நாடகம்

பாலச்சந்தர் (30)

குமாரசாமி (31)

சிவஞானம் (31)

(பாலச்சந்தர் வீட்டு நீண்ட சதுர முன் அறை. மேடையில் இடது, வலது, மற்றும் பின்பக்கங்களில் சுவர்கள். இடது சுவருக்கு அருகில் மேடை விளிம்பை ஒட்டி பழுப்பு வர்ண கிளியர்டோன் மடக்கு மேசை.

இதன் மேல் சால்பெல்லோவின் ‘ஹெர்ட்சாக்’, இலக்கியச் சங்க வெளியீடான ‘கோணல்கள்’, கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’, பழைய ‘நியூஸ்வீக்’ ஒன்று, ‘லைஃப்’ மூன்று, முழு அளவு வெள்ளைத்தாள் கொஞ்சம், பிலிப்ஸ் பயனியர் டிரான்ஸிஸ்டர் ஆகியவை உள்ளன.

இதற்குப் பின்னால் சுவரில் பதித்த அலமாரி, கதவு மூடி இருக்கிறது. இதற்கும் பின்னால் கோத் ரெஜ் மடக்கு நாற்காலி மூன்று சுவரில் சாய்க்கப் பட்டுள்ளன. சுவர்க்கோடியில் உள்ள கதவு உட்புறமாகத் திறந்திருக்கிறது.

பின் சுவரை ஒட்டியபடி, நடுவில் இல்லாமல் சற்று இடது பக்கம் ஒதுங்கிய மாதிரி கிளியர்டோன் சாய்வு நாற்காலி; இதில் நீலத்தில் கறுப்புப் பட்டைத் துணி போட்டிருக்கிறது.

பின் சுவரின் வலது கோடியில் ஒரு கதவு; இதுவும்உள்ளுக்கே திறந்துள்ளது. இதன் வழியே ‘சோவியத்நாடு’ மாதக் கேலண்டர் தெரிகிறது. 1969 டிசம்பர்;தேதிகள் கீழே; மேலே படம். வலது சுவரின் பின்கோடியில் ஒரு கதவு மூடியுள்ளது.

இச்சுவரில், மேடையின் முற்பகுதியில், ஒரு நீண்ட சன்னல்;இதன் கீழ் பகுதியில் பல நிறங்கொண்ட நவீன பாணி மஃபட்லால் திரை, சன்னல் விளிம்பில் ‘வீக்லி’ இரண்டு, சன்னலுக்கு அருகில் ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் டீபாய்; இதன்மேல் முழு அளவு அட்டை ஒன்று, ‘ஸ்பான்’ ஒன்று, வெள்ளைத்தாள் சில, ரைட்டர் பேனா, ஆஸ்ட்ரே, வில்ஸ் பெட்டி, தீப்பெட்டி இருக்கின்றன.

டீபாயை ஒட்டி ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் கட்டில், டன்லப் பில்லோ பாணி மெத்தை, மஞ்சள்-கறுப்பில் ஷோலாப்பூர் விரிப்பு. கட்டில் அகலத்திற்கு நீண்ட, வெள்ளை லாங்க்லாத் உறை போட்ட மூன்று தலையணைகள் ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டிலின் பின்பக்கம் அடுக்கி உள்ளன. இதற்குப் பின்னால் சாய்வு நாற்காலிக்கும் முன்னால் நேர் மேலே 60 வாட்ஸ் அர்ஜெண்ட்டா எரிகிறது.

கட்டிலின் இடது பக்கத்தில் ஹவாய் செருப்பு. தரையில் இங்கும் அங்கும் கட்டில் மற்றும் சாய்வு நாற்காலி. அருகில் அதிகமாகச் சிகரெட் துண்டுகளும் சாம்பலும் உள்ளன. கால்கள் கட்டில் விளிம்பைக் கடந்து நீண்டிருக்க, மூன்றாம் தலையணையில் தலையழுந்த படுத்து, ஜான் அப்டைக் எழுதிய ‘கப்புல்ஸ்’ என்னும் நாவலின் மலிவுப் பதிப்பை இரு கைகளாலும் பிடித்தபடி படிக்கிறான் பாலச்சந்தர்.

வெள்ளை, நீலம், செங்கல் நிறங்களில் சிறிதும் பெரிதுமான கட்டங்கள் போட்ட பின்னி லுங்கி; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக்; இடது கையில் மெடல் ஸ்ட்ரே போட்ட ஹென்றி ஸாண்டஜ் வாட்ச். 34 விநாடிகள் அசைவற்றுப் படிப்பில் ஆழ்கிறான். பிறகு வலது கையால் பக்கம் திருப்புகிறான். அதே சமயத்தில் இடது காலை மடக்கிக்கொள்கிறான். 15 விநாடிகள் சென்றதும் வலது காலை மடக்குகிறான்.

வலது கையின் மேல்புறத்தால் நெற்றியை ஆறு முறை அழுத்தித் தேய்க்கிறான். புத்தகத்தைப் பிடித்துள்ள இடது முழங்கை முட்டியை மெத்தையில் ஊன்றி, இடுப்பின் கீழ் பகுதியைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு தலையணைகளில் சாய்ந்தபடி அமர்கிறான். பலமாக மூச்சு விடுகிறான்.

புத்தகத்தை வலது கைக்கு மாற்றுகிறான். படித்துக்கொண்டே இடது கையை நீட்டி டீபாய் மீதுள்ள சிகரெட் பெட்டியைத் தடவி எடுத்துப் படுக்கை மேல் வைக்கிறான்; அதே கையால் ஒரு சிகரெட் எடுத்து வாயின் இடது கோடியில் திணிக்கிறான். பெட்டியைத் திருப்பி வைத்துவிட்டு தீப்பெட்டி எடுக்கிறான்.

சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்துக் கொண்டு, பெரு விரலால் உள் கூட்டைத் தள்ளி விடுகிறான். உள்ளங்கையில் பெட்டியை இடுக்கிக் கொண்டு, பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு குச்சி ஒன்றை உருவுகிறான்.

பெட்டியை மெத்தைமேல் வைத்து நடுவிரலால் அழுத்திக்கொண்டு குச்சியைக் கிழித்து எரிய வைக்கிறான். சிகரெட் பற்ற வைக்கிறான். அணைக்காமலே குச்சியை எறிகிறான். ஒரு முறை புகைத்த பின் சிகரெட் எடுக்கிறான்.

புத்தகம், சிகரெட்டைக் கை மாற்றிக்கொள்கிறான். திரும்பவும் பழையபடியே படுக்கிறான். படித்துக்கொண்டே ஐந்து முறை புகைத்து விடுகிறான். பிறகு, புகைக்காமல் படிக்கிறான். ஐம்பது விநாடிகள்.)

*****

(புத்தகத்தை மெத்தை மேல் போட்டுவிட்டு எழுந்து கொண்டே) பாவி (ஷெல்ப் உள்ள சுவர் பக்கம் திரும்பி கால்களைத் தொங்கப்போட்டபடி) படுபாவி (முதல் அசையை அழுத்தி) Updike, (இரண்டாம் அசைக்கும் அழுத்தம் தந்து) UPDIKE - UP-DIKE (செருப்பைப் போட்டபடி) John UP-DIKE. John - my uncle John has a thing Cong (ராகம் போட்டபடி) Long john Updike’s Couples, Couples Couples, Up (என்று எழுந்து நிற்கிறான். ஒருமுறை புகைக்கிறான். சாய்வு நாற்காலியை நோக்கி நடக்கிறான்; வழியில் துண்டு சிகரெட்டைப் போட்டு மிதிக்கிறான்.

திரும்பி கட்டில் அருகில் வந்து இடதுகை நீட்டி சிகரெட், தீப்பெட்டி எடுக்கிறான். வலது கையால் ஆஷ்ட்ரே எடுத்தவன், தலையை அசைத்துவிட்டு திரும்பவும் அதை வைத்து விட்டு நிமிர்கிறான். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டே போய்ச் சாய்வு நாற்காலியில் சாய்கிறான். சிகரெட், தீப்பெட்டிகளை வலது புறம் தரையில் போடுகிறான். கண் மூடியபடி வேகமாக, ஆழமாகப் புகைக்கிறான்.

வெறித்தனமான சிந்தனையின் சாயல் முகத்தில் படர்கிறது. (55 விநாடி கழித்து) ஹாங்ங். (20 விநாடி கழித்து) அதான் சரி. (10 விநாடி கழித்து) வேற வழி. (ஒரு நீண்ட புகையிழுப்புக்குப் பின் எழுகிறான். சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் தேய்க்கிறான்.

அவனுக்கு வலதுபுறம் உள்ள வழியில் நுழைந்து மறைகிறான். சில சப்தங்கள். 22 விநாடியில் திரும்புகிறான், கையில் பிளாஸ்க் மூடியுடன், சாய்வுநாற்காலியில் சாய்கிறான். மூடியிலிருந்து காபி குடிக்கிறான்.

அப்போதும் ஆழ்ந்த சிந்தனை, குடித்தபிறகு மூடியை வலதுபுறம் வைத்துவிட்டு, டிரான்ஸிஸ்டரை வெறிக்கிறான். 9 விநாடி கழிந்ததும் ஒரு சொடுக்குப் போட்டு எழுந்தோடி, அட்டை + ஸ்பேன் + தாள் + பேனாவுடன் திரும்பி வந்து அமர்ந்து அவற்றை மடியில் வைத்து விரைவாக எழுதுகிறான்.

25 விநாடியானதும் நிறுத்துகிறான். சிகரெட் ஒன்று எடுத்துப் பற்ற  வைத்துக்கொண்டு, பெட்டிகளை மூடிக்கு அருகில் போடுகிறான். 10 விநாடி விழிக்கிறான். புகைத்தபடி எழுதிய தாளை எடுத்துஎழுதாத கீழ் பாதியில் சிகரெட் நெருப்பால் துளை போடுகிறான்.

பிறகு ஒரு இழுப்பு, ஒரு புகை விடுதல், ஒரு துளைப்பு என்று மேலும் நான்கு துளை போடுகிறான். ஆறாம் துளை போடும்போது, வெளியிலிருந்து குரல்: பாலா, பாலா.

பால: வர்றேன். (அட்டை முதலியவற்றை இடது பக்கம் வைத்துவிட்டு, விரைந்து சென்று மூடியுள்ள கதவைத் திறக்கிறான். முதலில் சிவஞானம் நுழைகிறான்; சந்தன டெரிலீன் ஸ்லாக், கறுப்புவாருடன் வெஸ்ட் எண்ட் வாட்ச், கடல் பச்சை பாண்ட், ஸான்டக் காலணி. பின்னால் குமாரசாமி வருகிறான்; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக், மெடல் ஸ்ட்ரே போட்ட ஃபார்டிஸ் வாட்ச், மான் நிற டெரிகாட்டன் பேண்ட், ஸான்டக்) வாங்கடா உங்களைத்தான் நினைச்சிக்கிட்டே இருந்தேன். (கதவை மூடாமல் பின் தொடர்கிறான். சிகரெட்டைக் கீழே போட்டு மிதிக்கிறான்).

குமா: (நடந்தபடி); அதனாலேதான் கதவை மூடி வச்சிருந்தியா?

சிவ: (கட்டிலை நோக்கி நடந்தபடி): அப்படி என்னடா பண்ணிக்கிட்டிருந்தே? (திரும்பிப் பார்க்கிறான்.)

பால: Paper ஐ ஓட்டைப் போட்டுக்கிட்டிருந்தேன், சிகரெட் நெருப்பாலே, (நிற்கிறான்.)

குமா: (சாய்வு நாற்காலியை அடைந்து, திரும்பி நின்று) எப்படியும் Paper ஐ கெடுக்கனும்.

சிவ: (கட்டிலில் உட்கார்ந்தபடி) அதாண்டா லட்சியம். எழுதிக் கெடுக்கனும், இல்லேன்னா இப்படி, ரொம்ப tired ஆ இருக்கு. நான் கட்டிலியே உட்கார்றேன். முடியலேன்னா அப்படிச் சாயலாம்.

பால: உன் விளக்கம் இல்லாமயே புரியுது, சும்மா இரு. (அருகில் சென்று நிற்கிறான்.) நான் இப்போ ஒரு mood லே இருக்கேன். பயங்கரமான mood, தெரியுமா?

சிவ: தெரியுது.

பால: (குமாரசாமியிடம்) ஏண்டா நிக்கறே, உட்காரேன். (அவன் உட்காருகிறான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டே சிவஞானத்தைப் பார்த்தபடி, சிவஞானத்திடம்) எப்படி?

குமா: Studs, வேற எப்படி? என்ன Couple- படிச்சியா? முடிச்சாச்சா?

சிவ: Couples ஐ படுக்கையிலேயே வச்சிருக்கான், படிக்காம இருந்திருப்பானா? அதான் இத்தனை cigarete, இந்த mood.

பால: (சிவஞானத்தை முறைத்துவிட்டு) இன்னும் முடிக்கல, பாதிதான். என்னமா எழுதறான்டா, கொல்றான், சே!

சிவ: சே, சே, ஒரே அசிங்கமா இருக்கு; முதல்ல இந்தக் குப்பையைக் கூட்டித் தள்ளி கதவுக்குப் பின்னால ஒதுக்குடா.

பால: நல்லவேளை.

(நகர்கிறான்; உள்ளே செல்கிறான்.)

குமா: நானும் பயந்துட்டேன் சிவஞானம். c Couples ஐத்தான் சொல்றீயோன்னு.

சிவ: (புத்தகத்தை எடுத்துப் புரட்டியபடி) இதையே சொல்லியிருந்தாதான் என்னடா? much too much. De Sade கெட்டான் போ. (புத்தகத்தை டீபாய்மேல் போடுகிறான்)

குமா: But - (பாலச்சந்தர் எழுதி வைத்த தாளைப் பார்த்து விட்டு எடுக்கிறான்.)

பால: (விளக்குமாற்றுடன் திரும்பியவன்) குடுடா அதை. (ஓடிக்கொண்டே விளக்குமாற்றைப் போடு கிறான்.)

குமா: (அதைப் பார்த்து) என்னடா எழுதியிருக்க?

பால: (அதைப் பிடுங்கி மடித்தபடி) நேரம் வர்றப்போ நானே படிக்கச் சொல்றேன். (சட்டைப் பைக்குள் வைக்கிறான்) இது beginning தான். (ஒரு நாற்காலியை எடுத்து அருகில் போட்டுக்கொண்டே) But what a beginning...

குமா: பெருக்கல?

பால: வேணுன்னா நீயே பெருக்கிக்கோ. (உட்கார்கிறான்.)

குமா: கட்டிலே இழுத்துப் போடுடா, சிவஞானம் (நன்றாகச் சாய்ந்துகொள்கிறான்) கடைசியில பெருக்கிக்கலாம், ஒரே அடியா, போகும்போது (வலதுகை நீட்டி, தரையில் கிடந்த பெட்டிகளை எடுக்கிறான். இருந்த ஒரே சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். சிகரெட் பெட்டியை கதவுக்குப் பின்னால் வீசுகிறான்; தீப்பெட்டியைக் கீழே போடுகிறான்.)

(இதற்குள் சிவஞானம் எழுந்து கட்டிலைக் குறுக்காக நகர்த்திவிட்டு, பாண்ட் பைக்குள் இருந்து பர்க்கலி, தீப்பெட்டி எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, ஒரு சிகரெட் பற்ற வைக்கிறான். இரண்டு பெட்டிகளையும் அருகில் வைத்துக்கொள்கிறான்.)

பால: இதுக்குக் குறைச்சல் இல்ல.

சிவ: என்ன, குமார்? (செருப்பை விட்டுவிட்டு, காலைத் தூக்கிப்போட்டுச் சாய்ந்து படுத்துக் கொள்கிறான்.)

குமா: நானும் கேட்டேன். (பிளாஸ்க் மூடியில் சாம்பல் தட்டுகிறான்.)

பால: ஏண்டா, flask மூடிதான் உனக்கு ash-tray வா? அதான் உன் கண்ல படணுமா; இவ்வளவு பெரிய (அறையைச் சுட்டிக்காட்டி) ash-tray படலியா? (எழுந்து, வலதுகையை நீட்டி) And you a Critic! Bah! (நகர்ந்துசென்று ஷெல்பிலிருந்து புதுச் சிகரெட் பெட்டி எடுத்துக்கொண்டு உடைத்தபடி திரும்புகிறான்.)

குமா: (சிவஞானத்தை உற்றுப் பார்த்துவிட்டு) Allright என்ன விஷயம்? (தீப்பெட்டியை எடுத்து வீசுகிறான்.)

பால: (தீப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு) உடைக்கணும்!

குமா: Cigarette packet டையா? (புகையை வேகமாக விடுகிறான்) இப்பத்தானே உடைச்சே.

சிவ: ஹஹ்ஹா ஆ!

பால: (வலது கையிலுள்ள சிகரெட்டை சிவ

ஞானத்திற்கு முன்னால் நீட்டி) உன்னை நான் முறைக்கிறேன். உன்னைத்தான் (சிகரெட் பற்றவைத்த பின், எரியும் தீக்குச்சியை அவன் முன்னால் கொண்டு போய்) Cigarette டைப் பற்ற வைக்கிற மாதிரி உன்னைப் பற்றவைக்க விரும்பறேன்.

சிவ: ஏன்?

பால: (தீக்குச்சியைக் கீழே போட்டுத் தேய்த்து) அவன் ஒரு கேனன். நீ ஒரு பெரிய கேனன். But you are always great. At silly things.

சிவ: நீ?

பால: A Cannon, I ’ II smash everything. எல்லாத்தையும் எல்லாத்தையும் உடைப்பேன். பிடிடா (குமாரசாமிக்குத் தீப்பெட்டியை வீசுகிறான்.)

குமா: (அதைப் பிடித்துக் கீழே போட்டுவிட்டு); Dramatise பண்ணது போதும், விஷயத்தைச் சொல்லு.

சிவ: (சிகரெட்டைக் கீழே போட்டு) மிதிடா, பாலா. (மிதிக்கிறான்) உட்கார். (உட்காருகிறான்) கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு பார்க்கலாம்.

குமா: (தனது சிகரெட்டை அணைத்துவிட்டு); உடைக்கணும் உடைக்கணும்ன்னு திரும்பவும் ஆரம்பிக்காதே.

பால: (யாரையும் பார்க்காமல்) உடைக்கணும் உடைக்கணும்ன்னுதான் வருது, குமார். வேற மாதிரியே வர மாட்டேங்குது. (ஒரு முறை புகைக்கிறான்) உங்க கிட்டே என்ன சொல்லணும், எப்படிச் சொல்லணும்ன்னு ரொம்ப நல்லா தெரிஞ்சது, நீங்க வந்து சேர்றவரைக்கும். நீங்க வந்து சேர்ந்தப்பறம் ஒண்ணும் புரியல.

சிவ: புரியுது; எல்லாச் சனியனும் ஒரே சமயத்தில தோணும். ஒவ்வொரு கேள்வியா கேட்டா எல்லாம் சரியாப்போயிடும். சரி, எதை உடைக்கணும்!

பால: வேற எதை, மரபைத்தான்.

சிவ: ஏன்?

பால: வேற என்னா செய்றது மரபை? வேற எதுக்கு இருக்கு மரபு?

சிவ: (குமாரசாமியிடம்) நீ கேள்டா.

குமா: எதுக்காக?

பால: என்னையா கேட்கற? (அவன் தலையாட்டுவதைப் பார்த்துவிட்டு) உடைச்சாதாண்டா அப்புறம் ஒட்ட வைக்கமுடியும். கேள்வி கேட்கறானாம். அவன் கேட்டதையே நீ ஏன்டா கேட்கற ?

குமா: Allright. இந்த idea எப்படித் தோணிச்சி?

பால: இதுவும் சரியான கேள்வி இல்ல; இருந்தாலும் பதில் சொல்றன். (சிகரெட்டை ஒரு முறை இழுத்து விட்டுக் கீழே போட்டுத் தேய்க்கிறான்). இன்றைய தமிழ் இலக்கியம் சுத்த அபத்தம். எல்லாம் நாலஞ்சிமாதிரிதான் எழுதறாங்க. நாலஞ்சி stereotypes தான். இதேதான் திரும்பத் திரும்பத் திரும்ப. உயிர் போகுது படிச்சா. மரபை உடைச்சாத்தான் இந்த இலக்கியம் உருப்படும். I tell you, அதுவரைக்கும் இது உருப்படவே உருப்படாது.

குமா: மரபை  உடைச்சா  உயிர்  போகாது?

பால: இது ஒரு கேள்வி. ஏன் உடைக்கணும்? எதுக்காக உடைக்கணும்? உடைச்சா இது போகாதா, அது போகாதா? - இதெல்லாம் கேள்வி? (அவர்கள் இருவரும் குறிப்பாகப் பார்த்துக் கொள்வதைக் கண்டதும்) இது மட்டும் தெரியும்; சரியான கேள்வி கேட்கத் தெரியாது? மரபை எப்படி உடைக்கிறதுனு கேட்கத் தெரியாது. இதைக் கேட்கவே தெரியலியே, இதற்குப் பதில் எங்க சொல்லப் போறீங்க? நீ ஒரு critic, நீ ஒரு great jack of all trades. சொல்லுங்கடா பார்க்கலாம்.

சிவ: (பாலச்சந்தர் பேச்சு முடிவதற்குள் எழுந்து உட்கார்ந்து ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு) அதாவது நீ சொல்வதைப் பார்த்தா, இதுக்குச் சரியான பதில் உன்கிட்ட இருக்கு?

பால: Right. You've hit the nail on the head.

குமா: I wish he had. Literally. ஒரு cigarette போடு.

பால: அதே மூச்சிலியே cigarete போடச்சொல்றியா? (ஒன்றை எறிந்துகொண்டே) இந்தா, தொலை.

குமா: (பிடித்துக்கொண்ட பின்) cigarete இல்லாம பேச்சு வருமா? (பற்றவைத்தபடி சிவஞானத்தைப் பார்க்கிறான். அவன் புன்னகையுடன் படுப்பதைக் கண்டு) சிவஞானம் இப்போ பதில் சொல்றான் பார். எப்படிடா, சிவஞானம்?

சிவ: மரபு ஒரு கண்ணாடியா இருந்தா பிரச்சினையே இல்ல. ஒரு கல்லைத் தூக்கி எறிஞ்சா போதும்.

குமா: கல் எதுக்கு? அதையே கீழே போட்டா போதும்.

சிவ: Correct. மரபு கண்ணாடி இல்ல. அதனால இந்த ரெண்டு வழியும் பயனில்ல. கல்லும் எறிய முடியாது, கீழேயும் போட முடியாது.

பால: Fine. Fine playing for time. என்ன ஒண்ணும் தோணலியா?

சிவ: ஏன் தோணாமே? ஆயிரம் வழி இருக்கு. அதுல நீ எதை நினைச்சேன்னு நான் எப்படிச் சொல்றது? குமாரைக் கேளு.

பால: (முறுவலித்துவிட்டு) ‘மோகமுள்’லே சொல்ற மாதிரி, சுமை தாங்கி உயரம் வளர்ந்துட்டு என்னா ஆட்டம் ஆடற, குமார். இப்போ சொல்லு.

குமா: அவன் சொல்றது சரிதான்; ஆயிரம் வழி இருக்கு. இதைப் பாரு. (ஆழப் புகைத்த பிறகு) புதுமை செய்யனும், சோதனை செய்யனும், புதுப்புது சோதனை செய்யனும்.

பால: (இடை மறித்து, குமாரசாமியின் போக்கிலேயே) சோதனை சோதனையா புதுமை செய்யனும்! இப்படியே நீட்டிகிட்டே போ. ஆயிரம் வழிக்கு மேலயே கிடைக்கும். ஊம்... மறந்துட்டேன். c ஒரு Critic ஆச்சே. (ஒரு சிகரெட் எடுக்கிறான்.)

குமா: இந்த ரெண்டும் உனக்கு வேணுமா? அப்போ சரி,  நீயே  சொல்லு,  உன்  chance ஐ  ஏன்  கெடுக்கனும்…

பால: சரி. அந்தத் தீப்பெட்டியைப் போடு. (பிடித்துப் பற்றவைத்துக்கொண்டு) உடைக்கணும்; அதுதான் வழி, உடைக்கிறது தவிர வேற வழியே இல்லே. (இரு பெட்டிகளையும் கீழே போடுகிறான்.)

குமா: திரும்பவுமா? அதான் தெரியுமே. எப்படி உடைக்கிறது அதைச் சொல்டா.

பால: பேசாம என் வழியில சொல்றதுக்கு விடுறா. (வேகமாக ஒரு முறை புகைக்கிறான்) உடைக்கணும்ன்னு சொன்னேன். எதை உடைக்கணும்? மரபை உடைக்கணும், taboos ஐ உடைக்கணும், rotten social values ஐ உடைக்கணும், பயத்தை உடைக்கணும். அப்படி உடைச்சாத்தாண்டா இந்த நாடு உருப்படும், இந்த இலக்கியம் உருப்படும். என்னடா எழுதறாங்க இவங்க. நான் எழுதிக் காட்றேன் பாருங்க. (புகைக்கிறான்.)

சிவ: Social  criticism ? ஆ?

பால: (குமாரசாமியைக் காட்டி) இவன் கிட்டேயிருந்து நீயும் இதைப் புடிச்சிட்டியா? அதைப் பத்தி எனக்குக் கவலையில்ல. ஒரு வழியில பார்த்தா எல்லாம் social criticism தான். நான் சொல்ல வந்தது அது இல்ல; வேற. உடைக்கிறதுக்கு ஒரு வழிதான் இருக்கு. sex. எல்லாத்தையும் உடைக்கணும், உடைச்சி அக்கக்கா பிரிச்சி சரியா ஒட்ட வைக்கணும். நல்ல ஆளுங்கடா, நெஞ்சிலே பயம், மனசிலே பச்சை, ஆனா நாக்கிலே மட்டும் வெள்ளை, எல்லாத்தையும் உடைச்சாகணும். இதுக்கெல்லாம் sex ஐ தவிர வேற வழியே இல்லே. (புகைக்கிறான்.)

சிவ: (இதுவரை புகைத்தவன் இப்போது நிறுத்தி) இப்படித்தான் ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சேன். ஆனா -

குமா: நிராத் சௌத்ரியோட article நல்ல influence பண்ணியிருக்கு, இல்ல சிவஞானம்? Couples தான் காரணம்ன்னு முதல்லே நினைச்சேன். அதுக்கு முன்னாடியே Sex on the Mind, Fear in the heart இருந்திருக்கு.

சிவ: அது மட்டும் என்னடா, குஷ்வந்த்சிங் editor ஆனப்புறம் வந்த எல்லா Weekly யும் influence பண்ணியிருக்கும். Sex இல்லாத Weekly இப்போ ஏது?

குமா: Latest issueல prostitution பத்தி வந்திருக்கே பார்த்தியா? (சிவஞானம் இல்லையென்று தலை அசைத்தபடி விரைவாகப் புகைக்கிறான்) ரொம்ப நல்ல survey; நிச்சயமாப் படிக்கணும்..

பால: இங்கேதான் இருக்கு. குமார் சொன்னதைக் கேட்டதும் சங்க கால prostitutes ஞாபகம் வந்தது. அந்தக் காலத்து ஆளுங்க என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கானுங்க. ஒரு inhibition இல்லே, ஒரு taboo  இல்லே, எல்லாமே naturalஆ free ஆ இருந்திருக்கு. அந்த rich uninhibited sane வாழ்க்கை எங்கடா போச்சு? ரெண்டாயிரம் வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைச்சிட்டானுங்க படுபாவிங்க.

(ஒரு முறை புகைத்துவிட்டு, கீழே போட்டு மிதிக்கிறான், காட்டமாக) இவனுங்க உருப்படவே மாட் டாங்க. உடைக்கிறது இருக்கட்டும், முதல்லே இவனுங்களை உதைக்கணும். Sex ஐ பார்த்து பயப் படுவியா, பயப்படுவியான்னு உதைக்கணும். Sex ஐ பார்த்து பயந்து பயந்து எல்லாத்தையும் கெடுத்து உன்னையும் கெடுத்துக்குவியான்னு உதைக்கணும், பயம் தெளியற வரைக்கும் உதைக்கணும். (ஒரு சிகரெட் எடுத்துக் கொள்கிறான்.)

குமா: (சிகரெட் துண்டை அணைத்தபடி) எழுத்திலியா உண்மையாவா?

பால: எழுத்திலதான். (பற்ற வைக்கிறான்) இங்கே மட்டும் என்னா வாழுது? இந்த எழுத்தாளனுங்க, இவனுங்களும் பயந்து சாகறானுங்க. sexஐ பத்தி எழுதனுமன்னா நடுங்கறான், திணர்றான், பேத்தறான். அப்போல்லாம் இப்படியாடா எழுதினானுங்க? ஒருத்தன் என்ன சொல்ல வைக்கிறான் தலைவியைத் தெரியுமா? ‘என்ன செய்யலாம்’னு தோழி கேட்கறா. அதுக்குப் ‘பொன் செய்யலாம்’னு தலைவி சொல்றா. கபிலனோட அந்தத் துணிச்சல், நேர்மை எவன் கிட்டடா   இப்போ  இருக்கு?

சிவ: சினிமா கவிஞர் எல்லார்கிட்டேயும் இருக்கு. தமிழ் வார்த்தைங்க எல்லாத்துக்கும் இவங்க பச்சை வர்ணம் பூசிட்டாங்க. ஒரு வார்த்தையை விட்டு வைக்கலை.

குமா: ‘பாக்கி ஒன்னேதானுங்க’ன்னு ஒருத்தன் பாடி கிட்டே வாழைப்பழம் விக்க வேண்டியது தான்பாக்கி, மீதியெல்லாம் வந்தாச்சு. ஆனா ஒண்ணுசிவஞானம்; அவங்க கற்பனை வேற யாருக்கும் வராது.

சிவ: அதை விடு. தமிழ் இலக்கியத்திலே இப்போ Sex இல்லன்னு பாலா சொல்ற மாதிரி தெரியுது. எனக்கென்னமோ அதிகமா இருக்குன்னு படுது. நீ என்ன சொல்ற குமார்?

குமா: அதிகமாத்தான் எனக்கும் தோணுது. இன்னொரு விஷயம்; இதை நீங்களும் கவனிச்சிருப்பீங்க. indecent ஆனதைக் கூட decent ஆ சொல்றான் West லே; இங்கே decent ஆனதைக்கூட indecent ஆ ஆக்கிடறான்.

சிவ: Exacty. சினிமாப்பாட்டையும் 50 பைசா கதை களையும் எழுதறவங்களை விடு. Standard Writers ஏன் இப்படிச் செய்யறாங்க. இதைப் பார்க்கறப்ப, அப்படித் தமிழ்லே எழுதவே முடியாதோன்னு பயம்மா இருக்கு. Holy Sinner ஐ தமிழ்லே கற்பனை பண்ணிப் பாரேன். நான் சொல்றது புரியும்.

பால: Thomas Mann எதுக்கு? Maugham எடுத்துக்கோ போதும்.

குமா: விடுங்கப்பா, (புகையை விடுகிறான்) காட்டானுங்க மாதிரி உளறாதீங்க. ஆமா, Sex ல என்னா decent,  indecent?

சிவ: sexல எல்லாமே decent தானா?

குமா: இல்ல, எல்லாமே indecent ஆ?

பால: சும்மா உளறாத, sexல ஏது இந்தப் பிரச்சினை? Sexல indecent indecent! I laugh through the anus.

குமா: what'll you fast through the mouth?

சிவ: (ஒரு சொடுக்குப் போட்டு) பாலா நீ ஒரு கேள்வி கேட்ட, இப்போ அதுக்கொரு பதில் தோணுது. இதைக் கொஞ்சம் சுத்தி வளைச்சித்தான் சொல்லியாகணும்.

பால: அதாவது, வழக்கம் போல. பரவால்ல, சொல்லு. (புகைக்கிறான்.)

சிவ: (எழுந்து உட்கார்ந்துகொண்டு) ஒரு காதலன் இருக்கான். அவனோட காதலின் ஆழத்தைக் காட்றதுக்கு எழுத்தாளன் எத்தனையோ வழியைப் பயன்படுத்தறான். இதில பலதை வள்ளுவன் கையாண்டுட்டான். அதனால வள்ளுவன் கிட்ட இருந்தே ஒரு எடுத்துக்காட்டு தர்றேன். பாலொடு தேன் கலந்த மாதிரி காதலி எச்சில் இருக்குன்னு காதலனைச் சொல்ல வைக்கிறான் ஒரு இடத்துல. இது ஒரு factன்னு நான் நம்பல. இந்த அனுபவம், என்னைப் பொறுத்தவரையிலும், சரியா வரல - இந்தக் குறள் ஞாபகம் - Kiss பண்ணும்போது இருந்தும் கூட. (சிகரெட் பற்ற வைக்கிறான்.)

குமா: இதைப் போய் check பண்ணனுமா? இது யாருக்கும் சரியா வராது.

பால: நானும் இதை ஒத்துக்கொள்றேன் - அதாவது காதலின் ஆழத்தைத் தெரியப்படுத்தற உத்தி என்கிற அளவில  இதை  ஒத்துக்கொள்றேன்.

சிவ: Right (ஒருமுறை புகைத்து) இந்த வர்ணனையைப் பாரு. ‘அவளால் சற்றுநேரத்திற்கு மேல் சிறுநீர் பிரிவதைத் தடுக்க முடியவில்லை. அவனோ அமுதம் அமுதம் என்று அருந்தினான்.’ இது எப்படி இருக்கு?

குமா: எந்த 50 பைசா novelலே இது வருது?

பால: இது indecent ன்னு நீ சொல்ற, இல்லியா?

சிவ: ஆமா, அது மட்டுமில்ல, unhygenic ன்னும் சொல்றேன்.

பால: (விரைவாகப் புகையை ஊதிவிட்டு) எந்த contextல வருது? (சிகரெட்டை   அணைக்கிறான்.)

சிவா: context ஆ! I just made it up. (குஷியோடு புகைக்கிறான்.)

பால: context இல்லாமே என்ன சொல்றது? ஒரு குறிப்பிட்ட contextல இது மாதிரி வெளியீடு தேவைப்படலாம்.

சிவ: அதோட, ஒரு காதலனுக்கு இது மாதிரி கழிவும் தேவைப்படலாம். அதை அவன் bottle bottleஆ பிடிச்சி வைக்கலாம். அப்பறம் குடிக் கிறதுக்காக. (சுவைத்தபடி புகையை இழுக்கிறான்)

குமா: (சிரித்துவிட்டு) Thank god, you don’t write. ஆனால் சிவஞானம், ஒரு விதத்தில பார்த்தா இவன் சொல்றது சரிதான். Couples லே normal ஆ தெரியற வர்ணனை, Nick Carter லே ரொம்ப abnormal ஆ, ஏன் obscene னாவே தெரியுது. இதை மட்டுமாவது நீ ஒத்துக்கணும்.

சிவ: என் வர்ணனை indecentஆ தோணவேண்டியதில்லன்னு சொல்ற.

குமா: இல்ல, என்னைப் பொறுத்தவரையும் அது indecent தான். More than that obscene. Khosla Commission முத்தம் பத்தி சொன்னது ஒரு நல்ல parallel..

பால: அப்படிச் சொல்டா.

சிவ: முத்தத்திலே ஆயிரம் வகை இருக்கு. (புகை விடுகிறான்) படு ஆபாசமான வகையும் இருக்கு. அதையும் காட்டலாமா? எந்த ஆபாசத்துக்கும் எந்த அசிங்கத்துக்கும் ஒரு context கண்டுபிடிக்க முடியும்; முடியாதா?

குமா: உன்னால முடியும். என்னால முடியாது. பாலா வாலே கூட  முடியுமாங்கறது சந்தேகந்தான்.

பால: ஏன்டா முடியாது? இதைவிட ஆழமா என்னாலே எழுத முடியும் - தேவை ஏற்பட்டா.

குமா: இதை விட ஆழமா? ஓ!

பால: ஓ என்னடா ஓ! பீன்னு சொல்லு; ஏன் பயப்படற?

குமா: மலம்- ன்னு கூடச் சொல்லக்கூடாது?

பால: சாதாரணமா அப்படியா சொல்ற?

குமா: இல்லே. வெளிக்குப் போகணுன்னு சொல்வேன்.

பால: சே, அந்தப்பொருளுக்கு என்னடா சொல்லுவ?

குமா: Alright alright. இதையும் எழுதுவியா?

பால: நிச்சயமா. Theatre of the Absurd ல என்னென்ன எழுதறான், என்னென்ன காட்றான், ஏன் நான் மட்டும் எழுதக்கூடாது?

குமா: உண்மைதான். நான் கூட ஒரு French play படிச்சேன். One Act Play. எழுதினவன் பேர் ஞாபகம் வரல, நாடகம் பேரும் மறந்து போச்சி. அதில ஒரு இடத்தில, genitals ல தேள்கொட்டி வீங்கிகிட்டே போவுது. ஆனா, எனக்கொரு பயம், பாலா.

பால: என்ன?

குமா: இந்த மாதிரி எல்லாரும் எழுதிடுவாங்க. ஆனா உண்மையான Absurd Theatre எழுதறதுக்கு ஆள் வேணுமே, of  course நீ எழுதுவ. வேற யாரு?

சிவ: நம்ம புதுக்கவிஞர்களை மறந்துட்டியா, குமார்? (புகைத்துவிட்டு) Absurd theatreக்கு இவங்களைவிட qualified யாரிருக்காங்க? (அணைக்கிறான்.)

குமா: நீயும்   உடைக்கிறியா?

சிவ: நல்லவேளை ஞாபகப்படுத்தின, பாலா. உடைக்கிறது என்னா ஆச்சு?

பால: நீ கதை சொன்னா என்னா ஆகுமோ அதுதான் ஆச்சு. உருப்படியா ஒன்னைப் பேசாதீங்க, tangentலியே போயிட்டிருங்க.

சிவ: சரி, இனிமே உடைக்கிறதையே பேசுவோம். அதுக்கு முன்னாலே - coffee இருக்கா?

பால: flaskலே ரெண்டு cup இருக்கும். மூனா பண்ணிக்கலாம். (எழுந்து உள்ளே போகிறான்.)

சிவ: என்னடா  (மெதுவாக)  பையன்  இதா  இருக்கான்.

குமா: ஆமா  இதாதான்  இருக்கான்.

சிவ: நானும் பார்க்கறேன் நீ இதுல சரியாவே கலந்துக்கல.

குமா: நான் சரியாத்தான் கலந்துகிட்டேன்; நீதான் இன்னும் சரியான moodக்கே வர்ல. அவன் சொல்ற வழி உனக்குக்  கொஞ்சங் கூடப்  பிடிக்கல,  இல்லியா?

சிவ: கொஞ்சங்கூடப் பிடிக்கலன்னு ஒரே அடியாச் சொல்லாதே. இது கூடாதுன்னு நான் சொல்லல. இது மட்டுந்தான்னு சொல்லும் போதுதான் ஒரு மாதிரியா இருக்கு. நீ சொல்லு; ஏன் இதை மட்டும் பயன்படுத்தனும்?

பால: (இடது கையில் 3 கப்களும் வலது கையில் பிளாஸ்க்கும் எடுத்துத் திரும்பி) நான் சொல்றேன். (குமாரசாமியிடம் ஒரு கப் கொடுத்து காபி ஊற்றுகிறான்) sex தாண்டா எல்லாத்துக்கும், basis. அதனால தான். (சிவஞானத்தின் அருகில் சென்று, கப் தந்து,காபி ஊற்றியபடி) உனக்குப் போய் நான் fredeஐ நினைவூட்டணுமா? (நாற்காலியில் அமர்ந்து காபி ஊற்றிக்கொண்டு பிளாஸ்கைக் கீழே வைக்கிறான்.)

சிவ: (பாலச்சந்தரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு) sex கதைங்களுக்கு basis sex தான்னு நல்லா தெரியுது. (ஒருவாய்க் குடிக்கிறான்) ஆனா, எழுதறதுக்கு? இதுக்கும்  அதுதானா? (குடிக்கிறான்.)

பால: (குடிப்பதை நிறுத்தி) சந்தேகமில்லாம.

குமா: ah, the generate impulse (குடித்து முடித்துவிட்ட கப்பைக் கீழே வைக்கிறான்.)

பால: சபாஷ். (குடிக்கிறான்.)

குமா: Or probably the excretory impulse

பால: (கப்பை எடுத்து) உன் criticis - சத்துக்குத்தான் அது. (கப்பை கீழே வைக்கிறான்.)

சிவ: விடுங்கப்பா. (இடது கையால் வாயைத் துடைத்துக்கொண்டே கப்பைக் கீழே வைக்கிறான். ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு) Freud சொல்ற Libido வேற, உன் Sex வேற (பற்ற வைக்கிறான்) இல்லியா? Freud க்கு அப்பறம் எத்தனையோ பேர் அவன் சொன்னதை question பண்ணலியா? Adler ஐ எடுத்துக்கோ. இவன் power தான் basis ன்னு சொல்றான். இந்த ரெண்டுல எது சரி?

குமா: ரெண்டுமே சரிதான். Jungம் இதையேதான் சொல்றான்.

பால: உங்க Adlerஐயும் Jungஐயும் உடைப்பில போடுங்க. Freud கூடவே இருந்தா insignificantடாவேதான் இருந்தாகணுன்னு தெரிஞ்சிக்கிட்டதும் Adler பிரிஞ்சி போனான், போனதும் உருப்படாத theory ஒண்ணையும் சொல்லிட்டான். அப்புறம் Jung ரெண்டு பேருக்கும் இடையிலே வந்து பெரிய ஆளா ஆயிடறான்; Adler ஐயும் பெரிய ஆளா ஆக்கிடறான். ஏன் குமார், இவனுங்க ரெண்டு பேரும் plan  போட்டு  இப்படிச்  செய்திருப்பாங்ளோ?

குமா: My... that’s an idea!

சிவ: (வேகமாகப் புகைத்ததை நிறுத்தி குமாரசாமியிடம்) நீயும் உளரு. (பாலச்சந்தர் பக்கம் பார்த்து) நீ சொல்றபடி Freud சொல்றதே சரியாஇருக்கட்டும். அப்போ, நீ Sex கதைங்க எழுதறத் துக்குக் காரணம் என்ன? Freud சொன்ன - wish - fulfilment -டா நீ?

குமா: பொறுடா, கொஞ்சம், இதைவிட முக்கியமான கேள்வி ஒண்ணு இருக்கு. ஆமா, பாலா, sex கதைங்க எழுதறதுன்னா என்ன?

சிவா: இதுகூடத் தெரியலியா? Havelock Ellis, Stekel, Freud - இவங்க தர்ற Case Histories ஐ படிக்க வேண்டியது. ஒவ்வொண்ணுக்கும் ஒரு கதை எழுத வேண்டியது - அவ்வளவுதான். (புகைக்கிறான்.)

குமா: பேசாம இருடா, நீ சொல்லு, பாலா (பாலா ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்) for example, incest ஐ வச்சி ஒரு கதை எழுதலாம். அது மாதிரியா?

சிவ: எடுக்கும்போதே incestல தொடங்கு. (படுத்துக் கொள்கிறான்.)

பால: (புகையை விட்டு) ஏன் எழுதினா என்ன? இந்தத் தெருவிலேயே incest நடக்கு. ரொம்ப நாளா நடக்கு. அதுலென்ன தப்பு?

சிவ: அதுல ஒன்னும் தப்பு இல்ல. ஒரு குழப்பமும் (புகைத்துவிட்டு) ஒரு பிரச்சினையுந்தான் இருக்கு. யாரை எப்படிக் கூப்பிடறதுங்கற குழப்பம், இதுகூடப் பரவால்ல, ‘யாவரும் கேளிர்’ன்னு இருந் துடலாம். ஆனா இந்தப் பிரச்சனைதான் கொஞ்சம் serious ஆனது. Eugenics படி பார்த்தா, இதனால நல்ல இன வளர்ச்சி இருக்காது. (புகைக்கிறான்.)

பால: அதனால என்ன contraceptives பயன்படுத்தினாப் போவுது. (ஆழமாகப் புகையிழுக்கிறான்)

குமா: ஒரு சந்தேகம், fornication, adultery இரண்டையும் eugenics OKay பண்ணும். அப்போ இதைப் பற்றி எழுதலாமா?

சிவ: (எழுந்து உட்கார்ந்து) இந்த ரெண்டையும் எழுதறது எப்படி மரபை உடைக்கிறதாகும்? முந்தி யெல்லாம், (புகைத்துவிட்டு) ஒரு decadeக்கு முந்தி கூட , upper classலியும் lower class லியுந்தான் இது இருந்தது. ஆனா இப்போ middle class லே கூடப் பரவத் தொடங்கிடிச்சி. அப்போ, இதிலே உடைக்கறதுக்கு என்ன இருக்கு? (ஒருமுறை புகைத்துவிட்டு அணைக்கிறான்.) குமா: அந்தக் கட்டுரையை நீ படிக்கனும் - Prostitution பத்தி Weeklyயில் வந்ததைச் சொல்றேன், Respect-able Prostitutesன்னு ஒரு வகையை Jessica Jacob சொல்றா . Nymphomaniacs, frustrated wives, thrill-seeking collegians, working girls இப்ப டிப் பலரை இதில் அடக்கறா. இவங்கல்லாம் பணம் வாங்கறாங்க , அதனால் Prostitutes. பணம் வாங்கலன்னா இந்தப் பேர் தரமுடியாது, இல்லியா? நீ சொல்றதை இது Support பண்ற மாதிரி எனக்குப் படுது.

சிவ: Correct அப்போ நீ எந்தச் சமூக மரபை உடைக்கிறே? இதெல்லாம் இலக்கியத்திலயும் இருக்கு , புராணத்திலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இருக்கு. ராமாயணம் , அகல்யா விவகாரம், புதுமைப்பித்தன் சாபவிமோசனம்' கு.ப.ரா. சிறிது வெளிச்சம்', லா.ச. ரா. கீதாரி யெல்லாம் adulteryதான். ஜானகிராமன் மோகமுள்'ல adultery மட்டுமில்ல formi-cationனும் இருக்கு . அப்போ இலக்கிய மரபையும் நீ உடைக்கல , நீ உடைக்கிறதெல்லாம் உன் குட்டைத்தான். குமா: என்ன சொல்லப்போற?

பால: (புகைத்துக்கொண்டே) நீயே சொல்லு , நீதானே இதைக் கிளப்பினே. இதைத்தான் எழுதப்போறேன்னு நான் சொல்லக் கிடையாது.

குமா : Freudஐ விடறா சிவஞானம். சும்மா Freudஐ காட்டி blackmail பண்ணாதே. எனக்கு இன்னொரு சந்தேகம்.

பால : (சிகரெட்டை எடுத்துவிட்டு) நீ சந்தேகம்ன்னாவே பயம்மா இருக்கு.

குமா: உன் பக்கந்தான் பேசப் போறேன். சிவஞானம் இப்போ formல இருக்கான். விடக் கூடாது.

சிவ: (சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு ) என்ன சந்தேகம்?

குமா: Masturbation எடுத்துக்குவோம். இது ஒன்னும் ரொம்ப அசாதாரணமான பழக்கம் இல்ல. ஒரு காலத்திலே நாமெல்லாம் செய்துதான் இருக்கோம்.

சிவ: (புகையை விட்டபடி) Agreed.

பால : அந்த chance (சிகரெட்டை எடுத்தபடி) எனக்குக் கிடைக்கல. என்னை விடு. (அதைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்.)

குமா: உண்மையாவா?

பால : கைமுட்டி அடிக்கலேன்னா கூட அடிச்சதா சொல்லணுமா, உன் பாராட்டுக்காக? குமா: சொல்லவேணாம். சரி. இது சமூகத்திலே இருக்குன்னு தெரியுது. அதனால் - ஹா, மறந்துட் டேன். கலைக்கதிர்ல ஒரு கட்டுரையில் நம்ம தா.ஏ. சண்முகம் இதைப் பற்றிச் சொல்றார். இந்தக் கைமுட்டிப் பழக்கம் குமரப் பருவத்தினரிடம் ஏற்படுகிற இயல்பான பால் முதிர்ச்சியின் விளைவுதான்னு குறிப்பு தர்றார். அதனால் ஒரு எழுத்தாளன் சிரமப்பட்டு இதைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய தில்ல. இது கூடாதுங்கற மரபையும் உடைக்க வேண்டிய அவசியமில்ல.

பால : இதான் என் பக்கம் பேசற லட்சணமா?

குமா: கொஞ்சம் பொறு. நான் சொல்ல வந்தது வேற. இந்தப் பழக்கத்தைப் பத்தி எந்த இலக்கியமும் இருக் கிறதா எனக்குத் தெரியல - தக்ஷிணாமூர்த்தி எழுதின 'நங்கையே நமக்குதவி கவிதையைத் தவிர. அதனால், இதப்பத்தி எழுதாம இருக்கிற மரபை உடைக்கிறதுக்காக ஒருத்தன் இப்படி எழுதலாம். கதாநாயகன் கல்யாணமே வேண்டான்னு சொல்றான். ஆனா அப்பா அம்மா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. முதலிரவு, கதாநாயகி ஏமாந்து போறா. அடுத்து வர்ற பல இரவும் இப்படியே . ஒரு நாள் தற்செயலாகாரணம் கண்டுபிடிக்கிறா. இப்படி ஒரு Suspense கதை ஒருத்தன் எழுதறான். இதை நீ Sex கதைன்னு ஒத்துக்குவியா?

பால் : கதை இல்ல இது; Case History.

சிவ : அதுகூட இல்ல. (ஒருமுறை புகையை இழுத்து விட்டு) இது literary masturbation. குமா: அவசரப்படாதிங்க. இதில் ஏராளமா Sex ஐ புகுத்த முடியும். முதலிரவை அவ கற்பனை பண்றது அருமையான சமயம். அப்பறம் அவ அவனைக் கையும் களவுமா பார்க்கற இடம்; இதை மட்டும் ஏழெட்டுப் பக்கம் rumming commentary மாதிரி வர்ணிக்கலாம் இல்லையா? சிவ: இப்படி வர்ணிச்சிட்டா sex ஆயிடுமா? குமா: ஆகாதா? வேணுன்னே நீ இப்படிப் பேசற.

சிவ : Alright. அதனாலேயே அது நல்ல கதை ஆகாது. (புகைக்கிறான்.)

குமா: நல்ல கதை ஆகாதுன்னா ?

பால : ஒரு மேல்நாட்டுக்காரன் எழுதணும், அவ்வளவு தான், வேற ஒன்னும் வேண்டியதில்ல. சிவ: பாலா ரொம்ப எரிச்சலா இருக்கான். (ஒரு முறை புகைத்துவிட்டு) psychological probing இருக்கணும்; intensive Studyயா அமையணும்; வெறும் வர்ணனையோட நிற்காம் ஆழமாப் போகணும், அப்போதான் நல்ல கதையாகும். (புகைக்கிறான், நிம்மதியாக.)

குமா : I agree with you. பால : அவன் formulate பண்ணிட்டான். நீ approve பண்ணிட்டே , அப்புறம் என்ன? ஓ எழுத்தாளர்களே, ஆறே மாதத்தில் நல்ல கதை எழுதவேண்டுமா? இவர்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

சிவ: நீ இப்போ receptive moodலே இல்ல. இதைக் கேளு. நான் சொல்றது புரியும். அகல்யாகதையை எடுத்துக்கோ . (ஒருமுறை மெதுவாகப் புகைத்துவிட்டு) கௌதமர் உருவத்திலே இந்திரன் அவகிட்டே வர்றான். அவ respond பண்றா . நேரம் போகப் போக அவளுக்குச் சந்தேகம் வருது. தொட்ட இடம், தொடற் பாணி, தர்ற அழுத்தம் ஒவ்வொண்ணும் இவன் வேற ஆள்ன்னு காட்டிக் கொடுக்குது. இதை யெல்லாம் பிரமாதமா வர்ணிக்கலாம். கொஞ்ச நேரம் போகுது. அவன் அனுபவ நுணுக்கம் அவ சந்தேகத்தை நிச்சயமாக்குது. உடனே தப்பிக்கப் பார்க்கிறா. ஆனா இந்திரன் பலத்துக்கு முன்னே அவளால் ஒன்னும் செய்யமுடியல . கல் மாதிரி கிடக்கிறா. (ஒருமுறை புகைத்து விட்டு அணைக்கிறான்) அதாவது அவகெட்டுப் போகலே. இந்திரன் எல்லா techniquesஐயும் காட்டிப் பார்க்கிறான். இதுவும் வர்ணனை இடந்தான். அப்பவும் அவ கல்லாவே இருக்கா. ஆனா ejaculation சமயத்தில் அவ உடம்பு மட்டும் தவிர்க்க முடியாத சிலிர்ப்பை உணருது; அப்போ , ஒரு கணந்தான், அவ மனம் மலருது. இதுவும் வர்ணனை இடம். அதனாலே rapeல ஆரம்பிச்சது adulteryயில் முடியுது. இந்தக் கதையில் நீ எல்லா physical detailsம் தரலாம்; அதே சமயத்தில் ஒரு clinical studyயாவும் ஆக்கலாம்.

பால: நல்லாகதை சொல்ற. இன்னும் ஒன்னு செய்; இதை நீயே எழுதிடேன்.

சிவ: ஒரு great story எழுதறத்துக்கு chance கொடுத்தா இவன் என்ன சொல்றான் பார்ரா. பால: நானே என் கதைக்கி plot தேடிக்கிறேன். நீ உன் வேலையைப் பாரு.

சிவ: அப்போ நீ உன் கதையைப் படி. (படுக்கிறான்.)

குமா: ஆமா, அதை நான் மறந்தே போயிட்டேன். இவன் என்ன செய்யப் போறான்னு தெரிஞ்சிக்க இதான் சரியான வழி. படிடா, பாலா. பால : சிவஞானம் சொன்ன கதையைக் கேட்டப்புறம் இதைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கு. நாலே வாக்கியந்தான் எழுதியிருக்கேன். குமா: அதனாலே என்ன, சும்மா படி. சிகரெட்டைப் போடு. (சிகரெட் மற்றும் தீப்பெட்டியைப் பிடித்துப் பற்ற வைத்துக்கொண்டே கேட்கிறான்).

பால : (பாக்கட்டிலிருந்து தாளை எடுத்துப் படிக்கிறான்) 'ஓர் ஆளின் மூக்கைப் பார்த்து அவன் அம்மா முலையின் அளவைச் சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியும் என்று நினைத்தான் சேகர்.' சிவ : அதானே கேட்டேன்; பாலாகதையிலே முன்னாடியே முலை வர்லேன்னா எப்படி? இதை வச்சித்தானே மரபையே உடைச்சாகணும்.

குமா: நீயுமா? இதேதான் Tristram Shandyயிலே வருது.

பால : அந்த Shandyயை நான் பார்த்தது கூட இல்ல. அடுத்த para. (படிக்கிறான்) அவன் அண்ணி பால் கொடுப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். முலைக் கதுப்பில் மூக்கு அழுந்த முட்டி முட்டி பால் குடித்தது குழந்தை. தனக்கு ஒரு பக்கம் கூப்பிட்டுத் தரமாட்டாளா என்று எண்ணிக்கொண்டே ஒரு சிகரெட் பற்றவைத்தான்.' அவ்வளவுதான். குமா: (இருமுறை புகைத்துவிட்டு) Sexual stimulation வர்றதுக்குச் சரியான நேரமாchoose பண்ணி யிருக்கே. பால் குடிக்கிறதையும் fineஆ observe பண்ணி சொல்லி யிருக்க. அவன் cigarette பத்தவைக்கிறது தான் top. Cigarette ஒரு nipple substitute என்கிற விஷயத்தை அருமையா பயன்படுத்திட்டே, என்ன சிவஞானம்? சிவ: (எழுந்து கொண்டே) இது அண்ணி கிட்ட போற கதை. (உட்கார்ந்து கொள்கிறான்) நீல பத்மநாபன் எழுதின சண்டையும் சமாதானமும் ஞாபகம் இருக்கா? அது தம்பி மனைவிகிட்ட போற கதை. இதுக்கு ராமாயணத்திலேயே precedent இருக்கு. வாலி விவகாரம். இந்த ரெண்டும் ரொம்ப rare இல்லே; rareஆ இருந்தா அண்ணன் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி பத்தி பழமொழி ஏற்பட்டிருக்காது. இதிலே இவன் என்ன உடைக்கிறான்னு எனக்குத் தெரியல. (சிகரெட் ஒன்று பற்ற வைத்துக் கையில் பிடித்துக்கொண்டு ) எங்கே பார்த்தாலும் இதே பொழப்பாப் போச்சி. ஐராவதம் எழுதின ஒரு வேளை' யைப் பாரு, லா.ச. ரா. கதை மாதிரி இதுவும் நண்பன் மனைவிகிட்ட போற கதை. கிருஷ்ணமூர்த்தி எழுதின 'ஓர் இரவின் பிற்பகுதியில் மாமிகிட்ட போற கதை, ஒரு வகையில் பார்த்தா, அருள் எழுதின 'பேரம்?' வியாபாரி மனைவி கிட்ட போற கதை. இதெல்லாம் பரவலா இருக்குன்னு சொல்லாவிட்டாலும்கூடச் சமூகத்தில் இல்லவே இல்லேன்னு சொல்ல முடியாது . ராமகிருஷ்ணன் எழுதின பின்கட்டு ' cousins கிட்ட போற கதை. மு.வ. எழுதின நெஞ்சில் ஓர் முள் அண்ணன் தங்கை காதல் கதை . கருணாநிதி எழுதின தப்பிவிட்டார்கள் அப்பா மக கிட்ட போற கதை. இந்த Electra complex பிரம்மா - பத்மாகதையிலேயே தொடங்கிடுது. அதே மாதிரி Oedipus complex விநாயகர் கிட்டேய தொடங்குது. இப்போ , 'ரிஷிமூலத்திலே இதைத்தான் ஜெயகாந்தனும் deal பண்றதா சொல்லலாம். இதெல்லாம் நடக்கிறதே இல்லேன்னு சத்தியம் பண்ண முடியாது. பாலாவே நடக்குதுன்னு சொல்றான். மாமா மருமக்கிட்ட போற கதையை நான் இன்னும் படிக்கல. மாபஸான் ஒரு கதை எழுதியிருக்கான். இது அரிய வழக்கமில்ல; பல சின்ன ஊர்ல இது பரவலா இருக்கு. மாமி மருமகன்கிட்டே போற கதையையும் நான் இன்னும் படிக்கல , BelAmiயிலே இது வருதுன்னு நினைக்கிறேன். இது எவ்வளவு தூரம் பரவியிருக்குன்னு எனக்குத் தெரியாது. Upper classல ஒரு சமயம் இது நடக்கலாம்; நடக்கிறதுக்கு வேண்டிய சூழல் அங்கே நிறைய இருக்கு. இந்த ரெண்டையும் கூடத் தமிழ்ல யாராவது எழுதி இருப்பாங்க. ஆனா நிச்சயமா யாரும் எழுதியிருக்க முடியாத விஷயம் ரெண்டு இருக்கு. பாட்டி பேரன் கதை. தாத்தா பேத்தி கதை. இந்த ரெண்டையும் பாலா எழுதலாம். வேணுன்னா . (புகைக்கத் தொடங்குகிறான்.) குமா: கர்மம் கர்மம் (சிகரெட்டை எறிந்து மிதிக்கிறான்.) பால : இவன் புத்தியே இப்படித்தாண்டா.

சிவ: (புகைப்பதை நிறுத்தி) மரபை உடைக்கிறதுக்கு chance கொடுக்கும் போதெல்லாம் ஏன் பின்வாங்கற?

பால : முதல்ல அது முடியுமான்னு பார்றா. குமா: பேசாம இருடா. இப்ப இருக்கிற moodல அவன் வயசுக் கணக்கெல்லாம் போடுவான், விடு. சிவ: (சிகரெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு) Sex பிரச்சினையை analyse பண்ணப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அப்போதானே என்ன செய்யனுன்னு தெரியும். இதுவரைக்கும் incest, adultery, fornication பார்த்தோம். அப்புறம் என்ன? Hemosexuality. இதுக்கு ராமகிருஷ்ணன் எழுதின 'கோணல்கள் இருக்கு. சரஸ்வதி பத்திரிகையிலே ஒரு lesbian கதை வந்ததா ஞாபகம். இந்த ரெண்டும் விடுதியிலே வளர்ர விஷயங்கள். Prostitution குறுந்தொகையிலேயே வருது. இதுதான் World's Second Profession. இப்போ இது எவ்வளவு பரவியிருக்குன்னு அந்த அம்மா சொல்லிட்டாங்க, இல்லையா? Satyriasisக்கு அருணகிரிநாதர் இருக்கார். பல சினிமாவில், கதையில் வர்ற villains இருக்கிறாங்க ! Nymphomaniaவுக்குச் சூர்ப்பனகையைச் சொல்லலாம். முடியில் பெண்களை ஒளிச்சி வைக்கிற சாமியாருங்க, சேலையில் ஆண்களை ஒளிச்சு வைக்கிற பெண்ணுங்க பழைய புராணக் கதையில் நிறைய வர்றாங்க. இப்போ இந்த modern ageல இந்த ரெண்டும் ஏனோ அதிகமாயிட்டே போகுது. (ஒரு முறை புகைத்துவிட்டு அணைக்கிறான்) உன் பேச்சும் அதிகமாயிட்டே போகுது. இதெல்லாம் நீ சொல்லித்தாண்டா எங்களுக்குத் தெரியணும்! சிவ: இதைவிட அதிகமாகவே உங்களுக்குத் தெரியும், ஒத்துக்கறேன். ஆனா நீ உன் eureka moodலே இதையெல்லாம் மறந்துட்டேன்னு நினைக்கறேன். நீ மறக்காம சிந்தனை பண்ணி முடிவுக்கு வந்திருந்தா, என்னைப் பேசவே விட்டிருக்கமாட்டே, ஒவ்வொரு இடத்திலேயும் மறுத்துப் பேசியிருப்ப. பால : இவன் formல தான் இருக்கான் குமார். ஆனா எல்லாத்தையும் போட்டு குழம்பிட்டான்.

சிவ: இன்னும் கொஞ்சம் குழப்பம் மீதியிருக்கு , அவசரப்படாதே.

குமா: ஆமா, இன்னும் மீதி இருக்கு. திரௌபதி Polyandry, சீவகன் Polygamy, ராமன் Monogamyன்னு மீதி.

சிவ: இந்த மூணுமே சாதாரண விஷயம். இதில்லாம வேற இருக்கு. (சிகரெட் பற்ற வைக்கிறான்)

குமா: வேற என்னா? ஒருத்தனைப் பல பெண்கள் காதலிக்கிறது இருக்கு; அகிலனோட பாவைவிளக்கு'. ஒருத்தியைப் பல பேர் துரத்தறது இருக்கு. எத்தனையோகதை இருக்கு. வயசு வந்த பெண்கள் சின்னப் பசங்களைத் தேடறது இருக்கு. கந்தசாமியோட 'தேஜ்பூரிலிருந்து. சிவ: (குமாரசாமியைப் பார்த்து புகைத்துக்கொண்டே), வேற ஒன்னு. ரொம்ப முக்கியமானது. கொஞ்சம் think பண்ணு. வந்துடும். குமா: (சற்றுச் சிந்திக்கிறான்; பிறகு) Zoophilia!

பால : My!

சிவ: Exactly (ஒருமுறை புகையை இழுத்த பிறகு சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு) இது ஒன்னே போதும், பாலா. வேற ஒன்னும் வேணாம். இதுக்கு மட்டும் ஆயிரம் கதை எழுதலாம். இதோட ஆணும் பெண்ணும் masturbationனுக்காகப் பயன்படுத்தறப் பொருள்களையும் fetish ஐயும் சேர்த்தா - அடேயப்பா! (திருப்தியுடன் புகைக்கிறான்.) குமா: (இருவரையும் பார்த்த பிறகு ஒரு தடவை கனைத்துவிட்டு) நாம் இவ்வளவு நேரம் பேசியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. Sex வழியாக மரபை உடைப்பது புதியதல்ல என்று பொதுவாகக் கூறலாம். இதில் ஒருசில வகைகளைத்தான் இன்னும் யாரும் பயன் படுத்தவில்லை. சரிதானே?

சிவ: (புகைப்பதை நிறுத்தாமல்) அதிலென்ன சந்தேகம்? (படுக்கிறான்.)

குமா: நீ என்ன சொல்ற பாலா?

பால : உன்னை உதைக்கணுன்னு சொல்றேன். நீதான் இந்தப் பேச்சையே - கெடுத்தே; அவனைத் திரும்பத் திரும்பத் தூண்டிவிட்டே. நீயும் இவனும் சேர்ந்து இருக்கும் போது எந்தச் சனியனையும் பேசக் கூடாதப்பா. (சற்று நிறுத்தி ) ஏன்டா, ரெண்டு பேரும் சேர்ந்து analyse பண்றிங்களா? ஒருத்தன் ரெண்டு பேர் உடைச்சா போதுமாடா? எல்லாரும் உடைக்கணும். எல்லாரும் உடைக்கிற மாதிரி செய்யணும். இதுக்குத்தான் நான் வழிகாட்டப் போறேன். உங்களைப் பத்தி நான் கவலைப்படவேயில்லே, நீங்க என்ன வேணுன்னாலும் உளருங்க.

குமா: சரி, தாராளமா வழிகாட்டு. அதுக்கு முன்னால் ஒரு உதவி செய்.

பால : என்னா ?

குமா: ஒரு கைலி குடு, வெளிக்கு வருது. (சிகரெட் பற்ற வைக்கிறான்.) பால : கைலி bedroomல இருக்கு . (குமாரசாமி எழுகிறான்.) சீக்கிரம் வா; நானும் போகணும். (எழுகிறான்.)

குமா: அப்போ நீ போ. (உட்காருகிறான்) என்னாலே சீக்கிரம் வர முடியாது.

பால; (அருகில் வந்து கொண்டே ) Alright.

குமா: அதுக்குள்ள நான் இதைக் கூட்டிடட்டுமா? பால : (குனிந்து சிகரெட் தீப்பெட்டி எடுத்தபடி) நீ ஒன்னும் கூட்ட வேணாம், நானே கூட்டிக்கிறேன். (நிமிர்கிறான்) நீ உன் வேலையைப் பாரு. (உள்ளே விரைந்து மறைகிறான்.)

குமாரசாமி ஏதோ சொல்வதற்கு வாயெடுக்கிறான்; சிவஞானம் படுத்துக்கொண்டு கண்மூடியபடி புகைப்பதைப் பார்த்துவிட்டு, நன்றாகச் சாய்ந்து கண் மூடிக்கொண்டு புகைக்கத் தொடங்குகிறான்.

திரை விழுகிறது.

மொழியாக்கக் கட்டுரை

இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த பிரமிக்க வைக்கும் ஜெர்மென் மொழி படைப்பாளர்கள் (வான் கதே, பெர்டோல்ட் ப்ரக்ட், நீட்ஷே, ஹெர்மேன் ஹெஸ்ஸே, ஹென்ரிக் ஹெய்ன், காட் ஃபிரைட் பென், தாமஸ் மன்.) மற்றும் அறிவுஜீவுகளில் அதீதமான காஸ்மொபொலிட்டன்தன்மை கொண்டவராய் இருந்தவர் ஆஸ்த்ரிய பொஹீமியக் கவிஞர் ரைனர் மரியா ரில்கே (1875-1926).

ஒருவேளை உலகியல் தன்மைகளில் அவருக்கு இணையாக இருந்தவரெனச் சொல்வதென்றால் அவரது நண்பர் ஸ்டெஃபென் ஸ்வெய்க்-ஐ சொல்ல முடியும்.

ரில்கே ஆஸ்த்ரிய+ ஹங்கேரியக் கவிஞராக வகைப்படுத்தப்பட்டாலும் அவரை நாம் ஜெர்மன் இலக்கியத்தில்தான் சேர்க்கிறோம். காரணம் அவர் போலிஷ் மொழியிலோ அல்லது ஹங்கேரிய மொழியிலோ தன் படைப்புகளை எழுதவில்லை.

நவீனத்துவ இயக்கத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் ரில்கே ஆற்றிய பங்கு தனித்துவம் மிக்கது.

அவரை அமெரிக்க + ஆங்கில இலக்கிய ஆளுமைகளில் ட்டி.எஸ்.எலியட்டுக்கும், ஃபிரெஞ்சுக் கவிஞர்களில் பால் வெலேரிக்கும், ஐரிஷ் கவிஞர்களில் ஏட்சுக்கும் இணையான சாதனையாளர் என்று ஒப்பிட்டுச் சொல்லலாம்.

அவரது படைப்புகள் மூன்று வேறுபட்ட கலை வகைமைகளில் இன்றியமையாதவை:

1. ஓவியம்.

2. தத்துவம்.

3. மதம்.

ஓவியர் செஸானின் கலைக்கும் அவரது சுயத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது ரில்கே எழுதிய வரி: “செஸான் தன் கலையுடன் இணைந்திருக்கும் நிலையானது ஒரு மறைஞானி தன் கடவுளுடன் இணைந்திருப்பதற்குச் சமமானது”

ரில்கேவின் படைப்புகள் தொடர்ந்து நவீன வாசகர்களை வசீகரித்துக்கொண்டே இருப்பது இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம்.

தற்போது அதிகமாக மொழிபெயர்க்கப்படும் ஒரு ஜெர்மன் கவிஞர் ரில்கே தான்.

இந்த உலகெங்கிலும் உள்ள காண் கலைஞர்களுக்கு உந்துதலாய் அமைந்தவர் அவர்.

அவரதுபடைப்புகள் சாஸ்த்ரீய மற்றும் பாப் இசைக்கலைஞர்களால் இசையாக மாற்றப்பட்டுள்ளன.

ரில்கேவைப் பற்றிப் பேசுவதென்பது உலக இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்குச் சமானமாகும்.

வடக்கு ஆப்பிரிக்காவுக்கு ரில்கே 1911இல் மேற்கொண்ட பயணத்தைத் தவிர அவரது உலகியல் அனுபவம் ஆங்கிலோ சாக்ஸன் பிரதேச எல்லைகளை உறுதியாகத் தவிர்த்தது.

ஆங்கிலேயர்கள் மற்றும் அமெரிக்கர்களின் முனைமழுங்கிய லோகாதாயத் தன்மைகள் குறித்து அவரது வாழ்வின் இறுதிவரை சந்தேகம் கொண்டிருந்தார்.

ஒரு கவிஞன் என்ற முறையில் அவரது பார்வை சர்வதேசீயம் சார்ந்தது.

பிற மற்றும் அந்நிய கலாச்சாரங்களைக் குறித்துத் திறந்த மனம் கொண்டவராய் இருந்தார்.

ரில்கே வாழ்ந்த வாழ்க்கை பிரத்யேகமான நாடோடித்தன்மைமிக்கது.வறுமை நிறைந்தது.

கவிதை குறித்து அவர் கொண்டிருந்த அணுகல்களில் இருந்த அப்பூதிநெறி சம்பிரதாய மதவாத நம்பிக்கைளுக்கு அப்பால் நிகழ்ந்தது.

இந்தநூற்றாண்டின் முதல் கவிதை நாவல் என்று சொல்லக் கூடிய (Notebooks of Malte Laurids Brigge) ஒரு நாவலை எழுதிய பெருமை அவருக்கு உரியது.

ஓவியத்துறைக்கும் அவருக்கும் இருந்த உறவு அபாரமானது.

இம்ப்ரஷனிச ஓவியர் செஸானின் ஓவியங்கள் குறித்து அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ஓர் ஓவியர் எழுதியிருக்க வேண்டியவை என்பதான புரிந்து கொள்ளல் மிக்கது.

மேலும் பாரிஸ் நகர வாழ்க்கையின் சொகுசு கானல்நீர் போன்றது என்பதை இடையீடின்றி நேரடியாக அனுபவப்பட்டுப் பாரிஸை விமர்சித்தார்.

ஏறத்தாழ 10 வருட காலங்களுக்குப் பாரிஸ் நகரமே அவருக்குத் தலையிடம் என்று ஆனதை நாம் மறந்து விடக்கூடாது.

நாம் ரில்கேவை அவரது கவிதைகளுக்காக, உரைநடைக்காக, நாவலுக்காக, ஆயிரக்கணக்கில் எழுதப்பட்ட கடிதங்களுக்காக மட்டும் படிப்பதில்லை.

நம் பார்வையில் அவரது வாழ்க்கையானது ஒரு நவீனகலைஞனின் வாழ்வையும் இருப்பையும் எடுத்துகாட்டுவதாகவும், பிடிவாதமான அழகியல் தேடலாளராகவும் அவர் இருப்பதால்தான் இன்றும் வாசிக்கிறோம்.

ஹேப்ஸ்பர்க் ராஜ்ஜியத்தில் பிரதானமாய்ப் போலந்து மொழி பேசப்படும் விளிம்பெல்லையில் பிராக் நகரில் வீடற்ற ஏழைக்கவிஞனாய்ப் பிறந்தார் ரில்கே.

ரில்கே அவரது பாரம்பரியம் என்ற ஒன்றை அவரே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

அவர் பிரபுக்கள் பாரம்பரியத்திலிருந்து வந்ததாகக் கோரினாலும் அது சந்தேகத்திற்கு இடமானதாய் இருந்தது.

ஜெர்மன் இலக்கியப் பாரம்பரியத்தில் நீண்ட நெடுங்காலமாய் ஒரு மகா கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் என்கிற அந்தஸ்தைப் பெற்று வந்திருப்பவர் வுல்ஃப்கேங் வான் கதே மட்டுமே.

தவிர அவர் ஒரு கருத்தியலான மானுடப் பிறவியாகவும் கருதப்பட்டவர்.

பூர்ஷ்வா சமூகத்தின் மத்தியில் மதிப்புமிக்க அறிவார்ந்த சாதனையாளராக நின்றவர். அவரிடம் ஒரு விஞ்ஞானியின் தேடல் இருந்தது குறித்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பேர்ப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் வருபவர்தான் ரில்கே.

ஆனால் மிக வித்தியாசமான முறைகளில். ஒரு ஏகாந்தி, உள்மன யாத்திரைகளில் மூழ்கிப் போகிறவர். வாழ்க்கையின் பிற்பகுதியில் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிய அக்கறை கூட அற்றவராய் இருந்தார்.

அவரது குறுகிய வாழ்க்கையின் இறுதிவரை சுவைத்திற வல்லுநர்களின் சிறிய குழுக்களுக்கு அப்பால் அவர் பிரசித்தமாய் இருக்கவில்லை.

கதேவைப் போல ஒரு அமைச்சராகவோ, ஏட்ஸைப் போல ஒரு செனேட்டராகவோ சென் ஜான் பெர்ஸ் (ஃபிரான்சின் நோபல் பரிசு பெற்ற கவிஞர்) ஐப் போல ஒரு அயலகத் தூதுவராகவோ இருக்கவில்லை.

ஆனால் அவர் அரச குடும்பத்தவர்களின் உடனிருப்பை அனுபவித்தார். ஆனால் எந்தச்சபையிலும் அல்ல. தனிநபர்களாய் மட்டுமே அவர்களைச் சந்திக்க இயன்றது.

கற்பனையானது ஒரு மத்தியகால ஐரோப்பாவின் வண்ணமிகு எச்சங்களாய்த்தான் அவர் அந்தக் கோமகள்களைக் கண்டார்.

தர்ன் அண்ட் டேக்ஸிஸ் குடும்பத்திற்குச் சொந்தமான டியூனோ கோட்டை பல காரணங்களுக்காக இலக்கிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது.

முதல் உலகப் போர் சமயத்தில் அது அழிவுற்று மீண்டும் கட்டப்பட்டது. அவருக்குத் தெரிந்த அந்த அரச கும்பத்தினர் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவர்கள்.

அவர் காலத்தில் தாக்கம் மிகுந்த எந்த ஒரு அரசியல்வாதியும் ரில்கேவை சந்திக்க விரும்பி இருக்கமாட்டான்.

லெனினையும் ரில்கேவையும் நாம் ஒரு சந்திப்பில் இருப்பதாகக் கற்பனை செய்ய முடியுமா?

ஆனால் ஃபிரெஞ்சுக் கவிஞர் பால்வெலேரி ரில்கேவின் நண்பராய் இருந்தார். வெலேரியின் கவிதைகளை ரில்கே ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.

நகரச் சந்தடிகளால் எழுத முடியாதிருந்த ரில்கேவுக்கு அட்ரியாட்டிக் கடற்கரையிலிருந்த டியூனோகோட்டையில் ஒரு வருடம் தனிமையில் வாழ அனுமதி வழங்கினார் மேரி வான் தர்ன் டேக்ஸிஸ்.

குறியீட்டு அளவிலான ரில்கேவின் இருப்புநிலை அந்தக் காலகட்டத்தின் புற சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுடன் தொடர்பில்லாதது.

கதேவைப்போலன்றி ரில்கே அவரது காலத்தின் சக்திமிக்க ஆள் இல்லை. சொல்லப் போனால் அவர் வரலாற்றுப்பக்கங்களின் மார்ஜினில் இருந்த ஒரு கேள்விக்குறியாக இருந்தார்.

எதிர்+நவீனத்துவவாதிகளின் மத்தியில் நவீனத்துவ இயக்கத்தில் தனித்து நின்றார்.

ஆனால் அவரது கருத்துருவங்களை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையாக ஆக்கவில்லை.

அவர் ஒரு கவிஞர், ஒரு தத்துவம் சார்ந்த பத்திரிகையாளர் இல்லை.

இசைக் கலைஞர் ஷோப்பாங்கைப் பற்றி ஜெர்மன் கவிஞர் காட்ஃபிரைட் பென் இன் தன் கவிதையில் சித்தரித்தது போலத் தோன்றினார்.

அவருக்குள் நிலவிய உள்வய ஒழுங்குகள், வாழ்க்கையைப் பற்றிய ஒழுங்கு குறித்த சிந்தனை மற்றும் அவர் செய்த சில தியாகங்கள் நமக்கு உவப்பாய் இருக்கின்றன.

அவரது கவிதைகளின் ஊடாய் அவற்றின் முகத்திரைகளை ஊடுருவி நாம் கலைஞன்+ கவிஞனைப் பார்க்க முடியும்.

அதிகாரபூர்வமான வெளிப்பாட்டுக்கு எதிராக அவர் இந்த நவீன யுகத்தின் மெல்லிய கிசுகிசுப்பாகவும் ஒரு ரகசியக் குரலாகவும் இருந்தார்.

அவரது பயணங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஃபிரெஞ்சு சிற்பியாகக் கருதப்படும் ஹோதானிடமிருந்து அவர்கற்றுக்கொள்வதற்கு விருப்பத்துடன் இருந்தது, மேலும் ஓவியர் செஸானிடமிருந்து கற்றது மற்றும் ஒரு இளம் கவிஞருக்கு கவிதை என்பது என்ன என்பதைச் சொல்லிக் கொடுக்கப் பொறுமையுடன் இருந்தது போன்றவை நம் மனதிலிருந்து நீங்கி விடாதவை.

ஒரு தசாப்த காலத் தடையீடுகளற்ற படைப்பாக்கத்திற்குப் பின் அவர் Notebooks of Malte Laurids Brigge என்ற கவிதை நாவலின் பக்கமாய் ஈர்க்கப்பட்டார்.

இந்த நாவல் எழுதிய காலத்தில் அவருள் சுய சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்து கிடந்தன.

இந்த நாவல் 1910ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த வெளியீட்டுக்குப் பிறகு திசையற்றும் வாழ்க்கையை வாழ்வதில் களைத்துப் போனவராயும்இருந்தார்.

புதிதாய்த் தொடங்கவிருக்கும் ஒரு கவிஞன் ஆரம்பிக்க இயலாமல் இருந்தது போலிருந்தது அவரது நிலைமை.

எனவே 1910லிருந்து 1922ஆம் ஆண்டு வரையிலான காலம் ரில்கேவின் பிரச்சனைக் காலமாக இருந்தது. இடையில் அவர் கவிதைகள் எழுதாமல் இருக்கவில்லை.

ஆனால் அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றை எப்போதாவது எழுதும் கவிதைகள்  (occasional poems) என்று குறிப்பிட்டார்.

தனியனாய் ஸ்பெயின் தேசத்தின் டோலேடோவிலும் ரோம் நகரிலும் மற்றும் கெய்ரோவிலும் அவர் பயணித்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

இந்தப் பயண அனுபவங்களிலிருந்து அவர் சேகரித்துவந்த சிறு சிறு கூழாங்கற்களை ஒரு அற்புத மொசைக்காக அவரது டியூனோ இரங்கற் பாடல்களில் மாற்றினார்.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நீள்காவியமாக டியூனோ இரங்கற்பாடல்கள் கருதப்படுகின்றன (உங்களுக்கு ட்டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம், ஆக்தாவியோ பாஸின் சூரியக்கல், டெரக் வால்காட்டின் ஓமரோஸ் போன்றவை நினைவில் ஆடினால் நல்லது).

10 இரங்கற்பாடல்களின் தொடராக அமைகின்றது டியூனோ இரங்கற் பாடல்கள்.

