அன்புடையீர் வணக்கம், பிழைக்கு வருந்துகிறேன். சென்ற இதழில் பாக்கு பொறுக்குபவர்கள் மொழியாக்கச் சிறுகதையை மொழிபெயர்த்தவர் மருத்துவர் டி. எம். ரகுராம் அவர்கள். அவரது முகப்பெழுத்தை ஜி.வி. என்றுபிழையாக அச்சாக்கம் செய்துவிட்டோம். மருத்துவர் மன்னிப்பாராக.
***
ஓர் ஊழிக்காலத்தின் தொடக்கமாகவே இதைநான் உணர்கிறேன். அக்டோபர் ஆறாந்தேதி தொடங்கி முடிவிலாது தொடரும் இஸ்ரேல்பாலஸ்தீனம் போர் அதை உறுதி செய்கிறது. ஆயுதமேந்திய போராட்டம் ஏதிலி மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று அழிக்கிறது. உயிரழிப்பு கருதியதை நம் கைக்குக் கொடுக்குமா? நிலைகுலையாத நிதானமே விவேக மாக இருக்க முடியும். மானுடம் பேணாது நாம் பெறும் எந்த விடுதலையும் இறையாண்மைஉள்ளதாக இருக்காது. இழப்புக்களைக் கருத்தில் கொண்டு முதலில் போரை நிறுத்தவேணும். எரிவதைத் தணித்தால் கொதிப்பது அடங்கும்.
***
இதழ் வளர்ச்சி மேம்பாடு என்று தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். இடையில் எழுத்தாளர் களிடம் படைப்புகள் கேட்பது குறித்தும் பேச்சு வந்தது. இளவலொருவர் ஒரு படைப்பாளி இதழுக்குப் படைப்புப் பங்களிப்புச் செய்ய வேண்டுமெனில் இதழ் ஆசிரியனாகப்பட்டவர் அந்தப் படைப்பாளியாகப்பட்டவரிடத்து மண்டியிட்டுத் தென்டனிட்டுக் குழைந்தும் பணிந்தும் ஆயிரத்தெட்டுமுறை அன்பொழுகத்தானே கேக்க வேண்டுமென்றும் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் தப்புவது மாத்திரமல்ல குரலை உயர்த்தவே கூடாதென்றும் உபதேசித்தார். இன்னொருவர் ஒரிஜினல் அக்மார்க் இலக்கியவாதி ஒருவர் அவருடைய இதழுக்கு இரண்டாயிரத்து எட்டுமுறை படைப்புகள் கேக்க நேரிட்டாலும் சற்றும் மனந்தளராது கன்னி முயற்சியில் எத்துணை தீவிர மிருந்ததோ, அழுத்தமிருந்ததோ அதற்கும் மாற்றுகுறையாதபடிக்குத்தானே ஊக்கத்தோடும் உத்சாகத்தோடும் படைப்புகளைக் கழற்றிவிடும் பாங்கையும் அந்த நேர்த்தியையும் சொல்லிச் சொல்லி மாய்ந்ததோடு அந்த வழிமுறைகளை அடியொற்றித் தானே பிறளாமல் பின்பற்றலாமே என்று அறிவுறுத்தவும் செய்தார். நேசமிகு மித்திரர்கள், நிலைய வித்துவான்கள், ஆளுமைகள், ஆகிருதிகள் ஆகியோர் களிடத்துப் பெற்ற பரிந்துரைகள் / இலச்சினைகள்இருந்தால் அவற்றினைக் காட்டிக் கூடக் கறந்து விடலாமென அங்கலாய்த்தார் இன்னொருவர். இதெல்லாம் கூடத் தேவலை.
கும்பகோணத்து உபாத்தியார் ஒருவர், அச்சுக்குப் போகும் சஞ்சிகையை இடை நிறுத்தி வைத்த கையோடு படைப்பாளிக்கு போனைப் போட்டு உங்கள் படைப்புக்குக் காத்திருக்கிறோம் ஐயா, வந்தால் அச்சுக்கு இல்லையேல் குப்பைக்கு என்று இறைஞ்சி கேக்குமாறு மருளாடி அருள்வாக்கு சொன்னார்.
பிள்ளைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது... வாசிக்க நாற்பத்தியெட்டு இதழ்கள் நமது கரங்களில் பெற்றுக்கொண்ட பின்னும் மனமுவந்து அதற்கு விசய தானம் செய்யும் உணர்த்தியும் ஓர்மையும் இல்லாமலிருப்பது உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பதுவே அன்றி வேறில்லை. இந்தப் பண்பு கெட்ட நடத்தையை மெச்சி அணியாகப் பூணும் எவரொருவரும் இலக்கிய உணர்வாளருமல்லர்; அவர்தம் படைப்புகள் இலக்கியத் தளத்தில் விளைவிப்பதுவும் எதுவுமில்லை.
***
சினிமாவே சத்தியம், சினிமாவே லட்சியம், சினிமாவே அச்சாண்ட காலம், சினிமாவே முக்தி மோட்சம் என்று எண்ணம் புழுத்த இலக்கியவாதிகள் மலிந்து பெருகி வருகிறார்கள் மதராஸப் பட்டினத்தில். கோடம்பாக்கம் இராசப்பாட்டையில் ஒரு புல்லாகவேணும் முளைத்துவிட்டால் போதும் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும் என்கிற அளவுக்கு ஈனப்பானம் கெட்டுக் கிடக்கிறது அவர்களது நடவடிக்கை. பிரபல்ய திரை நெறியாளுகைத் திலகங்கள் வீட்டு வாசலில் கூழுக்கு காத்துக் கிடப்பது, எண்ணமில்லாத ராசா பன்றிவேட்டைக்குக் கிளம்பியதுபோலவே இலக்கியத் தேட்டம் என்பதே கிஞ்சித்துமில்லாத அந்தப் பகல் வேசக்காரர்களை நட்சத்திர ஹோட்டல்களில் பகட்டாகத் தாங்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பது, பேப்பரில் எழுதிக்கொண்டு வந்து கவிதையையோ, கதையையோ புகழ்ந்து எங்காவது ஒரு வார்த்தை அவர்கள் பேசிவிட்டால் அதை நெற்றியில் ஒட்டிவைத்துக்கொண்டு திரிவது... அட அவன் தொட்டுத் தந்தால்தான் தாலியே கட்டுவேன் என்கிறார்களய்யா! தமிழ் சினிமா மார்வாடிகளின் கைகளுக்குப் போய் மாமாங்கம் பல ஆகிவிட்டது.
சினிமாவை வல்லிய கலை வடிவமாக உணருகிற, சிந்திக்கிற, அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றுகின்ற ஒரேயொரு ஈ, காக்கை குஞ்சுகள் கூட இன்றைக்கு இங்குக் கிடையாது. கந்துவட்டி மொள்ளைப்பட்டு அதைக் கட்ட முடியாமல் ஊரைவிட்டு ஓடிவந்தவர்கள், காதலித்தவளைக் கலியாணம்கட்டிக்கொள்கிறேன் என்று கையில் சத்தியமடித்தவர்கள், பெண்டுபிள்ளைகளை ஆடம்பர வாழ்க்கையில் மிதக்க வைக்கப் பிரயாசைப்படுகிறவர்கள் தாம் இந்தக் கேடு கெட்ட கோடம்பாக்கத்துக்குக் காவடி எடுக்கிறார்கள். சிவாசி, எம்சியார் காலந்தொட்டு, இன்றைய விசீயண்ணன், அசீத்தண்ணன் வரைக்கும் திரைக்கலைஞர்கள் யாவரும் ஏ, பி, சி சென்டர்களில் விலைபோகும் டிக்கெட்டுகள். முதலாளிமார்கள் ஆடுகிற சூதாட்டத்தின் ஜோக்கர்கள். ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வடிவேலு என்கிற திரைக்கலைஞனை வருடக் கணக்கில் திரையில் தோன்ற முடியாதபடிக்கி முடக்கிப் போட்ட ஆண்மையற்ற இயக்குனர்கள், திரைப்படத்தை விநியோகம் செய்வதில் உள்ள குழறுபடிகளை, முறைகேடுகளை, முட்டுக்கட்டை களை, அத்துமீறல்களைக் குறித்தெல்லாம் வாய் திறக்க முடியாத புஜபல பராக்கிரமசாலிகளைநம்பி இந்தக் காமெடி பீசுகள் வான்டட்டாக வண்டி யில் ஏறிப்போய்த் தானாகவே உடையடித்துக்கொள் வதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
மணி சார், கமல் சார், ரசினி சார், ராம் சார், ரஞ்சித் சார், மிஸ்கின் சார் போன்ற சினிமா மூதாய்களிடம் ஞானப்பால் அருந்தாத, திரையாக்கம் மற்றுமதன் தொழில் நுட்பம், கலைநுட்பம் முறையாகக் கற்றுத் தேர்ந்த /தெரிந்த திறமைசாலி ஒருவனைத் தானாகக் கண்டு தெளியும் பட முதலாளிகள் யாரேனும் இங்கே இருக்கிறார்களா?
ஆகவே மக்களே மாரைத் தட்டி நெஞ்சில்வையுங்கள்...
கோடம்பாக்கத்துச் சினிமா தண்ணியில் தமிழ் இலக்கியக் கொள்ளு வேகவே வேகாது. சீரிய இலக்கியத்தை உள்வாங்கித் தின்று செமிக்கற சக்தி தமிழ் சினிமாவுக்குக் கிடையவே கிடையாது.
கல்யாணத்தில் மணமகன் இழவு வீட்டில் பிணம் பார்த்திருக்கத் தின்று முழித்திருக்கக் கை துடைக்கும் வெள்ளித்திரை பிரும்மாக்கள் ஏரி வேலைக்குப் போனால் என்ன சோத்துக்கு வழியில்லை கலைத்தாகமென்று சும்மா புலம்பித் திரிவது ஒட்டுத்திண்ணைவாசிகள் மேய்த்தால் மதனியை மேய்ப்பார்கள் இல்லையென்றால் பரதேசம் போவார்கள்.காடு வீடிழந்த குடியானவன் ரோட்டுக்கடையில்இவன் திங்க பிட்டுச் சுட்டு விற்கிறான்.தொட்டுக்கொள்ள எண்ணையில் சுட்ட கறிக்கோழியும்கையில் பணமிருக்கிறதாவென்றால் பணமிருந்த கையிருக்கிறதென்பதுமண்டையிலிருக்கும் மயிரும் சொந்தமில்லைஎடுப்புச்சாப்பாட்டுக்கு எகத்தாளம் கொஞ்சமல்ல மிக அதிகம்இளக்காரம் கண்டு பூலுக்குப் பூண் கட்டச்சொல்வதுஈரைப்பேன் ஆக்குவது பேனை பெருமாளாக்குவதுஎந்நேரமும் அடுத்தவன் வலப்பையைச் சுரண்டுகிறது.தன் காலில் பூ போட்டுக்கொள்வதுவராத நாயைக் கயிறு போட்டு இழுப்பதுகைகொடுத்துக்கொண்டே கடையாணி பிடுங்குவதுஈரத்துணி போட்டு கழுத்தை அறுப்பதுஅண்டப்புளுகு ஆகாசப்புளுகு பச்சைச்சிரிப்பு நீலிக்கண்ணீர்அவனியெங்கும் மணக்குது கனவுபட்டறை நாத்தம்கதவச் சாத்துங்க ஊசக் காத்தடிக்கிது உசுருக்கே கேடு.
***
வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னையில் வந்து அவதரித்திருக்கிறார் ஓர் இலக்கிய மேசய்யா. அதிகாரப்பூர்வமான கலைவளர்ப்பு உரக் கம்பெனியின் ஆஸ்தான ஸ்தாபகரான நம் பரிசுத்தர் செய்த கைங்கர்யம்... அண்மையில் அவரது சொந்தக் கற்பனையில் அவர் கைப்பட ஆக்கிச் சமைத்த நாவல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதச் சொல்லி போட்டி வைத்து அதிக்கிரமமான ஊரில் கொதிக்கிற மீனும் சிரிக்கிறதாம் என்கிற வடிகட்டின புளுகு மூட்டைக்கு ஆப்பிள் போனை வாங்கிப் பரிசளித்திருக்கிறார். அதை மன்னவனும் நீயே, வளநாடும் உனதே என்றேங்கி மயங்கி, ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்துள்ளது ஆர்வக்கோளாறொன்று. அன்றொரு காலத்திலே, ஆதியிலே ஒருப்பூட்டு ஆஷா நிவாஸில் வைத்து எனக்கும் கவிஞர் கென்னுக்கும் இந்தச் சொல்லேர் உழவன் தந்த கெட்டி அட்டை வழ வழத் தாள் கவிதைத் தொகுதியை அதன் கனம் கருதி சுமக்க முடியாது அவரிடமே திருப்பித் தந்தோம்... மட்டுமில்லாது வம்பாய் அவருக்குப் பிடித்திருந்த இலக்கியப்பித்து மற்றும் பேய்களுக்கு உடுக்கை அடித்து, திருநீறுக் கொழித்து மேலும் மேலுமவற்றைக் கிளர்ச்சி அடைய வைக்காமல் அப்பாலே போ சாத்தானே என்று வேப்பிலை அடித்து விரட்டினோம். போகிற போக்கில் இதழ்கள் நடத்தியாவது இலக்கியச் சேவை செய்யுங்கள் என்று கென் தோழர் ஒரு பேச்சிக்குச் சொல்ல அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டுவிட்டாரவர். ஓடிய விசையில் 24x7 என்ற இதழை ஒன்றோ இரண்டோ கொண்டு வந்தவர் அப்புறம் என்ன நினைத்தாரோ விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு என்று திரும்பவும் ஓட்டம் பிடித்தார். இப்போது போன மச்சான் பூமணத்தோடு திரும்பி வந்துதான் இந்த வெட்கங்கெட்ட வேலை பார்த்திருக்கிறார். அய்யா ராசேசு ஸ் பாண்டியனய்யா இலக்கியத் தளம் யாவருக்கும் பொதுவானது ஆடுங் கள் பாடுங்கள் என்னத்தையாவது எழுதி இங்கேகுப்பை போடுங்கள் வேண்டாமென்று சொல்லயாருக்கும் அதிகாரமில்லை. ஆனால் எழுத்து அச்சேறி பிரதியாக்கம் செய்யப்பட்டுவிட்டால் அந்தப் படைப்பு வாசிப்பவருக்குச் சொந்தம். விமர்சனம் வாசகனின் உரிமை. அதை உங்களுக்கு ஏற்றபடி காசு கொடுத்து எழுதத் தூண்டுவது தமிழ்இலக்கிய விமர்சன மரபுக்கு பொருந்தாத செயல்.
காசு கொழுத்தவன் கேளிக்கை பண்ண இங்கே இடம் இல்லை. இம்மாதிரியான கடைகெட்ட நடவடிக்கைகளை உடன் கைவிடுவது உங்களுக்குமிகவும் நல்லது. அவ்வாறின்றி அடர்ந்துஅவற்றைக் கைக்கொள்வீர்களானால்... முதலில்இலக்கியத்தளத்தில் உங்களுக்கு மரியாதை இருக்காது, அதன் பின் எங்கேயும் உங்கள் பேருமிருக்காது.
மாதாந்திர இலக்கியக் கூட்டமொன்றில் பீடித்தது
வெள்ளித்திரை விநோதங்கண்டுநாள்பட்ட வியாதியாச்சி
கமக்கட்டை விதைக்கொட்டை முதுகு பின்மண்டை
தனிச்சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தேன்
ஒப்பந்த முறைமையும் அறிமுகமாயிற்று
பிறகு கட்சி ஆரம்பித்துத் தொண்டர்கள் பெருகினார்கள்
வாரியங்கள் வைத்து மானியமும் கொடுத்துப் பார்த்தேன்
நமச்சல் அடங்கவில்லை கோடி லட்சம் செலவானாலும் சரி
பரந்த மனசுக்காரன் விழுந்து வணங்குகிறேன்
சித்த நேரம் சொறிந்து விடுங்கள் ராஜா.
***
உணர்வொன்றித் துய்க்குந்தன்மை, திளைக்குந் தன்மை மக்களிடத்திலே இல்லாமல் வழக்கொழிந்து விட்டது. துள்ளுவது, துடிப்பது, பதைப்பது, வியப்பது, விழைவது, மகிழ்வது, வெறுப்பது போன்ற மாந்த உணர்வுகள் எந்த நிலையிலும் தீவிரங்கொண்டவையாக இல்லை. படைப்பு தளத்திலொருவன் இயங்க வேண்டுமெனில் ஆழ்ந்த நினைவாற்றல், சிந்தனையாற்றல், கற்பனையாற்றல் உடன் உற்று நோக்கி உள்வாங்கும் கூருணர்வும் அவசியம் வேண்டும். தாய்மொழியில் வாசிக்க முடியாமல், எழுத முடியாமல் அசைபோட முடியாமல் ஏன் சிந்திக்கவே முடியாமல் செய்திருக்கிறது தலை திரும்பவொட்டாத தொடுதிரை மேய்ச்சல். வெற்று அறிவுப்பகட்டுக்குப் பலியாக்காமல் வளர் பிராயத்தினரை உணர்வுள்ளவர்களாகவும், பண்பு உள்ளவர்களாகவும், வளர்ப்பது பெற்றோர் களின் இன்றியமையாத கடப்பாடு ஆகும்.
நீர்வழிப் படூஉம் நாவலுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவிபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்!
காற்று துன்புறுத்தும் தீபமென தட்டுத்தடுமாறி அந்தப் பாறையின் உச்சியில் ஏறிநின்றேன் எல்லோரின் காமிராக்களையும் ஒருசேர இடைமறித்தபடி எல்லோரின் கவனத்தையும் என்பக்கம் திருப்பியபடி நடுக்கடலில் பிரம்மாண்டமாய் நிறைவடையும் அந்தியோடு சிலர் என்னையும் சேர்த்தே படம்பிடித்தனர் இன்னும் சிலர் அவர்களின் சட்டகத்தில் நானிருப்பதை விரும்பாது கீழிறங்கச் சொல்லி சத்தமிட்டனர் அச்சமயம் அனைவரின் கண்முன்பும் வந்திறங்குகிறேன் சூரியனிலிருந்து சிறகு மடக்கி வானிலிருந்து காற்றாலைகள் ஈனும் கடலலைகள் கரை எங்குள்ளதென இறந்தவர்களுக்கு மட்டும்தான் வழி சொல்லுமாம் பாறையின் கிண்ணங்களில் அருந்தப்படாமல் வழிகிறது பல கோடித்துளிகளின் தொகுப்புருவம் ஈருடல்களை ஒரு தலையில் இணைக்கும் இளஞ்ஜோடிகளாய் நானும் அவளும் இதன் பொருட்டே காத்திருந்தோம் ஆழியின் மடியினுள் அங்கே காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது உலகின் மாபெரும் நாணயம் நானோ யாருக்கும் கேட்காதபடி சத்தமாக வேண்டிக்கொண்டேன் நீரிலிருந்து ஜனித்து மீண்டும் நீருக்குள் புதையும் தினங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன நானும் கூட நேற்று பார்த்த அதே மனிதர்களை இன்றும் பார்த்துவிடுகிறேன் மேலும் அவர்கள் என்னைக் கடந்துசெல்ல ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறேன் ஆழ்கடல் ரகசியங்களோடு அதிகாலையில் கூண்டிலிருந்து தப்பிச் சென்ற ஒளிமிருகத்தை நடுவானில் சுட்டு வீழ்த்திய மதிமயக்கமாலை இது இழுபறிக்கும் காற்றில் தூரத்திலிருந்து பிரார்த்திக்கும் தேவாலயத்தின் ஒலிப்பெருக்கிகள் என்னை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டு கொஞ்சம் சொல்லி கொஞ்சம் விழுங்கிக்கொள்கின்றன மறுநாள் உயிர்த்தெழுவதற்கான வாசகங்களை கரையின் தனிமையில் காத்திருக்கும் எங்கள் இருவரின் பாதங்களையும் தழுவிச் செல்லும் அதே அலைகளைக்கொண்டு கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் தம்மை நனைத்துக்கொள்கின்றன தனித்தனியாக ஆகையால் தம்முள் மொத்தமாகவும்.
நண்பரொருவரின் வருகையை முன்னதாகவே அறிந்து கொண்ட பதற்றத்தில் மடிக்கப்படாத ஆடைகளை அவசர அவசரமாக அலமாரிக்குள் நுழைக்கின்றேன் மும்முரமாக நடைபெற்ற வாக்குவாதங்களைத் தற்காலிகமாய் ஒத்தி வைக்கின்றேன் பார்த்ததும் தெரிந்துவிடும் சுவரின் சிதிலங்களை என்னென்னவோ செய்து சரிசெய்கின்றேன் பண்டங்களின் கையிருப்பைக் கணக்கிடுகின்றேன் எவ்வளவு எடைவரைத் தாங்குமென்று எல்லா இருக்கைகளிலும் அமர்ந்து பரிசோதிக்கின்றேன் மேலும் நான் என்பது இதுதான், இவ்வளவுதான் என வரையறுக்கும் பொருட்களையெல்லாம் தேடித்தேடி மறைத்து வைக்கின்றேன் பத்துநிமிடத்தில் முடிந்தவரை பழுது பார்க்கப்பட்ட வீட்டில் எல்லாம் தயார் நிலையிலிருக்க நேர்த்தியானவை அனைத்தும் இயல்பானதா என அறியேன் ஆனால் இயல்பாகவே என்வீடு இதைவிட நேர்த்தியானது என வந்திருந்த நண்பரிடம் காட்டிக் கொண்டிருந்தேன்.
ஒரு இசை நாற்காலியைச் சுற்றிவரும் அந்தக் காதுகேளாத நபர்தான் இன்று புதிதாகக் கண்டறியப்பட்ட துணைக்கோள் விரும்பிய இடத்தில் மூச்சை நிறுத்தி, மீண்டும் விரும்பிய இடத்திலிருந்து சுவாசிக்கத் துவங்கும் பாடல்கள் யாவும் யாரைத் தக்கவைப்பது யாரைச் சீக்கிரம் தீர்ந்துபோகச் செய்வதென்பதில் பாரபட்சம் எதையும் காட்டுவதில்லை ஆனால் தனிப்பட்ட முறையில் இந்தப் பாடல்களுக்கு எப்போதும் சில பொறுப்புகளுண்டு நடுவானில் தோல்வியுற்ற எனது எத்தனையோ தினங்களைப் பலமுறை பத்திரமானத் தரையிறக்கியதுண்டு தனிமையைத் தியானிக்கச் செய்யும் ஒலிகேட்பிகளால் என் செவிகளுக்கும் பார்வை உண்டென நிரூபித்ததுண்டு இருக்கையைத் தேடித்தேடி அமர்வதும் பிறகு போதுமென்று எழுவதுமாய் ஆட்களோ மாறிக்கொண்டே இருக்கின்றனர் நாற்காலியும் ஆசைக்குச் சற்றுநேரம் ஆறுகால்களில் அமர்ந்து பார்க்கிறது.
பூரணமாய்க் குணமடைந்தேன் என்பது நான் காத்திருந்து காத்திருந்து எய்திய நிம்மதியின் பெருமூச்சு மெதுமெதுவாய் பயணப்பட்டு அடைந்த நிறைவின் பொற்கணம் அப்படியொரு கணத்தில்தான் தேன்கூட்டை நோக்கி எறியும் சிறுகல்லும் உடனுக்குடன் சாபம் நீங்கித் திரும்ப வருகிறது தேனீக்களாய்.
இவ்வுடை எனக்குப் பொருத்தமற்றது இதுவென் உடலோடு ஒட்டிக்கொள்கிறது எவற்றையெல்லாம் நான் எப்பொழுதும் மறைக்க முற்படுகிறேனோ உடலின் அந்த வளைவுகளை இவ்வுடை அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகிறது எனது பரந்த தோள்களால் அந்தப் பிங்க் நிற சரிகைக் கழுத்துப் பட்டையின் பாரத்தைச் சுமக்க முடியாது இவ்வுடை எனக்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது ஏனெனில் இதுவொரு பெண்ணின் உடை மேலும் “பெண்” எனக்குப் பொருந்தாது “ஆண்”- ம் கூடத்தான் எனது பிறழ்வுற்ற, உடைந்த, வித்தியாசமான வெறிகொண்ட இந்த உடலுக்கு எதுவும் பொருத்தமானதாக் தெரியவில்லை வினோதமான முரண் என்னவெனில் அவர்கள், அவர்களுடைய, அவர்களுக்கு... போன்ற சொற்கள் இலக்கணப் பிழையானவை என வாதிடும் எவரொருவருக்கும் ze, zir, Ze’s ... போன்றவை குறித்து எந்த அக்கறையுமில்லை உண்மையில் என்னைக் குறிப்பதற்கான எந்த மாற்றுப் பெயர்ச் சொல்லும் என் மொழியில் இல்லை நீ கேள் எனது பாலினம் என்னவென்று ஆண் அல்லது பெண் ... ? நான் இரண்டுமல்ல மேலும் உங்கள் அடையாளக்கூடுகள் மேலும் உங்கள் முத்திரைக் குத்தல்கள் எதுவும் என்னைத் தடைசெய்ய இயலாது நான் நேர்மையுடன் ஒப்புக்கொள்கிறேன் எனது பாலினம் எதுவொன்றுமில்லை அதுவும் இதுவுமல்லாத சார்புநிலையற்ற இன்மையே அது.
ze, zir, Ze’s ...: அவன், அவள், அவர் - க்கு மாற்றாகப் பால்புதுமையினரைச் சுட்டும் விளிச்சொற்கள்
வெகுகாலம் முன்பே வீசியெறியப்பட்டு அழுகத் தொடங்கிய - ஓர் கழிவுப் பொதி நான் எனது விலைமதிப்பற்ற வண்ணங்கள் யாவுமே ஒளியிழந்து மங்கிப்போயின தோலின் மேற்புறமெங்கிலும் கீறல்கள் மேலும் வளைவுகள் சுருங்கிப் பள்ளங்களாகி விட்டன நாம் மறைந்துபோகும் அந்நிகழ்வினை எவரொருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை கவனிப்பதுமில்லை இப்படித்தான் ஓர் வழிப்போக்கனால் அலட்சியமாகக் கசக்கிக் குப்பைத்தொட்டியில் திணிக்கப்படக் காத்திருக்கும் கழிவுப் பொதியாக நாம் மாறிப்போனோம் இவ்வாறுதான் - இங்கு நாமனைவரும் செத்துப்போகவிருக்கிறோம்.
எனது எலும்புகள் சொன்னது போகட்டும் விட்டுவிடு ஆனால் என் விரல்கள் சுருண்டு மூர்க்கமான உறுதியுடன் பற்றிக்கொண்டன மேலும் எனது எலும்புகள் சொன்னது நீ ஆற்றல் வாய்ந்தவள்/ன் ஆனால் என்னுடல் பலவீனம் அடைந்திருந்தது எனது எலும்புகள் சொன்னது நாளையைக் குறித்துக் கவலை கொள்ளாதே எல்லாம் சரியாகிவிடும் எனது எலும்புகள் சொன்னது எம்மை விடுதலை செய்யுமாறு ஆனால் இந்தத் துருவேறிய பொறிகள் எம்மைப் போகவிடாது.
உனக்கென்ன வேண்டும் சொல் நீ விரும்பியவண்ணம் என்னை அழைத்துக் கொள் நான் மாற மாட்டேன் நீ என்ன சொன்னாலும் கவலையில்லை நீ சொல்வதை நான் பொருட்படுத்த மாட்டேன் அவர்கள் சொல்வதையும் மூடத்தனமான அந்த நூலின் எழுத்துகளையும் பொய்ப் பரப்புரைகளையும் நீ அவ்வாறு காண்பாயெனில் நான் இச்சைகள் நிறைவேறா ஏமாற்றத்திற்கு உள்ளான ஓர் நபராகயிருப்பேன் நீ அவ்வாறு நம்புவாயெனில் நானொரு சாத்தானின் அடியாராக இருப்பேன் ஆனால் இப்பொழுது அது முக்கியமல்ல நீ அந்தப் பொய்களைப் பரப்புரை செய்தவாறு இரு போலிக் கடவுளரை நம்பியவாறு இரு நீ என்ன செய்தாலும் உனக்காக நான் மாற மாட்டேன்.
ஒரு முறை படகோட்டியொருவர் படகில் ஆன்மாக்களைச் சுமந்தவாறு ஆற்றைக் கடந்து செல்வதை நான் கண்டேன் அவரது முகத்தில் பிணக்களை வடிந்தது அவர் குரலில் கொடுங்காற்றின் ஓலம் அவரது கண்கள் புராதனத்தில் மூழ்கியிருந்தன அந்தப் படகோட்டியை நானொருமுறை சந்தித்தபொழுதில் அவர் என் அம்மாவைப் பற்றி என்னிடம் சொன்னார் அம்மாவின் மனவுறுதி; மகிழ்ச்சி மரணத்திற்குப் பின் மறுமையில் அவரது இருப்பு... என அம்மா இறந்த அந்நாளில் நாங்கள் சேர்ந்தே எங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டோம் ஓர் உறுதியான விடைபெறலினூடாக அவர் தன் வழியில் செல்வதற்கு முன்பு கடவுளர் வெளியேறிய அந்நாளில் அலைகளுக்குக் கீழே வீழ்ந்து மறைந்திடும் முன்பு ஓர் புன்னகையை வீசிச் சென்ற அந்தப் படகோட்டியை நான் நினைவு கூர்கிறேன்.
நான் முகமூடியை உற்று நோக்குகிறேன் அது என் கைகளில் வசதியாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை ஆனால் எந்த நிலையிலும் அதை வைத்திருப்பேன் நான் இந்த முகமூடியை அணிய விரும்பவில்லை அல்லது உண்மையில் எந்த முகமூடியையும் ஆனால் முகமூடியின்றி அவர்கள் என்னைப் பார்த்தால் என்ன நினைப்பார்களோ என அச்சப்படுகிறேன் என்னை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்னை அவர்கள் வெறுப்பார்களா? நான் அந்நிகழ்வினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்னிடம் வேறு முகமூடிகளும் உள்ளன அவற்றில் சில மற்றவைகளைக் காட்டிலும் மிக வசதியானவை ஆனால் நான் அவற்றை அணிய விரும்பவில்லை எனக்கு எந்த முகமூடியும் வேண்டாம் நானல்லாத ஏதோவொன்றின் பின்னே நான் ஏன் மறைந்துகொள்ள வேண்டும்? மற்றவர்களின் எண்ணங்கருதி நான் ஏன் மறைந்திட வேண்டும்? நான் எனது முகமூடியைக் கழற்றி வீச விழைகிறேன் ஆனால் என்னால் தானாக அதனைச் செய்ய முடியவில்லை ஒருவேளை அதற்குச் சரியான தருணம் இதுவல்லவோ ஆனால் அத்தருணம் என்றேனும் வருமா?
எனது கனத்த மார்பும் ஓசையில் அதிரும் குரலும் என்னுடலோடு பொருந்தாததால் நான் என்றும் நானாகவே இருந்ததில்லை நான் “அவன்” ஆகவே இருக்க விழைகிறேன் நான் நானாகவே இருக்க விழைகிறேன் நான் “அந்த வித்தியாசமான எதிர்பால் அடையாளமுள்ள திருநங்கையாக” இருக்க மாட்டேன் நான் ஓர் அவள் ஆக இருக்கவே மாட்டேன் ஓர் நாளில் உங்கள் பார்வைக்கு முன்னே நான் யாராக இருக்க விரும்புகிறேனோ அவ்வாறே இருப்பேன் தட்டையான மார்பும் ஆழமான குரலும் எனது உடலோடு பொருந்திட இறுதியாக நான் நானாகவே இருப்பேன் நான் “எதிர்பால் அடையாளமுள்ள திருநர்” ஆக இருக்கமாட்டேன் எனக்கு ஓர் பால்புதுமை அடையாளம்கூடத் தேவையில்லை நான் அவனாக மட்டுமே இருப்பேன் நான் நானாகவே இருப்பேன்.
All poetry. com இணையத் தளத்திலிருந்து...
இருள் கவியாத சிரிப்பைப் பார்க்கும்போது மருதாணி அப்பிய கைகள் ஒரு விளக்கை ஏந்தி வருவது போலத் தெரிகிறது எனக்கு அப்படியில்லை நானே தான் என் புன்னகையைத் தனியாக வடம்பிடித்து இழுத்து வரவேண்டும் முன்னேயும் பின்னேயும் நூறு ஓநாய்களின் இரைச்சலுக்கு நடுவே ஒரு பலியாடு நடந்து வருவது போல இருக்கும் அந்தக் காட்சி எப்போது வேண்டுமானாலும் ஒரு புளித்துப்போன கரைசலாக அது திரிந்துவிடக் கூடும் ஒரு இருள் கவியாத சிரிப்பு இவ்வளவு நாள் பூசிமெழுகிய அனைத்தும் மட்டமான பூச்சுகளெனக் காட்டிக் கொடுத்துவிடுகிறது எத்தனை பேரின் ஒத்துழைப்பால் நடக்கிறது பற்களிடையே கிளம்பும் ஒரு பிரகாசம் அது வான்நோக்கி எழும்பும்போது நானதன் கூரிய அலகுகளையும் கண்களையும் மட்டுமே நேருக்கு நேராகப் பார்ப்பேன்.
யாரையாவது தேர்ந்தெடுக்க விரும்பினால் என்னை விட்டுவிடுங்கள் யாரையாவது மன்னிக்க விரும்பினால் அதிலும் என்னைத் தவிர்த்து விடுங்கள் தேர்ந்தெடுக்கும்போது உண்மையை மறைக்க வேண்டியதாகிறது மன்னிக்கும்போது உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது கண்ணாடிச் சட்டங்களுக்குள் திகைக்கும் எறும்பு போல இரண்டுமே அதன் தூரங்களால் குழப்பப்படுகிறது நான் யாரையாவது தேர்ந்தெடுத்தால் எதுவும் பேசாமல் அவர்களுடன் பலிபீடத்தை நோக்கி நடப்பேன் யாரையாவது மன்னிக்க விரும்பினால் எவ்வளவு மயக்கத்திலிருந்தாலும் அவர்களின் பெயரை ஒருமுறை சரியாகக் கேட்டு உறுதிபடுத்திக்கொள்வேன் மற்றபடி யாரைப் பற்றி யாரிடமும் தனியாகக் குறைசொல்ல மாட்டேன்.
சந்தேகங்களுக்கும் யூகங்களுக்கும் வழிகொடுக்காமல் ஒரு உறவைத் தெளிவான காரணங்களுடன் முடித்து வைக்கும்போது அவரவரின் பாதையில் குழப்பமில்லாமல் பயணிக்க பெரிய உதவியாக இருக்கிறது அப்படிப் பிரிந்தவர்களில் எனக்குப் பழக்கமான பெண் ஒருத்தி நகைக்கடை முதலாளியின் மருமகளாகிக் கரு தரித்திருக்கிறாள் சம்பந்தப்பட்ட பையன் போக்குவரத்து சிக்னலில் உரிமம் புதுப்பிக்கப்படாத தனது வாகனத்திற்கு ஃபைன் கட்டிக்கொண்டிருக்கிறான் சில நொடிகளில் இந்தச் சிவப்பு விளக்கு மாறிவிடும் அருகிலிருப்பவர் பின்னால் நிற்பவர் வியர்வை பெருக ஒருவரையொருவர் நெருக்கிக்கொண்டிருக்கும் பயணிகள் எல்லோருமேதான் காத்திருக்கிறோம் அதற்காக.
வெளியே மேகங்கள் திரண்டு இருட்டி நிற்கிறது ஆகாயம் நிரந்தரமாக ஆழத்தில் புதைக்க நினைத்த ஒரு கதவு தானே திறந்து மீண்டும் அழைக்கிறது இந்த மாலையின் நிறம் இனி ஒரேயொரு சூரியனால் பூமியை வெளிச்சப்படுத்த முடியாதென்பது போலக் கிளம்பி வருகிறது நீண்ட நாள் லட்சியம் பூண்டிருந்த வேடனின் அம்பு என் சிறகுகளைத் துளைத்திருக்கிறது இந்த முறையும் வானத்தை நகங்களுக்கு மிக அருகே இருந்து வேறொருவரிடம் தவற விடுகிறேன் அதற்கான இடைவெளியில் வாஸ்தவமாக மீண்டும் ஒரு அங்குலத்தைக் குறைத்திருக்கிறேன் அவ்வளவுதான்.
யாரை என் மீட்பராகக் கருதுகிறேனோ அவர்கள் என்னை எப்போதும் வேட்டையாடுவதற்குச் சிரமமில்லாத ஒரு இரையாகப் பார்க்கிறார்கள் யாரை அன்புக்குரியவர்களாக மதிக்கிறேனோ அவர்கள் இன்னும் குணமாகாத என் காயங்களின் மறைவிடத்தை வித்தியாசமின்றி எல்லோருக்கும் காட்டிக் கொடுக்கிறார்கள் யாராலும் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதென மந்தகாசத்துடன் புன்னகைப்பவர்கள் திடீரென நீண்ட காலத்திற்கு எந்தத் தகவலுமில்லாமல் அமைதியாகி விடுகிறார்கள் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் புன்னகையும் பழகிவிடுகிறது குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எல்லா நிழலும் பெரிய கருஞ்சுவராக எழும்பி நிற்கிறது ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்கும் போது ஒரு துளி விழுகிறது இவ்வளவுக்குப் பிறகும் எதற்காக... இத்தனைக்கு நடுவிலும் எதற்காக...
வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டே ஒவ்வொரு வெற்றிலையாக நீவிச் சுண்ணாம்பு தடவுகிறாள் இலையின் நரம்புகள் எழுந்து திரை நெய்ய அந்தத் திரையில் எழுந்து விழுந்து நின்று பெருவனப்புடன் ஆடுகிறது அவளது காலநாகம்.
ஒரு பேருந்துள் இருக்கிறேன் அடையாளம் தெரியாத புன்னகைகள் எனக்கொரு முகமிருப்பதை அறிவிக்கின்றன இறங்க வேண்டிய இடம் எதுவெனக் கேட்கிறார் பக்கத்திலிருப்பவர் இறங்குமிடங்கள் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன ஜன்னல் வழி கடக்கும் மரங்கள் பேருந்துகளை எண்ணும் பிள்ளைகளாகின்றன அடுத்த நிறுத்தத்தில் பழகிய வாசனை பேருந்தை நிறைக்கிறது நான் இறங்குவதற்குத் தயாராகிறேன்.
இந்த முத்தத்தைப் பகடையாய் வீசித்தான் ஏணியின் மேலேறினாய் நானும் அதே முத்தத்தைக் கொண்டுதான் உன் கால் நரம்பை வெட்டினேன் நம் சிறகுகளின் கனத்தை உதற இயலாது போனதும் அதன் இரத்தப் பிசுபிசுப்பால்தான் காம்பின் ஈரப்பசையில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த நாள் அவ்வளவாக நினைவில் இல்லை அந்த ஒற்றை இலைக்காகத்தான் அவ்வளவு ஆழம் போயின நம் வேர்கள் இரு கழுத்திலும் பூட்டப்பட்ட ஒற்றை நிமிடத்தைச் சுமந்துகொண்டு எண்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறது அந்த முத்தத்தின் கூர்வாள் வெட்டுப்பட்டு விழுந்துகொண்டிருக்கின்றன எச்சில் தழும்புகள்.
பாவமன்னிப்பு நாற்காலியின் அருகே முழந்தாளிட்டிருக்கிறேன் கண்ணீர் பெருகி உருக ஒப்பித்துக் கொண்டிருக்கிறேன் நாற்காலியின் மௌனத்தின் மீது என்னைப் பதித்தபடி நடக்கிறேன் சிலுவையைத் துடைத்துக்கொண்டிருப்பவன் ஆணி அறையப்பட்ட இடத்தில் துடைத்துவிட்டுத் துணியை எடுத்துப் பார்த்துக் கொள்கிறான் அருமையான ஓவியம் என்கிறான் ஒவ்வொன்றாக உதிர்த்து உதிர்த்து எடை குறைந்து கொண்டே வருகையில் யாருமற்ற நாற்காலியில் மேக்தலீனின் கைத்துணி வந்து விழுகிறது மடிநிறையக் கற்களை அள்ளிக்கொண்டு இட்டு நிரப்பத் தோதான சாக்குப் பையாக ஒரு வாசம் தேடி வெளியேறுகிறேன் இப்போதைக்கு கண்ணீரின் சுவடின்றி என் முகம் பளபளவென்றிருக்கிறது.
பசி என்பது அறிகுறி மட்டுமல்ல அது எங்கள் சமூகத்தின் சாரம். அதுவே எங்களது தனித்துவம். வேதனைக்குரியது என்னவென்றால் அது உணரப்படக்கூடியது ஆயினும் புரிந்து கொள்ளமுடியாதது” என்று கூறும் ரோச்சா தனது முக்கியப் படங்களான ப்ளாக் காட், வைட் டெவில் (1964), என்ட்ரான்ஸ்ட் எர்த் (1967), மற்றும் அன்டோனியோ டாஸ் மோர்டஸ் (1969) மூலமாக லத்தீன் அமெரிக்க புதிய சினிமாவின் குறியீடாக உள்ளார். ஒரு இயக்கமாக அது பல சிந்தனையாளர்களையும் இயக்குனர்களையும் இன்றளவும் பேசப்படும் பல முக்கிய படங்களை உள்ளடக்கியபோதிலும். உதாரணத்திற்கு, லத்தீன் அமெரிக்கப் புது சினிமாவின் முதுகெலும்பாக ரோச்சாவிற்கு நிகரான புகழ்பெற்ற நெல்சன் டாஸ் பெரீராவின் படங்கள். பெரீராவின் நீண்ட பயணமும் கருத்தில் கொள்ளத்தக்கது. பல சினிமா இயக்கங்களைப்போல லத்தீன் அமெரிக்கப் புதுசினிமாவும் ஒரு நீண்ட வரலாற்றை உள்ளடக்கியது. பல புத்தகங்கள் லத்தீன் அமெரிக்கச் சினிமாவின் வரலாற்றைப் பற்றியும், குறிப்பாக நுவோ சினிமா எனப்படுகிற அதன் புதிய சினிமா இயக்கத்தைப்பற்றியும் வந்துள்ளன. உலகின் முக்கியச் சினிமா அலைகளைப்போல அதன் மையத்திலிருந்த இயக்குனர்களே அதன் கொள்கையறிக்கைகளை வெளியிட்டார்கள். அவ்வறிக்கைகளில் தலையாயது ரோச்சாவின் பசியின் அழகியல் என்று சொல்லலாம். 1965ல் ரோச்சா அவ்வறிவிப்பை வெளியிட்ட தருணத்திலிருந்து இன்று வரை அதன் தாக்கம் குறையவில்லை என்றும் சொல்லலாம். ஆய்வாளர்கள் மட்டுமல்ல விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும்கூட! லத்தீன் அமெரிக்கச் சினிமா என்றால் இன்றளவிலும் இளைஞர்கள் அரசியல் சார்ந்த படங்களைத் திரைப் படவிழாக்களில் என்னென்ன என்று கண்டடைந்து அதை ரசிப்பதிலும் அதைப்பற்றி அலசி எழுதுவதிலும் ஆர்வம் காட்டுகிறாரகள். பிரேசிலைச் சார்ந்த வால்டர் சாலஸ் அவரது சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் மோட்டர் சைக்கிள் டயரீஸ் மூலம் உலகலாவிய புகழ் பெற்றவர். இரண்டு பில்லியன் டாலர்களுக்கு அதிபதியான சாலஸ் வசதியான குடும்பப் பின்னணியிலிருந்து வருபவர். அந்த வகையில் அவர் ரோச்சாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அழகியலிலும் கூட. ஆயினும் இன்று அவரது புகழின் அடித்தளம் அவரது படங்கள் ரோச்சா அன்று லத்தீன் அமெரிக்கச் சினிமாவின் ஊற்றாகக் கருதிய பசியிலிருந்து உருவாக்கம் கொள்வதினால்தான்.
உதாரணத்திற்கு, சினிமாவின் நூறாவது ஆண்டை முன்னிறுத்தி இன்றைய முக்கிய இந்திய இயக்குநர்களான மீரா நாயர் மற்றும் குரிந்தர் சத்தா போன்றவர்களின் குறும்படங்களை உள்ளடக்கிய பாரிஸ் ஜெதைமி (Paris, je t’aime) என்ற “18 குறும்படங்களை உள்ளடக்கிய தொகுப்பு 2006ல் வெளியாகியது. அந்தத் தொகுப்பின் ஐந்தாவது படமாகிய லுவான் து 16இ (Loin du 16e) வால்டர் சாலஸும் டேனியலா தாமஸும் இணைந்து இயக்கியது. 16இ எனும் தான் வாழும் மாவட்டதிலிருந்து வெகுதொலைவில் என்று பெயரைக் கொண்ட அக்குறும்படம் புலம்பெயர்ந்து தனது குழந்தையுடன் தனியே வாழும் ஒரு இளம் தாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. சினிமாவின் வரலாறு 1895ல் பாரிஸில் லூமியர் சகோதரர்களின் படங்களுடன் தொடங்கியதாக வகுத்துக் கொண்டு 1995ல் கொண்டாடப்பட்ட சினிமாவின் நூறாவது ஆண்டையொற்றி பாரிஸ் நகரத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அத்தொகுப்பில் உள்ள படங்கள் அமைந்திருந்தன. காதலின் தலை நகரமாகப் பாரிஸை அன்றைய பாரிஸ் ஐ லவ் யுவிலிருந்து இன்றைய மிட்நைட் இன் பாரிஸ் வரை ஹாலிவுட் கொண்டாடி வருகிறது. ஆயினும் அத்தகைய ஒரு புனித பிம்பத்தைக் கோயன் சகோதரர்கள் அத்தொகுப்பிலுள்ள தங்கள் குறும்படத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அமெரிக்காவிலிருந்து பாரிசுக்கு வரும் பயணி ஒருவருக்குப் பாரிஸின் மெட்ரோ ஸ்டேஷன் ஒன்றில் ஏற்படும் வன்முறை நிறைந்த வரவேற்பை தங்களுக்கேயுரிய அபத்த நகைச்சுவை மூலம் சொல்லிச் செல்கிறார்கள். ழான் ழுக் கோதாரின் ஹாலிவுட்டுடன் அவருக்கிருக்கும் காதலும் வெறுப்பும் சார்ந்த உறவை ப்ரெத்லெஸ்ஸில் நாம் கண்டிருக்கிறோம். அதற்குத் தங்கள் எதிர்வினையை, பிரஞ்சு நாட்டினருக்கும் அவர்கள் பண்பாட்டிற்கும் தங்களுடைய காதல் கடிதத்தை, இருளில் தோய்ந்த ஹாசியத்தின் மையைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள் கோயன் சகோதரர்கள்.
வால்டர் சாலஸ் டேனியலா தாமசுடன் இணைந்து பாரிசுக்கான தனது கடிதத்தை வேறொரு மையைக் கொண்டு எழுதுகிறார். அவரது படங்களைப் பார்த்தவர்களுக்கு அது பரிச்சயமான மைதான். அவர் லத்தீன் அமெரிக்கா சார்ந்த தனது ஆதங்கத்தை முன் வைக்கிறார். டேனியலாவின் பங்களிப்பையும் முழுவதுமாக நாம் உணரமுடிகிறது. பாரிஸில் தனியே தனது குழந்தையுடன் வாழும் தாயின் ஒரு நாள் வாழ்வைச் சொல்லும் சினிமாவில் நமக்குப் பழக்கப் பட்ட கதைசொல்லல் முறையில் படம் ஆரம்பிக்கிறது. தனது கட்டிலுக்குப் பக்கத்திலுள்ள அலாரத்தின் ஒலியுடன் எந்திருக்கும் இளம் தாய் தனது கைக்குழந்தையுடன் வேகமாக டேகேர் என்கிற குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குச் செல்கிறாள். அந்த காப்பில்லத்திலுள்ள அடுக்கப்பட்ட தொட்டிலொன்றில் தனது குழந்தையைப் படுக்கவைத்து விட்டு சிறிது கொஞ்சியபின் விலகிச் செல்லும்போது குழந்தை அழுகிறது. திரும்பி வந்து குழந்தையை ஆசுவாசப்படுத்தித் தூங்கவைக்கத் தாலாட்டு ஒன்றினைப் பாடுகிறாள். இறுதியில் தனது அவசரத்தில் சிணுங்கும் குழந்தையைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்கிறாள். அவளது நடையில் அவளது காலதாமதம் சார்ந்த பதட்டம் தெரிகிறது. அவளது இலக்கோ மிகவும் தொலைவிலுள்ளதாக எட்டிச் சென்றுக்கொண்டேயிருக்கிறது. இடம் மாறி இரண்டு ட்ரெயின்களைப் பிடித்து ரயில்நிலையத்திலுள்ள இயந்திர நடைபாதையில் துரிதகதியில் நடந்து வாகனங்களின் நெரிசல் மிக்கத் தெருவைக் கடந்துதான் வேலைசெய்யும் பலமாடிக் கட்டடத்தை அடைகிறாள்.
கீழேயுள்ள அழைப்பானை அழுத்தி மேல்மாடி யிலுள்ள தனது எஜமானி அனுமதியளித்ததுடன் விரைவாக உள்ளே சென்று தனது கோட்டை கழட்டி வைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே இருக்கும் எஜமானியின் குரல் மட்டும் ஒலிக்கிறது. அவளது செருக்கு நிறைந்த குரலில் பதிலை எதிர்பார்க்காத ஆணவத்தில் தனக்கு இன்று வேலையில் தாமதமாகி இருப்பதால் நேரம் தாழ்த்தி திரும்புவதில் ஒன்றும் பிரச்சினையில்லையே என்கிறாள் நமக்குக் கண்ணில் தெரியாத அந்த எஜமானி. பதிலேதும் அளிக்க முடியாத தனது குழந்தையிடம் நேரத்தே மீள வேண்டிய திருப்பதைச் சொல்ல முடியாத அவ்விளம் தாய் அமைதியாக ஆம் என்கிறாள். தடாலென்று கதவைச் சாத்திவிட்டுச் செல்லும் எஜமானியின் அதிகார ஒலி மட்டும் கேட்கிறது. தனது கோட்டை கழற்றிவிட்டு அதற்கான தாங்கியில் மாட்டிவிட்டு சற்றே இளைப்பாற மூச்சைவாங்கும் அவ்விளம்தாயை தூரத்து அறையிலிருந்து எழும் குழந்தையில் அழுகுரல் அழைக்கிறது. அது தனது தலைமுடியைக் கொண்டைபோல் கட்டி விறுவிறுவென்று குரல் வந்த திசை நோக்கி செல்ல வைக்கிறது. தொட்டிலிலிருக்கும் குழந்தைக்குத் தாலாட்டைப் பாடி ஆசுவாசமளிக்கும் அத்தாய் அதன் புன்சிரிப்பைக் கண்டபின் ஒரு கணப்பொழுது தனது குழந்தையின் ஞாபகம் வந்தவளாய் வெளியே பார்க்கத் தலையைத் திருப்புகிறாள். பிரஞ்சு ஜன்னல் எனப்படுகிற அந்த முழு நீள ஜன்னல் அங்கே இருக்கிறது. அடைத்திருக்கும் அந்த ஜன்னல் வழியே வெளியேயிருக்கும் பலமாடிக்கட்டங்கள் தெரிகின்றன. வெளியே இருக்கும் வசதியான பாரிசுக்கும் உள்ளே இருக்கும் அவளது குழந்தையின் இடமான 16வது மாவட்டமும் மிகத் தொலைவிலேயே உள்ளன.
இங்குப் பசியென்பது அக்குழந்தையின் பசி மட்டுமல்ல அந்தத் தாயின் பசியையும் சொல்கிறது. ஆம். அவள் குடும்பத்தின் பசியைத் தணிக்க நாடு கடந்து வந்து (தனது கணவனிடமிருந்து கூடப் பிரிந்து) தனியே வாழ்கிறாள். ஒரு நல்ல எதிர்காலத்திற்கான பசி அவளிடம் இருக்கிறது. அதற்காக அவள் கொடுக்கும் விலை என்பது அவளது குழந்தையின் பசியைத் தீர்க்கவல்லதாக இல்லை. அவளது மேல் மட்ட எஜமானியின் குழந்தைக்குக் கிடைக்கும் பராமரிப்பு அவளது குழந்தைக்கு நிராகரிக்கப்படுகிறது. அன்னையின் அரவணைப்பு என்கிற அளவில். காலையில் அவளது குழந்தையுடன் தொடங்கிய தாலாட்டு படத்தின் முடிவில் எஜமானியின் குழந்தையுடன் முடிகிறது. ஒரே தாலாட்டு படத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் இணைத்து ஒரு வட்டவடிவ நேர்த்தியை படத்திற்கு அளிக்கிறது. வால்டர் சாலஸ் கோயன் சகோதரர்கள் போலவே பாரிசின் மேல் தனது விமர்சனத்தை வைக்கிறார். அது ழான் விகோ, ரேனுவா, கோதார், மற்றும் த்ரூபோவைக்கொண்ட நாடு மட்டுமல்ல அது லத்தீன் அமெரிக்கப் புலம்பெயர் தொழிலாளர்களின் வியர்வையில் தனது நாட்டின் மேல் மக்களின் வசதிகளைப் பாதுகாக்கும் நாடு. வால்டர் சாலஸ் மற்றும் டேனியலா தாமஸின் மென்மையான படத்தின் ஆழத்திலுள்ள அன்னையின் தாலாட்டில் மறைந்திருக்கும் குழந்தையைப் பற்றிய கனவுகளும் ஏக்கங்களும் உள்ளடங்கிய பெரும் தனிமையில் தோய்ந்த சோகத்தை நமக்குச் சொல்லும் விதம் தனித்துவம் நிறைந்தது. வால்டர் சாலஸ் மற்றும் டேனியலா தாமஸின் லத்தீன் அமெரிக்க மக்களின் புலம்பெயர் வாழ்வின் தணியாத சோகங்களுக்குள் மறைந்திருக்கும் தீராத பசியின் ஊற்று ரோச்சாவின் மனஅடுக்களையில் அவர் கஞ்சிக்காக இட்ட தீயின் அணையாத கங்கை தனது தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. ஆயினும் 41 வருடங்களுக்கு முன் ரோச்சா தனது லத்தீன் அமெரிக்க ஆன்ம ஒளியினால் செதுக்கிய அரசியலோவியமான பசியின் அழகியலிலிருந்து இப்படம் மாறுபட்டதே காலத்தினால் அரசியல் நிலைப்பாடுகள் மாறியபோதிலும் அன்று அறுபதுகளில் ரோச்சா நிராகரித்த முதல் நாடென அவர் வகுத்த வட அமெரிக்கச் சினிமா மட்டுமல்ல அவர் நிராகரித்த இரண்டாம் நாடான ஐரோப்பிய பிரஞ்சு சினிமாவின் அழகியலும் அவருக்கு உகந்த தல்ல. அந்த வகையிலே சாலஸ் மற்றும் தாமஸின் அழகியல் அவருக்கு ஏற்புடையதாக இருந்திருக்காது. ஆயினும் அவர்களது அரசியல் அவருக்கு நிறைவு அளித்திருக்கலாம்.
அமெரிக்கச் சினிமா அழகியலை அதன் அரசியல் அற்ற காரணகாரிய உத்திகளைக் கொண்ட தையல் தெரியாமல் கதையாடலை பிம்பங்களினாலும் ஒலி யினாலும் இணைத்துக் கொண்டு போகும் அழகியலை நிராகரித்த ரோச்சா இரண்டாம் நாடுகளான மேற்கு ஐரோப்பிய சினிமாவின் ஆசிரியத்துவத்தை முன் நிறுத்தும் பாங்கையும் விமர்சித்தார். அவரது பசியின் அழகியலை மையமாகக் கொண்ட சினிமாவில் ஆசிரியத்துவம் என்பது மக்களையும் அவர்களது பிரச் சினைகளையும் முன்னிறுத்திவதிலிருந்து எழுவது. அது லத்தீன் அமெரிக்கப் பண்பாடு சார்ந்தது. அதில் ஹாலிவுட்டின் அட்டகாசத்திற்கோ இத்தாலிய நியோ ரியலிசம் சார்ந்த யதார்த்த அழகியலுக்கோ இடமில்லை. போலவே, பிரஞ்சு சினிமாவின் அழகி யலில் லயிக்கும் மற்றும் வாழ்விலிருந்து விலகிய இன்பத்தோய்வுக்கும் அதில் இடமில்லை. அவரது அழகிலை அறியும் விதமாக அவரது முக்கியப் படமான ப்ளாக் காட் வைட் டெவில் படத்தைப் பற்றிக் கதைப்போம்.
1963ல் தனது 24வது வயதில் க்ளாபர் ரோச்சா எடுத்த படம் கருப்பு சாமி வெள்ளை அரக்கன் (Black God White Devil). அதன் கதையாடல் மேய்ப்பன் மானுவலையும் அவனது மனைவியான ரோஸாவும் சுற்றிப் புனையப்பட்டிருக்கிறது. தனது எஜமானனான நிலக்கிழாரை அவன் கொன்றவுடன் அவனும் அவனது மனைவியும் அவர்கள் கிராமத்திலிருந்து ஓடி தன்னைச் சுயம்புவான புனிதராக அறிவித்து அங்கு வலம்வரும் செபஸ்டியாவோவிடம் தஞ்சம் அடைந்து அவரைப் பின்தொடர்கிறார்கள். அவரது மதம் என்பது அவர் கனவு காணும் ஒரு கற்பனை யுலகம். அதை அடைய புதிர்கள் நிறைந்த வன்முறை அவருக்குத் தவிர்க்க முடியாதது. செபாஸ் டியாவோவை அடக்கக் கத்தோலிக்க சபையும் அரசும் அண்டோனியோ டாஸ் மோர்டெஸ் எனும் கூலிப்படையாக புகழ் வாய்ந்தவரை அனுப்பு கிறார்கள். இங்கு இன்னொரு கோணம் உருவா கிறது. அது என்னவென்றால் டாஸ் மோர்டெஸை எதிர்க்க புரட்சியாளனான அங்குள்ள கொள்ளையன் கோர்ஸிகோ கிளம்புகிறான். அவனது குறிக்கோள் செபாஸ்டியாவோவின் புனித யாத்திரையைத் தடுக்க நினைக்கும் டாஸ் மோர் டெஸுக்கு எதிராகச் செயல்படுவது. இத்தகைய சில இடங்களில் அமெரிக்க வெஸ்டர்ன்ஸை நினைவு உறுத்தும் கதையாடலை தனக்கேயுரிய விதத்தில் அதீத கற்பனைகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் தனது அரசியல் சார்ந்த அரசின் ஊழலுக்கும் அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக் கும் குரல் கொடுக்கும் விதத்தில் ரோச்சா வடித் தெடுக்கிறார்.
சென்ஸெஸ் ஆப் சினிமாவில் எழுதும் பீடர் ஹென்னெ ப்ளாக் காட் வைட் டெவிலுள்ள கதை யாடல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி அதன் இரண்டு பிரிவுகளை ஆழமாக அலசியுள்ளார். அவரது பார்வையில் முதல் பகுதி வேகமாகச் செல்கிறது. இரண்டாவது பகுதி மெதுவாக லாங் டேக் அல்லது லாங் டுரேஷன் ஷாட் என்று சொல்லப்படக்கூடிய கால அளவில் கிட்டத்தட்ட 40 விநாடிகள் கொண்ட சராசரி ஷாட்டுகளைக் கொண்டுள்ளது. இங்கு இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். அவர் சொல்லியிருப்பது போலவே பின்பகுதியிலுள்ள அழகியலே ரோச்சாவின் படத்திற்கு மெருகேற்றுகிறது. ஆயினும் அத்தகைய அழகியல் சிக்கலான ஒரு சூழலின் நிர்ப்பந்தத்தினால் கூட ஏற்பட்டிருக்கும். காசு செலவாக ஆக ஷாட்டு களின் நீளம் பெருகுவதை அன்றைய சின்னப் பட்ஜெட் இந்திய சினிமாக்களிலும் காணலாம். ஆயினும், அத்தகைய இந்திய படங்களில் ஆக்ஷனை துரிதப்படுத்தப் படத்தைத் தொகுக்கும் விதமும் காட்சிகள் படமாக்கப்பட்டவிதமும் அத்தகைய சினிமா வின் மையத்திலுள்ள பிளவைச் சொல்கின்றன. ரோச்சாவின் படத்திலோ அத்தகைய அழகியல் ஹென்னெ கூறுவதைப்போல உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவமாக உருக்கொள்கிறது. உதாரணதிற்கு, பீட்டோ என்கிற மிஷ்டிக்கான செபாஸ்டியாவோவின் காட்சி களை எண்ணிப் பாருங்கள். போலவே கோர்சிகா எனும் புரடிசிக் கொள்ளையனின் காட்சிகள். துண்டாடப் படாமல் ரோச்சா நீளமான காட்சிகளைக் கொண்டு வடிவமைத்திருப்பதால் அத்தகைய அழகி யல் அவரது அரசியலிலிருந்து உயிர்பெறும் கற்பனா தீத உலகிலும் அதன் விபரீதங்களை மீறி மக்கள், நிலம், மற்றும் வாழ்வு சார்ந்த யதார்த்தங்களில் அடங்கியுள்ள அபத்தங்களைச் சுட்டுவதாக உள்ளன.
இங்குப் பாஜானிய கருதுகோளான சிக்வென்ஸ் ஷாட்டைப் பற்றியும் சிந்திக்கலாம். ஷாட்டுகளைக் காட்சி துண்டுகள் என்று வகுத்துக்கொண்டால் ஒரே இடம் மற்றும் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் காட்சிகளைச் சீன் எனக் கொள்ளலாம். அத்தகைய காட்சிகளைக் கோர்வையாக ஒரு பொருள் கொண்டு இணைக்கப்படும்பொழுது அதைச் சீக் வென்ஸ் என்கிறோம். உதாரணத்திற்கு பட ஆரம்பத் தில் வீட்டிலோ ஆபிஸிலோ நடக்கும் காட்சிக் கோர்வையில் கதாநாயகன் காரில் புறப்பட்டு அலு வலகம் வந்து அங்கு நேர்காணலில் பங்கேற்று அதே நேர்காணலுக்கு வந்திருக்கும் கதாநாயகியைச் சந்திப்பதை “சந்திப்பு” என்கிற காட்சிக்கோர்வைக்குள் பிரிக்கலாம். அத்தகைய பல காட்சிகள் அடங்கிய காட்சிக்கோர்வையை ஒரே ஷாட்டில் வடிவமைக்கும் போது அது சீக்வென்ஸ் ஷாட்டாகிவிடுகிறது. அத் தகைய சீக்வென்ஸ் ஷாட்டுகள் தனது அரசியலின் பகுதியாக இருப்பதைப் போலிவியாவைச் சார்ந்த சான்ஹினெஸ் விவரித்துச் சொல்லியுள்ளார். பல்வேறு மொழிகள் பேசும் ஆதிகுடிகளின் தொகுப்பாகச் சான்ஹினெஸின் படங்களில் விரியும் போலிவியாவை அவர் சீக்வென்ஸ் ஷாட்டுகளைக்கொண்டு இணைக் கிறார்.
சினிமாவை புரட்சிக்கான ஆயுதமாகக் கருதிய சான் ஹினெஸின் ப்ளட் ஆப் த காண்டோர் முக்கிய மான லத்தின் அமெரிக்கப்படம். எனது நண்பர் டென்னெஸ் ஹான்லான் ஹோர்கே ஸன் சென்ஸ் என அழைக்கப்டுகிற Jorge Sanjines ஹோர்கே ஸான் ஹினெஸின் படங்களின்மேல் ஆய்வுசெய்து தனது முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். பிரஞ்சு சினிமா விமர்சன பிதாமகர் ஆந்த்ரே பஜானின் பார்வையில் அவர் சினிமாவின் ஆதார சுருதியாகக் கருதிய யதார்த்தத்திற்கு வழிவிடுவதினால், சீக்வென்ஸ் ஷாட்டுகள் முக்கியமானவை. ருஷ்ய ஐசன்ஸ்டீனிய மோண்டாஜ் உத்திகள் அத்தகைய யதார்த்ததைக் கலைத்துப் போடு வதால் அவருக்கு உகந்ததாகப் படவில்லை. இரண் டாம் நாடுகளின் சினிமாவை எதிர்த்தாலும் கோதாரின் அழகியல் மற்றும் அரசியலில் மனம் லயித்த ரோச்சா சீக்வென்ஸ் ஷாட்டின் அழகியலுடன் அரசியலுக்கு உகந்த மோண்டாஜ் உத்திகளையும் தனக்கே உரிய விதத்தில் இணைக்கிறார். அதுவே அவரது தனித் துவம். லத்தீன் அமெரிக்க மூன்றாவது (Third Cinema) சினிமாவின் முன்னோடி ரோச்சா அத்தகைய அழகி யலின் மூலம் மூன்றாவது சினிமாவின் தனித்துவத்தைக் கட்டமைத்தார் என்று கூறலாம்.
உதாரணத்திற்கு, படம் நெடுக ஓடி அலைந்து திரிந்து வெவ்வேறு குழுமங்களின் தலைவர்களின் கைப்பாவையாகி தங்களது தெரிவை பிறரின் கையில் விட்டுவிட்டுத் தவித்துக்கொண்டிருக்கும் மானுவெல் மற்றும் ரோஸாவின் பயணம் அதிகமாகச் சீக்வென்ஸ் ஷாட்டுகளிலேயே சட்டகப்படுத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக, படத்தின் பிற்பகுதியில். அத்தகைய சீக் வென்ஸ் ஷாட்டுகள் ஹாலிவுட்டைப்போல அல்லாமல் கைகளிலுள்ள கேமராவை வைத்து அதன் ஸ்திரத்தனமையற்ற ஆட்டம் நிறைந்த சலனங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடுமானவரை செயற்கை வெளிச்சங்கள் தவிர்க்கப்பட்டு இயற்கை சூழலில் அங்கிருக்கும் பல ஒலிகளுடன் படமாக்கப் பட்டிருக்கும் விதம் ரோச்சாவின் ஆன்மா லத்தீன் அமெரிக்க மண்ணில் ஸ்திரம் கொண்டிருப்பதைச் சொல்கிறது. தனது ஆணிவேரான தனது நிலம் மற்றும் அது சார்ந்த பண்பாட்டின் ஊற்றான சடங்குகளை மேலைத்தேய நாடுகளின் நுகர்தலுக்காக அன்றித் தனது அடிவயிற்றின் பசியிலிருந்து எழும் குரலாக உருவகித்திருப்பது ரோச்சாவின் தனித்துவம். அவரது கொள்கையறிவிப்பு அவரது செயற்பாட்டில் இருந்து வந்தது என்பதை ப்ரான்ஸ் பனோனை நினைவுகூறும் வகையில் வன்முறையைத் தனது அரசியல்/அழகி யலுக்காகப் பயன்படுத்தியுள்ள ரோச்சாவின் படங் களில் காணலாம்.
ஹென்னெ ப்ளாக் காட் வைட் டெவிலில் இரண்டு பகுதிகளின் பிரிவினையைச் சுட்டும் காட்சி இல்லை என்ற போதிலும் அத்தகைய ஒரு கட்ட மாகப் படத்தில் வரும் கோரஸ் ஒன்றைக் குறிப் பிடுகிறார். முதலாவதாக, அந்தக் கோரஸ் பாட்டுப் பின்னணியில் தப்பி ஓடிக்கொண்டிருக்கும் மானுவலை யும் ரோஸாவையும் இதுவரை நாம் கண்டிராத முட் செடிகளும் அடர்த்தியற்ற புதர்களும் நிறைந்த வறட்டு பாலையை ஒத்த நிலத்தில் நடந்து கொண் டிருப்பதைக் காண்கிறோம். இரண்டாவதாக அந்தப் பாட்டு கதையாடலைவிட்டு நம்மிடம் பார்வை யாளராக இசையின் வேகத்தைக்கூட்டி நேரிடையாகப் பேசத் தொடங்குகிறது: “நமது கதை தொடர்கிறது. மக்களே கவனமாகக் கேளுங்கள். மானுவலும் ரோஸா வும் பின்பகுதியுள்ள புதற்காட்டிற்குள் திரிந்தார்கள்.” நேரடியாகச் சினிமாவில் பார்வையாளர்களுடன் பேசும் தன்மையை பியர் பாவ்லோ பாசொலினி யிலிருந்து ழில் டெலூஸ் வரை ஆராய்ந்திருகிறார்கள். அத்தகைய கதாபாத்திரங்களின் அகவயநோக்கி லிருந்து விலகி கதையுலகத்திற்கும் சட்டகத்திற்கும் உள்ளுறையும் கதை மாந்தர்களுடன் பேசாமல் நேரடி யாக வெளியே மறைமுகமாகப் பேசும் யுக்தி சுற்று முகமான பாயிண்ட் ஆப் வியூவையும் அளிக்கிறது. அத்தகைய நோக்கு கதையாடலின் கனவுலகிலிருந்து அரசியல் அழகியல் மற்றும் தத்துவார்த்தம் சார்ந்து தியானிக்கப் பயன்படக் கூடிய யுக்தி.
எண்ணிப்பாருங்கள், கோதாரின் வீகெண்டில் நேரடி யாகக் கம்போடியா முதற்கொண்டு அன்றைய 1968 களின் அரசியல் நிலைப்பாடுகளை அதைப்பற்றிய அவரது விமர்சனங்களை அவர் நம்மிடம் நேரடி யாகப் பேசுவதை. டெலூஸ் இரண்டாவது உலகப் போருக்குப்பின் பிளவுபடும் சினிமாவை இரண்டு பிம்பக் குறியீடுகள் மூலம் உணர்த்துகிறார். போருக்கு முந்தைய சினிமாவை ஆக்ஷன் இமேஜ்-செயல் பிம்பம் அல்லது வினைப்படிமம் மற்றும் இரண்டா வது போருக்குப் பின்னான சினிமாவை டைம் இமேஜ் கொண்டு வகுத்துக்கொள்கிறார். காலப் பிம்பம் அல்லது நேரப்படிமம் கதையாடலிலிருந்து விரிந்து ‘ப்ரீ இண்டைரக்ட்’ சொல்லாடலுக்கான வெளியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அத்தகைய கட்டற்ற (கதை யாடலிலிருந்து மாற்றுவெளியில் பயணிக்கும்) மறை முக சொல்லாடல் தேர்ந்த இயக்குனர்களின் கையில் வாழ்வை அணுக்கமாக விசாரிக்க அரசியல் மற்றும் தத்துவ ஆழ்விசாரங்களில் ஈடுபட வழிகோலுகிறது.
அடுத்து நாம் மானுவலையும் ரோஸாவையும் அத் தகைய காட்டுக்குள் பார்க்கிறோம். புதிய மாந்தர்கள் கதையுலகை ஆட்கொள்ளப்போவதை எதிர்பார்க் கிறோம். ஹென்னெவின் பார்வையில் இதற்குமுன் அண்டோனியோ டாஸ் மோர்டெஸ்ஸின் படுகொலை யில் செபாஸ்டியாவோவின் குழுமத்தில்/ கும்பலி லிருந்த அனைவரும் கொல்லப்படுவதைக் காண் கிறோம். மானுவலும் ரோஸாவும் மட்டும் தப்பி ஓடுகிறார்கள். அதீத வன்முறை கற்பனாதீத தப்பித் தலுக்குத் துணைபுரிகிறது. அதன் பின் நாம் காணாத காலமொன்று இருக்கிறது. அதில் மாயமான கால மென்பது மானுவல் ரோஸாவின் வாழ்வின் சில நாட்கள், அல்லது மாதங்கள், அல்லது வருடங்களாகக் கூடயிருக்கலாம். நாம் அக்காலத்தைத் தாண்டி நேரடி யாக அவர்கள் முட்புதர்கள் மண்டிய பாலையில் நடந்து வறண்ட காட்டை அடைவதைக் காண்கிறாம். செர்டாவோ என்று அழைக்கப்படுகிற அத்தகைய வறண்ட நிலம் மதுரைக்கு தெற்கே உள்ள நமது நிலத்தை ஒத்ததாக இருக்கிறது. அதன் வெக்கையும் கூட. கதையாடலின் அத்தகைய கால துண்டிப்பு நம்மை அடுத்தக் கதைக்கு ஆயத்தப்படுத்துகிறது. மிக முக்கியமாக, ரோச்சாவின் கொள்கையறிவிப்பில் உள்ளதைப்போல அத்தகைய கதை சொல்லல்முறை ஹாலிவுட்டின் துண்டுபடாத அல்லது வெட்டுகளை மறைக்கும் தன்மைக்கு முற்றிலும் எதிரானது. இரண்டாவது சினிமாவில் மேற்கு ஐரோப்பிய கலை அழகியல் சார்ந்த அரசியலிலிருந்தும் அது மாறு பட்டது. ரோச்சாவின் கதைமாந்தர்கள் சமயமும் மாய மும் மறைஞானமும் நிறைந்த அபத்த ஆயினும் அந்நிலத்தில் யதார்த்தமாக வலம்வரும் தலைவர் களாகத் தங்களை அறிவித்துக்கொள்ளும் விபரீத புனிதர்களுடனும் புரட்சியைத் தங்களது ரோமாஞ்சக வன்முறையின்மூலம் முன்னிறுத்தி அரசியல் மாற்றத் திற்கு உறுதியளிக்கும் கலகக்காரர்களுடனும் பயணித்துத் தங்கள் வாழ்நாளை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பகுத்தறிவுக்கு எதிர் மறையான அறிவுக்கும் அனுபவத்திற்கும் அப்பாற் பட்ட அற்புதங்களில் திளைக்கும் தனது மக்களை ரோச்சா அவர்கள் நன்கறிந்த சடங்குகளும் இசையும் நிறைந்த கதையாடல் யுக்தியின் மூலம் எச்சரிக்கிறார். இங்குச் சடங்கென்பது மேலைத்தேய நாடுகளிலிருந்து அருவருப்பாக அல்லது ஏளனமாகப் பரிகசிக்கக்கூடிய பின்னோக்கிய நிகழ்வு அல்ல. அது அந்நிலத்திலிருந்து பண்பாட்டின் மூச்சாக எழுவது.
நான்காவதாக ஹென்னெ கூறுவது என்னவென்றால் படத்தின் 54சதவிகிதப் புள்ளியில் இந்த மானு வல்லும் ரோஸாவும் செபாஸ்டிய குழுவினரின் படு கொலைக்குப்பின் ஓடுவதைக் குறிக்கும் இரண்டாவது பாகம் அல்லது அழகியல் பிரிவு தொடங்குகிறது. படத்தின் அழகியல் அணுகுமுறை அதை இரண்டு கூறுகளாகப் பிளந்துவிடுவதைப்பற்றிக் கூறுகிறார். அண்டோனியோ டாஸ் மோர்டெஸும் கூலிப் படையாகத் தன்னை முன்னிறுத்தி, புனிதராக அறிவித்து வலம்வரும் “பீட்டோவான” செபாஸ்டியா வோவை கொல்ல ஒத்துக்கொள்கிறான். ஆயினும் அவனும் கத்தோலிக்கச் சபையிடம் தனது கூலியை பெறுவதில் கவனமாக இருப்பதில் சபையுடனான அவனது உறவும் ஐயத்திற்கு உரியதாக, தெளிவற்ற நிலையில் உள்ளது. போலவே அந்த மன்ணில் உதித்த லாம்பெயோ போன்ற புரட்சிக்கொள்ளையனின் தொன்மத்திலிருந்து உருக்கொண்டுள்ள கோர்சிகோ கதாபாத்திரம். அது லிபரேஷன் தியாலஜியைக் கையகப்படுத்தி மக்களைக் கற்பனையுலகிற்கு இட்டுச் செல்வதை விமர்சிக்கிறது. அத்தகைய தனது பண்பாட்டிற்கே உரிய கூறுகளைக் கொண்டுள்ள கருப்பு சாமியும் வெள்ளை அரக்கனும் இன்றளவும் சினிமா ஆர்வலர்கள் மீதும் கலைஞர்கள் மீதும் தனது தாக்கத்தைச் செலுத்துவது புரிந்து கொள்ளக்கூடியதே. பசியின் அரசியலைப் பேசும் ரோச்சா அதன்மேல் கவனத்தை ஈர்ப்பதின் முக்கியத்துவத்தைச் சொல் கிறார். சமூகம் முழுவதும் படர்ந்திருக்கும் பசியின் வாட்டத்திலிருந்து மீட்சி பெற அதன் மேல் ஒளி பாய்ச்ச வேண்டுமென்கிறார். அதுவே அந்தப் பசியைத் தணிக்க நாம் ஆற்ற வேண்டிய எதிர்வினை யின் முதற்படி. பசியில் வாடுபவர்களுக்கு வன்முறை என்பது இயல்பான நடத்தையே என்கிறார் ரோச்சா.
அத்தகைய வன்முறை நிகழும் தருணத்தில்தான் காலனைசருக்குக் காலனைச்ட் மக்களைப்பற்றிய பிரக்ஞை வரும் என்கிறார் ரோச்சா. வன்முறையை எதிர்கொள்ளும் கட்டாயத்திற்கு உட்படும்போது தான் காலனியாதிக்கத்திற்குப் பின்னால் உள்ள பண்பாட்டுச் சுரண்டல் காலனைசருக்குப் புரிபடும் என்கிறார். தனது அழகியல் உத்திகள் பிரத்யேக சூழலைச் சார்ந்துள்ளதால் அதில் குறைபாடுகள் இருக்கலாம் என்கிறார். அந்த வகையிலுமே எல்லோருக்குமான கதையாடல் என்று முன்மொழி யும் ஹாலிவுட்டிலிருந்தும் எல்லோருக்குமேயான எந்நாளுக்குமான மேம்பட்ட அழகியல் என்று பெருமை கொள்ளும் மேற்கு ஐரோப்பிய இரண் டாவது சினிமாவிலிருந்தும் மாறுபடுகிறார் ரோச்சா. அவரது அரசியலில் தோய்ந்த பசியின் அழகியலில் உருக்கொண்ட சினிமா பசியுள்ளவரை இளம் கலைஞர்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என்ப தில் ஐயமில்லை.
எம்.எப்.ஹுசைன் சகவாசத்தில் வாரணாசி சென்றடைந்த இரவு நேரத்தை ஒரு பேட்டியில் நினைவு கூர்கிறார் ராம்குமார். அதன்பின்பு அவர் உருவங்களை, உருவகப்படுத்துவதைத் துறந்துவிட்டு, சுருக்க வியலுக்கு நகர்கின்றார். அவ்வாறான பெரும் பங்கிருந்தும் தன்னை அவர் ஒரு எஸ். எச். ரசா வகையினராகத்தான் அடையாளப்படுத்துகிறார்.
இரவுநேரத்தில் வாரணாசி அடைந்தபோது மனித நடமாட்டம் குன்றியிருக்கிறது. மெய்யில், உயிர் மரித்த, உயிரற்றவர்களின் நகரமாக அவருக்குத் தெரிகிறது.
காலை அவரும் எம்.எப். ஹுசைனும் கிளம்பி ஆளுக்கொரு பக்கமாகக் கிளம்பி வாரணாசியின் ஜனத் திரளுக்குள் கலந்து பின்னர் மாலைவரை நகரை நுகர்ந்து இரவு நேரத்தில் சந்தித்து இருவரும் வாரணாசி குறித்து உரையாடியதாகக் கூறுகிறார்.
ஒரு பூனைத் தன் பாதத்தை நீர்மேல் தடவி தடம் பார்ப்பதைப்போல், வாரணாசியும் கங்கை நதியின் மீது தனது பாதத்தினை நீட்டி நீவுவதாகக் குறிப்பிடுகிறார், அதையே அவரது குறிப்போவியமும் சொல்கிறது. வாரணாசியின் மண்கற்கள் படிமங்கள் அவரது ஓவியத்தில் இடம்பெறுகிறது.
பார்த்தவுடன் பரவசப்படும், உணர்ச்சி வயப் படுத்தும் ஓவியங்களைப் படைப்பதில் நாட்ட மில்லாதவர் ராம்குமார். எஸ். எச். ரசாவின் படைப்பு களைப்போல அமைதியாய் உற்றுநோக்கி மெதுவாக ஓவியத்தைப் புரிந்துகொள்ளத் தூண்டும் வகையில் அமைத்தலே தனது பாணியாக ராம்குமார் முன் வைக்கிறார்.
சிம்லா, லடாக், குமாவூன், ஆன்றேட்டா ஆகிய வற்றைத் தொடர்ந்து வாரணாசியும் ராம்குமாரின் நாஸ்டால்ஜியா பட்டியலில் ஒன்றானது. மச்சு பிச்சு, கீரீஸ் என பலயிடங்கள் சென்று தரிசித்து வரும் கலைஞனின் மிகப்பெரும் சவால் என அவர் குறிப்பிடும்போது, “இயற்கையைப் பருகும் வள மான, ஆத்ம பரவசப்பட்ட கலைஞனின் மனமானது, சட்டென்று தாண்டிச்செல்லும் அவனது கலை எண்ணத்தின் வேகத்துடன் இயைந்து செயல்படுவ தென்பது ஒரு வாழ்நாள் சவால், வாழ்நாள் முயற்சி எனலாம்.”
ஐம்பது அறுபதுகளின் இந்திய நவீனத்துவக் கலை காலத்தியர்களிடையே வழமையான பாணியான பாரீஸ் மார்க்கத்தை ராம்குமாரும் மேற்கொண்டார். அவரது முன்னோடியான, ஒரு வகையில் வழிகாட்டி யாய்ச் செயல்பட்ட சைலோஷ் முகர்ஜியின் ஓவியப் பள்ளியான சாரதா உகெல் கலைக்குழுவிலிருந்து ஐம்பதுகளில் பாரீஸ் கிளம்பினார் ராம்குமார். இரண்டு வருடத்தில் இரு வெவ்வேறு கலைஞர்களிடத்தில் பாரீஸ் பயில்வு. பின்பு இந்தியா வருகை. பாரீஸ் அவருக்குப் பாதைகளைக் கைகாட்டியதாகக் கூறுகிறார் ராம்குமார், ஒரு பக்கம் மோதிகிலெய்னி, மறுபக்கம் டாவின்ஸி, அவர் காலத்திய ஐரோப்பிய கலைஞர்கள் பலர், மேலும் அவர் அங்கு நடந்த கலைப்பொருள் ஏலத்தில் மாட்டிஸேயின் ஓர் ஓவியம் இந்திய மதிப்பில் வெறும் நூற்றைம்பது ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக ஒரு துணுக்கு செய்தி என அவரது பாரீஸ் அனுபவம் விரிகிறது.
சிம்லாவில் பிறந்து வளர்ந்ததால் சிம்லா, குமாவூன் ஆன்றேட்டா, தில்லியில் வாழ்ந்ததால் கரோல்பாக், கனாட் ப்ளேஸ் மேலும் வாரணாசி நகரத்தின் நினைவுகள் எனப் பரவுகிறது ராம்குமார் சாயப்பூச்சுக்களின் ஓட்டம்.
எழுத்தாளராய் தொடங்கி ஓவியராய் மாறியவர் ராம்குமார், கரோல்பாக் பகுதியில் பரவலாக உணரப் பட்ட தேசப்பிரிவினையின் பதற்றங்களும் சங்கடங் களும் அவரது சிறுகதைகளிலும் ஓவியங்களிலும் பிரதிபலித்தது.
ராம்குமாரின் நவீனத்துவப் படைப்புகளில் வாழும் மாந்தர்கள் யாவரும் நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் பின்னணியில்லாத ஒரு சுவற்றில் ஒரு படல மாகத் தோன்றுகிறார்கள், அவர்கள் தோற்றங்கள், நுணுக்கங்கள் யாவும் பூசப்பட்டமேனிக்கு உள்ளன.
அவரது சக ஓவியர்களுடன் ஒப்பிடுகையில் பொரு ளாதார, லாபகரமான ஓவியராக ராம்குமார் வலம் வர வில்லை. அவரைப்போலவே கேய்தோந்தே அவரது படைப்புகளுக்கும் நேர்ந்ததெனக் கூறப்படுகிறது.
பொதுவாய் வைக்கப்படும் பதில், இவ்வோ வியர்கள் அவர்களது படைப்புகளுக்குத் தலைப் பிடாததுதான். ஒவ்வொரு கலை ஆர்வலருக்கும் ராம்குமாரின் எதாவது ஒரு படைப்பை வாங்கினால் போதும், எதாவது ஒரு ராம்குமாரின் படைப்பு.
கடைசி காலம் வரை வரைந்துகொண்டிருந்தாலும், ராம்குமார், தனது கடைசிக் கால படைப்புகளை விற்க முனையவில்லை, அவருக்கு அதில் பிடிப்பு குறைந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
பாடைகளை வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால் பெற்றோரின் வீட்டில் வாழ்வதற்காக மீனா திரும்பி வந்தபோது, அக்கம்பக்கத்தாருக்கு ஒரு பாடை மீண்டும் வீட்டுக்குள் வருவது போலிருந்தது.
அரக்கு முத்திரையுடன் வந்த அரசாங்கத் தபால், மீனாவுக்குச் சோகமான மூடாக்கைக் கொண்டு வந்திருந்தது.
மீனாவின் மரணச் செய்தியை அந்தக் கடிதம் கொண்டு வரவில்லை என்பது உண்மைதான்; அவளுடைய ‘காதல்வீரன்’ எல்லையில் வீர மரணத்தைத் தழுவினான் என்றுதான் அது அறிவித்தது. சவத்தைப் போர்த்தும் மூடாக்கு போல் அந்தச் செய்தி மீனாவை மீளாத்துயரில் தள்ளி மூடியது.
பெண்கள் தம் உள்ளுணர்வால் அறியும் விஷயங்கள் பல உள்ளன. நம் நாட்டில் எந்தப் பகுதியில் என்றாலும் ஆண்மகன் ஒருமுறைதான் செத்துப் போவான்; ஆனால் அவனுடைய விதவை மனைவியோ, அவள் உயிர் பிழைத்திருக்கும்வரை பலதடவை செத்துப் போக வேண்டியிருக்கும் என்ற நிஜத்தை மீனா அறிந்திருந்தாள். எனவேதான், சுடுகாட்டுக்குப் போன பாடை திரும்பி வந்தது போலத் தாய் வீட்டுக்கு அவள் திரும்பி வந்தபோது, ஊமையாய் இருந்த வீட்டுச் சுவர்கள்கூட அவளுடைய அவலத்தைக் கண்டு ஈனமாக முனகின. அவளுடைய பெற்றோர்களோ, கடவுளே தமது நாக்கைத் துண்டித்துவிட்டது போலக் கருதி, வாயடைத்துச் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அது விஸ்தாரமான வீடு. சிறியவர்களானாலும், பெரியவர்களானாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான அறையைத் தருமளவுக்குப் பெரியவீடு. மீனாவுக்கும் பிரத்யேகமான அறை இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவள், கல்லூரிக்குப் போய்த் திரும்பிவருவது போன்ற சகஜத்துடன் நேரே அந்த அறைக்குள் போனாள்.
சாதாரணச் சந்தர்ப்பங்களில் திறந்து மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் கதவுகள் இப்போது சபிக்கப்பட்டது போலாகிவிட்டன. விசேஷமான தருணங்களில் மட்டும், அதாவது, திருமணம், குழந்தை பிறப்பு, மரணம், அல்லது, எவரேனும் குடும்பப் பந்தத்திலிருந்து பிய்த்துக்கொண்டு போகிற சமயங்களில் மட்டும் அந்தக் கதவுகள் திறந்தன.
குடும்ப உறுப்பினர்களின் பரிவாரம் வெளியேறுவதைப் பெற்றோர்கள் சில சமயங்களில் கண்கள் வற்றிப்போன நிலையிலும், சிலசமயங்களில், கண்ணீர் ததும்பவும் பார்த்திருந்தனர்.
இருபது வருடங்களுக்கு முன் மீனாவின் பெரிய அக்கா கல்யாணமாகித் தனது புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போனதும், அவளைப் பொறுத்த மட்டிலான நல்ல விஷயத்திற்காக அந்த வீட்டுக் கதவுகள் அடைபட்டன. இரண்டாண்டுகள் கழித்துப் பிள்ளைப்பேற்றுக்காக அவள் பிறந்தகம் வந்தபோது, புதிய உயிரின் மென்கரங்கள் அவளுக்காக அந்த வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டன. ஆனால் அது நீடிக்க வில்லை.
பால்மணம் மாறாதப் பச்சிளங் குழந்தையை அதன் தலைவிதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டு, நாற்பது நாள்களிலேயே அவள் செத்துப் போனாள். மரணம் அவளுக்கு மீண்டும் அந்த வீட்டின் கதவை அடைத்து விட்டது. அவளுடைய புகுந்த வீட்டார் குழந்தையை வளர்த்தெடுக்க அழைத்துப் போனார்கள். என்றாலும், சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்று சொல்லித் திரும்பவும் இங்கேயே கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள். சின்னஞ்சிறு கைகளின் மூலமாகக் காரியமாற்றிக்கொண்டிருந்த விதி மீண்டும் கதவுகளைத் திறந்துவிட்டது.
இதே மாதிரிதான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகக் கல்வி பெறுவதற்காக மீனாவின் சகோதரன் வேறு நகரத்திற்குப் போனபோது அவனை வெளியே அனுப்பி, வீட்டின் கதவுகள் மூடிக் கொண்டன. ஐந்தாண்டுகள் கழித்து, விதி அவனுக்காகக் கதவுகளைத் திறந்துவிட்டது. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொண்ட வேற்றுச் சாதிப் பெண்ணுடன் திரும்பி வந்திருந்தான் அவன். அந்த அறையின் வாசலில் தொங்கிய பட்டுத் திரைச்சீலையைக் கடந்து, உள்ளே சமைத்த ஆடம்பரமான புலாவு மற்றும் இறைச்சியின் சுவையான மணம் வெளியே தவழ்ந்து வந்தது. ஒரு வருடம் கூடக் கழிந்திருக்காது, சந்தர்ப்பவசத்தால் நடந்த அந்தக் கல்யாணம் திடீரென்று விவாகரத்தில் முடிந்து, மீண்டும் அவர்களுக்குக் கதவு மூடிவிட்டது.
இப்போது மீனாவின் முறை. அவளுடைய திருமணத்திற்குப் பிறகு மூடிய கதவு, விதவையாகிவிட்ட அவளுடைய கரங்களாலேயே மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மணப்பெண்ணாகப் பல்லக்கில் சென்ற மீனா, பாடையில் ஏற்றிய பிணம் போலத் திரும்பி வந்திருக்கிறாள். வயதான அவளுடைய பெற்றோருக்கு, நிர்க்கதியாக அந்தச் சோகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. எனினும், அந்தத் துயரக்காட்சியைக் காண்பதிலிருந்து மீனாவின் அப்பாவைக் காப்பாற்றும் விதமாக, அவருடைய கண்களில் பூவிழுந்து பார்வை பறிபோயிருந்தது.
சீக்கிரத்திலேயே, அரசாங்க முத்திரைகளுடன் இன்னொரு கடிதம் வந்தது. சென்ற முறை வந்தது போல் வாழ்வையே மூடி முடக்கிப் போட்ட செய்தி கிடையாது; மாறாக, சந்தோஷ அலைகளைக் கொண்டு வந்திருந்தது. மொட்டைமாடியில் தொட்டிகளில் வளர்த்த பூச்செடிகள் திடீரென்று பூத்துக் குலுங்கியது போல் அந்தக் கடிதத்தின் செய்தி இருந்தது. போரில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவியருக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் வழங்க அல்லது, வாழ்வாதாரத்திற்காக ஏதாவது வேலைவாய்ப்புத் தர அரசாங்கம் விரும்பியது. சிறிதாக ஏதாவது உற்பத்திக் கூடங்களை நிறுவவும் அவர்கள் வங்கிக் கடன் பெறலாம்; அல்லது இராணுவம் நடத்தும் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக வேலை பெறலாம். எதற்கு விருப்பம் என்று மீனாவைக் கேட்டிருந்தனர்.
மீனாவைப் பொறுத்தமட்டில், அந்தக் கடிதம், பாடையின் மீது மலர்களைச் சொரிவதைப் போலிருந்தது. கையிலிருந்த கடிதத்தை அப்படியே கசக்கினாள். அவளுடைய உடலின் ஓர் அங்கம், அவளுக்குள்ளே எங்கோ ஓரிடத்தில் எப்பொழுதோ மரித்துவிட்டதால், மலர்களின் மணத்தால் அவளுக்கு எந்தப் பிரயோசனமும் கிடையாது. கட்டிலில் அப்படியே உயிரற்ற உடலாக விழுந்து கிடக்கத்தான் விரும்பினாள்.
செத்துப்போன அக்காவின் மகன் அவிநாஷ், வெளியூரில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவன், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தான். பதினெட்டு வயதாகும் அவன் தாய்ப்பாசத்தை அறியாமலேயே வளர்ந்தவன். மீனாவை நோக்கி அவன் ஓடிவந்தபோது ஆண்டுக்கணக்கில் அடைபட்டிருந்த கண்ணீர் மடைதிறந்த வெள்ளமெனப் பீறிட்டுப் பெருகியது. அவனை அணைத்துக் கொண்டவள், கழுத்தை இறுக்கிக் கொண்டு கதறியழுதாள். குழந்தையாக இருந்தபோது அவனை மடியில் கிடத்திக் கொஞ்சியவள், அவன் வளர்ந்து ஆளானதையும் பார்த்திருந்திருக்கிறாள். இப்போது மீனாவை விடவும் உயரமாக வளர்ந்துவிட்டான்.
ஒவ்வொரு தடவையும் தன்னுடைய அம்மா சாப்பாட்டைத் தரும்போது, முகத்தைத் திருப்பிக் கொள்வதே மீனாவுக்கு வழக்கமாகிவிட்டிருந்தது. சாப்பிடப் பிடிப்பது இல்லை. பாதியில் கைகழுவி விடுவாள். இந்தத் தடவை அவிநாஷ் தட்டு நிறையச் சாப்பாட்டைக் கொண்டுவந்தான். “மீனு, எழுந்திரு, எழுந்து சாப்பிடு” என்றான். மீனாவுக்குத் திடீரென்று பசி கொழுந்துவிட்டு எரிவதுபோல் இருந்தது. மீனாவின் பசியைக் கிளறியது உணவின் வாசனை அல்ல; அவிநாஷின் உதடுகளிலிருந்து வந்த “மீனு” என்ற வார்த்தையின் மாயாஜாலம்தான் பசியைத் தூண்டியது.
மீனா என்றோ, மீனாஜி என்றோதான் எல்லாரும் அவளை அழைப்பார்கள். ஆனால் அவிநாஷ் அவளை மீனு என்று கூப்பிட்டதும், அவளுடைய ‘காதல் வீரனின்’ நினைவுகள் வந்து சூழ்ந்து கொண்டன.
சம்பிரதாயமான மரியாதை என்ற அளவுகோலில் மீனா என்று அழைப்பவர்களுக்கு அவள் இளையவளாக இருந்தாள். மீனாஜி என்று கூப்பிடுபவர்களைப் பார்க்கும்போது அவர்களைவிடப் பெரியவளாக உணர்ந்து கொண்டாள். ஆனால் அவளை விடப் பத்துவயது இளையவனான அவிநாஷ் மீனு என்றழைத்தபோது, தன்னை மீனு என்று அன்பொழுக அழைத்ததன் கணவனின், அந்தக் ‘காதல் வீரனின்’ தோழமையான பொறுப்பை ஏற்கும் சுமை அவிநாஷின் தோளில் இறங்கிவிட்டதாகத் தோன்றியது. கணவன் இறந்த போதே, ‘மீனு’வும் சேர்ந்தே செத்துப்போய் விட்டாள்.
அடுத்தமுறை அவிநாஷ் அவளை ‘மீனு’ என்று அழைத்தபோது திடுக்கிட்டு அலறியவள், தன் கையைக் கொண்டு அவன் உதடுகளை மூடினாள். அடுத்த கணம் வெடுக்கென்று அவன் உதடுகளிலிருந்து கையை விலக்கிக் கொண்டாள். உயிரின் கடைசி மூச்சுப் பிரிவதுபோல, மீண்டும் அந்த அழைப்பைக் கேட்க விரும்பினாள்.
அவிநாஷ் மௌனமாகிவிட்டாலும், வெற்றிடத்தில் ஒலிப்பதுபோல் அந்த அழைப்பு இருவருக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.
உள்ளுணர்வுகளாலேயே பெண்கள் பல விஷயங்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டுவிடுவார்கள். மீனு என்ற அந்த வார்த்தைக்கு இனி தன் வாழ்க்கையோடு தொடர்பில்லை என்றும், கண்ணுக்குப் புலப்படும் எந்தவிதமான உருவத்தையும் அது ஏற்காது என்றும் அவளுக்கு உள்ளூரத் தெரிந்தே இருந்தது. எனினும், பிரக்ஞையற்றவளாகச் சற்றுத் தொலைவிலிருந்தபடியே அவிநாஷை அவ்வப்போது பார்த்துக் கொண்டாள்.
அவிநாஷ் அவளைச் சாப்பிடச் சொன்னபோது ஒப்புக்காகச் சாப்பிட்டாள். அவளுடைய மனநிலையை மாற்றுவதற்காகக் கேரம் விளையாட அழைத்தபோது அரைமனதோடு சேர்ந்து கொண்டாள். வெளியே காலாற நடக்கப் போனால், அவள் மட்டும் மரங்களின் நிழல்களில் ஒதுங்கி, அவளும் ஒரு நிழலுரு போல நடந்தாள்.
வெளிச்சம் அவளிடம் ஒருவிதமான மாயத்தைச் செய்ததென்றால், இருட்டு இன்னொரு வித மாயத்தைச் செய்தது. அந்த மாயங்கள் அவளைச் சூழ்ந்து மூடிக்கொண்டு விட்டன. அவளை விட ஒரு கைப்பிடியளவு உயரமாகிவிட்டிருந்த அவிநாஷ் இருளின் மாயத்தில் காதல் வீரனைப் போன்ற மாய உருவை வெளிப்படுத்தினான். அதே அவிநாஷ் வெளிச்சத்தில், ஒரு தாயைப்போல மீனா தன் முழங்காலில் கட்டிக்கொண்டு ஆடிய குழந்தையாகத் தெரிந்தான்.
ஓர் ஆண்மகன் இறந்துவிடும்போது, பெண்ணின் உடல் உயிரோடு இருந்தாலும், அவளுடைய கருப்பை உயிர்ப்போடு இருப்பதில்லை. அப்போதே அது செத்துவிடுகிறது. செத்துப்போன தனது கருப்பையின் முடை நாற்றம் மூக்குக்கு வருவது போல உணர்ந்தாள் மீனா.
அவளை ஓர் ஏக்கம் பற்றிக்கொண்டது. அவளுடைய ‘காதல்வீரனுக்கு’ தன் கருப்பையில் அடைக்கலம் கொடுத்திருந்தால், அவனுடைய எச்சம் உயிர்ப்போடு அவளோடு இருந்திருக்கும். விதிவசமான அந்தத் தருணத்தைத் தவறவிட்ட வருத்தம், வலி மிகுந்த ஓலமாய் அவள் உடலை அலைக்கழித்தது.
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகக் கலந்துவிட்ட ஒரு நாளும் வந்தது. தனது அறையில் கட்டிலில் படுத்திருந்த மீனா, அவிநாஷின் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.
இரண்டு முகங்களைக் கொண்டவனாகத் தெரிந்தான் அவிநாஷ். ஒரு முகம் மீனாவின் கணவனுடையதைப் போல இருந்தது. கணவன் மூலம் அவளொரு குழந்தையைப் பெற்றிருந்தால், அந்தக் குழந்தை எப்படியிருக்குமோ அப்படித் தெரிந்தது இன்னொரு முகம். ஒரு முகம் இன்று உலகத்திலேயே இல்லை; இன்னொன்று பிறக்கவே இல்லை. ஆனாலும் இரண்டு விதமான முகங்களையும் பார்ப்பது அவளுக்கு விருப்பமானதாகவே இருந்தது. மிகவும் பரிச்சயமானவையாக அவை தெரிந்தன.
தான் பார்த்துக் கொண்டிருப்பது நிழலுருவான முகங்கள் அல்லவென்றும், நிஜமான முகம்தான் என்றும் திடீரென்று ஒரு கணத்தில் பிரக்ஞை உண்டாயிற்று. ஒன்று துடிப்பான இளைஞனான அவிநாஷின் முகம். இன்னொன்று, பதினெட்டு ஆண்டு களுக்கு முன்னர் தோளில் போட்டுத் தாலாட்டிய குழந்தை அவிநாஷின் முகம்.
அரைகுறையான பிரக்ஞையிலிருந்த அவளிடம், கண்முன்னே இருப்பவன் ஓர் ஆடவன் என்றும், தான் அந்த ஆடவனுக்காகவும் அவன் தன்னுள்ளே இருக்க வேண்டும் என்ற நிஜத்திற்காகக் கருப்பையைக் கொண்டிருக்கும் பெண்ணென்றும் எண்ணம் தோன்றிய ஒரு கணப்பொழுதும் வந்தது.
வெளிச்சமும் இருட்டும் ஒன்றாகிவிட, அவளுள்ளே முரண்பட்டுக் கிடந்த ஆசைகளின் வேதனைக்குத் திடீரென்று முடிவும் வந்தது. ஒரு பெண்ணின் கரங்கள் வேட்கையோடு ஆடவனின் தழுவலுக்காக நீண்டன. சதை, பரிச்சயமான சதையின் வாசனையை உணர்ந்தது.
ஒரு பெண்ணின் ஆடைகளும், ஓர் ஆடவனின் உடைகளும் கட்டிலிலிருந்து நடுங்கியபடியே சரிந்து, தலை குனிந்து உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதனைப் போலத் தரையில் குவிந்து கிடந்தன.
அது ஆன்மாக்களின் சங்கமம் அல்ல. அடைய முடியாத ஒன்றை அடையும் வேட்கையில் ஒரு பெண் தன் பெண்மையைத் தானே மிதித்துத் துவைத்துக் கொண்ட தருணம் அது; ஒரே தாவலில் தன்னை மீறிய பெரிய ஆளாகத் துடித்த ஓர் ஆடவன் கிளர்ந்தெழுந்த, விதி வசப்பட்ட கோரமான தருணம் அது.
விதியின் பிடியிலிருந்த அந்தக் கணம் கடந்து போனது. மீனா அவளுடைய மீனுவுடன் சேர்ந்து இன்னொரு முறை மரணித்தாள்.
இரவு முழுவதும் இரண்டு பெண்களும் தமது மரணத்திற்காகப் பரஸ்பரம் மற்றவரைக் குற்றம் சுமத்திக் கொண்டே ஒரே படுக்கையில் கிடந்தனர்.
காலையில் அறையிலிருந்து வெளியே வந்தவள் மூன்றாவது மனுஷி. அவள் கசங்கிக் கிடந்த அரசாங்கக் கடிதத்தை நீவிச் சரியாக்கி, தொலைதூர மலைப் பிரதேசத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணியேற்கச் சம்மதம் தெரிவித்து அதில் கையொப்பமிட்டாள்.
விதியின் விளையாட்டால் திறக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் ஓர் அறைக்கதவு, சில நாள் கழித்து விதிக்கப்பட்ட இன்னொரு சம்பவத்தினால் திரும்பவும் மூடிக்கொண்டது. மீனா போய்விட்டாள். இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டாள்.
சில மனிதர்கள் இப்படித்தான். அவர்கள் வாழும் வாழ்க்கையின் மீது நீர்வாழ்ப்பூச்சிகளைப் போல் ஏதாவது எழுதி வரைந்தபடி இருப்பார்கள். ஆனால், ஒன்றும் சரியாக விளங்காது. ஒரு சித்திரமோ, குறைந்தது ஒரு வார்த்தைகூட உருவாக்க முடியாதபடி மொத்தமாக எல்லாவற்றிலும் ஒரு வெறுமை வந்து நிறைந்து அவர்களை முற்றிலும் தனிமைப்படுத்தி விடும். கடைசியில் கோடையில் வற்றிவிடும் சிறிய குட்டையோ குழியோ ஆக மாறி அவர்களின் உலகம் முடிவு பெறும். அப்படிப்பட்டவர்களில் ஒருவன் தான் சந்துரு அண்ணன்.
பத்தோ இருபத்தஞ்சோ வருஷங்களுக்கு முன் ஊரைவிட்டு ஓடிப்போன ஒரு மனிதன் இன்று காலை நான் ஷேவிங் க்ரீம் தடவியபடி நிற்கையில் திரும்பி வருகிறான். போகும்போது அவனிடமிருந்த அந்த மஞ்சள் துணிப்பை திரும்பி வந்த போதும் கையில் இருந்தது.
“என்னங்க, வெளியிலே ஒருத்தர் பாக்க வந்திருக்காங்க,”உரக்கச் சொன்னாள் மனைவி.
“யாரு?”
“எனக்குத் தெரியாது. முன்னாடி உங்கள் கூடயிருந்த நண்பன்னு சொன்னார்.”
“என் நண்பனுங்க எல்லாரையும் உனக்குத் தான் தெரியுமே.”
“தெரியும்... ஆனா, இவர நான் பாத்ததில்லே.”
சவரம் செய்யும் ரேஸரால் க்ரீமை வழித்துவிட்டு வாஷ்பேசினில் தண்ணீரை ஓடவிட்டு டவலால் முகத்தைப் பொத்திக்கொண்டு வெளியே வந்தேன்.
“ஜெகன், என்னைத் தெரியுதா?”
ஒரு மஞ்சள் பையைச் சுருட்டிப் பிடித்தவாறு முன் வரிசையில் விழுந்துபோன இரண்டு பற்களின் இடை வெளியில் ஒருவர் முற்றத்தில் நின்றபடி சிரிக்கிறார். இந்த முகம் எதுவென்று என் மனதைக் குடைந்து பார்த்தேன்.
விரிவான தேடலில் எனக்கு முக்கியமான இரண்டு மூன்று தடயங்கள் கிடைத்தன. மூக்கின் கீழே இடது புறமாக ஒரு கரும்புள்ளி. புருவத்தில் வந்து விழுகின்ற குச்சி போன்ற முடி ஒரு பாம்பு படமெடுத்து நிற்பது போலக் கர்வமாகக் கொத்தத் தயாராக நிற்கும் அந்த மூக்கு. கண்டுபிடிக்கச் சிரமமான இந்த ஆள் சந்துரு அண்ணன்தான். அந்த நேரத்தில் ஒரு கடிகாரத்தை விடச் சுலபமாகப் பத்து இருபது வருஷங்களை என் உடம்பிலிருந்து எனக்கு அகற்றி விட முடிந்தது. தற்போது நான் சந்துரு என்ற வேலையாளுடன் சின்னச் சின்னச் சந்தேகங்கள் கேட்டுத் திரிந்து கொண்டிருக்கும் பத்து வயது சிறுவன். என் டவுசரின் பின் பக்கத்தில் ஒரு ஓட்டையிருக்கிறது. அதன் வழியாக ஐம்பது பைசா வட்டத்தில் என் புட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
சந்துரு அண்ணனின் கண்களுக்குள் பார்த்தபோது காற்றில் பாக்கு மரங்கள் மெல்ல அசைந்தன. அந்தக் கரங்களை நான் அழுத்திப் பிடித்தேன்.
அப்போது நினைவுகளில் ஒரு தீப்பொறி கீழே விழுந்து ஏதோ ஒரு பனிக்காலத்தில் நாங்கள் பெருக்கிக் கூட்டி வைத்த சருகுகள் பற்றிக்கொண்டன. மரத்துப் போன உள்ளங்கையில் தீயின் சுடர்கள் அன்று பகிர்ந்த இதமான வெம்மை இன்னும் மிச்சமிருக்கிறது. நான் அந்தக் கரத்தைப் பற்றிக்கொண்டு என் கன்னத்தில் சேர்த்து வைத்தேன். மெதுவாகக் கண்களை மூடினேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சந்துரு அண்ணன் எங்கள் வீட்டு ‘உரல் அறை’யில் (நெல் குத்தும் தனி அறை ) படுத்துக்கொண்டிருக்கிறார். கைக் குத்தலரிசியின் வாசனை கமழும் சிமென்ட் பூசாத அறையின் சுவரோடு ஒட்டியபடி களிமண்ணால் செய்த கோழிக்கூட்டுக்கு மேலே ஒரு சாக்குப் பையை விரித்து அதன் மேல் ஒரு கோரைப்புல் பாயும் விரித்துதான் என்னைவிடப் பத்து வயது மூத்தவனான சந்துரு அண்ணன் வழக்கமாகத் தூங்கினார்.
பொழுது விடிவதற்குள் எங்கள் தாத்தா, சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் சந்துரு அண்ணனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாக்கு பொறுக்கி சேகரிக்கத் தோப்புக்குப் போய்விடுவார். பனி படர்ந்த புல்லில் நடக்கப் பிடிக்கும் என்பதால் அவர்களைத் தொடர்ந்து நானும் கிளம்பி விடுவேன்.
நாங்கள் நடந்து வரும் ஓசை கேட்டதும் பாக்கு மரங்களுக்கிடையே தேங்கி நிற்கும் மங்கலான அரை இருட்டிலிருந்து அலகில் பழுத்த பாக்கின் சாறு படிந்த வௌவால்கள் அங்குமிங்கும் பறக்கும்.
வௌவால்கள் கடித்துப் போட்ட பாக்கைத் தரையிலிருந்து பொறுக்கியெடுக்கையில் சந்துரு அண்ணன் சில சமயம் செக்கச் சிவந்த ஒன்றை எடுத்து என் கன்னத்தில் வைத்து மெதுவாக உரசுவார். அப்போது மிகப் பரவசமாக இருக்கும். பனித்துளிகளின் குளிருக்குள்ளேயே என் உடம்பு ஒரு நீர் நிலைக்குள் இறங்குவது போல் இருக்கும். ஒரு கத்தியைப் போல் அது அசையாமல் பலவகை மீன்களுக்கிடையில் நெடுநேரம் கிடக்கும். அப்போது என் கண்கள் மெல்ல மூடும்.
நாங்கள் பாக்கையெல்லாம் சேர்த்துக் கூடைக்குள் போட்டு வைப்பதற்குள் கோரைப் புற்களின் புதரிலிருந்து வெளியேறி நேராகக் கால்வாய்க்கு இறங்கிய தாத்தா உடம்பைச் சுத்தப்படுத்திக் கோமணத்தைக் கட்டிக்கொண்டு திரும்பி வருவார். அப்போது சென்ற இரவு நண்டுகளைத் தின்று பசியாறிய கொக்கொன்று தாத்தாவின் கருத்த ஒல்லியான உடம்பின் குறுக்காகப் பறந்து செல்லும். பள்ளியில் கறுப்புப் பலகையில் வெள்ளை ‘சாக்பீஸால்” வரைந்தது போல, இந்த வெண்மைக் கீற்று இன்னும் சற்றுநேரம் என் கண்களில் தங்கி நிற்கும்.
“இத்தனை நாளா எங்கிருந்தீங்க, சந்துரு அண்ணா?” நான் கேட்டேன்.
பரிமாறி வைத்திருந்த காலை உணவிலிருந்து கண்ணை எடுக்காமல் அவர் தனக்குத் தானே சிரித்தார். மூக்கின் நுனியைத் தடவி சற்று நேரம் பேசாமல் இருந்து பிறகு இட்லியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.
“உங்க குடும்பமெல்லாம்...” வீட்டுக்கு வந்த தன் கணவனின் பழைய நண்பனிடம் ஏதாவது கேட்க வேண்டுமே என்று நினைத்து ரேகா கொஞ்சம் சட்னியை அந்தப் பலகாரத்தின் மீது ஊற்றி நட்பு கலந்த உரையாடலை ஆரம்பித்தாள். சந்துரு அண்ணன் அதற்கும் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால், இம்முறை அவர் முகத்தில் சிரிப்பில்லை. சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்து வெளியே நடந்தார். மனைவி என்னைப் பார்த்தாள். சாப்பிட்ட பாத்திரங்களை அவரவர் துலக்கி வைக்க வேண்டும் என்பது எங்கள் ஊரில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம் என்பது அவளுக்குத் தெரியவில்லை. சந்துரு அண்ணா தன் ப்ளேட்டை சமையலறை மேடையில் கவிழ்த்து வைத்துவிட்டு முன் வாசலுக்கு வந்தார். தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தார். முற்றத்தைச் சுற்றியிருந்த சிறு மேட்டில் அமர்ந்தபடி தோப்பை ஒரு நோட்டம் விட்டு, இடையில் என்னை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்.
இந்தத் தோப்பை நீ இப்படிக் கவனிப்பாரற்று அலங்கோலமாக்கி விட்டாயே என்ற கோபமும் வருத்தமும் அந்தக் கண்களில் தெரிந்தது.
தாத்தா இறந்த பிறகு அம்மாவுக்குத் தன் பங்காகக் கிடைத்தது இந்தத் தோப்பு. என் அக்காவுடன் அவள் ஷார்ஜாவுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்ட பிறகு இந்தத் தோப்புக்கு நான் உரிமையாளன் ஆனேன். ஒரு புத்தகப் பதிப்பகத்தைச் சுமாராக நடத்திக் கொண்டு செல்கையில் எனக்கு இந்தத் தோப்பைக் கவனிக்க முடியாமல் போயிற்று. புதர் மண்டிக் காடாகக் கிடந்த இடத்தை வெட்டிச் சுத்தமாக்கி வருடம் இரண்டாகி விட்டது.
மரங்களைச் சுற்றி உரமிடும் குழிகளை எடுப்பதில்லை. உரம் போடுவதுமில்லை. வருடாவருடம் யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்து விடுவேன்.
கிடைக்கிற விளைச்சலை வாங்கி வைப்பேன். அதற்கிடையில் பல வியாதிகள் வந்து முக்கால்வாசி பாக்கு மரங்களின் மண்டை காய்ந்து விட்டது. பந்தல் போட, வேலி கட்ட என யார் யாரோ வந்து சில மரங்களை வெட்டிச் சென்றனர். தோப்பையே விற்று விடலாமென்று பார்த்தால் பட்டணத்திலிருந்து சற்றுத் தூரம் உள்நோக்கியிருந்தபடியால் யாருக்கும் வாங்க விருப்பமில்லை.
அதுவுமன்றி, தாத்தாவின் நினைவு இங்கே இருப்பதால் துச்சமான தொகைக்கு இதை விற்றுவிடவும் மனசு வரவில்லை.
“இவர் இன்னைக்குத் திரும்பிப் போயிடுவாரா?” ரேகா கேட்டாள்.
வெளிப்படையாக விருந்தாளியாய் வந்தவரிடம் கொஞ்சம் வாஞ்சையுடன் பேசியிருந்தாலும் முற்றிலும் பரிச்சயமில்லாத ஒருவரின் இருப்பு அங்கே அவளைப் பதட்டம் அடையச் செய்தது என்பது அந்தக் கேள்வியிலிருந்து புரிந்தது.
“தெரியாது,” என்றேன்.
அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் அடைக்கலம் கொண்டாள்.
பீடி பிடித்து முடித்ததும் சந்துரு அண்ணன் நேராகத் தோப்புப் பக்கம் போனார். போகிற வழியில் காடாகக் கிடந்த இடத்திலுள்ள புதர்களைக் கையால் வகிர்ந்து செல்ல வேண்டியிருந்தது.
மோட்டார் வைத்திருந்த சின்ன அறையெங்கும் சிதலெடுத்து ஒரு புறம் அப்படியே சரிந்து ஒடிந்து தொங்கிக்கொண்டிருந்தது.
துருப்பிடித்த குழாய்களின் மீது நிறைய மரத் தவளைகள் (தேரைகள் ) அமர்ந்திருந்தன. சந்துரு அண்ணனைப் பார்த்ததும் அவை உரக்கக் குரல் எழுப்பின. கிணறெங்கும் ஒரே பாசி. பாக்கு மரத்திலிருந்து எப்போதாவது ஒரு பழுத்த பாக்கு கீழே விழுந்து அந்தப் பாசியைச் சற்று விலக்கும். திரும்பப் பழையபடி ஆகிவிடும். அத்துடன் பாக்குமரமும் கிணறும் நடத்தும் உரையாடல் முடிவடையும்.
சந்துரு அண்ணனைத் தோப்பிலேயே விட்டுவிட்டு நான் காரைக் கிளப்பினேன். நேரம் தாமதமானதும் ஆபிஸிலிருந்து போன் அழைப்பு வந்திருந்தது.
இரவு திரும்பி வந்து காரைப் போர்ச்சில் ஏற்றி வைப்பதற்குள் மனைவி ஓடி வந்தாள். காலையில் அவள் முகத்திலிருந்த பயமும் எரிச்சலும் மாறி அவள் முற்றிலும் சந்தோஷமாகத் தெரிந்தாள்.
என் கையைப் பிடித்து நேராக ‘உரல் அறைக்கு அழைத்துச் சென்றாள். தன் கையால் மெதுவாகக் கதவை அழுத்தினாள். அதன் பலகை அசைந்ததும் கைக்குத்தல் அரிசியின் வாசனையும் தவிடின் வாடையும் எனக்கு மீண்டும் உணர முடிந்தது. நானே மறந்து போயிருந்தேன், எனினும் அந்த வாசனை அங்கே உள்ளேயே இருந்திருக்கிறது.
அவள் மின்விளக்கைப் போட்டாள். கோழிக் கூட்டுக்கு மீதாகப் பாயை விரித்துத் தூங்கிய படியிருந்தார் சந்துரு அண்ணன்.
சுவரிலிருந்த ஆணியில் அவரின் மஞ்சள் பை மாட்டப்பட்டிருந்தது. அப்போது எனக்குச் சந்துரு அண்ணனை எழுப்பிவிட்டுப் பச்சைப் புல்லின் பனித் துளிகளை மிதித்துச் சிதற வைத்தபடித் தோப்புக்கு ஓடவேண்டும் போலிருந்தது. பனியால் கழுவிய என் உள்ளங்கால்களில் ஒட்டியிருந்தன தொட்டால் சுருங்கி விதைகள். என் கால் கட்டை விரலைக் கடந்து ஊறுகிறது சிற்றெறும்பு.
“உள்ளே படுக்கச் சொல்லியிருக்கலாமே?” என்று மனைவியைக் கடிந்தேன்.
“சொன்னா கேட்டாத்தானே? இன்னைக்குப் பூரா தோப்பிலேயேதான் இருந்தார். காடாயிருந்ததை எல்லாம் நிறைய வெட்டியாச்சு. மண்டையில்லாத இரண்டு பாக்கு மரங்களை வெட்ட ஆளுங்கள ஏற்பாடு பண்ணியாச்சு.”
எதற்காகச் சந்துரு அண்ணன் இத்தனை காலத்துக்குப் பிறகு இந்தத் தோப்பைத் தேடி வந்தார்? அவர் கால்படாத ஒருதுளி மண்கூட இந்தத் தோப்பில் இல்லை. வயோதிகம் என்பது பின்நோக்கிப் பாய்கிற ஒரு நதியே. வருடங்கள் பல கடந்து போன பயணத்தில் அவர் எங்கேயாவது மரணத்தை நேரில் சந்தித்து இருக்கலாம். மரணத்தின் கையில் நினைவுகளின் கற்கள் உண்டு. கல்வீச்சு அதிகமாகிவிடவே ஓரடி கூட முன்னால் வைக்க முடியாமல் அவர் திரும்பி ஓடி இருக்கக்கூடும். எது எப்படியானாலும் ஒரு மாதத்துக்குள் தோட்டத்தின் தோற்றமே மாறிவிட்டது. வரிசையாக நட்டு வைத்த புதிய பாக்கு மரக்கன்றுகள் காற்றிலாடின.
கிணற்றிலிருந்த சருகுகளையும் பச்சை இலைகளையும் அகற்றியாயிற்று. டீசல் மோட்டார் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.
தெளிந்த நீரில் தவளைகள் குதித்து விளையாடின. ஓடையின் ஒரு பக்கத்தில் மதகு கட்டி நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு கொக்கு வந்து தண்ணீருக்குள் எட்டிப் பார்த்தது.
கேள்வியொன்றும் கேட்கவில்லை என்பதால் ஏராளமாகப் பீடி வாங்கிக் கொடுத்து ஒருத்தரைச் சும்மா இப்படி வேலை வாங்குவது சரிதானா? கூலியாக ஏதாவது ஒரு தொகையைப் பேசி விட யோசித்தேன். ஊதியத்தைப் பற்றிப் பேசியபோது சந்துரு அண்ணன் ஒன்றும் சொல்லாமல் வழக்கம் போல என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு வேலைக் கருவிகளுடன் தோப்புக்கு நடந்து விட்டார்.
“இந்தச் சந்துரு அண்ணன் ஒரு காலத்தில் திருடனாக இருந்தாரா?”
ஒரு நாள் இரவு உணவு சாப்பிடும்போது மனைவி சட்டென்று கேட்டாள்.
“அவருக்குத் திருட்டுத்தனம் இருந்ததுன்னு கேள்விப்பட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவங்க தான் சொன்னாங்க. உண்மையா?”
நான் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை.
“இங்கேயிருந்து என்னமோ திருடினதுக்குத் தானே தாத்தா அவரை விரட்டிவிட்டாரு?”
ஒரு விவாதத்துக்குத் தயாராக அவள் என் எதிரே அமர்ந்து தொடர்ந்தாள்: “ரொம்பவும் நம்பிடாதீங்க. நீங்க இல்லாத நேரம் பாத்து என் மண்டையிலே ஒரு போடு போட்டு இங்கே உள்ளதையெல்லாம் எடுத்துக்கிட்டு அய்யா கிளம்பினாலும் கிளம்பிடுவாரு. அவர் மனசுல என்னமோ ஒரு உத்தேசமிருக்கு, இல்லைன்னா ஒரு பைசா கூட வாங்காம அவர் ஏன் இங்கே கிடந்து வேர்த்து வேலை செய்யறார்?”
அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் காது முழுக்கச் சந்துரு அண்ணனின் அழுகைக் கூக்குரல்தான் கேட்டது. பாக்கு மரக் குலையின் குச்சிகளைக் கொத்தாகப் பிடித்து ஊர் போலீஸ்காரன் ராஜன் அவரைக் கண்மண் தெரியாமல் விளாசிக் கொண்டிருந்தான். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லை.
“கொல்லுடா ராஜா, அவனை... அப்பனும் ஆத்தாவும் செத்த பிறகு அலைஞ்சு நடந்தவன் இவன். இங்கே கொண்டாந்து இந்த நாய்க்குச் சோறு போட்டேன் பாரு. என்னத்தான் ஒதைக்கணும்.”
தாத்தா கோபாவேசத்தில் ஆடினார்.
“அவன் முதுக ஒடிச்சு போடு, நிமிரக் கூடாது!”
தன் நிர்வாண உடம்பைப் பார்க்காமலிருக்கக் கால் முட்டுகளுக்கிடையில் முகத்தைப் புதைத்துத் தரையில் துடித்துக் கொண்டிருந்தார் சந்துரு அண்ணன்.
நான் உரக்க அழுதேன்.
அம்மா என் வாயைப் பொத்தினாள்.
“அவன் திருட்டு ஜாதி. நல்லா வேணும் அவனுக்கு,” என்றாள்.
அடித்து அடித்துக் குச்சிக் கொத்து பிய்ந்து போனதும் போலீஸ்காரன் தன் நெற்றியிலிருந்த வியர்வையை வழித்துக் காக்கிச் சட்டையில் துடைத்தான்.
சாக்ஸைக் காலில் இழுத்துப் போட்டுக்கொண்டு கூரான போலீஸ் தொப்பியைத் தலையில் பொருத்தி னான். போகிற போக்கில் திருடனின் இடுப்பைக் குறிவைத்து ஒரு உதை விட்டான்.
“அம்மா...” என்ற சந்துரு அண்ணனின் அலறல் பாதியில் நின்றுபோயிற்று.
நான் கண்களைப் பொத்திக்கொண்டேன்.
அதற்குப் பிறகு சந்துரு அண்ணனைப் பார்த்தது இப்போது தான்.
என்றாவது ஒரு நாள் தன் தலையில் பலமான அடி விழுமென்று பயந்து கொண்டே என் மனைவி ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டாள். அத்தனை நாட்களும் சந்துரு அண்ணனின் கோரைப்புல் பாய் கோழிக் கூட்டுக்கு மீதே எப்பவும் இருந்தது.
புத்தக வியாபாரத்தில் நேர்ந்த நஷ்டம் எனக்குப் பெரிய கடன் தொல்லை உண்டாக்கி விட்டது. அதற்குள் சந்துரு அண்ணா வளர்த்த பாக்கு மரங்கள் ஒன்றொன்றாகக் காய்த்துக் குலுங்கத் தொடங்கியது. பிய்ந்து விழுந்த பாளைகளும் பூங்கொத்தின் அரிசி போன்ற விதைகளும் எனக்கு ஆச்சரியமளித்தன. காற்றில் கமுகின் மட்டைகள் கீழே விழும்போது தூக்கத்தில் ஒவ்வொரு முறையும் சந்துரு அண்ணன் விழித்தெழுந்தார்.
நெஞ்சில் கைவைத்து அசையாமல் படுத்தார். தோப்பில் வௌவால்களின் சத்தம் அதிகமானதும் அவர் எழுந்து ஓடி வருவார்.
பாக்குகள் முத்தலாகிப் பழுக்கத் தொடங்கின.
பாக்கின் காய்களிலிருந்த பச்சைநிறம் மாறத் தொடங்கியது சில மாதங்களுக்குள் விளைச்சலைப் பறித்து எடுக்கத் தயாராகிச் செக்கச் சிவந்த நிறத்தில் துலங்கி நின்றன.
கீழே மரத்தைச் சுற்றி வெட்டப்பட்ட குழியில் பனியில் விழுந்து கிடந்த ஒரு பாக்கையெடுத்து சந்துரு அண்ணன் தெரிவித்தார்:
“நல்லா முத்திடுச்சு. இனி பாக்கை உரிச்சுப் போட ஆளக் கூப்பிடுங்க.”
சந்துரு அண்ணனின் தோளில் இரண்டு கைகளையும் அழுத்திப் பிடித்தேன். என் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. சாந்தமான ஒரு புன்சிரிப்பு மட்டும் அண்ணன் முகத்தில் எனக்குத் தெரிந்தது. பழுத்த பாக்கை எடுத்து என் ஈரமான கன்னங்களை மெல்லத் தடவினார். நான் சொக்கிய படி கண்களை மூடினேன்.
அடுத்த நாள் காலை மனைவி என்னை உலுக்கி எழுப்பினாள். சந்துரு அண்ணனைக் காணவில்லையாம்.
திடுக்கிட்டுப் படுக்கையிலிருந்து எம்பி எழுந்தேன்.
‘உரல் அறையின்’ பக்கம் வந்து பார்த்தபோது கோழிக்கூட்டின் மீது கோரைப்புல் பாய் மடித்து வைக்கப்பட்டிருந்தது. சுவரில் மாட்டியிருந்த மஞ்சள் பையும் காணோம். மனைவி அலமாரியையும் அங்குமிங்கும் தேடிப் பார்த்து நிம்மதியடைந்த பாவத்துடன் திரும்பி வந்தாள்.
சந்துரு அண்ணன் போய்விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பாக்கைப் பறித்து உரிக்க மரமேறும் கயிறும் கத்தியுமாக வாசலுக்கு வந்தவர்களை மனைவி தோப்புக்கு அனுப்பி வைத்தாள். சந்துரு அண்ணன் ஓடி மறைந்த விஷயம் அவளைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. நேரம் இருட்டியதும் முற்றத்தில் பறித்துப் போட்ட பாக்கு ஒரு குன்றாகக் கிடந்தது.
சிதறி ஓடிய பாக்குகளை ஒரு வாரியலால் மனைவி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். சிவப்புப் பிழம்பாகத் தோன்றிய பழுத்த பாக்கிலிருந்து ஒரு வெளிச்சம் மெதுவாக இருட்டைக் கலைக்கப்பொங்கி வந்தது.
அன்றைய வேலை முடித்த ஆட்கள் கலைந்து சென்றனர்.
இரவில் அதுவுமிதுவும் யோசித்தபடி கண் விழித்துப் படுத்துக் கிடந்த என்னைப் பார்த்து மனைவி சொன்னாள்: “சந்துரு அண்ணன் போன பிறகுதான் நேரா மூச்சுவிட முடிந்தது. அவர் நிஜமாகவே திருடன் தானா?” நான் எதுவும் சொல்லவில்லை. என் மௌனத்தைப் பார்த்து அவள் மீண்டும் கேட்டாள்: அவர் அந்தக் காலத்தில் இங்கேயிருந்து என்னதான் திருடினார்?”
“ஒரு குலை பாக்கு,” என்றேன்.
அப்போது இருட்டிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது.
சந்தோஷ் ஏச்சிக்கானம் (1971)
கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பிறந்தார். ஊடகத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். மலையாளப் பட்டதாரியான இவர் சிறுகதைகளுக்கும் திரைக்கதைக்கும் பெயர் பெற்றவர். 2008-ல் கேரள சாகித்ய அகாதெமி விருது சிறுகதைக்குப் பெற்றார். பத்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளும் திரைக்கதைகளும் எழுதியுள்ளார்.
டாக்டர் டி.எம். ரகுராம் (1954)
தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மும்மொழிகளில் எழுதுபவர். இது வரையில் மொழிப்பெயர்ப்பு உட்பட பதினேழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் - மலையாள மொழிப்பெயர்ப்புக்கு திசையெட்டும் விருது உட்பட மூன்று விருதுகள் பெற்றுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மனநோய்ப்பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கேரளாவில் மஞ்சேரியில் வசிக்கிறார்.
தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மும்மொழிகளில் எழுதுபவர். இதுவரையில் மொழிப்பெயர்ப்பு உட்பட பதினேழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் - மலையாள மொழிப்பெயர்ப்புக்கு திசையெட்டும் விருது உட்பட மூன்று விருதுகள் பெற்றுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மனநோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கேரளாவில் மஞ்சேரியில் வசிக்கிறார்.
அம்மா சொற்களை இழந்திருந்த காலைப் பொழுதின் மௌனம் உக்கிரமாய் அழுத்தியது. அந்தக் காலையின் முந்தைய நாள் கூட அவர் சில சொற்களைத் திக்கித்திணறி பேசியதாக ஞாபகம். தொடர்ந்த நாட்களிலொன்றில் அம்மா என்னிடம் ரேடியோ வேண்டும் என்று கேட்டார். அவருடையத் திணறலிலும் சைகையிலுமிருந்து அதை நான் ஊகித்துக்கொண்டேன்.
அம்மா நெடுநாட்களாய்ப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றி வீசும் மூத்திர நாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு அவர் எதிரில் அமர்ந்து என்ன வேண்டும் என்று நான் விசாரிக்கும்போதெல்லாம் மாரி கோல்டு பிஸ்கெட், குலாப் ஜாமூன், நன்றாகக் கனிந்த சாம்பல் வாழைப்பழம், ஆட்டோ பயணம், மாத்திரை என்றெல்லாம் கேட்பார். இப்போது ரேடியோ வேண்டுமென்கிறார்.
அத்தருணத்தில் இலேசான வியப்பும் திகைப்பும் கொண்டு அம்மாவைப் பார்த்தேன். என் உட்செவியில் விரல் சூப்பும் குழந்தைச் சித்திரத்தை அடையாளச் சின்னமாகக் கொண்ட மர்பி ரேடியோ ஒன்று கரகரக்கும் குரலில் ஒலிஒழுக்கை வழியவிட்டபடி கண் சிமிட்டியது. அது மெள்ள டெசிபலைக் கூட்டி பல ஹெர்ட்ஸ்களை மாற்றித் தவளையின் அடித்தொண்டையில் கண்டங்காக்கையின் உலோகக் குரலில் பிறமொழியரின் மொழியில் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையெல்லாம் ஒலித்துக் கடைசியில் விரும்பிக் கேட்டதைப் பாடும் ஜீவனாய் நினைவில் சிரித்தது.
அம்மாவின் தொலைவுகள் இப்போது ஒரு கோரைப் பாய்க்குள் முடங்கிவிட்டன. அவருடைய பிரபஞ்ச வெளியே இப்போது அதுதான். அதற்கு உள்ளேயே அவர் வாழ்ந்து புனலாடிய பாலாறும் அதன் கரையோரத்து வீடும் அவர் கோலம் போட்ட வாசலும் அவர் அண்ணாந்து நோக்கிய வானமும் அவருடைய தோழிகளும் இருந்தனர். பின்னர் அதற்குள் அவர் வாழவந்த வீடும் அங்கவர் விறகுக்கும் கூலிக்கும் நீருக்கும் துவைப்புக்கும் நடந்த நிலங்களும் மலையும் இருந்தன. அம்மாவின் தற்போதைய ஒட்டுமொத்த வேதனைகளை நீக்கும் பரிகாரம் ஒரு சின்ன மாத்திரைக்குள் அடங்கி விடுவதைப் போல அவர் வாழ்வும் இன்று ஒரு கோரைச் சுருளுக்குள் அடங்கி விட்டது.
அம்மா ஏன் நடக்கவில்லை என்று வாதித்துக் கொண்டிருந்த நான் அம்மா ஏன் பேசவில்லை என்றும் கேட்டுக் கொண்டேன். நான் என்னுடைய தர்க்க அறிவைக்கொண்டு நிதம் நிதம் யோசித்தாலும் அம்மா நடக்கவில்லை எதுவும் நடக்கவில்லை அவர் பேசவில்லை என்பதுதான் உண்மைகளாக இருந்தன. உலகில் என் யோசனைகளுக்கு அப்பாற்பட்டவைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன தானே என்று எனக்கு நானே திருப்திபட்டுக்கொள்வதைத் தவிர வேறு நிஜமென்று எனக்கு ஒன்றில்லை.
அம்மாவின் ஊர் மலைகளற்றது. ஆற்றங்கரையில் இருப்பது. அவர் சிறுமியாக இருந்த காலத்தில் பரந்து விரிந்திருந்த தூயதும் வெண்மையும் கொண்ட பாலாற்றின் மணற் குன்றுகளில் நின்று பார்த்தால் வெகுதொலைவில் ஆட்டிடையன் கல்நிற்கும் மலை தெரியும். வேறு வகையில் எங்கும் அவர் மலைகளைப் பார்த்ததில்லை என்று சொல்வார். உறவுக்காரர்களின் வீடுகளும் கூட ஆற்றுக்கு இப்புறமும் அப்புறமும் தான். வீட்டிலிருந்தவரைக்கும் கால்நடையாகப் போகும் தொலைவுகளிலிருந்த ஒரு சில டெண்டுக் கொட்டகை சினிமாக்களுக்கும் திருவிழா கூத்துகளுக்கும் வீட்டாருடன் போய் வந்ததன்றி வேறு எங்கும் சென்றதில்லை என்றும் நினைவுகூர்வார்.
ஆற்றோரத்துக் கொருக்கைவேலி பாதுகாப்பிலிருந்த நிலத்தில் வடகிழக்கு மூலை நிலத்தில் கட்டியிருந்த பரணிலேறி உண்டிவில்லால் குருவியோட்டி சிறு பறைக் கொட்டி விலங்கு துரத்தி பசிய மலராயிருக்கும் கதிர் பழுப்பு வண்ணமாகும் வரை பொறுத்திருந்து கேழ்வரகு காத்த பொழுதுகளில் ஆற்றுச் சமவெளிக் காற்றுதான் அம்மாவுக்குப் பேச்சுத்துணை. அது வகை வகையான ஒலிக்கீற்றுகளைக் கம்பீர நாட்டையில் கொண்டு வந்து அவர் செவியில் சேர்த்தன. ஆலய மணியோசை கோயில் மணிச்சத்தம் அஜான் ஒலி எதிர்கரை நிலத்துப் பேச்சு வகைவகையான பறவை களின் கீசல்கள் தொலைதூர உலோகப்புனல் வழிய விடும் பாட்டு. எல்லாமே அம்மாவுக்குத் துணை. இவற்றுடன் சூரியன் உறங்கிடும் இரவுகளில் வீட்டுக்கு அருகிலிருந்த டெண்டுக்கொட்டகையில் பேசும் சித்திரங்களின் ஒலிகளையும் தினந்தோறும் காற்று கொணர்ந்து சேர்க்கும். காற்று வீசினால் அதை அனுபவிக்க முகம் திருப்பாமல் காதுகளைத் திருப்பிட அம்மா பழகியது அப்போதுதான்.
கங்காசர மலையடிவாரத்தில் ஒடுங்கியிருக்கும் அப்பாவின் கிராமத்துக்கு உறவுகள் சூழ முதன்முதலில் பேருந்திலேறி அம்மா வந்தபோது காற்று வீசவில்லையே என்றுதான் நினைத்தாராம். அப்பா வினுடைய கிராமத்தில் நான்கு தெருக்களைத் தள்ளி எழுந்து நின்று ஒரு மிருகம் போல முறைக்கும் மலை அங்கு வீசிடும் காற்றையெல்லாம் தடுப்பதாகவும் ஒலிகளனைத்தையும் உட்கிரகித்துக் கொள்வதாகவும் சொன்னபோது அவரை அப்பா முறைத்தாராம்.
மலைகளுள்ள ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த பின்னர் சமவெளிக்காற்று கொண்டுவரும் வெகு தூரத்து ஒலிக்கோவைகள் அம்மாவுக்குக் கிடைக்காமல் போனதால் முதன்முதலில் ரேடியோ ஒன்று வேண்டும் என அப்பாவிடத்தில் கேட்ட தருணத்தை அம்மா ஒரு முறை துல்லியமாய் என்னிடத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார்.
அதிகாலமே எழும்பி பீடி இலைகளின் நடு நரம்புகளைச் சிறுகத்தியால் சீவத்தொடங்கி அம்மா இலைகளை வெட்டும் நேரமும் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்புச் சேவை தொடங்கும் நேரமும் அனேகமாக ஒன்றாயிருக்கும். வானொலி நிலையத்தைத் திறக்கையில் ஏதோ ஒரு கருவி இசையை ரேடியோவில் ஒலிக்க விடுவார்கள். அப்போது ஊரின் வடக்கு மூலையில் கடை வைத் திருந்த செட்டியார் ஒருவர் கடையைத் திறக்கின்ற சம்பிரதாயம்தான் என் நினைவுக்கு வரும்.
கடைக் கதவின் குறுக்குச் சட்டமாகிய இரும்பு சட்டத்தைப் பிணைத்திருக்கும் பெரிய கருப்புப் பூட்டைத் திறந்த பின்னர்ப் பல காலமாகக் கையாண்டு இழைந்திருக்கும் எண்ணிலக்கம் இடப்பட்ட சிறு சிறு பலகைகளை நிலைப்படியிலுள்ள காடியிலிருந்து வரிசைக் கிரமமாக எடுத்து வெளியே வைப்பார். அதைப் பார்க்கையில் உலகிலேயே சிறந்த செயலெனத் தோன்றும்!
அப்பாவுடனும் எங்களுடனும் பேசிய நேரம் போக மிச்ச நேரங்களிலெல்லாம் அம்மா ரேடியோவுடன் தான் பேசினார். அவற்றில் ஒலிக்கும் பாடல்களை இழைந்து முணுமுணுத்தார். பாடல்களின் முன்னிசை ஒலிக்கும்போதே அந்தப் பாடலை இன்னதென்று எங்களுக்குச் சொன்னார். பாடல்களின் விவரங்களைச் சொல்வதற்கு வர்ணனையாளர்களை முந்திக் கொண்டார். அவர்கள் அரிதாகச் சொல்லும் சில தவறுகளை எங்களிடம் சுட்டிக்காட்டித் திருத்தினார். அந்தப் பாடல்களின் படங்களையும் பாடகர்களையும் நடிகர்களையும் குறித்த மேலதிக விவரங்களைத் தெரிவித்தார்.
“பேசாம அத நிறுத்தி வச்சிட்டு நீயே பேசி பாடிடேன்!”
அப்பா சொல்வதை ஒரு சிரிப்புடன் பீடியிலைக் குவியலில் தள்ளினார் அம்மா. அம்மாவுக்குக் கனதியாய் இழையும் குரல்கள் மீது தனிபிரியம் இருந்தது. சிதம்பரம் எஸ். ஜெயராமன், டி. ஏ. மோத்தி, திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராசன், மலேசியா வாசுதேவன் இப்படி. திணைப்புலம் காத்த வாழ்வு போய்ப் பீடியிலைகளை வெட்டியபடி நேரம் காக்கும் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்ட அம்மா சி. எஸ். ஜெயராமன் ரசிகையாக இருந்தது அப்பாவுக்கு விளங்க முடியாத புதிராய் இருந்தது. ரேடியோவில் வீணைக் கொடியுடைய வேந்தனே ஒலித்தால் பாடல் முடியும் வரை செய்து கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அம்மா நிறுத்தி விடுவார். ஒருநாள் அப்பா சொன்னார்.
“என்ன கொரலிது? எதுவோ கத்துன மாதிரி?”
அம்மாவும் அப்பாவும் அன்று சண்டையிட்டார்கள்.
மணல் சுரண்டிக் கொழுத்தப் பின்னர் ஆறழிந்து சாக்கடை பிரயோகிக்கும் கரும்பரப்பில் இறங்கி ஏறிட்டுப் பார்க்கவொன்னா காலத்தில் அம்மா சிறுமியாய் நோக்கிய ஆட்டிடையன் கல்லும் அங்கு இல்லாமற் போய்விட்டது.
நான் அம்மாவுக்கு ரேடியோ வாங்கச் சென்று வந்தேன்.
எல்லாவற்றையும் தயார் செய்த பிறகு எஃப்.எம் ரேடியோவை ஒலிக்க விட்டதும் சிதம்பரம் எஸ். ஜெயராமன்தான் அம்மாவுக்குப் பாடினார்.
“இன்று போய் நாளை வாராய் என
எனையொரு மனிதனும் புகலுவதோ”
தொல் நாளொன்றில் பீடியிலைகளை வெட்டிக் கொண்டிருக்கையில் ரேடியோவில் ஒலித்த அப்பாடலைக் கேட்டபோது மண்ணில் சிந்திய அம்மாவின் கண்ணீர்த் துளிகள் இரண்டு உறைந்த படிகங்களாய் எங்கள் முன் விழுந்து உடைந்தன. படிகத் துகள்கள் பொடிந்து நிர்மாணித்த காலத்தில் அம்மா சிறுமியானார். கடந்த காலத்தை ஒலிக்கும் பாடலும் இருக்குமா அம்மா? நாங்கள் உனக்காகக் கடந்த காலங்களைப் பாடுவோம்.
“ஜில்காமேஷ் கிழக்கையும் மேற்கையும் தொன்மையினையும் நவீனத்தையும் கவிதையினையும் வரலாற்றையும் பிணைப்பது; இதன் எதிரொலிகளைப் பைபிளில் ஹோமரில் ஆயிரத்தோரு இரவுகளில் காணமுடியும். அதே வேளையில் ஒவ்வொரு பண்பாட்டுக்குள்ளும், மானுட இருதயத்திற்குள்ளும் உள்ள, ஆழமான மோதல்களைத் துலக்கிக் காட்டுகிறது.”
David Damrasch / The loss and Rediscovery of the epic of Gilgamesh.
தெய்வத்தைப் புறந்தள்ளிய அதிமானுட வீரனும், மரணத்தின் ரகசியத்தை அறிந்து, அதனை வெல்ல முயன்ற மனிதனுமான ஜில்காமேஷ், சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்தவன். ஹோமரின் இதிகாச காலத்திற்கும் முற்பட்டவன். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னன். வரலாற்றுப் பதிவுகளுடன், மொழி மரபில் செல்வாக்குப் பெற்றிருந்த ஜில் காமேஷ் இதிகாசம் களிமண் பவளப் பகுதிகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது 19ஆம் நூற்றாண்டில். ஜில் காமேஷ் வரலாறு போல ஜில்காமேஷ் இதிகாச மீட்பும் சாகசம் நிரம்பியதே என்பதை டேவிட் டேம்ரச் ஆவணப்படுத்தி இருக்கிறார். சிதறிக் கிடந்த 11 களிமண்பாளங்களின் பதிவுகளைத் தொகுத்து, இடைவெளிகளை யூகித்து நிரப்பி, ஓர் எடுத்துரைப்பு வடிவில் ஆவணப்படுத்திய பிரிட்டிஷ் அருங்காட்சியகப் பணியாளர்கள், தொல்லியலாளர்கள், வரலாற்றாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு அசாதாரணமானது.
ஒரு பெண் தெய்வத்துக்கும் ஒரு மானுடனுக்கும் மகனாகப் பிறந்த ஜில்காமேஷ், உருக் (ஈராக்கில் உள்ளது) எனும் நகர - அரசின் மன்னன். ஏழு ஞானியரைக் கொண்டு, உருக் நகரை நிர்மாணித்தவன். பாதுகாப்பிற்கு அரண்கள் எழுப்பியவன். மாபெரும் தீரன். ஆனால் மணப்பெண்ணாக இருப்பவளை முதலில் துய்க்கும் ஆசை மிக்கவன். இதனால் பெண்டிர் தெய்வத்திடம் முறையிட, இவனை அடக்க, எங்கிடு என்னும் வீரனை உருவாக்குகின்றனர்.
விலங்குகளுடன் விலங்காகப் புல்லை மேய்ந்து வரும் எங்கிடு, மனிதத்தன்மைப் பெற்றிட, ஸ்ம்ஹத் என்னும் கோயில்தாசி அனுப்பி வைக்கப்படுகிறாள் ஜில்காமேஷால். ஆறு பகல் ஏழு இரவுகளில் அவனுடன் அவள் உறவுகொண்டு, ஒரு மனிதனாக்குகிறாள். ஜில்காமேஸின் அநீதிக்காக அவனுடன் சண்டையிட வரும் எங்கிடு, சளையாமல் பொருதுகிறான். ஆனால் கடைசியில் வெற்றி தோல்வி இன்றி இருவரும் சமநிலையில் இருக்கின்றனர். பிற்பாடு இருவரும் நண்பர்களாகிவிடுகின்றனர்.
தன்னை வசீகரிக்கும் பெண் தெய்வத்தை ஜில் காமேஷ் நிராகரிக்கவே, அவனை விண்ணகக் காளையை அனுப்பி, கொல்ல வைக்குமாறு தன் தந்தையை வேண்டுகிறது அப்பெண் தெய்வம். ஜில் காமேஷும் எங்கிடுவும் அவ்விண்ணக எருதினை வீழ்த்திவிடுகின்றனர். இருவரில் ஒருவர் தண்டிக்கப் பட வேண்டும் என்று வருகையில், எங்கிடு பலியாகின்றான். தன் சிநேகிதனின் மரணத்தால் ஆறாத் துயரமுற்ற ஜில்காமேஷ், மரணத்தை வெல்லும் ரகசியத்தைத் தேடி நீண்டதூரம் பயணிக்கிறான். மாபெரும் ஊழிப் பெருவெள்ளத்தில் உயிர்த் தப்பி வாழும் தன் மூதாதை உட்னாபிஸ்டிமைச் சந்திக்கிறான்.
ஒருவாரம் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் எனச் சோதித்துப் பார்க்கும் அம்மூதாதையரிடம் தோற்றுப் போகிறான் ஜில்காமேஷ். தூக்கத்தை வெல்ல முடியாதவனால், மரணத்தை எப்படி வெல்லக் கூடும்? மரணத்தின் தவிர்க்க முடியாமை மற்றும் மண்ணின் கடமைகளை ஜில்காமேஷ் புரிந்து கொள்ளுமாறு செய்து, ஆறுதலுக்காக இளமையை நீட்டித்திருக்க வைக்கும் மூலிகையுடன் அனுப்பி வைக்கிறார் மூதாதை.
வழியில் அம்மூலிகையும் ஒரு நாகத்தால் பறிக்கப்பட்டுவிட, அப்படியே திரும்ப நேர்கிறது ஜில்காமேஷ். தன் சரித்திரத்தை கல்லில் வடிக்கச் செய்வதுடன், தன் கல்லறையினையும் திட்டமிட்டு நிர்மாணித்து விட்டான்.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதும் முறை கண்டறியப்பட்டிருந்த சுமேரியாவில், அப்போது அங்குப் பேசப்பட்ட அக்கேடிய - சுமேரிய மொழிகளில் இந்த இதிகாசம் களிமண் பாளங்களில் பதியப்பெற்றது.
ஜில்காமேஷின் முந்தைய பெயர் வடிவம் பில் காமேஷ். உருக் நகரை 126 ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஜில்காமேஷும் அவனது மகன் உர்லுகலுகல் சேர்ந்து நின்லில் என்னும் பெண் தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பியதாகக் கல்வெட்டு உள்ளது. இந்த இதிகாசத்தை உருவாக்கியவர் பெயர் இல்லை. வாய்மொழி மரபின் தொடர்ச்சியாகப் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
காதல் - போர் தெய்வம் இனான்னாவின் சகோதரன் ஜில்காமேஷ். சுருள்முடி, தாடி-மீசை, ஒரு கையால் சிங்கக் குட்டியை இருக்கியிருத்தல், இன்னொரு கையில் அரிவாள் சகிதம் கம்பீரமாயிருக்கும் ஜில்காமேஷ் உருவம். இந்த இதிகாசம் Stupendous என்று வியக்கின்றார் கவிஞர் ரில்கே.
பாலைவனச் சோலைகளை முதலில் எழுப்பியதும், லெபனான் மலைகளில் முதலில் செடார் மரங்களைச் சாய்த்ததும் காட்டெருதுகளைக் கொல்லும் உத்திகளை முதலில் அறிந்திருந்ததும் கடலில் கலம் செலுத்துவதை அறிந்தவனும் ஜில்காமேஷ்தான்.
தெய்வத் தொடர்புகளுடன் ஜில்காமேஷ் இருந்த போதும், அவன் போற்றப்படுவது மானுட சாகசங்களுக்காவும், தீரத்திற்காகவும்தான். ஜில்காமேஷ் வாழ்க்கை தொன்மங்களுடன் சேர்ந்திருந்தபோதும், அவனது இதிகாசம் தொன்மமில்லை என்பார் ஆண்ட்ரூ ஜார்ஜ்.
இளமை - முதுமை, வெற்றி - வீழ்ச்சி, மனிதர் - தெய்வங்கள், வாழ்க்கை - மரணம் ஆகியவை குறித்து இந்த இதிகாசம் நிறையவே பரிசீலிக்கிறது. ஜில்காமேஷின் தீர்க்கமிகு நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல், அவன் மேற்கொள்ளும் தேடலில் எதிர்ப்படும் துயரம் - வேதனையிலும் இதிகாசம் வலிமை கொள்கிறது.
நீ தேடிடும் வாழ்வை கண்டறிய முடியாது :
தெய்வங்கள் மானுட சமூகத்தைப் படைத்தபோது மரணத்தை மானுடருக்கு விதித்தனர்; வாழ்வைத் தமக்கென்று வைத்துக் கொண்டனர்.
வில்லியம் கிரஹாம் சுமேர் தனது Folkways - Strange patterns of culture a hunter book, 1940 நூலில் ஜில்காமேஷின் தோற்றுவாய் மற்றும் பிற பண்பாடுகளில் இதன் மாறுபட்ட வடிவங்கள் இருப்பதை ஆராய்கின்றனர்.
“ஆதாம் - ஏவாள் கதையின் வேறுபட்ட வடிவமே இது. ஜில்காமேஷ் எல்லாப் பெண்களாலும் போற்றப்படுபவன். உருக் நகரின் மூத்தோர், அவனது தாயான பெண் தெய்வம் அரூரிடம் தன் மகனைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு வேண்டுகின்றனர். அவள் விலங்குத்தன்மை மிக்க எங்கிடுவை உருவாக்குகிறாள். ஒரு கோயில்தாசி அவளை ஈர்த்து மயக்கி விலங்குகளிடமிருந்து விலக்கிக் கொண்டு வருகிறார். பாலியல் அறிவு கிட்டியதும் பிரக்ஞை, புத்திசாலித்தனம், நாகரிகம் எழுகின்றன. மெக்ஸிகோ மக்களிடம் இத்தகைய தொன்மம் உண்டு...”
இதனைப் பத்திரிகையாளர் கீர்த்திக் சசிதரன் இப்படி அணுகுகிறார்:
“ஜில்காமேஷ் இதிகாசத்தில் பாலுறவு அனுபவம், காட்டுமிராண்டியிலிருந்து ஒருவரை உருமாற்றுகிறது எனில், யூத - கிறித்துவ உலகில் பாலியல் அறிவுதான், மனிதனை ஏடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றக் காரணமாகிறது. கண்டறிவதன் முக்கியத்துவத்தை ஜில்காமேஷ் அறியுமாறு செய்யும் அர்த்தத்தைத் தேடல், யூத மரபில் மீறலின் தவிர்க்க முடியாமையாக சுட்டிக் காட்டப்படுகிறது.”
இது காதரின் கதை மட்டுமெனச் சொல்ல முடியாது. ஒரு காலத்தின் கதையும்கூட. காதரைப் போலவெல்லாம் இப்போது நீங்கள் ஒரு மனுசனையும் பார்க்கமுடியாது. காதர் என்ற உடன் கருத்தான் காதரில் போய் நிற்காதீர்கள். இவன் ஒரு மாநிறக் காதர். அப்போது எங்கள் கூட்டத்தில் கொஞ்சம் பிராயங்கூடியவன் என்பதால் அவன்தான் நாயகனாக இருந்தான். மற்ற இரு நாயகர்கள் ரசாக்கும், மொட்டை நாசரும். அவர்கள் மூவரும் எங்களுக்கு நாயகனும் கோமாளியும் கூட. நாயகனுக்கும் கோமாளிக்கும் ஒரு பேப்பர் கனத்தில்தான் வித்தியாசமிருக்கும். சின்ன வெங்காயத்தின் உலர்ந்த தோல் போல என்றும் சொல்லலாம். எங்களுக்குப் பதினாலு பதினைந்து வயதிருக்கும் போது காதருக்கு பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும். நாலு ஐந்து வயது வித்தியாசம். அப்பாஸ் குட்டியாப்பா சொல்வதுபோலச் சவத்த மண்ணள்ளிப் போடு என வயசை விட்டுவிட்டு கதையின் விசயத்துக்கு வந்து விடுவோம். இன்று இரவு இஷா தொழுகை முடிந்த பிறகு காதர் தொழுகைப் பள்ளிக்குப் பின்னாலுள்ள மணல் மேட்டில் மண்ணைக் குவித்து வைத்துச் சத்தியம் அடிக்கப் போகிறான் என்ற செய்தி நேரமே வந்து சேர்ந்துவிட்டது. அதற்கு முந்திய இரவு கூட அவன் தூறல் நின்னு போச்சி படத்தில் பாக்கியராஜ் மாந்தோப்பில் ரவுடிகளை அடித்து விரட்டுவதுபோல அப்படியே அச்சு அசலாக அவன் பூவாறு சென்று இருந்தபோது ஏழுபேரைத் தனியாளாக நின்று கடல் மணலில் போட்டு அடித்து விரட்டியதாகச் சொன்னான். அவன் அடிபுடி கதைகளைப் பேசும்போதோ அல்லது காதல் கதைகளைப் பேசும்போதோ அதன் ரேகைகளை முகத்தில் பரப்பிக்கொள்வான். அந்த ரேகைகளில் நமக்குக் காட்சி ஓடும். ஆனால் அவன் நேற்று காட்சியை ஓட்டியபோது இன்று சத்தியம் அடிக்கப் போவதைச் சொல்லவில்லை எனவே இந்தச் சத்தியமடிக்கும் விசயம் இந்தப் பகலில் மேற்கொண்ட முடிவாக இருக்கும். எழவுடுப்பானுக்கு இந்தப் பகலில் என்ன எழவு எடுத்ததோ தெரியவில்லை. காதரின் ஈட்டான் பள்ளியின் பின்னாலுள்ள மணல் மேடு, ரசாக்கின் ஈட்டான் ஐதுரூஸ் காம்பவுண்டிலுள்ள பழைய பாழடைஞ்ச கிணத்து மதில், மொட்டைய நாசரின் ஈட்டான் மாணிக்கம் வயலிலுள்ள வளைந்த கட்டைத் தெங்கு. இஷா தொழுகை நடக்கும்போது பள்ளி காம்பவுண்டுக்குள் போக முடியாது. “லெச்சணங் கெட்ட இபுலீசுவளே பள்ளியில தொழுகை நடக்கத்துல ஹவ்வாத்து மயிரா மறிஞ்சிட்டு கெடக்கியோ...Ó என யாராவது சத்தம் போட்டு தொழுகைக்கு செந்தூக்காகத் தூக்கிப் போய் விடுவார்கள். இஷா தொழுகை முடிந்து ஆட்கள் ஒதுங்கிய பிறகுதான் பள்ளியின் சின்னக் கேட் வழியாக வளாகத்தில் புகுந்து மூத்திரப்பெறை மதில் எட்டிச்சாடி மணல்மேட்டுக்குப் போக முடியும். நாங்கள் ஏழெட்டு பேர் உண்டு மைதீன், காஜா, ஷேக், நூகு, இக்கு, இதில் நேரமே நானும் சோமனும் பிள்ளைமார் தெருவிலுள்ள மூர்த்தியின் தம்பி மாதவனுமாக நாங்கள் பள்ளி பின்பக்க மூத்திரப் பெறை மதில் எட்டிச்சாடி மணல் மேட்டுக்குப் போய் விட்டோம். காதரின் சத்தியத்தை நினைத்து எங்களுக்குச் சிரிப்புத் தீரவில்லை. போனதடவை அவன் சொப்பனஸ்கலிதம் பற்றி அடித்த சத்தியமே இன்னும் விடை தெரியாமல் கிடக்கிறது. காதருக்கு பிற்பாடு நடைபெற்ற ஹெரணியா ஆப்ரேசன் பற்றியும் பின்னர் இந்தக் கதையிலேயே பேசலாம்.
அப்போது எங்களுக்கு ஹெரணியா என்று சொல்லக்கூடத் தெரியாது. எரணியா என்றும் புடுக்காப்புரேசன் என்றும் இரணியல் என்றும் சொல்லியிருக்கிறோம். இங்கு இரணியல் என்று ஒரு ஊர் இருப்பதும் கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது போலச் சொப்பனஸ்கலிதம் என்ற வார்த்தையும் கூடப் பிரமிப்பூட்டும் புதிய சொல்தான். என்ன காரணமோ தெரியவில்லை, அந்தச் சொல்லில் மிகக் கடுமையான போதையிருந்தது.
அன்று உறக்கத்திலேயே விந்து வெளியேறும் பேச்சைக் காதர் துவங்கிப் பேசிக்கொண்டிருந்தான். நாங்கள் கர்மசிரத்தையோடு காதைத் தீட்டி வைத்திருந்தோம். அவனுக்கு விந்து உறக்கத்தில் சுமார் அரை லிட்டர் அளவிலிருந்து முக்கால் லிட்டர் வரைக்கும் போவதாச் சொன்னான். காதரிடம் கதை கேட்கும் போது சிரிக்கக்கூடாது சிரித்தால் அவன் மணல் மேட்டிலுள்ள மணல் குவியலைக் கையால் குத்தியும் காலால் சமுட்டியும் கடும்டென்ஷனாகி விடுவான். முன்பு அவன் பண்டாரத்தோப்பிலிருந்து வாங்கி வந்த ஒரு கேன் கள்ளை அவனே எட்டிச் சமுட்டிக் கொட்டினான். இன்னொரு முறை அவன் உம்மா வாங்கிவரச் சொன்ன ஒரு கிலோ தக்காளிப் பழத்தை ஆத்திரம் அடங்கும் வரை ஒவ்வொன்றாக நசுக்கிப் போட்டான். தக்காளிப்பழம் நசுக்கிய போது நாங்கள் மேலும் சின்னப்புள்ளைகளாக இருந்தோம். அவன் “பாருங்கலே” என்றபடி ஒரு தக்காளிப் பழத்தை கையிலெடுத்து “இதாம்புல உங்க வெதக்கொட்டை... நான் இப்போ நசுக்கம்புலே” அவன் கையில் தக்காளி பிய்ந்து தெறித்தது. சோமனெல்லாம் அப்போது பயந்து ஓடியவன் நாலைந்து நாட்கள் காய்ச்சலில் கிடந்திருக்கிறான். தக்காளி மேட்டர் ஒர்க் அவுட்டான பிறகு பலநேரங்களில் தூசனக்கதைகள் பேச மணல்மேட்டில் கூடும் போது காதர் சில தக்காளிப்பழங்களை ரகசியமாக வைத்திருப்பான். எப்போது எப்படி எடுப்பான் என்று தெரியாது. பள்ளி கொடிக்கெட்டுக்கு மேஜிக் காட்ட வந்தவன் கைக்குட்டையிலிருந்து புறாவை எடுத்தது போலத் தக்க சமயத்தில் ஆஊவென ஓசையை எழுப்பியபடி தக்காளியை எடுத்துவிடுவான். காதருக்கு டென்சன் வந்து விட்டால் அவனுக்கு முன்னால் பேசவோ சிரிக்கவோ கூடாது, பயந்த மேனிக்கு முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எனவே அவன் சொன்ன அரை லிட்டரிலிருந்து முக்கால் லிட்டர் வரை விந்து வெளியேறும் அவனின் சொப்பன ஸ்கலிதம் பற்றிப் பயந்துபோய்க் கேட்டுக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அது உண்மையா பொய்யா என்று அப்போது தெரியவில்லை. சொப்பன ஸ்கலிதம் விசயம் வெளிவந்த நாலமத்த நாள் ஐதுரூஸ் காம்பவுண்ட் பாழடைந்த கிணத்துமதிலிலிருந்த ரசாக் ஏழுகடல் தாண்டிப் போய்ப் பழிவாங்கும் சில நாகங்களின் கதைகளைச் சொல்லி எங்களைப் பிரமிக்க வைத்துவிட்டுப் பின்னர்ச் சொன்னான். “முக்கால் லிட்டரெல்லாம் வாய்ப்பு கிடையாது... காதர் டூப்படிப்பான்... நம்ம பக்கராக்கா கடையில தண்ணி குடிக்கக் கப்பு இருக்குல்லா ?”
“ஆமா...”
“அந்தக் கப்புல முங்க முங்க கோருனா எவ்வளவு இருக்குமோ அவ்வளவு வரும்...”
“ஆனா காதர் அடிச்சி சொன்னானே...”
வட்டமான கிணத்துமதில் அமைதியாக இருந்தது.
மறுநாள் காஜாதான் பக்கராக்கா கடையில் போய்க் காக்கா இந்தக் கப்புல எவ்வளவு தண்ணி பிடிக்கும் என நைசாகப் பேசியபோது,
அவர் கப்பை ஒரு உருட்டு உருட்டிப் பார்த்து விட்டு, “என்ன ஒரு நானூறு மில்லி பிடிக்கும்டே” என்றார்.
காதரின் சொப்பனஸ்கலிதம் விசயம் மெல்ல பள்ளியின் பின்னாலுள்ள மணல் மேட்டிலிருந்து ஐதுரூஸ் காம்பவுண்டு பழைய பாழடைஞ்ச கிணத்து மதிலுக்கு மீண்டும் மீண்டும் வந்து அந்தாக்குல மாணிக்கம் வயலிலுள்ள வளைந்த கட்டை தெங்குக்கு வந்து கடைசியில் மாஹீன் மச்சானிடம் போய்ச் சேர்ந்தது. மாஹீன் மச்சானுக்கு நாற்பது நாப்பத்தி ஐஞ்சு வயசிருக்கும். மாஹீன் மச்சான் பயலைத் தெறக்கி நடக்கக் காதர் இரண்டு மூன்று நாட்களாக ஆளு தலைமறைவாகி அவனை ஈட்டானில் காணவில்லை. மோதியார்தான் கடைசியில மாஹீன் மச்சானிடம் கேட்டார் எதுக்கு நாலு நாளா காதர தெறக்கி நடக்கே...
“முழுமாடு போல வளந்த பொறவும் இந்தத் தூக்க ஒறக்கத்துல உடுத்துருக்க சாரத்தோட மோண்டு உடாம்ணு வீட்ல திட்டிட்டு கெடக்கா இந்தப் பன்னிக்குப் பொறந்தவன் டெய்லி ஒறக்கத்துல முக்கா லிட்டர் விந்து போவுதுன்னு சின்னப் பயலுவள்ட்ட கதை உட்டுருக்கான்...”
மோதியார் காணிக்கை பெட்டி பக்கமாக விழுந்து கெடந்தார். அவருக்குச் சிரிச்சி சிரிச்சி விலாபுறத்தில் வலி எடுத்தது. மாஹீன் நல்லா இருப்பே என்னைய கொண்டுபோய்ச் சர்க்கார் ஆசுத்திரியில விடு... இதான் கியாமத்து நாளுக்க அடையாளம் என்றபடி மெல்ல எழுந்து கொண்டார்.
காதரைப் பத்திருபது நாளாக ஈட்டானில் காணவில்லை. அவன் திருவிழா கடைக்குப் பெண்களுக்கு வளையல் போடும் வேலைக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். இதையொட்டி பள்ளி நேச்சைத் தொடங்கியதால் கூடி விளையாட நல்ல இசைவான சூழல் இருந்தது. அவ்விரவுகளில் நாங்கள் கொள்ளி வாய் பிசாசுகளைப் பிடித்து வரலாமென மொட்டை நாசரோடு கூடியிருந்தோம். அறுத்த வயலின் காய்ந்தநாற்றுச் சருகுகளைப் புடுங்கி நடுவயலில் போட்டு தீ கொளுத்த வேண்டும், தீ கொளுந்துவிட்டு எரியும் போது சுற்றிக்கிடந்து ஆடவேண்டும் என நாசர் சொல்லியிருந்தான். அவன் இதற்காக எங்களுக்குப் பொரிக் கடலையும் பிச்சபெருமாள் கடையிலிருந்து இழுவுன கருப்பட்டியும் தேங்காய்த் துண்டும் வாங்கி வைத்திருந்தான். எனவே நாங்கள் மாணிக்கம் வயலின் கட்ட தெங்கினருகே கொள்ளிவாய்ப் பிசாசை விரட்டிச்செல்ல ஆடுவதென முடிவெடுத்திருந்தோம். ஆட்டம் துவங்கியது. மொட்டை நாசர் கையில் சின்ன மடக்கு கத்தியும் அதன் முனையில் சுண்ணாம்பும் தடவி ரெடியாக வைத்திருந்தான். இடது கையில் ஒரு குப்பியும் இருந்தது. உண்மையில் நாங்களெல்லாம் பயந்து போயிருந்தோம் சோமன் நடுங்கி எனக்கும் காஜாவுக்குமிடையே ஒடுங்கியிருந்தான். மொட்டை நாசர் என்ன நடந்தாலும் ஆட்டத்தை விட்டு விடக்கூடாது என்றும் ஆட்டத்தைவிட்டால் கொள்ளிவாய் பிசாசு அடித்துவிடும் என்பதை முதலிலேயே எச்சரிக்கை செய்திருந்ததால் நாங்கள் பயந்து அழுத பிறகும்கூட ஒரு நொடிப் பொழுது இடைவெளியிலும் ஆட்டத்தை விடவில்லை. அல்லா ரசூல்யா முஹ்யித்தினே எனப் பயந்து அழுத மேனிக்கே ஆட்டம் உச்சமாகப் போய்க் கொண்டிருந்தபோது திடீரென மொட்டை நாசர் மாணிக்கம் வயலின் வேலி எட்டிச்சாடி ஓடினான். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் ஓடும்போது மூன்று பிசாசுகள் குப்பியில் மாட்டியிருப்பதாகக் குப்பியின் வாயைப் பொத்திக் கொண்டே சொன்னான். இதன் பிறகு எங்கள் எல்லோருக்கும் ஐந்தாறு நாட்களாகக் காய்ச்சல். ஆட்களெல்லாம் மொட்டை நாசரைத் தேடி நடந்தார்கள். பன்னிக்குப் பொறந்தவன் சின்னப் புள்ளையளக் கூட்டிட்டுப் போய்க் கொள்ளிவாய் பிசாசப் புடிக்கப் போறேம்னு பொரிக்கடலையக் கொடுத்துப் பயங்காட்டி உட்ருக்கான். சோமனுக்குக் காய்ச்சல் விடாமல் அடித்துக் கொண்டிருந்ததால் பள்ளி ஆலீம்சாவிடம் தண்ணி ஓதி கொடுக்க அவனின் அம்மை கூட்டிக் கொண்டு வந்தபோது ஆலிம்சா “பயல இங்கண உள்ள துக்கயள்ட்ட சேர உடாதே... எல்லா சைத்தான் பிடிச்சவனுவோ.”
“இங்கணதானே ஒண்ணுக்குள்ள ஒண்ணா கெடக்கோம் வேற எங்க உடது... புள்ளையளுவள்லா...”
மீண்டும் எல்லோருக்கும் காய்ச்சலெல்லாம் குணமாகி உசாராக நாலைந்து நாட்களானது. ஐதுரூஸ் காம்பவுண்டு பழைய பாழடைஞ்ச கிணத்து மதிலிலிருந்த ரசாக்கு தீவிர ஆலோசனைக்குப் பிறகு கேள்வியாகக் கேட்டான்.
“மொட்டை நாசரு மூணு கொள்ளிவாய் பிசாச குப்பியில பிடிச்சத நீங்க கண்ணால பாத்தியளா... ?”
“பின்னே ... என் கண்ணால பாத்தேன் மூணணத்த செந்தூக்கா தூக்கி குப்பியில போட்டான்... “ காஜா அடிச்சி சொன்னான்.
ரசாக்கு தூ தூ வென அவூதுபில்லாஹி சொல்லிய படி ஒம்பது தடவை துப்பினான். ஓந்தானைக் கண்டால் ஒம்பது தடவை துப்ப வேண்டும் எனவும் பாம்பருனையைக் கண்டால் பத்து தடவை துப்ப வேண்டும் எனவும் அணிலைக் கண்டால் ஆறு தடவை ஃபிளையிங் கிஸ்ஸடிக்க வேண்டுமென்பதையும் அவன்தான் முதலில் சொல்லியிருந்தான். பாளறுவான் இப்போது ஏன் ஒம்பது தடவை துப்புகிறான் என்று புரியாமல் பார்த்தோம். அவன் முகம் இருண்டு கிடப்பதைப் போல இருந்தது. மொட்டை நாசரின் குப்பியிலிருந்த கொள்ளிவாய் பிசாசு ரசாக்கின் முகத்தை மேவிக் கிடப்பதைப்போலப் படர்ந்திருந்தது. கல்லுவீட்டு சேக்கு பாழடைஞ்ச கிணத்து மதிலின் பின்பக்கம் ஓலைப்பட்டாசோடு மறைந்திருந்தான். மறுபடியும் ரசாக் காஜாவிடம்,
“என்ன சைசுல இருந்திச்சி”
“அஜீஸ் வீட்டுல கெட்டிப் போட்டிருந்த கிடாய்க்க பெட்டிச்சாவி போல இருந்திச்சி... “
“பெட்டிச் சாவியின்னா... ?”
“கிடாய்க்க கொட்டை.”
“அதுக்கு அப்படியா பேரு வச்சிருக்கியோ...”
“ஆமா...”
“கருப்பா...?”
“இல்லே செவலே...”
“அல்லாண...”
“அல்லாண... வாப்பாண...”
“குப்பியில எப்படி அடைச்சான்...”
வாவ கூவ மாவ... மாவ கூவ வாவ... பயலுவோ ரசாக்கைச் சுற்றிப் பாட்டாகப் பாடி கிணத்து மதிலைச் சுற்றிச் சுற்றி ஆடினார்கள். சுற்றி வரும்போது ஆட்டத்தின் இடையே சேக்கு ஓலைப்பட்டாசைக் கொளுத்தி ரசாக்கின் காலோடு போட்டுவிட்டான் அது படாரென ரசாக்குக்குப் பின்னால் வெடிக்க யாரப்பே என அலறியவன் ஐதுரூஸ் காம்பவுண்டின் பழைய பாழடைஞ்ச கிணத்தில் விழுந்தான். அந்தச் சின்னக் கிணத்திலிருந்து அல்லோ வாப்போ எனப் பெரிய சத்தமாக ரசாக் ஒப்பாரி வைத்தான். ஆட்கள் ஓடி வந்தார்கள். பெரிய சேதாரமில்லை, முட்டங் காலுக்குக் கீழே சின்னதாகச் சிராய்ப்பு. ரசாக்கை வீழ்த்தியதிலிருந்து துவங்கியது பயலுவளின் புதிய ராஜ்யம். இது முடிந்து மூணு மாசத்துக்குப் பிறகு மொட்டை நாசரை மாணிக்கம் வயலின் கடைசி அத்தத்தில் முறிந்து கிடந்த வளைந்த தெங்கில் உசுப்பேத்தி உசுப்பேத்தி குப்பியில் பேய் பிடித்த குவலயம் போற்றும் குலத்தென்றல் நாசரே...எனக் கோரசாகப் பாடி தெங்கின் மறுமுனையில் கிடந்து பயலுவோ துள்ளோ துள்ளு எனத் துள்ளியதில் கொண்டை அடந்து யா ரப்பி யா நாயனே... எனப் பொத்தென விழுந்ததும் பயலுவோ ஆளுக்கொரு பக்கமாக தெறித்து ஓடினார்கள். பண்டாரம் ஆசானிடம் மொட்டை நாசரைக் கொண்டுபோனதும் அவர் பார்த்து விட்டு பொஜம் இறங்கியிருப்பதாகக் கூறித் துணியைப் பந்துபோலச் சுற்றிக் கம்முக்கூட்டில் ஏந்தி வைத்துக் கெட்டி கையில் சீம்புளி துண்டுகளைச் சுற்றிக்கட்டி நல்ல தைலம் கோரிவிட்டு அனுப்பினார். நாலு மாசத்துக்குக் கெட்டப் பிரிக்ககூடாது என்ற படி. மொட்டை நாசரும் ரசாக்கும் சந்தித்துக் கொண்டு பயலுவோ பழையதுபோல இல்லே... என்னத்தையும் போய் வாய உடாதே... அன்னைக்கு ஆ ஊண்ணு மின்னல் கணக்க என்னைய கிணத்துல தள்ளிட்டானுவோ...
சொப்பனஸ்கலிதம் மேட்டரில் எஸ்ஸான காதர் ஒரு வருடத்துக்குப் பிறகு ஊருக்குள் வந்தான். ஐந்து நாட்கள் விடுமுறையில் வந்திருப்பதாக முதலில் சொன்னவன் பின்னர்த் திரும்பிப் போகவில்லை. அவன் ஓராண்டு கேரளாவின் கொல்லம் அருகே ஒரு மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்ததாகவும் அங்கு அவன் நான்கு பெண்கள் வரை காதலித்ததாகவும் இதன் காரணமாகத் தன்னிடம் சில காதல் கதைகள் இருப்பதாகவும் மீண்டும் நாம் மணல் மேட்டில் சந்தித்துக் கதைகள் பேசலாம் என்றான். முதலில் நம்பிக்கை வரவில்லை ஆனால் அவனின் மொழி நம்பும்படியாக இருந்தது. அவன் கேரளாவில் ஓராண்டு ஜீவித்திருந்ததின் காரணமாக ஆட்டோவை ஓட்டோ என்றும் ஆரஞ்சியை ஓரஞ்சி என்றும் ஆப்பிளை ஓப்பிள் என்றும் சொல்லிக் கொண்டான். பயலுவளுக்கு ஓரஞ்சியிலும் ஓட்டோவிலும் வராத ரசனை ஓப்பிளில் வந்து நின்றது காதரின் பாக்கியம்தான். காதர் ஆள் கொஞ்சம் மினுங்கியிருந்தான். அவனின் மீசைக் கூட கொஞ்சம் வளர்ந்திருந்தது. அவன் புகைப்பிடிக்கவும் படித்திருந்தான். அவன் புகையை மெல்லமாக இழுக்காமல் உலகிலுள்ள எல்லாக் காற்றும் இன்றே தீர்ந்துவிடும் சூழலில் ஒருவன் சுவாசிப்பது போலப் புகையை இழுத்து கொப்பளித்து விழுங்கி மூக்கு மற்றும் வாய்வழியாக வெளியேற்றினான். அவன் விரைவில் எங்கள் எல்லோரையும் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்குக் கொண்டு வர விரும்பியிருந்தான். காதரை நாங்கள் எல்லோரும் மச்சான் என்று அழைக்கும்படி கேட்டுக் கொண்டபோது சேக்குச் சொன்னான் “நீங்கள் எனக்கு முறைக்குக் குட்டியாப்பா வாக வருவீயோ நான் என்னனாக்கும் மச்சாம்னு கூப்பிடது...”
“குட்டியாப்பாயும் மயிருந்தான்... நீயும் மச்சாம்னே கூப்பிடு... “பிறகு காதர் எல்லோருக்கும் மச்சான் ஆனான். சோமனும் மாதவனுக்கும் கூடக் காதர் மச்சான்தான். காதர் வேகமாகப் போகும் போது நாங்கள் கூட்டாகக் கேட்போம் “மச்சான் தூரமா...”
“இன்னா... பாரேத்துல போயி ஒரு அரைக்கிலோ ஓப்பிள் வாங்கிட்டு வந்துடுறேன்...”
காதர் எங்குப் போய்த் தொலைந்தால் என்ன, எங்களுக்கு அவன் வாயால் ஓப்பிள் என்ற சொல்லைக் கேட்க வேண்டும் அவ்வளவுதான். காதரின் ஓப்பிள் என்ற சொல் போல இதுவரை உலகத்தில் வேறு ஏதேனும் வசீகரமான சொல் இருக்கிறதா என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
மொட்டை நாசர் கன்யாமரிக்குப் போய் முழுமையாகச் செட்டிலாகிவிட்டான் ரசாக் இங்கொரு கில்ட் கடைக்கு வேலைக்குப் போகிறான். காலையில் போனால் இரவு ஒன்பது பத்துமணியாகிவிடும். வெள்ளிக்கிழமை அவதிநாள். அவன் அன்று உடு துணிகளை நனைத்துப் பொறுக்கி எடுத்து மதியம் பள்ளிக்குக் குத்பா தொழுகைக்கு வந்தால் ஒன்றிரண்டு வார்த்தைகள் அவ்வளவுதான். நிலவியல் மாற்றமாக ஐதுரூஸ் காம்பவுண்டை இடித்துப் பாதை போட்டு விட்டதால் பாழடைந்த கிணற்றின் கதை முடிந்தது. ஆனாலும் ரசாக்குக்கு இந்தத் துனியா வாழ்க்கையில் சின்னக் கூதியுள்ளையள் ஒரு ஓலைப்பட்டாசைப் போட்டு உள்ளே தள்ளியது மறக்கவியலாதது. ரசாக், காதர் ஊர்வந்து இறங்கியிருப்பதை அறிந்து வெள்ளிக் கிழமை குத்பாவுக்குப் பிறகு அவனிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிச் சென்றான் போலிருக்கிறது. பழையது போல அவனுவோ இல்லே... நீ முன்ன மாதிரி சொப்பனஸ்கலித கதையள உட்டியன்னா மலத்திப் போட்டு ஒருக்ககூட மார்க்கம் எடுத்துப் போடுவானுவோ... எச்சரிக்கையாகச் சொல்லி இருக்கிறான்.
காதர் கேரளாவிலிருந்து வந்த பிறகு அவனின் புதிய வெள்ளை பெல்பாட்டத்துக்கு நாப்பத்தியிரண்டு இஞ்சி அகலம் வைத்து அதன் அடியில் நல்ல கனமான ஜிப்பும் வைத்திருந்தான். அவன் நடக்கும் போது தொடை வரை பேன்று இறுக்கமாகவும் அதன் கீழே மெல்ல விரிவடைந்து கீழே குடையைத் திருப்பிப் பிடித்தது போல இருக்கும். அவன் அதைத் துவைத்துக் காயப்போடும் ஸ்டையிலும் கூட வித்தி யாசமானதுதான். நேராக அசையில் போடாமல் அவன் வீட்டில் நின்றிருந்த முருங்கை மரத்தினருகே இடுப்புக்கு மேலே உடலற்ற முண்டம் நிற்பது போலக் கயிற்றில் நேராகக் கட்டித் தொங்கவிட்டிருப்பான். காதர் கேரளாவிலிருந்து வந்த பிறகு இதுவரை மூன்று சத்தியங்கள் அடித்திருக்கிறான். ஏற்கனவே மணலாகக் கிடக்கும் பள்ளியின் பின்னாலுள்ள மணல்மேட்டில் மணலைக் குவித்து வைத்து கையால் மூன்று முறை ஓங்கி அடிப்பான் அதன் வடிவம் இப்போதைய புரிதலில் சொல்வதாக இருந்தால் சசிகலா பெங்களூர் சிறைக்குப் போகுமுன்னால் ஜெயலலிதா சமாதியில் அடித்த சாயலைப்போல ஒப்பிடலாம். காதர் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறான். சத்தியம் ஒன்று அவன் சாலுஅலெக்ஸ் பீட்டர் தாமஸின் மகள் மேரி லூயிஸ் ரேபேக்காளைக் கல்யாணம் பண்ணியே தீருவேன் என்றும் இது வாகூர் பிள்ளை சாயிப்பு குவித்த மணல்மேடு என்றால் இந்தச் சத்தியம் பலிக்கவில்லை என்றால் இந்த மணல்மேடு இரவோடு இரவாகக் கடலாகட்டும் என்று ஓங்கி மூன்று முறை அடித்தான். காதர் சொன்ன பெயர்களெல்லாம் புதிதாக இருந்தது. இதன் பிறகு காதரும் சோமனும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். ஒரே நெருக்கம் எப்போதும் ஒன்றாகவே சுற்றினார்கள். அவர்கள் கிஸ்ஸடிப்பதும் கட்டிப்பிடிப்பதுமாகக் கிடந்தார்கள். முதல் சத்தியமடித்த எட்டுக்கு காதர் இரண்டாவது சத்தியத்தில் முதல் சத்தியத்தைப் பின்வலித்துக் கொண்டான். சாலு அலெக்ஸ் பீட்டர் தாமஸின் மகள் மேரி லூயிஸ் ரேபேக்காளுக்கும் செய்யதுகுஞ்சி ராவுத்தரின் மகன் டேஸ் டேஸ் காதருக்கும் இத்தோடு எல்லா எடவாடுகளும் முடிகிறது. இனி கடலாகாமல் மணல் மேடு மணல்மேடாக இருக்கனும் யாரப்பி யா நாயனே யாரசூல் முஹாயித்தீனே ஒங்க காவல் எனக் குவித்திருந்த மணலில் ஓங்கி மூன்றுமுறை அடித்தான்.
மூன்றாவது சத்தியம் அவன் வேலை பார்த்த மிட்டாய் கம்பெனி முதலாளியின் மகள் சீனத்தைக் கட்டுவேன் என்பதாக இருந்தது. சீனத்து அவள் வீட்டில் குண்டு பல்பைப் பக்குவமாய் உடைத்து மேல் மூடியை நீக்கி பதினோரு பல்புகளில் விதவிதமான கலரில் தண்ணீர் நிரப்பி அவளின் மாடியில் கட்டி தொங்கவிட்டிருந்தாள். அவள் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம். அப்துல் ஜப்பாரின் பேரன் உவைசும், கருணாநிதி சேனப்பிள்ளையின் மகன் நூகு தில்கரமியும் மிட்டாய் கம்பெனி வேலைக்காரனான காதருமாக மூன்று பேருக்கும் அவள் மீது ஒரே நேரத்தில் காதல் மலர்ந்திருந்த நேரம். நூகு தில்கரமி எதிர்வீட்டுக்காரன் அவனிடம் ஒரு ஏர்கன் இருந்தது. அவன் அதன் உதவி கொண்டு சீனத்தின் கலர்தண்ணி பல்பைச் சுட்டு வீழ்த்தினான். உவைசு ஒரு சீப்பாங்கல் கொண்டு இரண்டு பல்புகளை ஒற்றையடியில் வீழ்த்தித் தள்ளினான். காதர் விசயம் தெரியாமல் ஒரு கவியாக உருக்கொண்டு அவன் ஒரு லெட்டரில் நாலு தெய்வீக லவ் வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி நேராக அவளிடம் போய் இது என் அன்பின் காணிக்கை எனக் கொடுத்தான். சீனத்து, காதரின் காணிக்கையை அப்படியே கொண்டு போய் வாப்பாவிடம் கொடுத்தாள். வாப்பா ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டு கருணாகப் பள்ளியருகே ஒரு பள்ளிவாசலில் காணிக்கைப் பெட்டி உடைச்ச வழக்கில் இக்பால் எஸ்ஐக்கு ஒரு குற்றவாளி தேவைப்படுவதாக அறிந்து கூப்பிட்டுச் சொன்னார். இக்பால் வந்து காதரைக் கொண்டு போனான். மூன்று நாட்கள் போட்டு நல்லா புரட்டி எடுத்து பொரியக்கூடிய நிலையில் காதரை ஊருக்கு ஏத்தி விட்டார்கள். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மாஹீன் மச்சான் கொல்லம் போய்வந்த பிறகுதான் கதை வெளியே உலாவத் துவங்கியது. கதை வெளியே பரவிக்கொண்டிருந்த அந்த நாளில் உண்மையில் காதர் அரைக்கிலோ ஓப்பிள் வாங்கப் போனவன் திரும்ப வரவில்லை. அவன் கன்யாமரியில் மொட்டை நாசரோடு கூடிவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல மணல்மேட்டுக்கு வந்து சேர்ந்தது. சோமன்தான் காதர் மச்சான் இல்லாமல் ரொம்பவும் போரடிப்பதாகச் சொல்லிக் கொண்டே மணல்மேட்டில் கிடந்து பாடினான். இடையில் மொட்டை நாசர் ஊருக்கு வந்து காதரின் வீட்டிலிருந்து அவனின் நாற்பத்தியிரண்டு இஞ்சி பெல்பாட்டம் பேன்றை இரகசியமாக வாங்கிக்கொண்டு போனதாக மணல்மேடு சலசலத்துக் கொண்டு கிடந்தது. எல்லாம் அப்படி இப்படி ஒரு ஆறுமாதம் ஓடியதும் ஒருநாள் மாலை நேரம் காதர் மீண்டும் எழுந்தருளினான்.
இம்முறை அவன் மணல்மேட்டுக்குச் செக்ஸ் சீட்டுக்கட்டுக் கொண்டு வந்திருந்தான். மொத்தம் ஐம்பத்தியிரண்டு கார்டுகள். எல்லா கார்டுகளிலும் வெள்ளைக்காரிகளின் நிர்வாணப்படங்கள். ஒவ் வொன்றும் ஒவ்வொரு கோலத்தில். எல்லோரிடமும் கார்டு கைமாறிக் கொண்டே இருந்தது. காதர் மச்சான் உண்மையில் பெரிய சகாப்தம்தான். அவன் ஆர்வம் பூத்துக் குலுங்க சோமனை மடியிலமர்த்திக் கொண்டான். ஆட்டின் குலானும் இஸ்பேட் ஏழும் டைமன் எட்டும் காதரின் கையிலிருந்தது. மணல்மேடு நிசப்தம் சூடியிருந்தது. எல்லாவனுக்கும் கண்களின் கருமணிகளைக் காதர் மச்சான் நிலைத்திருக்க வைத்திருந்தான். எல்லாம் அரைமணி நேரம்தான் சீட்டுக் கட்டைத் திரும்ப வாங்கி எண்ணிய போது மொத்தம் ஏழு கார்டுகள் குறைந்திருந்தன. மச்சான் டென்சன் ஆனான். வரிசையாக எல்லாவனையும் செக் பண்ணிய போது காஜாவின் கைலியினுள் கிளாவர் ராணியும் ஆட்டின் பத்தும் கிடந்தது. அவன் அல்லாவைக் கொண்டும் அவனின் வாப்பாவைக் கொண்டும் அவ்லியாக்களைக் கொண்டும் சத்தியம் அடித்தான் கைலியில் தனக்குத் தெரியாமல் விழுந்து கிடந்ததாக. காதர் மச்சான் பொறுத்துக் கொண்டு இன்னும் ஐஞ்சு கார்டு இப்போ வெளியே வரனும் இல்லண்ணா குடும்பத்தையே உப்பு வச்சி கிழிப்பேன் என்றதும் மச்சான் இன்னா மண்ணுல மூடி கெடக்கு என இக்கு மூன்று கார்டுகளைக் காட்டிக் கொடுத்தான். இன்னும் ரெண்டு கார்டு. ஒருவனும் அசங்கவில்லை. மச்சான் சோலே படத்திலுள்ள அம்ஜத்கான் போலச் சுற்றி வந்தார். ஆட்டின் ஒன்பதும் கிளாவர் கிங்கையும் காணலே... எடுத்தவன் அவனா வெளியே போடனும் இல்லாட்டி என்ன நடக்கும்னு மச்சானுக்கே தெரியாது மச்சான் மிருகமாவான் மச்சான் கொலைப்பான் என அவனையே அவன் குறிப்பிட்டுப் பேசினான். இன்னும் எவனும் அசங்கவில்லை. மச்சான் ஆவேசமாக எல்லாவனும் சீலைய உறிஞ்சி போடுங்கலே என்றதும் எல்லோரும் கைலியைக் கழற்றிப் போட்டோம். அப்போது கூட்டத்தில் சோமன் மட்டும் ஜட்டி அணிந்திருந்தான். மச்சான் இழுத்து ஜட்டியைத் தாத்துவிட்டதும் ஆட்டின் ஒன்பதும் கிளாவர் கிங்கும் விழுந்தது. காதர்மச்சான் எடுத்துவிட்டு பிசுபிசுப்பாக இருந்த கையை உதறிக்கொண்டான். கிளாவர் கிங்கிலிருந்த வெள்ளைக்காரி அதீத உணர்வைப் பொங்கச் செய்யும் ஒய்யாரமான உடல்வாகுடையவளாக இருந்தாள். அந்த வருகையில் காதர்மச்சான் எங்கள் எல்லோர் மனதிலும் கிளாவர் கிங்கை ஏற்றிவிட்டு உடனேயே சென்றவர் நாலாவது நாளிலேயே கன்யாமரியைக் காலி செய்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டான்.
வந்தவனுக்கு எங்களைக் கிளாவர் கிங்கிலிருந்து மீட்டெடுப்பதுதான் முதல் வேலையாக இருந்தது. தூங்கினால் நடந்தால் இருந்தால் எதைப்பார்த்தாலும் எல்லாம் இயல்புகளை மீறி கண்களில் கிளாவர் கிங் நிலை கொண்டிருந்தது. எங்கள் கண்கள் பூஞ்சையடைந்து உடல் உருகிக்கிடந்தது. நல்ல வேளை நாலாவது நாளிலேயே பொன்னு காதர்மச்சான் திரும்ப வந்தான் இல்லையென்றால் பத்திரகாளியின் கிணத்துமூடியின் வளையங்களில் நுளைந்து வெளியேறுமளவுக்கு உருகி இளைத்திருப்போம். காதர் மச்சான் வெள்ளைக்காரிகளின் நிர்வாணப் படங்களற்ற புதிய சீட்டுக்கட்டைக் கொண்டு வந்து ஒரு கதை சொன்னான். முன்னூற்றி எம்பத்தி ஏழாம் ஆண்டு ஒரு ராணி வசித்து வந்தாள் அவளுக்கு நாற்பத்தி ஆறு வயது நிறைவுற்றிருந்தது. அவளுக்கு இரண்டு ஆண் மகன்கள். மூத்தவன் பெயர் ஜாக் அடுத்தவன் பெயர் கிங். மூத்தவனுக்குப் பத்து வயது இளையவனுக்கு ஒன்பது வயது. அவள் ஐந்து ஆண்டுகள் அரசாட்சி செய்தாள். காதர் மச்சான் சொன்ன இந்தக் கதை நாம் சீட்டுக் கட்டில் புகுத்திக் கொண்டு நாம் அதற்குள் கிடந்தால் நமக்குச் சீட்டுக் கட்டு மந்திரம் கைகூடும். நாங்கள் படிப்படியாக இந்தக் கதையில் சந்தேகங்களை அருமை மச்சானிடம் நிவர்த்திச் செய்து செய்து தேர்ந்த சீட்டுக்கட்டு மந்திரவாதிகளாக மாறியிருந்தோம். நினைத்த கார்டை எடுத்துத் தருவது, கார்டுகளைக் கண்களை மூடிக் கொண்டு எண்ணி எறிவதென எங்கள் முன்னிருப்போர்கள் அண்டம் கலங்குமளவுக்கு அவர்களை எல்லாம் மிகைத்திருந்தோம். காதர் மச்சான் எங்களை இந்தக் கதையின்பால் புறட்டித் தள்ளாவிட்டால் நாங்கள் கிளாவர் கிங்கிலிருந்து மீண்டிருக்க முடியாது. நாங்கள் முற்றிலுமாக மீண்டும் மாணிக்கம் வயலின் பக்கவாட்டிலுள்ள ஜெம்மி நிலத்தில் அமர்ந்திருந்த ஒரு பகலில் சோமன் அரக்கப்பரக்க வந்து மச்சான் இன்று இரவு மணல்மேட்டில் சத்தியமடிக்கப் போவதாகவும் பின்னர் நமக்கெல்லாம் புதிய ஒரு A கதை சொல்ல இருப்பதாகவும் தகவல் சொன்னான்.
இஷா தொழுகையெல்லாம் நிறைவுபெற்றுப் பள்ளி வளாகம் ஆள் அனக்கம் தீர்ந்த பின்பு ஒவ்வொருவராக பின்பக்கமாகப் போய் மூத்திரப்பெறை மதிலெட்டிச்சாடி மணல்மேட்டுக்கு வந்தாகிவிட்டது. காதர்மச்சான் தனக்கு முன்னால் மணலைக் குவித்து வைத்திருந்தான். நாங்கள் இப்போதெல்லாம் காதர் மச்சானை எதிர்த்துப் பேச ஆரம்பித்திருந்தோம், போன தடவைக்கூடத் திட்டமிட்டுப் பேய் பந்து விளையாடக் கொண்டு வந்து மச்சானை மணல் மேட்டில் போட்டு நய்யப் புடைத்தெடுத்திருந்தோம். மச்சானின் உடம்மெல்லாம் தடிப்புத் தடிப்பாகக் கிடந்தது. மகாராணிக் கதையைக்கூடச் சேக்கு மகா ராஜா கதையாக மாற்றி மச்சானிடமே சொன்னான். மச்சான் அன்று மறுநாள் அரைக்கிலோ தக்காளியோடு வருவதாகக் கடும் சினத்தில் எழுந்து போனான். அடுத்த வாரம் மச்சானைக் கூட்டிக்கொண்டு ஆத்தங்கரைப் பள்ளிக்குப் போகும் வழியில் திருவம்பலபுரம் தாண்டியதும் மாலைப் பைனியும் தக்காளிஜாமும் கலந்து கொடுத்து பீ தெறிக்கவிட வேண்டுமென ஒரு திட்டமிருந்தது. ஒரு சால்வை போட்டுக் குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலின் மீது மச்சான் சத்தியமடித்தார் தாடிப்பெறை தங்கச்சங்கிலி தாஸீம்பீவியைக் கெட்டுவேன் என்று. மணல்மேடு நடுங்கியது. வடக்க மலை தெக்க கடலு நடுவுல ஆறு. எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை இருட்டில் ஒரு பந்து போல வந்து காதர்மச்சானின் முகத்தில் விழுந்துடைந்த பிளாஸ்டிக் பையிலிருந்த மீன்தண்ணி. நாத்தம்னா நாத்தம் படச்சவனே இது என்ன குதரத்து. எல்லாரும் ஓட்டம். காதர் கிட்டே போவமுடியாது. குவிஞ்ச மணல் அப்படியே இருக்கு. அவனால கண்ணு தொறக்க முடியலே. மீன் தண்ணீயில அழுவுன ஆட்டுக்கொடலையும் கலக்கிருப்பானுவோ போல. மறுபடியும் காதருக்கப் பொற மண்டையில இன்னொரு பந்து வந்து விழுந்து. காதர் சத்தமாகச் சொன்னான் மச்சினா எவனோ பீயக் கலக்கி அடிக்கானுவோ. நாங்கள் மதிலெட்டிச்சாடி மாணிக்கம் வயலின் வரப்பு வழியாக விழுந்து புரண்டு ஓடிப்போய்ச் செம்பூத்தில் விழுந்தோம். அருமாந்த காதர்மச்சான் என்னவானான் என்பது தெரியவில்லை. செம்பூத்தில் கிடந்த சோமன் சொன்னான் தள்ளே அரை லிட்டரு A கதை சொல்லுவாம்னு வந்தேன். எழவு இப்படி ஆயிப்போச்சே... சோமன் அரை லிட்டர் எனக் குறிப்பிட்டது காதர் மச்சானைத்தான். செம்பூத்து என்பது ஒரு சின்ன நீர்நிலையின் பெயர். மேட்டு வயலின் மத்தியில் தாழ்ந்து கிடந்தது. நீரில் வெங்கல மணம் பரவி நிற்கும். நீண்ட நேரம் நீராடினால் உதட்டுக்கும் நாடிக்கும் நடுவே உள்ள பகுதியில் வெங்கலக் கலரில் மகிழி பிடித்துவிடும். அன்று நல்ல நிலவொளி வேறு. திடீரெனச் செம்பூத்தைச் சுற்றிலும் பீ நாத்தம் பரவியது. நாங்கள் பார்வையைப் பயத்தோடு திருப்பியபடி பார்த்தபோது காதர்மச்சான் நைஞ்சி பிஞ்சி நாற்றமெடுத்து மேட்டில் நின்றபடி அழுதுகொண்டே செம்பூத்தில் குதித்தான். நீருக்குள் மறைந்து வாழும் லெச்சி நிர்வாணமாகக் கரையேறி ஊளையிட்டபடி ஓடிப்போனாள். பரந்த தரிசு நிலத்தின் நடுவே இரயில் இரவில் சப்தமிட்டபடி ஓடுவது போல இருந்தது. இன்னாபிடி என்று போனது இரண்டரை வருசம், மச்சான் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கிற சமயத்தில் ஊர் வந்து சேர்ந்தார். மச்சான் இல்லாத இந்த இடைபட்ட வருடங்களில் ஓராண்டுக்கு மேலாக மொட்டை நாசரும், கில்ட் கடையில முதலாளியிடம் ஏவி விட்டு ரசாக்கின் வேலையைக் கெடுத்து மீதி காலத்தை அவனோடுமாகக் களித்திருந்தோம்.
மச்சானின் லுக் நிறைய மாற்றம் கொண்டிருந்தது. முதலில் அவனோடு பழையது போலத் தொடர்பு கொள்ளலாமா என்ற தயக்கத்தைச் சோமன்தான் போய்ப் பேசிவிட்டு வந்து “நம்ம பொன்னு காதர் மச்சான் அப்படியேதான்... ஒரு மாற்றங் கிடையாது...” நாங்கள் பழையதுபோலக் கூடினோம். ஒரு பிரஞ்சி தாடி மச்சானின் தோற்றத்தில் உப்பலாக இருந்தது. பரவாயில்லை போகட்டும் இம்முறை இரண்டரையாண்டு கதைகள் என்றால் சும்மாவா மூன்று நான்கு நாட்களாகப் பொளந்து கட்டிவிட்டான். பள்ளியில் புதிய மோதினார் என்பதால் அவருக்குக் காதர் கொஞ்சம் அதிசயமாக இருந்தான். பம்பாய் டெல்லி சூரத் என காதர்மச்சானின் கதைகள் ஆலமரத்தின் விழுதுபோல ஆடிக்கொண்டிருந்தது. ஒரு வாரம் சென்று மணல்மேடு மீட்டிங்கில் காதர்மச்சான் இதை யாரிடமும் சொல்லக்கூடாது எனச் சத்தியம் வாங்கிக் கொண்டு சொன்ன ஒரு ரகசியம் முக்கியமானது. ஒரு A படத்தில் ஹிந்தி நடிகையுடன் நடித்ததாகவும் பிறகு அவள் மூன்று நாட்கள் அவளின் கெஸ்ட்ஹவுஸ்க்கு மச்சானைக் கொண்டு போய்ப் பிழிந்தெடுத்ததாகச் சிலாகித்துச் சொன்ன போது நாங்கள் கண்கள் கலங்கியிருந்தோம். சோமனுக்கு மச்சானோடு பம்பாய்ப் போகலாமென்று ஒரு யோசனை இருந்தது. மச்சான் சரியாகப் பத்து நாட்களுக்குள் அசல் ஊர்க்காரனாக மாறிக்கொண்டான். தொடர்ந்து மச்சான் A கதை A படம் என நடந்தவர் திடீரென A படம் போடும் ஐடியாவைச் சொன்னார். தம்புரான் பிள்ளையின் கடுவாயில் குடோனுக்குப் பின்னால் பார்ஷா சாயிப்பின் கோரம்பாய் குடோனில் A படம் போடலாம் என முடிவானது.
சீலனிடம் வீடியோவும் டெக்கும் நூற்றிப்பத்து ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்தால் மூணு கேசட் தருவான் என்றும் தலைக்கு ஐந்து ரூபாய்த் தந்தால் A படம் சக்ஸஸ் ஆகும் என்றதும் நாள் குறிக்கப்பட்டது. நாங்கள் பனிரெண்டுபேர் மாதவனிடம் ஐந்து ரூபாய் இல்லை என்பதால் சோமன் இரண்டு ரூபாயும் மைதீனும் காஜாவுமாக மூன்று ரூபாயாகப் போட்டுமொத்தம் எங்கள் சார்பில் அறுபது ரூபாய் மச்சானிடம் கொடுத்து விட்டு நாங்கள் மணல் மேட்டில் கனவுகளோடுக் கிடந்தோம். மேலும் காதர் மச்சான் யார் யாரிடம் காசு பிரித்தான் என்று தெரியாது. மொட்டை நாசர் ஊரில் நடமாடினான். ரசாக்கும் கடைக்கு லீவு என்று காலையிலேயே பக்கராக்கா கடையில் சொல்லியபடி நின்றிருந்தான். அந்த நாளின் இரவு எட்டுமணிக்கு மேல் பார்ஷா சாயிப்பின் பெரிய கோரம்பாய்க் குடோனில் நல்ல இருள் மூடிக்கிடந்தது. நாங்கள் பனிரெண்டு பேரும் ஏழு அம்பதுக்கே உள்ளே போய் இருட்டோடு இருட்டாகக் கோரம்பாய்க் கட்டுகளுக்கிடையே மறைந்திருந்து கொண்டோம். யாரும் பேசக்கூடாது என்றும் சவுண்ட் வைக்க மாட்டேன் என்றும் சவுண்டு வைத்தால் போலிஸ் ஒயர்லெஸ்ஸில் மாட்டிக் கொள்வோம் என்றும் முன்னமே சொல்லியிருந்தான். நேரமாகிக் கொண்டிருந்தது. புதிது புதிதாக ஆட்கள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கும்மிருட்டு யார் எவர் என்று தெரியவில்லை. காதர்மச்சான் தாறுமாறாகப் பணம் பிரித்திருப்பான் போல. உள்ளே வந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு கோரம்பாய்க் கட்டுக்குப் பின்னால் மறைந்திருந்தனர். எனக்கென்னமோ காதர் மச்சான் ஜமாஅத்திலுள்ள வரிக்காரன்கள் அனைவரையும் உள்ளே ஏற்றிவிட்டான் போலத்தான் தெரிகிறது. குடோன் அறைக்குள் செம்பூத்திலிருந்து நிர்வாணமாய்ச் சாமத்தில் ஓடிய லெச்சி இங்கு அடைக்கலம் புகுந்ததுபோல அவள் வவ்வாலாகப் பறக்கிறாள். இருள் இருள் இருள். பேச்சற்ற மௌனம் ஒரு மைய்யத்தைப் போல கிடக்கிறது. காதர்மச்சான் கடைசியில் எட்டரை மணிக்கு குடோனின் மெயின் கேட்டைப் பூட்டியபடி வருகிறான். ஒன்றும் தெரியவில்லை. ஒலியின் அனுமானத்தின் உத்தேசங்கள் தான். மச்சான் தீப்பெட்டியைப்பற்றித் தீக்குச்சி வெளிச்சத்தில் படத்தைத் தட்டி ஓடவிட்டார். படச்சவனே இந்த துனியாவில் முதன் முதலாகப் பிம்பத்தில் பார்க்கும் நிர்வாண பெண் உடல். உடல் நடுங்கி நாவு துடித்துப் பதறிய நடுக்கம். காஜாவும் சோமனுமாக ஏதோ கிசுகிசுத்து நகர்ந்த போது அங்கிருந்த பிளக் போர்ட் இருட்டில் தட்டி விழுந்து எல்லாம் நாசமாய் போனது. டீவியின் வெளிச்சம் போனதும் லெச்சியும் போனாள். காதர்மச்சான் அறுத்துக் கிழித்துக்கொண்டே தீக்குச்சியைப் பொருத்தி அந்த வெளிச்சத்தில் வயர்களை இழுத்தெடுத்துப் பார்த்தார். எங்கே வயர் பிரிந்தது என்று ஒன்றும் தெரியவில்லை. இருட்டில் நரங்கி நரங்கி வந்த சோமன் க்யா குவா மச்சான் என்ற தும் குச் நகி என்றபடி தலையைச் சொறிந்து கொண்ட போது மேலும் நெருங்கிய சோமன் மச்சான் நமக்குச் சாப்பிட ரெண்டு ஓப்பிள் இருக்கு எடுக்கவா... என்றதும், வீடு எரியும்போது நீ வாளை வெட்டாதடே என்றபடி வயரை வேகமாக இழுத்தெடுத்தான். அது பிளக்கோடு பூஞ்சி வந்தது. ஒன்றும் ஒப்பேறவில்லை. பொறுமை இழந்த காதர்மச்சான் கடைசியில் லைட்டைப் போட்டார். வெளிச்சம் பரவியது.
கிட்டத்தட்ட நாற்பதுபேர் வரையிலும் காதர் மச்சான் குடோனில் ஏற்றியிருக்கிறான். வெளிச்சத்தில் காஜா “லேய் எங்க குட்டியாப்பாலே...” என ஓடினான். ஆளாளுக்கு மாத்தி மாத்தி சொல்லி ஒரே குடும்பத்திலிருந்தே சிலரை காதர்மச்சான், அங்கு ஏற்றியிருக்கிறான். பக்கராக்கா கோரைக்கெட்டுக்குப் பின்னால் மறைந்தபடி “தக்வா இல்லாத பண்ணிக்குப் பொறந்தவன் என்ன காரியம் செய்திருக்கான் பாருங்கோ...” நல்லவேளை மச்சான் விடியுமுன்னால் கன்யாமரிக்குத் தப்பிப் போயிருந்தார். பார்ஷா சாயிபுக்கு விசயம் தெரிந்து, ஊர் கலைந்து, காலையில் சீலன் வந்து உண்ணாமல் தின்னாமல் பைசா போச்சி என மானங்கெட்ட கிழி கிழித்துக்கொண்டே செட்டையும் டெக்கையும் எடுத்துக் கொண்டு போனான். குடோனில் இரவு பரபரப்பில் சோமனிடமிருந்து தவறி விழுந்திருந்த இரண்டு ஓப்பிள் மட்டுந்தான் சீலனுக்கு மிச்சப்பட்டது.
நான்கு மாதங்கள் போயிருக்கும் நாங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தோம் காஜாவும் சேக்கும் பாலிடெக்னிக்குப் போனார்கள். மாதவன் லாரியில் கிளினராகப் போனான். சோமன் பனிரெண்டில் ஒரு பாடம் போனதால் வேப்பமூட்டில் ஒரு டியுடோரியல் சென்டருக்குப் போய்க் கொண்டிருந்தான். எங்கள் எல்லோருக்கும் நாகமூட்டுக்கடைதான் காலை ஒன்பதரைமணி வரையிலும் மீட்டிங் பாயிண்ட். மச்சான் காலை டெய்லி வந்துவிடுவான். முதல் செமஸ்டர் எக்ஸாம் முடிந்த மறுவாரம் பரபரப்பாக வந்த மச்சான் தனக்கொரு லவ் செட்டாகியிருப்பதாகச் சொன்னதும் நாங்கள் சத்தமாகச் சிரித்தோம். அன்றைக்கு ஆகாயத்தில் தாடகமலையின் மேலே செம்பூத்து லெச்சி நிர்வாணமாகப் போய்க் கொண்டு இருந்தாள். காதர்மச்சான் அல்லாண, வாப்பாண, உம்மாண, இது ரியல் பியார், லாஸ்ட் ஃபோர் மன்ந்தா... என்றான். சோமன் சொன்னான் “மச்சான் இவனுவோ எவனும் வரலைன்னாலும் மச்சினன் நான் துணை... இன்னைக்கு நைட் பழையபடியும் பள்ளிக்குப் பின்னால மணல்மேட்டுல மண்ணக் குவிச்சி மச்சான் சத்தியமடிப்பாரு” என்றபடி அடித்து நின்றான். என்னமும் ஆகட்டுமென மெயின் ரோட்டுக்கு வந்தோம், 7ணி நேசர்புரம் பஸ் வந்து நின்றது. மச்சான் பச்சைக் கூலிங் கிளாஸ் போட்டபடி ஈகிள் பெல்ட் போட்டு டக்இன் பண்ணிக் செமையாக நின்றான். அவள் பஸ்ஸிலிருந்து இறங்கினாள். படச்சவனே... வாய்ப்பிளந்து நின்றோம். பேரழகி. நிலவொளியில் செம்பூத்தை நோக்கி வெற்று உடலில் ஆபரணங்கள் அணிந்து லெச்சி ஆரணங்காய் ஓடி வருகிறாள். எங்களுக்கு மலைப்பு மாறவில்லை. அவள் உண்மையில் மச்சானைப் பார்த்துச் சிரிக்கிறாள். பின்னர் நோக்கி கிட்டே வந்தாள். ஹாய் டார்லிங் என்றவள், பஸ்ஸின் பின்னால் நல்ல கர்லாக் கட்டையை முழுங்கியவன்கள் போல நின்றிருந்த ஏழெட்டுப் பேர்களிடம் “இவன்தன்னே” என்றதும் அவர்கள் மச்சானின் மீது பாய்ந்தார்கள். காஜா மாப்பிளை ஓடிக்கோ என்று கத்தியதும் நாங்கள் எப்படித் தெறித்து ஓடினோம் என்பது இப்போது வரையிலும் புரியவில்லை. காதர்மச்சானை எடுத்துப் போட்டு நல்லா சமுட்டியிருக்கிறார்கள். சோமன் இடையில் கிடந்து மச்சானை அடிக்கவிடாமல் புகுந்து புகுந்து ஒன்றிரெண்டுச் சமுட்டுகளை ஏற்றெடுத்திருக்கிறான். எல்லாம் சரபுராவென நடந்து முடிந்திருக்கிறது. மச்சானின் பச்சைக் கூலிங்கிளாசும் ஈகிள் பெல்ட் டும் பிடுங்கப்பட்ட நிலையில் சோமனோடுச் சேர்ந்து ஆற்றங்கரையோரமாக ஓடித் தப்பியிருக்கிறார்கள். சாயங்காலம் போலச் சுண்டு வீங்கி வந்த சோமன் சத்தமாக “நீங்களெல்லாம் மனுசனுவளாலே... மச்சான் லவ் ஃபீலிங்குல அரைமணி நேரமா ஆல மூட்லக் கெடந்து அழுதான் தெரியுமா...”
நாங்கள் முகத்தைச் சோகமாக வைத்திருந்தோம். மச்சான் சரியாக மறுவாரத்தில் நார்மலுக்கு வந்தான். ஈகிள் பெல்ட் ராசியில்லை என்று சோமன் தான் துணைக்குப் போய் மச்சானுக்கு டபுள்பேரட் பெல்ட் வாங்கிக் கொண்டு மணிமேடையிலேயே ஆளுக்கொரு ஓப்பிள் ஜூஸூம் குடித்துக் கொண்டு தெம்பாக வந்தார்கள். மச்சான் மீண்டும் பம்பாய் போகலாம் என்பதுதான் நல்ல விசயம் என நாங்கள் மணல்மேட்டிலிருந்து பேசியபோது மச்சான் உடனே மறுத்துப் பம்பாய்ப் போனால் ஹிந்தி நடிகை என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி பிடிவாதம் பிடிப்பாள்...
“அவள் பிடிவாதம் பிடித்தால்... மச்சான் அவளின் ஹாஜத்தை நிறைவேற்ற வேண்டியதுதானே... ஒரு கொமரு காரியத்தில் சுணங்கலாமா? அல்லாவுக்கு அடுக்குமா...”
“ஜமாஅத்ல பிரச்சனையாவும்டே...”
“ஒண்ணும் ஆவாது... அவள முஸ்லிமா மதம் மாத்தி படச்சவனே ஒனக்க காவல்னு ராகத்தா கட்ட வேண்டியதுதானே மச்சான்...” என மைதீன் சொன்னதும்,
“அவளே முஸ்லிம்தான் மச்சினா” எனக் காதர் மச்சான் முஞ்சை பாவம்போல வைத்துக்கொண்டு சொன்னான்.
“சரி அப்போ கொல்லம் போலாம்லா... பழைய மிட்டாய் கம்பெனிக்கு...”
“அங்குன கண்ணுல கண்டாலே... இக்பால் எஸ்ஐ ஸ்பாட்லயே சுடுவான்...”
மணல்மேடு மௌனமாக இருந்தது.
மூன்றாவது நாளிலேயே மச்சான் சில நாட்டு மருந்துகளை உட்கொண்டு புது உற்சாகத்தைப் பெற்றுக்கொண்டார். 7E நேசர்புரம் பேரழகி பக்கம் இனி கனவிலும் தலை வைப்பதில்லை என்று ஒரு சத்தியத்தை அடித்துக்கொண்ட காதர் மச்சான் இனி வாழ்க்கையில் லவ் என்பதே இல்லை என்று மணல் மேட்டில் சத்தியமடித்த மறுவாரம் மச்சான் ரப்பர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்த கனகா மீது ஒரு அபிப்ராயம் தோன்றியது. உண்மையில் கனகாவும் கூட மச்சானைச் சாடைமாடையாகப் பார்ப்பதும் கண்ணால் பேசிச் செல்வதுமாக இருந்ததைப் புரிந்து சத்தியத்தைப் பின்வலிக்கலாமென்று மணல்மேட்டுக்கு வேகமாக வந்தபோதுதான், மணல் மேட்டைத் தோட்டமாக மாற்றும் வேலையை ஜமாஅத் துவங்கியிருந்தது. அவர்கள் ஏழெட்டு வேலையாட்கள் மணல் மேட்டு நிலத்தை வெட்டித் திருத்திக் கொண்டு இருந்தார்கள். இவ்வாறாக மச்சானுக்குச் சத்தியம் அடிக்க இருந்த ஒரே ஒரு இடம் காலியானதும் மச்சான் ரொம்பவும் தளர்ந்து போனார். நாங்கள் மச்சானைப் பலவாறாகத் தேத்திப் பார்த்தோம். கனகாவை மச்சான் மேற்கொண்டு பார்க்கவுமில்லை. மச்சானால் சத்தியத்தைத் பின்வலிக்காமல் இன்னொரு காதலின் முன்னே நகர்தல் சாத்தியமில்லை போலும். நாங்கள் தொடர்ந்து பேசினோம், இனி சத்தியத்தை ஆற்றுமணலில் அடிக்கலாம் என்றபோது மச்சான் மறுத்து கடல்மணல் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தார். கனகா ஒரே சிரியும் நளினமுமாக மச்சானைக் கடந்து போகிறாள். நமக்கு மச்சானை முட்டம் கடற்கரைக்குக் கொண்டு போய்க் கடல் மணலைக் குவித்து வைத்து பழைய சத்தியத்தை எடுத்துவிட்டு புதிய சத்தியமடித்தால், கனகா மச்சானின் வாழ்வில் நுழைய ஒரு வழியுண்டாகலாம் என்று சோமனும் சொன்னான். இதன்பிறகு நாங்கள் தாஹிரா ஓட்டோவில் மச்சானையும் தூக்கிப் போட்டு முட்டம் கடற்கரைக்குக் கொண்டு போய் மணலில் மச்சானின் சத்தியபிரமாணத்தைச் செவ்வனவே நடத்தியிருந்தோம். மச்சான் காற்றை இழுத்து சுவாசித்து ஆனந்த பெருமூச்சுவிட்டபடி இனி வாழ்வில் கனகாவைத் தவிர வேறு ஒருத்திக்கு இடமில்லை என்று இரண்டு கைகளையும் காற்றில் பரப்பி அந்த அலைமோதும் கரையில் டபுள்பேரட் பெல்ட்டும் அணிந்து ஒரு ஓவியம் போல நிற்கும் போது, தூரத்தில் ஒரு பாறை மறைவில் ஒரு இளம் ஜோடி மறைந்திருந்து காதல் சில்மிசங்கள் செய்து கொண்டிருந்தனர். மச்சான் சொன்னான் காதல் ஜோடிகளுக்குக் காதர் தொல்லை கொடுக்க மாட்டான் என்று. சோமன் சொன்னான் “தொல்லை கொடுக்க வேண்டாம் மச்சான் நமக்கு மறைந்திருந்து பார்க்கலாம்.”
காதல் ஜோடியின் சில்மிசங்களை இன்னொரு பாறையின் மறைவிலிருந்து பார்க்கலாமென முடிவாகி பம்மிப் பம்மி நாங்கள் பாறை மறைவுக்கு மச்சானின் தலைமையில் போய் நல்ல வாக்காக எட்டிப் பார்த்தோம். பாறையின் இடுக்கில் ஒரு வாலிபனின் மடியில் கனகா படுத்துக் கிடந்தாள். கடல் தலைகீழாகப் புறண்டு அடித்தது. சரி விடுங்கள். மச்சானின் வாழ்வில் மேலும் இதுபோலப் பதினெட்டுக் கதைகள் இருக்கிறது. காலம் ஓடிப் போய்விட்டது. இப்போது நாங்கள் யாரும் பழைய நாங்களல்ல. அப்போதிருந்தே மச்சான் எதற்கும் கலங்காதவர். ஆனால் கடந்த வாரம் நடந்த அரசியல் விவாதத்தின் ஆத்திரத்தில் சோமன் சொன்ன வார்த்தை மச்சானை உடைத்துப் போட்டிருந்தது. என்ன பேச் சென்றாலும் அவன் மச்சானை நோக்கி “பாக்கிஸ்தானுக்குப் போயிடு” என்று சொல்லியிருக்கக் கூடாது.
முன்பு கவிதைகள் தனி மனிதப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசின. அவை கவிஞன் என்னும் தனி நபர் வழி நுட்பமாக அணுகப்பட்டன. ஆளுமைப் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், காமம் போன்றவை பாடுபொருள்கள். அவற்றின் மொழி இறுக்கமானதும், உள்வயமானதுமாயிருந்தது. காலவோட்டத்தில் கவிதைகளில் சமூகப் பார்வை உருவானது. அரசியல், சூழலியல், எளியோர் பிரச்சினைகள் மேலுக்கு வந்தன. தனியான பிரச்சினைகளும் சமூக நோக்குடன் வெளிப்பட்டன. அவை உள்ளடக்கங்களாக இல்லாவிட்டாலும் நுண் அம்சங்களாயிருந்தன. தனிப்பட்ட சிக்கல்களுடன் தொடர்புபடுத்தியும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கவிதை மொழியும் சற்று எளிதானதும் வெளிப்படையானதுமானது.
ஸ்ரீநேசன் கவிதைகளின் ஆரம்பம் பெரும் அகப்போராட்டத்தில் துவங்குவது. முதலிலுள்ள “சிக்கல்” கவிதை, பைத்திய நிலையை அண்மிப்பதன் மூலம் அதை அடையும் முயற்சி. அதுவே அவருக்கு “எல்லையற்ற தர்க்கம், அர்த்தமின்மை, துயரம், அலைக் கழிப்பு” கொள்வதற்கான வழியாகிறது. “குருவி மற்றும்” கவிதையில் குருவியும், மாடும் மற்றொன்றாக மாறி விடுகின்றன. இது இயற்கையில் விளையும் அழகான விந்தைப் படிமம். மேலும் பல மாயைகள் தனக்குள் நிகழ கவிதைசொல்லி காத்திருப்பதாயிருக்கிறது. “நான் சலனமுறும்போது / எங்கேயோ ஓர் இடர்ப் பாடு இயக்கத்தில் / நிகழ்ந்து விடுகிறது” என்று தொடக்கத்திலேயே அவர் அறிகிறார். எனினும் “என்னைச் செலுத்தத் தொடங்குகிறேன் / தன்னுள் வெளியில்” என்பது ஆழ் விருப்பமாயிருக்கிறது. “உள் வெளிப் பயணம்” போன்ற கவிதைகளும் அவர் தன்னுள் தன்னைத் தேடுவன எனலாம்.
தொடக்கக் காலக் கவிதைகள் தன்னடையாளம் கொள்ள அலைந்தன. அடைய முடியாதது என உணருகையில் அவற்றுள் உளப் போராட்டங்கள் உருவாகின. தனிமையும் சுயவிரக்கமும் கவிந்தன. அனைவரின் துயருக்குக் காரணம் இது எனவும் அறிந்தன. துக்கம் தனியாகவே அனுபவிக்க முடிவது. எனவே அக்கவிதைகள் முழுதும் தன்னிலையில் எழுதப்பட்டன. எப்போதாவது தன்னிலையையே முன்னிலைப்படுத்தியும் கொண்டன.
அவை தன்னிலிருந்து விரிந்த உலகத்தைக் கண்டன. தன்னிலை ஓர் அறையாக, சுவர்கள் சூழ்ந்த இடமாக, மூளையாக, குகையாக, கருப்பையாய் இருந்தது. “கூட்டத்திலிருந்த தனியான / குஞ்சு மீனொன்று / அழைக்க / அதன் ஆழத்திற்குப் போனேன்” (ஆழ் மாற்றம்). இதில் கூட்டமாயுள்ள மீன் ஒன்று தனியாக அழைத்துச் செல்வது உதாரணம். இவற்றின் காலமும் நள்ளிரவு, இருட்டு, அமானுஷ்ய வேளையாயிருக்கின்றன. அதனால் “தன் விடிவு காலத்தைத் தேடுகிறேன்” என்பது நோக்கமாகிறது. அப்போது கவிதைகள் தன்னுடன் பேசிக் கொள்வதாக, தன்னைப் பற்றிச் சொல்வதாயின. மொழிப் பித்தேறி தம்போக்கில் கட்டுப்பாடில்லாமல் ஓடின. எதிர்பாரா இடங்களில் சொற்கள் உடைபட்டு வரிகள் சிதைந்தன. சிக்கலும் சிடுக்குகளும் நிரம்பிய தம் அகத்தை வல்லமையோடு வெளிப்படுத்துவதாகத் தோன்றின. ஒரே சமயத்தில் பல அர்த்தங்களைத் தொனிக்க முயன்றன. “விழி (கிழி)த்து, பட / படக்கும், இரத்தத்தில் குளித்துக் கொன்று” போன்றவை உதாரணங்கள். இவை கவிஞனில் நிகழும் மனப் போராட்டங்களின் சாட்சியங்களாகலாம்.
ஸ்ரீநேசன் கவிதைகளில் தொன்மப் படிமங்கள் அபூர்வமாகவே வெளிப்பட்டு முழுக் கவிதையையும் கட்டமைக்கின்றன. பழைய தொன்மங்கள் மறுவுருவாக்கமும் செய்யப்படுகின்றன. அவை பெருந்தெய்வ மரபுகளுடையவையாக அல்லாமல் நாட்டார் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் எழுதப்பட்ட “நள்ளிரவில் இயேசு இளம் பெண்ணை அழைத்துச் செல்கிறார்” கவிதையில் தொன்மத்தை அவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை. அதில் வரும் பாத்திரமான இளம் பெண்தான் இயேசு படிமத்தைப் படைப்பவளாயிருக்கிறாள். முதலில் சைக்கிள்காரனாலும், பிறகு இளம் பெண்ணாலும் கவிதை சொல்லப்படுகிறது. அவன் சாத்தானாக மாறிவிடும் சாத்தியமுள்ளவனாயிருப்பவன். அவள் மீதிக் கவிதையைத் தானே கூறி முடிக்கிறாள். தன்னைப் பாதுகாக்க நல்லெண்ணமுள்ள இயேசுவை “இயேசுவே வந்தீர்கள்” என்று உருவாக்குகிறாள். அவளின் ஆழ்ந்த நம்பிக்கை இயேசுவைத் தோற்றுவித்துவிடுகிறது. அதை எக்காலத்திலும் சைக்கிள்காரன் பொய்ப்பிக்கவும் மாட்டான். அந்த என்றுமுள அறத்தால்தான் இளம்பெண்களால் நள்ளிரவில் தனியே நடமாட முடிகிறது. இது எளிய சொற்களால் இயல்பாகத் தோன்றும்படி எழுதப்பட்ட ஒரு கவிதை. மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்திப் பெரும் அர்த்தங்களை உருவாக்கிவிடும் சிறந்த கவிதைகளிலும் ஒன்று.
“குறத்தியின் நரி” என்ற மற்றொரு கவிதையில், தான் குறத்தியிடம் பெற்ற ஒரு நரிப் பல்லிலிருந்து முழு நரியை உருவாக்குகிறார் கவிதை சொல்லி.
பரியை நரியாக்குகிற புராணப் படிமம் இங்கு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. அந்த நரி இங்குத் தனித்திருக்க முடியாததைக் காட்டித் தப்பித்து ஓலத்துடன் ஓடுகிறது. “கன்னியாகுமரி” கவிதையில் என்றென்றும் மாபெரும் தனிமையில் காத்திருக்கும் குமரி காட்டப்படுகிறாள். அதைப்போல், அந்தக் கடைக் கோடிக்குச் சென்றும் அவருடைய தனிமையும் நீங்குவதில்லை. அது சுற்றிக் கடலெனப் பெருகுகிறது.
முதலிலேயே ஸ்ரீநேசன் கவிதைகளின் மையப் படிமமான ஏரி அடையப்பட்டுவிடுகிறது (அந்தி). அப்போதும் தனியனான ஒருவனின் கண்களால் பார்க்கப்படுகிறது. அதே போல், தானற்ற பிறவற்றிலும், “மீனாக நான் / நானாக மீன்” (ஆழ் மாற்றம்) என்று தன்னை அடையாளப்படுத்தியும் கொள்ள முயலுகிறது. மலையும் அவரின் மற்றொரு மையப் படிமமாக இருப்பது. ஒரு கவிதையில், உயர்ந்த மலையை அடைந்து, அதன் அங்கமான ஒரு பாறையாக மாறியும் விடுகிறார் கவிதை சொல்லி. அதனால் எவ்வித அடையாளமுமற்ற தன்னை அறிய ஒண்ணாத நிலை கிட்டுகிறது. “ஞாபகங்கள் சிறகென விரித்த / ஒரு பறவை பறந்து / எள்ளும் என் இருப்பு” என்பது அப்போது அவர் கவிதைகளின் வழி அடையும் ஞானமாகிறது. மொத்த அகத் தேடல்களையும் காட்டிவிடுகிற உன்னதக் கவிதை “திரும்ப முடியாத பாறை”. நீண்ட, வளமான இலக்கிய மரபின் தொடர்ச்சியில் வருபவர்களால் மட்டும் எழுதப்பட முடிவது. அதே சமயத்தில் நவீனத்துவத் தன்மையையும் சுலமபமாகக் கடந்துவிடுகிறது.
இவ்வாறாகக் கவிதை சொல்லி, தான் முழுதாகப் பிறவற்றில் கலக்கிறார். பின் எழுதப்படும் கவிதைகளில் தனிமை மெல்ல உதிர்ந்து மற்றவையாக விரும்புகிறது. தாயாக, தாரமாக, சேயாகத் தன்னை உணர்கிறது. அது அம்மனாக, ஏரியாக, அதில் நீந்தும் மீனாக, கோயிலாக மாறுகிறது. அம்மனுடன் சேர்த்துத் தன்னைக் காண்பதுபோல், வெயில், பறவை, இலை, நிலவு என்று கவிதையுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. கவிதைகள் ஒருவித மீமெய்மைத் தன்மையை அடைகின்றன. அது மிகு கவித்துவம் கொண்ட அதி கற்பனை நிலை. அதனால், தன் சொந்த துக்கம், அனைவருடைய துயரமுமாகிறது. அல்லது பிறர் துயரெல்லாம் தனதாகிறது. மற்றோருடையதைச் சுமக்கும் தானடைகிற விரிவால் அவருக்குத் துயரமும் இன்பமாகத் தோன்றுகிறது. தன்னையே கவிதையிடம் ஒப்படைத்துக்கொண்டு எழுதப்படுவதாக மொழியும் மாறுகிறது. அற்புதப் படிமங்களும், மிகு புனைவுகளும், செறிந்த சொற்களும் உருவாகி வருகின்றன. எம்மொழியிலும் உயர்வாக வைக்கத்தக்க கவிதைகள் படைக்கப்படுகின்றன.
இந்த மீமெய்மை உணர்வே “நனைக்க இயலாத மழை” கவிதையில் நரிக்குறவர்கள் மேல் கொள்ளும் நேசமாகிறது. அது விலகியிருந்து காணும் வெறும் பரிவாக இல்லை. இதில் கொட்டும் மழையில், வெட்ட வெளியிலுள்ள அவர்கள் நனைவதில்லை. அவர்களுடைய அடுப்பு அணைவதில்லை. நரிக் குறவர்களின் நாடோடி இயல்பைப் பெருவாழ்வாகப் படைக்கிறார் கவிதைசொல்லி. மனம் பெருக “திரவ மலை” ஒன்றை உருவாக்கி உச்சிக்கும் செல்கிறார். இதுவரை வறண்ட பருண்மையான மலைகளைக் காட்டியவர், அதனால் தனது, வறண்ட கவிதை என்றவர், இதை நீர்ம நிலையாகக் காண்கிறார். அம்மலை முன்பு போல் தன்னந்தனியாகச் சென்றதாயில்லை. அது காதலியின் உடலாக இருக்கிறது. “வெறுங்காலை எடுத்து வைத்த முதற் பாறை தன் கடினத்தை இழந்து விட்டிருந்தது” (அவனதன் காமம்). ஆனாலும் அடைந்த மலை ஒருபோதும் நிரப்பப்பட முடி யாதென அவரால் உணரவும்படுகிறது. இம்மலை அவருடைய காதல் / காமமாக வளர்ந்து நிற்கிறது.
தன்னுணர்வு மிக முதலில் எழுதப்பட்ட கவிதைகள், தம் நீண்ட பயணத்தில் காதலி, மனைவி, குழந்தை, நண்பர்கள் என்று மற்றவர்களோடு பிணைகின்றன. அவற்றின் போக்கில் சமூக நுண் அலகுகளான குடும்பம், பள்ளி, வேலையிடம் போன்றவை, அவலமும் அபத்தமும் மிக்கதாகக் தோன்றுகின்றன. “கடவுளின் தூளி” அத்தகைய புனைவுக் கவிதை. இதில் குடும்பம் விபத்தில் சிக்கியதில் பெற்றோரை இழந்த குழந்தை அழுகிறது. கடவுள் தூளியில் ஆட்டுகிறாள். நரகத்திலும் சொர்க்கத்திலுமுள்ள அப்பாவையும் அம்மாவையும் கண்டு குழந்தை அமைதியுறுகிறது. கடவுள் ஓய்ந்து தூளி ஆட்டுவதை நிறுத்த, மீண்டும் குழந்தை அழுகிறது. “பாவம் கடவுள் நல்லதாக்குவதா / கெட்டதாக்குவதா / என்பதையே மறந்துவிட்டுத் / தூளியை ஆட்டத் தொடங்கி / ஆட்டிக்கொண்டே இருக்கிறாள்” எனக் கவிதை முடிகிறது. கடவுள் நிலையையும் கடந்த இக்குழந்தைமையே சொர்க்க / நரகப் பாகுபாடுகளை அழிக்க வல்லவை. அதனால் நல்லதும் கெட்டதும் கூட இல்லாமலாகின்றன. “வானேகுதல்” என்ற தொன்மமும் இவர் கவிதைகளில் அவ்வப்போது ஊடாடி வருவது. “சிறு காற்றுக்கும் புரளும் இலைச்சருகென / நான் புரண்டு மிதந்து பறந்து / திரும்புதலே இல்லாது வானேகவும் செய்யலாமென” (ஓர் இலைச்சருகு) என இனிய சந்தத்துடன் மந்திரம் போல் ஒலிக்கிறது கவிதை. வானேகல் இறத்தலுக்குச் சமமானது. அது மறத்தலுக்கும் துறத்தலுக்கும் கூட ஈடாகிறது. அனைத்தையும் விட்டு விடுதலையாதலை எதிர்நோக்கியிருப்பதுமாகிறது. இத்தகையவை புனைகதைகளாகப் புறத்தில் தோன்றினாலும், நிகழ்த்தும் தன்மையால் அனுபவமாவதால் மிகுந்த கவித்துவமுடையதாகின்றன.
இக்கவிதைகளில் நனவுக்கும் கனவுக்குமான மாயத் திரை விலகுகிறது. அவை இரண்டும் எதுவெதுவென அறிய முடியாதபடி ஒன்றாகின்றன. “கனவுப் பெண்ணிசை” என்ற ஆரம்பக் கால கவிதையென்றில் மற்றவர்களைத் துலக்கமாக அடையாளப்படுத்துவதன் மூலம், “என் பின்னே எதுவோ பவனி வர” என்று தன் அடையாளத்தைத் தேட முயலுவதாயிருக்கும். முன்பு எழுதப்பட்ட “நினைவி” கவிதையில் “உனை அறியாத ஒருவர் / நினைவிலும் நினைக்க நீ / இல்லை எனில் அவர்களுமில்லை” என்ற நிலை மாறி, இப்போதைய “கனவு மலை” கவிதை முற்றிலும் வேறொன்றாகக் கனவு காண்கிறது. தன் ஜடத்தன்மையை இழந்து சம்பந்தமில்லாத உயிரிகளாக மாறுகிறது. “இது கனவில்லை என நான் / உங்களுக்கு எதைச் சொல்லி நிரூபிப்பேன்” (யதார்த்தம் என யோசித்தால்) என எதிர்நிலையில் மொத்த வாழ்வையும் கனவாக நினைக்கிறது. இந்த மாய யதார்த்தச் சொல்லாடல்கள் பல அர்த்தங்களைப் பெறுகின்றன. இவற்றால் அசாதாரணத் தருணங்கள் அடையப்படுகின்றன. இப்படியான, ஆண்டன் செகாவை வாசித்தல் பற்றிய கவிதையில், எழுத்திலுள்ள மெழுகுவர்த்தி வெளியிலும் எரிகிறது. வாழ்க்கை அர்த்தம் பெரும் படைப்பூக்கத்துடன் தேடப்படுகிறது. “வாழ்வமைவு” கவிதையில் “கனவு காண்பதை நிறுத்திக்கொண்ட எனக்கு / நேற்றிரவு ஒரு கனவு / மலையாடிவாரக் கிராமத்தில் / மூன்று ஏக்கர் நிலம் வாங்கி / கல்லூரி ஒன்றைத் தொடங்கி யிருந்தேன்” என்று இதுகாறும் காணப்பட்ட கனவிலிருந்து பிற்பாடு விலகுகிறது. இதற்கு முந்தைய கனவு நிலை, நனவாகவே பார்க்கப்பட்டது என்றால், பின்னால் “அங்குத்திச் சுனை” கவிதையில் மாபெரும் துர்க்கனவாகிறது.
இக்கவிதைகளில் சாதாரண மனிதர்களுடன் அசாதாரண மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறார்கள். அது தன்னை அதி மனிதனாக உணர்வது. “பறவை மனிதன்,” தான் நடப்பதால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகப் பறப்பவனாயிருக்கிறான். “மேகங்களில் நடை பயில்பவன்” கவிதையில், முதலில் கடவுளும் இல்லை, மற்றவர்களும் இல்லை என்பதால் அவன் மேகங்களில் நடைபயில்பவன்தான் எனப்படுகிறது. தன்னை மேன்மேலும் வளர்த்தி அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சி கவிதையாகிறது. அதி மனிதரால்தான் மீட்சி சாத்தியம் என்ற கூற்றையும் நினைவூட்டுகிறது.
ஆரம்பக்காலக் கவிதையொன்றில், சிக்கல்கள் நிறைந்த வறண்ட நிலைக்கும் வறண்ட கவிதைகளுக்கும் காரணம் வறண்ட ஏரி என்று நம்பப்பட்டது. பிந்தைய கவிதைகளில் அந்நிலை மாறி வறண்ட ஏரி நிரம்பத் தொடங்குகிறது. ஏரி பெருகாமலும் வற்றாமலும் கண்காணிக்க ஏரிக்கரையில் மனிதரால் நிறுவப்பட்டது அம்மன் தெய்வம். அவள் சதா சர்வகாலமும் ஏரியைக் காப்பவள். அந்த ஏரியை நள்ளிரவில் அடைகையில் அம்மன் நீராடுகிறாள். அதுவே படைத்தலும் காத்தலுமான செயலாக இருக்கிறது. அவளைத் தாயாக, மனைவியாகத் தரிசிக்கிறார் கவிதைசொல்லி. தன்னை மறந்து அவர்களுடன் இணைகிறார். அம்மனாக, ஏரியாக, ஏரியின் அனைத்துமாக மாறுகிறார். புறத்திலுள்ள ஏரியும் அகத்தில் உயிர் பெற்ற அம்மனும் ஒன்றாகிறார்கள். முன்பு ஏரி அவர் படைப்பின் ஊற்றுக்கண்ணாகக் காணப்பட்டது என்றால் இப்போது படைப்புச் சக்தியின் வெள்ள மெனப் புலனாகிறது. இதில் சொற்கள் வெவ்வேறாக உருமாற்றி எழுதப்படுவதன் வாயிலாகப் பொருள் மாறி வெளிப்படும் மாயம் நிகழ்கிறது. சொல்லும் பொருளும் பிரிக்கவியலா ஒரு கவிதையின் எடுத்துக் காட்டு இது.
பிற்காலக் கவிதைகள் பெரும்பாலும் தூய சொற்களைக்கொண்டு எழுதப்படும் விவரணைகளா கின்றன. அவை வெளிப்படையான கூரிய உரை நடைத் தன்மையோடு இயங்குகின்றன. படிமங்கள், குறியீடு களைத் தவிர்த்து நேரடியாக எழுதப்படுகின்றன. தொடர்புறுத்தல் அவற்றின் முக்கிய நோக்கமாகிறது. ஓர் அனுபவத்தைப் பல கருத்துகளாக மாற்றிச் சொல்லிச் செல்வன. அதன் குரல் தனித்து ஒலிக்கும் உச்சாடனமாயிருக்கிறது. முன்வைக்கப்படும் அனைத்தும் நிதரிசனங்களாயிருக்கின்றன. புது வகை நவீனச் செய்யுள்கள் படைக்கும் செயலாகின்றன. தர்க்க ஒழுங்கு கொண்ட அறிவார்த்தக் கவிதைகள் உருவாக் கும் முயற்சிகள் எனவும் சொல்லலாம்.
கவிதை சொல்லி சில சமயங்களில் சமூக மனசாட்சியான பழைய கவி மரபை மீட்கிறார். அவர் எளியோர்பால் நிற்க வேண்டும் என்ற கடப்பாட்டைக் கொள்கிறார். சிறு விவசாயிகள், இடையர், பறவைகள், தூசிகள், கைக்குட்டைகள், குச்சிகள் என்று எல்லாமும் மேலெழுந்து பேச வைக்கப்படுகின்றன. அக்குரல் சுற்றுச்சூழல் பற்றிய ஆழ்ந்த கரிசனமாயிருக்கிறது. அதிகாரம் நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அரசியல் கசந்து விமரிசிக்கப்படுகிறது. அப்போது கவிதைகள் ஆதிக்க முகத்திற்கு நேர் நின்று ஏசுவதாயிருக்கின்றன. அவை நவீன அறம் பாடுவதாகி விடுகின்றன. இதுவே பீடத்திலுள்ளோரை அழிக்கும் பெரும் போராட்டமாகிறது.
இக்காலக் கவிதைகள் நீண்ட வாழ்க்கைக் குறிப்புகளாகவும் முதிர்வடைகின்றன. உண்மையான நபர்கள், இடங்கள் பதிவாகின்றன. துல்லியத் தகவல்கள் வெளிப்படுகின்றன. கவிதை எழுதுதல், நிகழ்ச்சிகள், பயணங்கள் என்று சுயஅனுபவங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை பிறகு புரட்டிப் பார்க்கும் தேர்ந்த ஆவணப்படுத்தலாகிறது. அனைத் தும் இணைந்து கவிதை சொல்லியின் தன் வரலாற்றுக் கவிதைகளாகின்றன. இத்தகைய சரித்திரத்தில் மூதாதைகள் பெருமிதத்துடன் மீட்கப்படுகிறார்கள். “மூன்று பாட்டிகள்” கவிதையில் சாதாரணத் தருணங் கள் அசாதரணமாக்கப்பட்டு அவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். “நரகத்தார்” கவிதையில் “மூன்று நூற் றாண்டுகளுக்கு மேலாய் வாழ்ந்த / எங்கள் குடும்ப மூதாய் ஒருவர்” என்று ஆரம்பித்துக் காட்டப்படுகிறார். அவரின் தொன்மை அதி புனைவால் முழுதாக வெளியாகிவிடுகிறது.
ஒரு தொன்மப் படிமம் “பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் படகு” (பிறவிக் கல்). இங்கு நகரம் சார்ந்த வேறொரு ஏரி காட்டப்படுகிறது. கரையில் அம்மன் சிலை இல்லை. மாறாக ஏரி நடுவில் ஒரு பாறை தென்படுகிறது. வெண்கொக்குகள் எச்சமிட்டு அயல்
நாட்டு நாரை போலுள்ளது. அதுவே பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் படகாகிறது. “கவித்தல விருட்சம்” கவிதையில் நெடுங்காலமாக விருட்சம் நிற்கிறது. மதுக்கூடத்தின் ஓரமாக ஜன்னலையொட்டி அமைந் துள்ளது. தல விருட்சங்கள் அனைத்தும் கோயில்கள் தோன்றக் காரணமானவை. அனாதி காலம் தொட்டு வருவன. இவ்விருட்சம் தொடர்ந்து மதுக்கூடத்துக்கு வருகிற சிறந்த கவிஞர்களின் வரிசையைக் காட்டு கிறது. தன்னையும் அப்பெருங்கவி மரபில் வைத்து அடையாளம் காண்கிறது.
ஒரு நீண்ட கவிப் பயணத்தில் தானாக அடைகிற மாற்றம் ஒன்று. சுற்றி நிகழ்பவற்றால் பெறுகிற மாறுதல் இன்னொன்று. இவை இணைந்த பெரும் நீரோட்டமாக, தனக்கேயான சொல்முறையையும், பொருள் கொள்ளலையும் கொண்டு ஸ்ரீநேசன் கவிதைகள் வெளிப்படுகின்றன. இவற்றாலெல்லாம் அவர் கவிதைகள் மிக முக்கியமானவையாக, மிகவும் சிறந்தவையாக விளங்குகின்றன.
(ஓசூரில் மாதந்தோறும் நிகழும் ‘புரவி’ இலக்கியக் கூடுகையில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் )
பகல் பொழுது சாய்ந்து இரவு தொடங்கி விட்டு இருந்த சமயம், அவர்கள் அந்த நகர எல்லையை அடைந்தபோது, திருமண மோதிரம் அணிந்திருந்த அவளது விரலிலிருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை நீனா தகாண்ட்டி உணர்ந்தாள். முரட்டுத் தோலால் ஆன தனது மும்முனைத் தொப்பியை கடினமான கம்பளிப் போர்வை மறைத்த படி இருக்க பைரனீஸ் மலைத்தொடர்களிலிருந்து அடிக்கும் ஆக்ரோஷ காற்றில் தன் பாதங்களைத் திடமாய் ஊன்றிக் கொள்ளப் போராடிக் கொண்டு, அந்தச் சிவில் பாதுகாவல் அதிகாரி கார்பைட் விளக்கின் வெளிச்சத்தில், அவர்களது அரசாங்க பாஸ் போர்ட்டுகளைப் பரிசோதித்தார். அந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் முழுமையான ஒழுங்கில் இருந்த போதிலும், அந்தப் புகைப்படங்கள் அவர்களை ஒத்திருக்கின்றனவா என்று நிச்சயம் செய்து கொள்ள அந்த விளக்கினை உயரே தூக்கிப் பிடித்தார். நீனா தகாண்ட்டி கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல இருந்தாள். மகிழ்ச்சியான ஒரு பறவையின் கண்களுடன், சோகம் கப்பிய ஜனவரி மாதத்தின் மங்கிய ஒளியில் அவளது வெல்லப்பாகு போன்ற சருமம் இன்னும் பளபளப்பாக இருந்தது. அந்த எல்லையோரப் படையின் முழு வருடச் சம்பளத்தையும் கொடுத்தாலும் கூட வாங்க முடியாத மின்க்கின் மென்தோலால் ஆன கோட் கன்னம் வரை அவளைப் போர்த்தியிருந்தது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவள் கணவன், ஓராண்டு இளையவனாக அதற்குரிய அழகுடன், ஒரு பேஸ்பால் தொப்பியுடன், வண்ணக்கோடுகளால் கட்டங்கள் இழைத்த கோட் அணிந்திருந்தான். அவனது மனைவி போலன்றி அவன் உயரமாக, உடல் வலிமையுடனும், அச்சமூட்டும் அடியாள் ஒருவனின் இரும்பு போன்ற இறுகிய தாடையும் கொண்டிருந்தான். ஆனால் எது அவர்கள் இருவரின் அந்தஸ்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியது என்றால், உயிருள்ள விலங்கு போல மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதான உட்பகுதி அமைந்த
அந்த வெள்ளி நிறக் கார்: வறிய எல்லைப் பகுதி வழியே என்றுமே காண முடியாத ஒன்று அது.
அந்தப் பின்புற இருக்கை மிகப் புதிய பெட்டிகளாலும், மேலும் இன்னும் திறக்கப்பட்டிராத பல பரிசுப் பொருள் அடங்கிய பெட்டிகளாலும் நிறைந்து வழிந்தது. அவளின் அமைதி குலைத்த கடற்கரை முரடனின் மென்மையான காதலுக்கு அவள் அடிபணியும் முன்னர், நீனா தகாண்ட்டியின் வாழ்வில் அடக்க இயலாத, மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாயிருந்த, அந்த உயர்ஸ்வர சாக்ஸபோனையும் அந்தக் கார் தாங்கியிருந்தது.
முத்திரையிட்ட பாஸ்போர்ட்டுகளை அந்த அதிகாரி திரும்பக் கொடுத்தவுடன், பில்லி சான்ஷெஸ் அவனது மனைவியின் விரலைக் குணப்படுத்த மருந்துக் கடை ஏதாவது தென்படுமா என்று அவரிடம் கேட்டான். அதற்கு அந்த அதிகாரி பிரெஞ்சுப் பகுதியான ஹென்டேயில்தான் அவர்கள் விசாரிக்க இயலும் என்று காற்றினூடே கத்தியபடி கூறினார். ஆனால் ஹென்டேயில் இருந்த பாதுகாவலர்கள், வெதுவெதுப்பான, நன்றாக ஒளியூட்டப்பட்டிருந்த அவர்களுக்கான பிரத்யேகமான சதுரமான கண்ணாடி எல்லைக் காவல் அறைக்குள், மேஜையில் அமர்ந்தபடி, கை இல்லாச் சட்டையுடன் சீட்டு விளையாடிக்கொண்டு, பெரிய கண்ணாடிக் குவளைகளில் இருந்த மதுவில் ரொட்டித் துண்டுகளை முக்கி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அப்போது பார்க்க வேண்டியிருந்ததெல்லாம், ஃபிரான்சுக்குள் செல்ல கையசைத்து அனுப்ப வேண்டியிருந்த அந்தக் காரை, அதன் அளவினை, தயாரித்த கம்பெனியை மாத்திரமே. பில்லி சான்ஷெஸ் ஹார்னைப் பலமுறை அழுத்தினான், ஆனால் அவன் அவர்களை அழைக்கிறான் என்று அந்தக்காவலர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேலும், அவர்களில் ஒருவன் ஜன்னலைத் திறந்து, காற்றைவிட அதிகச் சீற்றத்துடன் அலறினான்:
“Merde! Allez-vouz-en!”
“Shit! Whoever you are go away!”
காதுகள்வரை மேல்கோட்டால் போர்த்தப்பட்டு இருந்த நீனா தகாண்ட்டி பிறகு காரை விட்டு வெளியே இறங்கி அந்தக் காவலரிடம் சுத்தமான ஃபிரெஞ்சில் மருந்துக்கடை எங்கே உள்ளது என்று கேட்டாள். அவனது வழக்கம் போல வாய் நிறைய ரொட்டியுடன், அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை என்றும், அதுவும் இது போன்ற புயல் நேரத்தில் மிகக்குறைந்த பட்சம் கூட இல்லை என்றும் பதிலளித்தான்: பிறகு ஜன்னலை மூடினான். ஆனால், பிறகு அவன் சற்று கூடுதல் கவனத்துடன், மின்க்கின் இயற்கையான மினுமினுப்பு மிக்கத் தோலால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கினான்: அந்தப் பயங்கர இரவில் காயம்பட்ட தன் விரலை சப்பிக் கொண்டிருந்தவளை ஏதோ ஒரு மந்திரக் காட்சியாக அவன் நினைத்திருக்க வேண்டும். காரணம் அவனுடைய மனநிலை உடனடியாக மாறியது. மிகவும் அண்மையிலிருக்கும் நகரம் பியாரிட்ஸ் என்றும், ஆனால் அந்த மத்திய குளிர் காலத்தில், ஓநாய்களைப் போல ஊளையிடும் அந்தக் காற்றில், சற்றுத் தொலைவிலுள்ள பேயோன் பிரதேசம் செல்லும் வரை, திறந்திருக்கும் ஒரு மருந்துக் கடையையும் அவர்களால் கண்டுபிடிக்க இயலாது என்று விளக்கினான்.
“மிகவும் மோசமான நிலையா?”, என்று கேட்டான்.
“அது ஒன்றுமில்லை,”
நீனா தகாண்ட்டி புன்னகைத்துக்கொண்டே சொன்னாள். நுனியில், ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாத சிறிய ரோஜா முள் கீறலுடனான, வைர மோதிரம் அணிந்திருந்த விரலை அவனிடம் காண்பித்தாள்.
“அது வெறும் முள்.”
அவர்கள் பேயோனை - அடையும் முன்னரே மீண்டும் பனிமழை பெய்யத் தொடங்கியது. ஏழு மணியாகவில்லை எனினும் தெருக்கள் நடமாட்டமின்றிக் காட்சியளித்தன. புயலின் சீற்றத்தையொட்டி வீடுகள் மூடப்பட்டிருந்தன. பல மூலை முடுக்குகள் சென்று திரும்பிய பிறகும் ஒரு மருந்துக்கடையும் தென்படாது போகவே, அவர்கள் தொடர்ந்து செல்ல முடிவு செய்தனர். இந்த முடிவு பில்லி சான்ஷெஸை சந்தோஷப்படுத்தியது. கார்களுக்கென, அபூர்வமான, திருப்தியுறாத ஒரு ஆவல் கொண்டிருந்தான் அவன், மேலும் அவனுக்குப் பல குற்றவுணர்வுகள் கொண்ட ஒரு அப்பா இருந்தார், மேலும் அவனது இஷ்டத்தை எல்லாம் திருப்திப்படுத்த அவரிடம் வசதியிருந்தது: திருமணப் பரிசாக அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த, மேல் பகுதியை மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பென்ட்லி வகைக் காரை அவன் இதுவரை ஓட்டியிருக்கவில்லை.
ஸ்டீயரிங் பிடிப்பதனால் உண்டான அவனது அதீதப் பேரானந்தத்தின் காரணமாக எவ்வளவு தொலைவு ஓட்டினானோ, அதற்கேற்ப குறைந்த பட்சமே அசதியடைந்தான். அந்த இரவே போர்டோ நகரை அடைந்துவிட விரும்பினான்.
‘ஸ்ப்லென்டிட் ஹோட்டலில்’ மணப்பெண்ணுக்கான தொடர் அறைகளை அவர்கள் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், மாறி மாறி வீசும் பலத்த காற்றும், பனியுடனான ஆகாயமும் அவனைப் பிடித்து நிறுத்திவிட முடியாது. இதற்கு மாறாக, மேட்ரிட்லிருந்து தொடங்கிய அந்த நீண்ட நெடுஞ்சாலையின் கடைசி நீட்சியில் - குறிப்பாகப் பனிக்கட்டிப் புயல் அடித்துத் தாக்கும், மலை ஆடுகளுக்கு ஏற்ற பைன் மரங்கள் நிறைந்த மலை உச்சியின் விளிம்பு பகுதியில் - நீனா தகாண்ட்டி உற்சாகம் தீர்ந்துவிட்டிருந்தாள். எனவே பேயோன் நகருக்குப் பிறகு இன்னும் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்திவிட அவள் ஒரு கைக்குட்டையை மோதிர விரலில் சுற்றிக்கொண்டாள் அழுத்தமாக, அமுக்கி, பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினாள். நடுஇரவு நெருங்கும்வரை, பனி அடித்து முடிந்திருந்ததையும், சடாரென ஊசி இலைக் காட்டில் காற்று நின்றுவிட்டதையும், மேய்ச்சல் நிலத்தில் உறைந்த நட்சத்திரங்கள் ஆகாயத்தை நிறைக்கும் சமயத்தை எட்டியதையும் பில்லி சான்ஷெஸ் கவனிக்கவில்லை. போர்டோவின் தூங்கி வழியும் விளக்குகளைக் கடந்துவிட்டிருந்தான். ஆனால் நெடுஞ்சாலையின் வழியே பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் கலத்தை நிரப்பிக் கொள்ள மட்டும் நிறுத்தினான். மேலும், பாரிஸ் வரை நிறுத்தமின்றி வண்டி ஓட்டுவதற்கான தெம்புடனிருந்தான்: அவன் போலவே உணர்ந்தாளா என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை அவன். அவனது பெரிய 25000 பவுண்ட் ஸ்டெர்லிங் பெறுமானமுள்ள பொம்மையினால் அவன் அவ்வளவு களிப்படைந்திருந்ததால்-அவனருகில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவள் இரத்தம் தோய்ந்திருந்த மோதிர விரலின் கட்டு அவளது வளர்பிராயத்துக் கனவுகளை முதல் முறையாக நிச்சயமின்மையின் மின்னல் தீற்றல்கள் துளைக்க அந்த ஜீவனும் அப்படியே உணர்ந்தாளா என்று அவன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவில்லை.
அவன் பெற்றோர்கள் வியப்படையவும், அவளது மதிமயக்கம் நீங்கவும், மற்றும் ஆர்ச் பிஷப்பின் தனிப்பட்ட ஆசிர்வாதத்துடனும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த, கார்த்தஜீனா த இன்டியாஸ் -இல் மூன்று தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் திருமணம் செய்து கொண்டிருந்தனர். அந்தக் காதலின் உண்மையான அஸ்திவாரத்தையோ அல்லது முன்கூட்டியே கண்டறிந்திராத தோற்றுவாயையோ இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லை. அந்தத் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அது துவங்கி இருந்தது, கடலோரத்தில் ஒரு ஞாயிறன்று பில்லி சான்ஷெஸின் குழுவினர் மார்பெல்லா கடற்கரையில் பெண்களின் உடைமாற்றும் அறைகளைப் புயல்போலத் தாக்கிய தருணத்தின்போது. நீனா அப்போதுதான் பதினெட்டு வயது நிரம்பியிருந்தாள். நான்கு மொழிகளில் சீர் அழுத்தமற்ற உச்சரிப்புடன் பேசிக்கொண்டும், உயர் ஸ்வர சாக்ஸபோனில் தேர்ச்சி பெற்ற அறிவுடனும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள செயின்ட் பிளேய்ஸ் என்னுமிடத்தில் ஷேட்டல் லெனி - பள்ளியிலிருந்து வந்திருந்தாள். மேலும் இது, அவள் திரும்பி வந்ததிலிருந்து, அந்தக் கடற்கரைக்கு அவளது முதல் ஞாயிறு வருகை.
சருமம் தெரிய உடைகள் அனைத்தையும் உரிந்துவிட்டிருந்தாள் அவள். பக்கத்து உடை மாற்றும் அறைகளிலிருந்து கடற்கொள்ளையரின் கூக்குரலும் பீதியுற்ற ஜனங்களின் நெருக்கடி சந்தடியும் கேட்கத் தொடங்கிய பொழுது அவளது நீச்சல் உடையை அணியப்போன நேரத்தில், என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை - அவள் கதவுத் தாழ்ப்பாள் உடைந்து நொறுங்கும்வரை கற்பனைக்கு எட்டக் கூடிய மிக அழகான கொள்ளைக்காரன் அவள் முன் நிற்கும்வரை. போலி சிறுத்தைப்புலித் தோலால் ஆன கயிற்று உள்ளாடை ஒன்றைத் தவிர அவன் வேறெதுவும் அணிந்திருக்கவில்லை. மற்றும் அவன் சமுத்திரத்திற்கருகில் வாழ்பவர்களின் சமாதானமான, நெகிழ்தன்மை மிக்கத் தேகம் கொண்டிருந்தான். வலது மணிக்கட்டில் உலோகத்தாலான ரோமானிய வாட்போர் சண்டியனின் உருவம் பொறித்த காப்பு அணிந்திருந்தான். வலது முஷ்டியைச் சுற்றி ஒரு இரும்புச் சங்கிலியைப் பிணைத்திருந்தான். அதை அவன் ஒரு அபாயகரமான ஆயுதமாகப் பிரயோகப்படுத்தினான். அவன் கழுத்தைச் சுற்றி எந்தப் புனிதனின் உருவமும் பொறிக்கப்படாத ஒரு பதக்கம் தொங்கியது - அவன் இதயத்தின் துரித ஓட்டத்தில் மௌனமாய் அதுவும் துடித்தது. அவர்கள் இருவரும் ஒரே தொடக்கப் பள்ளிக்குச் சென்றிருந்தனர், அதே பிறந்தநாள் விருந்துகளில் பல பினாட்டாக்களை (லத்தீன் அமெரிக்கத் திருவிழாக்களில் சிறுபரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட, மேற்கூரையிலிருந்து தொங்கவிடப்படும் கலங்கள் - அவற்றைக் கோலால் உடைத்து பரிசுகளைப் பெறவேண்டும்) உடைத்திருந்தனர், ஏனெனில், அந்த இருவருமே குடியேற்ற நாட்களிலிருந்து அந்த நகரத்தின் தலை எழுத்தை தங்களது இஷ்டம்போல அமைத்துக் கொண்டிருந்த, குறிப்பிட்ட மாகாணத்தைச் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தனர். ஆனால் அத்தனை வருடங்களாக அவர்கள் பார்த்துக்கொள்ளாததால் ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நீனா தகாண்ட்டி அசைவின்றி அவளது அதீதமான நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள எதுவும் செய்யாமல், நின்று கொண்டேயிருந்தாள். பிறகு பில்லி சான்ஷெஸ் சிறுபிள்ளைத்தனமான சடங்கை நடத்தினான். தன் சிறுத்தைப் புலித்தோல் உள்ளாடையைக் கீழிறக்கினான். பிறகு மரியாதைக்குரிய, விரைப்பான அவனது ஆண்குறியைக் காட்டினான். அவள் நேராக அதை நோக்கினாள், வியப்புக்கான அறிகுறிகளின்றி.
“இன்னும் பெரிய, விரைப்பானவற்றை நான் பார்த்திருக்கிறேன்” என்றாள் அவள், அவளது பெரும் பீதியை அடக்கிக்கொண்டு. “ஆகவே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதைப் பற்றி மறுபடியும் யோசி, ஏனெனில் என்னிடம் நீ ஒரு கறுப்பனை விடச் சிறப்பாக இயங்க வேண்டியிருக்கும். ”
நிஜத்தில் நீனா தகாண்ட்டி ஒரு கன்னி மட்டுமின்றி, அந்த நிமிடம்வரை நிர்வாணமாக ஒரு ஆண் மகனையும் பார்த்திருக்கவில்லை. எனினும் அவளது சவால் பயனுள்ளதாயிருந்தது. பில்லி சான்ஷெஸால் என்ன செய்ய வேண்டும் என்று எண்ண முடிந்ததெல்லாம் அவனது சங்கிலி சுற்றப்பட்டிருந்த முஷ்டியைச் சுவர் மேல் மோதி, பிறகு கையை முறித்துக் கொண்டதுதான். மருத்துவமனைக்குத் தனது காரில் அவனைக் கூட்டிச் சென்றாள். பிறகு அவனுக்குக் காயம் ஆறி உடல் தேறும் காலத்தைப் பொறுத்துக் கொள்ள உதவி செய்தாள். அதன்பின், இறுதியில் எப்படி சரியான முறையில் புணர்வது என்பதை அவர்கள் சேர்ந்தே கற்றுக்கொண்டனர். கடினமான ஜூன் மாத பகல் நேரங்களை நீனா தகாண்ட்டியின் புகழ்பெற்ற மூதாதையர் ஆறு தலைமுறையாக எந்த இடத்தில் காலமாகி இருந்தனரோ அந்த வீட்டின் உட்புறமாக இருந்த மாடியில் கழித்தனர். ஹேம்மக்கில் படுத்தவாறு, விட்டு விடுதலைப்படாத மழுங்கடிக்கப்பட்ட உணர்வோடு அவன் அவளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அவள் சாக்ஸ போனில் பிரபலமான பாடல்கள் இசைத்தாள். அந்தத் தரைக்கும் கூரைக்குமாக வியாபித்த எண்ணிலடங்கா ஜன்னல்கள் கொண்டதும் மேலும் “லா மாங்கா”- மாவட்டத்திலேயே மிகப் பெரியதும், புராதனமானதுமான அந்தக் கட்டிடம் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் அசிங்கமானது. ஆனால் எங்கிருந்து நீனா தகாண்ட்டி இசைத்தாளோ, கட்டம் போட்ட தரை ஓடுகள் பதித்த அந்த மேல்மாடி நான்கு மணி வெய்யிலில் ஒரு பாலைவனச் சோலையாய் இருந்தது: மேலும் அது வீட்டோடு சேர்ந்த மாமரம் மற்றும் வாழை மரங்களின் தாராளமான நிழல்களோடு கூடிய முற்றத்தை நோக்கித் திறந்து கொண்டது. அதனடியில் ஒரு பெயரற்ற கல்லறைக்கல்லுடன் ஒரு கல்லறை இருந்தது; அந்த வீடு மற்றும் அந்தக் குடும்ப நினைவுகளை விடவும் மிகப் பழமையானதாக. இசைபற்றி எதுவும் அறிந்திராதவர்கள் கூட அப்படிப்பட்ட உன்னதமான ஒரு வீட்டில் அந்தச் சாக்ஸபோன் காலமுரண் மிக்கது என்றே நினைத்தார்கள். முதன்முறையாக அதைக் கேட்டபோது நீனா தகாண்ட்டியின் பாட்டி கூறினாள்:
“அது ஒரு கப்பல் போலச் சத்தமிடுகிறது.” சௌகரியத்தின் பொருட்டு அவளது குட்டைப் பாவாடை தொடை சுற்றி உயர்த்தியபடி தொடைகளை அகற்றிக் கொண்டு இசைக்கு ஒவ்வாத ஒரு காமத்துவ உணர்வுடன் அல்லாது வேறுமுறையில் அதை அவளை வாசிக்கச் செய்ய நீனா தகாண்ட்டியின் அம்மா பயனின்றி முயற்சி செய்தாள்.
“நீ எந்த இசைக்கருவி வாசிக்கிறாய் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை”, அவள் கூறுவதுண்டு, “உன் கால்களை அகட்டாமல் நீ வாசிக்கும்வரை”.
