாலாக ஏற்றுக்கொண்டிருப்பார். கதைக்கு அடிப்படையான உயிர்ப்பும், மூல எழுத்தாளர்களின் எடுத்துரைப்பு முறைமையும் காணாமல் போனதால் பிரியாணி சிறுகதையை அதன் மூலத்தோடு ஒப்பவைத்துப் பார்க்கத்தூண்டியது. மொழிபெயர்ப்பு, மூலக்கதையின் மொழி, கதைசொல்லலின் தனித்துவமான தன்மைகள் சிதைக்கப்பட்டு விளக்கி மொழிதலாகத் தோன்றியது. “கதைப் போக்கை, மொழிநடையைச் சிதைத்து விளக்கி மொழிதல் மொழிபெயர்ப்பாகுமா?” என்ற கேள்வியை முன்வைத்துப் ‘பிரியாணி’ சிறுகதையில் முதல் ஐந்து பத்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
மூலமொழியில் எழுதப்பட்ட கதைப்போக்கை இயன்றவரை சிதைக்காது இலக்குமொழிக்குக் கொண்டுவருதல் மொழிபெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப்புக்கான அறிவுக்கூர்மையும் எடுத்துக்கொண்ட இலக்கியத்தைக் குறித்த ஆழ்ந்த புரிதலும் இருப்பதை வெளிப்படுத்துவதோடு வாசகனுக்கு மூலமொழிக்கதையை அதன் உயிர்ப்புச் சிதையாமல் கொடுக்கின்ற மறுபடைப்புச் செயலாக அமைந்துவிடுகின்றது.
மூலத்தை அதன் போக்கிலேயே மொழிபெயர்த்தால் முதல் பத்தி பின்வருமாறு அமையும்.
“கதிரேசன்கூடக் கோபால் யாதவ் செருக்களையிலிருந்து இப்பத்தான் ஏறியிருக்கிறான். கூடவே மூணு வங்காளிப் பசங்களும். தீயாப் பாஞ்சாலும் பஸ்சு பொய்நாச்சியை அடையறதுக்குக் குறஞ்சது பத்திருபது நிமிசமாவது எடுக்கும்.”1
ஒரே பத்தியாக இருப்பதை மொழிபெயர்ப்பில் இரண்டு பத்திகளாக உடைத்துப் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.
“கோபால் யாதவ் செருக்களையிலிருந்து இப்போது தான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும், மூன்றுவங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.”
பஸ் தீயாய் பாய்ந்து வந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். (ப.9)
இந்தப் பத்தியில் முதல் வாக்கியத்தில் கதிரேசனும் கோபால் யாதவும் பிறகு வங்காளிப் பையன்களும் எதில் ஏறினார்கள் என்பது தள்ளிப்போடப்படுகின்றது. மூன்றாவது வாக்கியத்தில் அவர்கள் பஸ் ஏறியது சுட்டப்படுகின்றது.
முதல் வாக்கியத்திலேயே எதில் ஏறினார்கள் என்பதைச் சுட்டிவிட்டால் வாசகனுக்கு ஒத்திபோடலினால் ஏற்படுகின்ற எதிர்பார்ப்புக் கலைந்துபோகின்றது. அதனால், கதை செய்தியாக மாறிவிடுகின்றது. அடுத்ததாக, கதிரேசனுக்கும் கோபால் யாதவுக்கும் இடையில் எதோ ஓர் உறவு இருக்கிறது என்ற எண்ணத்தையும், கூடவே பஸ் ஏறிய வங்காளிப் பையன்களுக்கும் இவர்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தையும் இச்சொல்லல் முறை வாசகனுக்குள் தோற்றுவிக்கின்றது. இதனாலேயே இது செய்தியாக இல்லாமல் கதை வடிவமாகின்றது.
மொழிபெயர்ப்பில் கோபால் யாதவை முதன்மைப் படுத்தி அவர் பஸ் ஏறிவிட்டதை முதல் வாக்கியத்தில் முடித்துவிடுகிறார். அவரோடு கதிரேசனும் வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறுவதன் மூலம் இரண்டாவது வாக்கியத்தின் இறுதியில் உள்ள “உறுதியாகிவிட்டது” என்ற சொல் (1) வங்காளிப்பையன்களுடனான கோபால்யாதவ், கதிரேசன் உறவையும் (2) ஏதோ நடக்கப்போகிறது என்ற உணர்வையும் வாசகனுக்குக் கடத்துகின்றது. ஆனால் மூலக்கதையில் இச்சொல் இல்லாதது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இடையில் உறவு உண்டா இல்லையா என்பது சொல்லப்படாமல் ஒத்திப்போடப்படுகின்றது. இது கதாசிரியன் கட்டமைக்காத சொல்லல் முறையாகும்.
உண்மையில் கதையில், கோபால் யாதவ், கதிரேசன் ஆகியோரோடு வங்காளிப்பையன்களுக்குத் தொடர்பு ஏதும் இல்லை. கதிரேசனோடுதான் கோபால் யாதவுக்குத் தொடர்பு (கதிரேசனின் வீட்டுப் பின்புறத்தில் தங்கியுள்ளார்). ஆனால் மொழிபெயர்ப்பாளர் கதிரேசனுக்கும் வங்காளிப்பையன்களுக்கும் தொடர்பு இருப்பதான புரிதலை வாசகனுக்குள் கட்டமைக்கின்றார். அதோடு, அவர்கள் வருவது உறுதியாகிவிட்டது என்று கதையில் இல்லாத ஒரு கருத்தைச் சேர்க்கின்றார்.
இவ்வாறு கதைக்குச் சிறிதும் பொருத்தமில்லாத போக்கைக் கட்டமைத்து புதிர்த்தன்மையும் ஒத்திப்போடலும் அற்ற தட்டையான வேறொரு கதையை எழுதுவது மொழிபெயர்ப்பு அறத்தின் பாற்படுமா என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் சிந்திக்கவேண்டும்.
மொழிபெயர்ப்பாளர் மூலமொழியில் உள்ள பிரதி எத்தகைய மொழிநடையைக் கொண்டுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒரு கதை அது வெளிப்படுத்தும் கருவை அதன் சொல்லல் முறையால் செழுமைப்படுத்துகின்றது. கதைப் பொருண்மையும் மொழியும் மிகச்சரியாக இணை சேர்கின்றபோது ஒரு கதை வாசகனுக்கு மிகநெருக்கமான பிரதியாக ஆகி விடுகின்றது. செம்மைப்பட்ட மொழிநடையில் கதை சொல்லல் மரபு காலாவதியாகிவிட்டது. பேச்சு மொழியின் மீதான தாழ்வு மனப்பான்மை தகர்ந்து, அதன் உயிர்ப்பு கதைக்கு அடிப்படையானதொரு கூறு என்பது புரிந்துவிட்டது மட்டுமல்ல, எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் கடந்து எழுதுதல் மரபு சனநாயகத்தன்மையைக் கொண்டாடுகின்றது. பின்னைக்காலனியம் முன்வைக்கும் ஆதிக்க எதிர்ப்பரசியலை மிகச் சரியான திசையில் நகர்த்துவதில் தன் சொந்த மொழியை ரத்தமும் சதையுமாகக் கையாள்வதில் இருக்கின்றது. கதைப்பாத்திரங்களின் குரல்களோடு கதைசொல்லியின் மொழியையும் சந்தோஷ் ஏச்சிக்கானம் உரையாடல் தன்மையிலான பேச்சுவழக்காகக் கட்டமைத்ததன் உட்பொருளை விட்டுவிட்டு ‘பிரியாணி’ கதையை மொழிபெயர்த்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் கதையோடு உறவாடி உறவாடி அதன் உயிர்ப்பொருளைக் கண்டடைந்து மொழிபெயர்ப்பில் அதன் வடிவும் நேர்த்தியும் சிதையாது உயிர்ப்புடன் வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளார். அதனால்தான் மொழிபெயர்ப்பு ஒரு படைப்புச் செயல் என்று கருதப்படுகின்றது.
மூலக்கதையில் ஒரே பத்தியாக அமைந்ததை மொழிபெயர்ப்பாளர் இரண்டு பத்திகளாகப் பிரித்துக் கொள்கிறார். ஒரு பத்தி என்பது தொடர்ச்சியான ஒரு கருத்தின் முழுமையான வடிவம். அதை இரண்டாகச் சிதைக்கவேண்டுமானால் அதில் இரண்டு தனித்த அல்லது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கவேண்டும். ஏச்சிக்கானம், பேருந்தில் ஏறுவதையும் அது உரிய இடத்தை அடைவதற்கு ஆகும் நேரத்தையும் தொடர்ச்சியான செயல்பாடு என்பதால் ஒரே பத்தியாக அமைத்துள்ளார். எல்லா வகைப்பட்ட எழுத்துக்குமான இயல்பு இதுதான். ஆனால் மொழிபெயர்ப்பாளர் எந்த நோக்கத்துக்காகப் பத்தியை உடைத்தார் என்பது அறியக்கூடவில்லை. உடைக்கப்பட்ட இரண்டாவது பத்தியில் “பத்திருபது மினிட்” எனப் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளதை ‘இருபது நிமிடம்’ என்று செம்மைப்பட்ட வழக்காக மாற்றியதோடு சுமாரான கால அளவை தீர்மானமான கால அளவாக மாற்றிக் கதையின் உயிர்ப்பான மொழி நடை சிதைக்கப்பட்டுள்ளது. இதே கதையில் வேறு இடங்களில் பேச்சுவழக்குகளை மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கதைச்சூழலும் கதைப்போக்கும் கதைக்குள் உரையாடும் பாத்திரங்களின் வாழ்முறையும் அதற்கான மொழிநடையைத் தீர்மானிக்கின்றன. இந்தத் தன்மையை முற்றாக அழித்துவிட்டு தனக்கானதொரு மொழிநடையை உண்டாக்கிக்கொண்டு கதையின் சொல்லல்முறையை முற்றாக மாற்றியமைத்து புதிய கருத்துக்களைச் சேர்த்துக் கதைப்பாங்கைச் சிதைத்து ஒரு மொழிபெயர்ப்பு உண்டாக்கப்படுமென்றால் அந்த மொழிபெயர்ப்பு அந்தக் கதையைக் கொலை செய்கிறது என்பதைத் தவிர வேறு எந்த நன்மையையும் அந்தக் கதைக்கோ வாசகனுக்கோ செய்துவிடமுடியாது.
முதல் பத்தியில் அறிமுகப்பட்ட கோபால் யாதவுக்கும் மூன்றாவது பத்தியில் அறிமுகப்படுத்தப்படும் கலந்தன் ஹாஜியார் குடும்பத்துக்கும் இடையேயான பொருளாதார, வாழ்விடம் சார்ந்த இருப்பின் இடைவெளிகளில் இக்கதை தீவிரம் கொண்டுள்ளதால் கலந்தன் ஹாஜியாரைக் குறித்த அறிமுகமாக அமையும் மூன்றாவது பத்தி முக்கியமானது. (இரண்டாவது பத்தி ஒரே வாக்கியம். அதைச் சரியாக மொழிபெயர்த்துள்ளார்.)
மொழிபெயர்ப்பில், “கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார் அக்காலத்தில் தளங்கரையிலிருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது ஞாபகசக்தியை இழந்து விட்டதில் சேராது. கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது.” (ப.9)
மூலக்கதையில், “ஒரு காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய் வரைக்கும் மரக்கலம் ஓட்டிட்டுப்போன ஆளாக்கும். போன சனவரியோட எண்பத்தாறாச்சு. உயிரோடிருந்த நாலு பெண்டாட்டிகளில் குஞ்ஞீபிய மறந்துபோச்சுங்கறதல்லாம ஹாஜியோட நினைவாற்றலுக்கு வேற ஒரு குழப்பமும் இல்லை. கலந்தனுக்கு நாலல்ல நாற்பது பெண்டாட்டிகளைக் காப்பாத்தறதுக்கு வேண்டிய திராணி உண்டுன்னு ஊர்க்காரங்களுக்குத் தெரியும்.”3
இரண்டாவது பத்தியில், “அதுவரைக்கும் நாம கலந்தன் ஹாஜியாரைப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கலாம்.” என்று கூறியமையால் மூன்றாவது பத்தியில் அவரது பெயரை இரண்டு இடங்களில் முன்பாதி, பின்பாதியாகப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு பயன்படுத்துவது அந்தக் கதைப்பாத்திரத்தை வாசகனுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும் ஓர் உத்தியாகும்.
மூலக்கதைக்கும் மொழிபெயர்ப்புக்குமான இடைவெளியை மேற்கண்ட இரு மொழிபெயர்ப்புகளிலிருந்து தெளிந்துகொள்ளலாம். மூலக்கதையில் முதல் வாக்கியம், ஹாஜியாரின் தொழில் திறனைச் சொல்கிறது. இரண்டாவது வாக்கியம், வயதைச் சொல்வதன் மூலம் அவர் ஓய்வில் இருக்கிறார் என்பதை அறிவிக்கிறது. மூன்றாவது வாக்கியம், அவரது மனைவிமார் குறித்த கருத்தையும் உறவு சார்ந்த ஒருதலைப்பட்சமானது அவரது ஞாபக மறதி என்பதையும் எடுத்துக்காட்டி நையாண்டி செய்கிறது. இறுதி வாக்கியம் அவர் பெரும் செல்வந்தர் என்பதை ஊரே அறியும் என்பதைச் சுட்டுகிறது. இந்தக் கருத்து வைப்பு முறை, கதைப்பாத்திரம் குறித்த தொடர்புடையதும் வேறுவேறு திசைகளுக்கு வாசகனை அழைத்துச் செல்வதுமான தகவல்களை எடுத்துரைத்தலில் ஒரு முறைமை கையாளப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அடுத்தடுத்துத் தொடர்புடைய புதிய செய்திகளால் கலந்தன் ஹாஜியாரைக் குறித்த ஒரு மையக்கருத்தை வாசகனுக்குக் கடத்திவிடுகிறது இந்தப் பத்தி.
மொழிபெயர்ப்பில், முதல் வாக்கியம் முதலிரண்டு வாக்கியங்களையும் கலந்த கருத்தாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், ‘பண்டு’ என்ற மலையாளச் சொல்லுக்கு ‘அக்காலத்தில்’ என்று மொழிபெயர்ப்பைத் தந்ததன் மூலம் எக்காலத்தில் என்ற குழப்பத்தை வாசகனுக்கு விட்டுச் செல்கிறது. அடுத்ததாக, மூலநூலில் இல்லாதபோதும் ‘பலசாலி’ என்ற சொல்லை மொழிபெயர்ப்பாளர் கொண்டுவந்து சேர்த்துத் தன் விருப்பமான ஓர் அடையாளத்தை அக்கதைப்பாத்திரத்தின் மீது ஏற்றுகிறார். ‘பார்ட்டியாணு’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளதை ‘பலசாலி’ என மொழிபெயர்க்கவேண்டிய தேவை என்ன? தமிழ்ச்சூழலில் பேச்சுவழக்கில் ‘பெரிய ஆளாக்கும்’ என்பதன் மாற்றாக ஆங்கில மொழிக்கலப்பாகப் ‘பெரிய பார்ட்டியாக்கும்’ என்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். மொழிபெயர்ப்பில் ‘பார்ட்டியாக்கும்’ என்றோ ‘ஆளாக்கும்’ என்றோ பயன்படுத்துவதுதான் மூலமொழியில் கூறப்பட்ட வாய்மொழி மரபுசார்ந்த எழுத்துமுறைக்குப் பொருத்தமானதாக இருக்கமுடியும்.
ஒரு கதை என்பது கதாசிரியனால் எழுதப்படுவதன்று, கதையை வாசகனும் சேர்ந்தே எழுதுகிறான். ஆகவே, எழுதப்பட்டபிறகு அது வாசகப்பிரதியாகவே இருக்க முடியும் என்று சொல்லப்படுவதன் உட்பொருள் இதுதான்.பிரதியை வாசிக்க வாசிக்க அதனுள் சொல்லப்படாத இடைவெளிகளைத் தனது கருத்தாக இட்டு நிறைத்துக் கதையை வாசித்துச் செல்கிறான் ஆகவேதான் அது வாசகப்பிரதி. அப்படியான கதையெழுதுதலில் வாசகனுக்குப் பங்குகொடுக்காத ஒரு படைப்பு படைப்பாக இருக்க முடியாது. வெறும் சக்கையாகத்தான் இருக்க முடியும். வாசகனுக்குள் ஒரு கதையை வரைவதற்கான வாய்ப்பை ஒரு தேர்ந்த படைப்பாளன் விட்டுச்செல்லவே செய்கிறான். மொழிபெயர்ப்பாளர் ‘ஓ... அவ்வளவு பெரிய ஆளா இந்த ஹாஜியார், பெரிய பலசாலிபோல’ என்பதான கருத்துக்களை வாசகன் அந்த இடத்தில் உருவாக்கிக்கொள்வதற்கு இடமளிக்காமல் தாமாக முன்வந்து ‘பலசாலி’ என்ற சொல்லை இட்டு நிறைத்து கதையை உயிர்ப்பற்றதாக ஆக்கிவிட்டார்.
அதே பத்தியில் அடுத்த வாக்கியம் ஹாஜியாரின் குடும்பம் குறித்தும் அதில் பாரபட்சமான மனநிலை கொண்டவர் என்பது குறித்தும் வெளிப்படுத்தி, வாசகனிடத்தில் ஒரு நையாண்டியான பார்வையை ஹாஜியார் மீது உருவாக்குகிறார். தற்போது நான்கு மனைவிமாரும் உயிரோடு இல்லை என்பதையும் ‘உயிரோடிருந்த’ என்ற சொல்லின் மூலம் உணர வைக்கிறார். ஆனால் மொழிபெயர்ப்பாளர் அதை இரண்டு வாக்கியங்களாக மாற்றியதோடு தாமாக முன்வந்து ஹாஜியாரைக் குறித்து வாசகர்களுக்கு இரண்டு அறிவிப்புகளைச் செய்கிறார். (1) ‘அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. (2) நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது ஞாபகசக்தியை இழந்துவிட்டதில் சேராது.’
இந்த இரண்டு அறிவிப்புகள் மூலநூலின் கதைசொல்லல் முறையைத் தலைகீழாக மாற்றிப்போடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மேலும், மூலக்கதையின் சொல்லல் முறையால் வாசகனுக்குள் உண்டான நகைப்புணர்வு தரும் நையாண்டித்தன்மை நீக்கம் செய்யப்பட்டு ஹாஜியாரைக் குறித்த செய்திகளைத் திரட்டிக்கொள்வது என்ற தட்டையான வாசிப்புத் தன்மையைத் தருகின்றது.
சிக்கலான கலவை வாக்கியங்களைப் பெறுமொழிக்குக் கொண்டுவரும்போது சிறுசிறு வாக்கியங்களாகப் பிரித்து அதன் பொருண்மை சிதையாதவாறு தருதல் மொழி பெயர்ப்பு அறம். ஆனால், அவ்வாறு அறுத்துச் சேர்க்கவேண்டிய தேவை இல்லாததும் கருத்துச் செறிவுடையதுமான ஒரு வாக்கியத்தை அறுத்துச் சிதைத்ததன் மூலம் மொழிபெயர்ப்பு அறம் மீறப்பட்டுள்ளது.
அந்தப் பத்தியின் இறுதி வாக்கியம், ஊரார் அவரைக்குறித்துப் பேசுவதாக அமைத்து, ‘கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு’ என்ற கருத்தை ஊரார் கொண்டிருப்பதான ஒரு பாவனையைத் தோற்றுவிக்கின்றார். இதைத் தோற்றுவிப்பதற்காகவே, “ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது” என்று மூலத்துக்குச் சற்றும் தொடர்பில்லாமல் ஊரார் பேசுவதாகவும் அதில் ஒரு நியாயம் இருப்பதாகவும் “நாட்டுகார்க்கறியாம்” என்ற மூலக்கதைக் கருத்துக்கு ஒவ்வாத விவரணையை மொழிபெயர்ப்பாளர் செய்துள்ளார். கதை விவரணையாகின்றபோது அது தன்னுடைய இயல்பை இழந்து தட்டையானதொரு கருத்துக்குவியலாக மாறிப்போகின்றது என்பதை மொழிபெயர்ப்பாளர் அறியத்தவறிவிட்டாரா?
சுய ஆவர்த்தனங்களைப் பிரதியின்மீது திணிப்பதன் வாயிலாக மொழிபெயர்ப்புச் சிறப்படையும் என்று கருதுகிறாரா என்பது கேள்வி.
ஐந்தாவது பத்தி, ஹாஜியாரின் மகள் ருகியா தன் மகன் ரிஸ்வானிடம் தந்தையின் விருப்பத்தைச் சொல்லி, அது நடக்காவிட்டால் மனதில் வடுவாகக் கிடந்துவிடும் என்பதைக் கூறியதால் அவன் வரவேற்பு விருந்து வைக்கச் சம்மதித்தான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் கூற்றை மகன் வெளிப்படுத்தும் பாங்கில் கதைசொல்லியின் கூற்றாக இக்கருத்து மூலக்கதையில் அமைந்துள்ளது.
“ஒரு வரவேற்பாவது நடத்தி ஊருக்காரங்களுக்கு இத்தன பிரியாணி போடணும்னு தாத்தாவுக்கு ஒரு ஆச. எண்பத்தாறாச்சல்ல. இனி அந்த ஆச நடக்காதயே பெருசு பொணமாயிட்டுதுனா பிறகு அது மனசுல எப்பவும் ஒரு வெசனமாவே கெடக்கும்னு அம்மா சொன்னதுக்காக ரிஸ்வான் சம்மதிச்சான். இன்னிக்கிப் பொழுதோட ஆறுல இருந்து ஒன்பதுக்குள்ள ரிஸப்ஷன்.”5 (ப. 9)
மொழிபெயர்ப்பு: “சொந்த ஊரில் பேரனுக்கு ஒரு வரவேற்பு நடத்தி ஊர்க்காரர்களுக்கு நல்ல பிரியாணி போட்டுவிட வேண்டுமென்பது ஹாஜியாரின் ஆசை. அது நிறைவேறாமப் போனா அவர் செத்ததுக்கு அப்புறமும் மனதில் அது ஒரு பேஜாராகக் கெடக்கும்னு உம்மா சொன்னதால் ரிஸ்வான் சம்மதித்தான். இன்னக்கி சாயங்காலம் ஆறிலிருந்து ஒன்பதுக்குள்ளதான் வரவேற்பு.” (ப. 10)
மூலப் பிரதியின் முதல் வாக்கியத்தை அதில் இல்லாத ‘சொந்த ஊர்’, ‘நல்ல பிரியாணி’, ‘போட்டுவிட வேண்டுமென்பது’ ஆகிய தொடர்களைச் சேர்த்து மூலத்தின் சீர்மையைச் சிதைத்துள்ளார். இரண்டாவது வாக்கியத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டார் (அவருக்கு வயது 86 ஆனதைத்தான் முன்பே சொல்லிவிட்டோமே என்ற தெளிவு போலும்!) ‘எண்பத்தாறாச்சல்ல’ என்ற தொடர் தாய் மகனிடம் உரையாடுகிறாள் என்ற உணர்வை வாசகனுக்குக் கடத்தும் குறிப்பை வைத்துள்ளது. அது மொழிபெயர்ப்பாளருக்குத் தேவையில்லை போலும். மூன்றாவது வாக்கியத்தில், மூலப்பிரதியில் உள்ள ‘மூப்பர்’, ‘மய்யத்து’ ஆகிய சொற்களைக் கண்டு கொள்ளாமல் மொழிபெயர்ப்பாளர் தனது வாசிப்பில் தான் உணர்ந்ததைத் தமிழ் மொழியில் தந்துள்ளார்.
மூலத்துக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பு என்பதற்குப் பதிலாக அதற்கு விளக்கம் எழுதுவதை மொழிபெயர்ப்பு எனக் கருதுகிறாரோ என்ற ஐயம் எழுகின்றது. அதாவது, வாசகனுக்கு வாசகன் அவனது அனுபவங்களோடு சேர்த்து உருவாக்கிக்கொள்ளும் ஒவ்வொரு வாசிப்புக்குமான தனித்துவமான பிரதிகள் உருவாகி வாசிப்பு இன்பத்தைத் தந்துவிடக்கூடாது என்பதில் மொழிபெயர்ப்பாளர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார்.
அவ்வாறு ஒரு வாசகப் பிரதி உருவாகிவிட்டால் மூலமொழிக் கதாசிரியரின் மீது ஆர்வமும் மதிப்பும் உண்டாகிவிடுமல்லவா. வாசகனிடமிருந்து மூலமொழிக் கதாசிரியனை விலக்கி வைப்பதற்கு மொழிபெயர்ப்பு என்ற பெயரிலான இத்தகைய சொந்தக் கருத்துக் கலப்புப் பெயர்ப்புகள் பயன்படுகின்றன.
வாக்கியப் பிழைகள், கருத்துப் பிழைகள், சொற் பிழைகள் ஒரு கதையை வாசிப்பதற்கான தடைக்கற்கள். மூன்றாவது பத்தியில், மூலமொழியிலுள்ள இரண்டு வாக்கியங்களை ஒரே வாக்கியமாகச் சேர்த்துப் பிசைந்ததில் வாக்கியப் பிழை நேர்ந்துள்ளது. ‘கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது.’ இத்தொடரில் ‘ஹாஜியால்’ என்று மூன்றாம் வேற்றுமை உருபைச் (ஆல்) சேர்த்ததால் வாக்கியப்பிழை ஏற்பட்டுள்ளது. நான்காம் வேற்றுமை உருபைச் (கு) சேர்த்து ‘ஹாஜிக்கு’ என்று எழுதியிருக்கவேண்டும். ‘ஹாஜியால்’ என்று தொடங்கினால் ‘காப்பாற்ற முடியும்’ என்று முடித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் ‘திராணி உண்டு’ என்று எழுவாய்க்கும் பயனிலைக்கும் வாக்கிய ஓர்மையின்மையை ஏற்படுத்திவிட்டார். மூலமொழி வாக்கிய அமைப்பை உள்ளவாறே பெறுமொழியில் அமைக்கும்போது கருத்துத் தெளிவில் நெருடல் இல்லையென்றால் வாக்கியத்தைச் சிதைக்கவோ பிரிக்கவோ கூடாது என்ற தெளிவின்மையால் நேர்ந்த பிழையென்று இதனைக் கருதிவிட இயலாது. தட்டச்சுப் பிழையும் அன்று.
நான்காவது பத்தி மூலத்தில், ஹாஜிக்கு ஆமினா மூலமாகப் பிறந்த மகள் ருகியா. ருகியாவோட மகன் ரிஸ்வான். அமெரிக்காவில் இருதய அறுவைச்சிகிச்சை நிபுணன். அவனுடைய கல்யாணம் போனவாரம் பெங்களூர்ல வச்சு நடந்தது.4
மொழிபெயர்ப்பில், ஹாஜியாருக்கு ஆமினாவில் பிறந்த மக ருக்கியா. ருக்கியாவோட மகள் ரிஸ்வான். அமெரிக்காவில் கார்டியாக் சர்ஜன். அவனுடைய கல்யாணம் போன வாரந்தான் பெங்களூரில் நடந்தது. (ப.10)
ரிஸ்வான் ‘மகன்’ என்பதற்குப் பதிலாக ‘மகள்’ என அச்சுப்பிழை நேர்ந்துள்ளது. அடுத்த மூன்றாவது வாக்கியத்தில் ‘அவன்’ என்ற சொல்லின் மூலம் ரிஸ்வான் ‘மகன்’ என்பதை வாசகன் யூகித்துக்கொள்ள முடியும். மேலும் ‘ரிஸ்வான்’ என்பதும் ஆண் பெயராக இருப்பதால் அச்சுப்பிழை என வாசகன் எளிதாகக் கடந்து சென்றுவிட இயலும். அந்தப் பத்தியில் முதல் வாக்கியத்திலும் இறுதி வாக்கியத்திலும் சிறு சறுக்கல்கள் இருந்தபோதும் மூலத்தின் மொழிநடையை மாறாமல் கையாண்டுள்ளார் மொழிபெயர்ப்பாளர்.
மூலக்கதையில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதென்றால் அவற்றை அவ்வாறே பயன்படுத்த வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மொழிபெயர்த்துப் பெறுமொழியில் கொடுத்துவிட வேண்டும். ஆனால் இந்த ஐந்து பத்திகளில் சிலவிடங்களில் மொழிபெயர்த்தும் சிலவற்றை மொழிபெயர்க்காதும் விட்டுள்ளார். குறிப்பாக மூலப் பிரதியில் ஒலிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொற்கள் சிலவற்றை மொழிபெயர்த்தும் சிலவற்றை மொழிபெயர்க்காதும் விட்டுள்ளார்.
மிநுட் - நிமிடம்
பார்ட்டி - பலசாலி
கார்டியாக் சர்ஜன் - கார்டியாக் சர்ஜன்
பேஜார் - பேஜார்
உம்மா - உம்மா
ரிஸப்ஷன் - வரவேற்பு
‘கார்டியாக் சர்ஜன்’ என்பதை ‘இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர்’ என்றோ, ‘பேஜார்’ என்பதை ‘விசனம்’ என்றோ மொழிபெயர்த்திருக்கலாம். அதே பத்தியில் இஸ்லாமியர் பயன்படுத்தும் வழக்குமொழிச் சொல்லான ‘உம்மா’ என்பதை ‘அம்மா’ என மொழிபெயர்க்காமல் உள்ளவாறே ஒலிபெயர்த்ததோடு ‘பல்யுப்பாப்பன்’ (தாத்தா), ‘ஹாஜப்’ (ஆசை), ‘மய்யத்து’ (பிணம்) ஆகிய சொற்களை மொழிபெயர்க்காமலும் பயன்படுத்தாமலும் தவிர்த்துச் சென்றுள்ளார். அதேபோன்று கதையின் பின்பகுதியில் வியாபாரி ராமச்சந்திரனுக்கும் கோபால் யாதவுக்கும் இடையிலான உரையாடல் மூலப்பிரதியில் இந்தி மொழியில் அமைந்துள்ளது. அதனை மொழி பெயர்க்காது உள்ளவாறே ஒலிபெயர்ப்புச் செய்து கொடுத்துள்ளார்.
மூலமொழியின் எடுத்துரைப்பு முறைமையை மாற்றாது பெறுமொழியில் பேச்சு வழக்கில் மொழியாக்கம் செய்யும்பொழுது பிறமொழிச் சொற்கள் பொருத்தமாக அமைந்தால் அதனை உள்ளவாறே ஒலி பெயர்த்துக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பெறுமொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்து கொடுப்பதென்றால் பிற மொழிச் சொற்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்த்துக் கொடுத்தலே சிறந்ததாகும். ஆனால், அவ்வாறு மொழி பெயர்த்துக் கொடுக்கும்போது பேச்சுவழக்கிலான உரையாடல் தன்மையைக் கதை இழந்துவிடுமா என்பது குறித்துச் சிந்திக்கவேண்டும்.
வேறு மொழியில் இருந்து வரும் எழுத்தை வாசகன் மிகுந்த நம்பிக்கையோடு தனது தாய்மொழியில் அணுகுகின்றான். அவனுக்கு மூலமொழியில் உள்ள பிரதியின் சொல்லல் முறையோ, வாக்கியக் கட்டமைப்போ எதுவும் தெரியாது என்ற நிலையில் மொழிபெயர்ப்பாளர் கட்டமைக்கும் சொல்லல் முறை, வாக்கியக் கட்டமைப்புகள் மிகுந்த மதிப்புவாய்ந்தவையாக அமைந்துவிடுகின்றன. ஆனால், அது ஒரு கதையை வாசகப்பிரதியாக வாசகனுக்குக் கொடுக்கப்படாமல் மொழிபெயர்ப்பாளரின் விவரணைப் பிரதியாக வாசகனுக்குக் கொடுக்கப்படும்போது அதில் உயிர்ப்பற்ற ஒற்றைத்தன்மையிலான தட்டையான ஒரு பிரதியையே எதிர்கொள்கிறான். இது மொழிபெயர்ப்பின் மீது சலிப்பை ஏற்படுத்துவதோடு மூல மொழியில் எழுதப்பட்ட கதையின் உயிர்ப்பான தன்மையை அது தரும் வாழ்வனுபவத்தை வாசகன் பெறமுடியாமல் போவதோடு அந்தக் கதை குறித்தும் படைப்பாளன் குறித்தும் எந்தவிதமான கருத்தும் அற்றவனாக ஆகிப்போகின்றான். ஒரு மொழியில் சிறப்பாகப் பேசப்பட்ட கதை இன்னொரு மொழியில் சிறப்பாகப் பேசுவதற்கான தன்மை எதுவும் அற்ற சக்கையாக இருந்தால் அதை வாசிக்கும் வாசகன் மூலமொழி வாசகர்களின் பார்வைக்கோணத்தைத் தவறாகப் புரிந்துகொள்வான்.
மொழிபெயர்ப்பாளர், தான் வாசித்த பிரதியை பெறுமொழியில் தந்துள்ளாரே தவிர மூலப்பிரதியை மொழி பெயர்க்கவில்லை. ஆகவே, அது மொழிபெயர்ப்பாளரின் ஒற்றை வாசிப்பின் விளக்கி மொழிதலாக அமைந்து விட்டது.
மூல மொழியின் மொழிப்பயன்பாட்டு முறைமையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பப் பெறுமொழியின் மொழிப்பயன்பாட்டை உறுதிசெய்வது மொழிபெயர்ப்பாளனின் கடமை என்பதை மொழிபெயர்ப்பாளர் கண்டுகொள்ளவில்லையா அல்லது மொழிபெயர்ப்பாளருக்குப் பெறுமொழியின் பேச்சுவழக்கு மொழிநடையில் பரிச்சயமில்லையா என்பது அறியக்கூடவில்லை.
மொழிபெயர்ப்பாளர் தனக்காகச் சமைத்துக்கொண்ட ஒரு பிரியாணியை ஊரெல்லாம் தின்னக்கொடுத்து அது சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பிரியாணி என்று கூறிக்கொள்வது மொழிபெயர்ப்பாகுமா?
1. சந்தோஷ் ஏச்சிக்கானம். (2016). பிரியாணி. கோட்டயம், டி.ஸி. புக்ஸ்.
2. பிரியாணி (2018), (கே.வி. ஜெயஸ்ரீ, மொ.பெ.). திருவண்ணாமலை, வம்சி புக்ஸ்.
அன்புடையீர் வணக்கம்.
அடர்ந்து அடர்ந்து ஓர் இதழ் வெளியீட்டில் தாமதங்கள் நேர்வது அத்துணை யதார்த்தமான சமாச்சாரமல்ல, இந்தப்பூட்டு கூடிய மட்டும் நான் இழுத்தடித்தேன். காரணங்கள் பல செயல் ஒன்றுதான். படைப்புகளை உவந்தளிக்கிறதும் உருத்துடன் வாசிக்கிறதுமான போக்குச் சுத்தமாகவே இல்லை. அங்க அவயங்கள் அவற்றின் உணர்வுகளின்றிப் பூச்சு மேல் பூச்சாக ஒப்பனைகள் மாத்திரமே செய்யப்படுகின்றது. அதாவது வெறுங்கூட்டின் மீது மார்ப்பந்து வைத்துக்கொள்வது. பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தம் வைக்கிற ஊத்தை சொத்தைகள் வெறுங்கூப்பாட்டில் சரக்கை விற்றுவிடலாம் என்றே கருதுகிறார்கள், கருத்து கந்தசுவாமிகள், பிளர்ப் பெரிய சுவாமிகள், கார்ப்பரேட் தரகர்கள் வழியமைந்த சந்தைக் காடுகளில். இங்கே இப்பேறுப் பெற்ற காத்திரமான சூழலில் சிறுசஞ்சிகை என்ற வஸ்துவுக்கு ஜோலி எதுவும் இல்லை என்பது மனம் கசக்கும் உண்மை. புளியேப்பக்காரர்களின் முன்பதாக அமுது படைப்பதா? இலக்கியப்புள்ளி என்ற பேர் இல்லாமலாகி விட்டால் வயிற்றுக்கஞ்சிக்கு பங்கமா வந்துவிடும்? ஆனால் அச்சிலே வார்ப்பது ஆகாவிட்டால் மிடாவிலே வார்ப்பது.
மானுடத்தின் உயிர் குடிக்கும் தீண்டாமை சுவர், மாணாக்கர் என்றும் பாராது வன்முறையைக் கட்டவிழ்க்கும் எதேச்சதிகாரம், சக உயிரியை பாலிச்சைக்குப் பலியிடும் காட்டுமிராண்டிகள், நித்தமோர் ஒடுக்குமுறை, நேரத்துக்கு ஒரு அடக்குமுறை மற்றும் அத்துமீறல் என அன்றாடம் நிகழ்ந்தேறும் அறப்பிறழ்வுகளுக்கெதிராக ஏதிலியாகப்பட்ட நமது இருத்தாசாயம் கொதித்தடங்கிக் கொதித்தடங்கி ஓர் உலைக்களமாகவே ஆகிவிட்டப்பிறகு, சூதுகளை எல்லாம் கவ்வும் படியான ஓராயுதம் அங்கே தோன்றியிருக்கலாகாதா? யாது செய்யவும் வக்கற்று, தலை ஒன்றுக்கு இருநூறு முதல் எழுநூறுவரை சன்மானம் பெற்று, விலையில்லா வாக்குகளை வாரி வழங்கி, மீண்டும் மீண்டும் ஆண்டைகளைப் பீடத்தில் குந்த வைத்திருக்கிறோம் அரும்பாடுபட்டு. இனி வேண்டியமட்டும் நம்மை அவர்கள் வெச்சி வெச்சி செய்வார்கள். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழ்! வாழிய பாரத மணித்திரு நாடு!
முலைக்குத்து அறியாத சவலைப்பிள்ளைகளாய் இருக்கிறார்கள் ஆசான்களின் சீடப்பிள்ளைகள். ஈனவும் தெரியவில்லை நக்கவும் தெரியவில்லை. மட்டித்தண்ணி வைத்தாலும் உர்ர்... மடக்கி கழுத்தையறுத்தாலும் உர்ர்... சுயமாகவொரு சிந்தனை தெரிவு தேடல் என்பதோ முரண்படும் மற்றமைகளிடம் உறவு பேணி வார்த்தையாடுகிற வழக்கமென்பதோ அறவே கிடையாது. அட ஆய் கழுவ வேண்டுமென்றாலும் ஆசான்கள் வேண்டுமென்கிறார்கள் அய்யா. கிணற்றுக்குள்ளே தாண்டி தாண்டி சமுத்திரத்தை காட்டுகிறதுகள் இணையத் தவளைகள்.
பந்திக்கு வேண்டாமென்றாலும் இலையோட்டை இலையோட்டை என்கிற இலக்கியத் தாத்தாக்கள் சில பேர் இங்கே களமாடுகிறார்கள். பார்த்த வேலைகளுக்கெல்லாம், ஈபிஎப், பென்ஷன் எல்லாம் வாங்கிக்கொண்டாயிற்று. ஒழிந்த வேளைகளில் உதிரியாக இலக்கிய ஷேவை. பெயர்த்திகளை மடியில் கோர வைத்து தலையைத் தடவி மூளையை உறிஞ்சுவது அவர்கள் பிரியம். முன்னுரை என்கிற பெயரில் ஒன்றுக்கும் ஆகாத குப்பைகளுக்கெல்லாம் வக்கணையாக வியாக்கினங்கள் எழுதி நம்புகிறபேர்களின் காசை கரியாக்குகிறார்களே அதைக்கண்டால்தான் நமக்குத் தலைவில் எரிகிறது. மரம் முத்தினால் சேகு, மனுஷன் முத்தினால் குரங்குதான் போல.
இவ்விடம் சிறந்த முறையில் பிளர்ப் எழுதி தரப்படும். முன்னட்டை, முன் உள்ளட்டை, பின்னட்டை, பின் உள்ளட்டை இவற்றுக்குத் தக்கபடியும், அங்குப் பங்காளிகள், அத்தைமார் மாமன்மார், விட்டவர்கள் உருவின பேர்கள் இவர்களுக்குத் தக்கபடியும், மற்றும் ஆளுமைகளின் இன்றைய பொருளாதார ஸ்திதிக்கு தக்கபடியும், பதிப்பாளர்கள் பணிவான வேண்டுகோள்களுக்கு இணங்கியும்...
எஞ்சிய களத்திலிங்கு இலக்கியக் கம்பு சுற்றும் மிட்டாய் மாமாக்கள் மலிந்து வருகிறார்கள் நடப்பில். இவர்களது தலையாயக் கடமை, கூடுகைகளில் கழுத்து நரம்பு புடைக்க உரையாற்றுவது. (உபரியாகத் தினசரிகளில் பட்டியலிடுவது, கூட்டங்களில் ஆசி வழங்குவது) கூட்டத்துக்கு வர பஸ்சுக்குக் கிளம்புகையில் பிரதியை கையில் கொடுத்தால் போதும். ஆழ்ந்த வாசிப்பின் வழி அப்பிரதியை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்வார்கள். (தடியுமொடியாது பாம்பூஞ் சாகாது) மேடை ஏறும்போது கண்ணாடியை வசதிபோல் வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பார்கள்.
சங்கபலகாரம் முன்னமர்ந்து ஓயாது ஈயோட்டிக்கொண்டிருக்கும்
நக்கீரர் கையிலொரு அஞ்சி பத்தாவது வையுங்கள்
உதடு மன்றாட உள்ளிருந்த பல்லும்போய்ப் புலம்பித்தவிக்குமந்த
வாய்க்கொரு குவளை தேத்தண்ணீர் வாங்கியூற்றுங்கள்
உலையாய் கொதிக்குமிதயம் சற்றிதங் காணட்டும்
இனமான தமிழ்மகனின் மொழிப்பற்றை இனப்பற்றை
மேல் சென்றிடித்தலை நலம்விரும்பியின் கரிசனத்தை
துதிபாடிகளின் பிழைப்புவாதமென மொழி பெயர்க்க
எவ்விதம் அய்யா துணிகிறீர்கள்
ஈனங்கெட்ட இலக்கியப்பதடிகளின் வாடகைச்சரக்கில் மலிந்திருக்கும்
சொற்குற்றம் பொருட்குற்றம் தாளப்பிழை மேளப்பிழை
ஜதிப்பிழை சுதிப்பிழை கண்டு தாளாதேதோ அங்கலாய்க்கிறார்
பொற்கிழியில் முடிந்திருக்கும் ஆயிரம் வராகன்களுக்கு
ஆசைப்படவேண்டமென அவரெப்போது சொன்னார்
கெண்டையைப் போட்டுத்தானே விராலை பிடிக்க வேணும்
உறி கழண்ட நெய்ச்சட்டியுடைந்தால் நாய்க்காதாயமென்பதும்
ஓமலிட்டால் பண்டங்களேதும் வீடு வந்து சேராதென்பதும்
அவரறியாத பழைமையா - கொக்கறியாத குளமேது
எருமை உழுகிறது உண்ணிக்கேன் விடாய்க்கிறது
அல்லும் பகலும் அறுபது நாழிகையும் ரத்தம் சிந்தி
மானம் காக்கிறவர் சகோதர வாஞ்சையை இப்படியா சாடுவது
ஆகாயம் பூமி சாட்சி அடியேன் சொல்கிறேன்
கிடாய் பதுங்குவதெல்லாம் பாய்ச்சலுக்கு இடம்
புதியதாகக் களம் காண புகுந்திருக்கும் இளையவர்களின் இலக்கு இலக்கியமாக இருப்பதில்லை. தகுதி திறமை இல்லையென்றாலும் அண்டிப்பிழைக்க ஸ்கோப் உள்ள மல்டினேஷன் கம்பெனிகள் தேடியலையும் பட்டதாரிகள் போல உள்ளீடு உணர்வுத்தீவிரம் என்பது மருந்துக்குக் கூட இல்லையென்றாலும் வெளிச்சம் பாய்ச்சும் மேடைகளைக் கைக்காசு செலவு செய்து தேடித் திரிகிறார்கள். மூத்தவர்களைச் சந்திப்பது, முசுவாக இலக்கியம் பேசுவது, செட் - வெட் சென்ட் அடித்து இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வது, சிநேகிதர்களுடன் கதைப்பது இவற்றையெல்லாம் இலக்கியத்தேட்டம் தாகமெனக் கொள்ளமுடியாது. கூத்தாடி சிலம்பம் படைவெட்டுக்கு உதவாது.
தெல்லுமணிகளைப்போலப் பிள்ளைகள் பிறந்தீர்கள்
நீங்கள்தானப்பா உஸ்தியமானவர்கள்
தொடுதிரை மடிக்கணணியில் தரிசனம் நகக்கண்ணில் பூதலம்
பிடித்தகிளை முறிந்து மிதித்தகொம்பும் ஒடிந்தால் நம் இனத்திற்கு ஈனம்
கதியற்ற நாய்களுக்கேது அம்மாவாசை கும்பிடிக்கை
படகினடியில் வெப்பம் - இசைக்க மறந்த காற்றின் பாடல் யாரறிவார்?
நெரிந்து - நெரிக்கட்டு - பசலை - கைம்மண்
புள்ளிபொட்டை எங்கு மேய்கிறதோ
முன்பொரு காலத்தில் ஆயிரத்தெட்டு கிளிகளிருந்தன
ஒளிப்புகாவென் அழகிய வீடு
அபத்தங்களின் சிம்பொனியை நினைத்தால்
அழுவாச்சி வருதுங் சாமி
எம்புளுலே செம்புளுல் - எம்புளுலே செம்புளுல்
அடிக்கட்டையில் அமர்ந்து
உன் குறி நீவிக்கொண்டிரு என் ஆலமரத்துச்செல்லமே.
சூழலியல், பொருளாதாரம், சமூகம், அரசியல், கலை, இலக்கியம், சிறு சஞ்சிகை, ஓவியம், சினிமா, ஊடகம், நவீன அரங்காற்றுகை, நாட்டார் கலைகள், நிழற்படக்கலை ஆகிய துறைகளில் களமாடும் ஆளுமைகளோடு, அவரவர் களம் குறித்த பார தூரமான பரிவர்த்தனை, புரிந்துணர்வு வேண்டி, செயற்தளத்தில் அவர்களுடன் செயல்பட வேண்டி ஓர் ஒருங்கிணையும் கூடுகையையும் அதனையட்டி இயங்க தொடர் செயல் திட்டங்களையும் மணல்வீடு இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. ஆர்வமுள்ள அன்பர்கள் கலந்துகொள்ள வேண்டுகிறேன். நிகழிடம், நாள், நேரம் - ஏர்வாடி பிரதி மாதம் நான்காம் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு.
கலைஞர்கள் வாழ்வை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பது, மேம்படுத்துவது, ஆவணமாக்குவது, அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிப்பது என்று மேல் சொன்ன களப்பணிகளில் பதினைந்து ஆண்டுக் காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கலை இலக்கிய உணர்வாளர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக சென்ற 11 - 01 - 2020 அன்று மதியம் மூன்று மணிக்கு, மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகமைந்த, ஏர்வாடி கிராமத்தில் நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய விழாவிற்குக் கை கொடுத்த பேர்களுக்கும் நேரில் வந்து கலந்துகொண்டுச் சிறப்பித்த பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
மென்டோசா: நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமையை எழுத அமர்ந்தபோது என்ன செய்ய நினைத்தீர்கள்?
மார்க்வெஸ்: நான் குழந்தையாக இருந்தபோது என்னைப் பாதித்த எல்லா அனுபவங்களையும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினேன்.
மென்டோசா: பல விமர்சகர்கள் மனித இனத்தின் வரலாறு குறித்த ஒரு நீதிக்கதையையோ அல்லது தொடர் உருவகத்தையோதான் அந்தப் புத்தகத்தில் பார்க்கிறார்கள்.
மார்க்வெஸ்: இல்லை. நான் விரும்பியதெல்லாம் ஒரு விசாலமான வீட்டில் கழிந்த என் குழந்தைப் பருவத்தின் சித்திரத்தை அதில் பதிவு செய்ய விரும்பியது தான். நீங்கள் அறிந்ததுபோல் அது ஒரு சோகமான வீடு. அதில் மண்ணைத் தின்னும் ஒரு சகோதரி, எதிர்காலத்தை முன்கூறும் ஒரு பாட்டி, சந்தோஷத்திற்கும் பைத்தியத்திற்கும் அதிக வேறுபாடு செய்யாத ஒரே பெயரைக் கொண்ட எண்ணற்ற உறவினர்கள் அடங்கியது அந்த வீடு.
மென்டோசா: ஆனால் எப்போதும் விமர்சகர்கள் இன்னும் அதிகமான அடர்த்திச் சிக்கலான உள் எண்ணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.
மார்க்வெஸ்: அப்படி அவை இருந்தபோதிலும் கண்டிப்பாக முற்றிலும் உள் நோக்கமற்றவையாகத்தான் இருக்கவேண்டும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்றால், நாவலாசிரியர்களைப் போலன்றி விமர்சகர்கள் புத்தகத்தில் உள்ளதைவிட அவர்கள் எதைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்களோ அதையே செய்கிறார்கள்.
மென்டோசா: நீங்கள் எப்போதும் விமர்சகர்களைப் பற்றிப் பேசும்போது முரண்நகையோடுதான் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் அவர்களை அவ்வளவு வெறுக்கிறீர்கள்?