மேரி வான்தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்ற கோமகளின் விருந்தினராக இருந்தபோது தொடங்கப்பட்டதால் அந்தக்கோட்டையின் பெயர் அதற்குத் தலைப்பாக இடப்பட்டது.

கோட்டை வடக்கு இத்தாலியின் துறைமுக நகரான டிரியஸ்ட்டுக்கு அருகில் அட்ரியாட்டிக் கடலில் அமைந்திருக்கிறது.

முதல் உலகப் போரின் பின்விளைவுகளால் பெரும் மனோவியல் பாதிப்புக்கு ஆளானார் ரில்கே.

டியூனோ கோட்டையில் இந்தப் பாடலில் ஒரு பகுதி தொடங்கப்பட்டு, நிறுத்தப்பட்டு பிறகு 1922ஆம் ஆண்டுதான் ஸ்விட்சர்லாந்தின் வலேஸ் என்ற பகுதியில் முற்றுப் பெற்றது. மொத்தவரிகளின் எண்ணிக்கை 859.

டியூனோ கோட்டையில் ரில்கேவை இருக்க அனுமதித்த இளவரசி தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்பவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதியை அவர் டியூனோவில் தொடங்கிவிட்ட போதிலும் தொடர்ந்து எழுத இயலவில்லை.

ஏறத்தாழ முதல் உலகப் போர் முடியக்காத்திருந்தது போலிருந்தது அவரது படைப்பியக்கம். 1923இல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

டியூனோஇரங்கற்பாடல்கள் ஓர் உக்கிரமான மதநிலைகொண்ட (கிறித்தவ மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை) மறைநிலைத் தியான கவிதைகள்.

இவை அழகியலையும் இருத்தலியல் துயரங்களையும் எடைபோட்டுப் பார்க்கின்றன.

இக்கவிதைகளில் தேவதூதர்கள் மற்றும் மீட்புநிலை போன்ற குறியீடுகள் நிறைந்திருப்பினும் இவற்றைக் கிறித்தவ அர்த்தத்திலோ முறைமையிலோ வியாக்கியானப்படுத்தி அர்த்தம் தரமுடியாது.

டியூனோ இரங்கற் பாடல்களின் தாக்கத்தை நாம் பல வகைப்பட்ட வாசகர்களிடம் பார்க்கமுடியும்.

பாப் இசையிலிருந்து தொலைக்காட்சி வரை ஏதோ வகையில் ரில்கே தொடர்புபடுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.

இருக்கிறார்.

புதிய சகாப்த தத்துவவாதிகள், இறையியல்வாதிகள், சுயஉதவிப் புத்தகங்கள் எழுதுபவர்கள், போன்றோர் நேரடியாக இலக்கியம் சாராத வகையினர்.

நவீன ஜெர்மன் நாவலாசிரியர் ஹெர்மேன் ஹெஸ்ஸே அவரது புத்கத்தில் இருத்தலியல் பிரச்சனைகளின் எல்லைப்பாடுகளைத் தாண்டி அவற்றைத் தீர்க்கும் வழிவகையை அளிப்பவராக டியூனோ இரங்கற்பாடல்களில் தெரிகிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தப் பிரபஞ்சத்தின் இசை ரில்கேவின் கவிதைகளில் எதிரொலிக்கிறது என்றார்.

ஆனால் 1920களில் ஜெர்மானிய இளைஞர் சமுதாயத்தினருக்கு டியூனோ கவிதைகள் உவப்பாக இருக்கவில்லை.

ஃபிரான்ஃபர்ட் இலக்கிய விமர்சன இயக்கத்தின் மதிப்பு வாய்ந்த சமூகவியலாளர் மற்றும் மனோவியல் அறிஞருமான தியோடர் அடார்னோ (Theodor W. Adorno  1903-1969) இக்கவிதைகள் தீவினைமிக்கவை என்று விமர்சித்தார்.

இவற்றில் 5-ஆம் இரங்கற்பாடல் பிக்காஸோவின் ரோஜா (Rose Period) காலகட்டத்தில் தீட்டப்பட்ட ஓவியமான ‘கழைக் கூத்தாடிகளின் குடும்பம்’ என்ற ஓவியத்தினால் நேரடி பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பிருக்கிறது.

ஓவியத்திற்கும் கவிதைக்குமான வேறுபாடு அவர்கள் நிற்கும் தளத்தில் இருக்கிறது. ரில்கேவின் இலக்கிய மதிப்பு ஆங்கில இலக்கிய உலகைப் பொருத்தவரை பிரபலமாக டியூனோ இரங்கற் பாடல்களின் மேல் அமைந்திருக்கிறது.

இக்கவிதைகள் வெளியிடப்பட்ட பிறகு சுமார் 18 முறை வேறு வேறு மொழி பெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.

அமெரிக்க வெளியீட்டாளர்கள் ஸ்டீபென் ஸ்பென்டர் மற்றும் ஜே.பி.லேய்ஷ்மன் ஆகியோரின் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவில் பல இளம் கவிஞர்கள் டியூனோ இரங்கற்பாடல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர்.

பதற்றத்தினாலும் மனத்தொய்வினாலும் பல ஆண்டுகள் கவிதை இல்லாமல் கூட ரில்கே இருந்தார்.

இந்த இடைப்பட்ட காலங்களில் இங்கும் அங்குமான நிலையற்ற அலைக்கழிப்புகளே மிஞ்சின.

இந்தக் காலகட்டத்தில் பாலடைன் கிளாஸ் கோவ்ஸ்கா (1886-1969) என்ற பெண் ஓவியருடன் சற்றே காதல்வயப்பட்டிருந்தார்.

அப்போது நண்பரும் வணிகரும் புரவலருமான வெய்னர் ரைன்ஹார்ட்டின் அழைப்பின்பேரில் ரைன்ஹார்ட்டின் ஷேட்டு முஸோ (Chateau Muzot) என்ற பெரிய வீட்டிற்குக் குடி பெயர்ந்தார்.

இந்தத் தற்காலிக உறைவிடம் (ரில்கே கடைசிவரை அந்த வீட்டில் இருக்கலாம்) பெரிதும் வசதிக் குறை வானதுதான்: மின்சாரமோ அல்லது எரிவாயுவோ இல்லாதது.

டியுனோ கோட்டை எவ்வித காரணங்களுக்காக இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறதோ அதைவிட முக்கியமான காரணங்களுக்காக முஸோ குறிப்பிடப்படுகிறது.

ரில்கேவுடன் முஸோவில் கிளாஸ்கோவ்ஸ்கா இணைந்துகொண்டார். இங்குதான்  ரில்கே பால்வெலேரியின் ஃபிரெஞ்சுக் கவிதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.

மைக்கேல் ஆஞ்சலோவின் கவிதைகளையும் கூட. கட்டற்ற வகையில் கவிதைப் பிரவாகம் எடுத்ததும் முஸோவில் தான்.

ரில்கேவின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படும்போது (Power of Prayers) அவருக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது. லூ ஆந்ரியாஸ் சலோமி என்ற திருமணமான, அவரை விட வயதில் மூத்த பெண்ணுடன் அவர் ரஷ்யாவில் பயணம் செய்து திரும்பியிருந்த காலமது.

சிறிய இடைவெளியில் சலோமியுடன் இணைந்து இரண்டாம் முறையும் ரஷ்யப்பயணத்தை ரில்கே மேற்கொண்டார்.

அதுவரை அவரது வாழ்க்கை இறுகியது போன்றும் கட்டுப்படுத்தப்பட்டது போன்றும் இருப்பதாய் உணர்ந்தவர் மற்றும் அவரது பூர்வீக குறுகிய தெருக்கள் கொண்ட பிராக் நகரிலிருந்து சென்றவர், சலோமியின் சக்தி வாய்ந்த ஆளுமையாலும் ரஷ்யாவின் திறந்த சமவெளிகளாலும் பிரமித்துப் போனார்.

ரஷ்யாவின் புறவெளியை அவரது அகவெளியாக மாற்றிக் கொண்டார். அது ஐரோப்பாவின் கிழக்கில் இருந்தது:

சில சமயம் ஒரு மனிதன் 
அவனது இரவு உணவு
மேஜையிலிருந்து எழுந்து
வெளியில் செல்கிறான்
மேலும்  அவன்  போய்க்கொண்டே இருக்கிறான் 
காரணம் எங்கோ கிழக்கில் ஒரு தேவாலயம் 
உள்ளதென்பதற்காக
அவனது பிள்ளைகள் 
அவன் இறந்துவிட்டது போல ஸ்தோத்திரம் 
சொல்கின்றனர்
வேறொரு மனிதன் தன் வீட்டிலேயே 
தங்கிவிடுகிறான் அவனது இறப்புவரை 
அவனது தட்டுக்கள் மற்றும் கண்ணாடித் 
தம்ளர்களுடன்
எனவே அவனது பிள்ளைகள் 
வெளியே செல்கின்றனர் இந்த உலகினுள் 
அவன் மறந்த தேவாலயத்தைத் தேடியபடி.

ரில்கேவின் உள்மன யாத்திரை தொடங்கியது இந்தத் தொகுதியிலிருந்துதான் என்று சொல்லலாம்.

அவர் இக்கவிதையில் குறிப்பிடுவது எந்த வகையிலும் சம்பிரதாயமான கிறித்தவத் தேவாலயம் அல்லவென்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஒரு மனிதன் உள்வய வெளியை நோக்கி நடக்கும்போது அவன் தனது பிள்ளைகளுக்கும் விடுதலை அளிக்கிறான்:

ஒரு மனிதன் உம்மைப் பெற்றடைய 
மிக விரும்பிய காரணத்தால்
நாங்கள் அனைவரும் உம்மைப் பெற முடியும்
என்பதை அறிகிறேன்.

இந்த விருப்பமும் பெற்றிருத்தலும் இப்பொழுது முழுமையான சாத்தியம் என்று ரில்கே உணர்ந்துதான் எழுதினார்.

இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் கூட. வளர்ச்சி என்பது புவிசார் வெளியை நோக்கியது.

ஒரு விருட்சம் அதன் ஆண்டு வளையங்களில் வளர்வது போல.

ஒரு நத்தை அதன் புரிகளில் வளர்வது போன்றும் இந்தச் சூரிய மண்டலம் அதன் சுற்றுப் பாதைகளிலும் வளர்வது போன்றும்.

கிளாரா வெஸ்டாஃப் என்ற பெண் சிற்பியை மணந்தார் ரில்கே. திருமணம் ஒரு பெண் குழந்தை (பெயர் ருத்) பிறந்த கொஞ்ச நாட்களில் முடிவுக்கு வந்தது.

கிளாரா வெஸ்ட்டாஃப் ஃபிரெஞ்சு சிற்பி ஹோதான் என்பவரின் மாணவி.

கிளாராதான் ஹோ தானை அணுகச் சொல்லி ரில்கேவுக்கு அறிவுறுத்துகிறார்.

ரில்கே முதல்முறையாகச் செப்டம்பர் 1902ஆம் ஆண்டுப் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தார். இந்த நகர்வினால்தான் ரில்கே ஒரு ஐரோப்பியர் ஆகிறார்.

மேலும் ஒரு நகரக் கவிஞராகவும். வறுமையின் எல்லையில் வாழும் ஒரு கவிஞராகவும்.

பாரிஸ் நகரில் அவர் மனம் ஒரு வேட்டையாடப்பட்ட விலங்காக இருந்தது. சந்தடி நிறைந்த தெருக்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி எளிய உணவ கங்களில் உணவு உண்டார்.

ஒரு ஜெர்மன் வெளியீட்டாளருக்காக ஃபிரெஞ்சு சிற்பியான அகஸ்த் ஹோதான் (August Rodin 1840-1917) பற்றி ஒரு அறிமுக நூல் எழுதும் நோக்கத்தில் பாரிஸ் நகரத்தை அவர் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

அவருக்கு அப்பொழுது வயது 27. ஏற்கனவே சாதனைகள் ஓரளவுக்குச் செய்திருக்கும் கவிஞராய் அறியப்பட்டிருந்தார்.

ஒன்பது கவிதைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாவல்.

பிரார்த்தனை வேளையின் புத்தகத்தின் (Books of Prayers) இரண்டு பகுதிகள் முழுமையாக்கப்பட்டிருந்தன. தவிரச் சித்திரங்களின் புத்தகம் (Book of Pictures) என்ற நூல் வெளியிடும் தயாரிப்பில் இருந்தது.

இதுவரை அவர் எழுதிய அனைத்துக் கவிதைகளும் தன்வயமானவை மற்றும் உள்மன யாத்திரை சார்ந்தவை. பிற்கால 19ஆம்ஆண்டு அழகியலின்படி அவை உணர்ச்சிகளை மையமாய்க் கொண்டவை.

ஒருவேளை ரில்கே ஹோதானைச் சந்திக்காதுபோயிருந்தால் அவரது கவிதை வெளிப்பாட்டு பாணியானது ரில்கேவின் வாழ்விறுதிவரை அப்படியே மாறுதலின்றித் தொடர்ந்திருக்கும்.

ஆனால் பாரிஸ்நகரை நோக்கிய பயணம் சகலத்தையும் மாற்ற இருந்தது. ஹோதானைச் சந்தித்த சிறிதுகாலத்திலேயே சிற்பியின் மீதிருந்த அவரின் ஈடுபாடு ஒரு மாணாக்கனுடையதாய் மாறிற்று.

சிற்பியின் மீதான அக்கறைகள் அதிகமாக ஆக ஆகரில்கேவின் சுய அதிருப்தி அதிகமாகிக்கொண்டு இருந்தது. சிற்பி ஹோதான் ஒரு கடுமையான உழைப் பாளர், தொழில்நுட்பன்.

அவர் தன் படைப்புகளுக்கு அர்ப்பணித்த அளவற்ற சக்தியைக் கண்டு மலைத்துப்போனார் ரில்கே. “நீ உழைக்கவேண்டும் எப்போதும் உழைக்கவேண்டும்” என்று அவரது சிற்பங்களைச் சுட்டிக் காட்டியபடி ரில்கேவிடம் கூறினார்.

உழைப்பு என்று அவர் சொன்னது படைப்பைத்தான். கவிதை வரவில்லை என்றாலும் கவிதைக்காக (குறிப்புகள் எடுத்தல் இதுபோல) புதிய உழைக்கும் பழக்கங்களை ஹோதானிடம் கற்றுக்கொண்டார்.

1905ஆம் ஆண்டு ஹோதான் ரில்கேவை தனக்கான செயலராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே ஹோதானின் இருப்பிடத்தில் ரில்கேவுக்குத் தங்க அனுமதியும் கிடைத்தது.

இருவருக்கும் இடையில் ஒரு வகையான நட்பு மலர்ந்தது. பேச்சு மற்றும் கனவு போன்றவற்றை விட்டுவிட்டு ஹோதான் உச்சரித்த மந்திரம் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு.

”சமீப காலமாய்த் தனக்குக் கவிதை உந்தம் வரவில்லை என்று இளம் ரில்கே சொல்ல, பூங்காவில் உள்ள விலங்குக்காட்சிச் சாலைக்குச் சென்று வரச்சொன்னார் ஹோதான்.

அங்கு என்ன செய்வது?

ஒரு விலங்கை முழுமையாகப் பார்த்து முடிக்கும்வரை பார் என்றார் ஹோதான்.

ஹோதானின் எடுத்துக்காட்டு மற்றும் சொற்களின் ஊடாக ரில்கே தான் ‘காண்பது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதும் ஹோதான் சொல்வதும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொண்டார்.

ரில்கே ஒரு சிறுத்தையைத் தேர்ந்தெடுத்தார். இதன் விளைவாக உருவானதுதான் ரில்கேவின் பிரசித்தமான ‘சிறுத்தை’ என்ற தலைப்பிலான கவிதை.

அது சிறுத்தை ஒரு கூண்டுக்குள் எப்படி நடக்கிறது என்பதையும் அதே சமயத்தில் கவிதை எப்படி உருவாகிறது என்பதையும் சொல்கிறது.

ஒரு சிறு மனஸ்தாபத்தினால் ரில்கேவால் தொடர்ந்து ஹோதானோடு இருக்க இயலாததால் ஒரு வருடத்தில் பிரிந்தார்.

ஆனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. சிறுத்தை கவிதையைத் தொடர்ந்து ரில்கே இது போன்ற ‘காணும் கவிதைகளை’ நிறைய எழுதினார். ‘அன்னம்‘, ‘ஃபிளேமிங்கோ பறவைகள்’ இது போல.

ஒரு இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் (Letters to a Young Poet )மிகவும் பிரபலமான புத்தகமாய் இருந்தது.

அது ராணுவ உணவு உறைவிடப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஃபிரான்ஸ் ஸாவர் காப்பஸ் (Franz Xaver Kappus) என்ற மாணவருக்கு ரில்கே எழுதியவை.

இதே பள்ளியில் ரில்கே 5 ஆண்டுக் காலம் படித்தார். ஆனால் ரில்கே ராணுவப் பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. காப்பஸ் எழுதிய கவிதைகளின் மீது விமர்சனம் செய்ய விரும்பாமல் பதில் கடிதங்களை எழுதினார்.

இந்த 10 கடிதங்களில் ஓர் உணர்ச்சி ததும்பும் தொனியில் கலைஞனாய் இருப்பது என்பது என்னவென்றும் எப்படிக் காதலிக்க வேண்டும் என்றும் மேலும் எப்படி வாழவேண்டும் என்றும் அறிவுரை கொடுக்கிறார்.

இந்தக் கடிதங்களைக் காப்பஸ் பெற்றுக்கொண்ட காலம் 1902லிருந்து 1908 வரையிலானது. ஒரு சிறிய முன்னுரையுடன் முதன்முதலில் காப்பஸ் இன்ஸல் வெர்லேக் என்ற பதிப்பாளர் மூலம் ரில்கேவின் இறப்புக்குப் பிறகு 1929ஆம்  ஆண்டு லீப்ஸிக்  நகரில்  வெளியிட்டார்.

தவிர ரில்கேவின் இறப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தார் 6 தொகுதிகளாக அவர் கலை பற்றியும் கலைஞனின் வாழ்தொழிலைப் பற்றியும் எழுதிய கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். இந்தக் கடிதங்களின் காலகட்டம் 1930-1937.

இவற்றில் பல அவர் தன் மனைவி கிளாரா வெஸ்ட்டாஃபுக்கு எழுதியவை.

இவை பாரிஸ் நகரில் ரில்கே கண்ட ஓவியங்களைப் பற்றிய அனுபவங்களைச் சித்தரிப்பவை.

ரில்கேவின் கடிதங்களை நான்கு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது தொழில் முறை சார்ந்தது: இவற்றில் அவர் பதிப்பாளர்களுக்கும் சககலைஞர்களுக்கும் (சிற்பி ஹோதான் உட்பட) எழுதியவை முதல் வகை.

அவர் தன் மனைவிக்கும் குடும்பத்திற்கும் எழுதியவை இரண்டாம் வகையில் அடங்கும்.

புரவலர்களுக்கும் (மேரி தர்ன் அண்ட் டேக்ஸிஸ், நாநி உண்டர்லி+வொக்கார்ட்) மற்றும் காதலிகளுக்கும் (லூ ஆன்டிரியஸ் சலோமி மற்றும் பாலடைன் க்ளாஸோவ்ஸ்கா) எழுதியவை.

பிரசித்தமான எழுத்தாளருக்கு (ரில்கே) முன்பின் தெரியாதவர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்கள் கடைசி வகைப்பட்டவை.

இந்தக் கடிதங்களின் வாயிலாக அவர் நெருக்கமானவர்கள் பலருக்கு அவரது உள்வய சுயத்தைத் திறந்து காட்டுவதன் மூலம் நேரடி சந்திப்பில் அவர்களை ஈடுபடாமல் வைப்பதும் நோக்கமாய் இருந்திருக்கக் கூடும்.

கிளாரா வெஸ்ட்டாஃப் மற்றும் ரில்கேவின் திருமணப் பிரிவில் இருவருக்குமான சுயநலம் கலந்திருந்தது என்பதை மறுக்க இயலாது தத்தமது கலைவாழ்க்கையைத் தொடர்வதற்குக் குடும்பம் இடைஞ்சலானது என்பதை அவர்கள் கண்டுபிடித்துக்கொண்டிருக்கலாம்.

மேலும் பெண்கள் ரில்கேவின் வாழ்வில் நிறைய முறை குறுக்கிட்டிருந்தாலும் எவருடனும் அவர் தொடர்ச்சியான உறவு கொண்டிருக்கவில்லை.

ரில்கே ஒரு முன்மாதிரியான கணவனுமில்லை முன் மாதியான தந்தையும் இல்லை. அவர் பெண்களைப் புரிந்துகொள்வதில் நிறைய முரண்பாடுகளும் சிக்கல்களும் இருந்தன.

கிளாராவே கூட அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாய்ச் சேர்ந்து வாழ்வது என்பதை விட இருவரும் சேர்ந்து கலைக்காகத்  தங்களை அர்ப்பணித்துக்கொள்வது முக்கியமானது என்று எண்ணினார்.

எனவேதான் இறுதிவரை அவர்கள் இருவருக்குமிடையிலான கடித உறவு தடையற்றிருந்தது. குழந்தை ருத் சிறிதுகாலம் கிளாராவின் ஸ்டூடியோவில் விளையாடினாள்.

கொஞ்ச காலம் பாட்டி வீட்டில் காலம் கழித்தாள். ருத் திருமணம் செய்துகொள்ளும் செய்தி அறிவிக்கப்பட்டும் ரில்கே தன் மகள் திருமணத்திற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

தனது மனஒருங்கிணைப்பை அவர் இழந்துவிடுவார் என்று பயந்ததாகக் கூறினார்.

ரில்கே தான் சந்தித்த பல பெண்களுக்கு நித்திய காதலை உறுதியளித்தார். பிரமிப்பூட்டும் காதல் கடிதங்களை எழுதினார். தனது கவிதைகளிலேயே பெண்களுக்கான அழைப்புக் குறிப்பு இருப்பதாய்க் கூறினார்.

இந்த அழைப்பின் குரலை அடையாளம் கண்டவர் மாக்தா வான் ஹாட்டிங்பர்க் (Magda von Hattingberg  1883-1959) என்ற ஆஸ்த்ரியாவைச் சேர்ந்தபெண் பியானோ இசைக்கலைஞர்.

அவரை ரில்கே செல்லமாக ‘பென்வனூட்டா’ என்று கூட அழைக்கத்தொடங்கியிருந்தார். பல மாதக் கடிதப் போக்குவரத்துகளுக்குப் பிறகு இருவரும் சந்திப்பது என முடிவெடுத்தனர்.

ஆனால் கடிதங்களில் இருந்த உணர்ச்சிப் பெருக்கு நிஜசந்திப்பில் இருக்கவில்லை.

பென்வனூட்டாவின் அறிவுக்கூர்மையும் உணர்ச்சிகளும் அலாதியானவையாக இருந்தன.

ஆனால் இந்த உறவு தொடர முடியாததற்கு ரில்கேதான் காரணம்.

அவர் எந்த ஒருமனித உயிரையும் மனம் விட்டுக் காதலிக்க இயலாதவராக இருந்தார். அவரது இந்த அணுகல் ஒரு மனோவியல் பிரச்சினையாக, ‘ஃபோபியா’வாக மாறிவிட்டிருந்ததாய் எண்ணினார்.

அவர் பெண்களின் உள்வய ஆளுமைகளைக் கண்டு பயந்துபோயிருந்தார். எனவே கவர்ந்திழுக்கப்பட்டிருந்தாலும் அருகில் சென்றவுடன் பின்வாங்கிவிடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.

1922ஆம் ஆண்டு ஆர்ஃபியஸ¨க்கான 14 வரிக் கவிதைகள் (Sonnets to Orpheus) மற்றும் டியூனோ இரங்கற்பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன.

பயணம் செய்யாதபோது பிரெஞ்சு பேசப்படும் ஸ்விட்ஸர்லாந்தின் வாலைஸ் பள்ளத்தாக்கில் இருந்த சிறிய கோபுரத்தில் (Chateau de Muzot) தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்தார்.

இடையில் நண்பர்கள் வருகை நிகழ்ந்துகொண்டிருந்தது. 1923ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அவர் உடல்நிலையில் ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆரோக்கிய நிலையத்தில் டிசம்பர் மாதத்தைக் கழித்தார்.

அவருக்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் ஒரு விநோத வகையைச் சார்ந்தது. அவரது நோயின் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூட இறப்பு வரை ரில்கே விரும்பாதவராய் இருந்தார்.

1926இல்தான் அது அந்த நோய் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டின் டிசம்பரில் அவர் கடும்வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடன் கூட இருந்தது நாநி உண்டர்லி வொக்கார்ட் மட்டுமே.

1926ஆம் ஆண்டு டிசம்பர் 19 காலை ரில்கே காலமானார்.

“கதேவைத் தவிர அமெரிக்காவுக்கு மிகப் பிரபலமான ஜெர்மன் இலக்கிய இறக்குமதி”யாக இன்று இருப்பவர் ரில்கே.

இந்தச் செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடியதாய் இருக்கலாம்.

ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் அவர் படைப்புகளுக்கான வர வேற்பு இரண்டாம் உலகப் போர், ஃபாஸிஸம் போன்ற அம்சங்களால் பாதிப்புக்கு உள்ளாயிற்று.

1945ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது முக்கியத்துவம் குறைந்தது என்பதும் உண்மை.

போருக்குப் பிந்தியவிமர்சகர்களுக்கு அவரது பாதி மறைநிலை கலந்த உள்வயப் பார்வை ஏற்க முடியாததாய் இருந்தது. ஆனால் இந்த நிராகரணம் நீண்ட நாட்கள் தொடர வில்லை.

1975இல் அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது ரில்கேவின் தாக்கமானது கண்மறைவான நிலையில் குறையாமல் தொடர்ந்து நீடித்து வந்திருப்பதை அறிய முடிந்தது.

ஆனால் ஆங்கிலம் பேசும் கலாச்சாரங்களில் அவரது பிரசித்தமோ என்றுமே குறையாமல் இருந்து வந்திருக்கிறது.

இந்த அபரிமிதமான வரவேற்புக்குக் காரணம் என்ற ஒன்று இருக்குமானால் அது பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கவிதைகளில் நிலவிய பெரும்பான்மையான ஒரு இடைவெளி அல்லது வெறுமை.

மேலும் வீடற்றவருடையதும் மற்றும் திரிந்தலையும் ஒரு இலக்கியவாதியினுடையதுமான படிமம் அமெரிக்கர்களுக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது.

ரில்கே உறுதியான அளவில் எந்தத் தேசீயகலாச்சாரத்திற்கும் சொந்தமானவராக இல்லாதிருந்ததும் மற்றொரு காரணம்.

ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற விரிவான பயணங்களில் ரில்கே இங்கிலாந்தின் பக்கமோ அல்லது அமெரிக்காவின் பக்கமோ செல்லவில்லை.

அவர் கற்க எடுத்துக்கொண்ட சிறுமுயற்சிகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு ஆங்கில மொழியும் கூட இறுதிவரை அந்நியமாகத்தான் இருந்தது.

இந்த உண்மையுடன் அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய 400க்கும் மேற்பட்ட கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவருக்குப் பிடித்த கீட்ஸையும் எலிஸபெத் பேரட்பிரவுனிங் என்ற பெண் கவிஞரையும் (ராபர்ட் பிரவுனிங் என்ற ஆங்கிலக் கவிஞரின் மனைவி) ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்க விரும்பினார். 

ஆங்கிலம் மற்றும் பிரித்தானியா ஆகியவை பற்றிய தனது வெறுப்பும் உதாசீனமும் பற்றி மனம் திறந்து சில கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

சகல அருவெறுக்கத்தக்க விஷயங்களின் மொத்த உருவமாய் அமெரிக்கா அவருக்குத் தோன்றியது. ஆஸ்த்ரியக் கவிஞரான நிக்கோலஸ் லெனாவ் என்பவருக்கு ரில்கே எழுதிய கடித வரிகள்:

“America has no wine, no nightingale [ . . . ] brother, these Americans have the souls of shopkeepers, they are dead to all life of the mind, as dead as mutton.The nightingale is in the right not to visit these fellows. It seems to me seriously and profoundly significant that America has no nightingale. It seems to me like a poetic curse.’’

அமெரிக்கப் பொருள்கள் எதுவுமே நிஜமானவை அல்ல

மொழியாக்கக் கவிதைகள்

எல்லா மையங்களின் மையமே
உள்ளகங்களின் உள்ளகமே
தன்னைத் தானே மூடுண்ட பாதாம்
இனிமையாய் வளர்ந்தவாறு
இவை யாவும் இந்தப் பிரபஞ்சமனைத்திலும்
மிகச் சேய்மையிலுள்ள நட்சத்திரங்கள் வரையிலும்
அதற்கப்பாலும்
விதையைச் சூழ்ந்த உன் தசை உன் கனி

இப்பொழுது உணர்கிறாய் நீ
எதுவும் உன்னைப் பிடித்துத் தொங்கவில்லை என
உன் உமி முடிவில்லா வெளியில் நீள்கிறது
அங்கே சத்தான அடர்ந்த திரவங்கள்
உயர்ந்து வழிந்தோடுகின்றன
வெளிப்புறத்தில் ஒரு கதகதப்பு உதவுகிறது

உன் எல்லையற்ற அமைதியில் நீ ஒளியூட்டப்பட்டுள்ளாய்
ஒரு பில்லியன் நட்சத்திரங்கள்
இரவின் ஊடாய்ச் சுழன்று செல்கின்றன
உன் தலைக்கு மேல் ஒளி கிளர்ந்தபடி
ஆனால் எல்லா நட்சத்திரங்களும் மரித்தபின்னும்
உனக்குள் இருக்கும் அந்த இருப்பு
இருக்கும்.

மொழியாக்கக் கவிதைகள்

கடைவீதியில் பாம்பாட்டி வளைந்து வளைந்து
மகுடியை ஊதுகிறான்
அது தாலாட்டி மீண்டும் எழுப்புகிறது
சில சமயம் மகுடியின் வட்டத்தினுள்
கேட்பவன் ஒருவனை ஈர்க்கிறான்
அவன் சந்தடியான காட்சி மேடைகளிலிருந்து
அடிவைத்து வெளிவருகிறான்
அந்தப் பாம்பு தன் கூடையில் நிமிர்ந்து நிற்கும் வரை
வாசிப்பு விருப்பந் தெரிவித்துக்கொண்டேயிருக்கிறது
நிமிர்நிலை மேல் கெஞ்சுகிறது
அது தளரும்வரை
குருட்டுத்தனமாய்த் தலைசுற்றும் விதமாய்
இன்னும் இன்னுமென
திடுக்கிடுதலையும்
விரிவாதலையும் மாறி மாறிச் செய்தபடி
ஒரே ஒரு பார்வையில்
அந்த இந்தியன்
உனக்குள் நுழைந்து
ஓர் இந்திய விநோதத் தன்மையை உட்செலுத்திவிடுகிறான்
அதில் உள்ளது மரணம்
ஒரு விரிசல் உன் முகத்தின் குறுக்காய் ஓடுகிறது
கீழிறங்கும் வானங்கள் உன்னை நோக்கி
பிழம்பாய் விரைகின்றன
உனது வடக்கு ஐரோப்பிய ஞாபகத்தின் மீது எவ்வித பயனுமற்ற
வாசனைத் திரவியங்கள் அடுக்கப்படுகின்றன
அவை உனக்குப் பயனளிக்காது
வலிமை உன்னைப் பாதுகாப்பதில்லை
சூரியன் சீறுகிறது
காய்ச்சல் தாக்கி நடுக்குகிறது
கெடுநோக்கான சந்தோஷத்தில் ஈட்டிக்காம்புகள் உயர்கின்றன
மேலும் பாம்புகளில் விஷம் மின்னுகிறது.

மொழியாக்கச் சிறுகதை

நறுமணம் கமழ்ந்து இருண்டிருந்த தனது படுக்கை அறையில் இன்னமும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் அலங்காரி மர்ஷியோன் தெரேன்தான்.

தாழ்வான மெத்தென்ற படுக்கையில் மிருதுவான வெண்ணிறத் துகில்களின் நடுவே அவற்றுக்கு அணி சேர்ப்பது போலவும், முத்தமிடுவதுபோல் வருடிய நிலையிலும், விவாகரத்தான பெண்ணுக்குரிய ஆழ்ந்த சந்தோஷமான அமைதியான துயில் கொண்டிருந்தாள் அவள்.

வரவேற்பறையில் எழுந்த உரத்த குரல்களைக் கேட்டு விழித்துக்கொண்டவள், தன்னுடைய நெருங்கிய தோழி பரோன் தெ கிரான்ழெரி, உள்ளே தன் அறைக்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த வீட்டு வேலைக்காரியுடன் சண்டைபிடித்துக்கொண்டிருப்பதைப்  புரிந்துகொண்டாள்.

எனவே படுக்கையில் இருந்து எழுந்த மர்ஷியோன் கதவைத் திறந்து, திரைச் சீலையை விலக்கித் தன் முகத்தை - மேகக்கூந்தலில் ஒளிந்திருந்த முகத்தை - மட்டும் காட்டினாள்.

“என்ன விஷயம், ரொம்ப சீக்கிரமாகவே வந்து விட்டாயே?” என்று கேட்டாள். “இன்னும் ஒன்பது மணிகூட ஆகவில்லையே!”

முகம் வெளிறி, உடல் நடுங்கி, படபடப்புடன் இருந்த அழகிய பரோன் சொன்னாள்: “உன்னிடம் பேசவேண்டும். எனக்குப் பயங்கரமான விஷயம் நடந்துவிட்டது”

“உள்ளே வா டியர்”

அவள் உள்ளே போனாள்.

மர்ஷியோன் திரும்பவும் படுக்கைக்குப் போக, வேலைக்காரி, வெளிச்சமும் காற்றும் உள்ளே வருவதற்காக ஜன்னல்களைத் திறந்து வைத்தாள். பணிப்பெண் அறையைவிட்டுப் போனதும் மர்ஷியோன் கேட்டாள்:

“என்ன விஷயம், சொல்லு”

பெண்களை வசீகரமாகக் காட்டும் அழகொளிரும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தியபடியே அழுதாள் பரோன் தெ கிரான்ழெரி.

கண்கள் சிவந்துவிடக்கூடாது என்பதற்காகக் கண்ணீரைத் துடைக்காமலேயே விம்மினாள்:

“ஓ, டியர், எனக்கு நடந்தது அருவருப்பானது, மிகவும் அருவருப்பானது. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட நான் தூங்கவேயில்லை, என்ன உன் காதில் விழுகிறதா? ஒரு நிமிஷம் கூட. இதோ என் நெஞ்சு எப்படிப் படபடக்கிறது என்று பார்”

பெண்களின் இதயத்தை மூடி நிற்கும் உருண்டையான அங்கமாகிய, ஆண்களை மேலும் கீழே துழாவவிடாமல் திருப்தியோடு நிறுத்திவிடுகிற தன்னுடைய முலையின் மீது தோழியின் கையை எடுத்து வைத்தாள்.

அவள் இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.

அவள் தொடர்ந்தாள்:

“நேற்று சாயங்காலம் நான்கு மணிக்கு எனக்கு அது நடந்தது - அல்லது நாலரை மணி இருக்கும், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. உனக்குத் தெரியும் என் வீடு, அந்தச் சிறிய வரவேற்பறை அங்கே ஜன்னலோரம் உட்கார்ந்தபடியே செயிண்ட் லாஸார் வீதியில் வருவோர் போவோரைப் பைத்தியம்போல் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் உனக்குத்தெரியும்.

பக்கத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் எப்போதும் ஆரவாரமாக, பரபரப்பாக இருக்கும் - அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நேற்று, ஜன்னலோரம் போட்டிருந்த தாழ்வான நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளிக்காற்றைச் சுவாசித்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்.

நேற்று சாயங்காலப் பொழுது அருமையாக இருந்தது இல்லையா! திடீரென்று, எதிர்வரிசையில் ஜன்னலோரம் ஒரு பெண் - சிவப்பு உடையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். நான் இளஊதா உடையில் இருந்தேன். உனக்குத் தெரியுமல்லவா என்னுடைய அந்த அழகான இளஊதா உடை. அந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது.

ஒரு மாதமாக அங்கே வந்து குடியிருக்கிறாள்; ஒரு மாதமாகத் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதுவரை அவளை நான் பார்த்திருக்கவில்லை.

ஆனால் பார்த்தவுடேனே அவள் மோசமானவள் என்று தெரிந்துவிட்டது. என்னை மாதிரியே ஜன்னலின் ஓரமாக வந்து அவளும் வேடிக்கை பார்க்கிறாளோ என்றுதான் முதலில் நினைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய நடவடிக்கைகள் அவளை உன்னிப்பாகக் கவனிக்கும்படியாக எனக்கு ஆர்வத்தைத் தூண்டின.

முழங்கைகளை ஜன்னல் விளிம்பில் ஊன்றியபடி வீதியில் போய் வந்து கொண்டிருந்த ஆண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆண்களும் அவளைப் பார்த்தார்கள். எல்லாருமே, அல்லது கிட்டத்தட்ட எல்லாருமே.

வீட்டுக்குப் பக்கத்தில் வந்ததுமே ஏதோ காரணத்தால் அவள் அங்கே இருப்பது தெரிந்ததைப் போலவோ, அல்லது, உள்ளுணர்வால் அவளுடைய இருப்பை உணர்ந்து கொண்டது போலவோ, திடீரென்று தலையை உயர்த்தி, ரகசிய சமிக்ஞையைப்போல் வேகமாகப் பார்வையைப் பரிமாறிக்கொள்வார்கள்.

அவளுடைய சமிக்ஞை சொன்னது: ‘வருகிறாயா?’ அவர்களுடைய பதில்: ‘எனக்கு நேரமில்லை’ அல்லது ‘இன்னொரு நாள்’ அல்லது ‘என்னிடம் பணம் இல்லை’ அல்லது ‘என்ன துணிச்சல் உனக்கு!’.

அவளுக்கு அது வாடிக்கையான தொழிலாக இருந்தாலும், அதைச் செய்த விதம் எப்படி வேடிக்கையாக இருந்தது என்று உன்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

அவள் திடீரென்று ஜன்னலைச் சாத்திவிடுவாள், ஓர் ஆள் உள்ளே போவதைப் பார்ப்பேன்: தூண்டில் காரன் தூண்டிலை வீசி மீனைப் பிடிப்பதுபோல அந்த ஆளைப் பிடித்துவிட்டாள். பிறகு நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன், பதினைந்து - இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகவில்லை. நடந்தது எல்லாம் எனக்குச் சுவாரஸ்யமாக இருந்தது!

என்னை நானே கேட்டுக் கொண்டேன்:

‘ரொம்பச் சீக்கிரமாக அவளைப் புரிந்து கொள்ளும்படி செய்து விடுகிறாளே, எப்படி? சரி யாகவும் துல்லியமாகவும் செய்கிறாளே! தலைக்கு ஒரு அசைவைத் தருகிறாளா? அல்லது பார்வையில் கையசைப்பைக் காட்டுகிறாளா?’

என்னுடைய சிறிய பைனாகுலர் மூலம் உற்றுக் கவனித்தேன். எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. முதலில் ஒரு பார்வை, பிறகு புன்சிரிப்பு; ‘மேலே வருகிறாயா’ என்று கேட்பது போல் தலையைச் சற்றே பின்னோக்கி அசைத்தல்.

ஆனாலும் மற்றவர்களின் வெளிப்பார்வைக்குத் தெரியாமல், மிகவும் கவனமாக அதைச் செய்வதற்கு மிகவும் சாதுரியம் வேண்டும்.

திரும்பவும் என்னை நானே கேட்டுக் கொண்டேன்:

‘அவள் செய்வதுபோலவே என்னாலும் செய்ய முடியுமா?’

கண்ணாடிக்கு முன்னே நின்று செய்து பார்த்தேன் டியர். அவளை விட நன்றாகச் செய்தேன், ரொம்பவும் நன்றாகச் செய்தேன்! உற்சாகம் பொங்க திரும்பவும் ஜன்னலோரம் போய் உட்கார்ந்துகொண்டேன்.

அதற்குப் பிறகு அவளுக்கு வேறு ஆள் கிடைக்க வில்லை, பாவம் வேற ஆளே கிடைக்கவில்லை. அவளுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அப்படித்தான் பிழைப்பை நடத்த வேண்டுமென்றால் ரொம்பக் கஷ்டமானதுதான். கஷ்டமானாலும் வருகிற ஆள் அருமையாக இருந்துவிட்டால் அப்போதெல்லாம் சுவாரஸ்யமும் கூடிவிடும்.

பிறகு தெருவில் சென்றவர்கள் என்பக்கமாக வந்தார்களே தவிர, அவள் இருந்த பக்கமாகப் போக வில்லை. சூரியனும் மறைந்தது. பிறகு ஒவ்வொருவராக, இளைஞன், வயதானவன், கருத்தவன், வெளுத் தவன் என்று பல தினுசில் ஆட்கள் போனார்கள்.

கம்பீரமான ஒரு ஆள், நிஜமாலுமே வாட்டசாட்டமாக இருந்த ஒரு ஆள் டியர், என்னுடைய புருஷனை விடவும் அல்லது உன்னுடைய புருஷனைவிடவும் - அதாவது உன்னுடைய கடைசி புருஷன், அவனைத்தான் நீ விவாகரத்து செய்துவிட்டாயே - அழகாக இருந்தவன் வந்தான்.

எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்: ‘நான் சமிக்ஞை கொடுத்தால் அவன் புரிந்துகொள்வானா? நானோ கண்ணியமான பெண்மணி?’ அவனுக்குச் சமிக்ஞை காட்டவேண்டுமென்று மடத்தனமான ஆசை என்னைப் பிடித்துக்கொண்டது.

பொல்லாத ஆசை!

அந்த மாதிரியான ஆசையை யாராலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, தெரியுமா உனக்கு? எப்பவாவது அதுமாதிரி ஆசை எனக்கு வரும். அதெல்லாம் முட்டாள்தனமானது என்றுதானே நீயும் நினைக்கிறாய்? நம்மைப் போன்ற பெண்களுக்குக் குரங்கு மூளை என்று நினைக்கிறேன்.

ஒரு டாக்டர் கூட என்னிடம் சொன்னார், குரங்குகளோட மூளை நம்முடையது மாதிரியே இருக்குமாம். கல்யாணம் ஆனதும் சில மாதங்கள் நம்முடைய கணவர்களைப்போல இருக்கிறோம், அவர்களை ரொம்பவும் நேசிக்கிறோம்.

பிறகு நம்முடைய காதலர்களை, தோழிகளை, நம்மீது இச்சை கொள்கிற நல்லவிதமாகத் தெரிகிறவர்களை நேசிக்கிறோம். அவர்களின் பேசும் தோரணையை, எண்ணப்போக்கை, வார்த்தைகளை, பாவனைகளை, எல்லாவற்றையுமே நாம் பின்பற்றுகிறோம். ஆனால் அது ரொம்பவும் முட்டள்தனமானது.

“ஆமாம், ஆமாம்” என்றாள் மர்ஷியோன் பொறுமை இழந்தவளாக. “அதெல்லாம் சரி, என்னதான் நடந்தது? நீ மனத்தூண்டலுக்குப் பலி ஆகமாட்டாயே!”

டியர், எதையாவது செய்யவேண்டும் என்று மனத்தூண்டல் எனக்கு வந்தால், அதை நான் செய்து விடுவேன்.

அதனால் நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்:

‘ஒரு ஆளிடம் மட்டும் நான் முயற்சி செய்வேன், என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்ன ஆகிவிடும்? பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது! நான் புன்சிரிப்பைப் பரிமாறிக்கொள்வேன், அதோடு சரி, அதற்குப் பிறகு நான் மறுத்துவிடுவேன்’

அதனால் என்னுடைய விருப்பத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். நல்லவிதமான ஒரு ஆள், மிகவும் நல்லவிதமான ஆள் வேண்டுமே! திடீரென்று, உயரமான, நல்ல நிறமுள்ள, வசீகரமான தோற்றம் கொண்ட ஒரு நபர் வீதியில் வருவதைப் பார்த்தேன். உனக்குத்தான் தெரியுமே நல்ல நிறமான ஆட்களை எனக்குப் பிடிக்கும் என்று.

நான் அவனைப் பார்த்தேன், அவன் என்னைப் பார்த்தான். நான் சிரித்தேன், அவனும் சிரித்தான். நான் சமிக்ஞை செய்தேன், ஓ, மிகக் குறைவாகத்தான். தலையாலே சரி என்று பதில் சொல்லிவிட்டான் டியர்! வீட்டின் பெரிய கதவுக்கு முன் வந்துவிட்டான்.

அப்பொழுது என்னவெல்லாம் என் மனதில் ஓடியது என்று உனக்குத் தெரியாது. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்தேன். எப்படிப் பயந்து போனேன் தெரியுமா? ‘வீட்டுவேலைக்காரனிடம் - என் புருஷனின் விசுவாசியான ஜோஸப்பிடம் - வந்து பேசுவானே, அந்த நபரை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும் என்று ஜோஸப் நினைத்துக்கொள்வானே!’

என்ன செய்வது? ஒரு நொடியில் அழைப்பு மணியை அழுத்துவானே! நான் வாசலுக்குப் போய் அவனைப் பார்த்து, அவன் தவறுதலாகப் புரிந்து கொண்டதாகச் சொல்லி உடனடியாகப் போய்விடும்படி சொல்ல நினைத்தேன். பெண்களின் மீது,பரிதாபத்திற்குரிய பெண்களின் மீது, அவனுக்கு இரக்கம் வரும்  அல்லவா?

அவன் அழைப்பு மணியை அழுத்த எத்தனித்த அந்தத் தருணத்தில் ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். முட்டாள்போல உளறினேன்:

‘மிசியே, போய் விடுங்கள், தவறு செய்துவிட்டீர்கள், பெருந்தவறு. உங்களைப்போலவே இருக்கும் என் நண்பர் என்று உங்களை நினைத்துவிட்டேன். என்மீது தயவு செய்யுங்கள் மிசியே!’

ஆனால் டியர், அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டுச் சொன்னான்:

“ஓ, டியர், உன் கதை எனக்குத் தெரியும். உனக்குக்கல்யாணமாகிவிட்டது. அதனால் இருபது ஃபிராங் குக்குப் பதிலாக நாற்பது ஃப்ராங்க் வேண்டும் அதுதானே. அது உனக்குக் கிடைக்கும், உள்ளே இடத்தைக் காட்டுகிறாயா?”

‘அவன் என்னை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினான். பீதி அடைந்து நின்றிருந்த என்னை முத்த மிட்டு, இடுப்பில் கைவைத்து அணைத்துக்கொண்டே, திறந்திருந்த வரவேற்பறைக்குள்ளே நடத்தினான். சாமான்களை ஏலத்திற்கு விடுபவனைப் போலச் சுற்றி நோட்டம் விட்டான்.

‘உன் அறை நன்றாக இருக்கிறது, மிகவும் நன்றாக. ஜன்னல் வழி வியாபாரத்தைச் செய்கிற அளவுக்கு இப்போதுதான் உனக்கு அதிர்ஷ்டக் குறை ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது!’

திரும்பவும் நான் அவனிடம் கெஞ்சினேன்.

‘மிசியே, தயவுசெய்து போய்விடுங்கள்! என்கணவர் இப்பொழுது வந்துவிடுவார். சத்தியமாகச் சொல்கிறேன் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.’

ஆனால் அவன் அலட்டிக்காமல் சொன்னான்:

‘கிட்டே வா அழகியே, இந்தமாதிரி பேச்செல்லாம் நிறையக்கேட்டிருக்கிறேன். உன் புருஷன் வந்தால் அவனுக்கு ஐந்து ஃப்ராங் கொடுத்து வீதிக்கு அந்தப் பக்கம் உள்ள கஃபெயில் போய்க் குடித்துவிட்டுவரச் சொல்கிறேன்’

அங்கிருந்த ராவூலின் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இதுதான் உன் புருஷனா’ என்றான்.

‘ஆமாம் அவர்தான்’

‘ஆள் நன்றாக இருக்கிறார், பார்த்தால் எதற்கும் மசிகிறவர் போல் தெரியவில்லை. சரி, இது யார்? உன்னுடைய தோழிகளில் ஒருத்தியா?’

அது உன்னுடைய படம் டியர், கழுத்தைச் சுற்றி அலங்காரமாக இருக்கிற கவுன் போட்டு நீ இருக்கிற படம். என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கித் தடுமாறினேன்: ‘ஆமாம் அவள் என் தோழிகளில் ஒருத்தி’.

‘பார்க்க நல்லவிதமாக இருக்கிறாள், என்னை அவளிடம் நீ அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும்’.

அப்போது மணி ஐந்து அடித்தது. தினமும் ஐந்தரைக்கு ராவூல் வீட்டுக்கு வருவார். இந்த ஆள் போவதற்கு முன் அவர் வந்துவிட்டால் என்னாகும்?

என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்! அப்புறம், அப்புறம் என்புத்தி வேலை செய்யவில்லை. நான் யோசித்தேன் - யோசித்தேன் - அதாவது - அதாவது - அந்த ஆளிடம் இருந்து விடுபட நல்ல வழி - எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரமாக - ஆமாம், சீக்கிரமாகவே அது நடந்துவிட்டது - உனக்குப் புரிகிறதுதானே?

மர்ஷியோன் தெ ரேன்தான் சிரித்தாள், சிரித்தாள், பைத்தியம் போலத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, கட்டிலே ஆடும்படியாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஒருவழியாகச் சிரிப்பு அடங்கியதும் கேட்டாள்.

“ம், அது, அந்த ஆள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தானா?”

“ஆமாம்”

“அப்படி இருந்தும் அங்கலாய்க்கிறாயா?”

“ஆனால் - டியர், அவன் சொன்னான் - நாளைக்கும் வருவேன்னு சொன்னான் - அதே நேரத்திற்கு வருவானாம் - எனக்கு ரொம்பவும் கலக்கமாகிவிட்டது. சரிக்கட்டற மாதிரி எப்படிப் பேசுகிறான் தெரியுமா? பிடிவாதமாச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் என்ன செய்யட்டும்? சொல்லு”.

படுக்கையில் எழுந்து உட்கார்ந்து யோசித்த மர்ஷியோன், திடீரென்று சொன்னாள்:

“அவனைக் கைது செய்ய ஏற்பாடு பண்ணு”.

அதிர்ந்துபோன பரோன் தடுமாற்றமான குரலில் கேட்டாள்:

“என்ன சொல்கிறாய்? என்ன நினைத்துப் பேசுகிறாய்? அவனைக் கைது செய்யச் சொல்வதா? என்ன முகாந்திரத்தின் பேரில்?”

“அது ரொம்பச் சுலபம். போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப்போய், மூன்றுமாதமாக அந்த ஆள் உன்னைப் பின்தொடர்ந்து வருகிறான் என்றும், நேற்றுசாயங்காலம் திமிர் அடங்காதவனாக உன் வீட்டுக்குள் வந்துவிட்டான் என்றும் நாளைக்கும் திரும்பவும் வருவேன் என்று பயமுறுத்தி உள்ளதாகவும், அவனிடம் இருந்து சட்டப்படியான பாதுகாப்புத் தரும்படியும் கேள்”.

“ஆனால் டியர் அவன் ‘அதை’ போலீஸிடம் சொல்லிவிட்டால்...?”

“அவர்கள் அவனை நம்பமாட்டார்கள், முட்டாளாக இருக்கிறாயே, உன்னைத்தான் நம்புவார்கள்; யாரும் பழி சொல்லமுடியாத சமூக அந்தஸ்து உனக்கு இருக்கிறது”.

”ஆனாலும், அப்படிச் செய்ய எனக்குத் துணிச்சல் வரவில்லை”.

“துணிந்து செய் டியர், இல்லாவிட்டால் நீ ஒழிந்தாய்”

“அவனைக் கைது செய்தால், என்னை எப்படி எல்லாம் அவன் அவமானப்படுத்துவான் என்று யோசித்துப் பார்த்தாயா?”

“அவமானப்படுத்துவதற்குச் சாட்சிகள் வேண்டும். நிச்சயமாக அவனுக்குத் தண்டனை கிடைக்கும்.”

“என்ன தண்டனை விதிப்பார்கள்?”

“நஷ்டஈடு கொடுப்பதுதான். இம்மாதிரி விஷயங் களில், இரக்கமே காட்டமாட்டார்கள்.”

“ நஷ்டஈடுன்னு சொல்லும்போதுதான் ஞாபகம் வருகிறது - அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது - அந்த ஒரு விஷயம் தான். அவன் என் மேல் அங்கியில் நாற்பது ஃபிராங்க் வைத்துவிட்டுப் போய்விட்டான்”.

“ நாற்பது ஃபிராங்கா?”

“ஆமாம்”

“அதிகம் கிடையாதே”

“கிடையாது”

“அது ரொம்பச் சொற்பம். எனக்காக இருந்தால் என்னை அவமானப்படுத்தியது போல இருக்கும். சரி”

“சரி அந்தப்பணத்தை நான் என்ன செய்யட்டும்?” மர்ஷியோன் சில நொடிகள் தயங்கிவிட்டு, தீர்மானமான குரலில் சொன்னாள்: “டியர் - அந்தப் பணத்தைக் கொண்டு ஒரேயொரு கௌரவமான காரியத்தைச் செய்யலாம். அதைக் கொண்டு உன் புருஷனுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்துவிடு. அதுதான் நியாயமாக இருக்கும்!”

கட்டுரை

சாதி - ஒரு உரையாடல் என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில், எழுத்தாளர் ஜெயமோகன், தமிழகத்தில் நிலவும் ஒரு தனித்துவமான சமூக நிலையை முன்வைக்கிறார்.

அதாவது சாதிச் சங்கங்களைத் தாண்டி, முற்போக்குப் பேசும் அனைத்துக் கட்சிகளும், சமூகமும், மூர்க்கமான சாதிய மனநிலை கொண்டவை. அரசியல், பொருளியல் அமைப்புகள் கூட அப்படிப் பிரிந்து இயங்குகின்றன.

தவிர, இடைநிலைச் சாதி அரசியல் இருமுகம் கொண்டது. ஒரு பக்கம் அது பிராமணர்களிடம் நீங்கள் தான் சாதியைக் கற்பித்தீர்கள் என்று சொல்லி இழித்தும் பழித்தும் ஒடுக்க முயல்கிறது.

இன்னொருப் பக்கம் அது தலித்துக்களிடம் உங்களிடமிருக்கும் குறைந்தபட்சக் கல்விகூட நாங்கள் போட்ட பிச்சை என்கிறது. தமிழக இடைநிலைச் சாதியினர் எந்தக் காலகட்டத்திலும் தலித் விடுதலைக்காக ஏதும் செய்ததில்லை, அவர்கள் போராடியதெல்லாம் தங்களுக்காக மட்டுமே என்னும் அவதானிப்பையும் முன்வைக்கிறார்.

இந்த அவதானிப்புகள் சரியான அவதானிப்புகள். ஆனால், முழுமையான அவதானிப்பா எனயோசித்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. தமிழகம் தாண்டி, கர்நாடகம், ஆந்திரம், மராத்தியம், குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 16-17 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவங்களில், இது தமிழகத்தில் மட்டும் நிகழும் தனித்துவமான சமூக நிலை அல்ல என மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

தமிழக சமூக அரசியல் தளங்களில், சாதீய வாதங்கள், முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகள் என மூன்று தளங்களில் நிகழ்வதைக் காணலாம். ஒரு காலத்தில் அச்சு ஊடகங்கள் வழியாகவும், மேடைப்பேச்சுக்களிலும் மறைமுகமாக வும், நேரிடையாகவும் வெளிப்பட்ட கருத்துக்கள், இன்று சமூக ஊடகங்களுக்குத் தாவி விட்டன.

தான்நினைக்கும் கருத்துக்களைப் பெருமளவு சுதந்திரத்துடன், சமூக ஊடகங்களில் சாதீயக் கருத்துக்களை மூன்று தரப்பாரும் முன்வைக்கிறார்கள். 1990களுக்குப் பிறகான காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட தலித் தரப்பில் இருந்தது காத்திரமான குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.

உயர், இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந் தவர்கள் தங்கள் சாதியின் மீது பற்றுக்கொண்டிருக்கும் வரை இந்த சாதிப் பிரச்சினை என்பது இருந்து கொண்டுதான் இருக்கும்.

இவர்கள், தமிழகத்தின் இந்த அரசியல் சமூக பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கும் எந்த சாதிக்குழுவில் பிறந்திருந்தாலும், அதற்கேற்ற பாவனைகளையும், அரசியலையும்தான் கொண்டிருந்திருப்பார்கள். பெரிதாக மாறியிருக்காது...

இந்தக் குழுக்களின் அரசியல் இயங்கியலின் அலையை மட்டுமே நம்பி, சாதாரண மனிதர்கள் அவர்கள் தலைவர்களாக இருக்கும்வரை அந்தக் குழுவின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவர்களாகவே இருப்பார்கள்.

அது ராம்தாஸாக இருந்தாலும் சரி, கொங்கு ஈஸ்வரனாக இருந்தாலும் சரி.. அல்லது வேறெந்தச் சாதித்தலைவராக இருந்தாலும் சரி.

இது ஒரு சமூக, அரசியல் கட்டமைப்புச் சிக்கல்.

இது போன்ற காலகட்டத்தில்தான், திருமாவளவன் என்னும் தலைவர் எழுந்து வந்திருப்பதை மிகவும் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்புகளுக்குள் தன் அரசியலைத் தொடங்கியிருந்தாலும், இன்று அவர் எழுந்து நிற்கும் தளம் வேறு.

எந்தக் கருத்தியலை எதிர்க்கிறோம், எந்த மக்கள் திரளுடன் நிற்கிறோம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தெளிவாக மக்கள் முன் வைத்துக்கொண்டேயிருக்கிறார். அரசியல் தளத்தில், அறிவார்ந்த தகுதியில், தன் சாதியைத் தாண்டிய முதல் தலைவராக அவர் உருவெடுத்துள்ளது ஒரு முக்கியமான சமூக நிகழ்வு.

ஆனால், இது எவ்வளவு தூரம் இறுகிப் போயுள்ள சாதியக் கட்ட மைப்பைத் தகர்க்கும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என் தனிப்பட்ட அனுபவத்தில், பெண்களுக்கான கல்லூரிக் கல்வி, அவர்களுக்கு ஒரு விடுதலையைத் தருகிறது என அறிந்திருக்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத கலப்பு மணங்கள், இறுகிப் போன என் சாதியில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்திருக்கின்றன.

சாதியை உதறிச் சென்ற பெண்கள் பெரும் பாலும் சமூக அடுக்கில் கீழ் எனக் கருதப்படும்சாதி ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர்.எண்ணிக்கை குறைவெனினும், முக்கியமான நிகழ்வு.

பெண்கள் கிடைக்காத என் சாதி ஆண்கள், பக்கத்து மாநிலத்திலும், மற்ற சாதிகளிலும், நிலத்தை எழுதி வைத்து மணம் புரிந்துகொண்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ளன. இங்கே என் சாதி என்பதை நான் அடையாளத்துக்காக மட்டுமே சொல்கிறேன்.

இரண்டாவது, தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பைப் பற்றிப் பேசுகையில், தமிழ்ச் சமூகத்தை மட்டுமே மையமாக வைத்துப் பேசுவதைத் தாண்டி, இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்றும் பார்க்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, The India Forum என்னும் மின்னிதழில், ‘ Revolt of the Uppercastes ’, என்றொரு கட்டுரை வந்திருந்தது.

2015 ஆம் ஆண்டு, கட்டுரையாளர் அலகாபாத் நகரத்தில் உள்ள முக்கியமான அதிகாரப் பதவிகளில் (அதை அவர் Positions of Power and Influence (POPI) என அழைக்கிறார்) இருப்பவர்களின் சாதிகளை ஒருசர்வே செய்து தருகிறார்.

அந்தப் பதவிகளில், இருப்பவர்களில் 75 சதம் பேர், உத்திரப்பிரதேச மக்கள் தொகையில் 16 சதமே இருக்கும் உயர் சாதியினர் என்னும் தரவை முன்வைக்கிறார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய மதராஸ் மாகாணத்தில் இது போன்ற ஒரு தரவை முன்வைத்துத்தான், Non Brahmin Manifesto என்னும் ஒரு அறிக்கை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் குரலை முன்வைத்தது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டவர்கள் என்னும் அரசியல் அதிகாரக் குழுவாக உருவாகியது.

ஆனால், அரசியல் குழுக்களாகத் திரட்டப்படாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை, குறிப்பாக வட மாநிலங்களில் முற்றிலும் தலைகீழாக உள்ளது. இந்த வேறுபாடுகளைச் சில தரவுகள் மூலம் பார்க்கலாம்.

சமீபத்தில் ஈகலட்டேரியன்ஸ் என்னும் தன்னார்வக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே, இந்தியப் பல்கலைக்கழகங்களில், பன்மைத்துவம் தொடர்பான தகவல்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள். அதிலிருந்து மூன்று உதாரணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்

ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 1)

தமிழகத்தில் 60-65% வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள், 76% இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 19% இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், 16% இடங்களையும், 1% இருக்கும் மலைவாழ்மக்கள் 0.66% இடங்களையும், 15% இருக்கும் உயர்சாதியினர் மற்றவர்களும் போட்டியிடக் கூடிய பொதுப்பிரிவில் 7.34% உள்ளார்கள்.

தெளிவாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தங்கள் சாதிச் சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் இருக்கிறார்கள். முன்னேறிய சாதிகள் தங்கள் சாதிச் சதவீத அளவுக்குக் குறைவாக இருக்கிறார்கள்.

இன்னொன்று மெட்ராஸ் பல்கலைக்கழகம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், நிலை கொஞ்சம் மாறியுள்ளது. 18% இருக்கவேண்டிய தாழ்த்தப்பட்டவர்களின் பங்கு 31.5% ஆக இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

இங்கு பிற்படுத்தப்பட சாதியினர் 56% சதவீதமாக இருக்கிறார்கள். ஆனால், இங்குமே முற்படுத்தப்பட்ட சாதியினரின் சதவீதம், அவர்கள் மக்கள்தொகை அளவுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப் படவில்லை.

ஆனால், இதைத் தாண்டி, தலித்துகள், மற்றும்பழங்குடியினர், பல்கலைக்கழக உயர் நிர்வாகத் தலைப்புப் பொறுப்புகளில் எத்தனை சதவீதம் இருக் கிறார்கள் என்பது நுணுக்கி ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 2)

1915 முன்வைக்கப்பட்ட வகுப்புவாரிக் கோரிக்கை, இடஒதுக்கீடு என்னும் சட்டத்தைத் தாண்டிய சமூக நீதிக் கருதுகோள். சமூக நீதி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதுதான்.

அப்படி எனில், பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் சில சாதிகளின் ஆக்கிரமிப்பு சரி செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சரியான பிரதிநிதித்துவம், உயர்சாதி மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான இடங்கள் முதலியன தரப்பட வேண்டும்.

இப்போது இருக்கும் பிற்படுத்தப்பட்ட 3-4 சாதிகளின் தயவில் நிற்கும் அரசியல் கட்சிகள் இதைச் செய்யாது. ஜனநாயக வழியில், பாதிக்கப்பட்ட சாதியினர் இதை முன்னெடுத்து, அதிகாரத்திடம் போராடிப் பெறவேண்டிய ஒன்று.

பாதிக்கப்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் எனக் கேட்கலாம். 1915ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகள் குறித்துப் போராடி, வெற்றி பெற்றார்கள் என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.

ஜனநாயகத்தின் ஒரே சாதகமான அம்சம், நேர்மையான கோரிக்கைகளுக்காகப் போராடுகையில் வெற்றி பெறும் சாத்தியங்கள் அதிகம்.

அதே சமயத்தில், தமிழகம், கேரளம், மராத்தியம் போன்ற மாநிலங்கள் தாண்டிய தளங்களில், மத்திய அரசு நிறுவனங்களில் நிலைமை முற்றிலுமாக வேறு. இந்திய மக்கள் தொகை 100 கோடி பேர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுகையில், தமிழகம், இந்திய மக்கள் தொகையில் 5% மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மத்திய அரசு நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக, ஐஐடி தில்லியின் தரவுகளைத் தருகிறேன், (படம் 3) (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்).

509 இடங்களில், 92.7% சதம் பேர் இந்தியாவில் 20 முதல் 30% வரை இருப்பதாகச் சொல்லப்படும் உயர்சாதியினர். 18% உள்ள தாழ்த்தப்பட்டவர்கள், 1.8% பேர் மட்டுமே உள்ளனர். 8% உள்ள பழங் குடியினர், 0.5% மட்டுமே உள்ளனர். 50% உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், 5% மட்டுமே உள்ளனர்.

இந்த சமநிலையின்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசியல் தலைமை வட மாநிலங்களில் இல்லை என்பது ஒரு நூற்றாண்டு சோகம்.

தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகையில், முன் வைக்கப் படும் இடைநிலைச் சாதிகளின் இன்றைய ஆதிக்கம்என்பது அவர்களின் ஜனநாயக அரசியல் எழுச்சியின் காரணமாக உருவானது.

அது மத்திய வடமாநிலங்களில் நிகழாததால், வழக்கமான சனாதனச் சாதிப் படிநிலைகள் இன்னும் அங்கே அப்படியே, மாறாமல் உள்ளன. உயர்சாதிகள், தங்கள் பாரம்பரிய மான சமூக, பொருளாதார அதிகாரங்களில் அமர்ந்துஇருக்கிறார்கள்.

20-30% உள்ள உயர்சாதிகள் 70-90% இடங்களைப் பிடித்திருப்பதைப் பல தரவுகள் பேசுகின்றன. மீதி உள்ள 70-80% பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்கள், 10-30%த்தையே பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உரத்துப் பேசப்பட வேண்டிய விஷயம்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதியத்தைப் பற்றி, அங்கே தலித்துகள், சிறு பான்மையினர் ஒதுக்கப்படுதல் பற்றி, பெங்களூரு மேலாண் கழகத்தின் பேராசிரியர் தீபக் மால்கன், “ When will Dalit Lives Matter ”, என்னும் ஒரு முக்கியமான கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

அதே போல, மத்திய அரசு நிர்வாகத்திலும், உயர் சாதியினர் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. இன்றைய மத்திய அரசில், 89 துறைச் செயலாளர்களில், 85 பேர் உயர் சாதியினர். உச்ச நீதிமன்றத்திலும், பன்மைத்துவக் குறைபாடு உண்டு.

ஐஐடி கரக்பூரில், அங்கே பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு என ஒரு ரகசிய கோட்டா இருந் திருக்கிறது. இது பற்றி அகமதாபாத் இந்திய மேலாண்கழகப் பேராசிரியர் ராம்மோகன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 88 பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது. 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களும், ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதியதும் (வெற்றி பெறுவதல்ல) மட்டுமே தகுதி. வருடம் 10 மாணவர்கள், ஐஐடி இயக்குநரின் சிபாரிசில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

2005 ஆம் ஆண்டு தகவல் உரிமைச் சட்டம் வந்த பின்பு, அதன் வழியாகத் தரவுகள் திரட்டப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டவுடன், இது நின்றுவிட்டது.

கரிசல் இலக்கியப் பேராளுமை கி.ரா, கிராமத்துக்குப் பேட்டரி லைட் வந்த கதையைச் சொல்கையில், அது வந்த பின்பு, அய்யனார் இரவில் வேட்டைக்குப் போவது நின்றுவிட்டது என எழுதியிருப்பார்.

அது போன்ற கதை இது. தகவல் உரிமைச் சட்டம், இது போன்ற உண்மைகளை வெளிக் கொணர்கையில், ஊழல், சாதிய அய்யனார்கள் வேட்டைக்குப் போவது நின்று போகும் வாய்ப்புகள் உண்டு.

ஒப்பீட்டில், இந்தியாவில் சாதிய இழிவுகள் ஒரளவு குறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் கேரளத்திலும், முதலமைச்சரைப் பற்றிய சாதீய இழிவுகளை அவரின் அரசியல் எதிரிகள் பொதுவெளியில் பேச முடிகிறது.

தமிழகத்திலும், 2011 தேர்தலில், ஒரு முதுபெரும் தலைவரின் சாதி குறித்து இழிவாகப் பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேசியதைப் பார்த்தோம்.

தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் சமூக நிலை இழிவாக இருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களின் நிலை, வட மாநிலங்கள் மற்றும் மத்தியக் கல்வி நிலையங்களை விட மேம்பட்டுள்ளது என்பதையே இதுவரை உள்ள தரவுகள் காட்டுகின்றன.

எனினும், மாநில வாரியாகத் தரவுகள் திரட்டப்பட்டு, அவை அனைத்து மக்களும் காணும் வகையில் பொது வெளி யில் வைக்கப்பட்டு அலசப்படவேண்டும்.

சாதியம் என்பது, அதன் அத்தனை அசிங்கங்களுடனும் ஆராயப்பட்டு, மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட்டு, சமூக நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஜனநாயக வழியில் வெளிப்படையாகத் தீர்க்கப் படுவதே சரியான வழியாகும்.

இதில் பாலினச் சமத்துவம் 50% கட்டாயமாகப் பேணப்பட வேண்டும். இன்று நிலவும் சாதீயப் பிரச்சினைகளுக்கு (ஒடுக்கப்பட்ட மக்களைத்தவிர), ஒரு தரப்பு, மற்றவர்களைக் காரணமாகச் சொல்வது ஒரு சாக்கு மட்டுமே. அது ஜனநாயக அறிதலின்மையில் இருந்து உருவாகும் ஒன்று.


The Revolt of the Upper Castes | The India Forum <https://www.theindiaforum.in/article/revolt-upper-castes>

When Will India's Educational Institutes Have Their 'Dalit Lives Matter' Moment? (thewire.in) <https://thewire.in/education/princeton-woodrow-wilson-caste-discrimination>

The Big Picture: IIT Kharagpur had quotas for faculty's children! (ttrammohan.blogspot.com) <http://ttrammohan.blogspot.com/2010/08/iit-kharagpur-had-quotas-for-facultys.html>

Of 89 secretaries in Modi govt, there are just 3 STs, 1 Dalit and no OBCs (theprint.in) <https://theprint.in/india/governance/of-89-secretaries-in-modi-govt-there-are-just-3-sts-1-dalit-and-no-obcs/271543/>

One Too Many Mishras: India's Supreme Court Is A Brahmin Bastion (buzzfeed.com) https://www.buzzfeed.com/ravikiranshinde/one-too-many-mishras-indias-supreme-court-is-a-brahmin

பிரிவறிதல்

சாகும்வரை வரக்கூடாது என்றிருந்தேன்
பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று
மரங்களைப் பார்க்க ஆசைப்படுவதாக உற்சாகமானார்கள்
உன்னைப் பார்க்கலாமென்றுதான் அந்த இடத்திற்கு நடந்தேன்

நீ இருக்கப்போவதில்லைதான் நானும் இருக்கப்போவதில்லை
ஸ்டீபன் ஹாக்கிங் கண்டுணர்ந்ததுதான்
இது ஒரு மகா எந்திரம்
சக்கரங்களில் நசுங்கிப் போகிறவர்களைப் பற்றி
விசனப்பட நேரமில்லையதற்கு

கைகோர்த்துக்கொண்டு கனவு காண்பது
பாதுகாப்பாயிருந்தது
நமக்குள் இருந்த நம்பிக்கை
புவியடுக்குகளில் நிலவும் மெல்லிய நிலநடுக்கங்கள் போல்
அனிச்சையாய் இந்த மரக்கிளைகளில் அசைந்தது
பேராசிரியர் குனிந்து கையொப்பமிடும்போது
சொல்லிடப்போறேன்
என்ற ஒற்றைச் சொல்லை நீ முகம், முழுக்க
அபிநயித்தாய்
வேண்டாமே என்ற ஒற்றைச் சொல்லை நான் என் முகத்தில்
பாவிக்க முயன்று தோற்றேன்
அதற்குண்டான உன் முகபாவத்தை
இந்தப் பவழமல்லி மரத்தில் விரல்களால் தேடுகிறேன்
மரங்களின் காதலன் நான் எனச் சிரிக்கிறேன்
இளைய மாணவர்கள்
வானத்தில் கட்டப்பட்ட மேல் கட்டுமானம்
தொடுக்கும் எந்தப் பேரழிப்பையும்
தாங்கி நிற்கின்றன மனசுகளின் இருப்பு
பூமியின் ஆகப்பெரும் இயங்குயிர் குழந்தை
திமிங்கலமெனப் பாசாங்கு செய்வதில் லாபமென்ன
பூமியின் ஆகப் பெரும் குழந்தையான மனசின்
ட்ரில்லியன் டன் சுமையைச் சுமக்கும்
மனிதக்கூட்டம் சாதிக்க இனியொன்றுமில்லை
விடைபெறலில் மிதக்கும் கண்களைப் பார்த்துச் சொன்னேன்
எந்தக் கண்ணீரிலும் கரையாத நினைவு அணு ஒன்றை
கண்களில் சுமந்து போகாதீர்கள்
கண்மணிகளே...

குயுக்தம்

இறைஞ்சுவதில் ஒரு மண்டலம் பயிற்சி பெற்றவர்கள்
சொல்லக் கேட்டு கேட்டுச்சொல்லி
ஒவ்வொருவராய் வருகிறார்கள்
கரகரவெனத் தீட்டப்படும் கத்தியை
இந்த வைகறைப் பனியில் மங்கலாகப் பார்த்துவிட்டு
தொர தொரவெனக் கிடாய் ஒன்று அழுவதாய்
காட்சியொன்று விரிய
என்னிடமும் குஞ்சுகள் இருக்கின்றன
நத்தைகளை அடிமடியில் வைத்திருக்கிறேன்
என் மேனியெங்கும் ‘பாசம்’ மிதந்தலைகிறது
இரக்கமற்ற பூமி தாங்குவதற்கீடாக
புதுப்புது ஜிஎஸ்டியால் என்னையும்
உறிஞ்சிக்கொண்டேயிருக்கிறது
வானத்திற்கும் வரி செலுத்தித் தொலைக்கிறேன்
பாருங்கள் மீன்கொத்திப் பறவைகள்
பசியோடு கிறங்குகின்றன
என்னிடமே வந்து நீங்கள் கேட்டவண்ணமிருந்தால்
எப்படி...
இறைஞ்சுவதில் முன்அனுபவமே இல்லாத குளம்
சாப்ளின் பகிர்ந்தது போல்
தண்ணீருக்குள் தண்ணீராய் அழுது தீர்த்தது
இறைஞ்சுவதற்கான பல பட்டறைகளில் கற்றவர்கள்
முகாம்களில் தங்கிப் பயின்றவர்கள் என வருவோரின்
சாமர்த்தியத்திற்கிணையான சமர்புரிய
அங்கேயே கிடைக்கும் குளம் யாதுமறியவில்லை
வெட்டிக் கொடுப்பதும் கட்டிக் கொடுப்பதும்
தாய்மையின் பெருங்கருணையென்ற பரப்புரை
அரசூடகங்களால் தீவிரமாக்கப்படுகிறது
தான் வெட்டுண்டும் கட்டுண்டும் போவதைத்
தடுக்கவோர் கரமின்றி
இறைஞ்சுவோர்க்கு வழங்கிவிட்டு
இறைஞ்சுவோர் கொண்டுசென்ற குளத்தின்
குறும்பகுதியொன்று சமுத்திரமாக வளரும்
வாய்ப்புளதான கற்பனையில் கிடந்தது அது.

மீனும் கடலும்

கவிதைக்குள் நீந்துவது வழக்கமாகிவிட்டிருக்கிறது
கடலில் மீன்கள் நீந்துவதைப்போல
மீன்கள் கடலைக் குடிப்பதில்லை
கடலும் மீன்களைத் தின்பதில்லை
மீனும் கடலும் ஒன்றாயிருக்கின்றன
கடலும் மீனும் வேறாய் நிற்கின்றன

அத்வைதம் துவைதம் விசிச்டாத்வைதமல்ல
பசிதான் பேசுபொருள்
மீன்கள் கடலைக் கண்டுபிடித்து
பிடித்துக் கடித்துத் தின்றுவிடலாமென்று
விரட்டிக்கொண்டோடுகின்றன
கடலும் தன்னைத் தான்குழைத்துத் திரித்து
மீனுண்ணச் சுழல்கிறது
இவைகளெல்லாம் அலைகளுக்குத் தெரிவதில்லை
திருநாவுக்கரசரைப் போன்றதொரு
பிரம்மாண்டப் பேருருக்கொண்ட காலம்
காலம் காலமாய்ச் சாகரத்தின் விளிம்பிலமர்ந்துகொண்டு
உழவாரப் படையொன்றால்
அலைகளைச் செதுக்கிக்கொண்டேயிருக்கிறது

சமுத்திரத்தை ஸ்படிகத் தெளிவாகப் பார்க்க
கவிதைக்குள்ளும் நானப்படித்தான்
நாளும் பொழுதுமாகத் திளைக்கிறேன்
ஒரு நாளும் ஒரு துளிக்கவிதையைக்கூட
பிய்த்துத் தின்றவனில்லை நானும்... நானும்

கவிதைகள்தாம் கார்டூனில் வரும் முயல்குட்டி
கேரட்டொன்றை மெல்வதைப் போல
என்னை மென்றுகொண்டேயிருக்கிறது
நாசமாய்ப் போக அது.

விமர்சன உரை

வாழ்வு பன்மைக் கலாச்சாரமாக்கத்தின் இழு விசையில் பயணிக்கும் தன்னிச்சை நிகழ்வாகிவிட்டது. தன்னைச் சுற்றிய இருத்தலில் நேரிடும் மாற்றங்களை விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஒருவன் உடன்படும்போது எழுகிற முரண்பாடுகளே ஒருவனின் அகம் சமநிலை இழக்கும் புள்ளி என வரையறுக்கலாம்.

எந்தவித மாற்றுச்செயலுக்கும் உடன்படாமல் ஒழுங்கு முறைக்குள் பயணிக்கும் ஒருவனின்யதார்த்தம் சலிக்கும்போதெல்லாம் அவனுக்குத் தனது அன்றாடங்களின்மீது உண்டாகும் விலகல்தன்மையே அக்குறிப்பிட்ட அகமானது மாற்றுக்கோணத்தில் உலகைக் காணத் தூண்டுகிறது.

கவிஞர். செல்வ சங்கரனின் ‘கண்ணாடிச் சத்தம்’ தொகுப்பையும் அங்கிருந்தே புரிந்துகொள்ள முடியுமெனத் தோன்றுகிறது. இந்தத் தொகுதியில் ‘தன்னு மொட்டை’ என்றொரு கவிதையில் ஒரு ஒன்றரை வயது குழந்தையைமடியில் வைத்துக் கொள்ளும் காட்சியொன்று அடுத்தடுத்து அந்தப் பேருந்திலிருக்கும் அனைத்து மனிதர்களைக் கொண்டும் நிகழ்த்தப்படுகிறது.

அனைவரும் ஒருவர் மடியில் மற்றொருவர் அமர்த்தப்படும் தொடர் காட்சிகள் அந்தக் கவிதைக்குள் ஒருவித ஐயத்தையும், வினோதத்தையும் உண்டாக்குகிறது. அதைப் போலவே ‘கடைசி வாழ்வு’ கவிதையில் “இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால் அவர்  இறக்கவில்லை என்றுதானே அர்த்தம்” என்று இறப்புச் செய்தி சொல்ல வந்த குழந்தையின் அறிவிப்புத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுகிறது.

இவ்வாறு கவிதையின் அடிநாதமாக வினோத சித்தரிப்புகளைக் கைக்கொள்கிற செல்வ சங்கரனிடம் தொழிற்படும் அபத்தம் என்பது சாதாரணங்களின் மிகைப்படுத்தலாக அதிகம் வெளிப்படுவதைக் காணலாம்.

ஆனால் உண்மையில் அபத்தம் பெரும்பாலும் கற்பனையின் (fantasy) யதார்த்த வடிவமாகவே இருந்துள்ளதைக் காண்கிறோம். காப்காவின் பட்டினிக் கலைஞன் கதையைப்போல, ஒருவனுக்குப் பசியே எடுக்காது என்று கூறுவது கற்பனை என்றால் அவனைக் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் காட்சிப்படுத்திக் காசு பார்ப்பது யதார்த்தத்தில் நிகழக்கூடிய சாத்தியங்களுக்கு உடன்பட்டது.

அபத்தம் என்னும் மையம் யதார்த்தத்தின் ஆரங்களால் சூழப்பட்டிருக்கும்போது அது (fantasy) என்ற உணர்வுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கப்படுகிறது. நான்கு கைகள் அல்லது இரண்டு தலைகொண்ட பிறவி என்பது ஒருகாலத்தில் கற்பனை உயிரி என்றால், இன்றோ அதுவொரு மரபணு பிழை என்றாகிறது.