ஆனால் நீனா தகாண்ட்டியின் அந்தக் கப்பல் பிரிவு உபசாரப் பாடல்களும் மற்றும் அந்தக் காதல் விருந்தும்தான் பில்லி சான்ஷெஸைச் சுற்றியிருந்த அந்தக் கோபம் மிக்க வெளிப்புற ஓட்டினை உடைத்துக் கொண்டு வெளிவர அனுமதித்தது. பெரும் வெற்றியுடன் அவன் தூக்கிப் பிடித்திருந்த படிப்பறிவற்ற காட்டுமிராண்டி என்று பெயருக்கு அடியில் - இரண்டு புகழ் பெற்ற குடும்பப் பெயர்களின் சங்கமத்தில் பயந்துபோன மென்மையான ஒரு அனாதையைக் கண்டுபிடித்தாள் அவள். கை எலும்புகள் கூடிக் கொண்டு வருகையில் அவளும் பில்லி சான் ஷெஸூம் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள அவ்வளவு நன்றாகக் கற்றனர். தங்குதடையின்றி ஏற்பட்ட காதலின் ஓட்டத்தில், ஒரு மழைக்காலப் பகல் நேரத்தில் அவர்கள் அந்த வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அவள் அவனை அவளது கன்னிப் படுக்கைக்கு இட்டுச் சென்றபோது அவனே கூட ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற படுக்கையில், சொர்க்கத்தை அவர்களுக்கு முன்பே சென்றடைந்துவிட்ட திருப்தியுறாத பாட்டிகள் மற்றும் சிவில் போர் வீரர்களின் மார்பளவு சித்திரங்களின் வியப்பான, ஊன்றிய பார்வைக்கடியில் அவர்கள் களித்துக் கூத்தாடினர் - உணர்ச்சியுடனும், நிர்வாணமாயும். வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்களிலிருந்து வெளியேறி நீரில் மிதந்து செல்லும் கழிவுக் காற்றினைச் சுவாசித்தபடி, அதன் மல துர்நாற்றம், மற்றும் சாக்ஸபோன் மௌனத்தில் வீட்டு முற்றத்தினின்று வரும் தினப்படி சப்தங்களுடன், வாழை மரத்தடி தவளையின் அந்த ஒற்றைச் ஸ்வரம், எவரின் கல்லறை மீதும் வீழ்ந்திடாத அந்த நீர்த்துளி, வாழ்வின் இயல்பான அசைவுகளில் கற்றுக் கொள்ள இதற்கு முன்னர் அவர்கள் பெற்றிடாத சந்தர்ப்பங்கள் என காதலின் நடுவே, சிறிய இடைவேளைகளில் கூட அவர்கள் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டு நிர்வாணமாகவே இருந்தனர்.
அவளுடைய பெற்றோர் வீடு திரும்பிய சமயம் நீனா தகாண்ட்டியும் பில்லி சான்ஷெஸூம் காதலில் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தார்கள் என்றால் இந்த உலகமே வேறு எதற்கும் தேவையான அளவு பெரிதாக இல்லாமல் போயிருந்தது. அவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காதல் செய்தனர், ஒவ்வொரு முறையும் அதை மறுகண்டுபிடிப்புச் செய்ய முயன்றபடி. பில்லி சான்ஷெஸின் தந்தை தன் குற்ற உணர்வுகளை அமைதிப்படுத்த அவனுக்குத் தந்திருந்த அந்த ஸ்போர்ட்ஸ் காரில்தான் முதலில் அவர்கள் போராடினார்கள்; பிறகு, கார்கள் அவர்களுக்கு மிகவும் சுலபமாக ஆனவுடன், இரவில், எங்கே விதி அவர்களை முதன்முதலில் ஒன்றிணைத்ததோ அந்த வெறிச்சோடிப் போயிருந்த மார்பெல்லா பீச் உடைமாற்றும் அறைக்குள் அவர்கள் செல்வதுண்டு. நவம்பர் மாத களியாட்ட விழாக்களின்போது, மாறுவேட உடையில், ஒரு சில மாதங்களுக்கு முன்னர்வரை, பில்லி சான்ஷெஸையும் அவனது ஆயுதச் சங்கிலி கையாளும் குழுவினரையும் பொறுத்துக்கொள்ளக் கடமைப்பட்டிருந்த தலைமைப் பெண்களின் பாதுகாப்பின் கீழ், பழைய அடிமை மாவட்டமான ஜெஸ்தமனியில் இருந்த வாடகை அறைகளுக்குச் செல்வதுண்டு. அவன் ஒரு கறுப்பனை போல இயங்க வேண்டியிருக்கும் என்று அவள் உணர்த்தியதை, அவளது மூர்க்கம் தணிந்த கொள்ளையன் கடைசியாகப் புரிந்துகொள்ளும்வரை, ஒரு சமயம் சாக்ஸபோன் மீது அவள் வைத்திருந்த வெறி மிகுந்த ஈடுபாடு போலவே, நீனா தகாண்ட்டி தன்னை ஒரு ரகசியக் காதலுக்குத் தந்திருந்தாள். திறமையுடனும் அதே உற்சாகத்துடனும் அவளுக்கு எப்போதும் அவன் காதலைத் திரும்ப வழங்கிக் கொண்டிருந்தான். அவர்கள் திருமணம் முடிந்தவுடன், ஒருவருக்கொருவர் செய்து கொண்ட சபதத்தின்படி அட்லாண்டிக்கைக் கடந்து செல்லும் போது காதல் புரிவதை நிறைவேற்றினார்கள். அந்த விமானப் பணிப்பெண்கள் உறங்கிய பொழுது விமானக் கழிப்பறைக்குள் இருவரும் தங்களைத் திணித்துக்கொண்டு, களிப்பை விடச் சிரிப்பினால் அதிகம் ஆட்கொள்ளப்பட்டனர். அவர்கள் அறிந்தனர் திருமணம் முடிந்து இருபத்து நான்கு மணிநேரம் கழித்து அப்பொழுதுதான் நீனா தகாண்ட்டி இரண்டு மாதம் கர்ப்பமாகயிருக்கிறாள் என்பதை.
ஆக, அவர்கள் மாட்ரிட் நகரை அடைந்த போது, திகட்டிப்போன காதலர்களாக இருப்பதிலிருந்து வெகு தொலைவிலும், ஆனால் புதுமணத் தம்பதிகள் போல நடந்து கொள்வதற்கான போதுமான உசிதங்களும் கொண்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன், அதிகாரப் படிநிலை நிர்வாக மரபு அதிகாரி ஒருவர் அவளுடைய பெற்றோர் அவளுக்களித்த திருமணப் பரிசான, ஓரங்களில் கறுப்பு நிறத்தில் பளிச்சென்று அலங்கரிக்கப்பட்ட வெண்ணிற மின்கோட்டை நீனா தகாண்ட்டியிடம் கொடுக்க முதல் வகுப்பு அறைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் காத்துக்கொண்டிருந்த காரின், குறி இடப்படாத சாவிகளைப் பில்லி சான்ஷெஸூக்குத் தந்தார். மேலும் அந்தக் குளிர்காலத்தில் ஃபேஷனின் உச்சத்திலிருந்த ஷெர்லிங் - (மயிர் கத்தரிக்கப்பட்ட, ஒரு வருடத்திற்குள்ளான குட்டி ஆட்டின் பதனிடப்பட்ட தோல்) மேல்கோட்டு ஒன்றையும் கொடுத்தார்.
நிர்வாக வரவேற்பறையில் அவர்களது வெளி உறவுத்துறை குழு அவர்களை வரவேற்றது. நீனா தகாண்ட்டிக்காகக் காத்துக்கொண்டிருந்த அந்தத் தூதரும் அவரது மனைவியும் இரண்டு குடும்பங்களின் நண்பர்கள் மட்டுமல்லாது, நீனா தகாண்ட்டி பிறந்த போது பிரசவம் பார்த்த மருத்துவரும் கூட. அவர் ரோஜாக்கள் நிறைந்த பூங்கொத்துடன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் - அவை அவ்வளவு புத்தம் புதியதாயும் ஒளிர்வுமிக்கதாயும் இருந்ததால் பனித்துளிகள் கூடச் செயற்கையானவையோ என்று தோன்றின. பொய் முத்தங்களுடன் அவர்கள் இருவருக்கும் அவள் வாழ்த்து தெரிவித்து, பிறகு கொஞ்சம் உரிய காலத்தை முந்திவிட்ட மணப்பெண் என்ற அவளது அந்தஸ்து பற்றி அசௌகரியமான உணர்வுடன் அந்த ரோஜாக்களை வாங்கிக் கொண்டாள். அவற்றை அவள் எடுத்துக் கொண்டபோது விரல் ஒரு முள்ளின் மேல் பட்டுக் குத்தியது. ஆனால் அந்த அசம்பாவிதத்தை அவள் ஒரு வசீகரச் சாதுர்யத்துடன் கையாண்டாள்.
“நான் வேண்டுமென்றுதான் அப்படிச் செய்தேன்” அவள் கூறினாள், “அப்போதுதான் நீங்கள் என் மோதிரத்தைப் பார்ப்பீர்கள். ”
மெய்யாகவே அந்த வெளி உறவுத்துறை குழு முழுவதுமே அந்த மோதிரத்தின் அழகைக் கண்டு வியந்தது - அது கிட்டத்தட்ட ஒரு வாழ்நாள் வருவாயையே விலையாகக்கொண்டிருக்க வேண்டும் -அந்த வைரங்களின் தரம் காரணமாகவன்றி நன்கு பேணப்பட்டிருந்த அதன் புராதனத்தன்மைக்காக. ஆனால் எவருமே அவள் விரலில் ரத்தம் கசியத் தொடங்கியதைக் கவனிக்கவில்லை. அவர்கள் அனைவரும் அந்தப் புதிய காரின் மேல் தங்கள் கவனத்தைத் திருப்பினர். அந்த அரசு தூதுவரின் வேடிக்கையான திட்டத்தின்படி, அதைச் செலோஃபன் காகிதத்தில் சுற்றி, பிறகு அதை ஒரு மிகப் பெரிய தங்க ரிப்பன் கொண்டு கட்டி விட்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரது புனைவுத் திறனைக் கவனிக்கவே இல்லை.
அவன் அந்தக் காரைக் காண மிகவும் ஆவலாக இருந்ததால் அதைச் சுற்றியிருந்த காகிதத்தை உடனடியாகக் கிழித்தெறிந்து விட்டு மூச்சற்று நின்றான். மேற்புறம் மாற்றி அமைத்துக்கொள்ளும்படியான வசதியுள்ள, அசலான தோல் இருக்கை உறைகளுடன் கூடிய அந்த வருடத்திய ‘பென்ட்லி கன்வெர்ட்டிபிள்’ கார் ஆகும் அது. ஆகாயம் சாம்பல் போர்வை போலக் காட்சியளித்தது. துளைத்தெடுக்கும் குளிர் காற்று வீசிய பொழுது வெளியே இருப்பதற்கான உகந்த நேரம் அதுவாக இல்லாத போதிலும், பில்லி சான்ஷெஸ் குளிர் பற்றிய சிந்தனை ஏதுமில்லாதிருந்தான். அந்தக் காரின் மிகச்சிறிய நுணுக்கத்தையும் விடாமல் பார்த்து முடிக்கும் வரை வெளியே இருந்த வண்டி நிறுத்தத்திலேயே அந்த அரசுக் குழுவை நிறுத்தி வைத்திருந்தான், மரியாதை நிமித்தம் அவர்கள் விறைக்கும் குளிரில் அவர்கள் இருப்பதை அறியாமல். பிறகு அந்தத் தூதுவர் அவனருகில் அமர்ந்தார், அவர்களின் அதிகாரபூர்வமான தங்குமிடத்திற்கு வழிகாட்டியபடி. அங்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. வழியில், அந்த நகரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பல காட்சிகளைச் சுட்டிக் காட்டினார், ஆனால் பில்லி சான்ஷெஸ் அந்தக் காரின் மந்திரத்தில் மாத்திரமே ஈர்க்கப்பட்டவன் போலிருந்தான்.
அவனுடைய நாட்டுக்கு வெளியே அவன் பிரயாணம் செய்வது அதுவே முதல் முறையாகும். ஞான ஸ்நானம் பெறப்படாத குழந்தைகள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்குமாக அலைக்கழிக்கப்படுவதைப் போல, மறதியின் அசட்டையில் இலக்கின்றி மிதக்கும் வரை, எல்லாத் தனியார் மற்றும் பொதுப்பள்ளிகள் வாயிலாகத் திரும்பத் திரும்ப ஒரே வகுப்பில் இருந்தான். அவனுடைய இடத்தைப் போலன்றி அந்த நகரில் அவனுக்குத் தென்பட்ட ஆரம்பக் காட்சிகள் — நடுப்பகல் பொழுதில் எரியவிடப்பட்டிருந்த விளக்குகளுடனான சாம்பல் நிற வீடுகளின் வரிசைகள், இலைகளற்ற மரங்கள், தூரத்துச் சமுத்திரம் - இவை எல்லாமே அவனது இதயத்தின் ஓரத்தில் அவன் கட்டுப்படுத்தி வைக்க யத்தனித்த பாழாய்ப்போய் விட்டதான உணர்வை அதிகரித்தன. ஆனால் சீக்கிரமே அவை பற்றிய பிரக்ஞை இல்லாமல் அவன் மறதியின் முதல் வலையில் வீழ்ந்தான். அந்தப் பருவ காலத்தின் மிக ஆரம்பத்திய, ஒரு திடீர் மௌனப் புயல் தலைக்கு மேல் வெடித்திருந்தது. மதிய உணவிற்குப் பின் அந்த அரசு தூதரின் வீட்டிலிருந்து ஃபிரான்சு நோக்கிய அவர்கள் பயணத்தைத் தொடங்கிய பொழுது, அந்த நகரம் ஒளிரும் உறைபனியால் போர்த்தப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அப்பொழுது பில்லி சான்ஷெஸ் அந்தக் காரை மறந்தான். மற்ற ஒவ்வொருவரும் கவனித்துக் கொண்டிருக்க, அவன் சந்தோஷ மிகுதியில் கூச்சலிட்டான். முஷ்டி மடங்கிய கை நிறைந்த பனிக்கட்டியைத் தன் தலைக்கு மேலே வீசி எறிந்து, அந்தத் தெருவின் நடுவே தான் அணிந்திருந்த புதிய கோட்டுடன் உருண்டான்.
அந்தப் புயலுக்குப் பின்னர் ஒளி ஊடுருவித் தெரியும்படியாக மாறிய ஒரு பகற்பொழுதில், அவர்கள் மாட்ரிட் நகரை விட்டுக் கிளம்பும் வரையில் நீனா தகாண்ட்டி தனது விரலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை உணரவில்லை. அலுவலக நிமித்த மதிய உணவின்போது சாக்ஸபோனில் அரசாங்க விருந்துகளுக்குப் பிறகு இத்தாலிய இசை நாடக பாடல்களைப் பாட விழையும் அந்த அரசு தூதுவரின் மனைவியுடன் சென்று சாக்ஸபோன் வாசிக்கும்போது அவள் விரல் சிரமம் கொடுத்திருக்கவில்லை என்பதால் இது அவளை ஆச்சரியப்படுத்தியது. பிறகு, எல்லைப் பகுதிக்குச் செல்லும் குறுக்குப்பாதைகளைக் கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, அவள் தன் போதமின்றி ஒவ்வொருமுறை ரத்தம் கசிந்தபோதும் அந்த விரலைச் சப்பினாள், மற்றும் அவர்கள் பைர்ரனீஸ் மலைத்தொடர் பகுதியை அடைந்த பொழுதுதான் ஒரு மருந்துக் கடையைத் தேட வேண்டியதை யோசித்தாள். பிறகு அவள் கடந்த சில நாட்களின் அதிகப்படியாய்த் தங்கிப் போன கனவுகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிப் போனாள். திடுக்கிட்டு, கார் தண்ணீரின் ஊடாகச் செல்வதான ஒரு அச்சுறுத்தும் பீதிக் கனவின் மனப்பதிவில் கண் விழித்த சமயம், விரலைச் சுற்றியிருந்த கைக் குட்டையின் ஞாபகம் அவளுக்கு வந்தபோது நீண்ட நேரமாகி விட்டிருந்தது. காரின் டேஷ் போர்டில் இருந்த ஒளியூட்டப்பட்டிருந்த கடிகாரத்தை அவள்பார்த்தபோது மணி மூன்று ஆகியிருந்தது. மனக் கணக்குப் போட்டவள் பிறகுதான் போர்டோ பகுதியையும் அதேபோல, லுவா - நதியின் நீண்ட வெள்ளப்பெருக்குத் தடுப்பு மதிலை ஒட்டி சென்றுகொண்டிருந்ததையும், அங்கோலேம் பகுதியையும், புவாட்டியரையும் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தாள் - மூடுபனி வழியே வடிந்து இறங்கியது நிலவொளி, அந்தக் கோட்டைகளின் நிழல் வடிவங்கள் பைன் மரங்களின் ஊடாக ஏதோ மாயக் கதைகளில் வருவது போன்ற தோற்றமளித்தன. அந்தப் பிரதேசத்தை மனப்பாடமாக அறிந்திருந்த நீனா தகாண்ட்டி பாரிசிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறோம் என்று கணித்தாள். மேலும் பில்லி சான்ஷெஸ் அசந்து விடாமல் இன்னும் ஸ்டியரிங்கிலேயே இருந்தான்.
“நீ காட்டு மனிதன்” அவள் கூறினாள்.“நீ பதினோரு மணி நேரமாகக் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறாய், மேலும் நீ எதுவும் சாப்பிடவில்லை.”
அந்தப் புதுக்காரின் போதை அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது. விமானத்திலும் அவன் அதிகம் உறங்கி இருக்கவில்லை. ஆனால் விடிவதற்குள் பாரிஸ் நகரை அடையத் தேவையான கூர்ந்த விழிப்புடனும் தேவையான தெம்புடனும் இருந்தான். “அந்தத் தூதரக மதிய உணவு இன்னும் என் வயிறு நிரம்ப இருக்கிறது”, என்றான் அவன். பிறகு மேலோட்டமான தர்க்கம் ஏதுமின்றித் தெளிவாகக் கூறினான், “என்ன இருந்தாலும், கார்த்தஜீனாவில் அவர்கள் இப்பொழுதுதான் திரைப்படம் முடிந்து செல்கிறார்கள். கண்டிப்பாகப் பத்து மணியாகத்தான் இருக்கும். ”
என்றாலும் கூட அவன் ஸ்டியரிங்கிலேயே உறங்கி விடுவானோ என்று நீனா தகாண்ட்டிக்குப் பயமாகயிருந்தது. மாட்ரிட்டில் அவர்கள் பெற்றுக்கொண்ட பல பரிசுப்பொருட்களில் ஒன்றைப் பிரித்தாள் அவள். பிறகு, இனிப்பூட்டி பதனம் செய்யப்பட்ட ஆரஞ்சு ஒன்றை அவன் வாய்க்குள் வைக்க முயன்றாள்.
ஆனால் அவன் திரும்பிக் கொண்டான்.
“உண்மையான ஆண்கள் இனிப்பு சாப்பிடுவதில்லை” என்றான் அவன்.
ஆர்லியன்ஸூக்கு சற்று முன்னதாகவே அந்த மூடுபனி விலகியது. பனிபடர்ந்த வயல்வெளிகளை மிகப் பெரிய சந்திரன் ஒளியூட்டியது. ஆனால் போக்குவரத்து மிகவும் சிக்கலாக ஆகியது - காரணம் பாரிசுக்குச் சென்று கொண்டிருக்கும் உற்பத்திப் பொருட்களை ஏற்றிச் செல்லும் எல்லாப் பெரிய ட்ரக்குகளும், ஒயின் ஏற்றிச் செல்லும் வண்டிகளும் அந்த நெடுஞ்சாலையில் இணைந்தன. நீனா தாக் கொண்ட்டே காரோட்டுவதில் அவள் கணவனுக்கு உதவி செய்ய விரும்பினாள் என்றாலும் அதைக் குறிப்பால் உணர்த்திவிடக் கூடத் தைரியமின்றி இருந்தாள். முதல்முறையாக அவர்கள் இருவருமாக வெளியே சென்றிருந்த சமயம் ஒரு மனைவி காரோட்ட கணவன் பயணம் செய்வது போல அவமானப்படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை என்று அவன் அவளிடம் தெரிவித்திருந்தான். ஐந்து மணிநேர ஆழ்ந்த அமைதியான உறக்கத்திற்குப் பின்னர் அவள் மனம் தெளிவாகியிருந்தது. மேலும், சிறிய வயதினளாக இருந்ததிலிருந்தே அவள் பெற்றோருடன் எண்ணற்ற முறை செய்த பயணங்களால் அவள் அறிந்திருந்த பிரெஞ்சு மாகாணத்தில் அந்தக் குறிப்பிட்ட உணவகத்தில் கூட நிற்காமல் வந்தது குறித்துச் சந்தோஷப்பட்டாள். இதைப்போல அழகான நாட்டுப் புறம் இந்த உலகில் வேறு எங்கேயும் கிடையாது அவள் கூறினாள்: “ஆனால் ஒரு குவளை நீர் இலவசமாய்க் கொடுக்கும் ஒருவரைக்கூடக் காண முடியாது. தாகத்தினால் செத்தே விடுவோம்.” இதுபற்றி அவள் அவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்ததால் கடைசி நிமிடத்தில் அவள் ஒரு சோப்புக் கட்டியையும், கழிவறைகளில் பயன்படும் பேப்பர் ஒரு கட்டும் அவளது ஓரிரவுக்குத் தேவையான பொருட்கள் வைக்கும் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள். காரணம் பிரெஞ்சு உணவகங்களில் எப்போதும் சோப்புக்கட்டி இருந்ததேயில்லை, குளியலறைகளில் காணப்படும் பேப்பர் கூட முந்தைய வாரத்தின் செய்தித்தாள்கள் சிறு சதுரங்களாகக் கத்தரிக்கப்பட்டு ஒரு ஆணியில் தொங்க விடப்பட்டிருக்கும். அந்தக் கணம் அவள் வருந்தியது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே, அதாவது, புணர்ச்சியின்றி அந்த முழு இரவையும் வீணடித்ததற்காக. அவள் கணவனின் பதில் உடனடியாய் வந்தது.
“நான் இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன், பனியில் புணர்வது எத்தனை அற்புதமாயிருக்கக் கூடும் என்று”. அவன் கூறினான்: “இதே இடத்தில், நீ விரும்பினால்”.
நீனா தகாண்ட்டி அதுபற்றித் தீவிரமாக யோசித்தாள். அந்த நெடுஞ்சாலையின் விளிம்பிலிருந்த நிலவொளியூட்டப்பட்ட பனி, பஞ்சு போன்றும் வெதுவெதுப்பாகவும் தோன்றியது. ஆனால் அவர்கள் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை நெருங்கியபோது, போக்குவரத்து நெரிசல் அதிகமாயிற்று. அங்கே இருந்தவை வெளிச்சமிடப்பட்டிருந்த கொத்துக்கொத்தான தொழிற்சாலைகளும், மிதிவண்டிகளில் பெரும்பான்மை தொழிலாளிகளும் காணப்பட்டனர் — குளிர் காலமாக இல்லாதிருந்தால் அது ஒரு பட்டப் பகலாக ஆகியிருக்கும் இந்நேரம்.
“பாரிஸ் செல்லும் வரை நாம் சற்று பொறுத்திருப்போம்” என்றாள் நீனா தகாண்ட்டி. “மணமான ஜோடிகள்போல, சுத்தமான விரிப்புகளுடனான ஒரு படுக்கையில், நன்றாக, வெதுவெதுப்பாக.”
“இதுதான் முதல்முறையாக நீ என்னை மறுப்பது”, என்றான் அவன்.
“அப்படித்தான்”, அவள் பதில் அளித்தாள், “நாம் முதல்முறையாகத் திருமணம் செய்து கொண்டிருப்பதும் இப்பொழுதுதான்.”
விடியலுக்குச் சற்று முன்னர் அவர்கள் தெருவோர உணவகத்தில் தங்கள் முகங்களைக் கழுவிக்கொண்டு சிறுநீர் கழித்தபின், ட்ரக் ஓட்டுனர்கள் காலை உணவுடன் சிவப்பு ஒயின் குடித்துக்கொண்டிருந்த ஒரு கவுண்ட்டரில் காபியும், வெட்டி மடிக்கப்பட்டிருந்த சூடான ரொட்டித் துண்டுகளையும் சாப்பிட்டனர். நீனா தகாண்ட்டி குளியலறையில் அவள் குட்டைப் பாவாடையிலும், ரவிக்கையிலும் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டாள். ஆனால் அதைக் கழுவி நீக்கி விட யத்தனிக்கவில்லை. இரத்தக் கறை படிந்த கைக்குட்டையைக் குப்பைக் கூடைக்குள் எறிந்தாள். திருமண மோதிரத்தை இடதுகைக்கு மாற்றிக் கொண்டாள். பிறகு சோப்புக் கொண்டு நீரில் காயம்பட்டிருந்த விரலைக் கழுவினாள். அந்தக் கீறல் ஏறக்குறைய கண்ணுக்குப் புலப்படாததாகவே இருந்தது. இருப் பினும் அவர்கள் காருக்குத் திரும்பிய உடனேயே மீண்டும் அது ரத்தம் கசியத் தொடங்கியது. ஜன்னலுக்கு வெளியே நீனா தகாண்ட்டி தன் கையைத் தொங்க விட்டாள் - வயல்களிலிருந்து வீசும் குளிர்ந்த காற்றுக்கு ரத்தக்கசிவை நிறுத்தும் தன்மை உண்டென்ற நிச்சயத்துடன். இந்தச் சாமர்த்தியமும் பலனளிக்காது போயிற்று, ஆனால் அவள் அதுபற்றி இன்னும் அக்கறையின்றி இருந்தாள். “யாரோ ஒருவர் நம்மைக் கண்டுபிடிக்க விரும்பினால் அது மிகவும் சுலபம்”, இயல்பான வசீகரத்துடன் கூறினாள் அவள், “அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் இந்தப் பனித் தரை மேல் படிந்த என் ரத்தச் சுவடைப் பின் தொடரவேண்டியதுதான்.” பிறகு, அவள் என்ன கூறியிருந்தாளோ அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தாள். விடியலின் முதல் வெளிச்சத்தில் அவள் முகம் மலர்ந்தது.
“கற்பனை செய்”, அவள் கூறினாள். “மாட்ரிட்டிலிருந்து பாரிஸ் வரையிலான வழி எங்கிலும் பனியில் ரத்தச் சுவடு. அது ஒரு நல்ல பாடலைத் தரலாமில்லயா?”
மறுபடியும் சிந்திக்க அவளுக்கு நேரம் இருக்கவில்லை. பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் அவள் விரல் கட்டுக்கடங்கா வெள்ளம்போல ரத்தமாய்க் கசிந்தது, மேலும் அந்தக் கீறலின் வழியே அவளது ஆன்மாவே வெளியேறிச் சென்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். தனது பையில் கொண்டு வந்து இருந்த, கழிவறையில் பயன்படுத்தப்படும் தாள்கள் கொண்டு அந்த வழிதலை நிறுத்த முயற்சி செய்தாள் - ஆனால் ரத்தம் தோய்ந்த தாள்களை ஜன்னலுக்கு வெளியே வீசி எறிவதைவிட அவள் விரலில் அவற்றைச் சுற்றி விடுவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவள் அணிந்திருந்த ஆடைகள், அவள் கோட், அந்தக் கார் இருக்கைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக, சீர் செய்ய இயலாத வகையில் ரத்தத்தால் நனைந்து போய்க்கொண்டிருந்தன. பில்லி சான்ஷெஸ் மெய்யாகவே பயந்து போயிருந்தான். ஒரு மருந்துக்கடை தேடுதலை வற்புறுத்தினான். ஆனால் அவள் அதற்குள்ளாக அறிந்திருந்தாள் இது மருந்துக் கடைக்கு உட்பட்ட விஷயம் அல்லவென்று. “நாம் கிட்டத்தட்ட போர்ட் த ஆர்லியன்ஸ் - இல் இருக்கிறோம்”, அவள் கூறினாள், “நேரே மேலே போக வேண்டும், ஜெனரல் லெக்லெர் அவென்யூ - வழியாக, நிறைய மரங்கள் நிறைந்த அந்தப் பெரியது, பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்”.
அந்தப் பயணத்தின் மிகச் சிரமமான பகுதி இதுதான். மத்தியச் சந்தைகளை அடைய முற்பட்டுக்கொண்டிருந்த சிறிய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய ட்ரக்குகளால் ஆன ஒரு முடிச்சுடன் இரண்டு பக்கங்களிலும் அந்த ஜெனரல் லெக்லெர் அவென்யூ - நெரிசலடைந்திருந்தது. பயனற்ற ஹார்ன்களின் ஒலி ஆரவாரம் பில்லி சான்ஷெஸை அவ்வளவு கொதிப்படையச் செய்திருந்ததால், அவன் பல ஓட்டுநர்களைச் சங்கிலி - தாக்கும் குழுவின் வசை மொழியில் திட்டினான். மேலும் காரை விட்டு வெளியேறி அவர்களில் ஒருவனைத் தாக்கக் கூட முயன்றான். ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் உலகிலேயே இங்கிதமில்லாதவர்கள் என்ற போதிலும், அவர்கள் எப்போதும் முஷ்டிச் சண்டையிட்டதில்லை என்று நீனா தகாண்ட்டி அவனை நம்பச் செய்தாள். அது அவளின் சிறப்பான கணிப்பின் ஒரு நிரூபணமாக இருந்தது, ஏனெனில் அந்தக் கணத்தில் நீனா தகாண்ட்டி சுயநினைவு இழக்காமலிருக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.
லியோன் த பெல்ஃபோர் - டின் போக்குவரத்து வட்டத்தைச் சுற்றி வரவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு ஆயிற்று. ஏதோ இரவு போலச் சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் கடைகள் வெளிச்சமிடப்பட்டிருந்தன, அது ஒரு சராசரி செவ்வாய்க் கிழமை - மேகங்கள் மூடிய இருள் சூழ்ந்திருந்த அசுத்தமான பாரிஸ்தன்மையான ஜனவரி மாதத்தில், இடைவிடாது பெய்து, பனிக்கட்டியாய் உறையாத மழையுடன். ஆனால் டென்ஃபெர் ரோஷரூ அவென்யூவில் போக்குவரத்துக் குறைவாயிருந்தது. அதற்கு அடுத்த ஒரு சில வரிசைக் கட்டிடங்கள் தள்ளி, நீனா தகாண்ட்டி அவள் கணவனிடம் வலதுபுறம் திரும்பச் சொன்னாள், பிறகு அவன் ஒரு பெரிய, இருளடர்ந்த மருத்துவமனையின் அந்த அவசர சிகிக்சைப் பிரிவின் நுழைவாயிலுக்கு வெளியே காரை நிறுத்தினான்.
காரிலிருந்து வெளியே வருவதற்கு அவளுக்கு உதவி தேவைப்பட்டது. இருப்பினும் அவள் தனது அமைதியையோ அல்லது தெளிவையோ இழக்கவில்லை. சக்கரங்கள் பொருத்திய ஸ்ரெட்ச்சர் வண்டியில் படுத்தபடி, பணிநேர மருத்துவருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, அவள் அவளைப் பற்றிய அடையாளக் குறிப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய செவிலியின் வழக்கமான கேள்விகளுக்குப் பதிலளித்தாள். பில்லி சான்ஷெஸ் அவள் பையைச் சுமந்து வந்தான், அவளது திருமண மோதிரத்தை அணிந்திருந்த அந்த இடது கையை இறுகப் பற்றினான்: அது தளர்ச்சியடைந்து குளிர்ந்திருந்தது. அவள் உதடுகள் அவற்றின் நிறமிழந்திருந்தன. அந்த மருத்துவர் வந்து சேரும் வரை, அவளது காயம்பட்ட விரலை ஒரு சிறிய பரிசோதனை செய்யும் வரை அவள் கையைப் பிடித்தபடியே அவன் அவளருகிலேயே இருந்தான். அந்த டாக்டர் மிகுந்த இளவயதினராக இருந்தார், மழிக்கப்பட்டிருந்த தலையுடனும், பழைய தாமிர உலோகநிறத் தோலுடனும். நீனா தகாண்ட்டி அவரிடம் தன் கவனத்தைத் தரவில்லை. ஆனால் ஒரு வெளிறிய புன்னகையைத் தன் கணவன் மேல் திருப்பினாள், “பயப்படாதே”, அவள் சொன்னாள், அவளது வெல்வதற்கரிய நகைச்சுவை உணர்வுடன், “நடக்கக் கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இந்த நரமாமிசன் என் கையை வெட்டி தின்று விடுவதுதான்.”
அந்த டாக்டர் பரிசோதனையை முடித்தார். பிறகு மிகச் சரியான ஸ்பானிய மொழியில் ஒரு வித்தியாசமான ஆசிய உச்சரிப்புடன் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
“இல்லை குழந்தைகளே”, அவர் கூறினார். “இந்த நரமாமிசன் இப்படி ஒரு அழகான கையை வெட்டுவதை விடப் பசியால் இறந்து போவான். ”
அவர்கள் தர்ம சங்கடத்திற்குள்ளானார்கள், ஆனால் ஒரு இணக்கமான அசைவில் அவர்களை அமைதிப்படுத்தினார் அந்த டாக்டர். பிறகு அவர் அந்தக் கட்டிலை நகர்த்திச் செல்லப் பணித்தார். தன் மனைவியின் கைகளைப் பிடித்தபடி பில்லி சான்ஷெஸ் பின்தொடர முயன்றான். டாக்டர் அவன் கைகளை எடுத்துக்கொண்டு அவனைத் தடுத்து நிறுத்தினார்.
“நீ கூடாது”, அவர் சொன்னார். அவள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்கிறாள்.
நீனா தகாண்ட்டி அவள் கணவனை நோக்கி மறுபடியும் புன்னகைத்தாள், விடை பெறுவதற்காய் அந்த நடைக்கூடத்தின் முடிவில் பார்வையிலிருந்து அவள் மறையும் வரை கை அசைத்தவாறு இருந்தாள். அந்த டாக்டர் க்ளிப் பொருத்திய எழுது பலகையில் அந்த நர்ஸ் எழுதியிருந்த குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தார். பில்லி சான்ஷெஸ் அவரை அழைத்தான்.
“டாக்டர், அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” அவன் கூறினான்.
“எவ்வளவு நாளாய்?”
“இரண்டு மாதங்கள்”
இந்த தகவலுக்குப் பில்லி சான்ஷெஸ் எதிர்பார்த்த அளவு டாக்டர் முக்கியத்துவம் தரவில்லை. “நீ என்னிடம் சொல்வது சரிதான்”, அவர் கூறினார்.
பிறகு கட்டிலைத் தொடர்ந்து நடந்தார். நோயாளிகளின் வியர்வை நாற்றமடித்த, துக்கம் தோன்றச் செய்யும் அந்த அறையில் பில்லி சான்ஷெஸ் நின்றவாறே தனித்து விடப்பட்டான். நீனா தகாண்ட்டி அழைத்துச் சென்றிருந்த அந்தக் கீழ் நோக்கிய, வெறிச்சோடிய நடைக்கூடத்தில் என்ன செய்வதென்று அறியாது விடப்பட்டிருந்தான். பிறகு மற்றவர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த மரபெஞ்சில் உட்கார்ந்தான்.
அவன் எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்திருந்தான் என்பதை அறியவில்லை, ஆனால் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேற அவன் தீர்மானித்த போது மறுபடியும் இரவாகியிருந்தது, மேலும் இன்னும் மழை பெய்துகொண்டிருந்தது, இந்த உலகின் பாரத்தால் அமுக்கப்பட்டு, தான் என்ன செய்யவேண்டுமென்று இன்னும் அவன் அறியாது இருந்தான்.
பல வருடங்களுக்குப் பின்னர் அந்த மருத்துவமனை பதிவேட்டிலிருந்து நான் அறிந்து கொண்ட படி ஜனவரி ஏழாம் தேதி செவ்வாய்க் கிழமையன்று நீனா தகாண்ட்டி 9.30 மணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டாள். அந்த முதல்நாள் இரவில், பில்லி சான் ஷெஸ் அவசர சிகிச்சைப் பிரிவு நுழை வாயிலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்தக் காரில் உறங்கினான். பின் அடுத்த நாள் அதிகாலையில், மிக அருகாமையில் அவன் கண்டுபிடிக்க முடிந்திருந்த உணவகத்தில் ஆறு வேக வைத்த முட்டைகள் சாப்பிட்டான், இரண்டு கோப்பை காப்பியும் அருந்தினான், ஏனெனில் மாட்ரிட்டிலிருந்து அவன் முழுமையான உணவு உண்டிருக்கவில்லை. பிறகு அவன் அந்த அவசர சிகிச்சைப் பகுதிக்குச் திரும்பச் சென்றான். ஆனால் அவன் பிரதான வாயிலைப் பயன்படுத்த வேண்டுமென்பதை அவனுக்குப் புரியச் செய்தனர். நீனா தகாண்ட்டி மெய்யாகவே அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாளா என்று உறுதி செய்துகொண்ட பின், பார்வையாளர்கள் செவ்வாய்க் கிழமைகளில் ஒன்பது மணியிலிருந்து நாலு மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் அதாவது மற்ற ஆறு தினங்களில் இல்லை என்று கூறிய அந்தப் பெண் வரவேற்பாளரிடம் பேசுவதற்கு ஒரு அஸ்த்தூரிய பராமரிப்புப் பணியாளன் அவனுக்கு உதவி செய்தான். மழிக்கப்பட்ட தலையுடன் ஆன ஒரு கறுப்பன் என்று அவன் வர்ணித்த, ஸ்பானிய மொழி பேசும் அந்த டாக்டரைப் பார்க்க முயன்றான். ஆனால் இந்த மாதிரியான இரண்டு எளிய அடையாளங்களின் அடிப்படையில் அவரைப் பற்றி எவராலும் எதுவும் கூற இயலவில்லை.
அந்தப் பதிவேட்டில் நீனா தகாண்ட்டி இருப்பதை மறுஉறுதி செய்து கொண்டவன் காருக்குத் திரும்பினான். ஒரு போக்குவரத்து அதிகாரி, இரட்டைப்படை எண் வரிசைப் பகுதியில், மிகக் குறுகலான ஒரு தெருவில் அவன் வண்டியை இரண்டு வரிசை கட்டிடங்களுக்கு அப்பால் நிறுத்தச் செய்தார். தெருவின் அப்பால் ஒரு புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று ஹோட்டல் நிக்கோல் என்ற வாசகத்துடன் - அது ஒரு நட்சத்திர அந்தஸ்து மட்டுமே பெற்றிருந்தது, மேலும் அதன் வரவேற்புப் பகுதி மிகச் சிறியதாக இருந்தது, அதில் ஒரே ஒரு சோபா மற்றும் ஒரு பழைய, கம்பீரமான பியானோ இருந்தது. குழல் போல உச்சஸ்தாயி குரல் கொண்ட அந்த உரிமையாளர், பணம் இருக்கும் பட்சத்தில் எந்த வாடிக்கையாளரையும் எந்த மொழியிலும் புரிந்து கொள்ள முடிந்தவராயிருந்தார். பில்லி சான்ஷெஸ் தனது பதினோரு பெட்டிகள் மற்றும் ஒன்பது பரிசுப் பெட்டிகளுடன் காலியாக இருந்த அந்த ஒரே அறையை எடுத்துக்கொண்டான். ஒன்பதாவது தளத்தில் இருந்த ஒரு முக்கோண வடிவ மச்சு அறைக்குச் செல்லும், வேக வைத்த காலிஃப்ளவர் நெடி வீசிய வட்டவடிவப் படிக்கட்டுகளை ஒரே மூச்சில் தாவி ஏறினான். மங்கலான தாள்களால் சுவர்கள் மூடப்பட்டிருந்தன, மேலும் ஒரு பக்கத்து ஜன்னலருகில் எதற்குமே இடமில்லாதிருந்தது, ஆனால் உட்புறமாயிருந்த முற்றம் போன்ற பகுதியிலிருந்து அந்த மங்கலான வெளிச்சம் வருவதற்குத் தவிர.
இரட்டைப் படுக்கை, ஒரு உயரமான அலமாரி, ஒரு சாய முடியாத நேரான பின்பகுதி கொண்ட நாற்காலி, கையோடு சுலபமாக எடுத்துச் செல்லக் கூடிய ஒரு பிடெ - (பிறப்பு உறுப்புக்களைக் கழுவுவதற்கான பீச்சும் நீர் இணைப்புக் கொண்ட அமைப்பு) ஒரு வாஷ்பேசின், நீர் மொள்ளும் பாத்திரம் ஆக அந்த அறையில் இருப்பதற்கு ஒரே வழி அந்தப் படுக்கையில் படுத்துக் கொள்வதுதான். பழையவை என்பதற்கும் மோசமாக எல்லாப் பொருள்களுமே கைவிடப்பட்டவையாய்த் தோன்றின, ஆனால் ஆரோக்கியமளிக்கவல்ல ஒரு சமீபத்திய மருந்து நெடியுடன்.
அவனது வாழ்வின் எஞ்சிய பகுதியை அந்தக் கருமித்தனத்திற்கான திறமையில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த அந்த உலகின் புதிர்களைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் கழித்திருந்தாலும் சான்ஷெஸ் அவற்றை விடுவித்திருக்க முடியாது. அவனது தளத்தை அவன் அடையும் முன்னரே அந்தப் படிக்கட்டு விளக்கு அணைந்து போய்விடும் புதிரை அவன் ஒருபோதும் விடுவிக்க இயலவில்லை, மேலும் அவன் அதை மறுபடியும் எப்படி எரிய விடுவதென்று கண்டுபிடிக்கவும் இல்லை. ஒவ்வொரு தளத்தை அடையும் போதும் கழிவறையுடனான ஒரு சிறிய அறை இருந்ததையும், ஒரு சங்கிலி இழுப்பில் அது கழிவுகளைத் தள்ளிவிடுவதையும் அறிந்து கொள்ள அவனுக்கு ஒரு காலை நேரத்தின் பாதிப்பகுதி தேவையாயிருந்தது. மற்றும் அவன் அதை இருள் நேரத்தில் உபயோகிக்க முடிவு செய்து இருந்தான். அப்போதுதான், உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டால் அந்த விளக்கு எரியத் தொடங்கியதும் அதனால் யாருமே அதை மறுபடி அணைக்க மறந்து போக நேரிடாது என்பதையும் அவன் கண்டுபிடித்தான். யதேச்சையாக, அந்த நீண்ட ஹாலின் ஒரு கோடியில் இருந்த ஷவரை, அவன் சொந்த நாட்டில் உபயோகிப்பது போல, ஒரு நாளில் இரண்டு முறை அதை உபயோகப்படுத்த உறுதி செய்துகொண்டான். அதற்கெனத் தனியே பணம் கொடுக்க வேண்டியிருந்தது, கைப்பணமாக, மற்றும் அந்த அலுவலகக் கட்டுப்பாட்டில் இருந்த அந்தச் சுடுநீர் மூன்று நிமிடங்களில் நின்று போனது. இருப்பினும் பில்லி சான்ஷெஸ் தேவையான தெளிவுடன் தனதிலிருந்து வேறுபட்டு இந்த விதமாகக் காரியங்களைச் செய்வது பற்றி அறிந்து கொண்டான். எப்படிப் பார்த்தாலும் ஜனவரி மாதத்துக் குளிரில் வெளியே இருப்பதை விடவும் இது மிகவும் சிலாக்கியமானது. மற்றும் அவன் மிகவும் குழப்பமாகவும், தனிமையாகவும் உணர்ந்தான் அதாவது நீனா தகாண்ட்டியின் உதவியும், பாதுகாவலும் இன்றி அவனால் எப்படி வாழ்ந்திருக்க முடிந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
புதன் கிழமை காலை அறைக்குச் சென்ற பின், கோட்டுடன் படுக்கையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். இரண்டு வரிசை கட்டிடங்கள் தள்ளி அப்பால், இன்னும் ரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் அந்த அற்புதப்படைப்பைப் பற்றி எண்ணியவாறே, அவன் உடனே ஒரு மிக இயல்பான உறக்கத்துள் வீழ்ந்தான். விழித்த போது அவன் கைக்கடிகாரம் 5 மணி என்றது, இன்னும் ஜன்னல்களைக் காற்றும் மழையும் விளாசிக் கொண்டிருக்க. ஆனால் அது பகலா, காலையா அல்லது வாரத்தின் எந்த நாள் அது என்பது பற்றியோ அல்லது அது எந்த நகரம் என்பதையோ அவனால் கணிக்க இயலவில்லை. காலைப் பொழுது தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை, படுக்கையில் விழித்தபடி, எப்போதும் நீனா தகாண்ட்டியை நினைத்துக் கொண்டே அவன் காத்திருந்தான். பிறகு அவன் முந்தைய நாள் போலவே அதே உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றான். அன்று வியாழக்கிழமை என்று அங்கே தெரிந்து கொண்டான். பிறகு அந்த மருத்துவமனையில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன, மற்றும் மழை நின்றிருந்தது. அதனால் அவன் பிரதான நுழை வாயிலின் வெளியே இருந்த அந்தச் செஸ்ட்நட் மரத்தின் அடிப்பாகத்தின் மீது சாய்ந்து கொண்டான்.
எங்கே டாக்டர்களும் நர்சுகளும் வெண்ணிற கோட்டுடன் உள்ளும் புறமும் நடந்தபடி இருந்தனரோ, அங்கே நீனா தாக்கொண்ட்டேவைச் சேர்த்த அந்த ஆசிய டாக்டரைக் காணலாம் என்ற நம்பிக்கையுடன். அப்பொழுதும் மற்றும் மதிய உணவிற்குப் பிறகும் அவன் அவரைக் காணவில்லை. மேலும் அவன் வெளியே நின்று குளிரில் உறைந்து கொண்டிருந்ததால் அவனது கண்காணித்தலை முடித்துக்கொள்ள வேண்டிய தருணமாயிற்று. ஏழு மணிக்கு அவன் இன்னுமொரு சூடான பால் கலந்த காபியைக் குடித்து, கடினமாக வேக வைக்கப்பட்ட இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டான் -இரண்டு நாட்களாக ஒரே இடத்தில் ஒரே மாதிரியான பொருட்களைச் சாப்பிட்ட பின்னர்க் காட்சிக் கவுண்ட்டரிலிருந்து விருப்பப்படி அவனாகவே எடுத்துக் கொண்டான். தூங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்றபோது அந்தத் தெருவின் ஒரு பகுதியில், மற்ற கார்கள் யாவும் எதிர்த்திசையில் நிறுத்தப்பட்டிருக்க, அவனுடைய காரின் முன்புறக் கண்ணாடி யில் ஒட்டப்பட்ட ஒரு அபராதச் சீட்டுடன் அவனது கார் தனியே இருப்பதைக் கண்டான். ஒற்றைப்படை எண் நாட்களில் ஒற்றைப்படை எண் பகுதியில் நிறுத்தலாம் என்றும், இரட்டைப்படை எண் நாட்களில் மற்றொரு பகுதியில் நிறுத்தலாம் என்பதை அவனுக்கு விளக்குவது ஹோட்டல் நிக்கோலின் அந்தச் சுமை தூக்கும் கூலிக்கு ஒரு சிரமமான காரியமாக இருந்தது. அப்பேர்ப்பட்ட பகுத்தறிவுத்தனமான யுக்திகள் சீரிய பிறப்பில் வந்த சான்ஷெஸ் த அவிலாவுக்குப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருந்தன. ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பாக அந்தத் துணிகர மிகுந்த போலீஸ்காரர்கள் அருகில் நின்றிருக்க, மேயரின் அலுவலகக் காரை ஏறக் குறைய அருகில் இருந்த திரைப்பட அரங்கினுள் ஓட்டிச் சென்று முழு நாசம் உண்டாக்கியிருந்தான். அந்தக் கூலி அவனை அபராதப் பணம் செலுத்த அறிவுறுத்திய போதும், அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் காரை நகர்த்த வேண்டாம் என்று சொன்ன போதும் - காரணம் அவன் அதை மறுபடியும் நள்ளிரவில்தான் நகர்த்த முடியும் என்பதையும் - இன்னமும் குறைவாகத்தான் புரிந்து கொண்டான். உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, முதன்முறையாக நீனா தகாண்ட்டி பற்றி மட்டுமல்லாது, கரீபியனின் கார்த்த ஜீனாவில் பொதுச்சந்தையில் இருந்த ஒருபால் புணர்ச்சியாளர்களின் மதுபானக் கடைகளில் வேதனை தந்த அவனது இரவுகள் பற்றியும் நினைத்தான். அரூபாத் தீவிலிருந்து வந்த பாய்மரங்கள் கொண்ட மரக்கலங்கள் நங்கூரமிட்ட அந்தக் கப்பல் துறைக்குள் இருந்த உணவகங்களில் கிடைத்த தேங்காய் சாதம் மற்றும் வறுத்த மீன் ருசியையும் அவன் நினைவு கூர்ந்தான். காட்டு பான்ஸி மலர்ச்செடிகள் நிறைந்த தனது வீட்டின் அந்தச் சுவர்களை, அங்கே முந்தைய இரவில் 7 மணியே ஆகியிருக்கும் - அவன் வீடு, மேலும் மேல் மாடியின் குளிர்ச்சியில், பட்டுப் பைஜாமாவில் அவன் தந்தை செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பதையும் நினைவில் கண்டான் அவன்.
அவன் தன் அம்மாவை நினைத்துக் கொண்டான் - எவருக்குமே அவள் எங்கே இருப்பாள் என்று தெரியாதிருந்தது, என்ன சமயமாக இருந்த போதிலும் - அவனது விரும்பத்தகுந்த, வாயாடித் தாயார் இரவு வேளையில் காதுக்குப் பின்னால் ஒரு ரோஜாவுடனும், மூச்சுத்திணற அடிக்கும் உஷ்ணமான அந்தச் சுமையான, மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட துணியில் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கான உடையில் புழுங்கியபடி அவனது ஏழு வயதில், ஒரு மதியம், அவன் கதவைத் தட்டாமல் அவளறைக்குச் சென்றிருந்தான், பிறகு அவளது அவ்வப்போதான காதலர்களில் ஒருவனுடன் நிர்வாணமாய் அவளைப் படுக்கையில் கண்டான். இருவருமே சுட்டிக்காட்டிப் பேசாதிருந்த, அந்த விரும்பத்தகாத விபத்து, அன்பைவிட உபயோகமானதாய், உடந்தைத்தனமான ஒரு உறவை அவர்களுக்கிடையில் நிறுவியது. ஆனால் அவன் அது பற்றியோ, அல்லது ஒற்றைக் குழந்தைக்கான அவனது தனிமையால் ஏற்பட்ட பல பயங்கரங்கள் பற்றியோ உணர்வில்லாதிருந்தான். ஒரு துயரார்ந்த பாரிஸ் நகர மச்சு அறையில் அவனை அந்த இரவு படுக்கையில் தள்ளி வீசியிருப்பதைக் கண்டு, அவன் வருத்தங்களைச் சொல்வதற்கு யாருமின்றி, தன் மீதே கொண்ட ஆக்ரோஷ கோபத்தில், அழ வேண்டும் என்ற இச்சையை அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அது ஒரு நன்மை பயக்கும் தூக்கமின்மை. வெள்ளியன்று படுக்கையை விட்டு எழுந்து, அவன் கழித்திருந்த அந்த மோசமான இரவினால் புண்படுத்தப்பட்டு, ஆனால் தன் வாழ்வுக்கு ஒரு வரையறை தர தீர்மானித்தான். அவர்களது பெரும்பான்மை பணமும், விலாசப் புத்தகமும் - ஒரு வேளை பாரிஸில் அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவரின் எண்ணை அவன் கண்டுபிடித்திருக்கலாம் - சாவிகள் எல்லாம் நீனா தகாண்ட்டியின் பையில் இருந்ததால் இறுதியில் அவன் தன் பெட்டியின் பூட்டை உடைக்கவும் பிறகு உடை மாற்றிக் கொள்ளவும் முடிவு செய்தான். வழக்கமாகச் சாப்பிடும் உணவகத்தில் அவன் பிரெஞ்சில் “ஹலோ” - சொல்லவும், பன்றிக் கொழுப்பு, இறைச்சிக்கு இடையே வைக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் இவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் கற்றுக்கொண்டிருந்தான். இதை உணர்ந்துகொண்டவன், வெண்ணெணை அல்லது எந்த வகை முட்டை வேண்டும் என்றோ கேட்க ஒருபோதும் இயலாது என்பதை அறிந்திருந்தான். ஏனெனில் அவன் வார்த்தைகளை உச்சரிக்க ஒருபோதும் கற்க வில்லை. ஆனால் ரொட்டியுடன் எப்போதும் வெண்ணெய் பரிமாறப்பட்டது: மேலும் கடினமாக வேக வைத்த முட்டைகள் அந்தக் கவுண்ட்டரில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்து அவன் அவைகளைக் கேட்க வேண்டிய அவசியம் இன்றித் தானே எடுத்துக் கொள்ள முடிந்தது. அதற்கு மேலும், மூன்றாவது நாளின் போது, அந்தப் பணியாளர்கள் அவனை அடையாளம் கண்டு அவன் புரிந்துகொள்ளப்பட மேற்கொண்ட எல்லா முயற்சிகளின் போதும் அவனுக்கு உதவினர். பிறகு வெள்ளிக்கிழமை மதிய உணவு வேளையில் அவனைச் சரியாக இருத்திக் கொள்ள முயன்றபோது, எலும்புகள் அகற்றிய கன்றிறைச்சி யுடன் வறுத்த உருளைக் கிழங்குகள், மற்றும் ஒரு குவளை ஒயின் ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்தான். அவ்வளவு சௌகரியமாய் உணர்ந்தவன், மேலும் ஒரு பாட்டிலுக்கு ஆர்டர் செய்து அதில் பாதியைக் குடித்த பிறகு, திடமான தீர்மானத்துடன் அந்தத் தெருவைக் கடந்து மருத்துமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தான். நீனா தகாண்ட்டியை எங்கே பார்ப்பதென்று அவன் அறியவில்லை, ஆனால் அவன் நினைவில் அந்த ஆசிய டாக்டரின் தெய்வாதீனமான உருவம்நிலை பெற்றிருந்தது, மேலும் அவரைக் கண்டுபிடித்துவிட முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அந்தப் பொதுக் கதவு வழியாக உள்ளே செல்லாமல், மாறாக, சற்று குறைவான கவனத்துடன் கண்காணிக்கப்பட்டதாக அவனுக்குத் தோன்றிய அந்த அவசர சிகிச்சைப் பிரிவு நுழைவாயிலை உபயோகித்தான். ஆனால் நீனா தகாண்ட்டி விடைபெற கை அசைத்துச் சென்ற அந்த நடைக்கூடத்தைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. இரத்தத் தெறிப்புகளால் கறை படிந்திருந்த தளர்ந்த ஆடையணிந்திருந்த ஒரு காவலன், அவன் நடந்து சென்றபோது ஏதோ கேட்டதைப் பில்லி சான்ஷெஸ் கவனிக்காமல் சென்றான். அந்த மனிதன் இவனைப் பின்தொடர்ந்தான் மீண்டும் அதே கேள்வியைத் திரும்பத் திரும்ப ஃபிரெஞ்சு மொழியில் கேட்டவாறே. இறுதியில் அவ்வளவு வேகத்தில் இவன் கையைப் பற்றியதால் இவன் எதிர்பாராது நிறுத்தப்பட்டான். அவனை உதறித் தள்ள முயன்றான் பில்லி சான்ஷெஸ், ஒரு சங்கிலித் தாக்குதல் தந்திரத்துடன். பிறகு அந்தக் காவலன் பிரெஞ்சு மொழியில், மலங்கழிக்கும் தளமோவென இவன் தாயைப் பழித்துப் பேசி, சுற்றி வளைத்துக் கொண்ட சுத்தியல் பிடியில் - இவன் கையைத் தோள் வரையில் முறுக்கி, மறக்காமல் ஓராயிரம் முறை அவன் மலங்கழிக்கத் தளமான அவனது பரத்தை தாய் என்றவாறே இவனைக் கதவுவரை ஏறக்குறைய தூக்கிச் சென்று, வலியால் துடித்துக்கொண்டிருக்க, உருளைக்கிழங்குகள் அடைத்த ஒரு மூட்டையைப் போலத் தூக்கி வீசினான் அந்தத் தெருவின் நடுவில்.
அந்தப் பிற்பகல், அவன் பெற்ற தண்டனையால் வேதனை அடைந்து பில்லி சான்ஷெஸ் கொஞ்சம் முதிர்ந்த மனிதனாக இருக்கத் தொடங்கினான். அரசுத் தூதுவரை நாடிச் செல்லலாம் என்று தீர்மானித்தான், நீனா தகாண்ட்டி அப்படித்தான் செய்திருந்திருப்பாள். அந்த ஹோட்டல் பணியாளன் சுமுகமற்ற தோற்றம் கொண்டிருப்பினும் மிகவும் உதவியாக இருந்தான். மொழிகள் குறித்த மிகுந்த பொறுமை கொண்டிருந்த அந்தப் பணியாளன் அந்தத் தூதரக அலுவலக எண், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிவற்றைத் தொலைபேசி புத்தகத்திலிருந்து கண்டு பிடித்து ஒரு அட்டையில் அவற்றை எழுதியும் கொடுத்தான். ஒரு சுமுகமான பெண் தொலை பேசியில் பதிலளித்தாள். அவளது நிதானமான, ஈர்ப்பில்லாத ஆன்டஸ் பிர தேசத்துச் சொற்களை உடனே அடையாளம் கண்டு கொண்டான். அவனது முழுப்பெயரையும் கூறி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நிச்சயமாய் அந்த இரண்டு சிறப்பான குடும்பங்கள் அந்தப் பெண்மணியின் கருத்தில் பதிந்திருக்கும், ஆனால் தொலைபேசியில் அந்தக் குரல் மாற வில்லை. மனப்பாடம் செய்து வைத்திருந்த தனது பாடத்தை அவள் ஒப்பித்ததைக் கேட்டான் அவன். மாண்புமிகு அரசுத் தூதுவர் அவரது அலுவலகத்தில் அந்தச் சமயத்தில் இல்லை, நாளை மறுநாள் வரைஎதிர்பார்க்க முடியாது, ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முன்அனுமதியின்றி அவரைக் காண இயலாது, அதுவும் அசாதாரணமான அவசரச் சூழ்நிலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க இயலும் என்று சொல்வதைக் கேட்டான். இந்த வழியிலும் நீனா தகாண்ட்டியைப் பார்க்க முடியாது என்று பில்லி சான்ஷெஸ் அறிந்து கொண்டான். பிறகு அந்தச் செய்தியை எப்படி மனதுக்கினிய வகையில் அவள் கொடுத்தாளோ அதே உணர்வுடன் அவன் அவளுக்கு நன்றி கூறினான்.
பாரிசின் மிக அமைதியான மாவட்டங்களில் ஒன்றில், பில்லி சான்ஷெஸை ஈர்த்த ஒரே இடமான 22ரூ த ஷேம்ப்ஸ் எலிஸீஸ் - இல், பல வருடங்களுக்குப் பிறகு என்னிடம் அவனே கார்த்தஜீனா த இன்டி யாஸ் - இல் கூறியது போல, அவனது வருகைக்குப் பின்னர் முதன்முறையாகச் சூரிய ஒளி கரீபியனில் இருப்பது போலப் பிரகாசமாக இருந்தது. மேலும் அந்த ஈஃபில் டவர், பிரகாசமான வானின் குறுக்கே, அந்த நகரத்தின் மேலே உயர்ந்து நின்றது.
அரசுத் தூதுவரின் சார்பாக அவனை அழைத்துப் பேசிய அந்த அதிகாரி ஏதோ ஊறு விளைவிக்கவிருந்த நோயிலிருந்து சமீபத்தில்தான் மீண்டு வந்தவரைப் போல் தோற்றமளித்தார் - அவரது கறுப்புக் காற்சட்டை, கோட்டினால் மட்டுமல்லாது, உறுத்தலான காலர், துக்கம் அனுஷ்டிக்கும் உடை மட்டுமின்றி, அவரது விவேகமான அங்க அசைவுகளும், குரலும் அமைதிப்படுத்துவதான தன்மையும் சேர்த்து. பில்லி சான்ஷெஸின் அக்கறையை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவனது பகுத்தறியும் உசிதங்கள் எதையும் இழந்துவிடாமல் காட்டுமிராண்டி அமெரிக்காக்களுக்கு முரணாக அங்கே அவர்கள் உள்ளே நுழைவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் மருத்துவ விடுதியின் வாயில் காவலருக்கு லஞ்சம் தருவதொன்றே இங்கே ஒரு நாகரிகமடைந்த நாட்டில் இருப்பதாகவும் அதன் கடுமையான வரையறைகள் மிகவும் புராதனமான, கற்றறிந்த அடிப்படைகள் மீது கண்டறியப்பட்டன என்றும் அவனுக்கு நினைவு படுத்தினார். “இல்லை, அன்புச் சிறுவனே” அவர் சொன்னார். காரணத்தின் ஒழுங்குக்கு அவன் தன்னை உட்படுத்திக் கொண்டு செவ்வாய்க் கிழமை வரை காத்திருப்பது மாத்திரமே அவனது ஒரே ஒரு புகலிடம்.
“போகட்டும், இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கின்றன” அவர் முடித்தார். “அதற்குள்ளாக லூவர் மியூசியத்துக்குப் போ. பார்க்கவேண்டிய இடம் அது.”
வெளியே வந்தவன், பிளேஸ் த லா கன்கார்ட்-இல் தான் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ஈஃபில் டவரை அந்த மேற்கூரைக்கும் மேலே கண்டான். பிறகு அது மிகவும் அருகில் இருப்பதாகத் தோன்றியது. அதனால் கப்பல் துறை வழியாக அங்கு நடந்து செல்ல முயன்றான். ஆனால் உடனே உணர்ந்து கொண்டான் அது தோன்றிய தொலைவைவிட இன்னும் கூடுதல் தொலைவில் உள்ளது என்றும், மேலும் அவன் அதைத் தேடும் சமயத்தில் அது தன் இருப்பு நிலையை மாற்றிக் கொண்டே இருந்தது என்றும். அதனால் அவன் நீநா தாக்கொண்டேவைப் பற்றி நினைத்தபடி அந்தச் சைன் நதி- சாலையில் ஒரு நீண்ட கல் இருக்கையில் அமர்ந்தான். அவனுக்குப் படகுகள் போலன்றி அலைந்து திரியும் வீடுகள் போலக் காட்சியளித்த அந்தச் சிறு நீராவிப்படகுகள் சிவப்புக் கூரைகள், மற்றும் ஜன்னல்களில் பூந்தொட்டிகள், தளத்தின் குறுக்கே துணிக் கம்பி வரிசைகளுடன், பாலங்களுக்கு அடியில் கடந்து செல்வதைக் கவனித்துக்கொண்டிருந்தான். அசைவற்ற மீன்பிடி கோல், அசைவற்ற மீன் தூண்டில் நரம்புடன் அசைவற்றிருந்த ஒரு மீனவனைப் பார்த்தான். ஏதாவது அசையக் காத்திருந்து களைத்துப் போனான், இருட்டத் தொடங்கும் வரையிலும். பிறகு ஒரு டாக்ஸி பிடித்து ஹோட் டலுக்குச் செல்லத் தீர்மானித்தான். அப்போதுதான் பாரிசின் எந்த இடத்தில் அந்த மருத்துவமனை இருக்கிறது என்று தனக்குத் தெரியாமல் இருப்பதையும், அதன் பெயர் அல்லது விலாசம் தெரியாது என்பதையும் உணர்ந்தான்.
பெரும் பீதி மற்றும் மழுங்கடிக்கப்பட்ட உணர்வுடன் அவன் கண்ணில் பட்ட முதல் உணவகத்திற்குச் சென்று உயர்ரகக் கான்யாக் - பிராந்தி கேட்டு, பிறகு அவன் எண்ணங்களை ஒரு சீராக வைத்துக்கொள்ள முயன்றான். அவன் சிந்தனை செய்து கொண்டிருந்த போது பல்வேறு கோணங்களில், சுவர்களில் இருந்த எண்ணற்ற கண்ணாடிகளில் அவன் திரும்பத் திரும்பத் தோன்றுவதைக் கண்டவன், தான் தனிமையாகவும், பயந்துபோயும் இருப்பதைக் கண்டான். மேலும் அவன் பிறந்ததிலிருந்து முதன்முறையாக இறப்பின் நிதர்சனத்தைப் பற்றி எண்ணினான். ஆனால் இரண்டாவது கோப்பை பிராந்தியுடன் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தான், மற்றும் அந்தத் தூதரக அலுவலகத்திற்குச் திரும்பிச் செல்வதற்கான தெய்வாதீனமான உத்தேசம் வந்தது. அவன் பாக்கெட்டுக்குள் விலாசத்துடன் இருந்த அந்த அட்டையைப் பார்த்தான், பிறகு மறு பக்கத்தில் அந்த ஹோட்டலின் பெயர் மற்றும் தெரு எண் ஆகியவை அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தான். அந்த அனுபவத்தினால் உலுக்கப்பட்டவனாக அந்த வார இறுதி முழுவதும் சாப்பிடுவதற்கும், ஒரு புறமிருந்து மறுபுறத்திற்குக் காரை நகர்த்தி நிறுத்துவதற்கும் தவிர அவன் அறையை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர்கள் அங்கு வந்து சேர்ந்த காலையில் பெய்தது போலவே மோசமான மழை மூன்று நாட் களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. இதுவரையில் முழுமையாக ஒரு புத்தகமும் படித்திராத பில்லி சான்ஷெஸ் படுக்கையில் படுத்துக் கொண்டு, சலிப்பு உணர்விலிருந்து அவனைத் தற்காத்துக்கொள்ள அப்போது ஒரு புத்தகம் இருந்தால் தேவலாம் என்று விரும்பினான். ஆனால் அவன் மனைவியின் பெட்டிகளில் அவன் கண்டவை எல்லாம் ஸ்பானிய மொழி தவிர ஏனைய மொழிகளில் இருந்தவையே. ஆக, சுவர்க்காகிதங்களில் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்த மயில்கள் பற்றிச் சிந்தித்துக் கொண்டும் மற்றும் எப்போதும் நீனா தகாண்ட்டி பற்றி எண்ணிக் கொண்டும் செவ்வாய்க்கிழமைக்காகக் காத்திருந்தான். திங்களன்று, அந்த அறையைச் சீராக்கினான். அந்த நிலையில் அதைக் கண்டால் அவள் என்ன சொல்லக் கூடும் என்று வியந்தான். அப்பொழுதுதான் அந்த மின்க் கோட், காய்ந்த ரத்தக்கறையுடன் இருப்பதைக் கண்டுபிடித்தான். அவளுடைய ஓரிரவுக்கான பொருட்கள் வைக்கும் பையில் இருந்த வாசனை சோப்பால் அதைச் சுத்தம் செய்வதில் அந்தப் பகல் முழுவதையும் செலவழித்தான். மாட்ரிடில், முன்பு விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அது இருந்த நிலைக்கு அதனை மீட்டுக் கொண்டு வந்தான் வெற்றிகரமாக.
மேகமூட்டத்துடனும், சில்லிடும் குளிருடனும் செவ்வாய் விடிந்தது. ஆனால் மழையின்றி. ஆறு மணிக்கு விழித்தெழுந்த பில்லி சான்ஷெஸ், நோயாளிகளுக்குப் பூங்கொத்துகளும் பரிசுப் பொருட்களும் கொணர்ந்த உறவினர்கள் கூட்டத்துடன் மருத்துவமனையின் நுழைவாயிலில் காத்திருந்தான். கூட்டத்துடன் உள்ளே சென்றான், தன் கை மேல் இருந்த அந்த மின்கோட்டை எடுத்துக் கொண்டு, எந்த ஒரு கேள்வியும் கேட்காது, நீனா தகாண்ட்டி எங்கிருக்க முடியும் என்ற எந்த ஒரு கருத்தும் இன்றி, ஆனால் அந்த ஆசிய டாக்டரைச் சந்திக்கலாம் என்ற நிச்சயத்துடன். ஒரு மிக விஸ்தாரமான உட்புற முற்றத்தின் ஊடாக - பூக்கள் மற்றும் காட்டுப் பறவைகளுடன் - அதன் இருபுறமும், வார்டுகள் இருந்தன. பெண்களுக்கு வலது புறமும் ஆண்களுக்கு இடது புறமும். மற்ற பார்வையாளர்களைப் பின்தொடர்ந்து பெண்களுக்கான பகுதியில் நுழைந்தான். ஜன்னல்களின் பெரும் வெளிச்சத்தினால் ஒளியூட்டப்பட்டிருந்த அவரவரது படுக்கையில் மருத்துவச் சீருடையில் அமர்ந்திருந்த பெண் நோயாளிகளின் நீண்ட வரிசையைக் கண்டான். வெளியிலிருந்து கற்பனை செய்திருக்க முடிந்ததைவிட அதெல்லாம் கூடுதல் சந்தோஷத்துடன் இருந்ததைப் பற்றியும் கூட அவன் நினைத்தான். அந்த நடைக்கூடத்தின் இறுதியை எட்டியவன் அந்த நோயாளிகளில் நீனா தகாண்ட்டி இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின் திரும்பி நடந்தான். பிறகு, அந்த வெளிப்புற அரங்கைச் சுற்றி நடந்தான் அவன் தேடிக்கொண்டிருந்த டாக்டரை அடையாளம் கண்டுவிட்டதாகத் தோன்றும் வரை, ஆண்கள் பகுதியின் ஜன்னல்கள் ஊடே நோக்கியபடி.
நிஜத்தில் அவன் கண்டிருந்தான். அந்த டாக்டர் ஒரு நோயாளியை, மற்ற சில டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடனும் பரிசோதித்துக்கொண்டிருந்தார். பில்லி அந்தப் பகுதிக்குள் சென்றான், அந்தக் கூட்டத்தினின்று செவிலியர்களில் ஒருத்தியை விலக்கி விட்டு, அந்த நோயாளி மேல் குனிந்திருந்த அவரை நோக்கியவாறு நின்றான். அவன் அவரிடம் பேசினான். டாக்டர் தன் சோகம் கப்பிய கண்களை உயர்த்திப் பார்த்து, ஒரு நொடி யோசித்து, பிறகு அவனை அடையாளம் கண்டு கொண்டார்.
“ ஆனால் எங்கே போய்த் தொலைந்தாய் நீ” அவர் கேட்டார்.
பில்லி சான்ஷெஸ் குழப்பமடைந்தான்.
“அந்த ஹோட்டலில்”, அவன் சொன்னான். “இதோ இங்கேதான், அந்தத் திருப்பத்தில்.”
பிறகு அவன் தெரிந்து கொண்டான். அந்த வியாழக்கிழமை மாலை 7 மணி 10 நிமிடத்திற்கு, ஜனவரி ஒன்பதாம் தேதி, ஃபிரான்சின் மிகத் தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களின் அறுபது மணிநேர முயற்சிகள் தோற்றுப் போக, நீனா தகாண்ட்டி ரத்தம் வருவது நிற்காமல் இறந்துவிட்டிருந்தாள். கடைசிவரை தெளிவுடனும், அமைதியுடனும் இருந்திருக்கிறாள் அவள். அவளும் பில்லி சான் ஷெஸூம் முன்பதிவு செய்து கொண்டிருந்த ஏதென்னே பிளாசாவில் - அவள் கணவனைத் தேடுவதற்கு அவர்களுக்கு அறிவுரைகள் கொடுத்தபடி, மேலும் அவள் பெற்றோரைத் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களை அவர்களுக்குத் தந்து கொண்டும் இருந்தனர். ஏற்கனவே நீனா தகாண்ட்டி யின் பெற்றோர் பாரிஸூக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த பொழுதில், வெள்ளிக்கிழமை அந்த அயல்நாட்டு அலுவலகத்தில் ஒரு துரிதமான தகவல் தரப்பட்டிருந்தது. அந்த அரசுத் தூதுவர் தாமே, பிணத்தை நறுமணமூட்டிப் பாதுகாத்து வைப்பதிலும் பிறகு இறுதி யாத்திரை போன்றவை சம்பந்தப்பட்ட சடங்குகளிலும் அதிகார எல்லைக்குள் பாரிசின் போலீஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டு பில்லி சான்ஷெஸை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவனை வர்ணித்த ஒரு நெருக்கடிநிலை அதிகார அறிக்கை வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிறு மதியம் வரை வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டது.
மேலும் அந்த நாற்பது மணி நேரமும் ஃபிரான்சில் மிகவும் தேடப் பட்ட மனிதனாக இருந்தான் அவன் நீனா தகாண்ட்டியின் கைப்பையில் கண்டெடுக்கப்பட்ட அவனது புகைப்படம் எல்லா இடத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி கொண்ட ஒரே மாதிரியான மூன்று பென்ட்லி கார்கள் கண்டு பிடிக்கப்பட்டன, ஆனால் அவற்றில் ஒன்றுகூட அவனுடையதில்லை.
சனிக்கிழமை மதியம் நீனா தகாண்ட்டியின் பெற்றோர் வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அந்த மருத்துவமனை தேவாலயத்தில் அந்த உடலருகே அமர்ந்தனர், கடைசி நிமிடம் வரை பில்லி சான்ஷெஸ் கண்டுபிடிக்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன். அவனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் பாரிசுக்கு விமானத்தில் புறப்படத் தயாராக இருந்தனர், ஆனால் கடைசியில் தந்திகளில் ஏற்பட்ட ஏதோ சில குழப்பங்களால் அவர்கள் புறப்படவில்லை. இருநூறு மீட்டரே தள்ளியிருந்த, அந்தத் தரம் குறைந்த ஹோட்டலின் அறையில், நீனா தகாண்ட்டியின் காதலுக்கான தனிமை தந்த மனவேதனைகளுடன் பில்லி சான்ஷெஸ் கிடந்திருந்தபோது, ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு இறுதிச் சடங்கு நடந்தது. அந்தத் தூதரக அலுவலகத்தில் அவனை வரவேற்ற அதிகாரி பல வருடங்கள் கழித்து, அந்த அயல் நாட்டு அலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியை, பில்லி சான்ஷெஸ் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் பெற்றுக் கொண்டதையும், பிறகு அவனைத் தேடும் பொருட்டு ரூ த ஃபார்பக் செயின்ட் ஹானர்- வழியெங்கும் உள்ள மது, உணவு அருந்தும் கடைகளுக்குச் சென்றதையும் என்னிடம் கூறினார். கடற்பிரதேசத்துப் பையன் ஒருவன், அனுகூலமான, சிறப்பு மிக்க ஒரு தோற்றம் கொண்டிருக்க வேண்டியவன், பாரிஸின் புதுமையில் தாக்கப்பட்டு இப்படித் தகுதிக்கு ஒவ்வாத ஷெர்லிங் - கோட் அணிந்திருந்த ஒருவன் அவ்வளவு பெருமை மிக்கப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவனாக இருக்க முடியுமா என்று கற்பனை செய்ய முடியாமலிருந்ததை என்னிடம் ஒப்புக் கொண்டார்.
ஆத்திரத்துடன் அழவேண்டும் என்றெழுந்த ஆசையை அவன் அடக்கிக் கொண்ட அன்றிரவு, நீனா தகாண்ட்டியின் பெற்றோர் அந்தத் தேடுதலை நிறுத்தி விட்டு, ஒரு உலோகச் சவப்பெட்டியில் நறுமணமூட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருந்த உடலைக் கொண்டு சென்றனர், மற்றும் அதைக் கண்டவர்கள், இப்படி ஒரு அதீத அழகிய பெண்ணை, இறந்தோ உயிருடனோ ஒருபோதும் பார்த்திருக்கவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறினர். செவ்வாய்க்கிழமை காலை பில்லி சான்ஷெஸ் கடைசியாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தபோது, அந்தச் சவ அடக்கம் ஏற்கனவே முடிந்திருந்தது, அந்தத் துக்கமான ‘லா மாங்கா’ - கல்லறையில் - எந்த வீட்டில் அவர்களது சந்தோஷங்களின் முதல் திறவுகோல்களைக்கொண்டு திறந்து விடுவித்திருந்தனரோ அந்த இடத்திலிருந்து ஒரு சில மீட்டர் தள்ளி. அந்தத் துயரத்தை பில்லி சான்ஷெஸிடம் கூறிய அந்த ஆசிய டாக்டர் அந்த மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் அவனுக்கு அமைதி தரும் தூக்க மருந்துகள் சில தர விரும்பினார். ஆனால் அவன் மறுத்துவிட்டான். போய் வருகிறேன் என்று சொல்லாமல் பில்லி சான்ஷெஸ் புறப்பட்டான். நன்றி எனக் கூறுவதற்கு ஏதுமின்றி, அவனது தனிப்பட்ட துரதிர்ஷ்டத்தைப் பழி வாங்கும் பொருட்டு பெரும் அவசரத்துடன் யாராவது ஒருவரைக் கண்டுபிடித்து, மூளை தெறித்து வெளியேறும்படி, சங்கிலியால் அடித்து நொறுக்க மட்டுமே அவன் யோசனை கொண்டிருந்தான். அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, புறாக்களின் மென்மயிர் போர்த்திய இறகுகள் போன்ற பனி,மென்மையான பளீரென்று சிறுதுணுக்குகளாக, இரத்தச் சுவடு ஏதுமின்றி வானத்தினின்றும் வீழ்ந்து கொண்டிருந்ததை அவன் உணரவில்லை, மற்றும் பத்து வருடங்களில் அதுதான் பெரிய, முதல் பனிவீழ்வு என்பதால் பாரிஸ் நகர தெருக்களில் விழாக்காலத் தோற்றமிருந்ததையும் கூட.
From Strange Pilgrims, Twelve Stories by Gabriel Garcia Marquez, translated from the Spanish by Edith Grossman, published by Vintage International, New York, 1993.
மொழிபெயர்ப்பு என்பது மாற்றுருவாக்கமே அன்றி வேறில்லை. அதாவது, (கருத்தியல் ரீதியில்) ஒரு மொழிக்கு மாற்றாக இன்னொன்றை வைப்பதாகும். இதனால், துல்லியமான மொழிபெயர்ப்புச் சாத்தியப்படாததாகிறது. காரணம், இதில் மொழி விளையாடுகின்றது.
- டெரிடா
பிற விலங்கினத்திடம் இருந்து மனிதனை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவது மொழி. ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்த மொழி உள்ளது. ஐந்தறிவு உயிரினங்களிடம் சங்கேத மொழி இருக்க, மனிதனிடம் மட்டும் குறியீட்டு வடிவில் மொழி விளங்குகின்றது. பிற உயிரினங்களில் மறைகுறிகள் (codes) மொழியில் இருக்கும். மறைகுறி என்றால் குறிப்பிட்ட ஒலிகளுக்கெனத் தனித்த உணர்வு அல்லது அர்த்தம் இருக்கும். இந்த ஒலி இதை மட்டும் குறிக்கும். வேறு எதையும் குறிக்காது. அப்படி எதையும் குறிக்காமல் ஒன்றை மட்டும் குறித்து நிற்பது மறைகுறியாகும். மாறாக, மனிதரின் மொழி மறைகுறி நிலையைக் கடந்து குறியீட்டமைப்பில் இயங்குகிறது.
குறியீடு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தப் புலப்பாட்டைக் குறிக்கும். கால, இட, சூழலுக்கு ஏற்ப இந்த அர்த்தம் அறியப்படும். இது மனித மொழிக்கு மிகப் பொருந்தும். அதாவது, ஓர் ஒலியமைப்பு பல அர்த்தங்கள் இருந்தாலும் அவற்றுள் ஒன்றை மட்டும் சூழலுக்கு ஏற்ப நாம் கையாளுகின்றோம். அடிப்படையில் குறியீடுகள் யாவும் இப்படித்தான் நடந்து வருகின்றன. சான்றாக, சிவப்பு வண்ணம் பல அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும் சூழலுக்கு ஏற்ப ஆபத்து, நிறுத்தம், கம்யூனிசம், கோபம், நெருப்பு, குருதி, விபச்சாரம் எனக் கொள்வோம். இப்படித்தான் மனித மொழியின் ஒவ்வொரு ஒலியமைப்பும் அர்த்தப் படுத்தப்படுகின்றது. அதனால், அர்த்தம் என்பது குறியீடு போன்று புறச்சார்புடையது. சொல்லின் அகத்தில் அர்த்தமில்லை. எனவே, மறைகுறியில் 1:1 பொருண்மை இருக்க, குறியீட்டில் 1:X அமையப் பெரும். அதாவது, மனிதமொழி பன்முகத்தன்மை கொண்டது.
மேற்கண்ட விளக்கங்களின் பின்னணியில் மொழி குறித்த அடிப்படையைப் புரிந்து கொள்ளலாம். ஓர் ஒலியமைப்பு மனிதரிடையே பல பொருண்மைகள் கொண்டிருக்கும். பிற உயிரினங்களில் ஒற்றைப் பொருண்மையே பெற்றிருக்கும். இதற்கு இயற்கைக் காரணம் உள்ளது. ஒலியை ஊகித்து ஒற்றை அர்த்தத்துக்கு மேல் சிந்திக்கப் பிற உயிரினங்களால் இயலாது. ஆனால், மனிதரிடையே இது சாத்தியம். காரணம், அவனின் மூளை அமைப்பும் அது தொடர்பான அறிவுத் திறனும் ஆகும். அதனால்தான், மனித மொழியைச் செயற்கை மொழி என்றும், பிற உயிரின மொழிகளை இயற்கை மொழிகள் என்றும் வழங்கப்படுகின்றன. உன்னித்து நோக்கின் எல்லாம் இயற்கையே ஆகும். மனித மனநிலை உயர்நிலையில் (உயர்திணை) இருப்பதால் மனித மொழிகளுக்கு உயர்நிலை அந்தஸ்து உள்ளது. அதனால்தான், மனித மொழிகள் யாவும் உயர்நிலை மொழிகள் (higher language) என்பர். உயர்திணை என்பது காலங்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கின்ற உயிரினம் எனப் பொருள்படும். பிற உயிரினங்கள் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் அதே இயல்பில்தான் இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. மனிதயினம் மட்டும் காலத்து வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றம் பெற்று உயர்ந்து வருகிறது. அதனால், மனிதயினம் உயர்திணை என்றாகிறது. இதற்கு மொழி வளர்ச்சி சான்று. ஆதி காலம் தொட்டு ஒரே மாதிரியான மொழிதலை விலங்குகள் (குரைத்தல், கனைத்தல், கூவுதல்... ) கொண்டிருக்க, மனிதன் மட்டும் மாற்று மொழிகளை வெளிப்படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. அதனால், அக, புற மாற்றங்களுக்கு மனிதயினம் எளிதில் ஆளாகி வருகிறது.
மனித இயல்பு படி, ஒலிகளை ஒன்றுக்கு மேல் அர்த்தப்படுத்திக்கொள்ள முடிகிறது. அதனால்தான், மொழியை ஒலிகளின் / குறிப்பான்களின் விளையாட்டு என்பர். ஒன்றை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு நெகிழ்ச்சியானது மனித மொழி. இந்த நெகிழ்ச்சித் தன்மையை விளையாட்டுக்கு இணையாக மொழியியல் பார்க்கிறது. பின்நவீனத்துவ நோக்கில் குறிப்பான்களின் விளையாட்டே மொழி எனப்படுகிறது. இதன் நீட்சியாக, மொழிபெயர்ப்பைக் கூட விளையாட்டு என்பர். இத்தகு ‘ஒலித்தல்’ விளையாட்டு பிற உயிரினங்களுக்குத் தெரியாது. அதனால், பிற உயரினங்களில் இருந்து மனிதன் வேறுபட்டு இருக்கிறான். மேற்கண்ட பின்னணியில் மொழிபெயர்ப்புக் குறித்து இனி நாம் சிந்திப்போம்.
மொழிபெயர்ப்பு என்றால் என்ன, அதன் வரலாறு யாது, அதற்கான தகுதிகள் என்னென்ன...முதலியவற்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண் டும். ‘ஒரு மொழியில் இருக்கின்ற கருத்துகளை இன்னொரு மொழிக்குப் பெயர்த்தல் மொழிபெயர்ப்பு’ எனப் பொதுவில் வரையறுக்கலாம். அப்படித்தான் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றது. சொல்லுக்குச் சொல், வாக்கியத்துக்கு வாக்கியம் என மொழி பெயர்ப்பதோடன்றி விவரிப்பு, சுருக்கம், தழுவல், மொழியாக்கம் எனப் பல வகைகள் இதில் உள்ளன. இவற்றில் தழுவல் என்பது தனித்த இலக்கியமாகவே (தழுவல் இலக்கியம்) கருதப்படுகின்றது. காரணம், இந்தத் தழுவலில் கூடுதலான சுயம் உள்ளது. தழுவல் இலக்கியங்களான கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, நளவெண்பா முதலிய படைப்புகளில் ஆசிரியரின் சுயம் பரவலாக உள்ளது. இது முழுமைக்கும் மொழிபெயர்ப்பல்ல. அதேவேளை, முதல் நூலுமல்ல. இதுவும் வழிநூல். அதாவது, பெயர்ப்பு மொழி. முதல் நூலில் மூலமொழியும் பெயர்ப்பு நூலில் பெயர்ப்பு மொழியும் இருப்பது கண்கூடு. அதனால், தழுவல் இலக்கியம் கூட ஒருவிதத்தில் பெயர்ப்பு நூலே ஆகும்.
மொழி பெயர்ப்பில் முதல் நூலின் மூல மொழியே ஆதாரம். இதை மூல மொழி (source language) என்பர். இதன் மொழிபெயர்ப்பு மொழியை இலக்கு மொழி (target language) என்பர். மூல மொழி படைப்பை இலக்கு மொழிக்குக் கருத்துகளைப் பெயர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மொழிபெயர்ப்பு நிகழ்கிறது. இந்தக் கட்டாயம் சமூகத் தேவையாகும். காரணம், ஒரு மொழி கருத்துகள் இன்னொரு மொழியினருக்குத் தேவைப்படுகின்றன. அதனால், மொழிபெயர்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது. இப்படித்தான், சமய நூல்கள் தொடங்கி, தத்துவம், இலக்கியம், அறிவியல் என அனைத்துத் தளங்களிலும் காலங்காலமாக மொழிபெயர்ப்பு நடந்து வருகின்றது. இதனால், தனித்தனித் தீவுகளாக இருந்த உலக மொழிகள் தற்போது கைக்கோர்த்து இயங்க வரத் தொடங்கி விட்டன. இந்த நூற்றாண்டை ‘மொழி பெயர்ப்பு நூற்றாண்டு’ எனக் கூறும் அளவுக்கு மொழிபெயர்ப்புகள் நடக்கப் போகின்றன. காரணம், இன்றைக்கு மொழிபெயர்ப்பின் தேவை அனைத்துத்துறைகளுக்கும் அவசியமாகி விட்டது. இலக்கியத்தில் சிறிய கவிதையிலிருந்து திருக்குறள் வரை நடக்கிறது. அறிவியலில் குறுந்தகவலில் இருந்து பெருங்கோட்பாடு வரை நடக்கிறது. நடப்பு வாழ்வியலுக்குத் துணுக்குக் கருத்திலிருந்து தத்துவம் வரை மொழி பெயர்ப்புத் தவிர்க்க முடியாததாகிறது. காரணம், சின்னச் செய்தியிலிருந்து வரலாறு வரை கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த மொழிபெயர்ப்பில் மொழியைப் பெயர்ப்பதாகத் தெரிந்தாலும் கருத்துகளைத்தான் இன்னொரு மொழிக்குப் பெயர்க்கின்றோம். எனவே, மொழிபெயர்ப்பு என்பது, கருத்துகளை இன்னொரு மொழிக்குப் பெயர்ப்பதைக் குறிக்கும். ஒரு செடியை வேர் மண்ணோடு பெயர்த்து வேறோர் இடத்தில் நடுதல் போன்றது. இந்தக் கருத்துக்குக் மொழி ஒரு கருவியே அன்றி வேறில்லை. நாம் தொடர் வண்டியில் பயணித்தாலும் பேருந்தில் பயணித்தாலும் நமது நோக்கம் அடைவிடம் நோக்கிய பெயர்த்தலே ஆகும். இந்த இடப்பெயர்வு கருத்துப் பெயர்வு போன்றது. வெற்று வண்டி பெயர்ப்பாகாது. அதில் பொருளோ பயணியோ இருக்க வேண்டும். இதன்படி, வெறும் மொழியைப் பெயர்ப்பது மொழிபெயர்ப்பு என்றாகாது. கருத்துப் பெயர்ப்பே மொழிபெயர்ப்பாகும். அதாவது, மொழி சார்ந்த கருத்து பெயர்ப்பே உண்மையான மொழி பெயர்ப்பாகும்.
மேற்கண்ட விளக்கங்கள்படி, வார்த்தை பெயர்ப்பு என்றென்றும் மொழிபெயர்ப்பாகாது. ஆனால், நவீன மொழியியல் கூற்றுப்படி, மொழியைப் பெயர்த்தாலே கருத்துகளும் பெயர்க்கப்பட்டு விடுகின்றன. இதுவும் ஒரு விதத்தில் உண்மை. காரணம், வாக்கியங்கள் தோறும் மொழிபெயர்த்தால் கருத்துகளும் தானாகப் பெயர்க்கப்பட்டு விடுகின்றன. இருப்பினும், இதில் ‘மொழிதல்’ அமைப்புச் சரியாக அமையப் பெற வேண்டும். அதற்காகக் கொஞ்சம் மொழியுடன் விளையாட வேண்டியுள்ளது. இலக்கியப் படைப்புப் போல் மொழிபெயர்ப்புக்கும் மொழிநடை மிக அவசியம்.
இது, எழுதுதலுக்கான (மொழிதலுக்கான) பொதுவான விதி. அதனால்தான், பின்நவீனத்துவவாதியான டெரிடா, எழுதுதல் / மொழிதல் எல்லாம் குறிப்பான்களின் விளையாட்டு என்பார். எனவே, மொழிபெயர்ப்பாளரிடம் எழுத்தாற்றல் இருக்க வேண்டிய தேவை உள்ளது. முடிவாக, மொழிபெயர்ப்பும் படைப்பாக்கமே என அறிந்தேற்கப்படுகின்றது.
மொழி இல்லையென்றால் எழுத்தும் அது தொடர்பான இலக்கியமும் மொழிபெயர்ப்பும் இல்லை. எழுத்து வடிவமற்ற மொழியில் எழுத்துருவுக்கு இணையாக ஒலியுரு செயல்படுகின்றது. மொழிக்குள் ஒலி உள்ளதுபோல், மொழிபெயர்ப்பில் மாற்றொலி பெயர்ப்பு அடங்கியுள்ளது. அதாவது. ஓர் ஒலியை இன்னொரு ஒலியாகப் பெயர்ப்பது நடக்கின்றது. சான்றாக, கம்ப்யூட்டர் என்கிற பொருளைக் குறிக்கின்ற computer இங்கே ‘கணினி’ என மாற்றொலி பெயர்ப்புச் செய்யப்படுகின்றது. இந்த வகையில் மொழிபெயர்ப்பு என்பது மாற்றொலி பெயர்ப்பாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
பொதுபுத்தியில் கருதுவதுபோல், மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அதையும் தாண்டிக் குடும்பம் முதல் சமூக நிறுவனங்கள் அனைத்தையும் கட்டமைக்கக் கூடிய ‘அடிப்படை அமைப்பு’ ஆகும். இந்த மொழியானது சமூகத்தில் இயங்க வருவதற்கு முன் உள்ளத்தில் இயங்குகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். காரணம், மொழி தோற்றத்துக்குப் பிறகே சமூகம் தோன்றிற்று. மொழிக்கு முந்தைய சமூகம் ஒன்று இருப்பின் அது நிறுவனமயமாக்கப்படாத சமூகமாக இருந்திருக்கும். விதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைவே நிறுவனம் ஆகும். இதன்படி, குடும்பம் முதல் சமூகம் வரை நிறுவனம் என்றாகிறது. இவற்றின் விதிகளை மொழி விதிகள் தீர்மானிப்பதால் மொழியின்றி மனிதச் சமூகம் இருக்க வாய்ப்பில்லை. அதனால், மொழிக்குப் பிறகே சமூகம்.
குழந்தைப் பருவத்தை உன்னித்தால் இந்த உண்மை விளங்கும். மொழி பழக்கத்துக்குப் பிறகே சமூக வழக்கத்துக்குக் குழந்தை வருகின்றது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்ற உளச் செயல்பாடுகளை ஒழுங்கு வடிவமைப்பதில் மொழி பெரும்பங்கு வகிக்கிறது. காரணம், மனிதரிடையே எண்ணங்கள் யாவும் தூய எண்ணங்களாக அன்றிக் கருத்துகளாக உள்ளன. எண்ணம் என்பது மொழியற்ற சிந்தை. கருத்து என்பது எண்ணமும் மொழியும் கலந்த நிலை.
(இதைத்தான் தொல்காப்பியர் ‘மனனே’ என்றார் போலும்). எண்ணத்துக்கு மொழி தேவையில்லை. பறவை விலங்குகள் இப்படித்தான் எண்ணுகின்றன. கைக்குழந்தை மனமும் மொழியற்ற எண்ணங்களையே கொண்டுள்ளன. மாறாக, மொழிப் பயிற்சி ஏற்பட்டவுடன் எண்ணங்கள் யாவும் கருத்துகளாக வெளிப்பட ஆயத்தமாகி விடுகின்றன. இதில் மொழி பெயர்ப்பு நடப்பதைக் காணலாம். எண்ணத்தின் மொழிபெயர்ப்புதான் கருத்து.
மேற்கண்ட விளக்கங்கள்படி, மனிதருள் கருத்தோட்டமே மேலோங்கியுள்ளது. மனிதரல்லாத உயிரினங்களிடம் எண்ணவோட்டமே உள்ளது. தொடக்கத்தில் இந்த எண்ணவோட்டத்தில் திளைத்த குழந்தை, மொழி ஊட்டத்துக்குப் பிறகு கருத்தோட்டத்துக்கு மாறி விடுகின்றது என்பதை நாம் அனுபவத்தில் உணர்ந்து கொள்வோம். இந்தக் கட்டத்தில், குழந்தை மனத்தில் மாற்றம் நிகழ்வதை உளவியல் உறுதிபடுத்துகிறது. இந்த மாற்றம், புறத்திலிருந்து மொழியை உள்வாங்கிக் கொள்வதை ஆதாரமாகக் கொண்டு, சமூக விதிகளை மொழி வழியாக உள்வாங்கிக் கொள்கிறது. பிறகு, அவற்றுக்கு ஏற்ப இயங்கத் தொடங்கி விடுகின்றது. இந்நிலையிலான மனமே சமூக மனமாகும். மேலோட்டமாக, உள்ளத்தைச் சமூகக் கருத்துகள் இயக்குவதாகத் தெரிந்தாலும் மொழியே இயங்கு சக்தியாக இருப்பதைக் ஊகிக்க முடிகிறது. (இதை லக்கான் வலிந்து கூறுவார்). ஒட்டுமொத்த சமூகமே சொல்லாடல்களாலும் பனுவல்களாலும் நிறைந்துள்ளன. காரணம், மனம் முழுவதும் சொல்லாடல்களே நிரம்பியுள்ளன. இவற்றை லக்கான் ஆராய்ந்து பல சொல்லாடல்களை முன்வைப்பதைப் பார்க்கலாம். எனவே, மொழி என்பது அகநிலையின் இயங்கு சக்தி. இயற்கை மனிதனைச் சமூக மனிதனாக்கியதில் மொழியின் பங்கு முதன்மையானது என்பது வெள்ளிடை. இது,
குழந்தைப் பருவம் தொட்டே நடக்கின்ற ‘மனப் பழக்கம்’ ஆகும். இதனூடே பயணிக்கும் குழந்தை சமூக அடையாளங்களுடன் வாழத் துணிகிறது. எனவே, மொழியின்றி அமையாது (சமூக) உலகு.
சமூக இயல்பிலான மனிதமனம் ஒரு ‘மொழி மனம்’ ஆகும். அவன் வெளிப்படுத்துபவை யாவும் உளமொழியின் வகைக்கெழுக்கள் (derivatives) ஆகும். மொழியின்றி மனித மனமில்லை. இதை இன்னும் கூர்ந்தால், பேச்சு மொழியே உள்ளத்தின் அடிப்படை யாகும். பேச்சுக்கள் வழியாகத்தான் மொழியைக் குழந்தை உள் வாங்கிக் கொள்கிறது. அதனால், மனித மனம் ‘பேச்சு மொழிமனம்’ ஆகும். நாட்டார் வழக்காற்றின் அடிப்படை பேச்சு மொழியாக இருப்பதால், மனித மனம் மூலாதாரமாக ‘நாட்டார் மனம்’ (folk mind) விளங்குகிறது. இந்த நாட்டார் மனமானது, உறவுமுறை தொடங்கிக் குடும்பம், கலை, கடவுள், சமயம், சாதி, அறிவியல், நிறுவனம், தத்துவம் எனப் பல படைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இலக்கியம் ஆகும். மனிதனின் ஆகச் சிறந்த படைப்பு மொழி. அந்த மொழியின் ஆகச் சிறந்த படைப்பு இலக்கியம். இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பு மொழிபெயர்ப்பு ஆகும். காரணம், பிற கலைகளில் ஒருவரைப் போன்றே இன்னொருவர் செய்தால் பாராட்டப்படுவர். மாறாக, இலக்கியத்தில் அப்படி ‘டிட்டோ’ செய்தால் பாராட்டுக் கிடைக்காது. அதனால், மொழிசார் இலக்கியத்துக்குச் சிறப்பு மிகுதி. மாறாக, மொழிபெயர்ப்பில் ‘டிட்டோ’ ஆக்கம் பாராட்டுக்குரியது. எனவே, மொழிபெயர்ப்பு ஆகச் சிறந்த படைப்பு.
முன்பே கூறியபடி, மொழிபெயர்ப்பானது இலக்கியத்துக்கு இணையாக விளங்குகின்ற ஒரு படைப்புக் கலை. காரணம், இவ்விரண்டில்தான் மொழியின் ஆதிக்கம் மிகுதி. மேலும், மொழி பெயர்ப்பில் ‘டிட்டோ’ இருக்க வேண்டும். கருத்துசார் மொழி ஒப்புமை இருந்தால்தான் மொழிபெயர்ப்புச் சிறக்கும். அதனால்தான், இலக்கியம் அளவுக்கு மொழிபெயர்ப்புக்கும் நவீனக் கோட்பாடுகள் உள்ளன. சமூகவியல், அழகியல், மொழியியல், அமைப்பியல், பின்நவீனத்துவம், ஒப்பியல், பண்பாட்டியல் எனப் பல கோணங்களில் மொழிபெயர்ப்பை நோக்குகின்ற போக்கு உள்ளது. தற்சமயம் மொழிபெயர்ப்பு மீது பல பார்வைகள் இருந்தாலும் அவற்றைப் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பின் வரலாற்றுப் பார்வையை உள் வாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
வரலாற்றுப்படி, இலக்கியம் தோன்றிய காலக் கட்டத்திலேயே மொழி பெயர்ப்பும் தோன்றிவிட்டது. வெளிப்படையாக இது தெரியவில்லை என்றாலும் உள்ளுக்குள் மொழிபெயர்ப்பு நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக, இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முயல்கின்றபோது மனத்துள் மொழிபெயர்ப்பே நடக்கிறது. புரிதல் என்பது மொழிபெயர்ப்பின் வழிப்பட்டதாகும். ஒருவிதத்தில் இலக்கியம் என்பதே யதார்த்தத்தின் மொழிபெயர்ப்பு ஆகும். நடந்த சம்பவங்களை எழுதும்போது வரலாறு தோன்றுகிறது. இங்கே, வரலாறு என்பது சம்பவங்களின் மொழி பெயர்ப்பு ஆகும். தத்துவம் தொடங்கி அறிவியல் வரை அனைத்திலும் மொழியாக்கமே நடக்கின்றது. அவற்றுள் இலக்கியமும் ஒன்று.
இலக்கியம் என்பது யதார்த்தத்தின் அல்லது கற்பனையின் முதல் கட்ட மொழியாக்கம் என்றால் மொழிபெயர்ப்பு என்பது இரண்டாம் கட்ட மொழியாக்கம் ஆகும். அதனால்தான், இலக்கியம் அளவுக்கு மொழிபெயர்ப்புக்கும் வரலாறு உள்ளது. இருப் பினும், செழுமையான ‘மொழிபெயர்ப்பு’ பல படிப்பினைக்குப் பிறகே கலை வடிவம் பெற்றது. அதாவது, எழுத்து வடிவிலான மொழிபெயர்ப்பானது பல கட்டங்களுக்குப் பிறகே முழு வடிவம் பெற்றது. பனுவல் ஆதாரம்படி, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க மொழிக் காப்பியமான ‘ஒடிசி’ இலத்தின் மொழியில் பெயர்க்கப்பட்டதே முழுமுதல் மொழி பெயர்ப்பு ஆகும். இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு வரலாறு உள்ளது.
தொல்காப்பியத்திலேயே மொழிபெயர்ப்புக் குறிப்பு உள்ளது. எனில், இலக்கணம் வார்க்கின்ற அளவுக்குத் தொல்காப்பியர் முன்பே மொழிபெயர்ப்பில் தேர்ந்த நிலை தமிழரிடைய இருந்திருக்க வேண்டும்.
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூல்தாம் இருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்
வழி எனப்படுவது அதன் வழித்தாகும்
வழியின் வகையே நாள் வகைத்தாகும்
தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே
(மரபியல்94-98).
தொல்காப்பியர் கருத்துப்படி, நூல்களில் முதல் நூல், வழி நூல் என இருவகை நூல்கள் உள்ளன. சுயமான படைப்பு முதல் நூலாகும். அதைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற பனுவல்கள் யாவும் வழி நூல் வகைப்பட்டவை ஆகும். தொல்காப்பியர் முடிபுபடி, தொகுத்தல் (பொருண்மைகளைத் தொகுத்தல்) விரித்தல் (விவரித்துக் கூறுதல்) தொகைவிரி (தொகுத்தவற்றை விவரித்துக் கூறுதல்) மொழிபெயர்த்தல் (பிற மொழியிலிருந்து மொழிபெயர்த்து வழங்குதல்) யாவும் வழி நூல்களாகும். சுருங்கச் சொல்லின், பொருளுரை, கருத்துரை, விளக்கவுரை, மொழிபெயர்ப்பு ஆகியவை வழிநூல்கள் என்கிறார் தொல்காப்பியர். இவற்றில் மொழிபெயர்த்தலை மட்டும் ‘அதர்ப்பட யாத்தல்’ வேண்டும் எனச் சிறப்பித்துக் கூறுகிறார். அதாவது, தன்மொழியின் இயல்புக்கு ஏற்ப ‘ஒழுங்குபட அமையப் பெயர்க்க வேண்டும்’ என்பது தொல்காப்பியர் வகுத்த விதி. எனவே, மொழிபெயர்ப்பு என்கிற கலை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழில் நடந்து வருகின்ற நூலாக்க வழக்கம் என்பதை அறியலாம். எனவே, மொழிபெயர்ப்பு வரலாறு உலகளாவிய பழமைக்கு இணையான நிலையில் தமிழ் மொழிபெயர்ப்பு வரலாறு இருப்பதைக் காண முடிகிறது. அக்காலத்தில் வடமொழி நூல்கள் மொழிபெயர்ப்பு இருந்தன. அதனால்தான், வடசொற்களைக் கையாள வேண்டிய வழிகளைத் தொல்காப்பியர் கூறுகிறார். மேலும், தொல்காப்பியர் காலத்திலும் அவர்க்கு முன்பும் ‘தழுவல் இலக்கியங்கள்’ இருப்பதை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் புராணக் குறிப்புகள் இருப்பது சான்று. மேலும், என்ப, மொழிப, என்மனார் புலவர் முதலியவை ‘தழுவல்’ சார்ந்த சொற்கள் ஆகும். இலக்கணப் பனுவலிலும் தழுவல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியர் தனது இலக்கண நூலை முந்தைய இலக்கணங்களையும் சங்க இலக்கியங்களையும் தழுவி வழங்கினார். எனவே, இதுவும் ஒரு விதத்தில் வழிநூலே ஆகும். நன்னூல் முதலிய பிற இலக்கண நூல்கள் யாவும் வழிநூல்கள் என்பதில் ஐயமில்லை.
இனி, மொழிபெயர்ப்புக் குறித்த நவீனப் பார்வைக்கு வருவோம். மொழியியல் கோட்பாட்டு அடிப்படையில் மொழிபெயர்ப்பு என்பது இலக்கு மொழிக்கானது ஆகும். அதாவது, மூல மொழி (source language) நூலை இலக்கு மொழி (target language) நூலாக்கம் செய்வதன் விளைவு ஆகும். மொழிபெயர்ப்பு ஆக்கும்போது இவ்விரண்டும் இணை நிலையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பண்பாட்டு வேறுபாட்டுக்கு ஏற்பச் சிலவும் இலக்கண வரம்புக்கு ஏற்பச் சிலவும் மாற்றம் பெறலாம்.
கருத்தியல் சிதைவு ஆகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் மொழிபெயர்ப்பின் அடிப்படை விதி. இதைத் திறம்படச் செய்யும் மொழிபெயர்ப்பாளர் சிறப்பிற்குரியவர் ஆகிறார்.
மொழிபெயர்ப்பாளர்க்கென ஒருசில தகுதிகள் உள்ளன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கருத்துகளைப் பெயர்க்கின்ற ஆள் மொழிபெயர்ப்பாளர் எனப் பொதுவாகச் சுட்டினாலும், அவரின் பணி இத்துடன் முடிந்து விடுவதில்லை. காரணம், மொழி வழியிலான இந்தக் கருத்துப் பெயர்ப்பு மூலமாக அயற்பண்பாட்டைத் தனது சமூகத்துக்கு மொழிபெயர்ப்பாளர் அறிமுகப்படுத்துகிறார். இதனால், தேசிய அளவிலும் உலக அளவிலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காண வாய்ப்பாகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தன்மொழியும் மூலமொழியும் முறையாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது முதல் தகுதி. என்றாலும் வேறு சில தகுதிகள் இதற்கு இணையாகக் கருதப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, துறைசார் அறிவும் எழுத்தாற்றலும் அமையப் பெற்றிருக்க வேண்டும். இருமொழிப் புலமை மட்டும் மொழிபெயர்ப்புக்குப் போதுமானதாக இல்லை. இதுவே போதுமெனக் கொண்டால் இருமொழி முற்றறிந்த எவரும் மொழி பெயர்ப்பாளர் என்றாகலாம். நடப்பில் இதற்குச் சாத்தியமில்லை. ஒருவேளை, பேச்சுரைக்கு இது போதுமாகலாம். ஆனால், எழுத்துரைக்கு இது மட்டும் போதாது. காரணம், எழுத்துப் பணியில் அனுபவம் இருக்க வேண்டும். மொழிநடை மிக அவசியம். அதே வேளை துறைசார் புலமையும் இருக்க வேண்டும். சான்றாக, கவிதையை மொழிபெயர்க்க ஒருவருக்குக் கவி புனைவாற்றல் இருக்க வேண்டியது அவசியம். நாவலை மொழிபெயர்க்க வேண்டின் நாவல் நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும். இத்தகு பண்புகளின் தேவையை அறிவியல் நூல் மொழிபெயர்ப்பில் வெளிப்படையாகத் தெரிவதைக் காணலாம். கணினி அறிவு இருந்தால்தான் கணினி நூலை மொழிபெயர்க்க முடியும். வாசிப்புப் பழக்கம், எழுத்துப் பழக்கம் இவற்றுடன் துறையறிவு தேவை. இலக்கிய மொழிபெயர்ப்பாளர் இலக்கியவாதியாகவும் தத்துவ மொழிபெயர்ப்பாளர் தத்துவவாதியாகவும் அறிவியல் மொழிபெயர்ப்பாளர் அறிவியலராகவும் ஓரளவாவது இருக்க வேண்டியுள்ளது.
மேற்கண்ட விளக்கங்கள்படி, மொழிபெயர்ப்பில் பல வகைகள் உள்ளன. இலக்கிய மொழி பெயர்ப்பு, அறிவியல் மொழிபெயர்ப்பு, தத்துவ மொழிபெயர்ப்பு, செய்தி மொழிபெயர்ப்பு, வரலாற்று மொழிபெயர்ப்பு எனத் துறை வாரியாக மொழிபெயர்ப்பு வகைப் பெருகும். இவற்றுக்கெல்லாம் மொழிப் புலமையுடன் துறைசார் புலமையும் அவசியம். பொதுவில் மொழிபெயர்ப்பு என்றால் அறிவு சார்ந்த ஒன்று எனக் கருதுவோம்.
ஆனால், இது உளம் சார்ந்த படிமுறை என்பது தான் உள மெய்ம்மை. இதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
மொழிபெயர்ப்பு என்பது மொழி சார்ந்த கலை.
அந்த மொழியோ உளம் சார்ந்த நிலை. மொழி பெயர்ப்பின் ஆங்கிலச்சொல் ட்ரான்ஸ்லேஷன்.
இந்தச் சொல்லின் வேர்ச்சொல் ட்ரான்ஸ் (trans) ஆகும். இதன் நேரடி பொருள் மாற்று அல்லது பெயர்ப்பு. அதாவது, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுவது அல்லது பெயர்ப்பதைக் குறிக்கும். ட்ரான்ஸ் எனும் வேர்ச்சொல்லைக் கொண்டு ஆங்கிலத்தில் பல சொற்கள்
உள்ளன. ட்ரான்ஸ்ஃபார்மேஷேன் (transformation), ட்ரான்ஸ்ஃபார்மர் (transformer), ட்ரான்ஸ் ஜென்டர் (transgender), ட்ரான்ஸ்ரெலிஜன் (transreligion), ட்ரான்ஸ்லிட்ரேஷன் (translitration), ட்ரான்ஸ் மிஷன் (transmission), ட்ரான்ஸ்கல்சர் (transculture), ட்ரான்ஸ்க்ரிப்சன் (transcription), ட்ரான்ஸ்ப்லான்ட் (transplant), ட்ரான்ஸ்சிஷன் (transition), ட்ரான்ஸ்போர்டேஷன் (transportation), ட்ரான்ஸ்வெர்ஸ் (transverse), ட்ரான்ஸ்வேல்யூ (transvalue), ட்ரான்ஸ் ஆக்ஷன் (transaction), ட்ரான்ஸ்சென்டன்ட் (transcendent) வரிசையில் ட்ரான்ஸ்லேஷன் (translation) ஒன்று. மருத்துவம், வேதியியல், சமூகவியல், இலக்கியம் எனப் பல தளங்களில் ட்ரான்ஸ்-(trans-) வேர் கொண்ட சொற்கள் உள்ளன. அவற்றின் அர்த்தம் துறைதோறும் தனித்து இருந்தாலும், அடிப்படை அர்த்தமாக ‘மாற்று அல்லது பெயர்ப்பு’ இருப்பதைக் காண முடிகிறது. மேற்கூறியவற்றில் மொழி சார்ந்த சொற்களான ஒலிபெயர்ப்பு (transliteration), மொழிபெயர்ப்பு (translation), எழுத்துப்பெயர்ப்பு (transcription) ஆகியவை குறித்து மட்டும் இங்குக் காணலாம்.
ஒலிபெயர்ப்பு என்பது ஒரு மொழி சொற்களை இன்னொரு மொழியில் அதற்குரிய உச்சரிப்புச் சாரத்தில் எழுத்துவதாகும். சான்றாக, sorry என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் ‘சாரி’ என எழுதுவதைக் காணலாம். கிரேக்க, லத்தின சொற்களைத் தத்துவமும் அறிவியலும் ஆங்கிலத்தில் எடுத்தாளும் போது அவற்றின் ஒலி அமைப்பை அப்படியே பயன்படுத்துவதைக் காணலாம். ஆங்கிலத்தில் dialogue, geography, grammar, architect, economy, telephone, democracy, galaxy, psyche, narcissus எனப் பல சொற்கள் உள்ளன. மேலும், ஆங்கிலத்தின் அறுபது விழுக்காடு சொற்கள் கிரேக்க, லத்தின ஒலிபெயர்ப்புச் சொற்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. abdomen, alter, absent, accept, attitude, animal, dominate, clamor, corona, digital, navy, perfect, solar எனப் பட்டியல் நீளும். பொதுவாக, தத்துவச் சொற்கள் கிரேக்கத்திலிருந்தும், அறிவியல் சொற்கள் இலத்தீனத்திலிருந்தும் ஆங்கிலம் பெற்றது. சில சொற்கள் கிரேக்கத்தில் இருந்து இலத்தீனம் வழியாக ஆங்கிலம் அடைந்தன. தமிழின் காசு (cash), கட்டுமரம் (catamaran), சுருட்டு (cheroot), கறி (curry) முதலியவை ஆங்கிலத்தில் உள்ளன. சம்ஸ்கிருத சொற்களான ஆத்மா, அலர்ஜி, யோகா, ஆரஞ்ச் முதலியவை ஆங்கிலத்தில் அப்படியே உள்ளன. தமிழில் ‘அரபுதமிழ்’ இதற்கு நல்ல சான்று. அரபு சொற்களைத் தமிழில் எழுதுவதே இதன் சிறப்பு. சில திரையிசைப் பாடகர்கள் தமது தாய் மொழியில் பாடல்களை ஒலிபெயர்த்துப் பாடுவதைக் காணலாம். கணினியின் ‘ஒருங்கு குறி’ (unicode) இதன் அடிப்படையிலானதே ஆகும். இந்த ஒருங்கு குறி ஒலிபெயர்ப்பானது கணினி வளர்ச்சியில் ஒரு மைல்கல்.
அடுத்தது, மொழிபெயர்ப்பு. இது அனைவரும் அறிந்த ஒன்று. முன்பே கூறியபடி, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கருத்துருவில் பெயர்ப்பது ஆகும். ஒலிபெயர்ப்புக்கும் மொழி பெயர்ப்புக்கும் உள்ள வேறுபாடு, முன்னது ஒலியை மட்டும் பெயர்க்க, பின்னது, பொருண்மையைப் பெயர்க்கும். இதுதான் நடைமுறையில் பரவலாக நடந்து வருகின்ற பெயர்ப்பாகும். அகராதி இதன் அடிப்படையிலானது. மொழிபெயர்ப்புக்கும் அகராதியே அடிப்படை. இறுதியாக, எழுத்துப் பெயர்ப்பு. இது ஒரே மொழியில் இருக்கின்ற பழைய எழுத்து வடிவங்களைத் தற்கால எழுத்து வடிவத்துக்குப் பெயர்ப்பதாகும். இதைப் ‘படியெடுத்தல்’ எனவும் சொல்லலாம். பேச்சு வடிவத்தை எழுத்து வடிவமாகவும், சுருக்கெழுத்து வடிவமாகவும் படியெடுப்பதும் இதனுள் அடங்கும். கல்வெட்டியல், சுவடியியல் முதலியவற்றைப் படியெடுத்தல் இதனுள் அடங்கும். இந்த எழுத்துப் பெயர்ப்பு ஒரே மொழி வட்டத்துள் நடக்கின்ற போக்காகும். மேற்கூறிய மூன்றில் மொழிபெயர்ப்பே ஆழமானது. கலை நுணுக்கம் மிக்கது. காரணம், இது படைப்புக்கு இணையானது.
மனித இனத்தின் வளர்ச்சியை அல்லது வரலாற்றை மொழிக்கு முன், மொழிக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்கப்பட வேண்டும். காரணம், மொழிக்குப் பிந்திய மனிதனிடம் விரைவான பல மாற்றங்கள் உள்ளத்தில் நடந்தன/ நடக்கின்றன. மின்சாரத்துக்குப் பிந்திய மனிதயினம் விரைவாக வளர்ச்சி அடைந்ததுபோல், அக்காலத்தில் மொழி செய்தது. இந்த மொழி சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதற்கு முன்பாக உள மாற்றங்களை ஏற்படுத்தியது. மொழியின் முதல் கட்டுமானம் உள்ளம் என்பது லக்கானியம் கண்ட உண்மை. மொழிக்கு முந்தைய உள்ளம் தரிக்கெட்டு இயங்கி வந்தது. விலங்கோடு விலங்காக மனிதன் செயல்பட்டு வந்தான். உடல் நிலைத் தாண்டி எந்த முறைமையும் (தேவை, வெறி) அப்போது அவனிடம் இல்லை. விலங்குகளிடம் உள்ள முறைமை இப்படியானது. மொழி உருவாக்கத்துக்குப் பிறகு வாழ்க்கை முறைமைகள் பல உருவாயின. இவற்றின் கணம் (set) சமூகமானது. எனவே, சமூகம் என்பது மொழியின் உருவாக்கம் ஆகும். இதை லக்கான் வலிந்து கூறுகிறார். அவர் சுட்டுகின்ற குறியீட்டு முறைமை (symbolic order) என்பது சமூகத்தில் நிலவிவரும் குறியீடுகளின் ஒழுங்கைக் குறிப்பதாகும். சமுகத்தில் பொதிந்துள்ள வழக்கங்கள், விதிகள் எல்லாம் ஒழுங்குமுறைகள் ஆகும். இந்த ஒழுங்கு முறைகளை நேரடியாக மனிதன் உருவாக்கவில்லை. மாறாக, மொழி வழியில் உருவாக்கினான். நுண்ணிதின் கூறின், மொழியே தன்னியலாக இவற்றை உருவாக்கியது. ஃப்ராய்டிய நோக்கில் சமூகம் என்பது உள்ளத்தின் தயாரிப்பு ஆகும். லக்கானிய நோக்கில் சமூகம் என்பது மொழியின் தயாரிப்பு ஆகும். காரணம், இவர் நோக்கில் உள்ளம் (அகநிலை- subject) என்பது மொழியால் கட்டமைக்கப்பட்ட அமைப்பாகும். எனில், உளத் தயாரிப்பான சமூகம் என்பது மொழி உருவாக்கத்தின் ஒரு படிநிலையே அன்றி வேறில்லை என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் செய்திகள் மொழிபெயர்ப்பைப் புரிந்துகொள்ள எப்படி உதவும் என்பதை இனி நோக்குவோம். முன்பே கூறியபடி, மொழியால்தான் மனம் கட்டமைகிறது. மனம் முழுவதும் மொழியே நிரம்பியுள்ளது. மனிதருள் எண்ணங்கள் வெற்று எண்ணங்களாக இல்லை. மொழித்தலாக உள்ளன. எனில், உளச் செயல்பாடுகள் எல்லாம் மொழிச் செயல்பாடுகளாக விளங்குகின்றன. அதாவது, எண்ணங்கள் மொழியோடு கலந்து கருத்துருக்களாகின்றன. இதனால், அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் மொழிபெயர்ப்பாளராக விளங்குகின்றான். இந்த மொழிபெயர்ப்புக் கலையில் கைத்தேர்ந்தவன் சிறந்த மொழிபெயர்ப்பாளன் ஆகின்றான். இவனே சிறந்த மொழி மனிதன். சிறந்த சமூக மனிதன். கால்களைக் கொண்டோரால் ஓட முடியும் என்றாலும் ஒட்டப் பந்தயத்தில் பங்கெடுப்போர் மட்டும் ஆட்டக்காரர் ஆகிறார். அதேபோல், மொழியறிவு கொண்டோரெல்லாம் எழுத்தாளராவதில்லை. இருப்பினும், அந்த மொழியறிவு அடிப்படையாக அனைவரிடத்திலும் அடிப்படையாக இருப்பதுபோல் எழுத்தாளரிடமும் இருக்கும்/ இருக்க வேண்டும். இதே நிலைதான் மொழிபெயர்ப்புக்கும் உள்ளது.
மேற்கண்ட விளக்கங்கள்படி, மொழிபெயர்ப்பு என்பது மொழிமனிதனின் அடிப்படைப் பண்பாக உள்ளது. இதற்குப் பின்னணி உள்ளது. ஐம்புலன் வழியில் உணரப்படுகின்ற பொருட்கள் அனைத்துக்கும் பெயர் சூட்டவேண்டியது கட்டாயம். பெயரிலாப் பொருட்கள் சமூகத்தில் இருப்புக் கொள்ள முடியாது. அது செயல்பாட்டுக்கும் வர முடியாது. முன்பின் அறியாத பொருள் இருப்பின் அதற்கு உடனே நாம் பெயர் வைத்துவிடுவோம். (சான்று: மிளகாய்). அப்போதுதான், சமூகச் செயல்பாட்டுக்கு அந்தப் பொருள் வரும். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதும் இதன் அடிப்படையிலானதே ஆகும். இந்தப் பெயர்ச்சூட்டலில் மொழிபெயர்ப்பு நடப்பதைக் காணலாம். அதாவது, பொருள் (material) பெயராவதைக் காணலாம். வினைகளும் சொற்களாகின்றன. இதன்படி, பெயர்ச்சொல் வினைச்சொல் எல்லாம் மொழி பெயர்ப்புகளே ஆகும். அதாவது, ஒன்றை மொழியாகப் பெயர்த்தல் நடக்கின்றது. இந்தப் பெயர்ப்பு (பொருள் / வினை / சொல்) உள்ளத்தில் இருந்து தோற்றம் பெற்றவை. ஒவ்வொரு சொல்லும் ஏதோவொரு காலத்தில் விளைந்த உள நிகழ்வு ஆகும். அவை தலைமுறை வழிவழியாகக் கடத்தப்பட்டு வந்ததால் அவற்றின் இருப்பு இன்றளவும் நிலைத்து இருக்கிறது. இந்தப் பழைய ஒலியுருவைப் புதிய மனம் (குழந்தை மனம்) அறிந்தேற்க வந்துவிடுகின்றது. இந்த அறிந்தேற்பு மொழியறிவை உருவாக்கி வளப்படுத்துகின்றது. எனவே, மொழியறிவு என்பது மொழி வழி பெயர்ப்பால் உருவாகின்ற அறிவே அன்றி வேறில்லை.
மேற்கண்ட விளக்கங்கள்படி, குழந்தை மொழியைக் கற்றுக்கொள்வதன் வழியில் மொழிபெயர்ப்புப் பயிற்சியே எடுக்கிறது. மொழியை நன்கு கையாளத் தெரிந்த பிள்ளை அல்லது மனிதன் நல்ல மொழி பெயர்ப்பாளர் எனச் சொல்லலாம். உள மொழியியல் (psycholinguistics) கூற்றுப்படி, மொழியறிவு என்பது புலனுணர்வு போன்றது. இதுதான் உண்மையான ஆறாவது புலனறிவு. தொல்காப்பியர் கூறும்போது, ‘ஆறறி வதுவே அவற்றொடு மனனே’ என்றார். இங்கே, மனனே என்பது மனதையும் அது சார்ந்த மொழியையும் குறிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். லக்கான் கூறுவதுபோல், மனித அகநிலையை மொழி கட்டமைக்கிறது. இதைச் சற்று உன்னித்தால் மொழிபெயர்ப்பே அகநிலையைக் கட்டமைகிறது எனலாம். எண்ணங்கள், பொருட்கள், வினைகள் எல்லாம் உள்ளத்தில் மொழிகளாகப் (சொல்லாடல்களாக) பொதிந்துள்ளன. அதனால் தான், மனிதனின் சிந்தனையே ‘மொழித்தல்’ போன்றதாகிறது. அதாவது, மொழியால் மனிதன் சிந்திக்கின்றான். எனில், ஒவ்வொரு சிந்தனைக்கும் பின்புலமாக மொழிபெயர்ப்பு அல்லது மொழியாக்கம் உள்ளது. இங்கே, சொல்லாடல்கள் அனைத்தும் மொழியாகப் பெயர்க்கப்பட்ட அம்சங்களே ஆகும். இந்த மொழி தாய்மொழியா வேறுமொழியா என்பது தான் கேள்வி.
இப்போது முக்கியமான கட்டத்துக்கு வந்து விட்டோம். ‘தாய்மொழியில் மனிதன் சிந்திக்கிறான்’ என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு பொய் இதில் உள்ளது. காரணம், குடும்ப மொழியான தாய்மொழியில் நாம் சிந்திப்பதாக நினைக்கிறோம். ஆனால், பொதுவில் அப்படி நடப்பதில்லை. தமிழகத்தில் பிறமொழியினர் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் தாய்மொழி வேறாக இருக்கும். இருந்தாலும், அவர்களில் அதிப் பெரும்பான்மையினர் தமிழில் சிந்திப்பதைப் பார்க்க முடிகிறது. இங்கே, தாய்மொழி அடிப்பட்டு விடுகின்றது. காரணம், தமிழ்ச் சமூகத்தில் தமிழில்தான் அதிகமாக ஊடாட வேண்டியுள்ளது. இந்தச் சமூகப் பழக்கம் ‘மனப்பழக்கம்’ என்றாகித் தாய் மொழியைப் பின்னுக்குத் தள்ளி தமிழ் மொழி முன்னுக்கு வந்து விடுகின்றது. அதனால், அவர்களின் ‘சிந்தனை மொழி’ தமிழ் என்றாகிறது. இதேபோல் தமிழர்கள் பல தலை முறையாகப் பிற மொழிக் கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்தால் அவர்களின் சிந்தனை மொழி அந்தச் சமூக மொழியே அமையப் பெறும்.
தாய் மொழியைவிடத் ‘தன்மொழி’யே உள்ளத்தில் வீரியமாக இயக்கம் கொள்கிறது. இதுதான் சுயத்தின் மொழி (language of self) ஆகும். இந்தத் தன்மொழியாகப் பெரும்பாலும் தாய்மொழி அமையப் பெறலாம். சிலவேளை சமூக மொழி உள்வாங்கப்பட்டுத் தன் மொழி என்றாகலாம். இந்தத் தன்மொழிதான் சிந்தை மொழியாகவும் பேச்சு மொழியாகவும் வெளிப்படுகின்றது. உள்ளத்தில் பல மொழிகள் இருந்தாலும் எதில் மனம் சிந்திக்கின்றதோ அதுவே அன்னவரின் தன்மொழி (signifier) ஆகும். பாரதியாருக்குத் தமிழ், ஆங்கிலம், பிரஞ்ச், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், உருது, கன்னடம், மராத்தி முதலிய மொழிகள் தெரியும். அதனால், அவர் மனத்துள் இந்த மொழிகள் யாவும் குறிப்பிட்ட அளவிலான செயல்பாட்டில் இருக்கும். என்றாலும், அவரின் சிந்தை மொழி தமிழாகத்தான் இருந்திருக்கும். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்கிற அவரின் அனுபவ மொழியில் ‘தன்மொழி’ சிறப்பிக்கப்படுகின்றது. அதனால்தான், அவரால் செறிவானத் தமிழ்ப் படைப்புகளைக் கொடுக்க முடிந்தது. இந்தப் பார்வைப்படி, தாய்மொழிக் கல்வியைவிடத் தன் மொழிக் கல்வியே சிறந்தது. இந்தத் தன்மொழி அனைவரிடமும் பொதுவாக அமைந்திருப்பின் வலைப்பின்னல் உருவாக அது சமூக மொழி நிலை எய்தி விடுகின்றது. தன்மொழி ஒரு குறிப்பான் (signifier) என்றால் சமூக மொழி ஒரு குறிப்பான் சங்கிலி ((chain of signifiers)) ஆகும்.
சிந்தனையென்பது மொழியால் ஏற்படுவது. லக்கான் நோக்கில் இதைக் குறிப்பான் வழிச் சிந்தனை எனலாம். அதாவது, குறிப்பான்களே சிந்தனையைத் தீர்மானிக்கின்றன. இன்னும் ஆழமாக நோக்கின், நனவிலிக் குறிப்பான்களால் உருவாக்கப்படுவதுதான் சிந்தனை ஆகும். இந்த நனவிலிக் குறிப்பான்கள் நனவு நிலையில் பேச்சுகளாக (மொழிதல்) வெளிப்படுகின்றன. அதனால், நனவிலியின் மொழி பெயர்ப்பு தான் ‘நனவின் மொழிதல்’ எனக் கூறப் பொருந்தும். இதனைச் செய்வது ஈகோ ஆகும். இது சுயத்தின் அம்சம். அதனால், நனவில் மொழிதல் என்பது சுயத்தின் மொழிதல் என்றாகிறது. கனவை எடுத்துக் கொள்வோம். ஒருவருடன் நமது கனவைப் பகிர்ந்து கொள்ளும்போது மொழியால் விளக்குவோம். அதுவே மொழிபெயர்ப்பு ஆகும். இந்த மொழிக் கனவைத்தான் ஃப்ராய்ட் ஆய்வுக்கு உட்படுத்தினார். அவரின் கனவுக் பகுப்பாய்வு ஒரு விதத்தில் ‘மொழி ஆய்வு’ போன்றது. இதை அடுத்தக் (கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் லக்கான்). மனிதனை மொழிக்கு முன், மொழிக்குப் பின் என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இதில், மொழி மனிதனே முழுமையானவன். மொழிதலின்றிச் சமூக மனிதனில்லை. இந்த மொழிதலானது தன்மொழி வழிப்பட்டதாகும். இதுதான் உணர்வுகளைக் கருத்துருக்களாகப் பிரதிபலிக்கிறது. எனில், நாம் மொழிவது எல்லாமே மொழிபெயர்ப்புதான் என்றாகிறது. எனவே, அடிப்படையில் மொழிதல் என்பதே மொழிபெயர்ப்பு ஆகும். கருத்து அல்லது எண்ணம் அனைவருக்கும் பொது. அதைத் தமிழன் தமிழில் உரைக்கிறான். ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் உரைக்கின்றான். சீனன் சீனமொழியில் உரைக்கிறான். எனில், அனைவரும் மொழிபெயர்ப்பாளர்களே ஆகும்.
எண்ணங்களின் மொழிபெயர்ப்புதான் பேச்சொலி ஆகும். இந்தப் பேச்சொலியானது தன்மொழி சார்ந்தது. எண்ணம் பொதுவாக இருந்தாலும் தன்மொழி (இலக்கு மொழி) வேறு. இது, நாடுதோறும் அல்லது மாநிலந்தோறும் வேறுபடலாம். உலகச் சிந்தனையாளர்கள் யாவரும் தன்மொழியில்தான் அறிவை வழங்கினர். திருவள்ளுவர், ஃப்ராய்ட், மார்க்ஸ், லக்கான் முதலியோர் தன்மொழியில் சொல்லாடல் புரிந்தது நமக்குத் தெரியும். இதை நாம் தாய்மொழி எனக் கருதுகிறோம். ஆனால், இது தன்மொழி என அறிவோம். காரணம், பிற மொழியறிவு இருந்தாலும் சிந்தை மொழியே படைப்பில் ஈடுபடும். அந்தச் சிந்தை மொழிதான் தன்மொழி. (உளமொழி அல்ல).
மேற்கண்ட விளக்கங்கள்படி, தாய்மொழி வேறு தன்மொழி வேறு எனப் புரிந்து கொள்ளலாம். தாய்மொழி (mother language) என்பது குடும்ப மொழி. தன்மொழி (self language) என்பது சுய மொழி. இது மனமொழிகளில் ஒன்று. சமூக மொழியே தாய்மொழியாக இருக்கலாம். அதேபோல் தன்மொழியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த இணக்கம் கட்டாயமில்லலை. மேலும், இவற்றில் தன்மொழியே சிந்தனை மொழி. இந்தக் தன்மொழி குழந்தைப் பருவத்தில் இருந்து மனப் பழக்கத்தால் உண்டாவதாகும். இதுவும் போலச் செய்தல் (imitation) போன்றதே ஆகும். மனிதனின் கலைப் படைப்புகள் யாவும் ‘போலச் செய்தலின்’ விளைவுகளே என்பார் ப்ளேட்டோ. இதன்படி, இலக்கியம் என்பது போலச் செய்தல் ஆகும். இதை ‘நிஜத்தின் நிழல்’ என்பார் அவர். எனில், மொழிபெயர்ப்பு என்பது ‘நிழலின் நிழல்’ ஆகும். பொதுவில் மொழிப் பழக்கம் என்பது போலச் செய்தலின் நல்விளைவே அன்றி வேறில்லை. குழந்தையானது போலச் செய்தல் வழியில்தான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கின்றது. மொழியும் இதில் அடங்கும். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பக் குழந்தையின் ‘தன்மொழி’ ஒன்று அமையப் பெறும். அது, பெரும்பாலும் சமூக மொழியாகவே இருக்கும்.
குறிப்பாக, வட்டார மொழியாக இருக்கும். அதனால் தான், மொழி வழி மாநில எல்லை வட்டாரங்களில் ‘தன்மொழி’ வேறுவிதமாக இருக்கும். அங்கே மாநில மொழியே தன்மொழியாக இருப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
பெரும்பாலும் தாய்மொழியே தன்மொழியாக இருக்கும் என்றாலும், இதைப் பொதுமையாகக் கருதிவிட முடியாது. அதேபோல் சமூகமொழியே தன்மொழி எனவும் பொதுவில் கொள்ள முடியாது. காரணம், தன்மொழி என்பது தனியர் வாழ்வைப் பொறுத்து அமையப்பெறும். தன்மொழி என்பது அடிப்படையில் எழுத்துப் பெயர்ப்பு என்றாலும் அதற்கு அப்பால் மொழிபெயர்ப்பாகவும் விளங்குகிறது. காரணம், மொழியால் பெயர்க்கப்படும் எல்லாம் மொழி பெயர்ப்பு என்கிற வட்டத்துள் வைக்கப்படுகின்றது. ஓவியத்தை மொழியாக்குவதும் எண்ணங்களை மொழியாக்குவதும் ஒன்றே. மனித மனம் என்பது குறிப்பான்களால் நிறைந்தது. எனில், இந்த மொழி மனம் அதன் இயல்பில் மொழிபெயர்ப்பு மனம் என்றாகிறது.
இறுதியாக, தன்மொழியை உறுதிப்பட அடையாளம் காண முடியுமா எனும் கேள்வி எழுகின்றது. முன்பே கூறியபடி, எந்த மொழியில் சிந்திக்கின்றோமோ அதுவே தன்மொழி ஆகும். அதுவே ஈகோ மொழியும் ஆகும். ஆழத்து உளவியல் வழிக் கூறின், கனவில் நாம் பேசுகின்ற மொழியே ‘தன் மொழி’ ஆகும். இதில் ஆழத்து உளவியல் பாங்கு உள்ளது. இந்த ஆழம் வரை ஈகோவும் சுயமும் பொதிந்துள்ளன. அதனால், தன்மொழி சார்ந்த மொழிபெயர்ப்புகள் நனவிலியிலேயே நடக்கின்றது. எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் மொழியாகப் பெயர்க்கப்பட்டு ஆழ்மனத்துள் அமைந்து விடுவதால் மொழிதல் ஒரு விதத்தில் மொழி பெயர்த்தல் என்றா கிறது. பேச்சுக்கு முன் உள்ளத்துக்கு உள்ளுக்குள்ளேயே மொழிபெயர்ப்பு நடப்பதை அறிய முடிகிறது. எனவே, மொழிபெயர்ப்பானது உளவியல்பின் சிறப்பம்சம் எனலாம். சிந்தனை, பேச்சு, செயல்கள் யாவும் மொழிபெயர்ப்பு அம்சங்கள் ஆகும். முடிவாக, தன்மொழி சார்ந்த மனம் ‘மொழிமனம்’ ஆகும். அது ‘மொழிபெயர்ப்பு மனம்’ என இப்போது நாம் தெளிவுறுவோம்.
நுண்ணறிவே எனக்குத் தா வஸ்துக்களின் மிகச்சரியான பெயரை எனது வார்த்தையே அந்த வஸ்துவாகவே ஆகட்டும் எனது ஆன்மாவினால் இரண்டாம் தடவை சிருஷ்டிக்கப்பட்டு வஸ்துக்கள் பற்றிய அறிதலற்ற அனைவரும் என் ஊடாய் அவற்றை அடையட்டும் வஸ்துக்களை மறந்த அனைவரும் என் ஊடாய் அவற்றை அடையட்டும் வஸ்துக்களை நேசிப்பவர்களும் கூட என்னூடாய் அவற்றைச் சென்றடையட்டும்... நுண்ணறிவே, எனக்குத் தந்தளி வஸ்துக்களின் மிகக் கச்சித பெயரை, மற்றும் உன்னுடையதை மற்றும் அவர்களுடையதை, மற்றும் என்னுடையதை.
கள்ளமின்மையால் மட்டும் ஆடை உடுத்தி என்னிடம் முதலில் அவள் தூய்மையாய் வந்தாள் மேலும் நான் அவளை நேசித்தேன் நாம் ஒரு குழந்தையை நேசிப்பது போல அவள் எங்கிருந்தோ எடுத்து வந்த ஆடைகளால் தன்னை அலங்கரிக்கத் தொடங்கினாள் நான் அவளை வெறுத்தேன் அதை அறியாமல் சிறிது சிறிதாய் அவள் ஒரு அரசியானாள் ஆபரணங்கள் கண்ணைப் பறித்தன... எத்தனை கசப்பு எத்தனை சீற்றம் ஆனால் மீண்டும் அவள் நிர்வாணத்திற்குத் திரும்பிச் சென்றாள் அவளைக் கண்டு புன்னகை செய்தேன் அவளது முற்காலத்திய கள்ளமின்மையின் ஒட்டிய உள்ளாடை மட்டும் எஞ்சியிருந்தது அவளை நம்பினேன் நான் இரண்டாவது முறை அவளது உள்ளாடையையும் கூட அகற்றி மேலும் இப்போது மிக நிர்வாணமாக... ஓ நிர்வாணக் கவிதை, எப்போதுமே என்னுடையது நான் என் வாழ்க்கை முழுவதிலும் அதை நேசித்தேன்.
நீ எல்லாம் நீயாகவே இருக்கிறாய், கடலே என்றாலும் அந்த அளவு நீயாக இல்லாதிருக்கிறாய் எத்தனை தனிமையாக என்றென்றைக்குமாய் உன்னிடமிருந்து அப்பால் ஓராயிரம் காயங்களில் திறந்திருக்கிறாய், ஒவ்வொரு கணமும் எனது நெற்றியைப் போல எனது எண்ணங்களைப் போல உனது அலைகள் வந்து போகின்றன மேலும் வருகின்றன போகின்றன முத்தமிட்டு பின்வாங்கும் கடல் ஒரு நித்திய நட்பில் மற்றும் மனப்பிணக்கில் நீ நீயேதான் ஆனால் அதை அறிவதில்லை உனது இதயம் துடிக்கிறது ஆனால் அதை அது அறிவதில்லை... தனிமையின் என்னவிதமான நிறைவாக்கம் தனிமையான கடலே.
நான் நானில்லை நான் என் பக்கத்தில் என் கண்ணில் படாமல் நடந்து செல்லும் அவன் சில சமயங்களில் நான் அவனைச் சந்திக்கிறேன் மற்றும் அவனைச் சில சமயம் நான் மறக்கிறேன் நான் பேசும்போது, மௌனமாகவும் அமைதியாகவும் இருப்பவன் நான் வெறுக்கும்போது மென்மையாக மன்னிப்பவன் நான் இல்லாத இடத்தில் நடந்து செல்லும் அவன் நான் இறக்கும்போது நிமிர்ந்து நிற்கப் போகிறவன்.
ஒருவர் விண்ணின் ஊடாய்ப் பார்க்க வேண்டும் கண்டிப்பாக உனது கல்லறையைக் கண்டுபிடிக்க உனது மரணம் ஒரு விண்மீனிலிருந்து மழையெனப் பொழிகிறது பாறை உன்னை அழுத்தவில்லை அது கனவின் பிரபஞ்சம் அறியாமையில் நீ இருக்கிறாய் சகலத்திலும் வானம், கடல் மற்றும் பூமியில் மரித்து.
மிக உயரத்தில் பறவை பாடிக்கொண்டிருக்கிறது கீழே பாடிக்கொண்டிருக்கிறது தண்ணீர் மேற்புறத்திலும் அடியிலும் என் ஆன்மா திறக்கிறது இரண்டு லயங்களின் இடையில் வெள்ளியின் பத்தி இலைகள், பறவை, நட்சத்திரம், மிளாறு, வேர்கள், தண்ணீர் இரு கொந்தளிப்புகளுக்கிடையில் வெள்ளியின் பத்தி மேலும் நீ, கருத்தியலான அடிமரம் எனது ஆன்மா மற்றும் எனது ஆன்மாவிற்கு இடையே அலைவுறும் ஒலியை நட்சத்திரம் தொட்டிலிடுகிறது அலை மற்றும் தாழ்வாய்த் தொங்கும் கிளை மேலும் மற்றும் கீழும் நடுங்கிக் கொண்டிருக்கிறது எனது ஆன்மா.
சிறுபெண் பச்சைநிறமானவள் அவளுக்குப் பச்சைநிறக் கண்கள், கேசம் பச்சைநிறம் அவளது காட்டுரோஜா மொட்டு அடர்சிவப்பல்ல அல்லது வெண்ணிறமும் அல்ல ஆனால் பச்சை அவள் பச்சைநிறக் காற்றில் வருகிறாள் பூமி பச்சையாக மாறுகிறது அவளது பளிச்சிடும் ஒளி ஊடுருவும் ஆடை வெண்ணிறமும் அல்ல நீலமும் அல்ல ஆனால் பச்சைநிறம் அவள் பச்சைநிறக் கடலில் வருகிறாள் வானம் பச்சையாக மாறுகிறது எனது வாழ்க்கை தொடர்ந்து திறக்கிறது ஒரு சிறு பச்சைநிறக் கதவை அவள் பொருட்டு.
சேகரித்து வை அதை, ரோஜாவைச் சேகரித்து வை இல்லை ஆனால் அது சூரியன் பிழம்பின் ரோஜா தங்கத்தின் ரோஜா கருத்தியலின் ரோஜா ஆனால் அது இல்லை, அது சூரியன் கீர்த்தியின் ரோஜா கனவுகளின் ரோஜா இறுதி ரோஜா ஆனால் அது இல்லை, சூரியன் சேகரித்து வை அதை, ரோஜாவைச் சேகரித்து வை.
மலர் திரும்பி வருகிறது மாற்றமின்றி நமக்கான நீலநிற கணத்தைக் குறியிட நம் உடலுக்கென்று ஒரு இனிமையான சகோதரத்துவத்தை அளிக்க மேலும் அதீதமாய் வாசனை ஊட்டப்பட்டு சுருக்கமானதே போதுமெனச் சொல்ல சுருக்கம் பொன்னிறச் சூரியனில், பொன்னிறக் காற்றில் பொன்னிற பூமியில், பொன்னிறம் பூசிய கடலில் வானம் மற்றும் கடவுளர்களுக்கு எதிராய் சுருக்கம் ஓர் இருண்ட இல்லையின் மத்தியில் சுருக்கம் போதுமான செயல்பாட்டில் சுருக்கம் லயம் மற்றும் ஒளிக்கு இடையிலான சமனிலை மேலும் மலர் அசைந்தாடுகிறது தசையின் செறிவான நறுமணத்தில் இருப்பில் நுழைந்து இறுதிவரை சென்றுசேர்கிறது முடிவின்மையின் முடிவு வரை சென்று தொலைந்து போகிறது நம்மை ஒரு தோட்டமாய் மாற்றிவிட்டு வாழும் மலர் அசைந்தாடுகிறது உள்ளேயும் வெளியேயும் அதன் எடை அதன் சந்தோஷத்திற்கு மிகச்சரியான விகிதத்தில் மேலும் பறவை அதை நேசிக்கிறது மேலும் பேருணர்ச்சியால் அதை நிறைக்கிறது மற்றும் ஒரு பெண் வளைந்தபடி அதை நேசிக்கிறாள் ஆண் அதை நேசித்து முத்தமிடுகிறான் மலர்வதற்கு, வாழ்வதற்கு வஸ்துக்களினிடையே ஒரு கணத் தீப்பொறி ஒரு சபலப்படுத்தும் வடிவத்தினுள் ஒரு இயக்கமற்ற நிலையில் கடந்தகாலமற்ற ஒரு கணம் அதில் காம்ப்பஸின் நான்கு புள்ளிகளும் சரிசமமாய் ஈர்க்க இனிமையாயும் ஆழ்ந்தும் காதலின் கணம் திறக்கிறது ஒரு மலரென காதலும் மலரும் வடிவத்தில் பூரணமானவை பரஸ்பர வெறியெழுச்சிகொண்ட மறதியின் உறுதிப்பாட்டில் ஒரு பித்துப்பிடித்த இழப்பை ஈடுசெய்தலில் சுகந்தம், சுவை, சுகந்தம் வர்ணம், நறுமணம் மற்றும் தொடுதல், நறுமணம், காதல், நறுமணம் செந்நிறக் காற்று அதை வசியப்படுத்துகிறது மேலும் தூக்கிச் செல்கிறது, இனிமையான வன்புணர்ச்சி அது ஒரு வாழும் வீழ்ச்சி, இதம், புத்துணர்வு பரிபூரண அழகில் ஒரு மலரின் மரணம் பறந்தபடி, கடந்து சென்றவாறு அழகின் உன்னதத் தினத்தில் அதன் இவ்வுலகிடமிருந்து ஆர்வமிக்க விடைபெறலில் எந்தத் துயரமும் மிச்சமின்றி பூமியை இதமாக்கி, சூரியனை மற்றும் நிழலை ஒளியின் கண்களில் தன்னையே இழந்தபடி.
கதவு திறந்திருக்கிறது சில் வண்டு பாடுகிறது வயல்களில் நீ நிர்வாணமாய்ச் சுற்றி வருகிறாயா? ஓர் அமரத்துவமான தண்ணீர் போல சகலத்திலும் உள்ளே சென்று வெளியேறுகிறது காற்று வீசுகையில் நீ நிர்வாணமாய் சுற்றி வருகிறாயா? பேஸில் செடி உறங்கவில்லை எறும்பு சுறுசுறுப்பாக இயங்குகிறது வீட்டினுள் நீ நிர்வாணமாய்ச் சுற்றி வருகிறாயா?
உங்களால் எல்லாவற்றின் முகங்களையும் பார்க்க முடியும் மேலும் இது வெண்மை கட்டுமாவு, கொடுங்கனவு, அடோபி சுவர், ரத்தசோகை, சில்லிடுதல் கிழக்குப் பக்கம் திருப்பப்பட்டுள்ளது. ஓ வாழ்வின் நெருக்கமே. வாழ்வின் கடினத்தன்மையே உடலின் உள்ளே உள்ள ஏதோ ஒன்று விலங்காய் - வேராக, எரிகசடு முனைகளாய் அங்கே இன்னும் சரிவர அமைவுறா ஆன்மாவுடன் மற்றும் கனிமம் மற்றும் தாவரம் மனிதனின் பின்னணியில் சூரியன் விரைப்பாக நிற்கிறது பெண் பன்றி, முட்டைக்கோசுகள், இந்த மண் சுவர் பொய்யான சந்தோஷம், காரணம் நீ வெறுமனே காலத்தில் இருக்கிறாய், அவர்கள் சொல்வது போல ஆன்மாவில் அல்ல முழு ஆகாயமே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது ஈரமானதும் ஆவிப்புகை விடும் குவியல்களால் சாணிக்குவியல்களின் ஆன ஒரு தொடுவான் கரிப்பு எஞ்சுகிறது இரவின் இங்கு மற்றும் அங்குவில் பச்சைநிற நிலவின் கீற்றுக்கள், பாதி உண்ணப்பட்டு பொய் விண்மீன்களிலிருந்து படிகத் துகள்கள் வீழ்கின்றன கட்டுமாவு, காகிதம் கிழித்தெறியப்பட்டுள்ளது இன்னும் மெலிதாய் வான் - நீலத்தில் பறவைகள் நிஜமாக இன்னும் விழிக்கவில்லை கச்சாவான நிலாவில் தெருவிளக்கு ஏறத்தாழ மறைந்தது உயிரிகள் மற்றும் வஸ்துக்களின் கலவரக்கும்பல் ஒரு மெய்யான துயரம், காரணம் நீ நிஜமாகவே ஆழமாய் ஆன்மாவினுள் அவர்கள் சொல்வது போல காலத்தில் இல்லவே இல்லை.
உனது இடத்தில் நான் உனக்கொரு உலகினைப் படைத்திருப்பேனேயானால் நீ நம்பிக்கையுடன் அந்த இடத்திற்கு வந்துவிட்டாய் மேலும் அதன் பொருட்டு நீ வந்துவிட்டாய், எனது தஞ்சமாய் காரணம் எனது முழு உலகுமே உனது நம்பிக்கை தவிர வேறு ஒன்றுமில்லை நான் சேகரித்துச் சேமித்துக்கொண்டிருந்தேன் எனது நம்பிக்கையை மொழியில், பேசப்பட்ட ஒரு பெயரில், எழுதப்பட்ட ஒரு பெயரில் நான் சகலத்திற்கும் ஒரு பெயர் தந்திருந்தேன் நீ எல்லாப் பெயர்களின் இடங்களையும் எடுத்துக் கொண்டாய் இப்பொழுது எனது இயக்கத்தைத் தடுத்து நிறுத்தவியலும் எனது தொடர்ச்சியான வாழ்தலிலும் இருத்தலிலுமாய் இருந்த நெருப்பினுள் காற்றினால் சூழப்பட்டு அதுவே நீலநிற நெருப்பாகித் தீப்பிழம்பு மறுபடியும் சிவந்த நெருப்பினுள் லகானுக்குள் வரும்போது திடீரென எங்கோ தடுத்து நிறுத்தப்பட்ட நானே எனது கடலாக இருக்கிறேன் எதுபற்றி நான் பேசிக்கொண்டிருந்தேனோ அந்தக் கடல் ஆனால் கனமில்லை ஒளியால் நிரப்பப்பட்ட அறிதலின் அலைகளின் இறுக்கமாய் சகலமும் நகர்ந்து கொண்டிருக்கின்றன மேல்நோக்கி, மேல்நோக்கி பிரபஞ்சத்திற்கென நான் அளித்த அனைத்துப் பெயர்களும் கடவுளால் படைக்கப்பட்டவை, மீண்டும் படைக்கப்பட்டு, மீண்டும் படைக்கப்பட்டவை அருளால் வலிமையால் அல்ல பெயர்களிலிருந்து பெறப்பட்ட பெயர்.
நியூயார்க், ஏப்ரல் 5
பெட்ரோ ஹென்ரிக்கஸ் உரேனாவுக்கு
வெண்ணிற ரோஜாவைக் கையில் வைத்தபடி நீக்ரோ பெண் உறங்குகிறாள். அந்தப் பெண்ணின் சோகமான அணிமணிகளை ரோஜாவும் கனவும் மந்திரமயமாய் ஒன்றின்மேல் ஒன்று ஏற்றப்பட்டு அகற்றுகின்றன: அடர்சிவப்பு கொக்கிப் பின்னல் வேலை காலணி உறைகள், ஒளி ஊடுருவும் பச்சைநிற ரவிக்கை, அடர் சிவப்பு பாப்பி மலர்களுடன் பொன்னிற வைக்கோல் தொப்பி. தற்காப்பற்ற கனவுகளில், அவள் புன்னகை செய்கிறாள், அவளது கரியநிறக் கையில் வெண்ணிற ரோஜாவைப் பிடித்தபடி.
எத்தனை இறுக்கமாக அவள் அதைப் பிடித்திருக்கிறாள். அதை இறுக்கமாகவும் கவனமாகவும் பற்ற வேண்டும் என அவள் கனவு காண்கிறாள் எனத் தோன்றுகிறது. அவளது நனவிலி மனதில் அவள் அதுபற்றி அக்கறை கொண்டிருக்கிறாள் - உறக்கத்தில் நடப்பவர் ஒருவரின் கச்சிதத்துடன் - அது அவளது சொந்த மென்மை, அதை ஏதோ இன்று காலைதான் அதை அவள் பிரசவித்தாள் என்பது போல, கனவில் அந்த வெள்ளை ரோஜாவின் ஆன்மாவின் தாய் என உணர்பவள் போல. சூரியனைச் சுற்றி அது ஏதோ பொன் என்பது போல். சுருக்கமடைந்த பரிவட்டம் சில நேரங்களில் அவளது மார்பின் மேலோ அல்லது தோள் மீதோ தலை அசைக்கிறது, ஆனால் ரோஜாவைப் பிடித்திருக்கும் கை மரியாதையைக் காக்கிறது, வசந்தத்தின் நிலையான காப்பாளன்.
ஒரு கண்காணா மெய்மை சுரங்கப்பாதையில் உள்ள சகலத்தையும் துளைத்துச் செல்கிறது, கதகதப்பான ஆனால் அசுத்தமான முரண்படும் இருள் அரிதாய் உணரப்படுகிறது. சகலரும் தங்கள் செய்தித்தாள்களைக் கைவிட்டுவிட்டனர், அவர்களின் சூயிங்கம், அவர்களின் கத்தல்கள் அனைத்தையும். ஒரு சோர்வுமயமான கொடுங்கனவு மற்றும் துயரத்திலிருந்து அவர்கள் இந்த வெண்ணிற ரோஜாவினால் உறிஞ்சப்பட்டவர்கள் போல. நீக்ரோ பெண்ணை ரோஜா மாட்சிமைப்படுத்துகிறது அது சுரங்கப்பாதையின் மனசாட்சி என்பது போல. கவனிப்பான நிசப்தத்தில் உள்ள ரோஜா ஒரு சுவைமிக்கச் சாரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் ஸ்தூலமான இருப்பு ஆனால் சகலத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இரும்பும் நிலக்கரியும், செய்தித்தாள்களும் சகலமும் ஒரு கணம் வெள்ளை ரோஜாவினால் நறுமணமூட்டப்படுகின்றன, ஒரு மேம்பட்ட வசந்தகாலத்தினாலும், நித்தியத்துவத்தாலும் ...
நியூயார்க், மார்ச் 26
ஆன்ட் பெஸ்ஸிக்கு
என்ன அமைதி இந்தப் புராதன இல்லத்திற்கு, வெண்மையும் மஞ்சளுமாய் ஒரு டெய்ஸி மலரைப் போல. எளிமையான மரத்தால் உருவாக்கப்பட்டு முழுவதும் பூட்டப்பட்டு, அதன் தூசி நிரம்பிய புராதன ஜன்னல்களில் அவற்றின் இளம் ரோஜா சட்டங்களுடன், வசந்தத்தை வளப்படுத்தும் சாய்வான பச்சை மற்றும் அடர்சிவப்பு சூரியன், ஒரு கணம், இருண்ட காலியான உட்பாகங்கள் ஒளியிலும் வண்ணத்திலும், கரையின் சித்திரத்துடனும். பிற அசிங்கமான வீடுகள் அதைச் சூழ்ந்திருக்க “ரிவர்சைட் ட்ரை” வில் தனிமையில் விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது, ஒரு சுத்தமான சிறிய கிழவனைப் போல் அது தனிமையாகவும் சிறியதாகவும், பாசாங்குடன் இருக்கும் வீடுகளின் மத்தியில். அது நகரத்தில் விடப்பட்ட சிறு பொருள் போல ஒரு சிறு சட்டையை ஒத்திருக்கிறது. அதை எவரும் நேசிப்பதில்லை. அதன் கதவின் மேல் உள்ள இந்த வாசகம் சொல்கிறது: “வாடகைக்கு”. அவ்வப்பொழுது அதற்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் சந்தோஷமான காற்று அந்த அட்டையுடன் விளையாடுகிறது.
ஆனால் அதன் கல்லறைமயமான தனிமையிலிருந்து அவ்வளவு உயிர்ப்பு சக்தி வெளிப்படுவதால் வரிகள் மற்றும் வர்ணங்களின் ஒன்றன் மீதான பதிதல், அதன் முற்காலத்திய நாட்டுப்புறத்தன்மை வெளிர்ந்து மங்கலாகி, பயங்கரமான எஃகு மற்றும் கற்களின் திரட்சிகளை விரட்டி அடிக்கிறது. அவை அதனை மூச்சு முட்டச் செய்வதால், மேலும் அதைச் சுற்றி இனிமையானதும், தொலைவானதும் தனிமையானதுமான மலை, நீண்டகாலமாய் எதிர்பார்க்கப்பட்ட நாட்டுப்புற வசந்தகாலப் பசுமையுடன்,
பக்கமாய்ச் சாய்ந்து மென்மையாய்க் கிடக்கிறது ஒரு நன்றிமிக்க நாய் போல ஆற்றை நோக்கியவாறு
பல தலைமுறைகளைச் சேர்ந்த ஸ்பானியக் கவிஞர்களின் ஆசானாகக் கருதப்படும் வான் ரமோன் ஹிமினெஸ் பூரணத்துவத்தை நோக்கி இயங்கிய கவிஞர். தலைமுறை 27’ என்றழைக்கப்பட்ட கலை இயக்கத்தைச் சார்ந்த கவிஞர்களில் முக்கியமானவர். 1956ஆம் ஆண்டு அவரது லிரிக்கல் தன்மைமிக்கக் கவிதைகளுக்காக நோபல் விருதுபெற்றவர். அவர் பின்பற்றிய மாடனிஸ்மோ (Modernismo) என்பது ஸ்பானிய வகைப்பட்டதான நவீனத்துவம். இதையேதான் பிறகு ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் அர்ஹெந்தீனியாவில் அறிமுகம் செய்தார். ஹிமினெஸைப் பொருத்தவரை மாடனிஸ்மோ என்பது விடுதலைக்கான இயக்கம். ஸ்பானிய மொழி பேசிய அமெரிக்காக்களின் இருபது நாடுகளுக்குத் தேவையான பாதிப்பை ஹிமினெஸ் ஒருவரால் செலுத்த முடிந்தது. (வாஸ்தவமாக அவரது குரு என்று கருதப்பட்ட ரூபன் டேரியாவின் உதவியுடன். )
ஏனென்றால் மாடனிஸ்மோவின் தந்தை எனக் கருதப்படுபவர் ரூபன் டேரியோ(1867-1916). மத்திய அமெரிக்கக் குடியரசான நிக்கரகுவாவில் பிறந்த ரூபன் டேரியோ ஸ்பானிய மொழியில் எழுதிய கவிஞர்களிலேயே மிகவும் காஸ்மோபொலிட்டன் தன்மை வாய்ந்தவராக இருந்தார். மேலும் ரூபன் டேரியோ இந்த நவீனத்துவத்தை முழுக்க முழுக்கக் கவிதைக்கானது என்று குறிப்பிட்டு கவிதைக்கு ஒரு தனித்துவத்தை அளித்தார். டேரியோவின் மாடனிசமோ அவரது தொகுதியான ‘அஸூல்’ என்ற கவிதைத் தொகுதியிலிருந்து ஆரம்பித்ததாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் முதல் உலகப் போருக்குப் பிறகு டேரியோவின் நவீனத்துவத்திற்கு (Modernismo) வேண்டிய எதிர்ப்பு கிளம்பிற்று. பிறகு மறுதலிக்கப்பட்டது.
வாழ்க்கை முழுமைக்கும் ஹிமினெஸ் கவிதையைத் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். தவிர அவர் ஒரு சில உரைநடைப் படைப்புகளையும் எழுதி சாதித்து உள்ளார். புதிய கவிதைகள் உருவாக்கம் இல்லாத போது ஏற்கனவே எழுதப்பட்டவற்றைப் பளபளப்பாக்கினார். எழுத ஆரம்பித்த காலத்தில் பெரும்பான்மையான பா அமைப்புகளை வைத்தே எழுதினார். குறிப்பாக ஸ்பானிய 14 வரிக்கவிதையின் ஆசான்களில் மிக இன்றியமையாதவராகக் கருதப்படுகிறார். ஆரம்பக்கட்டக் கவிதைகளில் நெருக்கியடித்த கவித்துவ உணர்ச்சிகளில் ‘சுருங்கச் சொல்லல்’ இல்லாமல் இருந்தது என்பதை நாம் தொடக்கக் கால ஐரிஷ்கவிஞர் யேட்ஸின் கவிதைகளில் காணப்படுவதைப் போன்றது என்று சொல்ல முடியும். ஆரம்பகாலப் பிரக்ஞாபூர்வமான கவித்துவம் என்பதில் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் இருக்கத்தான் செய்தன.
அவர் கண்டு அனுபவம் கொண்டு கவிதையில் பதிவு செய்தது என்பதில் பதிவேட்டைக் கையாள்பவர்களைப் போலன்றி ஒரு ஓவியனின் வழியைக் கடைபிடித்தார். இறுதி வெளிச்சம் என்ற கவிதை இதற்கொரு எடுத்துக்காட்டு. 1914 - 15 ஆண்டுகள் வாக்கில் அவர் ஸ்பிரிச்சுவல் சானெட்ஸ் (Spiritual Sonnets) என்ற தொகுதிக் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார். இக்கவிதைகளில் ஹிமினெஸ் நேரடியாக அவரது 16ஆம் நூற்றாண்டு ஸ்பானிய முன்னோர்களின் ‘சானெட்’ எழுதும் முறையைப் பின்பற்றினார். யேட்ஸ் மற்றும் வில்லியம் பிளேக் போன்றோரின் கவிதைகளை வாசித்ததால் ஹிமினெஸுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆரம்பக்கட்டக் கவிதைகளில் பார்க்கலாம். வால்ட் விட்மேன் மீது அலாதியான மதிப்பு வைத்திருந்தார்.
அவரது கவிதைகள் ஆங்கில ரொமாண்ட்டிக் ஓவியர் டர்னர் (J. M. W. Turner) என்பவரின் ஓவியங்களுடனும் சீன ஓவியங்களுடனும் ஒப்புமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் அவரது வர்ணப் பயன்பாடுகள் மட்டுமன்றி சில சமயம் அவரது கவிதைகளில் மனிதர்களற்ற நிலப்பரப்புகளைப் பார்க்க அவர் வாய்ப்பளிப்பதும்தான்.
அவரது முதிர்ச்சிக் கட்டங்களில் பா அமைப்புகளையும் எதுகை மோனை மற்றும் ஓசை அமைகளையும் விட்டுவிடத் தொடங்கினார். இறுதியில் ‘நிர்வாணக் கவிதை’ என்ற ஒன்றை முன்மொழிந்தார். அவர் குறிப்பிட்ட நிர்வாணக் கவிதைக்கும் ‘தூய கவிதை’க்கும் அதிகமான வேறுபாடுகள் இல்லை. இதில் அவர் குறுகத் தரித்தலையும் சேர்த்துக் கொண்டதால் விவரணைகளை வெகுவாக ஒதுக்கினார். ஆனால் கலை கலைக்காகவே என்ற கருதுகோளை முன்வைத்த ‘தூய கவிதை’க்கும் ஹிமினெஸ் முன்வைத்த நிர்வாணக்கவிதைக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது-கோட்பாட்டளவில் என்ற போதிலும் கூட.
அவர் உடனிடருந்தும், வாசித்தும் எழுதிக்கொண்டு இருந்த பல இளம் கவிஞர்கள் அவரது வழி காட்டுதலால் முதிர்ச்சியடைந்தனர்: அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் - ஹோர்ஹே குய்யன் (Jorge Guillen), பெட்ரோ சாலினாஸ் (Pedro Salinas), லூயி செர்னுடா (Luis Cernuda), பெடரிக்கோ கார்சியா லோர்க்கா (Fedricao Garcia Loca), பைசந்த் அலெக்ஸாந்ரே (Vincente Alexandre), மற்றும் ரஃபேல் ஆல்பர்ட்டி (Rafael Alberti) போன்றோர். லோர்க்கா நேரடியாக ஹிமினெஸைத் தனது ஆசான் என்று பொதுவெளியில் ஒப்புதல் செய்திருக்கிறார். 1935ஆம் ஆண்டு ஸ்பானிய உள்நாட்டுப் போர் காரணமாக இந்தக் குழு சிதைந்து போகும் முன்னர் ஐரோப்பாவில் அப்பொழுது எழுதப்பட்ட மிகச்சிறந்த கவிதைகள் ஸ்பானியக் கவிஞர்களால் எழுதப்பட்டன என்று அறிவித்தார் ஹிமினெஸ். இளம் கவிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஹிமினெஸ் எப்போதும் அவசரப்பட்டு ஒரு படைப்பை எழுதவோ வெளியிடவோ செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினார். வெகுஜன வாசகர்களுக்காக எழுத வேண்டாம் என்றார். கவிதைக்காகவே இளம் கவிஞர்கள் தம் வாழ்க்கைகளை வாழ வேண்டுமென வற்புறுத்தினார்.
அவரது படைப்புகள் வெகுஜனப் பத்திரிகைகளில் இருமல் மருந்து விளம்பரங்களுக்கிடையில் வெளியிடப்படுவதை அவரால் என்றுமே ஜீரணிக்க முடிய வில்லை. உடைந்த அச்செழுத்துக்கள் அவரை இன்னும் கோபமூட்டின. எனவே அவருக்கென்றே ஒரு அச்சகத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் அவரது கவிதைகளை அடிக்கடி திருத்தம் செய்து கொண்டே இருக்கும் பிடிவாதமான பழக்கம் கொண்டிருந்தார்.
படைப்பு ரீதியாக அவர் மொத்தம் மூன்று சுயங்கள் இருப்பதாக நம்பினார். ஒருவிதத்தில் பார்ப்போமானால் எல்லாக் கவிஞர்களுமே தங்களின் சுயங்களின் மீது காதல் கொண்ட நார்சிசியஸ் போலத்தான் செயல்படுகின்றனர் என்றவர் மேலும் குறிப்பிட்டார்:
“ In me, there are at least three I’s,” he once wrote. “ I was always enough with two of them. But I want to be my third, the demanding one, el exigente.””
பொதுநபர் சுயம் எங்கே முடிகிறதென்றும் தனிநபர் சுயம் எங்கே ஆரம்பிக்கிறதென்றும் நிச்சயமாக ஒரு கவிஞனால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒருவரது சுயஅடையாளத்தில் மிக மர்மமானதும் ஆழமானதுமாக இருப்பது அதன் பிரித்தறிய முடியாத்தன்மையும் அதன் மர்மமும் ஆகும். இந்தச் சுயம் உடைபட்ட நிலை பிற்காலத்தில் பாப்லோ நெரூதாவால் முன் எடுத்துச் செல்லப்பட்டது. (குறிப்பாக எக்ஸ்ட்ரா வெகாரியோ என்ற தொகுதிக் கவிதைகளில் )
I am not I I am this one Walking beside me whom I do not see Whom at times I manage to visit And at other times I forget The one who remains silent when I talk The one who forgives, sweet, when I hate The one who takes a walk when I am indoors The one who will remain standing when I die.
(Translated by Robert Bly)
காலம் மற்றும் லயம் குறித்த பிரக்ஞை ஹிமினெஸ்ஸிடம் அதீதமாய்க் காணப்பட்ட ஒன்று. உழைக்கும் வர்க்கத்தினருடன் தன்னை அடையாளம் கண்ட பிரெஞ்சுத் தத்துவவாதியான சைமன் வெய்ல் காலத்திற்கும் லயத்திற்கும் இடையிலான சில உறவுகளைக் கண்டறிந்தார். சைமன் வெய்ல் ஆசிரியராக இருந்த நிறுவனத்திலிருந்து ஒரு வருட விடுமுறை பெற்றுக் கொண்டு தொழிற்சாலையில் ஷிப்ட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி செய்யும் முறைமைகளை ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வந்தார். ஒரு பணியின் முக்கியமான பிரச்சினையே காலமும் அதுசார்ந்த லயமும் என்றார் வெய்ல். முடிவற்றுத் திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்பவர்களுக்குச் சில எளிய இயக்கங்கள் இருக்கின்றன என்றும் இது முடிவற்றுத் திரும்பத் திரும்ப நிகழ்கின்றது என்றும் பிறகு கூறினார். சைமன் வெய்ல் உடல் உழைப்புக்கெனக் கண்டறிந்தவை மூளை உழைப்புக்குமே பொருந்தி வரக்கூடியவை. அதாவது சிந்தனையானது மின்னல் தெறிப்புகளென உருவெடுக்கிறது. காலப் பிரக்ஞை ஹிமினெஸைத் தீவிரமாகப் பாதித்த ஒன்று என்பதை நாம் அறிவது அவசியம்.
அவர் தனது உள்மன லயம் காலக் கடிகாரத்துடன் ஒத்துப்போவதில்லை என வருந்தினார். அவரது ஒரு நாள் என்பது சில சமயம் அரைமணி நேரமாகவும், மற்றவை மூன்று மணிநேரங்களாகவும் சில நாட்கள் ஆயிரக்கணக்காக மணிநேரங்களைக் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார். அவர் அவரது கவிதையில் மூழ்கி இருக்கும்போது காலம் கவனிக்கப்படாமல் அவரைக் கடந்து செல்கிறது. அல்லது அவரது சிந்தனையினுள் தேவையற்ற இரைச்சல் அல்லது அழையா விருந்தாளியாக உடைத்துச் சென்று நுழைகிறது. உள்வயமான சலனமறுத்த நிலையின் உச்சத்தை அவர் அடைய விரும்பினார். எனவே இதில் “முடிக்க வேண்டும்” என்ற அவசரப்படுத்தலோ அல்லது நேற்றைய தோல்விகளைப் பற்றிய பின்வருத்தங்களோ, இழந்து போன சந்தோஷமான மணிநேரங்களைப் பற்றிய ஏக்கமோ தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அவர் “ஒரு சமயத்தில் ஒரு நாள் (மட்டும்)” என்ற அளவில் தொடங்குகிறார். ஒரு நாள் என்பது அவரைப் பொருத்தவரை ஒரு தீவைப் போல் இருக்க வேண்டும் என நினைத்தார்: “காலம் என்கிற சமுத்திரத்தில் அதனுடைய காலை மற்றும் மாலையுடன்.” ஒவ்வொரு மணி நேரமும் அதனளவில் உருண்டையாகச் சொரசொரப்பின்றி அருகில் உள்ள மற்ற மணி நேரத்தை உரசாமல் இருக்க வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது.
மேலும் நிசப்தம் அவரது படைப்பு நேரத்திற்கு அத்தியாவசியமாய்த் தேவைப்பட்ட ஒன்று. உட்பக்கம் கார்க் உறையிடப்பட்ட மார்செல் ப்ரூஸ் (Marcel Proust)-இன் அறையில் இருந்தது போன்ற நிசப்தத்தைப் பிரான்ஸ் அனுமதிக்கவில்லையா என்று கேட்டார். சப்தங்களைத் தவிர்ப்பதற்கு வேண்டி அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றவும் செய்தார்.
கவிதை மற்றும் தினசரிப் பணிகளின் ஆழ்ந்த ரகசியங்கள் என்று அவர் சொன்னது மீண்டும் மீண்டும் இயல்பான லயத்தைத்தான். லயத்தைப் பின்பற்றாத செயற்கையான தூண்டல்களை ஹிமினெஸ் அறவே வெறுத்தார். இதனால் செயற்கை லயத்தைப் பின் பற்றும் அமெரிக்கர்கள் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறினார்:
“What do I care about three annual crops of California apples, which taste like wood, when I have another Spanish apple, which takes a year to develop its juices?”
அமெரிக்கர்களின் இயற்கை குறித்த அணுகுமுறையைப் பிடிக்காத ரில்கேவின் குரலைப் போல ஹிமினெஸின் மேற்கோள் ஒலிக்கிறது.
“வேர்களும் சிறகுகளும்: சிறகுகள் வேர்களாகட்டும், வேர்கள் சிறகுகளாகட்டும்” என்று கூறினார் அவர்.
சில மனோவியல் அறிஞர்கள் நம்புவது போல் கனவின் மொழியை யதார்த்த நிலைக்கு மொழி பெயர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவராக இருந்தவர் ஹிமினெஸ் - அவரது சில கவிதைகள் கனவுகளின் நேரடியான மொழிமாற்றம் செய்யப்பட்டவை என்பது நிஜமாக இருந்தபோதிலும்கூட. கனவின் பகுதியும் மெய்மையின் பகுதியும் படைப்பு வாழ்வின் இரு பக்கங்களாகக் கருதப்படுமானால் இந்த இரண்டில் எது நிஜம் என்பதைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதில்லை என்று நினைத்தார் ஹிமினெஸ். அவரது கவிதைகளில் சிலவற்றில் நாம் தலைகீழாக இரவில் பறப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவரது கனவுகளின் இரவுகளிலிருந்து வரும் ஒளிவீச்சு நகரங்களிலிருந்து வெளியிடப்படுகின்றனவா அல்லது விண்மீன்களிலிருந்து கசிகின்றனவா என்பது தெளிவில்லாதிருக்கிறது. ஆனால் கனவின் விளிம்பிலிருந்துதான் அவரது கவிதைகள் அழைப்பதாகக் கூறுகிறார்:
“கவிதை என்னை அழைக்கிறது, காதலைப் போல, அதனிடத்திலிருந்து. நான் புதிய நாளின் ஒழுங்கில் அதனிடம் சென்றேன், புதிய நேற்றின் வேறுபட்ட தொடர்ச்சியிடம். எழுதப்பட்ட பக்கத்திடம் செல்ல, அது பிரதிபலிப்பைப் பிடித்திருக்கிறது - ஒரு வெண்ணிற நதியின் கடினமான மேற்புறமென, கடினமான கண்ணாடியின் திண்மையின் ஊடாய் சாம்பல் நிறம் ஏற்கனவே வானத்தின் நீலத்திடமும் மற்றும் ஏற்கனவே பச்சை நிறத்தில் உள்ள மரத்திடமும் இருக்க.”
விடியலின் ‘பொய்யான தங்கத்திடமிருந்து’ அவர் ஒரு கற்பனையான பீச்சின் வழியாக நடக்கிறார், கனவின் அலைகளில் என்ன விடுபட்டிருக்கிறது என்பதைக் காண்பதற்கு. கடல் அலைகளில் அலையும் மரத்துணுக்குகளைச் சேகரிக்கும் ஸர்ரியலிஸ்ட்டுகளைப்போல அல்ல. ஹிமினெஸ் “ஆட்டோமேட்டிக்” எழுதுதலில் நம்பிக்கை கொள்ளாதவர். பகல் கனவுகளின் தொடர்ச்சி அவரை ஆட்டி வைக்கிறது என்பதைக் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:
“Sometimes my daydreams follow one another so quickly and abundantly that I think I am bleeding to death”.
மேன்மையான யதார்த்தத்தின் சூழ்நிலைமைதான் கனவு என்பதை ஒப்புக் கொள்ளவும் செய்கிறார். ஆனால் இது அவரது கனவுகள் பற்றிக் கருத்தோட்டங்களுடன் முரண்படுவதில்லை. நாம் கனவுகளிலிருந்து வரும் சொற்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி கைப்பற்றிவிட்டோமானால் அவைதான் மிக மெய்மை மிக்கவையும் மிகச்சிறந்தவையும் ஆகும் என்றும் கருதினார்.
ஸ்பெயின் தேசத்தின் அந்தலூசியா பகுதியில் மோகர் என்ற நகரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு வங்கி இயக்குநராக இருந்தார். தொடக்கத்திலிருந்தே ஹிமினெஸின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததென்று சொல்ல முடியாதிருந்தது. 1896ஆம் ஆண்டு அந்த லூசியாவின் தலைநகரான செவைல் என்ற இடத்தில் பட்டப்படிப்பு பெற்றார். அதே சமயத்தில் அவர் ஓவியமும் கற்றார். ஹிமினெஸின் முதல் கவிதை அவரது 17வது வயதில் வெளிவந்தது.
அப்போது அந்தலூசியாவில் வசித்த ரூபன் டேரியோவின் கவனத்தைக் கவர்ந்தது. ரூபன் டேரியோவைச் சந்தித்த ஹிமினெஸை டேரியோ தனது மாணவராக ஏற்றுக்கொண்டார். ஹிமினெஸ் 1900ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டு கவிதைப் புத்தகங்களும் சென்ட்டிமென்ட்டலானவை என்பதை யாரும் மறுக்கவில்லை:
1901ஆம் ஆண்டு நிகழ்ந்த அவரது தந்தையின் இறப்பு அவரை மோகருக்குத் திரும்பவிடச் செய்தது. நொய்மையான ஆரோக்கியம் கொண்டவரும், மனோ வியாகூலம் மிக்கவருமான, ஹிமினெஸை அவரது தந்தையின் இறப்பு வெகுவாகப் பாதித்ததால் பலவித மனநோய்க் குறிகள் அவரிடம் தெரிய ஆரம்பித்தன.
மன ஆரோக்கியத்தின் பொருட்டு ஃபிரான்சுக்கு மருத்துவ ஆலோசனைக்காகச் சென்றவர் அங்கேயே சில காலம் தங்க வேண்டி வந்தது. போர்டோ (பிரான்ஸ்) என்ற நகரில் இருந்த மனநோய்க் காப்பகத்தில் சிகிச்சை பெற்றார். பிறகு மேட்ரிட் நகரில் சிறிது காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
1902ஆம் ஆண்டு ஓரளவு உடல்நலம் தேறியவர் பிளான்கா ஹெர்நாந்தஸ் ஃபின்ச் என்ற பெண்ணுடன் காதல் கொண்டார். 1911-12 ஆம் ஆண்டுகளில் 104 காதல் கவிதைகளை எழுதினார். அதில் சில பாலுணர்வுத் தூண்டல் மிக்கவையாக இருந்தன.
1916ஆம் ஆண்டு ஹிமினெஸின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. அவரது அடுத்தக் காதலியான ஸெனோபியா காம்ப்ரூபி என்ற பெண்ணை மணக்க அமெரிக்காச் சென்றார். காம்ப் ரூபி அமெரிக்காவில் ஆங்கிலக் கல்வி கற்றவர். ஸெனோபியா காம்ப்ரூபி ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளர். ஹமினெஸூக்குத் தாகூரின் கவிதை மொழிபெயர்ப்பாளர் என்ற அறிமுகத்துடன்தான் ஸெனேபியாவின் சந்திப்புத் தொடங்கிற்று. அமெரிக்காவுக்குச் சென்ற பயணமும் திருமணம் முடிந்து ஸ்பெயின் திரும்பி வந்த அனுபவமும் புத்தகமாக உருவெடுத்து 1917இல் The Diary of a Newly Married என்ற தலைப்பில் வெளிவந்தது.
ஹிமினெஸின் கவிதைகள் ஆரம்பத்தில் இருந்ததை விட அவரது வளர்ச்சிக்கேற்ப சுருக்கத்தை நோக்கிச் சென்றன. மேலும் வர்ணங்களின் பயன்பாட்டை அவரது கவிதைகளில் கூடுதலாகப் பார்க்க முடிந்தது. கவிதை பற்றி அவரது கோட்பாடு (அ) கருத்து முக்கியமாக விவாதத்திற்குட்பட்டது. முழுமையான கவிதை ‘நிர்வாணமானது’ என்றார் ஹிமினெஸ். எல்லாப் பூரணமான படைப்புகளிலும் வடிவம் என்பது இருக்கிறது என்றும் ஆனால் அது ஒரு நதியின் சுழலைப்போலக் கண்ணுக்குப் புலனாவதில்லை என்றும் கருத்துரைத்தார்.
முதலில் வருவது வார்த்தை: ஒரு தீவு. அடுத்தது காதலில் போல வார்த்தைகளின் சந்தோஷமான இணைவு பின்னர் வருவது ஒரே சமயத்தில் திறந்தும் மூடியும் இருக்கும் ஓர் உலகம் அதனுள் (அதனுள் மட்டுமே) அது முடிவிலியைக் கொண்டுள்ளது. அவரது வார்த்தை பற்றிய தியானத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு: எனது ஆன்மாவினால் படைக்கப்பட்ட எனது சொல்லே வஸ்துவாக ஆகட்டுமாக அதை அறியாத அனைவரும் என் ஊடாகச் செல்லட்டும் அந்த வஸ்துக்களுக்கு மறக்கும் அனைவரும் என் ஊடாகச் செல்வார்களாக அவற்றிடனிடத்திற்கு அந்த வஸ்துக்களை நேசிப்பவர் அனைவரும் என் ஊடாகச் செல்வார்களாக நுண்ணறிவே எனக்குத் தா அந்த மிகச்சரியான பெயரை உனது பெயரை வஸ்துக்களினுடையதையும் என்னுடையதையும் அவர்களுடையதையும் உனது பெயரையும்.
அவரது இரவு கனவுகளைச் சொற்களில் பிடிப்பது பற்றிய தியானம் பற்றிச் சொல்லும்போது உள்வயத் தனிமொழி (‘interior monologue’) என்ற இலக்கிய உத்தி பெயரிடப்படுவதற்கு முன்பிலிருந்தே அவருக்கு அதில் நம்பிக்கை இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
ஆனால் முழுமுற்றாக உள்வயத் தனிமொழியின் பயன்பாட்டாளர்களுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிகிறது:
From a very early age I subscribed to what was later called the “interior monologue ... My main disagreement with the “interior monologuists,” their outstanding representatives being Dujar-din, James Joyce, Perse, Eliot, Pound, et al. is that while I believe that the interior monologue must flow, it must also be lucid and coherent.
- Time and Space: A Poetic Autobiography
எஸ்ரா பவுண்டையும் எலியட்டையும் சரியான முறையில் உள்வாங்கிக் கொண்ட ஸ்பானியக் கவிஞர் ஹிமினெஸ்.
ஹிமினெஸ் பிரதானமாய் ஒரு கவிஞர் என்ற போதிலும் குறிப்பிடத்தக்க உரைநடைப் படைப்புகளை எழுதி சாதனை புரிந்திருக்கிறார். ‘பிளேட்டரோவும் நானும்’ (Platero and I) என்ற உரைநடைப் படைப்பு (இது உரைநடைக் கவிதை என்றும் குறிப்பிடப்படுகிறது) அவரிடம் இருந்த வெள்ளிநிறக் கழுதையைப் பற்றிய கதையாக அமைகிறது. பெரியவர்களுக்காக எழுதப்பட்டதென்றாலும் சிறுவர் இலக்கியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இன்றும் இருக்கிறது. மேலும் அதிகமான பிரதிகள் விற்பனையில் இன்னும் முதல் இடத்தைப் பிடிக்கிறது. ஆனால் இந்த நூல் பிளேட்டரோ என்ற கழுதையைப் பற்றியதாக மட்டுமல்லாது அவர் பிள்ளைப் பிராயத்தில் வளர்ந்த அந்தலூசியப் பிரதேச கிராமப்புற வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்வதாக இருக்கிறது. அமெரிக்கர்கள் ஹிமினெஸை இந்த நூல் வழியாகத்தான் தெரிந்து கொண்டதுபோல் தோன்றுவது தவிர்க்க இயலாதது.
ஸ்பானிய உள்நாட்டுப்போரின்போது அவர் ரிபப்லிக்கன் படைகளுடன் இணைந்து செயல்பட்டார். போரின் உக்கிரம் தாக்குப்பிடிக்க இயலாதபோது புவெர்த்தா ரீக்கோவுக்குத் தானே புலம் பெயர்ந்து பெரும்பான்மையான காலத்தை அங்கேயே கழித்தார்.
அமெரிக்காச் சென்று சிறிது காலம் ஹிமினெஸ் தங்கி இருந்த போதிலும் அது சிறு மாற்றங்களைக் கூட அவரது ஆளுமையில் ஏற்படுத்தவில்லை. இதற்கு மாறாகப் பெடரிக்கோ கார்சியா லோர்க்கா மீது அமெரிக்க வாழ்க்கைத் தீவிரமாகப் பாதிப்பு செலுத்தியதால் ஒரு தனிக் கவிதை நூலே (Poet in New York (1940)) அவர் எழுதவேண்டி வந்தது. தவிரவும் அமெரிக்கர்கள் ஹிமினெஸின் படைப்புக்களைப் பொருட்படுத்தினார்களா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. ஹிமினெஸ் நோபல் பரிசு பெற்ற சமயம் (1956) வரை அவரது கவிதை மொழிபெயர்ப்புகளை எந்த அமெரிக்க வெளியீட்டாளரும் வெளியிடவில்லை என்பது உண்மை. நியூயார்க் துறைமுகம் பற்றியும் வாஷிங்டன் சதுக்கம் பற்றியும் எழுதிய இரண்டு கவிதைகள்தான் ஹமினெஸின் அமெரிக்க அனுபவம் என்று நாம் கொள்ள வேண்டும்.
எழுத்தாளர்கள் அனைவரும் பூரணத்துவத்தை அடைவதற்கு எழுதுவதில்லை. படைப்பை ரீ - டச் செய்வதிலும் பளபளப்பாக்குவதிலும் ஒருவிதமான ஒருவித பாலுணர்வுத் தன்மையான உந்தம் இருப்பதை மனோவியல் அறிஞர் கேஸ்ட்டன் பேச்லார்ட் (Gaston Bachelord) என்ற பிரெஞ்சு தத்துவவாதி எடுத்துச் சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் திருத்தி அமைத்தலை தாய்மயமான அன்பைச் சார்ந்ததெனக் கூறி இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியிடப்பட்ட பல கவிதைகளை ஹிமினெஸ் திருத்தி மாற்றி அமைத்துக் கொண்டே இருந்தது அவரது விமர்சகர்களை எரிச்சல் ஊட்டியது. முதிர்ச்சியற்ற முறையில் வெளியிடப்பட்டவை அல்லது முழுமையற்ற முறையில் உருக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டதைச் சீர் செய்யும் நோக்கத்தில் ஹிமினெஸ் செயல்படவில்லை.
ஹிமினெஸின் கீழ்க்கண்ட நூல்கள் முக்கியத்துவம் பெறுபவை:
1. Poetry in Prose and Verse. (1932)
2. Voices of my Song (1945)
3. Animal at Bottom (1947)
கலை உலகின் பெரும் ஆதரவைப் பெற்ற தத்துவவியலாளர், A Philosopher with more artists for followers, ப்யூங் சூல் ஹான், தொடர்பறுநிலையும் தனிமையும், சிதறுண்டாதலும், எதார்த்தத்தின் சிதைவும், இதுபோல மேலும் பல வியாதிகளை வளர்த்தெடுப்பதில் தொழில்நுட்பத்தின் பங்கு நிரந்தரமென்றாகிவிட்ட நவீன வாழ்நிலைகளின் பாடுகளை விவரிக்கும் இவரது எழுத்துக்களின்மீது, ஆதரவையும் அதேநேரம் ஐயப்பாடுகளையும் காணமுடிகிறது. (இவரது மூலமொழி ஜெர்மன்) தென்கொரியாவில் பிறந்து, பெர்லினைச் சார்ந்த அறிஞரின் சமீபத்திய புத்தகம் அன் டிஞ்சு (Undinge) பொருளெனப்படாதவை (Non objects), இவ்வருடத்தின் முற்பகுதியில் வெளிவந்தது. புத்தகம் குறித்துக் Art Review இதழுக்கு அளித்தப்பேட்டி.
‘அன் டிஞ்சு’, பொருளெனப்படாதவை புத்தகம், எண்மத் தகவலையே சார்ந்திருப்பதனால், பொருட்கள் மீதிருந்த, இழந்துவரும் தொடர்பு குறித்தது. நவீன தொழில்நுட்பங்களில் இல்லாத எவை பொருட்களில் உள்ளன?
பொருளெனப்படாதவை புத்தகம், பொருட்களின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக முன்வைக்கிறது. மண் சார்ந்த ஏற்பாடு அல்லது மண்ணுலக ஏற்பாடு (Order of Earth), நிரந்தர உருவ வடிவங்கொண்ட பொருட்களால் ஆனது மற்றும் மனித வாழ்விட அமைப்புக்கு ஒரு நிலையான சூழலைத் தருவது ஆகும்.
எண்ம ஏற்பாடு (Digital Order) உலகைத் தொட்டு உணராதபடிக்குத் தகவல்மயமாகத் தகவமைத்துக் கொண்டிருக்கிறது. எல்லா பக்கங்களிலிருந்தும், பொருட்களைப் புறந்தள்ளி, நமது சூழலுக்குள் பொருளெனப்படாதவை எனும் Non Objects நுழைந்து கொண்டிருக்கின்றன. பொருளெனப்படாதவைகளை நான் தகவல்களென்று பெயரிடுகிறேன். இன்று நாம் பொருட்களின் காலத்திலிருந்து பொருளெனப்படாதவைகளின் காலத்திற்கான மாறுதலில் இருக்கிறோம்.
பொருட்களல்ல, தகவல்களே தற்போது நமது சூழலை நிர்ணயிக்கின்றன.
நாம் கூகுள்பூமி, கூகுள்மேகம், இவற்றில்தான் வாசம் செய்கிறோம், இதுமுன் வரையிருந்த பூமி, ஆகாசத்திலில்லை. உலகம் தன் தொடுநுகர்வு குன்றி, மேகத்தைப்போல, ஆவியைப்போல நிலைமாறி வருகிறது. எதிலும் ஸ்திரமில்லை.
ஜப்பானிய எழுத்தாளர் யோக்கோ ஓகாவாவின் ஞாபகக்காவல் (Memory Police) நாவல் நினைவுக்கு வருகிறது.
பெயரில்லாத ஓர் தீவில் பொருட்கள், சடை முடித்துணி (சடை ரிப்பன்), தொப்பி, அஞ்சல்தலை, ஏன் ரோசாப்பூ, பறவைகளுங்கூட மறையத் தொடங்குவதாக அந்நாவலில் வருகிறது. பொருட்களுடன் சேர்ந்து ஞாபகங்களும் மறைகின்றன. தொடர்ந்து நிலவும் ஞாபகமறதி, இழப்பு என உறைபனிக்காலத்திலேயே மக்கள் வாழ்கின்றனர். யாவற்றையும் பல்கி பெருகும் சிதைவு பீடித்துக் கொண்டுள்ளது. உடலில் கூடப் பாகங்கள் மட்டும் மறைந்து போகின்றன. தொடர்ந்து, இறுதியாக, உடலிலிருந்து பிரிந்து, உடலை நீங்கிய குரலொலிகள் மட்டும் காற்றில் மிதந்து வருகின்றன.
ஒருவகையில், தொலைந்துபோன ஞாபகங்களாலாகிய தீவு, தற்காலத்தை நினைவூட்டுகிறது. ஆவியாக, உடல் நீங்கிய குரலொலியாக, எதார்த்தத்தைத் தகவல்கள் கரைத்துக் கொண்டிருக்கின்றன. எண்மமயமாக்கல் பொருளை அர்த்தமற்றதாகவும், உடற்கூடற்றதாகவும், தொடர்ந்து நம் உலகின் அடிநாதத்தையும் உருவழியறுப்பதாகவுமிருக்கிறது. ஞாபகங்களையும் நீக்குகிறது. ஞாபகங்களை நம் பார்வையில் கொண்டிருப்பதை விடுத்து நாம் தரவுகளையும், தகவல்களையும் கொட்டி குவித்து வருகிறோம். நாம் எல்லோரும் தகவல் பித்தர்களாகி விட்டோம். இப்பித்தம்தான் பொருட்களை மறையச்செய்கிறது.
தகவல்களால் ஊடுருவி செல்லப்பட்ட பொருட்களின் நிலையென்ன?
தகவலாக்கம் செய்யப்பட்ட உலகம், பொருட்களைத் தகவலிகளாக (Infomat) உருமாற்றம் செய்கிறது, அதாவது தகவல்களைப் பரிவர்த்தனை செய்யும் செயலிகளாக.
திறன்பேசிகள் பொருட்களல்ல, அவை தகவலிகள், சொல்லப்போனால், நம்மை வேவு பார்க்கும், மனதில் தாக்கங்களை உருவாக்கும் ஒரு வகைத் தகவல் உளவாளிகள்.
ஆனால் பொருட்கள் நம்மை உளவு பார்ப்பது இல்லை. அதனால்தான் நாம் அவற்றை நம்புகிறோம், திறன்பேசிகளை நம்பாத அதே காரணத்துக்காகவே.
எந்த ஒரு உபகரணமும், எந்த ஒரு மேலாதிக்க நுட்பமும், தனக்கான சில பூஜைச் சாமான்கள் (வழிபாட்டு) பொருட்களை விருத்தி செய்கின்றன, அவை அடிபணிதலை உயர்த்திப் பிடித்துச் செல்லும். திறன்பேசி, எண்மத்தகவல் அதிகாரத்தின் பூஜைச் சாமானாகும்.
ஜெபமாலையைப்போலக் கையடக்கத்திலுள்ள திறன்பேசி, அடக்குமுறையின் கருவியாகச் செயல்படுகிறது. லைக் செய்வது என்பது, எண்மவெளியில் பிரார்த்திப்பது ஆகும். நாம் தொடர்ந்து பாவமன்னிப்புக் கோருகிறோம். நம்மை நாமே, வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறோம், இதெல்லாம் இருந்தும், நாம் மன்னிப்பைக் கோருவதாகத் தோன்றுவதில்லை, கவனத்தை ஈர்ப்பதாக மட்டுமே தெரிகிறது.
பொருளெனப்படாதவையிலும் இதற்கு முந்தைய உங்களது புத்தகங்களிலும் அடிக்கோடிட்டதுபோல, மற்றவர்களுடனான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டிய சூழலில், தங்களது பிம்பத்தை முன் நிறுத்தியே செயல்படுகின்றனர் எனும் பதம் முன் வைக்கப்படுகிறது. அவ்வாறேயெனினும் மக்கள் இன்னமும் உறவுநிலைகளில் ஈடுபடத்தான் செய்கின்றனர் மற்றும் இன்றளவுங்கூடத் தூர எறிய விரும்பாத பொருட்கள் மீது பிடிப்புடன் இருக்கவே செய்கின்றனர். அன்றைக்கும் இன்றைக்கும் அதாவது உலகமயமாக்கத்திற்கும் எண்மமயமாக்கத்திற்கும் என்ன வேறுபாடு?
பொழுதுக்கும் திறன்பேசியை நோக்கியபடியே நேரச் செலவு செய்யும் மக்களுக்கு, மனதோடு நெருக்கமாகப் பொருட்களைக் கொள்ள அல்லது கொள்ளும் அவா இருக்கிறதா என்ன?
எனக்குத் தெரியவில்லை. பொருட்கள் நமது கவனத்திலிருந்து விலகி பின் வரிசையில் ஒதுங்கியுள்ளது. பொருட்களின் தற்போதைய அதீத நடப்பு பணவீக்கம் (Current Inflation), அதன் விளைவாகச் சரசரவெனப் பெருகிய உற்பத்தி, இவையாவும் பொருட்கள் மீதான அதிகரித்து வரும் நமது அலட்சியப்போக்கைத்தான் குறிக்கிறது.
அவையாவும் (உற்பத்தியான) இறந்து பிறந்த குழந்தையைப்போலவே.
அதிகப்படியான நாட்டம், பிடிப்பு எல்லாம் பொருட்களை நோக்கியல்ல, தகவல்களும், தரவுகளும் மீதுதான். பொருட்களை விடவும் இன்று நாம் தகவல்களைத்தான் அதிகம் உற்பத்தி செய்து நுகர்வு செய்கிறோம். சொல்லப் போனால் நாம் தொலைத் தொடர்பின் மூலம் போதையடைகிறோம்.
இச்சை எனும் ஆற்றலானது, பொருட்கள் மீதிருந்து விலகி பொருளெனாதவை நோக்கி மடைமாற்றப்பட்டுள்ளது. அதன் விளைவே தகவல்பித்து. நாம் அனைவரும் தகவல் பித்தர்கள். பொருள் மீதான அதீத பற்று ஏறக்குறைய ஒழிந்துவிட்டது எனலாம்.
நாம் தரவு, தகவல் பற்றாளர்களாகிக் கொண்டிருக்கிறோம். தற்போது, தரவு-பாலுறவு என்றொன்றைப் பற்றிய கதையாடல் உலவத் தொடங்கியுள்ளது. திறன்பேசியின் திரையைச் சொடுக்குதலும் (ஷொட்டு வைத்தலும்) வழித்தலும், தேய்ப்பதும், தடவுவதும் ஒரு வகைத் தொழுகை மொழியாகவேப்படுகிறது.
இவ்வுலகத்திற்கும் நமக்குமான உறவுநிலையில் இது ஒரு பெருத்த விளைவு. நம்மை ஈர்க்காதத் தகவல்கள் தூர வீசப்படுகின்றன. நமக்குப் பிடித்த விசயமெனில், அவை இடுக்கியைப் போன்ற விரல்களின் செயலால் பெரிது செய்து பார்க்கப்படுகின்றன. அதாவது இவ்வுலகின் மீதான நமது பிடிமானம் அதுதான் எனலாம். அது முழுவதும் நம்மைச் சார்ந்தது.
அவ்வாறுதான் ஆனால் திறன்பேசி நமது அகங்காரத்தைப் பெருக்கித் தருகிறது. உலகை ஓரிரு வழித்தல் செய்கைகளில் நமது தேவைக்கேற்றாற்போல நம் விருப்பத்திற்குக் கொண்டுவருகிறோம்.
எண்மைய வெளிச்சத்தில், இவ்வுலகம் முற்றிலும் நமக்கானதாகத் தோன்றுகிறது. அவ்வாறான ஒரு இருப்பாக இல்லாததினாலேயே மற்றவை மற்றவையாகவே இருக்கின்றன. ஆகையால் அவை மறைந்தும் போகின்றன (ஞாபகக்காவல் நாவலில் போல). மற்றவையெனும் பண்பு களவு போகுமாயின் அவை நுகர்வுபொருளாகின்றன.
டிண்டர் (Tinder) எனும் செயலி, அவ்வாறே மற்றவர்களைக் காமப்பொருளாக மாற்றுகிறது.
திறன்பேசியைக்கொண்டு மற்றவைகள் குறித்த ஞானத்தின்பால் பொருட்டில்லாத ஒரு சுயவழிபாட்டுக் கோளத்திற்குள் நம்மை நாம் உள்ளிழுத்துக் கொள்கிறோம். இவை மற்றவையை நுகர்வு பொருளாக மாற்றிவிடும். உங்களை ‘அது’ என்றாக்கி விடும். மற்றவை (The Others) என்பவை மறைவதுதான் திறன்பேசி நம்மைத் தனிமைப்படுத்துவதற்கான காரணம்.
பொருட்கள் வாழ்வில் நாம் களைப்பாறும் இடங்கள், அதாவது அவற்றுக்கென ஒரு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் உங்களது பாட்டுபெட்டி ஒன்றை உதாரணமாகச் சொல்கிறீர்கள், அது உங்களுக்கெனவே ஒரு மந்திர ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது. இவ்வாறான உங்களது ஏக்கத்தைச் சுட்டி யாராவது குற்றம் சுமத்தினால், உங்களது பதில் என்ன?
எந்த ஒரு சூழலிலும், நான் பழைய, அழகான பொருட்களுக்குத் துதி பாட விரும்பவில்லை. அது தத்துவத்தன்மையற்றதும் கூட. பொருட்கள் வாழ்வின் களைப்பாறும் இடங்கள். ஏனெனில் அவை மனித வாழ்வை நிலைப்படுத்துகின்றன. அந்தப் பழகிய நாற்காலி, பழகிய மேஜை, பழக்கமானது, தாவியபடியேயிருக்கும் மனித வாழ்வுக்கு ஓரளவு நிலையானத்தன்மையும் தொடர்ச்சியையும் இரவல் அளிக்கிறது.
நாம் பொருட்களுடன் பழகிக்கொண்டேயிருக்கலாம், ஊடாடிக் கொண்டேயிருக்கலாம். ஆனால் தகவல்களுடன் அப்படி முடியாது.
எவ்வகையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் தகவல் என்பது யாது என்பதனை முழுதும் கிரகித்துக் கொள்ளவேண்டும். எல்லாச் சூழலுக்கானதாகத் தகவல் எப்போதும் செல்லுபடியாகாது (Information has little currency).
வியந்துபோவதிலிருக்கும் பரபரப்பைத் தொக்கியே பயணிப்பதால் தகவலுக்குக் காலந்தாண்டி நிற்கும் ஸ்திரத்தன்மையும் கிடையாது. ஆயுளுக்கும் தொடரும் ஸ்திரத்தன்மையின்மையால் அது உணர்தலுக்கு சிதைவையூட்டும். தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் பரபரப்பு செய்தியெனும் வெறித்தனத்துக்கிடையே அது நம்மை வீசிவிடும்.
ஆகையால் தகவலையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது இயலாத காரியம். அவ்வாறுதான் அவை பொருட்களிடமிருந்து வேறுபடுகிறது. தகவல் நமது அறிவாற்றல் திறத்தையே பதற்றமான சுழலுக்குள் இடுகிறது.
ஒரு தகவலை நாம் அணுகும்போதும், இது வேறொன்றாகயிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணி, சந்தேகத்துடனேயே பார்க்கிறோம். அடிப்படையிலேயே நம்பிக்கையின்மையை அது தன்னுள் கொண்டிருக்கிறது.
அவசர அவசரமான பழக்கங்களை அது மேலும் வலுவூட்டுகிறது.
தகவல்களின் இயல்பிலேயே கலந்துள்ள அதீத அவசரத்தன்மையே போலி செய்திகள் உருகொண்டுத் திரியக் காரணம். சூடத்தைப்போலச் சில நேரமே தாங்கும் தகவலானது, காலச்செலவு கோரும் அறிவாற்றல் திற பயிற்சிகளான அனுபவங்கள், மனனம், உணர்தல் ஆகியவற்றை மறையச்செய்கின்றன. ஆக எனது ஆய்வுக்கும் ஏக்கத்திற்கும் தொடர்பில்லை.
உங்களது படைப்பில் நீங்கள் எண்மமயமாக்கலைச் சுற்றியே மீண்டும் மீண்டும் வட்டமடித்தபடி இருக்கிறீர்கள், அது எங்ஙனம் மற்றவைகளை மறைய வைக்கிறது, சுயமோகித்தனத்தைப் பூக்கவைக்கிறது, அதோடு நவ தாராளமயவாத காலத்தின் தன்னிச்சையான சுயச்சுரண்டலுக்கு இலகுவாக்குகிறது. நீங்கள் இவற்றை முதலில் கருவாகக்கொண்டது எப்படி? பின்னணியில் தனிக் கோணம் ஏதும் உளதா?
எனது படைப்புகளான சோர்வுற்ற சமுதாயம் (Burnout Society) 2010, உளவியல் அரசியல் (Psycho Politics) 2017 ஆகியவற்றில் காணப்படும் அடிநாதம், ஃபூக்கோ-வின் ஒழுங்குமுறை சமுதாயம் குறித்த ஆய்வின் மையக்கருத்தைக் கொண்டு தற்காலத்தினை எடுத்தியம்ப இயலாது என்பதே.
நான் இப்போது ஒழுங்குமுறை சமுதாயத்திற்கும், நவதாராளமயவாத சமுதாயத்திற்கும் உண்டான வேறுபாட்டினை எடுத்து வைக்கிறேன்.
ஒழுங்குமுறை அதிகாரபீடம் ஆணைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு இயங்குவது. அது அடக்குமுறை. சுதந்திரத்தையும் நசுக்குகிறது.
மறுபுறம், நவதாராளமயவாத அதிகாரபீடம், அடக்குமுறையைக் கொண்டதல்ல, வசீகரமிக்கது, அது அனுமதி தரக்கூடியது, ஆனால் அது சுதந்திரத்தை அடக்குவதை விட்டுவிட்டு, சுதந்திரத்தையே சுரண்டுகிறது. நம்மைப் பூர்த்திச் செய்வதாகக் கருதிக்கொண்டு, நம்மை நாமே சுரண்டிக்கொண்டிருக்கிறோம், ரசனையுடன் தன்னிச்சையாக.
ஆக நாம் வாழ்வது தகுதியாட்சியின் கீழ், ஒழுங்கு முறை சமுதாயத்திலில்லை. ஃபூக்கோ இதைக் கணித் திருக்கவில்லை.
நவதாராளமய தகுதியாட்சியின் குடிகளாக, தாங்கள் சுதந்திரமாக இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பவர்கள், அடிப்படையில் வேலையாட்கள்தான். முதலாளியே இல்லாது, முழுமுதல் வேலையாட்களான அவர்கள் தம்மைத் தாமே சுரண்டிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்களால் சுரண்டலுக்கு ஆளாவதைவிட, சுயச் சுரண்டல் மிகுந்த நேர்த்தி உடையது, திறமையானது, ஏனெனில் அது சுதந்திரச் சிந்தையோடே கைகோர்த்துப் பயணிக்கிறது.
காஃப்கா வேலையாட்களின் சுதந்திரத்தின் இம்முரண்பாட்டினை, பொருத்தமான நீதிமொழியில் எடுத்துக் கூறுகிறார்:
“கோமானின் கையிலிருந்த சாட்டையைப் பிடுங்கிய கால்நடை, தன்னைத்தானே, விளாசிக் கொண்டதாம், தானும் கோமானாகிக்கொள்ள.”
இச்சுயவன்முறை - தன்னைத்தானே விளாசிக்கொள்வது, மிகுந்த களைப்பை, மன அழுத்தத்தினை உண்டாக்கும். வேலையேக்கூடக் கடிமானதாயிருந்தாலும் அது அதீத சோர்வை விளைவிக்காது.
அதுவே, வேலை முடிந்தபிறகு களைப்பாயிருப்பதும், அதீத மனச்சோர்வும் ஒன்றல்ல. வேலை ஒரு கட்டத்தில் முடிந்துவிடும். ஆனால் மறுபுறம், வேலையில் சாதித்துக் காட்டச் சொல்லி நம்மீது நாமே அடுக்ம் அழுத்தம், வேலைநேரத்தைத் தாண்டி விஞ்சி நிற்கிறது. அது நம்மைத் தூக்கத்திலும் துன்புறுத்தும், தூக்கமில்லா இராத்திரிகளுக்கே இட்டுச்செல்லும்.
வேலையிலிருந்துகூட மீண்டு வரலாம், சாதித்துக் காட்ட வற்புறுத்தும் மன அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மிகக்கடினம்.
குறிப்பாகச் சாதித்துக்காட்ட, மேம்படுத்த எனச் சதா நேரமும் வேண்டும் இந்த உள்மனதின் அழுத்தந்தான், நம்மைச் சோர்வடைய, மன அழுத்தமுறச் செய்கிறது.
ஆக அடக்குமுறையல்ல, மன அழுத்தந்தான், இக்காலத்தின் நோய்க்குறியீடு.
அடக்குமுறை அதிகாரப்பீடத்திற்கு எதிராகக் கலகத்தைத் தூண்டும். நவதாராளமய ஆட்சியதிகாரப் பீடம், அடக்குமுறை செய்யாது சுதந்திரத்தைச் சுரண்டும், நவதாராளமயம் எந்தவொரு கலகத்தையும் காணாது. சுதந்திரம் எனும் முகமூடி தரித்து வலம் வரும்போது, அதிகாரம் முழுமையடைந்து விடுகிறது.
இவையே எனது சமூகவிமர்சனக் கட்டுரைகளின் மையக் கருவாகும். அவற்றையெலாம் குறிப்புரையில் புகுத்தினால், அதுவே “மற்றவை மறைந்து போகின்றன” (The Other Disappear) கரு எனலாம்.
நீங்கள் மாயம், மர்மம் ஆகியவற்றிலிருந்து கூச்சப்பட்டு விலகியிருக்கவில்லை. உங்களை ஒரு கற்பனாவாதியென நீங்கள் வகைப்படுத்துவீர்களா?
யாவுமே எனக்கு மாய மர்மமாகத்தான் தெரிகிறது. நமது கண்ணில் விழித்திரை, விழியின் வெண்படலத்தால் முற்றிலும் போர்த்தப்பட்டுள்ளது, அதன்மேல் ஒரு படலமாக வளர்ந்து இருக்கிறது, எந்தளவுக்கெனில், அப்படலத்தை விழித்திரை உணர முடியாத மட்டுக்கு.
நான் எனை கற்பனாவாதியென மாட்டேன், ஆனால் உள்ளவாறே உலகத்தை உணர நினைக்கும் எதார்த்தவாதி, அதில் மாயங்களும் மர்மங்களும் அடக்கம்.
மூன்றாண்டு காலம் நானொரு பனிக்காலப் பூந்தோட்டத்தை ஏற்படுத்தியிருந்தேன். அதுகுறித்து, ஒரு புத்தகமும் எழுதியிருந்தேன், பூமிக்குப் பாராட்டு (2018) Praise to the earth. ஒரு தோட்ட விவசாயியாக நான் புரிந்துகொண்டது, பூமி ஒரு மாயை. அதனை மறுப்பவர்கள் கண்கள் குருடு. பூமி வெறுமனே வளம்சார் ஆதாரம் அல்ல, குறிப்பாக, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கருவியல்ல.
இயற்கையுடனான நமது இன்றைய உறவு, ஆச்சரியத்தில் கூர்நோக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படவில்லை, மாறாக முழுவதுமாகக் கருவிகள் கொண்டு வரையறை செய்யப்பட்டது. குறிப்பாக மானுட ஆதிக்கக் காலத்தில்தான் இயற்கையும் பூமியும் மனித செயல்பாட்டு நீதிக்குக் கீழ் முற்றிலுமாகப் பணிக்கப்பட்டன. தனது விருப்பத்திற்கேற்ப, இணக்கத்தை மீறி, இயற்கை முழுவதையும் அதன் கோளத்தைத் தாண்டி, நிர்பந்தங்களைத் திணித்துக் கொண்டிருக்கிறான் மனிதன்.
ஆதலாலேயே அவனது இடையூறின்றி உருவாக வாய்ப்பில்லாத பல நடப்புகளை வெளிக்கொணர்ந்து விடுகிறான் மேலும், முழுக்கட்டுப்பாட்டையும் இழப்பதற்கு இது வழி வகுக்கிறது.
இப்போது, பூமியெனும் வளத்தைக் கண்ணும் கருத்துமாகக் கையாளவேண்டும் என்பதெல்லாம் போதாது. மாறாக, பூமியுடனான நமது உறவுநிலையில் முழுமாற்றம் தேவை. அதன் மாயாஜாலத்தை, அதன் கௌரவத்தை அதற்குத் திருப்பியளிக்க வேண்டும். அதன் அசாத்தியத்தைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர்கள், ஒட்டு மொத்த மனித செயல்பாடுகளின் முழுமையாக விளைபவை.
செயல் என்பது வரலாற்றின் வினைச்சொல்.
வால்டேர் பெஞ்சமின் வரலாற்றின் தேவதை (Angel of History), மனித செயல்பாடுகளின் பேரழிவு விளைவுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அவருக்கு முன்னால் வானைத்தொட உயர வளர குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், வரலாறு எனும் குப்பைக் குவியல் உள்ளது. அவரால் அதை அப்புறப்படுத்த முடியாது, ஏனெனில் எதிர்காலத்திலிருந்து வீசும் முன்னேற்றம் எனும் புயல் அவரைச் சுழலில் தூர வீசுகிறது. அவரது அகண்ட கண்களும், பிளந்த வாயும் அவரது கையாலாகாதத்தனத்தைப் பிரதிபலிக்கிறது.
சும்மா எனும் மற்றொரு தேவதைதான் (Angel of Inaction) அவரைப் புயலிலிருந்து காப்பாற்ற இயலும்.
நாம் சும்மா, செயலற்றுக் கிடக்கவேண்டிய திறனை மறுகண்டுபிடிப்புச் செய்யவேண்டும். சும்மாவென இருக்கும் திறன்.
ஆதலால் எனது அடுத்தப் படைப்பு, தற்போது பணி புரிந்து கொண்டிருக்கும் புத்தகத் தலைப்பு, “செயல் படாமை குறித்து” (Vita Contemplativa / Of Inactivity).
இது ஹானா அரெண்டெட் அவர்களின் செயல்பட்டுகொண்டிருக்கும் வாழ்க்கை குறித்து, (Vita activa / Of the active life) எனும் படைப்புக்கான எதிர்வினை போல.
‘அன் டிஞ்சு’வில் நீங்கள் எழுதுவதாவது, “நாம் அதிகப்படியான தரவுகளைச் சேமிக்கிறோம், இருந்தும் ஞாபகங்களுக்குத் திருப்பிச் செல்வதில்லை, நண்பர்களையும், பின்தொடர்பவர்களையும் குவிக்கிறோம், ஆனால் மற்றவர்களைச் சந்திப்பதில்லை”
இதேபோல வசனங்களை உச்சாடனங்களை நாம் அச்சு இயந்திரம், பின்னர்ச் செய்தித்தாள், பின்னாளில் தொலைக்காட்சி கண்டுபிடித்தபோதும் கேட்டிருந்தோம். ஒரு வேளை இந்தச் சந்தர்ப்பத்தில், இது குறித்துப் பீதியடைந்த நீங்கள் அபாயச்சங்கு ஊதுகிறீர்களோ?
எனது எண்ணம் உலகைத் திகிலுறச் செய்வதற்கில்லை, மாறாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுவே. ஒரு தத்துவவாதியாக எனது பணி, நாம் எவ்வகைச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை விவரிப்பது.
நவதாராளமயவாத அதிகார பீடம் சுதந்திரத்தை நசுக்குவதில்லை, சுரண்டுகிறது எனும்போதோ, திறன்பேசி, எண்மத்தகவல் அதிகாரப்பீடத்தின் பூஜைச்சாமான் எனும்போதோ, நான் பீதியைக் கிளப்ப எண்ணுவதற்கென்று பொருள் கொள்வதற்கு இல்லை.
தத்துவவியல் என்பது உண்மையை விளம்பும்.
இன்றைய உலகைப் புரிந்துகொள்வதற்காக, கடந்த சில வருடங்களாக, நான் தகவல்களின் நிகழ்வியலைக் கவனித்துப் படித்துவருகிறேன். அதை வைத்து ஒரு முன்மொழிதலை வைக்கிறேன், சமீபநாட்களில் நாம் எதார்த்தத்தையே, தகவல்கள் மூலமாக மட்டுமே முதன்மையாக வைத்து உணர்ந்துகொண்டிருக்கிறோம். அதன் விளைவு எதார்த்ததுடனான நேரடித் தொடு பரிச்சயம் பெருவாரியாக இல்லை.
எதார்த்தம் அதன் இருப்பைக் களவுகொடுத்து விட்டது. அதன் சரீர அதிர்வுகளை நாம் ஒருபோதும் உணர்வதில்லை. பொருட்களின் மீது தோல் படல மெனப் படர்ந்துள்ள தகவலானது, அவற்றின் தீவிரத்தை உணர்வதைத் தடை செய்கிறது.
உணர்வதே தகவல்களாகிப் போனபோது, நம்மைச் சுற்றிய மன நிலைக்கோ, வானிலைக்கோ நம்மை மரத்துபோகச் செய்கின்றன. அறைகள் கவித்துவத்தை இழக்கின்றன, அவை தகவல்கள் பரவ, அறையில்லா வலைய முனையத்திற்கு வழிவிட்டு நிற்கின்றன.
நிகழ்காலத்திலேயே குவிந்துள்ள, எண்மத்தின் மணிக்கூறு, நேரத்தின் நறுமணத்தை வீசியடித்து விடுகிறது. நேரமானது, தனித்தனி நிகழ்காலத் தீவுகளாக, நிகழ்கால அணுக்களாகப் பிளவுபடுகின்றன. அணுக்களுக்கோ வாசமில்லை.
கதையாடி, பயிற்சி கொண்டு மட்டுமே காலத்தை நறுமணமிக்கக் கூறுகளாக முன் கொண்டுவரமுடியும். எதார்த்தத்தினைத் தகவல் மையமாக்கியதில், காலமும் இடமும், வெளியும் தொலைந்து போகின்றன. இதற்கும் அபாயச் சங்கூதுவதற்கும் தொடர்பில்லை.
இது நிகழ்வியல்.
நீங்கள் தற்போது இருப்பது ரோம், ஒரு தனி அடையாளங்கொண்டது, வரலாறு, தொன்மை பூச்சு, தெருக்களில் அரங்கேறும் வாழ்க்கை, குடும்பத்தினர், நண்பர்களுடனான விருந்து உணவு மற்றும் எல்லா இடங்களிலும் உணரக்கூடிய வாட்டிகன் என யாவும். தற்போது உங்களுக்குத் தோன்றுகிறதா, தனித்துவிடப்பட்ட மனிதன், அவனிடத்தில் அவனது எண்ம மாற்று - மன நிறைவு, இவை குறித்த உங்களது வருத்தங்கள் ஒரு சில குழுக்களையோ அல்லது ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளையோ மட்டும் பொருந்துமோ என்று?
என்ன பயன், மக்கள் ஒருவரையொருவர் சந்தித்த மறுகணம் தங்கள் திறன்பேசிக்குள் கவனத்தைத் திருப்பிக்கொள்ளும்போது?
இணைப்பிலிருந்தும், முழுத் தொலைத்தொடர்பிலிருந்தும், மக்கள் முன்னைவிடவும், இன்னும் அதிகமாக, தனிமையை உணர்கின்றனர். நாங்கள் உங்களைக் கிடைப்பதற்கெளிதாய் நுகர்பொருளாய் ஒரு ‘அது’ வாய் மாற்றுகிறோம். இவ்வாறுதான், “நீங்கள்” என்பதே உலகின் பற்றாக்குறையாகிறது. அதுவே நம்மைத் தனியராய் உணர வைக்கிறது.
அதையொத்து ரோம், நியூயார்க், சீயோல் ஆகிய நகரங்களுக்கிடையே யாதொரு வித்தியாசமும் இல்லை. ரோம் என்னை வேறுவகையில் மனம் கவர்கிறது. மகிழ்ச்சிக்காக வேண்டி, நமக்கு, உயர்தரமான, உயரமான மற்றெதாவதொன்று தேவைப்படுகிறது. எண்மமயமாக்கல், மற்றவைகளை, அதன் இடர்களை, அதற்கு இணையான வேறெதாவது ஒன்றை, என யாவையும் ஒதுக்குகிறது, எல்லாவற்றின் மீதும் மென்மையைப் பூசுகிறது.
எல்லாத் தடங்களையும் நீக்கி, யாவற்றையும் கிடைப்பதற்கெளிதாய் அளிப்பதால்தான் அதன் பேர் திறன்பேசி. ரோம் நகரம் ஆனால் சிறப்புடையது, ஏனைய யாவற்றையும்விட உயர நிற்பதில்.
இன்று நான் மீண்டும் முழு நகரத்தைச் சுற்றி மிதிவண்டி அழுத்தி எண்ணற்ற தேவாலயங்களைத் தரிசித்து வந்தேன். ஒரு அழகான தேவாலயத்தைக் கண்டுபிடித்தேன், இருத்தல் குறித்த மிக அரிதான அனுபவத்தை அந்தத் தேவாலயம் எனக்கு வழங்கியது. தேவாலயம் மிகச் சிறியது, உள்ளே நுழைந்ததும், நீங்கள் உடனேயே, உணர்வீர்கள், நீங்கள் ஒரு குவி மாடத்தின் கீழ் நிற்பதை.
குவிமாடம் எண்கோணங்களைக்கொண்டு பாங்காக வடிவமைக்கப்பட்டிருக்கும். குவிமாடத்தின் மையத்தை நோக்கி அவை படிப்படியாய் அளவு சிறிதாகிச் செல்லும். ஒரு சக்திவாய்ந்த மேல்நோக்கிய விழிவழி இழுவையொன்றை உருவாக்கும் வகையில், சுற்றியுள்ள குவிமாடத்தின் உச்சியைச் சுற்றியுள்ள சன்னல்களை உடைத்து வெளிச்சம் தெறித்து உள்ளோடி வரும், அங்கு மாடத்தின் மையத்தில் தங்க வெண்புறா மிதந்த கோலத்தில் சிலையாயிருக்கும்.
கம்பீரமான ஒன்றை அனைத்தும் சேர்ந்து உருவாக்கியிருந்தது, அந்த மேல்நோக்கிய இழுவை என்னை வெளியில் மிதக்க வைத்தது.
நான் மேலெழுப்பப்பட்டேன்.
அந்த நேரம்தான் உணர்ந்தேன், புனித ஆவியென்பது யாதென்று?
அது ‘மற்றவைத் தவிர’ வேறொன்றும் இல்லை.
ஒரு புனிதப்பொருளுக்குள்ளே இருத்தலின் அனுபவத்தை உணர்வது, களிப்பூட்டும் அனுபவமாக இருந்தது.
உங்கள் கருத்துப்படி, நாம் உண்மையான பொருட் கள் மீது மறுபடியும் கவனம் செலுத்த, மீண்டும் உயிராற்றல் பெற, குறிப்பாக மற்றவர்களுடன் சேர்ந்தியங்க, என மாற இவ்வுலகில் என்ன நடக்க வேண்டும்? நமது காலத்தில், சிக்கல்களை எவ்வாறு சரிக்கட்ட கற்றுகொள்வது?
எனது ஒவ்வொரு புத்தகமும் ஒரு கற்பனாவாத எதிர் கதையாடல் கொண்டு முடியும். சோர்வுற்ற சமூகத்தில் (Burnout Society) மன அழுத்தத்தைத் தரும், ‘நான் எனும் மனச்சோர்வினை’ அதாவது சமூகத்தினரை இணைக்கும் வகையில் ‘நாம் எனும் மனச்சோர்வு’ கொண்டு எதிர்வினை செய்திருப்பேன்.
மற்றவர்களை வெளியேற்றுதலில் (Expulsion of Others) 2016 அதிகரித்து வரும் சுயமோகித்தனத்தைக் கேட்டலின் கலை கொண்டு எதிர்த்திருப்பேன்.
உளவியல் அரசியலில் (Psychopolitics) மூடத்தனம் எனும் கற்பனாவாத உருவத்தினைக் கொண்டு, ஒன்றுக்கொன்று இணைந்தத் தன்மையும், முழு கண்காணிப்புத் தன்மையும் எதிர்த்திருப்பேன்.
எவ்வகை இணைப்பிலும், எந்த முனையத்துடனும் தன்னை இணைத்துக்கொள்ளாதவனே மூடன்.
எரோஸின் சங்கடத்தில் (Agony of Eros) எரோஸ் மட்டுமே மன அழுத்தத்தைத் தோற்கடிக்க சக்தி பெற்றவன் என முன்மொழிந்திருப்பேன்.
காலத்தின் வாசனையில் (The Scent of time) 2014 உலாத்துதலின் கதையைக் கூறியிருப்பேன்.
சமூகத்தின் குறைகளை ஆராய்ந்து எனது புத்தகங்கள், அவற்றைத் தாண்டிவர கருத்தாக்கங்களை முன் மொழிவன. ஆம்! நாம் புதுவகையான வாழ்க்கை முறைகளிலும், புதுக் கதையாடல்களிலும் பணிசெய்ய வேண்டியிருக்கிறது.
உங்களது இன்னொரு புத்தகமான சடங்குகளின் மறைவு (Disappearance of Rituals) (2020). எவ்வாறு சடங்குகள், மக்கள் மற்றும் பொருட்கள், நமது வாழ்வில் வேரூன்ற உதவுவனவாகும்? ஏன் நம்மால் நம்மை பார்த்துக்கொள்ள இயலாதா?
சடங்குகள் காலத்தின் கட்டிட சாத்திரங்கள், வாழ்வின் வடிவத்தைக் கட்டமைக்கவும் நிலைநிறுத்தவும் செய்வன தற்போது அவை அரிதாகி வருகின்றன.
பெருந்தொற்றுக் காலம் அவற்றின் மறைவை அதிவேகப்படுத்தியுள்ளது. வேலையும் சடங்கு நோக்கங்கள் கொண்டுள்ளது. நாம் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலைக்குச் செல்கிறோம். வேலை ஒரு குழுவில்தான் நிகழ்கிறது.
வீட்டிலிருந்தே வேலையில், வேலையெனும் சடங்கு முழுவதும் தொலைந்துபோகிறது. நாள் என்பது அதன் அமைப்பையும் தாளத்தையும் இழக்கிறது. இது ஒரு வகையில் நம்மைக் களைப்பு அடையவும் மன அழுத்தமடையவும் செய்கிறது.
குட்டி இளவரசன் (1943) புனித எக்ஷுபெரி (The Little Prince by Saint Exubery) எழுதியது. அதில், குட்டி இளவரசன், நரியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத் துல்லியமாக வரச் சொல்வான். அவ்வகையில் வருகை என்பது ஒரு சடங்காக மாறும் பொருட்டு.
அவன் நரிக்கு விவரிக்கிறான், சடங்கு என்பது யாதென்று.
காலத்தின் அங்கங்கள் சடங்குகள், பலமாடிக் கட்டிடங்களில் உள்ள அறைகளைப்போல. அதில் ஒரு வீட்டைப்போல, நேரம் என்பது அணுகக்கூடியதாக இருக்க, சடங்குகள் உள்ளன. அவை நேரத்தை வகை தொகை செய்து, அடுக்கிவைப்பன. இவ்வகையில் காலம் அர்த்தமுள்ளதாகிறது.
நேரம் இன்று ஒரு திடக்கட்டுமானத்தை இழந்து விட்டுள்ளது. அது வீடல்ல மாறாக ஒரு நிலை ஒழிந்தச் சலனங்கொண்ட ஆறு. சடங்குகளின் மறைவு, நாம் அதிகச் சுதந்திரத்தைக் கொள்வதற்குச் சமம் என்பதாகயில்லை.
முழுதும் இலகுவான வாழ்க்கை நஷ்டமும் கூட. சடங்குகள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திய போதும், அவை வாழ்க்கையை அமைப்பாகவும், நிலையாகவும் கொள்ளும். அவை உடலில் மதிப்புகளையும், குறியீட்டு அமைப்புகளையும் நங்கூரமாக்கச் செய்யும், சமூகக்குழுவினை வலுவூட்டும்.
சடங்குகளில், நாம் குழுவையும் குழுவின் நெருக்கத்தையும் உடல் ரீதியில் அனுபவிக்கிறோம். எண்ம மயமாக்கல், உலகின் பௌதீகத்தன்மையை உருவித் தூர வீசுகிறது. பின்னர், பெருந்தொற்று வருகை, சமுதாயக்குழுவினரிடையேயான நேரிடை அனுபவத்தின் இழப்பை அது மேலும் வதைக்கிறது.
நீங்கள் கேட்கிறீர்கள், ஏன் இதை நாமே நாமாகச் செய்துகொள்ளக்கூடாது?
நாம் இன்றைக்கு எதாவதொன்றின் பேரில் அடுக்கும் காரணங்களான, அந்நியமானது, முறைபடுத்துவதனால் அசலானதல்ல ஆகியவற்றால் எல்லாச் சடங்குகளையும் புறக்கணிக்கிறோம்.
நவதாராளமயவாதம் ஒரு அசல் கலாச்சாரத்தை உருவாக்குகிறது, அதன் மையத்தில் அகங்காரம் உள்ளது. அக்கலாச்சாரம் சடங்குகளாக்கப்பட்ட செயல் எதிர்ச்செயல்கள் மீது சந்தேகங்களை வளர்த்தெடுக்கின்றன. உடனுக்குடனான உணர்ச்சிகளும், குறிப்பிட்ட நிலைகள் மட்டுமே அசல் என்றாகிவிட்டன.
வடிவிக்கப்பட்ட பண்புகள் உதாரணத்திற்கு, மரியாதை நிமித்தம் என்பது அசலல்லாதது, மேம்போக்கானது என மறுக்கப்படுகிறது. அசல் அல்லது உண்மைத்தன்மையின் சுயமோக மரபுதான், அதிகரித்து வரும் சமுதாயத்திலிருக்கும் வெறித்தனத்திற்குப் பகுதி பொறுப்பு.
அழகான வடிவங்களின் நெறி பொருட்டு, அசலெனும் மரபினை எதிர்த்து எனது புத்தகத்தில் நான் வாதங்கள் செய்கிறேன். மரியாதை நிமித்த தோரணைகள், பழக்க வழக்கங்கள் வெறுமனே மேம்போக்கானவையல்ல.
பிரஞ்சு தத்துவவியலாளர் அலேன் சொல்வதாவது, “மரியாதையான தோரணைகள் நமது எண்ணங்களில் பெரும் சக்தியைத் தேக்குகின்றன.”
நீங்கள் அன்பை, நற்பண்பினை மற்றும் மகிழ்ச்சியைப் பிரதிபலித்தால் மேலும் தலைபணிவது போன்ற கரணங்கள் ஆகியவனவற்றைச் செய்வது, மோசமான மனநிலைக்கு எதிராகவும் அதேசமயம் வயிற்றுவலிக்கெதிராகவும் உதவிசெய்யும். அக உலகைவிடவும் வெளியுலகிலிருப்பவைதான் அதிகம் நம்மைத் தாங்கிப் பிடிக்கும். பிளேய் பாஸ்கல் ஒருமுறை சொன்னதாவது, நம்பிக்கை இழப்பதைக் குறித்துப் பரிதவிப்பதற்குப் பதில், வெறுமனே, (பிரார்த்தனை) கூட்டத்திற்குச் சென்று, சடங்குகளில் பிரார்த்தனை, பாடல்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு, இன்னொரு வகையில், பார்த்து நடிப்பது, அது நம்பிக்கையைச் சரியாக மீட்டுவரும்.
வெளியுலகு அக உலகை மாற்றியமைக்கும், புது வரையறைகளைக் கொண்டுவரும். அதுவே சடங்குகளின் சக்தி. பிறகு, நமது ஆழ்மனது, இன்றைக்கு, பொருட்களில் வேரூன்றியிருப்பதில்லை. இப்புற உலகப் பொருட்கள், ஆழ்மனதை நிலையாக்க அதிகப் பலனளிக்கும். இதுவே தகவல்களிடம் மிகுந்த சிரமம், ஏனெனில் அது ஆவியாவது, நிலையற்றது, மிகக் குறுகிய தொடர்பைக்கொண்டது.
நீங்கள் ஜெர்மன் மொழியைக் கிட்டத்தட்டக் கூறுகூறாக ரசிக்கிறீர்கள், மேலும் துணைச்சொற்களற்ற வாசக அடுக்கான ஒரு பாணியைக் கொண்டாடுகிறீர்கள், அது உங்களுக்கு ஒரு தனித்தன்மையான குரலை, இந்தத் தற்கால, சமகாலக் கலாச்சார விமர்சன மரபில், அளிக்கிறது. இது ஒரு கலவையைப் போல உள்ளது, மார்டின் ஹெடெகர் மற்றும் ஜென். அவர்களுக்கும் உங்களுக்குமானத் தொடர்பு என்ன?
டெ ஜெட் (Die zeit) எனும் ஜெர்மன் வார செய்தித்தாளின் இதழியலாளர் ஒருவர் ஒருமுறை கூறினார், அன்றாட வாழ்க்கையினைத் தேக்கி வைக்கும் சிந்தனை கட்டமைப்புகளை, ஓரிரு வாக்கியங்களில் என்னால் கொண்டு வர இயலும் என.
எதற்காக நீங்கள் ஆயிரம் பக்க புத்தககத்தை எழுதுகிறீர்கள், சில வார்த்தைகளில் உங்களால் இவ்வுலகிற்கு அறிவூட்டமுடியுமெனில்?
ஓராயிரம் பக்க புத்தகம், உலகமெனில் அது எதன் பொருட்டு, எனும் விவரிக்கும் அப்புத்தகம், சமயத்தில் ஒரு ஹைக்கூ அளவுக்கு விவரமாக இல்லாமல் போகலாம்.
முதல் பனி
டெஃபொடில் இலைகள்கூட வலைகின்றன
அல்லது
கோவில் மணிகள் அழிந்து போகின்றன
வாசமான பூக்கள் மீதியிருக்கின்றன
ஒரு பொருத்தமான மாலை!
- பாஷோ
எனது எழுத்துக்களிலும், நான் ஹைக்கூவின் பாதிப்புகளைப் பயன்படுத்தவே செய்கிறேன்.
நான் சொல்கிறேன்:
அது அப்படித்தான்.
இது ஒரு ஆதாரத்தின் விளைவை உருவாக்குகிறது, அது எல்லோருக்கும் ஒரு புரிதலை அளிக்கிறது. ஒரு இதழியலாளர் ஒரு முறை எழுதினார், எனது புத்தகங்கள் படிப்படியாய் ஒல்லியாய்கொண்டே போகின்றன, ஒரு சமயத்தில் அவை முற்றிலும் மறைந்து போகக்கூடும் என.
அதோடு சேர்த்து நான் ஒன்று சொல்கிறேன், எனது சிந்தனைகள் காற்றில் ஊடுருவி, கலந்துவிடுமென்று. யாவரும் அதைச் சுவாசித்துக் கொள்ளலாம்.
கடைசியில், நீங்கள் குட்டி இளவரசனை மேற்கோளிடுகிறீர்கள், நம்பிக்கை, வாக்கு, பொறுப்பு ஆகிய மதிப்புகள் அபாயத்தில் உள்ளன என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இவைதானே நமது தனிப்பண்புகள் காலங்களைத் தாண்டி, சர்வாதிகாரிகளையும், போர்களையுங்கூடத் தாண்டி நம்முடன் இருப்பவை!
இன்று, நேரமெடுக்கும் எல்லாப் பயிற்சிகளும் அதாவது நம்பிக்கை, விசுவாசம், வாக்கு, பொறுப்பு ஆகியன எல்லாம், மறைந்துவருகின்றன. யாவும் சிற்றாயுளுடன் இருக்கின்றன. நாம் நமக்கே சொல்கிறோம், நமக்கு அதிகச் சுதந்திரம் இருக்கிறதென்று.
ஆனால் இச்சிற்றாயுள் நமது வாழ்க்கையை நிலை குலையவைக்கின்றன.
நம்மால் பொருட்களுடன் பிணை செய்துகொள்ள இயலும் ஆனால் தகவல்களுடன் முடியாது. நம்மால் தகவல்களைச் சிலநேரமே கவனிக்கமுடியும். அதன் பிறகு, அது ஒரு பதிலளிக்கும் இயந்திரத்தில் ஒலிக்கும் குறுந்தகவல் போலத்தான். பின்பு அது மறதியை நோக்கி சென்றுகொண்டிருக்கும்.
நம்பிக்கை ஒரு சமூகப் பயிற்சி என்று நினைக்கிறேன், இன்று அது தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் மாற்றப்பட்டு வருகின்றன.
அறிவு போதவில்லையென்றாலும், நம்பிக்கை ஆக்கப்பூர்வமான உறவுநிலைகளைக் கட்டியெழுப்ப உதவும்.
வெளிப்படைத்தன்மையான சமூகத்தில், ஒருவர், உடனே மற்றவர்களிடம் தகவல்களைக் கேட்பார். நம்பிக்கையோ ஒரு சமூகக்கடன், அது மேவாரியாயிருக்கும். வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் சமூகமோ, நம்பிக்கையின்மை கொண்ட சமூகத்தைத் தான் வளர்த்தெடுக்கும்.
உங்களது புத்தகங்கள், அதிகமாகக் கலைப் பின்புலத்திலிருந்தே வாசிக்கப்படுகிறதே, தத்துவவியலிலிருந்தில்லையே, எவ்வாறு அதை விளக்குவீர்கள்?
அதிகமாக, கலைஞர்கள் தான், தத்துவவாதிகளை விட எனது புத்தகத்தை வாசிக்கின்றனர். தத்துவவாதிகள் தற்போதெல்லாம், நிகழ்காலத்தில் ஆர்வங் காட்டுவதில்லை.
ஃபூக்கோ ஒரு முறை பேசும்போது, தத்துவவாதி என்பவன், இப்பொழுதை எண்ணங்களைக் கொண்டு மடக்கி பிடிக்கும் ஒரு இதழியலாளன், என்கிறார்.
அதைத்தான் நானும் செய்கிறேன்.
மேலும் எனது கட்டுரைகள், வேறொரு வாழ்க்கைக்குச் செல்லும் வழியிலிருக்கின்றன, இன்னொரு வேறுப்பட்டக் கதையாடலுக்கு. கலைஞர்களுக்கு அந்தக் குரல் கேட்கின்றது.
நான் கலையை நம்பி ஒரு பணியை எடுப்பேன், புது வாழ்க்கை வழிமுறை, புது விழிப்புணர்வு, புதுக் கதையாடல், என நிலவிவரும் கோட்பாடுகளுக்கு எதிராக, அதை மேம்படுத்துவேன்.
இந்தத் தருணத்தில், ரட்சகர் கலைதான், தத்துவம் கிடையாது அல்லது நான் தத்துவத்தைக் கலை வடிவில் பயில்கிறேன்.
நூலாசிரியர் குறிப்பு
ப்யூங் சூல் ஹான் (Byung Chul Han), ஜெர்மனி தத்துவ வியலாளர் மற்றும் கலாச்சாரக் கோட்பாட்டாளர், இவரது தொடக்கக் காலத்தில், சியோல் கொரிய பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படித்தவர், பின்பு, தத்துவவியல், ஜெர்மானிய இலக்கியம் மற்றும் கத்தோலிக்க வேதசாத்திரம் பயில, ஜெர்மனிக்குக் குடியேறினார்.
இருபதுக்கும் மேலாகப் புத்தகங்களை எழுதியுள்ளார், ஆய்வுக்கட்டுரை பாணியில் அமைந்திருப்பவை யாவும்.
களைப்படைந்த சமூகம் (Society of tiredness), வெளிப்படைச் சமூகம் (Society of transparency), சோர்வுற்ற சமூகம் (Burnout Society) எரோஸின் சங்கடம் (Agony of Eros), பொருளெனப்படாதவை - உயிரான உலகின் எழுச்சி (Nonthings - Upheaval in the lifeworld).
இவரது கருத்தில், வெளிப்படைத்தன்மை என்பது சமூகத்தின் மீது வீசப்படும் வலை, ஒரு சூது, குறிப்பாக அதன் மூலம் நம்மை இயக்குவது, நவயுகப் பொருளாதாரத்தின் யுக்தியெனக் குறிப்பிடுகிறார்.
ஆளுமைத்திறன் பிறழ்வு, சுயசீர்கேடு, அதீதக் களைப்பு, மன அழுத்தம், உளைச்சல், காதல், பாப் கலாச்சாரம், பகுத்தறிவு, காதல், சமூக ஊடகம், வெளிப்படைத்தன்மை, இணையம் எனப் பல தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
வெகு சமீபம் வரையிலும் இவர் தொலைகாட்சிகளுக்கோ, வானொலிகளுக்கோ எந்தப் பேட்டியும் அளித்ததில்லை. மேலும் பொதுவெளியில் தன்னைப் பற்றியும், குடும்பப் பின்னணியையும் பகிர்ந்து கொண்டதில்லை.
பத்திரிக்கையாளர் / நெறியாளர் குறிப்பு
ஜெசின் போர்ச்செ (Gesine Borcherdt) ஜெர்மானிய எழுத்தாளர், கலை அறங்காவலர், Art Review போன்ற கலை இதழ்களுக்குத் தொகுப்பு ஆசிரியர்.
2004 - இல் இருந்து எழுதிவரும் இவர், தற்காலக் கலைவடிவங்கள், தனி கவனங்கொண்டு பெண் கலைஞர்களை, சர்வதேச கலை வடிவங்கள், பாணிகள் குறித்தும் எழுதிவருகிறார்.
தனியார் ஸ்தாபனங்களுக்கு, அரங்கங்களுக்கு, வணிக நோக்கில்லா அமைப்புகளுக்காகப் பல கண்காட்சிகளுக்கு நிறுவனராகவும், அறங்காவலராகவும் இருந்து உள்ளார்.
லியாம் டிக்நர் (Liam Tickner) ஜெர்மானியிலிருந்து ஆங்கில மொழியாக்கம் செய்தவர்.
கு.அழகிரிசாமி எழுதியுள்ள பல சிறுகதைகள் தனித்தன்மையான இயல்புடைய பாத்திரங்களை மையப்படுத்தியவை. அவற்றுள் ஒன்று ‘தியாகம்.’ இக்கதை 1965ஆம் ஆண்டு ‘சுதேசமித்திரன் தீபாவளி மலரில்’ வெளியானது. ‘கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார்’ என்னும் பாத்திரத்தைப் பற்றிய கதை இது. அவருடைய கடையில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். ‘பயல்கள்’ என்பது செட்டியாரின் மொழி. அப்பையன்களின் வயது பற்றிக் கதையில் நேரடிக் குறிப்பில்லை. ‘பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும் போது’ (ப.869) என்று ஓரிடத்தில் எழுதுகிறார். அதன் மூலம் அவர்கள் அனேகமாகப் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்களை எந்நேரமும் திட்டிக் கொண்டேயிருப்பது தான் செட்டியாரின் இயல்பு. அப்படி அவர் திட்டுவதை ‘வசை(ப்) புராணம்’ என்கிறார் கு.அழகிரிசாமி.
‘இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம் தான். சாக்குக் கிடைத்துவிட்டது’ (ப.866)
‘...அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக்கொழிந்த ஓர் அந்நிய பாஷையில் இயற்றப்பட்ட காவியமாகக் கருதி ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்’ (ப.869)
‘செட்டியார் தம் ஓய்வொழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி “அண்ணாச்சி, வாங்க” என்று புன்னகையோடு அவரை வரவேற்றுவிட்டு, “மதுரைக்கு நேத்துத்தானே போனீங்க” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்’ (ப.870)
என மூன்று இடங்களில் ‘வசைப் புராணம்’ வருகிறது. தொடர்ந்து திட்டுவதை ‘அர்ச்சனை’ என்று சொல்லும் மக்கள் வழக்கு இன்றுமுள்ளது. அதையும் கு.அழகிரிசாமி பயன்படுத்தியுள்ளார். செட்டியாரின் நண்பர் சோமசுந்தரம் பிள்ளை என்பவர் வந்ததும் திட்டுவதற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்பார். அதைக் கீழ் வருமாறு சொல்கிறார்:
‘...அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது செட்டியார் சஹஸ்ரநாம அர்ச்சனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்’ (ப.868)
‘ஷண்முகம் பிள்ளை அதைப் பார்த்து, “அப்படின்னா, நித்தியப்படி அர்ச்சனை நடக்கும்ணுதான் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார் (ப.873).
அவர் பயன்படுத்துபவற்றை ‘இழிசொற்கள்’ (ப.869) என்று ஓரிடத்தில் சொல்கிறார். சரி, அப்படி அவர் கூறும் வசைச்சொற்கள் எவை? கதை நெடுகிலும் வரும் வசைச்சொற்கள்: தடிப்பயல்கள், பரதேசிகள், எருமை மாட்டுப் பயல்கள், பிச்சைக்காரப் பயல், தரித்திரம் பிடிச்ச பயல்கள், நாய், கஞ்சிக்கில்லாமல் செத்த பயல்கள், கழுதை, அறிவு கெட்ட பயல்கள், முடிச்சுமாறிப் பயல், பேய், தீவட்டித் தடியன் ஆகியவை.
செட்டியார் பயன்படுத்துபவற்றில் வசைத் தொடர்கள் பலவற்றையும் கு.அழகிரிசாமி பதிவு செய்துள்ளார். ‘அடி செருப்பாலே’, ‘ஜோட்டாலே அடிச்சு வெளியே பத்தும் இவனை’, ‘செருப்படி வாங்கிக்கிட்டுத்தான் இந்தக் கடையை விட்டுப் போகப்போறே’, ‘ஒங்களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கறதுக்கு ஒரு குத்துக்கல்லைக் கட்டிக்கிட்டு மாரடிக்கலாம்... தொலஞ்சி போங்கடா’, ‘வாயிலே என்ன கொளக்கட்டையா இருக்கு?’ முதலிய பல தொடர்கள் கதையில் இருக்கின்றன.
வசையின் தொனியை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இக்கதையில் கு.அழகிரிசாமி அதை முயன்றிருக்கிறார். வசைச்சொற்கள், வசைத் தொடர்கள், வசைத்தொனி எல்லாம் இணைந்த ஒரு பத்தி இது:
“அடி செருப்பாலே! நாயே! வாயைத் தொறக்கறியா நீ? (கணக்குப் பிள்ளையைப் பார்த்து) பார்த்தீரா சோமசுந்தரம் பிள்ளை? பயல் எதுத்தில்ல வெவகாரம் பண்றான்? ஜோட்டாலே அடிச்சு வெளியே பத்தும் இவனை! நமக்குச் சரிப்படாது. கஞ்சிக்கில்லாம செத்த பயல்களை எரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள்தனம், சோமசுந்தரம் பிள்ளை...” (ப.866).
திட்டுதலில் இருவகை உண்டு. பொதுவிடத்தில் புழங்கும் சொற்களைக் கொண்டு திட்டுதல் ஒரு வகை. இதைக் கையாளாதோர் இல்லை. பொதுச் சொற்களை அதாவது பொதுவிடத்தில் தயக்கமின்றி அனைவரும் பேசும் சொற்களைக் கொண்டு திட்டுதல் முதல் வகை. அறிவு கெட்ட பயல், தீவட்டித் தடியன் முதலிய வசைகளில் வரும் சொற்கள் எல்லாம் பொதுவிடப் புழக்கத்தில் உள்ளவை. ‘அறிவு’ என்பதைத் தனியாகவோ பிற சொற்களுடனோ பயன்படுத்தும்போது அது வசையாவதில்லை. ‘அனைவருக்கும் அறிவு வேண்டும்’ என்கிறோம். ‘கெட்ட சகவாசம் கூடாது’ என்கிறோம். ‘பயல்கள் எங்கே விளையாடுகிறார்கள்?’ என்கிறோம். இவற்றில் அறிவு, கெட்ட, பயல் ஆகிய சொற்கள் வசையல்ல. இவை ‘அவைக் கிளவிகள்.’ அதாவது பொதுவிடத்தில் விலக்கப்படாதவை. இம்மூன்றும் இணைந்து ‘அறிவு கெட்ட பயல்’ என்று ஒருசொல் நீர்மைத்து ஆகும் போது அது வசைச்சொல் தன்மை பெறுகிறது. இத்தகையவற்றை ‘நல்ல சொற்களைக்’ கொண்டு திட்டும் ‘நாகரிக வசை’ என்று சொல்லலாம். இவையும் கேட்பவர்களைப் பாதிக்கும் என்றாலும் பொதுவிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
விலக்கப்பட்ட சொற்களை அதாவது பொதுவிடத்தில் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு திட்டுதல் இரண்டாம் வகை. இவற்றைத் தமிழ் இலக்கணம் ‘அவையல் கிளவி’ என்று கூறும்.
பலர் கூடியுள்ள அவையில், பொதுவிடத்தில் சொல்லத்தகாத சொற்கள். ‘அவையல் கிளவி மறைத் தனர் கிளத்தல்’ என்பது தொல்காப்பிய நூற்பா. பொதுவிடத்தில் சொல்லத்தகாத சொற்களை விட்டுவிட்டுப் பேசவேண்டும் என்பது பொருள். சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அச்சொல்லை விட்டுவிட்டு வேறு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வேண்டும்.
பிற்கால இலக்கண நூலாகிய நன்னூல் இதை ‘இடக்கர்’ என்று சொல்லும். இடக்கர் சொற்களை மறைத்து அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் சொற்களுக்கு ‘இடக்கர் அடக்கல்’ என்று பெயர். பீ என்பதை மக்கள் வழக்கில் ‘ஆய்’ என்கிறோம். பீ என்பது இடக்கர்; ஆய் என்பது இடக்கரடக்கல்.
இந்த அவையல் கிளவி அல்லது இடக்கர் சொற்களையே ‘கெட்ட வார்த்தைகள்’ என்று சொல்கிறோம். பொதுவாகப் பாலுறுப்புகள், பாலுறவு தொடர்பான சொற்கள் இவ்வகையில் அடங்கும். காரணம் அவற்றைப் பொதுவிடத்தில் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்துபவரை இழிவாகக் கருதுகிறோம். பாலுறுப்புச் சொற்களைத் தனியாகப் பயன்படுத்தினாலே அவை வசையாகின்றன. ‘போடா சுண்ணி’ என்றால் அது வசையாகிறது. முறையற்ற பாலுறவு என்று கருதப்படுபவற்றைக் குறிக்கும் வசைச்சொற்கள் பல உள்ளன. ‘தாயோலி’ உள்ளிட்ட சொற்கள் அப்படியானவை.
கு.அழகிரிசாமியின் ‘கதிரேசன் செட்டியார்’ முதல் வகையான ‘நாகரிக வசை’ பாடுபவர். ‘நல்ல சொற்களைக்’ கொண்டு அவர் திட்டினாலும் கேட்பவருக்குக் கஷ்டத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது. கடையில் வேலைக்குச் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஆன புதுப்பையன் ஒருவனால் அந்தச் சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்குப் பதில் பேசுகிறான். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. உள்ளூரக் குமுறுகிறான். சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு ஓடி விடலாம் என்று தோன்றுகிறது. பழைய பையன்களுக்குப் பிரச்சினையில்லை. அவர் திட்டுவதைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. காரணம், திட்டுவதைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போய்விட்டது. அவர் இயல்பு இதுதான் என்பது அவர்களுக்குப் பிடிபட்டு விட்டது. அவர் திட்டும் சொற்களுக்கெல்லாம் நேரடி அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. ‘செட்டியாரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள்’ (ப.869) என்கிறார் கு.அழகிரிசாமி.
இடைவிடாமல் வசை பாடினாலும் கதிரேசன் செட்டியார் நல்ல குணம் உடையவர். பிற கடைகளில் கொடுப்பதைவிடச் செட்டியார் அதிகச் சம்பளம் கொடுப்பார். தீபாவளிக்குப் புதுத்துணிகள் எடுத்துத் தருவதோடு கையில் ரொக்கமும் தருவார். வீட்டு வேலை செய்யச் சொல்வதில்லை. வீட்டுக்குப் போனால் ‘ஐயா, ராசா’ என்று அன்பாகப் பேசுவார். சாப்பாடும் போடுவார். என்ன புகார் வந்தாலும் யாரையும் தாமாக வேலையை விட்டு அனுப்பமாட்டார். பையன்கள் தனிக்கடை வைத்தால் உதவி செய்வார். அவர்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொண்டால் கணிசமான தொகை கொடுப்பார். இப்படியெல்லாம் உயர்ந்த குணங்கள் கொண்ட செட்டியார் ஏன் பையன்களை இடைவிடாமல் திட்டுகிறார்? இந்தக் கேள்வியை அவரது நண்பர் மூலமாகக் கேட்டுப் பதில் பெற்று நமக்கும் தெரிவிக்கிறார் கு.அழகிரிசாமி.
கதிரேசன் செட்டியாரும் தம் சிறுவயதில் மளிகைக் கடை ஒன்றில் வேலை பார்த்தவர்தான். அவருடைய முதலாளி பெரும் கொடுமைக்காரர். செட்டியாரின் தாய், தகப்பன், பாட்டன் என்று உறவுகள் எல்லோரையும் கேவலமாகப் பேசுவார். முதலாளி பேசும் வசைகளைக் கேட்டால் ‘புளுத்த நாய் குறுக்கே போகாது’ என்கிறார் செட்டியார். ‘புழுத்த’ என்பது பேச்சு வழக்கில் ‘புளுத்த’ என்றாகியுள்ளது. உடலெல்லாம் புண்பட்டு புழு வைத்த நாய்கூட அவர் பேச்சைக் கேட்டால் முன் செல்லாமல் ஓடி ஒளிந்துகொள்ளும் என்று அர்த்தம். அப்படியானால் செட்டியாரின் முதலாளி ‘அவையல் கிளவி’யைப் பயன்படுத்தித் திட்டும் இரண்டாம் வகையினர். ‘அவர் திட்டுவதில் பத்திலே ஒரு பங்குகூட நான் பேசியிருக்க மாட்டேன்’ என்றும் செட்டியார் சொல்கிறார்.
இடைவிடாமல் திட்டும் செட்டியாரின் இயல்பு அவருடைய முதலாளியிடமிருந்து சுவீகரித்துக்கொண்டது எனத் தெரிகிறது. முதலாளி நிலையிலிருந்து ஒருவர் திட்டும் போது கீழிருப்பவருக்கு மனக்கஷ்டம் ஏற்படுகிறது. அந்தக் கீழிருப்பவர் முதலாளி நிலைக்கு உயரும்போது ‘திட்டக்கூடாது’ என்று கருதுவதில்லை. ‘திட்டினால்தான் தம்மை முதலாளியாக ஏற்பர்’ என்று கருதியோ முதலாளி நிலை என்பது திட்டுதலை உள்ளடக்கியது என்று எண்ணியோ தாமும் தம் முதலாளியைப் போலவே ஆகிவிடுகின்றனர். இதை எல்லா நிலைகளிலும் காணலாம். மாணவர்களிடம் இருக்கும் ‘பகடி வதை’ தொடர்வதற்குக் காரணம் வதையை அனுபவித்தவரே அடுத்த ஆண்டில் வதைப்பவராக மாறுவதுதான்.
செட்டியார் தம் முதலாளியின் பாணியைப் பின்பற்றித் திட்டுவதை இயல்பாக்கிக் கொண்டார். தம் முதலாளி அப்படியெல்லாம் திட்டியும் அடித்தும் ‘வசக்கி’த் தமக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்ததால்தான் தாம் இப்போது முதலாளியாக இருக்க முடிகிறது என்றும் கருதுகிறார். ‘அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைண்ணு வச்சு, யாவாரம் பண்ணி, இவ்வளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாமே நிர்வாகம் பண்ணிக்கிட்டு வர்றேன்’ (ப.872) என்பது செட்டியார் கூற்று. திட்டினால்தான் ‘பயல்கள் விருத்திக்கு வருவார்கள்’ என்பது செட்டியாரின் நம்பிக்கை. ஆகவே அவ்வியல்பை மாற்றிக் கொள்ள இயலாத நிலையில் செட்டியார் இருக்கிறார்.
அக்கூற்றில் உடன்பாடில்லாதவர் நண்பர் ஷண்முகம் பிள்ளை. பையன்களிடம் ‘கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லை?’ என்று கேட்கிறார். ‘ஒங்க மேலே தப்பில்லே; ஒங்க மொதலாளியைச் சொல்லணும். ஒங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் குடுத்திருக்காரு’ என்று சொல்கிறார். ‘ஒங்களைப் பாக்க எனக்கு உண்மையிலேயே பாவமா இருக்கு. இப்படிக் கத்தினா மொதல்லே ஒங்க ஒடம்புக்கு ஆகுமா’ என்றும் கேட்கிறார். ஆனால் செட்டியார் கேட்பதாக இல்லை. கத்திக் கத்தித் தம் தொண்டை கட்டிக் கொண்டாலும் திட்டுவதைவிட அவர் தயாராக இல்லை. திட்டுவது தேவை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார். அப்படித் தொண்டை வற்ற தாம் கத்தித் திட்டுவது ‘பயக நல்லபடியாத் தலையடுக்கணும்’ என்பதற்காகத் தாம் செய்யும் தியாகம் என்று அவர் கருதுகிறார்.
ஷண்முகம் பிள்ளை சொல்வது நியாயமானதாகவே தோன்றுகிறது என்றாலும் அதை ஒப்புக்கொள்வது சுயநலம் என்று செட்டியார் கருதினார். ‘பொதுநலம்’ என்று கருதித் தியாக உணர்ச்சியோடு ஒரு செயலைச் செய்பவரை மாற்ற முடியுமா?
இக்கதையில் கதிரேசன் செட்டியார், கடைப்பையன்கள், கணக்குப்பிள்ளை வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை, செட்டியாரின் நண்பர் ஷண்முகம் பிள்ளை ஆகியோர் பாத்திரங்கள். செட்டியார் கடையில் நடக்கும் காட்சிகளும் கதையில் முதல் பகுதி. நண்பரோடு பேசியபடி நடந்து செல்லும் பாதைக் காட்சி இரண்டாம் பகுதி. செட்டியாரின் இயல்பைக் கதையின் முதல் பகுதி ஆழக்காட்டுகிறது. இரண்டாம் பகுதி அவ்வியல்பைப் பற்றிய விவாதமாக அமைகிறது. இதில் ஒவ்வொரு பாத்திரத்தையும் மிகச் சில சொற்களில் செம்மையாகக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. கடைக்குப் புதிய பையன் ஒருவன் வேலைக்கு வந்திருக்கிறான். அவனால் செட்டியாரின் இயல்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அறியாமல் அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கோபம், அவன் மனநிலை, நிர்பந்தம் ஆகியவற்றை வெளிப்படுத்த பத்துத் தொடர்கள் போதுமானவையாக இருக்கின்றன.
செட்டியாரையே மையமாகக் கொண்ட இக்கதையை எழுதியிருந்தாலும் அவர் பக்கம் கு.அழகிரிசாமி இல்லை. ஷண்முகம் பிள்ளையின் பக்கமே கு.அழகிரிசாமி நிற்கிறார். ஷண்முகம் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அவர் மிகவும் மென்மையானவராகத் தோன்றுகிறார். தம் கருத்தைக்கூடச் செட்டியாருக்கு வலிக்காமல் முன்வைக்க விரும்புகிறார். தம் கருத்துக்கு ஏற்பில்லாத போதும் அதை வலியுறுத்த அவர் முயலவில்லை. தம் சிரிப்பால் எல்லாவற்றையும் கடக்க முயல்பவர் அவர். ‘ஷண்முகம் பிள்ளை சிரித்தார்’ என்றும் ‘ஷண்முகம் பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனால் அப்புறம் சிரித்துக் கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு...’ என்றும் ‘ஷண்முகம் பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்ன புத்திமதி’ என்றும் ‘என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார்’ என்றும் தொடர்ந்து சொல்லி ஷண்முகம் பிள்ளையின் இயல்பைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.
தம் கதைகளில் முரண்களைக் கையாளும் கு.அழகிரி சாமி அவற்றை ஒருபோதும் மோத விடுவதில்லை. மோதிக் கொள்வதால் நன்மை விளைவதில்லை. மாறாக, உறவில் சிடுக்குகள் உருவாகின்றன. ‘முரண்களின் இயைபு’தான் வாழ்க்கை என்பதையே தம் கதைகளில் முன்வைப்பவர் கு.அழகிரிசாமி. தமக்கு ஏற்பில்லாத ஒன்றை மையப்படுத்திய இக்கதையிலும் அப்படித்தான் அவர் செயல்பட்டுள்ளார். இது சிறந்த கதையாக உருப்பெற கு.அழகிரிசாமியின் இப்பார்வையே முதன்மைக் காரணம் என்று சொல்லலாம்.
---
கு.அழகிரிசாமியின் ஊர்க்காரரும் நெருங்கிய நண்பருமாகிய கி.ராஜநாராயணன் எழுதிய முக்கியமான கதை ‘நிலை நிறுத்தல்’ (கணையாழி, அக்டோபர், 1981). அது கிராமத்துக் கதை. மிகுதியான நிலம் வைத்திருக்கும் ‘பெரிய முதலாளி’, கிட்டத்தட்டக் கு.அழகிரிசாமியுடைய செட்டியாரின் மறுவார்ப்புத் தான். அல்லது செட்டியாரின் முதலாளியுடைய மறு வார்ப்பு என்றும் சொல்லலாம். ‘தியாகம்’ கதை நடக்கும் களம் கோவில்பட்டி நகரம். கி.ரா.வின் கதைக் களம் கிராமம். நிலக்கிழாருக்குப் பெயரில்லை; ‘பெரிய முதலாளி’ என்றே வருகிறது. அவரை அறிமுகப்படுத்திக் கதை தொடங்குகிறது.
‘மூதேய் மூதேய், வெறுவாக்கலங் கெட்ட மூதேய்...’ எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேன்னு உள்ள கெட்ட வார்த்தை வசவுகள் இருக்கு. புழுத்த நாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால்’ (கொத்தைப் பருத்தி, ப.104) என்று அவ்வறிமுகம் சொல்கிறது. ‘புழுத்த நாய் குறுக்கே போகாது’ என்னும் தொடர் இருகதைகளிலும் பயன்பட்டுள்ளது. செட்டியார் அவைக்கிளவி வசவாளர்; செட்டியாரின் முதலாளி அவையல் கிளவி வசவாளர். கி.ரா.வின் ‘பெரிய முதலாளி’யும் அவையல் கிளவி வசவாளர்தான். அதனால்தான் செட்டியாரின் முதலாளியின் மறுவார்ப்பாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
வசைபாடும் செட்டியாரை மையமாக்கிக் கு.அழகிரிசாமி கதை எழுதியது போலப் பெரிய முதலாளியை மையப்படுத்திக் கி.ராஜநாராயணன் எழுதவில்லை. செட்டியாரின் மளிகைக் கடையில் வேலை செய்யும் ‘பயல்களில்’ ஒருவனை எடுத்துக் கிராமத்துக் களத்தில் வைத்துக் கி.ரா. எழுதியுள்ளார். அதாவது கு.அழகிரிசாமியின் செட்டியாரிடம் வேலை செய்யும் ‘பயல்களில்’ ஒருவனை மையப்படுத்தி எழுதினால் எத்தகைய கதை கிடைக்குமோ அதுதான் ‘நிலைநிறுத்தல்.’ கு.அழகிரிசாமி காட்டும் பையன்களுக்குப் பெயரில்லை; அதாவது பெயரைச் சொல்லவில்லை. ‘ஒரு சிப்பந்தி’, ‘அந்தப் பையன்’, ‘கடைப் பையன்கள்’ என்பன போலத்தான் அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். கி.ரா. காட்டும் பையனுக்குப் பெயர் ‘மாசாணம்.’ மளிகைக்கடைப் பையன்களின் சாதி தெரியவில்லை. செட்டியார் சாதிக்காரர்கள் என்றே ஊகிக்கலாம்; பிள்ளை சாதியினரும் இருக்கலாம். மாசாணத்தின் சாதி பற்றியும் தெளிவான குறிப்பில்லை. அவர் பரம்பரையினர் ‘சாமி கொண்டாடிகள்’ என்பது தெரிகிறது.
பெரிய முதலாளியிடம் மாசாணம் வந்து சேரும் போது அவனுக்குப் பதின்மூன்று, பதினான்கு வயது தான். அவன் தோற்றம், படிமானம் எல்லாவற்றைப் பற்றியும் விவரணை உண்டு. அவனைத் தன் பண்ணையில் வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார் பெரிய முதலாளி. வருசத்துக்கு ஒரு ஜோடி வேட்டி; சாப்பாடு போக மாதம் மூன்று ரூபாய் சம்பளம். பல வருடம் அவரிடமே வேலை செய்கிறான். பின்னர்ப் படிப்படியாக அவன் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்கிறான் என்பதைக் கதை விவரிக்கிறது. அவன் குடும்பம் பரம்பரைச் சாமியாடிகள் என்னும் குறிப்புத்தான் கதையின் பின்பகுதியை நகர்த்துகிறது. பெரிய முதலாளியிடமிருந்து விலகி வெவ்வேறு பண்ணைகளில் வேலை செய்கிறான். பஜனைக் கோஷ்டியில் சேர்ந்து பாடவும் செய்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். அவன் மனைவி பெயரும் ‘மாசாணம்.’ கணவன் மனைவி இருவரும் ஒரே பெயரைக் கொண்டிருப்போர் நீவி விட்டால் கைகால் சுளுக்குக் குணமாகிவிடும் என்னும் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. அதனால் அவனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அவன் வீடு தேடி எண்ணெய்க் கிண்ணத்துடன் ஆட்கள் வருகிறார்கள். அவன் கைராசி பரவுகிறது.
அதிகம் பேசாத, எதற்கும் எதிர்வினை புரியாத அவன் குணம் மனைவிக்குப் பிடிக்கவில்லை. ‘ஆடுண்ணா ஒரு சுறுகுப்பால் கொடுக்கணும். கிடாண்ணா ஒரு முட்டாவது முட்டணும்’ என்று சாடை பேசுகிறாள். ஆனாலும் அவன் இயல்பு மாறவில்லை. ‘சின்ன முதலாளி’க்கு உடம்பு சரியில்லை என்று விபூதி போடச் சொல்லி அவனைத் தேடி வருகிறார்கள். அவனும் சென்று திருநீறு போடுகிறான். சாமியாடியின் இயல்புகளோடு அவன் இருக்கும் கோலத்தின் முன்னால் தவிர்க்க இயலாமல் பெரிய முதலாளியும் குனிந்து திருநீறு வாங்குகிறார்.