மார்க்வெஸ்: காரணம் பெரும்பாலான விமர்சகர்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவல் ஒருவிதமான ஜோக் என்பதையும், நெருங்கிய நண்பர்களுக்கான சமிக்ஞைகள் நிறைந்தது என்பதையும் அறிவதே இல்லை. எனவே ஏதோ முன்னதாக வகுத்தமைத்த ஒரு உரிமையில், அவர்களுக்குத்தான் சகலமும் தெரியும் என்கிற மாதிரியான தோரணையில் ஒரு புத்தகத்தின் ரகசிய மொழியில் எழுதப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு தங்களை மகா முட்டாள்களாக்கிக் கொள்ளும் அபாயத்திற்கு உட்படுத்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு விமர்சகரை நான் நினைவு கூர்கிறேன். அந்தப் பாத்திரங்களில் ஒன்றான கேப்ரியல் பாரிசுக்கு ரேபலே1 எழுதிய எல்லாப் புத்தகங்களையும் எடுத்துச்செல்வதைக் கவனித்தபோது அவர் ஒரு முக்கியமான சாவியைக் கண்டுபிடித்துவிட்டதாய் நினைத்தார். இந்தக் கண்டுபிடிப்பைச் செய்த பின் பான்ட்டேகுருயெல்2 தன்மையான அதிகபட்சங்களையும், மிகைப்படுத்தல்களையும் இந்த இலக்கியப் பாதிப்புக்குக் காரணமாகக் காட்டினார். நான் நிஜத்தில் ரேபலே பற்றிய அந்த மறைகுறிப்பினை ஒரு வாழைப்பழத் தோலை வீசி எறிவதுபோல வீசியெறிந்திருந்தேன். பல விமர்சகர்கள் அதில் வழுக்கி விழுந்துள்ளனர்.
மென்டோசா: விமர்சகர்கள் சொல்வதை ஒதுக்கி விடுவோமேயானால் அந்த நாவல் உங்கள் குழந்தைப் பருவத்தின் ஞாபகங்களை மறு உயிர்ப்பூட்டுதல் என்கிற எளிமையான பதிவு என்பதற்கு அப்பாற்பட்டு கூடுதலானவற்றைக் கொண்டிருக்கிறது என நான் எண்ணுகிறேன். புவெந்தியா குடும்பம் லத்தீன் அமெரிக்க வரலாறாக இருக்க முடியுமென்று நீங்கள் ஒருமுறை சொல்லவில்லையா?
மார்க்வெஸ்: ஆம் என்று நான் நினைக்கிறேன். லத்தீன் அமெரிக்க வரலாறு மிகப்பெரிய அளவிலான பயனற்ற வினைத்திட்டங்கள் மற்றும் மகத்தான நாடகங்கள் நிகழ்வதற்கு முன்னரே பெருமறதிக்குச் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. நாம் மறதி என்கிற கொடிய நோயினாலும் துன்புறுகிறோம். கால ஓட்டத்தில் எவர் ஒருவரும் வாழைப்பழக் கம்பெனியின் தொழிலாளர்களைக் கூட்டாகக் கொன்றழித்த, நிஜமாய் நடந்த நிகழ்வை நினைவில் கொள்வதில்லை. அவர்கள் ஞாபகம் வைத்திருப்பதெல்லாம் கர்னல் ஆரிலியானோ புவெந்தியாவைத்தான்.
மென்டோசா: மேலும் கர்னல் ஆரிலியானோ புவெந்தியா தோற்றுப்போன அந்த முப்பத்தி மூன்று வருடப் போர்களும் ஒருவேளை நமது சொந்த அரசியல் விரக்திகளாக இருக்கலாம். கர்னல் வெற்றியடைந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
மார்க்வெஸ்: அவர் மூதந்தையைப்போலவே இருந்திருப்பார். நான் நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் கர்னல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்துவிடும் சபலம் எனக்கிருந்தது. ஒரு வேளை அப்படி நான் செய்திருந்தால், நான் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமைக்குப் பதிலாக மூதந்தையின் அந்திமக் காலம் நாவலை எழுதியிருப்பேன்.
மென்டோசா: அப்படியானால் ஏதோ ஒரு எதிர்பாராத வரலாற்றியல் தலைவிதி காரணமாய் எவர் ஒருவர் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போரிட்டாலும் அதிகாரத்தைக் கையிலெடுக்கும்போது அவரே ஒரு கொடுங்கோலராக மாறும் அபாயத்தில் உள்ளார் என்பதை நாம் கண்டிப்பாக அனுமானித்துக் கொள்ள வேண்டுமா?
மார்க்வெஸ்: ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலில் கர்னல் ஆரிலியானோ புவெந்தியாவின் கைதிகளில் ஒருவன் அவரிடம் சொல்கிறான்: “என்னை எது கவலைப்படச் செய்கிறதென்றால் ராணுவத்தின் மீதான அவ்வளவு வெறுப்பிலும், அவர்களுடன் அத்தனை போரிட்டபோதும், அவர்களைப் பற்றி அவ்வளவு எண்ணிய போதும், நீ அவர்கள் அளவுக்கே மோசமானவனாய் ஆகியிருக்கிறாய்.” அவன் இவ்வாறு முடிக்கிறான்: “இதே வேகத்தில் போனால் நமது வரலாற்றிலேயே மிக மோசமாய் அடக்கியாள்கிற, மிக மட்டரகமான கொடுங்கோலனாக நீ இருப்பாய்.”
மென்டோசா: இதே நாவலை நீங்கள் உங்களின் பதினெட்டாம் வயதில் எழுத முயற்சி செய்தீர்கள் என்பது உண்மையா?
மார்க்வெஸ்: ஆம். அது இல்லம் என்று அழைக்கப்பட்டது. காரணம் முழுக் கதையுமே புவெந்தியாக்களின் வீட்டினுள் நடக்க இருந்தது.
மென்டோசா: அந்தச் செப்பமற்ற வரைவில் எவ்வளவு தூரம் நீங்கள் முன்னேறியிருந்தீர்கள்? அப்பொழுதும் கூட நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளை உள்ளடக்கத் திட்டமிட்டிருந்தீர்களா?
மார்க்வெஸ்: நான், ஒரு தொடர்ச்சியான வடிவமைப்பு என்கிற அளவுக்குச் செல்லவில்லை. தனித்தனி துண்டுகளாய்த்தான் செய்திருந்தேன். அவற்றில் சில அந்தச் சமயத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நிஜமாக ஒரு நூறு ஆண்டுக் கால அளவில் உள்ளதா என்பது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
மென்டோசா: ஏன் அதை அப்பொழுது தொடர்ந்து எழுதவில்லை?
மார்க்வெஸ்: காரணம் அந்தச் சமயத்தில் அனுபவமோ, தாக்குப்பிடிக்கும் திறனோ, அல்லது அந்த மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான தொழில்நுட்பச் செயல்திறனோ என்னிடம் இருக்கவில்லை.
மென்டோசா: ஆனாலும் கதை உங்கள் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.
மார்க்வெஸ்: அடுத்தப் பதினைந்து ஆண்டுகளுக்கு, என்னால் சரியான தொனியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எனக்கு உண்மையென்று தோன்ற வேண்டும். ஒரு நாள் நானும், மெர்ஸிடஸஸும், குழந்தைகளும் அக்கபுல்கோ3வுக்குக் காரில் செல்லும்போது அது என்னிடம் ஒரு பளிச்சிடும் வீச்சில் வந்தது. என் பாட்டி அவரது கதைகளை எனக்குச் சொல்லும் அந்த முறையில் நான் கதையைச் சொல்ல வேண்டியிருந்தது. அந்தச் சிறுவனை அவன் தாத்தா ஐஸ் கட்டியைப் பார்க்க அழைத்துச் செல்லும் அந்த மதியத்திலிருந்து நான் தொடங்கினேன்.
மென்டோசா: ஒரு நேர்கோட்டுத்தன்மையான வரலாறு.
மார்க்வெஸ்: ஒரு நேர்கோட்டுத்தன்மையான வரலாறு. அதில் அபூர்வமான அம்சம் தன் சகல கள்ளமின்மையில் சாதாரணத்துவத்துடன் உருகிப் பிணைகிறது.
மென்டோசா: நீங்கள் சாலையில் காரைத் திருப்பி எழுதத் தொடங்கிவிட்டது உண்மைதானா?
மார்க்வெஸ்: உண்மைதான். நான் அக்கபுல்கோவுக்குச் சென்றுசேரவில்லை.
மென்டோசா: அப்புறம் மெர்ஸிடஸ்4?
மார்க்வெஸ்: இந்த மாதிரியான எவ்வளவோ பைத்தியக்காரத்தனங்களை மெர்ஸிடஸ் பொறுத்துக்கொண்டிருந் திருக்கிறாள் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். அவள் இல்லாமல் நான் அந்தப் புத்தகத்தை எழுதியிருக்க முடியாது. அவள் சூழ்நிலைக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டாள். நான் சில மாதங்களுக்கு முன் வாங்கியிருந்த காரை அடகு வைத்து அவளிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தேன். அந்தப் பணத்தை வைத்து நாங்கள் ஆறுமாத காலத்திற்கு வாழ்க்கை நடத்த இயலுமென்று கணக்கிட்டேன். ஆனால் புத்தகத்தை எழுத எனக்கு ஒன்றரை வருடங்கள் ஆயிற்று. பணம் தீர்ந்து போனவுடன் அவள் என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. அவள் எப்படிச் செய்தாள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கசாப்புக்காரன் எங்களுக்கு இறைச்சியை கடன் தரும்படி செய்திருந்தாள். ரொட்டி சுடுபவனை எங்களுக்கு ரொட்டி தரும்படிச் செய்திருந்தாள். வீட்டு உரிமையாளரை ஒன்பது மாதங்கள் வாடகைக்கு காத்திருக்கும்படி செய்திருந்தாள். என்னிடம் எதையுமே சொல்லாமல் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டாள். அப்பொழுதைக்கப்பொழுது ஐநூறு தாள்களையும் கூடக்கொண்டு வந்தாள். நான் என்றுமே அந்த ஐநூறு தாள்கள் இல்லாமல் இருந்ததில்லை. புத்தகம் முடிந்தவுடன் கையெழுத்துப் பிரதியை தபாலில் எடிட்டோரியல் சுடாமெரிக்கானா பதிப்பகத்திற்கு அனுப்பியதும் மெர்ஸிடஸ்தான்.
மென்டோசா: தபாலில் அனுப்ப கையெழுத்துப் படிகளை எடுத்துச் சென்றபோது அவரது மனதில் ஓடிய எண்ணத்தை என்னிடம் ஒருமுறை கூறினார்: “இவ்வளவுக்குப் பிறகு நாவல் பயனற்றதாய்ப் போய் விட்டால் என்ன செய்வது? அவர் அதைப் படித்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை இருக்குமா?”
மார்க்வெஸ்: அவளுக்குக் கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பது பிடிக்காது.
மென்டோசா: அவரும் உங்கள் மகன்களும் உங்கள் புத்தகங்களைப் படிப்பதில் கடைசி நபர்கள். எனக்குச் சொல்லுங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவல் வெற்றிகரமாக அமையும் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தீர்களா?
மார்க்வெஸ்: அதை விமர்சகர்கள் விரும்புவார்கள் என்பது பற்றி உறுதியாக இருந்தேன். ஆனால் பொது வாசகர்களிடம் அது அவ்வளவு பெரிய வெற்றியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அது ஏறத்தாழ 5000 பிரதிகள் விற்கும் என்று நான் நினைத்தேன். (என்னுடைய முந்தைய புத்தகங்கள் அது வரை ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதிகளே விற்றிருந்தன. எடிட்டோரியல் சுடாமெரிக்கானா வெளியீட்டாளர்(கள்) இன்னும் சற்றே கூடுதலான நம்பிக்கையுடன் இருந்ததால் அது 8000 பிரதிகள் விற்கும் என்று நினைத்தார்கள். நிஜத்தில் முதல் பதிப்புப் போனஸ் அய்ரெஸில் இரண்டு வாரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது.
மென்டோசா: நாம் புத்தகத்தைப் பற்றிப் பேசலாம். புவெந்தியா குடும்பத்தின் தனிமை எங்கிருந்து வருகிறது?
மார்க்வெஸ்: அவர்களது அன்பின்மையிலிருந்து வருகிறது என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் புத்தகத்தில் பார்க்கலாம். ஒரு நூற்றாண்டில் பன்றி வாலுடன் பிறந்த ஒரே ஒரு புவெந்தியா மட்டும்தான் காதலுடன் உருவாக்கப்பட்டவன். புவெந்தியாக்கள் காதல் செய்யும் திறன் அற்றவர்களாய் இருந்தனர். மேலும் இதுதான் அவர்களின் தனிமை மற்றும் விரக்திகளுக்கான சாவி. தனிமையானது ஒற்றுமையின் எதிர்நிலையில் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.
மென்டோசா: ஏன் அத்தனை ஆரிலினியோக்களும், அத்தனை ஹோஸே ஆர்க்கேதியோக்களும் இருக்கிறார்கள் என்று எல்லோரும் கேட்கக்கூடிய கேள்வியை நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை. காரணம் இது லத்தீன் அமெரிக்காவுக்கே உரித்தான ஒரு மரபான வழக்கம் என்று நம் இருவருக்கும் தெரியும். நாம் நமது அப்பாக்கள் அல்லது தாத்தாக்களின் பெயரை அனுசரித்துப் பெயர் இடப்பட்டிருக்கிறோம். மேலும் உங்கள் குடும்பத்தில் அது ஒரு அர்த்தங்கெட்ட ஸ்தாயியின் உச்சத்தை எட்டி, உங்கள் சகோதரரில் ஒருவரும் காப்ரியல் என்றே அழைக்கப்பட்டார். ஆனால் ஆரிலினியோக்களையும் ஹோஸே ஆர்க்கேதியோக்களையும் வேறுபடுத்திக் காண ஒரு வழிகாட்டுக் குறிப்பு உள்ளது என்று நான் எண்ணுகிறேன்.
மார்க்வெஸ்: அந்த வழிகாட்டுக் குறிப்பு பின்பற்ற மிக எளிதானது. ஹோஸே ஆர்க்கேதியோக்கள் குடும்பத்தைத் தொடர்ந்து பெருக்கமடைய வைக்கின்றனர். ஒரே ஒரு விதிவிலக்கு; ஹோஸே ஆர்க்கேதியோ செகுந்தோ மற்றும் ஆரிலியானோ செகுந்தோ. இதற்குக் காரணம் உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர்கள் பிறப்பிலேயே இடம் மாறிவிட்டதுதான்.
மென்டோசா: புத்தகத்தில் மடமை ஆண்களுக்குள்ளாகவே உள்ளார்ந்து இருக்கிறது (கண்டுபிடிப்புகள், ரஸவாதம், மட்டுமீறிய பெருவிருந்துகள் மற்றும் குடிகள்) மேலும் பெண்களிடமிருந்த நல்லறிவு. நீங்கள் இருபாலரையும் அப்படித்தான் பார்க்கிறீர்களா?
மார்க்வெஸ்: பெண்கள் இந்த உலகத்தைத் தொடர்ந்து இயங்க வைக்கின்றனர். மேலும் சகலமும் உடைந்து சிதறுவதைத் தடுக்கின்றனர். ஆண்கள் வரலாற்றை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றனர். இறுதியில் இரு பாலரில் எவர் கிறுக்குத்தனமானவர் என்று ஒருவர் வியக்க வேண்டியிருக்கிறது.
மென்டோசா: வெளிப்படையாகப் பெண்கள் குடும்பத்தின் தொடர்ச்சிக்கு உத்தரவாதமளிப்பதோடு நாவலையும் தொடரச் செய்கின்றனர். இதுதான் ஒருவேளை உர்சுலா இகுவரனின் அசாதாரணமான நீண்ட ஆயுளின் ரகசியமாக இருக்கக் கூடுமோ?
மார்க்வெஸ்: ஆம். அவள் உள்நாட்டுப் போருக்கு முன்னரே, அவள் நூறு வயதை அடையும்போதே இறந் திருக்கவேண்டும். ஆனால் அவள் இறந்துவிட்டால் புத்தகம் தகர்ந்து போய்விடும் என்பதை நான் உணர்ந்தேன். இறுதியாக அவள் இறக்கும் சமயம், புத்தகத் திற்கு அவ்வளவு உந்தம் கிடைத்துவிட்டிருந்தது. அதனால் அடுத்தென்ன நடக்கிறது என்பது பற்றிய பொருட்டில்லாமல் போய்விட்டது.
மென்டோசா: புத்தகத்தில் யாருடைய பாத்திரத்தை பெட்ரா கோட்ஸ் எடுத்துக் கொள்கிறாள்?
மார்க்வெஸ்: மேலோட்டமாக நீங்கள் ஃபெர்னான்டாவின் கண்ணாடிப் பிம்பமாகப் பார்க்க முடியும். அதாவது ஆன்டிய மலைப் பிரதேச பெண்களின் ஒழுக்கவியல் பற்றிய தப்பெண்ணங்கள் இல்லாத ஒரு கடலோரக் கரீபியப் பெண். மேலும் அவளது ஆளுமையானது நிஜத்தில் நிறைய அம்சங்களில் உர்சுலாவினுடையதைப் போன்றது. யதார்த்தம் பற்றி அதிகமும் பக்குவமற்ற அறிவு கொண்ட ஒரு உர்சுலா (எனலாம்).
மென்டோசா: நீங்கள் நாவலை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் சில பாத்திரங்கள் நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட வேறு வித்தியாசமான திசைகளை எடுத்துக் கொண்டார்களா? உங்களால் ஒரு எடுத்துக்காட்டு தர இயலுமா?
மார்க்வெஸ்: ஆம். ஒரு பாத்திரம் சாந்த்தா சோஃபியா தெலா பைடாட். புத்தகத்தில், நிஜவாழ்க்கையில் போலவே, அவளுக்குத் தொழுநோய் இருப்பதைக் கண்டு பிடித்தவுடன் அவள் வீட்டைவிட்டுச் செல்லும்போது போய் வருகிறேன் என்று ஒருவரிடமும் சொல்லாமல் செல்வதாக நான் ஒரிஜினல் திட்டம் கொண்டிருந்தேன். அந்தப் பாத்திரத்தின் முழு ஆளுமையுமே தியாகம் மற்றும் சுயமறுப்பு ஆகிய உணர்வுகளின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்த போதிலும் கூட அந்த விளைவு நம்பத் தகுந்ததாய் இருந்திருக்கும். நான் அதில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அது மிகவும் குரூரமானது.
மென்டோசா: பாத்திரங்களில் எவராவது ஒருவர் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியிருக்கிறார்களா?
மார்க்வெஸ்: மூன்று பாத்திரங்கள் கட்டுப்பாட்டிலிருந்து நழுவினர். எந்த அர்த்தத்தில் என்றால் அவர்களது வாழ்க்கை நான் விரும்பியது போல் வெளிப்படவில்லை. தனது அத்தை அமரந்தா மீதான ஆரிலினியானோ ஹோஸேவின் அச்சமூட்டும் பேருணர்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஹோஸே ஆர்க்கேதியோ செகுந்தோ என்றைக்குமே வாழைப்பழ கம்பெனித் தொழிலாளர் சங்கத் தலைவராக ஆவதை நான் விரும்ப வில்லை. மேலும் பயிற்சிநிலை போப் ஹோஸே ஆர்க்கேதியோ ஒருவிதமான அழிவுமிக்க அடோனிஸ்5 ஆக மாற்றமடைந்து முழுமையான நாவலில் முற்றிலும் இடப்பொருத்தமற்றுப் போகிறான்.
மென்டோசா: புத்தகத்திற்குச் சில வழிகாட்டுக் குறிப்புகள் வைத்துள்ள எங்களைப் போன்றோர் ஒரு குறிப்பிட்ட நொடியை அடையாளம் காண்கிறோம். அதில் மெக் கோந்தோ ஒரு சிறு நகரமாக, உங்கள் நகரமாக இருந்து பாரன்கியா 6 வைப் போன்ற பெருநகரமாய் மாறுகிறது. அங்கு உங்களுக்குத் தெரிந்த இடங்கள் எதையாவது அல்லது மனிதர்கள் எவரையாவது நிஜமாக அதில் வைத்தீர்களா? இந்த மாறுதலின் காரணமாய் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டதா?
மார்க்வெஸ்: மெக்கோந்தோ ஒரு இடம் என்பதை விட ஒரு மனோநிலை என்று சொல்லலாம். எனவே ஒரு சிறுநகரத்திலிருந்து பெருநகரத்திற்குக் காட்சியை மாற்றுவது பெரியப் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும்போது அதன் சூழ்நிலையில் வெளிப்படையான மாறுதல் இல்லாதிருக்கவேண்டும்.
மென்டோசா: நாவலில் உங்களின் மிகக் கடினமான கணம் எதுவாக இருந்தது?
மார்க்வெஸ்: தொடங்குவது. பெரும் சிரமத்துடன் நான் தொடங்கி முடித்த அந்த முதல் வாக்கியத்தின் தினத்தை மிகத் தெளிவுடன் நினைவுகூர்கிறேன். மேலும் திகிலடைந்து என்னை நானே கேட்டுக்கொண்டேன், என்ன எழவு அடுத்து வருகிறது என்று. நிஜத்தில் காட்டின் மத்தியில் அந்தப் போர்க் கப்பலை கண்டுபிடிப்பது வரை அந்தப் புத்தகத்தின் நகர்வினைப் பற்றி நான் நிஜமாக நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் அந்தப் புள்ளியிலிருந்து முழு விஷயமுமே ஒருவிதமான வெறிமிகுந்த ஆவேசமாய் மாறிவிட்டது. மேலும் மிகவும் சந்தோஷத்துடன் அனுபவிக்கத் தக்கதாகவும் இருந்தது.
மென்டோசா: அதை முடித்த நாளை நீங்கள் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அப்போது என்ன நேரம்? நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
மார்க்வெஸ்: நான், பதினெட்டு மாதங்களாய் ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் மூன்று மணிவரை எழுதி வந்திருக்கிறேன். இதுதான் அந்தக் கடைசி நாள் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் புத்தகம் அதன் இயற்கையான முடிவுக்குத் தவறான நேரத்தில் வந்திருந்தது. ஏறத்தாழ காலை பதினோரு மணிக்கு. மெர்ஸிடஸ் வீட்டில் இல்லை. அதைப் பற்றிச் சொல்வதற்குத் தொலைபேசியில் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அது ஏதோ நேற்று நடந்தது போல் நான் என் முழுமொத்த மனத்தடுமாற்றத்தையும் நினைவு கூர்கிறேன். மிஞ்சி யிருந்த நேரத்தை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. மேலும் மதியம் மூன்று மணிவரை உயிர் தரித்திருக்க விஷயங்களைக் கற்பனை செய்து கண்டுபிடித்தேன்.
மென்டோசா: விமர்சகர்கள் பார்க்கத் தவறிய மிக அவசியமான சில அம்சங்கள் புத்தகத்தில் கண்டிப்பாக (அவர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு வெறுப்பு) இருந்திருக்கவேண்டும். அவை யாவை?
மார்க்வெஸ்: புத்தகத்தின் தலைசிறந்த ஒரு குணாம்சம், படைப்பாளனுக்குப் பரிதாபமான எல்லா மனிதர்களின் மீதும் இருந்த அளவற்ற கருணை.
மென்டோசா: உங்களின் மிகச்சிறந்த வாசகர் யார் என்று நினைக்கிறீர்கள்?
மார்க்வெஸ்: எனது ரஷ்ய நண்பர் ஒருவர், மிகவும் வயதான ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கிறார். அந்தப் பெண் முழுப் புத்தகத்தையும் கையால் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார், கடைசி வரிவரை. என் நண்பர் அந்தப் பெண்ணிடம் “நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி பதில் கூறியிருக்கிறார். “காரணம் யார் நிஜமாகவே பைத்தியக்காரர் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அது படைப்பாளனா அல்லது நானா என. மேலும் அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி முழுப்புத்தகத்தையும் மீண்டும் எழுதுவதுதான்.” அந்தப் பெண்ணைவிடச் சிறந்த ஒரு வாசகரைக் கண்டுபிடிப்பது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது.
மென்டோசா: எத்தனை மொழிகளில் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
மார்க்வெஸ்: பதினேழு.
மென்டோசா: ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
மார்க்வெஸ்: ஆம். அற்புதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் செறிவிக்கப்படும்போது மொழி அதிகச் சக்திவாய்ந்ததாய் ஆகிவிடுகிறது.
மென்டோசா: மற்ற மொழிபெயர்ப்புகள்?
மார்க்வெஸ்: நான் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பெயர்ப்பாளர்களுடன் இணைந்து வேலை செய்தேன். எனினும், புத்தகத்திற்குப் பிரெஞ்சு மொழியில் சரியான உணர்வு இருக்கவில்லை. எந்தவகையிலும் எனக்குத் திருப்தி இல்லை.
மென்டோசா: ஃபிரான்சில் விற்றதைவிட இங்கிலாந்தில் குறைவாகத்தான் புத்தகம் விற்றிருக்கிறது. ஸ்பானிய மொழி பேசப்படும் நாடுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவற்றில் அது அபாரமான வெற்றியடைந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மார்க்வெஸ்: ஒருவேளை கரீபியப் பாரம்பரியமாக இருக்கலாம். தெக்கார்த்தே7வின் கட்டுப்பாட்டைவிட நான் ரேபலேயின் கிறுக்குத்தனங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறேன். மேலும் ஃபிரான்சில் தெக்கார்த்தேவின் கை ஓங்கியிருக்கிறது. மற்ற நாடுகளில் இருந்த அளவுக்கு ஃபிரான்சில் புத்தகம் அவ்வளவு பிரபலமாய் என்றுமே ஆகாமல் இருந்ததற்கு இதுதான் காரணம். என்றாலும் கூட புத்தக மதிப்புரைகள் அபாரமாய் இருந்தன. ரோஸானா ரோஸான்டா முன்பொரு நாள் என்னிடம் சுட்டிக் காட்டினார். ஃபிரான்சில் புத்தகம் முதன் முதலில் வெளியிடப்பட்டது 1968ஆம் ஆண்டில். அது வியாபார வெற்றிக்கு கொஞ்சமும் யோகமில்லாத நேரம்.
மென்டோசா: நீங்கள் ஒரு நூறு ஆண்டுகளின் தனிமை நாவலின் வெற்றி குறித்துத் தடுமாற்றம் அடைந்தீர்களா?
மார்க்வெஸ்: ஆம். மிக அதிகமாக.
மென்டோசா: நீங்கள் என்றாவது அந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?
மார்க்வெஸ்: இல்லை. எனக்குத் தெரியாது. ஒருசில நெருக்கமான நண்பர்களை மனதில் கொண்டு நான் எழுதிய புத்தகம் சூடான கேக்குகளைப் போல் ஏன் விற்பனையாக வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானதாக (அது) இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
* EL OLOR DE LA GUAYABA GABRIEL GARCIA MARQUEZ, PLINIO APULEYO MENDOZA (Conversaciones con Plinio Apuleyo Mendoza) EDITORIAL SUDAMERICANA, BUENOS AIRES Tercera edición Setiembre de 1993
பத்மநாபனின் நாபியில் முத்தமிட்டாள் பானு. அவனது தாடையில் உதடுகளில் கன்னத்தில் அவளின் இதழ் பதித்தாள். ரவீந்திரனுக்கு மட்டும் தனியான அழைப்பு ஒலியை வைத்திருந்தான் பத்மநாபன். தன் உடலின் மீது படுத்திருந்த பானுவை மெத்தையில் படுக்குமாறு சைகை செய்தவாறு அவளை விலக்கி படுக்கையிலிருந்து எழுந்து அலைபேசியை எடுத்தான். உடைகளைச் சுருட்டிக் கொண்டு அறையிலிருந்து வெளியே சென்று சோபாவில் அமர்ந்தாள் பானு.
“ரவீந்திரன் வரச் சொல்றாரு. நான் கிளம்பனும்”. பத்மநாபன் அறையிலிருந்து சத்தமாகச் சொன்னான்.
“இப்போவேவா”
“ஆமா”
“ஏன்... ரவீந்திரன் பொண்டாட்டிக்கு ஏதாவது அவசரமாப் போயிச் செய்யனுமா”
அறையில் சட்டையின் பொத்தான்களை மாட்டிக்கொண்டிருந்தவன் பானுவை அடிக்க அவள் அருகில் ஓடி வந்தான். அவன் ஒரு விலங்கு போலப் பற்களைக் காட்டிக்கொண்டு ஓடிவருவதை எந்தச் சலனமும் இல்லாமல் வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பானு. கையை ஓங்கியவன் அடிக்காமல் அவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு பத்மநாபனுக்கு நீட்டினாள் பானு. பத்மநாபன் பாட்டிலை வாங்கிக் கீழே வைத்தான்.
“அவங்களப் போயி அப்படிச் சொல்ற. அவங்க புண்ணியவதி டீ”
“நான் தேவிடியாவா”
“ஏன் இப்படிப் பேசுற பானு”
“இத முத தடவ கிடையாது பத்து. நீ இன்னிக்கு நாம வெளிய போலாம்னு சொன்ன”
“நாளைக்குப் போலாம்”
“நாளைக்கு ரவீந்திரன் கூப்படமாட்டானா”
“நீ கிளம்பு”
“எங்க”
“உங்க வீட்டுக்கு.”
“ஏன்”
“நீ இங்க இருந்தா நான் உன்னைய ஏதாவது பண்ணிடுவேன்”
“என்ன பண்ணுவ”
“ஏண்டீ அசிங்கமாப் பேசற. ரவீந்திரனப் போயி அவன் இவன்னு சொல்றே. அவரு யாரு தெரியுமா”
“உன் அப்பாவா”
எழுந்து அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கி அவள் மீது ஏறியப் பாய்ந்தான். மறுதிசையில் கிடாசினான்.
“ப்ளீஸ். நீ கிளம்பு.” போ என்று சைகை செய்தவாறு அங்கிருந்து பால்கனியில் போய் நின்றுகொண்டான்.
பானு அதற்குபின் எதுவும் பேசவில்லை. உடைகளை அணிந்துகொள்ள அறையினுள் சென்றாள். உடலில் சுருண்டிருந்த துணிகளைக் களைந்தாள். உடைகள் ஏதுமின்றி உறைந்து நின்றாள். கண்களில் நீர் சொரிந்தது. தனது மார்பை இடையைக் கைகளால் மெல்ல பற்றினாள். பத்து என்றாள். ஜீன்ஸ் பேன்ட்டும் கருநிற டீசர்ட்டும் அணிந்துகொண்டு தன் உடைகளை ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.
கருப்பு நிற டீசர்ட் உன் செந்நிற உடலுக்கு அழகாய் இருக்கிறது என்று பத்து ஒரு முறை சொன்னதை நினைத்துக்கொண்டாள். கூந்தலை அவிழ்த்து தலைவாரி வாயில் பற்றியிருந்த கிளிப்பை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினாள். வெளியே வந்தபோது பத்மநாபன் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றாள்.
ஜெமினி சிக்னலில் நன்கு பருத்திருந்த வெள்ளைத் தோல் மத்திய வயதினன், அவனைப்போலவே பருத்திருந்த அவனது மனைவி, பத்து வயதை கடந்த இரு ஆண் குழந்தைகள் அனைவரும் கியரற்ற இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுவில் இருந்த குழந்தை பிதுங்கிக்கொண்டிருந்தது. முன் பக்கம் அமர்ந்திருந்த ஆண் குழந்தை ஒரு டெய்ரி மில்க் சாக்லெட்டை முழுதாகத் தின்றுகொண்டிருந்தது. சிக்னல்மாறி அந்த வண்டி அவனுக்கு முன்னே இடது பக்கம் திரும்பியது. பத்மநாபன் தன் மோட்டார் சைக்கிளில் நேராகச் சென்றான்.
அவர்கள் இந்த மாலைபொழுதில் கடற்கரை நோக்கி செல்லக் கூடும். அவர்கள் அங்கே பாய் விரித்து அமரக்கூடும். அந்தியில் அவர்கள் அன்றையைப் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கக்கூடும். பானுவும் அவனை எங்காவது வெளியே அழைத்துச்செல்லக் கேட்டாள். ரவீந்திரன் அழைத்திருக்காவிட்டால் ஒரு வேளை அவளை அழைத்துச் சென்றிருக்கக்கூடும். ரவீந்திரனின் மனைவியைப் பற்றிப் பானு ஏன் அப்படிப் பேசினாள். அவரது மனைவி அழகானவர்தான். ஓர்மையற்று ஒரு நாள் அவரது உத்ரா என்ற பெயரை பானு இருக்கும்போது உச்சரித்துவிட்டதும் உண்மைதான். எப்போதும் வெண்ணிறத்தில் அழுத்தமான நிறங்களாலான பார்டர்கள் கொண்ட பருத்தி புடவைகளையும் பார்டர் நிறத்திலான பிளவுஸையும் அணிந்திருப்பார். மெட்டல் வளையல்களும் காதணிகளும் பெரிய பொட்டும் இட்டிருப்பார். மெல்லிய காலடி சத்தத்தோடு அவர் நடந்து வருவது ஒரு பறவை சிறகடிக்காமல் பறந்து வருவது போல இருக்கும். சன்னமான குரலில் பேசுவார்.
தன் தாய் தந்தையரை சிறு வயதிலேயே இழந்துவிட்ட ரவீந்திரன் சுயமாக உழைத்து படித்து முன்னேறியவர். ஒரு ஐஸ் பேக்டரியில் வேலை செய்துகொண்டே படித்தவர் ரவீந்திரன். வழக்கறிஞர். சமூக ஆர்வலர். எப்போதும் ரவீந்திரன் அடர்த்தியான நிறங்களிலான ஜிப்பாவுடன் அப்போதுதான் சவரம் செய்து லோஷன் இட்ட முகமுமாகத் தோன்றுவார். நீதிமன்றங்களில் வெண்ணிற முழுக்கைச் சட்டையுடன் கறுப்பு கோட்டும் அங்கியுமாகக் கம்பீரமாகக் காட்சியளிப்பார். அவர் தன்னைத் தினமும் உடற்பயிற்சி செய்யச் சொல்வதும் தன்னால் அது இயலவில்லை என்பதையும் நினைத்து எரிச்சல் கொண்டான் பத்மநாபன். ரவீந்திரன் ஒரு குட்டிபயில்வான். ஆறடிக்கும் மேலான உயரம். எந்தக் கூட்டத்திலும் ரவீந்திரன் தனித்துத் தெரிவார். விரிந்த தோள்பட்டைகள், ஒடுங்கிய வயிறு, கூன் விழாத முதுகு, தாடையில் கை பொதித்துச் சிந்திக்கும் தோரணை, பெரிய மீசை, மெல்ல மெல்ல கால்களை வைத்து வேகமாக அவர் நடக்கும் பாங்கு, வசீகரிக்கும் அவரது குரல், நீதிமன்றங்களில் அவர் வாதங்களை முன்வைக்கும் விதம், எல்லாவற்றிலும் இருக்கும் தெளிவு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமை. ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் ரவீந்திரன் விரைவில் அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு வந்துவிடுவார். எந்தப் பெண்தான் ரவீந்திரனை காதலித்திருக்க இயலாது. பணக்கார பெண்ணான உத்ரா அவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது ஆச்சரியமில்லைதான். பத்மநாபன் வண்டியை அணைத்தான்.
இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியிலிருந்த குறுகிய இடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அரங்குக்குள் சென்றான் பத்மநாபன். புத்தகத்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ் வெளியிடுவார், நீ அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும், சரியாக ஆறு மணிக்கெல்லாம் கவிக்கோ மன்றத்திற்கு வந்துவிடு என்று ரவீந்திரன் அழைத்திருந்தார். நேற்று அழைப்பிதழைக் கொடுக்கும்போது இதைச் சொல்லவில்லையே என்று அவர் தொலைபேசியில் அழைத்து சொல்லும்போது நினைத்துக்கொண்டான். அழைப்பிதழிலும் அவன் பெயரில்லை. ஆனால் கேட்க நினைத்து கேட்கவில்லை. அவன் அரங்கினுள் செல்லும்போது தொகுப்பாளர் மேடைக்கு வர வேண்டியவர்களின் பெயரை அழைக்க ஆரம்பித்திருந்தார். பத்மநாபன் மேடை ஏற எளிதாக இருக்கும் என்று முன் வரிசையில் சென்று அமர்ந்தான்.
மேடைக்கு வரவேண்டிய அனைத்து பெயர்களையும் சொல்லி முடித்துவிட்டார் தொகுப்பாளர். அவன் பெயரை சொல்லவில்லை. அரங்கிலும் மேடையிலும் நிறைய கூட்டம் என்பதால் ஒரு வேளை புத்தகம் வெளியிடப்படும்போது அழைக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டான். அந்தப் பெண் தொகுப்பாளரை இதற்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறோமே என்று குழம்பிக்கொண்டிருந்தான். அவன் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் புத்தகத்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ் வெளியிட மனித உரிமை ஆர்வலர் ரகோத்தமன் பெற்றுக்கொள்வார் என்று அந்தப் பெண் தொகுப்பாளர் அறிவித்தார். பத்மநாபன் வயிற்றில் ஒரு ஓட்டையை உணர்ந்தான். இப்போது எழுந்து அரங்கை விட்டு வெளியேச் சென்றால் நன்றாக இருக்காது என்று கருதினான். பானு ரவீந்திரன் உன் அப்பாவா என்று கேட்டது அவனது நினைவுக்கு வந்தது. ரவீந்திரன் மேடையிலிருந்து பத்மநாபனை பார்த்து புன்னகைத்தார். பல ஊடகக்காரர்கள் நிழற்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். ரவீந்திரனின் மனைவி உத்ரா மேடைக்கு அருகில் வந்து தன்செல்பேசியால் போட்டோ எடுத்தார். திரும்பும்போது பத்மநாபனை பார்த்துப் புருவம் தூக்கி புன்னகைத்துக்கடந்தார். ரகோத்தமனுக்குச் சமீபத்தில் மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கலந்துகொண்டிருப்பதால் ஒரு வேளை ஊடகக்காரர்கள் அதிகம் வந்திருக்கலாம். அவரின் பெயர்தான் அழைப்பிதழில் கூட இருந்தது. ஆனால் தன்னை ஏன் இன்று வரச்சொன்னார், ஏன் இறுதியில் ரகோத்தமனே வாங்கிக் கொள்கிறார் என்று எதுவும் பத்மநாபனுக்குப் புரிய வில்லை.
நீதிமன்றம், காவல் நிலையம் என்றாலே பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் நீதிமன்றங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் தங்கள் புகார்களைக் கொண்டுவரவே பாதிக்கப்பட்டவர்கள் தயங்குகிறார்கள். வறியவர்கள், பெண்கள், எந்த அரசியல் கட்சி பின்புலமும் அமைப்பு பின்புலமும் இல்லாதவர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட வேண்டும். தட்டினால் நீதி கிடைக்கும். அதற்கு அவர்களுக்குக் காவல் நிலையங்கள் பற்றி, குற்றவியல் நீதிமன்றங்கள் பற்றி, உரிமையியல் நீதிமன்றங்கள் பற்றி, எப்படி ஒரு வழக்கை நீதிமன்றத்தில் நடத்துவது என்பது பற்றி, ஐபிசி, சிபிசி, சிஆர்பிசி, இந்திய அரசியல் சாசனம், இந்திய சாட்சி சட்டம், வாயிதா, ரிட் என்று அனைத்தையும் பற்றி அடிப்படை புரிதல் இருக்கவேண்டும். நீதிமன்றங்கள் நீதியை நிலை நாட்ட இருக்கும் அமைப்பு. அங்குச் செல்ல அஞ்ச வேண்டியதில்லை. அறிய அறிய அச்சம் அகல்கிறது. அப்படி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்று மிகவும் உழைத்து ரவீந்திரன் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ரவீந்திரனை சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அனைவரும் நன்கு அறிவர். உழைப்பாளி. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர். அவருக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் புத்தகத்தை அவர் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவரை நான் நன்கு அறிவேன் என்பதால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை, அவருக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி தன் உரையை நிறைவு செய்தார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ். அவருக்கு நன்றி சொன்னார் தொகுப்பாளர்.
எரிந்து எரிந்து அணையும் விளக்கு போலக் கை குலுக்கல்கள், முகமன்கள், வாழ்த்துகள், புன்னகைகள் என்று கூட்டம் மெல்ல கலைந்து சென்றது. அரங்கின் வேலையாட்கள் நாற்காலிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்திருந்தனர். பத்மநாபன் அருகில் வந்து அமர்ந்தார் ரவீந்திரன். அவனிடம் புத்தகத்தின் பிரதியை நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டான். அவன் தோளில் கை போட்டு வெளியே அழைத்துச் சென்றார். சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் இரண்டு கப் டீ வாங்கிபத்மநாபனிடம் ஒரு கப்பை நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டான். உத்ராவை காரை எடுத்துச்செல்லச் சொல்லிவிட்டேன், நாம் இருவரும் உங்கள் பைக்கில் என் வீட்டிற்குச் செல்லலாம் என்று ரவீந்திரன் சொன்னார். பத்மநாபன் பதில் எதுவும் சொல்லவில்லை.
நூலகத்தில் சிலர் செய்திதாள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எம்.என்.ராய் எழுதிய இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலகட்டம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தான் பத்மநாபன். நூலகங்களுக்கு என்று சுழலும் வேகத்தில் காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. தமிழகத்தில் இருக்கும் ஜாதிகள், அவர்களின் பிறப்பு, திருமணம், இறப்புச் சடங்குகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு பெரிய புத்தகம் மேஜையில் இருக்கவும் அதை எடுத்துப் புரட்டினான். ரவீந்திரன் எந்த ஜாதியைச் சேர்ந்தவர், இத்தனை வருட பழக்கத்தில் அவரை இதுவரை கேட்கவில்லை, கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை, இன்று முதல் முறையாக அந்த எண்ணம் வந்ததை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்.
அவர் தனது முற்பகுதி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எப்போதும் ரகசியம் காத்தார். ஒரு எல்லைக்கு மேல் அது குறித்து யாருக்கும் தெரியாது. நூலகத்தின் அருகிலிருந்த பிரிட்டீஷ் கவுன்சில் அலுலகத்தில் பானு பணிபுரிந்தாள். அவளை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்று கேஸ் கட்டுகள், கவுன் பை எடுத்துக்கொண்டு சைதை நீதிமன்றம் செல்ல வேண்டும். தேனாம்பேட்டையிலிருந்து அசோக் பில்லரில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து சைதை செல்ல நிறைய நேரம் ஆகிவிடும். மணி ஏற்கனவே பத்தரை ஆகிவிட்டது. காலிங் அவர்ஸ் தொடங்கியிருக்கும். ரவீந்திரன் தனக்காகக் காத்திருப்பார். அழைத்தபோதும் எடுக்கவில்லை. எரிச்சல் அடைந்திருக்கக்கூடும். ஆனால் பானுவை இன்று சந்திக்கவில்லை என்றால் பின்னர்ச் சந்திக்க இயலாமலே போய்விடக்கூடும். பானுவை தொலைபேசியில் அழைத்தால் எடுக்க மறுக்கிறாள். அவள் இன்னும் அலுவலகத்திற்கும் வரவில்லை. மறுபடியும் எல்எல்ஏ பில்டிங்கில் இருந்த நூலகத்திலிருந்து வெளியே வந்து பிரிட்டீஷ் கவுன்சில் அலுவலகம் சென்றான். வெளியே வாகன நிறுத்துமிடத்தில் அவளது இரு சக்கர வாகனம் நின்றது. அவள் வந்துவிட்டாள் என்பது அவனுக்கு மேலும் பதற்றத்தை அளித்தது. பாதுகாவலர்கள் அவனைச் சோதனை செய்தனர். அடையாள அட்டையைப் பரிசோதித்த பின் உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளே சென்று அவள் பெயரை சொல்லி அவளைப் பார்க்கவேண்டும் என்றான். பத்மநாபனை அமரச் சொன்னார் வரவேற்பாளர். லாபியில் அமர்ந்தான். தொண்டையில் பெரிய உருண்டை திரண்டிருந்தது. வர மறுத்து விடுவாளோ என்று சிதறியபடி இருந்தான்.
செல்போனில் எதையோ பார்ப்பது போல அவன் அருகில் வந்தாள் பானு. அவனிடம் எதுவம் பேசாமல் அமைதியாக அருகில் அமர்ந்தாள். காபி குடிக்கலாமா என்று கேட்டான். அவள் எதுவும் சொல்லவில்லை. அவன் எழவும் அவளும் எழுந்தாள். இருவரும் லாபியிலிருந்து வெளியே வந்து கேபிடீரியா சென்றார்கள். பத்மநாபன் இருவருக்கும் காபி வாங்கிக்கொண்டு வந்தான். இரண்டு கைகளையும் தாடையில் பொதித்து மேலே கண்ணாடி சட்டகங்களின் வழி விழுந்த வெயிலை பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.
“இனி இப்படி நடக்காது பானு”
அவள் எதுவும் சொல்லாமல் காபியை பருகினாள். அவள் அவனைப் பார்க்கவில்லை. மறுபடியும் அதையே சொன்னான்.
“நேத்து நான் பேசினதுக்கு ஸாரி பத்து”
இப்போது பத்மநாபன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
“நான் நேத்து போயிருக்கவே தேவையில்ல”
“இட் யிஸ் ஒகே. உனக்கு நேரமாகலயா. மணி பதினொன்னு ஆகுது. கோர்ட்டுக்கு போகல”. அவள் முந்தைய தினம் எதுவுமே நடக்காதது போல பேசினாள்.
“போகனும். உன்னைய பாக்கனும்னு தோனிச்சு”
“ம்”
“பானு”
“உனக்கு என்னைய நிஜமாவே பிடிச்சிருக்கா பத்து. எனக்குப் பயமாயிருக்கு”
பத்மநாபன் பானுவின் கைகளைப் பற்றினான். பானு பத்மநாபனை பார்ப்பதை தவிர்த்து கண்ணாடிக்கு திரைக்கு மறுபக்கம் இருந்த நூலகத்தில் ஒரு குழந்தை புத்தகம் ஒன்றை எடுத்துத் தீவிரமாகப் புரட்டுவதைப் பார்த்தவாறு இருந்தாள். அவளது கண்களில் நீர் கோர்த்திருந்தது. தலையைக் குனிந்து மெல்ல கண்களைத் துடைத்தாள்.
“சரி நீ கிளம்பு. நாம அப்புறம் பேசுவோம் பத்து”.
பெங்களூரில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பத்மநாபனுடன் படித்த எல்லா நண்பர்களும் ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார்கள். பத்மநாபன் எந்த நிறுவனத்திலும் சேரவில்லை. சென்னைக்குச் சென்று ஒரு நல்ல வழக்கறிஞரிடம் ஜூனியராகச் சேரவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ரவீந்திரன் இ.பி.டபிள்யூவில் நீதிமன்றங்களில் நீதிபதி ஒரு சமூகத்தின் எந்த வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய ஒரு கட்டுரை அவனுக்குப் பிடித்திருந்தது. அவரைப் பற்றி அவன் அறிய வந்த செய்திகள் அனைத்தும் இனியவையாக இருந்தன. அவர் நடத்தி வெற்றி பெற்ற குற்றவியல் வழக்குகள், உரிமையியல் வழக்குகள், பொதுநல வழக்குகள், சிலமுறை இரு தரப்பையும் அழைத்து அவர் செய்யும் பஞ்சாயத்துகள் குறித்துத் தெரிய வந்தபோது அவன் உவகைக் கொண்டான்.
முக்கியமாக ஒரு வீட்டில் வேலை செய்த பெண் அந்த வீட்டில் சில சேலைகள் திருடுப் போய்விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் நிலைய விசாரணையில் இறந்து போன வழக்கில் தீவிரமாகப் போராடி அந்தக் காவல் நிலையத்தின் குற்றவியல் எஸ்.ஐ மற்றும் ஏட்டு ஆகியோருக்குச் சிறை தண்டனை பெற்று தந்த வழக்கு பற்றி அறிய நேர்ந்தபோது அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டான். அவர் பதில் மின்னஞ்சல் அனுப்பி நேரில் வந்து சந்திக்கச் சொன்னார். பத்து வருடங்கள் கடந்துவிட்டது. வயதும் முப்பத்திரெண்டு ஆகிவிட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று பெரும்பாலும் இந்த மூன்று நீதிமன்றங்களிலேயே இந்தப் பத்து வருடங்கள் ஓடிவிட்டது. நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், ரவீந்திரனின் இல்லம், உதயம் தியேட்டருக்கு எதிரே இருந்த காம்ப்ளக்ஸில் இருந்த ரவீந்திரனின் அலுவலகம் இவைதான் அவன் உலகம்.
ரவீந்திரனுடன் தொடர்பு இல்லாமல் அவன் வாழ்வில் இணைந்துகொண்ட ஒரே விஷயம் பானு. இன்றைய பொழுது இனிதே கழிந்தது என்பது போல எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பத்மநாபன் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனம் போல அவன் வாழ்க்கையும் சென்று கொண்டுதான் இருந்தது. ஆனால் சில நேரங்களில் அவன் தலையற்ற முண்டமாகவே உணர்ந்தான். அவனில் ஏதோ ஒன்று குறைவதை ஏதோ ஒன்று நெருடுவதை ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் விளங்கிக்கொள்ள இயலாமல் அவதியுற்றான். பத்மநாபன் ரவீந்திரனின் ஜூனியராக மட்டுமே இப்போதும் அடையாளப்படுத்தப்படுகிறான். இத்தனைக்கும் சில வழக்குகளில் ஜாமீன் பெறுவதிலிருந்து வழக்கை நடத்துவது, வாயிதாபெறுவது, சாட்சிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்குச் சொல்லித்தருவது அனைத்தையும் அவனே முழுமையாகச் செய்தான்.