கற்பனையின் வீச்சு மட்டுப்படுத்தப்படும்போது உண்டாகும் அபத்தம் என்பது கனவுலகை எதிர் கொள்ளப் பயன்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டு வடிவம். ஆனால் செல்வசங்கரனின் கவிதைகளோ இயல்புநிலைகளை, சாதாரணங்களை மற்றும் எளியவாழ்வியல் காட்சிகளை அபத்தமாகப் பாவிக்கிறது.

இவ்வாறு ஒரு எடையற்ற படிமம் வினோதமாக்கப்படும்போது அதற்கான நோக்கு (purpose) தீவிரத்துவத்தில் வெளிப்படாமல் அல்லது குறைந்த பட்சம் இருத்தலியல் குறித்த பெருங்கேள்விக்கான யோசனைகளுக்கும் இட்டுச்செல்லாதபோது கவிதைகளானது ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு உணர்வுக்கருகில் சென்று  நிற்கிறது.

மேலும் இக்கவிதைகளின் வெளிப்பாடு ஒரு சாமான்யனின் கண்ணோட்டத்தில் முன்வைக்கப் படுகிறது என்பதையும் காணலாம். அதாவது தொல்காப்பியம் வகைப்படுத்துகிற உலக வழக்கு (பொதுவழக்கு) மற்றும் செய்யுள் வழக்கு என்ற சொல்லல் முறை பகுப்பில் பார்த்தோமேயானால் செல்வசங்கரன்பொதுவழக்கில் தன் கவிதை மொழியைக் கையாள்கிறார்.

கவிதைக்கே உண்டான மேட்டிமைகளைத் துறந்து ஒருவிதமான வெகுளித்தனத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதனாக வெளிப்படும் அவர்அந்தச் சாமான்யவேடத்தில் தான் காணும் சிக்கலான அனுபவங்களையும், நம்பிக்கைகளையும், தனதுபிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் இல்லையென்று நம்பிக்கொள்ளும் நிலையோடு உலகை எதிர்கொள்கிறார்.

ஆகவேதான் இதில் வருகிற கவிஞரின்குரலில் உவகையான தொனி எதுவும் வெளிப்படுவதில்லை. அவரின் ‘பழைய உலகம்’ கவிதையில் அவரே கூறுவதுபோல “எல்லாம் பழையதாகிவிட்டது” என்றும், எல்லாவற்றையும் கண்டு சலித்தது போலவும் அதை ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

அந்தப் பழையதைப் புத்துயிர்ப்பாக்கவோ அல்லது தன் கவிதைகளின் வழியே தீர்வுகாணவோகூட அவர் எந்தக் கணத்திலும் முயற்சிக்கவில்லை. தோராயமாக இந்தத் தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்த கவிதைகளிலும் ஒருவித சலிப்பு, விரக்தி மற்றும் அதிருப்தி போன்ற எதிர்மனோவியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

தான் செல்லும் இடங்களிலெல்லாம் சந்திக்க நேரிடும் மனிதர்களின் மீதான விலகலும், அவர்களைத் தம் கவிதையின் வழியே எள்ளல் செய்யும் குரலே தீவிரமாக ஒலிக்கிறது.

இதை அன்றாடங்களினால் தொடர் தொந்தரவுக்கு உள்ளான ஒருவன் உண்டாக்கும் முரண் அழகியல் என்றும் புரிந்துகொள்ளலாம். எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் வெளிப்படையான சொற்கள், வசவுகள் மற்றும் அப்பட்டத்தன்மைகளால் இதில் வருகிற வரிகளில் கவிதைசொல்லியின் ஆதிக்கம் வெளிப்படையாகக் காணமுடிகிறது.

இன்னமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் சில இடங்களைத் தவிர்த்துச் சின்னச் சின்ன உவமைகளோ, இடையீடுகளோ (தற்குறிப்பேற்றம்), உருவகமோ, அல்லது படிமங் களோ கூடக் காணக் கிடைப்பதில்லை.

ஒருவேளை அழகியலின்மீது கவிஞருக்கு இருக்கும் நம்பிக்கையின்மைதான் மனிதர்களின்மீதான எள்ளலாக மாறுகிறதோவெனவும் தோன்றாமலில்லை.

இந்த நிலையாமையான வாழ்வை நினைத்தும், சுற்றி நடக்கின்ற கேலிக்கூத்துகளை எண்ணி தலையில் அடித்துக்கொள்ளும் ஒருவனின் உடல்மொழியே இவரது கவிதைகள். அதேசமயம் சாராம்சத்தின் சாயலை ஒட்டி எழுதப்பட்ட ‘சொர்க்கபுரி’ கவிதையில் வருகிற உண்மை, ‘சாபக்கேடு’ கவிதையில் வருகிற இருள்/வெளிச்சம் பற்றிய அனுமானங்கள் இதர கவிதைகளைக் காட்டிலும் கூடுதல் அர்த்தங்களைக் கொண்டுள்ளதாக எழுதப்பட்டிருக்கின்றன.

ஒரு சின்னயோசனை தனக்குள் உருவாகி அதற்கான விளக்கங்களைத் தருவித்து அதன் உண்மை நிலையினைப் பாதியிலேயே உருமாற்றத்திற்குள்ளாக்கி வளர்த்தெடுப்பதன் மூலம் தன் படைப்புருவாக்கத்தை நிகழ்த்திக்காட்டுகிறார் கவிஞர்.

இவ்வாறு கணங்கள் ஒவ்வொன்றையும் தூரத்தில் வைத்து அதன் நடவடிக்கைகளை அறிவார்ந்த, தீவிர மனநிலைக்கு மாற்றான தரப்பில் நின்று கண்காணிக்கும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு எனக் கண்ணாடிச் சத்தத்தை அணுகலாம்.

******

அதே நேரத்தில் வாழ்வையும், சுற்றியுள்ள மனிதர்களையும் தொடர்ச்சியாக ஒட்டுதலின்றியும், பகடித்தனமாகச் சந்திக்கும் போக்கு ஒருகட்டத்தில் தொந்தரவிற்குள்ளான (Irritations) மனோபாவத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும்.

பகடியின் அர்த்தமே தனக்கு ஒவ்வாத ஒன்றை எதிர்ப்பதற்கும், அதைநோக்கி கேள்வியெழுப்புதற்குக் கிடைத்த மாற்றுவடிவமே என்பதைப் புரிந்துகொள்ளவது அவசியமாகிறது.

ஏனெனில் கவிஞர் இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் சுய எள்ளலையோ அல்லது பெரும் சித்தாங்களை நோக்கி பகடி செய்வதில்லை. மாறாகத் தனது சூழலையும், அதில் வந்துசெல்லும் மானுடத்தின் இருப்பையுமே நகைப்பாக வினா எழுப்புகிறார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

கவிஞர் செல்வசங்கரனின் கவிதைகள் பெரும்பாலானவை ஒற்றைச் சிந்தனையிலிருந்து உருக்கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பது இத்தொகுப்பிலும் நிரூபணமாகிறது.

துவங்குகிற புள்ளியிலிருந்து பாதை விலகாமல் கூறிச்செல்லும் இவரின் மொழியின் கட்டமைப்பு பாடுபொருளைவிட்டு பெரும்பாலும் வாசிப்பரின் கவனத்தைச் சிதறடிக்காமல்வைத்திருக்கும் போக்கைக் கடைபிடிக்கின்றன.

ஆகவேதான் இக்கவிதைகள் தனது முடிவினைக் காட்டிலும் துவக்கத்தில் சுவாரஸ்யங்கள் கொண்டதாக உள்ளன.

இன்னமும் கூறப்போனால் கவிதையின் மொத்த சூழலும் முதலிரண்டு வரிகளிலேயே துலக்கமாகி விடுகிறது. அதன்பிறகு நிகழ்வதெல்லாம் விவரிப்புகளாலும், அதிலிருக்கும் மெனக்கெடல்களாலும் எடுத்துரைப்பிலிருக்கும் ஆற்றலுக்கேற்ப தனது வலுவினை உறுதி செய்துகொள்கின்றன.

கவிதையில் இடம்பெறும் கூடுதலான சுட்டு எழுத்துகளும் மொழியைத் தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதைக் காணலாம். ஏனெனில் இவரின் கவிதைகளுக்குள் எதுவும் பொதுமையாக நடப்பதில்லை அல்லது அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

எல்லாமே கவிதையைச் சொல்பவரால் அந்தவானம், அந்தச் சத்தம் எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெளியில்தான் தன்னை அனுமதித்துக் கொள்கிறார்.

சுட்டிக்காட்டப்படுதல் என்று இங்குக்கூறுவது மேற்கூறியதுபோல முதலிரண்டு வரிகளில் கவிஞர் உருவாக்கிவிடுகிற காரண-வெளியைத்தான்.

அந்த வெளிதான் அக்கவிதையின் மையமாகவும் விளங்குகிறது. உதாரணமாக ‘பெரிய தவளை’ கவிதையில் ஆரம்பத்திலேயே தவளையை அறிமுகப்படுத்திவிடும்போது அதன்பிறகு நிகழும் அனைத்தும் அந்தத் தவளைப்பற்றியதாக மாறுகிறது.

இடையில் வேறெந்த சிந்தனைக் குறுக்கீடுகளோ, உவமைகளோ எதன்மீதும் அணுக்கமின்றிச் சொல்லுதலின் வாயிலாக மட்டும், உருவாக்கிய கணத்தின் அதிர்வுகளை முடிந்தவரைக்கும் நீட்டிப்பதன் வாயிலாக மட்டுமே கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.

இது ஒருவகையில் கவிதைக் கூறலில் கவிஞருக்கு இருக்கும் தீர்மானத்தையும் வெளிப்படுத்துகிறது. எதைச் சொல்லவேண்டும் என்பதற்கு ஈடாக எப்படிச் சொல்லவேண்டும் என்பதிலும் கூடுதல் பிரக்ஞையைக் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

உதிக்கும் யோசனைகளை மொழியாக்க முனையும் செயலில் தெரிகிற வேகமும் சொல்ல வந்ததைக் கச்சிதமாகச் சொல்லவிடாமல், சொல்லவந்ததிலிருக்கும் எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்கிற முனைப்பு முன்நிற்கிறது. அதாவது கற்பனை இடையீடுகளுக்குப் பதிலாக வியாக்கியான இடையீடுகள் நடக்கின்றன.

ஏனெனில் கவிஞரின் இந்தக் கவிதைகள் பெரும்பாலும் செயலாக (Action) இருக்கிறது. அதாவது காட்சியாக மாறாத செயல். ஒரு சட்டகத்திற்குள் வருவதற்கு முன்னரே நின்றுவிடும் செயல்.

ஆகச் செயல் காட்சியாக மாறாதவரை, வாக்கியங்கள் நியாபகமாக மாறுவதிலும் சிக்கல்கள் நேரிடலாம். ‘கடவுள் ரம்மி ஆடினார்’ கவிதையில் “கண்ணாடி போட்டவர்களைக் கடவுள் கண்ணைக் குத்த மாட்டார்” என்ற வரி உண்டாக்கும் சுவாரஸ்யத்தைப் படிக்கும் வாசகன் அதைத் தனது ஊகத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் “கண்ணாடி அணிந்தவர் - கடவுளின் தன்மை - விளையாட்டு” போன்றவற்றின் வழியே கவிதையின் உறைகணத்தைத் தொடர்ந்து நீட்டித்துச் சொல்கிறார்.

கவித்துவமிக்க வரிகளை உண்டாக்கி, அவற்றை முடிந்தவரை சொல்லுதலின் வழியே உறையச்செய்து, அவற்றின் நகர்வினை மெதுவாக்கிவிடுகிறார். ஆகையால் ஒவ்வொரு கவிதையும் தமக்குரிய எல்லைகளைத் தாமாகவே தீர்மானித்துக்கொள்கின்றன.

சொல்லுதல் சமயத்தில் விவரிப்புகளாக மாறிவிடுவதால் நேரிடும் இடர்பாடுகளாக இதனைப் பார்க்கத் தோன்றுகிறது. எனவேதான் முன்கூறியபடி கவிஞரின் முதல்வரியில் உருவாகும் வியப்பு என்பது வழக்கமாக ஒரு கவிதையின் இறுதியில் முடியக்கூடிய ஒன்று.

அதை முதல் வரியிலேயே உடைத்துச் சொல்லிவிட்ட பின்பு, கவிதை மொத்தமும் ஒரே பாடுபொருளில் நிலைத் திருப்பதாலும், முந்தைய வாக்கியங்களின் அதிர்வுக்குஈடான உணர்வினை உருவாக்கத் தவறி விடுவதாலும் விஷய நீட்டிப்பாகவும் மாறிவிடுகிறது. இவ்வாறுவிவரிப்புகள் இடையீடுகளாக முன்நிற்காதபோது, பூடகமான குறிப்பிடுதலும் இல்லாதபோது கிட்டத்தட்ட சில கவிதைகள் குறுங்கதையின் வடிவ நேர்த்திக்குத் தன்னை மடைமாற்றிக் கொள்வதையும் காணலாம்.

கவிதையின் வெளியை தீர்மானிப்பது நிச்சயம் அதை எழுதிய படைப்பாளியே. அந்த வகையில் கவிஞர் செல்வசங்கரனின் கவிதைகளின் எல்லைகள் உடைபடவேண்டியதும், தமது மையத்தைப் பெருக்கி பன்மையாக்குவதும் அல்லது அவற்றை மறைபொருளாக்குவதும், கருப்பொருளின் மும்முரத்தைக் கலைத்து விசாலமாக்குவது போன்ற கூறுகள் அவரின் படைப்புலகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகவும் அமையக்கூடும்.

நேர்காணல்: ஒளிப்பதிவாளர் அமரர் பி. என் சுந்தரம்

2007-ல் பி.என்.சுந்தரம் அவர்கள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நேர்காணலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

நன்றி : விஜயராஜ், சுபாகுணராஜன், தளவாய் ராஜன்    

“தொழில்நுட்பம் அல்லது சினிமாவின் தொழிற்சாலைச் சார்ந்த கலை யுக்திகள் மேலைநாடுகளிலிருந்து வந்திருக்கலாம். ஆயினும் அதன் அழகியல் பண்பாடு சார்ந்து, மண்ணும் மாந்தர்களும் சார்ந்து அந்தந்த வெளிகளுக்கு ஏற்ப நுண்ணிய வடிவத்தை அடைகிறது.

ஒரு மேதையின் கையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சினிமாவை திரையில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அற்புத நிகழ்வாகப் பிரதியெடுத்து நகலாக்க முடியாத நிகழ்த்துக்கலையாக விரிகிறது.”

சொர்ணவேல்: ஒளிப்பதிவாளர் கர்ணணைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் ஸ்பேகெட்டி வெஸ்டர்ன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய அமெரிக்க ஸ்டூடியோக்களின் துணையுடன் இத்தாலியின் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட செர்ஜியோ லியோனியின் வெஸ்டெர்ன்ஸ் ஞாபகத்தில் வருகின்றது. இசையைக் கூட அதிலிருந்தே எடுத்திருக்கிறார். என்னியோ மாரி கோனியின் இசையின் தாக்கம் தெளிவாக உள்ளது.

சுந்தரம்: சினிமாவே தொழில்நுட்பம் சார்ந்த கலைதானே. அது மேற்கிலிருந்து வந்திருக்கலாம். ஆயினும் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் நலிவடைந்த 1950களின் இறுதியாண்டுகளில் வெஸ்டர்ன்ஸிற்கு உயிர் கொடுத்தது குறைந்த செலவில் இத்தாலியில் ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் உறுதுணையுடன் இத்தாலிய இயக்குனர்கள் எடுத்த ஸ்பேகட்டி வெஸ்டர்ன்ஸ்தான்.

லியோனியின் சினிமொழி அபூர்வமானது. அவரது 1960களில் எடுக்கப்பட்ட படங்களான பார் எப் பிஸ்ட் புள் ஆப் டாலர்ஸ் (1964), பார் எ ப்யூ டாலர்ஸ் மோர் (1965), மற்றும் த குட், த பேட், அண்ட் த அக்லி (1966) சினிமா சரித்திரத்தில் மைல்கற்கள்.

முக்கியமாக மிக அகலமான நிலக்காட்சிகளிலிருந்து மிக அருகிலிருந்து சட்டகப்படுத்தப்பட்டிருக்கும் அண்மைக்காட்சிக்குத் தாவுவது சினிமொழியில் பேசாமொழிக் காலத்தில் க்ரிப்பித்-ஐஸன்ஸ்டெயினின் காலம் தொட்டு உள்ளது தான் என்றாலும் லியோனி அதன் எல்லையை ஒரு படி விரிவுபடுத்திப் புதிய ரீதியில் வெளியை தொகுப்பின் மூலம் கட்டமைத்து சினிமாவின் ப்ளாஸ்டிக் தன்மையிலுள்ள சாத்தியங்களை முன்னிறுத்தினார்.

அத்தகைய ப்ளாஸ்டிக் தன்மையைச் சிசிலியிலுள்ள தொன்று தொட்ட வறண்ட நிலத்தின்  மேல் அவர் ஊடாட விடும்பொழுது சினிமா அமெரிக்க வெஸ்டர்ன்ஸ் சரித்திரத்திலிருந்து வேறு பரிமாணம் கொள்கிறது.

அத்தகைய பரிமாணம் வெஸ்டர்ன்ஸின் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அதன் போக்கையே மாற்றுகிறது. தொழில்நுட்பம் அல்லது சினிமாவின் தொழிற்சாலைச் சார்ந்த கலை யுக்திகள் மேலைநாடுகளிலிருந்து வந்திருக்கலாம்.

ஆயினும் அதன் அழகியல் பண்பாடு சார்ந்து, மண்ணும் மாந்தர்களும் சார்ந்து அந்தந்த வெளிகளுக்கு ஏற்ப நுண்ணிய வடிவத்தை அடைகிறது. ஒரு மேதையின் கையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சினிமாவை திரையில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அற்புத நிகழ்வாகப் பிரதியெடுத்து நகலாக்க முடியாத நிகழ்த்துக்கலையாக விரிகிறது.

பார்க்கும் பொழுது கண்டுபாவித்து இதைப்போலவே ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஆவல் சினிமா எடுப்பவனுக்கும் பார்ப்பவனுக்கும் கூட ஏற்படுவது இயல்பானதே. நமது சகல உணர்வுகளையும் தூண்டக்கூடிய சினிமா நமது ஆழ் மனதை தீண்டும்பொழுது அத்தகைய உணர்வுகளின் எழுச்சி இயல்பானதே.

ஆயினும் அவ்வுணர்வுகளை வடிவமைத்துச் சினி மொழியில் கவிதையாகச் செதுக்கும் அழகியலும் லாவகமும் எல்லோருக்கும் கைகூடுவதில்லை.

ஜப்பானிய கலைஞன் அகிரா குரோசாவை எடுத்துக்கொண்டால் ஜான் போர்டின் வெஸ்டர்ன்ஸில் அவர் மனம் லயித்ததைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

பின்னர் அவரது யோஜிம்போ (1961) பல மேலை நாட்டு இயக்குநர்களுக்கு வெஸ்டர்ன்ஸின் கதையாடலின் சூக்குமத்தை அதன் சினிமொழி மூலம் விளக்கியது.

அவரது ஹிடன் போர்ட்ரஸ் (1958) ஜியார்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ்க்குக் காரணமாகயிருந்தது என்று லூகாஸும் அவரது எல்லா நேர்காணல்களிலும் தவறாமல் பதிவு செய்திருக்கிறார்.

இவ்வாறு காற்றைப்போலப் பயணிக்கும் சினிமா அதன் மணத்தை அங்கங்கு எடுத்துச் சென்று நுண்ணிய மனங்களைப் பாதிப்பது இயல்பானதே.

ஆயினும் காற்றைக் காசாக்க விழையும்பொழுது நாம் மணத்தை மாசாக்கி சக்கையாக ஒன்றை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பது தொழிற்கூடம் சார்ந்த கலை என்ற சினிமாவின் தொழில் சார்ந்த, வியாபாரம் சார்ந்த தன்மையின் நிரந்தரமான யதார்த்தம்.

ஆயினும் தொழிலும் கலையும் முரணியங்கும் வெளிகளிலுள்ள கலை வெளிப்பாடுடன் கூடிய பொருளீட்டக் கூடிய சாத்தியங்களே சினிமாவை நோக்கி என்றும் பல கலைஞர்களையும், வியாபாரிகளையும், போலிகளையும், மற்றும் எல்லையில்லாமல் கலக்கும் இம்மூன்று பரிமாணங்களுடன் போராடும் மானுடர்களையும் தன்பால் இழுக்கிறது.

வியாபாரியாகப் பணம் பண்ண வரலாம், இல்லை இப்பணம் எனக்கு ஒரு நல்ல திரைக்கதையை அமைக்கக் கால அவகாசம் கொடுக்கிறது என்று கூறலாம் ஆயினும் அடிப்படையில் அதன் பொருளாதார அடிப்படையே அதன் ஈர்க்கும் சக்தியாக உள்ளது.

ஆயினும் அத்தகைய பொருளா தாரஅடிப்படையே ஒரு பிரமை, ஒரு மாயை என்பது எக்காலமும் — நான் சினிமா தொழிலுக்கு வந்த 1950களிலிருந்து — இது லாபமற்ற நசிந்துகொண்டிருக்கும் தொழில் — அது தன் இறுதி கட்டத்தில் இருக்கிறது என்ற சதா ஒலிக்கும் சொல்லாடல்கள் உரைக்கும்.

ஆயினும் இன்றளவும் அது செத்து பிழைத்து தழைத்துக்கொண்டுதான் உள்ளது. ஒரு குக்கிராமத்தின் சாலையோர மரத்தில் அமாவாசை இருட்டில் அமர்ந்திருக்கும் பேயையொத்த சினிமா திகிலுடன் பல கதைகளைத் தன்னைப் பற்றிப் பரப்பிக்கொண்டு பயணிகளின் மனதை ஆக்கிரமித்துத் தனது புதிர்நிலையில் மனம் லயித்துப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

அங்கே பார்! என்ன நடக்கிறது என்கிறோம் நாம்!... ஐரோப்பாவில் பார் என்ன நடக்கிறது என்று மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள்!... இங்குப் புதிய அலைகள் ஓய்ந்துவிட்டது... ஈரானையும் கொரியாவையும் பாருங்கள் என்கிறார்கள் பிரெஞ்சுக் காரர்கள்! கிரோஸ்தாமியையும் மக்பல்பாபையும் பாருங்கள் என்கிறார்கள் அவர்கள். கோதார் ஒரு படி மேலே சென்று சினிமா கிரிபித்துடன் ஆரம்பித்துக் கிரோஸ்தாமியுடன் முடிந்துவிட்டது என்கிறார்.

ஆயினும் டிஜிட்டல் வடிவிலுள்ள புதிய ஜின்னுடன் புதிய ஜீபூம்பாவாகப் பரிணமித்துப் புதிய கதையாடல்களுக்கான சாத்தியங்களுடன் கனவு எனும் மாயக்காற்றில் ஏறி என்றுமில்லாத அளவு இன்று சுறுசுறுப்பாகச் சினிமா பயணித்துக்கொண்டு தானிருக்கிறது.

சொர்ணவேல்: கர்ணன் அவர்களைப்போல வித்தியாசமான ஸ்டூடியோ ஒளிப்பதிவாளர்கள் என்று யாரைச் சொல்லலாம்?

சுந்தரம்: தம்பு, ஜி.கே. ராமு, கன்னட திரையுலகில் நிகரில்லாது விளங்கிய எஸ்.வி.ஸ்ரீகாந்த். நாங்கள் ஒரே அறையில் தங்கியிருந்து ‘பகல் பேச்சும் இரவில் கனவும்’ என்ற பாரதியின் பாங்கில் சினிமாவைப் பற்றிய கனவில் சஞ்சரித்த காலங்கள் ஞாபகம் வருகிறது.

ஸ்ரீகாந்த் மாமேதை புட்டண்ணா கனகலுடன் பணிபுரிந்தது அவர்கள் இருவர்களது பாக்கியம். கெஜ்ஜே பூஜே (1969) இன்றளவும் பேசப்படும் படம். ஸ்ரீகாந்தின் என்றும் அழியாத ஒளி ஓவியம். ராஜ்குமாரின் படங்கள் மற்றும் பல முக்கிய நடிகர்களை நட்சத்திரங்களாகப் பரிணமிக்க வைத்ததில் அவரது கைவண்ணத்தைக் காணலாம்.

மஸ்தானின் கைவண்ணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறப்பாக ஜொலித்ததைப் போன்று. அண்ணாவின் வேலைக்காரி (1949) தொட்டு மஸ்தானின் தனித்துவத்தைப் பார்க்கலாம். ஜி.கே. ராமு நாடோடி மன்னனில் (1958) தனது ஸ்டூடியோ கலாசாலை பயிற்சியைப் பெருமையுடன் வெளிப்படுத்தியிருப்பார்.

இன்றைய மாணவர்களைச் சந்திக்கும் பொழுது பழைய ஒளிப்பதிவாளர்களின் பெயர் கூட அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வகையில் தேய்ந்து போன பிரிண்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட டிவிடிக்களில் அவர்களுக்குப் பழைய ஒளிப்பதிவாளர்களின் கலையம்சத்தில் எதுவும் இல்லாதது போன்று தோன்றலாம்.

நான் சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விரிவுடையாடலில் 1980 களின் ஒளிப்பதிவில் கூட அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதைக் கேட்டுத் திகிலுற்றேன். இன்றைய டிஜிட்டல் சினிமாவின் சாத்தியங்கள் நாங்கள் அன்று

கண்ட கனவை நிறைவேற்றியிருக்கிறது என்பது உண்மை. ஆயினும் 1980களில் வந்த படங்களின் அன்றைய லேப்களில் ப்ராஸஸ் ஆகிவந்த பிரிண்டுகளைப்பற்றிப் பேசும்போது அழுக்குக் களையப் படாமல் லாண்ட்ரியிலிருந்து வந்த துணிகளைப் போல இருப்பதாக அவர்கள் பேசியது அவர்களது அறியாமையையே உணர்த்தியது.

இன்று ஒளிப்பதிவைவிட டிஜிட்டல் இண்டர்மீடியெட் என்பது படமெடுத்த பிறகு படத்தை வெளியிடும் தருணத்திற்கு ஊடாகப் பிரதியெடுப்பதற்கு முந்திய இடைநிலை கட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்டு ஒலி-ஒளியை சீரமைத்து அழகுபடுத்துவதைக் குறிக்கிறது.

அழுக்கும் மாசும் அகற்றி கடலையும் ஆகாயத்தையும் மாசற கட்டமைத்துச் சினிமாவில் போலல்லாது டிஜிட்டல் ஓவியத்திலுள்ளதைப் போல வடிவமைக்கிறார்கள். நமது வாழ்வில் நாம் காணும் சென்னையிலும் கிராமங்களிலும் உள்ள வீதிகளையும் வீடுகளையும் அதீத துப்புரவு செய்து செயற்கையாக அழகுபடுத்தி யதார்த்தத்திலிருந்து அவற்றை விலக்கிவிடுகிறார்கள்.

இத்தகைய அழகியலில் பல சமயங்களில் செயற்கையான ஒரு இருண்மையைத் தூவினாலும் ஒளிப்பதிவாளரின் தனித்திறன் என்று ஒன்று மனதில் நிற்க மறுக்கிறது. மொழியின் நுண்ணியச் சலனங்கள் மறைந்து எல்லாப் படங்களும் சலவைச் செய்யப்பட்ட ஒரு மொழியில் — எங்களது காலத்தைப் போலல்லாமல் — தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை வங்கியிலிருந்து தனித்துவமற்ற கணினியைக்கொண்டு கவிதை எழுதுவதாகப் படுகிறது.

டிஜிட்டல் சினிமாவிற்கான அழகியல் வருங்காலத்தில் வரலாம். தற்சமயம் அதன் சாத்தியங்கள் என்ற மாயையிலேயே பெரும்பாலானவர்கள் உழன்று கொண்டிருப்பதாகப்படுகிறது.

சொர்ணவேல்: ஆயினும் பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவி.கே. சந்திரன் ஆகியோரின் பெருவழக்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவு தனித்துவம் நிறைந்த ஒன்றாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.

சுந்தரம்: ஆமாம். நான் சினிமாவில் வேர் விட்டுவந்த அத்தகைய உயர்ந்த ஒளிப்பதிவாளர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஸ்ரீராமும் ரவி.கே. சந்திரனும் சட்டகப்படுத்துதலிலேயே அவர்களது பயிற்சியும் மெனெக்கெடலும் தெரியும்.

கே.ராமச்சந்திரபாபுவைப்பற்றியும் இங்குக் கூறவேண்டும். ஜான் அபிரஹாமின் படங்களிலிருந்து கே.ஜி.ஜியார்ஜின் ஸ்வப்னா தனம் (1976) மற்றும் ஹரிஹரனின் வடக்கன் வீரகதா (1989) வரை அவரது வீச்சு முக்கியமானது.

அத்தகைய தமையனைக் கொண்ட ரவி.கே.சந்திரனும் அக்கறையுடன் ஒளிப்பதிவு செய்வது நிறைவான விஷயம்.

சந்தோஷ் சிவன் யதார்த்தத்தையும் பரிட்சார்த்த அழகியலையும் ஒருங்கே இணைத்துச் செல்பவர். வண்ணங்களில் மூலம் ஆச்சரியத்தை அளிப்பவர். ஆயினும் ஸ்டூடியோவிலிருந்து வந்த எனக்கு அருகாமையிலிருப்பவராக நான் அணுக்கமாக உணர்வது ஸ்ரீராமைத்தான் — ஸ்ரீராமிலிருந்து இன்றைய இளைஞர்கள் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு ஆரம்பித்ததாக எண்ணுவது எனக்கு உடன்பாடு இல்லாதது என்ற போதிலும். ஸ்ரீராமின் சட்டகங்கள் க்ளாசிகல் ஹாலிவுட் சினிமாவை நினைவுறுத்துவது தற்செயலானதல்ல.

அவரது நேர்காணல்களில் சன் தியேட்டரிலும் மற்ற சென்னைத் தியேட்டர்களிலும் அவர் பார்த்த படங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஸ்பீல்பர்கின் க்ளோஸ் ‘என்கௌண்டர்ஸ் ஆப் தி தர்ட் கைண்ட்’ (1977) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

நான் அதை இங்குப் பிலிம் பெஸ்டிவலில் பார்க்கையில் என்னுடன் இருந்த இளம் ஒளிப்பதிவாளர்கள் அப்படத்தை எண்ணியெண்ணி வியந்ததைக் கண்டிருக்கிறேன்.

அப்பொழுது வந்த அமெரிக்கன் சினிமாட்டோகிராபர் இதழில் அதன் நிகரில்லா ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஜிக்மாண்டின் நேர்காணலிலிருந்து, எச்எம்ஐ என்கிற (ஹைட்ராஜிரம் மிடீயம் - ஆர்க் அயோடைட்) சூரிய வெளிச்சத்துக்கு நிகரான வெளிப்புற வெளிச்சத்தைத் தரக்கூடிய லைட்டுகளைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.

அவை அல்ட்ரா வயலட் வெளிச்சத்தை நீலவண்ணத்தில் அளிக்கும் தன்மையுடைத்தது. அத்தகைய லைட்டுகளின் ஒரு கனவில் தோய்ந்த நீலத்தன்மையில் நாங்கள் மயங்கினோம்.

மற்றும் எவ்வளவு நேரம் எரிந்தாலும் அந்த லைட்டுகள் சூடாகாதது ஒரு பெருங்கனவின் நிறைவே!

எங்கள் காலகட்டத்தில் வெளிப்புறப் படபிடிப்பில் அடர்த்தியான மேகங்கள் மேவும் மந்தமான நேரங்களில் வெளிச்சம் கொடுப்பது என்றால் டங்ஸ்டன் லைட் என்று சொல்லக்கூடிய உட்புற லைட்டுகளுக்கு நீல பில்டர் அல்லது ஜெல்கள் கொடுத்து லைட்டின் தன்மையை மாற்றிப் போராடவேண்டும்.

அத்தகைய காலகட்டத்தில் எச்எம்ஐ லைட்டுகள் 80களின் சினிமா அழகியலை மாற்றி யமைத்ததில் முக்கியப் பங்காற்றின. அதைக்கொண்டு வெளிப்புறங்களிலும் இரவு நேரக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர்கள் சினிமாவின் சாத்தியங்களை விரிவுபடுத்தி அசத்தினார்கள்.

சந்தேகமில்லாமல் அந்தக் காலக்கட்டத்து ஒளிப்பதிவு அழகியல் சாத்தியங்களைப் பரிசோதித்து சினிமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் பி. சி. ஸ்ரீராம் அவர்கள்.

அவர் இயக்குனர் மௌலியுடன் பணியாற்றிய கருப்பு-வெள்ளைப் படங்களிலும், மணிரத்தினத்தின் இயக்கத்தில், இளைய ராஜா அவர்களின் இசையில் உருப்பெற்ற படங்களான மௌன ராகம் (1986), நாயகன் (1989) தமிழ் மற்றும் இந்திய சினிமா சரித்திரத்தில் சாதனைகள். மௌன ராகம் சினிமாவிற்கான ஒரு யதார்த்த அழகியலைக் கொண்டிருந்தபோதிலும் அதிலும் நாயகனிலும் ஸ்ரீராமின் மிகையதார்த்த அழகியலைக் காணலாம்.

நாயகனில் வெண்கல, பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு டங்ஸ்டன் லைட் சார்ந்த ஒரு மஞ்சள் வண்ணத்துடன் எச்எம்ஐ லைட்டுகளின் நீல வர்ணத்தையும் கலந்து ஒரு நவீன ஓவியத்தைத் தனக்கேயுரிய பாணியில் வடித்திருப்பார்.

அவரது செவ்வியல் ஸ்டூடியோ சார்ந்த தாக்கம் அவர் கதாபாத்திரங்களின் தலைகளில் கொட்டும் நீல வெளிச்சத்தின் அழகியலில் காணலாம். அதற்குப் பின் வந்த அக்னி நட்சத்திரத்தில் (1988) அவரது ஒளியழகு அதீத நடைக்கொண்டு தாய் மொழியின் உக்கிரத்துடன் சத்தமாகப் பேசுவதை உணரலாம்.

நமது கலாச்சாரத்தின் மிகையதார்த்தம் அதன் க்ளைமேக்ஸில் தெரியும். அந்த ஒளி சார்ந்த மெலொடிராமாவே ஸ்ரீராமை ஒரு தனித்துவம் நிறைந்த தமிழ் கவிஞனாகவும் வெளிப்படுத்துகிறது.

பூனா இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வந்த உங்களது நண்பரான மாகலைஞன் மது அம்பாட்டிலிருந்து (1990) ஸ்ரீராம் இங்கு மாறுபடுகிறார்.

நானும் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ரகுவரன் மலையாளத்தில் நடித்த முதல் படமான காக்காவை (1982) இயக்கியிருக்கிறேன். அங்குக் கலை சினிமாவிற்கான ஒரு வெளி அப்பொழுது இருந்தது. கமர்ஷியல் படங்களும் சின்னப் பட்ஜட்டில் எடுத்து சில சோதனை முயற்சிகளில் இறங்க சாதகமாக இருந்த காலகட்டம் அது.

அங்குக் கலை சினிமாவில் மது அம்பாட் போன்றவர்கள்  சினிமாவிற்கான ஒளிப்பதிவு அழகியலில் புதிய பரிமாணங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். புருஷார்த்தம் (1987), ஸ்வாதி திருநாள் (1987), வைஷாலி (1988), அமரம் (1991) போன்ற படங்களின் மூலம் ஒளிப்பதிவு அழகியலின் உச்சத்தைத் தொட்ட மது அம்பாட் உலகின் ஆகச்  சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பதில் எனக்கு ஐயமில்லை.

அவருடன் பணியாற்றிய நிகரில்லா ஓவியர் பி.கிருஷ்ணமூர்த்தியின் ஆர்ட் டைரக்ஷனும் இந்திய சினிமாவிற்கு ஒரு கொடை. ஓவியர் கிருஷ்ணமூர்த்தி 1970, 80களில் இந்திய புதுச் சினிமாவை வடிவமைத்த அதிமுக்கியமானவர்களில் ஒருவர். மௌனமாக இருப்பவர்.

நிறைகுடம் தளும்பாது என்பார்கள். அவர் அதற்கு உதாரணம்.

சொர்ணவேல்: ஆயினும் தற்கால மலையாள சினிமாவில் அன்றைய ஜான் ஆபிரஹாம், அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தனின் ஆழமான தடங்களைக்  காணக்  கிடைக்கவில்லையே?

சுந்தரம்: இந்திய புதுச் சினிமா இயக்கம் என்பது அந்த 1970/80 காலக்கட்டங்களில் உச்சத்தைத் தொட்டு மறைந்த ஒரு அலை. புதிய அலைகள் ஓயாமல் அடிப்பதுதானே கடல் உயிர்ப்புடன் இருப்பதற்கான சாட்சி.

இன்று அன்று இருந்த பிலிம் ஸொசைட்டிக்குச் சென்று படம் பார்த்து அளவளாவி கலை சினிமாவை ஆதரித்த நடுத்தர வர்க்கம் உலகமயமாதலின் அலையில் நுகர்வோராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலைப்பாசாங்கு நிறைந்த படங்களில் மயங்கிக் கொண்டிருக்கையில் அதற்கேத்த படங்கள் தானே உருவாக்கம் பெறும்.

சினிமா என்பது சூனியத்திலோ வெற்றிடத்திலோ உருவாகக் கூடிய ஒன்றல்ல.

ஆயினும் என்னுடைய பார்வையில் இன்றைய மலையாள படங்கள் இன்றைய தமிழ் சினிமாவைப் போல நலமாகத் தழைத்துக்கொண்டுதானிருக்கின்றன. ராமு கரியத்தும், ஏ. வின்சென்டும், பரதனும், பத்மராஜனும் விட்டுச்சென்ற ஒத்தையடிப்பாதையில் லோஹித தாஸும், ஜயராஜும் மற்றவர்களும் பயணித்து அது மும்முரமாகவே உள்ளது.

கலை சினிமாவில் பொதுவாகச் சினிமாவின் வியாபார இயல்பு மறைக்கப்படுகிறது. அரசு ஸ்தாபனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை நம்பியோ அல்லது மரத்தொழில் அல்லது ரைஸ்மில்காரர் என்ற ஒரு சிறு தொழிலதிபர்/ வியாபாரியின் தலையில் பாரத்தைப்போட்டுப் பயணிப்பதோ மைய நீரோட்ட சினிமாவின் பேராசையைப் போன்றதே...

தனது மையத்தில் அது ஒரு இருண்மையைக் கொண்டுள்ளது. அதனாலேயே சினிமாவை வைப்பாட்டியாகக் கருதும் ஒரு போக்கு இங்கிருக்கிறது.

அந்த வகையில் மத்திமபாதை சினிமா எனக்கு ஏற்புடையதே. சினிமா எனும் பேயின் பெரும் தீனியை அது மறைக்க முயல்வதில்லை. வியாபார நோக்குடன் ஒரு கலையழகை நாடுவது நியாயமான ஒன்றாகவேபடுகிறது.

ஆயினும் 100 வருட சினிமா சரித்திரத்தில் பரதன், பத்மராஜன், மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அங்கு ஆழமான தடத்தைப் பதித்திருப்பது அது எவ்வளவு நுண்ணியப் பயணம் என்பதை உணர்த்துகிறது.

என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் பயணித்துக்கொண்டிருந்தவன் என்றாலும் தமிழின் மைய நீரோட்ட சினிமாவிலேயே மனம் லயித்தேன். அது எனது ஸ்டூடியோ கால இளம் பருவத்தின் காரணமாக இருக்கலாம்.

சொர்ணவேல்: நாம் ஒளிப்பதிவாளர் கர்ணன் அவர்களைப் போல மற்ற ஒளிப்பதிவாளர்களைப் பற்றிப் பேச இந்த அமர்வை ...

சுந்தரம்: (உரத்த சிரிப்பொலியுடன்) மூன்றரை மணி நேர ஸ்டூடியோ சினிமாவைப் போல எனது கிளைக் கதைகள் நீண்டுகொண்டே போகிறது.

சொர்ணவேல்: ஆயினும் சுவாரசியம் நிறைந்த கதையாடலிது.

சுந்தரம்: ஆம். ஸ்டூடியோ வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் எதைச் சொல்வது எதை விடுவது என்கிற விஷயமே பொதுவாக அந்த ஞாபகங்களின் நுழைவாயிலிலேயே என் பின்னோக்கிய பயணத்தை நிறுத்திவிடுகின்றது.

பொதுவாக வருபவர்கள் நீ என்ன படங்களில் வேலை செய்தாய் என்பார்கள்.

நான்  பதிலை முடிக்கும் முன்பே அடுத்தக் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கும் அது ஒரு சடங்காக ஆகிவிட்டது. உங்களுடன் இது தொந்தரவான ஆனால் இன்பகரமான நிகழ்வாக ஞாபகங்களின் இனிப்பை சுரக்க வைப்பதாகத் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது.

அந்தக் காலகட்ட ஒளிப்பதிவாளர்களில் எல்லாரும் அறிந்த கே. ராம்னாத்தைப் பற்றி இங்குக் கூறவேண்டும். திரைப்பள்ளிகள் வருவதற்கு முன்னரே திரைப்பள்ளி மாணவர்களை விட அதீத சினிமா தாகத்தில் இருந்தவர் அவர்.

அவருடன் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆயினும் அவரிடம் தொழில் புரிந்தவர்கள், இணை ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரிந்தவர்களிடம் பணியாற்றியிருக்கிறேன்.

ரஷ்ய இயக்குனர்களான ஐஸன்ஸ்டெயினையும், டோவ் சென்கோவையும் அக்கறையுடன் அணுகிய ராம்னாத் அமெரிக்க கிங் விடோரையும் அதே அளவு நேசித்தார்.

ஏழை படும் பாடில் (1950) இந்தத் தாக்கங்களைக் காணலாம். இந்தியன் செசில் பி டீமெல்லி என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட பிரமாண்டத்திற்குப் பெயர் போன வாசனின் ஜெமினி ஸ்டூடியோவின் சந்திரலேகா போன்ற படங்களின் பிரமாண்டங்களின் மையத்திலிருந்த ஏ.கே. சேகர் என்ற நிகரில்லா கலை இயக்குனருடன் பணியாற்றிய ராம்னாத், அந்தக் காலத்து சுயாதீன சினிமாவான ஏழை படும் பாட்டை தயாரித்து இயக்கி பொருளிழந்து அவதிக்கு உள்ளானார்.

அவரது ஆன்மா இன்றளவும் தமிழ் சினிமாவையும் ஒளிப்பதிவாளர்களையும் வாழ்த்திக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். அவரது மற்றும் இசை அமைப்பாளர் எம்.பி.ஸ்ரீநிவாஸனின் தாக்கம் மற்றும் தொடர்பினால் ஒளிப்பதிவாளர்களுக்கு யூனியன் ஏற்பட ஆதிகாலம் தொட்டு நானும் போராடினேன்.

அன்று முதன்முதலில் சதர்ன்  இண்டியா சினிமாட்டோகிராபர்ஸ் அசோசி யேஷனைப் பதிவுசெய்யும்போது அதை எனது வள்ளுவர் கோட்டம் வாட்டர்டாங்கின் அருகிலிருந்த வீட்டின் விலாசத்தில்தான் பதிவு செய்தோம்.

இன்றளவும் சீகா என்று சொல்லப்படக்கூடிய தெற்கிந்திய ஒளிப்பதிவாளர்களின் தொழிற்சங்க ரெஜிஸ்டர்ட் ஆபீஸ் அதுவாகவே உள்ளது. ஒளிப்பதிவாளராகத் தனது சுயதொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தப் பாடுபட்ட கே.ராம்னாத்தின், ஒளிப் பதிவாளர்களாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஆசியை நான் அவ்விலாசத்தைக் காணும் தோறும் உணர்வதுண்டு.

சிறுகதை

ஒன்பது கவை கொண்ட கல்மூங்கிலை வலது தோளில் சாய்த்து பிடித்தபடி முன்னால் நடந்தார் சாமியாடி சின்னப்பன், முதுகில் தொங்கிடும் தோல் பைக்குள் ஏழு பிரம்புகுச்சிகள் பளபளப்போடு நீட்டிக்கொண்டிருந்தன.

சின்னத் தொங்குகொண்டை பிடறியைத் தொடுகிறது. கரையின் இருபுறமும் நொச்சி மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மரங்களின் நிழல்களை மேற்கில் நீட்டி படுக்கவைத்திருக்கிறான்.

அந்த நிழல்களின் மீது மனித நிழல்கள் நகர்ந்தன. சின்னப்பனுக்குப் பின்னால் பெண்களும், பெரியவர்களும் வந்தார்கள்.

பேரன் காளிராசு வலது கையில் பொங்கல் செம்பையும், பூஜைபொருட்கள் இருக்கும் பையை இடது கையில் பிடித்தபடியும் ஓடை மணல் பாதங்களில் நெறநெறத்துப் பிதுங்க தாத்தாவின் பின்னால் பெருமிதத்தோடு நடந்தான்.

பூக்கள் நொச்சிக்கிளைகளின் நுனியெல்லாம் பூத்திருக்கின்றன. சின்னச் சின்னப் பூக்கள் மயில் விரிக்கும் தோகைபோல நீல நிறத்தில் மின்னின.

செம்மறியாடுகளும், வெள்ளையாடுகளும் கரைகளில் நுழைந்து ஏறி இறங்குவது வழக்கம் என்பதால் கொலைக்கொம்பு நொச்சியின் அடிக்கால்களில் பின்னியிருக்கவில்லை நொச்சிக் குச்சியை எந்த இடத்திலும் பிடித்து ஓடைக்கு வெளியில் வரும்படி சந்துகள் நிறைந்திருந்தன.

ஆடுகளின் மிதியடிகளில் உருண்ட கூழாங்கற்கள் சிவந்த மண்ணோடு கரையின் அடியோரம் கிடந்தன.

கருங்கல் பாலத்திற்குச் சற்று முன்னால் ஓடைக்கரையின் வலது பக்கம் சாய்வாக ஏறிச்செல்லும் பாதையில் சின்னப்பன் ஏறினார்.

இன்னும் உழாத செங்காட்டில் கால் வைத்ததும் நான்கு கல்தூண்களுக்கு மத்தியில் கிழக்கு பார்த்து கருப்பசாமி நிற்பது தெரிந்தது.

கையில் வைத்திருந்த ஆளுயர கல் மூங்கிலைத் தூக்கிக் காட்டினார். முப்பத்தேழாவது வயதாக இருக்கும்போது தன் ஐயா மாரியப்பன் கேரளாவில் நெடுங்கண்டத்தில் இருந்த கணபதியா பிள்ளையைப் பார்க்க அழைத்துப் போனார்.

நெடுந்தூரம் சென்று வந்தது அதுதான். ஐயாவிற்கும் வயதாகிக்கொண்டிருந்தது. அவர் வாலிபமாக இருக்கும் காலத்திலேயே ஊரில் இருந்த ஏழுகுடி பிள்ளைமார்களும் மெல்ல கேரளாவிற்குக் குடிபெயர்ந்து விட்டனர்.

மறவர்களும், நாடார்களும் சரிபாதியாக இருக்கும் ஊரில் இருபது பறையர்குடிகள்  இருந்தாலும் பல வேலைகளில் ஈடுபட்டார்கள். அவர்களது வீடும் சின்னக் கோயிலும்  கிழக்கோடியில் இருப்பதில் சில வசதிகளும் இருந்தன.

முக்கியமாக வெளிக்கிப் போவதற்குச் சின்னக் கம்மாய் இருந்தது.

கணபதியாபிள்ளை ஊரில் இருந்த காலத்தில் மாரியப்பன், செந்தட்டிச்செடிகள், பாப்பரங்காய் கொடிகள், நெருஞ்சித்தொட்டுக்கள் அடர்ந்திருக்கும் செடிகளைக் கொடை நாளில் செதுக்கித் தள்ளி சுத்தம் செய்து வைப்பார்.

பந்தல்கால் கொண்டுவருவது, வாழைமரம் கொண்டு வருவது, நான்கு முழ வேப்பிலைத் தோரணம் கட்டுவது என ஆட்களோடு சேர்ந்து செய்வார்.

கோயில் காரியம் முடியும் வரை எடுபிடி வேலைகள் அனைத்தும் மாரியப்பன் செய்வார். பின்னால் கருப்பசாமிக்கு கொடை விழா நடத்த ஆள் இல்லாமல் அப்படியே போட்டு விட்டார்கள், மாரியப்பன் இருந்தவரைக்கும் வருடம் ஒருமுறை விளக்குப் போட்டுவந்தார்.

மழைக் காலம் முடிகிற சமயம், குளிர்காற்றுக்கு வீட்டு முற்றங்களில் தூங்க முடியாது சாக்குகளைப் போர்த்திக் கூரைக் குடிலுக்குள் படுத்தால்தான் குளிருக்கு அடக்கமாக இருக்கும்.  தூக்கம் வரும்.

மந்தைத் தோட்டத்தை ஒட்டிப் பிள்ளைமார் வீடுகள் மேல் கடைவீடு சொக்கலிங்கம் பிள்ளை வீடு. அப்படியே பின்னால் தோட்டம், அவனுக்கு மூன்று பெண்பிள்ளைகள், மூன்றுவயது பிராயத்தில் பையனோடு, மேலும் தங்கம்மாள் இரண்டு மாத சூல் கொண்டிருந்தாள்.

இரவு மணமணக்க கருவாட்டுக் குழம்பைத் தொட்டு கேப்பக்களியை விழுங்கிவிட்டு முன்வராந்தாவிற்கு வந்து படுத்தார்கள்.

விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. மூத்திரம் போக எழுந்தவள் டிடிங் டங்கென்று அடுக்களையில் பாத்திரம் விழும் ஓசை கேட்டதும், கருவாட்டுக் குழம்பு வைக்கிற நாளில் இந்தப் பூனைகள் எங்கிருந்துதான் மோப்பம் பிடித்து வருமோ இப்படிபோட்டு உருட்டுது என்று ஜலதாரிக்குக்கூடப் போகாமல் அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அடுக்களையின் தெற்குச்சுவரில் பெரிய குகை வாயில்போல ஓட்டை விழுந்திருந்தது. தட்டுக்களில் பாத்திரபண்டங்கள் ஒன்றுகூட இல்லை, கேழ்வரகும் கம்பும் தரையெல்லாம் சிந்தியிருப்பதால் பார்த்ததும் பக்கென்றது.

மேல்சுவரில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலக்கும்பா மட்டும் புட்டியோரம் விழுந்து கிடக்கிறது. பதினேழு ரூபாய் வைத்திருந்த கடுகு டப்பாவும் போய்விட்டது.

‘ஐயோ கள்ளன்’ என்று அலரவும் முன்பக்கம் படுத்திருந்த சொக்கலிங்கம் தடியைத் தூக்கிகொண்டு அடுக்களைக்குள் நுழைந்தார்.

அரிக்கேன் விளக்கு ஆட்டத்தில் சொக்கலிங்கத்தின் நிழலுரு பெரிய கரிய பூதம்போலச் சுவரின் இருபுறம் அசைவது இன்னும் பயத்தைக் கொடுத்தது.

கன்னக்கோல் வைத்த மண்சுவரின் அந்தப் பக்கம் இருட்டு கருத்து அடர்ந்திருக்கிறது. மோசம் போய் விட்டதைக் கண்டதும் தெருவிற்கு ஓடி ‘கள்ளன் கள்ளன்’  என்று கத்தினார்.

ஏழு வீட்டு பிள்ளைமார்களும் அடுத்தத் தெருவில் இருந்த நாடாக்கமார்களும், பொன்னு ஆசாரியும் தேவர்களும் ஏத்தகுடி முந்திதான் நடந்திருக்கிறது.

கேகேவென்று ஆட்கள் கம்பும் தடியுமாக மந்தைத்தோட்டத்தில் திமுதிமுவெனப் புகுந்து தேடத்தொடங்கினார்கள். வானமெங்கும் வெள்ளிகள் வெள்ளை வெளேரென்று ஜொலிக்கின்றன.

நிலவு இல்லை, வரகின் மேற்பரப்புக் கடல்தளம் போலக் கருத்து விரிந்து கிடக்கிறது. வெகுதூரத்தில் நிற்கும் புளியமரக் கருத்தச் சின்னமலை அடுக்குபோலத் தெரிகின்றன.

வரகு பூட்டைவிடும் பருவத்தில் ஏகமாக நெஞ்சு உயரத்தில் தோகைவீசி நிற்கிறது. கண்ணருகாமை தாண்டியனால் கரம்பைக்காட்டு மேடுபோல விரிந்து தெரிகிறது, எங்கும் ஆள் அலுக்கு பலுக்குத் தென்படவில்லை, ஆனால் பிடி பிடிபிடிவென்று வரப்புகளின் வழியே சத்தமிட்டபடி வேகமாக முன்னேறிப் போனார்கள்.

கிழக்கில் சாம்பல் நிறமும் மெல்ல வருவதுபோலத் தெரிகிறது. விடிகிறது என்றாலும் கருமை வெளுத்துத் தோட்ட மெல்லாம் ததும்பி இருக்கிறது.

வீரபத்திர நாடார் பையன் பன்னீர் ‘அந்தா தெரியுது’ என்றான் எல்லோரும் தூரத்தில் தெரியும் வேப்பமரம் பக்கம் பார்க்கவும் சாம்பல்நிறமாக விடிந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கருத்த பெரிய குண்டுக்கல் போல வரகின் மேற்பரப்பில் நகர்ந்துபோவது தெரிந்தது.

‘அந்தா அந்தா’ சத்தமிட்டுக்கொண்டு அதனை நோக்கி ஓடினார்கள். கல் வேகமாக விரைந்து சென்றது. இந்தப் பக்கம் பாருங்க இன்னொன்று நகர்ந்து போகுது,

இடதுபக்கம் பார்க்க அந்தக் கல்லுக்கு ஐந்துகோல் இடைவெளியில் இந்தக் கல் நகர்ந்து. வரப்பு வழியாக நழுவி விழுந்தார்கள் எழுந்து துரத்துகிறார்கள் பின்தங்கி பெண்களும் துரத்திக்கொண்டு வந்தார்கள்.

கருது பரியும் பருவத்து வரகுவாசம் ஆவிபோலப் புடைகளிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. இளஞ்சூட்டோடு பச்சை மணம் தாக்கியது. வேகத்தில் சாம்பல் நிறம் வடிந்துகொண்டிருக்கிறது.

துரத்த துரத்த இரண்டு பாறைகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. இருட்டை துரத்த துரத்த அது புகையைபோல மாயமாகிக்கொண்டிருப்பதைப் போல நகர்ந்து போவது பாறையல்ல சாக்குமூட்டைகள் என்று தெரிய ஆரம்பித்தன.

‘அந்தா போறான் திருடன்’ அப்படி வளச்சுவா, இப்படி வளச்சுவா, ஒருமுகமாக ஓடினார்கள்.

நெருங்கநெருங்க கிழக்கால் பாதை வந்தது, திடுக்கென மூட்டையைச் சாலையோரம் போட்டுவிட்டு சட்டை போடாத கருத்த மனிதன் எழுந்தான்.

கருத்துப் பளக்கிறது உடம்பு “டேய் எவன் வந்தாலும் வெட்டிப் பொலி போடுவேன், வாங்கடா தாயோளிகளா” வீச்சருவாளைத் தூக்கி ஓங்கினான். மற்றொருவன் சற்றுத் தள்ளி எழுந்தான் வேர்வையால் நனைந்த திடகாத்திரமான நடுக்கட்டு வயதுக்காரன், அறுவாளைக் காட்டி “இந்தச் சாக்கு மூட்டையில் தலையை வெட்டிக் கொண்டுபோவேன் வாங்கடா என்னடா செஞ்சிருவீங்க, வாங்கடா தலையோட சுண்ணியையும் வெட்டி எடுக்கிறேன்” வாய்க்குவந்தபடி திட்டத் தொடங்கினான்.

பைசல் பாண்டித் தேவருக்கு முன் கம்போடு வந்துகொண்டிருந்த பாலுத் தேவர், “அவனுக கெட்டபயலுகளா இருக்கானுக. குன்னக்கோல் பயலுக ரெண்டு பொருள் போனா போகுது, களசானிப்பயலுக உசுர எடுத்திடுவாங்க, அந்தளவில வாங்கப்பா அப்பறம் பார்த்துக்கிடலாம்” என்றபடி அப்படியே நின்றார்.

விரட்டிக்கொண்டு முன்னால்போன சிவக் கொழுந்தை நோக்கி திருடன் அறுவாளை ஓங்கிக் கொண்டு ஓடிவந்தான், துரத்தி வந்த பெண்கள் ஐயோவென்று கத்தினார்கள். சிவக்கொழுந்து திரும்பி ஓடவும் துரத்தி வந்தவர்களும் திரும்பி ஓடினார்கள், வரகு காட்டில் தொலைவில் அங்கங்க நின்றவர்கள் திரும்புவதுபோலத் தோல்பட்டையைத் திருப்பினார்கள்.

திருடன் நின்றபடி “இன்னக்கி ரத்தப்பொலி போடுறேன்டா” பூமியில் கொத்துவதுபோலக் கொத்தினான். சிலர் நகராமல் அங்கங்கே நின்றார்கள்.

“டேய் பொன்னு ஆசாரி நீ எங்க ஊருக்குள்ள வாடா தலைய எடுக்கிறேனா இல்லையான்னு பாரு உன் முண்டம் ஓடையில் கெடக்கும்” கையில் வைத்த இரண்டு முழ குச்சியோடு பொன்னு ஆசாரி வரகு பயிரடியில் அப்படியே பதுங்கி ஊரை நோக்கி தலைதெரியா வண்ணம் வெள்ளாமைக் காட்டுக்குள் குனிந்தபடி ஓடத்தொடங்கினார்.

“டேய் நாடானுக்குப் பேர் சொல்லமாட்ட” என்றாலும் பன்னீர் மெல்லத் திரும்பிப் பார்த்து நடக்கத் தொடங்கினான்.

அங்கங்கு நின்றிருந்தவர்கள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துவிட முடியாத வண்ணம் சட்டென வரகுத்தாளடியில் குனிந்து ஊரை நோக்கி ஓடத் தொடங்கினர்.

வெகுதூரத்தில் சத்தம் கேட்டு வந்து நின்றவர்கள்கூட வெளிக்கு வந்ததுபோல அமர்ந்தார்கள்.

பக்கத்து ஊர்க்காரன்தான், துரத்தத் துரத்த பிடரியில் சாக்கு மூட்டையைப் போட்டு குனிந்தபடி சாரைப்பாம்பு போல ஓடியவர்கள் ஒரு எல்லை வரவும் திருடர்கள் மூட்டையைப் போட்டுவிட்டு மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்,

“இந்தாபாரு பொட்ட பிள்ளைக வச்சிருக்க எவனும் நிம்மதியா தூங்க முடியாம பண்ணிருவேன் கூதிகளா” வசைபாடத் தொடங்கினான் பின் சென்ற இரண்டாவது திருடன்.

ஊருக்குள் திருடிய பொருளோடு பயந்தோடி ஒளிவது அவமானம் என்றோ, இதற்குமேல் ஓடினால் பிடித்துவிடுவார்கள் என்றோ அரிவாளை எடுத்து நின்றுவிட்டார்கள்.

பின்தங்கி வந்த தங்கமணி “கன்னம் வச்சவன் நாசமா போவான் அவனுக்கப் பெண்டுபிள்ளைக வைசூரி கண்டு சாவாளுக, போற வழியில நல்லபாம்பு கடிச்சு சாவீங்கடா, சரியான ஆம்பளையா இருந்தா ஒன் சாதிசனத்தில் கொள்ளவையிடா பாப்போம் கொறஞ்ச சனமன்னு பார்க்கிறயா.

அந்தா நிக்கிறாண்டா கருப்பசாமி உன் சாமானத்த அறுத்து எடுக்க” ஆவேசமாகத் திட்டினாள்.

அவிழ்ந்த கொண்டையைச் சுழற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு சொக்கலிங்கத்தின்  கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

பங்குனி உத்திரம் நாளில் கருப்பசாமிக்கு கடைசி வரைக்கும் ஒரு திரியையேனும் ஏற்றிவைத்து சென்றவர் கணபதியாபிள்ளை வீட்டம்மாள் தான், முதல் நாள் கோயில் களத்தைச் சுத்தம் செய்துவைக்கிற மாரியப்பனுக்கு ஐந்து ரூபாய் தருவார்.

ஆனால் கொடை எல்லாம் நடக்காது, தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களெல்லாம் அப்படியப்படியே நின்றுவிட்டார்கள், அதெல்லாம் அப்போதே நின்று விட்டது.

இருந்த மூனுகுடி பள்ளர்கள் கூட ஐந்துமைல் தூரத்தில் இருந்த காரமரத்தூருக்குப் பெயர்ந்து விட்டார்கள், பள்ளர்கள் செல்வாக்கு அதிகம் இருந்த ஊர் அது.

நெடுங்கண்டம் மோகன்ராஜ் எஸ்டேட்டிற்குக் கணக்குப் பிள்ளையாகப் போனார் கணபதியாபிள்ளை. வயதானபின் அவர் மகன் சாமிநாதப் பிள்ளைக்குப் பொறுப்பைத் தந்தார்கள்.

முந்தின வருசம் பங்குனி உத்திரத்திற்கு வராததால் மாரியப்பன் மகன் சின்னப்பனை அழைத்துக்கொண்டு கணபதியா பிள்ளையைப் பார்க்க நெடுங்கண்டம் போனார்.

“கருப்பசாமியை இனி நேரில் வந்து பாத்து திரும்பமுடியாது மாரியப்பா, இனி மனசில வேண்டிக்கிட வேண்டியதுதான். பிள்ளைகளும் விரும்புறதில்ல. வயசான காலத்தில அதிகப் பிரசங்கித் தனம் செய்யாம வீட்டில இருங்கன்னு திட்டுறாங்க, இனி ஒரே ஒருவாட்டி வந்து கருப்பசாமியை பாத்து வணங்கணும்னு நினைக்கிறேன்.

ஆனா நடக்காதுபோல, எங்க தாத்தா கட்டுனது. எங்க குடிக்கு ஒரு குலதெய்வம் மாதிரி, எப்படி விட்டுட்டு இருக்கிறதுன்னு தெரியல” கையைத் தொட்டி பக்கம் காட்டினார்.

வாழை இலையில் நல்ல சாப்பாடு போட்டு பேருந்து செலவிற்குப் பதிமூன்று ரூபாயும் கைச் செலவிற்கு ஏழு ரூபாயும் கொடுத்தார். வழி அனுப்பும் முன் ஆளுயர கல்மூங்கிலை வீட்டிலிருந்து எடுத்துவந்து அதற்குத் திருநீறு பூசி வணங்கி, “நான் வந்தா இந்தக் கம்பக் கருப்பனுக்கு முன்னால வச்சு ஒரு திரிபோடு” என்றார்.

மேற்கூரை இல்லாது கருப்பன் பீடத்தில் கம்பீர மாக நிற்கிறார். வலதுகையில் ஓங்கியபடி இருக்கும் வீச்சறுவாள்.

முழிதிரட்டி மிரட்டும் பெரிய கண்கள், புளி ஓடுபோல இருபுறமும் திருகி இருக்கும் மீசை. காலில் தண்டை இடது இடுப்பில் தொடை பக்கம் சாய்ந்து இருக்கும் சூரிக்கத்தி, உருட்டித் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டி வலது பிடரியில் கொண்டை கைப் பிடிக்குஞ்சம் இடது நெற்றிக்குமேல் எகிறி இருக்கக் கட்டிய முண்டாசு, மார்பும் வயிறும் இன்னொன்று இருக்கும் திடகாத்திரம், முகத்தில் தெரியும் ஆக்ரோசம் எல்லாம் துடிப்போடு இருக்கின்றன.

தனியாக யார் வந்து கருப்பன் முன் நின்றாலும் பயம் ஏற்படும், உடம்பில் எண்ணெய் மினுமினுப்பு இல்லாது காய்ந்து வெளிறிய கருப்பாக நிற்கிறார், உழுகிற காலத்தில் செம்மண் பூசிக்கொள்வார், மழைக்காலத்தில் அதைப் போக்கிக்கொள்வார்.

மேற்கூரை இல்லாது நான்கு தூண்கள் மட்டும் அடக்கமற்று நிற்கும் அலோதியான வெளி அச்சத்தைத் தந்தது, அதன் மேல் இருந்த இரு கருங்காலி விட்டங்களால் கூரை குப்பிற கவிழ்ந்தது.

முக்காலுக்கு முக்காலடி கொண்ட கனமான விட்டங்கள் மரத்தை அறுத்து விட்டமாகப் போட்டிருந்தால் இருந்திருக்கும் முற்றத்தைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கிறார் சின்னப்பன்.

வில்வமரத்தில் மெல்லியதாக வெண்மைபடர்ந்த குண்டுகுண்டான இளம்பச்சை காய்கள் தொங்குகின்றன. சுத்தம் செய்தபின்பும் மரத்தடியில் ஏழெட்டுக் காய்கள் கிடக்கின்றன.

கொஞ்சம் வாய் விட்டு காய்ந்து கிடக்கும் காயில் இரண்டு கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. வலது பக்கம் இலைகளை உதிர்த்துப் பட்டை பட்டை யான மஞ்சள் நெற்றுக்கள் காற்று வீசும்போது கிலுகிலுக்கின்றன. கிளைகள் நல்ல இடைவெளியோடு நாலாபுறமும் வான்நோக்கிச் செல்கின்றன.

சென்றவருடம் அதற்கு முந்தின வருடமும் கருப்பன் வேடம் தரித்து மறையாற்றில் தீர்த்தம் எடுத்து பறையர் தெருவழியாக ஆடிவந்தார். இந்த வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாட குறி கேட்க நினைத்தார்.

வேட்டையாடி நீரெடுத்து நடுத்தெரு வழியாகக் கருப்பன் கோலம் கொண்டு ஊரே வணங்கி கொண்டாடும்படி செய்யவேண்டும் என்று நினைத்தார்.

தூரத்தில் துணியில் சுற்றிய குழந்தையை மார்போடு அணைத்து தாயும் பெற்றெடுத்த மகளும் இளைஞனும் வருவது தெரிந்தது.

கோயிலைச் சுற்றிலும் நிலங்கள் உழாமல் தரிசாக விரிந்து கிடக் கின்றன. பழைய தட்டை தாள்களில் கரையான்கள் ஏறிக் கிடக்கின்றன.

அங்கங்கே வரப்பில் கருவேல மரங்களும் வேப்ப மரங்களும் நிற்கின்றன. வானில் கிரீச்சென்று கத்திக் கொண்டு செல்லும் செம்பருந்தை கண்ட பெண்களும் பெரியவர்களும் பெருமாளே என்று வணங்கினர்.

கருப்பசாமிக்கு ஏழடி முன் நிற்கும் விளக்குக் கல் குழியில் சின்னப்பன் மகள் வரதம்மா ஈயச் சொம்பிலிருந்து விளக்கெண்ணையை ஊற்றி திரி ஏற்றினாள். சின்னப்பன் தன் கொண்டையை அவிழ்த்து விட்டார்.

கணபதியாபிள்ளை பல வருடங் களுக்கு முன் தந்த கல் மூங்கிலை ஏழு படியையும் தொடும்படி வைத்தார்.

படியின் முன் அமர்ந்து தீபத்தை வணங்கினார். மரத்தடியில் அமர்ந்திருந்த அங்காளி பங்காளிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து சின்னப்பன் பின்னால் வந்து நெருக்கமாக அமர்ந்தார்கள்.

சின்னப் பனின் மீசை உதட்டோரம் இறங்கி கன்னத்தில் மேலேறுகிறது, சின்னப்பனைப் பார்த்தால் கண்ணுக்குள் உடனே பதிவது மீசையும் மூக்குத் துவாரங்களும் கண்களும்தான்.

மூக்குத்தண்டு நெற்றியிலிருந்தே எழுந்து வருவதால் அப்படிக் கவனிக்க வைக்கிறதோ என்னவோ நரைத்த மீசை என்றாலும் வெள்ளை வெளேர் என்று இல்லை, கருமை மங்கிய சாம்பல் நிறமும் மஞ்சள் ஏறிய வெள்ளை மயிர்களிலும்ஊடாடி இருந்தன. தலைமுடியைப் பின்னால் கோதி விட்டார்.

கொண்டு வந்திருந்த நவதானிய துணிப்பொட் டலத்தைப் படியில் பிரித்து வைத்தார். மடியிலிருந்து மல்லிப்பூ, ஊதாநிற சங்குப்பூ, ஆவாரம்பூ மூன்றையும் எடுத்து வெற்றிலையில் வைத்தார்.

சாணியைப் பிட்டு மூன்று உருண்டைகள் உருட்டி செய்தார். ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு பூக்களை வைத்து இதழ் தெரியாவண்ணம் இன்னும் சாணியை அப்பி மறுபடி உருட்டினார்.

இரு உள்ளங்கையில் மூன்றையும் போட்டு உருட்டினார். இரு உள்ளங்கைகளால் மூடியும் உருட்டினார், ஒவ்வொரு உருண்டையும் படியில் எடுத்து வைத்துவிட்டு கைகளைக் கழுவினார்.

தட்டில் திருநீற்றைப் பரப்பிச் சூடத்தை வைத்து சுடர் ஏற்றினார். சுடரை வணங்கி நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டார். கைப்பிரம்பு கட்டை எடுத்து ஆராதனைக் காட்டி படியில் வைத்தார். கண்மூடி வணங்கினார்.

புறங்கையால் விரல்களைக் கோர்த்திருந்த கை களைச் சுடருக்குமுன் விரைப்பாக நீட்டி, மணிக்கட்டை பின்புறம் சுழற்றி உள்ளங்கைகள் வெளியே தெரியவிரல்களை இறுக்கினார். சடக் சடக்கெனச் சொடக்குகள் போட்டன.

முதுகின் தசைகள் இறுகின. பற்கள் நறநறத்தன. விழிகளை உருட்டி செருக்கடிக்கும் காளை போல மூச்சை பட்டெனவிட்டு தலையை உலுக்கினார். விரல் கோர்த்து கைகளை நீட்டியபடி உடம்பு இடவலமாகச் சுழன்றதும் ‘அய்ய்ங்’ என்று நாக்கை சுடரைப் பார்த்து துருத்தினார்.

கண்களைத் தேனையால் இறுக்கி பல்லைக்கடித்தார், கோர்த்த கைகளை மேலே தூக்கி தலையைஒரு உலுக்கு உலுக்கினார். அந்த உலுக்கில் நெற்றியில் வைத்த திருநீறு மூக்கில் உதிர்ந்து படிந் திருக்கும். திரேகம் கிடுகிடுவென நடுங்கியது, கருப்பா சொல்லு நான் என்ன செய்ய அரற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அவரையே பார்த்தார்கள்.

படியில் கொத்து கொத்தாக வைத்திருந்த பிரம்புகளின் தூர்பக்கம் பற்றி எடுத்து வில்லாக வளைத்து விடப் பிரம்புகள் ஆடி அதிர்ந்தன.

வலக்கையில் இறுகப் பற்றித் தன் முதுகில் சடார் சடார் என அடிக்கத் தொடங்கினார். வெறிகொண்டு அடிக்கப் பின் இருந் தவர்கள் தங்கள் கண்களில் பிரம்படி பட்டுவிடும் என்பதால் தலையைப் பின்சாய்த்து எழுந்தனர்.

துரோகம் செய்த கொடூரனை அடிப்பதைபோலத் தன் முதுகில் தானே அடித்தார். பிரம்புகளின் அடிபட்டு பட்டு குறுக்கு மறுக்காகத் தடிப்புகள் சிவந்தன. இரண்டு மூன்று முறைகள் பிரம்படிகள் முதுகில்பட்டபோது வித்தியாசமாகப் பார்த்தவர்கள்.

நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து எப்போது நிறுத்துவார் என்பது போல மிரண்டார்கள். இருக்க இருக்க அடியின் வேகமும் கூடியது. பிரம்பின் நுனிபட்ட இடங்களில்தோல் கந்தி ரத்தம் கசிந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில்சங்கம்மா கிழவி “போதும்சாமி உன்னை நம்புதோம், நாங்க என்ன செய்யனும்னு சொல்லுசாமி” “கொடை எடுக்கணும்லா” “சரி அதுக்கு வழிகாட்டு சாமி” “மஞ்சள் பூ வந்தா கொடைக்கு வழி, மத்த பூ வந்தா கொடைக்குத் தடைலா” அமர்ந்தபடி வில்லாகக் குதித்தார். இரு ஆடவர்கள் பின்னால் விழாதபடி பிடித்தனர்.

சின்னப்பன் உடம்பு முழுக்க வேர்வை மினுமினுத்து வழுக்கியது. பாப்பாத்தி மகள் மருதாயியை அழைக்க அவள் நடுவிலிருந்த சாணி உருண்டையை எடுத்துப் பிரித்துக் காட்டினாள்.

அது மஞ்சள் நிறம் கொண்ட ஆவாரம்பூ அதைப் பார்த்ததும் பின்னால் அமர்ந்திருந்த ராமாயிக்கு சாமி வந்து கைகளை முறுக்கி எழுந்து குதித்தாள். கருப்பன் உத்திரவாதம் தந்தாலும் சின்னப் பனுக்கு மேனி முழுக்க ஜூம்ம் என்று சிலிர்த்துவிட்டது. ராமாயியைப் பெண்கள் ஓடிப் போய்ப் பிடித்தனர்.

நழுவி இறங்கிய சீலையை வாரி எடுத்துச் சொருகினால் மஞ்சள் பூ வந்ததும் எல்லோரும் பய பக்தியோடு விழுந்து வணங்கினார்கள்.

வெள்ளை வேட்டியை நான்காக மடித்துப் போட்டு அணைத்துக் கொண்டு வந்திருந்த ஒருமாத பெண் குழந்தையைத் தன் தாயிடமிருந்து வாங்கி வந்து சின்னப்பன் காலடியில் வைத்தாள் பெற்றவள் காமாட்சி.

அவளது கணவனும் விலகி முன் வந்தான். இருவரும் மண்டியிட்டு வணங்கினர். திருநீறு தூவி வாழ்த்தினார் சின்னப்பன். வண்ணாரகுடியைச் சேர்ந்த காமாட்சிக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் குழந்தைகள் இல்லாமல் வேதனைப்பட்டவள்.

சென்ற ஆண்டுச் சின்னப்பன் மீது கருப்பன் இறங்கி ஆடிவந்தபோது காமாட்சி விழுந்து வணங்கினாள், அவளது வேண்டுதல் வீண்போகாதபடி கருப்பன் கண் திறந்தார். காமாட்சியை முன்விட்டுப் பெண்கள் பின்னே போவாடியாகப் பேசிய பேச்சுக்களை அழித்துக் காட்டியதிலிருந்து அவளுக்குச் சாமியாடி சின்னப்பன் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டது.

தான் மலடி இல்லை என்பதை நிரூபித்துவிட்ட பெருமை இந்தச் சிசு, அதற்கு அருளை வாங்கிட பின்தொடர்ந்து வந்திருக்கிறாள். இந்தக் கருப்பசாமி மீது அவளுக்கு அந்தரங்கமான ஒரு பற்றும் பக்தியும் ஏற்பட்டது.

தன் கையாலாண்டதைச் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

கருப்பனின் படியில் வைத்திருந்த நவதானியங்களை அள்ளிக்கொண்டு காடு நோக்கி நடந்தார். உழாத காட்டில் கிழக்குப் பார்த்து நின்றார்.

போன வெள்ளாமையின் தட்டை தாள் அங்கங்கே நொறுங்கிப்போய் கிடந்தன. குப்பைமேனி செடிகளும்கொளுஞ்சி செடிகளும் குத்துக்குத்தாகக் காடெங்கும் தெரிகின்றன.

“மேகம் கூடனும் களிஞ்சு பொழியனும், காடெல்லாம் பச்சை தளிர்க்கனும், ஆடும் மாடும் கூடும் குருவியும் தேடும் இரை திசையெல்லாம் கெடைக்கணும், மனுசங்க கூடனும், குடும்பத்த உயர்த்தனும் நாடு செழிக்கனும், நல்ல மழை பொழியனும்” முணுமுணுப்பை மீறி ராகமாகவே பாடி நவதானியங்களை நாலாதிசைகளிலும் வீசி விதைத்தார்.

காக்கி டவுசர் தெரிய வாரி சுருட்டிக்கொண்டு மஞ்சள் வேட்டி, மணிகோர்த்த இடுப்புவார், தலையில் பின் படிந்து இறங்கும் தொங்கு கொண்டை, கழுத்தில் சின்னச் செவ்வந்தி மாலை, ஒரு கையில் சாட்டை, ஒரு கையில் வீச்சறுவாள் ஏந்தி ஆடிவருகிறார்.

ஒரு கொட்டு ஒரு தவில் இரண்டின் அடிக்கு நீர்ச் சொட்ட சொட்ட சாமியாடி வருகிறார். திடும் திடும் திடும் திடும் திடுதிடுதிடுதிடு திடும் திடும் திடும் ரண்டக்கணக்க ரண்டக்கணக்க ரண்டக் கணக்க டங்க டங்க டங்க டங்க ரண்டக்குணக்கு ரண்டக் குணக்க முன்னடியும் பின்னடியும் தாளத்திற்கேற்ப போட்டுச் சுழன்றாடச் சுழன்றாடப் பெண்கள் உலுலல உலுலலவெனக் குலவைப் போட்டனர்.

கோட்டுக்கு முன் தலைமுடி லொக் லொக்கெனத் தோளில் குதிக்கச் சின்னப்பன் மனைவி வேம்பம்மா சாமிகுதிப்பாக ஆடிச்  சென்றாள்.

பெண்கள் கொண்டுவரும் குடத்து நீரை ஊற்ற குனிந்து கொடுத்த சாமியாடி அப்படியே பின்எழுந்து முழிதிரட்டி தொங்கு கொண்டை இடத் தோளிலும் வலத்தோளிலும் பட்டென்று நீர் தெளிக்க தலையாட்டி குதிரைபோல வலக்காலை எகிறிப்போட்டு ஆடுகிறார்.

வீச்சறுவாளின் நுனிவேல் மூக்குபோல எட்டுத்திசை நோக்கி வெடுக் வெடுக்கெனத் திரும்புகிறது. முனியப்பனுக்குச் சாமியாடி வரும்போது வெளிப்படாத துடிப்பும், உற்சாகமும் மிரட்டலும் அடி விசையும் கலகலவென உடம்பதிர பீறிட்டுக் கிளம்பின.

மருமகனிடம் வீச்சருவாளைத் தந்துவிட்டு சாட்டையால் சுழற்றி படீர் படீர் என்று உடம்பில் அடித்து முறுக்குகிறார்.

சாட்டையை முதுகுப்பக்கம் போட்டு பிடித்து முன்னும் பின்னும் சென்றபடியால் சலங்கை குலுங்க வந்தபோது நாவிதர்சண்முகம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங் கினார்.

அவருடைய மகன் வேலாண்டி கைகட்டி நின்றிருந்தான் பெரிய பத்து படித்தும் வேலை இல்லாமல் தன்னுடன் குலத்தொழில் செய்துகொண்டிருக்கும் மகனுக்கு வேலை கிடைக்குமோ என்று பூமியை நோக்கிக் கேட்டார் சண்முகம்.

குதித்துச் சூறாவளி சூழல்வதுபோல உடம்பை சுழற்றினார். சாட்டையால் படீர் படீர் என்று அடித்தார். கிடுகிடுவெனத் திரேகமே “உண்டு மைய்யா உண்டு, நல்லகுறி சொல்லுது கருப்பன், ஐந்து விரல்விட்ட விரலி மஞ்சள் மூன்று, கிள்ளி வச்ச சுண்ணாம்போடு அரைச்சு மூன்று நாள், மூணுவேளை தண்ணியில கலந்து தலைக்கு ஊத்து, அப்புறம் வேட்டைக்குப் போகச் சொல்லு, வேட்டை விழும், கோட்டை புகும்,கருப்பன் சொல்றான்.

போமைய்யா போ” திருநீறு போட்டார்.

கருத்தரிக்க விடாது புகுந்த உதிரகாட்டேரி பேய் களுக்குச் சுடுகாட்டில் ரத்தச்சோறு படையலிடச் சொன்னார். வேண்டுதலுக்கு வாக்குகளைச் சொல்லி ஆவேசங்கொண்டு சாமியாடிச் சென்றார்.

கருப்பனே அருளாடிச் சென்றதாகப் பேச்சு எழுந்தது, சாமியாடி சின்னய்யன் கருப்பனசாமியாகவே மாறிப்போனார்.

வெள்ளாட்டுக் குட்டிகளின் பசிக்குரல் மெக மெக மெகமெகவெனப் பெரிய பஞ்சாரக் கூண்டுக் குள்ளிருந்து கிளம்பியது. எழ முயன்ற குட்டிக்கு முதுகு பஞ்சார வளையம் இடித்ததால் முன்னங்கால்களை மண்டிப் போட்டபடி கத்தியது.