இப்படிச் சில ஏற்புகள். ஒருவருசம் அவ்வூரில் மழையின்றிப் பஞ்சம் வருகிறது. உணவுக்கு வழியில்லை. அப்படிப் பசி மிகுந்த நாளொன்றில் பார்வதி அம்மன் கோயில் முன்னால் வந்து மாசாணம் உட்கார்ந்து கொண்டான். ‘மழை பெய்கிற வரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப் போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரைவிடப் போவதாகவும்’ சொன்னான். ஊரே வியந்து பார்த்தது. வயணம் என்பது உண்ணாநோன்பு.
உட்கார்ந்த நிலையில் அப்படியே இருக்கிறான் மாசாணம். பால் கொடுத்தாலும் குடிக்கவில்லை. ஒரு சொட்டு நீர் கூட அவன் தொண்டையில் இறங்க வில்லை. மூன்றாம் நாள் மழை வந்துவிட்டது. அப் போதுதான் மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான். ‘ஈஸ்வரீ’ என்று சொல்லிக்கொண்டே ஆலங் கட்டி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அவனைக் கைத்தாங்கலாக ஊரே அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கிச் செல்கிறது. அதில் பெரிய முதலாளியும் ஒருவர். வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டவர்கள் அவனுக்குப் பால் கொடுக்கிறார்கள். எப்போதும் அண்ணாந்து குடிக்கும் மாசாணம் இப்போது சப்பிக் குடிக்கிறான். ‘போதும்’ என்று சொல்கிறான். ‘இன்னும் கொஞ்சம்’ என்று பெரிய முதலாளி சொல்கிறார். உடனே எல்லோரும் ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று வற்புறுத்துகிறார்கள். அத்தோடு கதை முடிகிறது.
‘புழுத்த நாய் குறுக்கே போகாத’ அளவு இடைவிடாமல் மாசாணத்தை வைதவர் பெரிய முதலாளி.
அவனை அடிக்கவும் செய்திருக்கிறார். அப்பேர்ப் பட்ட முதலாளி அவனிடம் குனிந்து திருநீறு வாங்கும் படியும் டம்ளர் பாலை வைத்துக்கொண்டு ‘இன்னும் கொஞ்சம்’ என்று கெஞ்சும்படியும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான் மாசாணம். கு.அழகிரிசாமி காட்டிய பையன்களில் ஒருவனை எடுத்துக் கிராமக்களத்தில் வைத்து அவனுக்குப் பெயர் சூட்டி அவன் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பாங்கைக் கி.ரா. வின் கதை விவரிக்கிறது. இருவரின் கதைகளும் சிறந்தவையாகவே விளங்குகின்றன.
‘தியாகம்’ கதையில் கு.அழகிரிசாமி செட்டியாரைப் பின்தொடர்ந்து செல்வதால் வசைச்சொல் பதிவு மிகுதி; பெரிய முதலாளியில் தொடங்கினாலும் அவரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மாசாணத்தைக் கி.ரா. பின்தொடர்வதால் ‘நிலைநிறுத்தல்’ கதையில் வசைச்சொல் பதிவு மிகக் குறைவு. கி.ராஜநாராயணனும் இன்னும் கொஞ்சம் வசையைத் தாராளமாக விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
---
பழ.அதியமான் (ப.ஆ.), கு.அழகிரிசாமி சிறுகதைகள், 2011, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
கி.ராஜநாராயணன், கொத்தைப் பருத்தி, 1985, சிவகங்கை, அன்னம் (பி) லிட்., இரண்டாம் பதிப்பு.
அன்புடையீர், வணக்கம்.
ஆதாயவாதமும் சந்தர்ப்பவாதமும் அரசியலின் உடலும் உயிருமான ஜீவாதாரங்களாகிவிட்டன. குடியாட்சியின் நாயகர்களாகிய நாமும் சீர்கெட்ட இந்தச் செல்நெறிகளை நம் இயங்கு நெறிகளாக ஒரு மனதாகவே ஏற்றுக்கொண்டுவிட்டோம். இனியென்ன கேட்டுக்கேள்வி கட்டுத்திட்டம் ஏதுமில்லை. மனதை உலுக்கும் சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்திருக்க அங்கு ஆட்சி பரிபாலனம் செய்யும் பா.ஜ.க. அரசு அதைத் தன் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு இரண்டும் இவ்விடயத்தில் காட்டும் மெத்தனம் அவற்றின் சுயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆண்டுக்கொண்டிருக்கும் சொந்த நகரம் லங்கா தகனம், அரசர் பெருமானுக்கோ சங்கீத கவனம். அல்லற்பட்டு ஆற்றாது கசந்து வந்த பழங்குடியினரின் துயர் துடைக்காது மன்னர்பிரான் விருந்துண்டு களித்திருக்க வெளிநாடு பறந்துகொண்டிருக்கிறார். மானங்கெட அங்குள்ளவர்கள் எழுப்பிய வினாக்களை எதிர்கொள்ள முடியாமல் தரையிறங்கி இப்போது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சினிமா வசனம் பேசுகிறார். என்ன சொல்வது இந்த இழிவான அழி வழக்கை... சொன்னால் வெக்கம் சொல்லா விட்டால் துக்கம். இதுவல்ல மக்கள் வேண்டுவது...
வாழ்மானங்கள் தொலைத்த சிறும்பான்மை இனம் எதுவென்ற பொழுதும் அது அதன் நெருக்கடி இல்லாத, இயல்புநிலை கெடாத, அன்றாடங்களுக்குத் திரும்பும்படியான நிவாரண நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்கவேண்டும். வரலாற்றில் நெடிதும் பின்பும் நேர்ந்துவிட்ட பெரும்பிழைகளைக் களையும் படியான தீர்வுகள் காண உரிய வல்லுநர் குழுவை அமைத்து மூன்று இன மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து உற்ற தீர்வு காண வழிவகைச் செய்யவேண்டும்.
வேகும் வீட்டில் பிடுங்கியது லாபம் என்று அப்பாவி பழங்குடியினரை தங்களுக்குள் அடிப்பட்டுச் சாக அனுமதித்தால், மதவாதத்தால் மக்களுக்குள் பிளவு உண்டாக்கி, கலவரங்களை உண்டுச்செய்து அவற்றை வேடிக்கை பார்த்தால், கோடிகளில் புரள தங்களுக்கு வேண்டிய போதை வஸ்துக்கள் வளர்க்க அவர்கள் நிழலடியை அபகரித்து மலினமான அரசியல் செய்தால்...
அறங்கெட்ட ஆட்சி திறன் கெட்டு அழியும்.
---
வேத இதிகாச காலந்தொட்டு இணையப் பெருக்கங்கண்ட இன்றைய காலம் வரை திட்டு திடுக்கென்றால் பொதுவெளியில் பெண்களை மான பங்கப்படுத்துவது, துயிலுரிவது, பாலியல் வல்லாங்கு செய்து கொலை புரிவது போன்ற ஆண்மையற்ற இழிச்செயல்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பது பகுத்தறிவுள்ள ஒவ்வொரு ஆடவனையும் வெட்கித் தலை குனியச் செய்கிறது. அவகேட்டுக்கு ஆளான ஒவ்வொரு தாய்க்குலத்தின் முன் ஆற்றுவது ஒன்றுமில்லாத கையாலாகாத நமது இருப்பு ஒரு பெரிய கேள்விக்குறி? அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை மட்டுமல்ல நிபந்தனையின்றித் தண்டிக்கத்தக்கவையும் கூட.
---
படிக்கட்டுகளில் உறைந்திருக்கும் குருதிக்கறை, குடிக்கும் குடிநீர்க் குவளையில் மூத்திரம், பொது நீர்த்தொட்டியில் கரைக்கப்பட்ட மலம் இவை எல்லாம் மனிதச் சிறுமைகளின் உச்சம். சாதிய வெறிக்கு வேறேதும் சாயங்கள் பூசாமல், வாக்கு வங்கி அரசியல் செய்யத் தலைப்படாமல் நீதி ஒன்றை மாத்திரமே கருதி வருத்தங்கண்ட மக்களுக்கு தடங்கல்கள் ஏதுமின்றி அதை வழங்கவேண்டியது முதல்வரின் தலையாயக் கடமை.
---
நூறு நாட்கள் ஏரி வேலைக்காரர்கள் கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருதல், ஒழுங்கைகளை நிலை திருத்தி செப்பம் செய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார்கள். அத்தோடு அவர்கள் உழக்குடியினருடன் சேர்ந்து விளை நிலங்களைத் திருத்துதல், விதைத்தல், பயிரிடுதல், களையெடுத்தல், அறுவடை என எல்லா உழவர் பணிகளிலும் நிபந்தனைகளேதுமின்றி ஈடுபடுத்தப்பட வேண்டும்.
காலத்தில் வேண்டிய உதவி பணியாட்கள் இன்றி முழுமையான விவசாயம் செய்ய வழியின்றித் தவிக்கும் உழவர்களுக்கு இது உதவியாக இருக்கும். கண் முன்னர் விவசாயம் நசிந்து, அருகி, மறைந்து விடாதபடிக்கு காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நுகர்வோராகிய நமக்கு மெத்த உண்டு.
சூழியல், நீராதாரம் குறித்துச் சிந்திக்கிற யாவரும் அதே முக்கியத்துவத்துடன் உழவுதொழில் மற்றும் அது சார்ந்த உபதொழில்கள் நசிவுற்றுவிடாமல் மீட்டு எடுக்கச் சிந்திப்பது அவசியம். உற்றுழி உதவ உழவர்களுடன் இணைந்து நிற்கவேண்டியது நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.
சூப்பர் மார்கெட்டுகள், மெகா மால்களில் பாடம் செய்து பொதிகளில் வைத்து நிறை விலைக்கு விற்கும் பண்டத்தைப் பகுமானத்திற்கு வாங்கிப் பாவிப்பதற்குப் பதிலாக உழக்குடியினர் விளைவிக்கும் சிறுதானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவர்களாகச் சந்தைப்படுத்தும் எளிய சந்தைகளில் நேரிடையாக அவர்களிடம் வாங்கிப் பாவிக்கும் வழக்கத்தைச் சிரத்தையுடன் நாம் மேற்கொள்ள வேண்டும்.
---
எழுதுவது வாசிப்பது தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார்கள் நம் இலக்கிய கர்த்தாக்கள். இப்போது அவர்கள் வேண்டி விரும்பி முண்டியடித்து மண்டி போட்டுச் செய்யும் பிரதான வேலை விளம்பரங்கள் செய்வது. திரள் கண்ட பக்கமெல்லாம் கொண்டை ஹார்ன் கட்டி தொண்டை வரளக் கத்துகிறார்கள். தரமுள்ள பொருளுக்குத்தான் விளம்பரம் தகுதி. தரங்கெட்டவற்றை விளம்பரஞ் செய்வது மல்லாந்து படுத்து மார் மீது எச்சில் உமிழும் மடமையே அன்றி வேறென்ன?
---
பத்திருபது வருடங்கள் இருக்கும் நிலை கெடாமல் ஓரிடத்தில் இருந்து வாட்டமாய்ப் பிட்டத்தை வைத்துத் தேய்க்கச் சிலாக்கியமான சர்க்கார் உத்தியோகம் போன்றதில்லை இலக்கியத் தளத்தில் களமாடுவது. அங்ஙனமே விருந்தாடி கேளிக்கைக்கு மாத்திரம் வந்து போகிற சமாச்சாரமுமில்லை இலக்கியம் புழங்குவது.
புதியன சிந்தித்தல், இலக்கிய மேம்பாடு, முன்னேற்றம், படைப்பு முனைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு, சோதனை முயற்சி, சொல் காமுறுதல், ஊடாடுவது, உரையாடுவது, விமரிசிப்பது, புதிய போக்குகள் சமைப்பது, இளையவர்தம் படைப்புகளை மதிப்பீடு செய்வது, ஏனைய பிற மொழி/ துறை புழக்கம் பரிவர்த்தனை என்றெல்லாம் ஆழ அகல கால் வைக்கவேண்டியிருக்கிறது.
பதினெட்டு வருடமாக ஒரு ஆகிருதி அவர் பாட்டுக்கு அவர் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று ஆலாபனை செய்கிறார்கள் அவரது அடிப்பொடிகள். நம்ம பாட்டுக்கு நாம எழுதினா அது நம்ம சொந்த டைரியாகத்தான் இருக்கமுடியும்.
எதனுடனும் இடையீடு செய்யவொண்ணாத அந்த இழிநிலை இலக்கியத்தில் இல்லை. தானே பேசி தானே சிரிப்பது பரிபக்குவம். இங்கே குப்பை போடும் எந்தக் கொம்பனுக்கும் அந்தக் கொடுப்பினை கிடையாது.
---
கோடம்பாக்கத்திற்கென்றே பிரத்தியேகமான குணக் கேடுகள் பல உண்டு. அவையாவன ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குவது, அழுக்கைத் திரட்டிப் புழுக்கையாக்குவது, புழுக்கையைப் பொன்னாக்குவது, செத்தையைத் தூக்கி மெத்தையில் வைப்பது...
பொருண்மையில்லாத ஒன்றை கூட்டாகச் சேர்ந்து வெட்டி, ஒட்டி மகத்துவமானதாக்கி விற்றுப் பிழைப்பது வியாபாரமாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கென்றே ஒரு நெறி கண்டவர்கள் நம் தமிழர்கள். அறமெனப்பட்டதே இக வாழ்க்கை என்றானவன். நடிகனுக்கு இருநூறு கோடி சம்பளமாம் ஒரு படத்தில் சமுட்டிப் போட. இட்டுமுட்டு முட்டுவழிக்குப் போகப் பட்ட பாட்டுக்குத் தக்கன கூலிதான் தக்கும். விற்கிறதே, விலை போகிறதே என்று எப்படியும் விற்று முதலாக்கலாமா? ஒன்றுக்கு பத்து லாபமா? யாருடைய பணம் அது? ஒரு நடிகனை மானசீகமாக உறவு கொண்டாடி, வியர்வைச் சிந்தி உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொட்டிக் கொடுத்து அவனை வாழவைக்கிற ரசிகப்பெரு மக்களின் பணமல்லவா அது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைப்பவன், உறவாளியின் உதிரங் குடிப்பவன், பிள்ளைப்பாலில் குறியைத் தோய்ப்பவன் எப்படி அவனுக்கான தலைவனாக இருக்கமுடியும்? இப்படிப்பட்டவர்களையெல்லாம் இனங்கண்டு ஒதுக்க வேண்டும். அன்றேல் மதிகேட்டுக்கு உற்ற மருந்து அன்றுமில்லை இன்றுமில்லை என்றுமே இல்லை.
---
மொழியும் கலையும் புழங்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தமிழ் நாட்டார் நிகழ்கலை கலைஞர்களுக்கு (பொம்மலாட்டம், தோற்பாவை நிழற்கூத்து, தெருக்கூத்து) நிகழ்வுகள் வழி வருமானம் பெற களரி அறக்கட்டளை நடத்தும் தொடர் இணைய நேரலை (FB LIVE) நிகழ்வுகளுக்குத் தங்களை அன்போடு வரவேற்கிறோம். தமிழ் கலையிலக்கிய அமைப்புகள்/ உணர்வாளர்கள் அவை /அவர்கள் நடத்தக்கூடிய விழாக்களில் எங்களுக்கு நிகழ்வு வாய்ப்பு வழங்கியோ (இணைய நேரலை - FB LIVE) அல்லது களரி அறக்கட்டளை நடத்தும் நிகழ்வு களுக்கு இயன்ற நிதியைக் கொடையாக வழங்கியோ தொடர் நிகழ்வுகள் இடையறாது நடக்க உதவ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
ஹரிகிருஷ்ணன்
Shit tweet is sh*t tweet, then is * shit? Shits tweets, shit in tweets what is your tw*et today? Shtting tw*et or tweeting sh*ts? Please don’t sh*t in tweets. Use shit, the word, the whole of it else the flavor of it, a shi*ty flavor. Won’t smell though or those tweets only twe*t is lingo, no takeaways - home or temple. for temples are h*ly - - no not sh*t, I don’t mean that sh*t!! Clear enough, it is a strikingly hard hittingly path breaking truth tellingly journey going great carnival of International World Tour Journalism where the following are saved: ‘Journos’ ‘Sand’ ‘Environment’ Fun fact: you know not what it is, yet you should save it. and ‘some vagarious street dogs.’ We understand you. We know what you a*e. We’re with you, in this tr*th ‘n’ sh*t. But actually, we’re confused what is Sh*t? what is Sh*tty enough? what say you? You Sh*t truth or tr*th is shit? And what is truth anyway? And now your tweet says eat sh*t And Please don’t. No Shame on You, my dear boss! Sh*me on Us! Sh*me on Us!
To the boss - journalist, who the poet was very fond of, who later turned out to be not what she was thought to be or said to be, speaking the truth to power, and ended up not truthful to herself. Anyways, all good for us since truth is dead long back, it's in the compost bin now. RIP Truth!!
p.s.
This poem is to condemn a Journalist’ tweet & reply to a meme, which goes,
“At least they don’t eat sh*t like you! “
Shit is spelled Sh*t on social media (No they don't write Shit). An asterisk could deflect the scent of shit. At least that’s what they think!
சுவிடன் நாட்டவரும், தங்கப்பனை (---) விருதை வென்றவருமான திரை இயக்குநர் ஆஸ்லண்ட் தன்னுடைய படைப்பு செயற்பாடு, சமூகவியல் அறிவாவல்கள் மற்றும் முதன்மை சமூக உயிரியான மனிதனின் மனவிகாரங்கள் பற்றிய அவரது சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
- டெமி கேம்பாகிஸ்
இயக்குநர் ரூபன் ஆஸ்லண்டின் போர்ஸ் மெஜுர்’ 2015ஆம் ஆண்டு வெளியாகி சூழலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய திரைப்படம். அப்படம் வாழ்க்கையை அலுவல்கள் மயமாகவே ஆக்கிக்கொண்ட, விசாரணையே இன்றி அவற்றின்மீது மீது பித்துக்கொண்ட இன்றைய கலாச்சாரத்தை (ஒரு குடும்பஸ்தனின் இருத்தலியல் அடையாள சிக்கல்களின் முப்பட்டகப் பரிமாணத்தின் வழி) கடுமையாக பகடி செய்தது எனில், ‘தங்கப்பனை’ விருதை வென்றுள்ள அவரது ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் நவீன உலகில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இயைந்து
வாழும் சகவாழ்வு அதன் பிரச்சினைப்பாடுகள், செயலாக மாறாத வெறும் கருப்பொருளாகவே நின்றுவிட்ட லட்சியவாத சிந்தனை... இவற்றை எல்லாம் குறித்த வடிவான சித்திரத்தை உறுதிபடத் தீட்டியிருக்கிறது. முந்தைய படம் ஒரு பனிப்பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதியில் ஏற்படும் பனிச்சரிவை அதன் தலைப்பிற்கேற்ப கதாநாயகனின் ஆணாதிக்கத்துக்கு விடப்பட்ட லிட்மஸ் சோதனையாகக் காட்சிப்படுத்தியது என்றால், ஸ்கொயர் திரைப்படம் தனது கேமராக் கண்களால் குடும்ப அமைப்புக்கு அப்பாலான விவகாரங்களைக் கூர்மையாக நோக்குகிறது.
விரியும் அதன் பார்வை, விளம்பரங்கள் மலிந்த மிகை செருக்கு அறிவு செயற்பாடுகள், விவேகமற்ற சுயம் மற்றுமதன் மந்தமான தீவிரத்துவம், நிகழ்காலக் கலை உலகினதும் அதன் உபயதாரர்களினதுமான அறவீழ்ச்சிகள் ஆகியனவற்றின் மீது படர்வதோடு நகர்மய தாராளவாதம் குறித்த பூர்ஷ்வாக்களின் போதாமையுள்ள உணர்திறன் உள்ளிட்டவற்றை விசாரணைக்குட்படுத்துகிறது. இவ்வாறு இதைச் செய்ததன் மூலம் தன் திரைப்படத்தை, சமூக நல்லிணக்கதிற்குப் பதிலாகச் சுயநலனை மட்டுமே பேணி கைக்கொள்ளும் உலக முதலாளித்துவச் சமுதாயத்தின் மீதான காட்டமான விமர்சனமாக ஆஸ்லண்ட் மாற்றியுள்ளார்.
கலை வியாபாரமாக்கப்பட்டதைக் கறாராக விமர்சிப்பதின் மூலம் மக்கள் திரளின் மேல்தட்டைச் சேர்ந்தவர்களின் குறுகிய, பிரயோஜனமில்லாத - நல்லெண்ண அடிப்படையிலான உலகப்பார்வை, ஸ்டாக்ஹோமின் சமூக ஆய்வுகலத்தினுள் அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தில் மற்றவர்களுடைய கடுமையான வாழ்க்கை எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியாமல் அச்சப்பட்டு விதிர்ப்பதை கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது ‘தி ஸ்கொயர்’. ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் தனது 150 நிமிட காட்சி ஓட்டத்தில் இரு வேறு உலகங்களை நமக்கு வழங்கக் காண்கிறோம்: ஒன்று படம் நெடுக பரவலாகத் தோன்றும் புலம்பெயர்ந்தவர்கள், பிச்சைக் காரர்கள் மற்றும் வாழ்நாள் முழுதும் வதிவிடக்கவலைகள் மாத்திரம் வாய்க்கப்பெற்ற நிற்க நிழலடி சொந்தமில்லாதவர்கள் உலகு…
பணமும், பதவியும், கலவியும், அதிகாரமும் அவிழ்க்கமுடியாத வண்ணம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டதும் தான் என்ற அகங்காரத்தால் இயக்கப்படுவதுமான இருக்கப் பெற்றவர்களின் உந்துதல் குமிழ் உலகு இன்னொன்று...
ஸ்டாக்ஹோம் நகரின் எக்ஸ் - ராயல் தற்காலக் கலை அருங்காட்சியகத்தின் தலைமை காப்பாட்சியரான திரைக்கதை நாயகன் கிறிஸ்டியன் ‘தி ஸ்கொயர்’ என்னும் புதிய கலை நிர்மாணத்தை அமைப்பதற்கான பணியை அப்போதுதான் தொடங்கியிருக்கிறான். தி ஸ்கொயர் என்பது அருங்காட்சியகத்தின் முற்றத்தில் கருங்கற்கள் பாவப்பட்ட தரையில் 4 x 4 மீ அளவில் சதுர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு கம்பி அடைப்பு. “நம்பிக்கைக்கும், அக்கறைக்குமான ஒரு சரணாலயம்” என்ற செயல் நோக்கோடு அந்தக் கலைப் படைப்பு நிர்மாணிக்கப்படுகிறது - கனிவு, புரிந்துணர்வு, நம்பிக்கை, பரிவு மற்றும் பரஸ்பர மதிப்பு உள்ளிட்ட சமூக நெறிகளின் குறீயிட்டுப் பருவெளி அது. மிக விரைவிலேயே இந்த அறநெறிகள் கிறிஸ்டியனின் தனிப்பட்ட வாழ்வில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
சாலையில் தாக்கப்படும் ஒரு பெண்ணுக்கு அரை மனதோடு உதவுகிறான் கிறிஸ்டியன். அது பிக் பாக்கெட் அடிப்பதற்கான ஒரு உத்தி என்பதைத் தன்னுடைய மொபைல் போன், பர்ஸ், கஃப்லிங் திருடப்பட்டதை அறிந்தவுடன் தான் உணர்கிறான். தன்னுடைய உடைமைகள் எங்குள்ளன என்பதைத் தன்னுடைய ஐபோன் தடங்காட்டி (GPS) மூலம் உன்னிப்பாகக் கண்காணிக்கும்போது, அது ஸ்டாக்ஹோமின் புறநகரில் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இட்டுச் செல்கிறது. திருடிய நபரின் குடியிருப்பைக் கண்டுபிடிக்க முடியாத கிறிஸ்டியன் தன் உடைமைகளை மீட்க தந்திரோபாயம் ஒன்றை கையாள்கிறான்.
ஏற்படப்போகும் விளைவுகளை அறியாமல் கிறிஸ்டியன் செய்த காரியம் அந்த அடுக்ககத்தில் குடியிருக்கும் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த ஒன்றும் அறியாத ஒரு சிறுவனைப் பாதித்து அவனைக் கடும் கோபத்துக்குள்ளாக்குகிறது. பிழையைக் களைந்து நிலைமையைச் சீராக்கத் தீவிரமாக முயற்சிப்பதற்குப் பதிலாக தன் சுவடுகளைத் தொடர்ந்து பற்றி வரும் அச்சிறுவனை புறக்கணிக்கிறான். ஒரு கட்டத்தில் மிரட்டவும் செய்கிறான். பின்பு குற்றவுணர்வினால் தன் தவறுகளைச் சரிசெய்யவும் முற்படுகிறான். ஆஸ்லண்டின் திரைப்படைப்புகளைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் ஆண்மையின் சிக்கலான பலவீனங்களைத் தொடர்ந்து தன் திரைப்படங்களில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆண்மை குறித்த ஆண்வழி சமூகத்தின் அளவுகோல்கள் (மற்றும் அந்த அளவுகோல்களை எட்ட முடியாதவர்கள்) மீது அவருக்குள்ள ஈர்ப்பை அவர் வெளிக்காட்டுகிறார். அதுவே கிறிஸ்டியனை அவனது குறைகள் மற்றும் இரக்கமற்ற செயல்களைத் தாண்டி சக மனிதனாக அணுக வைக்கிறது.
புலம்பெயர் சிறுவனுடனான இந்தச் சிக்கலை எப்படிச் சரி செய்வது என்ற கிறிஸ்டியனின் தடுமாற்றம் மேட்டுக்குடி முற்போக்கு கலைச் சூழலின் அபூதியான, எந்தச் சலனங்களுக்கும் ஆட்படாத அற இலட்சியவாதத்தில் ஒரு பெரிய பொத்தலை போடுகிறது. தான் அங்கம் வகிப்பதாகக் கனவு காணும் ஒரு சமூக ஒப்பந்தத்துக்கு இரண்டகம் செய்வதும், தன்னுடைய கலை தொழிற் சூழலில் அந்த ஒப்பந்தத்தின் நெறிகளை வழுவாதிருக்க உறுதி பூணுவதும் ஆனால் தன் சொந்த வாழ்வில் அவற்றைத் தேவை கருதி கடைப்பிடிக்காமல் இருப்பதும் அந்தத் தடுமாற்றத்திற்கான காரணமாக அமைகிறது.
ஆனாலும் கிறிஸ்டியன் கருணையே இல்லாத இதயமற்ற நடுத்தர வர்க்கத்தினன் அல்ல. தன்னுடைய உடைமைகளும், பணமும் அவனுக்குத் திரும்பக் கிடைக்கும்போது ஆனந்தத்தில் அப்பணத்தின் பெரும் பங்கை அவன் வீடற்ற நபருக்குக் கொடுக்கிறான். இதே போல் தருணம் பின்பு வரும் காட்சியிலும் அமைகிறது. ஆனால் அப்போது கிறிஸ்டியன் மன அழுத்ததிலும், அகச்சிந்தனையில் ஆழ்ந்து இருந்ததாலும் அந்தப் பிச்சைக்காரனை முழுதாகப் புறக்கணிக்கின்றான். இந்தத் தருணம் இன்னொன்றையும் நினைவுப்படுத்துகிறது. அந்தப் பிக்பாக்கெட் பெண்மனியை ‘காப்பாற்றியப்’ பின் கிறிஸ்டியனுக்கு ஏற்பட்ட தன் மனநிறைவு அளிக்கக்கூடிய அட்ரிணலின் சுரப்பு ஒரு கேள்வியை எழுப்புகிறது. உண்மையில் பிறர்நலன் பேணுதல் என்ற ஒன்று உண்டா?
அல்லது அது நிபந்தனைகளுக்கு உட்பட்டதா? சக மனிதனுக்கு உதவுவது என்பது ஒருவருக்கு இதயத்தில் துளிர்க்கும் கருணையினாலா அல்லது சௌகரியமான சூழலிலும், இரு தரப்புக்கும் நலம் பயக்கும்போதும் மட்டும்தானா? இந்தச் சமூகம் தன்னலமின்மை என்னும் கருத்தாக்கத்தைக் குறித்து யோசிக்க நேரமில்லாத பேய்மனம் கொண்ட, பொருள்முதல்வாதத் தன்மையுடைய, நார்சிஸ குணமுள்ள ஒன்றாக மாறிவிட்டதா? இக்கேள்விகளை முன் வைப்பதன் மூலம் சகமனிதனை வெறுக்கும் ஒன்றாகத் தன் கண்முன்னே இச்சமூகம் மாறி வருவதை ஆஸ்லண்ட் குறிப்பால் உணர்த்துகிறார். அத்தனை ஊடாட்டங்களும் (எவ்வளவு நெருக்கமான, மென்மையான ஒன்றாக இருந்தாலும்) சுயநலன் சார்ந்ததாகவும் அதே நேரத்தில் குற்றம் நாடுகின்ற சந்தேகத்துடனேயே அணுகப்படுகின்றன. சமூக இயக்கவியல் குறித்த இந்தப் பரிவர்த்தனைச் சார்ந்த பார்வையைக் கிறிஸ்டியனின் கலவிக்குப் பின்பான வெடிச்சிரிப்பை உண்டாக்கக் கூடிய காட்சியில் இன்னும் வடித்துக் காட்டுகிறார் ஆஸ்லண்ட்.
அக்காட்சியில் கிறிஸ்டியன் ‘ஒரு இராக்கூடலில்’ ஈடுபட்ட பெண் தன் விந்தணுக்களைக் கர்ப்பம் தரிக்கப் பயன்படுத்திவிடுவாள் என்ற சந்தேக அச்சத்தில் கலவிக்குப் பயன்படுத்தப்பட்ட ஆணுறையைக் கொடுக்க மறுத்து அவளோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றான். ஈகோ, ஆஸ்லண்டின் உலகத்தில் வெல்ல முடியாத சக்தியாக உள்ளது. இவை ஒருபுறம் நடந்துக்கொண்டிருக்க, ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணத்தின் துவக்கவிழாவிற்காகக் கிறிஸ்டியனும் அவனது காப்பாட்சியாளர்கள் குழுவும் தயாராகிக்கொண்டிருக்க, அவனுடைய செய்தித்தொடர்பு அணி நிறைந்த பிரபல்யம் பெறவேண்டி உருவாக்கி வெளியிட்ட கொடூரமான மற்றும் சர்ச்சையேற்படுத்தக்கூடிய (கிறிஸ்டியன் அறியாத அனுமதியளிக்காத) யூடியூப் காணொளி பொதுமக்களிடமிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பை பெற்றிருக்கும் செய்தியை அறிகிறான். அதிர்ச்சியளிக்கக்கூடிய அந்தக் காணொளியின் உள்ளடக்கம், சமூக அக்கறையின்மை குறித்த கடுங்குற்றச்சாட்டாக உருக்கொள்கிறது. நாணங் கொள்ள வேண்டிய இந்தப் பரபரப்புக்கான பசியை நிலைபெறச்செய்வதில் ஊடகம் மற்றும் பொதுமக்களின் கூட்டுக் கரங்களுக்கிருக்கும் பங்கு குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.
விளக்கங்கள் ஏதுமின்றி கண்ணியம், விலக்கப்பட்டவை உள்ளிட்டவற்றின் எல்லைகளை மீறுவதற்கான ஆஸ்லண்டின் நாட்டம் இதில் பூரணமாகவும் பிரகாசமாகவும் வெளிப்படுகிறது. இது போன்ற சிற்றின்ப காட்சிகளைப் பார்க்கும் போது தங்களின் எதிர்வினை என்னவாக உள்ளது என்ற கேள்வியைத் தாங்களே எழுப்பிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பார்வையாளர்களுக்கே சவால்விடும் வகையில் அந்தக் காணொளி உருவாக்கப்பட்டிருப்பதும், அந்த நோக்கத்தின் துணிச்சலும் கொஞ்சம் கூடுதலான பெருநகைப்பிற்கு உள்ளாகிறது. தி ஸ்கொயர் கலை நிர்மாணத்தின் பொன் விதியால் செலுத்தப்படும் கனவுலக லட்சியவாதத்திற்கு ஒரு கடுமையான கண்டனமாக இது அமைகிறது. இதன் மூலம் உணர்ச்சிகளற்று மாயையில் இருக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில், தற்கால மேற்குலக நாடுகளின் ஒரு பெருநகரில் இது போன்ற இனிமையான ஒரு சமூக ஒழுங்கை அடைவது சாத்தியமா என்பதைப் பரிசீலிக்கத் தன்னுடைய பார்வையாளர்களை ஆஸ்லண்ட் நிர்பந்திக்கிறார். மனதை வதைக்கும் முரண்நகையாக அந்தச் செய்தி தொடர்புக் குழுவின் பரப்புரை இறுதியில் மிகப் பெரிய வெற்றியடைவதுதான் இந்தக் காட்சியில் உள்ள விமர்சனத்தை மேலும் கூர்மைப்படுத்துகிறது. அது வெற்றிகரமாக முன்னிறுத்தும் கலையின் நேரெதிர் கருத்துருவமாக அந்தக் காணொளியே அமைகிறது இந்தப் படிமங்கள் நம்மைச் சீண்டக்கூடிய, குலைக்கக்கூடிய வகையில் இருந்தாலும், மிகச் சிறப்பாகப் புனையப்பட்ட தீவிரமான, சர்ரியல் தன்மையுடைய, தனித்துவமான வேறொரு காட்சி உள்ளது.
திரைப்படத்தின் ஒரு பகுதியில் ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணத்தின் தொடக்கவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஓலெக் என்ற பெயர் கொண்ட நிகழ்த்துக்கலைஞன் குரங்கைப்போல் நடித்து ஒரு பெருவிருந்துக்கூடத்தில் உள்ள செல்வச் செழிப்பான புரவலர்களுடன் ஊடாடுகிறான். அக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள டெர்ரி நோட்டரி ஒவ்வொரு அசைவையும், சத்தத்தையும், முகப் பாவனையையும் ஆணி அறைந்தாற் போல் இயல்புக்கு மீறிய துல்லியத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புரவலர்கள் இந்தப் புதிரான விந்தை நிகழ்வை முதலில் ஆர்வத்துடனும், அருவருப்பான குழப்பத்துடனும் உற்றுநோக்குகிறார்கள். குரங்கு, புரவலர்களில் சிலரை தாந்தோன்றியாகத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் அச்சமேற்படுத்தும் வேட்டைக்குணத்துடன் ஊடாடத் தொடங்கியவுடன் விரைவில் அரங்கமே எளிதில் புலப்படக்கூடிய அசௌகரியத்திற்கும் இறுதியாகப் பயத்திற்கும் உள்ளாகிறது. இந்த நிகழ்த்துதலை அரங்கேற்றச் சொல்லி அது நிகழும்போதே படப்படிப்பை செய்துள்ள ஆஸ்லண்ட் நமக்கு ஐந்து நிமிடம் மூச்சு விடுவதற்கு இடம் கொடுக்கிறார். அது தவிப்பூட்டும், நெளியச்செய்யும் அதிர்ச்சிகரமான, அவல நகைச்சுவையின் மேல் மிதக்கும் நிகழ்த்துக்கலை படைப்பாக இறுதியில் முடிகிறது. இக்காட்சியில் பின்னணி இசையே இல்லாதிருப்பது இதிலுள்ள மூழ்கடிக்கும் இறுக்கத்துக்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது.
இது கவனமீர்க்கும் சினிமாத்தனங்களை அக்காட்சியிலிருந்து நீக்கி திரைப்படப் பார்வையாளர்களையும் அந்தப் பெருவிருந்துக்கூடத்தில் அமரச்செய்கிறது. மேலும் ஒவ்வொரு பார்வையாளனையும் நடப்பவற்றை மறைவாக ஒளிந்திருந்து பார்ப்பவனாக மாற்றி, நடப்பவற்றுக்கு உடந்தையானவனாகவும், காட்சி மற்றும் ஒலி சார் அனுபவங்கள் மூலம் விருந்தில் கலந்துக்கொண்டுள்ள புரவலர்கள் பெறும் அதே அனுபவங்களைப் பெறுபவனாகவும் மாற்றுகிறது. பார்வையாளர்களைத் தொடர்புப்படுத்தும் வகையில் அமைத்து அதைப் படமாக்கி, இது போன்ற ஒரு தொந்தரவு தரக்கூடிய சூழலில் நாம் எப்படிச் செயல்படுவோம் என்ற கேள்வியை நமக்கு எழச்செய்கிறது. புனைவு என்ற எண்ணத்தைப் பார்வையாளர்களின் மனதிலிருந்து நீக்குவதன் மூலம் பரீட்சார்த்த குறும் படத்துக்கான கனத்தைப் படத்தின் இப்பகுதி பெறுகிறது.
இதன் மூலம் திரைப்படத்திற்கும், திரைப்படத்தைக் காண வருபவர்களுக்குமான சமூக ஒப்பந்தத்தைச் சத்தமே இல்லாமல் ஆஸ்லண்ட் மீறுகிறார். இக்காட்சி தொடர்ச்சியாக ஒரே திசையில் பதற்றத்தை அதிகரித்து உச்சஸ்தாதிக்கு இட்டுச்சென்று அதிகாரமிக்கச் செல்வாக்கான நயநாகரிக செல்வந்தர்களின் சொகுசான, தூய்மையான, கண்ணியத்தைக் குத்திக் கிழிக்கிறது. தற்காத்துக் கொள்வதற்கான மிருக உள்ளுணர்வினால் ஒரு கண்ணியமான சமுதாயம் எவ்வளவு வேகமாகக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகத்தில் இறங்கும் என்பதை, நினைவுப்படுத்தும் விதமாகவும் இக்காட்சி அமைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் நம்மைச் சீண்டுவதாகவும், சிந்தையில் ஆழ்த்தும் பகடியாகவும், கலாப்பூர்வமான கொள்கை விளக்க அறிக்கையாகவும், மனித குணங்களின் ஆய்வாகவும், சமூகவியல் சிந்தனையின் பரிசோதனையாகவும் மற்றும் ஒரு நிகழ்த்துக்கலைப் படைப்பாகவும் விளங்கும் ஆஸ்லாண்டின் தி ஸ்கொயர் திரைப்படம், அபத்தமே நவீன மனிதனின் நிலையாக இருப்பதை, பாதிப்பை உண்டாகக் கூடிய, விசித்திரமான, வழக்கத்துக்கு மாறான பார்வையில் அணுகுகிறது. அவருடைய வழக்கமான அகல சட்டகங்களால் ஆன காட்சிகள் மற்றும் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்ட கேமரா, கட்டிடங்களின் மாசற்ற உட்பகுதிகளின் (கிறிஸ்டியனின் வீடு மற்றும் அருங்காட்சியகம்) மீதான ஓர்நிலை, ஒவ்வொரு சட்டகத்துக்குள்ளும் இருக்கும் காலியான அகன்ற வெண்ணிற இடங்கள் மீதான கவனத்தை அதிகரிக்கிறது. இது கருத்துரு கலையின் (Conceptual Art) சலிப்பூட்டும் மினிமலிசதன்மை மற்றும் ஒரே மாதிரியான சிக்கனத் தன்மையை அழகியலோடு பாவிக்கும் அணுகுமுறை. பொதுவெளி மற்றும் தனிமையில் மனிதனின் போக்குகள் குறித்தான ஆஸ்லண்டின் ஆர்வம் இத்திரைப்படத்தில் நகைச்சுவை, அதிர்ச்சி மதிப்பீடுகள் மற்றும் நம் மனதை எளிதில் இலகவைக்கும் உணர்வுகளையும் அகழ்ந்தெடுக்கிறது.
மீண்டும் அவர் பார்வையாளர்களைத் தி ஸ்கொயர் கலை நிர்மாணத்தின் சமூக நெறிகளைத் தூக்கிப்பிடிப்பதில் அவர்களுக்குள்ள குடிசார் பொறுப்புகளையும், தனி மனித அறிவில் உள்ள சுயம், நன்மை உள்ளிட்டவை எப்படிச் சமூகத்தின் கூட்டு நனவுநிலையோடு ஒத்துப்போகிறது என்பதையும் பரீசிலிக்க அழைப்பு விடுக்கிறார். ஸ்டாக்ஹோமை காற்று உட்புகாத சொகுசான வாழ்க்கைச் சூழல் கொண்ட நகரமாகச் சித்தரிப்பதன் மூலம், அந்நகரின் மாசுநீக்கப்பட்ட அதிநவீனத்தையும், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மனிதர்களை ஒன்றிணைக்கும் அதன் உள்ளார்ந்த மற்றும் முண்டு முடிச்சுகள் நிறைந்த பழமைவாதத்தையும் அடுத்தடுத்து வைத்து ஒப்புமைபடுத்திக்காட்டுகிறது ‘தி ஸ்கொயர்’. இந்தத் தனிமனித நலனுக்கும், சமூக எதிர்ப்பார்ப்பிற்கும் இடையே உள்ள ஒரு இருத்தலிய பொறிதான் இறுதியில் இப்படத்தின் மனமும் ஆன்மாவுமாகிறது.
‘தி ஸ்கொயர்’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியானதைத் தொடர்ந்து அதன் இயக்குநரை நான் நேர்காணல் எடுக்கும் இனிமையான வாய்ப்பை பெற்றேன். அவருடைய படைப்புச் செயல்பாடு, சமூகவியல் அறிவாவல்கள், உள்ளார்ந்த முன் முடிவுகள் மற்றும் கேன்ஸ் பார்வையாளர்கள் அவர்கள் இருக்கையில் இருந்துக்கொண்டே நெளிவதைக் காணும் மீகுறுகுறுப்பு உள்ளிட்ட அனைத்தையும் பற்றிய அவரது எண்ணங்களை அறிந்துகொள்ள முடிவெடுத்தேன்.
கேம்பாகிஸ்: ஸ்வீடனில் 1950களில் வளர்ந்த உங்கள் தந்தை கூறிய கதைகள் அளித்த உந்துதலின் பேரில் நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு படைத்த ஒரு கலை நிர்மாணமே இந்தப் படத்துக்கான கருவாக அமைந்தது என்பது உண்மையா?
ஆஸ்லண்ட்: ஆம் மற்றும் இல்லை. ஸ்டாக்ஹோமின் மத்தியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடைபெற்ற தொடர் திருட்டுகள் அளித்த அக வெழுச்சியே இந்தத் திரைப்படம் உருவாவதற்கான காரணம். நிறைய நபர்களுக்கு அதில் தொடர்பிருந்தது. அவர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் அந்த வழக்கின் ஆவணங்கள் முழுவதையும் நான் வாசித்த பின்புதான் வயது வந்தவர்களின் பங்கு என்பது எப்போதாவது தான் அதில் இருந்திருக்கிறது. முழுக்கச் சிறுவர்களால் நடத்தப்பட்ட ஒன்று அது. இதற்காகப் பெரியவர்களிடம் எந்த உதவியும் அவர்கள் கோரவில்லை. நான் என் தந்தையிடம் இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசினேன். அவருக்கு ஆறு வயதானபோது பெயரும், முகவரியும் தாங்கிய சின்னச் சிட்டையை அவரது கழுத்தில் மாட்டி ஸ்டாக்ஹோமின் மையத்திற்கு அவருடைய பெற்றோர்கள் அவரைத் தனியாக விளையாட அனுப்பி வைப்பார்கள் எனச் சொன்னார். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் பெரியவர்கள் உதவுவார்கள் என்று 50களில் நம்பப்பட்டது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இன்று நாம் சகமனிதனை ஏறத்தாழ ஒரு அச்சுறுத்தலாகப் காண்கிறோம். நம் மனப்பாங்கில் ஏற்பட்ட இந்த மாற்றமே ஒரு மாநகரின் மையத்தில் இந்தத் திருட்டுகள் யாருடைய தலையீடும் இல்லாமல் தொடர்ந்து நடந்துள்ளன என்பதற்கான காரணம். அதாவது குழந்தைகளின் உலகமும், பெரியவர்களின் உலகமும் வெவ்வேறு பிரபஞ்சத்தில் இருப்பதைப் போல் இந்நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இதைக் கருவாக வைத்தே நானும் என் நண்பர் ஒருவரும் இணைந்து ஒரு குறியீட்டுத் வெளியை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டோம். ஒரு சக மனிதனாக நம்முடைய பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும், சாலையில் உள்ள பாதசாரிகள் கடக்குமிடத்தைப்போல் மிக எளிய ஒன்றாக அது இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். நாம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும், சக மனிதன் மீது நம்பிக்கைகொள்ளவும் நம்மை நினைவுபடுத்தும் ஒரு குறியீட்டு வெளியாக அது இருக்கவேண்டும் என்றும் விரும்பினோம். அதாவது நம் சமூக ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் ஒரு முயற்சி.
கேம்பாகிஸ்: இந்தச் சதுர வடிவ அடைப்பை முதலில் நிறுவும்போது அதை ஒரு கலை நிர்மாணமாகக் கருதி நீங்கள் படைக்கவில்லை என்பதாகத் தெரிகிறது. நீங்கள் முதலில் என்ன நோக்கத்தில் அதை அமைத்தீர்கள்?
ஆஸ்லண்ட்: முன்பு நான் அதை ஒரு கலைப் படைப்பாகப் பார்க்கவில்லை. மாறாக ஒரு போக்குவரத்துக் குறியீடாகத்தான் பார்த்தேன். அதை நான் ஒரு மனிதம் கூடிய போக்குவரத்து குறியீடு என்றுதான் சொல்லி வந்தேன். ஆனால் எனக்கும் என் நண்பனுக்கும் கலை அருங்காட்சியத்திலிருந்து அழைப்பு வந்தவுடன் அது ஒரு கலைப்படைப்பாகத் திடீரென்று மாறிவிட்டது. (சிரிக்கிறார்)
கேம்பாகிஸ்: பொதுவில் இருப்பதைவிடத் தனிமையில் மனிதர்கள் வேறு மாதிரி நடந்து கொள்வதன் (நாம் கிறிஸ்டியனின் கதாபாத்திரத்தில் பார்ப்பதைப் போல) மீதான ‘தி ஸ்கொயரின்’ தீவிர நாட்டத்தைப் எடுத்துக் கொண்டோமானால் உங்களுடைய ஸ்கொயர் நிர்மாணத்துக்கும், சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடத்துக்குமான ஒற்றுமைகளைப் பரிசீலிப்பது சுவாரசியமாகப்படுகிறது. இரண்டுமே குடிசார் பொது நடத்தையை வலியுறுத்த கோடிட்டு வரையரை செய்யப்பட்டப் பருவெளிகள். குறியீட்டு வெளிகள் மற்றும் பருவெளிகள், பொது மற்றும் தனி இவற்றின் இடையேயான பரஸ்பர உறவு குறித்த இருமை படப்பிடிப்பின் போதே உங்களுடைய மனதில் தோன்றியதா?
ஆஸ்லண்ட்: எனக்கு இந்த இருமைகள் எப்போதுமே ஒப்புமைக்கு உரியதாகவே இருக்கின்றன. ஏனென்றால் பாதசாரிகள் கடக்கும் இடம் நீங்கள் எங்கே நடக்கவேண்டும் என்பதைச் சொல்லும் முற்றிலுமான ஒரு பருவெளி. தி ஸ்கொயரும் அதை ஒத்ததே. நியூயார்க் நகருக்குள் வந்தீர்களென்றால் அங்கு நம் மனிதத்தை நினைவுக்கூர ஒரு சதுரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தச் சதுரத்தின் எல்லைகளைத் தாண்டியும் அந்நகரில் பாதிப்பை அது உண்டாக்கும். ஆனால் தி ஸ்கொயர் (கலை நிர்மாணத்தை) பற்றி நீங்கள் சிந்தித்தீர்கள் என்றால் “இந்த நெறிகளெல்லாம் நிலைத்திருக்கும் ஒரு பருவெளியோ, குறியீட்டு வெளியோ நமக்கு உண்மையில் தேவைதானா? அவை ஸ்கொயருக்கு வெளியே அல்லவா உள்ளன?” என்ற கேள்வி எழும். அதுதான் தி ஸ்கொயரை பார்த்தவுடன் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று.
கேம்பாகிஸ்: தற்காலக் கலையுலகப்போக்கை பொறுத்தவரை அவை புதிய கேள்விகளைக் கேட்கத் தூண்டுவதில்லை என நீங்கள் முன்பு கூறியிருந்தீர்கள். ஆனாலும் நீங்கள் முன்வைத்த கேள்விகளைக் கேட்பதற்கான சரியான இடமாக அக்கலை உலகைத்தான் ‘தி ஸ்கொயர்’ திரைப்படம் கருதுவதாகத் தெரிகிறது. சமூக நெறிமுறைகள் மற்றும் மனிதனின் நடத்தைகள் குறித்த உங்களின் தேடுதலில் அந்தக் குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அவ்வப்போது வெளிப்படும் பாசாங்குகளைக் குத்திக்காட்டுவதும் உங்கள் நோக்கமா?
ஆஸ்லண்ட்: தற்காலக் கலையுலகை என்னுடைய திரைப்படத்திற்கான பின்னணியாகப் பயன்படுத்துவதுதான் என்னுடைய எண்ணம். போர்ஸ் மெஜூரில் ஒரு பனிச்சறுக்கு உல்லாச விடுதியை அக்குடும்பத்தில் நடப்பவற்றிற்கான பின்னணியாகப் பயன்படுத்தியதைப்போல. இத்திரைப்படத்தில் என்னுடைய முக்கிய நோக்கம் கலை உலகை விமர்சனம் செய்வதல்ல, மாறாகத் தி ஸ்கொயரின் எண்ணங்களை வைத்து ஒரு உரையாடலை ஏற்படுத்துவதே. ஒரு கலை அருங்காட்சியகத்தில் இந்த எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கமுடியும் என்பது எதார்த்தம்.
ஆனால் இப்படத்துக்கான தயாரிப்புகளின்போது நான் வெவ்வேறு தற்காலக் கலை அருங்காட்சியகங்களுக்குப் பயணப்பட்டேன். நான் பார்த்தவை எல்லாம் ஒன்று போலவே இருந்தன. சுவரில் ஒரு நியான் விளக்குக் குறியீடு, வார்ஹோலின் ஒரு படைப்பு, தரையில் இரண்டு பொருட்கள், ஆனால் அங்கு வருபவர்கள் முழுக்கக் கலையிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கலைக்கும் அருங்காட்சியகச் சுவர்களுக்கு வெளியே உள்ள உலகத்தில் நிகழ்பவைக்கும் எந்தத் தொடர்பையும் என்னால் காண முடியவில்லை. அதனால் ஆம் அதைத்தான் நான் விமர்சனம் செய்ய விரும்பினேன். இன்னும் சொல்லப்போனால் தாக்க விரும்பினேன்.
கேம்பாகிஸ்: இத்திரைப்படம் நிகழ்த்துக்கலையின் ஒரு சமூகவியல் படைப்பாக இரட்டிப்பாகும் என்ற நோக்கில் இதை நீங்கள் அணுகினீர்களா?
ஆஸ்லாண்ட்: குரங்கை போன்ற நிகழ்த்துதலை பொறுத்தவரை அதைத்தான் திட்டவட்டமாகச் சிந்தித்தேன். நீங்கள் சொல்வது சரியாக அந்தக் காட்சியைத்தான் என்று எண்ணுகிறேன். எனக்குச் சமூகவியல் மிகவும் விருப்பம். ஏன் என்றால் நாம் தோற்றாலும் மனிதர்களை மனிதத்தோடு பார்ப்பதற்கான வழி அதில் உள்ளது. தனி மனிதனை நோக்கி விரல் நீட்டி “நீ தவறிழைத்துவிட்டாய்” எனச் சொல்வதல்ல சமூகவியல். நாம் தவறிழைப்பதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தித்தந்த அமைப்பை அவதானித்து அதிலிருந்து கொஞ்சம் புத்தியைக் கற்றுக் கொள்வதுதற்கான முயற்சியே சமூகவியல். குறிப்பிட்ட தனிநபரின் மேல் கவனத்தைக் குவிக்காமல், மனித போக்குகளைப் பரிவுடன் அவதானிப்பதற்கான வழி. இதை நாம் தற்போது வாழும் காலத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இது அதிகமாகத் தனி மனிதனை பற்றியதாக உள்ளது. விரல்களை நீட்டி, குற்றவுணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. (சிரிக்கிறார்). எனக்கு இது தனிநபரை சரியான கருத்தாக்கத்தில் வைத்து பார்க்காத அமெரிக்கக் கலாச்சாரத்தோடு ரொம்பவும் பொருந்திப்போகிறது. அங்கு யார் வேண்டுமானாலும் அதிபர் ஆகலாம். ஒவ்வொருவரும் அவரவருடைய செயல்களுக்குப் பொறுப்பு என்ற வகையில் அக்கலாச்சாரம் உள்ளது.
கேம்பாகிஸ்: இந்தப் படத்தை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் சமுதாய எதிர்பார்ப்புகளுக்கும், தனி மனித விருப்புகளுக்கும் இடையேயான பதற்றத்தை ஆய்வதில் விருப்பமாக உள்ளது போல் தோன்றுகிறது.
ஆஸ்லண்ட்: இத்திரைப்படத்தின் நோக்கங்கள் என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்க நான் முயற்சித்தால் மீண்டும் ’தி ஸ்கொயர்’ எப்படி இச்சமூகத்தைப் பற்றிய உலகளாவிய கேள்விகளை எழுப்புகிறது மற்றும் என்ன மாதிரியான சமுதயாத்தை நாம் விரும்புகிறோம் என்பதற்கு என்னை இட்டுச்செல்கிறது. இது ஒரு விரிவான தலைப்பு. இந்தக் கதைக்கருவை நான் முதலில் சமுதாய அளவில் அணுக விரும்பினேன் - “இந்தப் பொதுச் செயல்திட்டத்தை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?” - அதே நேரத்தில் இதைத் தனி மனித அளவிலும் நான் அணுக விரும்பினேன். கிளாஸ் பாங்கின் கிறிஸ்டியன் கதாபாத்திரத்தை பல்வேறு அறதடுமாற்றங்களுக்கு இட்டுச் சென்று சவாலுக்கு உட்படுத்தினேன். அதே நேரத்தில் இந்தச் சமூகக் கலை செயல்திட்டத்திலும் அவனை ஈடுபடுத்தினேன். ஏன் என்றால் இது எனக்கே நான் விடுத்துக்கொண்ட சவால். இது போன்ற தருணங்களில் நான் மனித நெறிகளை வழுவ தவறிவிடுவேனா?
கேம்பாகிஸ்: உங்கள் கருத்தை வைத்துப்பார்த்தோமானால், தி ஸ்கொயர் அதன் உலகப்பார்வையில் மிகுந்த மனிதத்தன்மை கொண்டதாக உள்ளது. அதே நேரத்தில் அந்தக் குரங்கு காட்சியில் கடுமையான மிருகத்தன்மையுடையதாகவும் உள்ளது. அத்தருணத்தில் ஏதேனும் குறிப்பிட்ட சமூக நிகழ்வு அல்லது போக்கை விசாரணை செய்ய விரும்பினீர்களா?
ஆஸ்லட்ண்ட்: நிச்சயமாக... ‘வேடிக்கைப்பார்ப்பவன் விளைவை’ (Bystander Effect) மையமாக வைத்து எடுக்கப்பட்ட அக்காட்சி ஒரு பின்னணி குரல் அறிவிப்போடு தொடங்குகிறது. “நீங்கள் விரைவில் ஒரு வனவிலங்கை எதிர்கொள்ளப்போகிறீர்கள்…” நாம் எல்லோருக்கும் தெரிந்தைப்போல, வேட்டையாடும் உள்ளுணர்வு பலவீனத்தின் மூலம் தூண்டப்படும்.” இது மனிதர்களுக்கும் பொருந்தும். பள்ளியில் சக வகுப்புதோழன் ஒருவன் பலகீனமானவனாகத் தெரிந்தால் அவனை ஒரு கும்பலே குறிவைப்பது உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? மந்தையிலிருந்து ஒருவரை இப்படித் தேர்ந்தெடுப்பது என்பது மிருகக்குணம். நீங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினீர்கள் என்றால் அதை மிருகம் உணர்ந்துவிடும். ஆனால் அசையாமல் மந்தைக்குள் ஒளிந்துக்கொள்ள முயற்சித்தால் வேறு யாரேனும் ஒருவர் இரையாக வாய்ப்புண்டு. அதனால்தான் அச்சப்படுக்கூடிய ஒரு விஷயம் நடைபெறும்போது எதுவும் செய்யாமல் நாம் முடங்கிபோகிறோம். ஏன் என்றால் “என்னை விட்டுவிடு, வேறு யாரையேனும் கொல்” என்று எண்ணுகிறோம்.
இந்நடத்தையைச் சுட்டிக்காட்டுவதற்கு அக்காட்சியின் அமைப்பு மிக எளிதாக இருக்கவேண்டும் என விரும்பினேன். கவுண் மற்றும் டக்ஸிடோ அணிந்துக்கொண்டு அந்நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள புரவலர்கள் அனைவரும் குரங்குபோல் நடிப்பவரை எதிர் கொள்ளவேண்டும்.
இப்படம் கேன்ஸ் போட்டியில் திரையிடப்படுவதை எண்ணி உண்மையிலேயே அகமகிழ்கிறேன். அங்கே மற்றொரு டக்ஸிடோ அணிந்த பார்வையாளர்கள் படத்திலுள்ள கதாபாத்திரங்களின் அனுபவங்களைக் காணும்போது தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போன்று உணர்வார்கள். (சிரிக்கிறார்) பிறகு குரங்கைப் போல் நடிப்பவர் உள்ளே வருவார். தலைமை ஆணை அடித்து விரட்டுவார். பிறகு இனப்பெருக்கம் செய்யும் நோக்கில் ஒரு பெண்ணை அணுகுவார். (சிரிக்கிறார்) இறுதியில் அங்கிருந்த அனைத்துத் தூய்மை உள்ளம் படைத்த மனிதர்களும் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களாவார்கள்.
கேம்பாகிஸ்: அக்காட்சி கேன்ஸ் பார்வையாளர்களின் அனுபவத்தோடு தொடர்புடையதாக உள்ளது, படப்படிப்பின்போதே அக்காட்சியின் மீஎதார்த்தத்தை நீங்கள் பரிசீலித்தீர்களா? உதாரணமாகத் திரைப்படத்தைக் கூட்டத்தோடு காண்பதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மற்றும் தனிநபர் அனுபவம் இரண்டுக்கும் உள்ள வேற்றுமை படைப்பாக்கத்தின் போது உங்கள் எண்ணத்தில் இருந்ததா?
ஆஸ்லண்ட்: ஒருவர் திரைப்படத்தைத் தனியாக அமர்ந்து காண்பது என்ற எண்ணம் எனக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. ஏன் என்றால் அவர்கள் நகைச்சுவையை ஒரே மாதிரி உணரமாட்டார்கள். நீங்கள் மற்றவர்களோடு ஒன்றாக அமர்ந்து காணும்போது அந்த அனுபவம் எப்படி இருக்குமென்றால் “நான் இதற்குச் சிரிக்க அனுமதி உண்டா? ஓ சரி. நான் சிரிக்க வேண்டும்!” அது ஒரு விடுதலை. திரைப்படத்தைத் தனியாகக் காண்பது கடினமானதாகவும், தீவிரமானதாகவும் தெரிகிறது. இது ஒரு முக்கியமான மற்றும் தீவிரமான தலைப்பு என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் இதை உண்மையில் மற்றவர்களை மகிழ்விக்கும் வகையிலும், கட்டற்ற முறையிலும் செய்யவேண்டும் என்றே விரும்பினேன்.
கேம்பாகிஸ்: நீங்கள் நீச்சயமாக அதைச் சாதித்துவிட்டீர்கள்! நான் தொடர்ந்து அந்தக் காட்சிகளைச் சுட்டுவதற்கு காரணம் உள்ளது (சிரிக்கிறார்) ஏன் என்றால் அது ஒரு புதிய அலை காட்சியாக இருந்தது. ஒரே நேரத்தில் புதிரானதாகவும், வேடிக்கையாகவும், அசௌகரியமான காட்சியாகவும் அது வெற்றியடைந்திருக்கிறது. அக்காட்சி முழுவதும் நான் சிரிப்பதா, கவலைப்படுவதா அல்லது அச்சமுறுவதா என்ற திகைப்பிலேயே இருந்தேன். அந்த நிகழ்த்துதலின்போதே படப்படிப்புச் செய்வதுதான் இதைப்போன்ற நீடித்த பதற்றத்தையும், அசௌகரியத்தையும் உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நினைக்கிறீர்களா?
ஆஸ்லாண்ட்: சிறிதளவு. ஆம். சில வருடங்களுக்கு முன்பு “வங்கியினருகில் ஒரு சம்பவம்”. என்ற குறும்படத்தை எடுத்தேன். அந்தப் படப்பிடிப்புக்கு எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது என நினைக்கிறேன். ஒரு தோல்வியடைந்த வங்கிக்கொள்ளையை நான் நேரில் கண்டேன். அந்தக் கொள்ளை முயற்சியைக் கவனமாக அப்படியே மீட்டுருவாக்கம் செய்ய விரும்பினேன். அது மிகச் சிறிய நிகழ்வு அதே நேரத்தில் உணர்ச்சிகரமானது. ஒரு நிமிடம் துப்பாக்கிகள் காணாமல் ஆனவுடன், அடுத்து நாங்கள் கொள்ளையைப் படம்பிடிக்கப் பயன்படுத்திய செல்போன் கேமராக்களில் போதுமான அளவு ஸூம் செய்யமுடியவில்லை என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தோம். இது ஒரே நேரத்தில் முழுக்க அபத்தமான, மதிப்பற்ற மற்றும் நாடகத்தன்மையான ஒன்று. ஒரு நிகழ்வு நிகழும்போது சிறந்த விஷயம் என்னவென்றால் அதில் உங்கள் செயல்பாடுகள் வெவ்வேறு படிநிலைகளில் மதிப்பிடப்படாது மாறாக அனைத்தும் ஒரே தளத்தில் உணரப்படும்.
கேம்பாகிஸ்: போர்ஸ் மெஜூர் திரைப்படத்தைக் காட்டிலும் தி ஸ்கொயர் அவல நகைச்சுவையின் பரப்பை அதிகம் புத்தாய்ந்திருக்கிறது என்று சொல்வீர்களா? ஆம் நான் ‘தி ஸ்கொயர்’ கலை நிர்மாணம் குறித்த சலசலப்பை அதிகப்படுத்த செய்தி தொடர்புக்குழு உருவாக்கும் அந்தப் பிரபல காணொளி குறித்துதான் எண்ணுகிறேன்.
ஆஸ்லாண்ட்: இல்லை. நான் போர்ஸ் மெஜூரில் கையாண்ட அதே அணுகுமுறையைத்தான் கையாண்டேன். இப்படத்தின் இருள் நிறைந்த பகுதி என்றால் அது அந்தக் குரங்கை போல் செய்த காட்சிதான் என்று எண்ணுகிறேன். ஆனால் போர்ஸை (மெஜூர்) போல் நான் தி ஸ்கொயர் (திரைப்படம்) அங்கதம் நிறைந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். மேலும் ஸ்வீடனில் ‘கால்க் ஹியூமர்’ என்று ஒன்றை அழைப்போம். அதாவது நீங்கள் தூக்குமேடையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போதும் அதைக் குறித்த பகடியில் ஈடுபடுவது.
கேம்பாகிஸ்: கேலோவ்ஸ் ஹியூமர்? (தூக்குமேடை நகைச்சுவை)
ஆஸ்லாண்ட்: நீங்கள் அப்படித்தான் சொல்வீர்களா? (சிரிக்கிறார்)
கேம்பாகிஸ்: அவல நகைச்சுவை என்பது இயக்குநராக எப்போதும் உங்களுடைய கலை நுண்ணுணர்வின் அங்கமாக இருந்துள்ளதா?
ஆஸ்லாண்ட்: எப்போதும் இல்லை. நீங்கள் என்னுடைய முந்தைய படைப்புகளில் சிலவற்றில் காணலாம். ஆனால் அது கடந்த இரண்டு திரைப்படங்களிலும் அதிகம் இடம்பெற்றுள்ளது.
கேம்பாகிஸ்: ‘தி ஸ்கொயரை’ உங்களுடைய முந்தைய படங்களோடு ஒப்பிடும்போது, எது உங்களை எலிசெபத் மாஸ் மற்றும் டோமினிக் வெஸ்ட் உள்ளிட்டவர்களை நடிக்கவைத்து ஹாலிவுட் பரப்புக்குள் துணிந்து நுழைய வைத்தது?
ஆஸ்லாண்ட்: கேன்ஸ் போட்டியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால் கொஞ்சம் தந்திரத்தைக் கையாளவேண்டும். அவர்கள் சிவப்புக் கம்பளத்தில் நடக்க ஏதுவான நபர்களைத்தான் விரும்புகிறார்கள். அதனால் இந்த முகங்களைச் சேர்த்துக்கொள்வது உதவும். கிளேஸ் பார்க்க அழகாக இருப்பவர். நீங்கள் போட்டிக்குள் நுழையவேண்டும் என்றால் அது ஒரு நல்ல விஷயம். அதேதான் எலிசெபத் மற்றும் டோமினிக்கிற்கும். எலிசெபத் தற்போது மிகப்பிரபலம் என்றாலும் நான் என் கதாப்பாத்திரங்களுக்கான கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நடிகர் பிரபலமா இல்லையா என்பது குறித்த எந்த அக்கறையும் என்னிடம் இருக்காது. டோமினிக் கதாபாத்திரத்திற்கு ஒரு ஆங்கிலம் பேசக்கூடிய நடிகரை நடிக்க வைக்கவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கில்லை. ஆனால் அவர் மிகச் சிறப்பாக நடித்ததால் நான் அவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியதாயிற்று. எலிசெபத்தும் அப்படித்தான். அவள் ஒரு சிறந்த நடிகை. ஒரு காட்சியின் அமைப்பை பயன்படுத்தி முடிந்த அளவு நகைச்சுவையை எப்படி வெளிக்கொணரமுடியும் என்பதில் அவள் கெட்டிக்காரி என்பதையும் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலம் பேசும் நடிகர்களை இயக்கும்போது சில நுட்பமான விஷயங்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கிருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்த நான் நம்பிக்கையாக உணர்கிறேன். அதனால் என்னுடைய அடுத்தப் படம் முழுக்க ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
கேம்பாகிஸ்: உங்களுடைய அத்திரைப்படம் குறித்து நீங்கள் கொஞ்சம் பேச முடியுமா? அது இப்போது எழுத்து நிலையில் உள்ளதா?
ஆஸ்லாண்ட்: ஆம். பிறகு அதைப் பற்றிப் பேசுவதென்பது வேடிக்கையாக இருக்கும். அதன் பெயர் ‘துயரத்தின் முக்கோணம்’ (Triangle of Sadness) மன அழுத்ததால் உங்கள் புருவங்களுக்கிடையே ஏற்படும் சுறுக்கத்தையும் அப்படிச் சொல்லலாம். ஆனால் அதை எப்போதும் போட்டோக்ஸ் (தோள் சுருக்கத்தைச் சரி செய்யும் ஊசி) கொண்டு சரி செய்துவிடலாம். (சிரிக்கிறார்) இதன் முக்கியக் கதாப்பாத்திரம் ஒரு ஆண் விளம்பர நடிகன். ஏன் என்றால் அழகு என்பது பொதுவாகச் சுவாரசியமானது. உங்களிடம் பணம் இல்லையென்றாலும், கல்வி அல்லது திறமை இல்லையென்றாலும், அழகு உங்களைச் சமுதாயத்தில் முன்னேற்றி கூட்டிச் செல்லும். முக்கியமாகப் பொருளாதார ரீதியாக.
கேம்பாகிஸ்: பல வழிகளில் அழகு என்பது ஒரு பண்டம்.
ஆஸ்லாண்ட்: சரியாகச் சொன்னீர்கள். சமூக அல்லது பொருளாதார நிலையைத் தாண்டி யாருக்கு வேண்டுமானாலும் அந்த மரபியல் லாட்டரி விழலாம் என்பதில் உலகில் அத்தனை அநீதிகளுக்கு மத்தியிலும் ஒரு உலகளாவிய நியாயம் உள்ளது. அதனால் என்னுடைய முக்கியக் கதாபாத்திரம் சுலபமாக ஒரு கார் பழுது நீக்குபவனாக ஆகி இருக்கக்கூடியவன் அவனுடைய தோற்றத்தினால் ஒரு மிகப் பெரிய பேஷன் நிறுவனத்தின் முகமாக மாறுகின்றான். ஆனால் அவன் தலை வழுக்கை விழத் தொடங்குகிறது. அப்படியென்றால் அவனுடைய பொருளாதார மதிப்பையும் அதனால் அவனுடைய தன்னம்பிக்கையும் இழக்கிறான். அவனுக்கான சந்தையை மீட்க அவனுடைய முகவர் ஒரு பிரபலமான பெண் தோழியுடன் அவனை இணையச் சொல்கிறான். பிரச்சினை என்னவென்றால் அவன் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன் மற்றும் அவன் காதலில் இருக்க விரும்புகிறான். (சிரிக்கிறார்.) நமக்குப் பழக்கப்பட்டுள்ள பாலினப் பாத்திரங்களைத் தலைக்கீழாக்கி கலவி, பணம் மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கு இடையேயான உறவை புத்தாய்வதைத் தொடர்ந்து செய்ய விரும்புகிறேன்.
நம்முடைய ஆண்வழி சமுதாயத்தில் உதாரணமாக ஒரு அழகான இளம் பெண்ணுடன் 55 வயதுடைய ஒரு ஆண் இருப்பது இயல்பான ஒன்று. நமக்கு இந்தப் படிமத்தின் மீது எந்தப் புகாரும் இல்லை. ஏன் என்றால் நாம் இந்த அமைப்பை புரிந்துக்கொள்கிறோம். ஆனால் நீங்கள் திடீரென்று பெண்வழி சமூகத்திற்கு மாற்றப்பட்டால் என்ன நடக்கும்? நான் என்னுடைய ஆண் விளம்பரப்படநடிகன் ஒரு 55 வயது துப்புரவு செய்யும் பெண்ணுடன் காதலில் விழவும், பிறகு சமூகத்தின் ஏணியில் மேலேறியவுடன் அப்பெண்ணின் போக்கு எப்படி மாறுகிறது என்பதையும் பார்க்க விரும்புகிறேன். இந்தக் கதையமைப்பு என்னைக் கிளர்ச்சியுறச் செய்துள்ளது. (சிரிக்கிறார்) இத்திரைப்படம் கலவியின் பொருளாதாரத்தோடு காதல் எவ்வாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த நம் எண்ணங்களுக்கான சவாலாக இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்.
* துயரத்தின் முக்கோணம் கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்லண்டிற்கு மேலும் ஒரு தங்கப்பனையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. மேலும் ஆஸ்கர், பாப்டா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளுக்குத் தேர்வானது. அத்துடன் சமீபத்தில் நமது தலைநகர் சென்னையிலுள்ள திரையரங்குகளிலும் வெளியாகி ஓரிரு வாரங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது.
தனது எண்பதாண்டு கலைவெளிப் புழக்கத்தை, நவீனக்கலை பாணியென (Modernism) ஊர்ப்புறங்கள், நகர்ப்புறங்கள், கிராமங்கள், நகரவீதிகள் என நிலப்பரப்புகளிலும், தற்கால பாணியென (Contemporary Art) வடிவவியல் உருவங்கள் நிறைந்த பண்பியல் வெளிப்பாட்டிமை மற்றும் குறியீட்டியலிலும் (Abstract Expressionism & Symbology) கடந்தவர் எஸ் எச் ரசா எனும் சையத் ஹைதர் ரசா (S H Raza aka Syed Haider Raza).
இவ்விரு பாணிகள் மட்டுமே ரசாவின் அடையாளமெனச் சுருக்க முடியாது, ஏனெனில் செறிந்த கலைஞர்கள், தங்களது சமகாலத்திய பாணிகளைப் பற்றிய அறிவுப்பரிசோதனைகளைக் கண்டிப்பாகக் கடந்திருப்பர், எனில் இது ஒரு கலைஞன் தனது தனிப்பண்பாய், தனி முத்திரையாய், ஒரு பாணியை வகுத்துவைக்கும் இயல்பு மட்டுமே எனப் பொருள்கொள்ளுதல் கட்டாயம், தராசில் வைத்து, நிறை குறை பார்க்கும் நோக்கம் பிழையானது.
இதோடு, வெற்று அழகுணர்ச்சியினைக் கிளப்பும், எழிலொழுக, கிளர்ச்சியூட்ட வடிக்கப்படும் (Infatuation to aesthetics) நிலப்பரப்பு ஓவியங்களுக்கு இடங்கொடாது, மனமெனும் பிரபஞ்சத்தினுள் புதுப்பிம்பத்தைச் சமைக்கும் எந்தவொரு நிலப்பரப்பு ஓவியமும், ரசாவின் தன்மை கொண்டேயிருக்கும். ஏனெனில் ரசா எனும் மாஸ்டர், ஒரு வாத்தியார், ஒரு முன்னோடி, அந்தப் பாணியில் வேரூன்றியவர்.
ரசாவை குறிக்கும் போது வால்டெமெர் ஜார்ஜ் (பாலிஷ் - பிரெஞ்சு கலை அறங்காவலர், விமர்சகர்) (Waldemar George, Polish French Art Critic) “கண்ணிமைவில், காரணமின்றித் தொடர்பறுந்து போகும், பிம்பங்களை ரசா வெறுமனே உள்ளீடு செய்வதில்லை, படைப்பதுமில்லை. இதுபோன்ற பல பிம்பங்கள் எண்ணமெனும் வடிகாற் சுழலில் (Annihilation via Vortex) ஒன்றன்பின் ஒன்றாய் இழுத்துசெல்ல, அவற்றிலிருந்து சிதறும், சிதைந்த துண்டுகளுக்குச் சிறகுகள் கொடுத்து, உருமாற்றித் தனது நிலப் பரப்புகளில் உலவவிடுகிறார் ரசா. இதன் இலக்கியத்தன்மையே அவரிடம் ஒரு மாஸ்டரை கைகாட்டுகிறது.”
இருந்தும் கற்றுக்குட்டியானவர்களுக்கும், ஒரு வகையில் ஓவியங்களை வாசிப்பவர்களுக்கும் (ஓவியங்களைப் பார்த்து, அதைப்பற்றி இணையக் குறிப்புகள் கொண்டு ஆழம் பார்ப்பவர்கள், உதா: இக்கட்டுரையாளர்), ரசா ஏன் நிலப்பரப்பெனும் வடிவவியலெனும் நேர்கோடுகள், முக்கோணங்கள், வட்டங்கள், சக்கரங்கள், பிந்து (Bindu) திலகங்கள் (பொட்டு) என ஒரு ஓழுக்கமான வரையறை சட்டகத்தினுள் தன்னை நிறுவிக்கொண்டார்? எனும் கேள்வியிருத்தல் அவசியம். (அவ்வாறில்லையெனில், உங்களது கவனம் இவற்றின் மேலில்லை அல்லது உங்களது நுகர்வுத்தன்மையில் பழுதிருக்கலாம்)
ஏனெனில் நேர்கோடுகள், வட்டங்கள், முக்கோணங்கள் போன்ற வடிவவியல் சாத்திரப்பின்னணி கொண்டவையாவும், சட்ட திட்டங்களைப் போன்றவை, அவற்றுள் எங்கே புலனாகும் இலக்கியச்சிந்தனைகள், கற்பனைகள் மற்றும் கவித்துவங்கள்?கோர்ட்டில் கவிதைக்கு என்ன வேலை? சுருக்கமாக சட்டத்தில் ஏது கவித்துவம், நேர் கோடுகளில் என்ன கற்பனை?
மேலும் தன்னுணர்வு கொண்ட மனிதர்களிடமும், மனிதத்தன்மையிலும் பொதிந்துள்ள முகப் பாவங்களையும், வக்கிரங்களையும் ஏனையவற்றையும் தாண்டி நிலப்பரப்பில் அப்படி என்ன எதார்த்தங்கள், கலைத்தன்மைகள் காணக் கிடைத்துவிடப்போகின்றன?
மனிதர்களைத் தவிர வெகு சில உயிர்களுக்கும் மட்டுமே, ‘தான்’ என்பது புலப்படும், ஆக்டோபஸ்கள் நிலைக்கண்ணாடிகளில் தங்களைக் கவனிப்பதாகக் கூறப்படுகிறது, அதே நேரம், நாய் பூனைகளோ பதறுகின்றன. ஆதலால்தான் மனிதத்தன்மையினை நாம் வளர்ப்புப் பிராணிகளுக்குத் தத்துகொடுக்கிறோம், அவற்றுக்கென ஒரு சுயத்தை நாம் வடிவமைத்து, அந்தக் கோட்பாடுகளுக்குள் அவற்றைப் பழக்குகிறோம், பசுவெனில் அமைதி, காளையெனில் வீரம், நாயெனில் நன்றி, மனிதனெனில், இவை யாவும், இவற்றைத்தாண்டியும் - மனிதத்தன்மை நேர்கோடுகள், வட்டங்கள், மீன்முள் (Herringbone) போன்ற உருவ விசை சீர்மைகள் (Symmetry) சூத்திரங்கள் யாவும் கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கக்கூடியதாகவும், இவையெலாம் வடிவவியல் மற்றும் கட்டிட சாத்திர பொறியாள நிபுணர்களுக்கே உரித்தானதென (கட்டுரையாளருக்குத் தோன்ற), எவ்வாறு இத்தளத்தில் தனது பாணியை நிறுவி, தற்காலக் கலைப்பண்பாட்டு (Contemporary art in India) தொடர்பை அநேகமாக மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே ஏற்படுத்தினார் ரசா.
இதற்கு மேலாக, இதனை நான்கு தசாப்தங்களுக்கு முன்னராக வால்டெ மெர் ஜார்ஜ் கணித்துள்ளார். ஐரோப்பிய அமெரிக்கக் கலை சூழலில் நிலவிய, தற்காலக் கலைப்பண்பாட்டை (Contemporary Art) இந்தியாவுக்கு, ஏன் ஒட்டுமொத்த தெற்காசியாவிற்கே கட்டியிழுத்து வருபவர் ரசாதான் என்று 1960 -இல் ஜார்ஜ் எழுதியுள்ளார்.
(வால்டெமெர் ஜார்ஜ், இரண்டு உலகப்போர்களுக்கிடைபட்டக் காலத்தில் இயங்கியவர், நியோ ஹ்யுமானிஸம் (Neo Humanism- நவயுக மனிதத்துவம்) பக்கம் சென்றவர், உலகப்போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நேரத்தில், முசோலினி ஹிட்லர் உடன்படிக்கைக்கு முன்னர், சோவியத், பிரெஞ்சு சோசலிச, லிபரலிச கொள்கைகள் மீதான விரக்தியில், சர்வாதிகாரிகளுக்குக் கீழ் கலை பண்பாடுகள் பேணி பாதுகாக்கப்படும் எனும் வித்தியாசமான நம்பிக்கையில், முசோலினியை சந்தித்து இது குறித்துப் பேசியவர் ஜார்ஜ். இடது சாரி சிந்தனைப்பள்ளிகளின் கலைபடைப்புகள் இவருக்கு இனித்ததா கசந்ததா எனும் சந்தேகத்திற்குச் செல்லாது, ரசாவின் கலைப்படைப்பு குறித்தான இவரது கணிப்பை மட்டுமே நாம் பிரித்து வைத்துக்கொள்ளுதல் அவசியம்.)
ரசா, இந்திய சுதந்திர வேட்கையின் நவீன கலைவடிவ பண்பாட்டின் அடித்தளம் அமைத்தவர். எம் எப் ஹுசைன், எப் என் சௌசா, எஸ் எச் ஆரா ஆகியோருடன் இயைந்து களமாடியவர், முற்போக்குக் கலைஞர்கள் குழுவின் (Progressive Artists Group, PAG) அடிப்படை நிறுவனர்களில் ஒருவர்.
பீஏஜி (PAG) ஏழெட்டு ஆண்டுகளே புழங்கினாலும், ஒரேயொரு அருங்காட்சியே அரங்கேறினாலும், அதனுள் வாய்த்திருந்த பன்மைத்துவம் பழுதுபடாமல் இருந்ததெனலாம். பின்னால் நிறுவப்பட்ட தில்லி தேசிய அருங்காட்சியக அரங்கம், லலித்கலா அகாதெமி இந்தக் கோட்பாடுகளை ஓரளவுக்குச் சுவிகரித்துக்கொண்டன. இம்முற்போக்கு கலைக்குழுமத்தின் அக்கினிகுஞ்சுகளானவர்கள், புது இந்தியாவின் போக்கினை, பிரிவினைவாதத்தினை, வர்க்க சுரண்டல்களை, வேலையின்மை, பசி, பஞ்சம் யாவையும் ஓவியங்களில் படையலாக வைத்துக்கொண்டிருந்தனர். கலைப்பண்பாட்டினை மத அரசியல் சாயங்கொண்டு ஒடுக்கப் பழகிக்கொண்டிருந்த நேரம், மார்க்ஸிய பிடிப்புள்ள சௌசாவின் பெருந்தனக்காரனும் பராரியும் (The Tycoon and the Trump) கிஷன் கண்ணாவின் காந்தியின் மரணச்செய்தி (News of Gandhiji's death) ராம்குமாரின் வேலையில்லாதவர்கள் (Unemployed Graduates) என ஏனையோர் மனக்கொந்தளிப்புகளைச் சாயத்தில் ஏற்றிக்கொண்டிருந்தவேளை, ரசா தனது படைப்புகளில் நிலப்பரப்புகளுடன் வழக்காடிக்கொண்டிருந்தார். குழு கலையவும் கலைஞர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறவும் சரியாக இருந்தது.
ரசா பிரெஞ்சு கலைப்பள்ளி இக் கொலெ டெ பாரீஸ் (Ecole de Paris) சென்றார். எல்லை பிரிவின் போது, அவரது அண்ணன் குடும்பத்தினருடன் அவரது மனைவி பாத்திமா பாகிஸ்தான் தஞ்சம் புகும்போது கூட, இந்தியாவைப் பிரியாதவர், பிரெஞ்சு மண்ணில் தனது அநேக வாழ்நாளைக் கழித்தார். இதற்கு ஒரு காரணம் அவரது பிரெஞ்சு மனைவி ஜேனைன் மோங்கிலாத் (அவரும் ஓவியர், கலைஞர்) என்றால், மற்றொன்று ஐரோப்பிய அமெரிக்கக் கலை உலக மேடை. ஆனால் அவ்வபோது இந்தியா வந்து கொண்டேதான் இருந்தார், மண்ணுடனான தொடர்பு தொடர்ந்திருந்தது. மனைவி காலமான பின்பு மீண்டும் இந்தியா வந்தடைந்தார், ரசா பவுண்டேசன் தொடங்கி, கலை பரிவர்த்தனையிலேயே இருந்தார்.
எவ்வாறெனினும் ரசா தனது சமகால நண்பர்கள், கலைஞர்களைவிடத் தனி அந்தஸ்துகளை, அடையாளங்களைப் பிரெஞ்சு மற்றும் இந்திய அரசுகளிடமிருந்து சம்பாதித்தார். கடுந்தொந்தரவுக்கு ஆளாகியிருந்த ஹுசைன், சௌசா போன்றோர் நாட்டை விட்டு வெளியேறியது நிழல்திரையில் ஓட, எதார்த்தமாய் நோக்குகையில், ஒருவேளை ரசா ஒரு அகாதெமிக்காக (Academic & Studious), அதீத துறைசார்போக்கு, பற்றுகொண்ட, அங்கிங்கெனாதபடிக்கு ஒரு முதல் பெஞ்சு மாணவனாக வந்து போகிறாரா?
ரசாவின் நிலப்பரப்புகள் கனநேரமும் எரிந்து கொண்டேயிருக்கின்றன (Raza's burning landscape). ரசாவின் கிராமங்கள், எதார்த்தத்தின் சிறுதுளியைக் கூடச் சேர்த்திராதவையென வால்டெமெர் குறிப்பிடுகிறார். ஐம்பது அறுபதுகளில் ரசா படைத்த நிலபரப்புகள் அநேகம் கிராமங்கள் தாம்.
“ரசாவின் கிராமங்கள் நிலத்தின் ஆதரவை விடுத்து மேலெழுந்து, குளிர்ந்த கிரணங்கள் பாயும் மாய இரவினூடே, பயணிக்கின்றன; நிலத்தின் அதிர்வில் வீடுகள் பிளவுற்று, நிலைகுலைகின்றன; தேவாலயங்களோ மேகமெனும் மெத்தை வழியே கீழிறங்கிகொள்கின்றன.
அந்தியோ, அதிகாலையோ மங்கொளி பல வண்ணக்கூறாக வானகூடத்தின் கூரையெங்கிலும் சிதறிப்பரவுகின்றன; புனிதர் அப்போலினேயரின் (St Appolinaire) சந்நிதி மொசைக் தரை போல, தேவத் திருவுருவம் தெரியும் வண்ணக்கண்ணாடி ஜன்னலோ அல்லது லிமோஜஸ் நகரத்தின் படிகம் பூசிய பீடமோ போலப் பிரகாசமாகத் தெரிகின்றன; துளித்துளிப் பொலிவுகளாக அவ்வானமெங்கும் விண்மீன்கள் தெரிகின்றன; விலையுயர்ந்த ரத்தினக்கற்களால் பதிக்கபெற்ற புனிதப்பேழையைப்போல மினுக்கின்றன."
மெய்யடர்த்தியோ, ஏன் எடையையேக்கூட உணர இயலாத, யாவும் மிதவையாய் தோன்ற, எவ்வளவு செறிவான வண்ணங்களை அடிநாதமாய் ஏற்றிருந்தாலும், மெய்ப்பொருள் என்றொரு உணர்வைத் தரவில்லை என்கிறார் வால்டெமெர்.
ரசாவின் சாயத்தட்டில், பல வண்ணங்களின் நிழல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன, ஒன்றன் பின் ஒன்றாகத் ஊறி உருவாக, கலைஞனின் நேர்த்தியால் அவை அவற்றுக்கான கால நேரத்தில் சமைக்கப்படுகின்றன.
உலோகங்கள் குலைந்துருகி சேரவும், தகித்துக்கொண்டிருக்கும் நிலக்கரியின் இண்டு இடுக்குகளிலிருந்து நெருப்பு நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கவும், பாக்ஸைட் கனிமங்களடங்கிய பாறைகள் மேடுகள், வார்வாராகச் சீரான இடைவெளியில் கேன்வாஸில் தோன்றுகின்றன. கேன்வாஸ் விநோதமாக ஒரு வித மதப்புக்குள்ளாகிறது.
சில படைப்புகளைக் காணும் நொடியினில், ஒரு வித துர்நாற்றத்தை மனதின் நாசிக்குள் ஊதிவிடுகின்றன. அது கந்தகக் கசப்பு, எரிமலை குழம்புகளிலிருந்தும், நிலக்கரியிலிருந்தும் வருவது.
சிலதில், வானத்திற்கும், வட்டமாக அமைந்த பாறை மோடுகளுக்கும், சரியான தூரத்திலுள்ள, மையமான கிராமத்தை நோக்கி, மலைச்சரிவுகளில் கிளம்பிய காட்டுத்தீ, படையெடுத்து வருகிறது.
பனியும் பளிங்குமாய்த் தோன்றும் ஒரு நிலப்பரப்பில் சட்டெனக் கல்வாரி மலைகள் சிலுவை மரங்களோடு எழுகின்றன. கொடும் வெளிச்சத்தைப் பாய்ச்சி பிரளய வானத்தைத் துண்டாட, மேகங்களில் விழும் பிம்பங்கள் கலவரப்படுகின்றன.
லாபிஸ் லஸூலியின் (Lapiz Lazuli) கருநீலத்தை ஏந்திய வானங்கள் சட்டென, சுட்டெரியும் சிகப்புக் கிரணங்கள் பாய, ஒரு மாயவுணர்வெழுச்சியை உண்டாக்குகிறது.
ஒரு வானத்தில் சூரியனாகப்பட்டது, துருவ ஒளிச் சிதறலாகவே, இடறிய அழகாக இயங்குகின்றது.
ஒரு கிராமத்தின் வானத்தில், மனித குலத்தின் துக்கங்களை நோட்டமிட்டு வரும் சிதிலமடைந்த தேவாலய கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிலுவையும் அதைச் சுற்றிப் பூசப்பட்ட தங்க மஞ்சள் சாயம், சிலுவை வானத்தை, தேவனைப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. இதேபோல மருட்சி நிலையே ரசாவின் முக்கியப் படைப்பான வில்லே ப்ராவின்சாலெ-யிலும் (Ville Provencale) (1956) நீடிக்கிறது. கலை விமர்சகரும், கலைவரலாற்று எழுத்தாளரும் ஆன யசோதரா டால்மியா, அனலில் தகிக்கும் நிலமாக அதனைக் குறிப்பிடுகிறார்.
ஐம்பதுகளில், தெற்கு பிரான்ஸ் எங்கும் திரிகிறார் ரசா, ஆங்காங்கே சட்டென்று வரும் இடைக்காலத்திய பிரெஞ்சு கிராமங்களை அதிசயிக்கிறார். தொகுப்பு வீடுகளும், வெள்ளை வெளெரெனத் தேவாலயங்களும், வட்ட சப்பட்டைக்கற்களைக் கொண்டு பாவப்பட்டிருக்கும் தெரு வீதிகளும் குறிப்பாக, மர மேஜைகளும் நாற்காலிகளும் என இடைக்காலக் கலை வரலாற்று வகுப்பறைக்குள் நுழைந்ததாக உணர்கிறார்.
காலமுத்திரையில்லாத காலவேளையில், மனிதர்கள் வாசம் செய்யாதது போலத்தோன்றும் கிராமத்தில், கொளுத்தும் கதிரவனின் கிரணங்கள், இடையே ஊடு பாவும் பிரளயமாகத் தோன்றுகிறது.
கிடத்தப்பட்ட ஒரு பூ மாலையெனக் கிராமத்தின் வீடுகள், சில பழுப்பு மஞ்சளில் மினுமினுக்க, சில சிகப்பாய் கொதிக்க, சில மண்பாண்டக்காவியில், சில கருநீலம் என அலையலையாய் வீடுகள் பரந்து, நிலத்திலிருந்து மேலெழும்பி மிதவைப்போலத் தோன்றுகின்றன. செப்பமிடப்படாத சிகப்பு நிறமேந்திய நிலமும், மேலெழுந்த செடிகொடிகளின் பச்சையும், கரித்தோய்ந்த மோடுகள் கூறும் மினு மினுப்புமென நிலப்பரப்பை தயாரித்துள்ளார் ரசா.
யாவும் துயிலிலிருப்பது போலவும், விண் நெடுக வளர்ந்த விமானங்கள், உயிர்களின் குறியீடாகவும் தெரிகின்றன. பிரெஞ்சு மண்ணின் லே பிளாஸ்டிக் சென்ஸ் (ஞெகிழொழுங்கு அல்லது ஞெகிழ்வார்ப்பு நுட்பம்) ரசாவை பின் தொடர, தடம் பார்க்க என்னும் எவரும் எதிர்கொள்ளும் ஒற்றைச் சொல், லெ ப்ளாஸ்டிக் சென்ஸ் எனும் ஞெகிழொழுங்கு அல்லது ஞெகிழ்வார்ப்பு நுட்பம் (Le Plastique Sens). ப்ரெஞ்சு மண்ணையெட்டிய பின்பே ரசா இம்பாஸ்தோவிற்கு (Impasto) கேன்வாஸின் மீது தடிமனாக, திண்மையுள்ள, களிம்புபோலச் சாயத்தைப் பூசுவது, கிட்டதிட்ட சாயத்தை வார்ப்பது இதற்கென்று பெலெட் கத்திகளும், தூரிகை பழக்கமும் உண்டு.
ரசாவின் நிலங்களும் வானங்களும் தனித்தனியமைப்பு கொண்டவை. வார்ப்புகளில் ஊற்றப்பட்ட ஞெகிழி குழைமத்தைப்போல, ரசா தடம் எடுத்து, அச்சு வைத்த பாதைகளிலே, மேடு பள்ளங்கள், மோடுக்கள், பாறைகளென, வண்ணச்சாயங்கள் ஓடி உறைநிலையடைபவை. வானமோ ஒரு மிதவையாய் நிலங்களின் மேல் தோன்றுவன, ஊடாய் ஒளிச்சிதறல்களிருக்கும், மினுக்மினுகென்றும் விண்மீன்கள் தோன்றும். பிரளயங்கள் வானத்திலும் நிலத்திலும் தோன்றும்.
வித்தை ப்ரெஞ்சு மண்ணிலிருந்தாலும், கரு எனும் கச்சாபொருள் இந்தியத் தன்மைக்கொண்டது. இந்து மதப் பிரபஞ்சவியலில், மீமெய்யிலலில் அதீத ஈடுபாடு கொண்டவர் ரசா. அவருக்கு ரில்கே, அஞ்யேயா போன்றவர்களின் எழுத்துகளும், காந்தியின் ஆசிரம ஒழுக்கத்திலும் மத்தியபிரதேசக் காடுகளில் அவரது இளம்பருவ நாட்களும், வனாந்தரத்தின் இருளும், காட்டுயிர்களின் ஒலியும், அன்றைய ஆதிவாசிகளின் பேச்சொலியும், விடியலின் பரவசம் என நீளும் பட்டியல்.
மேலும் ராஜஸ்தான் ஜைன ஓவியங்கள், பஹரி நுண்ணோவியங்களிலிருந்து அவர் வண்ணங்களின் தன்மைகளை உணர்ந்தார். ரசாவின் நிலப்பரப்புகள் ஞெகிழத்தன்மையை உட்கொள்ளத்தொடங்கிய தசாப்தத்தில், அவரது ஓவியப்பண்பாடு பண்பியலுக்குள்ளும் குறியீடுகளுக்குள்ளும் நுழையத்தொடங்கியது எனலாம். அவரது பரிணாமங்களின் முக்கியமான ஆஜ் (Aaj) லா டெர்ரெ (La Terre) அதன் தடங்களாகும்.
பின்னாளில் அவர் கையாண்ட பிந்து (Bindu), பொட்டு, மத்தியபிரதேச வகுப்பறை சுவரில் வரையப்பட்ட வட்டம் தான் எனக் கூறுகிறார் ரசா. ரசாவின் இந்த முன்னெடுப்பு, பின் வரும் பல கலைத் தலைமுறைகளுக்கு வகுப்பறைப்பாடமெனில் அது மிகையில்லை.
பேரண்டவியலின் பரிமாணங்களை, உயிர், உடல், பொருள் (ப்ராகிருதி, புருஷ்) எனும் கோட்பாடுகளை, தோன்றல், மறைதல், நிலம், நீர், ஆகாயம், நெருப்பு எனும் விந்தைகள் என மீமெய்யிலில் திளைத்த ரசா உள்ளிருந்து வெளிப்படுத்தியதே தற்கால ஆசியக்கலை சமூகத்திற்குப் பாடத்திட்டமாகும்.
ரசா நினைவு உரை ஒன்றில் தத்துவவியல் பேராசிரியர் நவ்யோதி சிங் (Prof. Navjyothi Singh)“இரு பரிமாணம் கொண்ட கேன்வாஸின் மேற்பரப்பில் பரிமாணங்களைத்தாண்டி பரந்து கிடக்கும் படைப்பானது, ஓவியனின் சித்த ஆகாசமே, (Chitha Akash, Chitha) பார்வையாளன் பார்ப்பதும் அந்த மனவெளியைத்தான், அது பல கதவுகளும், ஜன்னல்களும் கொண்டனவாம். சித்தத்தின் ஆகாசமெனப்படும் அந்தப் பேரண்டவெளியில் ஓவியன் பிம்பத்தை, எந்தக் கோணத்திலும் எம்முகவாட்டத்திலும் படைக்கலாம், அதை ஒரு பார்வையாளன் எவ்விதமாகவும் பிரித்துப் பார்க்கமுடியும்” என அவரும் ரசாவும் கருத்துப் பரிமாறிக்கொண்டதாக நினைவுக்கூறுகிறார்.
பலவாறாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் மனிதத்தன்மையினையும், அருகாமையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகமெனும் பொய், மாய எதார்த்தத்தினையும் உதறிவிட்டு, பேரண்டத்தினுள் எட்டிப்பார்க்க எவ்வாறு தோன்றியது கலைஞனுக்கு?
ஆனால் ஒரு கடிகாரத்தை அக்கக்காய் பிரித்துப்படித்தால், அது, கடிகாரத்தினைப் படித்ததாகாது எனும் சொலவடை ஒழுங்கின்மை கோட்பாட்டியலில் உள்ளது.
1. https://criticalcollective.in/CC_ArchiveInner2. aspx?Aid=68&Eid=141
2. https://www.sothebys.com/en/articles/s-h-raza-theburning-landscape
3. https://auctions.pundoles.com/lots/view/1-54AP9M/ portrait-of-s-h-raza
4. https://www.sothebys.com/en/articles/three-of-a-kindsayed-haider-raza
5.https://hyperallergic.com/477316/the-progressiverevolution-modern-art-for-a-new-india-asia-societymuseum-2/
6. Swasthi , Raza Foundation Newsletter No.01, 2017
1990களின் இறுதியில் செர்பிய அதிபரின் மனைவி மீரா மர்கோவிச் எழுதிய Night and a Day : A Diary December 1992 - July 1994 நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. பால்கன் பகுதியில் செர்பியர் - குரேஷியர் - இஸ்லாமியர் மோதல்களால், அதீதமான இழப்புகளும், உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு உலகமே பதற்றம் கொண்டிருந்த பின்புலத்தில் எழுதப்பட்டது. பால்கனில் நிகழ்ந்த தவறு என்ன என்பதை மனித சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் பொருட்டுச் சென்னையில் இது வெளியிடப்பட்டது என்றார் மீரா மர்கோவிச். 90களில் யூகோஸ்லோவியா பிரிந்து சென்றதை அடுத்து டிசம்பர் 1992- ஜூலை 1994க்கிடையே நிகழ்ந்தவற்றினைப் பதிவு செய்கிறது இந்நூல். “நல்லதோ கெட்டதோ ஒவ்வொன்றையும் பற்றிய என் உணர்வுகளை, தன்னுணர்ச்சிப் பாங்கில் கண்டு வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் மீரா.
கிழக்கு ஐரோப்பிய சிதைவுக்கான ஒட்டுமொத்த தனது மதிப்பீடாக மீரா முன்வைப்பது: “மாற்றங்களை ஏற்படுத்திவிடும் முயற்சியில், முற்போக்கானதைவிடவும் நுகர்வியம் சார்ந்த மாற்றங்களைச் செய்ததுதான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செய்த தவறுகளாகும்; அவையே பொருளாதார அரசியல் சரிவுகளுக்கு இட்டுச் சென்றன. சோஷலிஸத்தையோ முதலாளித்துவத்தையோ நாம் நம்பியிருக்க முடியாது; ஏனெனில் இரண்டுமே கடந்த காலத்தின் பகுதியாகும். கடந்த காலத்தில் நாம் வாழ முடியாது. சாத்தியமற்ற கருத்துக்களாலும் சாதிக்க முடியாதவையாக முதலில் தோன்றிய மாற்றங்களாலும் சமுதாயம் இயக்கப்படுகிறது, ஆனால் பெரும் பாலானவை ஈடேறி, உலகை மாற்றிடும்.”
மேலும் புத்தக வெளியீட்டின்போது உள்நாட்டுப் போருக்கான மூலக் காரணமாக மீரா அடையாளப்படுத்தியது. “செர்பியர், குரேஷியர், இஸ்லாமியரிடையே தவறாக இடம்பெற்ற தேசியவாதம் காரணமாக விளைந்ததே அறிவுக்குப் பொருந்தாத பழங்குடிப் போர். இம்மூன்றினத்தவரும் தம் இறையாண்மை சதா அபாயத்திற்குள்ளாகிவிடும் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இது யூகோஸ்லேவியாவிற்கு வெளியிலிருந்து தூண்டிவிடப்பட்டது.”
எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாகத் தனது நாட்குறிப்பு வடிவிலான நூலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்: “முந்தைய யூகோஸ்லாவியாவில் ஏழையரே இல்லை, அது நல்லது. செல்வந்தரும் இல்லை, அதுவும் நல்லதே. நாம் அவர்களை விரும்பவில்லை. அதைத்தான் எனது நாட்டுக்கும் அனைத்து நாடுகளுக்கும் விரும்புகிறேன்.”
அப்போது முடிவுறாத இரவுக்குப்பின் புதிய தினம் விடியும் என்பது மீராவின் உத்தேசம்.
இவோ ஆண்ட்ரிக் என்றும் எழுத்தாளர் The Bridge over the Drina என்னும் தலைப்பில் எழுதியுள்ள நாவல் போஸ்னியாவை மையமிட்டது. இருபத்தியாறுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கலாச்சார இழைகளின் நெசவான பால்கன் பண்பாட்டை உணர்த்தக் கூடியது. போஸ்னியாவில் மதங்களும் சமூகங்களும் கலந்துவிட, பழைய உணர்வுகளும் போக்குகளும் தங்கிவிட, செர்பியரும் குரேஷியரும் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கை கொள்கின்றனர். கிறித்தவர் முஸ்லீம்களின் பழைய மேலாதிக்கத்தை (ஆட்டோமானியப் பேரரசுக் காலத்தை) பீதியுடன் நினைவுகூர்கின்றனர்.
இப்போது பால்கன் பிரதேசம் “பெருமூச்சுகள், வாசனைகள், சப்தங்கள், உயிர்த்தெழுந்த உணர்வுகள், இருண்ட புள்ளிவிவரங்கள் மற்றும் குரூர முரண்கள் கொண்ட நினைவு பிரதேசமாகின்றது” என்கிறார் ஆண்ட்ரிக். நாவலின் தலைப்பில் உள்ள பாலம், 16ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. போஸ்னியாவை இஸ்தான்புல்லுடன் இணைப்பது, மூன்று நூற்றாண்டுகளாகப் பல்வேறு நிகழ்வுகளையும் அபாயங்களையும் பார்த்து, சாட்சியமாகக் கம்பீரத்துடன் நின்று வருகிறது.
கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிக்க விரும்பும் ஒரு யுவதி இப்பாலத்திலிருந்து விழுந்து மடிகிறாள்; சூதாட்ட வெறியன் ஒருவன் தன் இறுதி ஆட்டத்தை அங்கே நிகழ்த்தி முடிந்து போகிறான். கிழவியின் ரூபத்தில் இதன் சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல முற்படும் செர்பிய கூலிப்படையாளை ஆஸ்திரிய-ஹங்கேரிய வீரன் அனுமதித்துவிடுகிறான் - ஏனெனில் அவனுடன் வருவது அவனது துணையும் காதலியுமான பெண்.
முதல் உலகப்போரில் ஒருபாதி சிதைக்கப்பட்ட இப்பாலம், பின் புதுப்பிக்கப்பட்டது. 2007-ல் யுனஸ்கோவால் அதன் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. போஸ்னியாவில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நடந்தபோது, இப்பாலம் போக்குவரத்திற்குத் தடைசெய்யப்பட்டது, மேலும் கொடூரத்தை நிகழ்த்தியது.
மேலும் பால்கன் பிரதேசத்து வரலாற்றின் அடுக்குகளுக்கிடையே புதைந்திருக்கும், செர்பிய - குரேஷிய - முஸ்லீம்களுக்கிடையேயான இடைவெளிகளை இணைத்திட மொழிவழி தேசியவாதம் போதாது என்பதை ஆண்ட்ரிக் சுட்டிக் காட்டுகிறார். பெருமளவில் பொருளியல், பண்பாட்டியல், தன்னாட்சி உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கைத்தரச் சரிவு போன்ற பிரச்சினைகள் கடுமையாக, கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகிறது. இவை எல்லாவற்றை விடவும் பண்பாட்டு ரீதியில் சமூகங்கள் தம்மை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியாது போனதுதான் பிரச்சினைகள் கூர்மை பெறுவதற்கு ஆதாரமானது என்கிறார் ஆண்ட்ரிக்.
பால்கன் பிரச்சினை என்பது என்ன?
90% முஸ்லீம்களும் 10% செர்பிய கிறித்தவர்களும் வாழும் கொசாவா என்னும் தன்னாட்சி உரிமைப்பிரதேசத்தில், 24.04.1987 இல் தாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டுவருவது குறித்துக் கலவரங்களும் பேரணிகளும் செர்பியர்களால் நடத்தப்படுகின்றன. செர்பியர் சார்பில் பேசிய, கம்யூனிஸ்ட் லீகின் தலைவரும், மீரா மார்க்கோவிச்சின் கணவருமான ஸ்வபோதான் மிவோஸ்விக், செர்பியரின் தலைவராகி விடுகிறார்.
பிற இன மக்களின் உரிமைகளைப் புறக்கணித்துவிட்டு, செர்பிய சிறுபான்மை உரிமையை மட்டும் முன்னெடுத்துச் சென்று, பெரும்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய மிவோஸ்விக்கின் அணுகுமுறையே பிரச்சினையின் அடிப்படை. இதனால், கிழக்கத்திய ஆசாரக் கிறித்தவ மரபினரான செர்பியர் மீது, ரோமன் கத்தோலிக்கரான குரேஷியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவநம்பிக்கை எழுந்தது.
மிலோஸ்விக்கின் மனைவி மீரா, பெல்கிரேட் பல்கலைகழகத்தில் சமூகவியல் பேராசிரியை. அங்கே தத்துவம் பயின்று, பின் வணிகம் செய்து, வங்கி அதிகாரியாக இருந்த மிலோஸ்விக், உடன் பயின்ற மீராவின் ஆதரவாலும் தூண்டுதலாலும் அரசியலுக்கு வந்தவர். சோஷலிசம், கம்யூனிசம் எல்லாவற்றையும் கைவிட்டு, செர்பிய தேசியவாதம் பேசி அதிபராகிறார்.
1993 Serbian Renewal Party வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க, பூசல் கொந்தளிப்பாகி ரணகளமாகிறது. மிலோஸ்விக் இன்னொரு பூதத்தையும் கிளப்பி விட்டிருந்தார். 1974லிருந்து கொசாவா பெற்றிருந்த தன்னாட்சி உரிமையை 1989ல் ரத்துச் செய்துவிட்டார். பெரும்பான்மையினரான முஸ்லீம்கள், அல்பேனியா வம்சாவளியினராதலால், அல்பேனியா கிளர்ச்சிக்கு தூபமிட்டது.
நேட்டோவை சேர்த்துக்கொண்டு அமெரிக்கா 10 நாட்கள் பெல்கிரேட் மீது குண்டு வீசி தாக்கியது.
ஒட்டுமொத்த விளைவு :
ஸ்லோவேனியா, குரேஷியா, போஸ்னியா, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ, கோசாவா என ஆறுநாடுகளாகியது யூகோஸ்லோவாகியா.
முப்பதாயிரம் பேரை இழந்து, இருபதாயிரம் முஸ்லீம் பெண்கள் வல்லுறவுக்குள்ளாகி இது 1014ஐ தொட்டு 2000இன் இறுதிவரை நீடித்து வந்த பத்து நூற்றாண்டுகள் பால்கன் சிக்கல்.
இன்னொரு நாட்குறிப்புப் போஸ்னியா சார்ந்தது. ஆன் ப்ராங் போன்ற சிறுமி எழுதியது. 1991-93 வரை. ஸ்வட்டா (பி.1980) என்னும் பள்ளிச்சிறுமி தன் 11 வயதில் யுத்த சூழலில் எழுதிவைத்தது. வழக்குரைஞரான தந்தைக்கும் வேதியியல் பணியாளரான தாய்க்கும் பிறந்த ஸ்வட்டா தன் நாட்குறிப்பை மிம்மி (பிரியமான நாட்குறிப்பே) என்றழைத்து ஒவ்வொரு நாள் பதிவையும் எழுதி வருகிறார்.
“அமைதியே இல்லை. நம் நகரில் இல்லங்களில், சிந்தனைகளில், வாழ்க்கைகளில் திடீரென நுழைந்திருக்கிறது யுத்தம். அது பயங்கரமானது. அம்மா என் சூட்கேஸை நிரப்பி ஆயத்தப்பட்டிருப்பதாலும் பயங்கரமானது” என்கிறது ஏப்ரல் 19, 1992 நாளிட்ட பதிவு.
“பிரியமான நாட்குறிப்பே, படுக்கையிலிருந்து உனக்கு எழுதுகிறேன். படுக்கையில் இன்னொரு தினம் காத்திருக்கிறது எனக்கு. சிறிய மேசை மீது எனது அபிமானத்திற்குரிய பொம்மை பிம்ப்ளிம்பிகா தும்மிக் கொண்டிருக்கிறது; பாண்டா அதனையே உற்றுநோக்குகிறது… பார்க்கட்டும்”.
“19:45 எங்கள் சலவை இயந்திரத்தின் கடகட சப்தத்தைக் கேட்டுக்கொண்டு, திரும்பவும் படுக்கையில் இருக்கிறேன். பழுது பார்ப்பவர் வந்தால் பாவம். நூறு ஆண்டுகள் ஆனது. அதனை மரியாதையுடன் நடத்த வேண்டும். பழுது பார்ப்பவர் போய்விட்டார், இப்போது மைக்கேல் ஜாக்சனைக் கேட்கிறேன் - Man in the mirror? எனக்கொரு விநோத எண்ணம். மடோன்னா விசிறிகள் மன்றத்தில் சேர்ந்திடப்போகிறேன். உண்மையில் நான் வினோதமானவளே!” இது டிசம்பர் 4, 1991 நாட்குறிப்பு.
“பிரியமான மிம்மி, வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த காலம் குரூரமானது, எனவேதான் அதனை நாம் மறக்க வேண்டியிருக்கிறது. நிகழ்காலமும் குரூரமானது, என்னால் அதை மறக்க இயலவில்லை. யுத்தத்துடன் விளையாட முடியாது. எனது இப்போதைய யதார்த்தம் நிலவறை, பயம், குண்டுகள், துப்பாக்கிச்சூடு…” இது மே 13, 1992 நாளிட்டது.
பொதுவாக நாம் நாட்குறிப்பில் எழுத, இச்சிறுமியோ நாட்குறிப்பிற்கு எழுதுகிறார். பொம்மை தும்முவதிலிருந்து மறக்க இயலாத கடந்த காலம் வரை. தன் நாட்குறிப்பை பள்ளி ஆசிரியர்களிடம் அவள் கொடுக்க, ஒரு பத்திரிகையாளரின் கவனத்தில் பட்டு, நூலாக வெளிவந்தது. யுத்தச்சூழலில் வளரும் குழந்தைகள் உளவியல் சிகிச்சைக்கு உள்ளாயினர் அக்காலக் கட்டத்தில். ஸ்வட்டாவும் அப்பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலும், சற்று விலகிய மனநிலையில் அவளால் பார்த்துப்பதிவு செய்ய முடிந்திருக்கிறது, தான் பாத்திரமாக நடித்துள்ள படத்தைப் பார்ப்பதுபோல.
“அவளது நாட்குறிப்புகளை நாம் வாசிக்கையில் பதற்றம், குழப்பம், கள்ளமற்ற தன்மை இல்லாது போதல், துயரங்கள் பற்றி நினைக்கிறோம். ஏனெனில் ஒரு குழந்தை இத்தகைய குரூர நிலையைப் பார்க்கக்கூடாது, அந்நிலையுடன் வாழக் கூடாது. அவளது துயரம் நம்முடையதாகிறது ஏனெனில் சரஜீவோவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவோம். இன்னும் நாம் எதிர்வினையாற்றவில்லை.”
ஒரு மழலையர் பள்ளி செர்பியர்களால் தாக்கப்பட்டு ஐந்து மழலைகள் பலியானார்கள் என்பது இங்கே நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டிய செய்தி.
சிறுமியின் நாட்குறிப்புக் குழந்தைத்தனமை எஞ்சியிருந்தாலும், போரின் குரூரத்தைத் தொட்டுவிடுகிறது. 1945இல் எழுதப்பட்டிருந்தாலும் இவோ ஆண்ட்ரிக்கின் நாவல் ஒரு நூற்றாண்டு பால்கன் பிரச்சினையின் கீழடுக்கிலிருந்து துருவி ஆராய்ந்து, 90களின் உள்நாட்டுப் போரினை தீர்க்கத் தரிசனமாகக் காட்டிவிடுகிறது.
உள்நாட்டுப் போரின்போதே பதிவான மீராவின் நாட்குறிப்பு, ஒரு பெண்ணின் பதிவாக இருப்பினும், நிலவரத்தைச் சொல்வதாகப் பாவனைச் செய்கிறது, திரித்துப் பேசுகிறது, புனைந்து எழுதுகிறது, மக்களுக்குத் துரோகம் இழைக்கிறது - அதிகாரத்தின் கரம் தனக்காக எழுதிக்கொள்வதால். தன் காலத்திற்குச் சாட்சியமாக இருக்கவேண்டிய பொறுப்பு எழுத்தாளருக்கு இருப்பதால், தன் காலம் குறித்த பதிவுடன் நிகழ இருப்பதையும் தீர்க்கத் தரிசனமாகச் சொல்லிவிடுகிறார் இவோ ஆண்ட்ரிக்.
எந்த முன் திட்டமும் உத்தேசமும் இன்றி நாட்குறிப்பிற்காக எழுதும் பள்ளிச் சிறுமியின் எழுத்து அழகாயிருக்கிறது - உண்மை பேசுவதால். அக்காலகட்டத்திலேயே சென்னையில் இதன் ஆங்கிலப் பதிப்பும் தமிழில் மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் டி.டி.வாசுவும், ‘நடுநிலையாளர்’ சோவும் கலந்துகொண்ட பிரபலங்கள். செர்பியாவிலிருந்து 1,50,000 டாலர்கள் செலவு செய்து இந்நிகழ்வுக்கு வருகை புரிந்திருந்தார் மீரா. பின்னர் ஏன் இப்படி நிகழாது?
இதில் ஒரு நெருடல். தமிழாக்கம் செய்தது ஞானியும் அவரது அணியும்.
1. Night and Day - A Diary, Mira Markovic, East West Books, Madras.
2. Zlata’s Diary - A child’s Life in Sarajevo - Zlata Filipovic, Viking, 1993.
3. Ivo Andric, The Bridge Over the Drina, 1945.
4. கொசவோ : துயரத்தின் தொடர்கதை, டிஜோஸ் ஜார்ஜ், தினமணி, 08.04.1999
5. இரவும் பகலும், மீரா மார்கோவிச், த்வனி, சென்னை 1999. 6. எக்ஸில், ஆகஸ்ட் - அக்டோபர் 1999.
பாத்திரங்கள்:
1. அறிவிப்பாளர்
2. இளம் காதலன்
3. இளம் காதலி
4. ஆண் அபிமானி
5. பெண் அபிமானி
6. தலைவர்
மக்களுக்குப் புறம்காட்டியபடி, மேடைக்கு மத்தியில் நின்றுகொண்டு, விழியை அகற்றாமல் பின்-மேடை வாயிலைப் பார்த்தவாறு தலைவரின் வருகைக்காக அறிவிப்பாளர் காத்திருக்கிறார். அவரது இரு புறமும் சுவரை ஒட்டிக்கொண்டது போல் தலைவரின் இரு அபிமானிகளும் (ஒரு ஆண் & பெண்) அவரது வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: (அதே நிலையில் இருந்தபடியான சில இறுக்கமான தருணங்களுக்குப் பிறகு) அதோ அவர்! அதோ அவர்! தெருக்கோடியில்! (தலைவர் வாழ்க போன்ற கோஷங்கள் கேட்கிறது.) அதோ தலைவர்! அவர் வருகிறார், அருகில் வருகிறார்! (மேடையின் இருபக்கத்திலிருந்தும் துதிக் கூச்சல்களும் கைத்தட்டலின் சத்தமும் கேட்கிறது.) அவர் நம்மைப் பாராதிருந்தால் நல்லது... (இரு அபிமானிகளும் சுவரை இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொள்கிறார்கள்.) கவனம், கவனம்! (அறிவிப்பாளர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்.) வாழ்க! வாழ்க! தலைவர்! தலைவர்! தலைவர் நீடூழி வாழ்க! (தலைவரைத் தரிசிப்பதற்காக, இரு அபிமானிகளும், தங்களது உடல்களை விறைப்பாகவும் சுவரில் சாய்ந்தவாறும் வைத்துக்கொண்டு, கழுத்தையும் தலையையும் எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் முன்னோக்கி நீட்டுகிறார்கள்.) தலைவர்! தலைவர்! (இரு அபிமானிகளும் ஒரேநேரத்தில் கோஷமிட்டனர்.) வாழ்க! வாழ்க! (மற்ற ‘வாழ்க’களும், ஆஹா! ஓஹோ!’களும் மேடையின் இருபக்கத்திலிருந்தும் வந்தன. சிறிது நேரத்தில் அவை நின்றுவிட்டது.) வாழ்க! வாழ்க! அறிவிப்பாளர் பின்-மேடையை நோக்கி அடியெடுத்து வைத்து பிறகு நிதானித்து உள்ளே நுழைகிறார். அவரை இரு அபிமானிகளும் பின்தொடர்கின்றனர். அவர் செல்கையில், ‘அய்யோ! அவர் இங்கிருந்து செல்கிறார்! இங்கிருந்து செல்கிறார்! என்னை விரைவாகப் பின்தொடருங்கள்! அவரை நோக்கிச் செல்லலாம்!’ என்கிறார். அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் மேடையிலிருந்து அழுதபடியே செல்கின்றனர்: ‘தலைவர்! தலைவ்வ்வர்! தலைவ்வ்வ்வ்வ்வர்!’ (இந்தக் கடைசி ‘தலைவ்வ்வ்வ்வ்வர்!’ கதறி அழும் குரலாக மேடையின் இரு பக்கத்திலிருந்து எதிரொலிக்கிறது.
அமைதி. சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. இளம் காதலன் வலதுபுறமாகவும் காதலி இடதுபுறமாகவும் உள்ளே நுழைகிறார்கள்; பிறகு மேடையின் மையப்பகுதியில் சந்திக்கிறார்கள்.
இளம் காதலன்: என்னை மன்னியுங்கள் மேடம். இல்லை உங்களைச் செல்வி என்று அழைக்கவேண்டுமா?
இளம் காதலி: மன்னியுங்கள். உங்களை யார் என்றே எனக்குத் தெரியாது.
இளம் காதலன்: எனக்கும் உங்களை யார் என்றே தெரியாது.
இளம் காதலி: அப்படியென்றால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது.
இளம் காதலன்: சரியாகச் சொன்னீர்கள். நம் இருவருக்கும் பொதுவான விஷயமொன்று இருக்கிறது. நம் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய புரிதலின் அடிப்படை நமக்குள் உள்ளது என்பதே இதன் பொருள்.
இளம் காதலி: மன்னியுங்கள். எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை. (அங்கிருந்து கிளம்புவது போல் நடக்க எத்தனிக்கிறாள்.)
இளம் காதலன்: ஓ, என் அன்பிற்குரியவளே, நான் உன்னை நேசிக்கிறேன்.
இளம் காதலி: அன்பே, நானும்!
(அவர்கள் கட்டித்தழுவுகிறார்கள்.)
இளம் காதலன்: அன்பே, உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். உடனடியாக நாம் திருமணம் செய்து கொள்வோம். அவர்கள் இடதுபுறமாக வெளியே செல்கிறார்கள். சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை.
(இரு அபிமானிகளும் பின்தொடர பின்-மேடையில் தோன்றுகிறார்;)
அறிவிப்பாளர்: ஆனால் இந்த வழியேதான் செல்வேன் என்று தலைவர் உறுதியாகக் கூறினாரே.
ஆண் அபிமானி: அது உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?
அறிவிப்பாளர்: ஆம், நிச்சயமாக.
பெண் அபிமானி: உண்மையில் இவ்வழியாகச் செல்வதாக இருந்ததா?
அறிவிப்பாளர்: ஆமாம். ஆமாம். அவர் இந்த வழியாகக் கடந்து சென்றிருக்க வேண்டும். விழா நிகழ்ச்சி பட்டியில் அது குறிக்கப்பட்டிருந்தது.
ஆண் அபிமானி: நீங்களே அதைப் பார்த்தீர்களா, உங்கள் கண்களாலும் காதுகளாலும் கேட்டீர்களா?
அறிவிப்பாளர்: யாரிடமோ சொன்னார். வேறு யாரிடமோ!
ஆண் அபிமானி: ஆனால் யார்? இந்த வேறு யாரோ என்பது யார்?
பெண் அபிமானி: நம்பகமான நபர்தானா? உங்களது நண்பரா?
அறிவிப்பாளர்: என் நண்பர்தான். எனக்கு நன்றாகத் தெரிந்தவர். (பின்னணியில் திடீரென்று மீண்டும் ‘வாழ்க!’ மற்றும் ‘தலைவர் நீடூழி வாழ்க!’ என்ற கூப்பாடுகள் ஒலிக்கின்றன). அவர் தான்! அதோ அங்கே! வாழ்க, வாழ்க, வாழ்கவே! அதோ அவர்! மறைந்து கொள்ளுங்கள்! மறைந்து கொள்ளுங்கள்!
இரு அபிமானிகளும், முன்பு இருந்தது போலச் சுவரை ஒட்டி சாய்ந்துகொண்டு, முழக்கங்கள் வரும் திசையை நோக்கி தங்களது கழுத்தை நீட்டிப் பார்க்கிறார்கள். மக்களுக்குப் புறம்காட்டியபடி பின்-மேடையில் அறிவிப்பாளர் நிற்கிறார்.
அறிவிப்பாளர்: தலைவர் வருகிறார். இதோ நெருங்கிவிட்டார். அவர் கீழே குனிகிறார். நிமிர்கிறார்.
அறிவிப்பாளரின் ஒவ்வொரு சொல்லுக்கும், அபிமானிகள் திடுக்கிட்டு தங்களது கழுத்தை இன்னும் அதிகமாக நீட்டிப்பார்கிறார்கள்; நடுங்குகிறார்கள். அவர் குதிக்கிறார். அவர் ஆற்றைக் கடக்கிறார். அவர்கள் அவருடன் கை குலுக்குகிறார்கள். அவர் கட்டைவிரலை நீட்டினார். உங்களுக்குக் கேட்கிறதா? அவர்கள் சிரிக்கிறார்கள். (அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் சிரிக்கிறார்கள்.) ஆ...! அவர்கள் அவருக்குக் கருவிகளின் பெட்டியைக் கொடுக்கிறார்கள். அவற்றை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? ஆ...! அவர் கையெழுத்திடுகிறார். தலைவர் ஒரு முள்ளெலியை வருடுகிறார். பேரழகுள்ள முள்ளெலி. கூட்டம் கைதட்டுகிறது. கையில் முள்ளெலியுடன் நடனமாடுகிறார். அவர் நடனக் கலைஞரை அணைத்துக்கொள்கிறார். வாழ்க! வாழ்க! (கூப்பாடுகள் மேடையின் இருபக்கத்திலிருந்தும் கேட்கின்றன. ஒருபுறம் நடனக் கலைஞரும் மறுபுறம் முள்ளெலியுமாக அவரைப் புகைப்படம் எடுக்கிறார்கள்; கூட்டத்தை நோக்கி கை அசைக்கிறார். பிறகு அவர் வெகுதூரத்தைப் பார்த்து காறி உமிழ்கிறார்.
பெண் அபிமானி: இங்கே வருகிறாரா? நம் திசையில் அவர் வருகிறாரா?
ஆண் அபிமானி: உண்மையில் அவர் செல்லும் வழியில்தான் நாம் இருக்கிறோமா?
(இரு அபிமானிகளை நோக்கி தலையைத் திருப்புகிறார்)
அறிவிப்பாளர்: அமைதி. நகராதீர்கள், நீங்கள் எல்லாவற்றையும் கெடுக்கிறீர்கள்...
பெண் அபிமானி: ஆனால்...
அறிவிப்பாளர்: அமைதியாக இரு, சொல்வதைக் கேள்! நான் உனக்குச் சொல்லவில்லையா அவர் வாக்குறுதியளித்திருக்கிறார் என்றும் தனது பயணத்திட்டத்தை அவரே தயார் செய்தார் என்றும்... (மேடையில் திரும்பிநின்றவாறு அவர் அழுகிறார்.) வாழ்க! வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க! (அமைதி) நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க! (அமைதி) நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க! (தங்களை அடக்கிக் கொள்ள இயலாமல் இரு அபிமானிகளும் திடீர் என அழுகிறார்கள்.) வாழ்க! நீடூழி வாழ்க தலைவர்!
அறிவிப்பாளர்: (அபிமானிகளுக்கு) அமைதி, நீங்கள் இருவரும்! அமைதியாக இருங்கள்! நீங்கள் அனைத்தையும் கெடுக்கிறீர்கள்! (பின்னர், மீண்டும் ஒருமுறை மேடையை நோக்கினார்; அபிமானிகள் அமைதியாகிவிட்டனர்.) தலைவர் நீடூழி வாழ்க! (வெறித்தனமான உற்சாகம்.) வாழ்க! வாழ்க! அவர் சட்டையை மாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் சிவப்பு திரைக்குப் பின்னால் மறைகிறார். அவர் மீண்டும் தோன்றுகிறார்! (கைதட்டல் வலுக்கிறது.) சபாஷ்! சபாஷ்! (அபிமானிகளும் ’சபாஷ்’ என்று ஆர்ப்பரித்துக் கைதட்ட ஏங்குகிறார்கள்; தங்கள் கரங்களை வாயில் வைத்துத் தங்களைத் கட்டுப்படுத்திக்கொண்டனர்.) அவர் தனது கழுத்துப்பட்டையை அணிகிறார்! அவர் செய்தித்தாளைப் படித்துவிட்டு காலை காபியை அருந்திக்கொண்டிருக்கிறார்! இன்னமும் முள்ளெலி அவரிடம் இருக்கிறது. படிக்கட்டின் கைப்பிடிச்சுவர் விளிம்பில் சாய்ந்திருக்கிறார். கைப்பிடிச்சுவர் உடைகிறது. அவர் எழுகிறார்... யார் உதவியுமின்றி அவரே எழுகிறார்! (கைத்தட்டல், ’வாழ்க’ கோஷங்கள்) சபாஷ்! சிறப்பு! அழுக்கடைந்த ஆடைகளைச் சுத்தம் செய்கிறார்.
இரு அபிமானிகள்: (கால்களைத் தரையில் உதைத்து) ஓ! ஆ! ஓ! ஓ! ஆ! ஆ!
அறிவிப்பாளர்: அவர் முக்காலியில் ஏறுகிறார்! அவர் இன்னொருவரின் தோள்ப்பட்டைகளின் மீது ஏறுகிறார். அவர்கள் அவருக்கு ஒரு மெல்லிய முனைகளுடைய ஆப்பு ஒன்றைக் கொடுக்கிறார்கள், இது தமாசுக்கு என்று அவருக்குத் தெரியும், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை, அவர் சிரிக்கிறார். (கைதட்டலும் ஆரவார பேரொலியும்.)
ஆண் அபிமானி: (பெண் அபிமானியிடம்) உனக்குக் கேட்கிறதா? கேட்கிறதா? ஆ! ஒருவேளை நான் அரசனாக இருந்தால்...
பெண் அபிமானி: ஆ...! தலைவர்! (இது ஓர் உயர்ந்த தொனியில் கூறப்படுகிறது.)
அறிவிப்பாளர்: (இன்னமும் மக்களுக்குப் புறம் காட்டியபடி நிற்கிறார்.) அவர் முக்காலி மீது ஏறுகிறார்! இல்லை இல்லை. அவர் இறங்குகிறார். ஒரு சிறுமி அவருக்குப் பூங்கொத்து அளிக்கிறாள்... என்ன செய்யப்போகிறார்? அவர் பூக்களை வாங்குகிறார்... அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று அழைக்கிறார்...
ஆண் அபிமானி: அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று விளிக்கிறார்...
பெண் அபிமானி: அவர் சிறுமியை கட்டியணைத்து... ‘என் கண்ணே’ என்று அழைக்கிறார்...
அறிவிப்பாளர்: அவர் அவளுக்கு முள்ளெலியைக் கொடுக்கிறார். சிறுமி அழுகிறாள்... தலைவர் நீடூழி வாழ்க! தலைவ்வ்வர் நீடூழி வாழ்க!
ஆண் அபிமானி: அவர் இங்கே வருகிறாரா?
பெண் அபிமானி: அவர் இங்கே வருகிறாரா?
அறிவிப்பாளர்: (திடீர் ஓட்டத்துடன், வேகமாக பின்-மேடைக்குள் நுழைகிறார்) அவர் போகிறார்! விரைவாக! வாருங்கள்!
அவர் மறைகிறார், இரு அபிமானிகளும் அவரைப் பின்தொடர்கின்றனர். அனைவரும் ‘வாழ்க! வாழ்க!’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. காதலர்கள் இருவரும் உள்நுழைகிறார்கள், மார்போடு அணைத்துப் பின்னிக்கொண்டவர்களென. மேடையின் நடுவில் நின்று பிறகு விலகுகின்றனர்; அவள் தனது கையில் கூடையொன்றை வைத்திருக்கிறாள்.
இளம் காதலி: வாயேன், சந்தைக்குச் சென்று முட்டைகள் வாங்கி வருவோம்!
இளம் காதலன்: அடேடே! நீ நேசிப்பது போலவே நானும் அவற்றை விரும்புகிறேன்.
அவள் அவன் கையைப் பிடித்துக்கொண்டாள். வலதுபுறத்திலிருந்து அறிவிப்பாளர் ஓடி வந்து, விரைவாகத் தனது இடத்தை அடைந்து, மக்களுக்குப் புறம்காட்டியபடி நிற்கிறார்; இரு அபிமானிகளும் அவருக்குப் பிறகு ஒருவர் இடதுபுறத்திலிருந்தும், இன்னொருவர் வலதுபுறத்திலிருந்தும் வருகின்றனர். அபிமானிகள் வலதுபுறத்தினூடே வெளியே செல்லவிருந்த காதலர்களை இடித்துவிட்டனர்.
ஆண் அபிமானி: மன்னிக்கவும்!
இளம் காதலி: அடடா! மன்னிக்கவும்!
பெண் அபிமானி: மன்னிக்கவும்! அடடா! மன்னிக்கவும்!
இளம் காதலி: அடடா! மன்னிக்கவும், மன்னிக்கவும், தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்!
ஆண் அபிமானி: மன்னிக்கவும், மன்னிக்கவும், மன்னிக்கவும், அடடா! தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்!
இளம் காதலன்: அடடா! மன்னிக்கவும், அனைவரும் மன்னிக்கவும்!
இளம் காதலி: (இளம் காதலனிடம்:) வாருங்கள், பிரபுவே! (இரு அபிமானிகளிடம்:) எந்தத் தீங்கும் நடக்கவில்லை! (தன் காதலனின் கைப்பிடித்து அவனை வெளியே இட்டுச் செல்கிறாள்.)
அறிவிப்பாளர்: (பின்-மேடையைப் பார்த்தவாறு) தலைவரை முன்னோக்கி தள்ளுகிறார்கள், பின்னோக்கி தள்ளுகிறார்கள், இப்போது அவரது கால்சட்டைக்கு இஸ்திரி இடுகிறார்கள்! (இரு அபிமானிகளும் தங்கள் பழைய இடத்திற்கே வந்துவிட்டனர்.) தலைவர் புன்னகைக்கிறார். அவர்கள் அவருடைய கால்சட்டையை இஸ்திரி இடுகையில் அவர் நடக்க ஆரம்பிக்கிறார். மலர்களையும் ஓடையில் விளையும் கனிகளையும் சுவைக்கிறார். அவர் மரங்களின் வேர்களையும் சுவைக்கிறார். சிறு குழந்தைகளைத் தன்னிடம் வரும்படி அவர் வற்புறுத்துகிறார். ஏனென்றால் எல்லோரிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு. காவல்துறைப் படையைத் துவக்கி வைக்கிறார். அவர் நீதியரசருக்கு மரியாதை செலுத்துகிறார். வெற்றி வீரர்களுக்கும், தோற்கடிக்கப்பட்டவர்களுக்கும் வணக்கம் செலுத்துகிறார். இறுதியாக அவர் கவிதையொன்றை வாசிக்கிறார். மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர்.
இரு அபிமானிகள்: ஆஹா! ஆஹா! (பின்னர், அழுதபடியே:) அய்யோ! அய்யோ!
அறிவிப்பாளர்: எல்லா மக்களும் அழுகிறார்கள். (மேடையின் இருபக்கத்திலிருந்தும் உரத்த அழுகைகள் கேட்கின்றன; அறிவிப்பாளரும் அபிமானிகளும் கதற ஆரம்பிக்கின்றனர்.) அமைதி! (இரு அபிமானிகளும் அமைதியானார்கள்; மேடையின் இருபக்கங்களிலும் அமைதி நிலவியது.) கால்சட்டையை அவர்கள் தலைவரிடம் திரும்பக்கொடுத்தனர். தலைவர் அதை உடுத்திக் கொள்கிறார். அவர் மகிழ்ச்சியாகத் தெரிகிறார்! வாழ்க! (மேடையின் இருபக்கங்களிலிருந்தும் ஆரவாரங்கள் கேட்கின்றன. இரு அபிமானிகளும் ஆர்ப்பரித்து ஒலி எழுப்புகிறார்கள்; அங்கு என்ன நடக்கிறது என்று சரியாகத் தெரியாததால், எகிறிக் குதித்துப் பார்க்க முயற்சி செய்கின்றனர்.) தலைவர் கட்டை விரலைச் சூப்புகிறார்!
(இரு அபிமானிகளிடம்:) உங்கள் பழைய இடத்துக்கு வாருங்கள், ஏய், உங்கள் இருவரையும்தான் சொல்கிறேன், அசையாதீர்கள், ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள், கூவுங்கள். தலைவர் நீடூழி வாழ்க! என்று.
இரு அபிமானிகள்: (சுவரில் ஒட்டிக்கொண்டபடி. மேலும் கூவுகிறார்கள்) நீடூழி வாழ்க, தலைவர் நீடூழி வாழ்க!
அறிவிப்பாளர்: அமைதியாக இருங்கள். நீங்கள் அனைத்தையும் கெடுத்துவிடுவீர்கள், அதோ அங்கேப் பாருங்கள், தலைவர் வருகிறார்!
ஆண் அபிமானி: (அதே நிலையிலிருந்தவாறு) தலைவர் வருகிறார்!
பெண் அபிமானி: தலைவர் வருகிறார்!
அறிவிப்பாளர்: கவனமாக இருங்கள்! அமைதியாகவும்! அடடா! தலைவர் திரும்பிப்போகிறார்! அவரைப் பின்தொடருங்கள்! என்னைப் பின்தொடருங்கள் அறிவிப்பாளர் பின்-மேடையின் வாயிலுக்குச் செல்கிறார் பிறகு ஓடுகிறார்; இரு அபிமானிகளும் ஆளுக்கொரு திசையாக வலது இடது என வெளியேறுகின்றனர். இரு பக்கங்களிலும் ஆராவாரம் கேட்டுக்கொண்டே இருக்கிறது பிறகு சிறிது நேரத்தில் குறைகிறது. சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. இளம் காதலனும் அவனைத் தொடர்ந்து இளம்காதலியும், மேடையின் இடதுபுறத்திலிருந்து வந்து வலதுபுறத்தினூடே வெளியே செல்கின்றனர்.
இளம் காதலன்: (ஓடிக்கொண்டே) உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே! உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
வெளியே செல்கிறான்
இளம் காதலி: (ஓடிக்கொண்டே) கொஞ்சம் நில்! கொஞ்சம் நில்!
அவள் வெளியே செல்கிறாள். சிறிது நேரத்திற்கு மேடையில் யாரும் இல்லை. பிறகு இரு காதலர்களும் ஓடியவாறு மேடையைக் கடந்து வெளியே செல்கின்றனர்.
இளம் காதலன்: உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
இளம் காதலி: கொஞ்சம் நில்!
அவர்கள் வலதுபுறத்தினூடே வெளியே செல்கின்றனர். மேடையில் ஒருவரும் இல்லை. அறிவிப்பாளர் மீண்டும் பின்-மேடையில் தோன்றுகிறார். ஆண் அபிமானி வலதுபுறத்திலிருந்தும், பெண் அபிமானி இடதுபுறத்திலிருந்தும் மேடைக்கு வருகின்றனர். அவர்கள் மேடையின் மையத்தில் சந்திக்கிறார்கள்.
ஆண் அபிமானி: அவரைக் காணும் வாய்ப்பைத் தவறவிட்டோமே!
பெண் அபிமானி: நம் துரதிர்ஷ்டம்!
அறிவிப்பாளர்: அது உங்கள் தவறு!
ஆண் அபிமானி: நீங்கள் சொல்வது உண்மை இல்லை!
பெண் அபிமானி: ஆம். நீங்கள் சொல்வது உண்மை இல்லை!
அறிவிப்பாளர்: இது என்னுடைய தவறு என்று சொல்கிறீர்களா?
ஆண் அபிமானி: இல்லை, அப்படிச் சொல்லவில்லை!
ஆண் அபிமானி: இல்லை, நாங்கள் அப்படிச் சொல்லவில்லை!
(மேடையின் இருபக்கங்களிலிருந்தும் ‘வாழ்க’ போன்ற ஆரவாரங்களின் கூச்சல் வருகின்றன)
அறிவிப்பாளர்: வாழ்க!
பெண் அபிமானி: அந்த ஓசை அதோ அங்கிருந்து வருகிறது! (அவள் வலதுபுறத்தைச் சுட்டிக்காட்டுகிறாள்.)
ஆண் அபிமானி: ஆம், அந்த ஓசை அதோ அங்கிருந்து வருகிறது! (அவன் இடதுபுறத்தைச் சுட்டிக்காட்டுகிறான்.)
அறிவிப்பாளர்: நல்லது. என்னைப் பின்தொடருங்கள்! தலைவர் நீடூழி வாழ்க!
(அவர் வலதுபுறமாக வெளியேறுகிறார்; இரு அபிமானிகளும் கத்திக்கொண்டே அவருடன் வெளியேறுகின்றனர்.)
இரு அபிமானிகள்: தலைவர் நீடூழி வாழ்க!
(அவர்கள் வெளியேறிச் செல்கின்றனர். சிறிது நேரம் மேடையில் ஒருவரும் இல்லை. இளம் காதலனும் அவனது காதலியும் இடதுபுறத்திலிருந்து வருகின்றனர். இளம் காதலன் பின்-மேடையினூடாக வெளியே செல்கிறான்; ‘உன்னைப்பிடித்துவிடுவேனே!’ என்று சொல்லியபடியே வலதுபுறத்தினூடாக காதலி வெளியேறுகிறாள். அறிவிப்பாளரும் அபிமானிகளும் பின்-மேடையிலிருந்து தோன்றுகிறார்கள். அறிவிப்பாளர் அபிமானிகளிடம் சொல்லுகிறார்:) தலைவர் நீடூழி வாழ்க! (இந்த வாசகத்தை அபிமானிகள் திரும்பச் சொல்கின்றனர். பிறகு, அபிமானிகளிடம் அவர் சொல்லுகிறார்:) என்னைப் பின்தொடருங்கள்! தலைவரைப் பின்தொடருங்கள்! (பின்-மேடையினூடே வெளியே செல்கிறார், இன்னமும் ஓட்டமும் கூச்சலும் தொடர்கிறது:) அவரைப் பின்தொடருங்கள்! (ஆண் அபிமானி வலதுபுறமாகவும் பெண் அபிமானி இடப்புறமாகவும் வெளியேறுகிறார்கள். இந்த முழுநேரத்திலும், மேடையில் நிகழ்பவற்றின் தாளத்திற்கு ஏற்ப ஆரவார பேரொலி சத்தமாகவோ மங்கலாகவோ கேட்கிறது; சிறிது நேரத்திற்கு மேடையில யாரும் இல்லை. பிறகு காதலர்கள் இருபுறத்திலிருந்தும் அழுதபடியே வருகிறார்கள். )
இளம் காதலன்: உன்னைப் பிடித்துவிடுவேனே!
இளம் காதலி: உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
(அவர்கள் ஓடிக்கொண்டே கோஷமிடுகின்றனர்) தலைவர் நீடூழி வாழ்க அறிவிப்பாளரும் இரு அபிமானிகளும் பின்-மேடையிலிருந்து தோன்றி, ‘தலைவர் நீடூழி வாழ்க!’ என்று கோஷமிடுகின்றனர்; இவர்களைத் தொடர்ந்து இரு காதலர்களும் கோஷமிடுகின்றனர். அவர்கள் எல்லாரும் வரிசையாக அழுதபடியே வலதுபுறமாக வெளியேறுகின்றனர். ’தலைவர்! நீடூழி வாழ்க, தலைவர்! அவரைப் பார்த்துவிடுவோம் இங்கிருந்து தெரியும்! உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!’ எல்லா வாசல்களினூடேயும் அவர்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். இறுதியாக, வலதுபுறத்திலிருந்தும், இடப்புறத்திலிருந்தும், பின்-மேடையிலிருந்தும் வந்த அவர்கள் அனைவரும் மேடையின் மையத்தில் சந்திக்கின்றனர். அப்போது இருபக்கத்திலிருந்தும் வரும் ஆரவார பேரொலிகளும் கைத்தட்டல்களும் பயமுறுத்தும் ஒலியாக மாறுகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் ஆரத்தழுவுகின்றனர். உச்ச ஸ்தாயில் அழுது கொண்டு , தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!பின்னர், திடீரென்று, அமைதி.
அறிவிப்பாளர்: தலைவர் வருகிறார். இதோ தலைவர். உங்களிடம் வருகிறார்! தயாராக இருங்கள்!
ஆண் அபிமானியும் இளம் காதலியும் வலதுபுறச் சுவரில் ஒட்டிக் கொண்டவாறு நிற்கின்றனர்; பெண் அபிமானியும் இளம் காதலனும் இடதுபுறச் சுவரில் ஒட்டியபடி நிற்கின்றனர். இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆண் அபிமானியும் இளம் காதலியும்: என் அன்பே, என் செல்லமே!
பெண் அபிமானியும் இளம் காதலனும்: என் அன்பே, என் செல்லமே!
இதற்கிடையில், அறிவிப்பாளர் அவரது இடத்துக்கு மீண்டும் வந்தார், மக்களுக்குப் புறம்காட்டியபடி, விழியை அகற்றாமல் மேடையினின்று வெளியேறும் வழியைப் பார்த்தவாறு நிற்கிறார்; கைதட்டல்கள் மந்தமடைகின்றன.
அறிவிப்பாளர்: அமைதி. தலைவர் தனது சூப்பை சாப்பிட்டுவிட்டார். அவர் வருகிறார். அவர் பக்கத்தில் வந்துவிட்டார்.
ஆரவார பேரொலி பல மடங்கு அதிகரிக்கிறது; அபிமானிகளும் காதலர்களும் கோஷமிடுகின்றனர்.
அனைவரும்: வாழ்க! வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!
அவர் வருவதற்கு முன் வண்ணத்தாள் துண்டுகள் தூவப்படுகிறது. தலைவர் கடந்து செல்வதற்கு ஏதுவாக, அறிவிப்பாளர் ஒரு பக்கமாகத் திடீரென ஒதுங்கி நிற்கிறார். வண்ணத்தாள் துண்டுகளைக் கையில் ஏந்தியபடி மற்ற நான்கு பாத்திரங்களும் உறைந்து போய் நிற்கின்றனர். ஆனாலும் இவற்றைச் சொல்லியபடி:) வாழ்க! (தலைவர் பின்- மேடையிலிருந்து முன்-மேடைக்கு நடந்து அங்கிருந்து மையப்பகுதிக்குச் செல்கிறார்; பிறகு, அடி விளக்கு பகுதிக்குச் செல்கிறார். தயங்கி நிற்கிறார். இடதுபுறம் நோக்கி அடியெடுத்து வைக்கிறார். பின்னர் ஏதோவொரு முடிவெடுத்தவராக உற்சாகத்துடன் வலதுபுறம் நகர்கிறார். அங்கு அறிவிப்பாளரின் ஆவல் கொண்ட ‘வாழ்க!’ கேட்கிறது. திகைப்பிலுள்ள மற்ற நால்வரின் பலவீனமான ‘வாழ்க’வும் கேட்கிறது. அவர்கள் திகைத்து நிற்கக் காரணம் உண்டு, ஏனெனில் தலைவர் வட்டத் தொப்பியொன்றை அணிந்திருந்தாலும் தலையில்லாமல் இருக்கிறார். இதைச் செய்துமுடிப்பதுகூடச் சுலபமானது: மேலங்கி அணிந்திருந்து அதன் கழுத்துப்பட்டைகள் தூக்கிவிடப்பட்டு, தலையில் வட்டத் தொப்பி வைத்திருப்பதே தலைவராக நடிக்கும் நடிகருக்குப் போதுமானது. மேலங்கி உடுத்தியிருக்கும் தலையில்லாத வட்டத்தொப்பி மனிதன் - இது அநேகமாக மாயத்தோற்றம் போன்றவொன்றையும் சந்தேகத்திற்கிடமின்றி ஒருவிதமான பரபரப்பையும் உருவாக்கியிருக்கும். தலைவர் அங்கிருந்து மறைந்த பிறகு, பெண் அபிமானி இவ்வாறு சொன்னார்,
பெண் அபிமானி: ஆனால்... ஆனால்... தலைவருக்குத் தலை இல்லையே!
அறிவிப்பாளர்: அவர் மேதையாக இருக்கும்போது அவருக்குத் தலையின் தேவை என்ன!
இளம் காதலன்: அதென்னவோ உண்மைதான்! (இளம் காதலியிடம்) உங்கள் பெயர் என்ன?
இளம் காதலன் பெண் அபிமானியிடமும்,
பெண் அபிமானி அறிவிப்பாளரிடமும்,
அறிவிப்பாளர் இளம் காதலியிடமும்,
இளம் காதலி காதலனிடமும்
உங்கள் பெயர் ? உங்கள் பெயர்? உங்கள் பெயர்?
பிறகு, எல்லோரும் ஒன்றாக, ஒருவர் மற்றவரிடம் உங்கள் பெயர் என்ன ?
(திரைச்சீலை விழுகிறது.)
துரதிர்ஷ்டவசமாக ரேயின் நவயதார்த்த அழகியலின் தடத்தில் பயணித்து அவரது கலைப்பயணத்தைத் தொடர்பவர்களாக வாதிடுவதற்குக் கன்னட கலை சினிமாவின் குறியீடான கிரீஷ் காசரவல்லி போன்ற ஒருவர் தமிழ் சினிமாவில் இல்லை. மலையாள சினிமாவைப் பொறுத்த வரையில், ரேயின் சில போக்குகளுக்கும் அடூர் கோபாலகிருஷ்ணனின் அழகியலுக்கும் இடையே இணையை வரைய விமர்சகர்கள் தொடர்ந்து முயல்கின்றனர். அடூரின் படங்களைப் பொறுத்து ஒருவர் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். ஷ்யாம் பெனகல் மற்றும் கௌதம் கோஷ் போன்ற வெளி மாநிலத்திலிருந்து வந்து எடுத்தவர்களின் படங்களையும், ஓரளவிற்கு உள்ளூர் திரைப்பட இயக்குனர் நரசிங்க ராவ் போன்றோரால் எடுக்கப்பட்ட படங்களையும் ஒருவர் சுட்டிக் காட்டினாலும், தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவிலும் ரேயின் யதார்த்த அழகியல் பள்ளியின் காத்திரமான வாரிசு இருப்பதாகக் கூற முடியாது.
ரே அல்லது கலை சினிமா இயக்கம் அல்லது 1970களின் புதிய இந்திய சினிமாவின் தாக்கம்
பொதுவாக, தமிழ் சினிமா ஒரு தனித்துவமான கலை சினிமா இயக்கம் அற்றதாக வகைப்படுத்தப்படுகிறது. ஆயினும்கூட, 1970 கள் தமிழ் சினிமாவில் முக்கியச் சோதனைகள் நடந்த ஒரு காலத்தைக் குறிக்கின்றது. அதில் திரைப்பட இயக்குனர்கள் கதை மற்றும் வகைமையின் வரம்புகளை உந்தித்தள்ளினார்கள். ரேயின் செல்வாக்கின் சுவடுகளை நாம் அந்தக் காலகட்ட தமிழ் சினிமாவில் காணலாம். ரேயின் படங்களைப்பற்றிய சொல்லாடல் அடர்த்தியான ஒன்று.
குறிப்பாக, பதேர் பாஞ்சலி (1955), அபராஜிதோ (1956), மற்றும் அபுர் சன்சார் (1959) ஜல்சாகர் (1958) தேவி (1960), சாருலதா (1964), கல்கத்தா முத்தொகுப்பு- -பிரதித்வந்தி (1970), சீமா பத்தா (1971) மற்றும் ஜன ஆரண்யா (1976), மகாநகர் (1963) மற்றும் நாயக் (1966), போன்ற படங்களைப்பற்றிக் கல்வித்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அறிஞர்கள் ரேயின் அழகியலைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆயினும்கூட, அத்தகைய காத்திரமான எழுத்துக்கள் ரேயின் தலைசிறந்த படைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்கிற ஆசையைத் தீர்த்துவிடவில்லை என்று நான் உணர்கிறேன். ரேயை நான் சென்னையில் திரைப்பட விழாவில் திரைக்கல்லூரி மாணவனாகச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால், ரேயின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு முடிந்த இக்காலகட்டத்தில் பல உணர்வுகளை மீட்டெடுக்கிறது.
அவரது ரசிகனாகச் சில நினைவுகளை மட்டுமே எழுதுவது எனக்கு மகிழ்ச்சியைத்தராது, இன்று எண்ணிப்பார்க்கையில் அவரது படங்களின் பல வண்ணமயமான நினைவுகளையும், பல குறிப்பிடத்தக்க தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் அவருடன் எப்போதும் உணர்ந்த ஆழமான பிணைப்பையும் உடனடியாக நினைவுகூரச் செய்கிறது. நேரடியான யதார்த்த அழகியல் சார்ந்த ரேயின் செல்வாக்குத் தமிழ் சினிமாவில் இல்லாததாலும், அவரது தாக்கத்தைக் கண்டுபிடிக்கக் கடினமாக இருந்தாலும், மறைந்த இரண்டு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குனர்களின் படைப்புகள் மூலம், ரேக்கும் தமிழ் சினிமாவிற்கும் இடையே ஒரு தளர்வான இணைப்பைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். சமீபத்தில் மறைந்த மகேந்திரன் (2019) மற்றும் பாலு மகேந்திரா (2014)வுக்கும் இக்கட்டுரை ஒரு மனமார்ந்த அஞ்சலியே. பாலுமகேந்திரா அவர்களின் முக்கியப் படங்களான வீடு (1988) மற்றும் சந்தியா ராகத்தில் (1989) சத்யஜித் ரேயின் யதார்த்த அழகியலின் தாக்கம் தலையாயது. வீடு தனது கதையாடலுக்குப் பாலு மகேந்திரா அவர்களின் அன்னையின் வீடு கட்டும் ஆசையையும் பிரயத்தனங்களையும் உந்துதலாகக் கொண்டுள்ளது. தனது அன்னையின் குடும்பத்திற்கான பிரத்தியேக வெளி சார்ந்த உணர்வெழுச்சிகளையும் அழகியல் ஆசானான சத்யஜித் ரேயின் யதார்த்த அழகியல் சார்ந்த தியானிப்புகளையும் கொண்டு தனது இவ்விரு படங்களையும் பாலு அவர்கள் செதுக்கியிருக்கிறார்.
இரண்டு படங்களின் முடிவுகளும் சமீப காலத்தில் சினிமா ஆர்வலர்களால் அதிகம் பேசப்பட்டவை. இரண்டிலுமே யதார்த்த அழகியலின் வீச்சு உண்டு. சுதா (அர்ச்சனா) தான் வாழும் வாடகை வீட்டிலிருந்து தனது தங்கை மற்றும் தாத்தாவுடன் (முருகேசன்/ சொக்கலிங்க பாகவதர்) வெளியேற வேண்டிய கட்டாயத்தினால் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் தனக்கு விருப்பமற்றபோதிலும் சொந்த வீடு கட்ட ஆரம்பிக்கிறார். நகரத்திற்கு வெளிப்புறத்திலுள்ள தாத்தாவின் ஒரு ப்ளாட்டை விற்று மற்றொரு ப்ளாட்டில் வீடு கட்ட ஆரம்பிக்கிறார்.
நடுத்தரவர்க்க குடும்பம் வீடு கட்டுவதற்குப் படும்பாட்டைப் பாலு அவர்கள் மிக யதார்த்தமாகச் சித்தரித்துள்ளார். பல சிக்கல்களுக்கு நடுவே வீடு கட்டுவது நின்று நின்று தொடர்கிறது. கான்ட்ராக்டர் போன்ற கட்டுமான பொருட்களைத் திருடக்கூடியவர்கள் இருந்தாலும் அங்கு வேலைசெய்யும் மங்கம்மா (பசி சத்யா) போன்ற நல்லமனம் கொண்டவர்களும் உள்ளார்கள். மழையிலிருந்து தனது கடனுக்கான விண்ணப்பத்தின் தாமதம் வரை அவரைப் பாதிக்கிறது. தனது மேலாளரிடம் உதவி கேட்கலாம் என்றால் அவன் சபலம் நிறைந்தவனாக இருக்கிறான். ஆயினும் தனது நண்பன் கோபியின் (பானு சந்தரின்) உறுதுணையுடன் வீடு ஒருவாறாக முன்னேறுகிறது. ஆயினும் அது முடிவுறும் தருவாயில் பெரிய இடரொன்றை சந்திக்கிறது. சென்னை பெருநகர நீர் வாரியத்திலிருந்து வரும் அதிகாரி வாரியம் கைப்பற்றி அரசின் கையிலிருக்கும் நிலத்தில் எப்படி வீடு கட்டுகிறீர்கள் என்று கேட்கிறார். கடைசிக் காட்சியில் அந்த நகர வெளிப்புற சிற்றூரின் பஞ்சாயத்து ஆபிஸில் சுதாவும் கோபியும் நீதிக்காக அமர்ந்திருப்பதுடன் படம் முடிகிறது. பாலு மகேந்திராவின் தனித்துவ அழகியலான அச்சுற்றுச் சூழலிலுள்ள இயல்பான வெளிச்சத்தில் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பெரியவர் தாத்தா முருகேசன் முடிவுறாத வீட்டைக்காண செல்கிறார். அந்த, கட்டிப் பூசப்படாத சுவரை தனது கைகளால் தொட்டு ஆசுவாசம் பெருகிறார். வரும் வழியிலே விடு எனும் முடிவுறாத ஆசையுடன் பெருவாரியான மத்தியத்தர மக்களைப் போல இறந்து மறைகிறார். பாலு அவர்கள் மேலான சத்யஜித் ரே என்கிற யதார்த்த அழகியல்வாதியின் தாக்கத்திற்கு வீடு ஒரு சான்று. போலவே, சந்தியா ராகமும் சத்யஜிரேயின் ஒளிப்பதிவாளரான சுப்ரதோ மித்ரவிற்கு அஞ்சலியென்று சொல்லலாம்.
மித்ர அவர்கள் மாணவர்களான எங்களுக்குத் தனது பூனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவிற்கான பட்டறையில் தனது யதார்த்தவாத அழகியலைப் பற்றிப் பேசியுள்ளார். உலகத்திலே 1950களில் நிழற்படக்காரனாக இருந்த அதுவரை சினிமாவிற்கான மிட்சல் போன்ற கேமராவை பார்த்திராத தன்னைச் சத்யஜித் ரே தனது முதல் படமான பதேர் பாஞ்சாலியில் நேரடியாக ஒளிப்பதிவாளராக ஆக்கியதை நினைவுகூர்ந்து தனது நிழற்படப் பின்னணி பதேர் பாஞ்சாலியில் எப்படி உதவியது என்பதை விளக்கினார். பாலு அவர்களும் பூனே கல்லூரியில் தனது அத்தகைய பின்னணியை என்னிடம் பகிர்ந்துள்ளார்கள். பதேர் பாஞ்சாலியில் ரெப்லெக்டர் அன்று சொல்லகூடிய சில்வர் வண்ணசாயம் அடித்திருக்கும் போர்டுகளைக் கொண்டு சூரிய ஒளியை மிதமாக அதுகாறும் இந்திய சினிமாவில் காணாத வகையில் சுப்ரதோ மித்ர பிரதிபலிக்க வைத்து வெளிப்புறங்களில் உள்ள ஷாட்டுகளில் எப்படி பயன்படுத்தியுள்ளார் என்று பாலு அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஜலசாகர் (1958) எனும் படத்தில் ஒரு நிலபிரபுத்துவக் காலத்தின் குறியீடான முதிய நிலவுடமையாளர் மாறிவரும் நவீன சமுகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் தேங்கி மடிவதை தனக்கேயுரிய யதார்த்த கவிநயத்துடன் ரே ஓவியமாக திரையில் வடித்திருப்பார்கள். அந்த முதியவர் வாழும் இன்று அவர் பராமரிக்கத் திண்டாடும் அரண்மனை போன்ற வீட்டின் வெளிப்புறத்திலும் மற்றும் மொட்டைமாடியிலும் பெரிய வெள்ளை வேட்டிகள் மற்றும் சேலைகளைப் போர்டுகளில் மாட்டி சூரிய ஒளியை அவற்றின் மூலம் பிரதிபலிக்கச் செய்து மித்ர அருமையாக ஒளிப்பதிவு செய்திருப்பதை நிகரற்றது என்று கூறிய பாலு அவர்களின் இயல்பான மற்றும் மினிமலிஸ அழகியலுக்கு மித்ர அவர்களின் இணையற்ற அழகியல் வழிகோலியது.
சாருலதாவில் (1964) மித்ர அவர்கள் பவுன்ஸ் லைட்டிங் எனப்படுகிற நேரடியாக அல்லாமல் மறைமுகமாக ஒளிபாய்ச்சுவதில் மற்றுமோர் புதுமையைச் செய்தார். ஒரு பெட்டிக்குள் 200 வாட்ஸ் பல்புகளைத் தேவைக்குத் தகுந்த மாதிரி வரிசையாக அடுக்கி பெரிய சீலிங் கொண்ட அந்த அரண்மனை போன்ற நவீன வீட்டின் உட்புறத்தில் சமமான ஒளியைப் பாய்ச்சி அத்தகைய வீட்டின் ஒளி யதார்த்தத்தைச் சட்டகப்படுத்தினார். பாலு அவர்களும் தனது பவுன்ஸ் லைட்டிங் அழகியலுக்குப் பெயர் போனவர். அவருக்கு நேரடியான ஒளியின்மூலம் வரும் அடர்ந்த நிழல்களின் மேல் ஒவ்வாமை உண்டு. சொக்கலிங்கம் (சொக்கலிங்க பாகவதர்) சந்தியா ராகத்தில் தனது முதிய வயதில் தனது சகோதரனின் மகனான வாசுவிற்கும் (ஓவியர் வீர சந்தானம்) மற்றும் அவர் மனைவியான துளசிக்கும் (அர்ச்சனா)யின் வீட்டில் அவர்கள் குழந்தையுடன் அவருக்கு ஏற்படும் பாச இணைப்பின்போதும் பின்னர்த் தாம் பாரமாக இருக்கிறோமோ என்று எண்ணும்போதும் சரி பின்னர் முதியோர் இல்லத்தில் அவர் இருக்கும்போதும் சரி மறைமுக லைட்டிங் உத்தியைப் பார்க்கலாம். போலவே கடைசிக் காட்சியில் படமுழுவதும் தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பிணியாக வலம்வரும் துளசிக்கு குழந்தை பிறந்து அவள் மருத்துவமனையிலிருக்கும் போது முதியவர் வந்து பார்க்கும் காட்சியிலும் சரி. தனகருகிலிருக்கும் பாசமான முதியவரின் விரலை அப்பிஞ்சுக்குழந்தை பற்றிக்கொள்ளும்போது பாலு அவர்களின் ஒளிப்பதிவினால் உருவ உள்ளடக்க ஒத்திசைவு யதார்த்த அழகியலின் மூலம் கைகூடுகிறது.
அவரது நிகரற்ற அழகியலுக்கு அக்காட்சி சான்றாக உள்ளது. முள்ளும் மலரிலும் அவரது ஒளிப்பதிவு மறக்க முடியாதது. ஆகையினால், மகேந்திரனின் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் மற்றும் (ஒளிப்பதிவாளர்) பாலு மகேந்திராவுடன் இணைந்து அவர் எடுத்த படங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஏனெனில் அவை ரே எனும் மாஸ்டரின் புகழ் பாடுவதில் குரல் கொடுத்தன மற்றும் மகேந்திரனும் பாலு மகேந்திராவும் பல நேர்காணல்களில் அவரது அழகியலில் தங்கள் மனம் லயித்தாகக் கூறியிருக்கிறார்கள். என்னிடம் நேரடியாகக்கூட. ரேயால் ஈர்க்கப்பட்ட பிறகு, யதார்த்தவாதத்தினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும் அவர்களின் படங்கள் ஏன் வேறுபடுகின்றன என்பதைப் பற்றிப் பார்ப்போம். ரே மற்றும் மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திராவின் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் அவர்களின் மாறுபட்ட அக்கறைகள் ஆகியவை தமிழ் சினிமாவில் ரேயின் நுட்பமான தடங்களை நாம் பாராட்ட முக்கியமான காரணிகள். ரேயின் திரைப்படங்களை, குறிப்பாகப் பதேர் பாஞ்சாலியை, சினிமா பற்றிய அவர்களின் பார்வையை அப்படம் மாற்றியமைத்ததை ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சகப் பத்திரிக்கையிலும் மற்றும் தீவிர தமிழ் சினிமா பத்திரிக்கைகளான நிழல் மற்றும் படச்சுருள் போன்ற பத்திரிக்கைகளின் அவர்களின் முக்கிய நேர்காணல்களில் கூறியிருக்கிறார்கள். பாலு மகேந்திரா தனது தேசிய விருதுகளைப் பெற்ற மற்றும் விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்ட வீடு (1988)மற்றும் சந்தியா ராகம் (1989) போன்ற திரைப்படங்களைப் பற்றி விவாதிக்கையில் ரேயின் தாக்கத்தை நினைவுகூர்கிறார்.
எனவே, மகேந்திரனின் சில முக்கியப் படங்கள் மற்றும் பாலுமகேந்திராவுடன் அவர் இணைந்து பணியாற்றிய படமான முள்ளும் மலரும் மூலம் தமிழ் சினிமாவில் ரேயின் குறைவாக எழுதப்பட்ட/விவாதிக்கப்பட்ட தாக்கத்தின் பின்னணியை இங்கே சுருக்கமாக அலசுவோம்.
1970கள் மற்றும் 1980களில் தமிழ் சினிமாவில் மகேந்திரனின் இடையீடு: மகேந்திரனின் திரைப்படம் முள்ளும் மலரும் 1978ல் திரைக்கு வந்தது. அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு வசனகர்த்தாவாகச் சினிமாத்துறையில் பணியாற்றிய பின்னர் இயக்குநராக அறிமுகமானார், முள்ளும் மலரும் தமிழின் பிரபல பத்திரிகையான கல்கியில் தொடராக வெளிவந்த உமா சந்திரனின் நாவலை அடிப்படையாகக்கொண்டது. முள்ளும் மலரும் கதையானது காளி மற்றும் வள்ளி என்ற அனாதை குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களது காலங்களைச் சுற்றிச் சுழல்கிறது. தன் தங்கையான வள்ளியை அணுக்கமாகப் பாதுகாத்து பராமரிக்கும் பாசமுள்ள காளி உணர்ச்சிகளும் கொந்தளிப்புகளும் நிறைந்தவனாக அவற்றால் அலைகழிக்கப்படுபவனாக இருக்கிறான். அவர்கள் வளரும்போது, காளி (ரஜினிகாந்த்) அங்குள்ள கேபிள் டிராலியின் வின்ச் ஆபரேட்டராக ஒரு மின் நிலையத்தில் பணியாற்றுகிறான், அவனது வின்ச் ஆபரேட்டர் தொழில் அங்குள்ள ஊழியர்களை, மலையில் உள்ள கிராமங்களில் உள்ள அவர்களின் குடியிருப்புகளிலிருந்து, பள்ளத்தாக்கில் உள்ள ஆலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. தனது நண்பர்களுக்கும் அதிகப் பழக்கமில்லாதவர்களுக்கும் கூட இலவசமாகச் சவாரி செய்ய உதவும் காளியின் செயல்பாட்டைப் புதிய பொறியாளராக அங்கு வரும், மனசாட்சியும் நேர்மையும் கொண்ட குமரன் (சரத் பாபு) கண்டிக்கிறார். அவர் வள்ளியை (ஷோபா) பார்த்தவுடன் அந்த முதல் பார்வையிலேயே சொக்கி காதலிக்கத் தொடங்குகிறார். மங்கா (ஜெயலட்சுமி, தனது தாயுடன் வாழ்வாதாரம் தேடி வெளியூரிலிருந்து அங்குக் குடியேறும் மற்றொரு முக்கியப் பெண் கதாபாத்திரம். வறட்சியினால் தனது தாயுடன் இடம்பெயர்ந்த அவள் வள்ளியின் தோழியாகிறாள். மங்கா காளியை அறிந்து இறுதியில் திருமணம் செய்துகொள்கிறாள்.
ஆனால் காளி தனது (வின்ச்-ஆபரேட்டிங்) தொழிலுக்குத் தேவையான கையை இழந்ததால் வேலையில் இருந்து நீக்கப்படுகிறான். அவன் சோககரமாகத் தனது கையை இழப்பதற்குக் காரணம் குடிபோதையில் விவேகமின்றிச் சாலையில் கிடந்தபோது ஒரு டிரக் அவன் மீது மோதி கடந்து போனதுதான். பிறகு, வேலையில் இருந்து நீக்கப்பட்டதற்குக் காரணமான அதிகாரி குமரன், அவனது திருமணத்தில் கலந்துகொள்ளும்போது, அவர் வழங்கும் பணப் பரிசை நிராகரித்துக் காளியால் அவமானப்படுத்தப்படுகிறார். இருப்பினும், குமரனின் பச்சாதாபம் மற்றும் மனிதாபிமானச் சைகையைப் புரிந்துகொண்ட மங்கா பரிசை ஏற்றுக் கொள்கிறாள். அதன்பிறகு, குமரன் வள்ளியை திருமணம் செய்து கொள்வதில் தனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது,
காளி அவசரமாக வள்ளியின் திருமணத்தை உள்ளூர் மளிகைக் கடைக்காரருடன் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறான். அவர் சபலம் நிறைந்தவர். பண்பற்றவர். பெண்களுடனான தொடர்புகளுக்குப் பெயர்பெற்றவர். குமரன் மீது ஆழமான காதலில் இருந்த போதிலும், வள்ளி தனது சொந்த சகோதரனின் விருப்பத்திற்கு இணங்குகிறாள், அவள் எந்த அளவிற்குச் சென்று தனது ஆசைகளைக் கொன்று தன்னை மகிழ்விக்க விழைகிறாள் என்பதைக் கண்டு மனம் வருந்துகிறான் காளி. இவ்வாறு, தனது சகோதரியின் கீழ்ப்படிதலின் செயலால் அவனது அகங்காரம் தணிகிறது. தனது இழந்த மரியாதையை மீட்டெடுக்க இறுதியில் தனது பரம எதிரியான குமரனுடன் தனது சகோதரியின் திருமணத்திற்குக் காளி ஒப்புக்கொள்கிறான்.
மேலே உள்ள கதைச்சுருக்கமானது ஒரு கலைப்படம் சார்ந்த சத்யஜித் ரேயின் அழகியலைக் காட்டிலும் தமிழில் உள்ள மைய நீரோட்ட திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது. ஆயினும், மகேந்திரனின் அழகியல் வேறுபட்டது, குறிப்பாக, கடந்த நூற்றாண்டின் பெரும்பாலான தமிழ் சினிமாவில் இருந்து நிச்சயமாக மாறுபட்டது. லயம் மற்றும் வெளிப்புறத்தில் அரங்கேற்றப்பட்ட இயல்பான காட்சிகள் மூலம் அத்தகைய அவரது காட்சியமைப்பின் வித்தியாசத்தை ஒருவர் சுட்டி, முள்ளும் மலரும் புனே திரைப்படப் பள்ளியில் பயிற்சி பெற்ற அதன் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் உருவாக்கமும் கூட என்று வாதிடலாம். குறிப்பாக, செந்தாழம் பூவில் எனும் பாடலிலும் மற்றும் பல காட்சிகளில் இயற்கையாகக் கிடைக்கும் ஒளியின் பயன்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு. அப்படத்தில் ஒளிப்பதிவு அழகியல் இருண்ட நிறத்தைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் முன்னணி கதாபாத்திரங்களான காளி மற்றும் வள்ளியின் கரு மண்ணைப் போன்ற அருமையான நிறத்தை, அதிக மேக்கப்புடன் செயற்கையாக வெண்மையாக்காமல், பெரும்பாலான தமிழ் சினிமாவைப் போல அல்லாமல், பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு தமிழ் பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக, இயல்பாகத் திரையில் அளித்தது. பாசமலர் போன்று சிறுவயதிலிருந்தே அண்ணனுக்கும் சகோதரிக்கும் இடையேயான ஆழ்ந்த பாசத்தைச் சுற்றியே கதை சுழல்கிறது. முள்ளும் மலரின் தனித்துவம் அந்த மலைமேட்டுச் சூழலில் அடங்கியுள்ளது. அண்ணன் தங்கையைச் சுற்றி இயக்குநர் மகேந்திரன் அவர்கள் உருவாக்கிய கற்பனையான பிரபஞ்சத்தில் யதார்த்தத்தின் ஒப்பீட்டு அளவிலான உணர்வை அவர் தனது நிதானமான லயத்தின் மூலமாகவும், உரையாடல்களின் மூலம் மட்டுமல்லாமல், அவர்களின் சூழலை விவரிப்பதன் மூலம் காட்சி ரீதியாகவும் உருவாக்கியதில் முள்ளும் மலரும் வித்தியாசமாக இருந்தது. அவர்களின் வாழ்க்கையின் யதார்த்தம் வெளிகளின் மூலம் உருக்கொண்டது. காளி மற்றும் வள்ளியின் சமூகப் பொருளாதாரப் போராட்டத்தை அனாதைகளாகவும், பின்னர் நிலையான வருமானம் இல்லாமல் விளிம்புநிலையில் உள்ள மக்களாகவும் அடிக்கோடிட்டுக் காட்டியது, குறிப்பாகக் காளி தனது கவனக்குறைவால் கையை இழக்கும்போது. அதன் விளைவாக அவன் வேலையை இழந்தபின் முள்ளும் மலரும் அன்றாடப் பொருட்களில் கவனம் செலுத்துகிறது. மிக முக்கியமாக, மகேந்திரனும் பாலு மகேந்திராவும் இயற்கைக்கு முன்னுரிமை அளித்தனர். சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மேல். இது அவர்களின் கதாபாத்திரங்களின் கற்பனையான பிரபஞ்சத்தை மூழ்கடித்து அவர்களின் வாழ்வெதார்த்தத்தை முன்னிறுத்தியது. இதன் மூலம் கதாநாயகன் ஒரு வின்ச் ஆபரேட்டராக இருந்த, சமமற்ற மலைப்பாங்கான நிலப்பரப்பின் பின்னணியில் பின்னப்பட்ட கதையாடலில் யதார்த்தத்தின் ஒரு அடுக்கைச் சேர்த்தது. ஒரு கேபிள் தள்ளுவண்டியின் அலைக்கழிச்சலை நாம் உணர முடிந்தது. முள்ளும் மலரும் நேரடியாக ரேயின் தாக்கம் கொண்ட ஒரு படமாக நாம் வாசிக்க முடியாது. அதன் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் வெளிப்படையான ஒப்புதலின் அடிப்படையில் ஒரு தளர்வான இணைப்பு என்று அதிலுள்ள ரேயின் மெல்லிய தடயங்களை மட்டுமே நாம் குறிப்பிட முடியும். பாலு மகேந்திரா அவ்வாறான ரேயின் தாக்கங்கள் கொண்ட படங்களாக முள்ளும் மலரும், வீடு மற்றும் சந்தியா ராகம் போன்ற படங்களைக் குறிப்பிட்டுள்ளார். மகேந்திரனின் அழகியலின் குறியீடான உதிரிப்பூக்கள் (1979) உதிரிப்பூக்களை, போஸ்ட் கிளாஸிக்கள் தமிழ் சினிமாவாக முன்னரே வகைப்படுத்தியுள்ளேன். மகேந்திரன், தமிழின் முதன்மை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதையான சிற்றன்னை என்ற சிறுகதையைத் தழுவி இயக்குநராகத் தனது இரண்டாவது படத்தை இயக்கினார். குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களையும் சுந்தரவடிவேலுவின் குடும்பத்தைச் சுற்றியும் கதை வலம் வருகிறது. உள்ளூர் பள்ளியின் நிர்வாகி சுந்தரவடிவேலு (விஜயன்) அவரது மனைவி லட்சுமி (அஸ்வினி) மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், அவரது மைத்துனர் செண்பகம் (மதுமாலினி) மற்றும் மாமனார் (சாருஹாசன்) உதிரிப்பூக்களின் முக்கிய கதாபாத்திரங்கள். சுந்தரவடிவேலுவின் பாத்திரம் சிக்கலானது மற்றும் இருண்டது. அவர் ஒரு அக்கறையுள்ள தந்தை, காமுகன் மற்றும் ஒரு பெண் வெறுப்பாளர். அவர் தனது மைத்துனியின் மீது ஆசைப்படுகிறார். அவரது பொறுமையான மனைவியும் மனைவியின் கையாலாகாத தந்தையும் கண்ணியமான அமைதி காக்கிறார்கள். சுந்தரவடிவேலுவின் அச்சுறுத்தும் மற்றும் அரவணைக்கும் ஸ்கிசோப்ரினிக் எனப்படுகிற பிளவுண்ட ஆளுமையைச் சகித்துக் கொள்கிறார்கள். இந்த வேளையில், ஒரு புதிய ஆசிரியர் (சுந்தர்) மற்றும் ஒரு சுகாதார அதிகாரி (சரத்பாபு) கிராமத்திற்கு வருகிறார்கள். மேலும் சுந்தரவடிவேலு, சுகாதார அதிகாரியுடன் தனது மனைவியின் நட்பைப்பற்றிச் சந்தேகம் கொண்டு, அவளைச் சித்திரவதை செய்கிறார். அவளை விவாகரத்து செய்துவிட்டு, புதிய ஆசிரியரை ஏற்கனவே காதலித்து வந்த மைத்துனியை நிர்ப்பந்தித்துத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் மைத்துனி இசையவில்லை. சுந்தரவடிவேலுவின் ஆசை கைகூடவில்லை. ஆகையினால் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி இறந்தவுடன், அவர் வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். பின்னர் அவரது மைத்துனி ஆசிரியருடனான தனது திருமணத்திற்கு அவரை அழைக்கச் சென்றபோது, அவரது ஆடைகளை அவிழ்த்து வன்புணர்வுக்கு நிகரான கொடுமையைச் செய்கிறார். கிராமம் இதைப்பற்றி அறிந்ததும், மக்கள் முழுவதும் அவரது பின் செல்ல குளத்திற்குச் சென்று அதில் அவர் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள அவருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவரது குழந்தைகள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள்.
உதிரிப்பூக்கள் தமிழ் சினிமாவில் மகேந்திரனின் அந்தஸ்தை நிலைநாட்டிய படம். ஒரு தனித்துவமிக்க இயக்குநராகக் கதையைக் காட்சிப்படுத்தக்கூடியவர் என்ற அளவில் கதாநாயகன் சுந்தரவடிவேலு பாசமுள்ள தந்தையாகவும், அதே சமயம் தன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் போது பெண் வெறுப்பாளராகவும் மிதமிஞ்சிய சாடிஸ்ட்டாகவும் சித்தரிக்கப்பட்டார். க்ளைமாக்ஸ் அதன் அமைதியான நீண்ட காட்சிகளால் தமிழ் சினிமாவிற்கும் புதியதாக அமைந்தது. அதில் மகேந்திரன் தனது ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் உதவியுடன் தனது இருண்ட கதாநாயகனை கட்டமைத்தார். அவர் தனது கிராம சமூகம் தொடர வலுக்கட்டாயமாக ஓடும் ஆற்றில்
நுழைந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார். தமிழ் சினிமாவைப் போல நேரடி வன்முறையினால் அல்லாமல், உதிரிப்பூக்கள் அதன் சிந்தனைமிக்க நீண்ட காட்சிகளின் மூலம் முடிவடைவது பார்வையாளர்களுக்கு மனசாட்சி இல்லாத கதாநாயகனையும், அவரைச் சுற்றியுள்ள கிராமவாசிகளையும் தமிழ் சமூகத்தைப் பற்றியும் சிந்திக்க ஒரு வெளியை வழங்கியது. தனித்துவமான ஆனால் மனிதாபிமானமற்ற மரணத்தண்டனை மூலமாக, ஒட்டுமொத்த கிராமத்தையும் தனக்கு எதிராக மட்டும் அல்ல அறத்திற்கு எதிராக மாற்றியதற்காக வருந்துகிறேன் என்ற கதாநாயகன் சுந்தரவடிவேலுவின் இறுதி வார்த்தைகள் இன்றும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.
நாயகன் உதிரிப்பூக்களின் சுந்தரவடிவேலு, முந்தைய காலகட்டத்தின், குறிப்பாகத் தமிழ் சினிமாவின் ஸ்டுடியோ காலத்தின், ஒரு கிராமத்தில் நீதிக்காகப் போராடிய பூர்வீகக் கதாநாயகன் அல்லது தனது மக்களுக்காகத் தியாகம் செய்த நாயகன் அல்ல. சுந்தரவடிவேலு “நியோ-நேட்டிவிட்டி” படத்தின் கதாநாயகனைப் பற்றிப் பேராசிரியர் சுந்தர் காளியால் விவரிக்கப்பட்டபடி அந்த வழியில் நாம் புரிந்து கொள்ளக்கூடியவர். சுந்தர வடிவேலுவின் ஆணாதிக்க ஆளுமையைக் கட்டவிழ்க்க காளி அவர்களின் கோட்பாடு உதவும். மகேந்திரனின் கதை மற்றும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவு மூலம் பதிவுறும் கிராமத்து சூழலின் யதார்த்தமும் உதிரிப்பூக்களை ஒரு நவ-நேட்டிவிட்டி திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் குறிக்கின்றன. மகேந்திரனின் அடுத்தப் படமான பூட்டாத பூட்டுக்கள் (1980) என்பது நியோ நேட்டிவிட்டி திரைப்படத்தின் ஒரு எடுத்துக்காட்டு என வாசிக்கலாம். இதில் கதாநாயகன் ஆண்மையற்றவர், எனவே, அவர் பக்கத்தில் இருக்கும் பெண்ணை நம்பியிருக்க வேண்டும். முந்தைய காலகட்ட நேட்டிவிட்டி படங்களில் உள்ள கதையம்சம் இங்குத் தலைகீழாக மாற்றப்படுகிறது. அங்கு எம்ஜிஆர் போன்ற ஹீரோ பெரும்பாலும் சுதந்திரமான, படித்த, நவீன அல்லது பணக்கார கதாநாயகியின் சுதந்திரத்தை அடக்கினார். பூட்டாத பூட்டு நாயகன் 1980களின் பதற்றத்தை நமக்குச் சொல்கிறான்.
மகேந்திரன் பற்றிய சிறப்பு இதழில் உலகச்சினிமா ஆய்வாளர் யமுனா ராஜேந்திரன், படச்சுருளில் உதிரிப்பூக்கள், ஷ்யாம் பெனகலின் முக்கியப் படமான நிஷாந்தின் (இரவின் முடிவு) மூலமாகத் தனது உந்துதலை பெற்றிருக்கக்கூடும் என்று காத்திரமாக வாதிடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மகேந்திரன் படைப்புகள் பற்றிய யமுனா ராஜேந்திரனின் விரிவான விமர்சனக்கட்டுரை முக்கியமான இடையீடு. ஒரு இருண்ட ஆண் பாத்திரத்தை முள்ளும் மலரும் காளி மூலம் மகேந்திரன் முன்னிறுத்துகிறார். உதிரிப்பூக்கள் சுந்தர வடிவேலுவை காளியின் ஆணாதிக்க மனப்பான்மையின் நீட்சியாக வாசிக்க முடியும். போலவே, ஒரு கொடூரமான அல்லது குடிகாரத் தந்தையின் இருண்ட கதாபாத்திரம் (நண்டு (1981) மற்றும் மெட்டி (1983)) மகேந்திரனின் மற்ற படங்களை ஆட்டிப்படைக்கிறது. பொதுவாக, மகேந்திரனின் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஆதரவற்றவர்களாகவும், ஆண்களைச் சார்ந்து அல்லது இறுதியில் ஆணாதிக்கச் சமூகத்திற்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படுகின்றனர். ஆகவே, அவரது திரைப்படங்களை முற்போக்கானது என வாசிப்பதை யமுனா ராஜேந்திரன் அவர்கள் நியாயமான முறையில் விமர்சிக்கிறார். ஆயினும் முள்ளும் மலரும் அல்லது உதிரிப்பூக்கள் பல முக்கியப் மைய நீரோட்ட தமிழ்ப்படங்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டவை என்று கருதும் யமுனா ராஜேந்திரன் அவர்களின் விமர்சனம் காத்திரமானது. அது தமிழில் நல்ல சினிமாவிற்கான தேடலிலிருந்து உருக்கொண்டுள்ளது. மகேந்திரனின் படங்களில் ஈடுபடுவதில் எனது ஆர்வமும் அத்தகையதே. அந்த 70/80களின் காலகட்டத்தில் மற்ற தமிழ் படங்களின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திற்குச் சவால் விடும் குறிப்பிடத்தக்க முயற்சி எதுவும் இல்லாததால்தான் மகேந்திரனின் படங்களில் நாம் மனம் லயிக்கிறோம்; ஆய்வுசெய்கிறோம். இத்தகைய போக்கே உதிரிப்பூக்கள் தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பாலான விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் போற்றப்பட்டதற்குக் காரணம். உதாரணத்திற்கு, இணையத்தில் மகேந்திரனின் இரங்கல் செய்திகளைப் பாருங்கள்.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல இயக்குனர்கள், மணிரத்னம் உட்பட, உதிரிப்பூக்களையும் மகேந்திரனின் அழகியலையும் இணையற்றதாகக் கருதுகின்றனர். அதிலுள்ள படிமங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் நிகரற்றதே. உதாரணத்திற்கு, அன்னையின் இறப்பின் வலி தெரியாமல் தங்களது உலகில் சஞ்சரிக்கும் குழந்தைகளைக் காண்பியல் மொழிமூலம் சித்தரித்துப் பிரிவின் ஆற்றாமையைப் படிமமாக விரித்தெடுத்திருக்கும் மகேந்திரன் அவர்களின் தனித்துவம். எனது மறைந்த நண்பரும் திரைப்பட இயக்குனருமான எஸ்.அருண்மொழியுடன் தனது நேர்காணல் ஒன்றில் (காணொளியில்) மகேந்திரன், பதேர் பாஞ்சாலியைப் பற்றி பேசுகையில் அது இணையற்றது என்கிறார்.
சினிமா ஒரு கலை வடிவமாக இருப்பதைப் பற்றி மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் ரேயின் படத்தைப் பார்க்கையில் சோகமாகவும் உள்ளது என்கிறார். தான் அப்படத்தைப் பார்த்துத் தூக்கத்தை இழந்ததாகவும், ஒரு எழுத்தாளராகத் தனது முந்தைய மெலோடிரமாடிக் மற்றும் உணர்வுப்பூர்வமான பாணியை மாற்றுவதற்கு ரேயின் ஆழ்ந்த அழகியல் எவ்வாறு உதவியது என்பதை அவர் விவரிக்கிறார். தங்கப் பதக்கம் (1974) படத்தின் எழுத்தின் வெற்றியின் மூலம் இயக்கத்தில் இறங்கியபோது முள்ளும் மலரும் மைய நீரோட்ட சினிமாவிலிருந்து விலகியதற்குச் சத்யஜித் ரே முக்கிய காரணம் என்கிறார். 1978 முதல் 1983 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் வரம்புகளை மீறிய குறிப்பிடத்தக்க முயற்சிகளை மகேந்திரன் செய்துள்ளார்.
வீடியோ நேர்காணலில், மகேந்திரனும் அருண் மொழியும் சந்தீபன் டெப் எழுதிய இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் இயக்குநரான சத்யஜித் ரேயை நினைவுகூர்கிறோம். (Sandipan Deb, இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சத்யஜித் ரேயை நினைவுகூர்கிறோம், Livemint.com 27 செப்டம்பர் 2015) என்கிற கட்டுரையை விவாதிக்கிறார்கள். தனது தந்தையின் அனுபவத்தைப் பற்றிய டெப்பின் நினைவுகளைப் படிக்கும்போது மகேந்திரனின் கண்கள் ஈரமாகின்றன. பதேர் பாஞ்சாலியின் தொடக்கத் திரையிடலின் போது பாக்கியம் பெற்ற நூறு பார்வையாளர்களில் ஒருவராக டெப்பின் தந்தை இருந்தார். அன்றைய மாலை கல்கத்தாவில் உள்ள பவானிபூரில் பாதிக் காலியாக இருந்த பாசுஸ்ரீ திரையரங்கினில் திரையில் ஒளிர்ந்த கருப்பு வெள்ளைப்படத்தைப் பார்த்தபோது டெப்பின் தந்தை உணர்ந்த பிரமிப்பை அவர் பின்னர் அடிக்கடி நினைவு கூர்ந்தார். அது போன்ற இந்தியப் படத்தை அவர் அன்றுவரை பார்த்ததில்லை. என் தந்தை தனியாக இல்லை என்று சொல்லத் தேவையில்லை. தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் பழம்பெரும் ஆசிரியரும், நான் சந்தித்ததிலேயே மிகவும் புத்திசாலித்தனமான வரும் பண்பட்ட மனிதர்களில் ஒருவருமான மறைந்த ஷாம் லால் அவர்களும் எனது தந்தையருடன் பிப்ரவரி 1956இல் ரேயின் படத்தைப் பார்த்தார், மேலும் பதேர் பாஞ்சாலி பற்றிய அவரது விமர்சனக் கட்டுரைக்கு கிட்டத்தட்ட முழு பக்கத்தையும் அத்தினசரியின் எடிட்டோரியல் பக்கத்திற்கு ஒதுக்கும் அளவுக்கு அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
டைம்ஸ் ஆப் இந்தியா தனது 177 வருடங்களில் ஒரு படத்திற்கு இவ்வாறு இடம் ஒதுக்கியதில்லை. ஒரே ஒருமுறைதான் அது நிகழ்ந்தது. ஷயாம் லால் பதேர் பாஞ்சாலி, இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் என்றார். ஆம். அது பலவிதங்களில் அதைச்செய்தது. மெகாபோனைப் பயன்படுத்துவதற்கு முன்பு தமிழ்த் திரையுலகில் எழுத்தாளராகக் கடுமையாக உழைத்த மகேந்திரனின் திரைப்படங்களில் இருந்து ரேயின் படங்கள் ஏன் வேறுபட்டன என்பதற்கான ஒரு நுண்ணியக் காரணத்தை டெப் நமக்கு அளிக்கிறார். சத்யஜித் ரே 1921 ஆம் ஆண்டில் ஒரு வசதியான பெங்காலி பிரம்மோ குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா உபேந்திர கிஷோர் ரே சௌதுரி, அவரது நெருங்கிய நண்பரான ரவீந்திரநாத் தாகூரைப் போலவே ஐரோப்பிய மறுமலர்ச்சியில் அதன் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மனிதர். விஞ்ஞானம் மற்றும் கலைகளின் உலகங்களைத் தாண்டி, அவர் ஒரு அச்சுத் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஆராய்ச்சியாளர். மிகவும் திறமையான ஓவியர் மற்றும் வயலின் கலைஞர், மேலும் பெங்கால் இதுவரை உருவாக்கிய மிகச் சிறந்த குழந்தை எழுத்தாளராக நிகரற்றவர் (சத்யஜித்தின் தந்தையான அவரது மகன் சுகுமாரிடமிருந்து மட்டும் ஒரு காத்திரமான போட்டியை மனதில் கொள்ளவேண்டும்). ரேயின் வசதியான பின்னணி, இதனால், அவரது தந்தையின் ஆரம்பகால மறைவின் இழப்பு மற்றும் சோகம் இருந்தபோதிலும், சாந்திநிகேதனில் சில ஆண்டுகள் கழிக்கவும் மேற்கத்திய பாரம்பரிய இசையைக் கற்கவும், ஒரு எழுத்தாளர் / கலைஞராக அவர் பெற்ற திறமைகளை மேம்படுத்தவும் அவருக்கு இடம் அளித்தது.
இயக்குநரான பின்னர் அவரது வாழ்க்கை என்பது வரலாறு. ரேயின் புகழ்பெற்ற வாழ்க்கை, அதில் அவர் தனது படங்களுக்கு எழுதவும், வரையவும் மற்றும் இசையமைக்கவும் முடிந்தது. அவரது பின்னணியினால் அவரது வெற்றி அவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்ததிலிருந்து தொடங்கியது, மற்றும் அவரது இங்கிலாந்து விஜயம் மற்றும் அங்கு அவரை விட்டோரியோ டி சிகாவின் பைசைக்கிள் தீவஸ் (1948) அவரை மூழ்கடித்த விதம் மற்றும் பதேர் பாஞ்சாலி போன்ற படங்களுக்கு அது வழிவகுத்தது நாம் அறிந்ததே. உதிரிப்பூக்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தைப் பெற்ற மௌன ராகம் (1986)த்திற்கு உந்துதலாக இருந்தது என்று கூறலாம். நிதானமான கதைச்சொல்லல், தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்ததைப் போல, உரையாடல்களில் மூழ்கிவிடாமல், அவரது கதாபாத்திரங்களுக்கு மூச்சு விடுவதற்கு இடமளிக்க மணிரத்னத்தைத் தூண்டியது. ரேயின் தாக்கம் தமிழ் சினிமாவில் அடர்த்தியாக அல்லாமல் நுண்ணிய வாசமாக அவ்வப்போது வீசிக்கொண்டிருக்கிறது. டெப் அவர்கள் ரே தனது படங்களில் வில்லனை தவிர்த்ததைப் பற்றிக் கூறுகிறார். வாழ்நாள் முழுவதும் அத்தகைய கதாநாயகன் - வில்லன் என்கிற இருமறை எதிர்வை தவிர்த்த ரே தனது இறுதி காலங்களில் இப்சனின் எனிமி ஆப் த பீப்பிளிலிருந்து உந்துதல் பெற்ற கணசத்ரு போன்ற படங்களில் வில்லன் ஒருவரை உருவகித்தும் உள்ளார். ஆயினும் அவன் நமது தற்காலச் சமூகத்தின் குரலாகவே ஒலிக்கிறான். மாறாக, வில்லனை கட்டமைப்பது மகேந்திரனின் திரைக்கதைக்கு மையமானது. அவனது சேடோமா சோக்கிஸம் அவரது ஆசிரியத்துவத்துடன் பிணைந்துள்ளது. அது அவரது மைய நீரோட்ட சினிமாவின் பின்னணியின் காரணமாக இருக்கலாம். அதுவே ரேயின் அழகியலிருந்து பிரிந்து சிறிது செயற்கை மணத்தைத் தனது படைப்புகளுக்கு இயக்குனர் மகேந்திரனை அளிக்கச் செய்கிறது. அது இன்றைய யதார்த்தத்தைச் சொல்கிறது என்றும் நாம் வாதாடலாம்.
References: Kaali, Sundar. “Narrating Seduction: Vicissitudes of the Sexed Subject in Tamil Nativity Film.” In Making Meaning in Indian Cinema, ed. Ravi S. Vasudevan. New Delhi: Oxford University Press, 2000, pp 168-191.
அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா? அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால், அன்னைக்கு ஏதோ நடக்கப் போகிறதாக எனக்கு உறுத்தியது மட்டும் நிஜம் என்று சொன்னதுடன் லதா நடுங்குகிறாள்.
அநுபந்து இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்புதான் லதா காலையில் எழுந்து எப்போதும் போல அவருக்கு, பல் துலக்குவதற்கும் குளிப்பதற்கும் சேர்த்து வெந்நீர் காய வைத்துவிட்டு சாப்பிட இரண்டு தோசையை வார்த்து முடித்து, அவளுக்குத் தேநீர் போட்டுக் குடித்துக்கொண்டிருந்தாள். லதாவுக்கு அத்தனையும் முடிக்க கால்மணி நேரத்திற்கும் அதிகம் போகாது. வழக்கமானதுதான். ஆனால் அன்றைக்கு ஏனோ ஒவ்வொன்றையும் செய்யத் தவறுவது மாதிரி கைகளின் வேகத்தை மனவோட்டம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது.
“சாமி அறை” லதா என்னிடம் காட்டுகிறாள். நான் உள்ளே எட்டிப் பார்க்கிறேன். கனமான தேக்குக் கதவால் சார்த்தப்பட்ட தாழ்வான நிலைவாசல். “அதுதான் அவர் தூங்கியெழுந்ததும் அலங்காரம் பண்ணிக்கிற அறை. எவ்வளவு நேரமானாலும் அலங்காரம் முடியறவரைக்கும் நான் இப்படி உட்கார்ந்திருப்பேன்.” லதா எனக்கு நேராக இருக்கிற சுவரைக் காட்டுகிறாள்.
அங்கு முன்பு சாய்விருக்கை இருந்திருக்கவேண்டும் இப்போது இல்லை. நான் கற்பனை செய்துகொள்கிறேன். லதா எழ ஒரு மணி நேரம் முன்னதாக தூக்கம் கலைந்த அநுபந்து தயாராக எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் எந்நேரமும் விட்டுப்போன ஏதாவது ஒன்றைக் கேட்டு அநுபந்திடமிருந்து அழைப்பு வரும் என்று லதா அவரது அறைக்கு வெளியே கிடக்கும் சாய்விருக்கையில் அமர்ந்து கொள்வது வழக்கம். இருபது வருடத்தில் ஒருமுறைகூட அப்படி எதற்குமே அநுபந்து அவளை அழைத்தது இல்லை.
ஒப்பனையை நிறுத்தக்கூடிய எந்தவொரு குறுக்கீடும் அவசரமும் அதுவரை வந்தது கிடையாது. நாற்பது வருடங்களாக அதிகாலைப் பொழுதைத்தனது ஒப்பனை முடியும்வரை காத்திருக்கும் பணியாளாக வெளியே வைத்திருக்கிறார்.லதாவுக்கு அந்தச் சில மணி நேரத்தில் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. மௌனமாக ஏதாவது செய்ய வேண்டும். திருமணமான புதிதில் அரைத்தூக்கத்தில் அமர்ந்திருப்பாள். கூந்தலைச் சிக்கெடுப்பது, துணி மடிப்பது, இடத்தைவிட்டு நகராத வேலைகளுக்கு அதுவொன்றுதான் வழி. சமீபகாலமாக பழைய புத்தகங்கள் சிலதை வாசித்து நேரத்தைப் போக்குகிறாள். அதிலும் ஆர்வமில்லை வெறும் திருப்புதல் மட்டும். சில சமயம் முதல்நாள் எடுத்ததேகூட வரும். சில பக்கங்கள் போன பிறகுதான் படித்த நினைவு எழும். சளைக்காமல் திரும்பவும் படிப்பாள். அநுபந்து வெளியே வந்ததற்குப் பின் செய்ய அவளுக்கு நிறைய வேலை காத்திருக்கிறது. ஆனால் சில நாட்களாக அவளால் அப்படி எதையும் செய்ய முடியவில்லை. ஏதோ நடக்கப்போவதுமாதிரி பதற்றம். சம்பந்தமில்லாமல் யாரோ வந்து காத்திருப்பதுபோல அடிக்கடி வாசலைப் பார்க்கும் உணர்வு துரத்துகிறது. அவர்கள் இருவரைத் தவிர அதிகாலையில் யாரும் வீட்டிற்கு வரப் போவதில்லை.
அதோடு அநுபந்து ஒப்பனையை முடிக்காமல் யாரையும் பார்க்கமாட்டார். அன்றைக்கு இரண்டு பழைய புத்தகங்களைப் புரட்டி முடித்து, அலமாரியைத் தூசி தட்டி அடுக்கியும் வைத்துவிட்டாள் அநுபந்து இன்னும் வரவில்லை. வானம் துலக்கமாக இன்னும் நேரம் இருக்கிறது. சாமி அறையைத் தாண்டி வாசல் கதவு வரைக்கும் இரண்டு முறை நடக்கிறாள். உள்ளே அநுபந்து இருக்கிற சத்தமே இல்லை. திரும்பி புத்தக அலமாரி அருகே போவதற்குள் அநுபந்திடமிருந்து குரல் வந்தது.
முதலில் அது ஏதோ விசித்திரமான சப்தம் என்று கவனிக்காதவள் பிறகு தன்னை யாரோ அழைக்கிறார்களோ என்று அடிக்கடி வெளியே பார்க்கிற பழக்கத்தால், முதலில் வாசலைத்தான் பார்த்தாள். பிறகுதான் அது சாமி அறையிலிருந்து வருவது தெரிகிறது. பெரிய ஏப்பம் மாதிரி.
அழைப்பு இல்லை ஒருவிதமான கேவல் ஒலி. லதாவுக்கு கதவு தாழிடப்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாமல் தள்ளினாள். திறந்தபோது அநுபந்தம் தரையில் சரிந்திருக்கிறார். நிச்சயமாகக் கதவைத் திறந்த அதே சமயத்தில்தான் அவரைச் சாய்த்த விதியும் வெளியேறியிருக்கவேண்டும். யாரோ தன்னைத் தள்ளிவிட்டு ஓடுகிறார்கள் என்பதுபோல யாரையோ தேடுகிறாள். சரிந்திருக்கும் அநுபந்தின் நிலை இயல்பான தடுமாற்றம் கிடையாது என்பதால் அங்கு ஊகிக்க முடியாத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதென்பதும் தெரிந்துவிட்டது. சப்தமே எழாமல் தலையைப் பிடித்தபடி “அம்மா” என்று சரிந்தாள். அநுபந்து நாற்காலியில் உட்கார்ந்தவாறே விழுந்திருக்கிறார். கால்கள் இன்னும் இருக்கையில் தொங்குவதுபோல மேலே உயர்ந்திருக்கிறது, தோள்கள் நிலத்தில் ஊன்றி, சரியாக தலை மட்டும் மேசையின் வெளிச்சத்திற்குள் வராமல் அடியில் போய்விட்டு இருந்தது. ஒப்பனைப் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன. யாருடனோ சண்டை நடந்ததுமாதிரி இருக்கிறது அந்த இடம். அநுபந்தைப் பார்க்க அவளுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு அது.
அந்த நொடியில் அடுத்தடுத்து நடப்பதைக் கிரகிக்கத் தெரியவில்லை. அதோடு அவளுமே துவண்டுபோய் நின்று கொண்டிருக்கிறாள். என்னசெய்வதென்று விளங்காமல். சரிந்திருக்கும் உடலைத் தூக்குவதா அல்லது யாரையும் கூப்பிடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப்போய் சம்பந்தமில்லாமல் மேசையில் சிரிக்கும் சிவாஜிகணேசனின் வெவ்வேறு விதமானப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கைக்கு எட்டும் தூரத்தில்தான் அநுபந்தின் உடல்.
கால்விரல்கள் மேல்நோக்கிக் காற்றில் எதையோ பிடித்திருப்பதுபோல முறிந்துள்ளன. எந்த அசைவும் இல்லை. உயிர் இருப்பதற்கான கடைசித் தடயமும் போயிற்று. அவளுக்கு விக்கித்துவிட்டது. கையை நீட்டித் தொட முடியும், இப்போது அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அநுபந்தின் முகத்தைப்பார்க்க முடியும். ஆனால் எதையும் செய்விக்காத படிக்கு அவளுடைய காலம் அப்படியே சுழியத்தில் நிற்கிறது. சற்றைக்கெல்லாம் யாரோ வருகிறார்கள் சரிந்த உடலை நிமிர்த்துகிறார்கள். அவளது தோள்களைப் பற்றி அழுகிறார்கள். அவ்வளவு நேரம் தேங்கிக்கொண்டிருந்த அதிகாலையின் இருளெச்சம் சட்டென உருகிக் காணாமல் போகிறது. பளீரென நுழையும் வெளிச்சத்தை அந்த அறைக்குள் லதா என்றைக்கும் பார்த்ததில்லை. ஒப்பனை விளக்குகளைத் தவிர சாளரத்தில் நுழையும் வெளிச்சத்தை அநுபந்து விரும்புவது கிடையாது.
ஒப்பனை விளக்குகள் அணைக்கப்பட்டன. அநுபந்தை சிவாஜி என்றுதான் அவளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஊரில் யாருக்கும் சிவாஜியின் உண்மையான பெயர்கூட தெரியாது. சிவாஜி என்றால் சிவாஜிகணேசனை அச்சுவார்த்தது போல் இருப்பார். நகத்தைக் கடிப்பது, மோவாயைத் தூக்கி மடக்கிய விரல்களில் வைப்பது, விடாமல் புகைப்பது, உதட்டை அடிக்கடி உருட்டுவது எல்லாம் சிவாஜியைக் கண்முன் விலகாமல் வைத்திருக்கும். லதா சிறுவயதில் கோவில் விழாக்களில் சிவாஜி கணேசனைப் பார்த்ததுண்டு. அவளுக்குப் பிடித்தமான நடிகர் இல்லையென்றாலும் சிவாஜியை நேரில் பார்க்கும் மனமயக்கத்தை அநுபந்து ஏற்படுத்திவிடுவார். அப்போது பார்த்ததுகூட அநுபந்தையா என்று திருமணமான புதிதில் தோன்றியிருக்கிறது. ஏனென்றால் அநுபந்தை அவள் சிவாஜியாகப் பார்த்ததிலிருந்து இப்போதுவரை அவருக்கு வயது அப்படியேதான் இருக்கிறது. வெயில் ஏறுவதற்குள் அரிமளம் முழுக்க சிவாஜியின் சாவுச்செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது. ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக பெரிய பெரிய மாலையுடன் வந்துகொண்டிருந்தனர்.
பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாருமே லதாவைவிட வயது அதிகம். இத்தனை வருடத்தில் அவர்கள் யாரையும் லதா பார்த்தது இல்லை.
அநுபந்தின் உடல் இன்னும் முற்றத்தில் வைக்கப்படவில்லை. வந்தவர்கள் உடல் இல்லாததால் லதாவைக் கட்டிக்கொண்டு அழுதனர். ஒரே நேரத்தில் அத்தனை உடல்களின் தழுவலையும் ஓலத்தையும் அவள் முதன்முறையாக எதிர்கொண்டாள். லதாவுக்கு அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறதென்பதே புரிகிறது. அறைக்குள் நின்றுபோயிருந்த காலம் மறுபடியும் சுழல ஆரம்பிக்கிறது. அந்த இடம் மெல்ல மெல்ல புழுக்கத்தால் நிறைவதை உணர்ந்தாள். வியர்வை வீச்சம் குமைகிறது. அவள் மெல்ல விசும்பினாள். என்னவென்றே தெரியாமல் மனம் எடையிழக்கிறது. எடை இழக்க இழக்க ஆசுவாசமாகிறது. அழுவதற்கு இழப்பு மட்டுமே நிச்சயம் காரணமாக இருக்காது. அவளுக்கு அந்தக் கணத்தில் அழவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றிற்று. ஓயாத பேச்சுகளும் ஒப்பாரிகளும் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது. அநுபந்தின் உடலைக்கொண்டு வருவதைத் தள்ளி போடுகின்றனர்.
வந்ததும் உடலுக்கு அணிவிக்க முதல் மாலையுடன் பழைய மன்னர் குடும்ப வாரிசும் கட்சித்தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இதில் யாரை முதலில் அனுமதித்தாலும் பிறிதொருவருக்கு அவமதிப்பு நிச்சயம். ஆனால் சிவாஜி இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கடைசியாகப் பங்கேற்ற கட்சிக் கூட்டத்தில் “எனது இறுதி அஞ்சலியை முதலில் சபாக்காரர்கள்தான் செய்யனும்” எனச் சொல்லியதாக நாடக சபா ஆட்கள் அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அறிவித்தார்கள்.
சபாக்காரர்களின் அழுத்தமான குரல் பெண்களின் பெரும் ஓலத்தையும் நிறுத்திற்று. அநுபந்திற்கு இவ்வளவு அழுத்தமான குரல் வளம் இல்லை. சிவாஜியிடமிருந்து அவருக்குக் கிடைக்காதது இது ஒன்றுதானென நாடகக்காரர்கள் எப்போதாவது விசனப்படுவது உண்டு. லதாவிடம் சில சமயம் உரிமையாக, ஏதாவது சுக்கு மிளகை போட்டுக் கொடுக்கக்கூடாதா என்பார்கள். லதா அவரது ஒப்பனை விசயங்களில் தலையிடும் அளவிற்கு அதன் எல்லைக்குள் நுழைந்தது இல்லை.
சிவாஜியின் ஒவ்வொரு அசைவும் பாவனையும் அது எங்கிருந்து எப்படித் தொடங்கவேண்டும் என்று அநுபந்திற்கு நன்றாகத் தெரியும். அந்த எல்லையில் யாரை, எப்படி, எப்போது அனுமதிப்பது என்கிற சூட்சமத்தை அவர்தான் வைத்திருந்தார். அப்படியொரு எல்லை இருப்பதே அவளுக்குத் திருமணமான புதிதில் தெரியாது. அம்மா இறந்தபிறகு லதாவிற்கு ஒரு துணையை ஏற்படுத்த சுசிலாவிற்கு ஏற்பட்ட அவசரத்தில் நிகழ்ந்தது சிவாஜியுடனான திருமண துவந்தம். சிவாஜியைக் கல்யாணம் பண்ணப் போகிறதாக ஊருக்குள் செய்தி பரவியபோது உண்மையில் லதா அதைத் தட்டிக்கழிக்க வேறு வழி தெரியாமல் இருந்தாள். அநுபந்தை சிவாஜியாக முதன்முதலில் கோவில் விழாக்களில் பார்த்திருக்கிறாள்.
அதன்பிறகு அவள் அம்மாவுடன் சபா அலுவலகத்தில். “அநுபந்து எப்போதும் சிவாஜியாகத்தான் வருவார். ஒப்பனையை எப்போது எங்கு செய்துகொள்கிறாரென அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சிவப்பு நிற கோட் சட்டையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் உரைமாவு பொங்கியதுபோன்ற முகப்பௌடருடன் (வசந்த மாளிகை) சிவாஜியைப் போல அழகாக நடந்து வருவார். வயது இவ்வளவு என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.” லதாவின் அம்மா இறக்கிறபோது லதாவுக்கு இருபத்தி மூன்று வயது. விதி தனக்கு இப்படியொரு திருமணத்தை முடிச்சிடும் என்று நினைத்து பார்க்கவில்லை.
லதாவின் அம்மாவுக்கு நாடக சபாவில் சிவாஜிதான் வேலை வாங்கிக் கொடுத்து, கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் நின்றபோது உதவியிருக்கிறார். அப்படி நிறைய பெண்களுக்கு சிவாஜி உதவி இருக்கிறார். அவர்களுடன் சிவாஜிக்குத் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் ஒரு செய்தியும் உண்டு. வீட்டின் வாசலிலும் திண்ணையிலும் கட்சிக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பெண்கள் அத்தனை பேரும் வீட்டின் வரவேற்பறையாக இருக்கும் தாழ்வான ஓடு வேய்ந்த இடத்தில் வழி விட்டு இருறமுமாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில விசும்பல்கள் மட்டும்தான் அதுவும் புதியவர்களின் வருகையைப் பொறுத்து.
அதன்பிறகு முணுமுணுப்பு மட்டும் கேட்கிறது. லதா தாழ்வாரத்தின் இடது பகுதியின் மூலையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேராக சில பெண்கள் நெருங்கி அமர்ந்திருக்கிறாள். லதா அங்கிருந்த அத்தனை பெண்களையும் கவனித்தாள். அவளுடைய அம்மா வயது இருக்கலாம். சிவாஜியின் உடல் இன்னும் வராததால் இப்போது யாருமே அழவில்லை. ஒருவருக்கொருவர் எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்து சலித்துப் போயிருக்க வேண்டும். அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன, யாரோ ஒரு பெண் மீன் ஆய்ந்ததோடு வந்திருக்கிறாள்.
ஒரு இறப்பு அவர்களது அன்றாடத்தைத் துளியும் மாற்றிவிடாது. அடிக்கடி முகத்தை முந்தியால் துடைத்துக்கொள்வதும் பிறகு அதால் வாயை மறைத்து காதுக்குள் விழும்படியான சொற்களை லாவகமாகக் கொடுப்பதுமாக பாவனைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள். லதாவுக்கு அந்தக் கதைகளெல்லாம் தன்னைப் பற்றியதுதானா என்று எண்ணத் தோன்றிற்று. ஆனால் அவர்களுக்குப் பேச அங்கு நிறைய கதைகள் இருக்கின்றன. சீக்கிரமே தங்களுடைய வீட்டில் கிடக்கும் வேலைகளுக்குத் திரும்பவேண்டும். கிடைக்கிற சிறிய ஆசுவாசத்தில் பேசிக்கொள்ள நிறைய இருந்தும் கதைகளை விவரிக்காமல் அதன் மையத்தைப் போட்டு உடைத்து விடுவதுதான் சரியான கதைசொல்லல். அதாவது, கதை தொடங்கியதும் அடுத்து அதன் மைய இழைக்குப் போய்விடுகிறது.
ஆமாம் அப்படித்தான் லதாவின் கதையைக் கூறுகிறார்கள். சிவாஜியை விராலிமலை முருகன் கோவிலில் மாப்பிள்ளைக் கோலத்தில் பார்த்தபோது லதாவுக்கு ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு பதற்றத்துடன் அங்கு நடக்கும் விபரீதத்தை என்ன செய்வதென்று புரியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு கவிந்து கொண்டாள். அநுபந்து சிவாஜி ஒப்பனையில் பட்டு வேட்டி சட்டையில் உதட்டை முறுக்கியபடி வந்தார். சபாக்காரர்கள் அவரை பாரதவிலாஸ் சிவாஜி என்று சத்தமாக வரவேற்றனர். என்னைக்கும்விட அன்றைக்குத்தான் சிவாஜிக்கே உரிய வெட்கத்தைச் சரியாக உதிர்க்கிறாரென உச்சிமுகந்ததும் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். வந்தவர்களை ஒவ்வொருவராக விசாரித்து தனது ஒப்பனையைப் பற்றி என்னவெல்லாம் விதந்தோதுகிறார்களெனச் சளைக்காமல் வாங்கினார்.
அதில் அவருக்கு ஒருபோதும் அவசரம் இருக்காது. பொறுமையாகப் புன்னகைத்தபடி சொல்பவர்களது தோளில் கை வைத்துக் கேட்கும் தோரணை அவர்களை நிறுத்தவிடாமல் பண்ணும். தாலிகட்டுவது கோவிலில் தேங்காய் உடைப்பது மாதிரி சட்டென முடிந்துவிட்டது. லதாவின் முகத்தை வாஞ்சையுடன் பிடித்து அத்தனைபேர் முன்னிலையில் நெற்றியில் முத்தமிட்டு மார்பில் சரித்துக்கொண்டதை அவளும் ரசிக்கும்படி ஆகிற்று. சிவாஜி லதாவிடம் அன்பாகத்தான் இருந்தார். இன்றைக்கு நேற்று இல்லை இருபது வருடங்களாக அவர் லதாவை கொஞ்சியபடிதான் டீ போடச் சொல்லுவார். வாசல் தெளிக்கக் காத்திருப்பார், தோசை வார்க்க அடம்பிடிப்பார், புடவைக் கட்ட விடமாட்டார், வாத்து போன்ற இவளது நடையைக் கேலி பண்ணுவார், இடுப்பில் கை ஊன்றி மோவாயில் விரல் வைத்து ரசிப்பார், அடிபட்ட இடத்தில் மருந்து தேய்ப்பதென்றால் போதும் பொம்மைமாதிரி வந்துவிடுவார், இது பரவாயில்லை நடனம் ஆடும்போது நாக்கைக் கடித்தபடி குழந்தை பொய் சொல்வதுமாதிரி நெளிவார்.
ஆரம்பத்தில் இதெல்லாம் அவளைப் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. கலையில் சுத்த சிருஷ்டி கொண்ட கலைஞர்களுக்குரிய மனநிலை இது. அவர்கள் தங்களை ஒவ்வொரு கணத்திலும் அப்படித்தான் உணர முடியும் என்று விட்டுவிட்டாள். ஒருநாள்கூட சிவாஜி ஒப்பனையின்றி லதா அவரைப் பார்த்தது இல்லை. பெரும்பாலும் நாடகங்களும் விழாக்களும் இரவில் நடந்து பகலில் முடிவதால், விடிந்து வெயில் ஏறிய பிறகுதான் வீடு திரும்புவார். வந்ததும் அறைக்குள் போய் ஓய்வெடுப்பார். பிறகு நண்பர்களைச் சந்திக்க நாடக சபாவுக்கும் மன்னரின் பழைய அரண்மனைக்கும் கட்சி அலுவலகத்திற்குமென தவிர்க்கமுடியாத அழைப்பு வந்துவிடும். அதனால் அநுபந்து எப்போதும் சிவாஜியின் ஒப்பனையில்தான் இருக்கிறாரென்று லதா நினைத்துக்கொண்டிருந்தாள்.
வீட்டிலும் அநுபந்துவின் பழைய புகைப்படங்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் வீடு முழுக்க அவருடன் நிற்கின்ற முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் தொங்குகின்றன. அனைத்திலும் சிவாஜியின் கம்பீரத் தோற்றம்தான் இருக்கிறது. லதாவால் அநுபந்து எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய முடியவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்து நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது லதா அவரது குரல் ஒலியை கண்களை மூடி கேட்பாள். அது மட்டும்தான் அநுபந்துவினுடையது. அதில் கார்வை இருக்காது, கனமான சொற்கள் எழாது, ஆழமான உச்சரிப்பு வராது. மென்மையானது பெண்களுக்குரிய சன்னமான குரல். சிரிப்பில் சலசலப்பு கேட்கும். அடக்க முடியாத சிரிப்பில், சப்தம் வழுக்கி வாத்திய ஒலியைப் போல் எழும். அந்தக் குரலை மறைக்க அநுபந்து படாது பாடுபடுவார்.
அவரை மறந்து உரையாடலில் லயித்திருக்கும்போதுதான் அது வெளுத்து வெளியே தெரியும். அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங்களும் நடந்துகொண்டிருந்தன. சிவாஜியை உட்கார்த்தித் தூக்கிப்போக ராஜ நாற்காலி ஒன்றும் அதை வைக்க ரதம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டு வந்தது. பெண்கள் சிலர் ஒப்பனைகளில் வந்திருந்தார்கள். காலையில் பார்த்த முகங்கள் இல்லை. இவர்கள் புதியவர்கள். வெவ்வேறு ஊர்களிலுள்ள நாடகக்காரர்கள். பட்டுப்புடவையும் பெரிய பூ செருகிய கொண்டைத்தலையும் அத்தர் மணக்க அமர்ந்திருக்கிறார்கள்.
கண்ணீர் வராமல் அழுவதும் முகத்தைத்துடைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களது பெயரைச் சொல்லி சிவாஜியை அழைக்கிறார்கள். சரோஜாதேவி அருகிலிருந்த விஜயாவைக் காட்டுகிறாள், பத்மினி அவரிடம் சுஜாதாவை அழைத்து வருகிறாள், வாணிஸ்ரீ அழுவதை அங்கிருந்த யாருமே விரும்பவில்லை அவ்வளவு அழகான முகம்.
வாணிஸ்ரீ மட்டும் லதாவின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய கர்ப்பப்பை சிகிச்சைக்குக் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லையென்று ஆதங்கப்பட்டாள். இந்த நடிகைகளைப் பார்ப்பதற்கென்றே சாவு வீட்டில் கூட்டம் அதிகம். பெரிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர்கள் அத்தனைபேரும் இங்குதான் இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகக்காரர்கள் வேனில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லோருமே ஏதவாது ஒரு வேஷத்தில்.
ரஜினி வந்தார், சப்பாணி கமல் வந்தார், நிறைய எம்ஜிஆர்கள் வந்தனர். எனக்கு வேடிக்கையில் பெரிய ஆர்வம் இல்லை. லதாவின் பக்கத்தில் போய் நிற்பதைத்தான் விரும்பினேன். சிவாஜியின் வீடும் எங்கள் வீடும் நேர் வாசல். சிவாஜி வீட்டுக்கு எதிர் வீடு என்பதுதான் எங்களின் அடையாளம். லதாவிற்கு திருமணமானது எனக்கு நினைவிலில்லை. நான் சின்னக் குழந்தை. லதாவின் வீட்டில்தான் எப்போதும் இருந்திருக்கிறேன். விவரம் அறிந்து லதாவைப் பார்க்கிறபோது அவள் சின்னப்பெண் மாதிரிதான் தெரிந்தாள்.
மாடிப்படியில் அமர்ந்து லதா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அழகான முகம். யாருமில்லாத தனிமை என்னவென்று அந்த முகம் எனக்குக் காட்டியது. லதா எந்நேரமும் அழுகிறாள். நல்ல மதிய வெயிலில்கூட மாடிப்படியில் அமர்ந்து அழுவாள். தாம்பத்தியக் கோளாறு என்று அம்மா பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சிவாஜிக்கு நூறு வயதுகூட இருக்கலாம். உடம்பு இரண்டு ஆளை முறுக்கி வைத்ததுமாதிரி. எப்போது அவர் சிவாஜி வேஷம் போட ஆரம்பித்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜிக்காக முகச் சிகிச்சை செய்துகொண்டது ஊருக்கே தெரியும். சிவாஜிக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். ஒருநாள் திடீரென்று அவர் வீட்டில் பெருங்கூட்டம் கூடியது. நல்ல வெயில் காலம் அது.
எல்லோரும் மொட்டை மாடியில்தான் படுப்போம். கருணாநிதியைக் கைது செய்து ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆகியிருந்தது. திருவிழாவோ பொதுக்கூட்டக் கொண்டாட்டங்களோ நடக்காமல் இருந்த சமயம். சிவாஜிகணேசன் இறந்த செய்தி வருகிறபோது நாடக சபாக்காரர்கள் நூறு பேர் லதா வீட்டில் இருந்தனர். இரவு நேரம் சிவாஜி மாடியில் படுத்திருக்கிறார். எப்படி இதைச் சொல்வதென்று புரியாமல் மெல்லத் தயங்கியபடி தெருவிளக்கில் நிற்கிறார்கள். காரணம் சிவாஜி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று சிவாஜி பலமுறை தெரிவித்திருக்கிறார். வந்தவர்கள் ‘சிவாஜி’ என்கிற பெயரை மட்டும் சொல்லி சூழலை ஆயத்தமாக்கியதும் சிவாஜி அதைப் புரிந்துகொண்டார். அவர்கள் பயந்தது போல அசம்பாவிதமாக ஒன்றும் நடக்கவில்லை.
ஆனால் சிவாஜி நிலைகுலைந்துதான் போனார். அடுத்த சில மணி நேரத்தில் சபாக்காரர்கள் ஒன்றுகூடி சென்னை செல்வதற்குத் தயாரானார்கள். வாழ்க்கையில் அப்படியொரு இரவை தான் அனுபவித்ததே இல்லையென்று லதாவிடம் அடிக்கடி சிவாஜி புலம்பியதாகச் சொல்வார். இரவு முழுக்க மனம் சிவாஜியின் பாடல்களை பாடிக்கொண்டே இருக்க, ஒப்பனை இல்லாமலேயே தான் சிவாஜியாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்.
“காலையில் இறங்கியதும் சபாக்காரர்கள் வற்புறுத்தித்தான் அன்றைக்கு சிவாஜி ஒப்பனையைச் செய்துகொண்டேன். செய்யக்கூடாது என்று இல்லை ஆனால் எனக்கு அப்போது அது ஏனோ தேவைப்படவே இல்லை” நாள் பூராவும் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்த கும்பலோடு கும்பலாக ஜனநெருக்கடிக்குள் சிவாஜிகணேசனை முதன் முறையாக அன்றைக்குப் பார்க்கிறார். அவரோடு அப்படி நின்று பார்த்தவர்கள் சிவாஜியின் ஒப்பனையோடு நூறு பேர். திரும்பும் இடமெல்லாம் சிவாஜி முகங்கள். அத்தனை சிவாஜிகளும் அழுகிறார்கள். அநுபந்துக்குத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் பெருகிறது. அவரால் அங்கு நிற்க முடியவில்லை. தலைக்கேறிய போதையாய் சமன் சரிகிறது. பெட்டியில் இருக்கும் சிவாஜியின் முகத்தை இத்தனை முகங்களிலிருந்து துலக்கி எடுத்துக்கொள்ள முடியாமல் தடுமாறி சரிந்துவிட்டார்.
விழித்தபோது ஒரு நிழற்தாங்கலில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி நிறைய சிவாஜிக்கள். கூட்டத்தில் தொலைந்தவரை அவர்கள்தான் இரவு தங்க வைத்து காலையில் அவர்களுடனே அரிமளம் வரை அழைத்து வந்தார்கள்.
அன்றைய இரவு பிரயாணத்தில் சிவாஜிக்களுடன் சேர்ந்து அநுபந்துவும் இனி சிவாஜியாகவே இருப்பதென்கிற முடிவிற்கு ஒப்புக்கொண்டார். அவர்களால் சிவாஜியாக இருக்க முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவர் அதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் ஆரம்பித்தார். தாடி வைத்து மறைத்த சிறிய மோவாயை சிகிச்சை செய்து சரியாக்கினார் (தோற்றத்தில் சிவாஜியிடமிருந்து கிடைக்காதது அத ஒன்றுதான்). புருவம் தடிப்பாக மாறும்படி சிரைத்துக் கொள்வதும் நிரந்தரமாக தலையில் விக் வைப்பதுமாக எப்போதும் சிவாஜியாகவே மாறத் தொடங்கிய சமயம்தான் லதா விதியாண்டவரைத் தேடிக் கிளம்பினாள்.
நேரம் ஆக ஆக சாவு வீட்டில் திருவிழாபோல சிவாஜியைப் பார்ப்பதற்கென்று கூட்டம் கூடிற்று.சிவாஜிக்கு வாரிசு இல்லை அதோடு லதாவின் உறவு வழியில் யாரும் கொல்லி வைக்க முடியாது. அதனால் சிவாஜியின் உறவுக்காரரில் ஒருவர்தான் செய்ய முடியும். லதாவுக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் சிவாஜி தன்னுடைய உறவுக்காரர்கள் என்று யார் வீட்டிற்கும் போனதில்லை. ஆனால் அவருக்குப் பெரியப்பா ஒருவர் இருந்தார். இறப்புக்கு சிவாஜி சென்றிருக்கிறார். பெரியப்பா வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். பெரியப்பாவின் மகன் இறந்துவிட்டான் அவரது பையன் ஒருவர் வந்திருந்தார்.
சிவாஜிக்கு மகன் முறை. அதாவது, லதாவுக்கும் சிவாஜிக்கும் பிறவாமகன். கொள்ளி சடங்குகளை அவரிடம் ஒப்படைத்தனர். லதா அன்றுதான் அப்படியொரு உறவைக்கேள்விப்படுகிறாள். தலை நரைத்து ஒல்லியாக வேட்டியும் அழுக்குச் சட்டையுமாக இருந்தார். அவளைவிட ஐந்து வயது அதிகம் இருக்கும். கடமைக்கு வந்து போய்விடலாம் என்று வந்தவரை திடுதிப்பென்று உருவான உறவு முறையில் நிற்க வைத்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் முடியாது என்று மறுத்தார். ஊர்க்காரர்களும் கட்சிக்காரர்களும் சம்மதிக்க வைத்தனர். அதிலும் அம்மா முறையில் சில சடங்குகளை லதாவுக்குச் செய்யவேண்டியிருந்தது. இதையெல்லாம் பார்த்து லதா தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்தேன். ஆரம்பத்தில் சிவாஜிமேல் லதாவுக்கு அப்படியொன்றும் வெறுப்பு இல்லை.
நானே பலமுறை அவர்கள் இருவரையும் காரில் ஒன்றாகப் போகிற போது பார்த்திருக்கிறேன். சிவாஜியை மணந்ததில் லதாவுக்குச் சம்மதம் இல்லை என்பது மட்டும் ஊருக்கே நன்றாகத் தெரியும். “தினமும் சிவாஜி ஒப்பனையோடுதான் இருப்பார். அதைக் கலைப்பதற்கே அவருக்கு விருப்பம் இருக்காது. எந்நேரமும் வீட்டிலிருக்கும் கண்ணாடி முன் நிற்பார். வீட்டில் எல்லா அறைகளிலும் நான்கு திசைகளிலும் ஆளுயரக் கண்ணாடி உண்டு.
அவருக்குப் பரிசளிப்பவர்கள்கூட நல்ல தரமான கண்ணாடி இருக்கிறது தரட்டுமா என்றுதான் கேட்பார்கள். அது மட்டுமில்லாமல் ரெண்டு வருஷம் போனால் அவரே ஒவ்வொரு கண்ணாடியையும் மாற்ற ஆரம்பித்து விடுவார். ரசம் போகாத கண்ணாடிகூட வெளுத்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். விழுகிற பிம்பத்தை நான்கு பக்கமும் விளக்கைப் போட்டு உற்று பார்ப்பார். கண்ணுக்குத் தெரியாத எந்தக் கீறல் வழியாக வெளிச்சம் ஊடுறுவியது, எந்த இடம் மங்கலாக மாறியது என்று அவரைத் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உடனே அந்தக் கண்ணாடியை மாற்றிடுவார். அவரைச் சுற்றி கண்ணாடிகள் இருக்கனும். எந்த பிம்பமும் அவரை சோபையாகக் காட்டிடக்கூடாது. அவர் நிற்கிற இடத்திலிருந்து அவரைச் சுற்றி எந்தப் பிம்பம் அசையுதுனு நல்லா தெரியும். இறுக்கி அணைக்கிறப்ப ஹால் மூலையில் சாய்வாக இருக்கிற கண்ணாடியில் எப்படி விழுகிது பார்” என்பார். லதாவுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். இதை ஒரு விளையாட்டுபோல அவர் அவளிடம் துல்லியமாகச் சொல்கிறார். லதாவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டினுள் அவர்கள் இருவர் மட்டும் இருக்கையில் பிம்பங்களின் அசைவு சுற்றி நின்று சிலர் பார்ப்பதுபோல அசௌகரியத்தை உண்டு பண்ணும்.
சில சமயம் லதா தனிமையில இருக்கிறபோது திடுக்கிட்டு போயிருக்கிறாள். தலையணையில் படுத்தபடி புத்தகங்களைப் புரட்டுகிறபோது வெளியே யாரோ வருகிற சத்தம் கேட்டுத் திரும்புவதற்குள் எந்தக் கண்ணாடியிலாவது பார்வை மோதி அவள் உருவம் நிலைகுலையச் செய்துவிடும். சிவாஜியிடம் இதெல்லாம் சொல்ல முடியாது. அவர் கேலியாகச் சிரிக்கிறார். சிவாஜி ஒப்பனையைக் கலைக்காததற்கு கண்ணாடிகளும் ஒரு காரணம். இந்தக் கண்ணாடிகளாலேயே லதாவை அவர் அதிகம் நேசித்தார். கட்டி அணைப்பது முத்தமிடுவது தோளோடு தூக்கிச் சுற்றுவது எனச் சளைக்காமல் செய்வார். சிவாஜிக்கு மதுப் பழக்கம் அறவே இல்லை. ஆனால் எந்நேரமும் மதுவின் போதையில் இருப்பது போல உளறுகிறார்.
அதாவது. எந்த இயல்பான நடத்தையும் அவருக்கு மிதமிஞ்சிய தன்மை கொண்டவை. போதையில் இருப்பவர்கள் கோபத்தைத் தவிர மற்ற உணர்வுகளைச் சமாளிக்க முடியாமல் சரணடைவது மாதிரி. சிவாஜியின் நாடகீய பாவனை எதையும் இயல்பாக நடத்தவிடாது. விதவிதமாகச் சிரிப்பது அழுவது கோபம் கொள்வது. லதாவுக்கு மிகவும் அலுப்பாக இருக்கும். “உங்களால் சாதாரணமாக இருக்க முடியாதா? ஏன் இப்படி எப்போவும் நடிச்சுட்டு இருக்கிங்க” அவளால் பொறுக்க முடியவில்லை. ஒருமுறை வீட்டிலுள்ள அத்தனை கண்ணாடிகளையும் போட்டு உடைத்தபோது சிவாஜி கல்லென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதுவும் ஏதோவொரு சினிமாவில் சிவாஜி அமர்ந்திருக்கும் நிலை. சண்டை போட்டுக்கொண்டு எங்கும் போவதற்கு பாவம் லதாவுக்குப் போக்கிடம் இல்லை. சிவாஜி சமாதானம் செய்கிறார். ஆனால் அவளால் அதை எதிர்கொள்ள முடியாது. இப்படி அடிக்கடி சண்டை நடக்கும். எங்க வீட்டிலிருந்து அம்மா ஓடிப் போய் சமாதானம் செய்யும்போது லதா அறையைவிட்டு வெளியே வர மாட்டாள். சிவாஜி அம்மாவிடம் “கல்யாணமே வேண்டானு நான் இருந்தேன். இதெல்லாம் எனக்குச் சரிபடாதுனு அப்போவே தெரியும். இதனாலதான் நல்ல கலைஞர்கள் திருமண பந்தத்தில் இருக்கிறது இல்லை” என்று அழகாக திருத்தமாகச் சொல்வார்.
சிவாஜிக்குப் பெண்களுடன் தொடர்பு இருந்தது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அது ஊருக்கே தெரியும். ஒரு காலத்தில் சலிக்கச் சலிக்க சல்லாபத்தில் திளைத்திருந்தார். நாடகத்திற்கு போகிற ஊர்களில் எப்படியாவது ஒருத்தி கிடைத்துவிடுவாள். ஆனால் யாரையும் சிவாஜி வற்புறுத்தியது இல்லை. அதே சமயம் அவரை மறுத்து யாரும் போனதும் இல்லை. சிவாஜி அதில் கைகாரர். ஒரு கட்டத்தில் நாடகங்கள் நிகழ்வது நின்று போன போது இதெல்லாம் ஓய்ந்தது. தொலைக்காட்சி பாடகர்களால் திருவிழாக்களிலும் இவர்களுக்கு மவுசு குறைகிறது. ஆடல் பாடல் குழுக்களுடன் சேர்ந்துகொண்டு திருவிழாக்களில் சிவாஜி மறுபடியும் தோன்றினார். பழைய சல்லாபத்திற்கு இடம் இல்லை. இது மிகவும் மேல் தட்டு உலகத்தைப் போன்று. சிவாஜிக்கு மேடையில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் பிறகு வீட்டிற்குத் திரும்பிவிடுவார். லதாவுடன் செலவிடுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. லதாவுக்கு குழந்தைப் பிரியம். சிவாஜி அதைச் சட்டையே செய்யவில்லை. எப்போது ஆரம்பித்தாலும் “நடக்கும் போது நடக்கும்” என்று தட்டிக் கழிப்பது லதாவிற்கு எரிச்சலூட்டும்.
அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊரில் ஒருத்தரைக்கூட விட்டு வைக்காமல் அவரது வீட்டிற்கு இழுத்து வந்தது. எங்கு பார்த்தாலும் “சிவாஜி செத்துப்போனார்” என்று முக்கத்துக்கு முக்கம் பெண்கள் பேசித் திரிந்தனர். அப்படித்தான் ஆபணரத்தையும் எங்கிருந்தோ சாவுச் செய்தி அழைத்து வந்தது. ஆபரணத்துக்குச் சொந்த ஊர் கிடையாது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராக சாணம் பிடிக்கக் கிளம்பிவிடுவாள். ஆபரணத்தை லதாவுக்கு அவ்வளவாக நினைவு இல்லை. ஆனால் ஆபரணத்துக்கு ஊரிலுள்ள அத்தனைபேரும் பரிச்சயம்.
நேராக சிவாஜியைப் போய் பார்த்து அழுது தீர்த்துவிட்டு பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள். எல்லோருமே நடிகைகளைப் போன்று ஒப்பனையில் இருந்தனர். அவளுக்கு அவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. நடிகைகள் யாரும் அழவில்லை. அந்தரங்கக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அதிகமும் சிவாஜியைப் பற்றியவை. சிவாஜியின் உடன் பிறந்தவர்கள் (எத்தனைபேர் என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்), நாடகத்திற்கு நடிக்க வந்தது, சபாக்காரர்களுக்குள் நடந்த சங்கப் பிரச்சினை என நிறைய. ஆபரணமும் அன்றைக்குத்தான் சிவாஜியைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்கிறாள். ஒருகட்டத்தில் காதில் விழுந்த ஏதோவொரு செய்தி அவளைத் திடுக்கிட வைத்தது. வலிப்பு வந்தது மாதிரி கால்கள் நடுங்கிவிட்டன. யாரிடம் எப்படிச்சொல்வதென்று புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். பக்கத்திலிருந்த நடிகை ஒருத்தி (இடம் கொடுத்து அமர வைத்தவள்) இவள் அழுவதைப் பார்த்துக் கேட்டதும் “சிவாஜிய விதியாண்டவர் கோவில் செல்லையன்தான் கொன்னுட்டான்”
என்றாள் மெதுவாக. சட்டென்று அந்த இடம் அமைதியாகிற்று. எல்லோருடைய முகமும் கூர்ந்து அவளை நோக்கின. ஆபரணம் பதற்றத்துடன் “விதியாண்டவர் கோயில் குளக்கரையில அனுபந்தம்னு யாரோ ஒரு பொம்பள மூனு முறை சொல்லிட்டு கிளம்பிட்டாள்” என்று பயத்துடன் வாய் பொத்துக்கொண்டு சொன்னாள். அடுத்த கணம் அந்த இடமே வெலவெலத்துப் போனது. விசயம் சபாக்காரர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் போனது. அவர்கள் அது உண்மைதானா என்று ஆபரணத்தை அழைத்துக் கேட்டனர். ஆபரணம் பதில் சொல்ல முடியாமல் அழுதாள். “யார் என்ன ஏதுனு தெரியல ஆனா சாய்ந்தரம் இருட்டுறப்ப ஒருத்தி அனுபந்தம் பெயர சொல்லிட்டு போனத பார்த்தேன்” என்றாள். ஊர்க்காரர்களின் கணிப்பு நேராக லதாமேல் விழுந்தது. அவர்களது கணிப்பும் தப்பாகவில்லை.
லதா சட்டென தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். விதியாண்டவர் கோவில் குளக்கரையில் அமர்ந்து சிவாஜியின் பெயரை உச்சரித்ததை லதா ஒப்புக்கொண்டாள். அந்திச்சாய்ந்த நேரத்தில் குளக்கரையில் நிற்பவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆபரணம் இன்னொரு படித்துறையில் அமர்ந்து இருக்கிறாள். லதாவுக்கும் சத்தமில்லாமல் எப்படி குளப்படிக்கட்டில் வேண்டுதல் பெயரை உச்சரிப்பதென்று புரியாமல் ‘அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் எழுந்து போய்விட்டாள்.
அதாவது, கோயில் உள்ளே இருக்கிற செல்லையனிடம் வேண்டிக்கொண்டவர்கள் குளத்தின் கடைசிப் படிக்கு வந்து கோவிலுக்குள் உச்சரித்த பெயரை குளத்துக்குள்ளே மூன்று முறை சன்னமாகச் சொல்லவேண்டும். செல்லையனிடம் வேண்டுதல் சொல்லிவிட்டதை அவனது தாய்க்குத் தெரிவிக்கும்முறை (செல்லையனின் தாய் குளத்துக்குள் இருக்கிறாள்). இந்த சம்பிரதாயமெல்லாம் லதாவுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆபரணம் குளக்கரையில் வைத்துக் கேட்டது அநுபந்தம் என்கிற பெயரைதான்.
அவளுக்கும் இங்கு வந்தபிறகுதான் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு பெண் எப்படி தன்னுடைய கணவனை அதுவும் ஊரே கொண்டாடும் நடிகரை விதியின் கையில் விட்டுவிட்டு வரலாம்? சாவுச்சடங்குகளும் டிரம் அடிக்கும் சத்தமும் தயாராகிக்கொண்டிருந்த ரததோரணங்களும் அப்படியே நின்று போனது. நாடக நடிகைகள் அவளை தனிஅறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தனர். என்ன வேண்டுதல் என்று கடைசி வரைக்கும் வாய் திறக்கவில்லை. மன்னரின் வாரிசு எல்லோரையும் அழைத்துப் பேசினார்.
“விதியாண்டவர் தலையிட்டிருப்பதால் விசயத்தை அமைதியாகத்தான் விசாரிக்க முடியும். அதோடு இதை லதாவின் மீதான குற்றமாகவும் பார்க்க முடியாது” ஆனால் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்தனர். விதி யாண்டவரிடம் வைக்கப்பட்ட வேண்டுதல் மூன்றாமவர் செவிக்குப் போவது பெரும்பாவம். அப்படி தெரிந்துவிட்டால் அவர்களையும் விதி விரட்ட ஆரம்பிக்கும். அதனால் லதாவிடம் விசாரிப்பதை இத்துடன் நிறுத்துமாறு ஊர் பெரியவர் மீசைக்கார அம்புலி சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் நாடக நடிகைகளிடம் லதா புலம்பிய சில விசயங்கள் வெளியே கசிந்து விட்டன.
அது என்னவென்றால், லதாவுக்கு முதலில் விதியாண்டவர் கோவிலுக்குப் போகும் எண்ணமே கிடையாது. லதாவின் அக்கா சுசிலாதான் அவளை அழைத்துப் போயிருக்கிறாள். சுசிலாவுக்கும் லதா என்ன வேண்டுதல் என்று சொல்லாமல் அவளைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் அழுகையை மட்டும் காட்டியிருக்கிறாள்.சுசிலாவே இதை பலவிதமான ஊகத்தில் எடுத்துக்கொண்டு லதாவுக்கும் சிவாஜிக்குமான வெளிப்படையான பிரச்சினை குழந்தையின்மைதான். ஆனால் அவள் நினைத்ததுமாதிரி சிவாஜிக்கும் லதாவுக்கும் குடும்ப உறவில் பெரிய சிக்கல் ஏதுமில்லை. சம்போகத்தில் சிவாஜி அவளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. லதாவின் ஒத்துழைப்பின்றி ஒரு முறைகூட சிவாஜி அவளைச் சம்போகத்திற்காக வற்புறுத்தினது கிடையாது. குழந்தைமாதிரி அடம்பிடிக்கும் குணத்தை ஊடலில் சிவாஜி வைத்திருந்ததாக லதா சுசிலாவிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள். அது அங்கிருந்த, சிவாஜியின் கொஞ்சல்களில் லயித்துப்போன, பெண்கள் பலருக்கும் தெரிந்த உண்மை.
ஆனால் சுசிலா ஊகித்தது, சிவாஜிக்கு நாடக சபாவில் இருக்கிற அத்தனை பெண்களிடமும் அந்தரங்க துவந்தம் உண்டு, அதற்கு அவளது அம்மாவே சாட்சிதான், அது இன்னும் அதிகமாகி லதாவைப் பற்றி நினைப்பே இல்லாதளவுக்குப் போயிருக்க வேண்டும். தங்கையின் வாழ்க்கை இப்படி வீணானதே என்று பெண்களின்மீது இருக்கும் மோகத்தை நிறுத்த முடிவு செய்து விதியாண்டவர் கோயிலுக்குப் போகக் கட்டாயப்படுத்தியிருக்கலாம்.
“யார் சொன்னது?” என்று மீசைக்காரர் கோபமாகக்கேட்டார். “நீங்களே தோராயமா ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க?” என்றார் மன்னர் வாரிசு. இதைவிட வேறு என்னவாக இருக்கும்? குழந்தை இல்லாததற்காக யாரும் விதியை மாற்றச் சொல்லி விதியாண்டவர் கோவிலுக்குப் போகமாட்டார்கள். விதியாண்டவரை வாழ்க்கையில் இழுத்துவிடுவது என்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை. மனிதர்களால் தீராத காரியம் நிறைய உண்டு. ஆனால் யாராலும் விதியை மாற்றுவது முடியாத ஒன்று. தீராத காரியம் விதி வசம் இருக்கிறதா என்று தெரியாமல் இறங்கவிடக் கூடாது என்று லதாவுக்கும் தெரிந்திருக்கும். விதியாண்டவர் அவ்வளவு சீக்கிரத்தில் லதாவை விட்டுவிடவில்லை. கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியதிலிருந்து லதா எந்நேரமும் செல்லையனின் வருகையை நினைத்து வாசலைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள். வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால்கூட ஓடிச்சென்று செல்லையன் வந்துவிட்டானா என்று பதறிவிடுகிறாள். செல்லையன் எப்படி வருவான் என்று லதாவுக்குத் தெரியாது. செல்லையன் பற்றிய பல கதைகள் எங்கள் ஊரில் உண்டு. அதேசமயம் தேவையின்றி செல்லையன் பெயரை யாரும் உச்சரிக்க மாட்டார்கள். எங்களுடைய பால்ய வயதில் செல்லையனும் கிட்டத்தட்ட எங்கள் வயதுக்குரிய பையனாகத்தான் தெரிந்தான். ஆனால் விதியாண்டவர் கோவிலை நினைக்கும்போதே அதன் தோற்றம் அச்சமூட்டும். சிறிய ஒற்றைத் தடம்தான். பெரிய குளம் அதைச் சுற்றி மண் குதிரைகள் நிற்கும். குளத்தையொட்டி பனை மரங்கள் சூழ விதியாண்டவர் கோவில். லதா எப்படி பயமில்லாமல் அங்கு போயிருப்பாள் என்று தெரியிவில்லை. ஆள் நடமாட்டம் இருக்காது. கையில் ஒரு குச்சியுடன் அரைக்கால் சட்டையில் நின்றவாறு செல்லையன் சிலை இருக்கும். விதியாண்டவர் கோவிலில் பெரிய தெய்வம் அய்யனார். அவருக்கு வலதுபுறம் செல்லையன்.
அவனுக்கு இரண்டு பக்கமும் சிறிய மண் குதிரைகள். செல்லையன் குதிரைகளை மேய்க்கிறவனாக இருந்திருக்க வேண்டும். செல்லையன் எப்படி அந்த அய்யனார் கோவிலுக்கு வந்தான் என்கிற கதைக்குத் தொடக்கமே இல்லை. ஆளுக்கொரு கதை சொல்வார்கள். எவ்வளவு சிக்கலான விதியையும் செல்லையன் தீர்த்துவிடுவான் என்கிற சொலவடை உண்டு. சிவாஜியை செல்லையன்தான் கொன்றான் என்பதை ஊர்க்காரர்கள் உறுதியாக நம்பினார்கள். சிவாஜி இறந்துகிடந்த அறைக்குள் யாரோ இருந்தார்கள் என்றும் கதவைத் திறந்த சமயத்தில் தன்னை யாரோ தள்ளிவிட்டுவிட்டுப் போனதுபோல இருந்ததை லதா கூறியதைக் கேட்டு நாங்கள் பயந்துதான் போயிருந்தோம். அந்த பயமே அந்தக் கதையை நம்ப வைத்தது.
சிவாஜி நாற்காலியுடன் சாய்ந்தவாறு தரையில் மோதி இறந்து கிடந்தார். செல்லையன் அவரைக் கீழே சாய்த்திருக்கவேண்டும். அவர் செல்லையனுடன் போராடி தோற்றிருக்கலாம். விதியாண்டவர் வேண்டுதல் விசயம் பரவியதில் அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊர்வலம் நடக்கவில்லை நின்று போனது.
“அம்மா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் சிவாஜியை எனக்குக் கல்யாணம் பண்ணியிருக்காது.” என்று லதா சொல்லும்போது எனக்கு அது என்னவென்று முதலில் விளங்கவில்லை. ஊரில் சிவாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் நிறைய பேர் ஆசைப்பட்டதாக என் அம்மா சொல்வது உண்டு. “சிவாஜி எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அம்மா அவரைப் பற்றி பேசாத நாள் கிடையாது. வெறும் மாசச் சம்பளம் மட்டும் அம்மாவுக்குக் கிடைக்கிற வழிய அவர் செய்யல. எப்போ பணம் தேவைப்பட்டாலும் சிவாஜி வீட்டுக்குத்தான் எங்களை அனுப்புவார்.
இதே திண்ணையில்தான் அவர் நாற்காலியில் நாடகக்காரர்களுடன் அமர்ந்திருப்பார். நானும் அக்காவும் வாசலுக்கு வந்து நிற்கிறதைப் பார்த்ததும் வாஞ்சையா எங்களை அழைத்து உள்ளே கூட்டிப்போவார். வீடு முழுக்க இருட்டாத்தான் இருக்கும். தொங்குற ஏதோ ஒரு சட்டையிலிருந்து பணத்தை எடுத்து மடித்து அக்கா கையில் கொடுப்பார். வெளியே இருக்கிற நாடகக்காரர்கள் எங்ளைப் பார்த்து ஜாடையாக ஏதோ சிவாஜியிடம் பேசுவார்கள். அவரும் சிரித்தபடி அதற்குத் தலையாட்டுவார். அப்பவும் சிவாஜி எப்படி இருந்தார்னு எனக்குச் சரியாக நினைவிலில்லை.
நான் பெரிய மனுஷி ஆனப்போ சிவாஜி எங்க வீட்டுக்கு வந்தார். அப்போவும் நல்லா கம்பீரமாக சினிமால வர மாதிரிதான் இருந்தார். அவர் கொடுத்த மொய்ப்பணம்தான் அன்னைக்கு பெரிய தொகை.” லதாவின் அம்மாவிற்கு சிவாஜி என்றால் பிரியம். அப்பெயரை உச்சரிக்காமல் இருந்ததே இல்லை.
சிவாஜி பற்றி ஊருக்குள் பேசும் விசயங்கள் லதாவுக்கும் தெரியும். சுசிலா லதாவிடம் தான் கேள்விப்பட்டதைச் சொன்னாள். சுசிலாவுக்கு அது பெரிய தவறாக ஏதும் பட்டதா என்று தெரியாது. ஆனால் அதன்பிறகு லதா அம்மா புதுப் புடவையும் அலங்காரமும் செய்துகொண்டு கிளம்புவதை லதா ரகசியமாகக் கவனித்தாள். சுசிலா ருது எய்தியப் பின் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போனதோடு இதைப்பற்றி அதிகம் பேச சந்தர்ப்பம் அமையாமல் போனது. எப்போது வீட்டிற்கு சிவாஜி வந்து போவாரென்று இருவருக்குமே தெரியாது.
ஆனால் இவர்கள் வீட்டில் சிவாஜியைப் பார்த்ததாக அக்கம் பக்கத்தில் சொல்வார்கள். சுசிலாவும் போனதற்குப் பின் லதா மட்டும்தான் வீட்டில். பள்ளி முடிந்ததும் நேராக வீடு வந்துவிடுவாள். ஒருமுறை வீட்டில் சிவாஜியுடன் அம்மா இருப்பதை லதா நேராகவே பார்த்துவிட்டாள். சிவாஜி தரையில் படுத்திருக்கிறார், அவர் மீது அம்மா படுத்திருக்கிறாள். சிவாஜியின் மிகப்பெரிய உடம்பில் அம்மா சின்னப் பூனைக்குட்டி மாதிரி ஆடையில்லாமல் கிடக்கிறாள். பார்த்த அந்தக்கணத்தில் முதலில் அது யாரோ என்று நினைத்துவிட்டாள். ஏனென்றால் அப்படி ஒருத்தி ஆடையின்றி தனது சிவந்த சதைத் திரட்சியுடன் பிரக்ஞையின்றி ஓர் ஆண் உடம்பில் அவ்வளவு வசதியாகப் படுத்திருப்பது (அப்படிப் படுக்க முடியுமா என்று கற்பனை செய்ததில்லை) நிச்சயம் யாரோவாக இருக்கலாம் என்று தோன்றியது. லதா நுழைந்ததும் சில நொடிகள் உறைந்தபடி நிற்கிறாள். அது அம்மாதான் என்றும் அவளுக்கு அவர்கள் இருவரும் சட்டென எழுந்துவிடும்வரை தெரியாது. இவள் வந்து நிற்பதை சிவாஜிதான் பார்க்க முடியும். லதாவின் சிறிய உருவத்தை அவர்மீது படுத்திருக்கும் அம்மா மறைத்திருப்பாள். சிவாஜி பதறியதும் கூந்தல் களைந்து படுத்திருப்பவள் திடுக்கென்று திரும்புகிறாள். பாம்பைக் கண்டது மாதிரி முகத்தில் பதற்றம். சிவாஜி ஒப்பனைகளுடன் ஆடை கசங்காமல் படுத்திருக்கிறார். அந்தக் காட்சி நினைவிலிருந்து மறைய ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை.
அவளும் அதைப்பற்றி அம்மாவிடம் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டாள். அம்மா நோயில் படுத்தபோது சிவாஜிதான் மருத்துவச் செலவுகளை கவனித்துக்கொண்டார். அம்மா இறந்து நான்கைந்து வருடங்கள் லதா, சுசிலாவோடு அவளது திருமணமான வீட்டில் இருந்தாள். சுசிலாவின் அந்தரங்க அசைவுகள் அவளுக்குக் கலவியின் கற்பனைகளை ஏற்படுத்துகிறபோதும் சிவாஜியும் அம்மாவும் இருந்தக் காட்சியைத் தூண்டிவிடவில்லை. அது மறந்தது மறந்தாகவே இருக்கிறது. கற்பனையில் சிறுக் கீறலைக்கூட அது ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அந்தக் காட்சி சிருங்கார உணர்வைத் தூண்டும் அவசியமற்றதென நழுவியிருக்கலாம். அதானல்தான் லதா தாபத்தை அசைபோடும் சமயத்தில் அக்காட்சி எதையும் செய்யாமல் போய்விட்டது. அக்காட்சிக்கு வேறு குணம் இருந்தது. சுசிலாவுக்கு லதாவை அவளுடனே வைத்துக்கொள்வதில் நிறைய சங்கடம். லதாவுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கும் சிவாஜியை விட்டால் யாரையும் தெரியாது. (அவர்தான் சுசிலாவுக்குத் திருமணம் செய்து வைத்தவர்). அவளுக்கு சிவாஜியை மணம் செய்து வைக்கும் எண்ணம் முதலில் இல்லை. ஆனால் இந்த விசயமாக சிவாஜியைச் சந்திக்க எடுத்த அலைச்சலும் அனுபவங்களும் அந்த முடிவுக்கு வர காரணமாகிற்று. அதே சமயத்தில் சிவாஜியும் கல்யாணம் செய்து கொள்ளும் யோசனைக்கு வந்திருந்தார்.
ஒருவழியாக சிவாஜியைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டு திருமணச் செய்தியை லதாவிடம் சொன்ன அடுத்த கணம் அந்தக் காட்சி திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்துகொண்டது. லதா ஆடிப்போய்விட்டாள். எங்கிருந்து அது வந்தது? இத்தனை நாள் மறந்துபோனதாக தன்னை நம்ப வைத்திருக்கிறது. சுசிலாவிடம் ஜாடை மாடையாக எப்படியோ சொல்லிப் பார்த்தாள். சுசிலாவால் ஒன்றும் செய்யமுடியாத இடத்திற்கு விசயம் போய்விட்டது. சிவாஜியைத் திருமணக் கோலத்தில் பார்த்ததிலிருந்தே லதாவுக்கு உள்ளூர நடுக்கம் எடுக்கத் துவங்கிற்று.
சிவாஜியிடம் நெருங்குவதைத் தள்ளிப்போட்டாள். சிவாஜிக்கு அப்போது வெளியே நிறைய பழக்கங்கள் கிடைத்ததால் லதாவின் சல்லாபம் அவசியப்படவில்லை. அவளுக்கும் இப்படியே இருந்துவிடுவது சரியென்று தோன்றிற்று. சிவாஜிக்கு இருக்கிற தொடர்புகள் பற்றி அவள் சட்டையே செய்யாமல் இருந்துவிட்டாள். ஒருபக்கம் இது வசதியாகவும் இருந்தது. அந்தக் காட்சி மறுபடி வரவே இல்லை. சம்போகத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. மீறி திறந்தால் அந்தக் காட்சியின் ஸ்தூல வடிவமும் மூடினால் அதன் பிம்பமுமாக அவளை விரட்டுகிறது. அம்மாவை நினைத்துக்கொள்கிறாள்.
அவளது நிர்வாணம் பயமுறுத்துகிறது. கண்களை மூடி அவளை எப்போதோ பார்த்த ஒரு பெண் தெய்வமாக பிடாரி, தந்துமி எனக் கற்பனை செய்கிறாள். அது அவளைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை. அந்த எண்ணமும் வெகு நேரம் நீடிக்காமல் சரிகிறது. பிறகு வேறொரு உருவம் அதுவும் நிர்வாணமாகக் கிடக்கிறது. மறுபடியும் வேறொரு தெய்வம். பிறகு அம்மாவின் இறுதிக் காலத்தின் உருவத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள். அது நழுவாமல் இருக்கவேண்டும். வேறு முகங்கள் தன்னை இன்னும் துரத்தக்கூடியவை. கண்ணீர் முட்டித் தளும்புவதுதான் விரட்டுகிற காட்சிகளைச் சற்றைக்கும் சரியவிடும்.
சிவாஜி அவளை அணைத்து முயங்குவதில்லை. அவளைக் கலைத்துப் போடுவதுபோல தனது வேகத்தில் காட்டுவதில்லை. களைந்துவிடும் ஒப்பனைக்காகப் பயப்படுகிறார் (அன்றைக்கு அம்மா உடனும் இப்படித்தான் கலையாமல் படுத்து இருந்தார்). சிகிச்சை நிச்சயம் வீணாகிவிடும். அதோடு இயக்கம் சீக்கிரமே முடிந்துவிடுகிறது. கணநேர தாபம்தான். சிவாஜிடமிருந்து வெளியேற நினைத்தாள். எங்காவது ஓடிவிட பலநாள் முடிவெடுத்துக் களைத்தது உண்டு. சிவாஜி எங்காவது கிளம்பியதும் அந்த அமைதி பெரும் நிம்மதியை அளிக்கும். அதுவரை வைத்திருந்த தயாரிப்புகள் சிவாஜி வெளியே போன அடுத்த நொடியில் இருக்காது. வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளும் மாறி மாறி நகரும் பொழுதும் அவளுக்கு அந்த இருப்பை விட அனுமதிக்கவில்லை. வீட்டைவிட்டுப் போனால் அடுத்து எங்கு என்கிற கேள்வி. லதா அந்தக் காலத்துக்குள் கட்டிப் போடப்பட்டுச் சுற்றிக்கொண்டிருந்தாள். துரத்துகிற காட்சிகளிலிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. குழந்தை பிறந்தால் பிள்ளையின் முகத்தையாவது பார்த்துக்கொண்டிருக்கலாம் ஆனால் திருமணமான நான்கு வருடத்தில் ஒருமுறைகூட கரு தங்கவில்லை.
இந்தச் சமயத்தில்தான் நடிகர் சிவாஜிகணேசன் இறந்த செய்தி வந்தது. ஒருபக்கம் அநுபந்துக்கு இனி சிவாஜியாக இருக்கும் அபிலாசை குறையும் என்கிற நம்பிக்கை, அதே சமயம் செய்தி கேட்டதும் அநுபந்துக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நிச்சயம் நடக்கும் என்றுதான் லதா, சிவாஜி சென்னைக்குப் போன பிறகு நினைத்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கு அபூர்வமாக அவளுக்கு விதியாண்டவரின் ஞாபகம் வந்திருக்கிறது. அது எப்படி? யாரால்? எதற்காக? என்றெல்லாம் தெரியவில்லை. மனம் திக்கென அடைக்கிறது. ஏதோ குற்றத்தைச் செய்யப்போவது போல விரல்கள் நடுங்குகின்றன. விதியாண்டவரின் கோவிலுக்குள் போனதே இல்லை. செல்லையன் எப்படி இருப்பானென்றே தெரியாது, இருந்தும் கண்களை மூடி கற்பனையாக ஓர் உருவத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.
அநுபந்து சிவாஜியாக மாற ஏற்கெனவே விதி முடிவாகி இருந்தது. சாவு வீட்டில் நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமாகிற்று. துக்கம் விசாரித்து மரியாதை செய்துவிட்டுப் போனவர்கள்கூட விசயத்தைக் கேள்விபட்டுத் திரும்பவும் வந்து விட்டனர். பொழுது சாயத் துவங்கிற்று, இனி அடக்கம் பண்ணமாட்டார்கள். அதோடு விதி, செல்லையன் கையால் போயிருப்பதால் ஆத்மாவை இப்படியே துக்கத்தோடு அனுப்பிவிட முடியாது. அதனைச் சமாதானப்படுத்தும் கர்ம பரிகாரத்தைச் செய்து விடையனுப்புவதுதான் சரி. ஆனால் அங்கிருப்பவர்கள் யாருக்கும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்றைக்குச் சாவு வீட்டில் லதா அழுவதை அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தேன்.
ரசிக்க வைக்கும் மூக்கும் நெற்றியும் லதாவுக்கு. இடது விழியின் ஓரத்தில் மிளகு போல ஒரு மச்சம். இன்றைக்குத்தான் அதை அருகில் பார்க்கிறேன். என்னிடம் எதற்காக எல்லா கதைகளையும் சொல்கிறாளென்று புரியவில்லை. இருபது வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டிற்கும் லதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லதாவுக்கு என்மீது ஈர்ப்பு இருந்திருக்கும் என்று கோமாளித்தனமான ஆசை எனக்கு. அன்று சாவு வீட்டில் ஒரு பெண்ணை நன்றாகப் பார்த்து ரசிப்பதற்காக நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் அச்சமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது.
என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊரில் நடந்த அசம்பாவிதம் அது. வித்தியாசமான நிகழ்வு. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒரு நாடக நடிகை தன்னுடைய செருப்பால் லதாவை அடித்துவிட்டாள். லதாவின் மூக்கில் இரத்தம் வழிகிறது ஆண்கள் அவளைப் பிடித்து இழுத்தனர். அப்போதுகூட என்னால் அப்படி அணைப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல அவர்களும் இந்தத் தருணத்தை உபயோகிக்கிறார்கள். சிவாஜியின் மகன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார். லதாவை அவர்தான் அவர்களிடமிருந்து விடுவித்து உள்ளே அழைத்துப்போனார். லதாவுக்குத் தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவச் சொன்னார். பல் ஒன்று விழுந்துவிட்டது இரத்தம் நிற்காமல் வழிகிறது. துணியால் வாயைப் பொத்தியபடி லதா அழுகிறாள். மகன் அவளது தோள்களை ஆதூரமாகப் பிடித்திருக்கிறார்.
லதா அவரிடத்தில் “நான் எதையும் செய்யல” என்று மன்றாடி அழுதாள். அதை நம்புவதாக அவர் தலையசைத்துத் தேற்றியதை நான் கவனித்தேன். அவர் லதாவைக் காப்பாற்றிவிட்டதாகத்தான் நாங்கள் நம்பினோம். ஆனால் ஊர்க்காரர்களில் சிலர் லதாவை விடவில்லை. வேண்டுதல் பற்றி விசாரிப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக அது, நிச்சயம் சிவாஜியை சாவடிப்பதுதான் என்கிற முடிவுக்கு வந்ததுடன், ஏன் அப்படியொரு முடிவு என்கிற கேள்வியில் லதாவைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தனர்.இன்னொரு தரப்பினர், விதியாண்டவரின் தீர்ப்பில்சிவாஜி இறந்திருப்பதால் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று விவாதத்தில் இருந்தனர்.
பொதுவாக விதியாண்டவர் கோவிலுக்குத்தான் மக்கள் ஊர்வலமாகப் போவது நடப்பு. ஆணி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மண் குதிரைகளைச் செய்து குளத்தைச் சுற்றி நாங்கள் எடுத்துபோவோம். பெரிய குதிரைகளை ஆண்கள் தங்களது தோளில் வைத்துத் தூக்கி வருவார்கள். செல்லையனுக்கு நேர்ந்திருக்கும் குட்டிக் குதிரைகளைப் பெண்கள் குழந்தையைப் போன்று மார்பில் அணைத்து வருவார்கள். திருமணமாகாத பருவத்தினர் அதில் அதிகம். அந்தத் திருவிழாவில் செல்லையனிடம் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்பது விதி. இந்தக் குதிரைக்குட்டிகளெல்லாம் செல்லையனுக்கான பரிசு. விளையாட்டுச் சாமான்கள். சீர்வைப்பது மாதிரி. ஆடி மாதம் கிடா வெட்டு நடக்கும் அது அவனுக்கான படையல்.
அதனால் இந்த சமயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் வேண்டுதல் செய்வதில்லை. ஆனால் நாங்களெல்லாம் வயசுப் பெண்கள் தூக்கி வருவதைப் பார்த்து “இனி யாரும் அந்தப் பிள்ளைகள பார்க்கக்கூடாது” என்று பயந்திருக்கிறோம். அவர்கள் ஏதும் வேண்டிவிட்டால் அவ்வளவுதான் செல்லையன் உங்களைக் குளத்தில் போட்டுக் கொன்றுவிடுவான். ஆனால் உண்மையில் செல்லையன் யாரையும் கொன்றது இல்லை. விதியாண்டவர் கோவில் மதியம் அகாலவேளையில் அங்கு நிற்கும் இளுப்பை மரத்தின் அடியில் செல்லையன் குச்சியுடன் நிற்கிறானென நாங்கள் பேசிக்கொள்வோம். பத்து வருடங்கள் கழித்து லதாவை அப்படியொரு அகால வேளையில்தான் விதியாண்டவர் கோவிலுக்குப் போகிற வழியில் நான் பார்த்தேன்.
உடல் சன்னமாக சரியாக வாரி முடியாத கூந்தலுடன் எங்கோ போய்விட்டுத் திரும்புகிற வேகத்தில் இருந்தாள். கொம்பு போல நிற்கும் அந்த முலைகள் தளர்ந்து விட்டடிருந்தன. சிவப்பான நிறம் வெளுத்து கரிய இரத்தம் போலிருந்தாள். சேலையில் நான் பார்த்த அழகான பெண்களில் லதா அன்றைக்கு அழகு. எப்போதும் தலையில் உண்ணிப் பூக்கள் இருக்கும். சிவாஜி சாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது, லதா விதியாண்டவர் கோவிலுக்குப் போனதிலிருந்து பயம் கொள்ளத் துவங்கினாள். பிரக்ஞையின்றி தான் செய்யக்கூடாத காரியத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டதாக அரற்றிக்கொண்டிருக்கிறாள்.