ரவீந்திரன் முந்தைய நாள் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் நிறையத் தரவுகளுக்கு அவன் உதவியிருந்தான். தட்டச்சுச் செய்து கொடுத்தான். மெய்ப்புப் பார்த்தான் திருத்தங்கள் கூறினான். ஆனால் முன்னுரையில் கூட அவன் பெயரில்லை. அழைப்பிதழிலும் அவன் பெயர் இல்லை. புத்தகம் வெளியிடும் நாளில் அழைத்து அவமானப்படுத்தினார். ரவீந்திரன் நன்றாகப் பேசுவார். மேன்மையாக நடந்துகொள்வார். துயரப்படும் குரலற்ற மனிதர்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருந்தார். ஆனால் எங்கோ தனக்கான பிம்பத்தை உருவாக்கியபடியே இருந்தார். ஊடகங்களுக்குத் தேவையான முகத்தை தயாரித்தபடியே இருந்தார். சமமாக நடத்துவார். கருத்துகளைக் கேட்பார். ஆனால் அவர் அது மட்டுமல்ல. ஏதேனும் உக்கிரமான உரையாடலின் போது கானகத்தில் யாருமற்ற தனிமையில் நடந்து செல்லும்போது சட்டென்று பெரும் ஒலியுடன் தாக்க வரும் வனவிலங்கு போல எதிர்பாராமல் தாக்குவார். நிலைகுலைந்தபின் மிருகத்தின் அங்கியை கழற்றிவிட்டு வெளிச்சம் அருளி பருக நீரும் தருவார். அப்போது வேறு ஒரு ரவீந்திரன் காட்சி தருவார்.
பானுவிடம் பேசி விடைபெறும்போது மதியம் பன்னிரெண்டு ஆகிவிட்டிருந்தது. சைதை நீதிமன்றத்திற்குச் செல்வதில் இனி பொருளில்லை என்று எண்ணி தேனாம்பேட்டையிலிருந்து தி.நகர் வழி அசோக் பில்லரில் இருக்கும் அலுவலகம் சென்றான். சேலை அணிந்திருந்த மாந்தளிர் மத்திய வயது பெண் அலுவலகத்தின் வெளியே அமர்ந்திருந்தாள். அந்தப் பெண்ணின் இடது கையில் மூன்று விரல்களைக் காணோம்.ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் இருந்தது. யாரோ வெட்ட வரும்போது தடுக்க முனைகையில் விரல்கள் அறுபட்டு போயிருக்கக்கூடும். உள்ளே நுழைந்தான். ரவீந்திரன் அவனைப் பார்த்துவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.
“வெளிய ஒரு பொம்பள உக்காந்திருக்காங்க”
“ம்”
“பாத்துட்டீங்களா”
“ம். இன்னிக்கி கோர்ட்டுல காலிங் அவர்ஸ்ல நீங்க இல்ல.”
“ஒரு முக்கியமான வேல”
“கருணாமூர்த்திக் கேஸ்ல இன்னிக்கி ரெண்டு விட்னஸ் வந்திருந்தாங்க. அவங்க வரலனுதான் போன தடவ இன்னிக்கி டேட் வாங்கினோம். ஆனா இன்னக்கி நீங்க இல்ல. என்கிட்டயும் சொல்லல. கோர்ட்டுல நீங்க இல்லனு போன் பன்னப்பையும் எடுக்கல”
“சாரி சார்”
ரவீந்திரன் எதுவும் பேசாமல் கேஸ் கட்டை மடித்து C.C.No. 365/19 என்று எழுதினார். இந்திய சாட்சிய சட்டம் புத்தகத்தைத் திறந்து மடித்திருந்த பக்கத்தை எடுத்து தன் டைரியில் குறிப்பெடுத்தார்.
“வெளியில ஒரு பொம்பள உக்காந்திருக்காங்களே”
“திருமுல்லைநாதன் பத்தி சொல்ல வந்திருந்தாங்க”
“திருமுல்லைநாதன் பத்தி என்ன” பத்மநாபன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“அவங்க விரலப் பாத்திங்களா”
“ஆமா மூனு விரலு இல்ல”
“திருமுல்லைநாதன்தான் காரணம்”
“அவங்க விரல பாத்தா அவங்களுக்கு வெட்டுப்பட்டுப் பல வருஷம் இருக்கும்போல இருக்கே சார்”
“ஆமா அதுல அவர் அக்யூட் ஆகிட்டாரு. அப்பீலுக்குப் போயிருக்கனும். போகல. இது நடந்து பதினைஞ்சு வருஷம் மேல ஆகிடுச்சு”
திருமுல்லைநாதன் இப்போது புழல் சிறையிலிருக்கையில் அவரை ஜாமீனில் எடுக்க ரவீந்திரன் முயன்று கொண்டிருக்கும் இந்த நிலையில் வெளியில் அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார் என்பதையும் ரவீந்திரன் அந்தப் பெண்ணிற்காகப் பரிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதையும் முடிச்சு போட பத்மநாபனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
“அவரு ஜாமீனுக்கு மறுபடியும் நாமதான் அப்ளை பண்ணியிருக்கோம். அப்பிடினா அவருக்கு வர மண்டே ஜாமீன் எடுக்க நாம ஆஜராகலையா”
“இல்ல”
“இது பச்ச துரோகம் சார்” பத்மநாபனின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.
“அந்தப் பொம்பள இதபத்தி எப்படியும் இன்னிக்கி இல்ல நாளைக்கி மீடியால சொல்லுவாங்க. நாம அந்த மாதிரி ஆள் கேஸ்ல ஆஜராகறது சரியில்ல”
“சார், அப்ப என்ன நடந்தது, அதுல எவ்வளோ உண்மை இருக்கு, நமக்கு எதுவுமே தெரியாது சார். ஆனா இப்போ அவரு சம்பந்தப்பட்டிருக்கிறது ஒரு பொதுநல வழக்கு. ஒருத்தன கோபத்துல கமினாட்டினு திட்டுனதுக்குக் கொலை செஞ்சிருக்காங்க. செத்து போனவன் எஸ்.சி. அந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டவங்கள அரஸ்ட் பண்ணச் சொல்லி கோஷம் போட்ட திருமுல்லைநாதன் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறார்னு கைது செய்றாங்க. ஏற்கனவே இரண்டு தடவ அவருக்கு ஜாமீன் கிடைக்கல. இதப்பத்தி நமக்கு நிச்சயமா தெரியும். இதுல உண்மை இருக்குனு தெரியும். நாம அவரு கூடச் சேந்து நிக்கவேண்டிய நேரம் சார் இது. இதுல எதுக்கு சார் இந்தப் பொம்பள விஷயத்தை இணைக்கனும். அவ்ளோ முழுமையானவங்கனு இங்க யாருமில்லையே சார்.”
“வேற யாரையாவது வைச்சுப் பாத்துக்கச் சொல்லி அவர் வைஃப் கிட்டச் சொல்லிடுங்க”
“நீங்க முடிவு பண்ணிட்டீங்களா சார்”
“எஸ்” தலையாட்டினார் ரவீந்திரன். இதற்கு மேல் இது குறித்துப் பேச விரும்பவில்லை என்பது போல மறுபடியும் குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.
பத்மநாபன் எழுந்து வெளியே வந்தான். அந்தப் பெண் அங்கேயே அமர்ந்திருந்தார். இவளை ஏன் இன்னும் அமரச் சொல்லியிருக்கார் என்று புரியாமல் அவளைக் கடந்து சென்றான். அருகிலிருந்த டீக்கடையில் நின்றுகொண்டு அந்தப் பெண்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் யாருக்கோ அழைத்துப்பேசினாள். பின்னர் ரவீந்திரனின் அலுவலக அறைக்குள் சென்றாள். அவள் வெளியில் வரும்போது வாகை சூடியிருந்தாள். அவள் செல்வதையே பார்த்தவாறு இருந்தான். பத்மநாபன் டீக்கடையிலிருந்து அலுவலகம் நோக்கி சென்றான். உள்ளே செல்லாமல் மறுபடியும் டீக்கடைக்குச் சென்றான். டீ குடித்தான். மறுபடியும் அலுவலகம் சென்றான். சாலையில் வாகன இரைச்சல். அவன் முழுதும் குவிந்திருந்தான். எதையோ முணுமுணுத்துக் கொண்டான். படபடப்பாக உணர்ந்தான். அவனது கைகள் வியர்த்தது. கர்சீப்பை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டான். உள்ளே நுழைந்தான்.
“சார், நான் திருமுல்லைநாதன் கேஸ்ல ஆஜர் ஆகுறேன் சார்”. அவன் தனக்குள் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளியே வந்துவிட்டது.
“இல்ல பத்மநாபன். வேற யாரையாவது பாத்துக்கச் சொல்லி அவங்க வைஃப் கிட்ட சொல்லிடுங்க”
“இல்ல சார் நான்தான் ஆஜர் ஆகப்போறதா அவங்க வைஃப் கிட்ட சொல்லப் போறேன்”
“அந்தப் பொம்பளக்கிட்ட இப்பத்தான் சொல்லி அனுப்பிச்சேன். உங்கக்கிட்ட சொல்லிட்டுச் சொல்லலாமுனு அந்தப் பொம்பளைய வெயிட் பண்ணச் சொல்லியிருந்தேன். நான் இந்தக் கேஸ்ல இனிமே இன்வால்வ் ஆக விரும்பல”
“சார் நீங்க இன்வால்வ் ஆக வேணாம் சார். ஆனா நான் ஆகப்போறேன். திருமுல்லைநாதன் இந்த விஷயத்துக்கு எவ்ளோவு போராடினாரு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்”
“இத விடமாட்டீங்களா பத்மநாபன்” சூழல் நாற்காலியிலிருந்து எழுந்து கத்தினார் ரவீந்திரன். இப்படி அவர் கத்துவது மிகவும் அரிதானது.
“எனக்கும் எல்லா அக்கறையும் இருக்கு. அந்தப் பொம்பள சொல்றதுல உண்மை இருக்கு. நாம இதுல இன்வால்வ் ஆக வேணாமனு சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும். விடுங்க. அவ்ளோதான்” சொல்லிவிட்டு ரவீந்திரன் தன் நாற்காலியில் அமர்ந்தார்.
“சார், நாம இல்ல சார், ரவீந்திரன் இல்ல சார், ரவீந்திரன் ஜூனியர் இல்ல சார், நான் சார், நான் பத்மநாபன் சாராங்கபாணி இந்தக் கேஸ்ல திருமுல்லை நாதனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுப்பேன் சார். அதுதான் சார் நியாயம்.” பத்மநாபனின் நா தழுதழுத்தது. அவனது உடல் ஆடிக்கொண்டிருந்தது.
ரவீந்திரன் எதுவும் பேசாமல் பத்மநாபனை குழப்பமாகப் பார்த்தார். அவர் தன்னைத் திரட்டிக்கொண்டு எதையோ சொல்ல முயன்றார். பத்மநாபன் அதற்குள் தன் கோட், கவுன் ஆகியவற்றை எடுத்துப் பையில் வைத்தான். வேறு எதையாவது எடுத்து வைக்கவேண்டுமா என்று யோசித்தான். அவனால் கோர்வையாக யோசிக்க முடியவில்லை. இப்போதும் அவன் உடல் ஆடிக்கொண்டிருந்தது. எல்லாம் வேகமாகச் சுழன்று கொண்டிருப்பது போல இருந்தது.
“இந்த உலகத்துல யாருமே முழுமையானவங்க இல்ல சார். நீங்க கூட”
அவரின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தான். வெளியில் பக்கத்துக் கடைக்கார்கள் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.
“என்ன சார் ஒரே சத்தம்”. பத்மநாபன் பதில் சொல்லாமல் பையை வண்டியில் வைத்து வண்டியை கிளப்பினான்.
பொன்னிற சித்திரங்கள் நிரம்பிய நீல வண்ணப் புடவையை அணிந்திருந்தாள் பானு. நெற்றியில் சின்னதாகச் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. காதில் நீல நிற மணிகள். மிக மெல்லிய தங்கச் செயின். நீல நிற பிளாஸ்டிக் வளையல்கள். சோபாவில் தளர்வாக அமர்ந்திருந்தாள் பானு. தனது கைப்பேசியிலிருந்து ஏதோ ஒரு திரைப்படத்தைத் தொலைக்காட்சிக்குக் காஸ்ட் செய்துவிட்டு சமையலறைக்குச் சென்றிருந்தான் பத்மநாபன். படத்தின் தலைப்பு நசீர் என்று இருந்தது. அந்த நடிகர் சேகர் கபூர் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
ஆனால் படத்தின் கதை திரைக்கதை எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அதைக் குறித்து அவள் அலட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் படத்தில் ஒளி மிக அற்புதமாக கையாளப்பட்டுள்ளதை கவனித்தவாறு இருந்தாள். ஒவ்வொரு காட்சி சட்டகமும் வண்ண ஒவியம் போல உயிர்பெற்றிருந்தது. காட்சிகள் மெல்ல நகர்ந்தன. பானு கதையைத் தொடரும் முயற்சியை முழுதும் விட்டு ஒவ்வொரு ஷாட்டையையும் உன்னிப்பாகக் கவனித்தாள். பத்மநாபன் இருவருக்கும் தேநீரும் ஒரு பச்சை நிற பீங்கான் தட்டில் ரஸ்க்குகளையும் எடுத்து வந்தான். அவள் தேநீரை எடுத்துக் குடித்தாள்.
“படம் பிடிச்சிருக்கா”
பானு வெறுமனே புன்னைகத்தாள்.
“மணி கௌல் டைரெக்ட் பண்ணது”
“ம். பேரு போடும்போது பாத்தேன். இது சேகர் கபூர் தான”
“ம்”
“எலிசபெத்னு ஒரு படம் இந்தாளு எடுத்ததுதானே”
“ம்”
“பண்டிட் குயின்னு கூட ஒரு படம் எடுத்தாரு”
“ம்”
கழுத்தில் கைகளை வைத்து சோம்பல் முறித்தாள் பானு. பத்மநாபன் தொலைக்காட்சியை அணைத்தான். எழுந்து நின்று பானுவின் கரங்களைப் பற்றி இழுத்தான். அவள் எழுந்து அவனில் சாய்ந்தாள். சட்டென்று அவளை பக்கவாட்டாகத் தூக்கினான். தாயை அரவணைத்துக் கொள்ளும் சேயை போல அவள் அவனது தோள் பட்டைகளைப் பற்றிக்கொண்டாள். எடையற்ற தோகை போல அவனில் இரு கரங்களில் அவள் இருந்தாள் .ஒரு கூழாங்கல்லை நதியில் விடுவது போல அவளை அவன் மெல்ல படுக்கையில் விட்டான். அவள் மெத்தையில் பொதிந்தாள். பத்மநாபன் பானுவின் நெற்றியில் முத்தமிட்டான். பானு பத்மநாபனின் முகத்தை வருடினாள். அவனது தாடையில் கன்னங்களில் இதழில் தன் இதழ் பதித்தாள். பானு பத்மநாபனின் நாபியில் முத்தமிட்டாள். பத்மநாபனின் நாபியிலிருந்து கமலம் உதித்தது. பிரபஞ்சம் சிருஷ்டித்தது.
இந்த வருட களரி - தொல்கலைகள் மேம்பாட்டு மையம் நடத்திய விருது விழா மற்றெந்த வருடங்களைக் காட்டிலும் சிறப்பாக அமைந்தது. சீரிய எழுத்துச்செயல்பாட்டுக்கான ராஜம்கிருஷ்ணன் நினைவு விருதை புதுப்புனல் சிறுபத்திரிக்கை ஆசிரியர் ரவிச்சந்திரனும், நவீன இலக்கியத்தில் சிறுகதைக்குப் பங்களிப்பு செய்தமைக்காக கு.அழகிரிசாமி நினைவு விருதை சு.வேணு கோபாலும், நுண்கலைகளுக்கான ஓவியர் கே.எம்.கோபால் விருதை ஓவியர் கிருஷ்ணமூர்த்திச் சார்பில் ஓவியர் ஜெயராமும் பெற்றுக்கொண்டார்கள். விழாவில் விருது வாங்கியவர்களில் மிக மூத்த கலைஞர் திரு.சாமிநாதன் அவர்களுக்கு எண்பது வயதிற்கு மேலிருக்கும். கொங்கு மண்டலத்தில் அறுபது வருடங்களுக்கு மேல் கூத்தாடியவர். ஜமாவில் இடை வேடதாரியாகத் துவங்கி, கூத்து வாத்தியாராகி, பிறகு அவரது ஜமாவிலிருந்த கலைஞர்கள் வளர்ந்து வந்து கூத்து வாத்தியார்களாகி, வேர் பிடித்து நிற்கிறார்கள். இப்படிக் கூத்துக்கலைக்குப் பெரிய பங்காற்றியவர். இரண்டு நபர்கள் அவர் தோள்பிடித்து அழைத்து மேடைக்கு வந்து, விருதை வாங்க வைத்து அழைத்துச் சென்றனர். விருது பெற்றோரில் மிகக் குறைந்த வயதுடைய கலைஞருக்கு வயது 12 - 13 இருக்கும். மிருதங்கக் கலைஞர் இளவரசன். விருதைப் பெற்றுக்கொண்டதும் மிருதங்கம் அவர் வாசித்துக் காட்டச் சொல்லப்பட்டார். அதுவரை மேடைக்கருகில் வாசித்துக் கொண்டிருந்த மூத்த கலைஞரின் வாசிப்பிற்கும் இவர் வாசித்ததற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் சிறப்பாக இருந்தது. ஒரு சரத்துப் பூவைப் போல அவ்வளவு கோர்வையாக, நேர்த்தியாக. விருதுகள் அளிக்கப்பட்டபின் இறுதியாக, நெல்லடிக்கும் களத்தில் தான் நம் உணவு விளைகிறது. இதே நெல்லடிக்கும் களத்தில் தான் நம் கலையும், உணர்வும் விளைகிறது என்று பொருத்தமாகச் சொல்லி முடித்தார் அறிவிப்பாளர்.
--
நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது, மூத்த எழுத்தாளர்கள் பேசியவை, தொகுப்பாளர் விருதுகளை, படைப்பாளிகளை, நிகழ்த்துக் கலைஞர்கள் பற்றி அறிமுகம் செய்துகொண்டிருந்தவை, அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், மனதில் ஒரு பகுதி மிகக் கவனமாக மேடைக்கருகில் நிகழ்வு தொகுப்பிற்குப் பொருத்தமாகப் பின்னணி இசை வாசித்துக் கொண்டிருந்த கலைஞர்களையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறது. முகவீணை, மத்தாளம், பெட்டி என்றழைக்கப்படுகிற ஆர்மோனியம் பிரதானமாக வாசிக்கப்பட்டன. விருதுபெற்ற நிகழ்த்துக் கலைஞர்கள் அவ்வப்போது கூத்தில் பாடப்படும் விருத்தங்கள், தருக்களைப் பாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். முகவீணை வாசிப்பவரின் கன்னப் புடைப்பு, மத்தாளக்காரர் தலையைச் சற்றே சுழித்து உதட்டு மட்டியை கடித்துக்கொண்டு அடித்தது, ஆர்மோனியம் வாசிப்பவர் இருவருக்கும் நடுவில் அமர்ந்தபடி அவர்களை ஒருங்கிணைப்பது போல வாசித்ததும் (இசையை எப்போதும் முதலில் துவங்குபவர் முகவீணைக் கலைஞரேயாயினும்) கவனித்துக்கொண்டேயிருந்தேன். அவர்கள் அந்தக் கணத்துக்குள் மூழ்கியவர்களாகவே இருந்தார்கள். விழாவிலிருந்து சுற்றத்திலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு பிறர் வந்து பேசும் போதும் பதில் சொல்ல அவர்கள் வேறு ஒரு உலகிலிருந்து மீண்டு வந்து பதில் சொல்லிவிட்டு மீண்டு அவ்வுலகில் மூழ்கியது போலவே இருந்தது. அவர்களுக்குள்ளே கூட மிகக் குறைவாகவே பேசிக் கொண்டும், அவ்வப்போது சககலைஞர்கள் செய்யும் திடீர் மெருகூட்டல்களை, கண்களால் அங்கீகரித்துக் கொண்டனர். அவர்கள் வாசிப்பில் அவ்வப்போது வந்த தமிழ் சினிமாப்பாடல்கள் என்ன என்ன என்பதைத் தொகுத்துப் பார்த்தேன். அவற்றுள் மிகச்சிறப்பான சில: “உனக்காக எல்லாம் உனக்காக”, “நீரோடும் வைகையிலே”, பூஜைக்கு வந்த மலரே வா, “ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்று”, “கட்டிக்கிட முன்ன நம்ம ஒத்திகைய பாக்கணும்டி” இவையெல்லாம் தொகுப்பாளர் விட்ட சின்னச் சின்ன இடைவெளிகளில் கிடைத்த சந்தர்பங்களிலெல்லாம் வாசிக்கப்பட்டவை பெரும்பாலும் நான்கைந்து வரிகள் தான் வாசிக்க அவகாசமிருந்தன.
--
நிகழ்வில் தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்பது மரப்பாவைகள் செய்யும் கலைஞர், அந்தப் பிராந்தியத்திலேயே இருக்கக் கூடிய ஒரே ஒரு சிற்பியான திரு.மாணிக்கம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததுதான். எழுபது வயதைத் தாண்டியவர். அன்றைக்கு நிகழ்த்தவிருந்த ஆரவல்லி சண்டை மரப்பாவைக் கூத்திற்காக வைக்கப்பட்டிருந்த பாவைகளைப் பார்த்து அவை தெலுங்கு நாட்டின், அல்லது தெலுங்கு பேசக்கூடிய பணக்கார வீட்டு பெண்களின் சாயலில் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டிருந்தேன். முகத்தில், நாசி நுனியில் உதட்டு மேட்டில் ஒரு சுடர் விடும் ஐஸ்வர்யம், கன்னக் கதுப்புகளில் இருந்த மகிழ்ச்சிக் களை, சிரிக்கும் கண்கள் இவற்றைக் கண்டு இப்படி நான் பாவித்திருந்தேன். இந்த அனுமானம் சரிதானா அல்லது என் மனப்பதிவுகளால் அப்படித் தோன்றுகிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது என்றிருந்தேன்.
ஏதோ என் நன்நிமித்தம். அந்தப் பொம்மைகளைச் செதுக்கிய சிற்பியையே சந்திக்க வாய்த்துவிட்டது. அவர் துறை பற்றிய எந்த அறிவும் இல்லாவிட்டாலும் அவரிடம் பேசுவது, அவரை அறிந்து கொள்ள முயல்வது எனக்கு முக்கியமாகப்பட்டது. மிகச் சொற்ப வார்த்தைகளில் பதில் சொல்லி வந்தார். ஆனால் விருப்பமில்லாமல் பேசியது போலவும் தெரியவில்லை. இறுதியில் அவர் என் வெகுளித்தனமான கேள்விகளால் ஆர்வமாகிப் பேசினார். தமிழகத்தின் நிகழ்த்து கலைகளின் காலகட்டங்களை ஒளியைக்கொண்டு தீப்பந்தம், பெட்ரோமாக்ஸ் லைட், பல்பு என்று வகுத்தோம் என்றால், இவர் பெட்ரோமாக்ஸ் காலகட்டத்தைச் சேர்ந்தவர். தீப்பந்தங்கள் கொண்டு நடத்தப்பட்ட கூத்துகளை இவர் சிறுவயதில் கண்டிருக்கிறார். இவர் ஓவியராக, கோவில்களுக்கு வண்ணம் அடிப்பவராக, மர, சிமிண்ட் சிலைகள் வடிப்பவராக, சாமி ஊர்வலங்களுக்குப் பயன்படும் சாமி வாகனங்கள் செய்து தருபவராக, மரப்பாவை செய்பவராகக் கிட்டத்தட்ட பதிமூன்று கம்பனிகளில் வேலை பார்த்த அனுபவம் சிறுவயதில். மரப்பாவை கூத்துக்களில், வீதி நாடகங்களில் அந்தந்த காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தும் போக்கு உருவாகும்போது அதற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்.
பொதுவாக ஒரு நாடக கம்பனி என்பது, 75 விதமான மரப்பாவைகளைக் கொண்டிருக்கவேண்டும். ராஜா, மந்திரி, போன்ற பொதுவான கதாப்பாத்திரங்களுக்கு அவற்றின் உருவத்திற்கு ஏற்றபடி ஒரே பொம்மைகளையே மாற்றி மாற்றி உபயோகப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அப்படி மாற்றத்தகாத இரண்டு பாவைகள் ராமனும் சீதையும். “ஏன் ஐயா அப்படி?” என்று கேட்டேன். பகவான் பொம்மைய வேற கூத்துக்கு ஆடும்போது கோமாளி கவுச்சியாப் பேசுவான், அவச்சொல் பேசுவாங்க அதுக்கெல்லாம் எடம் கொடுத்துடக் கூடாதுன்னு அந்த ரெண்டு பொம்மைகள மட்டும் எப்பவுமே தனியா எடுத்து வச்சிடனும்னு ஒரு வழக்கம்” என்றார். தொடர்ந்து இப்போதெல்லாம் அந்த வழக்கத்தை விடுத்து, மாற்றி உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். ராமனும் லட்சுமணனும் பரதச் சத்ருகனனும் சீதையும் என ஐவரும் தோன்றும் காட்சியில், பொம்மையாட்டிக் கொண்டிருப்பவர்கள் பாவைகளைக் காட்சி இறுதியில் ஒரே ஸ்திதியில் ஒரே நேரத்தில் கச்சிதமாக அமரச் செய்வார்கள். அந்தக் காட்சியே பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் இன்று அப்படி நேர்த்தியாகப் பொம்மையசைக்கும் கலைஞர்கள் யாவரும் அமரர்களாகி மேலே போய்விட்டார்கள். இன்று அப்படிப்பட்ட திறமைக்காரர்கள் இல்லை என்று வருத்தப்பட்டார்.
--
மரப்பாவைகள் செய்முறையை அவரிடம் கேட்டு குறித்து வைத்துக்கொண்டேன். அந்தச் சாக்கில் அவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமே என்று.அத்துறையில் எந்த தெளிவோ அனுபவமோ இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் இயங்கும் விதத்தை, மனக்கிடக்கை அறிந்துகொள்வது அணுக்கமான அனுபவமாகிறது. இசை சினிமா ஓவியம் பற்றியெல்லாம் அஞ்சாறு தெரிந்து வைத்துக்கொண்டா பாவித்துக் கொண்டிருக்கிறோம்?. மரப்பாவைகள் எடை குறைந்த மரங்களான செந்தணுக்கு மரத்திலும், கல்யாண முருங்கைமரத்திலும் செய்யப்படுவன. இந்த முகங்கள் செய்யப்படுவதற்கு எந்தக் குறிப்பிட்ட இலக்கணமும் இல்லை. முகத்தோற்றத்திற்கான ஆதர்சமென்பது பிறவற்றிலிருந்து பெறாமல் சுயமாக மனக்கிடங்கிலிருந்து பெறப்படுபவையே. கதாப்பாத்திரத்தின் குணவார்ப்பிற்கேற்றபடி முகங்களை அமைப்பர். இப்படியவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது இடைமறித்து அதுவரை என்னையரித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். தான் எந்த மனிதரையும் முன்மாதிரியாகக் கொண்டு இந்தப் பாவைகளைச் செய்யவில்லையென்றும், தெலுங்கு சாயல் வந்ததுக்கு எந்த ஞாயமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சரி எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது போலும்.
--
அதிகாலை 5.30 மணிக்கு மயில் ராவணன் கூத்தில் இந்தக் காட்சி வந்தது. மயில் ராவணனின் கோட்டைக்குள் நுழைந்து இராம லட்சுமணரை மீட்க வந்துகொண்டிருக்கிறான் அனுமன். அவனைத் தடுத்து நிறுத்தும் அக்னி கோட்டை காவல்காரன் மச்ச கற்பகனை சந்திக்கிறான். அவன் அனுமனின் புத்திரன். கடல் கடந்து சென்றவொரு பயணத்தின்போது வழியில் அனுமனுக்கு வியர்க்கிறது வானிலிருந்து வியர்வையைக் கையால் வழித்துக் கடலில் வீசுகிறான். விழுந்த வியர்வைத் துளிகள் ஒரு மச்சத்தின் கர்ப்பத்துள் நுழைந்து மச்சக கற்பகனென்னும் மகவாகப் பிறக்கிறது. தாய் மீன் குழந்தைக்குத் தாத்தா வாயுவின் பெருமைகளை, தந்தையின் வீரதீர பிரதாபங்களை, வலிமையைச் சொல்லிச் சொல்லி வளர்க்கிறாள். மகன் தான் காணவே காணாத தந்தையின் வீரத்தைப் பற்றிய பெருமிதத்தோடு வளர்கிறான். எதிரில் நிற்கும் தந்தை அவனுக்கு வெறும் குரங்காகத் தெரிகிறான். இருவரும் உரையாடிக் கண்டுணர்ந்து கொள்கிறார்கள். தந்தையை வீழ்த்த துணிந்த நின்ற புத்ரன், உண்மையை உணர்ந்து தந்தையின் நெஞ்சைக் காட்டி குத்து வாங்கி விழத்துணிகிறான். அனுமன் அவனைத் தாண்டி ராம லட்சுமணரை மீட்டு விபிஷ்ணனிடம் சேர்ப்பிக்கிறான். கதை முடிந்தது.
திருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுதுபோக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர்தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை. சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை? கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள்! இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள்.
பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக்காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப்போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத்தொழில் என்றான பிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.
பிறகு வேறென்ன செய்வது? திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி.பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.
புத்தக வாசிப்பு என்பது ஒரு Obsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப்புருச வெறியும் நமக்கு இல்லை.
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, “திருக்குறள் சொல் அகராதியும் மூலமும்” என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடிவாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருளும் பாடல்களுக்கு உரையும் இருக்காது.
எடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037 வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக்குறள்களில் உண்டு. பாடலின் முதல் தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம்.
இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A Word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ.மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.
இவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன? சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்?
திருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி.பிள்ளை என்ற கோ.வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.
‘திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.
திருக்குறள் பொருட்பாலின் ‘காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே என்றாலும். திரும்பத் திரும்பச் செவிமடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. ‘பகல் வெல்லும் கூகையைக்காக்கை!’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக.
இந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து.
என்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.
‘ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து
என்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.
நாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுதுகிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.
மேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.
தற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக்குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே! ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக.
இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.
Rev. G.U. Pope: The Men of mighty power their hidden energies repress, As fighting ram recoils to rush on foe with heavier stress.
G. Vanmeeganathan: The restraint of a man of great might is like a fighting ram stepping hack in order to charge its opponent.
Kaviyogi Shuddhanandha Bharathi : By self-restraint stalwarts keep fit, Like rams retreating but to Butt.
V.V.S. Iyer: The ram Steppeth back before it delivereth the stunning blow: even such is the inaction of the man of energy
மேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப்பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே தேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல் நூற்பா,
‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே!’
என்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடையவேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேராசிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.
மோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat எனப் பொருள் தரும்.
தகர் எனும் சொல்லுக்கோ
எனப் பொருள் தருகின்றது.
மேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு.உதள் எனும் சொல்லுக்கு Ram, He - goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.
என்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள்,அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை - வெள்ளாடோ, செம்மறியாடோ - குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.
இன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.
திருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.
தொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.
மேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று -
‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ, வெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம் கைச்சிறகால்ப் பார்ப்பொடுக்கும்’
என்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ்வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.
‘பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே’ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.
மூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.
வெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.
ஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா - Mongoose. எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
எலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால் கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.
‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’
என்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.
நாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே! நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,
‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!’
என்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.
விரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.
ஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.
எருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின் இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.
மொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர்வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.
வைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்!
தொடர்ந்து விரையும் வாகனங்கள் பச்சை சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணவிளக்குகள் இவை அனைத்துமே நாய்களுக்கு ஒன்றுதான் வரிக்கோட்டுச் சாலையை கடப்பதற்குக் காத்திருக்கிறது ஒரு வெண்ணிற முடுவலும் ஒரு கருங்குட்டியும் அந்த 8:30 விமானத்தின் நெரிசலைத் தவிர்க்க அந்தத் தென்றல் வானில் ஒரு பருந்து சறுக்கி வட்டமிட்டுகிறது அதே விமானத்திலிருந்து தரையிறங்கும் ஒருவரை அழைத்து வருவதற்குப் போகும் அந்த மகிழ்வுந்து கே எல் 21 பி 2288 அந்த முடுவலும் குட்டியும் கடப்பதற்கு இடைவெளிவிட்டு நிற்கிறது அபாயச் சங்கை ஊதி விரைகிறது அவசர ஊர்தி மயிரிழையில் தப்பிவிட்ட நாய்க்குட்டி வாயடைத்து நிற்கிறது அந்தப் பருந்து லேசான காற்றில் சறுக்கி உயரே வட்டமிடுகிறது அந்தச் சாலையின் குறுக்கே விடுதியின் பின்புறம் வெண்ணிற முடுவலும் கருங்குட்டியும் எதயோ சாப்பிடுகிறது அந்த மகிழ்வுந்து கே எல் 21 பி 2288 தரையிறங்கிய ஒருவருடன் வேகமாக விரைகிறது வீட்டை நோக்கி நடு வானிலே அந்தப் பருந்து இன்னமும் மிதக்கிறது பேரோசையுடன் அந்த அவசர ஊர்தி இப்பொழுது இறந்த அந்த நோயாளி மனிதனைத் தாங்கித் திரும்புகிறது புகைவண்டி முற்றத்திற்குத் திரும்பிச் செல்ல அந்த வரிக்கோட்டில் நிற்கிறது வெள்ளை முடுவலும் கருங்குட்டியும் அந்த அவசர ஊர்திக்கு வழிவிடப் பாய்ந்த மகிழ்வுந்து கே எல் 21 பி 2288 க்கு கீழே அந்த முடுவல் இறுதியாய் நடுங்கியது அப்படியே நின்ற அந்தப் பருந்து சறுக்கி வட்டமிட்டு உயரே உயரே பறக்கத் துவங்க அந்த 8:30 விமானத்திலே மோத கரும்புகை விண்ணிலே சுருள்சுருளாகியது அவசர ஊர்திகள் அலறுகிறது எரிந்த பறவையிறகுகளின் துர்நாற்றம் அந்தக் காற்றில் நிரம்பியலைகிறது சாலைகள் சந்திக்கும் அந்த முனையின் நடுவிலே இப்பொழுது கருப்பு மேலுடுப்பில் வெந்நிறக்கோடுகள் பளபளக்கும் ஒரு நாய் அனைவரும் சாலையைக் கடக்க உதவுகிறது.
சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை விரித்து அதைச் சமீபத்தியக் கவிதையென்று அறிமுகப்படுத்தி இதற்கு முன் எங்கும் வழங்கப்படவில்லை என்று அந்தக் கவிஞர் வாசிக்கத் துவங்கினார் என் அருகில் வந்து அமர்ந்த மனிதர் நேரத்தைக் கேட்டுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அதே கவிதையின் மேலும் சில வரிகளை அவர் சொல்லிக்கொண்டிருந்தார் வெளியே கொட்டும் மழையின் எதிரொலி போல் மேடையிலே அந்தக் கவிஞர் மீண்டும் மீண்டும் அதையே வாசித்தார் அந்த மனிதர் முடிவுரையாற்றும்பொழுது இறுதி வரிகளில் அந்தக் கவிஞர் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார் நான் கேட்காமலே அவர் தனது பெயரைச் சொன்னார் அந்த மனிதர் மழையில் மறைந்தபொழுது அந்தக் கவிதை மின்னலாய் மர உச்சிகளில் பிரகாசித்தது தகரக் கூரையில் மழைத்துளிகள் அலற அந்தத் தூறலில் ஒரு புல் அசைந்தாடியது அசைந்தது ஒரு ஊசல் போல அவரது பெயரை நினைவுகூர்ந்து அருகிலிருந்த மனிதரிடம் கேட்டேன் அந்த மனிதர் பிரபலமாக இருந்திருக்கிறார் பழுது பார்ப்பதில் கைதேர்த்தவர் பழங்காலக் கடிகாரமோ அல்லது மணிகாட்டியோ புத்துயிர் பெறும் அவரது கைவண்ணத்தில் தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகின்றனர் அவரது கடையைத் தேடி அனால் இப்பொழுது அவர் இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது இரவிலே தூக்கம் தொலைத்து பிரிந்து செல்லும் முன் அவர் கூறிய பெயரை கூகுளில் நிறையத் தேடியபொழுது அந்தப் பெயருக்கான விடை கிடைக்க தொங்கியது பிரௌசர் இறந்த முகம்தெரியாத யாரோ ஒருவரின் எழுதப்படாத புதையுண்ட சிறந்த கவிதை வாழ்பவரால் எழுதப்படவேண்டும் உங்கள் காதுகளைக் கல்லறையில வைத்துக் கேளுங்கள் ஆவிகளால் உங்களுக்குப் பயமில்லையென்றால்.
அந்த முயல் உரோமத் தூரிகைக் கொண்டு நான் வர்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறேன் எனது செல்ல முயல் அவனது இணையின் மேல் அந்த முயல் உரோமத் தூரிகை இப்பொழுது காற்றின் கூர்முனையில் கிழிந்த அந்த ஆடைக்கு வர்ணம் தீட்டுகிறது என் செல்ல முயலின் அந்தத் துடிக்கும் நாசியிலிருந்து வரும் மூச்சின் ஓசையை என்னால் கேட்க முடிகிறது நான் சிவப்பு மஞ்சள் வர்ணங்களை அந்தப் பழரசச் சாவடியின் ஆரஞ்சுத்தோல் குவியலுக்காக கலக்கிக் கொண்டிருக்கிறேன் தொட்டிலில் துடிக்கிறது அந்த முயலின் வால் நுனி ஒரு ஆமைக்கும் ஒரு முயலுக்கும் ஒரு யானைக்கும் ஒரு சிங்கத்திற்கும் நான் இப்பொழுது வர்ணம் தீட்டவேண்டும் அந்த ஆமையின் கண்களுக்காக முயலின் காதுக்காக யானையின் துதிக்கைக்காக மற்றும் அந்தச் சிங்கத்தின் கோரைப் பற்களுக்காக இப்பொழுது நான் வர்ணங்களைக் கலக்கிக்கொண்டிருக்கிறேன் பெண் முயலை விட்டு வந்த செல்ல முயல் தடுமாறியது நிலைச்சட்டத்தில் ஆமையால் தோற்கடிக்கப்பட்டதும் சிங்கத்தைக் கிணற்றுக்குள் குதிக்கவைத்ததும் யானை மீது ஏறியதுமான கதைகளைக் கூறி ஓவியத்துடனே நெருக்கமாய் வாழ்கிறது மிக மிக நெருக்கமாய் நிலைச்சட்டத்தின் மீது அவன் ஓவியத்தில் இருந்த அந்தப் பெண் முயலை மறைக்க அந்த முயல் உரோமத் தூரிகையைக் கூர்தீட்டி பெயர் அறியா வர்ணங்களில் தோய்த்து ஓவியத்திலுள்ள அந்தப் பெண் முயலுக்கு வர்ணம் தீட்டுகிறேன் நான் இப்பொழுது.
பொற்காலத்தின் பாடல்கள் நவீன சீனாவில் பொற்காலம் என்பது முற்காலத்தில் இல்லை
ஒரு பின்நவீனக்கட்டிடத்தின் (ஆண்குறி போன்ற தோற்றமுடைய) XX9 எண் தளத்தில் சீன அதிபருடன் அமர்ந்திருக்கிறார் மார்கோபோலோ வெனீஸ் நகர் பற்றிய தனது அவதானிப்புகளை நிறுத்திக்கொண்டவர் தனது கூர்பார்வையை நாடோடும் வணிகர்கள் நடமாடிக்கொண்டிருக்கும் சதுரங்கப்பலகையின் மேல் திருப்புகிறார் அங்கே ஒரு பொம்மை ரயில் வட்டப்பாதைகளில் சுற்றி வருகிறது அவித்த சீன கொழுக்கட்டைகளை அமுக்கியவாறு மல்லிகை டீயை விழுங்கிக்கொண்டிருக்கும் வெகுளி வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேக அன்பளிப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன பதின்மூன்று கோடுகள் கொண்ட செங்கொடி மற்றும் உலகிலேயே அதி உன்னதப் பட்டுசரிகை போர்த்தப்பட்ட பேரரசர் மாவோவின் சின்னஞ்சிறு சிலை கப்பல்களிலும் இருப்புப்பாதைகளிலும் தொடர்ந்துவர, ஆயத்த நிலையிலிருக்கின்றன ஒப்பந்தமிட்ட சரக்குகள்.
என் வீட்டிற்கு எதிரே இருக்கும் கருப்புக்கட்டிடம் கருப்பாக இருக்கிறது சீனாவில் இதுவே பெரிய விசயம் ஒவ்வொரு இரவும் 12.15 மணிக்கு 21வது மாடியில் மூன்று விளக்குகள் உயிர் பெறுகின்றன சிலசமயம், என் வீட்டின் இருட்டிலிருந்தபடி என்னால் உணரமுடிகிறது வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டத்தை. வேண்டுமென்றால் அவை ஒவ்வொன்றின் எட்டு கால்களையும் என்னால் விவரிக்க முடியும் உங்களுக்காக இப்போது கண்டிப்பாகச் சொல்கிறேன், இந்தக்கருப்புக்கட்டிடம் ஒரு விண்கலமேதான் வேற்றுக்கிரகவாசிகளுடன் சேர்ந்து ஒரு இணைவினை ஒன்று மட்டும் நிச்சயம் - 51% பங்கு சீனாக்காரனிடம்தான்.
ஒவ்வொரு நாளும் ஆயியின் கிரகம் புதிய வட்டணைக்கு இடம்பெயர்கிறது நேற்று ஆறாம் சுற்றுச்சாலை, முன்தினம் 5ஆம் சுற்றுச்சாலை புறாக்கூண்டுகளுக்கு முகவரி உண்டா? வட்டப்பாதைகளை விலகி அலையும் திரியும் கிரகங்களுக்கு இணைய ஆர்டர் பொருட்களை யார் கொண்டு இறக்குவது? பனிக்காலத்தில் ஆயி ஆறு சுற்றுத்துணி உடுத்தி வருகிறாள் தூங்கும்போதும் தான் ஒருவேளை அவள் ஒரு ஒட்டகமாயிருந்தால் தனது எசமானர் வீட்டின் மையப்படுத்தப்பட்ட சூடேற்றியின் வெப்பத்தைச் சேகரித்திருப்பாள் ஒரு நாள் அவளது முதுகெங்கும் வரிகள் - கானகம் நீங்கிய வேங்கையைப்போல பனியின் ஓநாய்ப்பற்கள் வெறுப்பின்றிப் பொசுக்கியதன் எச்சங்கள் அதே நேரம் அன்ஹுய் மாகாணத்தில் நெடுஞ்சாலை நீட்சிக்காகத் தரைமட்டமாகிறது அவளது சொந்த வீடு அடுத்த நாள் அவள் ஊர் திரும்புகிறாள் இனி அவள் ஏழையில்லை உள் நாட்டு அகதியுமில்லை இப்போது அவள் பலிக்குப்பின்னர் கொழுத்த கிடா.
ஆயி - அத்தை என்ற பொருள் பொதுவாக வீட்டு வேலை செய்யும் பெண்களும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.
இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்யுங்கள் நான்காம் இலக்கம் ஒரு மனிதனாக உருவெடுக்கிறது இப்போது அந்த மனிதன், சீனக்கால்பந்து அணியில் ஒரு ஆட்டக்காரனாகிறான் மரணம் அவனைத் துரத்துகிறது ஒரு புல்பேக் ஆட்டக்காரரைப்போல், போகுமிடமெல்லாம் களத்திற்குமப்பால் அவனது விருந்தினர்களின் வெளிறிய முகங்கள் ஒரு கிசுகிசுப்புதான், ஆனால் பெயரை யாரும் சொல்வதில்லை எந்த விழாவிற்கும் வீட்டிற்கும் அழைக்கப்படாது பாதுகாப்புணர்வின் சுண்ணாம்புக்குச்சியால் எழுதப்படும் அவன் பற்றிய குறிப்புகள் எண்ணிடப்பட்ட சதுரங்களைத்தாண்டும் புரவிக்கு நான்கில் ஒன்று பொய்க்கால் சீனாவில் சதுரத்துக்கு மூன்றே பக்கங்கள் சீன மொழியில் நான்காம் இலக்கத்தின் உச்சரிப்பும் மரணம் என்ற சொல்லின் உச்சரிப்பும் ஒரே போல இருப்பதால் நான்காம் இலக்கம் முடிந்தவரை உபயோகப்படுத்தப்படுவதில்லை
லியூ மாமா கடைசியாக ஒரு முறை தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் எங்கோ ஓர் மூலையில் ஒரு பச்சைத்தவளை இணையத்திலிருந்து உண்ட வார்த்தைகளைச்செரித்து வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறது அந்த வார்த்தைகள் ஒருசமயம் அதிகாரத்திடம் சொல்லப்பட்ட உண்மைகளாய் இருந்தன இப்போது அவை சுவாரசியமான துணுக்குகள் அந்தப்பச்சைத்தவளை தேச ஒற்றுமைக்காகவே அவ்வாறு செய்கிறது லியூமாமாவின் கோப்பையிலிருந்து வின்னி கரடி சிரிக்கிறது (இன்னும் சற்று நேரத்தில் வின்னி கரடியை தவளை விழுங்கிவிடும்) அதன் சிரிப்பு அண்ட சராசரம் எங்கும் பரவுகிறது பின் தணிக்கை செய்யப்படுகிறது லியூ மாமாவின் பணி முடிந்தது, இப்போது அவர் மரணிக்கப்போகிறார் வாழ்விலும் மரணத்திலும் அவர் இனி ஆற்று நண்டுகளால் நினைவுகூறப்படுவார்.
லியூ சியாபோ - நோபல் பரிசு பெற்றவர், மனித உரிமை ஆர்வலர், கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார், அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறை வைக்கப்பட்டு இருந்தார். ஆற்று நண்டு- தனிக்கை என்ற வார்த்தையின் ஒத்த உச்சரிப்புடைய சீனச்சொல்.
இரண்டு மாதம் கழித்து இந்த வெள்ளிக்கிழமைதான் இந்தியா வந்திருந்தேன். பேர்தான் கார்ப்பரேட் வாழ்க்கை. பாலைவனத்துக்கு நடுவே பெட்ரோல் பிளான்ட்டில் இரண்டு மாதம் விடுமுறையே இல்லாமல் நாளொன்றுக்கு பதினொரு மணி நேரத்துக்கு மேல் வேலை. சனி ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை மறுபடி ஆபிஸ். ஐந்தாறு மாதம் கழித்து அடுத்த வனவாசம் காத்திருக்கும்.
இந்த இரண்டு மாதத்தில் எல்லாம் மாறியிருந்தது. UPSC பரீட்சை முடிந்து இரண்டு பேர் கிளம்ப, இரண்டு பேர் PG பார்த்து கிளம்ப, இனிமே நானும் நீயும்தான் எனச் சொல்லி புது வீட்டு முகவரியை Whatsapp செய்திருந்தான் ரவி.
புது வீட்டை சுற்றிக் குடும்பங்கள். பழைய வீட்டை போல கஞ்சாப் புகைக்க முடியாது. இங்கெல்லாம் நினைச்சு கூடப் பார்த்திராத, வேணாம் விட்றலாம் என்றான் ரவி. நான் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை. இரண்டு நாள் மொத்தமும் தூங்கி கழித்தேன். திங்கட்கிழமை மறுபடி ஆபிஸ்.
“எடா ரூம் வா அடிக்கலாம். ரெண்டு மாசம் ஆச்சுல்லா... இல்ல வந்ததுமே போட்டியா” என்றார் விஷால், ஆபிஸில் மூன்று வருட சீனியர்.
“இல்ல சேட்டா... வீடு மாறியாச்சு. அடிக்க முடியாது. நானே கேக்கனும்னு இருந்தேன்... மால் கிட்டுமா”
“சரி சரி, என் கூட வந்துரு, நைட்டு ரூமுக்கு”
சேட்டாவுடன் அவரது ரூமிற்குச் சென்று கொண்டிருக்கிறேன். பேருந்தில் பக்கத்திலமர்ந்தபடி யாரோ திவ்யாவுடன் Whatsappல் கடலைப் போட்டபடி வந்து கொண்டிருந்தார். அவ்வப்போது சிரிப்பு வேறு. அவர் சிரிப்பதை பார்த்த என்னைப் பார்த்து சிரித்தபடி, “எடா என்ன, பழைய ஆபிஸ்ல புதுசா சேர்ந்த பொண்ணு, நல்லா பேசுறா, நல்லா கம்பெனி குடுக்குறா” என்றார். அவர் கடைசியாகச் சிரித்தது கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது.
அவர் ரூமில் இரண்டு OCB ரோல் செய்து அடித்தோம். போதையில் நான் என் ரூமிற்குக் கிளம்பினேன். நிலையம் வந்து ரயிலேறி அமர்ந்தேன். என் மனதில் சேட்டா மட்டும் எப்படி இத்தனை பெண்களோடு சுற்றுகிறார்? பழைய ஆபிஸில் புதுசா சேர்ந்த பொண்ண எப்படிக் கரெக்ட் பண்றாரு?
நீ பேசிப் பழகிக் கேட்டாதாண்டா கிடைக்குமெனச் சேட்டா சொல்வதும் என் மனதிலேயே சுற்றிக்கொண்டிருந்தது. அந்த நேரம் ஆபிஸில் என்னோடு வேலைக்குச் சேர்ந்த ராஜி மெசேஜ் வந்தது.
Hi da...
Hi ...
இந்தியா எப்படி இருக்கு?
நல்லா இருக்கு... நீ தான் அடுத்து கிளம்புறியே... இப்ப ஒரு மாசம் புனே வேற... எப்படி இருக்கு?
கடுப்பாகுதுடா சாவடிக்கறாங்க.
தங்குறது சாப்பிடுறது எல்லாம் கம்பெனி செலவுதான... நல்லா சாப்பிட்டு கோவத்த தீர்த்துக்க...
அதெல்லாம் எங்க?... முடியுற அளவு சாப்பிடுறேன்...