ஆடுகளும் நான் இருக்கிறேன் என்று வாய் திறவாமல் ம்ம்மிக்கு ம்ம்மிக்கு வென மூக்குவழி குரல் கொடுத்தன. மூத்திரம் போன இடம் மஞ்சளாக இருந்தது. மடிகனத்துக் காம்புகள் புடைத்து பூமியை நோக்கி பாய்வது போல் இருந்தன.

பின்மடியில் ஒழுங்கோடு மயிர்கள் படிந்து மின்னுகின்ற, வேம்பாள் முகத்தை ஆடு பார்த்து, சோதிக்காதே என்பதுபோல அவள் முகத்தைப் பார்த்து முனகியது, அவளுக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பக்கம் கட்டியிருக்கும் இளஞ் சினையாட்டின் பின்தொடை மயிர்களை வெட்டி விட்டிருந்த அடையாளம் கூட மறைந்து வந்தது.

வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு வாசலுக்குச் சின்னப்பன் வந்தபோது வேம்பாள் பஞ்சாரத்தைத் திறந்துவிட்டாள். குட்டிகள் வாலை ஆட்டிக்கொண்டு தாய்மடி நோக்கி ஓடின.

பால்குடி மறக்கும் பருவத்தில் குட்டிகளை விற்றால் நான்கு காசுகள் கிடைக்கும். இளைய மகள் மயிலம்மாளுக்கு இலைத்தோடு எடுத்துத் தருவதாகக் கல்யாண சமயத்தில் சொன்னது, அந்தக் காரியத்தை இன்னும் முடிக்க முடியவில்லை, சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாள்.

சின்னப்பன் கழுத்தில் துண்டோடு வாசல்படி யோரம் அமர்ந்து குட்டிகள் முட்டி பால்குடிப்பதை பார்த்தபடி மடியிலிருந்து த.பி.சொக்கலால் பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். கொச்சைவாடை பீடி புகைக்குச் சற்று அடங்கியது.

வாலாட்டும் இடத்தில் முகர்ந்து பின் குட்டிகளின் முட்டலுக்கு இன்னும் சுரந்து தந்தது. மனம் முழுக்க அடுத்த ஆண்டுக் கருப்பசாமிக்கு இன்னும் மிகச்சிறப்பாக வேட்டையாடி, தீர்த்தம் எடுத்து ஊர்சுற்றி சாமியாட வேண்டும் என்பதிலேயே லயத்தது.

அலுப்பில் தாமாகத்தான் எழுந்தார்கள், இளம் வெயில் கூரைகள் எங்கும் படர்ந்து பளிச்சென ஆக்கியது.

“பீடிய பீடிய குடிச்சிட்டு அப்படியே உக்காந்திராத வெள்ளன போயி ரெண்டு கொலைகொம்பப் பறிச்சு கட்டிட்டு வா, தரை மேச்சல் எங்கயும் இல்ல, சும்மா அலச்சலுக்குத்தான் முடிக்கிட்டும் போகனும், மழைமாரி விழுந்து வேலி கீலி தரை பத்துத் தளிக்கட்டும், இதுகளும் வெடுக்வெடுக்கன்னு பிடுங்கி வாயில போட்டு ரொப்பும்”

“பாரு ஒரு வாரத்தில் மழைவிழுதா இல்லையான்னு. இந்தக் கோமரத்தாடி சொன்னா தப்பாது”“ஆமா எல்லாம் உன் வாக்குப்படி சரியாத்தான் நடந்திருக்கு ஒன் பொச்சுப் பவிசியதான் நொண நொணன்னு ஊரே சொல்லுதே” என்றாள் கிண்டலாக.

“தூ நாயே நான் யார் தெரியுமா” என்றார், ஓ இந்தச் சாமியாடிய கோமரத்தாடின்னு சொல்லனுமாக்கும் என்றவள் பேசாமல் விளக்குமாரை எடுத்து கூட்டத் தொடங்கினாள்.

பெரியவன் இசக்கிமுத்துப் பின்னால் ஒருவர் தாங்கித்தாங்கி நடந்து வந்தார். நெருங்கிவர சின்னய்யன் எழுந்து அவர் நடையையே கவனித்தார், ஏதோ முள்ளில் மிதித்துவிட்டவர்போல இடதுகாலை பொத்தினார்போல் வைத்து வைத்து வந்தார்.

அறுபத்தைந்து வயதிற்கும் மேல் இருக்கும், ஆள்நல்ல உடல்கட்டில் இருந்தாலும் நடையில் ஒருசலிப்பான தோற்றம் பூசியிருப்பதுபோல இருந்தது.நெருங்கி வந்தவர் வணக்கம் வைத்து “முத்லாபுரத்திலிருந்து வர்றேன், காலில் ஆணிகண்டு தீரவே மாட்டெங்கிது, இந்தமாதிரி சாமியாடி செஞ்சு தார செருப்பில சரியாயுடுதுன்னு மார்க்கையனூரில் சொன்னாங்க, சரி இதையும் ஒருதடவ பாத்திடலாமன்னு வந்தேன்”

“வரனும் சாமி” என்றான்.

உள்ளே போய்ப் பெரிய சாக்கை எடுத்துவந்து சுவரோரம் விரித்துப் போட்டார்.

“தொட்டியில்ரெண்டு பாதத்தையும் நன்றாகக் கழுவி வந்தா பெரிய தோல் பையில் கைச்சுத்தியல், ஊசி, நூல்கண்டு கையுளி, சிறுகத்தி, குறடு என என்னென்னவோ இருந்தன.

அவரை நிற்க வைத்து வெட்டிவைத்திருந்த தோலில் அவரது இடது பாதத்தை வைக்கச் சொன்னார், கையுளியால் பாதத்தைச் சுற்றியும் படம் போலக் கோடிழுத்து முடித்தார்.

விரல் நுனிகள் போலக் கோடு விழுந்திருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

இசக்கிமுத்து ஆளை ஒப்டைத்துவிட்டு எழுந்துநழுவப் பார்த்தான். “மனுஷனுக்குள்ள மாயக் கோலங்கள கண்ணு முன்னாடி கத்துக்கண்ணு சாமி அனுப்பிவச்ச வரம்டா, குண்டிய வச்சு கவனிக்கணும்டா. ஆசையும் பொறுமையும் இல்லன்னு காங்க முடியாது. உன்ன சாமி ஏமாத்திட்டு போயிடும் இருந்து பார்றா” முகத்தில் கசப்பான கவலைப் படர்ந்தது.

இசக்கிமுத்து ஒன்றும் சொல்லாமல் கவனிப்பது போல நின்றவன், மெல்ல நழுவினான். சாக்கில் அமர வைத்தார். இடது கால்பாத ஈரத்தை தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து நன்றாகத் துடைத்தார், துண்டை மடியிலேயே போட்டுக்கொண்டார். பெருவிரலுக்கு அடுத்தப் பாதமேட்டில் வெள்ளையாகப் புற்றுசதை ஏறியிருந்தது.

“ஆஸ்பத்திரியிலயும் காட்டிட்டேன், கொடஞ்சு எடுக்கிறாங்க மறுபடியும் வளந்திடுது, பாதத்த ஊன முடியல சுல்லுன்னு ஏறுது” என்றார். கத்தியின் நுனியால் ஆணி கண்ட இடத்தில் சதையை வட்டமாகப் பதித்துச் சீவி எடுத்தார் பெரிய ஊசி முனையால் கிளறி கிளறி பொதுப்பொதுவென விழுந்த வெண்ணிற சதைத்துகள்களை எடுத்தார்.

அடியாழத்தில் குருத்து முனைப்போலக் குழியைச் சுற்றிக் கீறிக்கீறிப் பக்குவமாக எடுத்தார்.

“சாமி உள்ளங்கை ரேகைபோலவே பாதத்திலும் ரேகை இருக்கு. அந்த ரேகையை சரியா வரஞ்சுட்டோமன்னா இந்தக் காலாணிபுத்து வராம பண்ணிறலாம் அதுக்கொரு மருந்தும் தடவிடனும்” அவரது பாதத்தை வலது துடைமீது தூக்கிவைத்து தன் விரல்

நுனியால் விரல்களிலிருந்து ரேகைகளைத் தடவித் தடவி குதிங்கால்வரை சென்றார். பின் பாம்பு விரலையும் மோதிரவிரலையும் பொருத்திக்கொண்டு மேலிருந்து பாதத்தில் ஓடும் ஒவ்வொரு ரேகையாகத் தடவித் தடவி அதன் நீளம் வளைவு நெளிவு தடிமன் எட்டுக்கால் பூச்சி நூலாகச் செல்லும் மெல்லிய தடங்கள், ரேகையின் ஆழ அகலங்கள் எல்லாவற்றையும் வைத்து தன் மனதில் ஒரு பாதத்தை வரைந்தார்.

பின் பாதங்களின் ரேகைகளைக் கண்ணால் பார்த் தும், மனதில் வாங்கியபடியும் இடதுபாதம் வரைந்த ரேகைகோடுகளைக் தோலில் கையுளியால் வரைந்தார்.

திரும்பத் திரும்பத் ரேகையையும் தடவிப் பார்த்தும் கண்ணால் கவனித்தும் சரிபார்த்து வரைந்தார்.

ஆணிக்கால் போட்டு வந்த செருப்பின் குதிங்கால் பக்கம் சமமாகத் தேயாமல் வெளிப்பக்கமாகத் தேய்ந்திருப்பதைக் கவனித்து மூன்று புள்ளிகளால் அடையாளமிட்டுக் கொண்டார்.

“உங்க குதிங்காலுக்கு தேயாத வண்ணம் செருப்பு ஏத்திக் கொடுத்து செய் யணும், இரண்டு குதிங்கால் பகுதியையும் பழக்கணும்” என்றார்.

ஆணி புற்று தழைக்கும் குறிப்பான இடத்தில் மூன்று புள்ளிகளை அடையாளப்படுத்திக்கொண்டார், தேங்காய் எண்ணெயைத் தொட்டு திரும்ப ரேகைகளை அடையாளங்கண்டு தோலின் வரைபடத்தோடு சரிபார்த்தபடி நகர்த்தினார்.

“சரி பண்ணிறலாம் சாமி, ரேகையோட பொருந்தி அமரும்படியாகச் செருப்பு செய்யனும் மருந்து தடவிக்கிடணும் ஏழுநாள் கழிச்சு வாங்க, உங்க பாதத்துக்கு அடிவாறு மேல்வாறு எல்லாம் வாங்கணும் வலதுகாலக் கொடுங்க” அதையும் விரல்களால் தடவிப் பார்த்தார்.

“இதில் ஒன்றும் குறை வராது” “நிஜமாசரியாயிடுமாப்பா.” “இந்தக் கோமரத்தாடி ஆகும்ன்னா ஆகும்பான் இல்லென்னா இல்லம்பான் சாமி. இது சரியாயிடும்.” என்றார்.

அவர் எழுந்து ஐம்பது ரூபாய்தாளைத் தந்தார்.

“இழுத்தடிக்கமாட்டியே” “நீங்க வர்றதுக்கு ஒரு நா முன்னமே செஞ்சுவப்பேன், எதுக்கும் ஒரு நா தள்ளிச் சொல்றது நல்லதுதானே சாமி” என்றார் அவர் தலையாட்டி வணக்கம் சொல்லி திரும்பி தாங்கி தாங்கி மிதித்துச் சென்றார்.

இரண்டு முழு அகலத்தில் இரண்டு முழுநீளத்தில் பிசிறு நீக்கி சுருட்டிவைத்திருந்த மாட்டுத்தோலைப் பார்த்ததும் பிடித்துவிட்டது.

நல்ல பக்குவத்தில் வந்திருந்தது. தொட்டதும் அதன் நெளுகல் தன்மைதெரிந்து, இறுகி விரைப்பில்லாமல் தொவளலாக நல்ல நிறத்தில் இருந்தது.

சில தோல்கள் கல்லைத்தொட்டதுபோலக் கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும், நயமான தோல் கிடைக்க மெனக்கிட்டால் தான் முடியும். மருமகன் அம்மாசி ஓவுலாபுரத்திலிருந்து வாங்கி வந்திருக்கிறான்.

சொல்லாமலே இந்த மாதிரி செய்வான். மறுபடி சுருட்டி கட்டுவதற்குக் கயிற்றை எடுத்தார்.

இரண்டு பேத்திகளும் தாத்தாவின் தோளில் நெஞ்சை சாய்த்து தாத்தா கட்டுவதைப் பார்த்தனர். அடுத்தப் பிரசவத்திலாவது நடுவலவள் ஆண்டி யம்மாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டார் மடியிலிருந்து இரண்டு இருபது பைசாக்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தவர்.

பெரியவள் இருபதுபைசா என்றதும் மகிழ்ந்து தாத்தாவைப் பார்த்தாள். சின்னவள் தாத்தாவின் கழுத்தைக் கட்டி முத்தம் கொடுத்தாள். அதைப் பார்த்து பெரியவளும் முத்தம் கொடுத்தாள்.

பிள்ளைகளுக்கு ஆண்டியம்மாள் அடம் பிடிக்கிற முதுகில் இரண்டு அடியோடு ஐந்து பைசா தருவார்.

சோளக்கஞ்சியைத் தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு கலக்கி பெரிய ஈயக்கிண்ணத்தில் தந்தாள் ஆண்டியம்மாள்.

கஞ்சியைக் குடித்துவிட்டுத் துண் டால் வாயைத் துடைத்துக் கிளம்பத் தயாரானார், சுருக்குப்பையில் வைத்திருந்த இரண்டு வெற்றிலையை எடுத்துத் தந்தார், “அப்பா அடுத்த வருசம் கருப்பசாமிக்கு இன்னும் நல்லா கொடை நடத்தணும், எட்டு ஊருக்கு பேரும் புகழுமா போகனும்” “அதெல்லாம் பண்ணிறலாம்” மெல்லிதாகச் சிரித்தார்.

இருட்டுவதற்கு முன் கிளம்பினால்தான் கண் வெளிச்சத்திலே ஊர்போய்ச் சேர தோதாக இருக்கும். பேத்திகளை இருபுறமும் அணைத்து ‘போயிட்டு வரட்டுமா’ என்றார் வாயில் போட்டிருந்த இருபது பைசாவை எச்சிலோடு எடுத்து சரி என்றாள் சின்னவள்.

“வாயில காசபோட்டு பழகாதன்னு எத்தன தடவ சொல்றது” மூக்கில் குத்தப் போனாள். “சரிசரி விடு” என்றார்.

வெளியே வந்து கூரையைப் பார்த்தார், ராகித் தாள் கீற்று கருத்து துரும்புகளாக நொறுங்கிப் போய் கிடக்கிறது.

“ஒரு வண்டி ராகித்தாள் கிடைக்கட்டும், வந்து நானே பிரிச்சு மேஞ்சு விட்றேன்” என்றார்.

ஊரைத்தாண்டி மேற்குத் தடத்தில் நடையைக் கட்டும்போது சூரியன் மறைந்துவிட்டது. நன்றாகவே வெளிச்சம் இருந்தது. இடப்பக்கம் பீமன் கடவு மிக அருகில் இருப்பது போலத் தோன்றியது.

அதன் ஓடைகள் எல்லாம் சுத்துவாங்கி ஆற்றில் போய் இறங்கும். அடுத்த இரண்டு கரடுகளுக்குள் இடையே வாய்போல அகன்ற கடவு தெரிகிறது. இரண்டு கரடுகளுக்கு இடையே அந்தப் பக்கம் போனால் மார்க்கையனூர் வந்துவிடும்.

ஆண்டியம்மாளை தங்கை மகனுக்கே கொடுத்தார். வெங்கடாபுரத்தில் நாயக்கமார்கள்தான் அதிகம். அப்படி இப்படிச் சாராயம் குடிக்கிறான்தான் சோம்பேறித்தனம் கிடையாது. வீட்டில் ஒருநாள் நிற்கமாட்டான்.

எப்படியும் வேலையைத் தேடிப் போய் விடுகிறான் வளப்பிற்கு இடம் இருந்தால் ஒரு ஆட்டைக்கூட இவளுக்குக் கொடுத்துவிடலாம் என்று தோன்றியது.

குச்சனூர் செல்லும் பாதையின் வளைவில் நிற்கும் ஆலமரத்தில் மைனாக்கள் கெச்சட்டம் போடுவது கேட்டது. அடிமரம் தெற்காக வளைந்து விழுதுகளால் ஊன்றி நிற்கிற பழையமரம், பழனியப்பச் செட்டியார் தோட்டத்து வரப்போரம் தோதகத்தி மரத்தின்மேல் போட்டி சிறிய பரண் கூரையில்லாமல் இருக்கிறது.

வெள்ளாமை காலத்தில் காவலுக்குப் போட்டது. மரம் இலைகளை உதிர்ந்து இளம்பச்சையில் புதிய தளிர்கள் தளிர்ந்திருந்தாலும் குரங்கு பிடித்தது போல இலைகள் சுருண்டு சுருண்டு இருந்தன.

தோதகத்தி மரத்தின் கிளைகள் கரியத்துண்டாக நல்ல விசாலத்தோடு இருப்பதால் பரண்போடுவது எளிது.

பாதைப் புழுதியில் பாம்புத்தடத்தைப் பார்த்த தும் நின்றார். பருவெட்டாக இருக்கும்போல. வடக்கிலிருந்து தெற்காகச் சாலையைச் சற்றுமுன்கடந்திருக்கிறது. ஆடுகளின் குளம்படியோ, கவுதாரியோ மிதித்து அழிக்கவில்லை.

உள்ளங்கை அகலத்தில் புழுதியின் மேல் வழுவழுவென நெளிந்துநெளிந்து போகும் தடத்தைப் பார்த்தாலே பெரிய லகுடாக இருக்கும் என்று தோன்றியது. கட்டைவண்டிகள் சென்று சென்று இரு சக்கரத் தடங்களிலும் புழுதி படிந்து கிடக்கிறது. இரு கரிச்சான் குருவிகள் தலைக்குமேல் கத்தியபடி வட்டமடித்து இறையைத் தேடிப் போனது.

கொக்கி வெள்ளைச் சோளக்காட்டின் மேல் பறக்கும் பூச்சிகளைக் கரிச்சான்கள் பறந்து செல்லும் போக்கிலேயே லாவகமாக அலகால் கவ்வி வேட்டையை விழுங்கியது. சோளம் நல்ல பால் பருவத்தில் நிற்கிறது.

புதரிலிருந்து வெளிவந்த குள்ளநரி நடுபாதையில் நின்னு சின்னப்பனைத் திரும்பிப் பார்த்தது. சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல்ச்சுருளை இடது தோளில் வைத்துக்கொண்டு நரியைப் பார்த்தார்.

மிகக்குள்ளமான நரி எந்தப் பதட்டமும் இல்லாமல் முன்னால் உடம்பை அலட்டாமல் மெல்ல ஓடியது. ஊளையிட்டால் எங்கெங்கிருந்தோ பதில் ஊளை வரும் ஒன்றுகூடினால் ஆளையே குதறி எடுத்துவிடும். நரி கைஓடையில் இறங்கி மறைந்தது.

இந்த ஓடைவழி முதன்முதலாகப் போனதை மறக்கவே முடியாது அதுமெல்ல வளைந்து கரட்டின்அடிவாரத்திலிருந்து இறங்குவது தெரியும், கொடிக் கொம்பை பறித்து வரலாமென்று போனபோதுதான் பச்சைபசேல் என்று அருகம்புல் பெரிய நாற்றங்கால் அளவு விரிந்திருந்தது.

அதன் கரைபோல அரைவட்ட வடிவில் பெரிய பெரிய குண்டுபாறைகளும் கிடந்தன. அதன் அடியில் பிரண்டைகள் செழித்து வளர்ந்திருந்தன. இரண்டு பாறைகளுக்குஇடையில் நின்ற வேப்பங்குட்டையில் கோவைக் கொடி படர்ந்து அப்பி இருந்தது. முன்னால் பெரிய புல்தரை மண்டிபோட்டு அறுத்தால் நாலு கட்டு புல்வரும் பன்னருவாளை எடுத்து வந்து கை வைத்துவிடத் தோன்றியது. அருகம்புல்லில் மிதித்துக்கோவைகொடிக்குப் போகலாம் என்று காலை வைத்ததும் லவக்கெனத் தண்ணீருக்குள் விழும்படி ஆனது.

தொடையைத் தொடுகிற அளவு தெப்பமாகத் தண்ணீர் இருந்திருக்கிறது. பச்சை பசேல் என்று நிற்கும் அருகம்புல்அடியில் தண்ணீர் இருந்தது தெரிய வில்லை. இரண்டு நாட்களுக்கு முன் விழுந்த மழையில் இந்தப் பள்ளத்தை நிரப்பித் தெற்குப்பக்க கல்லிடுக்கில் நீர் கிடந்திருக்கிறது.

தண்ணீர் அலுங்காமல் புல் வயல் போல இருந்ததால் கால்வைத்து ஏமாந்தது நினைவிற்கு வந்தது. பள்ளத்தில் வண்டல் மண் படிந்து இருந்த வளம் அருகம் புல்லை நல்ல அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்த் திருக்கிறது.

சோளக்காடுகள் இருபுறமும் செழிப்பாக இருந்தன. மாலை மங்கி இருட்டத் தொடங்கியது. இந்தப்பக்கம் இன்னும் கரண்ட் தொகுப்பு வரவில்லை,

கண்மாய்க்கரை ஏறியபோது கூகையின் அலறல்குளக்கருவேலா மரத்திலிருந்து வந்தது. மரங்கள்தூங்குவதற்கு இருட்டு தழுவும்போல மேற்பரப்புஅமைதியாக இருந்தது. குளத்தின் வெட்டுக் கிடங்குகளில் மட்டும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

நீர் வற்றி குளத்தின் மேற்புறம் தரையாக விரிந்துகிடக்கிறது. நட்சத்திரங்கள் மங்கித் தெரியத் தொடங்கின, வளர்நிலா உச்சியில் பாதியாகத் தெரிந்தது. நிலவு வெளிச்சமா மசங்கும் மாலை வெளிச்சமா என்பதுபோல மயக்கம் இருந்தது.

நிலவு வெளிச்சம் தனதாக்கிக்கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண்மாய்க்கரையின் வடக்குப்பக்கம் இறைப் பொட்டி போகும் சத்தம் வந்தது. நிலவு வெளிச்சம் இன்னும் பளீரென்று பொழியும். பந்தம் ஏற்றாமல் நீர் இறைப்பது தெரிந்தது. அமாவாசை நாட்களில்தான் மதகின் இருபுறம் பந்தத்தை ஏற்றிவைத்து இறைப்பார்கள், மதகின் கண்ணிற்குக் கீழ் குளத்து நீர் இறங்கிவிட்டால் நீர் மேடேறி வெளியேறாது.

கண்ணைச் சுற்றி பெரிய கிண்ணிபோலக் கரையைக் கட்டி நீரை இறைத்து அதில் ஊற்ற மதகு கண்ணார் வழி வெளியேறும். காற்று கண்மாய் நீரில் தடவி வந்து இதமாகக் தாக்கியது.

ஒரு நரியின் ஊழை தெற்கில் இருந்து கிளம்பியது. பதிலுக்குக் கண்மாயின் மேற்குகரை பக்கமிருந்து ஊளை ஒலி வந்தது. இரண்டு கொக்குகள் வடக்காகப் பறந்து போகின்றன. கரையின் சரிவுகளில் உள்ள செடிகளிலிருந்து கோட்டான்கள் கிரிச் கிரிச் கிரிச்சென்று சொல்லி வைத்தது போலக் கத்தின. சட்டென ஒரு நொடி சத்தம் நின்று மறுபடி கத்தத் தொடங்கின.

மதகின் தெற்குப் பக்கம் நின்றிருந்தவர் “யார்ரா” என்று மிரட்டலோடு கேட்டபொழுதே பரமத்தேவர் குரல் என்று தெரிந்துவிட்டது.

“சின்னயன் சாமி” “ஓரமா வந்து நில்றா” சின்னயன் எதற்கு என்று விளங்காமல் பாதையின் ஓரம் நின்றார். இறைத்துக் கொண்டிருந்தவர்கள் இறைப்பெட்டியைத் திரட்டிக் கட்டிய ஈரமடைமீது வைத்துவிட்டு இந்தா வர்றோம் என்றார்கள்.

இறைத்து இறைத்து அந்த இடம் எல்லாம் சேறாக இருந்தது. இறைப்பொட்டியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.

“டேய் நீ சாமியாடியன்னா பெரிய புடுங்கி யாடா,  ஒன் சாதி மயிரு என்னடா”

“...........................”

“டேய் கேட்டதுக்கு வாயத்  தொறந்து சொல்லு”

“அண்ணே ஒரு அப்பு அப்பிக் கேளுண்ணே” சொல்லியபடி வேர்வை மினுங்க கரையேறி வந்தபடி கேட்டான்.

“சொல்றா கூதிமவனே”

“பறையன்”

“பறையன்தான. ஒனக்கும் அந்தக் கருப்பசாமிக்கும் என்னடா சம்பந்தம்”

“...........................”

“வாயத் தொறந்து பதில், சொல்லு. இல்ல அப்படியே குத்தி கொளத்தில் எறிஞ்சிடுவேன்”

“எங்க அப்பா காலத்திலிருந்து...”

“ஒங்க அப்பன் காலத்திலிருந்து சாமியாடியா? தோட்டி வேலை செஞ்சேன்னு சொல்லு”

“...........................”

“ஆமாவா இல்லையா”

“ம்ம்”

“ஏண்டா எடுபிடி, பிள்ளைமாரு கட்டுன கோயிலுக்கு  நீ  எப்படிடா  சாமியாட  முடியும்”

“சாமி அனாதரவா நிக்கிறத பாத்து...”

“அவங்க விட்டுவிட்டு ஊர காலி பண்ணி போயிட்டா நீ வேட்டை துள்ளுவியா நாயே. அதுவும் ஊராடி வர்ற ஒனக்கு குளிச்சிவிட்டுப் போச்சா, ஒன்னோட பறைச்சாதிக்கில்லடா ஆடனும். நீ வெள்ளாளனுக்கு பொறந்தியா, சொல்லுடா தாயோளி.”

சுண்டிப் போய் அவர்களையே பார்த்தார் சின்னப்பன்.

“கூதிமவனே இன்னைக்கு ராமுழுக்க நீ இறைப் பொட்டி போடனும், அந்தச் சாமி வந்து உன்ன எப்படிக் காப்பாத்துறான்னு பாக்கிறேன்.

ரா முழுக்க இறைப்பொட்டியில்தாண்டா நீ சாமியாடனும், அந்தமயிரு சாமிய இன்னக்கி நான் பாக்கனும்டா”

சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல் உருட்டைப் பிடிங்கி பிடறியில் ஒரு அடி வைத்துப் பள்ளத்திற்குத் தள்ளினார் பரமத்தேவர்.

“மீசையை முறுக்கிவிட்டிருக்கத் தொங்க விடுடாபன்னி பரதேசி, நறுக்கிப் போடுவேன் நறுக்கி, யாருக்கு யாருடா சாமியாடுறது. நீ சாமியாடுனாபெரிய புழுத்தியா இப்ப ஆடு, உன்ன செருப்பால அடிக்கிறேன் அந்தசாமி, என் மயித்த தொடுறானான்னு பாக்குறேன்”

மறுபடியும் பிடரியில் அடித்துத் தள்ளினார். இறைப்பொட்டி போய்வரும் இடமெல்லாம் ஈரமாகஇருந்தது. கச்சல் மண்ணுக்கு ஈரம்பட்டால் வழுக்கும்.

“இறைப்பொட்டி கயித்த பிடி, இல்ல இங்கயே உன் தலைய பொங்க வைக்கிறேன். பறப்பயலுக்கு என்ன துணிச்சல், டேய் நீங்க ரெண்டுபேரும் மாறிமாறி கயத்தப் பிடிங்கடா அவன் தாவு தீரணும் எந்த ஜென்மத்துக்கும் அவன் சாமியாடக் கூடாது.”

சின்னப்பனுக்கு ஆத்திரமும் பயமும் பதட்டமும் நிராதரவும் லேசான நடுக்கத்தைக் கொடுத்தது. அவமானம் கூனிக்குறுக வைத்தது. இனி சாமியாட மாட்டேன் சாமி என்று காலைப் பிடித்துக் கெஞ்சலாமா என்று தோன்றியது.

கால்களைப் பிடித்தாலும் அவர்கள் விடப்போவதில்லை என்று தெரிந்தது. பகலாக இருந்தால் என்ன சின்னப்பா நீ இங்க என்று கேட்பார்கள் நியாயத்தைச் சொல்லலாம் மனைவிபிள்ளைகளாவது ஓடி வருவார்கள், ஆளம்போடு வரிந்து கட்டி நிற்கிறார்கள். பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக மனம் தவித்தது.

ஒரு நாதியும் வராத இரவாகிவிட்டது. ‘கருப்பசாமி நான் என்ன செய்ய, எதற்குப் பித்தேறி உன் காலடிக்கு வந்தேன்?’ எதிராளி கழுவத்தேவனுடன் இறைப்பெட்டி பிடித்தார்.

மதகின் மீது பரமத்தேவரும் சிவனாண்டியும் அமர்ந்து இறைப்பொட்டி வீசி நீரை முகர்ந்துகண்ணார் மடையில் ஊற்றுவதையே பார்த்தனர். அது சோளக்காட்டிற்குப் பாய்ச்சலாகப் போனது.

“கூதிமவனே, நாளைக்கு உதடு மொலுக்கண்ணு இருக்கனும். மீசைய வச்சா நீ வலியசாதியின்னு நெனப்பாடா உனக்கு, சாதிகெட்ட நாயி. பறையன்னா பறையன் மாதிரி இருக்கணும். இல்லையன்னா காணா பிணமாக்கிருவேன்.

நீ சாமியாடிங்கிற பேருல அந்த ரெண்டுகுழி கோயில் நெலத்தை அமுக்கப் பாக்கிறயா தேவிடியா சிறுக்கி மவனே, நீ எதுக்குச் சாமியாடுனன்னு தெரியாதா நாதாரிப்பயலே.”

கோயிலுக்கு நிலம் இருப்பது நினைவிற்கே வரவில்லை. நிலம் இருக்கிறது என்பது தெரியும். கணபதியாபிள்ளை இருந்த காலத்தில் உழுது விதைத்தார். கருவேலமரங்கள் முளைத்து தெற்கே கடலாகக் கிடக்கிறது அதன்மேல் நினைவே இல்லை, கைவிடப்பட்டு நின்ற கருப்பசாமி மட்டும்தான்எப்போதும் நினைவிற்கு வந்தார்.

இறைப்பொட்டி போடப் போட சின்னப்பனுக்கு மூச்சிறைத்தது. சின்னப்பன் வாலிபனாக இருந்தபோது போட்டது, கை சலிக்கத் தொடங்கியது. இரவு தன் அவமானங்களை வெளியில் தெரியாமல் மறைப் பதுபோல இருந்தது. உடம்பில் வேர்வை ஊற்றாகக் கிளம்பியது.

கழுவனுக்கு முப்பத்தைந்து வயதிற்கு உள்ளாகத்தான் இருக்கும். ஆளும் திடகாத்திரமாக இருக்கிறான். அவன் நீரை கவிழ்த்து பெட்டியைத்தூக்கி வெட்டுக்கிடங்கில் வீசுவதிலேயே வேகம் காட்டினான்.

முடியாமல் தோற்றவனை, திரும்பத் திரும்ப மல்லுக்கு அழைத்து வீழ்த்தி மிதித்துச் சுகம் காணுபவனைபோல “ம்ம்... இழுடா... ம்ம்... இழுடா” என்று கேலியோடு வேலைக்குள் இழுத்தான். “அள்ளி எறிடா போத்தி அடுத்த எடம் பாத்தி” இறைப்பெட்டி நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான்.

இறுக்கிப் பிடித்து நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான், இறுக்கிப் பிடித்து நீர் அள்ள அள்ள உள்ளங்கை காந்தத் தொடங்கியது.

நீரை அள்ளி இறைப்பெட்டியை  மேலே இழுத்து வரும்போதெல்லாம் கால்களை இழுத்து கழுவனின் கால்கள் தடுமாறாமல் உறுதியாக நின்றன.

இந்த வயதில் கழுவனோடு இறைத்து சிவனாட்டி யோடு இறைத்து வலுவெல்லாம் இழந்து வீழப் போவதை நினைத்தாலும் கால்கள் நடுங்கின.

ஆனாலும் அகதிபலம் மிச்சம் மீதி இருந்ததால் நீரை அள்ளி ஊஞ்சல் போலக் கொண்டுவந்து கவிழ்த்தி அதே வேகத்தில் வீச முடிந்தது.

ஆதரவற்று நிற்கிற தனிமை, வேதனையைக் கொட்டுவதற்கு இல்லாத ஆதரவெல்லாம் வாழ்வ தற்கான ஆசையை அழிக்கத் தொடங்கியது. முடியாது என்று முரண்டு பிடித்திருந்தால் பெரிய மனிதன் என்று பாராமல் விழப்போகிற அடிகள் நெஞ்சுக்குள்திடுக்கிடச் செய்கிறது.

இறைத்தவண்ணம் அப்படியே செத்துப்போனால் நிம்மதி ஏற்படும் என்று தோன்றி யது. சாவு வரட்டும் என்று இறைக்கத் தொடங்கினார். குளம் மேலும் கீழும் அசைவதுபோல இருந்தது. நிலைகொள்ளாது ஒரு பக்கம் குளம் கவிழ்வதுபோல ஆடியது.

ஆள்மாறி ஆள்மாறி இறைத்தார்கள், பரமத்தேவர் பாய்ச்சலைக் கண்டு வந்து அமர்வதும் தொடர்ந்தது. சின்னப்பன் வைராக்கியமாக இறைத்தார் அவர்களில் ஒருவர் மாறி ஒருவர் தூங்கவும் செய்தனர்.

வானில் நட்சத்திரங்கள் கிழக்கில் மேலேற மேற்கில் நட்சத் திரங்கள் இறங்கின. இன்னார வெள்ளி, தார்க்குச்சி வெள்ளி, கட்டில்கால் வெள்ளி, கோலவெள்ளி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தது.

விடியற் காலைஇறைக்க வலுவில்லாமல் சரிந்து விழுந்தார்,முட்டிகள் உடலைத் தாங்க முடியாது துவண்டன.தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு மீண்டும் இறைப் பொட்டி கயிற்றை வைராக்கியமாக எடுத்துப் பிடித்து வெட்டுக் கிடங்கில் வீசினார். கால்களை இறுக ஊன்றி இறைத்தார்.

வீட்டில் வந்து படுத்தவருக்குத் தூக்கம் வரவில்லை, கூரை முகட்டைப் பார்த்தபடி இருந்தார். உயிரோடு இருக்கவேண்டுமா என்ற வேதனை நெஞ்சை நிரப்பியது. முடியாது என்று ஓடிவந்திருக்க லாமா என்று தோன்றியது.

ஓடி வந்திருக்கவும் முடியாது. அப்படி முயன்றிருந்தால் அடித்து உதைத்து இழுத்து வந்து இறைப்பொட்டி போட வைத்திருப்பார்கள். அது இதைவிட அசிங்கமாகி இருக்கும். ஏனோ அந்தச் சமயத்தில் ஓடத் தோன்ற வில்லை, நான்கு இறைவைப் போட்டதும் போடா என்று அனுப்பிவிடுவார்கள் என்று ஒரு அற்பத்தனமும் தோன்றியது.

மீசையைத் தொட்டபோது முகமே துடித்தது, அடுத்த ஆண்டு வேட்டை துள்ளி துடியான சாமியாடியாகச் சுழன்று ஆடிவர நினைத்த கனவு கலைந்ததை நினைக்க நினைக்கக் கண்ணீர் வழிந்தது.

நான்கு நாளாக உண்ணுவதற்கு மனதே வரவில்லை, பெண்பிள்ளைகள் இரண்டுபுறம் அமர்ந்துசின்னய்யன் கையை நீவிவிட்டார்கள், சின்னவள்சாப்பாட்டுத் தட்டை மடியில் வைத்து “ரெண்டுவாய் சாப்பிடுப்பா” என்று கெஞ்சினான்.

அடிபட்டுவந்ததால் சாப்பிட்டிருந்தால் சாப்பிட்டிருக்கலாம் போகப்போகத் தன்னையே வெறுத்தார். உணவை உண்ண ரோசம் இடம் கொடுக்க மறுத்தது. பிள்ளைகள் பேரன் பேத்திகள் எவ்வளவோ கெஞ்சியும் சாப்பாட்டை வேண்டாம் என்றார், தான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டுமா?

பதினேழுவயதில் சாமியாடியாக எடுத்த இந்த வாழ்வை எப்படி விடுவது? அவமானம் மட்டுமே அழுத்திக்கொண்டுஇருந்தது. சாப்பாட்டில் மனமே செல்லவில்லை, சாப்பிட நினைத்தாலே நெஞ்சமெல்லாம் அதிர்ந்தது.

முடியாது என்று முரண்டு பிடித்திருக்கவேண்டும் அடித்துக் கொன்றிருந்தால் அந்த நேர வலியோடு அடங்கி நிம்மதியாகப் போயிருக்கும், நிம்மதியற்று இப்படிக் கிடக்க வேண்டியிருக்காது.

கோயில் நிலத்தை வெட்டி சுத்தம் செய்திருப்பதாகச் சொன்னார்கள், மறுகொடை விழா அடுத்தச் செவ்வாய்க்கிழமை எடுக்கப் போவதாக ஒரே பேச்சாக இருந்தது, அலுக்குப் பலுக்கு இல்லாமல் ஊர் அடங்கி இருந்தது.

தலைமாட்டில் அமர்ந்திருந்த வேம்பாளிடம் பெரியவனையும் சின்னவனையும் வரச் சொன்னார்.

இருவரும் வந்து அமர்ந்திருந்தார்கள், சின்னப் பனுக்குக் காது அடைத்தது விடவே இல்லை. மெல்ல “பெரிய சாதி இருக்கிற ஊருல சின்னசாதி வாழ்றது கஷ்டம்பா, டவுணுபக்கம் போயி நல்லபடியாபிழைக்கிறதுன்னா பிழைச்சுக்கோங்க, இனி இங்க நிம்மதியா இருக்க முடியாது” என்றவர் கண்மூடி மூச்சை இழுத்து விட்டார்.

நான்கைந்து மூச்சு வாங்கியப் பின் “கால் ஆணி கண்டவருக்குச் செருப்பு தச்சு தரமுடியல, வந்தாரன்னா ஊசி டப்பாவில அம்பது ரூவாயப் போட்டு வச்சிருக்கேன், எடுத்துத் தந்திடுங்க” என்றவர் பரணியில் வைத்திருந்த தோல் உருட்டைப் பார்த்தார். கண்களை மூடவேண்டும் போல் இருந்தது. சின்னவனைப் பார்த்து “யாரு கருப்பசாமிக்கு கோமரத் தாடியா வர்றது” என்றார்.

“கழுவன்” என்றான் மகன்.

மொழியாக்கச் சிறுகதை

இரண்டு நுழைமாடங்களையும் ஒன்பது படுக்கை அறைகளையும் உடைய ஒரு மிகப்பெரிய வீட்டில் வசித்து வந்த, வாழ்க்கையில் வெறுப்புற்ற ஒரு விதவையான ரெபெக்கா, தெருவிலிருந்து கல் எறியப்பட்டதைப் போன்று திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தபோது, ஜூலையில் தொடங்கியது தொந்தரவு.

தனது படுக்கையறையில் இந்த முதல் கண்டுபிடித்தலை செய்யவும், தனது கணவன் இறந்தகாலம் தொட்டு அவளது வேலைக்காரியாகவும் நம்பிக்கைக்குரியவளாகவும் இருக்கும் அர்ஹேனீதாவிடம் இதனைக் குறித்துப் பேசியாக வேண்டும் என்றும் நினைத்தாள்.

பின்னர்ப் பொருட்களை நகர்த்தி வைத்துக்கொண்டிருக்கும்போது (ஒரு நீண்டகாலமாகவே ரெபெக்கா பொருட்களை இடம் மாற்றுவது அல்லது வேறு எதையும் செய்திருக்கவில்லை), படுக்கையறையில் உள்ள திரைச்சீலைகள் மட்டுமல்ல வீட்டில் இருந்த மற்ற அனைத்து திரைச்சீலைகளும் கூடக் கிழிக்கப் பட்டிருப்பதைக் கவனித்தாள்.

விதவையானவள் அறிவு செறிந்த உணர்வுடைய அதிகாரம் செலுத்துதலைக் கொண்டிருந்தாள், சுதந்திரப்போரில் இராயலிஸ்டுகளின் பக்கம் சேர்ந்து போரிட்டவரும் பிற்பாடு மூன்றாம் சார்லஸ் சான் இல்திஃ போன் சோவில் கட்டிய மாளிகையைச் சென்று காணும் ஒற்றை நோக்கத்துடன் ஸ்பெயினிற்கு எளிதில் செய்ய இயலாத பயணத்தை மேற்கொண்டவருமான ஒரு கிரியோலான, தந்தைவழிப் பூட்டனாரிடமிருந்து மரபுவழியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம் ஒருவேளை அது.

ஆகையால் மற்ற திரைச்சீலைகளின் நிலையை அவள் கண்டுபிடித்தபோது, அர்ஹேனீதாவிடம் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைத்தாள் என்றாலும், இன்னும் சரியாகச்சொல்வதென்றால், சின்னஞ்சிறு வெல்வெட் மலர்களுடன் இருந்த அவளது வைக்கோல் தொப்பியை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலைப் பற்றிய ஒரு தகவலைத் தெரிவிப்பதற்காக நகர மண்டபத்திற்குச் சென்றாள்.

ஆனால் அவள் அங்குச் சென்று அடைந்தபோது, மேற்சட்டையற்று, முடியடர்ந்து அவளுக்கு விலங்கியல்புடையதாகத் தோன்றிய ஒரு திண்மையுடன் இருந்த, மேயரையேக் கண்டாள், நகர மண்டபத்தின் திரைச்சீலைகளை, தன்னுடையதைப் போன்றே கிழிக்கப்பட்டிருந்தவற்றைச் செப்பனிட்டுக் கொண்டு பரபரப்பாக இருந்தவரை.

அழுக்காகவும் தாறுமாறான துப்புரவற்ற நிலையிலும் இருந்த அலுவலகத்திற்குள் பாய்ந்து நுழைந்தாள் ரெபெக்கா, அப்புறம் அவள் கண்ட முதல் விஷயம் மேசையின் மேலிருந்த இறந்த பறவைகளின் ஒரு குவியலாகும்.

ஆனால் அவள் ஒருங்கு குலைந்திருந்தாள், வெப்பத்தால் பகுதியளவிலும், அவளது திரைச்சீலைகளின் கேடுபாடு அவளுள் விளைவித்திருந்த உளக்கொதிப்பினால் பகுதியளவிலும், ஆகையால் மேசை மீதிருந்த இறந்த பறவைகளின் கேள்விப்பட்டிராத கண்காட்சியைக் கண்டு மனம் பதறுவதற்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை. படிக்கட்டின் உச்சியில், ஜன்னலின் உலோகக் கம்பியிழைகளைத் திரைச்சீலைத் துணியின் ஒரு சுருளினாலும் ஒரு திருப்புளியினாலும் செப்பனிட்டுக்கொண்டிருந்த, அதிகாரமிக்கவரின் சீரழிவின் அத்தாட்சியினால் அவள் மதிப்புக் குலைந்துவிடவும் இல்லை.

தனது சொந்த திரைச்சீலைகளால் எள்ளி நகையாடப்பட்ட, தன்னை அல்லாத வேறு எந்தவொரு மேன்மை மிக்கவரையும் பற்றி அவள் தற்போது எண்ணிக்கொண்டிருக்க வில்லை, அப்புறம் அவளது முழு ஈடுபாடானது தனது வீட்டின் ஜன்னல்களையும் நகர மண்டபத்திலிருந்த ஜன்னல்களையும் இணைத்துப் புரிந்துகொள்வதிலிருந்து அவளைத் தடுத்தது.

கதவிற்கு உள்ளாக இரண்டு அடிகள் எடுத்து வைத்து ஒரு கூரிய மதிப்பார்வத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அப்புறம் தனது கைக்குடையின் நீண்ட அலங்கரிக்கப்பட்ட பிடியில் சாய்ந்தவாறு, கூறினாள்:

“எனக்கு ஒரு புகார் அளிக்கவேண்டும்.”

படிக்கட்டின் உச்சியிலிருந்து, மேயர், வெப்பத்தினால் கன்றிச் சிவந்திருந்த தனது தலையைத் திருப்பினார்.

தனது அலுவலகத்தில் விதவையின் தானாக வலிந்து உண்டாக்கிய இருப்பிற்கு எதிராக மேயர் உணர்ச்சி எதையும் காட்டவில்லை.

மனச்சோர்வு தரும் அசட்டையுடன் பாழாக்கபட்டிருந்த திரைச்சீலையினை அவர் பிரித்துவிடுவதைத் தொடர்ந்தார், அப்புறம் மேலிருந்தே கேட்டார்:

“என்ன தொந்தரவு?”

“பக்கத்திலிருக்கும் பையன்கள் எனது திரைச் சீலைகளை முறித்துப் போட்டனர்.”

அவள் மேல் மேயர் வேறொரு நோட்டமிட்டார். அவளைக் கவனமாக ஆய்வுசெய்தார், நயநாகரீகமான சின்னஞ்சிறு வெல்வட் மலர்களிலிருந்து பழம் வெள்ளியின் வண்ணத்திலிருந்த அவளது ஷூக்கள் வரை, அப்புறம் அவரது வாழ்வில் அவளை அவர் முதன்முறையாகப் பார்த்தது போலிருந்தது அது.

மிக மெதுவான அசைவுடன், அவள் மீதிருந்த பார்வையை எடுக்காமலேயே அவர் கீழிறங்கி வந்தார்.

அப்புறம் அவர் கீழே வந்தடைந்ததும், தனது இடைவாரில் ஒரு கையை ஓய்வாக வைத்துக்கொண்டு, மேசையை நோக்கி திருப்புளியைக் காண்பித்து, அப்புறம் கூறினார்:

“அது பையன்களல்ல, சென்யோரா. அது பறவைகள்தாம்.”

அதற்குப் பிறகுதான் அவள் மேசையிலிருந்த இறந்த பறவைகளையும் படிக்கட்டுகளின் உச்சியில் இருந்த மனிதனையும், அப்புறம் அவளது படுக்கை அறைகளிலிருந்த முறிந்த திரைச்சீலைகளையும் இணைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டது.

அவள் கிடு கிடுத்தாள், அவளது வீட்டிலுள்ள படுக்கையறைகள் அனைத்தும் இறந்த பறவைகளாக நிறைந்திருப்பதைக் கற்பனை செய்தவாறு.

“பறவைகளா!” என்று வியந்தாள்.

“பறவைகளே” என்று மேயர் உடன்பட்டார். “பறவைகள் ஜன்னல்களை உடைப்பதும் வீடுகளின் உள்ளே இறப்பதுமான இந்தப் பிரச்சனை எங்களுக்கு மூன்று நாட்களாக இருப்பதால், நீங்கள் இதைக் கவனிக்காதிருந்தது வினோதமாக இருக்கிறது.”

ரெபெக்கா நகர மண்டபத்தை நீங்கியபோது, அவள் வெட்கமடைந்தவளாக உணர்ந்தாள், அப்புறம் நகரத்தின் புரளி அனைத்தையும் வீட்டிற்குள் கொண்டு வந்தவளும் எனினும் பறவைகளைப் பற்றி மூச்சே விட்டிருக்காதவளான அர்ஹேனீதாவைப் பற்றிக் கொஞ்சம் சீற்றமடைந்தவளாகவும் ஆனாள்.

அவளது கைக்குடையை விரித்தாள், வரவிருக்கும் ஆகஸ்டின் பிரகாசத்தினால் திகைத்தாள், அப்புறம் அவள் திணறடிப்பதும் ஆளரவமற்றதுமான தெருவினூடாக நடக்கும் போது அவளுக்கு அனைத்து வீடுகளின் படுக்கையறைகளும் ஒரு கடுமையானதும் மூக்கைத் துளைப்பதுமான இறந்த பறவைகளின் வீச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்ததான மனப்பதிவு ஏற்பட்டது.

இது ஜூலை கடைசியாக இருந்தது, அப்புறம் ஒருபோதும் நகரின் சரித்திரத்தில் அது இத்தனை சூடு மிக்கதாக இருந்ததில்லை.

ஆனால் பறவைகளின் மரணத்தினால் எச்சரிக்கை அடைந்திருந்த நகரவாசிகள், அதனைக் கவனிக்கவில்லை.

வினோதமானநிகழ்வானது நகரத்தின் நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பாதிக்கவில்லை என்ற போதிலும், ஆகஸ்டு மாத தொடக்கம் வரை இதனால் பெரும்பான்மையானவர்கள் தவிக்கும் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள்.

தமது அருட்திருநிலையை அந்தப் பெரும்பான்மையானவர்களுக்கு இடையில் சேர்த்துக் கொள்ளாதிருந்தவரான, காஸ்தானீதா இ மாண்டீய்தா பலிபீட புனித சமயத்துறை சடங்கைச் சேர்ந்த ஆந்தனி இசபெல், மென்னயம் வாய்ந்த வட்டார சமயத்துறைத் துறவியானவர், தொண்ணூற்றி நான்காம் வயதில், தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில்தான் கண்டிருக்கிறேன் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தார், அப்புறம் அப்படி இருந்தபோதும் அவர் இரண்டு இறந்த பறவைகளை மட்டுமே கண்டிருந்தார் என்றும், அவற்றிற்குக் குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக் கூடச் சேர்க்காமலும் தான். முதலாவதை திருப்பூட்டறையில் கண்டிருந்தார், ஒரு செவ்வாய்க்கிழமை திருப்பலி பூசைக்குப் பிறகாக,அப்புறம் அண்டையில் உள்ள ஏதோவொரு பூனையினால் அங்கே இழுத்து வரப்பட்டிருக்கும் என்றும் எண்ணினார்.

மற்றவொன்றை புதன் கிழமையில், சமயவட்டார திருச்சபை மனையின் தாழ்வாரத்தில் கண்டார், அப்புறம் தனது பூட்சின் முனையால் அதனைத் தெருவிற்குத் தள்ளிவிட்டார், பூனைகள் இருக்கவேண்டிய அவசியமே இல்லை என்று எண்ணியவாறு.

ஆனால் வெள்ளிக்கிழமை அன்று, அவர் இருப்புப்பாதை நிலையத்திற்கு வந்துசேர்ந்தபோது, அவர் அமர்வதற்காகத் தேர்ந்தெடுத்த நீள் இருக்கை ஒன்றில் மூன்றாவது இறந்த பறவையைக் கண்டுகொண்டார்.

அதன் சின்னஞ்சிறு கால்களைப் பிடித்து அதன் உடலை அவர் இழுத்தபோது அது ஒரு மின்னல் வெட்டைப் போன்று இருந்தது; அதனைத் தனது கண் மட்டத்திற்கு உயர்த்தினார், அதனைத் திருப்பினார், பரிசோதனை செய்தார், அப்புறம் மலைப்பூட்டும் விதமாக எண்ணிப் பார்த்தார், அருள் பாலிக்கட்டும், இந்த வாரம் நான் கண்ட மூன்றாவது ஒன்று இது.

அந்தக் கணம் தொட்டு நகரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார் அவர், ஆனால் மிகவும் நுட்பமாக இல்லாத ஒருவழியில்தான், தந்தை ஆந்தனி இசபெல், அவரது வயது காரணமான பகுதியும் அவர் தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில் கண்டிருந்தார் என்று சத்தியம் செய்ததால் மறு பகுதியும் (அந்த நகரத்திற்குப் பொருந்தாததாகத் தோன்றிய ஏதோவொன்று), திருச்சபை வட்டாரக் குடிகளால் ஒரு நல்ல மனிதர், அமைதியானவர் மற்றும் உதவும் மனப்பான்மையுடையவர், ஆனால் பழக்கத்திற்கு ஆளானபடியாகப் பகற்கனவு காண்பவர் என்று கருதப்பட்டார்.

பறவைகளுக்கு ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனித்தார், என்றாலும் அது அப்பொழுது ஒரு திருக்கோயில் மேடைப் பிரசங்கத்தை வேண்டும் அளவிற்கு அத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது என்பதை அவர் நம்பவில்லை.

அந்த நெடியை அனுபவித்த முதலாவது ஆள் அவர்தான். வெள்ளிக்கிழமை இரவன்று அவர் அதனை நுகர்ந்தார், எச்சரிக்கை உணர்வு மேலிட அவர் விழித்து எழுந்தபோது, அவரது நயநுட்பம் வாய்ந்த ஆழ்துயில் ஒரு குமட்டவைக்கும் நாற்றத்தினால் தடைபட்டது, ஆனால் அவருக்கு இதனை ஒரு கொடுங்கனவுடன் சேர்ப்பதா அல்லது அவரது உறக்கத்தைக் கலைப்பதற்கான தீய ஆவியின் அசலான தந்திரத்துடன் சேர்ப்பதா என்று தெரிந்திருக்கவில்லை.

அவரைச் சுற்றிலும் முகர்ந்து பார்த்தார், அப்புறம் படுக்கையில் புரண்டார், ஒரு திருச்சபை மேடைப் பிரசங்கத்திற்காக அந்த அனுபவம் உதவும் என்று எண்ணியவாறு.

அது, ஐம்புலன்களின் எந்தவொன்றின் வழியாகவும் மனித இதயத்தை ஊடுருவும் சாத்தானின் திறமையைப் பற்றிய ஒரு நாடகீயமான திருச்சபை பிரசங்கமாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.

அடுத்த நாள் திருப்பலி பூசைக்கு முன்பாக முன்றிலைச் சுற்றி அவர் உலவியபோது, எவரோ ஒருவர் இறந்த பறவைகளைப் பற்றி முதன்முறையாகப் பேசுவதைக் கேட்டார்.

அந்த வாரத்தில் சேகரிக்கப்பட்ட பறவைகளால் தான் கெட்ட இரவுநேர வாடை என்று எவரோ ஒருவர் கூறியதை அவர் கேட்டபோது தான் திருச்சபை பிரசங்கத்தைப் பற்றி, சாத்தானைப் பற்றி, அப்புறம் மோப்ப உணர்வினால் செய்யப்படக்கூடிய பாவங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தார்;

அப்புறம் அவரது தலையில் ஆவியெழுப்பும் முன்னெச்சரிக்கைளின் கூட்டவியல்கள், தீய மணங்கள், அப்புறம் இறந்தபறவைகள் உருக்கொண்டன. ஆகையால் அவருக்குஅந்த ஞாயிற்றுக்கிழமையில் அவரும் கூட மிகச் சரியாகப் புரிந்துகொள்ளாத மாண்பதை அன்பின் மீதான ஒரு நீண்ட பத்தியை மேம்படுத்தவேண்டி இருக்கும், அப்புறம் அவர் தீய ஆவி மற்றும் ஐம்புலன்களுக்கு இடையிலான உறவுகளை என்றென்றைக்குமாக மறந்துபோனார்.

இருந்தபோதிலும், அவரது சிந்தனையின் ஏதோவொரு தொலைப்புள்ளியில், அந்த அனுபவங்கள் பதுங்கி இருந்திருக்கவேண்டும்.

அது எப்பொழுதும் அவருக்கு நிகழ்ந்தது, எழுபது வருடங்களுக்கு அதிகம் முன்பாகக் குருமடப் பள்ளியில் மட்டுமல்ல,அவர் தொண்ணூறு வயது கடந்ததும் ஒரு குறிப்பிட்ட வழியில்.

குருமடப் பள்ளியில், ஒரு மிகப் பிரகாசமான பிற்பகலில் இடி முழக்கமற்று ஒரு கனத்த மழைப்பொழிவு உண்டான போது, அவர் சோபோக்ளீசிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்றை அதன் அசல் கிரேக்க மொழியில் படித்துக் கொண்டிருந்தபோது.

மழை பெய்து கழிந்த பிறகு, களைப்புற்ற வயலை அவர் ஜன்னல் வழியாக நோக்கினார், புதியதாகக் கழுவப்பட்ட பிற்பகலை, அப்புறம் அவர் பிரித்தறிந்து கொள்ள முடியாததாக இருந்த, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு பொதுப்படையான ரீதியில், “பழங்காலத்தைய சிறு பழங்கிரேக்கர்கள்” என்று அழைத்த கிரேக்க நாடக அரங்கத்தைப் பற்றியும் செவ்வியல் இலக்கியங்களைப் பற்றியும் முற்றிலும் மறந்து போனார்.

ஒரு மழையற்ற பிற்பகலில், ஒருவேளை முப்பதோ அல்லது நாற்பதோ ஆண்டுகள் பின்னர், அவர் வருகை புரிந்து கொண்டிருந்த ஒரு நகரம் ஒன்றின் உருளைக்கல் பாவப்பட்ட சதுக்கத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, அவர் குருமடப் பள்ளியில் வாசித்துக்கொண்டிருந்த சோஃபோக்ளீசிலிருந்து ஒரு பத்தியை மனப்பாடமாக ஒப்பித்தார்.

அதே அந்த வாரத்தில், பழங்காலத்தின் சிறு பழங்கிரேக்கர்களைப் பற்றிய ஒரு நீண்ட உரையாடலை, பேச்சளப்பவரும் எளிதாக உள்ளத்தில் எதையும் ஏற்றுக்கொள்பவரும், அவர், தான் கண்டுபிடித்ததாகக் கோரியதும் அது பிற்பாடு ஆண்டுகளுக்குப் பிறகு குறுக்குப்புதிர்கள் என்ற பெயரில் பிரபலமானதுமான குறிப்பிட்ட சிக்கலான புதிர்களின் பால் பிரியமாக இருந்த ஒரு கிழவரான, அப்போஸ்தல உதவியாளருடன் மேற்கொண்டிருந்தார்.

அந்த நேர்முகம் கிரேக்க செவ்வியல் இலக்கியங்கள் பாலான அவரது பழைய உள்ளங்கனிந்த நேசத்தை எல்லாம் ஓர் ஒற்றை அடியில் மீளெடுக்க அவருக்கு இசைவளித்தது. அந்த ஆண்டின் கிறிஸ்துமசில் அவர் ஒரு கடிதத்தைப் பெற்றார்.

அந்தச் சமயத்தில் அவர் இயல்புகடந்த கற்பனையுடனும், தனது விளக்கவுரைகளை அளிப்பதற்கான துணிபுடனும், அப்புறம் அவரது திருச்சபை பிரசங்கங்களின் ஒரு கொஞ்சம் முட்டாள்தனத்துடனும் இருப்பதன் திண்மையான கீர்த்தியை அவர் பெற்றார் என்ற விஷயத்திற்காக வேண்டி மட்டும் இல்லை என்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அவரை ஒரு மேற்றிராணியார் ஆக்கியிருப்பார்கள்.

1885ம் ஆண்டுப் போருக்கு நீண்டகாலம் முன்பாகவே அவர் அந்நகரத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டார், அப்புறம் அந்தச் சமயத்தில் பறவைகள் படுக்கையறைகளில் இறக்கத் தொடங்கியபோது அவருக்குப் பதிலாக ஒரு இளம் துறவியை அவர்கள் மாற்றிட வேண்டிக்கொண்டு வெகுகாலம் ஆகியிருந்தது,

குறிப்பாக அவர் தீய ஆவியைக் கண்டதாகக் கோரிய பிறகு. அந்தச் சமயம் தொட்டு அவர்கள் அவருக்குக் கவனம் கொடுக்காதவர்களாக ஆகத் தொடங்கினார்கள், கண் கண்ணாடிகள் இன்றியே அவரது திருச்சபை மறைநூலின் நுண்ணிய வரிவடிவங்களை அவருக்கு இன்னும் அடையாளம் கண்டுகொள்ளமுடியும் என்றபோதிலும் அவர் மிகத் தெளிவான வகையில் கவனித்திருக்காத ஏதோவொன்றாக இருந்தது அது.

ஒழுங்கான வழக்கங்களுடையவராக அவர் எப்பொழுதுமே இருந்தார். சிறியவராக, குறிப்பிடத் தக்கதல்லாதவராக, துருத்திய திடமான எலும்புகளுடனும் அமைதியான சைகைகளுடனும், உரையாடுவதற்கான ஓர் ஆறுதல்படுத்தும் குரலுடன் ஆனால் திருக்கோயில் உரைமேடைக்கு மிகஅதிகம் ஆறுதற்படுத்தும் குரலுடனும் இருந்தார்.

மதிய உணவு உண்ணும் வேளை வரையிலும் பகற்கனவு கண்டவாறு தனது படுக்கையறையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், கித்தான் நாற்காலி ஒன்றில் கவனமற்று நீட்டிக் கிடந்தவாறும் கணுக்கால்களில் அடிப்புறங்கள் கட்டப்பட்டிருந்த நீண்ட சாய்வரி கால் சராய்கள் அல்லாத வேறொன்றையும் அணியாதவாறு.

திருப்பலி பூசை செய்வதைத் தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை.

வாரம் ஒருமுறை பாவமன்னிப்புக் கூண்டில் அவர் அமர்ந்தார், ஆனால் பல வருடங்களாக எவரொருவரும் பாவமன்னிப்பைக் கேட்கவில்லை.

அவர் வெறுமனே எண்ணியது அவரது திருச்சபை வட்டாரக்காரர்கள் நவீன பழக்கவழக்கங்களால் கடவுள் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்று, அப்புறம் அதனால் தான் மூன்று சந்தர்ப்பங்களில் தீய ஆவியைக் கண்டதானது மிகவும் பொருத்தமான நிகழ்வு என்று அவர் நினைப்பது, சனங்கள் தனது வார்த்தைகளுக்குக் கிஞ்சித்தளவே நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள் என்ற போதிலும் அந்த அனுபவங்களைக் குறித்து அவர் பேசிய போது அவருக்கு அதனை மிகவும் ஒத்துக்கொள்ள வைப்பதற்கு முடியவில்லை என்பதையும் அவர் அறிந்தபோதிலும். அவரைப் பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிப்பது அவருக்கு ஒரு ஆச்சரியமாகவே இருக்கக்கூடும், கடைசி ஐந்து வருடங்களில் மட்டுமல்ல அவர் முதலிரண்டு பறவைகளைக் கண்டுபிடித்த அந்த வியக்கத்தக்க கணங்களிலும் கூடத்தான்.

அவர் மூன்றாவது பறவையைக் கண்டுபிடித்தபோது, அவர் வாழ்விற்குக் கொஞ்சமாகத் திரும்பிவந்தார், ஆகையால்தான் கடைசிச் சில நாட்களில் போற்றத்தக்க அளவில் இருப்புப்பாதை நிலைய நீளிருக்கையில் இறந்த பறவையைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

தேவாலயத்திலிருந்து பத்து அடிகள் தொலைவில், தெருவை நோக்கிய ஒரு தாழ்வாரமும் அலுவலகமாகப் பயன்பட்ட இரண்டு அறைகளையும் படுக்கையறையையும் கொண்ட திரைச்சீலைகள் அற்ற ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்தார்.

ஒருவேளை குறைந்த துலக்கமான அவரது கணங்களிலாக இருக்கலாம், மிகவும் சூடாக இருக்காதபோது உலகில் மகிழ்ச்சியை அடைவதற்குச் சாத்தியம் என்று அவர் கருதினார், அப்புறம் இந்தக் கருத்து அவரைக் கொஞ்சம் குழப்பியது.

அப்பாலைத் தடங்களின் செல்வழிகளினூடாக அலைந்து திரிய அவர் விரும்பினார். ஒவ்வொரு காலையிலும், கதவைத் திறந்து வைத்து விட்டு, அவரது கண்களை மூடிக்கொண்டு, அவரது தசைகளை விறைப்பாகவும் வைத்துக்கொண்டு படுக்கையறையில் அவர் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது அவர் செய்துகொண்டிருந்தது என்னவென்றால் அது இதைத்தான்.

எனினும், குறைந்த பட்சம் மூன்று வருடங்களாக அவரது தியானத்தின் கணங்களில் அவர் இனிமேலும் எதையும் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை என்பதால் அவர் அவரது சிந்தனையில் மிகவும் நுணுக்கமாக மாறினார் என்பதை அவரே கூட உணர்ந்திருக்கவில்லை.

பன்னிரெண்டு மணிக்கு மிகச்சரியாக, ஒவ்வொரு நாளும் அதே பொருட்களைக் கொண்டிருந்த ஒரு பள்ளம் பள்ளமான தட்டத்துடன் ஒரு பையன் இடைநாழியைக் கடந்து வந்தான்: ஒரு துண்டு யுக்கா கிழங்குடன் எலும்பு வேகவைத்தச் சாறு, வெள்ளைச் சோறு, வெங்காயம் இன்றிச் சமைக்கப்பட்ட இறைச்சி, வாழைப்பழ பொறியல் அல்லது ஒரு வட்டமான சோள நெய்யப்பம், அப்புறம் பலிபீடத்தின் சமயமுறை சடங்குப் பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் ஒருபோதும் சுவைக்காத ஒரு சில அவரைகளையும்.

துறவி அமர்ந்திருந்த நாற்காலிக்கு அடுத்துத் தட்டத்தைப் பையன் வைத்தான், ஆனால் துறவி இடைநாழியில் இனிமேலும் காலடியோசைகளைக் கேட்காதவரையிலும் தனது கண்களைத் திறக்கவில்லை.

ஆகையால், நகரத்தில் அவர்கள் நினைத்தார்கள் தந்தை தனது உச்சிவேளை உறக்கத்தை மதிய உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார் (மிகவும் முட்டாள்தனமாகத் தோன்றிய ஒரு விஷயம்) என்று இரவிலும் கூட அவர் சாதாரணமாக உறங்குவதில்லை என்பது உண்மையானது என்று இருக்கும்போது.

அந்தக் காலவாக்கில் தான் அவரது பழக்கங்கள் மிகவும் குறைந்த அளவு சிக்கலுடைவையாக ஆனது, கிட்டத்தட்ட பழங்குடி நிலையில்.

தனது கித்தான் நாற்காலியிலிருந்து அசையாமலேயே மதிய உணவுஅருந்தினார், தட்டத்திலிருந்து உணவை எடுக்காமலேயே, பதார்த்தங்களையோ அல்லது முட்கரண்டியையோ அல்லது கத்தியையோ பயன்படுத்தாமல், ஆனால் அவர் தனது சூப்பைக் குடித்த அதே கரண்டியை வைத்து, பின்னர் அவர் எழுவார், கொஞ்ச தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொள்வார், மிகப்பெரிய சதுர ஒட்டுக்களால் புள்ளியிடப்பட்ட அவரது வெள்ளை குருமார் நீளங்கியை அணிந்து கொண்டு, அப்புறம் இருப்புப்பாதை நிலையத்திற்கு நகரின் மற்ற அனைவரும் உச்சிவேளை உறக்கத்திற்குச் சாய்ந்து கொண்டிருக்கும் மிகத் துல்லியமான வேளையில் செல்வார்.

பல மாதங்களாக இந்தப் பாதையில் அவர் சென்றுகொண்டிருக்கிறார், தீய ஆவி கடைசித் தடவை அவர் முன் தோன்றியபோது அவரே உண்டாக்கிய பிரார்த்தனையை முணுமுணுத்தபடி.

ஒரு சனிக்கிழமை - இறந்த பறவைகள் வீழ்வது தொடங்கிய ஒன்பது நாட்களுக்குப் பிறகு - பலி பீடத்தின் புனித சமய சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், ரெபெக்காவின் வீட்டின் நேர்முன்பாக, அவருடைய காலடியில் ஓர் இறந்துகொண்டிருக்கும் பறவை விழுந்தபோது இருப்புப்பாதை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.

உள்ளுணர்வின் ஒரு கணநேர அழற்பாய்ச்சல் அவரதுதலையில் வெடித்தது, அப்புறம் அவர் உணர்ந்தார் இந்தப் பறவையானது, மற்றவற்றிற்கு முரணாக, காப்பாற்றப்படலாம் என்று. அதனை அவர் தன் கரங்களில் ஏந்தி ரெபெக்காவின் கதவைத் தட்டினார் அவள் தனது உச்சிவேளை உறக்கத்தை உறங்குவதற்காகத் தனது இரவிக்கையை ஊக்கவிழ்த்துக் கொண்டிருந்தபோது.

அவளது படுக்கையறையில், விதவை தட்டப்படுவதைக் கேட்கவும் உள்ளுணர்வு சார்ந்து அவளது நோட்டத்தைத் திரைச்சீலைகளை நோக்கித் திருப்பவும் செய்தாள்.

இரண்டு நாட்களாக எந்தப் பறவையும் படுக்கையறைக்குள் வந்துவிட்டிருக்கவில்லை. ஆனால் திரைச்சீலையானது இன்னும் கிழிந்திருக்கிறது.

அவளைப் பதற்றத்துடனும் கவலையுடனும் வைத்திருந்த பறவைகளின் ஆக்கிரமிப்பு படையேற்றமானது தொடரும் வரை அவற்றைச் செப்பம் செய்வது வீணான செலவீனம் என்று அவள் கருதினாள்.

மின்சார விசிறியின் ரீங்காரத்திற்கு மேலாக, கதவு தட்டப்படுவதை அவள் கேட்கவும் தாழ்வாரத்தின் கோடியில் படுக்கையறையில் அர்ஹேனீதா உச்சிவேளை உறக்கத்தில் ஆழ்ந்திருப்பாள் என்பதைப் பொறுமையின்மையுடன் நினைவுகூரவும் செய்தாள்.

அந்த வேளையில் அவள்மீது வலிந்து சுமத்துவது யாராக இருக்கலாம் என்று வியப்படைவதற்கு அவளுக்குத் தோன்றக் கூட இல்லை.

அவளது இரவிக்கையின் ஊக்கை மீண்டும் மாட்டினாள்.

திரைசீலைக் கதவைத் தள்ளித் திறந்து, அப்புறம் இடைவழி தூரம் மொத்தம், விறைப்பாகவும் நேராகவும் நடந்து சென்று, பிறகு அறைகலன்களாலும் அலங்காரப் பொருட்களாலும் நெரிசலுற்றிருந்த வசிப்பறையைக் கடந்து அப்புறம், கதவைத் திறப்பதற்கு முன்னர், உலோக திரைச் சீலையின் வழியாக மிகுதியாகப் பேசாத தந்தை ஆந்தனி இசபெல் அவரது கண்களை மூடியவாறும் ஒரு பறவையைக் கைகளின் தாங்கியவாறும் நிற்பதைக் கண்டாள்.

அவள் கதவைத் திறப்பதற்கு முன்னால், அவர் கூறினார், ‘இதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரவும் பிறகு உண்பதற்குக் கொஞ்சம் தந்தோம் என்றால், இது நன்றாகும்.’ அப்புறம் அவள் கதவைத் திறந்தபோது, அச்சத்தினால் குலைந்து வீழ்வாள் என்று எண்ணினாள் ரெபெக்கா.

ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக அவர் அங்கே தங்கவில்லை.

சந்திப்பைச் சுருக்கியது தான்தான் என்றுநினைத்தாள் ரெபெக்கா. ஆனால் உண்மையில் துறவிதான் சுருக்கியது.

அந்தக் கணத்தில் அதனைப் பற்றி விதவை நினைத்துப் பார்த்திருந்தாள் என்றால், துறவி, நகரத்தில் அவர் வாழ்ந்துகொண்டிருந்த முப்பது வருடங்களில், அவளது வீட்டில் ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒருபோதும் செலவிட்டிருக்க வில்லை என்று உணர்ந்திருப்பாள்.

எத்தனை தூரம் என்றாலும், ஒவ்வொருவரும் அறிந்திருந்ததைப் போன்று அவள் மேற்றிராணியாருடன் சொந்த உறவாக இருந்தாள் என்ற போதிலும், வசிப்பறையின் அலங்காரங்களின் ஊதாரித்தனங்களுக்கிடையே வீட்டின் இல்லக்கிழத்தியின் பாலிணைவு விழையும் உள்ளுரு தன்னைத் தெளிவாகக் காட்டிக்கொண்டது என்றே  அவருக்குத் தோன்றியது.

மேலும், ரெபெக்காவின் குடும்பத்தைப் பற்றிய கட்டுக்கதை (அல்லது ஒரு கதை) இருந்தது, அது நிச்சயமாக, விதவையுடைய பெற்றோரின் உடன்பிறப்பின் சேயான குடும்ப ஈடுபாட்டில் அக்கறை காட்டாதவர் என்று அவள் கருதிய கர்னல் அவ்ரலியானோ புயெந்தியா, ஒருமுறை மேற்றிராணியானவர் இந்நகரத்திற்கு வந்திருக்காதது அவரது உறவுக்காரர்களைக் காண்பதைத் தவிர்ப்பதற்கு வேண்டித்தான் என்று ஆணையிட்டுக் கூறினார் என்ற விஷயம் இருந்த போதிலும், மேற்றிராணியாரின் மாளிகையை அது அடைந்திருக்கவில்லை என்று நினைத்தார் தந்தை.

விஷயம் என்னவாக இருந்த போதிலும், அது வரலாறாகவோ அல்லது கட்டுக்கதையாகவோ இருக்கட்டும், தெய்வபக்தியின் எந்த அறிகுறிகளையும் காட்டாமலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பைக் கோரவும் ஆனால் அவர் அவளது கணவனின் மரணத்தைப் பற்றிய புதிரைப் பற்றிக் கட்டாயப்படுத்த முயன்றபோது தட்டிக்கழிப்பதான விடைகளை மட்டுமே எப்பொழுதும் பதிலளித்த அதன் ஒரேயொரு குடியிருப்பாளினியின், இந்த வீட்டில் பலிபீடத்தின் புனித சமயமுறை சடங்கைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் சௌகரியமாக உணரவில்லை.  இறந்துகொண்டிருக்கும் பறவையைக் குளிப்பாட்டுவதற்காக ஒரு கிளாஸ் தண்ணீரை அவருக்குக் அவள் கொண்டு வருவதற்காக அவர் காத்துக்கொண்டு, அவர் அங்கே இருந்தார் என்றால், அவருக்குப் பொறுப்பில்லாத ஒரு தற்செயலான நிகழ்வின் விளைவாகத்தான் இருந்தது அது.

விதவை திரும்பி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, துறவி, ஆடம்பரமான செதுக்கப்பட்ட மர ஆடுநாற்காலி ஒன்றில் இருந்துகொண்டு, இருபது வருடங்களுக்கு அதிகம் முன்பாக, ஒரு கைத்துப்பாக்கி வேட்டு ஒலிக்கவும், அப்புறம் கர்னலின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானும் அவரது சொந்த மனைவியின் ஒன்று விட்ட உடன்பிறந்தானும் ஆன ஹோசே அர்காதியோ புயெந்தியா, அவன் அப்போதுதான் கழற்றியிருந்த இன்னும் கதகதப்பாக இருந்த கால்சராயில் இருந்த கொளுவிகள் மற்றும் குதிமுள்களின் கலகலப்பிற்கு இடையே தலைக் குப்புற விழுந்த காலம் தொட்டு அமைதியாக இருந்திராத அந்த வீட்டின் வினோதமான ஈரப்பதத்தை உணர்ந்தார்.

வசிப்பறைக்குள் ரெபெக்கா மீண்டும் பாய்ந்து வந்தபோது, அவளை அச்சுறுத்திய தெளிவற்ற தன்மையின் வாடையுடன் ஆடுநாற்காலியில் தந்தை ஆந்தனி இசபெல் அமர்ந்திருப்பதை அவள் கண்டாள்.

“விலங்கொன்றின் வாழ்வானது, ஒரு மனிதனுடையதைப் போன்றே அத்தனை நேசமிக்கது நமது கர்த்தாவுக்கு” என்றார் தந்தை.

அவர் சொன்னது போல, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவை நினைவு கூர்ந்திருக்கவில்லை. விதவையும்கூட அவனை நினைவு கூர்ந்திருக்கவில்லை. திருக்கோயில் சமய உரை மேடையிலிருந்து மூன்று முறை தீய ஆவிகள் அவர் முன் தோன்றியதை பேசியது முதற்கொண்டு தந்தையின் வார்த்தைகளுக்கு எந்த நம்பகத்தன்மையையும் அளிக்காமல் இருப்பதையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவருக்குக் கவனத்தைச் செலுத்தாமலேயே அவள் பறவையைத் தனது கையில் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் அதனை முக்கவும், அதற்குப் பிறகு அதனைக் குலுக்கவும் செய்தாள்.

அவளது செய்யும் முறையில் பணிவடக்கமின்மையும் கவனக்குறைவும் இருந்ததைத் தந்தை கவனித்தார், விலங்கதன் வாழ்வின் பாலான ஒரு முழுமுற்றான சலுகையின்மை.

“பறவைகளை உனக்குப் பிடிக்காதா” என்றார் மென்மையாக ஆனால் அழுத்தத்துடன்.

பொறுமையின்மை மற்றும் பகைமையின் குறிப்புணர்த்தும் விதமாகத் தனது கண்ணிமைகளை உயர்த்தினாள் விதவை.

“நான் அவற்றை ஒருபோது விரும்பி னேன் என்றாலும், நமது வீடுகளுக்கு உள்ளே இறக்கத் தொடங்கியதனால் தற்போது அவற்றை நான் வெறுக்கிறேன்.”

“பல இறந்துவிட்டிருக்கின்றன” என்று விட்டுக் கொடுக்காதவாறு கூறினார்.

அவரது குரலின் தொனியில் ஒரு மிகப்பெரும் புத்திசாலித்தனம் இருந்ததாக ஒருவருக்கு நினைக்க முடியும்.

“அவை எல்லாம்” என்றாள் விதவை. விலங்கதனை வெறுப்பினால் பிழிந்து அதனை ஒரு தட்டில் வைத்தபோது, “அப்புறம் அவை எனது திரைச் சீலைகளைக் கிழித்துவிட்டிருக்கவில்லை என்றாலும்கூட அது என்னைத் தொந்தரவு செய்து இருக்காது” என்று அவள் சேர்த்துக் கூறினாள்.

இதயத்தின் இத்தகைய கடுந்தன்மையை அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றே அவருக்கு தோன்றியது அப்புறம்.

ஒரு கணம் கழிந்து, சின்னஞ்சிறியதும் தற்காப்பற்றதுமான உடலைத் தனது சொந்தக் கரத்தில் தாங்கியவாறு, அது சுவாசிப்பதை நிறுத்திவிட்டிருப்பதாக உணர்ந்தார் துறவி. அப்புறம் அவர் அனைத்தையும் மறக்கவும் - வீட்டின் ஈரப்பதத்தை, மட்டுமீறிய சிற்றின்ப வேட்கையை, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவின் உடலின் மீதான வெடிமருந்தின் தாங்கவொண்ணா நெடியை - அந்த வாரத்தின் தொடக்கம் தொட்டு அவரைச் சூழ்ந்திருந்த அதிசயமான உண்மையை உணர்ந்தார்.

அங்கே, ஓர் அல்லற்படும் முகபாவத்துடனும் தனதுகரங்களில் இறந்த பறவையுடனும் அவர் வீட்டை நீங்கிச் செல்வதை விதவை கவனித்தபோது, நகரத்தின் மீது வீழ்ந்துகொண்டிருந்த இறந்த பறவைகளின் மழையானதின் ஓர் அற்புதகரமான வெளிப்பாட்டை அவர் கண்டுணர்ந்தார், அப்புறம் அவர், கடவுளின் செயற்பணியாளரானவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அது மிகவெப்பமாக இல்லாதபோது மகிழ்ச்சியை அறிந்திருந்தவர், இறுதி அழிவைப்பற்றிய திருவெளிப்பாட்டை முற்றாக மறந்து விட்டிருந்தார்.

எப்பொழுதையும் போலவே, அவர் நிலையத்திற்குச் சென்றார், ஆனால் அவரது செயல்பாடுகளைப் பற்றி முழுவதுமாக அவர் அறிந்திருக்கவில்லை.

உலகில் ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று துல்லியமற்ற வகையில் அறிந்திருந்தார், ஆனால் குழப்பமுற்றதாக உணர்ந்தார், பேச்சற்றுப் போனார், அந்தக் கணத்திற்கு ஒவ்வாதவராக ஆனார்.

நிலையத்தில் நீளிருக்கையில் அமர்ந்தவாறு, இறுதி அழிவைப் பற்றிய திருவெளிப்பாட்டில் இறந்தப்பறவைகளின் மழையைப் பற்றி ஏதாவது இருந்ததா என்று நினைவுகூர முயன்றார், ஆனால் அவர் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார்.

திடீரென்று ரெபெக்காவின் வீட்டில் ஏற்பட்ட தாமதமானது அவருக்கு இரயிலைத் தவறவிட வைத்தது என்று எண்ணினார், அப்புறம் அவரது தலையைப் புழுதியாகவும் உடைந்தும் இருந்த கண்ணாடிக்கு மேலாக நீட்டவும் பயணச்சீட்டு அலுவலகத்திலுள்ள கடிகாரத்தில் அது ஒரு மணி ஆவதற்கு இன்னமும் பன்னிரெண்டு நிமிடங்கள் இருந்தது என்பதைக்காணவும் செய்தார்.