வேண்டுதலை செல்லையன் எப்படி நிறைவேற்றுவான் என்று தெரியாது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திரும்பவும் கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் செல்லையன் வந்து போன வீடுகளை விசாரித்தாள். சமீபகாலத்தில் அப்படி யார் வீட்டுக்கும் விதிக்காக செல்லையன் போனதாக அவருக்கும் ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு பெயர்களைச் சொன்னார். கிராமத்தில் இப்போது அவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்பது சந்தேகம். அவர் சொன்னதில் ஒரு முகவரி மட்டும் எஞ்சியது. ஊருக்கு வெளியே இரயில் தண்டவாளத்தைத் தாண்டினால் பழைய மண்டபம் ஒன்று உண்டு. அதற்குப் பக்கத்திலுள்ள வீடு அது. லதா அடுத்த நாள் மண்டப வீட்டிற்குச் சென்ற போது வீட்டில் ஒரு கிழவி மட்டும் அமர்ந்திருந்தது. பார்வை சரியாக இல்லை. ஊருக்குள் முதன் முதலில் இரயில் தடம் போட்டபோது கிழவியின் கணவர் அந்த இடத்தை அரசாங்கத்திற்குத் தர மறுத்துவிட்டு கடைசி காலத்தில் இறந்து போனார். மண்டபம் நான்கு தூண்கள் முன்பக்கம் திறந்தபடி பெரிய வாயில் அதிகபட்சம் இருபது அடிக்கு இருபது அளவில் சதுரமாக பழைய கோவிலாக இருக்கவேண்டும். மண்டபத்திற்கு வடக்குப் பகுதியில் மண்டபத்துடன் இணைத்து ஓடு வேய்ந்த வீட்டில் கிழவி இருக்கிறது. மண்டபம் இரயில் வேகத்திற்கு விழாது என்று கிழவியும் தங்கிவிட்டது. லதா கிழவியிடம் விதியாண்டவர் கோவில் பற்றிக் கேட்டாள். என்ன வேண்டுதல் என்று நேரடியாகக் கேட்க முடியாது. இந்த மண்டபம் எப்போதுமே இடியாது எத்தனை இரயில்கள் தடதடவென ஓடினாலும் மண்டபம் அதிருமே தவிர அசையாது என்று கிழவி கூறியது. அவள் திரும்பத் திரும்பக் கோவில் பற்றிக் கேட்டதற்கு கிழவி மண்டபத்தையும் இரயிலடிக் கதையையும் சொன்னது. அதன்பிறகு லதா என்ன கேட்பது என்று புரியாமல் அமைதியாகவிட்டாள். இறுதியாக கிழவி அவளிடம் “விதியாண்டவர் கோவிலில் இதுமாதிரி வேண்டிக்க” என்று முடித்துவிட்டது. இரயிலடி ஆற்றுப்பாலத்தில் குடியிருந்த வண்ணார் வீதியில் மண்டபம் பற்றி ஒரு கதை இருந்தது. அன்றைக்கு மண்டபத்தை இடிக்க முடியாமல் திரும்பிய சர்க்கார் ஆட்களின் கனவுகளில் இறந்து கிடக்கும் ஒரு சிறுவனின் உருவம் வந்துள்ளது. தங்களுடைய குழந்தைக்கு ஏதாவது நேரிடும் என்று பயந்து மண்டபம் இடிப்பை நிறுத்திவிட்டனர். கனவுகள் வந்ததற்கு இரண்டு நாள் முன்புதான் கிழவி விதியாண்டவர் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியது.
ஆக, நிச்சயம் கனவில் வந்தது செல்லையன்தான். எங்களது பால்ய நாட்களில் இந்தக் கதை எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அவ்வளவு தூரம் இவ்விசயங்களைத் தேடி நாங்கள் செல்ல முயற்சிக்கவில்லை. நிச்சயம் லதாவுக்குத் தெரிந்திருக்குமா என்று ஊகிக்க முடியவில்லை. இத்தனை வருடம் கழித்து லதாவிடம் நான் கேட்டபோது, “வண்ணார் வீதிக்குப் போயிருக்கேன்” என்று முடித்துவிட்டாள். ஆனால் இப்பொழுதும் லதாவுக்குள் பழைய நினைவுகள் மெல்ல வெளிப்படும்போதே விரல்களில் நடுக்கம் எடுக்க ஆரம்பிக்கிறது. சிவாஜியின் சாவு வீட்டிற்கு ஆபரணம் வந்தது எனக்கு நினைவில்லை. ஆனால் ஆபரணம் வந்த பிறகுதான் அந்தச் சாவு, ஊரில் மறக்க முடியாத கதையாக மாறியது. எப்போதுமே ஊரில் ஆபரணத்தின் வருகை எந்த வீட்டிலாவது கொலையை நிகழ்த்தும் என்கிற சொலவடை உண்டு. “ஆபரணத்துகிட்ட அருவாமணைய தீட்டி வைச்சுருக்கேன்”, “ஆபரணத்துட்ட கொடுத்து இன்னும் கொஞ்சம் பதம் கூட்டிக்கலாம்” இப்படி நிறைய பேச்சுகள் ஆபரணத்தின் வருகையில் கொலை விழுவதற்கான ஆயத்தங்களை ஏற்படுத்துமென நம்பியிருக்கிறோம். உண்மையிலேயே ஆபரணம் வந்துபோன அடுத்த நாள் ஊருக்கு வெளியே தைலக்காட்டில் கொலை விழுந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய ரவுடியை அவனுடைய பழைய பகையாளிகள் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி வைத்தார்கள். அரிவாள்மனையால் ஒருத்தி அவளது புருஷனைத் தொடையில் அறுத்துவிட்டுக் கிணற்று அடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தச் செய்தியும் உண்டு. அதனால் ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அந்த உத்தரவு ரொம்ப நாளைக்கு நீளவில்லை. மொன்னைக் கத்தியும் மழுங்கிய அரிவாமனையையும் வைத்து வீட்டு வேலை ஒன்று நடக்கவில்லை. நானே கத்தியையும் மனையையும் எடுத்துக்கொண்டு வடிவான அரளையைத் தேடிப் போயிருக்கிறேன்.
குளத்துப்படியில் மொன்னைக் கத்திகளோடு கசாப்புக்காரர்கள் காத்திருப்பார்கள். சுத்தமாக இரண்டு வருடம் போனது ஆபரணம் திரும்பவும் அரிமளத்துக்குள் நுழைவதற்கு. பூனை மாதிரி ஒவ்வொரு வீட்டு வேலியில் நின்று சன்னமாக அழைத்துத் தீட்டிக்கொடுத்துவிட்டு மறைந்துவிடுவாள். ஊர்த் தலையாரிகள் ஆபரணத்திடம் சத்தியம் வாங்கித்தான் ஊருக்குள் விட்டதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆனால் எப்படியோ சாணம் பிடித்துக் கொடுக்காமலேயே ஆபரணம் இன்னொரு விதியை முடித்து வைத்துவிட்டதாக நம்பினோம்.
அது சிவாஜியாகத்தான் இருக்கவேண்டுமா? சிவாஜி இறந்தது சனிக்கிழமை. பிணத்திற்குத் துணையாக ஒரு பெட்டைக்கோழியை வாங்கி ரதத்தினடியில் கட்டி வைத்தார்கள். சிவாஜியின் அடக்கம் இரண்டாவது நாளும் நடக்கவில்லை. கோழி நெல்மணிகளைக் கொத்திக்கொண்டு ரதத்திலேயே அடைந்துவிட்டது. சேவல் ஒன்று அந்தப் பெட்டையுடன் கூடியதை நான் பார்த்தேன். அடிக்கடி சேவல் வந்து கூடுவதும் திண்ணையிலிருப்பவர்கள்
தோள் துண்டை வீசுவதுமாக இருந்தது அந்தக் கூத்து. மூன்றாவதுநாள் காலையில் ஒருவழியாக சிவாஜியின் சடங்கிற்கான முறையைக் கண்டுபிடித்தார்கள். அன்றைக்கு ஊரில் நல்ல மழை. பொட்டல் காடுகளெல்லாம் செம்புலமாகும்படி கொட்டித் தீர்த்தது. வருடம் முழுக்க வெயில். இப்படி எப்போதாவதுதான் எங்களுக்கு மழை. அதுவும் ஊரில் ஏதாவது முக்கிய மான காரியத்தில்தான் மழை வந்து ஊர் வாயில் சாகும். மழையோடு மழையாக இரண்டு மண் குதிரைகளை எடுத்து வந்தார்கள். ஒன்று பெரிய குதிரை மற்றொன்று குட்டி. குட்டி மண் குதிரையை வீட்டில் எந்த இடத்தில் சிவாஜியின் உயிர் வெளியேறியதோ அந்த இடத்தில் நிறுத்தி வைத்து, நாற்பது நாட்களுக்கு அங்கு செய்ய வேண்டிய பூசை காரியங்களை லதாவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு பெரிய குதிரையை எடுத்துக்கொண்டு முச்சந்திக்குப் போனார்கள்.
எங்களுக்கு அன்றைக்கு நடப்பதெல்லாம் திருவிழா சடங்குமாதிரி இருந்தது. அதாவது, பெரிய மண் குதிரையைத் தலைகீழாகத் தூக்கிப் போய் அங்கு ஒரு பனை மட்டையில் பெரிய பாடை ஒன்றைத் தயார் செய்து அதில் கிடத்தினார்கள். குதிரையின் கால்களுக்கு எந்தத் திசை, தலைக்கு எந்தத் திசை என ஆளக்கொரு யோசனை. பாடை ஒவ்வொரு திசையாகச் சுற்றியது. நாங்கள் மொட்டை மாடியிலும் புளிய மரத்திலும் வேப்பமரத்திலுமாக ஏறி நின்றோம். நிஜக்குதிரையின் சடலம் போலவே எங்களுக்குத் தெரிந்தது. லதா அழுத களையோடு வந்து பாடையில் கிடத்திய குதிரைக்கு அரிசி, பால், மாலையையும் போட்டாள். அவள் ஒரே நாளில் பாதியாகிவிட்டிருந்தாள். வாரிசு மகன் அவளைத் தோள் பற்றி அழைத்துப் போனான். இனி லதா அந்த மகனோடுதான் இருப்பாளென்று நினைத்துக்கொண்டேன். லதாவை பார்க்க முடியாது, வயசான மகன் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போய் விடுவான். அதுதான் சரி. லதாவை இனி யாரும் சீந்தமாட்டார்கள். அடக்கம் முடிந்த அடுத்த நாள் அவளைத் தீயிட்டுக் கொளுத்தப்போகிறார்கள் என்று கேள்விபட்டேன். அம்மாவிடம் கேட்டேன் “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க. அப்புறம் நாற்பது நாளைக்கு செல்லையனுக்கு யாரு சடங்கு செய்றது?”. அப்படியென்றால் நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா இருக்க மாட்டாளா? நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா உயிரோடுதான் இருந்தாள். அவளை யாரும் ஒன்றும் செய்யவில்லை. வழக்கமான சாவு வீட்டின் களை அங்கு இருந்தது.
லதாவை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆட்கள் திண்ணையில் அமர்ந்து பேசுவதும் போவதுமாக இருந்தார்கள். இன்றைக்குப் பார்க்கிற லதாவுக்கும் அவளுக்கும் இரண்டு தலை முறை வித்தியாசம். இத்தனைக்கும் வெறும் பத்து வருடங்கள்தான் நடுவில். இந்த லதா அவளின் தாய் மாதிரி இருக்கிறாள். இவளது மகளைத்தான் அன்றைக்கு நான் ரசித்தேன். சாலையோர உண்ணிப் பூக்கள் அவளை எனக்குத் தந்திருக்கின்றன. அவளைத் தவிர வேறு யாருமே அதைச் சூடிக்கண்டதில்லை. அவளுக்காக சில பூக்களைப் பறித்துக் கொண்டு போகலாமா என்று தோன்றிற்று. அவளால் அந்தக் காலத்துக்குள் நுழைய முடியாமல் இருக்கலாம். அதன் சாவி துருப்பிடித்து எங்காவது தொலைந்திருக்கும். அதை வெளி கொணர்ந்துவிடும் மோசக்காரனாக நான் ஏன் என்று ஒதுங்கிக்கொண்டேன். ஆனால் லதாவை வீட்டில் சந்தித்தபோது பழைய நினைவுகள் அவளைத் தேடி மறுபடியும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதை அவதானித்தேன். நான் லதாவைச் சந்திப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் ஆபரணம் இறந்து போனாள்.
அதற்கு முன்பு லதாவை வந்து சந்தித்திருக்கலாம். லதாவின் பேச்சில் அதொரு துரத்திக்கொண்டிருந்த சாபத்தின் கதைமாதிரி அங்கலாய்த்துக்கொள்கிறது. லதா ஆபரணத்துக்காக ரொம்ப வருத்தப்படுகிறாள். “எல்லாம் விதி. அது போற வழில எல்லாரையும் சேர்த்துக்கும்” என்று புலம்புகிறாள். ஒருகணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அம்மா லதா வீட்டுக்குப் போக வேண்டாமென்று எச்சரித்தும் நான் வந்து நிற்கிறேன். சிவாஜி இறந்த அறைக்குள் பத்து வருடங்கள் முன்பு வைத்து மண் குதிரைக் குட்டியை லதா நாற்பத்து ஒன்றாம் நாள் குளத்தில் கரைக்காமல் வைத்துக் கொண்டாளாம், விதியாண்டவர் கோவில் செல்லையன் இன்னும் அங்கு இருக்கிறான் என்று ஒரு கதை. உண்மையில் நாற்பத்து ஒன்றாம் நாள் மண்குதிரையைக் கரைக்க வேண்டுமா இல்லை அங்கேயே வைத்துக்கொள்வதா எது சரி என்று யாருக்கும் தெரியாது. ஆனால் காலம் அதை ஒரு துர்கதையாக்கிவிட்டிருக்கிறது. லதா வீட்டில் அந்தக் குட்டி மண் குதிரை குழந்தை விளையாடும் பொம்மை மாதிரி மூலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை அதை எடுத்துப் போகலாம் என்பது போல. ஆபரணத்தை விதி விரட்டியதை ஆபரணம் வந்து சொல்லும்வரை லதாவுக்கும் தெரியாதுதான். “ஆபரணம் பாவம்” என்றாள்.
நான் அதை ஆமோதிப்பதாகத் தலை அசைத்தேன். அதாவது இந்தக் கதை எனக்கு முன்னமே தெரியும், தூரத்திலிருந்து நான் கவனித்து வந்தேன் என்பது மாதிரி. லதா என்னிடம் சொன்னாள். “ஆபரணம் ஒரு பாவமும் பண்ணாம இத்தனை வருஷம் அவதிப்பட்டிருக்கா.” அந்தக் கசப்பு லதா பிரக்ஞையில்லாமலே உளறுகிற அளவுக்கு ஞாபகங்களில் சீழ் பிடித்திருந்தது. ஆபரணம் லதாவின் வேண்டுதலைக் கேட்ட அடுத்தக் கணம் விதியாண்டவர் கோயிலிலிருந்து கிளம்பிவிட்டாள். அவளால் அங்கு ஒருகணம்கூட நிற்க முடியவில்லை. உள்ளே சென்று செல்லையனிடம் மன்னிப்புக் கேட்பதா இல்லை குளத்திற்குள் மூழ்கி செல்லையனின் தாயிடம் முறையிடுவதா என்று புரியாமல் பயந்து போய்விட்டாள். தெரியாமல் நடந்த செயல் அல்ல. விதியாண்டவரின் கோயிலில் அடுத்தவரின் வேண்டுதலைக் கேட்கக்கூடாது என்று குழந்தைகள்கூட அறியும். அங்கு குழந்தைகளைத் திருவிழா காலம் தவிர வேறு எப்போதும் பார்க்க முடியாது. ஆடு மாடு மேய்ப்பவர்கள் குளத்திற்கும் கோவிலுக்கும் நடுவிலுள்ள இலுப்பை மர நிழலில் அமர்ந்துவிடுவார்கள்.
ஆபரணத்துக்கு இதெல்லாம் தெரியும். அன்றைக்கு ஆபரணம் விதியாண்டவர் கோவிலுக்கு வருவதற்கும் ஒரு காரணம் உண்டு. அவளுக்கு ஒரு வேண்டுதல் தேவை. ஆனால் அதைக் கேட்பதற்கு அவளுக்கு சமயம் கூடவில்லை. எப்படியென்றால், ஆபரணத்துக்குக் கொஞ்ச நாளாகச் சாணம் பிடிக்கிறபோது எதையோ பறி கொடுப்பதுபோன்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. அது என்னவென்று தெரியவில்லை. யார் சாணம் பிடிக்க வந்தாலும் கத்தி கூராகுகிறபோது எதையோ இழப்பது போல உணர்கிறாள். சிலர் குறைத்துப்பேசிக் காசு கொடுப்பார்கள், சிலர் இன்னும் அதிகம் தருவார்கள், எப்போதாவது வீடுகளில் கூலியோடு சேர்த்து பழைய துணிகளைச் சுருட்டிக்கொடுத்து விடுவதும் உண்டு.
அதனால் ஆபரணத்துக்கு வீடுகள் இருக்கும் தெருக்களில் சாணம் பிடிப்பதென்றால் நல்ல ஆதாயம். தெருவின் சந்திப்பு முனையில் எங்காவது நிழல் பிடித்து அமர்ந்துவிடுவாள். ஒன்றிரண்டு அரிவாள்மனைதான் முதலில் வரும் பிறகு எப்படியோ அந்தத் தெரு முழுக்கச் சேர்ந்துவிடும். ஊர்க்கதை, நாட்டுநடப்பு என்று பொழுது முடிந்து கிளம்புவதற்குள் ஆபரணத்துக்கு ப் பை கொள்ளும். தைலக்காட்டில் அடிக்கடி கொலை நடந்த பிறகு ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த சமயம் ஒரு நாள் ஆபரணம் சாணம் பிடிக்கும் சைக்கிள் இல்லாமல் வெறும் கையொடு வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டுப் போனாள்.
ஊர்ச் சண்டைக்கும் குடும்பம் கெட்டதற்கும் நான் எப்படிப் பொறுப்பாவது என்று முச்சந்தியில் நின்று திட்டித் தீர்த்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆபரணம் அரிமளத்துக்குள் வராமல் ஊர் ஊராக அலைந்து திரிகிறாள். இத்தனைக்கும் அரிமளத்தில் அப்படியொன்றும் வருமானமில்லைதான். ஆனாலும் ஆபரணத்தின் பழைய சொந்தம் அங்கு நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய புண்ணியத்திற்காக ஊரைவிட முடியவில்லை. ஒரு வழியாக ஆபரணம் ஊருக்குள் வர ஆரம்பித்தபோது பழையபடி வருமானமும் துணிமணிகளும் அளவுக்கு மிஞ்சிச் சேர ஆரம்பித்தன. எப்போதாவது தைலக்காட்டில் ஒருசில அசம்பாவிதங்களும் காதில் விழுந்துகொண்டுதானிருந்தன. அது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள ஆபரணம் பெரிதாகப் பிரயத்தனப்படவில்லை. ஆனால் நாளாக ஆக எதோவொரு பாவச் சம்பவத்தைச் செய்கிறோம் என்று உறுத்த ஆரம்பிக்கிறது.
தைலக்காட்டில் இரண்டு வயதுக் குழந்தையை யாரோ அறுத்து வீசியதைப் பார்த்துவிட்டாள். உண்மையில் அந்தக் குழந்தை இந்த ஊரே கிடையாது. போலீஸ் வெளியூர்க்காரர்களைக் கைது செய்தது. ஆபரணம் அடுத்தமுறை வாடிக்கையாக வந்தபோது கொலைகாரர்களை அடையாளம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று மனம் சாந்தியானாலும் அந்த நினைப்பு நிறுத்தவில்லை. யாராவது கத்தி, அரிவாளைத் தீட்ட வரும்போதெல்லாம் ஆபரணத்துக்கு பயம் பிடித்துவிடுகிறது. அவளுக்கு அதை இரண்டே நாளில் துரு சேரும்படித் தீட்டித் தரத் தெரியும்.
ஆனால் வருகிறவர்கள் பதத்தின் கடைசி சட்டம் வரைக்கும் தெரிந்திருக்கிறார்கள். விரலால் கீறி இரத்தம் பார்க்காமல் போவதில்லை. பதம் எந்த வேலைக்கு எந்தளவு என்று ஆபரணத்துக்கு நல்ல பரிச்சயம். அவளும் போக்குக் காட்டி ஏமாற்றி அனுப்பினாள். சக்கரத்தை மிதிக்க மிதிக்க அவளுக்கு வயிற்றுக்குள் கிலி கொள்ள துவங்கியது. சமயத்தில் சிறுநீர் கழிக்கும் அவசரம் என்று சொல்லிவிட்டு முதுகில் விழும் கேலிச் சொற்களோடு அங்கிருந்து போய் விடுவாள். ஒரு கட்டத்தில் இனி இந்தத் தொழிலை நிறுத்திவிடுவதென்கிற முடிவுக்கு வந்த பிறகு கடைசியாக விதியாண்டவர் கோவிலில் போய்க் கூறிவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அன்றைக்கு, லதா கோவிலுக்குப் போன அதே நாள், வெகுநாளாக விதியாண்டவர் கோவில் பூசாரி அழைத்ததன் பேரில்தான் ஆபரணம் கிளம்பிப்போனாள். பூசாரி, கோவில் மூலகிரகத்திலிருந்து அரிவாள், கத்தி, கூர் வாள் என்று அத்தனையும் எடுத்து வந்து வைத்தார்.
ஆடி இரண்டாம் வெள்ளி கிடா வெட்டு பூசை. ஆயுதங்களைப் பார்த்ததும் ஆபரணத்துக்கு நடுக்கம் எடுத்துவிடுகிறது. ஒவ்வொன்றாகச் சாணம் பிடிக்க ஆரம்பிக்கிறாள். கையில் பலம் இல்லாமல் உடல் நடுங்குகிறது. பூசாரியிடம் சொல்லிக் கொள்ளாமல் செல்லையனிடம் போய் “இந்த விதியிலிருந்து என்னை விலக்கிவிடு” என்று கேட்டுவிட்டுச் சூடம் ஒன்றை ஏற்றிவிட்டு நேராகக் குளக்கரைக்குப் போனாள். முதல் படித்துறையில் இறங்கி செல்லையன் தாயிடம் வேண்டுதலை உரக்கச் சொல்லும்போது நா எழாமல் விக்கித்தது.
படி ஏறியபோது ஏதோ மனக்குழப்பம். மறுபடியும் இறங்கிச் சொல்ல வேண்டும் என்று தோன்றவே பக்கத்து படித்துறைக்குப் போனாள். பின்பு அங்கேயே சிறிது நேரம் ஆசுவாசமாகச் சாய்ந்திருக்கையில்தான் லதாவின் வேண்டுதல் காதில் வந்து விழுகிறது. பத்து வருடங்கள் கழித்து ஆபரணம் லதாவைச் சந்திக்கையில் லதாவுக்கு அடையாளம் தெரியவில்லை. மொட்டைத் தலையும் எலும்பு உடம்புமாக ஆபரணம் உருமாறிப்போனாள். புகையிலைப் பழக்கத்தால் உதடுகள் சுட்டிருந்தன. லதா யார் என்ன என்றெல்லாம் கேட்காமல் ஆளைப் பார்த்ததும் மீந்த சாதத்தைத் தட்டில் போட்டுக் கொடுத்தாள். ஆபரணத்தால் சாப்பிட முடியவில்லை கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது.
லதாவின் கையைப் பிடித்துக்கொண்டு “விதியாண்டவர் கோயில்ல உன்னோட வேண்டுதல நான் கேட்டு தொலச்சுட்டேன். என்னால உன்னோட விதி மாறாம போயிருக்கும். நான் இப்போ விதி கெட்டு அலையுறேன்” என்று குறி சொல்வதுமாதிரிப் பாடினாள். லதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. திரும்பத் திரும்ப ஆபரணம் அதையே பாடுகிறாள். அதில் ஊருக்குள் சாணம் பிடிக்க வந்த கதை, வேண்டுதலைக் கேட்ட கதை, விதி விரட்டுகிற கதை என்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து கவனித்ததும் தான் வீட்டிற்கு வந்திருக்கிறது ஆபரணம் என்று தெரிகிறது. ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜி இறந்த நேரத்தில் ஊருக்குள் தன்மீது அவச்சொல்லை உருவாக்கியவள் என்கிற நினைப்பு இன்னும் லதாவை விட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் ஆபரணத்தின் கோலம் அவள்மேல் பரிதாபத்தை ஏற்படுத்திற்று. “என்ன செய்றது ஆபரணம்.. எல்லாம் விதி” என்று தேற்றினாள். அந்த வார்த்தையக் கேட்டதுமே உடம்பை உலுக்குவது மாதிரி ஆபரணம் துடித்துவிடுகிறாள். லதா என்னிடம் சொன்னபோது லதாவும் விசும்பிவிட்டாள்.
“விதி விதி விதி” என்று சத்தமே இல்லாமல் ஆபரணம் உச்சரிப்பதை லதாவும் செய்து காட்டுகிறாள். பிரக்ஞை மெல்ல நழுவுகிறது. நான் ஆபரணத்தைப் பற்றிக் கேட்டு அதனைத் திசை மீளச் செய்கிறேன். அன்று ஆபரணம் வேண்டுதலைக் கேட்டதிலிருந்து பொட்டு தூக்கம் இல்லாமல் அலைந்திருக்கிறாள். பாவத்திற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை. விசாரிப்பதற்கும் பயம். விசயம் தெரிந்தால் ஊருக்குள் விடமாட்டார்கள். காதில் விழுந்த வேண்டுதல் மனதிலிருந்து இறங்கவே இல்லை. ஆபரணத்துக்குப் புத்தி தெளியவே நான்கு வாரம் ஆகிற்று. சாணம் பிடிக்கப் போகிற இடங்களில் விசாரிக்கிறாள். ஒரு வழியாக பொற்பனைக் கோவிலில் இதற்குப் பரிகாரத்தை வயதான ஒருத்தர் கூறினார். அது, விதியாண்டவர் கோவிலில் செல்லையனைத் தவிர வேறு யார், அதைக் காதில் வாங்குகிறாரோ அவரிடமே செல்லையன் வேண்டுதலை விட்டுவிடுவான். ஒருத்தரின் விதிக்குள் குறுக்கிடும் இன்னொருவர் அந்த விதியால் அவரது விதியை மாற்றிக்கொள்கிறார். ஆபரணத்துக்குத் தலைச்சுற்றிவிட்டது. திருக்கட்டளையிலேயே தங்கிவிட்டாள். அடுத்தநாள் மறுபடியும் அதே ஆளிடம் திரும்பவும் கேட்கிறாள். அவர் அதையே மீண்டும் சொல்கிறார். எத்தனைமுறை கேட்டாலும் அதே பதில்தான்.
ஆபரணத்துக்கு எப்படி தன்னால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. முதலில் அநுபந்தமே அவளுக்கு யாரென்று தெரியாது. அந்தப் பெயரை அவள் கேள்விபட்டதே இல்லை. இன்னொரு பக்கம், இதுநாள்வரை தான் சாணம் பிடித்துக் கொடுத்தப் பதம், அப்படி எந்த உயிரையாவது சாய்த்திருக்குமோ என்கிற குழப்பம். பூசாரியிடம் யார் வேண்டுதலுக்கு வந்தது? என்று கேட்டுவிட முடியாது. ஆபரணத்திடம் இருந்ததெல்லாம் அநுபந்தம் என்கிற பெயர் மட்டும்தான். அவளுக்கும் அந்தப் பெயர் பரிச்சயம் இல்லை. உள்ளூரில் இவள் யாரிடமாவது கேட்டாள் நிச்சயம் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஏற்கெனவே ஆபரணத்தின்மீது நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அநுபந்தம் என்கிற பெயரை வாய் திறந்து சொல்லாமல் விசாரிக்கும் விதிவசத்திற்குள் சிக்கிக்கொண்டு ஊர் ஊராக தேடி அலைகிறாள்.
எங்காவது ஊர்க்காரர்கள் அமர்ந்து பேசிக் கொள்ளும்போது அந்தப் பெயர் எதுவும் காதில் விழுகிறதா என்று காதைத் தீட்டி வைத்து அமர்ந்திருப்பாள். டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூடம் என ஒரு இடம் விடவில்லை. இதற்கிடையில்தான் அரிமளத்தில் சிவாஜி இறந்த செய்தி வந்தது. சிவாஜியை சிறுவயதிலிருந்து ஆபரணம் பார்த்து ரசித்திருக்கிறாள். கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கவேண்டும்.
அதோடு ஊர்க்காரர்கள் கூடுகிற துக்க வீட்டில்தான் தேடும் அநுபந்தம் கிடைக்கலாம். சிவாஜியின் பிணத்திற்கருகே யாரோ அநுபந்தம் என்று சொல்லப் போக அதுவரை அழுது கொண்டிருந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. துக்கத்தோடு அதிர்ச்சியும் குழப்பமுமாக அத்தனையும் ஒன்று சேர்ந்து, யார் பெயரை இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருக்குகிறேனோ அவர் இறந்துவிட்டாரே என்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தியில் விசயத்தை உளறிவிட்டாள். “நான் வேணும்னு செய்யல” என்று மறுபடியும் மறுபடியும் தலையில் அடித்துக்கொள்ளும்போது லதா அவளைப் பிடித்து அப்படியே அணைத்துக் கொள்கிறாள்.
உடல் சுருட்டி வைத்த சிறுதாம்பு போல இருக்கிறது. இரண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் தேற்றிக்கொள்கிறார்கள். ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜியின் உடலை முச்சொந்தி வைத்து குதிரைப் பாடைக்கு மாற்றி நெல் வைத்துக் கட்டியவள். ஊரில் யாருமே செய்ய துணியாத அப்புதிய சடங்கை ஆபரணத்தை வைத்துக் கோவில் சாமிகள் நிறைவேற்றின. ஒருவகையில் அதுகூட விதியின் காரியமாக இருக்கலாம் என்று அவளும் அன்று ஒப்புக் கொண்டதுதான் காரணம். அதோடு அன்றைக்கு அடக்கச் சடங்கில் லதா பிரக்ஞையின்றி இருந்ததால் நடந்தது எதுவும் தெரியாது. ஆபரணம் அத்தனையும் சமீபத்தில் நடந்தது மாதிரி விளக்கினாள். எதற்காக விதியாண்டவர் கோவிலில் என்ன காரணத்திற்காக லதா போனாள் என்று ஆபரணம் கேட்காமலேயே அந்த உரையாடல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. “ஏன் அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்னு சொன்ன?” என்று கேட்டாள். அந்த கேள்வி காதில் விழுந்ததும் லதாவுக்கு உடல் பதறியெழுந்தது. இத்தனை வருடங்களாக அந்தச் சொல் தன்னை எந்த உருவத்தில் வந்து கேட்கும் என்று பயந்துபோயிருந்தாள்.
தலையை முழங்கால்களுக்குள் வைத்துக்கொண்டு ‘ஆமாம்’ என்று தலையசைத்தபடி அழுகிறாள். சிவாஜியின் அடக்கம் முடிந்து நாற்பத்தியொன்றாம் நாள் இரவு, லதாவின் கனவில் ஒரு முகம் தெரிந்துள்ளது. அந்த உருவத்தை அவள் அதுவரை எங்கும் பார்த்ததில்லை. அது யாரென்றும் தெரியாது. மூன்று முறை கனவில் அந்த ஆள் வருகிறார். எதற்கு என்று தெரியாமல் லதா பேயைக் கண்டதுமாதிரி திடுக்கிட்டு விழித்து அழுகிறாள். ஆபரணத்திடம் சொல்லும்போதே லதா விசும்புகிறாள். முந்தியால் வாய் பொத்திக்கொள்கிறாள். ஆபரணம் அவளைச் சமாதானப்படுத்தி “எனக்கும் அப்படி யாரென்றே தெரியாத முகம் ஒரே ஒருதடவை கனவில் வந்திருக்கு” என்றதும் லதா திடுக்கிட்டு “எப்போ?” என்றாள். ஆபரணத்திற்குச் சரியாக நினைவில் இல்லை.
சற்று யோசித்தவள் “சிவாஜியை அடக்கம் பண்ணினதுக்கு பிறகுதான்”. என்றாள். “அவரை குதிரைப் பாடைக்கு மாற்றியபோது என் கத்தியின் பதம் பட்டு அவரது பொய் சிகை அவிழ்ந்து நான் பதறிப்போய் தடுமாறினேன். அன்னைக்கு நல்ல மழை வேற. தண்ணீபொத்து பொத்துனு பிணத்தில் விழுந்து முகமே அலங்கோலமாகிடுச்சு” லதா, “அந்த முகம் எப்படி இருந்தது?” என்றாள். அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா?
அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால், அன்னைக்கு ஏதோ நடக்கப் போகிறதாக எனக்கு உறுத்தியது மட்டும் நிஜம் என்று சொன்னதுடன் லதா நடுங்குகிறாள். அநுபந்து இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்புதான் லதா காலையில் எழுந்து எப்போதும் போல அவருக்கு, பல் துலக்குவதற்கும் குளிப்பதற்கும் சேர்த்து வெந்நீர் காய வைத்துவிட்டு சாப்பிட இரண்டு தோசையை வார்த்து முடித்து, அவளுக்குத் தேநீர் போட்டுக் குடித்துக்கொண்டிருந்தாள். லதாவுக்கு அத்தனையும் முடிக்க கால்மணி நேரத்திற்கும் அதிகம் போகாது. வழக்கமானதுதான். ஆனால் அன்றைக்கு ஏனோ ஒவ்வொன்றையும் செய்யத் தவறுவது மாதிரி கைகளின் வேகத்தை மனவோட்டம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது.
“சாமி அறை” லதா என்னிடம் காட்டுகிறாள். நான் உள்ளே எட்டிப் பார்க்கிறேன். கனமான தேக்குக் கதவால் சார்த்தப்பட்ட தாழ்வான நிலைவாசல். “அதுதான் அவர் தூங்கியெழுந்ததும் அலங்காரம் பண்ணிக்கிற அறை. எவ்வளவு நேரமானாலும் அலங்காரம் முடியறவரைக்கும் நான் இப்படி உட்கார்ந்திருப்பேன்.” லதா எனக்கு நேராக இருக்கிற சுவரைக் காட்டுகிறாள். அங்கு முன்பு சாய்விருக்கை இருந்திருக்கவேண்டும் இப்போது இல்லை. நான் கற்பனை செய்துகொள்கிறேன். லதா எழ ஒரு மணி நேரம் முன்னதாக தூக்கம் கலைந்த அநுபந்து தயாராக எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும். அதனால் எந்நேரமும் விட்டுப்போன ஏதாவது ஒன்றைக் கேட்டு அநுபந்திடமிருந்து அழைப்பு வரும் என்று லதா அவரது அறைக்கு வெளியே கிடக்கும் சாய்விருக்கையில் அமர்ந்து கொள்வது வழக்கம். இருபது வருடத்தில் ஒருமுறைகூட அப்படி எதற்குமே அநுபந்து அவளை அழைத்தது இல்லை.
ஒப்பனையை நிறுத்தக்கூடிய எந்தவொரு குறுக்கீடும் அவசரமும் அதுவரை வந்தது கிடையாது. நாற்பது வருடங்களாக அதிகாலைப் பொழுதைத் தனது ஒப்பனை முடியும்வரை காத்திருக்கும் பணியாளாக வெளியே வைத்திருக்கிறார். லதாவுக்கு அந்தச் சில மணி நேரத்தில் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. மௌனமாக ஏதாவது செய்ய வேண்டும். திருமணமான புதிதில் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருப்பாள். கூந்தலைச் சிக்கெடுப்பது, துணி மடிப்பது, இடத்தைவிட்டு நகராத வேலைகளுக்கு அதுவொன்றுதான் வழி. சமீபகாலமாக பழைய புத்தகங்கள் சிலதை வாசித்து நேரத்தைப் போக்குகிறாள். அதிலும் ஆர்வமில்லை வெறும் திருப்புதல் மட்டும். சில சமயம் முதல்நாள் எடுத்ததேகூட வரும். சில பக்கங்கள் போன பிறகு தான் படித்த நினைவு எழும். சளைக்காமல் திரும்பவும் படிப்பாள்.
அநுபந்து வெளியே வந்ததற்குப் பின் செய்ய அவளுக்கு நிறைய வேலை காத்திருக்கிறது. ஆனால் சில நாட்களாக அவளால் அப்படி எதையும் செய்ய முடியவில்லை. ஏதோ நடக்கப்போவதுமாதிரி பதற்றம். சம்பந்தமில்லாமல் யாரோ வந்து காத்திருப்பதுபோல அடிக்கடி வாசலைப் பார்க்கும் உணர்வு துரத்துகிறது. அவர்கள் இருவரைத் தவிர அதிகாலையில் யாரும் வீட்டிற்கு வரப்போவதில்லை. அதோடு அநுபந்து ஒப்பனையை முடிக்காமல் யாரையும் பார்க்கமாட்டார். அன்றைக்கு இரண்டு பழைய புத்தகங்களைப் புரட்டி முடித்து, அலமாரியைத் தூசி தட்டி அடுக்கியும் வைத்துவிட்டாள் அநுபந்து இன்னும் வரவில்லை. வானம் துலக்கமாக இன்னும் நேரம் இருக்கிறது. சாமி அறையைத் தாண்டி வாசல் கதவு வரைக்கும் இரண்டு முறை நடக்கிறாள். உள்ளே அநுபந்து இருக்கிற சத்தமே இல்லை. திரும்பி புத்தக அலமாரி அருகே போவதற்குள் அநுபந்திடமிருந்து குரல் வந்தது. முதலில் அது ஏதோ விசித்திரமான சப்தம் என்று கவனிக்காதவள் பிறகு தன்னை யாரோ அழைக்கிறார்களோ என்று அடிக்கடி வெளியே பார்க்கிற பழக்கத்தால், முதலில் வாசலைத்தான் பார்த்தாள்.
பிறகுதான் அது சாமி அறையிலிருந்து வருவது தெரிகிறது. பெரிய ஏப்பம் மாதிரி. அழைப்பு இல்லை ஒருவிதமான கேவல் ஒலி. லதாவுக்கு கதவு தாழிடப்பட்டிருக்குமா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றாமல் தள்ளினாள். திறந்தபோது அநுபந்தம் தரையில் சரிந்திருக்கிறார். நிச்சயமாகக் கதவைத் திறந்த அதே சமயத்தில்தான் அவரைச் சாய்த்த விதியும் வெளியேறியிருக்கவேண்டும். யாரோ தன்னைத் தள்ளிவிட்டு ஓடுகிறார்கள் என்பதுபோல யாரையோ தேடுகிறாள். சரிந்திருக்கும் அநுபந்தின் நிலை இயல்பான தடுமாற்றம் கிடையாது என்பதால் அங்கு ஊகிக்க முடியாத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதென்பதும் தெரிந்துவிட்டது. சப்தமே எழாமல் தலையைப் பிடித்தபடி “அம்மா” என்று சரிந்தாள். அநுபந்து நாற்காலியில் உட்கார்ந்தவாறே விழுந்திருக்கிறார். கால்கள் இன்னும் இருக்கையில் தொங்குவதுபோல மேலே உயர்ந்திருக்கிறது, தோள்கள் நிலத்தில் ஊன்றி, சரியாக தலை மட்டும் மேசையின் வெளிச்சத்திற்குள் வராமல் அடியில் போய்விட்டு இருந்தது.
ஒப்பனைப் பொருட்கள் தரையில் சிதறிக்கிடக்கின்றன. யாருடனோ சண்டை நடந்ததுமாதிரி இருக்கிறது அந்த இடம். அநுபந்தைப் பார்க்க அவளுக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு அது. அந்த நொடியில் அடுத்தடுத்து நடப்பதைக் கிரகிக்கத் தெரியவில்லை. அதோடு அவளுமே துவண்டுபோய் நின்று கொண்டிருக்கிறாள். என்னசெய்வதென்று விளங்காமல். சரிந்திருக்கும் உடலைத் தூக்குவதா அல்லது யாரையும் கூப்பிடுவதா என்று முடிவெடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப்போய் சம்பந்தமில்லாமல் மேசையில் சிரிக்கும் சிவாஜிகணேசனின் வெவ்வேறு விதமானப் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கைக்கு எட்டும் தூரத்தில்தான் அநுபந்தின் உடல். கால்விரல்கள் மேல்நோக்கிக் காற்றில் எதையோ பிடித்திருப்பதுபோல முறிந்துள்ளன. எந்த அசைவும் இல்லை. உயிர் இருப்பதற்கான கடைசித் தடயமும் போயிற்று.
அவளுக்கு விக்கித்துவிட்டது. கையை நீட்டித் தொட முடியும், இப்போது அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அநுபந்தின் முகத்தைப் பார்க்க முடியும். ஆனால் எதையும் செய்விக்காதபடிக்கு அவளுடைய காலம் அப்படியே சுழியத்தில் நிற்கிறது. சற்றைக்கெல்லாம் யாரோ வருகிறார்கள் சரிந்த உடலை நிமிர்த்துகிறார்கள். அவளது தோள்களைப் பற்றி அழுகிறார்கள். அவ்வளவு நேரம் தேங்கிக்கொண்டிருந்த அதிகாலையின் இருளெச்சம் சட்டென உருகிக் காணாமல் போகிறது. பளீரென நுழையும் வெளிச்சத்தை அந்த அறைக்குள் லதா என்றைக்கும் பார்த்ததில்லை. ஒப்பனை விளக்குகளைத் தவிர சாளரத்தில் நுழையும் வெளிச்சத்தை அநுபந்து விரும்புவது கிடையாது.
ஒப்பனை விளக்குகள் அணைக்கப்பட்டன. அநுபந்தை சிவாஜி என்றுதான் அவளுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஊரில் யாருக்கும் சிவாஜியின் உண்மையான பெயர்கூட தெரியாது. சிவாஜி என்றால் சிவாஜிகணேசனை அச்சுவார்த்தது போல் இருப்பார். நகத்தைக் கடிப்பது, மோவாயைத் தூக்கி மடக்கிய விரல்களில் வைப்பது, விடாமல் புகைப்பது, உதட்டை அடிக்கடி உருட்டுவது எல்லாம் சிவாஜியைக் கண்முன் விலகாமல் வைத்திருக்கும்.
லதா சிறுவயதில் கோவில் விழாக்களில் சிவாஜி கணேசனைப் பார்த்ததுண்டு. அவளுக்குப் பிடித்தமான நடிகர் இல்லையென்றாலும் சிவாஜியை நேரில் பார்க்கும் மனமயக்கத்தை அநுபந்து ஏற்படுத்திவிடுவார். அப்போது பார்த்ததுகூட அநுபந்தையா என்று திருமணமான புதிதில் தோன்றியிருக்கிறது. ஏனென்றால் அநுபந்தை அவள் சிவாஜியாகப் பார்த்ததிலிருந்து இப்போதுவரை அவருக்கு வயது அப்படியேதான் இருக்கிறது. வெயில் ஏறுவதற்குள் அரிமளம் முழுக்க சிவாஜியின் சாவுச்செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது. ஊர்க்காரர்கள் ஒவ்வொருவராக பெரிய பெரிய மாலையுடன் வந்துகொண்டிருந்தனர்.
பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு வந்தார்கள். அவர்களெல்லாருமே லதாவைவிட வயது அதிகம். இத்தனை வருடத்தில் அவர்கள் யாரையும் லதா பார்த்தது இல்லை. அநுபந்தின் உடல் இன்னும் முற்றத்தில் வைக்கப்படவில்லை. வந்தவர்கள் உடல் இல்லாததால் லதாவைக் கட்டிக்கொண்டு அழுதனர். ஒரே நேரத்தில் அத்தனை உடல்களின் தழுவலையும் ஓலத்தையும் அவள் முதன்முறையாக எதிர்கொண்டாள். லதாவுக்கு அப்போதுதான் அங்கு என்ன நடக்கிறதென்பதே புரிகிறது. அறைக்குள் நின்றுபோயிருந்த காலம் மறுபடியும் சுழல ஆரம்பிக்கிறது.
அந்த இடம் மெல்ல மெல்ல புழுக்கத்தால் நிறைவதை உணர்ந்தாள். வியர்வை வீச்சம் குமைகிறது. அவள் மெல்ல விசும்பினாள். என்னவென்றே தெரியாமல் மனம் எடையிழக்கிறது. எடை இழக்க இழக்க ஆசுவாசமாகிறது. அழுவதற்கு இழப்பு மட்டுமே நிச்சயம் காரணமாக இருக்காது. அவளுக்கு அந்தக் கணத்தில் அழவேண்டும் அவ்வளவுதான் என்று தோன்றிற்று. ஓயாத பேச்சுகளும் ஒப்பாரிகளும் எழுவதும் அடங்குவதுமாக இருந்தது. அநுபந்தின் உடலைக்கொண்டு வருவதைத் தள்ளி போடுகின்றனர். வந்ததும் உடலுக்கு அணிவிக்க முதல் மாலையுடன் பழைய மன்னர் குடும்ப வாரிசும் கட்சித்தலைவர்களும் காத்திருக்கிறார்கள். இதில் யாரை முதலில் அனுமதித்தாலும் பிறிதொருவருக்கு அவமதிப்பு நிச்சயம்.
ஆனால் சிவாஜி இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அவர் கடைசியாகப் பங்கேற்ற கட்சிக்கூட்டத்தில் “எனது இறுதி அஞ்சலியை முதலில் சபாக்காரர்கள்தான் செய்யனும்” எனச் சொல்லியதாக நாடக சபா ஆட்கள் அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அறிவித்தார்கள். சபாக்காரர்களின் அழுத்தமான குரல் பெண்களின் பெரும் ஓலத்தையும் நிறுத்திற்று. அநுபந்திற்கு இவ்வளவு அழுத்தமான குரல் வளம் இல்லை. சிவாஜியிடமிருந்து அவருக்குக் கிடைக்காதது இது ஒன்றுதானென நாடகக்காரர்கள் எப்போதாவது விசனப்படுவது உண்டு. லதாவிடம் சில சமயம் உரிமையாக, ஏதாவது சுக்கு மிளகை போட்டுக் கொடுக்கக்கூடாதா என்பார்கள்.
லதா அவரது ஒப்பனை விசயங்களில் தலையிடும் அளவிற்கு அதன் எல்லைக்குள் நுழைந்தது இல்லை. சிவாஜியின் ஒவ்வொரு அசைவும் பாவனையும் அது எங்கிருந்து எப்படித் தொடங்கவேண்டும் என்று அநுபந்திற்கு நன்றாகத் தெரியும். அந்த எல்லையில் யாரை, எப்படி, எப்போது அனுமதிப்பது என்கிற சூட்சமத்தை அவர்தான் வைத்திருந்தார். அப்படியொரு எல்லை இருப்பதே அவளுக்குத் திருமணமான புதிதில் தெரியாது. அம்மா இறந்தபிறகு லதாவிற்கு ஒரு துணையை ஏற்படுத்த சுசிலாவிற்கு ஏற்பட்ட அவசரத்தில் நிகழ்ந்தது சிவாஜியுடனான திருமண துவந்தம். சிவாஜியைக் கல்யாணம் பண்ணப் போகிறதாக ஊருக்குள் செய்தி பரவியபோது உண்மையில் லதா அதைத் தட்டிக்கழிக்க வேறு வழி தெரியாமல் இருந்தாள். அநுபந்தை சிவாஜியாக முதன்முதலில் கோவில் விழாக்களில் பார்த்திருக்கிறாள். அதன்பிறகு அவள் அம்மாவுடன் சபா அலுவலகத்தில்.
“அநுபந்து எப்போதும் சிவாஜியாகத்தான் வருவார். ஒப்பனையை எப்போது எங்கு செய்துகொள்கிறாரென அவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சிவப்பு நிற கோட் சட்டையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் உரைமாவு பொங்கியதுபோன்ற முகப்பௌடருடன் (வசந்த மாளிகை) சிவாஜியைப் போல அழகாக நடந்து வருவார். வயது இவ்வளவு என்று யாரும் உறுதியாகச் சொல்ல முடியாது.” லதாவின் அம்மா இறக்கிறபோது லதாவுக்கு இருபத்தி மூன்று வயது. விதி தனக்கு இப்படியொரு திருமணத்தை முடிச்சிடும் என்று நினைத்து பார்க்கவில்லை.
லதாவின் அம்மாவுக்கு நாடக சபாவில் சிவாஜிதான் வேலை வாங்கிக் கொடுத்து, கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் நின்றபோது உதவியிருக்கிறார். அப்படி நிறைய பெண்களுக்கு சிவாஜி உதவி இருக்கிறார். அவர்களுடன் சிவாஜிக்குத் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் ஒரு செய்தியும் உண்டு. வீட்டின் வாசலிலும் திண்ணையிலும் கட்சிக்காரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
பெண்கள் அத்தனை பேரும் வீட்டின் வரவேற்பறையாக இருக்கும் தாழ்வான ஓடு வேய்ந்த இடத்தில் வழி விட்டு இருபுறமுமாக அமர்ந்திருக்கிறார்கள். ஒரு சில விசும்பல்கள் மட்டும்தான் அதுவும் புதியவர்களின் வருகையைப் பொறுத்து. அதன்பிறகு முணுமுணுப்பு மட்டும் கேட்கிறது. லதா தாழ்வாரத்தின் இடது பகுதியின் மூலையில் அமர்த்தப்பட்டிருக்கிறாள். அவளுக்கு நேராக சில பெண்கள் நெருங்கி அமர்ந்திருக்கிறாள். லதா அங்கிருந்த அத்தனை பெண்களையும் கவனித்தாள். அவளுடைய அம்மா வயது இருக்கலாம். சிவாஜியின் உடல் இன்னும் வராததால் இப்போது யாருமே அழவில்லை. ஒருவருக்கொருவர் எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்து சலித்துப் போயிருக்கவேண்டும்.
அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன, யாரோ ஒரு பெண் மீன் ஆய்ந்ததோடு வந்திருக்கிறாள். ஒரு இறப்பு அவர்களது அன்றாடத்தைத் துளியும் மாற்றிவிடாது. அடிக்கடி முகத்தை முந்தியால் துடைத்துக்கொள்வதும் பிறகு அதால் வாயை மறைத்து காதுக்குள் விழும்படியான சொற்களை லாவகமாகக் கொடுப்பதுமாக பாவனைகளை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள். லதாவுக்கு அந்தக் கதைகளெல்லாம் தன்னைப் பற்றியதுதானா என்று எண்ணத் தோன்றிற்று. ஆனால் அவர்களுக்குப் பேச அங்கு நிறைய கதைகள் இருக்கின்றன. சீக்கிரமே தங்களுடைய வீட்டில் கிடக்கும் வேலைகளுக்குத் திரும்பவேண்டும்.
கிடைக்கிற சிறிய ஆசுவாசத்தில் பேசிக்கொள்ள நிறைய இருந்தும் கதைகளை விவரிக்காமல் அதன் மையத்தைப் போட்டு உடைத்து விடுவதுதான் சரியான கதைசொல்லல். அதாவது, கதை தொடங்கியதும் அடுத்து அதன் மைய இழைக்குப் போய்விடுகிறது. ஆமாம் அப்படித்தான் லதாவின் கதையைக் கூறுகிறார்கள். சிவாஜியை விராலிமலை முருகன் கோவிலில் மாப்பிள்ளைக் கோலத்தில் பார்த்தபோது லதாவுக்கு ஒருகணம் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு பதற்றத்துடன் அங்கு நடக்கும் விபரீதத்தை என்ன செய்வதென்று புரியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு கவிந்து கொண்டாள். அநுபந்து சிவாஜி ஒப்பனையில் பட்டு வேட்டி சட்டையில் உதட்டை முறுக்கியபடி வந்தார்.
சபாக்காரர்கள் அவரை பாரதவிலாஸ் சிவாஜி என்று சத்தமாக வரவேற்றனர். என்னைக்கும்விட அன்றைக்குத்தான் சிவாஜிக்கே உரிய வெட்கத்தைச் சரியாக உதிர்க்கிறாரென உச்சிமுகந்ததும் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். வந்தவர்களை ஒவ்வொருவராக விசாரித்து தனது ஒப்பனையைப் பற்றி என்னவெல்லாம் விதந்தோதுகிறார்களெனச் சளைக்காமல் வாங்கினார். அதில் அவருக்கு ஒருபோதும் அவசரம் இருக்காது. பொறுமையாகப் புன்னகைத்தபடி சொல்பவர்களது தோளில் கை வைத்துக் கேட்கும் தோரணை அவர்களை நிறுத்தவிடாமல் பண்ணும். தாலிகட்டுவது கோவிலில் தேங்காய் உடைப்பது மாதிரி சட்டென முடிந்துவிட்டது. லதாவின் முகத்தை வாஞ்சையுடன் பிடித்து அத்தனைபேர் முன்னிலையில் நெற்றியில் முத்தமிட்டு மார்பில் சரித்துக்கொண்டதை அவளும் ரசிக்கும்படி ஆகிற்று.
சிவாஜி லதாவிடம் அன்பாகத்தான் இருந்தார். இன்றைக்கு நேற்று இல்லை இருபது வருடங்களாக அவர் லதாவை கொஞ்சியபடிதான் டீ போடச் சொல்லுவார். வாசல் தெளிக்கக் காத்திருப்பார், தோசை வார்க்க அடம்பிடிப்பார், புடவைக் கட்ட விடமாட்டார், வாத்து போன்ற இவளது நடையைக் கேலி பண்ணுவார், இடுப்பில் கை ஊன்றி மோவாயில் விரல் வைத்து ரசிப்பார், அடிபட்ட இடத்தில் மருந்து தேய்ப்பதென்றால் போதும் பொம்மைமாதிரி வந்துவிடுவார், இது பரவாயில்லை நடனம் ஆடும்போது நாக்கைக் கடித்தபடி குழந்தை பொய் சொல்வதுமாதிரி நெளிவார். ஆரம்பத்தில் இதெல்லாம் அவளைப் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. கலையில் சுத்த சிருஷ்டி கொண்ட கலைஞர்களுக்குரிய மனநிலை இது.
அவர்கள் தங்களை ஒவ்வொரு கணத்திலும் அப்படித்தான் உணர முடியும் என்று விட்டுவிட்டாள். ஒருநாள்கூட சிவாஜி ஒப்பனையின்றி லதா அவரைப் பார்த்தது இல்லை. பெரும்பாலும் நாடகங்களும் விழாக்களும் இரவில் நடந்து பகலில் முடிவதால், விடிந்து வெயில் ஏறிய பிறகுதான் வீடு திரும்புவார். வந்ததும் அறைக்குள் போய் ஓய்வெடுப்பார். பிறகு நண்பர்களைச் சந்திக்க நாடக சபாவுக்கும் மன்னரின் பழைய அரண்மனைக்கும் கட்சி அலுவலகத்திற்குமென தவிர்க்கமுடியாத அழைப்பு வந்துவிடும். அதனால் அநுபந்து எப்போதும் சிவாஜியின் ஒப்பனையில்தான் இருக்கிறாரென்று லதா நினைத்துக்கொண்டிருந்தாள்.
வீட்டிலும் அநுபந்துவின் பழைய புகைப்படங்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் வீடு முழுக்க அவருடன் நிற்கின்ற முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள் தொங்குகின்றன. அனைத்திலும் சிவாஜியின் கம்பீரத் தோற்றம்தான் இருக்கிறது. லதாவால் அநுபந்து எப்படி இருப்பாரென்று கற்பனை செய்ய முடியவில்லை. சாய்வு நாற்காலியில் அமர்ந்து நண்பர்களுடன் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது லதா அவரது குரல் ஒலியை கண்களை மூடி கேட்பாள். அது மட்டும்தான் அநுபந்துவினுடையது. அதில் கார்வை இருக்காது, கனமான சொற்கள் எழாது, ஆழமான உச்சரிப்பு வராது. மென்மையானது பெண்களுக்குரிய சன்னமான குரல். சிரிப்பில் சலசலப்பு கேட்கும்.
அடக்க முடியாத சிரிப்பில், சப்தம் வழுக்கி வாத்திய ஒலியைப் போல் எழும். அந்தக் குரலை மறைக்க அநுபந்து படாது பாடுபடுவார். அவரை மறந்து உரையாடலில் லயித்திருக்கும்போதுதான் அது வெளுத்து வெளியே தெரியும். அடக்கம் செய்வதற்கான எல்லாக் காரியங்களும் நடந்துகொண்டிருந்தன. சிவாஜியை உட்கார்த்தித் தூக்கிப்போக ராஜ நாற்காலி ஒன்றும் அதை வைக்க ரதம் ஒன்றும் அலங்கரிக்கப்பட்டு வந்தது. பெண்கள் சிலர் ஒப்பனைகளில் வந்திருந்தார்கள். காலையில் பார்த்த முகங்கள் இல்லை.
இவர்கள் புதியவர்கள். வெவ்வேறு ஊர்களிலுள்ள நாடகக்காரர்கள். பட்டுப்புடவையும் பெரிய பூ செருகிய கொண்டைத்தலையும் அத்தர் மணக்க அமர்ந்திருக்கிறார்கள். கண்ணீர் வராமல் அழுவதும் முகத்தைத் துடைத்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களது பெயரைச் சொல்லி சிவாஜியை அழைக்கிறார்கள். சரோஜாதேவி அருகிலிருந்த விஜயாவைக் காட்டுகிறாள், பத்மினி அவரிடம் சுஜாதாவை அழைத்து வருகிறாள், வாணிஸ்ரீ அழுவதை அங்கிருந்த யாருமே விரும்பவில்லை அவ்வளவு அழகான முகம். வாணிஸ்ரீ மட்டும் லதாவின் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டாள். அவளுடைய கர்ப்பப்பை சிகிச்சைக்குக் கொடுத்தப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லையென்று ஆதங்கப்பட்டாள்.
இந்த நடிகைகளைப் பார்ப்பதற்கென்றே சாவுவீட்டில் கூட்டம் அதிகம். பெரிய பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆசிரியர்கள் அத்தனைபேரும் இங்குதான் இருந்தார்கள். வெவ்வேறு ஊர்களிலிருந்து நாடகக்காரர்கள் வேனில் வந்து இறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எல்லோருமே ஏதவாது ஒரு வேஷத்தில். ரஜினி வந்தார், சப்பாணி கமல் வந்தார், நிறைய எம்ஜிஆர்கள் வந்தனர். எனக்கு வேடிக்கையில் பெரிய ஆர்வம் இல்லை. லதாவின் பக்கத்தில் போய் நிற்பதைத்தான் விரும்பினேன். சிவாஜியின் வீடும் எங்கள் வீடும் நேர் வாசல். சிவாஜி வீட்டுக்கு எதிர் வீடு என்பதுதான் எங்களின் அடையாளம். லதாவிற்கு திருமணமானது எனக்கு நினைவிலில்லை. நான் சின்னக் குழந்தை. லதாவின் வீட்டில்தான் எப்போதும் இருந்திருக்கிறேன். விவரம் அறிந்து லதாவைப் பார்க்கிறபோது அவள் சின்னப்பெண் மாதிரிதான் தெரிந்தாள். மாடிப்படியில் அமர்ந்து லதா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அழகான முகம். யாருமில்லாத தனிமை என்னவென்று அந்த முகம் எனக்குக் காட்டியது. லதா எந்நேரமும் அழுகிறாள்.
நல்ல மதிய வெயிலில்கூட மாடிப்படியில் அமர்ந்து அழுவாள். தாம்பத்தியக் கோளாறு என்று அம்மா பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சிவாஜிக்கு நூறு வயதுகூட இருக்கலாம். உடம்பு இரண்டு ஆளை முறுக்கி வைத்ததுமாதிரி. எப்போது அவர் சிவாஜி வேஷம் போட ஆரம்பித்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜிக்காக முகச் சிகிச்சை செய்துகொண்டது ஊருக்கே தெரியும். சிவாஜிக்குக் கல்யாணம் ஆகி ஐந்தாறு வருடங்கள் இருக்கும். ஒருநாள் திடீரென்று அவர் வீட்டில் பெருங்கூட்டம் கூடியது. நல்ல வெயில் காலம் அது. எல்லோரும் மொட்டை மாடியில்தான் படுப்போம். கருணாநிதியைக் கைது செய்து ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஆகியிருந்தது. திருவிழாவோ பொதுக்கூட்டக் கொண்டாட்டங்களோ நடக்காமல் இருந்த சமயம். சிவாஜிகணேசன் இறந்த செய்தி வருகிறபோது நாடக சபாக்காரர்கள் நூறு பேர் லதா வீட்டில் இருந்தனர். இரவு நேரம் சிவாஜி மாடியில் படுத்திருக்கிறார். எப்படி இதைச் சொல்வதென்று புரியாமல் மெல்லத் தயங்கியபடி தெருவிளக்கில் நிற்கிறார்கள்.
காரணம் சிவாஜி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்று சிவாஜி பலமுறை தெரிவித்திருக்கிறார். வந்தவர்கள் ‘சிவாஜி’ என்கிற பெயரை மட்டும் சொல்லி சூழலை ஆயத்தமாக்கியதும் சிவாஜி அதைப்புரிந்துகொண்டார். அவர்கள் பயந்தது போல அசம்பாவிதமாக ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் சிவாஜி நிலைகுலைந்துதான் போனார். அடுத்த சில மணி நேரத்தில் சபாக்காரர்கள் ஒன்றுகூடி சென்னை செல்வதற்குத் தயாரானார்கள். வாழ்க்கையில் அப்படியொரு இரவை தான் அனுபவித்ததே இல்லையென்று லதாவிடம் அடிக்கடி சிவாஜி புலம்பியதாகச் சொல்வார். இரவு முழுக்க மனம் சிவாஜியின் பாடல்களை பாடிக்கொண்டே இருக்க, ஒப்பனை இல்லாமலேயே தான் சிவாஜியாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்.
“காலையில் இறங்கியதும் சபாக்காரர்கள் வற்புறுத்தித்தான் அன்றைக்கு சிவாஜி ஒப்பனையைச் செய்துகொண்டேன். செய்யக்கூடாது என்று இல்லை ஆனால் எனக்கு அப்போது அது ஏனோ தேவைப்படவே இல்லை” நாள் பூராவும் காத்திருந்து இறுதி மரியாதை செலுத்த கும்பலோடு கும்பலாக ஜனநெருக்கடிக்குள் சிவாஜிகணேசனை முதன் முறையாக அன்றைக்குப் பார்க்கிறார். அவரோடு அப்படி நின்று பார்த்தவர்கள் சிவாஜியின் ஒப்பனையோடு நூறு பேர். திரும்பும் இடமெல்லாம் சிவாஜி முகங்கள். அத்தனை சிவாஜிகளும் அழுகிறார்கள். அநுபந்துக்குத் துடைக்கத் துடைக்கக் கண்ணீர் பெருகிறது. அவரால் அங்கு நிற்கமுடியவில்லை. தலைக்கேறிய போதையாய் சமன் சரிகிறது. பெட்டியில் இருக்கும் சிவாஜியின் முகத்தை இத்தனை முகங்களிலிருந்து துலக்கி எடுத்துக்கொள்ளமுடியாமல் தடுமாறி சரிந்துவிட்டார்.
விழித்தபோது ஒரு நிழற்தாங்கலில் அமர்த்தப்பட்டிருந்தார். அவரைச் சுற்றி நிறைய சிவாஜிக்கள். கூட்டத்தில் தொலைந்தவரை அவர்கள்தான் இரவு தங்க வைத்து காலையில் அவர்களுடனே அரிமளம் வரை அழைத்து வந்தார்கள்.
அன்றைய இரவு பிரயாணத்தில் சிவாஜிக்களுடன் சேர்ந்து அநுபந்துவும் இனி சிவாஜியாகவே இருப்பதென்கிற முடிவிற்கு ஒப்புக்கொண்டார். அவர்களால் சிவாஜியாக இருக்க முடிந்ததா என்று தெரியவில்லை. ஆனால் இவர் அதற்கான அத்தனை பிரயத்தனங்களையும் ஆரம்பித்தார். தாடி வைத்து மறைத்த சிறிய மோவாயை சிகிச்சை செய்து சரியாக்கினார் (தோற்றத்தில் சிவாஜியிடமிருந்து கிடைக்காதது அது ஒன்றுதான்).
புருவம் தடிப்பாக மாறும்படி சிரைத்துக் கொள்வதும் நிரந்தரமாக தலையில் விக் வைப்பதுமாக எப்போதும் சிவாஜியாகவே மாறத் தொடங்கிய சமயம்தான் லதா விதியாண்டவரைத் தேடிக் கிளம்பினாள். நேரம் ஆக ஆக சாவு வீட்டில் திருவிழாபோல சிவாஜியைப் பார்ப்பதற்கென்று கூட்டம் கூடிற்று. சிவாஜிக்கு வாரிசு இல்லை அதோடு லதாவின் உறவு வழியில் யாரும் கொல்லி வைக்க முடியாது. அதனால் சிவாஜியின் உறவுக்காரரில் ஒருவர்தான் செய்ய முடியும்.
லதாவுக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் சிவாஜி தன்னுடைய உறவுக்காரர்கள் என்று யார் வீட்டிற்கும் போனதில்லை. ஆனால் அவருக்குப் பெரியப்பா ஒருவர் இருந்தார். இறப்புக்கு சிவாஜி சென்றிருக்கிறார். பெரியப்பா வீட்டிலிருந்து யாரும் வந்திருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். பெரியப்பாவின் மகன் இறந்துவிட்டான் அவரது பையன் ஒருவர் வந்திருந்தார். சிவாஜிக்கு மகன் முறை. அதாவது, லதாவுக்கும் சிவாஜிக்கும் பிறவா மகன். கொள்ளி சடங்குகளை அவரிடம் ஒப்படைத்தனர். லதா அன்றுதான் அப்படியொரு உறவைக் கேள்விப்படுகிறாள். தலை நரைத்து ஒல்லியாக வேட்டியும் அழுக்குச் சட்டையுமாக இருந்தார்.
அவளைவிட ஐந்து வயது அதிகம் இருக்கும். கடமைக்கு வந்து போய்விடலாம் என்று வந்தவரை திடுதிப்பென்று உருவான உறவு முறையில் நிற்க வைத்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் முடியாது என்று மறுத்தார். ஊர்க்காரர்களும் கட்சிக்காரர்களும் சம்மதிக்க வைத்தனர். அதிலும் அம்மா முறையில் சில சடங்குகளை லதாவுக்குச் செய்யவேண்டியிருந்தது. இதையெல்லாம் பார்த்து லதா தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்த்தேன். ஆரம்பத்தில் சிவாஜிமேல் லதாவுக்கு அப்படியொன்றும் வெறுப்பு இல்லை. நானே பலமுறை அவர்கள் இருவரையும் காரில் ஒன்றாகப் போகிறபோது பார்த்திருக்கிறேன்.
சிவாஜியை மணந்ததில் லதாவுக்குச் சம்மதம் இல்லை என்பது மட்டும் ஊருக்கே நன்றாகத் தெரியும். “தினமும் சிவாஜி ஒப்பனையோடுதான் இருப்பார். அதைக் கலைப்பதற்கே அவருக்கு விருப்பம் இருக்காது. எந்நேரமும் வீட்டிலிருக்கும் கண்ணாடி முன் நிற்பார். வீட்டில் எல்லா அறைகளிலும் நான்கு திசைகளிலும் ஆளுயரக் கண்ணாடி உண்டு. அவருக்குப் பரிசளிப்பவர்கள்கூட நல்ல தரமான கண்ணாடி இருக்கிறது தரட்டுமா என்றுதான் கேட்பார்கள். அது மட்டுமில்லாமல் ரெண்டு வருஷம் போனால் அவரே ஒவ்வொரு கண்ணாடியையும் மாற்ற ஆரம்பித்து விடுவார். ரசம் போகாத கண்ணாடிகூட வெளுத்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியும். விழுகிற பிம்பத்தை நான்கு பக்கமும் விளக்கைப் போட்டு உற்று பார்ப்பார். கண்ணுக்குத் தெரியாத எந்தக் கீறல் வழியாக வெளிச்சம் ஊடுறுவியது, எந்த இடம் மங்கலாக மாறியது என்று அவரைத் தவிர யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
உடனே அந்தக் கண்ணாடியை மாற்றிடுவார். அவரைச் சுற்றி கண்ணாடிகள் இருக்கனும். எந்த பிம்பமும் அவரை சோபையாகக் காட்டிடக்கூடாது. அவர் நிற்கிற இடத்திலிருந்து அவரைச் சுற்றி எந்தப் பிம்பம் அசையுதுனு நல்லா தெரியும். இறுக்கி அணைக்கிறப்ப ஹால் மூலையில் சாய்வாக இருக்கிற கண்ணாடியில் எப்படி விழுகிது பார்” என்பார். லதாவுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். இதை ஒரு விளையாட்டு போல அவர் அவளிடம் துல்லியமாகச் சொல்கிறார். லதாவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வீட்டினுள் அவர்கள் இருவர் மட்டும் இருக்கையில் பிம்பங்களின் அசைவு சுற்றி நின்று சிலர் பார்ப்பதுபோல அசௌகரியத்தை உண்டு பண்ணும்.
சில சமயம் லதா தனிமையில இருக்கிறபோது திடுக்கிட்டு போயிருக்கிறாள். தலையணையில் படுத்த படி புத்தகங்களைப் புரட்டுகிறபோது வெளியே யாரோ வருகிற சத்தம் கேட்டுத் திரும்புவதற்குள் எந்தக் கண்ணாடியிலாவது பார்வை மோதி அவள் உருவம் நிலைகுலையச் செய்துவிடும். சிவாஜியிடம் இதெல்லாம் சொல்ல முடியாது. அவர் கேலியாகச் சிரிக்கிறார். சிவாஜி ஒப்பனையைக் கலைக்காததற்கு கண்ணாடிகளும் ஒரு காரணம். இந்தக் கண்ணாடிகளாலேயே லதாவை அவர் அதிகம் நேசித்தார். கட்டி அணைப்பது முத்தமிடுவது தோளோடு தூக்கிச் சுற்றுவது எனச் சளைக்காமல் செய்வார். சிவாஜிக்கு மதுப் பழக்கம் அறவே இல்லை. ஆனால் எந்நேரமும் மதுவின் போதையில் இருப்பது போல உளறுகிறார்.
அதாவது. எந்த இயல்பான நடத்தையும் அவருக்கு மிதமிஞ்சிய தன்மை கொண்டவை. போதையில் இருப்பவர்கள் கோபத்தைத் தவிர மற்ற உணர்வுகளைச் சமாளிக்க முடியாமல் சரணடைவது மாதிரி. சிவாஜியின் நாடகீய பாவனை எதையும் இயல்பாக நடத்தவிடாது. விதவிதமாகச் சிரிப்பது அழுவது கோபம் கொள்வது. லதாவுக்கு மிகவும் அலுப்பாக இருக்கும். “உங்களால் சாதாரணமாக இருக்க முடியாதா? ஏன் இப்படி எப்போவும் நடிச்சுட்டு இருக்கிங்க” அவளால் பொறுக்க முடியவில்லை. ஒருமுறை வீட்டிலுள்ள அத்தனை கண்ணாடிகளையும் போட்டு உடைத்தபோது சிவாஜி கல்லென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார். அதுவும் ஏதோவொரு சினிமாவில் சிவாஜி அமர்ந்திருக்கும் நிலை. சண்டை போட்டுக்கொண்டு எங்கும் போவதற்கு பாவம் லதாவுக்குப் போக்கிடம் இல்லை. சிவாஜி சமாதானம் செய்கிறார். ஆனால் அவளால் அதை எதிர்கொள்ள முடியாது. இப்படி அடிக்கடி சண்டை நடக்கும். எங்க வீட்டிலிருந்து அம்மா ஓடிப் போய் சமாதானம் செய்யும்போது லதா அறையைவிட்டு வெளியே வர மாட்டாள். சிவாஜி அம்மாவிடம் “கல்யாணமே வேண்டானு நான் இருந்தேன். இதெல்லாம் எனக்குச் சரிபடாதுனு அப்போவே தெரியும். இதனாலதான் நல்ல கலைஞர்கள் திருமண பந்தத்தில் இருக்கிறது இல்லை” என்று அழகாக திருத்தமாகச் சொல்வார். சிவாஜிக்குப் பெண்களுடன் தொடர்பு இருந்தது ஒன்றும் பெரிய ரகசியம் கிடையாது. அது ஊருக்கே தெரியும். ஒரு காலத்தில் சலிக்கச் சலிக்க சல்லாபத்தில் திளைத்திருந்தார். நாடகத்திற்கு போகிற ஊர்களில் எப்படியாவது ஒருத்தி கிடைத்துவிடுவாள்.
ஆனால் யாரையும் சிவாஜி வற்புறுத்தியது இல்லை. அதே சமயம் அவரை மறுத்து யாரும் போனதும் இல்லை. சிவாஜி அதில் கைகாரர். ஒரு கட்டத்தில் நாடகங்கள் நிகழ்வது நின்று போன போது இதெல்லாம் ஓய்ந்தது. தொலைக்காட்சி பாடகர்களால் திருவிழாக்களிலும் இவர்களுக்கு மவுசு குறைகிறது. ஆடல் பாடல் குழுக்களுடன் சேர்ந்து கொண்டு திருவிழாக்களில் சிவாஜி மறுபடியும் தோன்றினார். பழைய சல்லாபத்திற்கு இடம் இல்லை. இது மிகவும் மேல்தட்டு உலகத்தைப் போன்று. சிவாஜிக்கு மேடையில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் பிறகு வீட்டிற்குத் திரும்பிவிடுவார். லதாவுடன் செலவிடுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது. லதாவுக்கு குழந்தைப் பிரியம். சிவாஜி அதைச் சட்டையே செய்யவில்லை. எப்போது ஆரம்பித்தாலும் “நடக்கும் போது நடக்கும்” என்று தட்டிக் கழிப்பது லதாவிற்கு எரிச்சலூட்டும். அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊரில் ஒருத்தரைக் கூட விட்டு வைக்காமல் அவரது வீட்டிற்கு இழுத்து வந்தது. எங்கு பார்த்தாலும் “சிவாஜி செத்துப்போனார்” என்று முக்கத்துக்கு முக்கம் பெண்கள் பேசித் திரிந்தனர்.
அப்படித்தான் ஆபணரத்தையும் எங்கிருந்தோ சாவுச் செய்தி அழைத்து வந்தது. ஆபரணத்துக்குச் சொந்த ஊர் கிடையாது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராக சாணம் பிடிக்கக் கிளம்பிவிடுவாள். ஆபரணத்தை லதாவுக்கு அவ்வளவாக நினைவு இல்லை. ஆனால் ஆபரணத்துக்கு ஊரிலுள்ள அத்தனைபேரும் பரிச்சயம். நேராக சிவாஜியைப் போய் பார்த்து அழுது தீர்த்துவிட்டு பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள். எல்லோருமே நடிகைகளைப் போன்று ஒப்பனையில் இருந்தனர். அவளுக்கு அவர்கள் யாரென்று அடையாளம் தெரியவில்லை. நடிகைகள் யாரும் அழவில்லை. அந்தரங்கக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அதிகமும் சிவாஜியைப் பற்றியவை. சிவாஜியின் உடன் பிறந்தவர்கள் (எத்தனைபேர் என்று அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்), நாடகத்திற்கு நடிக்க வந்தது, சபாக்காரர்களுக்குள் நடந்த சங்கப் பிரச்சினை என நிறைய. ஆபரணமும் அன்றைக்குத்தான் சிவாஜியைப் பற்றி முழுவதும் தெரிந்துகொள்கிறாள். ஒருகட்டத்தில் காதில் விழுந்த ஏதோவொரு செய்தி அவளைத் திடுக்கிட வைத்தது. வலிப்பு வந்தது மாதிரி கால்கள் நடுங்கிவிட்டன. யாரிடம் எப்படிச்சொல்வதென்று புரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
பக்கத்திலிருந்த நடிகை ஒருத்தி (இடம் கொடுத்து அமர வைத்தவள்) இவள் அழுவதைப் பார்த்துக் கேட்டதும் “சிவாஜிய விதியாண்டவர் கோவில் செல்லையன்தான் கொன்னுட்டான்” என்றாள் மெதுவாக. சட்டென்று அந்த இடம் அமைதியாகிற்று. எல்லோருடைய முகமும் கூர்ந்து அவளை நோக்கின. ஆபரணம் பதற்றத்துடன் “விதியாண்டவர் கோயில் குளக்கரையில அனுபந்தம்னு யாரோ ஒரு பொம்பள மூனு முறை சொல்லிட்டு கிளம்பிட்டாள்” என்று பயத்துடன் வாய் பொத்துக்கொண்டு சொன்னாள். அடுத்த கணம் அந்த இடமே வெலவெலத்துப்போனது.
விசயம் சபாக்காரர்களுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் போனது. அவர்கள் அது உண்மைதானா என்று ஆபரணத்தை அழைத்துக் கேட்டனர். ஆபரணம் பதில் சொல்ல முடியாமல் அழுதாள். “யார் என்ன ஏதுனு தெரியல ஆனா சாய்ந்தரம் இருட்டுறப்ப ஒருத்தி அனுபந்தம் பெயர சொல்லிட்டு போனத பார்த்தேன்” என்றாள். ஊர்க்காரர்களின் கணிப்பு நேராக லதாமேல் விழுந்தது. அவர்களது கணிப்பும் தப்பாகவில்லை. லதா சட்டென தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.
விதியாண்டவர் கோவில் குளக்கரையில் அமர்ந்து சிவாஜியின் பெயரை உச்சரித்ததை லதா ஒப்புக்கொண்டாள். அந்திச்சாய்ந்த நேரத்தில் குளக்கரையில் நிற்பவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆபரணம் இன்னொரு படித்துறையில் அமர்ந்து இருக்கிறாள். லதாவுக்கும் சத்தமில்லாமல் எப்படி குளப்படிக்கட்டில் வேண்டுதல் பெயரை உச்சரிப்பதென்று புரியாமல் ‘அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்’ என்று மூன்று முறை சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் எழுந்து போய்விட்டாள்.
அதாவது, கோயில் உள்ளே இருக்கிற செல்லையனிடம் வேண்டிக்கொண்டவர்கள் குளத்தின் கடைசிப் படிக்கு வந்து கோவிலுக்குள் உச்சரித்த பெயரை குளத்துக்குள்ளே மூன்று முறை சன்னமாகச் சொல்லவேண்டும். செல்லையனிடம் வேண்டுதல் சொல்லிவிட்டதை அவனது தாய்க்குத் தெரிவிக்கும்முறை (செல்லையனின் தாய் குளத்துக்குள் இருக்கிறாள்). இந்த சம்பிரதாயமெல்லாம் லதாவுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆபரணம் குளக்கரையில் வைத்துக் கேட்டது அநுபந்தம் என்கிற பெயரைதான்.
அவளுக்கும் இங்கு வந்தபிறகுதான் எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு பெண் எப்படி தன்னுடைய கணவனை அதுவும் ஊரே கொண்டாடும் நடிகரை விதியின் கையில் விட்டுவிட்டு வரலாம்? சாவுச்சடங்குகளும் டிரம் அடிக்கும் சத்தமும் தயாராகிக்கொண்டிருந்த ரத தோரணங்களும் அப்படியே நின்று போனது. நாடக நடிகைகள் அவளை தனிஅறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தனர். என்ன வேண்டுதல் என்று கடைசி வரைக்கும் வாய் திறக்கவில்லை. மன்னரின் வாரிசு எல்லோரையும் அழைத்துப் பேசினார். “விதியாண்டவர் தலையிட்டிருப்பதால் விசயத்தை அமைதியாகத்தான் விசாரிக்க முடியும். அதோடு இதை லதாவின் மீதான குற்றமாகவும் பார்க்க முடியாது” ஆனால் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்தனர். விதியாண்டவரிடம் வைக்கப்பட்ட வேண்டுதல் மூன்றாமவர் செவிக்குப் போவது பெரும்பாவம்.
அப்படி தெரிந்துவிட்டால் அவர்களையும் விதி விரட்ட ஆரம்பிக்கும். அதனால் லதாவிடம் விசாரிப்பதை இத்துடன் நிறுத்துமாறு ஊர் பெரியவர் மீசைக்கார அம்புலி சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் நாடக நடிகைகளிடம் லதா புலம்பிய சில விசயங்கள் வெளியே கசிந்து விட்டன.
அது என்னவென்றால், லதாவுக்கு முதலில் விதியாண்டவர் கோவிலுக்குப்போகும் எண்ணமே கிடையாது. லதாவின் அக்கா சுசிலாதான் அவளை அழைத்துப் போயிருக்கிறாள். சுசிலாவுக்கும் லதா என்ன வேண்டுதல் என்று சொல்லாமல் அவளைப் பார்க்கும்போதெல்லாம் வெறும் அழுகையை மட்டும் காட்டியிருக்கிறாள். சுசிலாவே இதை பலவிதமான ஊகத்தில் எடுத்துக்கொண்டு லதாவுக்கும் சிவாஜிக்குமான வெளிப்படையான பிரச்சினை குழந்தையின்மைதான். ஆனால் அவள் நினைத்ததுமாதிரி சிவாஜிக்கும் லதாவுக்கும் குடும்ப உறவில் பெரிய சிக்கல் ஏதுமில்லை. சம்போகத்தில் சிவாஜி அவளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. லதாவின் ஒத்துழைப்பின்றி ஒரு முறைகூட சிவாஜி அவளைச் சம்போகத்திற்காக வற்புறுத்தினது கிடையாது. குழந்தைமாதிரி அடம்பிடிக்கும் குணத்தை ஊடலில் சிவாஜி வைத்திருந்ததாக லதா சுசிலாவிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள். அது அங்கிருந்த, சிவாஜியின் கொஞ்சல்களில் லயித்துப்போன, பெண்கள் பலருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் சுசிலா ஊகித்தது, சிவாஜிக்கு நாடக சபாவில் இருக்கிற அத்தனை பெண்களிடமும் அந்தரங்க துவந்தம் உண்டு, அதற்கு அவளது அம்மாவே சாட்சிதான், அது இன்னும் அதிகமாகி லதாவைப் பற்றி நினைப்பே இல்லாதளவுக்குப் போயிருக்க வேண்டும். தங்கையின் வாழ்க்கை இப்படி வீணானதே என்று பெண்களின்மீது இருக்கும் மோகத்தை நிறுத்த முடிவு செய்து விதியாண்டவர் கோயிலுக்குப் போகக் கட்டாயப்படுத்தியிருக்கலாம். “யார் சொன்னது?” என்று மீசைக்காரர் கோபமாகக் கேட்டார். “நீங்களே தோராயமா ஒரு முடிவுக்கு வந்துட்டிங்க?” என்றார் மன்னர் வாரிசு. இதைவிட வேறு என்னவாக இருக்கும்?
குழந்தை இல்லாததற்காக யாரும் விதியை மாற்றச் சொல்லி விதியாண்டவர் கோவிலுக்குப் போகமாட்டார்கள். விதியாண்டவரை வாழ்க்கையில் இழுத்துவிடுவது என்பது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை. மனிதர்களால் தீராத காரியம் நிறைய உண்டு. ஆனால் யாராலும் விதியை மாற்றுவது முடியாத ஒன்று. தீராத காரியம் விதி வசம் இருக்கிறதா என்று தெரியாமல் இறங்கவிடக் கூடாது என்று லதாவுக்கும் தெரிந்திருக்கும். விதியாண்டவர் அவ்வளவு சீக்கிரத்தில் லதாவை விட்டுவிடவில்லை. கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியதிலிருந்து லதா எந்நேரமும் செல்லையனின் வருகையை நினைத்து வாசலைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். வீட்டில் ஏதாவது சத்தம் கேட்டால்கூட ஓடிச்சென்று செல்லையன் வந்துவிட்டானா என்று பதறிவிடுகிறாள். செல்லையன் எப்படி வருவான் என்று லதாவுக்குத் தெரியாது. செல்லையன் பற்றிய பல கதைகள் எங்கள் ஊரில் உண்டு.
அதேசமயம் தேவையின்றி செல்லையன் பெயரை யாரும் உச்சரிக்க மாட்டார்கள். எங்களுடைய பால்ய வயதில் செல்லையனும் கிட்டத்தட்ட எங்கள் வயதுக்குரிய பையனாகத்தான் தெரிந்தான். ஆனால் விதியாண்டவர் கோவிலை நினைக்கும்போதே அதன் தோற்றம் அச்சமூட்டும். சிறிய ஒற்றைத் தடம்தான். பெரிய குளம் அதைச்சுற்றி மண் குதிரைகள் நிற்கும். குளத்தையொட்டி பனை மரங்கள் சூழ விதியாண்டவர் கோவில். லதா எப்படி பயமில்லாமல் அங்கு போயிருப்பாள் என்று தெரியிவில்லை. ஆள் நடமாட்டம் இருக்காது. கையில் ஒரு குச்சியுடன் அரைக்கால் சட்டையில் நின்றவாறு செல்லையன் சிலை இருக்கும். விதியாண்டவர் கோவிலில் பெரிய தெய்வம் அய்யனார். அவருக்கு வலதுபுறம் செல்லையன்.
அவனுக்கு இரண்டு பக்கமும் சிறிய மண் குதிரைகள். செல்லையன் குதிரைகளை மேய்க்கிறவனாக இருந்திருக்க வேண்டும். செல்லையன் எப்படி அந்த அய்யனார் கோவிலுக்கு வந்தான் என்கிற கதைக்குத் தொடக்கமே இல்லை. ஆளுக்கொரு கதை சொல்வார்கள். எவ்வளவு சிக்கலான விதியையும் செல்லையன் தீர்த்துவிடுவான் என்கிற சொலவடை உண்டு. சிவாஜியை செல்லையன்தான் கொன்றான் என்பதை ஊர்க்காரர்கள் உறுதியாக நம்பினார்கள். சிவாஜி இறந்துகிடந்த அறைக்குள் யாரோ இருந்தார்கள் என்றும் கதவைத் திறந்த சமயத்தில் தன்னை யாரோ தள்ளிவிட்டுவிட்டுப் போனதுபோல இருந்ததை லதா கூறியதைக் கேட்டு நாங்கள் பயந்துதான் போயிருந்தோம். அந்த பயமே அந்தக் கதையை நம்ப வைத்தது. சிவாஜி நாற்காலியுடன் சாய்ந்தவாறு தரையில் மோதி இறந்து கிடந்தார். செல்லையன் அவரைக் கீழே சாய்த்திருக்கவேண்டும். அவர் செல்லையனுடன் போராடி தோற்றிருக்கலாம். விதியாண்டவர் வேண்டுதல் விசயம் பரவியதில் அன்றைக்கு சிவாஜியின் சாவு ஊர்வலம் நடக்கவில்லை நின்று போனது. “அம்மா உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் சிவாஜியை எனக்குக் கல்யாணம் பண்ணியிருக்காது.” என்று லதா சொல்லும்போது எனக்கு அது என்னவென்று முதலில் விளங்கவில்லை. ஊரில் சிவாஜியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தான் நிறைய பேர் ஆசைப்பட்டதாக என் அம்மா சொல்வது உண்டு. “சிவாஜி எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். அம்மா அவரைப் பற்றி பேசாத நாள் கிடையாது. வெறும் மாசச் சம்பளம் மட்டும் அம்மாவுக்குக் கிடைக்கிற வழிய அவர் செய்யல.
எப்போ பணம் தேவைப்பட்டாலும் சிவாஜி வீட்டுக்குத்தான் எங்களை அனுப்புவார். இதே திண்ணையில்தான் அவர் நாற்காலியில் நாடகக்காரர்களுடன் அமர்ந்திருப்பார். நானும் அக்காவும் வாசலுக்கு வந்து நிற்கிறதைப் பார்த்ததும் வாஞ்சையா எங்களை அழைத்து உள்ளே கூட்டிப்போவார். வீடு முழுக்க இருட்டாத்தான் இருக்கும். தொங்குற ஏதோ ஒரு சட்டையிலிருந்து பணத்தை எடுத்து மடித்துஅக்கா கையில் கொடுப்பார். வெளியே இருக்கிற நாடகக்காரர்கள் எங்ளைப் பார்த்து ஜாடையாக ஏதோ சிவாஜியிடம் பேசுவார்கள். அவரும் சிரித்தபடி அதற்குத் தலையாட்டுவார். அப்பவும் சிவாஜி எப்படி இருந்தார்னு எனக்குச் சரியாக நினைவிலில்லை.
நான் பெரிய மனுஷி ஆனப்போ சிவாஜி எங்க வீட்டுக்கு வந்தார். அப்போவும் நல்லா கம்பீரமாக சினிமால வர மாதிரிதான் இருந்தார். அவர் கொடுத்த மொய்ப்பணம்தான் அன்னைக்கு பெரிய தொகை.” லதாவின் அம்மாவிற்கு சிவாஜி என்றால் பிரியம். அப்பெயரை உச்சரிக்காமல் இருந்ததே இல்லை. சிவாஜி பற்றி ஊருக்குள் பேசும் விசயங்கள் லதாவுக்கும் தெரியும். சுசிலா லதாவிடம் தான் கேள்விப்பட்டதைச் சொன்னாள். சுசிலாவுக்கு அது பெரிய தவறாக ஏதும் பட்டதா என்று தெரியாது. ஆனால் அதன்பிறகு லதா அம்மா புதுப் புடவையும் அலங்காரமும் செய்துகொண்டு கிளம்புவதை லதா ரகசியமாகக் கவனித்தாள்.
சுசிலா ருது எய்தியப் பின் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டுக்குப் போனதோடு இதைப்பற்றி அதிகம் பேச சந்தர்ப்பம் அமையாமல் போனது. எப்போது வீட்டிற்கு சிவாஜி வந்து போவாரென்று இருவருக்குமே தெரியாது. ஆனால் இவர்கள் வீட்டில் சிவாஜியைப் பார்த்ததாக அக்கம் பக்கத்தில் சொல்வார்கள். சுசிலாவும் போனதற்குப் பின் லதா மட்டும்தான் வீட்டில். பள்ளி முடிந்ததும் நேராக வீடு வந்துவிடுவாள். ஒருமுறை வீட்டில் சிவாஜியுடன் அம்மா இருப்பதை லதா நேராகவே பார்த்துவிட்டாள். சிவாஜி தரையில் படுத்திருக்கிறார், அவர் மீது அம்மா படுத்திருக்கிறாள்.
சிவாஜியின் மிகப்பெரிய உடம்பில் அம்மா சின்னப் பூனைக்குட்டி மாதிரி ஆடையில்லாமல் கிடக்கிறாள். பார்த்த அந்தக் கணத்தில் முதலில் அது யாரோ என்று நினைத்துவிட்டாள். ஏனென்றால் அப்படி ஒருத்தி ஆடையின்றி தனது சிவந்த சதைத் திரட்சியுடன் பிரக்ஞையின்றி ஓர் ஆண் உடம்பில் அவ்வளவு வசதியாகப் படுத்திருப்பது (அப்படிப் படுக்க முடியுமா என்று கற்பனை செய்ததில்லை) நிச்சயம் யாரோவாக இருக்கலாம் என்று தோன்றியது. லதா நுழைந்ததும் சில நொடிகள் உறைந்தபடி நிற்கிறாள். அது அம்மாதான் என்றும் அவளுக்கு அவர்கள் இருவரும் சட்டென எழுந்துவிடும்வரை தெரியாது. இவள் வந்து நிற்பதை சிவாஜிதான் பார்க்க முடியும். லதாவின் சிறிய உருவத்தை அவர்மீது படுத்திருக்கும் அம்மா மறைத்திருப்பாள். சிவாஜி பதறியதும் கூந்தல் களைந்து படுத்திருப்பவள் திடுக்கென்று திரும்புகிறாள். பாம்பைக் கண்டது மாதிரி முகத்தில் பதற்றம். சிவாஜி ஒப்பனைகளுடன் ஆடை கசங்காமல் படுத்திருக்கிறார். அந்தக் காட்சி நினைவிலிருந்து மறைய ரொம்ப நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அவளும் அதைப்பற்றி அம்மாவிடம் ஒன்றும் கேட்காமல் விட்டுவிட்டாள். அம்மா நோயில் படுத்தபோது சிவாஜிதான் மருத்துவச் செலவுகளை கவனித்துக்கொண்டார். அம்மா இறந்து நான்கைந்து வருடங்கள் லதா, சுசிலாவோடு அவளது திருமணமான வீட்டில் இருந்தாள். சுசிலாவின் அந்தரங்க அசைவுகள் அவளுக்குக் கலவியின் கற்பனைகளை ஏற்படுத்துகிறபோதும் சிவாஜியும் அம்மாவும் இருந்தக் காட்சியைத் தூண்டிவிடவில்லை. அது மறந்தது மறந்தாகவே இருக்கிறது. கற்பனையில் சிறுக் கீறலைக்கூட அது ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அந்தக் காட்சி சிருங்கார உணர்வைத் தூண்டும் அவசியமற்றதென நழுவியிருக்கலாம்.
அதனால்தான் லதா தாபத்தை அசைபோடும் சமயத்தில் அக்காட்சி எதையும் செய்யாமல்
போய்விட்டது. அக்காட்சிக்கு வேறு குணம் இருந்தது. சுசிலாவுக்கு லதாவை அவளுடனே வைத்துக்கொள்வதில் நிறைய சங்கடம். லதாவுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும். அவளுக்கும் சிவாஜியை விட்டால் யாரையும் தெரியாது. (அவர்தான் சுசிலாவுக்குத் திருமணம் செய்து
வைத்தவர்). அவளுக்கு சிவாஜியை மணம் செய்து வைக்கும் எண்ணம் முதலில் இல்லை. ஆனால் இந்த விசயமாக சிவாஜியைச் சந்திக்க எடுத்த அலைச்சலும் அனுபவங்களும் அந்த முடிவுக்கு வர காரணமாகிற்று. அதே சமயத்தில் சிவாஜியும் கல்யாணம் செய்துகொள்ளும் யோசனைக்கு வந்திருந்தார். ஒருவழியாக சிவாஜியைத் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டு திருமணச் செய்தியை லதாவிடம் சொன்ன அடுத்த கணம் அந்தக் காட்சி திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்துகொண்டது. லதா ஆடிப்
போய்விட்டாள். எங்கிருந்து அது வந்தது? இத்தனை நாள் மறந்துபோனதாக தன்னை நம்ப வைத்திருக்கிறது. சுசிலாவிடம் ஜாடை மாடையாக எப்படியோ
சொல்லிப் பார்த்தாள். சுசிலாவால் ஒன்றும் செய்ய முடியாத இடத்திற்கு விசயம் போய்விட்டது. சிவாஜியைத் திருமணக் கோலத்தில் பார்த்ததிலிருந்தே லதாவுக்கு உள்ளூர நடுக்கம் எடுக்கத் துவங்கிற்று. சிவாஜியிடம் நெருங்குவதைத் தள்ளிப்போட்டாள். சிவாஜிக்கு அப்போது வெளியே நிறைய பழக்கங்கள் கிடைத்ததால் லதாவின் சல்லாபம் அவசியப்படவில்லை. அவளுக்கும் இப்படியே இருந்துவிடுவது சரியென்று தோன்றிற்று. சிவாஜிக்கு இருக்கிற தொடர்புகள் பற்றி அவள் சட்டையே செய்யாமல் இருந்துவிட்டாள். ஒருபக்கம் இது வசதியாகவும் இருந்தது. அந்தக் காட்சி மறுபடி வரவே இல்லை. சம்போகத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. மீறி திறந்தால் அந்தக் காட்சியின் ஸ்தூல வடிவமும் மூடினால் அதன் பிம்பமுமாக அவளை விரட்டுகிறது. அம்மாவை நினைத்துக்கொள்கிறாள். அவளது நிர்வாணம் பயமுறுத்துகிறது. கண்களை மூடி அவளை எப்போதோ பார்த்த ஒரு பெண் தெய்வமாக பிடாரி, தந்துமி எனக் கற்பனை செய்கிறாள். அது அவளைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை. அந்த எண்ணமும் வெகு நேரம் நீடிக்காமல் சரிகிறது. பிறகு வேறொரு உருவம் அதுவும் நிர்வாணமாகக் கிடக்கிறது. மறு படியும் வேறொரு தெய்வம். பிறகு அம்மாவின் இறுதிக் காலத்தின் உருவத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள். அது நழுவாமல் இருக்கவேண்டும். வேறு முகங்கள் தன்னை இன்னும் துரத்தக்கூடியவை. கண்ணீர் முட்டித் தளும்புவதுதான் விரட்டுகிற காட்சிகளைச் சற்றைக்கும் சரியவிடும். சிவாஜி அவளை அணைத்து முயங்குவதில்லை. அவளைக் கலைத்துப் போடுவதுபோல தனது வேகத்தில் காட்டுவதில்லை.
களைந்துவிடும் ஒப்பனைக்காகப் பயப்படுகிறார் (அன்றைக்கு அம்மா உடனும் இப்படித்தான் கலையாமல் படுத்து இருந்தார்). சிகிச்சை நிச்சயம் வீணாகிவிடும். அதோடு இயக்கம் சீக்கிரமே முடிந்துவிடுகிறது. கணநேர தாபம்தான். சிவாஜிடமிருந்து வெளியேற நினைத்தாள். எங்காவது ஓடிவிட பலநாள் முடிவெடுத்துக் களைத்தது உண்டு. சிவாஜி எங்காவது கிளம்பியதும் அந்த அமைதி பெரும் நிம்மதியை அளிக்கும். அதுவரை வைத்திருந்த தயாரிப்புகள் சிவாஜி வெளியே போன அடுத்த நொடியில் இருக்காது. வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளும் மாறி மாறி நகரும் பொழுதும் அவளுக்கு அந்த இருப்பை விட அனுமதிக்கவில்லை. வீட்டைவிட்டுப் போனால் அடுத்து எங்கு என்கிற கேள்வி. லதா அந்தக் காலத்துக்குள் கட்டிப்போடப்பட்டுச் சுற்றிக்கொண்டிருந்தாள். துரத்துகிற காட்சிகளிலிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. குழந்தை பிறந்தால் பிள்ளையின் முகத்தையாவது பார்த்துக்கொண்டிருக்கலாம் ஆனால் திருமணமான நான்கு வருடத்தில் ஒருமுறைகூட கரு தங்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் நடிகர் சிவாஜிகணேசன் இறந்த செய்தி வந்தது. ஒருபக்கம் அநுபந்துக்கு இனி சிவாஜியாக இருக்கும் அபிலாசை குறையும் என்கிற நம்பிக்கை, அதே சமயம் செய்தி கேட்டதும் அநுபந்துக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம்.
இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று நிச்சயம் நடக்கும் என்றுதான் லதா, சிவாஜி சென்னைக்குப் போன பிறகு நினைத்துக் கொண்டிருந்தாள். அன்றைக்கு அபூர்வமாக அவளுக்கு விதியாண்டவரின் ஞாபகம் வந்திருக்கிறது. அது எப்படி? யாரால்? எதற்காக? என்றெல்லாம் தெரியவில்லை. மனம் திக்கென அடைக்கிறது. ஏதோ குற்றத்தைச் செய்யப்போவது போல விரல்கள் நடுங்குகின்றன.
விதியாண்டவரின் கோவிலுக்குள் போனதே இல்லை. செல்லையன் எப்படி இருப்பானென்றே தெரியாது, இருந்தும் கண்களை மூடி கற்பனையாக ஓர் உருவத்தை நினைத்து வேண்டிக்கொள்கிறாள். ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. அநுபந்து சிவாஜியாக மாற ஏற்கெனவே விதி முடிவாகி இருந்தது. சாவு வீட்டில் நேரம் ஆக ஆகக் கூட்டம் அதிகமாகிற்று. துக்கம் விசாரித்து மரியாதை செய்துவிட்டுப் போனவர்கள்கூட விசயத்தைக் கேள்விபட்டுத் திரும்பவும் வந்து விட்டனர். பொழுது சாயத்துவங்கிற்று, இனி அடக்கம் பண்ணமாட்டார்கள்.
அதோடு விதி, செல்லையன் கையால் போயிருப்பதால் ஆத்மாவை இப்படியே துக்கத்தோடு அனுப்பிவிட முடியாது. அதனைச் சமாதானப்படுத்தும் கர்ம பரிகாரத்தைச் செய்து விடையனுப்புவதுதான் சரி. ஆனால் அங்கிருப்பவர்கள் யாருக்கும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அன்றைக்குச் சாவு வீட்டில் லதா அழுவதை அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தேன். ரசிக்க வைக்கும் மூக்கும் நெற்றியும் லதாவுக்கு. இடது விழியின் ஓரத்தில் மிளகு போல ஒரு மச்சம். இன்றைக்குத்தான் அதை அருகில் பார்க்கிறேன். என்னிடம் எதற்காக எல்லா கதைகளையும் சொல்கிறாளென்று புரியவில்லை.
இருபது வருடங்களுக்கு மேல் எங்கள் வீட்டிற்கும் லதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. லதாவுக்கு என்மீது ஈர்ப்பு இருந்திருக்கும் என்று கோமாளித்தனமான ஆசை எனக்கு. அன்று சாவு வீட்டில் ஒரு பெண்ணை நன்றாகப் பார்த்து ரசிப்பதற்காக நான் நின்றுகொண்டிருக்கிறேன். ஒரு பக்கம் அச்சமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது. என்னை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊரில் நடந்த அசம்பாவிதம் அது. வித்தியாசமான நிகழ்வு. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே யாரோ ஒரு நாடக நடிகை தன்னுடைய செருப்பால் லதாவை அடித்துவிட்டாள். லதாவின் மூக்கில் இரத்தம் வழிகிறது ஆண்கள் அவளைப் பிடித்து இழுத்தனர். அப்போதுகூட என்னால் அப்படி அணைப்பதை இயல்பானதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல அவர்களும் இந்தத் தருணத்தை உபயோகிக்கிறார்கள். சிவாஜியின் மகன் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார். லதாவை அவர்தான் அவர்களிடமிருந்து விடுவித்து உள்ளே அழைத்துப் போனார். லதாவுக்குத் தண்ணீர் கொடுத்து முகத்தைக் கழுவச் சொன்னார். பல் ஒன்று விழுந்துவிட்டது இரத்தம் நிற்காமல் வழிகிறது. துணியால் வாயைப் பொத்தியபடி லதா அழுகிறாள். மகன் அவளது தோள்களை ஆதூரமாகப் பிடித்திருக்கிறார். லதா அவரிடத்தில் “நான் எதையும் செய்யல” என்று மன்றாடி அழுதாள். அதை நம்புவதாக அவர் தலையசைத்துத் தேற்றியதை நான் கவனித்தேன்.
அவர் லதாவைக் காப்பாற்றிவிட்டதாகத்தான் நாங்கள் நம்பினோம். ஆனால் ஊர்க்காரர்களில் சிலர் லதாவை விடவில்லை. வேண்டுதல் பற்றி விசாரிப்பை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாக அது, நிச்சயம் சிவாஜியை சாவடிப்பதுதான் என்கிற முடிவுக்கு வந்ததுடன், ஏன் அப்படியொரு முடிவு என்கிற கேள்வியில் லதாவைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தனர். இன்னொரு தரப்பினர், விதியாண்டவரின் தீர்ப்பில் சிவாஜி இறந்திருப்பதால் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று விவாதத்தில் இருந்தனர். பொதுவாக விதியாண்டவர் கோவிலுக்குத்தான் மக்கள் ஊர்வலமாகப் போவது நடப்பு.
ஆணி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மண் குதிரைகளைச் செய்து குளத்தைச் சுற்றி நாங்கள் எடுத்துபோவோம். பெரிய குதிரைகளை ஆண்கள் தங்களது தோளில் வைத்துத் தூக்கி வருவார்கள். செல்லையனுக்கு நேர்ந்திருக்கும் குட்டிக் குதிரைகளைப் பெண்கள் குழந்தையைப் போன்று மார்பில் அணைத்து வருவார்கள். திருமணமாகாத பருவத்தினர் அதில் அதிகம். அந்தத் திருவிழாவில் செல்லையனிடம் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்பது விதி. இந்தக் குதிரைக்குட்டிகளெல்லாம் செல்லையனுக்கான பரிசு. விளையாட்டுச் சாமான்கள். சீர்வைப்பது மாதிரி. ஆடி மாதம் கிடா வெட்டு நடக்கும் அது அவனுக்கான படையல். அதனால் இந்த சமயத்தில் எக்காரணத்தைக் கொண்டும் யாரும் வேண்டுதல் செய்வதில்லை. ஆனால் நாங்களெல்லாம் வயசுப் பெண்கள் தூக்கி வருவதைப் பார்த்து “இனி யாரும் அந்தப் பிள்ளைகள பார்க்கக்கூடாது” என்று பயந்திருக்கிறோம்.
அவர்கள் ஏதும் வேண்டிவிட்டால் அவ்வளவுதான் செல்லையன் உங்களைக் குளத்தில் போட்டுக் கொன்றுவிடுவான். ஆனால் உண்மையில் செல்லையன் யாரையும் கொன்றது இல்லை. விதியாண்டவர் கோவில் மதியம் அகாலவேளையில் அங்கு நிற்கும் இளுப்பை மரத்தின் அடியில் செல்லையன் குச்சியுடன் நிற்கிறானென நாங்கள் பேசிக்கொள்வோம். பத்து வருடங்கள் கழித்து லதாவை அப்படியொரு அகால வேளையில்தான் விதியாண்டவர் கோவிலுக்குப் போகிற வழியில் நான் பார்த்தேன். உடல் சன்னமாக சரியாக வாரி முடியாத கூந்தலுடன் எங்கோ போய்விட்டுத் திரும்புகிற வேகத்தில் இருந்தாள். கொம்பு போல நிற்கும் அந்த முலைகள் தளர்ந்து விட்டடிருந்தன. சிவப்பான நிறம் வெளுத்து கரிய இரத்தம் போலிருந்தாள். சேலையில் நான் பார்த்த அழகான பெண்களில் லதா அன்றைக்கு அழகு. எப்போதும் தலையில் உண்ணிப் பூக்கள் இருக்கும். சிவாஜி சாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதாவது, லதா விதியாண்டவர் கோவிலுக்குப் போனதிலிருந்து பயம் கொள்ளத் துவங்கினாள். பிரக்ஞையின்றி தான் செய்யக்கூடாத காரியத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டதாக அரற்றிக்கொண்டிருக்கிறாள். வேண்டுதலை செல்லையன் எப்படி நிறைவேற்றுவான் என்று தெரியாது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
திரும்பவும் கோவிலுக்குச் சென்று பூசாரியிடம் செல்லையன் வந்து போன வீடுகளை விசாரித்தாள். சமீபகாலத்தில் அப்படி யார் வீட்டுக்கும் விதிக்காக செல்லையன் போனதாக அவருக்கும் ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேள்விப்பட்ட ஒன்றிரண்டு பெயர்களைச் சொன்னார். கிராமத்தில் இப்போது அவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்பது சந்தேகம். அவர் சொன்னதில் ஒரு முகவரி மட்டும் எஞ்சியது. ஊருக்கு வெளியே இரயில் தண்டவாளத்தைத் தாண்டினால் பழைய மண்டபம் ஒன்று உண்டு. அதற்குப் பக்கத்திலுள்ள வீடு அது.
லதா அடுத்த நாள் மண்டப வீட்டிற்குச் சென்றபோது வீட்டில் ஒரு கிழவி மட்டும் அமர்ந்திருந்தது. பார்வை சரியாக இல்லை. ஊருக்குள் முதன் முதலில் இரயில் தடம் போட்டபோது கிழவியின் கணவர் அந்த இடத்தை அரசாங்கத்திற்குத் தர மறுத்துவிட்டு கடைசி காலத்தில் இறந்து போனார். மண்டபம் நான்கு தூண்கள் முன்பக்கம் திறந்தபடி பெரிய வாயில் அதிகபட்சம் இருபது அடிக்கு இருபது அளவில் சதுரமாக பழைய கோவிலாக இருக்கவேண்டும். மண்டபத்திற்கு வடக்குப் பகுதியில் மண்டபத்துடன் இணைத்து ஓடு வேய்ந்த வீட்டில் கிழவி இருக்கிறது. மண்டபம் இரயில் வேகத்திற்கு விழாது என்று கிழவியும் தங்கிவிட்டது. லதா கிழவியிடம் விதியாண்டவர் கோவில் பற்றிக் கேட்டாள். என்ன வேண்டுதல் என்று நேரடியாகக் கேட்க முடியாது. இந்த மண்டபம் எப்போதுமே இடியாது எத்தனை இரயில்கள் தடதடவென ஓடினாலும் மண்டபம் அதிருமே தவிர அசையாது என்று கிழவி கூறியது. அவள் திரும்பத் திரும்பக் கோவில் பற்றிக் கேட்டதற்கு கிழவி மண்டபத்தையும் இரயிலடிக் கதையையும் சொன்னது. அதன்பிறகு லதா என்ன கேட்பது என்று புரியாமல் அமைதியாகவிட்டாள். இறுதியாக கிழவி அவளிடம் “விதியாண்டவர் கோவிலில் இதுமாதிரி வேண்டிக்க” என்று முடித்துவிட்டது.
இரயிலடி ஆற்றுப்பாலத்தில் குடியிருந்த வண்ணார் வீதியில் மண்டபம் பற்றி ஒரு கதை இருந்தது. அன்றைக்கு மண்டபத்தை இடிக்க முடியாமல் திரும்பிய சர்க்கார் ஆட்களின் கனவுகளில் இறந்து கிடக்கும் ஒரு சிறுவனின் உருவம் வந்துள்ளது. தங்களுடைய குழந்தைக்கு ஏதாவது நேரிடும் என்று பயந்து மண்டபம் இடிப்பை நிறுத்திவிட்டனர். கனவுகள் வந்ததற்கு இரண்டு நாள் முன்புதான் கிழவி விதியாண்டவர் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பியது. ஆக, நிச்சயம் கனவில் வந்தது செல்லையன்தான். எங்களது பால்ய நாட்களில் இந்தக் கதை எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு அவ்வளவு தூரம் இவ்விசயங்களைத் தேடி நாங்கள் செல்ல முயற்சிக்கவில்லை. நிச்சயம் லதாவுக்குத் தெரிந்திருக்குமா என்று ஊகிக்க முடியவில்லை. இத்தனை வருடம் கழித்து லதாவிடம் நான் கேட்டபோது, “வண்ணார் வீதிக்குப் போயிருக்கேன்” என்று முடித்துவிட்டாள். ஆனால் இப்பொழுதும் லதாவுக்குள் பழைய நினைவுகள் மெல்ல வெளிப்படும்போதே விரல்களில் நடுக்கம் எடுக்க ஆரம்பிக்கிறது.
சிவாஜியின் சாவு வீட்டிற்கு ஆபரணம் வந்தது எனக்கு நினைவில்லை. ஆனால் ஆபரணம் வந்த பிறகுதான் அந்தச் சாவு, ஊரில் மறக்க முடியாத கதையாக மாறியது. எப்போதுமே ஊரில் ஆபரணத்தின் வருகை எந்த வீட்டிலாவது கொலையை நிகழ்த்தும் என்கிற சொலவடை உண்டு. “ஆபரணத்துகிட்ட அருவாமணைய தீட்டி வைச்சுருக்கேன்”, “ஆபரணத்துட்ட கொடுத்து இன்னும் கொஞ்சம் பதம் கூட்டிக்கலாம்” இப்படி நிறைய பேச்சுகள் ஆபரணத்தின் வருகையில் கொலை விழுவதற்கான ஆயத்தங்களை ஏற்படுத்துமென நம்பியிருக்கிறோம். உண்மையிலேயே ஆபரணம் வந்துபோன அடுத்த நாள் ஊருக்கு வெளியே தைலக்காட்டில் கொலை விழுந்திருக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய ரவுடியை அவனுடைய பழைய பகையாளிகள் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி வைத்தார்கள். அரிவாள்மனையால் ஒருத்தி அவளது புருஷனைத் தொடையில் அறுத்துவிட்டுக் கிணற்று அடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தச் செய்தியும் உண்டு. அதனால் ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அந்த உத்தரவு ரொம்ப நாளைக்கு நீளவில்லை. மொன்னைக் கத்தியும் மழுங்கிய அரிவாமனையையும் வைத்து வீட்டு வேலை ஒன்று நடக்கவில்லை. நானே கத்தியையும் மனையையும் எடுத்துக்கொண்டு வடிவான அரளையைத் தேடிப் போயிருக்கிறேன். குளத்துப்படியில் மொன்னைக் கத்திகளோடு கசாப்புக்காரர்கள் காத்திருப்பார்கள்.
சுத்தமாக இரண்டு வருடம் போனது ஆபரணம் திரும்பவும் அரிமளத்துக்குள் நுழைவதற்கு. பூனை மாதிரி ஒவ்வொரு வீட்டு வேலியில் நின்று சன்னமாக அழைத்துத் தீட்டிக்கொடுத்துவிட்டு மறைந்து விடுவாள். ஊர்த் தலையாரிகள் ஆபரணத்திடம் சத்தியம் வாங்கித்தான் ஊருக்குள் விட்டதாக ஒரு பேச்சும் இருக்கிறது. ஆனால் எப்படியோ சாணம் பிடித்துக் கொடுக்காமலேயே ஆபரணம் இன்னொரு விதியை முடித்து வைத்துவிட்டதாக நம்பினோம்.
அது சிவாஜியாகத்தான் இருக்கவேண்டுமா? சிவாஜி இறந்தது சனிக்கிழமை. பிணத்திற்குத் துணையாக ஒரு பெட்டைக்கோழியை வாங்கி ரதத்தினடியில் கட்டி வைத்தார்கள். சிவாஜியின் அடக்கம் இரண்டாவது நாளும் நடக்கவில்லை. கோழி நெல்மணிகளைக் கொத்திக்கொண்டு ரதத்திலேயே அடைந்துவிட்டது. சேவல் ஒன்று அந்தப் பெட்டையுடன் கூடியதை நான் பார்த்தேன். அடிக்கடி சேவல் வந்து கூடுவதும் திண்ணையிலிருப்பவர்கள் தோள் துண்டை வீசுவதுமாக இருந்தது அந்தக் கூத்து. மூன்றாவதுநாள் காலையில் ஒருவழியாக சிவாஜியின் சடங்கிற்கான முறையைக் கண்டுபிடித்தார்கள். அன்றைக்கு ஊரில் நல்ல மழை. பொட்டல் காடுகளெல்லாம் செம்புலமாகும்படி கொட்டித் தீர்த்தது. வருடம் முழுக்க வெயில். இப்படி எப்போதாவதுதான் எங்களுக்கு மழை. அதுவும் ஊரில் ஏதாவது முக்கியமான காரியத்தில்தான் மழை வந்து ஊர் வாயில் சாகும். மழையோடு மழையாக இரண்டு மண் குதிரைகளை எடுத்து வந்தார்கள். ஒன்று பெரிய குதிரை மற்றொன்று குட்டி.
குட்டி மண் குதிரையை வீட்டில் எந்த இடத்தில் சிவாஜியின் உயிர் வெளியேறியதோ அந்த இடத்தில் நிறுத்தி வைத்து, நாற்பது நாட்களுக்கு அங்கு செய்ய வேண்டிய பூசை காரியங்களை லதாவுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு பெரிய குதிரையை எடுத்துக்கொண்டு முச்சந்திக்குப் போனார்கள். எங்களுக்கு அன்றைக்கு நடப்பதெல்லாம் திருவிழா சடங்குமாதிரி இருந்தது. அதாவது, பெரிய மண்குதிரையைத் தலைகீழாகத் தூக்கிப் போய் அங்கு ஒரு பனை மட்டையில் பெரிய பாடை ஒன்றைத்தயார் செய்து அதில் கிடத்தினார்கள். குதிரையின் கால்களுக்கு எந்தத் திசை, தலைக்கு எந்தத் திசை என ஆளக்கொரு யோசனை. பாடை ஒவ்வொரு திசையாகச் சுற்றியது. நாங்கள் மொட்டை மாடியிலும் புளியமரத்திலும் வேப்பமரத்திலுமாக ஏறி நின்றோம்.
நிஜக்குதிரையின் சடலம் போலவே எங்களுக்குத் தெரிந்தது. லதா அழுத களையோடு வந்து பாடையில் கிடத்திய குதிரைக்கு அரிசி, பால், மாலையையும் போட்டாள். அவள் ஒரே நாளில் பாதியாகி விட்டிருந்தாள். வாரிசு மகன் அவளைத் தோள் பற்றி அழைத்துப் போனான். இனி லதா அந்த மகனோடுதான் இருப்பாளென்று நினைத்துக் கொண்டேன். லதாவை பார்க்க முடியாது, வயசான மகன் அவளை அழைத்துக்கொண்டு ஊருக்குப் போய் விடுவான். அதுதான் சரி. லதாவை இனி யாரும் சீந்தமாட்டார்கள். அடக்கம் முடிந்த அடுத்த நாள் அவளைத் தீயிட்டுக் கொளுத்தப்போகிறார்கள் என்று கேள்விபட்டேன். அம்மாவிடம் கேட்டேன் “அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க. அப்புறம் நாற்பது நாளைக்கு செல்லையனுக்கு யாரு சடங்கு செய்றது?”. அப்படியென்றால் நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா இருக்க மாட்டாளா? நாற்பத்தி ஒன்றாம் நாள் லதா உயிரோடுதான் இருந்தாள். அவளை யாரும் ஒன்றும் செய்யவில்லை. வழக்கமான சாவு வீட்டின் களை அங்கு இருந்தது. லதாவை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு சில ஆட்கள் திண்ணையில் அமர்ந்து பேசுவதும் போவதுமாக இருந்தார்கள். இன்றைக்குப் பார்க்கிற லதாவுக்கும் அவளுக்கும் இரண்டு தலை முறை வித்தியாசம். இத்தனைக்கும் வெறும் பத்து வருடங்கள்தான் நடுவில். இந்த லதா அவளின் தாய் மாதிரி இருக்கிறாள். இவளது மகளைத்தான் அன்றைக்கு நான் ரசித்தேன். சாலையோர உண்ணிப் பூக்கள் அவளை எனக்குத் தந்திருக்கின்றன. அவளைத் தவிர வேறு யாருமே அதைச் சூடிக் கண்டதில்லை. அவளுக்காக சில பூக்களைப் பறித்துக் கொண்டு போகலாமா என்று தோன்றிற்று. அவளால் அந்தக் காலத்துக்குள் நுழைய முடியாமல் இருக்கலாம். அதன் சாவி துருப்பிடித்து எங்காவது தொலைந்திருக்கும்.
அதை வெளி கொணர்ந்துவிடும் மோசக்காரனாக நான் ஏன் என்று ஒதுங்கிக்கொண்டேன். ஆனால் லதாவை வீட்டில் சந்தித்தபோது பழைய நினைவுகள் அவளைத் தேடி மறுபடியும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கின்றன என்பதை அவதானித்தேன். நான் லதாவைச் சந்திப்பதற்கு ஒரு வருடம் முன்புதான் ஆபரணம் இறந்து போனாள். அதற்கு முன்பு லதாவை வந்து சந்தித்திருக்கலாம். லதாவின் பேச்சில் அதொரு துரத்திக்கொண்டிருந்த சாபத்தின் கதைமாதிரி அங்கலாய்த்துக்கொள்கிறது. லதா ஆபரணத்துக்காக ரொம்ப வருத்தப்படுகிறாள்.
“எல்லாம் விதி. அது போற வழில எல்லாரையும் சேர்த்துக்கும்” என்று புலம்புகிறாள். ஒருகணம் எனக்குத் திடுக்கிட்டுவிட்டது. அம்மா லதா வீட்டுக்குப் போக வேண்டாமென்று எச்சரித்தும் நான் வந்து நிற்கிறேன். சிவாஜி இறந்த அறைக்குள் பத்து வருடங்கள் முன்பு வைத்து மண் குதிரைக் குட்டியை லதா நாற்பத்து ஒன்றாம் நாள் குளத்தில் கரைக்காமல் வைத்துக் கொண்டாளாம், விதியாண்டவர் கோவில் செல்லையன் இன்னும் அங்கு இருக்கிறான் என்று ஒரு கதை. உண்மையில் நாற்பத்து ஒன்றாம் நாள் மண்குதிரையைக் கரைக்க வேண்டுமா இல்லை அங்கேயே வைத்துக்கொள்வதா எது சரி என்று யாருக்கும் தெரியாது. ஆனால் காலம் அதை ஒரு துர்கதையாக்கிவிட்டிருக்கிறது. லதா வீட்டில் அந்தக் குட்டி மண் குதிரை குழந்தை விளையாடும் பொம்மை மாதிரி மூலையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் குழந்தை அதை எடுத்துப் போகலாம் என்பது போல. ஆபரணத்தை விதி விரட்டியதை ஆபரணம் வந்து சொல்லும்வரை லதாவுக்கும் தெரியாதுதான். “ஆபரணம் பாவம்” என்றாள். நான் அதை ஆமோதிப்பதாகத் தலை அசைத்தேன்.
அதாவது இந்தக் கதை எனக்கு முன்னமே தெரியும், தூரத்திலிருந்து நான் கவனித்து வந்தேன் என்பது மாதிரி லதா என்னிடம் சொன்னாள். “ஆபரணம் ஒரு பாவமும் பண்ணாம இத்தனை வருஷம் அவதிப்பட்டிருக்கா.” அந்தக் கசப்பு லதா பிரக்ஞையில்லாமலே உளறுகிற அளவுக்கு ஞாபகங்களில் சீழ் பிடித்திருந்தது. ஆபரணம் லதாவின் வேண்டுதலைக் கேட்ட அடுத்தக் கணம் விதியாண்டவர் கோயிலிலிருந்து கிளம்பிவிட்டாள்.
அவளால் அங்கு ஒருகணம்கூட நிற்க முடியவில்லை. உள்ளே சென்று செல்லையனிடம் மன்னிப்புக் கேட்பதா இல்லை குளத்திற்குள் மூழ்கி செல்லையனின் தாயிடம் முறையிடுவதா என்று புரியாமல் பயந்து போய்விட்டாள். தெரியாமல் நடந்த செயல் அல்ல. விதியாண்டவரின் கோயிலில் அடுத்தவரின் வேண்டுதலைக் கேட்கக்கூடாது என்று குழந்தைகள்கூட அறியும். அங்கு குழந்தைகளைத் திருவிழா காலம் தவிர வேறு எப்போதும் பார்க்க முடியாது. ஆடு மாடு மேய்ப்பவர்கள் குளத்திற்கும் கோவிலுக்கும் நடுவிலுள்ள இலுப்பை மர நிழலில் அமர்ந்துவிடுவார்கள். ஆபரணத்துக்கு இதெல்லாம் தெரியும்.
அன்றைக்கு ஆபரணம் விதியாண்டவர் கோவிலுக்கு வருவதற்கும் ஒரு காரணம் உண்டு. அவளுக்கு ஒரு வேண்டுதல் தேவை. ஆனால் அதைக் கேட்பதற்கு அவளுக்கு சமயம் கூடவில்லை. எப்படியென்றால், ஆபரணத்துக்குக் கொஞ்சநாளாகச் சாணம் பிடிக்கிறபோது எதையோ பறி கொடுப்பதுபோன்ற பதைபதைப்பு ஏற்படுகிறது. அது என்னவென்று தெரியவில்லை. யார் சாணம் பிடிக்க வந்தாலும் கத்தி கூராகுகிறபோது எதையோ இழப்பதுபோல உணர்கிறாள்.
சிலர் குறைத்துப்பேசிக் காசு கொடுப்பார்கள், சிலர் இன்னும் அதிகம் தருவார்கள், எப்போதாவது வீடுகளில் கூலியோடு சேர்த்து பழைய துணிகளைச் சுருட்டிக்கொடுத்து விடுவதும் உண்டு. அதனால் ஆபரணத்துக்கு வீடுகள் இருக்கும் தெருக்களில் சாணம் பிடிப்பதென்றால் நல்ல ஆதாயம். தெருவின் சந்திப்பு முனையில் எங்காவது நிழல் பிடித்து அமர்ந்துவிடுவாள். ஒன்றிரண்டு அரிவாள்மனைதான் முதலில் வரும் பிறகு எப்படியோ அந்தத் தெரு முழுக்கச் சேர்ந்துவிடும். ஊர்க்கதை, நாட்டுநடப்பு என்று பொழுது முடிந்து கிளம்புவதற்குள் ஆபரணத்துக்குப் பை கொள்ளும். தைலக்காட்டில் அடிக்கடி கொலை நடந்தபிறகு ஆபரணத்தை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த சமயம் ஒரு நாள் ஆபரணம் சாணம் பிடிக்கும் சைக்கிள் இல்லாமல் வெறும் கையொடு வந்து அழுது ஒப்பாரி வைத்துவிட்டுப் போனாள்.
ஊர்ச்சண்டைக்கும் குடும்பம் கெட்டதற்கும் நான் எப்படிப் பொறுப்பாவது என்று முச்சந்தியில் நின்று திட்டித் தீர்த்துவிட்டாள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆபரணம் அரிமளத்துக்குள் வராமல் ஊர் ஊராக அலைந்து திரிகிறாள். இத்தனைக்கும் அரிமளத்தில் அப்படியொன்றும் வருமானமில்லைதான். ஆனாலும் ஆபரணத்தின் பழைய சொந்தம் அங்கு நன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய புண்ணியத்திற்காக ஊரைவிட முடியவில்லை. ஒரு வழியாக ஆபரணம் ஊருக்குள் வர ஆரம்பித்தபோது பழையபடி வருமானமும் துணிமணிகளும் அளவுக்கு மிஞ்சிச் சேர ஆரம்பித்தன. எப்போதாவது தைலக்காட்டில் ஒருசில அசம்பாவிதங்களும் காதில் விழுந்துகொண்டுதானிருந்தன. அது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள ஆபரணம் பெரிதாகப் பிரயத்தனப்படவில்லை.
ஆனால் நாளாக ஆக எதோவொரு பாவச் சம்பவத்தைச் செய்கிறோம் என்று உறுத்த ஆரம்பிக்கிறது. தைலக்காட்டில் இரண்டு வயதுக் குழந்தையை யாரோ அறுத்து வீசியதைப் பார்த்துவிட்டாள். உண்மையில் அந்தக் குழந்தை இந்த ஊரே கிடையாது. போலீஸ் வெளியூர்க்காரர்களைக் கைது செய்தது. ஆபரணம் அடுத்தமுறை வாடிக்கையாக வந்தபோது கொலைகாரர்களை அடையாளம் கேட்டுத் தெரிந்துகொண்டாள். அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று மனம் சாந்தியானாலும் அந்த நினைப்பு நிறுத்தவில்லை. யாராவது கத்தி, அரிவாளைத் தீட்டவரும்போதெல்லாம் ஆபரணத்துக்கு பயம் பிடித்துவிடுகிறது. அவளுக்கு அதை இரண்டே நாளில் துரு சேரும்படித் தீட்டித் தரத் தெரியும். ஆனால் வருகிறவர்கள் பதத்தின் கடைசி சட்டம் வரைக்கும் தெரிந்திருக்கிறார்கள்.
விரலால் கீறி இரத்தம் பார்க்காமல் போவதில்லை. பதம் எந்த வேலைக்கு எந்தளவு என்று ஆபரணத்துக்கு நல்ல பரிச்சயம். அவளும் போக்குக் காட்டி ஏமாற்றி அனுப்பினாள். சக்கரத்தை மிதிக்க மிதிக்க அவளுக்கு வயிற்றுக்குள் கிலி கொள்ள துவங்கியது. சமயத்தில் சிறுநீர் கழிக்கும் அவசரம் என்று சொல்லிவிட்டு முதுகில் விழும் கேலிச் சொற்களோடு அங்கிருந்து போய்விடுவாள். ஒரு கட்டத்தில் இனி இந்தத் தொழிலை நிறுத்திவிடுவதென்கிற முடிவுக்கு வந்த பிறகு கடைசியாக விதியாண்டவர் கோவிலில் போய்க் கூறிவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் அன்றைக்கு, லதா கோவிலுக்குப் போன அதே நாள், வெகுநாளாக விதியாண்டவர் கோவில் பூசாரி அழைத்ததன் பேரில்தான் ஆபரணம் கிளம்பிப்போனாள்.
பூசாரி, கோவில் மூலகிரகத்திலிருந்து அரிவாள், கத்தி, கூர் வாள் என்று அத்தனையும் எடுத்து வந்து வைத்தார். ஆடி இரண்டாம் வெள்ளி கிடாவெட்டு பூசை. ஆயுதங்களைப் பார்த்ததும் ஆபரணத்துக்கு நடுக்கம் எடுத்துவிடுகிறது. ஒவ்வொன்றாகச் சாணம் பிடிக்க ஆரம்பிக்கிறாள். கையில் பலம் இல்லாமல் உடல் நடுங்குகிறது. பூசாரியிடம் சொல்லிக்கொள்ளாமல் செல்லையனிடம் போய் “இந்த விதியிலிருந்து என்னை விலக்கிவிடு” என்று கேட்டுவிட்டுச் சூடம் ஒன்றை ஏற்றிவிட்டு நேராகக் குளக்கரைக்குப் போனாள். முதல் படித்துறையில் இறங்கி செல்லையன் தாயிடம் வேண்டுதலை உரக்கச்சொல்லும்போது நா எழாமல் விக்கித்தது. படி ஏறியபோது ஏதோ மனக்குழப்பம். மறுபடியும் இறங்கிச் சொல்ல வேண்டும் என்று தோன்றவே பக்கத்து படித்துறைக்குப் போனாள். பின்பு அங்கேயே சிறிதுநேரம் ஆசுவாசமாகச் சாய்ந்திருக்கையில்தான் லதாவின் வேண்டுதல் காதில் வந்து விழுகிறது.
பத்து வருடங்கள் கழித்து ஆபரணம் லதாவைச் சந்திக்கையில் லதாவுக்கு அடையாளம் தெரியவில்லை. மொட்டைத் தலையும் எலும்பு உடம்புமாக ஆபரணம் உருமாறிப்போனாள். புகையிலைப் பழக்கத்தால் உதடுகள் சுட்டிருந்தன. லதா யார் என்ன என்றெல்லாம் கேட்காமல் ஆளைப் பார்த்ததும் மீந்த சாதத்தைத் தட்டில்போட்டுக் கொடுத்தாள். ஆபரணத்தால் சாப்பிட முடியவில்லை கண்ணிலிருந்து கண்ணீர் வழிகிறது. லதாவின் கையைப் பிடித்துக்கொண்டு “விதியாண்டவர் கோயில்ல உன்னோட வேண்டுதல நான் கேட்டு தொலச்சுட்டேன். என்னால உன்னோட விதி மாறாம போயிருக்கும். நான் இப்போ விதிகெட்டு அலையுறேன்” என்று குறி சொல்வதுமாதிரிப் பாடினாள். லதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
திரும்பத் திரும்ப ஆபரணம் அதையே பாடுகிறாள். அதில் ஊருக்குள் சாணம் பிடிக்க வந்த கதை, வேண்டுதலைக் கேட்ட கதை, விதி விரட்டுகிற கதை என்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து கவனித்ததும் தான் வீட்டிற்கு வந்திருக்கிறது ஆபரணம் என்று தெரிகிறது. ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜி இறந்த நேரத்தில் ஊருக்குள் தன்மீது அவச்சொல்லை உருவாக்கியவள் என்கிற நினைப்பு இன்னும் லதாவை விட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் ஆபரணத்தின் கோலம் அவள்மேல் பரிதாபத்தை ஏற்படுத்திற்று. “என்ன செய்றது ஆபரணம்.. எல்லாம் விதி” என்று தேற்றினாள். அந்த வார்த்தையக் கேட்டதுமே உடம்பை உலுக்குவது மாதிரி ஆபரணம் துடித்துவிடுகிறாள். லதா என்னிடம் சொன்னபோது லதாவும் விசும்பிவிட்டாள். “விதி விதி விதி” என்று சத்தமே இல்லாமல் ஆபரணம் உச்சரிப்பதை லதாவும் செய்து காட்டுகிறாள். பிரக்ஞை மெல்ல நழுவுகிறது. நான் ஆபரணத்தைப் பற்றிக் கேட்டு அதனைத் திசை மீளச் செய்கிறேன். அன்று ஆபரணம் வேண்டுதலைக் கேட்டதிலிருந்து பொட்டு தூக்கம் இல்லாமல் அலைந்திருக்கிறாள். பாவத்திற்கு என்ன பரிகாரம் என்று தெரியவில்லை. விசாரிப்பதற்கும் பயம். விசயம் தெரிந்தால் ஊருக்குள் விடமாட்டார்கள். காதில் விழுந்த வேண்டுதல் மனதிலிருந்து இறங்கவே இல்லை. பரணத்துக்குப் புத்தி தெளியவே நான்கு வாரம் ஆகிற்று. சாணம் பிடிக்கப் போகிற இடங்களில் விசாரிக்கிறாள்.
ஒரு வழியாக பொற்பனைக் கோவிலில் இதற்குப் பரிகாரத்தை வயதான ஒருத்தர் கூறினார். அது, விதியாண்டவர் கோவிலில் செல்லையனைத் தவிர வேறு யார், அதைக் காதில் வாங்குகிறாரோ அவரிடமே செல்லையன் வேண்டுதலை விட்டுவிடுவான். ஒருத்தரின் விதிக்குள் குறுக்கிடும் இன்னொருவர் அந்த விதியால் அவரது விதியை மாற்றிக்கொள்கிறார். ஆபரணத்துக்குத் தலைச்சுற்றிவிட்டது. திருக்கட்டளையிலேயே தங்கிவிட்டாள். அடுத்தநாள் மறுபடியும் அதே ஆளிடம் திரும்பவும் கேட்கிறாள். அவர் அதையே மீண்டும் சொல்கிறார். எத்தனைமுறை கேட்டாலும் அதே பதில்தான். ஆபரணத்துக்கு எப்படி தன்னால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற முடியும் என்று புரியவில்லை. முதலில் அநுபந்தமே அவளுக்கு யாரென்று தெரியாது. அந்தப் பெயரை அவள் கேள்விபட்டதே இல்லை. இன்னொரு பக்கம், இதுநாள்வரை தான் சாணம் பிடித்துக் கொடுத்தப் பதம், அப்படி எந்த உயிரையாவது சாய்த்திருக்குமோ என்கிற குழப்பம். பூசாரியிடம் யார் வேண்டுதலுக்கு வந்தது? என்று கேட்டுவிட முடியாது. ஆபரணத்திடம் இருந்ததெல்லாம் அநு பந்தம் என்கிற பெயர் மட்டும்தான். அவளுக்கும் அந்தப் பெயர் பரிச்சயம் இல்லை.
உள்ளூரில் இவள் யாரிடமாவது கேட்டாள் நிச்சயம் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஏற்கெனவே ஆபரணத்தின்மீது நல்ல அபிப்ராயம் இல்லை. எனவே அநுபந்தம் என்கிற பெயரை வாய்திறந்து சொல்லாமல் விசாரிக்கும் விதிவசத்திற்குள் சிக்கிக்கொண்டு ஊர் ஊராக தேடி அலைகிறாள். எங்காவது ஊர்க்காரர்கள் அமர்ந்து பேசிக்கொள்ளும்போது அந்தப் பெயர் எதுவும் காதில் விழுகிறதா என்று காதைத் தீட்டி வைத்து அமர்ந்திருப்பாள். டீக்கடை, பஸ் ஸ்டாண்ட், பள்ளிக்கூடம் என ஒரு இடம் விடவில்லை. இதற்கிடையில்தான் அரிமளத்தில் சிவாஜி இறந்த செய்தி வந்தது. சிவாஜியை சிறுவயதிலிருந்து ஆபரணம் பார்த்து ரசித்திருக்கிறாள். கடைசியாக அவர் முகத்தைப் பார்க்கவேண்டும்.
அதோடு ஊர்க்காரர்கள் கூடுகிற துக்க வீட்டில்தான் தேடும் அநுபந்தம் கிடைக்கலாம். சிவாஜியின் பிணத்திற்கருகே யாரோ அநுபந்தம் என்று சொல்லப் போக அதுவரை அழுது கொண்டிருந்தவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. துக்கத்தோடு அதிர்ச்சியும் குழப்பமுமாக அத்தனையும் ஒன்று சேர்ந்து, யார் பெயரை இவ்வளவு நாள் தேடிக்கொண்டிருக்குகிறேனோ அவர் இறந்துவிட்டாரே என்று வேண்டுதலை நிறைவேற்ற முடியாத விரக்தியில் விசயத்தை உளறிவிட்டாள். “நான் வேணும்னு செய்யல” என்று மறுபடியும் மறுபடியும் தலையில் அடித்துக்கொள்ளும்போது லதா அவளைப் பிடித்து அப்படியே அணைத்துக்கொள்கிறாள். உடல் சுருட்டி வைத்த சிறுதாம்பு போல இருக்கிறது. இரண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் தேற்றிக்கொள்கிறார்கள்.
ஆபரணம்தான் அன்றைக்கு சிவாஜியின் உடலை முச்சொந்தி வைத்து குதிரைப்பாடைக்கு மாற்றி நெல் வைத்துக் கட்டியவள். ஊரில் யாருமே செய்ய துணியாத அப்புதிய சடங்கை ஆபரணத்தை வைத்துக் கோவில் சாமிகள் நிறைவேற்றின. ஒருவகையில் அதுகூட விதியின் காரியமாக இருக்கலாம் என்று அவளும் அன்று ஒப்புக் கொண்டதுதான் காரணம்.
அதோடு அன்றைக்கு அடக்கச் சடங்கில் லதா பிரக்ஞையின்றி இருந்ததால் நடந்தது எதுவும் தெரியாது. ஆபரணம் அத்தனையும் சமீபத்தில் நடந்தது மாதிரி விளக்கினாள். எதற்காக விதியாண்டவர் கோவிலில் என்ன காரணத்திற்காக லதா போனாள் என்று ஆபரணம் கேட்காமலேயே அந்த உரையாடல் அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. “ஏன் அநுபந்தம் அநுபந்தம் அநுபந்தம்னு சொன்ன?” என்று கேட்டாள். அந்த கேள்வி காதில் விழுந்ததும் லதாவுக்கு உடல் பதறியெழுந்தது. இத்தனை வருடங்களாக அந்தச் சொல் தன்னை எந்த உருவத்தில் வந்து கேட்கும் என்று பயந்துபோயிருந்தாள். தலையை முழங்கால்களுக்குள் வைத்துக்கொண்டு ‘ஆமாம்’ என்று தலையசைத்தபடி அழுகிறாள்.
சிவாஜியின் அடக்கம் முடிந்து நாற்பத்தியொன்றாம் நாள் இரவு, லதாவின் கனவில் ஒரு முகம் தெரிந்துள்ளது. அந்த உருவத்தை அவள் அதுவரை எங்கும் பார்த்ததில்லை. அது யாரென்றும் தெரியாது. மூன்று முறை கனவில் அந்த ஆள் வருகிறார். எதற்கு என்று தெரியாமல் லதா பேயைக் கண்டதுமாதிரி திடுக்கிட்டு விழித்து அழுகிறாள். ஆபரணத்திடம் சொல்லும்போதே லதா விசும்புகிறாள். முந்தியால் வாய் பொத்திக்கொள்கிறாள். ஆபரணம் அவளைச் சமாதானப்படுத்தி “எனக்கும் அப்படி யாரென்றே தெரியாத முகம் ஒரே ஒருதடவை கனவில் வந்திருக்கு” என்றதும் லதா திடுக்கிட்டு “எப்போ?” என்றாள். ஆபரணத்திற்குச் சரியாக நினைவில் இல்லை.
சற்று யோசித்தவள் “சிவாஜியை அடக்கம் பண்ணினதுக்கு பிறகுதான்”. என்றாள். “அவரை குதிரைப் பாடைக்கு மாற்றியபோது என் கத்தியின் பதம் பட்டு அவரது பொய் சிகை அவிழ்ந்து நான் பதறிப்போய் தடுமாறினேன். அன்னைக்கு நல்ல மழை வேற. தண்ணீபொத்து பொத்துனு பிணத்தில் விழுந்து முகமே அலங்கோலமாகிடுச்சு” லதா, “அந்த முகம் எப்படி இருந்தது?” என்றாள்.
இன்னும் விடிய நிறைய நேரமிருந்தது. சுந்தரம் கையைத் தலைக்குக் கீழ் வைத்துக் கட்டிலில் ஒருக்களித்துப்படுத்திருந்தார். அப்போது அவரை நோக்கி ராட்சத மிருகத்தைப்போல் புல்டோசர் உருண்டு வந்தது. வீட்டுப்படிகளை சக்கரத்தால் பற்றியபடி சாதாரணமாக ஏறியது. தெருக்கதவைத் திறந்துகொண்டு நீண்ட தாழ்வாரத்தில் நுழைந்தது. திரும்பி அவர் படுத்திருந்த அறைக்குள் புகுந்தது. கட்டிலை நெருங்கியதும் தயங்கியது. ஒற்றைக் கையை நீட்டி அவரை லேசாக முகர்ந்தது. மேலே கிடந்த போர்வையை இழுத்துத் தள்ளியது. அவர் உடலுக்குக் கீழே கையை விட்டுத் தூக்க முயன்றது. இரும்புக் கரம் சில்லெனப்படவும் திடுக்கிட்டு விழித்தார். கண்களைக் கசக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.
எதிரில் உயர நின்றிருந்த புல்டோசரைக் காணவில்லை. ஒரு கணத்தில் மாயமாகியிருந்தது. மேலே நீண்ட பரணும், அடுக்கிய தகரப் பெட்டிகளும், குறுக்கேயுள்ள கொடித்துணிகளும் கறுத்துத் தெரியும் இருட்டான அறை. மூலையில் ஆள் நின்றிருப்பபதைப்போன்ற அலமாரி. கருந்துளை போன்ற மாடம். உயரத்தில் ஜன்னல் மட்டும் செவ்வகமாக வெளிர்ந்திருந்தது. தான் வீட்டுக்குள்தான் படுத்துக்கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து கொல்லைக்குப் போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.
மீண்டும் உறங்க முயன்றார். நேற்றுதான் சுந்தரம் புல்டோசரைக் கண்டிருந்தார். அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் நேரில் பார்த்தது முதன்முறை. நேற்றைய செய்தித்தாளில் நாலு வழிச்சாலை போடுகிற அறிவிப்பைப் படித்திருந்தார். எந்த முக்கியத்துவமுமில்லாமல் வெளியிடப்பட்ட அரசு விளம்பரம். நீண்ட நாட்களுக்கு முன்பு அவருக்குப் பதிவுத் தபாலிலும் அறிவிப்பு கிடைத்திருந்தது. அவர் கொல்லைக்கு எதிரில் ஓடும் தேசிய நெடுஞ்சாலை அகலமாக்கப்படப் போகிறது. அவருக்குச் சொந்தமான நிலம் தேவைப்படுமளவு அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்படும். யாரும் மறுப்பு தெரிவிக்கக் கூடாது. முதலில் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவுமிருந்தது. அவருடைய கொல்லையின் ஒரு பகுதி பறிக்கப்படுவதைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அம்மா சுயமாகச் சம்பாதித்து வாங்கியது. அத்தாட்சியாக கரும் கடுக்காய் மசியில் கிறுக்கலாக எழுதிய பத்திரக் காகிதங்கள் பெட்டியில் பத்திரமாயிருக்கின்றன. அவர் நிலத்துக்குத் தொடர்ந்து தீர்வைக் கட்டியும் வருகிறார். அதை அபகரிக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை. நேற்று மத்தியானம் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு, வேலையாள் பெரிய முருகனுக்கும் அலுமனியத் தூக்கில் மனைவி பொன்னம்மா போட்டுத் தந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கொல்லைக்குப் புறப்பட்டார். வழியில் மளிகைக்கடைத் திண்ணையில் செய்தித்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அதை முழுக்கப் படித்த பாவனையில் கோவிந்து சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் ஆமோதிக்கும் நாராயணன். தூரத்தில் சுப்புராயன் அமைதியாயிருந்தார். சுந்தரம் தூக்கை வைத்துவிட்டு நின்று செய்தித்தாளைப் பிரித்தார். அப்போதுதான் சாலை விரிவாக்கத் திட்ட அறிவிப்பு கண்ணில்பட்டது. முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில், நடந்த பனிமலைப் போரைப் பற்றிய செய்தி. சிகரத்தின் உச்சியிலுள்ள சிறிய கூடாரமொன்றின் மங்கிய புகைப்படம். கீழே நம் படையினரின் வீர தீர சாகங்களைப் பற்றிய கதை. மற்ற பக்கங்களில் வழக்கமான கற்பழிப்பு, கொலை, கொள்ளைகள். நான்காம் பக்கமும் ஐந்தாம் பக்கம் பாதியும் முழுக்க உரிமையாளர்கள் பேரும், ஊரும், நில அளவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. சுலபமாகப் படிக்க முடியாதவாறு சிறிய எழுத்துகளிலான அச்சு. சுந்தரம் நான்காவது பாரம் தேர்ந்த கல்வியால் ஆங்கிலத்தை வாசித்தார். ஆயிரக்கணக்கான பெயர்களில் தன்னுடையதைத் தேடிக் கண்டுபிடித்தார். பேரும், பறி போகும் இடமும், சர்வே எண்ணும் சரியாயிருந்தன. செய்தித்தாளில் தன் பெயர் அச்சில் வருவது ஒருவகையில் பெருமை. இன்னும் வரிசையாக பெயர்கள், நிலங்கள். சில கொல்லைகளின் இழப்பு வெறும் ஓரிரு அடிகள்தான். வேறு சில கொல்லைகள் முழுவதுமாகப் பறிபோயிருந்தன. சுந்தரத்தால் தாங்க முடியவில்லை. இந்தச் சாலை பலருக்குச் சொந்தமான நிலத்தின் மீது போடப்படப்போகிறது. கீழே புதையப் போவது வெறும் மண்ணல்ல, உயிர். அவற்றை நம்பித்தான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சுந்தரம் திண்ணையில் உட்கார்ந்து மறுபடியும் அறிவிப்பை ஆழ்ந்து படித்தார். கோவிந்தும் நாராயணனும் திரும்பியும் பார்க்கவில்லை. கடைக்காரர் ராமு, விற்பனைப் பெட்டிகளில் புழுங்கல், பச்சரிசி, கேழ்வரகுகளைப் பொழுதுபோக குவித்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கு நெடுஞ்சாலை ஓரக்கொல்லைகள் கிடையாது. உள்ளூரில் நிலங்கள் பாதுகாப்பாயிருக்கின்றன. சுப்புராயனுக்குச் சொந்தமாக நிலமும் வீடுமில்லை. சுந்தரம் வசீகரமானத் தலைப்பை வாய்விட்டுப் படித்தார்.
“தங்க நாற்கர சாலைத் திட்ட அறிவிப்பு”
கோவிந்து தன் கனத்த தொண்டையில் அபிப்ராயம் தெரிவித்தார்.
“அதெல்லாம் நம்புற மாதிரி இல்ல. அவ்ளோ பெரிய ரோட்ட தங்கத்தால போடவே முடியாது. ரொம்ப செலவாவும்.”
நாராயணன் சிரித்தார்.
“அதுக்கெல்லாம் கணக்குப் பாக்க மாட்டாங்க. பணக்காரங்க எதையும் செய்வாங்க. ரோடு பல்லக்குல போய் வர மாதிரியிருக்கணும்.”
கோவிந்தும் சிரித்துக்கொண்டார்.
“நாலு வழி போடறதெல்லா நடக்காது. அதுக்கு ரொம்ப எடம் வேணும். இங்க கொஞ்சமும் கெடைக்காது.”
நாராயணன் “அதான் நெறைய கொல்லைங்க கெடக்குதே. எல்லாத்து மேலயும் ரோடு போடலாமுன்னு விதி. அதுக்கு ஒருவெலை தருவாங்க.”
“ரோடெல்லா சீக்கிரம் வராதுண்ணா. சும்மா பயமுறுத்தல்” என்றார் ராமு ஆறுதலாக. சுந்தரத்துக்கு நேரமானதால் சாப்பாட்டுத் தூக்குடன் எழுந்தார்.
“வேற வழியில்ல. ஊரு பேரோட தெளிவா போட்டிருக்கு. உடனே கொல்லையக் காலி பண்ணனும்” என்று சொல்லியவாறு கொல்லைக்கு நடந்தார். இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து ஆற்றில் இறங்கினார். ஆறு பாலைவனம்போல் வறண்டிருந்தது. உச்சி வேளையில் ஆட்களில்லாமல் கானல் ஓடிக்கொண்டிருந்தது. அங்கங்கே சோலைகள் போல் பசுமையான நாணல்கள், முட்புதர்கள். சில கிழிந்த துணிகள் மாட்டி தத்தளித்துக்கொண்டிருந்தன. எண்ணற்ற காலடிச் சுவடுகளாலான மணல் வெளி. அந்த ஆற்றுக்கு பெயர் வரக் காரணமான மணல் பாலைப்போல் வெண்மையாயிருந்தது. சிறு சங்குகளும் நத்தை ஓடுகளும் கலந்திருந்தன. ஆற்றில் எப்போதோ உருவான நீரோட்டத் தடங்கள் இன்னும் மறையாமல் வளைந்து நெளிந்து சென்றன. ஓரங்களில் காய்ந்த பாசிப் படிவங்கள் நீண்டிருந்தன. மணல் நெருப்புக் குழம்பாக தகித்தது. செருப்பு இல்லாமல் நடக்க முடியாது, சுருண்டு விழவேண்டியதுதான்.
அப்படி இறந்தவர்களைப் பற்றி சுந்தரம் இளம் வயதில் கேட்டிருக்கிறார். தூரத்தில் ஆட்கள் படுத்திருப்பதைபோல் பிணங்கள் புதையுண்ட மேடுகள் கிடந்தன. மேலே காய்ந்த மாலைகள். ஓரத்தில் ஒரு மேடு, வாடாத மாலைகளுடன், உடைந்த சட்டியுடன் புதிதாயிருந்தது. தொலைவில் ஓவியம்போல் நீலமான ஏலகிரி மலை அசையாதிருந்தது. கத்தரித்தவைபோல் விளிம்புகள் அடிவானில் கோடிட்டிருந்தன. அடுத்து தென்னைகளின் பசுங்கரை. கீழே அவர் கொல்லை நெருங்குவதைப்போல் தெரிந்தது. அவர் நடக்கையில் விலகிச் சென்றது. ஆற்றில் ஓடிக் கலக்கும் கானாற்றின் வழியாகச் சென்றார். வழியில் ஜேம்சின் குத்தகைக் கொல்லை எதிரில் வண்டியும் மாடும் தனித்திருந்தன. மாமர நிழலை மாடு சாவகாசமாக அசையிட்டுக் கொண்டிருந்தது. கானாற்றிலிருந்து குறுக்கு வழியாக கொல்லைக்குப் பின்பக்க வரப்பில் ஏறினார். வழக்கமாக கொல்லைக்குப் பின்னால் மறைந்திருக்கும் பெரிய முருகன் இல்லை. வயல்களின் தாள்களும் களைச் செடிகளின் இலைகளும் கரும்புத் தோகைகளும் உரச எதிரிலிருந்த சிறிய மோட்டார் கட்டடத்தை அடைந்தார்.
பெரிய முருகன் களத்து மூலையில் புன்னை மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். கோயிலுக்கு நேர்ந்திருந்த புதர்த் தலை மயிரைக் கை அலைந்தது. மறு கை, குச்சியால் மண்ணில் கோடுகளை இழுத்தது. அவரும் சாலை அகலமாக்கப் படுவதற்கு விசனப்படலாம். அதைப் பற்றி உலவும் நிறைய கதைகளைக் கேட்டிருக்கலாம். சுந்தரத்தின் வருகையை உணர்ந்து சட்டென எழுந்தார். தூக்கை வாங்கிக் கொண்டு தயங்கினார்.
“இந்த ரோடு போட புதுசா ஒண்ணு வந்திருக்காம். அதுக்கு உசிரு கூட இருக்குதாம். தானா எல்லாம் செய்யுதாம்.”
அதைக் காண பெரிய முருகன் அபூர்வமாக ஆசைப்பட்டாற் போலிருந்தது. அவருக்குத் தம்பி சின்ன முருகன் சொல்லியிருக்கலாம். அவன் தோல் தொழிற்சாலை வேலைக்குப் போகாமல் ஏமாற்றிப் பார்த்துவிட்டு வந்திருப்பான். அவரும் உடனே போக விரும்பினார்.
“நேரிலப் போயி என்னன்னு பாக்கலாம்,வா.”
“கொல்லைய எப்படி விட்டுவர்றது? நீ போயி வாண்ணா” என்றுபெரிய முருகன் நெளிந்தார். தலை மயிரைச் சொறிந்தவாறு பக்கத்திலிலுள்ள தன் வீட்டுக்குச் சாப்பாட்டுடன் சென்றார். அவர் இயந்திரத்தால் குழம்பியிருக்கிறார் எனத் தெரிந்தது. சுந்தரத்துக்குச் சாலை வேலைகளுடன் மனித இயந்திரத்தையும் காணும் ஆவல். கொல்லை மேட்டைக் கடந்து நெடுஞ்சாலைக்குச் சென்றார். தூரத்தில் நகரப்பேருந்து சாய்வாக வந்தது. அவர் கை காட்டினார். நிறுத்தமில்லையென்றாலும் பேருந்து அவரை ஏற்றிக்கொண்டது.
உள்ளே கூட்டமாகத் திருவிழாவுக்குச் செல்லும் மனோபாவத்தில் கூச்சலும் கொண்டாட்டமாயிருந்தார்கள். மேலும் நிறைய பேர் ஏறிக்கொண்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து மற்றொரு பேருந்து. அதிலும் பெருங்கூட்டம் நெரிந்தது. முதல் நிறுத்தம் ரவுண்டானாவில் நின்றதும் பேருந்து பாதி காலியானது. அங்கு நான்கு பக்கம் சாலைகள் சிக்கலாகச் சந்திக்கின்றன. மேலும் பெரிதாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சுற்றிலும் ஆட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தரம் இறங்கி வீடுகளையும் கடைகளையும் இடித்துக் குவித்திருந்த சிதைவுகளின் மேல் ஏறி நின்றார். அங்கிருந்து அனைத்து இடங்களும் தெளிவாகத் தெரிந்தன.
சாலை சந்திப்பு பெரிய சர்க்கஸ் மைதானம் போலிருந்தது. நடுவில் பெரிய இயந்திரம் குனிந்து மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தது. நன்கு வளர்ந்த கொம்பன் யானைபோல் தோன்றியது. கால்களுக்குப் பதிலாக பருத்த சக்கரங்கள். சிறிய கண்ணைப் போன்ற காபினில் ஓட்டுநர் பையன் இயக்கிக்கொண்டிருந்தான். தும்பிக்கை எதற்கோ கான்கிரீட் இடிபாடுகளில் நுழைந்து துழாவியது. கூழாங்கல் போல் தேய்ந்த சிறிய கல்லை எடுத்துப் பார்த்து கீழே போட்டது. தன்னைவிட பல மடங்கு எடை கொண்ட பாறையைச் சுலபத்தில் தூக்கி ஓரத்தில் கிடத்தியது. நீரைக் கூட உறிஞ்சிக் குடிக்கும் என்று பட்டது. அதுதான் இரும்புகளினாலான நீண்ட கையும் வாலுமுள்ள புல்டோசர் என்று தெரிந்து கொண்டார். அவருக்கு முதலில் இனம் புரியாத பயமேற்பட்டது. அபார திறனைக் கண்டு வியப்பாய் இருந்தது. அந்த இயந்திரம் அரசாங்கத்தின் பரு வடிவம். தூரத்தில் நின்றபடி அதிகாரிகளும் ஊழியர்களும் அதை மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார்கள். மக்கள் தந்த மனுக்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். கூட்டம் கண்டு களித்துக்கொண்டிருந்தது. நீண்ட நேரம் நின்றிருந்த பார்வையாளர்கள் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தம்மையறியாது அழுதார்கள். ஒருவர் வாய்விட்டு தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருந்தார். சுந்தரத்தின் காதில் வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
“அதோ அந்த மூலையில இருக்க சின்ன எடம் எங்களது. எதிர்ப்பக்கம் திண்ணை, அப்புறமா வாசல், பின்னால அடுப்பங்கரை. இங்க நா பொறந்தேன், எம் மகன் பொறந்தான். அவனுக்குப் புள்ளைங்க இங்கதான் பொறப்பாங்கன்னு நம்பினே. ஆனா ஒரு நாளில் எல்லாத்தையும் அழிச்சாங்க. கண்ணெதிரில வீடு காணாம போச்சு. கண்டுபிடிக்க முடியாத மாதிரி கனமா ரோடு போடுவாங்க. எனக்குக் கொஞ்சம் நஷ்டஈடு வரும். அத வச்சு ஒண்ணும் பண்ண முடியாது. பழைய வாழ்க்கைய வாங்க முடியுமா? இது வாழ்ந்து வளந்த எடம். இங்கதான் தாத்தா, பாட்டி, அப்பா ஆவிங்க அலையுது. அதனால தெனம் தேடி வர்றேன். எங்குடிசைய இடிச்ச புல்டோசரு நாசமாப் போவணும்.”
அவர் குனிந்து மண்ணை அள்ளித் தூற்றினார். அவரை மற்றவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். புழுதி காற்றில் கலந்தது. புல்டோசர் மேல் துளியும் படவில்லை. இன்னொருவர் பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். புல்டோசர் மீது வைத்த கண்ணை எடுக்காமல் மற்றவர் அரைகுறையாகக் கேட்டார். அது சென்ற பக்கமெல்லாம் பார்வை தொடர்ந்தது.
“முன்ன வழி முழுக்க குட்டிக் கோயிலுங்க மொளைச்சிருக்கும். எல்லாம் சின்னச் சாமிங்க. அவங்கவங்க விருப்பத்துக்குக் கட்டினது. வெறும் கல்லு கூடயிருக்கும். மூதாதைங்க ஆயுதங்க. முக்கிய வேலையாப் போறப்ப கும்பிட்டுக்கிட்டே போவலாம். வேலை நல்லா முடியும்ன்ற நம்பிக்க வரும். திரும்பி வர்றப்ப அதுங்க தொணை. இப்ப ரெண்டு பக்கத்தையும் தொடைச்சிட்டாங்க. முகங்கள அழிச்ச மாதிரி வெறும வந்தாச்சு. எந்த ஊருன்னு கண்டுபிடிக்க முடியல. நமக்குத் தெரியாம வேற ஊரில போயி எறங்குறோம். அங்க நின்னு தெகைச்சுத் திரும்பறோம். நாம அடையாளம் இல்லாம போயிட்டிருக்கோம்.”
அவர் மிகவும் படித்தவரைப் போலிருந்தார். கண்களில் கனத்த கண்ணாடி. பிறகு சகா ஆரம்பித்தார். அப்போதும் புல்டோசரால் ஈர்க்கப்பட்டுப் பார்த்தவாறிருந்தார்.
“பெரிய கோயில இடிக்க எல்லாருக்கும் பயம். ஏன்னா, பெரிய தெய்வங்களுக்கு எப்பவும் மதிப்பு. பெரியவங்க பணம் போட்டு கோயிலுக்குன்னு இருக்க விதிங்கபடி கட்டினது. மூணு வேள பூஜை, மந்திரம் உண்டு. அத இடிச்சா தெய்வ குத்தம்னு சொல்வாங்க. புள்ள குட்டிக்காரங்க யாரும் இடிக்க வர மாட்டாங்க. அதனால சின்ன பையன்தான் புல்டோசர ஓட்டுவான். அவனுக்கு இது விளையாட்டு. எவ்வளவு பெரிய கோயிலுன்னாலும் பையன் இஞ்சின முடுக்குவான். இரும்புக் கை போயி கோயிலக் கும்பிடும். மண்டபத்துக்குள்ள நுழைஞ்சி மூலஸ்தானத்த வணங்கும். அங்க தாங்கி நிக்கற முக்கியக் கம்பத்த தொடும். அப்பிடியும் விழாட்டி பிடிச்சு அசைக்கும். கோயில் பொலபொலன்னு உதிரும். எந்திரம் சம்பந்தமில்லாத மாதிரி கையை உருவிக்கும்.”
அதைக் கேட்டு பக்கத்திலிருந்தவரால் பொறுக்க முடியவில்லை.
“இந்த ரோட்டுல ஒரு நா விடாம போறேன். எங்குல தெய்வக் கோயிலு வழியில நிக்குது. நாலு வழிங்க போட்டா முழுசா அழியும். அதக் காப்பாத்த வெளியூர் விஞ்ஞானிங்க வந்தாங்க. அவங்க அப்படியே பேத்து பின்னால தள்ளினாங்க. முதல்ல கோயில் அடித்தளத்த ஆழமாத் தோண்டினாங்க. அப்புறமா அங்குல அங்குலமா பெரிய உருளைங்களால நகத்தினாங்க. மேல கோயிலுக்கு எதுவுமாகல. முடிக்க ஒரு வருஷமாச்சு. நா தெனம் கோயில்ல சூடமேத்திப் பாத்துக் கும்புட்டு வீடு திரும்புவே. கொஞ்ச தூரத்துல மாதா கோயிலிருந்துச்சு. அவங்க ரெண்டு வழிங்க போதும்னு கோர்ட்டுல வழக்குப் போட்டாங்க. முதல்ல தடையாணை கிடைச்சது. கடேசில தீர்ப்பு வந்து இடிச்சுட்டாங்க. அத இன்னும் கட்ட ஆரம்பிக்கல.”
அவர் சட்டைப்பை நிறைய கணக்குச் சீட்டுகளோடு வெற்றிகரமான வியாபாரியைப்போல் தெரிந்தார். வேலையை விட்டுவிட்டு ஆர்வத்தால் தொலைவிலிருந்து சாலை வேலைகளைக் காண வந்திருக்கிறார். தலைகள் மறைக்கவும் சுந்தரம் வேறொரு பக்கமாகச் சென்றார். அங்கிருந்து புல்டோசர் தெளிவாகத் தெரிந்தது. அது திரும்பி நீண்ட வணிக வளாகத்தை மெதுவாக உடைத்துக்கொண்டிருந்தது. கட்டடங்களின் சன்னல்கள், கதவுகள் முன்பே பெயர்க்கப்பட்டு மூளியாக நின்றிருந்தன. மக்கள் ஒவ்வொரு பகுதி கடை சரிகையிலும் ஆரவராத்தோடு ரசித்தார்கள். அந்தச் சத்தங்களை மீறி ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். நெற்றியில் பட்டையாகத் திருநீறு, குங்குமம். குரல் அசரீரி போல் கேட்டது.
“எங்க ஊருல ரோட்டோரம் பெரிய புத்திருக்குது. அது எந்தக் காலத்ததுன்னு தெரியாது. எங்க பாட்டன், முப்பாட்டன் சொல்லியிருக்காங்க. அதுல வயசான ராஜநாகம் குடியிருக்குது. தலையில வெலை மதிப்பில்லாத மாணிக்கக் கல்ல வச்சிருக்குது. அது சக்தி வாய்ந்த தெய்வம், அத அழிக்க நெனைச்சவங்க அழிவாங்க. அதுக்கு கட்டியிருந்த கோயில இடிச்சு ரோட பெரிசா போட வந்தாங்க. புல்டோசர ஓட்டி வந்தவன் சீட்டுலயே ரத்தம் கக்கிச் செத்தான். உத்தரவு போட்ட அதிகாரி, இஞ்சினியரு, சர்வேயரு எல்லாம் ஆக்சிடெண்டுல மாண்டாங்க. காண்டிராக்டர் பைத்தியமாயிட்டாரு. கடைசில மேலிடத்துல ஒத்துகிட்டாங்க. அங்க ஐவேஸ் வளைஞ்சிப் போவுது. புத்துக்கோயிலு மட்டும் நடுவுல தனியா நிக்குது. நாளுக்கு நாளு பக்தருங்க அதிகமா வாராங்க. அத ஒண்ணும் பண்ண முடியாது.”
அவர் சன்னதம் வந்தவரைப் போலிருந்தார். கோயில் திசை நோக்கி வணங்கினார். சுந்தரம் நம்பவும் நம்பாதிருக்கவும் முடியாது திகைத்தார். நிறையக் கதைகளைக் கேட்டு சுந்தரம் உத்வேகமுற்றார். கதை சொல்லில் பங்கேற்கும் விருப்பம் மிகுந்தது. மனதில் புதைந்தவற்றைத் தன்னையறியாது வெளிப்படுத்தினார். அனைவரும் ஆவலுடன் கேட்டார்கள்.
“எங் கொல்லை அம்மா முந்திய விரிச்சி வாங்கினது. அப்பா, அம்மா வடக்கேயிருந்து வந்தவங்க. அங்கதான் நம்ம ஆத்தின் மூலமிருக்குது. இங்க ஓடி வருது. இருந்தும் அது வறண்ட பூமி. வெத்தலை, கேவுருதான் வெளையும். அங்க பெரிய பஞ்சம் வந்ததாம். மண்ண விழுங்கி சனங்க உயிர் வாழ்ந்திருக்காங்க. அவங்களுக்கு யாரும் உதவல. எல்லாரும் குடும்பம் குடும்பமா தோணின எடங்களுக்கு பொழைக்கப் போயிருக்காங்க… கடைசியா எங்க அப்பா, அம்மாவோட லட்சுமின்ற பசு மாட்டோடு ஆத்து வழியாவே நடந்திருக்கார். எங்க போறதுன்னு தெரியாது. இங்க வந்து கரையேறியிருக்காங்க. ஊரு பச்சையா கண்ணுலபட்டிருக்குது. கொஞ்ச நாளில அப்பா செத்துட்டார். அவருக்கு நோயி, ஏக்கம் ஏதோ ஒண்ணு… லட்சுமியும் செத்திருக்குது. என் அம்மா தோச, பணியாரம் சுட்டு வித்து வாழ்ந்திருக்கா. பெரிய பண்ணைக்காரங்க ரெட்ட மாடு கட்டிக்கிட்டு தின்ன வருவாங்களாம். பொன்ன, பொருளப் பரிசாத் தந்திருக்காங்க. அம்மாவுக்கு இளம் வயசு. நல்ல வளப்பமாயிருப்பாளாம். பக்கத்துவீட்டுப் பெருமாள் மந்திரி கிட்ட பேரம் பேசி வாங்கியிருக்கா. அவரும் கொறைஞ்ச வெலைக்கு நெலத்தப் பொழைக்கத் தந்திருக்காரு. அப்ப ஆடு, மாடுங்கதா பெரியசெல்வம். நெலங்க புல்லு மொளைச்சு சும்மா கிடக்குமாம். அந்தக் கொல்லதான் எனது. அம்பது, அறுபது வருசமா ஆண்டுகிட்டு வர்றது. இப்ப அதப்போயி புடுங்க வர்றாங்க.”
அவரது வேதனை தீர்ந்தது போல் இருந்தது. அவருக்கு யாரும் பதிலளிக்காமல் மௌனம் காத்தார்கள். தூரத்தில் தனியாக ஒருவர் நீண்ட நேரம் கண்களை மூடி அழுதுகொண்டிருந்தார். தலையில் தொப்பியும் மார்பில் தொங்கும் நீண்ட தாடியும். கைகள் இறைஞ்சுவதைப்போல் உயர்ந்திருந்தன. சுந்தரம் அங்கிருந்து நகர்ந்து அவரை நெருங்கி நின்றார்.
“அழாதிங்க. கடவுள் வேற நல்ல எடம் தருவாரு. அத ஏத்துக்குங்க” என்றார்.
இசுலாமியரின் உதடுகள் எதையோ முணுமுணுத்தன. அவர்களுடைய வேத பாடமாயிருக்கலாம். இயந்திர சத்தத்தில் சரிவரக் கேட்கவில்லை. கடைசியாகக் கண்கள் திறந்தன.
“நாங்க ரோடோரம் காவாக் கரைப் பள்ளத்துல குடியிருக்கோம். அதுக்கும் முன்னால ஆத்தோரம் இருந்தோம். அங்க வெள்ளம் வருதுன்னு தொரத்தினாங்க. பின்னால சந்த மூலையில. அங்க கடைங்க கட்டிட்டாங்க. கடைசியா இங்க வந்தோம். காவாயில ஒரு நாளும் தண்ணி வந்து பாத்துதில்ல. சாக்கடதா வத்தாம ஓடும். நாங்க ஒண்ணுக்கொண்ணு அண்ணந் தம்பி, பெரிப்பா, சித்தப்பா மொறை. மொத்தமா வரிசயா குடிசைங்க போட்டோம். சின்னதா தகரத்துலயும், ஓலையாலயும். அத வந்து இடிச்சாங்க. வெறுங்கையால பிரிச்சுப்போட்டிருக்கலாம். புல்டோசர வுட்டு அழிச்சாங்க. அதும் சக்கரங்க ஓடுறப்பவே ரெண்டு மூணு குடிசங்க பாழாப்போச்சு. மீதிய தூக்கி வாரிப் போட்டாங்க. இங்கிருந்து நாங்க மலைக்கிப் போவணுமாம். அங்கியும் ஒரு நாளைக்கு வருவாங்க.”
அவர் புத்தி பேதலித்தவரைப்போலிருந்தார். ஆறுதல் கூற முடியாதெனப்பட்டது. அங்கிருந்து சுந்தரம் பழைய சாலைக்கு நடந்தார். அவருக்குத் தலை சுற்றி வாந்தி வரும் போலிருந்தது. தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த பேருந்துகள் ஒன்றில் ஏறினார். சுந்தரம் கொல்லைக்குத் திரும்பினார். பெரிய முருகனை ஆளைக் காணவில்லை. எங்காவது தென்னை மரத்துக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பார். சிறிய மின்சாரக் கட்டடத்தின் சாய்ப்பில் செருகியிருந்த தபால் உறையைத் தேடினார். முதலில் கையெழுத்திட்டு வாங்கி நீண்ட நாட்களாகியும். பிரிக்காமல் வைத்திருந்தார். தொலை தூரத்தில் சாலை வேலை நடைபெறுவதைக் கேள்விப்பட்ட பிறகுதான் தபால் முத்திரைகள் நிறைந்த கடித உறையைக் கிழித்தார். உள்ளே கற்றை கற்றையாகக் காகிதங்கள். பொடிப்பொடி எழுத்துகளில் நிறைய பக்கங்களுள்ள அறிவிப்புக் கடிதம். அதில் நீண்ட நேரமாக தன் பெயரைத் தேடினார். கூடவே அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பெயர்களும் சேர்ந்து கண்ணில்பட்டன. கடிதத்தை உறையிலிட்டு பழையபடி ஓலைக் கூரையில் நுழைத்திருந்தார். இப்போது சுந்தரம் மீண்டும் அதை எடுத்துப் படித்தார். செய்தித்தாளில் வெளியான அதே அறிவிப்பு.
அவரை அச்சம் பீடித்தது. இன்னும் சில நாட்களில் கொல்லை பறி போகப்போகிறது. அவருக்குத் தலை சுற்றி மயக்கம் வரும்போலிருந்தது. கடித உறையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். நாற்பது, அம்பது வருடப் பழக்கமுள்ள கால்கள் தாமாக கானாற்றை, ஆற்றை, தெருக்களைக் கடந்து வீட்டை அடைந்தன. வீட்டுப் பெஞ்சின்மேல் கடிதத்தைப் போட்டார். கதர் சட்டையையும் கழற்றாமல், கால்களையும் கழுவாமல் கட்டிலில் சாய்ந்து உறங்கியும்விட்டார். சாப்பிட பொன்னம்மா அழைத்தது கூடத் தெரியவில்லை. இப்போது வழக்கம்போல் கொல்லைக்குக் கிளம்பும் அதிகாலை நேரமாகியிருந்தது. வானில் பறவைகளின் மென்மையான கீச்சுகள். ஊர்க்கோடியிலிருந்து தனியான முதல் சேவல் குரல். பக்கத்து வீட்டு கல்லுபள்ளியாவின் ஆடுகள் உறக்கச் சடைவிலிருந்து கலைந்தெழும் ஓசை. எல்லாமும் அவருக்குத் தெளிவாகக் கேட்டன. அவைதான் அவரைத் தினமும் அழைத்து எழுப்புகின்றன. அவற்றைத் தன் பிரமையெனவும் நினைத்துக்கொள்வார். அச்சப்தங்கள் மனதில் ஆழப்பதிந்து தேவைப்படுகையில் மேலெழுகின்றன. சுற்றிலும் மெல்லிய திரை போன்ற வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டார். மனைவி பொன்னம்மா தாழ்வாரத்தில் பிள்ளைகளுடன் சுருண்டு படுத்திருந்தாள். அவர்களுக்கு நன்கு விடிந்த பிறகு ஒவ்வொருவராக எழுந்துதான் பழக்கம். தெருக்கதவை வெறுமனே சாத்திக்கொண்டு கிளம்பினார். கொல்லைக்குப் பின்னால் ஏலகிரி மலையின் வானம் வெளிச்சமுறத் தொடங்கி இருந்தது.
தினமும் காலையில் கடிதம் ஏதாவது அவளிடமிருந்து வந்திருக்கிறதா என்று பார்ப்பது டானின் வழக்கம். ஒருவேளை, அவளுக்கு நேரம் இருந்திருக்காது என்று நினைத்துக்கொள்வான். அவள் செய்ய வேண்டிய காரியங்களையெல்லாம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்ப்பான். ரோமிலிருந்து பாரீசுக்கு அவளது உடமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அப்படி ஒரு முடிவை எடுக்கும்முன் பாரீஸில் அவள் பார்த்து வைத்திருக்கக்கூடிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடியேறவேண்டும். அவனுடைய கடிதத்தால் ஈர்க்கப்பட்டு பதிலளிக்க நேரம் கிடைக்கும்முன் இன்னும் கொஞ்சம் நாட்கள் தனக்குக் கிடைத்திருக்கும் புதுவேலையைச் செய்ய நினைத்திருக்கலாம். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்கத் தேவைப்படும் நாட்களை கணக்கிட்டு நீட்டித்துப் பார்த்து அந்த நாளும் முடிந்து போய்விட்டது. மேலும் மூன்று நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் அவளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை.
“ஒரு முடிவுக்கு வர அவள் காத்திருக்கிறாள்” என்று சொல்லிக்கொண்டான். மேலும், “நினைத்ததை எழுதுவதற்கு முன் அவள் எப்படி உணர்கிறாளோ அதைப்பற்றி உறுதியான முடிவுக்கு வரவேண்டும் என நினைப்பது இயல்புதானே” என்று நினைத்தான்.
ரோசாலின்ட்-ஐக் காதலிப்பதாகவும், அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கடிதம் எழுதி பதிமூன்று நாட்கள் ஆகின்றன. குறுகியக்காலத் தொடர்பு என்ற கோணத்தில் அது கொஞ்சம் அவசரமான முடிவாக இருக்கலாம். ஆனால் தான் எவ்வித அழுத்தமும் தராமல் நினைத்ததை அப்படியே தெரிவித்த வகையில் அது ஒரு நல்ல கடிதம்தான் என்று டான் நினைத்தான். எப்படிப் பார்த்தாலும், ரோசாலின்டை இரண்டு ஆண்டுகளாக அறிவான். அதாவது, இரண்டு ஆண்டுகளுக்குமுன் அவளை நியூயார்க்கில் சந்தித்தான். அவளை மீண்டும் கடந்த மாதம் அய்ரோப்பாவில் பார்த்தான். அவள் மேல் காதல் கொண்டவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். அய்ரோப்பாவிலிருந்து மூன்று வாரங்களுக்கு முன் திரும்பியதிலிருந்து தன் நண்பர்களில் ஒரு சிலரைத்தான் சந்திக்க அவனுக்கு நேரமிருந்தது. ரோசாலின்ட்டுக்கும் அவனுக்குமான திட்டங்கள் குறித்து சிந்திக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
ரோசாலின்ட்டுக்கு தொழிற்சாலை வடிவமைக்கும் வேலை. அய்ரோப்பாவை அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் அய்ரோப்பாவில் வசிக்க விரும்பினால், அங்கேயும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்க அவனால் முடியும். இப்பொழுது, அவனது பிரஞ்சு மொழியும் ஓரளவு முன்னேறியிருந்தது. அவன் பணியாற்றும் டிர்க்ஸன் அன்ட் ஹால் எனும் பொறிஞர்கள் ஆலோசனைக் குழுமத்துக்குப் பாரீசிலும் ஒரு கிளை உள்ளது. எல்லாம் சுலபமாக முடிந்துவிடும். அவனுக்குத் தேவை ஒரு விசா மட்டுமே. புத்தகங்கள், தரைவிரிப்புகள் எனச் சில பொருட்கள், பிறகு அவனது ஒலிப்பதிவுக்கருவி, சில உபகரணங்கள், வரைவதற்கான கருவிகள் என சிலவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட வேண்டியதுதான். தன் மகிழ்ச்சியின் முழு அளவை இன்னும் கணக்கிட்டு முடியவில்லை என்று டான் நினைத்தான்.
ஒவ்வொரு நாள் நகரும்போது, அற்புதமான இயற்கைக்காட்சி மறைந்திருக்கும் திரை சற்றே உயர்வதுபோல் உணர்ந்தான். முழுவதுமாக அதைப் பார்க்க முடியும் நேரத்தில் ரோசாலின்ட் அவனுடன் இருக்கவேண்டும் என விரும்பினான். உண்மையில், அந்த இயற்கைக் காட்சியைக் காண நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக முன்னேறுவதில், ஒரே ஒரு விஷயம்தான் இப்பொழுது தடையாக இருக்கிறது. அவனுடன் எடுத்துச் செல்ல அவளிடமிருந்து ஒரு கடிதம் கூடக் கிடைக்கவில்லை என்பதே அது.
மீண்டும் ரோமுக்குக் கடிதம் எழுதி, உறையின் மீது “தயவு செய்து உரிய முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்று இத்தாலிய மொழியில் குறிப்பிட்டான். தற்சமயம் பாரீசுக்கு அவள் வந்திருக்க வேண்டும். பரவாயில்லை. கடிதம் ஏதாவது வந்தால் அனுப்பவேண்டிய முகவரியை நிச்சயமாக ரோமில் கொடுத்திருப்பாள். மேலும் இரண்டு நாட்கள் கழிந்தன. இன்னும் கடிதம் எதுவும் வரவில்லை. கலிபோர்னியோவில் இருக்கும் அவனுடைய அம்மாவிடமிருந்து ஒரு கடிதம், உள்ளூர் மதுபானக்கடையின் விளம்பரம், முதற் கட்டத் தேர்தல் குறித்த அறிவிப்பு மாதிரி ஏதோ ஒன்று, இவைதான் வந்திருந்தன. மெலிதாக சிரித்தான். பிறகு அஞ்சல்பெட்டியை சாத்திப் பூட்டிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான். கடிதம் எதுவும் இல்லை என்பதைப் பார்த்ததும் அவன் சோகமடையவில்லை. உண்மையில் அவனுக்கு ஏற்பட்டது, ஒருவித வேடிக்கையான அதிர்ச்சி. அவனுக்குக் கடிதத்தை அனுப்பாமல் மேலும் ஒரு நாள் காக்க வைத்து, செல்லமாக அவனை ஏமாற்றி விளையாடுவது போல் உணர்ந்தான்.
பிறகு அவன் கடக்க வேண்டிய அந்த ஒன்பது மணி நேரம். அதாவது ‘சிறப்பு அஞ்சல் சேவை’ பற்றிய சீட்டு ஏதாவது வந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் வீடு திரும்பும் அந்தக் கால இடைவெளி, அவன்மீது பெரும் சுமையாக இறங்கியது. திடீரென சோர்வாகித் துவண்டுபோனான். ‘சிறப்பு அஞ்சல் சேவை’ மூலமாக ரோசாலின்ட் கடிதம் எழுதப் போவதில்லை. அதுவும் இந்தச் சூழ்நிலையில். அடுத்த நாள் காலை வரை காத்திருப்பதைத்தவிர வேறு வழி இல்லை. மறுநாள் காலை பெட்டியில் கடிதம் ஒன்று இருப்பதைப் பார்த்தான். அது கலைவிழா ஒன்றின் அழைப்பிதழ். அதை சுக்குநூறாகக் கிழித்து கைகளில் வைத்துக் கசக்கினான். அவனது அஞ்சல் பெட்டிக்கு அடுத்ததாக இருந்த பெட்டியில் மூன்று கடிதங்கள் இருந்தன. நேற்று காலையில் இருந்தே அவை அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது. தன் பெயருக்கு வந்த தபால்களை எடுக்க ஆர்வம் காட்டாத அந்த டியுசன்பெரி யாராக இருக்கும்?
அலுவலகத்தில் அன்றுகாலை அவனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. அது அவன் உற்சாகத்தைத் தூண்டியது. ஒரு வேலை அவளது கடிதம் தவறுதலாக அவன் பெட்டிக்குப் பக்கத்தில் இருக்கும் அந்தப் பெட்டியில் போடப்பட்டிருக்குமா? அஞ்சல் ஊழியர், வரிசையாக உள்ள அத்தனை பெட்டிகளையும் திறப்பது வழக்கம். ஒரு முறையாவது வேறு ஒருவரது கடிதம் அவனுடையப் பெட்டியில் இருந்திருக்கிறது. அவன் நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கத் தொடங்கினான். அவளும் தன்னை விரும்புவதாகக் கடிதத்தில் எழுதியிருப்பாள் என்று நம்பினான். எப்படி எழுதாமல் போவாள்? ழுவான் லெ பேன் பகுதியில் அந்த அளவுக்கு அவர்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள். அவளுக்குக் கேபிள் மூலம், “ஐ லவ்யு, ஐ லவ்யு, ஐ லவ்யு” என்று தெரிவிக்கலாம். இல்லை. தொலைபேசியில் பேசுவது நல்லது. ஏனெனில் அவளது கடிதத்தில் பாரீஸ் முகவரி இருக்கும். அவளது அலுவலக முகவரிக்கூட இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அவளை எங்கே தொடர்புகொள்வது என்பது அவனுக்குத் தெரிந்துவிடும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க்கில் ரோசாலின்டைச் சந்தித்தபோது, இரண்டு அல்லது மூன்று முறை அவர்கள் இருவரும் உணவகத்துக்கும் நாடகத்துக்கும் சென்றுள்ளனர். பின்னர், அடுத்தடுத்த அழைப்புகளை அவள் ஏற்காததால், அவனைவிட அதிகமாக யாரையோ அவள் விரும்புகிறாள் என்று அவன் நினைத்தான். அந்த நேரத்தில் அவனுக்கு அது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், அவளை ழுவான் லெ பேன் பகுதியில் சந்தித்தபோது நிலைமை முற்றிலுமாக மாறி இருந்தது. இரண்டாம் சந்திப்பில் காதல் மலர்ந்திருந்தது. அதுவரை அவளுடன் பழகிய ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கேன் படவிழாவுக்குச் சென்றபோது அவர்களுடன் போகாமல் அவனுடன் ழுவான் லே பேனில் தங்கியபோது அது தெளிவாகியது. இருவருமாகச் சேர்ந்தார்போல் ஐந்து நாட்களை முழுமையாகக் கழித்தனர். டான் அவளிடம், ‘ஐ லவ் யு’ என்று சொல்ல, ரோசாலின்ட்டும் திருப்பி அதை ஒரு முறை சொன்னாள். ஆனால் அவர்களிடம் எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. மீண்டும் எப்பொழுது சந்திக்கலாம் என்பதைப் பற்றிக்கூடப் பேசவில்லை. எப்படி அவன் இவ்வளவு முட்டாளாக இருக்கமுடியும்?
அவளுடன் சேர்ந்து உறங்க விருப்பம் என்பதையாவது சொல்லி இருக்கலாம். மாறாக, அவனது உணர்வுகள் அப்பொழுது அதைவிடவும் முக்கியமாக இருந்தன. விடுமுறை காலத்தைக் கழிக்கும்போது எந்த ஜோடியாக இருந்தாலும் ஏதாவது நடந்துவிடும். காதல்வயப்படுவதும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதும் வேறு கதை. அவள் நடந்துகொண்ட விதத்தைக் கவனித்தபோது அவளும் அப்படியே உணர்ந்திருந்தாள் என்று நினைத்தான். ரோசாலின்ட் அமைதியானவள், கருத்த முடி, சிரித்த முகம். அதிக உயரமில்லை. ஆனால், உயரமாக இருப்பதைப் போல் தோன்றுவாள். அவள் அறிவாளியாக இருந்தாள். எனவே, எந்த முட்டாள்தனமானச் செயலையும் செய்ய மாட்டாள். அவளிடம் உணர்ச்சிவயப்படும் செயல் எதுவும் இல்லை என்பதை டான் உணர்ந்தான். அவனும், யாரிடமும் உணர்ச்சி வயப்பட்டு எதையும் கேட்டதில்லை.
திருமணம் என்பது சில காலம் சிந்தித்து முடிவுசெய்ய வேண்டிய விஷயம். சில வாரங்கள், மாதங்கள் ஏன் வருடங்கள்கூட யோசிக்க வேண்டிய விஷயம். திருமணம் செய்துகொள்ள அவளிடம் விருப்பம் தெரிவிக்கும் முன், ழுவான் லே பென்னில் கழித்த ஐந்து நாட்களுக்கும் அதிகமான காலம் அதைப்பற்றிச் சிந்தித்ததாக உணர்ந்தான். அவனைப் பொறுத்தவரை, ரோசாலின்ட் பார்னஸ் ஒரு வலிமையானப் பெண் அல்லது பெண்மணி (அவளுக்கு இருபத்தியாறு வயது, அவனுக்கு இருபத்தி ஒன்பது). அவனும் அவளும் பார்க்கும் வேலையில் பல பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. இருவரும் சந்தோஷமாக வாழ அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என்றும் நினைத்தான்.
அன்று மாலை, அந்த மூன்று கடிதங்களும் இன்னும் டியுசன்பெரியின் பெட்டியிலேயே கிடந்தன. அஞ்சல் பெட்டிகளின் எதிரில் இருந்த எண் பட்டியலில் டியுசன்பெரியின் எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து அழைப்புமணியை அழுத்திக்கொண்டிருந்தான். ஒரு வேளை அவர்கள் உள்ளே இருந்து, தபாலை எடுத்து செல்ல வராமல் இருக்கலாம். பதில் இல்லை. டியுசன்பெரி அல்லது டியுசன்பெரி குடும்பத்தினர் வெளியேபோய் இருக்கின்றனர் என்பது தெளிவானது. பெட்டியைத் திறக்க அங்குள்ள மேற்பார்வையாளர் அவனை விடுவாரா? நிச்சயமாக மாட்டார். மேலும், அவரிடம் சாவிகளும் இருக்காது. அங்கு கிடந்த கடிதங்களில் ஒன்று அய்ரோப்பாவில் இருந்து வந்த வெளிநாட்டுத் தபால் போல் இருந்தது. அப்பெட்டியின் மழமழப்பான முன்பக்க உலோக வாயிலில் ஒரு விரலை விட்டு திறக்கப் பார்த்தான். பெட்டி திறக்கவில்லை. அவனது சாவியைப் போட்டு திருப்பிப் பார்த்தான். பூட்டுக்குள் ‘லடக்’ என்ற சத்தம். மறை நகர்ந்து பெட்டி அரை அங்குலம் திறந்தது. அதற்கு மேல் திறக்க மறுத்தது. அவனது வீட்டுச் சாவிகள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்து அந்தப் பெட்டிக்கும் பித்தளையிலான சட்டத்துக்கும் இடையில் வைத்து அதை லீவராக பயன்படுத்தினான். கடிதங்களைத் தொடப் போதுமான அளவு அந்தப் பித்தளைச் சட்டம் கொஞ்சம் வளைந்து கொடுத்தது. கடிதங்களை எடுத்துக் கொண்டு முடிந்த அளவு பித்தளைச் சட்டத்தை நேராக்கினான். சோதித்துப் பார்த்ததில், எந்தக் கடிதமும் அவனுக்கானது இல்லை. திருடனைப் போல் அவற்றை நடுங்கியபடியே பார்த்தான். பிறகு அதில் ஒன்றை எடுத்து தன் கோட் பையில் போட்டுக்கொண்டதும், மற்றவற்றை வளைந்திருந்த பெட்டிக்குள் தள்ளிவிட்டான். அதன் பின் குடியிருப்புக் கட்டடத்துக்குள் நுழைந்தான். மின்தூக்கிகள் ஒரு மூலையில் காணப்பட்டன. அவற்றில் ஒன்று காலியாக இருப்பதைப்பார்த்தான். அதில் ஏறி மூன்றாவது மாடிக்குத் தனியாக வந்து சேர்ந்தான். அவனது குடியிருப்பின் கதவைச் சாத்தியபோது இதயம் வேகமாகத் துடித்தது. அவன் ஏன் அந்தக் குறிப்பிட்ட கடிதத்தை எடுத்தான்? அதைத் திருப்பி வைத்துவிடப் போகிறான். சந்தேகமில்லை. யாரோ ஒருவரிடமிருந்து வந்த கடிதம் போல இருந்தது. ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. நீல நிறத்தில் அழகான கையெழுத்தில் இருந்த முகவரியைப் பார்த்தான். ஆர்.எல்.டியுசன்பெரி… உறையின் பின்புறம் இருந்த முகவரியையும் பார்த்தான்.
எடித் டபில்யு. விட்கோம்ப், 717, கார்பில்ட் டிரைவ், ஸ்திரேன்டன்.
உடனடியாக, அது டியுசன்பெரியின் காதலியாக இருக்கவேண்டும் என்று நினைத்தான். சதுர வடிவில் இருந்த உறையில் இருந்த அக்கடிதம் கனமாக இருந்தது. இப்பொழுது அதை இருந்த இடத்தில் போடவேண்டும். சேதமான அந்த அஞ்சல் பெட்டி? விடுங்கள். அதிலிருந்து எதுவும் களவுபோகவில்லை தானே. அப்புறம் என்ன?
ஓர் அஞ்சல் பெட்டியை உடைப்பதென்பது முக்கியமான குற்றம் தான். ஆனால் பெட்டியை நிமிர்த்திக்கொள்ளட்டுமே. எதுவும் திருடு போகாதவரை, அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? சலவைக்குப் போட அவன் கோட் ஒன்றை எடுத்துக்கொண்டான். கூடவே அந்த டியுசன்பெரியின் கடிதம். ஆனால், கையில் எடுத்ததும் அதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தன் செய்கைக்கு வெட்கப்பட நேரமில்லாமல் நேராகச் சமயலறைக்குப் போய் தண்ணீரைக் கொதிக்க வைத்தான். ஆவியில், கடித உறை அழகாக சுருட்டிக்கொண்டது. டான் அமைதிகாத்தான். கடிதத்தின் மூன்று பக்கங்களும் முழுமையாக, இரு புறமும் எழுதப்பட்டிருந்தன.
“அன்பே” என்று தொடங்கியிருந்தது. “உனக்கு எழுதியே ஆக வேண்டும் எனும் அளவுக்கு நீ இல்லாத வெறுமையை மிகவும் உணர்கிறேன். உண்மையில் எப்படி உணர்கிறாய் என நீ முடிவு செய்துவிட்டாயா? நம் இருவருக்கும் எல்லாம் மறைந்து போகும் என்று நினைப்பதாகச் சொன்னாய். நான் எப்படி உணர்கிறேன் என்று உனக்கு தெரியுமா? அந்தப் பாலத்தின் மீது நின்று பெனிங்டன்னில் வெளிச்சம் வருவதை கவனித்துகொண்டிருந்தோமே! அதேபோல்தான் இப்பொழுதும் உணர்கிறேன்...”
கடிதம் முழுவதையும், நம்பமுடியாமல் ஆனால் ஆர்வத்தோடு படித்தான். அந்தப் பெண், டியுசன் பெரி மீது காதல் பைத்தியமாக இருந்தாள். அவள் எதிர்பார்ப்பதெல்லாம் இவனிடமிருந்து ஒரு பதில், ஒரு சைகை. அவர்கள் ஒன்றாகச் சென்று வந்த வெர்மோன்டில் உள்ள நகரத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாள். அங்கே சந்தித்துக்கொண்டார்களா அல்லது அங்கு பயணம் சென்றார்களா என்று தெரியவில்லை என்றும் எழுதியிருந்தாள்.
கடவுளே, இப்படி ஒரு கடிதத்தை ரோசாலின்ட் தமக்கு எழுதமாட்டாளா என்று நினைத்துப்பார்த்தான். இந்த விஷயத்தில், டியுசன்பெரி அவளுக்கு எழுதமாட்டான் என்பது தெளிவாகத் தெரிகிறது. வந்திருக்கும் கடிதத்தைப் பார்த்தால், அவர்கள் கடைசியாகச் சந்தித்துக்கொண்ட பிறகு டியுசன்பெரி எழுதியிருக்கமாட்டான் என்பது தெரிகிறது. கடிதத்தைப் பசை போட்டு ஒட்டி, பத்திரமாக அதைத் தன் சட்டைப் பையில் டான் போட்டுக்கொண்டான். கடைசி பத்தி மட்டும் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.
“மீண்டும் உனக்கு எழுதுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், இப்பொழுது எழுதி விட்டேன். நான் நேர்மையாக இருந்தாகவேண்டும். ஏனெனில் நான் அப்படித்தான்.”
தானும் அப்படித்தான் என்று டான் நினைத்துக் கொண்டான். அந்த பத்தியில் மேலும் எழுதப்பட்டிருந்த வாசகம் : “ஞாபகம் இருக்கிறதா? அல்லது மறந்துவிட்டாயா? என்னை மீண்டும் பார்க்க விரும்புகிறாயா அல்லது விருப்பமில்லையா? உன்னிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை என்றால் எனக்குத் தெரிந்துவிடும். என்றும் அன்புடன் எடித்.” முத்திரையில் தேதியைப் பார்த்தான்.
கடிதம் ஆறு நாட்களுக்கு முன் அஞ்சலிடப்பட்டிருந்தது. எடித் விட்கோம்ப் எனும் அப்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்த்தான். இந்தத் தாமதம் சகஜம்தான் என்று தனக்குள் சமாதானம் சொல்லியபடி நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பாள் என நினைத்தான்.
ஆறு நாட்கள். நிச்சயமாக இன்னும் அவள் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். பெனின்சுலாவில் உள்ள ஸ்கிரான்டனில், இந்நேரம் நம்பிக்கையுடன் காத்திருப்பாள். டியுசன்பெரி எத்தகைய மனிதன்? கசானோவா போன்றவனா? புதிதாய் முளைத்தத் தொடர்பைத் துண்டிக்க விரும்பும் திருமணமான மனிதனா? டான் வசிக்கும் கட்டிடத்தில் அவன் சந்தித்த ஆறு அல்லது எட்டு பேரில் டியசன்பெரி யாராக இருக்கும்?
காலை 8.30 க்கு வேகமாக வெளியேறும் தொப்பியில்லாத ஓரிரு நபர்களா? ஹாம்பர்க் தொப்பியுடன் மெதுவாக நகரும் அந்த ஆளா? உடன் வசிப்பவர்களைக் கவனிப்பதில் அதிக அக்கறையைக் காட்டாதவன் டான். ஒரு கணம் யோசித்துப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தனிமையையும் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் அவனால் உணர முடிந்தது. நம்பிக்கையின் கடைசித் துடிப்புகளை அவனது உதடுகளிலேயே உணர முடிந்தது. ஒரே வார்த்தையின் மூலம் அவளை சந்தோஷமடைய வைக்கமுடியும். அதாவது, டியுசன்பெரியால் முடியும்.
“சண்டாளா,” என முணுமுணுத்தான். கோட்டை வைத்துவிட்டு, மேசையை நோக்கிப் போனான். ஒரு தாளை எடுத்து, “எடித், நான் உன்னை நேசிக்கிறேன்” என்று எழுதினான். தெளிவாக அந்த வாசகம் எழுதப்பட்டிருப்பதைப் பார்க்க விரும்பினான். ஏற்கனவே சரியாக முடித்துவைக்கப்படாமல் இருந்த ஒரு முக்கியமாக பிரச்சினை இதன் மூலம் முடித்துவைக்கப்படுவதாக அவன் நினைத்தான். எழுதிய கடிதத்தை டான் கசக்கி குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். பிறகு, படிக்கட்டுகளில் இறங்கி, கடிதத்தை பெட்டியில் போட்டுவிட்டு, கையிலிருந்த கோட்டை சலவைக்கு கொடுத்தான். செகன்ட் அவென்யு முழுதும் வெகுதூரம் நடந்து சோர்ந்து போனான். ஹார்லெமின் முடிவு வரும்வரை நடந்துகொண்டிருந்தான்.
அதன்பின் ஒரு பேருந்தில் ஏறினான். பசி எடுத்தது. ஆனால், என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லை. வேண்டுமென்றே அவன் சூன்யத்தை எண்ணினான். இரவு கடந்து, அடுத்த கடித சேவையை கொண்டுவரும் காலை வரட்டும் என காத்திருந்தான். ரோசாலின்ட்டைப் பற்றி தோராயமாக நினைத்து வைத்தான். ஸ்கரேன்டனைப் பற்றியும் நினைத்தான். தங்கள் உணர்ச்சிகளின் காரணமாக இவளைப்போல் மக்கள் இப்படிக் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது. என்ன பரிதாபம்! ஏனெனில், ரோசாலின்ட் அவனை மிகவும் சந்தோஷமடைய வைத்திருந்த போதிலும் இந்த மூன்று வாரமும் சித்ரவதைதான் என்பதை அவனால் மறுக்கமுடியாது. ஆமாம். இன்றோடு இருபத்தி இரண்டு நாட்கள் இப்படி இருந்ததற்காக இன்று இரவு வினோதமான அவமான உணர்வு ஏற்பட்டது. வினோதமான அவமானமா? அதை எதிர் கொண்டால் அதில் எதுவும் வினோதம் இல்லை. அவளை ஒருவேளை இழந்துவிட்டோம் என நினைத்துதான் வெட்கப்பட்டான். ழுவான் லெ பென்னிலேயே உறுதியாக அவளிடம், தான் அவளை நேசிப்பதோடு திருமணம் செய்துகொள்ளவும் விரும்புவதாகச் சொல்லியிருக்கவேண்டும். அப்படிச் சொல்லாததால் இப்பொழுது அவளை இழந்திருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிந்தனையே அவனைப் பேருந்தில் இருந்து இறங்க வைத்தது. அத்தகைய மோசமான, பயங்கரமான சாத்தியக்கூற்றை மனதிலிருந்து ஓட்டவும், விலக்கிவைக்கவும், உடலிலிருந்தே நீக்கவும் நடந்துகொண்டிருந்தான். திடீரென அவனுள் ஒரு யோசனைத் தோன்றியது. அது வெகுதூரம் செல்லவில்லை. பெரிதாக இலக்கு எதுவும் அதற்கில்லை. ஆனால், அன்று மாலைக்கான ஒரு திட்டம். வீட்டுக்குத் திரும்பும் வழியில் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தான். கடைசியாக வந்த கடிதத்தை டியுசன்பெரி படித்திருந்தால் விட் கோம்புக்கு என்னதான் எழுதுவான் என்று கற்பனை செய்து பார்த்தான். அவளைக் காதலித்துதான் ஆக வேண்டும் என்றில்லை. அவளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற அக்கறையுடன் டியுசன்பெரி பதில் எழுதியிருப்பான். அந்தக் கடிதத்தை எழுத அவனுக்கு சுமார் பதினைந்து நிமிடம் தேவைப்பட்டது. இவ்வளவு நேரம் மௌனமாக இருந்ததற்குக் காரணம் அவள் குறித்து தனக்கு ஏற்பட்ட உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் என்று குறிப்பிட்டான். அவளிடம் ஏதாவது தெரிவிப்பதற்கு முன் அவளைச் சந்திக்க விரும்பியதாக எழுதினான். எனவே, அவள் எப்பொழுது தன்னைப் பார்க்க முடியும் என்றும் கேட்டான். டியுசன் பெரியின் தொடக்கப் பெயர் என்ன என்று நினைவுக்கு வரவில்லை. (அதை அவளது கடிதத்தில் பயன்படுத்தியிருந்தாள்) ஆனால், உறையின்மீது ஆர்.எல். டியுசன்பெரி என இருந்தது மட்டும் ஞாபகத்தில் இருந்தது. எனவே, சாதாரணமாக ‘ஆர்’ என்று கையொப்பமிட்டான்.
அந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தபோது, உண்மையில் அதை அவளுக்கு அனுப்பவேண்டும என்ற திட்டம் அவனிடம் இல்லை. பெயரிடப்படாமல், தட்டச்சு செய்து அனுப்பப்பட்ட எழுத்துகளைப் படித்தபோதுதான் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவளுக்குச் செய்யக் கூடிய குறைந்தபட்ச உதவியாக அது இருக்கும் என்று நினைத்தான். மேலும், எப்பொழுது நாம் மீண்டும் சந்திக்கலாம்? என்று கேட்பதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால், உண்மையில் இது பயனற்றது. போலியானதுதான். டியுசன் பெரி அக்கறை காட்டவில்லை என்பதும், காட்டப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது. இல்லையென்றால், ஆறு நாட்களைக் கடக்கும்படி விட்டிருக்க மாட்டானே. விட்ட இடத்திலிருந்து டியுசன்பெரி அந்த நிலைமையைத் தொடரவில்லை என்றால், பொய்யானதொரு நிலையை நீட்டிக்கிறான் என்று பொருள். ‘ஆர்’ என்ற எழுத்தை உற்றுப்பார்த்தான். தான் எதிர்பார்ப்பதெல்லாம் எடித்திடமிருந்து ‘ஆம்’ என்ற சந்தோஷமான ஒற்றைச் சொல் மட்டுமே என அவனுக்கு தெரியும். ஆகவே, கடிதத்தின் அடியில், “பி.கு : உன் பதிலை டிர்க்சன் அன்ட் ஹால் சேனின் பில்டிங், நியூயார்க். என்ற முகவரிக்கு அனுப்பு” என்ற குறிப்பையும் தட்டச்சு செய்தான். எடித் பதில் எழுதினால், எப்படியும் அக்கடிதம் இவனுக்குக் கிடைத்துவிடும். இன்னும் சில நாட்களுக்குள் அவள் பதில் எழுதவில்லையென்றால், டியுசன்பெரி அவளுக்கு பதில் கடிதம் எழுதிவிட்டதாக அர்த்தம்.
அல்லது, எடித்திடம் இருந்து கடிதம் வந்தால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுலபமாக, தானே இந்த விஷயத்தைக் கையாளலாம் - கையாளவேண்டும். கடிதத்தை அஞ்சலில் சேர்த்தபின் அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது போன்ற உணர்வைப் பெற்றான். ஒரு வகையான நிம்மதியும் கிடைத்தது. நன்றாகத் தூங்கி விழித்தபோது கீழ்தளத்தில் உள்ள அஞ்சல் பெட்டியில் அவனுக்காக ஒரு கடிதம் காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு எழுந்தான். அங்கே ஒரு கடிதமும் காணப்படவில்லை (ரோசா லின்டிடம் இருந்தும் கடிதம் வரவில்லை, தொலைபேசி கட்டண ரசீது மட்டும் இருந்தது) என்றதும் அதிர்ச்சி கலந்த ஏமாற்றமும் ஏற்பட்டது. மேலும், இதற்குமுன் அப்படி ஒரு சோர்வை அவன் அனுபவித்ததில்லை. இப்பொழுது ஏன் அவனுக்குக் கடிதம் வரவில்லை என்பதற்கு எந்தக் காரணமும் அவனுக்குப் புலப்படவில்லை. ஸ்கரேன்டனிலிருந்து வந்த கடிதம் அடுத்த நாள் காலை அலுவலகத்தில் காத்திருந்தது. வரவேற்பு மேசையின் மீது கிடந்த அக்கடிதத்தைப் பார்த்தவன் அதை எடுத்துக்கொண்டான். அந்த நேரத்தில் வரவேற்பாளர் தொலைபேசியில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தததால் அவளிடமிருந்து எந்தக் கேள்வியும் எழவில்லை. அவனை அவள் கவனிக்கவேயில்லை. “அன்பே” என தொடங்கியது கடிதம். படிக்கும் போது அதில் உள்ள உணர்ச்சிப் பிரவாகத்தை தாங்கிக்கொள்ள கஷ்டப்பட்டான். எனவே, அவன் வேலை பார்க்கும் பொறியியல் துறையில் பணியாற்றும் யாராவது இப்படி படிப்பதைப் பார்த்து விடுவதற்கு முன்பாகக் கடிதத்தை மடித்து வைத்தான். தன் சட்டைப் பையில் அக்கடிதம் இருப்பது பிடித்தும் இருந்தது பிடிக்காமலும் இருந்தது.
கடிதம் வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அது உண்மையில்லை என்பது அவனுக்குத் தெரியும். ஏன் அவள் எழுதாமல் இருக்கவேண்டும்? அடுத்த வார இறுதியில் எங்காவது இருவரும் ஒன்றாகப் போகலாம் என அவள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள் (டியுசன்பெரியும் ஓய்வாகத்தான் இருந்தான்). இவனே நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்யும்படி கேட்டிருந்தாள். வேலையில் ஈடுபட்டபடியே, அவளைப் பற்றி யோசித்துப் பார்த்தான். ஸ்கிரேண்டனில் இருந்தாலும், ஒற்றை வார்த்தையால் இயக்கக் கூடிய தீவிரமான, துடிப்புள்ள முகமற்ற அப்பெண்னை மனக்கண்ணில் பார்த்தான். என்ன வேடிக்கை இது! இவனால் பாரீசில் உள்ள ரோசலின்ட்டிடமிருந்து ஒரு பதிலைப் பெற முடியவில்லை! ”கடவுளே” என முணுமுணுத்தவன் மேசையை விட்டு எழுந்தான். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான். ஏதோ ஆபத்தான ஒரு விஷயத்தைப் பற்றி அப்பொழுதுதான் யோசித்துப் பார்த்தான். ரோசா லின்ட் இவ்வளவு காலமும் அவனை விரும்பவில்லை, எப்பொழுதும் விரும்பப் போவதுமில்லை என்பதைச் சொல்லத் திட்டமிட்டிருக்கிறாள் என்ற அவனுக்குப் பட்டது. இந்த எண்ணத்தை அவன் மனதிலிருந்து நீக்க அவனால் முடியவில்லை. இப்பொழுது, இதுவரை கற்பனை செய்து வைத்த அவளது மகிழ்ச்சியான, புதிர் நிறைந்த அல்லது ரகசியமாகத் திருப்தியடைந்த முகம் மாறிப்போனது. எல்லாவற்றையும் முறித்துவிடக்கூடிய அக்கடிதத்தை எழுதும் அருவருப்பான வேலையில் அவள் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிந்தது.
அதை நாகரீகமாகத் தெரிவிக்கக்கூடிய வார்த்தைகளுக்காக அவள் யோசனையில் ஆழ்ந்திருப்பதாக அவன் உணர்ந்தான். இத்தகைய எண்ணம் அவனை மிகவும் பாதிக்கவே, அன்று மாலை எந்த வேலையும் ஓடவில்லை. அதைப் பற்றி நினைக்க நினைக்க, அவனுக்கு அவள் எழுதுவதுவதற்கோ, எழுதலாம் என்று எண்ணியிருப்பதற்கோ வாய்ப்புகள் குறைந்து கொண்டிருந்தன. அப்படி ஒரு முடிவினை எடுக்க அவள் என்னென்ன படிகளைக் கடந்திருப்பாள் என்பதைத் துல்லியமாக அவனால் ஊகிக்க முடிந்தது. அவன் இல்லாமல் கழித்த அந்தக் குறுகிய கால இடைவெளியில், அவள் வேலையில் ஈடுபட்டபடியே, பாரீசில் உள்ள தன் நண்பர்களுடன் கழித்த நேரத்தில் அவன் இல்லாமல் ஏதாவது ஒரு விஷயம் நிறைவேறியிருக்கும். அவளைப் பற்றி அவனுக்குத் தெரியும். இரண்டாவதாக, அவன் அமெரிக்காவிலும் அவள் அய்ரோப்பாவிலும் இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை அவளைப் பாதித்திருக்கும். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, அவனை அவள் உண்மையில் விரும்பவில்லை என்பதைக் கடைசியில் கண்டுபிடித்திருப்பாள். இது மட்டுமே உண்மையாக இருக்க வேண்டும். காரணம், தாங்கள் அக்கறைகொண்டு உள்ளவர்களுக்குக் கடிதம் எழுத யாரும் இவ்வளவு காலம் கடத்தமாட்டார்கள். சட்டென எழுந்து நின்று கடிகாரத்தை முறைத்துப் பார்த்தான். அதனுடன் சண்டைபோடுவதுபோல் அதைப் பார்த்தான்.
இரவு 8.17. செப்டம்பர் 15.
அவனது பதற்றமான உடல் மீதும் நடுங்கும் கைகளின் மீதும் காலத்தின் முழுச் சுமையையும் தாங்கிக் கொண்டிருந்தான். அவனது முதல் கடிதம் எழுதப்பட்டு இருபத்தி ஐந்து நாட்கள், இவ்வளவு மணி நேரங்கள், இவ்வளவு நிமிடங்கள்…
இந்தச் சுமையிலிருந்து நழுவிய அவனது மனம் ஸ்கிரேன்டனில் இருக்கும் பெண்ணைக் கவ்விக்கொண்டது. அவளுக்கு ஒரு பதில் எழுத வேண்டியது தன் கடமை என்று அவன் நினைத்தான். அவளது கடிதம் முழுவதையும் மீண்டும் ஒரு முறை படித்தான். உணர்வுப்பூர்வமாக மிகவும் கவனமாகப் படித்தவன், இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில வாக்கியங்களில் ஒன்றிப்போனான். அவளுடைய நம்பிக்கையின்மை மீதும் ஊசலாடும் அவளது காதல் மீதும் அவ்வளவு அக்கறை கொண்டவன் போல் காட்டிக்கொண்டான். ஏறக்குறைய அது அவனுடய சொந்தக்காதல் போலவும் இருந்தது. இங்கோ ஒருத்தி, சந்திக்கக்கூடிய இடத்தையும் நேரத்தையும் தெரிவிக்கும்படி இவனிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறாள். துடிப்பும் ஆர்வமும் கலந்திருக்கும் இவள் தனக்கே கைதியாக இருப்பவள். இவள் பறக்க ஆயத்தமாக இருக்கும் ஒரு பறவையைப் போன்றவள். திடீரென தொலைபேசி நோக்கிச் சென்றவன் ஒரு தந்தியை அனுப்பினான்.
“கிரான்ட் சென்ட்ரல் டெர்மினல், லெக்சிங்டன் அருகில், வெள்ளி மாலை 6 மணிக்கு என்னைச் சந்திக்கவும். அன்புடன் ஆர்.”
நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை. வியாழக்கிழமையும் கடிதம் எதுவும் வரவில்லை ரோசாலின்ட்டிடமிருந்து. அவளைப் பற்றிக் கற்பனை செய்து பார்க்கும் அளவு இப்பொழுது அவனுக்குத் துணிச்சலோ உடல் பலமோ இல்லை. அவனுள் இருப்பதெல்லாம், அவள் மீது கொண்ட அன்பு மட்டுமே. மலைபோல் அசைக்க முடியாத மங்காத காதல் அது. வெள்ளிக்கிழமை காலை, அவன் எழுந்ததும் ஸ்கிரேன்டனில் உள்ள பெண்ணை நினைத்துப் பார்த்தான். அவள் இன்று காலை எழுந்து தன் உடமைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள். அல்லது வேலைக்குச் செல்வதாக இருந்தால், நாள் முழுவதும் டியுசன்பெரியின் கனவு உலகில் அவள் சஞ்சரித்துக்கொண்டிருப்பாள்.
அவன் தரைத்தளத்துக்குப் போனபோது அவனது பெட்டியில் சிவப்பு, நீல வண்ண விளிம்புடன் வெளிநாட்டுத் தபால் இருப்பதைப் பார்த்தான். அப்பொழுது அவனுக்கு மெல்ல ஏற்பட்ட அதிர்ச்சி வலிக்கவே செய்தது. பெட்டியைத் திறந்து, அந்த நீளமான மெல்லிய கடித உறையை வெளியே எடுத்தான். கைகள் நடுங்கவே சாவிகள் தவறி காலடியில் விழுந்தன. தட்டச்சு செய்யப்பட்ட கடிதத்தில் பதினைந்து வரிகள் மட்டுமே இருந்தன.
“டான், உன் கடிதத்துக்குப் பதில்போட இவ்வளவு நாள் ஆனதற்கு மிகவும் வருந்துகிறேன். என்ன செய்வது. இங்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பல விஷயங்கள். இன்றுதான் ஓரளவு எல்லாம் சரியாகி வேலையை ஆரம்பித்தேன். முதலில் ரோமில் தாமதமானது. மின்பழுது பார்ப்பவர்களின் வேலைநிறுத்தம், அது இது என்று பல காரணங்களால் இங்கு குடியிருப்பைச் செப்பனிடுவது பெரிய தலைவலியாக இருந்தது. டான்! நீ ஒரு தேவதூதன். எனக்கு அது தெரியும். அதை நான் மறக்கவும் மாட்டேன். கடற்கரையோரம் நாம் கழித்த நாட்களை மறக்கவும் மாட்டேன்.
ஆனால், திடீரென இங்கேயோ வேறு எங்காவதோ திருமணம் செய்துகொள்வதற்காக என் வாழ்க்கைப் பாதையைச் சட்டென மாற்றிக் கொள்ள இயலாது. கிறிஸ்துமஸுக்கு என்னால் அமெரிக்கா வர வாய்ப்பில்லாத அளவுக்கு இங்கு வேலை அதிகமாக இருக்கிறது. நீயும் ஏன் நியூயார்க்கிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வரவேண்டும்? கிறிஸ்துமஸ் நேரத்தில் அல்லது இக்கடிதம் கிடைப்பதற்குள் உன் எண்ணங்கள் கொஞ்சம் மாறியிருக்கக்கூடும். சரி, மீண்டும் எனக்குக் கடிதம் எழுதுவாயா? இது உன் மகிழ்ச்சியைக் குறைத்துவிடாது அல்லவா? எப்பொழுதாவது மீண்டும் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள முடியுமா? அதுவும் ழுவான் லெ பேனில் தற்செயலாக நிகழ்ந்ததுபோல் அற்புதமாக அமையுமா?
”ரோசாலின்ட் கடிதத்தைப் பைக்குள் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான். அவனது எண்ணங்கள் குழப்பம் நிறைந்தவையாக இருந்தன. சிதறடிக்கப்பட்ட படைக்குக் கிடைக்கும் தெளிவற்ற கட்டளைகள்போல், காலம் கடப்பதற்கு முன் இறக்காமல் இருக்கவும் சரணாகதி அடைவதைத் தவிர்ப்பதற்குமான அமைதியான மரண விசும்பல்களாக அவை இருந்தன. ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகவும் நேராகவும் அவனுக்குத் தோன்றியது. அதாவது அவளை அவன் பயமுறுத்திவிட்டான். கட்டுப்படுத்த இயலாமல் முட்டாள்தனமாக தன் மனதில் பட்டதை ஒப்புக் கொண்டதுதான் அது. தான் எடுத்துவைத்த அடுக்கடுக்கான எதிர்காலத் திட்டங்களே அவனுக்கு எதிராக அவளைத் திருப்பியிருக்கின்றன. சொன்னதில் பாதியை மட்டும் அவன் சொல்லியிருந்தால், அவளை அவன் எவ்வளவு காதலித்தான் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பாள். ஆனால், அவனோ குறிப்பிட்டுச் சொல்லியிருந்தான். அவனது கடிதத்தில், “அன்பே உன்னை நான் ஆராதிக்கிறேன். கிறிஸ்துமஸூக்கு நீ நியூயார்க் வரமுடியுமா? இல்லையென்றால் நான் பாரீசுக்கு வருகிறேன். நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ அய்ரோப்பாவில் வசிக்க விரும்பினால், அங்கேயே வீடும் ஏற்பாடு செய்கிறேன். நான் மிக எளிதாக…” என எழுதி இருந்தான்.
என்ன ஒரு முட்டாளாக அவன் நடந்துகொண்டிருக்கிறான்! நேர்ந்துவிட்ட தவறைத் திருத்துவதில் அவன் மனம் ஏற்கனவே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அதற்குள் அடுத்தக் கடிதத்தைப் பாசத்தோடு இயல்பாக அமைக்கும் வேலையில் அது ஈடுபட்டிருந்தது. அக்கடிதம் அவள் முடிவெடுக்கக் கொஞ்சம் அவகாசம் தரக்கூடியதாக இருக்கும். இன்று மாலையே அக்கடிதத்தை கவனமாக எழுதிவிடுவான். நினைத்ததை அது சாதித்துவிடும். அன்று பிற்பகல், சற்று முன்னதாகவே டான் அலுவலகத்தைவிட்டு வெளியேறினான். வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மாலை 5 மணியாகி சில நிமிடங்கள் கடந்திருந்தன. ஸ்கிரேன்டனிலிருந்து வரும் பெண், கிரான்ட் சென்டரலில் 6 மணிக்குக் காத்திருப்பாள் என்பதைக் கடிகாரம் அவனுக்கு நினைவூட்டியது. ஏன் என்று தெரியவில்லை. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைத்தான். நிச்சயமாக அவளிடம் அவன் பேசப்போவதில்லை.
சொல்லப்போனால், அவளைப் பார்த்தாலும் அவனால் அடையாளம்கூட கண்டுபிடிக்க முடியாது. எனினும் ஒரு ஸ்திரமான, லாவகமான காந்தம் போல் அந்தப் பெண்ணைக்காட்டிலும் கிரான்ட் சென்டிரல் அவனை ஈர்த்தவண்ணம் இருந்தது. உடைகளை மாற்றத் தொடங்கினான். இருப்பதிலேயே சிறந்த கோட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான். ‘டை’கள் இருந்தது. பேழையில் தயங்கிய விரல்களால் தேடி, அடர்த்தியான நீல நிற டையைத் தேர்ந்தெடுத்தான். பலவீனமாகவும் நிதானம் குறைவதாகவும் உணர்ந்தான். தன் நெற்றியில் துளிர்த்த குளிர்ந்த வேர்வைத் துளியைப் போலவே ஆவியாகிக் கரைந்து போவது போல் உணர்ந்தான். அவன் இறங்கி நாற்பத்தியிரண்டாம் தெருவை நோக்கி நடந்தான். டெர்மினலின் லெக்கிங்டன் அவென்யூ நுழைவாயிலில் இரண்டு அல்லது மூன்று இளம் பெண்களைப் பார்த்தான். அவர்களில் யாராவது ஒருத்தி எடித் விட்கோம்ப்பாக இருக்கவேண்டும். அவர்கள் ஏதாவது தலைப்பெழுத்துக்கள் பொரித்த பொருட்களை எடுத்து வருகிறார்களா என்று கவனித்தான். ஆனால் அப்படி எதுவும் அவர்களிடம் இல்லை. பிறகு, அவர்களில் ஒருத்தி, தான் பார்க்கக் காத்திருந்தவனைச் சந்தித்தாள். சட்டென, கருப்புநிறக் கோட்டும் மிலிட்டரி பின் வைத்த கருப்பு பெரெட் அணிந்திருந்த அந்த வெள்ளைக்காரப் பெண்தான் எடித் என்று அவன் உறுதியாக நம்பினான். ஆம். அகலமாக இருந்த அவளது வட்டமான விழிகளில் பரபரப்பு தெரிந்தது. காதலித்த ஒருவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருவரைத் தவிர வேறு யாரிடமும் அத்தகைய பரபரப்பு இருக்காது. அவளுக்கு இருபத்தி இரண்டு வயது இருக்கலாம். திருமணமாகதவளாகவும், துடிப்பும் நம்பிக்கையும் சேரக் காத்திருப்பவளாகத் தெரிந்தாள். நம்பிக்கை, அதுதான் அவளிடம் கவர்ந்த்து. மேலும் அவளிடம் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. வார இறுதி நாட்களைக் கழிக்க போதுமான அளவில் அது இருந்தது. சிறிது நேரம் அவள் அருகில் நின்று பார்த்தான். ஆனால் அவனை அவள் கண்டு கொள்ளவேயில்லை. அங்கிருந்த பெரிய கதவுகளின் வலப்பக்கமும் உட்புறமும் நின்று அவ்வப்பொழுது முட்டி மோதும் கும்பலைக் கவனிக்க அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தான். வாயிற்புறத்தின் வெளிச்சத்தில், அவளது வட்டமான கூந்தலின் பளபளப்பும், சோர்வான கண்களில் ஆவலும் தெரிந்தன. ஏற்கனவே 6.35 ஆகியிருந்தது. நிச்சயமாக, அது அவளாக இருக்க முடியாது என்று நினைத்தான்.
பிறகு திடீரென அவனுக்குச் சலிப்பு ஏற்பட்டது. தன்னை நினைத்தே ஒரு வகையான அவமானம் ஏற்பட்டது. ஏதாவது சாப்பிடலாம் அல்லது ஒரு கப் காபியாவது அருந்தலாம் என்று மூன்றாவது அவென்யு வரை நடந்து சென்றான். ஒரு காபிகடைக்குள் நுழைந்தான். செய்தித்தாளை வாங்கியவன் பரிமாறுபவன் வருவதற்குள் திறந்து புரட்ட ஆரம்பித்தான். ஆனால் பரிமாறும் பெண் வந்தபோது, அவனுக்கு எதுவும் இப்பொழுது தேவை இல்லை என்பதை உணர்ந்து மெல்லிய குரலில் வருத்தம் தெரிவித்து எழுந்தான். வந்த இடத்துக்கே திரும்பிப் போய் அந்தப் பெண் இன்னும் அங்கு இருக்கிறாளா என்று பார்க்கலாம் என்று நினைத்தான். அவள் அங்கு இருக்கக் கூடாது என எதிர்பார்த்தான். ஏனெனில் அவளுடன் ஒரு மோசமான விளையாட்டில் அவன் ஈடுபட்டிருந்தான். அப்படி அவள் இன்னும் அங்கு இருக்க நேர்ந்தால் அது ஒரு விளையாட்டு என்பதை அவளிடம் தெரிவித்துவிட வேணடும். அவள் இன்னும் அங்குதான் இருந்தாள். அவளை அவன் பார்த்ததும், தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு தகவல் மேசையை நோக்கி நடந்தாள். அங்கு வட்டமடித்துவிட்டு மீண்டும் அவள் திரும்பி வருவதையும் கதவுகளுக்குப் பக்கத்தில் அதே இடத்தில் நிற்பதையும், பிறகு ஏதோ ராசியில்லை என்பதுபோல் காத்திருக்கும் இடத்தை அடுத்த பக்கத்துக்கு மாற்றுவதுமாக இருப்பதையும் கவனித்தான். அவளது அழகிய கண் இமைகள் இப்பொழுது பதற்றமான கோணத்தில் காத்திருந்தன. சித்ரவதைக்குள்ளான காத்திருப்பும், ஏறக்குறைய நம்பிக்கையற்ற எதிர்பார்ப்பும் அவற்றில் தெரிந்தன.
ஆனால், இன்னமும் ஒரு நம்பிக்கைக்கீற்று மீதம் உள்ளதாக அவன் நினைத்தான். சாதாரணமாக அதுதான் பலமான அம்சம். தனக்குக் கிடைத்தவற்றிலேயே உறுதியான எதார்த்தம் அதுவாகத்தான் இருக்கும் என உணர்ந்தான். அவளைக் கடந்து சென்றான். இப்பொழுது அவள் அவனைப் பார்த்தாள். பிறகு உடனடியாக அவனுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினாள். லெக்கிங்டன் அவென்யூவைத் தாண்டியுள்ள வெற்றிடத்தை உற்றுப் பார்த்தபடி இருந்தாள். அவளது வட்டமான இளம் விழிகளில் நீர் கோர்ப்பதை அவன் அவதானித்தான். கைகளைப் பாக்கெட்டுகளில் விட்டபடி முகத்துக்கு நேராகப் பார்த்து அவளைக் கடந்து சென்றான். அவனை எரிச்சலுடன் அவள் பார்த்தாள். அவன் புன்னகை செய்தான். அவளது பார்வை அவனை நோக்கித் திரும்பியது. அதில் அதிர்ச்சியும் நம்பிக்கையின்மையும் நிறைந்திருந்தன. அவன் சிரித்துவிட்டான். அது அவன் உள்ளிருந்து சட்டென எழுந்த சிறு புன்னகை. ஆனால் அழுதுகூட இருக்கலாம் என நினைத்தான். மாறாக சிரித்திருக்கிறான், அவ்வளவுதான். அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு அது துல்லியமாகத் தெரியும்.
“மன்னிக்கவும்” என்றான். அவள் வெறித்துப் பார்த்தாள். அவன்மீது செலுத்திய பார்வையில் புதிர்கலந்த வியப்பு இருந்தது. “மன்னிக்கவும்” என்று அவன் மீண்டும் சொல்லிவிட்டு திரும்பிநடக்க ஆரம்பித்தான். திரும்பிப் பார்த்தபோது, நம்பிக்கையிழந்த குழப்பத்தோடு ஏறக்குறைய பயத்தோடு அவள் அவனை உற்றுநோக்குவதைக் கவனித்தான். பிறகு அவள் வேறு எதையோ பார்த்தாள். திடீரெனத் தோன்றும் தலைகளைப் பார்க்க முன் காலால் எம்பி தலையை உயர்த்தி கண்களால் துழாவினாள். கடைசியாக அவளிடம் அவன் பார்த்தது அவளது ஜொலிக்கும் கண்கள். அவற்றில் உறுதியான ஆனால் அபத்தமான, தன்நிலையிழந்த நம்பிக்கை காணப்பட்டது. லெக்கிங்டன் அவென்யுவைத் தாண்டி நடந்தபோது அவன் அழுதுவிட்டான். இப்பொழுது அவனது கண்கள் சரியாக அந்தப் பெண்ணின் கண்கள் போன்றே இருந்தன என்பது அவனுக்குத் தெரியும். அதாவது, தளராத நம்பிக்கை நிறைந்து ஜொலிக்கும் கண்கள். தன் தலையைப் பெருமிதத்துடன் நிமிர்த்தினான். இன்று இரவு ரோசாலின்ட்டுக்கு எழுதவேண்டிய கடிதம் பாக்கி இருந்தது. அதை அவன் எழுதத் தொடங்கினான்.
பத்ரீசியா ஹை சுமித் (1921 - 1995) அமெரிக்காவில் பிறந்தாலும் வாழ்வின் பெரும் பகுதியை அய்ரோப்பாவில் கழித்த பெண் எழுத்தாளர். அவர் அதிகமாக மர்மம் கலந்த புதினங்களையும் கதைகளையும் எழுதியவர். உளவியல் ரீதியான பதற்றம், குற்றமனம், மனோநிலைகள் எனப் பல்வேறு அம்சங்களை அவரது புனைவுகளில் உணரலாம். Poised to Fly (1970) என்னும் இக்கதை, அவரது Eleven (1994) என்ற கதைத் தொகுப்பில் உள்ளது.
நான் சொற்களில் இருக்கிறேன் சொற்களில் இறக்கிறேன் மேலும் பிறரின் சொற்களிலிருந்து விழிக்கிறேன்.
கவிதை தொடங்குவதில்லை ஆகவே அது முடிவதுமில்லை துரதிர்ஷ்டவசமாக கவிதை ஒன்றுக்கும் இரண்டுக்குமிடையில் இரண்டுக்கும் முடிவின்மைக்குமிடையில் முடிவின்மைக்கும் சுழியத்துக்குமிடையில் சுழியத்துக்கும் மைனஸுக்குமிடையில் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு வஸ்து எனில் கவிதை ஓரிடத்தில் இருந்துகொண்டு இல்லாததைப் பிரதிமிக்கிறது அவ்வாறே ஒன்றுமற்றவையிலிருந்து ஒன்றுமில்லாததைப் பிரிக்கிறது எனவே கவிதை ஒரு வெற்றுக்கோப்பையிலிருந்து வெடிமருந்தைத் தயார் செய்கிறது நிலவின் புருவத்தில் இருந்துகொண்டு கிழட்டுச் சூரியனின் மீசையை வரைகிறது எப்போதும் அது மொழியாதவற்றின் உள்ளேயான பாய்ச்சலுடன் இயங்கிக்கொண்டிருப்பது.
நான் அண்ணாந்து பார்த்தபோது உலகம் சாளரத்தருகில் வந்து நின்றது அது ஒரு காகம் தன் கண்ணாடிக் குகையிலிருந்து கத்திக் கரைந்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம் ஒரு பந்தைக் கையிலெடுத்து உலகின் முகத்தில் வீசினேன் அது தன்னையே சுருட்டி திருப்பி வீசியது இப்படியே நாங்கள் இரவு முழுதும் விளையாடிக்கொண்டிருந்தோம் காலையில் சொன்னபோது யாரும் அதை நம்பத் தயாரில்லை அங்கே நானும் அந்த முட்டாள் பந்து மட்டும் எப்போதும்போல் உருண்டுகொண்டிருந்தது
படுத்திருக்கும் வேளையில் என் தந்தை உண்ணமாட்டார் அவருக்கு அவ்வாறு உண்ணவும் பிடிக்காது புரையேறிவிடும் என்பதாக இருக்கலாம் அவர் கல்லறைக்கு முன்பு நான் காத்திருக்கிறேன் நீள்துயிலிலிருந்து அவர் எழுந்துகொள்வதற்கு நிலவின் நெடி இரவைக் கீறிச் செல்கிறது.
எக்காலத்திலும் நிகழக்கூடிய மரணத்திற்கு அளிக்க உவந்தேகியிந்த உடலைத் தூக்கி சுமந்துகொண்டு திரிகிறேன் திரைகளின் மறைவிலிருந்து வெளிவரும் உண்மைகளின் வெளிச்சத்தில் பூப்பெய்துகிறது மரணம் உடைந்து சிதறும் யதார்த்தம் தவிர்த்த பொய்மை கணங்களின் குருதிகளற்ற கண்ணீரின் வெம்மையில் தனக்கான ஒரு கோப்பை லெமன் டீயைத் தயாரித்து அருந்தி மகிழ்கிறது மரணம் எனது உடலின் மீதமர்ந்தவாறு அனைவரும் சமமென்றுரைத்து.
சுகானுபவம் தந்த தித்திப்பில் ஓய்வைத் தழுவிக்கொண்ட சொற்களை நீர்மை துளிர்க்கும் பாலைநிலத்தில் தேடி அலைகிறேன் சிதறுண்டு போயின உனதும் எனதும் ஆன சொற்கள் காட்சிப்படுத்திய கணங்களில் வரியொலி தவிர்த்து அவற்றை விவரிப்பது குறித்து மாற்றிச் சிந்திக்கையில் தோற்றுவித்து விடும் பிரச்சினைதனை வேறு ஒரு மொழி உற்பத்தியாகி கடலின் இனிப்பில் கரைந்து போன நாட்களின் பொழுதுகளில் மீளவும் ஞாபகம் செய்து உயிர் கொள்கின்றன சொற்கள் நிகழும் பேரின்ப பெரு அமைதியில் வழிவிட்டுக் காத்திருக்கிறார் கட உள்.
கரைந்தொழுகும் காலம் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிவிடும் எந்தன் கனவுகளைத் துரத்தியோடிச் சென்று தொடர்வதில் நிகழ்கிறது சில நிசப்தங்கள் வழுவமைதி ஒழுகல்களின்றி என்னில் புத்தன் கல்லைச் சுமந்தான் கற்கள் கூடி சுமந்தன புத்தனை நான் சுமக்கிறேன் ஒரு கல்லை ஒரு புத்தனை என்னில் நிகழும் சில கனவுகளை.
நானும் மகளும் சந்தைக்குச் சென்றிருந்தபொழுது வயது முதிர்ந்த மூதாட்டியொருத்தி இலந்தம் பழங்களைச் சணல்பையில் விரித்து விற்றுக்கொண்டிருந்தாள். கருவேப்பிலைக்கட்டுகள் ஆயிரம் விற்றுத்தீர்ந்தால் ஒரு கூறு இலந்தைகள் விற்றுத்தீரும்போல. கிழவியின் தோல்சுருக்கங்களைப் போல பழங்கள் வாடியிருந்தன. கூறொன்றை வாங்கிப் பையில் திணித்துக்கொண்டேன். கொஞ்சூண்டு பழங்களை வாயில் போட்டுக்கொண்டு மகளுக்கும் பழம் ஒன்றை ஊட்டிவிட்டேன். வாயில் திணித்த மறுநொடியே பழம் பிதுக்கிக்கொண்டு வெளியேறிவிட்டது. நாவிற்கு ஒப்பவில்லைபோலும். ஏன் துப்பிவிட்டாய் என்றதற்கு,
“பழம் கசக்குது” என்றாள்.
“பழம் புளிக்கிறது” என்று சொல்லத் தெரியாதவள்.
அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஏன் இலந்தை என்றென்றும் பிடித்திருக்கிறது?
இலந்தை விற்றவள் என் பாட்டியை நினைவு படுத்தியிருந்தாள். கிழவியின் குழைந்த மார்புக்குள் உடல் புதைத்துக் கடந்த குளிர் பருவங்களையும், இரவுகளையும், ஒற்றைக்கண்ணன்களையும் நினைக்கச் செய்துவிட்டாள். அருகிலேயிருந்தும் சென்றுசேரமுடியாத ஊரை, காட்டோடையோரம் நின்றிருந்த இலந்தை மரத்தை, (ஒற்றை இலந்தை மரத்திற்காய் ஓடும் சிற்றோடை என்றும் சொல்லலாம்) முதல் பழத்தைப் பறித்துக் கொடுத்த ஏழூர்க்காளை, காட்டோடை மீன் குஞ்சுகளை என்று நினைவில் ஆழ்ந்து கிடந்ததையெல்லாம் மேலெழும்ப வைத்துவிட்டாள்.
இலந்தைப்பழம் என்றென்றைக்கும் எனக்குள் புளிப்பதில்லை. ‘எல்லோருக்கும் இலந்தைகள் இனித்துவிடுவதில்லை.’ ஒற்றை ஆப்பிளுக்கு பின்னால் பத்து இலந்தைகள் மறைந்து கிடக்கின்றன. இலந்தைகளை உணரும் இதயங்கள்தான் ஆப்பிளுக்குள் உறைந்திருக்கும் காஷ்மீர்ச் சூழலை உணரமுடியுமென்று நம்புகிறேன். யதார்த்தனின் நகுலாத்தை நாவல் என் உள்ளங்கைகளுள் குவிந்திருக்கும் இலந்தைகள். குழந்தைகள் சிற்றோடையில் பழைய கிழிசல் சேலையை நீரில் உள் நுழைத்து எடுக்கும்போது பிஞ்சுக் கைகளில் அள்ள அள்ளத் துள்ளும் மீன்குஞ்சுகள் போல யதார்த்தனின் நாவல் நதியெங்கும் அத்தனை கலைச்சொற்கள்.
மீன் குஞ்சுகளைப் பாலிதீன் பைகளிலோ, சிமெண்ட் தொட்டிகளிலோ அல்லது கண்ணாடிக்குப்பிகளிலோ சேகரம் செய்வதைப்போல, அக்கலைச்சொற்களைச் சேகரித்துக்கொண்டேன். பாத்திமாறுக் சானா அவர்களுடைய முன்னட்டை ஓவியம் மொத்த நாவலையும் எப்படி பிரதிபலித்திருக்கிறது அல்லது மொத்தத்தையும் எப்படி பிரதிபலிக்க முயன்றிருக்கிறது என்பதனை, நாவல் வாசிப்பின் மூலமே உணரமுடியும். கீரிப்பிள்ளை மேட்டிற்கு விலக்கான சர்ப்பங்கள் ஏன் ஓவியத்தில் இவ்வளவு விரவிக் கிடக்கின்றன?
சர்ப்பங்கள் புகுந்த நிலமாகிப் போனதன் குறியீடா இல்லையா எனத் தெரியவில்லை. சர்ப்பங்கள் நிறைந்த வாழ்வாகவே நிலம் மிஞ்சிப்போகிறது. கீரிப்பிள்ளை மேடு, ஆத்தை நின்ற மடுவான கீரிக்குளம், கீரிக்குளத்து வான் கதவுகள், வன்னி நிலத்து காட்டுயிர்களான மான், மரை, கலட்டியான், கூழைக்கிடாய், தட்டான்கள், மந்திகள், கீரிக்குளத்தையும் நகுலாத்தை நிலம் காக்கும் சிறு தெய்வங்கள், குளத்திற்கான கதைகள், நிலத்திற்கான கதைகள், சிறுதெய்வங்களின் மீதான ஊரின் மூத்த பெண்களான வள்ளியத்தை ஆட்சி, பூவரசாட்சி, அன்னம்மாள் என்று நீண்ட கிழவிகளின் வாய்வழிக் கதைகள், சக்கடத்தான் கதை, வேட்டைக்காரனின் துவக்கிற்கொரு கதை என்று ஊரும் நாவலும் கதைகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அம்மா சாமியாடுவாளென்று எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன்.
அமாவாசையன்றோ, முழு நிலவன்றோ சனங்கள் கூடுவார்கள். அவள் எனக்கு அந்நியளாகிவிடுகிற தருணங்கள் அவை. சிறுதெய்வங்களிடம் கேட்பதற்கும் பெறுவதற்கும் சனங்களிடம் ஏதோ ஒன்று உள்ளிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு பலகீனம் என்பதைத் தாண்டி வேறெதையும் நான் இன்னும் உணர்ந்திருக்கவில்லை. சிறுதெய்வங்களின் வாக்குகளின்றிச் சனங்களால் இவ்வாழ்வை நம்பிக்கையுடன் கடக்க முடிவதில்லை. பெருந்தெய்வங்கள் நம்மிலிருந்து வெகுதூரத்தில் இருக்கின்றன. நாம் சிறுதெய்வங்களோடும், சிறுதெய்வங்கள் நம்மோடும் காலம் காலமாய் உரையாடிக் கொண்டிருக்கிறோம். பெருந்தெய்வங்களிடம் உரிமை கொண்டாட முடியாமல் போவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தப்புரிதல் மனதிற்கு மனம் நிச்சயம் வேறுபடவே செய்யும், ஆனால் பொதுவான மனநிலையில் சிறுதெய்வங்களின் மீது நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. சிறுதெய்வங்களின் வாக்குகளை எளிதாக நம்மால் நம்ப முடியும். நம்பிக்கை முறியும்பொழுது அவர்களை வசைபாடவும் பின் அவர்களின் மீதான கோபத்தை இயல்பாக ஒரு சூடம் கொழுத்தியோ தேங்காய் உடைத்தோ கடந்து போக முடியும். சிறுதெய்வங்கள் நம் மூதாதையர்கள் என்பதிலிருந்து இந்த உரிமை நம்மை அவர்களோடு மிக நெருக்கமாக வைத்திருக்கிறது. சாமியாடுதல் என்ற சொல்லிற்கு மாற்றாக கலையாடுதல் என்ற சொல்லை யதார்த்தன் எனக்கு அறிமுகம் செய்கிறார். காலத்திற்கும் ‘அம்மா கலையாடுபவள்’ என்ற சொல்லே நினைவில் இருக்கும்.
வேட்டைக்காரன் வாழ்வு முறை, மனோநிலை, வேட்டையில் அவனடையும் ஓர்மம், வாழ்வோடு வாழ்வாகிப்போன அவன் சக்கடத்தான்கள், வேட்டைத் துவக்குகள், வேட்டை மறுப்பு காலத்திற்குப் பிந்திய வேட்டைக்காரன் மனோநிலையென அழகாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாவல் பாத்திரமான காங்கேசன் கட்டியிருந்த பச்சை நிற பெல்ட், நீண்டகாலமாக மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தவொன்று. சிறுபிள்ளைப் பருவத்தில் பத்துப் பதினைந்து வேட்டை நாய்கள் ஊரைச் சுற்றிக்கொண்டே இருந்திருக்கின்றன.
அவைகள் பெரும்பாலும் குரைத்துப் பார்த்ததில்லை. ‘வாயடிக்கிற நாய் வேட்டைக்காகாதுதான்’ என்கிற பழமொழி மிகச் சரியானதுதான். எங்கள் குடிசைக்குப் பக்கத்துக் குடிசை வேட்டைக்கார கிழவன் என்றோ காலமாகிவிட்டான். எப்படி இறந்தான் எப்பொழுது இறந்தான் என்றெல்லாம் கேட்டறியும் மனோநிலையை இப்பெருநகர வாழ்வும் இயந்திரத்தனமான வேலைகளும் மனோரீதியாக அனுமதித்திருக்கவில்லை. கிழவனின் புலிமீசை இன்னமும் நினைவில் நிறைந்திருக்கிறது.
வேட்டை நேரங்கள் போக மற்ற நேரங்களில் எல்லாம் அவன் சிரித்துக்கொண்டே இருந்தது மட்டும்தான் அதிகமாகத் தேங்கிக் கிடக்கிறது. வேட்டைக்காரன் இடுப்பை அணைத்திருக்கும் பச்சை பெல்ட் வெறும் சாரத்தை மட்டும் அணைத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல... குறுங்கத்தி ஒன்றை எப்பொழுதும் சுருகியே வைத்திருந்தான். பாதைகளில் குறுக்கே அவனைச் சந்திக்க நேரிடும் பொழுதெல்லாம் ஒருவித போலி பயத்தை உருவாக்கிச் சிரித்துக்கொண்டே செல்வான் பல நேரங்களில் அவனைப் பூனைமீசைப் பூச்சாண்டி என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆறு வயதிற்கு மேலாகும் வரை நான் எந்த உடுப்பும் பெரிதாக அணிந்திருக்கவில்லை.
சக்கடத்தானின் குட்டிகள் உடுப்புகளோடா திரியப்போகுதுகள். அவ்வப்பொழுது தனக்குப் பசிக்கிறது எனக் கூறி கத்தியை வைத்துக்கொண்டு காதறுக்கப் போவதாகவோ குடல் அறுக்கப் போவதாகவோ பகடி சொல்லி சிரித்துக் கடப்பான். அவனை நான் மீண்டும் பார்த்தது இந்நாவலில்தான். அந்தக் கிழவன் பெயர் கூட இன்றுவரைத் தெரியவில்லை. அவன் பெயரும் சின்ராசனாகவோ சின்னானாகவோ இருக்கக் கூடும். சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோதுதான் கிழவி வழிமறித்தாள். ‘கருச்சாமி நல்லாருக்கியா சாமி?’ என்றாள்.
‘ப்பு’ உச்சரிப்பில் என்றும் இருந்ததில்லை. யதார்த்தனின் மொழியில் சொல்வதென்றால், ஏதோவொரு ஆத்தையின் குரல். ‘வேட்டைக்கிழவனின் கிழவி’ ‘புருசன் போய்விட்டான்’ பிள்ளைகளும் போய்விட்டார்கள் விசனப்பட்டாள். வேட்டைக்காரனின் பிள்ளைகளிலொருவன் ஏதோவொரு பெருநகரத்தின் கட்டிட உச்சியில் வண்ணம் பூசிக்கொண்டிருந்த போது கீழே விழுந்து முடங்கிப்போனது நினைவில் வந்தது. ‘நானும் உன் பிள்ளை தான் கிழவி, என மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டு, ஒரு வெற்றிலைப்பாக்கு கூட வாங்கித் தராமல்தான் கடந்து வந்தேன். கீரிக்குளத்தின் ‘வான்கதவுகள்’ மற்றும் அவ்வொலிச் சொல் என் முன்னால், பூமிக்கும் வானுக்குமான அரூபத் தடுப்பை ஏற்படுத்திவிட்டிருந்தது. கீரிக்குளமும் அதன் வான்மதகுகளும் எண்ணற்ற கதைகளைத் தேக்கி வைத்து யதார்த்தனிடம் கையளித்திருக்கின்றன. கீரிப்பிள்ளை மேட்டின் வளத்தைக் குறிப்பிடும் பொழுது, காக்கை வதன கீரிகுளத்தின் வெகுதூரத்திலிருந்து அதனை நோக்கியவாறு காத்து நிற்கிறான். மாரியில் காக்கை வதனன் கால்வரை தண்ணீர் ஏறி நிற்கிறது.
தண்ணீர் இறங்கிப் பயிர்கள் மஞ்சள் பூத்துச் சரிந்து அறுவடைக்குத் தயாராகும்போது காக்கை வதனன் பழுப்பு நிறத்திற்கு மாறி நிற்கிறான். ‘மாரியில் பச்சை, கோடையில் மஞ்சள்’ ‘பருவத்தின் நிறம் அவனுக்கு’ என்கிறார் யதார்த்தன். சிறுதெய்வத்திற்கு இவ்வலங்காரமே பெரும படையல் எனத் தோன்றுகிறது. நாவல் முழுவதும் ஆங்காங்கே பாலுறவு சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நகுலாத்தை வளைவின் தட்டான்களும் குரங்குகளும் மந்திகளுமே பாலுறவுக் கதைகளை வைத்திருக்கின்றன. முகம் சிதைந்த தட்டானின் பாலுறவு காங்கேசனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
நீதனுமொரு முகம் சிதையாதத் தட்டான்தான். பாலுறவில் வரம்பு, முறை, மரபு சார்ந்த கட்டுப்பாடு என்பதெல்லாம் யதார்த்த வாழ்வில் சாத்தியமில்லைதான். விதிவிலக்குகள் இருக்கலாம். ஒருபாலுறவு, வேறு சில வழக்கத்திற்கு மாறான பாலுறவுகள் என்பதெல்லாம் புரிந்துகொள்ளாமலும் உணர்ந்துகொள்ளாமலும் புறக்கணிக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவதெல்லாம் மனப்பக்குவத்தின் போதாமைகளே... குழந்தைப் பருவம் முடிந்து உடல் பாலியல் மாற்றங்களை உணரத் தொடங்கும் பொழுதே பெண்பிள்ளைகளோ ஆண்பிள்ளைகளோ தங்கள் பாலுறவு வழிமுறைகளைக் கண்டடையத் தொடங்கிவிடுகிறார்கள். சிறுபிள்ளைகளான வெரோனிக்கும் தாமரைக்குமான பிரியம், அன்பு, காதல், காமம், இதை நமக்கு அறியத் தருகிறது. ஒருபாலுறவு வெறும் உடல் தேவைக்கானதாக மட்டும் இருக்கவில்லை. ஒரு மனம் இன்னொரு மனதை முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது.
இந்த ஆழமான நம்பிக்கைகளே வளர்ந்து வளர்ந்து பிறகு பிரியங்கள் முரண்கள் வாதைகள் உடற்கலப்பு என்றெல்லாம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. வெரோனி மற்றும் தாமரைக்கிடையிலான உறவுமுறை மிக அழகாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒருபாலுறவுக் காதலை இவ்வளவு நேர்த்தியாக சொல்லிச் செல்லும் நூல்கள் மிகக்குறைவென்று எண்ணுகிறேன். ஆண் தன்பாலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான எல்லா சூழலையும் சமூகம் கடைவிரித்து வைத்திருக்கிறது. பெண்களுக்கான பாலியல் தேவைகள், அதுவும் ஆண்துணை இழந்தவர்க்கு எல்லா வழிகளும் பெரும்பாலும் மரபு, ஒழுக்கம் போன்ற விலங்குகளால் கட்டப்பட்டுவிடுகிறது. இத்தாகம் ஏதேனுமொரு வழியில் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது, பூர்த்தி செய்யப்படவேண்டியிருக்கிறது. இவ்வுறவு முறைகளைத்தான் பொதுப்புத்தியில் கள்ளத் தொடர்பு என்ற அருஞ்சொல்லை உருவாக்கி உபயோகித்து, முடிந்தவரை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. நிர்மலாவிற்கும் புலேந்திரனுக்கும் உடற்தேவைகளைத் தாண்டியதொரு பிணைப்பு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இருவருக்குமான கடந்தகாலக் காயங்களுக்கு மாறி மாறி மருந்து தடவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருவருக்குமான உரையாடலில் நிர்மலா அடிக்கடி இறந்த கணவனைப் பற்றி கேட்கிற கேள்வி, ‘நீ அவரை ஒன்றும் செய்யவில்லை தானே?’ புலேந்திரன் ஏதேனும் செய்திருப்பானா வென்பதெல்லாம் கதையாசிரியனுக்கு மட்டுமே தெரியும். அவளால் ஒருபோதும் மறைந்த கணவனை நினையாமல் இருக்கமுடிவதில்லை. தம் பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியாத அல்லது அவர்களுக்கு விளங்க வைக்கமுடியாத உறவுத்தேவைகளிவைகள். கைக்குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருக்கிறாள் தமயந்தி. நீண்ட தனிமை தன் தாகம் தீர்க்கப்படாத பொழுதுகளில் மனவழுத்தத்தின் புதைகுழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைப் புதைக்கத் தொடங்கிவிடுகிறது. பாலியல் வறண்ட தனிமை கொலை செய்யவோ, தற்கொலைக்கோ தூண்டுவது அடிக்கடி கேள்விப்படுகிற செய்திகள்தான். சிறுவன் சாரங்கன் பூனைபோல் பதுங்கி தமையத்தின் அறைக்குள் நுழைகிறான். அசையாமல் கண்மூடிப் படுத்துக் கிடக்கிறாள்.
வந்தவனவளின் பின்னால் படுத்துக்கொள்கிறான். பிரமையோ இதுவெனச் சந்தேகிக்கிறாள். ஆனால் உருவத்தை நம்பாமலிருக்க முடியவில்லை. அடிவயிற்றில் நெரி கண்டதுபோல் நுணுகி வலிக்கிறது. வியர்வை வாடை எழும் இவள் பின்கழுத்தின் மென்மயிர்களுக்கு இடையில் அவனுடைய நாசி அழுத்தி முகர்கிறது. இருவுடல்கள் வியர்வையால் வழுக்கித் திரும்புகின்றன. பாயிலிருந்து குளிரும் வெறுந்தரைக்கு உடல்கள் இணைந்து நகர்ந்தன. ஒரு கொலையோ தற்கொலையோ நீட்டிக்கப்படும் தருணங்களிவை. மசாலாக்கண்ணியும், பார்வை பார்க்கிற கிளியும், பூசை செய்பவருமான கிளியன்ரிக்கும் (கிளி என்பதை விட கிளியன்ரி என்பதே பிடித்திருக்கிறது) அட்சயனுடனான சந்திப்புகள், உரையாடல்கள் யதார்த்தத்தின் மொழியில் அப்படியே பதிவு செய்வதைத் தவிர வேறு சொற்றொடர்கள் பொருத்தமாகத் தோன்றவில்லை.
“உனக்கு மீசையெல்லாம் முளைச்சிட்டு எண்டே நம்பேலாம கிடக்கு, நீ சிப்பைப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு சிப்புக்குப் பட்டிட்டு எண்டு வீறிட்டது, நேற்றுமாரி எல்லோடா கிடக்கு, உண்மையாகவே வளர்ந்திட்டியோடா?” என்கிறாள். அட்சயனை ஏகத்துக்குச் சீண்டுகிறாள். சிப்பு விசயத்தைக்கூட ஞாபகத்தில் வைத்திருக்கிறாள். “சாப்பிடேன்”
“இல்லை வேணாம்.”
“எனக்கு பசிக்குதடா, ஒவ்வொரு நாளும் தனியாத்தானே சாப்பிடுறன், இண்டைக்கு என்னோடு சாப்பிடேன்?”
“என்ன சாப்பாடு?”
“சோறுதான். இண்டைக்கு மரக்கறி.”
சோற்றைக் குழைத்து உருட்டி முதல் பிடியை ஏந்தினாள். அட்சயன் ஆ... என்று சோற்றை வாங்கினான். அவள் இரண்டாவது வாயை நீட்ட,
“நீயும் சாப்பிடன் அன்ரி” கிளியன்ரி தன் குழந்தைத்தனத்துடன் கேட்கிறாள்,
“எனக்கு ஆர் தீர்த்ததி விடுற”
அப்படியொரு குழந்தைத்தனமான கேள்வியை இதுகாருமவன் கேட்டிருக்கவில்லை. எதிர்பார்த்திருக்கவுமில்லை. கைகள் அனிச்சையாக சோற்றைக் குழைத்து அவளுக்கு ஊட்டுகிறான். பரஸ்பரம் புதிதாகப் பார்க்கும் பார்வைகளில் சொல்லப்படாதச் சொற்களுக்குப் பஞ்சமில்லை. வெளியில் குரல் கேட்டது. கோயிலுக்கு வந்தவர்கள் யாரோ அழைத்தார்கள.
“ஓம் வாரன்” கடைசி சோற்றை இவனுக்கு நீட்டும்போது,
“காணுமோ இன்னும் குலைக்கட்டோ” என்கிறாள்.
பசித்ததுதான்.
“இல்லை காணும் கூப்பிட்டீனம்” என்கிறான்.
“அவையளை விடு உனக்குக் காணுமோ?”
“ஓம் வடிவாகக் காணும்.”
அவளுக்குக் காணுமோ என்று கேட்க நினைக்காத மனதை அவள் இவன் கைகளை, சோறு குழைத்த அதே பாத்திரத்தினுள் வைத்துக் கழுவும்போதுதான் கடிந்துகொண்டான். இவன் வாயைத் துடைக்கும்போது தலையைக் கோதி ஒருமுறை நெற்றியில் முத்தமிட்டு அனாயாயசமாக கூடாரத்தை விட்டு வெளியேறினாள். முத்தம் நெற்றியில் அழிபடாமல் கிடக்கிறது. வெறுமனே அவனை அங்கேயே விட்டு விட்டுச் சென்றாள். கிளியன்ரியை நாவலாசிரியர் கிளிப் பிள்ளையாக மாற்றிய தருணங்களிவை.
இரண்டு காதல் கதைகள் எனக்கு முக்கியமாகப்படுகிறது. மார்கழிக்கும் திகழ்கசீரனுக்குமான காதல் உறவு மற்றும் கவிதாவிற்கும் சின்ராசனுக்குமான காதல் உறவு. மார்கழி ஒரு தண்டனையின் பொருட்டு இயக்கத்தின் மருந்தகப்பிரிவில் பணி செய்கிறாள். வெரோனிடம் பகிர்ந்துகொள்ளப்படும் அவள் காதலும் பகிர்ந்துகொள்ளாமல் போன ரகசியங்களும் என்றென்றும் வாதைகளாய் வடுக்களாய் வாசகனுக்குள் படிந்துவிடுகின்றன. கலீல் ஜிப்ரான் காதல் கடிதங்களை என்றைக்கோ வாசித்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஜிப்ரானும் மேரிஹஸ்களும் என்றைக்கும் பார்த்துக்கொண்டதில்லை என்பதாக நினைவு. கடிதத்திற்கும் மறு கடிதத்திற்கும் மாதக்கணக்கான இடைவெளிகள். அவ்விடைவெளிகளின் நீளம் மனதாலும் அளக்கமுடியாது. மாதக் கணக்கில் பதில் கடிதத்திற்குக் காத்திருக்கவேண்டும் என்பதால் என்னவெல்லாம் எவ்வளவு எல்லாம் பகிர்ந்துகொள்ளமுடியுமோ பகிர்ந்தார்கள். மேரிஹஸ்களின் கடிதத்திற்குக் காவிய வரிகளைப் பதிலளிக்கிறான் ஜிப்ரான். மார்கழிக்கான சூழல் அப்படி இருந்திருக்கவில்லை.
உலகிலேயே ஒன் வேர்ட் ஆன்சர் பரீட்சைக்குப் பதில் எழுதுவதைப் போலப் பதில் வருகிறது திகழ்கசீரனிடமிருந்து. தனக்குத் தெரிந்த விருப்பத்தைக் கடிதமாக வரைந்து கடிதத்திலும் வரைந்து அனுப்பி வைக்கிறாள். திகழ்கசீரனிடமிருந்து வெகுசில வரிகளும் இரண்டு அன்பளிப்புகளும் வந்து சேர்கின்றன. உலகில் யாரும் அளித்திராத அன்பளிப்புகள். ‘ஒன்று சயனைடு குப்பி’ ‘இன்னொன்று ஒரு ஜோடி பாக்கெட் உடைக்காத பெரிய எவரடி பேட்டரி’ உச்சபட்ச காதல் பரிசுகள் வேறென்னவாக இருந்திருக்க முடியும். அன்பளிப்புகளைக் கைகொள்ளமுடியாத மார்கழி வன்னி நிலத்தின் ஏதோவொரு திசையில் நடுகல்லாய் நிலைத்திருக்கிறாள்.
“அவள் கரும்புலியல்லோ”
இப்பொழுதெல்லாம் ஐஸ் விற்பவர்களை அடிக்கடி பார்க்க முடிவதில்லை. உடைந்த தகர டப்பாக்கள், காலி மதுப்புட்டிகள் என குப்பைமேடு குப்பை மேடாய் தேடிக்கொண்டு ஐஸ்காரன் கால்களைச் சுற்றி திரிந்ததெல்லாம் அவன் சைக்கிள் சக்கரம் போல் ஞாபகம் வெளிகளில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. விதவிதமான பழங்களை அறிந்தவனுக்குத் தான் அறிந்திராத ஐஸ் பழத்தை அறிமுகப்படுத்துகிறார் யதார்த்தன். குழந்தை பருவத்தில் செல்லாக் காசுகளைக் கொடுத்து அடம்பிடித்து வெரோனியும் தாமரையும் கொஞ்சல் மொழியில் கெஞ்சி ஐஸ்காரனை என்றென்றும் ஐஸ்பழந்தரும் மரமாக மாற்றிவிடுகிறார்கள். (மரியாள் கையளித்த உண்டியல் காசுகள் என்றென்றைக்கும் செல்லுபடியாகும், மரியாளுக்கு முன்னால் அவனொரு தேவதூதன்) சாதிய வன்கொடுமைகள் பற்றிய அரசியலை நாவலின் பாத்திரங்களே தனித்துப் பேசுகின்றன.
தீவிர சாதிய மனோநிலை கீழ்ப்பட்டத்திலிருந்து தலைமைகள் வரை பரவலாக இருந்திருக்கிறது. நூலாசிரியரன் பாத்திரங்கள் ஆங்காங்கே விமர்சனம் செய்துகொண்டே இருக்கின்றன. காடு கழனி வைத்து வாழ்ந்த தோட்டக்காட்டான் முத்துசாமியைச் சாதிப்பெருமித சனங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பத்துப் பதினைந்து வெள்ளாளர் செட்டு இளைஞர்களால் முத்துசாமி இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சகட்டுமேனிக்குச் சந்தியில் வைத்துத் தாக்கப்படுகிறான். சாதியத்தின் கைகள் பெரும்பாலும் நம் கழுத்தை நேரடியாக நெரிப்பதில்லை. நம் கைகளாலேயே நெருக்கிக்கொண்டு கொலையுற வைக்கிறது. தங்கள் குடிகளான பஞ்சமர்களின் மூலம் அவன் முகத்தில் சிறுநீர் கழிக்க உத்தரவிடப்படுகிறது. திருக்கைவாளால் அடிபட்டு வெடித்துப் பிளந்து கிடந்த முத்துசாமியின் முதுகில் ஒவ்வொருவரும் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறுவர்களும், ஏன் புடவை சுற்றி பிடித்திருக்க வெள்ளாளசெட்டி பெண்களும் சிறுநீர் கழிக்கிறார்கள் அமிலம் ஊற்றப்பட்ட புழுவாய் முத்துசாமி துடிக்கிறான்.
“சிறுநீரைவிடவா அமிலம் ஒரு மனிதனை, மனிதத்தைக் கொன்றுவிட முடியும்?” முதுகிலும் முகத்திலும் சிறுநீர் கழிப்பவர்களின் மலர்ந்த உறுப்புகள் (மர்ம உறுப்புகளென்று சொல்ல என்ன இருக்கிறது) இன்னும் சீழ்பிடிக்காமலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது. சுவர் விளம்பரப் பதாகைகளின் முகங்களில் சிறுபிள்ளைகள் சிறுநீர் பீய்ச்சி விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதைப்போல சமகால சமூகமும் கடந்துதான் போய்க்கொண்டு இருக்கிறது. இன அடையாள அரசியலையும் கம்யூனிசத்தின் மீதான இயக்க நிலைப்பாட்டு அரசியலையும் சண்முகம் மற்றும் தோழர் அருமரும் தங்கள் இயல்பான மொழியில் கதைக்கிறார்கள்.”
“இனவாதம் எண்டுறதும் பொருளாதாரத்தாலையும் மத அமைப்புகளாலையம் கட்டப்பட்ட ஒன்றுதான் சண்முகம் இனவாதத்தை அளிக்கிறது எண்டுறது பொருளாதார சமத்துவம் நோக்கின புரட்சியாளைதான் சாத்தியம். விடுதலைப் போராட்டம் எண்டுறதுலைறது சிங்களவனைச் சுடறது என்ற நிலையிலை எல்லாத்தையும் வளர்த்துவிட்டிருக்கிறியள். கடைசியில் சுடுறதோடத்தான் முடியும். விடுதலைக்கான உலகத்தின்ர கனவைத் தனிய நின்று காணேலாகாது, விளங்குதோ”
இந்த உரையாடல்களை நிகழ்த்தியிருக்காத, நிகழ்த்திய உரையாடல்களைக் கேட்க செவி கொடுக்காத காதுகளால் இழந்து நிற்பது எத்தனை எத்தனை உயிர்கள். சண்முகத்திற்கும் அருமர் மீதான அபிப்பிராயம் எல்லாம் “ஒரு தோழமாருக்கும் இயக்கத்தைப்பிடிக்காது”. அருமர் ஒரு தோழர். நச்செள்ளையாகிவிட்டவளான வெரோனிகா தான்செய்த குற்றமொன்றுக்காக இவளுடைய பொறுப்பாளரால் விசாரிக்கப்படுகிறார்.
“லெப்டினன் நச்செள்ளை, களத்தில் ராணுவ உடல் ஒன்றைக் காலால் உதைத்திருக்கிறீர்கள். மானுட அறத்தின் படியும் அமைப்பின் நடைமுறைகளின்படியும் அது தவறான நடத்தை, அதனால் உங்கட மூண்டு மாதம் நீங்கள் மெடிக்சில் பனிஸ்மென்ட் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது ஆட்சேபனை இருந்தால் சொல்லலாம்.”
"அவங்கள் எங்களை ஆக்களின்ர பொடிய எடுத்தால், கீரிக் கிழிச்சி, நிர்வாணமாக்கி ரோடு ரோடா கட்டி இழுத்துச் சிதைச்சுத்தான் எங்களிட்ட தாரங்கள்".
நச்செள்ளை முடிக்க முதல் அருகில் இருந்த தளபதி இவளை இடைமறித்து,
“இஞ்ச பாரும் பிள்ளை, நாங்கள் ராணுவம் இல்லை. நாங்கள் விடுதலைப்போராளிகள். ஒரு ராணுவ எதேச்சதிகார கட்டமைப்புக்கும் விடுதலைக்காகப் போராடுகிற எங்களுக்கும் இதுதான் வித்தியாசம், அதாலை நீங்கள் இந்த விசயத்தைச் சரியாய் விளங்கிக்கொள்ள வேணும், விளங்குதோ”
“அப்ப என்னை விருப்பம் இல்லாமல் பிடித்துக்கொண்டு வந்து இயக்கத்தில சேத்தது எந்த மானுட அறத்தில் வரும்”
இப்படியான பிள்ளைகளின் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை. அச்சுதனை இழந்த மழைக்கிளவிகள், துணைகளை இழந்த நிர்மலாக்கள், தமயந்திகள், துயிலுமில்லத்தில் உறங்கும் தாமரைகள், வெரோனிகள், செந்தழல்கள் என பெண்களும் பெண்களின் வலிகளாலும் தியாகங்களாலும் இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. கீரிப்பிள்ளை மேட்டின் எல்லா உயிர்களும் சிற்றெறும்புக் கூட்டமாய் நந்திக்கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். கடலை நோக்கிய பயணத்திற்குக் கரைகள் இல்லையா?. கடல்மணற்பரப்பில் சுவடுகளானார்கள். நந்திக்கடல் கடற்கூதலைச் சுவடுகளின் மீது வீசிக்கொண்டேயிருக்கிறது...
‘ஆத்தை அவள் படலையிலேயே வீற்றிருக்கிறாள்.’
கீரிக்குளத்தின் வான் கதவுகளின் அருகில் இருந்து எவ்வியின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
“அம்மான் கண்”
சிறுதெய்வங்களின் மீது எல்லா உரிமைகளும் உண்டுதானே? எவ்வியின் பொருட்டும் சனங்களின் ஆன்மாக்களின் பொருட்டும், ஆச்சியின் யானைக்குட்டி கோபச் சொல்லான அதே வார்த்தையை நானும் பயன்படுத்திக்கொள்கிறேன்.