ஹா ஹா... டயட்டா? DPல தொப்பத் தெரியலயே மூச்ச பிடிச்சுருக்கியோ?
ரொம்பப் பண்ணாத நான் ஒன்னும் குண்டா இல்ல சரியா...
நானும் அப்படிச் சொல்லலியே நீனும் கும்முனுதான் இருக்க...
விளையாடாதடா எனக்கு வெக்க வெக்கமா வருது
உண்மையாதான் சொல்றேன் செம பிகர் நீ... கும்முனு இருக்க...
போதும்... போதும்...
நாம Friends with Benefits - ஆ இருக்கலாமா?
அப்படினா?...
ஓத்தா தெரிஞ்சுட்டே தெரியாத மாதிரி கேக்குறாளே...இப்ப என்னன்னு சொல்றது... Workout ஆவுற மாதிரி தெரியுதே... சேட்டா சொன்ன மாதிரி கேட்டாதான் கிடைக்கும் போலயே... இப்ப என்னா சொல்லலாம்...
Google கிட்ட கேளு...
ரொம்பத்தான்...
அய்யோ இவ்வளோ நேரம் என்ன பண்றா? அவசரப் பட்டுட்டோமோ? நம்மள ரொம்ப நல்லவன்னு நினச்சி நாசமாக்கிட்டோமா? நம்மதான் நல்லவன் இல்லியே? இப்ப அது பிரச்சினை இல்லடா புண்ட... நம்ம ஆளுகிட்ட சொல்லிட்டா என்ன பண்றது. போச்சு கூதி மாதிரி கேட்டு இருக்கறதும் போகப்போது. sex வேற love வேற, அப்படி இப்படி முட்டுக் குடுத்தாலும் ஒத்துக்கமாட்டா ஜெனி. காறித் துப்பிட்டு போகப்போறா... ஓத்தா எதாச்சி reply பண்றாளா இவ... போதைய போட்டது தப்பு... போதை இல்லனா கண்டிப்பா கேட்டிருக்கமாட்டோம்... இப்ப போதையும் இறங்கிப்போச்சு.
அடப்பாவி... நீங்க எப்ப மாடர்ன் ஆனிங்க?
மாடர்ன்லாம் இல்ல... ஆசைய சொல்லி கேக்குறேன் புடிக்கலயா விடு... நான் இனிமே இப்படிப் பேச மாட்டேன்.
ரொம்ப மாறிட்டிங்க. நான் எப்பவும் உனக்கு வெறும் Friend தான் சரியா?
சரி.
நம்மளே யாருகிட்டயும் சொல்லிடாதனு கேட்ருவோமா? நான் இப்படிக் கேட்டேன்னு யாருகிட்டயும் சொல்லிடாதடி என டைப் செய்துகொண்டிருந்தேன்... அவளிடமிருந்து மெசேஜ்.
பயப்படாத...ஜெனிக்கிட்ட சொல்லமாட்டேன்.
ரொம்பத் தாங்க்ஸ்.
பொன்னிற நூலினால் பின்புறமாகத் தைக்கப்பட்டிருந்த அவனது வெண்ணிற காற்சட்டை தலைப்புவார்களுடன், ஒவ்வொரு விரலிலும் அணிந்திருந்த வண்ணக்கற்கள் பதித்த அவனது மோதிரங்களுடன், கலகலக்கும் மணிகளுடைய அவனது பிரி சடைகளுடன், அவனை நான் பார்த்த முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எருதுச்சண்டை நடக்குமிடத்தின் ஒரு கோவேறு கழுதையையே அவன் எனக்கு நினைவுபடுத்தினான், சாந்த மரியா தெல் தாரியனின் கப்பல்துறைகளில் ஒரு மேசையின் மீது பிரத்யேக பிணிமருந்துகளின் குடுவைகளுக்கும் அவன் தயாராக்கிய துயராற்றும் மருந்துகளுக்கும் நடுவே நின்றவாறு கரீபியப் பிரதேசத்தின் நெடுகே உள்ள பட்டணங்களில் அவனது ஊறுபட்ட கூப்பாட்டுடன் கூவி விற்றுச் சென்றான், அந்தச் சமயம் மட்டும் இந்திய அழுக்கடைசல்களைத் தவிர்த்திருந்தான் என்பதைத் தவிர, அவர்களிடம் ஒரு நிஜமான பாம்பைக் கொணர்ந்து தரக் கேட்டுக்கொண்டிருந்தான், அதனால் அவன் தானே கண்டுபிடித்திருந்த நஞ்சுமுறிவு மருந்தினை, பிழையாத்தன்மை கொண்ட ஒன்றே ஒன்றினை, கனவான்களே சீமாட்டிகளே, நாகங்கள், பெருஞ்சிலந்திகள் மற்றும் பூரான்கள் அவற்றோடு அனைத்து வகையான விஷ விலங்குகளுக்கானதை அவனால் தன் உடல் மீதே பரிசோதித்துக் காட்டி விளக்க முடியும்.
அவனது தீர்மானத்தினால் ஈர்க்கப்பட்ட எவரோவொருவர் கண்ணாடிக் குப்பியில் அடைக்கப்பட்ட ஒரு நச்சுப் புதர் குழி விரியனில் மிக மோசமான ஒன்றினை எங்கிருந்தோ (சுவாசத்தை விஷமாக்கிக் கொல்லும் பாம்பினை) அவனுக்கு எப்படியோ கொண்டுவந்தார், பிறகு அவன் அத்தனை ஆர்வத்துடன் அதன் தக்கை மூடியினைத் திறந்தபோது அவன் அதனைத் தின்னப்போகிறான் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தாலும், பிராணியானது தான் விடுவிக்கப்பட்டோம் என்று உணர்ந்த உடனேயே கண்ணாடிக் குப்பியிலிருந்து தாவி வெளிவந்து அவனைக் கழுத்தில் கடித்து, அவனது மேடைப்பேச்சுக்கான சுவாசத்தை வெட்டிவிட்டது, முறிவு மருந்தினை எடுக்கப் போதுமான நேரம் அரிதாகவே தரவும் செய்தது, பிறகு அந்தக் கையடக்கக் கச்சிதமுள்ள மருந்தாளுநன் கூட்டத்தினுள் உருண்டு விழுந்து தரையில் உருண்டான், அவனது மாபெரும் உடல் அதனுள்ளே ஒன்றுமே இல்லை என்பது போன்று வதங்குற்றது, என்றாலும் அவன் தனது எல்லாத் தங்கப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டிருந்தான்.
அங்கு இருபது ஆண்டுகளாக நல்லெண்ண நோக்கத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலானது பாம்பின் விஷம் கப்பலின் மேற்தளத்தை அடையாமல் இருப்பதற்காக வேண்டி தொற்று நிரல் தணிக்கையைப் பிரகடனம் செய்யும் அளவிற்கு ஆரவாரமானது அத்தனை பெரியதாக இருந்தது, பிறகு குருத்தோலை ஞாயிறை புனிதப்படுத்திக் கொண்டிருந்த மக்கள் தங்களது ஆசிர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளுடன் தேவாலயத்திலிருந்து வெளி வந்தனர், விஷமேறிய மனிதனின் காட்சியைத் தவறவிட எவரொருவரும் விரும்பவில்லை, மரணத்தின் காற்றுடன் ஏற்கனவே மூச்சுத்திணறிக்கொண்டு, அவன் முன்பிருந்ததை விட இருமடங்கு ஏற்கனவே உடல் வீங்கிப்போயிருந்தான், அவனது வாயின் வழியாகப் பித்த நுரை வழிய அவனது மயிர்க்கண்களின் வழியாகப் பதைத்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாலும், ஆனால் இன்னும் அத்தனை உயிர்த்துடிப்புடன் சிரித்துக் கொண்டிருந்ததால் அவனது உடலெங்கும் மணிகள் கலகலவென்று ஒலித்தன. வீக்கமானது அவனது உடல்பிடிப்பான கால்சட்டையின் இழைக்கச்சையையும் ஆடைகளின் தையல் மூட்டுப்பிரிகளையும் அறுந்துவிடச் செய்தது, மோதிரங்களின் அழுத்தத்தினால் அவனது விரல்கள் கருஞ்சிவப்பாயின, உப்பிலிட்ட மான் இறைச்சியின் வண்ணத்திற்கு அவன் மாறினான், மேலும் அவனது அடித்துவாரத்திலிருந்து வந்தது சாவின் கடைசிக் கணங்களின் சாடைக்குறிப்பு, ஆகையால் பாம்பினால் தீண்டப் பட்ட ஒருவனைக் கண்டவர் அனைவருக்கும் தெரியும் மரிப்பதற்கு முன்னர் அவன் அழுகிக்கொண்டிருக்கவும் அவனை ஒரு மண்வாரியால் எடுத்து சாக்கின் உள்ளில்போடும் அளவிற்குச் சுருண்டு மடங்கியும் இருந்தான் என்பதும், என்றாலும் பொடிந்து தூளாகிக் கிடந்தநிலையிலும் அவன் தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந் தான் என்றும் கூட அவர்கள் கருதினார்கள்.
அவனது வண்ணப்புகைப்படங்களை எடுக்கத் தமது நீண்ட தொலைவு லென்சுகளுடன் கடற்படையினர் மேற்தளத்திற்கு வந்தது அத்தனை வியக்கத்தக்கதாக இருந்தாலும், தேவாலயத்திலிருந்து வெளிவந்த பெண்கள் இறந்து கொண்டிருக்கும் மனிதனின் மீது ஒரு கம்பளியை வைத்துமூடவும் ஆசீர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை அவனின்மீது வைத்து அவர்களின் நோக்கத்தைத் தடுத்தார்கள், அட்வெண்டிஸ்ட் (இயேசுநாதரின் மீள்வருகையில் நம்பிக்கையுள்ளவர்களுடைய) கருவிகள் வைத்து உடலினை தேவ நிந்தனை செய்யாதிருக்க வேண்டி சிலரும், சாகத் தயாராய் சிரிப்புடன் இறந்து கொண்டிருக்கும் போலி தெய்வ விக்கிரக வழிபாட்டினனைத் தொடர்ந்து பார்க்கப் பயந்து மற்றவர்களும், அந்த விதத்தில் ஒருவேளை அவனது ஆன்மா மட்டுமே குறைந்தபட்சம் விஷமேறாது இருக்கும் என்று எண்ணியதால் மேலும் பிறரும்.
எல்லோரும் அவன் இறந்துவிட்டான் என முடிவு செய்திருந்தபோது இன்னும் அரை மயக்கத்திலும் அவன் இருந்த கெட்ட நொடியிலிருந்து முற்றாகத் தேறாமலும் இருந்த சமயத்தில், ஒரு கையால் குருத்தோலைகளை அவன் ஒதுக்கித் தள்ளி, எவரொருவரின் உதவியும் இன்றி மேசையை அவன் தயாராக்கி, மீண்டும் ஒரு முறை நண்டினைப் போல அவன் அதன் மேல் ஏறி, அதோ அங்கே மீண்டும் அவன், நாமனைவரும் நமது சொந்தக் கண்களால் கண்டதைப் போல, கண்ணாடிக் குப்பியின் உள்ளே எனது நஞ்சு முறிவு மருந்தானது கடவுளின் கையல்லாத வேறொன்றும் இல்லை என்று மீண்டும் கூவியவாறு, ஆனால் இதன் விலை வெறும் இரண்டு குவார்ட் திலியோக்கள் தாம் ஏனெனில் அவன் இதனைக் கண்டுபிடித்தது விற்பனைக்காக அல்ல மாறாக மனித இனத்தின் நன்மைக்காக, மேலும் அவன் அதனைச் சொன்னவுடன், கனவான்களே சீமாட்டிகளே, என்னைச் சுற்றி கூட்டம் கூடி நெரிக்க வேண்டாம் என்று மட்டும் சொல்கிறேன், அனைவருக்கும் போதுமான அளவு என்னிடம் இருக்கிறது.
சுற்றிக் கூட்டம் கூடினார்கள், வாஸ்தவமாக, அவர்கள் அதனை நன்றாக அவ்வாறுதான் செய்தார்கள், ஏனென்றால் கடைசியில் அனைவருக்கும் தேவையானது இருக்கவில்லை. அராஜகவாதிகளின் விஷமேற்றப்பட்ட தோட்டாக்களுக்கும் கூட எதிராக இது நல்லதென்று அவனால் நம்ப வைக்கப்பட்டு, போர்க்கப்பலின் கடற் படைத் தலைவரும் கூட ஒரு குப்பி வாங்கினார், மேலும் மாலுமிகள் அவன் மேசையின் மேலே இருக்கும்படியான வண்ணப் படங்களை எடுப்பதோடு மட்டும் வெறுமனே சமாதானப்பட்டுவிடாமல், இறந்த நிலையில் அவனின் புகைப்படத்தை எடுக்க அவர்களுக்கு இயலவில்லை, எனினும் அவனது கை சுளுக்குப் பிடிக்கும்வரை அவனைக் கொண்டு ஆட்டோகிராஃப்களில் கையெழுத்திடச் செய்தார்கள்.
அப்போது இரவாகிக் கொண்டிருக்க மிகவும் குழப்பமுற்ற எங்களில் சிலர் மட்டுமே கப்பல்துறையில் மீந்திருக்க, அவனது கண்கள் முட்டாள் ஒருவனின் பார்வை கொண்ட யாரோவொருவனை அந்தக் கண்ணாடிக் குப்பிகளைத் தூக்கிப்போடுவதற்குத் தேட, பிறகு இயல்பாகவே அவன் என்னைக் கண்டுபிடித்தான். விதியின் பார்வை போலிருந்தது அது, என்னுடையது மட்டுமல்ல, அவனுடையதும் கூட, அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்து முடிந்திருந்தது எனினும் அது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது போல நாங்கள் இருவரும் நினைவு கூர்கிறோம். நடந்தது என்னவென்றால் அவனுடைய சர்க்கஸ் மருந்துக் கடையைக் கற்றறிந்த சான்றோர் ஒருவரின் பேழை போன்றிருந்த ஊதா நிற பட்டைகளுள்ள பயணப் பெட்டியில் வைத்துக்கொண்டிருந்தோம், முன்னர் அவன் பார்த்திராத சில ஒளியினை என்னுள் அவன் கவனித்த போது, கடுகடுப்பான ரீதியில் யார் நீ என்று அவன் கேட்டான், இரு வழிகளிலுமே அப்பாவானவர் இறந்திருக்காததால் நான் ஓர் அனாதை என்று பதிலளித்தேன், விஷம் ஏறியிருந்தபோது அவன் வெளியிட்டதை விட உரத்த சிரிப்பை வெளியிட்ட அவன் பிறகு என்னிடம் கேட்டான் பிழைப்புக்கு என்ன செய்கிறாய் என்று, உயிர் தரித்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை என்று நான் பதிலளித்தேன், ஏனென்றால் பிரயாசைக்குத் தகுதியானது வேறொன்றும் இல்லை, இன்னும் சிரித்துக் கண்ணீர் உகுத்தவாறு உலகின் எந்தச் சாஸ்திரத்தை நீ கூடுதல் அதிகமாகக் கற்க விரும்புகிறாய் என்று கேட்டான், பிறகு ஏமாற்றாமல் நான் உண்மையைச் சொன்ன ஒரேயொரு நேரம் அதுவாகவே இருந்தது, நான் ஒரு குறி சொல்பவனாக ஆக வேண்டும் என்று விரும்பினேன், பின்னர் அவன் சிரிக்கவில்லை ஆனால் ஆழ்ந்துயோசித்தது போல எனக்குச் சொன்னதோ எனக்கு அதற்காக அதிகம் தேவைப்படாது ஏனென்றால் கற்பதற்குக் கடினம் கூடியதானது என்னிடம் ஏற்கனவே இருக்கிறது, ஓர் அசடனுடையதைப் போன்றிருந்த எனது முகம். அதே இரவு அவன் என் தந்தையிடம் பேசி ஒரு ரியால் மற்றும் இரண்டு குவார்ட்திலியோக்கள் மற்றும் பிறன்மனை நயத்தலை முன்கூறிய ஒரு சீட்டுக் கட்டுக்காக என்னை என்னென்றைக்குமாக வாங்கினான்.
அப்படித்தான் இருந்தான் கெட்டவன் ப்ளாக்கமன், ஏனென்றால் நான்தான் நல்லவன் ப்ளாக்கமன். பிப்ரவரி மாதம் என்பது கண்காணா யானைகளின் கூட்டம் என அவன் ஒரு வானவியல் வல்லுநரை நம்ப வைக்கும் ஆற்றல் உடையவனாய் இருந்தான், ஆயினும் நல் வாய்ப்பு அவன் மேல் திரும்பியபோது இதயத்தின் அடியாழத்தில் கொடுவிலங்காக மாறிப் போனான்.
அவனது கீர்த்தி மிகுந்த நாட்களில் வைசிராய்களைப் பதனமிடுபவனாக இருந்தான், அப்படிப்பட்ட அதிகாரத்துடன் அவன் அவர்களுக்குக் கொடுத்த முகங்களுடன் அவர்கள் உயிருடனிருந்ததை விடச் சிறப்பாக மிகப் பல வருடங்களுக்கு நன்றாக ஆட்சி செய்தார்கள் என்று அவர்கள் சொன்னார்கள், மேலும் அவன் அவர்களுக்கு அவர்களின் இறந்த மனிதனின் தோற்றத்தைக் கொடுக்கும் வரை எவரொருவரும் அவர்களைப் புதைக்கத் துணியவில்லை, ஆயினும் ஒரு கிறிஸ்தவப் புரோகிதரைப் பைத்தியமாக அடித்து இரு புகழ்பெற்ற தற்கொலைகளையும் கொணர்ந்த ஒரு முடிவற்ற சதுரங்க விளையாட்டின் கண்டுபிடிப்பினால் அவனது கீர்த்தியானது பாழ்பட்டது, அதனால் அவன் வீழ்ச்சி யுற்றான், கனவுகளின் பொருள் கூறுபவன் என்பதிலிருந்து பிறந்தநாள் வசியக்காரனாய், பரிந்துரைத்தல் மூலம் கடைவாய்ப் பல் பிடுங்குபவன் என்பதிலிருந்து சந்தையில் குணப்படுத்துபவன் என்பதாகச் சீரழிந்தான்; ஆகையால் நாங்கள் சந்தித்த சமயத்தில், சனங்கள், ஏன் வழிப்பறிக்காரர்களும் கூட அவனை ஏற்கனவே சாடையாகப் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.
எங்களது தந்திரநிலை தாங்கியுடன் நிலைபெயர்ந்து நகர்வுற்றுச் சென்றோம், வாழ்வானது நிலைபேறான நிலையற்ற தன்மையுடன் இருந்தது, கடத்தல்காரர்களை ஒளியூடுருவத்தக்க தாக்கி மறைந்து தப்பிக்கவைக்கும் உட்கரை குளிகைகள், ஞானஸ்தானம் பெற்ற மனைவிகள் தமது டச்சுக் கணவன்மார்களிடத்து பிதாவின் மீதான பயத்தை உண்டாக்குவதற்காக வடிசாற்றில் எறியும் துளி மருந்துகள், மற்றும் உங்களது சொந்த விருப்பத்தின் பேரில் நீங்கள் வாங்க விரும்பக்கூடிய எந்தவொன்றையும் விற்க முயலும்போது, கனவான்களே சீமாட்டிகளே, இது ஒரு கட்டளை அல்ல என்பதால், இது ஓர் அறிவுரை, மேலும், மொத்தத்தில் எப்படியிருந்தாலும் மகிழ்ச்சி என்பது நன்றிகடன் போன்ற ஒன்றல்ல.
இருந்தபோதிலும் அவனது நகைச்சுவைப் பேச்சில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரித்தோம் என்றாலும், உண்மை என்னவென்றால் எங்களுக்குச் சாப்பிடப் போதுமானதை சமாளிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது, மேலும் அவனது கடைசி நம்பிக்கை ஒரு குறிசொல்லி என்ற எனது தொழிலின் மேல் அமைந்திருந்தது. எனது புதிய சாஸ்திரத்தினைப்பற்றி உலகினை நம்ப வைப்பதற்காகச் சிறந்த வழியினைத் தேடியவாறு அவன் இலக்கணப் புத்தகத்தினை உட்பிளந்து வெளிப்படுத்தியபோது ஒரு ஜப்பானியனைப் போல மாறுவேடமிட்ட என்னை ஒரு கல்லறைப்பெட்டியில் வைத்துப் பூட்டி இரண்டு அரைக்கோளங்களை முனை களில் கொண்ட பாய்மரச் சங்கிலிகள் வைத்துக் கட்டினான், என்னால் இயன்றதை எனக்கு முன்கூற முயற்சிக்க முடியும் என்பதால், மேலும் இங்கே, கனவான்களே சீமாட்டிகளே, எசேக்கியேலின் மின்மினிப் புழுக்களால் வதைக்கப்பட்ட குழந்தை இதோ உங்கள் முன் இருக்கிறது, பிறகு நம்பிக்கை அற்ற முகங்களுடன் இங்கு நின்று கொண்டு இருப்பவர்களே, நீங்கள் எப்போது இறக்கப்போகிறீர்கள் என்று இவனைக் கேட்கும் தைரியம் உங்களுக்கு இருக்குமா என்று பார்க்கிறேன், ஆனால் அந்தச் சமயத்தில் அன்று எந்த நாள் என்று கூட என்னால் ஊகிக்க முடியாமல் இருந்தது, செரிமானத்தின் அயர்ச்சி உங்களது கணிக்கும் சுரப்பியை இடர்ப்படுத்துவதால் நான் ஒரு குறிசொல்லி என்பதைக் கைவிட்டான் அவன், நல் அதிர்ஷ்டத்துக்காக எனது தலையில் கம்பு கொண்டு நையப்புடைத்த பிறகு, எனது தந்தையிடம் என்னைக் கூட்டிச் சென்று தனது பணத்தைத் திரும்பப் பெற முடிவு செய்தான்.
ஆனால் அந்தச் சமயத்தில் வேதனையின் மின்னோட்டத்திற்கு நடைமுறை தீர்வை அவன் கண்டு பிடிக்க நேர்ந்தது, உடம்பில் வேதனை உண்டாகும் இடத்தில் குருதி உறிஞ்சும் கண்ணாடிக் குடுவைகள் ஓடும் தையல் எந்திரத்தை உண்டாக்கச் சென்றான்.
கெடுவாய்ப்பினைத் துரத்திவிட அவன் எனக்குக் கொடுத்த நையப்புடைப்புகளால் நான் முனகியவாறு அந்த இரவைக் கழித்துகொண்டிருந்ததனால், தனது கண்டுபிடிப்பை சோதனைக்குட்படுத்த கூடியவனாக அவன் என்னை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று, பிறகு எங்களது திரும்புதல் மேலும் தாமதப்படவும், அவனது நல்ல நகைச்சுவைப் பண்பினை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்தான், அவனது தையல் எந்திரமானது மிக நன்றாக வேலை செய்துகொண்டிருந்தது வரையிலும், அதாவது அது ஓர் அனுபவமற்ற கிறிஸ்தவப் பெண் துறவியினை விட நன்றாகத் தைத்ததோடல்லாமல் வலியின் இடத்திற்கும் தீவிரத்திற்கும் ஏற்றவாறு பறவைகளையோ அல்லது அஸ்ட்ரோமீலியா (பெரூவிய அல்லது இன்காஅல்லி) பூக்களையோ பூந்தையல் இடவும் செய்து கொண்டு. பிலடெல்ஃபியாவில் போர்க்கப்பலின் கமாண்டர் நச்சுமுறிவு மருந்தினை வைத்து பரிசோதனையை மீண்டும் முயற்சித்தபோது அவரது பணியாட்களுக்கு முன்னால் அட்மிரல் (கடற்படைத் தலைவன்) சொறியிழைப்பாகாக மாறிப் போனார் என்ற செய்தியானது எங்களை வந்தடைந்தபோது, எங்களது துரதிருஷ்டத்தின் மீதான எங்களின் விஜயத்தை நம்பியவாறு நாங்கள் இருந்தது எப்படியென்றால் அது அப்படித்தான்.
நீண்ட காலத்திற்கு அவன் மீண்டும் சிரிக்கவே இல்லை. இந்தியக் கணவாய்களினூடே தப்பித்து ஓடி எவ்வளவுக்கு எவ்வளவு நாங்கள் தொலைந்து போனதாக ஆனோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தெளிவாகக் கடற் படைக்காரர்கள் மஞ்சள் காய்ச்சலை இற்றொழிப்பது என்ற போர்வையில் நாட்டினை ஆக்கிரமித்தார்கள் என்ற செய்தியும் அவர்களின் வழியில் குறுக்கிடும் ஒவ்வொரு நெடு நாளைய அல்லது அறுதியாய் சுற்றித் திரிந்தலைபவர்களின் தலையைக் கொய்கிறார்கள் என்ற செய்தியும் எங்களை வந்தடைந்தது, மேலும் முன்னெச்சரிக்கை வேண்டி பூர்வீகக் குடிகளை மட்டுமல்லாது, கவனமாற்றம் செய்வதற்காகச் சீனர்களையும், பழக்கதோஷத்தில் நீக்ரோக்களையும், மேலும் பாம்பாட்டிகள் என்பதால் இந்துக்களையும் தலை கொய்யவும் செய்து மேலும் தாவர, விலங்கின, தாது வளங்களையும் துடைத்தழிக்க அவர்களால் இயன்றது ஏனென்றால் எங்களது விவகாரங்களில் அவர்களது வல்லுநனர்கள் கிரிங்கோக்களைக் குழப்பியடிப்பதற்காகக் கரீபியனில் வசிப்பவர்களுக்குத் தமது தோற்றத்தை மாற்றும் திறன் இருக்கிறது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பதால். அத்தகைய கொடுவெறி எங்கிருந்து வந்ததென்பதோ நாங்கள் ஏன் இவ்வளவு பயந்து நடுங்கினோம் என்பதோ லா வாஹீராவின் காற்றின் திசைகளில் எங்களை மிகவும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் ஆக்கிக் கொண்டதுவரை எனக்குப் புரியவில்லை, மேலும் அதற்குப் பிறகுதான் அவனுக்குத் தனது நச்சு முறிவு மருந்தானது ஒருவகையான பேதிமருந்தும் கற்பூரத் தைலமும் அல்லாத வேறொன்றும் இல்லை என்றும் விஷமெடுக்கப்பட்ட அந்தப் புதர்விரியனை அவனிடம் கொண்டு வர அலைகுடி ஒருவனுக்கு அவன் இரண்டு குவார்ட்திலியோக்கள் கொடுத்தான் என்றும் என்னிடம் ஒத்துக்கொள்ளும் தைரியம் வந்தது.
காலனியக் காலச்சமயப் பிரச்சார நிறுவன கட்டிட இடிபாடுகளில் நாங்கள் தங்கினோம், சில கள்ளக் கடத்தல்காரர்கள் அவ்வழி கடந்து போவார்கள் என்ற நம்பிக்கையில் ஏமாந்தபடி, ஏனென்றால் அவர்கள்தாம் நம்பத்தகுந்தவர்களும் நிலையற்றதான பாதரச வெயிலில் அந்த உப்பளங்களின் வழியாகக் கடந்து செல்லும் திறன் படைத்தவர்கள் அவர்கள்தான் என்பதால்.
முதலில் நாங்கள் புகையில் வாட்டிய சலமாண்டர்களையும் இடிபாடுகளிலிருந்த மலர்களையும் உண்ணவும் அதன் வேகவைத்த கால்களை நாங்கள் உண்ண முயலும் போது சிரிப்பதற்கான சக்தியை இன்னும் வைத்திருந்தோம், ஆனால் கடைசியாக நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் கோர்த்த ஒட்டடைகளையும் கூட நாங்கள் உண்டபோதுதான், அப்போதுதான், உலகத்தை நாங்கள் எவ்வாறு இழந்து வாடுகிறோம் என்பதை உணர்ந்தோம்.
அந்த நேரத்தில் மரணத்திற்கு எதிரான எந்தப் போக்கிடமும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதால், அது மிக மிகக் குறைவாக என்னை ஊறுபடுத்தக்கூடியதான இடத்தில் காத்துக்கொண்டு நான் வெறுமனே கீழே படுத்துக்கொண்டேன், சுவர்களினூடாக வெறும் ஒரு பெரு மூச்சினால் மட்டும் கடந்து செல்லக்கூடியவளாக இருந்த ஒரு பெண்ணினை நினைவு கூர்ந்தவாறு அவன் சன்னி கண்டு பிதற்றிக் கொண்டிருந்த போதும், அந்தப் புனைந்து தோற்றுவித்த பழம் நினைவுகொள்ளலும் கூட மரணத்தைக் காதற்பிணியினால் ஏமாற்றும் அவனது மேதமையின் ஒரு சூழ்ச்சித்திறன்தான்.
இருப்பினும், அந்தக் கணத்தில் நாங்கள் இறந்துபட்டிருக்க வேண்டும், இடிபாடுகளினூடே சீழ்கையடித்துக்கொண்டிருந்தது காற்றா அல்லது அவனது எண்ணங்களா என்று எனக்கு இப்போதும் சொல்லவியலாதவாறு மிகப்பெரும் பலத்துடன் சிந்தித்துக்கொண்டு முன் எப்போதையும் விட உயிர்ப்பு மிக்கவனாக அவன் என்னிடம் வந்து அந்த இரவு முழுவதும் எனது கடுந்துயரத்தைப் பார்த்தவாறே கழித்தான், அப்புறம் விடியலுக்கு முன்பு அதே குரலுடனும் இறந்த காலங்களின் அதே மனவுறுதியுடனும் தனக்கு இப்போது உண்மை தெரியும் என்று என்னிடம் சொன்னான், அஃதாவது அவனது அதிர்ஷ்டத்தினை மீண்டும் சுழற்றி மாற்றியது நான்தான் என்று, ஆகவே உனது காற்சட்டைகளைத் தயாராக்கிக்கொள், ஏனென்றால் எனக்காக நீ சுழற்றி மாற்றிய அதே வழியில்தான், நீ அதனை நேராக்கவும் போகிறாய்.
அவனிடம் வைத்திருந்த மிகச் சிறு நேசத்தையும் நான் இழந்தது அப்போதுதான். அவன் நான் அணிந்திருந்த கடைசிக் கந்தல் துணிகளையும் அகற்றி, என்னை ஏதோ சில முள் கம்பியில் சுருட்டி, எனது காயங்களில் பாறையுப்பினைத் தடவி, எனது மூத்திரநீரிலேயே என்னை அமிழ்த்தி, மேலும் சூரியன் என்னைத் தோலுரிப்பதற்காக எனது கணுக்கால்களில் கட்டித் தூக்கினான், இந்த இழிவுபடுத்தல்கள் எல்லாமுமே தனது துன்புறுத்துபவர்களை ஆற்றுப்படுத்த போதுமான தல்ல என்று தொடர்ந்து கத்தியவாறே இருந்தான்.
கடைசியாகக் காலனியக்கால மதப்பிரச்சாரகர்கள் மதவிரோதிகளை மறுஉற்பத்தி செய்யுமிடமான கழுவாய் சிறைக்கிடங்கில் எனது சொந்த துயர் நிலையில் என்னை அழுகிப்போகுமாறு தூக்கியெறிந்தான், பிறகு அவனிடம் தேவைக்கு அதிகமாக இன்னும் மிஞ்சியிருக்கும் குரல்மாற்றிப் பேசக் கூடியவனின் நயவஞ்சகத்துடன், உண்ணத்தக்க விலங்குகளின் குரல்களையும், விளைந்து முதிர்ந்த பீட்ரூட் கிழங்குகளின் ஓசைகளையும், மேலும் சொர்க்கத்தின் நடுவே ஏழ்மையில் நான் இறந்துகொண்டிருக்கிறேன் என்று மருட்சியாகத் தோன்றும்படி தூயநீரூற்றுகளின் ஓசைகளை என்னைத் துன்புறுத்துவதற்காகப் போலி செய்து உண்டாக்கத் தொடங்கினான்.
இறுதியாகப் பண்டங்களைக் கள்ளக்கடத்தல்காரர்கள் அவனுக்கு வழங்கியபோது, சிறைக்கிடங்கிற்கு இறங்கி வந்து நான் இறந்துபோய்விடக் கூடாது என்பதற்காக எனக்குச் சிலவற்றை உண்ணக் கொடுத்தாலும், அதன் பிறகு அத்தகு ஈகைக்காகக் குறடுகள் வைத்து எனது நகங்களைப் பறித்தெடுக்கவும், சாணை தீட்டும் கல் வைத்து எனது பற்களை உடைத்தெடுக்கவும் செய்தான், அப்புறம் எனது ஒரேயோர் ஆறுதல் இன்னும் மோசமான தியாகங்களுடனான ஆகப் பெரும் பழியினைத் துறக்க வேண்டி வாழ்வு எனக்கு ஒரு தறுவாயினையும் நல்வாய்ப்பையும் தரும் என்ற விருப்பம்தான்.
எனது சொந்த அழுகலின் கொள்ளை நோயிலிருந்து என்னால் எதிர்த்து நிற்க முடியும் என்பதில் நான் கூட வியப்புற்றேன் மேலும் அவன் தனது உணவின் எச்சங்களை என் மீது எறிந்துகொண்டிருக்கவும் சிறைக்கிடங்கின் காற்றானது நஞ்சேறி என்னைக் கொல்வதற்காக அழுகிய பல்லிகள் மற்றும் பருந்துகளின் துண்டங்களை மூலைகளில் சுண்டி எறியவும் செய்தான்.
எனக்கு உண்ணக் கொடுப்பதைக் காட்டிலும் அஃது அழுகிப் போவதற்காக எறிந்துவிடவே அவன் விரும்புவான் என்று எனக்குக் காண்பிப்பதற்காக ஓர் இறந்த முயலை என்னிடம் அவன் கொண்டு வந்தபோது எத்தனை காலம் கடந்து போனது என்று எனக்குத் தெரியவில்லை எனினும், எனது பொறுமை அதுவரையே நீடிக்கவும் என்னிடம் எஞ்சியிருந்தது எல்லாம் கடும்வெறுப்பாக மட்டுமே இருந்ததால், நான் அந்த முயலின் செவிகளைப் பிடித்து, உடைந்து சிதறப்போவது விலங்கல்ல அவன்தான் என்று மாயமாகத் தோன்றும்படியாகச் சுவரை நோக்கி வீசியெறிந்தேன், ஒரு கனவில் நிகழ்வதைப் போலப் பிறகு அது நிகழ்ந்தது. முயல் மிரட்சியில் கீச்சிட்டு மீண்டெழுந்ததோடல்லாமல், காற்றில் தாவியபடி என்னிடம் வரவும் செய்தது.
அப்படித்தான் எனது மேன்மையான வாழ்வுத் தொடங்கியது. இரண்டு பெசோக்களுக்கு மலேரியா பாதித்தவர்களிலிருந்து காய்ச்சலை வலித்து எடுக்க, நான்கு - ஐம்பது பெசோக்களுக்குக் குருடர்களுக்குப் பார்வையளிக்க, பதினெட்டுப் பெசோக்களுக்கு நீர்க்கோவை பிடித்தவர்களிலிருந்து நீர்க்கட்டை வடித்து எடுக்க, முடவர்களுக்கு அவர்களின் அவையங்களை, அவை பிறப்பிலிருந்தே அவ்வாறு உள்ளதெனில் இருபதுபெசோக்களுக்குத் திருப்பி அளிக்க, அவை ஒரு விபத்தினாலோ சச்சரவிலோ அவ்வாறு ஆனதெனில் இருபத்து இரண்டு பெசோக்களுக்குத் திருப்பி அளிக்க, அவை போர்களினாலோ நில நடுக்கங்களினாலோ காலாட்படையினர் இறங்கியதனாலோ அல்லது ஏதொருவகையான சாதாரணப் பேரிடரினாலோ அவ்வாறு ஆனதெனில் இருபத்து ஐந்து பெசோக்களுக்குச் சரியாக்க, ஒரு சிறப்பு ஏற்பாட்டின்படி மொத்தவிலைக்குச் சாதாரண நோயாளிகளை, அவர்தம் வகைக்கு ஏற்ப பைத்தியக்காரர்களை, குழந்தைகளைப் பாதிக் கட்டணத்தில் பிறகு முட்டாள்களை நன்றிக்கடனுக்காக என நான் அப்போதிருந்து உலகைச் சுற்றி வந்தேன், அப்புறம் நான் ஒரு பரோபகாரி இல்லை என இனி தைரியத்தோடு யார் சொல்லக்கூடும், கனவான்களே சீமாட்டிகளே, மேலும் இப்போது, ஆமாம், ஐயா, இருபதாவது படையணியின் தளபதியே, தடையரண்களை நீக்குமாறு உங்களது பொடியன்களுக்கு ஆணையிட்டு அல்லலுறும் மனிதகுலத்தைக் கடக்கவிடுங்கள், தொழுநோயாளிகள் இடதுபுறமும், வலிப்பு நோயாளிகள் வலதுபுறமும், வேறு இடத்திற்கு மாற முடியாத முடவர்கள் அதேயிடத்திலும் குறைந்த அவசரமுடையவர்கள் பின்புறமும், தயைக் கூர்ந்து என் மீது கூட்டம் சேர்ந்து நெரிக்காதீர்கள் ஏனென்றால் நோய்நிலைகள் எல்லாம் ஒன்றுகலந்து போனால் அவர்கள் தமக்கு இல்லாத நோய்க்குத் தாம் சிகிச்சை பெற்றால் பிறகு நான் அதற்குப் பொறுப்பல்ல, மேலும் பித்தளைக் குழாய்கள் சூடாகிப் பழுக்கும் வரை இசையை வாசியுங்கள், அப்புறம் தேவதூதர்கள் எரிந்து போகும் வரை வாணங்களைக் கொளுத்துங்கள், அப்புறம் சிந்தைகள் அழியும் வரை மதுபானம் வழியட்டும், அப்புறம் சிறுக்கிகளையும் கழைக்கூத்தாடிகளையும், கசாப்புக்காரர்களையும் புகைப்படம் எடுப்பவர்களையும் கொண்டு வாருங்கள், ப்ளாக்கமன்களின் தீம் புகழ் இங்கே முடிவடைவதாலும் உலகளாவிய பெருங்கொந்தளிப்பு தொடங்குவதாலும் எல்லாம் என் செலவில், கனவான்களே சீமாட்டிகளே, ஒருவேளை எனது தீர்ப்பு பிழைக்குமென்றால் ஒரு பேரவையாளனின் நுட்பங்களுடன் அவர்களை நான் உறங்கவைக்கச் சென்றது அவ்வாறுதான், பிறகு சிலர் என் முன் தாம் முன்பிருந்ததைவிட மிகமோசமாகவும் மாறினார்கள்.
நான் செய்யாத ஒரேயொரு காரியம் மரித்தவர்களை உயிர்ப்பிக்காததுதான், ஏனென்றால் அவர்கள் தமது கண்களைத் திறக்கும்போது தம்மைத் தம்நிலையிலிருந்து இடையுறுத்தியவரின் மேல் கொலை செய்யும் வெஞ்சினம் கொள்ளவும், பிறகு எல்லாம் முடிந்ததும் தற்கொலை செய்து கொள்ளாதவர்கள் நம்பிக்கையிழப்பில் மீண்டும் மரிக்கவும் செய்கிறார்கள்.
எனது தொழிலின் சட்ட முறைமையினைப் பற்றி விசாரணை செய்யும் மதி நுட்பமுடையவர்களின் குழு ஒன்றினால் முதலில் பின்தொடரப்பட்டேன், அப்புறம் அவர்களுக்குப் புரிந்த பிறகு, அவர்கள் சிமோன் மாகோசின் நரகத்தை வைத்து என்னை மிரட்டவும் நான் ஒரு புனிதராய் ஆகக்கூடிய கழுவாய் தேடி மனந்திரும்புதலின் வாழ்வைப் பரிந்துரைக்கவும் செய்தார்கள், ஆனால் அவர்களின் அதிகாரத்திற்குப் பங்கம் இழைக்காமல், துல்லியமாக இந்த வகையில்தான் நான் தொடங்கினேன் என்று பதிலளித்தேன்.
உண்மை என்னவென்றால் இறந்த பின்னால் புனிதராவதிலிருந்து எனக்குக் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை, நான் ஒரு கலைஞன், கடற்படையின் தூதரிடமிருந்து நான் வாங்கிய இந்த ஆறு சிலிண்டர் காரில் கழுதை நிலையில் போய்க்கொண்டே இருப்பதற்காக, நியூ ஆர்லியன்ஸ் கடற்கொள்ளையரின் ஓபராவில் ஆண்குரலாக இருந்த இந்த ட்ரினிடாடைச் சேர்ந்த வாகன ஓட்டியுடன், எனது அசலான பட்டுச் சட்டைகளுடன், எனது கீழைத்தேய களிம்புகளுடன், எனது புஷ்பராகப் பல்வரிசைகளுடன், எனது தட்டையான வைக்கோற் தொப்பியுடன், மேலும் எனது இருவண்ண பித்தான்களுடன், அலறிமணிக் கடிகாரமின்றி உறங்குவதற்கும், அழகு இராணிகளுடன் நடனமிடுவதற்கும், எனது அகராதித்தன்மை வாய்ந்த சொல்லாட்சி திறத்தினால் அவர்களை மயங்கச் செய்தபடியும், மேலும் ஏதோ சில திருநீற்றுப் புதன்கிழமைகளில் எனது தொழிற்திறங்கள் வற்றி அழிவுற்றாலும் எனது ஈரல் பதைபதைக்காமல் இருக்கவும், உயிருடன் இருக்கவேண்டும் என்பதுதான் நான் வேண்டிக்கொள்ளும் ஒரெயொரு காரியம், ஏனென்றால் ஒரு மந்திரியின் வாழ்க்கையைத் தொடர எனக்குத் தேவையானதெல்லாம் ஓர் அசட்டு முகம்தான், மேலும் இங்கிருந்து மாலைச் செவ்வானத்திற்கும் அப்பால் இருக்கும் எனக்குச் சொந்தமான கடைகளின் தொடர்களால் எனக்குத் தேவைக்கும் அதிகமானது இருக்கிறது, அங்கே அதே பயணிகள் கடற்படைத்தலைவனின் வழியாக எங்களிடமிருந்து சேகரிக்கும் எனது கையொப்புக் கொண்ட உருப்படங்கள், எனது காதற்கவிதைகள் அடங்கிய பஞ்சாங்கங்கள், எனது பக்கவாட்டு உருவரைப்பொறிப்புகள் உள்ள பதக்கங்கள், எனது துணிகளின் துணுக்குகள் மற்றும் பளிங்குக்கல் குதிரைப் பொறிப்பகளாகச் செதுக்கப்பட்டு எல்லாப் பகல்கள் மற்றும் இரவுகளிலும் நமது நாட்டின் தந்தையரைப் போன்று குருவிகளால் எச்சமிடப்படும் மகத்தான கொள்ளை நோயின் பாதிப்பின்றி அனைத்தினாலும் அவர்கள் இப்போது தடுமாறுவார்கள்.
இதில் புனையப்பட்டது ஒன்றும் இல்லை என்று மக்கள் எண்ணும் விதமாகக் கெட்டவனான ப்ளாக்கமனால் இந்தக் கதையைத் திரும்பச் சொல்ல முடியாதது பரிதாபகரமானது. இந்த உலகத்தில் அவனைக் கடைசித் தடவையாகப் பார்த்த எவரொருவரும், அவன் தனது முந்தைய பகட்டின் காதணிகளைக் கூட இழந்துவிட்டிருக்கிறான் என்றும், தனது ஆன்மா முழுமையாகச் சீர்குலைந்த நிலையிலும் பாலைவனத்தின் கடுமையினால் தனது எலும்புகள் ஒழுங்கு குலைந்து இருந்தபோதிலும், சாந்த மரியா தெல் தாரியனின் கப்பல்துறைகளில் தனது சாசுவதமான கல்லறைப் பெட்டியினை வைத்து மறுதோற்றம் கொள்ளப் போதுமான கலகலக்கும் மணிகளை இன்னும் மீதம் கொண்டிருக்கிறான், விதிவிலக்காக இம்முறை அவன் எந்தவொரு முறிவு மருந்துகளையும் விற்க முயலவில்லை என்றாலும், எல்லோரும் காணும் விதமாகப் பொதுவிடத்தில் வைத்துத் தன்னைச் சுடுமாறு கடற்படையினரிடம் உணர்ச்சி பெருக்கடைந்த குரலில் வேண்டுகிறான், அப்படிச் செய்தால் தான் இந்த இயல் கடந்த ஜீவனின் உயிர் மீட்டளிக்கும் குணங்களை அவனால் தனது சொந்த உடலின்மேல் பரிசோதித்துக் காண்பிக்க முடியும், கனவான்களே சீமாட்டிகளே, ஒரு மோசடிக்காரனும் ஏமாற்றுகாரனுமாகிய நான் எனது கண்ணியமற்ற தந்திரங்களினால் நீண்டகாலமாக அவதியுற்ற பிறகு என்னை நம்பாமல் இருப்பதற்கான உரிமை உங்களுக்குத் தேவைக்கு அதிகமாக உள்ளதென்றாலும், இன்றிருக்கும் ஆதாரம் வேறோர் உலகத்திலிருந்து வந்தது அல்ல என்று நான் என் அன்னையின் அஸ்தியின் மீது சத்தியம் செய்கிறேன், வெறும் எளிய உண்மை, மேலும் உங்களுக்குச் சந்தேகம் ஏதேனும் மீதம் இருக்கிறதென்றால், வழக்கமாகச் சிரிப்பதைப் போன்று இப்போது நான் சிரிப்பதில்லை என்றாலும் அழுவதற்கான ஒரு வேட்கையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதையும் கவனியுங்கள். எவ்வளவு நம்பக் கூடியவனாக அவன் இருந்திருக்கவேண்டும், அவன் தனது சட்டைகளின் பித்தான்களைக் கழற்றியவாறு, அவனது கண்கள் கண்ணீரில் நிறைந்தவாறும், மரிப்பதற்கான ஆகச் சிறந்த இடத்தைக் குறிக்கக் கோவேறு கழுதையினைப் போலப் பின்னால் உதைத்தவாறு அவன் தனது இதயத்தைக் காண்பித்தாலும், ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அவர்களது தன்மானம் குலைவதைக் கண்டுபிடிக்கக்கூடும் என்ற பயத்தில் கடற்படையினர் இன்னும் சுடவில்லை.
கடந்த காலங்களின் ப்ளாக்கமன் - தன்மைய - சூழ்ச்சித் திறங்களை மறந்துவிட்டிருக்காத எவரோ ஒருவர், யாருக்கும் தெரிவதில்லை எப்படியென்று, கரீபியப் பிரதேசத்திலிருக்கும் கார்வினோ மீன்கள் அனைத்தையும் மேற்பரப்பிற்குக்கொண்டு வரும் அத்தனை அளவுள்ள பார்பார்ஸ்கோ வேர்களுள்ள ஒரு தகரக் குவளையை எப்படியோ பெற்று அவனிடம் கொண்டு வர, அவற்றை உண்மையில் தின்னப்போவதைப் போன்ற, பெரும் வேட்கையோடு அதனைத் திறந்தான், பிறகு நிஜமாகவே, அவற்றைத் தின்றான், கனவான்களே சீமாட்டிகளே, ஆனால் உணர்ச்சி வசப்படவோ எனது ஆன்மாவின் இளைப்பாறுதலுக்காக வேண்டுதல் செய்யவோ செய்யாதீர்கள், ஏனென்றால் இந்த மரணம் என்பது வெறும் ஓர் உசாவல் அன்றி வேறொன்றும் இல்லை. இம்முறை அவன் இசை நாடகரீதியான பிதற்றல்களை வெளியிட்டு நொறுங்கிக் குமைந்து போகாமல் மிகவும் நேர்மையாக இருந்தாலும், மேசையிலிருந்து ஒரு நண்டினைப் போல் ஊர்ந்து இறங்கி, சிறிது தயக்கத்திற்குப் பின் படுத்துக்கொள்வதற்கு மிகவும் தகுதியான இடத்தை நிலத்தில் தேடினான், பிறகு அங்கிருந்து அவன் ஒரு தாயைப்பார்ப்பது போன்று என்னைக் காணவும், ஈறில்காலத்தின் இசிவினால் சுழற்றப்பட்ட ஆண்மை மிக்கக் கண்ணீர்த்துளிகள் அனைத்தையும் இன்னும் கட்டுப் படுத்திக்கொண்டு, தனது கைகளில் கிடந்தவாறு அவனது கடைசி மூச்சினை விட்டான்.
நிச்சயமாக அந்த ஒரேயொரு முறைதான் எனது விஞ்ஞானம் என்னைத் தோல்வியுறச் செய்தது. முன்னெச்சரிக்கையாக அவனுக்கு வேண்டிய அளவில் இடம் விடப்படக்கூடியதாக இருந்த ஒரு பெட்டியில் அவனைக் கிடத்தினேன். வழிபாட்டு வினைமுறையாளர் தங்க அங்கி அணிந்திருக்கவும் மூன்று மேற்றிராணியார்கள் அங்கே அமர்ந்திருக்கவும் செய்ததனால் எனக்கு நான்கு - பெசோ முற்கால ஸ்பானிய பொற்காசுகள் செலவை ஏற்படுத்திய கூட்டு இரங்கற்பாடலை அவனுக்காக ஒலிக்கச் செய்தேன். ஒரு குன்றின் மேல் மிகச் சிறந்த கடற்புர வானிலைக்கு முகம் கொடுத்தவாறு அமைந்த ஒரு பேரரசனுக்கான ஒரு கல்லறை மாடத்தை, ஒரு சிறு தேவாலயத்துடன் ‘கடற்படையினரை ஏமாற்றியவனும் விஞ்ஞானத்தின் பலியாளும், கெட்டவன் என்று மிக மோசமாக அழைக்கப்பட்டவனுமான, இறந்த(வன்) ப்ளாக்கமன் இங்கிருக்கிறான்’ என்று கோதிக் பாணி கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த ஓர் இரும்பு பட்டிகையினையும் அவனுக்காக மட்டுமே உண்டாக்கினேன், அப்புறம் அந்தக் கௌரவங்கள் அவனது நற்குணங்களுக்கு நீதி செய்யப் போதுமானது என்று எனக்குத் தோன்றியவுடன், அவனது இழிபழிக்காக எனது பழிதீர்த்தலைத் தொடங்கினேன், பிறகு அவனைக் கவசமிடப்பட்ட கல்லறை மாடத்தினுள்ளே உயிர்ப்பிக்கச் செய்து பேரச்சத்தில் அவனை உழலச் செய்தேன்.