நீளிருக்கைக்குத் திரும்பியபோது, அவர் மூச்சுத் திணறிக் கொண்டிருந்ததாக உணர்ந்தார். அந்தக் கணத்தில் அது சனிக்கிழமையாக இருந்தது என்று நினைவுகூர்ந்தார்.

அவரது பின்னல் கைவிசிறியை சிறிதுநேரம் ஆட்டினார், அவரது உள்வயமான மூடாக்கில் தொலைந்துபோனார்.

அப்புறம் அவர் அவரது நீளங்கியில் இருந்த பித்தான்களின் மேலும் தனது பூட்சுகளின் மேலுள்ள பித்தான்களிலும் அவரது நீண்ட, ஒயிலான, துறவியின் காற்சட்டைகளிலும் தனது விரல்களைக் கொண்டு உராய்ந்தார், அப்புறம் அவரது வாழ்வில் இத்தனை சூடாக அவர் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்பதை எச்சரிக்கையுடன் கவனித்தார்.

நீளிருக்கையிலிருந்து நகராமலேயே அவரது நீளங்கியின் கழுத்துப்பட்டையின் பித்தான்களைக் கழற்றினார், அப்புறம் தனது சட்டைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து, அப்புறம் வெளிச்சம் பாய்ச்சிய உணர்ச்சிக் கனிவின் ஒரு கணத்தில், அவர் ஒருவேளை ஒரு நிலநடுக்கம் வந்துகொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம் என்று எண்ணியவாறு, வெப்பத்தினால் கன்றியிருந்த தனது முகத்தைத் துடைத்தார்.

அவர் அதை எங்கேயோ வாசித்திருந்தார். இருந்தபோதிலும் வானம் தெளிந்து இருந்தது:

பறவைகள் அனைத்தும் கண்காணாது போயிருந்த தெள்ளத் தெளிந்த நீலவானம். நிறத்தையும் தெள்ளத் தெளிந்த தன்மையையும் அவர் கவனித்தார், ஆனால் ஒரு கணத்திற்கு இறந்த பறவைகளை மறந்திருந்தார்.

இப்பொழுது அவர் வேறு எதைப் பற்றியோ நினைத்துக்கொண்டிருந்தார்,

ஒரு புயல் வரப்போகும் சாத்தியத்தைப் பற்றி. இருந்தபோதிலும் வானமானது மெல்லியதாகவும் சாந்தமிக்கதாகவும் இருந்தது, அவர் ஒருபோதும் சூட்டை உணர்ந்திராத, வேறு ஏதோ நகரத்தின் மீதிருக்கும் வானம் அது என்பதைப் போன்று, தொலைவானதாகவும் வேறுபட்டதாகவும், அப்புறம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது, தனது அல்லாத வேறு எவருடையதோ கண்கள் என்பதைப் போன்று.

அப்புறம் அவர் வடக்குத் திசையில், பனையோலைகள் மற்றும் துருப்பிடித்தத் துத்தநாகத்தின் கூறைகளுக்கும் மேலாக நோக்கவும், மெதுவான, நிசப்தமான, பருந்துகளின் ஓசையொழுக்கான கொத்தைகளை மடுவிற்கு மேலாகப் பார்க்கவும் செய்தார்.

புதிரான சில காரணத்துக்காக, அவர் குருமடப்பள்ளியில், தனது சிறு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்குச் சற்றைக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று உள்ளத்தில் உணர்ந்த மனக்கிளர்ச்சிகளை அந்தக் கணத்தில் மீண்டும் நினைத்துப் பார்த்தார்.

தனது தனிப்பட்ட நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊர் வட்டகை குரு இவருக்கு அனுமதி கொடுத்திருக்கவும், பழம் மரக்கட்டையின் மணம் வீசும், ஊர் வட்டகைக் குருவின் கோணலான சின்னஞ்சிறு கிறுக்கலால் உரைவிளக்கம் எழுதப்பட்டிருந்த மஞ்சளேறிய புத்தகங்களை வாசிப்பதில் ஈர்ப்புற்ற வாறு இவர் மணிநேரங்களாக அங்கே வழக்கமாகத் தங்கிவிடுவார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒருநாள் முழுவதும் அவர் வாசித்ததற்குப் பிறகு, அவர்வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வெளிப்படையாக விழுந்து கிடந்த ஓர் அட்டையை எடுப்பதற்காக, ஊர் வட்டகைக் குருவானவர் அறைக்குள் நுழைந்து அவசரம் காட்டி, அதிர்ச்சியடைந்தார்.

அவரது திருமட முதல்வரின் குழப்பத்தை மிக எச்சரிக்கையான மெத்தனத்துடன் அவர் கவனித்தார் என்றாலும், அந்த அட்டையை அவருக்கு வாசிப்பதற்கு இயன்றது. ஓரேயொரு வாக்கியம் மட்டுமே அதில் இருந்தது, ஊதா மையில் எழுதப்பட்டிருந்த ஒரு தெளிவான, நேரான கையெழுத்தில்: “திருவாட்டி இவெத்தே இன்றிரவு இறந்தாள்.” ஓர் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கழிந்து, மறக்கப்பட்டிருந்த ஒரு நகரத்தின் மீதாகப் பருந்துகளின் கொத்தை ஒன்று பறப்பதைக் கண்டவாறு, மேசையின் முன்பாக ஊதா நிறத்தில், விளங்கிக்கொள்ள முடியாத வகையில் வேகவேகமான மூச்சிரைப்புடன், தன்முன் அமர்ந்திருந்த ஊர்வட்டகைக் குருவின் துயரம் நிரம்பிய முகவுணர்ச்சியை அவர் நினைவுகூர்ந்தார். அந்தக் கருத்துத் தொடர்பினால் உலுக்கப்பட்டவாறு, அதற்கு அப்புறம் அவர் உஷ்ணத்தை உணரவில்லை, ஆனால் இன்னுஞ்சரியாகச் சொல்வதென்றால் மிகச்சரியான எதிரிடையான, பனிக்கட்டியின் தேள்கொட்டலை தனது அடிவயிற்றிலும் தனது காலின் பாதங்களிலும் உணர்ந்தார்.

அந்தப் பேரச்சத்தின் மிகத்துல்லியமான காரணம் என்ன என்பதைப் பற்றி அறியாமலேயே அவர் அச்சமுற்றார், பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், அந்த நிகழ்வுக்குப் பாராமுகம் காட்டி, அப்போது அவர் இருந்தபோது, குழப்பமிக்கக் கருத்துகளின் ஒரு வலையில் சிக்கி, அவைகளுக்கிடையில், சகதியில் சிக்கிக்கொண்ட சாத்தானின் குளம்பிலிருந்து, உலகின் மேல் விழும் இறந்த பறவைகளின் ஒரு திரளிலிருந்து, ஒரு குமட்டும் உளப்பாட்டை வேறுபடுத்திக் கொள்வதற்கு இயலாததாக இருந்தது.

அப்புறம் அவர் நிமிர்ந்து இருந்தார், வெறுமையில் தொலைந்துபோன ஒரு வாழ்த்துதலைத் தொடங்குவதுபோல, வியப்பார்வத்தில் ஒரு கையை உயர்த்தி, அப்புறம் பேரச்சத்தில், “அலைந்துதிரியும் யூதன்” என்று கூக்குரலிட்டார்.

அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. பலவருடங்களில் முதன்முறையாக அவர் அதைக்கேட்கவில்லை.

புகையின் ஒர் அடர்த்தியான மேகத்தினால் சூழப்பட்டு, நிலையத்திற்குள் இழுக்கப்பட்டுக்கொண்டு வருவதை அவர் கண்டார், அப்புறம்துருப்பிடித்தத் துத்தநாகத் தகடுகளுக்கு மேலாகத் தணல் கரிக்கங்குகளின் மழை சொரிவதையும் கண்டார்.

ஆனால் நான்கு மணிக்கு சிறிதுநேரம்கழிந்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வழங்கப் போகும் உளத்தைப் பதியவைக்கும் பிரசங்கத்தின் இறுதி வடிவங்களை வடித்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பிற்பகல் நேரம்வரைக்கும் அந்தத் தொலைவானதும் விளங்கிக்கொள்ளமுடியாததுமான கனவிலிருந்து அவர் முற்றாக விழித்தெழுந்திருக்கவில்லை.

எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு, பெண் ஒருத்திக்கு கடைசி யான திருமுழுக்காட்டு கொடுக்கப்படுவதற்காக அவர் அழைக்கப்பட்டார்.

அதன் விளைவாக இரயிலில் அந்தப் பிற்பகலில்யார் வந்து சேர்ந்தது என்பதைத் தந்தைக்கு அறியஇயலாமல் போனது.

நீண்ட காலமாகவே இற்றுப் போய் விழும் நிலையில் இருப்பதும் வண்ணமற்றதுமான நான்கு இரயில்பெட்டிகள் கடந்து செல்வதைக்கவனித்தவாறு இருந்தார், அப்புறம் எவரொருவரும் தங்குவதற்காக இறங்கி வருவதை அவருக்கு நினைவுகூர முடியாமல் இருந்தது, குறைந்தபட்சம் சமீபத்தையவருடங்களில்.

முன்பு அது வேறுமாதிரியாக இருந்தது, ஒரு முழுப் பிற்பகலிலும் வாழைப் பழத் தார்கள் ஏற்றப்பட்ட இரயில் கடந்து செல்வதை அவர் காண்பதற்குச் செலவிட முடிந்தபோது; பழக்குலைகள் ஏற்றப்பட்ட ஒரு நூற்று நாற்பது இரயில் பெட்டிகள், இரவு நன்கு கவியும் வரைக்கும், ஒரு பச்சை இலாந்தர் விளக்கை ஆட்டும் மனிதன் இருந்த கடைசிப் பெட்டி கடந்து செல்லும் வரை, முடிவற்று கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

அப்புறம் அவர் இருப்புப்பாதையின் மறுபக்கத்திலிருந்த நகரத்தைக் கண்டார் - விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன இப்போது - அப்புறம் அவருக்குத் தோன்றியது, வெறுமே இரயில் கடப்பதைக் கண்டுகொண்டிருப்பதானது, வேறொரு நகரத்திற்கு அவரைக் கொண்டுசென்றதைப் போல ஆனது.

ஒருவேளை அதிலிருந்து வந்ததாக இருக்கலாம் ஒவ்வொரு நாளும் நிலையத்திற்கு அவர் வந்து இருப்பதான வழக்கம், அவர்கள் தொழிலாளர்களைச் சுட்டுக்கொல்லவும் வாழைப்பழத் தோட்டங்கள் அனைத்தும் அழிந்ததற்குப் பிறகும் கூட, அப்புறம் அதனுடன் அந்த நூற்றி நாற்பது இரயில் பெட்டிகளும் தீர்க்கப்பட்டன, அப்புறம் எஞ்சவிடப் பட்டது எவரொருவரையும் அழைத்துவரவோ எவரொருவரையும் அழைத்துச் செல்லவோ செய்யாத அந்த மஞ்சளேறிய, புழுதிபடிந்த இரயில் மட்டுமே.

ஆனாலும் அந்தச் சனிக்கிழமை எவரோவொருவர் வரத்தான் செய்தார்.

பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல்நிலையத்தை விட்டுச் சென்றபோது, தனது பசியை அல்லாத வேறு எதையும் பற்றிக் குறிப்பிடத்தகுந்ததாக இல்லாத அமைதியான பையன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் தொட்டு தான் உணவு ஏதும் உண்டிருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தபோதுதான் கடைசிப் பெட்டியிலிருந்து துறவியைக்கண்டான்.

துறவி ஒருவர் இருந்தார் என்றால், விடுதி ஒன்றும் இருந்தாகவேண்டும் என்று, அவன் எண்ணினான். அப்புறம் அவன் இரயிலிலிருந்து இறங்கி, உலோகம் போன்ற ஆகஸ்டுச் சூரியனால் கொப்புளமாகக் கொதித்துக் கிடந்த தெருவைக் கடந்து, அப்புறம் தேய்ந்துபோன கிராமபோனின் ஒலி வந்த நிலையத்தின் எதிரில் அமைந்திருந்த ஒரு வீட்டின் குளிர் நிழலுக்குள் நுழைந்தான்.

இருதினங்களின் பட்டினியால் கூர்மையாக்கப்பட்ட, அவனது நுகர்வுணர்வு, அது ஒரு விடுதிதான் என்று அவனிடம் கூறியது.

அப்புறம் அவன் தன் வாழ்நாளில் ஒருபோதும் படிக்கவே போகாததான ஓர் அடையாளமான, ‘ஹோட்டல் மக்காந்தோ’ என்ற அடையாளத்தைக் காணாமலேயே அதற்குள் சென்றான்.

அதன் உடைமையாளினி ஐந்து மாதங்களுக்கும் கூடுதலான கர்ப்பத்துடன் இருந்தாள்.

அவள் கடுகின் நிறத்தில் இருக்கவும், அவளது தாய் அவளைக் கர்ப்பமாகக் கொண்டிருந்த அதே போன்று மிகச்சரியாகவும் காணப்பட்டாள் (என்ன ஒரு கண்றாவியான மொழி பெயர்ப்பு).

அவன் உத்தரவிட்டான், “மதிய உணவு, உங்களால் இயன்ற அத்தனை சீக்கிரம்” அப்புறம் அவள், அவசரப்படுவதற்கு முயலாமல், வெறும் எலும்புடைய ஒரு சூப்பினையும் அதனுள் கொஞ்சம் வாழைக்காயையும் நறுக்கி இட்டுக்கொடுத்தாள்.

அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. சூப்பின் வெம்மையிலும் ஆரோக்கியமான ஆவியாலும் ஈர்க்கப்பட்டு, அவனுக்கும் நிலையத்திற்குமிடையில் கிடக்கும் தொலைவைக் கணக்கிட்டான், அப்புறம் தவறவிடும் ஒரு இரயில் விளைவிக்கும் பீதியின் குழப்பமான அந்த உணர்வுநிலை தன்னை ஆக்கிரமித்தது என்று உடனடியாக உணர்ந்தான்.

அவன் ஓடுவதற்கு முயன்றான்.

அவன் கதவை அடைந்தான், கடுவேதனையில், இரயிலைப் பிடிப்பதற்குத் தனக்கு நேரமில்லை என்று அவன் உணர்ந்தபோது வாயிற்படிக்கு அப்பால் அவன் ஒரு காலைக் கூட எடுத்து வைத்திருக்கவில்லை.

அவன் மேசைக்குத் திரும்பியபோது, தனது பசியை மறந்துவிட்டிருந்தான்; கிராமபோனுக்கு அடுத்து இருந்த பெண், தனது வாலை ஆட்டும் ஒரு நாயின் பயங்கரமான முகவுணர்வுடன் தன்னை இரக்கத்துடன் நோக்குவதை அவன் கண்டான்.

அப்புறம், அந்த முழுநாளில் முதன்முறையாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனது அம்மா அவனுக்குக் கொடுத்திருந்த அவனது தொப்பியைக் கழற்றினான், அப்புறம் அவன் உண்பதை முடிக்கும்போது அதனைத் தனது முழங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டான்.

அவன் மேசையிலிருந்து எழுந்தபோது, தவறி விட்ட இரயிலினாலோ, அல்லது அதன் பெயரைக் கண்டுபிடிப்பதற்கான சிரமத்தை மேற்கொள்ளாமல் அவன் இருந்த அந்நகரத்தில் வாரக்கடைசியைச் செலவழிக்கும் வாய்ப்பு பற்றியோ அவன் சஞ்சலம் அடைந்ததைப் போன்று தோன்றவில்லை.

அவனதுமுதுகின் எலும்புகள் ஒரு கடினமான, நேரான நாற்காலியினால் தாங்கப்பட்டு அறையின் ஒரு மூலையில் அவன் அமர்ந்தான், அப்புறம் நீண்ட நேரத்திற்கு அங்கே அமர்ந்திருந்தான், ரெக்கார்டு இசைக்குச் செவி கொடுக்காமல் அவற்றை எடுத்துக் கொண்டிருந்த பெண்:

“தாழ்வாரத்தில் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்” என்று அவனிடம் கூறும் வரை.

நோவுற்றதாக உணர்ந்தான் அவன். அந்நியர்களுடன் உரையாடலைத் துவக்குதற்கு ஒரு முயற்சி தேவைப்பட்டது.

ஆட்களை அவர்களின் முகத்தில் நோக்கு வதற்கு அவன் அச்சமடைந்தான், அப்புறம் அவனுக்கு பேசுவதை அல்லாத வேறு வழி இல்லாததனால், அவன் நினைத்ததைக் காட்டிலும் வேறுபட்டவகையில் சொற்கள் வெளிவந்தன. “ஆம்” என்று அவன் பதிலளித்தான்.

அப்புறம் அவன் ஒரு லேசான நடுக்கத்தை உணர்ந்தான். நாற்காலியில் ஆடுவதற்கு முயன்றான், அவன் ஓர் ஆடுநாற்காலியில் அமர்ந்திருக்கவில்லை என்பதை மறந்தவாறு.

“இங்கே வரும் ஆட்கள் தாழ்வாரத்திற்கு ஒரு நாற்காலியை இழுத்துச் செல்வார்கள் அங்கே குளிர்ச்சியாக இருப்பதால்” என்று சிறுமி கூறினாள்.

அப்புறம், அவளைக் கவனித்தவாறு, அவள் பேசுவதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள் என்று அவன் உணர்ந்தான்.

அவள் கிராமபோனைச் சுற்றிக்கொண்டிருந்ததால் அவளை முயன்று ஒரு நோட்டம் விட்டான்.

அவள் அங்கே பல மாதங்களாக அமர்ந்துகொண்டிருப்பதைப் போன்று தோன்றியது, வருடங்களாக இருக்கலாம் ஒருவேளை, அப்புறம் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்வதற்கு அவள் கிஞ்சித்து ஆர்வத்தையும் காட்டவில்லை.

அவள் கிராமபோனைச் சுற்றிக் கொண்டிருந்தாள் ஆனால் அவளது வாழ்வு அவனில் குவிந்திருந்தது. அவள் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

“நன்றி உங்களுக்கு” என்றான்  அவன், எழுவதற்கும் அவனது அசைவுகளில் கொஞ்சம் சௌகரியத்தையும் யதேச்சைத் தன்மையையும் கொடுப்பதற்கு முயன்றவாறு.

அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதில் இருந்து அந்தச் சிறுமி விலகவில்லை.

“அவர்கள் அவர்தம் தொப்பிகளைக் கொக்கிகளில் விட்டுச் செல்லவும் கூடச் செய்வார்கள்” என்று அவள் கூறினாள்.

இந்த முறை அவனது செவிகளில் ஓர் எரிச்சலை உணர்ந்தான். அவன் நடுங்கினான், விஷயங்களைப் பரிந்துரைக்கும் அவளது வழிமுறையைப் பற்றிஎண்ணியவாறு.

அசௌகரியமாக அடைபட்டுக் கொண்டு விட்டதைப்போன்று அவன் உணர்ந்தான், அப்புறம் தவறவிடப்பட்ட இரயிலைப் பற்றியபீதியை மீண்டும் உணர்ந்தான். ஆனால் அந்தக் கணத்தில் உடமையாளினி அறைக்குள் நுழைந்தான்.

“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் வினவினாள்.

“அவர்கள் எல்லாம் செய்வதைப் போன்றே, தாழ்வாரத்திற்கு அவர் ஒரு நாற்காலியை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்” என்று கூறினாள் சிறுமி.

அவளது வார்த்தைகளில் ஓர் ஏளனத்தின் தொனியை அவன் கண்டுகொண்டதாக எண்ணினான்.

“கவலை வேண்டாம்” என்றாள் உடைமையாளினி. “நான் உங்களுக்கு ஒரு ஸ்டூலினைக் கொண்டு வருகிறேன்.”

சிறுமி சிரிக்கவும் அவன் மனவுறுதி குலைந்ததாக உணர்ந்தான். அது உஷ்ணமாக இருந்தது.

ஒரு முறிவுபடாத, வறண்ட வெப்பம், அப்புறம் அவன் வியர்த்துக் கொண்டிருந்தான். உடமையாளினி தோல் இருக்கையுடன் இருந்த ஒரு மரஸ்டூலை தாழ்வாரத்திற்கு இழுத்து வந்தாள்.

சிறுமி மீண்டும் பேசத் தொடங்கும்போது அவளைப் பின்தொடர இருந்தான் அவன்.

“இதில் மோசமான விஷயம் என்னவென்றால் பறவைகள் இவரை அச்சுறுத்தும்” என்று கூறினாள்.

சிறுமியின் மீது உடைமையாளினி தனது கண்களைத் திருப்பியபோது உண்டான கடுத்தப் பார்வையை அவருக்குக் காண முடிந்தது.

அது ஒரு விரைவானதும் ஆனால் தீவிரமானதுமான பார்வையாக இருந்தது.

“நீ செய்யவேண்டியது அமைதியாக இருப்பதுதான்” என்று அவள் கூறினாள், அப்புறம் அவனை நோக்கி புன்னகையைத் திருப்பினாள்.

அப்புறம் அவனது தனிமை குறைந்ததைப் போன்று உணரவும் பேசுவதற்கான தூண்டுதலை பெறவும் செய்தான்.

‘அவள் கூறியதுதான் என்ன?’ என்று வினவினான்.

“அதாவது பகலின் இந்த வேளையில் தாழ்வாரத்தில் இறந்த பறவைகள் விழும்” என்று சிறுமி கூறினாள்.

“அவை அவளுடைய வெறும் எண்ணப்போக்குகள் மட்டுமே” என்றாள் உடைமையாளினி. அறைநடுவில் சிறுமேசையின் மீதிருந்த செயற்கை மலர்களின் ஒரு பூங்கொத்தை நேர்செய்வதற்காக அவள் குனிந்தாள்.

அவளது விரல்களில் பதட்டமான ஒரு வெட்டியிழுப்பு இருந்தது.

“எனது எண்ணப்போக்குகள், இல்லவே இல்லை” என்றாள் சிறுமி. “நீங்களே முந்தைய நாளுக்கு முன் தினம் அவற்றில் இரண்டை வாரி எடுத்தீர்கள். “

உடைமையாளினி அவளைக் கடுப்புடன் நோக்கினாள். சிறுமி ஒரு இரங்கத்தக்க முகபாவத்தை, அப்புறம் சந்தேகத்தின் இலேசான தடயம் கூட எஞ்சி இருக்காதவரைக்கும் அனைத்தையும் விளக்கும் வெளிப்படையான ஆர்வ வேட்கையையும் கொண்டு இருந்தாள்.

“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால், ஐயா, நேற்றைய முன் தினம் அவளைத் திகைக்க வைப்பதற்காகக் கூடத்தில் இரண்டு இறந்த பறவைகளைச் சில பையன்கள் வைத்தார்கள், அப்புறம் அவர்கள் கூறினார்கள் இறந்த பறவைகள் வானத்திலிருந்து வீழ்ந்துகொண்டிருந்ததாக.

சனங்கள் அவளிடம் சொல்லும் அனைத்தையும் அவள் விழுங்குகிறாள்.”

அவன் புன்னகைத்தான். விளக்கம் அவருக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது; அவன் தனது கைகளைத் தேய்த்துக் கொள்ளவும், அவனைக் கடும் மனவேதனையுடன் கவனித்துக்கொண்டிருந்த சிறுமியைக் காண்பதற்குத் திரும்பவும் செய்தான்.

கிராமபோன் இசைப்பதை நிறுத்திவிட்டிருந்தது. உடைமையாளினி வேறு அறைக்குச் சென்று விட்டிருந்தாள், அப்புறம் அவன் கூடத்தை நோக்கிச் சென்றபோது சிறுமி ஒரு தாழ்ந்த குரலில் வலியுறுத்தினாள்:

“அவை வீழ்வதை நான் பார்த்தேன். என்னை நம்புங்கள். எல்லோரும் அவற்றைக் கண்டார்கள்.”

அப்புறம் கிராமபோனுடனான அவளது பற்று தலையும், உடைமையாளினியின் கடுகடுப்பையும் அவன் புரிந்துகொண்டதாக நினைத்தான்.

“ஆம்” என்றான் அவன் பரிவிரக்கத்துடன். அதற்கு அப்புறம், கூடத்தை நோக்கி நகர்ந்தவாறு கூறினான்: ‘நானும் கூட அவற்றைக் கண்டிருக்கிறேன்.‘

வெளியே உஷ்ணம் குறைவாக இருந்தது, வாதுமை மரங்களின் நிழலில். கதவுச்சட்டத்திற்கு எதிராக ஸ்டூலைச் சாய்த்து வைத்துவிட்டு, தனது தலையைப் பின்னால் சாய்த்தான், அப்புறம் தனது அம்மாவைக் குறித்து நினைத்துப் பார்த்தான்: அவனது அம்மா, முற்றிலும் சோர்வுற்று, அவளது ஆடுநாற்காலியில், நீண்ட ஒரு விளக்குமாற்றை வைத்து கோழிகளை விரட்டியவாறு இருந்தாள், முதன் முறையாக அவன் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தபோது.

ஒரு வாரத்திற்கு முன்பு, கடைசி உள்நாட்டு யுத்தத்தின்போது ஒரு மழைகோர்த்த விடியலில் நாட்டுப்புற பள்ளிவீட்டின் மண்ணும் நாணற் புல்லினாலும் ஆன நான்கு சுவர்களுக்கிடையே அவன் உலகிற்கு வந்த நாள் முதல் அந்த ஜூன்மாத காலை நேரத்தில் அவனது இருபத்து இரண்டாம் பிறந்தநாளன்று அவனுடைய அம்மா அவனது ஹேம் மக்கில் அவனை அணுகி ஒரு வாழ்த்து அட்டை உள்ள ஒரு தொப்பியைக் கொடுத்தது வரை நீண்டிருந்த, தனது வாழ்வானது ஒரு மெல்லிழைவான நேர்சரடாகும் என்று நினைத்திருப்பான்: ‘எனது அன்பு மகனுக்கு, அவனது நாளில்.’

சமயங்களில் அவன்  தனது செயலின்மையின் துருப் பிடித்த நிலையை உதறிவிட்டு பள்ளிக்கூடத்திற்காக ஏங்கினான், கரும்பலகைக்கும் ஈக்களின் எச்சத்தால் நெறிந்துகொண்டும் இருந்த நாட்டின் வரைபடத்திற்கும், அப்புறம் குழந்தைகளின் பெயர்களில் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்த கோப்பைகளின் நீண்ட வரிசைக்காகவும் ஏங்கினான்.

அங்கே அத்தனை உஷ்ணமாக இருக்கவில்லை.  சாம்பல்நிறமான நீண்டகால்களை உடைய கோழிகள் கை கழுவும் நிலைச்சட்டத்திற்கு அடியில் முட்டைகள் இடுவதற்காகப் பள்ளிக்கூட அறைக்குள் நுழைந்த, அது ஒரு பசுமையான, சாந்தமிக்க நகரமாக இருந்தது.

அந்தக் காலத்தில் அவனது அம்மா ஒரு சோகமானவளும் சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய பெண்மணியாக இருந்தாள்.

காப்பித் தோட்டங்களின் ஊடாக அப்பொழுது சற்றைக்கு முன்பாக வந்த காற்றை உட்கொள்வதற்காக அவள் அந்தியில் அமரவும், ‘மனௌரெ தான் உலகத்தில் மிக அழகான நகரம்,’ என்று கூறவும் செய்வாள்.

‘நீ வளர்ந்தவனாக ஆகும் போது புரிந்துகொள்வாய்.’

ஆனால் அவன் எதையும் புரிந்துகொள்ளவில்லை. அவனது வயதைவைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே மிகவும் உயரமாகவும் சோம்பல் கொண்டுவரும் அந்தத்துடுக்குத்தனம் மற்றும் அசட்டையான உடல்நலத்தின் திடீர் பாய்ச்சலில், பதினைந்து வயதிலும் அவன் புரிந்துகொள்ளவில்லை.

அவனது இருபதாம் பிறந்த நாள் வரையிலும் வாழ்வானது அவனது ஹேமக்கில் கிடக்கும்போது செய்யும் ஒரு சில இடமாற்றங்களே என்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருந்திருக்கவில்லை.

ஆனால் இந்தச் சமயத்தில் அவனது அம்மா, கீல்வாதத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, பதினெட்டுவருடங்களாக அவள் பணியாற்றிய பள்ளியிலிருந்து விலகினாள், அதன் காரணமாக அவர்கள், பள்ளிக்கூட அறையில் கடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததைப் போன்ற சாம்பல்நிற கால்களை உடைய கோழிகளை அவர்கள் வளர்த்த, ஒரு மிகப்பெரிய உள்முற்றம் இருந்த இரண்டு - அறை வீட்டில் குடியேறினார்கள்.

கோழிகளைப் பேணுவதுதான் யதார்த்தத்துடனான அவனது முதன் தொடர்பாடலாக இருந்தது. அவனது அம்மா அவளது பணி ஓய்வினைக் குறித்தும் அதற்கு மனுக் கொடுப்பதை மேற்கொள்வதற்காக அவளது மகனை அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் எண்ணிய, ஜூலை மாதம் வரை அது மட்டும் ஒரேயொன்றாக இருந்தது.

ஆவணங்களைத் தயார் செய்வதற்காக ஒரு செயலூக்கமுள்ள வழியில் அவன் ஒத்துழைத்தான், அப்புறம் இன்னும் அவள் பணி ஓய்வு பெறும் அளவிற்கு வயதாகிவிட்டிருக்கவில்லை என்பதால் அவளுடைய தீக்கை சான்றிதழை ஆறு மாதங்கள் மாற்றுவதற்காக வட்டார சமயகுருவினை சம்மதிக்கச் செய்வதற்கான சாமர்த்தியத்தையும் கூடக்கொண்டிருந்தான்.

அவனது அம்மாவின் கல்வி கற்பிக்கும் அனுபவத்தை வழுவாமல் விவரித்த, அவனது இறுதியான வழிகாட்டல்களை வியாழக் கிழமை அன்று பெறவும், பன்னிரண்டு பெசோக்கள், மாற்றுவதற்கான ஓர் உடுப்பு, ஆவணங்களின் ஒரு கோப்பு மற்றும் அவனுக்கு ஒரு பன்றிப் பண்ணையைத் அமைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் அவனுக்குக் கட்டாயம் கொடுக்கும் ஒரு விஷயம் என்று அவன் விளங்கிக்கொண்டிருந்த, ‘பணி ஓய்வு’ என்ற வார்த்தையைப் பற்றிய முற்றிலும் வளர்ச்சியற்ற ஓர்எண்ணத்துடன் நகரத்திற்கான பயணத்தைத் தொடங்கினான்.

புழுக்கமான சூட்டினால் மந்தமாகி, விடுதித்  தாழ்வாரத்தில் லேசாக மயங்கியவாறு, அவனதுநிலைமையின் தீவிரத்தைப் பற்றிச் சிந்திப்பதை அவன் நிறுத்தவில்லை.

எதிர்பாரா இடையூறானது அடுத்து வரும் நாளில், இரயில் திரும்பிவரும்போது சரியாகிவிடும் என்று கருதிக்கொண்டான், ஆகையால் இப்பொழுது அவனது ஒரே கவலை ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருப்பதும் தாங்கவொண்ணா அளவுக்கு வெப்பத்துடன் இருந்த இந்த நகரத்தை என்றென்றைக்குமாக மறந்துவிடுவதும் ஆகும்.

நாலுமணிக்கு சிறிது நேரம் முன்பாக, மகிழ்ச்சியற்றதும் மந்தமானதுமான உறக்கத்தில் ஆழ்ந்தான், அவனது ஹேம்மக்கைக் கொண்டுவராதது ஓர் அவமானம் என்று உறங்கும்போது எண்ணியவாறு. அப்புறம்தான் அவன் அனைத்தையும் உணர்ந்தான், துணிகளின் மூட்டையையும் பணி ஓய்வுக்கான ஆவணங்களையும் இரயிலில் மறந்துவிட்டிருந்தான் என்பதை உணர்ந்தான்.

திடுக்கிடலுடன் விழித்தெழுந்தான், அச்சமுற்று, அவனது அம்மாவைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தான், அப்புறம் பீதியினால் மீண்டும் நெரிக்கப்பட்டான்.

அவனது இருக்கையைத் திரும்பி உணவறைக்குஇழுத்து வந்தபோது, நகரத்தில் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டிருந்தன.

அவன் ஒருபோதும் மின்சார விளக்குகளைக் கண்டிருக்கவில்லை, ஆகையால் விடுதியின் புள்ளிகள் நிறைந்த எளியகுமிழ் விளக்குகளை கண்டபோது மிகவும் ஈர்ப்புக்கு உள்ளானான்.

அவனது அம்மா அவற்றைப்பற்றி அவனிடம் பேசியிருந்தாள் என்பதைப் பிறகுஅவன் நினைவுகூர்ந்தான், அப்புறம் துப்பாக்கிக் குண்டுகளைப் போன்று கண்ணாடிகளின் மீதுமோதிக்கொண்டிருந்த பெரிய ஈக்களைத் தட்டிவிடு வதற்கு முயன்றவாறு, உணவறையை நோக்கி இருக்கையை இழுப்பதைத் தொடர்ந்தான்.

அவனது நிலைமையின் தெளிவான அத்தாட்சியினால் குழம்பியவாறு, கடுமையான வெப்பத்தில், அவனதுவாழ்வில் முதன்முறையாக அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் தனிமையின் கொடுமையினால், பசியின்றியே உணவு கழித்தான்.

ஒன்பது மணிக்குப்பிறகு வீட்டின் பின்புறம் உள்ள, செய்தித் தாள்களினாலும் சஞ்சிகைகளினாலும் ஒட்டப்பட்டுஇருந்த ஒரு மரத்தாலான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

நள்ளிரவில், ஐந்து கட்டிடத் தொகுதிகளுக்கு அப்புறம், பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், தனது கட்டிலில் முகங்குப்புற படுத்தவாறு, காலை ஏழு மணிக்கு அவர் தயாராக்கியிருந்த திருச்சபை பிரசங்கத்தைச் சாயுங்காலத்தின் அனுபவங்கள் வலிமையூட்டின என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவன் ஒரு நச்சாவி கிளம்பும் மற்றும் சுரம் பிடித்ததுமான உறக்கத்தில் முழ்கியிருந்தான்.

பன்னிரண்டு மணிக்குசிறிது முன்பாக அவர் பெண் ஒருத்திக்கு ஒரு கடைசியான திருமுழுக்காட்டு செய்வதற்காக நகரத்தைக் கடந்து சென்றிருந்தார், அப்புறம் அவர் கிளர்வுற்றதாகவும் பதற்றமாகவும் உணர்ந்தார், அதன் விளைவாக அவரது கட்டிலின் அடுத்ததாகப் புனித பலிபூசைக்குரிய சாதனங்களை வைக்கவும் தனது திருச்சபை பிரசங்கத்தை நிகழ்த்தச் செல்வதற்காகப் படுத்துக் கிடக்கவும் செய்தார்.

பல மணிநேரங்களுக்கு அவர் அவ்வாறே இருந்தார், விடியலில் ஓர் உப்புக்கொத்திப் பறவையின் தொலைதூர அழைப்பை அவர் கேட்கும் வரையிலும் கட்டிலில் முகங்குப்புற கிடந்தார்.

அப்புறம் அவர் எழுவதற்கு முயன்றார், வலிமிகுந்து எழுந்து அமர்ந்தார், சிறுமணியின் மேல் மிதித்தார், அப்புறம் அவரது அறையின் குளிர்ந்த, கடினமான தரையில் தலைகுப்புற விழுந்தார்.

அவரது பக்கவாட்டில் எழுந்த ஒரு நடுக்கத்தை அவர் உணர்ந்தபோது அவர் சுயநினைவை மீண்டும் பெற்றிருக்கவில்லை.

அந்தக் கணத்தில் அவரதுமொத்த எடையைப் பற்றிய உணர்வு அவருக்குஏற்பட்டது: அவரது உடலின் எடை, அவரதுபாவங்கள், அப்புறம் அவரது வயது ஆகியஅனைத்தினைக் குறித்தும்.

அவரது பிரசங்கங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த போது அடிக்கடி நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைப் பற்றிய ஒரு துல்லியமான கருத்தை உருவாக்குவதற்கு அவருக்கு உதவிய கல் தரையின் கடினத்தன்மையை அவரது கன்னத்தில் உணர்ந்தார்.

‘கர்த்தாவே’ என்று அவர் முணுமுணுத்தார், பயந்து போனார்; அப்புறம் நினைத்தார், நான் ஒருபோதும் இனிமேல் எழுந்து நிற்கப்போவதில்லை என்று.

எதைப் பற்றியும் யோசிக்காமலும், ஒரு நல்லசாவுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் கூட நினைவின்றியும், தரையில் நெடுஞ்சாண் கிடையாக எத்தனை நேரம் கிடந்தார் என்பதை அவர் அறியவில்லை.

அது, உண்மையில், அவர் ஒரு நிமிடநேரத்திற்கு இறந்துபோனது போன்று இருந்தது. கதவின் அடியில் பிரகாசமான கதிரொளியைக் கண்டார்; தொலைவாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருந்த, சேவல்களின் கரகரப்பான இரைச்சலை அவர் கேட்டார், அப்புறம்தான் உணர்ந்தார் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் அவரது திருச்சபை பிரசங்கத்தின் வாக்குகளை மிகத் துல்லியமாக நினைவில் கொண்டிருக்கிறார் என்றும்.

கதவின் தாழ்ப்பாள் கட்டையை அவர் பின்னால் இழுத்தபோது, விடியல் புலர்ந்துகொண்டிருந்தது.

வேதனை உணர்வு அவருக்கு நின்றுவிட்டது, அப்புறம் அவரது அடியானது அவரது வயோதிகச் சுமையிலிருந்து அவரை அகற்றிவிட்டதாகக் கூடத் தோன்றியது. சேவல்கள் மொத்தம் நிறைந்திருந்த ஒரு துயரார்ந்த ஈரலிப்பான அந்தக் காற்றின் முதல் சுவாசத்தை அவர் வாய் நிறைய விழுங்கியபோது, நன்மைகள் அனைத்தும், ஒழுக்கக்கேடும், நகரத்தின் துயரங்களும் அவரது இதயத்தைத் துளைத்ததாகத் தோன்றியது.

அப்புறம் அவர் தன்னைச் சுற்றிக் கண்ணோட்டினார், தனிமையுடன் தன்னை இணக்கப் படுத்திக்கொள்வதைப் போன்று, அப்புறம் விடியலின் அந்தச் சாந்தமான நிழலில், தாழ்வாரத்தில், ஒன்று, இரண்டு, மூன்று இறந்த பறவைகளைக் கண்டார்.

இந்த மூன்று பறவைகளின் கூட்டு மரணமும், அவரது தயாரிக்கப்பட்ட திருச்சபை பிரசங்க உரைக்கு ஏற்ப, சில பரிகாரத்தை வேண்டுகிறது என்று எண்ணியவாறு, ஒன்பது நிமிடங்களுக்கு மூன்று உடல்களையும் அவர் கூர்ந்து ஆராய்ந்தார்.

அப்புறம் அவர் தாழ்வாரத்தின் மற்ற மூலைக்கு நடந்து சென்று, மூன்று இறந்த பறவைகளையும் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஜாடிக்குத் திரும்பினார், பச்சையாக அசையாது இருந்த தண்ணீருக்குள், ஒன்றை அடுத்து ஒன்றாகப் பறவைகளை எறிந்தார், அந்தச் செயல்பாட்டின் நோக்கத்தைச் சரியாக அறியாமலேயே.

மூன்றும் மூன்றும் அரை டஜன், ஒரு வாரத்தில், என்று அவர் எண்ணினார், அப்புறம் துலக்கத்தின் ஓர் அற்புதகரமான மின்வெட்டொளி அவரது வாழ்வின் மகத்தான நாளை அவர் அனுபவிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறார் என்று அவரிடம் கூறியது.

ஏழு மணிக்கு வெப்பம் தொடங்கியது. விடுதியில், ஒரேயொரு விருந்தினன் காலை உணவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான். கிராமபோன் சிறுமி இன்னும் விழித்தெழுந்திருக்கவில்லை.

உடமையாளினி நெருங்கினாள், அப்புறம் அந்தக் கணத்தில் கடிகார மணியின் ஏழு மணி அடிப்பொலிகள் அவளது புடைத்திருந்த வயிற்றிற்குள் ஒலித்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.

‘ஆக நீ இரயிலைத் தவறவிட்டுவிட்டாய்,‘ என்று அவள் ஒரு காலங்கடந்த பரிவிரக்கத்தின் தொனியில் கூறினாள். அதன் பிறகு அவள் காலை உணவை கொணர்ந்தாள்: காப்பிப் பாலுடன், ஒரு பொறித்த முட்டை, அப்புறம் வாழைக்காயின் சீவற்துண்டுகள்.

அவன் உண்பதற்கு முயன்றான், ஆனால் அவனுக்குப் பசியில்லை. வெப்பம் வந்துவிட்டது என்பதைப் பற்றிய எச்சரிக்கையுடன் இருந்தான் அவன்.

குடம் குடமாக வியர்த்துக்கொண்டிருந்தான். மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான். அவனது உடைகளை அணிந்தவாறே, மிகச்சிறிதளவே உறங்கியிருந்தான், அப்புறம் இப்போது சிறிதளவு காய்ச்சலையும் கொண்டிருக்கிறான்.

அவன் மீண்டும் பீதியை உணர்ந்தான், அப்புறம் மிகப்பெரும் பச்சை மலர்களுடைய அவளது புதிய ஆடையில் பளீரென்று, உடமையாளினி உணவுப் பாத்திரங்களை எடுப்பதற்காக மேசைக்கு வந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்.

உடமையாளினியின் ஆடை அதுஞாயிற்றுக்கிழமை என்று அவனுக்கு நினைவுபடுத்தியது.

‘திருப்பலி பூசை ஏதாவது இருக்கிறதா?’ என்று வினவினான்.

‘ஆம், இருக்கிறது’, என்று கூறினாள் பெண். ‘ஆனால் அது இல்லாததைப் போன்றுதான், ஏனென்றால் கிட்டத்தட்ட எவரொருவரும் போவதில்லை.

உண்மை என்னவென்றால் ஒரு புதிய துறவியை எங்களுக்கு அனுப்புவதற்கு அவர்கள் விரும்பாததால்.’

‘அப்புறம் இவருக்கு என்ன குறை?’

‘இவருக்குக் கிட்டத்தட்ட நூறு வயது, அப்புறம் அவர் அரைப்பைத்தியம்,’ என்று கூறினாள் பெண்;அசைவற்று நின்றாள் அவள், சிந்தனையில் மூழ்கிய வாறு, அனைத்துப் பாத்திரங்களையும் ஒரு கையில் தாங்கிக்கொண்டு.

அதன் பிறகு அவள் கூறினாள், ‘வேறு ஒரு நாள், தீய ஆவியை அவர் கண்டார் என்று திருச்சபை பிரசங்கமேடையில் இருந்து அவர் சத்தியம் செய்தார், அப்புறம் அதன் பின்னர் எவர் ஒருவரும் திருப்பலி பூசைக்குச் செல்வதில்லை.’

ஆகையால் அவன் தேவாலயத்திற்குச் சென்றான், பாதி நம்பிக்கையிழந்த நிலையினாலும் பாதி ஒரு நூறு வருடங்கள் வயதான ஒரு நபரைக் காணும் ஆர்வத்திலும்.

அது முடிவுறாத புழுதிபடிந்த தெருக் களும் ஆள்குடியிருப்பு அற்றதாகத் தோன்றும் துத்த நாகக் கூரைகளை உடைய அடர்ந்த மரத்தாலான வீடுகளும் உடைய, மரித்துப்போன நகரம் என்பதை அவன் கவனித்தான்.

ஞாயிற்றுக்கிழமையின் போது இருந்த நகரமாகும் அது: புற்களற்ற தெருக்கள், திரைச் சீலைகளற்ற வீடுகள், அப்புறம் திணறடிக்கும் வெப்பத்தின் மீதிருக்கும் ஓர் அடர்ந்த, அற்புதகரமான வானம்.

ஞாயிற்றுக் கிழமையை வேறு எந்தவொரு நாளிலிருந்தும் வேறுபடுத்துவதற்கு அனுமதிக்கும் எந்தவொரு அடையாளமும் இல்லை என்று அவன் எண்ணினான், அப்புறம் ஆளற்ற தெருவினூடாக அவன் நடந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்: ‘ஒவ்வொரு நகரத்திலுள்ள அனைத்து தெருக்களும் தேவாலயத்திற்கோ அல்லது கல்லறைமயானத்திற்கோ தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும்.’ அந்தக் கணத்தில் அவன் ஒரு கோபுரத்தையும் அதன் உச்சியில் மரத்தாலான ஒரு காற்றுத் திசைகாட்டியையும், பத்து மணி கழிந்து நான்கு நிமிடங்களில் நின்றுவிட்டிருந்த ஒரு கடிகாரத்தையும் கொண்டிருந்த வெள்ளையடிக்கப்பட்ட கட்டிடத்துடன் இருந்த உருளைக்கல் பாவப்பட்ட ஒரு சிறு சதுக்கத்திற்கு வந்தடைந்தான்.

அவசரமின்றி அவன் சதுக்கத்தைக் கடந்து, திருக்கோயில் மோடிட்ட வாயில் முகப்பின் மூன்று படிகளில் ஏறினான், அப்புறம் உடனடியாகச் சாம்பிராணியின் வாடையுடன் கலந்திருக்கும் வயதான மனித வியர்வையின் வாடையை முகர்ந்தான், அப்புறம் கிட்டத்தட்ட காலியாக இருந்த தேவாலயத்தின் வெதுவெதுப்பான நிழலுக்குள் சென்றான்.

பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் அப்பொழுதுதான் திருச்சபை பிரசங்கமேடையில் ஏறியிருந்தார்.

அவனது தொப்பியை அணிந்தவாறு பையன் ஒருவன் நுழைவதை திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கவிருந்த போதுதான் கண்டார்.

அவனது பெரிய, சாந்தமான, அப்புறம் தெளிவான கண்களை உடைய கிட்டத்தட்ட வெறுமையாக இருந்த நெற்றியை ஆராய்ந்தபடி அவனை அவர் கண்டார்.

அவனது தலையை ஒரு புறமாகவும் அவனது கைகளை முழங்கால்களிலும் வைத்துக்கொண்டு, திருக்கோயிலின் கடைசி வரிசை இருக்கையில் அமர்வதை அவர் கண்டார்.

இந்த நகரத்தில் அவன் ஓர் அந்நியன் என்று அவர் கண்டுகொண்டார்.

இந்நகரத்தில் அவர் முப்பது வருடங்களாக இருந்து வருகிறார், அப்புறம் அதன் எந்தவொரு குடியிருப்பாளர்களையும் அவனது வாடையினால் மட்டுமே அவருக்கு இனம் கண்டுகொண்டிருந்திருக்க முடியும்.

ஆகையால் அப்பொழுதுதான் வந்தடைந்திருந்த அந்தப் பையன் ஓர் அந்நியன் என்று அவர் அறிந்தார்.

ஒரு தீவிரமான, சுருக்கமான நோட்டத் தில், அவன் ஓர் அமைதியான ஆன்மா என்று அவர் கண்டறிந்தார், அப்புறம் சிறிதளவு சோகமுடையவனாகவும், உடைகள் அழுக்காகவும் சுருக்கம் விழுந்தும் இருக்கின்றன என்றும்.

அதாவது அவற்றை அணிந்துகொண்டு உறங்கியவாறே அவன் நீண்டகாலத்தைச் செலவிட்டான் என்பதைப் போன்று, அதனை அவர் அதீத வெறுப்பும் இரக்கமும் சேர்ந்து கலந்த ஓர் உணர்வுடன் எண்ணினார்.

ஆனால் அப்புறம், திருக்கோயில் நாற்காலி வரிசையில் அவன் அமர்ந்திருப்பதைக் காணும்போது, அவரது இருதயம் நன்றியுணர்வினால் பெருகி வழிந்தது, அப்புறம் அவர்அவரது வாழ்வின் மகத்தான திருச்சபைப் பிரசங் கத்தை அளிப்பதற்குத் தயாரானார்.

கர்த்தாவே, நான் அவனை இக்கோயிலில் இருந்து வெளியே எறியவேண்டியதில்லை என்பதற்காகத் தயைக் கூர்ந்து அவனுடைய தொப்பியை கழற்றுவதற்கு அவனுக்கு நினைவுபடுத்துங்கள் என்று அதேசமயத்தில் அவர் நினைத்தார்.

அப்புறம் தனது திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவர் என்ன சொல்லிக்கொண்டிருந்தார் என்பதை உணராமலேயே அவர் பேசினார்.அவர் தனக்கே கூடச் செவிகொடுக்கவில்லை.

உலகத்தின் தொடக்கம் தொட்டு அவரது ஆன்மாவில் ஒடுங்கியிருந்த ஒரு வசந்தத்திலிருந்து பாய்ந்தொழுகிய தெளிவானதும் சரளமானதுமான மெல்லிசையை அவர் கேட்கவே இல்லை.

அவரது வாக்குகளானவை, எதிர்பார்க்கப்பட்ட வரிசையிலும் இடத்திலும் மிகத் துல்லியமாகவும், பொருத்தமாகவும், மிகநுட்பமாக வும் முன்னால் பாய்ந்தொழுகியதாக ஐயுறவிலா உண்மையை அவர் குழப்பிக்கொண்டார்.

ஒரு வெதுவெதுப்பான ஆவி அவரது உள்ளிடங்களை அழுத்துவதாக அவர் உணர்ந்தார். ஆனால் அவரது ஆன்மாவானது வீண் தற்பெருமையற்றது என்பதை அவர் அறிந்திருந்தார், அப்புறம் அவரது உணர்ச்சிகளை முடமாக்கிய அந்த மனமகிழ்வின் உணர்ச்சியானது செருக்கோ கீழ்ப்படியாமையோ அல்லது வீண் தற்பெருமையோ அல்ல, மாறாக, நமது கர்த்தாவின் பாலான அவரது மெய்க்கருத்தின் தூய மகிழ்ச்சி கொண்டாட்டமாகும்.

ஒரு சில கணங்களில் வெப்பமானது மிக மோச மானதாக ஆகும் என்பதை அறிந்தவாறு, அவளது படுக்கையறையில், ரெபெக்கா மயக்கத்தை உணர்ந்தாள். புதுமைத்திறத்தின் ஒரு விளங்காத அச்சத்தினால் இந்நகரத்துடன் நிலைகொண்டிருப்பதாக அவள் உணர்ந்திருக்கவில்லை என்றால், அவளது துண்டு துணுக்குகளை அந்துருண்டைகள் உடையடிரங்குப்பெட்டியில் இட்டுக் கொண்டு வேறோர் வாழுலகை நோக்கிச் சென்றிருப்பாள், அவளது பூட்டனார் செய்தததைப் போன்று, அப்படித்தான் அவளிடம் சொல்லப்பட்டது.

ஆனால் அந்நகரத்தில், முடிவற்ற தாழ்வாரங்களுக்கும், வெப்பமானது நின்றுபோகும்போது திரைச்சீலைகளை ஒளியூடுருவும் கண்ணாடியை வைத்து அவர் மாற்றியிருக்கக்கூடிய ஒன்பது படுக்கையறைகளுக்குமிடையே மரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தாள் என்பதை உள்ளூர உணர்ந் திருந்தாள்.

அவள் அங்கேயே தங்கியிருப்பாள், என்று தீர்மானித்தாள் (அவள் தனது ஆடைகளைத் துணிமணிகளை வைக்கும் உள்ளறை நிலையடுக்கில் அடுக்கியபோது எப்போதும் எடுத்த ஒரு தீர்மானமாக அது இருந்தது), அப்புறம் ஓர் இளந்துறவியை அவர்களுக்கு அனுப்பிக் கொடுப்பதற்காக ‘எனது ஒப்புயர்வற்ற ஒன்றுவிட்ட உடன்பிறந்தாருக்கு’க் கடிதம் எழுதுவதற்கும் கூடத் தீர்மானித்தாள், ஆகையால் அவளுக்குச் சின்னஞ்சிறு வெல்வெட் மலர்கள் உள்ளதனது தொப்பியை அணிந்தவாறு மீண்டும் தேவாலயத்திற்கு வர முடியவும், ஒத்திசை வான திருப்பலி பூசையையும் பொருத்தமானதும் சமயத்தில் பற்றுறுதிக் கொள்ளச் செய்வதாகவும் இருக்கும் திருச்சபைப் பிரசங்கங்களை மீண்டும் கேட்கவும் முடியும். நாளை திங்கட்கிழமை, அவள் நினைத்தாள், அர்ஹேனீதா திடீரென்று திரைச்சீலை இடப்பட்டிருந்த கதவைத் திறந்து கத்தியபோது, மேற்றிராணியாருக்கான கடிதத்தின் முகமன்வாழ்த்தைக் குறித்துக் கட்டக்கடைசியாகச் சிந்திப்பதற்குத் தொடங்கியிருந்தாள் (அற்பமானதும் மரியாதைக் குறைவானதும் என்று கர்னல் புயெந்தியா அழைத்திருந்த ஒரு முகமன் வாழ்த்து):

‘சென்யோரா, சனங்கள் சொல்கிறார்கள் தந்தை திருச்சபை பிரசங்கமேடையிலிருந்து பைத்தியமானார் என்று!’

விதவை கதவை நோக்கி ஒரு குறிப்பிட்ட வகையில் வாடிச் சுருங்கியிருக்காததும் கடுமையானதுமான முகத்தைத் திருப்பினாள்.

‘கிட்டத்தட்ட அவர் ஐந்து வருடங்களாகப் பைத்தியமாக இருக்கிறார்,‘ என்று கூறினாள். அப்புறம் அவள் தனது துணிமணிகளை ஒழுங்குபடுத்தி வைப்பதைத் தொடர்ந்து செய்தவாறு, கூறினாள்:

‘தீய ஆவியை அவர் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்.’

‘இம்முறை தீய ஆவியை அல்ல.’ என்றாள் அர்ஹேனீதா.

‘பிறகு யாரை?’ என்று ரெபெக்கா வினவினாள், முறை பிசகாமலும் அலட்சியமாகவும்.

‘இப்போது அவர் சொல்கிறார் அலைந்து திரியும் யூதனை அவர் கண்டதாக.’

அவளது தோல் நெளிவதாக உணர்ந்தாள் விதவை.

அவளது கிழிந்த திரைச்சீலைகளை, வெப்பத்தை, இறந்த பறவைகளை, அப்புறம் கொள்ளைநோய் ஆகியவற்றை அவளுக்குப் பிரித்தறியாமல் இருந்ததற்கு இடையில், அவளது தொலைவான சிறுபிராயத் தின் மத்தியானங்களுக்கு அப்புறம் அவள் நினைவு கொண்டிராத அந்த வார்த்தைகளை அவள் கேட்ட போது, குழப்படியான எண்ணங்களின் ஒரு பல்திறம்அவளது தலை வழியாகக் கடந்துசென்றது: ‘அலைந்து திரியும் யூதன்.’ அப்புறம் அவள் நகரத் தொடங்கினாள், சீற்றமடைந்து, பனிக்கட்டியாக உறைந்தவாறு, அர்ஹேனீதா வாய்பிளந்து அவளை நோக்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி.

‘அது உண்மைதான், என்றாள் ரெபெக்கா’ அவளது இருத்தலின் அடியாழங்களிலிருந்து எழுந்து வந்த ஒரு குரலில். ‘இப்போது எனக்குப் புரிகிறது பறவைகள் ஏன் மரிக்கின்றன என்று.’

பேரச்சத்தினால் உந்தப்பட்டு, அவள் தன்னை ஒரு கருப்பு பூத்தையல் செய்யப்பட்ட சால்வையை வைத்து மூடிக்கொண்டு, மின்னற்பொழுதில், நீண்ட இடைநாழியையும் அலங்காரப் பொருட்களால் திணிக்கப்பட்டிருந்த வசிப்பறையையும், அப்புறம் வாயிற்கதவையும், பலிபீடத்தைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், மருரூபம் கொண்டும் ‘நான் அவனைக் கண்டேன் என்று சத்தியம் செய்கிறேன் உங்களிடம்.

இன்று காலை தச்சனான யோனாசின் மனைவிக்குக் கடைசியான திருமுழுக்காட்டைச் செய்துவிட்டு நான் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவன் என் பாதையில் கடந்து சென்றான் என்று நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன்.

அவனது முகமானது கர்த்தாவின் சாபத்தினால் கறுத்திருந்தது என்றும், அவனது நீத்தார் கண்விழிப்பில் எரியும் கங்குகளின் ஒரு தடத்தை அவன் விட்டுச் சென்றான்’ என்றும் கூறிக்கொண்டிருந்த தேவாலயத்திற்குச் செல்லும் இரண்டு கட்டிடத் தொகுதிகளையும் கடந்தாள்.

அவரது திருச்சபை பிரசங்கம் நின்றுபோனது, அந்தரத்தில் மிதந்தவாறு.

தனது கைகளின் நடுக்கத்தை அவருக்குக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார், அதாவது அவரது உடல் மொத்தமும் குலுங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அப்புறம் ஒரு உறைபனிக் குளிரான வியர்வையின் நூலிழை மெதுவாக அவரது முதுகுத்தண்டில் கீழிறங்கிக் கொண்டிருந்தது என்பதையும்.

அவர் நோவுற்றதாக உணர்ந்தார், நடுக்கத்தை உணர்ந்தவாறு, அப்புறம் தாகத்தையும், அப்புறம் தனது குடலில் ஒரு வன்மையான முறுக்கலையும், அப்புறம் அவரது அடிவயிற்றில் ஓர் ஆர்கன் குழாயின் அதிர் சுரத்தைப் போன்று எதிரொலித்த ஓர் இரைச்சலையும். அப்புறம் அவர் உண்மையை உணர்ந்துகொண்டார்.

தேவாலயத்தில் சனங்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டுகொண்டார், அப்புறம் அந்த ரெபெக்கா, இரங்கத்தக்க விதமாக, பகட்டாகக் காட்டிக்கொண்டு, அவளது கைகளை விரித்தவாறு, அப்புறம் கடுமையான, வாலுலகங்களை நோக்கித் திரும்பிய உறைந்த முகத்துடன், தேவாலயத்தின் நடுப்பகுதியில் முன்னேறி வருவதைக் கண்டார்.

என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர்குழப்பமாகப் புரிந்துகொண்டார், அவர் ஓர் அற்புதத்தைக் கண்டுகொண்டிருந்தார் என்பதை நம்புவதற்கு வீண்தற்பெருமையாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொள்ளும் அளவிற்குப் போதுமான தெளிவுடன் இருந்தார்.

தாழ்மையுடன் தனதுநடுங்கும் கரங்களைத் திருச்சபை பிரசங்க மேடையின் மரவிளிம்பில் வைத்துக்கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

‘அப்புறம் அவன் என்னை நோக்கி நடந்துவந்தான்,’ என்றார் அவர். அப்புறம் இந்தத் தடவை அவர் நம்பவைப்பதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருந்த தனது சொந்தக் குரலைக் கேட்டார்.

அவன் என்னை நோக்கி நடந்து வந்தான், அப்புறம் அவன் மரகதக் கண்களையும் பரட்டையான தலை முடியையும், வெள்ளாட்டுக்கிடாவின் மணத்தையும் கொண்டிருந்தான்.

அப்புறம் நமது கர்த்தாவின் பெயரால் அவனைப் பழித்துரைப்பதற்காக என் கையை உயர்த்தி, அப்புறம் அவனிடம் கூறினேன்: “நில், ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியிடுவதற்கான நன்னாளாக ஒரு போதும் ஞாயிற்றுக்கிழமை இருந்ததில்லை.”

அவர் முடித்தபோது, வெப்பம் வந்துவிட்டிருந்தது.

அந்தத் தீவிரமான, கடினத்தன்மையான, அந்த மறக்க முடியாத ஆகஸ்டின் எரியும் வெப்பம்.

ஆனால் தந்தை இசபெல் ஆந்தனி இனிமேலும் வெப்பத்தைப் பற்றி அக்கறை கொண்டவராக இல்லை. அவர் அறிந்திருந்தார், அவரது முதுகிற்குப் பின்புறம், நகரமானது மீண்டும் பணிவுடன் இருந்தது என்று, அவரது திருச்சபை பிரசங்கத்தினால் பேச்சற்று, ஆனால் அவர் அதனால் கூட மகிழ்ச்சியடையவில்லை.

அவரது பாழ்பட்ட தொண்டைக்கு ஒயினானது இதமளிக்கும் என்ற உடனடியான எதிர்ப்பார்ப்பினாலும் கூடஅவர் மகிழ்ச்சியடையவில்லை.

அவர் அசௌகரியமாகவும் இடம் மாறி வந்தவராகவும் உணர்ந்தார். அவர் கவனம் சிதறியதாகவும் தியாகத்தின் உச்ச கணத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாதவர் ஆகவும் உணர்ந்தார்.

கொஞ்சகாலமாகவே இதே விஷயம் அவருக்கு நிகழ்ந்து கொண்டிருந்தது, ஆனால் தற்போது இது வேறுவகையான கவனச்சிதறலாக இருந்தது, ஏனென்றால் அவரது எண்ணங்கள் ஓர்உறுதி செய்யப்பட்ட மன உளைவினால் நிறைக்கப்பட்டிருந்தன.

பிறகு அவரது வாழ்க்கையில் முதன் முறையாக, அவர் கௌரவத்தை உணர்ந்தார். அப்புறம் அவர் கற்பனைசெய்திருந்ததையும் அவரது திருச்சபை பிரசங்கங் களிலும் வரையறுத்திருந்ததை அப்படிப் போலவே, தாகத்தைப் போன்று கௌரவமும் ஒர் உந்துதலே என்று உணர்ந்தார்.

நற்கருணைப் பேழையை ஊக்கத்துடன்  அடைத்துவிட்டு அவர் கூறினார்:

‘பித்தகோரஸ்.’

மொட்டையடிக்கப்பட்டதும் பளபளப்பானதுமான தலையை உடைய ஒரு குழந்தையான, தந்தை ஆந்தனி இசபெல்லின் ஞானப்புதல்வனான, அவர் அவனுக்குப் பெயரிட்டிருந்தவனுமான, திருக்கோயில் ஏவலன், பலிபீடத்தை நோக்கி வந்தான்.

‘காணிக்கைகளை எடுத்துக்கொள்,’ என்றார் துறவி. குழந்தை முழித்தான், முற்றிலுமாகச் சுற்றித்திரும்பி விட்டு, அதன்பிறகு கிட்டத்தட்ட கேட்க முடியாததொரு குரலில் சொன்னான், ‘காணிக்கைத் தட்டு எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.’

அது உண்மையாக இருந்தது. காணிக்கைகள் எடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன.

‘அப்படியென்றால் திருப்பூட்டறைக்குச் சென்று ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு உன்னால் முடியும் அளவிற்குச் சேகரித்துக்கொள்,’ என்றார் தந்தை.

‘அப்புறம் நான் என்ன சொல்லவேண்டும்?’ என்றான் பையன்.

தந்தை எண்ணப்பூர்வமாக அவனது மொட்டை யடிக்கப்பட்ட, அதன் மேற்புடைப்பான பொருத்து வாய்களுடன் இருந்த நீலமண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தார்.

இப்போது முழிப்பது யாரென்றால் அது அவர்தான்:

‘அலைந்து திரியும் யூதனைத் துரத்துவதற்கு என்று சொல்,’ என்றார் அவர், அப்புறம் அவர் அதைக் கூறிய போது தனது இதயத்தில் ஒரு பெரும் சுமையைத் தாங்கிக்கொண்டிருந்ததாக உணர்ந்தார்.

ஒரு கணத்திற்கு அந்த நிசப்தமான ஆலயத்தின் மெழுவர்த்திகள் உருகிச்சொட்டும் ஒலியையும் தனது சொந்த உணர்ச்சிவயப்பட்டதும் கடினமானதுமான சுவாசத்தைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை.

அப்புறம், திருச்சபை ஏவலன் அவனது உருண்ட விழிகளைத் திகைப்புடன் அவரின் மீது வைத்து நோக்கியபோது, திருச்சபை ஏவலனின் தோளில் தனது கையை வைத்தவாறு, அவர் கூறினார்:

‘பிறகு பணத்தை எடுத்து தொடக்கத்திலிருந்தே தனியாக இருக்கும் அந்தப் பையனிடம் கொடு, நீ அவனிடம் சொல் இது துறவியிடமிருந்து என்றும், அப்புறம் அவன் ஒரு புதிய தொப்பியை கட்டாயம் வாங்கவேண்டும் என்றும்.’

One day after Saturday by Gabriel Garcia Marquez. English translation: J. S. Bernstein. From: Gabriel Garcia Marquez: Collected Stories (Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Jonathan Cape, 1991.

கட்டுரை

இன்று எனக்குச் செய்வதற்கு ஏராளம்:

நினைவை அதன் இறுதி வரை கொல்லவேண்டும்

மண்ணைக் கல்லாக்கவேண்டும்,

எவ்வாறு வாழ்வதென்று மீண்டும் கற்கவேண்டும்.”

அக்மதோவா

 

அன்னா அக்மதோவா (1889-1966) என்னும் ரஷ்யக்கவி அழகியாக மிளிர்ந்து, கவிதையாக ஒளிர்ந்தவர். அழகு, காதல், கவிதை ஒருங்கிணைய அற்புத ஆளுமை யாக விளங்கியவர்.

கொந்தளிப்பான காலகட்டத்தில் அசாதாரணமான வாழ்வை கடக்க முயன்றவர். துயரத்தில் உறைந்துபோன ஒரு தேவதை.

இசையா பெர்வின் (1907-1997) என்னும் ரஷ்ய-பிரித்தானிய சமூக - அரசியல் கோட்பாட்டாளர் 1945ல் ஒரு முறை லெனின் கிராடில் (பீட்டர்ஸ்பர்க்) அன்னா அக்மதோவாவை சந்தித்துப் பேசினார்.

போரினையும் ஒடுக்குமுறையினையும் பேசத் தொடங்கிய அவர்கள். தம் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

சிறுமியாயிருந்தபோது தன் போக்கு, கவிஞர் குமிலோவை மணந்து கொண்டது, கணவன் தூக்கிலிடப்பட்டது பற்றியெல்லாம் குறிப்பிட்ட அக்மதோவா, பைரனின் டான் யுவான் கவிதை வரிகளை அவ்வளவு வேட்கையுடன் எடுத்துரைத்தார்.

அடுத்து தன் கவிதைகளில் ஒன்றிரண்டை காட்டி, தன் சகாக்களில் ஒருவர் அரசினால் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த போது அழுதுவிட்டார். முதல் நாள் மாலையில் தொடங்கிய இச்சந்திப்பு மறுநாள் காலை 4 மணியான பின்னும் முடியவில்லை.

அப்போது தான் அவர்கள் பேச்சில் புஷ்கினும் செக்காவும் இடம் பெற்றனர். இருவரும் இவ்விரு இலக்கியவாதிகள்பற்றி உடன்பாடான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

அடுத்து பெர்லினுக்குத் துர்கனேவிடம் அபிமானம் எனில், அக்மதோவாவுக்குத் தாஸ்தோயெவ்ஸ்கியிடம் ஈடுபாடு. ஒருவரின் ஏக்கத்தை/ துயரத்தை அடுத்தவர் புரிந்து கொண்டார்.

“அன்றிரவு பெர்வினது வாழ்வு, கலையின் பரிபூரணத்திற்கு அவ்வளவு நெருக்கமாக வந்துவிட்டது” என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாளர் மினகல் இக்னேஷியஃப். பெர்வின் தன்அறைக்குத் திரும்பியது காலை 11 மணிக்கு.

“மிகவும் தகுதியான அறிவு, தரவுகளில் இல்லை மாறாகப் பண்பாட்டின் மாபெரும் படைப்புகளிலும் மானுடம் சுவீகரித்துள்ள தார்மிக, உணர்வோட்ட, இருத்தலியல் ஞானத்திலும் உள்ளது” என்று அச்சந்திப்பை விளக்குகிறார் டேவிட் ப்ரூக்ஸ் என்னும் எழுத்தாளர்.

‘பெர்வினும் அக்மதோவாவும் அத்தகைய வாழ்க்கையை மாற்றும் உரையாடலை நிகழ்த்த முடிந்தது, அவர்கள் நிறைய வாசித்திருந்ததால்; ஆன்மிக ரீதியில் வேட்கை மிகுந்திருந்ததால்; நாம் நம்மைப் புரிந்து கொண்டிருப்பதை விடவும் மேலாகப் புரிந்துள்ள மேதைகள் எழுதிய இலக்கியத்தை அவர்கள் பொதுமொழியாகக் கொண்டிருந்ததால்’ என்கிறார் டேவிட் ப்ரூக்ஸ்.

*******

அக்மதோவாவின் தோழியும் அவரைப் போலவே இழப்புக்கும் உள்ளான அகோவ்ஸ்கயா தன் சிநேகிதி பற்றிய உருவச் சித்திரத்தை இப்படித் தீட்டுகிறார்:

“நாளுக்கு நாள், மாதாமாதம் என் துண்டு துணுக்கான குறிப்புகள், என் வாழ்வின் மறு உருவாக்கம் என்பது குறைந்து, அக்மதோவாவின் வாழ்க்கைச் சம்பவங்களாக மாறிக்கொண்டிருந்தன.

அவளது வார்த்தைகள், செயல்கள், தலை, தோள்கள், கைகளின் அசைவுகளெல்லாம் அவ்வளவு பூரணம்கொண்டிருந்தன.

அவை இவ்வுலகில் மாபெரும் கலைப் படைப்புகளுக்கே உரியவை. இதனால் அவள்பால் ஈர்க்கப்பட்டேன்.

என் கண்களுக்கு முன்பாகவே, அவளது ஆளுமையை விடவும் மிகப்பெரிதான அவளின் விதி, இப்புகழ்பெற்ற- புறக் கணிக்கப்பட்ட, வலுமிக்க, நிராதரவான பெண்ணில் இருந்து, துயரம், தனிமை, பெருமிதம், தீரமிக்கச் சிலையைச்   செதுக்கிக்கொண்டிருந்தது.”

*******

அக்மதோவாவின் 14 வயதிலிருந்து அவரை விடாப்பிடியாகக் காதலித்து வந்துள்ளவர் கவிஞர் குமிலோவ். ஆனால் அக்மதோவாவுக்கு இன்னொருவர் மீது; தன் காதல் ஏற்கப்படாத நிலையில் வருந்தி இருந்தார்.

தான் காதலிக்கப்படாத நிலையில் இரண்டொரு முறை தற்கொலைக்கு முயன்றார் குமிலோவ். இதனால் குமிலோவை மணந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகினார் அக்மதோவா. இது குறித்த அவரது பதிவு:

“என் ஒட்டுமொத்த ஆயுளுக்காகவும் நஞ்சூட்டப் பட்டிருக்கிறேன்; ஏற்கப்படாத காதலின் நஞ்சு கசப்பானது! மீண்டும் என்னால் காதலிக்க முடியுமா? முடியவே முடியாது! ஆனால் குமிலோவ் எனது விதி, நான் அதனிடம் அடி பணிகிறேன்... மகிழ்ச்சியற்ற இம்மனிதன் என்னுடன் மகிழ்ச்சியடைவான்.”

இம்மூன்று குறிப்புகளும் சுட்டிக் காட்டும் ஆளுமை, அன்பும் சிநேகமும் கலந்த அறிவுஜீவியாக இருக்கவேண்டும்; ஒரு பண்பாட்டின் மலர்ச்சியாக இருக்கவேண்டும்; ஒரு கலைப்படைப்பாகத் திகழ்ந் திருக்கவேண்டும்; காதல் என்பது உணர்வோட்ட மட்டுமில்லை, ஆக்கபூர்வமானது எனக் கவிதைகள் எழுதியது, மற்றவருக்கு வாழ்வளித்தது.

******

அக்மதோவாவுக்கு 17 வயதாயிருந்த போது, அவர் எழுதிய கவிதைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அக்கவிதைகளைச் சகித்துக்கொள்ள முடியாத அவரது தந்தை ஆண்ட்ரெய் கோரென்கோ, தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்காமல் அப்பெயரில் (அன்னா கோரென்கோ) எழுதுவதைத் தவிர்க்குமாறு கண்டித்துவிட்டார்.

கலகக்குணமும் சுதந்திர மனோபாவமும் மிக்க அன்னா உடனே அப்பெயரை விட்டு விட்டு தாய்வழி கொள்ளுப்பாட்டியின் பெயரான அக்மதோவாவினை தெரிவு செய்துகொண்டார்.

இப்பெயருக்குப் பின்னே ஒரு வரலாற்றுக் குறிப்பும் உண்டு.

அவரது தாய்வழி மூதாதையர் செங்கிஸ்கான்மரபினர். அம்மரபில் வந்த தார்தாரிய குறுநில மன்னன் 1481இல் கொலையுண்ட கான் அஹ்மத். அஹ்மத்தின் விரிவாக்கமாக வந்த பெயர் அக்மதோவா.

கவிஞர் குமிலோவை 1910இல் மணந்துகொண்டார் அக்மதோவா. ராணுவத்தில் பணியாற்றிய குமிலோவ் எதிர்ப்புரட்சியாளர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

அதற்கு முன்னரே 1918இல் அக்மதோவாவும் குமிலோவும் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 1912இல் பிறந்த மகனே லெவ்.

1918லேயே அக்மதோவா, கவிஞரும் அஸ்ஸரிய அறிஞரும் பேராசிரியருமான ஸிலைகோவை மணந்து கொண்டார்.

1926ல் அவரிடமிருந்து பிரிந்தபின் இன்னொரு கவிஞர் நிகோலாய், நிகோலோவிச் புனினுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஏற்கனவே ஒரு குடும்பம் நடத்தி வந்திருந்தவர் புனின்.

இதற்கிடையே தேர்ந்த வரலாற்றாசிரியராக விளங்கிய லெவ், எதிர்ப்புரட்சியாளர் குமிலோவின் மகன் என்ற வகையிலேயே கைதாகி 1935-56 காலகட்டத்தில் கட்டாய உழைப்பு முகாம்களில் அடை பட்டவர்.

மகனுக்கு நேர்ந்த இச்சோகமே அக்மதோவாவை ஆட்டிப் படைத்தது. மகனைப் பார்க்க மணிக்கணக்கில் இறைவளாகங்களில் காத்திருந்தும் பதற்றப்பட்டதும் தவித்ததுமே அவரது முக்கியக் கவிதைகளுள்  ஒன்றான  Requiem-னை  எழுத வைத்தது.

1925-ல் அவரது நூல்களெல்லாம் தடை செய்யப் பட்டன. அக்மதோவா ‘ஒரு பாதி வேசி- ஒரு பாதித் துறவுக்கன்னி’ என்ற குற்றச்சாட்டின் பேரில் ஸ்டாலின் காலத்தில் ஒதுக்கப்பட்டார்.

குறுகிய காலம் பார்த்த நூலகர் வேலையும் போனது.

சோவியத் எழுத்தாளர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். எந்த வழி வகையும் இல்லாத நிலையில் நண்பர்கள் ஆதரவைக் கொண்டே பிழைத்து வந்தார்.

இவ்வளவுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டு அக்மதோவாவின் தனிப்பட்ட ஒழுக்கநெறிச் சார்ந்தது. அது அரசியல் தளத்தில் எழுமுன்பு, இலக்கியத்தரத்திலேயே எழுந்துவிட்டது.

போரிஸ் மிகைலோவிச் எய்கன்பாம் என்னும் விமர்சகரே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தவர். இதற்கும் அக்மதோவாவின் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம்?

இரண்டாவது கணவர் ஸிலைகோ, பேராசிரியராகக் கவிஞராக அறிஞராக இருந்தபோதும், அக்மதோவா தன்னளவில் ஓர் அறிவுஜீவியாகக் கவிஞராக இயங்கு வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

White flock - தொகுதி 1919இல் மறுபதிப்பு வருவதற்கான ஒப்பந்தத்தில் அக்மதோவா தன் இரண்டாவது கணவர்பெயரைச் சேர்க்காமல், தன் பெயரிலேயே ஒப்பம் இட்டார். இதனால் ஆத்திரமுற்ற ஸிலைகோ, தன் மனைவி புதிதாய் கவிதைகள் எழுதக்கூடாது என்று சீறினார்.

அதனைப் புறக்கணித்து அக்மதோவா எழுதிய கையெழுத்துப்படிகளை எரித்துவிட்டார்.

அக்மதோவா அரசினால் ஒடுக்கப்பட்டதும் வதை பட்டதும் உண்மை. ஆனால் அதற்குத் தூபம் போட்ட தாக இலக்கியவாதி இருந்துள்ளார்.

முன்னோடித் தடையாளாராக ஒரு கவிஞர் இருந்து உள்ளார் என்பது அவ்வளவாகக் கவனிக்கப்படாத விஷயமே.

அவரிடம் உள்ள சுதந்திர உணர்வை தடை செய்பவராக அவரின் தந்தை இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

1921இல் அக்மதோவா எழுதிய கவிதை.

வாழ்வென்பது மற்றவர்களுக்காக
உனக்கானது அல்ல

பனியின் குளிரில் கிடக்கின்றாய்
துப்பாக்கி முனைகள் செய்தவை

இருபத்தெட்டுப் புண்கள்
துப்பாக்கிக்குண்டுகள் செய்தவை
இன்னொரு அய்ந்து

புதிய துயரின் ஆடையை நெய்தேன்
என் நேசத்திற்காக
ரஷ்யபூமி நேசிக்கிறது சுவையை
நேசிக்கிறது குருதியின் சுவையை

இக்கவிதை அக்மதோவாவின் தனிப்பட்ட துயரினை வலியை வெளிப்படுத்துவதுடன் ரஷ்யக் குடியானவரின் ரஷ்ய பூமியின் அவலங்களையும் வதைகளையும் வெளிப்படுத்திவிடுகிறது.

அக்மதோவாவின் வாழ்வில் 1936-41 காலகட்டம் கொந்தளிப்பானது. பீதியும் பதற்றமும் நிறைந்தது. அதே சமயம், படைப்பாக்க ரீதியில் வளமானதும்ஆகும். இது பற்றி அவரே சுட்டிக்  காட்டியிருக்கிறார்:

“உயிர் வாழ்வோரின் பட்டியலிலிருந்து என் பெயர் நீக்கப்பட்டது... பீதி, அயற்சி, வெறுமை, மரணம் போன்ற தனிமை நிறைந்த அந்த ஆண்டுகளின் அனுபவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, 1936இல் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.

ஆனால் என் கையெழுத்து மாறியிருந்தது, என் குரல் வேறுபட்டு ஒலித்தது... requiem எழுந்தது (1935-40) என் பழைய பாணிக்குத் திரும்ப வழியில்லை.

எது நல்லது, எது மோசமானது என்று நான் சொல்லக்கூடாது.

1940 உச்சமாயிருந்தது.

ஒன்றின் குதிகால்களை இன்னொன்று தொற்றியபடி விரைந்தும் மூச்சுத் திணறியும் கவிதைகள் ஒலித்தன  இடையறாமல்...”

1937 ஸ்டாலின் ஆட்சியில் கட்சியினையோ ராணுவத்தையோ நம்பமுடியாத நிலையில் எவ்வளவு பேர் கைது செய்யப்படவேண்டும், எவ்வளவு பேர் நாடு கடத்தப்படவேண்டும் என்பதற்கு மண்டல ரீதியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

1937-38இல் தூக்கிலிடப்பட்டவர்கள் 6,81,692 பேர். நாட்குறிப்பில் அரசியல் நகைச்சுவையினைக் குறித்து வைத்து இருந்தால் கூடக் குற்றமாகக் கருதப்பட்டதன் உச்சபட்ச விளைவு இது.

அக்மதோவாவின் மகன் லெவ் சிறைப்பட்டதும் நண்பர் மேண்டல்ஸ்டாம் நாடு கடத்தப்பட்டதும் இக்காலக் கட்டத்தில்தான். கவிஞர் நிகோலாய் க்ளியுயேவும் தூக்கிலிடப்பட்டது இக்காலக்கட்டத்தில்தான்.

1925இல் தடைசெய்யப்பட்ட அக்மதோவா நூல்கள் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் 1940இல் தான் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன.

மொழி பெயர்ப்புகள் வாயிலாக உலகமும் அப்போதுதான் விரிவாக  அறிந்து கொள்கிறது.

காதலை கவிதையாக்கி கவிதையை வாழ்வாக்கிக் கொண்டிருந்த அக்மதோவா ‘வைரப்பனி’யாக ஒளிர்ந்தவர். அக்மதோவாவை இளமையில் பாரிஸில் சந்தித்த ஓவியரும் சிற்பியுமான மோதிக்ளியானி தன்னை அப்படியே மறந்து போனார்.

இருவரும் வெர்லெய்ன், பாதிலேர், மல்லார்மே போன்றவர்களின் பிரெஞ்சு கவிதைகளில் ஆழ்ந்தனர். அக்மதோவாவை எண்ணற்ற ஓவியங்களாக வடித்தார் மோதிக்ளியானி.