“அறுதல் வேசை ஆத்தை பிள்ளைகளை மன்னிப்பாள்.” கனகையாச்சி குரல் நடுங்கப் பாடுகிறாள்,
“காடும் பெண்டெல்லோ கண்டீரோ என்ரையாத்தை! நீரும் பெண்டெல்லோ கண்டீரோ என்ரையாத்தை! நானும் பெண்டெல்லோ கண்டீரோ என்ரையாத்தை! பெண்டாக இறக்கி நின்றாய் என்ரையாத்தை! பூமிப்பெண்டோடு கலந்துபோனாய் என்ரையாத்தை!
“உங்களுடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதைக் காட்டிலும் நீங்கள் எதை நினைவு கூருகிறீர்கள் எப்படி நினைவுகூருகிறீர்கள் என்பதே முக்கியம்” என்கிற காபிரியல் கார்சியோ மார்க்வெஸ்ஸின் கூற்றை, யதார்த்தன் தன் நகுலாத்தை மூலம் முழுமைப்படுத்தியுள்ளார்.
மழைக் கோப்புக்கான முறுக்கு வெயில்தான். பொட்டுத்தூத்தல் விழுந்தாலும் நிலம் இளகிக்கொடுத்திருக்கும். மண் இறுக்கம் குறையாமல் இங்கு மகசூல் ஏது? பிசுக்கு வியர்வை முதுகை நமநமக்க “ஏ பாக்கியங் இங்கன லேசா சொறியேங்” என அவள் கிட்டத்தில் போய்த் திரும்பி நின்றாள் வடிவு. எரிச்சல் வரத்தான் செய்தது பாக்கியத்திற்கு, பெயருக்கு ‘பரட்டு பரட்டு’ என ரெண்டு இழுப்பு இழுத்து வெடுக்கென்று ‘போ’ என்றாள். கருமாயத்திலும் மினுக்கம் கொடுக்கும் என்பதை மெய்யாக்கும் தோற்றம் வடிவுக்கு, கடுங்கோடையில்தான் காய்ப்பும் காய்க்கிறது. திரும்பிப் போனவளை பார்த்தபடியே நின்ற பாக்கியம் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
கஞ்சிச்சட்டியைத் தொறந்ததுதான் தாமதம், பாக்கியத்தைப் பார்த்துத் தொடர்ந்தாள் வடிவு, “வெளிக்குப் போற எடத்துல வீங்கிட்டு, வலி உயிர் போவுது பாக்கியங் லேசா முக்கீட்டேங் ஒரே ரத்தக்காடுதாங்” அருகிலிருந்த பொம்பளை ஆட்களோடு அமர்ந்திருந்த பாக்கியம் மொணமொணத்துக் கொண்டே போனாலும் தோராயமாக வடிவுக்குக் கேட்க முடிந்தது.
“எடுக்காத எடுப்பெடுத்தா... இது மட்டுமா வரும்” வடிவு சிரித்துக்கொண்டாள். சிரிக்கிறாள் என்றதும் பாக்கியத்துக்கு ஏன் மேலும் மேலும் தன் சீரழிவை வடிவே தேடுகிறாள் என்று ஆங்காரம் கூடியது. அழுத்திச் சொன்னாலாவது அந்த மட்டில் அடங்குவாள் என மீண்டும் அதையே சொன்னாள். வார்த்தை ஒன்றும் வலியெடுக்காது என்ற எளிய உண்மை இப்போது வடிவுக்குப் பிடிபட்டிருந்தது.
தூக்குவாளியின் மூடியைக் கழட்டிச் சோற்றை மூடியில் போட்டுக்கொண்டு சாப்பிடத் தொடங்கினாள். ஒரு பார்வை பூவரசின் கொப்பில் தொங்கியத் தொட்டிலில் இருந்தது. ஒவ்வொரு வாய்க்கும் கண்ணத்து மட்டில் விண்விண்ணென்றுத் தெறிப்பு! ரெண்டு நாளாக உப்புக்கல் உமி ஒத்தடம் கொடுத்தும் ஒன்றும் தேவலையான பாடில்லை.
ஒவ்வொரு வாய்ச்சோற்றுக்கும், சோற்றை மெல்லத் தொறக்கும்போது, வலிக்கு, வாய் ஒருவடியாகக் கோணத் துவங்கியது. மொகரக்கட்டை என்ன லச்சணத்தில் இப்போதிருக்கும் என்றெண்ணும்போது வடிவுக்கு உதடுப் பிதுங்கி சிரிப்பு வந்தது.
“மூதேய்... என்னத்துக்குத்தாங் சிரிப்பாளே” (எப்படித்தான் சிரிக்காளோ?) என்றனர் தங்களுக்குள். இதே ஆள்கள்தான், “ரெண்டாள் பாட, ஒரு பொம்பயளா பாத்தாலும் சிரிச்ச மொகமா பாக்க வடிவ விட்டா ஆளு கெடயாது” என்றும் சொன்னார்கள். எத்தன முறை இங்கு உள்ளவர்கள், “கொஞ்சம் கெறக்கமா இருக்கே” எனும்போது “வெலகுக்கா” என்றபடியே தன் தலைச் சுமையோடு அவர்கள் விறகுக் கட்டையும் சுமந்திருப்பாள். இப்போது மட்டும் என்ன வேதனையில் கொஞ்சம் குன்னி நடந்தாலும் உடலூக்கம் வடிவுக்குச் சுண்டவில்லை.
இப்போது வெறகு வெட்டுச் சோலி கிடையாது. மக்காச்சோள அறுப்புத்தான். வேலை முடிந்து, கொண்டு வந்த கஞ்சியை உண்டு கிளம்பலாம் என்பது எண்ணம். பாவாடை நாடாவைச் சுருக்கு இழுத்து தளர்த்திக்கொண்டு கொறச்சோற்றை விழுங்கத் தொடங்கினாள் வடிவு. அவதி அவதியென்று நாலு வாய் அவக்கென்று அள்ளி முழுங்கும் சோலி எல்லாம் வடிவிற்குக் கிடையாது. அப்படியள்ளித் தின்று எந்த ரயிலை மறிக்கப்போகிறோம். ஆற அமர ஒரு கும்பா சோற்றைத் திங்கவேண்டும். உடம்பு வலிக்கப் பாடு பார்க்கவேண்டும். உடம்பு நோவ பாடுபார்த்தால் சாமத்தில் தூக்கம் கெடாது என்ற எண்ணம் வடிவுக்கு. “திங்கதுக்குத் தக்கன கறிமப்பு” என்றால் மேலும் சில வாய் போட்டுக்கொள்வாள். இப்போது அப்படி ஒன்றும் திங்க முடியாதுதான். “செஞ்சுட்டு செருப்படி படுவது” போலத் தின்று பின் நொம்பலப்பட முடியுமா!
காட்டை ஒட்டிப்போகும் கண்மாய் கரையை உரசி உருளும் வன்னியரசு சைக்கிளில் விக்கும் முறுக்கு, காரச்சேவு, கொய்யா உள்ள தகரப்பெட்டியை ஒரு பார்வைப் பார்க்கும்போது மறுபார்வை குழந்தை தொட்டிலையும் பார்த்தது. அதே வேளையில் கை சுருக்குப்பையைத் தடவியது. அதுதான் செய்ய வேண்டும் என்பதுபோல எழுந்தவள் மறு கை உயர்த்திக் காற்றில் துடுப்பு போட்டு
“ஏண்ணே, இந்தா வாரேன்” என்றாள்.
“பதறாம வா, எதுக்கு வேகு வேகுனு ஓடியார? நின்னுட்டுத்தான இருக்கேன்”
சோற்றுக்கையோடு வந்தவளை பார்த்ததும் வெஞ்சனப் பாட்டுக்கு வாங்க வந்திருப்பாள் என ஊகித்தபடி டப்பாவுக்குள் இருந்து ஒரு கரண்டி ஊறுகாயை எடுத்து இலையில் மடித்து நீட்டினார். “ஊகூம்” என்று தலை உதறி, “சாப்டேங்... வேற என்ன இருக்கு என தகர டப்பாவைக் குனிந்து பார்த்தாள் உயரம் அப்படி! சோற்றுக்கையைத் துடைத்துக்கொண்டு “பாக்கியம் ஒனக்கு எதும் வேணுமா” எனும்போது கூட்டத்தின் சலசலப்பு நின்று மீண்டும் இயல்பானது. பாக்கியம் பதில் சொல்லவில்லை வெறுமனே” தலையசைத்து வெறித்தாள்.
அடுத்த நொடி அடிவயிற்றில் தீ வைத்தது போல சுரீர் என்றிருந்தது பாக்கியத்திற்கு. வடிவு தன் சுருக்கில் இருந்து பணம் எடுத்து நீட்டிக்கொண்டிருக்கும்போது கரிவலவந்தநல்லூர் பால்வண்ண நாதர் கோயில் நேற்றிக்கடன் போட்ட சுருக்கு பையது.
ஏ... முண்ட என்ன சோலி பாக்க நீயி...” தன்னை மீறி தலையில் அடித்தபடி பாக்கியம் கேட்டே விட்டாள். பாக்கியம் கேட்டதெல்லாம் வடிவை எட்டவில்லை என்றாலும் கம்மிய குரலில் “அதிகப் புடிச்ச முண்ட நீ சீரழியதும் இல்லாம புள்ளைக்கு நேத்திக்கடன் போட்ட காசுல வாங்கி அது தலையிலவும் மண்ண கொண்டாந்து போடனுமாக்கும்” என்று பாக்கியம் சொல்லி முடிக்கத்தான் செய்தாள்.
வடிவு தொட்டிலை நெருங்கும்போதே தாய் வாடையெடுத்து குழந்தைக் கொஞ்சிச் சினுங்கியது “வாரங் வாரங்” எனச் சொல்லும்போது நெஞ்சு அடைக்கத்தான் செய்தது வடிவுக்கு. மேலக்கரையில் உள்ள காட்டின் இடப்பக்கம் பெத்துராசு நாயக்கர் கரும்புக்காடு அதன் நடுவில் ஒத்தப்பிரிப்பாதையாக நீண்டு காடு-களத்தை ஊடறுத்துப் போகும் ஆற்றுப்பாதை, அதையொட்டிய சுழிவில் சச்சமுக்கமாக அமைந்த கரும்புக்காடு பெத்துநாயக்கர் ஒருவருக்குத்தான். இப்போது ஆள் தவங்கிப்போனார். மகன் ராசு வருகை கொஞ்ச நாட்களாகவே குறைந்திருந்தது.
ராசுவின் நினைவு வரும்போது நடு மார்பில் ஒட முள் ஏறியதுபோல இருந்தது. வத்தலாகச் சிவந்த கண்களில் நீர் தடம் தொலைத்திருக்க, உள்ளெழுந்த வேக்காட்டை அமர்த்தவேண்டிய மட்டுக்கு காற்றை இழுத்து கூட்டை நிறைத்தாள். உடம்பு வெடப்பு கூட மார்பு புடைத்தது.
வடிவு குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டாள். கரும்புக்காட்டில் மோட்டார் ஓடும் சத்தம். காலை கரண்டுதான். இப்போது எல்லாம் கேசவன்தான் வந்து போகிறான். ராசு வீட்டுக்காரியின் தம்பி முறையானவன். கூறு கணக்கில்லாமல் தொழிலில் இறங்கி “வேவரிக்கு வியாபாரம்” செய்து நொடித்த கையோடு இங்கு வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறான். ராசு கிணற்றடியில் உள்ள பம்பு செட்டில் குளித்துத் துவட்டிக்கொண்டே வெளியே நின்றான் கேசவன்.
கேசவனைக் கண்டதும் தன்னறியாதொரு எளக்கார பிசுக்கு வடிவிடம் சுரந்தது. சில சமயம் சம்மந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் சாயலை இன்னொருவர் பூசிக் கொள்கிறார்கள். கேசவன் கூட இப்போது சந்திரனுடைய சாயலைப் பூசிக்கொண்டு நிற்பது போலவே வடிவு பார்வைக்குப்பட்டது. கேசவனும் எட்டத்தில் நின்றாலும் இவளைப் பார்த்துவிட்டான்.
நட்டாம நின்றவள் அதே வெடப்பில் சேலை மாராப்பை விலக்கி அவள் குழந்தையை மார்புக் காம்பில் வாய்பதிய அழுத்தி பிடித்தப்படி நின்றாள். நீச மூச்சு ஒவ்வொன்றும் பெரும்போக்குப் போய்க்கொண்டிருந்தது.
“பலவட்ட முண்ட! வந்துட்டா, என்னப்பாரு எங் இதப் பாருனு” வடிவைப் பார்த்த உடன் மேலும் நிலை தடுமாறியவன் எசக்கற்றுப்போய் இருந்தான். அதற்கு மேல் வார்த்தை அவனுக்கு வரவில்லை. வேகமாக வண்டி நிறுத்தியிருந்த மேடுக்கு நடக்கத் தொடங்கினான்.
“பொண்டுவசட்டி பயலுகளும் கறிக்கு அலையுதானுக, அது கெடைக்கலங்கவும் யோக்கியன் வேசம் போடுதானுக” என வடிவு உதடு முணுமுணுத்துக் கொண்டது. கேசவனைப் பார்க்கப் பார்க்கக்கூடவே சந்திரனும் அவனைப் போலவே ஓட்டமும் நடையுமாகக் கழண்டுபோன காட்சி கண்முன் விரிய, வந்த வௌமெல்லாம் நெஞ்சி நிறைந்து பொங்கி பாலாக உறுவதுபோல குழந்தை குடிக்க குடிக்கச் சூடேறிப் பொங்கியது. விழுந்தடித்து ஓட்டமும் நடையுமாக வாப்பாரியபடிப் போன கேசவன் வண்டி கரைமேடைத் தாண்டி போகும்வரை பேய்ச்சிரிப்பு சிரித்தவளுக்கு வாய் ஓயவில்லை.
சோற்றுச்சட்டிச் சிதறிக்கிடந்த இடத்தில் பதறிப்போய் கோமதி நின்றுகொண்டிருந்தாள். மதியக்கஞ்சிதான் சிதறியிருக்கிறது. சந்தேகமே வேண்டாம் வடிவுடையதுதான். ‘மோசம் போச்சே’ என்ற உண்மை புலப்படும்போது கோமதிக்குக் கண் இருட்டியது. மதியம் மூன்று மணிக்கு மேல் உள்ளாற்றுக்கு மேற்கே விறகு வெட்டிவிட்டு வீடு வரவேண்டியவள் இன்று சாயங்காலம் மணி ஆறான பின்னும் வராததால் தேடியலையும்படியானது.
“எத்தேய்... இந்தா நடந்து போச்சுல்ல ஒன்னு கெடக்க ஒன்னு நடக்கும்னுதான நானும் தலதலயா அடிச்சுக்கிட்டேங். ரோட்டுல போறவ குடும்பம்னா எப்புடியும் போனு விட்டுத் தொலயலாங். கழுதய நம்ம இந்த வீட்டுல பொண்ணக் கட்டீருக்கமேனுதாங்” என்றான் சந்திரன்.
“யய்யா... யய்யா யாருய்யா இருக்கா எங்களுக்கு உங்கள விட்டா” கோமதியின் வார்த்தைகள் அழுகையோடு சேர்ந்து வந்தது.
“அதானத்த வேலயப் போட்டு ஓடியாந்துருக்கு, இல்லன்னா எங்கன ஓடினானு தேடு தேடுனு தேடியலையனும்னு எனக்கென்ன நேத்திக்கடனா சொல்லுங்க”
“எடுத்த எடுப்புலயே இப்புடி சொல்லுதீகளேய்யா... நீங்களே இப்புடிச் சொன்னா ஊர் என்ன சொல்லும்”
“ஊர மூட ஒலமூடியா? நாங் சொல்லித்தாங் தெரியனுமாக்கும் புதுசா...”
“விட்டெறிஞ்சு பேசாதீகய்யா...! பரமா வளந்த புள்ள! துடுக்கா ரெண்டு வார்த்த மொறனு யார் கிட்டவும் பேசுவாளே ஒழிய வேண்டாத செயல் ஒன்னும் செஞ்சுக்கிரமாட்டா... ஆம்பள இல்லாதக் கொறைக்குதான்யா உங்கள தேடக்கூட்டியாந்தேங், ஏம்புள்ளைக்கு என்னாச்சோ, யாரும் என்னமுஞ் செஞ்சுருப்பாங்களோனு நெனச்சாலே” கோமதிக்கு முடிக்க முடியவில்லை.
“ஏத்தே... அப்படி ஒன்னுமில்ல, பதறாதீக”
“அதுக்கில்லைய்யா இந்த ஒரு தடவ எனக்கு வேற போக்கில்ல நல்லபடியா அவ வந்துட்டா... ஒரு நாளும் உங்க மறவுல வாழ்ந்து போகுற நிலம வராதுய்யா... அது ஒன்ன நெனச்சு மலஞ்சுராதிக”
“செரி செரி ஒரே வாக்குல நீங்களும்! அக்கற இல்லாமயா... நாங் மேக்க ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்” என்றபடி சந்திரன் நடக்கத் தொடங்கினான்.
மண்ணோடு சிதறிக்கிடந்த சோற்றைப் பார்க்கும் போது கோமதிக்கு மனதோடு சில சம்பவங்களைக் கிளறச் செய்தது. வடிவுக்கு மூத்தவளான “ராணி”யைக் கட்டிய புதிதில் கூட பேச்செல்லாம் தேனாக இருந்தது.
“எங்கிட்டோ உள்ள ஆளுங்க நெனப்பெல்லாங் வேண்டாங், எந்த ஒன்னுக்கும் என்னய யோசிக்காம கூப்புடலாங்” என சந்திரன் சொன்னபோது கோமதிக்கு நிம்மதியாகத்தான் இருந்தது. அந்த நிம்மதிக்கு ஆயிசு ரெண்டே ஆண்டுகள்தான்.
“எனக்கொன்னும் இல்ல... இது எதுக்குடா கொறவுள்ள கழுதயக் கட்டியதை, வேற ஒரு புள்ளயக்கட்டி நான் கண்ண மூடங்குள்ளயும் பேரம் பேத்திய காட்டுடானு எங்க ஆத்தாக்காரிதாங் ஒரே பாட்டா படிக்கா... எனக்கென்னன்னாத்தே... எங்கிட்டாப்பட்ட புள்ளியவோ கட்டிக் கூட்டியாந்து இவளுகளுக்குள்ள வழக்குத் தீத்துக்கிட்டே காலந்தள்ளுததுக்குப் பதிலா இவ இளையவளே கட்டுனா ஒன்னு கூடுனாலும் கொறஞ்சாலும் புள்ளகுட்டினு ஆனாலும் விடுதலாத் தெரியாது. ஒரு எண்ணந்தாங் வேற ஒன்னுமில்ல. ஒரு சொல்லுக்குச் சொல்லி வக்கேங்” என்றோர் முறை சந்திரன் நீட்டி முழங்கியபோதுதான் முதல் முறையாகக் கெதுக்கென்றிருந்தது கோமதிக்கு, அவள் மனம் போலவே வீடும் குழப்பத்தில் இருளும்போது வடிவைக் காணோம் என்ற தகவல் வெளியே வரத்துவங்கியது.
கோமதியும், மற்றவர்களும் அடுத்த கட்டத்தை யோசிக்கும்போது விடிந்திருந்தது, வடிவும் வீடு வந்திருந்தாள்.
ராசு இப்படிச் செய்வான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. துடுக்காக வடிவிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்ததுண்டு என்பதைத் தவிர வேறு எந்த நினைப்பும் யாருக்கும் வந்தது கிடையாது. சட்டென பிளசர் கார் ஒன்று பாதையில் வந்து மறித்துச் சோற்றுச்சட்டி கீழே விழுந்து சிதற வண்டியில் ஏற்றும் வரையில் வடிவுமே கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவுதான் என்றே தோன்றுகிறது.
“ஏடி என்ன” என வீடு வந்தவளிடம் கோமதி மிரண்டு போய்க் கேட்டபோது “ராசு அத்தாங் கூட்டு போனாக” என்பதைத் தாண்டி அவளிடம் பதில் எதுவும் வரவில்லை. உறவில் முறைதான் என்றாலும் வசதி கூடிப்போய் இருக்கும் இருக்கப்பட்ட கைகள். வடிவும் கோமதியும் கூட ஒரு சமயம் ராசு காட்டுக்கு வேலைக்குச் சென்றதுண்டு.
“யாருடி கூலி வாங்குனவ கையப்புடிச்சு குடும்பம் நடத்தக் கூப்புடுவ... அவுக தெனவுக்கு நம்மளா ஆளு? இப்படி நம்ம தலயிலயா விழுவனும்” என்ற கோமதி அழுகையோடு மேலும் தொடர்ந்தாள்.
“நாங்தான் அன்னைக்கே சொன்னனே, யாரு கேட்டா... நாங் ஏதோ விகல்பமா பேசுதம்கமாரி ராணி கூட சடச்சுக்கிட்டா” என்ற சந்திரன் லேசாக ஒரு பார்வை வடிவைப் பார்த்தான். குத்துக்காலிட்டு உக்காந்திருப்பவள் அவனைப் பார்த்ததும் முகத்தை ஒரு திருப்புத் திருப்பினாள். அதில் உள்ள இளப்பத்தைக் கண்டடையாத அளவுக்கு கூறு மழுங்கவில்லை. அதையும் மீறி வடிவின் திமிறிய மார்பு கெறக்கம் குடுத்தது.
ராசுவும் வடிவும் கலந்த காட்சி நொடிப்பொழுதில் கண் முன் நிழலாட ஒரு வெட்டு வெட்டி இழுத்தது சந்திரனுக்கு, தன்முன் இத்துனை இறுக்கமாக இருக்கும் வடிவின் முகம், லயிப்பில் சிணுங்குவது போல போல நினைக்கையில் நிராசையால் ஊறிய எச்சிலை முழுங்க மனமின்றி துப்பிவிட்டு தொடர்ந்தான்.
“போர வார ஆளு தோதுக்கு இழுக்க இங்கன ஆளுருக்குனு என்ன எழுதியா போட்ருக்கு” சந்திரன் சொன்ன கையோடு மேலும் ஒரு முறை வடிவைப் பார்த்தான். எந்தப் பாதிப்பும் இல்லாததுபோல வடிவு இருந்தது, மேலும் ஆத்திரத்தைக் கூட்டியது.
“இப்படி இஷ்டத்துக்குப் போற போக்குல அலயுத குடும்பத்துக்குள்ள நாங் பொழங்க முடியாது. நாளைக்கு ஒரு பய எங்கிட்டயே வந்து இது எப்பிடியினு கட்டுக்குத்தகையா? இல்ல வாரக்கூலியானு கேப்பாங். நாங் அதுக்கு தரவு பேசி முடிக்கவா?” இந்த முறை வடிவைச் சுட்டே தீரவேண்டும் என அழுத்திக் கூறினான். நிமிர்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்தாள். அதிலுமே அவன் வேண்டியது கிடைக்கவில்லை.
“இவளோ பேசுதாங்கல்ல, இனி நீங்களாச்சி மாமா, நீங்க பாத்து நல்லது செஞ்சு விடுங்கனு சொல்லு, இல்ல நான் என்ன செய்ய மாமா, இப்புடி ஆய்போச்சேனாச்சும் சொல்லு” எனச் சொல்லிக்கொண்டே வடிவு முதுகோடு ஒரு அடி போட்டாள் கோமதி.
வடிவிடம் விசும்பல் தோன்றியதேயன்றி அழுகை வந்ததாகத் தெரியவில்லை. அடிபுடியாக இவ்வளவு பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது பாக்கியம் மட்டும் அருகில் நெருங்கிக் கேட்டாள், “ஏ புள்ள, நீ என்னடி இப்புடி ஏத்தமெடுத்து உக்காந்திருக்க. இவளோ பேச்சு நடக்கு ஒரு வார்த்த சொல்ல மாட்டிக்க” என்றாள்.
“என்ன சொல்லனும்? இப்புடி நடந்திருக்கே அவன என்னனு கேக்கம்னு சொல்ல ஒரு ஆளில்ல, கொண்டு போய் என்ன செஞ்சாங் எப்புடி ஓடியாந்தனு கேக்க நாதியில்ல, ஒரு நா பொழுது முழுக்க காங்கலயே தின்னயானு கேட்டாளா? ஆத்தாக்காரி அவளா முந்திக்கிட்டு பறி குடுத்துட்டு வந்துட்டயேனு வாப்பாருதா, அக்கா புருசன் பறிபோச்சோனு பதருதாங். எனக்கு எல்லாமே தெரியும் பாக்கியம்” எனும் போது வடிவுக்கு அழுகை கண் நிறைந்தது. அடித்தொண்டைக் குரலிலேயே மேற்கொண்டு தொடர்ந்தாள். “அந்தாளு இழுத்துட்டுப் போனாரு, ஒரு நாளு ராத்திரி பூராவும் அடச்சு வைச்சுட்டாரு, ஒன்னும் நடக்கல வேனுங்கமட்டும் அழுது தீத்துட்டேன். என்ன நெனச்சானோ தெரியல காலைல கதவத்தொறந்தாங். அழுது ஒன்னும் ஆவப்போறதுல்ல, அதுவும் நல்லதுதாங் இனி போயும் என்னத்தையும் போய் நீ மாத்தி மறிக்க முடியாது. யோசிச்சுக்கோ ஓம்பிரியந்தாங். போறியா இல்ல இருந்து போறியானு கேட்டாங். எனக்கு அழுவதாங் வந்துச்சு. சரி போனு சொல்லிட்டு ஒதுங்கி நின்னுட்டான். வேற ஒன்னும் நடக்கல”
“அதயாவுது சொல்ல வேண்டியதான வடிவு” பரிதாபமாகக் கேட்டாள் பாக்கியம்.
“ஏஞ் சொல்லனும்? எங்க அக்கா புருசன் கிட்ட ஏங் யோக்கியத்தக் காட்டுததவிட அவன் பேசப் பயப்புடுத ஆளுக கூட உண்டுமாங்க பேரு தேவல” எனும்போது சட்டென கண்ணீர் வந்தது வடிவுக்கு, வந்த வேகத்தில் துடைத்துக்கொண்டாள்.
“டுப்பு டுப்பு டுப்பு” என்ற சத்தம் ஒரு நொடி படபடவென்று வந்தது. உடன் வேலைக்கு வந்த கூட்டத்தில் யாருக்கும் அந்த சத்தம் படபடப்பைத் தரப்போவதில்லை வடிவைத்தவிர. பாக்கியம் குருவு சொல்வதை சிரத்தையில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவரவர் அவரவர் பாடில் கவனத்தைக் குவித்திருந்தாலும் கூட சத்தம் வந்த திசையை வடிவு நிமிர்ந்து பார்த்தாளேயானால் எல்லோரும் தன்னைக் கொத்தித் தின்னும் பார்வையால் குதறியே விடுவார்கள் என்ற எண்ணத்தைத் தாண்டி பார்க்கவேகூடாது என்ற வைராக்கியத்தோடு தலை நிமிராமல் இருந்தாள். எத்தனை முறை இந்தச் சத்தம் கேட்காதா என ஏங்கியிருக்கும் மனம்.
தற்செயலாக நிமிர்வது போல எத்தனை முறை நிமிர்ந்து பார்த்திருப்பாள். “அவனுக்குக் கல்யாணமாகி பத்து வயசுல பய ஒருத்தங் இருக்கானே அவங்கூட மறுகலாம்னு மனசுல நெனச்சுக்கிட்டுத் திரியாத” என்றொருமுறை வடிவின் அம்மா திட்டிக் கொண்டிருக்கும்போது கூட தெருமுனையில் வண்டிச் சத்தம் கேட்டு மனம் குளிராட்டத்தானே செய்தது.
இது எதுவுமே சரிப்படாது என்ற நினைப்பு வந்தவுடன்தான். தெளிச்சுப் பார்த்து ஒரு சீக்காளியைச் சந்திரன் துப்பில் கட்டி வைத்தாள் கோமதி. “இவம்னா... நம்ம கைக்குள்ள உள்ளவங் எந்த இழுப்புக்கும் சரிம்பாங். உங்களுக்கும் ஒரு வகையில தம்பி மொற, நாளைக்கு என்ன ஒன்னுன்னாலும் ஏ தம்பி, அக்கா சொல்லுதம்ல்லனு உரிமையா சொல்லிக்கிடலாங். நடந்தது போனதுன்னு எதயுமே ஒழிச்சு மறச்சு சொல்லவேண்டியதில்ல, இங்கவா இதாங் கத, நீயாச்சு எங்களுக்குனு சொன்னாப் போதும் குளுந்துபோவாங்” என சந்திரன் சொல்லும் போது கோமதிக்கும் சரியென்றே பட்டது.
ஒரு பாடாக ஆளும் பேருமாகச் சேர்ந்து கல்யாணத்தை முடித்து வைத்திருந்தார்கள். “எலேய்.. இத எடுறா, இங்க வந்து நில்லுடா” என ஒவ்வொரு முறை புருசனை விரட்டி வேலை சொல்லும்போது அவளைத் தன் பிடியில் நிறுத்திவிட்டதாகவே சந்திரனுக்கு ஒரு நினைப்பு. “ஆட்டும் ஆட்டும் அண்ணாச்சி” என வடிவு புருசன் பதில் சொல்லும் போதும் ‘எப்படி என் முறுக்கு’ என்பது போல வடிவை ஒரு பார்வை பார்த்துக்கொள்வான். அதே நேரம்தான் சந்திரனுக்கும் ராணிக்கும் ரெட்டைப்பிள்ளை பிறந்தது. வடிவு புருசனுக்கும் சீக்கு முத்தியது.
வடிவு மட்டுமிருக்கும் ஒருநாள் தவம் கிடந்தது போலக் காத்திருந்து சந்திரன் வீட்டுக்கு வந்தான். வந்த தொனியும், பார்த்த பார்வையுமே அவன் வந்த கோப்பை உணர்த்தியது.
“என்ன வடிவே”
“மாமா” என்றவள் சட்டென “அவுக இப்பம்தாங் வெளிய போனாக, வந்துருவாக எதுவும் அவுகட்ட சொல்லணுமா” என்றபடியே எழுந்து நின்றாள்.
“ஏந்தா, அவனத்தாங் பாக்க வரணுமா உன்னயப் பாக்க வரக்கூடாதா” என்றவன் சிரித்துக்கொண்டே “ஆறான் நம்பர்” பீடிக்கட்டில் இருந்து ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.
“............”
“சரி எப்புடி இருக்க? நல்ல வச்சுக்கிடுதானா ஒன்னய அவங்?”
“ம்ம்ம்... வீட்டுல அக்கா, புள்ளைக எல்லாங் நல்லாருக்காகளா?”
“புள்ளக நல்லா இருக்குக, நெறமெல்லாங் என்னயப்போல வெளுப்புத்தாங் கழுதய கொணமும் அதே கணக்காத்தாங்” என்றவன்
“ம்ம்ம்...” என கண்ணை மூடி அதைத் தானே உணர்ந்ததுபோல தலையாட்டிக்கொண்டு தொடர்ந்தான்.
“ஒங்கக்காக்காரிதாங் புள்ள பெத்த பெறவு ஆளு கெட்டழஞ்சு கணத்தும் போயிட்டா...”
“இந்தா போனதும் வாரம்னுட்டுத்தாங் சொல்லிட்டுப் போனாக” என்றவள் ஒருமுறை வெளியே எட்டிப் பார்த்தாள்.
“அவனா” என்றவன் சிரித்தபடியே மறு பீடியை எடுத்தான். பின்
“அவங் பலரசம் பாண்டிய தொயங்கட்டிக்கிட்டே திரியுதாங். இன்னைக்குத் தொண்டைய நனைக்க ஏங்கிட்டதாங் சில்ரய தேத்திக்கிட்டுக் கௌம்புதாங். எந்நேரமும் பொகச்சல் இதுல வடிப்புப் போட்டுக் குடிமப்பு வேற! நீ அதே போலயே இருக்கயே, பய சுதாரிச்ச ஆளு கெடயாது போலயே”
இம்முறை கொஞ்சம் சத்தமாகவே சிரித்தான்.
“சரி மாமா அவுக வந்ததும், நீங்க தேடியாந்தீகனு சொல்லுதேங்”
“ஏத்தா அவனத்தாங் அடிக்கொரு மொற பாக்கேனே”
நெறய தடவ சாராயங் குடிச்ச கையோட வண்டியேறி நம்மள பாக்க அவனே வந்துருவாங் ஒன்னயப்பத்திதாங் ஒரே ஆவலாதி”
“..............”
“நானே ஆஞ்சு ஓஞ்சு வாரேங், இவ கொழுத்துப் போயி ஏம்மேல காலத்தூக்கிப் போடுதாங்....” சிரித்துக்கொண்டே,
“அட கூறு கெட்ட கழுத இது நமக்குள்ள நெறக்கத விட்டுட்டு, நல்ல வேல ஊரக்கூட்டி கொட்டடிக்காமவிட்டானேனு நெனச்சேங்”
“..................” வடிவுக்கு உடல் சூடாகிப்படபடத்தது.
“அன்னைக்குச் சொன்னதுதாங் என்ன தோதுக்குனாலும் நானாச்சு ஒனக்கு, அவன ஒரு ஒப்புக்கு வச்சுக்கோ. ஏற்கனயே சொகங்கண்டவ எத்தன நாளைக்கு வானத்தப் பாத்துக்கிட்டே தண்ணிய மண்டிக்கிட்டு இருப்ப” என்றவன் வடிவு கையைப் பிடித்தான். வெடுக்கென்று உதறிவிட்டு,
“இது நல்லதுக்கில்ல கௌம்புங்க” என்றாள் வடிவு.
“ஏ... யாத்தா நீ அந்தானைக்குல நெம்ப பண்ணாத” என்றவன் மேலும் கையை இறுக்கிப் பிடித்தான்.
“தூர எடும்யா கைய” என்ற வடிவு திமிறி நிமிர்ந்தாள்.
“என்னடி யோக்கிய மயிறுமாறி ஏறி பேசுத... உம் புருஷனுக்கு ஓங் தெனவடக்கத் துப்பில்லனு அவனே சொல்லுதாங். ஓங் அரிப்புக்கு ஊராங்கிட்ட ஒறவாடி தீத்துக்கிடலாம்னு மனசுல கணக்குப் போடுதியோ.”
“அப்படி தேவன்னா உம்ம ஒத்தாச ஒன்னும் வேண்டாங் வெளிய போ மொதல்ல”
“வா - போனு சொல்லுத முண்ட! அன்னைக்குப் பெருசா என்னத்தையும் பாத்துட்டங்கதுனால இந்தப் பேச்சு வருதோ? இங்கயும் பாரு அப்பத்தான தெரியும்” என்றபடியே வேட்டியை அவிழ்த்தான் சந்திரன்.
அதே வேகத்தில் வடிவைச் சுவரோடுத் தள்ளினான்.
“இந்த பாரு நீ எங்கிட்ட வந்துட்டுப் போனது வாஸ்தவம்தான்னும் சொல்லுவேன். ஒன்னுத்துக்கும் ஏலாத ஆம்பள. உன்னக் கட்டிக்கிட்டு எங்கிட்டுக்கூடி எங்கக்கா புள்ளயப் பெத்தாலோனு தெரியலனும் ஊரெல்லாம் சொல்லுவேங். நாங் பாத்து ஒத்துக் கிட்டாத்தானய்யா நீ ஆம்பள? நீ செய்ததச் செய் ஆம்பள” வடிவு முறைத்தப்படி வெடப்பாக நின்றாள். சந்திரன் ஒரு நொடி வெலவெலத்துப் போனான்.
ஒரு நொடி அவளைப் பார்த்தவனுக்கு, எண்ணத்தில் முன்பு இருந்த வலு தனக்கு இப்போதுத் தானாக உருகுவது தெரிந்தது. வடிவை விட்டு விலகி மின்னல் வேகத்தில் சந்திரன் வெளியே நடக்கத் தொடங்கினான். வடிவு ஏனோ அதை யாரிடமும் சொல்லவில்லை. அதே வேளையில் சந்திரன் பல மாதிரிச் சொல்லியிருக்கிறான் என்பதை,
“இந்தா பாரு ஓங் கூறுபாடு தெரிஞ்சுதாங் நான் கட்டிக்கிட்டேன். இந்த வாழ்க்க கெடச்சதுக்கு ஒனக்கு நன்றி இருக்கனும். எனக்குத் துரோகம் பண்ண நெனச்சா வம்பா நீதாங் சீரழிஞ்சு போவ... சாமியிருக்கு அவளோதாங், நாங் சொல்லுவேங். அண்ணாச்சி நல்ல மனுசனா இருக்கங்கண்டு ஓங் இழுப்புக்கு வர்ல, வேறவம்னா ஆத்தோட போற தண்ணிதான்னு அள்ளிக் குடிச்சுருப்பாங்” என நாலு வார்த்தைக்கு ஒரு இருமல் இருமியபடி போதையில் தினமும் வடிவு புருசன் உளறும்போது தெரிந்துகொண்டாள்.
அப்படியொரு இரவைக் கடந்த காலையொன்றில் அழுக்குத் துணியள்ளிக்கொண்டு வடிவு வெளியே வந்தாள். காலைக்கரண்டுதான் பம்புசெட்டு ஓடும் துவைத்துக் குளித்து வரலாம் என்ற கணக்கில் ஒரு ஈய வாளியில் துணியள்ளி வந்தாள். ஊரடிக் கிணற்றில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் என்ற எண்ணத்தோடு மறுகாட்டுக்குப் போக எண்ணித்தான் நடந்தாள். டுப்பு டுப்பு டுப்பென்ற சத்தத்தோடு ராசு வண்டிக்கடந்து போகவும்தான் நடையை ராசு காட்டுப்பக்கமாக எட்டி விட்டாள். மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது, வண்டி வேலிப்படலை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. வேற்றாள் யாரும் வந்து துவைக்கவில்லை. வடிவு ஒரு பார்வை ராசைத் தேடிப் பார்த்தாள். உள்ளவரைக்கும் தண்ணி பாய்கிறதா என்று பார்க்கப்போயிருக்க வேண்டும்.
வடிவு துவைப்பைப் பிடித்தாள். முந்திய நாள் பெய்த மழையால் எப்படியும் மோட்டர் ரொம்ப நேரம் ஓடப்போவது கிடையாது என்ற எண்ணம் ஒரு புறம் வந்தது.
ஒரு எட்டுப் பார்த்து மோட்டாரை அமத்த வேண்டியதுதான் என்ற நினைப்போடு ராசு வருகையில் வடிவு துவைப்பை முடிக்கும் தருவாயில் இருந்தாள். “யாரு தொவைக்கது” என்று சோப்புத்தண்ணியைப் பார்த்தபடியே கேட்டவன் “நாங்தாங்” என்ற பதில் வரவும் நிமிர்ந்து ஆளைப் பார்த்தான். முந்திக்கொண்டு எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லாமல் சரியென்று தலையசைத்தான்.
“தண்ணி கடைசி வரைக்கும் பாஞ்சுருச்சு, பதறாம தொவச்சு முடி, மோட்டர அதுக்கப்பறம் வேணும்மான அமத்து தேங்”
கடைசித் துணியை ஒரு பிழி பிழிந்துகொண்டே “முடிஞ்சது அவளோதாங்” என்றாள்.
“சரி அப்ப கௌம்புதயா” எனும்போது சினேகமான சிரிப்போடு கொஞ்சம் ஏக்கமும் வெளிப்பட்டது ராசுவிடம்.
“இல்ல இன்னைக்குக் கொஞ்ச நேரம் இருந்துட்டே போறேங்” என்றவளை எங்க இன்னொரு முறை சொல் எனும் தொனியில் ஒரு பார்வை பார்த்தான் ராசு. புரிந்துகொண்டவளாக அதையே திருத்தமாகச் சொன்னாள் வடிவு. பெய்த மழைக்கும் ஓடிய மோட்டருக்கும் மண்ணெல்லாம் ஈரம்தான்.
வைராக்கியத்தோடு வெறுப்பும் கூடியிருந்தது. இப்போது வடிவுக்கு, உச்சந்தலையில் இடியை வாங்குவதுபோல தன்னை நெருங்கிக்கொண்டிருக்கும் டுப்பு டுப்பு வண்டிச்சத்தம் கிட்டத்தில் வர வர மனம் இருளாடியது. எல்லாமே இந்தச் சத்தத்தைத் தொடுத்து வந்ததுதான். கொஞ்சம் முன்பு முகம் முறித்துச் செல்லும் குருவு கூட, ஒரு காலத்தில் வடிவை அவ்வளவு தாங்கியிருப்பாள். ஒரு காலம் என்பது ஓராண்டாகச் சுருங்கிக்கூட போகுமா என்றும் தோன்றியது.
“இன்னைக்கி மதியத்தோட போட்டா, வெளிய ஒரு சோலியா அவுகளோட போவனும், நாங் கேட்டாலும் அண்ணே சரினுதாங் சொல்லும். இருந்தாலும், நமக்குத்தாங் நீ இருக்கியே சம்பளத்த ஒங்கிட்டயே வாங்கிட்டு ஒரே ஓட்டமா ஓடிட்டு வந்துருவேன்” என குழைந்து பேசிய குருவுதான் இன்று குமட்டைக் கோணிக்கொண்டு போகிறாள். சரி அவள் யோக்கியத்தைக் காட்ட அவளுக்குத் தெரிந்த ஒரே வழி.
காரவீட்டு லட்சுமிப்பாட்டி கூட வீடெடுத்துக் கட்டியது கூட யாரோடோ இருந்த தொடுப்பின் விளைவாகத்தானாம். அப்படி ஒன்றும் இங்கு அள்ளிக் கட்டவில்லை. ஏதோ இந்த மட்டில் இதுகள் மத்தியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது.
“எலேய் ஏறி ஒரு அனப்பு காத்தோட விட்டம்னா காதுல இருக்க ஊலயெல்லாம் வெளிய தள்ளீரும்”, என்ற ராசுவின் ஒரு வரிக்குச் சந்திரனிடத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தது.
சட்டென “டுப்பு - டுப்பு” வண்டி வடிவைக் கடந்து போனது. வேறு யாரோ புது ஆள் வண்டி. இன்னொரு முறை டுப்பு - டுப்பு சத்தம் கேட்டால் இதே வைராக்கியத்தில் இருக்க முடியுமா? இயலாமல் போகவும் வாய்ப்பு உண்டு, இயலாத குறைக்குத்தானே உயிர் சுமக்கும்படியானது. தாயும் பிள்ளையுமாக செத்தொழிந்த கதை எத்தனை கேட்டதுண்டு. அப்படியே ஆனாலும்தான் என்ன? என்று எண்ணம் வலுக்கத்தான் நேத்திக்கடன் போட்ட காசை எடுத்தாள். தான் செய்ய இயலாததை தெய்வம் செய்து பலி ஏற்கட்டும். அதுக்கு ஏது பாவக்கணக்கெல்லாம்.
“எனக்கு யோகமோ - அதிஸ்டமோ இருக்கானு தெரியல, ஆனா அத்தன தொரதிஸ்டத்தையும் தூக்கிச் சொமக்கத் தெம்பிருக்கு” என்று கல்யாணம் ஆன புதிதில் பாக்கியத்திடம் வடிவு சொன்னாள். அதுவும் வாஸ்தவம் ஆனால் இதுக்கேது தெம்பு. ஒவ்வொரு முறை கொள்ளைக்கு ஒதுங்கும்போது பீச்சிக்கொண்டு வருகிறது ரத்தம். தினமும் போன ரத்தத்திற்குக் கணக்கே கிடையாது. இருந்து முடித்து அழுத்திக் கழுவும்போது கண்ணீர் ஓடத்தான் செய்தது. இனியும் கடத்த முடியாது என்ற எண்ணம் வலுத்த போதுதான்
“ஆறான் நம்பர்”
வண்டியேறி சங்கரன் கோவில் ஆஸ்பத்திரிக்குப் போனாள். அது என்ன பொருள்காட்சிபோல இத்தனை பேர் முன்னால் சொல்லவோ, காட்டவோ கூச்சம். அதுதான் இவ்வளவு முத்திவிட்டிருந்தது. டாக்டர் கிட்டத்தில் போய் பக்குவமாய்ச் சொல்ல வழியில்லை, வாசலில் நின்றபடியேதான் சொல்ல முடிந்தது. பின்னாடி நின்றவர்கள் எல்லோருமே ஆம்பளயாட்கள்.
“வெளிய போவும்போது ரத்தமா போவுது சார்”
“வீக்கம் எதுவும் இருக்காம்மா?”
“இருக்கு சார்”
“வீக்கம் அதுவா உள்ள போகுதா, இல்ல தள்ளுனாத்தாங் போகுதா?”
“தள்ளுனாத்தான் சார் போவுது” என்றதும் நர்ஸ்சை அனுப்பி தனியறை ஒன்றில் பார்க்கச் சொன்னார்.
“என்னக்கா இவளோ தூரம் ஆக விட்டுருக்கீங்க. வேதன ரொம்ப இருக்குமே” என்ற நர்சை ஏனோ அவ்வளவு பிடித்திருந்தது வடிவிற்கு. பதினெட்டு வயதிருக்கலாம். காத்தாடிக்குக் கீழ் வேலை. சரி மகராசி நல்லாருக்கட்டும் என ஒரு நொடி மனதில் நினைத்துக்கொண்டாள். ஆப்பரேசன் செய்தே ஆகவேண்டுமாம். தொகை மூவாயிரத்தி ஐநூறு ஆகுமாம்.
அப்புறமும் கொஞ்சநாள் அளந்து திங்கவேண்டும் போல. இப்போதே ஊறுகாயோ, வதக்கிய சின்ன வெங்காயமோ கூட சேர்க்க முடியாது. நல்லெண்ணெ ரெண்டு கரண்டி ஊற்றி சோற்றோடு வெறவி எவ்வளவுதான் தின்றுவிட முடியும். தொடுகறி காரமாக இருந்தால் கூட சோறைக் “கொண்டா - கொண்டா” என வயிறு கேட்கும். வயிறே கேட்டாலும் குடுக்கவும் முடியாது. “கடுகு” இத்தீனி உள்ளே போனாலும் கொள்ளைக்கு முடுக்குகிறது - ரத்தம் - வலி - அழுகைதான்.
“பாக்கியம், இன்னா போனதும் வாரேன்” என்றாள் வடிவு. வாய் வீக்கம் இன்னும் வடிவுக்கு முழுதாகக் குறையவில்லை.
“இந்தச் சர்பத் கடக்காரங்கிட்ட ஒத்த ஐஸ்கட்டி வாங்கி ஒத்தனம் குடுக்கக்கூடாதா?” என்று சொல்ல வாயெடுத்தவள்,
“வேல முடிஞ்சு போச்சுல்ல, எல்லாரும் கௌம்பீருவாகளே” என்று மட்டும் சொன்னாள்.
“அதுக்குள்ள வந்துருவேங்” என்றாள் வடிவு. உடனே என்ன நினைத்தாளே “வர்றதுக்குள்ளாட்டியும் எல்லாரும் கௌம்பீட்டா நீயும் கௌம்பீரு” என்றாள்.
“சரி” என்பது போல பாக்கியமும் தலையசைத்துக் கொண்டாள்.
“இது நல்லதுக்கில்ல இவளே, நீ இல்லாட்ட வேற ஒருத்தினு அவுக போவலாம், நீ அப்புடி போவ முடியுமா? ராசண்ணே வீட்டு அக்கா என்னைக்குமில்லாம ரெண்டு மூணு தடவ கேசவன் கூட வண்டியேறி காட்டுக்கு வந்ததெதுக்குனு பாக்க? நான் சொல்லித்தாங் தெரியனுமாக்கும் ஒனக்கு! கையும் களவுமா புடிக்கத்தாங், அவுக மகாராசன் அவுகள ஒன்னுஞ் சொல்லமாட்டாக! உனக்குத்தாங் வௌக்கமாத்தடி விழுவும் பாத்துக்காக” என மூன்று மாதம் முன்பே பாக்கியம் சொல்லியிருந்தாள். ராசு காட்டுப்பக்கம் வருவதைக் குறைத்ததும் இந்த மூன்று மாதமாகத்தான். பாக்கியத்திற்கு வடிவு பத்திக்குறையுண்டே தவிர வெறுப்புக் கிடையாது. இருந்தும் இவளுக்கு விழுந்த பேச்சை அவளும் வாங்கும்படியாகிவிட்டது. உறவெல்லாம் பேச்சுக்குப் பதறத்தான் செய்யும், உருத்துதான் மறுவட்டமும் வரும். ராசுக்குத் தன்னிடம் உள்ளது உருத்தல்லவா! என்ற எண்ணம்தான் வடிவுக்கு அப்போது.
மேக்கே உள்ள புதர் நோக்கி நடந்தாள் வடிவு. கொஞ்ச நேரம் அடக்கிப் பார்த்தாள். போய் தொலைந்த பின் வரும் காந்தலும் கடுகடுப்பும் வேண்டுமா இந்த ஈன வாழ்க்கை எனச் சொல்லாமல் சொல்லும். வேண்டியெல்லாம் வழி பிறக்காதென்றான பின்புதான் ராசுவிடம் கேட்டாள்.
“சாயங்காலமா வந்து வாங்கீட்டுப் போ” என்ற ராசு வேகமாக நடந்துவிட்டான். கொஞ்ச நாளாக வீட்டிலும் முடுக்கம் “பாவம்” என்று எண்ணிக் கொண்டாள். சாயங்காலம் ஆள் எங்குமே தென்படவில்லை என்ற பின்தான் ஒன்பது மணியைப் போல ராசு வீட்டுப் பக்கமாக வந்தாள். ஜன்னலை ஒட்டித்தான் படுத்திருப்பான். அந்தப்பக்கம் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. காலையில் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது. இருந்தும் என்னமோ முன்னைப்போல ராசுவைப் பார்க்கவும் முடிவதில்லையே...
வாசல் பக்கம் அழிப்பாச்சிய கதவு உண்டு, அது தாண்டிய வராண்டாவின் முன் எரியும் மின் விளக்கு எரியவில்லை. அதற்கு அடுத்த ரூம் கதவு முழுவதுமாக சாத்தி வைக்கவுமில்லை. வாசல் அருகே நின்று சத்தம் குடுக்கலாமா என்ற நினைப்போடு பார்க்க அடர்த்தியான இருட்டு மட்டுமே தெரிந்தது. இருட்டுக்கே உண்டான மௌனம்.
“வீல்...!” என்றொரு சத்தம். ஒரு நொடி நடு நெற்றியில் இருந்து தாடைவாரையில் மின்னல் வெட்டியது போல இருந்தது வடிவுக்கு. வாய் பேச முடியாதோர் வலி பொறுக்காது அலறியது போல இன்ன வார்த்தை என்று கூறயியலாத மொழியில் துடித்தலறியபடி முகம் பொத்திக்கொண்டு தரையில் வடிவு விழுந்தாள். சில நொடிகளுக்குக் கண்ணை விரியத் திறக்க வராதோ எனப் பதறும்படியிருந்தது.
“ம்மா... ம்மா...” என்று அலறும்போதுதான். நான்கு வீடுகள் தள்ளி “அலைகள் நாடகத்தின் அதிரடியான கடைசி வாரக் காட்சிகளைக் கண்டுகழித்துக் கொண்டிருந்தோர் காதுகளில் கேட்டிருக்கவேண்டும். ஒவ்வொருவராக வெளியே வரும்போது ராசு வீட்டு முற்றத்திலும் விளக்கு எரிந்தது. வடிவு தடுமாறி எழுந்து நிற்கும் போது “திட்”டென முகத்தோடு அடித்த இரும்புப்பூட்டு அருகில் கிடப்பதைக் கண்டாள். அந்த மாயத்தில் விழுந்தது நாலு வௌக்குமாத்து அடி.
“காட்டுக்கும் கம்மாய்க்கும் ஒதுங்குன முண்ட, இன்னைக்கு வீட்டுக்கு ஏறி வருத அளவுக்கு ஆயிப்போச்சு என்ன! நீ வருவனுதான இருந்தேன்” என்றபடி இன்னொரு வௌக்குமாத்தடி விழுகும்போதுதான் எரிந்ததும் அடிப்பதும் ராசு வீட்டுக்காரிதான் என்பது கண்முன் தெரிந்தது.
“கேசவா, அந்த நாயப் புடிச்சுக் கதவோட சேர்த்துக்கட்டு” என்றதும் காத்திருந்தவன் போல எங்கிருந்தோ வந்த கேசவன் ஓடிவந்து வடிவு முடியைப் பிடித்து,
“பலவட்டர நாயி, ஊர்ல ஆம்பள யாரும் இல்லையோ, இங்கனதாங் நோங்குது என்ன” என்றபடியே எழுப்பினான். முகவாயின் வேதனை ஒரு புறம் உயிர்போக, மீதி உயிர் மயிர் வழியே போவது போல இருந்தது.
“க்கா... க்கா...” என்று வாயெடுத்தவளுக்கு வாயில் வேறு வார்த்தை வரவில்லை.
“இவ... யாரு யாருக்கு நாயி அக்கா? மொற கொண்டாடி வாரியோ? இவ... இவ கூட ஒரு முண்ட வருவாளே பாக்கியம்னு அவ இவளுக்குத் தூது. குடும்பத்த சீரழிக்கதுக்கு தெனைக்கு ஒரு ஆளு வேற. எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியோ நாயி! இன்னைக்கு ஊர் கூடி நாயம் சொல்லட்டும், பெறவு அவ போற திக்கம் போவட்டும்”
“எம்மா ஏ தாயி! உனக்கு சங்கடந்தாங் இல்லங்கல, என்னத்தயோ இல்லாதப்பட்ட கழுத செஞ்சுருச்சு, பெரியாளுக கண்டிச்சுவிடுதோம். நீ உள்ள போ...” என்றார் சங்கரன் தாத்தா.
“அப்புடி சொல்லாதிக மாமா... தோளுக்கு வளந்துட்டான் பய, நாளைக்கோ நாள மறுநாளோ மக பெரிய மனுசியாயிருவா, தாங் பெறப்பென்ன - குடும்பமென்ன- வாங்குன பேரென்ன இந்த வேலைய அவுக தரத்துக்குச் செய்யலாமா? சரி நடந்து போச்சு, கழுதய அந்த மட்டுல விடுங்கனு அனைக்கட்டி ரெண்டு புள்ளயோட நானும் சேர்ந்து செத்துப் போவோம்னு சொல்லி அவர ஒரு வசத்துக்குக் கொண்டாந்தா... இந்த முண்ட சாமத்துல வீடு தேடி வாராளே என்னனு சொல்ல நானு”.
ராசு வீட்டுக்காரி ஒரு குமுறு குமுறிவிட்டு மூச்சிறைத்தாள். பாக்கியம் கூட்டத்தில் நின்றிருந்தாள் என்றாலும் உள்ளுக்குள் துடித்தாலும் அவள் பெயரும் அடிபடத் தயங்கி நிற்கும்படி ஆகிவிட்டது. கேசவன் வடிவு கையைப் பிடித்துக் கட்டப் போனான்.
“எப்பா நீயுந்தாங் என்ன, பேசிக்கிட்டுத்தான இருக்கு?” என்றார் தாத்தா.
“மாமா நாங் நெறயா பொறுத்துட்டேங், இத்தன நாள்ல வீட்டுச் சொல் ஒன்று வெளிய விட்டுருப்பனா சொல்லுங்க”
“நாங் அத இல்லனு சொல்லலயே”
“பின்ன, இன்னைக்கு ஒரு முடிவு தெரியனும்.இல்லனா ஏங் குடும்பம் சீரழிஞ்சு போவும் அது நடக்கனும்னா பெரியவுக நீங்களே சொல்லுங்க”
“என்னம்மா நீ” என்றவருக்கு என்ன சொல்ல எனத் தெரியவில்லை. கையைக் கட்டியக் கையோடு கேசவன் பேசினான்.
“பொழுது அடஞ்சு கூதக்காத்து வீசும்போது தேடுது ஒனக்கு என்ன?”
“நாங் அதுக்கு வர்லக்கா” ராசு வீட்டுக்காரியைப் பார்த்தபடி தீனமானதொரு குரலில் வடிவு சொன்னாள்.
“மறுபடி அக்கா - நொக்கானு இழுத்தைன்னா பாரு, ஒங்கக்காள அக்கானு கூப்புடு. அவளுக்குப் புருசங் ஒரு பய இருக்காம்ல, அவங்கிட்ட போய் நில்லு”
“......................”
“இங்கிட்டு சிக்குனத பெறக்கிட்டு போலாம்னு வந்துருக்கா களவாணி நாயி” என்றபடியே கேசவன் வடிவை அடிப்பதுபோல கை ஓங்கினான்.
“அப்புடியெல்லாங் சொல்லாதிகக்கா” வலிக்கு அழுகிறாளா, வார்த்தைக்கு அழுகிறாளா என்று தெரியாதபடி வடிவு அழுதுகொண்டிருக்கிறாள். தன்னை வடிவு சட்டை செய்யாதது கேசவனை உசுப்பேற்றியது.
“என்னத்த அப்ப களவாங்க வந்த” என்று மறுபடியும் கேட்டான். வடிவு அதற்கும் ராசு வீட்டுக்காரியைப் பார்த்தபடியே,
“உதவி கேட்டுத்தாங் வந்தேங்.... திருடிப் பொழைக்க நாங் ஆளில்ல” என்றவள் தேம்பிக்கொண்டே, அதே மூச்சில், “அவுகதான் உதவி செய்யதம்னு வரச் சொன்னாக, செய்ததும் செய்யாததும் உங்க பிரியந்தாங்... அவுக கிட்ட ஒரு வார்த்த கேட்டுப்பாருங்க, அவுகளே சொல்லுவாக” வடிவு ஏக்கத்தோடு சொன்னாள்.
“ஆமத்தா அவுகளவும் கூப்புடுவா ஒனக்கு, அது ஒன்னுதாங் செய்யல நானு, என்னமும் இருந்துட்டுப் போவுது. இத்தோட இந்த சோலிய வுட்டுட்டுப் போயிரு, வேற ஒரு தரம் பாத்தேம்னு வை...!” என்றவள் கேசவனைப் பார்த்து,
“அவள அவுத்துவிடுறா” என்றாள்.
“இந்தப் பழியோட நாங் போவலக்கா என்னய கொன்னாலும் சரி, நான் திருட ஒன்னும் வர்லக்கா” என வடிவு சொல்லும்போதுதான் கேசவனுக்கு வர்ம இடம் புடிபட்டது. சரி அங்கயே மறுபடி அடிப்போம் என்ற எண்ணத்தோடு,
“ஏ... களவாணி முண்ட என்ன பசப்புதியோ மவளே, போலீஸ்ல எழுதி வச்சம்னு வையி, வம்பா சீரழிஞ்சு சாவ” என்றான்.
வடிவு பார்வை அப்போது கதவிடுக்கில் நிலை குத்தி நின்றது. அடுத்த நொடி கேசவனை ஒரு பார்வை பார்த்தாள், கண்ணிப்போய் இருந்த முகத்தில் வௌம் மட்டுமே இருந்தது. கேசவனுக்கு வாய் வரவில்லை. கேசவன் கைக்கட்டை அவுக்கும்போது வடிவு கேசவனைப் பார்த்துச் சொன்னாள்.
“இந்தா பாரும் அவுசாரியா அம்பலத்துக்கு ஏறுனாலும் களவாணிங்க பேரு வாங்குதவ நாங் இல்ல தெரிஞ்சுக்கோரும்” என்று சொல்லி சேலை முந்தானையால் அடிபட்ட இடத்தைப் பொத்தியபடி திரும்பி நடந்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் அந்த கடுகடுப்பை விட பயங்கரமான வேற ஒரு கடுகடுப்பு வரும் என்பது அவள் அறிந்ததே. வலி உயிர் போகிறது என்கிறார்கள். அப்புடியே போனால் கூட தேவலை என்றானது. ஒரு - ஒரு முறை வெளியே ஒதுங்கும்போது வெயிலில் புழு சுருளுவதுபோல சுருண்டு அழும்படியாகிறது. மேற்கே புதருக்கு மேல்புறம் கொஞ்சம் தண்ணி உண்டு. கழுவ குத்தவைத்து எழும்போது வெளியே வேர் தள்ளி நோவு உருக்கியது. பல நாள் ரெத்தப்போக்கு வேறு, கன்னக்கடுப்பு ஒரு புறம் என எல்லாம் சேர பல்லைக்கடித்தபடி கண்ணீர் கழுவி வேரை உள்ளே தள்ளியபோது லேசாக மயக்கம் வருவதுபோல இருந்தது. “ஆன முடியாமல்” அங்கயே விழுந்தாள்.
கோடை என்றாலும் முறுக்கு வெயிலுக்கு கருமேகம் திரண்டு இருந்தது. சில்லு வெட்டாக வடிவு மனதுக்குள் ஒரு கலங்கிய காட்சி நிழலாடியபடியே இருந்தது. இப்போது மறுபடி மறுபடி அதுவே நினைவில் வந்து மோத மோத கலங்கியவை தெளிவாகத் தெரிந்தது. கதவிடுக்கு வழியே தான் கண்ட காட்சி கட்டில் ஓரமாகத் தொங்கப்போட்டது போல சலனமே இன்றி இருந்த ராசுவின் கால்கள்.
ஒரு எட்டு கூட நடந்ததைத் தடுக்க முன்வராத கால்கள். மறுநொடியே மீண்டும் திட்டென அறைந்த பூட்டும் தெளிவு கலைந்த இருட்டும் கவ்வியது. வடிவு துடித்து எழுந்தாள். எங்கோ வனாந்திரத்தில் அம்மணமாகக் கிடப்பது போன்ற உணர்வு அவளுக்கு, பெருமூச்சு விடும்போது வேர்த்து மார்பெல்லாம் நனைந்திருந்தது. தூரத்தில் தீனமான அழுகுரல் வந்து நிக்கவும்தான் குழந்தை நியாபகம் வந்து பதறிப்போனாள்.
இயலாமை இன்ன மட்டுமில்லாமல் தின்ன, “பெறந்தே கொல்லுதே பாவம்” என தலையில் அடித்துக்கொண்டாள். ரெண்டு நாள் முந்தி நடந்த கேவலத்தைத் தானும் புள்ளையும் சுமக்கவேண்டுமோ தெரியாது.
“ஏங் உயிர நாங் மாச்சுக்கிடுவேங், எம்புள்ளய நாங் கொன்னுக்கிட மாட்டேங், சாமி கொன்னுரு கொன்னுரு கொன்னுரு... நான் கொன்னுகிடமாட்டேங் சாமி நீயே கொன்னுரு” எனப் புத்தி கலங்கியவள் போல புலம்பியபடி எழுந்தவள் நாலு எட்டு கூட வைத்திருக்கமாட்டாள். அதற்குள் உசார் வந்தவள் போல,
“எம்புள்ளய நானே கொல்லச் சொல்லுதனே சண்டாள முண்ட நாஞ் சாவனும் நாந்தாங் சாவுனம்” என்றவள் மாரில் ஓங்கி அடித்துக்கொண்டே தொட்டில் உள்ள திசை நோக்கி ஓடி வந்தாள். இப்போது சத்தமில்லை. எவ்வளவு நேரம் கிடந்தோம் என்றும் தெரியவில்லை என்பது கூடுதல் குழப்பம் கொடுக்க கால்கள் தடுமாறியபடியே இருந்தது.
“ஐயோ ஏம்புள்ள” என பேய் அலறல் அலறிக்கொண்டு வடிவு ஓடிவரும்போது ஏகதேசம் எல்லோருமே போய் விட்டார்கள். ஒற்றை ஆளாக பாக்கியம் மட்டும் நின்றுகொண்டிருந்தாள். திடுக்கிட்டு எட்டி குழந்தை உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலைப் பார்த்தாள். குழந்தை உறங்கிக்கொண்டிருந்தது. ராசு தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்தான். ஆளைக் கண்டதும் ஓடி வந்தவள் கால்கள் பின்ன அங்கேயே விழுந்தாள். கப்பி, கசடு, கேடு, அழுக்கு, இழுக்கு என சகலத்தையும் கழுவிச்செல்லும் மாமழை வெறி கொண்டு வடிவையும் கழுவத் தொடங்கியது.
வண்ணப்பெண்ணின் புடவை சரசரப்பு போல பெய்துகொண்டிருந்த மழையில் யாரோ ஒரு சிறுவன் தன் தந்தையுடன் நடந்து சென்றான். அவன் தலையில் சிறிய மஞ்சள் குடையை மாட்டியிருந்தான். அவன் அந்தக் குடையை அவ்வப்போது கைகளால் பற்றி குதூகலித்தான். அந்தக் குடை அவனை மழையிலிருந்தும் நாளை வெயிலிருந்தும் காக்கும். குடை என்பது தலைக்கு மேல் தற்காலிகமாய் ஒரு கூரை. அங்கங்கே சின்னச்சின்ன நீர் குட்டைகள்.
மெடிக்கல்ஸூக்கு வெளியே ஸ்டூலில் அமர்ந்திருந்த கண்ணபிரான் அந்தச் சிறுவனையும் அவனுடைய தந்தையையும் பார்த்துக்கொண்டே இருந்தான். மின்சாரம் நின்றிருந்தது. உள்ளே சுழல் நாற்காலியில் பரதன் அமர்ந்திருந்தார். கார்மேகங்களிலிருந்து மெல்ல கதிரவன் எட்டிப் பார்த்தான். மெடிக்கல்ஸீன் கண்ணாடிக் கதவுகளில் பட்டுத் தெறித்த மாலைக் கதிர்களில் அமானுஷ்யம் குடிகொண்டிருந்தது. பரதனின் கண்ணாடி ப்ரேம் மஞ்சள் ஒளியில் ஜ்வலித்தது. திரை விலகுவதுபோல மழை மெல்ல ஓயத் துவங்கியது. பரதன் மெடிக்கல்ஸின் அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். அருகிலிருந்த பிளாஸ்டிக் குடத்திலிருந்து தண்ணீரைக் குவளையில் எடுத்து முகத்தை அலம்பினார். வெண்ணிறக் கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்து கண்ணாடியை மாட்டிக்கொண்டார். தான் சென்று விஜயனைச் சந்தித்து வருவதாகக் கண்ணபிரானிடம் சொன்னார். அவன் தலையசைத்தான். வண்டியைக் கிளப்புகையில் அவனைப் பார்த்து நல்ல ஷர்ட் என்றார். கண்ணபிரான் புன்னகைத்தான்.
கண்ணபிரான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மெடிக்கல்ஸூக்கு வேஷ்டியும் முழுக்கை சட்டையும் அணிந்து வருவான். பரதன் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் அவனை ஒரு முறை நாள் ரோட்டிலிருந்த பரணி டெக்ஸ்டைல்ஸூக்கு அழைத்துச் சென்று பேண்ட் சர்ட் பிட்டுகளை எடுத்து அருகிலிருந்த நாகா டெய்லர்ஸிடம் தைக்கக் கொடுத்தார். முழுக்கை சட்டையெல்லாம் அணியத் தேவையில்லை என்று சொன்னார். அது வயதான தோற்றத்தை அளிக்கும் என்றார். மேலும் கோடுகள் போட்ட சட்டைகளைவிட பெரிய சதுரங்கள் கொண்ட சட்டைகளை அணியச் சொன்னார். சட்டைகளை எடுக்கும்போதே சோபையான வண்ணங்களைத் தவிர்த்தார். கை கடிகாரம் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அடிக்கடி மொபைல் போனை எடுத்து நேரம் பார்ப்பதையும் வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்க்கச் சொன்னார். யாரைச் சந்தித்தாலும் மென்புன்னகையோடு பேசச் சொன்னார். செருப்பு அணிவதற்குப் பதிலாக ஷூ அணியக் கட்டாயப்படுத்தினார். தினமும் ஷூவைப் பிரஷ்ஷால் பாலிஷ் செய்யச் சொன்னார். வெளியிடங்களில் ஷூவில் அழுக்கு படிந்துவிட்டால் துணி அல்லது கிடைத்தால் வாழைப்பழத்தோலைக் கொண்டு நன்கு துடைக்கச் சொன்னார். அவரே ஒரு முறை செய்தும் காட்டினார். ஒருபோதும் பொது இடங்களில் ஷூவைக் கழற்றிவிட்டு வெறும் சாக்ஸூடன் இருக்கக்கூடாது. காலையில் ஷூ அணிந்தால் இரவு வீட்டுக்குச் சென்றுதான் ஷூவைக் கழற்றவேண்டும் என்றார். ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் சார் என்று சொன்ன கண்ணபிரானைப் பரதன் என்றே சொல்லவேண்டும் என்று கட்டளையிட்டார். மேலும் ஒரு முறைக்கு மேல் ஒரு உரையாடலில் எவர் ஒருவரையும் சார் என்று சொல்லக்கூடாது என்றார். அது யாராக இருந்தாலும் ஒரு சார் போதும் என்றார். கண்ணபிரான் பரதனிடம் வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் அடிக்கடி டீ குடிப்பான். மேலும் அருகிலிருந்த ஹோட்டல்களில் காலை மதியம் இரவு என்று உண்டான். பரதன் அவனைச் சமைத்து உண்ணச் சொன்னார். மதியத்திற்குக் கடைக்குச் சாப்பாட்டை எடுத்து வரச்சொன்னார். வீட்டுக்குச் சென்று உண்டு வந்தாலும் தவறில்லை என்றார். அதிகம் டீ காபி குடிப்பதற்குப் பதிலாக வெந்நீரில் எலுமிச்சை கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் டீத்தூள் கலந்து குடிக்கச் சொன்னார். அதற்காகக் கடையில் ஒரு கெட்டில் வாங்கி வைத்தார். தொலைந்துபோன காலத்தை நினைத்துக்கொண்டு வருந்துவதை தவிர்க்கச் சொன்னார். சென்றது இனி மீளாது என்றார். எவரிடமும் தலை குனிந்து பேசக்கூடாது, இளிக்கக்கூடாது என்றார். இளிப்பது வெட்கத்தின் வெளிப்பாடு. காதலிக்கும் பெண்ணைத் தவிர வேறு யாரிடமும் வெட்கப்படத் தேவையில்லை என்றார். கண்ணபிரான் அரைக்கைச் சட்டை அணிந்து இன் செய்துகொண்டான். ஷூ வாட்ச் அணிந்துகொண்டான். தினமும் சவரம் செய்தான். அவரைப்போல அவன் மீசையை மழிக்கவில்லை. காலை ஏழு மணிக்கு அவன் மெடிக்கல்ஸைத் திறந்தால் இரவு பத்து மணி வரை இருப்பான். பரதன் ஒன்பது மணிக்கு வருவார். அடிக்கடி கட்சி தொடர்பான வேலைகளுக்காக வெளியில் சென்றுவிடுவார். மாலையில் சிறிது நேரம் இருப்பார். வேறு வேலை எதுவும் இல்லையென்றால் அவரும் மெடிக்கல்ஸிலேயே இருப்பார். வாடிக்கையாளர்களிடம் அதிகம் பேசத்தேவையில்லை, அதே நேரத்தில் பேசாமலும் இருக்கக்கூடாது என்பார். ஒருமுறை வந்த வாடிக்கையாளர் அடுத்தமுறை வரும் போது அவர் சென்றமுறை எதற்காக வந்திருந்தார் என்பதை நினைவில் வைத்து அதை கேட்கவேண்டும், அவர்களின் குடும்பத்து உறுப்பினர்கள் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் தற்சமயம் எப்படி இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும், அதே நேரத்தில் தேவையின்றி அவர்களை அதிக கேள்விகளும் கேட்கக்கூடாது, அவர்கள் மீது உண்மையான அக்கறை நமக்கு உண்டு என்பதை நாம் உணர்த்தினால் போதுமானது, உண்மையான அக்கறையும் இருக்கவேண்டும் என்று அவனுக்கு அவர் வகுப்பு எடுத்தார்.
பயிலப் பயில நுண்ணறிவு கொண்ட இயந்திரம் சொற்கிடங்கிலிருந்து சூழமைவுக்குப் பொருத்தமான வாக்கியங்களை உருவாக்குவது போல பயின்று பயின்று தன்னைத் தகவமைத்துக்கொண்டான் கண்ணபிரான். அவன் பிறருடன் பேசும்போது இளிப்பதை முதலில் பிரக்ஞைப் பூர்வமாகத் தவிர்த்தான். தலையை ஒரு பக்கம் சாய்த்து சொறிந்துகொள்வதை நிறுத்தினான். மெல்ல அந்தப் பழக்கங்கள் பொருந்தாத பழைய சட்டைகள்போல அவனை விட்டு விலகின. அவன் கச்சிதமாகக் கூர்மையாக இனிமையாகப் பேசினான்.
நால்ரோட்டின் முனையில் அமைந்திருந்தது விஜயனின் ஸ்ரீகிருஷ்ண பவன். ஹோட்டலுக்குள் சாலையிலிருந்து இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்லவேண்டும். பெரும்மழை வந்தால் ஹோட்டலுக்குள் நீர் புகுந்துவிடும். ஆனால் அப்படி பெரும் மழை வந்ததுமில்லை. ஹோட்டலுக்குள் நீர் புகுந்ததுமில்லை. தூறல் குறைந்திருந்தாலும் அதிகக் கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் காபி குடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு தந்தை தன் மகளுக்குத் தோசையைக் கிள்ளி ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தார். அடிக்கடி அவளது வாயைத் துடைத்துவிட்டார். தலையை வருடினார். தண்ணீர் புகட்டினார்.
யசோதையின் கிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன், முரளிகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கோவர்தன கிருஷ்ணன், வேங்கடகிருஷ்ணன் என்று பல்வேறு கிருஷ்ணனின் வரை படங்கள் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. மறுபக்க நீலவண்ணச் சுவரில் கிருஷ்ணன் விஜயனுக்கு குருஷேத்திரத்தில் அருளிய கீதா உபதேசத்தின் ஓவியம்.
“என்ன இன்னிக்கு மழை பெய்யுதேன்னு நினைச்சேன். வாராது வந்த மாமணியா ஹோட்டலுக்கு வந்திருக்கீங்க” என்று கல்லா அருகில் நின்ற பரதனைத் தன் கேபினிலிருந்து வெளியே வந்த விஜயன் வரவேற்றான்.
“எப்படி இருக்கீங்க விஜயன்”
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. பத்மா மேடம் எப்படி இருக்காங்க”
“நல்லா இருக்காங்க”
“என்ன சாப்பிடுறீங்க”
“இல்ல உங்களப் பாக்க வந்தேன்”
“ஓ... அப்படியா... வாங்க உள்ளே போலாம். முருகா இரண்டு கப் காபி கேபினுக்கு அனுப்பு. காபி குடிப்பீங்க இல்ல பரதன். நான் இந்த நேரத்துல பொதுவா பேட்மிட்டன் விளையாட போயிடுவேன்.”
“தெரியும். இன்னிக்கு மழையா இருக்கு. போய் இருக்கமாட்டீங்கனு நினைச்சுதான் வந்தேன்.”
“பரதன் கணக்கு தப்பாதுதான். உட்காருங்க.”
குளிரூட்டப்பட்ட அறை. விஜயன் எப்போதும் ஹோட்டலில் தனக்கென்று அமைத்துக்கொண்ட கேபினில்தான் அமர்ந்துகொள்வான். அங்கிருந்து கொண்டு அனைத்தையும் கவனிப்பான். மாலைகளில் அவன் புதிதாகத் துவங்கிய கிளப்பில் பேட்மிண்டன் விளையாடுவான். எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டை நெற்றியில் குங்குமத் தீற்றலுடன் இருப்பான். காபி கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றான் முருகன்.
“சொல்லுங்க பரதன்”
தான் கட்சியில் முழு நேர ஊழியராக மாற முடிவு செய்திருப்பதால் ஜீவா மெடிக்கல்ஸைக் கண்ணபிரானுக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அதனால் கண்ணபிரான் பெயரிலேயே டிரக் லைசன்ஸூக்கு விண்ணப்பிக்க எண்ணியிருப்பதாகவும் அதற்கு ரெண்ட் அக்ரிமெண்ட்டைக் கண்ணபிரான் பெயருக்கு மாற்றவேண்டும் என்றும் முன்னுரைகள் ஏதும் இல்லாமல் கூறினார்.
“புல் டைம் பார்ட்டி மெம்பர் ஆகப் போறீங்களா”
“ம்”
“புல் டைம் பார்ட்டி மெம்பர் எல்லாம் வேறு தொழில் நடத்தக்கூடாதுங்கற கட்டுப்பாடெல்லாம் இன்னமும் உங்க கட்சில மட்டும்தான் இருக்கு பரதன்”
“அது நம்ம கட்சி இல்லையா விஜயன்.”
“சாரி. நம்ம கட்சிதான். காபி குடிங்க பரதன் ஆறிப்போகுது. காபி கொட்டையைச் சிக்மகளூருலயிருந்து நேரடியாவே வரவழைக்கிறேன். இங்கேயே வறுத்து அரைக்கிறோம். இங்க காபி குடிக்க மட்டுமே காலைலையும் சாய்ந்திரமும் ஒரு கூட்டம் வரும்”
தலையாட்டிய பரதன் சுவற்றில் தொங்கவிடப்பட்ட நாகராஜனின் படத்தைப் பார்த்தார். இது நாகராஜன் இல்லையா விஜயன் என்று கேட்டார். திரும்பி படத்தைப் பார்த்த விஜயன், ஆமாம், இது ரொம்ப வருஷமா இருக்கே. நீங்க இங்க வந்ததில்லைன்னு நினைக்கிறேன் என்றான்.
“வந்திருக்கேன். கேபினுக்கு வந்ததில்லை.”
“ஓ...ஆமாம் பரதன். நாகராஜன் பெரியப்பாதானே எனக்கு எல்லாமே. இன்னிக்கி நான் ஒரு ஆளா இந்த ஊருல இருக்கறதுக்குக் காரணமே அவருதானே. இந்த இடமே அவரதுதானே.”
“தெரியும். அவரு உங்க சொந்த பெரியப்பா இல்ல, இல்ல விஜயன்.”
“ஆமாம். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நானும் என் தம்பியும் அப்படியே கூப்படப் போயி நிறைய பேரு அப்படி நினைச்சிக்கிட்டாங்க. நான் எட்டாம் கிளாஸ் படிக்கறப்போ எங்க நைனா இறந்துட்டாரு. நிலம் பதினாறு ஏக்கர் இருந்துச்சு. மணக்குப்பம் எங்க ஊரு. திருக்கோயிலூர்ல இருந்து திருவெண்ணெய்நல்லூர் போற வழியில இருக்கு.”
“தெரியும். அந்த ஊருக்கெல்லாம் நிறைய முறை போயிருக்கேன். உங்க அப்பாவும் நாகராஜனும் ஒண்ணா படிச்சாங்க இல்ல.”
“ஆமாம். நைனாவும் நாகராஜன் பெரியப்பாவும் அண்ணாமலையில ஒண்ணாதான் பி.ஏ. படிச்சாங்க. முதல்ல பெரியப்பா விழுப்புரத்துல தான் ப்ராக்டீஸ் பண்ணாரு. அப்போ நைனாவுக்காக ஒரு நிலத்தகராறு கேஸூ கூட ஜெயிச்சு கொடுத்தாரு. ரொம்ப நல்ல சிநேகம். நைனா செத்துப்போனப்பறம் சின்ன நைனா எங்களுக்கு உதவல. அவரு பக்கத்துல எடை யாருன்னு ஒரு கிராமத்துல கம்பத்துகாரங்க வீட்ல பொண்ணு எடுத்தாரு. அப்பறம் அவங்க வீட்டோட போயிட்டாரு. எங்க சொத்தை வேற பறிக்கப் பாத்தாரு. அங்க நல்ல ஸ்கூலும் இல்ல. எங்க அம்மா நாங்க நல்லா படிக்கனும்னு பெரியப்பாவை வந்து பாத்தாங்க. பெரியப்பா பசங்க இங்க தங்கி ஸ்கூலும் காலேஜூம் படிக்கட்டும்னு சொல்லிட்டாரு. தனு பெரியம்மா கிட்டக்கூட அவரு எதுவும் கேட்கல. தனு பெரியம்மா எங்களை அவங்க பசங்க மாதிரியே பாத்துக்கிட்டாங்க. அவங்க பையன் பாலனுக்கும் எங்களுக்கும் எந்த வித்யாசத்தையும் அவங்க காட்டினதில்லை. ஒரு நாளு கூட சாப்பாடு விஷயத்துல பண விஷயத்துல முகம் சுளிச்சதில்லை. பெரியப்பா ஜவஹர் ஸ்கூல்ல சேத்தாரு. அப்புறம் காலேஜ் படிச்சேன். நான் ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைச்சப்போ அவருதான் இந்த இடத்தைக் கொடுத்து நடத்திக்கச் சொன்னாரு. முன்னாடி இங்க ஒரு மெஸ்ஸூம் இரண்டு மூணு கடையும் இருந்துச்சு. அப்படியே எல்லாத்தையும் இணைச்சு ஹோட்டலை ஆரம்பிச்சேன். பெரியப்பா இருக்குற வரைக்கும் அவருகிட்ட வாடகையை ஒண்ணாந்தேதின்னா கொடுத்துடுவேன். இப்போ பெரியம்மாகிட்ட கொடுத்துடறேன். நானே அப்பப்போ வாடகையை ஏத்தி பத்திரத்தைப் புதுப்பிப்பேன். என் தம்பி இன்ஜினியரிங் முடிச்சுட்டு நல்ல வேலையில இருக்கான். இதுக்கெல்லாம் அவருதான் காரணம். எனக்கு இந்த ஹோட்டலுக்கு அவரு பேரு தான் வைக்கனும்னு ஆசை. அவருதான் கூடவே கூடாதுன்னு சொல்லிட்டாரு. இந்த இடத்தை என் பேருக்கு விலைக்குக் கொடுத்துடுங்கனு கேட்கனும்னு நினைப்பேன். ஆனா கேட்க இதுவரைக்கும் தைரியம் வரல.”
“நீங்க சொல்ற பல தகவல்கள் எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு விவரமா இப்போதான் தெரியுது.”
“பெரியப்பாவ பாக்க நீங்க வருவீங்க இல்ல.”
“ஆமா. அப்போ கடலூர் செயின்ட் ஜோசப்புல பியெஸ்சி கெமிஸ்ட்ரி படிச்சுட்டு இருந்தேன். வக்கீலுக்குப் படிக்கலாம்னு ஒரு எண்ணம் வந்ததுக்குக் காரணமே அவருதான். அவருக்குப் பேரே லேபர் லாயர்தான். முழுக்க முழுக்க கட்சிக்காரங்க கேஸ் தான் எடுப்பாரு.”
அவன் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவன் வந்து அரிசி மூட்டைகள் வந்திருப்பதாகவும் குடோன் சாவி வேண்டும் என்றும் கேட்டான். சாவியை எடுத்துக் கொடுத்தவன் குடோன் மிகச் சிறியதாக இருப்பதால் நிறைய பொருட்களை வாங்கி வைக்க முடியவில்லை என்று பரதனிடம் சொன்னான். அடிக்கடி வாங்க வேண்டியிருக்கிறது என்றும் புலம்பினான். தலை அசைத்து மௌனமாக இருந்தார் பரதன்.
“நீங்க சொன்ன விஷயம் செஞ்சிடலாம் பரதன். நீங்க போன்லையே சொல்லியிருக்கலாம்”
“நேருல வந்து சொல்றதுதானே முறை.”
“சரிதான். நீங்க வந்ததும் நல்லதாப் போச்சு. உங்களைப் பாத்து ரொம்ப நாள் ஆச்சு. அந்தப் பையன் உங்க கிட்ட வேலை செய்றாரா.”
“மூணு வருஷமா எங்கிட்ட வேலை செய்றாரு. அதுக்கு முன்னாடி கொஞ்ச வருஷம் பெங்களூருல்ல வேலையில இருந்தாரு. அவருக்கு அங்க சரியா வரல. அவருக்கு போன வருஷம்தான் கல்யாணம் ஆச்சு.”
“உங்களுக்குத் தெரிஞ்சப் பையனா இருக்கறது ஒண்ணு போதும் பரதன். நாளைக்கே கூட செஞ்சிடலாம். உங்கக் கடையில ஒருத்தரு கொஞ்சம் சதை பிடிச்சாப்புல இருப்பாரே. அவரா பரதன்”.
“ஆமாம்... அவரு தான்.”
“ஓகே டன். நான் ரெண்டு மூணு தடவை அவரப் பாத்திருக்கேன். பேரு தெரியாது. மாத்திரலாம் பரதன்.”என்று சொல்லி மேஜையைத் தட்டினான்.
“நல்லது விஜயன்”
“இதுக்குப் போயி என்ன பரதன். ஆமாம் கட்சில எதாவது போஸ்டிங் கொடுக்குறாங்களா” என்று தலையை முன்பக்கம் கொண்டு வந்து கேட்டான்.
“மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்.”
“நல்லது. கடலூர்லயா?”
“ஆமாம்”
“அப்போ நீங்க அங்க போயிடுவீங்களா”
“இல்ல பத்மாவுக்கு இங்கதானே ப்ராக்டீஸ். நெய்வேலி கோர்ட் விருத்தாசலம் கோர்ட். இப்போதைக்கு இங்கதான். நான்தான் போயி வருவேன். பின்னாடி பார்க்கலாம். நான் வரேன் விஜயன்” என்று சொல்லி எழுந்துகொண்டார். வாங்க என்று சொல்லி பரதனை வாசல் வரை வந்து வழி அனுப்பினான் விஜயன்.
திரும்பிய விஜயன் ஹோட்டல் கல்லா அருகில் கீழே சிதறிக் கிடந்த பில்களைப் பார்த்து உடனே பெருக்கச் சொன்னான். ஈரமாக இருந்த வாசலைத்துடைக்கச் சொன்னான். விரிந்த நிலையில் வாசலை அடைத்துக் கிடந்த இரண்டு மூன்று குடைகளை அப்புறப்படுத்தச் சொன்னான். டேபிள்களில் அப்படியே இருந்த காபி டம்ளர்களை எடுக்கச் சொல்லி கத்தினான். நேராக இருந்த நாற்காலிகளை எடுத்து மறுபடியும் நேராகப் போட்டான். யாரும் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று சத்தம் போட்டுக்கொண்டே கேபினுக்குள் சென்றான்.
விஜயன் தாரிக் அலி என்பவரிடமிருந்து சில வருடங்களுக்கு முன்னர்தான் பரதனின் கடையிருந்த காம்ப்ளெக்ஸை வாங்கினான். அந்த வருடத்தில் இரண்டு கிரௌண்டில் இடம் வாங்கி கிளப் ஒன்றை ஆரம்பித்தான். ஊரில் இருக்கும் பணக்காரர்கள் சந்தித்துக்கொள்ள ஒரு இடம் இருக்கவேண்டும் என்ற எண்ணம் விஜயனுக்கு இருந்தது. மேலும் இது நல்ல லாபத்தைத் தரும் என்றும் அவன் எண்ணினான். விஜயன் காம்ப்ளெக்ஸை வாங்கிய புதிதில் அங்கிருந்த நான்கு கடைகளிலும் வாடகை வாங்கச் செல்வதுண்டு. பின்னர் அனைவரும் ஜிபேயில் பேடிம்மில் வாடகை செலுத்தத் தொடங்கிய பின்னர் செல்வதை நிறுத்திக்கொண்டான். கடை காம்ப்ளெக்ஸ், பின்னால் இருந்த ஆறு வீடுகள் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் இருபது செண்ட் நிலம். காம்ப்ளெக்ஸின் மாடியில் ஒரு கழிப்பறை மட்டும் இருந்தது. அவனுக்கு காம்ப்ளெக்ஸின் முதல் மாடியிலும் கடைகளைக்கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த இடத்தில் ஒரு குடோன் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருந்தது.
மழை பெய்திருந்ததால் வெக்கையாக இல்லை. வேம்பின் கிளைகள் காற்றில் மெல்ல நடனமிட்டன. இரவின் இறுக்கத்தைக் கலைக்கும் வகையில் குடித்திருந்த ஒருவர், “நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே” என்று உச்சஸ்தாயியில் உருகியவாறு தெருவில் நடந்து சென்றார். கண்ணபிரான் தோசை வார்த்து தக்காளி வெங்காயம் வதக்கி சட்னி செய்து வாசலில் அமர்ந்து சாப்பிட்டான். நான்கு இல்லங்கள் இருந்த லைன் வீடு. மற்ற இல்லங்களில் வெளி விளக்குகள் அணைந்திருந்தன. நான்கு வீட்டுக்கும் சேர்த்து கழிப்பறைகளும் குளியலறைகளும் கடைசியில் இருந்தன.
திருமணமாகி அவன் அவனது மனைவியை அந்த வீட்டுக்குத்தான் அழைத்து வந்தான். அந்தப் பெண்ணுக்கு அந்த லைன் வீடு பிடிக்கவில்லை. கண்ணபிரானையும் பிடிக்கவில்லை. வீடு சிறித்து இருக்கிறது. கண்ணபிரான் பெருத்து கருப்பாக எருமைமாடு போல இருப்பதாகச் சொன்னாள். ஏதோ பி.பார்ம் படித்திருப்பதாகச் சொல்லி கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால் ஒரு மெடிக்கல்ஸில் வெறும் மாதச் சம்பளத்தில் இருப்பவனுக்கு எப்படித் தன்னை தன் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கலாம் என்று பிலாக்கணம் பிடித்தாள். எப்போது கண்ணபிரான் அருகில் சென்றாலும் வயிற்று வலி, உடல் சோர்வு என்று சொல்லி ஒருக்களித்துப் படுத்துக்கொள்வாள்.
கல்யாணமான இரண்டாவது மாதத்தில் ஊரில் தோழியின் திருமணத்திற்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றாள். இரண்டே நாளில் திரும்புவதாகவும் சொன்னாள். சென்று ஒரு வருடத்திற்கு மேல் கடந்து விட்டது. நேரில் சென்று அழைத்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்பாள். பல ஞாயிற்றுக்கிழமைகள் கடந்துவிட்டன. பரதன் இவை அனைத்தையும் அறிந்திருந்தார். அவர் ஒரு முறை அவள் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்தார். அவளுக்குப் புகார் என்று ஒன்றும் இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆனால் அவளுக்குக் கண்ணபிரானைப் பிடிக்கவில்லை. பிடிக்காததற்கும் அவளிடம் காரணங்கள் இல்லை. அவள் திரும்ப வரக்கூடும் என்று அவர் அவனிடம் சொன்னார். வராமலும் போகக்கூடும். உனக்கென்று நிலையான வருமானத்தையும் கௌரவத்தையும் உருவாக்கிக்கொண்டால் அவள் வரக்கூடும். அதே நேரத்தில் அவளுக்காக என்று இல்லாமல் உனக்காக உருவாக்கிக்கொள் என்றார். அதை எப்படி உருவாக்கிக்கொள்வது என்று கண்ணபிரானுக்குத் தெரியவில்லை.
பரதன் அவன் பெயரில் மெடிக்கல்ஸை மாற்றிக்கொடுப்பதால் அது சாத்தியமாகும் என்று எண்ணினார். அவருக்குப் பல காலமாக முழு நேர ஊழியராகச் சென்று விடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சட்டம் படித்தவர் அதன் பின் ப்ராக்டீஸ் செய்யாமல் இருந்தார். ஒரு தொழில் இருந்தால் கட்சி வேலைகளையும் செய்யலாம் என்று ஒரு வருட டிப்ளமோ வகுப்பு படித்து மெடிக்கல்ஸை ஆரம்பித்தார். தன் ஆதர்ச நாயகனான ஜீவானாந்தத்தின் பெயரில் கடைக்கு ஜீவா மெடிக்கல்ஸ் என்று பெயர் சூட்டினார். அவர் அந்த மெடிக்கல்ஸைத் தொடங்கி பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. கண்ணபிரான் வந்து மூன்று வருடங்கள் சென்றுவிட்டன.
பரதன் கண்ணபிரானின் ஆளுமையில் வெகுவான பாதிப்பைச் செலுத்தினார். அவனைத் தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யச் சொன்னார். அவர் வில் போன்ற உடலைக் கொண்டிருந்தார். இறுக்கமான கச்சிதமான உடல். வலுவான உடல் இருந்தால் வலுவான உள்ளம் அமையும் என்று கண்ணபிரானிடம் அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். யார் வந்தாலும் சென்றாலும் எது நடந்தாலும் ஒரு நாளின் அட்டவணை மாறக்கூடாது என்பார். தினமும் பேப்பர் படிக்கச் சொன்னார். ஆங்கில நாளிதழ்கள் வாசிக்கவேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தினார்.
முந்தைய நாள் மழை பெய்த சுவடே தெரியாமல் மறுநாள் காலை தீயருவிபோல கொட்டிக்கொண்டிருந்தது வெயில். சுபமுகூர்த்த தினம் என்பதால் மெடிக்கல்ஸூக்கு எதிரிலிருந்த லக்ஷ்மி திருமண மண்டபத்தில் பட்டுச்சேலைகளிலும் பட்டு வேஷ்டிகளிலும் சீமாட்டிகளும் சீமான்களும் அங்கிங்கும் இங்கங்கும் பரபரத்துக்கொண்டிருந்தார்கள். மணப்பெண்ணும் மணமகனும் பிளக்ஸ் போர்ட்டில் புன்னகைத்தார்கள். கண்ணபிரான் ஏழு மணிக்கெல்லாம் மெடிக்கல்ஸைத் திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அருகிலிருந்த மளிகைக் கடை எட்டுமணிக்கும் கூரியர் கடை ஒன்பது மணிக்கும் திறக்கும். பறவை எப்போது அமரும் எப்போது பறக்கும் என்பதை கணிக்க இயலாதது போலவே சிமெண்ட் கடைக்காரர் கடையை எப்போது திறப்பார் எப்போது மூடுவார் என்பதை அறிய இயலாது. மணப்பெண்ணுக்குத் தலைவலி என்று சொல்லி ஒருவர் கண்ணபிரானிடம் மாத்திரைகள் வாங்கிச்சென்றார். ஊரின் பணக்காரர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஏதோ பெரிய வீட்டுத் திருமணம் என்று எண்ணிக்கொண்டான். ஒரு கறுப்பு நிற ஹூண்டாய் க்ரேட்டா கார் வந்து மெடிக்கல்ஸ் முன் நின்றது. விஜயன் காரிலிருந்து இறங்கினான். மெடிக்கல்ஸை நோக்கிச் சென்றான். கண்ணபிரான் எழுந்து கடையில் இருந்து வெளியே வந்தான்.
“நீங்க தானே கண்ணபிரான்”
“ஆமாம் சார்”
“இங்கே எதிர்தாப்புல ஒரு கல்யாணம். நம்ம ராஜன் கார்ப்பரேஷன் இருக்குல்ல. அவங்க பொண்ணு கல்யாணம். நான் போய்ட்டு வந்துடேறன். வண்டி இங்கேயே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார். எப்போதும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு ஏழரை மணி வரை நடை செல்வார் பரதன். அவர் வீடு இருந்த கெங்கைகொண்டான் பகுதியிலிருந்து ஜெயப்பிரியா திரையரங்கைத் தாண்டி நால்ரோடு வழியாக மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டுவரைச் சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்வார். சில நாட்கள் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கட்சி ஆபிஸூக்குச் சென்று நாளிதழ்களை வாசித்துவிட்டுத் தன் சகாக்கள் எவரேனும் இருந்தால் அளாவிவிட்டுத் திரும்பி விடுவார். பரதனுக்கு நடை என்பது அடிப்படையில் பராக்குப் பார்ப்பதற்கான ஒரு ஏற்பாடு. பூங்காக்களில் அவர் ஒரு போதும் நடை செல்ல மாட்டார். சாலை என்பது விநோத நடனங்கள் நிகழும் மேடை என்று சொல்வார். அன்று ஒரு பாலத்தின் அருகே நடை சென்று கொண்டிருக்கையில் எதிரிலிருந்த புற்றுக்கோயிலில் ஒரு பெண் பால் ஊற்றுவதை கவனித்தபடியே கடந்தார்.
நாகங்களை வழிபடுவது எப்போதும் நம் மரபில் இருக்கிறது. தமிழகத்தில், தென்னிந்தியாவில், இந்தியாவில், தென்கிழக்கு ஆசியாவில் நாக வழிபாடு உள்ளது. பௌத்தம் போன்ற பிரிவுகளில் நாகார்ஜூனரின் வரைபடங்களில் நாகத்தைப் பார்க்க முடிகிறது. மகாவிஷ்ணு நாகத்தின் மீது துயில் கொள்கிறார். சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டிலிருந்த நாகத்தை ஆரியர்கள் தங்கள் தெய்வங்களுடன் இணைத்தனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. குண்டலினி போன்ற யோக முறைகளில் கூட சக்தியின் குறியீடாக நாகம் வருகிறது. விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்திற்காக உருவாக்கிய சின்னத்தில் நாகம் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் வேறு எந்த விலங்கை விடவும் ஊர்வனவை விடவும் பறவையை விடவும் நாக வழிபாடு இந்திய மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. நம்மூரில் பக்ஷிராஜன்களை விட நாகராஜன்கள் அதிகம் இருக்கின்றனர். நாகராஜனைப் பற்றி விஜயன் அத்தனை தீவிரமாகப் பேசியது ஆச்சரியம் அளிக்கிறது. விஜயனுக்குள் எப்போதும் ஒரு வணிகனின் கணக்கு மட்டுமே இருக்கும் என்று நினைத்தால் அவனுக்குள் இப்படியான நன்றியுணர்வு கூட இருக்கிறது. ஆச்சரியம்தான். மனிதர்கள் எத்தனையோ அடுக்குகளிலானவர்கள். எந்த அடுக்கு எப்போது வெளிப்படும் என்பது மட்டுமே நிச்சயமற்றதாக இருக்கிறது. தனு அம்மையாரைப் பார்த்து பல காலம் ஆகிறது. சென்று பார்க்கவேண்டும். சிந்தித்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறி வீட்டுக்குச் சென்றார். அவரது மனைவி பத்மா நாளிதழ்களை வாசித்துக்கொண்டிருந்தார்.
வெற்றிலை மென்றவாறு கார் கதவைத் திறக்கச் சென்ற விஜயன் கண்ணபிரானைப் பார்த்துக் கடை நோக்கிச் சென்றான். விஜயன் வருவதைப் பார்த்த கண்ணபிரான் ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து வெளியில் வைத்தான். தனக்கும் ஸ்டூலை எடுத்து வெளியில் போட்டான். உட்காருங்க சார் என்றான். கண்ணபிரான் நன்கு சவரம் செய்திருந்தான். பெரிய பெரிய சட்டங்கள் கொண்ட ஆரஞ்சு நிற அரைக்கை சட்டையை அணிந்திருந்தான். ஷூ நன்கு பாலிஷ் செய்யப்பட்டிருந்தது.
“பரதன் இல்ல”
“பரதன் ஒன்பது மணிக்கு மேல வருவார்”
“என்ன முதலாளியைப் பேர் சொல்லி கூப்பிடுறீங்க” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அவருதான் அப்படி கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு”
“ம்.”
“நீங்க எந்த ஊரு”
“எனக்கு எடையாருன்னு திருக்கோயிலூர் திருவெண்ணெய்நல்லூர் ரோட்டுல இருக்குற ஊர் சார்” எடையார் என்றவுடன் விஜயனின் காதுகள் பெரிதாகின.
கண்கள் விரித்த விஜயன் இதைப்பற்றி தன்னிடம் பரதன் முந்தைய தினம் ஒன்றும் சொல்லவில்லையே என்று தன் ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டான். பரதனை எப்படித் தெரியும் என்று விசாரித்தான். ஒருமுறை சட்டமன்றத் தேர்தலுக்குத் திருவெண்ணெய்நல்லூருக்குப் பிரச்சாரத்துக்கு வந்தவர் அன்றிரவு தன் பக்கத்து வீட்டிலிருந்த தோழரின் வீட்டில் தங்கினார். அப்போது பேசிக் கொண்டிருக்கையில் தான் பி.பார்ம் படித்தவன் என்பதை அறிந்து கடைக்கு ஆள் தேவை வர இயலுமா என்று கேட்டார். அப்படி வந்துசேர்ந்தேன் என்று சொன்னான்.
“உங்களுக்கு எடையாருல சுப்புராயுலுவைத் தெரியுமா”
“பெருமாள் கோயில் பக்கத்துல கம்பத்துக்காரரு வெள்ளை அம்பாஸிடர் காரு வைச்சிருந்தாரே, அவரா”
“ஆமாம்.”
“உங்களுக்கு அவரு எதாவது சொந்தமா”
“என் சொந்த சித்தப்பா. நான் மணக்குப்பம்தான்”
“அப்படியா. பரதன் சொல்லலையே சார். அவங்கதான் எங்க முதலாளிங்க. அதாவது ஆண்டைங்க. எங்க அப்பா காலம் வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு. அவரு புள்ளதான் இந்த ஆண்டை அப்படிங்கறது எல்லாம் இனிமே வேணாமுன்னுட்டார். நீங்க எங்களுக்குக் கடன்பட்டவங்க இல்ல, நாங்களும் உங்களுக்குக் கடன்பட்டவங்க இல்லன்னு சொல்லிட்டாரு. என் தம்பி படிக்கலை, அவங்க கொள்ளிலதான் வேலைக்குப் போறான். ஏதாவது வீட்டு வேலை இருந்தா செய்வான். இப்ப தான் சார் தோணுது, உங்களுக்கு அப்படியே சுப்புராயலு ஐயா ஜாடை”
“பரதன் இப்போ எங்க இருப்பார்”
“வீட்ல”
“சரி. எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன்.”
“சரி சார். ரெண்ட் அக்ரிமெண்ட்டை இன்னிக்கி சாய்ந்திரம் ஹோட்டலுக்குக் கொண்டு வரலாமா”
“வாங்க அதுக்கென்ன, நேத்தே பரதன்கிட்ட பேசினதுதானே” என்று சொல்லிக்கொண்ட நாவைச் சுழற்றி பற்களில் சிக்கிக்கொண்ட பாக்கைத் துப்பிவிட்டு காரை நோக்கிச் சென்றான்.
லாரி ப்ரோக்கர் ஷெட்டின் மேல் மாடியிலிருந்தது பரதன் குடியிருந்த வீடு. விஜயன் காரைக் கொண்டு வந்து நிறுத்துகையில் ப்ரோக்கர் ஷெட் திறக்கப்படவில்லை. பத்மா கேஸ் கட்டை மடித்து அட்டைப்போட்டு கட்டிக்கொண்டிருந்தார்.
“வாங்க விஜயன். உட்காருங்க.”
“எப்படி இருக்கீங்க மேடம்”
“நல்லா இருக்கேன்”
“போன வாரம் கோர்ட்டுக்கு வந்திருந்தீங்களா. உங்களைப் பாத்தேன். பேசனும்னு நினைச்சேன். அப்பறம் உங்களைப் பாக்க முடியல”
“ஆமாம் மேடம். கடைப் பசங்க நைட் ஹோட்டலைக் கிளீன் பண்ணிட்டு தண்ணீ பேரல்களை வெளியவே வைச்சுட்டாங்க. அதுக்கு கேஸ். பைன் கட்டிட்டு வந்தேன்” பத்மாவின் புருவங்கள் இன்னும் கீழே இறங்கவில்லை என்பதை கவனித்த விஜயன் வக்கீல் நமச்சிவாயம்தான் எடுத்துக் கொடுத்தாரு என்று சொன்னான். சரி என்பது போல தலையசைத்தார் பத்மா. நெற்றியில் பெரிதாகப் பொட்டு வைத்திருந்தார். வெண்ணிற பருத்தி புடவை அணிந்திருந்தார். கைகளில் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை.
“ப்ராக்டீஸ் எப்படி இருக்கு மேடம்”
“பரவாயில்ல. விருத்தாசலமும் போறதால இப்ப கொஞ்சம் ஓகே.” என்று சொல்லி கேஸ் கட்டுகளின் மீது கேஸ் நம்பரை எழுதினார். விஜயன் தன்னைப் பார்க்க வரவில்லை பரதனைப் பார்க்க வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட பத்மா,
“பரதன், விஜயன் வந்திருக்கிறார் பாருங்க” என்று அமர்ந்த இடத்திலிருந்தே சற்று குரல் உயர்த்திச் சொன்னார். தனக்கும் பத்மாவுக்குக் காபி போட்டு எடுத்து வந்த பரதன் விஜயனிடம் ஒரு கப்பை நீட்டி நான் அப்பறம் குடிச்சுக்குறேன் என்று கொடுத்தார். விஜயன் மறுக்காமல் வாங்கிக்கொண்டான். விஜயன் கண்ணபிரானைப் பார்த்ததையும் பேசியதையும் சொன்னான். முந்தைய தினம் பரதன் ஹோட்டலில் கவனித்ததுபோல பொருட்களை வைக்க அதிக இடம் இல்லாததால் அந்த மெடிக்கல்ஸ் இருக்கும் இடத்தையே குடோனாக வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் சட்டென்று தோன்றியதாகச் சொன்னான். பரதன் குடோனுக்கு மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிக்கலாம் என்று கூறிய போதும் விஜயன் உறுதியாக சொன்னதையே திரும்பச் சொன்னான். குடோன் தான் பிரச்சினையா இல்லை வேறு எதாவது பிரச்சினையா என்பதைப் பரதனால் அறிய முடியவில்லை. கண்ணபிரான் ரெண்ட் அக்ரிமெண்ட்டை எடுத்துக் கொண்டு வந்துவிடக் கூடும் என்பதால் நேரில் சொல்லிவிடலாம் என்று வந்ததாகச் சொன்னான். இதைவிட நல்ல இடத்தில் மெடிக்கல்ஸூக்கான இடம் நிச்சயம் கிடைக்கும் என்றும் சொன்னான். பரதன் அதன் பின் பேசுவதை தொடர விரும்பவில்லை.
விஜயன் பரதனிடமும் பத்மாவிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். விஜயனின் முகத்தில் தெரிந்த பதற்றமும் அவசரமும் பரதனைக் குழப்பியது. குடோன் தான் வைக்கவேண்டும் என்றால் முந்தைய தினமே சொல்லியிருக்கலாம். எப்போதாவது சிமெண்ட் கடையைத் திறக்கும் சின்னத்துரையைக் காலிச் செய்யச் சொல்லி அங்கு வைக்கலாம். ஏன் நல்ல வணிகம் நிகழும் கடையை இடம் மாற்ற வற்புறுத்தவேண்டும். புதிய இடத்திற்கு கடையை மாற்றினால் பழைய வாடிக்கையாளர்கள் வராமல் போகக்கூடும். அதுவும் கண்ணபிரானுக்கு மாற்றிக்கொடுக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் இது அவசியமற்றதாகப் பரதனுக்குத் தோன்றியது. அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம் என்றாலும் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று அறிய இயலவில்லை. எப்போதும் போல ஒன்பது மணிக்கு கடைக்குச் சென்ற பரதன் கண்ணபிரானிடம் விஜயனுடன் நடந்த உரையாடல் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். கண்ணபிரானிடம் வீனஸ் கம்யூட்டர் சென்டருக்குச் சென்று பத்திரம் வாங்கி ரெண்ட் அக்ரிமெண்ட்டைத் தயாரிக்கச் சொன்னார். அதற்கான தரவுகளையும் முந்தைய பத்திரத்தின் நகலையும் கொடுத்தார். கண்ணபிரான் திரும்ப வந்தப் பின்னர் பத்திரத்தைச் சரி பார்த்தார். அனைத்தும் சரியாக இருக்கிறது, விஜயனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கிறதாம் அதனால் பத்திரத்தை அடுத்த நாள் அல்லது அதற்கும் அடுத்த நாள் கொண்டு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று சொன்னார். கண்ணபிரான் மேற்கொண்டு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அதை கவனித்த பரதன் தான் ஒருவரைச் சந்திக்கவேண்டும் என்று மட்டும் சொல்லி வெளியே கிளம்பினார்.
தனு அம்மையாரின் இல்லம் முன் இருந்த சிறிய கணபதி கோயிலில் இரு பெண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். வாசலில் வி.என்.இல்லம் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. மா, கொய்யா, வாழை, தென்னை மரங்கள் சூழ இருந்தது இல்லம். செம்பருத்தியும், ரோஜாவும், மல்லியும் பூத்திருந்தன. கதவு திறந்திருந்தது. வெளியே இருந்த திண்ணையில் ஒரு வயோதிகர் படுத்திருந்தார். தனு அம்மையார் இருக்கிறாரா என்று தெரியவில்லை. காலிங் பெல் எங்கு இருக்கிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பரதன் திண்ணையில் அமர்ந்தார். அந்த இரு பெண்களில் ஒருத்தி பரதனை நோக்கி வந்தாள். யாரைப் பார்க்கணும் என்று விசாரித்தாள். தனு அம்மையாரைப் பார்க்கவேண்டும், பரதன் என்று சொல்லுங்கள் என்றார். உள்ளே சென்ற பெண் பரதனை உள்ளே வரச்சொல்லி அழைத்தாள். தாழ்வாரத்தில் ஒரு சாய்வான மர நாற்காலியில் அமர்ந்திருந்தார் தனு. பார்த்து வருடங்கள் கடந்துவிட்டதை இருவரும் சொல்லிக்கொண்டனர். பரதன் ஒரு மழை நாளின் இரவில் ரேஷன் அரிசி கடத்தப் படுவதை நாகராஜனிடம் வந்து சொன்னதை நினைவு கூர்ந்தார் தனு. அப்போது நாகராஜன் தன் ராஜ்துத் வண்டியில் பரதனை ஏற்றிக்கொண்டு வடலூர் சபை அருகே டெம்போவை மடக்கி பிடித்ததைச் சொல்லிச் சிரித்தார்.
“நீங்க அப்போ அடிக்கடி வருவீங்க இல்லையா. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்க லா படிச்சிட்டு ப்ராக்டீஸ் பண்ணலைன்னு அவருக்கு வருத்தம் சொல்லியிருக்கார். உங்களுக்குக் கட்சில போஸ்டிங் கொடுத்திருக்கிறதா சொன்னாங்க. சொல்லுங்க, என்ன விஷயம்.”
பரதன் நிகழ்ந்தவற்றைச் சுருக்கமாகச் சொன்னார். தனு விஜயன் அவ்வாறு நடந்து கொள்பவன் இல்லையே என்று மறுத்தார். இந்த வீட்டில் நாகராஜன் இருந்தபோது எத்தனையோ பிள்ளைகள் உணவருந்தியிருக்கிறார்கள். எத்தனையோ பிள்ளைகளுக்கு ஒரு விடுதி போல இந்த வீடு இருந்திருக்கிறது. அவர்களோடு விஜயன் பழகியிருக்கிறான். ஒன்றாக உண்டு உறங்கியிருக்கிறான். ஆனால் வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்று பரதன் நிகழ்வுகளைத் தொகுத்து மறுபடியும் கூறுகையில் தனுவாலும் அதை ஏற்காமல் இருக்க முடியவில்லை.
“என்ன செய்யலாமுனு சொல்றீங்க” என்று கேட்டார்.
“தெரியலை. என்னால இதை வேற மாதிரியும் அணுக முடியும். இன்ஜங்க்ஷன் வாங்க முடியும். ஆனா விஜயன் இங்க வளர்ந்தவரு. அதான் உங்களை ஒரு முறை பாத்து பேசிட்டு போகலாமனு நினைச்சேன்.”
“நான் ஒரு தடவை விஜயன்கிட்ட பேசிப்பாக்குறேன். நீங்க ஒரு இரண்டு மூணு நாளு இந்த விஷயத்தை அப்படியே விட்டுடுங்க.”
தனு அம்மையாரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த போதும் அந்த வயோதிகர் அங்கேயே படுத்திருந்தார். திண்ணைக்கு முன்னர் வேய்ந்திருந்த கூரையால் வெயில் தெரியவில்லை. அந்த இரு பெண்கள் பரதனின் வண்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பரதனைப் பார்த்ததும் இறங்கி ஓடினர்.
வாடகை கொடுத்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகின. அதற்குள் தனு பெரியம்மா ஏன் அழைத்தார் என்று விஜயனுக்குப் புரியவில்லை. அதுவும் அன்று மாலையே கட்டாயம் வந்து சந்திக்கவேண்டும் என்று சொன்னதும் ஆச்சரியம் அளித்தது. அவர் அப்படி அழைத்ததே இல்லை. பரதன் பெரியம்மாவிடம் ஏதேனும் சென்று பேசி இருப்பாரா என்று நினைத்தவாறு அவரது வீட்டுக்குச் சென்றான். தனு உடல் மெலிந்து சாய்வு நாற்காலியில் சுருண்டிருந்தார். விஜயன் அருகில் வந்து அமர்ந்த போதும் தனு அவனிடம் முகத்தைக் காட்டவில்லை.
“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க”
தனுவின் தங்கை மகள் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்துவிட்டு சென்றாள். அவளிடம் ஏதாவது கேட்கலாம் என்பதற்குள் அவள் ஏதோ ஒரு அறைக்குள் மறைந்துவிட்டாள். டிவியில் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.
“பெரியம்மா வரச் சொல்லியிருந்தீங்க” என்று மறுபடியும் சற்று சத்தமாகச் சொன்னான் விஜயன்.
“எனக்கு காது கண்ணு புத்தி எல்லாம் நல்லாத்தான் இருக்கு விஜயா” என்று விஜயனை பார்க்காமலே சொன்னார் தனு.
“அவசரமா வரச் சொன்னீங்க” எழுந்து அருகிலிருந்த டீபாயிலிருந்த ரிமோட்டை எடுத்து டிவியை அணைத்துவிட்டு அமர்ந்தார். அவனையே சிறிதுநேரம் அமைதியாகப் பார்த்தார்.
“நான் கேக்குறதுக்கு நேரடியா பதில் சொல்லு விஜயா”
“கேளுங்க”
“பரதன் கடையில வேலை செய்யுற பையனுக்கு நீ ஏன் மெடிக்கல்ஸைக் கொடுக்க முடியாதுங்குற”
“இல்ல பெரியம்மா அங்க குடோன் வைக்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. பரதன்கிட்ட நேரடியாவே அவரு வீட்டுக்குப் போயி காலையிலேயே சொல்லிட்டேன். அவரு உங்களை வந்து பாத்தாரா”
“உனக்கு குடோன் வைக்க வேற எடமே கிடைக்காதா. உனக்கு இல்லாத இடமா.”
“அதில்ல பெரியம்மா. அந்தக் கடை ரோட்டுலெயே இருக்கு. லோடு ஏத்த இறக்க வசதியா இருக்கும்.”
“அந்த சிமெண்ட் கடை”
“அந்த சின்னத்துரை காலி செய்யமாட்டான். சண்டைக்கு வருவான்”
“அப்போ வேற எந்தக் காரணமும் இல்ல”
“இல்லையே… ஏன்… யாராவது எதாவது சொன்னங்களா”
“சரி விஜயா. உனக்கு நிறைய வேலை இருக்கும். நீ கிளம்பு. அதை கேக்கத்தான் கூப்பிட்டேன்.” அதன் பின் தனு பேசவில்லை. ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தார். விஜயன் எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான். தனு அவனைப் பார்த்து ஏன் இன்னும் இங்கு இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை, போ என்றும் சொல்லவில்லை. மௌனம் ஒரு பெருஞ்சுவராக மாறி தன் முன் எழுந்து நிற்பதை உணர்ந்தான். அவனுக்கு அந்தச் சுவற்றை எப்படி உடைப்பது என்று தெரியவில்லை. அவன் மெல்ல எழுந்து எதுவும் சொல்லாமல் வெளியில் வந்தான். திண்ணையில் அமர்ந்திருந்த வயோதிகர் வாழைமரத்துக்கு அருகில் சென்று அமர்ந்து சிறுநீர் கழித்தார். திரும்ப வந்தவர் விஜயனைப் பார்த்து யாருப்பா நீ என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் உள்ளே சென்றார். மா மரத்தின் இலைகள் காற்றில் கூத்தாடின. இலைகள் அத்தனையும் நாவுகளாக மாறி ஒவ்வொன்றும் ஒரு வாதத்தை முன் வைப்பதுபோல விஜயனை அழுத்தின. உரையாடல்கள் பட்சிகளின் இரைச்சலாக மாறி காதைத் துளைத்தன. ஓங்கி வளர்ந்திருந்த தென்னைகள் ஆகாயத்தின் ஆரஞ்சு கதிர்களின் ஒளியில் தங்களின் தனிமையை உரைத்தன. அவனுக்குத் தன் தலைக்கு மேல் இருந்த கூரை சட்டென்று காணாமல் போய் விட்டது போல இருந்தது. மேலே ஆகாயம் கீழே மண். விஜயன் மிகவும் தனித்துவிடப்பட்டவனாக உணர்ந்தான். அவன் அந்த தென்னைகளை மறுபடியும் பார்த்தான். அவை இப்போது ஓங்காரமிட்டன. கண்களை விலக்கி வீட்டைப் பார்த்தான். அவன் வளர்ந்த வீடு. அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. இன்று வளர்ந்த சுவர்கள் நாளை மதில்களாக மாறும். மதில்களைப் பள்ளிகளிலும் சிறைச்சாலைகளிலும் மனநலவிடுதிகளிலும் அமைக்கின்றனர். புக முடியாத வீடு செல்லமுடியாத கருவறை. கரும்பூதம் ஒன்று வானத்திலிருந்து இறங்கிவருவது போல அந்தி மங்கி இருள் சூழ்ந்தது. காரில் சாய்ந்து நின்று சாலையை வெறித்துப்பார்த்தான். வாகனங்கள் ஒளி பாய்ச்சி சீறிக்கொண்டுசென்றன. கிழக்கில் பிறை உதித்திருந்தது. உடனே வந்து ரெண்ட் அக்ரிமெண்ட்டைக் கண்ணபிரான் பெயருக்குப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று பரதனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காரில் ஏறி ஹோட்டலுக்குச் சென்றான்.
முதலில் அவர்தானா எனச் சந்தேகம். அவராக இருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் அந்த நடை, உயரம், எல்லாம் அவர்தான் என்கிறது. ஆனால் அது அவர்தானா என நான் சந்தேகிக்க இரண்டு காரணங்கள்; ஒன்று அவர் தோற்றத்தில் முன்பிருந்த உயரத்திற்கேற்ற மிடுக்கும், நிமிர்வும் இல்லை. இரண்டாவது அவர் வீடு அருகில் இருக்கும் இன்னொரு நகரத்தில் அல்லவா இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகரத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகையில் எவ்வளவு முறை அவர் வீட்டிற்குச் சென்றிருப்பேன். மாதமொரு முறை ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனக்கூட்டமோ, விவாதமோ அங்கு நடக்கும். இருபது முப்பது பேர் கலந்துகொள்வோம் அவ்வளவு பேருக்கும் அன்று இரவு உணவும் கூட அவர் வீட்டில்தான் ஏற்பாடாகியிருக்கும். சில இரவுகள் அவர் வீட்டில் தங்கியதும் உண்டு. மோகன் என்னும் என் பெயர் கூட அவர் நினைவில் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
அவர் இந்தச் சிறுநகரத்தில் அல்லது பெரிய கிராமத்தில் என்ன செய்கிறார் அதுவும் நடந்து எங்கே செல்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது நாவல் ‘சுழல்’ வெளியீட்டு விழாவில் பார்த்தது மீண்டும் இப்பொழுது தான் வாய்த்திருக்கிறது. இன்னும் அந்த சந்தேகம் போகவில்லை அவராக இருக்கவே விரும்புகிறேன். எனக்கும் அவருக்குமான இடைவெளி ஒரு இருபது அடி இருக்கும். நான் எனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த தேநீர்க் கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தேன். கடைக்கு எதிர்ப்புறம் அதாவது சாலையின் மறுபுறம் அவர் நின்று கொண்டிருந்தார். முதலில் யார் எனத் தெரியவில்லை சிறிது நேரம் கடையையே கவனித்துக்கொண்டிருந்தவர் பிறகு கிளம்பி நடக்கத் துவங்கினார்.
அவர் நடக்கத் துவங்கிய பிறகுதான் எனக்குள் மேற்குறித்த எண்ணவோட்டம் எல்லாம் வந்தது. நான் தேநீருக்கான காசைக் கொடுத்துவிட்டு வந்து பார்ப்பதற்குள் வெகுதூரம் கடந்திருந்தார். அவர் வேகமாகவெல்லாம் நடக்கவில்லை ஆனால் அவரது உயரம் அவரை வெகுதூரம் அழைத்துச் சென்றிருந்தது. நான் எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தேன். அதற்குள்ளாக அவர் அவருக்கு இடதுபுறமாகப் பிரிந்த மண் சாலையில் இறங்கி நடக்கத் துவங்கிவிட்டார். நான் சாலையைக் கடந்து மறுபுறம் சென்று சேரும் சொற்ப நேரத்தில் மீண்டும் வலப்புறமாக வளைந்து ஒரு வீட்டின் இரும்புக் கேட்டைத் தள்ளி கேட்டின் உள்ளே வலது புறமாக இருந்த இன்னொரு அறை மரக்கதவின் பூட்டைத் திறந்துகொண்டிருந்தார். இது யார் வீடு இதை ஏன் திறந்துகொண்டிருக்கிறார் என ஆச்சர்யமாகவும், குழப்பமாகவும் இருந்தது. கேட்டின் முன்பாக வண்டியை நிறுத்திய என்னை சுவாரஸ்யமின்றி ஒரு பார்வை பார்த்தார். அவரால் என்னை அடையாளம் காணமுடியவில்லை.
கேட்டைத் தள்ளி உள்ளே சென்று “சார் வணக்கம் நான் மோகன்” என்றேன்.
“நீங்க என் மாணவரா, வாசகரா?” என்றபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றார்.
அவர் அழைக்காமலே நானும் உள்ளே சென்றேன், “நான் வாசகர் தான் சார், முன்னாடி வீட்டு மாடில இலக்கியக் கூட்டம்லா நடத்துவீங்கல்ல சார் அதுக்கெல்லாம் வந்திருக்கேன் சார்”
“ஓ, அது ரொம்ப முன்னாலயல்ல “
“ம், இருக்கும் சார் பத்து வருசம் முன்னாடி நான் ஜி.கெ.ஜி. ஆர்ட்ஸ் காலேஜ்ல வேல பாத்தப்போ சார். அங்க ஒரு ரெண்டு வருசம் இருந்தன் சார் அப்போ நீங்க வீட்ல நடத்துன எல்லாக் கூட்டத்துக்கும் வந்திருக்கேன்”
“அங்க சாமியப்பா நகர் வீடு”
“ஆமா சார்”
அந்த அறையில் நாற்காலி என்று எதுவுமில்லை ஒரு கச்சைக் கட்டில் மட்டும் போடப்பட்டிருந்தது அந்தக் கட்டிலில் ஒரு பகுதியில் உட்கார்ந்தவர் இன்னொரு பகுதியைக் கைகாட்டினார். நானும் உட்கார்ந்துகொண்டேன்.
“சார் அக்கா, பையன் எல்லாம் எங்க சார்”
அவரது மனைவி, மகன் பற்றித்தான் கேட்டேன். அவர் மனைவியை அக்கா என அழைத்ததாக நினைவு.
“இருக்காங்க நல்லா இருக்காங்க அந்த வீட்ல இருக்காங்க”
வேறென்ன கேட்பது அவராகப் பேச்சைத் தொடரும் முன் நாமாக எதையாவது கிளறி சந்திப்பு அபத்தமாக மாற அனுமதித்து விடக்கூடாது என அமைதி காத்தேன். அப்படியே பார்வையைச் சுழலவிட்டேன். ஒரு டேபிள் பேன், உட்கார்ந்து எழுதும்படியான ஒரு மர எழுது மேஜை இன்னொரு புறத்தில் ஒரு ஐந்து ஐந்தரை அடி உயரத்தில் இரண்டு இரும்பு ரேக் அதன் செல்ப்கள் முழுக்க புத்தகங்கள். குறைந்தபட்சம் ஒரு ஐநூறாவது இருக்கும். அறையின் ஒரு பகுதி தடுக்கப்பட்டு சமையல் அறை போல காட்சியளித்தது. அது சமையல் அறை என்பதற்கு அந்த அறையில் இருந்த பாத்திரம் கழுவும் தொட்டி ஒன்று மட்டுமே சாட்சி மற்றபடி சமையலுக்கான எந்த உபகரணங்களும் இல்லை. எழுந்து ஒரு பிளாஸ்டிக் கேனிலிருந்து தண்ணீரை ஒரு குவளையில் சரித்து எனக்குக் கொடுத்தார்.
“இப்பொ என்ன செய்றீங்க”
“காலேஜ் ப்ரொபசர்தான் சார்”
“ அரசாங்க கல்லூரியா?”
“இல்ல சார் தனியார் தான்”
“ஒன்னும் தர மாட்டானே”
“போதும் சார் அப்படியே ஓடுது “
“சீக்கிரமா அரசாங்க கல்லூரிகள் பக்கம் போகப் பாருங்க”
“பாக்கனும் சார்” என்றேன்.
அவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராகத்தான் இருந்தார். ஒருவேளை ரிட்டயர் ஆகியிருப்பாரோ? பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒரு ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரும்பொழுது நாற்பத்தி ஐந்து என அவரது வயதைக் குறித்ததாக நினைவு. அப்படியென்றால் இன்னும் ஓய்வு பெற மூன்று ஆண்டுகள் இருக்கிறது. ஒருவேளை விஆர்எஸ் எதுவும் வாங்கி எழுதுவதற்காகத் தொந்தரவில்லாமல் தனிமையில் இருப்பாரோ. ஆம் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.
“உங்க பேர் என்ன சொன்னீங்க” என்றார்
“மோகன் சார்”
“மோகன் டீ சாப்பிடப் போலாமா”
“ போலாம் சார்” இருவரும் எழுந்து வெளியே வந்தோம். அப்போதுதான் கவனித்தேன் வெள்ளையில் நீலக்கோடுகள் போட்ட லுங்கி ஆழ்ந்த மர நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. முன்பு அவர் மடிப்புக் கலையாத சட்டை பேண்டில்தான் இருப்பார். இப்பொழுது அந்த சட்டையில் மடிப்பு இருந்ததற்கான சுவடே இல்லை. வண்டியில் ஏற்றிக்கொண்டு முன்பு தேனீர் அருந்திய கடைக்கே சென்றேன்.
பாதி வழியில் கேட்டார், “நீங்க சாப்ட்டீங்களா”
“ இல்ல சார் “
“அப்போ டீ வேண்டாம், சாப்பாடே சாப்பிட்டுடலாமா?”
“ஸரீங் சார்” பக்கத்தில் ஒரு ஹோட்டலைப் பார்த்ததாக நினைவு அதை மனதில் வைத்துச் சிறிது தூரம் ஓட்டிச்சென்றேன். அங்கு வண்டியை நிறுத்தியவுடன்
“ஓ... இங்க வந்துட்டீங்களா?” என்றவர் “இன்னும் கொஞ்சம் தூரம் இதே ரோட்ல போனா ஒரு மில் வரும். அங்க ஒரு மெஸ் இருக்கும். அதுல சாப்பாடு நல்லாருக்கும்”
“செரீங்க சார் அங்கயே போலாம்” என வண்டியை ஸ்டார்ட் செய்து அவர் சொன்ன கடைக்கே வண்டியை விட்டேன்.
கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இரண்டு சாப்பாடு சொன்னோம். கேட்டு வாங்கி நன்றாகச் சாப்பிட்டார். நான் மெதுவாக அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை இலையை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்காது என்பதால் கொஞ்சம் சாப்பாட்டை இலையில் வைத்து நிரண்டிக்கொண்டிருந்தேன். இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வந்தோம். அவர் கை கழுவி முடிக்கும் முன்பாகவே நான் சாப்பாட்டிற்குப் பணம் கொடுத்துவிட்டேன். அவர் அதைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாதவர் போலத் தள்ளிப்போய் பக்கத்திலே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டுக்கொண்டிருந்தார்.
அங்கு இருந்த மர பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தவர் என்னை “வாங்க உட்கார்ங்க” என்றார்.
நான் உட்கார்ந்தவுடன் “என்னைப் பார்த்ததிலே உங்களுக்கு ஒன்னும் சங்கடம் இல்லையே? ரொம்ப செலவு வெச்சிடலையே”
“சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல சார் என்றேன்”
“இப்ப என்ன சார் எழுதிக்கிட்டு இருக்கீங்க?”
“அஞ்சாறு வருசமாவே ஒன்னும் எழுதுறதில்ல மோகன்”
நான் அதிர்ச்சி அடைந்தேன். ஒரு காலத்தில் எவ்வளவு பெரிய எழுத்தாளர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர். அவரைத் தெரியும் என்பதையும் நேரடிப்பழக்கம் உண்டு என்பதையும் எவ்வளவு பெருமையாக என் சக நண்பர்களிடத்திலும், கல்லூரியிலும் எனது தகுதிகளில் ஒன்றைப் போலச் சொல்லியிருப்பேன்.
“ஆனா கடந்த கொரானாவுக்குப் பிந்தைய புத்தகக் கண்காட்சிகள்ல கூட உங்க புத்தகங்கள் நிறைய இருந்துதே சார்.”
“முன்னாடி வந்ததுதான் அச்சடிச்சு வித்துக்கிட்டே இருக்காங்க அவங்க முடிவு தான… ம்”
“ விஆர்எஸ் வாங்கிட்டீங்களா சார்”
“இல்லையேப்பா”
“இப்போ எந்த ஸ்கூல்ல சார் இருக்கீங்க? “
"நீங்க என்னைப் பாத்து ஒரு எடத்துல இருந்து அழைச்சுட்டு வந்தீங்கல்ல அந்த ஸ்கூல்லதான்”
“ … அது வீடு சார்”
“ ஸ்கூல்லாம் போறதில்லைங்க”
“...ஸார்”
“ராமனூர் ஸ்கூல்ல இருந்தப்போ ஒரு ஹெட்மாஸ்டர் இருந்தான் அவன் பேரு கூட மறந்துபோச்சு, சல்லிப்பய, ரொம்ப பொறாமை புடிச்சவன். எந்நேரமும், நா எடுத்த தமிழ் பாடம் தான் பசங்க ஒழுங்கா படிக்கிறதில்ல, வாத்தியார் கதை எழுதுறது, புக்கு போடுறேன்னு சுத்திக்கிட்டு இருந்தா பையன் எப்படி படிப்பான்னு பேசிக்கிட்டே இருப்பான். நான் நடத்துற வகுப்பைக் கவனிச்சுக்கிட்டே இருப்பான். ஒரு தடவை சண்டையே வந்துருச்சு. பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுல நான் வகுப்பெடுத்த பிரிவு மாணவர்களோட விடைத் தாள்களை இன்னொரு பிரிவுக்கு வகுப்பெடுத்த ஒரு பொம்பளை டீச்சர்கிட்ட கொடுத்து திருத்த சொல்லீட்டு அந்தம்மா வகுப்பு தாள்களை என்னைத் திருத்தச் சொன்னான், அந்தம்மா நெறையப் பேரை வேணும்னே பெயிலாக்கிட்டா. அது அவனுக்கு என்னை மட்டம் தட்ட வசதியாப் போச்சு. அடுத்து வந்த மாதிரிப் பொதுத்தேர்வுல தமிழ் பரிட்சைக்கு மொத நாள் கேள்வித்தாளை எடுத்து இந்தாங்கடா படிச்சுக்குங்கடான்னு குடுத்துட்டேன். பரிட்சைக்கு மொத நாள் கேள்வித்தாள் கிடைச்ச சந்தோசத்துல அவனுங்க ஊரெல்லாம் டமாரம் அடிச்சுட்டானுக. பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூட பசங்க எல்லாம் வந்து கேள்வித்தாளை ஜெராக்ஸ் எடுத்துட்டுப் போறானுக. பள்ளிக்கூடம்லா ஒரே பரபரப்பு பசங்கள புடுச்சு மெரட்டுனதுல நான் தான் குடுத்ததா சொல்லீட்டானுக. அத அவனுங்ககிட்ட எழுதி வாங்கிட்டான், அந்த ஆளு. அப்பவே டிஇஒ கிட்ட கம்ப்ளெய்ண்ட் செஞ்சு பரிட்சையை நிறுத்திட்டான். என்னைய விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி டிஇஒ கிட்ட இருந்து லெட்டர் ஸ்கூலுக்கு வந்துருச்சு. நான் அந்த மயிராண்டியைப் போய் பாக்கவே இல்ல விசாரணை முடிஞ்சு அவன் அனுமதி தர்ற வரைக்கும் எனக்கு விடுப்புன்னும் அதுவரைக்கும் சம்பளம் சலுகை எதுவும் இல்லைன்னு அவன் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டான். நானும் அதுல இருந்து பள்ளிக்கூடப் பக்கம் போறதில்லை. என்ன நல்ல கதை மாதிரி இருக்கா மோகன்” என்றார்.
அதிர்ச்சியிலிருந்து விடுபடவே இல்லை. ஆனாலும் அந்தக் கேள்வியை நான் கேட்டாக வேண்டும் அல்லவா. நீங்க ஏன் சார் விசாரணைக்குப் போகல? என்றேன் வேறென்ன மோகன் பைத்தியம்தான் என்றார். அதற்கு மேல் நான் கேட்கும் கேள்விகள் என் எல்லைக்கு அப்பாற்பட்டவை அமைதியாக போலாமா சார் என்றேன். எதும் அவசர வேலை இருக்கா மோகன் என்றார். நல்ல ஒரு உரையாடலுக்குத் தயாராய் இருப்பார்போல. ஒன்னும் அவசரமில்லைங்க சார் என்றேன். தலையை உயர்த்திப் பார்த்தார் பெட்டிக்கடைக் கிழவி முக்கால் தூக்கமும் கால் விழிப்புமாக எங்கள் இருப்பைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல் இருந்தாள். முக்கியமான இன்னொரு கேள்வியை நான் கேட்க வேண்டியிருந்தது. ஆனால் கேட்கலாமா? கேட்பது என்று ஆகிவிட்டது கேட்டுவிடுவோம்.
“வீடு, அக்கா, தம்பி எல்லாம் சார்?”
“ஒரு மூனு மாசம் அமைதியா இருந்தா, இப்படியே இருந்தா என்ன செய்யறது சாப்பாட்டுக்கு என்ன வழி என்ன வழின்னு கேட்டுக்கிட்டே இருந்தா. என்னோட புத்தகம் போடுற எல்லாப் பதிப்பகத்துக்காரங்கள்ட்டயும் பேசி முடிச்சி வெளியில கொடுத்திருந்து எல்லாமா ஒரு அஞ்சு லச்சத்த அவளுக்கு குடுத்துட்டு அடுத்த நாளே இங்க வந்துட்டேன். நண்பர் ஒருத்தரோட வீடுதான் இது. அதுல பாருங்க வர்ரதுக்கு மொத நாள் சோத்துக்கு வழிதானே வேணும் இரு பண்றேன் பாருன்னு ஒரு லச்ச ரூபாய்க்கு அரிசி மூட்டையாவே எடுத்துப் போட்டு வீட்ட நெரப்பி தின்றீனுட்டு வந்துட்டேன். பையன் அம்மா சொன்னா அப்படியே கேப்பான். இப்போ படிச்சு முடிச்சு வேலைக்கிப் போயிருப்பான்”
“அவங்களும் வந்து பாக்கலையா சார்?”
“வந்தா உத்தரத்துல தொங்கீருவன்னு சொல்லீட்டேன். என்னை நல்லாத் தெரிஞ்சவங்க எப்படி வருவாங்க”
“ஒரு டீ சாப்பிடலாமா மோகன்”
“சாப்பிடலாம் சார்”
இரண்டு மணி நேரத்திற்கு முன் நான் டீ குடித்த கடையின் பெயரைச் சொல்லி அங்கு போகலாம் என்றார். பெட்டிக்கடைப் பாட்டியை எழுப்பி பணம் கொடுத்துவிட்டு வண்டியில் திரும்புகையில் மெதுவாகக் கேட்டேன்
“செலவுக்கெல்லாம் எப்படி சார்” என்றேன்.
“ஜென்ம தினம் பஷீரோட கதை படிச்சிருக்கீங்களா?”
“படிச்சிருக்கேன் சார்”
“அதுமாதிரிதான் போகுது, பக்கத்துல சலூன் கடை வச்சிருக்குற பையன் தினம் பனிரெண்டு மணிக்கு அந்தப் பேக்கரிப் பக்கம் போனா டீ வாங்கிக்கொடுப்பான். நாலஞ்சு கொழந்தைங்களுக்கு டியூசன் எடுக்குறேன் எப்படியும் மாசத்துல பாதி நாள் சாப்பிட்ருவேன் “ என சொல்ல “சார்” என்றேன்.
“தனியா வந்து ஒரு வருசம் எழுதிக்கிட்டிருந்தேன் அப்புறமா விட்டுட்டேன்” அவர் யாரிடத்திலோ சொல்வதைப்போல சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் தேநீர்க் கடை டீ குடித்தோம்.
“ஒரு எக் பப்ஸ் சொல்லுங்க” என்றார் பப்ஸைக் கடித்துத் தின்ற படி டீ குடித்து முடித்தார்.
“சார் மறுபடியும் எழுதலாமல்ல சார்… சார்”
வேறெதையோ உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“மோகன், அது ரஸமலாய்தான முன்னாடி இதெல்லாம் எல்லாக் கடைலயும் கிடைக்காது இப்போ தினம் பாக்குறேன்” என்றார்.
பில்லைக் கொடுக்கும்போது இரண்டு ரஸமலாய்களைப் பார்சல் செய்து தரச்சொல்லி வாங்கிக் கொண்டேன். வீட்டில் இறக்கிவிட்ட பின் ரஸமலாய் பார்சலையும் ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்தேன். ரஸமலாய் பார்சல்களை வாங்கிக்கொண்டவர், பணம் வேண்டாம் என மறுத்தார். வற்புறுத்தி சட்டைப்பையில் திணித்துவிட்டு வந்தேன். எனது செல்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார். ஒரு மாதம் கழித்து போன் செய்தார். அவரது நண்பரின் போனிலிருந்து பேசுவதாகச் சொன்னவர்
“வேறொன்னுமில்லை இந்த மாசம் ….ல் சிறுகதை ஒன்னு எழுதியிருக்கேன் படிச்சிட்டு சொல்லுங்க” என்றார்.
நேப்பில்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் செனோரா புரூடென்சியா லினேரோ கவனித்தது நேப்பில்ஸூம் ரியோவாச்சா துறைமுகத்தில் வீசுவது போல அதே வாடையைக் கொண்டிருந்ததைத்தான். அவள் யாரிடமும் சொல்லவில்லை, வாஸ்தவமாக பயணிகளுக்கான பழைய பெருங்கப்பலில் நிரம்பி வழிந்த, போருக்குப் பின் முதன் முறையாக போனர்ஸ் அயர்ஸிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த இத்தாலியர்கள் எவரும் இதைப்புரிந்துகொண்டிருக்கமுடியாது. எப்படியாயினும், 72 வயதில், பேரலைகள் வீசும் கடலில் பதினெட்டு நாள் தொலைவில் இருக்கும் தன் மக்களையும், வீட்டையும் விட்டு வந்திருந்த அவள் சற்றே குறைவான பயத்தையும், குறைவான தனிமையையும், தொலைவான உணர்வையும் உணர்ந்தாள்.
புலர்காலைப் பொழுதென்பதால் கரையில் இருந்த விளக்குகள் தெளிவாகத் தென்பட்டன. பயணிகள் கரையில் தங்களுக்கென்று எந்த சரியான இடம் அமையும் என்ற நிச்சயமற்ற தன்மையால் கனத்த இதயங்களுடனும், கடந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒன்று மட்டுமே கப்பலில் செய்த முழுப்பயணத்திலும் ஒரு உண்மைத்தன்மை கொண்டது என்ற உணர்வோடும், வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து உடைகள் அணிந்துகொண்டனர்.
ஞாயிறு கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட ஒரு சிலரில் செனோரா புரூடென்சியா லினேரோவும் ஒருத்தி. இதற்கு முன் அவள் அணிந்திருந்த உடைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட, சற்று துக்கம் அனுஷ்டிப்பதான வகையில் உடையணிந்து அந்தக் கப்பலைச் சுற்றி நடந்து வந்த அவள், இன்று ஒரு பழுப்புநிற, முரட்டுத் துணியில், கயிற்றில் கோர்க்கப்பட்ட புனித பிரான்ஸிஸ் சின்னத்துடனிருந்த தளர் அங்கி அணிந்திருந்தாள்.
மேலும், ஒரு புனிதப் பயணியினுடையதைப் போலன்றி மிகப் புதியதாய் இருந்த, முரட்டுத் தோலால் ஆன செருப்புகளை அணிந்திருந்தாள். ஏதோ முன் காணிக்கை செலுத்துவதுபோல, ரோம் நகர மாவட்ட சமய முதல்வரை சந்திக்க கடவுள் அவளை ஆசிர்வதிப்பாரெனில், இனிவரும் வாழ்நாட்களில் தன் தகுதிக்கேற்ற உடை அணிவதாக கடவுளிடம் அவள் உறுதி சொல்லியிருந்தாள்.
மேலும், ஏற்கனவே அந்த ஆசிர்வாதம் அவளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவே கருதினாள், கரீபியக்கடல் புயல்களை தாங்கிக்கொள்ள ஏதுவான தைரியத்தை அவளுக்கு ஊட்டியதற்காக. கூட்டுப் பிரார்த்தனை முடிந்ததும், பரிசுத்த ஆவிக்கு நன்றியறிதலுடன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினாள்.
மற்றும், காற்றடிக்கும் ரியோ வாச்சாவின் இரவுப் பொழுதில் இவளைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்கும் தன் ஒன்பது பிள்ளைகள், மற்றும் பதினான்கு பேரக் குழந்தைகள் ஆகிய ஒவ்வொருவருக்குமாகப் பிரார்த்தனை செய்தாள்.
காலை உணவிற்குப்பின் அவள் கப்பல் தளத்திற்குச் சென்றபோது கப்பல் வாழ்க்கை மாறி இருந்தது. நடன அரங்கத்தில் அந்த்தீலிய மாயச் சந்தையில் இத்தாலியர்கள் வாங்கியிருந்த, சுற்றுலாப் பயணிகளுக்கான பலவிதமான பகட்டுப் பொருட்களும், சிறு அணிகலன்களுடன் மூட்டை முடிச்சுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், அந்த விசேஷ மது அருந்தும் கூடத்தின் மேல் ஒரு வார்ப்பு இரும்புக் கூண்டினுள் பெர்னாம்பூக்கோ பிரதேசத்தின் மெக்காக் குரங்கு ஒன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அது ஒரு மின்னும் காலைப் பொழுதாக இருந்தது. நித்திய தினசரி வெளிப்படுகாட்சி போன்ற ஒளியுடன், போருக்குப் பிறகு வந்த முன்மாதிரியான கோடை ஞாயிறுகளில் ஒன்றாகும் அது. அந்த மிகப் பெரிய கப்பல், தெள்ளத்தெளிவான, நீரில் ஒரு நோயாளி சிரமப்பட்டு சுவாசிப்பதுபோல அங்குலம் அங்குலமாக நகர்ந்தது. ‘அன்ஜோ’ கோமான்களின் இருண்ட கோட்டை, தொடுவானின் மேல் தோன்ற ஆரம்பித்தது.
ஆனால் கப்பல் தளத்தின் மீதேறி வந்திருந்த பயணிகள் பரிச்சயமான இடங்களை கண்டுவிட்டதுபோல நினைத்து கவனத்துடன் அவற்றைப் பார்க்காமல் சுட்டிக்காட்டி, சந்தோஷத்தில் தெற்கத்திய வட்டார வழக்குமொழியில் சந்தோஷக் கூச்சலிட்டனர். கப்பலில் பல அன்பான, முதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொண்ட, நடனமாடும் பெற்றோரின் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொண்ட, முதன்மை அதிகாரியின் ஆடையின் ஒரு பட்டனைக் கூட தைத்துக் கொடுத்த செனோரா புரூடென்சியா லினேரோ ஆச்சரியப்படும் வகையில் இப்போது அவர்கள் அனைவரும் மிகத் தொலைவாகவும், மாறுதல் அடைந்தும் இருப்பது ஆச்சரியமளித்தது. அந்த வெப்ப மண்டலத்தின் மூச்சுத் திணற அடிக்கும் உஷ்ணத்தில் வீட்டு நினைவு தந்த அவளது துவக்க ஏக்கத்தைத் தாங்கிக்கொள்ள அனுமதித்திருந்த அந்த சமூக உணர்வு, மனித நேயம், பேரலை வீசும் கடல்களின் சாஸ்வதமான அன்பானது அந்தத் துறைமுகம் பார்வைக்கு வந்தபோது மறைந்து போயிற்று.
இத்தாலியர்களின் சொல்சரளமான தன்மைக்கு பரிச்சயம் அற்ற செனோரா புரூடென்சியா லினேரோ, பிரச்சினை அவர்கள் மனங்களிலன்று என்றும் மற்றும் அவளிடமே என்றும் நினைத்தாள், ஏனெனில், திரும்பி வந்துகொண்டிருந்த ஒரு கூட்டத்தில் போய்க்கொண்டிருந்த ஒரேயொரு நபர் அவள் மட்டும்தான். முதன்முதலாய் ஓர் அந்நியள் என்ற கூர் வலியில் வேதனையடைந்து ஒவ்வொரு கடற் பயணமும் இதுபோலத்தான் இருக்கவேண்டும் என்று அவள் நினைத்தாள்.
பாரம்தாங்கி குறுக்கு கட்டைகள் மேல் சாய்ந்தபடி நீர் ஆழங்களில் கண் பார்வைக்கு சான்றடையாளம் இன்றி முடிந்துபோன பல உலகங்களைப் பற்றி எண்ணியவாறிருந்தாள். அவளருகில் நின்றுகொண்டிருந்த மிக அழகிய இளம்பெண் திடீரென ஒரு பய அலறலுடன் அவளைத் திடுக்குறச் செய்தாள்.
“மாமாமியா” அவள் கத்தினாள் கீழே சுட்டிக்காட்டி.
“பார் அங்கே” அது நீரில் மூழ்கி இறந்துபோன ஒரு மனிதன். முகம் மேலே தெரியும்படி அவன் அலையில் மிதப்பதைப் பார்த்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ. அரிதான ஒரு வினோதம் இயற்கையிலேயே அமைந்ததான, ஒரு முதிர்ந்த, வழுக்கைத் தலை மனிதன், விடியல் நேர வானத்தின் நிறத்தை ஒத்த திறந்த சந்தோஷக் கண்களுடன் இருந்தான்.
மாலை நேரத்திற்குரிய முழு ஆடையும் அணிந்திருந்தான். பூ வேலைப்பாடு செய்த, கைகள் இல்லாத உள்சட்டை, வார்னிஷ் பளபளப்பு கொண்ட தோலால் ஆன ஷூக்கள், மேலும், மேல் சட்டையின் மார்புப்பகுதியின் பின்மடிப்புப்பகுதியில் ஒரு புத்தம் புதிய மஞ்சள் நிற கார்டனியா மலர் ஒன்று. வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்ட சிறிய சதுர வடிவ பரிசுப் பெட்டியை வலது கையில் பிடித்திருந்தான், மேலும், வெளுத்த, இறுகிய அவன் விரல்கள், இறக்கும் தறுவாயில் அவனால் பிடித்துக்கொள்ள ஏதுவாய் இருந்த கப்பலின் முன்புறப்பகுதியை இறுகப்பற்றியிருந்தன.
“திருமண விருந்தொன்றிலிருந்து அவன் தவறி விழுந்திருக்கவேண்டும்”, அந்தக் கப்பல் அதிகாரிகளுள் ஒருவர் கூறினார்.
“கோடை காலங்களில், இந்த நீர்நிலைகளில் இது போன்று அடிக்கடி நிகழ்கிறது” அது ஒரு க்ஷணநேரக் காட்சி, ஏனெனில், அப்பொழுதுதான் அவர்கள் வளைகுடாவிற்குள் நுழைந்துகொண்டிருந்தனர், மேலும், சற்று துயரம் குறைந்த சில விஷயங்கள் அந்தப் பயணிகளின் கவனத்தைத் திசை திருப்பின.
ஆனால் செனோரா புரூடென்சியா லினேரோ அந்த மூழ்கி இறந்த மனிதனைப் பற்றித் தொடர்ந்து எண்ணிவாறே இருந்தாள். மூழ்கிய, பரிதாபமான அந்த மனிதனின் நீண்ட பின்புறப் பகுதிகள்கொண்ட இறுக்கமான ஜாக்கெட், கப்பல் சென்ற பின், நீரில்விட்டுச் செல்லும் தடம்போல, சிற்றலை ஏற்படுத்தியது. துறைமுகத்திற்குள் கப்பல் மிதந்து வந்த உடனேயே, ஒரு பழைய சிறு நீராவிப்படகு வெளியே வந்தது.
போரால் சிதைவுற்றிருந்த எண்ணற்ற பல ராணுவக் கலங்களின் ஊடே, அந்த சிதைவுத் துருக்களை கடந்து தன் பாதைளை ஏற்படுத்திக் கொண்டு அந்தக் கப்பல் சென்றபோது, அந்த நீர் எண்ணெய்யாக மாறிக்கொண்டிருந்தது, மேலும், அந்த வெப்பம் ரியோவாச்சாவில் பிற்பகல் இரண்டு மணிக்கு நிலவும் வெப்பத்தைவிட ஆக்ரோஷமானதாய் மாறியது.
அந்தக் குறுகிய நீர்ப்பாதையின் மறுபுறத்தில், பதினோரு மணி சூரியனில் மின்னிய அந்த நகரம் அதன் எல்லா பொய்த்தோற்றம் கொண்ட அரண்மனைகளும், புராதன, அருவெறுக்கத்தக்க, வர்ணமடிக்கப்பட்ட குடிசைகளும் அந்தக் குன்றுகளின் மேல் ஒன்று சேர்ந்து பார்வைக்கு வந்தன. அப்பொழுதுதான், தாங்க முடியாத ஒரு துர்வாடை, கலங்கடிக்கப்பட்ட அடிப்பகுதியிலிருந்து எழும்பியது.
செனோரா புரூடென்சியா லினேரோ அதை அவள் வீட்டின் பின்முற்றத்தினின்று வரும் அழுகும் நண்டுகளின் வீச்சத்தை வைத்து அடையாளம் கண்டாள். திட்டமிட்ட நடப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே, பயணிகள் சந்தோஷத்தை மிகுந்த அளவில் வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களை அடையாளம் கண்டனர் அந்தக் கப்பல் தள மேடை மேலே, அத்தனை அமளியான கூட்டத்திலே, பெரும்பான்மையோர் வயோதிகம் அடைந்த முதிர் பெண்கள். அதில் கணவனை இழந்தவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்கான அவர்களின் உடைகளில், பிரமிக்க வைக்கும் மார்புகளுடன், மூச்சுத் திணறிக்கொண்டிருந்தனர்.
மேலும் உலகிலேயே மிக அழகான, அதிகப்படியான குழந்தைகளுடன், மனைவிகளின் பின்னால், அந்த உஷ்ணத்திலும் கடுமையான ‘நோட்டரி’கள் போல உடையணிந்த சிறிய, ஊக்கம் தளராத, அழிவற்ற வகையான கணவர்கள் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தனர். இந்தத் கேளிக்கை கொண்டாட்டக் குழப்பத்தின் மத்தியில், ஆறுதல்படுத்த இயலாத ஒரு முகபாவத்துடன் ஒரு வயோதிகன், பிச்சைக்காரன் அணியும் மேற்கோட்டு ஒன்றை அணிந்து, சிறு கோழிக்குஞ்சுகளை ஏகமாய் அவன் பாக்கெட்டிலிருந்து இரு கைகளாலும் வெளியே இழுத்தான்.
பித்துக்குளியாய் அலைந்துகொண்டும், கீச்சிட்டுக் கொண்டும் ஒரு க்ஷணத்தில் அவை அந்தக் கப்பல்துறை மேடை முழுவதையும் நிறைத்தன. மேலும், இந்த மாயாஜால வித்தையின் பால் கவனமற்ற அந்தக் கூட்டம் மிதித்துச் சென்றபோதும் பல உயிருடனும், ஓடியவாறும் இருந்தன, மாய வித்தையில் தோன்றியவை என்ற காரணத்தால்தான். அந்த மந்திரவாதி அவன் தொப்பியை தலை கீழாகத் திருப்பித் தரையில் வைத்தான், ஆனால் அந்த கப்பலின் கைப்பிடிக்கிராதி பக்கமிருந்த எவருமே அவனை நோக்கி தர்ம நாணயம் ஒன்றைக்கூட வீசி எறியவில்லை. மரியாதைக்குரிய அவளுக்காகவே அந்த வியத்தகு காட்சி படைக்கப்பட்டது போல் தோன்றியதில் ஈர்க்கப்பட்டவளாய் அவள் மட்டுமே அதை மெச்சினாள்.
ஒரு படகிலிருந்து மற்றொரு படகிற்குச் செல்லத் தோதாக அமைக்கப்பட்ட பலகைப் பாலம் கீழிறக்கப்பட்ட மிகச்சரியான தருணத்தையும் ஒரு கடற்கொள்ளைக்காரனின் ஊளையிடும் இயங்கு விசைத் தாக்குதலுடன் ஒரு மனிதப் பனிச்சரிவு கப்பலை முற்றுகை இட்டதையும் அவள் அறியவில்லை. கோடையில் அழுகிய வெங்காய நாற்றம் கொண்ட அத்தனைக் குடும்பங்களின் காட்டுத்தனமான கொண்டாட்டத்தினால் திகைத்துப் போனாள். மூட்டை முடிச்சுகளைத் தூக்குவதில் அடிதடியில் இறங்கிய சுமைத்தூக்கிகளால் உந்தித் தள்ளப்பட்டவள், அந்தக் கப்பல் துறையின் மேல் அந்தச் சின்னஞ்சிறு பறவைக் குஞ்சுகளுக்கு ஏற்பட்ட கெடுதியான, இழிவான இறப்பு தருவித்த அச்சத்தை உணர்ந்தாள்.
இது நடந்தது அவள் அவளது வர்ணம் பூசப்பட்ட தகர மூலைகள் கொண்ட மர ட்ரங்குப்பெட்டியின்மேல் அமர்ந்துகொண்டபோதுதான், மேலும் கலங்காது அங்கேயே இருந்தவள், நச்சு வட்டப் பிரார்த்தனை ஸ்லோகங்களை ஜபித்துக் கொண்டிருந்தாள். இதுபோன்ற மத நம்பிக்கை அற்ற இந்த நாட்டினரால் வரும் அபாயம் மற்றும் சபலம், இவற்றிற்கு எதிராக. அந்தத் திடீர்ப் பிரளயம் கடந்த பின்னர் அந்த முதன்மை அதிகாரி அவளைக் கண்டார். மேலும், அவள் ஒருத்தி மட்டுமே யாருமற்ற அந்தப் பயணிகளின் நடன அறையில் இருந்தாள்.
“இங்கே இப்போது யாரும் இருக்கலாகாது எனக் கருதப்படுகிறது” அந்த அதிகாரி அவளிடம் ஒருவித அன்புப் பாங்குடன் கூறினார்,
“ஏதாவது உதவி நான் உங்களுக்குச் செய்ய முடியுமா?”
“நான் தூதரக பிரதிநிதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளது’’ என்றாள் அவள்.
அது உண்மைதான். அவள் கடல் பிரயாணம் மேற்கொண்ட இரண்டு நாட்களுக்கு முன்பு, அவளது மூத்த மகன் நேப்பில்ஸில் இருந்த அவனது தூதரக நண்பனுக்கு ஒரு தந்தி கொடுத்திருந்தான், அவன் தாயாரை துறைமுகத்தில் சந்தித்து, தொடர்ந்து அவள் ரோம் நகர் செல்வதற்குரிய ஏற்பாடுகள் அனைத்திலும் உதவி செய்யுமாறு கேட்டிருந்தான். அந்தக் கப்பலின் பெயரையும் நண்பனிடம் தந்திருந்தான். மேலும், அவன் தாயார் கரையை அடைந்ததும் புனித பிரான்ஸிஸின் உடை அணிந்திருப்பாளாதலால் அவளை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்றும் கூறியிருந்தான்.
இந்த ஏற்பாடுகள் குறித்து அவள் சமரசம் அற்றவளாயிருந்தாள். அந்த மாலுமிக் குழுவின் மதிய உணவு நேரம் நெருங்கியபோதிலும், மேஜை நாற்காலிகளை ஏற்கனவே தயாராக போட்டுவிட்டு, அந்தத் தளங்களை வாளித் தண்ணீரால் கழுவி விட்டுக்கொண்டிருந்தனர் என்றபோதிலும், அந்த முதன்மை அதிகாரி இவளை அவள் போக்கில் சிறிது நேரம் காத்திருக்க அனுமதித்தார். அது நனைந்துவிடக் கூடாதென்பதால் அவள் ட்ரங்குப் பெட்டியை பலமுறை அவர்கள் நகர்த்த வேண்டி இருந்தது, ஆனால் அவள் தன் முகபாவத்தை மாற்றிக்கொள்ளாமல் இடத்தை மாற்றிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த உயிர் காக்கும் தோணிகளுக்கு மத்தியில், முழு வெய்யிலில் அவள் ஜபம் செய்வதற்கு தடங்கல் ஏற்படுத்தாது அவர்கள் அந்தப் பொழுதுபோக்கு அறைகளின் வெளியே அவளைக் கொண்டுவந்து அமரச் செய்தனர்.
பாவமன்னிப்புக்கான உடையில் வியர்வையில் மூழ்கியவாறு, அந்த ஜபமாலையை உருட்டிக்கொண்டு, எந்த எதிர்பார்ப்புமின்றி இருந்த அவளை அங்கேதான் மீண்டும் ஒருமுறை அந்த முதன்மை அதிகாரி இரண்டு மணிக்கு சற்று முன்பு கண்டார். ஏனெனில், மிகவும் அச்சத்துடனும் வருத்தத்துடனும் இருந்தவள் அழமுடியாது என்ற பட்சத்தில் இதை மட்டுமே செய்ய முடிந்தது.
“இப்படி தொடர்ந்து ஜபித்துக்கொண்டிருப்பதால் உங்களுக்குப் பிரயோசனமில்லை,” அந்த அதிகாரி முந்தைய அந்த அன்புப்பாங்கின்றி கூறினார்:
“ஆகஸ்ட்டில் கடவுள் கூட விடுமுறையில் சென்றுவிடுகிறார்.” வருடத்தின் இந்தப் பருவத்தில் பாதி இத்தாலி கடற்கரையில்தான் இருக்கும், எல்லா நாட்களையும்விட குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் என்று விளக்கினார் அவர். எல்லா சாத்தியக் கூறுகளின்படி அந்தத் தூதரக பிரதிநிதி விடுமுறையில் இல்லை என்றும் பொறுப்புமிக்க அவரது பொறுப்புகளின் தன்மைப்படி கணித்தாலும், திங்கட்கிழமைக்கு முன்பே அந்த அலுவலகத்தைத் திறக்கமாட்டார் என்பது நிச்சயம்.
ஒரேயொரு நியாயமான விஷயம் என்னவென்றால் ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஓர் இரவுக்குரிய நல்ல தூக்கம் பெறுவதுதான். அந்த எண்கள் தொலைபேசி புத்தகத்திலிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தத் தூதரகத்திற்கு மறுநாள் தொலைபேசியில் தொடர்புகொள்வதுமே. அவரது நியாயமான பேச்சை ஒப்புக்கொள்வதைத் தவிர செனோரா புரூடென்சியா லினேரோவிற்கு வேறு வழி இருக்கவில்லை, மேலும் அந்த அதிகாரி புலம் பெயர்தலுக்காகவும், சுங்கவரி செலுத்துவதற்காகவும், நாணய மாற்றுதலுக்கான அத்தனை நடைமுறைகளிலும் உதவி செய்தார்.
பிறகு, தெளிவற்ற வழிகாட்டுதல்களுடன் அவள் ஒரு கௌரவமான ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்படவேண்டும் என்று அவளை ஒரு டாக்ஸியில் அமர்த்தினார். ஒரு சவ ஊர்தியின் தடயத்துடன் அந்தத் தளர்ச்சியுற்ற டாக்ஸி, யாருமற்ற தெருக்களில் தள்ளாடித்தடுமாறிச் சென்றது. தெருக்களின் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த துணி வரிசைகள் மட்டும் காணப்பட்ட அமானுஷ்ய நகரத்தில் அவளும் அந்த ஓட்டுநர் மட்டுமே உயிருள்ள ஜந்துக்கள் என்று ஒரு கணம் நினைத்தாள் அவள். ஆயினும் கட்டுக்கடங்கா உணர்ச்சியுடன், அதிகம் பேசும் ஒரு மனிதனுக்கு, ஒரு பாவப்பட்ட, தனித்து விடப்பட்ட, போப்பாண்டவரைக் காண கடல் ஆபத்துகளுக்குத் தன்னை ஆட்படுத்திக்கொண்ட ஒரு பெண்ணுக்கு கெடுதல் செய்யுமளவு நேரம் கிடைக்காது என்றும் நினைத்தாள். தெருவின் புதிர்ச்சிக்கலின் முடிவில் அவள் மறுபடியும் கடலைப் பார்த்தாள்.
‘பளிச்’சென்று வர்ணம் பூசப்பட்டிருந்த, ஏகப்பட்ட, சிறுசிறு ஹோட்டல்கள் காணப்பட்ட, மனிதர்களற்ற, கொதித்துக்கொண்டிருந்த ஒரு கடற்கரை வழியே மறுபடியும் அந்த டாக்ஸி சாய்ந்துகொண்டே தொடர்ந்து சென்றது. இவைகளில் ஒன்றின் அருகிலும் அது நிற்கவில்லை. ஆனால் கொஞ்சம் ஆடம்பரம் குறைவாயிருந்த ஒரு ஹோட்டலுக்கு நேராகச் சென்றது. ஒரு பொதுத் தோட்டத்தினுள், பெரிய தென்னை மரங்கள், பச்சைநிற பெஞ்சுகள் ஆகியவற்றின் நடுவில் அமைந்திருந்தது அது. நடைபாதை பக்கவாட்டு நிழலில் அந்த ட்ரங்குப் பெட்டியை வைத்தான் அந்த டிரைவர்.
பிறகு செனோரா புரூடென்சியா லினேரோவின் சந்தேக மனோபாவத்தைப் புரிந்துகொண்டவன், இதுதான் நேப்பில்ஸ் நகரில் உள்ள மிக கௌரவமான ஹோட்டல் என்று உறுதி செய்தான். ஒரு அழகான, கருணை உள்ளம் கொண்ட சுமைக்கூலியாள் அந்தப் பெட்டியை தன் தோளில் தூக்கிக்கொண்டு அவளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான். இரும்புக் கம்பி வேலைப்பாடுகள் அமைந்த, படிதாங்கு அமைப்புக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டுக்கு படிக்கட்டு வழியாக நடத்திச் சென்றான். பிறகு உச்சஸ்தாயி குரலில் ஒரு அபாயமூட்டும் தீர்மானத்துடன் ‘புச்சினி’யின் ஓப்பரா பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தான். ஒரு பெருமரியாதைக்குரிய கட்டிடமாக, புதுப்பிக்கப்பட்ட அதன் ஒன்பது தளங்களில் ஒவ்வொன்றிலும் வேறு வேறு ஹோட்டலுடன் அமைந்திருந்தது அது. உடனே ஒருவித மாயத்தோற்றத்தில், செனோரா புரூடென்சியா லினேரோவிற்கு, எதிரொளிக்கும் படியான சலவைக்கல் படிக்கட்டின் நடுவில் மேலேறிக்கொண்டிருக்கும் ஒரு கோழிக் கூண்டில்தான் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது: ஒரு க்ஷணநேரத்தோற்றத்தில், கிழிந்த உள்ளாடைகளுடனும், புளிப்பு ஏப்பம் விட்டுக்கொண்டு அத்யந்தமான சூழ்நிலையில் இருந்த மனிதர்களைத் தெரியப்படுத்திய வீடுகள் கண்ணில் பட்டன. மூன்றாம் தளத்தில் அந்த லிப்ட் ஒரு குலுக்கலுடன் நின்றது.
அதன் பின்னரே அந்தக் சுமைக் கூலியாள் பாடுவதை நிறுத்திவிட்டு, அந்தக் கதவின் தள்ளக்கூடிய சாய்சதுரங்களைத் திறந்தான். பிறகு, தலை சாய்த்து, கௌரவமான ஒரு வணக்கத்துடன் செனோரா புரூடென்சியா லினேரோவிடம் அவளுக்குரிய தங்கும் இடம் வந்துவிட்டதாக அறிவித்தான். பார்வையாளர்கள் பயன்படுத்தும் அந்தப் பெரிய அறையில், இடையே வண்ணக் கண்ணாடி சொருகப்பட்ட, மரத்தாலான கவுண்ட்டரின் பின்னால் தளர்ச்சியுற்ற ஒரு விடலைப் பையனையும் செம்புப்பானைகளில் நிழலில் வளர் செடிகளையும் பார்த்தாள். அவளது குட்டிப்பேரனின் அதே மென்மையான சுருட்டைத் தலைமயிர் கொண்டிருந்தான் அவன்.
வெண்கல உலோகத் தகட்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்களுடனான அந்த ஹோட்டலின் பெயர் அவளுக்குப் பிடித்திருந்தது, மேலும், அந்த கார்பாலிக் அமிலத்தின் வாடையும், தொங்கவிடப்பட்டிருந்த பெரணிச் செடிகளும், அந்த அமைதியும், சுவர் ஒப்பனைத்தாளின் மேலிருந்த அந்த பொன்னிறமான லில்லிமலர் சின்னமும் அவளுக்குப் பிடித்திருந்தன. பிறகு அவள் லிப்டுக்கு வெளியே காலடி வைத்து வெளியே வந்தாள். அவள் இதயம் அமிழ்ந்தது.
ஒரு ஆங்கிலேய சுற்றுலாப் பயணக் குழுவினர் ஒரு நீள வரிசை சாய்வு நாற்காலிகளில், குறுங்காற்சட்டை அணிந்து, கடற்கரையில் நடப்பதற்கு ஏதுவான செருப்புகள் அணிந்து குட்டித் தூக்கத்தில் இருந்தனர்: அவர்கள் பதினேழு பேரும் ஒரு ஒத்திசைவான ஒழுங்கில் அமர்ந்திருந்தனர், ஏதோ ஒரே மனிதனே பலமுறை அந்த அறையின் நிலைக் கண்ணாடிகளில் திரும்பத் திரும்ப பலமுறை காட்சியளிப்பதுபோல. ஒருவரிடமிருந்து மற்றொருவரை வித்தியாசப்படுத்திடாது, ஒரே பார்வையில் அவர்களைப் பார்த்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ, மேலும் அவள் காண முடிந்ததெல்லாம், அந்த நீண்ட வரிசையில், ஒரு கசாப்புக் கடையில் கொக்கியில் தொங்கிக் கொண்டிருக்கும் பன்றி இறைச்சிப் பாளங்கள் போலத் தோன்றிய அடர்சிவப்பு நிற முழங்கால்களை மட்டுமே. கவுண்ட்டரை நோக்கி மேலும் ஒரு அடிகூட அவள் எடுத்துவைக்கவில்லை. அந்த லிப்டுக்குள் பெரும் பீதியுடன் பின்வாங்கினாள்.
“நாம் வேறு ஒரு தளத்திற்குச் செல்லலாம்” அவள் சொன்னாள். “சாப்பாட்டு அறை உள்ள ஒரே தளம் இதுதான், சினோரா” அந்தக் சுமைக்கூலியாள் சொன்னான். “அது ஒரு பொருட்டில்லை” என்றாள் அவள். சரி என்பதுபோல ஜாடை செய்த அந்தச் சுமைக்கூலியாள், லிப்டை மூடிவிட்டு, ஹோட்டலின் ஐந்தாம் தளம் வந்து சேரும்வரை அந்தப் பாட்டின் மீதிப் பகுதியைப் பாடினான். அங்கிருந்த ஒவ்வொன்றும் சற்று தளர்ந்த, கண்டிப்பற்ற தன்மை கொண்டதுபோலத் தோன்றியது. அதன் உரிமையாளர் ஸ்பிரிங் போன்ற ஒரு தலைமைப் பெண். அவள் ஸ்பானிய மொழியில் சரளமாகப் பேசினாள். மேலும், அந்த பார்வையாளர்களுக்கான பெரிய அறையில், சாய்வு நாற்காலிகளில் யாரும் இங்கே பகல் தூக்கம் கொண்டிருக்கவில்லை.
சாப்பாட்டு அறை என்பதே உண்மையில் அங்கே இல்லை, ஆனால் அந்த ஹோட்டல், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து குறைந்தவிலையில் விருந்தாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்கிறது என்பதாலும், அந்த அறையில் அடர்சிவப்பு நிற முழங்காலுடன் எந்த ஒரு ஆங்கிலேயனும் உறங்கிக்கொண்டிருக்கவில்லை என்ற ஒரு விடுதலை உணர்வினாலும், அதே அளவில் அந்தப் பொறுப்பாளரின் பேச்சுத் திறன் மற்றும் அன்பு உள்ளத்தினாலும் இணங்கச்செய்யப்பட்டவளாக சரி என்று ஓர் இரவு அங்கே தங்குவதெனத் தீர்மானித்தாள். பிற்பகல் மூன்று மணிக்கு அவள் அறையின் திரைச்சீலைகள் இழுத்துவிடப்பட்டன. மேலும், பாதி இருளில் மறைவுண்டிருந்த மரங்கள் அடர்ந்த ஒரு சோலையின் குளிர்ந்த அமைதியைக் கொண்டிருந்தது. மேலும் அழுவதற்குத் தோதான நல்ல இடமாக அமைந்தது. அவள் தனித்துவிடப்பட்ட உடனேயே, செனோரா புரூடென்சியா லினேரோ இரண்டு பூட்டுகளையும் பூட்டினாள். பிறகு, காலையிலிருந்து, முதன்முறையாக தயங்கி வெளியேறும் மெல்லிய நீரோடையென சிறுநீர் கழித்தாள், அதுவே பிரயாணக் காலத்தில் அவள் தொலைத்துவிட்டிருந்த தனது சுய அடையாளத்தை திரும்பப் பெற அவளை அனுமதித்தது போல இருந்தது. பிறகு அவள் செருப்புகளைக் கழற்றினாள், இடுப்பைச் சுற்றியிருந்த அந்தக் கயிற்றுப் பட்டையைக் கழற்றினாள்.
பிறகு தன் இடப்புறமாக அந்த மிக அகலமான, அவள் ஒருத்திக்கு மிகத்தனிமையைத் தருவதான இரட்டைப் படுக்கையில் வீழ்ந்தாள், பிறகு நெடுங்காலம் கடந்துவிட்டிருந்த பிறிதொரு கண்ணீர் ஓடையைத் திறந்தாள். இதுதான் அவள் முதன்முறையாக ரியோவாச்சாவை விட்டு கிளம்பியது என்பது மட்டுமல்ல, அதுவும் அவள் பிள்ளைகள் திருமணமாகி விலகிச்சென்றபின் அவள் வீட்டை விட்டுச் கிளம்பிச்சென்றிருந்த சில சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. மேலும் உயிரற்ற ஜடம் போன்ற அவள் கணவனை கவனித்துக் கொண்ட, வெறுங்காலில் நடக்கும் இரண்டு செவ்விந்தியப் பெண்களுடன் அவள் மட்டும் தனியாக இருந்தபோது. அவர்கள் இளமைக் காலத்தில் காதல் புரிந்திருந்த ஆட்டுத்தோல் படுக்கை விரிப்பில், முப்பது ஆண்டுகளாக சுயநினைவற்று கோமாவில் கிடந்த, எப்போதும் அவள் நேசித்த ஒரே மனிதனின் சிதைவுகளை அந்தப் படுக்கையறையில் நேருக்கு நேர் பார்ப்பதிலேயே அவளது பாதி வாழ்க்கை கழிந்தது. அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தின் போது, திடீரென ஒரு தெளிவின் ஒளிக்கீற்றுடன் அந்த நோயாளி கண்களைத் திறந்தான்.
தனது குடும்பத்தை அடையாளம் கண்டு கொண்டான். பிறகு ஒரு புகைப்படக்காரரை வரவழைக்கும்படி அவர்களிடம் கேட்டான். தோலினால் ஆன ஒரு மாபெரும் துருத்தியும், கறுப்பு உறையிட்ட காமிராவும் அந்த வீட்டில் புகைப்படங்கள் எடுப்பதற்கான மெக்னீசியம் தகடும் வைத்திருந்த ஒரு வயதான மனிதனை அந்தப் பூங்காவிலிருந்து அழைத்து வந்தனர் அவர்கள். புகைப்படங்களை நோயாளியான அவனே வகைப்படுத்தினான். “புரூடன்சியாவிற்கு ஒன்று, வாழ்வில் அவள் எனக்களித்த காதலுக்கும் சந்தோஷத்திற்கும்” என்றான் அவன். இது முதல் மெக்னீசிய ப்ளாஷில் எடுக்கப்பட்டது. “இப்போது மேலும் இரண்டு என் அருமை மகள்களான புரூடன்சியாவுக்கும், நதாலியாவிற்கும்” அவன் சொன்னான். அவையும் எடுக்கப்பட்டன. “மேலும் என் இரண்டு மகன்களுக்கு, யாருடைய பாசமும், நல்ல நேர்மையும் இந்த குடும்பத்திற்கே சான்றாக அவர்களை ஆக்கியிருக்கிறதோ, அவர்களுக்கு”, அவன் சொன்னான். ஆக, இப்படியே, அந்த புகைப்படக்காரரிடம் தாள் தீர்ந்துபோய் புதியது வழங்க அவர் வீட்டிற்குச் சென்று வரவேண்டியதாயிற்று.
நான்கு மணிக்கு, அந்த உருவப் படத்தின் அவரவர்க்கான பிரதி நகலை பெற்றுக்கொள்ள குவிந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் அமளியான கூட்டமும், அந்த மெக்னீசியப் புகையும், அந்த படுக்கையறை காற்றை சுவாசிக்க இயலாதபடி ஆக்கியிருந்தது, தன் படுக்கையில் சுயநினைவை இழக்கத் தொடங்கிய அந்த நோயாளி விடைபெறுவதுபோல ஒவ்வொருவரையும் நோக்கி சென்று வருகிறேன் என கையை அசைத்தான், ஏதோ அவனை அந்த உலகத்திலிருந்து, அந்த கப்பல் கிராதியிலிருந்து அவனே தன்னை அழித்துக்கொள்பவனைப்போல. எல்லோரும் நம்பியிருந்ததைப்போல அவனது மரணம் அந்த விதவைக்கு ஆசுவாசமாக இல்லை.
அதற்கு மாறாக, அவள் அவ்வளவு துக்கத்தினால் பீடிக்கப்பட்டிருந்ததால் பிள்ளைகள் அவளைச் சூழ்ந்துகொண்டு அவள் சமாதானம் கொள்ள அவர்களால் என்ன செய்ய இயலும் என்று கேட்க, அவள் விரும்புவதெல்லாம் போப்பாண்டவரை சந்திக்க ரோம் நகரம் செல்லவேண்டும் என்ற ஒன்றே என்று பதிலளித்தாள். “நான் புனித பிரான்சிஸின் உடையணிந்து தனியாகச் செல்வேன்” என்று அவர்களிடம் தெரிவித்தாள். நான் ஒரு சபதம் செய்திருக்கிறேன். விழிப்புநிலையுடனிருந்து அந்த வருடங்களின் மிஞ்சியிருந்த ஒரே மனநிறைவு, இப்படி அழுவதில் கிடைத்த இன்பமாய் இருந்தது. கப்பலில், மார்செய்லில் கரையிறங்கிய இரண்டு கிளேரிசைன் சகோதரிகளுடன் ஒரே கேபின் அறையைப் பகிர்ந்து கொள்ளவேண்டி இருந்ததால், அவள் குளியலறையிலேயே யாரும் பார்க்காத வண்ணம் அழுவதற்கென்றே தயங்கித் தாமதிப்பாள்.
இதன் விளைவாக நேப்பில்ஸின் அந்த ஹோட்டல் அறையே அவள் ரியோவாச்சாவிலிருந்து கிளம்பியதிலிருந்து அவள் மனம் திருப்தியுறும் வண்ணம், அழுவதற்கு ஏற்ற இசைவான ஒரே இடமாக இருந்தது. உணவகத்திற்கு அந்த நேரத்தில் செல்லவில்லை என்றால் உண்பதற்கு ஏதும் அவளுக்குக் கிடைக்காது என்று கூறுவதற்காக அந்த உரிமையாளர் அவள் அறைக்கதவை ஏழுமணிக்குத் தட்டியிருக்கவில்லை என்றால், மறுநாள் ரோம் நகரம் செல்லும் புகைவண்டி சென்ற பிறகும் கூட அவள் அழுதுகொண்டே இருந்திருப்பாள். அந்த சுமைக்கூலியாள் உடன் சென்றான். கடலிலிருந்து குளிர் தென்றல் வீச ஆரம்பித்திருந்தது, மற்றும் வெளிர்ந்த ஏழுமணி சூரியனடியில் கடல் குளியல் போட்ட சிலர் இன்னும் கடற்கரையில் இருந்தனர். ஒரு சிக்கலான, செங்குத்தான அகன்ற நிலத்தின் வழியாக, அப்போதுதான் ஞாயிறு தூக்கத்தினின்றும் விழித்துக்கொள்ள ஆரம்பித்திருந்த குறுகிய தெருக்கள் வழியாக அந்தக் சுமைக்கூலியை பின் தொடர்ந்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ.
பிறகு, சிவப்புக் கட்டமிட்ட துணியால் மூடப்பட்டிருந்த மேஜைகளும், காகிதப் பூக்களுக்கான ஜாடிகளும் இருந்த, ஒரு நிழல் படிந்த கொடிப்பந்தல் வீடு போலிருந்த இடத்தில் தன்னைக் கண்டாள். அந்த முன் பொழுதில் அவள் போல பசியாற இருந்தவர்கள், உணவு பரிமாறும் மேஜைப்பணி ஆண்களும், பெண்களும் தவிர, ரொட்டியும் வெங்காயமும் சாப்பிட்டுக்கொண்டிருந்த பின்புற மேஜையிலிருந்த ஒரு ஏழை பாதிரியார் மட்டுமே. அவள் உள்ளே சென்றதும் எல்லோர் கண்ணும் அவளது பழுப்பு உடைமேல் இருந்ததாக அவள் உணர்ந்தாள், ஆனால் இது அவளை பாதிக்கவில்லை, ஏனெனில், அந்த கேலி கூட அவள் பிராயச்சித்தத்தின் ஒரு பகுதி என்பதை அவள் அறிந்தாள். மாறாக, உணவு பரிமாறும் அந்தப் பணிப்பெண் மீது இவளிடம் ஒரு இரக்கப் பொறி எழும்பியது. ஏனெனில், அந்தப் பெண் பொன்நிற தலைமுடியுடன் அழகாக இருந்தாள், ஏதோ கீதமீசைப்பது போலப் பேசினாள், ஆக, இப்படி ஒரு பெண் உணவகத்தில் உணவு பரிமாறி மேஜைப்பணி செய்யவேண்டுமெனில், இத்தாலியில் போருக்குப் பிறகு விஷயங்கள் மிக மோசமாக இருக்கவேண்டும் என செனோரா புரூடென்சியா லினேரோ நினைத்தாள்.
பூத்திருக்கும் அந்த நிழல் படிந்த இடத்தில் அவள் கலக்கமற்று, நிம்மதி உணர்வடைந்தாள், மேலும், சமையலறையிலிருந்து வந்த ‘பே’ இலை வாசனையுடன் அடர்குழம்பின் மணம் அந்த நாள் முழுவதும் பரவியிருந்த கவலைகளால் தள்ளிப் போடப்பட்ட பசியுணர்வைத் தூண்டியது. முதன் முறையாக நெடுநேரம் அழவேண்டும் என்ற இச்சையின்றி இருந்தாள். ஆயினும் அவள் விரும்பிய வண்ணம் அவளால் சாப்பிட முடியவில்லை, பாதி, அந்தப் பெண் நிறத்தலைமயிருடன் இருந்த பெண்ணிடம் பேசுவது கொஞ்சம் சிரமமாக இருந்ததனாலும், அவள் கனிவுடனும் பொறுமையுடனும் இருந்த போதிலும், பாதி, அங்கே கிடைக்கக் கூடிய மாமிசம் ரியோவாச்சா வீடுகளில், கூண்டில் வைக்கப்பட்டிருப்பது போன்ற சிறிய பாடும் பறவைகளின் கறி ஒன்று மட்டுமே அங்கு கிடைக்கக்கூடியது என்பதனாலும் அந்த மூலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்தப் பாதிரியார், பிற்பாடு ஒரு மொழிபெயர்ப்பாளராக ஆனவர், அவளைப் புரிந்துகொள்ள வைக்க பிரயத்தனப்பட்டார். அதாவது, அந்தப் போர் நெருக்கடிகள் இன்னும் ஐரோப்பாவில் முடிந்துவிடவில்லை என்பதையும், ஏதோ சில காட்டுப் பறவைகளாவது சாப்பிடக் கிடைப்பதே ஒரு அற்புதம் என்று பார்க்கப்படவேண்டும் என்றார். ஆனால் அவள் அவற்றைத் தொடாது தள்ளினாள்.
“என்னைப் பொறுத்தவரை என் குழந்தைகளில் ஒருவரை சாப்பிடுவது போலிருக்கும் அது” என்றாள் அவள். அதனால், சலவைக்கல் போல கடினமாக இருந்த ரொட்டித் துண்டு ஒன்றும், பழச்சாறுடன் கொதிக்க வைக்கப்பட்ட, துர்வாடை பன்றி இறைச்சித் துண்டுகள் ஒரு தட்டும், கொஞ்சம் சேமியா சூப் மட்டுமே அவள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அந்தப் பாதிரியார் அவள் மேஜை நோக்கி வந்து, ஈகையின் பேரில் அவருக்காக ஒரு கப் காப்பி வாங்கித் தரவேண்டும் என்று கூறிவிட்டு அவளுடன் அமர்ந்துகொண்டார்.
யூகோஸ்லேவியாவைச் சேர்ந்த அவர் சமயப்பணி காரணமாக பொலிவியாவில் இருந்தார், ஒரு தடுமாற்றம் நிறைந்ததும் வெளிப்பாட்டு திறன் மிக்கதுமான ஸ்பானிய மொழி பேசினார். செனோரா புரூடென்சியா லினேரோவுக்கு அவர் கடவுளின்பால் தாட்ஷண்யம் மிக்க தடயச்சாயல் இல்லாத, ஒரு சாதாரண மனிதன் போல தோற்றமளித்தார். மேலும், உடைந்த அழுக்கு நகங்களுடன், அவமானகரமான கைகள் அவர் கொண்டிருந்ததையும், அவருக்கே உரிய குணச்சித்திர இயல்பு என்பதைப் போல சுவாசத்தில் வெங்காய வாடை நீடித்து நிலைத்ததையும் கவனித்தாள். ஆனால் என்ன இருந்தாலும் அவர் கடவுள் சேவையில் உள்ளார், மேலும், வீட்டிலிருந்து வெகுதொலைவில் அவள் இருக்கும்போது, பேசுவதற்கு இப்படி ஒருவரை அவள் சந்திப்பதென்பது மகிழ்ச்சியான ஒன்றே.
சுற்றிலும் உள்ள மற்ற மேஜைகளில் மேலும் மனிதர்கள் அமர்ந்ததனால், அவர்களைச் சூழ்ந்த, பண்ணை முற்றத்தில் உண்டாகும் கனத்த சத்தத்தைக் கவனம் கொள்ளாது, கிடைத்த அவகாசத்தில் அவர்கள் பேசினார்கள். இத்தாலியைப் பற்றிய ஒரு தீர்மானமான கருத்தை இதற்குள் அடைந்திருந்தாள் செனோரா புரூடென்சியா லினேரோ. அவளுக்கு இது பிடிக்கவில்லை, இந்த மனிதர்கள் சற்று ஒழுங்கு முறையற்றவர்கள் போல இருப்பதாகச் சொன்னால் அது கொஞ்சம் மிகைதான், அல்லது இவர்கள் பாடும் பறவைகள் கறி உண்பதால் என்று கூறினால் அதுவும் அதிகபட்ச அபிப்பிராயம் எனத் தோன்றலாம், ஆனால் கடலில் மூழ்கிய ஒரு மனிதனை அப்படியே நீரில் மிதக்க விட்டுவிட்டிருக்கும் கொடிய வழக்கம் கொண்டவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். அவள் தயவில் ஒரு ‘கிராப்பா’ பிராந்திக்கு ஆர்டர் செய்திருந்த அந்தப் பாதிரியார் அவளது கருத்தின் மேம்போக்கான, ஆழமற்ற எண்ணத்தைப் புரிய வைக்க முயற்சி செய்தார். போர்க்காலத்தில் திறன் மிக்க சேவை ஒன்றை ஏற்படுத்தி மூழ்கிப் போய், நேப்பில்ஸ் வளைகுடாவில் பலியாகி மிதந்து கொண்டிருந்த பலரை அடையாளம் கண்டு, புனிதமான மண்ணில் புதைத்து, மிகச் சிறந்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
‘நூற்றாண்டுகளுக்கு முன்பு’, அந்தப் பாதிரியார் முடித்தார்,
“வாழ்வதற்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்பதை இத்தாலியர்கள் நன்றாக அறிந்து கொண்டனர், மேலும், அதை எவ்வளவு சிறப்பாக அவர்களால் வாழ முடியுமோ அப்படி வாழ முயற்சிக்கின்றனர். இதுவே அவர்களை வாயாடிகளாகவும், கணக்காக இருப்பவர்களாகவும் செய்திருந்தது. ஆனால் கொடூரத்திலிருந்து இதுவே அவர்களை குணப்படுத்தியும் இருந்தது”.
“அவர்கள் கப்பலைக் கூட நிறுத்தவில்லை” என்றாள் இவள்.
“அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் துறைமுக அதிகாரிகளுக்கு ரேடியோ செய்தி அனுப்புவார்கள்” என்றார் அந்தப் பாதிரியார்.
“இதற்குள் அவனை அவர்கள் எடுத்திருப்பார்கள், கடவுள் பெயரால் புதைத்திருப்பார்கள்”
இந்த விவாதம் இருவரின் மன நிலையையும் மாற்றியது. செனோரா புரூடென்சியா லினேரோ சாப்பிட்டு முடித்திருந்தாள். அப்போதுதான் அவள் உணர்ந்தாள் மற்ற எல்லா மேஜைகளுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்பதை. மிக அருகில் ஏறக்குறைய நிர்வாணமாயிருந்த சுற்றுலாப் பயணிகள் மௌனமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களில் முத்தமிட்டுக்கொண்டிருந்த ஒரு சில ஜோடிகள் சாப்பிடவில்லை. மதுபான விற்பனைக் கூடத்தருகில், பின்புறம் இருந்த மேஜைகளில், உணவகத்தின் அருகில் வசித்த மக்கள் சூதாடிக்கொண்டும், நிறமற்ற ஒயின் குடித்துக்கொண்டும் இருந்தனர். சுவையற்ற அந்த நாட்டில் அவள் தங்க வேண்டியிருந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே என்று புரிந்துகொண்டாள் செனோரா புரூடென்சியா லினேரோ.
“போப்பாண்டவரைப் பார்ப்பது என்பது மிகக்கடினமான ஒன்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
அந்தப் பாதிரியார் பதிலளித்தார் கோடைகாலத்தில் எதுவுமே சுலபமில்லை என்று.
‘கேஸ்ட்டல் கேன்டோல்போ’வில் போப்பாண்டவர் விடுமுறையில் இருக்கிறார், மேலும், புதன்கிழமை பிற்பகல் பொழுதுகளில் உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் வரும் புனித யாத்ரீகர்களுக்காக பொது சந்திப்பு ஒன்று நிகழ்த்துவார்.
நுழைவுக் கட்டணம் மிக மலிவே: 20 லிரா.
“மேலும், ஒருவரின் பாவமன்னிப்பைக் கேட்பதற்கு அவர் எவ்வளவு வசூலிக்கிறார்?” அவள் கேட்டாள்.
“இந்தப் புனிதத் தந்தை பாவ மன்னிப்புகளைக் கேட்பதில்லை” என்றார் அந்தப் பாதிரியார், சற்று அவதூறு அடைந்ததுபோல,
“வாஸ்தவமாக மன்னர்களுடையது தவிர.”
“வெகு தொலைவிலிருந்து இதற்காக வந்திருக்கும் ஒரு பாவப்பட்ட பெண்ணுக்கு அவர் இந்த ஆதரவை மறுக்கவேண்டிய காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் அவள்.
“மேலும் சில மன்னர்கள், மன்னர்களாக இருந்த போதிலும், காத்திருந்தே இறந்துவிட்டிருக்கின்றனர்”, அந்தப் பாதிரியார் கூறினார்.
“ஆனால், சொல்லுங்கள் எனக்கு, புனிதத் தந்தையிடம் பாவமன்னிப்புக் கோருவதற்காக மட்டுமே தன்னந்தனியாய் இப்படி ஒரு பிரயாணம் நீங்கள் மேற்கொண்டிருப்பதால் தங்களுடையது ஒரு மோசமான பாவமாக இருக்க வேண்டும்”
ஒரு க்ஷணம் செனோரா புரூடென்சியா லினேரோ யோசித்தாள். பிறகு, முதன்முதலாக அவள் புன்னகையைப் பார்த்தார் அந்தப் பாதிரியார்.
“தேவ மாதாவே” அவள் சொன்னாள், “அவரைப் பார்த்தாலே போதும், திருப்தி அடைவேன் நான்,” மேலும், அவள் ஆத்மாவிலிருந்து எழுந்தது போன்ற ஒரு பெருமூச்சுடன் கூறினாள், “என் வாழ்நாள் கனவாக இருந்திருக்கிறது இது”.
உண்மை என்னவென்றால் அவள் இன்னும் பயமும் கவலையும் கொண்டவளாய் இருந்தாள், மேலும் அவள் விரும்பியதெல்லாம் தாமதம் சற்றும் இன்றி உடனே அந்த உணவகத்தை விட்டும், அதேபோல, இத்தாலியை விட்டும் வெளியேறிவிடவேண்டும் என்பதையே. இந்த, ஏமாளிப் பெண்ணிடம் பெற முடிந்ததெல்லாம் பெற்றுக்கொண்டு விட்டதாக அந்தப் பாதிரியார் எண்ணியிருக்கவேண்டும். அவளுக்கு வாழ்த்து கூறிவிட்டு, வேறு ஒரு மேஜைக்கு ஈகையின் பெயரால் அவருக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தருமாறு கேட்பதற்குச் சென்றார்.
அந்த உணவகத்தை விட்டு அவள் வெளியேறி நடந்தபோது, செனோரா புரூடென்சியா லினேரோ மாறுதல் அடைந்த ஒரு நகரத்தைக் கண்டாள். ஒன்பது மணிக்கு வீசிய சூரிய வெளிச்சத்தால் அவள் ஆச்சரியமடைந்தாள். மாலைத்தென்றலில் ஆசுவாசம் காண தெருக்களை படையெடுத்துக்கொண்டிருந்த, கரகரப்பான ஒலி எழுப்பிய மக்கள் திரளைக் கண்டு அச்சமடைந்தாள். பைத்தியம் பிடித்தாற்போல, துப்பாக்கி வெடிப்பொலி போல பின்புறம் சப்தமிட்ட வெஸ்பா ஸ்கூட்டர்கள் வாழ்வை சாத்தியமற்றதாக்கியிருந்தன. வெற்று மார்பைக் காட்டியபடி ஸ்கூட்டர் ஓட்டிய ஆண்களின் பின்புறம் அவர்தம் அழகிய பெண்கள் ஆண்களின் இடுப்பைக் கட்டிப்பிடித்தபடி அமர்ந்திருந்தனர்.
அந்த ஸ்கூட்டர்கள் தொங்கிக்கொண்டிருந்த பன்றிகளின் நடுவேயும், முலாம்பழங்களால் நிரப்பப்பட்டிருந்த மேஜைகளுக்கு நடுவேயும், திடீரென்று, உள்ளேயும் வெளியேயும் ஓட்டப்பட்டன. அந்த திருவிழாக்கோலமாயிருந்த சூழல் செனோரா புரூடென்சியா லினேரோவுக்கு ஒரு பேரழிவுபோலத் தோன்றியது. அவள் வழியைத் தவறவிட்டாள், திடீரென ஒரு மகிழ்ச்சிக் கேடான தெருவில் தன்னைக் கண்டாள். அங்கு ஒன்றோடொன்று ஒத்திருந்த வீடுகளின் வாசல் வழியில் அதிகம் பேசாத பெண்கள் உட்கார்ந்திருந்தனர்.
அந்த வீடுகளில் கண் சிமிட்டிய சிவப்பு விளக்குகள் இவளை பெரும் அச்சத்தில் நடுங்க வைத்தன. சில கட்டிடங்கள் வரை, இத்தாலிய மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும், ப்ரெஞ்சிலும் ஏதோ பேசிக்கொண்டு நல்லமுறையில் உடையணிந்து, தன் ‘டை’யில் வைரம் தரித்திருந்த ஒரு மனிதன் அவளைப் பின்தொடர்ந்தான். எந்த பதிலும் பெற முடியாமற்போனதும், அவன் தன் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து ஒரு கட்டிலிருந்து ஒரு அஞ்சல் அட்டையை அவளிடம் காட்டினான். மேலும், ஒரு பார்வை மட்டுமே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது அவள் நரகத்தினூடே நடந்துகொண்டிருந்தாள் என்று நிச்சயமாய் உணர்ந்துகொள்ள.
பெரும் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடினாள், அந்தத் தெருக்கோடியில், மாலை மங்கல் ஒளியில் கடலைக் கண்டாள், மறுபடியும், அழுகிக்கொண்டிருக்கும் மீன் சிப்பிகளின் அதே துர்நாற்றம் ரியோவாச்சா துறைமுகத்தை ஞாபகப்படுத்தியபடி இருக்க. பிறகு அவள் இதயம் அதற்குரிய சரியான இடத்திற்கு வந்து சேர்ந்தது மீண்டும். மனிதர்கள் யாருமற்ற பீச்சை ஒட்டிய வர்ணம் பூசப்பட்ட ஹோட்டல்களையும் சவஊர்தித் தன்மையான டாக்ஸிகளையும் மாபெரும் வானத்தில் தோன்றிய முதல் விண்மீனின் வைரத்தையும் அடையாளம் கண்டாள். அந்த வளைகுடைவாவின் எல்லை முடிவில் தனிமையாகவும் பிரம்மாண்டமாகவும் ஒவ்வொரு தள அடுக்கிலும் ஒளிர்ந்தபடி கப்பல் நிற்கும் தளத்தில் நின்றிருந்த அவள் பயணம் செய்த கப்பலை அடையாளம் கண்டாள். இனி ஒருபோதும் அதனுடன் எந்த விதத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தாள். ‘காராபியனரி’ என்றழைக்கப்படும் தேசீய இத்தாலிய போலீஸ் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த ஒரு கூட்டத்தினால் அவள் இடது பக்கம் திரும்பி அந்த மூலை வரை சென்றவள் மேலே செல்ல முடியாமற் போனது.
ஒரு வரிசை ஆம்புலன்ஸ் வண்டிகள் கதவை திறந்து வைத்தவாறு அவள் தங்கியிருந்த ஹோட்டல் கட்டிடத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தன. கால்விரல் நுனியில் நின்றபடி பார்வையாளர்களின் தோள்களின் மீதாக உற்றுநோக்கிய செனோரா புரூடென்சியா லினேரோ மீண்டும் ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகளைக் கண்டாள். இயக்கமற்றும் விழுமிய தோற்றத்துடனும் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரெட்சரில் தூக்கிச் செல்லப்பட்டனர். மேலும் அனைவரும் இரவு உணவுக்கான மரபான ஆடையில் ஒரே மனிதன் பல தடவைகள் பிரதி செய்யப்பட்டது போல் தோன்றினர். பிளானல் துணியால் ஆன கால்சட்டைகள், குறுக்குக் கோடுகள் கொண்ட கழுத்துப்பட்டிகள், மேலும் அடர் வண்ண ஜாக்கெட்டுகளின் மேல் டிரினிட்டி கல்லூரியின் முத்திரை அவர்களின் மார்பளவிலிருந்து பாக்கெட்டுக்களின் மேல் பூந்தையல் செய்யப்பட்டிருந்து.
அவர்களை வெளியே எடுத்து வரும் சமயத்தில் தமது பால்கனிகளிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள், மற்றும் தெருவில் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் கோரஸாக அவர்கள் ஏதோ விளையாட்டரங்கில் இருப்பது போல் எத்தனை பேர் என எண்ணினர். பதினேழு பேர் இருந்தனர். இரண்டிரண்டு பேர்களாக ஆம்புலன்ஸ் வண்டியில் வைக்கப்பட்டனர், பிறகு, யுத்த அபாய சைரன்களின் ஓலத்துடன் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டனர்.
திகைக்க வைக்கும் அத்தனை நிகழ்வுகளால் அதிர்ந்து போன செனோரா புரூடென்சியா லினேரோ பிற ஹோட்டல்களில் தங்கியிருந்த விருந்தினர்கள் லிப்டில் புரியாத பாஷையில் பேசியபடி நிறைந்திருந்தவர்களுடன் ஏறிச் சென்றாள். அடைக்கப்பட்ட, லிப்டில் மூன்றாவது தளத்தைத் தவிர ஒவ்வொரு தளத்திலும், இறங்கினார்கள். மூன்றாம் தளம் வெளிச்சமிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த கவுண்ட்டரிலோ அல்லது சாய்வு நாற்காலிகளிலோ, காத்திருப்பு அறையிலோ அடர்சிவப்பு நிற முட்டிகளைக் கொண்ட உறங்கிக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களோ எவரும் இருக்கவில்லை. அடக்கமுடியாத உணர்ச்சியுடன் அந்த ஐந்தாவது தள உரிமையாளர் அந்த அசம்பாவிதம் பற்றி கருத்துரைத்தார்:
“அவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்”, அவர் செனோரா புரூடென்சியா லினேரோவிடம் ஸ்பானிய மொழியில் கூறினார்.
“இரவு உணவின்போது, உண்ணுவதற்கேற்ற ஒரு வகை சிப்பி கொண்டு தயாரித்த சூப் விஷமாகிப் போயிருக்கிறது. எண்ணிப் பாருங்கள், ஆகஸ்ட்டில் சிப்பிகள்.”
இவள் அறைச் சாவியை இவளிடம் கொடுத்தாள் அவள். பிறகு இவளை கவனிக்காது மற்ற விருந்தினர்களிடம் தனது சொந்த பாஷையில்
“சாப்பிடும் அறை இங்கே இல்லாததால் தூங்கும் ஒவ்வொருவரும் உயிருடன் விழித்து எழுவார்கள்” என்று கூறினாள். தொண்டைக்குள் மேலும் ஒரு கண்ணீர் முடிச்சுடன், செனோரா புரூடென்சியா லினேரோ தன் அறைக் கதவுகளைத் தாழிட்டாள். அதன் பிறகு, அந்த சிறிய எழுதும் மேஜையையும், சாய்வு நாற்காலியையும் ட்ரங்குப் பெட்டியையும் கதவை ஒட்டித்தள்ளினாள்: எங்கே ஒரேசமயம் மிகப்பல நிகழ்வுகள் நடந்து விட்டிருந்தனவோ அந்தக் கொடிய நாட்டின் பயங்கரத்திற்கு எதிராக கடந்து செல்லமுடியாத ஒரு தடுப்பரணை அமைக்க. பிறகு, கைம்பெண் அணியக்கூடியதான தன் இரவு உடையை அணிந்து கொண்டாள். படுக்கையில் மல்லாந்து படுத்தாள், பிறகு, அந்த நஞ்சிடப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்களின் ஆத்மாக்களின் நித்திய அமைதிக்காக பதினேழு ஜபங்கள் சொன்னாள்.
ஏப்ரல் 1980
Seventeen Poisoned English Men, from Strange Pilgrims,Twelve stories by Gabriel Garcia Marquez, Translated from the Spanish by Edith Grossman, Alfred A.Knopf, New York,1993 Seventeen Poisoned English Men, from Strange Pilgrims,Twelve stories by Gabriel Garcia Marquez, Translated from the Spanish by Edith Grossman, Alfred A.Knopf, New York,1993
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண் துறையின் பெயர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொடக்கத்தில், ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மாசனபு புகுவோகாவின் மேற்கோள் கையாளப்பட்டுள்ளது. வழக்கமாக, நிதிநிலை அறிக்கை என்பது துறையின் உயர் அதிகாரிகள் தங்கள் அலுவலகங்களில் இருந்து தயாரிப்பது என்னும் நிலை மாறி, வேளாண் துறை அமைச்சர் தமிழ்நாட்டின் பல இடங்களுக்குப் பயணம் செய்து உழவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் ஆலோசனைகளும் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவையெல்லாம், வேளாண்துறை, தனது அணுகுமுறையில் மாற்றங்கள் தேவை எனச் சிந்திப்பதன் அடையாளம் எனச் சொல்லலாம்.
வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கை, 2023-24 ஆம் ஆண்டில் தனது துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 18% அதிகரித்துள்ளது. முதலீடுகளையும் 18% அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு வேளாண் துறைக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக, தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்ததின் காரணமாக, காவிரியில் நீர் வரத்து மிகவும் திருப்திகரமாக இருந்தது. காவிரியின் நீர்வரத்து நன்றாக இருப்பதை உணர்ந்து அரசு வழக்கமாக குறுவை சாகுபடிக்கான நீர்திறப்பதை 19 நாட்கள் முன்னதாகச் செய்தது. இதைத் தானே முன்னின்று செய்த முதல்வர், பின்னர் சில நாட்கள் கழித்து தானே காவிரி டெல்டாப்பகுதிக்குச் சென்று நீர் வரத்து பற்றிய ஆய்வை மேற்கொண்டார். அரசின் முனைப்பின் விளைவாக, கடந்த 2 ஆண்டுகளாக, டெல்டாப் பகுதியில் நெல் சாகுபடிப்பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
திமுக தன் தேர்தல் அறிக்கையில் ஒரு லட்சம் உழவர்களுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், கடந்த இரண்டாண்டுகளில் 1.5 லட்சம் இலவச மின்சார இணைப்புகளைக் கொடுத்திருப்பது, வேளாண்மைக்கு இந்த அரசு தரும் முக்கியத்துவத்தை கூடுதலாக உணர்த்துகிறது.
இந்த ஆண்டை உலக உணவு நிறுவனம், ‘சிறு தானியங்களின்’, ஆண்டாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு, சென்ற ஆண்டிலிருந்தே சிறு தானியங்கள் உற்பத்தி மேம்பாட்டுக்கான ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தை அறிவித்து, நிறைவேற்ற முனைந்துள்ளது. சிறு தானியங்கள் மழையை நம்பியிருக்கும் மாவட்டங்களில் உற்பத்தியாகும் உணவு தானியம். இவற்றின் நீர்த்தேவை நெல்லை ஒப்பிடுகையில் மிகக் குறைவு.
இந்த ஆண்டு, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு 2 கிலோ ராகி கொடுக்கும் திட்டத்தை வெள்ளோட்டமாக நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது. சிறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அமுதம், சிந்தாமணி, காமதேனு போன்ற கூட்டுறவு நுகர்பொருள் அங்காடிகள் வழியே விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன. அரசு சார்பில் சிறு தானிய விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடுகள், உணவு வகைகள் மக்களிடையே எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இதுபோன்ற திட்ட அளவிலான இடையீடுகள் மிகவும் செயல்திறன் மிக்கவை என்பதால், இவை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில், அரிசி என்பது நிகழ்காலத்தைப்போல மூன்று வேளை உணவாக இருக்கவில்லை. கம்பு, ராகி, சோளம் போன்ற தானியங்கள் தமிழர்களின் உணவில் முக்கிய இடம்பெற்றிருந்தன. ஆனால், பசுமைப்புரட்சித் திட்டங்கள் நெல்லுக்கும், கோதுமைக்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, அவற்றின் உற்பத்தி அதிகரித்து, மற்ற தானியங்கள் நம் உணவுப்பழக்கத்தில் இருந்து விலகிப் போயின.
அரசின் இந்த முன்னெடுப்பின் விளைவாக, சிறுதானியங்களுக்கான ஒரு நுகர்வு-கொள்முதல் என ஒரு கூடுதல் வணிகச் சங்கிலி உருவாகி வரும். அது உற்பத்தியாளர்களுக்கான ஒரு குறைந்த பட்ச விலையைப் பெற்றுத்தரும். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பு. ஆனால், இதற்கான ஒதுக்கிடு 82 கோடி என்பது மிகவும் குறைவானதாக உள்ளது. இன்னும் அதிகரிக்கலாம்.
நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு சிலநாட்கள் முன்பு, வேளாண் துறை, அரசின் இயற்கை வேளாண் கொள்கையை வெளியிட்டது. வேளாண் உற்பத்தியில் வேதிப் பொருட்கள் குறிப்பாக பூச்சி மற்றும் களைக்கொல்லிகள் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மொத்த உணவுச் சங்கிலியிலும் ஊடுருவி விட்டதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் போக்கு அபாயகரமானது. எனவே, இந்தக் கொள்கை முன்னெடுப்பு வருங்காலத்துக்கு மிகவும் தேவையான ஒன்று என்னும் வகையில் வரவேற்கத்தக்கதே.
நிதிநிலை அறிக்கை பண்ணைக் குட்டைகளை அமைக்கும் ஒரு திட்டத்தையும் முன்வைத்துள்ளது. ஆனால், வெறும் 600 பண்ணைக் குட்டைகளை மட்டுமே அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
மானாவாரிப் பயிர் மற்றும் தோட்டப்பயிர் சாகுபடியின் மிகப் பெரும் பிரச்சினையே, காலம் தவறிப் பெய்யும் மழைதான். கடந்த 70 ஆண்டுகளில் உற்பத்திப் பெருக்கம் என்னும் பேராசையால், நாம் நீர்த் தன்னிறைவு என்னும் ஒரு கருத்தாக்கத்தை மறந்து விட்டோம். கிணறுகளை ஆழமாக வெட்டத் தொடங்கி, நிலத்தடி நீருக்காக ஒரு மறைமுகப் போட்டியை உருவாக்கிவிட்டோம். இதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை உழவர்கள்தாம். இதை முன்பே உணர்ந்து நம்மை காந்தியப் பொருளியல் நிபுணர் குமரப்பா எச்சரித்தார். ஆனால், நாம் காதுகளில் போட்டுக்கொள்ளவில்லை.
நிலத்தடி நீர் என்பது பூமி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகச் சேமித்து வந்த சொத்து. அதை எழுபது ஆண்டுகளில் நமது பேராசை காரணமாக உபயோகித்துத் தீர்த்து விட்டோம். இது நம் நாட்டின் தலையாய பிரச்சினை. இதை அரசு ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பாகச் செய்து, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நிலங்களிலும் பண்ணைக் குட்டைகளை அமைக்கவேண்டும். இவை ஏற்கனவே இருக்கும் கிணறுகள், போர்வெல் பம்புகள் அருகே அமைக்கப்பட்டு, அதீத மழை நீர் அவற்றுக்கும் செல்லும் வகையில் ஒரு முழுமையான திட்டமாக நிறைவேற்றப்படலாம். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை இத்துடன் இணைத்தால், அடுத்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு உழவரும் தத்தம் நிலத்தில் பெய்யும் மழையைச் சேமித்து உபயோகிக்கும் பண்ணைக் குட்டை வழிமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்திவிடமுடியும்.
இனி இதன் மீதான விமர்சனங்கள்:
கடந்த 50 ஆண்டுகளாக உழவர்களின் வருமானம், சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. தமிழ்நாடு போன்ற தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், வேளாண்மையை விட்டு தொடர்ந்து மக்கள் விரைவாக வெளியேறி வருகிறார்கள். இன்று 10% க்கும் குறைவான உழவர்கள் மட்டுமே தமிழ் நாட்டில், வேளாண்மையை முழுவதும் நம்பி இருப்பவர்கள் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன் காரணம் எளிதானது.
சராசரியாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் வைத்திருக்கும் உழவர்களின் (தமிழ்நாட்டு உழவர்களில் இவர்கள் 80%), மொத்த குடும்பமும் இணைந்து உழைத்தாலும் செலவுகள் போக வருடம் 1 லட்சம் வருமானம் பெறுவது கடினம். தோட்டம், மானாவாரி நிலம் வைத்திருப்பவர்கள் நிலை இன்னும் மோசம். இதை விட, இருவரும் தொழிற்சாலையில் திறனில்லாத் தொழிலாளர்களாக வேலை செய்தால் அதிகப் பணம் ஈட்டிவிட முடியும்.
வேளாண் துறையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையாகப் பெயர் மாற்றம் செய்த அரசு, தன்னால் இயன்ற அளவுக்கு உழவர் நலனுக்குச் செய்து வருகிறது. ஆனால், அதன் பலன்கள் போதுமானவையாக இல்லை. எனவே உண்மையான உழவர் நலம் என்பது அவர்களின் வருமானம் மற்ற துறைகளில் மக்கள் ஈட்டுவதற்கு இணையான அளவை எட்டுவதுதான்.
ஆனால், இன்றிருக்கும் கட்டமைப்பில் வருமானம் அப்படி உயர்வது சாத்தியமில்லை. இந்தப் பிரச்சினை இன்று உலகளாவிய பிரச்சினை. 2.5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் இந்திய உழவர், நவீன வேளாண் முறைகளைக் கடைபிடிக்காத ஆப்பிரிக்க உழவர், 440 ஏக்கர் வைத்திருக்கும் அமெரிக்க உழவர், 175 ஏக்கர் வைத்திருக்கும் ஐரோப்பிய உழவர் - இவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை ஒன்றுதான். அது, ‘வேளாண்மையின் லாபமின்மை’.
ஒவ்வொரு ஆண்டும் குறையும் வேளாண் வருமானம், உழவர்களைப் பெரும் நஷ்டத்தை நோக்கிச் செலுத்துகிறது. ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட சதவீத உழவர்கள் வேளாண்மையைக் கைவிடும் அபாயம் நம் முன்னே நிற்கிறது.
இந்தப் பிரச்சினை ஒரு கட்டமைப்புப் பிரச்சினை. உலகில் எந்த நாடுமே உணவு உற்பத்தி இறையாண்மையை விட்டுக் கொடுப்பதில்லை. குறிப்பாக வளர்ந்த நாடுகள். எனவே, எவ்வளவு நஷ்டமானாலும், அவர்கள் பெருமளவு உற்பத்தி மானியத்தைக் கொடுத்து உழவர்களின் உற்பத்தியைத் தக்க வைத்துக்கொள்வார்கள். அதேபோல உலகில் எந்த நாடுமே, தம் மக்கள் உணவின்றி வாட விட மாட்டார்கள். பெருமளவு உணவு தானிய மானியம் கொடுத்து காத்துக்கொள்வார்கள்.
இப்படி உற்பத்தி, நுகர்வு என இருபுறமுமே உலக நாடுகளால் மானியங்கள் கொடுக்கப்படும்போது, வேளாண் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைக்காது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் நெல்லில் பாதி அளவு இலவசமாக ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுகையில், உழவர்களின் நெல் உற்பத்திக்கு ஒரு போதும் சரியான விலை கிடைக்காது.
எனவே, இங்கே தமிழ்நாட்டு வேளாண்துறையின் வழக்கமான அணுகுமுறையான உற்பத்தி அதிகரிப்பு, அரசு கொள்முதல் உதவி என்னும் வழிமுறை வேளாண்மை லாபகரமாக மாற உதவாது.
நேரடியாக, உடனடியாக உழவர்களின் வருமான உயர்வுதான் தீர்வு.
இதைச் செய்யாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நாம் உழவர்களையும், வேளாண்மையையும் அழிவை நோக்கித் தள்ளுகிறோம் என்பதை அரசு எவ்வளவு விரைவில் உணர்கிறதோ, அவ்வளவு நல்லது.
அப்படி வேளாண் வருமானத்தை உயர்த்த வல்ல சில தீர்வுகளைக் காண்போம்.
நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில், அடுத்த 7 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மின் உற்பத்தி 33000 மெகாவாட் ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். அதில் முக்கியமான அளவு சூரிய ஒளி மின் உற்பத்தியாக இருக்கும். சூரிய ஒளி மின் உற்பத்திக்குத் தேவை நிலம் மட்டுமே. தமிழ்நாடு அரசு தன் மின் உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை உழவர்களின் நிலத்தில் உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்தினால்,
1. அரசுக்கு இலவச மானிய பாரம் குறையும்.
2. உழவர்களுக்கு வேளாண் உற்பத்தி அல்லாத ஒரு வருமானம் கிடைக்கும். குஜராத்தில் நடந்த ஒரு பரிசோதனையில், ஒரு இணைப்புக்கு வருடம் 60 ஆயிரம் வரை கூடுதல் வருமானம் கிடைத்திருக்கிறது.
இத்திட்டத்தை பின் தங்கிய, வேளாண்மையை நம்பியுள்ள மாவட்டங்களான தஞ்சை, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் முதலில் வெள்ளோட்டம் பார்த்து விட்டு, படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் நிறைவேற்றலாம். வேளாண் பொருள் உற்பத்தியின் லாபமின்மையை
இந்தத் திட்டம் ஓரளவு உடனடியாகச் சரி செய்யும்.
இலவச பொது விநியோகத் திட்டம் போன்ற திட்டங்களால், உணவு தானியங்களின் தேவை சந்தையில் அதிகம் இல்லாமல், உற்பத்திக்கு உழவர்களுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை என்பதை நாம் முன்னரே கண்டோம்.
எனவே, உழவர்கள் உணவு தானியங்களை மட்டுமே உற்பத்தி செய்துகொண்டிராமல், கலப்புப் பண்ணை முறைகளை உருவாக்க அரசு உதவி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, பால் துறையில், உழவர் உற்பத்தியை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் ஆவின் நிறுவனம் போல, உழவர்களை ஆடு, கோழி போன்றவற்றை வளர்க்கச் செய்து அவர்களிடமிருந்து இறைச்சி, முட்டை போன்றவற்றைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி சந்தைப்படுத்தலாம். இவற்றுக்கு உலக அளவில் தேவைகள் இருப்பதால் ஏற்றுமதியிலும் ஈடுபடலாம். இதில் மிக முக்கியமானது, ஆவின் போன்ற பெரும் அலகு உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாகும் வகையில் அரசு ஒரு நீண்ட காலத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படலாம். இங்கே சுய உதவிக் குழுக்கள், உள்ளூர் உழவர் சந்தைகள் போன்ற சிறு அலகுகள் உதவாது.
இப்போதைய கட்டமைப்பில், உழவர்களின் உற்பத்தியை அரசு கொள்முதல் செய்து, தன் பொறுப்பில் வைத்திருந்து அது தொடர்பான செயல்பாடுகள் - சேமிப்பு, பதப்படுத்துதல், விநியோகம் என அனைத்தையும் தன் தலையில் போட்டுக் கொள்கிறது.
ஆவின் போன்ற ஓரளவு தன்னிறைவு பெற்ற பெரும் உற்பத்தியாளர் நிறுவனம் உருவானால், அது உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களின் கொள்முதல், பதப்படுத்துதல், விநியோகம் என எல்லா வணிகச் செயல்பாடுகளையும், தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும். அரசுக்கு நிதிச் சுமையும், மேலாண் சுமையும் இருக்காது.
வேளாண்மையின் லாபமின்மையை, இப்போது இருக்கும் அரசு அணுகுமுறையினால், திட்டங்களால் தீர்க்க முடியாது. தற்காலிகமாகத் தள்ளிப்போட முடியும். இதனால் வேளாண் சிக்கல் தொடர்ந்து அதிகரித்து, ஒரு நாள் பெரும் பிரச்சினையாக வெடிக்கும். அதற்கு முன்பு விழித்துக்கொள்ளுதல் நல்லது.
2014-க்குப் பின்னர்த் தேசிய அரசியலில் ஏற்பட்ட ஜனநாயக நெருக்கடி 2019ல் கொள்கை அளவில் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக ஓர் அணியில் திரள வலுவான காரணமாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியே அதிகாரப்பூர்வ முடிவை வெளியிடாத நிலையில் ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். விசிக, இடதுசாரி கட்சிகள், மதிமுக எனத் தானாக முற்போக்குச் சக்திகள் ஓரணியாகச் சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாக்குவங்கி அடிப்படையிலும் இது திமுகவிற்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது. சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் அவற்றை அணிதிரட்டி திமுக 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியுடன் தனது வெற்றியை உறுதிசெய்தது. இப்படியாகப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திமுக ஆளும் கட்சியாகத் தமிழகத்தில் வெற்றிபெற்றுள்ளது.
பெண்களுக்கான போக்குவரத்தை இலவசமாக்கியது, பல விமர்சனங்களுக்கு இடையிலும் கொரோனா பேரிடரைத் திறம்படக் கையாண்டு அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, தமிழருக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் சில அரசியல் திருத்தங்களை மேற்கொண்டதென ஆரம்பகாலத் திமுகவின் பணி வாக்களித்தோரைத் திருப்தி செய்யும் விதமாகவே அமைந்தது. திராவிட மாடல் என்னும் பதம் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டது. இதற்கெல்லாம் அணி சேர்க்கும் வகையில் நிதி அமைச்சராக ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆட்சியின் மகுடமாகப் பார்க்கப்பட்டார். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒன்றிய அரசுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகளும், விமர்சனங்களும் தேசிய அளவில் கவனம் பெற்றன. திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயிர்நாதமாக முழங்கப்படும் சமூகநீதியின் பால் பற்றும், தெளிந்த அறிவும் பெற்றவராக எந்த நேர்காணலிலும் அவரால் அனாயசமாகத் தரவுகளுடன் பதில்கூற முடிகிறது. அவர் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் அவசியம் குறித்துச் சென்ற மணல்வீடு இதழில் வெளியான பாலசுப்ரமணியம் முத்துசாமியின் கட்டுரையும் வெளிப்படுத்தியிருந்தது.
எனினும் இவையெல்லாம் ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்கங்களாக இருக்குமென எண்ணியிருந்த சமயத்தில் திமுக மீண்டும் கலைஞர் தலைமையிலமைந்தது போலவே தனது அசலான சுயரூபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. எதிர்கட்சியாக இருந்தபொழுது எந்த எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் குரல் கொடுத்ததோ ஆட்சிக்கு வந்ததும் அதற்கு நேர் எதிரான முடிவைதனது நிலைப்பாடாக வெளிப்படுத்தியுள்ளது. இதிலிருந்தே திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கியதெனக் கூறலாம். மேலும் மாணவர்களின் கல்விக்காக அரசால் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சியின் CEOவாக வலதுசாரி ஆதரவுகொண்ட ஒருவரை நியமிக்க முன்வந்தது அதன் மீதான மற்றொரு கறை. இல்லம் தேடிக் கல்விமீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டு என அதன் கொள்கைகள் பல இடங்களில் வழுக்கத் தொடங்கின. வெறும் இரண்டே ஆண்டுகளில் அதுவும் வெற்றிப் பெற்ற முதல் தேர்தலிலேயே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கி திமுக எப்போதும் ஒரு குடும்பநலனுக்கான அரசியல் கட்சிதான் என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் நிரூபித்துள்ளது. இதற்குமேலும் திமுகவை வெறும் சமூகநீதி என்ற வாயளவிலான சமாதானத்திற்காக மட்டுமே வலதுசாரிய அரசியலுக்கெதிரான ஆயுதமாக உயர்த்திப்பிடிக்க முடியாதென்பது தெளிவாகியுள்ளது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க அரசு நிர்வாகம் சார்ந்த அளவில் இந்த திராவிட மாடல் அரசின் செயல்பாடு என்னவாக இருக்கிறதென்பதையும் சில நிகழ்ச்சிகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடலின் மேற்பூச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து நம்பி வாக்களித்த சாமான்யனின் காலடிகளில் உதிரத் தொடங்கியுள்ளது. அதில் பி.டி.ஆர்.க்கும் பங்கிருப்பது கசப்பான உண்மையாகும்.
அரசுப் பணிகளை எடுத்துக்கொள்வோம். எந்தவித ஒழுங்குமுறையுமின்றி நடைபெற்ற ஆவின் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த பணிநியமனங்கள் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறுமெனச் சொல்லப்பட்ட அறிவிப்புகள் ஆரம்பத்தில் சில நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தன. ஆனால் இந்த ஆண்டு வெளி ஆகியிருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் கால அட்டவணை போட்டித் தேர்வை எதிர்நோக்கியிருக்கும் பல்லாயிர கணக்கானோரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தது வருடத்திற்கு முப்பது, முப்பத்தைந்து தேர்வுகள் மூலம் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரைத் தேர்வு செய்யும் ஆணையம் இவ்வருடம் வெறும் இரண்டாயிரம் பணியிடங்களுக்கான பத்து, பதினைந்து தேர்வுகளை மட்டுமே நடத்தத் திட்டமிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பிற்குப் பின் பேருக்கு இரண்டு தேர்வுகளைச் சேர்த்துள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தரம் கோரிய போராட்டம், இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டமெனத் தொடர்ந்து அரசுப் பணிக்காகவும் அரசு ஊதியத்திற்காகவும் போராட வேண்டிய சூழலே நிலவுகிறது. கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளத்தை ஒப்பிடும்போது கூலித்தொழிலாளியின் ஒருநாள் வருமானம் அதிகமாக இருக்கிறது. கல்வியை முன்னுதாரணமாகக் கூற வேண்டிய ஆசிரியர்களே கல்வி பெற்றதற்கான தண்டனையை அனுபவிப்பது போலதான் இன்றைய அரசு நிர்வாக மேலாண்மை உள்ளது. பொருளாதாரம் பற்றிய பிடிஆரின் வாதங்களில் வெளிப்பட்ட கோபமும் நியாயமும் இதுபோன்ற நிலைமையைச் சீர் செய்துவிடுமென்ற நம்பிக்கையை விதைத்தன. ஆனால் தப்பித் தவறி அரசு கஜானாவிலிருந்து பொது மக்களுக்குக் கசிந்துகொண்டிருந்த சொற்ப தொகைகளையும் நிறுத்திவிடும் வண்ணமே அவரின் கறாரான செயல்பாடுகள் உள்ளன. எதற்கெடுத்தாலும் கொரோனா காலப் பேரிடரையும் கடந்த ஆட்சியின் சீர்கேட்டையும் காரணமாகக் கூறுவதே அமைச்சர்களின் பதிலாக இருக்கிறது.
வெறும் வாக்காளனின் சாதாரணப் புலம்பலாகவும் விமர்சனமாகவும் மட்டுமே இதனைச் சுருக்கி அணுகமுடியாது. பிஜேபி வெளிப்படையாகவே தனது பொருளாதாரக் கொள்கையாக அறிவித்துக்கொள்ளும் 'minimum government' என்னும் ஆபத்தான பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மய சார்பையே திராவிட மாடலும் மறைமுகமாகத் தழுவுகிறது. நம்ம ஸ்கூல் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளைப் பேணுவதற்கான பொறுப்பைத் தனியாருக்குத் திறந்து விடுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மீதான அரசின் தார்மீகக் கடமைகளை மெல்ல மெல்ல கைகழுவுவதே இன்றைய நவீன பொருளாதார வளர்ச்சியாக உலக நாடுகளால் முன்வைக்கப்படுகிறது. இது கல்வியையும் வேலைவாய்ப்பையும் தனி மனிதனின் பலத்திற்கும் வலுவிற்கும் உட்பட்ட சவாலாகவே விட்டுவிடுகின்றன. அமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே தனியார் வேலை வாய்ப்பு முகாமொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் உதயநிதி “அரசால் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது” என இறுமாப்பு பொங்க கூறுகிறார்.
இதில் பிடிஆரின் செயல்பாட்டிற்கு வருவோம். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக நிதி பற்றாக்குறையினைச் சில சதவீதங்கள் குறைத்துக் காட்டியது மட்டுமல்லாமல் அரசின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ‘லீக்கேஜ்’களைச் சரிசெய்ய முயன்றார். மேலும் மத்திய அரசையும் அதன் சார்பு ஊடகங்களையும் திறமையாகக் கையாண்டார். ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார். அரசுக்குப் பொருளாதார ஆலோசனை வழங்குவதற்கு நோபல் பரிசு பெற்ற வல்லுனர்கள் அடங்கிய திட்டக்குழு ஒன்றையும் அமைத்து மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவையெல்லாம் வாக்களித்த மக்களுக்கு ஒரு அரசியல்வாதி செய்ய வேண்டிய அடிப்படைக் கடமைகள்தான். ஆனால் இதனைத் தாண்டி பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்துவோமெனத் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வாக்குறுதியினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்கவும் தக்க பதில் தரவும் மறுத்து வருகிறார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியும் உரிய முறையில் வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டது. இதிலும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்குப் பிறகுதான் ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளது (முழுவதும் நிவர்த்திச் செய்யப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை).
குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ போன்ற அரசு கீழ்நிலைப் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் ‘Out Sourcing' மூலம் நிரப்பப்படுமென அரசாணையில் குறிப்பிட்டு இருந்தது கண்டனங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஆளாகி உள்ளது. ‘Out Sourcing' என்பதன் மூலம் தற்போதிருக்கும் வெவ்வேறு அரசுப் பணியாளருக்கு ஆன தேர்வாணையங்களை அரசு என்ன செய்யத்திட்டமிட்டுள்ளது என்பதும் கேள்விக்குறி ஆகிறது. இந்த குரூப் சி மற்றும் டி பணிநிலைகளில் ஏராளமான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர் அதிக அளவு பயனடைந்து வருகின்றனர். இன்று அது பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த ‘Out Sourcing' முறையில் வடமாநிலத்தவர் வேலைபெறும் அபாயமும் இருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் வெறும் பொறுப்பு தலைவருடன் சொற்ப ஊழியர்களைக் கொண்டு பெயரளவில் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
அரசு ஊழியர்கள் நடத்திய பிரதிநிதித்துவ மாநாட்டில் அரசு ஊழியர் சங்கத் தலைவர் அன்பரசு ‘அத்த கூலிக்கு ஆளெடுக்க முயலும் இவர்களைக் கார்ப்ரேட் மாடல் என்று கூறாமல் எப்படிக் கூறுவதெனக் காட்டமாக விமர்சித்துள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தற்போதைய திமுக அரசும் அரசு பணிகளையும், அரசு ஊழியர்களுக்குச் செய்யப்படும் செலவினங்களையும் தேவையற்ற நிதிச்சுமையாகக் கருதுவதாகவே தோன்றுகிறது. இப்படியாக அரசு ஊழியர்களின் கசப்பைச் சம்பாதித்துக்கொள்ளும் வண்ணமே பிடிஆரின் நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் இவை எந்த 'mainstream media' அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது நேர்காணல் செய்யப்பட்டுவிடும் Youtube சேனல்களிலோ கேள்வியாக எழுப்பப்படுவதில்லை. அரசியலும் பொது மக்களின் அன்றாடமும் இருவேறு பாதைகள் போல பிளவுபட்டுள்ளதே இம்மாதிரியான மந்ததன்மைக்குக் காரணமெனலாம். மக்களுக்கான நலத்திட்டங்கள் சரியான பயனாளர்களைச் சென்று சேரும் வகையில் இருக்கவேண்டுமெனப் பல நேர்காணல்களில் நிதி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதியோர் உதவித்தொகை பெறுவதில் செய்யப்பட்டிருக்கும் சில திருத்தங்கள் பயனாளர்களைப் பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அதே போன்று கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருந்த நகைக்கடன்கள் தள்ளுபடியிலும் இப்படியான சில அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து மேம்பாலங்கள் அமைப்பது, புதிய கட்டிடங்கள் திறப்பது என்பன போன்ற செலவினங்கள் தடையின்றிச் செய்யப்படுகின்றன.
இதனையெல்லாம் தொகுத்துக் காணும்போது குறுகியகாலச் செலவினங்கள் அல்லது ஒரு முறை மட்டும் செய்யவேண்டிய செலவினங்கள் போன்றவை தடையின்றிச் செயல்படுத்தப்படுகின்றன. அல்லது எதிலெல்லாம் அரசியல்வாதிகளும் அவர்களது பினாமிகளும் லாபமீட்ட வாய்ப்பு உள்ளதோ அத்திட்டங்களெல்லாம் எவ்வித இடையூறுமின்றி நடந்தேறுகின்றன. ஆனால் நீண்டகாலச் செலவினங்களைக் கோரும் மக்களின் எதிர்காலம் சார்ந்த முடிவுகள் மொத்தமாகக் கிடப்பில் போடப்படுகின்றன. அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற நிதி அமைச்சரின் நடவடிக்கைகள் இப்படிதான் அமைந்துள்ளன. பாஜகவின் ‘minimum government’ என்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மருத்துவச் சேவையைச் சிறப்பான முறையில் செயல்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டு வரும் அதேவேளையில் அதற்கான செவிலியர்கள் ஒப்பந்த முறை அடிப்படையிலேயே பணியமர்த்தப் படுகின்றனர். எதையும் தரவுகளுடன் மட்டுமே செயல்படுத்த வேண்டுமென நினைக்கும் அவரின் எண்ணம் நடைமுறையில் அதன் பயனாளர்களுக்கு ஏற்படுத்தும் சிக்கலைக் கணக்கில் கொள்வதாகத் தெரியவில்லை. எந்தவித விவாதமுமின்றிக் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் ஐம்பதினாயிரத்திலிருந்து இரட்டிப்பாக்கப்பட்டு ஒரு லட்சமாக உடனடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா பேரிடரில் திமுக வலியுறுத்திய ஐயாயிரம் ரூபாய் உதவித்தொகையைத் தர, சென்ற ஆட்சியாளர்களுக்கும் மனம் வரவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடனான சந்திப்புக் குறித்து நேர்காணலொன்றில் பகிரும் பிடிஆர், அவரின் பொருளாதார நடவடிக்கைகளை அவ்வளவு வியந்து பாராட்டி உரைக்கிறார். இதன் வழியாகவும் பிடிஆரின் பொருளாதாரக் கொள்கைச் சார்புகளை ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ளலாம். அதே நேர்காணலில் சில துறைகளில் தனியாரின் தலையீட்டைத் தவிர்க்க முடியாதெனவும் கூறுகிறார். மக்களுக்கு இன்னும் ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளதென எல்லா நேர்காணல்களிலும் ஏதாவது ஒரு திட்டம் குறித்துப் பேசிவரும் பிடிஆரின் செயல்பாடுகள் களத்தில் வேறுவிதமாகவே எதிரொலிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது. இந்தியாவையொட்டி உலகமயமாக்கல் கொள்கையினைத் தழுவி எந்த நாடுகளெல்லாம் வெறும் தேசியவாதத்தின் மூலம் தங்கள் பாசிச ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனவோ அவையெல்லாம் இன்று ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளாதாரப் பெருமந்தத்தைச் சந்தித்து உலக அரங்கில் திவாலாகும் நிலைமையை எட்டியுள்ளன. அருகிலிருக்கும் இலங்கையும், பாகிஸ்தானுமே சிறந்த உதாரணங்களாக நமது கண்முன் நிற்கின்றன. கொரோனா பேரிடருக்குப் பிறகு சிறு நிறுவனங்கள் தொடங்கிச் சர்வதேச அளவில் கிளைபரப்பி வணிகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் வரை அனைத்தும் பெரிய அளவில் பணியாளர்களை lay off செய்து வருகின்றன.
இப்படியாக அடுத்தச் சில நூற்றாண்டுகளுக்கு எந்த மீட்சியும் கண்ணுக்குத் தெரியாதவாறு பொருளாதாரக் கொள்கைகள் நம்பிக்கையின்மையையும் பெரும் அச்சத்தையும் சோர்வையும் அளிக்கக் கூடியதாக இருக்கும் சூழலில் குறைந்தபட்சம் மாநில அளவிலாவது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருளாதாரச் சீரமைவுத் தேவைப்படுகிறது. பொருளாதார நன்மைகளைப் பெரும் முதலாளிகளுக்கும் அதன் வீழ்ச்சிகளைப் பொது மக்களுக்கும் பகிர்ந்தளித்துவிட்டு அதை மேற்பார்வை செய்யும் இடைத்தரகராக மட்டுமே ஒரு அரசு என்பது சுருங்கிவிடுதல் கூடாது. உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்காத மூலதன குவிப்பிற்கு எதிரான ஒரு பொருளாதாரக் கொள்கையே அரசையும் அதன் மக்களையும் பாதுகாப்பதாக அமையும். ஆனால் மாநிலத்தில் தொடர்ந்து கோலோச்சிய இரு திராவிடக் கட்சிகளாலும் இனி அப்படியான சமூகநலன் மிக்கக் கொள்கைகளை வகுப்பதற்கும் அதில் பயணிப்பதற்கும் இயலாதென்பது வெளிப்படையாகியுள்ளது. இயல்பாகவே இத்தகைய சலிப்பினால் தோன்றும் மாற்று அரசியலுக்கான ஏக்கம் பாஜகவிற்கே சாதகமாக அமையும் வகையில் களச்சூழலானது கனிந்து கொண்டிருக்கிறது. வலதுசாரிய அலையைத் தனது வியூகங்களால் எதிர்கொள்ள முடியாமல் எப்படிக் காங்கிரஸ் தள்ளாடி இன்று பாதாளத்தில் வீழ்ந்திருக்கிறதோ திமுகவும் அப்படியான ஒரு நசிவைச் சந்திப்பதற்கான நிமித்தங்களாகத்தான் இச்செயல்பாடுகளைப் பார்க்கவேண்டியுள்ளது.
கனடா தேசத்தின் வாழும் கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர், சுற்றுச்சூழல் இயக்கவாதி என பன்முக ஆளுமையாக இருப்பவர் மார்கரெட் அட்வுட். எனவே பன்மைத்துவ இலக்கிய வகைமைகளில் இயங்கிக்கொண்டிருப்பதையும் அவரது சாதனையாகக் குறிப்பிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கியவகைமைகளில் ஒரு படைப்பாளர் சிறப்பாக இயங்குவது சற்றே அரிது என்று சொல்லலாம். அதிலும் சரிசமமான சரளம், ஆழம், கூர்மையான பார்வைக்கோணம் மற்றும் விவாதங்களைத் தாங்கி எடுத்துச் செல்லுதல் ஆகிய அம்சங்களில் அட்வுடுக்கு நிகர் அவரே. கவிதை எழுதத் தொடங்கி ஒன்றிரண்டு தொகுதிகள் வெளிவந்தவுடன் புனைகதையாளர் என்ற புரமோஷன் பெற்றுவிடும் பழக்கத்தை கனடிய இலக்கியவாதிகள் பின்பற்றுவதில்லை.
ஒரு கலாச்சார தேசீயவாதி, மற்றும் பெண்ணிய இயக்கவாதி என்பதோடு அவரை ஒரு கலாச்சார மானுடவியலாளர் என்றும் அழைக்க முடியும். சிலருக்கு அவர் ஒரு அரைகுறை மார்க்சீயவாதியாகவும் இன்னும் சிலருக்கு ஒரு இருத்தலியல் பினாமினாலோஜிஸ்ட்டாகவும் தோன்றி இருக்கிறார். அவரது ஈடுபாடுகள் எந்த அளவுக்கு நவீனத்தன்மை கொண்டவராய் அவரை ஆக்குகின்றனவோ அதே அளவுக்கு ஆதிகாலத்தன்மை கொண்டவராயும் ஆக்குகின்றன.
பகடிக்கும் கிண்டலுக்கும் அட்வுடின் எழுத்துகளில் நிறைய இடமிருக்கிறது. ஒருவித மௌடீகம் அவர் பெரும்பான்மைக் கவிதைகளைச் சுற்றி வளையமிட்டிருக்கிறது. பலவித பிரதிபலிப்புகளை தன் கவிதைகளில் அவர் ஒன்றிணைக்கிறார். தண்ணீர், கண்ணாடி, புகைப்படங்கள், காமிராக்கள் இன்ன பிற. சூழப்பட்ட அமைப்புகளான அறைகள், வீடுகள், கதவுகள் போன்ற அமைப்புகள் படிமங்களாகிக் குறியீடுகளாக மாறுகின்றன. கண்ணாடிகளை ஒரு தந்திரமாக அன்றி ஒரு தொழில்நுட்பமாய் மாற்றுகிறார். அவரது கவித்துவ அணுகுமுறையில் இருமைத் தன்மைகளை இரட்டைத் தலைக் கவிதைகள் என்ற தொடரில் காண முடியும். அவரது கவிதைகளில் ஒரே சமயத்தில் உள்ளும் புறமும் தெரியும்படியான வெளிப்பாடுகள் நிறைந்துள்ளன. அற்புதமானவைகளும் யதார்த்தமானவைகளும், பிசாசுத்தன்மையானவையும் ஸ்தூலத்தன்மை கொண்டவையும் ஆன இருமைகள் ஒரே கண்ணாடியின் இருபக்கப் பிரதிபலிப்புகளாகும் சாத்தியத்தை நோக்கி எழுதப்பட்டவற்றிருக்கின்றன. சமரசமின்றி பாப் கலாச்சாரத்தின் மொழியையும் கொச்சை மொழியின் பயன்பாடுகளையும் இலக்கிய மொழிக்கு இடையில் அவரால் பயன்படுத்த முடியும். ஒருவிதமான பிசாசுத் தன்மையான அம்சங்களை தி ஜர்னல்ஸ் ஆஃப் சூசன்னா மூடி என்ற கவிதைத் தொகுதியில் சித்தரிக்கிறார்.
இக்கவிதைகளின் ஊடாய் படைப்பாளி தனது அந்நியமாக்கப்பட்ட வயோதிகத்தையும் மரணத்தையும் மரணத்தின் அப்பாலையும் காண முயல்கிறார். A Bus Along St.Clair : December என்ற கவிதையில் அவர் தன்னை ஒரு பேய்பிடித்த வயோதிகப் பெண்ணாக சித்தரிப்பது ஆச்சரியமளிப்பதில்லை :
நான்தான் அந்த வயோதிகப் பெண் உனக்கு எதிரில் பேருந்தில் அமர்ந்திருப்பவள் அவளது தோள்கள் ஒரு சால்வையைப் போல் இழுக்கப்பட்டுள்ளன அவளது கண்களிலிருந்து வருகின்றன ரகசிய தொப்பி ஊசிகள் சுவர்களை சிதைத்தழித்தபடி.
கொதிக் (Gothic) வகையான தொல்கதைகளை அவரால் மிக இயல்பாகத் தன் கவிதைகளினுள் கொணர முடிகிறது: நடனமாடும் மணல் ஈக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு கடற்கரையில் வந்து சேர்தல், காட்டினுள் செல்லும் மர்மமான வழிப்பாதை, மூகமூடி அணிந்த மனிதர்கள், நாசம் விளைவிக்கும் தாவரங்கள் மற்றும் பிற விலங்குகள். தப்பி ஓடிச் செல்லும் ஒரு இளம்பெண், பேய்பிடித்த கிராமப்புறங்கள், அரக்கர்கள் நிறைந்த கோட்டைகள் என இந்தச் சித்திரங்கள் மேலும் விரிகின்றன. அட்வுடின் கவிதைகளில் புறவய உலகங்கள் அகவய உலகங்களால் இழுவைக்குள்ளாகின்றன.
அவரது பிரான்கன்ஸ்டீன் பற்றிய கவிதையை விவரிக்க மேரி ஷெல்லியின் (ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் மனைவி) பிரான்கன்ஸ்டீன்(1818) மற்றும் போர்ஹெஸ்ஸின் “ட்லோன், உக்பார், ஓர்பிஸ், டெர்ஷியஸ்” (Tlon, Ucbar, Orbis, Tertius) ஆகிய படைப்புகளை நினைவு கொள்வது உதவியாக இருக்கும். பிரதி எடுத்தல் மற்றும் மறுபிரதியாக்கல் ஆகிய படிமங்கள் போர்ஹெஸ்ஸின் ட்லோன் கதையில் தொழிற்படுகிறது. அட்வுடின் இன்னொரு கொதிக் கவிதையான Speeches for Dr Frankenstein என்ற கவிதையில் ஒரு தீர்மானகரமான மொழி பயன்பாட்டுக்கு உள்ளாகிறது: அது படைத்தல் (மனிதன்) குறித்தானது மட்டுமல்ல - அரைகுறையான படைத்தல் மற்றும் பிறப்பு - இறப்பு பற்றிய குழப்பமாக மாற்றம் அடைகிறது :
... ... ... ... ...
நிபுணத்துவத்தால் நான் பைத்தியமானேன் நான் உன்னைப் பூரணமாக்கினேன் இதற்குப் பதிலாக நான் தேர்ந்திருக்கவேண்டும் உன்னை ஒரு சிறிய விதையாகச் சுருட்ட நம்பிக்கைமிக்க தொடக்கங்கள் இப்பொழுது நான் இந்த தட்டுநிறையும் விளைவுகளால் பின்வாங்குகிறேன் மையம் மற்றும் புறத்தோல் இடைப்பட்ட தசை ஏற்கனவே அழுகத் தொடங்கிவிட்டது நான் நிற்கிறேன் அழிக்கப்பட்ட ஓர் கடவுளின் முன்னால் தசைநார்களின் கூளம் விரல்கணுக்கள் மற்றும் கச்சாவான தசைக்கட்டுக்கள் இந்தப் பணி எனதுதான் என்றறிந்தும் எப்படி உன்னை என்னால் நேசிக்க முடியும்?
... ... ... ... ...
Speeches for Dr Frankenstein
மாயாஜாலம் அல்லது பில்லிசூனியம் இவை சம்பந்தப்படாத அட்வுடின் கவிதைகள் மிகக் குறைவு. குலக்குறிச் சின்னங்களும் விலங்குகளும் அவரது கவிதைகளில் மனிதர்கள் அளவுக்கே முக்கியத்துவம் பெறுபவை. வடஅமெரிக்க பழங்குடிக் கலாச்சாரங்களிலிருந்து (அல்கோன்க்கியன், க்ரீ, ஒட்டாவா, மற்றும் ஓஜிப்வா) அவரது குறியீடுகள் வெளிப்படுகின்றன. மாயாஜாலத்தை அட்வுட் ஒருவகையான அரசியல் விமர்சனமாகப் பயன்படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. விலங்குகளும் குலக்குறிச் சின்னங்களும் கண்காணா உலகம் அளவுக்கே அட்வுட்டுக்கு ஈர்ப்புடையவையாக இருக்கின்றன. தொன்மங்களுக்கும் (எடுத்துக்காட்டாக ஆர்பியஸ், பெர்சிபோன், சர்சி) தேவதை கதைகளுக்கும் தேவையான அளவு இடம் அட்வுடின் கவிதைகளில் உள்ளன. அதேபோல வரலாற்று நாயகர்களான கேப்டன் குக் (டாக்டர் விக்டர் பிரான்கன்ஸ்டீன் (மேரி ஷெல்லியின் நாவலிலிருந்து) போன்றவர்கள் இன்றைய கிண்டல் கலந்த விமர்சனப் பார்வையில் தங்களின் எதிர்மறை நிலையை விவரிக்கின்றனர்.
The Handmaid's Tale என்ற நாவலை 1984ஆம் ஆண்டு மேற்கு பெர்லினில் வசிக்கும்போது ஒரு பழைய வாடகை அச்சு இயந்திரத்தில் எழுதினார் என்பது ஈடுபாடு கொள்ளத்தக்க தகவல். குறிப்பிட்ட சூழல், தனி அறை, குறிப்பிட்ட மேஜை போன்ற சில படைப்பாளர்கள் கோரும் விசேஷமான தனித்துவ எழுதுமிடங்களைத் தேடாத ஒரு எழுத்தாளர் அட்வுட்.
இவரது பிரசித்தம் பெற்ற பல நாவல்கள் காரணமாக இவரை ஒரு புதின எழுத்தாளர் என்று மட்டுமே அடையாளப்படுத்துபவர்களும் உண்டு. 18 கவிதைத் தொகுதிகள், 18 நாவல்கள் மற்றும் 11 புதினம் சாரா நூல்களை இதுவரை எழுதி இருக்கிறார். இரண்டு முறை புக்கர் விருதுகள், கனடாவின் கவர்னர் ஜெனரல் விருது மற்றும் ஆர்தர் சி.கிளார்க் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
புகழ்பெற்றவராய் இருப்பது பற்றி ஏஏஆர்ப்பி (AARP)மின் இதழில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது கனடியர்கள் புகழை ஐயத்திற்கிடமான விதத்தில் பார்ப்பதாகவும் அது சற்றே சுவைக்கேடானது என்றும் பதில் அளித்தார் அட்வுட். அமெரிக்கர்களோடு ஒப்பிட்டால் கனடியர்கள் புகழுக்கு வித்தியாசமான மதிப்புதான் தருகிறார்கள் என்றும் கூறினார்:
Hugh Delhanty : What impact has fame had on you?
Margaret Atwood : I am a Canadian, so we take a dubious view of fame. We think it's in slightly bad taste. If I were American, it would be different. Americans love fame. I just soft-pedal it here because it would be considered in slightly bad taste to go around acting as if you're famous.
மார்கரெட் அட்வுட்டின் தந்தை பூச்சி ஆராய்ச்சி இயலில் ஈடுபட்டிருந்தார். அட்வுட் கனடாவின் ஒட்டாவா என்ற இடத்தில் பிறந்தார். அவர் ஒரு சிறந்த சிறுகதையாளர் என்பதும் கவனிக்கத்தக்கது.
டொரென்ட்டோ பல்கலைக்கழகத்தில் படித்தபோது அவருக்கு பேராசிரியராக சிறப்பு பெற்ற விமர்சனக் கோட்பாட்டாளரான நார்த்ரோப் பிரை வகுப்பெடுத்திருக்கிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ரேட்கிளிப் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
ஜிம் போல்க் என்ற அமெரிக்க எழுத்தாளரை அட்வுட் 1968இல் மணந்தார். ஆனால் விரைவிலேயே (1973) அவரிமிருந்து விவாகரத்து பெற்றார். பிறகு கிரேம் கிப்ஸன் என்ற சக கனடா நாவலாசிரியருடன் இணைந்து வாழ்ந்தார். கிப்ஸனின் இறப்பு(2019)வரை அட்வுட் அவருடன் இணைந்த வாழ்க்கை நடத்தினார்.
அட்வுட் எழுதி வெளியாகிய முதல் கவிதைத்தொகுதி 1961இல் வெளிவந்தது. இதற்கு டபுள் பெர்ஸிபோன் என்று தலைப்பிட்டிருந்தார். எழுத்து வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டே அவர் பிரிட்டீஷ் கொலம்பியப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
அட்வுட்டின் பல வகைமையான படைப்புகளில் மிகத் தொடக்கத்திலிருந்தே பெண்ணிய அக்கறைகள் இருந்திருப்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 1970களில் டொரென்ட்டோவின் யார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1972-73ஆம் ஆண்டுகளில் டொரென்ட்டோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு எழுத்தாளராகவும் இருந்தார். இதற்கடுத்த ஒரு தசாப்தத்தில் ஆறு கவிதைத் தொகுப்புகளை அட்வுட் வெளியிட்டார்.
சூசன்னா மூடியின் குறிப்பேடுகள் (1970) குறிப்பிடத்தக்க வகையில் அதே பெயர் கொண்ட கனடிய தொடக்க கால பெண் எழுத்தாளரின் பிம்பத்தை மனதில் இருத்தி அட்வுட் எழுதியது என்பதை நினைவுகொள்வது அவசியம். சூசன்னா மூடியின் குரலையே கவிதை விவரிப்பில் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பேடுகள் (அ) டயரி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதே காலகட்டத்தில் மூன்று நாவல்களையும் வெளியிட்டார். 1980களில் அட்வுடின் இலக்கிய மதிப்பீடு உயர்ந்தது. 1990களில் அவரது இலக்கிய நற்பெயர் கூடுதல் வலுப்பெற்றது. 2016களில் ஜானி கிறிஸ்துமஸ் என்ற சித்திரம் வரைபவருடன் இணைந்து ஏஞ்சல் கேட்பேர்ட் (Angel Catbird) என்ற சூப்பர் ஹீரோ காமிக் சித்திரத் தொடரை எழுதத் தொடங்கினார். இந்தப் படைப்புகளை ‘ஸ்பெக்கு லேட்டிவ் புனை கதை’ (Speculative Fiction) என்றும் விமர்சகர்கள் வகைப்படுத்த முயன்றனர். இந்த நூற்றாண்டில் ஸ்பெக்குலேட்டிவ் சிறுகதைகளை எழுதிய மற்றொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ.
பத்து ஆண்டு கால இடைவெளிக்குப் பின் 2020இல் அட்வுட் வெளியிட்ட கவிதைத் தொகுதியான டியர்லி (Dearly) வயோதிகம், வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து தியானித்தல் போன்ற அம்சங்களைக்கொண்ட கவிதைகள் அடங்கியது. பிரதான கவிதையான ‘டியர்லி’ கார்டியன் என்ற செய்தித்தாளிலும் வெளியிடப்பட்டது. தவிர அந்த செய்தித்தாளின் வலைத்தளத்தில் அட்வுட் அந்தக் கவிதையை வாசிக்கவும் செய்தார். இதில் இடம் பெறும் கவிதைகளிலும் தொன்மம்சார் பாத்திரங்களின் நவீனமயமாக்கப்பட்ட குரல்களைக் கேட்க முடியும். இதில் ரில்கே தொடர்பான கவிதை ஒன்றும் ஐரிஷ் கவிஞர் யேட்ஸ் பற்றிய கவிதை ஒன்றும் உள்ளன. “மொழிபெயர்ப்புக் கருத்தரங்கு” (At the Translation Conference (Dearly)) என்ற கவிதை இன்று மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் அனைவரும் படிக்கவேண்டிய கவிதை. தவிர பாலுறவு குறித்த மிக வெளிப்படையான சிந்தனைகளை கவித்துவமான முறையில் விவாதமாக்கி இருக்கிறார்.
கனடிய அடையாளம் குறித்த கோட்பாடுகள் பற்றி அட்வுட் குறிப்பிடத்தக்க கட்டுரைகளை எழுதினார். இது மற்றும் கனடிய இலக்கியம் குறித்த இலக்கிய விமர்சனமாக அமைந்த அட்வுடின் பிரதான நூலாக அமைவது Survival : A Thematic Guide to Canadian Literature. இந்த நூலில் விமர்சகர் நார்த்ரோப் பிரை (Northrop Frye)யின் பாதிப்புகளை காண முடிகிறது.
பெண்ணியவாதி என்ற முத்திரையை அட்வுட் விருப்பமின்றி ஒப்புக்கொண்டாலும் அவரது படைப்புகள் பெண்ணிய இலக்கிய விமர்சகர்கள் ஈடுபாடு கொள்ளத் தக்கவையாக இருக்கின்றன. எடிபில் உமன் (Edible Woman) என்ற ஸர்ரியல் தன்மையான நாவலில் தொடங்கி அட்வுட் அழுத்தமாகக் கூறினார்:
“நான் அதை பெண்ணியம் என்று கருதவில்லை. நான் அதை சமூக யதார்த்தவியல் என்றுதான் கருதுகிறேன்’’ என்றார். ஆனால் அட்வுடின் நிராகரிப்புக்கு மிஞ்சி பாலியல் அரசியல், தொன்மங்களின் பயன்பாடு, தேவதைக் கதைகளின் பயன்பாடு போன்றவற்றைக் கொண்டு அவரது எல்லாப் படைப்புகளையும் பெண்ணிய நோக்கிலேயே சில விமர்சகர்கள் அணுகுகின்றனர். அட்வுட் விவரிக்கும் தி ஜர்னல் ஆப் சூசன்னா மூடி கொதிக்தன்மை கொண்டதாய் இருக்கிறது. சில படைப்புகளில் யதார்த்தத்தை விட புனைவின் அதிகாரம் விஞ்சிவிடுகிறது. சாதாரணத்துவத்தை விநோதம் ஆக்கிரமிக்கிறது. இதன் அடிப்படை அலகு பயம் என்ற அம்சமாக இருக்கலாம் என்று மோயர் போன்ற சில விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கு மோயர் தரும் பெயர் ‘மனோவியல்சார் கற்பனை’. பெண்ணியம் என்ற சொல்லின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை அளிப்பதால்தான் தன்னால் அந்த லேபிளை ஏற்க முடியவில்லை என்று கூறிய அட்வுட் அது குறித்த பல கேள்விகளை எழுப்பினார்:
“I always want to know what people mean by that word [feminism]. Some people mean it quite negatively, other people mean it very positively, some people mean it in a broad sense, other people mean it in a specific sense. Therefore, in order to answer the question, you have to ask the person what they mean.
அட்வுட் குழந்தைகளுக்கான புத்தகங்களிலும் அவர்களுக்கான டிவி தொடர்களிலும் ஈடுபாடு உள்ளவர்.
அந்த தேசத்தில் விலங்குகள் மனித முகங்களைக் கொண்டிருக்கின்றன ஆசாரப் பூனைகள் தெருக்களை உரிமைகொண்டிருக்க குள்ள நரி ஓடுகிறது பணிவுடன் பூமிக்கு வேட்டைக்காரர்கள் அதைச் சுற்றி இருக்க அவர்தம் ஓவியத்திரை நடத்தை முறையில் நிலைப்பட்டிருக்க காளை குருதியால் பூத்தையல் செய்யப்பட்டு மேலும் ட்ரம்பெட்டுகள் ஒலிக்க சீரிய மரணம் அளிக்கப்பட்டு அதன் மேல் பெயர் வம்சாவளிசார் பிராண்டுடன் முத்திரை இடப்பட்டிருக்கிறது காரணம் (வாள் அதன் நெஞ்சில் இருக்க அதன் நீலநிற வாயில் இருந்த பற்கள் அது மணலில் உருண்டபோது மனிதத்தன்மையுடன் இருந்தது) நிஜத்தில் அவன் ஒரு மனிதன்தான் கட்டுக்கதைகளால் அடர்த்தியாக்கப்பட்ட காடுகளில் ஓநாய்களும் கூட அவற்றின் எதிரொலிக்கும் உரையாடல்களை நடத்துகின்றன இந்த தேசத்தில் விலங்குகளுக்கு விலங்குகளின் முகங்கள் உள்ளன அவற்றின் கண்கள் காரின் முகப்புவிளக்கு ஒளியில் ஒரு முறை மின்னி மறைகின்றன அவற்றின் மரணம் நேர்த்தியானதல்ல அவற்றுக்கு எவரின் முகங்களும் இல்லை.
ஒரு மேஜையின் மையத்தில் ஆரஞ்சு இது ஒரு ஆரஞ்சு என்று சொல்லியபடி சற்று தூரத்தில் அதைச் சுற்றி நடப்பது போதுமானதல்ல நமக்கு சம்பந்தம் இல்லை வேறெதுவும் கிடையாது: அதை விடு தனியே அதை நான் என் கைகளால் எடுக்க விரும்புகிறேன் நான் அதன் தோலை உரித்தெடுக்க விரும்புகிறேன் வெறும் ஆரஞ்சு என்பதை விட எனக்கு இன்னும் அதிகமாக சொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் அது சொல்லவேண்டியது சகலமும் எனக்குச் சொல்லப்படவேண்டுமென விரும்புகிறேன் மேலும், நீ, எதிரில் மேஜைக்கு அப்பால் சிறிது தொலைவில் அமர்ந்திருக்கிறாய் உனது புன்னகை அடக்கமாக மேலும் அந்த ஆரஞ்சைப் போல சூரிய ஒளியில்: மௌனமாய் இப்போது உனது மௌனம் மாத்திரம் எனக்குப் போதுமானதல்ல என்னவிதமான மனநிறைவில் உனது கைகளை ஒன்றாக மடித்து வைத்திருந்தபோதிலும் சூரிய ஒளியில் உன்னால் சொல்ல முடியக்கூடிய எது வேண்டுமானலும் எனக்கு வேண்டும் உனது வேறுபட்ட குழந்தைப் பிராயங்கள் இலக்கற்ற பயணங்கள் உனது காதல்கள், உனது ஒருங்கிணைந்த எலும்புகள் உனது நிற்கும் நிலைகள் உனது பொய்கள் இந்த ஆரஞ்சு மௌனங்கள் (சூரிய ஒளி மற்றும் மறைவுண்ட புன்னகை) நீ சொல்லும்படியாக உன்னைத் திருக விரும்ப வைக்கின்றன இப்பொழுது நான் ஒரு அக்ரூட்டுக் கொட்டையைப் போல் உன் கபாலத்தை உடைக்கப் போகிறேன் உன்னைப் பேச வைக்க அதை ஒரு பூசணிக்காயைப் போலப் பிளக்கப் போகிறேன் அல்லது உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கு ஆனால் அமைதியாக நான் ஆரஞ்சை தேவையான கவனத்துடன் எடுத்து மென்மையாகப் பிடித்துக்கொண்டிருந்தேன் என்றால் நான் காணலாம் ஒரு முட்டை ஒரு சூரியன் ஒரு ஆரஞ்சுநிற நிலா ஒருவேளை ஒரு கபாலம் சகல சக்திகளின் மையம் என் கையில் ஓய்வுகொள்கிறது நான் அது எப்படி இருக்கவேண்டுமென விரும்புகிறேனோ அப்படியெல்லாம் அதை மாற்ற முடியும் மேலும் நீ, மனிதன், ஆரஞ்சு மதியம், காதலன், எனக்கு அப்பால் நீ எங்கே அமர்ந்தாலும் (மேஜைகள், ரயில்கள், பேருந்துகள்) நான் அமைதியாக நெடுநேரம் கவனித்தால் இறுதியாக, நீ சொல்வாய் (ஒருவேளை பேசாமல் கூட) (அங்கே மலைகள் உண்டு உன் கபாலத்தில் தோட்டம் மற்றும் பெருங்குழப்பம், சமுத்திரம் மற்றும் சூரைக்காற்று ; அறைகளின் சில மூலைகள் கொள்ளுப் பாட்டிகளின் உருவச்சித்திரங்கள் குறிப்பிட்ட நிறத்தில் உள்ள திரைச்சீலைகள் உனது பாலைவனங்கள்; உனது தனிநபர் டைனோசர்கள்; முதல் பெண்) எல்லாவற்றையும் நான் அறியவேண்டும் எனக்குச் சொல் எல்லாவற்றையும் அவை இருந்தவிதத்தில் ஆரம்பத்திலிருந்து.
இரண்டு குரல்கள் மாறி மாறி என் கண்களைப் பயன்படுத்தின ஒன்றுக்கு நீர்வர்ணங்களால் தீட்டப்பட்ட நடத்தை முறை இருந்தது மலைகள் அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி பேசும்போது தணிந்த தொனியைப் பயன்படுத்திற்று மேம்படுத்தும் கவிதை வரிகளை உருவாக்கியது மேலும் வறியவர் மீது உணர்ச்சிகளை செலவிட்டது மற்ற குரலுக்கு வேறு ஞானம் இருந்தது ஆண்கள் எப்போதும் வியர்க்கின்றனர் என்பது பற்றியும் மேலும் அடிக்கடி குடிக்கின்றனர் மற்றும் பன்றிகள் பன்றிகள்தான் ஆனால் கண்டிப்பாக உண்ணப்பட வேண்டும் எப்படியும் பிறவாத குழந்தைகள் உடலில் காயங்களைப் போல சீழ்பிடிக்கின்றனர் மேலும் கொசுக்களைப் பற்றி எதையும் செய்வதற்கில்லை என்பது பற்றியும் ஒன்று எனது நீர்கோர்த்து உருத்திரிந்து வெளுக்கும் கண்களின் வழியாகப் செந்நிற இலைகளைப் பார்த்தது பருவகாலங்களின் சடங்குகள் மற்றும் ஆறுகளை மற்றது கண்டுபிடித்தது இனிப்புப் பட்டாணிகளுக்கு மத்தியில் அரைகுறையாய்ப் புதைக்கப்பட்ட புழுக்களுடன் ஆரவாரித்த ஒரு இறந்த நாயை.
பெரும்பான்மை விலங்குகள் பிற விலங்குகளைக் கனவு காண்கின்றன அவற்றின் வகையைப் பொருத்து (சில வகை எலிகள் மற்றும் கொறிக்கும் சிறு விலங்குகள் பீதிக்கனவுகளில் ஐந்து கூர்நகக்கால்கள் இறங்கும் மாபெரும் அடர்சிவப்பு உருவத்தைக் காண்கின்றன) அகழ் எலிகள் இருட்டைக் கனவு காண்கின்றன மென்மையான அகழ் எலிகளின் வாசனைகளை தவளைகள் பச்சை மற்றும் பொன்னிறத்தில் லில்லி மலர்களுக்கிடையே நனைந்த சூரியன்கள் போல் மினுங்கும் தவளைகளை சிவப்பு மற்றும் கருப்பு வரிகள் கொண்ட மீன்கள் அவற்றின் கண்கள் திறந்திருக்க அவற்றுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான கனவுகளின் தற்காப்பை, தாக்குதலை அர்த்தம் நிறைந்த அமைப்புகள் பறவைகள் பாட்டிசைத்தலினால் சூழப்பட்ட எல்லைகளைக் கனவு காண்கின்றன சிலசமயங்களில் விலங்குகள் தீவினையைக் கனவு காண்கின்றன சோப்பு மற்றும் உலோக வடிவில் ஆனால் பெரும்பாலும் விலங்குகள் பிற விலங்குகளையே கனவு காண்கின்றன அங்கே விதிவிலக்குகள் உள்ளன சாலை ஓர விலங்குக்காட்சி சாலையில் உள்ள வெள்ளிநிற ஓநாய் குழிபறித்து வெளித்தள்ளவும் கழுத்துக்கள் கடிபட்ட ஓநாய்க் குட்டிகளையும் ரயில் நிலையம் அருகில் கூண்டில் அடைபட்ட ஆர்மடில்லோ நாள் முழுக்க ஓடுகிறது எட்டாம் எண்களின் வடிவில் அதன் குட்டிப் பன்றிக் கால்கள் படபடக்க அது இனியும் கனவு காண்பதில்லை ஆனால் விழித்திருக்கையில் பைத்தியமாக இருக்கிறது புனித கேத்தரின் சாலையில் விலங்குவிற்பனைக் கடை ஜன்னலில் கொண்டையுடன், ராஜரீகக் கண்களுடன் தன் தண்ணீர்ப் பாத்திரம் மற்றும் மரத்தூள் நாட்டை ஆளும் உடும்பு மரத்தூளைக் கனவு காண்கிறது.
இந்த இடத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளாதிருப்பது நல்லது இந்த இடம் உங்களை வாசஞ் செய்துவிடும் இந்த இடம் இறுதியாக உங்களைத் தோற்கடிக்கும் இங்கே ஏன் என்ற சொல் சுருண்டு தன்னைத் தானே காலி செய்து கொள்கிறது. இது பஞ்சம்.
இதுபற்றி உங்களால் எந்தக் கவிதையும் எழுத முடியாது மணற்பள்ளங்கள் அங்கே நிறைய பேர் புதைக்கப்பட்டு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் தாங்கவொண்ணா வலி அவர்களின் சருமங்களின் மேல் இன்னும் படிந்திருக்கிறது இது சென்ற ஆண்டு நடந்துவிடவில்லை அல்லது நாற்பதாண்டுகளுக்கு முன்னால் ஆனால் சென்ற வாரம். இது நடைபெற்று வந்திருக்கிறது இது நடக்கிறது நாம் பெயரடைகளின் மலர்வளையங்களை அவர்களுக்காக உருவாக்குகிறோம் அவற்றை நாம் உருட்டுமணிகளைப் போல் எண்ணுகிறோம் நாம் அவர்களை புள்ளி விபரங்களாய் மாற்றுகிறோம் மற்றும் இறைவழிபாட்டு முறைகளாக மேலும் இது போன்ற கவிதைகளாக ஆக்குகிறோம் எதுவும் பயனில்லை அவர்கள் அவர்களாகவே இன்னும் இருக்கின்றனர்.