இதெல்லாம் சாந்த மரியா தெல் தாரியனை தீ எறும்புகள் கபளீகரம் செய்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே நடந்தது என்றாலும், அட்லாண்டிக் பெருங்கடற் காற்றுகளில் மேலேறி உறங்கும் டிராகன்களின் நிழலில் குன்றின் மேல் கட்டுக்குலையாது நிற்கிறது கல்லறை மாடம், பிறகு ஒவ்வொரு முறை நான் அதைக் கடக்கும் பொழுதும் ஒரு வண்டி நிறைய ரோசாப்பூக்களை அவனுக்காகக் கொண்டு வருகிறேன் அவனது நற்குணங்களுக்காக எனது இதயம் வலி கொள்ளவும் செய்கிறது என்றாலும், அதன் பிறகு நொறுங்கிக்கொண்டிருக்கும் பெட்டியின் சிதிலங்களில் அவன் அழுவதைக் கேட்பதற்காக அந்தப் பட்டிகையில் எனது செவியினை வைக்கிறேன், ஒருவேளை அவன் தற்செயலாக மீண்டும் இறந்து போயிருந்தால், ஒருமுறை கூடியும் அவனை உயிர்ப்பிக்கிறேன், தண்டனையின் அழகின் பொருட்டு அவனது கல்லறை மாடத்தின் உள்ளே, நான் வாழும் காலம் மட்டும் அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பான், அஃதாவது, என்றென்றைக்குமாக.
ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: க்ரிகரி ரபாஸ்ஸா
Blacaman the Good, Vendor of Miracles by Gabriel Garcia Marquez. English translation: Gregory Rabassa.
From Gabriel Garcia Marquez Collected Stories
(Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Penguin, 1996.
ஒவ்வொரு துண்டிலுமிருக்கும் வாழ்வைப்போலொன்றையும் பேழையிலிருந்து எடுத்து நுகரவேண்டும் ஒவ்வொரு பூவாய் எடுத்துத்தொடுத்தல் எவ்வளவு அழகு ஒரு புகைப்படத்தை எப்போதும் துடைத்துக்கொண்டிருக்கும் கைகளைப் போலவேயிருக்கிற துனதன்பு. ஒரு குற்றத்தை மிகச்சாதுர்யமாக சிக்கல்கள் இல்லாதவாறு பிரித்துக்கொண்டிருக்கும்போது சிறிய மலர்கள் பூத்துக்கொண்டிருப்பதை யாரும் பார்க்கவில்லை அதனால்தான் காலத்தில் அது இவ்வளவு அதிசயம்.
நிழலில் உலர்ந்திடும் வாழ்வு அவனுக்கு பின்னெப்போதும் வரிசையில் வெறுங்கையோடு கலைந்திடும் கூட்டத்தில் தனித்த முகம் அவனுடையது கொஞ்சமாகத் தூங்கி வழிந்திடும் பகல்பொழுதில் புனிதங்களற்ற மலர்களை யிரண்டிரண்டாக அடுக்கி சிறிய விரல்களை வளைத்து இதயமொன்றை திரும்பத்திரும்பச் செய்து காண்பிக்குமவனுக்கு ஒவ்வொரு துண்டாகப் பகிர்ந்துகொண்டிருக்கும் அன்புகளை நினைவில் வைத்துக்கொள்வதில் சிக்கல்களுமிருந்தன மேலும் எல்லா வழிகளிலும் தொலைந்து போனவனின் சாயல்களுமிருந்தன. உள்ளங்கையில் விழுந்திடும் பழுத்த இலையொன்று வீடு திரும்புதலை கொஞ்சமாக ஞாபகப்படுத்துகிறது அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் இப்பிரபஞ்சம் ஒரு காய்ந்த சமமற்ற கல் என சொல்லிக்கொள்கிறான் நீங்களோ யின்னும் பிரார்த்தனைகளை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். கோடைகாலத்தில் உதிர்ந்திடும் இலைகளின் வாசனைகள்தான் பேரன்பு ஆம் நம் காலத்தில்தான் அது வெறும் சொல்லானது.
தற்செயலான உடல்நலக்குறைவில் நீங்களுணர்ந்து கொள்ளலாம் தொட்டிச்செடிகளிலிருக்கும் சொற்களின் நெருக்கத்தை அவைகளுக்கு உடல்களில்லை ஞாபகங்களுமில்லை வலிகளுமில்லை அவைகளுக்கு அவ்வாறேயிருக்கச் சொல்லப்பட்டிருக்கிறது அதன் காலத்தில் அவைதான் புனிதமானது அதன் பூக்கள்தான் மிகத்தனிமையானதும் உங்களுக்கு. வெறுப்பின் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து அவ்வளவு அருகில் சென்று கொல்வதற்குப் பதிலாக நீண்ட நேரம் ஓடக்கூடிய ஒரு இசைக்கோர்வையை கேட்டுக்கொண்டிருக்கலாம் காலம் இப்போது மலர்ந்து நீண்ட வரிகள்படர்ந்திருக்கும் கடற்கறையின் சாயலிலிருக்கிறது சற்று திருகி மூடப்பட்டிருக்கும் ஒரு மருந்துக்குப்பியை அவசர அவசரமாகத் திறப்பதற்கு நீங்கள் செல்லும் வெகுதூரத்தின் முடிவில் பேரண்டம் சுருங்கி மிகச்சிறிய பொருளாகிக்கொள்கிறது இப்போதும் உங்களுக்கு மிக அருகில்தான் உள்ளது அக்கடைசி வாய்ப்பு அவ்வுலகம் அந்த இசைக்கோர்வையைத் திரும்பவும் சுழலவிடுகின்றது தன்னை மறந்து அந்த வீட்டின் தொட்டில் செடிகள் 1 மிமீ வளர்ந்திருக்கின்றன.
ஒருவர் கடலை நோக்கியும் மற்றொருவர் கரையை நோக்கியும் பிரிந்து நடக்கும்போது விலகிச்செல்வதன் பொருள் வெகுதூரமாகிறது ஒரு அற்புதத்தைத் திட்டமிட்டு நடத்தும் பெரியவர் சிறிய ஜன்னல்களிலிருந்து ஒலிகளைப் பரப்புகிறார் இரவு முழுவதும் காய்ந்த சங்கு வெய்யிலில் கடவுளொருவரைப்போல் குழப்பமாகிக் கிடக்கிறது காய்ந்த துணிகளை எடுத்து மடிக்கும் நினைப்பில் சில பொருட்களை சில சொற்களை மடித்து அடுக்கிக்கொண்டிருக்கிறது மனது திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் அவ்வுணர்வை கச்சிதமான ஒலியாக்கிக் காற்றில் பரப்புகிறது அக்குளிர்ந்த மணற்பரப்பு அந்த யிரவின் நட்சத்திரங்கள் வெறுமனே ஜொலிக்கவில்லை.
இன்றைய தமிழ் நவீன ஓவியர்களில் மிக நுண்ணியப் படிமங்களையும் புறப்பரப்பு வகைகளையும் ஓவியமாக்கி தொடர் கண்காட்சிகள் வழி உலகலாவிய பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறார் ஓவியர் வெங்கடேஷ். வெங்கடேஷ், புதுச்சேரி சேலியமேடு (பாகூர்) கிராமத்தை தன் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சிறு வயதுக் காலம் முழுக்க இயற்கையோடு இயைந்த சேலியமேடு கிராம வாழ்வே அவருடைய படைப்புகளுக்குப் பெரும் ஆதாரமாக இருப்பதாகச் சொல்வார். குறிப்பாக அவருடன் நெருங்கி ஓவியம் தவிர்த்து பேசியவர்களுக்கு மட்டுமே அந்த நினைவுகளை அவர் சொல்லியிருப்பார். இது, ஒருவகையில் எல்லா கலைஞர்களின் படைப்பிலும் முன் நிற்கும் படைப்பூக்க குணாம்சம்தானே என்று எளிதில் கடந்துவிட முடியாத அளவில் அவருடைய ஓவியங்கள் மாநிலம், நாடு, மொழி என்பனவற்றைத் தாண்டி படிமங்களாய் கிளைத்துக்கொண்டிருக்கின்றன என்பது அவருடைய ஓவிய வரிசைகளைக் காணும் எவருக்கும் கிட்டும்.
அதற்குப் பெரும் உதாரணமாக, அவருடைய படைப்புகளில் மைக்கேல் ஜாக்சனின் சுதந்திர மூச்சை, வாரணாசியின் இரவை, வெள்ளைநிறக் கனவுத்தாய்களின் பால் கனக்கும் முலைகளை, மாடு மேய்க்கும் கட்டியக்காரர்களை, பாலே நடனப் பாதங்களின் சக்தியை, பெண் வேடமிடும் நடிகன் முகத்தில் இறக்கியிருப்பது, கொடும் நோய் ஏற்படுத்தும் பெரும் வலிகளை, வெள்ளை நதியாய்த் தவழச்செய்வது போன்ற பெரும் படிமங்களையும் அதை அவர் பொருத்தியிருக்கும் தளங்களையும் காணலாம். அதோடு விஷேச பிடிவாதத்தோடு ஒவ்வொரு ஓவியத்திற்கும் அவர் எடுத்திருக்கும் நீண்ட கால அளவு நவீன ஓவிய மரபில் மிக முக்கியத்துவம் நிறைந்தது. அந்தக் கணங்களே அவரை, அவருடைய வாழ்வியல் துயருக்குள் மீண்டும் மீண்டும் கல்லெறிந்து விளையாடச் செய்கிறது. அவ்விளையாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் மாறி மாறி எழும் வளையங்களின் கனச்சுற்று அளவை உள்வாங்கி மிக நுட்பமான படிமமாகத் தீட்ட முடிகிறது. அந்த அவதானிப்பின் காரணமாய்தான், அவரின் படைப்புகள் அவரைப்போல் இவ்வுலகம் முழுக்க உள்ள மௌனமானவர்களின் மொழியாய் மாறி வண்ணங்களின் கூட்டுக் கணக்கில் வளர்ந்து எழுகிறது.
“உள்ளத்தின் கண்கொண்டு பார்த்ததை ஞாபக ரேகைகளினாலும் வண்ணங்களைக் கொண்டு தீட்டும் அனுபவமே ஓவியம்” எனப் பௌத்த ஞானி புத்தகோசர் சென்னது இங்கு நினைவுக்கு வந்து போகிறது. அவ்வகையில் வெங்கடேஷின் ஓவியத்தையும் அதை அவர் அணுகும் விதத்தையும் இந்திய கலை மரபில் முன்தோன்றிய தத்துவப்பார்வையின் நீட்சியாகவும் கூடப் பார்க்க பெரும் வாய்ப்புள்ளது. இந்தப் பின்னணியுடன்தான் ஓவியர் வெங்கடேஷ் படைத்த ஓவியங்களின் மொழி குறித்து மிக விரிவாகப் பேச வேண்டியத் தேவையும் எழுகிறது. ஓவியக் கல்லூரியில் முறையாகப் பல படிநிலைகளில் அவர் பயிற்சி எடுத்திருந்தாலும் தன்னார்வத்தொடர் தேடலுக்குப் பிறகே அவருடைய படைப்புவெளி அவருக்குக் கைவரப்பட்டிருக்கிறது. அதைதான் நாம் அவருடைய ஓவிய மொழியெனப் பார்க்க உதவுகிறது. அது, சொற்கோர்வைகளாலும் ஓசைகளின் ஒழுங்கமைவுகளாலும் ஆன படைப்பாய் மாறி நமக்குக் காண கிடைக்கிறது. அப்படிக் கிடைக்கும் ஒவ்வொரு படைப்பும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட வாழ்வியல் பொருட்களின் புறநிலை அர்த்தங்களுடன் நம்மைத் தொடர்புபடுத்துகிறது. அத்தொடர்பு, ஓவிய மொழியின் ஆதாரக் குறியீடுகளால் ஆன கட்டமைப்புக் கூறுகளின் மூலம் மேலும் நம் முன் வலுவாய் எழுகிறது. அந்த எழுச்சி, மனித மனம் தன் அனுபவங்களின் பின்னணிக் கொண்டு தேடும் வாழ்வியல் அர்த்தங்களின் மீது மற்றுமொரு அனுபவமாய் மாறி புதிய அர்த்தங்களைக் கட்டமைக்கிறது.
வெங்கடேஷின் ஆரம்பகாலப் படைப்புகளை, தன்வாழ்வுசார் அனுபவங்களையும் உலகளாவிய ஓவியங்களின் வெளிப்பாட்டு நுட்பங்கள் குறித்த கற்றல் அனுபவத்தையும் இணைத்தல் முயற்சியின் விளைவாக எழுந்த ஒரு புதிய கலாச்சாரக் கூறுகளின் தாள அமைப்பென வகைப்படுத்தலாம். அதில் கிராமம் சார் வாழ்வியல் மாந்தர்கள்,விலங்குகள் மற்றும் நுண்ணிய உயிரினங்கள் போன்றவைகளால் அமையப்பெற்றன. குறிப்பாக, அவை இந்திய கலை மரபு தொடர்ச்சிபோலக் கதைசொல்லல் தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். இவ்வகையில் இவரின், ஆரம்பக் காலப் படைப்புகளிலேயே ‘அழகியலை’ முன் வைத்த ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதையும் அனுபவம் கொள்ள முடிகிறது. அதன் காரணமாக அவர் ஓவியப்பரப்பாகத் தேர்ந்தெடுத்த கேன்வாஸ், அட்டை மற்றும் தாள்கள் போன்ற தளங்களிலிருந்தே புதிய வெளிப்பாட்டு நுட்பங்களை நமக்குக் காட்சியாக்கியிருக்கிறார். அதன் வழியேதான் படைப்பை தனித்த மொழியாக்கும் அணுகுமுறை அவருக்குக் கைவரப்பெற்றிருக்கிறது.
மைக்கேல் ஜாக்சன் தொடர் ஓவிய வரிசை இவரின் இடைக்காலப் படைப்பில் குறிப்பிடத்தக்கது. ஜாக்சனின் கருப்பு நிறம், அவருடைய ஆடை அலங்காரம், குரலுடன்இணைந்த உடலின் சக்தி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தினைச் சுட்டி நிற்கும். உதாரணமாக, தங்க நிற வயல்வெளியில் தலையில் தொப்பியோடு பாடும் ஜாக்சனுடன் உரையாடல் நிகழ்த்தும் ஆப்பிரிக்க மர முகமூடியின் வாய் தங்கத்தில் ஜொலிக்கும். நிகழிடம் இரவு நேரத்தின் கருமை பூசிய ஆற்றங்கரையாய் இருக்கும். அதுவே அவருடைய முன் கால ஓவியங்களான ஆற்றங்கரைகளில் ஆடு மேய்க்கும் வெங்கடேஷின் கருமையான தன் உருவத்தினோடு உரையாடும் ஆடுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் வண்ணக்கோர்வையின் பொருத்தப்பாடும் அதே உணர்வு அதிர்வுகளைத் தரக்கூடியதே. மேலும், கரும்பு சோலைகளுக்கிடையில் மந்திரமாய்த் தோன்றி கடுமையான நோய்மையில் போராடிக்கொண்டிருக்கும் தன்னுருவத்தின் உடலை முத்தமிடுவதும் என்பனவையெல்லாம் அவர் நம்பும் அழகியல் முன்னிலைப் படுத்தப்பட்ட அரசியலை நோக்கிய நகர்தலாகவே உணரமுடிகிறது. இப்படியான பார்வை நிச்சயம் அவரின் ஓவியங்களின் புற அமைப்பு குறித்த ஒப்பீடு அல்ல. அவற்றின் அழகியல் வழி அவருடைய அகப்பயணத்தில் அவரிடமிருந்து எழும் புதிய வெளிப்பாட்டுக்கான ஓவிய மொழியின் சரளத்தன்மையை நமக்குக் கடத்துகிறது. இப்படி எனக்குக் கிடைத்த அனுபவம் ஒரு சுவைஞனாய் என் மன உலகின் கால மாறுபாட்டில் பலவாக மாறும் சாத்தியப்பாடுகளையும் அவை கொண்டுள்ளது என்பதுதான் சான்று.
கடந்த சில வருடங்களாக, இன்னும் நுட்ப அணுகுமுறையுடன் உத்திரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரின் உள் அடுக்குகளைக் கனவு படகுகளெனப் படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார். அவற்றினை அதன் உருவாக்க காலத்திலே நாம் உள்வாங்க வேண்டியதன் தேவை மிக அதிகம் இருக்கிறது. ஏனெனில் அப்படைப்பின் அணுகுமுறை இதுவரை உலக ஓவியர்கள் வாரணாசியைப் படைப்பாக்கிக் கொண்டிருக்கும் மொழியிலிருந்து முற்றிலும் புதிய பரிமாணத்தில் இருப்பது மிக முக்கியத்துவம் நிறைந்தது. இந்த வாரணாசி ஓவிய வரிசையின் அணுகுமுறையில் உள்ள அடிப்படை அம்சம் எதுவென்பது பற்றிக் கேட்டதற்கு வெங்கடேஷ் சொல்வதானது, “தென்னிந்தியாவில், புதுச்சேரி பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட எனக்கு இறப்புச் சடங்கு என்பது என் வாழ்வியல் நினைவுகளில் உள்ள பெரும்பான்மையான ஒன்றாகும். அதாவது என் வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் இருக்கும் சுடுகாடு எங்கள் குடும்பத்திற்கு உரியது. அங்குதான் என் தாத்தா, பாட்டி மற்றும் என் அம்மா என அனைவரின் உடலும் சிதையூட்டப்பட்டது. அந்த இடம் எங்கள் ஜாதிக்கு மட்டுமே உரியது. மேல்ஜாதி இந்துக்கள் அவர்களுக்கான தனி இடத்திலேயே அவர்கள் உடல்களை எரிப்பர். எங்களுக்கான சுடு காட்டில் அவர்களின் உடல்களை எரிப்பதை பாவச்செயலாக எண்ணுவர். இது மனரீதியில் எனக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நீர், நிலம், காற்று, மண் மற்றும் தீ மீண்டும் மீண்டும் நமக்கு ஏற்றத்தாழ்வின் நிலையாமையை அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. இறப்பு எல்லோருக்கும் உரியதே. இயற்கையை உணராமலே இந்த வாழ்வின் இறுதிக்கு வந்து விடுகிறோமே! என்பதே அது. அந்தப் பாதிப்பிலிருந்தே இந்த வாரணாசி நகரை நான் பார்க்கிறேன். அங்கு நொடிக்கு நொடி நடைபெறும் உடல் எரியூட்டல் சடங்கில் நான் முன் குறிப்பிட்ட நீர், நிலம், காற்று, மண், தீ மற்றும் இதர சிறிது பெரிதுமான உயிரினங்கள் இச்சடங்குடன் இயைந்துக் கணத்துக்கு கணம் தம்மை மாற்றி நமக்கு அந்த நகரை வெவ்வேறு ரூபத்தில் காட்சியளிக்கிறது. அத்தகைய நொடி நேர வேறுபாட்டை நாம் பார்த்து வாழ்வின் அர்த்தம் புரிந்துக்கொள்ள முயற்சிக்கிறோமா என்பதே என் கேள்வி. அவ்விதம் நான் அங்கிருந்து பார்த்து நான் உள்வாங்கியதை, வேறு ஒரு காலத்தில் அந்நகரை என்வெளிப்பாடாக என்னுடைய பெயிண்டிங் மற்றும் டிராயிங் வரிசைகளாகத் தற்போது வெளிப்படுத்தி வருகிறேன்”.
இந்த அடிப்படைப் புரிதலுடன் அவரின் தற்போதைய வாரணாசி ஓவிய வரிசையை அணுகும்போது, இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன இவருடைய நவீனதத்துவ மரபின் வெளிப்பாட்டு முறைமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. மரணம் உறுதியானது என்பதே இவர் ஓவியங்களில் கங்கை ஆற்று நீர். மரணம் உறுதியானது என்று தெரிந்தும் வாழும் வரையின் அதன் மீது பயணப்படுதலே கங்கையில் மிதக்கும் இவர் ஓவியப் படகுகள். அதன் மீது பயணிக்கும் மனிதர்கள் எப்போதும் மனிதர்களே. என்பதே இவர் படைப்பில் கங்கையின் இருப்பு. அந்தப் படகு பயணம் வழி, நம் நினைவில் நிற்கும் அழகியல் உணர்வுகளே அவ்வோவியங்களில் பறக்கும் பறவைகள். அதுபோல் கங்கை நதியை நமக்கு வானத்தின் நீட்சியாகப் பார்க்கத் தருகிறார். மேலும், அந்த ஓவியங்களில் பகல் வானத்தின் வெளிச்சம் மனித வாழ்வின் சந்தோஷத்தைப் போன்றது என்பதும், அனைவரும் விரும்பக்கூடிய அளவில் பெரும் வெளிச்சத்துடன் இருக்கும். அந்த வானம் பெருகி வழிந்து கங்கை நதியில் மிதக்கிறது. அப்படி மிதக்கும் அந்தப் பகலை, இரவு நேர வானம் நட்சத்திரங்களாக மாற்றி மீண்டும் கங்கை நதியிலேயே இறக்கி விடுகிறது. இதெல்லாம் மனிதர்களுக்கு நேரடியாகத் தெரியாதது. இப்படியான மாயம் நிகழும் அந்த இருள்நேர கணங்களைத்தான் இவர் தீட்டி வருகிறார்.
அவ்வோவிய வரிசையில் முதன்மைப் படிமமாக அரிச்சந்திரன், காளி, நாகா, சாது மற்றும் அகோரிகளுக்கு இணையாக அந்நகரத்தின் மூலை முடுக்குகளில் சிறுகுழுக்களால் வழிபடும் சிறு தெய்வங்களும் இடம் பெருகின்றன. இவைகள் அவரின் முற்கால ஓவியங்களைப் போலவே கதைசொல்லல் முறை தவிர்த்து அவை இடம்பெறுதல் எங்ஙனம் என்பதிலிருந்து எழும் அழகியலையே முன் வைக்கிறது. அதற்கு உதாரணமாக, “அரிச்சந்திரன்” எனும் தலைப்பில் அமைந்த ஓவியத்தில் அரிச்சந்திரனின் நிலையானது, அவனுடன் கலந்திருக்கும் அந்தகாலக் கட்டிடங்களும். அவன் உடலாகவே மாறும் கட்டிடங்களும் நம் பார்வையில் அரிச்சந்திரன் அந்தக் கால நிலப்பரப்பின் படிமமாக மாறுகிறான். அவன் எரிக்கும் உடல் விறகுகள் அரிச்சந்திரனின் உண்மைத் தன்மையும் அவனின் சோகமுமாக நமக்குப்பல சாத்தியங்களை உண்டு செய்கின்றன. அதன் மூலம் அவ்விதம் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய காலமே, நேற்றைய இன்றைய நாளைய மனிதர்களின் உடல்களை எரியூட்டிக்கொண்டிருக்கின்றன என்பதாக அதன் மொழி உணர்த்துகிறது.
அதுபோல் வாரணாசி வரிசையில் இடம்பெறும் கங்கை நதியைப்போல, படகுகளைப் போல, நட்சத்திரங்களும் கட்டிடங்களும் போல சில இடங்களில் இடம்பெறும் விறகு அடுக்குகள் முன் வைக்கும் ஓவியத்தத்துவமும் கவனிக்கத்தக்கதே. படிமங்களின் இடம் பெயர்தலில் அந்த விறகுகள் வாரணாசியை மட்டும் சேர்ந்ததில்லை. பல்வேறு பகுதியைச் சார்ந்த மரங்கள் என்பது போன்ற தோற்றத்தை உண்டு செய்கின்றன. அவை உணவாய் எடுத்த நீர் என்பது பூமிக்கடியில் ஓடும் ஒரு பொது நீர். அந்தப் பொதுத்தன்மை மிக்க மரங்கள்தான் சில காலம் மனித உடலாக இருந்து பின் வாழ்வின் இறுதிநிலையை எட்டும் மனித உடல்களை எரியூட்டுகின்றன என்ற நிலைக்கு நம்மைக்கொண்டு செல்கிறது. அவ்வாறாக நாம் உணரும் தேவை வருவதால், அவ்வோவியங்களில் இடம்பெறும் விறகு அடுக்கானது இந்திய நிலம் கீழிருந்து மேலேழுந்தவாரியாக நம் பார்வைக்கு அடுக்கி வைத்தது போல் வளர்கிறது. இப்படி என் பார்வையை உறுதி செய்யும் விதமாக, உரையாடலின் போது வெளிப்பட்ட வெங்கடேஷின் பார்வையும் இருந்திருக்கிறது. அது, “இயற்கையை மனிதனின் பேரால் அதன் இருப்பு நிலையை மாற்றிப் பல் ஆண்டுகாலமாக உடல்களை எரித்துக் கொண்டிருக்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தச் செயல்பாட்டால் நமக்கு முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்த விறகினைக் கொண்டு எரியூட்டும் வேலை செய்யும் மனிதர்கள் படும் கஷ்டம் கூடத் தெரியாமல் சுயநலத்துடன் இங்குவந்து சென்று கொண்டு இருக்கிறோம். நான் அங்கு நடைபெறும் சடங்குகள் எதையும் நேரடித்தன்மையிலிருந்துக்கொண்டு பார்ப்பதில்லை அதனால்தான் அச்சடங்குகள் என் ஓவியங்களில் நேரடியாகப் பிரதிபலிப்பதுமில்லை”. என்பதுதான்.
அதுபோல் மேற்சொன்னவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இருள் உரையாடல்களின் சாட்சி போலச் சில ஓவியங்களை நாம் காண உருவாக்கியிருக்கிறார். அதிலொன்று, பறவையின் பார்வையில் தெரியும், கங்கை நதி படகு ஓவியம். படகில் பயணிக்கும் அந்த நகரமே முக்கியப்பாடுபொருள். அது மிதக்கும் நதி அலைகள் முழுக்கப் படித்துறைகளாகத் தோற்றம் கொள்வதும் அதில் வந்து கலக்கும் நட்சத்திரங்களின் மறு கரைகளெல்லாம் அவ்வோவியத்தின் மொழி பிரவாகத்திற்கான சாட்சியம். மற்றொன்று, அந்நகரத்து மாடு ஒன்றின் கண்களில் இறங்கிய நிலவு ஓவியம். அம்மாடு உடல் அந்நகரத்தின் நிலப்பரப்பாக மாறியிருக்கும் மந்திரப் பொழுதை கைப்பற்றியிருப்பார். இன்னொரு ஓவியம், மஞ்சள் நிற பூமியில் நடக்கும் அந்நகரத்து ஆடு தன் பின் உடலை கரைத்துக் கங்கை நதியின் படிக்கட்டுகளாக ஒழுக்கிக் கொண்டே செல்வதாக அசையும் காட்சியாகத் தோற்றம் தருகிறது. மற்றொன்று ஒரு ஆடும், நாகா சாது ஒருவரும் இணையும் சாம்பல் நிற ஓர் புதிய உலகம் உருவாகும் தருணம் ஏற்படுத்தும் சலனம் இதுவரை பேசப்படாத துறவின் தத்துவங்களைப் பேசத் துவங்குகிறது எனலாம். இது போன்ற தனித்தன்மைகள் எல்லாம்தான் வெங்கடேஷின் ஓவியங்களின் தன் மீறல் தன்மையையும் இந்தப் பொது உலகிற்கும் சொல்ல விழைகிறது. இவ்வகையில் இக்காலத்துக்கேற்ற புதிய காட்சி மொழியைத் தன் இடைவிடாத படைப்புகளின் வழி கொடுத்துக்கொண்டிருக்கும் அவருக்கு நாம் செய்ய என்னவெல்லாம் இருக்கிறது என்பதுதான், இனி பேச வேண்டியவை.
தமிழ் கூறும் நல்லுலகம் தன் ரசனைத்திறன் வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத அளவில் முன்னேறியிருக்கிறது. முகபுத்தகத்திலும், அதில் பரவும் வீடியோக்களையும் கொண்டு சடுதியில் நிரந்தரப் பிரதேசம் அமைத்து, அங்கிருந்து இவ்வுலகின் எல்லாவற்றையும் கண்டும் ரசித்துக்கொண்டிருக்கிறது. அதற்கும் முதலீடு என்னவோ மனித சக்திதானே. அந்தச் சக்தியின் முதலீட்டில் நம் ரசனையின் மேம்பாடும் படைப்புத் தொழில் சார்ந்த அணுகுமுறையில் ஏதேனும் வளர்ச்சி நிகழ்கிறதா? என்றால், இருக்கிறது! ஆனால் இல்லை! என்ற திரிசங்கு நிலைதான். நம் மத்தியில் இவ்வளவு நெருக்கமாகக் காணக்கிடைக்கும் வெங்கடேஷின் ஓவியங்களை நாம் பார்க்கப்போவது எப்போது. அவருடைய புதிய ஓவியங்களை நான் பார்க்கக் கேட்கும்போது, தரையில் அவற்றை விரித்துக் காண்பித்தாலும் அவற்றைப் பார்ப்பதற்கான ஒளி வரும் பிரதேசத்தைத் தேர்ந்தெடுத்து வைப்பதும் கூடப் பேரனுபவம்தான். அவருடைய கலை வாழ்வையும் அதிலுள்ள நெருக்கடி நிலையையும் பற்றிப் பேசுவதுகூட நமக்குக் கிடைக்கும் வாழ்வின் அடுக்குகள் பற்றிப் புரிதலையும்தான். ஒரு அடி முன் வந்து வெங்கடேஷின் படைப்புகளை நேரில்பார்த்து உணரத் தொடங்குவீர்கள் எனில் அப்போது “நான் கலைஞனாய் இருப்பது புரட்சியின் அர்த்தம்தான்” எனச் சொல்லும் வெங்கடேஷ் எனும் சக மனிதனின் குரலும் அவர் படைப்பு மொழியிலிருந்து உங்களுக்குக் கேட்கும்.
அவள் மாறிவிடப் போவதில்லை என்று நான் நினைத்தேன் எல்லாக் கதவுகளின் வாயிற்புறத்திலும் ஒரு வெண்ணிற ஆடையோடு நீல நிறக் கண்களோடு எப்பொழுதுமே காத்துக் கொண்டிருப்பாள் என்று எப்பொழுதுமே புன்னகையுடன் கழுத்தில் அட்டிகையை அணிந்தவாறே திடீரென்று இழை அறுந்தது தரையின் வெடிப்புகளில் இது முத்துகளின் கூதிர்காலம் அம்மாவுக்குக் காஃபி பிடிக்கும் அமைதியாக ஒரு சூடேற்றும் கணப்பின் அருகில் அமர்ந்து கூரிய நாசியின் மீது கண்ணாடியைச் சரி செய்து என் கவிதையைப் படிக்கிறாள் நரைத்த தலையை ஆட்டி மறுக்கிறாள் மடிமீதிருந்து கீழே விழுந்த கவிதையை உதடுகள் இறுக்கி அமைதி காக்கிறாள் அது ஒன்றும் மகிழ்ச்சியான பேச்சு அல்ல விளக்கின் அடியில் இனிமையின் ஆதாரம் உன்னதமில்லாத துக்கம் எந்தக் கேணியிலிருந்து இவன் நீர் பருகுகிறான் எந்தப் பாதைகளில் இவன் நடக்கிறான் என் கனவின் பிம்பமாயில்லாத இந்த மகன் அன்பெனும் பாலூட்டிதான் இவனை நான் போஷித்தேன் அமைதியின்மை அவனை வாட்டுகின்றது வெப்பக்குருதியில்தான் அவனைக் குளிப்பாட்டினேன் அவன் கைகள் ஏனோ கரடு முரடாய் உணர்ச்சியற்று இருக்கின்றன உன் கண்களை விட்டு வெகு தொலைவில் குருட்டுக் காதல் குத்தியிழுக்க தனிமை தாங்கிக் கொள்ள எளிதானது ஒரு வாரத்துக்குப் பிறகு குளிர்ந்து போன அறையில் கம்மிய குரலில் அவளுடைய மடலை நான் படித்தேன் ஒவ்வொரு சொல்லும் தனித் தனியே நிற்கின்றன நேசமிகு இதயமென.
ஆங்கில மொழியாக்கம்: ஜான் ஆர். கார்ப்பென்டர் & போக்தனா கார்ப்பென்டர் (1976 ஆம் ஆண்டு ஜுன் மாத Poetry இதழில் வெளியான கவிதை)
சிறுபிராயத்து நீரின் மீது ஒரு மேகமென அவருடைய கடுமையான முகம் என் உணர்ச்சி மிக்கக் கைகளை அவர் அபூர்வமாகவே பிடித்திருக்கிறார் மன்னிக்க முடியாத குற்றவுணர்வைக் கற்பனையில் நாட முயன்று அவர் கானகங்களை வேரோடு சாய்த்தார் பாதைகளைச் சமன்படுத்தினார் இரவுக்குள் நாங்கள் நுழைந்த தருணத்தில் விளக்கைத் தூக்கிப் பிடித்தார் அவருடைய வலது கை மீது நான் அமர்ந்திருப்பேன் என்று எண்ணினேன் ஒளியிலிருந்து இருளை நாங்கள் பிரித்தெடுப்போமென வாழ்ந்திருப்போரை எடை போட்டு ஆனால் நடந்ததென்னவோ வேறாக இருந்தது காயலாங்கடைக்காரன் அவருடைய சிம்மாசனத்தை வண்டியேற்றிக்கொண்டு போனான் எங்கள் ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடகு வைக்கப்பட்டன அவர் இரண்டாம் முறையாகப் பிறந்தார் பொசுக்கென்று மிகவும் பலவீனமாக வெளிறிய தோலும் இல்லையோ என்று தோற்றமளித்த எலும்புகளுமாய் தன் உடலைக் குறுக்கிக்கொண்டே வந்தார் ஓர் அனாமதேய இடத்தில் ஒரு கல்லின் நிழலில் நான் அதைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக என்னுள் அவர் வளர்கிறார் எங்களுடைய தோல்விகளை நாங்கள் உண்கிறோம் நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோம் பழக்கப்பட்டுப் போவது எவ்வளவு எளிதானதென்று அவர்கள் சொல்லும்பொழுது.
ஆங்கில மொழியாக்கம்: ஜான் ஆர். கார்ப்பென்டர் & போக்தனா கார்ப்பென்டர் (1976 ஆம் ஆண்டு ஜுன் மாத Poetry இதழில் வெளியான கவிதை)
ஒரு கூழாங்கல் என்பது ஒரு முழுமையான பொருள் தனக்குத் தானே நிகராய் அதன் எல்லைகளுக்குள் இருந்துகொண்டு துல்லியமாய்க் கல்லறிவால் நிரம்பி வேறெதன் சாயலிலும் இல்லை அதன் நெடி அச்சுறுத்துவதில்லை ஆசையைத் தூண்டுவதில்லை அதனுடைய உத்வேகமும் ஒட்டாத தன்மையும் நியாயமானதாகவும் கண்ணியமாகவும் இருக்கின்றன கடுமையானதோர் குற்றச்சாட்டை நான் உணர்கிறேன் அதை நான் கைகளில் ஏந்தி நிற்கும் பொழுது பொய்மையான வெப்பம் ஊடுருவுகிறது அதன் உன்னத மேனியை கற்கள் என்றுமே அடி பணிந்து விடுவதில்லை இறுதி வரை அவை நம்மைப் பார்க்கும் ஒளி மிகுந்த அமைதியான கண் கொண்டு.
ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ் & பீட்டர் டேல் ஸ்காட்
என்ன ஆகும் கைகள் கவிதையிலிருந்து தாழ்ந்து விழும்போது? ஏனைய மலைகளில் நான் வறண்ட நீர் பருகும் பொழுது? இது ஒரு பொருட்டாகவே இருக்கக் கூடாது என்றாலும் இருக்கிறது என்னவாகும் கவிதைகள் மூச்சுப் பிரியும் நேரம் குரலினிமையும் நிராகரிக்கப்படும் பொழுது? மேஜையை விட்டு விலகி ஓர் இருண்ட காட்டின் அருகே புதிய சிரிப்பொலிகள் எதிரொலிக்கும் பள்ளத்தாக்கில் இறங்கி விடுவேனோ?
ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ்
வெண்ணிறத் தீப்பிழம்பாய் ரோஜாப் புதரின் மீது தன்னைத் தானே வீழ்த்திக் கொண்டான் புனித இக்னேஷஸ் சதையின் இச்சைகள்ஒடுங்க தன் கருமையான வழக்கங்களின் மணிகொண்டு மூழ்கடிக்க விரும்பினான் அவன் இம்மண்ணின் காயத்திலிருந்து பீறிடும் புவியின் அழகை ஆனால், முட்களின் தொட்டிலுக்கு அடியில் விழுந்து கிடந்தபோது தன் நெற்றியிலிருந்து வழிந்த குருதி புருவங்களின் மீது ஒரு ரோஜா வடிவத்தில் உறைவதைக் கண்டான் முட்களைத் தேடிய அவனுடைய அந்தகக் கைகளை ஊடுருவிச் சென்றது மலரிதழ்களின் இனிய ஸ்பரிசம் ஏமாந்து போன புனிதன் அழுதான் மலர்களின் பரிகாசத்துக்கிடையே முட்களும் ரோஜாக்களும் ரோஜாக்களும் முட்களும் நாங்கள்மகிழ்ச்சியையே நாடுகிறோம்.
ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ்
நேற்றைக்குத்தான் நீலமேக மாமாவுக்குத் தீயாத்து. அதற்கு முந்தியநாள் நாதியற்ற கருக்கிருட்டுச்சாமத்தில் “பேக்கொண்ட கழுத போல” வாசலில் இருந்த அழிப்பாச்சுன கம்பிக்கதவை அறைந்தபடி துட்டிச்செய்தி சொல்ல பழனி நின்றுகொண்டிருந்தான். அத்தை இறந்து முழுவதும் இரண்டு மாதம் முடியவில்லை. அன்று பொட்டுத்தூக்கம் இல்லாமல் முட்டைக் கட்டியபடி இரவெல்லாம் இருந்தவர்களில் நானும் ஒருவன்.
சத்தம் கேட்டு முதலில் முழிப்புத்தட்டியது என் வீட்டம்மாளுக்குத்தான். “யய்யா...யய்யா”யென்று என்னைப் பதட்டத்தோடு உலுக்கி உசுப்ப நானும் எழுந்துகொண்டேன். “ச்” யென்று எழும்போதே எரிச்சல் உச்சு முடியை பிடித்தது. “ஏத்தா... என்ன? கதவைத்தான தட்டுதாக” போர்வை உதறி எழுந்தமர்ந்தேன். “இரு பாக்கேன், ஓவ்... ஓ... னு அவயம் போட்டுக்கிட்டு...”. “நீங்க சொல்லுவீக நல்லா... ஊரே அடங்கிப்போச்சு இன்னியேரத்துல வந்து இப்புடி மட மடன்னு அடிச்சா கெதக்கு கெதக்குனு இருக்காது?”
“................”
எனக்கும் மெல்லியப் பதட்டம் படர்ந்தது. அண்ணாக்கயிற்றில் கைலியை முறுக்கி விட்டுக்கொண்டு “வாரன், வாரேன்” எனச் சடவாகச் சொன்னபடியே கதவைத் திறந்தேன். பழனிதான் நின்றுகொண்டிருந்தான். எடுத்த எடுப்பிலேய “ஒம்போனத்தூக்கி தூர எறி, எத்தன வட்டம் போடுதது! எடுத்துப்பேச ஒனக்கென்ன பேதியா எடுக்கு?” கண் நிறைந்திருந்த தூக்கச்சடவு வல்லுசாக வடிந்துபோயிருந்தது.
என் போனை எடுக்கும்படி உள்ளே திரும்பி பொம்பளயாளிடம் சைகை காட்டும்போதே, நடு வீட்டில் லைட் எரிந்தது. தலைமுடியை வரிக்கொண்டை போட்டு, சேலையைச் சரி செய்துகொண்டு போனை நீட்டிக்கொண்டே, “அண்ணன்தானோ, ஒரு நிமிசத்துல எனக்கு ஏதோ வடியா வந்துருச்சு”, சிரிக்கலாமா? என்ன செய்ய என்ற குழப்பத்தினூடே பழனியைப் பார்த்தாள். பதில் இல்லை. தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.
போனை வாங்கிப் பார்த்தேன் ஏழுமுறை கூப்பிட்டிருக்கிறான். இதுபோகச் சுகுமாரன் ஒருமுறை. “என்னாச்சுடா” என்றேன்.
அதற்குள் “தாத்தா போன எடுத்தியா?” என்று என் பேத்தியை மகள் வெரட்டத் தொடங்கினாள். பழனி வாசப்படியில் இருந்து ஒரு எட்டு பின்னவைத்து தாழ்ந்த குரலில் “தாய் வந்துருக்கா?” என்றான். “ம்”. “நீலமேகம் அண்ணாச்சி” என அவன் தொடங்கும்போது பெரும் பாதிப் புரிந்துவிட்டது. தலையை ரோட்டப்பாக்க திருப்பி வைத்துக்கொண்டு “மருந்தத் தின்னுட்டாரு”என்றான் நெஞ்சை பொத்திக்கொண்டு “என்னாச்சுண்ணே, என்னாச்சுண்ணே” என என் வீட்டுக்காரி கேட்டபடியே இருந்தாள்.
கலங்கிய நிழலுருவமாக ஒரு நொடி நீலமாமா என் முன்பு வந்து மறைந்து போனார். ‘பனாமாஸ் சீரட்டு, உவக்காடு, கெணறுவெட்டு, பீடி, பூப்போட்ட சாரம்,சுருட்டமுடி, ஒட்டுப்புருவம், இராசங்கப்பேரி, பாக்கியராஜ், உப்புவேர்வ, எழும்புக்கவிச்சுவாட, தங்கக்கலர் வாட்சு, மரகதம் அத்தை, சவ்வாது வாசம்’ இடைவெளியின்றிச் சிதறியது நீலமாமாவின் நினைவுகள்.
“என்னாச்சி, என்னாச்சுண்ணே” நிதானம் நழுவி உடைந்துபோன குரலில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தவளிடம் “ஏம்மா... நீ சும்மா இரு” என்றேன். ஆற்றாமைக்கு வந்த கோவம். வாயை மூடிக் கொண்டாள். என் கண்ணுக்கதுப்பெல்லாம் நடுக்கம். “ஆஸ்பத்திரிக்கு தூக்கீட்டுப் போவக்குள்ள முடிஞ்சு போச்சு” என்றான்.
வழிய ஒரு தெம்பை வரவழைக்க முயன்றேன். போன் மறுபடியடித்தது. சுகுமாரன்தான். எடுத்ததும் “மாமா”வெனவேத் தொடங்கினான். “மருமனே தயவு செஞ்சு மலைக்காதீக வண்டியெடுத்துக்குட்டுத்தான வாரிக, தாயியென்ன செய்யுதா? இல்ல... இல்ல வேண்டாம்... இருக்கட்டும். பெறகூடச் சொல்லிக்கிடலாம். நீங்க பதறாம வாங்க... மாமா இருக்கேன்” சொல்லியும் சொல்லாமலும் துண்டித்தேன். “ஏம்மா... அந்தத் துண்ட எடு” என்று திரும்பியபோது “பெத்த புள்ளகிட்ட பேசுதமாரி ஏலே ஏதாயினு பேசுவாகளே இப்புடி தொடச்சு எடுத்ததுமாரி ஒரு மாயத்துல முடிஞ்சு போச்சுன்னு சொல்லுதீயலே” தேம்பி அழத்தொடங்கினாள்.
கொடியில் தொங்கிய துண்டை எடுத்துக்கொண்டு அரக்கப்பறக்க நிலையில் கை வைத்து இழுக்க வண்டிச் சாவி அகப்பட்டது. அவளைப் பார்த்து ஒப்புக்கு ஒரு சமாதானமாக “சரி நம்ம என்ன செய்ய முடியும்” என்று “ஏலாதவன்” சாயலில் சொல்லும்போது முடியாமல் கண்ணீர் வந்தேவிட்டது. சட்டெனத் துண்டையெடுத்துத் துடைத்துக்கொண்டேன். “சரி நீ போய்ப் படு, காலைலவருவயாம்”என்றேன். “ஏலேய் அம்மாள பாத்துக்கோடா, புள்ளைய திட்டிக்கிட்டு இருக்காத கதவ வந்து பூட்டிக்கோ” மகளிடம் திரும்பிப்பாக்காமலே சொல்லிவிட்டு நகரும்போது, செவிக்குள் இருந்து யாரோ அழைப்பதுபோல இருந்தது.
---
வழக்கமாகக் குளிக்குமிடம் கணபதியாத்துப்பாலம் தான். வறண்ட காலந்தவிர்த்து மீதி நாளெல்லாம் ஓரஞ்சாரத்தில் மண்டிய நாணல் அடி குறுத்து நனைத்து, தரகுப்புல் வாசத்தோடு ஓடு பாலத்தரையைப் பரசியபடி தண்ணீர் போகும். உள்ளூர் இளவட்டங்களின் மெனக்கிடலில் பாலத்திற்கு மேற்காகப் பத்தடிதூரம் ஒரு ஆள் மட்டத்திற்குக் கெடங்கு தோண்டி குளிக்கத் தோது செய்திருந்தார்கள்.
“ஊரிலாப்பட்ட கழுதகயெல்லாம் அங்கனக்குள்ளதாங் வந்து கும்மரிச்சம் போடுதுக. அதுக ஆடுதம்னு நம்மள தள்ளிவுட்டா காலம் போன கடைசில பெரிய எமாத. மேக்க நம்ம நீலமேகம் காட்டுக்கு விடுங்க”யென இன்று காலை தெருமுனையில் என்னை எதிர்பார்த்து நின்றது போல இருந்த முருகமாமா, வண்டியில் ஏறும்போதே சொல்லியிருந்தார். வயல் வந்ததும் அடைப்பைத் திறந்து கொண்டு முன்னே நடந்தவர், மோட்டார் சுவிட்சைப் போட்டார்.
வரப்பில் இருந்து வாய்க்காலில் இறங்கி நடந்தேன். சாண் அளவு நீர் கரண்டையை நனைத்தது. அடுத்த எட்டுக்குத் தண்ணீர் குதுரமெலியை மறைத்து வட்டங்கட்டிக் குளிரூட்டியது. கிழக்குவாட்டாக எழுந்த சூரியன் நாதகிரி மலையேறி இன்னும் ஒளி சிதறத் தொடங்கவில்லை.
கஜத்துக்கு முப்பதாயிரம் மேனிக்கு ஒன்னரை லட்சம் முதலை இறக்கி, நீலமாமா சமீபத்தில் வெட்டியது வீண்போகவில்லை எனக் கிணற்றைப் பார்த்ததும் நினைத்துக்கொண்டேன். விடிகாலை குளிருக்குக் கிணற்றுத் தண்ணீரில் இறங்கிக் குளிப்பதுதான் சுகம். குளிக்கக் குளிக்க மிதமான கதகதப்பு சொனக்காட்டும். கயிறு போட்டு ஏறும் காலம் கொஞ்சம் முன்னர்தான் வழுக்கியோடியிருந்தது. “முட்டிக்கிட்டு குனியனுமா?” வெறுமனே நெனைத்தாலே பெசம் ரெண்டும் தசையோறி விண்ணு விண்ணென்கிறது.
“படி வெட்டாம போனீக, பாடோட பாடா அதுவும் வெட்டியிருக்கலாம்லா, அது அந்தானைக்கு என்னத்த பெருசா கொண்டுட்டு போயிற போகுது” என்று நீலமாமாவிடம் கேட்டதற்கு “அவசியம்னா தொட்டில நாலு போனி எடுத்தூத்தி மேல அலசிக்கிடுதது. நல்ல ஒடம்புக்கு நாழித்தண்ணிபோதும் மருமனே” என்றார். “நாழித்தண்ணி குண்டி கழுவக் காணுமா?”
பம்புசெட் ஓடவும் நுரைத்து வந்த புதுத்தண்ணீர் மூன்று நாட்களாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தூரத் தள்ளி வரப்புகளில் இறங்கி ஓடி வயக்குண்டை தொட, புகைந்த உவர்க்காட்டு மண் வேக்காடெடுத்தடங்கியது. பெரு மூச்சுவிட்டுக்கொண்டேன். “மண் அப்படி யாரை நொந்து என்ன செய்ய?”
மயானக்கரையில் ஏனோ காரணமேயின்றிச் சுகுமாரன் கையைப் பிடித்தபடி இதையேதான் சொன்னேன். “வாஸ்தவந்தான் மாமா” யென்று புரிந்தவனாக அவனும் தலையசைத்துக்கொண்டான். இருவரின் பார்வையும் நீலமாமாவை விட்டு விலகாமல் குமிந்தது.
வைக்கோலும் சாண எருகும் அடுக்கி அதன்மேல் மண்குலைத்துப் பூசியிருந்தார்கள். நெஞ்சுக்கறியும், சப்பைச் சதையும் நின்று கொழுப்பெடுத்து எரிய சடலத்தின் மீது பிளந்துவைத்த தேங்காயும், உடைத்த ஆமணக்கு முத்தும் குவித்திருந்தனர். சுகுமாரன் குடம் உடைத்து தீ வைக்கும்போது ரெண்டுமடங்கு “செய்தி கேட்டதை” விட நெஞ்சடைத்துக்கொண்டது எனக்கு.