அவற்றில் நிர்வாண ஓவியங்களும் உண்டு. பல ஓவியங்களை அக்மதோவாவிடம் வழங்கவும் செய்தார். பெரும்பாலானவை காணாமல்போக, ஒன்றினை மட்டும் அக்மதோவா பெருமிதத்துடன் தன் அறையில் மாட்டியிருந்தார்.

பிரெஞ்சுபண்பாட்டில் வளர்க்கப்பட்டிருந்த அக்மதோவா வுக்குப் பிரெஞ்சு சூழலும் பிரெஞ்சு கவிதைகளும்மோதிக்ளியானி நட்பும் சேர்ந்து அவரை மெய்மறக்கச் செய்துவிட்டன.

இத்தகைய ஆளுமை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆட்பட்டது போல, தனிப்பட்ட நிலையில் நண்பர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டு முதல் கணவன் தூக்கிலிடப்பட்டு, ஒரே மகன் கட்டாய உழைப்பு முகாமில் வதைபட, தன் எழுத்து 15 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருக்க, அன்றாட வாழ்வுக்கான குறைந்த பட்ச வழிவகையும் பறிக்கப்பட்டு உறைநிலைக்குத் தள்ளப்பட்டார்.

என்றாலும் அவரது சக பயணிகள் போல,  அதிருப்தி/ உடன்பாடின்மை காரணமாக ரஷ்ய மண்ணிலிருந்து புலம்பெயர விரும்பவில்லை. அவரது கண்ணீரும் கற்பனையும் கவிதையும் ரஷ்ய மண்ணின் வாசம் பெற்றிருந்தன.

புடம் போட்ட தங்கமாய் மீண்டெழுந்து அவர் எழுதிய Requiem, The Way of All the Earth, Poem Without a Hero என்னும் நீண்ட கவிதைகள் ரஷ்ய மண்ணின் துயரத்தை அவரது துயரத்துடன் ஊடு பாவாக்கி நெய்யப்பட்டவை.

தலைசிறந்த இக் கவிதைகள் தாந்தேயின் தெய்வீக நாடகத்தின் உத்வேகத்தில் பிறந்தவை என்பதால் உலக இலக்கிய வாசகனுக்கு எப்போதும் ஒளி பாய்ச்சும் மின்மினிகள்.

ஸ்டாலின் கால ஒடுக்குமுறை விபரங்களும் அக்ம தோவாவின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளும் அறியாத வாசகனுக்கு இக்கவிதைகள் புதிர்கள்தான். அதிலும் அக்மதோவா என்னும் ஆளுமை மர்மம்தான்.

அக்மதோவா தன் இறுதிக் காலத்தில் எழுதி வந்த குறிப்பேடுகளில் ஓரிடம். poem without a hero தொடர்பானது... ஆரம்பகட்ட மாயகோவ்ஸ்கி கணப் பருகே புகை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். என்னை அங்கே காணவில்லை, ஆனால் எங்கோ ஓரிடத்தில் என்னை ஒளித்து வைத்திருப்பேன் மோதி க்ளியானி ஓவியத்தின் நெஃபெர்டிடியாக இல்லாது போனால்.

1911இல் அவர் அப்படித்தான் எகிப்திய தலையலங்காரத்துடன் என்னைப் பலமுறை தீட்டியிருந்தார். தாள்களை நெருப்பு விழுங்கிவிடக் கனவு ஒன்று அவற்றிலொன்றை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.”

அக்மதோவாவின் உணர்வுநிலையைப் பிரக்ஞையோட்டத்தை ஆன்மாவின் தவிப்பைச் சொல்வதற்கு இணையான கவிதை பிரவாகத்தை ஈழப் போர்க்களத்திலிருந்து  பாயவிடுகின்றார்  கருணாகரன்.

கடந்துசெல்லும் ரெயினில் யாரும்
கையசைக்கவோ
புன்னகைக்கவோ இல்லை

சாவின் அதிர்ச்சியில் எல்லோரும்
உறைந்துவிட்டனர் போலும்

இறந்தவரைப் பற்றிய துக்கமும்
மரணத்தின் கலக்கமும்
எல்லோரையும் சோர்வடையச் செய்திருக்கிறது

துக்கம் அப்பிய கணங்களில் சுரக்கும்
இரக்கத்தை முகர்ந்து பார்க்கிறேன்

வேதனையின் வேர்கள் பரவிக்கிடக்கின்றன
எல்லா இடத்திலும்

அக்கணத்தில் ஒரு மின்னலாக

குறுஞ்செய்திகளில் ஒரு முத்தத்தைப்
பகிர்ந்துகொண்டிருக்கிறாள்

ஒரு பெண்
சாவுச் செய்தியில் செருகப்பட்ட மலராகியது

அவளுடைய அந்த முத்தம்
இறந்தவனின் உடல் வாசனைத் திரவமாகி
அந்த ரெயினைக் கரைத்தது.

(குறிப்பு: இலங்கைத் தமிழர் வழக்கில் ரெய்ன் என்பது ட்ரெய்ன்)

ஆணின் அதிகாரத்தையும் அரசின் அதிகாரத்தையும் எதிர்த்த கலகக் குரல் அக்மதோவாவினுடையது. அவர்“ரகசியத்திலிருந்து வெளிப்படும் மர்மம், மர்மத்திலிருந்து அவிழும் புதிர்”.

இப்புதிரை அறிந்தவர்களாக இசையா பெர்லின் இருக்கக்கூடும், மோதிக்ளியானி இருக்கக்கூடும்.

‘சூரியன் எழுந்தது நகரில் கலகக்காரனைப் போல்’என்னும் அக்மதோவாவின் வரி அவருக்கும் பொருந்தும்.

ஆதாரங்கள்:

 1. The word That causes Death’s Defeat/ Nancy K. Anderson/ yale ilny. Press, 2004.
 2. Representation of Grief in Akhmatova’s Requiem and pushkin’s the Bronze Horseman/ Hillway smith. Digital commonse Colby, 2008.
 3. Anna akhmatova/ Ludmilla Mandrykina/ soviet Literature - 6, 1979.
 4. Anna akhmatova: Where to start with her literature/ Madeleine Nosworthy/Fivebooks.com
 5. Love story/David Brooks - The Hindu - May3, 2014.
 6. Anna akhmatova/ Poetry foundation.com
 7. அம்ருதா, ஜனவரி 2018 - கருணாகரன் கவிதைகள்

துயரத்தின் நிறங்கள்

மனித சமூகத்தில் உலகெங்கிலும் கறாரான இருமையின் எதிர்வுகளால்(0:1, ஆண்: பெண்) கடுமையான உடல் - மனச்சிதைவிற்கு ஆளாகிறவர்களாக பால்புதுமையினரே இருந்துகொண்டிருக் கிறார்கள்.

பருவ மாற்றங்களின்போதான உடலியல் முகிழ்வுகள் பொதுவாக மனிதர்களுக்கு புதுமையின் ஒளிர்வாக- பரவசமூட்டுவதாக - காலத்தின் வசந்தமாக அமைந்துவிடுகிறது. 

ஆனால், அதுவே பால் புதுமையினருக்கு நரகத்தில் நுழையும் கொடுந்துயராக இருக்கிறது.

அத்தகைய நோவுகளையும் பாடுகளையும் உலகெங் கிலும் உள்ள பால்புதுமையினப் படைப்பாளர்கள் பல்லாயிரம் பக்கங்களில் எழுதி வைத்துள்ளனர்.

அதில் கவிதையில் எளிய சொற்களின் கோர்வையில் மிகப்பெரிய விசயங்களைச் சொல்லிச் செல்கின்றனர். அக்கவிதைகளில் படரும் துயரத்தின் சில நிறங்கள் ...

Allpoetry.com  இணையத்தளத்திலிருந்து.

உன் மகன்...

தடை செய்யப்பட்ட அப்பெயரை
தட்டச்சு செய்கையில்
நான் தொட்டப் பலகையின் ஒவ்வோர் விசையும்
என் விரல் நுனிகளை எரித்தன
உன் பெற்றோரின் கேள்வி
“இதிலென்ன தவறு, நீயேன் 
இதை விரும்பவில்லை?”

அவர்கள் உனக்குச் சொல்கிறார்கள்
நீ ஒருபோதும் அவர்களது மகனாக
இருக்க முடியாதென
ஆனால், நான் எப்போதும் அவ்வாறுதான் இருக்கிறேன்

அந்தப் பெண் இறந்து விட்டாள்
வெகுகாலம் முன்பே அவள் மறைந்துவிட்டாள்

ஆனால், அவன் இங்கேதான் வாழ்ந்துகொண்டு
மற்றும் உயிருடன் இருக்கிறான்
இறந்தவொரு உடலத்தைக் காட்டிலும்
உயிருள்ள மகன் மேலன்றோ...

உங்கள் மனங்களில் அவள் இறந்துவிடவே
நான் விழைகிறேன்
ஏனெனில், நான் அவளில்லை
அவள்
வெகுகாலம் முன்பே மறைந்துபோய் விட்டாள்.

- சலிம் வைஸர்

முடிவற்ற...

அந்தச் சிறுமி தன் முடிவற்ற இரவுகளை
கண்ணாடிக்கு முன்பே கழித்தாள்
தனது மாறுபட்ட பிறப்பினை விரும்பியவண்ணம்
அவள் வேண்டுகிறாள்
தனது குரல் தடித்த அழுத்தமான ஒன்றாக இருக்கலாகாது என
தனது கணுக்கால்கள் மயிரடர்ந்ததாக
இருக்கலாகாது என
தனது தோள்கள் மிக அகன்றதாக
இருக்கலாகாது என
தனது மார்புகள் தட்டையானதாக
இருக்கலாகாது என
வேண்டினாள்
யாசித்தாள்
பிராத்தித்தாள்
தன் மாறாத் துயர் மீண்டு
வெறுமை அகன்று போகவென்று
ஒரு நாள் அவளது இறந்த உடலத்தை
அவர்கள் கண்டடைந்தனர்
அவளது இறுதி அடக்கம்
நடைபெறவுள்ளது - ஓர்	
ஆணின் உடலுக்கானதாக.

-டெஸ்மொமென்ட்

குரல்கள்

மக்கள் மென்மையான குரல்களைப் 
போற்றிப் புகழ்கின்றனர்
அவை
அன்பும் அரவணைப்பும் நிறைந்த குரல்கள்
இனிமையும் நம்பிக்கையும் கொண்ட குரல்கள்

கரகரப்பான குரல்களின் மீது அவர்கள் மையல் கொள்கிறார்கள்
ஆண்மையும் ஆழமும் மிகுந்த குரல்கள்
பாதுகாப்பு உணர்வு தரும் தொலைதூரக் குரல்கள்

எனது கரடு முரடான குரல்களை
எவரும் பொருட்படுத்துவதில்லை
அது உடைந்து திரிபுற்ற குரல்
ஆழமற்ற - அதே நேரம்
பெரும் ஓசையற்ற குரல்
அமைதியான ஆனால்
மென்மையில்லாக் குரல்
பாதுகாப்பான - ஆனால்
ஆண்மையற்ற என் குரல்

எவருமே பொருட்படுத்துவதில்லை
ஆணாகப் பிறந்திடாத
ஓர் சிறுவனின் குரலை.

-மெனோடொரா கெய்

மயிர்

கருத்த கோடுகளும் குறுகிய கம்பியிழைகளும்
சிந்தனைக்குத் தடையாக வெளியே துருத்திக்கொண்டிருக்கும்
ஓர் எளிய தொடுகை மட்டுமே போதும்
அது கைகளின் அலைச்சலை நீக்கிப்
பின் மனதை விழிப்புறச் செய்யும்

ஓர் தகுதியான உடலில் இது
முதிர்ச்சியின் அடையாளம்
அழகான முரட்டுத்தனமான
நிச்சயம் கவர்ச்சிகரமான அடையாளமே அது

ஆனால் எனக்கோ அதுவொரு சாபம்
என்றென்றைக்குமான
ஓர் துயரத்தின் நினைவூட்டல்
நீயொரு போலி நீயொரு தோல்வி என்பதாக
அது சதியின் தோற்றுமுகமாயிருக்கிறது

கண்ணாடியில் பார்க்கையில்
பயங்கர நிழலெனத் தெரிகிறது
சவரம் அவசியத் தேவை - ஒருவேளை
அதைத் தீயிலும் பொசுக்கலாம்
ரசாயனங்கள், இடுக்கி, லேசர் மற்றும் மெழுகு
எல்லாம் எனக்கான ஆயுதங்கள்
இவைகளின்றி
என்னால் நிம்மதியாக இருக்க முடியாது

என்மனம் பலவீனமானது
அது உடைந்து நொறுங்குகிறது
நினைவுகளின் வேதனை என்னை
இருளுக்குள் தள்ளுகிறது

மயிர்களும் கனத்த சதைகளும் கொண்ட
கூண்டினுள் மீண்டும் நான் சிக்குண்டேன்
எனது இடுப்பு மிகக் குறுகியது
தோள்கள் நல்ல அகலமானவை
என் மார்புகள் மிகத் தட்டையானவை
வயிறு வீங்கிய வடிவிலானது
என் மயிர் மெல்லியதாக இருக்கவேண்டும்
அவை விரைவாக வளர்வதை
நான் வெறுக்கிறேன்

நீங்கள் நினைப்பதுபோல்
இதுவென்றும் நகைச்சுவை அல்ல
நான் அச்சம் கவலை மற்றும் மனச்சோர்வில்
வீழ்ந்திடும்போது சில மயிர்களின் மேல் மட்டும்
அதீத கவனம் செலுத்துகிறேன்

இயற்கையன்னை உதவிக்கு வருவாள் 
மயிரின் நிறம் மெதுவாக மங்கும்போது
அதன் ஒரு பகுதியை 
அவள் எடுத்துச் சென்றுவிடுகிறாள்

நான் உடைந்து நொறுங்கி வீழும்பொழுதிலெல்லாம்
எனக்குள் முணங்கிக்கொள்கிறேன்
உறுதியுடன் இரு
ஒன்பது ஆண்டுகளில் ஓர் மாற்றம் உருவாகும்
நான் ஒவ்வொருமுறை கடந்து செல்லும்பொழுதும்
கண்ணாடி என்னிடம் கிசுகிசுக்கிறது
இறுதியில் அமைதியே நிலவுமென்று 

என் விருப்பங்களை நிலைநிறுத்த
எனக்கேயான நங்கூரங்கள் இருக்கின்றன
ஆனால் அவை அச்சத்தின் தொலைகாலத்திற்கு
அப்பால் உள்ளன

எனவே, இந்த மூடுபனிக்குள் சிக்குண்டவாறு
நானிருக்கிறேன்
எரியும் கோபத்தின் கடும் மன அழுத்தத்தின்
வாழ்வினை நகர்த்தியவாறு.

-சராஃபியா

மொழியாக்கச் சிறுகதை

Archibald Colquhoun and Peggy Wright ஆகியோர் இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்த Adam One Afternoon தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் ஆங்கிலப்  பதிப்பு காலின்ஸ் பதிப்பகம் 1957. இந்த பதிப்பு 2000-இல் ரேண்டம் ஹவ்ஸில் வெளியிட்டது.  

மிகத் தொலைவிலிருந்து இங்கே பார்ப்பது கடினம், மேலும் யாராவது ஒருவர் இங்கே ஒருமுறை வந்திருந்தாலும் கூடத் திரும்பிச் செல்லும் வழியை ஞாபகப்படுத்த முடியாது.

ஒரு காலத்தில் இங்கே ஒரு பாதை இருந்தது, ஆனால் முள்செடிகளை வளரவிட்டு நான் ஒவ்வொரு தடயத்தையும் அழித்தேன். இது நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, இந்த என் வீடு.

மஞ்சள் பூக்கும் காட்டுமுள் செடிகள் அடர்ந்த கரையில், ஒரே ஒரு தளம் கொண்டது, பள்ளத்தாக்கிலிருந்து இதைப் பார்க்க முடியாது, இந்த வீடு சுண்ணாம்பில் வெள்ளை அடித்திருப்பதையும் ஜன்னல்கள்  சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருப் பதையும்.

இதைச் சுற்றி கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. லெட்டூஸ் கீரைகளை நத்தைகள் மெள்ளும் ஒரு துண்டு காய்கறிப்பாத்தி எனக்குப் போதுமானது.

சற்றே மேடாக்கப்பட்ட பூமியில் ஒரு முள் மண்வெட்டியைக் கொண்டு உருளைக்கிழங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறேன், எல்லாம் ஊதா நிறத்தில் மொட்டுவிட்டுக் கொண்டிருக்கின்றன.

நான் எனக்கு உணவளித்துக்கொள்ளும் பொருட்டு உழைத்தால் போதும், காரணம் எவரிடமும் எதையும் எனக்குப் பகிர்வதற்கு ஒன்றுமில்லை.

நான் முள்செடிகளை மீண்டும் வெட்டுவதில்லை, இப்போது வீட்டின் கூரையின் மீது ஏறிக்கொண்டிருப்பதையும் சரி, கொஞ்சம் கொஞ்சமாய் விழத்தொடங்கும் பனிச்சரிவு போல, சீர்ப்படுத்தப்பட்ட நிலத்தின் மேல் படர்ந்து வருபவற்றையும் சரி.

அவை சகலத்தையும் புதைத்துவிடுவதை விரும்புவேன், என்னையும் சேர்த்து. பல்லிகள் அவற்றின் கூடுகளைச் சுவர்களின் வெடிப்புகளில் வைத்திருக்கின்றன, எறும்புகள் தரையின் செங்கற்களின் அடியிலிருந்து தமது துளைகள் மிகுந்த நகரங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டுவிட்டன.

ஒவ்வொரு நாளும் புதிய வெடிப்புகள் வந்திருக்கின்றனவா என்று எதிர்பார்ப்பேன், மேலும் மனித இனத்தின் நகரங்களும் களைகளால் நிறைக்கப்பட்டு விழுங்கப்படுவதை  நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

என் வீட்டின் மேற்புறமாகக் கரடுமுரடான பள்ளத்தாக்குகளின் சில பகுதிகள் உள்ளன. அவற்றில் நான் எனது ஆடுகளைத் திரியவிடுகிறேன். அதிகாலை வேளையில் முயல்களின் வாசனையைப் பிடித்துக் கொண்டு சில சமயங்களில் நாய்கள், இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்.

அவற்றைக் கற்களை வீசி நான் துரத்துவேன். நாய்களை நான் வெறுக்கிறேன், அவற்றின் அடிமைத்தனமான மனித விசுவாசத்தையும். எல்லா வீட்டு மிருகங்களையும் நான் வெறுக்கிறேன், எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த தட்டுக்களின் மிச்சங்களை நக்குவதற்காக அவை மனிதர்களிடம் காட்டும் அவற்றின் கருணை போன்ற பாசாங்கினையும்.

நான் பொறுத்துக்கொள்ளக்கூடிய மிருகங்கள் ஆடுகள் மாத்திரமே, காரணம் அவை மனித நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை, எதையும் கொடுப்பதும் இல்லை.

என்னைக் காப்பதற்குச் சங்கிலியால் கட்டிய நாய்கள் எனக்குத் தேவையில்லை. உயிர்வேலிகளோ, பூட்டுகளோ கூட. அவை அருவெறுக்கத்தக்க மனிதரின் உபகரணங்கள்.

என்னுடைய தோட்டத்தைச் சுற்றிலும் தேனீக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒரு தேனீக்கூட்டத்தின் பறத்தல் என்பது முள்ளடர்ந்த உயிர்வேலி போன்றது. அதை நான் மட்டுமே கடக்க முடியும்.

இரவு நேரத்தில் தேனீக்கள் பீன்ஸ் விதைகளின் தோல்கள் மீது உறங்குகின்றன, ஆனால் எந்தமனிதனும் என் வீட்டினருகில் வருவதில்லை. அவர்களுக்கு என்னைப் பற்றிப் பயம், அதுவும் சரிதான். என்னைப் பற்றி அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட கதைகள் நிஜம் என்பதல்ல இதற்குக் காரணம்.

அவை பொய்கள் என்று நான் சொல்கிறேன், அவர்கள் எப்போதும் சொல்கிற விஷயங்கள்தான். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிப் பயப்படுவது சரிதான், அவர்கள் பயப்படவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.

காலையில் நான் உச்சிப் பகுதிக்குச் செல்லும்போது, கீழே பள்ளத்தாக்கு விரிவதைப் பார்க்கிறேன், உயரமாக எல்லாப் பக்கமும் என்னைச் சுற்றியும் இந்த உலகினைச் சூழ்ந்தும் கடல் இருப்பதை என்னால் பார்க்க முடியும்.

மனித இனத்தின் வீடுகள் கடலின் விளிம்புகளில் அமைந்திருப்பதையும், அவற்றின் பொய்யான அண்டை வீட்டுத் தன்மையுடன் கப்பல் தகர்வடைந்தது போலிருப்பதையும். நான் பழுப்பு மஞ்சளானதும் சுண்ணாம்புக் கற்களால் ஆனதுமான நகரத்தையும், அவற்றின் ஜன்னல்களின் பளபளப்பையும், அவற்றின் நெருப்பின் புகையையும் பார்க்கலாம்.

ஒரு நாள் முள்செடிகளும் புல்லும் அவற்றின் சதுக்கங்களை மூடிவிடும், கடல் வந்து அவற்றின் சிதிலங்களைப் பாறைகளாக வடிவமைத்து விடும்.

இப்பொழுது தேனீக்கள் மட்டும்தான் என்னுடன் இருக்கின்றன. தேனடைகளில் நான் தேன் எடுக்கும் பொழுது என்னைக் கொட்டாமல் என் கைகளைச் சுற்றி ரீங்காரமிடுகின்றன, என் மீது ஒரு வாழும் தாடி போன்று படிந்துவிடுகின்றன.

நட்பான தேனீக்கள், எவ்வித வரலாறும் இல்லாத புராதன இனம். பல ஆண்டுகளாக இந்த மஞ்சள்பூ முள்செடிகளின் கரைப் பகுதியில் வாழ்ந்துவருகிறேன், ஆடுகளுடனும்,  தேனீக்களுடனும்.

கடந்து சென்ற ஒவ்வொரு வருடத்தையும் குறிக்கச் சுவற்றில் குறியிடும் வழக்கம் இருந்திருக்கிறது ஒரு சமயம். ஆனால் முள்செடிகள் இப்போது எல்லாவற்றையும் நெருக்கி மறைக்கின்றன.

நான் ஏன் மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகவேலை செய்யவேண்டும்?

நான் அவர்களின் வியர்வை மிகுந்த கைகளை வெறுக்கிறேன், அவர்களின் காட்டுமிராண்டித்தனமான சடங்குகளையும், அவர்களின் நடனங்களையும், தேவாலயங்களையும், அவர்தம் பெண்களின் அமில எச்சிலையும்.

ஆனால் அந்தக் கதைகள் நிஜமல்ல, என்னை நம்புங்கள், என்னைப் பற்றிய அந்தக் கதைகளை அவர்கள் எப்போதும் சொல்லி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய் சொல்லும் பன்றிகள்.

நான் எதையும் கொடுப்பதுமில்லை, நான் எவருக்கும் எதுவும் கடன்பட்டதுமில்லை. இரவு நேரங்களில் மழை பெய்தால், காலையில் கரையில் வழுக்கி நகர்ந்து வரும் பெரிய நத்தைகளைச் சமைத்து உண்கிறேன்.

காட்டின் தரையில் ஈரமான, மிருதுவான குடைக் காளான்கள் இரைந்து கிடக்கின்றன. எனக்குத் தேவைப்படும் மற்ற எல்லாவற்றையும் இந்தக் காடு தருகிறது. எரிப்பதற்கான குச்சிகளையும், பைன் காய்களையும், செஸ்ட்நட் கொட்டைகளையும். கண்ணி வைத்து நான்முயல்களையும் த்ரஷ் பறவைகளையும் கூடப் பிடிக்கிறேன்.

ஏன் எனில் எனக்குக் காட்டு விலங்குகளைப் பிடிக்காது, அல்லது இயற்கை பற்றிய உன்னத வழிபாட்டை - அது மனிதனின் அபத்தமான வெளிவேஷங்களில் ஒன்று.

இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கவேண்டும் என்பதையும், வலுவானவன் வைத்த சட்டமே நிலைக்கிறது என்பதையும் நான் அறிவேன். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மாத்திரமே கண்ணி வைத்துக் கொல்கிறேன், துப்பாக்கிகள் கொண்டல்ல, காரணம் அவற்றை எடுத்து வருவதற்கு வேறு மனிதர்களோ அல்லது நாய்களோ தேவை.

ஒவ்வொரு மரமாக அவர்கள் வெட்டும் கோடரிகளின் மழுங்கின ‘தட்’ ஓசையால் சில சமயங்கள் சரியான நேரத்தில் நான் எச்சரிக்கப்படாதுவிட்டால் காட்டில் சில மனிதர்களைச் சந்திக்கிறேன்.

அவர்களை நான் பார்க்காததுபோலப் பாசாங்கு செய்வேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் இந்தக் காடுகளுக்கு விறகு சேகரிக்க வருவார்கள், கற்றாழைகளின் பிடுங்கப்பட்ட தலைகளைப் போல அவர்கள் பிய்த்து எடுத்திருப்பார்கள்.

அடிமரங்கள் கயிறுகள் கொண்டு இழுத்துச் செல்லப்படுகின்றன, அவை உருவாக்கும் ஒழுங்கற்ற தடங்கள் புயல்காலத்தில் மழையைத் தேக்கி நிலச்சரிவுகளை உண்டாக்கத் தூண்டுகின்றன.

மனிதரின் நகரங்களில் உள்ள சகலமும் இத்தகைய அழிவுக்கே சென்று சேரட்டும். ஒரு நாள் நடந்து செல்லும்போது நான் பார்க்க வாய்க்குமா, வீட்டுப் புகைபோக்கிகள் பூமியிலிருந்து வெளிவருவதையும், படுபாதாளங்களில் விழும் தெருக்களின் பகுதிகளை நான் சந்திப்பேனா, காட்டின் மத்தியில் ரயில் பாதையின் துண்டுகளால் நான் தடுக்கி விழுவேனா?

கண்டிப்பாக நீங்கள் வியப்பீர்கள், இந்த என்னுடைய தனிமை என் மீது கனத்துக் கவிவதை நான் உணரவில்லையோ என்றும், ஏதோ ஒரு மாலையில் நீண்ட அந்திமயங்கும் நேரங்களில் ஒன்றில், நீண்ட வசந்தகாலத்தின் மாலை மயங்கும் நேரத்தில், எவ்வித குறிப்பிட்ட நோக்கமும் என் சிந்தனையில் இல்லாமல், மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் செல்லவில்லையா என்றும்.

நான் செல்லத்தான் செய்தேன், ஏதோ ஒரு மாலைவேளை, ஒரு நீண்ட கதகதப்பான மாலை மயங்கும் நேரத்தில், வசந்தத்தின் நீண்ட மாலை மயங்கும் சமயம் சென்றேன்.

கீழே இருக்கும் தோட்டங்களைச் சூழ அமைந்திருக்கும் சுவர்களை நோக்கிச் சென்று ‘மெட்லர்’ மரங்களின் வழியாகக் கீழே இறங்கினேன். ஆனால் பெண்கள் சிரிப்பதையும் ஒரு தூரத்துக் குழந்தையின் அழைப்பினையும் கேட்டவுடன் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.

அதுதான் கடைசித் தடவை. இப்பொழுது மேலே நான் தனியாக இருக்கிறேன். நல்லது, இப்பொழுதும் அப்பொழுதும் தவறுகள் செய்வது பற்றி நானும் பயந்துவிடுகிறேன் உங்களைப் போலவே. மேலும் உங்களைப் போலவே நானும் முன்புபோலவே தொடர்கிறேன்.

நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள், வாஸ்தவமாக, உங்கள் கணக்குச் சரிதான். அந்த விவகாரத்தினால் அல்ல, இருந்தாலும், அது எப்போதாவது நடந்ததா இல்லையா என்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது அது ஒரு விஷயமே இல்லை, எப்படி இருந்தாலும்.

அந்தப் பெண், நீண்ட புல்வெட்டும் ‘சைத்’ கருவியுடன் இங்கு மேலே வந்த அந்தக் கறுப்புப் பெண், அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது, அப்பொழுது இன்னும் கூட மனித உணர்ச்சிகளால் நிறைந்தவனாக நான் இருந்தேன்--நல்லது, அவள் அந்தச் சரிவின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன், என்னை அவள்கையசைத்து அழைத்தாள், ஆனால் நான் பதில் சொல்லாமல் கடந்து போய்விட்டேன்.

ஆமாம், நான் அப்பொழுது கூட இன்னும் மனித உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தேன், மேலும் அந்தப் பழைய கோபத்துடனும் கூட. மேலும் அந்தப் பழைய கோபத்தினால் - அவளுக்கு எதிராக இல்லை என்றாலும் கூட, அவளுடைய முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை - நான் அவளுக்குப் பின்புறம் சென்றேன், அவளுக்கு என் ஓசை கேட்காமல்.

இப்பொழுது மனிதர்கள் சொல்லும் கதைகள் வெளிப்படையாகவே பொய்யானவை, காரணம் அப்போது மிகவும் தாமதமாகி இருந்தது, பள்ளத் தாக்கில் ஒரு குஞ்சும் கூட இருக்கவில்லை, அவளுடைய குரல்வளையைச் சுற்றி என் கைகளைப்போடும்போது எவரும் அவள் சப்தத்தைக் கேட்க வில்லை.

ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள நான் என் கதையை ஆரம்பத்திலிருந்து சொல்லவேண்டியிருக்கும்.

ஆங், நல்லது, நாம் அந்த மாலை நேரத்தைப் பற்றி இனி குறிப்பிட வேண்டாம். இங்கே நான்வாழ்கிறேன், லெட்டூஸ் கீரைகளைத் துளையிடும் நத்தைகளுடன் எனது லெட்டூஸ் கீரைகளைப் பகிர்ந்து கொண்டு.

குடைக்காளான்கள் வளரும் எல்லா இடங்களையும் எனக்குத் தெரியும், அவற்றில் விஷக்காளான்களுக்கும் நல்லவற்றுக்கும் என்னால்வித்தியாசத்தைச் சொல்ல முடியும். பெண்களைப்பற்றியும் அவர்களின் விஷங்களைப் பற்றியும்நான் இனியும் சிந்திப்பது கிடையாது.

கற்புடன் இருப்பது என்பது ஒரு பழக்கமே தவிர வேறல்ல, எல்லா வற்றுக்கும் மேலாக.

அவள்தான் கடைசி ஆள், புல்வெட்டும் கருவியுடனிடருந்த அந்தக் கறுப்புப் பெண். வானம் மேகம் நிறைந்திருந்தது. நான் ஞாபகம் கொள்கிறேன், கறுப்பு மேகங்கள் கடந்து சென்றன.

அது போன்றதொரு விரையும் வானத்தின் கீழே, ஆடுகளினால் ஒட்டமேயப்பட்ட சரிவுகளில், முதல் மனிதத் திருமணங்கள் நடந்திருக்கவேண்டும். மனித ஜீவன்களுக்கிடையில் ஆன தொடர்பில் பரஸ்பர பயங்கரமும், அவமான மும் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது.

நான் விரும்பியதும்கூட அதைத்தான். பயங்கரத்தையும் அவமானத்தையும் காண்பதற்கு, அவள் கண்களில் வெறும் பயங்கரத்தையும் அவமானத்தையும் காண. அந்த ஒரு காரணம்தான் அதை நான் அவளுக்குச் செய்தது, என்னை நம்புங்கள்.

அதைப்பற்றி என்னிடம் ஒருவரும் ஒரு வார்த்தையும் என்றுமே சொல்லவில்லை. அவர்களால் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் இல்லை, அந்த மாலை பள்ளத்தாக்கே வெறிச்சோடிக் கிடந்தது.

ஆனால் ஒவ்வொரு நாளும் மலைகள் இருளில்மூழ்கும்போது, லாந்தர் விளக்கொளியில் அந்தப் பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நான் நகரத்தை உணர்கிறேன், அதனுடைய மனிதர்களுடனும், வெளிச்சங்களுடனும், இசையுடனும் கீழே அவர்கள் இருப்பதை உணர்கிறேன்.

உங்கள் குரல்கள் யாவும் என்னைக் குற்றம் சாட்டுவதை உணர்கிறேன்.

ஆனால் என்னைப் பார்ப்பதற்குப் பள்ளத்தாக்கில் ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் அந்த விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம் அந்தப் பெண் வீடு திரும்பவில்லை என்பதுதான்.

கடந்து செல்லும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் நின்று உறைந்துபோகின்றன, தரையைத் தம் கால்களால் கீறி ஊளையிடுகின்றன என்றால், அதற்குக் காரணம் அங்கே ஒரு வயதான குழிமுயலின் வளை இருப்பதுதான், நான் சத்தியம் செய்கிறேன், வயதான வெறும் குழிமுயலின் வளை.

மதிப்புரை

I

தரை, கடல், வான் எனச் சாலைகளும் ஊர்திகளும் பெருகிவிட்ட சூழலில் உள்நாட்டிற்குள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்து பரவசம் அடையக்கூடிய வாய்ப்புகள் பின்காலனித்துவச் சமூகத்தில் வளர்ந்துவிட்டன.

இன்று பூமிக்கு வெளியே விண்வெளிச் சுற்றுலாப் பயணம் போய் வருவதும் நடந்துகொண்டிருக்கிறது; பழக்கப்பட்ட காட்சிகளைவிட மேற்கண்ட பயணங்களில் எதிர்கொள்ள நேரும் பழக்கப்படாத, அதிசயத்தில் ஆழ்த்தும் காட்சிகளாலும் மனிதர்களாலும் உள்ளத்தில் ஏற்படும் எல்லை இல்லாப் பரவசத்தையும் களிப்பையும் மற்றவர்களோடும் பகிர்ந்து இன்பம் காணத் துடிக்கும் ஒரு மன அமைப்பில் இருந்து பிறந்ததுதான் இந்தப் பயண இலக்கியம் எனக் கருதலாம்.

தமிழ் இலக்கிய மரபில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தொடங்கி ஐம்பெருங் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பலவற்றிலும் இந்தப் பயணம் என்பது ஒரு நிகழ்வாக இணைக்கப் பட்டுள்ளது.

(சிலப்பதிகாரத்தில் பயணங்கள் - என்றே இக்கட்டுரையாளர் ஒரு சிறுநூல் எழுதியுள்ளார்.) காப்பியத்தில் பயின்றுவரும் உறுப்புகளில் செலவு - அதாவது பயணம் என்பது ஒன்று என வகுத்தவர்களின் இலக்கிய அறிவைப் பாராட்டத் தோன்றுகிறது; ஆனாலும் 20ஆம் நூற்றாண்டின் காலனித்துவச் சமூகத்தில்தான் தனித்ததொரு இலக்கிய வகை எனச் சொல்லும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது; எனவே தொடக்கக் காலப் பயண இலக்கிய நூல்களாகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட முடிகிறது.

வீராசாமி ஐயர் எழுதிய ‘காசி யாத்திரை’ (1832) முதல் தமிழ்ப் பயண நூலாகக் கருதப்படுகிறது; தொடர்ந்து சேலம் நரசிம்மலு நாயுடு எழுதிய ‘ஆரிய திவ்விய தேச யாத்திரையின் சரிதம்’ (1885), துரைசாமி மூப்பனார் எழுதிய ‘கங்கா யாத்ரா ப்ரபாவம்’ (1887), கொ.சண்முகச்சுந்தர  முதலியாரின் ‘காசி ராமேஸ்வர யாத்திரை’(1903) முதலிய நூல்கள் தமிழில் பயண இலக்கியம் என்கிற வகை உருவாகத் தொடக்கமாக அமைந்தன.

தொடர்ந்து ‘உலகம் சுற்றிய தமிழர்’  என்று 1940களிலேயே அறியப்பட்ட ஏ.கே.செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்) (1911-1983) ஏறத்தாழ பத்துப் பயண நூல்கள் எழுதியதோடு 1850க்கும் 1925க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பலருடைய  கட்டுரைகளைத் (ஏறத்தாழ 140) தேடித் தொகுத்து,  ‘பயணக்கட்டுரைகள்’ என்று ஆறு தொகுதிகளை வெளியிட்டார்.

இன்னும் திரு.வி.க. (இலங்கைச் செலவு), சி.சுப்பிர மணியன் (நான் கண்ட சில நாடுகள்), கவியோகி சுத்தானந்த பாரதியார் (நான் கண்ட ரஷ்யா), மு.வரத ராசனார் (யான் கண்ட இலங்கை), ம.பொ.சி. (மாஸ்கோ விலிருந்து இலண்டன் வரை), சாலை இளந்திரையன் (எங்கள் பயணங்கள்) எனப் பலரும் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

பயண நூல் எழுதுவதற்காகவே உலகம் முழுவதும் பயணம் செய்த ‘இதயம் பேசுகிறது’ என்ற இதழை நடத்திய மணியன், 12 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். 1885 தொடங்கி 2008 வரை 600 பயண நூல்கள் வந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூகுள் கட்டுரையில் பதிவாகியுள்ளது.

இத்தகைய பயண இலக்கிய நூல் வரிசையில் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (1921-1982) நான்கு பயண இலக்கிய நூல்களும் தனித்து விளங்குகின்றன.

மேன்மையான ஒரு புனைகதையை எழுத்தாளருக்குரிய மொழிநயமும் நுட்பமான அவதானிப்பும் அங்கதம் வந்து அப்பும் நடையும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அள்ளி வழங்குபவையாக அமைகின்றன.

இந்திய வானொலி நிலையத்தின் நிர்வாகம் ஜப்பான் நாட்டு வானொலி நிலையத்தின் செயல் முறைகளை அறிந்து வர தி.ஜா.வை ஜப்பானுக்குச் சென்றுவரப் பணிக்கிறது.

அப்பொழுது தான் கண்ட ஜப்பானை, சுதேசமித்திரன் இதழில் தொடராக எழுதியுள்ளார்; தொடர்ந்து 1967இல் ஐந்திணைப் பதிப்பகம் ‘உதய சூரியன் - ஜப்பான் பயணக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணக் கட்டுரைகளைச் சிட்டியும் தி.ஜா.வும் சேர்ந்து எழுதியுள்ளனர். 1971ஆம் ஆண்டில் புக்வெஞ்சர் (Book Venture) என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தி.ஜா.  நடை  அவ்வளவாகப்  புலப்படவில்லை.

அரசின் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ரொமானியாவுக்கும், செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்த பயண அனுபவத்தைக் கணையாழியில் தொடராக எழுதியுள்ளார்; 1974இல் புத்தகமாக வெளி வந்துள்ளது; வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற தலைப்பில்.

பத்து அதிசயங்களைக் கொண்ட ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற பயண நூலைச் சாவி இதழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்குச் சர்வதேசக் குழு ஒன்றுடன் சேர்ந்து சென்று வந்த அனுபவத்தைப் பேசுகிறது.

இந்த நான்கில் தி.ஜா.வின் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இந்தக் கருத்தரங்கிற்காகக் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற முக்கியமான ஒரு பயண நூலை மட்டும் மையப்படுத்தி இக்கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.

II

எடுத்துரைப்பின் அழகியலை அணுஅணுவாய் உணர்ந்து அறிந்த ஒரு கைதேர்ந்த கதைசொல்லி என்பதால், தொடக்கத்திலேயே வியக்கும்படியாக ரொமானியா

(ருமேனியா, உருமேனியா, உருமானியா, Romania )-வில் கண்ட காட்சியைப் பற்றிப் பேசுகிறார். வாசிக்கத் தொடங்கினால், காணாத ஒரு காட்சியைப் பற்றிப் பேசுகிறார். அது ஒரு சிகிச்சை விடுதி - ஆரோக்கிய விடுதி - பற்றியது. “அந்த விடுதியில் ஒரு மாதம் தங்கினால் கட்டிளங்காளையாகத் திரும்புவீர்கள்” என்றொரு ‘கவி’ பரிந்துரை செய்கிறார்.

“அந்த அளவிற்கு எங்களுக்கு நேரமும் இல்லை; டாலரும் இல்லை.” என்று தன்னிலையைப் பதிலாகச் சொல்லுகிறார். இந்தக் காயகல்ப சிகிச்சை விடுதிக்கு அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து முதலிய பல நாடுகளில் இருந்து வருகிறார்கள் என்ற தகவலையும் தருகிறார்.

இப்படியான தான் செல்லாத இடத்தைக் குறித்த ஓர் உரையாடல் மற்றும் கதை மூலமாகச் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைக்க நடக்கும் விளம்பர உத்தி இவையெல்லாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் தி.ஜா.

அவருடைய புனைவெழுத்துகளிலும் நீக்கமற இடம்பெறும் இத்தகைய சொல்முறை இந்தப் பயணநூலிலும் பரவிக்கிடப்பதால் கவனமாக வாசிக்கிறவர்களுக்கு வாசிப்பு இன்பம் பெருகிவரும் என்பது உண்மை.

ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போரை எதிர்கொண்ட வடுக்களால் நிரம்பிக் கிடப்பவை. தி.ஜா. வுக்கும் அந்த வடுக்கள்தான் முதலில் கண்ணில் படுகின்றன.

ப்ராஹாவில் தங்கியிருந்தபோது ஸாவர்னா என்ற உணவு விடுதிக்குச் சென்றால், உண்டு கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலோர் 60 - 70 வயதுதான கிழவர்கள்.

காரணம் கேட்டால், “இரண்டாம் உலகப் போரில் இளைஞர்களும் நடுவயதுக்காரர்களும் போர்முனையில் மாண்டுவிட்டனர்; இளைஞர்கள் இனிதான் பெருகவேண்டும்” என்றுபதில் கிடைக் கிறது; பதில் சொன்ன அந்த நண்பரிடம்தன்னுடைய டில்லி நண்பர் ஒருவர், “நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் போர்முனைக்குப் போகவேண்டும்; பட்டாளத்தில் சேர்க்கப்படவேண்டுமென்று உலக அளவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் போரே இந்த உலகத்தில் தோன்றாது” என்று சொன்னதைச் சொல்லுகிறார்; பதிலுக்கு அந்த நண்பர்,

“அருமையான யோசனை! உண்மைதான். உலகம் முழுவதும் அரசியல் நடத்துபவர்கள் பெரும்பாலும் நடுவயது அல்லது கிழத்தடியர்கள்தான். சண்டையைத் தொடங்குபவர்கள் அவர்கள்தான்.

ஆனால் அவர்களுடைய மடமைக்கும் வெறிக்கும் போர்க்களத்தில் பலியாகிறவர்கள் இளைஞர்கள்தான்” (ப.14)

என்று சொன்னதாகப் பதிவு செய்கிறார்; தொடர்ந்து அந்த நண்பரே ‘ஐக்கிய நாடுகள் இளைஞர் ஸ்தாபனம்’ என்று தனியாக இருக்கவேண்டும்; அல்லது இருக்கிற ஐ.நா. சபையே இளைஞர் ஸ்தாபனமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்; அப்பொழுதுதான் போர் ஒழியும்; அப்போதும்கூட வயதானவர்கள் வந்து சூழ்ச்சி செய்து இளைஞர்கள் மனதைக் கலைத்து விஷவித்துக்களை ஊன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறினாராம். இவ்வாறு தி.ஜா.,

போர் ஒழிப்புக் குறித்துத் தனது சிந்தனையைத்தான் இப்படியொரு நாடகப் பாங்காகப் புனைந்து கூறுகிறார். அவர் ஓர் அரசு ஊழியர். தன் செலவில் பண்பாட்டுப் பரிவர்த்தனை என்ற பேரில் அனுப்பி வைத்திருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கும்போதுதான், தி.ஜா. என்கிற பேராண்மையின் பெருமை புலப்படும்.

உணவு விடுதியில் முதியவர்களே உட்கார்ந்திருக்கும் அந்தக் காட்சி தொடர்ந்து அவருக்குள் தொல்லைப்படுத்திச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. இப்படி எழுதுகிறார்:

“என் ஊர், என் ஜில்லா, என் ராஜ்யம், என் தேசம் - இந்த எல்லா ‘என்’களும், நமது உலகம் என்ற பெரும் கலத்துள் முரண் இன்றி, உதைப்பின்றி அந்தந்த இடத்தில் ஆங்காங்கு அமர்ந்திருந்த கிழவர்களையும் கிழவிகளையும் பார்த்தோம். இத்தனை ‘என்’களுக்கும் தங்கள் வயிற்றில் பிறந்த இளைஞர்களை இரையாகக் கொடுத்தவர்கள் இவர்கள்” (ப. 14)

மேலும் இரவு வந்தால் திரைப்படம் போகலாமென்று அழைத்துச் செல்லுகிறார்கள். அங்கேயும் போர் விளைவித்த கொடூரமான கதைகள்; காட்சிகள்; ஓரிடத்தில் ‘அமைதியான காட்சிகள் நிறைந்த படங்களை எங்களுக்குக் காட்டுங்களேன்’ என்று தி.ஜா. வாய்விட்டுக் கேட்கும் அளவிற்குப் போரின் கொடூர நினைவுகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன; உலகப்போர் முடிந்த 1945-களுக்குப் பிறகு ஐ.நா. என்றும் உலக அரசாங்கம் என்றும் மானுட சமூகத்தில் போரே நடக்கக்கூடாது என்றும் (ஏறத்தாழ 5 கோடி மக்களைப் பலி கொடுத்த பிறகு) பெரும்பேச்சாகப் பேசப்பட்டது.

ஆனால் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுதான் கழிந்திருக்கிறது; அதற்குள் உலகம் முழுவதும் அமெரிக்கா உட்பட, மீண்டும் தேசிய வெறிகள், ஆக்ரமிப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டன; மனித இனத்திற்கு விமோசனம் என்பதே இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு மேன்மையான கலைஞனுக்கே உரிய கருணைக் கண்களைப் பெற்றவர் தி.ஜா. என்பதால் அதைக் கண்டுகொள்ளுகிறார்; அது குறித்த தன் சிந்தனையை இப்படியொரு நாடகப்பாங்கில் பதிவு செய்துகொண்டு போகிறார்; பொதுவாகவே தி.ஜா.வின் பயணக் கட்டுரைகள் முழுவதும், வெளிநாட்டில் தான் காணும் ஒரு காட்சி, தனக்குள் தூண்டிவிடும் சிந்தனைகளை உரையாடலாக வெளிப்படுத்துகிற முறையிலேயே அமைந்துள்ளது.

ரொமானியாவின் எழுத்தாளர்கள் சந்திப்புக் குறித்த பதிவில் இன்றியமையாத பல கருத்துக்களை முன் வைக்கிறார்; அங்கே எழுத்தாளர்கள் ‘டாக்டர் அல்லது இன்ஜினியரைவிட’ மூன்று மடங்கு வருவாயோடு நல்ல நிலையில் இருக்கிறார்கள்; எந்த நூலானாலும் குறைந்த பட்சம் 15 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள்; எல்லாம் ஓராண்டில் விற்றுவிடுகின்றன; காரணம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள். “பொதுவாகச் சோஷலிஸ்ட் நாடுகளில் புத்தகப்பசி அதிகம்” என்று பதிவு செய்கிறார்; புத்தக ஆக்கம் குறித்துப் பேசும் போது, அவருக்கே உரிய அங்கதம் மேலெழுந்து நமது பரிதாப நிலையைப் படம் பிடித்துவிடுகிறது.

“(அங்கே) புத்தக விலையும் மலிவு, புத்தகத்திற்குப் பயன்படும் காகிதங்கள் உயர்ந்த ரகம். மேலட்டைகளில் நவீன ஒவியக்கலை ஓங்கியிருக்கிறது. பெண்களின் முகத்தையோ, மற்ற அங்கங்களையோ பெரிதுபடுத்தி அட்டையில் போட்டால்தான் விற்கும் என்ற அவசியம் இல்லை.

பஞ்சாங்கக் காகிதங்களும், நைந்துபோகும் காகிதங்களும் ஒரு தடவை படித்ததும் அக்கக்காகக் கலையும் கட்டும், அச்சுப் பிழைகளும் இல்லை” (ப. 35)

இப்படியான அங்கதம் நூல் முழுவதும் பரவி கிடக்கிறது; அங்குள்ள துப்புரவான நகரம், சுத்தமான ரயில் நிலையம் முதலியவற்றைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்குள் நினைவுகள் குறுக்கே பாய்ந்து நம்மூர் கும்பகோணத்தையும் டில்லியையும் முன்னிறுத்தி அவர் எழுதிச் செல்லும் அங்கதம் அனைத்தும் தி.ஜா. என்ற மாபெரும் கலைஞனுக்குப் பெருமை சேர்க்கக் கூடியனவையாகும்.

ரொமானியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். க்ளூஷ் எழுத்தாளர் சங்கத்தில் சந்தித்த இளம் எழுத்தாளர்கள் வாஸிலே ரெப்ரியானு, அகஸ்டின் புஃபூரா யாய் செஃப், அயன் லுங்கு, (ப.95) இலக்கிய ஒப்பியல் விமர்சகர் டாக்டர் ஃடிஃபான பிட்டான், கவி வர்ஜில் தியோட ரெங்கு, கவி ட்யூடர் அர்கேசி, நாட்டுப்பாடல் வகைகளில் ஒன்றான தோய்னா - என்று பலவாறு பேசும்போது, அர்கேசியைப் பற்றி,

“ஐரோப்பிய கவிதை வரலாறு ஒன்று எழுதப்படுமானால் அர்கேசியின் பெயர் அதன் மகாகவிகளில் ஒன்றாக நிற்கும். ஐரோப்பிய இலக்கியத்திலேயே ஒப்பற்று ஜொலிக்கும் புதிய உருவகங்களைப் படைத்துக் குவித்திருக்கிறார்” (ப.103) என்று எழுதிவிட்டு தி.ஜா. தனக்கே உரிய பாணியில் இப்படி எழுதுகிறார்:

“அர்கேசி போன்ற ரொமானியாவின் இலக்கிய மேதைகள் நமக்குத் தெரியவில்லை. இன்னும் பல சிறிய நாடுகளின் தனிப்பட்ட அழகுகளை நாம் காணவில்லை. வல்லரசு நாடுகளின் படைப்புகள்தான் பிரபலமாகின்றன.

இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ரஷ்யா. இப்படித் தன் அழகைக் காட்ட ஒவ்வொரு நாடும் வல்லரசாக ஆக முயலவேண்டும் போல் இருக்கிறது” (ப.103) என்று கிண்டலாக எழுதுகிறார்; மற்றொரு இடத்திலும் இதே கருத்தை வேறொரு விதமாகப் பதிவு செய்கிறார்:

“ஃபுக்கின் நாவல்களும் சரி, மற்ற செக் ஆசிரியர்களின் படைப்புகளும் சரி - இந்தியாவில் வரவில்லை. முன்பு கூறியவாறு நம் வரலாற்றில் ஏற்பட்ட வினை. ஆங்கில இலக்கியம்தான் மேற்கத்திய இலக்கியத்தின் உச்சம், பிரதிநிதி என்ற மயக்கம்  இன்னும்  நம்மை  விடவில்லை” (ப. 125)

இவ்வாறு காலனித்துவத்தின் செல்வாக்கு ஒரு சிறிதும் குறையாமல் இங்கே இலக்கியத்துறையிலும் நீடிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ரொமானியாவிலிருந்து செக் நாட்டின் ‘ப்ராஹா’ வந்து தான் முதலில் இறங்குகிறார். அந்த நகரத்தின் இசையின் பெருமை பேசுகிறார்; இசைமேதை மோட்ஸா இதன் எழிலைக் கண்டு போதைகொண்டு விட்டான் என்றெழுதுகிறார்.

சிறுபத்திரிக்கை வாசகனான எனக்கு ‘ப்ராஹா’ என்றவுடன், அங்கு வாழ்ந்த பிரான்ஸ் காஃப்கா (1883-1924) குறித்துத் தி.ஜா. என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலோடு வாசிப்பில் வேகம் கூடியது.

செக் எழுத்தாளர் சங்கச் சந்திப்பில் திருமதி ஷெர்மா யானோவா என்ற நாவலாசிரியையைச் சந்திக்கிறார். “நான் சந்தித்த முக்கியமான எழுத்தாளர் இவர்” என்ற அறிமுகத்தோடு காஃப்கா குறித்து அவர் சொன்ன கருத்தாக இப்படி எழுதுகிறார்:

“காஃப்காவை உண்மையான செக் எழுத்தாளர் என்று நான் கருதுவதில்லை. அவருக்குக் காசநோயைத் தவிர, மனநோயும் அதிகம். தம்மையே தனித்துக் கொண்டு வலுவிழந்த மனத்தைச் சுமந்து துயர்பட்டவர்.

அவர் உலகைப் பார்த்த பார்வையும் மனப்பாங்கும் ஒருவித அச்சத்தின், மன அசௌக்யத்தின் அடிப்படையில் உருவானவை. ஆனால், செக் மக்கள் உல்லாசமானவர்கள். ஆரோக்ய உள்ளம் படைத்தவர்கள்; அதனால்தான் உண்மையான செக் படைப்பாளன் என்று காஃப்காவைக் கருத விருப்பமில்லை எனக்கு.

நாட்ஸிகள் யூதர்களைப் படுத்திய பாடும் கொடுமையும் காஃப்காவை அளவுக்கு மீறி உயர்த்த மறைமுகமாக உதவின.”

இப்படிச் சொன்ன அந்த நாவலாசிரியையிடம் தி.ஜா. கேட்கிறார்,

“இதனை எங்கள் நாட்டுச் சோதனைப் படைப்பாளர்களிடம் சொல்வீர்களா?”

அதற்கு அந்த அம்மையார், “சொல்லுகிறேன். என் தோலை உரித்துவிடுவார்கள். அவ்வளவுதானே. இங்கேயே அந்த மாதிரி பலர் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னாராம்; இந்த உரையாடல் முழுவதும் அப்படியே தி.ஜா.வின் தனித்தன்மையை, மொழியை வேலை வாங்கும் ஆளுமையைக் காட்டும் ஒரு சிறு துணுக்காகும்.

சோதனையைச் சோதனைக்காகச் செய்வது சரியல்ல (ப.127) என்ற தமிழ் சோதனை எழுத்தாளர்கள் குறித்த தன் விமர்சனத்தைத்தான் மேற்கண்டவாறு நாடகப் பாங்காகப் புனைந்து காட்டுகிறார்.

மொழிபெயர்ப்பாளர் நியாகு என்பவரோடு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். ‘டான்யூப்’ நதி வரப்போகிறது என்கிறார் அவர், தி.ஜா.வுக்குள் இருக்கும் குழந்தை வெளியே வந்துவிடுகிறது; அதன் முழுப் பிரவாகத்தையும் மயங்கிப்போய்ப் பார்த்துக்கொண்டேயிருந்த ஞாபகம் என்கிறார்;

மேலும் “நதிகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது; கடல், மலை, வயல் காட்சிகளுக்குச் சொற்கள் உண்டு. எனக்கு நதிகளை வர்ணிக்க முடிவதில்லை;

சும்மா பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்; ஒரு தாயை, கடவுளைப்போல நேரில் காண்கிற பிரமை. மன ஓட்டத்தை நிறுத்திவிடுகிற உயிர்க் காட்சி.

கடவுள் இல்லை என்று சொல்லு என இங்கர்சால் போன்ற பெரியார்கள் என்னைக் கட்டி வைத்து அடித்தாலும், கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாலும் நான் இல்லை என்று சொல்லமாட்டேன்.

கரை தவழும் வெள்ளத்தைச் சுமந்து செல்லும் ஆறு ஒரு மக்கள் கூட்டம், ஒரு உயிர் கூட்டம், அருள் கூட்டம் என்று மட்டும் சொல்கிறேன்” (ப.68) என்று கவிதை எழுதுகிறார் தி.ஜா. காவிரி ஆற்றின் குழந்தை  அல்லவா அவர்!

இந்த இடத்தைப் போலவே வாய்ப்புக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பகுத்தறிவு இயக்கத்தினர்க்குக் ‘கொட்டு’ கொடுத்துக்கொண்டே போவதைப் பார்க்க முடிகிறது. ஓர் உரையாடலின் போது ஒரு நண்பரின் நண்பர், உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியுமா, வால்மீகி ராமாயணம், கீதை படித்ததுண்டா? வேதங்களைப் பற்றித் தெரியுமா? இப்படிப் பல கேள்விகள்; உடன்பாடான பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்; அப்படி என்றால், “நீர் பிராம்மணரா?” என்ற கேள்விக்கு “இல்லை” என்று கூறுகிறார்; ஏன்? என்ற அடுத்தக் கேள்விக்கு “பிராமண யோக்யதை ஒன்றும் கிடையாது. பிறந்தது அந்த ஜாதியில்.

ஆனால் பகுத்தறிவுவாதிகளும் அரசாங்க - கல்லூரி அதிகாரிகள் எல்லாம் என்னைப் பிராமணன் என்றுதான் கூறுகிறார்கள். பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட மூடநம்பிக்கைகள் சாத்தியம்” (ப.54) என்று ஒரு குட்டு வைக்கிறார்.

“உச்சிக் குடுமியை ஒழிக்கும் கோஷம்” (ப.15) என்று ஓரிடத்தில் சுட்டிச் செல்லுகிறார். இதுபோலவே மொழி அரசியலைப் பற்றிப் பேசும்போதும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

“மொழி உணர்ச்சி நெருப்புப்பெட்டி; விளக்கும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். எங்கள் மொழி உயர்த்தி என்று பல முட்டாள்கள் சொல்வதால்தான் உலகில் மொழிச் சண்டைகள், அதன்மூலம் நாட்டு - இனச் சண்டைகள் மூள்கின்றன... சுயநலக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உதவுகிற கோடரிகள்” (ப.122) என்றெல்லாம் ரொமானியாவிலுள்ள செக் - ஸ்லோவாக் என்ற இருமொழிகளைக் குறித்துப் பேசும் பின்புலத்தில் இதையும் பேசுகிறார்.

மற்றொரு இடத்தில் குழந்தைகள் பேசும் மொழி உலகமெங்கும் ஒன்றாகவே இருக்கிறது. அவர்கள் செய்வது எல்லாம் உலகம் எங்கும் ஒரே அச்சுதான்; வளர்ந்து ‘பாஷைகளாகக்’ கற்றுக்கொள்ளும்போது தான் பாஷைகளின் பின்னுள்ள சுவர்களும் எழுகின்றன என்கிறார்.

“இந்த ஒலிகளே எங்கள் மொழியில் கிடையாது” என்று ஷ, ஜ, ஸ போன்ற எழுத்துகள் அடங்கிய புத்தகங்களையே தடை செய்கிற டாக்டர் பேராசிரியர்களின் நினைவு வருகிறது.

‘இந்த ஒலி எங்களுக்குக் கிடையாது’ என்று சொல்லுவதைக் கேட்டால் நமக்கு “அடித்துக் கொண்டு அழ அறுபது கைகள் ஏன் இல்லை என்று குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது”.

இவ்வாறு தூரத்தில் எங்கோ சென்று யார் யாரோடோ உரையாடும்போதும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிகழ்த்திக் காட்டிய செயல்பாடுகள் கூடவே வந்து அவரைத் தொந்தரவு படுத்துவதையும் தி.ஜா. நினைவுகூர்கிறார்.

ஓரிடத்தில் தான் பாடும்போது ஏற்படும் முகக் கோணலைக் கண்டு, இரண்டு ரொமானியப் பையன்கள் சிரிப்பது தெரியாமல் சிரித்தார்களாம். அப்பொழுது “தம்பி, ஓடற பாம்புக்குக் கால் எண்ண வேண்டா” என்று தமிழில் சொன்னதாகப் பதிவு செய்கிறார்.

உண்மையிலேயே அவ்வளவு நுட்பமான பல பார்வைகள் இந்தப் பிரதி முழுவதும் விரவி கிடக்கின்றன. ஜார்ஜ் டான் என்ற ரொமானிய கப்பல் ஓட்டும் துறையிலிருந்து ஓய்வு பெற்றவரைக் குறித்துச் சொல்லும்போது மிக நுட்பமாக அவர் முகபாவத்தைக் கவனித்துப் பதிவு செய்கிறார். அவருக்கு, “ஆங்கிலம் தெரியாது. பிரஞ்சுதான் தெரியும்.

எனவே மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்னமே அவர் முகம் துடியாய்த் துடிக்கும்; என்ன இத்தனை நேரம் காக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு பரபரப்பும் குறையும் முகத்தில் கூத்தாடும்” (ப. 52) என்கிறார்.

ஒருநாள் வுல்த்தாவா (செக் நாட்டில்) நதிக்கரை ஓரமாக இருக்கும் பெத்ஸ்லோவா - என்பாரின் வீட்டிற்குப் போகிறார். அந்த நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார் தி.ஜா. “குளிர் காற்றைத் தடுப்பதற்காக ஆற்றையும் அதன் மீதுள்ள வீதியையும் நோக்கும் பெரும் சாளரத் திறப்பை மூடப் போனார் அவர்; அப்போது அடிவானம் செக்கரும் ஓரிரண்டு விண்மீனும் மோனமுமாகத் தவமிருந்தது.

மூச்சை நிறுத்தும் வனப்பாக அங்கு அந்தி மயக்கம் கண்மூடும் சமயம். பெத்ஸ்லோவாவும் அதைப் பார்த்துச் செயலற்று நின்றார். ஐந்து நிமிடம் கழித்துத்தான் திரையைத் தொங்கவிட முடிந்தது அவரால்” (ப.126)

இதுபோலவே ஐரோப்பிய ஆலயங்களில் இளைஞர்களைக் காண முடியவில்லை என்பதை அவதானித்துச் சொல்லுகிறார்; மேலும் “கண்ட கண்ட இடத்தில் எந்த உணவையும் தயார் செய்யும் அவசர யுகத்தில் ‘சுவை நஷ்டம்’ எற்படத்தான் செய்யும்.

ஓய்வின், அமைதியின் குறியீடுகளையும் பரபரப்பின் சின்னங்களையும் ஒரே சமயத்தில் அடைய முடியாது. கூழோ, மீசையோ - ஒன்றுதான் தேறும்” (ப.84) என்றெல்லாம் எழுதிச் செல்லும்போது கைதேர்ந்த எழுத்தின்  வலிமையை  உணரமுடிகிறது.

இன்னும் அங்கே உள்ள அரூபக் கலை, கிராம மியூசியம், கண்ணாடிச் சிற்பக் கூடம், ஓவியக் கூடம், இசைக் கூடம், கருங்கடல் காட்சி, நோய்க்கு மருந்தாகப் பயன்படும் நீர் ஊற்றுமலைகள், ஏரிகள் மறைந்து கட்டிடங்கள் எழும்பிய கதை, எலும்பைப் பதம் பார்க்கும் குளிர், இனக்காப்பு வரலாறு, போர்களால் அலைக்கழிக்கப்பட்ட மக்களின் மன நிலை, நாட்டுப்புறப் பாடல்கள், சூன்யமாகத் தெரியும் உள்ளொடுங்கிய தெருக்கள், வெங்காய வடிவக் கோபுரங்கள், பல்வேறு நூலகங்கள் எனப் பலவற்றையும் வெறுமனே வரிசை கட்டிச் சொல்வதிலிருந்து மாறுபட்டு, அந்த வேற்றுப் புலத்தில் வித்தியாசமான காட்சிகளால் தனக்குள் இருந்து புறப்பட்டு வந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் தனக்கே உரிய நக்கலும் கிண்டலும் அங்கதமும் கூடிய புனைவுமொழியில் எடுத்துரைத்துள்ளார்  தி.ஜா. இதே பாணியிலேயே ரொமானியாவுக்கும் செக் நாட்டிற்கும் போய் வந்து ஓராண்டு கழித்து எழுதிய இந்தப் பதிவு குறித்தும் இப்படி எழுதுகிறார்.

“ஒரு ஆண்டுப் பூட்டி வைத்த மளிகைக் கடையைத் திறந்து பார்த்தால், என்னதான் காற்றுப் புகாமல் மூடியிருந்தாலும் புளி விறைத்திருக்கும், பருப்பில் சற்று புழு அந்துக்கள் விளையாடியிருக்கும். கற்பூரம் கரைந்திருக்கும், இல்லாவிட்டால் இப்படி மூடிவிட்டான்களே எனக் கோபக்கார இளம் எலிகள் சாக்குகளையாவது மர டப்பாக்களையாவது பல்லால் அறுத்திருக்கும். பூசணம் இருக்கும். எண்ணெய் பிசுக்கு வெடி சேர்ந்திருக்கும். நினைவும் அப்படித்தான். அப்படி அப்படியே இருந்து விடாது.

ஆனாலும் எத்தனையோ நினைவுகள் பசுமையாக, ஒரு அசைவு, மணம், ஓசை விடாமல் இருக்கின்றன. அப்படி மிக மிக ஓங்கி நிற்பது தெருக்களின் சூன்யம்” என்றும் எழுதுகிறார்.

இப்படி ஓர் அழகான உருவகம் மூலம் தன் எழுத்தின் தன்மையைப் போக்கைத் தானே விமர்சனம் செய்து கொள்ளும் மேன்மையான கலைஞராகத் தி.ஜா. உயர்ந்து நிற்கிறார்.

துணைநூல்கள்:

1. தி.ஜா., ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (மு.ப.1974), காலச்சுவடு, டிச.2017, நாகர்கோயில் - 629001.

2. தி.ஜா. நினைவு நூற்றாண்டுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை - சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சாகித்திய அகாடெமி, அக்.5, 6, 2021.

கவனிப்பு

மதில் மேல்
ஐந்து காகங்கள் அமர்ந்திருக்கின்றன
ஆறாவதாய் ஒன்று வந்ததும்
ஐந்தில் ஒன்று பறந்துவிட்டது
மற்றொன்று வந்ததும்
இன்னொன்று பறந்து போகிறது
அரைமணி நேரமாய்க் கவனித்தும்
ஐந்து மட்டுமே இருக்கிறது
ஆறாவது காகம் அங்கு
அமரவேயில்லை
மாடியிலிருந்து இறங்கி வந்து
போனைப் பார்த்தால்
நண்பர் ஒருவர்
ஐந்து முறை அழைத்திருக்கிறார்
என்னவாயிருக்கும் என்ற
கலக்கம் ஒரு பக்கம்
காகம் ஒன்றின் குரல் போல
ஒலிக்கிறது அசரீரி
நல்லதே நடக்கும்
அல்லது
நடந்தது நல்லது.

வாழைப்பழமே போற்றி

தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு
நடராஜ நாமகரணத்தைச்
சூட்டி மகிழ்ந்தனர்
அவனாலோ
பதின் பருவம் நிறைவுறும் வரையிலுமே
‘ட’ எழுத்தை உச்சரிக்க முடியவில்லை
நா சுழல மறுப்பது ஏன்
ஏதேனும் சாமிக்குத்தமா என
கலங்கினர் பெற்றோர்
நதராஜன் என்றே கூறித் திரிந்தவனுக்கு
ஒரு நாள்
அதிசயமான ஒரு வாழைப்பழம் கிடைத்தது
அதை உரித்தபோது உடைந்த ‘ட’
உண்ட போது ‘த’ என்றானது
இப்போது
பெயரை உச்சரித்து உச்சரித்து
ஆஹா தேன் வாழை தேன் வாழை
என்று துள்ளும்போது
வாழைப்பழ திரைக்காட்சி
நினைவிற்கு வந்து
ஒரு விஷயத்தை அவனுக்கு உணர்த்தியது
வருவது வரட்டும் என
இரண்டில் ஒன்றை விழுங்கியவனின்
துணிவுதான்
மிகச்சிறந்த நகைச்சுவை.

அறியாதவை

சித்திரை
ஒளி
குற்றங்கள்
இந்தச்சொற்கள்
விடாது துரத்துகின்றன
சித்திரை
ஒளி
கொண்டாட்டம் என்று
உருக்கொண்டிருக்க வேண்டியவை
கோடை வெயிலின் ஒளிக்கீற்று
மணிக்கட்டை ஆழமாய்க் கீறியும்
துரத்தலும் ஓட்டமும்
நிற்காமல் தொடரும் சாலையில்
விபத்திற்குள்ளாகி நசுங்கிக் கிடக்கும்
ஆட்டோவின் தன்னம்பிக்கை வாசகம்
இந்த நொடிக்கு துளியும் உதவாதது
குற்றங்களும்
கொண்டாட்டமும்
எப்படி இடம் பெயர்ந்தது
என்பது
யாரும் அறியாதது.

பிரியாணி

பிரியாணி எனும் சொல்
ஒரு பிசாசைப்போல்
பிடித்துக்கொண்டிருந்த காலம்
எதைப் பேசினாலும்
பிரியாணி என்றே ஒலிப்பதாய் கூறினர்
தூக்கத்தில் முனகுவதும்
முணுமுணுத்து வணங்குவதும்
பிரியாணியையே
நிலைமை தற்போது
கட்டுக்குள் இருக்கிறது என நினைத்தால்
சிறிதும் பொருத்தமற்ற
ஒரு சூழலில்
என் இலையில் வந்து விழுகிறது பிசாசு
நீங்கள்தானே அழைத்தீர் என்கிறார் சர்வர்
சூழலைப் புறந்தள்ளி
வரவழைத்துக்கொண்ட மனோதிடத்துடன்
அதனுடன் மோதினேன்
ஹோட்டல் அதிபரும் இன்னும் சிலரும்
மகிழ்ந்து சிரித்தவண்ணம் இருக்கின்றனர்
அதனிடம் 
தோற்றுக்கொண்டிருக்கும்
எனக்கோ
மிகுந்த துக்கமாயிருக்கிறது.

கட்டுரை

தமிழில் எண்பதுகளில் அறிமுகமான அமைப்பு இயல், பின்னமைப்பியல் கோட்பாட்டுப் பின்புலத்தில் தொன்னூறுகளின் உலகமயமாதலுடன் அறிமுகமான ஒரு கோட்பாடே பின்நவீனத்துவம் மற்றும் பின்காலனியம்.

இவ்விரண்டு சொற்களும் தமிழில் புதுக் கலைச்சொற்களாகப் பயிலப்படுவதற்கு முன்பாக ஒருவித ‘பேன்ஸி’ சொற்களாக மாறி, இன்று தேய் வழக்கான ஒருவகைக் குறிச்சொற்களாக (Buzz word) ஆளப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக இரண்டும் எந்தப் பறவைகள் வேண்டுமானாலும் எச்சமிட்டுச் செல்லும் தலைவர்கள் சிலைபோல ஆகி விட்டது. ஓர் இலக்கியவாதியின் அனைத்துக் குறைபாடுகளும் பின்நவீனம் என்று ஒதுக்கி ஓரங்கட்டும் நிலையே உள்ளது.

இயலாமையை, இயலமுடியாததை எல்லாம்பின்நவீனம், பின்காலனியத்தில் ஏற்றி, கடந்து சென்று தவிர்ப்பதான சூழல் உள்ளது. கவிதை புரியவில்லையா?

பின்நவீனத்துவம், பின்காலனியம்தான் காரணமென்று இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே அறிந்தவர்களின் கூற்று உலா வருகிறது. இதன் உச்சம் என்னவென்றால், புரியாமல் எழுதுவது அனைத்தும் பின்நவீனம் என்று கூறும் அளவிற்கு இது ஒரு சர்வரோக நிவாரணியாக மாறியுள்ளது.

இத்தனைக்கும் பின்நவீனம், பின்காலனியம் குறித்து நிறைய நூல்களும், கட்டுரைகளும் வந்து, உரையாடல்களும் நடந்துள்ளன. ஆனாலும், தமிழின் பழகிய மனம் ஆழமாக எதையும் உள்வாங்காமல், பனிச்சறுக்கில் விளையாடும் பிள்ளைகளைப்போல, மேலாகச் சறுக்கிச் செல்வதே சுகம் என்ற மனநிலைக்கு ஆழ்ந்துவிட்டது.

ஒருவகையில் அறிவு ஆழப்படாமல், மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்று அறிவித்த பின்நவீன நிலை தமிழ்ச் சூழலில் நிலவுகிறதோ? அதற்கிணங்க, தமிழ் அறிவுப் பரப்பு மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்பதே யதார்த்தம்.

அலைகுடிகள், நிலைகுடிகளாகி இன்று வலைகுடிகளாக மாறிவிட்டனர். எதையும் ஆழமாகவும், ஆழ்ந்தும் புரிந்துகொள்ளும் மனநிலை முற்றிலுமாக, தன்-மையவாத, தன்-முனைப்புவாத மனநிலையாக, நுகர்வை அடிப்படையாகக் கொண்டதாக மாறியுள்ளது.

அதன் விளைவு தமிழ் இலக்கியம் நுகர்விற்கானதாக மாறியுள்ளது. மந்தைகளின் மேய்ச்சல் நிலங்களாக உள்ளதே தவிரப் புதியன விளைவதற்கான விளைச்சல் நிலங்களாக இல்லை.

நுகர்வே அனுபவமாக, உயர் ரசனையாகக் கட்டப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு, பண்டங்களைப்போல நுகரப்படுகிறது. அந்நுகர்ச்சிக்கான ரசனைகளை உருவாக்குவதாகத் திறனாய்வு, விமர்சன, மதிப்புரை இத்யாதிகள் உருவாக்கப்படுகின்றன.

காத்திரமான இலக்கியங்களை உருவாக்கிய தமிழ் சூழலில், நீர்த்த, நுகர்வு சார்ந்த, ரசனைவாத தின்னிப்பண்டார இலக்கியங்கள் பெருகிவிட்டன. வெறும் விதந்தோதல், படைப்பாளிகள் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து சுகம் காணுதல் என்பதாக மாறிவிட்டது. மெய்யிலக்கியம் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரிக்கும் ‘மொய்யிலக்கியமாக’ மாறிவிட்டது.

இதில் சாதி சார்ந்த, மதம் சார்ந்த, எழுத்தாளன் நட்புச் சார்ந்த குழுக்களாக, கூட்டங்களாக வாசகத்திரள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. விரல்நுனி ‘விக்கி’ விபரங்களே எழுத்தாளன், வாசகனின் அறிவுப்பரப்பாக, ஆச்சர்யம் தரும் படைப்புத் திறனாக மாறியுள்ளது.

இல்லாவிட்டால் பாலியல் சீண்டல்கள், மிகைப்பாலியல் ஃபேண்டஸிகள், குடும்பச் செண்டிமெண்ட், வரலாற்றுப் புனைகதைகள், மிகைஉணர்ச்சி காதல் நாடகங்கள் ஆகியவை இலக்கியங்களாக உள்ளன. தமிழில் இலக்கியப் பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் அவர்களது பல்லக்குத் தூக்கிகளும் நிறைவதற்கு இதுவே காரணம்.

இலக்கியப் பீடங்களும், மடங்களும்

தமிழ் இலக்கியச் சூழலின் இந்த நீர்த்த நிலை பல ரசனைவாத இலக்கியப் பீடங்களையும், மடங் களையும் உருவாக்கும் அரசியல் களமாக மாறிவிட்டது.

இலக்கியப் பீடங்கள் என்பவை ஒவ்வொரு காலத்தின் ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்தால் கட்டப்படுவதே. சான்றாக, தமிழ் இலக்கிய வரலாற்றை உற்று நோக்கினால் இந்தப் பீடங்களுக்கும், ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்திற்கும் உள்ள உறவு, மையமாகி சொல்லாடலாக மாறுவதையும் அறியலாம்.

சங்ககாலம் எனப்படும் பாட்டும் தொகையும் எழுதப்பட்ட காலத்தில் இயற்கையும், திணைகுடி வாழ்வும் ஆதிக்கம் வகிக்கும் மைய சொல்லாடல் புலமாக அமைந்தது. அதன்பின் வந்த கீழ்கணக்குக் காலங்களில் அறநெறி மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.

நாடுகளாக மாறிய நிலைகுடி வாழ்விற்கு அரசுருவாக்கத்திற்கான அறநெறிகள் தோன்றி அறிவுறுத்துவதாகவும், பௌத்த சமணச் சமய அறநெறி ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலமாகவும் அமைந்தன.

அடுத்துவந்த வேந்தர்கள் காலங்களில் குடிமக்கள் உருவாக்கத்திற்கான சமய வாழ்வியல் சார்ந்த காப்பியங்கள் இலக்கிய மையச் சொல்லாடல் புலமாக அமைந்தது. அதற்குப்பின் வந்த பேரரசு உருவாக்கத்திற்குத்தக இறை சார்ந்த பக்திநெறி இலக்கிய மையச்சொல்லாடல் புலமாக அமைந்தது.

பேரரசுகள் சிதைந்த பின்பு வந்த அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப இலக்கிய மையச் சொல்லாடல் சிதைவுற்ற நிலையில் பல்வேறு இலக்கிய வகைமைகள் தோன்றின. சித்தர்களின் தனித்துவமான ஆதிக்க எதிர்ப்பு, நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் போன்றன மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.

18-19 ஆம் நூற்றாண்டில் உருவான காலனியத்திற்கு எதிரான தேசிய எழுச்சிக் காலத்தில் தேசியம் என்ற கருத்தியலே இலக்கியப்பீடத்தை தீர்மானிப்பதாக மாறியது. அதன்பின் வந்த திராவிட இயக்க எழுச்சியின்போது, எதிர்முரணாக, திராவிட எதிர்ப்பு இலக்கியம் என்பதே பீடமாக மாறியது.

அதாவது தேசிய எழுச்சி என்ற கருத்தியல் உயர்சாதி மற்றும் பார்ப்பனிய ஆதிக்க கருத்தியலாக இருந்ததால் அன்றைய இலக்கியப்பீடத்தைத் தீர்மானிப்பதாக மாறியது. ஆனால், திராவிட இலக்கியம் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் உருவானது என்பதால், தேசிய எழுச்சி இலக்கியம் சுத்த இலக்கியம், கலைமுதல்வாதம் என்கிற கலை அடிப்படைவாத ஆதிக்கமாக மாறியது.

திராவிட இலக்கியம் அதிகாரத்துடன் உறவுகொண்டிருந்ததால், ஆதிக்கம் வகித்த பார்ப்பனியச் சொல்லாடல் புலம் சிறுபத்திரிக்கை, மற்றும் சுத்த இலக்கியம் என்று அரசு அதிகார எதிர்ப்பு (இலக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்) இலக்கியமாக இருந்தது.

தமிழில் காலனிய ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்திய முதலாளிய ‘நவீனத்துவம்’ திராவிட அரசியலாகவும், இலக்கியத்தில் திராவிட எதிர்ப்பு பார்ப்பனியக் கலைமுதல்வாதமாகவும் வெளிப்பட்டது.

அதிகாரம் அரசுடன் உறவு கொண்டது என்றால், ஆதிக்கம் சமூகக் கருத்தியலுடன் உறவு கொண்டது. இலக்கியம் எப்பொழுதும் ஆதிக்கச் சொல்லாடலுடன் உறவு கொண்டு பீடமாக மாறுகிறது. அதனால்தான் ஆதிக்க இலக்கியப்பீடம் அதிகாரத்தைவிட ஆபத்துஆனதாக மாறுகிறது.

அது மக்களை இணக்கத் தன்னிலைகளாக அதாவது அரசதிகாரத்தை ஏற்கும் தன்னிலைகளாக மாற்றுகிறது. இலக்கியத்தின் இந்த முக்கியப்பணியைச் சமூகத் தொடர்ச்சியை மறுப்பதே ரசனைவாத இலக்கியக் கோட்பாடு.

எண்பதுகள் வரை தமிழ் இலக்கியத்தில் கலை முதல்வாதமே இலக்கியப்பீடமாக ஆதிக்கம் செய்துவந்தது. அது ஒருவகை மேட்டிமைவாத இலக்கிய மாகவும், இலக்கியத்தன்மை என்பது மேட்டிமை ரசனை சார்ந்ததாகவும் அமைந்தது.

இந்த மேட்டிமை வாதத்திற்கு எதிராக மக்கள் இலக்கியம் என்ற பரந்துபட்ட மக்கள் ரசனை என்பதாக மக்கள் இலக்கியம் என்ற ஓர் எதிர்ப்பிலக்கியம் உருவானது. இதனை பார்ப்பனிய மேட்டிமைவாதம், திராவிட வெகுசனவாதம் மற்றும் மாரக்சிய, இடதுசாரி சமூகவாதம் என்ற மூன்று போக்குகளாக வகைப்படுத்தலாம்.

எண்பதுகளில் இடதுசாரி சிந்தனையும், அமைப் பியலும், தமிழீழ எழுச்சியும் இணைந்து பார்ப்பனியக் கலை கலைக்காகவே, இடதுசாரி, திராவிடக்கலை மக்களுக்காகவே என்ற பிரிவினையைத் தகர்த்து, கலையின் சமூக விளைவை முதன்மைப்படுத்தியது.

இச்சூழலில், அமைப்பியலும், பின்னமைப்பியலும் தமிழ் இலக்கியப்பீட அரசியலை மேட்டிமையிலிருந்து விடுவித்து ஒருவகையில் ஜனநாயகப்படுத்தியது எனலாம். நாட்டார் மரபுகள் துவங்கி விளிம்பில் இருந்த பலவும் மையச் சொல்லாடலுக்கு வந்தன.