அந்தப் பெண் ஈரமான சிமெண்ட்டுத் தரையில் கிடக்கிறாள் முடிவற்ற வெளிச்சத்தின் கீழ் ஊசி அடையாளங்கள் அவள் கைகளில் போடப்பட்டுள்ளன மூளையைக் கொல்ல மேலும் அவள் வியக்கிறாள் ஏன் சாகிறோம் என அவள் சொன்ன காரணத்தால் அவள் சாகிறாள் அவள் அந்த வார்த்தையின் பொருட்டு இறக்கிறாள் அது அவளது உடல், மௌனமாய் விரல்களின்றி இந்தக் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது.
அது ஒரு அறுவைச் சிகிச்சையை ஒத்திருக்கிறது ஆனால் அது இல்லை அல்லது விரித்து வைத்த கால்கள் மற்றும் உறுமல்கள் மற்றும் குருதி இது ஒரு பிரசவமா ஓரளவு அது ஒரு வேலை ஓரளவு அது திறனை வெளிக்காட்டல் ஒரு இசைக் கன்செர்ட்டோவைப் போல அதை மோசமாக செய்ய முடியும் அல்லது சிறப்பாக அவர்கள் தங்களுக்குள் சொல்கிறார்கள் ஓரளவுக்கு அது ஒரு கலை.
இந்த உலகின் தகவல்கள் தெளிவாக கண்ணீரின் ஊடே பார்க்கப்படுகின்றன அப்படியானால் ஏன் அவற்றைச் சொல்லவேண்டும் அப்படியானால் என் கண்களில் ஏதும் கோளாறா? பயந்து பின்வாங்காமல் திரும்பிக்கொள்ளாமல் தெளிவாகப் பார்ப்பது என்பது அவசம் கண்கள் விரிய பசைப்பட்டி ஒட்டப்பட்டு சூரியனிலிருந்து இரண்டு அங்குல தூரத்தில் திறந்திருக்கிறது அப்படியானால் நீங்கள் காண்பது என்ன? அது ஒரு மோசமான கனவா ஒரு பொய்த்தோற்றக் காட்சியா? அது ஒரு ஆழ்பார்வை தரிசனமா? நீங்கள் செவிகொள்வது என்ன? விழிக்கோளத்தின் குறுக்காய் ஒரு சவரக்கத்தி என்பது ஒரு பழைய திரைப்படக் காட்சி அது நிஜமும் கூட சாட்சியமாக இருக்கவேண்டியது கட்டாயம் நீங்கள் செய்யவேண்டியது.
இந்த நாட்டில் நீங்கள் விரும்பியதைச் சொல்லலாம் காரணம் எப்படியும் யாரும் நீங்கள் சொல்வதை செவிகொள்ள மாட்டார்கள் போதுமான அளவு பாதுகாப்பானது இந்த நாட்டில் என்றுமே எழுதப்பட முடியாத கவிதையை எழுத முயற்சி செய்யலாம் எதையும் கண்டுபிடிக்காத எதையும் மன்னிக்காத கவிதையை காரணம் நீங்கள் உங்களை ஒவ்வொரு நாளும் கண்டுபிடித்து மன்னித்துக்கொள்கிறீர்கள் வேறெங்கோ, இந்தக் கவிதை கண்டுபிடிப்பல்ல வேறெங்கோ, இந்தக் கவிதை தைர்யத்தை எடுத்துக்கொள்கிறது வேறெங்கோ, இந்தக் கவிதை கண்டிப்பாக எழுதப்படவேண்டும் காரணம் கவிஞர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர் வேறெங்கோ, இந்தக் கவிதை கண்டிப்பாக எழுதப்படவேண்டும் ஏற்கனவே நீங்கள் இறந்துவிட்டீர் என்பதுபோல மேலும் ஒன்றுமே செய்வதற்கில்லை அல்லது உங்களைக் காப்பாற்ற சொல்லப்பட்டது என்பதுபோல வேறெங்கோ இந்தக் கவிதையை கண்டிப்பாக நீங்கள் எழுதவேண்டும் காரணம் செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை.
நான் அறிந்து கொள்ளும் முன்பே தேசவரைபடங்களுக்கு வர்ணம் கொடுத்தாகிவிட்டது நான் மன்றாடியபோது அரசர்கள் சொன்னார்கள் கண்டுபிடிக்க எதுவும் விடுபட்டிருக்கவில்லை என எப்படியும் நான் கிளம்பிச் சென்றேன் ஆனால் நான் சென்ற இடங்கள் எல்லாவற்றிலும் வரலாற்றாசிரியர்கள் மலர் வளையங்கள் மற்றும் பொய்ப் பற்களால் ஆன பெல்ட்டுகளை அணிந்திருந்தனர் அல்லது பாலைவனங்களில் கற்களால் ஆன நினைவு மேடுகள் மற்றும் உல்லாசப் பயணிகள் இருந்தனர் குகைகளில் கூட மெழுகுவர்த்தி அடித்துண்டுகள் இருந்தன இருளில் விரைந்து கிறுக்கப்பட்ட எழுத்துப் பொறிப்புகள் இருந்தன என்னால் சென்று சேர முடியவில்லை எப்போதும் பெயர்கள் எனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டிருந்தன இப்பொழுது எனக்கு வயதாகிவிட்டது எனக்குத் தெரியும் எனது பிழை அந்த தேச வரைபடங்களை ஒப்புதல் செய்தது கண்கள் களைத்து சோர்ந்த நினைவுச்சின்னங்களை உயர்த்துகின்றன அட்லஸ்களை எரித்து அழியுங்கள் என நான் பூங்கா பெஞ்சுகளிடம் கத்துகிறேன் வெற்றுக் கல்லறைகளைக் கடந்து தெருவின் குறுக்கே வெற்றுப் பதாகையை வீசியபடி திருப்பத்திற்கு அப்பால் புவிப்பரப்பியல் சுத்தமாக்கப்பட்ட புதிய பிரதேசத்தில் அதன் கடற்கரைகளில் அம்புகள் மின்னுகின்றன.
எமது மொழியில் அவன் என்பதற்கும் அவள் என்பதற்கும் சொற்கள் கிடையாது அல்லது அவளது அல்லது அவனது என்பதற்கும் ஒரு பாவாடையையோ அல்லது கழுத்து டையையோ அல்லது அது போன்ற வஸ்து எதையாவது முதல் பக்கத்தில் போட்டுவிட்டால் அது உதவும் வன்புணர்ச்சி விஷயத்தில் வயதை தெரிந்துகொள்வது உதவுகிறது ஒரு குழந்தையா வயது முதிர்ந்தவரா? எனவே நாம் ஒரு தொனியைத் தொடங்கி வைக்கலாம் எமக்கு எதிர்காலத் தொடர் வாக்கியம் இல்லை என்ன நடக்க இருக்கிறதோ அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது ஆனால் நீங்கள் நாளை என்ற ஒரு வார்த்தையை அல்லது புதன்கிழமை என்ற வார்த்தையையோ சேர்க்கலாம் நீங்கள் சொல்வது என்னவென்று நாங்கள் அறிந்துகொள்வோம் இந்த சொற்கள் உண்ணப்படக்கூடிய வஸ்துக்களுக்கானவை உண்ணப்பட முடியாத பொருள்களுக்கு எங்களிடம் எந்த வார்த்தையும் கிடையாது அவற்றுக்கு பெயர் எதற்கு? இது தாவரங்களுக்கும் பறவைகளுக்கும் சபித்தலில் பயன்படுத்தப்படும் காளான்களுக்கும் பொருந்தும் மேஜையின் இந்தப் பக்கத்தில் “இல்லை” என்று பெண்கள் சொல்வதில்லை “இல்லை” என்பதற்கான ஒரு சொல் இருக்கிறது ஆனால் பெண்கள் அதைச் சொல்வதில்லை அது மிகவும் திடீர்த்தன்மை கொண்டதாயிருக்கும் “இல்லை” என்று சொல்வதற்குப் பதிலாக நீங்கள் “ஒருவேளை” என்று சொல்லலாம் பெரும்பாலான சூழ்நிலைகளில் நீங்கள் புரிந்துகொள்ளப்படுவீர்கள் மேஜையின் அந்தப் பக்கத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன இன்னும் பிறக்காதவை, இறந்தவை, உயிருள்ளவை உங்களால் அருந்த முடியக் கூடிய விஷயங்கள் உங்களால் அருந்த முடியாத விஷயங்கள் சொல்லப்பட முடியாத விஷயங்கள் இது ஒரு புது சொல்லா அல்லது பழைய சொல்லா? இது மரபழிந்துவிட்ட ஒன்றா? இது முறைசார்ந்ததா அல்லது பரிச்சயமானதா? எந்த அளவு கோபமான வெறுப்பு கொண்டது? ஒன்றுக்குப் பத்து என்ற அளவிலா? நீங்கள் அதை உருவாக்கினீர்களா? மேஜையின் தூரத்து முடிவில் கதவுக்கு அடுத்து வலதுபக்கத்தில் உள்ளவர்கள் “அபாயங்கள்” பற்றி ஆராய்கின்றனர். அவர்கள் தவறான ஒரு வார்த்தையை மொழிபெயர்த்தால் அவர்கள் கொல்லப்படலாம் அல்லது குறைந்தபட்சம் சிறையில் அடைக்கப்படலாம் அது போன்ற “அபாயங்களுக்கு” எந்தவித பட்டியலும் இல்லை அவர்கள் பிறகு மட்டுமே கண்டுபிடிப்பார்கள் கழுத்து டை பற்றியோ அல்லது பாவாடை பற்றியோ அல்லது அவர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்பது பொருட்டாக ஆகாமல் போகும்போது. அவர்கள் காபி நிலையங்களில் முதுகுகள் சுவர் பக்கம் சாய்ந்திருக்க மூலைகளில் அமர்ந்திருக்கின்றனர் என்ன நடக்கவேண்டுமோ அது ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிறது.
ஒரு நடிகை போல அந்த பளபளப்பு வெளியில் அவள் பவனி வருகிறாள் அவன் தத்ரூபமாகத் தன் போனில் ஒரு ஷார்ட் வீடியோவை எடுக்க பணிக்கப்பட்டிருக்கிறான் ஒரு சில ஒன்மோர்களுக்குப் பின் அவளுக்குத் தெரிந்தது அவன் “ டேக் “ ஓகே செய்யமாட்டானென்று அவனுக்குப் புரிந்தது இது ஒரு பரவசத்தின் “Time Loob” என்று கவனித்துக்கொண்டிருந்த நான் வயிறு எரிய இதை டாலரேட் செய்வது எப்படி என புகைத்துக்கொண்டிருந்தேன் ஒரு மாயாவைச் சாயாவாகக் கருதும் மார்க்கத்திற்கு அந்தர் பல்டியடிக்கலாமா என்றிருந்தேன் அதற்குள் ஹெவியாகப் பசிக்க பட்டினியின் போதெல்லாம் தொந்தியைச் சற்று ஸ்லிம்மாக பாவித்துக்கொண்டு நடக்கும் அந்த ராஜ single -ன் நடையை நினைவு கூர்ந்தேன் நினைவு கூர்ந்தபடியே அங்கிருந்து நடையைக் கட்டினேன்.
ஒரு கலவரமாகி வெடிக்க கூட்டத்தில் என் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய இருவரில் ஒரு வண்டியோட்டி அடிபட்ட எனக்குத் தண்ணீர் கொடுக்கிறான் முதலுதவி செய்கிறான் ரத்தம் வடியும் வண்டியோட்டியான எனை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு எல்லா வண்டி கூரை மீதும் தாவித் தாவித் தாவித் தாவி ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான் ஒரு பாதசாரி. ஏதோ வீழ்த்தப்பட்டவன் போல படுத்துக் கிடந்தேன் சரியில்லாத மனது எதிலிருந்தோ சற்று மீட்கச் சொல்கிறது இரண்டு தலையணை வைத்துப் படுத்தேன் அதுவும் போதாதென கைகளையும் தலைக்கு வைத்துப் படுத்தேன் மீட்பில் பலனேதுமில்லை பிறகொரு அமைதி பெரிதாக நினைத்துக்கொள்ள ஒன்றுமில்லை என்றதும் படுத்திருந்த வாக்கிலேயே என் முன் நானே கால் மேல் கால் போட்டேன்.
இவ்வாறாக எங்கள் ஊரில் மூன்று குளங்கள் இருந்தன பீச்செடிக் குளம் (பூச்செடிக் குளம்) எல்லோரும் குளிக்கும் பகலில் நேரெதிர் திசையில் கொட்டாங்குச்சிக்குள் மண்புழுக்கள் நிமிண்டிக்கொண்டிருக்கின்றன தொண்டைக்குழிக்குள் முள் முங்கி முங்கி எழுகிறது தக்கை.
சாணிக்கெண்டைகள் நீந்தித் திளைக்கின்றன வெள்ளியுடலை வெய்யிலில் காட்டி மின்னுகின்றன பாடப்புத்தகங்களைக் காற்றுப் புரட்ட அன்சாரி அடியாழத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான் வாப்பாவும் வும்மாவும் அழுதபடி கரையில் காத்திருக்கிறார்கள்.
சிறுவர்கள் காத்திருக்கிறார்கள் படர்ந்த காட்டாமணக்கு தலைநீட்டும் பாம்பு குறிதவறாத அடி காலத்தே புரள்கிறது வாலைப்பிடித்துக் கரையில் வீச இறந்துவிட்டது குளம்.
இரண்டு பேர் இருக்கையில் இடது ஓரம் அமர்ந்தபடி சுமாரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் பேருந்தின் வலது ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கிறாள் பேரணி மாபெரும் எதிர்ப்பு அரசியலை மதவாதம் என அட்சரங்கள் சட்டகம் சட்டகமாக பின்னோக்கி நகர்வதை நேராக்கி விளங்கிக்கொள்கிறாள் உஷ்ணம் தணிக்க நொங்கு சர்பத் அருந்தும் வாலிபனைக் கடக்கையில் அடித்தொண்டை வறட்சியை எச்சில் விழுங்கி சமாளிக்கிறாள் விட்டு விட்டு காக்கிக்குயில் சீட்டியடிக்கையில் தென்னைகள் சூழ்ந்த தாமரைக்குளத்தில் மூழ்கியெழுந்து ஜன்னல் காற்றில் கேசத்தை உலர்த்துகிறாள் ஒவ்வொரு நிறுத்தமாக நின்று ஊர்ந்து நின்று போகும் இந்த சர்க்குலர் பஸ் என்றைக்காவது பேரிளம் ஜங்ஷனிலிருந்து பேதையூருக்கு சென்றுவிடாதா என அனுதினமும் ஏறியிறங்கி ஏறியிறங்கிச் சலிக்கிறாள் நாராயணீ.
உறக்கம் சூழ் அந்தியைக் கைவிட்டுவிட்டு பகலைப் பூசிக்கொள்கிறேன் நேரங்களின் அழியாட்டம் அனுதின பட்சணமாய் ஊட்டந்தர அதிகாலையின் மழை மணத்தை இருத்திக்கொள்கிறேன் இருளின் வாசத்தில் வாழும் ஒளி நானானதும் கவிகையிலிருந்து நழுவும் அருவிபோல் மனதிலிருந்து வீழ்கிறேன் என்னை ஏந்திக்கொள்ளவெனப் பனி மேகங்கள் மடி விரிக்கின்றன நாளையின் ஆசைகளும் ஏக்கங்களும் இக்கணமே நிறைவுற்றதாய்க் கனா செய்து நிறைவுக் காட்சியின் ஒவ்வொரு அசைவையும் அம்மேகக் குடிலில் அமர்ந்து வடிவமைத்திருக்கிறேன் அங்கே நான் இறையாகக் கீழ்மைகொல் பதியாகத் தேவதைகளை நிராகரிக்கும் திமிரனாக ஒற்றை உலகரசின் அதிபதியாய் வீற்றிருக்கிறேன் விழிப்பில் அகப்படும் உருவை எடைப் போடவரும் ஏமான்களே ஒவ்வொரு இமையசைவிற்கும் புதுவுலகைப் படைப்பவனின் கனாவை நியாந்தீர்க்குமளவு உங்களுக்குக்கண்கள் உண்டா என்ன!
வாதப் பிரதிவாதங்களில் சிறக்கவில்லை மீட்பர் வேடம் தரிக்கவில்லை புத்தம் புரிதலுக்கான சாளரமென அண்டை கரை தேடி நீந்தவில்லை தெளித்துவிடப்படும் நீரிலே நனையத் தெரிந்திருந்தது ஏரணக் கேள்விகளை ஒதுக்கிவிட்டிருந்த சரணாகதியில்தான் எவ்வளவு சுகம் மிச்சமிருந்தது தாள் பணிந்த திரை அழிக்கப்பட்டதும் வனாந்திர வாசியாவேனென இம்மிகூட நினைக்கவில்லை இருந்ததோ இல்லையோ முள் குடையும் சிலாம்பைத் தொலைத்தவன், எப்படி அழாதிருப்பது.
அன்புடையீர் வணக்கம்
சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கும் எனக்குமிடையே ஒரு பஞ்சாயத்துமில்லை. அவருக்கு நான் எவ்விதமான பாலியல் வல்லாங்கும் செய்யவில்லை. பால் புதுமையினர் குறித்த ஓர் உரையாடல், வலுத்த வாக்குவாதமாகி அதன் உக்கிரம் தாளாது, சதீஷ் இரண்டாயிரத்துப் பத்தொன்பதில் முகநூல் பதிவொன்றை எழுதி இருந்தார். மன உளைச்சலில் நிதானம் தப்பி எழுதிய பதிவென்று அவரே பின்பதை அழித்தார். மனம் வருந்தி அவர் அனுப்பிய முகநூல் குறுஞ்செய்தியை இங்கே இணைப்பது நாகரீகமாகாது என்பதால் தவிர்க்கிறேன். அந்த முகநூல் கணக்கும் இப்போது புழக்கத்தில் இல்லை.
இரண்டாயிரத்து இருபத்தொன்று சென்னை புத்தகண்காட்சியில் நேர்கண்டபோது அவரும் நானும் பரஸ்பரம் உரையாடிக் கொண்டோம். அத்துடன் பிரச்சினை முடிந்தது. நிற்க. நீதிநாயகம் காயத்திரி அம்மாள் பட்டணக்கரையில் வசிப்பவர். படித்தவர், பண்புள்ளவர், ஹிங்கிதம் தெரிந்தவர். இளைத்தவர்கள் - சளைத்தவர்கள் ஏழைகள் - பாழைகள், ஏப்பை - சாப்பைகள், ஏதிலிகளுக்கு ஒரு துன்பம் துயரமென்றால் அவர் மடி சுரக்கும் கருணாமிர்தத்தை அந்த இந்து மகா சமுத்திரமும் கொள்ளாது.
இப்படியாக இருக்கத்தொட்டுத்தான் புழக்கத்தில் இல்லாத முகநூல் கணக்கில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்பே எழுதியவரால் அழிக்கப்பட்ட பதிவை கள்ளத்தனமாக எடுத்து வைத்திருந்து ஒரு முனைவர்ப் பட்ட ஆய்வாளர் பாலியல் சுரண்டல்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது அதன் விசையைத் திசை திருப்பும் விதமாக அப்பதிவை இடைச்செருகியதுடன் அன்றி வருவோர், போவோர், வம்பாடிகள் யாவற்றைப் பேர்களுக்கும் அதன் இணையச் சுட்டியைப் பகிர்ந்து களிப்பாடி அடங்கியிருக்கிறார்.
அம்மையார் குசு அமிழ்தவஸ்து என்றேங்கி மயங்கிய நமது யோக்கிய சிரோன்மணிகள் தங்கள் புஜ பல பராக்கிரமங்களை (வெகு சௌகரியமாக, வெகு சாமார்த்தியமாக) முகநூல் பக்கங்களில் ஏகத்துக்கும் காட்டி வசையாகப் பெய்து வைத்திருக்கிறார்கள். நரை முற்றியும் ஆராயாது கெட்ட முறை செய்யும் முந்திரிக்கொட்டைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது...
ஒருவர் எழுதிய முகநூல் பதிவை அவரே அழித்துவிட்ட பின்பு அவரது அனுமதியின்றி அதைக் கண்டவர் எடுத்து பாவிக்கலாமா? முகநூல் பதிவு ஒன்றை அதன் உண்மைத்தன்மையைச் சரி பார்க்காது முற்றான புகாராகக் கொள்ளலாமா ? முகநூல் நடமாடும் நீதிமன்றமா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிக்காமல் ஒருநிமிட கால அவகாசத்தில் நீதி வேண்டி உங்களிடம் மண்டியிட்டது யார் நீதிமான்களே?
காயத்திரி கார்த்திக் அம்மையார் அவர்கள் சமூகத்திற்கு… எனது இழிந்த செயலைக் கண்டு பொறுக்கமாட்டாது வெகுண்டு முகநூலில் என்னைப் பிளாக் செய்த நீதிநாயகமே! பிறகெதற்கு மானம் ஈனம் இன்றி எனது விவகாரத்தில் தலையிடுகிறீர்கள்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு... என்னைக் குறித்தோ எனது செயல்பாடுகள் குறித்தோ மறுமுறை எங்காவது ஒரு சொல்... ஒரே ஒரு சொல் அவதூறு செய்வது (அல்லது அவதூறாக வார்த்தையாடுவது) தெரிந்தால் உங்கள் மீது சட்டப்பிரகாரமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்... அன்றியும் இந்த இழிசெயலைத் தொடர்ந்து செய்வீர்கள் என்றால் அதனை அடுத்து நான் புழங்கும் எனது சொல்லில் மரியாதை இருக்காது நான் மேற்கொள்ளும் நடத்தையில் பண்பு இருக்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு சொல் மானிடர் உத்தமபுத்திரர் சுயமோகச் செயமோகன் அவர்கள் சந்நிதானத்திற்கு... நான் செய்த நிதி மோசடி குறித்துத் தங்களிடம் பிராது கொடுத்த பெயரில்லாத பிரஹஸ்பதி யார்? பிரபஞ்சத்தின் ஒரேயொரு அறிவாளி, உன்னதக் கவிச்சிங்கம் உங்களுக்குத் தெரியாதா அய்யா வழக்காடு மன்றம் செல்லும் வழி? பொருளைத் தொலைத்தவனை அங்குப் போகும்படிக்கு அறிவுரைக்காமல் தங்கள் வலைப்பக்கத்தில் வழி வந்தமாய் வாய்ப்பந்தல் (காசில்லாத சேவை) போட்டுக்கொண்டிருந்தால் இழந்தவனுக்கு நிதி/ நீதி மீளக் கிடைக்குமா அறத்தெய்வமே சுவாமி? கொக்கு அறியாத குளம் உண்டா? தாங்கள் செய்யாத மோசடியா அறக்கடவுளே! பிராயத்துப் பிள்ளைகளை, அவர்களின் சிந்தனைப்போக்கை ஒருமுகமாக முடக்கி உங்கள் விளம்பரப் பிரலாபங்களை மட்டுமே காட்சிப்படுத்தும் பதாகைகளாக ஆக்கி வைத்திருக்கிறீர்களே இது மோசடியில்லையா?
பொறுக்கித் தின்பவைகளுக்கு மூக்கைத் தரித்து, இடுப்பையும் உடைத்து உரல் குழிகளையே கைலாசம் என்றாக்கி வைத்திருக்கிறீர்களே அறிந்தும் அறியாத எம் சிவமணியே இது மோசடியில்லையா? கையுழைப்பில் தேடிய பெரும் பொருளைக்கொண்டா தாங்கள் அறஞ் செய்கிறீர்கள்? ஊரெல்லாம் உண்டி குலுக்கித்தானே உங்கள் பாடும் விடிகிறது? கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் உங்கள் பரோபகாரச் சிந்தைக்கு உதிரிகளைக் கண்டால் இளக்காரம் விளக்காக எரிகிறது. சுதாகர் கதக்கின் கைம்மண்ணுக்கோ / கண்மணி குணசேகரனின் புள்ளிப் பெட்டைக்கோ / அழகிய பெரியவனின் நெரிக்கட்டுக்கோ / ஆதவன் தீட்சண்யாவின் நமப்புக்கோ /குமாரசெல்வாவின் உக்கிலுவுக்கோ /எழில் வரதனின் ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெருவுக்கோ ஈடானது இல்லை உங்கள் எழுத்து, பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று அவ்வளவுதான்.
தலைத் தடவி மூளை உறிஞ்சப்பட்ட சுயமில்லாத மந்தைக் கூட்டத்திற்கு உகந்தபடி அவர்கள் மேவும் சந்தைக்குத் தக்க எழுத்தை உற்பத்தி செய்து விற்கும் வியாபாரி அவர்களே! எச்சரிக்கிறேன், இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். சுயாதீனமாகச் செயலாற்றும் எளியவர்களை, அவர்கள் செயல்களை, உணர்வுகளை இழித்துப் பழிப்பது, ஏகடியம் பண்ணுவது, வகைத் தொகை அறியாது வலைப்பக்கத்தில் நீதிபரிபாலனம் செய்வது போலான மலிவான செயல்களை…
இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது பாம்புக்கு ராசா மூங்கத்தடி.
------
வர வர மாமியார் கழுதைப் போலானார் என்றொரு சொலவடை தமிழ் நாட்டில் வழக்கத்தில் உண்டு. கருதி அரசுக் கட்டிலில் அமர்த்தப்பெற்றவர்கள் ஆரம்பத்திலே நம்பிக்கையைத் தரத்தான் செய்தார்கள் வாஸ்தவம்தான். திட்டக்குழுவிலே துறைசார் அறிவாளுமைகள் இடம் பெறச் செய்ததுமொரு நல்ல முன்னெடுப்பு. போகப் போகச் சிக்கல்கள் களையப்படாமல், குறைகள் தீர்க்கப்படாமல் பூசி மெழுகுதல், தப்பை வைத்துக் கட்டுதல் போன்ற தந்திர உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை இப்போது கைகண்ட மருத்துவமாய் நடைமுறைச் செல்நெறிகளாகிவிட்டன.
ஒத்தூதிகளை, துதிபாடிகளை, உடன் பிறப்புகளை, கட்சி அபிமானிகளை, வாரிசுகளை அரவணைத்து ஆலிங்கனம் செய்து அதிகாரத்தை, வருமானத்தைப் பங்கீடு செய்து காபந்து பண்ணுவது கிடக்கட்டும். ஆட்சி நாயகர்களை அம்போவென்று நடுத்தெருவில் விடலாமா? சீர்கெட்ட விவசாயிகளின் நிலை மேலும் அவலத்திற்குள்ளாகிவிட்டிருக்கிறது. வருங்காலம் பிள்ளைகள் கையில். படித்த பட்டதாரிகளுக்கு அரசு தேர்வுகள் வழி கிடைத்துக்கொண்டிருந்த வேலை வாய்ப்புகள் இன்று அருகி மறைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது.
கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட தேர்வுகள் நான்கில் மூன்று பங்கு குறைந்துவிட்டது. வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் முறைகேடுகள், சீர்கேடுகள், துஷ்பிரயோகங்களை முற்றிலும் தவிர்க்க துரித நடவடிக்கைகளை அரசு உடன் மேற்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் தோன்றுதல், சமூக ஊடகங்களில் காட்சிகொடுத்து சாதனைப்பட்டியல் வாசிப்பது, வெத்துவேட்டுப்பிரகடனங்கள் மற்றும் பழம்பெருமை திரைவசனங்கள் பேசுவது போன்ற மலினமான வழக்கொழிந்த யுக்திகளை விடுத்து நேரிடையாகக் களத்தில் இறங்கி மக்களுக்குகந்த செயல்களைச் செய்வதே சாலச் சிறந்தது ஈரோட்டில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு திருவாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு மாரடைப்பு. செய்த செலவெல்லாம் வீணாகிவிடும் என்று சூழலே பரபரத்துக்கொண்டிருக்கிறது. வெட்கக்கேடு.
ஆட்சியாளர்களை வழித்துக்கொண்டு சிரிப்பது, கழுவி கண் மேல் ஊற்றுவது ஒருபக்கம் கிடக்கட்டும். காசு வாங்காமல் ஓட்டுப் போட நம்மால் ஆகாதா. ஆண்டி குறிச் சுவைக்கச் சொன்னால் தாதனுக்கு எங்கே போயிற்று புத்தி? இதிலே கொங்கு பெல்ட் தேர்தலுக்குத் தங்கம் விநியோகம், தலைக்குப் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்ற அங்கலாய்ப்புகள் வேறு. பகுத்தறிவு உள்ளவன் செய்கிற வேலையா நாம் செய்துகொண்டிருப்பது? தாரமங்கலத்து சட்டமன்ற தேர்தலில் ஜெயம் பெற்ற அபேட்சகர் அருமை அண்ணார் திருமிகு அர்ச்சுனன் அவர்கள் நன்றி நவில ஓர்முறை எங்களூருக்கு வந்தார்.
வந்தவருக்குத் துண்டுபோர்த்தி, மாலை சார்த்தி, சோடா உடைத்து கொடுத்து அனுப்பியிருந்தால் பாவம் அவர் பாட்டுக்கு வந்தவழி போயிருப்பார். எங்களூர் திருவாளத்தானொருவன் ஓட்டு போட்டச் சனத்துக்கு ரோடு போடறது, ஆத்து தண்ணி டேங்க் கட்டிக்கொடுக்கறது மாதர ஏதாவதொரு உபகாரஞ் செய்யுங்க சாமி என்றதுதான் மாயம்… கடன் வாங்கி, உடன் வாங்கி, எம்பொண்டாட்டி தாலி அடகு வெச்சி இருபத்தி அஞ்சு லட்சம் உரூபா ஏற்கனவே வாக்கரிசி போட்டுட்டேனே! இன்னும் என்னடா உங்களுக்கு எம்மயிர புடுங்கி அடிக்கணும்னு ஒரு செம கேள்வி கேட்டாரு. மனசுக்கு நெம்பக் குளுமையா இருந்தது அன்னைக்கு. இங்ஙனம் அரசியல் ஊழல்கள், சமூகச் சீர்கேடுகள், சாதி மதத் தீண்டாமைகள், உழைப்புச் சுரண்டல்கள், அறிவுக்கொள்ளைகள், தனிமனிதக் கொடுமைகள் எதுவென்றபோதிலும், அரசு எந்திரம், ஆட்சியாளர்கள், எதிர்க் கட்சியினர் போன்றோரைக் குற்றம் பாராட்டுகின்ற அதே காலை ஆய்ந்தோய்ந்தோமானால் கருததக்க வகிபாகம் அதில் நமக்கும் உண்டென்பதை உணரமுடியும். சமரசங்கள், சாக்குப்போக்குகள் கூறி நமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் முதலில் நமதளவில் உள்ள பிழைகளைக் தாமதங்கள் இன்றிக்களைவதே தார்மீக அறமாகும்.
----
எழுபது எண்பதுகளில் ஈழத்தில் எண்ணிறந்த குழுக்கள் இருந்தன. அவை ஈழத் தமிழ்மக்கள் விடுதலையை முன்னெடுத்துப் போராடின. இன்று அளவும் அந்தப் போராளிகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
போலவே நமது தமிழ் நாட்டில் அதே காலகட்டத்தில் எழுத்து, நடை, நிறப்பிரிகை, கசடதபற, படிகள், மீட்சி போன்ற இதழ்களோடு மேலும் பல சிற்றிதழ்கள் சார்ந்து பல தோழர்கள் தீவிர இலக்கியம், நுண்கலைகள், புதிய பரிசோதனை முயற்சிகள், புதிய மொழியாக்கம், இளையவர்களுக்கான தளம், மனத்தடை இல்லாத புதிய எழுத்துவகைமைகள், உலக அளவிலான கலை இலக்கியப் போக்குகள், சினிமா உள்ளிட்ட மாற்றுக் கலை வடிவங்கள், மாற்றுத்துறை அறிவு வளர்ச்சி என்று தங்கள் உடல் பொருள் ஆவி ஈந்து மாறாத அர்ப்பணிப்புணர்வோடு இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தனர். சுருங்கக் கூறின் அவர்கள் தங்களைத் தின்னக் கொடுத்துக் கலை இலக்கியத்திற்கு உயிரூட்டினார்கள்.
இப்போதும் இருக்கின்றன பல இலக்கியக் குழுக்கள், அவை தங்களது தன்னகங்காரத் தீ எரிய இலக்கியத்தை நெய்யாய் ஊற்றுகின்றன. மேல் மேச்சலும், மித மிஞ்சின ஒப்பனையும், கண் கூசும் வெளிச்சமும், காதடைக்கும் விளம்பர இரைச்சலும் இலக்கிய இலட்சணமில்லை.
இதழ்த் தரமென்பது ஓர் எடிட்டரின் பொறுப்புணர்வால் மாத்திரம் விளைவது அல்ல. படைப்பாளிகளுக்கும் ஏன் வாசகர்களுக்கும் கூட அதில் பாத்தியமிருக்கிறது. ஆக்கிப் படைத்திருக்கும் அவ்வளவும் பாகுபாடு இன்றி வெளியாகும் இதழ்களத்தனைக்கும் அனுப்பப் பெறல் வேண்டும்.
விடைப்பது, பிணங்குவது, வேரோடுப் பிடுங்கிக்கொள்வது, நிறைக்குடம் தண்ணீர் தலையோடு வார்த்துக்கொண்டு கோவிலில் முறைப்பாடு வைப்பது, மிளகாய் அரைத்துப் பூசுவது, மோடி வைப்பது, வசியம் பண்ணுவது, ஆடுவது, பாடுவது, ஓடுவது, ஒளிவது, அங்குமிங்கும் தாண்டிக்குதிப்பது, அழுவது, புறத்தே சிரிப்பது, கைக் கொடுத்துக் கொண்டே கடையாணி கழற்றுவது, கொண்டான் கொடுத்தான் உறவு கொண்டாடுவது போன்ற உள்ளடி வேலைத்தனங்களையெல்லாம் அவரவர் அந்தரங்கத்திலே வைத்துக்கொள்ளவேண்டும். இலக்கியத் தளத்திலே இலக்கியம் மட்டும்தான் முதற்பொருளும் கருப்பொருளுமாக இருக்கவேண்டும்.
இலக்கியத்தை முன்வைத்து அங்கே காரியம் பார்ப்பது மட்டுமல்ல படைப்பதையும், நுகர்வதையும் பொதுவில் வைக்கிறதை ஒரு பண்பாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அணுக்கமான ஆதர்ச புருஷர்களிடம் இலக்கியம் உசாவுகிற வேளையில் வாசகர்கள் வெறுமே ஊம் போட்டுக்கொண்டிருக்காமல், ஊடகங்கள் பால் அவர்கள் காட்டும் பாரபட்சங்கள் குறித்து, சுரணைக்கெட்டிருப்பதைக் குறித்துக் கேள்விகள் எழுப்பி அவரவர் கடமைகளைச் செய்ய வலியுறுத்தவேண்டும். (காசுக் கொடுத்துப் புத்தகம் வாங்கிப் படிக்கிறவர் சொன்னால் எழுத்தாளன் கேட்டுக் கொள்ளவேண்டும்.) இந்நிலையில் ஊக்கமும் உத்வேகமும் உள்ள இளையவர்கள் படைப்பாளிகளாவது இன்றியமையாதது. தவிர மொழியும் கலையும் புழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். தீவிர எழுத்து முயற்சி, இலக்கிய வாசிப்பு, மனம் திறந்த உரையாடல் ஆகியனவற்றுக்கான களமாக மணல்வீடு தன் பயணத்தைத் தொடர்கிறது உணர்வாளர்களின் பேராதரவோடு…
பதிலளியுங்கள், திரும்பப் பேசுங்கள், உரையாடுவோம் தொடர்ந்து...
இவண் ஹரிகிருஷ்ணன்
“ஓவியத்தின் முதல் நோக்கம், அவை உலகப் பொது வெளிப்பாடாக இருக்கவேண்டும்.” - பைட் மாண்ட்ரியன் (Piet Mondrian)
உலக ஓவிய வெளிப்பாட்டுத் தளத்தில் நவீன இயக்கங்களின் போக்குகள் என்பது, எல்லாக் கலைகளிலும் நேர்ந்தது போலவே, அணுசக்தி யுத்த அச்சுறுத்தலுடன் கூடிய வாழ்வின் விளிம்பில் இருந்தும், போருக்குப் பிந்தையதான வாழ்வில், அதிகாரம் கட்டியெழுப்பும் ஒரு விசித்திரமான உலகத்திற்குள் வாழ்ந்துகொண்டே தத்தமது திறவுகோலைக் கண்டெடுப்பதாகவும் தோன்றியிருக்கிறது. அதே சமயம் அரச மாளிகையை மையமிட்ட படைப்புச் சுருக்கங்களிலிருந்தும் வெளியேறி மீண்டிருக்கிறது என்பதே உண்மை. அங்கிருந்து வளர்ந்தெழுந்துகொண்டிருக்கும் பல்வேறு பாணிகளிலும் ஓவியப் படைப்புகளின் அடிப்படையிலும், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது “தன்னுள் உரையாடி, முற்றிலும் புதிய வெளிப்பாடுகளைக் கண்டெடுத்து, கண்டெடுத்ததன் அளவுகளைக் கூட்டியும் குறைத்தும் என ஒரு புதிய நிலையில் நிறுத்திக்கொள்வது எனத் தொடர்கின்றன.”
தமிழ் நிலப்பரப்பில், சென்னை ஓவியக் கல்லூரியின் பயிற்சியும் பரிசோதனை முயற்சிகளும் பல வெளிப்பாட்டு வடிவங்களை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கும் ஓவியங்களைச் சேகரிப்பவர்களுக்கும் தந்த வண்ணம் உள்ளது யாவரும் அறிந்ததே. அவ்வரிசையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஏனைய ஓவியர்களைப் போலவே இவருடைய கல்லூரிக் காலத்தின் பயிற்சி ஓவியங்கள் வழி தன் படைப்பு மனதைக் கண்டடைந்தவராய் இருக்கிறார்.
குறிப்பாக, “நிலப்பரப்பு ஓவியங்கள், முக உருவங்கள் மற்றும் நீர்வண்ண ஓவியங்கள் எனப் பயிற்சிகள் எவ்வளவு தூரம் தன்னை அழைத்துச் சென்றதோ அதுவரை அதனுள் திளைத்துத் திளைத்து அங்கிருந்து மெல்ல வெளியேறியிருக்கிறார்”.
ஆம், “கலை மிகவும் அகநிலையின் பக்கம் சார்ந்திருப்பது, புறக்காட்சிகளைப் பார்த்து வரையும்போதுகூட, அதில் தெறித்து எழும் அகநிலைக்காரணிகளைக் கண்டுகொள்ளும்போது அத்தகைய வெளியேற்றங்கள் பல புதிய பயணப் பாதைகளையும் காண்பிக்கத் தவறுவதில்லை. அதே சமயம், இதெல்லாம் படைப்பாளிகளின் மனம் சம்பந்தப்பட்டது என, பார்வையாளர்கள் ஒதுங்கிக்கொள்ளவும் அவசியமில்லை. ஏனெனில், தொடர் ஓவியப் பார்வையாளர்களுக்கும் தான் பார்க்கும், உணரும் ஓவியங்களின்வழி தன்னிலிருந்தும் தன் நிலையிலிருந்தும் வெளியேறி வாழ்வின் புதிய பாதைகளுக்குப் பயணப்படும் சாத்தியங்களையும் உணர்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் நீண்ட கால ஓவிய வரிசைகளைப் பார்க்கும்போது, அவருடைய அகநிலையில் இருந்து எழும் வண்ணங்களின் பயன்பாட்டில், இந்த வெளியேற்றச் சாத்தியங்கள் மிகவும் முக்கியமான காரணிகளாய் இருக்கிறது.
ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்கள் கல்லூரிக்காலப் பயிற்சி முறைகளில் இருந்து வெளியேறி தன் குழந்தைப்பருவம் அதிக அளவில் திளைத்த தன் நிலப்பரப்பின் மிக முக்கிய வெளியான ‘சித்தன்ன வாசல்’ குகையோவிய வண்ணக்கலவைகளிலும் கதை கூறும் முறைகளையும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில், ‘அன்பு’, ‘மஞ்சள்நிறப் பெண்’, ‘தடாகம்‘, ‘தடாக மலர் சேகரிப்பவள்’, தடாக விளையாட்டு’ எனப் பாரம்பரியக் கதை சொல்லல் முறைகளில் கண்டெடுத்த முறைகளுக்குள்ளிருந்தே புதிய, அரூப வெளிகளைக் கண்டடைந்திருக்கிறது.
இந்த ஆரம்ப காலப் படைப்பு வெளிப்பாட்டில் இவரிடமிருந்த கதை சொல்லும் முறைகளிலிருந்து ஒரு நேரத்தில் மாறுபட்டு, அதிலுள்ள அரூபப் பாடல்களைக் கண்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே, உருவங்களைத் தவிர்த்த ஒரு புதிய இசைகளைப்போல ‘புனிதமான உணர்வின்பம்’ எனும் தொகுதிக்கான வெளிகளைக் கண்டடைந்திருக்கிறார்.
இத்தகைய வெளிப்பாட்டுப் பாதைகள் பற்றி ஓவிய உலகம் என்ன பொருள் கொண்டுள்ளது என்பதைக் கண்டுகொள்வதும் மேலதிக புரிதல் உணர்விற்கு உகந்தது. அதாவது, தன்னைச் சுற்றி ஒலிக்கும் ஓசைகளை உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஒரு புதிய இசையை உருவாக்குவது என்பதாகச் சொல்லலாம். ஓவியங்களில் ‘அரூபப் பாடல்கள்’ என்பது சுயத் தோற்றத்தை வரையறுக்கும் ஒரு சொல், ஓவிய உலகில் இன்னும் தலைமுறைகளாக அதன் தோற்றம் மற்றும் பொருள் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்கக் கலை சேகரிப்பாளர் லாரி ஆல்ட்ரிச் 1969 இல் ‘லிரிக் கல் அப்ஸ்ட்ராக்ஷன்’ (Lyrical Abstraction) எனும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலை விமர்சகர் ஜீன் ஜோஸ் மார்கண்ட், 1947 இல், அமெரிக்காவில் அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசத்தைப்போன்ற ஓவியத்தில் வளர்ந்து வரும் ஐரோப்பியப் போக்கைக் குறிப்பிட, ’அப்ஸ்ட்ராக்ஷன் லிரிக்’ (Abstraction Lyric) என்ற சொல்லின் மாறு பாட்டைப் பயன்படுத்தினார். இந்த வார்த்தையின் இரண்டு பயன்பாடுகளும் புறநிலை யதார்த்தத்துடன் தொடர்பில்லாத புதியதொரு உணர்ச்சிகரமான, தனிப்பட்டதொரு புதிய வெளிப்பாடுகளால் வகைப்படுத்தப்படும் கலைவெளியைக் குறிக்கின்றன.
அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் இந்த ஆரம்பகால அரூப ஓவியங்களில் என்ன அர்த்தம் இருக்கும் என்பது எனக்குத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அந்த வண்ணவெளிகளையும் அதனுள் அசையும் உருக்களையும் அணுகினோமெனில். அழகியல் அல்லது புறநிலை உலகம் பற்றிய முன்முடிவுகள் இல்லாமல், சுதந்திரமாக ஓவியம் வரைவதன் மூலம், தெரியாத ஒன்றைத் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அவற்றைக்காணும் நம்மிடமும் புதிய புதிய சுதந்திர வெளிகள் திறவுகொள்வதன் சாத்தியங்களையும் கண்டுணர முடியும். இதைத்தான், மிகவும் செல்வாக்கு மிக்க கலை விமர்சகர்களில் ஒருவரான ஹரோல்ட் ரோசன்பெர்க் (Harold Rosenberg), “இன்று, ஒவ்வொரு கலைஞரும் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
நம் காலத்தில் கலையின் அர்த்தம் சுய உருவாக்கத்தின் இந்தச் செயல்பாட்டில் இருந்து பாய்கிறது.” என்கிறார். இவ்வகையில்தான், ஆலங்குடி சுப்பிரமணியனின் வண்ணப்பிரவாக ஓவிய வரிசைகளை நாம் காண முடிகிறது. முன்முடிவுகளற்ற இந்தப்பயணங்களின் வழி முன்னர் தானும் பார்வையாளர்களும் பழக்கப்பட்ட அனுபவங்களில் இருந்து வெளியேறி வண்ணங்களின் செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித நிர்வாணத் தன்மையின் பயணப் பாதைகளைக் கண்டடைய வேண்டுமென உழைத்திருக்கிறார். அதை அவர் சென்றடைந்ததன் வழி அவ்வோவியங்களைக் காணும் நமக்கும் புதியதொரு அனுபவத்தைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறார். குறிப்பாக, அத்தகைய படைப்புகளில் ததும்பும் மென்மையான மற்றும் துடிப்பான வண்ணங்களில் உள்ள உணர்வுப்பூர்வமான, அன்பின் மடிப்புக்கள் எல்லாம் கலைஞரின் தொடுதலின்போது எழுந்த மனநிலைகளின் அசைவு உண்மைகள்தான் எனினும் இந்த வகை ஓவியங்களில் எப்போதும் தெரியும், ‘தன்னுள் நீடித்திருக்கும் பிடிமானங்களைத் துறத்தல்’ என்பதன் வழி மனித வாழ்வின் பேருண்மைகளாக எழுந்து நிற்கின்றன. இந்தப் படைப்புகளை ஒரு செயல் ஓவியங்களுடன் தொடர்புபடுத்தலாமா? எனும் கேள்வி எழும் போதே, இவரது வண்ணக் குழைவு ஓவியங்கள் மயக்கஅணுகுமுறையோடு இயைந்த மாய உணர்வுச் செயல்பாட்டுடன் தொடர்புடையது என்ற பதில் நம்மை வந்தடைகிறது. அதுபோல் இவருடைய ஒற்றை வண்ண ஓவிய வரிசைகளும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கின்றன. பொதுவாக ஒற்றை வண்ணங்களில் உடல்களைத் தேடியெடுக்கும் முயற்சியாக இவ்வோவியங்களைக் காணமுடிகிறது. அத்தகைய தேடல் நம்மிடம் வந்து சேரும்போது, நமக்குள் அர்த்தமுள்ள ஆற்றல் மற்றும் பால் பாகுபாடற்ற காட்சி அல்லது மனோதத்துவ நுண்ணறிவு ஆகியவற்றின் உணர்வை வழங்கத் தொடங்குகின்றன. குறிப்பாக, நேரடிக் கருத்துகளைக் கூறுவதற்கு மாறாக, மூளை அலைகளால் உருவாக்கப்பட்ட வடிவங்களின் வித்தியாசம் இவ்வரிசை ஓவியங்கள் எனவும் சொல்லலாம். இப்படி, ஆலங்குடி சுப்பிரமணியன் தனது சொந்த மனதின் காட்சி ஆய்வுக்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொள்வதே அவருடைய தற்காலப் படைப்புகள் எனலாம். இவருடைய கடந்த இரண்டு ஆண்டு காலப் படைப்புகளில் மனிதர்கள் புழங்கும் இயற்கையின் உருவங்கள், வடிவங்களில் இவர் ஈர்க்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, சிறிய அளவிலான படைப்புக்கள் என்றாலும், புதிய பாதைகளில் தெரியும் பல காட்சி மொழியை உருவாக்கித் தருகிறார், அவ்விதம் அப்படைப்புகளில் பரிணாமத்தைக் கடந்த காலத்துடன் ஒரே நேரத்தில் தொடர்பையும் நவீன உலகத்தின் மனநிலையிலிருக்கும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தி, அவர் ஒரு அழகியல் நிலையை நமக்குக் காணத் தருகிறார். இவ்விதம் படைப்புகள் வரிசையில், ஒவ்வொன்றிலிருந்தும் வெளியேறி தற்போது முற்றிலும் புதிய முறைகளில் வினைபுரிந்து கொண்டிருக்கும் ஆலங்குடி சுப்பிரமணியன் தனது பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, “சுவாரசியமான தொடர்ச்சியுடன் என் படைப்பு வெளியேற்றம் மனிதர்களின் வளர்ந்து வரும் யதார்த்த உணர்விற்குச் சாட்சியமளிக்கிறது. வாய்மொழியாகச் சொல்ல இயலாத காட்சி அசைவுகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். அதன் யதார்த்த ஆவலே என் கலையில் பிரதிபலிக்கிறது” என்று சொல்கிறார்.
தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் மற்றும் பல இலக்கிய வடிவங்களின் அட்டைப்படங்கள் என இவரது ஓவியங்கள் பரவலாகப் பயணப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும் கண்காட்சிகளுக்காகத் தொடர்ந்து பல வரிசை முறைகளை உருவாக்குவதே தனக்கான செயல் கணங்கள் என இயங்கி வருகிறார். இவருடைய தற்கால ஓவியங்களின், மேற்பரப்புகளில் பல உடல்களின் அசைவு அடையாளங்களைக் காணமுடிகிறது. அதே சமயம் அந்த உடல்கள் எவ்வாறு நகர்கிறது, அது அவ்வாறு நகர்வதற்கு என்ன காரணம்? உடல் எவ்வாறு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது? எதனால் பார்க்கும் நமது மனக்கிடக்கையின் உட்பரப்புடன் தொடர்பு ஏற்படுகிறது? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணிகளைத்தேடி நேரம் கூட்டி அவ்வோவியங்களுக்குள் செல்வோம் எனில், சில உணர்வுப் புரிதல்கள் நம்மை வந்து சேருகின்றன. அதாவது, வண்ணங்களின் பிரயோகக் குறியீடுகளில்தான் இவர் படைப்பின் சாராம்சம் இருக்கிறது. அதுதான், இவரது ஒவ்வொரு படைப்பிலிருந்து எழும் உடல்களின் குறியீட்டு இயக்கங்கள். ஓவியரின் அக உள்ளிருப்பின் சாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும் படைப்புவெளியின் மேற்பரப்பில் தெரிவிக்க, வினையாற்றும் கணங்களின் மாயமே, படைப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நுட்பமான அடையாளத்தை விளைவித்திருக்கிறது. ஒரு குழப்பமான குறியீடு வண்ணங்களின் மதிப்பீட்டில் அவ்வுடலின் குழப்பத்தை நமக்கு விளைவிக்கிறது. விரக்தியான உடல்கள் வெற்றிடமான அடையாளங்களைக் காட்சியின் சலனத்தால் நமக்குள் ஏற்படுத்துகின்றன. இதற்குப் பேருதாரணமாக 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது 2021 வரையிலான இவரது படைப்பு வரிசைகளைச் சுட்டலாம். அதில் வண்ணங்களும் ஒரு நிறப் படைப்பும் அடங்கும். ஆலங்குடி சுப்பிரமணியன் எனும் ஓவியரின் இவ்வாறான மெனக்கெடல்கள், உடனடியாகச் சமூகத்தில் யாதொரு புரட்சிகர மாற்றத்தைத் தூண்டப்போவதில்லை. அதே சமயம், ஹரோல்ட் ரோசன் பெர்க்கின் வார்த்தைகளில், செல்வதானால் “அந்தச் செயல்பாட்டுக் கணங்கள் ஒரு ஓவியம் மட்டும் அல்ல, அது ஒரு நிகழ்வும் கூட” எனும் பார்வையில் பார்க்க முடியும். ஆம், ஓவியமெனும் தொடர் நிகழ்வில் திளைத்து தன்னுடல் எனும் படைப்புகளைப் படைத்துக்கொண்டிருப்பதும் மனிதவாழ்வின் புரட்சிகரப் பக்கங்களில் ஒன்றுதான். அதனால்தான், வாழ்க்கையின் ஆற்றலையும் இயக்கத்தையும் கேன்வாஸில் தெரியும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
படைப்பின் முன் பயணங்களிலிருந்து வெளியேறி, தற்போது ஆலங்குடி சுப்பிரமணியன் திறந்திருக்கும் பாதை புதியது. ‘பொருட்களற்ற பொருட்களின் உறைநிலை’ எனும் வரிசையில் வரைந்துகொண்டிருக்கிறார். இதில் இவரது முந்தைய படைப்பின் உருவங்கள் மற்றும் நிலப்பரப்புகளை விட்டுவிட்டு, ‘பல வடிவங்களின் கூட்டு’ எனும் நிலையைக் காண்கிறார். இவ்வரிசையின் முதல் ஓவியத்தில், வெதுவெதுப்பான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடது புறத்தில் இருந்து வரும் விசித்திரமான கருப்பு நிலை மற்றும் கீழ் பகுதியில் நீல நிறத்தின் துலக்கமான சுழல்களால் சிதைக்கப்படுகின்றன. மங்கலான விளிம்புகள், பிரிக்கப்பட்ட வண்ணத் தொகுதிகள் மற்றும் செவ்வகப் பதிவேடுகளின் தொடக்கங்கள் ஆகியவற்றை வடிவங்கள் வண்ணங்களாகக் கூடுவதைக் காணலாம், அதே போல் வண்ணப் பிரயோக அளவு மற்றும் தளத்தின் அளவுடன் சில சோதனைகளையும் தொடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. இவை முற்றிலும் பிரதிநிதித்துவமற்ற ஓவியத்திற்கான முன்னேற்றத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையைக் குறிக்கிறது. அது முற்றிலும் தீர்க்கமான விஷயத்துடன், அவர் தனது வாழ்க்கையின் சிந்தனைக்குரிய அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது: செங்குத்து மற்றும் கிடைமட்ட வடிவங்களுக்கு இடையே இடம் மாறும் உறவு; முக்கியமாக இருண்டதொரு பிரகாசமான நிறத்தின் கண்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உருவம் முற்றிலும் மறைந்துவிட்டது, ஒரு விசித்திரமான, வெடிக்கும் வண்ணத் துறைகளைத் தவிர இவருடைய தற்காலப் படைப்புகளில் வேறு எதுவும் இல்லை. படைப்புக்கூறுகள் என்பது - முன்புறம் மற்றும் பின்புறத்திற்கு இடையே பண்பு ரீதியாக வியத்தகு உறவுகளைக் கொண்டுள்ளது; ஒளி, இருள் - ஆலங்குடி சுப்பிரமணியன் பேச்சில் முன் வைக்கும் உடல்கள், நிலங்களின் உறவுகள், வாழ்வும் மரணமுமாய்க் கேன்வாஸின் மையத்தில் ஒன்றிணைகின்றன. இப்படைப்புகள் எல்லாம், நாம் கண்காட்சிக்கூடத்தில் இடைவெளியின் துணையுடன் நின்று ஊடுருவிச் சென்று பார்த்து அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டியதாய் இருக்கின்றன. அப்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புக்களால் நம் சிந்தையில் அதுவரை காணாத புராண உலகம் திறவுகொள்வதை நம்மால் உணர முடியும். அவ்வுலகில் பிரிவினை அற்ற புனைவுகளும் உலக உடல்கள் கரைந்து போகும் பல அறிவியல் புனைகதைகளும் மோதுகின்றன, அம்மோதல்கள் நிகழ்காலத்தில் பார்வையாளர்களான நம்மை நமக்குள் எளிதாகக் கண்டுபிடிக்கும் பாதைகளை உருவாக்குகின்றன.
எனவே, வாய்ப்புக் கிட்டும்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புகளைக் கண்டு உணர்ந்து இன்றைய நம்மிலிருந்து வெளியேறி, அகக்காட்சிகளின் புதிய பயணப்பாதையில் பயணிப்போம்.
ஆங்கில மொழியில் எழுதி ஆங்கிலேயக் கவிஞர்களுக்கு இணையான பெயரைப் பெற ஒரு தெற்காசியக் கவிஞனால் முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக இருப்பவர் டவ்கிலியன் என்ற புனைப்பெயரைக் கொண்ட ஹோஸே கார்சியா வில்லா. ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்களை வகைப்படுத்தும்போது இந்தோ - ஆங்கிலக் கவிஞர் என்ற அடைமொழி தரப்படுகிறது. இது அமெரிக்காவிலேயே பாதி காலத்தை வாழ்ந்த ஏ.கே.ராமானுஜனில் தொடங்கி நிஸீம் எஸக்கீல் வரையிலான கவிஞர்களுக்கு ‘ஆங்கிலத்தில் எழுதிய இந்தியக் கவிஞர்கள்’ என்ற வகைப்பாடுதான் தரப்பட்டு வந்திருக்கிறது. தவிர ஏ.கே.ராமானுஜன் கவிதை தவிர பிற துறைகளான மானுடவியல், மொழியியல், வாய்மொழிக்கதைகள் சேகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
கீ.பி.ஆடன், எடித் சிட்வெல், ஈ.ஈ.கமிங்ஸ் போன்றோருக்கு இணையான இலக்கிய அந்தஸ்து ஆசியக் கவிஞர்களிலேயே ஹோஸே கார்சியா ஒரே ஒருவருக்குத்தான் அளிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் தேசத்தில் பிறந்த (1908) வில்லா, ஒரு கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் மற்றும் ஓவியர். டவ்கிலியன் என்ற அவரது புனைப்பெயரில் புறா, சிங்கம், கழுகு ஆகியவை மறைந்திருக்கின்றன. தவிர கவிதையாக்கத்திலும் வடிவத்திலும் அதன் ஒலி இயைபுகளிலும் அதுவரை செய்யப்பட்டிராத சில பரிசோதனைகளை அவர் வெற்றிகரமாகச் செய்ததாலும் அவர் அமெரிக்கக் கவிஞர்களுக்கு இணை யானவராய்க் கருதப்படுகிறார். அவரை சிலர் கிரீன்விச் கிராமத்தின் போப் எனக் குறிப்பிட்டாலும் அந்தப் பெயரின் நல்தன்மைகளை தக்கவைத்துக் கொள்ளும் படைப்புத் திறன் கொண்டவராய் இருந்தார் வில்லா.
1929ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் மேகஸின் (Phillipines Herald Magazine) பத்திரிகையில் ‘மேன்-சாங்ஸ்’ (Man-Songs) என்ற பாலுணர்வைத் தூண்டும் கவிதைகள் ஓ.செவில்லா (O.Sevilla) என்பவர் எழுதியதாக வெளியிடப்பட்டன.
மூன்றாவது தொடர் வெளியிடப்பட்ட உடனே ஹோஸே கார்சியா வில்லா பிலிப் பைன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பொது ஒழுக்கமுறைமைகளுக்கு நாசம் விளைவித்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு 50 பெசோ அபராதம் விதிக்கப்பட்டார். பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகத்தின் டீன் ஆக இருந்தஜோர்ஜ் போக்கோபோ அந்தக் கவிதைகள் “பண்பு கெட்டவை மற்றும் ஆபாச மானவை” என்று அறிவித்து அப்போது இரண்டாம் ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருந்த வில்லாவை பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக நிறுத்தம் செய்தார். பிலிப்பைன்ஸ் ஹெரால்ட் பத்திரிகை பொது வாசக அழுத்தத்தினால் பாலுணர்வு தூண்டக் கூடிய கவிதைகளை வெளியிட்டதற்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இந்த மென் உணர்வுகளை உறுத்தும் கவிதைகள் வில்லாவை ஓராண்டுக்கு பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தம் செய்யக் காரணமாக இருந்தன. மாறாக வில்லாவின் மாறுபட்ட இலக்கியப் பிரதியொன்று பிலிப்பைன்ஸ் தேசத்திலிருந்து முடிவாகக் கிளம்பிச் செல்லக் காரணமாயிற்று. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிலிப்பைன்ஸ் Hg பிரஸ் (Phillipines Free Press) நடத்திய சிறுகதைப் போட்டியில் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக வில்லாவின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பரிசுத் தொகையாக ஆயிரம் பெசோக்களை வழங்கியது. இந்தத் தொகையைப் பெற்ற வில்லா அதை வைத்தே (தன் பெற்றோரின் உதவியின்றி) அமெரிக்கா கிளம்பிச்சென்றார். ஆனாலும் கூட அவரது தொகுக்கப்பட்ட சிறுகதைகளான (1933) (Foot note To Youth) நூலில் இந்த பரிசுக் கதை சேர்க்கப்படவில்லை.
நியோ - காலனியலிசம் மற்றும் எலைட்டிசம் போன்ற காரணங்களுக்கு எளிதாக வில்லாவை கண்டனம் செய்வதற்கும் இந்த இரண்டு நிகழ்வுகளும் காரணமாயின. வில்லாவுக்கு ஒரு ‘இனக்குழு அடையாளம்’ இல்லை என்றும் அவரது சொந்த நாட்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால் வேறு இலக்கிய வட்டங்களில் பின்வருமாறு பாராட்டப்பட்டார்: “ The inventor of modernist writing in English in the Philipines .”
1930இல் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அங்கே துவங்கப்பட்ட இலக்கிய ஏடான கிலே (களிமண்)வின் ஸ்தாபகர் களில் ஒருவராக வில்லா இருந்தார். பிறகு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரும்போது அமெரிக்க இலக்கிய வட்டங்களின் கவனத்தைப் பெற்ற முக்கியமான ஆசியக் கவிஞராய் ஆனார்.
1933இல் வெளியான (Foot note to Youth) நூலுக்குப் பிறகு வில்லா உரைநடையிலிருந்து முழுமையாக கவிதைக்கு மாறினார். 1942இல் வெளியிடப்பட்ட கவிதை நூலில் ரிவர்ஸ்டு கான்ஸொனன்ஸ் (Reversed Consance) என்ற புதிய ஒலிஇயைபு முறையை ஆங்கிலக் கவிதைகளுக்கு அறிமுகப்படுத்தினார். 1949ஆம் ஆண்டு புதிய கவிதை எழுதும் ஒரு முறையை அறிமுகம் செய்தார். இவை ‘கமா கவிதைகள்’ என்றழைக்கப்பட்டன. இந்த உத்திமுறையில் ஒவ்வொரு சொல்லுக்குப் பிறகும் ஒரு கமா பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்த்தையும் அதன் வார்த்தை அடர்த்தியை அடைய கமாக்கள் உதவுவதாக அறிவித்தார். வார்த்தைகளின் தொனியும் கூடுதல் பலமும் பெறுவதாய் அவர் நம்பினார். இந்த ‘கமா’ வடிவ முறையுடன் முரண்பட்ட நிறைய எழுத்தாளர்கள் இருந்தபோதிலும் டேம் எடித் சிட்வெல் போன்ற கவிஞர்கள் இந்த முறைக்கு வரவேற்பளித்தனர்.
1949ஆம் ஆண்டிலிருந்து 1951ஆம் ஆண்டு வரை நியூ டைரக்ஷன்ஸ் வெளியீட்டு நிறுவனத்தின் இணை ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்பு நியூயார்க் சிட்டி காலேஜின் கவிதைப் பட்டறையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
1964ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பணியையும் விட்டு விட்டு நியூயார்க் ஸ்கூல் ஃபார் சோஷியல் ரிசேர்ச் (New York School for Social Research )இல் 1964லிருந்து 73ஆம் ஆண்டுவரை ஆசிரியப் பணியை ஏற்றார். இந்தக் கால கட்டத்தில் அவர் இலக்கிய வட்டாரங்களிலிருந்து வெளியேறிவிட்டாரோ என்று தோன்றும்படியாக இருந்தது. ஐ.நா சபைக்கான பிலிப்பைன்ஸ் தூதுக் குழுவின் கலாச்சார இணை அதிகாரியாக 1952லிருந்து 1963வரை இருந்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் கலாச்சார ஆலோசகராக 1968இல் அமர்த்தப்பட்டார்.
கல்லூரி தவிர அவரது இல்லத்திலும் கவிதை பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். டபிள்யூ.ஹெச்.ஆடன், எலிசபெத் பிஷப், எடித் சிட்வெல், மரியன் மூர் போன்றவர்களின் இலக்கிய வட்டத்தில் அவரால் முக்கிய இடம் பிடிக்க முடிந்தது மட்டுல்ல அவர் கவிதைகளை அவர்கள் வாசித்து ஏற்றனர் என்பது சரிசமமான முக்கியத்துவம் பெறும் விஷயம்.
1942இல் அமெரிக்காவில் வில்லாவின் Have come, am here கவிதைத்தொகுதியை வைக்கிங் வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. இதன் மூலம் அமெரிக்காவின் இலக்கிய எல்லைகளில் அவரது இடத்தைப் பதித்தார். Have come இரண்டு அமெரிக்கக் கவிஞர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. ஒருவர் மார்க் வேன் டோரன். மற்றவர் இ.இ.கமிங்ஸ். இந்தத் தொகுதியின் வெளியீட்டுக்கு முந்தியும் பிந்தியும் கமிங்ஸ் மாறுபட்ட மனநிலைகளில் இருந் தார் என்பது தெரிகிறது. 1938ஆம் ஆண்டிலிருந்து கமிங்ஸை சந்திக்க பல கடிதங்கள் எழுதியும் பதில் பெறாமல் வில்லா இருந்திருக்கிறார். இதில் கூடுதல் விசேஷம் என்னவென்றால் கமிங்ஸின் மொத்தக் கவிதைத் தொகுதியையும் படித்த பிறகுதான் உரை நடை (சிறுகதை) எழுதுவதை விட்டுவிட்டு முழுமையாகக் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் வில்லா. இறுதியில் கமிங்ஸ் நண்பராகவும் கவிதை எழுது வதற்கான தூண்டுதலாகவும் அமைந்தார். இந்த இரு கவிஞர்களின் நட்பு இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நீடித்தது.
Volume two என்ற கவிதைத் தொகுதி 1949இல் வெளிவந்தது. இந்தத் தொகுதியில்தான் வில்லாவின் கமா கவிதைகள் முதன்முதலில் வெளிவந்தன. விவாதங்களை எழுப்பச் செய்தன இந்த ‘கமா’ கவிதைகள். வில்லாவின் இறுதியானதும் மிக முக்கியமானதுமான செலக்டட் போயம்ஸ் அன்ட் நியூ ( Selected Poems and New ) 1958-ல் வெளிவந்தது. நியூயார்க் இலக்கியக் களம் வெள்ளை அமெரிக்க எழுத்தாளர்களால் அரசோச்சப்பட்ட காலகட்டத்தில் வில்லா தனக்கான இடத்தை நிறுவிக் கொண்டது ஆச்சரியமளிக்கிறது. 1948ஆம் ஆண்டு லைஃப் பத்திரிகை ஆசியக் கவிஞரின் வருகையை அறிவித்து எழுதியபோது வில்லாவின் இலக்கிய ஸ்தானம் கூடுதலாய் ஸ்திரமாயிற்று. மேன்ஹேட்டனிலிருந்த கோத்தம் புக் மார்ட் என்ற புத்தக விற்பனை நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு பிரசித்தி பெற்ற புகைப்படம் ஒன்றும் அதில் வெளிவந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த இலக்கியவாதிகளின் பட்டியல் பின்வருமாறு: டென்னஸீ வில்லியம்ஸ், மரியன் மூர், எலிசபெத் பிஷப், ரேண்டல் ஜேரல், டபிள்யூ.ஹெச். ஆடன், அவருக்கு அருகில் வில்லா.
மெலுஸ் [ MELUS ] என்ற ஆய்வுப் பத்திரிகையின் 2004ஆம் ஆண்டின் இதழில் டிமோதி யூ (Timothy Yu) என்ற கீழைத்தேயவியல் விமர்சகர் பின்வருமாறு எழுதியது கவனிக்கப்பட வேண்டும்:
“ The presence of Villa, an actual Asian subject, as modernist writer is quite different kind of subversive Orientalism; he threatens to overturn the Orientalist hierarchy at the heart of modernism, in which classic Asian art and literature provide passive inspiration to a vibrant Western modernism.”
வில்லா ஒரு வெள்ளை எழுத்தாளர் அல்ல என்ற பிரக்ஞை கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். 1946ஆம் ஆண்டு ஹென்றி மில்லர் வில்லாவுக்கு எழுதிய கடிங்களில் ஒன்றில் எழுதியதையும் ஊன்றிப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்:
ஹென்றி மில்லர் பின்வருமாறு எழுதினார்: “ What amazes me, since you were born in the Phillipines, is your deep grasp of English.”
1942ஆம் ஆண்டு நியூ ரிபப்லிக் என்ற பத்திரிகையில் எழுதிய முன்னணி விமர்சகர் பேபட் டியூட்ச் வில்லாவுக்கு ஒரு ஆழ்பார்வை மிக்க மதவியல் கவிஞர் என்ற தகுதியை அளித்துப் பாராட்டினார்.
அதே ஆண்டு நேஷன் பத்திரிகையில் எழுதிய மரியன் மூரின் வரிகள்: “ ....ravely deep poems'' where ''final wisdom encountered in poem after poem merely serves to emphsize the disparity between tumult and stature.
வில்லா பயன்படுத்திய ஆங்கிலம் இந்திய எழுத் தாளர்களும், கரீபிய, ஆப்பிரிக்க எழுத்தாளர்களும் பயன்படுத்திய காலனியாதிக்க எஜமானர்களின் ஆங்கிலத்திற்கு சமானமானது அல்ல என சில பின் -காலனிய இலக்கிய விமர்சகர்கள் சொல்லக்கூடும்.
ஒரு இம்ப்பீரியலிச மொழியைத் தனதாகக் கோரிய ஜோஸப் கோன்ராட் மற்றும் விளாதிமிர் நெபக்கோவ் ஆகியோர் செய்ததுபோல வில்லா நிரூபித்தார்: மொழியியல் உரிமை கொள்ளல் என்பதற்கும் ஸ்தூல பூகோள எல்லைகளுக்கும் தொடர்பில்லை என்பதை. மேலும் கவிதையின் வாக்கியக் கட்டுமானம் என்பது சாதாரண உரையாடலின் கட்டுமானமோ அன்றி உரைநடையின் கட்டுமானமோ அல்ல. அவர் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் கூட அது அதற்குரிய விநோதத் தன்மைகளுடன்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அவர் ஒரு விநோதமான மனிதர்: டவ்கிலியன், அதாவது புறா, பருந்து மற்றும் சிங்கமாக இருந்தவர்.
வில்லா பிலிப்பைன்ஸ் அதிகார வர்க்க அமைப்புகளை மட்டும் பகைத்துக் கொள்ளவில்லை. அவரது தந்தையிடமிருந்தும் பிரிந்து சென்றார். அவரது தந்தை ஜெனரல் அக்வினால்டோ ஒரு மருத்துவர் மற்றும் படையணி அதிபராக இருந்தார். அவரது பதவி ஒரு கர்னலுக்கு இணையானது. ஆனால் மகனின் நடவடிக்கைகளை ஏற்காமல் அவன் அமெரிக்கா சென்றபின் பண உதவியை முற்றிலுமாய் நிறுத்திவிட்டார். வில்லா ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற கனவு அவரது தந்தைக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. நிலைத்த பகைமை உறவே இறுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நிலவியது. பல நவீன இலக்கிய விமர்சகர்கள் சொல்வதுபோல அவர் ஓர் வெகுண்டு எழுந்த போராளி. மேலும் அவரது கவித்துவ மற்றும் மொழித்திறன்களை எவர் ஒருவராலும் குறைசொல்ல முடியாதிருந்தது. பிலிப்பைன்ஸில் ஓர் ஆயுதம் தாங்கிய போராட்ட விடுதலைக்கான தயார்நிலை இருந்தபோது பல இடதுசாரிகள் கலை கலைக்காகவே என்றிருந்த வில்லாவை புறக் கணித்தார்கள். இடதுசாரி வறட்டுவாதிகள் கண்டனம் செய்து ஒதுக்கப் பார்த்தனர்.
வில்லாவின் கவிதைகளின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கையானது முற்றிலும் உள்வயப் படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஒருவேளை ஜெரார்ட் மேன்லி ஹாப்கின்ஸ் என்ற கவிஞர் சிலாகித்த இன்ஸ்கேப்ஸ்-க்கு இணையானதாய் இருந்திருக்கும். கவிதையில் வில்லாவுக்கு முன்வைப்பதற்கோ அல்லது தற்காப்பதற்கோ கவிதையைத் தவிர வேறு எதுவும் இல்லாமலிருந்தது என்பதை அவர் கவிதைகளின் ஊடாய் வாசிக்கும் வாசகன் புரிந்து கொள்ள இயலும். ஆனால் வில்லா எழுதியது போன்ற கவிதைக்கு ஒரு கூர்ந்த விமர்சன அறிவாண்மை அத்தியாவசியமானதாய் இருந்தது. உணர்ச்சிப் பாக்களை எழுதும் கொடையும் இதற்கு இணையானதொரு தேவையானது. இவை இரண்டுமே அவரிடம் அபரிமிதமாய் இருந்தன என்பதை எவராலும் மறுக்க இயலவில்லை. அவரது கவித்துவ மென் உணர்வானது உரைநடையுடன் எந்த உறவாடலும் கொள்ளாத் தூய்மையுடன் இருந்தது -அவர் உரைநடையில் புழங்கியவர் மற்றும் சிறந்த சிறுகதைகளை எழுதியவர் என்ற போதிலும்.
வில்லாவின் கவிதைகளைப் பற்றிப் பேசும் விமர்சகர்கள் அவரை வில்லியம் பிளேக் (William Blake 1757-1827 ) என்ற ஆங்கிலக் (பிரித்தானிய) கவிஞரின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பேசி இருக்கின்றனர். இந்தப் புள்ளியின் விவாதத்தை புரிந்துகொள்ள நாம் வில்லியம் பிளேக்கின் கவிதைகளுடன் அறிமுகம் கொண்டவர்களாய் இருத்தல் அவசியம். குழந்தைத் தன்மைமிக்க கள்ளமின்மை என்ற அம்சம் இவர்கள் இருவரையும் இணைப்பதாகக் கொள்ள முடியும். குறிப்பாக வாசகர்களுக்கு பிளேக்கின் கவிதை நூலான Songs of Innocence and of Experience ( 1789 ) -ல் இடம்பெறும் கவிதைகள் மிக இன்றி யமையாத வாசிப்பாக இருக்கும். புலி என்ற தலைப்பிலான கவிதையை பள்ளிக் காலத்திலேயே படித்தவர்கள் இருக்கக் கூடும். 1950களில் அமெரிக்கா வில் நிகழ்ந்த எதிர்க்கலாச்சாரத்தின் விளைவாக உருவான பீட் கவிஞர்களான ஆலன் கின்ஸ்பர்க்கும், பாப் டைலானும் பிளேக்கின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற தகவல் முக்கியமானது.
சிற்றடக்கமான ஆசிரிய வசனங்கள் ( Aphorism ) எழுதுவதிலும் தன் முத்திரையைப் பதித்தவர் வில்லா. ஆனால் ஆங்கிலத்தில் பொதுவாக இதற்கான வார்த்தையான Aphorism க்குப் பதிலாக Xocerisms என்ற வார்த்தையை அவர் உருவாக்கினார். கவிதையின் முதல் வரி: “The poem's First line: The Coiled Cobra” ஆக இருக்க வேண்டும் என அவர் சொன்னது அவரது கவிதைகளுக்கு முற்றிலும் பொருந்துகிறது.
O
இந்தக் கவிதைகள் யாவும் கீழ்க்கண்ட அச்சு நூலிலிருந்து தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கப்பட்டவை: JOSE GARCIA VILLA- Doveglion / Collected Poems / Edited by John Edwin Cowen / Penguin Classics (2008)
நொய்யல் (நாவல்), தேவிபாரதி, தன்னறம் பப்ளிகேஷன், குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை-635307 & 98438 70059. விலை: ரூ 800.
(27.11.22 ஒசூர் ‘புரவி-கூடுகை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
25 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த தேவி பாரதியின் கவிதைத்தொகுப்பான ‘கண்விழித்த மறுநாள்’ தொகுப்பின்பின் அட்டை உள்பக்கத்தில் அவரது அடுத்தபடைப்பு ‘நொய்யல்’ நாவல் எனும்குறிப்பு இருந்தது. அந்த நாவலை இவ்வளவு ஆண்டுகாலம் கழித்து இப்போதுதான் பார்க்க நேர்கிறது. இதற்கிடையில் அவர் சில சிறுகதை - நெடுங்கதைத் தொகுப்புகள் கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நீர் வழிப்படூஉம்’ என மூன்று நாவல்களையும் எழுதிவிட்டார்.
பொதுவாகவே, தேவிபாரதியின் நெடுங்கதைகள் நவீனத்தமிழின் ஆற்றொழுக்கான நடையில் எழுதப் பட்டவையாகும். அவற்றில், வட்டார வழக்குகளின் மொழிப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இருக்கும். நெடுங்கதைகளில் அவர் கையாளும்மொழி முற்றிலும் நவீனத்துவம் சார்ந்த ஒன்றாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. தவிர, செழுமையான அந்த மொழிப்பின்புலத்தில் வைத்து மனிதவாழ்வு குறித்த பேரவலங்களையும், உன்னதங்களையும் தொடர்ந்து விசாரணை செய்கிற ஒன்றாகவும் அந்நெடுங்கதைகள் இருக்கின்றன. விசாரணை என்பது தத்துவங்களின் பாற்பட்ட அகவயப்பட்ட திறப்பிற்கான சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
மனித வாழ்வின் இடர்பாடுகளை, நுண்ணுணர்வு களை எழுத முற்படுகையில் பல்வேறுவிதமான சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. சிலநேரம் மொழி நம்குறுக்கே வழிமறித்து நின்று எதனை- எப்படி பேசுவது என்கின்ற சிறிய குழப்பத்தை முன்வைக்கிறது. சொல்வதற்குகந்த மொழித் தேர்வினை அநாயசமாகத் துண்டித்துவிட்டு இவ்விடத்தில் இயங்குகிற ஆற்றலும் வல்லமையும்சாத்தியம் இல்லைதான். தவிர, படைப்பின் துல்லியவெளிப்பாட்டுக்கு - நம் உள்ளார்ந்து கிடக்கும்அர்த்தப் பொதிவுகளுக்கு - அந்தத் தருணத்தின், அந்த நொடியின் தீர்மானிப்பே படைப்பின் வடிவத்தை மெல்லத் தொட்டுணரச் செய்கிறது. பிறகுதான், அந்தப் பாதை படைப்பின் அடர்ந்த கனதியைப் பொறுத்து நீண்டு செல்கிறது.
நாவல்களைப் பொறுத்தவரை, தேவிபாரதி பெரும் பாலும் வட்டாரவழக்கின் மொழிநடையை மிகச் சரளமாகப் பயன்படுத்துகிறார்.
அவரது நாவலின் கதைக்களங்களுக்கு படைப்பின் நம்பகத்தன்மைக்கு உச்சபட்ச செறிவினையூட்டி, வாசகரை நெருக்கமாக உணரச் செய்கிற வட்டார மொழியின் தேவை அவ்வளவாக இருக்கிறது. அதை வாரியெடுத்துக் கைக்கொள்ளாமல் அந்த மனிதர்களின் கதைகளை, அந்நிலப்பரப்பின் கதைகளை ஒருபோதும் சொல்லிவிட முடியாதென உணர்ந்திருப்பதால்தான் இந்த மொழி அவருடைய நாவல்களில் பிரதானப்பட்டு இருக்கிறது.
இந்த ‘நொய்யல்’ நாவல் நிகழும் கதைக்களம் கொங்கு மண்டலத்தைச் சார்ந்ததாக இருப்பினும், கொங்குநிலப்பரப்பு என்பதை ஒரு முகமாக - ஒருபடித்தானதாக நாம் பொத்தாம் பொதுவாக முன்வைத்துவிட முடியாது. அரசு நிர்வாகக் காரணங் களுக்காகக் கொங்குமண்டலம் என்பது எட்டுமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், வடபுலமான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியின் வழக்குமொழி முற்றிலும்பிற மாவட்ட எல்லைகளுக்குப் பொருந்தாத வேறொன்றாக இருக்கிறது. தென் புலமான ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் மொழிப்புழக்கம் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
அந்தவகையில் கொங்கு மண்டலத் தென்பகுதி யையும், வடபகுதியையும் பொதுவாக்கிவிட முடி யாது. பல்வேறு சொற்கள் இந்த நிலப்பரப்பினுள் மிகுந்த மாறுபாட்டுடனே புழக்கத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபடித்தானதாக ஒரே சொற் களின் புழங்குதன்மைகொண்ட நிலமாக கொங்கு நிலப்பரப்பு இல்லை.
இவ்விடத்தில், மனிதவாழ்வு சந்திக்கிற இடர்ப் பாடுகளையும், அதனுடைய மாயத் தன்மையான கற்பிதங்களையும் சொல்வதற்குரிய மொழியாக ஈரோடு, திருப்பூர் சார்ந்த கொங்குவட்டார வழக்கு மொழியினைத் தேவிபாரதி பயன்படுத்தி இருப்பதையும், அதைப் பரவலாக வாசகர்களுக்கு கடத்தும் படி செய்திருப்பதையும் இந்தநாவல் பெருமளவு சாத்தியப்படுத்தி இருக்கிறது.
மனிதகுலம் தத்தமது தொல்மரபுக்கதைகளை, நம்பிக்கைகளை, சடங்குகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு வெளிப்பாட்டு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால் அதைமொழியில் கொண்டு வரும்போது அதில் தனித்தியங்குவதற்கு எளிமையின் பூடகச் சொற்களைக் கொண்ட, நாம் சார்ந்த நிலத்தின் வட்டாரவழக்குமொழியைப் பயன்படுத்தி அந்தத் தொல்குடிக்கதைகளை அந்தரத்தில் ஒலிக்கும் ஓர் அசரீரியைப்போல் சொல்லிப் பார்ப்பதென்பது இந்த ’நொய்யல்’ நாவலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொங்குத்தமிழின் நன்முயற்சியாகக் கருதலாம்.
‘நொய்யல்’நதி, அதன் கரையில் வாழும் மனிதர்களுடைய வாழ்வின் அங்கமாகவும், அவர்களுடன் பின்னிப்பிணைந்த உயிர்ப்புமிக்க ஒரு வஸ்துவாகவும், மேலும் அவர்களது எல்லாவித நம்பிக்கைகளின் சாரமாகவும் அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது ஒற்றைநதியின் கதையாக மட்டுமே முன்நிறுத்தப்படாமல் அந்நிலப்பரப்பின் மனிதர்களதுஒட்டுமொத்தக் கதைகளாகக் கிளைத்துப் பரவி இருக்கிறது. இயல்பாகவே ஒருநிலப்பரப்பின் கதையைச் சொல்லும்போது, அங்கே குறிப்பிட்ட சாதியின் கதையாக அல்லது ஆதிக்கச் சாதிக்கும் அல்லது அதற்கு எதிர்நிலைச் சாதிக்கும் உண்டான பகைமுரண்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறஒன்றாக அமைந்துவிடுவது இருக்கும். ஆனால், இந்த ‘நொய்யல்’ முன்னிறுத்தும் கதைமாந்தர்கள் - சாதியின் பல்வேறு அடுக்குநிலைகள் அவர்களுக்குள் இருப் பினும்- புழங்குசாதி, புழங்குவதற்கு அப்பாற்பட்டசாதி என்ற படிநிலைகள் அவர்களுக்குள் மறை முகமாகவும் நேரிடையாகவும் இருந்தாலும்கூட, குறிப்பிட்ட சில அபூர்வமான தருணங்களில், அது ஒன்றை ஒன்று மீற முடியும் என்கிற இளகுத்தன்மை யையும் நாவல் தனக்குள் கொண்டிருக்கிறது.
அது சாத்தியப்படுவதற்கு மனிதவாழ்வு தனதுசாதிப் பெருமிதங்களையெல்லாம் கடந்து நிராதர வாக்கப்படும்போது அல்லது நிர்க்கதியாகக் கையளவு சோறுக்கு வழியின்றி நிற்கும் சூழல் நேர்ந்துவிடும் எனும் எதிர்கால அச்சம் பிடித்தாட்டும்போது அல்லது தாம் காப்பாற்றி வந்த ஆதிக்கச் சாதியின்பெருமைப் போர்வை கிழிந்து தொங்கும்போதுதான் அதுவரையிலான கௌரவத்தின் பிடிமானம் அற்றுப் போக நேர்கிறது... அப்படித்தான் நாட்டார் தெய்வங் களின் பின்புலத்தில் சாதி என்ற கனத்த திரை நாட்டார் தெய்வமாகிப்போன தேவனாத்தா கோயிலின் முன்பாக மெல்லக் கிழிபடுகிறது. அந்நேரம், அதி காரம் - கௌரவத்தில் உயர்ந்ததாகக் கருதப்பட்ட வெடத்தலாங்காட்டுப் பண்ணாடிகள் நாட்டார் தெய்வத்தின் ஆகிருதியில் கட்டுண்டு சிலையாக நிற்கிறார்கள்.
அதிலொன்றும் தவறில்லை, அவர்கள் அப்படியே நின்று கொண்டிருக்கட்டும்...
இந்த ’நொய்யல்’ நதி, அதனை ஒட்டி வாழ்கிற மனிதர்களின் சுபாவங்களில் உண்டாக்குகிற அபூர்வ மாற்றங்கள் - அதனுடன் பொருந்திப் போகிற நம்பிக்கைகள் - வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் அலாதியானது. ஒரு சகமனிதனைப்போல அல்லது தனக்கு அணுக்கமான கடவுளைப்போல அல்லது நமது ஒட்டு மொத்த வாழ்வையும் நிர்மூலமாக்க வந்த ஒருகொடும் துயரமாக, யாவற்றையும் அழித்தொழித்து விடும் அடங்காத சூறையாக அல்லது ஊர்எல்லையில் வீற்றிருக்கும் நாட்டார் தெய்வமான தேவனாத்தாளே நொய்யல் நதியாகவும் மருவிக்கிடக்கிறது. நதியை, சூறைக்காற்றைக் கரங்கூப்புவது தொன்றுதொட்டு இயற்கையை வணங்கி வருகிற தொல்மரபின் நீட்சியாகும். அப்படியாகத்தான், உள்ளார்ந்த தெய்வத் தன்மையை ஒருநதியின் முகமாக உள்வாங்கிக் கொண்டே அந்நொய்யல்கரைவாசிகள் அங்கு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கரைகொள்ளாது ஊருக்குள் புகுந்து ஓடித் திரிந்தாலும் அல்லது காய்ந்துபோன வெம்பரப்புமணலாக திரிந்து கிடந்தாலும் எப்போதும் அது, அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.
நாவிதரான குமரப்பபண்டிதன் இந்த நாவலின் மிகமுக்கியமான பாத்திரம். சேவை சாதியைச் சார்ந்த அவர் சாதிரீதியாக கீழ்மைப்படுத்தப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒருவராக இருந்தாலும், தன் முனைப்பால் அவர் கற்றுக்கொண்டுள்ள ஜோதிட மற்றும் ஜாதக பலன்களை கணிக்கும் திறன், பிணிபோக்கும் மருத்துவஞானம் அல்லாமல் ஒருநல்ல வார்த்தை அவர் சொல்லிவிட்டால் தம்காரியத்தை அடுத்து தயங்காமல் பார்க்கலாம் என்கிறபண்ணாடிகளின் அசாத்திய நம்பிக்கை என ஒரு வித்தியாசமான பார்வையை நாவல் முன்னிறுத்துகிறது. வறட்சியின் கோரப்பிடியில் ஊர் சிக்குண்டிருக்கும்போது குமரப்ப பண்டிதனின் ஒற்றை வார்த்தையை நம்பித்தான் அந்தக் கிணற்றைத் தோண்டுகிறார்கள். இறுதியில், நீர்க் கண்கள் தட்டுப்படாமல் பரிதவித்து ‘ஓர் நல்வழி பிறந்துவிடாதா’ எனும் ஏக்கம் படரும்போது அவர்கள் குமரப்ப பண்டிதன் முன்னால் கிட்டத்தட்ட கையேந்திப் பிதற்றுகிறார்களே அக்கணத்தில் பண்டிதன் வெறும் ஓர் நாவிதன்தானா...? அதுகாறும் தன்மீது வாரியிறைக்கப்பட்ட கீழ்மையின் சகதிகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு நிற்கும் அவர்களின் கடவுள் அல்லவா...?
வேம்பணகவுண்டர் - சாமியாத்தாள், குமாரசாமி - பூபதி - வேலாத்தாள் - கிரிக்கவுண்டர் - காரிச்சி - சென்னிமூப்பன், நாய்க்கர்கள் என பலதரப்பட்ட பிரிவு மனிதர்களும் இந்த நாவலில் உலவுகிறார்கள். ஆனால்இந்த நாவல் சாதிகளுக்குள் இருக்ககூடிய ஏற்ற இறக்கங்களை பிரதானப்படுத்தி முன்னிறுத்துகிற ஒன்றாக தொழிற்படவில்லை. அதனுடைய ஏற்றஇறக்கங்களைக் கடுமையான மொழியில் விமர்சிக்கக்கூடிய ஒன்றாக இல்லை. ஆனால் அந்த சாதியப்படிநிலை உண்டாக்குகிற அவலத்தை வாசகர்கள் புரிந்துகொண்டு, தம் மனதளவில் விமர்சிக்கக்கூடியஒருவராக மாறும்படி அரவமின்றி நிர்பந்திக்கிறது. அந்த விமர்சன மனப்பான்மையிலிருந்து இந்தநாவலை விலக்கி வைத்துவிட்டு, சாதாரணமாக வெறுமனே ஒரு கதை சார்ந்ததாக, அதீதத்தின் உருவக மாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதி மேலெழுந்தவாரியாக ஒருவாசகன் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
‘சாமி எசமாங்களே ராசாங்கமே’ என்ற குரல் தனித்து ஒலிக்கும் குரல் அல்ல. அது கீழ்நிலைப் படுத்தப்பட்ட ஒருவன் தன் ஆழ் மனதிலிருந்து தன்னியல்பாகவே வெளிப்படுத்தி காலத்திற்கும் நான் உங்களுக்கு சேவகம் புரியவே உயிர்பிழைத்து இருக்கிறேன் என்பதனை நேரடியாகவே சொல்கிற வார்த்தையாகும். அந்த இழிவு சுபாவத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதை அவ்வளவு சுலபத்தில் மாற்றி வைத்துவிட முடியுமா...? ஆனால் தெய்வம் அல்லது பிசாசு என்ற நம்பிக்கைகளின் வழி ஓர் ஊரே பிதிர் கெட்டு நிற்கும்பொழுது மாயத் தன்மையிலான அந்தச் ‘சங்கிலி’ உடைபடுகிறது தெய்வநிலை அல்லது தெய்வத்தன்மை அல்லது பயந்தடங்கும் படியான அமானுஷ்யமான பேயின் வருகையின் பொருட்டோ அந்தக் கண்ணி சட்டென உடைகிறது.
கூடியிருக்கும் சபையின் முன்பாக, மாதாரிப் பெண்காரிச்சி அவ்வளவு சுலபமாக கிரிக் கவுண்டரை - அது என்ன காரணமாக இருந்தாலும் அதைமுன்னிட்டு - நெஞ்சோடு சேர்த்து அணைத்துவிட முடியாது. வழிவழியாக வந்த அவர்களது நம்பிக்கை களின் பொருட்டு, தம்மை சூழ்ந்திருக்கக்கூடிய-ஊரைப் பிடித்திருக்கக்கூடிய தீவினைகளிலிருந்து வெளிவருவதற்கு ‘காரிச்சியின்’ மேல் இறங்கி இருக்கும் ‘பார்வதி’ எப்படியேனும் கிரிக்கவுண்டரை அடையாமல் விடமாட்டாள் என்கின்ற புரிதலிருந்தே சபை முன்பாக காரிச்சி கிரிக்கவுண்டரை அணைக்கிறாள். இதுவரையிலான கொங்குவட்டாரக் கதைகளில் காணப்படாத ஒன்று. ஆனால், அதை எந்தவிதமான நெருடலுமின்றி, அந்த ‘நொய்யல்’ நதிநீரின் விசைக்கேற்ப அதில் ஓடுகிற சிறிய உயிரினங்கள், மிதக்கும் சருகுகள்போல கடந்து போகும்படி பிரதியில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் தேவிபாரதி.
கட்டற்ற பாலுறவு வேட்கை ஒரு கொடிய விலங்கினைப்போல் குமாரசாமி - சாமியாத்தாளைச் சுற்றி, பூபதியைச்சுற்றி, ஏன் வேம்பணகவுண்டரையும் ஒருகாலத்தில் சுற்றிப்படர்ந்த சித்திரத்தை இந்தப் பிரதி குறிக்கிறது. ஆனால், அந்த வழிவந்த வெள்ளியங்கிரி என்கிற கிரிக்கவுண்டர், அவனைநெருங்க முடியாமல் உள்ளுக்குள் தவித்துக்கொண் டிருக்கும் காரிச்சி-இந்த இரண்டு பாத்திரங்களும் அதற்கு எதிர்முனையில் நின்று சம்பாஷிக்கின்றன. இதைப் பாலுறவு வேட்கையின் நிலம் என்று அணுக முயன்றால், அதற்கு மாறாக கணவனால் தீண்டப் படாமலேயே தன் உயிரை மாய்த்துக்கொள்கிற ‘பாரு’ என்கிற பார்வதியையும் எதிர்நிலையில் வைத்து சித்தரிக்கிறார் தேவிபாரதி. எவ்விதப் பழிபாவத்திலும் முகங்கொடுக்காத அவளுடைய தூயஆன்மா, காரிச்சியின் மூலமாகக் கணவனான கிரிக்கவுண்டரை தீண்ட முற்படுகிறது. ‘காரிச்சி - கிரி - பார்வதி’, இந்த மூன்று உடலங்களுமே ஒன்றுக்கொன்று புணர்ச்சியின் பொருட்டுத் தீண்டிக்கொள்ளாத தூய ஆன்மாக்களாக இருப்பதால்தான், இது அந்தச்சபையின் முன்பாக நொய்யலின் வெளியில் சாத்தியமாகிறது.
ஊருக்குள் புகுந்து அழிவினை உண்டாக்கி பேரச்சத்தை விளைவிக்கிற ‘நொய்யல்’ நதியும், மனிதர்கள் சூழுமிடங்களிலெல்லாம் அபாயத்தின் அறிகுறிபோல் வந்துபோகிற ‘சூறையும்’ அந்த மனிதர்களின் வழியே அமானுஷ்ய நிகழ்வாக உருவகிக்கப்படுகிறது. கண்ணி கண்ணியாகக் கிளைக்கதைகளை விரித்து செல்கிற இந்த நாவலின்நிலப்பரப்பு மனிதவாழ்வின் உயர்வினைக் கொண் டாடுதல் அல்லது பிழைப்பிற்காக வம்பாடு படுகின்ற அவலநிலை என இருமையுடனிருக்கிறது.
வாழ்வின் நிலையாமையை, மகாபாரத-ராமாயண கிளைக்கதைகளின் வழியாகப் பேசுதல் என்கிற தகவமைப்பினை நாவல் பெற்றிருக்கிறது. உதாரணங்களையும் உவமைகளையும் இதிகாசத்தின் கிளைக்கதைகளிலிருந்து அல்லது நம்பிக்கையின் பாற்பட்ட நாட்டார்வழக்குக் கதைகளிலிருந்து எடுத் தாள்கிற ’நொய்யல்’ நதிக்கரை மனிதர்கள், தமது வழிபாட்டிற்கு பெருந்தெய்வங்களன்றி நாட்டார் தெய்வங்களை மட்டுமே முன்னிறுத்தி தமதுவாழ்வை அதன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அது சொல்கிற ஒருவாக்குக்காக, அதன்முன் தவம்கிடப்பவர்களாக இருக்கிறார்கள். நாட்டார் தெய்வங் களின் ஆகிருதியை, தொன்மக் கதையாடல் வழி யாக நிலைநிறுத்த இந்த ‘நொய்யல்’ நாவல் முற்பட்டிருக்கிறது. அதனாலேயே நம்பிக்கை மற்றும்அச்சவுணர்வு புதிர்க் கதைகளாகவிரிந்து இந்தப் பிரதியினுள் இழுத்துச் செல்கிறது. மருள் ஏறி சன்னதங் கொண்டு பழனி மூப்பன் அடிக்கிற உடுக்கை ஒலி வெடத்தலாங்காட்டு வெட்டவெளியெங்கும் காற்றில் பரவிக்கிடக்கிறது.
அந்த உடுக்கையொலியினூடாகவே, இந்த ‘நொய்யல்’ கரை வாழ்வின் கண்டுணரவியலாத சூட்சுமத்தை - அளவிடமுடியாத கொண்டாட்டத்தை-புறந்தள்ள முடியாத மனித அற்பத்தனங்களை-அவிழ்க்கவியலாத புதிர்களைச் சொல்வதற்குத் துணிந்திருக்கிறார் தேவிபாரதி...
போர்த்தியோன் நகரத்து நீதிபதி மேதாவியானாலும் கொஞ்சம் குஷியான பேர்வழி. பணிப் பெண்ணாக அவர் வைத்துக்கொண்ட, உருண்டு திரண்ட ஸ்தனங்களைக் கொண்ட ஜாக்குலின் என்ன மாதிரியான வேலைகளைச் செய்தாள் என்று அந்த ஜில்லாவில் இருந்த எல்லாருக்குமே தெரிந்திருந்தது. ஆனாலும் போர்தியோன் நகரத்து மக்களுக்குத் தாராள மனது: அந்த நல்ல மனிதரின் நீதிபரிபாலனத்தைப் பெரிதாக நினைத்து, அவர் குஷியாக ஓய்வு எடுத்துக்கொள்வதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
ஒரு நாள் காலை குஷிப்பேர்வழியான அந்த நீதிபதியின் அலுவலக அறையில், வாளிப்பும் வசீகரமும் நிரம்பிய இளம்பெண் ஒருத்தியைக் கண்டதும் அவருக்குச் சந்தோஷ போதை தலைக்கு ஏறியது. முந்தைய இரவில் ஜாக்குலின் அவருக்குப் பரிபூரணமாகச் சேவை செய்திருந்த போதிலும், ரத்தம் சூடேறி மேலிட்ட கிளர்ச்சியை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. “குட்மார்னிங் டியர்” என்று மெல்லச் சிரித்தபடியே, அவருடைய சுபாவப்படி அப்பெண்ணைக் கட்டித் தழுவி கொண்டார்.
“மைலார்ட்!” என்று அலறியபடியே அவருடைய தழுவிலில் இருந்து வேகமாக விலகி வெளிவந்தாள். “நான் உங்களிடம் பிராது கொடுக்க வந்திருக்கிறேன். இது மாதிரி எனக்கு நேர்ந்ததைப் பற்றி விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும்படி கேட்க வந்திருக்கிறேன்”.
“இந்த மாதிரி நேர்ந்ததா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டார். “இது அற்புதமான விஷயம் அல்லவா! சொர்க்கத்துக்கு நிகரான சந்தோஷமான விஷயம் அது; எப்போதும் நினைத்து ஆனந்தப்படுவதுடன், அந்த அனுபவத்தைத் தந்தவனுக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டுமே ஒழிய, அதைப் பற்றிப் புகார் கொடுக்க வந்திருக்கிறாயே, பேதைப் பெண்ணே! உலகம் புரியாத முட்டாளாக இருக்கிறாயே... சரி சரி, என்ன நடந்தது சொல்லு. நீ யார்? அந்த மனிதன் யார்? அவன் செய்த காரியத்தில் என்ன புகார்? ம் ம் ?”
“ஐயா, நான் துணி வெளுக்கிறவள். அந்த ஆள் சீர்துய்ஃஉ செய்த காரியம்...”
“சீர்துய்ஃஉ ஆ? ராஜாவின் அரண்மனைக் காரிய தரிசியா? முட்டாள் பெண்ணே, நன்றிகெட்ட தனமாக அந்தக் கனவான் மீது புகார் சொல்கிறாயே?”
“மை லார்ட், அவர் என்னைக் கட்டாயப் படுத்தினார்...” சிணுங்கினாள் அவள்.
“கட்டாயப்படுத்தினாரா? நம்ப முடிய வில்லையே!” என்றவர், “சரி சரி மேலே சொல்லு” என்றார்.
சீர்துய்ஃஉ சில துணிகளை வெளுக்க அவளிடம் கொடுத்ததையும், வெளுத்த துணிகளை அவர் வீட்டில் போய்த் திருப்பிக் கொடுத்ததையும், அதற்கு உரிய கட்டணத்தைக் கேட்டபோது, அதுவரை அவளுக்குக் கிடைத்திராத, மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தரப் போவதாக அவன் சொல்லியதையும் அந்த அழகிய சலவைக்காரி சொன்னாள். அவன் பூடகமாகச் சொன்னது தங்கமோ வெள்ளியோ அல்ல. அவன் கொடுப்பதாகச் சொன்ன பொக்கிஷத்தைத் தருவதற்கு அவனுக்கு முப்பது நிமிஷத்துக்குக் குறையாமல் ஆனது.
அபிநய பாவனைகளோடு அந்தச் சலவைக்கார சுந்தரி வருணித்தவற்றை இங்கே வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. அம்மாதிரியான கிளுகிளுப்பான கதைகளைக் கேட்பதில் ஆர்வமாக இருக்கும் நீதிபதியும் சுவாரஸ்யத்தோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுச் சொன்னார்: “ஜாலியான கதையா இருக்கே! கேட்டதுமே எனக்குக் குஷியாயிடுச்சி... ஆமாம், உனக்குக் கட்டணமாகத் தரப்பட்ட அற்புதமான விஷயத்தினால உனக்குச் சந்தோஷமே கிடைக் கலையா?”
“ஆமாங்க, எனக்குத் துளியும் சந்தோஷமே கிடைக் கலை; பணமும் கிடைக்கலை. அதனால அந்தக் கனவானிடம் இருந்து நஷ்டஈடா ஆயிரம் க்ரவுன் வாங்கிக் கொடுங்க.”
“துளியும் சந்தோஷம் இல்லியா?” யோசித்தார் நீதிபதி. சீர்துய்ஃஉ துடிப்பாகக் காரியம் செய்கிற அனுபவஸ்தன். பெண்களைப் பரவசப்படுத்துறதுல என்னை மாதிரியே கைதேர்ந்தவன். காதல் களியாட்டத்தில கில்லாடி. இந்தப் போர்தியோன் நகரத்தில இருக்கிற பணிப்பெண்கள் எல்லாருமே அவன் கட்டணம் கொடுத்தமாதிரி கிடைக்காதா என்று ஏங்குவாங்கஞ் நீ என்னடான்னா சந்தோஷம் துளியும் கிடைக்கலை என்கிறாய். நம்ப முடியலையே!”
“மைலார்ட்...” என்று சாந்தமாகச் சொன்னவள், “அதுமாதிரி கொடுக்கிற எல்லா நேரத்திலேயும் ஒரு பெண்ணுக்குச் சந்தோஷம் இருக்குமான்னு உங்க அபிமானச் சுந்தரி ஜாக்குலினிடம் கேட்டுப்பாருங்க” என்றாள்.
“சரி, கேட்கிறேன்” என்றவர், மேஜை மீதிருந்த மணியை ஒலிக்கவும் ஜாக்குலின் அங்கே வந்தாள். சலவைக்காரியின் கேள்வியை அவளிடம் கேட்டார் நீதிபதி. ஜாக்குலின் அதற்குப் பதில் சொன்னாள்:
“சார், அதுமாதியான களியாட்டங்களில் எனக்குரொம்பவும் இஷ்டம். அதனால எனக்கு எப்போதும் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனா நிஜத்தைச் சொல்லணும்னா, சின்னப்பொண்ணா இருந்தப்ப அந்தமாதிரி காரியம் பண்ணும் போதுஎனக்கு வலி ஜாஸ்தியா இருந்தது. இந்தச் சலவைக்காரிக்குச் சீர்துய்ஃஉ-விடமிருந்து சந்தோஷம் கிடைக்கவில்லை என்றால், அவள் சொல்ற மாதிரி கட்டாயப்படுத்தி இருக்கலாம்.”
“தேங்க் யூ மை டியர்” என்று ஜாக்குலினை அனுப்பிவிட்டு, “கட்டாயப்படுத்தினதா நீ சொல்வதை நிஜமான்னு நான் கண்டுபிடிக்கணும்” என்று சொன்னார். “ஒரு ஊசியும் கொஞ்சம் நூலும் கொண்டு வாங்க” என்று உத்தரவு போட்டார்.
ஊசியும் நூலும் வந்ததும், சலவைக்கார சுந்தரி யிடம் நூலைக் கொடுத்துவிட்டு, ஊசியைத் தன் கையில் வைத்துக்கொண்டார். “இப்ப நீ இந்த ஊசியில உன்னோட நூலைக் கோக்கணும்.”
“எதுக்கு மை லார்ட்?”
“எல்லாம் காரணமாகத்தான். நான் சொன்னபடி செய். நான் பிடிச்சிருக்கிற ஊசியின் காதில் உன் கையில இருக்கிற நூலைக் கோர்.”
தோளைக் குலுக்கிக்கொண்ட அந்தச் சலவைக் காரி கவனமாக நூலை ஊசியின் அருகே கொண்டுபோனாள். ஊசிக்குப் பக்கத்தில் அவள் நூலைக் கொண்டு போனதும் நீதிபதி மெல்லத் தன் கையை அசைத்தார். திரும்பவும் அவள் முயன்றாள். இந்தத் தடவையும் நீதிபதி தன் கையை ஆட்டினார். மூன்றா வது தடவை அவள் முயன்றபோதும் அதுமாதிரியே நடந்தது. எரிச்சலான அவள், “நீங்க ஊசியை அசைக் காம பிடிச்சிக்கிட்டு இல்லேன்னா, என்னால அதில நூலை நுழைக்க முடியாது” என்று இரைந்தாள்.
நீதிபதி வெற்றிக்களிப்போடு சிரித்தார். “சரியாய்ச் சொன்னாய் பெண்ணே! நீயும் இந்த ஊசிமாதிரி இடம் கொடுக்காம இருந்திருந்தா சீர்துய்ஃஉவால் எதுவும் செய்திருக்க முடியாது. அவர் கட்டாயப் படுத்தினார்னு சொல்கிறாய்... கதையளக்கிறாயா?... இந்த மாதிரி விஷயங்களில் கட்டாயப்படுத்தினது பற்றி விசாரிக்க எனக்கு இனியும் பொறுமை இல்லை. உன்னுடைய புகாரை நிராகரிக்கிறேன்”.
“மைலார்ட், கொஞ்சம் பொறுங்க. நீங்க நிதானமா ஆராயவில்லை” என்றாள் மென்மையாக. “எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க. நூல் நேரா இல்லாமல் தளர்வா இருந்தால் திறமையான தையல்காரிக்கும் கூட ஊசியில கோர்க்கிறது கஷ்டமாக இருக்கும்ன்னு அவங்க சொல்றதைக் கேட்டிருக்கிறேன்”
“அப்படிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அப்புறம் வேறு என்னவெல்லாம் தையல்காரப் பெண்கள் சொல்லியிருக்காங்க?”
“கொஞ்சம் மெழுகைத் தடவி இந்தமாதிரி நூலை நேராக்கிட்டா வேலை சுலபமா முடிஞ்சிடும். மைலார்ட், எனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுங்க.”
அந்தப் பெண்ணின் சாதுரியமான பேச்சு நீதிபதி யைக் கவர்ந்துவிட்டது. எனவே மறுபடியும் ஊசி யைக் கையில் வைத்துக் கொண்டார். இந்தமுறை உடனடியாக நூலைக் கோர்க்க முயற்சி செய்யாமல், ஊசியைப் பார்த்து நைச்சியமாக உருகிவழிகிற மாதிரி பேசினாள்: “ஆஹா, என்ன அருமையான ஊசி நீ. ரொம்ப மெலிஞ்சு இருந்தாலும் விறைப்பா நேரா இருக்கிற உன் அழகே அழகு. எதற்கும் வளைஞ்சு கொடுக்காத உன்னோட காது என்னை அப்படியே இழுக்குது! அருகே வா, அழகான ஊசியே உன்னைக் கெஞ்சுகிறேன்”. அவளுடைய வார்த்தைகளால் கிறங்கிப்போன நீதிபதி ஊசியை அவளுக்குப் பக்கமாகக் கொண்டுவந்தார். சட்டென்று அவருடைய மணிக்கட்டைப் இறுகப் பிடித்துக்கொண்டாள். அழகான ஊசியே இப்ப என்கிட்ட வந்திட்டியா” என்று கொஞ்சியபடியே மெழுகுகைத் தடவிநேராக்கி வைத்திருந்த நூலை அதன் காதில் கோர்த்து விட்டாள்.
போர்தியோன் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ள விவரங்களின்படி சலவைக்காரப் பெண்ணுக்குச் சீர்துய்ஃஉ நூறு கிரவுன் நஷ்டஈடு தந்ததாகத் தெரிகிறது; அந்தப் பெண் கேட்டதுபோல் ஆயிரம் கிரவுன் கிடையாது. ஆனாலும் ஆவணங்களில் குறிப்பிடப்படாவிட்டாலும், காதில் விழுந்த செய்திகளின்படி, நீதிமன்றத்தின் மற்ற ஒன்பது நீதிபதிகள் தாம் பெற்றுக்கொண்ட சேவைக்காகத் தலா நூறு கிரவுன் தம் பங்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.
அமரர் அருண்மொழியுடன் எனது தொடர்பு என்பது 1977லிருந்து 42 வருடங்களாக நீடித்த ஒரு நட்பு. படங்களைப் பார்த்து ரசித்து விவாதிப்பதையே மையமாகக் கொண்ட உறவு. அவர் சிறிது காலம் தொலைக்காட்சியில் வேலை செய்த கட்டத்தில் பூனே திரைப்பள்ளிக்கு ஆறுமாத பயற்சிக்காக வந்திருந்தார். அது சதீஷ்பகதூர் போன்ற அருமையான சினிமா ஆசிரியர்கள் இருந்த காலகட்டம். அன்று நாங்கள் முதன்முதலில் சந்தித்தது கேரல் கசீனா என்கிற ஒரு செக்கொஸ்லாவிகிய இயக்குனரின் படம் பார்த்த பிறகு தான். அப்படத்தின் பெயர் ஆங்கில மொழி பெயர்ப்பில் எ ஃபன்னி ஓல்ட் மேன்/ A Funny Old Man ( Smesny Pan, dir. Karel Kachyna, 1969). ஏதோ ஒரு வகையிலே இன்று அவரது மாணவர்கள் முகநூலில் பதிவிடும் அவரது போட்டோக்களைப் பார்க்கையில் அவரும் ஒரு வேடிக்கையான வயோதிகராக நடித்திருப்பதில் மகிழ்வுற்றிருப்பதாகத் தெரிகிறது. நடிப்பிற்கான உந்துதல் எங்கேயிருந்து அவருக்கு வந்திருக்கும் என்றெண்ணிப் பார்க்கிறேன்.
அதற்கு நாம் முப்பது வருடத்திற்கு முன் காணி நிலம், ஏர்முனை போன்ற படங்களை அவர் இயக்கிய 1980களின் இறுதிக்கும் 1990களின் தொடக்க வருடங்களுக்கும் போக வேண்டும். அவரது படங்களில் கலைராணி, நாசர், தலைவாசல் விஜய், பாலாசிங் போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். நவீன நாடகத்தில் அவரது ஈர்ப்பென்பது நல்ல சினிமாவுடன் தொடர்புகொண்டது. அவர் பூனே திரைப்பள்ளியில் நான் மாணவனாக இருக்கையில் ‘மூன்றாவது தியேட்டரி’ன் சிற்பியான பாதல் சர்க் காரின் ஒர்க் ஷாப்பில் கலந்துகொண்டார். எழுபது களின் இறுதியில் ஷ்யாம் பெனெகல் கோவிந்த் நிஹாலானி போன்றோரை, பிலிம் பெஸ்டிவல்களுக்கு இடைவிடாமல் செல்லக்கூடிய நாங்கள் பேட்டி கண்டிருக்கிறோம். அவர்களது மாற்றுவழி கலை சினிமா சார்ந்த பயணத்தில் பூனே திரைப்பள்ளி மற்றும் தேசிய நாடகப்பள்ளியைச் சார்ந்த நசிருத்தின் ஷா மற்றும் ஓம் புரி போன்றவர்கள் ஆற்றிய பங்கு அதிமுக்கியமானது. நசீரும் ஓம் புரியும் தேசிய நாடகப் பள்ளியில் அல் காஷி அவர்களின் மாணவர்களாகத் தேர்ச்சிபெற்றபின் பூனே திரைப்பள்ளியிலும் நடிப்புக் கலையைப் பயின்றவர்கள். ஷபானா ஆஜ்மி, சாது மெஹெர் போன்றவர்கள் பூனே திரைக்கல்லூரி யைச் சார்ந்தவர்கள். ஸ்மிதா பாடீல் பூனே திரைப்பள்ளி மாணவர்கள் படங்களில் நடித்ததின் மூலமாகப் பெனெகலுக்குப் பரிச்சயமானவர். போலவே மற்ற சீரிய நாடகக் குழுவிலிருந்து வந்தவர்கள்தான் அம்ரிஷ் புரி போன்ற தேர்ந்த கலைஞர்கள். கிரிஷ் கர்னாட் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவிட்டு பூனே திரைப்பள்ளியின் இயக்குனராகப் பெனெ கலுக்குப் பரிச்சயமாணவர். பெனெகல் சத்யஜித் ரேயைப் போன்று விளம்பரத்துறையில் இருந்து வந்திருந்தாலும் விளம்பரப்படங்கள் எடுத்த அனுபவம் அவருக்கு உண்டு, ரே அவர்கள் ஒரு வரை கலைஞனாக எழுத்தாளனாகத்தான் அந்தத் துறையிலிருந்தார். பெனெகலின் அனுபவம் அவரே நடிகர்களை முன்னிருத்தி தன் படங்களுக்கென ஒரு நுகர்வோர் சந்தையை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக யிருந்தது. வனராஜ் பாட்டியா போன்ற அவரது இசையமைப்பாளர்களும் விளம்பரத்துறையில் இருந்தே அவருடன் பயணித்தவர்களே.
ஷ்யாம் பெனெகலின் ஒளிப்பதிவாளர், பெங்களூர் பாலிடெக்னிகில் அந்தக்காலத்தில் ஒளிப்பதிவில் தேர்ச்சி பெற்று குரு தத்தின் ஒளிப்பதிவாளர் வி.கே. மூர்த்தியவர்களிடம் பணியாற்றிய கோவிந்த் நிஹலானி அருண்மொழியின் மனதுக்குப் பெனெகலை விட நெருக்கமானார். அவரது சீரிய அரசியல் நோக்கும் தீவிர கருத்தியல் சார்பும் அருண்மொழிக்கு அணுக்கமாக இருந்தது. ஆக்ரோஷ் மற்றும் அர்த் சத்யா போன்ற படங்களைச் சேர்ந்து பார்த்திருக்கிறோம். அனந்து அவர்களைப்போல அந்தக் காலத்தில் டயரி குறிப்பு எழுதும் பழக்கம் அருண்மொழியவர்களுக்கு இருந்தது. தொண்ணூறுகளின் மத்தியில் என்னிடம் வந்து பழைய டைரிகளைப் படித்துக் காண்பித் திருக்கிறார். அதில் அவர் பெனெகல்-நிஹலானி போன்று நாடகத்தில் பயின்ற நல்ல நடிகர்களின் கூட்டில் ஒரு மாற்று சினிமா இயக்கத்தைப் பற்றிக் கனவு கண்டது புலனாகியது. இந்த அருண்மொழியின் கடந்த கால வாழ்க்கை எதுக்கு முக்கியம் வாய்த்ததாகிறதென்றால் அவருடைய சுய வாழ்வனு பவங்களை மையமாகக்கொண்டு தனது மாணவரை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு எடுத்துக்கொண்டிருந்தார். கடைசிக் காலகட்டங்களில் அவரது மாணவர் சாமிநாதனின் வீட்டிலும் செம்மலர் அன்னம் மற்றும் அன்னம் அரசுவின் வீட்டிலும் அதிகம் தங்கி யிருந்தார். சாமிநாதன் வீட்டில்தான் நான் சென்ற முறை ஆகஸ்ட் மாதத்தில் சென்னையிலிருந்தபோது செம்மலரின் பிறந்த நாளை கொண்டாடினோம். சாமிநாதன் வீட்டிலிருந்துதான் கடைசியாக அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கச் சென்றிருக்கிறார்.
சாமிநாதன் அவரைக் கடைசியாக அந்தத் தியேட்டர் வளாகத்திலேயே உள்ள ஹாஸ்பிடலில் பார்க்கும்போது சாயந்து மிகக் களைத்தபடி அமர்ந்திருக்கிறார். இசிஜியில் நார்மலாக இருக்கிறது; வெறும் கேஸாக இருக்கக் கூடும் என்று சொல்லியிருக்கிறார்கள். டாக்டர், “எதுக்கும் ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு அழைத்து”ப் போகச் சொல்லியிருக்கிறார். சாமிநாதன்
லைப் சப்போர்ட்டுடன் கூடிய ஆம்புலன்சுக்காகக் காத்திருக்கையில் அது மிக அருகாமையில் வந்த நிலையில் அருண்மொழி விடை பெற்றுக்கொண்டுள்ளார்.
அருண்மொழி சாமிநாதன் வீட்டிலிருந்து அந்த ஜப்பானிய படத்தைப் பார்க்கப் போவதற்கு முன் சாமிநாதனும் அவரும் அதற்கு முந்தைய நாள் அருண்மொழி தனது படத்திற்காக எடுத்த பூடேஜைப் டெஸ்க்டாப்பில் பார்த்திருக்கிறார்கள். அது இயக்குனர் ஹரிஹரனை அருண்மொழியின் கதாநாயகனான துணை இயக்குனர் வேலைக்காகக் காணச்செல்வதைப் பற்றிய காட்சி. அதற்கு முன் இயக்குனர் மிஸ்கினுடனும் அத்தகைய ஒரு காட்சியைத் தனது படத்திற்காக எடுத்திருக்கிறார். அந்தப் பூடேஜைப் பற்றியும் அன்றுஎன்னுடன் பேசினார். வாழ்வனுபத்திலிருந்து விளிம்புநிலையிலிருக்கும் கலைஞர்களையும் பெண்களையும் விவசாயிகளையும் சிமெண்ட் பேக்டரி தொழிலாளர்களைப் பற்றியும் தொடர்ந்து நான்கு பதின் வருடங்களாகப் படமெடுத்த அருண் மொழி சிறிது அயர்ச்சியினால் இளைப்பாறப் போயிருக்கிறார். நாளைக்கே அவரது அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. “என்ன செஞ்சுக்கிட்டிருக்கீங்க?” “இல்ல. க்ளாசுக்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கேன்.” “என்ன கிளாஸ்?” “கேங்க்ஸ்டர் சினிமா பற்றியது.” “நாம பூனேயில் மெல்வில் படங்களைப் பார்த்தது ஞாபகமிருக்கா?” “ஆமா.” “அதைக் காமிச்சாலே போதுமே... ப்ரிபேரஷன் நோட்ஸ்ல்லாம் எதுக்கு... 1977லிருந்தே குறிப்பெடுத்துட்டிருக்கீங்க...” சிறிது மௌனத்துக்குப்பின் “இல்ல... இப்ப இந்தச் சனிக்கிழமை ஷூட் பண்ற சீக்குவென்ஸ் அசோகமித்திரன் சாருக்கு ஹோமாஜா இருக்கணும். நான் அனுப்பின அவரோட கரைந்த நிழல்கள் கதையிலருந்து உள்ள சீனைப் படிச்சுட்டேங்களா...” “ஆமா.” இப்படிச் சினிமா இயக்குநர்கள் மட்டுமல்ல இலக்கியகர்த்தாக்களும் அவர் கூடவே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் அவர் மணிக்கணக்காக ஆவணப்படுத்திக்கொண்டிருந்த சில கலைஞர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.
உதாரணத்திற்கு, நகுலனை அவர் பலதடவைகள் சந்திக்க முயற்சி செய்து பின்னர் ஷூட் செய்திருக்கிறார். நகுலனின் கவிதைகளைப் படித்துவிட்டு ஆர்வமாய் எனது ஊரான வழுதூருக்கு வந்துவிட்டார், நாகர் கோயில் செல்லும் வழியில். பின்னர் நாங்கள் கிளம்பி ரயிலில் போகும்பொழுதுதான் கேள்விகளைப் பற்றிய சிந்தனை. பின்னர் நாங்கள் திருவனந்தபுரம் சென்ற டைந்தபோது புயல் வரப்போவதாக ஒரு அறிவிப்பு இருந்தது. ஆயினும் அவருடன் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு கடற்கரையில் நெடுநேரம்வரை நடந்து சென்றதில் நேரம்போனது தெரியவில்லை. பாஸ்பிண்டரின் ஓர்பாலுறவை பற்றியும் நாங்கள் மாணவர்களாக இருந்த நேரத்தில் பார்த்த அவரது படங்களைப் பற்றியும் அந்த அந்திப்பொழுதில் பேசிக்கொண்டிருந்தோம்.
குறிப்பாகப் பாஸ்பிண்டரின் இன் அ யியர் ஆப் 13 மூன்ஸ் (In a Year of 13 Moons, 1978) என்ற படத்தைப் பற்றி. தஞ்சாவூரில் குடைவாசலிலிருந்து வந்த அருண்மொழிக்கு அணுக்க மான கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்திலிருந்து குறும்படமாக அவர் யோசித்த ஒரு திரைக்கதையையும் அவர் விவரித்தார். அது அருமையாக இருந்தது. சில படங்களை மனதளவில் கண்டுகளித்து விடுகிறோம். திரையில் கண்ட பல படங்கள் சுவடுகள் தெரியாமல் அழிந்தபோதும் அவையழியாமல் மனதில் நினைக்கும்தோறும் நிறைவை அளிப்பதாக உள்ளன.
அருண்மொழி அத்தகைய காட்சிகளை எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் அள்ளி வழங்கியிருக்கிறார். நடந்துகொண்டே, டீக்குடித்துக்கொண்டே.
அடுத்த நாள் நினைத்திருந்தபடி நான் அருண்மொழியுடன் நகுலன் அவர்களின் வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. எனது தங்கம் படத்தின் இணை இயக்குனரான இலாரியாவுடன் சுந்தர ராமசாமியவர்களை அவரது நாவலான புளியமரத்தின் கதையின் (இத்தாலிய) பட உரிமைக்காகச் சென்று சந்திக்க வேண்டியதிருந்தது. அவர் அமரர் பாலு மகேந்திரா போன்ற பலர் சில வருடங்களுக்கு முன்னர் ஆர்வம் தெரிவித்திருந்தனர் என்றும் காப்புரிமை பற்றிக் கறாராக ஒப்பந்தமெதுவும் இல்லை என்றும் சொன்னார். தமிழ் நாட்டிலுள்ள இந்த மாதிரியான காப்புரிமை பற்றிய இறுக்கமற்ற சூழல் மேற்கேயில்லை என்று இலாரியாவின் நண்பர் ஓவியர் சல்வதோரே சிலாகித்தார். இலாரியா அதற்குப்படங்கள் எடுப்பதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தமில்லாமல் ஒத்துக்கமாட்டார்கள் மற்றும் காப்புரிமை சார்ந்த குழப்பம் என்பது எப்போதும் துணை இயக்குனர்கள் போன்ற விளிம்புநிலை கலைஞர்களையே அதிகம் பாதிக்கும் என்றும் வாதாடினார். அதற்குச் சல்வதோரே இங்குக் கலைஞர்களைப்போலச் சிந்திக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார். இத்தகைய கலைஞர்கள் மிகவும் வல்னெரபில் ஆக இருக்கக் கூடியவர்கள். எப்போதும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று எதிர்வினையாற்றினார் இலாரியா.
தங்கத்துக்குப் பிறகு அருண்மொழியுடன் இணைந்து செகண்ட் பெர்த் என்ற படத்தை உருவாக் கினார் இலாரியா. அதில் அவர்கள் கூவாகத்தில் முக்கியக் காட்சிகளை எடுத்தார்கள். திருநங்கைகளின் வாழ்வை மையமாக வைத்து அருண்மொழி எழுதிய கதையாடல் அது. இரண்டாம் பிறவியில் அருண் மொழி இயக்குனராக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துமிருந்தார். கடைசியாக அவர் எடுத்துக் கொண் டிருந்த படத்திலும் ஒரு (துணை) இயக்குனர்தான் மையமாக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில் அரசியல் சார்ந்து படங்களை ரசிக்கும் அருண்மொழியின் மனதில் த்ருபோவின் டே பார் நைட் மற்றும் பெல்லினியின் 8 அண்ட் லு போன்ற அவர் இளவயதில் பார்த்த படங்களின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது என்று சொல்லலாம். இரண்டாம் பிறவிக்குப் பிறகுஅவர் அன்றிலிருந்து இன்றுவரை இருபது வருடங்களுக்கும் மேலாக மாற்றுபாலினரின் வாழ்வை மையப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பவராகவே இருந்துவந்துள்ளார். அவருக்கு எப்போதும் இருக்கும் அக்கறை (கலைஞர்கள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ளோரின்) வாழ்வை ஆவணப்படுத்துதலைப் பற்றியதுதான். செகண்ட் பெர்த்தின் சூட்டிங்கின் போதும் கதையாடலுக்கு வெளியேயிருந்த திருநங்கைகளின் வாழ்வை தனது கைவசமிருந்த ஹை-8 கேமராவில் டேப்பைக்கொண்டு பதிவு செய்திருந்தார். அதில் எங்களூர் பக்கத்திலிருந்து கூவாகத்திற்கு வந்திருந்த எனக்குப் பரிச்சயமான திருநங்கை தாடி வளர்த்து நோய்வாய்பட்டிருப்பதைக் கண்டேன்.
நானும் அருண்மொழியும் பின்னர் எடிட்டிங் ரூமில் எங்கள் மாணவ பருவத்திற்குப் பிறகு 90களில் இந்திய திரைப்பட விழாவில் கே அண்ட் லெஸ்பியன் படங்களின் சிறப்புப் பகுதியில் பார்த்த பல படங்களைப் பற்றிப் பேசினோம். அதில் மேற்கத்திய உலகில் எயிட்ஸினால் மறைந்த பல ஆளுமைகளைப் பற்றிய படங்கள் இருந்தன. அமரர் மார்லன் ரிக்ஸின் டங்ஸ் அன்டையிட் உட்பட (Tongues Untied, dir. Marlon Riggs, 1989) ஓரினச்சேர்க்கையாளர்களுடன் எயிட்ஸை தவறுதலாகத் தொடர்புறுத்தி அவர்களை வன்முறைக்கும் ஒதுக்குதலுக்கும் நிராகரிப்புக்கும் உள்ளாக்கியதைப் பற்றியும் முக்கியமான படங்கள் வந்திருந்தன. ஆனால் நமது நாட்டில் அவர்களது வாழ்க்கை இருட்டடிப்புக்கு உள்ளானதால் அவர் களுடைய அந்த இருண்ட காலகட்டமும் உளவூறும் பதிவாகவில்லை. அருண்மொழியவர்களின் வீடியோ வில் தான் தனது நெருங்கிய நண்பர்களை 1980/90 களில் இழந்த 60 வயதை ஒட்டிய திருநங்கையவர்களின் நேர்காணலைக் கண்டேன். அது எனக்கு எங்களூரை ஞாபகப்படுத்தியது மட்டுமல்லாமல் மிஸ்கின் அவரது கேமராவில் எடுத்திருந்த தாடி வைத்து மாலை அணிந்திருந்த ஒரு திருநங்கையின் உருவத்தையும் ஒத்திருந்ததாகப்பட்டது. அருண் மொழி திருநங்கைளையும் மாற்றுபாலினரையும் ஆவணப்படுத்தியிருந்த அனுபவமும் கைகொடுத்தது. அவ்வாறுதான் எனது படமான கட்டுமரத்தில் ஒரு மைய கதாபாத்திரமான அலங்காரம் உருவெடுத்தார். இன்று எண்ணிப் பார்க்கையில் பல வருடங்களுக்கு முன் கவிஞர் நகுலனைக் காரணமாகக் கொண்டு நானும் அருண்மொழியும் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் கால நேரம் மறந்து நடந்து திரிந்து அளவளாவிய அந்தத் தருணம் பின்னர் நடந்த பல விஷயங்களுக்கு காரணமாக இருந்தது தெரிகிறது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு இருமை சூழ்ந்ததினால் அவசரமாக நானும் அருண்மொழியும் திருவனந்தபுரம் கடற்கரையிலிருந்து திரும்பினோம். அருண்மொழி அவர்கள் (அவரது நண்பர்களுக்குப் பரிச்சயமான) ட்ரேட் மார்க் ஸ்டைலில் தனது ஜீன்ஸை கால் முட்டிகளுக்கு மேலே மடக்கி வைத்து அவரது இரு செருப்புகளையும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் போட்டுக் கொண்டார். நாங்கள் தங்கியிருந்த லாட்ஜை அணுகி அருகேயிருந்த டீக்கடையில் அமரும்போதுதான் அருண்மொழியின் ஒரு செருப்பு காணாமல் போயிருந்தது தெரிந்தது. “நாளைக்கு நடக்கேல எடுத்துக்கலாம்” என்றார் அருண்மொழி பதட்டமேதும் இல்லாமல். நமது கண்முன்னே நடப்பதை ஆவணப் படுத்தலில் ஆர்வம் கொண்ட அருண்மொழி அதற்கடுத்தும் நேசித்தது நடப்பதைத்தான்.
அலைந்து திரிந்து தான் சந்தித்த பேர் தெரியாத மக்களிடம் எப்பவும் பிரியமாக உலகைப்பற்றியும் வாழ்வைப்பற்றியும் அது அவர்களை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் அன்புடன் விசாரித்த அருண்மொழியின் நலம் விசாரித்துத் தோள் கொடுத்தோரும் இருந்தனர். தனது படங்களான காணி நிலம் (1987) மற்றும் ஏர்முனை (1992) மூலம் பல திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. ஷிலா விட்டேக்கர் போன்ற சினிமாவைப் பற்றி நன்கு அறிந்த க்யுரேடர்கள் அன்றிருந்தனர். அவர் காணிநிலத்தை அவர் மனதிற்குப் பிடித்ததினால் ப்ரமோட் செய்தார். பல உலக திரைப்பட விழாக்களுக்கு அன்றே சென்று வந்தவர் அருண்மொழி. குறிப்பாக இன்று சர்வதேச திரைப்படவிழாக்களில் முதல் பத்துக்குள் கணிக்கப்படும் டாப் டியர் பிலிம் பெஸ்டிவல் என்று சொல்லப்படக்கூடிய சுவிட்சர் லாண்டில் நடைபெறும் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் அன்றே காணிநிலம் பங்கேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அருண்மொழி அங்குக் கௌரவப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வு அது. ஆயினும் எல்லா சுயாதீன இயக்குநர்களையும் போல தனது அடுத்தப் படமான ஏர்முனையை அவர் எடுக்க ஆறு வருடங்கள் ஆகியது. தளராமல் தனது ஆவணப்படங்களை இயக்கி வந்த அருண்மொழி ஏர்முனைக்காக அந்தக் காலத்திலேயே இன்று நாம் க்ரௌட் சௌர்சிங் என்று சொல்லக் கூடிய மக்களிடமிருந்து அதுவும் முக்கியமாகக் குறுவிவசாயிகளிடமிருந்து சிறு துளிகளாகப் பணத்தைச் சேகரித்து அவர்களுக்கான குரலாக ஏர்முனையை உருவாக்கினார்.
ஏர்முனை அன்றே இன்றைய விவசாயிகளின் நிலைமையை எதிர்ப்பார்த்துள்ளது. இன்றைய சுற்றுச்சூழல் சார்ந்த கரிசனத்துடன் உரங்களுக்கும் செயற்கை ரசாயனங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்க்கதரிசியாக அன்றே தனது குரலை பதிவு செய்துள்ளார் அருண்மொழி. அத்தகைய ஒரு படத்திற்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அனுமதி இல்லை என்றவுடன் வருத்தமடைந்தார். நாங்கள் கல்கத்தாவில் நடந்த இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்தியாவில் 1991ல் தனிப்பட்ட முறையில் ஏர்முனையைத் திரையிட்டோம். பல நண்பர்களையும் முக்கிய இயக்குனர்களையும் அழைத் திருந்தோம். எங்களுக்கு மகிழ்ச்சியான அதிர்ச்சி தந்த விஷயம் என்னவென்றால் நாங்கள் மிருனால்-தா என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும் புகழ்பெற்ற வங்காள இயக்குனர் மிருனால் சென் அத்திரையிடலுக்கு வந்திருந்ததுதான். கல்கத்தாவில் ஆயிரம் முக்கியமான கலைஞர்கள் இருந்தாலும் சினிமாவைப் பொறுத்தவரை சத்யஜித் ரே, ரித்விக் கடக் மற்றும் மிருனால் சென் தலையானவர்கள். அதிலும் கவிஞர்களும் பிலிம்மேக்கர்களும் சூழ்ந்து உள்ள கல்கத்தாவில் திரைப்பட விழா என்றால் மிருணால் சென்னுக்கு உள்ள காலஅவகாச இக்கட்டை எண்ணிப்பாருங்கள். அதுவும் கடக் அவர்கள் அப்போது இல்லை. ரேயும் உடல் நலம் குன்றியிருந்த காலமது. மிருணால் சென் திரையிடலுக்கு வந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஒரு பெரிய ஹாலில் ஏர்முனைக்காகக் குரல் கொடுக்கவும் செய்தார்.
சென்: “தமிழ்நாட்டிலிருந்து எந்தப் படமும் தகுதி பெறவில்லை என்றறிகிறேன். ஏர்முனை போன்ற படத்தை நிராகரித்ததற்குக் காரணம் சொல்ல முடியுமா?... என்எப்டிசி போன்ற நிறுவனங்கள் ஏர்முனை போன்ற படங்களை எடுப்பதில் உதவி புரியவேண்டும்... இல்லையெனில் கஷ்டப்பட்டு எடுத்த படத்தையாவது மக்களிடம் எடுத்துச் செல்வதில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அம்மா அறியான் என்ற ஒரு அருமையான மலையாள திரைப்படத்தையும் இப்படித்தான் மக்களிடம் சென்றடைவதிலிருந்து தடுத்தீர்கள். திரைப்பட விழா எனும் இவ்வெளி யாருக்கானது என்று கேக்கிறேன்... மக்களுக்கானதும் மக்களுக்கான படங்களுக்கும் அது இல்லையெனில்...”
சென் அவர்கள் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு ஏர்முனை போன்ற சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சரியாகச் சப்டைட்டில் செய்யப்படாத ஒரு இளம் இயக்குநரின் தமிழ் படத்திற்குக் குரல் கொடுத்தது எங்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்வையும் மகிழ்வையும் ஏற்படுத்தியது. அருண்மொழியும் நானும் அவரிடம் நன்றி சொல்ல வார்தைகளுக்குத் திக்குமுக்காடினோம். மிருனால் சென் போன்றவர்களுக்கு அவர்களது கலையும் வாழ்வும் அரசியலும் செயற்பாடும் ஒன்றேதான் என்பதை உணர்ந்து தலை வணங்கினோம். கலை சினிமா இயக்கமாகப் பரிணாமம் பெறாவிட்டால் நாம் எத்தகைய குரல்களை இழக்கிறோம் என்று இன்றளவும் எண்ணிப் பார்க்கிறேன். வணிகப்படம் எடுப்பவர்கள் அவார்டுக்காகப் படம் எடுப்பதிலிருந்து சென் போன்ற இயக்குநர்களின் வேள்வியை மையமாகக் கொண்ட சினிபயணம் வித்தியாசமானது. நிகரில்லாதது.
பின்னர் சென் அவர்கள் உருவாக்கிய பெருஞ்சலனத்திற்குத் திரைப்பட விழா இயக்குனர் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார். அப்பெரிய ஹாலில் மௌனம் நிலவியது.
இயக்குனர்: “தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன். ஆயினும் நாங்கள் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் அனைத்து படங்களையும் தேர்வு செய்துள்ளோம்.”
சென்: “அப்போ அரசியலுக்கு இடமில்லாத சர்வ தேசிய திரைவிழாவா இது?”
இயக்குனர்: “அப்படியில்லை. உருவமும் முக்கியமானது. உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவத்தின் தேடலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.”
சென்: “ஒரு நல்ல படத்தில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா?...” அரசியல் இல்லாத அழகியலினால் வறுமையில் வாடும் நமது நாட்டிற்கும் மக்களுக்கும் என்ன பயன்? நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் பலகோடிகள் இறைத்து இவ்விழாவை நடத்துகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”
இயக்குனர்: ம்ம்ம் ...
சென்: “தர்ட் சினிமா என்று ஒரு அழகியல் இருக்கிறது. அதைப்பற்றி தெரியுமா? கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?”
இயக்குனர் மௌனம் சாதித்தார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். மிருனால் சென் போன்ற அரசியலில் ஈடுபாடுகொண்ட ஆயினும் மனிதத்தில் தோய்ந்த கலைஞர்கள் சமன் இழந்தால் சபை கொள்ளாது என்றறிந்தேன் அன்று. அருண்மொழியின் ஆன்ம விசாரங்களும் சமத்துவமும் நீதியும் சுயமரியாதையும் சார்ந்ததுதான். அதில் உள்ளடக்கத்தின் வீரியமே உருவத்தைத் தீர்மானிக்கிறது. உள்ளடக்கதில் சீர்மையில்லாத பொழுது ஒரு செயற்கையான உருவ மெருகேற்றலை அவரது மனம் நாடவில்லை என்பது தான் உண்மை. அவரது காணிநிலம், ஏர்முனை ஆகிய இரண்டு படங்களிலும் கூட நீடித்த ஒப்பாரி போன்ற கதையாடலை சீர்குலைக்கும் காட்சிகள் விமர்சனத்திற்கு உண்டானதுண்டு. அதுவே அப்படங்களின் ஆற்றல் மற்றும் தனித்துவம் என்று நான் அன்று எதிர்வினையாற்றியிருக்கிறேன். அலைந்து திரிந்து மக்கள் கலைஞனாக மக்களிடம் அக்கறை கொண்டு குசலம் விசாரித்து ஊடல் கொண்டு அவர்கள் வாழ்வை அதன் சமனின்மையை உள்ளபடியே பதிவு செய்து அவர்கள் மனதில் பதிந்த கலைஞனின் பயணம் முற்றுபெறாதபோது படத்தை மட்டும் அவர் சீராகக் கொண்டு சென்று கோர்வையாக முடித்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அவரது தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரது பயணத்தைக் கண்டு பீதியடைவதையே காட்டுகிறது. சதா ஓடிக்கொண்டிருக்கும் மானுடம் எனுமாற்றில் அதன் ஏற்றத்தாழ்வுகளில் லயித்துச் சினிமா மூலம் அதன் சமமின்மையை ஆன்ம விசாரம் செய்துகொண்டிருந்த கலைஞனுக்கு அதன் பார்க்கும் பொழுதே மாறிக்கொண்டிருக்கும் தன்மையை ஆவணப்படுத்திக்கொண்டிருப்பதே அவனது தலையாயக் கடமையாகப்படுகிறது. அவனது வார்த்தைகளில் வடிக்க முடியாத சாத்தியங்களில் நம்பிக்கையற்று இருண்மையில் உழலும் மானுடத்தைப்பற்றிய கேள்விகளுக்கு அவனது அச்செயலிலேயே பதிலிருப் பதாகப்படுகிறது. மற்றபடி அத்தகைய ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுக்கே இருக்கிறது எல்லா நேரங்களிலும் என்னைப் போன்ற எல்லோரும் செய்வது; படத்தைச் சீர்படுத்துதலும் திரைப்பட விழாக்களுக்கு எடுத்து செல்லுதலும் அங்கு நடக்கும் நாம் எதிர்ப்பார்க்கக் கூடிய கேள்வி-பதிலாடல்களும். அதைத் தனது 29 வயதிலேயே காணிநிலத்துடன் உலகம் சுற்றிய பொழுது முழுவதுமாகப் புரிந்து கொண்ட அபூர்வ கலைஞர்தான் என்றும் எனது மனதிற்கினிய அருண்மொழி!
மூன்றாவது டெஸ்டை இந்திய அணி டிரா செய்தது குறித்துத் தந்தியில் செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஐந்தாவது நாளில் ரிஷாப் பண்ட் ஆடிய ஆட்டத்தை அந்தக் கட்டுரை வெகுவாகச் சிலாகித் திருந்தது. நான்காவது நாள் ஆட்டத்தைப் பற்றிய நேற்றைய செய்தியில் கிட்டத்தட்ட அனைத்து நாளிதழ் களுமே இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பேயில்லையெனக் கூறியிருந்தன. கைவசம் மூன்றே விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு பந்துவீச்சுக்குச் சாதகமான கடைசி நாளில் நானூறு ஓட்டங்களையெடுத்து வெற்றி பெறுவது சாத்தியமேஇல்லை என்றும் சமன்செய்வதும்கூட முடியாத காரியமே என்றும் யூகங்களை வெளிப்படுத்தி இருந்தன. லோகுவுக்கும்கூட அப்படித்தான் தோன்றியது. ஆனால் ஏழாவது மட்டையாளராக இறங்கிய ரிஷாப் பண்ட் நம்பமுடியாத வகையில் ஆடி இருந்தார். இலக்கை அடைய சொற்ப ரன்களே தேவைப்பட்ட நிலையில் ரிஷாப் எதிர்பாராதவகையில் ரன்அவுட் ஆகிவிடப் போட்டி சமனில் முடிந்திருந்தது.
நாளிதழைப் புரட்டியவாறு கடைக்கு உட்புறம் மையப்பகுதி நாற்காலியில் அமர்ந்து லோகநாதன் தேநீரை அருந்திக்கொண்டிருந்தார். அவரது கவனம் அவ்வப்போது ஜெயபாலின் மீதும் சென்று சென்று மீண்டபடியிருந்தது. ஜெயபால் பேக்கரிக்கு முன்னா லிருக்கும் பெட்டிக்கடைக்கு அருகில் நின்றவாறு டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். பாடாவதி ஆகிவிட்ட ஒரு பழைய டிவிஎஸ் பிப்டியில் தினமும் இந்த நேரத்திற்கு ஜெயபால் வந்துவிடுகிறார். அங்கிருந்தபடியே டீயைச் சொல்லிக் குடித்துவிட்டு காசுகுடுக்க வரும்போது மூன்று உளுந்து வடைகளையும் வாங்கி பார்சல் கட்டிக்கொண்டுபோய் மொபட்டின் டேங்க் கவருக்குள் வைத்து விடுகிறார். பிறகு பெட்டிக்கடையில் ஒரு கட்டுப் பத்தாம் நெம்பர் பீடி வாங்கி அதிலொன்றை உருவி அங்கேயே நின்றபடி புகைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
லோகநாதன் சற்று நேரத்திற்குமுன் உளுந்து வடையைச் சாப்பிட்டபடியே முகநூலில் உலாவி கொண்டிருந்தார். ரிஷாப் பண்டின் ஆட்டம் குறித்தான பதிவொன்று தட்டுப்பட்டது. நேற்றைக்கு முழுவதுமே சமூக வலைதளங்களையெல்லாம் ரிஷாப்புதான் ஆக்கிரமித்திருந்தார். பத்துமணிநேரத்துக்கும் மேலாக நின்று விளையாடிய ரிஷாப் பண்ட் கூடுதலாக இன்னும் பத்தே நிமிடங்கள் நின்றிருந்தால்கூடப் போதும். அணியை ஜெயிக்க வைத்திருப்பார் என்றும் ரிஷாப்பின் வரலாற்றில் மிக முக்கியமான இன்னிங் ஸான இது கிரிக்கெட்டின் வரலாற்றிலேயும் மிகமிக முக்கியமான இன்னிங்ஸாக மாறிப்போயிருக்கும் என்றும் அந்த முகநூல் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
சுவர்போல நின்று சிக்ஸரும் போருமாக விளாசிக் கொண்டிருந்தவர், பந்து பீல்டரின் கைக்குப் போய் விட்டதுகூடத் தெரியாமல் ஒத்தை ரன்னுக்கு ஓடி ரன்அவுட் ஆனதைப் பற்றி என்னத்தைச் சொல்ல? என்றும் அந்தப் பதிவர் அங்கலாய்த்திருந்தார். பொதுவாகக் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகளை ஆட்டத்திறமைகள் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் தீர்மானிக்கிறது என்பார்கள். பத்துமணி நேரத்துக்கும் மேலாக அனுக்கிரகம் புரிந்த அதிர்ஷ்டம் கடைசிப் பத்து நிமிடங்களுக்கு முகம் முழிக்காது போய் விட்டதே என்றவாறு அந்த முகநூல் பதிவு நீண்டு கொண்டிருந்தது. பதிவின் ஓரிடத்தில் இடம் பெற்று இருந்த சில வரிகள் சட்டென்று இழுத்துப் பிடித்துக்கொண்டது. வாழ்வின் புதிரான போக்குகளையும் பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக மாறிவிடுகிற சிறிய கணங்களையும் பற்றியெல்லாம் யோசிக்க வைத்தது. பொதுவாக லோகு இவ்விதமாக யோசிப்பவர் கிடையாதுதான். அவருடைய சிந்தனைத்தள மானது ஒரு சராசரி மனிதனுக்குரிய லௌகீகங்களால் ஆனது. ‘நூலளவுக்கும் குறைவான நூலளவு ஏமாந்த தால் மலையளவுக்கும் பெரிதான மலையளவு கை நழுவிப் போய்விட்டதே’ என்பதுதான் அந்த வரிகள். சாதாரண லோகுவை சிந்தனையாளர் லோகுவாக அவ்வரிகள் மாற்றியது. அதற்குக் காரணம் அவர் ஜெயபாலை கண் பார்வைக்குள் வைத்துக்கொண்டு மேற்படி வரிகளைப் படிக்க நேர்ந்ததால்கூட இருக்கலாம்.
லோகுவுக்கும் ஜெயபாலுக்கும் பரஸ்பரம் பரிச்சியம் உண்டாகி இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது. ஆனாலும், பெரிதாகப் பேசிக்கொண்ட தில்லை. அப்போது லோகு ஒரு பனியன் கம்பனி யில் டெய்லராக இருந்தார். இப்போது இரண்டு பனியன் கம்பனிகளுக்கு முதலாளியாக இருக்கிறார். பணம் சேர்ந்ததுமே உடம்பு பெருத்துவிட்டது. முக்கியமாக வயிறு பெருத்துவிட்டது. குருதியில் கொழுப்பும் இனிப்பும் சேர்ந்துவிட்டதாக மருத் துவர்கள் கூறினார்கள். காலையில் எழுந்ததுமே ஸ்போர்ட்ஸ் ஷூவும் பெர்முடாஸ் டிரவுசரும் டீசர்ட் பனியனுமாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஆறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் நால் ரோட்டிற்கு வந்துவிடுகிறார். வந்த இடத்தில்தான் இன்றைக்கு ஜெயபாலைப் பற்றியும் வாழ்க்கையப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.
கடந்த ஆறுமாத காலமாகத்தான் ஜெயபால் மறுபடியும் கண்ணில் படுகிறார். அதற்குமுன்பு வெகு வருடங்கள் அவர் ஊரில் இல்லாதவராக இருந்தார். ஏழு கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் ஊரைச் சேர்ந்தவரான ஜெயபால் லோகுவுக்குச் சோமுவின் மூலமாகத்தான் அறிமுகமானார். பனியன் தொழிலைவிட்டு விலகி சோமு அப்பொழுது பர்னிச்சர் கடை ஆரம்பித்திருந்தான். சோமுவின் ஊர் லோகுவின் ஊருக்கு வடக்கே இரண்டு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்தது. உண்டான விலையிலிருந்து கூடுதல் விலை நிர்ணயித்துக் கடனுக்குப் பொருட்களைக் கொடுப்பதும் தவணைத் தொகையை வாரத்தில் ஒருநாள் வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று வசூலிப்பதுமாகச் சோமுவின் வியபார முறைமை இருந்தது.
எட்டுத் திசைகளிலும் சுமார் முப்பது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வாடிக்கையாளர்கள் இருந் தனர். வேலையில்லாத நாட்களில் லோகுவும் சோமுவுடன் லைனுக்குப் போவதுண்டு. வாய்க்கால் பாதைகள், கிளுவைகள் மருங்கமைந்த இட்டேறிகள்,பஞ்சாயத்து ரோடுகள், எருக்கலைகளும் ஆவாரைகளும் பூத்துக் கிடக்கும் கொறங்காடுகளுக்குள் போகும் ஒற்றையடிப் பாதைகள் என வசூலின் பொருட்டு சோமு போய்வருகின்ற வழித்தடங்கள் அபாரமான அழகுடையவை. அவரது வாடிக்கையாளர் குடும்பங்களில் ஒரு குடும்பமாக ஜெயபாலின் குடும்பமும் இருந்தது.
பத்திரிக்கையில் வெளிவந்திருந்த சிக்ஸர் அடிக் கும் ரிஷாப் பண்டின் புகைப்படத்தை ஒருகணம் உற்றுநோக்கிய லோகநாதன் மறுபடியும் ஜெயபாலைக் கவனிக்க ஆரம்பித்தார். காலை நேரத்திற்கேயுண்டான பரபரப்புகளுடன் நால்ரோடும் நால் ரோட்டின் கடைகளும் அதன் மக்களும் இயங்கிக் கொண்டிருக்க இவைகளுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதைப்போல ஜெயபால் அவர்பாட்டிற்கு நின்றபடி அவர்பாட்டிற்குத் தேநீரைஉறிஞ்சிக்கொண்டிருந்தார்.
போய் ஒரு புன்சிரிப்பைப்போட்டு ‘அப்புறம் நல்லாயிருக்கீங்ளா ஜெயபால்.. சௌக்கியம்தானே..?’ எனக் கேட்கலா மென்றும் தோன்றியது. கேட்பதாக இருந்தால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இதே டீக்கடைக்கு முன்னால் ஜெயபாலைச் சந்திக்க நேர்ந்த அந்த முதல் நாளிலேயே கேட்டிருக்கவேண்டும். இத்தனை நாட்களாக யாரோ எவரோபோல உன்னையெல்லாம் எனக்கு ஞாபகமே இல்லை என்பது மாதிரி நடந்து கொண்டுவிட்டு திடீரென இன்றைக்குப்போய்ப் பெயர் சொல்லி விளித்து நலம் விசாரிக்கச் சங்கடமாகவும் இருந்தது.
‘என்ன ஜெயபாலு ஊருக்கே வந்துட்டாப்லயா..? தினமும் காலைல நால்ரோட்ல தட்டுப்படறாப்ல..?’ சில மாதங்களுக்கு முன்பு தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பொன்றில் லோகு சோமுவிடம் கேட்டார். சோமுவின் பர்னிச்சர் கடை இரண்டு மூன்று கிளை களுடன் இப்போது பெரிய நிறுவனமாக வளர்ந்து விட்டது. மிகவும் பிஸியான வியபாரியாகிவிட்ட அவனை முன்பு போலெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை.’
‘அப்படீன்னுதான் நானும் கேள்விப்பட்டே னுங்ண்ணா.. எனக்கும் பெருசா டச்சுக் கெடையாது. எங்காச்சும் குறுக்கமறுக்கப் பார்த்தா ரெண்டுவார்த்தை பேசிக்கிறதோட சரி... குண்டடத்தில் வாடகைக்கு வீடு பார்த்து வந்துட்டாப்லைனு தகவல்’ என்றான். ‘இங்க அவரோட அண்ணந்தங்கச்சியெல்லாம் பண்ணையத்தைப் பங்கி கறால் பண்ணிக்கலாம்னு இருப்பாங்களாட்டயிருக்குது. தனக்கான பங்கை குடுக்காம ஏமாத்தி எழுதிக்குவாங் களோங்கிற சந்தேகத்துல இங்கயே வந்துட்டாப்ல போல’ என்றும் கூறினான்.
ரிஷாப் பண்டிற்கு வாய்த்தது போலவே ஜெயபாலுக்கும் ஒரு நாள் வாய்த்தது. அந்த நாளின் பகல்முழுவதும் பொழுதெறங்கி இரவு எட்டு மணிவரைக்கும் ஜெயபாலுக்கு அதிர்ஷ்ட தேவதை அனுக்கிரஹம் புரிந்துவந்தாள். அன்றைக்கு நடந்த பைனலில் ஜெயபால் பின்னி பெடலெடுத்திருந்தார். அந்தப் போட்டியானது ஊரே கூடி திருவிழாவை யொட்டி ஊருக்கு வந்திருந்த ஒறம்பரைச் சனங் களெல்லாம் கூடி பலத்த கரவொலிகளையும் விசிலொலிகளையுமெழுப்பியபடி பார்த்து ரசிக்க உள்ளூர் குளக்கரை மைதானத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வாசுகியும் இருந்தாள். எட்டுமணியளவில் வெற்றிக்கோப்பையும் கையுமாக அரங்க மேடையிலிருந்து ஜெயபால் இறங்கி வந்த சமயம் தான் அதிர்ஷ்டதேவதை தன் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டிருந்திருக்கவேண்டும். மேலுமொரு பத்து நிமிடங்களுக்கு அவள் தனது அருட்பாலிப்பை நீட்டித்திருந்தாளேயாயின் - சோமு கூப்பிட்டது ஜெயபாலின் காதில் விழுந்திருக்கும். இவர்கள் இருக்கும் திசைநோக்கி அவரும் வந்திருப்பார். வந்திருப்பின் நிலைமையே வேறு. தள்ளிக்கொண்டு ஓடி ஸ்டார்ட் செய்யும் நிலையிலிருக்கும் பழைய டிவிஎஸ் பிப்டியில் இப்படிச் சுற்ற வேண்டியிருந்திருக்காது.
ஞாயிறு தவிர வாரத்தின் எல்லா கிழமைகளிலும் சோமுவுக்கு லைன் வசூல் இருக்கும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு ஏரியா எனப் பிரித்து வைத்திருப்பான். திங்கட்கிழமை லைனில் ஜெயபாலின் ஊரும் ஏனைய பிற ஊர்களும் இடம் பெற்றிருந்தன. அந்த லைனிலிருக்கும் மற்ற ஊர்களையெல்லாம் பார்த்துவிட்டு ஏதேனும் ஹோட்டலொன்றில் மதிய உணவை முடித்துக்கொண்டு வரும் வழியில் ஜெயபாலின் ஊருக்கு வந்து அங்குள்ள பிற வாடிக்கையாளர்களை எல்லாம் பார்த்துவிட்டுக் கடைசியாகத் தோட்டத்திற்குள்ளிருக்கும் ஜெயபாலின் வீட்டிற்கு வந்து சேருவார்கள். வெயிலில் அந்தியின் சிவப்பு கூடிக் கொண்டிருக்கும்.
பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் தங்கை நித்யா பள்ளிச் சீருடை யிலிருந்து நிலம்தொடும் பூக்கள்போட்ட பாவாடைக்கும் தொளதொள டீசர்ட் அல்லது ரவுண்ட்நெக் பனியனுக்கும் மாறி கழுவப்பட்ட முகத்தில் பூசப் பட்ட பவுடரோடு காணக் கிடைப்பாள். நீளவாக்கில் இரண்டாக மடித்த ஈரிழைத் துண்டை மார்புக்குமேலெ கழுத்தாடையாகச் சுற்றியபடி அவள் வலம்வரும் காட்சியானது அவ்வளவு அழகாக இருக்கும். ‘தனக்கு ஒரு ஐந்து வருடங்கள் குறைவாக இருந்து அல்லது இந்தப் பொண்ணுக்கு ஒரு ஐந்துவருடங்கள் அதிக மாக இருந்திருந்தால் ஒரு கல்லை விட்டுப் பார்த்திருக்கலாமே’ என லோகுவுக்குத் தோன்றுவதுண்டு.
அந்தத் திங்கட்கிழமை லைனில் மனதைக் கவரும்விதமாக மற்றொரு பெண்ணும் இருந்தாள். வாசுகிதான் அவள். வாசுகியும் ஜெயபாலின் ஊர்தான். ஊர் முகப்பிலேயே விஸ்தீரணமான தோட்டமும் தோட்டத்தின் குபேரபாகத்தில் மிகப்பெரிய கான்கிரீட் வீடும் அவளுக்கு இருந்தது. நித்தியாவைவிடவும் ஐந்தல்ல குறைந்தது ஏழு வருடங்களுக்காவது மூத்திருப்பாள். இரண்டு டிகிரிகளை முடித்துவிட்டு அய்ந்தாறு வருடங்களுக்கும் மேலாக மணவாளனுக்காகக் காத்திருக்கும் முதிர் கன்னி. அம்சமான அழகி. முப்பதை நெருங்கிக்கொண்டிருந்த லோகுவுக்குச் சோடிபோட சரியான வயதுதான். ஆனால், வயதுப்பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா என்ன? மாப்பிள்ளைகள் கிடைக்காததால் அல்ல. வந்த மாப்பிள்ளைகள் யாரையுமேவாசுகிக்குப் பிடிக்காததால்தான் கல்யாணம் தள்ளிப் போகிறதே தவிர மாப்பிள்ளைகளுக்கு வாசுகியைப் பிடிக்காததால் அல்ல என்று சோமு கூறினான்.
‘அதெல்லாம் பெரிய எடம் அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு உங்களுக்கெல்லாம் ஏணி வெச்சாலும் எட்டாது ஏதாவது முயற்சி கியற்சி பண்ணி என் பொழப்புல மண்ணைப் போட்றாதீங்க இங்க எல்லாருத்துகிட்டயுமே எனக்குனு ஒரு நல்லபேரு இருக்குது’ என்பது அவனது கூற்றின் உள்ளர்த்தமாகவும் இருந்தது.
ஜெயபாலுக்கு ஒரு அண்ணனும் இருந்தார். அவர் முழுநேர விவசாயி. இவர்கள் போய்ச்சேருகின்ற நேரத்தில் இரவு மார்க்கெட்டுக்குப் போகயிருக்கும் காய்கறிகளை மூட்டை பிடித்துக்கொண்டோ கறவை களுக்குத் தவிட்டுத் தண்ணீர் காட்டிக்கொண்டோ இருப்பார். அந்த நேரத்துக்கெல்லாம் ஜெயபாலின் அப்பாவும் கொறங்காட்டிலிருந்து செம்மறிகளை ஒட்டிக்கொண்டு வந்திருப்பார். பட்டியிலடைப்பதற்கு முந்தைய அந்தி மேய்ச்சலுக்காகத் தோட்டத்தின் எதாவதொரு பகுதியில் ஆடுகளை மேயவிட்டபடி நொச்சி விளாரும் கையுமாக நின்று கொண்டிருப்பார். ஜெயபாலின் அம்மாவும் எதையாவது செய்து கொண்டிருப்பார். சாயுங்கால நேரத்துக்கான தேநீரைத் தயாரித்துக் கொண்டிருப்பதும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் இவர்களுக்கும் ஒரு டம்ளர் கிடைக்கும்.
சிலசமயம் ஜெயபாலும் வீட்டிலே இருப்பதுண்டு. அப்போது அவர் திருப்பூரிலிருக்கும் பனியன் கம்பனியொன்றிற்குக் கட்டிங் மாஸ்டராகப் போய்க்கொண்டிருந்தார். போகும்போதோ திரும்பி வரும்போதோ எதிர்முட்டுப் போடநேர்ந்தால் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஜெயபாலின் அப்பா வோடு சம்பிரதாயமான நல விசாரிப்புகளுடன் சற்று நேரம் உரையாடுவதைச் சோமு தவறவிடக் கூடாத சம்பிரதாயமாகவே கடைபிடித்து வந்தான். வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தாரிடத்தில் வியபாரம் தாண்டியும் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சோமு திட்டமாக வைத்திருந்தான். அவ்விதம் செய்வது வியாபார வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்பினான்.
ஜெயபாலின் அப்பாவுக்குத் தன் மூத்த மகனைப் பற்றிய கவலைதான் அதிகமுமிருந்தது. ‘வயசு இருபத்தியெட்டு முடியப்போகுதுங் தம்பி... படிக்காமப் போயிட்டான். பத்தாததுக்கு ஒரு தொழிலுக்கோ ஏவாரத்துக்கோ போகாம காட்டைக் காத்துட்டே கெடக்கறான். இந்தக் காலத்து புள்ளைங்க எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டுதுக.. தனக்கு வரப்போறவனும் தன்னைவிட அதிகம் படிச்சு நெழலான உத்தியோகத்திலியோ தொழில் வியபாரத்திலியோ இருக்கோணம்னு கண்டிசன் போடுதுகளாமா... பொட்டப்புள்ளைய வூட்லவெச்சிக்கிட்டு பையனுக்குக் பார்க்கறதுக்கும் யோசனையாத்தான் இருக்கு’ என்கிற ரீதியில் ஜெயபாலின் அப்பா சோமுவிடம் தன் மனக்கிடக்கைகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு.
அந்த வாரம் ஜெயபாலும் வீட்டிலே இருந்தார். லோகு முதன்முதலாக ஜெயபாலைப் பார்த்தது அன்றைக்குத்தான். வெள்ளை முண்டா பனியனும் லுங்கிவேட்டியுமாகத் துணிதேய்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை முழுக்கைச் சட்டையும் புளூகலர் ஜீன்ஸ் பேண்ட்டும்தான் பிடித்தமான உடைகள்போல. சிமெண்ட்சீட் போட்ட வாசல் பந்தலுக்குக் கீழ் மர மேசையின்மேல் தனியாக வெள்ளை முழுக்கைச் சட்டைகளாகக் கிடந்தது. வாசலுக்கு வெளிப்புறமிருந்த களத்தின் கொடிக்கயிற்றில் தனியாகப் புளூகலர் ஜீன்ஸ்களாகக் காய்ந்து கொண்டிருந்தது.
விளைந்த மூங்கிலை இரண்டாகப் பிளந்து நேராக நிறுத்தியதைப் போன்ற உடல்வாகு ஜெயபாலுக்கு. சற்றே உயரம் குறைவான நடிகர் ரகுவரனைப் போல இருந்தார். சின்னவயது ரகுவரன். கையிலும் காலிலும் தோளிலும் மார்பிலும் ரோமப்படர் வென்பதே சிறிதுமில்லை. உருவிவிட்டதைப்போல மின்னின.
‘இவுரு லோகண்ணன். பக்கத்து ஊர்க்காரரு. பனியன் கம்பனில டெய்லரா இருக்கார். நான் பனியன் கம்பனிக்குப் போன காலத்துல அண்ணந்தான் எனக்குத் டெய்லரிங் கத்துக்குடுத்த குரு. இன்னிக்கு லீவுனு வூட்ல உக்காந்திருந்தாரு பொழுது போகட்டும் வாங்கனு தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்’ என்கிறவிதமாகச் சோமு ஜெயபாலுக்கும் அவருடைய அம்மா அண்ணனுக்கும் லோகுவை அறிமுகப்படுத்தி வைத்தான்.
ஜெயபாலைப் பார்த்தவுடனே லோகுவுக்குப் பிடித்துப் போய்விட்டது. நிறையப் பேசவேண்டு மென்றும் தோன்றியது. ஒரே தொழிலைச் சார்ந்தவர்கள் வெளியிடத்தில் புதிதாக அறிமுககையில் தங்கள் துறைசார்ந்து உரையாடிக்கொள்ள நிறைய இருக்கும்தானே? தொழில்சார்ந்த விசயங்களைப் பேசப்பேச ஒரு புரிதல் உருவாகி வெறுமனே தெரிந்தவர் எனும் நிலைமாறி நட்பு உருவாகவும் பலப்படவும் வாய்ப்புகள் இருக்கிறதுதானே? அன்று அப்படியெதுவும் நடக்கவில்லை. சோமு அறிமுகப்படுத்தியதும் ‘அப்படியா, சரி, நல்லது’ என்பது போலச் சிறு புன்னகையையும் சிறு ஆமோதிப்பின் தலையாட்டலையும் பிரதிபலித்த ஜெயபால் அவர் பாட்டுக்கு துணி தேய்க்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், அவரது அம்மாவும் அண்ணனும் முதல் சந்திப்பிலேயே நிறையப் பேசினார்கள். வந்து நிற்கும் புதிய மனிதனை ஒரு விருந்தினரை உபசரிப்பதுபோல உபசரித்து அவன் குடும்பம் அவன் பின்னணி பற்றியெல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தது.
‘கட்டிங் மாஸ்டர்னா லோக்கல் கம்பனீல வெட்றீங்ளா? இல்ல, எக்ஸ்போர்ட் கம்பனீல வெட் றீங்ளா? பீஸ் ரேட்டுக்கா? ஷிப்டுச் சம்பளத்துக்கா?’ என்றெல்லாம் லோகுவிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. தவணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்த பிறகு ஒரு டீ குடிக்கும் நேரம் அங்கே அமர்ந்திருந்தார்கள். அந்த நேரத்துக்குள் மற்றவர்களிடம் உரையாடியபடிக்கே அவ்வப்போது ஜெயபாலிடமும் மேற்படியான கேள்விகளையெல்லாம் லோகு கேட்க முனைந்தார். ஒன்றிரண்டு கேள்விகளிலேயே நிறுத்தியும் கொண்டார். ஒரு நல்ல உரையாடலை வளர்த்தெடுக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் கேட்கப்படும் அன்பின் விளைவுக் கேள்விகளுக்குக்கூட மிசின் மாதிரி ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு தன்பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக்கொண் டிருப்பவரிடம் மேற்கொண்டு என்னத்தைக் கேட்பது?
அன்று வரும்வழியில் லோகு தன் அபிப் பிராயத்தைப் பகிர்ந்துகொள்ளவும் சோமுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘சேச்சே... நீங்க நெனைக்கிற மாதிரி மண்டைக்கனம் புடிச்ச ஆளெல்லாம் கெடையாதுங்ண்ணா. அந்தாளு சுபாவமே அதான். ஊட்டுச் சனத்துக கிட்டக்கூடப் பெருசா பேசிக்க மாட்டாரு. அவுரு பாட்டுக்கு தானுண்டு தன்னோட வேலையுண்டுனு இருக்கற டைப்புன்னு வெச்சுக் கங்களேன். நானும் பெருசா பேசிக்கறதில்லை. ஏதாச்சும் கேட்டாருன்னா அதுக்குப் பதில் சொல்ற தோட சரி. ஆளு சைலண்ட் பார்ட்டியா இருந்தாலும் ஊருக்குள்ள வளுசப்பசங்ககிட்ட இவுருக்குனுனொரு செல்வாக்கு இருக்குது. கிரிக்கெட் டீமுக்கு கேப்டன் கோயில் கமிட்டில இளைஞரணித் தலைவர்னு ஆளுமையான ஆளுதான்.’ அன்றைக்குத் திரும்பிவருகையில் சோமு மற்றொரு விசயத்தையும் கூறியிருந்தான். ‘இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாதுங்ண்ணா... இவுரு கூடவே வெகுநாளா வேலைக்குப் போயிட்டிருக்கற ஒருத்தர் எனக்குத் தெரிஞ்சவரு, அவுரு சொன்னது. ‘ஆளு பொம்பளை விசயத்துல மன்னனாமா...’
அதுசமயம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல் லாம் லோகு சோமுவோடு எல்லாக் கிழமை லைன் களுக்கும் போய்க்கொண்டிருந்தார். உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவரோடு சேர்ந்து தனியாக ஒரு பனியன் கம்பனியைத் துவங்கும்வரை அந்தப் பயணம் தொடர்ந்தது. மேற்படியான காலகட்டத்தில் இவர்கள் போகும்போது ஜெயபாலும் வீட்டிலேயிருந்த சமயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எல்லாச் சந்திப்புகளிலும் ஜெயபாலிடமிருந்து வெளிப் படுவது அதே சலனமில்லாத ஒரு சிறு புன்னகையும் ஒற்றை வார்த்தையில் பதில்களும்தான். அவர் பாட்டுக்கு இருப்பார். அவரது சுபாவமே அது தான் என்பதால் லோகுவும் பெரிதாகப் பேச முயற்சிப் பதில்லை. ஆனால், அவரது அண்ணன் அப்பா எல்லாம் நன்கு பழக்கமாகிவிட்டார்கள். இன்றைக்கும் எங்காவது தடம்வழிகளில் காணநேர்ந்தால் சில வார்த்தைகளாவது பேசாமல் போவதில்லை.
‘நம்மகூடப் பேசறதுக்கே இவ்வளவு யோசிக்கிறானே...? ஙொய்யாலே... இவனெப்படீடா பொம்பளை விசயத்துல மன்னனாக இருக்க முடியும்? ஒருவேளை சோமான் கேள்விப்பட்டதாகச் சொன்னதெல்லாம் பொய்யாக இருக்கலாமோ...’ என்றும் லோகுவுக்குத் தோன்றியதுண்டு. ‘பேசினா லென்ன? பேசாவிட்டலென்ன? பற்றியும் சுற்றியும் கொள்ளும்படியான உடல்வாகு இவனுக்கு. எந்தக் கொடியும் பற்றிக்கொள்ளவும் சுற்றிக்கொள்ளவுமே விரும்பும்’ என்றும் நினைத்துக்கொள்வார்.
மஹா சிவராத்திரியைத் தாண்டியதும் சிவனை விட்டுவிட்டுச் சனங்கள் சக்தியைக் கொண்டாடத் துவங்கி விடுகிறார்கள். பங்குனி சித்திரை இரண்டுமே ஆசைதீர அம்மன்களைக் கொண்டாடி மகிழும் மாதங்கள்தான். இங்கே இந்த மாதங்களில் சாட்டுப் பொங்கல்களின் குலவைச் சத்தத்தை, தீர்த்தக் காவடிகளின் கொட்டும் முழக்கை, கொம்பின் ஓசையை, படுகளமெழுப்பும் உடுக்கைப் பாடல்களை, ஊர்தோறும் நிறைந்திருக்கும் வழியெல்லாம் அமர்ந் திருக்கும் காளிக்கும் மாரிக்கும் கன்னிமார்களுக்கும் படையிலடாமல் இருந்துவிட முடியுமா என்ன? அந்த எட்டுக்குச் சலிக்காமல் ஒவ்வொரு ஊரின் கோவில் விசேசங்களுக்கும் நிறைவு நாளில் நடக்கும் இரவு நிகழ்ச்சிகளுக்கும் சோமு போய்க்கொண்டிருந்தான். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெறவிரும்பும் ஒரு பிஞ்சுநிலை வியாபாரி அவர்களின் யாதொரு அழைப்பையும் புறக்கணிக்க முடியாதுதானே? கூடாதும்தானே? சூழ்நிலையை அனுசரித்துச் சில நிகழ்ச்சிகளுக்கு லோகுவும் போய்க்கொண்டிருந்தார். அப்படிப் போனதில் ஒன்றுதான் அந்த ஆடல்பாடல் கலை நிகழ்ச்சியும். ஜெயபாலின் ஊரிலே நடந்தது.
இவர்கள் போய் சேர்ந்தபோது இரவு அன்ன தானம் முடிவுறும் தருவாயிலும் இன்னிசைக் கச்சேரி ஆரம்பிக்கப்போகும் தருவாயிலும் இருந்தது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்றுவந்த கோவில் சாட்டையொட்டிய பல்வேறு நிகழ்வுகளுக்கு நிதி அளித்தவர் களையும் வெவ்வேறு வகைகளில் துணைபுரிந்தவர்களையும் குறிப்பிட்டு விழா மேடையில் உள்ளூர்பிரமுகரொருவர் நன்றி நவின்றபடியிருந்தார். விழாப்பந்தலில் ஊர்ச்சனம் முச்சூடும் சுற்றமும் நட்பும் சூழ அமர்ந்திருந்தனர். மையப்பகுதிக்குச் சற்று மேபுறமாகச் சில நாற்காலிகள் காலியாகக்கிடந்தன.
லோகுவும் சோமுவும்போய் அமர்ந்து கொண்டனர். ஊர் அறிந்த வியாபாரி அல்லவா? ‘வாங்க.. வாங்க..’ ‘இப்பதான் வர்றீங்களா..?’ ‘அன்னதானம் இன்னும் நடந்துட்டுத்தானிருக்கு.. சாப்பிடலீன்னா போயி சாப்பிட்டுட்டு வந்துருங்க..’ என்கிற ரீதியில் உபசாரமொழிகள் அணிவகுத்தன. அவைகள் வருகின்ற திசைகளை நோக்கி தலையைத் திருப்பிப் பணிவும் புன்சிரிப்புமாகச் சோமுவும் பதில் சொல்லியபடி அமர்ந்திருந்தான்.
‘மத்தியானம் மேட்ச் பார்க்க வர்லியாட்ட யிருக்குதுங் சோமு.. கண்டிப்பா வருவேன்னு சொல்லீருந்தீங்ளே..’ என்றொரு குரல். பரிச்சியமான குரலாக இருக்க லோகுவும் திரும்பிப் பார்த்தார். வாசுகிதான். நேர் பின்வரிசையில் இரண்டு நாற்காலி களுக்குக் கிழ புறமிருந்த மூன்றாவது நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ‘ஒரு ஆர்டரு சம்பந்தமா பல்லடம் வரைக்கும் போக வேண்டீதாப் போயிருச்சுங் வாசுகி.. அதான் வரமுடியாமப் போயிருச்சு..’ என்று காரணத்தைக் கூறிய சோமு ‘இன்னிக்கு உங்க ஊரு டீமு குள்ளக்காளிபாளையம் டீமை வெச்சுச் செஞ்சுட்டாங்க போல..’ என்றான். வாசுகியின் பிரகாசமான முகம் மேலும் வெளிச்சமடைந்ததைப் போலப் பட்டது. ‘பின்னே எங்க பசங்க இன்னிக்குப் பின்னியெடுத்திட்டாங்களாக்கும்’ என்றாள்.
எட்டு அணிகள் பங்குபெற்ற நாக் அவுட் போட்டியில் பைனல் வரைக்கும் வந்திருந்த இரண்டு அணிகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. முதலில் குள்ளக்காளிபாளையம் அணிக்கு ரன்னர் கப்பும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அடுத்ததாக வின்னர் கோப்பையை வென்ற ஜெயபாலின் அணி மேடையேறியது. உள்ளூர் அணி என்பதால் பார்வையாளர்கள் பகுதியில் விசிலும் கைதட்டலும் பட்டையைக் கிளப்பின. வாசுகியே அறியாத வண்ணம் லோகு வாசுகியை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
மேன் ஆப் தி மேட்ச் ஜெயபாலுக்கு வழங்கப் பட்டது. மேன் ஆப் தி சீரியலும் அவருக்குத்தான். பதினைந்து ஓவரில் நூற்றியிருபது ரன்களைச் சேசிங் செய்தால் வெற்றி எனும் இலக்குடன் இறங்கிய அணி மூன்று ஓவருக்கே ஐந்து விக்கட்டுகளை இழந்து இருபத்தியேழு ரன்களோடு தடுமாறியதாம். ஆட்டம் காலி, தோல்வி நிச்சயம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்களாம். ஆனால், ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஜெயபால் அடித்து நொறுக்கி மூன்று பந்துகள் மீதமிருக்கவே வெற்றியை வசமாக்கினார் என்றும் இது உண்மையிலேயுமே ஒரு கேப்டன் இன்னிங்ஸாக்கும் என்றும் ஆட்டநாயகன் விருது வாங்கும் சமயம் ஜெயபாலைக் குறித்துச் சிறு புகழ்உரையை மைக்கிலேயே நிகழ்த்தினார்கள். கோப்பை களும் கையுமாக ஜெயபால் யாரையோ பற்றி யாரோ புகழ்கிறார்கள் நமக்கென்ன என்பது போல நின்றுகொண்டிருந்தார். இந்தாளிடம் இப்போது ஏற்புரையாற்றச் சொல்லி மைக்கை நீட்டினால் எப்படி இருக்கும் எனும் யோசனை உதிக்க லோகு வுக்குப் புன்னகை அரும்பியது. ஏதோ தோன்றி யவராகத் திரும்பி பின்வரிசையில் அமர்ந்திருக்கும் வாசுகியை நோக்க அரும்பிய புன்னகை அற்றும் போனது. போகத்தானே செய்யும்? சோமுவுக்கு ஜாடைகாட்டினார். திரும்பிப் பார்த்துவிட்டு நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் லோகுவின் காதில் கிசுகிசுப்பாகக் கூவினான். ‘அடங்கொய்யால... என்னண்ணாயிது இப்படிப் பார்க்குது? வுட்டா போயி தூக்கீட்டெ போயிரும் போலயிருக்குதே...’
ஆடல்பாடல் நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. பார்வையாளர்களுக்கான பந்தலையொட்டியே கிழ புறத்தில்தான் அன்னதானப் பந்தலும் அமைக்கப் பட்டிருந்தது. குறுக்கே தெனந்தடுக்குகளை வரிசை யாக நிற்கவைத்துக் கட்டிய தடுப்பும் இருந்தது. அதன் காரணமாக அன்னதானக் கூடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை இங்கே இருப்பவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. அன்னதானமெல்லாம் முடிவுக்கு வந்து இளைஞர் அணியினரின் தண்ணிதானம் சத்தமில்லாமல் நடை பெற்றுக் கொண்டிருப்பதாகச் சோமுவுக்கும் லோகு வுக்கும் தோன்றியது. ஸ்டேஜையொட்டியே நேர் கீழ்புறத்தில் ஆட்டக் கலைஞர்களுக்கான மேக்கப் ரூமும் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பந்தலுக்கு வடகிழக்காவும் அன்னதானப் பந்தலுக்கு வடமேற்காகவும் மேக்கப் ரூமுக்கு நேர் தென்புற மாகவும் இருக்கின்ற பகுதியில் பேருக்கு சில நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அமர்வதும் எழுவதும் முக்கால்வாசி விளக்குகள் அணைக்கப் பட்ட அன்னதானப் பந்தலுக்குள் போவதும் வருவது மாக இளைஞர் அணியினரின் புழக்காட்டங்கள் இருந்தது. அத்தனை அமளி துமளிகளுக்கு நடுவி லும் ஜெயபாலின்மேல் ஒரு நிதானம் நிலவியது. உழவு நடக்கும் காட்டில் வயிற்றிலே தீயை வைத்துக் கொண்டதைப்போலத் தாவித் தாவிப் படைக்கால் மண்புழுக்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கும் புழுதிக் குருவிகளுக்கு நடுவே மிகுந்த அமைதியோடு இரை யெடுத்தப் படியிருக்கும் கொக்கின் நிதானம்.
இவர்கள் இருவரும் மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த ஆடல்பாடலில் ஜெயபால் மீது ஒரு கண்ணையும் வாசுகியின் மீது மறுகண்ணையும் வைத்த படி அமர்ந்திருந்தனர். வாசுகி தனது பௌதீகமான மற்றும் அபௌதீகமான அனைத்துக் கண்களையும் ஜெயபாலின் மீதே வைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒரு தாக்கம் இல்லாது போய்விடுமா என்ன? ஏதோ தோன்றியதுபோல் அவரது கிடையிலிருந்தபடியே ஜெயபாலுவும் அவ்வப்போது இங்கே திரும்பிப் பார்ப்பதும் பின் ஒன்றும் விளங்காதவராக அங்கே திரும்பி ஆடலைக் காண்பதுமாக இருந்தார். ‘கூப்பிட லாமாங்ண்ணா..
உங்களுக்கொண்ணும் பிரச்சனையில்லையே?’ என்றான் சோமு.
“தாராளாமா கூப்டு. எனக்கென்ன பிரச்சனை?”
“இல்லே... உங்களுக்கு இதுமேல ஒரு நோட்டம் இருக்கலாம்னு ரொம்ப நாளாவே ஒரு டவுட்எனக்கு. அதுதான் எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கிலாமேன்னு கேட்டேன். இப்ப மட்டும் அந்தாளு இங்க வந்து ஒரு விசுக்கா இதுமுட கண்ணைப் பார்த்துட்டான்னு வெய்யுங்க... சீமெண்ணைல நனைச்ச பழைய துணிமேல தீக்குச்சிய ஒரசிப்போடற மாதிரிதான். கபக்குன்னு பத்திக்கும்.”
“நம்முளுக்கு நோட்டமிருந்து என்ன பிரயோசனம்? நம்மமேல அதுக்கு நோட்டமிருக்கோணமே.. நடை முறைக்கு வாய்ப்பில்லாத நோட்டத்தை வெச்சிக்கிட்டு என்ன செய்ய? அதுமுட தகுதிக்கு நானெல்லா அது மண்ட எடத்தைக்கூடப் பார்க்க முடியாது. கூப்டுட்ரு... பத்தராப்ல இருந்தா பத்திக் கிட்டுப் போகட்டும்”
சைகை காட்டினால் தெரிந்து கொள்ளும் தூரம்தான். ஜெயபால் திரும்பிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ‘இங்க வாங்க தல... வந்துட்டுப் போங்க...’ எனும் விதமாகச் சோமு கைச்சாடை காட்டினான். தெரிந்து கொள்ளாமல் போனதைப்பற்றி என்ன சொல்வது. விதி என்றுதான் சொல்லவேண்டும். அதிர்ஷ்ட தேவதை மூஞ்சியைத் திருப்பிக்கொண்டாள் என்று தான் சொல்லவேண்டும். ‘அண்ணா போதும்னு தோணுதுங்ண்ணா.. தண்ணியுங்கூட மூணுதடவை தான் தாட்சண்யம் காட்டுமாமா. நாலஞ்சுதடவை சாடை காட்டியும் இந்தாளுக்கு ஒறைக்கலை. மண்ணு மாதிரி பார்த்துட்டு அவம்பாட்டுக்கு மூஞ்சியைத் திருப்பிக்கிறான். எல்லாரும் என்னை ஒரு மாதிரியா பார்க்கறாப்ல தோணுது.’ என்றான் சோமு. மணி நள்ளிரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியூர் ஆட்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களும் புறப்பட்டனர்.
சில நாட்கள் சென்றிருக்கும். காலையுணவை உண்டு விட்டு லோகு கம்பனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இதைச் சொல்வதற்கென்றேசோமு வந்திருப்பான்போல. வந்ததும் வராததுமாக விசயத்தை ஆரம்பித்தான். “உங்களுக்குத் தெரியு மாங்ண்ணா... ஜெயபாலு எஸ்ஸாயிட்டாரு...”
“என்னடா சொல்றே..? வாசுகிய கூட்டீட்டா..?”
“அதையக் கூட்டீட்டு ஓடீருந்தாத்தான் பிரச்சனையே இல்லையே. அந்த டேன்ஸ்குரூப்பைச் சேர்ந்த ஒரு புள்ளையவாமா. புள்ளையுங்கூடக் கெடையாது. பொம்பளை. அவ ஏற்கனவே ரெண்டுபேருத்தைக் கட்டி இப்போ ரெண்டு பேருககூடயும் இல்லாம தனியா இருக்கறாளாமா.. எட்டு வயசுல ஒரு பொண்ணும் இருக்குதாமா அவுளுக்கு... ரெண்டும் எஸ்ஸாயிருச்சு”
“அடக் கருமமே... இவுனுக்கேண்டா புத்தி இப்படிப் போச்சு?”
“ஊருபூராமே இப்படித்தாண்ணா பேசிக்கிறாங்க. இருக்கற எடம் தெரியாம இருக்கற பையன். இப்படிப் பண்ணிப்போட்டானே... நம்பவே முடியலையேனு”
“அவுங்க ஊட்டுக்குப் போயிருந்தியா...?”
“போகாம இருப்பனா..? அங்க ஒருத்தரையும் கண்ணுலயே பார்க்கச் சகிக்கலை. எழவு வுழுந்த வூடுமாதிரி இருக்குது”
“மொதல்லயேகீது பழக்கம் இருந்துருக்குமோ.? மொதச்சந்திப்புலயே இந்தளவுக்குப் போயிட்டாங் கங்கிறதை நம்பவே முடியலை. அதுலயும் ஒரு மாதிரி கெத்தான ஆளு இப்படிப் பண்ணீட்டாருங்கிறதை நம்பவே முடியலை”
“மொதல்லயெல்லாம் எந்தப் பழக்கமும் இல்லியாமா... அன்னிக்கு நைட்டு பங்ஷனப்போ பார்த்துக்கிட்டதுதான். எப்படியோ செட்டாகி அது இந்தளவுக்குப் போயிருச்சு.”
“கரும்மடா எல்லாம். ரெண்டுபேரும் எங்க இருக்கறாங்கனு ஏதாச்சும் தெரியுமா? ஜெயபாலு ஊட்லயும் மத்த சொந்தக்காரங்களுமெல்லாம் என்ன முடிவு எடுத்திருக்கிறாங்க?”
“அவுங்க அப்பாவும் அம்மாவும் ஆகவே ஆகாதுன்னு தலை முழுகீட்டாங்களாமா... நெருங்குன பங்காளிக நாலஞ்சுபேரு அந்தப் பொம்பளை யோட அட்ரஸை கலைக்குழு மேனேஜர்கிட்ட வாங் கீட்டுப்போயி பார்த்துருக்கிறாங்க. திண்டுக்கல்லுக்கு அந்தப் பக்கம் எங்கியோ மலங்காட்டுக்குள்ள இருக்குதாமா அந்த ஊரு. அவுளுக்குப் பணத்தைக்கீது கொடுத்து ஒதுக்கியுட்டுட்டு இவனைக் கூட்டீட்டு வந்துரலாம்னு போயிப் பேசிப் பார்த்துருப்பாங் களாட்டயிருக்குது. வந்தா கூட்டீட்டுப் போயிக்கங்கனு சொல்லீட்டு குடிசைக்குள்ள போயிட்டாளாமா அவ. நடந்தது நடந்துபோச்சு என்னை இப்படியே உட்ருங்கன்னு கையெடுத்துக் கும்புடறானாமாம் இவன். மறுபடியும் பேசறதுல பிரயோசனமில்லைனு எல்லோரும் வந்துட்டாங்களாம்”
இதெல்லாம் நடந்து இருபது வருடங்களாகி விட்டது. மீளவே முடியாத துக்கம் என்று எதுவுமில்லை. எழவு வீடு மாதிரி அன்றைக்குக் காட்சியளித்த ஜெயபாலின் வீட்டில் அதற்குப் பிறகு இரண்டு கல்யாணங்கள் நடந்துவிட்டது. எல்லோருமே நன்றாகத்தான் இருக்கிறார்கள். இன்னமும் அவர்மீது அவர்களுக்குக் கோபமோ வருத்தமோ இருப்பதற்கு வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. இருந்தும் இத்தனை காலத்துக்குப் பிறகும் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் என்னவாக இருந்துவிட முடியும்?
பெரிய மலைகளையே விழுங்கிப் படுத்திருக்கும் நடுக்கடல் அமைதியின்மேல் சிறிய கல்லொன்று விழுந்தாலும்கூட அதற்குரிய ஒரு சலனம் அந்த நேரத்திற்கு உருவாகவே செய்கிறது. பிறகு கடல் மறுபடியும் அமைதியாகி விடுகிறது. அரூபமான மனிதமனமும் ஒருவகையான நடுக்கடல் அமைதி தான். சின்னஞ்சிறியதையும் ஏற்றுக்கொள்ளாமல் சலனமுறும். பென்னம்பெரியதையும் விழுங்கிவிட்டு அமைதி கொள்ளும். லோகு நினைத்துக்கொண்டார். ஜெயபாலின் பெற்றோர் அவர் இல்லாமல் வாழ்ந்து பழகிவிட்டார்கள். அண்ணனும் தங்கச்சியும் ஜெய பாலுக்குப் போகவேண்டிய சொத்தையும் தாங்களே அனுபவித்துப் பழகிவிட்டார்கள்.
வாசுகியை அவள் பெற்றோர் மிக வசதியான இடத்திற்குக் கட்டிக் கொடுத்தார்கள். தற்போது அது மிகமிக வசதியான இடமாக வளர்ந்துவிட்டது. பல தொழில்களைச் செய்யும் வாசுகியின் கணவர் பனியன் கம்பனியும் வைத்திருக்கிறார். டைரக்ட் எக்ஸ்போர்ட். லோகுவின் இரண்டு பனியன் கம்பனிகளையும் சேர்த்து நிறுத்தினால் அவர்கள் கம்பனியின் கணுக்கால் உயரத்திற்கு வரலாம். மூலைக்கு மூலை கணவர் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துக்களைப் பரிபாலனம் பண்ணுவதற்காக வாசுகியும் மூலைக்கு மூலை தனது கறுப்பு இன்னோவா காரில் போன படியும் வந்தபடியும் இருக்கிறாள். கடந்த சில மாதங்களில் எங்கேனும் தடம் வழியில் பழைய பாடாவதி டிவிஎஸ் பிப்டியை கறுப்பு இன்னோவா எதிர்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை. அப்படி எதிர்கொண்டிருந்தால் கண்ணாடிகள் ஏற்றப்பட்ட கறுப்பு இன்னோவாவுக்குள் என்ன நடந் திருக்கும் என்றும் தெரியவில்லை. ஜெயபால் ஓடிப்போனசெய்தியை சோமு வந்து சொன்னதும் சட்டென்று அந்தரங்கத்தில் ஒரு ரகசிய இன்பம் ஊற்றெடுத்ததை லோகு இப்போது நினைத்துக் கொண்டார். சிரிப்பாய் வந்தது. கூடவே வரும் இன்பமென்றும் எதுவுமில்லை.
கோல்டு கிங்ஸ் சிகரெட் ஒன்றைப் பெட்டிக் கடையில் வாங்கிப் பற்றவைத்துக் கொண்ட லோகு சலூன் கடைக்கு முன்னால் போடப்பட்டிருந்த மரப் பெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டார். நால்ரோட்டின் காட்சிகளை வேடிக்கை பார்த்தவாறு புகையை ஊதிக்கொண்டிருந்தார். பேக்கரிக்கு முன்னால் கடைரோட்டில் நின்ற இவருடைய சைக்கிளுக்குச் சற்றே மேபுறமாக ஜெயபாலுவின் மொபட்டும் நின்றது. பேக்கரிக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஜெயபால் உளுந்துவடைப் பார்சலைக் கொண்டுபோய் வண்டி யின் டேங்க் கவருக்குள் வைத்துவிட்டு பெட்டிக் கடைக்கு வந்தார். தலைமுடி மீசையெல்லாம் பாதிக்குப் பாதி நரைத்துவிட்டது. ஆனாலும், அந்த உடல்வாகும் முகமும். அவை இன்னும் அப்படியே தான் இருக்கிறன. பார்த்தும் பார்க்காதவராக லோகு சாலையைக் கவனித்தபடி புகையை ஊதிக்கொண் டிருந்தார் ஜெயபாலும் பார்த்தும் பார்க்காத மாதிரித் தான் போய்க்கொண்டிருக்கிறார். ஆனால், அதில் தன்னுடையதைப் போன்ற பாவனை இல்லை. திட்டமிடல் இல்லை. மிகவும் இயல்பாக இருக் கிறது. யாரென்றே தெரியாத ஒருவரைக் கடந்து போகும் இயல்பு. ஒருவேளை நம்மை உண்மையாகவே அவர் மறந்துவிட்டார்தானோ என்னவோ. இப்படியெல்லாம் யோசனைகளை ஓடவிட்டுக் கொண்டிருந்த லோகு சட்டென்று எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு காதைத் தீட்டிக் கொண்டார். பீடியை பற்ற வைத்தபடியே ஜெயபால் பெட்டிக்கடைக்காரரிடம் வினவிக்கொண்டிருந்தார். ‘நேத்து ரிஷாப் பண்டு பின்னியெடுத்திட்டானாட்ட இருக்குது...?’
குகையில் முடவர்களைப் போலில்லாமல், முழுமையாகவும் சாகசத்துடனும் எப்போது வாழப்போகிறோம்?
-விர்ஜீனியா உல்ஃப்
பெரிய ஆளுமைகள் பிரிட்டனில் அருகிவந்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தீவிரமாகச் சிந்தித்தும் எழுதியும், இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளவர் விர்ஜீனியா
உல்ஃப் (1882-1941). நாவல், விமர்சனம், பெண் ணியம், வரலாறு என்னும் தளங்களில் புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியவராக, தனது ஆளுமைப்பொலிவோடு உருகொண்டதற்கிணங்க, தனது எழுத்தையும் உருகொள்ளவைத்தவர். வாழ்ந்தது போல் எழுதியவர். சிந்தித்தது போல் வாழ்ந்தவர். இறக்கவும் செய்தவர்.
அவரது கவனக்குவிப்பெல்லாம், “தற்போதைய கணம், புரிதலுடன் முழுதாக ஆழமாகப் பிரவாகிக்கும் வரை, கடந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலத்தால் இன்னும் முழுமையாக நிரம்புமாறு” செய்வதாக இருந்தது.
இதுதான் அவருக்கு இருந்த சவால் - எழுத்திலும் வாழ்விலும். இரண்டாம் உலகப்போர் கட்டவிழ்த்து விட்டிருந்த பீதியுணர்வு, இலக்கிய உலகில் நிலவிய காழ்ப்புணர்வுகள் - பாரபட்சங்கள், தன் உடல் சார்ந்த நோய் குறிகள் - மனநிலை பாதிக்கப்பட்ட துயரங்கள் ஆகியவற்றின் பின்புலத்தேதான் விர்ஜீனியா இயங்கினார். எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த தீவிர பற்றுதலும் அர்ப்பணிப்புமே அவரது கணிசமான பங்களிப்புக்கு அடிப்படை. நாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், பெண்ணிய விவாதங்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் என நிறையவே விட்டுச் சென்றுள்ளார்.
பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி என்பது போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுடன் குரல்களைக் கேட்பது போன்ற உளம் சார்ந்த பிரச்சனையும் இருந்து வந்தது. சீரிய இலக்கியவாதியான அவருக்கு, அவ்வப்போது வரும் இலக்கியவாதிகளின் கடுமையான விமர்சனங்களும் பாராமுகமும் பாதிப்பைத் தந்தன. சஞ்சலப்பட்டார். மனச்சிதைவு ஏற்பட்டது. தற்கொலை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றின. இதன் அதல பாதாள முடிவுதான் 1941இல் அவர் தன் கோட் பாக்கெட்டில் கற்களை நிரப்பி ஒயுஸ் நதியில் இறங்கி மூழ்கிப்போனது. அவரின் மனநிலைப் பிரதி அவதிப்பட மூலக்காரணம் அவரது குடும்பத்தில், குறிப்பாக அவரது தந்தையிடம் இருந்து வந்தது என்கிறார், விர்ஜீனியாவின் வாழ்க்கை வரலாற்றினை VIRGINIA WOLF: The Marriage Of Heavan and Hell / Peter Dally என்னும் தலைப்பில் எழுதியுள்ள உளவியல் மருத்துவர்.
விர்ஜீனியாவின் தந்தை வெஸ்லி ஸ்டீபன் பிரிட்டனில் இலக்கியவாதிகளது வாழ்க்கை வரலாறு சார்ந்த அகராதித் தொகுப்புகளை BIOGRAPHIA BRITANNICA என்னும் தலைப்பில் கொண்டுவரும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தவர். 1905இல் புற்றுநோய் கண்டு மடிந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவரது மாற்றாந்தாய் சகோதரி ஸ்டெல்லா PERITONITIS என்னும் நோயால் இறந்துபோனார். விர்ஜீனியா 13 வயது யுவதியாக இருந்தபோது, அவரது மாற்றாந்தாய் சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஜெரால்ட் டக்வொர்த்தால் பாலியல் இம்சைக்கு உள்ளாகியுள்ளார்.
பருவம் எய்தியபோது தாய் இறந்தது, தொடர்ந்து ஸ்டெல்லா இறப்பு, புற்றுநோய் காரணமாகத் தந்தை இறப்பது போன்ற காரணங்கள் விர்ஜீனியாவை கடுமையாகப் பாதித்துள்ளன. அத்துடன், தந்தை ஸ்டீபன், CYCLOTHYMIA என்னும் ஒருவித மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படி அடுக்கடுக்காக உடல் சார்ந்தும், குடும்பம் சார்ந்தும், மரபணு சார்ந்தும், காலகட்டம் சார்ந்தும் உருகொண்ட மனச்சிதைவு / பைத்திய நிலை அவரது சமநிலை பிறழ்வில் ஓர் ஒழுங்கினை ஏற்படுத்த முற்பட்டபோது தீவிரமாய் எழுதினார். அது இல்லாத தருணத்தில் ஆற்றில் கரைந்துபோனார். அவரது சிக்கல் இரு துருவநிலை, ஆளுமைச் சீர்குலைவு எனப்படுகிறது.
விர்ஜீனியாவின் தாய் ஜூலியா ஜாக்சன், மேரி அண்டோய்னிட்டா என்னும் அரசிக்குப் பணி பெண்ணாய் இருந்தவரது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், இந்தியாவில் பிறந்தவர்.
இதன் காரணமாக விர்ஜீனியாவின் இல்லம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் மையமாக இருந்தது. தந்தையால் உருவாக்கப்பட்ட பெரும் நூலகம் அரிய கருவூலமாகக் கருதப்பட்டது. விர்ஜீனியா தனது ஒன்பது வயதிலேயே The Hyde Park Gate News என்னும் குடும்பச் செய்திதாளை நடத்தியிருந்தார். பொருளியலாளர் கீன்ஸ், ஓவியர் கிராண்ட், தத்துவவாதிகள் ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டீன் போன்றோர் விர்ஜீனியாவின் அண்ணன் அட்ரியன் நடத்தி வந்த கூட்டங்களில் பங்கேற்றனர். சீக்கிரமே இக்குழு BLOOMSBURY என்றழைக்கப்பட்டது. இக்குழுவினர் கூடிய விர்ஜீனியாவின் இல்லம் ப்ளம்ஸ்பரியில் இருந்ததால்.
இப்படியான பிரச்சினைகள் மற்றும் சாதக நிலையிலிருந்து பறக்கத் தொடங்கியவர்தான் விர்ஜீனியா.
சார்லஸ் டிக்கின்ஸின் எழுத்தில் பிரச்சினைகள் அலசப்படும் அளவுக்கு புனைவம்சம் கூடி வரவில்லை, தன் நோக்குநிலையை / கருத்தியலை வற்புறுத்தியவர் டி.எச். லாரன்ஸ், கருத்துகளில் மட்டும் செழுமையானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி என தனது நாட்டின் இலக்கியவாதிகளை மதிப்பிடும் விர்ஜீனியா, பாத்திரங்களின் அகஉலகை சித்தரிப்பதில் கவனக்குவிப்புச் செய்தார். அதற்கேற்ற உணர்வுக்கூர்மையும் துல்லியமும் கனபரிமாணமும் சேர்ந்த மொழியைக் கையாண்டார். கான்ஸ்டன்ஸ் கார்னட்டின் மொழியாக்கத்தில் வந்து கொண்டிருந்த ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து மனந்திறந்து பாராட்டினார், வரவேற்றார். மேற்கத்தைய எழுத்து, உலகியல் வாழ்வுடன் கட்டுண்டுவிட, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் ஆகியோரின் எழுத்து ஆன்மாவின் சஞ்சலங்களை / பாடுகளை / வரை களை / பரிசோதனைகளைப் பேசுகிறது என்றார். ரஷ்ய எழுத்து ஆன்மா நோயுற்றிருப்பதை, ஆன்மா குணப்படுத்தப்படாமலிருப்பதை அல்லது குணப்படுத்தப்படுவதைப் பதிவு செய்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் சீறிக் கொதித்தெழுந்து நம்மை உள்ளீர்த்து விடுவதான நீர்ச்சுழல்கள், மணற் புயல்கள், பெருக்கெடுத்தோடும் வெள்ளங்கள் என்று குறிப்பிட்டார். ஆங்கிலேய நாவலாசிரியனோ கருணை கொள்வதற்குப் பதிலாக அங்கதம் செய்வதிலும், தனிநபர்களைப் புரிந்துகொள்வதிற்குப் பதிலாகச் சமூகத்தைக் கூராய்வு செய்வதிலும் ஈடுபட்டுவிடுகிறான் என குறைப்பட்டார்.
தனது எழுத்து தனிநபரின் அக உலகத்தை விவரிப்பதாக அமைந்து, அவரது காலகட்ட சமூக வரலாறாக விரிவடையக் கூடியதாக இருக்குமாறு எழுதினார்.
“சாதாரண நாளில் சாதாரண மனதில் ஒரு கணத்தைப் பரிசீலனை செய்யவும், அற்பமானது, அதியதிசயமானது, தோன்றி மறைவது என பல்வேறான மனப்பதிவுகள் உண்டாகின்றன அல்லது உருக்கின் கூர்மையுடன் பொறிக்கப்படுகின்றன. நாலாபுறங்களிலிருந்தும் எண்ணற்ற அணுக்களின் இடையறாத பொழிவு; அவை வீழ்கையில், திங்கள் / செவ்வாயின் வாழ்வாக உருகொள்கின்றன; முக்கியத் தருணம் இங்கிருந்தல்லாமல், அங்கிருந்து வருகிறது; எனவே, ஓர் எழுத்தாளன் அடிமையாக இல்லாமல் சுதந்திரமனிதனாக விரும்பினால், தான் எழுதியாக வேண்டியதை அல்லாமல் தான் தெரிவு செய்ததை எழுத விரும்பினால், சம்பிரதாயத்தின் மீதல்லாமல் தனது உணர்வோட்டத்தின் மீது தன் எழுத்தை அமைத்துக்கொள்ள முடிந்தால், ஒத்துக்கொள்ளப்பட்ட பாணியில் கதைப்பின்னலோ இன்பியலோ துன்பியலோ நேசமோ விநாசமோ இருக்காது; வாழ்வென்பது ஒழுங்கில் நிறுத்தப்பட்டுள்ள விளக்குகளின் வரிசை அல்ல; பிரக்ஞையின் தொடக் கத்திலிருந்து முடிவு வரையில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம், அரைபாதி தெரியும் உறை. இவ்வேறுபடுகின்ற, அறியப்படாத, பாதிப்புறாத ஆன்மாவைத் தொடர்புறுத்தச் செய்வது ஒரு நாவலாசிரியரின் பணியல்லவா?”
300 ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு நபரால், ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கின்ற சாத்தியத்தை ORLANDO நாவலில் முன்வைக்கிறார். ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றின் வடிவில் வந்துள்ளது இந்நாவல். 12 மணி நேரங்களில் கிலாரிஸ்ஸா டல்லாவே என்னும் பாத்திரத்தின் ஆளுமை கொள்ளும் வீச்சை விவரிப்பது Mrs. Dalloway நாவல்.
அவரது தலைசிறந்த நாவல் என்று கொண்டாடப்படுவது The Waves (1960). பெர்னார்ட், லூயி, நெவில்லே, சூஸன், ஜின்னே, ரோடா என்னும் ஆறு பாத்திரங்களின் அக உலகத் தனிமொழிகளாக இருக்கும்.
ஒரு நாளில் நிகழ்வதாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்னர் இடம்பெறும் பகுதிதான் ஒருவரால்/ஆசிரியரால் எடுத்துரைக்கப்படுகிறது. மற்றபடி எடுத்துரைப்பு இன்றியே, பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களாகவே அமைந்திருக்கிறது. அத்தியாய முகப்பில் இடம் பெறுவது, ஆடல் சார்ந்த இயற்கை விவரிப்பின் நாடகமாகிவிடும். இறுதி அத்தியாயத்தில் பெர்னார்ட் என்னும் பாத்திரம், மற்ற பாத்திரங்களையும் தனக்குள் உள்ளடக்கிப் பேசுவதாக, ஆன்மிக இழைகளின் நேர்த்தியான நெசவாக, கவிதா பூர்வ சித்திரமாக, உரைநடையிலான கவிதையாக, வாழ்க்கை சார்ந்த ஒரு பரிசோதனையா அல்லது இலக்கியம் சார்ந்த பரிசோதனையா என்ற ஊடாட்டத்தைக்கொண்டிருக்கும்.
“என் நண்பர்களை ஒவ்வொருவராகப் பார்த்து, நடு நடுங்கும் விரல்களால் அவர்தம் பூட்டிய பெட்டகங்களைத் திறக்க முயன்றேன். என் துயரத்துடன் இல்லை, எனது துயரமில்லை மாறாக, எமது வாழ்வின் புரிந்துகொள்ள இயலாமையுடன் ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பார்க்கப் போனேன். அவர்களைப் பரிசீலிப்பதற்காகச் சிலர் பாதிரியார்களிடம் செல்கின்றனர்; சிலர் கவிதையிடம்; நான் என் சிநேகிதர்களிடம், எனது இருதயத்திடம் துண்டு - துணுக்குகள், தொடர்களிடையே நொறுங்காத ஒன்றைத்தேடி - என்னைப் பொறுத்தவரை, நில விடமோ மரத்திடமோ அழகில்லை; இன்னொருவருடனான ஸ்பரிசமே ஒருவருக்குப் போதுமானது - இருந்தும், அதைக் கூடப் புரிந்துகொள்ள இயலாத, அவ்வளவு பரிபூரணமற்ற, பலவீனமிக்க, தனிமையானவன் நான்.”
இன்னொரிடத்தில் ஒரு வாக்கியம்:
“ஒரு கணத்தில் ஒரு வரவேற்பறையில், மெது வாழ்க்கை, வாளின் ஊடேயான நாளின் பெருமித அணிவகுப்புடன் தன்னைச் சரிசெய்து கொள்கிறது.”
பெர்னார்டின் அக மனத் தெறிப்புகளில் வேறோரு பதிவு :
“நான் திரும்பிப் பார்த்துக்கொள்வது ஒரு வாழ்வில்லை; நான் ஒரு நபரில்லை; நான் பலராக இருக்கிறேன்; நான் யாரென்று - ஜின்னியா, சூஸனா, நெவில்வேயா, ரோடாவா அல்லது லூயியா - முழுமையாகத் தெரியவில்லை; அல்லது அவர்களிடமிருந்து என்வாழ்வைப் பிரித்தறியத் தெரியவில்லை.”
பாலியல் நெருக்கடிக்குள்ளாகியிருந்த விர்ஜீனியா, மணமான பின், விட்டா சாக்வ்ல்லே-வெஸ்ட் என்னும் பிரெஞ்சு தோழியிடம் ஈர்ப்பு கொண்டிருந்தார். அவரை உத்வேக தேவதையாகக் கருதினார். அது தன்பால் உறவு வரை விரிந்தது. தன் கணவருக்கும் அது தெரியும் படி தயக்கமின்றி நடந்துகொண்டார். ‘ஒர்லாண்டோ’ நாவலை இத்தோழிக்குச் சமர்ப்பணம் செய்தார்.
லியோனார்ட் உல்ஃப் என்னும் யூதரை தன் 30வது வயதில் மணந்துகொண்டார். விர்ஜீனியாவின் மனச்சிதைவுப் பிரச்சனை, உடல்சார்ந்த நோய்க்கூறுகள், ஒருபால் உறவு என்பவற்றையெல்லாம் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுப் புரிந்துகொண்டார் லியோனார்ட். மனைவியுடன் சேர்ந்து ஹோகார்த் அச்சகத்தை (வெளியீட்டு நிறுவனம்) நிறுவி, டி.ஸ். இலியட், காதரின் மேன்ஸ்ஃபீல்ட் போன்றோரின் நூல்களுடன் விர்ஜீனியாவின் எழுத்துக்களையும் வெளியிட்டு வந்தார். இரண்டாம் உலகப்போரின் அழுத்தமும், தன் கணவர் யூதரென்பதால் நாஜிக்களுக்கு இலக்காக் கூடும் என்ற பயமும் சேர்ந்து விர்ஜீனியாவை வதைத்து, அவரைத் தற்கொலைக்கு உந்திய காரணிகளில் ஒன்றாய் இருந்தது. தன் கணவருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றுகூட ஒருமுறை திட்டமிட்டுள்ளார்.
ஆற்றில் கரைந்து போகுமுன் இரு கடிதங்களை விட்டுச் சென்றுள்ளார் விர்ஜினியா. ஒன்று கணவருக்கு, இன்னொன்று சகோதரி வாரனஸ்ஸா பெல்லுக்கு.
கணவருக்கு எழுதிய கடிதத்தில் :
“மீண்டும் பைத்தியமாகப் போவதுபோல் உணர்கிறேன். அப்பயங்கரமான காலகட்டங்களில் மீண்டும் நம்மால் வாழமுடியும் என்று நான் எண்ணவில்லை. இப்போது என்னால் மீளமுடியாது. குரல்களைக் கேட்கத் தொடங்குகிறேன், என்னால் கவன குவிப்புச்செய்ய இயலவில்லை. ஆகவே என்னால் செய்யக் கூடிய சிறந்ததைச் செய்கிறேன். சாத்தியமாகிவிடும் அதிகபட்ச சந்தோஷத்தை அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விதத்திலும் யாரேனும் இருக்கக்கூடிய தன்மையில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இப்பயங்கர நோய் வரும்வரை, இருவர் இவ்வளவு சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணியதில்லை. இனியும் என்னால் போராட இயலாது. உங்கள் வாழ்வை பாழாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றறிவேன், நான் இன்றி உங்களால் செயல்பட முடியும். செயல்படுவீர்கள் என்றறிவேன். இதைச் சரியாகக்கூட எழுத முடியவில்லை என்பதைப் பார்க்கிறீர்கள். என்னால் வாசிக்க முடியவில்லை. நான் சொல்ல வருவது, எனது சந்தோஷங்களுக்கெல்லாம் நான் உங்களுக்கே நன்றி பாராட்ட வேண்டும். முற்றிலும் பொறுமை காத்து, நம்பமுடியாத விதத்தில் நல்ல வராக இருந்துள்ளீர்கள். யாரேனும் என்னைக் காப் பாற்றியிருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கமுடியும். உங்களது நல்லியல்பின் உறுதிப்பாடு தவிர்த்து எல்லாவற்றையும் இழந்துள்ளேன். இனி மேல் உங்கள் வாழ்வைப் பாழ்படுத்துவதை என்னால் தொடர இயலாது. நானும் நீங்களும் சந்தோஷமாயிருந்ததுபோல வேறிருவர் சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணவில்லை நான்.”
விர்ஜீனியாவின் தற்கொலை சாதாரணமாக நிகழ்வது போன்றதில்லை. பிரச்சினைகளை எதிர்கொள்ள இல்லாமல் செய்துகொள்வதில்லை. உலகியல் காரணங்களால் மேற்கொண்டதல்ல. இவ்வளவுக்கும் தாம்பத்தியத்தில் உறவுகூட நெருடலன்றி இசைவாக இருந்துள்ளதை, அவரின் இறுதிக் கடிதமே தெரிவிக்கும்.
The Waves - நாவலில் ஓரிடம். அது விர்ஜீனியாவின் இன்னொரு முகத்தைக் காட்டும்.
“தொலைவில் ஒரு மணி அடிக்கின்றது, அது சாவுக்கல்ல. வாழ்வுக்காக அடிக்கின்ற மணிகள் உண்டு. ஓரிலை வீழ்கிறது, ஆனந்தத்திலிருந்து. ஓ, நான் வாழ்வில் நேசம் கொண்டிருக்கிறேன்!...” இதனை எதிரொலிப்பதுபோல 1937ஆம் ஆண்டில் ஒரு நாட்குறிப்புப் பதிவு உள்ளது :
“...எனது மகிழ்ச்சி குருட்டுத்தனமானதில்லை. எனது 55 ஆண்டுகளில் இன்று காலை மூன்றிலிருந்து நான்கு மணி வரை, அதுதான் சாதனை என்றெண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வளவு அமைதியுடன் நிறையாமல் விழித்திருந்தேன் சுற்றிச் சுழலும் உலகில் இருந்து ஆழ்ந்தமைதியான நீலவெளிக்குள் அடி யெடுத்து வைத்ததுபோல, தீங்கு நெருங்காதபடி திறந்த விழிகளுடன் இருந்தேன்; நிகழக்கூடிய அனைத்துக்கும் எதிராக ஆயுதம் தரித்திருந்தேன். எனது ஆயுளெல்லாம் இதற்குமுன் இத்தகு உணர்வைப் பெற்றிருந்ததில்லை. ஆனால் கடந்த கோடைகாலத்திலிருந்து பலமுறை பெற்றுள்ளேன். எனது மோசமான மனச்சிதைவில் அதனை நான் அடைகையில் மேலங்கியைத் தூக்கியெறிந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது போல...”
நட்சத்திரங்களைக் கண்டு அகத்தை விசாலமாக்கிக் கொள்ளும் விர்ஜீனியாவால்தான், ‘ஒரு பெண்ணென்ற வகையில் எனக்கொரு தேசமில்லை, எனது தேசம் ஒட்டுமொத்த உலகமே’ என்று கூற முடியும்.
ஆதாரங்கள் :
1. Virgini Woolf / A Writer’s Diary / A Harvest Book - Harcourt INC, 1954
2. Thw Waves / Virginia Woolf / The Hogarth Press, 1960
3. Virginia Woolf on the creative benefits of keeping a diary / Haria popova / theguardian.com
4. The Common Reader / Virginia woolf
5. Virginia Woolf / biography.com
6. The Lone Grey Woolf / Curtis sittenfelol / Deccan heralol / 27 Nov 2005
7. Looking Through a Prism Of The Past / Halavika Karlekar / Biblio -Sep 1996
8. A sense of emptiness / Ravi vyas / The Hindu, Nov 3, 1996
9. Virginia woolf : The Marriage of Heaven and Hell / Peter Dally The feminist bible - Review of a Room of one’s own / Virginia Woolf / Ravi vyas / The Hindu - Aug 3, 1997
வாழ்வு நத்தையின் ஊர்தலைப் போல் அதிகுறை இயக்கத்தைக் கொண்டிருந்தது. எங்கும் சோர்வு சூழ்ந்த வெளி. ஒருவேளை அது என் மனதின் பிரதிபலிப்பாய் கூட இருக்கலாம். இம்முறையும் வங்கித் தேர்வின் முடிவு என்னை விரக்தியடையச் செய்திருந்தது. இதுநாள்வரை நான் எதிர்கொண்டிருந்த நேர்முகத் தேர்வுகளின் கேள்விகளுக்கான சாத்தியமான வேறு பதில்களை ஆராய்ந்துகொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாய் வழக்கம் போல் எண்ணங்களைக் கணிதச் சமன்பாடுகள் ஆக்கிரமித்துக்கொண்டன. அவை பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களில் என்னை ஒன்றவிடவில்லை. வண்டியோ வெகுநேரமாய்ப் புறப்படவிருப்பதைப் போல் முன்னேறுவதும் அதைத் தொடர்ந்து நடத்துநரின் விசில் ஒலிகளும் என என்னை எரிச்சலுறச் செய்திருந்தது. மாநகரின் அந்த நண்பகலை வாகனங்களின் புகையும் தூசியும் மேலும் உக்கிரமடையச் செய்திருந்தது. யாரோ என்னைத் தொட்டி நீருக்குள் அமிழ்த்துவதைப் போல் அந்த வெயிலையும் வெறுமையையும் உணரத் தொடங்கினேன். அது நீர் தொட்டியல்ல. நீராவியால் நிறைந்த தொட்டி. அப்பேருந்தே எனக்கு ராட்சச நீராவித் தொட்டியாய் தோன்றியது.
ஒருவழியாய்ப் புறப்பட்ட வண்டி எனக்கு இளைப்பாறலைத் தந்தது. சில நொடிகளில் யாரோ ஒருவர் ஓடிவந்து ஏறி என்னருகில் அமர்ந்தார். அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். சட்டென எழுந்த ஒரு துள்ளல் இசைக்கு அருகில் இருந்தவர் தொடையில் தாளமிட ஆரம்பித்தார். சில முறைத் தாளம் தப்பி என் தொடையிலும் விழுந்தது. அது வண்டிக் குலுக்கலில் இருக்குமெனக் கால்களை ஒடுக்கி அமர்ந்தேன். வண்டி மலைக்கோட்டை நிறுத்தத்தைத் தாண்டியிருக்கையில் அவரிடமிருந்து சிரிப்பொலி கேட்டது. முழுதாய் தலையைத் திருப்பாமல் விழிகளை அவர் மேல் ஓடவிட்டேன். நாற்பது வயதிருக்கும். சற்று நரைத்த தாடியும் வயதிற்கு மீறிக் குடியேறியிருந்த முதுமையின் சாயலோடும் இருந்தவர் என்னை நோக்கித் திரும்பாமலே நான் கவனிப்பதை உணர்ந்தவர்போல் முன்னிருக்கையின் கீழிருந்த ஒலிப்பெருக்கியைச் சுட்டிக் காட்டினார். “அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்” என மனோவும் ஸ்வர்ணலதாவும் பாடிய பாடலது.
“நல்ல பாட்டுங்க” என்றார். நான் “ஆமாம்” எனத் தலையசைத்தேன். “ஓடும் காவிரி இவதான் என் காதலி குளிர்காயத் தேடித் தேடிக் கொஞ்சப்பிடிக்கும்.” இம்முறை அவர் சற்று உரக்கச் சிரித்தார். நான் என்ன என்பதைப்போல் அவரைப் பார்க்க “இல்ல ரொம்ப நாளா என் காதுல கொஞ்சப் பிடிக்கும்னு விழுகல. என்னடா இப்படி விரசமாவா பாட்டெழுதுவாங்கன்னு நெனச்சேன். அப்பறம் என் நண்பர்தான் வௌக்கமா சொன்னாரு.”
நான் அவரிடம் பேச விருப்பமில்லாதவனைப் போல் கால்களை மேலும் ஒடுக்கி அமர்ந்தேன். சாலையோரத்திலிருந்த கடையின் பெயர் பலகையைச் சுட்டி அவர் மேலும் பேச்சைத் தொடர்ந்தார். “பேரு வச்சிருக்காங்க பாருங்க ஆதிகுடி காபி கிளப். ஆதிகுடி சாராயக் கடை. சொல்லிப்பாருங்க தம்பி எவ்வளவு நல்லா இருக்கு. காபி கிளப்புக்கு ஆத்திக் குடின்னு பேரு வைக்கனும். என்ன நான் சொல்றது” எனப் பதிலை எதிர்பார்த்து எனது முகத்திற்கு மிக அருகில் வந்தார். நான் வேறுவழியின்றி
“இல்லங்க ஆதிகுடிங்கறது ஊரு பேரு. லால்குடி பக்கத்துல இருக்கு” என்றேன்.
“ஓஹோ” என ஏமாற்றமடைந்தவரைப் போல் முகத்தை வைத்துக்கொண்டார்.
“தம்பிக்கு லால்குடி பக்கமோ?”
“இல்ல புதுக்கோட்டை.”
“காஞ்சப் பய ஊரு” என முகத்தைச் சுளித்தவாறு சற்று உரக்கச் சிரித்தார்.
எனக்கு அவரது முகத்தில் ஒரு குத்து விட வேண்டுமெனத் தோன்றியது. மேற்கொண்டு பேச்சை வளர்க்க விரும்பாமல் வெளியே வேடிக்கை பார்ப்பவனைப் போல் தலையை நன்றாகத் திருப்பிக் கொண்டேன்.
பேருந்து மரக்கடை வீதி வழியாகச் சென்று காந்தி மார்க்கெட் நிறுத்தத்தில் நின்றது. பயணிகளை ஏற்றுவதற்காய் சற்று நேரம் அங்கே காத்திருந்த பேருந்து உடனே புறப்படவிருப்பதைப் போல் பாவனைக் காட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சில நொடிகளில் உள்ளங்கை நீளமுள்ள மல்லிகைப் பூச்சரங்களைப் பத்து ரூபாய் எனப் பேருந்தில் ஏறி இருவர் விரைவாய் விற்றுக்கொண்டிருந்தனர். நான் ஓடாத மணிக்கூண்டில் உறைந்திருந்த நேரமும் சரியாய் என் அலைபேசியில் அப்போது சுட்டிய நேரமும் பொருந்துவதைப் பார்த்து மெல்லியதாய்ப் புன்னகைத்தேன்.
“எவனுக்காகவோ போயி எவனோ சாவுறான் பாத்தீகளா?” என அவர் மணிக்கூண்டைப் பார்த்தவாறு சொன்னார். முதல் உலகப் போரில் பிரிட்டிசாருக்காய் மரித்த திருச்சிராப்பள்ளி ராணுவ வீரர்களின் நினைவிடமது.
நான் அவரோடு பேச விரும்பாததால் அவர் சொன்னது செவிகளில் விழாததுபோல் இருந்துகொண்டேன்.
பேருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. சிறுநீர் கழிப்பிடத்திற்குச் செல்கையில் அருகிலிருந்த தடுப்புச் சுவரின் மீது ஒரு பகார்டி பாட்டிலைப் பார்த்தேன். எனக்கு மது அருந்த ஆசைத் தோன்றியது. சமீபநாட்களாய் சுயஇன்பத்தைப் போல் அந்த நினைப்பும் மனதில் எழத் தொடங்கினால் என்னால் மனதை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. சுவர் முழுதும் ஹெச்.ஐ.வி மருத்துவம் மற்றும் ஆண்மை பெருக்கும் சுவரொட்டிகளால் நிறைந்திருந்தன. மிதமிஞ்சிய மூத்திர நெடியால் எனக்கு மூச்சடக்கி கண்மூடி சிறுநீர் கழிக்கச் சற்றுக் காலதாமதம் ஆனது. நான் தலை கவிழ்ந்து சிறுநீர் கழித்துவிட்டு நிமிர்கையில் மதுக்குடுவை கால் பங்கு நிரம்பியிருந்தது. நான் அதிர்ச்சியுற்றுத் திரும்ப நரைதாடிக்காரர்
“எவன் போதைக்காவது ஆகும்ல தம்பி” என்றவாறு சிரித்தார். சிரித்ததில் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது. என்னால் அவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த ஆள் என்னைப் பின்தொடர்வது போலும் தோன்றியது. வேகமாய் வெளியேற மூத்திர நெடி பேருந்து நிலையம் முழுதும் நிறைந்திருப்பதாய் தோன்றியது. பேருந்தில் படிக்க வேண்டும் என்பதற்காய் வேளாண்மை குறித்த மாத இதழ் ஒன்றை வாங்கி வந்தேன். புறவழிச்சாலையில் செல்லும் வண்டிக்காய்க் காத்திருந்த வேளையில் அம்மாத இதழைப் புரட்டினேன். உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களோடு புன்னகை ததும்பும் முகங்களாய் தங்கள் வெற்றிக் கதைகளைச் சொல்லியிருந்தனர். நான் என்னுடைய எதிர்காலம் குறித்த கற்பனையில் மூழ்கத் தொடங்கினேன். அடுத்த வங்கித் தேர்வில் புரொபெசனரி ஆபிசராய் தேர்வானேன். நிலத்தடி நீர் ஆயிரம் அடிகளுக்குக் கீழ் சென்ற என் நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தேன். என் குடும்பத்தின் ஒன்றரை ஏக்கர் நூறு ஏக்கர்களாய் விரிந்து பெருகியது. வங்கி அதிகாரியாய் இருந்துகொண்டே நஞ்சற்ற காய்கறிகளை உற்பத்தி செய்கிறேன். அதை விற்பனை செய்ய எல்லா ஊர்களிலும் இயற்கை அங்காடிகளைத் திறக்கிறேன். பின் எனது நிலத்தின் விளைச்சலை மட்டுமே சமைக்கும் ஒரு உயர்தர உணவகத்தை ஆரம்பிக்கிறேன். பின் எனக்கு வங்கி அலுவலர் வேலை தேவையில்லாமல் போகிறது. செல்வம் கணக்கற்றுப் பெருகுகிறது. நான் கட்ட நினைக்கும் பங்களாக்கள் குறித்தும் பயணம் செய்ய நினைக்கும் கார்கள் குறித்தும் கற்பனை வளர்கையில் என்னவென்று சொல்ல இயலா ஒரு குற்ற உணர்வு என்னுள் உருவாகியது. அப்போது மனக்கண்ணில் வெள்ளைக் குல்லாவோடு ஜே.சி.குமரப்பா எட்டிப்பார்க்கிறார். இ.எஃப்.ஷூமாஸர் ‘சிறியதே அழகு’ என்கிறார். காந்தி ஈறு தெரிய புன்னகைக்கிறார். எனக்குக் குற்ற உணர்விலிருந்து மீள வழி கிடைத்துவிட்டது. நார்த்தாமலை திருவிழாவிற்கும் திருவப்பூர் திருவிழாவிற்கும் காலை முதல் இரவு வரை எனது உணவகத்தில் அனைவருக்கும் அன்னதானம் நடைபெறுகிறது. என்னை மக்கள் ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு நிற்கச் சொல்லி வற்புறுத்துகின்றனர். நான் முடியாதென மறுக்கின்றேன். ஆனால் மக்கள் சக்திக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும். அப்போது எனது எண்ண ஓட்டங்களைத் தம்பி தம்பியென ஒரு குரல் இடைமறித்தது. நரைதாடிக்காரர் அழைத்தார். எனது எரிச்சலை காட்டிக்கொள்ளவில்லை.
“தம்பிக்கு கூகுள் பேல அக்கவுண்ட் இருக்கா?”
“இல்லண்ணே”
“என்ன தம்பி என்னய பாத்தா களவாணிப் பய மாதிரித் தெரியுதா?”
அந்த நேரடிக் கேள்வியால் என்ன சொல்வதெனத் தெரியாமல் நான் திகைத்த வேளையில் “தம்பி என் சேக்காளி பணம் தரணும். என் அக்கவுண்டுக்குப் போடுறான். ஆனா என்னோட எ.டி.எம் கார்ட தொலைச்சுட்டேன். அதான். ஆயிரம்தான். அவன் ஒங்க நம்பர்ல போட்டதுக்கு அப்புறம் கையில இருந்து குடுத்தா போதும்” என்றார்.
என்னிடம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இருந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு அலைபேசி எண்ணை கொடுத்தேன். என்னிடமிருந்து சற்று விலகிச் சென்று அலைபேசியில் பேசியவர் “தம்பி தர்மராசுங்கறது தான் ஒங்க பேரா” எனக் கேட்க நான் ஆமெனத் தலையசைத்தேன். எனது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய்ச் செலுத்தப்பட்டது குறித்த குறுஞ்செய்தி வந்தது. எனது கூகுள்பே செயலியை சோதித்து விட்டு ஆயிரம் ரூபாயைத் தந்தேன். அவர் வேகமாய் பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறினார். எனக்கு ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டதைப் போல் உறுத்தலாய் இருந்தது.
பேருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைத் தாண்டியிருக்கையில் எனது அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்ற நொடியில் “யோவ் எவ்வளவு நேரமாச்சு போன் அடிச்சாலும் அந்த ஆளு எடுக்க மாட்டேங்குறான்?” என்றொரு குரல் சற்று ஆவேசமாய் முறையிட்டது.
நான் சற்றுப் பொறுமையாய் “யார்ணே நீங்க எதோ ராங் நம்பர்னு நினைக்கிறேன்” என்றேன்.
“மயிரு என்ன விளையாடுறீகளா புடுங்கிகளா ஆயிரம் ரூவா அட்வான்ஸ் வாங்குனீல அயிட்டம் எங்கடா?” அவன் குரல் மேலும் உக்கிரமடைந்தது.
“என்ன அயிட்டம்ணே” என் குரலில் படபடப்போடு சற்று ஆர்வமும் தொனித்தது.
“உங்க அக்கா.”
அப்பதிலால் நான் ஆத்திரமுற்றாலும் சற்றுத் திடமான குரலில் அவரிடம் சொன்னேன் “நான் வீட்டுக்கு ஒத்தப் புள்ளண்ணே.”
“டேய் தாயளி ஒங்காயி அப்பனுக்குப் புள்ளயே இல்லாம ஆக்கிருவேன். லாட்ஜ் ரூம் செலவு வேற... தர்மராசாம் மயிராண்டி தேடி வந்து கொல்லுவேன் பாத்துக்க.”
நான் வேகமாய் இணைப்பைத் துண்டித்தேன். அந்த எண்ணிலிருந்து தொடர்ச்சியாய் அழைப்புகள் வந்தன. சற்று நேரம் கழித்து ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்பதா வேண்டாமா எனக் குழம்பி இறுதியில் அழைப்பை ஏற்றேன்.
“என்ன தம்பி பஸ் ஏறியாச்சா? எதுவும் கூப்பிட்டாங்களா?” என்ற கேள்வியின் மூலம் அழைத்தவர் யாரென அறிந்துகொண்டேன்.
“அண்ணே யார்ணே நீங்க? ஒங்களால என்னைய கொண்ருவேன்னு மிரட்டுறாங்க.”
“தம்பி ஆயிரம் ரூவாக்குல்லாம் கொல்லுவாங்களா? சும்மா ஏசிட்டு விட்டுறுவானுங்க. பயப்படாதீக. உண்மையிலே என் ஏ.டி.எம் கார்டு தொலஞ்சு போச்சு. எனக்கு அவசரமா கொஞ்சம் காசு தேவை. நாளைக்கு வந்தீகண்ணா நீங்க ஆயிரத்துக்கு எறநூத்தம்பது எடுத்துக்குங்க. என்ன நான் சொல்றது. சலுகை புதிய ஏ.டி.எம் கார்டு வரும் வரை மட்டுமே” என்று இறுதி வரியை விளம்பர அறிவிப்பைப் போல் சொல்லிவிட்டுச் சிரித்தார். எனக்கு அடிவயிற்றிலிருந்து கிளம்பிய எரிச்சலோடு வாயில் வந்த வசைச் சொல்லைக் கட்டுப்படுத்தியவாறு அழைப்பைத் துண்டித்தேன். மீண்டும் பணம் அனுப்பியவனிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பைத் துண்டித்துவிட்டு அவனுடைய எண்ணுக்கு கூகுள்பேயில் இரண்டாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.
இரவு உறங்குவதற்கு முன் நரைதாடிக்காரரிடமிருந்து வாட்ஸப்பில் நாளை காலை ஒன்பது மணியளவில் மத்திய பேருந்து நிலையத்தில் உங்களுக்காய் காத்திருப்பேனெனக் குறுஞ்செய்தி வந்தது. பதிலுக்கு நான் அனுப்பிய இரண்டாயிரம் ரூபாய் பரிவர்த்தனைக்கான ஸ்கிரின் ஷார்ட்டையும் அதன் கீழே “போயா லூசு கூ...” என்று தட்டச்சு செய்தும் அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து சற்று நேரத்தில் “தம்பி இன்று நடந்ததை உங்கள் நண்பர்களிடம் சொல்லிப் பாருங்கள் அனைவரும் உங்களைத் தான் லூசு கூ... என்று சொல்வார்கள்” எனப் பதில் வந்தது. ஆத்திரத்தில் அலைபேசியை ஒலிக்காதவாறு செய்துவிட்டு தலையணையை நாலு முறைக் குத்தி விட்டு உறங்கிப் போனேன்.
மறுநாள் காலை கண்விழிக்கத் தாமதம் ஆனது. அவசரகதியில் கிளம்பி திருச்சி பேருந்தில் செல்லும் போது நரைதாடிக்காரரின் நினைப்பு வந்தது. அவரைக் குறித்துச் சிந்திப்பதைத் தவிர்த்துப் பயிற்சி வகுப்பில் அன்றைய தேர்வுக்கான பாடங்களைப் புரட்டத் தொடங்கினேன். ஆனால் மத்திய பேருந்துநிலையத்தில் இறங்கியதும் நான் எதிர்கொண்டது அவரைத்தான். எனக்கு அவரை எப்படித் தவிர்ப்பதெனத் தெரியவில்லை. ஏதோ விதி என்னைப் பெரிய வில்லங்கத்தில் தள்ளிவிட முயற்சிப்பதாய் தோன்றியது. அவரோ எனது எண்ணங்களைத் தெளிவாய் ஆராய்ந்திட போதிய நேரம் அளித்திடவில்லை. “தம்பி ராத்திரி நல்லா ஒறங்குனீகளா? ஆன் லைனுக்கே வரலையே கொஞ்சம் உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க” என்றார்.
“அண்ணன் என்னைய தொந்திரவு பண்ணாதீங்க அப்புறம் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிருவேன் பாத்துக்குங்க.”
“சரி தம்பி நானே கூட்டிக்கிட்டுப் போரேன் பதராதீக.”
“என் பசங்க மூணு பேரு எஸ்.ஐ யா இருக்காங்க. ஒரு வார்த்தை சொன்னாப் போதும்.” (உண்மையில் என்னுடன் பயிற்சி வகுப்பில் பயில்பவனின் நண்பர்கள் சென்ற எஸ்.ஐ. தேர்வில் தேர்வாகியிருந்தனர்).
“அப்படியா என்னன்னு சொல்லுவீக”
“ஒங்ககிட்ட எனக்கென்ன பேச்சு”
“சரி தம்பி கோச்சுக்காதீக. நானும் புதுக்கோட்டைக்காரன்தான். அரண்மனைக் கொல்லைதான் பூர்வீகம். கொஞ்சம் அந்த டீக்கடைக்கு வாங்க பொறுமையாப் பேசுவோம்” என அழைத்தார். எனது அம்மாச்சியின் பூர்விக ஊர் அது. ஒரு வேளை அவர் என் உறவினராய் கூட இருக்கலாம். அதெல்லாம் நான் அவரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. என் முகத்தில் குடியேறியிருந்த வெறுப்பைச் சரி செய்ய அவர் ஏதேதோ பேசியவாறு வந்தார். நான் அவருக்கு எதிர் திசையில் முகத்தைத் திருப்பியவாறு சென்றேன்.
பேருந்து நிலையத்திற்கு வெளியிலிருந்த தேநீர் கடைக்குச் சென்றோம். அவர் இரண்டு தேநீரைச் சொல்லிவிட்டுச் சாலையில் செல்வதற்குச் சிரமப்பட்ட காருக்கு வழிவிடும் விதமாய் ஒரு இருசக்கர வாகனத்தை ஓரமாய் நகர்த்தி வைத்தார். இருவருக்கும் தேநீர் வந்தது.
இரண்டு தேநீருக்கும் நானே காசைத் தந்துவிட வேண்டும் என்பதற்காய் சூட்டோடு அருந்த தொடங்கினேன். “தம்பிக்கு புதுக்கோட்டையில எங்க?” என்ற அவரது கேள்விக்கு “வம்பன் நால்ரோடு” என்றேன். என் ஊர் ஆலங்குடி என்பதை நான் சொல்ல விரும்பவில்லை.
“அப்படியா நான் எட்டாவதுலேந்து பன்னென்டாவது வரைக்கும் வேங்கிடகுளத்துல தான் படிச்சேன். தம்பியும் அங்க தான படிச்சிருப்பீக?” என்றார். “இல்ல நான் ஆலங்குடியில படிச்சேன்” எனப் பதிலளித்ததற்கு “அப்பன்னா ஆலங்குடியில தானே வீடு இருக்கு” எனச் சிரித்தார். நான் எப்படிக் கண்டறிந்தார் எனப் புரியாமல் விழித்தேன்.
அவர் எனது சங்கடத்தை உணர்ந்து சிரிப்பை அடக்கும் விதமாய் உதடுகளை மடித்துக்கொண்டார். நான் வேகமாய் தேநீரை அருந்திவிட்டுக் காசைக் கொடுக்கலாம் என முயற்சிக்கையில் நான் கையில் வைத்திருந்த கண்ணாடி டம்ளரை வாங்கி அருகிலிருந்த ட்ரேயில் வைத்தவாறு அவர் பேசத் தொடங்கினார். அக்குரலில் எதோ ஒரு வசீகரமிருந்தது.
“மதுரையில டிப்ளமோ அக்ரி படிச்சேன் தம்பி. அப்ப என் கூடப் படிச்சவன் ஒருத்தன் கரூர்காரன். படிக்குற காலத்துல நல்ல நண்பன். எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம் வருவோம். படிச்சு முடிச்சுட்டு திருச்சியில உரக்கடை வைச்சோம். யோசனை அவனோடது. ஆனால் காசு முழுக்க என்னோடது. எங்க அம்மா நகையை வித்துக்கொடுத்தா. ஆனா அப்பாவுக்கு அதுல விருப்பமில்ல. கூட்டுல போகாதடான்னாரு. நான் கேக்குற மனநிலையில இல்ல. என் பார்ட்னர் அஞ்சு காசு கொடுக்கலை. கடையில நல்ல வியாபாரம். இலாபத்துல அவன் முதல் போட்ட மாதிரி கழிச்சுக்கிட்டோம். வெவசாயி எங்க வாழ்ந்தான். உரக்கடைக்காரன் தானே வாழ்ந்தான். தில்லை நகர்ல சொந்த வீடு வாங்குனேன். கல்யாணம் ஆச்சு. எங்க அம்மா முதல்ல போயி சேந்துச்சு. கொஞ்ச நாள்ல அப்பாவும் அம்மாவோட கூட்டு சேந்துட்டாரு. நல்ல வேளை அப்புறம் நான் அனுபவிச்சதெல்லாம் அவரு பாக்கல.”
சூடு ஆறியிருந்த தேநீரை ஒரே மடக்கில் அருந்திவிட்டு அருகிலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு காசு கொடுக்கச் சென்றார். ஏனோ எனக்கு மறுக்கத் தோன்றவில்லை.
தேநீருக்குக் காசைத் தந்தவர் பேச்சைத் தொடர்ந்தார். “எனக்கு ஊர்ல கொஞ்சம் நெலம் இருந்துச்சு. அதுல வெவசாயம் பாக்கணும்னு ஆசை. அப்பப்ப ஊருக்கு போயிட்டு வருவேன். அந்த நேரத்துல அவன் தனியா கரூர்ல ஒரு கடை ஆரம்பிச்சிருக்கான்.
எனக்கது தெரியல. நம்ம கடை பேர்ல கடனுக்குச் சரக்கெடுத்து அவன் கடையில வித்திருக்கான். கடன் அதிகமா போகவுட்டு கடையிலேந்து அவன் பங்கு காசையும் வாங்கிட்டு வௌகிட்டான். அதுக்கப்புறம் தான் எனக்கு விசயம் தெரிஞ்சுச்சு. ஆனா என்ன பண்றது எல்லாம் கைய மீறிப் போச்சு. ஏற்கனவே இருக்குற கடன அடச்சாத்தான் மேற்கொண்டு சரக்குன்னு எல்லா டீலரும் சொல்லிட்டானுங்க. கடையில விக்க ஒன்னும் இல்ல. வீடு வித்ததுல பாதிக் கடன் தான் முடிஞ்சுச்சு. அப்புறம் கடையயும் மூடிட்டேன். கடனக் கொடுத்தவன் எல்லாம் வீடு தேடி வர ஆரம்பிச்சான். கடனத் திருப்ப வழி யில்லேன்னா பொண்டாட்டிய வைச்சுச் சம்பாரிக்கச் சொன்னானுங்க. எங்க அப்பாரு சொன்னதக் கேட்காமவிட்டுட்டோமேன்னு அப்ப வருந்துனேன். மீள்றதுக்கு வழியே தெரியல. எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வர்ரறதுனா என்னன்னு அப்பதான் புரிஞ்சிச்சு. எனக்குச் சொந்தமானது எல்லாம் கையவிட்டுப் போச்சு. உசிரு மட்டும் மிஞ்சிச்சு. கொஞ்சநாள் எப்படி சாகலாம்னு யோசிச்சுக்கிட்டு சுத்தித் திரிஞ்சேன். எனக்குச் சாகப் பயம் இல்ல. ஆனா என் சாவு மூலமா அவனப் பழிவாங்கணும். ஒரு நாள் விடியயில கரூர் பஸ்ல கிளம்பிப்போனேன். எனக்கு அவன் கண் முன்னால சாகணும்னு ஆசை. ரொம்ப நாள் கழிச்சு கர்நாடகாக்காரன் காவிரில ஒரு லட்சம் கன அடி தொறந்திருந்தான். ரெண்டு கரையும் தொட்டுக்கிட்டு காவிரி பாயுறா? அவளும் கடலுக்கிட்ட தன்ன பலி கொடுக்கப் போறான்னு தோணுச்சு. அவளைப் பாத்துக்கிட்டே பஸ்ல போனேன். ரெண்டு பேரும் எதிர் எதிர் தெசையில. ஆனா நோக்கம் ஒன்னுதானே. குளித்தலையிய அவ என்னய கூப்புடுற மாதிரி தோணுச்சு. நான் முசிறி பாலத்துல எறங்கிட்டேன். அப்படியே பாலத்துல நடந்து போனேன். விடிஞ்சு அரை மணி நேரம் ஆகியிருக்கும். பெருசா ஆளுக நடமாட்டம் இல்ல. அதுதானே அகண்ட காவிரி. என்ன ஒரு பிரம்மாண்டம். அத முழுசாப் பாக்க எனக்குக் கண்ணு கொள்ளல. கெழக்காலச் சூரியன் மேகத்துக்குள்ளாற மறைஞ்சிருந்துச்சு. இன்னும் முழுசா மேல வரல. காவிரிய வடக்கு கரையிலேந்து தெற்கு கரை வரைக்கும் ஒரு பார்வை பார்த்தேன். அப்படியே தெகப்பா இருந்துச்சு. ஏதேதோ பறவைங்க மீன் தேடித் திரிஞ்சுதுங்க. நான் அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி நின்னேன்.” அதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்களை மூடி சில நொடிகள் மௌனமாய் இருந்தார். அதை மீண்டும் மனதிற்குள் நிகழ்த்துபவரைப் போல. எனக்குப் படபடப்பாய் இருந்தது. இதோ அவர் என் கண் முன்னே ரத்தமும் சதையுமாய் நிற்கிறார் எதற்கு நான் பதட்டமடைய வேண்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். ஆனால் என் சமாதானங்கள் என்னை ஆற்றுப்படுத்தவில்லை.
அவர் கண்களை மூடியவாறே தொடர்ந்தார். “அவள் ஆர்ப்பரிக்குற ஓசை. பால்கொடம் எடுக்கயில பொம்பள ஆளுக சாமி வந்து ஆங்காரமா ஆடுங்களே அது மாதிரி. கொஞ்ச நேரம் அந்தச் சத்தத்த கண்ண மூடிக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருந்தேன். திடீர்னு ஒரு குரல் கேட்டுச்சு. வா ரெண்டு பேரும் ஒன்னாப் போவோம் அப்படின்னு.”
அப்போது அவர் கண்களைத் திறந்தார். “ஆமா காவிரி பொண்ணுதான். யோசிக்காம குதிச்சிட்டேன். நான் நல்லா நீந்துவேன். ஆனால் இதுவரைக்கும் ஆத்துல நீந்துனதே இல்ல. அவ என்ன இழுத்துக்கிட்டுப் போறா. நான் அவ இழுப்புக்கு நீந்துறவனோட உள்ளுணர்வுல நீந்திப் போறேன். என்னால தெடமாச் சொல்ல முடியும். அது உயிர் ஆசையில்ல. அப்பதான் அந்த அதிசயம் நடந்துச்சு. எங்கேருந்தோ பத்து நீர்காகம் எனக்கு முன்னால பறக்க ஆரம்பிச்சுதுக. என்னமோ எனக்கு வழிகாட்டுற மாதிரி.
எனக்கும் அதுகளுக்கும் இருபதடி தூரம் எடவெளி இருக்கும். நான் எருக்கம் புதருக்குள்ளயும் நாணலுக்குள்ளாறயும் மாட்டுறப்ப அதுகளும் அந்தரத்துல எனக்காகக் காத்திருக்குதுக. நான் அதுகள நோக்கி நீந்தத் தொடங்குனேன். அதுக என்னய எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போகுதுங்க. கருவேலம் முள்ளு கிளிச்சு என் உடம்பெல்லாம் எரியுது. எப்படியும் பத்து சுழலுக்கிட்ட இருந்தாவது தப்பிச்சிருப்பேன். அங்கெல்லாம் அதுக வௌகிப் பறக்குதுங்க. இல்லன்னா நிச்சயம் அந்தச் சுழலுக்குள்ளாற மாட்டிருப்பேன். அப்படியே எவ்வளவு நேரம் நீந்துனேன்னு தெரியல. திடீர்னு அதுக எல்லாம் வல்லாங்கை பக்கமா பறக்க ஆரம்பிச்சுதுங்க. நானும் அதுக பின்னாடியே நீந்திப் போனேன். அதுங்க அப்படியே பறந்து போயி கரையில இருந்த ஒரு கோயில் கோபுரத்துல அமருதுங்க. அதுல ஒரு சுதைச் சிற்பம் மட்டும் தெளிவா என் கண்ணுக்குத் தெரியுது. அது தெறந்த மேனியா ஒரு பொண்ணோட சிலை. ஆனா அவ விசித்திரமா காவிரிக்குத் தன்னோட யோனிய விரிச்சுக் காட்டுறா. எனக்கு எதுவோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. ஆனா மனசுல ஒன்னு தெளிவா மின்னலடிச்சுச்சு. காவிரி கடலுக்குத் தன்ன பலி கொடுக்கப் போகல. அவ எல்லாரையும் வாழவைக்கதான் போறான்னு. கடல்தானே இந்த ஒலகத்தோட கர்ப்பப்பை. மொத உசிரு அங்க இருந்து தானே உருவாச்சு. மழைத் தண்ணி இல்லென்னா நெடுங்கடலும் நீர்மை குன்றுங்கிறான் வள்ளுவன். நதிங்கிறது மழையோட ஓட்டந்தானே. கடல்ல ஆறு நொழையுதே அதுதான் பூமியோட யோனின்னு தோணுச்சு. இதெல்லாம் அப்பத்தான் தோணுச்சா இல்ல அப்புறமா நான் எனக்குள்ளாற இப்படி வௌக்கம் குடுக்குறேனான்னுத் தெரியல. நான் அப்படியே ஆத்தோட போக்குல போனேன். எலவம்பஞ்சு காத்தடிக்குறத் தெசையில பறக்குற மாதிரி. மனசுல இருந்த பாரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. ரொம்பக் குதூகலமா இருந்துச்சு. முத்தரசநல்லூர் தாண்டுனோன்னே ஸ்ரீரங்கம் கோபுரம் கண்ணுல பட்டுச்சு. அப்படியே நீரோட்டத்துல போயி அம்மா மண்டப படித்துறையில கரையேறுனேன். தண்ணி அதிகமா ஓடுதுன்னு அங்க காவலுக்கு இருந்த போலீஸ்காரன் ஒருத்தன் என்னய ஏதோ கடவுளப் பாத்த மாதிரி கும்பிட்டான். என் உடுப்பெல்லாம் முள்ளுல கிழிஞ்சு ஆத்தோட போயிருந்துச்சு. அங்க யாருக்கோ திதிக் குடுத்த வேட்டியொண்ணு கம்பில சுத்திக் கெடந்துச்சு. நான் அதை உடுத்திக்கிட்டேன். அப்படியே நாலு நாள் தண்ணி குறையுற வர ஆத்த பாத்துக்கிட்டே அங்கயே ஒக்காந்திருந்தேன். நாலு நாளும் அந்தப் போலீஸ்காரன் தான் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். அப்புறமா எனக்கு சாவத் தோணல” என்றார்.
இருவரும் மௌனமாய் இருந்தோம். நான் இப்படியொரு உணர்ச்சிப் பெருக்கான உரையாடலை எவருடனும் நிகழ்த்தியதில்லை. ஆகவே எனக்கு அவரிடம் என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
அவர் தலை கவிழ்ந்து வெகுநேரம் மௌனமாய் இருந்தார். நான் அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாய் “இப்ப ஏன்ணே இந்த வேலை செய்யுறீங்க” என்றேன்.
நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் “என்ன தம்பி செய்யச் சொல்றீக. அரைக்காசுக்கு போன மானம் ஆயிரங் கொடுத்தாலும் திரும்ப வராது. நெட்ல இதுக்குன்னு சில சைட்ஸ் இருக்கு. அதுல என் நம்பர் கொடுத்து வைப்பேன். எவனாவது போன் பண்ணி பொம்பள கூட்டிவிடக் கேப்பான். நான் அட்வான்ஸ் அனுப்பச் சொல்லிட்டு அப்புறம் ஃபோன எடுக்க மாட்டேன். ஆயிரம் ரூபாய்க்கு மேல இல்ல. அதுவும் மூணு நாளைக்கு ஒருத்தன். எனக்கும் இந்த ஈனத் தொழில் பிடிக்கலதான். என்னால எவங்கிட்டயும் வேலைக்குப் போக முடியல.” என்றார்.
“சரிண்ணே நான் என்ன செய்யணும்”
“உங்க அக்கவுண்ட செக் பண்ணுங்க தம்பி” என்றார்.
நான் எனது அலைபேசியை வெளியில் எடுத்தேன். அதில் முப்பது தவறிய அழைப்புகள் இருந்தன. நல்ல வேளையாக நேற்றிரவு அலைபேசியை மௌனிக்கச் செய்திருந்தேன். கூகுள்பேயில் நேற்றிரவு மட்டும் ஒன்பது நபர்கள் ஆயிரம் ரூபாய் அனுப்பியிருந்தனர். அதை அவரிடம் தெரிவித்தேன். அவர் என்னை ஏ.டி.எம்முக்கு தனது ஹோண்டா ஷைன் பைக்கில் அழைத்துச் சென்றார். நான் ஒன்பதாயிரத்தை வெளியிலெடுத்து அவரிடம் தந்து விடைபெற முயற்சித்தேன். அவர் தன்னுடன் வரச்சொல்லி என்னையும் அழைத்தார். நான் மறுக்கவில்லை. அங்கிருந்து சிறிது தொலைவில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். வழக்கறிஞரின் பெயர் புண்ணியமூர்த்தி என்றிருந்தது. நான் வெளியில் காத்திருந்தேன். அவர் அவ்வழக்கறிஞரோடு வந்தார். வழக்கறிஞர் நெற்றியில் குங்குமமிட்டு இருந்தார். கருப்பு வெள்ளை உடையில் சற்றுப்பருத்த உடலோடும் மயிரடர்ந்த செவிகளோடும் இருந்தார். நாங்கள் எங்களது வண்டியைக் கிளப்ப அவர் தனது வெள்ளை நிற ஆக்டிவாவை இயக்கினார். அதன் முகப்பில் வழக்கறிஞர்களுக்கான கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.
இரு வண்டிகளும் சாலையில் இணையாய் பயணிக்கையில் வழக்கறிஞர் “பரமசிவம் அந்தப் பயல நம்பலாந்தானே?” என்றார். (அப்போது தான் நரைதாடிக்காரரின் பெயர் எனக்குத் தெரிய வந்தது).
அதற்கு “சார் அவனுக்கு ரொம்ப வெவரமெல்லாம் தெரியாது. எவனோ வண்டிய ரிப்பேர் பாக்க குடுத்துருக்கானுங்க. அது செயின் அடிக்குறவங்க வண்டின்னு எப்படித் தெரியும்? முந்துன வாரம் ராமலிங்க நகர்ல செயின் அடிக்கும் போது சிசிடிவியில வண்டி நம்பர் சிக்கியிருக்கு. பாத்தா வண்டிய ரிப்பேர் பாத்த மெக்கானிக்க ஸ்டேசனுக்குக் கூட்டிக்கிட்டு வந்துட்டாங்க” என இவர் பதிலளித்தார்.
“சரிப்பா அவன் வண்டிக்காரன் போன் நம்பர வாங்கி வச்சிருக்கலாம்ல?” என்றதற்கு
“சார் இவன் நம்பரத்தான் கொடுத்திருக்கான். அவனுங்களடோத வாங்கல” என்றார்.
“போலீஸ்காரனுங்க வண்டி நம்பர வச்சும் ஆளப் புடிக்க முடியலேங்குறானுங்க. ஏதோ பழைய கண்டமான வண்டி நம்பராம் அது. சரி நீ எதுவும் வாயத் திறக்காத நான் பேசிக்குறேன்” என வழக்கறிஞர் சலிப்புடன் சொன்னார்.
நாங்கள் கண்டோன்மென்ட் காவல்நிலையத்திற்குச் சென்றோம். சில கரை வேட்டிக்காரர்கள் காவல் நிலையத்தின் வெளியே நின்றிருந்தனர். அதில் சிலர் வழக்கறிஞருக்கு வணக்கம் வைத்தனர். பரமசிவம் என்னை எங்கும் சென்றுவிட வேண்டாமென்றும் வெளியே காத்திருக்குமாறும் சொல்லிச்சென்றார். என்னைக் கடந்து சென்ற காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இடைவெளியில்லாமல் ஒலித்துக்கொண்டிருந்தன. யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை. நான் காத்திருந்த நேரத்தில் அலை பேசியில் வாட்ஸப் செயலியைத் திறந்தேன். பணம் அனுப்பிய சிலர் என்னை மிக மோசமான வசைகளால் திட்டியிருந்தனர். அவர்கள் அனைவரையும் பிளாக் செய்தேன்.
அரைமணி நேரம் கழித்துப் பரமசிவமும் வழக்கறிஞரும் திரும்பி வந்தனர். உடன் வேறொருவரும் வலது காலைச் சற்றுத் தாங்கியவாறு நடந்து வந்தார். வழக்கறிஞர் தனது ஆக்டிவாவைக் கிளப்பும் முன்பு “யப்பா சக்திமானு அவனுங்க எதுவும் கால் பண்ணா ஒடனே போலீஸுக்கு சொல்லிரு. சரியா? என்ன சொல்லிருவாப்லயா பரமசிவம். பையனுக்குச் சாமர்த்தியம் பத்தாது போலயே?” என்றார். பரமசிவம் சக்திமானுக்கு நற்சான்றிதழ் வழங்கி “அதெல்லாம் சொல்லிருவாப்ல” என்றார். சக்திமானோ தலை கவிழ்ந்தவாறே இருந்தார். நான் அவரைப் பார்த்தவாறு இப்படியெல்லாமா பேரு வைப்பாங்க என யோசித்துக் கொண்டிருந்தேன்.
நாங்கள் மூவருமாகப் பட்டாபிராமர் தெருவில் இருந்த சக்திமானின் வீட்டிற்குச் சென்றோம். வீட்டை ஒட்டியாவாறே சிறிய டூவீலர் மெக்கானிக் ஷாப் இருந்தது. சில வண்டிகளும் நின்றன. சக்திமான் எங்களை வீட்டிற்குள் வரச் சொல்லாமலும் முறையாக விடைபெறாமலும் தனது வீட்டிற்குள் சென்றார். சற்று நேரத்தில் அவரது மனைவி வெளியில் வந்தாள். அவரும் “வாங்க” என உதட்டசைத்தாள். ஆனால் அது எங்கள் செவிகளில் விழவில்லை. அந்த அழைப்பும் வீட்டிற்குள் வரச்சொல்லி இல்லையென நான் புரிந்துகொண்டேன். பரமசிவம் அவளிடம் பைக் சாவியைத் தந்தார். பிறகுதான் அது சக்திமானின் பைக் எனப் புரிந்தது. “பையன் எப்படியிருக்கான்” எனப் பரமசிவம் கேட்டதற்கு “நல்லா இருக்கான்” எனத் தலையசைத்தாள். “உள்ள இருக்கானா?” என அவர் எட்டிப்பார்த்தார். “காலாண்டுப் பரிச்சை படிக்கிறான்” என்றாள். சரியென அவர் விடைபெற்றுக்கொண்டார். அங்கிருந்து தென்னூர் சாலையில் நடந்து சென்று வலது பக்கமிருந்த ஒரு குறுகிய சாலைக்கு அழைத்துச் சென்றார். அத்தெருவில் நடந்து செல்கையில்
“ஏன்ணே சக்திமானுங்குறது உண்மையான பேரா?” என்றேன்.
“இல்லப்பா அவன் பேரு சந்திரசேகர்.”
“அப்புறம் ஏன்ணே சக்திமானுன்னு கூப்புடுறீங்க?”
“நீ எந்த வருசம் பொறந்த?”
“தொன்னூத்தியேழு”
“அந்தச் சமயத்துல டிடிசேனல்ல சக்திமானுன்னு ஒரு நாடகம் ஓடுன்னுச்சு. அப்ப இவனுக்குப் பத்து வயசு இருக்கும். ஸ்கூல்ல எவனோ ஒருத்தன் சக்தி மானெல்லாம் சும்மா டூப்புன்னு சொல்லியிருக்கான். இவனுக்குக் கடுமையான கோவம் வந்துருச்சு. இவன் சக்திமான் உண்மைதான்னு நிரூபிக்கிறதுக்காக இப்ப சக்திமான் என்ன காப்பாத்துவாருன்னு மொத மாடியிலேந்து குதிச்சிருக்கான். நல்லவேளை அவன் ஸ்கூலுக்கு ஒரு மாடிதான். காலோட போச்சு. அதுலேந்து அதுவே அவன் பேராயிருச்சு” என்றார்.
“ஏன்ணே உங்களச் சுத்தி எல்லாம் இப்படிப்பட்ட ஆளுகளாத்தான் இருப்பாங்களா?” என்றேன்.
அவர் உரிமையோடு என்னை “டேய்” என்றார். அவரின் வீடு சற்று உள்ளடங்கியிருந்தது. “தம்பி நேத்து நீங்க அனுப்புன ரெண்டாயிரத்த இப்ப உடனே தேத்திரலாம்” என்றார். நான் அதெல்லாம் வேண்டாமென மறுத்துவிட்டு அங்கு இரைந்து கிடந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் உதவி வேளாண் அலுவலர் தேர்வுக்கான வழிகாட்டி நூல்களும் இருந்தன. நான் அதைக் கையிலெடுத்துப் புரட்டினேன்.
“என்ன பண்றதுப்பா நாப்பத்திரண்டு வயசாயிருச்சு. ஒங்கள மாதிரி சின்னப் பயலுகள்ட போட்டி போட முடியுமா?” என்றவர் அப்போது தனது அலைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசத் தொடங்கினார். அவர் பேச்சை சற்றுநேரம் கவனித்த எனக்கே அவரிடம் உண்மையில் ஏகப்பட்ட பெண்கள் கைவசமிருப்பார்களோ என எண்ணத் தோன்றியது. அவர் தன்னிடமுள்ள ஒவ்வொரு பெண்களாய் வர்ணித்து வந்தார். பழைய எழுத்தாளர்கள் அவ்வர்ணனையைச் சிருங்கார ரசம் என எழுதுவார்கள். அலைபேசியில் அவர்கள் புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கேட்க அது காவல் துறையிடம் சிக்கினால் பெண்களின் வாழ்க்கைப் போய்விடும். ஏனெனில் அவர்கள் கல்லூரி மாணவிகள் எனச் சொல்லி வைத்தார். பதினைந்தாயிரம் சொல்லி பன்னிரண்டில் பேரம் முடிவுற்றது. ஆயிரம் ரூபாய் முன்பணத்தை என் நம்பர் சொல்லி அதற்குக் கூகுள்பேயில் அனுப்பச் சொன்னார். இரண்டு நிமிடத்தில் என் எண்ணுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. நான் வேகமாய் அலைபேசியின் பேட்டரியை அணைத்தேன். அவர் என் பதட்டத்தைக் கண்டு உரக்கச்சிரித்தார். இம்முறையும் அவருக்குப் புரையேறி கண்களில் நீர் வழிந்தது.
சரி வீட்டிற்குக் கிளம்பலாமென அவரிடம் விடை பெற்றேன். தானும் பேருந்து நிறுத்தம் வரை உடன் வருவதாக எழுந்தார். எனக்குத் தாகமாய் இருந்தது. வீட்டின் மூலையில் மினரல் வாட்டர் கேன் இருந்தது. நான் அதனருகே சென்று நீரருந்த தலையை நிமிர்த்திய போதுதான் பரமசிவத்தின் திருமண புகைப்படத்தைப் பார்த்தேன். அவர் கண்களில் ஒருவிதக் குறும்பு தெரிந்தது. பிறகு புகைப்படத்தை மீண்டுமொரு முறை நன்றாக உற்று நோக்கி விட்டுக் கிளம்பினேன். பேருந்து நிறுத்தம் வரை பரமசிவமும் என்னுடன் வந்தார். நாங்கள் பேருந்திற்காய்க் காத்திருக்கும் போது என்னால் அக்கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன்ணே உங்க வீட்டுக்காரம்மா இப்ப சக்திமான் கூடத் தான் இருக்காங்களா?”
அவர் என் பக்கம் முகத்தைத் திருப்பவில்லை. பேருந்தின் வரவை எதிர்நோக்கியிருப்பதைப் போல் சாலையை வெறித்திருந்தார். நான் அக்கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதெனச் சங்கடப்பட்டேன். சற்றுத்தாமதமாய் அவரிடமிருந்து பதில் வந்தது
“கடன் காரனுங்களுக்குப் பதில் சொல்ல முடியாம நான் வீட்ட விட்டுப் போயிட்டேன். அவளும் எத்தன பேருக்குப் பதில் சொல்லுவா. கையில இருக்க எல்லாத்தையும் வித்துச் சாப்புட்டுக்கிட்டு இருந்திருக்கா. என் மகனுக்கு அப்ப ரெண்டு வயசு. என்ன பத்தி எந்தத் தகவலும் இல்ல. எங்க வண்டிய சக்திமான்தான் ரிப்பேர் பாப்பான். அவளோட பழைய ஸ்கூட்டிய அவங்கிட்ட வித்துத் தர முடியுமான்னு கேட்டுருக்கா. அப்படியே பழக்கம் ஆகிருச்சு. நான் மூணு மாசம் கழிச்சு திரும்பி வந்தப்போ என் சம்சாரம் அவன் கூட இருந்தா” என்றார்.
பரமசிவத்திற்கு அவர்கள் இருவர் மீதும் எந்தப் புகாருமில்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அன்று இரவு உறங்குவதற்கு முன் அலைபேசியை மீண்டும் உயிர்ப்பித்தேன். எனது வங்கிக்கணக்கில் இன்னொரு ஆயிரம் ரூபாய் செலுத்தப் பட்டதற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது. நான் கூகுள் பே செயலியை சோதித்துப் பார்த்தேன்.
பணம் அனுப்பிய எண்ணிலிருந்து எனக்கு வாட்ஸப்பில் மோசமான வசைகள் வந்திருந்தன. நான் அந்த எண்ணை பிளாக் செய்தேன்.
“இனிமேல் பணம் வேண்டாம்” எனத் தட்டச்சுச் செய்து பரமசிவத்திற்கு அனுப்பினேன். அவர் சரியெனப் பதிலளித்தார்.
“எதற்கு என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் தெருவிலேயே யாரேனும் பிடித்திருக்கலாமே?” எனக் கேட்டேன்.
அவர் வடிவேலு ஏட்டாய் இருக்கும் புகைப் படத்தை அனுப்பி “அவங்கெல்லாம் தொழிலக் கத்துக்குவானுங்க தம்பி” என்றார். நான் ஒரு புன்னகையைப் பதிலாய் அளித்து விட்டு “என் நண்பர்களிடம் இன்று நடந்ததைச் சொன்னேன் அவர்கள் அனைவரும் உங்களைத்தான் லூசு கூ.... என்றார்கள்” என அனுப்பி வைத்தேன்.
“சரி விடுங்க தம்பி அப்படி இருக்குறதுலயும் ஒரு சொகம் இருக்கு” எனப் பதிலளித்தார். நான் அவருக்கு ஒரு புன்னகையை அனுப்பிய பின் அலைபேசியின் பேட்டரியை அணைத்து வைத்தேன்.
இடையும் இசையும் என்கிற பெயர் கொண்ட அந்த மனமகிழ் மன்றத்து இரவு நேர நடன விடுதியின் வாசலில் சில மாதங்களுக்குமுன், நகர மக்கள் அத்தனை பேருடைய நினைவுகளிலும் இன்னும் சில வருடங்களுக்காவது நீங்காமல் நிலைக்கப்போகும், தனித்துவமிக்கப் பேய்மழை பெய்துகொண்டிருந்த அந்த இரவில் எங்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்றும் எங்கள் ஐந்து பேராலுமே தெளிவாக மனக்கண்களில் திரும்பிப் பார்த்து விளங்கிக்கொள்ள முடியவில்லை. முதலில் அந்த நிகழ்வு நடன விடுதியின் வாசலில்தான் தொடங்கியதா அல்லது அதற்கு முன்பே, விடுதிக்குள்ளேயே, நிகழத் தொடங்கி விட்டிருந்ததா, அல்லது நடன நிகழ்வின்போது எங்களுக்கு நேர்ந்த வினோதமான அனுபவத்தை நாங்கள்தான் பேசிப் பெருக்கி அது எங்களை விடுதிக்கு வெளியிலும் தொடர்ந்து வந்ததாகக் கற்பனை செய்துகொண்டோமா என்பதேகூட எங்களுக்குத் தெளி வில்லாத இருண்மைப் பண்பு கொண்டதாகத்தான் இருக்கிறது. ஐவரில் ஒருவர் மட்டுமல்லாமல் ஐவருமே அந்த அனுபவத்தை அடைந்தோம் என்கிற ஒரேயொரு பலவீனமான மெய்ம்மையின் கொக்கியில்தான் நாங்கள் அந்த நிகழ்வினுடைய மாயத்தன்மையின் முழு எடையையும் தொங்க விட்டிருக்கிறோம்.