என் அம்மே ஒரு வளந்த கெழவி உண்டு. அவள் சொன்னதுதான் நேற்று தீயாத்தும்போது நினைவில் தட்டியது “மனுசமக்க வாழுத காலத்துலவும் சரி செத்த பெறவும் சரி தவிப்பார தந்தரைக்கு மேலவும் கீழவும் ரெண்டு ஆறு ஓடுது” இந்த ரெண்டும் ஆற்றாத தவிப்பையும் சூட்டையும் தீதான் ஆற்றும் போல, கலயச்சாம்பல் எடுத்ததும் கம்மிய குரலில் வீம்பாக ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு முருகமாமா சென்னார்,
“கூதியாங் ஆறி போனாங்”
--
முருகமாமா என்னில் இருந்து பத்து வயது மூத்தவர் என் தாய்மாமாவும் கூட. எங்கள் காட்டுக்குக்கொஞ்சம் கெழக்கிட்டு அவருடையது. நாலுக்கு ரெண்டு பழுதில்லாமல் கரும்பு வௌச்சல் பருவத்திற்குப் பதிவாக இத்தன லோடு கரும்பு என்று சுகர்மில்லுக்கு ஏத்தி காசு பாக்க அவர்பாடு தன்னக் கட்டிக்கொண்டு பிசகில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.
குளித்துச் சில நிமிடத்தில் ஏறுவெயில் வர உடம்பு உனந்து காய்ந்திருந்தது. “கௌம்புவமா மாமா?”வண்டியை உதைக்கும்போது ஈர வேட்டியை பிழிந்துகொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார். கணபதியாத்துப் பாலம் தாண்டி, மேலப் பிள்ளையார் கோவில் வருவதற்குள் கடந்துபோன பி.ஆர்.சி வண்டிக்கும் கரும்பு ஏத்தி வந்த டக்கருக்கும் என் வலதுதோளை அமுக்கி “மெல்ல.... மெல்ல..... பாத்து” என்று முணுமுணுத்துக்கொண்டார்.
“நிப்பாட்டும் மாப்ள! சாமி கும்புட்டு போவம்”. மாமா சொல்லவும் வண்டியை மேலப்புள்ளையார் கோவிலடியில் நிறுத்தினேன். முருகமாமா ஓர் ஆழ்ந்த பெருமூச்சோடு சாமி கும்புடை முடித்துக்கொண்டார். பிள்ளையார் கோவிலுக்கு இடதோரம் ஐயப்பசாமி கோவில் மதியம் இன்று குருபூசையென்பதால் அருகாமை கால்வாய் மறித்துத் தண்ணீரைத் திருப்பிப் புழக்கத்திற்கு விட்டிருந்தார்கள்.
பூவரசும், புளியமரமும் நெடுக வளர்ந்து பச்ச மூடாக்குப் போட, அடியில் ஒற்றைப்பிரியாக வளைந்தோடிய பாதையில் செல்லங்கொஞ்சுவது போலச் சலசலத்தபடி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றையே பார்த்தவர், சட்டெனச் சுதாரித்துக்கொண்டு அவரே ஆரம்பித்தார்.
“நம்ம சோலராசு கோழிப்பண்ணைல கீரிப்புள்ள எறங்கி சக்கட்டிமேனிக்கு கோழிய காலி பண்ணீருச்சு, குருண மருந்து வச்சப்பம் ஒன்னுத் திங்கல, செத்த கோழிய திங்க நாயி கூட அந்த வாடைக்குக் கிட்ட வராது மருமனே, அதையும் தின்னுட்டு, தென்னமரத்து மாத்தரையையும் தின்னுருக்கான். நைட்டு தண்ணி பாச்ச வந்த சந்தானம் பயதாங் என்ன இன்னியேரம் மோட்டார் ஓடுது, லைட் வேற எரியுதுனு அண்ணாச்சி, அண்ணாச்சினு சத்தங் குடுத்துக்கிட்டே உள்ளபோய்ப் பாத்துருக்கான்”. எனும்போது அவர் குரல் கம்மியது. மாமா தரையை வெறித்தபடி இருந்தார். எசக்கத்து இளந்து போய்க்கிடந்த அவர் பெசத்தை அழுத்திப் பிடித்தேன். “கடைசியா உனக்குத்தான் பாக்க குடுத்து வைச்சுருக்கு! உங்கிட்ட எதும் சொன்னானாய்யா? இல்ல... கழுதப்பய குடிச்சுட்டாம்னா, அது கெடந்து அரிச்சு இல்லாத கிரித்திரியம் பண்ணி என்னத்தையாது பேச வைக்கும் அதுதாங்...”
இல்லையென்பது போலத் தலையாட்டிக்கொண்டேன். சொன்னால் மட்டும் “எமன் பழி ஏற்கப் போறானா?”
--
எனக்குப் பத்து பன்னெண்டு வயது இருக்கும்போது “மேக்க மழ புடிச்சு ஊத்துனா இராசிங்கபேரி கம்மா நெறஞ்சு போவும்லா?” என முருகமாமாவிடம் கேட்டதற்கு “இன்னைக்கு வேண்டாம் மாப்ள நானும் நீலமேகமும் வேற சோலியாப் போறோம்” என ஏதோ சமாளித்துக்கொண்டு ஓடினார். மறுநாள் நான் அடம் புடிக்க என்ன அழைத்துப்போக நீலமேக மாமாவையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். முன்னால் உள்ள கம்பி யில் என்னை உக்கார வைத்துக்கொண்டு, முருகமாமாவை கேரியருக்கு விட்டு நீலமாமா உண்ணி மிதிக்கச் சைக்கிள் மின்னல் வேகத்தில் பூந்து கிளம்பியது. நினைவறிய நீலமாமாவை முதலில் பார்த்தது அன்றுதான். அவர் முருகமாமாவின் பள்ளிக்கூட்டாளி.
தவிட்டுச்சேற்றைக் குலைத்து விரவிய நச்சு மழை பெய்ஞ்சு தீர்த்த ஒரு சாயங்காலம்தான் முருகமாமா “அஞ்சடிச்சாம் முக்கு”அருகில் கடவாயில் ரெத்தம் வழிய,சட்டையும் சாரமும் நனைந்துபோய் முட்டுக் காலைக் கட்டிக்கொண்டு அரசமரத்தில் சாய்ந்து இருந்தார். “என்னாச்சு மாமா” பல முறை கேட்டும் பதில் இல்லை. ரெண்டு கண்களும் ரெத்தச்செவப்பு. வலதுகை முட்டுத்தோல் சிராய்ந்து உரிந்திருந்தது. பூசு பூசென்று மூச்சு வாங்க, துடித்துக்கொண்டு இருந்த கீழுதட்டை கடித்துக்கொண்டு ஏதோ முணங்கியபடியிருந்தார்.
சிறு அசைவுதட்ட சட்டென முருகமாமா எதிர்பாத்து நிமிரும்போது, மேக்க இருந்து சவதிக்காடு அடிச்சுத் தெரிக்க நீலமாமா ஓடிவந்தார்.
அவரைப் பார்த்ததும் இதுவரைத் தாக்காட்டி வைத்ததைத் தாமரிக்க முடியாமல் முருகமாமாவுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.
நடு நெற்றியில் நரம்பு புடைக்க, “ஏறுல வண்டில” யென நீலமாமா முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார். என்னைப் பார்க்காமலே எனது சைக்கிளை வாங்கியபடி “மருமனே வண்டிய எங்கிட்ட விட்டுட்டு நடங்க, நான் முருகன மந்த வரைக்குக் கூட்டு போய்ட்டு நானே கொண்டாந்து வீட்ல விட்டுறேன்” நீலமாமா சொல்லி முடிக்கும் முன்னமே சைக்கிள் நீலமாமாவின் கைக்கு மாறியிருந்தது. நான் நிதானப்பட்டு நாலு எட்டு வைக்கும்போது சைக்கிள் தெறிச்சு பறந்து கீழமந்தையை ஒட்டி வேகமெடுத்திருந்தது.
“என்ன சொல்லுதாக உம்ம மச்சுனரு சேக்காளிக எல்லாம்” மறுநாள் வாசலில் நின்றபடி முருகமாமாவிடம் சத்தங்கொடுத்த நீலமாமாவின் நெற்றியில் நாலு இலைத் தையல் விழுந்திருந்தது. வேட்டியை உதறி யெழுந்து குஷி பொங்க வாசலுக்கு வந்த முருகமாமா “இனி அட்டஞ்சுழிப்பானாக்கும் நம்மகிட்ட” என்றார்.
--
ஒரு நாளும் குளிச்ச கையோடு வீடு திரும்பியது கிடையாது. முருகமாமாவிடம் “டீ குடிச்சுட்டு போவமாமாமா” என்றேன். சரி என்றுதான் சொல்வார் என்றேகேட்ட கேள்வி. பதில் இல்லை. பின்னாடி உக்காந்தபடியே தலையாட்டியதாக உள்ளுணர்வு. கணேசன் கடையில் வண்டியை நிறுத்தி, ரெண்டு டீ, ஒரு கோல்டுபிலேக் எனக்கும், ஒரு சிசர்பில்டர் முருகமாமாவுக்கும். கேள்வியோ, பதிலோ, விளக்கமோ கிடையாது, கைய நீட்டுனா சீரெட் தன்னைப்போல வரும். இப்போது ஒரு சுண்டு சுண்டித்தான் கணேசண்ணே சீரெட்டை எடுத்தான்.
“ரெண்டு தானோ ஏதோ ஒரு நெனவுல பனாமாஸ்ல ஒன்னு உருவுதேங், அந்த ஒரு பாக்கெட்ட அவுகளுக்கு மட்டும் வாங்குதது” என்றான். சீரெட் அப்பமெல்லாம் ஒரு ரசனைதான். நம்மை நாமே ரசிக்க ஆரம்பித்த காலத்தில் தர்பாராக வந்து ஒட்டுன சரக்கு. தேட்டரில் புதுப்படம் எறங்கினால், மணிக்கு ஒருமுறை வரும் இராசபாளைய வண்டிக்கு (ஜெய்ராம் வண்டியோ, நாதகிரி வண்ணமயிலோ) சுளிவாகக் கிளம்பி பார்க்கவேண்டியபடத்தில் எத்தன பாட்டு என்று கணக்கு பண்ணி அதுக்குத் தக்கன பீடி, சீரெட்டை எடுத்துச் செல்வது.
“சும்மா எடுத்த எடுப்புல மானாங்கன்னியா பாட்ட போடுவானா மருமனே, அதுக்குனு ஒரு எடம் வரும்ல அத ஒரு ரசனையோட கேக்கனும். அதுக்குத்தான் தனியாசில மேப்படி யாவாரமெல்லாம் கைவசம் வச்சுகிடுறது”என்று நீலமாமா ஒரு சாதாச்சீரெட்டை நீட்டினார். லேசான புகைச்சலுக்குப்பின் பர்பர்ரென்று இழுவையைப்போட்டேன். சட்டெனத் தேட்டரில் லைட் எரிந்துஅமர்ந்தது. நீலமாமா சீரெட்டையும் என் சீரெட்டையும் அணைத்துச் சட்டை மேப்பித்தானை தொறந்து காலரைத் தூக்கி பின்ன இழுத்துவிட்டபடி “போலீஸ்கார பய வந்துட்டான்” என்றார். தேட்டர்களில் அது வாடிக்கையான சிக்னல்.
அந்த வருசம்தான் அம்மா ஊரான இராயப்பன்பட்டியில் தங்கி பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். “இங்கன பள்ளிக்கூடமா இல்ல? அங்க கொண்டு போடனுமா” என நீலமாமா கூடச் சடைத்துக்கொண்டாராம். வாரம் தவறாமல் அம்மாவின் கடிதம் வரும். ஒரு நாள் நீலமாமாவிடம் இருந்து கடிதம் வந்தது. ஏதாவது புதுப்படப் பாட்டுகள் பதிந்த கேசட் வாங்கி வரும்படியும், கூடவே சில பாட்டுகளும் எழுதி, அதைக் கட்டாயம் பதிந்து வரும்படியும் சொல்லியிருந்தார். பாட்டு வரிசையிலேயே, “மருமனே தெக்கூர் வண்டில, ஒரு நாளு காசி மச்சான் காட்டுல போட்டுருந்த பருத்தி மூட்டையை ஏத்தி விடப் போயிருந்தேன். ஏ... சிறுக்கிபுள்ள! அந்த வண்டிக்கார தாயிளியொரு பாட்டுப் போட்டாம் கேட்டுக்க”, என்ற குறிப்புடன் பாட்டு வரி வந்தது. “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி”. அந்த நேரம்தான் மதுரை தங்கம் தேட்டரில் “தூரல் நின்னு போச்சு” படம் பெரும்போடு போட்டுக்கொண்டிருந்தது.
ஒரு மூச்சுக்குக் கடை கன்னிலயும், கல்யாணச் சடங்குலயும் ஒரே “ஏரிக்கரை பூங்காத்தே, நீ போற வழிதென் கிழக்கே” பாட்டும் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” பாட்டும்தான். கூட படித்தவர்கள் எல்லாம் ஆகா,ஓகோ என்று வாய்பிளக்க எனக்கும் ஆச கெடந்து அடிக்கத்தான் செய்தது. சரி எப்படியும் இராசபாளையத்தில் ஏதாவதொரு தேட்டரில் இறங்கியிருக்கும் என நிச்சயமாகத் தெரியும். நீலமாமாவுடன் போய்ப் பார்க்க வேண்டும் (ஒரு கணக்குத்தான்).
அடுத்த லீவுக்கு வரும்போது இராசபாளையம் மீனாட்சி தேட்டரில் அதே படம்தான் (தப்பீருமா இப்பம்?) “மருமனும் நானும் டவுனுக்குப் படம் பாக்க போறோம்”யெனச் சுதாரிப்பாகச் சொல்லிக்கொண்டு வந்தார். பெல்பாட்டம் பேண்ட்டும், இறுக்கிப் புடிச்ச சட்டையும் கழுத்தில் ஒரு மப்புலர் துண்டும் அணிந்திருந்த நீலமாமாவுக்குக் குஷி இன்னமட்டில் இல்லை.
“என்ன மாமா, ஒரு கோப்பு கட்டி வந்தது கணக்கா தெரியுதே, என்ன விசியம்” என்றேன். சிரித்துக் கொண்டார்.
வண்டி சிவகிரியை எட்டுனதுதான் தாமதம் நீல மாமாவுக்குப் பாட்டு தன்னைப்போல வந்தது. “காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி உன் சேலையில் பூ வேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள்”. “இது எதுல உள்ள பாட்டு மாமா சட்டுனு நெனவுக்கு வரமாட்டேங்கு”யென்று ரெண்டு தடைவ கேட்ட பின்னாடி மப்புளர் துண்டின் ஒரு முனையைத் தோளில் தூக்கிப்போட்டபடி “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ” பாடிக்கொண்டே புருவம் ரெண்டையும் கொக்கி போட்டது போல ஒரு தூக்கு தூக்கி என்னைப்பார்த்தார்.
“மருமனே, வரும்போது ஒரு பாட்டு புக்கு வாங்கிடனும் மறந்திராம”
“அதாங் மனப்பாடமா அடிக்கீக பின்ன என்னத்துக்கு”
“தெளிவா சொல்லு சீனி மாமா மவளுக்குன்னு” பின் சீட்டில் இருந்த முருகமாமா சத்தங்கொடுத்தார்.
“ஓவ்...! வெசக்கொள்ளுய்யா நீரு!” நான் சொல்ல, நீலமாமா சிரித்ததற்கு மொத்த பஸ்சும் திரும்பிப் பார்த்தது.
--
சீரெட்டை இழுத்துக்கொண்டே கடையின் கூரைச் சாப்புக்குள் இருந்து வெளியே வரும்போது வாசலில் என் வண்டியில் சாய்ந்தபடி பழனி, “இப்போம் எதுக்குச் சொல்லுதம்னா” என்று எதிராளிக்கு ஆதரவான முறையில் நேக்காகக் குனிந்து குறுக்கை வளைத்து, “இப்பமே பதிஞ்சு வச்சுட்டம்னா நம்ம தேவைக்குத் தக்கன ஒரு லோனு கீனு போட வைக்க, சௌரியமா இருக்கும்ல என்ன சொல்லுதீக, நம்ம நமக்குத்தக்கன என்னத்தையாது போட்டு பெறக்கி காலந்தள்ளிக்கிட்டு இருப்போம். கரும்பு வௌஞ்சு வரைல என்ன செய்யனு தவதாயப்பட்டுக்கிட்டு, ஆல போட்ட காட்டுக்காரங்கிட்ட போயி தாயே தங்கமேனு கெஞ்சி எங்கரும்பயும் போட்டுக் குடுப்பானு நிக்கதுக்கு, கழுதய வௌஞ்சதா! சடசடனு வெட்டி சுகர்மில்காரங்கிட்ட வித்துட்டுத் தங்கமா காச வாங்கீட்டு, சூசுவானு இருந்துறல” யென வாசு அண்ணாச்சி தலையைக் கழுவிக்கொண்டிருந்தான். பக்கத்தில் தங்கப்பாண்டி இருந்தார்.
வாசு அண்ணாச்சிக்கு நம்ம வீச்சு புரியும். சட்டென்று அவரையும், பழனியயும் பார்த்ததும்; “சரித்தான் அதிகாரியவுக உக்கார வேண்டியதுதாங் நம்ம கூட்டாளிக அவுகளுக்குச் சரிக்கு சரியா உக்கார கூடுமா?” என்றேன். “தம்பி, நல்லவேள பாக்க தெரிஞ்சன் போங்க” எனச் சிரித்துக்கொண்டே “அதிகாரி ஒன்னும் சரி இல்லையே, இப்பம்தாம் நம்ம கரும்பக் கேக்காக அவுக சொக்காரவுகளுக்குன்னா இன்னும் வேகமா வேலையிருக்கும்” (இது தங்க பாண்டியனை குறிவைத்து) “அண்ணாச்சி நீங்க தேனுகீனு தடவி நீட்டிருக்கனும், வெத்துக்கொழல நீட்டுனா எப்படிச் செல்ப் எடுக்கும்? மாப்ளக்கு தேன் கொழல்னாத்தான் பிரியம்”. “அந்தக் கோளாரு நமக்குத் தெரியாம போச்சே!” என்றார் வாசு அண்ணாச்சி. சட்டை அடியை வாயில் பிடித்தபடி வேட்டியை இறுக்கிக்கொண்டே “பாண்டியம்ன்னா இன்னேரம் சோலிய பெறுக்கிருப்பாப்புல” என்றேன்.
தங்கப்பாண்டியன் “ஏ... சிறுபுள்ளையமாரி, என்ன பேசுதம்னு இல்லாம” என்று வேட்டியை உதறி இடத்தைவிட்டு நகண்டு கொண்டார். முருகமாமா, “என்னய்யா ஒரே வாக்கில எம்புள்ளைய கேலி பேசுதீக” முருகமாமாவுக்கும் சிரிப்பு வரத்தான் செய்தது.
பழனி, “விடுங்க சின்னையா, வெருவாக்கெட்ட பய கிட்ட போய்க்கிட்டு, அவம் பேசி அந்தானைக்குல, நமக்குநாலு வெரக்கட தேஞ்சு போவ போதாக்கும், இவனையும் வச்சு சோறு போடுதா பாருங்க எந்தங்கச்சி அவளத்தாங் சொல்லனும்”. “என்ன சொல்லனும்” சீரெட்டை அவனிடம் நீட்டினேன். பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டு “இப்புடி கொள்ளக்கூட்டம்னு தெரிஞ்சும், கொணங்கானாத பயனு தெரிஞ்சும் சோறு போடுதாபாத்தயா! எங்க வளப்பு அப்புடி, என்ன சின்னையா” வென முருகமாமாவையும் துணைக்கு இழுத்தான். மாமா தலையாட்டிக்கொண்டே புகை விட்டார். பஞ்சுக்கு கங்கு வரவும் தூர எறிந்துவிட்டு “அது வந்துய்யா, இப்பம் ஊராபய இருக்கும்போதுதான் சொல்லக் கூடாது நமக்குள்ளனா நொந்துக்கிடலாம் பொதுவுல உள்ளதசொல்லுதக்கு என்ன, எம்மகன் பழனி ஒரு கிரிசு கெட்டபய, ஆனா எம்மருமக அவன ஆத்திப்போத்தி நடந்துகிடுதாள்ள, அப்ப எங்க வளப்பு கொறையானு மாப்ள கேப்பாகல்ல”என்று என்னை பார்த்து கண்ணடித்தார்.“இப்புடி சின்னையாமாரெல்லாம் இருந்தா! என்னீய? இருந்தாப்புள செடி மாதிரி பேசி விட்டுறுதது” நீலமாமா என்றால் மேலும் ரெண்டு உரண்டு வரும். “இன்னைக்கு ஒரு மூணு மணியப்போல வந்தா விசேசத்துக்கு சரியா வரும்ல” என்று முருகமாமாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டான்.
--
நீலமாமா காடு உவக்காடு, அடிக்கொருதரம் வண்டியில் வண்டல் கொண்டு வந்து தரையை மெத்திபாடு பார்ப்பார். அப்படி வண்டல் அடிக்கப் போய் வந்துதான் சீனி மகளைப் பிடித்துப்போனதாக நீலமாமாசொல்லியிருந்தார். மாமா வழித்தெடுத்தது போலச் சாட்டையான தேகம் சதைப் பிடிப்புதான் குறையே தவிர நல்ல எழும்புத்தாக்கான மனுசன். “எவ்வளவு திங்க எங்கதாமுல போகுது” என்று சொல்லாத ஆள் கிடையாது. அன்று மாமா அழைத்ததால் எங்கள் வீட்டுக்கு நீலமாமா விருந்துக்கு வந்திருந்தார். மரகதம் அத்தை மாமாவைப்போல் அல்லாது நல்ல திரட்சியான உடல், பூரிப்பான உடலுக்கு ஏத்தபடி நல்ல சிவப்பு. சாப்பாடு முடிந்ததும், அத்தையிடம் நீலமாமா என்னைக் காட்டி,
“மருமன், நம்ம பெண்ணைத்தான் கட்டுவேன்னு கண்டிசனா சொல்லிட்டாக அதுதான் சரினு ஒன்ன கையோடு கூட்டு வந்து, இந்தா உம்ம அத்தகாரியாச்சு - நீராச்சு!னு விட்டுறததான், அப்புடியே உன்னய அணைச்சு உன்ன கொண்டாந்து சேத்தாச்சு”
அத்தை என்னைப் பார்த்து குழுங்கச் சிரித்தபடி “அதுக்கென்ன தாராளமா கட்டிக்கிறட்டும், இப்புடி மருமன் கெடைக்கனுமே! என்ன மருமனே பாத்துக்கிட்டீகளா என்னைய? என்ன கணக்காத்தான் எனக்கு மக பொறந்தா இருப்பா” என்றாள்.
“..............” வெறுமனே சிரித்தபடியே இருந்தேன்.
“என்ன மருமன் பேசுறதுக்குக் காசுக் கேப்பாகப் போல” என்று கேட்டபடி என்னைப் பார்த்தாள் மரகதம் அத்தை.
“ஏய்! சும்மா இரு மருமனுக்கு, கோவம் வந்துச்சி... யாரு என்னனு பாக்காம கை நீண்டு போகும்” நீலமாமா சொல்லவும் முருகமாமா வாயைப்பொத்தி என் முதுகில் தட்டிச்சிரித்தார். “சும்மா இருங்க மாமா” என்று மழுப்பிக்கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன்.
மாமா அவ்வாறு சொல்லுவதற்கு ஒரு கதை இருந்தது. இப்போது நினைத்தாலும் எப்படி நீலமாமாவினால் அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிந்தது என்பது ஆச்சர்யம்தான். அப்படியான சம்பவம் நடந்தது நீலமாமா விருந்துக்கு வந்த நாளில் இருந்து ரெண்டு வருடத்திற்கு முன்பு, முருகமாமா கடவாயில் ரெத்தம் வழிய உட்காந்திருந்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குப் பின்பு,
நானும், பழனியும் இராமனாதபுரத்தில்தான் பத்தாப்புப் படித்துக்கொண்டிருந்தோம். விளையாட்டாக நடந்ததைப் பழனி இவ்வளவு வன்மமாக எடுத்துக் கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை. வேண்டுமென்று கபடியில் அவனை அடித்தது போல எனக்கு நினைவும் இல்லை. தளவாரம் ரெட்டை பாலத்தின் முன்புதான் அவன் அண்ணனோடு நின்றிருந்தான்.
நான் வீடு திரும்பும்போது ஆவலாதி கேட்டு முடியவில்லை. ஆவலாதி என்பதை விட ஆத்தாமையால் வந்த புலம்பல் என்றுதான் சொல்லவேண்டும்.
“தலநாள்ல பொறந்த புள்ளைய இப்படி எந்த வெருவாக்கட்ட பயலோ மறிச்சுக்கிட்டு அடிச்சுருக்கானே”அம்மா புலம்பிக்கொண்டிருக்க எரிச்சலில் வெளியே வந்த எனக்கு ஏனோ நீலமாமாவைத்தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
“பழனின்னா... அந்தப் பூலிங்காபுரத்துப்பய தங்கத்தொர தம்பிதான மருமனே? அவன் அண்ணன்காரனப் போல இவனும் கேம்பேரி நாயா வந்து வாச்சுட்டானா?”
“உமக்கு இப்பம் எவனா இருந்தா என்ன? அவன் என்ன யானைக்கா பெறந்துருக்கான்? நீரு வாரேரா வல்லயா அதாங் இப்பம் கேள்வி”
“ஏ... என்னைய்யா பேச்சு இது? எடும் சைக்கிள, இப்பமே போவம்”
நீலமாமாவுக்குப் பழனியை பார்த்ததும் தன்னைவிடப் பத்துவயது இளையவனை அடிப்பதற்குத்தயக்கம் வந்ததை உணர முடிந்தது. பழனியுடன் இன்னும்ரெண்டு பேர் பரக்கபரக்க முழித்தபடி இருந்தனர்.
“என்னல ஆளக் கூட்டு வந்திருக்கயோ” என்று பழனி சொன்னதும் பளார், என்று என் கன்னத்தில் ஒரு அறை விட்டார் நீலமாமா.
“என்கிட்ட என்னமோ வீராவேசமா முறுக்குன, தாயிளி இவன் ஒரு ஆளு மயிருனு பேசிக்கிட்டு இருக்கான் ஆம்பளதான நீயி? அடிலே ஓத்தாக்கூதி அவன, வருதத பாத்துக்கிடுவோம்”.
பழனி தன் வாழ்நாளில் நான் குடுத்த அடியை வாங்கியிருப்பானாயென்று தெரியவில்லை. சட்டை கிட்டையெல்லாம் கிழிஞ்சு திரும்பி வரும்போது நீலமாமா “சவாசு............... மருமனே” யென்று சொல்லிக்கொண்டு வந்தார்.
அதற்கு எப்படித் தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஊர்ப்பட்டபய நாலுபேர் முன்ன மாமாவால் அடிபட்டதும் வந்த வௌம் எல்லை தாண்டியிருந்தது. விறுவிறுவென்று போனவன் மாமாவின் கையை உதறிவிட்டு “தாயோளி! யாரலே ஆம்பளயானு கேட்ட” என்று நீலமாமா கன்னத்தோடு குடுத்த அறையில் அவர் மட்டும் இல்லை, அவர் சொல்ல கதைகேட்ட முருகமாமாவும் வெலவெலத்துப்போனார். தெசப்போக்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சாயங்காலம் வரை சுத்தியலைந்து விட்ட பிறகுதான் வீடு திரும்பினேன். அன்னைக்குச் சாயங்காலம் முருகமாமா கூடத் தயங்கியபடிதான் கேட்டார். “அவன் பெரியாளே திருப்பி அடிச்சா என்னத்துக்குல ஆவ? நீ வாட்டுல கை நீட்டுவியா?”. “ஆமா அவரு பெரிய இவரு... கத்திரிக்கோலு வச்சுருக்காரு அந்தானைக்குப் புடுக்கத் தரிச்சு விட்டுருவாரு”.
இரண்டு நாட்களுக்குப் பின்பு முருகமாமாவும், நீல மாமாவும் பெரிய மாரியம்மன் கோவில்கிட்ட உள்ள லாலா கடையில் நின்றுகொண்டு இருக்கக் கடந்து போன என்னை நீலமாமாதான் அழைத்தார். “மருமனே டீ குடிக்கீகளா”.
“இல்ல இருக்கட்டும்”
“சும்மா வாங்க மருமனே, நான் என்ன கத்திரிக்கோல இடுக்கிட்டா திரியுதன்” நீலமாமா சிரித்துவிட்டார்.
தயங்கி நான் வர, நீலமாமா என்தோளில் கையைப் போட்டுக்கொண்டு “மருமன் ஆம்பளதானலேனு சொன்னதுதான் தாமதம் தாயோளில வந்துச்சே வௌம்”
“பின்ன! மச்சானும் அக்காளும் குடுத்த ஊட்டத்துக்கு அம்புட்டுக்கூட இல்லைன்னா எப்படி” என்றபடி டீகிளாசை முருகமாமா என்னிடம் நீட்டினார். போன வாரம் வரை கூட மாமாவிடம் உருத்தாக நான் பேசிய அனைத்துக்குமே ஏதோ ஒருவகையில் அதுவே துடக்கமாக இருந்தது.
--
எடுத்த எடுப்பில் இன்னது தப்பு, இது சரியில்ல என்று அவரிடம் சிலர் மட்டும்தான் சொல்ல முடியும்.
அவரிடம் ஒரு துடியான சண்டித்தனம் உண்டு. எதிராளி பேச்சுக் கொஞ்சம் மாறினாலும் அருகில் இருப்பவர் இவர் குணமறிந்து சுதாரித்தால்தான் உண்டு. ஒரு மாயத்தில் சட்டை மடிப்பை முட்டுக்குக்கீழ் தெரச்சவிட்ட வேகத்தில் சடாரென்று அடி, துள்ளியவன் செவிட்டில் இறங்கியிருக்கும். ‘விறகுப்பேட்ட மணியரசன்’ கிட்ட நாலுவருசம் முன்ன சண்டை போட்டு ரோட்டில் உருண்டு பிறண்டபோது கூட “என்ன நெனப்புல நடமாடுதீக? என்ன அறியா புள்ளையா மாமா, சரி ஒருநாள் இல்ல ஒருநாளு சரியா வரும்னு விட, காலங்கடந்து போச்சு மாமா! அந்தச் சல்லிப்பயகிட்ட போய்க்கிட்டு சரி மல்லுக்கு நிக்கனுமா? ஒரு தரம் போல ஒரு தரம் இருக்குமா? ஏதோ ஒன்னுமாத்தி ஒன்னு நடந்து போச்சுனு வைங்க, என்னத்துக்காகும். அப்றோம் அவன மந்தைல விட்டுக்கிட்டு மிதிச்சாலும் அசிங்கம் அசிங்கந்தான மாமா” என்றதுக்கு, வேட்டியை சண்டிக்கெட்டுக் கட்டிக்கொண்டு “மருமனே என்னைக்கு இந்த வேட்டிய எடுத்துக்கெட்ட எசக்கத்து போவுதோ அன்னைக்குத்தான் உம்ம மாமன ஒருத்தன் மறிச்சு நிக்க முடியும்” யெனச் சிரித்துக் கொண்டார். அந்த மாமாதான் நாலு மாதமாக, மண்ணரிப்பு கண்ட கரையாக இளந்து போய் இருந்தார். அரிமானம் உடம்புக்கா?
காட்டில் ஆலை போட்டிருந்த அன்று கிளாசும்கையுமாக மோட்டார் ரூமின் அருகில் நீலமாமா உக்காந்திருந்தார். “என்ன வேல பாத்திக போங்க, நீங்களே இந்தச்சோலி பாத்தா ஊர் பய உள்ள வந்து ஒழப்பாம என்னீவாங்?” சடசடவென வேட்டியை எடுத்துக்கட்டியபடி பரட்டுபரட்டென்று வாயை துடைத்துக்கொண்டார். துடைப்பில் மாமாவுக்குத் தொங்குமீசை விழுந்தது.
“மாமா, உங்கள ஒன்னுங் குடிக்க வேணாங்கல நம்ம தோப்புல எங்கனக்குள்ள வேண்ணாலும் உக்காந்து உங்க மனம்போலச் சாப்புடுங்க, மாரி பயலனாலும் எளனி வெட்டித்தர அனுப்புதேன், மத்த நாள்னா கூடச் சரிங்களாம். ஆல ஓடுததுனால ஆளுக வந்துபோன மானைக்கு இருக்கும், போதாக்கொறைக்கு அந்த எழ வெடுத்தப்பய கடையும் வயலுக்கு நேர எதுத்தாப்புல வேற இருக்கா... சடக்குனு இங்கனதான் குடிக்க ஒதுங்கு வாங்க அதுனாலதாங், எதும் நெனச்சுக்கிடாதீக”
“அய்யோ, அதெல்லாம் கிடையாது மருமனே நான் பெத்த புள்ளமாரி நீங்க, நான் ஒன்னுங் நெனக்கல” என் கைகளைப் பிடித்தபடிச் சொன்னார். அவர் வார்த்தைகள் போலவே அவர் பிடியும் தளர்ந்திருந்தது. கடைசிக் கடைசியென அவர் பேசும் எந்தப் பேச்சுமே முடிவில் ஒரு விசும்பலை சுமந்திருந்தது. இன்னொரு நாள் எதையோ பேசப்போய் அங்க இங்க சுத்தி நீலமாமா இப்படிக் கொண்டு வந்துவிட்டார்.
“மருமனே, மனுசனுக்கு மொத்தம் மூணு மணியடிக்கும். முதமணி இருவது வயசுல, ரெத்தம் சூடேரி ஒடம்பும் கம்பா நிக்கும்போது நமக்கு அது தெரியாது. ரெண்டாது மணி நாப்பதுல, ஆகா! சரிதான்னு சுதாரிக்காம் பாருங்க, அவன்பாடு ஏதோ கொஞ்சந் தேவல! அதுல சுதாரிக்காத ஆளுக்கு மூணாது மணி அடிக்கும்போது என்னென்ன கழுதயெல்லாமோ வந்து நம்மள போட்டு அலக்களிக்கும். அந்த அலக்களிப்பு இல்லாதவனுக்குத்தான் நல்ல சாவுனு வச்சுக்கோங்க, ஒரு மாசமா உங்க அத்தையவே எடுத்துக்கோங்களேன் பாவம்! நேத்து என் கையப்புடிச்சுக்கிட்டு, யய்யானு ஒரே அழுக” மாமா கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார்.
பொதுவாக இப்படி எதாவது நடந்தால் முருகமாமா உள்ள விழுந்து மறிப்பார் “எப்பா...! உனக்குத்தெரியாதத ஒன்னும் நான் சொல்லப்போறதில்ல. நேரம்னு ஒன்னுஇருக்கு பாத்தியா? அது இல்லாத வேலையெல்லாம் செய்யவைக்கும், வம்பாடுபட்டு உழச்சும் ஒரு புடி கெடக்காம போன எத்தன ஆளுகல நம்ம பாத்துருக்கோம். அதுதான் கெரகக் கோளாறுக, அதுபுடிச்சு ஆட்டைல மனுசன் என்னத்துக்கு ஆவான் என்ன மாப்ள” என்று என்னைப் பார்த்தார். தலையாட்டிக் கொள்வேன்.
காட்டில் தேங்காய் உரிப்பு ஆளும் பேருமாக வேலை மும்முரமும் பேச்சும் போய்க்கொண்டிருந்தது, நீலமாமா எங்கூடத்தான் இருந்தார். அத்தைக்குப் பண்டுவம் பாக்கத் துடங்கியதில் இருந்து நடமாட்டம் சுருக்கம்தான். அத்தைக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டுவெளியே இப்படிக் கொஞ்சம் உலாத்துவார். பதிவாகக் காய் எடுக்கவரும் ராசு வண்டியை நிறுத்தி வாசப்படலை திறந்துகொண்டு உள்ளே வரும்போதே “அண்ணாச்சி அந்த வடக்குத்தெரு வாத்தியாரு தவறிப்போனாரு போல” என்றேன். ராசு மாமா இருந்ததைக் கவனித்திருக்கவில்லை. “சரி வயசான காலத்துல யார சொல்ல முடியுது” பேச்சுக்கு சொல்லிவிட்டு காய் எண்ணத் தொடங்கினேன்.
மாமா மெல்ல ராசுவிடம் சைகையில் கேட்டார். அவன் தடுமாறவும், ஊர்ஜிதப்பட்டுக்கொண்டு தலையசைத்தார்.
“மருமனே, ஒரு எட்டு போய்ட்டு வந்துருவமா?” வாத்தியார் ஊர் மாத்திப்போய்ப் பத்து வருசமிருக்கும். “அது என்னத்துக்கு மாமா மெனக்கட்டு எடுத்துக்கூட்டி அங்க போய்க்கிட்டு” தளர்ந்த குரலில் “போனதும் வந்துருவமே” என்றார். நான் மறுக்கவில்லை.
வழக்கமாகத் தோளில் துண்டை போட்டுக்கொண்டு இடதுகையைப் பின்னால் வேட்டியை தூக்கி குறுக்கோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு வலதுகையால் நாடியை தேய்த்தவண்ணம் துஸ்டி வீட்டாட்களிடம் இணக்கமாகத் தலை சாய்த்து என்ன? எப்பம்? என்று பதமாக நடத்தும் விசாரணைகளை அன்று முதல் தான் நீலமாமா நிறுத்தினார் போல, கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கைப்பிடித்து விசும்பினார். வாத்தியாருக்கு யாரோ புள்ளையில்லா கொறைக்குத் தீ மூட்ட எரியும் சடலத்தின் முன்நின்று வெகுநேரம் அழுதார்.
--
முருகமாமாவை வீட்டில் விட்டுவிட்டு, என் வீட்டுக்கு வந்தேன். என் வீட்டம்மா, “விசேஷத்துக்குச் சுகுமாரனுக்கும் அவன் வீட்டம்மாளுக்கும் சேலத் துணி எடுக்கும்போதே நெனச்சேன் அவனுக்குத் துண்டுஎடுக்காம விட்டுப்போச்சு” என்றாள். “சரி எடுத்துற வேண்டியதுதான”. “அதாங் நீங்க வரவும் கேட்டுக்கிடுவோம்னு இருந்தேன்”. “எம்மா முக்காத்துட்டு பெறாதயாவாரத்துக்கெல்லாம் கேக்கணுமா, பெரிய விசயத்துக்கெல்லாம் கேக்கது கெடயாது”. சிரித்தேன். வக்கணங் காட்டிக்கொண்டே உள்ளே சென்றவள் ஏதோ நியாபகம் வர திரும்பி வந்தாள். “சுகுமாரு வந்துச்சு விஷேசன்னு சொல்ல, அப்பறம் அவன் வீட்டம்மாளுக்கு டாக்டர் நாளைக்குத்தான் கொழந்த பிறக்க நாள் குடுத்துருக்காராம்”. “அட, அப்புடியா நல்ல விசயம்தான் நீ என்ன சொன்ன?”. “இப்புடி ஒரு காரியம் நடந்த ஒடனே ஒரு நல்லதும் நடக்கும்யா, நீங்க ஒன்னும் நெனயாதீக உங்க சின்னையா சாமியா உங்க கூடவே இருப்பாருனே”. “அதான பெரியமனுசி வேணுங்கது”. சிரித்தாள்
“மனுசன் இருந்திருந்தா சந்தோசப்பட்டு இருப்பாரு”
எனக்கு அப்போதுதான் மகள் பிறந்திருந்தாள். அவளைப் புளியங்குடியில் பார்த்துவிட்டு கணபதிவண்டியில் வந்து இறங்கும்போது, நாலு பேரோடுநீலமாமா வடக்கப் பாக்க வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். நீலமாமாவின் முகம் கொஞ்சம் அரண்டுதான் இருந்தது. உடன் முருகமாமாவும் இருந்தார் என்னையும் முருக மாமா கவனித்து இருந்தார். வரவேண்டாம் என்பதுபோலப் பஸ்ஸில் இருந்து இறங்கிய என்னிடம் சைகை காட்டியபடி நடந்தார்.
மறுநாள் இதைப்பற்றிக் கேட்கலாமா என்ற யோசனையுடன் நீலமாமாவை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்ததும் எனது ரெண்டு கைகளையும் எடுத்து அவர் மார்போடு வைத்துக்கொண்டு “மருமனே! மக பொறந்திருக்காமே”, முருகன் சொன்னான் ரொம்பச் சந்தோசம்மருமனே, அத்த கேட்டான்னா ரொம்பச் சந்தோசப்படுவா” என்றார். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
எப்போதாவது கேட்கலாம் என்று எனக்குத் தோனும் போதெல்லாம் “வந்த புதுசுல நானும் என்னமோனு நெனச்சங்க, யாரு என்ன சொல்லுதது எனக்குத் தெரியாதா என் வீட்டுக்காரியப் பத்தினு நின்னாகப் பாத்தீகளா அதுதான் முக்கியம்” என என் வீட்டுக்காரி நீலமாமாவை மெச்சுவது நினைவில் வர கேட்காமலே இருந்துவிடுவேன்.
ஒன்றரை மாதத்திற்கு முன்பு அத்தை இறந்த செய்தி எட்டும்போது நானும் மாமாவோடுதான் இருந்தேன். குடித்துக்கொண்டு இருந்த டீ கிளாசை அப்பிடியே போட்டுவிட்டு “ஏம்மா” என கதறியபடி மூட்டித் தைக்காத கேரளா பூப்போட்ட சாரம் பாதையில் அவிழ்ந்து விழும் ஓர்மை கூட இன்றி ஓடினார். அவர் வேட்டியை எடுத்துக்கொண்டு பின்னாடியே நானும் ஓடினேன்.
--
அத்தை தவறிய மறுநாள் மாமாவுக்குக் கொஞ்சம் அதிகமாகவே போயிருந்தது. நிறைந்த போதையில் ஒட்டியும், வெட்டியும் நீலமாமா “கடைசிக் கடைசியா அவளும் வாஸ்தவம்தான்னு சொன்னா” என்று எதையோ சொல்ல வரவும் “சரிய்யா, சரி...... நீ சூசுவானு இரு” முருகமாமா தட்டிவைத்தார். அதற்குப் பின்பு நீலமாமா தவறிய நாளன்று சாயங்காலம் ஒரு ஏழுமணிப்போலத் தன்னுடன் வரமுடியுமா என்று என்னைக்கேட்டார். “இப்பமெல்லாங் நீங்க குடிக்கதில்லனு தெரியும், சும்மா எங்கூட மட்டும் வாங்க”. அன்று ஆலை போட்டிருந்த போது வெரட்டியது நினைவில் வந்தது. “சரி வாங்க”. கடைக்குப் போகும்போது, “மருமனே இங்கனக்குள்ள வேண்டாம் வாங்கீட்டு மேக்க நம்ம காட்டுக்கு போயிருவோம்”. “ஆட்டும் வண்டிய எடுங்க”. “இல்ல இது இங்கனே கெடக்கட்டும் நான் உம்ம கூட வாரேன்”. “முருகமாமாவுக்கு ஒரு போனப்போட்டு மேக்க வந்திர சொல்லட்டுமா” என்று போனை எடுத்தேன். “இல்ல வேண்டாங்”. சிறுக சிறுக இருட்டு கணமேறிபடி இருக்கக் காட்டை அடைந்தோம்.
--
“அந்த மோட்டார் சுச்ச போட்டுவிடுங்க மருமனே, செத்த நேரத்துக்கு ஓடட்டும். மேலு காலு அலசிட்டுப் போவம் ஒரே வேக்காடா இருக்கு” தன் வேர்த்து உப்பெறிந்து போன சட்டையைக் கழட்டி ஒரு மூலையில் போட்டபடி மோட்டார் ரூம் திண்ணையில் ஒரு பக்கமாகச் சாய்ந்தார். தொட்டியில் கிணற்று நீர் குழாய் வழி வந்து நிறைந்து உவர் மண்ணைத் தொடவும் மண்ணும் சிறிது பொங்கி வேக்காடெடுத்தடங்கியது. மாமா ரெண்டு கிளாஸ் குடித்தார்.
“மருமனே, இந்தக் கந்தன் கதைய கேட்டீகளா?” “ம்! ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்து போனானாமே” எனக்குக் காரணம் தெரியாமலில்லை, இருந்தும் அதை இங்கு ஏதோ சொல்ல தேவை இல்லை என்று மனம் சொன்னது.
“அப்புராணிபய மாமா, என்னா தாலியோ அவன போய்க்கிட்டு” என்றேன். ஒரு வடியான சிரிப்புடன் நீலமாமா, “யாரு கந்தனா? கந்தன் புத்தி கவுட்டுக் குள்ளதான்னு வச்சுக்கோங்க! அம்புட்டுக்கிட்டான் நேரம்பாத்து பாண்டித்துரை வெட்டிட்டான்”
கண்களை இறுக்கி மூடியவாறு அடுத்தக் கிளாசைக் குடித்துவிட்டு ஒருநிமிட மௌனத்துக்குப் பின் “வடக்குத்தெரு வாத்தியார் இங்கன இருக்கைல ஒரு சங்கதி நடந்ததே நெனவிருக்கா மருமனே” அப்போது மாமாவின் கண்ணிலும் உதட்டிலும் சங்கடம் கலந்த சிரிப்பு இருந்தது.
“....................”
பின் மாமாவே “ஒரு மட்டுக்கு எங்க ஆத்தாக்காரியும் பாட்டா பாடித் தீத்தா...... அப்புடி கறி கேக்குதோ? அறுத்தா - கேக்குமா? எம்மவன் ஒரு வார்த்த உங்கிட்ட சடச்சு பேசியிருப்பான? அப்படி என்ன புடுங்குத சோலி இந்த முண்டைக்கு அந்த வாத்தியாங் வீட்டுக்குள்ள? பொழுதுக்கும் மினிக்கிக்கிட்டு பறப்பெடுத்த முண்ட,தலதலயா அடிச்சுக்கிட்டனே, மேட்டு நெலத்த வுழுவதவனுங்கெட்டான். மேனா மினுக்கிய கட்டுனவனும்கெட்டாம்னு” தெச வேற பக்கம் திரும்பவும் நான் ஏதோ சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு,
“அந்தக் கந்தன் பயல அதுக்குத்தான் வெட்டிப் புட்டானாக்கும்” என்றேன். நான் கேட்டதும்தான் இது இன்னும் சல்லையான கேள்வியெனப்பட்டது. “அவன கொன்னு என்னீய மருமனே, இல்ல அவன மட்டும் கொன்னு என்னீயங்கேன்”. உடம்பு ஒரு நொடி சிலிர்த்தடங்கியது. மரகதம் அத்தை இறந்த மறுநாள் மாமா போதையில் என்னிடம் என்ன பேசினார் என்று யோசிக்கத்தோன்றியது. “ச்ச... போச்சு” சர்வ நிச்சியமா அப்படி இருக்காது அதுவும் முட்டி ரெத்தம் வத்திய காலத்தில். சமாதானப்படுத்திக்கொண்டேன்.
“ஆனாலும் மாமா! உடம்பிறந்தவ, உடமப்பட்டவ, பெத்தவ - பெறந்தவ மேலயாச்சும் ஒரு நம்பிக்க வைக்கவேண்டாமா”. மாமா ஏதோ வாய்க்குள்ளே முனங்கியபடி தரையைப் பார்த்துக்கொண்டு சிரித்தார். பின்பு, “சரி ஏதோ ஒரு சொல் பொறுக்கமாட்டாம செய்றதுதான்” மாமா அவருடைய வழக்கமான பனாமாஸ் சிகரெட்டை பற்றவைத்து இழுத்து ஊதிவிட்டு “நான் பாண்டித்துரைய சொல்லுதேன்” என்றார்.
“உங்களவிடயா மாமா? ஒரு சொல்லு ஊராங் சொல்லீர பொறுப்பீகளா வாள்ள பாயிறமாறில்ல வருவீக”.இதை நான் ஏன் சொன்னேன்? ஒருவேளை என் உள்ளூர உள்ள ஆர்வம் அப்படிக் கேட்க வைத்ததா? உணர்வு மேலிட மனதில் உள்ளதை மாமா சொல்லிக்கேட்க உந்திய கேடுகெட்ட குறுகுறுப்புத் தவிர வேறென்ன!
மாமாவை அது பெரிய அளவில் ஒன்றும் உணர்ச்சி வசப்படுத்தவில்லை. “முருகனுக்குத் தெரியும் மருமனே” என்று மட்டும் நிதானமாகச்சொன்னார். “என்ன தெரியும்”.“ஊருக்கு மேக்கிட்டு ஒரு சோலியா போனம்னு சொல்லுவோம் பாருங்க நீருகூடத் தொயங்கட்டிக்கிட்டு சிறு புள்ளையா வாரன் வாரன்பீரு” எனக்குச் சிரிப்பு வந்தது இதைச்சொல்லும்போது மாமாவும் என்னைப்பார்த்துச் சிரிக்கத்தான் செய்தார்.