இச்சூழல் இலக்கியப்பீட அரசியல் என்ற மையத்தைத் தகர்த்தது. அதாவது இலக்கியத்தை உணர்வுப் புலத்திலிருந்து அறிவுப்புலத்திற்கு நகர்த்தியது. இதன் பொருள் இக்கோட்பாடுகள் உணர்வை மறுப்பதல்ல. அதனை அறிவுத்தளத்திலான உடலியக்கமாக மாற்றுபவை.

மீண்டும் இந்த மையம் வலதுசாரிகள் எழுச்சியுடன் 2000- த்திற்குப் பிறகு வலுவாகக் கட்டமைக்கப்படுகிறது. இச்சூழலில்தான் பின்நவீன மற்றும் பின் காலனியக் கோட்பாடுகள் இலக்கியப் பீடத்தகர்ப்பு என்ற அரசியலை மையம் X விளிம்பு என்ற முரணில், விளிம்பை முன்னெடுத்தது.

அதனால், இலக்கியப் பீடங்கள் இக்கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் அதனை ஒரு பேஃஷனபுல் குறிச்சொல்லாக fashionable buzzword பயன்படுத்தி, அதனை ஒரு தேய்வழக்காக மாற்றிவிட்டனர். இது ஒருவகையில் பண்பாட்டுத் தளத்திலான குறியியல் சார்ந்த வர்க்கப் போராட்டமே.

இதன்விளைவு பின்நவீனம், பின்காலனியம் ஆகியவை குறித்த சரியான புரிதலற்ற ஒரு நிலையே பரவலானது. அதனைக் குறித்து வந்த நூல்கள் எழுத்துகள் பல்கலைக் கழகங்களில் பயன்பட்ட அளவிற்குக் கலை அடிப்படைவாத சிற்றிதழ்சார் தமிழ் இலக்கிய உலகில் பயன்படுத்தப்படவில்லை.

காரணம், கலை முதன்மைவாதம் என்றபெயரில் இங்கு அறிவார்ந்த கலைசார்ந்த பார்வையைவிட, ரசனை சார்ந்த உணர்வு சார்ந்த பார்வையே முதன்மையானதாக உள்ளது.

கலையின் முக்கியத்துவத்தை வெறும் அழகியல் சார்ந்ததாக முன்வைத்த இப்பார்வை, மதங்களைப்போலக் கலை அடிப்படைவாதமாகமாறி, அறிவு சார்ந்ததான கோட்பாட்டுப் பார்வைகளை விலக்கியது.

அதன் விளைவே அமைப்பியல் துவங்கி பின்காலனியம் வரை விலக்கப்பட்ட பார்வை உருவாகியது. கோட்பாடுகளைவிடப் படைப்பிலக்கியங்கள் அதிகம் வாசிப்பாளரிடம்  உணர்வாக்கத்தை உருவாக்கி, கருத்தியலைச் சமூக வயப்படுத்திப் பண்பாட்டைக் கட்டமைப்பதாக உள்ளது என்பதால்தான், படைப்பாளிகளின் சமூகப் பொறுப்பும், கோட்பாடு சார்ந்த அறிவும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியள்ளது.

பின்காலனியமா? பின்நவீனமா?

தொழில் வளர்ச்சியடைந்த நவீனத்துவத் திட்டம் (modernist project) முழுமையடைந்த மேற்குலகில் பின்நவீனத்துவம் (post modernism), பின்நவீனம் (post modernity), பின்நவீனநிலை (post modern) என்பது சாத்தியம்.

வளர்ச்சியடையாத, காலனியத்தால் வீக்கம் அடைந்த, காலனிய எஜமானர்களால் திணிக்கப்பட்ட நவீனத்தை மேற்பரப்பில் ஏற்று மனதளவில் நிலவுடமை சார்ந்த பழைய மதிப்பீடுகளில் உள்ள இந்திய ஒன்றிய, குறிப்பாகத் தமிழகத்தில் பின் காலனிய சிந்தனையே பின்நவீனத்தின் குரலாக இடப்படுத்தக் கூடியது.

காரணம், கோட்பாட்டுச் சட்டகங் களில் பின்நவீனம், பின்காலனியம் இரண்டுமே பின்அமைப்பியல் சிந்தனைகள் உருவாக்கிய அடிப் படைகளோடு, திறனாய்வுச் சிந்தனையில், கருத்தாக்கங்களின் மூலம் உருவானவையே.

இதன் பொருள் இரண்டும் ஒன்றல்ல, ஆனாலும், இரண்டும் இரண்டு சமூகப்பின்னணிகள் குறித்த திறனாய்வுச் சிந்தனையை அளிப்பதே. நவீனம் முற்றுப்பெறாத, சுயவளர்ச்சியற்ற காலனிய சமூகங்களில் பின்நவீனத்துவம் பின்காலனியமாகவே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. (இது எனது தனிப்பட்ட கருத்து என்பதால், இது விரிவாக விவரிக்கப்பட வேண்டும். ஆனால், அது மற்றொரு கட்டுரைக்கான திட்டம் என்பதால், இங்கு விவரிக்கவில்லை.)

அவ்வகையில் நம் சமூகத்திற்கு அதிகப் பொருத்தப்பாடு கொண்டது பின்காலனியமே என்பதால், அதன் அடிப்படையான காலனிய தன்னிலை உருவாக்கம் குறித்தும், அதில்இருந்து விடுபடுவது குறித்தும் சிந்திக்க  முனைகிறது இக்கட்டுரை.

அது எப்படிக் கட்டுரை சிந்திக்கும், கட்டுரை எழுதுபவர்தானே சிந்திப்பார் என்ற கேள்வி பின் நவீன, பின்காலனிய சிந்தனையில் பொருளற்ற ஒன்று. ஏனென்றால், அகம் X புறம், உள் X வெளி, உள்ளடக்கம் X உருவம் போன்ற இருமைப் பிளவுகளை இக்கோட்பாடுகள் ஏற்பதில்லை.

மைய மற்ற ஒன்றிற்கு இத்தகைய இருமைப்பிளவுகள் சாத்தியமில்லை. மையங்களே இவற்றைத் தீர்மானிக் கின்றன. எழுத்தும், இலக்கியமும் ஆசிரியன், பிரதி, வாசகன் என்கிற ஓர் அமைப்பில் திரளும் (Assemblage) ஒன்று என்பதால், கட்டுரை தன்போக்கில் மொழியாக ஒழுங்கமைகிறது. எழுதுபவரின் உள்நோக்கம், மொழியின் சாத்தியப்பாட்டில், எழுத்தாக வெளிப் படுகிறது என்பதைக் கூறித் தொடரலாம்.

‘இந்தியப்பொதுபுத்தி’ எனும்பின் காலனிய தன்னிலை.

நமது பொதுபுத்தியில் படிந்துள்ள சில கேள்விகளுடன் இதனைத் துவங்கலாம்....

இத்தகைய பொதுபுத்தியில் பதிந்த நமது மன சாட்சியை விசாரணை செய்யும் ஒரு கோட்பாட்டுச் சட்டகமே பின்காலனியம். மேற்கண்ட கேள்விகளில் பொதிந்துள்ள எண்ணங்கள் உருவாகக் காரணமாக அமைந்த காலனியத்தன்னிலையைக் கேள்வி கேட்கும் ஒரு சிந்திக்கும் முறையே பின்காலனியம்.

அல்லது ‘பின்காலனியநோக்குதல்’ (postcolonial gaze) உருவாக்கும் தன்னிலை மீதான திறனாய்வாக (விமர்சனமாக) வெளிப்படுவதே இக்கேள்விகள். காலனியத்திலிருந்து விடுதலையடைந்த இந்தியாபோன்ற ஒன்றியநாடுகளில் உள்ள நமது தன்னிலை உருவாக்கத்தை, நமது சிந்தனையில் அமிழ்ந்துள்ள காலனிய அழுகலை, அதன் விளைவால் உருவான நமது அடிமை மனநிலையை, அடிமையாக இருப்பதில் காணும் சுகத்தைக் கட்டுடைத்து நம்மை, நமக்கு உணர்த்த முனையும் ஒரு கோட்பாடே பின்காலனியம். காட்டுமிராண்டித்தனமான, அநாகரீகமான, போரும், வன்முறையும், மூடநம்பிக்கையும் கொண்டதாக காலனிய எஜமானர்களால், காலனிய அறிவுஜீவிகளால் வரலாறாக நமக்கு சொல்லப்பட்டதைப் புறந்தள்ளி அதன் உள்ளே மறைக்கப் பட்ட நமக்கான வரலாற்றை எழுதுவதற்கான ஒரு கருவியே புதுகாலனியம்.

அல்ஜீரிய விடுதலைப் போராளியும் புரட்சிகர அரசியல் கோட்பாட்டுச் செயல்பாட்டாளருமான பிரான்ஸ்ஃபனான், பின்காலனியச் சிந்தனைக்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தந்தவர்.

பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியாவின் விடுதலைக்காகப் போராடிய உளவியல் மருத்துவரான அவர், காலனியத்தின் மிகப்பெரும் சிக்கலான காலனிய உளவியலை ஆய்வு செய்து, காலனியத் தன்னிலை எப்படிக் காலனிய நாடுகளின் மனிதர்களைத் தங்களது காலனிய தன்னிலைக்கு ஏற்பக் கட்டமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

மேற்கண்ட அனைத்துக்கேள்விகளும் காலனிய நாடுகளின் ஆழ்மனதில் காலனியத்தை ஏற்கும் தன்னிலையாக, தன்னை அடிமையாக உணராத, எஜமான விசுவாசத் தன்னிலைகளாக இருப்பதை அம்பலப்படுத்தினார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தன்னிலைகளாகக் காலனியத் தன்னிலைகள் அமைவுற்றிருப்பதை வெளிப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து “கீழ்த்திசைவியம்” (ஓரியண்டலிஸம்) மூலம் பின்காலனியச் சிந்தனை முறையைக் கோட்பாட்டாக்கம் செய்த எட்வர்ட்சைத், விளிம்புநிலை சிந்தனையை உருவாக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான காய்த்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பின்காலனியம் உருவாக்கிய கலப்பினம் பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த ஹோமிபாபா எனப் பலஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே பின்காலனியம்.

காலனியம் எழுதிச் சென்ற,விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு காலனிய எதிர்ப்பு மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலையாக ஒருங்கிணையும் ஒருபுரட்சிகரசுயதன்னிலை பற்றியக் கோட்பாடே பின்காலனியக்கோட்பாடு.

பின் காலனியம் - வரலாற்றுப் பின்னணி

17-ஆம்நூற்றாண்டு முதலாளிய புரட்சிகளுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பிறகு உருவானதே காலனியம். அதற்கு முந்தைய சமூகங்கள் மதம் சார்ந்தும், நிலவுடமை உற்பத்தி முறையிலும் அமைந்த ஓர் உலகப்பார்வையைக் கொண்டிருந்தது.

புதிய ‘பகுத்தறிவு’ என்கிற அறிதல்முறை கட்டமைக்கப் பட்டு மொத்த உலகமும் அதன் அடிப்படையில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதுவரையிலான உயிர்கள், இயற்கை, அனைத்தும் முதலாளியக் கருத்தியலில், பகுத்தறிவுத் தர்க்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டன.

பல்வேறு குழுவாக, நிறமாக,இனமாக, மதமாக, மொழியாக அறியப்பட்டஉயிர்கள் உலகளாவிய ‘மனிதர்’ என்ற கருத்தாக்கத்தின் வழியாகப் பொதுமைப்படுத்தப்பட்டன. ஒரு வகையில் கடவுள் இறப்பும், கடவுளின் இடத்தை மனிதனும் மாற்றீடு செய்ததும் நடந்தன.

உலகம் என்ற ஒரு புவிப்பரப்பும், அதன் வரைபடங்களும், அதற்கான அறிவும் கண்டுபிடிக்கப்பட்டு கதைக்கப்பட்டது.

அதுவரையிலான பல இனங்களாக, குலங்களாக, குடிகளாக, நாடுகளாக இருந்த மக்கள் தேசங்களாக மாற்றப்பட்டனர். காலனியம் ஓர் உலகளாவிய வரலாற்றைக் கட்டமைத்தது. அனைத்துக் குடிகளின் வரலாறும், தேசங்களின் வரலாறாக மாற்றப்பட்டது.

இன்றைய உலகாக நாம் அறிவது 17ஆம் நூற்றாண்டு முதலாளியம் கட்டமைத்த உலகமே. அதுவரையில் மதங்களின் அதிகாரத்திலும், கடவுளின் ஆதிக்கத்திலும், நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் செயல்பட்ட மனித அறிவானது தேசியம், மனிதன், பகுத்தறிவு ஆகியவற்றால் மாற்றீடு செய்யப்பட்டது.

அதுவரையிலான இயற்கை சார்ந்த மனித உடல்கள், முதலாளிய உற்பத்திமுறைக்கான செயற்கை உடல்களாக மாற்றமடைந்தன. மனிதனின் ஆன்மீகம் என்று மதங்களின் கதையாடல்கள் முழுக்க, உற்பத்தி, உழைப்பு என்று மாறியது.

மனிதனின் ஆக்கபூர்வ உயிர்ப்பு என்பது, அந்நியமாக்கப்பட்ட உழைப்பாகமாறியது. மனித சக்தி உழைப்பு சக்தியாக மாறியது.

உழைப்பு சக்தி சந்தைகளால், முதலாளிய உற்பத்தி முறைகளால், அதன் உபரியால் தீர்மானிக்கப்பட்டது. இப்படியாக, இவ்வுலகம் உருவானதன் பின்னணியில் காலனியத்தின் அறிவுருவாக்கம் உள்ளது.

காலனியம் என்பது எஜமானர்கள் X அடிமைகள் என்ற இருமைப்பிளவில் கட்டமைக்கப்பட்ட ஓர் உலகப்பார்வை. காலனியத்தின் உச்சமாக உருவான வெவ்வேறு எஜமானர்களின் சந்தைப் போட்டிக்காக நடத்தப்பட்ட முதல், இரண்டாம் உலக யுத்தங்கள் காலனியத்தை முடிவிற்கு கொண்டுவந்தன. சுதந்திர தேசங்கள் என்ற பெயரில் உலகச் சந்தையானது மறுசீரமைப்புச் செய்யப்பட்டு உருவானதே புதுக் காலனியம்.

புதுகாலனியம் என்பது ஒரு நாடு அரசியலில் விடுதலை பெற்றாலும், தொடர்ந்து பொருளியல், சிந்தனை, கருத்தியலில் எஜமான தேசங்களால் ஆதிக்கம் செய்யப்படுவதே.

இப்புதுக்காலனியம் சர்வதேசம் என்கிற அமைப் பிற்குள் கொண்டுவரப்பட்டு, பல சர்வதேச அமைப்புகளால் (U.N.. World Bank. IMF. NATTO etc...) ஆளப் படுவதாக மாறியது. இப்புதுக்காலனியச் சமூகங்களின் எஜமானர்களுக்கு எதிரான மற்றும், காலனியத்தால் உருவாக்கப்பட்ட கலப்பினமான மனிதர்களின் தன்னிலையாக்கம் குறித்த ஒரு புதிய அறிவுருவாக்கக் கோட்பாடே பின்காலனியம்.

காலனியத்திலிருந்து விடுதலை அடைந்தாலும், காலனியத்தின் எச்சத்தை அகற்றி, காலனிய நீக்கத்துடன் எதிர்ப்புணர்வுடன் தனது சுதேசிய அடை யாளத்தையும், சர்வதேசிய அடையாளத்தையும் கலந்த ஒரு நாடாக இருக்கும் சமூகங்களின் தன்னுணர்வு சார்ந்த ஒரு கோட்பாட்டுத் திறனாய்வு சிந்தனையாக உருவானதே பின் காலனியம்.

‘பின்’ என்பது ‘ POST ’ என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழில் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இது

1. காலரீதியாக காலனியத்திற்கு பிந்திய என்ற பொருளிலும்,

2. கருத்தியல் ரீதியாக காலனியத்தை அகற்றிவிட்டு ஒரு புதிய தன்னடையாளத்தைப் பதிலீடு மற்றும் பதிவேற்றம் (post) செய்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

இதன்பொருள், காலனியத்தினை மறுப்பதும், காலனியத்தால் உருவான காலனிய தன்னிலைகளைக் கலைப்பதும், தகர்ப்பமைப்புச் செய்வதும் என்பதே. ஆக, காலனியம் என்பது, மேற்கத்தியம் தன்னை எஜமானனாக உருவாக்க, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளை அடிமைகளாகக் கட்டமைக்க, அதன் மூலவளங்களைச் சுரண்டிக் கொழிக்க உருவான ஒரு அதிகார அமைப்பு.

இந்த அதிகார அமைப்பின் ஒரு ஆதிக்க வடிவமாக உள்ள காலனியத் தன்னிலையைத் தகர்ப்பமைப்புச் செய்து புதிய தன்னிலைகளைக் கட்டமைப்பதற்கான முயற்சியே பின்காலனியக் கோட்பாடு.

பின்காலனியக் கோட்பாடு

பின்காலனியக் கோட்பாடு காலனியம் உரு வாக்கிய முரணான நாம் X பிறர் (Self X Other) என்ற அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கிறது. இதன் அடிப்படையில் மேற்கு X கிழக்கு, நாகரீகம் X காட்டுமிராண்டி உள்ளிட்ட முரண்கள் கட்டமைக்கப் படுவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

இதன் வழியாகவே காலனியத் ‘தானுமை’ அல்லது சுயம் என்பது கட்டமைக்கப்படுகிறது. அதன் ஆதிக்கம் காலனியத் தன்னிலையாகக் காலனிய நாட்டு மக்களிடம் கட்டப்பட்டு அவர்கள் ‘பிறன்மை’யாக ஆக்கப்படுகிறார்கள் என்கிறது.

இம்மனநிலைதான் மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்குமான உளவியல் சார்ந்த பதிலாக அமைகிறது. இதன் வழியாக ‘வெள்ளைப் புராணம்’ (white mythology) உருவாக்கப்படுகிறது.

அப்புராணங்களில் பெருங்கதையாடல்களாக தேசியம், சர்வதேசியம் என்கிற கருத்தாக்கங்கள் அதற்கான கற்பிதப் புவியியல்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வுலகம் ஒரு சர்வதேசிய அமைப்பாக கருதப்படுவதுடன், அதன் அடிப்படையில் உலகளாவிய கட்டப் பஞ்சாயத்து அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

இதன் தத்துவ விளைவாக அகிலத்துவவாதம் (Universalism) என்பது உருவாகிறது. அகிலத்துவ வாதத்தில் மேலாண்மையான ஒரு மாதிரியாக இருப்பது ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளையினம். உலகையே வெள்ளையின மாதிரியில் உருவாக்க முனைவதே இதன் அடிப்படை.

இதன் பின்னிருந்து இயக்குவது ஐரோப்பிய மையவாதம் (Euro-Centrism) என்பதை அம்பலப்படுத்துகிறது பின்காலனியம். அடிப்படையில் ஐரோப்பிய மையவாதத்தைத் தகர்ப்பதே பின்காலனியக் கோட்பாடு.

இது ஐரோப்பா உருவாக்கிய தான், பிறர் என்கிற தன்னிலைக்கட்டமைவைத் தகர்த்து, புதியதொரு விடுதலையான, சுதந்திரமான, அடிமைத்தனமற்ற தன்னிலையை உருவாக்க முனைகிறது.

இப்பொழுது இக்கட்டுரை ஒரு எச்சரிக்கையுடன் முடிகிறது. அதாவது, தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், பின்காலனியம் ஆகியவை இரண்டு தகவமைப்புகளைப் பெற்றுள்ளது. (‘தகவமைப்பு’ என்ற சொல். இவை சூழலுக்குத் தகத் தன்னை அமைத்துக்கொண்டன என்ற பொருளில்தான்.)

ஒன்று முன்நவீன மற்றும் முன் காலனிய சிந்தனைகள், பண்பாடுகள் என்கிற பழமைவாதத்தைச் சுய தேசிய அடையாளமாக முன்வைக்கும் ‘தேசபக்தி’ என்கிற பெருங்கதையாடல் போக்கு அதனை வலதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.

பிம்ப உடைப்பு, பழமை எதிர்ப்பு, புனிதக் கவிழ்ப்பு என்ற பெயரில் அனைத்தையும் அடித்து நொறுக்கி கட்டுடைப்போம் என்ற பெயரில் அறமற்றதாக வெளிப்படும் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்கிற பெருங்கதையாடல் போக்கு, அதனை இடதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.

பின்நவீன, பின்காலனியக் கோட்பாட்டில் பழமை, புதுமை என்ற எதிர்மைகள் கிடையாது. அவற்றை அதிகாரமும், ஆதிக்கமுமே தீர்மானிக்கிறது.

எனவே மேற்கண்ட இரண்டு போக்குகளும் எச்சரிக்கையுடன் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவை அதிகார அரசியலுடன், சமூக ஆதிக்கத்துடன் உறவு கொண்டவை.

இவ்விரண்டு போக்குகளுமே பின்நவீன மற்றும் பின்காலனியக் கோட்பாட்டின் அறம்சார் விடுதலைக்கு எதிரானது.

கலை இலக்கியம் என்பதை பின்நவீனம் மற்றும் பின்காலனியம் ஒரு சமூகச் செயல்பாடாக, உயிர்கள், இயற்கை, சமூகம் என்கிற மூன்று புலங்களின் அறம் சார்ந்த, அறிவுச் செயல்பாடாக முன்வைக்கிறது.

அச்செயல்பாடே அழகியலாக இலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதே நமக்கான பின்நவீனம் மற்றும் பின்காலனியம்.

சிறுகதை

சின்னப்பொன்னானுக்கு வயது எழுபதைத் தொட்டு இருக்கலாம் அல்லது தாண்டியுங்கூட இருக்கலாம். பரம்பரைச்சொட்டை நெற்றியிலிருந்து மேலேறி இருக்க காதுகளின் பக்கங்களில் பஞ்சுப்பொதிபோல முடிக்கற்றை அப்பியிருந்தது.

உள்ளூர் நாவிதன் ஊரின் தென்கடைசிக்கு மாதத்தில் இருமுறை மட்டுமே அடப்பப்பையுடன் வந்து போவதால் சின்னப் பொன்னான் தாவாங்கட்டையில் நீள நீளமான வெள்ளை முட்கள் குட்டானாய் முளைத்து நின்றிருந்தன.

சின்னப்பொன்னான் கண்களில் வெள்ளைப்புரை விழுவதாகவும், புகைபோன்று சிலரின் முக அடையாளம் தூரத்தே வருகையில் தெரிவதாகவும், சீக்கிரமாகக் கண்களை ஆப்ரேசன் செய்துகொள்ளணும் என்றும் பேச்சுக் கொடுப்பவர்களிடம் எல்லாம் சிலநாட்களாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

தூரத்திலிருந்து தன்னை நோக்கி வருபவர் ஆணா பெண்ணா என்ற சந்தேகமும், ஒருவேளை அது பேயாகவும்கூட இருக்கலாமெனவும் நினைப்பதாகவும் சொன்னவர் அப்படிச் சொல்லி முடித்ததும் சிரித்துக்கொள்வார்.

கிட்டே வந்துகொண்டிருக்கும் பேயை அவர், ‘யாரப்பா அது? வர்றது?’ என்று கேட்டு காதைத் தீட்டிக்கொண்டு எதிராளியின் பேச்சுக்குரலை வைத்து, “அட நீயாப்பா! தே... இன்னிக்கி பொழப்புக்கு எங்கீம் போவுலியா?

யாரப்பா உன்னி யாட்டம் இப்ப பொட்டிய முதுவுல கட்டீட்டு ஏணியைத் தூக்கீட்டு திரியறாங்க?

மரம் ஏறுன ஆக்கள் பூராவும் குழிக்குப் போயி படுத்துட்டாங்க! அங்கங்கெ ஊட்டுக்கு ரெண்டு தென்னைமரம் வச்சவவனுங்கெல்லாம் உன்னைக் கூப்பிட்டு ஏறச் சொல்லி தேங்காய் போட சொல்றாங்க!

காசுபணம் குடுப்பானுங்களா இல்லநாலு தேங்காயை எடுத்துட்டு போன்னு சொல்லீருவானுங்களா? நீயே கடையில புட்டுமா தின்னுட்டு திரியறே...

தேங்காயை வச்சி என்ன பண்டுவே?”

நான் சின்னவனா இருந்தப்ப ஊரைச்சுத்தியும் பனைமரம் காடுகாடா அத்தனை நின்னுட்டு இருந்துச்சுக! சில்லாங்காட்டுல நாப்பது மரத்துல தெளுவு எறக்கீட்டு இருந்துச்சு எங்கய்யன்.

அவுருக்குப்பொறவு நான் கலியாணம் கட்டுற வரைக்கிம் ஏறீட்டு இருந்தேன். மரம் ஏறுற மனுசனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டீனுல்லொ சொல்லீட்டானுங்க நசியனூர்ல!

அவிங்கூர்ல அவிங்க பங்காளிங்க நாலு பேரு பனையுச்சியில இருந்து பொத்து பொத்துனு உழுந்துஇடுப்பு போயி கெடக்கானுக...

அதே மாதிரி ஆயிப் போயிட்டா எம்புள்ளயில்ல இசி வழிக்கோணும்னு எம்பட மாமியாகாரி புள்ளையத் தரமாண்டீன்னு அவிங்கூட்டு வாசல்ல நின்னு குதிச்சா!

அவுனுக கள்ளை மூக்கு முட்ட ஏத்தீட்டு பனையேறி உழுந்தா அது அவுனுங்க கெரவம்! எல்லாருக்குமா அப்பிடி நடக்கும்?

அப்புறமென்ன... மயிலாவை நானு எப்பிடிக் கட்டுனேன்னு கேளு நீயி! எம்பட மாமியாகாரி கிட்ட பனையேறமாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துல்லொ கட்டீட்டு வந்தேன்.”

இவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே சண்முகம்சென்றிருப்பான். இருந்தாலும் சின்னப்பொன்னான்சொல்ல வந்த விசயத்தை வேறு யாரேனும் இவரின் முதுகுக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருக்கலாமென முழுதாகவும் சொல்லி முடிப்பார்.

நிசமாலுமே இவருக்குக் கண்ணு கெட்டுப் போச்சா என ஊருக்குள் யாருக்கும் உறுதியாய் தெரியவில்லை.

ஊரின் தெற்கே கருப்பராயன் கோவில் அருகேதான் இவர் வீடு. கோவிலுக்கு அருகாமையில் அஞ்சுதலை நாகம் ஒன்று அப்பப்போ குறுக்கையும் மறுக்கையும் திரிவதாய் ஆடு மேய்ப்பவர்கள் சொல்வது இவர் காதிலும் விழும்தான். ஆட்டுக்குட்டி காணாமல் போனால் அந்த நாகம் தான் தூக்கிப்போய்ச்சாப்பிட்டுவிட்டதாய் சொல்லிக்கொள்வார்கள்.

இவரே தான் தனியாக இந்தப் பத்துப்பனிரெண்டு வருடங்களாகச் சமைத்து உண்டு வருகிறார். அரசாங்கம் கட்டிக் கொடுத்த பொட்டிவீடுதான். முன்பாகச் சாலை வீட்டினுள்தான் குடித்தனம் நடத்தினார்.

வீட்டினுள்ளே ரெண்டு தண்ணீர் குடமும் விறகடுப்பும் சமைத்துண்ண நான்கு போசியும் படுத்துறங்க ஒரு கயிற்றுக்கட்டிலும்தான் இருந்தன. இலவசமாய் வீட்டினுள் வந்து சேர்ந்திருந்த டிவி பொட்டியை பையன் முருகன் தூக்கிப்போய்விட்டான்.

சின்னப்பொன்னான் மயிலாவைக் கட்டிக்கொண்டு ஊருக்குள் வருகையில் அவளுக்கு வயது இருபது. பார்க்க முப்பது வயதுக்காரியாய் அப்போதே தெரிவாள். இவருக்கு இருந்தால் இருபத்தியெட்டு இல்லீன்னா முப்பது இருந்திருக்கலாம்.

மயிலா வந்தபிறகு மரம் ஏறிய ஏணியையும் பொட்டியையும் சாலையில் ஒசக்கே தூக்கிக் கட்டினார். எல்லோருமாய் யோசித்து முடிவெடுத்தப் பின் விசயமங்கலத்தில் தவுடு புண்ணாக்குக் கடை வைத்து முதலாளியாய் அமர்ந்தார் சின்னப்பொன்னான்.

பாவு காச்சிக்கொண்டிருந்த ட்ரம் சிலகாலம் சும்மாவே வீட்டின் பொறவுக்குக் கிடந்து துருப்பிடித்து அழிந்துவிட்டது. கருப்பட்டி அச்சுப் பலகையைக் கரையான் அரித்துத் தின்றுவிட்டது.

காடுகளில்உயரமாய் நின்றிருந்த பனைகள் காணாமல் போயிருந் தன. வெய்யில் காலங்களில் சிறார்களுக்கு வரும் வேர்க்குருவுக்குப் பெருவிரலால் நோண்டித்தின்றது போக மீதமான நொங்கை உடலெங்கும் பூசி வேர்க் குருவைப் போக்கடித்த காலம் மலையேறிப்போய் இப்போதைய குழந்தைகளுக்குக் குட்டிக்குரா பவுடர் பூசுகிறார்கள்.

பனங்கிழங்கை அறியாத சிறார்கள், அப்படின்னா என்ன அப்பாரு? அது மரத்துலயா காய்க்கும்? என்கிறார்கள்.

மயிலா ஒரு பெண்ணையும் மகனையும் அவருக் காக ஈன்றெடுத்தாள். பெண்ணை நசியனூருக்கே சொந்தத்தில் கட்டிக் கொடுத்திருந்தாள். மகன் உள்ளூரிலேயே காதல் வயப்பட்டு ஒருத்தியைக் கட்டிக்கொண்டான்.

அவன் திருமண விசயமே ஊரார்யாருக்கும் தெரியாமல் சிலகாலம் இருந்தது. திருமணம் செய்து கொண்ட விசயத்தை அந்தக் காதலர்கள் ஏன் ஊராருக்கு மறைத்தார்கள்? என்று, ஒருநாள் பெண் வீட்டார் தான் மகளின் அலைபேசியில் மாலையும் கழுத்துமாக மகளும் மருமகனும் நின்றிருந்த போட்டோ பார்த்து தெரிந்து ‘குய்யோ முய்யோ’வெனக் கதறினார்கள்.

எந்த நேரமும் நெஞ்சிலேயே வைத்திருந்த அலை பேசியை எப்போது ஏமாந்து டேபிளில் வைத்தோமென அந்தப்பெண் குழம்பியிருக்கையில் முதல் அடியை அம்மாவிடமிருந்து முதுகில் குப்பென வாங்கினாள்.

அழுகாச்சி எதுவும் அவள் வாயில்இருந்து வரவில்லை. உள்ளூர் சொந்தத்தில் சின்னப் பொன்னான் பையன் முருகன் இவளுக்கு அண்ணன் முறை வருகிறதாம். மற்றபடி காதலுக்கு ஊருக்குள் எந்த எதிர்ப்பையும் சனமே காட்டிக்கொண்டதில்லை இதுகாலம் வரை.

வீடு வீடுக்கு குட்டிக்குட்டியாய் சில பஞ்சாயத்துகள் நடந்து முடிந்து ஊரின் மேற்கே கடைசி வீட்டுக்குத் தனிக்குடித்தனம் செய்துகொள்ளக் காதலர்கள் பணிக்கப்பட்டார்கள். இப்போது அவர்களின் பையன்கூட உள்ளூர்பள்ளியில் ஆறாவது படிக்கப் போய்க் கொண்டிருந்தான் சைக்கிளில்! காதல் கண்மணியாய் இருந்த முருகனின் மனைவி சீதாலட்சுமி உடல்பெருத்து நூறுநாள் வேலைக்கு மம்பட்டி சட்டியோடு உள்ளூர் பெண்களோடு கதையடித்துக்கொண்டு செல்கிறாள்.

‘யக்கோவ்! எம்பட ஊட்டு முன்னால தக்கோளிச் செடி இருந்ததல்லக்கா, அதுல தெனமும் நாலு பழம் பொறிச்சுப் போடறனக்கா!

இப்பப்பாரு ஊருக்குள்ள ஆட்டோல கொண்டாந்து விக்கறவன் மூனுகிலோ நாப்பது ரூவாக்குக் குடுக்குறான்!

அட வெலெ எச்சா இருந்தப்ப நாலு நாலு பழம் தெனமும் பொறிக்கறாப்டி வந்து தொலைச்சிருக்கலாமுல்லோ! தேக்கா!

எல்லா நமக்குன்னு அப்பிடித்தான் நடக்கும் பாத்துக்குவே!’ முருகன் மாருதி வேன் ஒன்றைச் சொந்தமாய் வைத்து வாடகைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.

சின்னப்பொன்னான் தன் மருமகளிடம் இது நாள் வரை ஒரு வார்த்தை பேசியதில்லை. முருகன் காதல் திருமணம் செய்துகொண்டது அவருக்குப் பிடிக்கவில்லை இன்றுவரை. அப்படியே காதலித்திருந் தாலும் அவரிடம் முன்பாகவே சொல்லியிருந்திருக்க லாம். அவர் ஒன்றும் மறுக்கப்போவதில்லை.

ஆனால் தங்கை முறையாகும் பெண்ணை எப்படி இவன் காதலிக்கலாம்? அந்தப் பெண்தான் கட்டாயப்படுத்திக் கழுத்தில் தாலி வாங்கிக்கொண்டிருந்திருக்கவேண்டும் என நினைத்தார். அந்தப் பெண்ணின் குடும்பத்தாரோடு உறவை முறித்துக்கொண்டார்.

இவர் இப்படிச் செய்கிறாரே என்று வேதனைப்பட்ட மயிலா, ‘என்ன இருந்தாலும் நம்ம பையன் முருகன்! இப்பிடி ஊருக்கு மேற்கேயெல்லாம் கொண்டி தனியா இருன்னு சொல்றது நல்லா யில்லங்கொ!

நம்மூடு கிடக்க நம்ம பையன் போயி வாடகையூட்டுல இருக்கோணுமா? நாலுசனம் காதுல கேட்டா என்ன சொல்லும்?’ என்றெல் லாம் பேசத் துவங்க மயிலாவின் இடுப்பில் ஒரு மிதி வைத்தார் சின்னப்பொன்னான்.

மயிலா கீழே விழுந்து அதிர்ச்சியில் பேபேபே... என உளறத் துவங்கினாள். அப்போது எழுந்து பையனிடம் போனவள்தான் மயிலா. இன்றுவரை பையனோடே இருக்கிறாள். எதிர்முட்டு எந்தச் சந்தி லாவது இருவரும் சந்தித்தாலும், ஒரு காறித்துப்பலோ அல்லது ‘க்கும்’ என்ற முனகலோ கூட இல்லாமல் ஒதுங்கிப் போகிறார்கள் இருவருமே.

ஆடுகள் பத்து உருப்படியை வைத்து மேய்த்துக் கொண்டு இருக்கும் மயிலா கூனு விழுந்த முதுகை வைத்துத் தடியூன்றித்தான் நடக்கிறாள். மயிலா இப்போது மயிலாக்கிழவி. கண்ணு பொரை விழுந்த தாகக் கோவை அரவிந்த் ஆஸ்பத்திரி போய் ஒரு கண்ணை ஆப்ரேசன் செய்து வந்திருந்தாள்.

இந்தவிசயத்தைக் காதில் கேட்டு அறிந்துகொண்டதில் இருந்துதான் சின்னப்பொன்னானும் பார்ப்போரிட மெல்லாம், கண்ணு பொட்டக்கண்ணு ஆயிட்டுவருது, எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

இவரே ரேசன் அரிசியில் கூட்டாஞ்சோறும் கஞ்சியும் வைத்துக் குடித்துக்கொண்டிருந்ததால் உடல் வற்றி காற்றடித்தால் பறந்துவிடும் நிலையில் இருந்தார்.

சின்னப்பொன்னானும் ஊன்றிக்கொள்ளக் கைத்தடி போட்டு மூன்று வருடங்களாகிவிட்டது. ஊராருக்கு இப்போது சின்னபொன்னப்பாரு ஆகிவிட்டிருந்தார்.

சின்னப்பொன்னப்பாரு பக்கத்து வீட்டில் மருதாயிக் கிழவி இருந்தாள். அவள் பையன் கோவையில் இஞ்ஜினியரிங் வொர்க்ஸ் வைத்திருந்தான். அங்கேயே நாயக்கமார் பெண்ணைக் காதலித்துக் கட்டிக்கொண்டு வாழ்கிறான்.

ஊருக்குள் மாரியம்மன் கோவில் சாட்டு நடந்ததென்றால் வருடம் தவறாமல் அம்மனுக்குக் கிடாவெட்டு நிகழ்த்த வந்து சேர்ந்துவிடுவான். அவன்தான் அம்மாவுக்குச் சின்னப்பொன்னான் வீட்டருகே மெத்தை வீடு கட்டிக் கொடுத்திருந்தான்.

மொசைக்கல்லில் நடந்தறியாத மருதாயிக்கிழவி அவ்வப்போது வீட்டினுள்ளேயே பொத்து பொத்தெனவிழுந்து விழுந்து எழுந்து மகனை கண்டபடி திட்டிக் கொண்டேயிருக்கும்.

தன்னை இருபது வருடங்கள் முன்பாக விட்டுச்சென்ற புருசனையும் கண்டபடி திட்டத் துவங்கும். மருதாயிக்கிழவியும் ஆடுகள் இருபது உருப்படியை மேய்த்துக்கொண்டிருந்தவள் தான்.

சீக்கு வந்து பத்து ஆடுகள் தினமும் ஒன்றாக இறந்துவிடவே, மீதமிருந்தனவற்றை உள்ளூர் வண்ணானை அழைத்து, ‘சந்தைக்குப் பிடித்துப்போய்விற்றுத் தொலையடா... பிள்ளைங்களாட்டம் வளர்த்துனேன்... ஒவ்வொன்னாச் சாவுதுக!

பாக்க பாக்க அழுவாச்சியா வருது எனக்கு!’ என்று தள்ளிவிட்டு விட்டது ஐந்து வருடம் முன்பாகவே. இப்போது கேபிள் கனெக்சன் போட்டு எல்ஈடி டிவியில் நாடகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.

எந்தநேரமும் சட்டியில் வரட்டீயை வைத்திருந்து அவ்வப்போது சூடுபண்ணி சூடுபண்ணி அதில் எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டுக் குடிக்கப்பழகியிருந்த மருதாயிக்கிழவி, குளிக்கப் பாத்ரூமிற்குள் சென்றாள் என்றாள் குறைந்தது ஒன்னரைமணி நேரம் நிதானமாய்க் குளித்து முடித்து வெளிவரும் பழக்கம் வைத்திருந்தாள்.

வீட்டு முன்னால் இருக்கும் பைப்பில் தான் காலை நேரத்தில் தண்ணீர் நிற்கும்வரை குடம் குடமாய்ப் பிடித்துக்கொண்டு போய்ப் பாத்ரூம் தொட்டியை  நிரப்புவாள்.

வீட்டின் முன் இருக்கும் காலியிடத்தில் கத்தரிச் செடியும் வெண்டைக்காய் செடியும் வளர்த்துகிறாள். அவைகளுக்கும் காலையில் குடம் குடமாய்க் கொண்டு போய் ஊற்றுவாள்.

சின்னப்பொன்னானப் பாரு வீட்டினுள் நுழைந்து அவரது இரு குடங்களைத் தூக்கி வந்து தண்ணீர் பிடித்துக்கொண்டுபோய் வைப்பதும் மருதாயிக்கிழவிதான். தண்ணீர் வரும் காலை நேரத்தில் அப்பாரு வாயைக் குவித்துப் புஸ்ஸ் புஸ்ஸ்செனக் காற்றை ஊதிக்கொண்டே கட்டில் குழியில் தூங்கிக்கொண்டிருப்பார்.

தூங்கும் சமயத்தில் நாய் நுழைந்து சோத்துச்சட்டியை கவிழ்த்தி சாப்பிட்டுவிட்டு சென்றால் கூட அவருக்கு எதுவும் தெரியாது.

மாரியம்மன் கோவில் கல்லுக்கட்டில் அமர்ந் திருந்தவர் சண்முகன் சென்ற பிறகும் தன் கதையை யாரேனும் கேட்பர் என நினைத்து சொல்லிமுடித்து அமைதியானார். அரசமரத்து நிழல் சொகுசாய் இருந்தாலும் காற்றுதான் இல்லை. கிழக்கே குடோனில் தறி ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் மட்டுமே இவர் காதுக்குக் கேட்டது.

சுளுக்கைகள் தன்னைச் சுற்றிலும் வந்துவிட்டன வோவென அப்போதைக்கப்போது தோளில் கிடந்ததுண்டால் திண்ணையில் இருபக்கமும் அடித்து அகற்றிக்கொண்டிருந்தார்.

சுளுக்கை கடி வாங்கிவிட்டால் கடிபட்ட இடம் இட்லி மாதிரி உப்பிக் கொள்கிறது! மாசத்தில் எப்படியும் ரெண்டுதடவையாச்சிம் அவைகள் இவரைக் கடித்து வைத்துவிட்டு மிக விரைவாய்ச்  சென்றுவிடுகின்றன.

“இங்கெங்கடா சுளுக்கை கடி வாங்கீட்டு தன்னப் போலப் பேசீட்டு குக்கீட்டு இருக்கே?” ஆரப்ப அப்பாரு புறங்கை கட்டிக்கொண்டே இவர் அருகில் வந்து நின்றது. விரலிடுக்கில் பத்தாம்நெம்பரு பீடி புகைந்துகொண்டிருந்தது. ஆரப்ப அப்பாரு மருதாயிக்கிழவியின் அடுத்த வீடு. அவரும் இவரைப் போலவே தனி ஆள்தான்.

அவருக்கும் வீட்டினுள் சட்டி சாமான்கள் எல்லாம் குறைவுதான். ஆனால் இள வட்டங்கள் சிலர் ஆரப்ப அப்பாருவின் வீட்டுக்குத்தான் சீட்டாடவும் கேரம்போர்டு ஆடவும் சிலர் குடிக்கவும் வந்து போவார்கள்.

விடுமுறை நாட்களில் கறிவறுவல் செய்து காரஞ்சாரமாய்த் தின்பார்கள். அப்பாருக்கு அரைக் கட்டிங் கிடைக்கும். மிளகாய், தக்கோளி, பூண்டு, சீரகமென வாங்கவேண்டிய எந்தச்செலவும் ஆரப்ப அப்பாருக்கு இல்லை.

எல்லாம் அவர்களே வாங்கிவந்து வீட்டினுள் போட்டுவிடுவார்கள். அப்பாரு மகிழ்வான மனிதர். எந்த நேரமும் தலையில் உருமாலைக் கட்டு இருக்கும்.

ஒரே பெண்பிள்ளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து நாற்பது வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆரப்பஅப்பாருவின் வீட்டினுள் எந்த நேரமும் டிவி சப்தம் பெரிதாக இருக்கும். வீட்டின் சாவி கூட வெளித்திண்ணையில் தேங்காய்த் தொட்டியினடியில் தான் இருக்கும். யார் சென்றாலும் திறந்து கட்டிலில் படுத்து உறங்கலாம். சாப்பாடு செய்யலாம். சாப்பாடு சட்டியில் இருந்தால் போட்டும் சாப்பிடலாம்.

“தாரு ஆரப்பனா? ஊட்டுலதான் என்னேரம் கிடக்குறதுன்னு அப்பிடியே சித்தெ வெளிய வந்துட்டுப் போறதுதாண்டா! பீடி வாங்க வந்தியா கடைக்கி?”

“பீடிக்கி யாரு இங்க வந்தா? நம்ம பழனான் ஒருவாரமா வயித்துப்போக்குனு கெடையில கெடக் கான்னு பசங்க சொன்னானுங்க! அதான் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்தேன்! பத்தாம் நெம்பரு பீடியாட்டமே கட்டல்ல கெடக்காண்டா! இன்னும் ரெண்டு நாள்ல கிழக்கெ சுடுகாட்டுல போயி படுத்துக்குவான்னு நினைக்கிறேன்!”

“பையன் பாத்துக்குவான்ல ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போயாச்சிம்! வேனு வேற வச்சிருந்தானே!”

“ஆஸ்பத்திரியெல்லாம் ரெண்டாம் நாளே கூட் டீட்டு போயிட்டு வந்துட்டாங்க!”

“பழனான் தண்ணி போடறவனாச்சே!”

“ஆமா! அப்படின்னு தான் நானு அவம் புள்ளை கிட்ட பையனுக்கு ஒரு போனை போடச் சொல்லி பேசினேன். அவன் என்னடான்னா முந்தா நேத்துஒரு கோட்டரு அப்படித்தான் வாங்கிக் குடுத்தனப் பாரு...

எச்சா வவுத்துல புடுங்க ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னான். அடக்கருமம் புடுச்சவனே நீயி ரம்மு வாங்கிக் குடுத்தியா?ன்னேன்! அப்படின்னா என்னுங்கப்பாரு?ங்கான். வயித்துல போறவனுக்குப் பிராந்தி குடுத்தா எச்சாத்தான போவும்!

மளார்னு ரம்முன்னு சொல்லி வெசீமங்கல கடையில வாங்கீட்டு வந்து உங்கொப்பனுக்குக் குடுடான்னு சொல்லி போனை வச்சேன். பழனான் கட்டல்ல அவட்டை போயிக் கெடந்தவன் மளார்னு எந்திரிச்சி உக்கோந்துட்டாண்டா! ‘இப்ப வந்துருமா சரக்கு?’ அப்பிடிங்கறான்.

தம்முக்கட்டி எந்திரிச்சி ஜன்னல் மேல பீடிக்கட்டை எடுத்து அதுல ஒன்னை உருவி பத்தவச்சி ஊதுறான்! உனக்கு வேணுமா ஒன்னு? அப்படின்னு எனக்குப் பீடிகட்டை நீட்டுறான்னா பாத்துக்க! ‘இப்ப பையன் வாங்கீட்டு வந்துருவானா? வந்துருவானா?’ன்னு சல்லை பண்ணினான். வாங்கீட்டு வந்துருவாண்டா சித்த கம்முனு கட்டல்ல கெட!” அப்படின்னுபோட்டு வந்தேன்.

“போயிருவானா? பொழைப்பானா?”

“தெரீல சந்தேகமாத்தான் இருக்குது! ரம்மு ஒரு வேள ஆளைக் காப்பாத்தினாலும் காப்பாத்திரும். அப்புறம் பாரு ஆடுகளை ஓட்டீட்டு மேய்க்கறதுக்குக் கிளம்பீருவான்”

“இன்னிக்கி பசகெல்லாம் வேலைக்கி போயிட்டானுங்களா?”

“போயிருப்பானுங்க! நேத்து எனக்கு அரை பாட்டிலு ராத்திரி குடுத்தானுங்க! நானு அதை இனி இன்னாரத்துக்கும் மேல ஏன் குடிக்காட்டின்னு ஊட்டுக்கு பொறவுக்கால ஊசிப்புல்லு மொளச்சிக் கெடந்ததுக்குள்ளார சாமத்துல வீசிட்டேன்.

ஊட்டுக் குள்ள வச்சிருந்தாத்தான் எவன் வந்தாலும் அன்னாந்து மடக்கு மடக்குனு குடிச்சுட்டுப் போயர்றானுங்களே! காத்தால ஞாவகம் வந்து புல்லுக்குள்ள தேடுறேன் சிக்குவனாங்குது! கெழபக்கத்துல இருந்து குக்கீட்டே புல்லு புடுங்கீட்டு தேடீட்டே வர்றேன் அரைமணி நேரம்.

கடைசியா பார்த்தா எங்க நின்னு வீசினனோ அவத்திக்கே காலுக்குள்ள கிடந்திருக்குது! ஊட்டுக்கு பொறவுக்கு நீயி இப்பப் போயிப்பாரு... பளிச்சுனு ஒரு புல்லு பூண்டு இருக்காது! அமட்டையும் புடுங்கித் தள்ளீட்டேன்!”

“அப்புறம் குடிச்சியா இல்லியா?”

“குடிக்கத்தானே அந்தப்பாடு பட்டு புல்லு புடுங்கி னேன்! அப்பவே மெட்டைக் கழட்டி அன்னாந்து ஊத்தீட்டேன்! அது கெடக்குது... ஆமா என்ன சொல்றா மருதாயி?”

“அவுளுக்கென்ன?”

“என்னடா இப்பிடிக் கேக்குறே? ஊட்டுக்காரனுக்குச் செய்யுறாப்டி உம்பட ஊட்டுக்குள்ளவந்து கொடம் தூக்கி தண்ணி புடிச்சு வெக்கிறா... நீயும் திடீருன்னு அவ ஊட்டுக்குள்ளார போயி டிவிபாத்துட்டு நெதானமா வர்றே... லவ் யூ சொல்லிட்டியா?”

“என்னத்தடா கேக்குறே? லவ் யூங்கறே... அப் பிடின்னா என்ன?”

“காதல்றா! உன்மேல அவளுக்கு நோட்டமிருக் குதுடா! நானா இருந்தன்னா எம்பட ஊட்டுல அடுப்பே பத்தவைக்க மாட்டேன்! அவளையே ஆக்கிப் போடச்சொல்லி அட்டனங்கால் போட்டுட்டு கட்டல்ல  படுத்துக்குவேன்  தெரிஞ்சிக்க!”

“டேய் ஏண்டா உனக்குப் புத்தி இப்பிடி கூறு கெட்டுப்போச்சு? கெழவிகிட்ட போயி லவ்யூ சொல்லச் சொல்றே? தண்ணி போட்டுப்போட்டு மண்டையில உனக்கு மசாலா இல்லாம போயிடுச்சுடா ஆரப்பா!”

“பின்ன எதுக்குடா உனக்கு அவ தண்ணி புடிச்சுக் கொண்டாந்து வெக்கிறா?”

“கெழவன் கொடம் தூக்க முடியாம அவட்டை போயி கிடக்கானேன்னு செய்வாடா!”

“நீ பெரிய சொத்துக்காரன் பாரு, உனக்குக் கடைசி காலத்துல செஞ்சு பத்தரத்துல கைநாட்டு வாங்கிப் பொழைச்சுக்க  ஐடியா  பண்டியிருக்கா!”

“நானே வெறுங்குண்டி அம்மணம்னு கிடக்கேன்! பொண்டாட்டியும் வெறச்சுட்டு போயி பத்து வருசமாச்சு!”

“தெரியுதில்ல! கோவிச்சுட்டு போன பொண்டாட்டி இனி உம்பட ஊடு தேடி வரவா போறா? கெடையில நாலு நாளு கெடந்துபாரு... அன்னிக்கித் தெரியும் உனக்கு! உன்னோட மருமக வந்து உனக்குச் சேவகம் பண்ணுறாளா இல்ல மயிலா வந்து சேவகம் பண்ணுறாளான்னு! ஒரு சனம் உம்பட ஊட்டுப்பக்கம்எட்டிப் பாக்காது.

சின்னப்பொன்னான் சீக்கிரம் போனான்னா தூக்கிக்கொண்டு பொதைச்சுட்டுசோலிகளைப் பார்ப்பம்னு இருப்பாங்க! இங்க மட்ட மத்தியானத்துல வந்து கல்லுக்கட்டுல உக்கோந்து சுளுக்கை கடி வாங்கீட்டு இருக்குற நேரம் மருதாயி ஊட்டுல உக்கோந்து அவகூடச் சாடை பேசீட்டு டிவில பொம்மை பார்த்துட்டு லவ்யூ சொல்றதை உட்டுட்டு திருவாத்தானாட்ட இருக்கான்!”

“டே, நீ என்னை இக்கட்டுல கொண்டி மாட்டி வச்சுட்டு வேடிக்கை பார்க்க பாக்கேடா ஆரப்பா!”

“நல்லபுத்தி சொன்னா இக்கட்டுங்காம்பாரு எருமை மேய்க்கி! கோயமுத்தூருல உக்கோந்துட்டு அவ பையன் சம்பாதிச்சி பணம் கொண்டாந்து அம்மாக்கு குடுத்துட்டு போயிட்டு இருக்கான்! ஒருத்தி அத்தாப்பெரிய ஊட்டுல உக்கோந்துட்டுச் செலவுபண்டத் தெரியாம வரக்காபி குடிச்சுட்டு உக்கோந் துட்டு இருக்கறா!

ஏண்டா அவ கறி எடுத்து திங்கறதை ஒரு விசுக்கா வாச்சிம் பார்த்திருக்கியாடா? போயி கிட்ட உக்கோந்து நல்லாப் பழகுடா சின்னப் பொன்னா... அப்பத்தான் வாயிக்கி ருசியா நாலு தீம்பண்டம் செஞ்சு அவுளும் திம்பா உனக்கும் குடுப்பாடா!”

“எறந்து திங்கச் சொல்றே என்னை?”

“இனி எனக்கு மசக்கோவம் வந்துரும். பாத்துக்கொ! எதோ நேக்கா பேசிப் பழகி நல்லசோறு தின்னு ஒடம்பை கவனிடா! இன்னும் பத்துவருஷம் சேர்த்தி ஊருக்குள்ள நல்லசேதி கெட்டசேதியெல்லாம் கேட்டுட்டு உசுரோட இருப்பே! போயி டிவி முன்னாடி உக்கோந்துட்டு மருதாயியோட பேச்சுக்குடு!

அவ குடுக்குற வரக்காபியே போதும்னு வாங்கி உருப்பு உருப்புன்னு குடிச்சுட்டு எந்திரிச்சிறாதே. மழை வர்றாப்டி மானம் இருக்குது... வெங்காயப் போண்டா தின்னா நல்லா இருக்கும்னு சொல்லு! அவளுக்கும் நாக்குல எச்சி ஒழுகும்ல! டிவில எத்தனை விளம்பரம் வருது திங்கறாப்ல!

இனி நீ போறப்ப எனத்தைக் கொண்டுட்டு போறே? வகுறு ரொம்ப ஒனத்தியா தின்னு! உனக்கெல்லாம் செஞ்சு தரமாட்டன்னு மருதாயி சொல்லவே மாண்டா! உம்மேல ஒரு கண்ணுடா அவுளுக்கு!

நீ அனுசரிச்சுப் போனீன்னா தங்கத் தாம்பாளத்தட்டுல உக்காத்தி நீவி நீவி உன்னைக் கவனிச்சுக்குவா! நான் சொல்றது நடக் கும்டா சின்னப்பொன்னா! மாரியம்மன் பாரு வடக்கு முகனா உக்கோந்துட்டு காது குடுத்து கேட்டுட்டுஇருக்குது இந்த ஆரப்பன் நல்லதுதான் சொல்றான்னு!”

“சேரி நீ சொல்றாப்டித்தான் கொஞ்சம் நாளு இருக்கப் பாக்குறனே! காசா பணமா! மொதலு எனத்த இதுல போடப்போறோம் நாம! சேரி நானு பொங்கும் பொங்குனு தெக்கெ நடையக் கட்டுறேண்டாஆரப்பா! நீ வரலியா?”

“எனக்கு மேக்கெ சோலி ஒன்னு இருக்குது! பார்த்துட்டு பொறவுக்கு வர்றேன்! போபோ! எல்லாம் ஆத்தா பாத்துக்குவா!” சொல்லிவிட்டு ஆரப்ப அப்பாரு நேராய் மயிலா வீட்டுக்குத்தான் கிளம்பினார். இன்னமும் கொஞ்சம் போதை அவருக்கு மீதமிருந்தது!

*****

மூன்றாம் நாள் காலையில் ஊருக்குள் தெற்குக் கடைசி வீட்டின் முன்பாகப் பெரும் சண்டை துவங்கியிருந்தது. ஊருக்குள் வாசல்படியில் கிடந்த நாய்கள் எல்லாமும் கூட என்னவோ ஆகிவிட்டதெனக் குலைத்துக்கொண்டே தெற்கே ஓடின.

கட்டிலில் பச்சை மிளகாயோடு சேர்த்தி நெய்க்கருவாடு தின்னும் கனவில் இருந்த சின்னப் பொன்னானப்பாரு வீட்டின் முன் கூச்சலாக இருந்த தால் ‘அக்ஸ்! அக்ஸ்!’ என இரண்டு பெரும் தும்மல்களைப் போட்டுவிட்டு கட்டிலின் அடியில் கிடந்தகைத்தடியை எடுத்துக்கொண்டு எழுந்தார். அவருக்கு மயிலா அடித்தொண்டையிலிருந்து பெருங்குரல் எடுத்து சத்தமிடுவது கேட்டது.

இவ எங்க இங்க வந்து தொண்டையத் தொறந்துட்டு இருக்கா காலங் காத்தால! என்ன கேடு இவளுக்கு வந்துச்சு? நெகா எதுவும் சிக்காமல் வாசலுக்கு வந்தார். இவரது பச்சை வர்ண ப்ளாஸ்டிக் தண்ணீர்க் குடம் வாசலில் தண்ணீரோடு உருண்டு கிடந்தது.

“என்ன மயிருக்குளே எம்படக் கெழவனுக்கு நீயிதண்ணி சொமக்குறே? அவனெ ஏண்டி உம்பட ஊட்டுக்குள்ள வச்சு சோறு ஊட்டி உடறே? உனக்கெல்லாம் இந்த வயசிலயும் நெனப்பு மயிரப்பாரு! வகுந்து போடுவண்டி முண்டெ!

ஊட்டுக்காரன் செத்து இத்தினி வருஷங்கழிச்சி உனக்குத் தண்ணி ஊறுதா? மருகாதியா ஊட்டக் காலி பண்ணீட்டு உம்படப் பையங்கிட்ட ஓடீரு! மயிலான்னா ஆருன்னு நெனச்சே?”

மயிலா கூனிக்கொண்டே தடியூன்றியபடி வந்து மருதாயிக்கிழவியை ஒரு சாத்து சாத்தவே திரிந்தது. மருதாயிக்கிழவியும் ஒன்றும் சலைக்கவில்லை!

“ஆமாளே தொண்டுக்கெழவி! அப்பிடித்தான்லே ஊட்டி உடுவேன்! நீ கிழிக்கிறது கிழி போ! காத்தால ஏறீட்டு வந்துட்டா சண்டைக்கி. புருசனை உட்டுப் போட்டு ஊருக்கும் மேக்கெ ஓடிப்போனவதானடி நீயி! ஏண்டி நீ பேசுறியே இத்தனை பேச்சு, அதுல ஒரு நாயம்னு எதாச்சிம் இருக்குதா?

இன்னிக்கி எங்கிருந்துடி உனக்குப் புருசன் நெனப்பு தட்டிக்கிச்சு? முடியப் புடிச்சன்னா ஆட்டி யுட்டுறுவேன் பாத்துக்க! ஆருகிட்ட உன் பூலவாக்கைகாட்ட வந்துட்டே? உம்பட ஊட்டுக்காரன் வேணும்னா மடியில கட்டீட்டு போ!

ஆரு வேண்டாங்கறாங்க இங்க? ஆனா என்ன ஒரு ஏத்தமிருந்தா ஊட்டை காலி பண்ணீட்டு போவச் சொல்லுவேடி தொண்டுக்கெழவி!

நீ போடி ஊரை உட்டு! நடக்க மாட்டாதவன் சித்தப்பனூட்டுல பொண்ணு கட்டுன கதை எனக்குத் தெரியாதா?

எப்பிடியடி கெழவி உசிரை வச்சிட்டு இன்னும் சோறு திங்கறே? நானா இருந்திருந்தா அன்னிக்கே அரளி வெதை அரைச்சுக்  குடிச்சுட்டு போயிருப்பேன்!”

நேரம் ஆக ஆகச் சனக்கூட்டம்தான் பெருகினதே யொழிய இரு கிழவிகளையும் கட்டுப்படுத்தி ஒதுக்கயாருக்கும் நினைப்பில்லை. ஆரப்ப அப்பாரு பீடிப் பொகை ஊதியபடியே நிம்மதியாய் கூட்டத்தின் முன்னால் நின்று ரசித்தார். நாய்ச்சண்டை ஒரு பக்கம்குட்டானாய் நிகழ்ந்து முடிந்திருந்தது.

அப்போதுமருதாயிக்கிழவி பொறுத்துப் பார்த்து சின்னப் பொன்னாக் கிழவன் அருகில் போய் அவரது கன்னத் தில் ஒரு உம்மா கொடுத்தாள்!

“போயிச்சாவுளே ஒய்யா! இத்தினி ஆனதுக்கப்புறம் உம்பிருசன் இனி எனக்குத்தான்!” என்று நடு வாசலில் நின்று கொக்கறித்தாள்.

மயிலாக்கிழவி தடியை ஒரு சொழட்டு சொழட்டி வீசியெறிந்துவிட்டு,

“ஐயோ! எம்பட ராசாவெ படங்காட்டி படங்காட்டி அமுத்திக்கிட்டாளே! கேக்க நாதியில்லியா! மாரியாத்தா கண்ணு பூத்துப்போச்சா உனக்கு?”

என்று  ஒப்பாரி  வைத்தபடி  வாசலில்  அமர்ந்தாள்.

சின்னப்பொன்னானப்பாரு அவளை நோக்கி தடி யூன்றிக்கொண்டே சென்று அவள் முதுகில் லொட்டுலொட்டென  லேசாய் தட்டினார்.

மயிலாக் கிழவி ‘என்ன?’ என்பது மாதிரி தலையுயர்த்தி அவர் முகம் பார்த்தாள்.

“மயிலா! லேய்! லவ்யூடி!” என்றார்.

“என்னெ?” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயிலாக்கிழவி வாசலில் சாய்ந்தாள்.

உள்ளூர் வண்ணான் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு வந்து கிழவியின் அருகில் அமர்ந்து நாடி பிடித்துப் பார்த்தான்.

பின்பாகக் கூட்டத்தாரைப் பார்த்து உதடு பிதுக்கி மண்டையை இருபுறமும் ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டிவிட்டு எழுந்தான்.

“கெழவி போயிச் சேர்ந்துடுச்சுங்கொ!” என்றான்.

முழு ஆண்டு விடுமுறையைத் தடுக்கப் பார்க்கிறது 
அம்மாவின் ஓயாத முனகல்
மெல்லிய கையுறைகளை
முதன்முதலில் பார்க்கிறேன் 
‘கையுறையுடன் தாதி’
நான் வரையப் போகும் எண்ணெய் ஓவியத்தின் பெயர்
தாதிகளின் முலைகள் புட்டங்கள் என்று 
நூற்றுக்கணக்கான ஓவியங்கள் பின்தொடரும்
நாளங்களில் புகுந்து இரத்த அணுக்களை ஏமாற்றிய 
ஊசிகளின் கதைகளை கேரள தாதிகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்
உடைந்த பாறைத்துகள்கள் திடீரென 
நீரை உறிஞ்சியது போல மலத்துண்டுகள்
வெல்டன் சேச்சி 
எனக்கு விடுமுறை கிட்டியது
நாசித்துவாரங்களில் நிரந்தர குடல் மணம்
கிளம்பும் முன் நான் தேர்ந்தெடுத்த 
சொற்கற்கள் அம்மாவின் நெத்தியை
பதம் பார்த்திருக்க வேண்டும்
இதயம் கசிந்தது என பின் ஒரு கனவில் வந்து சொன்னாள்
வசதியாக அமர்ந்து ஆடை மாற்றும் உடல்களை 
வேடிக்கை பார்ப்பது போல 
ஜன்னல் இருக்கையில் இருந்து 
விடியலைக் காண்கிறேன் 
கருப்பு அடர் நீலத்தை ஒரு வெளிர் மஞ்சள் கீற்று குறுக்கிடும்போது 
அம்மா இறந்துவிட்டாள் என்று உறுதிகொண்டேன்
வானம் விடிவதை என்னால் எழுத முடியும்
பிறகு நான் என் விடுமுறைக்கான பரதீஸை அடைந்தேன் 
தாத்தா... என்று ஓடிச்சென்று 
செய்தி அறிவித்து அழைத்து வந்தேன்
வார்த்தைகளில் இருந்த வயதிற்கு மீறிய பிரசங்கங்கள் விலகி
தயை கூடிய நாள் அது.

மதிப்புரை

ஒரு வெள்ளிக்கிழமை கதை

ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒருவன் / தன் கனவில் / தெரியாத ஒருத்தியின் பாதத்தை / நக்கிக்கொண்டிருந்தான் / அதே இரவு ஒருத்தி / தன் கனவில் / தெரியாத ஒருவனுக்காக / ஒரு மலையுச்சியிலிருந்து குதித்துக்கொண்டிருந்தாள் / அக்கணமே அனைத்தும் அறிந்த முகநூல் செயலி / ஸ்ட்லெட்டோ அணிந்த பெண்ணொருத்தி / மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளம்பரத்தை / இருவர் நேரக்கோட்டிலும் பகிர்ந்தது / அக்கணமே அவர்கள் / ஸ்ட்லெட்டோவை மலையுச்சியைத் / தேடத் தொடங்கினார்கள் / அக்கணமே முகநூல் செயலி / இருவர் நேரக்கோடுகளிலும் / ஸ்ட்லெட்டோ வகைகளை / மலைவாசஸ்தல பேக்கேஜ்களைக் / கொட்டிக் குவித்தது / அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு ஸ்ட்லெட்டோவைக் / கட்டியணைத்துக்கொண்டு தூங்கினான் அவன்/ அதேநாள் ஒரு மலையுச்சியிலிருந்து / அவள் குதித்து டிவி சானல்களில் செய்தியானாள் / இப்போது அவன் நேரக்கோட்டில் / நாவறட்சிக்கான மருந்துகளை / நிரப்புகிறது செயலி / அவள் நண்பர்களின் நேரக்கோடுகளில் / ஆவிகள் சம்பந்தமான காணொளிகளை நிரப்புகிறது / யாரும் திறக்காவிட்டாலும் பார்க்காவிட்டாலும் / அவை எல்லாவற்றிலும் அவள் / விழுந்த இடத்திலிருந்து / உச்சிக்கு ஏறிக்கொண்டிருக்கிறாள் (விளையாட வந்த எந்திரபூதம்)

பரிணாமம்

மனித உயிரினம் பரிணாமம் அடைந்ததைப் பற்றிய கேள்வி ஒன்று எப்போதும் உண்டு. ஹோமா எரக்டஸ் ஹோமோ ஹெபலிஸ் என்ற உயிரிகளிடமிருந்து ஹோமோ செபியன்ஸாக மனிதன் உருவானதற்குப் பின்பு ஏன் அடுத்தக்கட்ட பரிணாமத்தை அவன் அடையவில்லை? பரிணாமத்தை எது தீர்மானிக்கிறது?

உயிர்வாழத் துவங்கியப் போராட்டத்தின் நிர்பந்தம், சூழலின் தனித்துவப்பண்பு, உயிரின் தகவமைப்பைத் தீர்மானித்ததன் விளைவு (Environmental Pressure) விலங்குப் பண்பை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்துக்கொண்டதன் முடிவு இன்றைய மனித இனம்.

இனி அவனுக்கு இயற்கையோ பிற இனங்களின் அச்சுறுத்தலோ பருவச்சூழலோ அவனது வாழ்வு குறித்த போராட்டத்தை மாற்றப் போவதில்லை. அதாவது (Environmental Pressure) சூழல் அழுத்தம் அவனுக்கு இனி கிடையாது. ஆக,

மனிதனின் பரிணாமம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது பௌதீகப் பரிணாமம்தான் physical Pressure) முடிவுக்கு வந்துள்ளதே தவிர, மூளைப் பரிணாமம் (Mind pressure) இன்னும் முடியவில்லை. சூழல் அழுத்தம் உடற்செயலியலின் பரிணாமத்தைப் பாதித்ததுபோலவே தொழில் நுட்ப அழுத்தம் (Technological Preesure) மூளையின்
பரிணாமத்தை மாற்றும் காரணியாக இருக்கிறது.

உடல் சார்ந்த மனிதனின் பரிணாமத்தை இனி மாற்றும் காரணிகள் அவனைச் சுற்றி இல்லை என்பதே நிதர்சனம். பிறகு, இப்போது நடந்துகொண்டிருப்பதெல்லாம் மூளையின் பரிணாமம் மட்டுமே. இத்தனை நூற்றாண்டுகளாக அது தனது பரிணாமச் சிருஷ்டியை மூளைக்குள் செய்துகொண்டிருக்கிறது.

இனி அதன் இயக்கத்தை நிறைவு(நிறுத்த?) செய்யும் அளவுக்குரிய (தொழில்நுட்ப) தகவமைப்பு உருவாக வாய்ப்பு இல்லை. சூக்கும இருப்புக்கு அழிவு இல்லை யென்று நமக்குத்தெரியும் (மூளையின் செயல்பாடுகள் இங்குச் சூக்குமம்). மேலும் இந்தச் சூக்கும இருப்பே தூல இருப்பை நிர்வகிக்கிறதென்கிற சித்தாந்தத்தைச் சொல்லித்  தெரியவேண்டியதில்லை.

மூளை பரிணாமத்திற்கு இயைந்து தனது சிருஷ்டிக்குள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று அவ்வித பரிணாமத்தின் உச்சம் என்னவென்றால் அது தன்னை மனித இனம் என்கிற பழைய நின்றுபோன பௌதீகப் பரிணாமத்தை அசைத்தேவிட்டது.

அதாவது தன் நிறைவு அடைந்த மனித உயிரின் தூல இருப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் பரிணாமத்தின் சிருஷ்டி  நிலைக்கு  ஏற்ப  மாறியுள்ளது.

மூளை பரிணாமத்தின் விளைவால் மனிதன் எனும் உயிரின் “பண்புகள்” மாறத் துவங்கியிருக்கின்றன. முன்பு இத்தன்மையை நாம் எந்திரன் அல்லது ரோபாட்டிக் சென்ஸ் என்று உலகமயமாக்கலின் துவக்கத்தில் அழைத்துக்கொண்டோம்.

மனித யந்திரங்களின் வருகையால் நாம் அவ்வாறு அழைத்துக் கொள்வது ஒருவித கலாச்சார வழக்கமாக இருந்தது. ஏனெனில் ரோபோக்களின் பரிணாமம் அப்போது நிகழ்ந்துகொண்டிருந்தது. இன்று எந்த ரோபோவும் நமக்குத் தேவை இல்லை.

பொருள்களின் இருப்பே நமக்குத் தொந்தரவாக உள்ளது. நம்முடைய பிரக்ஞையின் விழிப்பு (attention) நம்மைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் அனுபவிக்கவேண்டும் ஆனால் அதற்காக அதைச் சுமந்துகொண்டு திரியலாகாது.

நினைக்கும்போது கண்முன் வரவேண்டும் வேண்டாம் என்றதும் அது தனது இடத்தைக் காலி செய்து கொள்ளக்கூடிய “இருந்தும் மறைந்துமான” உயிரியாக வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய அன்றாடங்களை வெளியே நின்று கவனித்தால் அந்த இருந்தும் மறைந்துமான  உயிரியின்  தடயங்கள்  புலப்படும்.

இந்தப் பகுதியைத் தற்காலிகமாக இங்கு நிறுத்தி விட்டு அன்றாடத் தடயங்களின் சுட்டிகளைக் கவனித்துவிட்டு வரலாம். நாம் சக நண்பர்களுடன் உரையாடும் விதம் மாறியிருக்கிறது. நீண்ட வாக்கியங்களுக்கு நமது குறுஞ்செய்திகளில் இடமில்லை.

ஹாட்டினும், ஸ்மைலியும் அதை எடுத்துக்கொண்டு விட்டன. ஒரு கேள்வியைச் சில குறிப்பான்களால் உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு, பழைய ஃபோர்ன் இணையத்தைவிட வேறு என்ன உன்னிடம் இருக்கிறது என்பதைச் சில எமோஜிகளைப் பயன்படுத்திக் கேட்கிறேன்.

பதிலுக்கு அங்கிருந்து நண்பர் உபயோகிக்கும் புதிய இணையத்தின் படம் வருகிறது. அது எப்படிப்பட்டது என்று சில ஸ்மைலிகள் அனுப்புகிறேன் அவரிடமிருந்து நாக்கைத் தொங்கப்போட்ட நாய்க்குட்டி வருகிறது. அவ்வளவுதான் உரையாடல்.

குரல் பதிவு செய்திகள் இன்னும் நேரத்தைக் குறைத்திருக்கிறது. இறந்து விட்டதைத் தெரியப்படுத்த, காதலை அறிய, வெறுப்பை உமிழ என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாட்ஸ் அப் ஸ்டேடஸ் இருக்கிறது. நம்மைச் சுற்றி நிறைய செயலிகள் உள்ளன. நாம் செயலிகளுடன் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு ஒருவரது தனிமை என்று ஒன்று இல்லவே இல்லை. தனிமைக்குள் இந்தத் தொழில் நுட்பங்களெல்லாம் வருகின்றன. இவற்றின் இருப்பையும் சேர்த்தே தனிமைப் பொருள் கொள்ளப்படுகிறது. காதலிக்கப் பிறிதொரு உயிர் தேவையில்லை இணையம் போதும். புணர்ச்சிக்கு செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயலி போதும்.

தர்க்க உரையாடல் நிகழ்த்த தரவிறக்கம் செய்த நுண்ணறிவு மென்பொருள் சாதனம் இருக்கிறது (Intellectual Debate software). இந்த சாத்தியங்களின் உச்சம்தான் செயற்கை நுண்ணறிவு ஏஐ Artificila Intelligence - AI..

இளம் பெண் ஒருத்தியிடம் நீங்கள் அவளது தனிமைக்குக் காரணம் என நீங்கள் அடுக்கும் துயரமா, பரிவா, ஆற்றாமையா, காதலா, மகிழ்ச்சியா, அமைதியா என்று எதைக் கேட்டாலும், பதில் உதட்டைச் சுழித்து தோள்களை உதறிக்கொள்வாள்.

இந்த செய்கைக்கு விளக்கம் காண, அதற்கு மேலே கூறிய தொழில்நுட்பங்களின் உதவிகள் வேண்டும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று புலப்படலாம் மனித உணர்வுகள் ஒரு செயலியைப் போன்றும், தகவல் தொழில்நுட்பங்களுடனும் எவ்வாறு பரிபாலிக்கிறது?

இப்படிச் செயல்படக்கூடாதென்றும் இப்படிச் செயல்பட வேண்டுமென்றும் அதை எது நிர்வகிக்கிறது?

பதில், நிச்சயம் ஒரு செயலியை, செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள உயிரிரை அனுபவிக்க, புரிந்துகொள்ள அதுபோன்ற இன்னொன்றால்தானே சாத்தியம்!

பெருந்தேவியின் கவிதைகள் இந்த பரிணாமத்தைத்தான் காட்டுகின்றன. “நீ ஒரு பரிணாமம் அடைந்த புதிய உலகத்தின் உயிரி” என்பதாக நம்மை நோக்கிச் சொல்கிறது, கூடவே தன்னையும் அவ்வாறு அடையாளப்படுத்தவும் செய்கிறது.

மானுட யத்தனம், மானுட தரிசனம், மானுட கீழ்மை, பரிவு, துக்கம், ஏக்கம், ஆற்றாமை, அபத்தம், காதல், காமம் இதெல்லாம் “மானுடத்தைக்” குறித்து இக்கவிதைகள் பேசவில்லை மாறாக, பரிணாமம் அடைந்த இப்புதிய யுக உயிரியின் நிலைபாட்டுடன்தான் நடத்துகிறது.

இந்தப் பரிணாம உயிரியைச் சாட்சிப்படுத்தும் கவிதை ஒன்று

எனக்கு எப்போதுமே வேலைகள் இருக்கின்றன
கற்பனையான ஒட்டகச்சிவிங்கியின் மீது ஏறப் பார்ப்பது பகலில் 
ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தேடி விசாரிப்பது இரவில் 
மேக மூட்டம் கவிந்த இரவில் காதலனோடு சண்டைப் போடுவது 
ஒரு மூட்டைத் தவறுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன் 
எதையும் சரி செய்துகொள்ளாதவன் 
சொல்ல மறந்துவிட்டேன் 
அவனைப் பின் தொடர்வது மூன்றாவது வேலை 
ஒருநாள் ஃபேஸ்புக்கில் எழுபத்தெட்டு பேருக்கு ஆர்ட்டின் போட்டான் 
நான் கத்தியைக் கையிலெடுத்தபடி மின்திரையைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன் 
இன்னும் ஒன்று நீ தொலைந்தாய் 
நான்காவது வேலை தெருவில் அலைவது 
பையத்தியக்காரர்களால் 
வீடற்றவர்களால் பார்க்கப்படுவது 
அவர்களது கண்களுக்குள்தான் உட்கார்ந்திருக்கிறது உலகம் 
அவர்களிடம்தான் தெரிந்துகொள்கிறேன்
அது எத்தனை துப்புக்கெட்டதென்று
தோற்றவர்கள் இருக்கும் இடத்தில்
ஜெயித்தவராக ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லையென்று
ஐந்தாவது வேலை பின்னிரவில் அழுவது
அதைச் செய்யாதவர்கள் இருக்கலாம் செய்ய நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.

அழுவதும் துக்கப்படுவதும் இங்குப் பாடுபொருள் அல்ல. மாறாக அதுவும் அன்றாடத்தின் ஒரு வேலை. ஏனெனில் கவிதை சொல்லிக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.

பைத்தியக்காரர்களும் வீடற்றவர்களும் இங்கே பரிணாமத்துக்கு உட்படாதவர்களாக வருகிறார்கள். இந்த உயிரிக்கு அவர்கள்மீது வாஞ்சை இல்லை, பரிவு கிடையாது. ஏக்கம் அறவே இல்லை (அது எத்தனை துப்புக்கெட்டதென்று)

மனிதனும் இயற்கையும் நேருக்கு நேராக எதிர்கொள்ளும் உலகம் அல்ல இந்த கவிதைசொல்லியினுடையது. மனிதன் அவன் உருவாக்கிய தொழில்நுட்ப உலகத்தின் கடைசிக்கு வந்துவிட்டான்,

இயற்கை சின்னஞ்சிறு புள்ளியாக கரைந்து பின் கண்ணுக்குப் புலனாகாத நுண் தகவல்களாக உருமாறி காலம் கடந்துவிட்டது. மெய்நிகர் உலகம் மெட்டாவர்ஸ்கள் இயற்கையின் இடத்தை பதிலீடு செய்துகொண்டிருக்கின்றன.

நிஜ உலகத்தில் இருக்கும் உங்களுக்கு மெட்டாவர்ஸ் உலகில் வேறொரு குணம், உருவம், கனவு, கற்பனைகள், ஆசைகள், குரோதம், காமம் என மெய்நிகரின் ‘அவதாருக்காக’ நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் (அதுதான் வசதியும்கூட). உங்கள் அவதார் உங்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்யத் தொடங்கும்.

இவ்விதமான உலகத்திலிருந்து இக்கவிதைகளை வாசிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அது இன்னொருவிதமான வாசிப்பை அளிக்கும்.

இன்னொரு கவிதை இந்த மனிதன் இயற்கை என்கிற துவந்தத்தை உதறிவிடுவதைக்  காணலாம்.

நாம் மனிதர்களாக இருந்தாலும்
மனிதர்களில்லை
நாம் தவளைகள்
ஒரு மந்திரத் தொடுகை நடந்தால்
இதோ இளவரசர்களாகிவிடுவோம்
சொகுசாகக் கனவு காண்கிறோம்
ஒரு பெரிய குட்டையை
நம்முடைய பாசிலோகத்தை
பூச்சிகள் புழுக்கள்
ஏழு சந்ததி தலைப்பிரட்டைகள்
பரவசத்தோடு கத்தும்போது
ஒரு நகரும் வாய்
நம்மை விழுங்குகிறது
நம் பிதுங்கிய முழி முழித்துப் பிதுங்குகிறது.

Update and Restart, Exhast, wired, Hang, Hangover, virtual world இந்தச் சொற்களெல்லாம் இப்போது சொல்லாடல்களாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன இவை நமது மொழிக் கிடங்கிற்கு (Langue) போய்விட்டன..

நாம் அனைவரும் ஒவ்வொரு முறையும் ‘அப்டேட் ரீஸ்டார்ட்’ செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மிகப்பெரும் துக்கமோ, ஏமாற்றமோ, இழப்போ ஒரு பெரு மூச்சில் வெளியேறுவதற்கு, கவனிக்கவேண்டும் பெருமூச்சிற்கு நிகரான இன்னொரு செயல் இக்காலக்கட்டம் நமக்கு அளித்த இச்சொற்கள்.

இவை வெறும் சொற்களாக இல்லாமல் உணர்வாக, கதையாக மாற்றம் பெறும் கவிதை ஒன்று.