நாங்கள் அன்று முன்னாள் மாநிலங்களை இணைத்த நெடுஞ்சாலை மருங்குத் தொழிற்பேட்டைத் தொகுப்பில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள், உள்ளாடைகள், தூமைக் கழிப்புக் குட்டைகள், நெகிழி சிசினங்கள், பொம்மைகள், கைக்கருவிகள் முதலியன தயாரிக்கும் (நூறு விழுக்காடு பெண்களால் நடத்தப்படுகிறது என்ப தனாலேயே பிரபலமாகியிருக்கும்) யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவி நடத்திவரும் அதன் இரட்டை உரிமையாளர்களும், அந்த மாலை நிகழ்வில் பங்குகொண்ட எங்கள் ஐவரில் இருவரும், உடன்பிறந்த சகோதரிகளுமான எங்கள் தோழிகள் இருவரில் ஒருத்தியாகிய நீமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக (கொண்டாட் டத்தை ஏற்பாடு செய்திருந்தவள் அவர்களில் மற்றொருத்தியான யோகா) அழைப்பின் பேரில்இடையும் இசையும் நடன விடுதியில் குழுமி இருந்தோம். அப்பொழுது மழைக்கான அடையாளம் எதுவும் வானில் இருக்கவில்லை. கூடவேதனிநாடு பிறந்தநாள் கொண்டாட்ட நாளாயும் அந்த நாள் இருந்ததால் சாலைகளிலும் விடுதிகளிலும் மன்றங்களிலும் கூட்டநெரிசலும் வாகன நெரிசலும் மிக அதிகமாக இருந்தது, அரசுப் பிரமுகர்களைத் தவிரப் பிறருக்குப் பொதுயிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான அனுமதி தரப்பட வில்லை, மற்றவர்கள் தங்களுடையதை வெகுதொலைவில் நிறுத்திவிட்டோ அல்லது திருப்பி அனுப்பிவிட்டு வேலை முடிந்ததும் (வேலையென்ன வேலை, அன்று அரசு விடுமுறையாதலால் பொது இடங்களில் அத்தனை பேரும் செய்துகொண்டிருந்தது விருந்தாடல்களையும் நடனங்களையும் முத்த மிடல்களையும் தழுவல்களையும் தவிர வேறெதையுமில்லை) செய்தியனுப்பி வரவழைத்துக்கொள்ளும் ஏற்பாட்டைச் செய்துவிட்டோதான் கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டுமென்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால் யோகாவும்நீமாவும் தங்களுடைய சொந்த வாகனத்தைக் கொண்டு வராமல் வாடகை வாகனத்திலேயே (மற்ற எங்கள் மூவரையும் அந்த வண்டியிலேயே எங்கள் இருப்பிடங்களிலிருந்து ஏற்றிக்கொண்டும்) நடன விருந்திற்கு வந்துவிட்டிருந்தார்கள். எங்களைத் தவிர அவர்களால் விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற நண்பர்களும் தவறாமல் விடுதிக்கு வந்துவிட்டிருக்கப் பிறந்தநாள் நிகழ்வு கோலாகலமாகத் துவங்கி நடந்து கொண்டிருந்தது. பரிசுகளும் முத்தங்களும் வாழ்த்துக் களும் சீண்டல்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டபின் இசை நடனம் துவங்கியது. மதுவகைகள் எச்சிலாய் வழிந்தோடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு இசைக்கோப்பு முடியும்போதும் உற்சாகம் அதன் உச்சத்திற்குச் சென்று பீறிட்டு அடங்கி அடுத்த இசைக் கோப்பு அதன் பணியைச் செய்ய அந்த இடத்திற்கு மாறிக்கொண்டிருந்தது. முதலில் கிட்டத்தட்ட அங்கேவருகை தந்திருந்த அத்தனை பேரையும் ஆட வைத்துஆரவாரித்துக்கொண்டிருந்த சூழல். நேரம் செல்லச் செல்ல ஆடிச் சோர்ந்துபோனவர்கள் தங்கள் இருக்கைகளில் ஒதுங்கிக்கொள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய இளைஞர் பட்டாளத்துடன் தொடர்ந்து கொண்டிருந்தது.
நடன விருந்து என்பதே ஒரு கிளர்ச்சியூட்டும் அனுபவம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை, நானோ அன்று தனிப்படக் கூடுதல்கிளர்ச்சியொன்றிலும் திளைத்துக்கொண்டிருந்தேன், என்னை விடாமல் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறா னென்று சொல்லப்பட்ட என்னுடைய கல்லூரியைச்சேர்ந்த (நான் அரசு வான்வெளி ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் வேற்றுக் கிரகவியல் துறையில் இளநிலை இரண்டாமாண்டு மாணவி. யோநீ பெண் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலையில் பகுதிநேர மேலாளராகப் பணி செய்தபடி போதா பெண்கள் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்) மாணவர்களில் ஒருவன் (ஒரு முறை தொழிற்சாலை யின் போட்டியாளர்களால் அதன் உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் அச்சுறுத்தல் நேரவிருப்பதாக ஒரு அநாமதேயத் தகவல் காற்றில் கசிந்தபோது நான் தங்கும் விடுதி வாசலிலேயே இரண்டு இரவுகளைக் கழித்தவன்) இன்று என்னைக் காட்டி என் மீதான தன்காதலையும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளத் தன் நண்பர் களுடன் அங்கே வரவிருப்பதாகச் சக மாணவிகள் மூலம் நான் கேள்விப்பட்டிருந்தேன். முதலில் அதை நான் நம்பவில்லையாயினும் அது அளித்த கிளர்ச்சி காரணமாக நம்ப விரும்பினேன். ஆனால் நான் கேள்விப்பட்டது உண்மைதான். அந்த மாணவன்மெய்யாகவே தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் அங்கே வந்துதானிருந்தான். பிறந்தநாள்கொண்டாட்டத்திற்கும் அவனுக்கும் தொடர்பில்லை யாதலால் தொலைவில், பொது வாடிக்கையாளர் களுக்குரிய பகுதியில், ஒரு மூலை மேசையில் என்னைப் பார்த்தபடியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறான் என்கிற ஊகமும் ஒருவேளை அவன் என்னை அணுகக்கூடும் என்கிறஎதிர்பார்ப்பும் தந்த போதையில் எனக்கு நடனத்தின் நடுவே அடிக்கடி காதுகள் சூடாகிச் சிவந்துகொண்டிருந்தன. தொடர்ந்து சுழன்றுகொண்டேஇருந்த மனிதவுடல்கள் கூடிப் பிரியும் இடைவெளியில் மயக்கமூட்டும் மங்கிய பன்னிற ஒளிவிளக்குகளின் அலைவில் உயர்ந்தும் தாழ்ந்தும் திரண்டும் திரிந்தும் தெரிந்தும் மறைந்தும் அவனுடைய இருப்பு என் பார்வைக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அது என்னுடைய அசைவு களைப் பிரத்யேகமானதாக ஆக்கிக்கொண்டு இருப்பதாயும் எனக்குத் தோன்றியது. ஏதோ ஒரு கட்டத்தில் அவன் எழுந்து என்னை நோக்கி வருவானென்றும் தன்னுடன் நடனமாட என்னை அழைப்பானென்றும் நான் எதிர்பார்த்து அந்தத் தருணத்திற்காகக் காத்துக் கொண்டுமிருந்தேன். அப்போது அந்த அழையா விருந்தாளியை என் தோழிகள் திரும்பி வியப்புடன் பார்ப்பார்கள். அவன் என்னைக் காதலிப்பதாக அவர்களிடம்திக்கித் திணறிச் சொல்லுவான். அவர்கள் என்னை அது உண்மையா என்று உசாவுவார்கள். நான் பெருமிதமும் அலட்சியமும் கலந்த குரலில் அவன் என் கல்லூரி மாணவன் என்பது உண்மைதானென்றாலும் அவன் என்னை விரும்புகிறான் என்பதுஎனக்கே இப்போதுதான் தெரியும் என்றும்அந்த வகையில் அவனுடன் நடனமாட எனக்குமறுப்பேதும் இருக்கப் போவதில்லையென்றாலும் அவனுடைய காதலைப் பொறுத்தவரையில் நான் இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்றும் சமத்காரமாகப் பேசி என் தோழிகளே அவனைப்பற்றி என்னிடம் நான் விரும்பும் வகையில் பேச ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்வேன் (ஏன்,இவனுக்கென்ன, ஆள் பார்க்க வாட்ட சாட்டமாக, நாகரீகம் தெரிந்தவனாக, உன்னைப் புரிந்துகொள்ளவும் உனக்காகக் காத்திருக்கவும் முயற்சிக்கிறவனாகத்தானே தெரிகிறான் இத்யாதி). கற்பனைகளின் வேகத்திலும் நடனத்தின் வேகத்திலும் அகப்பட்டு உண்மையில் அப்போது நான் மூச்சுவிடத்திணறிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் விரைவிலேயே, அவன் நான்எதிர்பார்த்த எந்த அசைவையும் காட்டாமல் தொலைவிலேயே தன்னைத் தன் நண்பர்களுடன் இருத்திக்கொண்டிருந்த காரணத்தால், அந்த மயக்கம் மெதுமெதுவாக வடியத் தொடங்கி என்னுடைய தன்னுணர்வு திரளத் தொடங்கி அவனுடைய பார்வை அத்தனை இடையீடுகளை மீறியும் என் மார்புகளில் ஒருவிதமான பிடிவாதத்துடன் மோதியதாக நான் உணர்ந்தபோது வெட்கத்தாலோ இயல்புணர்ச்சியாலோ எனக்கு அது ரசிக்காமல் போய்விட்டது. நான் வேண்டு மென்றே அவன் பார்வைக்கு என் பின்புறத்தைக் காட்டியபடியும் அவனுடைய இருப்பைச் சட்டை செய்யாதவளைப்போல இசையிலும் நடனத்திலும் என் கவனத்தைத் திருப்பிக்கொள்ளவும் முயற்சித்தேன். முதலில் அதில் ஓரளவு அழுத்த தணிவையும் உணர்ந்தேன். ஆனால் சிறிதுநேரத்திற்குப் பிறகு மீண்டும் அவனுடைய பார்வை என் முதுகைத் துளைத்து மார்புகளைத் துழாவுவதான உணர்வு நீங்க வில்லையென்று தோன்றவே அவனை வெளிப் படையாகவே முறைத்துப் பார்த்து என் எரிச்சலைக் காட்டிவிடும் எண்ணத்துடன் அவன் இருந்த திசையை நோக்கித் திரும்பினேன்.
அப்போதுதான் அது நிகழத் தொடங்கியிருக்க வேண்டும் (அல்லது ஏற்கனெவே நிகழ ஆரம்பித்து விட்டிருந்த அதை நான்தான் தாமதமாக உணர்ந்தேன் என்றும் சொல்லலாம்). அங்கே அந்த மாணவன் இல்லை. நான் அவனிடமிருந்து பார்வையைத்திருப்பியிருந்த சமயத்தில் ஏதோ ஒரு கணத்தில் அவன் கிளம்பிப் போய்விட்டிருக்கவேண்டும் (ஒருவேளை நான் முகத்தைத் திருப்பிக்கொண்டது தன்னை அவமானப்படுத்தியதாகவோ அவனை நான் விரும்பவில்லை என்பதாகவோ அவனை எண்ணச் செய்திருக்கக்கூடும். அல்லது அவனுக்குத் தன் நண்பர்களிடம் தான் காதலியாக வரித்திருக்கும் பெண்ணை வெறுமே காட்டிவிட்டுப் போகும் யோசனை மட்டுமே இருந்திருக்கக்கூடும். அல்லது இத்தனை கூட்டத்தில் தன்னுடைய காதலைச் சொல்வது, அது எனக்கு என் தோழிகள் முன்னிலையில் தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடுமென்றால், அத்தனை அறிவுக்குகந்த செயலாக இருக்காது என்று தோன்றியிருக்கக் கூடும். அல்லது அப்படிஅவன் நண்பர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருக்கக் கூடும், அல்லது, அல்லது, அல்லது). என்னை அவனுடைய வெளியேற்றம் பெரிதாகப் பாதிக்கவில்லையென்றாலும் (எங்கே போய்விடப்போகிறான்) சிறிது ஏமாற்றத்தைத் தரத்தான் செய்தது(ஒருவிதத்தில் அந்த ஏமாற்றத்தில் ஏதோ ஒரு கிளர்ச்சியும் இருக்கத்தான் செய்தது). ஆனால் அதே கணத்தில் அந்தக் கிளர்ச்சியை நான் சிந்தித்துப் பரிச்சயப்படுத்திக்கொள்வதைத் தடை செய்யும் வண்ணம் என் மார்புகளைத் துளைக்கும் அந்தப் பார்வை மட்டும் இன்னும் என்மேல் தங்கியிருந்ததை என் இயல்புணர்ச்சி அறிந்துவிட்டது. நான் திடுக் கிட்டேன், என் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்து விட்டது. அந்தத் துணிவற்ற மாணவனல்ல, மாறாக வேறு யாரோதான் என்னை அப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களென்பதை நான் தெரிந்துகொண்டுவிட்டேன். குழப்பத்துடனும் சிறிது அச்சத்துடனும் கண்களை அரங்கத்தைச் சுற்றிஓட்டினேன். ஆண்களின் பார்வை அவற்றின் இயல்புப் படி என்மேல் சில கணங்கள் மின்வெட்டி விலகிக் கொண்டிருந்தனவேயன்றி என் உறுப்புகளில் பிரத்யேகமாகத் தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கழுத்தின் கீழ்புறம் மேற்சட்டையினடியில் யாரோ உதடுகளைக் குவித்துக் காற்றை ஊதும் குறுகுறுப்பை என்னால் வெறும் கற்பனை என்று எடுத்துக்கொள்ளவும் முடியவில்லை. பார்வையால் எத்தனை துழாவிப் பார்த்தும் ஆளையோ காரணத்தையோ கண்டுபிடிக்க முடியாமலும் தவிப்பை வெளிக்காட்டாமலும் தொடர்ந்து சிறிது நேரம் நடனமாடிக்கொண்டிருந்த நான் கடைசியில் அதன் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு வழியின்றி அதை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன்.
கெடுவாய்ப்பாக அந்தப் பகிர்தல் தீர்வைக் கொண்டு வருவதற்குப் பதிலாக சூழலை இன்னும் அச்சம் நிறைந்ததாயும், என் தோழிகளையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சுழலாயும் உடனே மாற்றிவிட்டது. நான் சொன்னதைக் கேட்டதும் அவர்களுடைய முகங்கள் கேலியினாலோ கோபத்தினாலோ சிவப்பதற்குப் பதிலாக பீதியில் வெளிறிப்போய்விட்டன. அவர்கள் நான் என் மார்புகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த பார்வையால் நிம்மதியிழப்பிற்கு உள்ளாகியிருந்த அத்தனைநேரமும் தாங்களுமே என்னைப் போலவே அதே விதமான உறுத்தலைத் தங்கள் முலைகளில் பரிச்சயப் பட்டுக்கொண்டிருந்ததாக என்னிடம் சொல்லித் தாங்களும் திகைத்து என்னையும் திகைக்க வைத்தார்கள். நான் அந்தப் பார்வைக்குரிய உடலைத்தேடிக் கண்களால் சலித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களும் என்னைப் போலவே மற்றவர் களுக்குத் தெரிவிக்காமல் அதே செயலில்தான் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். ஒவ்வொருத்தியுமே அது தனக்கு மட்டுமே தோன்றும் காரணமற்ற உணர்வு என்றே எண்ணி அதைத் தானே கண்டுபிடித்துச் சரிசெய்துகொண்டுவிட முயற்சி செய்துகொண்டு இருக்கிறாள்கள். இப்போது நான் வெளிப்படையாக அதைத் தெரிவித்தவுடன் அது தனிப்பட்ட உணர்வல்ல என்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. தெரிந்ததும் அந்தப் பார்வையின் பிடிவாதம் கூடிவிட்டதைப்போல எங்கள் எல்லாருக்குமே மூச்சுத் திணறவும் தொடங்கிவிட்டது.
ஒப்பீட்டளவில் இடையும் இசையும் நடன விடுதி அளவில் சிறியதுதான். ஒருவேளை அதன் தாங்கும் சக்திக்கு அதிகமாகக் கூட்டம் சேர்ந்து அதனால்அறை வெப்பம் அதிகமாகி அதோடு பலதரப்பட்ட மது வகைகளின் நெடி மற்றும் காதையும் மண்டையும் பிளக்கும் இசையோலம் எல்லாமாகச் சேர்ந்து அந்த மூச்சுத் திணறலை உண்டாக்குகிறதோ, அதுதான் மார்பகங்களைத் தாக்கி யாராலோ பார்க்கப்படும் உணர்வை ஏற்படுத்துகிறதோ என்று நாங்கள் ஒரு மேசைக்கு நகர்ந்துபோய் உட்கார்ந்து பதற்றத்துடன் எங்களுக்குள் பேசி விடை தேட முயற்சித்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு அந்த உணர்வு உண்டாகியிருப்பதால் அதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் எங்களைத் தவிர அப்போது அந்த விடுதியிலிருந்த வேறு யாரும் யாருடனும் அவ்விதமான உணர்வைப் பகிர்ந்துகொண்டதாக எங்களால் பார்க்க முடியவில்லை. தொடர்ந்து சிரிப்பும்களிப்பும் நடனமும் இசையுமாகவேதான் அரங்கம் நிறைந்திருந்தது. எங்கள் ஐவரையும் திகில் பிடித்துக் கொண்டுவிட்டது. எங்களை வலையில் வீழ்த்த யாரோ முயற்சி செய்கிறார்களென்றும் நாங்கள் அருந்திய மதுவிலோ நான் அருந்திய பானத்திலோ (நான் மது அருந்துவதில்லை) எதையோ தனிப்படக் கலந்து தந்திருக்கிறார்களென்றும் எங்களைக் கவனி யாதவர்கள்போல அமர்ந்திருப்பவர்களில் யாரோ ஒருவருக்கு அல்லது ஒரு குழுவிற்கு எங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணம் இருக்கிறதென்றும் கற்பனை செய்துகொண்டதில் எங்களுடைய உடல்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. வெறும்உணர்வு சார்ந்து விடுதி நிர்வாகத்திடம் முறை யிடுவது பலன் தராது என்றும் தோன்றவே வேறுவழியின்றி நாங்கள் உடனே விடுதியை விட்டுவெளியேறிவிட முடிவு செய்தோம். விருந்தினர்கள்விடைபெறுவதற்கு முன் விருந்தளிப்பவர் வெளியேறுவது நாகரிகமாகாது என்று யோகாவும் நீமாவும் தயங்கினாலும் எங்களுடைய வற்புறுத்தலின் பேரிலும் தங்களுடைய அச்சத்தினாலும் மேலும் எங்களில் ஒருத்திக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே அவள் பொருட்டாகத் தாங்கள் விடைபெற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது என்றும்வருகை தந்தவர்களிடமும் அவர்கள் வேண்டியஅளவு உண்டு குடித்து விருந்தாடிவிட்டுச் செல்லத் தங்கள் செலவில் அனுமதிக்கும்படி விடுதி மேலாளரிடமும் சொல்லிவிட்டு விடுதியைவிட்டு வெளியேறினோம். யோகாவும் நீமாவும் எங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்ப அங்கிருந்தவர்கள் யாருடைய உதவியையேனும் உரிமையோடேயே கேட்டுப் பெற்றிருந்திருக்கலாமெனினும் அச்சத்தாலும் சந்தேகத்தாலும் அந்த வழியைத் தவிர்த்துவிட்டு வாடகை வண்டி பிடித்துக்கொள்ளும்எண்ணத்துடன் நடன அறையைவிட்டு வெளியேறி விடுதி வரவேற்பறையையும் கடந்து வாசலைநோக்கிப் போனோம்.
இசையும் இடையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் கேளிக்கையுலகின் வகைமைகளையும் மாயாஜாலங்களையும் அவை தரும் பரவசங்களையும் சாலையிலிருந்து தன்னை வேடிக்கைப்பார்ப்பவர்களால் சற்றும் ஊகிக்கவியலாதபடி மறைத்து வைத்து வாடிக்கையாளர்களாகி உள்ளேநுழைந்த பின்பே வேறொரு உலகத்தின் அனுப வத்தை ஒரு பேரதிசயமாக அவர்கள்முன் விரித்துக் காட்டும் நோக்கத்துடன் தன் உள்ளரங்கங்களை ஒலித்தடுப்புச் சுவர்களின் வெகு ஆழத்திற்குள்புதைத்து வைத்திருக்கும் கட்டுமானத் தொழில் நுட்பத்தைத் தேர்ந்துகொண்டிருந்தது. அது ஒரு கனவுஉலகம். அங்கே அது உருவாக்கும் ஒளியையும் ஒலியையும் தாண்டி யதார்த்தவுலகின் ஒளியோஒலியோ உட்புகுவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பேஇல்லை. போலவே அதன் உள்ளிருந்து வெளியேறும்ஒருவர் வாசலைத் தொடும் கணம் வரையில் அதன்பிடியிலிருந்து தப்பி வெளியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் தருணமும் சித்திப்ப தில்லை (இசையும் இடையும் விடுதியைப்போன்ற மிகச் சில விடுதிகள் தங்கள் அரங்கங்களுக்குள் அலைபேசி போன்ற வெளியுலகத் தொடர்புச் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு, அது எத்தனை முக்கியமான பிரமுகராக இருந்தாலும், விலக்குப் பெற்றிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தானே). எனவே நாங்கள் வாசலைத் தொட்ட கணத்தில்தான் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியுடன் வெளியேவான் பிளந்து கொட்டிக்கொண்டிருக்கும் மழையைஎதிர்கொண்டோம். அது பொதுவாக ஆகஸ்ட்பதினைந்தின் மழை என்பதை அதைச் சந்தித்த வுடனேயே எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம்.ஆனால் அதே மழை ஏதோவொரு கோபத்துடனும் பழிவாங்கும் மூர்க்கத்துடனும் நகரத்தின் மேல், மிக அச்சமூட்டும் விதத்தில் விழுந்துகொண்டிருப் பதாகத் தோன்றியது. வானம் மிகப் பழையதாக, வேறு ஏதோ ஒரு காலத்தினுடைய வானம்போலத் தெரிந்தது. நகரத்தின் மூன்றாவது பிரிவின் முக்கியச் சாலைகளில் ஒன்றான அந்தச் சாலை எண் 7 அதன் வானுயர்ந்த கட்டிடங்களிலும் எண்பதடி அகலச் சாலையிலும் ஆள் நடமாட்டமற்றுப்போயிருந்தது. தனிநாடு நாள் கொண்டாட்டங்கள் பாயக் காத்திருக்கும் மிருகத்தைப்போல வெளிப்படுவதற்கான தருணத்தை நோக்கி அவற்றின் உட்புறங்களிலும் மறைவுகளிலும் பதுங்கியிருப்பதை இந்நிலத்தோடு பழகியிருக்கும் யாராலும் உணர முடியும். அந்தக் கொண்டாட்டத்தின் வண்ணங்கள் வேறு. இசை வேறு. நடனங்கள் வேறு. அவற்றிலும் பார்வைகள் உண்டுதான். ஆனால் அவை அச்சம் விளைவிக்கும் ரகசியத்தையும் இருண்மையையும் கொண்டிருப்பதில்லை. அவைவெளிப்படையானவை, துணிச்சல் கொண்டவை. சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்கெனவேதடையிருந்ததால் கனத்த மழைப் பொழிவிற்குஇடையிலும் சாலையின் நெடுந்தொலைவுவரை பார்வைத் தடையேதும் இருக்கவில்லை. எங்கள்ஐவருக்குள்ளுமே அதுவரையில் நிறைந்திருந்த, உடனடியாக இருப்பிடத்திற்குத் திரும்பும் தவிப்பையும் புதிர்மை கொண்ட அச்சவுணர்வையும் அந்த அகண்டபுறவெளி தணித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தது. என்றாலும் எங்கள் மார்புகளின் மேல் படிந்திருந்த அந்த உடலற்றப் பார்வை விலகிவிட்டதான உணர்வை நாங்கள் இன்னும் பெறவில்லை. வெளியே வந்ததும் யோகா தன்னுடைய ஓட்டுநருக்குத் தகவல் சொல்லி வண்டி வருவதை உறுதி செய்து கொண்டுவிட்டாளெனினும் காத்து இருக்கும் நேரத்தில் நாங்கள் குறைந்தபட்சம் விடுதி வாசலிலிருந்து அப்பால் நகர்ந்து செல்லவாவது ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துத் தவிப்புடன் மழைக்குள் பார்வையால் துழாவிக்கொண்டிருந்தோம் (விடுதி யுமே ஏதோவொரு விளங்காத முணுமுணுப்பால் எங்களை வழியை அடைத்துக்கொண்டு நிற்காமல் அகன்று போகச் சொல்லி அரற்றிக்கொண்டேதான் இருந்தது). நெடுநேரம் இப்படியே கடந்துபோனது.
பிறகு மினுதான் (மினு ஒரு படிமி. நடிகையாக முயற்சித்துக்கொண்டிருக்கிறாள். அரசு விமரிசனச் சிந்தனைகளைக்கொண்ட பெண் என்றும் அவ்வித மான சிந்தனைகளை உள்ளடக்கிய சிறு திட்டப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவளென்றும் சில தலைமறைவுக் குழுக்களுடன் ரகசியத் தொடர்பி லிருப்பவளென்றும் (தகுந்த ஆதாரங்களில்லாமல், அல்லது ஆதாரங்களெதையும் விட்டுவைக்காமல்) அறியப்பட்டிருக்கிறாள் சாலையின் எதிர்ப்புறம், விடுதி வாயிலிலிருந்து ஒரு இருநூறு மீட்டர் தொலைவில், நீர்த்திரையின்மேல் வரையப்பட்ட அபத்த ஓவியத்தைப்போலக் குத்துவாக்கில், ஏழெட்டு அடி உயரம் இருக்கலாமென்று கணிக்கத்தக்க கருப்பு உருப்படியொன்று உயர்ந்திருந்ததை எங்களுக்குச் சுட்டிக்காட்டினாள். ஏதோ ஒரு கட்டிடத்தின் திறந்துகிடக்கும் வாயிலைப்போலத்தான் முதலில் அது எங்களுக்குத் தோன்றியது. அதுதானா என்பதை அவதானித்துக் கொள்ளும் எத்தனிப்புடன் நாங்கள் அதை நீர்த்தாரையை ஊடுறுவி பார்த்துக்கொண்டிருந்த நிமிடங்கள் முழுவதிலும் (அப்போதைய மனநிலையில் அதைஉற்றுப் பார்க்கப் பார்க்க அந்தத் தோற்றத்தை ஒரு பெரும் மலையின் அடிவாரமாகவோ அல்லதுஒரு குகையின் முகப்பாகவோ தான் எங்கள் மனதில்உள்வாங்கிக்கொள்ள முடிந்தது) அதன் இருப்பிலோ அல்லது அதன் முன்புறத்திலோ எந்தச் சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. மழைக்காக ஒதுங்கியிருக்கவேண்டியவர்கள் ஏற்கெனவே புகலிடங்களைக் கண்டுகொண்டிருந்து இருப்பார்களாதலால் அந்த வாயில் வெறிச்சோடிக் கிடப்பதாயும் எங்களுக்காகவே அது தன்னை விரியத் திறந்துவைத்துக் காத்துக்கொண் டிருப்பதாயும் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக் கொண் டோம். முதுகின் பின்னே விடுதியின் இருப்பும் முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்ததால் அவ்விடத்திற்குச் சென்று ஒதுங்கி அங்கே எங்கள் வண்டிக்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தோம். ஒரு சில வினாடிகள் மழைக்குள் எங்களை மூழ்கடித்துக்கொள்வதற்கும் குழப்பமான அந்தக் கரிய பொருளை நெருங்குவதற்கும் எங்களை மனதளவில் ஆயத்தப்படுத்திக்கொண்ட பிறகு ஒருவர் பின் ஒருவராக விடுதிப் படிகளிலிருந்து நழுவி அதை நோக்கி ஓடத் தொடங்கினோம். ஓடும்போதே அப்படிஎங்களை மழைக்குள் விரட்டிவிட்ட மர்மப் பார்வையின் பிடியிலிருந்து தப்பிவிட்ட உணர்வை அடைவதன்மீதும் கவனங்குவிக்க முயன்றோம். ஆனால்எங்களுக்கு நிகழவேண்டியது நிற்காமல் நிகழ்ந்து கொண்டுதானிருந்தது. ஓடும் கதியிலேயே நாங்கள் எங்கள் உடலைப் பழையபடி சுமையற்றதாக உணர்வதற்குப் பதிலாகக் கூடுதல் சுமையில் திணறுவதாக உணர்ந்தோம். உண்மையில் அந்தப் பார்வையிலிருந்து அகல்வதற்குப் பதிலாக நேரே அந்தப்பார்வையை நோக்கியேதான் நாங்கள் விரைந்துகொண்டிருந்தோமென்பதை நாங்கள் தெரிந்துகொள்வதற்குள் விடுதி வாயிலுக்கும் அந்தக் கருப்புப் படிமத்திற்குமிடையிலிருந்த தொலைவை எங்கள் ஓட்டம் கரைத்துவிட்டிருந்தது. நாங்கள் அங்கே பார்த்ததை நாங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பார்வையை, அதற்குரிய உடலை, நேருக்கு நேராக, கண்ணோடு கண்ணாக நாங்கள் வலியப்போய்த் திடீரென்று எதிர்கொண்டிருந்தோம். ஒரு மனித உருவமாக இருக்கலாமென்கிற ஊகத்திற்குச் சிறிதளவு கூட இடம் தராத நிறத்துடனும் உயரத்துடனும் வடிவத்துடனும் அங்கே நின்றுகொண்டிருந்தது ஒரு ஆணுருவம். மேலும் அவன் (இந்த வார்த்தையை நான் மிகச் சிரமப்பட்டுத்தான் உச்சரிக்க வேண்டியிருக்கிறது, ஒரு பரிணாமப் பொருளில் அந்த உருவத்தை, தொடர்ந்து அதனுடன் நடத்திய சிறு உரையாடலோடும் பொருத்திப் பார்த்தால், அதை உயர்திணையில் அழைக்கவோகற்பனை செய்யவோ இன்றும் எங்களுக்குத் தயக்கமிருக்கிறது) எங்களை எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தவனைப் போலவும் அவனுடைய அழைப்பின் பேரில்தான் நாங்கள் அவனை அணுகினோம் என்பதைப் போலவும் எங்களைப் பார்த்துப் புன்னகையும் செய்தான். மின்னலடித்ததைப் போல மழைக்குள்ளிருந்து அந்தச் சிரிப்பு எங்கள்மேல் பாய்ந்தது. நெருங்கிநிற்பது ஒரு மனித உருவம், அதிலும் ஒரு ஆண், அதிலும் தன்னை மறைத்துக் கொள்ளாமல் உடனேதன்னை எங்களிடம் வெளிப்படுத்திக் கொண்டுவிட்ட அதே பார்வைக்கு உரியவன் என்கிற அதிர்ச்சி எங்களைத்தொடர்ந்து முடிவெதையும் எடுக்கவிடாமல் செயலிழக்கச் செய்த தென்றால், கூடுதலாக அவனுடைய அசாதாரணமான உயரமும், அசாதாரணமான நிறமும், அசாதாரணமான உடலமைப்பும் (அந்த மாதிரியில்இன்னொரு உருவத்தை இந்த நிலத்தில் உங்களால்கண்டுபிடித்துவிட முடியாது என்று இப்போதும்எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்)தந்த வியப்பு அங்கிருந்து நகர்ந்து செல்வதற் குரிய விருப்பமென்று ஏதாவது இருந்தால் அதை யும் சுத்தமாக எங்களிடமிருந்து உறிஞ்சிவிட்டிருந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் அவனுடைய பார்வையின் அச்சுறுத்தலை (உண்மையிலேயே நாங்கள் அச்சமடைந்தோமா அல்லது அந்தப் பார்வையைத் தேடிக் கண்டடையும் தவிப்பை அச்சவுணர்வு என்று எண்ணிக்கொண்டு விட்டோமா) அவனுடைய பிரசன்னம் தணித்து விட்டிருந்தது. நாங்கள் அவனை நெருங்கிய வுடனேயே எங்களை அங்கே கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்ததைப்போல எங்கள்மார்புகளின் மீதிருந்த தன் பார்வையை விலக்கி அதை எங்கள் பார்வைகளுக்குள், அவற்றைவிலக்கிக்கொள்ள முடியாதபடி, சொருகி விட்டிருந் தான். மேலும் அவனை நாங்கள் நன்றாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதைப்போலவும் (அவன் முகம் எங்களிடமிருந்து விலகிமிக உயரத்தில் மிதந்துகொண்டிருந்தது, அவனருகில் நாங்கள் எங்களை அவன் காலடியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளாக உணர்ந்து கொண்டு இருந்தோம்), அவன் ஏதோ ஒரு குடையை எங்கள்தலைக்குமேல் உயர்த்திப் பிடித்திருப்பதைப் போலவும், அல்லது உயர்ந்து பரந்திருந்த அவனுடைய ஆகிருதியே ஒரு மழைத் தடுப்பாகஎங்களைத் தனக்குள் பொதிந்துகொண்டு இருந்ததைப் போலவும் நாங்கள் நின்றிருந்த இடத்தில் மழையற்றிருந்தது. எங்களுடைய உடைகள் நாங்கள்ஓடி வந்த ஒரு சில வினாடிகளில் பெரிதாக நனைந்து விடவில்லையாயினும் அவனருகில் நின்றிருப்பதில் நாங்கள் மனவலம்பலை உணர்ந்தோம். ஏதோ எங்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அபூர்வப் பொருளைப்போல எங்களருகில் நின்றிருந் தான் அவன். இறுதியில் யோகாதான் துணிவை வரவழைத்துக்கொண்டு அவனை அண்ணாந்து பார்த்துயார் நீ என்று கேட்டாள். ஒரு தடவையல்ல, இரண்டு மூன்று தடவைகள் அவள் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்ட பிறகு கண்ணன் என்றான் அவன் குனிந்து எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே.
“லேய் முக்கா! டீப் லெக்ல போய் நில்லு.”
“குமாரண்ணே! யாமுன்ணே இப்படிச் செய்ய? நான் கீப்பிங் நிக்கேன்.”
“நல்ல வாயில வரும், பேசாம போய் நில்லு! லேய் கண்ணாடி! பஸ்ட் ஸ்லிப் வேண்டாம். நீ கீப்பிங் வா.” முந்தைய நாள் குமாரின் பந்துவீச்சில் சுஹைப் தவறவிட்ட கேட்சை அனைவரும் மனதில் நினைத்துக்கொண்டனர்.
ரன்னர் எண்டில் நின்ற குமாரின் அண்ணன் தமிழ் “எதுக்குல அவனைப் புடிச்சி எசலிட்டேயிருக்க?” என்று கேட்க, “நீங்க பொத்திட்டுப் பேட்டிங் பண்ணுங்க. எங்க டீமுக்குள்ள பேசிக்கிடுவோம்“ என்றான் குமார்.
சுஹைப் கீப்பிங்கை விடுத்து, முனகிக்கொண்டே டீப் லெக் தென்னையின் நிழலில் நின்று “கமான் காமன்! ஈசி விக்கெட்” என்று கீப்பிங் பழக்கத்தால் உரக்க கத்தி முன்னோக்கி நடந்து வந்தான். சுற்றிலும் விதைக்கப்பட்ட முன்னிரவு, அதிகாலை மலங்கள் ஈக்களால் மொய்க்கபட்டுக் கொண்டிருந்தன. வீச்சத்துக்குப் பழக்கப்பட்ட நர, பன்றி மூக்குகள் சிறியதும் பெரியதுமாய் நாள் முழுக்கப் பூங்காவில் மூச்சிழுத்துக்கொண்டிருக்கும். முன்னாள் பூங்கா வீதி பூங்கா இன்று பீ பார்க். செவ்வக வடிவ பூங்காவில் இடது மேல் ஓரத்தில் இருந்த பாலர் பள்ளியில் பெரும்பாலும் நந்தவனத்தெரு குழந்தைகள் மூக்குஒழுக அழுதும், ஏங்கியும், ஜன்னல் வழியே கிரிக் கெட் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நந்தவனத்தெருவின் பின்னிருந்த நந்தவனமும் பீ பார்க்கின் சிறுகிளைப் போன்றே சிறப்பாகச் செயல் பட்டுக்கொண்டிருந்தது. பூங்காவும், நந்தவனமும் அனைத்துச் சாதி மக்களின் மலங்களால் செழித்திருந்தன. பன்றிகளுக்குச் செம்மையான கோள்.சுற்றத்தின் உழைப்பில் குறைவற்ற விருந்து. பார்க் சுவரின் சுற்றிலும் சிறுநீர் உறிஞ்சி உயர்ந்த தென்னைகள் விளையாடுபவர்களின் சோர்வுக்குத் தங்களாலான நிழலளித்தன. அவ்வப்போது தெங்கு களையும் உதிர்த்தன.
பார்க்கின் வலது மேல் ஓரத்தில் கஞ்சா இழுப்போர் தங்களுக்கான இடத்தைப் பதிவுசெய்து கொண்டனர்.
ஸுஹைபால் ஆறு ஓவர்களும் டீப் லெகில் நின்று சில ஓட்டங்களை தடுக்கமுடிந்தது. மேலும் ஒரு டிரெக்ட் ஹிட்டில் ராஜாராமை அவுட் செய்ய முடிந்தது. பீல்ட்டிங் நிற்பதே அவனது விருப்பம். என்றாலும் பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற வருத்தமும் ஓரத்தில் ஊறிக் கரைந்தது. இலக்கு 6 ஓவர்க்கு 58 என்று நிர்ணயிக்கபட்டிருந்தது. தனக்கு ஒரு ஓவர் அளித்திருந்தால், குறிப்பாக அந்தக் கடைசி ஒவரில் 22 ரன் போயிருக்க வாய்ப்பே இல்லை. குமார் அண்ணன் கண்டிப்பாகத் தன்னைப் பேட்டிங் கடைசியாகத்தான் இறங்க சொல்லுவான். அனைவரும் பாலர் பள்ளியின் வெளி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் ஓய்வு எடுத்தனர்.
“யாருக்கெல்லாம் ரஸ்னா வேணும்?” என்று சுனில் கேட்டவுடன் வியர்த்த கருத்த 4 கைகள் உயர்ந்தன. அவன் நாலு எட்டு வைத்ததும், மேலும் இரண்டுரஸ்னா எண்ணிக்கை சேர்ந்துகொண்டது.
கடைசி ஓவரில் லேகா பாலு அடித்த மூன்று சிக்ஸர்களை நினைத்துப்பார்த்தான் குமார்.
“லேய் திரும்பத் திரும்ப சொன்னேன்ல ஓபி போடாத போடாதனு, அவனுக்கு அது ஒன்னுதான் கனெக்ட் பண்ண தெரியும். ஆப்சைடு தூக்கி போட வேண்டியதுதான?” என்று ஷாஜியைக் கேட்டான்.
“தெரியலனே பால் கிரிப் இல்ல போல, அதா” என்று கூறி மீதி பதிலை குமாரின் முகம் பார்க்காமல் விழுங்கினான்.
சுஹைப்புக்கு குமார் அண்ணன் ஏன் தன்னையே குறிவைக்கிறான் என்பது நன்றாகத் தெரியும். கடந்தமாத பெட் மேட்சில் மாணிக்கம் அண்ணன் எதிர்பார்த்தபடி குமார் அண்ணன் பந்து வீச இயலாமல் “பால் கிரிப் கிடைக்கல” என்று கூற,தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 3 ஓவர் களில் 4 விக்கெட்கள் வீழ்த்திய ஸுஹைபை மாணிக்கம் அண்ணன் மனதார புகழ்ந்தான். கூடவே அன்று பயன்படுத்தப்பட்ட பந்தையும் அவனிடமே கொடுத்தான். மறுநாள் மாலை நேர பயிற்சிக்குப் பின் நடந்த அரட்டையில் அணியில் விளையாடுவோர்களின் “மசை”களைப் பற்றிய உரையாடலில் குமார் அண்ணன் முதலில் சோழவராஜாவை இழுத்தான்.
“கிளி இன்னும் டியூஷன் விட்டு கௌம்பலபோல?”
“நீ சும்மா இரியாண்டே! கிளிய நம்ம மட்டும்பார்த்தா போதுமா? நமக்கு அந்த மேஜிக் எல்லாம் தெரியாத கிளிக்குக் கண்ணு யார் மேலயாக்கும் தெரியுமா?” என்று சோழவன் ஸுஹைபை நோக்கி கண்காட்டினான்.
குமார் அண்ணனுக்கு அது போதாதா? “லேய்! ஸுஹைபு... முக்கா மாமா. அண்ணே அண்ணேனு சொல்லிக்கிட்டு அண்ணிக்கே லைன் அடிக்கியால?” என்று கூற அனைவரும் வெடித்துச் சிரித்தனர். “முக்காமாமாவா?” என்று மலைச்சாமி உரக்க கூறிச் சிரித்தான்.
“அதெல்லாம் ஒன்னில்லணே. சோழவண்னே சும்மா இருக்கமாட்டியா? நான் கௌம்புகேன் நேரமாயிட்டு” என்று கூறி ஓட, அனைவரும் சேர்ந்து “முக்கா மாமா” என்று கூவினார்கள். அவர்களின் கூவலின் அர்த்தம் அடுத்த நாள் காலை வெளிக்குப் போய்க்கொண்டிருந்தபோது புரிந்தது. என்றாலும் அணியில் உள்ள யாரையும் அவன் எதிர்கேள்வி கேட்டு பழக்கப்படவில்லை. அன்றிலிருந்து தன்னை ‘முக்கா’வுக்குப் பழக்கிக்கொண்டான்.
ஆட்டம் வெகு விரைவில் முடிந்துவிடும் போலிருந்தது. நாலு ஓவர்களில் 48 ரன்கள் அடித்து விட்டாகியது.
“ஸுஹைபு... மக்கா. ஸுஹைபு” பார்க்கின் வாசல் அருகே நின்று கையசைத்து அழைத்தார் ஸுஹைபின் தந்தை நைனா முகமது. வடக்கிலிருந்து வீசிய காற்றில் மென் சிறுநீர் வீச்சம் ஸுஹைபின் மூக்கிற்கும், தந்தையின் அழைப்பு காதுக்கும் எட்டின.
“குமார் அண்ணே, எங்க அப்பா கூப்டுகு, போயிட்டு வரேன்” என்றவாறே எழுந்தான். அவனது கால்கள் செருப்புடன் உறவாடி ஓட தயாராகின. “போய் வா” என்பதாய் ஸுஹைபுக்கு தலையசைத்து “ஈஸி வின்னிங்., ரெண்டே ரன்தான்” என்று கூவினான்.
“டீம்ல எடுத்துப் போடுணே இப்போ வந்துருவேன்” என்று கூறிக்கொண்டே பார்க் வாசலை நோக்கி ஓடினான் ஸுஹைபு.
“என்ன பா!” நைனாவின் கையில் கேஸ்ட்ரால் காலி கேன் இருந்ததைக் கொண்டு ஒருவாறு கணித் திருந்தான் ஸுஹைபு.
“மக்கா! காலைல சொன்னேம்லா. இப்போ கடை கொஞ்சம் கூட்டமில்ல பார்த்துக்கோ, போய் வாங்கிட்டு வந்துரு” - நைனா.
“யப்பா! ஏம்பா அவளோ தூரம் போகச் சொல்லுஹ, ஒன்னோட ஒரே செரையா இருக்கு.”
“இந்த வெயில்ல எரிச்சல் படுத்துஹாப நீ” ஸுஹைபு.
“மக்கா ஒரே ஓட்டத்துல போய் வாங்கிற மாட்டியானி. ஒரு ஓட்டம்டே. நேத்துகூட அம்மா பொண்ணு வீட்ல வடை வாங்க போயிட்டு பத்து நிமிஷ வேலைய ரெண்டே நிமிஷம் சிட்டா பறந்து வந்துடேலா, ஒரே ஓட்டம்டே, அம்ம வேற கத்திக்கிட்டே இருக்கா” என்றவாறு கேனை கைகளில் திணித்தார். தனது சட்டை மேல் பாக்கெட்டில் இருந்து பல ஓட்டைகள் கண்ட ரேஷன் கார்டை ஸுஹைபிடம் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக இரண்டையும் வாங்கிக்கொண்டு போகத் தயாரானவனை “மக்கா! கொஞ்ச தண்ணி அடி கைகால்கழுவிகிடுகேன்” என்று பார்க்கின் வெளிப்புறம்இருந்த அடிபம்பை நோக்கி நடந்தார் நைனா.
அருகிலிருந்த கிணற்றின் மேல் கேனை வைத்து விட்டு, பம்பினை துள்ளி துள்ளி அடித்தான். மேட்ச் முடிந்துவிட்டது போலும்.
“மக்கா கொஞ்சம் தெம்பா அடி.”
இன்னும் உயரம் துள்ளி வேகமாக அழுத்தினான். தண்ணீரை கையில் ஏந்திதன் முகத்தில் தெளித்தும் முழங்கை வரை தண்ணீரை விட்டும் கழுவினார். பாதங்களை அடியில் கிடந்த கருங்கல்லில் அழுத்தி தேய்த்து அழுக்கினை போக்கினார். “ மக்கா! நீயும் வா,கைகால் கழுகிட்டு போ” என்றார்.
“வேண்டாம். நா வீட்டுக்கு வந்து கழுவுக்கேன்.”
“சும்மா வாடே ஒரு நிமிஷம்” என்று நைனா பம்ப் அடித்தார். நைனாவுக்கு மூச்சி வாங்கியது. “போதும்பா கழுவிட்டேன்.”
“டே காலக் கழுகுடே” அழுத்தி அடித்தார் நைனா.
கழுவி முடித்ததும் தன் தோளில் கிடந்த துண்டை கொடுத்தார். வாங்கி லேசாகத் துடைத்துக்கொண்டு கேனை எடுத்து நடக்கத் தொடங்கினான்.
“மக்கா, நில்லு”
“என்னப்பா?”
“வரும்போது பக்கத்து நாடாங்கடையில பாப்பாக்கு மட்டிப்பழம் மூனு வாங்கிக்கோ, அப்டியே ஒரு சர்வத்தும் குடுச்சிக்கிடு என்னா” என்று ஐந்து ரூபாயை அவனது பாக்கெட்டில் சொருவினார். ஸுஹைபு சவேரியார் கோவில் தெரு திசைநோக்கி நடந்தான். குறுந்தெரு தாண்டி செல்கையில் ஏனோ கடைக்குப் போவது பிடித்திருந்ததாய் தோன்றியது. ஆனால் ஏன் அப்பாவுடன் எரிச்சல் என்று பிடிபடவில்லை. அம்மாவிடமும் கடைக்குப் போகச்சொல்லும் போதெல்லாம் இதே கூத்துதான்.
தெருவின் இடப்பக்கமிருந்த கசாப்பு கடையின்கூரைக்கம்பில் ஆட்டின் ஈரல் தொங்கிக்கொண்டு இருந்தது. ஆட்டின் தலைகள் இரண்டு, பெரும் அடி மரத்துண்டின் மீதிருந்தன. அதில் ஒரு ஆடு நாக்கை வேலியை விட்டபடி சிரித்த வண்ணம். வானம் நோக்கி ஏதோ யோசிக்கும் தருணத்தில் வீழ்த்தப்பட்ட ஆடுகளின் நான்கு கண்கள்.
ஸுஹைபுக்குக் குலசேகரநங்கை அம்மன் கோவில் தெருவின் இடப்பக்கம் திரும்பியபோது விர்ஜின் வீட்டைக் கடக்கப்போகிறோம் என்ற எண்ணம், சிறிது கிளர்ச்சி ஊட்டியது. சனிக்கிழமை அதுவும் மதியம் வீட்டில் இருக்கத்தான் வாய்ப்பதிகம், அவள் வீட்டைக் கடக்கும் கணத்தில் கேஸ்ட்ரால் கேன் இடக்கைக்கும், கண்கள் வலப்புறமும் சென்றன. “ஏசு அழைக்கிறார்.... ஏசு அழைக்கிறார்...” வழக்கம் போல் வரும்போது ஒருவேளை வாய்ப்பிருக்கலாம்.
ரேஷன் கடை வரிசையில் மூன்று பேருடன் நான்காவதாகப் போய் நின்றான். அந்த மொட்டை வெயிலிலும் சவேரியார் கோவில் சுடுமணலில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். பார்க்கில் அடுத்த ஆட்டம் ஆரம்பித்திருக்கலாம்? அவன் பின்னால் மேலும் ஒருவர் வந்து நின்றார். வரிசை குறைவதாய்த் தெரியவில்லை.
“அண்ணே! இங்க கேன் வச்சிகிட்டுப்போறேன். இரண்டு நிமிசத்தில வந்துருவேன். கொஞ்சம் பார்த்துக்கிடுங்க” பின்னால் நின்றவரிடம் கேட்டான் ஸுஹைபு.
“செரி! சீக்கிரம் வந்துருடே” என்றார். கேனை வைத்துவிட்டு சித்ரஞ்சன் தாஸ் கடைக்கு எதிரில் இருந்த நாடார்கடையைச் சேர்ந்தான்.
வெளியில் தொங்கிய ஏத்தம், செந்தொழுவன், கதலி, மட்டி, மோரிஸ், பேயன் குலைகளைக் கடந்து,வலப்பக்கம் நனைத்த வெத்தலை, இடப்பக்கம் சோடா பாட்டில் டிரே. நடுவில் ஒரு ஆள் நிற்பதற்கான இடம் மட்டுமே இருக்க, அங்கு நின்றவன்பின் நின்று ஸுஹைபு “அண்ணே! மூணு மட்டினே”என்றான். கடையின் இருளிலிருந்து வெத்தலை குதப்பியவாறு நாடார் கைகளில் இரண்டு சோடா போஞ்சுடன் வந்தார்.
“இந்தா. அடுத்து என்னடே மட்டி மட்டும்தானா?” என்று கேட்டார்.
“ஒரு சர்வத். சோடா சர்வத்.. மஞ்ச”
இருளில் புகுந்தார். கையில் சோடா போஞ்சு சர்பத்துடன் வந்தார். காசு கொடுத்துவிட்டு, அடிக்கும் வெயிலுக்கு ஒரே அடியில் சர்பத்தைக் குடித்து முடித்தான். மேலும் காசிருந்தால் இன்னும் ஒன்று குடித்திருக்கலாம். முன்தின மாலைமுரசினுள் மட்டிகள் அடங்கின. ஓடி சென்று சரியான நேரத்தில் வரிசையில் இடத்தைப் பிடித்துக்கொண்டான். மண்ணெண் ணெய் கவனமாக அளவு குறைத்து ஊற்றப்பட்டது. கேனை இறுக மூடி அதன் மேல் கடையில் அருகில் கிடந்த வெள்ளை பிளாஸ்டிக் கவரால் கட்டி தூக்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தான். விர்ஜின் வீடு பூட்டியிருந்தது. கசாப்புக் கடையில் நாக்கு வெளி தள்ளிய தலையின் கண்களில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கடைக்காரர் ரத்தம் தெறித்த முண்டா பனியனுடன் கூரையினுள் அமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போகும் முன் இன்னும் ஆட்டம் தொடர்கிறதா என்று பார்க்கை ஒரு பார்வை இடலாம் என்று பார்க்கை அடைந்தான். பிட்சில் பேட்டிங் எண்டின் மூன்று ஸ்டம்புகளும், ரன்னர் எண்டின் கருங்கல் மட்டுமே தென்பட்டன. மண்ணெண்ணெய் மனம் சலித்துப்போயிருந்தது. பார்க் வாசலில் இருந்த ட்ரான்ஸ்போர்மரின் கீழ் செடிகளின் நடுவே தூங்கிக்கொண்டிருந்த கொழுத்த பன்றி எழுத்து, சுற்றும் முற்றும் பார்த்து மீண்டும் துயின்றது. பசி வயிற்றை உரச, வீடு நோக்கி வேகம் பிடித்தான் ஸுஹைபு.
“உம்மா! இதை எங்க வைக்கது?” என்று நடையில் நின்று கூவினான். மீன்குழம்பின் கொதிப்பு மேலும் பசியேற்றியது.
“அங்கன வச்சிட்டு கைகால் கழுவிட்டு உள்ள கேறு” என்றாள், “நாள் முழுக்கப் பீ காடு, எரிய வெயிலு, என்ன கொண்டாட்டமோ?” என்று அடுக் களையில் வேலையின் நடுவே முணுமுணுத்தாள். அப்பா சாய்வு நாற்காலியில் அமர்ந்து பனை ஓலை விசிறியால் காற்றை அலைந்துகொண்டிருந்தார்.
மிதியடியில் பாதத்தின் ஈரத்தை நன்றாகத் துடைத்து, “உம்மா! வயிறு பசிக்கி. எப்பா, பேன்போட வேண்டியதுதானா?” என்று ஸ்விட்ச் பக்கம் போனான்.
“லேய்! லேய்! வெக்க காத்து தான் வருகு.பேசாம இரு. மொதல்ல பழத்த குடு, ரேஷன் கார்டு எங்க?” என்றார் நைனா.
“எதுக்குப் பறக்க? இந்த இருக்கு.” பாண்ட் பாக்கெட்டில் இருந்து விழுந்த 50 காசை மேல் பாக் கெட்டில் போட்டு அடுக்களையினுள் நுழைந்தான். ருக்ஷனா உம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு நின்றாள்.
“ருக்கு. வா வா வா... பழம் சாப்டுகியா?” நைனாகுரல் கொடுத்தார். குழந்தை அண்ணனை இடித்து விட்டுத் தத்தகா புத்தகா என்று அப்பாவிடம் ஓடியது.மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தைத் திறந்து “சூரன் செமையாட்டு கொதி. ஹ்ஹ்ம். நல்ல மனம். உம்மா வேற என்ன?”
“ஹ்ஹ்ம்... அடுப்புக்கரி. எவளோ மட்டம் சொல்லிருக்கேன். நீ வேலைய முடிச்சிட்டு போய் பந்தடினு” என்று கொழம்பு கரண்டியால் ஓங்கினாள் உம்மா. அதே கண்கரண்டியைக் கொண்டே அருகில் மூடியிருந்த பாத்திரத்தைத் திறந்து கிண்டிவிட்டாள்.
“அடிபொலி நெத்திலி அவியலும் உண்டு” என்றுஉம்மாவின் தோள்பற்றி, “அதான் வேலைய முடிச்சாச்சுலா?” என்றான் ஸுஹைபு.
“என்னத்த கிழிச்சியோ? படிக்கத கோட்டவிட்டுறாத, எதோ இப்ப தான் கொஞ்சமாட்டு வருகமாறி இருக்கு” என்றவாறு தட்டத்தில் சுடுசோறு போட்டு, மேல் கறுத்த மீன்குழம்பை ஊற்றி, நல்ல துண்டத்தை உம்மா தேட, “அந்தத் துண்டம் போடு, இது இது இந்தச் சின்னத் துண்டும்” என்று ஸுஹைபு சுட்டினான். “அவியல நானே வச்சிக்கிடுகேன், கரண்டியைக் குடு” என்றான்.
“ஒண்ணு வேண்டாம், அஞ்சு பேரு சாப்பிடணும், நீரு அள்ளி கொட்டிட்டு போவேறு” என்று தட்டத்தைப் பிடுங்கி ஒரு பகுதி நெத்திலி அவியலை வைத்து, “போய் சாப்டு” என்றாள் உம்மா.
மச்சிப்படியின் கீழிருந்த மரக்கட்டிலில் சம்மணங் கொட்டி அமர்ந்து, தட்டின் நடுவுல இருந்த மாந் துண்டினையும், எண்ணெய் குளித்த கருவேப்பிலை களையும் தட்டின் ஓரத்தில் ஒதுக்கி, விரவிய சோற்று உருண்டையின் மீது நெத்திலி அவியலை வைத்து உண்டான். உண்ட வேகத்தில் புரையேறியது.
“மெள்ள மெள்ள! தண்ணிய குடியாண்டே” என்றார் நைனா மட்டிப்பழத்தின் பாதி அவர் இடக்கையில் இருந்தது.
தலையைத் தட்டிக்கொண்டான். கண்களில் நீர் கோர்க்க, கழுத்திலிருந்து வியர்வை ஸுஹைபின் சட்டைக்குள் ஊற்றியது. பசியின், ருசியும் சேர்ந்து சூரையோடும், நெத்திலியோடும் விளையாடின. தலை குனிந்து, உடல் வளைத்து பெரும் ஏப்பம் ஒன்றை வெளியேற்றினான்.
“உம்மா! ரசம் உண்டா?”
“நேத்தைக்க ரசம்தான் இருக்கு? இங்க மூடி வச்சிருக்கேன்” உம்மா அடுக்களையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இடக்கையால் அடுப்பைச் சுட்டினாள். சிறிது சோறும், ரசமும். மூன்று வாயில் சோற்றை முடித்து, தட்டையேந்தி ரசம் குடித்தான்.
“ரசம் நல்ல வொரப்பு” என்று மூக்கை உறிஞ்சிய வாறு தட்டு, மற்றும் கையைக் கழுவி, ஈரத்தை பேண்டில் துடைத்து, “வாப்பா! மாணிக்கம் அண்ணே உன்ன பார்க்கணும்னு சொல்லுச்சி” என்று கட்டிலில் அமர்ந்தான் ஸுஹைபு.
“என்னயவா? எதுக்கு மக்கா?”
“தெரில, பேசணும்னு சொல்லுச்சி. எதுக்குனு தெரில.”
“எதாவது எலவ இழுத்துட்டு வந்துராத மக்களே!” என்று உம்மா குரல்கொடுத்தாள்.
“உம்மா அதெல்லாம் ஒன்னுமில்ல, நீ சும்மாகெட. வாப்பா என்ன சொல்லுகது?” என்றான் ஸுஹைபு.
“திங்க கிழம வாப்பா வருவானு சொல்லு” என்றார் நைனா. ருக்ஷனா அவர் நெஞ்சில் தலைசாய்த்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
“செரி, நா மேல போய் கொஞ்சம் முதுக சாய்க்கேன்.” ஸுஹைபு தலையணையுடன் படிகள் ஏறினான்.
“பிள்ளைக்கு மண்டைக்காட்டுல கைவாங்கிப் போடணும் மறக்காம?” என்று நைனாவிடம் நினைவு படுத்தினாள் உம்மா.
“ஹ்ம்ம்! சாப்பிடுகேலா?”
“துஅ முடிச்சிட்டு வந்துருகேன். இந்தப் பய அந்த வழக்கமெல்லாம் பீகாட்டுல கரைச்சிட்டான்போல” என்று வாப்பா சொன்னது ஸுஹைபுக்கு கேட்டது. உண்ட மயக்கமும், உடல் சோர்வும் அனல்காற்றைக் கண்டுகொள்ளவில்லை.
மாலை நான்குமணி வெயிலின் சூடும், மணமும் ஸுஹைபுக்கு பெரும்பாலும் தலைவலி அளிக்கும். அன்று தலைவலி இல்லை என்பதே ஸுஹைபுக்கு ஆறுதல் அளித்தது. வாப்பா படிகளில் ஏறும்போதே குரல்கொடுத்தார் “மோனே! ஸுஹைபு சாயா குடிக்கலயா” என்று வார்த்தைகளுக்கு நடுவே மூச்சி வாங்கினார்.
கண்களைக் கசக்கி, சாரத்தைச் சரி செய்து எழுந்து அமர்ந்தான்.
“நா கீழ வருவேம்லா.”
“இருக்கட்டும் மக்ளே, குடி.”
வாப்பா போட்ட சாயா தான். உம்மா பட்டை, கிராம்பு சேர்த்து மணமாய்க் கொடுப்பாள். இனிப்பின் அளவு ஒருநாளும் தப்பியதில்லை.
“சாயா நல்ல இருக்கா?”
“ஹ்ம்ம்... உம்மா எங்க?”
“பிள்ளைய தூக்கிட்டு காத்தாட போயிருக்கா.”
“ஹ்ம்ம்” நைனாவின் உடல்மொழி ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. கிழமைகளை மனதில் கணக்குப் போட்டுப்பார்த்தான்.
“மற்றபடி, கயிறு இழுக்கணும், ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம், என்ன மக்கா ?” என்றார் நைனா.
“வாப்பா நீ சள்ள படுத்தாத பார்த்துக்கோ. என்னால முடியாது. போய் தூண கட்டிட்டு அழு” ஸுஹைபு சிவப்பு டைல்ஸ் பார்த்த வண்ணம் சாயா குடித்துக்கொண்டே கூறினான்.
“உம்மா வந்த உடனே ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம். செரி ஒரு ரெண்டு நிமிஷம் மக்கா” என்று நைனா கெஞ்சினார்.
“அத செஞ்சே ஆகணுமா? நிறைய இருக்குலா, சின்னப்பிள்லேள்தான, வாயில இருந்து கலர் பேப்பர் இழு, தொப்பி, கலர் பூக்கூட, முட்ட, கோமாளினு நெறைய இருக்குலா. பின்ன எதுக்கு இத பிடிச்சிட்டு தொங்குக. என்னால முடியாது. வேணும்னா உம்மாவையும், உங்குட்டியையும் பிடிக்கச் சொல்லு” என்று எரிந்து விழுந்தான் ஸுஹைபு.
நைனா பொறுமையாய் படியிறங்கி சென்றார்.
சொல்லிருக்கக்கூடாதுதான், வாப்பாவுக்கு வேறு போக்கில்லை. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் முதல் எதிர்வினை இப்படியே தான். இம்முறை என்ன செய்வார்? ஸுஹைபின் அடிவயிற்றிலிருந்து நெத்திலியின் புளிச்ச ஏப்பம் குமட்டி அடங்கியது.
வாயிலில் குட்டியின் குரல் கேட்டது.
“என்னா எந்திரிச்சாச்சா?” என்று உம்மா வாப்பா விடம் ஸுஹைபை கேட்பது புரிந்தது. ஸுஹைபு காதை நன்றாகத் தீட்டிக்கொண்டும் யாதொரு பயனுமில்லை. அவர்களின் கிசுகிசுக்கும் மொழி அவர்களுக்கே வெளிச்சம்.
“குட்டி.. இந்தா கயிறைப் புடி... இங்க தும்பு கிட்ட, நீ இந்தப் பக்கம்” வாப்பா ஸுஹைபு சொன்னபடி உம்மாவையும், குட்டியையும் கயிறு பிடிக்கச்சொல்வது ஸுஹைபுக்கு எரிச்சலூட்டியது. என்னவாக இருந்தாலும் சரி இந்தமுறை கயிறை தொடப்போவதில்லை என்று தன்னிடம் கூறிக் கொண்டான். ஏன் இவருக்கு இந்தச் சோலி?. ஒரு முறைகூடத் தப்பியதில்லை என்று பலவருடங்கள் மார்தட்டிக்கொண்டிருந்த வாப்பாவின் வித்தை, போன செப்டம்பர் மாதம் டிவிடி பள்ளியில் ஆட்டம் கண்டது. அன்று முதல் இந்த ஒன்றை மட்டும் ஒத்திகை பார்க்காமல் நிகழ்ச்சிக்கு போகமாட்டார். “அதுக்கு நானா பலிகடா?” என்று ஸுஹைபு பொருமிக்கொண்டே படியிறங்கினான். கீழே சிரிப்பும் கும்மாளமும் மேலும் கோபமூட்டியது.
“நீ ஒழுங்கா புடி, இன்னும் டயிட்டாட்டு” என்று வாப்பா சொன்னதும், அவரது கழுத்தில் சுத்தப்பட்டிருந்த நல்ல வடக்கயிற்றின் இடத்தும்பை உம்மா இழுத்துக்கொண்டிருந்தாள்.
“குட்டி ஒழுங்கா புடிச்சி இழுக்கணும் கெட்டியா?வாப்பா கழுத்த அப்டியே இருக்குபோது, கயிறு ரெண்டு பக்கமும் நல்ல டையிட்டா ஆகணும். எங்க இழு பாப்போம்?” என்று இடப்பக்க கயிறை இடக்கையால் பற்றி வலப்பக்க கயிறை தன் கழுத்தால் இழுக்கக் குட்டி கயிறுடன் வந்து வாப்பா வின் காலில் சிரித்துக்கொண்டே விழுந்தாள். சற்றென்று அழுவதுபோல் முகம் இடப்பக்கம் கோணி சென்றதை கண்ட வாப்பா சுதாரித்துக் கொண்டு “குட்டி! அப்படித்தான். நல்ல இழுத்த பார்த்துக்கோ, உம்மாவ பாரு ஒரு மண்ணும் தெரியல. எந்திரி. நல்ல புடிக்கும். இன்னும் டயிட்டா” என்று வாப்பா அடிக்கும் கூத்தைக் கண்டு ஸுஹைபு உள்ளூர எரிச்சலடைந்தான். உம்மாவும்ஏன் இதை எதுவுமே கேட்பதில்லை, அவள் கேட்கமாட்டாள். பள்ளிக்கூடத்தில் இவர்கள் நடத்தும் மேஜிக் நிகழ்ச்சிக்கு இவர்கள் இருவர் மட்டுமே வித்தைக் காரர்கள். உம்மா பெரும்பாலும் மேஜிக்கிற்குத்தேவையானவற்றை ஒருங்கிணைப்பதோடு சரி. அனைத்து வித்தைகளையும் வாப்பாவே செய்வார். கோழியாகி முட்டை இடுவார், கோமாளியாகி குட்டிக்கரணமிடுவார், விஸில் அடித்தவாறு வாயிலிருந்து வண்ணவண்ண காயிதங்களை இழுத்து கொண்டே இருப்பார். பள்ளி சிறுவர்களையும் சேர்த்துக்கொண்டு சில வித்தைகளைச் செய்வார். கருப்பு கை குட்டையிலிருந்து வெண்புறா வெளிவரும், அதுவரை மாணவர்களைச் சிரிக்கவைத்து கடைசி வித்தையாகக் கயிறை எடுத்து ஒரு பக்கம் உம்மா பிடித்துக்கொள்வாள். கூட்டத்திலிருந்து ஏதேனும் ஒரு மாணவனை அழைத்து இழுக்கச் சொல்லி, ஏன் இவர் இதை மட்டும் தூக்கித் திரிக்கிறார், ஸுஹைபு உம்மாவை பார்த்தான். வாப்பாவின் கழுத்தை இறுக்குவதில் உம்மாவுக்கு எவ்வித தயக்கமுமில்லை. குட்டி இன்னும் கீழே விழுந்துகொண்டே இருந்தாள். வாப்பா ஏன் இன்னும் இந்தக் கூத்தை நிகழ்த்துகிறார். பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும் இன்னும் ஒரு முறைகூட உருப்படியாய் கழுத்தில் கயிறு இழுக்கப்படவில்லை.
“இங்க குடு குட்டி, நான் இழுக்கேன், எவளோ நேரம்” ஸுஹைபு வலப்புற கயிறைப் பற்றிக் கொண்டான்.
வாப்பா உம்மாவிடம் தயாரா? என்பதாய் கண் காட்டினார். “சொன்ன உடனே இழுடே, கோவத்துல சோலிய முடிச்சி போடாத” என்று சிரித்துக்கொண்டே இருபக்க கயிறின் இழுப்பை ஆராய்ந்தார்.
ஸுஹைபு விரல்கள்மேல் ஒரு சுற்றுசுற்றி கயிறை இழுத்தான். உம்மாவின் பக்கம் மிக சரியான இழுப்பில் இருந்தது. வாப்பா கயிறில் இருந்து கையையெடுத்தார்.
“இழு. இன்னும் டயிட்டா... இழு” என்றார் வாப்பா. குட்டி இடக்கை விரல்களை வாயில் வைத்து வாப்பாவை இமைகொட்டாமல் பார்த்தாள். வாப்பாவின் கழுத்து நரம்புகள் வெளித் தெரிய ஆரம்பித்தன.
“இழு.. இன்னும்... இ...” என்று கயிறின் முழுஇழுப்பில் இருபக்க கயிறை ஓங்கி அடித்தார். ஸுஹைபின் கையிலிருந்த கயிறு நழுவி ஸுஹைபு பின்னால் விழுந்தான். வாப்பாவின் கழுத்தில்முடிச்சி அவிழாமல் அப்படியே இருந்தது. உம்மா சுதாரித்துக்கொண்டாள்.
“என்ன மயிரல புடிக்க ஒழுங்கா புடினு சொன்னேன்லா” என்று வாப்பா விழுந்துகிடந்த ஸுஹைபை மிதிக்கக் காலை ஓங்கினார். ருக்ஷனா கூவி அழுது, உம்மாவின் கால்களில் முகம் புதைத்தாள்.
“வா ஒழுங்கா புடி” என்று மீண்டும் கயிறை ஸுஹைபின் கைகளில் திணித்தார். ஸுஹைபு வாங்காமல் கீழே அமர்ந்திருந்தான்.
“செரி புடி மக்ளே” என்றாள் உம்மா.
ஸுஹைபு வாப்பாவின் முகம் பார்க்காமல் கயிறை வாங்கினான். மீண்டும் தயாரானார்கள்.
“இழு... இன்னும் இன்னும் மேல தூக்கி...” வாப்பா பாதங்களால் தரையை இறுக பற்றினார். கழுத்து நரம்புகள் புடைத்தன. முடிச்சி இறுக ஆரம்பித்தது. ஸுஹைபு இன்னும் இறுக்கினான். வாப்பாவின் ஓங்கிய காலை நினைவில் இருந்து விலக்க முடிய வில்லை. இழுத்தான். தன்கைகளில் நரம்புகள்புடைக்க இழுத்தான்.
“ஹ்ஹ்ம்... ஹ்ஹ்ம்.. ஆ ஆஅ அட்...” என்று வாப்பா கயிறின் இருப்பக்கமும் ஓங்கி அடிக்கவே முடிச்சி மறைந்து கழுத்து விடுபட்டது. மீண்டும் ஸுஹைபு வலப்பக்கம் விழுந்தான். உம்மா குட்டியை தூக்கிக்கொண்டு அடுக்களைக்குச் சென்றாள்.
“அவளோதான் மக்ளே” என்று வலக்கையை ஸுஹைபிடம் நீட்டினார். ஸுஹைபு தானாகவே எழுந்து, மாடிப் படியேறினான். வாப்பா பொறுமை யாய் சுற்றி இரும்புப் பெட்டியினுள் வைத்துமூடினார்.
“வர புதன்கிழம மலையாள ஸ்கூல்ல ஷோ, அட்வான்ஸ் வாங்கிட்டேனாக்கும்” என்று உம்மா விடம் கூறுவது ஸுஹைபின் காதுகளுக்கு விருப்பற்ற செய்தியாய் விழுந்தது.
ஞாயிறும், திங்களும் வாப்பாவின் கால் பாதத்தை யும், கழுத்தின் இறுக்கத்தையும் எண்ணிக் கடந்தன. எதற்கு அவருடைய வீம்பை எண்ணி மீண்டும்மீண்டும் சுழல்கிறேன் என்று ஸுஹைபு தன்னைத் தானே கேட்டுக்கொண்டான். “என்னடே கீப்பரு ஈவினிங் பெட் மேட்ச், வந்துரு” என்று ஜி குரூப் நண்பன் பொன் மாதவன் நினைவூட்டினான்.
“இல்ல மக்கா நா சீக்கிரம் வீட்டுக்கு போணும். நெட் ப்ராக்டிஸ் இருக்குப் பார்த்துக்கோ” என்றான் ஸுஹைபு.
“சரியான நேரத்தில கால வாருகியேடே, வெளையாண்டுட்டு போடே”
“மத்தநாள்னா வெளையாடுவேன்லா. இணைக்கு வாய்ப்பே இல்ல, வேணும்னா திருவாழ்மார்பன எடுத்துக்கோ, மசக்காட்டான், நல்ல சுத்துவான், கீப்பருக்குச் செமையா காத்து வீசும்” என்று ஸுஹைபு கூற, “முடியாதுனுடேலா கௌம்பிட்டே இரு” என்று பொன் மாதவன் இ குரூப் கிளாஸ்நோக்கி நடந்தான்.
பள்ளிமுடிந்து வீடு சேர்ந்தவுடன் வாப்பா இருப்பதைப் பார்த்தும் பார்க்காமலும் மாடியேறிய ஸுஹைபிடம், “மாணிக்கத்த பார்க்கணும்னு சொன்னேலா, போயிருவோமா என்னா?” என்று நைனா கேட்டார்.
“ஆமா.”
“சரி, டீ குடிச்சிட்டு ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா. நான் பாய் கடை கிட்ட நிக்கேன்” என்று நைனா படியிறங்கி சென்றார். கட்டிலில் ருக்ஷனா தூங்கிக்கொண்டிருந்தாள். உம்மா துணியைக் கல்லில் அடிப்பது ஸுஹைபுக்குக் கேட்டது. மாடிக்குச் சென்று சட்டையை மட்டும் மாற்றிக்கொண்டு கிளம்பினான்.
நைனா “அதுக்குள்ள வந்துட்டா, டீ எடுத்தியா?” என்று கேட்க, “ஸுஹைபு நல்ல துடியில்லா, வேகமாட்டு கப்ப கவுத்திட்டு வந்துருப்பான்” என்று கிண்டினார் பாய், விரல்களின் நடுவே புகை வெளியேறிக்கொண்டிருந்தது.
“சும்மா இருங்க மாமா! அப்புறம் குடிக்கலாம்னு வந்துட்டேன்.”
“நாயர் கடையில ஒரு காபி எடுக்கியா” என்று நைனா பாக்கெட்டில் கைவிட்டு சில்லறையைத் தேடினார்.
சாரதா பவன் திண்டில் பாலின் தரமறிய கண்ணாடி குவளைகள் அடுக்கப்பட்டிருந்தன. சில குவளையில் கால் பங்கு வெண்மை, அரைக் குவளை தண்ணீர், ஒரு குவளையில் முக்கால் பங்கு நீர், அடியில் கால் பங்கு வெண்மை. அந்தக் குவளைகளில் நடுவே நாயர் பட்டையுடன் அமர்ந்திருந்தார்.
“வேண்டா. வந்து சாப்டுட்டுப் பார்த்துக்கிடலாம்” என்று ஸுஹைபு அவ்விடத்தை விட்டு நகர ஆயத்தமானான்.
“வரட்டா, மாமிய கேட்டதா சொல்லுங்க, இமாமுதீனையும்” என்று பாயிடம் கூறிவிட்டு நைனாவும் ஸுஹைபும் பார்க் நோக்கி சென்றனர்.
“வாப்பா, இங்க ஐயப்பங் கோயில் கிட்ட நில்லுங்க, நான் உள்ள போய் கூட்டிட்டி வாரேன்” என்று ஸுஹைபு பார்க்கினுள் சென்றான்.
நெட் ப்ராக்டிசில் வழக்கம்போல் வேகப்பந்து வீச்சாளர்கள் ஐயப்பனும், மாசானமும் ஆக்ரோஷமாய்ப் பந்து வீசிக்கொண்டிருந்தார்கள். நெட்டில் மாணிக்கம் ஹெல்மெட், கிலோவிஸ் என்று சகல பாதுகாப்புடன் தடுப்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
“டப்... லவ்லி டெலிவரி... லவ்லி டெலிவரி... சேம் லெங்த்...”
“வெல் லெப்ட் வெல் லெப்ட்... என்ன டெஸ்ட் மேட்ச்சானே... கனெக்ட் பண்ணு” - ஐயப்பன்.
“எண்ணே மாணிக்கனே, வாப்பா வந்துருக்கு”
“டப்... குட் ஷாட்... அப்படியே புல்லா பேட் போகட்டும்... ஸ்டாப் பண்ணாத” - மாசாணம்.
“வாப்பா வந்துருக்கு, மாணிக்கண்ணே” என்றான் குரல் கூட்டி அழைத்தான் ஸுஹைபு.
“இத புடி மக்கா” அடுத்தப் பேட்டிங் பிடிக்க ஆயத்தமாகி இருந்த கணேஷிடம் நெட் பொசிஷனை ஒப்படைத்துவிட்டு மாணிக்கம் ஸுஹேபுடன் ஐயப் பன் கோவில் நோக்கி நடந்தார்.
“மாமா நல்லா இருக்கேளா?” மாணிக்கம் கேட்டார், கை, கால்களில் பேடுடன்.
“நமக்கென்ன! ஆச்சி நல்லா இருக்காளா?” என்றார் நைனா.
“இப்போ பரவாயில்ல, மெல்ல நடக்கா, டீ குடிக்கலாமா மாமா?”
“இல்ல இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வந்தே, இவன் நீ எதோ பேசணும்னு கூப்ட்டேனு சொன்னான், அதான்” என்றான் நைனா.
“ஆமா மாமா, நம்ம டீம் பத்தி கேள்விப் பட்டிருப்பேள்லா?”
“அது இல்லாமலா, போன வருஷம் பெருசா போட்டியெல்லாம் நடத்துனேளா, இந்த வருஷம் அப்டி ஏதாச்சும் உண்டா? பையனையும் எடுத்து போடு, வெயிலுக்கப் பிள்ளலா இவன்?” என்று ஸுஹைபை தோளில் தட்டினார் நைனா.
“அதான் மாமா, ஸுஹைபு நல்ல விளையாடுகான், பேட்டிங், பௌலிங், கீப்பிங்னு எல்லாம்நல்லா வருகு, அதான் டீம் சார்பா டிஸ்ட்ரிக்ட் செலேச்ஷன் அனுப்பலாம்னு ஒரு யோசனை. அவன்கிட்ட கேட்டேன், உங்க கிட்ட கேக்கணும்னு சொன்னான். அதான்.”
வாப்பா ஸுஹைபை பார்த்து புன்னகைத்தார். “அது சரிதான். நல்ல போகட்டும். அதுக்கென்ன?”
“சில நாட்கள் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிவரும். செலேச்ஷன் ட்ரைனிங்ஸ் போகணும், மேட்ச்லாம் இருக்கும். போனா உறுதியா செலக்ட் ஆகிருவான்” என்றார் மாணிக்கம்.
ஐயப்பன் கோவிலில் பூசைக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
“அப்போ வேண்டாம் மக்கா. படிக்கட்டும். சும்மா விளையாடுகது சரிதான். பின்ன இந்த விளையாட்டு சோறு போடுமானு தெரியல?” ஸுஹைபைப் பார்த்தார். அவன் இம்முடிவை ஏற்கனவே எதிர் பார்த்ததைப்போல் மாணிக்கம் அண்ணனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
நைனா தொடர்ந்தார். “மக்கா இந்தப் பீ காட்டுல நம்ம சுத்திலும் இருக்கப் பிள்ளேல் எவளோ பேரு எவளோ நாள் விளையாடுகா. அதே மாற்றி எவளோ பேர் விளையாடுவா. நீங்க எல்லாரும் நல்லத்தான் விளையாடுகெயோ. பொழுதனைக்கு ப்ராக்டிஸ் செஞ்சாச்சாலும் இது நிரந்தரமானு தெரில.”
“இல்ல மாமா, ஒரு மாதிரி விளையாண்டு உள்ள போய்ட்டா போதும். ஏதாச்சும் கவர்மண்ட் வேல கூடச் சிக்கும்” என்று மாணிக்கம் விளக்கினார்.
“இங்க நித்தம் ப்ராசிடிஸ் பண்ணுக பாதிபேர் மெடிக்கல் ரெப்பாட்டு தான வெயில்ல சுத்திக்கிட்டு இருக்கீங்க மக்கா. கொறச்சி சொல்லல. அதுலகஷ்டம் இருக்குனு சொல்லுகேன். இவன் படிக் கட்டும், எனக்கும் முன்னால மாதிரி திருவிழா, ஸ்கூல், கல்யாண ப்ரொக்ராம்ன்னு கெடைக்கதுஇல்ல. இவன் படுச்சி கொஞ்சம் தலையெடுத்தாததான்” என்று வாப்பா தொடர, அருகிலிருந்த குமார் அண்ணன் வீட்டினுள்ளிருந்து “எம்மா... எம்புள்ள... எம்புள்ள...” என்று பெருங்குரலொன்று பூங்கா வீதியை நிறைத்தது. வாப்பாவும், மாணிக்கம் அண்ண னும் வீட்டுக்குள் சற்றும் யோசிக்காமல் ஓடினர். ஸுஹைபு சுதாரித்து அவர்களைப் பின்தொடர்ந்தான்.
உள்ளே தமிழ் அண்ணன் வாயில் நுரை தள்ள, அவனை மடியில் தாங்கி சுப்பம்மாள் கதறிக் கொண்டிருந்தாள்.
நைனா தமிழைத் தூக்கி, அவனது வாயில் விரல்களை விட்டு வாந்தி எடுக்க வைத்தார்.
“அந்தத் துணிய எடு” என்று மாணிக்கத்திடம்கூற, தமிழின் யமஹா பைக்கில் காயப்போட்டிருந்த துண்டை எடுத்து கொடுத்தார். அதற்குள் பக்கத்துக்கு வீட்டார் கூடிவிட்டனர். துணியை வைத்துத் தொண்டையில் அழுத்த, தமிழ் குமட்டிக்கொண்டு வாந்தி எடுத்தான். தமிழின் அப்பா வீட்டிற்கு ஓடி வந்தார். “என்னாச்சி டீ...”
“உம்ம வெச வாய வச்சிட்டு எம்புள்ளய என்ன சொன்னீரு. அவனுக்கு எதாச்சின உம்ம என்ன சிச்சை செய்யேன் பாரும்” என்று அழுது கீறினாள்.
வாப்பா தமிழைச் செவுட்டில் அறைந்தார். அவனைத் தூக்கிக்கொண்டு “அவசர” டாக்டர் மருத்துவமனை நோக்கி ஓடினார்.
“மாமா! வண்டில போயிரலாம்” என்று மாணிக்கம் கூவ, எதையும் கேளாதவராய் நைனா தமிழைத் தோளில் போட்டு ஓடினார்.
மாணிக்கம் வண்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்தார். அடுத்தத் தெரு முக்கில் நைனாவை நெருங்கி, “மாமா ஏறுங்க” என்று வண்டி மருத்துவமனை நோக்கி பயணப்பட்டது.
“கொஞ்சமா கொழம்பு... கொஞ்சமா. ஹ்ம்ம் போதும். பையனுக்கு ஆயிசு கெட்டி தான். இருந்தாலும் பொன்னையா நாயக்கர் வெடுக்குனு வார்த்தையைப் போட்ருவாரு. தமிழு சுடுசொல் பொறுக்காத பையன்” என்று நைனா சோற்றை அள்ளி உண்டார். ஸுஹைபு கோழி கொத்துப் பரோட்டா தின்றுகொண்டே வாப்பா ஓடியதை எண்ணினான்.
“அப்டி இப்டி படிச்சாலும் பள்ளிக்கூடத்துக்குப் போறான். அப்புறமென்ன. செத்துப்பார்க்கலாம்னு நெனச்சிருப்பான் போல. நமக்கும் சாவுக்கும் நடுவுல பையன் கெடந்து கடைசில இப்போதைக்கு நம்ம கிட்ட இழுத்துப் போட்டாச்சி” என்ற வாப்பாவின் பேச்சில் சற்றுப் பெருமை தெரிந்தது. ஸுஹைபுக்கு வாப்பாவின் புதன்கிழமை மேஜிக் நிகழ்ச்சியை நினைவுக்கு வந்தது, கூடவே எரிச்சலும்.
வாரங்கள் கடந்தன.
“கமான் கமான், குமரண்ணே அப்டியே போடு, ஈஸி ஈஸி” என்று ஸுஹைபு கீப்பிங்கில் நின்று கூவினான். “ரெடி” என்று குமார் பௌலிங் போட போகும் கணத்தில், தமிழ் அண்ணன் பேட்டிங் நின்றுகொண்டிருந்த விஜயிடம் சென்று “லேய் பேட் குடு, நான் பேட்டிங் புடிக்கென்” என்று கேட்டான்.
குமார் அண்ணன் “கொடு” என்பதாய் கண் அசைத்தான். தமிழ் பேட்டை வாங்கிக்கொண்டு சுத்தி நின்ற பீல்டர்களை எண்ணி, “என்ன ஸுஹைபு அப்பா எப்படி இருக்கா?” என்றான்.
“வாப்பா நல்ல இருக்கானா?”
“அடுத்த மாசம் லவன்ஸ்ல இருக்கியா?” என்று கேட்டான் தமிழ்.
“பெட் மேட்ச் லவன்ஸ்ல இருக்கேன். கீப்பிங்” என்றான் ஸுஹைபு.
குமார் “ரெடி? லேய் “ஐடியா” பிரஸ்ட் ஸ்லிப்ல நின்னு என்ன பக்கடா போட்டுட்டு இருக்க. பொசிஷன்க்கு வாடே! மக்கா ஸுஹைபு! ரெடியா...”
“ரெடினே... கமான் ஈஸி ஈஸி” - ஸுஹைபு.
அன்று மலவீச்சம் சற்று குறைவாகவே இருந்தது.
கவிதை குறியீட்டு ரீதியிலான மொழியில் உறவையும் உணர்வுகளையும் பற்றிப் பேசுகிறது. அதனால்வாழ்க்கையில் நுட்பங்களாயுள்ள அம்சங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அப்போது முடிவு இல்லாமல் அறிந்துகொண்டிருப்பதின் ஆனந்தம் கிடைக்கிறது. பிறகு அதுவே கால ஓட்டத்தில் தனிப்பட்ட அனுபவத்தின் பகுதியாக மாறியும் விடுகிறது. மாறாக அபியின் கவிதைகளில் எல்லாமும் அனுபவ வடிவங்களாகவே உருவாக்கித் தரப்படுகின்றன. அவை வாசகருக்கு தேடலை அளிக்கின்றன என்பதை விடவும் தாமே உள் முகத் தேடலை நிகழ்த்திக்கொள்கின்றன எனலாம். அத் தேடல் தனக்குத் தானே உண்மையாயிருப்பதால் ஆழ்ந்த கவித்துவத்தைப் பெறுகின்றன. அதைத் தவிரவும் வேறு நோக்கங்களில்லாதிருப்பதால் அவை பழக்கமான அன்றாடச் சொற்களில் சொல்லப் படுகின்றன. அதனால் தெளிவாயிருப்பதைப் போன்ற மேற்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. அதைக் கடந்தால் முற்றிலும் புதிய சொல் இணைவுகளால் அறிந்திராத தளத்துக்கு இட்டுச் செல்கின்றன.
அபியின் ஆரம்பகாலக் கவிதைகளில் கூரிய படிமங்கள் தனித்து வெளியில் பிரித்தெடுக்கக் கூடியதாகப் புலப்படுகின்றன. பிறகு எழுதப்பட்டவற்றில் முழுக் கவிதையும் படிமமாக மாறியதாகத் தோன்றுகின்றன. அவை புறத்தில் அசாதாரண எளிமையுடன் காட்சி கொடுக்கும். உள்ளே செல்லுந்தோறும் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடியாத தன்மையை உணர வைக்கும். இன்னும் அணுக்கமாக முயன்றால் புரிவதை போன்ற பாவனையைத் தரும். அதை முழுதாக விளக்கிட இயலாது. கடைசியாக அடையப்படுவது இருண்மையே. தெளிந்த மொழியில் பெரும் அர்த்தமின்மையே உருவாக்கப்படுகிறது. இக் கவிதைகளில் மெய்யாய் இருப்பது சூன்யம்தான். இவை அபி கவிதைகளின் தனித்தன்மை. ‘தெளிவு’ கவிதையில் ‘தெளிவு என்பது பொய்’ என்றிருப்பதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
அபி கவிதைகள் முதலில், தவிர்க்க முடியாமல் வாழ வேண்டியிருக்கும் இருத்தலை அறிகின்றன. அதனால் தெரிய வருவது நிறைந்துள்ள தடைகளும் எல்லைகளும். அவற்றிலிருந்து தப்பித்துச் சென்று விட முயலுகின்றன. பிறகு வாழ்க்கையிலிருந்து விலகியிருப்பதால் கிடைக்கிற சூட்சம வடிவான நிம்மதியை அடைகின்றன. அதைச் சித்தரித்துக்காட்ட கவிதைகள் வழக்கமான பொருள் வயப்பட்ட உருவகங்களைக் கைவிடுகின்றன. கருத்துகளாய்இருக்கும் படிமங்களால் தனக்குள் பேசத் தொடங்கு கின்றன. அவற்றை நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அப்போது அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாகக் குறியீடுகளாக்கிக்கொண்டு அப்படியே உணர முடிகிறது. அதனாலேயே தொடர்ந்த வாசிப்பில் அபி கவிதைகள், இது வரையிலும் இல்லாத அளவு எல்லையற்ற அனுபவங்களை வழங்குவையாய் இருக்கின்றன.
‘புரண்டு படுக்க இடமின்றி / ஒற்றையடிப் பாதை / சலிக்கிறது’ என்ற வரிகள் நமக்கு நீண்ட, தனித்த, குறுகிய பழக்கமான பாதையைக் காட்சியாக்குவதுடன், ஒற்றையடிப் பாதையாக மாறி நாமும் சென்றுகொண்டிருக்கும் மேலான அனுபவத்தை அளிக்கின்றன. ‘ஆடுகள் மலையிறங்கித் / தலைதாழ்த்தி வருகின்றன’ என்கையில் ‘தலை தாழ்த்தி’ என்ற ஒரு வார்த்தையே துல்லியமான முழு வடிவை வழங்கிவிடுகிறது. ‘வானம் சுற்றிலும் / வழிந்து இறங்குகிறது’ என்ற அடுத்த அழகான வரி, மறுபடியும் பிரம்மாண்ட பிரபஞ்சமெனும் கருத்துக்கு அழைத்துப் போகிறது. ‘காடு எரிந்த கரிக்குவியலில் / மேய்ந்து களைத்துத் / தணிந்தது வெயில் / என்னோடு சேர்ந்து.’ இதில் தன்னையும் இயற்கையின் அங்கமாக்கிக்கொண்டு பார்த்தல் வெளிப்படுகிறது. ‘மெலிதாக அசையும் வீடுகளும் / தடதடக்காது நகரும் தெருக்களும்’ என்று தன்னுடன் சேர்ந்து சடப் பொருட்களும் இயக்கம் பெறுவதாகக் காணுகிறது. ‘சாயல்... நீண்டுகொண்டிருந்த சாலையில் / நெடு நேரம் நின்றுகொண்டிருந்தது’ ‘யாருமில்லா இரவில் / நீண்டு உயர்ந்த தேக்குகள் / காட்டின் எல்லைக்குள் / நடமாடித் திரியும்’ போன்றவற்றிலெல்லாம் புறத்திலுள்ளவையும் கற்பனையால் உயிரடைந்து சலனமுறும் மாயம் நிகழ்ந்தேறுகிறது.
இதன் கவிதைகள் சொல்லப்படுவதில் ஒரு போதும் வெளிப்படுத்த முடியாத இசைமையையும் படிமங்களாக்குகின்றன. அது தூய அனுபவத்தைத் தர விரும்புகின்ற முயற்சி. அதை அரூபமாக மட்டும் உணர முடியும். ‘தந்தியைப் பிரிந்து / கூர்ந்து கூர்ந்து போய் / ஊசி முனைப் புள்ளியுள் இறங்கி / நீடிப்பில் நிலைத்தது / கமகம்’ என வார்த்தைகளால் இசை உணர்வு ஏறக்குறைய விவரிக்கப்பட்டுவிடுகிறது. ‘சுருதியின் / பரந்து விரிந்து விரவி... / இல்லாதிருக்கும் இருப்பு’ என்பது நம்மை நாம் மறந்து போய்விடும் நிலையைத் தருகிறது. இசையின் உருவற்ற தன்மை முடிவில் மௌனம் என உணர்த்த ‘நூறு வருஷ நீளத்துக்கு / இதன் / ஸ்பரிச சுகத்தில் / அரூபமுற்ற / சுருதி’ ‘... படலமாக்கிப் படர்த்திற்று மௌனம்’ என்கிறது. ‘தாள லயம் மீண்டும் / நீருக்கடியில் / கூழாங்கல் உருளும் ஓசையைப் / பெற்றுவிடும்’ ‘மாட்டு வண்டிகள் / எழுப்பும் ஓசையிலிருந்து / தோன்றினான்’ என இயற்கையில் எழும் இசைகளும் படிமங்களாக உருவாகின்றன. இவற்றின் முன்பு நாம் விளங்கிக்கொள்ள முற்படாது வெறுமனே காண்போராக இருக்கலாம். அதனால் தாமாகக் கிடைப்பது நிறைய.
அபி கவிதைகள் சுய தேடலைக் கொண்டிருப்பதால், அவற்றை வாசிக்கையிலும் தனக்குத் தானே சொல்லிக்கொள்வதைப் போலிருக்கின்றன. அவைவினா விடைகளாக, குறிப்புகளாக, நனவோட்டங் களாக உள்ளன. நீ, நான், அவன், இவன் என்றுகுறிப்பிடப்படுவதெல்லாம் தன்னை நோக்கிபேசுவதாகவே அமைகின்றன. ‘அதிர்வு’ கவிதை,தனக்குள் மாற்றி மாற்றி உரையாடிக் கொள்வதா யிருக்கிறது. ‘போவதும் வருவதும் உணர்வது வாழ்க்கை’ என்பதற்கு ‘இருப்பதை உணர்வது இல்லாதிருப்பது’ என்று பதில் கூறப்படுகிறது. ‘இன்று’ கவிதையில் ‘இன்று / நீ வர வேண்டிய நாள் / எனினும் / வரமாட்டாய்’ என்று சொல்வது வெளிப்படையாகவே மற்றொருவரின் இன்மையைக் காட்டுவது. மேற்கொண்டு ‘என்ற ஒன்று’ கவிதை, நீ, நான் என்பதை அடையாளச் சிக்கலாகவும் எதிர்மறைகளின் இரைச்சலாகவும் பார்க்கிறது. அந்த முரண்படாத் தன்மையை, குழந்தைகள் பெற்றுள்ள சூன்யம் என்கிறது. அச்சூன்யம், தன்னை மறந்த மனம் கொள்ளும் தோற்றம். நான், நீ என்பது வெறும் பாவனையாயிருப்பதை ‘நமக்குள் ஒரு ஏற்பாடு’ என்று ‘ஏற்பாடு’ கவிதை தெளிவாக்குகிறது. ‘உள்பாடு’ கவிதை ‘புள்ளியைத் தொட்டுத் தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு’ என்பது தனக்குள் நம்பிக்கையுண்டாகச் சொல்லிக்கொள்வதுதான். ‘சுற்றி லும் பெருகி நுரைத்துத் ததும்பும் குரல்களில் - நான் நீக்களில்’ என்பதில் அந்த இருமையை இல்லாமலாக்கும் விருப்பம் மேலிடுகிறது. ‘என்னுள் / புதர் விலக்கித் துருவிக் / கண்டுபிடித்ததென்ன, உன் / சிதறல்களேயன்றி’ என்ற ‘அடையாளம்’ கவிதையின் வரிகளில் இரண்டையும் ஒன்றாகக் காணும் நிலையைத் தோற்றுவிக்கிறது. ‘உன்னைப் பிரித்து விலக்கிக்கொண்டே / உன்னைத் தேடி / உன் தவம் மட்டும் உடன் வரப் / போகிறாய்’ என்பது தன்னை நோக்கிய கூறலாயிருக்கிறது. ‘ஆடுவேன் ஆடினேன் கிலுகிலுப்பை ... சூழ்ந்து செறிந்திருக்கும் / தன் அணுக்களின் / முகச்சோர்வு சகியாது / அவன் வெளிவந்தான்’ என்ற கவிதை ‘இன்னும் ஒரு விளையாட்டைத் தேடி வியர்க்கிறேன்’ என்று முடிகிறது. இதில் தன்னிலிருந்து முளைத்தெழுந்த ஒருவனையே சுட்டுகிறது. இது ‘அவன்’ கவிதையில் ‘அவன்’ ஓசையிலிருந்தும், விநாடியிலிருந்தும் தோன்றியதாக அரூபமாக்கப்பட்டு ‘எனக்குக் கிடைத்த சொந்த உருவம் / அவனைப் பார்த்தபோது மங்கிப்போனதை’ காட்டுகிறது. வெளிப்படையாகவே தனக்குள் தான் சுருங்கி முணுமுணுத்துக்கொள்ளும் ‘மாலை வரிசை’ கவிதைகள் வாழ்வின் அந்திமத்தை தரிசிப்பது எனலாம். அவற்றில் நான், நீ பேதம் அறவே ஒடுங்கி இருக்கின்றன. இங்கு, நான், என் என்று, தான் மட்டும் இருக்கும் இருப்பாகிறது. ‘மாலை-பாழ்’ கவிதையில் பிறரின் இருப்பையும் துறந்து ‘இருத்தலின் நிமித்தம் / தெருவும் நானும் என / இருத்தலே’ என்று எண்ணிக்கொள்கிறது. மற்றொரு கவிதையில் ‘சாவு சொன்னதை / ஸ்வரப்படுத்திப் / படுக்கை வசமாக / விரிய விட்டிருக்கிறோம்’ என்று ‘மாலை-விரிவு’ கவிதை வாசிப்பவரின் பங்கேற்பையும் வெளிப் படுத்துவது. ‘மாலை - போய்வருகிறேன்’ கவிதையில் மாலைப் பொழுதையே ஒரு முன்னிலையாக்கி ‘ரத்தம் இருள்வது தெரிகிறது ... போய் வருகிறேன்’ என்பது வாழ்விலிருந்து விடைபெற்று மரணத்தை நோக்கிப் போதலாகப்படுகிறது.
அபி கவிதைகளில் ‘நான் இல்லாமல் என் வாழ்க்கை’ என்கிற கவிதை எல்லா கவிதைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திவிடுகிறது. அரூபமான படிமங்களுக்கும், அர்த்தம் காண முடியாத தன்மைக்கும், அனுபவமாக உணர்கிற மொழிக்கும் எடுத்துக்காட்டாகிறது. அக்கவிதையில் வாழ்க்கையை விட்டு வெளியேறிச் செல்லுதல் நிகழ்கிறது. விடுபட்ட வாழ்க்கை முடிவில்லாமல் பெருகுகிறது. அது மகிழ்வுடன் நடந்தும் பறந்தும் செல்கிறது. எந்தத் தடையுமில்லாத ‘சூன்யத்தை’ அனுபவிக்கிறது. அங்குவாழ்வும், சாவும் இருப்பதில்லை. அதேபோல் எந்தசிந்தையும் எழுவதுமில்லை. தன்னை யாருக்கும் உணர்த்த கூட வேண்டியதுமில்லை. அந்த வாழ்க்கைபரிபூரணச் சுதந்திரமானதாயிருக்கிறது. இதுவே பெரும்பாலான கவிதைகளில் வெவ்வேறு படிமங் களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘வருவோம்போவோமாய்த் / தெருவை நிறைப்போம்’ என்றுவாழ்க்கையின் தொடரோட்டத்தையும் நெரிசலையும்நிலையாமையையும் கூட ஓர் இயல்பான அன்றாடவாழ்வின் புழக்கத்தில் கிடைக்கிற படிமத்தால் வெளிப்படுத்துகிறது. வாழ்ந்தாக வேண்டிய நிர்ப் பந்தத்தையும் காட்டுவது ‘விரயமின்றி வாழ்க்கையை/ நிலைகளில் நிரப்பலும் / ஒட்டாது திரட்டலும்/ தொழில்’ என்பது. ‘காலம்/ ஊசியிட்டுக் குத்திமல்லாத்திய / பூச்சிகளாய் / மனிதர்கள் - புகைப் படங்களில் / பேச முயன்று/ சிரித்துத் திகைத்து இப்படி.’ இது வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நிலைக்கான சிறந்த படிமம்.
அந்த வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டு மானால் அறிந்த பிறகு வெளியேறுதலை ‘இல்லா திருத்தலே / இருத்தல்’ என அரூபமான முறையில் வகுக்கிறது. அதை உணர்த்தும் இசைப் படிமம் ‘நாதம் / அலை பாய்வதெப்படி / இருப்பது அது / அலைவதன்று.’ ‘கொஞ்சம் கொஞ்சமாக / விலகி / விலகலில் நீடித்தாயெனில் / நீ வாழ்கிறாய்’ என்பது ‘அவர்’ சொன்னதாக உள்ள ஆப்த வாக்கியம். ‘உன்னைச் சுற்றி / வட்டங்கள் உருவான பின் / விலகிக் கொள்கிறேன்.’ ‘புள்ளியைத் தொட்டுத்தடவி / அதன் மூடி திறந்து / உள் நுழைந்து / விடு.’ என்பதெல்லாமும் விட்டு விலகுதலின் முயற்சிகளாகத் தோன்றுகின்றன. பல்வேறு பசிகள் உண்டாவதும் அவற்றுக்கு எப்போதும் உணவிட்டுக்கொண்டிருப்பதும் வாழ்க்கை யாகும். இருப்பினும் அவை நிறைவுற்று அடங்குவ தில்லை. ‘சமையல்’ கவிதை தனக்குள் புகும் ‘அராஜகப் பசிகளை’ தவிர்க்க, தான் ‘பதுங்கிச் சுருண்டேன்’ என்றும், கடைசியில் ‘என்றுமே சமையல் இல்லை’ என்றும் அறிவிக்கிறது. அதனால் இனி வாழ்வில் பற்று ஏற்படப்போவதில்லை. ‘அவசரமில்லாத / சிறிய ஓடைகள் நடுவே / கூழாங்கற்களின் மீது / என் வாழ்வை / மெல்லத் தவழவிட்டேன்.’ இதுவே விலகலை நாடும் நிலை. அத்தேடலும் நம்மைப் பிணைத்துவிடும் தளையாகவும் மாறலாம் என்பது ‘குறிப்பிட்ட தேடல் / அலுப்பாகி / தேடலினின்றும் விடுதலை / என்பதில் / திகைத்துச் சுருளும் / அனுபவம்’ ‘வாழ்க்கையின் / பச்சை வாசனை / தவறிப்போகலாம்’ போன்ற வரிகளாக வருகின்றன. அதை ‘வெளியேறத் துடிப்பேன்/ ஆனால் எப்படி’ என அரற்றவும் செய்கிறது.
இருத்தல் என்பதிலிருந்து விடுபட்டு அடையும் மௌனத்தைக் கவிதைகள் எட்ட முயலுகின்றன. அப்போது வார்த்தைகளின் போதாமையை உணர்ந்தபடியிருக்கின்றன. ‘என் சப்தக் கூறுகள் பிளந்து / மௌனம் / நீலம் காட்டியபோது / அபத்தமான சைகைகளுடன் / வெட்கமற்ற வெறுமையில் / புரண்டுகொண்டிருந்தன / வார்த்தைகள்’ என்பதில் அதைக் காணலாம். கூறியதிலும் ‘பாவம் வார்த்தைகள் / மலடு வழியும் முகத்தோடு / வெளியேறும்’ என்ற அதிருப்திதான் கிடைக்கிறது. ‘சொல்லாதிருந்ததற்கும் / சொன்னதற்கும் / இடைவெளியில் / புல் வளர்ந்து / பூமியை மூடும்’ என்பதும் எண்ணியதை சொல்ல இயலாத நிலைதான் எனத் தெரிகிறது. ஆனாலும் ‘நெடுங்கால நிசப்தம் / படீரென வெடித்துச் சிதறியது’ என தானாகவும் அது வெளிப்பட்டும் விடலாம்.
இயல்பும், நுட்பமுமான படிமங்களால் ‘மாலை’ வரிசை கவிதைகள், அபூர்வ அழகியல் தன்மைகளுடன் மிளிர்கின்றன. இந்தக் கவிதைகளில் மீண்டும் மீண்டும் மாலைப் பொழுதில் உலா போதல் எழுதப்படுகிறது. ‘என் மாலை சொல்கிறது / இது ஏதோ திசைதான் என்று / விலகலுக்கென்று உள்ள திசை’ என்பது வாழ்வு நாள் முடிந்து சூரியன் மறையும் பொழுதுதான். நடை செல்லுமிடம் சற்றுஎட்டவுள்ள மலையாக, காடாக இருக்கிறது. பெரும் பாலும் அங்கு நின்றுதான் கவிதைகள் தமக்குள் சொல்லிக்கொள்ளப்படுகின்றன. புறப்பட்டு வந்த ஊர் யாருடையதாகவோ சிறிதாகத் தோன்றுகிறது. ‘யாதும் ஊர் ஆகிறது’ இவ்வரிசைக் கவிதைகளின் அனுபவம் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுச் செல்வ தாயிருக்கிறது. மேலும் குறுக்கி, வாழ்க்கையின் அந்திமக் காலம் என்றும் சொல்லாம். ‘திரியில் சுடர் இறங்கிக்கொண்டிருக்கிறது / கதைகள் தீர்ந்து போயிருந்தன’ ‘வெறுமைப் பாங்கான / எனது வெளியில் / ஒளியும் இருளும் முரண்படாத / என் அந்தியின் த்வனி’ என்பவை அது பற்றிய கவிதை வரிகள். நடைப் பயிற்சியின் முடிவில் அடையப்படுகிற இடம் ‘எப்போதும் காலியாயிருக்கும் இடம்’ என அடையாளம் காட்டப்படுகிறது. ‘சுழல்வதும் சுற்றுவதுமான / இயக்கங்கள் / நினைவிழந்து கொண்டிருக்கின்றன. ‘அடிவான் விளிம்பில் / பறவை கூச்சல் மொய்த்துப் / பிணம் போல் / என் மாலை’ எனவும் கவிதை தன்னை உணர்ந்தபடியிருக்கிறது. ‘மாறிமாறி வருதல் ஒழிந்து / முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை / இப்படியே நடக்கட்டும் / போய்வருகிறேன்’ என்று வெளிப்படையாக விடைபெறலை அறிவிக்கிறது.
‘கனலும் எனது / அனைத்துத் தரைகளையும் / பனிப்புகை செலுத்திக் / குளிர்விக்கிறது’ எனத் தெரிவிக்கும் போதே, ‘பாறைகளை / ஊதி உருட்டித்தள்ளும் / என் மலைகளின் மீது / என் கனல் சுற்றிவந்தது’ என்று இளமையைத் திரும்பியும் பார்க்கிறது. ‘மாலையோடு பேசித் தளிர்க்கும் / கதை / என் வடிவில் இருந்த கதை’ என்றும் ‘அருமையாய்க் கழிந்தது / சருகுகளடிப் பொழுது’ என்றும் அதை எண்ணி மகிழ்கிறது. வாழ்விலிருந்தும் காலத்திலிருந்தும் சேர்ந்து விலகுவதால் மீண்டும் குழந்தைப் பிராயம் கிட்டிவிடுகிறது. ‘காலம்’ வரிசைக் கவிதை ஒன்றிலும் இது ‘யார் சொன்னது / அந்த நாட்கள் போயினவென்று... இந்த ஒற்றையடிப் பாதையில் / புதிதாய் வரும்’ என்றும் ‘காடு முழுவதும் சுற்றினேன் / பழைய சுள்ளிகள் கிடைத்தன’ என்றும் கடந்த கால மீட்பு அடையப்படுகின்றன. ‘என்னைச் சுற்றி நிரம்பும் / காட்டுக் களிப்பு.’ ‘இங்கே என்னருகே / எனது மாலை / பிரபஞ்ச சோகம் திளைத்து.’ இந்தக் களிப்பும் சோகமும் உச்சத்தில் ஒன்றுதான் என்று படுகிறது.இறுதியில் அடையப் பெறுவது எல்லையில்லா ஆனந்தம். ‘இனி / இருக்கிறேன் என்பதில்லாத இருப்பு / இல்லை என்று / இருக்கும்’ இருக்கையில் இல்லாதிருப்பதாகக் கருதிக்கொள்வது பூரண மகிழ்ச்சி தான். ‘என்ற ஒன்று’ கவிதை ‘சூன்யம் இருந் தவரை / எல்லாம் சரியாயிருந்தது’ என்று ஏதும்அற்றிருந்த நிலையைக் காட்டுகிறது. அது திறந்த மனமுள்ள குழந்தைத் தன்மை. அங்கு மற்றது என்றபேதங்களில்லை. அறிவின் எல்லைகளும் இருப்ப தில்லை. எதையும் முடிவற்று காணும் வாய்ப்புகளையும் கொண்டது. அப்படி உணர்வதுதான் ஆனந்த மயமான இருப்பு போலும்.
நான் அதைப் பற்றி முன்பே யோசித்திருக்க வேண்டும், இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. பன்னிரண்டரை மணிக்கு மேலாகிவிட்டது மேலும் நான் நிரப்பிக்கொள்ள மறந்துவிட்டேன். சேவை நிலையங்கள் மூன்று மணிவரை மூடியிருக்கும். ஒவ்வொரு வருடமும் பூமியின் பாறை மடிப்புகளில், ஆயிரங்கோடி நூற்றாண்டுகளாய் மணல் மற்றும் களிமண் படிவங்களுக்கு இடையில் சேகரித்துப் புதையுண்டிருந்த இரண்டு மில்லியன் கச்சா எண்ணெய் மேலே கொண்டு வரப்படுகிறது. இப்பொழுது நான் கிளம்பினால் பாதி வழியில் தீர்ந்துபோய் விடும் ஆபத்து இருக்கிறது. எச்சரிக்கை அளவைமானி கொஞ்ச நேரமாகவே டேங்க் ரிசர்வ்வில் இருக்கிறது என்று எச்சரித்துக்கொண்டிருக்கிறது. பூமிக்கு அடியிலான உலகளாவிய சேமிப்புகள் உத்தேசமாக இருபது வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று அவர்கள் கொஞ்சகாலமாகவே எச்சரித்து வந்திருக்கிறார்கள் அல்லது அவ்வாறு. அது பற்றிச் சிந்திப்பதற்கு எனக்கு நிறைய நேரம் இருந்தது. எப்போதும் போலப் பொறுப்பில்லாமல் நான் இருந்திருக்கிறேன். டேஷ்போர்டில் சிவப்பு விளக்கு மினுங்கி எரியத் தொடங்கும்பொழுது நான் கவனம் செலுத்துவதில்லை, அல்லது விஷயங்களைத் தள்ளிப்போடுகிறேன், பயன்படுத்துவதற்கு முழு ஒதுக்கப்பட்ட சேமிப்பும் இன்னமும் மிச்சமிருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன் பிறகு மறந்துவிடுகிறேன். இல்லை, ஒருவேளை, அதுதான் கடந்த காலத்தில் நடந்திருக்கும், காற்று அளவுக்கே பெட்ரோல் ஏராளமாக இருந்த அந்த நாட்களில். கவனக்குறைவாக இருந்துவிட்டு பிறகு அதைப் பற்றி மறந்து விடுவது. இப்பொழுது அந்த மினுங்கல் வெளிச்சம் வரும்பொழுது அது ஒரு அபாயத்தையும், பெரும் அச்சுறுத்தலையும், ஒரே சமயத்தில் தெளிவின்றியும் ஆனால் நடந்து விடக்கூடியது என்கிற மாதிரியும் பரிமாற்றம் செய்கிறது.
பலவிதமான பதற்றம் நிறைந்த சமிக்ஞைகள் எனது பிரக்ஞையின் மடிப்புகளுக்கிடையே வண்டலாய்ப் படியும் அவற்றுடன் அந்த செய்தியையும் நான் எடுத்துப் பதிவு செய்து கொள்கிறேன். இது எனது ஒருவிதமான மனோநிலையில் கரைந்து விடுகிறது. அதை என்னால் உதறித்தள்ள முடியாத பிரக்ஞை நிலையில் அது கரைகிறது. அதே சமயம் அது அதன் விளைவாய் கச்சிதமான நடைமுறை காரியம் செய்வதற்கு என்னைத் தூண்டுவதில்லை. எடுத்துக்காட்டாக நான் பார்க்கும் முதல் பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி நிரப்பிக் கொள்வதற்கு அல்லது சேமிப்பைச் செய்வதற்கான உள்ளுணர்வு என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறதா, நம்மை அறியாமலே நாம் மேற்கொள்ளும் கருதாத் தன்னியல்பு செய்கையின் கஞ்சத்தனம். என்னுடைய டேங்கில் எண்ணெய் தீரப் போகப் போகிறது என்பதை நான் உணரும்போதே எண்ணெய்ச் சுத்திகரிப்பு கையிருப்புகள் குறைந்து வருவதையும், எண்ணெய்க் குழாய்களின் போக்குகள் பற்றியும், மேலும் எண்ணெய்க் கப்பல்கள் பாரங்களுடன் கடல்களை உழுது செல்வதையும் உணர்கிறேன். டிரில் பிட்டுகள் பூமியின் ஆழங்களைத் துழாவி அசுத்த நீரைத் தவிர வேறு எதையும் மேலே கொண்டு வருவதில்லை. எனது கால் ஆக்ஸிலேட்டரின் மீதிருக்க, நமது பூமிக்கோளம் சேமித்து வைத்திருக்கும் கடைசிப் பீற்றுதாரை சக்தியை அதன் மிக எளிய அழுத்தம் கூட எரித்துவிடக்கூடும் என்ற உண்மையை உணர்கிறது. எனது கவனம் கடைசிச் சொட்டு எரிபொருளைஉறிஞ்சுவதில் நிலை கொள்கிறது. டேங்க் ஏதோ ஒரு எலுமிச்சைப் பழம் என்பது போல, அதிலிருந்து ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பிழியப்பட வேண்டும் என்பது போல நான் பெடலை அழுத்துகிறேன். நான் வேகத்தைக் குறைக்கிறேன். இல்லை. அதிகரிக்கிறேன். என் உள்ளுணர்வுபூர்வமான எதிர் வினை, நான் எந்த அளவுக்கு வேகமாகச் செல்கிறேனோ, இந்த எனது பிழிதலில் இருந்து அந்த அளவு தூரமாகச் செல்வதற்கு எனக்குக் கிடைக்கும் என்பதாய் இருக்கிறது. அது இறுதியானதாய் இருக்கவும் கூடும்.
நிரப்பிக்கொள்ளாமல் நகரத்தை விட்டுச் செல்லும் ஆபத்தில் நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. நிச்சயமாகத் திறந்திருக்கும் ஒரு பெட்ரோல் நிலையத்தை நான் கண்டுபிடிப்பேன். நிழல்மரச்சாலைகளில் காரை ஓட்டியபடி, வேறுபட்ட பெட்ரோலிய கம்பெனிகளின் வண்ண அறிவிப்புப் பலகைள் முளைத்து நிற்கும் நடைபாதைகளையும், மலர்ப்படுகைளையும் தேடிச் செல்கிறேன். ஒரு காலத்தில் அவை இருந்த ஆக்கிரமிப்புடன் இன்று இல்லாத போதிலும் கூட. அந்த நாட்களில் புலிகளும் பிற தொன்ம விலங்குகளும் நமது என்ஜின்களின் உள்ளே தீப்பிழம்புகளை உமிழ்ந்த காலத்தைப் போல அவை இன்றில்லை.
மீண்டும் மீண்டும் திறந்திருக்கிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து நான் முட்டாளாகிறேன். அதற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையம் வழமையான நேரத்தில் திறந்திருக்கும் மதிய இடைவேளை சமயத்தில் மூடி யிருக்கும். சிலநேரங்களில் ஒரு பெட்ரோல் நிலைய உதவியாளன் ஒரு மடக்கு நாற்காலியில் அமர்ந்தபடி சாண்ட்விச்சை சாப்பிட்டுக்கொண்டோ, அல்லது, அரைத் தூக்கத்திலோ இருக்கிறான். மன்னிப்புக் கோரும் தோரணையில் அவன் தனது கைகளை விரித்தும் காட்டுகிறான். சட்டங்கள் அனைவருக்கும் ஒன்றுதான். எனது கேள்வி கேட்கும் சைகைகள் நான் அவை அவ்வாறு ஆகும் என்று அறிந்திருந்தவாறே பயனற்றவையாகின்றன. சகலமும் எளிமையாகத் தோன்றிய காலம் முடிந்துவிட்டது.
அதாவது மனித சக்தியானது இயற்கை சக்தியைப் போலவே நிபந்தனையற்று உங்கள் சேவையில் இருக்கிறது என நீங்கள் நம்ப முடிந்த காலம். அப்போதுபெட்ரோல் நிலையங்கள் எல்லாமும் உங்கள்வழியில், வரிசையாக ஈர்ப்புடன் முகிழ்த்தவாறு இருக்க அவற்றின் உதவியாளன் பச்சை அல்லது நீல வண்ணத்திலோ அல்லது கோடுபோட்ட தொள தொள முழு அங்கியை அணிந்தோ வண்டுக்கூட்டத்தின் அரைபடலால் காரின் முன்பக்கக்கண்ணாடி அசுத்தமானதைத் துடைப்பதற்குத் தயாராகச் சொட்டச் சொட்ட ஸ்பாஞ்சினை கையில் வைத்துக் கொண்டிருப்பான்.
அல்லது, மாறாக. குறிப்பிட்ட பணியிலிருந்த மனிதர்கள் இருபத்தி நான்கு மணிநேரமும் பணிசெய்து கொண்டிருந்த காலத்தின் முடிவுக்கும், சிலவித பொருட்கள் பயன்படுத்தித் தீரவே தீராது என்று நீங்கள் கற்பனை செய்திருந்த காலத்தின் முடிவுக்கும் இடையே ஒரு முழு யுகத்தின் வரலாறே கிடக்கிறது. -- அதன் நீளம் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும், ஒரு தனிநபருக்கும் இன்னொரு தனிநபருக்கும் வேறுபடுகிறது. அதனால் நான் சொல்கிறேன் இந்தக் கணத்தில் செழுமைச் சமுதாயங்கள் என்று அழைக்கப்பட்டவற்றின் எழுச்சியையும், உயர்வையும் வீழ்ச்சியையும் நான் ஒரே சமயத்தில் அனுபவம் கொள்கிறேன் - ஒரு சுழலும் டிரில் கருவி ஒரே நொடியில் பிளியோசீனிய, கிரெடீசிய, டீரசீய படிவப் பாறைகளின் ஊடாக ஒரு மில்லினியத்திலிருந்து அடுத்த மில்லினியத்திற்கு நுழைவதைப்போல.
கிலோமீட்டர்மானி தந்திருக்கிற தகவல்களை உறுதி செய்த பின் காலம் மற்றும் புவி வெளியில் எனது நிலைமையைக் கணக்கெடுக்கிறேன். இப்பொழுதான் முள் பூஜ்யத்திற்கு வந்து நிற்பதையும், எரிபொருள்மானி இப்பொழுது நிலையாகப் பூஜ்யத்தில் நிற்பதையும் காலக்கடிகாரத்தின் சிறிய மணிக்கை இன்னும் மேற்புற கால்வட்டத்தில் நிற்பதையும். மதிய வேளைகளில் தண்ணீருக்கான தற்காலிக உடன்பாடானது தாகம் நிறைந்த புலியையும் மானையும் கலங்கிய ஒரே குட்டைக்கு வர வைப்பதைப் போல, எனது கார் பயனின்றிப் புத்துணர்ச்சிக்காகத்தேடுகிறது, எண்ணெய் தொடர்பான தற்காலிக உடன்பாடு அதை ஒரு பெட்ரோல் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு ஓடச் செய்கிறது.
மதிய வேளைகளில் கிரெடீசிய வாழ்வுயிரிகள் கடலின் மேற்புறத்தில் திரண்டு வந்தன, அடர்ந்த கூட்டமான நுண்ணியப் பாசிகள், பிளான்க்டன்களின் மெல்லிய ஓடுகள், மென்மையான கடல்பஞ்சுகள், கூர்ந்த பவளப்பாறைகள் சூரிய ஒளியில் மென்மையாய்க் கொதித்து அவற்றினூடாய்த் வாழ்வைத் தொடர்ந்த மரணம் என்ற சுழற்சியில் தொர்ந்து வாழ்கின்றன. அவை விலங்கு மற்றும் தாவரக் கசடுகளின் மெல்லிய மழையாகச் சுருங்கும்போது அவைமேலோட்டமான நீர்களில் படிந்து, மண்ணுக்குள் மறைந்து, பிரளயங்களின் நடப்புகள் கடந்த பிறகு கால்கரீசியப் பாறைகளின் தாடைகளினுள் மெல்லப் பட்டு, சின்-கிளைன் மற்றும் ஆன்ட்டிகிளைன் மடிப்புகளில் செரிமாணமாகி, அடர்த்தியான எண்ணெய்களாய் திரவமாக்கப்பட்டுப் பிறகு இவை இருண்ட பாதாளத்தின் நுண்துளைகளில் மேல் நோக்கி தள்ளப்படுகின்றன - ஒரு பாலைவனத்தின் மத்தியில்பீச்சி அடித்துத் தீப்பிழம்புகளாய் வெடிக்கின்றன. இவை மீண்டும் ஒரு முறை உலகின் தொடக்கநிலைக்காலத்து மதியத்தில் இருந்தது போன்றதான ஒரு கொழுந்து விட்டு எரிதலில் பூமியின் மேல் தளத்தைச் சூடாக்குகின்றன.
தனது வெறுங்கைகள் இரண்டைத் தவிர வேறு ஆயுதம் எதுவுமில்லாத மனிதனை யந்திரமயமான உலகம் வளைத்துக் கொண்டுவிட்டது. அது சந்தேகமின்றிக் காட்டுத்தனமான இயற்கையைப் பயன்பாட்டுக்கு உள்ளாக்குவதை விட எளிமையாளது. இந்த உலகில் நமது கைகள் இனி அவற்றின் செயல்பாடுகளை அவைதான் மேலாண்மை செய்ய வேண்டியிருக்கும் நிலை. இனியும் நமது யந்திரமயமான தினசரி உழைப்பினை நம் கைகள் பிற கைகளுக்கு மாற்றிவிட முடியாத நிலை.
மேலும், இங்கே மதியத்தின் மத்தியில் உள்ள நாகரீக பாலைவனத்தில் திறந்திருக்கும் ஒரு சேவைநிலையத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். கார்களின்கூட்டம் ஒன்று அதைச் சுற்றி பரபரத்துக்கொண்டிருக்கிறது. உதவியாளர்கள் ஒருவருமில்லை. பண நோட்டுக்களை மெஷின்கள் பற்றி எடுத்துக் கொள்ளக் கூடிய சுயசேவை நிலையங்களில் ஒன்றுதான் அது. காரோட்டிகள் குரோம் நிற பம்ப் நுனிகளை அவற்றின் உறைகளில் இருந்து வெளியில் எடுத்தபடி சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இயக்கக் குறிப்புகளை வாசிப்பதற்காக அவர்களின் கையசைவுகளைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். நிச்சயமற்ற கைகள் பித்தான்களை அழுத்துகின்றன, ரப்பர் குழாய்களின் பம்புகள் தமது சுருள்களுக்குத் திரும்பி விடுகின்றன. இடை மாறுபாட்டுக்கான காலத்தில் உருவான என் கைகள் பம்ப்புடன் தடுமாறுகின்றன. எனது உயிர்பிழைத்தலுக்கு அவசியமான அது போன்ற செயல்களைச் செய்வதற்கு என் கைகள் பிற கைகளுக்காகக் காத்திருந்து பழகி விட்டவை. இந்த நிலைமை நிரந்தரமானதல்ல என்பதைப் பற்றி நான் எப்போதும் பிரக்ஞையுடன் இருந்தேன். கோட்பாட்டளவில் என் கைகள் ஒரு இனத்தின் யந்திரம் சாரா செயல்பாடுகளை நிகழ்த்திக் கொள்ளும் அதன் பங்கினைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் செய்ய விரும்பாது. கடந்த காலங்களில் விரோதமான இயற்கையினால் வளைத்துக் கொள்ளப் பட்ட மனிதன் தன் வெறும் கைகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லாது இருந்ததைப் போல இன்று நாம் ஒரு யந்திர உலகத்தினால் வளைத்துக் கொள்ளப் பட்டுள்ளோம். அதை சந்தேகமின்றி காட்டுத் தனமான இயற்கையை விட எளிமையான வகையில் கையாள முடியும். அந்த உலகத்தில் அப்போதிலிருந்து தம் சொந்த விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கும் இனியும் மற்ற கைகளுக்கு தம் யந்திரமயமான தினசரி உழைப்பில் நம்பி இருக்க அவசியமின்றி எதிர்பாராத விதமாக நிஜத்தில் எனது கைகள் சிறிது ஏமாற்றம் அடைந்திருக்கின்றன.
பயன்படுத்துவதற்குப் பம்ப் மிக எளிதாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னரே சுயசேவை நிலையங்கள் ஏன் சர்வ சாதாரணமாக ஆகவில்லை என உங்களை வியக்க வைக்கிறது. ஆனால், ஒரு தானியங்கி சாக்லேட் விநியோக யந்திரத்தைப் பயன்படுத்துவதிலிருப்பதை விடவும் அல்லது வேறு எந்தப் பணம் எண்ணும் இயந்திரத்தை இயக்குவதால் வருவதைவிடவும் இதில் நீங்கள் கூடுதலான சந்தோஷத்தைப் பெறவில்லை. சிறிது கவனம் தேவைப்படும் ஒரே செயலாக்கமானது பணம் செலுத்துவதில் அடங்கியிருக்கிறது. ஒரு சிறிய இழுப்பறையில் நீங்கள் ஒரு ஆயிரம் லயர் நோட்டை சரியாக வைக்க வேண்டும்--அதன் எலக்ட்ரிக் ஒளிக்கண் குய்செப் வெர்டியின் தலை உருவப் பொறிப்பினை அடையாளப்படுத்திக் கொள்வதற்கேற்றவாறு, அல்லது, ஒவ்வொரு வங்கிநோட்டின் குறுக்காகச் செல்லும் மெல்லிய உலோகப் பட்டியை அடையாளம் காணுமளவுக்குக் குறுக்காகச் செல்லும்படி.
அந்த நோட்டு விழுங்கப்படும் போது ஒரு வெளிச்சம் கிளம்பும். அப்பொழுது நான் விரைய வேண்டும், பம்பின் நுனியை டேங்கின் வாயில் நுழைத்து கச்சிதமாகவும், நடுங்கியபடியும் வரும் ஜெட்டை உள்ளே பொங்கிப் பீறிட நுழைக்க வேண்டும். இந்தப் பரிசினை நான் அனுபவிக்க விரைய வேண்டும். இது எனது அறிவுணர்வுகளைச் சந்தோஷப்படுத்துவதற்குத் தகுதியற்றவை எனினும் எனது போக்குவரத்து வழமையாக இருக்கும் எனது உடற்பகுதிகள் அதற்கு ஆர்வத்துடன் ஏங்குகின்றன. இவை எல்லாவற்றையும் சிந்தித்து முடித்ததுதான் தாமதம் அப்பொழுது ஒரு கூர்மையான க்ளிக் ஓசையுடன் பெட்ரால் வருவது நின்று சமிக்ஞை விளக்குகள் அணைந்து போகின்றன. சில விநாடிகளுக்கு முன்பாக இயக்கிவிடப்பட்ட சிக்கலான கருவி ஏற்கனவே இயக்கமற்று நிறுத்தப் பட்டுவிட்டது. எனது சடங்குகள் உயிர் கொடுத்த நிலவுலகம் சார்ந்த சக்திகளின் நகர்வுகள் ஒரு கணத்திற்கு மேலாக நீடிக்கவில்லை. வெறும் உலோகப் பட்டிகையாகக் குறைக்கபட்ட ஆயிரம் டாலர் நோட்டுக்கு மாற்றாகப் பம்ப் மிகக் குறைந்த அளவு பெட்ரோலையே தரும். கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை பதினோரு டாலர்கள்.
நான் மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். வேறு ஒரு நோட், பிறகு மற்றவை, ஒரு தடவைக்கு ஒரு ஆயிரம் எனத் தர வேண்டும். பணமும் பாதாள லோகமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அவை நீண்டகாலம் பின்னோக்கிச் செல்கின்றன. அவற்றின் உறவு ஒரு பிரளயம் அடுத்து மற்றொரு பிரளயமாக வெளிப்பாடு காண்கிறது--சில நேரங்களில் மந்தமாகவும், சில நேரங்களில் மிகத் திடீரென்றும். எனது டேங்கை சுயசேவை நிலையத்தில் நிரப்பிக்கொண்டிருக்கையில் பாரசீக வளைகுடாவில் புதையுண்டிருக்கும் ஒரு கருப்பு ஏரியில் ஒரு வாயுக் குமிழி வீங்கி உயர்கிறது. ஒரு எமீர் மௌனமாக, அகன்ற வெண்ணிற கைச் சட்டைகளில் மறைக்கப்பட்ட கைகளை உயர்த்தித் தனது மார்புக்கு குறுக்காக மடிக்கிறார். ஆகாயத்தைத் தொடும் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் எக்ஸான் கம்ப்யூட்டர் ஒன்று எண்களை மெல்லுகிறது. கடலின் மிகத் தூரத்தில் ஒரு சரக்குக் கப்பல் அது திசைமாறிச் செல்லவேண்டும் என்ற ஆணையைப் பெறுகிறது. எனது பாக்கெட்டுகளில் நான் துழாவுகிறேன். காகிதப் பணத்தின் நோஞ்சான் சக்தி ஆவியாகிப் போகிறது.
என்னைச் சுற்றிலும் நான் பார்க்கிறேன். ஆளற்ற பம்புகளுக்கிடையில் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருக்கிறேன். இந்த நேரத்தில் திறந்திருக்கும் ஒரே பெட்ரோல் நிலையத்தைச் சுற்றியிருந்த கார்களின் முன்வருதலும் பின்போதலும் எதிர்பாராத விதத்தில் நின்று போயிற்று. ஏதோ மிகச் சரியான இந்தக் கணத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பிரளயங்களின் ஒருமிப்பு திடீரென்று அந்த உச்சபட்சமான பிரளயத்தை உருவாக்கிவிட்டதைப் போல ஒரே சமயத்தில் பம்ப்புகள், கார்புரேட்டர்கள், மற்றும் எண்ணெய் பம்ப்புகள் எண்ணெய்க்கிணறுகளின் குழாய் வழிகள் போன்ற சகலமும் வறண்டு போகின்றன. இதில் பொருட்படுத்தப்பட வேண்டியது என்னவென்றால் நீங்கள் இதையெல்லாம் முன்னரே எதிர்நோக்கி விட்டீர்கள் என்று சொல்ல முடிவதுதான். இப்பொழுது கொஞ்சகாலமாக எதிர்காலத்தை என்னால் அச்சமின்றிக் கற்பனை செய்யமுடிகிறது. என்னால் ஏற்கனவே வரிசை வரிசையான, நூலாம்படை படிந்த, கைவிடப்பட்ட கார்களைப் பார்க்க முடிகிறது. இந்த நகரம் ஒரு உடைந்த பிளாஸ்டிக் குவியலாகச் சிறுத்துப் போவதையும், முதுகின் மேல் சாக்குக்களுடன் திரியும் மனிதர்கள் எலிகளால் துரத்தப்படுவதையும் இப்பொழுதே என்னால் பார்க்க முடிகிறது.
திடீரென்று இந்த இடத்தை விட்டு அகலவேண்டும் என்ற ஏக்கத்தால் நான் பீடிக்கப்படுகிறேன். ஆனால், எங்கே போவது? எனக்குத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. ஒரு வேளை சக்தியின் எந்தச் சிறு மிச்சம் விடப்பட்டிருக்கிறதோ அதை எரித்துச் சுழற்சியை முற்றுப் பெறச் செய்ய விரும்பு கிறேனாக இருக்கலாம். இன்னும் ஒரு தாரைப் பெட்ரோலை வடித்துவிட நான் ஒரு கடைசி ஆயிரம் லயர் நோட்டைத் தோண்டி எடுக்கிறேன்.
ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோல் நிலையத்தில் வந்து நிற்கிறது. அதன் ஓட்டுநர் ஒரு இளம்பெண். அவளுடைய வழிந்தோடும் கூந்தல் சுழற்சிகளில் சுற்றப்பட்டும், கழுத்தை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி ஸ்வெட்டர் மற்றும் ஸ்கார்ஃப் உடன். இந்தச் சிக்கு விழுந்த குவியலில் இருந்த ஒரு சிறிய மூக்கினை உயர்த்தியபடி சொல்கிறாள்: “அதை நிரப்பு.”
நான் அங்கே பெட்ரோல் நிரப்பும் நாஸிலுடன் நின்று கொண்டிருக்கிறேன். நான் நிகழ்த்தும் இயக்கங்கள், நான் பயன்படுத்தும் பொருட்கள், நான் எதிர்பார்க்கும் மீட்பு எனச் சகலமும் கவர்ச்சி யற்றிருக்கும் ஒரு உலகத்தில் குறைந்த பட்சம் அவை எரியும் பொழுது மகிழ்ச்சிகரமான ஞாபகங்களை யாவாது விட்டுச் செல்லட்டும் என்பதற்கு வேண்டி இந்தக் கடைசி ஆக்டேன்களை அவளுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஸ்போர்ட்ஸ் கார் மீது இருக்கும் எரிபொருள் செலுத்தும் மூடியைக் கழற்றுகிறேன். பம்ப்பின் வளைந்த மூக்கினை உள்ளே நுழைத்துப் பித்தானை அழுத்துகிறேன். அந்தப் பிரவாகம் உள்ளே செல்வதை உணர்கையில் இறுதியாக ஒரு தூரத்துச் சுகிப்பின் ஞாபகமொன்றினை அனுபவம் கொள்கிறேன். ஒரு உறவினை உருவாக்கக் கூடிய ஒரு விதமான வீர்ய சக்தி, ஒரு திரவ ஒழுகலோட்டம் எனக்கும் கார் ஸ்டீயரிங் வளையத்தின் முன்னால் அமர்ந்திருக்கும் அந்த அந்நியளுக்கும் இடையே நிகழ்கிறது.
அவள் என்னைப் பார்க்க வேண்டி திரும்புகிறாள். அவளது மூக்குக் கண்ணாடியின் பெரிய சட்டங்களை உயர்த்துகிறாள். அவளுக்கு ஒளிகசியும் ஊடுருவல் மிகுந்த பச்சைக் கண்கள் இருக்கின்றன : “ஆனால் நீங்கள் பெட்ரோல் நிலைய உதவியாளர் இல்லையே... என்ன செய்கிறீர்கள் நீங்கள்... ஏன்?...” என் பக்ககாதலின் அதீதமான செயல்பாடு இது என அவள்புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனித இனம் தனதென்று சொந்தம் கொண்டாடிக் கொள்ளக் கூடிய வெப்பத்தின் கடைசி வெடித்தலில் அவளை நான் இணைக்க விரும்புகிறேன். அந்தச் செயலானது ஒரு காதல் செயலாக இருக்கையில் வன்முறை செயலாகவுமிருக்கும், ஒருவிதமான வன்புணர்ச்சி, பாதாள சக்திகளின் உயிரை அழிக்கும் உக்கிரத் தழுவல்.
அவளைக் கப்சிப் என்று இருக்கச் சொல்லி சைகை செய்கிறேன். காற்றில் என் கையைக் கொண்டு கீழ் நோக்கிச் சுட்டுகிறேன். இந்த மயக்குநிலை எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் துண்டிக்கப்பட்டு விடலாம் என எச்சரிப்பதற்கு என்பது போல. பிறகு நான் ஒரு விதமான வட்டவடிவக் கையசைப்பினைச் செய்கிறேன். பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை என்று சொல்வது போல. மேலும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் என் வழியாகக் கருப்பு நிற புளூட்டோ பாதாள உலகிலிருந்து மேலே வருகிறான், அவள் வழியாக ஒரு சுடர் விடும் பெர்ஸிஃபோன்-ஐ சுமந்து செல்லும்படி. ஏனெனில் அவ்வாறுதான் வாழும் வஸ்துக்களைக் கருணையற்று விழுங்குபவளான பூமி தன்னுடைய சுழற்சியை மீண்டும் தொடங்குகிறாள்.
தனது கூர்மையான, இளமையான முன்பற்களை வெளிக்காட்டியபடி அவள் சிரிக்கிறாள். அவள் தீர்மானமில்லாதவளாக இருக்கிறாள். காலிஃ போர்னியாவில் எண்ணெய்ப்படிவுகளுக்காக மேற் கொள்ளப்பட்ட தேடல் அதில் வாள்வடிவப் பற்களை உடைய புலியும் அடக்கம். கரிய ஏரிக் குழியின் மேற்புறமிருக்கும் நீர்ப்பரப்பால்தான் அந்த மிருகம் கட்டாயமாக ஈர்க்கப்பட்டிருக்கும். அந்த நீர்ப்பரப்பு அதை உறிஞ்சி உட்கொண்டுவிட்டது.
ஆனால் எனக்களிக்கப்பட்ட குறைந்த நேரம் முடிந்துவிட்டது. பெட்ரோல் வருவது நின்று போய் விட்டது. பம்ப் சலனமில்லாதிருக்கிறது. அணைப்புத்துண்டிக்கப்பட்டுவிட்டது. மனித இனத்தின் சுழலும்வாழ்வும் எல்லா இடங்களிலும் சகல என்ஜின்களும் எரிப்பதை நிறுத்திவிட்ட மாதிரியும் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவுகிறது. இந்தப் பூமியின் மேல் ஓடு இந்த நகரங்களை மறுபடி உள்ளிழுத்துக் கொள்ளும் நாளில், மனித இனமாக இருந்த ப்ளாங்க்டன் படிவம் ஆஸ்பால்ட் மற்றும் சிமிண்ட் புவியியல் அடுக்குகளால் மூடப்பட்டுவிடும் ஒரு மில்லியன் வருட காலத்திற்குள் அது எண்ணெய்ப் படிவுகளாகப் பெருகும். யார் பொருட்டு என்று நாம் அறியோம்.
அவளுடைய கண்களுக்குள் நான் பார்க்கிறேன்: அவள் புரிந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப் பொழுதுதான் பீதியடையத் தொடங்கி இருக்கிறாள் போலும். நல்லது. நான் நூறு வரை எண்ணுவேன். மௌனம் தொடர்ந்தால், நான் அவள் கையைப் பற்றுவேன். பிறகு நாங்கள் ஓடத் தொடங்குவோம்.
****
இந்தச் சிறுகதை நம்பர்ஸ் இன் த டார்க் என்ற தொகுதி யிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. நம்பர்ஸ் இன்த டார்க் கால்வினோவின் இறப்புக்குப் பிறகு அவரதுமனைவியான எஸ்தர் கால்வினோவால் சேகரிக்கப் பட்டு வெளியிடப்பட்டது.
Numbers in the Dark and other Stories, Italo Calvino, Translated from the Italian by Tim Parks. Published by Vintage International, New York, 2009
நீங்கள் எழுத வந்ததன் சமூக, அரசியல் பின்னணியைச் சொல்லுங்கள்?
கடும் உடலுழைப்பால் வாழ்வை நடத்தும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சாதியினர் கலந்து வாழும் சூழலில் வளர்ந்தேன். வீட்டிலும் வெளியிலும் எவ்வளவு உழைத்தாலும் பெண்களின் இடம் துயரம் நிறைந்ததாக இருந்தது. படித்த பெண்களாயிருந்தாலும் படிக்காத பெண்களாயிருந்தாலும் அவர்களுக்கு இங்குச் சமூக அந்தஸ்தும் மரியாதையும்இல்லை. நான் படிக்கும் காலத்தில் என் தெருவில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளிக்குப் போகவில்லை. இந்தச் சாதிய, வர்க்க, ஆணாதிக்க முரண்கள் தொந்தரவளித்தன. ஆதிக்கச் சாதி ஒடுக்கப்பட்டசாதிப் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, சாதிய வன்மம், ஆணாத்திக்கக் குரூரம், பெண் மதிப்பு பற்றிய சிந்தனைகள் அநீதியான சமூக அமைப்பு மீதான கோபத்தை வளர்த்தன.
நான் படித்த பள்ளியில் தொண்ணூறு சதம் ஆசிரியர்கள் பெண்கள். பெண் ஆசிரியர்களில் முக்கால்வாசி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந் தவர்கள் மீதமுள்ளவர்கள் பிற்படுத்தப்பட்டவர். அனைவரும் பெற்றோர் பார்த்துக்கொடுத்த ஆண்களைத் திருமணம் செய்தவர்கள். வாங்கும் சம்பளத்தை அப்படியே கட்டிய கணவன் கையில் கொடுத்து விடுவார்கள். சில ஆசிரியர்கள் புருசனிடம்அடி உதைப்பட்டுக் கன்றிய சதையுடன் வரும்காட்சிகள் எனக்கு அதிர்ச்சியளித்தன. ஆசிரியர்கள் என்ற மதிப்புள்ள நிலையைப் பெண்கள் எட்டிய பின்பும் அவர்கள் வாழ்வு எந்த விதத்திலும் அப்போதுமேம்பட்டிருக்கவில்லை. ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் அறிவாசானாய் கம்பீரமாய் மரியாதைக் குரியவராய் தோன்றியவர்கள் குடும்பத்திற்குள் தமதுவிருப்பு வெறுப்புகளைச் சொல்லவும் தன்னிச்சையாய் முடிவெடுக்கவும் முடியாதவர்களாய்ச் சிறுமைப்படும், வன்கொடுமைக்காளாகும் வாழ்வின் நிர்பந்தம் பெண் நிலை குறித்து யோசிக்க வைத்தன.
ஆனால் நான் பிறந்த சமூகத்தில் தொண்ணூத் தொன்பது சதம் பெண்கள் படித்திருக்கவில்லை. குடும்பத்தின் மொத்த வருமானமும் பெண்களிட மிருக்கும், பெண்கள்தான் நல்லது கெட்டது பார்ப்பார்கள். எதையும் துணிந்து சுதந்திரமாக முடிவெடுப்பார்கள். எதற்கும் புருசனிடம் உத்தரவு கேட்டு நிற்க மாட்டார்கள், தகவலாகத்தான் சொல்வார்கள். குடும்பச் சண்டையில் புருசன் ஒரு அடி அடித்தால் திரும்பி இரண்டடி அடித்து நான் உனக்குச் சளைத்தவளில்லை என்று காண்பிக்கும் துணிவு மிக்கவர்கள். கூட்டத்தை வழிநடத்தும் பிடிபோல எம் தாய்மார்கள் கம்பீரமானவர்கள். மீனவச்சமூகப் பெண்களின் தலைமைத்துவப் பண்பு எனக்குப்பெண் ஆளுமை, பெண்ணுரிமை குறித்த தெளிவானபார்வையையும் புரிதலையும் கொடுத்தது. ஒரு பெண் எந்நிலையிலிருந்தாலும் சமூகத்துக்கும் குடும்பத்துக் கும் ஆணுக்கும் அஞ்சாமல் தன்னிச்சையாக, துணிவாக முடிவெடுக்க வேண்டும். பெண் தலைவியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமென்பது எனது சிறு வயது தீர்மானம். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் ஔவையின் கதையை சொன்ன போது ஔவையை எனக்குள் தேடத் தொடங்கினேன்.
தமிழ்க் கவிதையை ஆணாதிக்கத்தின் அதிகாரப் பீடமாகக் கட்டிக் காத்தார்கள் கவிஞர்கள். அதை யெல்லாம் உடைத்துக்கொண்டு பெண்ணிய எழுத்துதீவிரமடைந்து இன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, பெண்கள் தீவிரமாக 2000-க்குப் பிறகு எழுத வந்தபோது பல எதிர்ப்புகள் வந்தன.அவற்றையெல்லாம் வென்றெடுத்துப் பெண் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அதில் உங்களின் ஒருங்கிணைப்பு முதன்மையானது. அதைக் குறித்துச் சொல்லுங்கள்.
மரபில் ஒடுங்கி, ஆண்மொழிக்குள் அடங்கி எழுதப் படும் பெண் எழுத்துக்களை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகள் பெண் மொழி, பெண் அடையாளம், ஆணாதிக்க எதிர்ப்பு என நேரடியாகப் பெண்ணிய அரசியல் வயப்பட்ட எழுத்துகள் புதிதாக உருவான போது இழிவுபடுத்தவும், இல்லா மலாக்கவும் முயன்றார்கள். 2000-க்கு பிறகு வெளியான பெண்ணெழுத்துகள் ஆணாதிக்க விதிகளை மீறி விட்டதென்ற வன்மம் அவர்களிடம் பல்வேறு வடிவில் வெளிப்பட்டது. நேரடியான வசைகள், கூட்டங்களில் இழிவுபடுத்திப் பேசுதல், ஊடகங்களில் பெண்ணியம் பற்றிய வெறுப்பைப் பரப்புதல், பெண் எழுத்து இப்படி இருக்கக்கூடாது என்றும் எப்படி இருக்கவேண்டும் என்றும் விளக்கமளித்தல், பெண் படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்வை இழிவுபடுத்தி எழுதியும் பேசியும் உளவியல் தாக்குதல் தொடுத்தல் என பல வன்முறைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். திரைத்துறையில் இருந்து சிறு பத்திரிகை வரை பெண்ணிய எதிர்ப்பாளர்கள்பல்வேறு வடிவில் செயல்பட்டார்கள். இவற்றை எதிர்க்கவும், மறுப்புகள் எழுதவும், பெண் மொழிக்கான இடத்தை உருவாக்கவும், நேரடியான தாக்குதல் களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என நான் இயக்கத்தை, குழுக்களை உருவாக்கிச் செயல்பட்டிருக்கிறேன். எதிர்ப்புக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பெண் கவிஞர்கள் படைப்பாளிகளின் சந்திப்புகள் எனப் பெண் வெளிகளை உருவாக்கியபொழுது பெண்ணெழுத்து பற்றிப் பேசவும் எழுதவும் வலிமையான களம் உருவாக முடிந்தது. இயக்கம், பெண்ணியப் பதிப்பகம், பெண்ணிய இதழ் என அணங்கு சிறிய அளவில் செயல்பட்டாலும் பெண்ணெழுத்திலும் பெண்ணிய அரசியலிலும் அது வலிமையான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உருவாகி வந்த புதியவர்கள், இளையவர்கள் தடைகளை மீறி எழுதவும், தற்பொழுது பரவலாகப்பேசப்படும் புதிய பெண்ணிய, பெண் அடையாளஎதிர்ப்புக் கருத்தாடல்கள் உருவாகவும் நான் முன்னெடுத்த இயக்க - குழுச் செயல்பாடுகள் பெரும்பங்காற்றியுள்ளன. இவை கடந்த இருபது ஆண்டுதமிழிலக்கிய வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்கமுடியாத அளவுக்கு நேரடியாகப் பதிவாகியுமுள்ளன. பெண்ணெழுதுதலில் இருந்த மனத்தடைகளைத் தகர்த்து அனைத்தையும் எழுது வதற்கான சுதந்திர மொழி வெளியை இனிவரும் பெண்களுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது எனத் தற்போதுள்ள வாசகர்கள் சொல்லும்போது எனது எழுத்தின் - இயக்கத்தின் செயல்பாட்டின் பயன் என அதனையே உணர்கிறேன்.
உங்கள் கவிதை மொழி சிடுக்கான மொழி கிடையாது. தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து இன்று வரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றி வருகின்றீர்கள். துயரங்களையும், விடுதலைகளை யும் வெகு இயல்பாக்குவதும் அவைகளை இயற்கையின்பால் மடை மாற்றம் செய்வதாயும் உங்களது கவிதைகளை வரையறை செய்யலாம். மொழியிலும், பாடுபொருளிலும் ஒருவித எடையற்ற தன்மையைப் பின்பற்றுவதே நவீன கவிதைகளின் தற்காலப் போக்கு என்ற நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. அந்த வகையில் தாங்கள் எழுத வந்த காலகட்டத்திலிருந்து இன்றைக்குள்ள கவிதைகள் என்னென்ன வகை யான மாற்றங்களை அடைந்துள்ளதாக நினைக் கின்றீர்கள் ?
சிடுக்கான கவிதைமொழி வாசகரிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் மொழியிலிருந்தும் சற்று அந்நிய மாய்த் தள்ளி நிற்கிறது. கவிதையென்பது மொழியின் புதிர்விளையாட்டல்ல. அகழியில் விழுந்து நீந்திக் கரையேறும் சிரமம் எதற்கு. மொழி பொழிந்து அதன் போக்கில் பாதையை அடையவேண்டும்.
எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை ஒரே வகையான மொழி வெளிப்பாட்டு முறையைப் பின்பற்றுகிறேன் என்பது தவறான பார்வை. எனது கவிதைகளின் மொழி பன்மையானது. ‘மனக்கடல், நிறமாறும் திரைச் சீலைகள், கொக்கைக் கவனித்துக்கொண்டேயிரு’ போன்றவை உருவகக் கவிதைகள், ‘யானைக்கதை, வானத்தைக் கோர்ப்பவள், கன்யாக்குமரி, விஸ்வரூபம், பகலை மேய்ப்பவன், நெடுஞ்சாலை நடனம், கண்ணாடிப் பூனைகள், ஊஞ்சல்’ வகைக் கவிதைகளில் மொழியில் மாயத் தளங்களை உருவாக்கியிருப்பேன். ‘பேய்மொழி, விலக்கப்பட்ட குருதி, வேம்பாயி’ தொன்மக் கவிதை மொழியும் ‘வார்த்தைகளின் பேரரசி, புலி சேர்ந்து போகிய’ செம்மொழியையும் ‘காதல் கடிதம், என் குழந்தை பல வாரங்களாகப் பேசவில்லை, ஒட்டகங்கள் குதிரைகள் ஒரு மீன்கூடை, அம்மா ஒரு தொடுவானம், அமராவதி லைலா ஜுலியட்டின் காதல் கொடி, கடலொரு அசையும் மாமலர்’கவிதைகள் கதைச்சொல்லல் முறையில் அமைந்தவை. பெண்மொழி, விடுதலை அரசியல், சூழலியல் என நுட்பமான மொழியில் இந்நூற்றாண்டின் பேரரசியலை நுண்ணரசியலை அசைத்துப் பார்க்கும் பன்மொழிக் குரல்களுடையவை எனது கவிதைகள். பெண்ணரசியல் வாசிப்பில் ஒரு வகையிலும் அரசியலற்ற பொது வாசிப்பில் வேறு ஒரு வகையிலும் அவை அர்த்தமடையக் கூடியவை.
தன்னிலைக் குரலில் அகவயமாய் நிகழ்ந்த கவிதை மொழி தற்பொழுது சமூக மொழிக்குள் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. சுய கற்பனை போதை, அபத்தக்காதல், கழிவிரக்கம் போன்றவற்றிலிருந்து வெளியேறி இருக்கிறது ஒரு பகுதி கவிதை. தமிழ் கவிதையின் வெளியை விரிவடையச் செய்யும் இம்மாற்றத்தை மிக்க மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்.
பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல்குரலான உங்கள் கவிதைகளில் பிரச்சாரமாக மட்டும் போய்விடாதவாறு தொழிற்படும் உங்களது கவிதை மொழியை நீங்கள் எங்கிருந்து பெற்றதாக கருதுகிறீர்கள்?
“வீடுகளாலான இனம், நரமாமிசர், நுகர் பொருள், அவன், ஆயிரத்து இரு இரவுகள், தாயம்” இவ்வகைக் கவிதைகள் பெண் மீதான ஒடுக்குமுறையின் வடிவங்களை மொழிப்படுத்துபவை. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மொழியில் நம் ஆன்மாவை துளைக்கும் கவிதைகள். இம்மொழியை நான் தீர்மானிப்பதில்லை திட்டமிடுவதில்லை. கவிதையின் கரு அல்லது அக்கணம் அல்லது உள்ளுணர்வு மொழிக்குள் வினையாற்றிப் பல காட்சிகளாக விரிந்துபடிமமாகவோ, உவமையாகவோ அல்லது உரு மறைத்தோ கவிதைக்குள் தன்னைத்தானே எழுதிக் கடக்கிறது. கவிதைச் சொல்லி மொழி வினையை அவதானிப்பது மட்டுமே செய்ய முடியும். படைப் பாக்கம் முடிந்த பின்புதான் அதன் மீதான ஓர்மை வரும். கவிதைக்குள் கவிஞர் இடையீடு செய்யும் போது அது பிரச்சாரமாக மாறிவிடும்.
பள்ளிச் சிறுமிகள் போல் புதுவெள்ளத்தில் குழுமிக் குழுமிக் குசுகுசுக்கும் மீன்கள் என்ற உங்களது உவமையில் அந்தச் சிறுமிகளில் நீங்களுமே ஒரு சிறுமி. வானத்தில் மேகங்களாக மேய்ந்து கொண்டிருக்கக்கூடிய வரையாட்டின் கழுத்தில் குன்று போன்ற பெரிய மலையைக் கட்டியது யாரென்று யோசித்தபடியே தொடர்வண்டியில் தூங்கிப்போன சிறுமியும் நீங்கள்தான். ஒருசிறுமியாக மாறிவிடமாட்டோமா என்ற ஏக்கம் உங்கள் கவிதை முழுவதும் படர்ந்திருக்கிறது. சுற்றியுள்ள இரைச்சல்களிலிருந்தும், பெரியாள் தனம் என்றவொன்றை நிரூபிக்க முயலும் வீண் ஜம்பங்களிலிருந்தும் விடுபடவேண்டுமென்ற உங்களது மனவோட்டம் புலனாகிறது. இந்தக்குழந்தை மனநிலைதான் உங்களது இயல்பு மனநிலையா? அல்லது எல்லாவற்றிலிருந்தும் விடுபடவேண்டி இப்படியொன்றை தரித்துக் கொள்கிறீர்களா?
எதற்கும் எவற்றுக்கும் முகம்கொடுப்பதே எனதுஇயல்பு. எதிலிருந்தும் எப்போதும் விடுபட முனைந்த தில்லை.
ஊரில் கர்வத்துடன் வலம் வரும் மருத்துவச்சி போல மொழியின் மருத்துவச்சிக்கும் கர்வமுண்டு. என் காலப் பெண்களுக்கு எட்டாத, மறுக்கப்பட்ட கால வெளிகளில் பயணித்து நுழைந்து வெளிவந்தவள் நான். எவ்வளவுதான் குடும்பச் சுமைகள் பொறுப்புகள் அழுத்தினாலும் கற்பனைகளும் கனவுகளுமாய் எனது வானம் எனது பூமியெனத் துள்ளித் திரிந்திருக்கிறேன். இக்காலக் குழந்தைகளுக்கு வாய்க்கப் பெறாத சுதந்திரமான மகிழ்வான காலத்தை, காட்சி இன்பத்தை மொழியின் நினைவுப் பாதையில் அசைபோடும் கவிதைகள் அவை. அமைதி யாகவும் இருப்பேன், கூச்சலிட்டும் குதிப்பேன், பாம்பு வாயில் மாட்டாத தவளை மாதிரி. புறங்கை உள்ளங்கை பிரிக்க முடியுமா, முதிர்ச்சியும் குழந்தைமையும் அப்படித்தான்.
தங்கள் உடல் மீதான புனிதங்களைக் கட்டுடைத்தல் என்பது பெண்ணியக் கவிதைகளின் முதன்மை அரசியல் செயல்பாடு. அவ்விதத்தில் பெண்ணுடல் பற்றிய ஆண்மொழியிலிருந்து இக்கவிதைகள் எவ்வாறு வேறுபட்டுத் தம் தனித்துவத்தை அமைத்துக்கொள்கிறது ?
தமிழில் எழுத்து, வார்த்தை, சொல்லமைப்பு, மொழிக் கட்டமைப்பு, மொழிக் குறியமைப்பு, மொழிஉருவாக்கம், மொழிந்துரைப்பு அனைத்தும் ஆண் ஆதிக்கத்தை உற்பத்தி செய்யும் சமூக இயந்திரங்களாகச் செயல்படுகின்றன. இம்மொழி புனிதம்- புனிதமற்றமவை என உடல்களை வகைப்படுத்தி மேன்மையானவர் கீழ்மையானவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனப் பிரிக்கிறது. பிறகு ஒருவர் மற்றவர் மேல் அல்லது ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தின் மேல் மேலாதிக்கம் செய்யும் அதிகாரத்தையளிக்கிறது. பெண் விடுதலையை மொழி விடுதலையிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது. ஆண்மைய மொழி யைச் சிதைத்துப் புனித-புனிதமின்மை என்ற குறி அமைப்புகளைக் கட்டுடைத்து எனக்கான மொழியை மிகக் காத்திரமாக உருவாக்கியிருக்கிறேன். பெண் வெறுப்பு மொழியரசியலின் அதிகாரத்தைக் கட்டுடைத்து மொழிக்குள் உயர்நிலையாக்கப்பட்ட ஆண் ஆராதனைகளையும் ஆண் துதிகளையும் ஆண் பஜனைகளையும் ஆண்மையையும் மொழிவெளி யிலிருந்து நீக்கிப் பெண் மொழியுடலை உருவாக்கும் போது அவை தனித்துவமானவைகளாய் நிறுவிக் கொள்கின்றன.
கர்ப்பம் தரிக்கின்ற பெண் உடலமைப்பே பெண்ணை இரண்டாம் பாலினமாகக் கருதுவதற்கான எளிய உண்மையாக இருந்து வந்தாலும் பெண் உடலின் இந்த அம்சம் தான் நம் கலாச்சாரத்தில் புனிதமான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. உங்களது படைப்பிலும் தாய்மையின் பரிபூரணத்துவத்தைக் கொண்டாட்ட மனநிலையில் அணுகியுள்ளதை அறிய முடிகிறது. இந்நிலையில் கர்ப்பம் தரித்தல், கர்ப்பப்பையினைப் புறக் கணித்தல் என்ற இருவேறான நிலைப்பாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
தாய்மையைப் புனிதமாகப் பிம்பப்படுத்துவது, தாய்மையைக் கொண்டாட்டமாகக் காட்சிப்படுத்துவது அனைத்தும் சமூக பாவனை, அது ஒரு மாயை. வயிற்றில் வளரும் சிசு பெண்ணெனக் குறிகேட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணிகள் உண்டு. கருவில் அழிக்கும் வசதி வந்த பின் தாய்மார்களாவது தப்பினர். சாதிமாறிக் காதலித்ததற்காக எத்தனை தலித் கர்ப்பிணிகள் மிகக்கொடூரமாகச் சாதியக்கொலை செய்யப்பட்டார்கள்.
பெண் உடல் மீதான அதிகாரத்தை இன்னும் இந்தச் சமூகமும் குடும்பமும் தான் வைத்திருக்கிறது. பெண்ணின் அசைவுகள் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிக்கப்படுகிறது. அவள் ஏன் கருத்தரிக்கவில்லை, ஏன் கருத்தரித்தாள், யாருக்குக் கர்ப்பமானாள், எந்தக் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் தந்தை பெயர் எவருடையது என நிறைய விதிகளும் தண்டனைகளும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருவைச் சுமப்பது அவள், சாவா வாழ்வா எனப் பெற்றெடுப்பது அவள், நோய் நொடி காத்து ஊட்டி வளர்த்தெடுப்பது அவள். ஆனால் சமூகம் சொல்கிறது குழந்தையின் மீது தாய்க்கு உரிமையில்லை. தாய்மை புனிதமென்ற தோற்றத்தை உருவாக்கிப் பெண்ணை இரண்டாம் இடத்தில் அடக்கி வைத்திருக்கிறது சமூகம். பெண்கள் மீதான சமூக அதிகாரத்தை உடைத்து தாய்மையின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டாமா. தாய்மையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் கவிதைகள் என்னுடையவை.
பெண் உற்பத்தி செய்த பொருளை ஆண் கைப்பற்றி தனது பெயரை எழுதி ஒட்டி தனதாக்கிக் கொள்வது பெண்ணை நிர்மூலமாக்கும் அரசியல். பெண் படைத்தளிக்கும் உயிர் மீதான அதிகாரம் தாய்க்கு மட்டுமே உரியது.
பெண் உடல் பெண்ணிற்கு உரிய வெளி. கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆணின் அத்துமீறல் பெண் உடலில் நிகழ்வதற்கு எந்தச் சமாதானம் செய்தாலும் அத்துமீறலை விடச் செய்யப்படுகின்ற சமாதானம் தான் மிகப்பெரிய அத்துமீறலாகும். பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படுகின்ற கட்டுப் பாடற்ற வன்முறைக்கு எதிராக இங்கே என்னதான் தீர்வுள்ளது. ஆண் உலகத்திலிருந்து பெண் முழுக்கவே ஒதுங்கிட வேண்டுமா...? அல்லது ஓரினச் சேர்க்கை மாதிரியான பாலியல் சுதந்திரத்தைக் கைக்கொள்ளலாமா...?
பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுப்படுத்த முடியாத உச்சத்தை எட்டிவிட்டன. ஓரினச் சேர்க்கை எல்லாருடைய தேர்வாகவும் திணிக்க முடியாது. சுயபால் விருப்பமுடைய இணைகள் மட்டுமே இணைய முடியும். அனைத்து பெண்களுக்கும் இவை சாத்தியமில்லை. ‘ப்ரீ வுமன் - நோ மேன்’ உண்மையில் தொடங்கலாம். ‘கென்யா உமோஜா’ கிராமத்தை போலப் பெண்கள் மட்டுமே வாழும் சமூகத்தை உருவாக்கும் தேவை அவசியமாகிறது.
‘திருகி எறிய முடியாத முலைகள்’ என்று ஒரு இடத்தில் சோக நாடகமாகவும், ‘இன்றெனக்கு ஒரு மகள் பிறந்தாள்; அவளுக்குப் பிறப்புறுப் பில்லை’ என்று இன்னொரு இடத்தில் ஆழ்மனப் படிமமாகவும், ‘காளிகளின் பிறப்புறுப்பில் சொருகப்பட்ட கம்பிகளை ஆயுதமாய் வடிக்கும் எங்கள் உலைக்கூடங்கள்’ என ஆணினத்திற்கு விடும் சவாலாகவும் வேறோர் இடத்தில் கூறு கின்றீர்கள். இறுதியாக, ஒரு பெண், பெண்உடலை எவ்வாறுதான் பார்க்க விழைகின்றார். அந்தந்தக் கண நேர மனநிலை, சூழமைவு தான் பெண்ணுடல் பற்றிய பெண் சிந்தையைத் தீர்மானிக்கின்றதா? அல்லது பெண்ணுடல் என்பது பெண்ணியத்திற்கான ஆயுதமாக உபயோகப் படுத்தப்படுகிறதா? பெண்ணுடல் வழியாகப் பெண் முன்வைக்கும் தீர்க்கமான கருத்தாக்கம்தான் என்ன?
இக்கவிதைகள் அனைத்தும் ரியாக்டிவ் பொயட்ரி அதாவது எதிர்வினைக் கவிதைகள். ஒரு சமூகத்தில் இப்படியான வலி மிகுந்த துன்பியல் கவிதைகள் உருவாகக் கூடாது.
ஒரு பெண் தன்னுடலை மண்ணாகப் பார்க்கட்டும் மரமாகப் பார்க்கட்டும் அல்லது சதையாகவோ சருகாகவோ பார்க்கட்டும் அது பெண்ணுக்குரிய பார்வை. பெண் என்பவள் எங்கள் உடமை என்று சொல்ல நீங்கள் யார். பெண் மீது ஆதிக்கம் செலுத்த, அதிகாரம் செய்ய வன்முறைக்குள்ளாக்க சமூகம் ஏன் அனுமதிக்கிறது என்ற மைய முரணி லிருந்துதான் பெண்ணியம் உருவாகிறது. பெண்ணியம் வன்முறையைத் தூண்டுகிறது என்றால்தூண்டுகிறோம். இதுவரை சமூகத்துக்கு ஒப்புக் கொடுத்து வாழ்ந்த பெண்களுக்கு வலி, வேதனை, துன்பம், வன்முறையைத் தவிர என்ன தந்திருக்கிறது இந்தச் சமூகம். ஆண்குறிகளைக் கொய்யும் நீலிகள் தோன்றத்தான் வேண்டும், ஆண்குறி மைய முற்றதிகாரத்தை வேரறுக்க.
உங்களின் கவிதைகள் ஆண்மைய மொழியைத் தலைகீழாக்கம் செய்து புதிய மொழிவெளியைக் கட்டமைக்கின்றன. அந்தவகையில் இயற்கை, சூழல், சமூக அரசியல் கூறுகள் இணைகின்றன கவிதைகளில். இந்நிலையில் கவிதைக்கு அரசியல் தேவையில்லை என்ற புனிதவாதக் கருத்து இன்னும் தொடர்வதைப் பார்க்கிறோம். இதன் நுண்ணரசியலை எவ்வாறு அணுகுவது?
ஆணாதிக்கக் கட்டமைப்பை பாதுகாக்கும், சேவை செய்யும் மொழி விடுதலையைப் பேசும் தகுதி இழக்கிறது. பால் சமத்துவ விடுதலை உணர்வு, பாலின வெறுப்பு மொழியைக் கட்டுடைத்து ஒடுக்கப் பட்ட விளிம்புநிலை உடல்களை மொழிச் சிறையி லிருந்து விடுவிக்க விழைகிறது. மொழியால் மதிப் பூட்டப்பட்ட, உயர்நிலையாக்கப்பட்ட ஆண்மைய கருத்தமைவு, குறியமைப்பின் பேரரசியல், நுண் அரசியலைக் கட்டுடைத்து மொழியால் கீழாக்கம் செய்யப்பட்ட கருத்தமைவுகள் குறியமைவுகளிலிருந்து பெண்ணுடலை விடுவிக்கும்போது பெண்ணியப் புத்தாக்கக் கவிதைகளாக அவை மொழியில் வினையாற்றுகின்றன. மொழியில் ஆண் உளவியலை அடித்து நொறுக்கும் பெண்ணிய நுண்ணரசியல் மொழியில் சில கவிதைகள் பகடியாக உருமாறுகின்றன. உதாரணமாகப் பெண்ணென்னும் நினைவு, ஆயிரத்து இரு இரவுகள், கோழிக் குழம்புக்கான குறிப்புகள் போன்ற கவிதைகளில் பெண் கூற்றில் பொங்கும் ஏளன நகைப்பை வாசகருக்குச் சரியாகக் கடத்தியிருப்பேன்.
கலை கலைக்காக என்று ஒரு குழு அரசியல் உருவானது. அது மொழி ரசனை வயப்பட்டதென்றது. எங்களுக்கு அரசியலில்லை மொழியின் அழகியல், அனுபவத்தின் அழகியல், மொழியின் புதுமை மட்டும்தான் நோக்கம் என்றனர். உலகில் அரசியல்அற்ற, கருத்தியல் சார்பற்ற படைப்பு ஒன்று இருக்க முடியுமா? “தமிழ் தான் என் மூச்சு அதைப் பிறர் மேல் விடமாட்டேன்” என்பது இனவெறி மிகுந்த வாசகம். ஒரு நிலத்தின் மீது, ஒரு இனத்தின் மீதான அந்நிய மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்திதான் என் மூச்சு அதைபிறர் மேல் விடமாட்டேன் என்றுதானே அக்காலகட்ட அரசியலைப் பிரதிபலித்திருக்க வேண்டும்.தமிழ் பிற மொழி மீது ஆதிக்கம் செய்யப் போய் கவிஞர் தார்மீகக் கோபம் கொண்டு பொங்கிஎழுந்தது போல் பிழையான வரலாற்றைப் பதிய வைக்கும் அரசியல் யாருக்கானது. கலை கலைக்காக என்ற பிரச்சாரம் எவ்வளவு போலியானது, பொய் யானது பக்கச் சார்பானது என்பது அம்பலமாகியது. படைப்பாக்க மொழியை எந்தக் குழுவும் நாட்டாமை செய்ய முடியாதென அப்போதே இன்குலாப் போன்றோர் பதிலடி தந்துள்ளனர்.
ஆண் மைய மொழிக் கலாச்சாரத்தின் புளிப்புஏறிய தன்மையின் சீர்மையைக் கலைத்துவிட்டுப் பெண் மொழி என்ற புதிய சொற்கூட்டை அர்த்தவியல் சார்ந்தும், வடிவவியல் சார்ந்தும் உரக்கச் சொல்லி பதிய வைப்பவை யாகவே உங்களது இலக்கியச் செயற்பாட்டை வகுக்கலாம். அந்த வகையில் பெண் மொழி என்ற கருத்தியல் தளம் பற்றிப் பெண் படைப்பாளர்களுக்குள்ளாகவே ஒரு ஓர்மைஉள்ளதாகத் தோன்றவில்லையே... பெண் மொழியின் இந்த பன்முகத்தன்மை பெண்ணிய நிலைப்பாட்டை எங்ஙனம் கூர்மைப்படுத்த உதவுகின்றது?
பெண் மொழி, பெண்ணியரசியல் கூர்மைப்படும் வழிகளைப் பிரபல பதிப்பகங்களும் பிரபல ஊடகவெளியும் கபளிகரம் செய்து வருகிறது. முன்னோடிகள் ரத்தம் சிந்திய தியாகத்தில் விளைந்த பெண் விடுதலையரசியல் நிழல் வேண்டும், கனி வேண்டும் என்பது வரை சரிதான். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கத்தானே போராடினர், இதை அனுபவிக்கட்டும். ஒற்றை மரத்தை தோப்பாக்க வேண்டாம் வேரை வெட்டாமல் இருக்கலாம் அல்லவா. மீடூ-க்கும் குரல் கொடுப்பது, மீடூ வழக்கில் சிறைச் செல்ல வேண்டிய குற்றவாளிகளையும் கொண் டாடுவது சந்தர்ப்பவாத அரசியல் இல்லையா. நூல் அச்சாக, விளம்பரத்துக்காக, விருதுக்காக அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகள், லாபியிஸ்டுகள் சுயமரியாதையற்றவர்கள் எல்லா தளங்களிலும் இருப் பார்கள் அது இங்கே அதிகம் என்பதால் அடுத்தத் தலைமுறையும் பாதிக்கிறது.
ஆணின் சகல அதிகாரங்களையும் கேள்விக்கு உள்ளாக்கும் உங்கள் கவிதைகளில் ஆண்உடலுக்கான தவிப்பு தவிர்க்கப்படுவதன் மூலம்அவை ஆணை மறுத்தொதுக்கும் லெஸ்பியன் அரசியலை முன்வைப்பதாகப் புரிந்துகொள்ளலாம் எனத் தோன்றுகிறது. இது பற்றித் தங்கள் கருத்து?
ஏற்கனவே மூன்றில் ஒரு பெண் ஆணால் கைவிடப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்கள்தன்னிச்சையாக வாழ்ந்து கொண்டுதான் இருக் கிறார்கள். அவர்களுக்குள் ஆணுடலுக்கான தவிப்புஇருக்கிறதா என்பது கேள்விக்குரியது. பெரும் பான்மையான பெண்கள் தம் வாழ்வில் இருந்து ஆண் ஒழிந்தது நிம்மதியென நினைப்பவர்கள். ஆனால் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் சமூகச் சூழலும் மரபுத் தளைகளும் தடுக்கின்றன. சமூகத்தில் ஏசெக்சுவல் பெண்களுமிருக்கிறார்கள். பாலியல் பகிர்வு இல்லாமல் பெண்கள் குழுவாய் வாழ்வதும் கூட்டமாய் வாழ்வதும் சாத்தியமே. பொதுச் சமூகப் பொருளாதார அரசியல் அதிகாரப் புறக்கணிப்புக்கும் முகம் கொடுத்தபடி திருநங்கைகள் தங்களுக்குள் கூட்டாக ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் உதவியபடி சமூகமாய் வாழ்கிறார்கள். பெண்ணுலகில் ஆண் தவிர்ப்பு என்பது லெஸ்பியன் அரசியலை நோக்கிய நகர்வாக மட்டுமே குறுக்க முடியாது. ஆனால், பெண்கள் சமூகத்தில் லெஸ்பியனாக வாழ்வதும் ஒரு பகுதி, அது சிலரின் தேர்வாக இருக்க முடியும்.
ஆண் பெண்ணைக் காலங்காலமாகக் காத்து வருகிறான் என்ற நோய் பீடிக்கப்பட்ட சிந்தனையை உங்களது கவிதைகள் வாயிலாக தகர்த்து வரக் கூடியவர் நீங்கள். உங்களிடம் விபரீதமான ஒருகேள்வி. என்றைக்காவது ஒருநாள் ஒரு ஆண் மனநிலையில் வாழ்ந்துள்ளீர்களா... அதாவது நான் ஒரு ஆண் என்பது மாதிரி. அது உங்களால் முடியுமா? முன்னுதாரண ஆண் என்பது போல ஒரு கற்பனை வடிவம் கொடுக்கலாமே. பெண் எதிர்பார்க்கும் ஆண் அங்குதானே சாத்தியமாகும். என்ன சொல்கிறீர்கள்?
ஆண் உலகின் மையமென்று நம்புவது தீவிர மனநோய் பிரச்சினை. ஒரு எறும்பாக வாழ்ந்தாலும் பெண் எறும்பாக வாழ வேண்டும். பெண் படைப்பின் உச்சம், பெண் உலகின் மையம். ஆண்மையைத் துறந்து அனைவரும் பெண்ணாக வாழ முயல வேண்டும். ஆனால் இங்கு ஆணுக்கான எல்லா அதிகாரத்தையும் அனுபவித்தபடி பெண் பெயரடையாளத்தையும் புனைப்பெயராகத் திருடிக்கொள்கிறார்கள். ஆணாதிக்கத் திமிருடன் வாழ்பவ னெல்லாம் நான் தாயுமானவன், பெண்ணாலானவன் என்று படைப்புகளில் போலி முற்போக்கு பேசும் கிரிமினலாக இருக்கிறான்.
நான் பூரண விடுதலையின் குறியீடாக, சுதந்திர மானவளாக இருக்க எந்த அதிகார மைய நிழலிலும் நிற்பதில்லை. நான் ஏன் ஆண் என்னும் குறை உருவத்தை ஏற்கவேண்டும். ஆணினால் ஒரு உயிரைச் சுமந்து இந்த உலகுக்கு அளிக்க முடியுமா. ஆண் உயிரும் அடையாளமும் பெண் கொடுத்தது.
ஆண் உயிரணுக்கள் இன்றி உயிரியல் தொடர்ச்சியைப் பெண் மட்டுமே தொடர முடியும்என்பதற்கு இயற்கையில் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதை அசெக்சுவல் இனப்பெருக்கம் Parthenogenetic Reproduction என்று அழைக்கிறார்கள். வரிக்குதிரை சுறா, சுத்தித்தலை சுறா, நட்சத்திர மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களும் கொமோடோ ட்ராகன், ஒரு வகைப் பல்லியினம், பிலிப்பைன்ஸ் காடுகளில் வாழும் மலைப்பாம்புகள் போன்ற நிலத்தில் வாழும் உயிரினங்களும் ஆண் இல்லாத காலங்களில் இணைச் சேர்ப்பு இன்றி முழுக்க முழுக்கப் பெண் டிஎன்ஏ மரபணுவுடன் குட்டிகள் ஈனுகின்றன. பூச்சி, புழு, பூஞ்சையினங்களிலும் இவ்வகையுண்டு. உலகில் ஆணினம் பெண்ணினத்திற்கு விளையாட்டுப் பொம்மைகள். இந்த விளையாட்டுப் பொம்மைகள் ஆயுதம் தாங்கிய படையாகி பெண்ணினத்தை ஒடுக்கியதன் வழி மனிதகுல வரலாறு தலைகீழாக மாறியது.
விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது இன்றைக்குப் பலருக்கு வணிகமாகவும் பேஷனாக வும் இருக்கிறது. அல்லது அப்படிப் பேசுவதன்மூலம் பொதுவெளியில் தங்களை யோக்கிய வானர்களாக அடையாளப்படுத்திக் கொள் கிறார்கள். ஆனால் நடைமுறையில் எதுவுமில்லை. அதாவது ஒருவர் சாதி, பாலின ஆதிக்க நீக்கத்தைத் தன்னுள் செய்துகொள்ளாது வெறுமனே பெண் விடுதலை, தலித் விடுதலை, பால்புதுமையர் விடுதலை என விளிம்புநிலை அரசியல் பேசுவது என்பது ஒரு வணிகச் செயல்பாடுதானே. இத்தகைய போக்கை இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் மத்தியில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என இரு நிலையிலும் செயல்படுபவர் எனும் நிலையில் எவ்வாறு இதைப் பார்க்கிறீர்கள்?
பிழைப்புவாதிகள் எல்லாக் குழுக்களிலும் இருப் பார்கள். அவர்கள் ஆட்சி அரசியல், ஊடகம் போன்ற அதிகார மையங்களின் தொடர்பிலிருப்பார்கள். இந்தவிசைப்பலகை போராளிகள் தகவல்களையும் ஆவணங் களையும் களவாண்டு ஊடகங்களில் பரபரப்பு உருவாக்குவார்கள். இப்போலிப் போராளிகள் அனைத்துவிடுதலை களத்திலும் எங்காவது வந்து நின்று விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் சிலஆவணங்களை உருவாக்கி ஆதாரமாக வைத்துக்கொள்வார்கள். நிஜ களப் போராளிகளின் இடத்தைஊடக அதிகார அரசியல் ஆதரவுடன் பொது வெளியில் தட்டிப் பறித்துக்கொள்வார்கள். சிலர் பாதிக்கப்பட்ட, போராளி பிம்பத்தை உருவாக்கி உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையில் நிதிக் கொள்ளையடிப்பார்கள். அடிப்படைச் சமூக அரசியல்மாற்றமே குறிக்கோள் என்பதால், சமூகப் பணிச் சுமையில் இதையெல்லாம் களையெடுப்பது தங்கள் பணியல்ல எனக் களப்போராளிகள் பொருட்படுத்தாமல் கடந்து விடுகின்றோம்.
உங்களின் கவிதைகள் பெண்விடுதலை அரசியலை பிற எல்லா விளிம்பின் விடுதலையுடன் இணைத்து முன்வைக்கும் வகையில் தனித்துவமாக உள்ளன. இந்நிலையில், பெண்ணிய அரசியல் தலித்தியம், பழங்குடி, சூழலியல், பால்புதுமையர் எனப் பிற விளிம்புநிலை அரசியல்களுடன் இணைந்து செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் என்ன?
LGBTQ+ வானவில் குடை போல அனைத்து விடுதலையரசியலும் ஒரு சங்கிலியில் இணைய வேண்டுமென்பது கனவுப் பெருந்திட்டம். ஆனால் சூழலியல் பெரும்பாலும் தொண்டு நிறுவனங்களின் பிடிக்குள் உள்ளது. தொண்ணூறு சதம் விளிம்புநிலை விடுதலையரசியல் அமைப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றப் போதுமான கருத்தியல் பலத்துடன் இயங்குவதில்லை. தலித்தியத்தைப் பெண்ணியத்தை, பால்புதுமையர் அரசியலை உள்வாங்காத அல்லது ஏற்காத பிற்போக்குநிலை தொடர்கிறது. குறிப்பாகச் சூழலியல் அரசியல் சாதியைக் கடந்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்ஸ் பேசும் நாம் தான் பிற விளிம்புநிலை அரசியலை இணைத்துப் பேச குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜென்டர் பாலிடிக்சில் இயங்குபவர்கள் சுயநல மீடியேட்டர்களால் வழிநடத்தப்படும் அபாயமும் சூழ்ந்திருக்கிறது. இந்த மீடியேட்டர்களை மிக எளிதாக அடையாளம் காணலாம். வெளிநாட்டு உள்நாட்டு நிதி கிடைக்கிறது என்பதற்காகவே இவர்கள் திடீரென்று தலித்தியம் பெண்ணியம் பால்புதுமையர் பிரச்சினையெல்லாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள். ஒரு நிறுவனத்தைக் கூட உருவாக்குவார்கள். ஒன்றுக்கு நிதி நின்றதும் நிதிக் கிடைக்கும் அடுத்த விசயத்தைக் கையிலெடுப்பர். படைப்பு வழியாகவும் களத்திலும் தொடர்ந்து நமதுஅரசியலுக்கான இணைப்பை நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். அதே சமயம் இதுபோன்ற வழிப்பறி கொள்ளையர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
இன்றைய இந்திய, தமிழகச் சூழலில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் மார்க்சியச் சிந்தனைகளின் முக்கியத்துவமும் கூட்டிணைவும் தேவையென்ற கருத்தியல் சிலரால் முன்வைக்கப்படுகிறது. ஒரு எழுத்தாளர், இயக்கச் செயல்பாட்டாளர் என்ற முறையில் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
உலகில் சமத்துவச் சமூகம் புரட்சிகரச் சமூகத்தை வென்றெடுக்க உருவான முற்போக்கு சித்தாந்தங்களும் கொள்கைகளும் செயல்திட்டங்களும் முற்றுமுழுதாய் அனைத்து இனங்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஒடுக்குமுறைகளையும் ஒழித்துச்சமத்துவத்தை நிலைநாட்ட போதுமானவையாக இல்லை என்பதைக் காலம் நமக்குப் படிப்பித்து இருக்கிறது. ஆகவே நம் நிலத்தில் தோன்றிய, வளர்த்துஎடுக்கப்பட்ட பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் அயோத்திதாசரியம் போன்ற சித்தாந்தங்களின் புரட்சிகரச் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை அறத்துக்கான சிந்தனைகளைக் கொள்கைகளை இணைத்து அரசியல் செயல் திட்டங்களை வகுத்து செயல்படுவதே இன்றைய மாற்று அரசியலுக்குத் தேவையான செயல்திட்டம்.
மதவாத எதிர்ப்பு, ஆணாதிக்க மற்றும் சாதிய தகர்ப்பு போன்ற நெடும் போராட்டங்களின் களச் செயல்பாட்டிற்குத் தாங்கள் வாழும் மாநகரச் சூழல் எந்த அளவு உதவக்கூடியதாகவும் தடை போடுவதாகவும் உள்ளது ?
கடந்த காலங்களில் தலைநகரிலிருக்கும் அமைப்புகள் கட்சிகள் மாணவர்களை இணைத்துப் போராட்டங்களை நடத்த முடிந்தது. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாசிச அடக்குமுறையால் ஜனநாயக வெளி குண்டாந்தடியால் துப்பாக்கிகளால் புல்டோசர்களால் முடக்கப்படுகிறது.
அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்காகச் சிறைப்படுத்தும் கொல்லப்படும் ஆபத்து அதிகரித்திருக்கிறது அதற்குத் தயாராகவும் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கம், மாணவர்கள், அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை போராளிகள், சிறுபான்மையோர், விளிம்புநிலையோர் ஜனநாயக வழியில் அமைதியாய் பதாகைப் பிடித்துப் போராட முடியவில்லை. இந்துத்துவ, சங்க் பரிவார் பயங்கரவாதிகளும் அவர்களின் ஏவல் காவல்துறையும் பல்கலைக்குள் நுழைத்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள். மக்களின் அறவழிப் போராட்டங்களில் புகுந்து தாக்குகிறார்கள் சுடுகிறார்கள். ஊரை கொளுத்தி உடைமைகளைக் கொள்ளையடிக்கிறார்கள். மனிதஉரிமை கருத்துரிமை பேசியதற்காக அர்பன் நக்சல் முத்திரைக் குத்தப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுகள், பிணை மறுப்புச் சிறைத்தண்டனை கொடுமைகள் நடக்கின்றன.
இங்கு அறிமுகமான நிறைய நண்பர்கள் சமூகச்செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டனர். சோசியல் மீடியா பக்கங்களைக் கூட மூடிவிட்டனர். சிலர் கட்சி அமைப்புகளிலிருந்தும் வெளியேறி விலகி நிற்கின்றனர். என் தலைமையில் இணையும் மாணவர்கள் பிரச்சனைக்களுக்குள்ளாகக் கூடாதென்று அவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடாதென்று போராட்டங்களை ஒருங்கிணைப்பதில்லை. மூத்த அமைப்புகள் இயக்கங்கள் கட்சிகளும் வெளிப்படையாகப் போராட்டங்கள் நடத்த முடியாத சூழல். போராட்டங்களைக் குறைத்து அறைக் கூட்டங்களில் அரசியல் விவாதங்களை முன்னெடுக்கிறோம் செயல்படாமல் இருக்க முடியாது இல்லையா? பாசிசத்தின் அனுமதியுடன்தான் சுவாசிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால், பாசிசம் இறுதியில் மக்களிடம் தோற்றதே வரலாறு.
நவீன, நுகர்வுப்பெருக்கம், பன்னாட்டுபோர் வணிக அரசியல் சூழல், இந்திய சாதிய, ஆணாதிக்க, சனாதனச் சூழல் எல்லாம் கலந்த ஒரு சிக்கலான உளவியலாகத் தமிழ் உளவியல் இருக்கிறது. இச்சூழலில் பெண்ணிய எழுத்தின் முக்கியத்துவம் எவ்வாறு அமைகிறது?
ஒரு சமூகத்தில் பெண் விடுதலையடைந்தால்தான் பிற பகுதியினர் விடுதலையடைய முடியும். ஓட்டை வாளியில் நீர் சேந்தி விளைச்சல் காண முடியாது. ஆணாதிக்கச் சமூகம் பெண் மையச் சமூகமாக நகர்ந்தால்தான் சமூக மாற்றமும் சமூகப் புரட்சியும் நடக்கும். அதுவரை மக்களாட்சி என்ற பெயரில் முதலாளிகள், கார்ப்ரேட்டுகளின் அடிமையாய் வாழ்ந்து வீடுபேறு அடைய முடியும். பெண்ணியம், பெண்ணியரசியல், விளிம்புநிலையிலிருந்து மையஅரசியல் அதிகார நிலை எட்ட வலுவான பெண்ணியஅரசியல் இயக்கம் அவசியம். பெண்ணியச் சொல்லாடல் பெண்ணெழுத்து மைய நீரோட்டங் களாய் மாறும் காலம் எழும். ஆண்மையக் கழிவுகள் கசடுகள் அடித்துச் செல்லப்பட்டு மொழியும் நிலமும் புத்துயிர்ப்பு பெரும்.
கவிதை சார்ந்து இல்லாவிடினும் முகநூலில் தொடர்ந்து இயங்குபவர் நீங்கள். நவீன கவிதைகளுக்கான எல்லையற்ற ஒரு பரந்தவெளியாக முகநூல் விரிந்துள்ளது. கவிதைகள் அளவுக்கு அதற்கான விளம்பரங்களும் நிறைந்திருக்கும் அச்சூழலில் இப்போக்கு விளைவிக்கும் நன்மை, தீமை குறித்த தங்களின் அவதானிப்பு?
புதிதாக எழுத வருகிறவர்கள் தங்கள் அடை யாளத்தைத் தனித்துவமாக வெளிக்காட்ட முடிகிறது. சின்ன வட்டமோ பெரிய வட்டமோ பயனாளிகளுக்கு உடனடி சமூக அடைவு கிடைக்கிறது. கடந்த காலங்களில் கவிஞராய் அடையாளம் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். தற்காலத்தில் சமூக ஊடகத்தில் ஒரு சில வாரங்களில் நிகழ்ந்துவிடுகிறது.
ஜோசியம் பார்ப்பவர்கள் பிரபலங்களுடன் படமெடுத்து வைத்து வியாபாரத்தில் வெற்றியடையப் பார்ப்பார்கள். கவிஞர்களும் ஜோசியர்கள் மாதிரி உருமாறிவிட்டனர். கொள்கை முரண் பேணாது நாலு பிரபலங்களுடன் விளம்பரம் செய்கிறார்கள். நாலு பேர் போற பாதை நல்வழி என்ற ஆழ்ந்த மூடநம்பிக்கையுடைய நம் மக்கள் தொடர்கிறார்கள். இளையராஜாவை கொள்கை அடிப்படையில் விமர்சிக்க தகுதியிருக்கிறது என நம்பும் படைப்பாளிகள் சுய விமர்சனத்துக்குத் தயாராக இருப்ப தில்லை.
இன்று பெண் எழுத்தின் போக்கு என்னவாக இருக்கிறது. எதைநோக்கிச் செல்ல வேண்டும்? புதிதாக எழுத வரும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
புதிதாக எழுத வருபவர்கள் அதிகம் படித்தவர்கள், என்னைவிடப் புத்திசாலிகள் உலக அனுபவம் வாய்த்திருக்கிறது. பெண்ணியம், பெண்ணெழுத்துத் தளத்தில் இயங்க அரசியல் தெளிவு வேண்டுமென்றால் உலகளாவிய பெண்ணியம், பெண்ணெழுத்துக் குறித்துக் கற்க வேண்டும். சொல்லுக்கும் செயலுக் கும் மலை மடு வித்தியாசம் கொண்டோரை அடை யாளம் கண்டு புறக்கணிப்பதன் வழி புதியவர்களின் தனித்தன்மை காக்கப்படும். தமிழின் கொல்லைப் புறத்தில் பெண்ணியம், பெண்ணெழுத்து அரசியலை குட்டையாய் குறுக்கும் அதிதீவிர இலக்கிய அரசியல் நகர்த்தல்கள் நடக்கின்றன, எவரும் அதிலூறும் ஒரு மட்டையாகிவிடக் கூடாதென விழைகிறேன்.
உலக அறிவு விரல் சொடுக்கில் கிடைக்கும் காலத்தில் எதிர்ப்பாற்றலை மாற்றரசியலை அவரவரே உருவாக்க முயற்சிக்க வேண்டும், அது முன்னோக்கி நகர உதவும்.
வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது.
அதன் அகத்தில் அவன் இருந்தான். கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படியவிட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.
நீ கனவை அடைய முயற்சி செய்கிறாய். நான் கனவாகவே இருக்கிறேன். வெகுதூரம் பயணம்செய்து, மலைச் சிகரத்தின் மீதேறி, களைத்து உட்கார்ந் திருக்கும் உன்னால், நீயே நிர்மானித்திருக்கும் இந்தப்பாவனை வெளியெனும் சுவரைத் தாண்டி வர முடியாது. நானோ இன்னும் மேலே பறப்பேன். எங்கும் சுற்றித் திரிவேன்! புதிர் சுவரை வருடியபடி எப்போதேனும் ஒருபறவை அவனைக் கேலி செய்தபடியே கடந்தது. சில தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் தான்தோன்றித் தனமாகச் சுற்றின.
அவன் பாடத் தொடங்கினான். தும்பி வா தும்பக் குளத்தில்... தென்றல் வந்து தீண்டும்போது... இசையில் தொடங்குதம்மா... இதயவானின் உதய நிலவே... நானன்றி யார் தொடுவார்... மாலையில் மலர் சோலையில்... இன்னும் என்னென்னவோ பாடல்கள். நினைவில் தெளிந்து எதிர்நீச்சல் பழகி மீன்களாய் மேலேறும் பாடல்கள். விரிந்தவானே வெளியே, திரிந்த காற்றே கதிரே... மனம் பிதற்றும் கவிதைகள். இவற்றுக்கு இடையில் தான் அவன் அறைக்குள் அவள் நுழைந்திருந்தாள்.
இலேசாகத் திறந்திருந்த கதவை அவள் தட்டியதும், உள்ளே வந்ததும் அவனுக்குத் தெரியவில்லை. அவன், வேதாந்தமே விஞ்ஞானமே விளங்க முடியாத அதிசயமே... என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் கூடு பாய்ந்து மேலேறிக்கொண்டிருக்கையில் பின்னால் தொண்டையைச் செருமும் சத்தம் கேட்டு, இலேசான பதற்றத்துடன், அற்புதங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் நிகழலாம் என்பதற்கு இதை விட வேறேதாவது சான்று இருக்க முடியுமா என்றெண்ணிக் கொண்டு, அவளைப் பார்த்தான். அவள் ஒரு சிறு புன்னகைக் கரிசனமும் இன்றி அழைத்தாள்.
“நான் காட்டாத்துல குளிக்கணும். தொணைக்கு வரமுடியுமா?”
அவன் குழம்பினான். சிரிப்பதா வேண்டாமா எனத் தவித்தான். அந்த ஒரு கணமே, அவளுடைய உருண்டை முகம் அவன் மனதில் பதிந்துவிட்டது. சரிவில் இறங்குகையில் அவளுடைய கால்கள் வரையாடுகளினுடையதாய் இருந்தன. அவனுக்கோ கால்கள் பின்னின. இவள் என்னைக் கவர்ந்து செல்லவந்திருக்கும் நீர்கன்னியோ? அவள் சிரித்துக்கொண்டே திரும்பி, சொன்னாள்.
“தேவையில்லாத கற்பனையெல்லாம் வேணா!”
அய்யோ, என்ன இது? மனதைப் படிக்கும் இவள் யார்? அவன் மீண்டும் சிரிக்க முயன்று தடுமாறினான்.
“காட்டாத்துல குளிக்கலாம்னு நெனச்சேன். இந்த வழியும், ஆறும், கொஞ்சம் ரிஸ்க்கான எடங்களா பட்டுச்சி. யாராவது கூட இருந்தா நல்லாருக்குமேனு தோணுச்சி. நெனச்சுக்கிட்டே வரும் போது உங்க பாட்டு கேட்டது. மொழி... இல்ல... இசை என் தயக்கத்த ஒடச்சிடுச்சி. அதனாலதான் உங்கள தொணைக்குக் கூப்டேன்.”
அவன் முகத்தைத் தாழ்த்தி சரிவில் கவனத்தைச் செலுத்தினான். அவளோ பதிலை எதிர் நோக்காமல் விடுவிடுவெனக் கீழே இறங்கிச் சென்றுகொண்டே இருந்தாள். இறுக்கமான ஷார்ட்ஸூம், தளர்வான பனியனும் அணிந்திருந்தாள். கால்களில் அருமையான ஷூ இருந்தது.
ஆற்றை நெருங்க நெருங்க காட்டுப் புற்களின் வாசனை அடர்த்தியாய் விரவி ஈரப்பதம் இமிரிய காற்று தழுவியது. எங்கும் காட்டுப் புற்கள். வேறு வகையான செடிகள் எவற்றையும் பார்க்க முடியவில்லை. காட்டாற்றின் நடுவே அங்கங்கே எழும்பி இருக்கும் பாறைகளில் மோதி நுரைத்துச் சுழித்து அங்கிருப்பவற்றோடு பேசிக்கொண்டே சென்றது நீர்.கூப்பிடு தொலைவில், பாறைக்கூட்டங்களுக்குஅருகில், மணல் தேறியிருக்கும் ஒரு சிறுசமவெளியைத்தேர்ந்து, அவள் குளிக்கச் சென்றாள். அவன் வேறொருபக்கம் நீரில் இறங்கினான். அது உறைநிலைக்குச் செல்லும் வெப்ப நிலையின் அருகில் இருந்தது.
அவர்கள் இருவரும் அப்படித்தான் அந்த மலை யுச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் அந்தர வெளியில், எப்போதும் மழைத்துளிகள் வீழ்ந்து கொண்டிருக்கும் குன்றில், பாறையொன்றின் மீது எழுப்பப்பட்டிருக்கும் சிறிய தங்கும் விடுதி அறையில் சந்தித்துக் கொண்டார்கள்.
ஆனால் உண்மையில் அதையே அவர்களுடைய முதல் சந்திப்பாகக் கொள்ள முடியாது. கோட்டயம் நகரத்துக்கு வடக்கே, வாகமன் நோக்கி முன்னேறும் சாலையில் பஜாஜ் அவெஞ்ஜெரில் அவன் போய்க் கொண்டிருக்கையில், அவளை முன்னமே பார்த் திருந்தான். தன்னுடைய ராயல் என்ஃபீல்ட் இன்டெர் செப்டார் பைக்கில் வேகமாக அவள் அவனைக் கடந்தாள்.
அவள் அணிந்திருந்த மேல் கோட்டுக்குள் காற்று நுழைந்து தழுவியிருந்தது. மொழுமொழுவென அழகானதொரு ஹெல்மெட், கண்ணாடி, கை உறைகள், காலில் கருத்த ஷூ, பழுப்புநிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். இருக்கையில், அவளுக்குப்பின்னால், பயணப்பை உறுதியாகக் கட்டப் பட்டிருந்தது. அதனுள்ளே கேம்பிங் கியர்ஸ், கூடாரம், தூங்கும் பை, படுக்கை, சிறிய அடுப்பு, தேயிலை அல்லது காபிதூள், சர்க்கரை, சில நொறுக்குகள், முதலுதவி மருந்துகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவனும் கூட அவற்றைத் தன்னுடைய பயணப்பையுள் வைத்திருந்தான்!
அவள் அனுபவம் வாய்ந்த பயணியாக இருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறுதியாகிவிட்டது. திருப்பங்களில் இலாவகமாகத் திருப்பினாள். சக பயணிகளையும், வாகனங்களையும் கச்சிதமான இடைவெளியோடு கடந்தாள். சாலையில் தென்படும் ஆட்களில் சிலரை, அனிச்சையாய் திரும்பிப் பார்ப்பதைப் போல, அவளும் அவனை அனிச்சையாகத் திரும்பிப் பார்க்கும் சம்பவம் அப்போது நேர்ந்தது.
அவர்கள் குளித்துவிட்டு விடுதி அறையை நோக்கிய சரிவில் மேலேறியபோது அவள் உடல் இலேசாக நடுங்கியது.
“தண்ணி இவ்ளோ குளிர்ச்சியா இருக்கும்னு நான் எதிர்பாக்கல. விட்டா, அப்டியே ஒறஞ்சிருப்பேன்!”
அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆமோதித்துத் தலையை ஆட்டினான்.
“ரூம் போனதும் எதையாவது சூடா ஆர்டர் செஞ்சி குடிங்க!”
அவள் புன்னகை செய்தாள். அடுத்த நாள் காலையிலேயே அவன் புறப்பட்டபோது அவளிடம் சொல்லிவிட்டுப் போகலாமென எண்ணினான். குளிக்கப் போகையில் அவளின் அறையெண்ணைச் சொல்லியிருந்தாள்.
அவளுடைய அறைக் கதவைத் தட்டியதும், மெல்லிய முனகலுடன் உள்ளே வரச்சொல்லி அழைப்பது கேட்டது. அவன் உள்ளே சென்று பார்த்தான். அவள் காய்ச்சலில் நடுங்கியவாறு கிடந்தாள். தொலைபேசியில் வரவேற்பறைக்கு அழைத்து, மருத்துவரை ஏற்பாடு செய்யச் சொன்னான். அவள் குணமடையும் வரை தன்னுடைய பயணத் திட்டத்தை அவன் துறக்க வேண்டியதானது.
வாகமனிலிருந்து திரும்புகையில் இருவரும் இணையாகவே தங்களின் வண்டிகளில் மலைப் பாதையில் கீழிறங்கி, கோட்டயம் ரயில் நிலையத்துக்கு முன்னாலிருக்கும் ஒரு தேநீர்க் கடையில் தேநீரைப் பருகிவிட்டுப் பிரிந்தார்கள். இடையில் அவர்கள் நிறையப் பேசிக்கொண்டார்கள். தன்னைக் குறித்துப் பெரிதாக ஒன்றுமே சொல்லாத அவள், உலகம் முழுவதையும் தன் இருசக்கர வாகனத்தால் சுற்ற வேண்டும் என்னும் ஆசையை மட்டும் அவனிடத்தில் அழுத்தமாகத் தெரிவித்தாள்.
அதன் பின்னர் வெவ்வேறு நிலப்பரப்புகளில் உயிர்த்துக்கொண்டிருந்த மனோரஞ்சனியும், ஞான குருவும் கடிதங்களிலும், தொலைபேசியிலும் பேசிக் கொண்டனர். ஆசிரியர்களாய் இருந்த அவர்கள், தங்களுக்குக் கிடைத்த நீண்ட பள்ளி விடுமுறை நாட்களில், ஆண்டுக்கு மூன்று முறை சந்தித்து, ஒன்றாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள். செப்டம்பரிலும், டிசம்பரிலும் கிடைக்கும் விடு முறைகளைச் சில நேரங்களில் மழையும், பண்டிகை களும் பங்கு போட்டுக்கொண்டன. கோடைக் காலங்கள் அவர்களை உற்சாகம் கொள்ள வைத்தன. பகுதி பகுதியாக இந்தியாவை முழுவதுமாகச் சுற்றிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டார்கள்.
கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி, வங்காள விரிகுடா கரையை ஒட்டியவாறே கொல்கத்தா வரைக்கும். பஞ்சாப் தொடங்கி நாகலாந்து வரை இமயமலையின் அடிவாரத்தை உரசியபடி. திருவனந்தபுரத்திருந்து தாத்ரா நாகர்ஹவேலி வரைக்கும். கம்பாத் மற்றும் கட்ச் வளைகுடாக்களையும், இந்தியப் பெரும் பாலைவனத்தையும் ஊடுருவி பஞ்சாப் வரை. தமிழகத்தின் தென்முனையிலிருந்து இந்தியாவின் வடமுனை வரையும், பின்னர் மய்யப்பகுதியில் இடதும் வலதுமாய் ஒரு சிலுவையைப்போல. அவர்களின் சக்கரங்கள் மலைகளிலும், சமதளங்களிலும் உற்சாகமாய் ஏறி இறங்கின. விசிறும் காற்றில் அவர்களின் வாகனச் சத்தம்காற்று வெளியைக் குடைந்தது. புதிய புதிய நிலப்பரப்புகளை வடிவமைக்கும் சிற்பிகளெனத் தங்களைக் கருதிக்கொண்டார்கள். வகை வகையான நிலத் தோற்றங்களும், முகத் தோற்றங்களும், வாழ் முறைகளும், மொழிவழக்குகளும் உற்சாகப்படுத்தின.
பயணங்களின் இடையே கிடைத்த சொற்ப ஓய்வில், சொற்ப அளவில் அவர்கள் பேசிக்கொண் டார்கள். பெற்றோர்கள் பயணத்துக்குகந்த பைக்கை வாங்கிக் கொடுத்து உலகம் சுற்ற வாழ்த்தியதை மனோரஞ்சனி ஆர்வத்தோடு சொன்னாள். இளமை காலம் முதலே பைக்குகளின் மீது கொண்டிருந்த ஆர்வம், சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் ஆர்வமாக வளர வளர உருமாறியதை ஞானகுரு சொன்னான்.
ஒரு கோடையில் கொல்கத்தா சென்றபோது அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள முடிந்தது. வண்டிகளை நிறுத்திவிட்டு கால்நடையாகவே கொல்கத்தா வின் வீதிகளிலும் சாலைகளிலும் குறுக்கும் நெடுக்கு மாய் அலைந்தார்கள். விக்டோரியா அருங்காட்சி யகத்தைச் சுற்றியிருக்கும் மைதானங்களில் சிறுவர் களுடன் கிரிக்கெட் ஆடினார்கள். புனித பவுல் கதீட்ரலில் மனோரஞ்சனி நீண்ட நேரத்துக்கு மௌனமாக அமர்ந்திருந்தாள். அங்கிருந்து திரும்ப எண்ணிய மனோரஞ்சனியை சம்மதிக்க வைத்து சிங்கூர், புர்துவான், போல்பூர் வழியாகச் சாந்திநிகேதன் வரை பேருந்தில் அழைத்துச் சென்று வந்தான் ஞானகுரு. கொல்கத்தாவிலிருந்து பைக்கு களில் திரும்பும் வழியில், ஒரு காட்டிடையே, அகன்ற பாறையின் மீது, கற்திட்டைகள் நிறைந்திருந்த இடத்தில் அமர்ந்து, அவள் மெல்லிய புன்னகையோடு தலையாட்டிச் சம்மதிக்க, தன் காதலைத் தெரிவித்தான் ஞானகுரு.
அந்தக் காலைக்குக் கொண்டலாத்தியின் குரல் பின்னணி பாடிக் கொண்டிருந்தது. தோட்டத்து செம்பருத்திகளில் தேன்சிட்டுகள் வந்து வந்து அந்தரத்தில் மிதந்தபடியே தேனை உறிஞ்சின. அவற்றின் சிறகடிப்பு தேன் குடிப்பதால் உண்டாகும் களிப்பா, அல்லால் தேன் குடிப்பதற்கு மேற்கொள்ளும் பாடா என்று நினைத்தான் ஞானகுரு.
படுக்கையிலிருந்து எழுந்ததும் பெரும்பாலும் தேநீர் தயாராகிவிட்டிருக்கும். மனோரஞ்சனி தூங்கிக்கொண்டேயிருப்பின் அவன் தயாரிப்பான். இல்லைஎனில் அவள். மனோரஞ்சனியோ, ஞானகுருவோ முன்னறை நாற்காலியில் வந்து உட்கார்ந்திருக்கையில் ஒருவருக்கொருவர் கோப்பைகளை நீட்டிக் கொள்வார்கள். அவர்கள் இருவரும் தேநீர் பித்துக்கொண்டவர்கள். பலவிதமான சுவையும் மணமும் கொண்ட தேநீரைப் பருகியவர்கள். பைக் பயணத்தில் பல இடங்களில் தேநீரைச் சுவைத்து, எத்தனையோ விதமான பிராண்டுகளுக்குத் தாவிப்பார்த்து விட்டவர்கள்.
விரும்பிய பிராண்டுகளை வெளியிலிருந்து தருவிப்பது என்பது மாறி, ஊரைச் சுற்றியிருக்கும் அங்காடிகளில் கிடைக்கின்ற பிராண்டுகளையே வாங்கத் தொடங்கி, பலவற்றுக்கும் கடந்து, இப்போது ஆ.வே.தாமஸ் தங்க பிராண்ட்டை பருகினார்கள். அவள் நீட்டிய தேநீர் கோப்பையில் அதிகாலையின் மொத்த ரம்மியமும் வீசியது. நுண்மையான நுரைப் பொங்கிய தேநீரின் வட்ட முகம். ஆவி மெல்ல எழும்பி முகத்தில் படிந்து இதமளித்தது.
திரவங்களுக்கென்று ஒரு திடமான வடிவம் கிடையாது. அவை இருக்கும் பாத்திரத்தின் வடிவத்தை எடுத்துக் கொள்ளும். அல்லது அதைப் போலவே வடிவத்தை மாற்றும். நம்மால் ஏன் அவ்விதம் முடிவ தில்லை என்று ஞானகுரு நினைத்தான். ஒருவேளை திட திரவ வாயுக்களின் கலவையினால் ஆன உடல் என்பதால் மனிதனுக்கு அப்படியொரு குழப்பம் மேலிடுகிறதோ என்று தோன்றியது.
அவள் ஒரு கோப்பையுடன் அவன் முன்னால் உட்கார்ந்துக் கொண்டாள். அவன் ஒரு புன்னகையுடன் அவளை நோக்கிவிட்டு, தூயதும் தெள்ளியதுமாயிருந்த இளங்காலை மனதின் துப்புரவிலிருந்து ஒரு கதையை எடுத்துச் சொல்லத் தொடங்கினான். அவன் அவளுடன் எல்லாவற்றையும் கதைப்பான். அவளும் அவனுக்கென்று சில கதைகளை வைத்திருப்பாள். அல்லது அவன் விவரிக்கையிலேயே, அவள் மனதில் ஆழப்புதைவிலிருந்து சில சடாரென முகிழ்த்துக் கிளைத்து வெளியே வரும். தேநீர் கோப்பை தீர்ந்து போவதற்குள்ளாகச் சொற்ப அளவிலேனும் சில கதைகளை அவர்கள் பகிர்ந்து முடித்திருப்பார்கள்.
அவ்விதம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தேன் சிட்டுகளும், சிட்டுக்குருவிகளும் முன்னறை கம்பிச்சுவரின் மேல் அமர்ந்தோ, அல்லது உள்நுழைந்து வந்தோ அவர்களைச் சுற்றிப் பறக்கும். முன்னாலிருக்கும் நாற்காலிகளில் அமர்ந்து பார்த் திருந்து விட்டு மீளப்பறக்கும்.
ஞானகுருவின் கதைகள் புதிதாய் இருந்தன. ஆனால் மனோரஞ்சனியோ, நீண்ட நாட்களாய் அவனிடத்தில் ஒரே கதையையே சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒவ்வொரு முறை சொல்லும் போதும், முதன்முதலாய் அவனோடு குளித்த நீரின் குளுமையை அவள் கொணர முயன்றாள்.
அவள் கதை தேங்கிய நீரின் மணம் கொண்டு, பல்வேறு உயிரினங்களைப் பெருக்கி, நெருக்கடிகளை அதிகரித்து நெளிந்தது. தன்னுடைய கதைகளைப் புதுப்பிக்க அவளுக்கு வழியேதுமில்லாமல் போய் விட்டது. அவர்கள் மணம் புரிந்துகொண்டு குடியேறிய வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் கம்பீரமாக நிற்க வைக்கப்பட்டுப் பளபளவென மின்னிய அவளின் ராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டார், மங்கி மங்கி சிறிது சிறிதாக ஒளியிழந்து ஒருநாள் முற்றிலுமாக மறைந்து போனது.
பின்னர் வாகனம் நிறுத்துமிடத்தில் மனோரஞ்சனி மலர்ச்செடிகளை நட்டாள். அங்கு மலர்களிடத்தில் வந்த கொண்டலாத்திகளிடமும், வெள்ளைச் சில்லை களிடமும் அவற்றின் சிறகுகளின் மீதமர்த்தித்தன்னை எங்காவது வெகுதூரம் கூட்டிச் செல்ல வேண்டினாள். தோட்டத்தில் பூத்திடும் மலர்களின் மணங்களோடு பயணம் செய்வதற்கு யத்தனித்தாள். பட்சிகளும், புஷ்பங்களும் கைவிரித்த நிலையில் எண்ணங்களை மட்டுமே முடுக்கிவிட்டுப் பயணங் களை மேற் கொண்டு வந்தாள் மனோரஞ்சனி.
கதையென்பது என்ன? நம்முடைய கதையை நமக்கே சொல்லிக்கொள்வதுதானே? அவனும் அவளும்பயணத்தின்போது சந்தித்துக்கொண்ட கதையை, பார்த்த இடங்களை, கிடைத்த அனுபவங்களை, அவன்அறிந்தக் கதையை அவளும், அவள் அறிந்தக்கதையை அவனும் தினந்தோறும் அவ்விதம்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அன்றும் அப்படித்தான் ஞானகுரு கதையைச் சொல்லத்தொடங்கினான்.
ஆனால் மனோரஞ்சனி அவன் சொன்ன கதைகளைக் கேட்கவில்லை. நிர்தாட்சண்யமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறு திசைகளை நோக்கினாள். அவன் முகம் பார்க்க விரும்பாதவளாய் தோன்றிய மனோரஞ்சனியை எதிர்கொள்வதற்கு விரும்பாத ஞானகுரு திகைத்துத் தடுமாறினான். அவளே முகம் காட்டாமற் போனால் பிறகு யாரிடம் தன் சொற்களைச் சேர்ப்பது?
அவன் முகத்தை அவளும் அவள் முகத்தைஅவனும் வெகு காலமாகப் பார்த்து வந்தனர். ஆழ்ந்து நோக்கி அவற்றின் அழகுகளையும், அசட்டுத்தனங்களையும், அசிங்கங்களையும் பரஸ்பரம் கண்டறிந் திருந்தனர். சொல்லப்போனால் அவன் முகம்அவளுடையதாகவும், அவள் முகம் அவனுடைய தாகவும் இடம் மாறிவிட்டதாகத்தான் ஞானகுரு நினைத்தான். மணம் புரிந்துகொண்டோ, ஒன்றாகவோ வாழும் இணையரின் முகங்கள் பெரும்பாலும் ஒரே சாயலில் இருப்பதைத் தன் நெடுங்கால ஆய்வின் வழியே கண்டறிந்திருந்தான் ஞானகுரு. முகச்சாயல் ஒத்திருந்தால் தான் பிரியமே ஏற்படுகிறது. இது ஒரு வகையான சுயமோகம் என்றும் அவன் நினைத்தான். ஆழ்ந்த தியான மனநிலையோடு தேநீர் பருகும் இத்தருணத்தில் தன் முகமே தன்னைப் பார்க்காமல் போனால் என்செய்வது என்று துணுக்குற்ற ஞானகுரு, இன்று நாம் எங்காவது வெளியில் செல்லலாம் என்று மனோரஞ்சனியிடத்தில் சொன்னான்.
சிறப்பாய் தயாராகியிருந்தாள் மனோரஞ்சனி. அவளுக்குப் பிடித்தமான பருத்திப் புடவை. தலையில் அவள் வளர்த்த ரோஜாவில் இளையது. அப்படியே தழுவி உட்செரித்துவிடலாம் போல சுகந்த மணம். இப்போது அவனிடத்தில் இருந்த ஸ்பிளண்டரை மனோரஞ்சனி அந்நியமாய்ப் பார்த்தாள். இதற்கு முன்னால் பைக்கிலேயே உட்காராதவளைப்போலத் தடுமாறி பின்னிருக்கையில் அமர்ந்து அவன் தோளைப் பற்றிக்கொண்டாள். எங்காவது ஒரு மலைவாசஸ்தலத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படிக்கு ஞானகுருவை அவள் கேட்டுக் கொண்டாள்.
வீட்டிலிருந்து கிளம்பி சிறு நகரத்தைக் கடந்ததும் வந்த நெடுஞ்சாலையின் ஓரங்களில் பெரும் புளிய மரங்களும், தூங்கு மூஞ்சி மரங்களும் கிளைத்திருந்தன. அவளுக்கு எல்லாமே புதிதாகத் தோன்றின. சாலையோர உணவகத்தில் நின்றபடியே சிற்றுண்டியை முடித்துக்கொண்ட அவர்கள் அருகிலிருந்த செல்லாபுரியம்மன் சாமிச்சோலையில் இளைப்பாறினார்கள். பெரும் விருட்சங்கள் நிழல் பந்தலிட்டிருந்த அவ்விடம் அவளுள் மௌனத்தை நிறைத்தது. மனோரஞ்சனி எண்ணுவதை அங்கிருந்த நாகணவாய்ப் புட்கள் பிதற்ற முயன்றன. வானத்தை முட்டும் கற்தூண்களுக்கிடையில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் பூமிக்கும் விண்ணுக்குமாகச் சென்றுசென்று வந்த அவள் சிறிது நேரத்தைக் கழித்து அங்கிருந்து புறப்படலாமென்று விரும்பினாள்.
பொழுது மெல்ல பொலிந்து வந்தது. வெய்யில் சுள்ளென்று கிள்ளியது. அங்கிருந்து பார்த்தாலே கிழக்குத் திசையில் வானத்துக்குச் சுற்றுச்சுவர் கட்டியதைப் போலத் தெரியும் மலையுச்சிக்குத்தான் அவர்கள் செல்வதற்குத் தீர்மானித்திருந்தனர். அதற்கு இன்னும் பல கிலோமீட்டர்கள் போக வேண்டியிருந்தது. ஆனாலும் ஞானகுரு வேகத்தில் நிதானம் காட்டினான். மனோரஞ்சனியிடம் அவன்மட்டுமே பேசிக்கொண்டு சென்றான். அவளின் உம்கொட்டல்கள் மட்டுமே அவனுக்குக் கேட்டு வந்தன.
அவர்கள் பாதி வழியைக் கடந்திருந்தார்கள். அந்த இடத்தில் நெடுஞ்சாலைப் பள்ளங்கள் புதிதாகச் செப்பனிடப்பட்டிருந்தன. அங்கு வேகத்தடை ஒன்று இருப்பதாக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவல் பலகை சொன்னது. ஆனால் சாலையில் வெள்ளைநிற டிவைடர்களோ, எச்சரிக்கைக் கோடுகளோ வரையப்பட்டிருக்கவில்லை. ஞானகுரு கூர்ந்து பார்த்தபோது சில மீட்டர் தொலைவில் கருநிறச்சாலை இலேசான வயிறு வீக்கத்துடன் படுத்துக்கிடந்தது. ஞானகுரு ஸ்பிளண்டரின் வேகத்தை வெகுவாகக் குறைத்தான். பைக்கை சாலை ஓரமாகவே செலுத்தினான். வியூபைண்டர் கண்ணாடியில் அவர்களின் பின்னால் ஒருவர் வண்டி யில் வந்துகொண்டிருப்பது நிழல் தீற்றலைப் போல உள்ளே பதிந்தது.
மனோரஞ்சனி அவனிடத்தில் பேசத் தொடங்கினாள்.
“வாகமனில்...”
பெருவெடிப்பை போன்றொரு சப்தம் திடீரென்று எழுந்தது. என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் பின்னால் வந்த வாகனம் அவர்கள் வாகனத்தின் மீது மோதியது. ஞானகுருவும், மனோரஞ்சனியும் வண்டியிலிருந்து கீழே வீசப்பட்டார்கள். ரத்தம் கசியும் உள்ளங்கைச் சிராய்ப்பைக் கொண்டே சாலையில் ஊன்றி எழுந்து நின்ற ஞானகுரு, பதற்றத்துடன் மனோரஞ்சனியைத் தேடினான். அவன் உடல் நடுங்கியது. இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. பய உணர்வு கவ்விக்கொண்டது. ஸ்பிளெண்டர் சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடந்தது. அவர்களை மோதிய பைக் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்திருந்தது. அதை ஓட்டிவந்திருந்த நடுவயது கடந்த மனிதர் அதன் அருகிலேயே கிடந்தார். மனோரஞ்சனி சாலை வேகத்தடையைத் தலையணைப் போலப் பாவித்துக்கொண்டு பேச்சுமூச்சற்று கவிழ்ந்து கிடந்தாள். மனோரஞ்சனியிடத்தில் ஓடினான் ஞானகுரு. அவன் கத்தல் அருகிலிருந்த ஊரையே எழுப்பியது.
ஆம்புலன்ஸ் வந்ததும், மருத்துவமனைக்குச் சென்றதும் எதுவும் துல்லியமாக அவனுக்கு நினைவுஇல்லை. அவர்களின் வண்டியை இடித்த பெரியவர் மயக்கத்தில் இருந்து தெளிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அவரைப் பற்றிய மேலதிக செய்திகளை ஞானகுரு கேட்டுக்கொள்ளவில்லை. மனோரஞ்சனிக்கு உயிர் இருக்கிறது என்று ஆம்புலன்ஸ் ஊழியர் சொன்ன பிறகே ஞானகுருவின் இதயத்துடிப்பு சீரானது. பரிசோதனைகள் முடிந்து, அவசர பிரிவில் சேர்த்து, அவனைப் பார்க்க அனுமதிப்பதற்குச் சில மணி நேரமானது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போல மனோரஞ்சனி படுத்திருந்தாள். உயிர் காக்கும் கருவிகள் அவள் உடலுடன் பொருத்தப்பட்டிருந்தன. அவளைப் பார்க்கையில் அழுகை பீறிட்டு வந்தது.
அவனை மருத்துவர் அழைப்பதாகச் சொன்னதும் சென்று மேசை முன்னால் காத்திருந்தான் ஞானகுரு. மீண்டும் அவன் இதயம் விசைகூட்டி துடிக்கத் தொடங்கியிருந்தது. சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவர் மிக இயல்பாக அவனை விசாரித்தார்.
“நீங்க ஓக்கேதானே?”
“ஆமா சார். என்னோட ஒய்ஃபுக்கு...”
“ஷி ஈஸ் ஓக்கே! தலையில அடிபட்டிருக்கு. அவங்க கோமாவுல இருக்காங்க. மேபி இது ஷார்ட் டைம் கோமாவாகூட இருக்கலாம். இப்ப உயிர்பொழச்ச மாதிரி, கோமாவுலர்ந்தும் திடீர்னு கண்முழிக்கலாம்”
“சார்...”
“அப்புறம் இன்னொன்னு. ரெக்கவரி ஆயிட் டாங்கனா, அதுக்குப் பிறகு அவங்க நினைவாற்றல் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. மெமரி லாஸ் இருக்கும்”
ஞானகுரு அதிர்ச்சியுடன் மருத்துவரை பார்த்தான். அவர் தொடர்ந்தார்.
“ஆமா. ஒருவேள அவங்க உங்களையே அடையாளம் காணாமப் போனாலும் ஆச்சரியமில்ல. பாக்கலாம். எல்லாமே நம்பிக்கைதான்”
ஞானகுரு இன்னொரு முறை சார் என்றான். எத்தனை முறை சார் சொன்னாலும் அதுதான் செய்தி என்ற பாவனையோடு மருத்துவர் இருந்தார்.
தொடர்ந்த நாட்களில் வீட்டுக்கும், மருத்துவ மனைக்குமாகப் போய்வந்து கொண்டிருந்தான் ஞானகுரு. மனோரஞ்சனி கண்விழிப்பாளா என்று நினைப்பதை விடவும், அவள் தன்னை அடையாளம் கண்டுகொள்வாளா என்று நினைப்பதிலேயே மனம் உழன்றது. பலவாறாக நினைத்து நினைத்துத் தன்னை நிதானப்படுத்திக் கொள்வதற்கு முயன்றான் ஞானகுரு.
ஒருவாரம் கழிந்திருந்தது. அந்த நாளின் மஞ்சள் வெய்யில் துலங்கும் மாலை வேளையில், மனோரஞ்சனி கண் விழித்துவிட்டாளென்று கூவிக்கொண்டே அவனிடத்தில் ஓடிவந்தாள் செவிலி. ஞான குரு எழுந்து ஓடினான். சிலநிமிடங்களுக்கெல்லாம் மருத்துவரும், ஞானகுருவும், செவிலியும் மனோரஞ்சனியின் படுக்கையருகில் இருந்தார்கள்.
ஞானகுருவின் முகத்தில் அழுகையும், மகிழ்ச்சியும் தளும்பிக் கொண்டிருந்தது. மனோரஞ்சனியை பிரேமையுடன் நோக்கினான். அவள் எல்லோரையும் குழப்பத்துடன் பார்த்தாள். இலேசான வலியில் அவள் முணகுவது கேட்டது. அவள் அருகில் சென்ற ஞானகுரு அவளுடைய கையைப் பற்றிக்கொண்டான். அவள் வினோதமாக நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் ஹாஸ்பெட்டலுக்கு எதுக்கு வந்தேன்?”
ஞானகுரு அவளை மிரட்சியுடன் பார்த்தான். அவளிடத்தில் முதல் சொல்லாக எதை உதிர்க்க லாமென்று போராடியது அவன் மனம். மனோரஞ்சனியின் பார்வையிலிருந்த அந்நியமோ இன்னும் விலகிடவில்லை.
“நீங்க யாரு?”
அவனைப் பார்த்து மனோரஞ்சனி அவ்விதம் கேட்டதும் வெடித்து அழத் தொடங்கினான் ஞானகுரு. அவன் தோளை அழுத்திய மருத்துவர் சொன்னார்.
“கண்ட்ரோல் யுவர்செல்ஃப். கண்டிப்பா அவங் களுக்குப் பழய நினைவுகள் திரும்பும். அதுவரைக்கும் நீங்க அவங்கள பொறுமையா கவனிச்சிக்கணும்”
மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்ட பிறகு மனோரஞ்சனியை கவனித்துக்கொள்வதற்கென நீண்ட விடுப்பை ஞானகுரு எடுக்கவேண்டியிருந்தது. முதல் வேலையாகத் தன்னுடைய ஸ்பௌண்டரை விற்றுவிட்டுப் பஜாஜ் அவெஞ்ஜர் வாங்கினான். மனோரஞ்சனிக்கென ராயல் என்பீஃட்ல் இண்டெர் செப்டாரை வாங்கி நிறுத்தினான். மீண்டும் பைக் பயணத்தைத் திட்டமிட்ட ஞானகுரு, மனோரஞ்சனியை தன்னுடைய பஜாஜ் அவெஞ்சரில்அழைத்துக் கொண்டு வாகமனுக்குக் கிளம்பினான்.
வானமும், மேகங்களும் இழைந்து புழங்கும் வெளியின் ஒரு துண்டு. மூன்று பக்கம் சுவரும், ஒருபக்கம் கண்ணாடியும் கொண்டதோர் அறை. மலைச் சிகரத்தில் சரிவை நோக்கியபடி இருக்கும் மனிதக்கூடு. நிர்மானித்த காலம் முதல் பறவைகளை எள்ளியபடி அது மிதந்துகொண்டிருந்தது. அதன் அகத்தில் அவர்கள் இருந்தனர்.
கண்ணாடிச் சுவரின் திறப்பைக் கொஞ்சம் நெகிழ்த்தினாலும் குளிர்க்காற்று பாய்ந்து பற்றியது. கீழே பார்வையைத் தாழ்த்தினால் புற்படுக்கையின் மீது விழிக்கதிர் உருண்டு அதல பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் காட்டாற்றில் போய் விழுந்தது. கண்ணாடித் திரவம் பாய்கின்ற நீர்வழி. திவலைகள் தெறித்து, தண்ணீர்த் துகள்கள் பரவி, நீர்ப்புழுதியைப் படிய விட்டு கடக்கும் சிறுவெள்ளம். அவ்வப்போது மீன்கள் எழும்பி மறைந்தன.
இயற்பியல் பாடத்தில் நாம் இருவகை விசைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஒன்று மைய விசை (Centripetal force) இன்னொன்று மைய விலக்கு விசை (Centrifugal force). ஒரு கயிற்றின் நுனியில் ஒரு கல்லைக் கட்டி, இன்னொரு நுனியைப் பிடித்துக்கொண்டு சுற்றுவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம்.
கயிறு சுழற்றுகையில், வேகம் குறைந்து விட்டால் கயிறு தொய்வடைந்து, கல் கையை நோக்கி வந்து விடும். வேகம் அதிகரித்தால், கயிற்றின் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கல் தெறித்துவிடும். இரண்டு விசைகளும் சரிசமமாகச் செயல்படுகையில், ஒரு சீரான வட்டத்தில் தொய்வில்லாமல் கல் சுற்றிவரும்.
கூட்டாட்சி என்பதற்கான சரியான உவமை இதுவாகத்தான் இருக்கக் கூடும். விடுதலைப் பெற்ற 75 ஆண்டுகளில், இந்தியா என்னும் ஜனநாயகத்துக்குப் பல சோதனைகள் வந்துள்ளன. ஆனால், இந்தியா ஒவ்வொன்றையும் கடந்து ஓரளவு நிலையான ஜனநாயகமாக முன்னேறி வந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கான காரணங்கள் பல இருந்தாலும், அதிகாரத்தை மையப்படுத்தி ஏதேச்சதிகார நாடாகமாற்ற முயன்ற ஒவ்வொரு முயற்சியும் இதுவரை மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. பிரிவினைவாதங்கள், நேரு போன்ற மாமனிதரின் ஜனநாயகத்தன்மை கொண்ட அணுகுமுறையால் வெல்லப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில், இந்தியா அத்தனை பிரச்சினைகளுக்குமிடையில், ஒரே நாடாக இருந்து வந்துள்ளது.
இந்தியாவின் பரப்பளவு 32.9 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். மக்கள் தொகை 140 கோடி. இந்திய அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகள் 22. அது தவிர, இந்தியாவில் 122 பெரும்மொழிகளும் 1599 சிறுமொழிகளும் இருப்பதாக இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கூறுகிறது. 1947 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு விலக முடிவெடுத்த பின்னர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்திய நாட்டுடனும், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் பாகிஸ்தானுடனும் இணைந்து இரு பெரும் நாடுகளாக உருவெடுத்தன.
இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், மேற்கத்திய அரசியல் பார்வையாளர்கள் இந்திய ஜனநாயகம் 10-15 ஆண்டுகள்கூட நிலைத்து நிற்காது என ஆருடம் கூறினர். நேரு இறந்த பின்னர் நடந்த தேர்தலிலும், பின்னர் அவசர நிலைக்காலத்திலும், இதே ஆருடங்கள் மீண்டும் ஒலித்தன. அத்தனையையும் பொய்யாக்கி விட்டு, இன்றுவரை இந்தியா ஒரு ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவோடு ஒப்பிடுகையில், ஆப்பிரிக்கா பத்து மடங்கு பெரியது (3.03 கோடி சதுர கிலோமீட்டர்கள்). மக்கள்தொகை இந்தியாவைவிடக் குறைவு (121 கோடி). பேசப்படும் மொழிகள் 1200 - 2000 வரை எனச்சொல்லப்படுகிறது. பல மொழிகளுக்கு லிபிகள் இல்லை. மொத்தம் 54 நாடுகளாகப் பிரிந்து இருக்கிறது.
பொருளாதார அலகில் ஆப்பிரிக்கக் கண்டமும், இந்திய நாடும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. ஆனால், வணிகம் மற்றும் அரசியல் தளங்களில், இந்தியா பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உருவாகியுள்ளது. 54 நாடுகளாகப் பிரிந்து இருப்பதால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள தனிநாடுகள் ஒப்பீட்டில் பெரும் அரசியல் சக்தியாக மாறவில்லை. இதுதான் இந்தியா ஒரு நாடாக ஒன்றிணைந்ததன் வெற்றி.
இந்தியா ஒன்றாகி, அதற்கான அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட போது, இவ்வளவு பரந்துபட்ட மொழிகளும் கலாச்சாரமும் கொண்ட ஒரு பூகோளப் பகுதி ஒரே நாடாக இருத்தல் பற்றிய பயம்அனைவரிடமும் இருந்தது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என அரசியல் சட்டம் சொன்னாலும், அரசியல் அதிகாரங்கள் ஒன்றிய அரசிடம் கூடுதலாக இருந்ததற்கு இந்த அடிப்படை பயம்தான் காரணம். அந்தப் பயமே, இந்திய அரசியல் சட்டத்தின் 356 போன்ற பிரிவுகள் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்கு எதிராகவோ அல்லது சட்டம் ஒழுங்கு குலையும் போதோ, இந்தப் பிரிவைப் பயன்படுத்தி, மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தைஅரசியல் சட்டம் ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளது.
அரசியல் சட்ட உருவாக்க விவாதங்களில் பல முறை இந்த அதிகார மையப்படுத்துதல் விவாதிக்கப் பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒன்றிய அரசுக்கு மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தாலும், நிதித் துறையில், மிகத் தெளிவான வரையறைகளைக் கொடுத்திருந்தது. தத்தம் வரையறைகளுக்குள் வரிகளை விதித்துக் கொள்ளும் இறையாண்மை கொண்ட சம உரிமை கொண்ட அரசு அலகுகள் என ஒன்றிய அரசையும் மாநில அரசுகளையும் குறித்து அம்பேத்கர் கூறி இருக்கிறார். பல உச்சநீதி மன்றத் தீர்ப்புகளும் இதை உறுதி செய்திருக்கின்றன.
ஆனால், தில்லியை மையமாகக் கொண்ட ஒன்றியஅரசுகள் தொடக்கம் முதலே, தில்லிதான் இந்திய அமைப்பின் அதிகாரத் தலைநகர் என்னும் மன நிலையில் செயல்பட்டு வந்துள்ளன. இந்தியை தேசியமொழி ஆக்கும் முயற்சி அதில் முதன்மையானது. அதை மூர்க்கமாக முன்னெடுக்கும் முயற்சி தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.
அவசர நிலைக்காலத்தில், ஒன்றிய அரசு, பாராளு மன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, மாநிலங்களின் கீழ் இருந்த கல்வித் துறையை மாநில / மத்தியப் பொதுப்பட்டியலுக்குமாற்றியது. இதனால் கல்வி மீதான ஒன்றிய அரசின் பிடி இறுகத் தொடங்கியது.
அதேபோலத் தொடக்கத்தில் மிகவும் கவனமாகப்பயன்படுத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் 356ஆவதுபிரிவு ஒரு காலத்தில், ஒன்றிய அரசுக்கு எதிரான கட்சிகளின் ஆட்சிகளைக் கலைக்க என அரசியலாக மாறியது. 1991ஆம் ஆண்டுக் கர்நாடக மாநில அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம், மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பல்வேறு விதிகளை உருவாக்கி, ஒன்றிய அரசுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
ஆனாலும், மாநிலங்களின் மீதான மேலாதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகள் நேரிடையாகவும், மறை முகமாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. சில சமீபத்திய எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்:
1. வேளாண்மை மாநில அரசின் கீழ் வரும் துறை. ஆனால், அதைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
2. துறைமுகங்கள் பொதுப்பட்டியலில் இருந் தாலும், நடைமுறையில், பெரும் துறைமுகங்கள் ஒன்றிய அரசின் நிர்வாகத்திலும், சிறு துறைமுகங்கள் மாநில அரசின் நிர்வாகத்திலும் இருந்து வருகின்றன. பாஜக அரசின் 2021 ஆண்டுத் துறைமுகச் சட்டம், எல்லாத் துறைமுகங்களையும் ஒன்றிய அரசின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.
3. மருத்துவத் துறை மாணவர் சேர்க்கைக்கு மையப்படுத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு போல, மற்ற துறைகளுக்கும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிடப் படுகின்றன.
4. நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில், மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியை, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மட்டுமே செலவு செய்ய அனுமதி என்னும் இறுகிய விதிகள்.
5. புதிதாக அறிமுகப்படுத்த உள்ள மீன்வள மசோதா, கடற்கரை வாழ் மீனவர்களின் உரிமையைப் பறிக்கிறது என மீனவர்கள் ஏற்கனவே எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்
இது போன்ற அணுகுமுறை மாநில அரசுகள், தங்கள் மாநிலத்திற்கேற்ப திட்டம் வகுக்கும் சுதந்திரத்தை, அதற்கேற்ப நிதி ஒதுக்கும் உரிமையை முற்றிலுமாக மறுதலிக்கிறது. இது போன்ற மையப் படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டால், மாநிலங்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்து வெறும் கௌரவ உள்ளாட்சி அமைப்புகளாக மாறிவிடுவார்கள்.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், பாஜக மிக நுட்பமாகத் திட்டமிட்டு எதிர்க்கட்சிகள், ஊட கங்கள், நீதித்துறை இவை மூன்றின் பங்களிப்பைக் குறைத்திருப்பதை அரசியலைக் கூர்ந்து கவனிப் பவர்கள் அனைவரும் உணர்வார்கள். இவை பாஜகவின் வெற்றி என்பதைவிட, ஜனநாயகத் தூண்களின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.
தேசிய அளவில், எதிர்க்கட்சித் தலைவர் எனும் இடத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. காங்கிரஸ்தன் உட்கட்சிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் தீவிரம் இல்லாத கட்சி போலத் தோற்றமளிக்கிறது. எரிபொருள் விலைஉயர்வு, வேலைவாய்ப்பின்மை, சிறு/குறு தொழில்கள்முடக்கம், வேளாண் சட்டங்கள் என மிகமிக அருமை யான வாய்ப்புகளைப் பாஜக அள்ளி வழங்கினாலும், ஒரு நாள் அடையாளப் போராட்டத்தை மட்டும் நடத்திவிட்டுக் காங்கிரஸ் தன் கடமை முடிந்தது என விலகிவிடுகிறது.
உழவர்கள் தாங்களே முன்னின்று போராடி, 700 உயிர்களைப் பலிகொடுத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. அது தாங்கள் செய் திருக்க வேண்டிய போராட்டம் என்பதைக் காங்கிரஸ்இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதைத் தாண்டி மம்தா, கம்யூனிஸ்ட்போன்ற எதிர்க்கட்சிகளும் தலைவர்களும் மக்களுக்காக என்ன பிரச்சினை களைக் கையில் எடுக்கிறார்கள் என்பதைப் பொதுமக்கள் அறிந்திருக்கிறார்களா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எமர்ஜென்சியை நினைவுறுத்தும் வகையில் பெரும் பாலான ஊடகங்கள் தவழ்கின்றன. பாஜகவை நிலை நிறுத்தவென்றே அவற்றில் பல, எதிர்க்கட்சிகளை மட்டுமே கேள்வி கேட்கின்றன.
கட்சிகளைக் கவிழ்க்க, எம்.எல்.ஏக்களைக் கவர,சிபிஐ, ஈ.டி என்னும் மத்திய நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவது மிக இயல்பாகிவிட்டது, பாஜக வையும், மோதியையும் எதிர்க்க நினைக்கும் எந்த அரசியல்வாதிக்கும், அவர்கள் செய்த ஊழல் தொடர்பான பயங்கள் இருப்பதால் எவரும் பெரிதாக எதிர்க்கத் துணிவதில்லை.
இந்தநிலையில்தான், பிடிஆர் என்னும் வழக்கமான அரசியல் பின்னணி இல்லாத ஒருவர் எழுந்து வருகிறார். தான் ஏற்றிருக்கும் துறை பற்றிய அறிவும், உலகளாவிய அனுபவமும், நல்ல பேச்சுத் திறனும் கொண்டவர். கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களில் தரவுகளை முன்வைத்து வாதிடக் கூடியவர். அவர் அகில இந்திய அரசியலுக்குப் புதிய முகம் என்பதாலும், ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பதாலும், அவர் குரலுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது.
சமீபத்தில், ‘த வயர்’ இதழுக்காக, கரண் தாப் பருடனான பிடிஆரின் நேர்காணல் அரசியல் தளங் களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேர் காணலின் முதல் கேள்வியிலேயே அண்ணாவின் ‘தனிநாடு கோரிக்கையை’ கண்ணி வெடியாக வைத் திருந்தார் கரண். பிடிஆர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், அதன் பின்னால் உள்ள சித்தாந்தம் என்ன என்பதை ஒரு விரிவான தளத்தில் வைத்துப் பதிலளித்தார்.
அதே போல மாநில உரிமைகள், நட்டாவின் ஒரு கட்சி ஆட்சி என்னும் பல கேள்விகளுக்கு மிகவும் தெளிவாகப் பதில் சொன்னார். இந்தித் திணிப்பு பற்றிய கேள்விக்கு அண்ணாவை மேற்கோள் காட்டிச் சொன்ன பதில் சரியாக இருந்தது என்றா லும், ஆங்கிலம் எப்படித் தமிழ்நாட்டின் முன் னேற்றத்துக்கு உதவியது என்பதைச் சொல்லி, இந்திமாநிலங்களும் ஆங்கிலம் படித்தால் நல்லது எனச்சொல்லியிருக்கலாம் என்பதைத் தவிரக் குறை காண முடியாத நேர்காணல்.
அண்ணாவுக்கு அடுத்தப் படியாக, தம் கட்சியின் சித்தாந்தத்தை நல்ல ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் தலைவர்கள் திமுகவில் இன்றுவரை இல்லை என்னும் உண்மை, பிடிஆரின் நேர்காணலைக் காண்கையில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
1962 ஆம் ஆண்டு அண்ணா பாராளுமன்றத்தில் திராவிட நாடு கேட்ட போதும், பின்னர்ச் சீனப் போர் காலத்தில் அதைக் கைவிட்ட போதும் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவை. ஆனால், அக்காலத்தில் ஜவஹர்லால் நேரு என்னும் பெரும் உலகத் தலைவர் அவருக்கு எதிரில் நிற்கையில், அவரின் ஆளுமையின் வெளிச்சத்தில், அண்ணாவின் குரலும் கொள்கையும் எடுபடாமல் போயின.
ஆனால், இன்றிருக்கும் பிரதமர் நேரு அல்ல. தன் நிர்வாகத் திறனாலோ, கொள்கைகளாலோ தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்டவரல்ல. அவருக்கு எதிரில் யாருமே இல்லாத ஒரு வெற்றிடம் இருக்கிறது. இந்தச் சூழலில், மிகத் தெளிவாக, நல்லஆங்கிலத்தில் கோர்வையாக, சரியான நேரத்தில், பிடிஆர் வழியாகக் கூட்டாட்சிக்கானக் குரல் எழுந்திருக்கிறது. வெற்றிடம் என்பதால், பிடிஆர் குரல் இன்று நாடு முழுவதும் எதிரொலித்திருக்கிறது.
பாதுகாப்பு, வெளியுறவு, பன்னாட்டு வர்த்தகம் போன்ற தளங்களில் மையப்படுத்தப்பட்ட சக்தி யாகவும், மாநில நிர்வாகம், கல்வி மருத்துவம், வேளாண்மை போன்ற தளங்களில் தன்னாட்சி பெற்ற மாநிலங்களின் கூட்டமைப்பாகவும் இந்தியா தன்னை மாற்றிக் கொள்வது, இந்தியாவை வலுவான ஜனநாயக நாடாக்கும். அமெரிக்கா போன்ற உலகின்வெற்றிகரமான ஜனநாயக நாடுகள் இந்த அமைப்பைத்தான் பின்பற்றுகின்றன.
எனவேதான் அந்த இலக்கை நோக்கி மிகவும் வலுவாக எழுந்துள்ள பிடிஆரின் குரல் முக்கியத்துவம் பெறுகிறது.
எஃப் என் சௌசா 1924-இல் கோவா, சாலிகௌவில் பிறந்தார். இளம்வயதில் தந்தையை இழந்த இவர், சின்னம்மையின் கோரப்பிடியிலிருந்து வாழ்வைப் போராடிப் பெற்றவர், அது முதல் எந்தவொரு மரபையும், வழக்கத்தையும் தேமே என்று பின் பற்றாமல், சுயாதீனமாக, தனக்கான ஒரு வழியில் வாழத் தொடங்கினார்.
மும்பை சர் ஜே ஜே கலைக்கல்லூரியில் பயின்று வந்தபோது, இந்திய விடுதலை போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
1947-இல் எஸ்.எச்.ரஜா (SH Raza), எம்.எப்.ஹுசைன் (MF Hussain), கே.எச். ஆரா (KH Ara) ஆகியோருடன் இணைந்து முற்போக்கு கலைஞர்கள் PAG (Progressive Artists Group) எனும் குழுவினைத் தொடங்கினார்.
(இதனை முன்வைத்து இவர்கள் வழி வந்த பல படைப்புகள் குறித்து, மணல்வீட்டின் சென்ற இதழில் இந்திய நவீனத்துவத்தின் அக்கினிக்குஞ்சுகள் எனும் கட்டுரை வந்துள்ளது.)
அதீதக் காட்டம் கொண்ட ஓவியங்களை மென்மேலும் உசுப்பிவிடும் வகையில், தலைப்புகளையும், அடிக்குறிப்புகளையும், கூர்மையாகப் பயன்படுத்தும் தெளிவுகொண்ட ஞானியாவார் சௌசா. எந்தவொரு வரையறையுமில்லா சௌசாவின் பாணி, காண்போரின் சிந்தனையைத் தூண்டி, மனதில் ஆழமாகப் பதிவன. அவரது தொகுப்புகளில் வழக்கமாக வலம் வரும் பாணிகள், சாயல்கள் எனப் பல உள்ளன.
உறைநிலையிலுள்ள வாழ்வின் நொடிகள், நிர்வாணநிலை, நிலப்பரப்புகள், கிருத்துவ சின்னங்கள் என யாவும் பெரும் மன பிரளயத்தின் சிக்கி உருக்குலைந்த சிதிலமடைந்த தன்மையில் காணமுடியும்.
வழமையாய் போன அலுப்பூட்டும் பொது மரபு களையும், அற்பமான அன்றாட வாழ்கையையும், மறுதலிப்பதும் சாடுவதுமே சௌசாவின் ஓவியங்களின் முக்கிய பண்பாக காணமுடிகிறது.
சௌசாவின் கலைத்திறனும் படைப்புத்தளமும் பல்வேறு கலை பள்ளிகளின் சாராம்சங்களைச் சார்ந்து வருகின்றன. பூர்வீக கோவாவின் நாட்டார் கலை வடிவங்கள், மறுமலர்ச்சி கால ஓவியக் கலை பண்பாடு, கத்தோலிக்க தேவாலய கிருத்துவ மத அபிமானம் மேலும் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய நிலவெளி பிரதேசங்கள் மற்றும் நவீனத்துவ ஓவியக்கலையின் புதிய முன் னெடுப்புகள் என அவரது ஓவியங்களின் சாராம்சம் நீள்கிறது. குறிப்பாக, குழப்படிகளுக்கு பஞ்சமில்லாத ஆண் பெண் உறவுகளில், அவர்தம் பாலுறவில் தோன்றும் மனக்கசப்புகள், உராய்வுகள் ஆகியவற்றை சௌசாவின் ஓவியங்களில் காணலாம்.
அளவாகவே கோடுகளை பயன்படுத்தினாலும், வடிவங்களும், உருவங்களும் நேர்த்தியாகவும் சமரசமாகவும் இருக்கும் மேலும் சௌசாவின் உருவங்கள்குறுக்கும் நெடுக்குமாய் பின்னியுள்ள கோடு களிலேயேக் காணப்படும்.
1949இல் லண்டன் சென்ற சௌசா அங்கு தனக்கென்றொரு அடையாளத்தை உருவாக்கத் தொடங்கினார். ஒரு வருடத்திலேயே, தனது படைப்புகளை தனியரங்கில் காட்சிபடுத்திவிட்டார் மேலும் அவரது சுயவரலாற்று கட்டுரை ‘புழுவின் நிர்வாண நிலை’ யினை (Nirvana of a Maggot) வெளியிட்டார்.
1967இல் நியூயார்க் சென்று குகென்ஹெய்மர் சர்வதேச விருதினை வாங்கிய பின்பு அங்கேயே குடிபுகுந்தார். உலகளாவிய மிகவும் பிரசித்திப்
பெற்ற அரங்கங்களில் அவரது ஓவியங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கின்றன.
லண்டன் டேட் கேலரி, புது தில்லி நவீன ஓவியங்களின் தேசிய அரங்கம், பாரீஸ் க்ரூஸ் கேலரி ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் காட்சிபடுத்தப் பட்டிருக்கின்றன.
சௌசா 2002 மார்ச் மாதம் காலமானார்.
‘எப்போதோ தான் கண்ட அற்புதத்தை, அன்றாடம் தனது வீட்டில் நிகழ்த்த விரும்பும் ஒரு குழந்தையைப் போலத்தான் இவ்வாழ்வு எனக்கு. நீங்கள் அமர்ந்திருக்கும் கட்டிலுக்குக் கீழே உள்ள அந்தப் பெட்டியில் சில தருணங்களை மடித்து வைத்திருக்கிறேன். அவற்றையே பூட்டிய கதவுக்கு உட்புறம் மீண்டும் மீண்டும் உடுத்திக்கொண்டு இத்தனிமையை மறைக்கிறேன்’. சொல்லி முடித்தபோது கோபால் சார் சட்டையில்லாமல் இருந்தார், அல்லது அவர் அப்படியிருந்ததை நான் முன்பே கவனிக்காமலிருந்தேனா?
அவரது அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருக்கும் அளவுக்குக் கோபால் சார் எப்போது பொருட்படுத்தத்தக்க ஒருவராக மாறினார் என்பது தெளிவாக நினைவிலில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்குமுன்பு அவர் முதுகலை விடுதி காப்பாளராகப் பணியில் இணைந்தபோது கரீம் சார், ‘இவரு சரிப்பட்டு வரமாட்டாரு. வார்டன்னா ஒரு இது வேணாமா? பசங்க ரூமுக்கு வெளியில பவ்யமா நின்னுக்கிட்டு அட்டெண்டென்ஸ் எடுக்குறாரு சார்’ என்று என்னிடம் சொன்னது நினைவிலிருக்கிறது. இந்த விடுதியில் நிறைய மாணவர்களும் என்னைப்போலக் கல்யாணமும், காலாவதியும் ஆகாத சில ஆசிரியர்களும் இருக்கிறோம்.
கோபால் சார் தொடர்ந்தார் ‘அந்தப் பெட்டியின் இடதுபக்க மூலையில் ஒரு டைரியும், அதற்கு எஞ்சிய முத்தங்களின் அகராதி என்றொரு பெயரும் வைத்திருக்கிறேன். அதன் நிறம் வெப்பம். அதில் நான் முழுமையாக இறங்க முடியாமல் போனமுத்தங்களைத் தேதி வாரியாகக் குறித்து வைத்திருக்கிறேன். காரணம் அவை ஒன்றல்ல இரண்டல்ல, ஒரு பட்டியல். ஒரு பள்ளிக்கூடக் குமாஸ்தாவாகத்தான் வாழ்வைத் தொடங்கினேன். வேலைக்குச் சேர்ந்த புதிதில் எதுவுமே விளங்கவில்லை, பழகியது போலிருந்தது பக்கத்து இருக்கையிலிருந்து வந்த பெண் வாடைதான். மதிய இடைவேளையில் தனது வெக்கையை உருட்டி உருட்டி சோறாக என் தட்டில் வைத்தாள். நானும் எந்தவித கூச்சமுமில்லாமல் அதையெடுத்து என்னுடலிலிருந்து நீளும் யாவைக்கும் உண்ணக் கொடுத்தேன். பணியாளர் அறையில் நாங்கள் மட்டும் தனித்திருந்த வேளைகளில், தனதுநரம்பு நாற்காலியிலிருந்து சாய்ந்து கைகளை உயர்த்தி அவள் சோம்பல் முறித்தது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அவள் ஆசிரியை, இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாய் என்பதெல்லாம் என்னை வந்தடைய ஒவ்வொருமுறையும் பார்வையற்றவனின் முதுகையே தேர்ந்தெடுக்கின்றன’.
‘ஏற்கனவே முத்தங்களுக்குப் பழகியிருக்கிறோம் என்றாலும், அன்றைய மாலை வேளையில் அனைவரும் கிளம்புவதற்காகக் காத்திருந்து மிகவும்பொறுமையாக மற்றுமொரு முத்தத்திற்குத் தயாரானோம். கைகளால் எனைப் பற்றாமல் முத்தமிடு என்றாள். கண்களைக் கட்டி விளையாடும் குழந்தையைப் போலக் காற்றில் விரல்களை அசைத்து ஒரு முத்தத்தின் மூலம் அவளுள் இறங்கினேன். ஈர உதடுகளோடு பிரிந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த பெரும்பறவையின் இறகென ஒரு ஓவியம் எங்கள் பின்னால் தொங்கிக்கொண்டிருந்தது. அதில் அருவமான வனமிருகங்களிரண்டு ஒன்றையொன்று விழுங்குவது போல வரையப்பட்டிருந்ததைப் பார்த்தேன், அல்லது அப்படித்தான் என் கண்களுக்குத் தெரிந்தது. அவள் பதறிப்போய் ‘ப்ரீத்தி உன்னைக் கம்ப்யூட்டர் லேப்ல தானே இருக்கச் சொன்னேன்’ என்றாள். ப்ரீத்தி அவளது இரண்டாவது மகள். அச்சிறுமியின் உடல்மொழி காட்டிய திசையில் மேலும் (அங்கே படிக்கும்) இரண்டு சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எதை எதையோ பொறுக்கி தேர்ந்தெடுத்து அடுக்கி இயல்பை உண்டாக்க நான் தான் முயன்றுகொண்டிருந்தேன். அவள் அவர்களோடு அவ்வளவு இணக்கமாக நிதானத்துடன் கிளம்பினாள். ஒருகணம் தற்கொலைக்குத் தூண்டியது என்னை நோக்கிய அவளது நிறை புன்னகைதான். அன்றிரவு உறக்கமில்லை, அடுத்தநாள் பள்ளிக்குள் அனுமதியில்லை, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அவள் பள்ளிக்குள்தான் இருந்தாள், கோபமெல்லாம் ஒன்றுமில்லை அந்தந்த நேரங்களில் தேவைப்பட்டது பருகிக்கொண்டோம், அவ்வளவுதான்.’
‘அதன்பிறகு உள்ளூரில் புணர சில உடல்கள் கிடைத்தன. இருப்பினும் பள்ளி பணியாளர் அறையை விடுத்து நான் விரிய முயன்ற போதெல்லாம், வானம் அச்சுறுத்தும் வகையில் தனது நிறங்களை மாற்றிக் கொண்டே இருந்தது. அன்றைய நிறம் விரிசல், துணைக்கு இருந்தவள் என்னிலிருந்து நீங்கி தூரத்தில் ஒரு லென்சைக்கொண்டு என் தொட்டி மீனை விடிய விடியத் துரத்திக்கொண்டிருந்தாள். மூன்று மாதங்கள் கழித்துப் பின்னிரவில் வந்த இன்னொருத்தியிடம், ‘அசையத் தொடங்கியதுமே என்னிடுப்பு உறைந்து விடுகிறது. நீயாவது ஏதாவது செய்யேன்’ என்று கெஞ்சினேன். அவள் ‘முத்தமிடும்போதே தோன்றியது. உன் எச்சிலில் ஏனோ தண்டனையின் ஈரம்’ என்றாள். கிளம்புவது வரைக்கும் அவளது கால்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தேன். அவள் எரிச்சலில் ‘சீ கண்டாரொலி கால நக்கி’ என்றாள். ‘கொஞ்சநேரம் கொஞ்சநேரம் என்று சொல்லிக்கொண்டிருந்தது ஒன்று தான் அந்த நேரத்தில் எனக்குப் பேராறுதல்’.
விடுதியில் ஒருநாள் இரவுணவுக்குப் பிறகு கோபால் சாரின் அழுகுரல் கேட்டது. ஒரு கைப்பந்து மைதானம் அளவிற்கு இடைவெளி, அதைச்சுற்றி செவ்வக வடிவத்தில் அடுக்கப்பட்டிருக்கும் மூன்றடுக்கு ரயில் பெட்டிகளைப் போலத்தான் இருக்கும் விடுதியின் சி ப்ளாக். இரண்டாவது மாடியிலிருந்த போதும் கூட அவரது அழுகை தெளிவாகக் கேட்டது. நான் கீழிறங்கிப் போவதற்கு முன்பே, மாணவர்கள் தங்கள் அறைகளுக்கு வெளியே நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் ‘கோபால் சாரை அடிச்சுட்டாங்க’ என்றான்.
‘யாரு பசங்களா அடித்தது?’
‘இல்லை. கரிம் சார் தான் அறைஞ்சுட்டாரூ.’
பெண்ணழகின் உச்சங்களை வாசித்திருக்கிறேனே ஒழிய அறிந்தவனில்லை. ஒரு ஆண் சுற்றியிருப்பவர்களின் பிரக்ஞையின்றித் தேம்பித் தேம்பி அழும்போதே அவனது உச்ச அழகு வெளிப்படுகிறது என்பதை அன்றறிந்தேன். கோபால் பேரழகன்.
அதன்பிறகு கோபால் சாரைபற்றி நிறையப் பேசினார்கள். நிறையக் காயங்கள் அவர் முகத்தில் புதிது புதிதாகத் தோன்றி மறைந்தன. என் மாணவன் ஒருவன் ‘அவரு ராத்தரியில இங்க இருக்கறது கிடையாது சார். வெளியில ஏதோ வேல நடக்குது’ என்றான். ‘ஹாஸ்டல்ல புரோட்டா போட்டுட்டா போதும், தலைவரு மலுமிச்சம்பட்டிக்கி சரக்கு சாப்பிட கிளம்பிட்ராரூ’ என்றான் இன்னொருவன். வெள்ளை சட்டை மட்டும் தான் உடுத்துவார், நல்லநிறம். மனக்கசப்பில் இருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைக்குண்டான தோரணை. தொடர்ச்சியாகக் கவனித்தபோதுதான் தெரிந்தது, படிக்கட்டுகளுக்கு மேலிருக்கும் தடுப்புச்சுவருக்காக அவர் ஒருபோதும் குனிவது கிடையாது. இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் ஒன்று மிதமிஞ்சிய போதை, இல்லையென்றால் பார்வை குறைபாடு.
ஒருநாள் கருக்கலில் என் அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார். ‘எங்க அப்பா செத்துட்டாரு சார். நா போயிட்டு வந்தர்றேன். ஒரு ரெண்டு நாளைக்கு ஹாஸ்டல பாத்துக்கோங்க’ என்றார். எனக்கு வித்தியாசமாகப்பட்டது அதை அவர் சிரித்துக் கொண்டே சொன்னதுதான். சோகப்புன்னகை என்றெல்லாம் வர்ணிக்க மனம் விரும்பியது. நிச்சயம் அது புன்னகை அல்ல, ஒரு பெருஞ்சிரிப்பு.
சொன்னபடியே இரண்டுநாளில் விடுதிக்குத் திரும்பினார். அவரை மீசையில்லாமல் எதிர்பார்த்திருந்தேன், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. திருத்தமாக வந்து சேர்ந்திருந்தார். இழவு விசாரிக்கத் தான் அவர் அறைக்குச் சென்றேன்.
‘என் தகப்பனாரின் சொல் ஊரில் உரத்து ஒலித்துக்கொண்டிருந்த காலமொன்றிருந்தது. தன்னை முன்னிறுத்தி எனக்கு ஒரு பெண்ணைக் கட்டி வைத்தார். நல்லவள்தான் ஆனால் அழகியென்று சொல்லுவதற்கில்லை. அவள் மீதேறியபோதெல்லாம் எனக்குத் தோன்றியவை இவை. அவளுடல் விஷமேறியதுபோலக் குளிர்ந்து கிடக்கிறது, அல்லது அவள் நாள்பட்ட நோய்க்குச் சிகிச்சைக்காக நீட்டிக் கிடக்கிறாள், இல்லையெனில் ஆட்டத்திற்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஆழ்துயிலில் சொப்பனத்திலிருந்து அவளோடிருக்கும் என்னைக் காண்கிறாள்’. பல வருடங்கள் கல்வி நிறுவனங்களில் வேலை செய்ததால் ஒரு வாத்தியாரின் உடல்மொழியில் கடினமான ஒரு சூத்திரத்தை விளக்குபவர் போலப் பேசிக்கொண்டிருந்தார் கோபால்.
‘ஊரில் ஒருநாள் காலையில் கூட்டாளியின் மனைவி புற்றுநோயில் இறந்துபோனதாகச் சேதி வந்தது. நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் குடும்பத்தின் சார்பாக அப்பாதான் போவார். அன்று ஏனோ எனக்குக் கிளம்பிப் போகவேண்டும் போலிருந்தது. அங்கே நண்பனைப் பார்த்து இழவு கொடுத்தேன். அந்த இடத்து வாசனையிலேயே இருக்க மனம் விரும்பியது. இறந்தவளின் பாதங்கள் நோக்கிய திசையிலிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது. எழுந்து அவ்வுடல் முழுமையாகத் தெரியுமிடமாகத் தேர்ந்தெடுத்து நின்றுகொண்டேன். உயிரற்று இருந்தபோதும்கூட ஒரு பெண்ணுடலால் இயக்க முடிந்த சாத்தியத்தை என்னுள் உணர்ந்தேன். ஒரு விக்ரகத்தைக் கண்டு அழும் பக்தன், மலையுச்சியை அசையாமல் கண்டமர்ந்திருக்கும் சித்தன், இவர்களைப் போலத்தான் அசைவற்றுக் கிடக்கும் அந்த உடலோடு ஒரு அலைவரிசையில் இணைக்கப் பட்டிருந்தேன். ஒரு இழவு நாளில் அவ்வுடல் ஆதிசேஷனைப்போல என் ஆண்மையைக் கடைந்து கடைந்து கண்டெடுத்துத் தந்தது. அந்த மீட்சியில் தூரத்திலிருந்த போதும் கூட என் உச்சத்திலிருந்தேன்’.
‘வீட்டிற்குத் திரும்பி ஒரு நான்கு நாட்கள் தாக்குப்பிடித்தேன். மறுநாள் இரவு ஒரு பாயில் என் மனைவியைக் கிடத்தினேன். இரண்டு குடங்களில் தண்ணீரை அவள்மீது ஊற்றினேன். தலைமயிரையும் பின்னங்கழுத்தையும் கழுவினேன். பாதங்களின் அழுக்கை மனதார நீக்கினேன். அந்தச் சுத்தத்தின் இச்சையில் அவற்றை முத்தமிட்டேன். அவளது வயிற்றுச் சிராய்ப்பு நிறத்திலிருந்தது அவ்வறை, வெளிச்சம் வேண்டி மஞ்சள் பூச அவளது ஆடைகளைக் களைந்தேன். அழுத்தித் தொட்டால் நொறுங்கும் வெண்சாம்பலின் மீது இழைப்பதுபோல, அவ்வுடலில் மஞ்சள் பூசினேன்.
ஒரு வேலியென அவளைச்சுற்றி பன்னீர் தெளித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். நெற்றிக் குங்குமமும், பிணமென அலங்கரித்த உடலின் பெருமூச்சும், ஏறியடங்கும் வயிறும்தான் எனக்கான ஓல அழைப்பு. வழக்கத்திற்கு மாறாக அவளுடலின் சூடு என்னுள் பரவியது.
மண்டியிட்டு மலைக் கோயிலேறும் பித்தனென மெதுவாக முன்னகர்ந்து அவளையசைத்தேன். ஒவ்வொரு அசைவிலும் தண்டனையின் கொப்பளங்கள் உடைந்து அதன் சீழ் விந்து நிறத்தில் வெளியேறின. பாயை நீங்கி அவளது கைகளைக் கோர்த்து வயிற்றில் வைத்தேன், மூன்றுமுறை சுற்றி வந்தேன், தலைகுனிந்து வணங்கினேன்’.
‘மறுநாள் விடியலிலிருந்து அவளென் முகம் பார்ப்பதைத் தவிர்த்தாள். மூன்றாவது நாளில் தூக்கில் தொங்கினாள். நான் செய்ததையே அவளுக்குத் திரும்பச் செய்தார்கள், அதற்கு முழுமனதாகத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கிடந்தாள். என் உடலிலிருந்து நீள வாய்ப்பிருந்த யாவும் உதிர்ந்து பொசுங்கின. வெள்ளைத் துண்டைப் பற்றிக்கொண்டு இழவுப்பெற நீட்டிய கைகளில் மீண்டும் கொப்பளங்கள். அதன் பிறகு ஊரில் என்னைச் சில ஆண்கள் குனியவும் மண்டியிடவும் அழைத்தார்கள். கைக்கு வந்த சொத்துக்களைத் தம்பிகளுக்கே விற்றேன். ஊரை நீங்கி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. தகப்பனின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கவே ஊருக்குச் சென்றேன், எத்தனையோ முறை பார்த்தும் பிணமாகக் கிடந்தது என் அப்பனின் சாயலில் இல்லை, அந்த ஊரும்தான்’.
இதைக் கோபால்சார் சொல்லிமுடித்தபோது கிட்டத்தட்ட இடைவெளியே இல்லாமல் அவரருகே அமர்ந்திருந்தேன். அவர் வர்ணித்த சவக்களையைப் போலவே அவரது முகமும் மினுங்கியது. கைகளைப் பற்றினேன், தோளில் சிறிதுநேரம் சாய்ந்திருந்தேன், பிறகு அவர்தான் என் பின்னந்தலையை வருடி தன்பக்கம் திருப்பி என் உதடுகளில் முத்தமிட்டார்.
கல்லூரி விடுதிகளுக்கெனச் சில விதிமுறைகள் உண்டு. அதன்படி மாணவர்களுக்குப் பிறகே விடுதி பணியாளர்கள் உணவருந்த வேண்டும்(ஆசிரியர்கள் விதிவிலக்கு). அன்று காலை காந்திபுரம் வரைக்கும் செல்லவேண்டியிருந்ததால் சீக்கிரமே தட்டை எடுத்துக் கொண்டு உணவறைக்குச் சென்று காத்திருந்தேன். கோபால் சாரைக் காணவில்லை. அன்றைய அட்டவணைப்படி தோசை, நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு தட்டுடன் வந்தமர்ந்தார் கோபால். அதில் இரண்டு லட்டுகள் இருந்தன. ஒன்றையெடுத்து என் தட்டில் வைத்து ‘வெள்ளன எந்திரிச்சி கோயிலுக்குப் போயிட்டு வந்தேன் சார், நல்ல பசி’ என்றார்.
கல்லூரிகளில் தங்களது அதிகாரத்தை அவ்வப்போது ருசிக்க நினைப்பவர்கள், யாருக்கும் சொல்லாமல் விடுதிக்குள் ரோந்து வருவது உண்டு. முதலில் பேராசிரியராகச் சேர்ந்து மாணவ சேர்க்கை இல்லாத காரணத்தால் அங்கேயே விடுதி உணவு ஒப்பந்தத்தை எடுத்து நடத்திவந்த முரளிக்கும் ‘ரவுண்ட்ஸ்’ போக ஆசை வந்ததில் பெரிய தவறொன்றும் கிடையாது. சிக்கலே கோபால்சார் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தது தான்.