“அப்ப விவரம் தெரியாதுல்ல மாமா, நான் எந்தச்சோலினு கண்டேன், நீங்க மைனரு! தோனுத நேர மெல்லாம் பொம்பளயாளுகள தேடிப்போவீக”. மாமா வின் சிரிப்பு மெல்ல அமிழ்ந்துகொண்டிருந்தது. “மேப்படிச் சோலிக்காகத்தாங் ஒருத்திய நானும் உங்க முருக மாமனும் பாக்கப்போனம்னு வைச்சுக்கிடுங்களேன். அவள அதுக்கு அப்பறங்கூட ரெண்டோரு வட்டம் பாத்துருக்கேன், என்னைப் பாக்குதப்பெல்லாம் ஒரு வடியா சிரிப்பா, எனக்கு அப்ப வௌங்கல, ஆனா உம்ம மாமனுக்கு வௌங்கீட்டு, பாண்டித்துரையும் கொஞ்சம் யோசிச்சு இருக்கனும் மருமனே, தன் தரமென்ன தனக்கு எது ஏலும் ஏலாதுனு அவனுக்குல்லா ஓர்ம வேணும்”
மாமா தீர்மானமான பார்வையில் என்னைப் பார்த்துத் தொடர்ந்தார். “அழிகாட்டுல கூட ஏதோ ஒரு நேரம்வெள்ளாமைக்கு வழியிருக்கு. உவக்காட்டுல என்ன இருக்கு. மருமனே எத்தன தடவ வண்டல் கொண்டு வந்து கொட்டி மெத்துனாலும் தின்னு செமிச்சுட்டு உப்புப் பொறிஞ்சுபோய்த்தான் நிக்கும். கேவலம் மண்ணுதிங்க ஒடம்பு மருமனே, மனுசன் தின்னா தின்னுட்டுப் போறான்” என்று சொல்லும்போது மாமா கண்களிலும் உப்பு நீர்சுரந்தது.
“வாங்க மாமா வீட்டுக்கு போவோம்” என்று எழுந்தேன். இருக்கட்டும் மருமனே யாரு இருக்கா வீட்டுல அந்தானைக்கு நம்மல வரவேக்க, செ..... நீங்க போங்க மக என்ன காங்கலயேனு தவிச்சுக்கிட்டு கெடப்பா! பசியும் இல்ல இங்கன காத்தாடி இருக்குள்ள பேசாம இங்கனே படுத்துக்கிடுதேன். காலைல வேணும்னா இங்கிட்டாப்புள வாங்க.”
--
நேரமும் ஆச்சுதான் இன்று மூணு மணிக்கு நீல மாமாவுக்கு விஷேசம் என்று கிளம்பி நானும் அவளும் அவர் வீடு அடையும்போது மூலச்சோறு படைக்கத் தொடங்கியிருந்தனர்.
சினிமா தன்னளவில் ஒரு மொழியா அல்லது மற்ற மொழிகளுடன் ஒப்பிடப்படக்கூடிய ஒன்றா என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் ஒன்று. 1970களில் கிறிஸ்டியன் மெட்ஸ் போன்ற சினிமாவின் சீரிய விமர்சகர்கள் சசூரின் குறியியலை அடிப்படையாகக் கொண்டு மொழியியலின் கூறுகளைச் சினிமாவை ஆராய எச்சரிக்கையுடன் கையாளலாம் என்றார்கள். ஆயினும் இன்று அது சினிமாக்கோட்பாட்டு வரலாற்றில் ஒரு பழைய மைல் கல்லாக மட்டுமே திகழ்கிறது. கினேஸிஸ் எனப்படுகிற கிரேக்க மொழியில் அசைவினைச் சுட்டும் வேர்ச்சொல்லிலிருந்து தனது பெயரை அடைந்த சினிமா அசைவையும் அதன் எதிர்மறையான நிச்சலனத்தையும் பதிவு செய்வதைத் தனது தொழில்நுட்பம் சார்ந்த பிரத்யேக இயல்பாகக் கொண்டுள்ளது. திரைமொழி என்ற பதத்தைவிடச் சினிமொழி என்பது சினிமாவின் கினெஸிஸ் அசைவு சார்ந்த இயல்புக்குத் தகுந்ததாக இருக்கிறது. ஆயினும் சினிமா என்பது ஒரு மொழிதான் என்கிற சிந்தனையை நாம் கேள்விக்கு உள்ளாக்கும்போது அதன் பிரத்தியேகத் தன்மையான அசைவைக் குறிக்கச் சினிமா என்ற சொல்லே போதுமானதாக இருக்கிறது. அந்த ரீதியில் சிந்திக்கும்போது மொழிபெயர்ப்பின்போது அதில் ஈடுபட்டுள்ள கலைஞனின் படைப்புத்திறனை முன்னிறுத்த நாம் மொழியாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதைப் போலத் தழுவலின் அடியில் மறைந்துள்ள சினிமாக் கலைஞர்களின் ஆக்க சக்தியை அங்கீகரிக்கச் சினிமாக்கம் என்ற சொல் நமக்கு உதவலாம்.
சினிமாவின் மையக் கூறான அடாப்டேஷனை தழுவல் என்ற சொல் முற்றிலுமாக விளக்கக்கூடியதாக இல்லை என்றே சொல்லவேண்டும். தழுவல் என்பது வெளியிலிருந்து ஒரு இலக்கியப் படைப்பையோ நாடகத்தையோ தழுவி சினிமாவை உருவாக்குவதைக் குறிக்கிறது. ஆயினும் சினிமாவிலுள்ள இலக்கியத் தழுவல்களைப் பற்றியுள்ள சொல்லாடல்களைப்பற்றிச் சிந்திப்போமேயானால் அது மூலப்பிரதிக்கு நம்பகமானதாக இருக்கிறதா என்ற அளவீடை வைத்துக்கொண்டு அணுகுவதே சினிமாவின் ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. 1930களில் கர்னாடகம் என்ற பெயரில் ஆனந்தவிகடனில் விமர்சனங்கள் எழுதிய கல்கி 1933ல் பிரகலாத சரித்திரம்(1931) என்ற பெயரில் வெளியிடப்பட்ட பேசாமொழிப் படத்தைப் பற்றி எழுதுகிறார். அப்படம் அந்தக் காலத்தில் சினிமா தயாரிப்பில் முன்னணியிலிருந்த கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. இந்திய சினிமாவின் ஆரம்பக் காலகட்டங்களில் புராணம் மற்றும் நாட்டார் கதைகளும் நாடகங்களுமே முதன்மை மூலப்பொருட்களாக இருந்தன. ஆதலால் “ஆடல் பாடல்” என்ற பகுதியில் கல்கி எழுதிய விமர்சனங்களும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களையே முக்கியமாக விவாதிப்பதைக் காணலாம். அவரது தேர்ந்த படங்களின் பட்டியலிலும் பக்த குசேலர், பாமா விஜயம், சீதா கல்யாணம் ஆகியவை உள்ளது. பாதுகா பட்டாபிஷேகத்தை அதன் திரைக்கதை கருதி புகழும் கல்கி, ரத்னாவளி என்ற சமஸ்கிருத நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை விமர்சிக்கிறார்.
அத்தகைய சூழலில்தான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதி ராஜா சாண்டோ இயக்கிய மேனகா (1935) என்ற சமூகப்படம் தமிழ் நாவலொன்றில் இருந்து வடிவமைக்கப்பட்ட சமூகப்படமாக உருக்கொண்டது. அதற்கு முன்னரே டி.கே.எஸ் சகோதரர்கள் மேனகாவை வெற்றிகரமான நாடகமாக அரங்கேற்றியிருந்தார்கள். மேனகாவிலிருந்து கடந்த 77 வருடங்களாகத் தமிழின் பரப்பிய கலாச்சாரத்தின் உருவத்திருமேனியான கல்கி மற்றும் சிறு பத்திரிக்கைச் சூழலில் அதிகம் அறியப்பட்டிருக்கும் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் முதற்கொண்டு, இவ்விரண்டுக்கும் ஊடாகப் பயணித்த சுஜாதா போன்ற இலக்கியகர்த்தாக்களை உள்ளடக்கிய ஒரு நெடும் பயணம் தமிழ் சினிமாவினுடையது. ஆயினும் இலக்கியத்துக்கும் சினிமாவிற்குமான இடைவெளி தமிழில் அதிகமாக உள்ளது என்ற விமர்சனம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒன்று. இந்த விமர்சனம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமானதல்ல, அது உலகளாவியது. ஆயினும் விமர்சனங்கள் பொதுவாக இலக்கியத்தைத் தழுவியதில் இருக்கும் திருப்தியின்மையைப் பற்றியது. நாம் அந்தச் சொல்லாடலைச் சற்றுத் தியானிப்போம்.
இலக்கியத்தைத் தழுவிய சினிமாவைப் பற்றிச் சிந்தித்த ஆதி கோட்பாட்டாளர்களில் ஆந்த்ரே பாஜானும் (Andre Bazin) ஜியார்ஜ் ப்ளுஸ்டோனும் (George Blue stone) முக்கியமானவர்கள். இலக்கியத்தை என்றும் மேலிடத்தில் வைத்துக்கொண்டாடிய பாஜானுக்கு இலக்கியத்தி லிருந்து நேரடியாக உருக்கொள்ளும் படங்களின் மீது அக்கறையிருந்தது எதிர்பார்க்கக் கூடியதே. 1950ல் “(In defence of mixed Media (Bazin, Andre. “In Defense of Mixed Media.” What is Cinema? ed. and trans. Hugh Gray. Vol. I. Berkeley: University of California Press, 1967: 53-75.)” என்ற தனது கட்டுரையில் பாஜான் நாவலுக்கான தனது சிலாகிப்பை தெளிவாக்குகிறார். நாவல் என்கிற கலைவடிவத்தை வயதில் மூத்ததினால் அது தனது லயத்தையும் சமனையும் சினிமாவைவிட அதிகம் எட்டியிருந்த கலைவெளிப்பாடாக எண்ணிய பாஜான், இலக்கியத்தைத் தழுவி சினிமாவை உருவாக்கும்பொழுது தனது உன்னதக் கலையுருவை எட்ட சினிமாவை இலக்கியம் எத்தனிக்கிறது என்று கூறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் யதார்த்த நாவல்கள் அடைந்திருந்த உருவ - உள்ளடக்கம் சார்ந்த செய்நுட்ப மற்றும் அழகியல் தேர்ச்சி பாஜானைப் பாதித்திருந்தது புரிந்து கொள்ளக் கூடியதே.
பால்ஜாக்கினால் ப்ரான்சில் 19-ம் நூற்றாண்டில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட நாவலின் யதார்த்தத் தன்மை அங்குள்ள அறிவுஜீவிகளை இன்று வரை உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாப்பசானும் எமில் ஜோலாவும் யதார்த்த போதத்தைச் சிறுகதைக்கும் நாவலுக்கும் ஏற்ற அழகியலாகச் சிந்திப்பதற்கு வழிவகுத்தார்கள். துவக்கம், முரண், முடிவு என்ற புனைவுமிகுந்த சட்டகத்திற்குள் யதார்த்த வாழ்வின் மிக இயல்பான நொடிகளின் மிகையில்லாத சித்தரிப்பு அன்றைய இலக்கிய விமர்சகர்களையும் ஆர்வலர்களையும் மனம்லயிக்கச் செய்ததில் ஆச்சரியமேதுமில்லை. யதார்த்த அழகியலின் வீச்சை மற்றொரு எல்லையில் தால்ஸ்தாயும், தஸ்தாயெவ்ஸ்கியும், செகாவும், துர்கனேவும் விஸ்தரித்துக்கொண்டிருந்தார்கள். வரலாற்றையும் அறம் சார்ந்த சிக்கல்களையும் விவாதிக்க வாழ்வின் இயல்பான தருணங்களைத் தங்கள் புனைவுக் கதாபாத்திரங்களின் வாயிலாகக் கட்டமைத்தார்கள். அக்கதாபாத்திரங்களின் எதிர்வினை இன்றளவும் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இந்த ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அன்னா கரினீனாவின் (தொடர்) மறு ஆக்கமே சாட்சி.
தஸ்தாயெவ்ஸ்கியில் புற உலக யதார்த்தம் அகவுலக உணர்வுகளின் படிமங்களாகப் படர்வது பாஜானின் சீடர்களான பிரஞ்சு புதிய அலை சினிமாவின் வித்தகர்களான கோதார், த்ரூபோ, ஷாப்ரால், ரோமர், மற்றும் ரிவத்தின் உளவியல் யதார்த்த அழகியலுக்கு வழி வகுத்தது. பாஜானின் சினிமா விமர்சனங்களின் வீச்சு ஆவணப்பட அழகியலான யதார்த்தத்தை அப்படியே சட்டகப்படுத்துவதிலிருந்து யதார்த்த அழகியலை புனைவுலகின் அடிப்படைக் கூறாகக் கொண்ட மேலை நாவல்கள் மற்றும் செவ்வியல் ஹாலிவுட் சினிமாவரை பாய்வதைக் காணலாம். பாஜானின் இப்பாய்ச்சலுக்கு ஊடாக “உயர்ந்த” நிலையிலிருக்கும் இலக்கியத்துக்கு இணையான “தாழ்ந்த” சினிமாவின் சாத்தியப்பாடுகளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும், சினிமாவின் யதார்த்த அழகியலில் பொதிந்திருக்கும் அதன் மீட்சியைப் பற்றிய நம்பிக்கையும் சுடர்விடுவதையும் காணலாம்.
பாஜானின் கட்டுரைக்குப் பிறகு 1957ல், ஏழு வருடங்கள் கழித்து, இன்றளவும் இலக்கிய - சினிமா தழுவல் கோட்பாடுகளின் அடிப்படை பிரதியாக எண்ணப்படும் ஜியார்ஜ் ப்ளுஸ்டோனின் “Novels into Film/ நாவல்ஸ் இன்டு பிலிம் (Bluestone, George. Novels in Film: The Metamorphosis of Fiction into Cinema. Berkeley: University of California Press, 1957),” வெளிவந்தது. ப்ளுஸ்டோனின் புத்தகத்தைப் பாஜானின் இலக்கியத்தைப் போலச் சினிமாவும் சமனுக்காக முயலவேண்டும் என்ற கருத்தாக்கத்திற்கு எதிர்வினையாகக் கருதலாம். ப்ளுஸ்டோனின் சிந்தனையில் இலக்கியமும், சினிமாவும் தங்கள் அடிப்படை இயல்பில் மாறுபட்ட கலை வடிவங்கள். ஒரு வரலாற்று நிகழ்வும் அதனைக் காட்சிப் படுத்தும் ஓவியமும் வித்தியாசமாக இருப்பதைப்போல. ப்ளுஸ்டோன் நாவல் மற்றும் சினிமா இரண்டுக்குமான குறைபாடுகளைப் பற்றிப் பேசுகிறார். நாவல் புறவுலகைக் கொண்டு நமது பிரக்ஞையின் வெவ்வேறு நிலைகளைத் தொட்டு வெளியுலகுக்கு நிகரான உள்ளுலகை கட்டமைப்பதில் வல்லது. சினிமா அவதானிப்பின் மூலம் யதார்த்தத்தைத் தனது கருப்பொருளாகக் கொள்வதில் இணையற்றது. லாரா யு. மார்க்ஸ் போன்ற intercultural cinema/ பண்பாட்டிடைச் சினிமாவைப் பற்றிய புலன்சார்ந்த புரிதலுக்கு ழில் தெலூசின் சினிமா தத்துவம் மூலம் வழிகோலும் சமீபத்திய சினிமா சிந்தனை யாளர்கள் (பார்க்க: Marks, Laura U. The Skin of the Film : Intercultural Cinema, Embodiment, and the Senses. Durham and London: Duke University Press, 2000) ப்ளுஸ்டோனின் சினிமா சார்ந்த பிரக்ஞை பற்றிய சிந்தனையைக் காலாவதியாக்கிவிட்ட போதிலும், இலக்கிய - சினிமா தழுவல் கோட்பாட்டிற்கு அவரது பங்களிப்பு முக்கியமானது. தெரிதிய நோக்கில் உயர்ந்த இலக்கியம்/தாழ்ந்த சினிமா என்ற இருமை எதிர்வை ஐம்பதுகளிலேயே ப்ளுஸ்டோன் தகர்த்தெறிந்தது முக்கியமானது. சினிமாவின் கதையாடலின் கால அவகாசத்தைச் சுருக்கியமைப்பதில் உள்ள கட்டாயம் பொழிப்புரையாகக் கதையை மாற்றினாலும் அது தனது மொழியையும் அழகியலையும் கொண்டு எப்படி விரிகிறது என்று வுதரிங் ஐட்ஸ், ப்ரைட் அண்ட் ப்ரெஜுடிஸ், த க்ரேப்ஸ் ஆப் வ்ராத், மற்றும் மதாம் புவாரி போன்ற படங்களை அலசி விவாதிக்கும் ப்ளுஸ்டோன் இன்றும் பிலிம் அடாப்டேஷன் கோட்பாட்டின் ஆதாரமாக இருப்பது நியாயமானதே.
அதன்பின் சினிமா - இலக்கியத் தழுவல் சொல்லாடல் மூன்று வகையறாவை அடிப்படையாக வைத்து முன்னேறுவதைக் காணலாம். எளிமையாகக் கூறுவதெனில் 1. மூல இலக்கியம்/ நாவலுக்கு முற்றிலும் விசுவாசமான, அதையொத்த தழுவல். 2. மூல இலக்கியம்/ நாவலின் முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய ஆனால் சுயாதீனத் தழுவல் மற்றும் 3. மூல இலக்கியம். நாவலின் ஆன்மாவை பிரதிபலிக்கும் (ஆயினும்) முற்றிலும் வேறான கதையாடலைக்கொண்ட தழுவல். பாஜானின் கோட்பாட்டுலக நவீன குரலும், பாஜானை மீள் வாசித்துப் பல்கலைசூழலில் பாஜானின் சிந்தனைகள் மூலம் சினிமா சொல்லாடல்களின் பரிமாணங்களை விஸ்தரிக்கச் செய்தவருமான டட்லீ ஆண்ட்ரூ தனது கான்சப்ட்ஸ் இன் பிலிம் தியரியில் (Andrew, Dudley. Concepts in Film Theory, Oxford, New York: Oxford University Press, 1984) இவ்வகை மூன்று பிரிவுகளை இலக்கியத் தழுவல்களில் காண்கிறார்: முழுவதும் நம்பகமான தழுவல், நடுவில் சினிமாவிற்கும் இலக்கியத்துக்குமான குறியியலைமையமாகக் கொண்ட (இலக்கிய/ ஒளி - ஒலிக்குறிகளின்) சந்தியில் நிகழும் தழுவல், மற்றும் முழுவதும் இரவலின் அடிப்படையில் (இலக்கியமும் சினிமாவும் வெவ்வேறாகக் கட்டமைக்கப்பட்டு) நிகழும் தழுவல். ஆண்ட்ரூவின் கூற்று பல சினிமா விமர்சகர்கள் மற்றும் கோட்பாட்டாளர்களின் சிந்தனையில் எதிரொலிப்பதைக் காணலாம்.
சினிமாவின் சுருக்கமான (பொதுவாக மூன்று மணி நேரத்திற்குள்) கால அவகாசத்தையும், தொழிற்சாலைச் சார்ந்த உற்பத்திப் பொருளாக இருப்பதினால் நுகர்வோரைத் திருப்திப்படுத்தவேண்டிய அதன் கட்டாயத்தையும் சுட்டிக்காட்டி சினிமாவின் வரையறைகள் இலக்கியத்தை விட நெருக்கமானது/ இறுக்கமானது என்று விவாதிப்பவர்கள் பலர். சினிமாவின் கால அவகாசம் நமது சகிப்புத்தன்மை சார்ந்தது என்று எதிர் வினையாற்றுபவர்களும் உளர். பெரிய நாவல்கள் பிபிசி போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களின் நெடுந்தொடர்களுக்கே ஏதுவானது. ஏனென்றால் அத்தகைய நாவல்களுக்கு மெருகேற்றும் சிறிய கதாபாத்திரங்களும் சூட்சுமமான நிகழ்வுகளும் வசனங்களும் சினிமாவில் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அழுத்தம் கொடுக்கக் காவு கொடுக்கப்படுகின்றன என்ற நியாயமான விமர்சனம் தொடர்ந்து ஒலிக்கும் ஒன்று. கதையைவிடக் கதையின் நிகழ்ச்சிக் கூறுகளில் ஆர்வம்கொண்ட சினிமா எப்படி நிகழ்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொகுத்துக்கொண்டு இலக்கியத்தின் சாரமான கதாபாத்திரங்களின் அகவயத் தன்மையை முற்றிலும் உதாசீனம் செய்து நாவலின் சாரத்தை இழக்கிறது என்ற விமர்சனம் சினிமா தொடங்கிய நாள் முதலே உண்டு.
கதையாடலை தனது முதுகெலும்பாகக் கொண்ட பெருவழி சினிமா தனக்கு முன் அத்தகைய இயல்பைக் கொண்டிருந்த இலக்கியம்/ நாவல்களின்பால் நாட்டம் கொண்டிருந்தது புரிந்துக்கொள்ளக் கூடியதே. எட்வின். எஸ். போர்டரின் “த க்ரேட் ட்ரெயின் ராப்பரி (1903)” நாடகாசிரியர் ஸ்காட் மார்பிளின் நாடகத்தைத் தழுவி சினிமாவின் சரித்திரத்தில் தனது திரைக்கதைக்காக அழியாப் புகழ் அடைந்துள்ளது. இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளைத் தொகுப்பின் மூலம் இணைத்தது உட்பட சினிமொழியின் பல கூறுகளைப் பரிட்சித்துப் பார்த்ததினாலும் கூட அது காலப்போக்கில் அத்தகையதொரு புகழை அடைந்தது. ஆனால் அதற்கு மூன்று வருட முன்னரே முப்பது நிமிட குறும்படமாக ஷெர்லாக் ஹோம்ஸ் திரைக்கு வந்துள்ளார்: Sherlock Holmes Baffled (1900) என்ற ஒளிப்பதிவாளர் / இயக்குனர் ஆர்தர் மார்வினின் படம் 1968ல் பேப்பர் பிரிண்டாக லைப்ரரி ஆப் காங்கிரஸில் மீட்டெடுக்கப்பட்டது. அந்தக் காலத்தில் சினிமாவின் காப்புரிமைக்காக ஒவ்வொரு ப்ரேமையும் பேப்பரில் பிரிண்டாகப் போட்டு லைப்ரரி ஆப் காங்கிரஸில் பதிவு செய்யும் வழக்கமிருந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் பேப்பிள்ட் இன்று சினிமா பிரதியாக இல்லாவிட்டாலும் போட்டோப் பிரதியாக (காகித்ததில் அச்சிடப்பட்டு) கிடைப்பது ஆவணப்படுத்துவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
சமீப காலங்களில் இலக்கிய - சினிமா தழுவல் சார்ந்த கோட்பாடுகளின் அலசலின் முக்கிய வெளிப் பாடு ப்ரையன் மெக்பார்லேனின் புத்தகம்: நாவல் டு பிலிம்: அன் இன்ட்ரொடக்சன் டு த தியரி ஆப் அடாப்டேஷன் (McFarlane, Brian. Novel to Film: An Introduction to the Theory of Adaptation, Oxford: Clarendon Press, 1996). மெக்பார்லேன் தனது புத்தகத்தில் தற்சமய தழுவல் சொல்லாடலின் மையத்திலுள்ள ஒரு ஊடகத்திலிருந்து மற்றொன்றிற்குத் தழுவும்பொழுது ஏற்படும் சிக்கல் மொழிபெயர்ப்பு/ translation சார்ந்ததல்ல இட (மாற்றம்)பெயர்ப்பு/ transposition சார்ந்தது என்றசிந்தனையின் பல பரிமாணங்களை ஆய்வு செய்கிறார்.அதில் இலக்கிய/ சினிமா வேறுபாட்டைச் சொற்சார்ந்தது/ பிம்பங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வேறுபடுத்தி வாசிக்கும் அவரது முக்கியமான இடையீடாக இனன்சியேஷன் (enunciation) / விளக்கக்கூற்றைப் பற்றிய அவரது கருத்தாக்கத்தைக் கூறலாம். மொழியியலாளர் பென்வெனிஸ்டேயின் சிந்தனையின் அடிப்படையில் கதையாடலையும் விவரணையையும்/ விளக்கக்கூற்றையும் வகை பிரிக்கும்மெக்பார்லேன் (இட) மாற்றத்திற்கு ஏதுவான கதையாடலை எந்த ஒரு குறியியலுக்குள்ளும் சிக்காத கதையின் கூறுகள் எனக் கூறுகிறார். விவரணை அல்லது விளக்கக் கூற்றானது தழுவலுக்கு நுண்ணிய வழிமுறையை வேண்டி நிற்பது. எளிதில் (இட)மாற்றத்திற்கு வயப்படாதது. ஏனென்றால் அவை குறியியலின் வெளிப்பாடாகப் பரிணமித்து அர்த்தம் அடைபவை. சினிமா தனது விவரணை/ விளக்கக் கூற்றுகளுக்குக் காட்சியைச் சட்டகப்படுத்தும் விதத்திலும் மற்றும் அக்காட்சி மற்ற காட்சிகளுடன் கொண்டுள்ள உறவை கொண்டும், அதாவது மிஸென்ஸீன்/ காட்சிப்படுத்துதல் மற்றும் மோண்டாஜ் என்கிற தொகுப்பழகியல் சார்ந்தும் இயங்குகிறது. இலக்கியத்துக்கான சொற்சார்ந்த அழகியல் சினிமாவில் வெளிசார்ந்த அழகியலாகத் தழுவலில் (இட)மாற்றம் கொள்வதை மெக்பார்லேன் விவரிக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் கிங் லியரும், குரோசவாவின் ரானும்: சினிமாவில் தழுவல் என்பது மிகவும் சிக்கலானது. தவிர்க்க முடியாதது. ஜாம்பவான்களிலிருந்து ஜுஜுபிகள் வரை தன் வயப்படுத்துவது. அஞ்சலி என்கிறப் போர்வையில் காட்சிக்குக் காட்சி திருட வைப்பது. ஜேப்படியடித்த காட்சியைக்கொண்டு மன/உணர்வெழுச்சிக்கு வித்திட்டு மறுஉருவாக்கத்திற்குத் துணைபோவது. ஆதலினால் கடும் விமர்சனத்திற்கும் சில சமயங்களில் புகழ்ச்சிக்கும் வழிகோலுவது. மேற்கத்திய தழுவல் கோட்பாட்டைக் கீழை சினிமாக்கம் என்கிற கருத்தாக்கம் எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பார்ப்போம்.
ஜான் போர்டின் வெஸ்டர்ன்ஸின் ரசிகனான குரோசவா, அமெரிக்க வெஸ்டர்ன்ஸினால் உந்தப்பட்டு ஆனால் தனது ஜப்பானிய மண் சார்ந்த சமூராய் கதைகளை மையமாக வைத்து இயக்கிய படங்களில் முக்கியமானது அந்த வகையறாவில் அவரது முதல்படமான செவன் சமூராய் (1954). பின்னர் ஹாலிவுட்டில் ஜான் ஸ்டர்ஜஸினால் த மேக்னிபிகண்ட் செவன் (1960) என்று மீளுருவாக்கப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பானவர்களை (பொதுவாகப் பழிதீர்க்கும்) இலக்கிற்காக ஒன்று கூட்டும் அதன் கதையாடலின் மையக் கூறு பின்னர் இங்கு இயக்குனர் ரமெஷ் சிப்பியின் கையில் ‘ஷோலே’வாக (1975) பரிணமித்தது. வெஸ்டர்ன்ஸிலிருந்து குரோசவாவின் படம் மாறுபடுகின்றது என்றால், ஜான் ஸ்டர்ஜஸ் மீண்டும் சமூராய் பண்பாட்டோடு மேலைக் கலாச்சாரக் கூறுகளைத் தூவி பதப்படுத்துகிறார், தனது பெருவாரியான அமெரிக்க ஐரோப்பிய ரசிகர்களை மனதில் கொண்டு. ஷோலேவிலோ ஜாவேத் - அக்தர் குரோசவா, ஸ்டர்ஜிஸின் வாசத்துடன் செர்ஜியோ லியோனின் ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் த வெஸ்ட் என்ற படத்தின் கதையாடலின் சில கூறுகளையும் இந்திய சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்கார தொன்மங்களையும் நவீனமாக்கி அந்த அவியலில் தூவுகிறார்கள். இத்தகைய தழுவல்களின் தொகுப்பின் முதல் படமான குரோசவாவின் செவன் சமூராயிற்கு அகத் தூண்டுதலளித்த சமூராய் தொன்மம் ஒரு ஆவியாகப் பரிணமிக்கிறதே ஒழிய பொருண்ம உடலாகத் தன்னைத் தழுவ அனுமதிப்பதில்லை. இங்குக் கீழை நாடுகளில் இலக்கியச் சிறுகதை/ குறுநாவல்/ நாவலிலிருந்து தழுவலாக உருக்கொள்ளும் சினிமா வெகு சிலதே. பல மூலங்களிலிருந்து உருக்கொள்ளும் சினிமாக்கம்தான் அதிகம்.
செவன் சமூராயிலிருந்து மாறுபட்டு 1985ல் குரோசவா இயக்கி அவரது கடைசிக் கட்ட உருவாக்கங்களில் ஆகச்சிறந்த படமாகக் கருதப்படும் ரான் ஷேக்ஸ்பியரின் கிங்லியர் மற்றும் ஜப்பானிய பழங்கதையான மோரி மோடொனாரியின் கலவை. மோரி மோடொனாரி ஜப்பானிய நிலச்சுவான்தார்களைப் பற்றியது. குரோசவா தனக்கேயுரிய பாங்கில் கீழை மரபிற்கு ஏற்றவாறு கிங் லியரில் லியருக்கும் அவரது மூன்று பெண்களுக்குமிடையே உள்ள சிக்கலான உறவை குறுநில மன்னனாக இச்சிமான்ஜி இனத்தை வழிநடத்தும் போர்த் தலைவன் ஹிடே டோரா இச்சிமான்ஜிக்கும் அவனது மூன்று மகன்களுக்கும் நடக்கும் போராட்டமாகச் சினிமாக்கம் செய்கிறார். அவன் தனது மூன்று மகன்களுக்குத் தனது நிலத்தையும் அதிகாரத்தையும் பிரித்துக் கொடுக்குமுன் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற நல்லறிவை போதிக்க எண்ணி மோடொனாரியின் தொன்மத்திலிருந்து அம்புகள் கூட்டாக இருந்தால் அவற்றை முறிக்க முடியாது என்பதைப்பற்றி உபதேசிக்கிறான். ஹிடே டோராவின் கடைசி மகன் சாபூரோ, லியரின் கடைக் குட்டி கார்டிலியாவை ஒத்தவன், தனது தந்தையின் கூற்றை அம்புகளைத் தன் தொடையில் வைத்து முறித்து மறுதலிக்கிறான். வாழ்வியல் யதார்த்தங்களிலிலிருந்து விலகியிருக்கும் தனது தந்தையின் பேச்சுக்கு அவன் ஜால்ரா அடிக்க விரும்பவில்லை. அவருக்குப் பாசத்தின் உண்மை நிலையை உணர்த்த நினைக்கிறான். ஆனால் லியரைப் போன்ற ஹிடே டோரா உணர்ச்சி வயப்பட்டுச் சாபூரோவை நிந்தித்து விரட்டி தனது சுயநலமிக்க மற்ற இரு மகன்களின் (மற்றும் அவர்கள் குடும்பத்தின்) கையில் சிக்கி பரிதவிக்கிறான். புத்தி வரும்பொழுது சாபூரோவை இழந்து சுவாதீனத்தை இழக்கிறான். சினிமாக்கத்தின் ஆக்கபூர்வ சாத்தியங்களின் எல்லையின் குறியீடாக விளங்கும் ரான் பலவிதங்களில் நிகரில்லாமல் விளங்குகிறது. ஷேக்ஸ்பியரின் கிங் லியரின் ஆவியிலிருந்து தனது கதையாடலுக்கான மனவெழுச்சியையும் அகத்தூண்டுதலையும் குரோசவா பெற்றிருந்த போதிலும், ரானின் கதையாடல் கிங் லியரிலிருந்து வேறுபட்டது. உதாரணத்திற்கு, கிங் லியரில் லியருக்கு பின்கதை அல்லது விரிவான வரலாறு என்பது கிடையாது. குரோசவா கீழை நோக்கில் ஹிடே டோராவின் கடந்தகாலத்திலும் ஒளிபாய்ச்சுகிறார். குரோசவாவின் இத்தகைய மாற்றங்கள் இன்றளவும் இலக்கிய - சினிமா சொல்லாடல்களில் விவாதிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.
ரானின் இறுதிக்காட்சியில் பார்வையிழந்த சுருமாரு சிதைந்த தனது குடும்பக் கோட்டையின் மேல் நிற்கிறான். அவன் அங்குத் தள்ளாடி நடந்து அக்கோட்டை/மொட்டை மலை நுனியில் கால் தவறி தன்னைச் சுதாரித்துக் கொள்ளும்பொழுது அவனது சகோதரி அவன் பாதுகாப்புக்காகக் கொடுத்திருந்த அவன் கையிலுள்ள படச்சுருள் சுருண்டு விழுகிறது. அதிலுள்ள புத்தர் நுனியில் தொங்கிக்கொண்டு இருண்ட சிதிலமடந்த மீட்சிகளின் அறிகுறிகளற்ற இவ்வுலகை மௌன சாட்சியாகப் பார்வையிடுகிறார். மேலிருக்கும் சுருமாரு தன்னந்தனியாக (கை)விடப்பட்ட நவீன மனிதனின் பிரதிநிதியாக உள்ளான். மானுடம் இறைவன் அல்லது புத்தன் மற்றும் அவனது பேரன்பும் கருணையும் அற்ற உலகில் வாழ்வை எதிர்க்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும் என்ற குரோசவாவின் கூற்று அச்சூழலின் பன்முகப்பொருள்களில் ஒன்றாக ஒலிக்கின்றது. இந்தப் படிமம் கிங் லியரில் இல்லாதது: கலையின் உச்சபட்ச சாத்தியங்களை உணர்த்தி நம் கண் முன்னே அதைக் குரோசவாவின் சினிமாக்கம் மூலமாக நிகழ்த்துக்கலையாகப் பரிணமிக்கச் செய்வது. ஆம், ஒவ்வொருமுறை ரானை பார்க்கையிலும் வெவ்வேறு உணர்வாக, பொருளாக, ஆன்ம பயணமாக நம்முள் எல்லையில்லாமல் விரிந்து மானுட ஆன்மாவிற்குள் சதா கனன்றுகொண்டிருக்கும் வாழ்வின் பொருளைப் பற்றிய வேள்வித்தீக்கு அருகாமையில் நம்மை இட்டுச்செல்வது. உயர்ந்த கலைஞனின் கையில் சினிமாக்கத்தின் எல்லையில்லாச் சாத்தியங்கள் அவனது கட்டற்ற கவி மனதின் பாய்ச்சலாக உருக்கொண்டு பல கலைகளின் கலவையான சினிமாவின் ஆன்ம வாடையை நம்மை நுகரச்செய்வது. அந்தச் சினிமாவில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய அனுபவம் நிகரில்லாதது. அத்தகைய வாழ்வில் அரிதாகத் துய்க்கக்கூடிய தருணத்தை நமக்களித்த குரோசவா ரானின் மூலம் சினிமாவின் அறுதி சாத்தியங்களைத் தெளிவுறுத்துகிறார்.
பாதசாரிக் கடவையைக் கடப்பதற்கான பச்சை நிற சமிக்ஞை விளக்கு ஒளிரும்பொழுது இஸ்மத் தலையை எனது பக்கம் உயர்த்தியவளாய் “மம்மி உலகத்தில் ஒருவருக்கு இரண்டு மம்மிக்கள் உண்டா?” என்று கேட்டாள்.
வலது கையை இறுகப் பற்றிக்கொண்டு கடவையைக் கடப்பதற்கு ஆயத்தமாகிகொண்டிருந்த நான், அவளது கேள்வியால் சற்று தடுமாறியவளாய் வீதியின் அடுத்தப் பக்கத்தினை அடைந்தேன். இருப்பினும் முப்பது செக்கனில் பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்தினை அடைவது போல் அவ்வளவு சீக்கிரம் அவளது கேள்வியைக் கடந்துவிட முடியாது.
வழமையாகப் பாடசாலையிலிருந்து இஸ்மத்தை அழைத்து வரும்பொழுது லண்டனை மொய்க்கின்ற இரட்டை தட்டுப் பேருந்தில் ஏறி சுவாரஸ்யமான, அதியற்புதமான உலகின் நிலவெளிகளில் தரிசித்தபடி எங்களது உரையாடல் நகர்ந்து கொண்டிருக்கும். பறவைகளின் சிறகுகளிலும், வண்டுகளின் மெல்லிய முதுகுகளின் யானையின் தும்பிக்கைகளிலும் நாங்கள் பயணித்துக் கொண்டிருப்போம். ஏன்? எதற்கு? எப்படி? என்ற அவளது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல எனது அகராதி தயாராக இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான் சலிக்காமல் கண்களை வளைத்து கைகளை விரித்து நடித்துக் காட்டும்பொழுது அவளது பூனைக் கண்களால் சுருக்கியும் அகல விரித்தும் ரசித்தபடியே வருவாள்.
கரையை அடைவதற்கு நாங்கள் விரும்புவதேயில்லை. இவ்வாறு நிமிடங்கள் மணித்தியாலங்களாகக் கரைவதுண்டு. ஆனால் அன்று இஸ்மத் எழுப்பிய கேள்வி எனது சிந்தனையின் எல்லையைப் பரிசோதித்துப் பார்த்தது. பதில் சொல்வதற்கு அதிகத் தூரம் சுழியோட வேண்டியிருக்கும் என அக மனம் கூறியது. எஜமானின் கட்டளைக்கு அடிபணிய மறுக்கின்ற பாபரோ குதிரையைப் போல இஸ்மத்தின் கேள்வியை முதுகில் ஏற்றி சவாரி செய்யச் சற்று தயங்கினேன்.
மேலதிக தகவல்களை அவள் கூறட்டும் என்பது போல் மௌனமாக முகபாவனையை மாற்றி அவளது பக்கம் திரும்பினேன். இஸ்மத் மேலும் கூற ஆரம்பித்தாள். “டாவினின் மம்மி வீட்டில் இல்லையாம். வேறொரு வீட்டில் வசிக்கின்றாவாம்; இப்பொழுது புதியதொரு மம்மி வந்திருக்காவாம். அவனோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடும்பொழுது பந்தை நல்லா வீசுறாவாம்.
அப்போ அவனுக்கு இரண்டு மம்மிதானே” என்று கூறி முடித்தாள். “ம், இருக்கலாம்” என்ற அரைக்குறை விடையைக் கூறிக்கொண்டே வீட்டின் கதவினைத் திறந்தேன். திருப்தியற்ற அந்தப் பதிலுடன் குழந்தை உள்ளே நுழைந்தது.
டாவினும் இஸ்மத்தும் ஒரே வகுப்பினைச் சேர்ந்த நல்ல நண்பர்கள். எங்களது வீடு அமைந்துள்ள வீதிக்கு அடுத்த வீதியில் தான் டாவினின் வீடு உள்ளது. இந்த இரண்டு வீதிகளும் சந்திக்கின்ற சந்தியில்தான் பாடசாலை அமைந்துள்ளது. இஸ்மத் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் சில வேளைகளில் டாவினும் அவனது பெற்றோருடன் வருவான். அந்த வீதியில் நீல நிற யுனிபோர்ம் அணிந்து மாணவர்கள் செல்லும் காட்சி ஒரு சிறிய நதியைப் போன்று இருக்கும். இஸ்மத்தும் டாவினும் ஒருவரையொருவர் சந்திக்கின்ற வேளையில் ஒரு புன்முறுவலுடன் “ஹலோ” கூறி எங்களது கைகளிலிருந்து விடுபட்டு இருவரும் இணைந்து பாடசாலையை நோக்கி விரையும்பொழுது வெள்ளை நிற காலுறையும் கறுப்பு நிற பூட்சும் அணிந்த அவர்களது கால்கள் எழுப்புகின்ற சத்தமானது நதியில் துடுப்பு போடும் சத்தம் போலக் கேட்கும்.
அப்படியொரு நாளில்தான் டாவினின் பெற்றோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. ஆரம்பத்தில் புன்னகை மட்டுமே எங்களது உடல்மொழியாக இருந்து வந்தது. ஒரு நாள் அவனது தாய் வெலன்டினா, டாவின் நேற்று இரவு தூங்குமுன் இஸ்மத்தைப் பற்றிச் சிலாகித்துக் கூறினான் என்று கூறும்பொழுதே “இஸ்மத்தும் டாவினைப் பற்றி அடிக்கடி கதைப்பாள்”, என்றேன். பச்சை நிறமாய்ச் செழித்துச் சடைத்த ஓக் மர இழைகளில் வெயில் இழைந்து கொண்டிருக்கும் இளவேனில் காலங்களில் இஸ்மத்தினையும் காலித்தினையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு நான் போவதுண்டு. சில வேளைகளில் வெலன்டினா டாவினையும் அவனது தங்கையான சலோமியையும் அழைத்து வருவாள். குழந்தைகள் எல்லோரும் ஊஞ்சலையும் சறுக்கிகளையும் ஆக்கிரமித்துக்கொள்ள எங்கள் இருவரினதும் உரையாடல் மெதுவாக நகரும்.
ஒரு நாள் டாவினின் ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாட எங்கள் குடும்பத்தினை டாவினின் வீட்டிற்கு அழைத்திருந்தார்கள். டாவினுக்குப் பிடித்த சாலி அன்ட் லோலா புத்தகப் பொதியுடன் அவனது வீட்டிற்குச் சென்றோம். வெலன்டினா கடும் சிவப்பு நிற வெல்வெட்டில் குடை போன்று விரியும் நீள் சட்டையுடன் எங்களை வரவேற்றாள். கொலம்பிய நாட்டார் பாடலொன்று கோடியனின் துள்ளலான இசையுடன் வீடு முழுக்க மோதிக்கொண்டிருந்தது. “டாவினின் தந்தை எங்கே?” என்ற எனது கேள்வி முடிய முந்தியே “இதோ நான் லசண்யா செய்து கொண்டிருக்கின்றேன்” என்ற குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது.
வரவேற்பறையின் பக்கம் திரும்புகையில் மூன்று கதவுகளைக் கொண்ட புத்தக அலமாரிதான் முதன்முதலாகக் கண்களில் தெரிந்தது. என்னையறியாமலேயே புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் உள்ள சோபாவில் தொப்பென்று இருந்துகொண்டேன். பின்னர் அலமாரியை நோக்கி கூர்ந்து அவதானித்தபொழுது கார்ஸியா மார்க்ஸின் புத்தகங்கள் தெளிவாக விளங்கின. “நீ நல்லா வாசிப்பாயா?” என்று வெலன்டினாவினை நோக்கி கேட்கும் பொழுதுதான் அவள் லண்டன் ஸோஆஸ் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறையில் முதுகலை மாணவி என்பது தெரிந்தது.
மெல்லிய அந்த நிலவொளியின் வெளிச்சம் உடலில் பட்டுத் தெரித்துக்கொண்டிருக்கையில் கார்ஸியா மார்க்ஸின் நாவலான Love in the time of Cholera எங்களது உரையாடலை விழுங்கிக்கொண்டிருந்தது. புளோரின்டினோ - பேர்மினாவின் காதல் கதையில் மனது கிறங்கிவிட்டது. சிறிது நேரத்தில் வெலன்டினா, ஜின் குவளையுடன் சோபாவில் உட்கார்ந்து சாளரத்தின் வழியாகத் தென்பட்டதொரு புள்ளியில் உன்னித்தவளாக, முதுகினை நேராக நிமிர்த்தி முழங்கால்களை இணைத்துக் கட்டி தனது கடந்தகாலக் காதல் கதைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.
நான் பருகிக்கொண்டிருந்த கரமல் சுவை ததும்பும் சூடான கொலம்பியக் கோப்பியிலிருந்து எழுந்த ஆவியில் அவளது காதலின் ஆன்மா மேலெழுந்துகொண்டிருந்தது. இடையிடையே ஜேம்சன் அவளது ஜின் கோப்பையை நிறைத்துக்கொண்டும் பாடல்கள் நிறைந்த ஒலித்தட்டு இழையை மாற்றிக்கொண்டும் இருந்தான். அவர்கள் இருவரும் காற்றில் புரளும் இலைகள் போல மிக இயல்பாக இருந்தார்கள். வெலன்டினா ஏதோவொரு ஞாபகத்தினை வரவழைத்தவளாய் “உன்னுடைய காதல் அனுபவங்கள்?”, என்று என்னை நோக்கிய அவளது கேள்வி முடிய முந்தியே கண்களினை சுருக்கியவாறே விரல்களைப் பிணைத்துக்கொண்டு “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”, என்ற ஒரு பச்சைப் பொய்யை கூறும் பொழுது பக்கத்தில் இருந்த எனது கணவரின் நெஞ்சு நிமிர்ந்தது.
பிந்தியதொரு கோடை கால வெயிலில் அவளது பல்கலைக்கழக நூலகக் கட்டடத்திற்குப் பின்னால் உள்ள பரந்து விரிந்த பசுமையான புல்வெளியின் நடுவில் நின்றுகொண்டிருந்த செர்ரி மரத்தின் கீழே நாங்கள் அமர்ந்து எனது காதலின் இனிப்பான உணர்வுகளின் மெல்லிய தடங்களை ஒன்று விடாமல் அவளிடம் பகிர்ந்து கொண்டதை அன்று வேற்று கிரகவாசியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்த அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சூரியன் கிட்டத்தட்ட அஸ்தமித்திருந்தது. வானம், அந்திப்பொழுதின் வருகையால் தெளிவற்றிருந்தது. வெலன்டினாவிற்கு என்ன நடந்தது? எங்கே போனாள்? இஸ்மத் சொல்வதெல்லாம் உண்மைதானா? கோடை கால விடுமுறையில் இலங்கை சென்று வருவதற்குள் இவ்வளவு மாற்றங்களா? அம்மா இல்லாது டாவினும் சலோமியும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? எனக்குள் நானே கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தேன். தொலைபேசியை எடுத்து வெலன்டினாவை அழைத்தேன். அவளிடமிருந்து பதில் வரவில்லை. ‘ஹாய்! நான் பிஸியாக இருக்கின்றேன். நீ நலமா? இலங்கையிலிருந்து வந்துவிட்டாயா? வருகின்ற திங்கட்கிழமை குழந்தைகளைப் பார்க்க வருவேன். அப்பொழுது உன்னைச் சந்திக்கின்றேன்’, என்று சர்வ சாதரணமாக அவளிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. ‘சரி’ என்று மட்டும் மறுமொழி அனுப்பிவிட்டு முன்னாலிருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன்.
பாடசாலையிலிருந்து வந்த இஸ்மத் அன்றைய நாளின் நிகழ்வுகளை ஒப்புவிப்பதற்காக வழமையைப் போல் நீள்சாய்விருக்கையில் இருந்த அவளது தந்தையின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள். “வாப்பா டாவினுக்குப் புதிதாக ஒரு மம்மி வந்திருப்பதாக ஸ்கூலில் கூறினான். அப்படியென்றால் அவனுக்கு இரண்டு மம்மிக்கள் உண்டு தானே?”, என்று விபரிக்கத் தொடங்கினாள். எனது கணவருக்கு அவளது கேள்வி அதிர்ச்சியை அளித்தது போல் காணப்பட்டார். பின்னர் அவருடைய நிலபிரபுத்துவக் கண்கள், முன்னால் இருந்த என்னைப் பார்த்து எச்சரிக்கை செய்வது போல் பிரகாசித்தன. சற்று நேரத்தில் அவரது மனதில் வேறு ஏதோவொரு சிந்தனை வந்து விட்டது. குழந்தை சொல்லியதை முழுமையாகக் காதில் உள்வாங்கிக் கொள்ளாதவர் போல “ம்” என்றொரு வார்த்தையுடன் மேல் மாடிக்குச் சென்றுவிட்டார். பாவம் குழந்தை, அந்தச் சின்னஞ்சிறு மூளைக்குள் குழப்பம் ஆழமாக இழையோடிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் பின்னர்க் கால்களை மடித்து நிலத்தில் அமர்ந்துகொண்டு அவளது இளைய சகோதரனான காலித்துடன் சேர்ந்து சித்திரம் வரையத் தொடங்கினாள். இருவருக்கும் எதை வரைவதென்ற கலந்துரையாடல் நடந்தது. இறுதியில் தீர்மானித்ததிற்கிணங்க இருவரும் சேர்ந்து வீடு வரைய ஆரம்பித்தார்கள். இஸ்மத் வீட்டினை வரைந்தாள். காலித் வீட்டிற்குப் பின்னால் அழகியதொரு வானவில்லை வரைந்துகொண்டிருந்தான். அவனுக்கு ஒத்தாசையாகக் கலர் பெட்டியிலிருந்த வர்ணப் பென்சில் ஒவ்வொன்றையும் இஸ்மத் எடுத்துக் கொடுத்தபடியே “காலித், உலகத்தில் சிலருக்கு இரண்டு மம்மிக்கள் இருக்கின்றார்கள் என்பது உனக்குத் தெரியுமா?”, என்று கதையைத் தொடங்கினாள்.
வானவில்லிற்கு நிறம் தீட்டிக்கொண்டிருந்த காலித் இஸ்மத்தின் பக்கம் திரும்பி “ஓ! அப்படியா?”, என்ற போது அவனது கண்கள் பக்கத்துப் பக்கத்தில் தொடாமல் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் போல ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.
காலையில் இஸ்மத்தினைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்பொழுது டாவின் தனது ஸ்கூட்டரில் முன்னால் நகர்ந்து செல்ல சலோமியின் கைகளைப் பற்றிக்கொண்டு ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட வெலன்டினாவின் தோற்றத்தினை ஒத்திருந்தாள். டாவினும் சலோமியும் எப்பொழுதும் போலவே எந்த வித மாற்றமுமின்றி அப்பெண்ணுடன் சரளமாக உரையாடியபடி வந்துகொண்டிருந்தார்கள். ஜேம்சன் அப்பெண்ணின் வலது கையைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். மனதிற்குள் ஏதோவொரு வெற்றிடம் தோன்றுவது போலிருந்தது. உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன். பின்னர் அவர்களைக் கவனிக்காதது போல் பாசாங்கு செய்து கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த இஸ்மத்தினை நோக்கினேன். ஜேம்சன் என்னைக் கண்டதும் பெயரைக் கூறி அழைத்தான். நான் கேட்காதது போல் நடையை வேகமாக்கினேன். மீண்டும் இரண்டாவது தடவையும் அழைத்தான். இனி நடிக்க முடியாது என்பதால் திரும்பிப் பார்த்து “ஹலோ”, என்று கூறினேன். “ஹாய்! விடுமுறையெல்லாம் எப்படி? இவ அமண்டா”, என்று அந்தப் பெண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினான்.