யார் யாரோ வருகிற இரவு கனவில்

ஒருமுறை தபால்காரர் வந்தார்
தாத்தாவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு
ஒருமுறை முகம் தெரியாத மொட்டைத் தாத்தா வந்தார்
காப்பி ஷாப்பில் கல்லாவில் இருப்பவர்
பிள்ளையார் கோவிலில் செருப்புகளைப் பார்த்துக்கொள்பவர்
போத்தீஸில் திடகாத்திர புஜ அழகைக் காட்டும்
Mannequin கூட வந்திருக்கிறான்
நேற்று காதலனின் மனைவி வந்தாள்
இன்று அவளுக்குப் போட்டியாகக்
காதலனின் அம்மா வந்தாள்
வந்தவள் இரு கையால் எனக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டாள்
அவளைவிட என்னை ஆதரிக்கிறாள் போல
காதலனும் வருகிறான் எப்போதாவது
கலைந்த தலையோடு
சமயத்தில் அடையாளத்தை மாற்றிக்கொண்டு
என் இன்னொரு காதலனின் tuck in செய்யாத சட்டையோடு
மூன்றாமவனின் செல்லத் தொந்தியோடு
கலைந்த தலையைக் கோதியவுடன் சிரித்தான்
எப்படியிருக்கிறாய் என்றேன்
சந்தோஷமாக இருக்கிறேன் என்றான்
இந்தக் காலை
எனக்கும் அவனுக்கும் உவப்பான
ஒரு பொய்யோடு தொடங்கியிருக்கிறது.

சியர்ஸ்

பெருந்தேவியின் கவிதையம்சங்களில் பொதுவாக வெளிப்படும் ஒரு பாவனை இருக்கிறது. அது கொண்டாட்ட செயல். பாய்ஸ் திரைப்படத்தில் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் (அபத்தம், வெற்றி, தோல்வி, சந்தோஷம் இத்தியாதி) ட்ரீட் கேட்கும் நண்பர்களின் ரசனைத்தனம் உண்டு.

அதாவது, நடந்ததைப் பற்றிய கவலையைத் துறந்துவிட்டு இந்த தருணத்தை அனுபவிக்கலாம் வா என்று. கிட்டத்தட்ட இன்றைய கேயாஸ் உலகத்தில் இந்த அனுபவம்தான் நமது இருப்பை கொஞ்சமாவது நோய் பீடிப்பதிலிருந்து ஆற்றுபடுத்தும் மருந்து. நிகழ்காலத்தில் உறைந்திருக்கும் அத்தகைய தருணத்தை அக்கணமே அனுபவிக்கும் கவிதை மனநிலை அலாதியானது.

பெருந்தேவி அவற்றை கடப்பதைக் கவனிக்கும்போது  சில இடங்களில் வெளிப்படையாகவும் சில இடங்களில் மௌனமாகவும் எல்லாவற்றுக்கும் சியர்ஸ் கேட்கிறார்.முதலில் சியர்ஸ் என்கிற தலைப்பிட்ட பெருந்தொற்று காலக் கவிதை இப்படி முடிகிறது.

இன்று 
சாவுக்கணக்கைக் கேள்விப்படும்போது
உயிரோடிருக்கும் கணக்கில்
நானிருப்பது உறுதியாகிறது
உயிரோடுக்கும் கணக்கில் நானிருப்பதை
உறுதி செய்துகொள்ளாமல்
நாளின் முதல் தேநீரை
என்னால் அருந்த முடியாது

பெருந்தொற்று நமக்கு அளித்த நிச்சயமின்மையை உறுதி செய்துகொள்ளும் மனநிலையைக் கொண்டாடுகிறதென்றால் இன்னொரு கவிதை அபத்தத்தை ரசிக்கும் ஒரு நாளும் முட்டாளும் என்கிற கவிதையிலிருந்து

சில வரிகள்.
முட்டாள்கள் காலைகளில் அழுகிறார்கள்
சில செம்பருத்திகள் தண்டுகளற்றுப்
பூக்க முயல்கின்றன
முட்டாள்கள் மாலைகளில் அழுகிறார்கள்
யார் யாரோ யார் யாருக்காகவோ
பொறுமையின்றிக் காத்திருக்கிறார்கள்
முட்டாள்கள் நள்ளிரவுகளில்
கண்களைத் துடைத்துக்கொள்கிறார்கள்
தண்டுகளின்றிப் பூக்கப் போகும்
செம்பருத்திகளாகத்
தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்

இந்தக் கவிதையில் வரிசைப்படுத்தப்படும் முட்டாள்களில் - இரவுக்குரியவர்கள் கண்களை துடைத்து கொள்கிறார்கள் என்று முடிக்கும் முன் வெளிப்படும் ஒருவித பரிகாசம் உணர்வும் சரி அடுத்தக் கவிதையில் வெளிப்படும் அங்கே பகல் இங்கே இரவை மாற்றிவிடப்போவதில்லை என்றும் முடிகிறபோது எதுவும் எதுவுமே என்னும் தனிமையின் ஓசையும் சியர்ஸை மௌனமாக உயர்த்திப் பிடிக்கின்றன.

இன்னொரு கவிதை இங்கே இரவாகும்போது அங்கே பகலாகிறது என்கிற கவிதை.

குளியல் தொட்டியிலிருந்து
எழுந்து நின்ற அவள்
தன்னைப் பார்த்துக்கொண்டாள்
சில புதிய மச்சங்கள் சில பெரிய சிவப்புப் புள்ளிகள்
உடல் மாறிவிடவில்லை
வயது எங்கோ தூரத்தில்தான் குலைகிறது - கொன்றைகள் வாடிவிடவில்லை
உடையணியும் முன்
தன் இலையை இடப்பக்கம் சாய்த்து
ஒரு செல்ஃபி எடுத்தாள்
வேறொரு கண்டத்தில்
ஒரு கடலில் நத்தைகள்
மெதுவாகக் கடலேறின
ஒரு மல்லிகைப்பந்துக்கும்
இன்னொன்றுக்குமாக
அவள் கை அலைந்தது
குளியலறைக் கண்ணாடியில் வழக்கம்போல
தனியாகச்
சிதையில் இறங்கினாள்
அங்கே பகல் இங்கே இரவை/ மாறிவிடப்போவதில்லை எதுவும்
எதுவும்

எதுவும் எதுவும் என்கிற சொற்கள் மௌனமாக சியர்ஸ் என்பதை உயர்த்திப் பிடிக்கும் உணர்வுகளை அளிக்கின்றன. பிரிவு பிரிவாகவும் துக்கம் துக்கமாகவும் ஏமாற்றம் ஏமாற்றமாக பெருந்தேவியின் கவிதைகளில் வருவதில்லை.

அப்படியான சொற்கள் அர்த்தமிழக்கின்றன, பதிலாக அவை கொண்டாட்டமாக மாறுகிறது. ஆனால் இதுமட்டுமே இக்கவிதை சொல்லியைப் பரிணாமம் அடைந்த உயிரி என முடிவுக்கு வந்துவிட அனுமதிப்பதில்லை. மாறாக இக்கவிதைசொல்லி கொண்டிருக்கும் மற்றவர்களுடனான துவந்தத்தையும் பார்க்கலாம்

இரு தரப்பினர்

இக்கவிதை சொல்லிக்கு இரண்டே தரப்பினர்களுடன்தான் துவந்தம்.

1. முதல் தரப்பினர் தன்னைப்போன்று பரிணாமம் அடைந்த சக புதிய யுக உயிரிகள். அவர்களுடன் இவர் நட்புப் பாராட்டுகிறார், ஆதுரமாக அரவணைக்கிறார், காதல் வயப்படுகிறார், பரிவு காட்டுகிறார். “நீங்கள் இந்த யுகத்திற்கு வந்துவிட்டீர்கள் நன்றி. இங்கு சில நிபந்தனைகள் உண்டு. நாம் நிபந்தனைகளோடு வாழ்வைத் தொடங்குவோம். தகுதிகளை உறுதி செய்வோம். கனவுகள் இருக்கின்றன. அக்கனவுகளை இடம் பெயர்த்துவோம்.”

2. இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (அது அவர்களது தரப்பு). “நீங்கள் ஏன் இன்னும் மாறவில்லை. பரிணாமத்தின் காலம் முடிந்துகொண்டிருக்கிறது. முடிந்துவிட்டால் பின் உங்களுக்கு இடம் மியூசியம்தான். அங்கும் ஒன்றும் சிறப்பான வாழ்க்கை  அமைந்துவிடாது. அதில் தொல்பொருளாகிவிடுவீர்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார், பகடி செய்கிறார்.

முதல் தரப்பினர்

முதல் தரப்பினரை அடையாளப்படுத்தும் சில கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகள்

ஒரு மல்லிகைப் பந்துக்கும்
இன்னொன்றுக்குமாக
அவள் கை அலைந்தது
குளியலறைக் கண்ணாடியில்
வழக்கம் போல்
தனியாகச்
சிதையில் இறங்கினாள்
அங்கே பகல் இங்கே இரவை
மாற்றவிடப்போவதில்லை
எதுவும்
எதுவுமே

இதே போன்று இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கவிதைத் தொகுப்பில் கலவிக்குத் தயாராகும் கவிதையில் எல்லா உறுப்புகளும் தனித்தனியாகக் கழட்டப்பட்டு கலவிக்குத் தயாராதல் நிலையைச் சொல்லும் கவிதை இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் சித்திரமே அபாரமானது.

இங்குக் கவனிக்க வேண்டியது இரு மனங்களும் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. அதாவது, கலவிக்கு மனம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. இதுமட்டுமின்றி இவ்வாறு முதல் தரப்பினாராக வகைப்படுத்த சில கவிதைகளும் இருக்கின்றன. ( இன்னும் தொள்ளாயிரம் உண்டு, முட்டைக்கோஸாக )

இரண்டாம் தரப்பினர்

இரண்டாம் தரப்பினர் முன்னமே கூறியதுபோல இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வெளியே போ, ஒன்றைப் போன்றவர்கள், விஷேசச் சலுகை... போன்ற கவிதைகள்)

சில கவிதைகளிலிருந்து வரிகள் இங்கே...

உன் உதடுகள் கோணுகின்றன
உன்னை நினைத்துக்கொள்ள
யாராவது இருக்கிறார்களா
உன்னில் நீயென எதுவும் மிச்சமில்லை
ஒரு பெருமூச்சு எழும்புகிறது

உன்னை நினைத்துக்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்கிற இக்கவிதை கடைசியில் இவ்வாறு முடிகிறது

....
உனக்குத் தெரியும்
சில மணி நேரங்களுக்குப் பின்னர்
ஒரு பொய்யான காலை
கிறுக்குப் பிடிப்பதிலிருந்து
உன்னைக் காப்பாற்றிவிடும்

பிரவுனிய இயக்கம்

பொதுவாக கவிதையின் பண்பு என்பது அது தன்னை யாருடனும் ஒட்டிக்கொள்ளாது. அது தனது ஒத்தப்பிரிவு எனச் சுட்டும் பிறிதொன்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளும். காரணம் கவிதை இயங்கிக்கொண்டிருக்கும் காலத்தை நம்மால் துல்லியமாகப் பிடித்துவிட முடியாது. அதில் காலத்தொடர்ச்சி இருக்காது.

அதாவது, கால வரிசைப் பற்றிய பிரக்ஞைக் கிடையாது. ஓர் இயக்கம் காலவரிசையில் இருக்கும்போது மட்டுமே அது மற்றதுடன் இயங்கியல் தன்மை கொண்டிருக்கும். கவிதை செயல்படும் நிகழ்காலம். பிரவுனிய இயக்கம் மாதிரி.

அனைத்து திசைகளிலும் சீர்மையற்ற இயக்கத்தை அது பதிவு செய்ய நினைக்கும் நிகழ்காலத்துடன் தொடர்புப்படுத்துகிறது. அதனாலயே கவிதையை இங்கு பிரவுனிய இயக்கம் என உதாரணத்துடன் சுட்டுகிறேன்.

எப்படியென்றால், கவிதை தொழிற்பட்ட உடனே, நீரில் மகரந்தத் தூள்கள் கொட்டியதும் அங்குமிங்கும் அவை நீர் மூலக்கூறுகளால் மோதப்பட்டு அலைவதைப்போல கவிதை அந்த நிகழ்காலத்தில் வெவ்வேறு திசைகளில் மோதிப் படிமங்களையும் பெயர்களையும் பொருட்களையும் சில சமயம் வேறொரு காலத்தையுமே (இங்கு அதுவும் இன்னொரு வஸ்துவாக) தனது இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறது. பிரவுனியன் இயக்கத்தில் மகரந்தத் தூள் நீர் மூலக்கூறுகளை உடைப்பதுமில்லை நீர் மூலக்கூறுகள் மகரந்தத் தூளைச் சிதைப்பதுமில்லை. கவிதை அவ்வாறுதான் நிகழ்காலத்துக்குள் செயல்படுகிறது.

இன்றைய உலகத்தின் நிகழ்கால மனநிலையையும் அதேநேரம் எதிர்காலத்தின் நிழலையும் துல்லியமாக பிரதிபலிக்கும் சமகாலத்தில் அரிதினும் அரிதான கவிதையில் மாறிய போக்கிற்கு பெருந்தேவியின் கவிதைகள் முன்னோடி என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

(இவை பெருந்தேவியின் பெண் மனசு ஆழம், விளையாடவந்த எந்திர பூதம், தட்டாமாலை ஆடும்போது, உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளை எடுத்துக்கொண்டு வாசிக்கப்பட்டு எழுதப்பட்டது)

சிறுகதை

திருவிழாக்குப் போறமாதிரி ஊர்ச்சனம் முழுக்க எங்க படையெடுத்துப் போகுது? எண்டு பாத்தால், லெபனான்காரன் வீட்டை புதினம் பாக்கப்போறதாத் தெரிஞ்சுது. அங்கை அப்பிடியென்ன புதினம் எண்டு மாங்கொட்டை இளையாம்பியண்ணையை மறிச்சுக் கேட்டன்.

‘இதென்ன நாசமறுத்த கேள்வி கேக்கிறாய்? இண்டைக்குக் காலமை லெபனான்காரன் வீட்டை திரும்பி வந்திட்டானாம் எண்டு நியூஸ்பேப்பரில வராத குறையாச் சனங் கதைக்குது.

நீயென்ன கவட்டுக் கை கையை வைச்சுக் கொண்டிருக்கிறியே?’ எண்டு அந்தாள் என்னோட சாதுவாய் உரஞ்சிப் போட்டுப் போகுது. எனக்கெண்டால் உண்மையில அந்தாள் சொன்னதை நம்பேலாமலிருக்கு.

எங்கடை யூரிலயிருந்த இளந்தாரிப்பொடியளெல்லாம் 1983 யூலைக்குப் பிறகு சவூதி, குவைத், டோகா, கட்டார் எண்டு உருவிக்குடுக்க, இந்தப் பூனாமேன் லெபனா னுக்குப் போனான். போனவன் போனவன்தான். ஒரு அஞ்சாறு வரியமாய் ஒரு தொடர்புமில்லை.

இவன் போனநேரந்தான் லெபனானில கடுஞ்சண்டை யொண்டு நடந்தது. அந்தச் சண்டைக்குள்ள மாட்டுப்பட்டு ஆள் முடிஞ்சுதெண்டு வீட்டுக்காரர் முடிவெடுத்து அழுதுகிழுதுபோட்டு இருந்திட்டுதுகள்.

பின்னை அதுகள் வேறை என்ன செய்யிறது? இப்ப பாத்தால் ஆள் திரும்பி வந்திட்டானாம். இவன் எண்டைக்கு லெபனானுக்கு வெளிக்கிட்டானோ அண்டையிலயிருந்து ஊர்ச்சனம் முழுக்க ராஜசேகர் எண்ட இவன்ர சொந்தப் பெயரை மறந்து, லெபனான்காரன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டுதுகள்.

இவன் லெபனானுக்கு வெளிக்கிடேக்குள்ளையே அரைவாசிச் சனம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுதுகள். பிறகு, சண்டைக்குள்ள அகப்பிட்டு ஆள் முடிஞ்சுதாம் எண்டு கேள்விப்பட்டோண்ண ஊர்ச்சனம் முழுக்கப் புளுகிப் பூத்தில தட்டிக்கொண்டு திரிஞ்சுதுகள்.

குடிக்காத நேரத்தில இவனைப்போல ஒரு தங்கமான பிள்ளையை ஆரும் ஊருக்குள்ளை காட்டேலாது. ஆனால், ஒரு சொட்டுக் குடிச்சானெண்டால் கதை சரி. ஊருக்குள்ளை இவனைப்போலக் கடை கெட்டவன் ஆருமில்லையெண்டளவுக்குத் தம்பி அண்டப் பிரசண்டனாய் நாலுகாலில நிப்பான். கதை பேச்செல்லாம் முழுத்தூசணத்திலதான் நடக்கும்.

அதோட, “டேய்! தொட்டாக் காச்சல் வரும். நளத்திக்கும் ஓப்பன்!” எண்டு ஒரு மந்திரம் போல அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். தன்னோட தனகிற ஆக்களையெல்லாம் பச்சைத்தூசணத்தால இரவிரவாய்த் தொடர்ந்து புனிதப்படுத்திக்கொண்டிருப்பான்.

இடைக்கிடை பாட்டுகளும் பாடுவான். பெண்டிலுக்கு அடிச்ச  மாதிரி ஒண்டுரண்டு கல்லு அவனுக்கு மேலையும் விழத்தான்  செய்யும்.  அதோட பாட்டு நிண்டிடும்.

“டேய்! ஆரடா புண்டயாண்டி கல்லெறியிறவன்? நெஞ்சில துணிவிருந்தால் நேருக்கு நேராய் வாடா! உன்ரை சுண்ணியை வெட்டிச் சொதிவைச்சுத் தாறன்” எண்டு இன்னொரு பாட்டம் தொடங்குவான்.

இதால ஊருக்குள்ள காவாசிச் சனத்தின்ர நித்திரை குழம்பிப்போகும். இப்பிடிக்கொத்தவன் ஊரை விட்டுப் போறான் எண்டால் ஆருக்குத்தான் புளுகாயிருக்காது?

இதிலையும் குறிப்பாய் முன்சந்தியில பலசரக்குக்கடை வைச்சிருந்த இரத்தினசபாபதியருக்குத்தான் இறெக்கை முளைச்ச புளுகம். அந்தாள் கைக்கூழம் (வெள்ளாளரை விட உயர்ந்த சாதி) பகுதி.

ராஜசேகர் என்ன செய்வானெண்டால் தாமனிட்டப் போய்ப் புளிச்ச கள்ளெல்லாம் மூக்குமுட்ட வாத்துப் போட்டு இரத்தினசபாபதியின்ர கடையடியால வரேக்குள்ள, “குளா! குளா! கைக்குளா! குளத்து மீன்தின்னி!” எண்டு சிதம்பரம் ஜெயராமன்ர குரலில் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு வருவான்.

அந்தாளுக்கது பெரிய ஆக்கினையாயிருக்கும். இவன் பெரிய மல்லன்.

அந்தாள் ஒரு வாடல் கிழவன். இவனோட எதிர்க் கேலுமே? ஏதோ ஜேஆரின்ரை புண்ணியத்தில ஒரு கலவரம் வந்து இவன் ஒரு வழியாய் லெபனானுக்குப் போனான்.

அது இரத்தின சபாபதியருக்கு நெஞ்சில பாலை வாத்தது. பிறகு இவன் அங்கை சண்டைக்குள்ள அகப்பட்டு முடிஞ்சிட்டானாம் எண்ட தகவல் கிடைச் சாப்போல அவருக்கு பழம் நழுவிப் பாலில விழுந்த கணக்காய் இருந்திச்சுது.

இப்ப இவன் திரும்பி வந்திட்டான் எண்டதைக் கேள்விப்பட்டதுமே தனக்கு ஏழரைச்சனி தொடங்கிட்டுது எண்டு அந்தாள் முடிவு கட்டியிருக்கும். இவன் பிறந்தமூட்டம் இவன்ர மூத்த தமக்கை குட்டிப்பரமேஸ் பள்ளிக்குடத்தில படிச்சுக்கொண்டிருந்தவள். குஞ்சரம் ரீச்சர்தான் வகுப்பு ரீச்சர்.

“இப்ப பிறந்த உன்ர தம்பிக்கு என்ன பெயரடி?” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக் கேட்டிருக் கிறா. அவளும் வலு விலாசமாய் ‘டார்லிங் பேபிங் ராஜசேகர்’ எண்டு எடுத்துவிட்டிருக்கிறாள். “ம்...!

பீ குடிக்கிற மாடுகளுக்கெல்லாம் பேரைப் பாரன்!” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக்கலாய்ச்சதும்  ஊருக்குள்ள   எல்லாரும் அறிஞ்ச  கதை.

எங்கட வீட்டுக்கு மூண்டு வீடு தள்ளித்தான்  இவனின்ர வீடிருக்கு. ஊர்ச்சனம் முழுக்கப் புதினம் பாக்கப் போகுதுகள் எண்டாப்போல பின்னேரக்கையாய் நானும் போனன்.

ஆள் வீட்டு முத்தத்தில அட்டணக்கால் போட்டிருந்து கொண்டு மடியில ஒரு பிறவுண் கலர் ரூ பேன்ட் பிலிப்ஸ் றேடியோவை ஏரியல இழுத்துச் செங்குத்தாய் விட்டுட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கழுத்தில நார்த்தும்பு மாதிரி ஒரு மைனர்ச் செயின். உடம்பு மெலியவுமில்லைப் பெருக்கவுமில்லை. லெபனானுக்குப் போறதுக்கு முந்தி எப்பிடியிருந்தானோ அதேமாதிரியிருந்தான்.

வாய் நிறையச் சிரிப்பு. ஒரேயொரு மாற்றம். முதுகில வலப்பக்க விலாவில ஒரு நீட்டுப் பள்ளம். அதிலையொரு தையல்போட்ட அடையாளந் தெரிஞ்சுது. டக்கெண்டு பாத்தால் ஒரு திருநீலகண்டத்தைப் பிறவுண் கலரில பச்சை குத்தின மாதிரியிருக்கும். சனங்களெல்லாம் அதைத்தான் புதினம் பாத்துக்கொண்டு நிண்டுதுகள்.

“இது அங்கை லெபனான் ஆமியடிச்ச செல்பீஸ் பட்டு வந்த காயம். அப்பிடியே முதுகு பிளந்து போச்சு. எனக்கொண்டும் தெரியாது. முகங்குப்புற விழுந்திட்டன். வேர்க்சைட்டில நடந்தபடியால் உடனை கூட வேலை செய்தவங்கள் அம்புலன்ஸில  கொஸ்பிட்டலுக்குக் கொண்டு போட்டாங்கள்.

அஞ்சு நாள் கழிச்சுத்தான் கண் முழிச்சன். செத்துப் பிழைச்சு மறுபிறப்பெடுத்து வந்திருக்கிறன். நான் இஞ்சை திரும்பி வருவன் கனவிலயும் நினைக்கேல்ல. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில திரும்பி வந்திட்டன்.

இனிக்கனவிலயும் வெளிநாட்டை நினைச்சுப் பாக்கிறேல்ல எண்ட முடிவோட தான் வந்திருக்கிறன். என்ன நடந்தாலும் நடக்கட்டும். இனி வாழ்வும் சாவும் இஞ்சைதான்” எண்டொரு நீண்ட லெக்சர் அடிச்சான். போன சனமெல்லாம் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு நிண்டுதுகள்.

அதுக்குப்பிறகு லெபனான்காரன் ஊருக்குள்ள கொஞ்சக்காலம் புதுமாப்பிளை மாதிரித் திரிஞ்சான். குடிவெறியில்லை. சனங்களோட மட்டு மரியாதை யோட பண்பாய்ப் பிழங்கினான். ‘பரவாயில்லை, லெபனான் போய்வந்ததிலை ஆள் திருந்தியிட்டான்’

எண்டுதான் நானும் நினைச்சன். ஊர்ச்சனங்களும் நினைச்சுதுகள். ஒரு கொஞ்சக்காலம் ஊர் அமைதிப் பூங்காவாயிருந்தது. லெபனான்காரனின்ர தகப்பன் கோணர் சுந்தரம் பிள்ளை வண்டில்மாடு வைச்சுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்.

கொடிகாமம், எருவன், மாசேரி, மிருசுவில், எழுதுமட்டுவாழ், இயற்றாலை, மீசாலை, பளை எண்டு தென்மராட்சிப் பக்கமும், குடத்தனை, அம்பன், நாகர்கோவில், மாமுனை, செம்பியன்பற்று எண்டு கிழக்கூருக்கும் வண்டில்ல போய் தென்ன மட்டை, பொச்சுமட்டை, பனைமட்டை, கிடுகு, அலம்பல், வைக்கல் எண்டு பலதும் பத்தும் ஏத்தியந்த ஊருக்குள்ள விக்கிறதுதான் அவரின்ர தொழில். இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி தேப்பனோட உதவிக்கு வண்டில்ல போறவன்.

அப்பிடிப் போய்ப் போய்த்தான் குடிக்கப் பழகினவன். பிறகு இவன் லெபனானுக்குப் போனாப்போல இவனுக்கு நேரை மூத்தவன் சந்திரசேகரோ அல்லாட்டில் இவனுக்கு நேரை இளையவன் பாலசேகரோ தேப்பனோட உதவிக்கு மாறிமாறி வண்டில்ல போறது வழமையில இருந்தது. இவனைப் போலத்தான் அவங்களும் ஊருக்குள்ள புகழ்பெற்ற குடிகாரங்களாக வந்திட்டாங்கள். இப்ப இவன் வந்தாப்போல புதுமாப்பிள்ளைக் கணக்காய் சும்மா ஊர்சுத்தித் திரியிறான் எண்டிட்டுப் பழையபடி தகப்பன்காரன் வண்டில்ல உதவிக்குக் கூட்டிக்கொண்டு போகத் தொடங்கினார்.

பிறகென்ன பழைய குருடி கதவைத் திறவடியெண்டு வேதாளம் முருங்கைமரத்தில ஏறிட்டுது. லெபனான்காரன் வைபவரீதியாகக் குடியை ஆரம்பிச்சான்.

இவன் லெபனானுக்குப் போகமுந்திக் குடிச்சால் தமிழில உள்ள அத்தனை தூசணமும் பேசுவான். இப்ப லெபனான் போய் வந்தாப்போல அங்கத்தையத் தூசணத்தையும் கலந்தடிக்கத் தொடங்கிட்டான். ‘அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!’

எண்டொரு வார்த்தையைத் தமிழ்த் தூசணத்தோட கலந்தடிப்பான். அதின்ர மீனிங் அவனுக்கு மட்டுந்தான் தெரியும். அதின்ர மீனிங் என்ன? எண்டதை ஒருத்தரும் அவனிட்டக் கேக்கேல்ல.

கேட்டால் அவன் அதுக்கொரு மீனிங் சொல்லுவான். அதை நம்பவேண்டியதுதான். எது எப்பிடி யெண்டாலும் தூசணந்தானே! இதிலை டீப்பாத் திங் பண்ணத் தேவையில்லையெண்டு ஊர்ச்சனமும் பெரிசுபடுத்தேல்ல.

கோணர் சுந்தரம்பிள்ளைக்குக் காலப் போக்கில உடல்நலக்கேடு வந்தாப்போல வண்டில் மாடு எல்லாத்தையும் லெபனான்காரன்ர பொறுப்பிலயே விட்டுட்டார். அதுக்குப்பிறகு இவன் நினைச்ச நேரம் வண்டிலைப் பூட்டுவான்.

ஆரவாரமாய் வெளிக்கிடுவான். திரும்பி வாறதும் அப்பிடித்தான். இவன் வண்டில் கட்டித் திரும்பி வாறான் எண்டால் ஊருக்குப் பிறம்பாத் தெரியும். மெயின்றோட்டில வரேக்குள்ளயே, “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு லெபனான் தூஷணத்தால மாடுகளைப் பெலத்து விரட்டியடிச்சுக்கொண்டுதான் வருவான்.

ஊர்ச்சனங்கள் அலேட்டாகி ஒதுங்கி விடுங்கள். பிள்ளையார் கோயிலுக்கு முன்னால பாரவண்டிலைக் கொணந்து கல்லுக்கட்டி விட்டுட்டு, மாடுகளை அவிட்டுப் பிடிச்சுக்கொண்டு துவரங் கம்பால சளார்! சளார்! எண்டு இரண்டு வெளுவை வெளுப்பான்.

மாடுகள் வாலைக் கிளப்பிக்கொண்டு பறக்கும். இவன் “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு சொல்லிக்கொண்டு மாடுகளுக்குப் பின்னால குறுந்தூர ஓட்டவீரன்போலப் பறப்பான்.

வீடு வந்தோண்ண கயித்தை இழுத்துப்பிடிச்சுக்கொண்டு மாடுகளுக்குத் திரும்பவும் இரண்டு தரம் வெளுப்பான். உடனே சடுண்பிறேக் அடிச்ச மாதிரி மாடுகள் நிண்டிடும்.

லெபனான்காரன் ஊருக்குத் திரும்பிவந்த காலத்தில் இயக்கங்களின்ரை ஆதிக்கம் கொஞ்சம் மேலோங்கியிருந்ததால குடிச்சு வெறிச்சாலும் பெரிசாய் அட்டகாசம் செய்யாமல் அடக்கி வாசிச்சான்.

இதுக்கு இன்னுமொரு முக்கிய காரணமுமிருந்தது. இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி, குடிச்சிட்டு அடிக்கடி வம்பிழுக்கிற அன்னமலரின்ரை கடைசிப்பொடியன் புலிகள் இயக்கத்தில் பெரிய தளபதியாயிருந்தான்.

போதாக்குறைக்கு அன்ன மலரும், “இனிமேல் இஞ்சை ஆரும் தண்ணியைப் போட்டிட்டு என்னோட தனகட்டன். வாழ்க்கையில சூரிய வெளிச்சத்தையே காணேலாமலுக்கு பங்கருக்கை போடுவிச்சு விடுறன்” எண்டு ஒரு ஸ்ரேற்மென்ரும் விட்டிருந்ததால இவன் என்னதான் நிறைவெறியில இருந்தாலும் அன்னமலரின்ரை பெயரை மறந்தும் உச்சரிக்கவே மாட்டான்.

மற்றும் படி பெரிசா மாற்ற மொண்டும் நடக்கேல்ல. ஆனால் ஊர்நிலைமை தான் கொஞ்சக்காலத்தால தலைகீழாய் மாறிட்டுது. சந்திரிகா ஆட்சிக்கு வந்து கொஞ்சக்காலம் பிரபா கரனோட தேன்நிலவு கொண்டாடினா.

பிறகு வழமை போலக் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாய் இரண்டு பகுதியும் கீரியும் பாம்புமாகிச் சண்டை துவங்கிச்சுது. ஆமிக்காரர் பலாலியிலயிருந்து வெளிக்கிட்டுப் படிப்படியாய் வந்து சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினாங்கள்.

பிறகு அங்கிருந்து தென்மராட்சிக்கு வந்து, அதால வடமராட்சிக்கு வந்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுக்கலையும் பிடிச்சிட்டாங்கள். புலிகள் இயக்கம் படகேறி வன்னிக்குப் போட்டுது. இதால மோசமாய்ப் பாதிப்புக்குள்ளானவர்களில் லெபனான்காரனு மொராள்.

முந்தினகாலங்கள் மாதிரிக் கிழக்கூருக்கும் தெற் கூருக்கும் வண்டில் கட்டிப் போகேலாது. எல்லாப்பக்கமும் ஆமிக்காறன் பண்டடிச்சு நிண்டுகொண்டு றூட்பாஸ் கேட்டான். இல்லையெண்டால் திருப்பிவிட்டான்.

அதால இவனுக்குத் தொழில் பாதிப்பு மட்டுமில்லை. கிழக்கூர், தெற்கூர் கள்ளுத் தவறணைகளையும் நெருங்க முடியேல்ல. எதைச் செய்தாலும் உள்ளூருக்குள்ளதான் செய்யவேண்டியிருந்தது. அதால ஆமிக்காரரைக் கண்டால் இவனுக்குச் சரியான கடுப்பாயிருக்கும்.

அதால உள்ளுர்த் தவறணையில போய்க் கள்ளடிச்சிட்டு, வெள்ளையையும் கூட்டிக்கொண்டு பொழுது படேக்குள்ள வீட்டுக்கு வருவான். வெள்ளைக்குக் கள்ளை மணந்தாலே உசாரேறி விடும். ஒண்டு ஒண்டரை அடிச்சால் என்ன நடக்கும்?

தவறணையிலேயே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா!’ தொடங்கியிடும். இவன் என்ன செய்வானெண்டால் வெள்ளைக்குத் தன்ரை கணக்கில ஒண்டரைப் போத்தில் கள்ளை வேண்டிக் குடுத்திட்டு, பொழுது படேக்குள்ள வீட்டைக் கூட்டிக்கொண்டு வருவான். சொல்லி வேலையில்லை.

வெள்ளை பாடினால் தாளந்தப்பாது.  சும்மா அந்தமாதிரித்தான்  இருக்கும். ‘வெள்ளை! களத்தில் கேட்கும் கானங்களில் ஒண்டை எடுத்து விடுங்கோ!’ எண்டு இவன் அடியெடுத்துக் குடுப்பான். வெள்ளை இரண்டு நிமிசங்கள் அகவணக்கம் செலுத்திப்போட்டுத் துவங்கும்.

‘மறவர் படைதான் தமிழ்ப்படை
குலமானமொன்றுதான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை
அவர் வெல்வார் என்பது வெளிப்படை...
இதுமுடிஞ்ச கையோடை,
‘சிவலைமாடு கட்டியிருக்கிற
சலங்கை உடையட்டும்
சிங்களவன் கொட்டமடிக்கிற
இலங்கை உடையட்டும்...’
அடுக்க,
‘எங்கள் தலைவன் பிரபாகரன் என்று
முழங்கு சங்கே முழங்கு - அவன்
பொங்கி எழுந்தான் பொடிப்பொடியாய்
உடைந்தது பார் கைவிலங்கு
உடைந்தது பார் கைவிலங்கு
மக்களெல்லாம் மக்களெல்லாம்
பிரபாகரன் பக்கம்
மக்கள்படை என்றைக்கும்
அவன் பக்கம் தான் நிற்கும்
மக்கள்படை என்றைக்கும்
அவன் பக்கம் தான் நிற்கும்’

எண்டு வரிசையாய்க் காசியானந்தன்ர பாட்டுகள் வந்துகொண்டிருக்கும்.

இதுக்கெல்லாம் ஒரு வெற்றுத் தார்ப்பீப்பாவைக் கவிட்டுப்போட்டு லெபனான்காரன் அந்தமாதிரிப் பக்கவாத்தியம் வாசிப்பான். இதுமுடிய வெள்ளை புதுவை இரத்தினதுரையின்ர பாட்டுகளுக்குத் தாவும்.

‘பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே...’, ‘இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்...’, ‘எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம் தமிழ் ஈழமண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம்...’, ‘ கடலதை  நாங்கள் வெல்லுவோம் கடற்புலி நாங்கள் ஆளுவோம்...’ எண்டு வரிசையாய்ப் பாடிக்கொண்டு வந்து கடைசியாய் இரண்டு பாட்டை லெபனான்காரனோட சேர்ந்து பாடுவான்.

முதல்ல, ‘வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம் தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்...’ வரும். இதுமுடியத்தான் உச்சக் கட்டந் தொடங்கும். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு...’ எண்டு வெள்ளை தொடங்கின கையோட,

‘வேங்கைகளானவர் நாங்கள்
எந்த வேளையும் சாகலாம் போங்கள்
வேங்கைகளானவர் நாங்கள்
எந்த வேளையும் சாகலாம் போங்கள்...’

வெள்ளையை மேவித் திரும்பத்திரும்ப உச்சத் தொனியில் லெபனான்காரன் பாடுவான். தொடர்ந்து, இரண்டும் சேர்ந்து கைத்தாளம் போட்டுக்கொண்டு,

‘தலைவன் வழியிலே தடைகள் இராது
தடைகள் இருப்பின் தலைவன் இரான்
புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகம் என்றே நீ கூறு...’

எண்டு பைலா அடிக்கத் தொடங்குவாங்கள்.

இனிப் பொறுக்கேலாது எண்ட கட்டத்தில லெபனான் காரன்ர கடைசித் தங்கைக்காரி பதுமினி அதுக்குள்ள என்ர பண்ணுவாள்.

“எடேய்! குறுக்காலையள்ளுவாரே! இப்ப ஆமிக்காறர் வந்தாங்கள் எண்டால் முழுப்பேருக்கும் தீட்டி போடுவாங்களடா! நிப்பாட்டுங்கோடா உங்கட கூத்துக் கும்மாளத்தை நாசங்கட்டுவாரே!”

அதைக் கேட்டோண்ண லெபனான்காரன் சும்மா இருப்பானே? அவனுக்கும் ஏறியிடும். “போடி அங்கால! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு கத்துவான்.

“எனக்கு உன்னோட கதையில்ல! வெள்ளை யண்ணை நீ எழும்பி வீட்டை நட! தேடப் போகுதுகள்!” எண்டவள் வெள்ளையை உறுக்குவாள். வெள்ளை அதோட இருந்த இடந்தெரியாமல் நைசா நழுவியிடும்.

லெபனான்காரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில புதுமை மலரக்கா இருக்கிறா. எதிரிக்கும் இரங்கக் கூடிய தங்கமான மனிசி. அவவின்ர மனிசன்காரன் தில்லைநாதன் எண்டு சேவையராய் வேலை பார்த்தவர்.

அந்தாள் அன்ராயபுரம், வவுனியா, மதவாச்சி, புத்தளம், சிலாபம் எண்டு ரிற்ரயர் பண்ணும்வரைக்கும் வெளி மாவட்டங்களிலதான் வேலை செய்தது. ஒரு காலமும் சொந்த மாவட்டத்தில வேலை செய்யேல்ல.

பப்ளிக் கொலிடேயள், புதுவரியம், தீபாவளி, கிறிஸ்மஸ் எண்டு லீவுகாலங்களில வீட்டில வந்து நிக்கும். பிறகு போகிடும். புதுமை மலரக்காவுக்கு விசு, ராம் எண்டு இணைப்பொடியள்.

அந்த மனிசிக்கு மெல்லிசையில கொஞ்சம் ஈடுபாடு. அதுதான் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தியின் நினைவாகப் பிள்ளையளுக்கு விசு, ராம் எண்டு பேர் வைச்சிருக்கிறார்.

அவங்கள் ரெண்டு பேரும் லெபனான்காரனோட ‘ரஜினிமாமா! ரஜினி மாமா!’ எண்டு நல்ல வாரப்பாடு. சொல்ல மறந்திட்டன், லெபனான்காரன் அந்தக்காலத்தில பேமஸா ஓடின தர்மத்தின் தலைவன், குருசிஷ்யன், மனிதன் படங்களில வாற ரஜினி மாதிரித்தானிருப்பான்.

விசு, ராம் ரண்டுபேரும் எப்பவும் ரஜினி நடிச்ச படங்களைத் தான் பாப்பாங்கள். அதால அவங்கள் லெபனான் காரனை ‘ரஜினிமாமா!’ எண்டு கூப்பிடத் தொடங்கி, பிறகு அந்தப் பெயர் அவங்களுக்கிடையில நிலைச்சிட்டுது. லெபனான்காரன் தன்ரை புளுகு மூட்டை எல்லாத்தையும் அவங்களிட்டைத்தான்  அவிட்டு விடுவான்.

96 பிற்பகுதியில ஊருக்குள்ள ஆமி கால்வைச்ச நேரம். ஒருநாள் பின்னேரம் இவனுக்கு நிறைவெறி. கனகராவளவுப் பிள்ளையார்கோயில் வாசற்படியில வந்து இருந்துகொண்டு, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்! இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்?’

எண்டு பாடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்டிட்டு விசுவும், ராமும் ஓடிவந்திட்டாங்கள்.

இவன்  பாட்டுக்கு ஓரிடைவெளிவிட, விசு “ரஜினிமாமா! உங்களுக்கு ஆமிக்காரரைக் கண்டால் பயமில்லையோ?

எங்களுக்கெண்டால் சரியான பயம்” எண்டான். அதைக் கேட்டோண்ண இவனுக்கு உசார் ஏறியிட்டுது.

“எனக்கோ? ஆமிக்குப் பயமோ? அது என்ர அகராதியிலயே கிடையாது. ரண்டு ஆமிக்காரரைப் பிடிச்சு ஒருநாள் என்ர வண்டில் சில்லுகளில தேடா வளையக் கயித்தால கட்டிப்போட்டு மாட்டைப் பூட்டினன்.

மகத்தையா! மகத்தையா! மாட்டைப் பூட்ட வேண்டாம். எங்கள அவித்துவிடுங்க! எண்டு மண்டாடினாங்கள். பாக்கப் பாவமாயிருந்திச்சு. பிறகு அவிட்டுவிட்டிட்டன். இப்பவும் என்னைக் கண்டால் அவங்களுக்குத் தொடையள் நடுங்குமடா தம்பிமாரே!”

எண்டு ஒரு புளுகு மூட்டையை அவிட்டு விட்டான். அந்தநேரம் பாத்துக் கோயில் முன்வீதியால பத்துப் பதினைஞ்சு ஆமிக்காரர் ரோந்தில வந்திட்டாங்கள். அவங்களைக் கண்டோண்ண விசுவுக்கு ஒரே கொண்டாட்டமாய்ப் போச்சு.

“ரஜினி மாமா! இவையளில இரண்டுபேரைப் பிடிச்சுத் தேடா வளையக் கயிற்றால வண்டில் சில்லுகளில கட்டுவமே?” எண்டு கேட்டிட்டுத் திரும்பிப் பார்த்தால் லெபனான்காரனைக் காணேல்ல.

மாயமாய் மறைஞ்சிட்டான். விசுவுக்குச் சரியான ஏமாற்றமாய்ப் போச்சு. அடுத்தநாள் பின்னேரம் இவனைக் கோயிலடியில சந்திக்கேக்குள்ள விசு கேட்டான், “என்ன ரஜினிமாமா நேற்று ஆமிக்காரரைக் கண்டு பயந் தோடிட்டியள்?” எண்டு. இவனே இந்த மாதிரிக்கேள்விக்கெல்லாம் சளைக்கிறவன்?

“மண்ணாங்கட்டி! ஆமிக்காவது நானாவது பயப் பிர்றதாவது. பேப்பொடியா! நான் தேடாவளையக் கயிறெடுக்கப் போனனடா! வந்து பாத்தா ஆமிக்காற னெல்லாம் போகிட்டான். நீயெண்டாலும் அவங்களை மறிச்சு வைச்சிருக்கலாமே?

மறிச்சு வைச்சிருந்தால் நான் ஆரெண்டு காட்டியிருப்பன். இது அவங்களைப் போக விட்டிட்டு இப்ப விழல்கதை கதைக்கிறாய்!” எண்டான். விசுவால எதிர் நியாயங் கதைக்க முடியேல்ல.

இது நடந்து சரியாய் மூண்டாவது நாளிரவு லெபனான்காரன் வீட்டில எதிர்பாராதவிதமாய் ஓர் அசம்பாவிதம் நடந்தது. இதுக்கு முதல்நாள் கோப்பிறேசனில கள்ளடிச்சிட்டு முசுப்பாத்தி பண்ணின ஆக்களுக்கு ரோந்து போன ஆமிக்காறர் முதுகு முறிய வெளுத்திருக்கிறாங்கள்.

அதால கோப்பிறேசன் நடத்திற சின்னக்குட்டி, ‘அன்பார்ந்த தமிழீழப் பெருங்குடி மக்களே! கோப்பறேசனில் மது அருந்துவோரை அமைதி பேணும்படி பாதுகாப்புப் படையினர் அன்பாகக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

எனவே இவ்விடத்தில் அமைதி பேணுவதில் பெருஞ்சிரமத்தை எதிர்நோக்குவோர் கொள்கலன்களில் மதுவைப் பெற்றுச்சென்று தத்தமது வீடுகளில் வைத்து அருந்துமாறு தயவாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’ எண்டு பொது அறிவித்தல் ஒன்றை விடுத்தாப்போல, இவன் பாத்தான் என்னத்துக்குத் தேவையில்லாத வீண்சோலியெண்டிட்டு மூண்டுபோத்தல் கள்ளும் அரை டிஷ் மாட்டிறைச்சிப் பொரியலும் வாங்கிக்கொண்டு பொழுது சுருங்க முன்னம் வீட்டை வந்து சேந்திட்டான்.

அண்டைக் கெண்டு இவன்ர தமையன் சந்திரசேகரும் வீட்டில நிண்டான். தமையனை விட்டுட்டுத்தான் மட்டும் தனியக் குடிக்கிறதோ?

எண்டிட்டு அவனையுங் கூப்பிட்டான். அவன் என்ன செய்தான்?

தகப்பனை விட்டுட்டுக் குடிக்கிறது சரியில்லை எண்டுட்டு, “அப்பு! நீயும் வாளை” எண்டு கூப்பிட்டான். இப்ப தேப்பன்காரன் நடுவில. வலப்பக்கம் தமையன்காரன்.இடப்பக்கம் எங்கடையாள். கச்சேரி ஆலாபரணத் தோட மெதுவாத் தொடங்கிச்சுது.

தேப்பன்காரன் தன்ர கையில வண்டில்மாட்டைத் தராமல் இவன்ர பொறுப்பில விட்டது சந்திரசேகருக்குச் சரியான கடுப்பு. அவனுக்குக் கொஞ்சம் உசார் ஏறினோண்ண, “கோணர் சுந்தரி! நீ செய்த வேலை சரியோ? மூத்தவன் நானொருத்தன் முழுசாய் இருக்கத் தக்கதாய் ஒரு பொறுப்பில்லாத முழுக் குடிகாரனிட்ட வண்டில் மாட்டைக் குடுத்திருக்கிறாய். அப்ப நான் என்ன சிரைக்கிறதுக்கே இருக்கிறன்?” 

எண்டொரு தொடக்கந் தொடங்கினான். தேப்பன்காரன் அரையுங் குறையுமான ஏற்றத்திலயிருந்ததால கொஞ்சம் அடக்கி வாசிச்சார். “எட விசர்க் கொந்தா! நீ சும்மா கல்லில குத்தாதை! இவன் செத்துப் பிழைச்சு வந்திருக் கிறான். பாவமெல்லே!

அதுக்கை உன்னைப்போல மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பேயனில்லையிவன். நல்ல வாயாடி. வியாபாரத்துக்குப் பொருத்தமான ஆள் எண்டிட்டுத்தான் வண்டில் மாட்டை இவன்ர கையில குடுத்தனான். சரியே! விளக்கப் பூழலில்லாமல் பேக் கதைபேசாதை  கண்டியோ?”

லெபனான்காரன் ஏற்கனவே செம ஏற்றத்தில இருந்தான். இதைக் கேட்டோண்ண அவனுக்கு இன்னும் ஏறியிட்டுது. “என்னடா சொன்னனீ அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!....” எண்டு கத்திக்கொண்டே தமையன்காறனுக்குக் கன்னத்தைப் பொத்தியொண்டு குடுத்தான்.

ஏய்ம் தவறி தேப்பன்ர கன்னத்தில அச்சொட்டா விழுந்திச்சுது. பதிலுக்குத் தமையன், “பேப்பூழல்! முந்தநாள் பிறந்த மூத்திரச் சேங்கு!

எனக்குக் கைநீட்டிறியோ?” எண்டுட்டு லெபனான் காரனுக்குக் கன்னத்தில வெளுக்க, அதுவும் ஏய்ம் தவறித் தகப்பன்ர கன்னத்தில ஸிமூத்தா விழுந்திச்சுது. அந்தாள் பதகளிச்சுப்போய், “நாய் வேசைமக்களே! எனக்கேன்ரா அடிக்கிறியள்?” எண்டு மெல்ல விலத்தினாப்போல, இப்ப ஏய்ம் தவறாமல் இரண்டு பேரும் நேரடி மோதல்ல இறங்கிச்சினம். இரண்டாவது அடியில தமையன் நிலத்தில சரிஞ்சிட்டான்.

இவன் அவனுக்குமேல ஏறியிருந்து தொண்டையைத் திருகத் தொடங்கியிட்டான். இது விசயம் பிழைக்கப் போகுது எண்டுட்டு மூத்ததமக்கை குட்டிப்பரமேசும் கடைசித் தங்கை பதுமினியும் ஓடியந்து வெளி முத்தத்தில நிண்டு, “ஐயோ! ஐயோ! கொல்லுறான்! கொல்லுறான்! காப்பாத்துங்கோ!” எண்டு குழறிப் போட்டு இவனைப் பிடிச்சுத் தள்ளிவிட்டாகள்.

இவன்ர பிடி தளர்ந்தோண்ண அவன் இருமிக்கொண்டு  எழும்பி ஓடினான்.

“பறை வேசையள்! ஏனடி தள்ளி விழுத்தினனீயள்? இண்டைக்கு உவனைக் கொல்லாமல் விடன்!”

எண்டு பின்னால ஓடினான். இந்தக் களேபரத்தில புதுமை மலரக்கா பொடியளோட எங்கட வீட்டை யோடி வந்தா. சொல்ல மறந்திட்டன். எங்கட வீட்டுக்கு அடுத்த வீடுதான் புதுமை மலரக்கா வீடு.

அவ ஓடியந்து புட்டு அவிச்சுக்கொண்டிருந்த என்ரை அம்மாவை அருட்டினா.

“அக்காத்தை! அக்காத்தை! உவங்கள் குடிச்சிட்டுச் சண்டை பிடிக்கிறாங்கள். தமக்கையும் தங்கையும் குளறியடிக்கிறார்கள். வாவன் ஒருக்காப்போய் விலக்குப் பிடிச்சு விடுவம். அயலுக்கை சரியில்லை யெல்லே!

அம்மா இருந்த இடத்தால எழும்பாமலுக்கு, “என்னடி உனக்கு வேறை வேலையில்லையே? குடிகாரர் சண்டை தானாய் அடங்கியிடும். அதுக்கை இப்பிடிக் கொத்த இடத்துக்கு ஒருக்காலும் விலக்குப் பிடிக்கப் போகக்கூடா. அவங்கள் தலைகால் தெரியாமல் நிப்பாங்கள். என்னடி!

எண்டு ஏறுக்குமாறாய்க் கேட்டாலும் கேப்பாங்கள். அது எங்களுக்குத்தான் கடைசி வரைக்கும் சங்கையீனமாய்ப்போம். பேசாமல் போய் உன்ரை அலுவலைப் பார்!” எண்டு சொல்லிப் போட்டு அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா.

“என்னக்காத்தை உப்பிடிச் சொல்லுறாய்? நீ வராட்டில் இரு. நான் போறன். தம்பி நீ வாறியோ?” எண்டு என்னைக் கேட்டுட்டு லெபனான்காரன்

வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய்ப் பொடியனை இழுத்துக்கொண்டு போக, நானும் பின்னால புதினம் பாக்க ஓடினன். அங்கை சந்திரசேகர் கையில உலக்கையோட நிக்க, குட்டிப்பரமேஸ் அவனை இழுத்துப் பிடிக்க, லெபனான்காரன் ஒரு மொட்டைக் கத்தியோட நிக்க, அவனைப் பதுமினி இழுத்துப்பிடிக்க, ஒரே களேபரமாயிருந்திச்சுது. தகப்பன்காரன் “நாய் வேசைமக்களே! போங்கோடா அவர வரே!” எண்டு  தாவராத்தில  சரிஞ்சிருஞ்சு  கத்துறார்.

“ஐயோ! இதுகளைப் பெத்தநேரம் ரண்டு அம்மிக்குழவியைப் பெத்திருக்கலாம். மனிசர்  வீட்டில நிம்மதியாய் இருக்கேலுதே?” எண்டு தாய்க்காரி குஞ்சுப்பிள்ளை அலப்பாரிக்கிறா.

புதுமை மலரக்கா வைக் கண்டோண்ண பதுமினி லெபனான்காரனிட்ட, “அண்ணை! அங்கை பார் புதுமை மலரக்கா வந்திட்டா! கத்தியைக் கீழை போடு!” எண்டாள். லெபனான்காரன் நிமிர்ந்து வடிவாய்ப் புதுமை மலரக்காவைப் பாத்திட்டு, “அயர்லி சறுமூத்தா!

மும்மூத்தா! ஏன்ரி நான் புதுமை மலரக்காவுக்கு ஓக்கமாட்டன் எண்டு நினைச்சியோ? உனக்கு ஓப்பன். பக்கத்தில நிக்கிற மற்றவளுகளுக்கும் ஓப்பன். நான் லெபனான்காறிகளுக்கே ஓத்தவன்ரி. விடடி என்ர கையை நரிவேசை!” எண்டான். அதில நிண்ட எனக்கே பெருஞ் சங்கையீனமாப் போச்சுது. புதுமை மலரக்காவுக்கு  என்ன  மாதிரியிருந்திருக்கும்?

(இதோட கதை முடிஞ்சுது. இதைக் கேள்விப் பட்டுட்டு அம்மா என்ன சொல்லியிருப்பா எண்டது உங்களுக்குத் தெரியுந்தானே! இந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு புதுமை மலரக்கா பகலில எந்தவொரு பொது இடத்திற்கும் இரண்டு வரியமாப் போறேல்ல. மற்றது, லெபனான்காரனும் மூண்டுவரியத்தால வண்டில்ல தென்னம்பொச்சு ஏத்திக்கொண்டு வரேக்குள்ள தவறி விழுந்து செத்திட்டான். அவன் தவறி விழுந்து சாகேல்ல. ஆயத்துச் சந்திச் சென்றிக்குள்ள நிண்ட ஆமிக்காறர் இவனுக்குத் துவக்குச்சோங்கால வாகாய் வெளுத்ததாலதான் செத்தவன் எண்டொரு கதையுமிருக்கு. இதையெல்லாம் நான் கதைக் குள்ள சேர்க்கேல்ல)

கட்டுரை

1947-ல், ஒரு புத்தம்புது தேசமாக இந்தியா விடியல் கண்டபோது, நீண்ட காலனியாதிக்க உறக்கத்திலிருந்து விழித்திருந்த அந்த தேசம், சுதந்திரத்தின் விளைவாய் தன் முன்னின்ற சவால்களை எதிர்நோக்க இருந்தது. பின்வாங்கிய பிரிட்டிஷ் அதிகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்த பிரிவினையின் குரூர குருதிப் புனல், இந்தியா பாகிஸ்தான் என இரு தேசங்களாக மதத்தின் பேரிலான பிளவுகோட்டிற்கு இருபுறமும் உருவாக சாட்சியாக இருந்தன.

பாகிஸ்தான் இசுலாமிய அடையாளத்தை பற்றிக் கொள்ள, இந்தியா தனது வருங்காலத்தினை தொலை நோக்கில் கொண்டு, தனது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மதச்சார்பின்மையை தெரிவு செய்தது.

வேற்றுமையில் ஒற்றுமை எனும் அவரது அரசியல் நெறியே, பன்மைத்தன்மைக்கு, வெவ்வேறு மதங்களும் ஒன்று கூடி வாழ்ந்து, ஒன்றாக ஏற்றம் காணும் நோக்கில், அனைத்து வகையினருக்குமான ஒரு தேசம் எனும் அடையாளத்திற்கு வித்திட்டது.

இப்புது இந்தியா, பிரிட்டிஷ் அரசின் அதிகாரப் பிடியின் அடையாளத்தை உதறிவிட்டு, புதிதாய் உருவான குடியரசின் பெரும் அறைகூவலாய் அமைந்திட, தனக்கென ஒரு புது கலை வடிவத்தை நாடியது.

ஆசிய சமூக அருங்காட்சியகத்தில் நடப்பிலிருக்கும் “இந்தியாவிற்கான நவீனக்கலை : ஒரு முற்போக்கு புரட்சி (The Progressive Revolution: Modern Art for a New India) கலை கண்காட்சி நிகழ்வானது, இந்திய தேச கட்டுமான பணிகளுக்கிடையேயும், பிரிவினையின் கோரத்தினடையேயும் உயிர்கொண்டு தேசத்தின் கலையாற்றல் திறத்தின் அடையாளமாக உருவான நவீன கலைதனை அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வின் நாயகர்கள் எனப்பட்டவர்கள், கலை, அரசியல், புரட்சி மீதான காதலினால் உந்தப்பட்டு ஒன்று சேர்ந்த கலகக்காரர்கள். இவ்விளைஞர் பட்டாளம் தங்களை முற்போக்கு கலைஞர்கள் அமைப்பு ( Progressive Artists ’ Group (PAG) ) என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்.

பீஏஜி (PAG) அனைத்து மத, சாதி, இன, குல பின்னணியிலிருந்தும் வந்த கலைஞர்களை உள்ளடக்கி ஒரு நுண்ணிய இந்திய தேசமாய் இருந்தது. இதுவே நேருவின் மதசார்பின்மை நெறியினை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும், தூதுவர்களாக இவர்களை மாற்றியது எனலாம்.

இவர்களில் பலர் இந்தியாவின் இண்டு இடுக்கிலிருந்து வந்தாலும், இவர்கள் ஒன்று சேர்ந்து புழங்கிய நிலம் பம்பாய் (தற்போது மும்பை) பெருநகரமாகும்.

இக்கலைஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வங்காள சிந்தனைப் பள்ளியின் தேசிய கலை இயக்கங்களையும், இயல்மெய்வாதத்தின் மீதான நாட்டத்தை நிராகரித்திருந்தாலும், அவற்றிலிருந்து ஒரு சாராம்சத்தை மட்டும் சுவீகரித்துக் கொண்டனர்.

அது முந்தைய கலைவடிவங்களில் இருந்து மீட்டுருவாக்குவது ஆகும்.

முன்காலனியாதிக்க கால தரவுகளை நாடி செல்வது இந்திய கருத்தாக்கங்களின் மீள்புனைவிற்கு வழிவகுப்பது, கலைஞர்கள் தம் சுயநிர்ணயத்திற்கு அத்தியாவசியமாகும்.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவிலும் அதன் தேவை இன்றியமையாததே.

ஏகாதிபத்தியத்தின் கீழ் புழங்கிக்கொண்டிருந்த கல்விசார் யதார்த்தவாதத்தினை ஓரங்கட்டும் நோக்கில் கலைஞர்கள் புதுப்புது மரபுகளை உருவாக்க முனைந்தனர்.

தனிநபர், அரசியல், கதையாடல், வரலாறு, கருத்தியல் ஆகிய கோட்பாடுகள் மேலும் இந்திய அழகியல், சர்வதேச நவீனத்துவம் என பலவற்றைக் கொண்டு புதிய பொருளாக்கங்களை, வடிவங்களை, பாணிகளை சமைத்து நவீன இந்திய வட்டார கலைக்கு வித்திட்டனர்.

முப்பரிமாணம், அழகியல் நிலை, வண்ணங்கள், உட்கூறுகள் என வெகுசில நிரந்தர வரையறைகளுக்கு மட்டும் உட்பட்டு முழுமுதல் சுதந்திரத்துடன் கருப்பொருள் மற்றும் உத்தியினை கையாண்டு, ஓவியங்களை படைப்பதே  அவர்கள்  நோக்கம்.

மேற்கத்திய நவீனத்துவ வளர்ச்சியில் பாரிஸ் கலை சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு, ஆப்பிரிக்க மற்றும் ஓசனிக் கலை சிந்தனைப் பள்ளிகளின்பால் கொண்டிருந்த பெருங்கடன் என்பதை நூற்றாண்டுகள் பழமையான ஐரோப்பிய இயற்கை வாதத்தினை (naturalism), மேற்கத்திய நுண்கலை வடிவங்களுக்கு தொடர்பில்லாத தெறிக்கும் வண்ணக்கூறுகளும், புடைப்பில்லா சித்திரத்தன்மையினையுடையதுமான (pictorial flatness), ஐரோப்பிய நுண்கலை கலைஞர்களை தகவமைக்க செய்தது, ஆப்ரிக்க கலைவடிவங்களின் மீதும் ஆசிய வடிவங்கள் மீதும் ஒரு சேர இருந்த ஈர்ப்பும் ஈடுபாடும் ஆகும். வான்கா (VonGogh) ஜப்பானிய படைப்புகளால் உந்தப்பட்டது மட்டுமல்ல அவற்றைச் சேகரிக்கவும் செய்தார்.

காகின் (Gaugin) கூட பொலினீசிய குறியீட்டியலையும் அழகியலையும்  சுவீகரித்துக்கொண்டார்.

இந்திய நுண்கலை படைப்புலகம் மேற்கை மட்டும் நோக்கியிருக்கவில்லை, கிழக்கையும் கூட ஏன் ஒரு வகையில் தன்னையுமே நோக்கி இருந்தது.

நிகழ்வின் அருங்காட்சி நிர்வாகிகள் Dr செஹரா ஜுமாபாய் (Dr.Zehra Jumabhoy), கோர்டால்ட் கலை கல்லூரி இணை விரிவுரையாளர் (Courtauld Institute of Art) மற்றும் தான் பூண் ஹ¨ய் (Tan Boon Hui), ஆசிய சமூக அருங்காட்சியகத்தின் இயக்குநர் (Asia Society Museum) ஆவர்.

இக்கலைப்படைப்புகளை வெறும் பிரதிகளாக பார்ப்பதை தவிர்த்து தொகுப்புகளாக கண்டுகொள்ளுதலே சரியான முறைமை என்று அவர்கள் வலியுறுத்தவே செய்கின்றனர்.

அக்கருத்தை காண்பவர் மனதில் பதியச்செய்யவே, நேர்த்திகொண்ட முன்நவீன ஆசிய படைப்புகளை, பெரும்பாலும் ப்ளான்ச்செட் (Blanchette), ஜான் டி ராக் பெல்லேர்  (John D Rockefeller) ஆகியோரின்  களஞ்சியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை இந்திய கலை படைப்புகளுக்கு இடையிடையே காட்சிபடுத்தினர்.

ஒரு  ஜப்பானிய ஸ்க்ரால் வகை (Japanese Scroll), ஒரு பகரி நுண்ணோவியம் (Pahari miniature), ஒரு சோழ வெண்கலம் என காட்சிப்படுத்தி இவைகளுக்கும் இந்திய நுண்கலை வடிவத்திற்கும் இடையேயான உறவினை, வெறுமனே கிழக்கு மேற்கு எனும் எதிரெதிர் / இருநிலை கூறுகளாக அடையாளம் கொள்ளாமல், பின்னிப்பிணைந்த பல கூறுகள் கொண்ட இந்திய நுண்கலையாகவே காண வழிவகை செய்யவே இம்முயற்சியாகும்.

கண்காட்சியில் முதல் அரங்கம், 1949 - இல் பம்பாய் கலை சமூகக்கூடத்தில் நிகழ்ந்த PAG-இன் முதல் கண்காட்சியினை மீட்டுருவாக்கம் செய்ய முனைந்துள்ளது.

பிரான்சிஸ் நியூட்டன் சௌசாவின் (Francis Newton Souza) மிதுனா (1949) (Mithuna - Lovers) இவற்றில் முக்கியமானது. கண்கள் அகலமாக, தனிப்பாங்கில் அமைந்து, ஆடம்பரமான உருவமைப்புடன், பதினேழாம் நூற்றாண்டின் பஞ்சாப் மலைகளின் பகரி ஓவியங்களின் சாயலிலும், இந்து ஜைன கோயில்களின் புடைப்போவியங்களின் சாயலிலும் மற்றும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso), ஜோர்ஜஸ் ப்ராக் (Georges Braque) ஆகியோரின் ஐரோப்பிய கியூபிசத்தின் உட்கூறு களையும் கொண்டு மாதிரி வடிவமற்று திகைப்பூட்டும்வண்ணம் உள்ளது.

போர்ச்சுகீசிய கோவாவில், ஒரு ரோமன்  கத்தோலிக்க குடும்பப் பின்னணியிலிருந்து, வறுமையின் பிடியில் கலகக்காரனாக உருவான சௌசாவிற்கு, இங்கிதம், பாங்கு கற்று இயங்க நேரமிருக்கவில்லை.

இவர்தம் படைப்புகள் பற்றுதல், பாரம் பரியங்கள் இவற்றை ஒதுக்கியே அமைந்தன. அதே ஆண்டில் (1949) வரைந்த இவரது இன்னொரு ஓவியத்தில், கையில் தூரிகையுடன் ஒரு நாயகனைப் போல் தன்னையே தீட்டியுள்ளார்.

அம்மணமாக, எலும்பும் தோலுமாக தோன்றினாலும், அந்த இளைஞனின் தெனாவெட்டு அவரது நேர்கொண்ட பார்வையில் உணரமுடிகிறது. ஒரு தேர்ந்த கலைஞனை, அவன் கொண்ட உத்வேகத்தை வெற்று பாசாங்கை உதறித் தள்ளும் அவனது திமிறிடும் பார்வைகள் அறிவிக்கிறது.

இத்தருணம், டோன டெல்லாவின் (Donatello) வெண்கல சிற்பமான கோலியாத்தை வதம் செய்யும் டேவிட்டை நினைவுபடுத்துகிறது.

இவ்விதத்தில், இது பிரிட்டிஷ் பேரரசிற்கும் இந்திய குடியரசிற்கும் இடையிலான உறவை சுட்டும் உவமையென  எடுத்தாகவேண்டும். ஆனால் அவ்வோவியம் நிறுவ இருந்த கவித்துவ மான நியாயம் பொதுவெளியில் எடுபடாமல் போனதோடு, தவறான கற்பிதங்களால் கலகங்களுக்கு வித்திட்டது.

பம்பாய் நிர்வாகத்திடம் உண்டான உரசலில், இந்தியாவை விட்டு ஐரோப்பிய கரையை நோக்கி சௌசாவினை அனுப்பி வைத்தது. அவர் பாரிஸுக்கு, பின் அங்கிருந்து நியூயார்க்கிற்கு சென்றடைந்தார்.

இது PAG-க்கு ஒரு பேரிழப்பு. சௌசா இன்றி, அந்த தீவிர கொள்கைவாதியின்றி, அவ்வமைப்பு பிடிப்பற்றுபோனது. கண்காட்சியின் இன்னொரு ரத்தினம்சம் அக்பர் பதம்சீயின் (Akbar Padamsee) 1952 -இல் தீட்டப்பட்ட ‘காதலர்கள்’ (Lovers) ஆகும்.

1954-இல் பம்பாய் ஜஹாங்கிர் கலை அரங்கத்தில் காட்சிப்படுத்தியபோது சௌசாவிற்கு நேர்ந்த கொடுமை இந்த வண்ண ஓவியத்திற்கும் விதிக்கப்பட்டது. வெய்யில் குளித்து மஞ்சளும் மாநிறமுமாய் மண்மணத்துடன் ஆணும் பெண்ணும், வெண்ணிற காளையின்மீது அமர்ந்து, ஆண் பெண்ணின் மார்பகங்களை கூப்பி அணைத்தபடி சரசம் பேசுகிறது இப்படைப்பு.

தனித்தன்மைகொண்ட முகவடிவமும், ‘நீட்சிபெற்ற உருவங்களும், பனிரெண்டாம் நூற்றாண்டு சோழ வெண்கல சிற்பமான சிவபெருமானை நினைவூட்ட, இவற்றின் ஒற்றுமையை விளக்க வெண்கல சிற்பமும் ஓவியத்திற்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்து மத மறைகளிலிருந்து சிவன் பார்வதியின் தற்கால உருவகமாக, தம்பதிகளாக பதம்சீ வடிக்க முனைந்ததே எதார்த்தம் ஆனாலும் அவ்வட்டார நிர்வாகிகள் இதனை சிவபெருமான், தேவி பார்வதியின் நிர்வாணத்தையும், உடலுறவையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி, உள்ளுணர்ந்தே இறைமீது கலங்கம் செய்ததாக முடிவு செய்தனர்.

இருநூறு வருட பிரிட்டிஷ் ஆட்சியின் அளவு கடந்த ஒழுங்குகள், இந்திய கலைவடிவங்களில் சாதாரணமாக பொதிந்திருந்த சரச, காம, உணர்வுகளை சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து நீக்கியிருந்தது. இன்றளவிலும் கோவில்கட்டிட, சிற்ப சாத்திரங்களில், பழங்கால இந்து மறைநூல் சாத்திரங்களில், ஏன் மொகலாய நுண்ணோவியங்களிலும் கூட இவை நிறைந்து காணப்படுகின்றன.

(சௌசாவைப் போலல்லாமல் பதம்சீ, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் எதிர்த்து போராடி வென்றார். அதோடல்லாமல் அவ்வழக்கு இன்றளவிலும் நவீன இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின்  ஒரு  திருப்புமுனையாக  அமைந்தது)

வாசுதேவ் கெய்ட்டோண்டே (Vasudeo S Gaitonde), இக்குழுவின் ஆன்மீகவாதியானவர், பரிபூரணமான சுருக்கமான நடையில் இயங்குபவர். ஜென் பௌத்தம், கிழக்கு ஆசிய ஸ்க்ரால்கள் (East Asian scrolls) மற்றும் வனப்பு எழுத்தியல் (calligraphy) இவற்றின் மீதிருந்த ஈர்ப்பில், தொன்ம நிலப் பரப்புகளை எளிமையான குறிப்பியல் கொண்டு இவர் வரைந்தது மார்க் ரோத்கோ (Mark Rothko)- வுடன் ஒப்பிடப்பட்டிருகிறது.

1964-இல் கெய்ட் டோண்டே நியூயார்க் சென்றபோது அவர்கள் இருவரும் சந்தித்து அவர்தம் படைப்புகளுக்கான அகத்தூண்டுதல்களை பரஸ்பரம்  செய்துகொண்டனர்.

செறிவான இந்திய கலாச்சார கலைச் சூழலின் அடையாளமாக, பல்வகை கலை சாராம்சங்களின் அயற்சேர்க்கையாக, கூட்டுருவாக்கமாக காட்சிப்படுத்தும் மற்றொரு முயற்சியில், 1962-ஐ சேர்ந்த சாம்பல் நிறத்தால் தோய்ந்த நீலம், வெள்ளை பின்னணியில் பறவையும் சூரியனும் காணப்படும் கெய்ட்டோண்டேவின் குறிப்பியல் சித்திரத்தை, பூத்துக் குலுங்கும் மரக்கிளையின் மீதிருக்கும் நீல வெள்ளி நிற பறவையுடைய மெல்லிய படைப்பான பதினாறாம் நூற்றாண்டின் ஜப்பானிய ஸ்க்ரால் ஓவியத்தின் அருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சையத் ஹைதர் ரசா (Syed Haider Raza) - இன் காஷ்மீர் (1949) ஓவியத்திலும் இது போன்ற தெளிவுடைய, ஒத்திசைவான கூடுகைகள் புலப்படுகின்றன. துவக்க காலத்தில், தாளில் தீட்டப்பட்ட குவாச்சே வகையை சேர்ந்த இது, செசான்னேக்கு வந்தனை (Homage to Cezanne)- யினைப் போன்று புண்ணிய பூமிக்கான வாழ்த்துப் பாவாக அமைகிறது.

இருள் படர்ந்த ஆறுகள் இரண்டு, குறுக்கும் நெடுக்குமாக சங்கமிக்கின்றன. இரவு வெளியிலே தூரத்தில் இருக்கும் காடு, மலைகளுக்கு சவாலாக, கூரை வீடுகள் வெகுவாக பரவி வருகின்றன. இது ஒரு துவக்க கால பரிசோதனை.

ஒரு புறம், துணிவுடன் கூடிய பிரகாசமான வண்ணங்களையும் வலிய கோடுகளையும் கொண்டு ஓவியத்தின் தளத்தை சிதறுண்டாக்கியும் கூட மறுபுறம் மனச் சலனத்துடன் வரைபட நோக்கு நிலையை, விடாமல் பற்றிக்கொண்டிருப்பது விளங்குகிறது.

ரசா இசுலாமியர் என்றாலும், சராசரி இந்திய மனநிலையில் பொதிந்திருக்கும் பண்டைய கால நம்பிக்கை முறைமைகளிலிருந்து ஈர்க்கப்பட்ட பேதங்கள் இல்லாமல் இயல்பாக ஊறிய தாக்கங்களே. இதுவே மதசார்பற்ற / மதநல்லிணக்க கொள்கைகள் பின் காலனியச்சமூகத்தில் வேரூன்றியிருந்ததற்கு ஆதாரம்.

ரசாவின் பின்நாள் இணைப்பாக்க படைப்புகளில் தெள்ளிய எடுத்துக்காட்டு சாத்புரா (1984). நிலப்பரப்பையும் குறிப்பியலையும் கலந்து உருவாக்கி தாந்திரீக பௌத்தமும், இந்து மதமும் சமரசத்துடன் ஒன்றிணைத்து குறியீட்டியலாக்கி அதீதத் தனித்தன்மை கொண்ட, தனி மொழியாக உருவகிக்கப்பட்டதுதான் சாத்புரா.

இவ்வோவியத்தில், விந்தையான கருஞ்சூரியன் ஒன்று கிடை, மூலமட்டங்களில் சிதறுண்டு கிடக்கும், ஒளி மங்கிய சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலான தளங்களை கொண்ட சிதிலமடைந்த வடிவியல் நிலப்பரப்பை நிரப்பு கிறது.

கீழிருக்கும் தகவல், இது மத்தியபிரதேச காடுகளை, ஓவியர் பிறந்து வளர்ந்த வட்டாரத்தின் நினைவூட்டல் என்கிறது. ஓவியத்தின் வடிவியல் கட்டமைப்பு இந்துமத எந்திரங்களை குறிக்கையில், வடிவியல் குறியீடுகள் தேவசக்தியினை உருவகப்படுத்துகிறது. அதே வேளையில், வண்ணங்களும் தூரிகைகொடுகளின் மிடுக்கும் வலிமையும் உலகப்போரின் பிற்கால அமெரிக்காவின் குறியீட்டியலாக கொள்ளப்படுகிறது.

மூன்றாம் தளத்தில் காட்சியிலுள்ள ராம்குமாரின் பெனாரஸ் (1964), இதே பாணியில் வாரணாசி நகரத்தின் நிலப்பரப்பை காட்டுகிறது. பெனாரஸ் இவருக்கு அதீத இஷ்டமானதாகவும், இவரது ஏனைய நிலப்பரப்புகளும் இந்தியாவை சுற்றியே இருக்கும்.

மேலும் குமாரின் வர்ண கட்டமைப்புகள் காலப்போக்கில் வரைபட வடிவத்தை அணைத்துக்கொண்டது. அழியா அச்சாக இருக்கும் இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியின் மேற்கத்திய நவீனத்துவம் குமாரின் கலைப்பயணம் முழுக்க, அவரது மரணம் வரை ( கடந்த ஏப்ரல் மாதம்) தொடர்ந்து உணரப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னான சமூக நிகழ்வுகளையும், நவீன இந்தியாவை உருவமைத்த குரூர நிகழ்வு களையும் கையாண்ட விதத்தில் முற்போக்கு புரட்சி அமைப்பு இன்றியமையாததாகிறது.

1950களில், சமூக அரசியல் தளத்தின் மீதும் மற்றும் அதன் பொருளாதார இக்கட்டின் மீதுமிருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், தங்களை சுற்றி நடந்தவற்றை, நடைமுறை யதார்த்தங்களை கலைஞர்கள் ஆவணம் செய்துகொண்டுதானிருந்தனர்.

அவர்கள் கண்டறிந்த அவை யாவும் அவர்கள் கலைப் படைப்புகளில் தலையங்கங்களாக இருந்தன.

இக்கால கட்டத்தின் வலிமை வாய்ந்த படைப்பினை கொண்டு வந்தவர் மக்பூல் பிதா ஹுசைன் (Maqbool Fida Husain), பீஏஜி-இன் உறுப்பினர்களிடையே சர்வதேச அளவில் அதிகமாக அறியப்பட்ட கலைஞர்.

அறிவிப்பு பதாகைகள் தீட்டுவதில் தனது கலைத்தொழிலை தொடங்கியவர், அவரது யாத்ரா (1955) மற்றும் ஹோலி (1951) ஆகிய ஓவியங்களில் வீடு வாசலை, கிராமப்புறங்களை கவித்துவமாக காட்சிப்படுத்தியதில், பசோஹ்லி ஓவியங்கள், ராஜஸ்தான், மொகலாய நுண்ணோவியங்கள் மற்றும் ஜைன கையெழுத்து படிவங்கள் ஆகிய நாட்டார் மற்றும் மத சடங்கு சம்பிரதாயங்களில் இருந்தும் மேற்கத்திய பாணிகளிலிருந்தும் ஈர்ப்பு கொண்டார்.

ஹ§சைனின் மேதாவித்தனமும், வெளிப்படையான பாணிகளும், நவீன இந்திய கலையாக பல இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது. அவரை இந்தியாவின் பிக்காஸோ என்றழைப்பது முறையாக இருந்தாலுங்கூட, அவ்வகை அடையாளபடுத்துதல் என்பது, அருங்காட்சியக காப்பாளர்களை முகம் சுளிக்க வைக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

மிகப்பெரும் பிரபலமான பின்னும்கூட, ஒரு வேளை அதனால்தானோ என்னவோ, 1996-இல் இந்துமத பெண் தெய்வத்தை, நிர்வாணமாக வரைந்ததற்கு, ஹுசைன் தீவிர வலதுசாரிகளால் குறி வைக்கப்பட்டார்.

இசுலாமியர் என்பதால் மட்டுமே, தவிர எந்த வகையிலும் தீங்கிழைத்திராத அவ்வோவியம் வெறும் பலிகிடா மட்டுமே, அதனால் கலைஞரும் பலிகிடாவானார். அதன் விளைவாக, நாட்டை விட்டு வெளியேறி, கத்தாரில் புகலிடம் கோரி,  அந்நாட்டு  குடிமகனாவே  இறந்தார்.

சம்பந்தப்பட்ட ஓவியம் மற்றும் ஐம்பதுகளில் வெளிவந்த அவரது முக்கியமான படைப்புகளான சிலந்தியும் விளக்கும் (Spider and the Lamp) 1956 மற்றும் நிலம் (Zameen) 1955 ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்படவில்லை.

ஆனாலும் முழுமை யற்ற மதசார்பின்மை கொள்கையுடன் விளங்கும் தேசத்தில், இந்தியக்கலையை சுற்றி சுற்றி வலம் வரும் ஆவியாகவே  திரிகிறார்.

தேசத்தின் ஆன்மீகத் தந்தையான மகாத்மா காந்தி மீது, ஒரு தீவிர வலதுசாரி இந்து வெறியனால் 1948-இல் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு பிறகு, தனிநாடாக வங்காளதேசம் உருவாவதற்கு முன் நிகழ்ந்த கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை என பேரழிவு சம்பவங்களை துல்லியமாக சித்தரிக்கும் க்ரிஷன் கண்ணாவின் படைப்புகள்... (Krishen Khanna), காந்திஜியின் ரணச்செய்தி (1948) ( News of Gandhiji’s Death 1948)  மற்றும் இருள் பொதிந்த, MN உறையச்செய்யும் இரு படைப்புகளான ஆட்டம் ஒன்று 1978 (Game-I), உடற்கூறியல் பாடம் 1972  (The Anatomy Lesson). ஆகியனவாகும்.

“காந்தியின் மரணச்செய்தியில்”, பீதியடைந்த ஒரு பொது இட காட்சி, இந்து, முஸ்லீம், சீக்கிய, கிறிஸ்துவ மதங்களிலிருந்து, பல்வேறு வாழ்நிலைகளை சார்ந்தவர்கள் தெருவிளக்கின் கீழ் குழுமி, அந்த பெருந்துக்க செய்தியை வாசிக்கின்றனர்.

மதநல்லிணக்கம் எனும் குடையின்கீழ் கூடியிருந்தாலுங்கூட ஒவ்வொருவரும் அவர்தம் எதார்த்த நிலையினுள் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். காந்தியக் கனவான பல சமயக்குழுக்களிடையே நல்லிணக்கம், பிரிவினை கலவரத்தின் தருணத்தில் உடைபட்டு போன  பொழுதின் அச்சுறுத்தும் காட்சியிது.

ஆட்டம் ஒன்றில், மேஜையைச் சுற்றி சீருடையில் அமர்ந்திருக்கும் ராணுவத்தளபதிகள் பலர், போர் எனும் ஆட்டத்தை தொடங்குகின்றனர், தங்கள் இடையே வெள்ளை காகிதத்தைக் கடத்துகிறார்கள், வங்காள இனப்படுகொலையினை அரங்கேற்றுவதற்கு கதை வசனம் எழுதுகிறார்கள்.

பின்பு அவர்கள் உடற்கூறியல் பாடத்தில், நாட்டினைக் கூறுகூறாக துண்டாடிவிட்டு, பிரேதத்தினை மிரட்சியுடன் நோக்குகின்றனர்.

நவீன வாழ்க்கையின் இரட்டை கவலைகள், வறுமையும் அந்நியமாக்கலும், ராம்குமாரின் அரிதான உருவகப் படைப்பான வேலையில்லா பட்டதாரிகள் (unemployed Graduates) 1956 ஆகும்.

அமைப்புமுறைகளின் ஈவிரக்கமற்ற தன்மை, வாய்ப்புகளின்றியிருக்கும் நகர்ப்புற இந்தியாவின் கீழ் நடுத்தர வர்க்கத்தினரை சுட்டிக்காட்டும் வண்ணம் ஒரே உருவங்கொண்ட தொளதொளவென உடுப்புகள் அணிந்து நம்