“டாவின் இஸ்மத்துடன் சேர்ந்து கேக் செய்ய ஆசைப்படுகிறான். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது அவளை வீட்டிற்குக் கூட்டி வரமுடியுமா?”, என்று முகத்தில் எந்தவொரு மாற்றமுமில்லாமல் ஜேம்சன் பேசிக் கொண்டிருந்தான். அவனுடன் என்னால் கோர்வையாகப் பேச முடியவில்லை. “சரி, பார்க்கலாம்”, என்று மட்டும் கூறினேன்.
வெலன்டினாவினை சந்திப்பதற்காக ஈஸ்ட்ஹாம் பிரதான வீதியில் அமைந்திருந்த இத்தாலி உணவகத்திற்குள் நுழைந்தேன். சமையலறைக்குள் இருந்த லோரா ஜன்னலின் வழியாகக் கைகளை அசைத்தாள்.
வெலன்டினாதான் இந்த உணவகத்தினை எனக்கு அறிமுகப்படுத்தினாள். இங்கே நிர்வாகி, சமையல்காரர் எல்லாமே லோராதான். லோராவின் மகள் கார்லோவும் வெலன்டினாவும் பல்கலைக்கழக நண்பிகள்.லோராவிடம் பிஸ்ஸா செய்வதற்கெனப் பிரத்யேகமான விறகு அடுப்பு உண்டு. அதுதான் இந்த உணவகத்தின் தனித்துவமும். என்னைப் போலவே வெலன்டினாவும் பிஸ்ஸா பிரியை. வார இறுதி நாட்களில் லோராவின் உணவகத்தில் இருவரும் அமர்ந்துகொண்டு பிஸ்ஸாவினை ருசித்தபடியே ஓரான் பார்மூக்கின் ஸ்தான்பூல்,டொனி மொரீசனின் நியூயார்க், சிமந்தா அடிச்சியின் சூக்கா என உலகின் பல இடங்களிற்கும் சென்று வருவோம். எங்களது உரையாடலுக்கேற்ப இடையிடையே லோரா இசையினை மாற்றிக்கொண்டிருப்பாள். இறுதியில் அவளது இத்தாலிய நடனத்துடன் நாங்களும் இணைந்து கொள்வோம். வழமையைப் போன்ற மனநிலை அன்று என்னிடமில்லை. உணவகத்திற்குள் கடலின் அலைகள் மேலெழுந்து அடங்குவது போல் இத்தாலிய இசையொன்று என்னை அணைத்துக்கொள்ள முயன்று கொண்டிருந்தது வெலன்டினாவின் முகத்தினை எப்படி எதிர்கொள்வது, எப்படி அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவது என்பதை யோசிக்கையில் என்னுடைய உதடுகள் வறண்டு, இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. தலையைக் குனிந்துகொண்டே குடித்துக் கொண்டிருக்கும் சூடான லெடே கோப்பியை வெறித்துப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தேன். வெலன்டினாவின் நிழல் முன்னால் நின்றது. என்றும் போலக் கண்டவுடனேயே கட்டி அணைத்துக்கொண்டாள். பிடியிலிருந்து விலகியவுடன் நேருக்கு நேர் நோக்கினேன். அவளது திடமான உடலும் செழிப்பான கன்னங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அவள் முகத்தில் அமைதியின்மை மற்றும் அசௌகரியத்தின் சாயல் எதுவுமில்லை. “ஹாய்! எப்படி? என்னிடம் ஏன் எதுவுமே கூறாமல் சென்றுவிட்டாய்? என்ன பிரச்சினை?” என்று உடனே விடயத்திற்குள் சென்றுவிட்டேன்.
ஒரு கணம் அமைதியானாள். பின்னர் சீஸூம் ஒலிவ்வும் கலந்த பிஸ்ஸாவினை தருமாறு லோராவிடம் கூறிவிட்டு தனது கதையைக் கூற ஆரம்பித்தாள். “நானும் ஜேம்சனும் ஒன்றாகச் சேர்ந்து வாழத்தொடங்கிப் பதினைந்து வருடங்களாகின்றன. கொலம்பியா பல்கலைக்கழகமொன்றில் நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் அவனும் நானும் காதலிக்கத் தொடங்கினோம். அவனது காதலை மதித்து நீண்டதொரு வாழ்க்கையை அவனுடன் வாழ விரும்பினேன். இருவரும் சேர்ந்து குழந்தைகள் வேண்டும் எனவும் முடிவு செய்தோம். எனது வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ஜேம்சன் முழு ஆதரவு வழங்கினான். ஆனால் சென்ற வருடத்தொடக்கத்தில் ஜேம்சனின் நடத்தைகளில் மாற்றம் ஏற்பட்டது. வேலை முடிந்து காலம் தாழ்த்தி வீடு வரத் தொடங்கினான். என்னுடன் எந்தவித களியாட்டங்களுக்கும் வருவதில்லை. சிறியதொரு விடயத்தினையும் பூதாகரமாக மாற்றி என்னுடன் சண்டையிட்டான். எங்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. சென்ற வருட கிறிஸ்மஸ் நாளன்று அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை என்னிடம் கூறினான். அவன் ஒலிவியாவுடன் சேர்ந்து புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கப் போவதை அறிந்தபொழுது எனது மூச்சு ஒரு கணம் நின்றுவந்தது. கடும் விரக்தியுற்றேன். என்னால் தற்காலிகமாகவேணும் பிரச்சினையிலிருந்து விடுபடமுடியவில்லை. பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு நெஞ்சுவெடிப்பது போல் அழுதுகொண்டிருந்தேன். படிப்பு விடயத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமலிருந்தது. தனிமையும் அமைதியும் கம்பளிப் போர்வை போல நாளுக்கு நாள் கனத்துக் கொண்டே வந்தது. எனினும் ஜேம்சனின் உணர்வினை நான் மதித்தேன். பின்னர் நானும் ஜேம்சனும் கலந்துரையாடினோம். சிறு மாறுதலுக்காகக் குழந்தைகளை ஜேம்சனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு மாதகால விடுமுறையில் கொலம்பியா சென்று வர தீர்மானித்தேன். ஹீத்ரோ விமான நிலையத்தில் எனது பாடசாலைக் காதலனான ஏரியனை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. இறந்தகாலத்தின் கண்களால் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த தீராக்காதல் புழுங்கிக்கொண்டிருந்த மனதின் வெறுமையை இன்னுமின்னும் விசிறியது. நானும் ஏரியனும் உயர்தர வகுப்பின் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது காதலிக்கத் தொடங்கினோம். ஏரியன் எனது கிராமத்திற்கு அயல் கிராமத்தில் வசித்து வந்தான். கொலம்பிய உள்நாட்டு யுத்தத்தில் நாங்கள் இடம்பெயர்ந்த பொழுது எங்களது காதலும் காணாமல் போய்விட்டது. அதன் பிறகு நான் ஏரியனைச் சந்திக்கவேயில்லை. ஆனால் இன்று வரை எமது காதலின் சிதிலங்களை மனதில் சுமந்து வாழ்வதாகவும் பல இடங்களில் என்னைத் தேடி அலைந்ததாகவும் ஏரியன் கூறினான். நீரடியில் கிடக்கும் பொருட்களாய் எண்ணற்ற பிம்பங்கள் உள்ளுக்குள் அசைந்தன. என்னுள் எங்கோ ஒரு மூளையில் இருந்த குற்றவுணர்ச்சி வார்த்தைகளாக வெளிவரத் தொடங்கின. இருவரும் ஒன்றாக இணைந்து எங்களது கிராமங்களுக்குச் சென்றோம். பாசிமணியைப் போன்று மலையடிவாரத்தில் சிதறிக்கிடந்த கோப்பி விதைகளின் மேலே தலையைச் சாய்த்து எங்களது கடந்த கால வாழ்க்கையை இரைமீட்டோம். எனது மனதில் படிந்திருந்த துயரம் மெதுவாகக் கரைந்து சென்றது. ஏரியன் ஐந்து வருடங்களாக லண்டனில் வாழ்ந்து வருகின்றான். என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் கூறினான். ஆனால் என்னால் உடனடியாகப் பதில் கூற முடியவில்லை. சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளேன்.”
வெலன்டினா கூறி முடித்தபொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்களது உணவு மேசையில் இருந்த லெவெண்டர் வாசனை கலந்த மெழுகுவர்த்தியின் திரியினை லோரா பற்றவைத்துக் கொண்டிருந்தாள்.
“நீ துணிச்சலான பெண். நல்லதொரு முடிவினை நீ தீர்மானிக்க உன்னை வாழ்த்துகின்றேன்”, என்று வெலன்டினாவிடம் கூறி விடைபெற்றேன்.
உணவகத்திலிருந்து வெளியேறும்பொழுது மழை உடைந்து பெய்யத் தொடங்கியது. ஐந்தாவது இலக்க பஸ்ஸில் ஏறி நான்காவது தரிப்பிடத்தில் இறங்கினால் வீட்டின் முன்னால் உள்ள வீதியைச் சென்றடையலாம். ஆனால் மனதில் ஏறியிருந்த தேவையற்ற எண்ணங்களைக் கரைப்பதற்கு நான் தனிமையுடன் நடந்து செல்ல ஆசைப்பட்டேன். ஒரு கணம் இருளில் மறைந்து மழையில் கரைய விரும்பினேன். எவ்வளவு இலகுவான வாழ்க்கையைக் கடினமானதாக மாற்ற நினைத்தேன் என்பதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு நானே வெட்கப்பட்டேன். முகத்தில் விழுந்த மழைத் தூறல்களைக் கைகளால் விலத்தியபடி நடந்தேன். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்கு நானே வகுத்த விதிகள் ஒவ்வொன்றையும் இருளில் வெளித்தள்ளினேன்.
புகைமூட்டத்திலிருந்து விலகி வரும் ஒளிப்புள்ளி போல மனது தெளிந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் என்னுடைய கால்சட்டையின் பாக்கட்டில் இருந்த கையடக்கத் தொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. நடந்து போகின்ற வழியில் மரம் ஒன்றின் கீழே நின்று தொலைபேசியை வெளியே எடுத்துப்பார்த்த பொழுது வாப்பாவிடமிருந்து ஐந்து தடவைகள் அழைப்பு வந்திருந்தது. என்னவாக இருக்குமோ என்ற பதற்றத்துடன் அவர் அனுப்பியிருந்த குரல் தகவலைச் சொடுக்கினேன். “உன்னுடைய உம்மாவுடன் சேர்ந்து இனி வாழ்க்கை நடத்த முடியாது. நான் காவத்தமுனையிலிருக்கின்ற தோட்டத்திற்குப் போய் நிம்மதியாக வாழப் போகின்றேன். பிள்ளைகளாகிய நீங்கள் யாரும் எங்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முயற்சிப்பதுமில்லை. நீங்கள் யாருமே நல்லாயிருக்க மாட்டீர்கள்”, என்று வாப்பா சாபமிட்டிருந்தார்.
உம்மாவும் வாப்பாவும் முதுமையடைந்துவிட்டாலும் அவர்களுடைய சண்டை மட்டும் இளமைப் பொலிவுடனேயே இருந்து வருகின்றது. அவர்களுக்கிடையில் நடைபெறும் பிரச்சினைகளை நினைத்துப் பார்த்த பொழுது திடீரென்று ஒரு கத்தி குத்துப் போல் மனதை வலிக்கச் செய்தது. அதிகாலைச் சூரியன் உதிக்கும் பொழுதே அவர்களுடைய விவாதமும் தொடங்கிவிடும். இருவருக்குமே விட்டுக்கொடுப்பு என்பது எட்டாத்தூரம். உம்மாவும் வாப்பாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகப் பெருமையுடன் பேசிக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை காதல் என்பது வெறும் கட்டிலில் முடிவடையும் ஒரு சங்கதி. நிரந்தரமாகப் பிரிய வேண்டும் என்பதை ஒரு நாளாவது அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்படியொரு வாழ்க்கை தேவையா என்று கேட்டால் “இந்த ஆளைப் பிரிந்தால் ஊர் என்ன சொல்லும்? மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்வேன்?” இப்படியான வசனங்கள் தான் உம்மாவின் பாடுபொருளாக இன்று வரையிலும் இருந்து வருகின்றது.
ஒரு தையலையாவது தெரிந்திருந்தால் இவரை வேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்றும் சில வேளைகளில் உம்மா புலம்புவாள். யதார்த்தமும் அதுதான். வாப்பாவின் உழைப்புதான் அதிகாரத்தினைத் தீர்மானிக்கின்றது. ஆண் என்கின்ற அகங்காரம் நிறையவே அவரிடம் உண்டு. கழுவிய துணியைச் சுருட்டி முறுக்குவதுபோல் உம்மாவின் தலைமுடியினைச் சுருட்டி அடிக்கின்ற காட்சியைப் பார்த்து வளர்ந்த பிள்ளைகளாகிய நாங்கள் மூவருமே மூன்று தேசங்களில் இருப்பதைப் போலவே தான் எங்களுக்கிடையிலான உறவும் இருந்து வருகின்றது. எல்லாவற்றினையும் நினைத்துப் பார்க்கையில் இமைத்து நிறுத்தப் பார்த்த எத்தனத்தையும் மீறி வழிந்த கண்ணீர் மழை நீருடன் கலந்தது.
இஸ்மத்தின் அறையினுள் இருந்த அழுக்குத் துணிகளைத் துவைப்பதற்காகக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தேன் கையில் இருந்த புத்தகத்தினை மடித்து வைத்துவிட்டு போர்வையைச் சரி செய்தபடி தூங்குவதற்காகக் கட்டிலில் ஆயத்தமாகிக்கொண்டிருந்த அவள் என்னைக் கூர்ந்து நோக்கினாள். பின்னர் மம்மி என்பவளது வேலை எவ்வளவு கடினமானது இல்லையா மம்மி? என்று பெருமூச்சொன்றினை வெளியே தள்ளிய படி கூறினாள்.
உணர்வுகளை உள்ளே இழுக்கும் அடர் ரேகைகள் ஓடும் கண்கள் அவளுக்குள் இருந்தன. பின்னர் அவளை நெருங்கி “நிச்சயமாக, மம்மி என்பவளது வேலை கடினமானதுதான்” என்றேன்.
“டாவினுடன் இன்று பாடசாலையில் விளையாடினாயா? அவன் எப்படி இருக்கின்றான்?”, என்று கேட்டேன்.
“ஆம்” என்று தலையை அசைத்தாள் இஸ்மத். “டாவினுக்கு இன்னுமொரு டடீயும் சீக்கிரம் கிடைக்கப் போகுது. உலகத்தில் சிலருக்கு இரண்டு மம்மிக்கள் மட்டுமல்ல, இரண்டு டடீக்களும் உண்டு.” என்று கூறியபடியே இரவு விளக்கினை உயிர்ப்பித்தேன்.
இப்பொழுது பட்டாம் பூச்சியின் நிழலைப் போன்று சிறியதொரு நம்பிக்கை இஸ்மத்தின் மனதில் முளைவிட்டிருக்கக்கூடும் என்று எனது மனது கூறிக்கொண்டேயிருந்தது. அவள் கன்னத்தில் நண்டுகள் ஆற்றுமணலில் உருவாக்குவது போலக் குழிகள் தோன்ற சிரித்தாள். பின்னர் பற்றி எறிந்த அந்த மெல்லிய வெளிச்சத்தினை அவளது இமைகள் அணைத்துக்கொண்டன.
ராணிக்கு ரோகிணி நட்சத்திரம்! ஓலைக் கூரையின் ஓட்டையிடுக்கில் நிலா பார்த்தவர்கள் ராணியின் ஜெனன ஜாதகத்தால் மொட்டை மாடியில் நிலாச்சோறு உண்ணத் தொடங்கினர் ராணியின் அப்பா தடுக்கி விழுந்தாலும் பிடி மண்ணோடு எழுவது தற்செயலானது ராணி வீட்டில் நாலணா நாணயங்களால் வடிவு பொலிந்த வேங்கடநாதன் கண்ணாடிச் செவ்வகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தார் செவ்வாய், வெள்ளி நாட்களில் இறைச்சி, மீன் சேர்ப்பதில்லை மாதாந்தங்களிலெல்லாம் குடும்பமே கோயிலிலிருக்கும் முன்புற மதில்மேல் இரும்புச் சட்டியில் வைத்திருந்த சோற்றுக் கற்றாழை நீரின்றிச் செழித்தது வீட்டில் வளர்க்கும் வாழைமரங்கள் வடக்கு நோக்கியே குலை தள்ளியது. இப்படியான நன்னிமித்தங்களில்தான் அவர்கள் ‘ராணி லக்கி பிரைஸ்’ அட்டைகளின் உற்பத்தியாளர்களாயினர்.
சிவப்பில் மடித்த சிறுசதுரக் காகிதப் பொதியைப் பிரிக்கப் பிரிக்க ஜோக்கர்களின் உடலில் வெறுங்கை விரிக்கும் ராணி வயது வேறுபாடின்றி எல்லாக் காதலையும் ஏற்கிறாள் அவளது பத்துப் பைசா புன்னகைக்காக பலநூறு இழந்தவர்கள் பத்து பைசா கிடைத்ததும் பித்தேறித் திரிவது குபேர சாபம் என்போருமுண்டு ராணிக்குச் சிலநேரம் பைத்தியம் பிடிக்கும் பின் வாசலில் கோலமிடுவாள் முற்றத்தில் எச்சில் உமிழ்வாள் அவளை சிறு குழந்தைபோல் எப்போதும் சுமக்கவேண்டும் இறக்கிவிட்டால் குடுகுடுவென ஓடி எங்கேனும் விழுந்து அடிபடுவாள் பொழுதெலாம் புனர் ஜென்மத்தில் பிறக்கிறார்கள் ராணியின் பெற்றோர் அவளோ அனைத்து பருவ காலங்களிலும் காந்தர்வ மணம் செய்தபடியிருக்கிறாள் பாருங்கள்! தங்க நாணயங்களில் ஒளிரும் அவள் புன்னகையின் சீதளம் கூரைகளின் அந்தரத்தில் உறைந்திருப்பது எவ்வளவு அழகு!.
ஒழுங்கு குலைந்து சிதறிக் கிடக்கும் புனிதப்பொருட்களால் நிறைந்திருக்கிறது ராணியின் ஒப்பனை அறை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் தோல் சுருக்கம் நீக்கும் அவளது நிலைக்கண்ணாடி பாற்கடல் கடையும்போது புறப்பட்டதாய் இருக்கலாம் வியர்வை துடைப்பதற்கென அலமாரி நிறையப் பொன்மொழிகள் துர்கந்தம் பரப்பும் நீர்மத்தைக் குருதியில் குழைக்கிறாள் வாசனைத் திரவியமாகிவிடுகிறது ராணியின் கணவர்கள் அவள் நிலைக்கண்ணாடியிலிருந்து நொடிக்கொருவராய் வெளியேறிச் செல்கின்றனர் தளமற்ற அவ்வறையின் கூரையோ காணுந் தொலைவிலில்லை.
ராணி லக்கி பிரைஸின் முதுகில் பரமபதக் கட்டங்களிருக்கின்றன குட்டி ஏணிகள் பெரிய ஏணிகள் சிறு மற்றும் பெரும் பாம்புகள் சாமிகள் சாத்தான்கள் பூச்சிகள் விலங்குகள் பறவைகள் சோழியும் தாயக்கட்டையும் தேவையில்லை கண்கள் மூடி எண்களை நீங்களே தியானித்தறிந்து காய் நகர்த்தலாம் மிதமின்றி நீங்கள் மதுவருந்தியிருந்தால் விளையாட்டு காண்பவர்களை மகிழ்விக்கும் ஏணியில் ஏறவும் முடியாது பாம்பின் தலையோ பள்ளத்தில் விழுங்கும் காலி அட்டைகளை எரித்துப் புகைப் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா புது வருட நாட்காட்டியை எரிப்பது போலொரு தற்கொலையின் ருசி மிகுந்தது அதுவென்கிறார்கள்.
யாமத்தில் நானெழுதும் பாடல் மலர்களில் வெளுத்திருக்க காலையில் கறுக்கும் அதன் தொடர் வினோதம் வளர்ந்து பரந்திருந்த இருளுடலைப் பரிகசிக்கிறது. ‘அறத்தில் கோர்த்த வார்த்தைகளால் அலங்கரித்த உடலுக்கு அற்பமனம்’ என்றொரு வாக்கியமெழுதிக் கடலிலிட்டேன் அலைக்கழித்து அலைக்கழித்தென்னையது மணிமேகலையின் வீட்டு வாயிலில் தள்ளிவிட்டது வேப்பம் பூவுக்கொரு வெண்பா பாட வருமாறு காளமேகத்தை அழைக்கும் எனது பால்யம் பொருட்பாலில் தயிர் கடையும் மத்தாகிப்போனதை கூகையொன்று நள்ளிரவுக்குச் சொல்கிறது நெடுநேரம் கூர்ந்தால் கண்நோவு வருமெனச் சொல்லியும் கள்ளிப்பூவைப் பார்த்திருக்கிறது புத்தகத்திலிருந்து நழுவிய அந்த மயிலிறகின் ஒற்றை விழி பூமிக்கு பூமி என்ற சொல்லே புளித்த உவமையாயிருக்கும் அவலத்தை ஒரு கலயம் கள்ளிடம் கேட்டுவரச்சென்ற பறவைக்காலி எறும்புகள் இன்னும் திரும்பவில்லை செம்பருத்திப்பூ வண்ணத்தில் இசையைப் புனைந்து முற்றத்திற்குக் கொண்டுவரும் கொத்தன் நான் பழங்கோயில் தூணில் நடன நிலையில் உறைந்திருந்த பெண்ணொருத்தியை இழுத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டேன் கால்கழுவப் பாயும் வெள்ளத்தில் குவார்ட்டரைக் கலந்து அடித்து நகரப் பேருந்து நிலையத்தின் கழிவறை விட்டு அகாலத்தில் வெளியேறும் என் கலங்கிய முகத்தின் முன்பு கொடுநதியாய் குழைந்தபடி இரும்புக் குழம்பும் சிமென்ட் குழம்பும் திசை திசை ஓடியகல்கிறது ஐந்தரையடி உயரத்திலிருக்கும் எனது வீட்டின் கூரையை உரசியபடி தாழ்ந்து வருகின்றன மின்கம்பிகள் வீட்டை இன்னுங் கொஞ்சம் மண்ணுக்குள் இறக்கவேண்டும்.
‘காற்றில் வண்ணங்கள் சிதறும் பறவைகள்’ என்றெழுதியவன் சற்றே நிதானித்து ‘காற்றினூடே செவிகளில் வண்ணங்கள் நிகழ்த்தும் பறவைகள்’என விரித்தான் ‘வைகறை இளங்காற்றின் மென்குளிரை மலர்களில் வரையும் பறவைகள் இன்குரல்’ என மாற்றியபோது சிறு நிறைவுற்றான் ‘பட்சிகள் குரலில் கண்ணாடிப் பார்க்கிறது காற்று வகிடெடுத்துக் கொள்கிறது வைகறை’ இது இன்னும் நன்றாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்கிறது ‘வாகன ஒலிகள் எந்திர கூடங்களின் ஒலிகளுக்கு எதிர்திசையில் நிகழும் குருவிகள் குரல் தொல்லுலகின் தொடக்க வானத்தில் ஆதிமுதல் அதிகாலையை நெஞ்சிழுத்து நெய்கிறது’ குற்றமில்லை என்றாலும் இது போதவில்லை எழுதியதின்மேல் தாறுமாறாகப் பேனாவால் கிறுக்கிவிட்டு அறையிலிருந்து வெறுமையாய் வெளியேறினான் மூடிய காகிதத்தில் மூண்டிருக்கும் கோடுகளில்.
சிறுபத்திரிக்கை என்பதன் உள்ளுயிர் வேறொரு சாரத்திலும் வேறொரு மரபிலும் இருந்து வருகிறது. அதன் ‘சிறு’ என்ற அடையாளம் குறைந்த அச்சிடல், சிறிய வாசகத்தளம் என்ற குறிப்பில் இல்லை. இருளும் தனிமையும் கொண்டு, ஒரு கருநிலை இயக்கமாக, ‘பெரிது’ என்பது சார்ந்து இயங்கும் அனைத்து அதிகாரங்களுக்கும், பெரிது என்பது சார்ந்த அனைத்துக் கேளிக்கை - சந்தை மதிப்புகளுக்கும், பொதுமைப்படுத்தல்களுக்கும் எதிரான புள்ளியில் தன் நியாயத்தை, இருப்பை முன்னிறுத்தியே தன் ‘சிறு’ என்ற பொருண்மையை அது தக்கவைத்தது.
சாராம்ச நீக்கம் செய்து மனிதனை ஒரு காலிக்கூடாக்கி அவனை நுகர்வோன் என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் நிறுத்தியிருக்கும், வணிக - சந்தை எழுத்துக்கும், படைப்பூக்கச் சாளரங்கள் அற்ற கல்விப்புல இறுகிய சட்டகங்களுக்கும் எதிர்நிலையான ஒரு கலை / அறிவு இயக்கம் எனச் சொல்லித்தான் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் விசைகொண்டது. இங்குச் சிற்றிதழ் எழுத்துக் கனவு, தீவிரத்துவம், பிடிவாதம், விளிம்புநிலை மூர்க்கம், வேறுபடுதல் முதலிய குண இலட்சணங்களுடன் கண்டுபிடிப்பு, மெய்யறிதல், சமகாலப் பாடுகள், புதிய யதார்த்தங்கள் என்ற உள்ளீடுகளுடன் ‘நவீன இலக்கியம்’ ‘தீவிர இலக்கியம்’ ‘மாற்று இலக்கியம்’ என்றெல்லாம் முன்வைக்கப்பட்டது.
புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செல்லப்பா என ஒரு தடத்தின் நவீனத்துவமாகவும், தொ.மு.சி, கைலாசபதி, வானமாமலை, கோ.கேசவன் என நீளும் மார்க்சிய பாரம்பரியத்தின் ‘முற்போக்கு இலக்கியம்’ என்ற சொல்லாடலாகவும், இவ்விரண்டினிடையான முரண்விசை இயக்கத்தின் நீட்சியில், என்பதுகள் தொண்ணூறுகளில் இவற்றிடையான நெகிழ்தலும், அதனூடாக வெடித்துத் திறந்த 90களின் புதிய பலநூறு பாதைகளுமாக, ஈராயிரத்துக்குப் பிறகான சந்தை முற்றுகையும் வெகுசன - தீவிர என்ற கோடழிதலும், சிற்றிதழ்கள் தம் பழைய தார்மீகங்களில் இயங்கவியலா புதிய நெருக்கடிகளும், வரலாறும் உள்ளீடுகளும் காலியாகி திணைமயங்கிய நுகர்பொருள்களாவும், பொத்தாம் பொதுவானத் தன்மையும் களைப்படைதலுமான ஒரு கலங்கிய பரப்பிலும் படைப்பூக்கத்தின் முடிவற்ற அறிதல்களின் தீவிரத்தவத்தை உயிர்ப்பிக்கும் உதிரியடைந்த எழுது விரல்களைக் கண்டடையும் வேட்கை கொண்டாக வேண்டிய விளிம்பில் சிற்றிதழ்கள் இன்று தம்மை வந்து நிறுத்தியுள்ளன.
இந்த நவீன எழுத்தியக்கத்தின் ஊடும் பாவுமாக வெட்டிச் செல்லும் பல்வேறு போக்குகளும் மொழித்தடங்களும், இன்றைய குழப்படிகளுக்கும் இடையேயான ஒரு நெடிய பாதையில் ‘விருட்சம்’ இதழ் தனது அசாதாரணமான நிதானத்துடனும், பற்றிக்கொள்ளலின் பிடிவாதத்துடனும் தன் தொடர்ந்த பயணத்துடன் முப்பது ஆண்டுகள் என்ற பெரும் பரப்பைக் கடந்தும் நீண்டு வருகிறது.
ஒரு தனிப்பட்ட கருத்தியல் குழு, ஒரு குறிப்பிட்ட நோக்கம், ஒரு பிரத்யேக குணம், தனதேயான தனித்துவம் ஆகியவை சிற்றிதழின் அடிப்படைகள். சிற்றிதழின் பல்வேறுபட்ட உள்மரபுகளின் வரலாறுகளுக்குள் விருட்சம் இதழ் க.நா.சு., சி.சு.செல்லப்பா பின்னர் வெங்கட்சாமிநாதன் வழியான ஒரு நவீனத்துவ மரபின் ஒரு நீட்சியிலிருந்தே உருவாகிறது.
அதில் சிறுபத்திரிக்கை சூழலின் பல்வேறுபட்ட ஊடாட்டமான ஓட்டங்கள் பிரதிபலித்தாலும், தீவிரமாக வேறுபடும் எழுத்தாளர்கள் அருகருகான பக்கங்களில் உரசிச் சென்றாலும் அந்த இதழ்களின் மொத்தப் பரப்புக்குள் ஓடும் ஆசிரிய மனம் என்பது க.நா.சு - செல்லப்பா மரபின் நிழலிலேயே இருக்கிறது. முன்னர்க் குறிப்பிட்ட சிற்றிதழ் வரலாறு, மரபு அதன் உள்ளர்ந்த இயல்புகளான பிரத்யேகத்தன்மை, பிடிவாதம், தீவிரத்துவம் முதலிய மதிப்புகளின் இலட்சிய குணங்களில் ‘நவீன விருட்சம்’ ஒரு பெரும் காலப் பரப்புக்குள் ‘சிற்றிதழின்’ தீவிர அகஉயிர் சுழலும் இடமாகவே இருந்துள்ளது.
எண்பதுகள் தொண்ணூறுகளில் கனன்ற ஒரு புதியமொழியை, புதிய உணர்திறன்களை விருட்சம் தன்னூடாகக் குறிப்பாகக் கவிதைகளின் வழி சாட்சிப்படுத்தியுள்ளது ஒரு முக்கிய இடம். அதில் துடித்த அன்றின் பிரக்ஞையும் அதிர்வுகளும் ஓர் இசைக் குறிப்புகள் போல இன்றும் அதன் பழுப்பேறிய பக்கங்களில் உயிர்ப்படைகின்றன. இன்று பெரும் ஆகிருதிகளாகக் கொண்டாடப்படும் கவிஞர்கள், இன்றைய கவிதை விரிந்து செல்லும் முடிவற்ற பிரதேசங்களுக்கு ஆதாரமான நீரூற்றுகளை எழுப்பிய முன்னோடிகள் பலரும் விருட்சம் என்னும் சிறிய ஏட்டில் அருகருகாக இருக்கிறார்கள்... வினோதமும் தினசரியும் ஞானமும் விளையாட்டுமான தேவதச்சன், இயற்கையும் மெய்யறிதலும் மனவெழுச்சிகளுமான தேவதேவன், சுயத்தின் காலித்தன்மையும் தனிமையும் பிளவுமான நகுலன், அங்கதமும் மரபோசையும் புனைவார்த்தமுமான ஞானக்கூத்தன், மண்ணும் சொல்லுமான பழமலய், இருண்ட தேசங்களின் படிமங்களும் அரசியலுமான இந்திரன், அறிவார்த்தம் பொறியாண்மை, கனவியல்பும், மொழிக் கூட்டமும் ஆன பிரம்மராஜன், கொந்தளிப்பும் பிரபஞ்சஅறிதல்களும் மானுடமுமான பிரமிள் எனத் தமிழ்க் கவிதையில் மாறுபட்ட வெவ்வேறு பிரபஞ்சங்களை வெவ்வேறு நிறங்களை வரைந்தவர்களை விருட்சம் தன் தொடக்க இதழ்களிலேயே கண்டடைந்துள்ளது. 90களில் கிளர்ந்து இன்று மையமற்ற பெருவெளியாகியிருக்கும் இன்றைய கவிதை மொழியின் உள்விதைகளான இந்தப் பெரும் முன்னோடிகள் விருட்சத்தின் பதினாறே பக்கங்களிலான ஆரம்ப இதழ்களில் சாதாரணமாக இடம் பெற்றிருக்கிறார்கள். அதன் தீவிரத்துவத்தை இன்றின் கதியிலிருந்துதான் உணரமுடியும். இன்று முத்திரையிடப்பட்ட பேரங்காடிப் பண்டங்கள் போல் வளமும் வண்ணமும் ஏறிய ‘சிற்றிதழ்களை’ விடவும் 16 பக்கங்களில் அன்றைய பிரக்ஞையில் ஒரு கூரிய வாள் போல் இறங்கிய நவீனவிருட்சம் வீர்யம் மிக்கது. சிறிது என்பதன் தார்மீகமும் போக்கிரிக்குணமும் அதில் உள்ளது.
தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கைகள், எப்போதும், எதிர்காலவியலான ஒரு மூட்டவெளி நோக்கி அம்பெய்துபவை. எதிர்காலவியலான மொழியை, நாளைக்கான சொற்களை, நாளைக்கான கனிகளை எம்பித் தொடுபவை. இன்று பொதுவெளி நோக்கி ஊடுருவி வந்திருக்கும் நவீன அதிர்வேறிய ஒரு தமிழை நேற்றைய ‘நவீன விருட்சம்’ உள்ளிட்ட சிற்றிதழ் தளங்களே உருவாக்கின. எண்பதுகள் தொண்ணூறுகளின் அறிவுக்களங்களுக்கும் அதன் தீவிர மொழி கதிக்கும் ஒப்புக்கொடுக்கவும் அதனூடாகப் பயணமும் சாகசமும் செய்திடவுமான துணிவும் வேட்கையும் உண்மையும் அன்றைய விருட்சம் இதழ்கள் கொண்டிருந்துள்ளன.
விருட்சத்தின் சிற்றிதழ் சார்ந்த குரலை, மனச்சான்றை அதன் தொடக்க இதழ்களிலேயே உறுதியுடன் காண முடிகிறது. இரண்டாவது இதழ், முகப்பில் ஆதிமூலத்தின் க.நா.சு. கோட்டோவியம் தாங்கி வருகிறது. இமை தாழ்ந்த ஒரு தீவிரப்பிரக்ஞையின் ரேகைகளே அங்குக் க.நா.சு என்னும் கோடுகளாகியுள்ளன. ஆதிமூலத்தின் தீற்றலில் அது ஒரு தனிமனிதனின் முக உருச்சித்திரமாக அல்ல. க.ந.சு என்ற ஒரு சாராம்சத்தின், இயக்கத்தின், ஒரு சிந்தனை வடிவத்தின், தீவிரத்துவமே அங்குக் கோட்டுருக்களாகியுள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தித் தொடங்கி நவீன எழுத்தின் பல்வேறு ஆகிருதிகளை வார்த்த ஆதிமூலத்தின் ஒவ்வொரு கோட்டு மொழியிலும் சிற்றிதழ் எழுத்தாளனின் மூர்க்கமும், எதிர்ப்பும், சுய குலைவும், தீவிரமும், தனிமையுமே கோட்டுப் படிமங்களாக உருமாறியுள்ளன.
விருட்சம் 2 ஆவது இதழில் க.நா.சு மறைவு குறித்து ஞானக்கூத்தன் எழுதிய அஞ்சலிக் கட்டுரை ஒரு தலையங்கம் போலவும் வாசிக்கத் தகுதி படைத்ததே. சிற்றிதழ் மனம், அதன் அகவுயிர், பெரிது சார்ந்த எந்த சமூகப் பிம்பங்களையும் கேலி செய்தும் எதிர்த்தும் நிமிர்ந்து செல்லும் அதன் அழகும் சுயமாண்புமே அதில் முன்வைக்கப்பட்டுள்ளது. க.நா.சு., செல்லப்பா வழி பெற்றுக்கொண்ட நவீனத்துவத்தின் பரப்பெல்லைகளே நவீன விருட்சம் நிலைகொள்ளும் இடம். மெல்ல, விருட்சத்தில் புனைவு மொழியும் விமர்சன மொழியும் அடுத்தடுத்த இதழ்களில் தன்னியல்பான கதியில் வந்திணைகின்றன. கோபிகிருஷ்ணனின் தூயோன் கதைத்தொடங்கிப் புனைவெழுத்தில் பலவிதமான தடங்களும் அதனூடாகச் சென்றுள்ளன. நண்பனின் தாய் நோயுற்றிருக்கிறாள். அங்கு ஒன்றமுடியாது தன் விருப்பங்களே முக்கியமாகக் குடித்துவிட்டு வருபவன்தான் தூயோன். தான் உள்ளே யாராக இருக்கிறானோ அப்படியே வெளியேயும் நடந்துகொள்கிறான். பாசாங்கான சரித்தன்மைகளை அவனால் பேணமுடிவதில்லை. நன்மை - தீமை என்ற மொராலிட்டிக்கு - நீதியியலுக்கு வெளியே இருப்பவன்தான் தூயோன். இன்று மிகைநவிற்சி அன்பும் நீதியியலும் உருகிவழியும் இடைநிலை ‘யதார்த்த’ எழுத்துக் குவியல்களின் முன் ‘தூயோனை’ நிறுத்தவேண்டும். அதன் காத்திரமும் உண்மையும் இன்றைய அரசியல் சரித்தன்மைகளிலிருந்து கையாளவே முடியாத ஒரு திறந்த கத்தி போல உள்ளது.
ஆரம்ப இதழ்களில் வந்த ஆத்மாநாம் குறித்த கட்டுரை, பழமலயின் சனங்களின் கதை குறித்த மதிப்புரை, ஜெயமோகனின் ஆற்றூர் ரவிவர்மா - சுரா இடையேயான கவிதை விவாதம் குறித்த பதிவு, அடுத்த இதழில் ரவிவர்மாவின் மறுப்புரை, நகுலனின் தன் நில் வா போ கவிதை குறித்த சுய வாசிப்பை பகிரும் அரிய ஒரு குறிப்பு, ரா.ஸ்ரீனிவாசனின் கவிதை வடிவம் குறித்த தொடர் பதிவுகள் எல்லாம் எண்பதுகள் இறுதியில் மாறிக்கொண்டிருக்கும் ஒரு புதிய காலத்தின் சுழல்வை முற்கூரும் முக்கியச் சுவடுகள்.
குற்றாலம் கவிதைக் கூட்டம் குறித்த ஞானியின் பதிவு அமைப்பியல் குறித்த மென்பகடி கொண்டது. செவ்விலக்கியங்கள் மீதான கட்டுடைப்பையும் நவீன கவிதையின் மீதான பிரதியியலாளன் தொழில்நுட்ப பிரித்துப் போடல்களையும் அவர் தன் சந்தேகங்கள், அசௌகரியங்களோடு புதிய வரவுகளை அனுமதித்துப் போகிறார். சிற்றிதழ்கள் எப்படிக் கருத்துகளின் மோதுகளமாகக் காலத்தின் ஒரு நிகழ்தளமாக, இருந்துள்ளது என்பதும் இன்று ‘ஏதும் நிகழவில்லை’ என்னும் வெறும் உற்பத்திக் கேந்திரமாக அது உருமாறியிருக்கும் இடமும் எதிர் நிறுத்தி விருட்சத்தின் அழுத்தமான இடம் உணரப்படுகிறது.
அதே நேரம் 90 களில் பெரும் உரையாடலும் விமர்சன விவாதங்களாகவும் கொதிநிலையடைகிறது சிற்றிதழ் வெளி. நிறுவனவாத மார்க்சியத்துக்கு அப்பாலான புதிய அறிவுக்களங்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட நூறு அடையாளங்கள் வெவ்வேறு வரலாறுகளின் புதிய விரல்களின் எழுத்துப் பிரவேசம், படைப்பை பிரதியாக்கி அதன் பொறியாண்மையை உரையாடத் தொடங்கிய அமைப்பியல், ஒற்றைத் தன்மையினிடத்தில் பன்மையும், விளையாட்டும் கொண்டுவந்த பின் நவீனபேச்சுகள், க.ந.சு, செல்லப்பா, வெ.சா - வின் நவீனத்துவ எல்லைகளைக் கடந்து வந்த உடைப்புகள், படைப்புத் தளத்தில் லத்தீன் அமெரிக்க ஊக்கங்கள், யதார்த்தவாதம் நெருக்குண்டு புனைவதீதமும், கனவுத் தன்மையும், வழக்காற்றுக்கூறுகளும், மொழி வெளியும் என நூறு நாவுகளாலான கதைவெளி, அகத்தீவிரம், தத்துவ அழுத்தம் என்னுமிடம் புறவய நெகிழ்வு, உரைநடை, உடலின் சொற்கள், புனைவு மொழி எனப் புதிய துடிப்புகளில் மலர்ந்த கவிதைவெளி; வித்தியாசம், படிகள், மேலும், மீட்சி, கல்குதிரை, லயம், நிகழ், மன ஓசை, நிறப்பிரிகை, புனைகளம் என வெவ்வேறு களங்களும் வெவ்வேறு நிலைப்பாடுகளும் முரண்படு கருத்தியல் குழுக்களாலும் ஒன்றையொன்று ஊடாடியும் மறுத்தும் சமர்புரிந்த வார்த்தைப் பெரு வெளியாகி 90கள் வேறுபாடுகளின் தீவிரத்தால் அதன் வெவ்வேறு குரல்களால் அதிர்வேறிய தசாப்தம். இதனூடாக விருட்சத்தின் பயணம் யாது.
இந்தத் துடிப்பு மிக்கக் காலகட்டத்தின் மாறுபட்ட பலவிதமான எழுத்துவிரல்களும் விருட்சத்தின் பக்கங்களில் குறுக்கும் நெடுக்குமாக உரசிச் செல்கின்றன. அருகருகாக இடம்பெற்றுள்ளன. எல்லோருக்குமான ஒரு பொதுமேசையாக அது இருந்துள்ளது. முரண்படுபவர்கள் அருகருகாக எழுதியிருக்கிறார்கள். முரண்பட்ட விசைகளால் இழுக்கப்பட்ட 90களின் ஊடாட்டமான காலத்தினூடே விருட்சம் பெரிய உருமாற்றங்களின்றி, ஒருவித பொத்தாம்பொதுத்தன்மையும் அசாதாரணமான நிதானமும் கொண்டு மௌனப் பயணமாகக் கடந்து செல்கிறது. எதிர்வினையாற்றலின் இடத்தில் நிசப்தப் பார்வையாளனாக அது அமைதிகொள்கிறது.
நீண்டு வரும் அதன் முப்ப தாண்டு பெரும் பரப்பில் பெரிய தோலுரிதல்களோ வளர்சிதைவுகளோ அன்றி நிதானமும், பொதுத் தன்மையும் பேணுதலாக முன்பே கூறிய க.ந.சு தொடங்கி வெங்கட்சாமிநாதன் வரையான ரசனை – அழகியல்வாத நவீனத்துவத்தில் ஊன்றியபடியே புதுமையடைந்து வரும் காலத்தினூடாகவும் தன் பழைய நாஸ்டால்ஜியாவின் மன ஊக்கத்தோடும் அது தொடர்ந்து முன்னகர்ந்து வந்துள்ளது. அழகிய சிங்கரின் அலுவலகம் செல்லும் மத்தியதர வர்க்கத்தின் சலிப்புகள், அதன் அழகியல்,ஞானம் என்பதான அவரது கவிதைகள், கதைகள், அவரது பத்தி எழுத்து போன்ற கட்டுரைகள், பார்வைகள்,மதிப்பீடுகள், மற்றும் ஞானக்கூத்தன், வெங்கட்சாமி நாதன், வைத்தீஸ்வரன், அசோகமித்திரன், நகுலன் ஆகிய படைப்பாளிகளின் பிரதானமான பங்களிப்புகளே நவீன விருட்சத்துக்கான தனிக்குணம், பிரத்தியேகத்தன்மை என்ற ஒன்றை வார்த்துள்ளது. விருட்சத்தின் முக்கோணப் பக்கங்களாக அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வெங்கட் சாமிநாதன் இருந்திருக்கிறார்கள். மற்றபடி ஒவ்வொரு காலத்தின் வெவ்வேறு அலைகளில் எழுந்துவரும் வேறுபட்ட படைப்பாளிகளும் நவீன விருட்சத்திற்குள் தடையின்றிப் பிரவேசிக்கிறார்கள். தொடர்ந்து விருட்சம் புதியவர்களுக்கும் அறிமுகமற்ற புதிய பயில் விரல்களுக்கும் தன்னைத் திறந்துவைத்து வந்துள்ளது. மனத் தடைகளற்று அதன் இடம் எல்லோருக்குமான களமாக இருந்துள்ளது. கடந்த தசாப்தங்களிலான இணையச் சமூக ஊடக வெளிகளில் முகிழ்த்த எழுத்தாளர்களுக்கும் அது தொடர்ந்து இடமளித்துள்ளது.
எல்லோரையும் அனுமதித்தலும் தனது அடிப்படைப் பொருண்மையில் நெடிய காலப் பரப்பிலும் ஒருவித மாறாத்தன்மையும் அல்லது அதன் காலமற்ற தன்மையையும் விருட்சத்தின் மீதான விமர்சனமாக அன்றி அதன் பிரத்யேக தனிச் சுபாவமாக நாம் கடந்து செல்லலாம்.விருட்சத்தின் இந்தப் பண்பியல்பை அதன் ஆசிரியரே ஒரு தலையங்கத்தில் சுட்டிக்காட்டுகிறார். விருட்சம் பழைய எண்பதுகள் சிற்றிதழ் வரலாற்றின் ஓர் எச்சமாக மூன்று தசாப்தங்கள் கடந்தும் தொடர்கிறது.
அதேசமயம் இன்று சிறுபத்திரிக்கைத் தளங்களை ஊடுருவியிருக்கும் கேளிக்கைகள், வெகுசனச் சீரழிவுகள், பொதுவெளி அதிகாரங்கள் நோக்கிய பிறழ்வுகள், இடைநிலை எழுத்து பாவனையிலான சமரச சமன்பாடுகள் என்பவற்றிற்குச் சிறிதும் உட்படாது, விலகி நின்று நவீன விருட்சம் தன் தார்மீகம் சிதையாது துணிந்தும் தனித்தும் சிற்றிதழ்காலப் பிடிவாதத்தையும் செருக்கையும், தன் இருப்பை உரத்து வைக்கும் இடமே அதன் தனித்துவமும் அழகும் ஆகிறது. மணல் வீட்டின் இந்த விருது விருட்சத்தின் மூத்த கரங்களைச் சென்றடையும் அன்புக்கும் விழைவுக்கும் அந்தத் தளமே ஆதாரமாகிறது.
அழகிய சிங்கரின் தலையங்கங்கள், பத்தி எழுத்து போன்ற குறுங்கட்டுரைகள், மதிப்பீடுகள் போன்றவற்றில் முந்தைய சிற்றிதழ் மரபின் அகஉயிர், ஒரு நீரோட்டம் வந்தபடியே இருக்கிறது. அதில் ‘வெற்றி’ என்ற நுகர்விய மதிப்பீட்டுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட புதியகால இடை நிலை எழுத்துகளின் மீதான சந்தேகம் இருக்கிறது. விருட்சத்தின் பழைய இதழ்களில் எப்போதும் பரிசோதனைகளுக்கான அழைப்பு இருக்கிறது. வணிக எழுத்து என்ற வரையறுக்கப்பட்ட எதிர் நிலையை முன்னிறுத்தி நவீன எழுத்தின், தீவிர எழுத்தின் பற்றுதல் இருக்கிறது.
இந்தத் தலையங்கங்களில் இயங்கும் அழகிய சிங்கரின் ஆளுமை குணாம்சம் என்பது ஆவேசமோ தன்முனைப்போ அற்றது. பெரிய அதிர்வுகளற்று மெல்லியல்பான அவதானங்களுடன், தன் முன்வைப்புகள் குறித்துத் தானே தயக்கங்கள் கொள்வதும் கூட. கடந்த பதின்மங்களின் மாறி வரும் காலம், சிற்றிதழ் வெளிகள் பொதுத்தளங்களுக்கு நகர்ந்திருப்பதும் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் வெகுசன கேளிக்கை நாயகர்கள் ஆகி வருவதும் குறித்த திகைப்புகள் அதற்குண்டு.
குமுதம் தீராநதியின் வருகை குறித்தும் உருமாற்றமடைந்த ஒரு பெரும் காலப் பரப்பின் தடித்த நூல்களின் பிரவேசம் குறித்தும் ஒருவித அசௌகரியமும் பதற்றமும் கொள்ளும் மனம் ஒரு தலையங்கத்தில் வெளிப்படுகிறது. மாறுபட்ட காலங்கள், போக்குகளினூடே விருட்சம் தனதேயான ஒரு சாராம்சத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தக்க வைத்துள்ளது. மணல்வீட்டின் தலையங்கம் எப்போதும் சாடல்கள் விமர்சனங்களின் அதிர்வோடு, சூழலின் பிறழ்வுகளின் மீது முறைப்பாடுகளும் சீற்றமும் கொண்டதாகவே இருந்துள்ளது. மணல் வீடு அறிவித்துள்ள இந்த விருது என்பது எல்லா முரண்பாடு களையும் மௌனித்துவிட்டு அதிகாரத்தின் கேளிக்கைக் கேந்திரங்கள் நோக்கி நடையிடத் தொடங்கிய நேற்றைய சிற்றிதழ் எழுத்தாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு குறியீடான விமர்சனம்தான்.
ஈரோட்டில் 03 - 08 -19 அன்று நடைபெற்ற சிற்றிதழ்களுக்கான அஃக் பரந்தாமன் நினைவு இலக்கிய விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற நவீன விருட்சம் சிறுசஞ்சிகை குறித்து வாசிக்கப்பட்ட கட்டுரை.