கோபாலைப் பார்த்து ‘ஏன் சார் பசங்களுக்கு முன்னாடி தட்டத் தூக்கிக்கிட்டு வந்து ஒக்காந்து இருக்கிறீர்கள்? கொஞ்சம் பொறுத்து சாப்பிட்டா ஆவாதா?’ என்றார்.
இவர் சிறிதும் யோசிக்காமல் ‘நான் திங்கிற இந்த ரெண்டு தோசையில தான் உங்குடி முழுகி போயிரப் போவுதா?’ என்று சாப்பிடுவதை நிறுத்தி எழுந்து நின்றார்.
அந்த ஆள் எங்கள் மேஜையருகே வந்து கோபாலை அறையத் தொடங்கினார். தன் ஈரக்கையால் ஆன மட்டும் தடுத்துப் பார்த்தும் பயனில்லை. ‘கணக்க முடிச்சிவிட்றா’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த கோபால் சார் ஒரு கட்டத்தில் கைகழுவும் இடத்தில் வழுக்கி விழுந்தார். ‘கணக்கு கேக்குது நாயி’ என்று காரி உமிழ்ந்தார் முரளி. பசங்களும் நாங்களும் இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்தோம்.
கோபால் சார் எழுந்து விடுவிடுவெனத் தன் அறைக்குச்சென்று தனது பெட்டியை எடுத்துக்கொண்டு யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விடுதியை விட்டு நீங்கினார். பலமுறை முயன்றும் அவரை அதன்பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை.
இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம். பெண், வாழப்பாடி பக்கம்.
பா.ரஞ்சித் அட்டகத்தியிலிருந்து சார்பட்டா பரம்பரை வரைக்கும் ஒரு வெற்றிகரமான வெகுசன திரைப்பட இயக்குனர். வெகுசனத்தின் மொழியில் விளிம்புநிலையினர் பிரச்சினைகளைப் பேசியவர். ரஞ்சித்தின் வருகைக்குப் பின்னர் தமிழ் வெகுசன திரைப்படச் சூழலில் விளிம்புநிலையினர் பற்றிப் பேசுவதற்குப் புதிய சந்தை உருவாகியுள்ளது என்பதே மகிழ்ச்சிக்குரியது.
மேலும், தமிழில் அதுவரை சுயாதீனப்படங்களிலும் ஆவணப்படங்களிலும் மட்டுமே பேசி விவாதித்து வந்த மாந்தர்களின் குரல்களை அழகியலுடனும் சுயமரியாதையுடனும் வெகுசனத்தளத்திற்குக் கொண்டுசென்றவர்.
வெகுசனத்தளமென்பது மையநீரோட்டத்துடன் தொடர்புடையது. ஆவணப்படங்களும் சுயாதீனப் படங்களும் மிகக் குறைந்த அளவிலான பார்வையாளர்களைக் கொண்டது. இவற்றிற்கான பார்வையாளர்கள் முன்னமே அரசியல் விழிப்புப் பெற்றவர்களாகவும் பால்புதுமையினர் பற்றிய விவாதங்களிலும் இருப்பர். வெகுசனத் தளப் பார்வையாளர்கள் அவ்வாறில்லை பெரும் மந்தையைப் போன்றது. வெகுசன ரசனை ஒழுங்கின்மையைப் போலத்தோற்றமளித்தாலும் தன்னளவில் ஒரு ஒழுங்கைக் கொண்டே இயங்குகிறது. அதனுடன் பேசுவதற்கென ஒரு மொழி இருக்கிறது. அம்மொழியில்தான் வெகுசன கலைகளைப் பேசுகின்றன.
வெகுசன திரைப்படங்கள் தன்னகத்தே வைத்திருக்கும் திரைக்கதைக்கான விதிமுறைகள், நடிகர் நடிகையர் தேர்வு, அதன் இசை வடிவம், காட்சிகளின் ஊடான பாடல்கள், விளம்பர உத்தி போன்றவையெல்லாம் அம்மொழியைச் சார்ந்தவை. இவ்வாறு கழுத்தை நெறிக்கும் காரணிகளுடனே ஒரு திரைப்படம் வெளியாகிறது. ஆக, ஒரு திரைப்படத்தைத் தீர்மானிப்பதில் வெகுசனத்தின் பங்கே பிரதானமானது. வெகுசன ரசனையைப் புரிந்து கொள்வதும் அதன் கவனத்தைக் கோரும் படங்களும் திரைக்கலைஞர்களின் பிரதான பணி. இவ்வாறான எந்தச் சிக்கல்களும் சுயாதீன திரைப்படக் கலைஞனுக்கோ ஆவணப்படக் கலைஞனுக்கோ இல்லை. அவனுக்கான சந்தை வேறு, அவனுக்கான பார்வையாளர்கள் வேறு. அவர்களின் படைப்புலகம் வேறானது. அவை வேறுவகையான விதிமுறைகளுடன் மாற்று அழகியலை பேசுபவையாக இருக்கின்றன.
அடிப்படையாக எல்லாக் கலை வெளிப்பாடுகளைப் படைக்கும்போது கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “இது யாருக்காகச் செய்யப் படுகிறது?” என்பதே. அவ்வாறு பார்க்கையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ வெகுசனத்தை மனதில் கொண்டு உருவானதில்லை என்றே தோன்றுகிறது. காரணம் அதன் திரைமொழியில் காணப்படும் குழப்பம்.
படம் துவங்கும்போது நாடகமாக்கல் பற்றிய புனைவு - ஆவணப்படமாக நகர்ந்தது. ஆவணப்படத்திற்கான தன்மைகளைக்கொண்டு சாதி, பால்புதுமையினர் உரையாடல்களைப் பேசுகிறது. சற்று நேரத்தில் புனைவாக முயற்சிக்கிறது. இன்னும் நேரம் சென்றபோது நாடகமாகவே நகர்கிறது. அதற்கு அப்பால் பிரச்சார மேடையாக நகர்ந்து இறுதியில் குழப்பமே அதன் மொழி என விடைபெற்றுக் கொண்டது. வெகுசன திரைப்படத்திற்கான மொழியுமின்றி, சுயாதீன படத்திற்கான மொழியுமின்றித் தன்னைத் தானே குழப்பிக்கொண்டிருக்கிறது.
பா.ரஞ்சித் தன்னளவில் வெற்றிகரமாகக் கையாண்ட வெகுசன திரைமொழியின் மறதியில் கட்டமைந்திருக்கிறது இதன் திரைக்கதை. பார்வையாளர்களுக்கு அறிவு புகட்டும் பாணியிலான உரையாடல்கள், சமூகப் பிரச்சினைகளை இருமைகளாக மட்டுமே பார்க்கத் தூண்டும் வழக்கமான (வழக்கமானதல்ல என நம்ப வைப்பதற்காகப் பால் புதுமையினர் கதாப்பாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன) கதாப்பாத்திர சித்தரிப்புகள், துண்டு துண்டான திரைக்கதைகளின் நெகிழித்தனமான ஒருங்கிணைப்பு சுயாதீன படப் பார்வையாளர்கள் கேட்ட, பார்த்த, விவாதித்தவற்றை மீண்டும் மீண்டும் கூறும்போது வரும் சலிப்பே இப்படம். படமும் வெகுசனத்தை மனதில் கொள்ளவில்லை என்பதால் இங்குப் படம் சுயாதீன படத்தை விரும்பும் பார்வையாளர்களுக்கானது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. படம் சுயாதீனத்தன்மையும் பெறவில்லை என்பதே அதிருப்தி. உணர்வு அடிப்படையிலும் திரைக்கதை அடிப்படையிலும் படம் ஒரு தொடர்ச்சியின்மையிலேயே நகர்கிறது. வசனங்களில் காணப்படும் செயற்கைத்தன்மை மைய கதாப்பாத்திரத்தின் மீதான பார்வையாளரின் நெருக்கத்தைக் குறைத்துவிடுகிறது.
திரைப்படம் பார்வையாளனுடன் உரையாட ஏதுமின்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறது. பார்வையாளர்களுக்கு அறிவுப் புகட்டவேண்டிய பெரும் கடமை தனக்கிருப்பதாகப் படம் காட்டிக் கொள்கிறது. அதனால், திரைப்படம் தன்னை மேன்மை பொருந்தியதாகக் கருதிக்கொண்டு எதிரிலுள்ள பார்வையாளனை அறிவற்றவனாக்குகிறது.
ரெனே பாத்திரம் தன்னுள் ஏறிக்கொண்ட பக்குவமானவள் என்ற சோடனைகள் எதிரிலுள்ள ஏனைய அனைவரையும் குறை அறிவுடையவர்களாக அரசியல் சரி தன்மை தெரியாதவர்கள் என்பதாகக் கருதி அறிவுரைகளை வாரியிரைக்கிறது. இதுவே, ரெனே கதாப்பாத்திரம் பார்வையாளர்களை எரிச்சலுறச் செய்வதற்கான பிரதான காரணம்.
நாடகத்தைத் தடுக்கவரும் நபரும் நாடக நடிகரைப் போல வேடமிட்டு வந்து நிகழ்த்திவிட்டு செல்வதைப் பார்த்ததும் அவரும் நாடக குழு நபர் என நினைக்கையில், பின்னர் அவர் ஒரு அடிப்படைவாத குழுவைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. அந்தக் கதாப்பாத்திரம் கதையின் ஓட்டத்தில் இல்லாமல் திடீரெனக் கதையை முடித்து வைப்பதற்குப் பயன்படுத்துவது என்பது அபத்தம். இன்னும் ஒரு படி சென்று அர்ஜூனைத் திருத்தியது போல எதிர்பாராத திருப்பமாக அவரையும் பேசித் திருத்தியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். திரைப்படம் நெடுந்தொடராகிவிடும் என்ற காரணத்தால் அம்முடிவை இயக்குனர் கைவிட்டிருப்பார் என நினைக்கிறேன்.
புதிய தலைமுறை லிபரல் அரசியல் சிந்தனைக் கொண்ட இளைஞன் காதலி ரெனேயுடன் இளையராஜா பாடல் பாடியதற்காகக் கோபப்பட்டான் என்பதே ‘அவன் போலியாகச் சாதி ஒழிப்பு பேசுபவன்’ என்பதை நிறுவ போதுமானது எனச் சித்தரித்திருப்பது எத்தனை வேடிக்கையானது.
இந்தப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான நல்லவிசயம் அர்ஜுன் ஒரு பட்டியலினப் பெண்ணைக் காதலிப்பதை தெரிந்த அவனின் அம்மா அவனுக்கு ஏதோ பேய் புகுந்து பேசவைக்கிறது என்கிறாள். இது ஒரு பிரமாதமான உற்றுநோக்கல். தமிழ் சமூக நெடுங் காலமாகவே காதல் உணர்வை பேய் பிடித்திருப்பதாகவே (முருகு அணங்கியதாக) கருதி வருகிறது. மரபான சமூகங்களின் காதல் பற்றி யோசனையைச் சிறு கீற்றில் காட்டிவிட்டு சென்றதே பிரமாதமானது.
‘நட்சத்திரம் நகர்கிறது’ சாதிபற்றிய உரையாடலுக்கும் மாற்றுப் பாலுறவு பற்றிய உரையாடலுக்கும் பயன்படுத்தியிருப்பது நாடகக் கலைஞர்களையும் நாடக ஒத்திகையையும். கலைஞர்கள் என்பவர்களே சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள். சமூகம் தன்பால் கொண்டிருக்கும் விழுமியங்களுக்கு அப்பால் தன்னை நிறுத்திக் கொள்பவர்கள் அல்லது நிறுத்திக் கொள்ளத் தகவமைக்கப்பட்டவர்கள்.
ஒரு சமூக மனிதனுக்கான விதிமுறைகளில் இருந்து சற்றே விலகலான தன்மையைக் கலைஞர்கள் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஒரு சமூக மனிதன் பாலினத்திற்கென வரையறுக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே பொதுவெளியில் உடுத்த இயலும் எனும்போது சடங்கு மற்றும் கலை சார்ந்தவர்களுக்கு அதில் ஒரு தற்காலிக விடுப்புள்ளது.
ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் உடையணியும் சாத்தியம் கொண்டவர்கள். ஆண் பெண்ணாகப் பாவனை செய்யும் சாத்தியம் பெற்றவர்கள். பெண் வேடக் கலைஞரின் பாவனைகள் சராசரி ஆண் போன்றதல்ல. அதனால், கலைஞனின் பால் ஒழுக்கம் பற்றிப் பேசுவது ஒட்டு மொத்த சமூகத்தைப் பேசுவதாகிவிடாது என்பதாகச் சமூக மனிதன் கருதுகிறான்.
‘கூத்தாடி வீட்டில் பெண்ணை எடுக்காதே’ என்று கூறும் பழமொழிகள் உங்கள் நினைவிற்கு வரட்டும். அதனால் கலைஞர்கள் முறையற்ற பால் ஒழுங்குடன் இருப்பதாகவே சமூகம் கருதுகிறது. அவ்வாறானக் கருத்தையே திரைப்படம் சமூகத்திற்கு பால்புதுமையினர் பற்றிப் பேச எடுத்துக்கொண்டு இருப்பது எந்த அதிர்வையும் ஏற்படுத்த போவதில்லை. மாறாகச் சமூகம், ‘கலைஞர்கள் அப்படியானவர்கள் என்று நான் முன்னமே சொல்யிருக்கிறேன்’ என்று பெருமை பேசிக் கொள்ளும்.
தமிழ் சினிமாவில் பால்புதுமையினர் பற்றியும் மாற்றுப் பாலுறவுகள் பற்றிய திரைப்படங்கள் குறைவுதான் அதற்காக நட்சத்திரம் நகர்கிறது அதனைப் பூர்த்திச் செய்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. எளிய மனிதர்களிடம் காணப்படும் மாற்று பால்ஒழுக்கம் பற்றிய பிரத்யேக வாழ்வையோ அழகியலையோ காட்ட முயற்சிக்கவில்லை. மாறாக, கலைஞர்கள் விசித்திரமான பாலுறவு பழக்கம் கொண்டவர்கள் எனக் காட்டியிருக்கிறது. மேலும், ஒரே படத்தில் அரசியல் அத்தனையையும் பேசிவிட்ட திருப்தியைப் படம் அடைந்திருக்கிறது.
வழக்கமாகப் பா.ரஞ்சித் படங்கள் சுயமரியாதைத் தன்மைகொண்டதாக இருக்கும். அதற்குக் காரணம் அதன் புனைவாக்கத் தன்மையில் விளிம்புநிலை சமூகம் பற்றிய நேர்மறையான, சமூகக் கட்டமைப்புக் குறித்தான பிரக்ஞையைக் கொண்டிருப்பது.
நாம் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றிய எந்தச் சொல்லாடலை வளர்த்தெடுக்கிறோமோ அதுவே பின்னர் யதார்த்தமாகச் சமூகத்தில் நிலவும். வழக்கமாக விளிம்பு நிலையினரின் இருப்பிடத்தை(சேரிகளை) காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் (அசுத்தமானவர்கள், ரவுடிகள், ஒழுக்கம் குறைவானவர்கள் வாழுமிடம்), பா.ரஞ்சித்தின் அட்டகத்தி முதல் சார்ப்பேட்டா வரை காட்டப்பட்ட இருப்பிடத்திற்குமான (எல்லா இருப்பிடங்களைப் போலவும் சண்டைச் சச்சரவுகளுடனும் அவர்களுக்கே உண்டான வாழ்க்கை அழகியலுடன் வாழும் மனிதர்களின் இடம்) வித்தியாசம், கதைமாந்தர் தான் அவமானப்படும் தருணங்களில் காட்டும் எதிர்வினை போன்ற காரணிகளே இந்தச் சுயமரியாதைத் தன்மையைக் கொண்டு வருகிறதே தவிர வசனங்களினால் மட்டுமே அல்ல.
இந்தக் காரணிகள்தான் வளர்த்தெடுக்கவேண்டிய சொல்லாடல்களின் சாரமாக இருக்கிறது. ஏனெனில் சமூக மையநீரோட்டத்துடன் இணைவதற்கே இச்சொல்லாடல் முயற்சிக்கின்றன.
‘நட்சத்திரம் நகர்கிறது’ தன்னுள் கொண்டிருக்கும் ஆவணத்தன்மை இந்தச் சுயமரியாதை காரணியைத் தின்றுவிடுகிறது. ஏனெனில், ஆவணங்கள் யதார்த்தத்தின் மீது கட்டமைவதாகக் காட்டிக்கொள்ளும். யதார்த்தத்தைப் பேசும் படங்கள் விளிம்புநிலையினரை குறுகச் செய்கிறது.
யதார்த்தத்தைத் திரை அப்படியே காட்டுவதாக எண்ணும் திரைப்படங்கள் (மதுரைக்காரர்கள் எப்போதும் கையில் அருவாளுடன் அலைபவர்கள்) புதிய சொல்லாடல்களை உற்பத்திச் செய்யவிடாது தடுக்கின்றன. இதனால், நம்பிக்கையை ஏற்படுத்தும் லட்சியவாத சொல்லாடலை வளர்த்தெடுக்கும் சாத்தியம் குறைவு. இங்கு யதார்த்தம் எனச் சொல்லப்படுவதும் தொடர் விவாதங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பாதிப் பொய்கள் (பாதி உண்மைகள்).
புதிய அலை இயக்குனர்களான நாகராஜ் மஞ்சுளே, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்கள் லட்சியவாத சொல்லாடல்களைப் பேசியதன் மூலமாகவும் வெகுசன திரைமொழியை அதற்குரிய சாத்தியம் கொண்டது எனக் காட்டியதாலும் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ஆனால், விளிம்புநிலை சமூகங்களின் சுயமரியாதையைக் கொல்லும் ஆவணங்களைப் பேசும் படங்களால் ஒரு போதும் இலட்சியவாதத் தன்மையைத் தர இயலாது. மேலும் மைய நீரோட்டத்துடன் இணைய விரும்பாத சொல்லாடல்கள் இனவாதத்தின் சாயலையே பெறும்.
“தத்தவவாதிகள் உலகை பல்வேறு விதமாக விளக்கினார்கள்: இருந்தபோதிலும், முக்கியமானது அதனை எப்படி மாற்றுவது என்பதுதான்”
- கார்ல் மார்க்ஸ்
“The philosophers have only interpreted the world in various ways; the point, however, is to change it.”
- Karl Marx
தத்துவத்தின் பணி உலகை குறித்த மற்றொரு விளக்கம் அல்ல. உலகை மாற்றுவதே என்றார் கார்ல் மார்க்ஸ். காரணம், இதுநாள்வரை தத்துவவாதிகள் உலகு, மனிதர்கள், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றின் தொடர்புகளையும், இப்பிரபஞ்ச தோற்றம் குறித்தும், இந்த வாழ்விலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு விளக்கங்களை கூறி வந்தார்கள். கிரேக்கத்தைச் சார்ந்த சாக்ரடிஸ் துவங்கி ஜெர்மானிய ஹெகல் வரை மேற்கத்திய சமூகங்களில் வாழ்க்கை, உலகம், மனிதன், பிரபஞ்சம், உயிர் குறித்த பல விளக்கங்கள் தத்துவமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்திய ஒன்றியம் உள்ளிட்ட கீழ்திசைச் சமூகங்களில் தத்துவம் என்பது வீடுபேறு அதாவது மோட்சம், தனிமனித விடுதலை அதாவது பற்றற்ற துறவறம் என்றும், பிறவியற்ற பெருவாழ்வு, உலக தோற்றம் பற்றிய பல விளக்கங்களை தந்துள்ளது. வேதங்கள் துவங்கி இன்றைய ஆன்மீக கார்ப்பரேட் சாமியார்கள் வரை இதனை விளக்க பல்வேறு தத்துவப் பள்ளிகளும் இருந்து வந்துள்ளது.
அனைத்துமே மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவதைப் பற்றியும் அதற்கான சரியான வழிமுறைப் பற்றியும் பேசவில்லை. உற்றுக் கவனித்தால், இத்தத்துவங்கள் அனைத்தும் தனிமனித நோக்கில் முன்வைக்கப்பட்டவையே தவிர, ஒரு சமூக முன்னேற்றம் குறித்து கவலைப்படவில்லை. உலகளாவிய தத்துவங்களில் நாத்திகம் சார்ந்த கடவுள் மறுப்பு சிந்தனைகள் ஓரளவு சமூகத்தின் நிலைகுறித்த விமர்சனங்களை, அது மாறவேண்டிய தேவைகள் குறித்து பேசினாலும், முறையான திட்டமிடலுடன் கூடியதாக அவை அமைய வில்லை.
பொதுவாக, தத்துவங்கள் தனிமனிதர்களை அடிப்படை அலகாக கொண்டிருக்கின்றனவே தவிர, சமூகம் குறித்த கவனம் அதிகம் இல்லை. இங்கு தமிழ் சிந்தனை மரபு திணை என்கிற சமூகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்று என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். தமிழ் சிந்தனை மரபில் தனிமனிதன் குறித்த கவனத்தைவிட, குழும முன்னேற்றமே அடிப்படையாக இருந்துள்ளது.
தமிழ் குடிமரபு குறித்து ஒரு தனித்துவமான பண்பாக இது அமைந்துள்ளது. அவ்வகையில் தமிழ் சிந்தனை மரபின் முக்கியத்துவம் ஆய்விற்குரிய பொருளாக உள்ளது. அது விரிவாக மற்றொரு தளத்தில் உரையாடப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பதிவு செய்துவிட்டு தொடரலாம்.
மார்க்ஸ் கூறியதைப்போல உலகை மாற்றுவது தத்துவத்தின் பணி மட்டுமல்ல, இலக்கியத்தின் பணியும்கூட. தத்துவம் உலகை அறிவார்த்தமானதாக மாற்ற முயல்கிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வார்த்தமானதாக மாற்ற முயல்கிறது. உலகுடன் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை உருவாக்குவதே கலை இலக்கியத்தின் பணி. ஆதிச் சமூகத்தின் குகை ஓவியங்கள், பாவனை நடனங்கள், சடங்குகள், நாட்டார் மரபுகள், கூத்துகள் ஆகியவை தொன்மங்களாக வெளிப்பட்டது துவங்கி இன்றைய கலை இலக்கிய முயற்சிகள் வரை உலகை உணர்வு சார்ந்த ஒன்றாக உருவாக்கியுள்ளன.
திடப்படுத்தப்பட்ட அல்லது கருத்தாக்கமாக மாற்றப்பட்ட உணர்வே அறிவு என்பதால், இலக்கியத்தின் திடப்படுத்தப்பட்ட உணர்வாக தத்துவம் அமைகிறது. அல்லது தத்துவம் இலக்கியத்தின் அறிவாக அமைகிறது. அதனால், தத்துவத்திற்கே முன்னோடியாக இலக்கியம் அமைகிறது. ஏனெனில் உணர்விலிருந்துதான் அ றிவு உருவாக்கம் நிகழ்கிறது. ஆகவே, இலக்கியத்திலிருந்து வாழ்க்கையும், வாழ்விலிருந்து தத்துவமும் பிறக்கிறது. வாழ்க்கைத் தத்துவங்களை புனைவது மட்டுமல்ல இலக்கியம், வாழ்வை தத்துவமயமாக வாழ்வதற்கான வேட்கையைத் தருவதும் இலக்கியமே.
அதனால்தான், தத்துவத்திற்கு முன்பே கலைகளும் புனைவடிவங்களான இலக்கியமும் உருவாகியுள்ளது. இலக்கியத்தின் தோற்றத்திற்கு பிந்தையதாகவே தத்துவத்தின் தோற்றம் அமைந்திருக்கிறது. இலக்கியம் அதாவது கலை இலக்கியம் ஒரு சமூகத்தினைச் சார்ந்த மனித உணர்வுகளுடன் உறவுகொண்டது. மேலும், ஒரு சமூகத்தின் உணர்வியக்கமாக இருந்து அதனை சமூகமாக காப்பதிலும் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. தத்துவத்தின் தோற்றுவாயாக இலக்கியம் அமைந்த போதிலும், இலக்கியம் தனக்கென்று ஒரு தத்துவத்தைக் கொண்டுள்ளது. அது என்ன? என்பதை உரையாடிப் பார்ப்பதே நோக்கம்.
தத்துவம் என்று புழக்கத்தில் உள்ள சொல் வடமொழியைச் சார்ந்தது. அதற்கான சரியான தமிழ்ச்சொல் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருள் என்பதிலிருந்து தற்காலத்திற்கான சொல்லாக மெய் இயல் என்பதைப் பயன்படுத்தலாம். இச்சொல்லே தத்துவத்தின் சிக்கலை தமிழில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது தத்துவம் என்பது மெய் குறித்த இயல். மெய் என்றால் உண்மை அல்லது பண்டிதர் அயோத்திதாசர் பயன்படுத்தும் உள்+மெய் உள்ளார்ந்துள்ள மெய். இந்த உள்ளார்ந்த மெய்என்பதே இறை மறுப்பின் அடிப்படையாக அமைகிறது.
சத்தியம், உண்மை இரண்டும் மாறுபாடு உடையது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சிந்தனைமுறையில் மெய் அதாவது உண்மை என்பதே சத்தியம் என்பதாக கருதப்படுகிறது. ஒருவகையில் தமிழில் மெய் என்பது உடலை பருப்பொருளைக் குறிப்பதைப்போல, சத்தியம் என்பதில் உள்ள ‘சத்’ என்பதும் வடமொழியில் பொருளைக் குறிப்பதே. எனவே உண்மை என்பது ஒரு கருத்து அல்ல, பொருள் அல்லது பொருள்வயமான கருத்து என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கு சத்தியம் என்பது ஒரு மாறா உண்மை என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், உண்மை மாறும் தன்மைக் கொண்டது. சத்தியம் மாறாத்தன்மைக்கொண்ட தர்மாவுடனும், உண்மை மாற்றத்திற்குறிய அறத்துடனும் இணைந்துள்ளது என்பதை அறிவது அவசியம். இத்துணை நுட்பமும், கனதியும் கூடியதாக இருப்பதே தத்துவம் குறித்த சிந்தனையிலுள்ள சிக்கல். மிகவும் நுண்மையான பல வேறுபாடுகளை வித்தியாசங்களைக் கொண்டதே தத்துவம் (மெய்யியல்). (இனி இக்கட்டுரையில் கூடுமானவரை தத்துவம் என்ற சொல்லிற்கு பதிலாக மெய்யியல் என்ற சொல்லையே பயன்படுத்தலாம். தத்துவம் என்ற சொல் உருவாக்கும் படிமம், மெய்யியல் என்பதில் உருவாகுவதில்லை. காரணம் அச்சொல் மக்களின் வழக்கில் பயன்பாட்டில் ஒரு சிந்தனைப் படிமமாக மாறவில்லை இன்னும்.)
இந்திய மெய்யியல் சார்ந்த கலைச்சொற்களில் பல குழப்பங்கள் உள்ளது. பரவலாக தத்துவம் (மெய்இயல்) என்பதை, கோட்பாடு என்பதை எல்லாம் சித்தாந்தம், வேதாந்தம் என்றே புழக்கத்தில் பயன்படுத்துகிறோம். தத்துவம் படித்தவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் கூட இப்படியே பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் அது தவறானது. காரணம்...
1. வேதாந்தம் வேதத்தை பிரமாணமாகக் (ஆதாரமாகக்) கொள்வது. அது விஷ்ணுவை முதன்மைக் கடவுளாக கொள்வது. அதன் சமய வடிவம் வைணவம் (தமிழில் மாலியம்).
2. சிந்தாந்தம் சித் என்கிற அறிவைப் பிரதானமாகக் கொள்வது. சிவனை முதன்மையானக் கடவுளாகக் கொள்வது. அதன் சமயவடிவம் சைவம் (தமிழில் சிவனியம்).
3. மெய்யியல் (தத்துவம்) என்பதன் உட் பிரிவுகளே சித்தாந்தம், வேதாந்தம், சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை. ஆகையால் மார்க்சிய சித்தாந்தம் போன்ற சொற்பயன்பாடு அடிப்படையில் தவறானவை. மார்க்சிய மெய்யியல் என்று சொல்வதே சரியானது.
இந்திய ஒன்றியச் சிந்தனை மரபில் பெரும்பாலும் தத்துவம் இறையியல் சார்ந்ததாகவே உள்ளது. அதன் இறுதி இலக்கு கடவுள் ஏற்பு X மறுப்பு என்பதே. அல்லது வேதத்தை ஏற்பது X மறுப்பது என்பதே. ஆனால், தத்துவம் (philosophy) என்று மேற்கத்தியப் பொருளில் சொல்லப்படும் ஒன்றாக இவை இல்லை. இந்தச் சிக்கலை உணர்ந்து ஆங்கிலேய காலனியம் தனது ஆளுகைத் தொழில்நுட்பமாக மீள் கண்டுபிடிப்புச் செய்த வேதங்கள் அது குறித்த உரையாடல்கள், சிந்தனைகள் ஒழுங்கமைக்கப்பட்டதே இந்தியத் தத்துவமாக இன்று சொல்லப்படுகிறது. இதன்பின் ஒரு உயர்சாதிய மேலாண்மைக்கான பின் காலனியச் சிந்தனையின் அரசியல் உள்ளது. ஆனால், மேற்கத்தியச் சமூகத்தில் தத்துவம், அறிவியல், இறையியல் (மதம்) என்ற பிரிவுகள் கிரேக்கர்கள் துவங்கி இருந்து வந்தது. அது தத்துவம் (philosophy) தர்க்கம் (logic தமிழில் அளவையியல்) சார்ந்த அறிவு மரபாக இருந்தது. இறையியல் (theology) மத உணர்வு சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையாக இருந்தது. அறிவியல் என்பது தர்க்க நெறிபட்ட, நிரூபிக்கப்பட்ட அறிவு சார்ந்ததாக இருந்தது.
இந்திய தத்துவம் தர்க்கத்தைப் பயன்படுத்தி கடவுள் என்பதை நிரூபிப்பதாகவும், சமயம் சார்ந்ததாகவும் இருந்தது. நாத்திகம்கூட கடவுள் மறுப்பில் செலுத்திய வாதங்களை சமூக மாற்றம் குறித்து பேசவில்லை. ஆக, இந்திய தத்துவ மரபு, இறை மையவாதமாக அமைந்த இறையியல் சார்ந்ததாகவே அமைந்தது. அதிலிருந்து விலகிய சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை தர்க்க நெறியில் அமைந்த சரியான பொருளில் தத்துவம் அல்லது மெய்யியல் என்ற சொல்லக்கூடியவையாக உள்ளன. ஆகையால் மெய்யியல் குறித்து பேசும் போது இறை சார்ந்து பேசுபவையும் (வேதாந்தம், சித்தாந்தம் ஆகியவை), மெய் சார்ந்து பேசுபவையும் (சார்வாகம், பௌத்தம், சமணம், ஆசிவகம் ஆகியவை) என்ற பிரிவு அவசியப்படுகிறது. அதனால் இலக்கியமும் இறை சார்ந்து பேசுவதாகவும், மெய் சார்ந்து பேசுவதாகவும் பண்டைய செவ்வியல் சமூகங்களில் அமைந்தது.
சான்றாக? தமிழின் காப்பிய மரபு ஒரு சமயம் சார்ந்து அமைந்தாலும் அது மெய்காண்முறை குறித்துப் பேசுகிறது. குறிப்பாக மணிமேகலை, நீலகேசி போன்றவற்றை சுட்டலாம். தமிழில் மெய்யியல் சார்ந்த ஒரு உரையாடல் என்பது இக்காப்பியங்கள் வழியே அமைகின்றன. அதன்பின் சித்தாந்தம் என்கிற சைவ சாத்திரங்கள் வருகின்றன. இவை வைதீகத்தைவிட அதிகம் வேதச்சார்புடையதாக தங்களைக் காட்டி வைதீக பார்ப்பனிய மேலாண்மையை, சைவ வேளாளர்கள் மேலாண்மையாக மாற்றின. இதில்தான் சைவமும் தமிழும் இணையும் புள்ளிகள் உருவாகுகிறது. இங்கு ஒன்றை அவசியம் சுட்ட வேண்டும். தமிழருக்கான மெய்யியல் குறித்து விரிவான ஆய்வுகள் அவசியம். அந்த ஆய்வுகளுக்கான அடிப்படைகளை இலக்கியத்தில் எப்படிப் பெறுவது என்பதற்கு இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் இடையிலான பயிற்சி அவசியம் என்பதைச் சொல்லித் தொடரலாம்.
மெய்யியல் அல்லது மெய்ப்பொருளியலின் அடிப்படைகள்
பொதுவாக கோட்பாட்டு அடிப்படையில் மெய்யியலை இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம். வழக்கமாக மார்க்சியம் கூறும் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பது உலகின் முதன்மையானது எது? என்ற அடிப்படையில் பிரிக்கப்படும் பிரிவு. ஆனால், இங்கு சுட்டப்படும் பிரிவு மெய்யியலின் சிந்தனைமுறைச் சார்ந்த ஒன்று. அல்லது சிந்திப்பதின் பின்னுள்ள பிம்பம் (தமிழில் படிமம்) சார்ந்த ஒன்று.
மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் ஒரு சக்தி அல்லது உண்மை இருப்பதான பிம்பம். இது பொதுவாக இறையியல் பின்னணி கொண்டதாக அல்லது எல்லாவற்றிற்கும் அப்பால் அனைத்தையும் இயக்கும் சக்தி அதாவது மூலாதார சக்தி என்று ஒன்று உள்ளது என்பதை நம்புவது. அதுவே உலகை இயக்குவது. உலக உற்பத்தி என்பது ஒரு சக்தியால் நடைபெறுவது என்பது. இதன் பிம்பம் பானையை வனைய ஒரு குயவன் தேவை என்ற பிம்பச்சிந்தனை எனக் கூறலாம்.
இதன் அடிப்படைகள்
1. பேருண்மை - உலகம் - மனிதன் இடையிலான தொடர்புகளை ஆராய்வது அல்லது அப்பாலை உண்மைகளை அறிய முயல்வது
2. பிரபஞ்சத்திற்கு வெளியே பேருண்மை உள்ளதாக நம்புவது
3. பேரறிவைப் பெறுவதே ஆன்மீக இன்பம் என்பது அதாவது ஞானம் பெறுதல்
4. அனைத்தும் சாராம்சப்படுத்தப்பட்டவை என்ற சாராம்சவாத சிந்தனையே இதன் அடிப்படை
மனிதன், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவை இயல்பாய் உறைந்துள்ள உள்ளுறை (உண்மை = உள் + மெய்) ஆற்றலால் திரண்டவை என்கிறது. எந்த வெளி ஆற்றலிலும் உருவானவை அல்ல. அப்பாலை மெய்யியல் கூறும் வெளி ஆற்றல் என்பது ஒரு உள்ளார்ந்த அல்லது மையம் சார்ந்த ஒன்றிருப்பதை அங்கீகரிப்பது. ஆனால், இம்மெய்யியல் சார்ந்த சிந்தனை மையம் என்பதையும் மறுக்கிறது. பானை வனையும்போதுதான் ஒருவன் குயவனாகிறான். பானையும் குயவனும் இணைவதால் திரள்வதே பானை. இதனை டெல்யுஸ்-கத்தாரியின் திரளுதல் (அசம்பலேஜ்) என்ற கோட்பாட்டுவழியாக புரிந்து கொள்ளவேண்டும். சுருக்கமாக புரிந்துகொள்ள, ஒருவர் என்னவாக இருக்கிறார் என்பதை அவர் புழங்கும் சூழலே தீர்மானிக்கிறது. ஒருவர் பள்ளியில் ஆசிரியர், வீட்டில் தலைவர், நண்பர் குழாமில் நண்பர்...
இப்படியாக அவரது இருப்பு உருவாகிக் கொண்டே இருப்பதுடன், அவர் என்னவாக உருவாகவேண்டும் என்பது சூழலால் திரளும் ஒரு அடையாளம் அல்லது இருப்பு எனலாம். இதைதான் திரளுதல் என்கிறோம். ஒரு இலக்கியப் பிரதி வாசிப்பில்தான் பொருளாக (அர்த்தமாக) திரள்கிறது என்பதன் மெய்யியல்சார்ந்த பின்னணி இதுதான். இதனை இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்) என்பதாக முன்வைக்கலாம்.
இம்மெய்யியலின் அடிப்படைகள்
1. இயல்புநிலை (இந்தியத் தத்துவ சிந்தனையில் சுபாவவாதம் மற்றும் பௌத்தம்). பிரபஞ்சம், மனித இருப்பு அனைத்தும் இயல்பானது, அது உருவாகிக்கொண்டே உள்ளது. அல்லது அதன் இயக்கம் உருவாகிக்கொண்டிருப்பதே.
2. பேருண்மையை மறுப்பது. உண்மை சூழலால், புறத்தால் திரளும் ஒன்று என்பது.
3. உணர்வு என்பதும் ஒரு திரளுதலே. உண்மையான ஆன்மீக இன்பம் உணர்வுகள் பேருணர்வாக திரளும் அந்த ஒரு கணமே.
4. அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது. ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது.
முன்பு சுட்டியதைப்போல, இது கொஞ்சம் புரிதலுக்கு சிக்கலான, கடினமான ஒன்று. என்றாலும், புரிந்துகொள்ள வேண்டியது, இதுநாள்வரை சொல்லப்பட்ட விண்ணில் திரியும் அப்பாலை உண்மையை அல்லது தான் தியானித்துக் கண்ட சத்தியத்தைப் பிடித்தெடுத்து, வாசகனின் மண்டையில் திணித்துவிடுவதே இலக்கியத்தின் மெய்யியல் என்பதன் பின் ஒரு எதேச்சதிகாரம் உள்ளதென்பதையே. உண்மையில் இலக்கியத்தின் தத்துவம் அதன் திருளுதல் உருவாக்கும் உருவாகுதல் (பிக்கமிங்) நிலையே. இலக்கியப் பிரதி பல திரளுதல் வழியாக பல்வேறு உருவாகுதலை தருவதே. அது முடிந்த முடிபாக நின்றுவிடும் ஒன்றல்ல.
முக்கியமான இக்கேள்விக்கு பதில் தேடுவதன் வழியாக, இலக்கியத்தின் மெய்யியலை கூடுதலாக புரிந்து கொள்ளமுடியும். மெய்யியல் குறித்து மூன்று விதமான சிந்தனைகள் உள்ளது.
1. பொதுவான மெய்யியல் சிந்தனை- இது உலகை விளக்க முயல்வது.
2. மார்க்சிய மெய்யியல் சிந்தனை - உலகை மாற்ற முயல்வது - இயங்கியல் சார்ந்த ஒன்று - உலகம் மாறிக்கொண்டிருப்பது என்கிறது.
3. டெல்யுசிய மெய்யியல் சிந்தனை- தத்துவம் (மெய்யியல்) என்பது புதிய கருத்தாக்கத்தைப் படைக்கும் கலையே - இது மொழி-சமூகம் அவற்றின் இயக்கம் சார்ந்த ஒன்று “philosophy is the art of forming, inventing, and fabricating concepts.” - டெல்யுஸ் - கத்தாரி).
டெல்யுசிய சிந்தனை மனிதன், உலகு, பிரபஞ்சம் ஆகியவற்றின் உறவை conceptualize செய்து அதனை ஒரு கருத்தாக்கமாக வெளிப்படுத்துவதே மெய் இயலின் பணி என்கிறது. மெய்யியல் குறித்த இறை இயல், கடந்தநிலை, பேருண்மை, தரிசனம், ஆன்மீகம், பேரறிவு உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு மெய்யியலை ஒரு மொழிச் செயலாகப் பார்க்கிறது. தத்துவம் ஒரு மொழிச் செயல்பாடு என்பதால் அது புதிய அனுபவங்களை, உணர்வை சமூகத்தில் ஒரு புதிய கருத்தாக்கமாக அறிமுகப்படுத்தும் ஒன்றே. இப்புதிய கருத்தாக்கம் புதிய வாழ்தலாக உருவாகும் பல மெய்யியல் சிந்தனையாளர்கள் பல கருத்தாக்கங்களை உருவாக்கி உள்ளனர். அதற்கு நிறைய சான்றுகளைத் தரலாம் - நிலையாமை, ஆத்மா, மாயாவாதம், பரமாத்மா, ஜீவாத்மா, பிளாட்டோ கூறும் வடிவம் - தெகார்த் கூறும் காஜிட்டோ...
இப்படியாக.
இக்கேள்வி மிகவும் சிக்கலானது என்பதுடன் அதனை வரையறுப்பது சாத்தியமற்றதாக உள்ளது. இத்தலைப்பில் பிரஞ்சு மார்க்சிய, இருத்தலியத் தத்துவச் சிந்தனையாளரான ழான் பால் சார்த்தர் ஒரு புகழ்பெற்ற கட்டுரையை எழுதியுள்ளார். அவர் இலக்கியமாக அதில் கவிதையியல் (poetics) என்பதை முன்வைத்து, இலக்கியம் என்பது கடப்பாடு (commitment) சார்ந்த ஒன்று என்கிறார். இலக்கியத்தை உரைநடை, கவிதை என்று இரண்டாகப் பிரித்து, உரைநடை என்பது மொழியை திட்டமிட்டு பயன்படுத்தும் ஒரு அரசியல் நடவடிக்கை என்றும்,
கவிதை மொழிக்கு வெளியே இருப்பது அது எழுதுபவரால் பயன்படுத்தப்படுவதற்கு மாறாக, மொழி அமைப்பிலிருந்து பிரித்து அதன் சொற்களை அகஉலகின் உணர்த்தலாக வெளிப்படுத்துவது என்கிறார். சுருக்கமாக இலக்கிய எழுத்தில் கவிதையை மட்டும் உணர்வுடன் உறவுகொண்டதாக முன்வைக்கிறார்.
இலக்கியம் குறித்த வரையறையில் எதிர்படும் சிக்கல் அதன் உணர்வுதளம் குறித்ததே. இலக்கியம் உருவாக்கும் இலக்கிய அல்லது கலை உணர்வு என்பதே அதன் அழகியல் அடிப்படையாக உள்ளது. உணர்வு என்பது ஒரு உடலில் உருவாகும் தனித் தன்மையான ஒரு விளைவு. அது அவ்வுடலை இயக்குவதாகவும், அவ்வுடலின் புலன்களை மறு வடிவமைப்பு செய்வதாகவும் உள்ளது. அது எழுதுதல் என்ற ஒரு மொழிவினையாக இருந்தாலும், அவ்வினை வாசிப்பின் வழியாகவே தன்னை தகவமைத்துக் கொள்கிறது. இலக்கியம், தத்துவம் இரண்டுமே மொழியால் நிகழ்த்தப்படுவதே மற்றும் எடுத்துரைக்கப்படுவதே. இரண்டுமே மொழிவினை என்றாலும், இரண்டின் வினையும், விளைவும் வேறாகும். இலக்கியமும், கலையும் உணர்வுப் புலத்தை உருவாக்குபவை. அதன்வழியாக, ஒரு உடலின் புலனாக்கத்தையும், உணர்வாக்கத்தையும் கட்டமைப்பதாக உள்ளது.
சுருக்கமாகக் கூறினால் மெய்யியல் பேரறிவு சார்ந்த ஒன்று, என்றால் இலக்கியம் பேருணர்வு சார்ந்த ஒன்று என்று கருதலாம். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. இலக்கியத்தின் தத்துவம் (மெய்யியல்) இந்த பேருணர்வை சார்ந்ததே. ரோலான் பார்த் கூறும் ‘ஜூவான்ஸ்’ என்பதை அடைவது அல்லது வாசிப்பின்பம் வழியாக ஒரு களிப்புநிலையை அடைவதன் மூலம் ஒரு புதிய உலகை, உணர்வைப் பெறுவது (சூஃபிகள் கூறும் ‘எக்ஸ்டஸி’ என்ற பேரின்பநிலை, இந்திய சிந்தனைமுறை முன்வைக்கும் பேரானந்த நிலை). இதனைதான் தரிசனம் (உளக் காட்சி என்று தமிழில் குறிப்பிட்டால் அதன் இறைசார் தத்துவம் கழன்றுவிடுவதைக் காணலாம்) என்கிறார்கள் இந்தியத் தத்துவ சிந்தனையாளர்கள்.
இத்தரிசனத்தை ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினரே பெறமுடியும் என்ற ஒரு சிக்கலான நிலையை உருவாக்கியுள்ளனர். இத்தரிசனத்தை பிற சமூகத்திற்கு மறுப்பவர்களாக தங்களது சனாதன வருணக் கோட்பாட்டை அமைத்தனர். அதனால் தத்துவம் (மெய் இயல்) என்பது சிக்கலான ஒருவகை ஞானம் சார்ந்த நடைமுறையாக முன்வைக்கப்பட்டது.
ஆனால், இலக்கியம் அனைத்து மக்களுக்கான தரிசனத்தைத் தரக்கூடியதாக அமைந்துள்ளது. வாசிக்-கும் மக்களிடம் ஒரு உளக்காட்சியை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இந்த உளக்காட்சியை பெற ரசாக் கோட்பாடு என்கிற வடமொழி சார்ந்த கோட்பாட்டை முன்வைக்கிறார்கள் அதே ஆன்மீகவாதிகள். அதில் உள்ள ‘த்வனி’ என்கிற ஒன்றை தொல்காப்பியம் கூறும் ‘உள்ளுரை’ மற்றும் ‘இறைச்சி’ என்பதோடு ஒப்பிடலாம். இறைச்சி, இறைவன் இரண்டும் இறை என்ற ஒரே வேர்ச்சொல்லில் இருந்தே உருவானவை. அதைக்கூட கட்டவிழ்த்து வெளிப்படுத்தும் ஒரு இலக்கிய கோட்பாட்டு வாசிப்பை தமிழ்ச் சூழலில் நிகழ்த்தியதில்லை இந்த ரசாக் கோட்பாடு பேசும் ரசனைவாதிகள் (இவர்களால் இலக்கியம் ஒரு உணவுப் பண்டத்தைப் போல அணுகப்படுகிறது. ஸ்பெஷல் மசாலா, ஆனியன் தோசை, சாம்பார் வடை என்பதைப்போல).
காரணம் இலக்கியத்திற்கு என்று ஒரு தத்துவம் உள்ளது என்பதையே இவர்கள் மறுப்பவர்களாக உள்ளனர். அதன் நீட்சி கோட்பாடுகளை மறுப்பதாகவும் அறிவை மறுப்பதாகவும் உள்ளது. அறிவு என்பது பதப்படுத்தப்பட்ட உணர்வும், அனுபவமுமே அல்லது உணர்வின், அறிவின் சாரமாக பெறப்படும் ஒன்றே. உணர்வு என்பது பதப்படத்தப்படாத அறிவு அல்லது சாரப்படுத்தப்படாத உணர்வு. இலக்கியத்தின் தத்துவம் உணர்வை உருவாக்கி வாசிப்பவனின் அகக் காட்சியை உருவாக்குவதன் வழியாக உயர்ந்த உணர்வுத் தளத்திற்கும் அதன் சாரமான அறிவிற்கும் இட்டுச் செல்வதே. பக்தியிலிருந்து ஞானம் என்பது உணர்விலிருந்து அறிவு என்பதே.
இலக்கியத்தின் தத்துவம் என்பது உலகை மாற்றுவது, புதிய மனிதர்களைப் படைப்பது, புதிய அறிவை உருவாக்குவது, புதியதொரு உணர்வுத் தளத்தை உருவாக்குவது அல்லது பெயரற்ற ஒரு உணர்விற்கு பெயர் தருவது. இலக்கியம் உணர்வு, புனைவு, கற்பனை சார்ந்தது என்றால், மெய்யியல் அறிவு, கருத்தாக்கம், மெய் சார்ந்த ஒன்று. இரண்டும் சமூக அறம் சார்ந்தவையே.
அழகியல் என்பது இயற்கைத் தத்துவம் என்கிறார் டெல்யுஸ். இயல் உலகை அழகியலாக உள்வயப்படுத்துவதே கலை. இலக்கியம், சினிமா ஆகியவற்றின் அடிப்படை. உணர்வுகளை கருத்தாக்கமாக மாற்றுவது தத்துவம். கருத்தாக்கத்தை உணர்வாக மாற்றுவது இலக்கியம். மெய்யியல் வாழ்க்கைக் குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கி ஒருவரது உலகப் பார்வையைக் கட்டமைக்கிறது என்றால் இலக்கியம் வாழ்க்கை குறித்த அழகியலை உருவாக்கி ஒருவருக்கு எண்ணற்ற உலகை அறிமுகப்படுத்துகிறது. அவரது உணர்வை உருவாக்கி சமூகத்துடன் இயைபுபடுத்துகிறது. வாழ்வதற்கான வேட்கையைத் தருவதே இலக்கியம் இதுதான் எனது பார்வையில் இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்தின் மெய்யியல்.
தொகுத்துக் கூறினால், இலக்கியத்தின் தத்துவத்தை (மெய்யியல்) இலக்கியத்துவம் என்று கூறலாம். அதன் தனித்தன்மைகள் மூன்று. 1. அழகியல், 2. அறவியல் 3. வாழ்வதற்கான வேட்கையை உருவாக்குதல்.
இங்கு வேட்கை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வேட்கையை, பிராய்ட் மற்றும் லக்கான் இன்மை (லேக்) என்றார்கள். ஒருவரிடமில்லாத ஒன்றின்மீது வரும் ஆசை என்பதாக. சான்றாக ஆண் பெண்ணாக இல்லை என்பதால் பெண்மீதான வேட்கை உருவாகுகிறது என்று. டெல்யுஸ்-கத்தாரி வேட்கை ஓர் உற்பத்திச் சக்தி என்றார்கள். யதார்த்த உலகை ஒருவரது விருப்பிற்கு ஏற்ப உற்பத்தி செய்யும் ஆற்றலே வேட்கை. இந்த உலகை உற்பத்தி செய்வதே சமூகத்தின் வேட்கைதான் என்பதாக இதனைப் புரிந்து கொள்ளலாம். இதனை அத்வைத மாயாவாதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. அது புறஉலகு என்பதே ஒரு மாயை, அதை மாயையாக அறிவதே ஞானம் என்கிறது. ஆனால், வேட்கையின் வழி உருவாகும் புறஉலகு என்பது புத்தம் கூறும் ஆசையே (வேட்கையால் கட்டப்படும் தன்மையவாத அகவிருப்பு) அனைத்திற்கும் காரணம் என்பதோடு இணைத்து நோக்கத்தக்கது. டெல்யுஸ்-கத்தாரி முன்வைக்கும் வேட்கை பன்மையான புற உலகை படைத்தளிப்பது என்பதே.
ஆக, தத்துவம், வேட்கையை எதிர்மறையாக - unproductive-ஆக பார்க்கிறது. அது வேட்கையை பாவம் என்றும் புனிதமற்றது அல்லது கறை என்றும் அதனை துறக்கச் சொல்கிறது. துறவறத்தை போதிக்கிறது. இலக்கியத்துவம், டெல்யுஸ் - கத்தாரி வழியில் வேட்கையை நேர்மறையாகப் பார்க்கிறது - productive-ஆக பார்க்கிறது. இலக்கியம் சமூகத்தின் உற்பத்திச் சக்தியாக உள்ளது. இலக்கியத்தின் தத்துவம் சமூகத்தில் வாழ்வதற்கான வேட்கையைப் பெருக்குவதே. அந்த வேட்கை அறம் சார்ந்தாக, அழகியல் சார்ந்தாக இருக்க வேண்டும். செவ்வியல் தத்துவம் குறித்த கோட்பாட்டிற்கு எதிரானதாக இலக்கியத்துவம் உள்ளது. டெல்யுசின் புதிய தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப, இலக்கியம் மொழியியல் வினையாக, சமூகத்தில் புதிய கருத்தாக்கத்தை, உணர்வாக்கமாக அதன்வழி புலனாக்கமாக கட்டமைக்கிறது. இலக்கியத்துவம் என்று புதிய அறிதலே இலக்கியத்தின் தத்துவமாக உள்ளது. தொகுத்துக் கூறினால், இலக்கியத்துவத்தின் வினை என்பது...
1. அறிவார்ந்த தளத்திலான ஆன்மீகம் அதாவது அறிவியல் சார்ந்த ஒரு அறிதல் தரும் களிப்பு நிலையை உருவாக்குவது.
2. ஒற்றை உலகிலிருந்து பல்லுலகம் நோக்கிப் பரவுதல்.
3. புதிய சமவெளிகளை (இயற்கைகளை) அறிமுகப்படுத்துதல்.
4. வாழ்ந்துபெற்ற அனுபவத்தை தருதல்.
5. வாழ்வதற்கான புதிய வேட்கைகளை உற்பத்தி செய்தல். பல்வேறு உலகங்களை உருவாக்குதல். அவ்வுலகங்கள் வழி நாமும் பல்வேறு உருவாகுதலாக மாறுதல்.
மெய்யியல் (தத்துவம்) உலகை அறிவாக உள்வாங்குகிறது என்றால், இலக்கியம் உலகை உணர்வாக உள்வாங்குகிறது. உணர்வே அழகியலாக இலக்கியத்திலும், அறமாக மெய்யியலிலும் வெளிப்படுகிறது. இலக்கிய அழகியலே மெய்யியலின் அறமாக உள்ளது. அறம்சார் அழகியலே வாழ்விற்கான வேட்கையை, சமூக வாழ்விற்கான அடிப்படைகளைத் தருவது. இனியான இலக்கியம் தமிழ் இலக்கிய பீடங்கள் உருவாக்கி வைத்துள்ள ரசனைவாதம் சார்ந்த வெறும் உணர்ச்சி சார்ந்த ஒன்றாக இல்லாமல், அறம் சார்ந்த அறிவு சார்ந்த அழகியலாக அமைய வேண்டும். அதற்கு அறம் சார் அழகியல் என்ற ஒரு புதிய கருத்தாக்கமே இலக்கியத்தின் தத்துவம் அல்லது இலக்கியத்துவம் முன்வைக்கும் ஒன்று.
“அந்த நாட்களில், குழந்தைகள் நாங்கள், பெரியோர்க்கு ஒப்பாய் கருதப்படாது, மட்டு மரியாதையின்றி நடத்தபட்டோம்; ஆனால் எனது அபிப்ராயத்தில், பெரியோர்களோ, குறிப்பாக அனைத்து வகையான அறிமுகமில்லாதவர்களோ, யாராக இருப்பினும் எனது கால் தூசிக்கும் கீழானவர்கள்.”
“இவ்வுலகினும் பெரிதாய் நான் கருதுவது குழந்தைகளை மட்டுந்தான்.”
- என்ரி டர்கர் (1892-1973)
இவ்வாசகங்கள், இளைஞர்கள், பெரியவர்கள், சமூகத்தின் முதியவர்கள் என சமூகத்தின் எந்த வளர்ந்த மனிதர்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத, என்ரி டர்கர் எனும் கலைஞரின் நாட்குறிப்பிலிருந்தவை.
குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர், அதீத பற்று; அதீதமென்றால், தத்து குழந்தை வேண்டி விண்ணப்பிக்குமாறு அவரைத் தூண்டும் அளவுக்கு அதீதம். (அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தகவல் இங்கு தேவையில்லை.)
குடும்பம் என்று எதுவுமிருக்கவில்லை, வெகுசிலர் என்பதே அதிகம் போல, விரல் விட்டு எண்ணக் கூடிய மனிதர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்திருந்தார் டர்கர். எளிதாக மக்களிடையே ஜன ரஞ்சகமாக உலாவர, அவரிடம் ஓரிரு சூத்திரங்கள் மட்டுமே இருந்தன. அவற்றில் ஒன்று, அந்தந்த நாளின் வானிலை நிலைய அறிக்கையைப் பற்றியும், நிலவிவரும் வானிலை பற்றியும் சிலாகிப்பது. இவ்வாறு சமூகத்தின் விளிம்பின் முனையிலிருந்து கொண்டு தத்துக் குழந்தைக்கு விண்ணப்பித்திருந்தார் அந்தத் துறவி.
மேலும், மிகவும் வறியவரான டர்கர், மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக ஓர் அத்தக் கூலியாய் நிரந்தரமில்லாத ஜீவனம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் ஒரு தீவிர ரோமன் கத்தோலிக்கரும் ஆவார்.
இதுதான் அன்றாட வாழ்வு டர்கர் மீது செலுத்திய ஒளியின் பிம்பம்.
ஆனால் இவையெல்லாம் தாண்டி, அவரது அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை அறைக்குள், அவருக்கென்று தனியாக ஒரு உலகம் பரந்து விரிந்திருந்தது - அவற்றை பீடித்திருந்த மாய மந்திர சக்திகளும், துர்சக்திகள் உட்பட.
டர்கரின் படைப்புலகம் குறித்த விவாதங்கள், விமர்சனங்கள் என எதிலிருந்தாவது தொடங்க வேண்டுமென்றால், எப்பொழுதும் வெகுஜனத்தின் கண்ணை உறுத்தும், டர்கரின் ஓவியங்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்குறி வளர்ந்த, குட்டிப் பெண்களிலிருந்துதான் தொடங்கவேண்டும். அதைப்போல, பெண்குழந்தைகள் மீதிழைக்கப்படும் அநீதியும் அதை விஞ்சும் அதீதமான, வன்முறையும், குரூரச் சித்திரவதைகளையும் புறக்கணிக்கமுடியாது.
முதற்கண் பார்வையாளர்கள் சிலருக்கு இதன் விகாரம் மட்டுமே தெரியும். படைப்பாளியின் மன நிலை மீது சிறு சந்தேகமும், குரூரத்தின் மறைவில், கலைஞனின் வக்கிரம் இருப்பதாகவும் தோன்றும்.
இவ்வகை, எதார்த்தம் நீங்கிய உலகைக்கண்டு, சமகால கலைபடைப்புகளே கொஞ்சம் தள்ளிதான் நிற்கும்.
இவற்றை கடந்தே, டர்கரின் பரந்த தனியுலகத்தை புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் டர்கர் மிகவும் கைதேர்ந்த ஓவியரோ, கோடுகளில், வண்ணங்களில் நிபுணத்துவம் பெற்றவரோ கிடையாது. அது அவருக்கும் தெரிந்திருந்திருக்கக்கூடும் அதனால்தான் அவர் அதிகமாக வித்தைகளையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கினார்.
இன்றைய கலை ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள் யாவருக்கும் அவரது வித்தையில் புலப்பட்ட டர்கரின் சாமர்த்தியம், மெய்சிலிர்க்க வைக்கிறது.
செய்தித்தாள்கள், விளம்பரங்கள், வண்ணங்கள் தீட்டும் ஓவியப்புத்தகங்கள் மேலும் குப்பைகளில் அவருக்கு கிடைக்கும் மதிப்பற்ற பொருட்கள், என அவற்றில் கிடைக்கும் உருவப்படங்கள் யாவையும் சேகரித்துகொள்வார். அவற்றை தடமெடுத்து உருவங்களை கொலாஜ் ஆக கோவைக்கலையாக (Collage) உருவாக்குவார்.
இவ்வாறு சுவரோவியங்கள் போல, (Murals), ஒட்டு காகித டேப்களைக்கொண்டு இணைத்து, எட்டு அடி நீளம்கொண்ட ஓவியங்கள் பலவற்றை படைத்துள்ளார்.
சில நேரங்களில் அந்த கோவை படைப்புகளுக்காக, சரியான உயர அகல விகிதத்துக்கு உருவங்களை பெரிதாக்க, ஒரு சாதாரண மருந்துக்கடை நகலக இயந்திரத்தில், பல புகைப்பட நூதனங்களைப் புரிந்திருக்கிறார்.
(யோசிக்க: இவ்வாறு செய்வதற்கு மூன்று டாலர்கள் வரை செலவு ஆகும். ஆனால், டர்கரின் வாரக்கூலியே இருபத்தி ஐந்து டாலர்கள்தான். அவரது படைப்பு கோருகின்றவற்றை அரும்பாடுபட்டாவது பூர்த்தி செய்ய வேண்டும் எனும் கடப்பாடு உள்ளவராக இருந்திருக்கிறார்.)
இவற்றை கடந்து, நம் கண்ணில் புலப்படுவது ஒரு கலைஞன் மட்டுமே - வெகுஜன மைய நீரோட்டத்திலிருந்து விலகி, எந்த கலையறிவு பின்புலமும் சாராது, கருத்துகள், விமர்சனங்களுக்கு செவி மடுக்காது (அவர் படைப்புகள் வாழ்நாள் முழுவதும் படைப்புகள் வெளிவராதவை என்றாலும், முடித்து வைத்த படைப்புகளின் தரத்தை சோதித்து பார்க்க விரும்பும் ஆசையையே இங்கு நாம் நோக்கவேண்டும்), கலைபடைப்புகளுக்கு மட்டுமே நேர் செய்ய நினைத்த, என்ரி டர்கர் எனும் சுயாதீனக்கலைஞன் மட்டுமே முன்னுக்கு வருகிறார். (Outsider Artist)
மரித்தபோது அனாதையாக முதியோர் இல்லத்தில் கிடந்தவருக்கு, இப்பொழுது, அமெரிக்க சட்டப்படி மொத்தம் ஐம்பது வாரிசுகள் உரிமைகோருகின்றனர். சொத்துரிமைக்கோரி நடப்பாண்டில், மாகாண நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளனர்.
டர்கர் முதியோர் இல்லத்திற்கு செல்லும் முன்னர், அவரது வாடகை வீட்டின் பொறுப்பை முழுக்க முழுக்க வீட்டு உரிமையாளருக்கே (நேத்தன் லெர்னர், கியோகோ லெர்னெர் தம்பதியினர்) விட்டு சென்று விட்டார்.
வீட்டை சுத்தப்படுத்த முயன்ற நேத்தனுக்கு அங்கிருந்த கலைபடைப்புகளைக் கண்டு தூக்கிவாரி போட்டது.
படைப்புகளை இனங்கண்டு, நாட்டார்கலை மைய ஆர்வலர்களுக்குக் கொண்டு சென்றது லெர்னர் தம்பதியர்கள்தான்.
“அவரது பாரம்பரியத்தை ஏந்திசெல்லும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு என்பதை உரக்க சொல்லவே இந்த வழக்கு” எனக் கூறுகிறார் டர்கரின் தூரத்து சொந்தக்காரர் க்ரிஸ்டன் சாடவ்ஸ்கி. “அவரது வாழ்நாள் படைப்புகளை வேற்றாள் சொந்தம் கொண்டாடிவந்திருக்கிறார் என்பதே எங்களுக்கு மிகுந்த வேதனை - தவறையெல்லாம் சரி செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கிருக்கிறது.”
மைக்கேல் போன்ஸ்டீல் எனும் டர்கரின் ஆய்வாளர் கூறும்போது, “லெர்னர் தம்பதியினர் எப்பொழுதும் முழு உரிமைதாரராக இருக்க முடியாது என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால், ஒருவகையில் வாரிசுதாரராகக் கோரும் உரிமைகூட அந்தத் தம்பதியினருக்கு இருக்கிறது. கலை படைப்புகளை, அவற்றின் அந்தஸ்தை இனம் காணும் கலைகண்கள் எல்லோருக்கும் இருக்காது.”
உயில் என்று எதுவும் எழுதாதவரையில், லெர்னர் தம்பதியினர் தரப்பு வாதம் சட்டப்படி செல்லுபடி யாகாதுதான். ஆனால் குப்பையை ஒதுக்க சென்ற, வீட்டு உரிமையாளருக்கு அவையாவும் கலை படைப்புகளாக தோன்றியதுதான் நிதர்சனம்.
அவரது கலைபடைப்புகளைப் போல அவரது 15000 பக்க நாவலோ, 5000 பக்க சுயவரலாறோ அல்லது பத்துவருட வானிலை அறிக்கை குறிப்பேடுகளோ இதுவரை வெளியிடப்படவில்லை.
அதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. மேலும் டர்கர் அறையில் தொட்டதெல்லாம் பொன்னாகிக் கொண்டிருக்கின்றன. சுயாதீனக்கலைகளை அங்கீகரிக்காத அருங்காட்சியக அறங்காவலர்கள் கூட, இன்று அவரது படைப்புகளுக்கு பெருமதிப்பு வைத்து பின்தொடர்கின்றனர்.
1997இல் மிக முக்கியமான, அமெரிக்க நாட்டார் கலை அருங்காட்சியகம் ஒன்றில் டர்கர் முதன்முதலில் இடம் பிடித்தார். அதிலிருந்து தொடங்கிய விவாதங்களைப் பேசும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓவியக் கலை ஞராக மட்டுமல்லாது நாவலாசிரியராகவும் வலம் வந்த டர்கர் ஏன் டோல்கியேனின் காதல் மொழியில் பேசவில்லை என்று டர்கரின் இதிகாச நாவலை பற்றிய மற்றொரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
டர்கரின் விசிறிகள், அவரைப்போன்ற தனிமை வாதகலைஞர்களின் கூற்று (Reclusive Artists) டர்கர் குறித்த, மைக்கேல் தெவொஸ் கட்டுரையிலிருந்து :
ஒரு வழியாக, அவர் சிறிதும் சட்டை செய்யாத வெகுஜன சந்தையை டர்கர் சேர்ந்துவிட்டார். அவரது கலைகளை அருங்காட்சியகங்கள் கொள்ளட்டும். இவர் சைக்கோவா இல்லை அப்பாவியா என்று மேதாவிகளும், கருத்து சொல்பவர்களும், டர்கரை குறுக்குவெட்டாக மனோரீதியான தளத்தில், கூராய்வு செய்யட்டும். ஆனால், டர்கரை மட்டும் நாங்கள் வைத்து கொள்கிறோம். எங்களிடையே வாழும், அனாதை யாய் திரியும், சுயாதீன அறிவுஜீவிகளுக்கானவர் டர்கர்.
1977இல் டர்கரின் படைப்புகள் ஹைட் பார்க் கலைமயத்தில் (Hyde Park Art Centre) காட்சிப் படுத்தபட்டது.
2008, Intuit : The centre for Intuitive & Outsider Art in Chicago, டர்கரின் வீட்டு அறைகளையும், பொருட்களையும், அருங்காட்சியகப்படுத்தி, நிரந்தர அருங்காட்சியகமாகத் தொடங்கியது.
Museum of Everything, ஜேம்ஸ் ப்ரெட் (James Brett) சுயம்பு (Self-taught artists) கலைஞர்களுக்கான நகரும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்.
2010, American Folk Art Museum “ The Private collection of Henry Darger ” டர்கரின் சேகரிப்புகளை காட்சிப்படுத்தியது.
Jim Elledge : Henry Darger, The Throwaway boy - The Tragic life of an Outsider Artist
டர்கர் குறித்த ஆவணப்படம்:
The Realms of the Unreal - 2004, Documentary on Darger.
டர்கர் படைப்புகள் காணக் கிடைக்கும் அருங் காட்சியகங்கள் :
Hyde Park Art Centre
American Folk Art Museum 1990s
Intuit : The centre for intutitive and outsider art on chicago.
Museum of Modern Art, New york
Art Institute of Chicago & Smithsonian
சின்ன ஆசையுள்ளுக்குள் எண்ணமாய்ச் சிறுகணத்தில் துளிர் விட்டதும் வேகமான அவ்விழைவு விளைச்செயலிலும் மண்ணள்ளிப் போடுகிறது சித்துகளில் சிறந்து விளங்கும் சித்தனொருவனின் மந்திரங்களிலொன்றை கைப்பற்றும் எண்ணமும் அவ்வாறேயெனக்கு முளைவிட்டது நயந்தும் பயந்தும் நஞ்சுணவிட்டும் எதுவும் பயனற்றுப்போயின மோதிரமாய் மூன்று சுற்றுச் சுற்றியிருக்கும் பாம்புக்கேயித்தனை பரிதவிப்புகளென்பதை பதறாமலுணர்ந்தானோ அச்சித்தன் சிறு கயிறுமொரு நீறும் அணியாதவனின் அவ்வுயிர் மோதிரம் எனக்குத் தனித்துறுத்தியதில் வியப்பேதுமில்லை பெருமுயற்சிகளுக்குப் பின்னர் அரைமனதாயதை கைவிட்டேன் கைவிட்ட பின்பாவது கிட்டுமென்ற நப்பாசையாய் உறுத்தியது தொலி மினுக்கங்கொண்ட நாகமோதிரம் கனவுக்குள் நஞ்சைப் பாய்ச்சின மோதிர விரலிலிருந்து பாம்பு டிஸ்கோ இரப்பர் பேண்டாய் விரிந்தது வேளை பார்த்தெட்டி கட்டைவிரலைத் தவ்வி கடித்ததும் அதனிரு கண்களிருந்தும் ஒருநிறயிரு கடுவன் பூனைகள் தவ்வின கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் சீலையையவை கவ்வின ஒருகையால் குழந்தையையும் மறுகையால் சீலையையும் பாதுகாத்தாள் ஓடியுதவி செய்யும் முன்னே அக்கனவு தெளிநீரை மறைக்கும் நுரையானது மறுநாள் அச்சித்தன் வாய் திறவாமலே என்னிடமொரு வாக்கு கேட்டான் கைப்பற்றும் தீயயெண்ணம் கைவிடுவதாய் ஒப்புக்குக் கையடித்துச் சொல்லவும் சித்தன் உள்ளங்கைத் தீண்டலில் வௌமெடுத்த நாகம் விரலைத் தீண்டியது நஞ்சு மணிக்கட்டைத் தாண்டு முன் இரு கடுவன் பூனைகளும் சதையைப் பிறாண்டிப் பிறாண்டி பதம் பார்க்கத் துவங்கின மேனியெங்கும் பொங்கும் குருதியைத் துடைத்துக் கொண்டே விரைவிலிக் கனவும் கலையுமென உறை குருதியாய் பன்னெடுங் காலமாகத் தளராது காத்தோ காத்திருக்கிறேன்.
சின்னத் தொடையிடுக்கில் கை வைத்துறங்குமச் சிறுவன் வளர்ந்ததும் பிறவிக்குணத்தை மட்டை வைத்துக் கட்டமுடியாமல் தனக்கொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான் தலையணையைக் கட்டிப் பிடித்தபடியுறங்குமச் சிறுமியின் வளையாத அப்பண்புக்காய் பெருந்தொகையீடாகத் தந்தொரு ஆணை பதிலீடாக விலைக்கு வாங்கித்தருகிறார் தந்தை தனித்திருக்கும் நாய் குரைக்குமோ கடிக்குமோவென இரு நாய்களையும் இணைக்குமச் செயலால் அவ்விரண்டையும் அதுகளுக்குள்ளே செய்கின்றன விதிவிலக்கான விலகலில் பிறன்மனையும் நெடுநாட்கள் நீடிக்காத காரணத்தால் தடுப்பூசியற்ற தயக்கங்களை உடைக்குமக் கணத்தில் வெறிகளும் கடிகளும் வினயமாக்கப்படுகின்றன விளையாட்டாய் அடுக்குமருமை உடைக்கும் நாய்க்கு தெரியாததால் அடைக்கண்ணவதியில் முடக்குமிருவரையும் ஏழிழைப்போட்டு ஏங்கி வாங்கிய பேறுகாலத்திலவள் பெற்றயிருபால் குழந்தைகளும் வளர்பிராயக் கிளர் முறையில் வழிவழியாய் பெற்றுவந்த பழக்கங்களைச் செய்கின்றனர் மகளையும் மகனையும் மருவி நோக்கும் பெற்றோரால் பெறுமதிப்புக் கூடியும் உறுமதிப்புக் குறையாத சந்தைகள்.
சின்னமேதுமற்று தோன்றிய கணமிருந்தே இலங்குகின்ற கவிதையென்பது உப்புத்தாளால் முகந்துடைப்பது நகைத்தபடியே நரம்பையறுப்பது கற்பனையுறுப்பில் களி கொள்வது கூரூசியை கண்ணிலிறக்குவது உறவுகள் முகஞ்சுழிப்பது கொதியிரும்பாய் தனித்திருப்பது கவிதையென்பது நறுக்கப்பட்ட விரல்கள் குவிந்தெழும் வெடிப்புகைகள் உடற்வேட்கையின் உயிர்த்துடிப்பு இமைகளின் அதிவுயர் பயன்பாடு வெக்கை தணிக்கும் காற்று நெருப்பை வாங்கும் காரணி பிய்ந்த உள்ளீட்டுச் சொற்கள் மேலும் கவிதையென்பது படர்தாமரையின் வடிவங்கள் அரிக்கப்பட்ட கரைகள் புண் பத்திய மேலுகள் புலப்படாத் துரோகங்கள் நிறை போதையின் வாநீர் வறுகடலையின் மணம் பிரண்டையுப்பின் துவர்ப்பு அப்புறம் கவிதையென்பது தெரிந்த பெண்ணின் புன்னகை தீட்டி மறையும் சொற்சித்திரம் கனவுகளின் கடுஞ் சஞ்சரிப்பு தனிப்பட்ட முறையில் சீரழிவது தன்னாலேயே நெறிபடுவது பிறரறிவரென எவருமேயெண்ணுவது மேலும் கவிதையென்பது அளவு கடந்த மதிமயக்கங்கள் அதனார்வலர்களை தூண்டும் கதிகள் புரிபடா தன்மையில் புலன்கள் நெறிபடுவது எக்காலத்திலும் குறுங்குழு மண்ணள்ளிப் போடுவது தெளிவற்ற வழியிலே நிலைக்கச் செய்வது வழியுற்றும் அதிலேயே திளைக்கச் செய்வது மென்மேலும் கவிதையென்பது சலிப்பு மேலிடுமிரவுகள் குதிகாலின் உயர்வழுத்தம் செறிவூட்டிய உயிரிருப்பு நெஞ்சுக்குள் சுடும் பொங்கச்சோறு வறுபடும் உளுந்தின் மணம் வெட்டவெளி மின்னல் வேவு பார்க்கும் சன்னல் அய்யா கவிதையென்பது வரவழைத்த வெஞ்சினம் தெளிவற்றவுணர்வின் அலைவு மறைந்திருக்கும் புதை மணல் கொதிப்பேறும் சிறு மூளை மரிப்பதற்கெனவே பிறக்குமுயிரி இடையிடையே வாழும் தன்மை நாட்பட்டு படருமுள்ளாடைத் தடம் மேலும் கவிதையென்பது இனங்கெட்ட கழுதைக்கில்லா ஏனம் குணங்கெட்ட மாட்டுக்கற்ற கூளம் வெங்கம்பயலுக்கு வாய்த்த யோனி உத்தம பரத்தையின் உற்சவம் சொற்ப காலங்களின் அற்பம் பட்டதனால் பதறும் மனம் இட்டதனால் இடறுரும் கரம் மென்மேலும் கவிதையென்பது இன்னதுதானென்று உறுதியாக ஒரு கூதியானுக்குங் தெரியாது.
சர்ப அவதாரம் ஏற்றான் காதலியின் கண்கண்டவன் அண்டம் நடுநடுங்க சூலகப் பொழுதின் கர்ப்பகால ஓவியத்தை உடைத்தான் கடைசிக் கண்ணியையும் இணைக்கத் தெரியா செம்படவன் உன் தெப்பத் தலைவன் தந்தைக்குப் பெண் கேட்டு ஓம்கார சொல்வளர்த்து வைபவப் பார்வைகள் பதட்டம் சூட சமுத்திர மும்முரம் அடங்க தவளைக் காய் நடை நடந்து மூழ்கிப் போனான் இன்றைக்கு மூன்றாம் நாள் பார்த்து வந்த ஆறு இன்னமும் நகர்ந்து கொண்டிருக்க வெந்ததும் பாரம் குறையும் மங்களமீன்கள் அலையலைந்து நிர்வாணம் தேட நெல்லுக்கு அல்லாமல் புல்லுக்குப் பண்ணும் குடி ஆயர் வலம்புரியில் எழுதாதே உன் மஞ்சள் வானத்தை மெயில் அனுப்பு ஓடக்காரன் பாடலில் பயணமேறி ஜோக்கர் பறவைகள் எச்சமிட்டால் மரங்கள் என்ன செய்யும் முளைக்கும் போல் பொங்கிப் பொழியும் மழை ஆன்டி-ரஸ்ட் முலாம் வேய்ந்த நுரையீரல்கள் கள்ளியின் உதிரத்தில் முறுக்கேறி உறும கழுவி ஊற்றிய வார்த்தைகளை ஈரத்தில் அணுகாதே வழுக்குதல் தவிர்க்க இயலாது தோரோ உன் ஏரிக்கரை காகிதத்தில் வாசம் ஏறா மழைக்காலம் இடித்து மின்ன கொடிமுடி மலர கண்கட்டி வித்தையில் நூற்றியொரு கலசங்கள் ஒன்று பெண்பால் மாற்று உடையற்ற சயனக்கன்னி ஆற்றோடு போகவிடு சமுத்திரத்தை ஒற்றைப்படையில் இரவும் பகலும் அடங்கி எழும்.
நான்காம் வேற்றுமையில் பிருஷ்ட முகம் சிறுத்தைப் போல் பிம்ப ஆப்டிக்கல் மாயை முதல்வாத அர்த்தத்தில் பூ விரிக்கும் தென்னம் பாலை கிழமேல் பொதுவழியில் தென்வடலாய் திறக்கும் தேகமனம் பாறைகள் நிற்கும் இடைபெருவெளி இலைகள் சிரிக்கும் சவரக்கத்தி முகம் துடைத்துக்கொண்டவன் கந்தர்வன் அவன் உறங்கா சிசு உறங்கும் கவிதை குரல் ஏறிய பாரத்தில் சர்க்கரைக் கப்பல் எறும்புப் புற்று வட்டங்கள் வரைய பெருநதி வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது மரம் நிறையத் தங்கக் கிளிஞ்சல்கள் ஃப்ரீஸ்டாண்ட் ஃபிரேமில் நான் போல் நிழல் பட்ட புத்தி நாக்கிலிருந்து தலைகீழாய் தேள் இறங்க முகம் நோக்கிய ஆவுடை மறைக்கும் பச்சை ஆப்பிள் மங்கல் காட்சியில் கோணம் குறைந்த கோபுரம் ரீங்கரிக்கும் சூரியன் மை பூசிய ஒரு ஜோடி ரெட்டைவால் குருவி கம்பிகள் குறுக்கிடும் ஜன்னல் கான்கிரீட் காலம் பெயரற்று மிதக்கும் படகு ஸ்வரம் மீறி அலையும் வயோதிகச் சமுத்திரம் பயமும் நடுக்கமுமாய் இருக்க உடைந்த வில் முறியாக் கரும்பு நாரை புரியும் சௌக்கார் நடனம் குதிரைகள் கால் பதித்த பள்ளத்தில் விசுவாசம் அறுத்த நாய் குளிர்கால உடையில் துணையுடன் வருகிறது மீன்கொத்தி யூகலிப்டஸில் சுருதி இணைக்கிறது பீத்தோவன் தொப்பியணந்த மரம்கொத்தி இரட்டைக் கனவில் சுதந்திர வாசல் நீலநிறப்பெண் இழுப்பறைகளாய் திறந்து நிற்க செவ்வானவேளையில் மலைகள் உறங்க.
பரிவர்த்தனை பேசும் வலதுகரம் உயிர்பெற்று நேரத்தை எட்டாவதாக எட்டென்று அடிக்கிறது கடிகாரம் கோயில்களின் நகரத்தில் வயோதிகத்தைப் பார்சல் பண்ணும் யுவதிகள் காலத்தை விஷமிட்டுக் கொன்று புதைத்த இடத்தில் முளைத்த மரம் காற்றின் திசைக்கண்டு கிளை வளர்க்க நடுநரம்பு விரைத்து இலை மலர நிற்கிறான் குதிரைவீரன் சமுத்திர சதுரங்கத்தில் துப்பாக்கித் தூக்கி வந்தாள் குறிவைத்து நின்றாள் எதிரி ராணி மானோ மயிலோ மஞ்சத்தில் குயிலோ விருந்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள் விருப்ப முலையலங்காரத்தில் அலை கொண்டு பறக்கும் நீர்க்கரையில் வியர்த்த முகம் ஞாபகத்தில் பால்குடி உதடுகள் கவனத்தில் மீன்பிடி வலைகள் புல்லின் சலசலப்பை தாய் பாஷையில் பெயர்க்க விளைநிலப் பாறைகளுக்கு தடைகள் இல்லை சிலந்தியின் நீர்மணிமாலை முறை விடுத்து ஆளாகிவந்த சூரியக் கபாலம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது சபலத்தில் சொல்லில் சொல் கூட கூடா சொல்லில் புதிர் கூட இருபத்து ஐந்தாவது வரியில் குருட்டுக் கவிஞன் பறக்கவிட்ட ஒற்றைக்கால் வெட்டுக்கிளி கடவுளின் சாயலில் சாக விரும்புகிறது விருட்சம்.
ஒரு மரண வீட்டில் ஒருவர் பத்தியை இறந்தவர் தலை மாட்டில் வைத்தார் இன்னொருவர் சரிந்து விழுந்த மாலையைச் சரி செய்தார் ஆளாளுக்கு ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தவர்கள் தங்களுடைய மரணத்தினை கீழே விழுந்திடாதவாறு ஒரு கையால் கெட்டியாகப் பிடித்திருந்தார்கள் ஏன் எப்பொழுதும் போல இருக்கலாம் மிகவும் கஷ்டமாக இருந்தால் தன்னுடைய முகத்திலிருக்கும் அமைதியை வாசித்துக்கொண்டிருங்களென இறந்தவர் வந்து எல்லாருக்கும் அறிவுரையைப் பொழிந்தார் எல்லாரும் கைகளை விலக்கி சாதாரணமாகி இறந்தவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அதில் குடிகொண்டிருந்த அமைதியை ஆளாளுக்குத் தங்கள் முகத்தில் வைத்துச் சோதித்துப் பார்க்க அது யாருக்குமே வரவில்லை இறந்தவர் கால் பெருவிரல்கள் இரண்டும் ஒட்டியிருப்பது போல தன்னுடைய கால் பெருவிரல்களைக் கூட்டத்தில் ஒருவர் ஒட்டி வைத்தார் உடனே எல்லாரும் அவசர அவசரமாக ராட்டினம் உயரச் செல்லுகையில் முகத்தைக் கைகளால் பொத்துவது போல இரண்டு கைகளை வைத்து அவரவர் மரணத்தினைப் பொத்திக்கொண்டனர்.
நன்றாக ஏந்தலாக இருப்பதால் வந்த சிக்கல் கழுத்துக் குழிக்குள் அமுங்கியிருந்தால் இது நடந்திருக்காது தனியாக வேறு துருத்திக்கொண்டு நிற்கிறது அங்கு வேறெதுவும் வளர்ந்து தொந்தரவாகவும் இல்லை நல்ல போதுமான இடம் வாய்த்துள்ளது ஒரு சிறிய கவர்ச்சியும் லேசாக மிளிர்கின்றது மெல்லிய வன்முறைக்குத் துணிகின்றவர்கள் அதனால் கன்னத்தில் பளாரென ஒன்றை விடுகிறார்கள் கன்னமே இதைக் கேட்டு வாங்கிக்கொண்டது கன்னமே தான் இதற்கு முழுப்பொறுப்பு கன்னத்தை யார் அப்படியிருக்கச் சொன்னது யேசு அன்றைக்குக் கோடு போட்டார் இன்றைக்கு வரை ரோடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் நம்ப வேண்டியதில்லை நம்பினாலும் யேசுவிற்கென்ன ஒரு மெல்லிய புன்னகையைத்தான் எல்லாருக்குமாக பூக்கவிடப் போகிறார்.
மரம் எனக்கு லட்சம் வயதாக்கும் என்றது அந்த மரத்தை விடப் பெரிய ஒரு மரத்தை அதனிடம் காட்டினேன் என்னுடைய கூற்றை மமதையாகப் புரிந்துகொண்டாய் எங்களுக்கு லட்சம் வயதாக்கும் என்று அதன் கருத்தை அது திரும்பச் சொன்னது இதிலும் மமதை ஒட்டிக் கொண்டுள்ளதே ஒரு மலையைக் காட்டவா இல்லை உன்னுடைய கூற்றை திரும்பப் பெறுகிறாயா மமதை கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் அதனிடம் சொன்னேன் இல்லை இல்லை மலையையே காட்டு யாரெனப் பார்த்துவிடுவோம் என்று குரலை சற்று உயர்த்தியது அதனுடைய வாழ்க்கையில் திடீரென வந்த மலையை அதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இரண்டு மரங்களுக்கிடையே ஒரு மலை வந்து உயரமாக நின்றது அந்த மலையைப் புரட்ட வேண்டுமென மரம் நினைத்துவிட்டது அதனால் தேவையில்லாமல் மலையின் வாழ்க்கையில் ஒரு மரம் குறுக்கே வந்து தேவையில்லாமல் ஒரு மலை புரண்டது ஆனால் உண்மையில் மலைகள் மரங்களெல்லாம் எப்பொழுதும் சாதாரண ஒன்றாக நின்றுகொண்டிருக்கின்றன அந்தச் சாதாரணவொன்றே திரும்பத் திரும்ப ஒன்று போல அங்குத் திரும்பத் திரும்ப நடந்துகொண்டிருந்தது பார்க்க மிரட்சியாக இருந்தது.
சக்கரங்களில் எப்போது எது எந்தத் திசையில் கழண்டுகொள்ளுமெனத் தெரியாது யார் எப்போது எதற்காக எதில் விஷத்தைக் கலந்துவிடுவார்களெனத் தெரியாது அடுத்த அடியில் எந்தச் சர்ப்பம் சீறிக்கொண்டு நிற்குமெனத் தெரியாது எந்தக் காரணத்திற்காக எனது விரிப்புகள் பறிக்கப்படுமெனத் தெரியாது அது ஏன் வழங்கப்பட்டது என்பதும் எனக்குத் தெரியாது ஒரு நொடி அடுத்த நொடியில் மோதிக்கொள்வதற்குள் கடவுளிடம் எத்தனை முறையீடுகளைச் சொல்லி விலக்கு கேட்பது.
ஒவ்வொன்றிலும் மூழ்குவதற்கு எவ்வளவு தேவையோ அதிலிருந்து சமவெளிகளுக்குத் திரும்பவும் அவ்வளவே தேவையாயிருக்கிறது பால்நிறப் பற்களின் புன்னகைகள் அனைத்துமே வெண்மையானவை அல்ல அப்படியொரு சிரிப்பும் அதேநிறப் பற்களும் எனக்குமிருந்தன புன்னகைக்கும் சிரிப்பிற்குமான இடைவெளி பயங்கரமானது அந்தப் பயங்கரத்தின் ஊடாகதான் இரண்டின் மரணத்தையும் அறிய நேர்கிறது ஆக்கிரமிப்பு முழுதாகவே நிகழ்ந்துவிட்டதெனப் புரியவரும்போது அறிமுகம் வேண்டி நீட்டப்படும் உள்ளங்கைகளும் அதே இருட்குகைகளுக்கான வழியவே காட்டுகின்றன கண்ணிமைக்காமல் ஒரு நிமிடம் பார்க்கிறோம் எதிரே நிற்பவரின் முகத்தினை முதுகுக்குப் பின்னால் விரிந்துசெல்லும் பாதையினை அதில் உறைந்திருக்கும் நட்சத்திர பொறியினை தலைக்குப் பின்னால் மீண்டும் எழும்ப இருக்கும் ஒரு கரியநிற பறவையினை.
மாமிசம் கேட்கும் ஓநாயே ஒரு நிமிடம் நண்பனாக இரு அது மட்டும்தான் உன்னால் முடியும் அவ்வளவு தூரம்தான் என்னாலும் முடியும் மொழியின் அகர வரிசைகளைக் கண்டறிவதற்குள் அதனால் நடக்கும் அனைத்து வன்முறைகளும் தொண்ணூறு சதவீதம் முடிந்துவிடுகின்றன மின்மினிகளைச் சிறைபிடிக்கும் நேரமெல்லாம் அவை என் உள்ளங்கைகளில் குட்டி வௌவாலாக மாறிவிடுகின்றன தாராளமாகத் தேடிக்கொள்ளுங்கள் நான் போதைப் பொருட்களைப் பயன்படுத்தவில்லை சட்டைப் பையிலிருந்து நீங்களே எடுத்து இன்னும் சில பத்தாண்டுகள் என் ஏணியைச் சரிக்க எண்ணினால் மறுவார்த்தை பேசாமல் நான் கூடவே வருவேன் நிர்வாணத்தில் மச்சங்களைத் தேடி எனக்குச் சலித்துவிட்டது கைகளை உயர்த்தி வானத்தைக் கேட்கிறேன் கைகளை இறக்கி மீண்டும் திணிக்கிறார்கள் ஒரு பூமிப்பந்தை பூமியும் வேண்டாம் கைகளும் வேண்டாம் கடவுள்கள் உறையும் வானமும் வேண்டாம் கண்களை மூடிக்கொண்டு பலிபீடத்தில் தலையைக் கொடுக்க தயார் அதுவே என் கடைசித் தலையாக இருந்தால் மட்டும் போதும்.
நலம் விசாரிக்கும் போது உன் கண்களில் பசியுடனான அந்தப் புலியைப் பார்த்தேன் வேட்டையாட அவ்வளவு தயார் நிலையில் இருந்தது அதன் பூரிப்பும் மதமதப்பும் யாரையும் எளிதாக வீழ்த்திவிடும்தான் எனினும் எச்சரிக்கை நண்பா அதனுடன் ஒட்டிப்பிறந்த மற்றொரு புலி அவ்வளவு சீக்கிரத்தில் உறக்கத்திலிருந்து எழுந்திருக்காதெனினும் அதற்கும் குரோதத்தில் ஒளிரும் இரண்டு சிவப்புநிற கண்கள் நிச்சயம் உண்டு.
உன் கதைகளையெல்லாம் எங்கிருந்து தோண்டியெடுக்கிறாய் அதனுலகம் நிச்சயமாக இதுவல்ல பல்லடுக்குகளில் படைக்கப்பட்ட பூமி ஒன்றிலிருந்து உனக்கு யாரோ தூதனுப்ப வேண்டும் என் பிரமிப்பைப் பார்க்கத்தான் நீ அவைகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறாய் யாரும் அறியா அமைப்பில் அது பனுவலாகிறது ஒருவர் மனதிலிருந்தும் நீங்க முடியாத கதையாக உருக்குலைத்துப் போடும் கனவின் வாதையாக அடுத்தமுறையாவது உனக்கோலை வரும் தந்தி நரம்பில் என் பிராணனைப் பிணைத்துவை உடலொழிந்தேனும் அவ்வுலகின் சிருஷ்டிகளை நான் காணவேண்டும் இந்நிலக்கோட்டின் கீழ் நம்மைவிட என்ன கீழ்மை இருந்துவிடப் போகிறது. விதைகளை நீ கையிலே வைத்திருக்கிறாய் ஊறிய சேற்றைக் காணும்போதெல்லாம் ஒன்றிரண்டைத் தூவுகிறாய் விருட்சமாவது பற்றி உனக்குக் கவலையில்லை உன் கெண்டியில் அடர்த்திக் குறையக் குறைய சிறகுகள் பெறுகிறாய் விடுதலைப் பறத்தலில் அல்ல என்கிறாய் கால்தடம் பதியா நிலத்திலிருந்து சிந்தியதைப் பார்க்கிறாய் அங்கே உன் தசை நார்கள் கடுகுருண்டையாய் மாறி நிற்கின்றன புள்ளியிலும் புள்ளி இந்த மன்னிப்புக்கான உன் அப்பியாசம் மறவாதே சொப்பனமே அதன் உயரம் காணவும் நேரம்வரும்.
உன் பாதங்களைக் கிள்ளியது பற்றி
என்ன நினைத்தாய்?
நாம் சாலையில் விழப் பார்த்தபோது
கவனக்குறையை எடையிட்டாயா?
பொடனி வியர்வையை நக்கிச் சுவைக்கையில்
ஏக்கப் பேர்வழி எனத் தோன்றியதா?
பரஸ்பரம் கீழ்மைகளை ஒப்புவிக்கும்
சுதந்திரம் நமக்குள் இருந்ததே
இல்லை, யோசித்தாயா?
உதடுகளைப் பொத்திக்கொண்டு
எச்சிலுக்குக் காத்திருப்பது
மார்பில் முகம் புதைத்ததற்கு
வருத்தப்படுவது எனப் பூப்படையாமலே
புதைந்துவிட்டது எல்லாமும்
அரூபமாய்த் தொட்டுக்கொள்வதுதான்
புனிதமென்றால்
பிறப்புறுப்புகளில் ஏனிந்த சுனைப் பெருக்கம் சகி.
எங்கே கட்டி வைத்திருக்கிறாய் கிடை நாயை? கட்டவிழ்த்துவிடு உன் மூதாதை தடம் பதித்த மேய்ச்சல் நிலம் செந்நரிகள் சூழ குதறப்பட்டுக் கிடக்கிறது எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் கிடை மேய்க்கும் கம்பை? இதோ குள்ள நரிகள் சூழ கிடை மாடுகள் புனைந்து வைத்திருந்த நிலமெங்கும் நரியின் பல் தைத்த தந்திர வேலிகள் உள்ளன நரிகள் உன் குட்டியையும் கன்றையும் தூக்கிக்கொண்டு ஓடியபோது கோவம் வந்ததா உனக்கு? நரியைக் கொன்று பல்லெடுத்து மாட்டிக்கொண்டாயே! உன் நிலம் பறிபோகின்றபோது மட்டும் ஏன் இந்த மௌனம்! மூதாதையான குலதெய்வத்தை அழை மருளாட்டம் மறந்துவிட்டதா சலங்கையைச் சீர் செய்து கட்டிக்கொள் கொம்பூதச் சொல் கிடைக்காளைகள் எக்காளமிடட்டும் முறுக்கேறிய உடம்பை வளைத்து நெளித்து ஆடு இவ்வுலகம் உன் நெளிவுகளில் ஆடட்டும்.
கண்மாயைத் தொலைத்த நத்தைகள் வெறுங்கூடாகிய பின் எங்கள் விளையாட்டுக்குக் கிடை ஆடுகள் ஆகிப்போயின குட்டி நத்தைகள் இளங்குட்டிகளாகின பெருத்த நத்தை கிடாய்களாகின சற்றே மின்னிய நத்தைகள் பெட்டை ஆடுகளாகின அப்பா தொலைத்த கிடை ஆட்டு மந்தையை இப்படித்தான் என் சட்டைப் பையில் வைத்திருந்தேன்.
இரவின் அணுக்கம் கூடியிருக்கும் தூரத்தில் நாய் ஊளையிட்டால் கூட நரி என்று அடிமனது பிதற்றும் ஆடுகளுக்கு எந்தப் பயமும் இருக்காது கரும்புத் தோகை அசைந்தால் உயிரில் சுனை பிடுங்கும் ஆனால் ஆடுகள் துணையாய் இருக்கும் அந்தியில் தோன்றும் நிலா நடுச் சாமத்தில் மறையும் வளர்பிறை நாளில் அப்பா ஒருநாள் ஊர் போய்த் திரும்புவதற்கே மூச்சு முட்டுகிறதே அமாவசை நாட்களிலும் பிறை நாட்களிலும் அப்பாவுக்கு எத்தனை நாள் மூச்சு முட்டியிருக்கும் இருந்தாலும் இந்த இருள் எங்களின் தாய்.
கேள்விகள் நிறைந்த அதிசய சிகரெட் ஒன்றை காலமெனக்கு பரிசாக அளித்தது பேராவல் தாங்காது அந்தச் சிகரட்டைப் பற்ற வைத்தேன் முதல் புகையை உள்ளிழுத்தபின் நான் லாஸ் ஏஞ்சலில் நின்றிருந்தேன் பழரசம் வரவைக்கும் கைகள் இதுதானே? எனக் கேட்டு கன்னி ஒருத்தி என் உள்ளங்கையில் முத்தமிட்டாள் புகையை வெளிவிட்ட போது என் வலது கை துண்டிக்கப்பட்டு இருந்தது இரண்டாவது முறை நான் புகையை உள்ளிழுத்த போது கதகதப்பேற்படுத்தும் விறகுத்தீயின் முன்பு ஆதி மனிதர்களோடு ஆடைகளற்று அமர்ந்திருந்தேன் குகைச் சுவற்றில் உள்ள படங்களைச்சுட்டிக் காட்டி இவை புரிகிறதா? என அவர்கள் வினவினர் என்ன படம் என நான் உற்றுப் பார்த்தபோது நான் ஒரு தெருவோரத்தில் அமர்ந்திருந்தேன் என் விழிகள் களவு போயிருந்தன மூன்றாவதாகப் புகையை உள்ளிழுக்க எத்தனித்த போது சிகரெட் பாதியில் அணைந்திருந்தது எனக்கு உதவுவதற்காகப் பக்கத்திலிருந்த பால்ய நண்பனொருவன் அதைப் பற்ற வைத்து எனக்குக் கொடுத்தான் இருவரும் நஞ்சை நிலத்தின் மாமரம் ஒன்றின் முன்பு நின்றிருந்தோம் மாங்கனி ஒன்றைப் பறித்து உண்ட நான் மாங்காய் ஏன் இவ்வளவு புளிக்கிறதென அவனிடம் வினவினேன் யாரோ உலுக்கியதில் புகையை நான் வெளிவிட்ட போது எங்கள் வீட்டு மாமரம் என் நண்பனை முழுவதுமாய் விழுங்கியதாய் அனைவரும் பேசிச் சென்றனர் நான்காவது முறையாக நான் சிகரெட்டை உள்ளிழுத்தபோது நான் ஒரு கோட்டை வாசலில் நின்றிருந்தேன் ராஜ பரிவாரங்களோடு வந்த என் நண்பன் எனக்கு ஏனடா அந்தச் சிகரெட்டை கொடுத்தாய்? எனக் கேட்டு மலர் மாலை ஒன்றை அணிவித்தான் மறுநாள் என் வீட்டில் நீண்ட நாக்கினால் தூக்கிட்டு தொங்கும் என் கையில் இன்னும் அணையாமலிருக்கும் சிகரட்டை ஊரார் அதிசயத்துடன் பார்த்துச் சென்றனர்.
அது நான் என்றுமே சொல்லாதது நான் எப்போதும் பாட இருப்பது அது தினங்களில் இல்லை அது எப்போதும் தொடங்கும் ஒன்று பாதி இருளிலும் பாதி ஒளியிலும் அதன் ஒளிர்வு அத்தனை வளைவாய் என்பினும் அத்தனை உயர்வாய் எழும்பிச் சொல்கிறது எங்கே முதல் மலர் புறா கடவுளின் கைகள் நேசத்தை இழந்தபோது அது ஓர் ஒலியற்ற மகத்தான வார்த்தையை வெளிப்படுத்த எதிரொலியற்றதாய் எங்கே சுகந்தம் கீழே சென்றதோ அங்கே ஓ ஆனால் எல்லாமே அங்கே இருந்தது என் கவிதைகளின் மேலே ஒரு மலர்வளையம்.
முதலில் ஒரு கவிதை கண்டிப்பாக ஜாலமாய் இருக்கவேண்டும் பிறகு ஒரு கடற்காகம் போல் இசைமயமாய் ஒரு பிரகாசத்தின் இயக்கமாய் ஒரு பறவையின் மலர்வின் ரகசியம் பொதிந்ததாய் அது ஒரு மணியைப் போல மெலிவாய் மற்றும் அது கண்டிப்பாக தீயையும் அத்துடன் கொண்டிருக்க அதற்கு வில்களின் விவேகம் இருக்கவேண்டும் அது ஒரு ரோஜாவைப் போல முழந்தாளிடவேண்டும் அதனால் செவிகொள்ள முடியவேண்டும் புறா மற்றும் மானின் ஒளிர்மையை ஒரு கல்யாணப்பெண்போல தான் தேடுவதை மறைக்கவேண்டும் எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடவுளின் மீதாக மிதக்கவேண்டும் கவிதைகளின் புத்தக அட்டையிலிருந்து அவர் புன்னகை செய்தபடி இருக்க.
நிச்சலனம் என்பது சிந்தனையின் ஒருமித்தல் படிவாகாதிருத்தல் ஒரு கழைக்கூத்தாடி இறுக்கமான கயிற்றின் மேல் சமன்செய்தவாறு இருத்தல் குன்றா வினைப்பொருள் மொட்டுப் போல அவளது செயல் முடியும்வரை ஓர் அழகிய தாவலில் அவள் தரையில் இருக்கிறாள் வளைந்து வணங்குகிறாள் தன்னைப் பிரகாச கரவொலியில் முங்கச் செய்கிறாள் பிறகு நிசப்தம் இனி இல்லை இப்பொழுது அது பேச்சென்று அழைக்கப்படும் ரோஜா.
நான் எண்ணுகிறேன் ஆம், சோகமான நீலநிற சிறுத்தை அதன் கண்கள் பச்சைநிறத்தில் இருந்தால் ஈடற்றதாய் இருக்கும் மற்றும் மரணத்தை இரு பூக்களைப் போல் பார்க்க வேண்டும் நானே கூட அதற்குக் கொணர்வேன் திகைப்பூட்டும் தங்கம் அனைத்தையும் கடவுளின் பொருட்டு அதன் காலடியில் கிடப்பேன் மரணத்திற்காய் காத்திருந்து அதன் நீலநிற விலங்குப் பாதம் தன் ஈடற்ற சட்டவிதியைக் கொண்டிருக்கும் பச்சைநிறக் கண்கள் ஈடற்ற சொற்களை என்னவிதமான குரல் இந்த நீலம் இந்த பச்சை திரட்டும் என்பது மாபேரளவான நேசம் மற்றும் நானே கூட நேரம் நானே காத்திருக்கிறேன் இந்த அபரிமிதத்திற்கு. ஓ விரைந்து வீழ்வாயாக, தூய தாளே தூய கண்களே வீழ்வாய் கனம் மிகுந்து அமரத்துவமான சிறுத்தையே மரணத்திற்கிணையாக என்னை தூக்கி நிறுத்து என்னை உனது ஒப்புமையின்மையுடன் ஒப்புமைப்படுத்து.
புயல்களையும் சூரியனையும் தாங்கிய புராதன எறும்பைப் போல அழகாய் இரு தலைக்கவசமோ அல்லது தளர் அங்கியோ அணியாது அது தலைமை பிஷப்பாகவும் போர்வீரனாகவும் இருந்தும் கூட அது தன் தசையைத்தான் அணிந்தது இனிய மரியாதையுடன் பாத்திரங்களுக்கு வணக்கம் செய் இவை யாவும் என்னவென்பது உனது விளக்கத்திற்கு விடப்பட்டிருப்பினும். மிகச்சரியாக பிரபஞ்சம் அவ்வளவு சிறிதில்லை ஆனால் இவை கண்டுபிடிக்கப்படும் எங்காவது மிகச்சரியாக அவை கண்டுபிடிக்கப்படும் பெரும் நிதானத்துடன் பேசு ஆனால் யோசி மாபெரும் ஆவேசத்துடன் எரியும் பேருணர்ச்சி எறும்பு என்ன நினைத்தது என்று எந்த ஆண்டுப்பதிவேடுகளும் வெளிப்படுத்தவில்லை என்பினும் அதன் சந்ததியினர் முத்திரையை உடைக்காத போதிலும் எறும்பின் தடயமற்ற தன்மையை அடியொற்றிப் பிரதியெடு ஒவ்வொரு எறும்பும் இந்தப் பூரணத்தை எட்டிவிட்டது அது வருகிறது அது போல அது செல்கிறது தண்ணீர் வழிவது போல் வழிகிறது அத்தியாவசியமாக ஆனால் ரோஜாவைப் போல ரகசியமாக.
கடல்நீரில் செய்யப்பட்ட ஒரு ரேடியோ இசைப்பதற்கு கடல்கன்னிகளைக்கொண்டிருக்கும் அவர்கள் என்னை முத்தமிடும் சமயம் எனது புலன்கள் அனைத்தும் வரவேற்கும் பறவைகளால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ திராட்சைகளின் இசையைக் கொண்டிருக்கும் அவற்றின் விலாக்களுக்கு இடையே மகிழ்ச்சிகளை சுமந்து செல்வர் இணைநிலையினர் இன்றி ஆனால் ஒளியால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ வில்லியம் பிளேக் -இன் இசையைக் கொண்டிருக்கும் அவர் தன் மாபெரும் புலிவால்களால் தோற்கடிப்பார் கடவுள் - இசைவிருந்துகளை.
எண் ஒன்றுக்கும் ஒன்றுக்குமிடையில் ஒரு முற்றெண்ணுக்கும் மற்றொரு முற்றெண்ணுக்கும் இடையில் அதுவே வெறுமையாக இருக்கிறது அந்த அரூப பூஜ்யம் நானுக்கும் நானுக்கும் இடையே சுயத்துக்கும் சுயத்துக்கும் இடையே அதுவே சர்வமானது அந்த அரூப நாயகன் அந்த சுயம் சமமாய் இருக்கக்கூடும் அல்லது என்றென்றுமாய் இரண்டாக இருக்கலாம்.
எனது நிலையான முகவரியை உங்களுக்கு அளிக்க (அது) உங்களைத் திகைப்பூட்டும் நான் ஆனது போல (கொண்டது) விலாசமற்ற நாட்கள் அல்லது விசாரணையின் நாட்கள் கடந்து போயின கண்டுபிடிக்கப்பட்டன ஏணி மூலம் மதிலேறிக் கடக்கும் இடப்பெயர்வு மேலே அல்லது கீழே ஆனால் எப்போதும் ஒரு பார்வைக்குவிப்பு ஒரு எப்போதுமான - விலாசம் கண்டுபிடிக்கப்பட்டது காதல் என்னை வெற்றிகொள்ளாதிருந்திருப்பின் (அது) மரணமாக இருந்திருக்கலாம். மரணத்தைவிடக் கூடுதல் அல்லது குறைவாக இருந்திருக்கலாம் ஆனால் கடவுள் அதை செவியுற்றதும் உடனே மாட்சிமையுடன் பதவி துறந்தார் நான் அங்கே இருந்தேன் எந்த ஒலியுமின்றி வார்த்தை.
பிக்காஸோவில் நீங்கள் காண்பது நீலம், ரோஜா நிறம் மற்றும் கனசதுரங்களின் கன்னித்தன்மை அவரது நிறங்களின் ஒலி இலையுதிர்காலம் ஆப்ரிகாட் பழங்களின் மனச்சோர்வு ஒவ்வொரு ஓவியத்தின் மேலும் ஷகாலின் தேவதைகள் போல் தொங்குகின்றன இந்த மனிதன் மில்ட்டன் கே என்பவன் மிக சோகமானவன் மேலும் அவன் தேவதைகளையும் நிர்வாணிகளையும் ஓவியம் தீட்டுவதில்லை என்றாலும் அவை அவற்றைப் போலவே அவலமானவை மிக நிச்சலனமான மணிகள் இரங்கற்பாடல்களுக்கு ஒலிக்கின்றன கனசதுரங்கள் துக்கத்தின் கனசதுரங்கள் ஆனால் கன்னிகளாய் இருப்பதால் கனசதுரங்கள் அதிக கவனத்துடன் எழுகின்றன ஆனால் நிர்வாணிகள் அனைவரும் நிச்சலனமாய் அவர்கள் கன்னிகளாய் இல்லாமையால் இதை உள்வாங்க மென்மை தேவைப்படுகிறது வர்ணங்களின் பொருட்டு நிர்வாணிகள், கனசதுரங்களை பீடிக்க இருக்கின்றனர் ஒருவர் ஓவியக்கலையின் காளைச்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்தால் ஒழிய. பிறகு இணங்குவித்தல் உடனடியானது: நீங்கள் கிடக்கிறீர்கள் வீழ்ச்சியுற்று, வெற்றியாளராய், மிகத் துயரமான கொம்புகளைப் பற்றிப் பிடித்தபடி.
ஒவ்வொருவரும் ஓர் அறையை தம்முடன் சுமக்கின்றனர் இதை கேட்டலின் மூலமாய்க் கூட நிரூபிக்கலாம் யாரோ ஒருவர் விரைந்து நடந்தால் மற்றும் ஒருவர் காது கொடுத்து கூர்ந்து கேட்டால் இரவில் சுற்றியெங்கும் சகலமும் அமைதியாய் இருக்கையில் ஒருவர் செவியுறுகிறார் எடுத்துக்காட்டாக சரியாக சுவற்றில் இறுத்திக் கட்டப்படாத கண்ணாடியின் சடசடப்பை. From Franz Kafka’s ‘First Octavo Note-book.’ Wedding Preparations (Secker and Warburg)
ஒரு வில்லாளன் ஆவதற்கு நீங்கள் ஒரு தறியின் அடியில் இரண்டு வருடங்கள் முன்னும் பின்னுமாய் போய்வரும் ஓடக்கட்டையை கண் இமைக்காமல் பார்க்க வேண்டும் பிறகு மூன்று வருடங்கள் உங்கள் முகம் ஒளியின் பக்கம் திருப்பப்பட்டு ஒரு பட்டு நூலின் மேல் ஒரு பேன் மேலேறுவதைக் கவனிக்க வேண்டும் ஒரு சக்கரத்தை விடப் பெரியதாய் அந்தப் பேன் தோன்றும் பிறகு ஒரு மலையைவிட அது சூரியனை மறைக்கும் போது நீங்கள் அம்பை விடலாம் நீங்கள் இதயத்தின் மையப்புள்ளியைத் தாக்குவீர்கள். From Lao-Tse, quoted in The Notebooks of Simone Weil, volume 1 (Putnam)
அவனது கவிதைகளின் நிழலிலிருந்து விரைந்து பறந்து மறையும் பொன்னாலான பறவைகள் ரைம்போவின் அந்தத் தங்கப் பறவைகள் எங்கிருந்து வந்தன? எங்கே பறந்து போகின்றன? அவை புறாக்களோ அன்றி பருந்துகளோ அல்ல அவை காற்றை வசிப்பிடமாய்க் கொண்டவை இரவில் பொறிக்கப்பட்ட தனிநபர் தூதுவர்கள் ஒளியூட்டத்தின் வெளிச்சத்தில் விடுவிக்கப்படுகின்றன காற்றின் உயிரிகளுடன் அவற்றுக்கு எந்த உருவ ஒற்றுமையும் இல்லை அவை தேவதூதர்களும் கூட இல்லை ஆன்மாவின் அரிய பறவைகள் சூரியனிலிருந்து சூரியனுக்கு இடம்பெயரும் பறவைகள் கவிதைகளில் சிறைப்பட்டிருப்பதில்லை அங்கிருந்து விடுதலை அடைகின்றன. From Henry Miller, The Time of the Assassins (New Directions).
தனது ஓவியத்தட்டின் முதன்மை வர்ணங்களைத் தறித்தார் மற்றும் அவரது அமைப்பாக்க உத்திகளில் செங்குத்துக்களையும் கிடைத்தளங்களையும் கூட இறுதியாக ஒரு புள்ளியை அடைந்தபோது அவரால் பச்சை நிறத்தின் ஒழுங்குகளை அனுசரிக்க இயலாமல் மரங்களைப் பார்க்காமலிருக்க மேஜையருகே இருக்கையை மாற்றி அமர்ந்தார் இந்த மந்திரவாதி அவரது ஆரம்பப் பணியில் அதி நுட்பமான மரங்களின் ஆய்வுகளை சாதித்தார் அரூப கோணத்திற்கு முன்னேறி எடுத்துக்காட்டு அடுத்த எடுத்துக்காட்டாய் அவை சதுரங்களிலும் செவ்வகங்களிலும் மறையும் வரை. From a book review by Howard Devree of Piet Mondrian by Michel Seuphor. New York Times Book Review, 1957.
தாகமாயிருக்கும் ஒரு சிறு பறவை அதன் மரணத்திலிருந்து ஒருவர் எடுத்து விடுகிறார் அதன் சிறிய இதயம் துடிக்கிறது படபடத்து கதகதப்பான நடுங்கும் கை மீது எந்த பிரம்மாண்டமான கடலின் கரையாக நீங்கள் இருக்கிறீர்களோ அதன் இறுதி அலையென நீங்கள் திடீரென அறிகிறீர்கள் இந்த சிறு உயிரி தேறிவருகிறது என வாழ்வு மரணத்திலிருந்து தேறுவதுபோல மற்றும் நீங்கள் அதைப் பிடித்திருக்கிறீர்கள் பறவைகளின் தலைமுறைகள் மற்றும் அவை பறக்கும் எல்லாக் காடுகளையும் அவை பறந்து சென்று மேலேறும் அனைத்து சொர்க்கங்களையும். From a letter to Otto Modersohn. Letters of Rainer Maria Rilke, volume 1 (Norton).
ஆன்ட்டிபோலோ நகரில் பல இளைய வயதினர் இருப்பார்கள் அவர்கள் உன்னிடம் வருவார்கள் அவர்களை நீ விரும்புவாய் காரணம் அவர்களது நாவுகள் தேன்தடவியது போன்றவையாக இருக்கும் அவர்களின் கால்கள் மென்மையாய் நடப்பவை நீ என்னை மறந்துவிடுவாய் உன்னால் மறக்கப்பட்ட என்னால் உன்னை மறக்கவியலாது நீ என்னை மறக்கும்போது நான் எனது நெஞ்சின் மேல் விரல்களால் தட்டிக் கொள்வேன் உன்னை அழைத்தபடி மரங்களின் ஊடாய் நான் உன்னிடம் பேசுவேன் நாட்டியக்காரர்களின் கைகளின் ஊடாய் பல காதலர்களால் பேசப்பட்ட வார்த்தைகளின் ஊடாய் உன்னிடம் பேசுவேன் நாட்டியக்காரர்களின் கரங்கள் உன் உடலைச் சுற்றி இருக்கும் உன்னை வியந்து நோக்கும் ஆண்களின் கண்கள் எனது கண்களாய் இருக்கும் எனக்குப் பல கைகள், பல கண்கள் உள்ளன. உன்னைக் காதலிப்பதால் நான் பல காதலர்களாக ஆகிவிட்டேன் கற்பனையில் காரணம் பிற ஆண்களின் கரங்கள் உன்னைச் சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை பல நாட்டியக்காரர்களை நானே உண்டாக்கி இருக்கிறேன் அவர்கள் உனது வட்டவடிவான இடையைப் பற்றும்போது பற்றிக் கொண்டிருப்பது நானாக இருக்கும் அவர்கள் சொல்லும் காதலின் சொற்கள் அவர்களது அல்ல மாறாக எனது நான் பல காதலர்களாக இருக்கிறேன் உனக்கு நீயும் கூட என்னை நேசிப்பாயானால் பல நாட்டியக்காரர்களில் நீ என்னைக் காணலாம் அவர்களின் உடல்களில், அவர்களின் சொற்களில் நானே பல காதலர்கள் காரணம் நான் உன்னைக் காதலிக்கிறேன். * பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம்
நிழல் ஊசலாடுவதும் மரம் கிளைவிரித்து இறங்குவதுமாய் ஏறி இறங்குவதும் நீரின் பிழையல்ல கண்ணின் மாயம் இறங்கி உடல் மறைக்கும் வரை தெரிவதுமில்லை அதன் உயரம் சமநிலை என்பது மேல்காண்பதெனில் வேரின் நீட்சியை எதில் கழிப்பது ஒவ்வொரு முறையும் ஒரு தவறை நீயோ அவரோ காண்கையில் தவறின் மீது உனக்கு அக்கறை ஏதுமில்லையோ கொதிக்கும் மனதை ஆசுவாசப்படுத்த இளநீர் இளநீர் எனும் குரல் எங்கோ ஒலித்துக்கொண்டே செல்கிறது. ஒலித்துக்கொண்டிருக்கும் சப்தத்தை தாண்டிய மௌனம் உரைப்பதென்ன மகிழம்பூக்கள் வசிக்கும் தெருவில் ஒரு நாடோடி முகவரி தேடி அலைகிறான் வீசும் நறுமணம் நிர்க்கதியானவற்றை கேள்விக்குள்ளாக்குகிறது ஒவ்வொரு விநாடியும் முடிவற்றதன் நீட்சி பார்த்த நொடியில் நீர் சுரக்கிறது உப்புக்கரிக்கும் உன் நினைவு வடுக்கள் ஏற்படுத்துவதை எந்தத் துணிகொண்டு துடைப்பது எந்த நீரைக் கொண்டு கரைப்பது தூரமென்பது திரும்பிப் பார்ப்பதற்கும் விடைபெறுவதற்கும் நாமே வகுத்த நிமித்தம்.
நினைவுகளை அழிப்பதென்பது பிறப்பின் மறுஅவதரிப்பு ஒருநாளின் பகலை இரவு விழுங்கி மீண்டும் பிரசவிக்கிறது புதுப்பகலை மறக்கடிக்க மிச்சமிருப்பது ஒரு நினைவு. கொதிக்கும் நீரில் முகம் பார்க்க முடியுமா அடிக்கும் காற்றில் அசையாக்கொடியை எப்படிக் காண்பது விளையும் பயனை உணரா மனங்கள் வினையும் முடிவும் அதனதன் வழியே நீரில் மிதக்கும் தக்கைக்கு வயதோ ஆயிரம் மீனெனப்படுவது நீரின் வாழ்க்கை.
மிகத்துல்லியமானது ஒவ்வொரு விநாடியும் மனதின் நிழலில் அசைந்தாடும் உருக்கள் உரைப்பது என்ன மத்திம காலத்தின் ஞானம்தான் சங்கீதம் அது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது ஓங்கி ஒலிக்கையில் நிச்சயமாய் எழுந்து நிற்கவேண்டும் ஒட்டு மொத்தமானதாய் அனைவருக்குமானதாய் ஏதேனுமொன்று இருக்கத்தான் வேண்டும் இடமும் வலமும் மாறிப்போகையில் உன் இடதும் என் வலதும் முழுமையடைய வேறொன்றைத் தேடுவதென்பது எதன் பொருட்டு தேடிக் கொண்டே முடிவடைகிறது கண்டடைந்ததாய் நாம் கொண்டாடுவது யாரோ ஒருவருடைய வலப்பாகத்தை விநாடியென்பது காலம் சிதறிய ஒரு பருக்கை.
பாலச்சந்தர் (30)
குமாரசாமி (31)
சிவஞானம் (31)
(பாலச்சந்தர் வீட்டு நீண்ட சதுர முன் அறை. மேடையில் இடது, வலது, மற்றும் பின்பக்கங்களில் சுவர்கள். இடது சுவருக்கு அருகில் மேடை விளிம்பை ஒட்டி பழுப்பு வர்ண கிளியர்டோன் மடக்கு மேசை.
இதன் மேல் சால்பெல்லோவின் ‘ஹெர்ட்சாக்’, இலக்கியச் சங்க வெளியீடான ‘கோணல்கள்’, கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’, பழைய ‘நியூஸ்வீக்’ ஒன்று, ‘லைஃப்’ மூன்று, முழு அளவு வெள்ளைத்தாள் கொஞ்சம், பிலிப்ஸ் பயனியர் டிரான்ஸிஸ்டர் ஆகியவை உள்ளன.
இதற்குப் பின்னால் சுவரில் பதித்த அலமாரி, கதவு மூடி இருக்கிறது. இதற்கும் பின்னால் கோத் ரெஜ் மடக்கு நாற்காலி மூன்று சுவரில் சாய்க்கப் பட்டுள்ளன. சுவர்க்கோடியில் உள்ள கதவு உட்புறமாகத் திறந்திருக்கிறது.
பின் சுவரை ஒட்டியபடி, நடுவில் இல்லாமல் சற்று இடது பக்கம் ஒதுங்கிய மாதிரி கிளியர்டோன் சாய்வு நாற்காலி; இதில் நீலத்தில் கறுப்புப் பட்டைத் துணி போட்டிருக்கிறது.
பின் சுவரின் வலது கோடியில் ஒரு கதவு; இதுவும்உள்ளுக்கே திறந்துள்ளது. இதன் வழியே ‘சோவியத்நாடு’ மாதக் கேலண்டர் தெரிகிறது. 1969 டிசம்பர்;தேதிகள் கீழே; மேலே படம். வலது சுவரின் பின்கோடியில் ஒரு கதவு மூடியுள்ளது.
இச்சுவரில், மேடையின் முற்பகுதியில், ஒரு நீண்ட சன்னல்;இதன் கீழ் பகுதியில் பல நிறங்கொண்ட நவீன பாணி மஃபட்லால் திரை, சன்னல் விளிம்பில் ‘வீக்லி’ இரண்டு, சன்னலுக்கு அருகில் ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் டீபாய்; இதன்மேல் முழு அளவு அட்டை ஒன்று, ‘ஸ்பான்’ ஒன்று, வெள்ளைத்தாள் சில, ரைட்டர் பேனா, ஆஸ்ட்ரே, வில்ஸ் பெட்டி, தீப்பெட்டி இருக்கின்றன.
டீபாயை ஒட்டி ஒரு ஆலிவ் பச்சை கோத்ரெஜ் கட்டில், டன்லப் பில்லோ பாணி மெத்தை, மஞ்சள்-கறுப்பில் ஷோலாப்பூர் விரிப்பு. கட்டில் அகலத்திற்கு நீண்ட, வெள்ளை லாங்க்லாத் உறை போட்ட மூன்று தலையணைகள் ஒன்றன்மேல் ஒன்றாகக் கட்டிலின் பின்பக்கம் அடுக்கி உள்ளன. இதற்குப் பின்னால் சாய்வு நாற்காலிக்கும் முன்னால் நேர் மேலே 60 வாட்ஸ் அர்ஜெண்ட்டா எரிகிறது.
கட்டிலின் இடது பக்கத்தில் ஹவாய் செருப்பு. தரையில் இங்கும் அங்கும் கட்டில் மற்றும் சாய்வு நாற்காலி. அருகில் அதிகமாகச் சிகரெட் துண்டுகளும் சாம்பலும் உள்ளன. கால்கள் கட்டில் விளிம்பைக் கடந்து நீண்டிருக்க, மூன்றாம் தலையணையில் தலையழுந்த படுத்து, ஜான் அப்டைக் எழுதிய ‘கப்புல்ஸ்’ என்னும் நாவலின் மலிவுப் பதிப்பை இரு கைகளாலும் பிடித்தபடி படிக்கிறான் பாலச்சந்தர்.
வெள்ளை, நீலம், செங்கல் நிறங்களில் சிறிதும் பெரிதுமான கட்டங்கள் போட்ட பின்னி லுங்கி; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக்; இடது கையில் மெடல் ஸ்ட்ரே போட்ட ஹென்றி ஸாண்டஜ் வாட்ச். 34 விநாடிகள் அசைவற்றுப் படிப்பில் ஆழ்கிறான். பிறகு வலது கையால் பக்கம் திருப்புகிறான். அதே சமயத்தில் இடது காலை மடக்கிக்கொள்கிறான். 15 விநாடிகள் சென்றதும் வலது காலை மடக்குகிறான்.
வலது கையின் மேல்புறத்தால் நெற்றியை ஆறு முறை அழுத்தித் தேய்க்கிறான். புத்தகத்தைப் பிடித்துள்ள இடது முழங்கை முட்டியை மெத்தையில் ஊன்றி, இடுப்பின் கீழ் பகுதியைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு தலையணைகளில் சாய்ந்தபடி அமர்கிறான். பலமாக மூச்சு விடுகிறான்.
புத்தகத்தை வலது கைக்கு மாற்றுகிறான். படித்துக்கொண்டே இடது கையை நீட்டி டீபாய் மீதுள்ள சிகரெட் பெட்டியைத் தடவி எடுத்துப் படுக்கை மேல் வைக்கிறான்; அதே கையால் ஒரு சிகரெட் எடுத்து வாயின் இடது கோடியில் திணிக்கிறான். பெட்டியைத் திருப்பி வைத்துவிட்டு தீப்பெட்டி எடுக்கிறான்.
சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்துக் கொண்டு, பெரு விரலால் உள் கூட்டைத் தள்ளி விடுகிறான். உள்ளங்கையில் பெட்டியை இடுக்கிக் கொண்டு, பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு குச்சி ஒன்றை உருவுகிறான்.
பெட்டியை மெத்தைமேல் வைத்து நடுவிரலால் அழுத்திக்கொண்டு குச்சியைக் கிழித்து எரிய வைக்கிறான். சிகரெட் பற்ற வைக்கிறான். அணைக்காமலே குச்சியை எறிகிறான். ஒரு முறை புகைத்த பின் சிகரெட் எடுக்கிறான்.
புத்தகம், சிகரெட்டைக் கை மாற்றிக்கொள்கிறான். திரும்பவும் பழையபடியே படுக்கிறான். படித்துக்கொண்டே ஐந்து முறை புகைத்து விடுகிறான். பிறகு, புகைக்காமல் படிக்கிறான். ஐம்பது விநாடிகள்.)
(புத்தகத்தை மெத்தை மேல் போட்டுவிட்டு எழுந்து கொண்டே) பாவி (ஷெல்ப் உள்ள சுவர் பக்கம் திரும்பி கால்களைத் தொங்கப்போட்டபடி) படுபாவி (முதல் அசையை அழுத்தி) Updike, (இரண்டாம் அசைக்கும் அழுத்தம் தந்து) UPDIKE - UP-DIKE (செருப்பைப் போட்டபடி) John UP-DIKE. John - my uncle John has a thing Cong (ராகம் போட்டபடி) Long john Updike’s Couples, Couples Couples, Up (என்று எழுந்து நிற்கிறான். ஒருமுறை புகைக்கிறான். சாய்வு நாற்காலியை நோக்கி நடக்கிறான்; வழியில் துண்டு சிகரெட்டைப் போட்டு மிதிக்கிறான்.
திரும்பி கட்டில் அருகில் வந்து இடதுகை நீட்டி சிகரெட், தீப்பெட்டி எடுக்கிறான். வலது கையால் ஆஷ்ட்ரே எடுத்தவன், தலையை அசைத்துவிட்டு திரும்பவும் அதை வைத்து விட்டு நிமிர்கிறான். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டே போய்ச் சாய்வு நாற்காலியில் சாய்கிறான். சிகரெட், தீப்பெட்டிகளை வலது புறம் தரையில் போடுகிறான். கண் மூடியபடி வேகமாக, ஆழமாகப் புகைக்கிறான்.
வெறித்தனமான சிந்தனையின் சாயல் முகத்தில் படர்கிறது. (55 விநாடி கழித்து) ஹாங்ங். (20 விநாடி கழித்து) அதான் சரி. (10 விநாடி கழித்து) வேற வழி. (ஒரு நீண்ட புகையிழுப்புக்குப் பின் எழுகிறான். சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் தேய்க்கிறான்.
அவனுக்கு வலதுபுறம் உள்ள வழியில் நுழைந்து மறைகிறான். சில சப்தங்கள். 22 விநாடியில் திரும்புகிறான், கையில் பிளாஸ்க் மூடியுடன், சாய்வுநாற்காலியில் சாய்கிறான். மூடியிலிருந்து காபி குடிக்கிறான்.
அப்போதும் ஆழ்ந்த சிந்தனை, குடித்தபிறகு மூடியை வலதுபுறம் வைத்துவிட்டு, டிரான்ஸிஸ்டரை வெறிக்கிறான். 9 விநாடி கழிந்ததும் ஒரு சொடுக்குப் போட்டு எழுந்தோடி, அட்டை + ஸ்பேன் + தாள் + பேனாவுடன் திரும்பி வந்து அமர்ந்து அவற்றை மடியில் வைத்து விரைவாக எழுதுகிறான்.
25 விநாடியானதும் நிறுத்துகிறான். சிகரெட் ஒன்று எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு, பெட்டிகளை மூடிக்கு அருகில் போடுகிறான். 10 விநாடி விழிக்கிறான். புகைத்தபடி எழுதிய தாளை எடுத்துஎழுதாத கீழ் பாதியில் சிகரெட் நெருப்பால் துளை போடுகிறான்.
பிறகு ஒரு இழுப்பு, ஒரு புகை விடுதல், ஒரு துளைப்பு என்று மேலும் நான்கு துளை போடுகிறான். ஆறாம் துளை போடும்போது, வெளியிலிருந்து குரல்: பாலா, பாலா.
பால: வர்றேன். (அட்டை முதலியவற்றை இடது பக்கம் வைத்துவிட்டு, விரைந்து சென்று மூடியுள்ள கதவைத் திறக்கிறான். முதலில் சிவஞானம் நுழைகிறான்; சந்தன டெரிலீன் ஸ்லாக், கறுப்புவாருடன் வெஸ்ட் எண்ட் வாட்ச், கடல் பச்சை பாண்ட், ஸான்டக் காலணி. பின்னால் குமாரசாமி வருகிறான்; வெள்ளை டெரிகாட்டன் ஸ்லாக், மெடல் ஸ்ட்ரே போட்ட ஃபார்டிஸ் வாட்ச், மான் நிற டெரிகாட்டன் பேண்ட், ஸான்டக்) வாங்கடா உங்களைத்தான் நினைச்சிக்கிட்டே இருந்தேன். (கதவை மூடாமல் பின் தொடர்கிறான். சிகரெட்டைக் கீழே போட்டு மிதிக்கிறான்).
குமா: (நடந்தபடி); அதனாலேதான் கதவை மூடி வச்சிருந்தியா?
சிவ: (கட்டிலை நோக்கி நடந்தபடி): அப்படி என்னடா பண்ணிக்கிட்டிருந்தே? (திரும்பிப் பார்க்கிறான்.)
பால: Paper ஐ ஓட்டைப் போட்டுக்கிட்டிருந்தேன், சிகரெட் நெருப்பாலே, (நிற்கிறான்.)
குமா: (சாய்வு நாற்காலியை அடைந்து, திரும்பி நின்று) எப்படியும் Paper ஐ கெடுக்கனும்.
சிவ: (கட்டிலில் உட்கார்ந்தபடி) அதாண்டா லட்சியம். எழுதிக் கெடுக்கனும், இல்லேன்னா இப்படி, ரொம்ப tired ஆ இருக்கு. நான் கட்டிலியே உட்கார்றேன். முடியலேன்னா அப்படிச் சாயலாம்.
பால: உன் விளக்கம் இல்லாமயே புரியுது, சும்மா இரு. (அருகில் சென்று நிற்கிறான்.) நான் இப்போ ஒரு mood லே இருக்கேன். பயங்கரமான mood, தெரியுமா?
சிவ: தெரியுது.
பால: (குமாரசாமியிடம்) ஏண்டா நிக்கறே, உட்காரேன். (அவன் உட்காருகிறான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டே சிவஞானத்தைப் பார்த்தபடி, சிவஞானத்திடம்) எப்படி?
குமா: Studs, வேற எப்படி? என்ன Couple- படிச்சியா? முடிச்சாச்சா?
சிவ: Couples ஐ படுக்கையிலேயே வச்சிருக்கான், படிக்காம இருந்திருப்பானா? அதான் இத்தனை cigarete, இந்த mood.
பால: (சிவஞானத்தை முறைத்துவிட்டு) இன்னும் முடிக்கல, பாதிதான். என்னமா எழுதறான்டா, கொல்றான், சே!
சிவ: சே, சே, ஒரே அசிங்கமா இருக்கு; முதல்ல இந்தக் குப்பையைக் கூட்டித் தள்ளி கதவுக்குப் பின்னால ஒதுக்குடா.
பால: நல்லவேளை.
(நகர்கிறான்; உள்ளே செல்கிறான்.)
குமா: நானும் பயந்துட்டேன் சிவஞானம். c Couples ஐத்தான் சொல்றீயோன்னு.
சிவ: (புத்தகத்தை எடுத்துப் புரட்டியபடி) இதையே சொல்லியிருந்தாதான் என்னடா? much too much. De Sade கெட்டான் போ. (புத்தகத்தை டீபாய்மேல் போடுகிறான்)
குமா: But - (பாலச்சந்தர் எழுதி வைத்த தாளைப் பார்த்து விட்டு எடுக்கிறான்.)
பால: (விளக்குமாற்றுடன் திரும்பியவன்) குடுடா அதை. (ஓடிக்கொண்டே விளக்குமாற்றைப் போடு கிறான்.)
குமா: (அதைப் பார்த்து) என்னடா எழுதியிருக்க?
பால: (அதைப் பிடுங்கி மடித்தபடி) நேரம் வர்றப்போ நானே படிக்கச் சொல்றேன். (சட்டைப் பைக்குள் வைக்கிறான்) இது beginning தான். (ஒரு நாற்காலியை எடுத்து அருகில் போட்டுக்கொண்டே) But what a beginning...
குமா: பெருக்கல?
பால: வேணுன்னா நீயே பெருக்கிக்கோ. (உட்கார்கிறான்.)
குமா: கட்டிலே இழுத்துப் போடுடா, சிவஞானம் (நன்றாகச் சாய்ந்துகொள்கிறான்) கடைசியில பெருக்கிக்கலாம், ஒரே அடியா, போகும்போது (வலதுகை நீட்டி, தரையில் கிடந்த பெட்டிகளை எடுக்கிறான். இருந்த ஒரே சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். சிகரெட் பெட்டியை கதவுக்குப் பின்னால் வீசுகிறான்; தீப்பெட்டியைக் கீழே போடுகிறான்.)
(இதற்குள் சிவஞானம் எழுந்து கட்டிலைக் குறுக்காக நகர்த்திவிட்டு, பாண்ட் பைக்குள் இருந்து பர்க்கலி, தீப்பெட்டி எடுத்துக்கொண்டு உட்கார்ந்து, ஒரு சிகரெட் பற்ற வைக்கிறான். இரண்டு பெட்டிகளையும் அருகில் வைத்துக்கொள்கிறான்.)
பால: இதுக்குக் குறைச்சல் இல்ல.
சிவ: என்ன, குமார்? (செருப்பை விட்டுவிட்டு, காலைத் தூக்கிப்போட்டுச் சாய்ந்து படுத்துக் கொள்கிறான்.)
குமா: நானும் கேட்டேன். (பிளாஸ்க் மூடியில் சாம்பல் தட்டுகிறான்.)
பால: ஏண்டா, flask மூடிதான் உனக்கு ash-tray வா? அதான் உன் கண்ல படணுமா; இவ்வளவு பெரிய (அறையைச் சுட்டிக்காட்டி) ash-tray படலியா? (எழுந்து, வலதுகையை நீட்டி) And you a Critic! Bah! (நகர்ந்துசென்று ஷெல்பிலிருந்து புதுச் சிகரெட் பெட்டி எடுத்துக்கொண்டு உடைத்தபடி திரும்புகிறான்.)
குமா: (சிவஞானத்தை உற்றுப் பார்த்துவிட்டு) Allright என்ன விஷயம்? (தீப்பெட்டியை எடுத்து வீசுகிறான்.)
பால: (தீப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு) உடைக்கணும்!
குமா: Cigarette packet டையா? (புகையை வேகமாக விடுகிறான்) இப்பத்தானே உடைச்சே.
சிவ: ஹஹ்ஹா ஆ!
பால: (வலது கையிலுள்ள சிகரெட்டை சிவ
ஞானத்திற்கு முன்னால் நீட்டி) உன்னை நான் முறைக்கிறேன். உன்னைத்தான் (சிகரெட் பற்றவைத்த பின், எரியும் தீக்குச்சியை அவன் முன்னால் கொண்டு போய்) Cigarette டைப் பற்ற வைக்கிற மாதிரி உன்னைப் பற்றவைக்க விரும்பறேன்.
சிவ: ஏன்?
பால: (தீக்குச்சியைக் கீழே போட்டுத் தேய்த்து) அவன் ஒரு கேனன். நீ ஒரு பெரிய கேனன். But you are always great. At silly things.
சிவ: நீ?
பால: A Cannon, I ’ II smash everything. எல்லாத்தையும் எல்லாத்தையும் உடைப்பேன். பிடிடா (குமாரசாமிக்குத் தீப்பெட்டியை வீசுகிறான்.)
குமா: (அதைப் பிடித்துக் கீழே போட்டுவிட்டு); Dramatise பண்ணது போதும், விஷயத்தைச் சொல்லு.
சிவ: (சிகரெட்டைக் கீழே போட்டு) மிதிடா, பாலா. (மிதிக்கிறான்) உட்கார். (உட்காருகிறான்) கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு பார்க்கலாம்.
குமா: (தனது சிகரெட்டை அணைத்துவிட்டு); உடைக்கணும் உடைக்கணும்ன்னு திரும்பவும் ஆரம்பிக்காதே.
பால: (யாரையும் பார்க்காமல்) உடைக்கணும் உடைக்கணும்ன்னுதான் வருது, குமார். வேற மாதிரியே வர மாட்டேங்குது. (ஒரு முறை புகைக்கிறான்) உங்க கிட்டே என்ன சொல்லணும், எப்படிச் சொல்லணும்ன்னு ரொம்ப நல்லா தெரிஞ்சது, நீங்க வந்து சேர்றவரைக்கும். நீங்க வந்து சேர்ந்தப்பறம் ஒண்ணும் புரியல.
சிவ: புரியுது; எல்லாச் சனியனும் ஒரே சமயத்தில தோணும். ஒவ்வொரு கேள்வியா கேட்டா எல்லாம் சரியாப்போயிடும். சரி, எதை உடைக்கணும்!
பால: வேற எதை, மரபைத்தான்.
சிவ: ஏன்?
பால: வேற என்னா செய்றது மரபை? வேற எதுக்கு இருக்கு மரபு?
சிவ: (குமாரசாமியிடம்) நீ கேள்டா.
குமா: எதுக்காக?
பால: என்னையா கேட்கற? (அவன் தலையாட்டுவதைப் பார்த்துவிட்டு) உடைச்சாதாண்டா அப்புறம் ஒட்ட வைக்கமுடியும். கேள்வி கேட்கறானாம். அவன் கேட்டதையே நீ ஏன்டா கேட்கற ?
குமா: Allright. இந்த idea எப்படித் தோணிச்சி?
பால: இதுவும் சரியான கேள்வி இல்ல; இருந்தாலும் பதில் சொல்றன். (சிகரெட்டை ஒரு முறை இழுத்து விட்டுக் கீழே போட்டுத் தேய்க்கிறான்). இன்றைய தமிழ் இலக்கியம் சுத்த அபத்தம். எல்லாம் நாலஞ்சிமாதிரிதான் எழுதறாங்க. நாலஞ்சி stereotypes தான். இதேதான் திரும்பத் திரும்பத் திரும்ப. உயிர் போகுது படிச்சா. மரபை உடைச்சாத்தான் இந்த இலக்கியம் உருப்படும். I tell you, அதுவரைக்கும் இது உருப்படவே உருப்படாது.
குமா: மரபை உடைச்சா உயிர் போகாது?
பால: இது ஒரு கேள்வி. ஏன் உடைக்கணும்? எதுக்காக உடைக்கணும்? உடைச்சா இது போகாதா, அது போகாதா? - இதெல்லாம் கேள்வி? (அவர்கள் இருவரும் குறிப்பாகப் பார்த்துக் கொள்வதைக் கண்டதும்) இது மட்டும் தெரியும்; சரியான கேள்வி கேட்கத் தெரியாது? மரபை எப்படி உடைக்கிறதுனு கேட்கத் தெரியாது. இதைக் கேட்கவே தெரியலியே, இதற்குப் பதில் எங்க சொல்லப் போறீங்க? நீ ஒரு critic, நீ ஒரு great jack of all trades. சொல்லுங்கடா பார்க்கலாம்.
சிவ: (பாலச்சந்தர் பேச்சு முடிவதற்குள் எழுந்து உட்கார்ந்து ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு) அதாவது நீ சொல்வதைப் பார்த்தா, இதுக்குச் சரியான பதில் உன்கிட்ட இருக்கு?
பால: Right. You've hit the nail on the head.
குமா: I wish he had. Literally. ஒரு cigarette போடு.
பால: அதே மூச்சிலியே cigarete போடச்சொல்றியா? (ஒன்றை எறிந்துகொண்டே) இந்தா, தொலை.
குமா: (பிடித்துக்கொண்ட பின்) cigarete இல்லாம பேச்சு வருமா? (பற்றவைத்தபடி சிவஞானத்தைப் பார்க்கிறான். அவன் புன்னகையுடன் படுப்பதைக் கண்டு) சிவஞானம் இப்போ பதில் சொல்றான் பார். எப்படிடா, சிவஞானம்?
சிவ: மரபு ஒரு கண்ணாடியா இருந்தா பிரச்சினையே இல்ல. ஒரு கல்லைத் தூக்கி எறிஞ்சா போதும்.
குமா: கல் எதுக்கு? அதையே கீழே போட்டா போதும்.
சிவ: Correct. மரபு கண்ணாடி இல்ல. அதனால இந்த ரெண்டு வழியும் பயனில்ல. கல்லும் எறிய முடியாது, கீழேயும் போட முடியாது.
பால: Fine. Fine playing for time. என்ன ஒண்ணும் தோணலியா?
சிவ: ஏன் தோணாமே? ஆயிரம் வழி இருக்கு. அதுல நீ எதை நினைச்சேன்னு நான் எப்படிச் சொல்றது? குமாரைக் கேளு.
பால: (முறுவலித்துவிட்டு) ‘மோகமுள்’லே சொல்ற மாதிரி, சுமை தாங்கி உயரம் வளர்ந்துட்டு என்னா ஆட்டம் ஆடற, குமார். இப்போ சொல்லு.
குமா: அவன் சொல்றது சரிதான்; ஆயிரம் வழி இருக்கு. இதைப் பாரு. (ஆழப் புகைத்த பிறகு) புதுமை செய்யனும், சோதனை செய்யனும், புதுப்புது சோதனை செய்யனும்.
பால: (இடை மறித்து, குமாரசாமியின் போக்கிலேயே) சோதனை சோதனையா புதுமை செய்யனும்! இப்படியே நீட்டிகிட்டே போ. ஆயிரம் வழிக்கு மேலயே கிடைக்கும். ஊம்... மறந்துட்டேன். c ஒரு Critic ஆச்சே. (ஒரு சிகரெட் எடுக்கிறான்.)
குமா: இந்த ரெண்டும் உனக்கு வேணுமா? அப்போ சரி, நீயே சொல்லு, உன் chance ஐ ஏன் கெடுக்கனும்…
பால: சரி. அந்தத் தீப்பெட்டியைப் போடு. (பிடித்துப் பற்றவைத்துக்கொண்டு) உடைக்கணும்; அதுதான் வழி, உடைக்கிறது தவிர வேற வழியே இல்லே. (இரு பெட்டிகளையும் கீழே போடுகிறான்.)
குமா: திரும்பவுமா? அதான் தெரியுமே. எப்படி உடைக்கிறது அதைச் சொல்டா.
பால: பேசாம என் வழியில சொல்றதுக்கு விடுறா. (வேகமாக ஒரு முறை புகைக்கிறான்) உடைக்கணும்ன்னு சொன்னேன். எதை உடைக்கணும்? மரபை உடைக்கணும், taboos ஐ உடைக்கணும், rotten social values ஐ உடைக்கணும், பயத்தை உடைக்கணும். அப்படி உடைச்சாத்தாண்டா இந்த நாடு உருப்படும், இந்த இலக்கியம் உருப்படும். என்னடா எழுதறாங்க இவங்க. நான் எழுதிக் காட்றேன் பாருங்க. (புகைக்கிறான்.)
சிவ: Social criticism ? ஆ?
பால: (குமாரசாமியைக் காட்டி) இவன் கிட்டேயிருந்து நீயும் இதைப் புடிச்சிட்டியா? அதைப் பத்தி எனக்குக் கவலையில்ல. ஒரு வழியில பார்த்தா எல்லாம் social criticism தான். நான் சொல்ல வந்தது அது இல்ல; வேற. உடைக்கிறதுக்கு ஒரு வழிதான் இருக்கு. sex. எல்லாத்தையும் உடைக்கணும், உடைச்சி அக்கக்கா பிரிச்சி சரியா ஒட்ட வைக்கணும். நல்ல ஆளுங்கடா, நெஞ்சிலே பயம், மனசிலே பச்சை, ஆனா நாக்கிலே மட்டும் வெள்ளை, எல்லாத்தையும் உடைச்சாகணும். இதுக்கெல்லாம் sex ஐ தவிர வேற வழியே இல்லே. (புகைக்கிறான்.)
சிவ: (இதுவரை புகைத்தவன் இப்போது நிறுத்தி) இப்படித்தான் ஏதாவது சொல்லுவேன்னு நினைச்சேன். ஆனா -
குமா: நிராத் சௌத்ரியோட article நல்ல influence பண்ணியிருக்கு, இல்ல சிவஞானம்? Couples தான் காரணம்ன்னு முதல்லே நினைச்சேன். அதுக்கு முன்னாடியே Sex on the Mind, Fear in the heart இருந்திருக்கு.
சிவ: அது மட்டும் என்னடா, குஷ்வந்த்சிங் editor ஆனப்புறம் வந்த எல்லா Weekly யும் influence பண்ணியிருக்கும். Sex இல்லாத Weekly இப்போ ஏது?
குமா: Latest issueல prostitution பத்தி வந்திருக்கே பார்த்தியா? (சிவஞானம் இல்லையென்று தலை அசைத்தபடி விரைவாகப் புகைக்கிறான்) ரொம்ப நல்ல survey; நிச்சயமாப் படிக்கணும்..
பால: இங்கேதான் இருக்கு. குமார் சொன்னதைக் கேட்டதும் சங்க கால prostitutes ஞாபகம் வந்தது. அந்தக் காலத்து ஆளுங்க என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கானுங்க. ஒரு inhibition இல்லே, ஒரு taboo இல்லே, எல்லாமே naturalஆ free ஆ இருந்திருக்கு. அந்த rich uninhibited sane வாழ்க்கை எங்கடா போச்சு? ரெண்டாயிரம் வருஷத்துக்குள்ள எல்லாத்தையும் குழிதோண்டிப் புதைச்சிட்டானுங்க படுபாவிங்க.
(ஒரு முறை புகைத்துவிட்டு, கீழே போட்டு மிதிக்கிறான், காட்டமாக) இவனுங்க உருப்படவே மாட் டாங்க. உடைக்கிறது இருக்கட்டும், முதல்லே இவனுங்களை உதைக்கணும். Sex ஐ பார்த்து பயப் படுவியா, பயப்படுவியான்னு உதைக்கணும். Sex ஐ பார்த்து பயந்து பயந்து எல்லாத்தையும் கெடுத்து உன்னையும் கெடுத்துக்குவியான்னு உதைக்கணும், பயம் தெளியற வரைக்கும் உதைக்கணும். (ஒரு சிகரெட் எடுத்துக் கொள்கிறான்.)
குமா: (சிகரெட் துண்டை அணைத்தபடி) எழுத்திலியா உண்மையாவா?
பால: எழுத்திலதான். (பற்ற வைக்கிறான்) இங்கே மட்டும் என்னா வாழுது? இந்த எழுத்தாளனுங்க, இவனுங்களும் பயந்து சாகறானுங்க. sexஐ பத்தி எழுதனுமன்னா நடுங்கறான், திணர்றான், பேத்தறான். அப்போல்லாம் இப்படியாடா எழுதினானுங்க? ஒருத்தன் என்ன சொல்ல வைக்கிறான் தலைவியைத் தெரியுமா? ‘என்ன செய்யலாம்’னு தோழி கேட்கறா. அதுக்குப் ‘பொன் செய்யலாம்’னு தலைவி சொல்றா. கபிலனோட அந்தத் துணிச்சல், நேர்மை எவன் கிட்டடா இப்போ இருக்கு?
சிவ: சினிமா கவிஞர் எல்லார்கிட்டேயும் இருக்கு. தமிழ் வார்த்தைங்க எல்லாத்துக்கும் இவங்க பச்சை வர்ணம் பூசிட்டாங்க. ஒரு வார்த்தையை விட்டு வைக்கலை.
குமா: ‘பாக்கி ஒன்னேதானுங்க’ன்னு ஒருத்தன் பாடி கிட்டே வாழைப்பழம் விக்க வேண்டியது தான்பாக்கி, மீதியெல்லாம் வந்தாச்சு. ஆனா ஒண்ணுசிவஞானம்; அவங்க கற்பனை வேற யாருக்கும் வராது.
சிவ: அதை விடு. தமிழ் இலக்கியத்திலே இப்போ Sex இல்லன்னு பாலா சொல்ற மாதிரி தெரியுது. எனக்கென்னமோ அதிகமா இருக்குன்னு படுது. நீ என்ன சொல்ற குமார்?
குமா: அதிகமாத்தான் எனக்கும் தோணுது. இன்னொரு விஷயம்; இதை நீங்களும் கவனிச்சிருப்பீங்க. indecent ஆனதைக் கூட decent ஆ சொல்றான் West லே; இங்கே decent ஆனதைக்கூட indecent ஆ ஆக்கிடறான்.
சிவ: Exacty. சினிமாப்பாட்டையும் 50 பைசா கதை களையும் எழுதறவங்களை விடு. Standard Writers ஏன் இப்படிச் செய்யறாங்க. இதைப் பார்க்கறப்ப, அப்படித் தமிழ்லே எழுதவே முடியாதோன்னு பயம்மா இருக்கு. Holy Sinner ஐ தமிழ்லே கற்பனை பண்ணிப் பாரேன். நான் சொல்றது புரியும்.
பால: Thomas Mann எதுக்கு? Maugham எடுத்துக்கோ போதும்.
குமா: விடுங்கப்பா, (புகையை விடுகிறான்) காட்டானுங்க மாதிரி உளறாதீங்க. ஆமா, Sex ல என்னா decent, indecent?
சிவ: sexல எல்லாமே decent தானா?
குமா: இல்ல, எல்லாமே indecent ஆ?
பால: சும்மா உளறாத, sexல ஏது இந்தப் பிரச்சினை? Sexல indecent indecent! I laugh through the anus.
குமா: what'll you fast through the mouth?
சிவ: (ஒரு சொடுக்குப் போட்டு) பாலா நீ ஒரு கேள்வி கேட்ட, இப்போ அதுக்கொரு பதில் தோணுது. இதைக் கொஞ்சம் சுத்தி வளைச்சித்தான் சொல்லியாகணும்.
பால: அதாவது, வழக்கம் போல. பரவால்ல, சொல்லு. (புகைக்கிறான்.)
சிவ: (எழுந்து உட்கார்ந்துகொண்டு) ஒரு காதலன் இருக்கான். அவனோட காதலின் ஆழத்தைக் காட்றதுக்கு எழுத்தாளன் எத்தனையோ வழியைப் பயன்படுத்தறான். இதில பலதை வள்ளுவன் கையாண்டுட்டான். அதனால வள்ளுவன் கிட்ட இருந்தே ஒரு எடுத்துக்காட்டு தர்றேன். பாலொடு தேன் கலந்த மாதிரி காதலி எச்சில் இருக்குன்னு காதலனைச் சொல்ல வைக்கிறான் ஒரு இடத்துல. இது ஒரு factன்னு நான் நம்பல. இந்த அனுபவம், என்னைப் பொறுத்தவரையிலும், சரியா வரல - இந்தக் குறள் ஞாபகம் - Kiss பண்ணும்போது இருந்தும் கூட. (சிகரெட் பற்ற வைக்கிறான்.)
குமா: இதைப் போய் check பண்ணனுமா? இது யாருக்கும் சரியா வராது.
பால: நானும் இதை ஒத்துக்கொள்றேன் - அதாவது காதலின் ஆழத்தைத் தெரியப்படுத்தற உத்தி என்கிற அளவில இதை ஒத்துக்கொள்றேன்.
சிவ: Right (ஒருமுறை புகைத்து) இந்த வர்ணனையைப் பாரு. ‘அவளால் சற்றுநேரத்திற்கு மேல் சிறுநீர் பிரிவதைத் தடுக்க முடியவில்லை. அவனோ அமுதம் அமுதம் என்று அருந்தினான்.’ இது எப்படி இருக்கு?
குமா: எந்த 50 பைசா novelலே இது வருது?
பால: இது indecent ன்னு நீ சொல்ற, இல்லியா?
சிவ: ஆமா, அது மட்டுமில்ல, unhygenic ன்னும் சொல்றேன்.
பால: (விரைவாகப் புகையை ஊதிவிட்டு) எந்த contextல வருது? (சிகரெட்டை அணைக்கிறான்.)
சிவா: context ஆ! I just made it up. (குஷியோடு புகைக்கிறான்.)
பால: context இல்லாமே என்ன சொல்றது? ஒரு குறிப்பிட்ட contextல இது மாதிரி வெளியீடு தேவைப்படலாம்.
சிவ: அதோட, ஒரு காதலனுக்கு இது மாதிரி கழிவும் தேவைப்படலாம். அதை அவன் bottle bottleஆ பிடிச்சி வைக்கலாம். அப்பறம் குடிக் கிறதுக்காக. (சுவைத்தபடி புகையை இழுக்கிறான்)
குமா: (சிரித்துவிட்டு) Thank god, you don’t write. ஆனால் சிவஞானம், ஒரு விதத்தில பார்த்தா இவன் சொல்றது சரிதான். Couples லே normal ஆ தெரியற வர்ணனை, Nick Carter லே ரொம்ப abnormal ஆ, ஏன் obscene னாவே தெரியுது. இதை மட்டுமாவது நீ ஒத்துக்கணும்.
சிவ: என் வர்ணனை indecentஆ தோணவேண்டியதில்லன்னு சொல்ற.
குமா: இல்ல, என்னைப் பொறுத்தவரையும் அது indecent தான். More than that obscene. Khosla Commission முத்தம் பத்தி சொன்னது ஒரு நல்ல parallel..
பால: அப்படிச் சொல்டா.
சிவ: முத்தத்திலே ஆயிரம் வகை இருக்கு. (புகை விடுகிறான்) படு ஆபாசமான வகையும் இருக்கு. அதையும் காட்டலாமா? எந்த ஆபாசத்துக்கும் எந்த அசிங்கத்துக்கும் ஒரு context கண்டுபிடிக்க முடியும்; முடியாதா?
குமா: உன்னால முடியும். என்னால முடியாது. பாலா வாலே கூட முடியுமாங்கறது சந்தேகந்தான்.
பால: ஏன்டா முடியாது? இதைவிட ஆழமா என்னாலே எழுத முடியும் - தேவை ஏற்பட்டா.
குமா: இதை விட ஆழமா? ஓ!
பால: ஓ என்னடா ஓ! பீன்னு சொல்லு; ஏன் பயப்படற?
குமா: மலம்- ன்னு கூடச் சொல்லக்கூடாது?
பால: சாதாரணமா அப்படியா சொல்ற?
குமா: இல்லே. வெளிக்குப் போகணுன்னு சொல்வேன்.
பால: சே, அந்தப்பொருளுக்கு என்னடா சொல்லுவ?
குமா: Alright alright. இதையும் எழுதுவியா?
பால: நிச்சயமா. Theatre of the Absurd ல என்னென்ன எழுதறான், என்னென்ன காட்றான், ஏன் நான் மட்டும் எழுதக்கூடாது?
குமா: உண்மைதான். நான் கூட ஒரு French play படிச்சேன். One Act Play. எழுதினவன் பேர் ஞாபகம் வரல, நாடகம் பேரும் மறந்து போச்சி. அதில ஒரு இடத்தில, genitals ல தேள்கொட்டி வீங்கிகிட்டே போவுது. ஆனா, எனக்கொரு பயம், பாலா.
பால: என்ன?
குமா: இந்த மாதிரி எல்லாரும் எழுதிடுவாங்க. ஆனா உண்மையான Absurd Theatre எழுதறதுக்கு ஆள் வேணுமே, of course நீ எழுதுவ. வேற யாரு?
சிவ: நம்ம புதுக்கவிஞர்களை மறந்துட்டியா, குமார்? (புகைத்துவிட்டு) Absurd theatreக்கு இவங்களைவிட qualified யாரிருக்காங்க? (அணைக்கிறான்.)
குமா: நீயும் உடைக்கிறியா?
சிவ: நல்லவேளை ஞாபகப்படுத்தின, பாலா. உடைக்கிறது என்னா ஆச்சு?
பால: நீ கதை சொன்னா என்னா ஆகுமோ அதுதான் ஆச்சு. உருப்படியா ஒன்னைப் பேசாதீங்க, tangentலியே போயிட்டிருங்க.
சிவ: சரி, இனிமே உடைக்கிறதையே பேசுவோம். அதுக்கு முன்னாலே - coffee இருக்கா?
பால: flaskலே ரெண்டு cup இருக்கும். மூனா பண்ணிக்கலாம். (எழுந்து உள்ளே போகிறான்.)
சிவ: என்னடா (மெதுவாக) பையன் இதா இருக்கான்.
குமா: ஆமா இதாதான் இருக்கான்.
சிவ: நானும் பார்க்கறேன் நீ இதுல சரியாவே கலந்துக்கல.
குமா: நான் சரியாத்தான் கலந்துகிட்டேன்; நீதான் இன்னும் சரியான moodக்கே வர்ல. அவன் சொல்ற வழி உனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்கல, இல்லியா?
சிவ: கொஞ்சங்கூடப் பிடிக்கலன்னு ஒரே அடியாச் சொல்லாதே. இது கூடாதுன்னு நான் சொல்லல. இது மட்டுந்தான்னு சொல்லும் போதுதான் ஒரு மாதிரியா இருக்கு. நீ சொல்லு; ஏன் இதை மட்டும் பயன்படுத்தனும்?
பால: (இடது கையில் 3 கப்களும் வலது கையில் பிளாஸ்க்கும் எடுத்துத் திரும்பி) நான் சொல்றேன். (குமாரசாமியிடம் ஒரு கப் கொடுத்து காபி ஊற்றுகிறான்) sex தாண்டா எல்லாத்துக்கும், basis. அதனால தான். (சிவஞானத்தின் அருகில் சென்று, கப் தந்து,காபி ஊற்றியபடி) உனக்குப் போய் நான் fredeஐ நினைவூட்டணுமா? (நாற்காலியில் அமர்ந்து காபி ஊற்றிக்கொண்டு பிளாஸ்கைக் கீழே வைக்கிறான்.)
சிவ: (பாலச்சந்தரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு) sex கதைங்களுக்கு basis sex தான்னு நல்லா தெரியுது. (ஒருவாய்க் குடிக்கிறான்) ஆனா, எழுதறதுக்கு? இதுக்கும் அதுதானா? (குடிக்கிறான்.)
பால: (குடிப்பதை நிறுத்தி) சந்தேகமில்லாம.
குமா: ah, the generate impulse (குடித்து முடித்துவிட்ட கப்பைக் கீழே வைக்கிறான்.)
பால: சபாஷ். (குடிக்கிறான்.)
குமா: Or probably the excretory impulse
பால: (கப்பை எடுத்து) உன் criticis - சத்துக்குத்தான் அது. (கப்பை கீழே வைக்கிறான்.)
சிவ: விடுங்கப்பா. (இடது கையால் வாயைத் துடைத்துக்கொண்டே கப்பைக் கீழே வைக்கிறான். ஒரு சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு) Freud சொல்ற Libido வேற, உன் Sex வேற (பற்ற வைக்கிறான்) இல்லியா? Freud க்கு அப்பறம் எத்தனையோ பேர் அவன் சொன்னதை question பண்ணலியா? Adler ஐ எடுத்துக்கோ. இவன் power தான் basis ன்னு சொல்றான். இந்த ரெண்டுல எது சரி?
குமா: ரெண்டுமே சரிதான். Jungம் இதையேதான் சொல்றான்.
பால: உங்க Adlerஐயும் Jungஐயும் உடைப்பில போடுங்க. Freud கூடவே இருந்தா insignificantடாவேதான் இருந்தாகணுன்னு தெரிஞ்சிக்கிட்டதும் Adler பிரிஞ்சி போனான், போனதும் உருப்படாத theory ஒண்ணையும் சொல்லிட்டான். அப்புறம் Jung ரெண்டு பேருக்கும் இடையிலே வந்து பெரிய ஆளா ஆயிடறான்; Adler ஐயும் பெரிய ஆளா ஆக்கிடறான். ஏன் குமார், இவனுங்க ரெண்டு பேரும் plan போட்டு இப்படிச் செய்திருப்பாங்ளோ?
குமா: My... that’s an idea!
சிவ: (வேகமாகப் புகைத்ததை நிறுத்தி குமாரசாமியிடம்) நீயும் உளரு. (பாலச்சந்தர் பக்கம் பார்த்து) நீ சொல்றபடி Freud சொல்றதே சரியாஇருக்கட்டும். அப்போ, நீ Sex கதைங்க எழுதறத் துக்குக் காரணம் என்ன? Freud சொன்ன - wish - fulfilment -டா நீ?
குமா: பொறுடா, கொஞ்சம், இதைவிட முக்கியமான கேள்வி ஒண்ணு இருக்கு. ஆமா, பாலா, sex கதைங்க எழுதறதுன்னா என்ன?
சிவா: இதுகூடத் தெரியலியா? Havelock Ellis, Stekel, Freud - இவங்க தர்ற Case Histories ஐ படிக்க வேண்டியது. ஒவ்வொண்ணுக்கும் ஒரு கதை எழுத வேண்டியது - அவ்வளவுதான். (புகைக்கிறான்.)
குமா: பேசாம இருடா, நீ சொல்லு, பாலா (பாலா ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்) for example, incest ஐ வச்சி ஒரு கதை எழுதலாம். அது மாதிரியா?
சிவ: எடுக்கும்போதே incestல தொடங்கு. (படுத்துக் கொள்கிறான்.)
பால: (புகையை விட்டு) ஏன் எழுதினா என்ன? இந்தத் தெருவிலேயே incest நடக்கு. ரொம்ப நாளா நடக்கு. அதுலென்ன தப்பு?
சிவ: அதுல ஒன்னும் தப்பு இல்ல. ஒரு குழப்பமும் (புகைத்துவிட்டு) ஒரு பிரச்சினையுந்தான் இருக்கு. யாரை எப்படிக் கூப்பிடறதுங்கற குழப்பம், இதுகூடப் பரவால்ல, ‘யாவரும் கேளிர்’ன்னு இருந் துடலாம். ஆனா இந்தப் பிரச்சனைதான் கொஞ்சம் serious ஆனது. Eugenics படி பார்த்தா, இதனால நல்ல இன வளர்ச்சி இருக்காது. (புகைக்கிறான்.)
பால: அதனால என்ன contraceptives பயன்படுத்தினாப் போவுது. (ஆழமாகப் புகையிழுக்கிறான்)
குமா: ஒரு சந்தேகம், fornication, adultery இரண்டையும் eugenics OKay பண்ணும். அப்போ இதைப் பற்றி எழுதலாமா?
சிவ: (எழுந்து உட்கார்ந்து) இந்த ரெண்டையும் எழுதறது எப்படி மரபை உடைக்கிறதாகும்? முந்தி யெல்லாம், (புகைத்துவிட்டு) ஒரு decadeக்கு முந்தி கூட , upper classலியும் lower class லியுந்தான் இது இருந்தது. ஆனா இப்போ middle class லே கூடப் பரவத் தொடங்கிடிச்சி. அப்போ, இதிலே உடைக்கறதுக்கு என்ன இருக்கு? (ஒருமுறை புகைத்துவிட்டு அணைக்கிறான்.) குமா: அந்தக் கட்டுரையை நீ படிக்கனும் - Prostitution பத்தி Weeklyயில் வந்ததைச் சொல்றேன், Respect-able Prostitutesன்னு ஒரு வகையை Jessica Jacob சொல்றா . Nymphomaniacs, frustrated wives, thrill-seeking collegians, working girls இப்ப டிப் பலரை இதில் அடக்கறா. இவங்கல்லாம் பணம் வாங்கறாங்க , அதனால் Prostitutes. பணம் வாங்கலன்னா இந்தப் பேர் தரமுடியாது, இல்லியா? நீ சொல்றதை இது Support பண்ற மாதிரி எனக்குப் படுது.
சிவ: Correct அப்போ நீ எந்தச் சமூக மரபை உடைக்கிறே? இதெல்லாம் இலக்கியத்திலயும் இருக்கு , புராணத்திலயிருந்து இன்னைக்கு வரைக்கும் இருக்கு. ராமாயணம் , அகல்யா விவகாரம், புதுமைப்பித்தன் சாபவிமோசனம்' கு.ப.ரா. சிறிது வெளிச்சம்', லா.ச. ரா. கீதாரி யெல்லாம் adulteryதான். ஜானகிராமன் மோகமுள்'ல adultery மட்டுமில்ல formi-cationனும் இருக்கு . அப்போ இலக்கிய மரபையும் நீ உடைக்கல , நீ உடைக்கிறதெல்லாம் உன் குட்டைத்தான். குமா: என்ன சொல்லப்போற?
பால: (புகைத்துக்கொண்டே) நீயே சொல்லு , நீதானே இதைக் கிளப்பினே. இதைத்தான் எழுதப்போறேன்னு நான் சொல்லக் கிடையாது.
குமா : Freudஐ விடறா சிவஞானம். சும்மா Freudஐ காட்டி blackmail பண்ணாதே. எனக்கு இன்னொரு சந்தேகம்.
பால : (சிகரெட்டை எடுத்துவிட்டு) நீ சந்தேகம்ன்னாவே பயம்மா இருக்கு.
குமா: உன் பக்கந்தான் பேசப் போறேன். சிவஞானம் இப்போ formல இருக்கான். விடக் கூடாது.
சிவ: (சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு ) என்ன சந்தேகம்?
குமா: Masturbation எடுத்துக்குவோம். இது ஒன்னும் ரொம்ப அசாதாரணமான பழக்கம் இல்ல. ஒரு காலத்திலே நாமெல்லாம் செய்துதான் இருக்கோம்.
சிவ: (புகையை விட்டபடி) Agreed.
பால : அந்த chance (சிகரெட்டை எடுத்தபடி) எனக்குக் கிடைக்கல. என்னை விடு. (அதைக் கீழே போட்டுத் தேய்க்கிறான்.)
குமா: உண்மையாவா?
பால : கைமுட்டி அடிக்கலேன்னா கூட அடிச்சதா சொல்லணுமா, உன் பாராட்டுக்காக? குமா: சொல்லவேணாம். சரி. இது சமூகத்திலே இருக்குன்னு தெரியுது. அதனால் - ஹா, மறந்துட் டேன். கலைக்கதிர்ல ஒரு கட்டுரையில் நம்ம தா.ஏ. சண்முகம் இதைப் பற்றிச் சொல்றார். இந்தக் கைமுட்டிப் பழக்கம் குமரப் பருவத்தினரிடம் ஏற்படுகிற இயல்பான பால் முதிர்ச்சியின் விளைவுதான்னு குறிப்பு தர்றார். அதனால் ஒரு எழுத்தாளன் சிரமப்பட்டு இதைச் சொல்லிக் கொடுக்கவேண்டிய தில்ல. இது கூடாதுங்கற மரபையும் உடைக்க வேண்டிய அவசியமில்ல.
பால : இதான் என் பக்கம் பேசற லட்சணமா?
குமா: கொஞ்சம் பொறு. நான் சொல்ல வந்தது வேற. இந்தப் பழக்கத்தைப் பத்தி எந்த இலக்கியமும் இருக் கிறதா எனக்குத் தெரியல - தக்ஷிணாமூர்த்தி எழுதின 'நங்கையே நமக்குதவி கவிதையைத் தவிர. அதனால், இதப்பத்தி எழுதாம இருக்கிற மரபை உடைக்கிறதுக்காக ஒருத்தன் இப்படி எழுதலாம். கதாநாயகன் கல்யாணமே வேண்டான்னு சொல்றான். ஆனா அப்பா அம்மா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. முதலிரவு, கதாநாயகி ஏமாந்து போறா. அடுத்து வர்ற பல இரவும் இப்படியே . ஒரு நாள் தற்செயலாகாரணம் கண்டுபிடிக்கிறா. இப்படி ஒரு Suspense கதை ஒருத்தன் எழுதறான். இதை நீ Sex கதைன்னு ஒத்துக்குவியா?
பால் : கதை இல்ல இது; Case History.
சிவ : அதுகூட இல்ல. (ஒருமுறை புகையை இழுத்து விட்டு) இது literary masturbation. குமா: அவசரப்படாதிங்க. இதில் ஏராளமா Sex ஐ புகுத்த முடியும். முதலிரவை அவ கற்பனை பண்றது அருமையான சமயம். அப்பறம் அவ அவனைக் கையும் களவுமா பார்க்கற இடம்; இதை மட்டும் ஏழெட்டுப் பக்கம் rumming commentary மாதிரி வர்ணிக்கலாம் இல்லையா? சிவ: இப்படி வர்ணிச்சிட்டா sex ஆயிடுமா? குமா: ஆகாதா? வேணுன்னே நீ இப்படிப் பேசற.
சிவ : Alright. அதனாலேயே அது நல்ல கதை ஆகாது. (புகைக்கிறான்.)
குமா: நல்ல கதை ஆகாதுன்னா ?
பால : ஒரு மேல்நாட்டுக்காரன் எழுதணும், அவ்வளவு தான், வேற ஒன்னும் வேண்டியதில்ல. சிவ: பாலா ரொம்ப எரிச்சலா இருக்கான். (ஒரு முறை புகைத்துவிட்டு) psychological probing இருக்கணும்; intensive Studyயா அமையணும்; வெறும் வர்ணனையோட நிற்காம் ஆழமாப் போகணும், அப்போதான் நல்ல கதையாகும். (புகைக்கிறான், நிம்மதியாக.)
குமா : I agree with you. பால : அவன் formulate பண்ணிட்டான். நீ approve பண்ணிட்டே , அப்புறம் என்ன? ஓ எழுத்தாளர்களே, ஆறே மாதத்தில் நல்ல கதை எழுதவேண்டுமா? இவர்களுடன் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
சிவ: நீ இப்போ receptive moodலே இல்ல. இதைக் கேளு. நான் சொல்றது புரியும். அகல்யாகதையை எடுத்துக்கோ . (ஒருமுறை மெதுவாகப் புகைத்துவிட்டு) கௌதமர் உருவத்திலே இந்திரன் அவகிட்டே வர்றான். அவ respond பண்றா . நேரம் போகப் போக அவளுக்குச் சந்தேகம் வருது. தொட்ட இடம், தொடற் பாணி, தர்ற அழுத்தம் ஒவ்வொண்ணும் இவன் வேற ஆள்ன்னு காட்டிக் கொடுக்குது. இதை யெல்லாம் பிரமாதமா வர்ணிக்கலாம். கொஞ்ச நேரம் போகுது. அவன் அனுபவ நுணுக்கம் அவ சந்தேகத்தை நிச்சயமாக்குது. உடனே தப்பிக்கப் பார்க்கிறா. ஆனா இந்திரன் பலத்துக்கு முன்னே அவளால் ஒன்னும் செய்யமுடியல . கல் மாதிரி கிடக்கிறா. (ஒருமுறை புகைத்து விட்டு அணைக்கிறான்) அதாவது அவகெட்டுப் போகலே. இந்திரன் எல்லா techniquesஐயும் காட்டிப் பார்க்கிறான். இதுவும் வர்ணனை இடந்தான். அப்பவும் அவ கல்லாவே இருக்கா. ஆனா ejaculation சமயத்தில் அவ உடம்பு மட்டும் தவிர்க்க முடியாத சிலிர்ப்பை உணருது; அப்போ , ஒரு கணந்தான், அவ மனம் மலருது. இதுவும் வர்ணனை இடம். அதனாலே rapeல ஆரம்பிச்சது adulteryயில் முடியுது. இந்தக் கதையில் நீ எல்லா physical detailsம் தரலாம்; அதே சமயத்தில் ஒரு clinical studyயாவும் ஆக்கலாம்.
பால: நல்லாகதை சொல்ற. இன்னும் ஒன்னு செய்; இதை நீயே எழுதிடேன்.
சிவ: ஒரு great story எழுதறத்துக்கு chance கொடுத்தா இவன் என்ன சொல்றான் பார்ரா. பால: நானே என் கதைக்கி plot தேடிக்கிறேன். நீ உன் வேலையைப் பாரு.
சிவ: அப்போ நீ உன் கதையைப் படி. (படுக்கிறான்.)
குமா: ஆமா, அதை நான் மறந்தே போயிட்டேன். இவன் என்ன செய்யப் போறான்னு தெரிஞ்சிக்க இதான் சரியான வழி. படிடா, பாலா. பால : சிவஞானம் சொன்ன கதையைக் கேட்டப்புறம் இதைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கு. நாலே வாக்கியந்தான் எழுதியிருக்கேன். குமா: அதனாலே என்ன, சும்மா படி. சிகரெட்டைப் போடு. (சிகரெட் மற்றும் தீப்பெட்டியைப் பிடித்துப் பற்ற வைத்துக்கொண்டே கேட்கிறான்).
பால : (பாக்கட்டிலிருந்து தாளை எடுத்துப் படிக்கிறான்) 'ஓர் ஆளின் மூக்கைப் பார்த்து அவன் அம்மா முலையின் அளவைச் சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியும் என்று நினைத்தான் சேகர்.' சிவ : அதானே கேட்டேன்; பாலாகதையிலே முன்னாடியே முலை வர்லேன்னா எப்படி? இதை வச்சித்தானே மரபையே உடைச்சாகணும்.
குமா: நீயுமா? இதேதான் Tristram Shandyயிலே வருது.
பால : அந்த Shandyயை நான் பார்த்தது கூட இல்ல. அடுத்த para. (படிக்கிறான்) அவன் அண்ணி பால் கொடுப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். முலைக் கதுப்பில் மூக்கு அழுந்த முட்டி முட்டி பால் குடித்தது குழந்தை. தனக்கு ஒரு பக்கம் கூப்பிட்டுத் தரமாட்டாளா என்று எண்ணிக்கொண்டே ஒரு சிகரெட் பற்றவைத்தான்.' அவ்வளவுதான். குமா: (இருமுறை புகைத்துவிட்டு) Sexual stimulation வர்றதுக்குச் சரியான நேரமாchoose பண்ணி யிருக்கே. பால் குடிக்கிறதையும் fineஆ observe பண்ணி சொல்லி யிருக்க. அவன் cigarette பத்தவைக்கிறது தான் top. Cigarette ஒரு nipple substitute என்கிற விஷயத்தை அருமையா பயன்படுத்திட்டே, என்ன சிவஞானம்? சிவ: (எழுந்து கொண்டே) இது அண்ணி கிட்ட போற கதை. (உட்கார்ந்து கொள்கிறான்) நீல பத்மநாபன் எழுதின சண்டையும் சமாதானமும் ஞாபகம் இருக்கா? அது தம்பி மனைவிகிட்ட போற கதை. இதுக்கு ராமாயணத்திலேயே precedent இருக்கு. வாலி விவகாரம். இந்த ரெண்டும் ரொம்ப rare இல்லே; rareஆ இருந்தா அண்ணன் பெண்டாட்டி, தம்பி பெண்டாட்டி பத்தி பழமொழி ஏற்பட்டிருக்காது. இதிலே இவன் என்ன உடைக்கிறான்னு எனக்குத் தெரியல. (சிகரெட் ஒன்று பற்ற வைத்துக் கையில் பிடித்துக்கொண்டு ) எங்கே பார்த்தாலும் இதே பொழப்பாப் போச்சி. ஐராவதம் எழுதின ஒரு வேளை' யைப் பாரு, லா.ச. ரா. கதை மாதிரி இதுவும் நண்பன் மனைவிகிட்ட போற கதை. கிருஷ்ணமூர்த்தி எழுதின 'ஓர் இரவின் பிற்பகுதியில் மாமிகிட்ட போற கதை, ஒரு வகையில் பார்த்தா, அருள் எழுதின 'பேரம்?' வியாபாரி மனைவி கிட்ட போற கதை. இதெல்லாம் பரவலா இருக்குன்னு சொல்லாவிட்டாலும்கூடச் சமூகத்தில் இல்லவே இல்லேன்னு சொல்ல முடியாது . ராமகிருஷ்ணன் எழுதின பின்கட்டு ' cousins கிட்ட போற கதை. மு.வ. எழுதின நெஞ்சில் ஓர் முள் அண்ணன் தங்கை காதல் கதை . கருணாநிதி எழுதின தப்பிவிட்டார்கள் அப்பா மக கிட்ட போற கதை. இந்த Electra complex பிரம்மா - பத்மாகதையிலேயே தொடங்கிடுது. அதே மாதிரி Oedipus complex விநாயகர் கிட்டேய தொடங்குது. இப்போ , 'ரிஷிமூலத்திலே இதைத்தான் ஜெயகாந்தனும் deal பண்றதா சொல்லலாம். இதெல்லாம் நடக்கிறதே இல்லேன்னு சத்தியம் பண்ண முடியாது. பாலாவே நடக்குதுன்னு சொல்றான். மாமா மருமக்கிட்ட போற கதையை நான் இன்னும் படிக்கல. மாபஸான் ஒரு கதை எழுதியிருக்கான். இது அரிய வழக்கமில்ல; பல சின்ன ஊர்ல இது பரவலா இருக்கு. மாமி மருமகன்கிட்டே போற கதையையும் நான் இன்னும் படிக்கல , BelAmiயிலே இது வருதுன்னு நினைக்கிறேன். இது எவ்வளவு தூரம் பரவியிருக்குன்னு எனக்குத் தெரியாது. Upper classல ஒரு சமயம் இது நடக்கலாம்; நடக்கிறதுக்கு வேண்டிய சூழல் அங்கே நிறைய இருக்கு. இந்த ரெண்டையும் கூடத் தமிழ்ல யாராவது எழுதி இருப்பாங்க. ஆனா நிச்சயமா யாரும் எழுதியிருக்க முடியாத விஷயம் ரெண்டு இருக்கு. பாட்டி பேரன் கதை. தாத்தா பேத்தி கதை. இந்த ரெண்டையும் பாலா எழுதலாம். வேணுன்னா . (புகைக்கத் தொடங்குகிறான்.) குமா: கர்மம் கர்மம் (சிகரெட்டை எறிந்து மிதிக்கிறான்.) பால : இவன் புத்தியே இப்படித்தாண்டா.
சிவ: (புகைப்பதை நிறுத்தி) மரபை உடைக்கிறதுக்கு chance கொடுக்கும் போதெல்லாம் ஏன் பின்வாங்கற?
பால : முதல்ல அது முடியுமான்னு பார்றா. குமா: பேசாம இருடா. இப்ப இருக்கிற moodல அவன் வயசுக் கணக்கெல்லாம் போடுவான், விடு. சிவ: (சிகரெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு) Sex பிரச்சினையை analyse பண்ணப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அப்போதானே என்ன செய்யனுன்னு தெரியும். இதுவரைக்கும் incest, adultery, fornication பார்த்தோம். அப்புறம் என்ன? Hemosexuality. இதுக்கு ராமகிருஷ்ணன் எழுதின 'கோணல்கள் இருக்கு. சரஸ்வதி பத்திரிகையிலே ஒரு lesbian கதை வந்ததா ஞாபகம். இந்த ரெண்டும் விடுதியிலே வளர்ர விஷயங்கள். Prostitution குறுந்தொகையிலேயே வருது. இதுதான் World's Second Profession. இப்போ இது எவ்வளவு பரவியிருக்குன்னு அந்த அம்மா சொல்லிட்டாங்க, இல்லையா? Satyriasisக்கு அருணகிரிநாதர் இருக்கார். பல சினிமாவில், கதையில் வர்ற villains இருக்கிறாங்க ! Nymphomaniaவுக்குச் சூர்ப்பனகையைச் சொல்லலாம். முடியில் பெண்களை ஒளிச்சி வைக்கிற சாமியாருங்க, சேலையில் ஆண்களை ஒளிச்சு வைக்கிற பெண்ணுங்க பழைய புராணக் கதையில் நிறைய வர்றாங்க. இப்போ இந்த modern ageல இந்த ரெண்டும் ஏனோ அதிகமாயிட்டே போகுது. (ஒரு முறை புகைத்துவிட்டு அணைக்கிறான்) உன் பேச்சும் அதிகமாயிட்டே போகுது. இதெல்லாம் நீ சொல்லித்தாண்டா எங்களுக்குத் தெரியணும்! சிவ: இதைவிட அதிகமாகவே உங்களுக்குத் தெரியும், ஒத்துக்கறேன். ஆனா நீ உன் eureka moodலே இதையெல்லாம் மறந்துட்டேன்னு நினைக்கறேன். நீ மறக்காம சிந்தனை பண்ணி முடிவுக்கு வந்திருந்தா, என்னைப் பேசவே விட்டிருக்கமாட்டே, ஒவ்வொரு இடத்திலேயும் மறுத்துப் பேசியிருப்ப. பால : இவன் formல தான் இருக்கான் குமார். ஆனா எல்லாத்தையும் போட்டு குழம்பிட்டான்.
சிவ: இன்னும் கொஞ்சம் குழப்பம் மீதியிருக்கு , அவசரப்படாதே.
குமா: ஆமா, இன்னும் மீதி இருக்கு. திரௌபதி Polyandry, சீவகன் Polygamy, ராமன் Monogamyன்னு மீதி.
சிவ: இந்த மூணுமே சாதாரண விஷயம். இதில்லாம வேற இருக்கு. (சிகரெட் பற்ற வைக்கிறான்)
குமா: வேற என்னா? ஒருத்தனைப் பல பெண்கள் காதலிக்கிறது இருக்கு; அகிலனோட பாவைவிளக்கு'. ஒருத்தியைப் பல பேர் துரத்தறது இருக்கு. எத்தனையோகதை இருக்கு. வயசு வந்த பெண்கள் சின்னப் பசங்களைத் தேடறது இருக்கு. கந்தசாமியோட 'தேஜ்பூரிலிருந்து. சிவ: (குமாரசாமியைப் பார்த்து புகைத்துக்கொண்டே), வேற ஒன்னு. ரொம்ப முக்கியமானது. கொஞ்சம் think பண்ணு. வந்துடும். குமா: (சற்றுச் சிந்திக்கிறான்; பிறகு) Zoophilia!
பால : My!
சிவ: Exactly (ஒருமுறை புகையை இழுத்த பிறகு சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு) இது ஒன்னே போதும், பாலா. வேற ஒன்னும் வேணாம். இதுக்கு மட்டும் ஆயிரம் கதை எழுதலாம். இதோட ஆணும் பெண்ணும் masturbationனுக்காகப் பயன்படுத்தறப் பொருள்களையும் fetish ஐயும் சேர்த்தா - அடேயப்பா! (திருப்தியுடன் புகைக்கிறான்.) குமா: (இருவரையும் பார்த்த பிறகு ஒரு தடவை கனைத்துவிட்டு) நாம் இவ்வளவு நேரம் பேசியதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. Sex வழியாக மரபை உடைப்பது புதியதல்ல என்று பொதுவாகக் கூறலாம். இதில் ஒருசில வகைகளைத்தான் இன்னும் யாரும் பயன் படுத்தவில்லை. சரிதானே?
சிவ: (புகைப்பதை நிறுத்தாமல்) அதிலென்ன சந்தேகம்? (படுக்கிறான்.)
குமா: நீ என்ன சொல்ற பாலா?
பால : உன்னை உதைக்கணுன்னு சொல்றேன். நீதான் இந்தப் பேச்சையே - கெடுத்தே; அவனைத் திரும்பத் திரும்பத் தூண்டிவிட்டே. நீயும் இவனும் சேர்ந்து இருக்கும் போது எந்தச் சனியனையும் பேசக் கூடாதப்பா. (சற்று நிறுத்தி ) ஏன்டா, ரெண்டு பேரும் சேர்ந்து analyse பண்றிங்களா? ஒருத்தன் ரெண்டு பேர் உடைச்சா போதுமாடா? எல்லாரும் உடைக்கணும். எல்லாரும் உடைக்கிற மாதிரி செய்யணும். இதுக்குத்தான் நான் வழிகாட்டப் போறேன். உங்களைப் பத்தி நான் கவலைப்படவேயில்லே, நீங்க என்ன வேணுன்னாலும் உளருங்க.
குமா: சரி, தாராளமா வழிகாட்டு. அதுக்கு முன்னால் ஒரு உதவி செய்.
பால : என்னா ?
குமா: ஒரு கைலி குடு, வெளிக்கு வருது. (சிகரெட் பற்ற வைக்கிறான்.) பால : கைலி bedroomல இருக்கு . (குமாரசாமி எழுகிறான்.) சீக்கிரம் வா; நானும் போகணும். (எழுகிறான்.)
குமா: அப்போ நீ போ. (உட்காருகிறான்) என்னாலே சீக்கிரம் வர முடியாது.
பால; (அருகில் வந்து கொண்டே ) Alright.
குமா: அதுக்குள்ள நான் இதைக் கூட்டிடட்டுமா? பால : (குனிந்து சிகரெட் தீப்பெட்டி எடுத்தபடி) நீ ஒன்னும் கூட்ட வேணாம், நானே கூட்டிக்கிறேன். (நிமிர்கிறான்) நீ உன் வேலையைப் பாரு. (உள்ளே விரைந்து மறைகிறான்.)
குமாரசாமி ஏதோ சொல்வதற்கு வாயெடுக்கிறான்; சிவஞானம் படுத்துக்கொண்டு கண்மூடியபடி புகைப்பதைப் பார்த்துவிட்டு, நன்றாகச் சாய்ந்து கண் மூடிக்கொண்டு புகைக்கத் தொடங்குகிறான்.
திரை விழுகிறது.
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த பிரமிக்க வைக்கும் ஜெர்மென் மொழி படைப்பாளர்கள் (வான் கதே, பெர்டோல்ட் ப்ரக்ட், நீட்ஷே, ஹெர்மேன் ஹெஸ்ஸே, ஹென்ரிக் ஹெய்ன், காட் ஃபிரைட் பென், தாமஸ் மன்.) மற்றும் அறிவுஜீவுகளில் அதீதமான காஸ்மொபொலிட்டன்தன்மை கொண்டவராய் இருந்தவர் ஆஸ்த்ரிய பொஹீமியக் கவிஞர் ரைனர் மரியா ரில்கே (1875-1926).
ஒருவேளை உலகியல் தன்மைகளில் அவருக்கு இணையாக இருந்தவரெனச் சொல்வதென்றால் அவரது நண்பர் ஸ்டெஃபென் ஸ்வெய்க்-ஐ சொல்ல முடியும்.
ரில்கே ஆஸ்த்ரிய+ ஹங்கேரியக் கவிஞராக வகைப்படுத்தப்பட்டாலும் அவரை நாம் ஜெர்மன் இலக்கியத்தில்தான் சேர்க்கிறோம். காரணம் அவர் போலிஷ் மொழியிலோ அல்லது ஹங்கேரிய மொழியிலோ தன் படைப்புகளை எழுதவில்லை.
நவீனத்துவ இயக்கத்திலும் ஐரோப்பிய இலக்கியத்திலும் ரில்கே ஆற்றிய பங்கு தனித்துவம் மிக்கது.
அவரை அமெரிக்க + ஆங்கில இலக்கிய ஆளுமைகளில் ட்டி.எஸ்.எலியட்டுக்கும், ஃபிரெஞ்சுக் கவிஞர்களில் பால் வெலேரிக்கும், ஐரிஷ் கவிஞர்களில் ஏட்சுக்கும் இணையான சாதனையாளர் என்று ஒப்பிட்டுச் சொல்லலாம்.
அவரது படைப்புகள் மூன்று வேறுபட்ட கலை வகைமைகளில் இன்றியமையாதவை:
1. ஓவியம்.
2. தத்துவம்.
3. மதம்.
ஓவியர் செஸானின் கலைக்கும் அவரது சுயத்துக்குமான தொடர்பு பற்றிக் குறிப்பிடும்போது ரில்கே எழுதிய வரி: “செஸான் தன் கலையுடன் இணைந்திருக்கும் நிலையானது ஒரு மறைஞானி தன் கடவுளுடன் இணைந்திருப்பதற்குச் சமமானது”
ரில்கேவின் படைப்புகள் தொடர்ந்து நவீன வாசகர்களை வசீகரித்துக்கொண்டே இருப்பது இன்னொரு ஆச்சரியப்படத்தக்க விஷயம்.
தற்போது அதிகமாக மொழிபெயர்க்கப்படும் ஒரு ஜெர்மன் கவிஞர் ரில்கே தான்.
இந்த உலகெங்கிலும் உள்ள காண் கலைஞர்களுக்கு உந்துதலாய் அமைந்தவர் அவர்.
அவரதுபடைப்புகள் சாஸ்த்ரீய மற்றும் பாப் இசைக்கலைஞர்களால் இசையாக மாற்றப்பட்டுள்ளன.
ரில்கேவைப் பற்றிப் பேசுவதென்பது உலக இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்குச் சமானமாகும்.
வடக்கு ஆப்பிரிக்காவுக்கு ரில்கே 1911இல் மேற்கொண்ட பயணத்தைத் தவிர அவரது உலகியல் அனுபவம் ஆங்கிலோ சாக்ஸன் பிரதேச எல்லைகளை உறுதியாகத் தவிர்த்தது.
ஆங்கிலேயர்கள் மற்றும் அமெரிக்கர்களின் முனைமழுங்கிய லோகாதாயத் தன்மைகள் குறித்து அவரது வாழ்வின் இறுதிவரை சந்தேகம் கொண்டிருந்தார்.
ஒரு கவிஞன் என்ற முறையில் அவரது பார்வை சர்வதேசீயம் சார்ந்தது.
பிற மற்றும் அந்நிய கலாச்சாரங்களைக் குறித்துத் திறந்த மனம் கொண்டவராய் இருந்தார்.
ரில்கே வாழ்ந்த வாழ்க்கை பிரத்யேகமான நாடோடித்தன்மைமிக்கது.வறுமை நிறைந்தது.
கவிதை குறித்து அவர் கொண்டிருந்த அணுகல்களில் இருந்த அப்பூதிநெறி சம்பிரதாய மதவாத நம்பிக்கைளுக்கு அப்பால் நிகழ்ந்தது.
இந்தநூற்றாண்டின் முதல் கவிதை நாவல் என்று சொல்லக் கூடிய (Notebooks of Malte Laurids Brigge) ஒரு நாவலை எழுதிய பெருமை அவருக்கு உரியது.
ஓவியத்துறைக்கும் அவருக்கும் இருந்த உறவு அபாரமானது.
இம்ப்ரஷனிச ஓவியர் செஸானின் ஓவியங்கள் குறித்து அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் ஓர் ஓவியர் எழுதியிருக்க வேண்டியவை என்பதான புரிந்து கொள்ளல் மிக்கது.
மேலும் பாரிஸ் நகர வாழ்க்கையின் சொகுசு கானல்நீர் போன்றது என்பதை இடையீடின்றி நேரடியாக அனுபவப்பட்டுப் பாரிஸை விமர்சித்தார்.
ஏறத்தாழ 10 வருட காலங்களுக்குப் பாரிஸ் நகரமே அவருக்குத் தலையிடம் என்று ஆனதை நாம் மறந்து விடக்கூடாது.
நாம் ரில்கேவை அவரது கவிதைகளுக்காக, உரைநடைக்காக, நாவலுக்காக, ஆயிரக்கணக்கில் எழுதப்பட்ட கடிதங்களுக்காக மட்டும் படிப்பதில்லை.
நம் பார்வையில் அவரது வாழ்க்கையானது ஒரு நவீனகலைஞனின் வாழ்வையும் இருப்பையும் எடுத்துகாட்டுவதாகவும், பிடிவாதமான அழகியல் தேடலாளராகவும் அவர் இருப்பதால்தான் இன்றும் வாசிக்கிறோம்.
ஹேப்ஸ்பர்க் ராஜ்ஜியத்தில் பிரதானமாய்ப் போலந்து மொழி பேசப்படும் விளிம்பெல்லையில் பிராக் நகரில் வீடற்ற ஏழைக்கவிஞனாய்ப் பிறந்தார் ரில்கே.
ரில்கே அவரது பாரம்பரியம் என்ற ஒன்றை அவரே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
அவர் பிரபுக்கள் பாரம்பரியத்திலிருந்து வந்ததாகக் கோரினாலும் அது சந்தேகத்திற்கு இடமானதாய் இருந்தது.
ஜெர்மன் இலக்கியப் பாரம்பரியத்தில் நீண்ட நெடுங்காலமாய் ஒரு மகா கவிஞர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர் என்கிற அந்தஸ்தைப் பெற்று வந்திருப்பவர் வுல்ஃப்கேங் வான் கதே மட்டுமே.
தவிர அவர் ஒரு கருத்தியலான மானுடப் பிறவியாகவும் கருதப்பட்டவர்.
பூர்ஷ்வா சமூகத்தின் மத்தியில் மதிப்புமிக்க அறிவார்ந்த சாதனையாளராக நின்றவர். அவரிடம் ஒரு விஞ்ஞானியின் தேடல் இருந்தது குறித்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்பேர்ப்பட்ட ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியில் வருபவர்தான் ரில்கே.
ஆனால் மிக வித்தியாசமான முறைகளில். ஒரு ஏகாந்தி, உள்மன யாத்திரைகளில் மூழ்கிப் போகிறவர். வாழ்க்கையின் பிற்பகுதியில் புத்தகங்கள் வெளியிடுவது பற்றிய அக்கறை கூட அற்றவராய் இருந்தார்.
அவரது குறுகிய வாழ்க்கையின் இறுதிவரை சுவைத்திற வல்லுநர்களின் சிறிய குழுக்களுக்கு அப்பால் அவர் பிரசித்தமாய் இருக்கவில்லை.
கதேவைப் போல ஒரு அமைச்சராகவோ, ஏட்ஸைப் போல ஒரு செனேட்டராகவோ சென் ஜான் பெர்ஸ் (ஃபிரான்சின் நோபல் பரிசு பெற்ற கவிஞர்) ஐப் போல ஒரு அயலகத் தூதுவராகவோ இருக்கவில்லை.
ஆனால் அவர் அரச குடும்பத்தவர்களின் உடனிருப்பை அனுபவித்தார். ஆனால் எந்தச்சபையிலும் அல்ல. தனிநபர்களாய் மட்டுமே அவர்களைச் சந்திக்க இயன்றது.
கற்பனையானது ஒரு மத்தியகால ஐரோப்பாவின் வண்ணமிகு எச்சங்களாய்த்தான் அவர் அந்தக் கோமகள்களைக் கண்டார்.
தர்ன் அண்ட் டேக்ஸிஸ் குடும்பத்திற்குச் சொந்தமான டியூனோ கோட்டை பல காரணங்களுக்காக இலக்கிய வரலாற்றில் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படுகிறது.
முதல் உலகப் போர் சமயத்தில் அது அழிவுற்று மீண்டும் கட்டப்பட்டது. அவருக்குத் தெரிந்த அந்த அரச கும்பத்தினர் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தவர்கள்.
அவர் காலத்தில் தாக்கம் மிகுந்த எந்த ஒரு அரசியல்வாதியும் ரில்கேவை சந்திக்க விரும்பி இருக்கமாட்டான்.
லெனினையும் ரில்கேவையும் நாம் ஒரு சந்திப்பில் இருப்பதாகக் கற்பனை செய்ய முடியுமா?
ஆனால் ஃபிரெஞ்சுக் கவிஞர் பால்வெலேரி ரில்கேவின் நண்பராய் இருந்தார். வெலேரியின் கவிதைகளை ரில்கே ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.
நகரச் சந்தடிகளால் எழுத முடியாதிருந்த ரில்கேவுக்கு அட்ரியாட்டிக் கடற்கரையிலிருந்த டியூனோகோட்டையில் ஒரு வருடம் தனிமையில் வாழ அனுமதி வழங்கினார் மேரி வான் தர்ன் டேக்ஸிஸ்.
குறியீட்டு அளவிலான ரில்கேவின் இருப்புநிலை அந்தக் காலகட்டத்தின் புற சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுடன் தொடர்பில்லாதது.
கதேவைப்போலன்றி ரில்கே அவரது காலத்தின் சக்திமிக்க ஆள் இல்லை. சொல்லப் போனால் அவர் வரலாற்றுப்பக்கங்களின் மார்ஜினில் இருந்த ஒரு கேள்விக்குறியாக இருந்தார்.
எதிர்+நவீனத்துவவாதிகளின் மத்தியில் நவீனத்துவ இயக்கத்தில் தனித்து நின்றார்.
ஆனால் அவரது கருத்துருவங்களை ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையாக ஆக்கவில்லை.
அவர் ஒரு கவிஞர், ஒரு தத்துவம் சார்ந்த பத்திரிகையாளர் இல்லை.
இசைக் கலைஞர் ஷோப்பாங்கைப் பற்றி ஜெர்மன் கவிஞர் காட்ஃபிரைட் பென் இன் தன் கவிதையில் சித்தரித்தது போலத் தோன்றினார்.
அவருக்குள் நிலவிய உள்வய ஒழுங்குகள், வாழ்க்கையைப் பற்றிய ஒழுங்கு குறித்த சிந்தனை மற்றும் அவர் செய்த சில தியாகங்கள் நமக்கு உவப்பாய் இருக்கின்றன.
அவரது கவிதைகளின் ஊடாய் அவற்றின் முகத்திரைகளை ஊடுருவி நாம் கலைஞன்+ கவிஞனைப் பார்க்க முடியும்.
அதிகாரபூர்வமான வெளிப்பாட்டுக்கு எதிராக அவர் இந்த நவீன யுகத்தின் மெல்லிய கிசுகிசுப்பாகவும் ஒரு ரகசியக் குரலாகவும் இருந்தார்.
அவரது பயணங்கள் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஃபிரெஞ்சு சிற்பியாகக் கருதப்படும் ஹோதானிடமிருந்து அவர்கற்றுக்கொள்வதற்கு விருப்பத்துடன் இருந்தது, மேலும் ஓவியர் செஸானிடமிருந்து கற்றது மற்றும் ஒரு இளம் கவிஞருக்கு கவிதை என்பது என்ன என்பதைச் சொல்லிக் கொடுக்கப் பொறுமையுடன் இருந்தது போன்றவை நம் மனதிலிருந்து நீங்கி விடாதவை.
ஒரு தசாப்த காலத் தடையீடுகளற்ற படைப்பாக்கத்திற்குப் பின் அவர் Notebooks of Malte Laurids Brigge என்ற கவிதை நாவலின் பக்கமாய் ஈர்க்கப்பட்டார்.
இந்த நாவல் எழுதிய காலத்தில் அவருள் சுய சந்தேகங்களும் முரண்பாடுகளும் நிறைந்து கிடந்தன.
இந்த நாவல் 1910ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த வெளியீட்டுக்குப் பிறகு திசையற்றும் வாழ்க்கையை வாழ்வதில் களைத்துப் போனவராயும்இருந்தார்.
புதிதாய்த் தொடங்கவிருக்கும் ஒரு கவிஞன் ஆரம்பிக்க இயலாமல் இருந்தது போலிருந்தது அவரது நிலைமை.
எனவே 1910லிருந்து 1922ஆம் ஆண்டு வரையிலான காலம் ரில்கேவின் பிரச்சனைக் காலமாக இருந்தது. இடையில் அவர் கவிதைகள் எழுதாமல் இருக்கவில்லை.
ஆனால் அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அவற்றை எப்போதாவது எழுதும் கவிதைகள் (occasional poems) என்று குறிப்பிட்டார்.
தனியனாய் ஸ்பெயின் தேசத்தின் டோலேடோவிலும் ரோம் நகரிலும் மற்றும் கெய்ரோவிலும் அவர் பயணித்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.
இந்தப் பயண அனுபவங்களிலிருந்து அவர் சேகரித்துவந்த சிறு சிறு கூழாங்கற்களை ஒரு அற்புத மொசைக்காக அவரது டியூனோ இரங்கற் பாடல்களில் மாற்றினார்.
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நீள்காவியமாக டியூனோ இரங்கற்பாடல்கள் கருதப்படுகின்றன (உங்களுக்கு ட்டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம், ஆக்தாவியோ பாஸின் சூரியக்கல், டெரக் வால்காட்டின் ஓமரோஸ் போன்றவை நினைவில் ஆடினால் நல்லது).
10 இரங்கற்பாடல்களின் தொடராக அமைகின்றது டியூனோ இரங்கற் பாடல்கள்.
மேரி வான்தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்ற கோமகளின் விருந்தினராக இருந்தபோது தொடங்கப்பட்டதால் அந்தக்கோட்டையின் பெயர் அதற்குத் தலைப்பாக இடப்பட்டது.
கோட்டை வடக்கு இத்தாலியின் துறைமுக நகரான டிரியஸ்ட்டுக்கு அருகில் அட்ரியாட்டிக் கடலில் அமைந்திருக்கிறது.
முதல் உலகப் போரின் பின்விளைவுகளால் பெரும் மனோவியல் பாதிப்புக்கு ஆளானார் ரில்கே.
டியூனோ கோட்டையில் இந்தப் பாடலில் ஒரு பகுதி தொடங்கப்பட்டு, நிறுத்தப்பட்டு பிறகு 1922ஆம் ஆண்டுதான் ஸ்விட்சர்லாந்தின் வலேஸ் என்ற பகுதியில் முற்றுப் பெற்றது. மொத்தவரிகளின் எண்ணிக்கை 859.
டியூனோ கோட்டையில் ரில்கேவை இருக்க அனுமதித்த இளவரசி தர்ன் அண்ட் டேக்ஸிஸ் என்பவருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதியை அவர் டியூனோவில் தொடங்கிவிட்ட போதிலும் தொடர்ந்து எழுத இயலவில்லை.
ஏறத்தாழ முதல் உலகப் போர் முடியக்காத்திருந்தது போலிருந்தது அவரது படைப்பியக்கம். 1923இல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
டியூனோஇரங்கற்பாடல்கள் ஓர் உக்கிரமான மதநிலைகொண்ட (கிறித்தவ மதத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை) மறைநிலைத் தியான கவிதைகள்.
இவை அழகியலையும் இருத்தலியல் துயரங்களையும் எடைபோட்டுப் பார்க்கின்றன.
இக்கவிதைகளில் தேவதூதர்கள் மற்றும் மீட்புநிலை போன்ற குறியீடுகள் நிறைந்திருப்பினும் இவற்றைக் கிறித்தவ அர்த்தத்திலோ முறைமையிலோ வியாக்கியானப்படுத்தி அர்த்தம் தரமுடியாது.
டியூனோ இரங்கற் பாடல்களின் தாக்கத்தை நாம் பல வகைப்பட்ட வாசகர்களிடம் பார்க்கமுடியும்.
பாப் இசையிலிருந்து தொலைக்காட்சி வரை ஏதோ வகையில் ரில்கே தொடர்புபடுத்தப்பட்டுக்கொண்டே இருந்தார்.
இருக்கிறார்.
புதிய சகாப்த தத்துவவாதிகள், இறையியல்வாதிகள், சுயஉதவிப் புத்தகங்கள் எழுதுபவர்கள், போன்றோர் நேரடியாக இலக்கியம் சாராத வகையினர்.
நவீன ஜெர்மன் நாவலாசிரியர் ஹெர்மேன் ஹெஸ்ஸே அவரது புத்கத்தில் இருத்தலியல் பிரச்சனைகளின் எல்லைப்பாடுகளைத் தாண்டி அவற்றைத் தீர்க்கும் வழிவகையை அளிப்பவராக டியூனோ இரங்கற்பாடல்களில் தெரிகிறார் என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்தப் பிரபஞ்சத்தின் இசை ரில்கேவின் கவிதைகளில் எதிரொலிக்கிறது என்றார்.
ஆனால் 1920களில் ஜெர்மானிய இளைஞர் சமுதாயத்தினருக்கு டியூனோ கவிதைகள் உவப்பாக இருக்கவில்லை.
ஃபிரான்ஃபர்ட் இலக்கிய விமர்சன இயக்கத்தின் மதிப்பு வாய்ந்த சமூகவியலாளர் மற்றும் மனோவியல் அறிஞருமான தியோடர் அடார்னோ (Theodor W. Adorno 1903-1969) இக்கவிதைகள் தீவினைமிக்கவை என்று விமர்சித்தார்.
இவற்றில் 5-ஆம் இரங்கற்பாடல் பிக்காஸோவின் ரோஜா (Rose Period) காலகட்டத்தில் தீட்டப்பட்ட ஓவியமான ‘கழைக் கூத்தாடிகளின் குடும்பம்’ என்ற ஓவியத்தினால் நேரடி பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை வாசகர்கள் அறிய வாய்ப்பிருக்கிறது.
ஓவியத்திற்கும் கவிதைக்குமான வேறுபாடு அவர்கள் நிற்கும் தளத்தில் இருக்கிறது. ரில்கேவின் இலக்கிய மதிப்பு ஆங்கில இலக்கிய உலகைப் பொருத்தவரை பிரபலமாக டியூனோ இரங்கற் பாடல்களின் மேல் அமைந்திருக்கிறது.
இக்கவிதைகள் வெளியிடப்பட்ட பிறகு சுமார் 18 முறை வேறு வேறு மொழி பெயர்ப்பாளர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன.
அமெரிக்க வெளியீட்டாளர்கள் ஸ்டீபென் ஸ்பென்டர் மற்றும் ஜே.பி.லேய்ஷ்மன் ஆகியோரின் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டனர். அமெரிக்காவில் பல இளம் கவிஞர்கள் டியூனோ இரங்கற்பாடல்களை மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர்.
பதற்றத்தினாலும் மனத்தொய்வினாலும் பல ஆண்டுகள் கவிதை இல்லாமல் கூட ரில்கே இருந்தார்.
இந்த இடைப்பட்ட காலங்களில் இங்கும் அங்குமான நிலையற்ற அலைக்கழிப்புகளே மிஞ்சின.
இந்தக் காலகட்டத்தில் பாலடைன் கிளாஸ் கோவ்ஸ்கா (1886-1969) என்ற பெண் ஓவியருடன் சற்றே காதல்வயப்பட்டிருந்தார்.
அப்போது நண்பரும் வணிகரும் புரவலருமான வெய்னர் ரைன்ஹார்ட்டின் அழைப்பின்பேரில் ரைன்ஹார்ட்டின் ஷேட்டு முஸோ (Chateau Muzot) என்ற பெரிய வீட்டிற்குக் குடி பெயர்ந்தார்.
இந்தத் தற்காலிக உறைவிடம் (ரில்கே கடைசிவரை அந்த வீட்டில் இருக்கலாம்) பெரிதும் வசதிக் குறை வானதுதான்: மின்சாரமோ அல்லது எரிவாயுவோ இல்லாதது.
டியுனோ கோட்டை எவ்வித காரணங்களுக்காக இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறதோ அதைவிட முக்கியமான காரணங்களுக்காக முஸோ குறிப்பிடப்படுகிறது.
ரில்கேவுடன் முஸோவில் கிளாஸ்கோவ்ஸ்கா இணைந்துகொண்டார். இங்குதான் ரில்கே பால்வெலேரியின் ஃபிரெஞ்சுக் கவிதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார்.
மைக்கேல் ஆஞ்சலோவின் கவிதைகளையும் கூட. கட்டற்ற வகையில் கவிதைப் பிரவாகம் எடுத்ததும் முஸோவில் தான்.
ரில்கேவின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படும்போது (Power of Prayers) அவருக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது. லூ ஆந்ரியாஸ் சலோமி என்ற திருமணமான, அவரை விட வயதில் மூத்த பெண்ணுடன் அவர் ரஷ்யாவில் பயணம் செய்து திரும்பியிருந்த காலமது.
சிறிய இடைவெளியில் சலோமியுடன் இணைந்து இரண்டாம் முறையும் ரஷ்யப்பயணத்தை ரில்கே மேற்கொண்டார்.
அதுவரை அவரது வாழ்க்கை இறுகியது போன்றும் கட்டுப்படுத்தப்பட்டது போன்றும் இருப்பதாய் உணர்ந்தவர் மற்றும் அவரது பூர்வீக குறுகிய தெருக்கள் கொண்ட பிராக் நகரிலிருந்து சென்றவர், சலோமியின் சக்தி வாய்ந்த ஆளுமையாலும் ரஷ்யாவின் திறந்த சமவெளிகளாலும் பிரமித்துப் போனார்.
ரஷ்யாவின் புறவெளியை அவரது அகவெளியாக மாற்றிக் கொண்டார். அது ஐரோப்பாவின் கிழக்கில் இருந்தது:
சில சமயம் ஒரு மனிதன் அவனது இரவு உணவு மேஜையிலிருந்து எழுந்து வெளியில் செல்கிறான்
மேலும் அவன் போய்க்கொண்டே இருக்கிறான் காரணம் எங்கோ கிழக்கில் ஒரு தேவாலயம் உள்ளதென்பதற்காக
அவனது பிள்ளைகள் அவன் இறந்துவிட்டது போல ஸ்தோத்திரம் சொல்கின்றனர்
வேறொரு மனிதன் தன் வீட்டிலேயே தங்கிவிடுகிறான் அவனது இறப்புவரை அவனது தட்டுக்கள் மற்றும் கண்ணாடித் தம்ளர்களுடன்
எனவே அவனது பிள்ளைகள் வெளியே செல்கின்றனர் இந்த உலகினுள் அவன் மறந்த தேவாலயத்தைத் தேடியபடி.
ரில்கேவின் உள்மன யாத்திரை தொடங்கியது இந்தத் தொகுதியிலிருந்துதான் என்று சொல்லலாம்.
அவர் இக்கவிதையில் குறிப்பிடுவது எந்த வகையிலும் சம்பிரதாயமான கிறித்தவத் தேவாலயம் அல்லவென்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஒரு மனிதன் உள்வய வெளியை நோக்கி நடக்கும்போது அவன் தனது பிள்ளைகளுக்கும் விடுதலை அளிக்கிறான்:
ஒரு மனிதன் உம்மைப் பெற்றடைய மிக விரும்பிய காரணத்தால்
நாங்கள் அனைவரும் உம்மைப் பெற முடியும் என்பதை அறிகிறேன்.
இந்த விருப்பமும் பெற்றிருத்தலும் இப்பொழுது முழுமையான சாத்தியம் என்று ரில்கே உணர்ந்துதான் எழுதினார்.
இந்த நூற்றாண்டு மனிதனுக்கும் கூட. வளர்ச்சி என்பது புவிசார் வெளியை நோக்கியது.
ஒரு விருட்சம் அதன் ஆண்டு வளையங்களில் வளர்வது போல.
ஒரு நத்தை அதன் புரிகளில் வளர்வது போன்றும் இந்தச் சூரிய மண்டலம் அதன் சுற்றுப் பாதைகளிலும் வளர்வது போன்றும்.
கிளாரா வெஸ்டாஃப் என்ற பெண் சிற்பியை மணந்தார் ரில்கே. திருமணம் ஒரு பெண் குழந்தை (பெயர் ருத்) பிறந்த கொஞ்ச நாட்களில் முடிவுக்கு வந்தது.
கிளாரா வெஸ்ட்டாஃப் ஃபிரெஞ்சு சிற்பி ஹோதான் என்பவரின் மாணவி.
கிளாராதான் ஹோ தானை அணுகச் சொல்லி ரில்கேவுக்கு அறிவுறுத்துகிறார்.
ரில்கே முதல்முறையாகச் செப்டம்பர் 1902ஆம் ஆண்டுப் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தார். இந்த நகர்வினால்தான் ரில்கே ஒரு ஐரோப்பியர் ஆகிறார்.
மேலும் ஒரு நகரக் கவிஞராகவும். வறுமையின் எல்லையில் வாழும் ஒரு கவிஞராகவும்.
பாரிஸ் நகரில் அவர் மனம் ஒரு வேட்டையாடப்பட்ட விலங்காக இருந்தது. சந்தடி நிறைந்த தெருக்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி எளிய உணவ கங்களில் உணவு உண்டார்.
ஒரு ஜெர்மன் வெளியீட்டாளருக்காக ஃபிரெஞ்சு சிற்பியான அகஸ்த் ஹோதான் (August Rodin 1840-1917) பற்றி ஒரு அறிமுக நூல் எழுதும் நோக்கத்தில் பாரிஸ் நகரத்தை அவர் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அவருக்கு அப்பொழுது வயது 27. ஏற்கனவே சாதனைகள் ஓரளவுக்குச் செய்திருக்கும் கவிஞராய் அறியப்பட்டிருந்தார்.
ஒன்பது கவிதைத் தொகுதிகள் மற்றும் ஒரு நாவல்.
பிரார்த்தனை வேளையின் புத்தகத்தின் (Books of Prayers) இரண்டு பகுதிகள் முழுமையாக்கப்பட்டிருந்தன. தவிரச் சித்திரங்களின் புத்தகம் (Book of Pictures) என்ற நூல் வெளியிடும் தயாரிப்பில் இருந்தது.
இதுவரை அவர் எழுதிய அனைத்துக் கவிதைகளும் தன்வயமானவை மற்றும் உள்மன யாத்திரை சார்ந்தவை. பிற்கால 19ஆம்ஆண்டு அழகியலின்படி அவை உணர்ச்சிகளை மையமாய்க் கொண்டவை.
ஒருவேளை ரில்கே ஹோதானைச் சந்திக்காதுபோயிருந்தால் அவரது கவிதை வெளிப்பாட்டு பாணியானது ரில்கேவின் வாழ்விறுதிவரை அப்படியே மாறுதலின்றித் தொடர்ந்திருக்கும்.
ஆனால் பாரிஸ்நகரை நோக்கிய பயணம் சகலத்தையும் மாற்ற இருந்தது. ஹோதானைச் சந்தித்த சிறிதுகாலத்திலேயே சிற்பியின் மீதிருந்த அவரின் ஈடுபாடு ஒரு மாணாக்கனுடையதாய் மாறிற்று.
சிற்பியின் மீதான அக்கறைகள் அதிகமாக ஆக ஆகரில்கேவின் சுய அதிருப்தி அதிகமாகிக்கொண்டு இருந்தது. சிற்பி ஹோதான் ஒரு கடுமையான உழைப் பாளர், தொழில்நுட்பன்.
அவர் தன் படைப்புகளுக்கு அர்ப்பணித்த அளவற்ற சக்தியைக் கண்டு மலைத்துப்போனார் ரில்கே. “நீ உழைக்கவேண்டும் எப்போதும் உழைக்கவேண்டும்” என்று அவரது சிற்பங்களைச் சுட்டிக் காட்டியபடி ரில்கேவிடம் கூறினார்.
உழைப்பு என்று அவர் சொன்னது படைப்பைத்தான். கவிதை வரவில்லை என்றாலும் கவிதைக்காக (குறிப்புகள் எடுத்தல் இதுபோல) புதிய உழைக்கும் பழக்கங்களை ஹோதானிடம் கற்றுக்கொண்டார்.
1905ஆம் ஆண்டு ஹோதான் ரில்கேவை தனக்கான செயலராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே ஹோதானின் இருப்பிடத்தில் ரில்கேவுக்குத் தங்க அனுமதியும் கிடைத்தது.
இருவருக்கும் இடையில் ஒரு வகையான நட்பு மலர்ந்தது. பேச்சு மற்றும் கனவு போன்றவற்றை விட்டுவிட்டு ஹோதான் உச்சரித்த மந்திரம் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு.
”சமீப காலமாய்த் தனக்குக் கவிதை உந்தம் வரவில்லை என்று இளம் ரில்கே சொல்ல, பூங்காவில் உள்ள விலங்குக்காட்சிச் சாலைக்குச் சென்று வரச்சொன்னார் ஹோதான்.
அங்கு என்ன செய்வது?
ஒரு விலங்கை முழுமையாகப் பார்த்து முடிக்கும்வரை பார் என்றார் ஹோதான்.
ஹோதானின் எடுத்துக்காட்டு மற்றும் சொற்களின் ஊடாக ரில்கே தான் ‘காண்பது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதும் ஹோதான் சொல்வதும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொண்டார்.
ரில்கே ஒரு சிறுத்தையைத் தேர்ந்தெடுத்தார். இதன் விளைவாக உருவானதுதான் ரில்கேவின் பிரசித்தமான ‘சிறுத்தை’ என்ற தலைப்பிலான கவிதை.
அது சிறுத்தை ஒரு கூண்டுக்குள் எப்படி நடக்கிறது என்பதையும் அதே சமயத்தில் கவிதை எப்படி உருவாகிறது என்பதையும் சொல்கிறது.
ஒரு சிறு மனஸ்தாபத்தினால் ரில்கேவால் தொடர்ந்து ஹோதானோடு இருக்க இயலாததால் ஒரு வருடத்தில் பிரிந்தார்.
ஆனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் குறையவில்லை. சிறுத்தை கவிதையைத் தொடர்ந்து ரில்கே இது போன்ற ‘காணும் கவிதைகளை’ நிறைய எழுதினார். ‘அன்னம்‘, ‘ஃபிளேமிங்கோ பறவைகள்’ இது போல.
ஒரு இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் (Letters to a Young Poet )மிகவும் பிரபலமான புத்தகமாய் இருந்தது.
அது ராணுவ உணவு உறைவிடப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஃபிரான்ஸ் ஸாவர் காப்பஸ் (Franz Xaver Kappus) என்ற மாணவருக்கு ரில்கே எழுதியவை.
இதே பள்ளியில் ரில்கே 5 ஆண்டுக் காலம் படித்தார். ஆனால் ரில்கே ராணுவப் பள்ளியில் படிப்பைத் தொடரவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. காப்பஸ் எழுதிய கவிதைகளின் மீது விமர்சனம் செய்ய விரும்பாமல் பதில் கடிதங்களை எழுதினார்.
இந்த 10 கடிதங்களில் ஓர் உணர்ச்சி ததும்பும் தொனியில் கலைஞனாய் இருப்பது என்பது என்னவென்றும் எப்படிக் காதலிக்க வேண்டும் என்றும் மேலும் எப்படி வாழவேண்டும் என்றும் அறிவுரை கொடுக்கிறார்.
இந்தக் கடிதங்களைக் காப்பஸ் பெற்றுக்கொண்ட காலம் 1902லிருந்து 1908 வரையிலானது. ஒரு சிறிய முன்னுரையுடன் முதன்முதலில் காப்பஸ் இன்ஸல் வெர்லேக் என்ற பதிப்பாளர் மூலம் ரில்கேவின் இறப்புக்குப் பிறகு 1929ஆம் ஆண்டு லீப்ஸிக் நகரில் வெளியிட்டார்.
தவிர ரில்கேவின் இறப்புக்குப் பிறகு அவரது குடும்பத்தார் 6 தொகுதிகளாக அவர் கலை பற்றியும் கலைஞனின் வாழ்தொழிலைப் பற்றியும் எழுதிய கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். இந்தக் கடிதங்களின் காலகட்டம் 1930-1937.
இவற்றில் பல அவர் தன் மனைவி கிளாரா வெஸ்ட்டாஃபுக்கு எழுதியவை.
இவை பாரிஸ் நகரில் ரில்கே கண்ட ஓவியங்களைப் பற்றிய அனுபவங்களைச் சித்தரிப்பவை.
ரில்கேவின் கடிதங்களை நான்கு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது தொழில் முறை சார்ந்தது: இவற்றில் அவர் பதிப்பாளர்களுக்கும் சககலைஞர்களுக்கும் (சிற்பி ஹோதான் உட்பட) எழுதியவை முதல் வகை.
அவர் தன் மனைவிக்கும் குடும்பத்திற்கும் எழுதியவை இரண்டாம் வகையில் அடங்கும்.
புரவலர்களுக்கும் (மேரி தர்ன் அண்ட் டேக்ஸிஸ், நாநி உண்டர்லி+வொக்கார்ட்) மற்றும் காதலிகளுக்கும் (லூ ஆன்டிரியஸ் சலோமி மற்றும் பாலடைன் க்ளாஸோவ்ஸ்கா) எழுதியவை.
பிரசித்தமான எழுத்தாளருக்கு (ரில்கே) முன்பின் தெரியாதவர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்கள் கடைசி வகைப்பட்டவை.
இந்தக் கடிதங்களின் வாயிலாக அவர் நெருக்கமானவர்கள் பலருக்கு அவரது உள்வய சுயத்தைத் திறந்து காட்டுவதன் மூலம் நேரடி சந்திப்பில் அவர்களை ஈடுபடாமல் வைப்பதும் நோக்கமாய் இருந்திருக்கக் கூடும்.
கிளாரா வெஸ்ட்டாஃப் மற்றும் ரில்கேவின் திருமணப் பிரிவில் இருவருக்குமான சுயநலம் கலந்திருந்தது என்பதை மறுக்க இயலாது தத்தமது கலைவாழ்க்கையைத் தொடர்வதற்குக் குடும்பம் இடைஞ்சலானது என்பதை அவர்கள் கண்டுபிடித்துக்கொண்டிருக்கலாம்.
மேலும் பெண்கள் ரில்கேவின் வாழ்வில் நிறைய முறை குறுக்கிட்டிருந்தாலும் எவருடனும் அவர் தொடர்ச்சியான உறவு கொண்டிருக்கவில்லை.
ரில்கே ஒரு முன்மாதிரியான கணவனுமில்லை முன் மாதியான தந்தையும் இல்லை. அவர் பெண்களைப் புரிந்துகொள்வதில் நிறைய முரண்பாடுகளும் சிக்கல்களும் இருந்தன.
கிளாராவே கூட அவர்கள் இருவரும் கணவனும் மனைவியுமாய்ச் சேர்ந்து வாழ்வது என்பதை விட இருவரும் சேர்ந்து கலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொள்வது முக்கியமானது என்று எண்ணினார்.
எனவேதான் இறுதிவரை அவர்கள் இருவருக்குமிடையிலான கடித உறவு தடையற்றிருந்தது. குழந்தை ருத் சிறிதுகாலம் கிளாராவின் ஸ்டூடியோவில் விளையாடினாள்.
கொஞ்ச காலம் பாட்டி வீட்டில் காலம் கழித்தாள். ருத் திருமணம் செய்துகொள்ளும் செய்தி அறிவிக்கப்பட்டும் ரில்கே தன் மகள் திருமணத்திற்குச் செல்ல மறுத்துவிட்டார்.
தனது மனஒருங்கிணைப்பை அவர் இழந்துவிடுவார் என்று பயந்ததாகக் கூறினார்.
ரில்கே தான் சந்தித்த பல பெண்களுக்கு நித்திய காதலை உறுதியளித்தார். பிரமிப்பூட்டும் காதல் கடிதங்களை எழுதினார். தனது கவிதைகளிலேயே பெண்களுக்கான அழைப்புக் குறிப்பு இருப்பதாய்க் கூறினார்.
இந்த அழைப்பின் குரலை அடையாளம் கண்டவர் மாக்தா வான் ஹாட்டிங்பர்க் (Magda von Hattingberg 1883-1959) என்ற ஆஸ்த்ரியாவைச் சேர்ந்தபெண் பியானோ இசைக்கலைஞர்.
அவரை ரில்கே செல்லமாக ‘பென்வனூட்டா’ என்று கூட அழைக்கத்தொடங்கியிருந்தார். பல மாதக் கடிதப் போக்குவரத்துகளுக்குப் பிறகு இருவரும் சந்திப்பது என முடிவெடுத்தனர்.
ஆனால் கடிதங்களில் இருந்த உணர்ச்சிப் பெருக்கு நிஜசந்திப்பில் இருக்கவில்லை.
பென்வனூட்டாவின் அறிவுக்கூர்மையும் உணர்ச்சிகளும் அலாதியானவையாக இருந்தன.
ஆனால் இந்த உறவு தொடர முடியாததற்கு ரில்கேதான் காரணம்.
அவர் எந்த ஒருமனித உயிரையும் மனம் விட்டுக் காதலிக்க இயலாதவராக இருந்தார். அவரது இந்த அணுகல் ஒரு மனோவியல் பிரச்சினையாக, ‘ஃபோபியா’வாக மாறிவிட்டிருந்ததாய் எண்ணினார்.
அவர் பெண்களின் உள்வய ஆளுமைகளைக் கண்டு பயந்துபோயிருந்தார். எனவே கவர்ந்திழுக்கப்பட்டிருந்தாலும் அருகில் சென்றவுடன் பின்வாங்கிவிடுவது அவருக்கு வழக்கமாக இருந்தது.
1922ஆம் ஆண்டு ஆர்ஃபியஸ¨க்கான 14 வரிக் கவிதைகள் (Sonnets to Orpheus) மற்றும் டியூனோ இரங்கற்பாடல்கள் எழுதி முடிக்கப்பட்டன.
பயணம் செய்யாதபோது பிரெஞ்சு பேசப்படும் ஸ்விட்ஸர்லாந்தின் வாலைஸ் பள்ளத்தாக்கில் இருந்த சிறிய கோபுரத்தில் (Chateau de Muzot) தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்தார்.
இடையில் நண்பர்கள் வருகை நிகழ்ந்துகொண்டிருந்தது. 1923ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் அவர் உடல்நிலையில் ஏதோ சரியாக இல்லை என்பதை உணர்ந்து ஒரு ஆரோக்கிய நிலையத்தில் டிசம்பர் மாதத்தைக் கழித்தார்.
அவருக்கு ஏற்பட்ட ரத்தப் புற்றுநோய் ஒரு விநோத வகையைச் சார்ந்தது. அவரது நோயின் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூட இறப்பு வரை ரில்கே விரும்பாதவராய் இருந்தார்.
1926இல்தான் அது அந்த நோய் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆண்டின் டிசம்பரில் அவர் கடும்வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடன் கூட இருந்தது நாநி உண்டர்லி வொக்கார்ட் மட்டுமே.
1926ஆம் ஆண்டு டிசம்பர் 19 காலை ரில்கே காலமானார்.
“கதேவைத் தவிர அமெரிக்காவுக்கு மிகப் பிரபலமான ஜெர்மன் இலக்கிய இறக்குமதி”யாக இன்று இருப்பவர் ரில்கே.
இந்தச் செய்தி சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடியதாய் இருக்கலாம்.
ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் அவர் படைப்புகளுக்கான வர வேற்பு இரண்டாம் உலகப் போர், ஃபாஸிஸம் போன்ற அம்சங்களால் பாதிப்புக்கு உள்ளாயிற்று.
1945ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது முக்கியத்துவம் குறைந்தது என்பதும் உண்மை.
போருக்குப் பிந்தியவிமர்சகர்களுக்கு அவரது பாதி மறைநிலை கலந்த உள்வயப் பார்வை ஏற்க முடியாததாய் இருந்தது. ஆனால் இந்த நிராகரணம் நீண்ட நாட்கள் தொடர வில்லை.
1975இல் அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போது ரில்கேவின் தாக்கமானது கண்மறைவான நிலையில் குறையாமல் தொடர்ந்து நீடித்து வந்திருப்பதை அறிய முடிந்தது.
ஆனால் ஆங்கிலம் பேசும் கலாச்சாரங்களில் அவரது பிரசித்தமோ என்றுமே குறையாமல் இருந்து வந்திருக்கிறது.
இந்த அபரிமிதமான வரவேற்புக்குக் காரணம் என்ற ஒன்று இருக்குமானால் அது பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் கவிதைகளில் நிலவிய பெரும்பான்மையான ஒரு இடைவெளி அல்லது வெறுமை.
மேலும் வீடற்றவருடையதும் மற்றும் திரிந்தலையும் ஒரு இலக்கியவாதியினுடையதுமான படிமம் அமெரிக்கர்களுக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது.
ரில்கே உறுதியான அளவில் எந்தத் தேசீயகலாச்சாரத்திற்கும் சொந்தமானவராக இல்லாதிருந்ததும் மற்றொரு காரணம்.
ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற விரிவான பயணங்களில் ரில்கே இங்கிலாந்தின் பக்கமோ அல்லது அமெரிக்காவின் பக்கமோ செல்லவில்லை.
அவர் கற்க எடுத்துக்கொண்ட சிறுமுயற்சிகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு ஆங்கில மொழியும் கூட இறுதிவரை அந்நியமாகத்தான் இருந்தது.
இந்த உண்மையுடன் அவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய 400க்கும் மேற்பட்ட கவிதைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அவருக்குப் பிடித்த கீட்ஸையும் எலிஸபெத் பேரட்பிரவுனிங் என்ற பெண் கவிஞரையும் (ராபர்ட் பிரவுனிங் என்ற ஆங்கிலக் கவிஞரின் மனைவி) ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்க விரும்பினார்.
ஆங்கிலம் மற்றும் பிரித்தானியா ஆகியவை பற்றிய தனது வெறுப்பும் உதாசீனமும் பற்றி மனம் திறந்து சில கடிதங்களில் எழுதியிருக்கிறார்.
சகல அருவெறுக்கத்தக்க விஷயங்களின் மொத்த உருவமாய் அமெரிக்கா அவருக்குத் தோன்றியது. ஆஸ்த்ரியக் கவிஞரான நிக்கோலஸ் லெனாவ் என்பவருக்கு ரில்கே எழுதிய கடித வரிகள்:
“America has no wine, no nightingale [ . . . ] brother, these Americans have the souls of shopkeepers, they are dead to all life of the mind, as dead as mutton.The nightingale is in the right not to visit these fellows. It seems to me seriously and profoundly significant that America has no nightingale. It seems to me like a poetic curse.’’
அமெரிக்கப் பொருள்கள் எதுவுமே நிஜமானவை அல்ல
எல்லா மையங்களின் மையமே உள்ளகங்களின் உள்ளகமே தன்னைத் தானே மூடுண்ட பாதாம் இனிமையாய் வளர்ந்தவாறு இவை யாவும் இந்தப் பிரபஞ்சமனைத்திலும் மிகச் சேய்மையிலுள்ள நட்சத்திரங்கள் வரையிலும் அதற்கப்பாலும் விதையைச் சூழ்ந்த உன் தசை உன் கனி இப்பொழுது உணர்கிறாய் நீ எதுவும் உன்னைப் பிடித்துத் தொங்கவில்லை என உன் உமி முடிவில்லா வெளியில் நீள்கிறது அங்கே சத்தான அடர்ந்த திரவங்கள் உயர்ந்து வழிந்தோடுகின்றன வெளிப்புறத்தில் ஒரு கதகதப்பு உதவுகிறது உன் எல்லையற்ற அமைதியில் நீ ஒளியூட்டப்பட்டுள்ளாய் ஒரு பில்லியன் நட்சத்திரங்கள் இரவின் ஊடாய்ச் சுழன்று செல்கின்றன உன் தலைக்கு மேல் ஒளி கிளர்ந்தபடி ஆனால் எல்லா நட்சத்திரங்களும் மரித்தபின்னும் உனக்குள் இருக்கும் அந்த இருப்பு இருக்கும்.
கடைவீதியில் பாம்பாட்டி வளைந்து வளைந்து மகுடியை ஊதுகிறான் அது தாலாட்டி மீண்டும் எழுப்புகிறது சில சமயம் மகுடியின் வட்டத்தினுள் கேட்பவன் ஒருவனை ஈர்க்கிறான் அவன் சந்தடியான காட்சி மேடைகளிலிருந்து அடிவைத்து வெளிவருகிறான் அந்தப் பாம்பு தன் கூடையில் நிமிர்ந்து நிற்கும் வரை வாசிப்பு விருப்பந் தெரிவித்துக்கொண்டேயிருக்கிறது நிமிர்நிலை மேல் கெஞ்சுகிறது அது தளரும்வரை குருட்டுத்தனமாய்த் தலைசுற்றும் விதமாய் இன்னும் இன்னுமென திடுக்கிடுதலையும் விரிவாதலையும் மாறி மாறிச் செய்தபடி ஒரே ஒரு பார்வையில் அந்த இந்தியன் உனக்குள் நுழைந்து ஓர் இந்திய விநோதத் தன்மையை உட்செலுத்திவிடுகிறான் அதில் உள்ளது மரணம் ஒரு விரிசல் உன் முகத்தின் குறுக்காய் ஓடுகிறது கீழிறங்கும் வானங்கள் உன்னை நோக்கி பிழம்பாய் விரைகின்றன உனது வடக்கு ஐரோப்பிய ஞாபகத்தின் மீது எவ்வித பயனுமற்ற வாசனைத் திரவியங்கள் அடுக்கப்படுகின்றன அவை உனக்குப் பயனளிக்காது வலிமை உன்னைப் பாதுகாப்பதில்லை சூரியன் சீறுகிறது காய்ச்சல் தாக்கி நடுக்குகிறது கெடுநோக்கான சந்தோஷத்தில் ஈட்டிக்காம்புகள் உயர்கின்றன மேலும் பாம்புகளில் விஷம் மின்னுகிறது.
நறுமணம் கமழ்ந்து இருண்டிருந்த தனது படுக்கை அறையில் இன்னமும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தாள் அலங்காரி மர்ஷியோன் தெரேன்தான்.
தாழ்வான மெத்தென்ற படுக்கையில் மிருதுவான வெண்ணிறத் துகில்களின் நடுவே அவற்றுக்கு அணி சேர்ப்பது போலவும், முத்தமிடுவதுபோல் வருடிய நிலையிலும், விவாகரத்தான பெண்ணுக்குரிய ஆழ்ந்த சந்தோஷமான அமைதியான துயில் கொண்டிருந்தாள் அவள்.
வரவேற்பறையில் எழுந்த உரத்த குரல்களைக் கேட்டு விழித்துக்கொண்டவள், தன்னுடைய நெருங்கிய தோழி பரோன் தெ கிரான்ழெரி, உள்ளே தன் அறைக்கு வரவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த வீட்டு வேலைக்காரியுடன் சண்டைபிடித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டாள்.
எனவே படுக்கையில் இருந்து எழுந்த மர்ஷியோன் கதவைத் திறந்து, திரைச் சீலையை விலக்கித் தன் முகத்தை - மேகக்கூந்தலில் ஒளிந்திருந்த முகத்தை - மட்டும் காட்டினாள்.
“என்ன விஷயம், ரொம்ப சீக்கிரமாகவே வந்து விட்டாயே?” என்று கேட்டாள். “இன்னும் ஒன்பது மணிகூட ஆகவில்லையே!”
முகம் வெளிறி, உடல் நடுங்கி, படபடப்புடன் இருந்த அழகிய பரோன் சொன்னாள்: “உன்னிடம் பேசவேண்டும். எனக்குப் பயங்கரமான விஷயம் நடந்துவிட்டது”
“உள்ளே வா டியர்”
அவள் உள்ளே போனாள்.
மர்ஷியோன் திரும்பவும் படுக்கைக்குப் போக, வேலைக்காரி, வெளிச்சமும் காற்றும் உள்ளே வருவதற்காக ஜன்னல்களைத் திறந்து வைத்தாள். பணிப்பெண் அறையைவிட்டுப் போனதும் மர்ஷியோன் கேட்டாள்:
“என்ன விஷயம், சொல்லு”
பெண்களை வசீகரமாகக் காட்டும் அழகொளிரும் கண்ணீர்த் துளிகளைச் சிந்தியபடியே அழுதாள் பரோன் தெ கிரான்ழெரி.
கண்கள் சிவந்துவிடக்கூடாது என்பதற்காகக் கண்ணீரைத் துடைக்காமலேயே விம்மினாள்:
“ஓ, டியர், எனக்கு நடந்தது அருவருப்பானது, மிகவும் அருவருப்பானது. ராத்திரி முழுக்க ஒரு நிமிஷம் கூட நான் தூங்கவேயில்லை, என்ன உன் காதில் விழுகிறதா? ஒரு நிமிஷம் கூட. இதோ என் நெஞ்சு எப்படிப் படபடக்கிறது என்று பார்”
பெண்களின் இதயத்தை மூடி நிற்கும் உருண்டையான அங்கமாகிய, ஆண்களை மேலும் கீழே துழாவவிடாமல் திருப்தியோடு நிறுத்திவிடுகிற தன்னுடைய முலையின் மீது தோழியின் கையை எடுத்து வைத்தாள்.
அவள் இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.
அவள் தொடர்ந்தாள்:
“நேற்று சாயங்காலம் நான்கு மணிக்கு எனக்கு அது நடந்தது - அல்லது நாலரை மணி இருக்கும், என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. உனக்குத் தெரியும் என் வீடு, அந்தச் சிறிய வரவேற்பறை அங்கே ஜன்னலோரம் உட்கார்ந்தபடியே செயிண்ட் லாஸார் வீதியில் வருவோர் போவோரைப் பைத்தியம்போல் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றும் உனக்குத்தெரியும்.
பக்கத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் எப்போதும் ஆரவாரமாக, பரபரப்பாக இருக்கும் - அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
நேற்று, ஜன்னலோரம் போட்டிருந்த தாழ்வான நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளிக்காற்றைச் சுவாசித்தபடி எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன்.
நேற்று சாயங்காலப் பொழுது அருமையாக இருந்தது இல்லையா! திடீரென்று, எதிர்வரிசையில் ஜன்னலோரம் ஒரு பெண் - சிவப்பு உடையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். நான் இளஊதா உடையில் இருந்தேன். உனக்குத் தெரியுமல்லவா என்னுடைய அந்த அழகான இளஊதா உடை. அந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது.
ஒரு மாதமாக அங்கே வந்து குடியிருக்கிறாள்; ஒரு மாதமாகத் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதுவரை அவளை நான் பார்த்திருக்கவில்லை.
ஆனால் பார்த்தவுடேனே அவள் மோசமானவள் என்று தெரிந்துவிட்டது. என்னை மாதிரியே ஜன்னலின் ஓரமாக வந்து அவளும் வேடிக்கை பார்க்கிறாளோ என்றுதான் முதலில் நினைத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய நடவடிக்கைகள் அவளை உன்னிப்பாகக் கவனிக்கும்படியாக எனக்கு ஆர்வத்தைத் தூண்டின.
முழங்கைகளை ஜன்னல் விளிம்பில் ஊன்றியபடி வீதியில் போய் வந்து கொண்டிருந்த ஆண்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆண்களும் அவளைப் பார்த்தார்கள். எல்லாருமே, அல்லது கிட்டத்தட்ட எல்லாருமே.
வீட்டுக்குப் பக்கத்தில் வந்ததுமே ஏதோ காரணத்தால் அவள் அங்கே இருப்பது தெரிந்ததைப் போலவோ, அல்லது, உள்ளுணர்வால் அவளுடைய இருப்பை உணர்ந்து கொண்டது போலவோ, திடீரென்று தலையை உயர்த்தி, ரகசிய சமிக்ஞையைப்போல் வேகமாகப் பார்வையைப் பரிமாறிக்கொள்வார்கள்.
அவளுடைய சமிக்ஞை சொன்னது: ‘வருகிறாயா?’ அவர்களுடைய பதில்: ‘எனக்கு நேரமில்லை’ அல்லது ‘இன்னொரு நாள்’ அல்லது ‘என்னிடம் பணம் இல்லை’ அல்லது ‘என்ன துணிச்சல் உனக்கு!’.
அவளுக்கு அது வாடிக்கையான தொழிலாக இருந்தாலும், அதைச் செய்த விதம் எப்படி வேடிக்கையாக இருந்தது என்று உன்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
அவள் திடீரென்று ஜன்னலைச் சாத்திவிடுவாள், ஓர் ஆள் உள்ளே போவதைப் பார்ப்பேன்: தூண்டில் காரன் தூண்டிலை வீசி மீனைப் பிடிப்பதுபோல அந்த ஆளைப் பிடித்துவிட்டாள். பிறகு நான் என் கடிகாரத்தைப் பார்த்தேன், பதினைந்து - இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகவில்லை. நடந்தது எல்லாம் எனக்குச் சுவாரஸ்யமாக இருந்தது!
என்னை நானே கேட்டுக் கொண்டேன்:
‘ரொம்பச் சீக்கிரமாக அவளைப் புரிந்து கொள்ளும்படி செய்து விடுகிறாளே, எப்படி? சரி யாகவும் துல்லியமாகவும் செய்கிறாளே! தலைக்கு ஒரு அசைவைத் தருகிறாளா? அல்லது பார்வையில் கையசைப்பைக் காட்டுகிறாளா?’
என்னுடைய சிறிய பைனாகுலர் மூலம் உற்றுக் கவனித்தேன். எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. முதலில் ஒரு பார்வை, பிறகு புன்சிரிப்பு; ‘மேலே வருகிறாயா’ என்று கேட்பது போல் தலையைச் சற்றே பின்னோக்கி அசைத்தல்.
ஆனாலும் மற்றவர்களின் வெளிப்பார்வைக்குத் தெரியாமல், மிகவும் கவனமாக அதைச் செய்வதற்கு மிகவும் சாதுரியம் வேண்டும்.
திரும்பவும் என்னை நானே கேட்டுக் கொண்டேன்:
‘அவள் செய்வதுபோலவே என்னாலும் செய்ய முடியுமா?’
கண்ணாடிக்கு முன்னே நின்று செய்து பார்த்தேன் டியர். அவளை விட நன்றாகச் செய்தேன், ரொம்பவும் நன்றாகச் செய்தேன்! உற்சாகம் பொங்க திரும்பவும் ஜன்னலோரம் போய் உட்கார்ந்துகொண்டேன்.
அதற்குப் பிறகு அவளுக்கு வேறு ஆள் கிடைக்க வில்லை, பாவம் வேற ஆளே கிடைக்கவில்லை. அவளுக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அப்படித்தான் பிழைப்பை நடத்த வேண்டுமென்றால் ரொம்பக் கஷ்டமானதுதான். கஷ்டமானாலும் வருகிற ஆள் அருமையாக இருந்துவிட்டால் அப்போதெல்லாம் சுவாரஸ்யமும் கூடிவிடும்.
பிறகு தெருவில் சென்றவர்கள் என்பக்கமாக வந்தார்களே தவிர, அவள் இருந்த பக்கமாகப் போக வில்லை. சூரியனும் மறைந்தது. பிறகு ஒவ்வொருவராக, இளைஞன், வயதானவன், கருத்தவன், வெளுத் தவன் என்று பல தினுசில் ஆட்கள் போனார்கள்.
கம்பீரமான ஒரு ஆள், நிஜமாலுமே வாட்டசாட்டமாக இருந்த ஒரு ஆள் டியர், என்னுடைய புருஷனை விடவும் அல்லது உன்னுடைய புருஷனைவிடவும் - அதாவது உன்னுடைய கடைசி புருஷன், அவனைத்தான் நீ விவாகரத்து செய்துவிட்டாயே - அழகாக இருந்தவன் வந்தான்.
எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்: ‘நான் சமிக்ஞை கொடுத்தால் அவன் புரிந்துகொள்வானா? நானோ கண்ணியமான பெண்மணி?’ அவனுக்குச் சமிக்ஞை காட்டவேண்டுமென்று மடத்தனமான ஆசை என்னைப் பிடித்துக்கொண்டது.
பொல்லாத ஆசை!
அந்த மாதிரியான ஆசையை யாராலும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, தெரியுமா உனக்கு? எப்பவாவது அதுமாதிரி ஆசை எனக்கு வரும். அதெல்லாம் முட்டாள்தனமானது என்றுதானே நீயும் நினைக்கிறாய்? நம்மைப் போன்ற பெண்களுக்குக் குரங்கு மூளை என்று நினைக்கிறேன்.
ஒரு டாக்டர் கூட என்னிடம் சொன்னார், குரங்குகளோட மூளை நம்முடையது மாதிரியே இருக்குமாம். கல்யாணம் ஆனதும் சில மாதங்கள் நம்முடைய கணவர்களைப்போல இருக்கிறோம், அவர்களை ரொம்பவும் நேசிக்கிறோம்.
பிறகு நம்முடைய காதலர்களை, தோழிகளை, நம்மீது இச்சை கொள்கிற நல்லவிதமாகத் தெரிகிறவர்களை நேசிக்கிறோம். அவர்களின் பேசும் தோரணையை, எண்ணப்போக்கை, வார்த்தைகளை, பாவனைகளை, எல்லாவற்றையுமே நாம் பின்பற்றுகிறோம். ஆனால் அது ரொம்பவும் முட்டள்தனமானது.
“ஆமாம், ஆமாம்” என்றாள் மர்ஷியோன் பொறுமை இழந்தவளாக. “அதெல்லாம் சரி, என்னதான் நடந்தது? நீ மனத்தூண்டலுக்குப் பலி ஆகமாட்டாயே!”
டியர், எதையாவது செய்யவேண்டும் என்று மனத்தூண்டல் எனக்கு வந்தால், அதை நான் செய்து விடுவேன்.
அதனால் நான் எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்:
‘ஒரு ஆளிடம் மட்டும் நான் முயற்சி செய்வேன், என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்ன ஆகிவிடும்? பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது! நான் புன்சிரிப்பைப் பரிமாறிக்கொள்வேன், அதோடு சரி, அதற்குப் பிறகு நான் மறுத்துவிடுவேன்’
அதனால் என்னுடைய விருப்பத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தேன். நல்லவிதமான ஒரு ஆள், மிகவும் நல்லவிதமான ஆள் வேண்டுமே! திடீரென்று, உயரமான, நல்ல நிறமுள்ள, வசீகரமான தோற்றம் கொண்ட ஒரு நபர் வீதியில் வருவதைப் பார்த்தேன். உனக்குத்தான் தெரியுமே நல்ல நிறமான ஆட்களை எனக்குப் பிடிக்கும் என்று.
நான் அவனைப் பார்த்தேன், அவன் என்னைப் பார்த்தான். நான் சிரித்தேன், அவனும் சிரித்தான். நான் சமிக்ஞை செய்தேன், ஓ, மிகக் குறைவாகத்தான். தலையாலே சரி என்று பதில் சொல்லிவிட்டான் டியர்! வீட்டின் பெரிய கதவுக்கு முன் வந்துவிட்டான்.
அப்பொழுது என்னவெல்லாம் என் மனதில் ஓடியது என்று உனக்குத் தெரியாது. எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று நினைத்தேன். எப்படிப் பயந்து போனேன் தெரியுமா? ‘வீட்டுவேலைக்காரனிடம் - என் புருஷனின் விசுவாசியான ஜோஸப்பிடம் - வந்து பேசுவானே, அந்த நபரை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும் என்று ஜோஸப் நினைத்துக்கொள்வானே!’
என்ன செய்வது? ஒரு நொடியில் அழைப்பு மணியை அழுத்துவானே! நான் வாசலுக்குப் போய் அவனைப் பார்த்து, அவன் தவறுதலாகப் புரிந்து கொண்டதாகச் சொல்லி உடனடியாகப் போய்விடும்படி சொல்ல நினைத்தேன். பெண்களின் மீது,பரிதாபத்திற்குரிய பெண்களின் மீது, அவனுக்கு இரக்கம் வரும் அல்லவா?
அவன் அழைப்பு மணியை அழுத்த எத்தனித்த அந்தத் தருணத்தில் ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். முட்டாள்போல உளறினேன்:
‘மிசியே, போய் விடுங்கள், தவறு செய்துவிட்டீர்கள், பெருந்தவறு. உங்களைப்போலவே இருக்கும் என் நண்பர் என்று உங்களை நினைத்துவிட்டேன். என்மீது தயவு செய்யுங்கள் மிசியே!’
ஆனால் டியர், அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டுச் சொன்னான்:
“ஓ, டியர், உன் கதை எனக்குத் தெரியும். உனக்குக்கல்யாணமாகிவிட்டது. அதனால் இருபது ஃபிராங் குக்குப் பதிலாக நாற்பது ஃப்ராங்க் வேண்டும் அதுதானே. அது உனக்குக் கிடைக்கும், உள்ளே இடத்தைக் காட்டுகிறாயா?”
‘அவன் என்னை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்தினான். பீதி அடைந்து நின்றிருந்த என்னை முத்த மிட்டு, இடுப்பில் கைவைத்து அணைத்துக்கொண்டே, திறந்திருந்த வரவேற்பறைக்குள்ளே நடத்தினான். சாமான்களை ஏலத்திற்கு விடுபவனைப் போலச் சுற்றி நோட்டம் விட்டான்.
‘உன் அறை நன்றாக இருக்கிறது, மிகவும் நன்றாக. ஜன்னல் வழி வியாபாரத்தைச் செய்கிற அளவுக்கு இப்போதுதான் உனக்கு அதிர்ஷ்டக் குறை ஏற்பட்டுவிட்டது போலிருக்கிறது!’
திரும்பவும் நான் அவனிடம் கெஞ்சினேன்.
‘மிசியே, தயவுசெய்து போய்விடுங்கள்! என்கணவர் இப்பொழுது வந்துவிடுவார். சத்தியமாகச் சொல்கிறேன் நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள்.’
ஆனால் அவன் அலட்டிக்காமல் சொன்னான்:
‘கிட்டே வா அழகியே, இந்தமாதிரி பேச்செல்லாம் நிறையக்கேட்டிருக்கிறேன். உன் புருஷன் வந்தால் அவனுக்கு ஐந்து ஃப்ராங் கொடுத்து வீதிக்கு அந்தப் பக்கம் உள்ள கஃபெயில் போய்க் குடித்துவிட்டுவரச் சொல்கிறேன்’
அங்கிருந்த ராவூலின் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இதுதான் உன் புருஷனா’ என்றான்.
‘ஆமாம் அவர்தான்’
‘ஆள் நன்றாக இருக்கிறார், பார்த்தால் எதற்கும் மசிகிறவர் போல் தெரியவில்லை. சரி, இது யார்? உன்னுடைய தோழிகளில் ஒருத்தியா?’
அது உன்னுடைய படம் டியர், கழுத்தைச் சுற்றி அலங்காரமாக இருக்கிற கவுன் போட்டு நீ இருக்கிற படம். என்ன சொல்வது என்று தெரியாமல் திக்கித் தடுமாறினேன்: ‘ஆமாம் அவள் என் தோழிகளில் ஒருத்தி’.
‘பார்க்க நல்லவிதமாக இருக்கிறாள், என்னை அவளிடம் நீ அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும்’.
அப்போது மணி ஐந்து அடித்தது. தினமும் ஐந்தரைக்கு ராவூல் வீட்டுக்கு வருவார். இந்த ஆள் போவதற்கு முன் அவர் வந்துவிட்டால் என்னாகும்?
என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்! அப்புறம், அப்புறம் என்புத்தி வேலை செய்யவில்லை. நான் யோசித்தேன் - யோசித்தேன் - அதாவது - அதாவது - அந்த ஆளிடம் இருந்து விடுபட நல்ல வழி - எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரமாக - ஆமாம், சீக்கிரமாகவே அது நடந்துவிட்டது - உனக்குப் புரிகிறதுதானே?
மர்ஷியோன் தெ ரேன்தான் சிரித்தாள், சிரித்தாள், பைத்தியம் போலத் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, கட்டிலே ஆடும்படியாகக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ஒருவழியாகச் சிரிப்பு அடங்கியதும் கேட்டாள்.
“ம், அது, அந்த ஆள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தானா?”
“ஆமாம்”
“அப்படி இருந்தும் அங்கலாய்க்கிறாயா?”
“ஆனால் - டியர், அவன் சொன்னான் - நாளைக்கும் வருவேன்னு சொன்னான் - அதே நேரத்திற்கு வருவானாம் - எனக்கு ரொம்பவும் கலக்கமாகிவிட்டது. சரிக்கட்டற மாதிரி எப்படிப் பேசுகிறான் தெரியுமா? பிடிவாதமாச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நான் என்ன செய்யட்டும்? சொல்லு”.
படுக்கையில் எழுந்து உட்கார்ந்து யோசித்த மர்ஷியோன், திடீரென்று சொன்னாள்:
“அவனைக் கைது செய்ய ஏற்பாடு பண்ணு”.
அதிர்ந்துபோன பரோன் தடுமாற்றமான குரலில் கேட்டாள்:
“என்ன சொல்கிறாய்? என்ன நினைத்துப் பேசுகிறாய்? அவனைக் கைது செய்யச் சொல்வதா? என்ன முகாந்திரத்தின் பேரில்?”
“அது ரொம்பச் சுலபம். போலீஸ் கமிஷனர் ஆபீசுக்குப்போய், மூன்றுமாதமாக அந்த ஆள் உன்னைப் பின்தொடர்ந்து வருகிறான் என்றும், நேற்றுசாயங்காலம் திமிர் அடங்காதவனாக உன் வீட்டுக்குள் வந்துவிட்டான் என்றும் நாளைக்கும் திரும்பவும் வருவேன் என்று பயமுறுத்தி உள்ளதாகவும், அவனிடம் இருந்து சட்டப்படியான பாதுகாப்புத் தரும்படியும் கேள்”.
“ஆனால் டியர் அவன் ‘அதை’ போலீஸிடம் சொல்லிவிட்டால்...?”
“அவர்கள் அவனை நம்பமாட்டார்கள், முட்டாளாக இருக்கிறாயே, உன்னைத்தான் நம்புவார்கள்; யாரும் பழி சொல்லமுடியாத சமூக அந்தஸ்து உனக்கு இருக்கிறது”.
”ஆனாலும், அப்படிச் செய்ய எனக்குத் துணிச்சல் வரவில்லை”.
“துணிந்து செய் டியர், இல்லாவிட்டால் நீ ஒழிந்தாய்”
“அவனைக் கைது செய்தால், என்னை எப்படி எல்லாம் அவன் அவமானப்படுத்துவான் என்று யோசித்துப் பார்த்தாயா?”
“அவமானப்படுத்துவதற்குச் சாட்சிகள் வேண்டும். நிச்சயமாக அவனுக்குத் தண்டனை கிடைக்கும்.”
“என்ன தண்டனை விதிப்பார்கள்?”
“நஷ்டஈடு கொடுப்பதுதான். இம்மாதிரி விஷயங் களில், இரக்கமே காட்டமாட்டார்கள்.”
“ நஷ்டஈடுன்னு சொல்லும்போதுதான் ஞாபகம் வருகிறது - அதுதான் எனக்கும் கவலையாக இருக்கிறது - அந்த ஒரு விஷயம் தான். அவன் என் மேல் அங்கியில் நாற்பது ஃபிராங்க் வைத்துவிட்டுப் போய்விட்டான்”.
“ நாற்பது ஃபிராங்கா?”
“ஆமாம்”
“அதிகம் கிடையாதே”
“கிடையாது”
“அது ரொம்பச் சொற்பம். எனக்காக இருந்தால் என்னை அவமானப்படுத்தியது போல இருக்கும். சரி”
“சரி அந்தப்பணத்தை நான் என்ன செய்யட்டும்?” மர்ஷியோன் சில நொடிகள் தயங்கிவிட்டு, தீர்மானமான குரலில் சொன்னாள்: “டியர் - அந்தப் பணத்தைக் கொண்டு ஒரேயொரு கௌரவமான காரியத்தைச் செய்யலாம். அதைக் கொண்டு உன் புருஷனுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுத்துவிடு. அதுதான் நியாயமாக இருக்கும்!”
சாதி - ஒரு உரையாடல் என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரையில், எழுத்தாளர் ஜெயமோகன், தமிழகத்தில் நிலவும் ஒரு தனித்துவமான சமூக நிலையை முன்வைக்கிறார்.
அதாவது சாதிச் சங்கங்களைத் தாண்டி, முற்போக்குப் பேசும் அனைத்துக் கட்சிகளும், சமூகமும், மூர்க்கமான சாதிய மனநிலை கொண்டவை. அரசியல், பொருளியல் அமைப்புகள் கூட அப்படிப் பிரிந்து இயங்குகின்றன.
தவிர, இடைநிலைச் சாதி அரசியல் இருமுகம் கொண்டது. ஒரு பக்கம் அது பிராமணர்களிடம் நீங்கள் தான் சாதியைக் கற்பித்தீர்கள் என்று சொல்லி இழித்தும் பழித்தும் ஒடுக்க முயல்கிறது.
இன்னொருப் பக்கம் அது தலித்துக்களிடம் உங்களிடமிருக்கும் குறைந்தபட்சக் கல்விகூட நாங்கள் போட்ட பிச்சை என்கிறது. தமிழக இடைநிலைச் சாதியினர் எந்தக் காலகட்டத்திலும் தலித் விடுதலைக்காக ஏதும் செய்ததில்லை, அவர்கள் போராடியதெல்லாம் தங்களுக்காக மட்டுமே என்னும் அவதானிப்பையும் முன்வைக்கிறார்.
இந்த அவதானிப்புகள் சரியான அவதானிப்புகள். ஆனால், முழுமையான அவதானிப்பா எனயோசித்தால் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. தமிழகம் தாண்டி, கர்நாடகம், ஆந்திரம், மராத்தியம், குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 16-17 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவங்களில், இது தமிழகத்தில் மட்டும் நிகழும் தனித்துவமான சமூக நிலை அல்ல என மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.
தமிழக சமூக அரசியல் தளங்களில், சாதீய வாதங்கள், முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகள் என மூன்று தளங்களில் நிகழ்வதைக் காணலாம். ஒரு காலத்தில் அச்சு ஊடகங்கள் வழியாகவும், மேடைப்பேச்சுக்களிலும் மறைமுகமாக வும், நேரிடையாகவும் வெளிப்பட்ட கருத்துக்கள், இன்று சமூக ஊடகங்களுக்குத் தாவி விட்டன.
தான்நினைக்கும் கருத்துக்களைப் பெருமளவு சுதந்திரத்துடன், சமூக ஊடகங்களில் சாதீயக் கருத்துக்களை மூன்று தரப்பாரும் முன்வைக்கிறார்கள். 1990களுக்குப் பிறகான காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட தலித் தரப்பில் இருந்தது காத்திரமான குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.
உயர், இடைநிலை, ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந் தவர்கள் தங்கள் சாதியின் மீது பற்றுக்கொண்டிருக்கும் வரை இந்த சாதிப் பிரச்சினை என்பது இருந்து கொண்டுதான் இருக்கும்.
இவர்கள், தமிழகத்தின் இந்த அரசியல் சமூக பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கும் எந்த சாதிக்குழுவில் பிறந்திருந்தாலும், அதற்கேற்ற பாவனைகளையும், அரசியலையும்தான் கொண்டிருந்திருப்பார்கள். பெரிதாக மாறியிருக்காது...
இந்தக் குழுக்களின் அரசியல் இயங்கியலின் அலையை மட்டுமே நம்பி, சாதாரண மனிதர்கள் அவர்கள் தலைவர்களாக இருக்கும்வரை அந்தக் குழுவின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பவர்களாகவே இருப்பார்கள்.
அது ராம்தாஸாக இருந்தாலும் சரி, கொங்கு ஈஸ்வரனாக இருந்தாலும் சரி.. அல்லது வேறெந்தச் சாதித்தலைவராக இருந்தாலும் சரி.
இது ஒரு சமூக, அரசியல் கட்டமைப்புச் சிக்கல்.
இது போன்ற காலகட்டத்தில்தான், திருமாவளவன் என்னும் தலைவர் எழுந்து வந்திருப்பதை மிகவும் நம்பிக்கையுடன் பார்க்கவேண்டியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்புகளுக்குள் தன் அரசியலைத் தொடங்கியிருந்தாலும், இன்று அவர் எழுந்து நிற்கும் தளம் வேறு.
எந்தக் கருத்தியலை எதிர்க்கிறோம், எந்த மக்கள் திரளுடன் நிற்கிறோம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தெளிவாக மக்கள் முன் வைத்துக்கொண்டேயிருக்கிறார். அரசியல் தளத்தில், அறிவார்ந்த தகுதியில், தன் சாதியைத் தாண்டிய முதல் தலைவராக அவர் உருவெடுத்துள்ளது ஒரு முக்கியமான சமூக நிகழ்வு.
ஆனால், இது எவ்வளவு தூரம் இறுகிப் போயுள்ள சாதியக் கட்ட மைப்பைத் தகர்க்கும் என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என் தனிப்பட்ட அனுபவத்தில், பெண்களுக்கான கல்லூரிக் கல்வி, அவர்களுக்கு ஒரு விடுதலையைத் தருகிறது என அறிந்திருக்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் நடக்காத கலப்பு மணங்கள், இறுகிப் போன என் சாதியில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்திருக்கின்றன.
சாதியை உதறிச் சென்ற பெண்கள் பெரும் பாலும் சமூக அடுக்கில் கீழ் எனக் கருதப்படும்சாதி ஆண்களைத் திருமணம் செய்திருக்கின்றனர்.எண்ணிக்கை குறைவெனினும், முக்கியமான நிகழ்வு.
பெண்கள் கிடைக்காத என் சாதி ஆண்கள், பக்கத்து மாநிலத்திலும், மற்ற சாதிகளிலும், நிலத்தை எழுதி வைத்து மணம் புரிந்துகொண்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ளன. இங்கே என் சாதி என்பதை நான் அடையாளத்துக்காக மட்டுமே சொல்கிறேன்.
இரண்டாவது, தமிழ்ச் சமூகத்தின் சாதியக் கட்டமைப்பைப் பற்றிப் பேசுகையில், தமிழ்ச் சமூகத்தை மட்டுமே மையமாக வைத்துப் பேசுவதைத் தாண்டி, இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்றும் பார்க்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, The India Forum என்னும் மின்னிதழில், ‘ Revolt of the Uppercastes ’, என்றொரு கட்டுரை வந்திருந்தது.
2015 ஆம் ஆண்டு, கட்டுரையாளர் அலகாபாத் நகரத்தில் உள்ள முக்கியமான அதிகாரப் பதவிகளில் (அதை அவர் Positions of Power and Influence (POPI) என அழைக்கிறார்) இருப்பவர்களின் சாதிகளை ஒருசர்வே செய்து தருகிறார்.
அந்தப் பதவிகளில், இருப்பவர்களில் 75 சதம் பேர், உத்திரப்பிரதேச மக்கள் தொகையில் 16 சதமே இருக்கும் உயர் சாதியினர் என்னும் தரவை முன்வைக்கிறார்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய மதராஸ் மாகாணத்தில் இது போன்ற ஒரு தரவை முன்வைத்துத்தான், Non Brahmin Manifesto என்னும் ஒரு அறிக்கை, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் குரலை முன்வைத்தது. பின்னர் அது பிற்படுத்தப்பட்டவர்கள் என்னும் அரசியல் அதிகாரக் குழுவாக உருவாகியது.
ஆனால், அரசியல் குழுக்களாகத் திரட்டப்படாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை, குறிப்பாக வட மாநிலங்களில் முற்றிலும் தலைகீழாக உள்ளது. இந்த வேறுபாடுகளைச் சில தரவுகள் மூலம் பார்க்கலாம்.
சமீபத்தில் ஈகலட்டேரியன்ஸ் என்னும் தன்னார்வக் குழு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே, இந்தியப் பல்கலைக்கழகங்களில், பன்மைத்துவம் தொடர்பான தகவல்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள். அதிலிருந்து மூன்று உதாரணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்
ஒன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 1)
தமிழகத்தில் 60-65% வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்கள், 76% இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். 19% இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், 16% இடங்களையும், 1% இருக்கும் மலைவாழ்மக்கள் 0.66% இடங்களையும், 15% இருக்கும் உயர்சாதியினர் மற்றவர்களும் போட்டியிடக் கூடிய பொதுப்பிரிவில் 7.34% உள்ளார்கள்.
தெளிவாக, பிற்படுத்தப்பட்டவர்கள், தங்கள் சாதிச் சதவீதத்துக்கு அதிகமான இடங்களில் இருக்கிறார்கள். முன்னேறிய சாதிகள் தங்கள் சாதிச் சதவீத அளவுக்குக் குறைவாக இருக்கிறார்கள்.
இன்னொன்று மெட்ராஸ் பல்கலைக்கழகம். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில், நிலை கொஞ்சம் மாறியுள்ளது. 18% இருக்கவேண்டிய தாழ்த்தப்பட்டவர்களின் பங்கு 31.5% ஆக இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
இங்கு பிற்படுத்தப்பட சாதியினர் 56% சதவீதமாக இருக்கிறார்கள். ஆனால், இங்குமே முற்படுத்தப்பட்ட சாதியினரின் சதவீதம், அவர்கள் மக்கள்தொகை அளவுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப் படவில்லை.
ஆனால், இதைத் தாண்டி, தலித்துகள், மற்றும்பழங்குடியினர், பல்கலைக்கழக உயர் நிர்வாகத் தலைப்புப் பொறுப்புகளில் எத்தனை சதவீதம் இருக் கிறார்கள் என்பது நுணுக்கி ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்) (படம் 2)
1915 முன்வைக்கப்பட்ட வகுப்புவாரிக் கோரிக்கை, இடஒதுக்கீடு என்னும் சட்டத்தைத் தாண்டிய சமூக நீதிக் கருதுகோள். சமூக நீதி என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதுதான்.
அப்படி எனில், பிற்படுத்தப்பட்ட மக்களின் அதிலும் சில சாதிகளின் ஆக்கிரமிப்பு சரி செய்யப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சரியான பிரதிநிதித்துவம், உயர்சாதி மக்கள் தொகைக்கேற்ப அவர்களுக்கான இடங்கள் முதலியன தரப்பட வேண்டும்.
இப்போது இருக்கும் பிற்படுத்தப்பட்ட 3-4 சாதிகளின் தயவில் நிற்கும் அரசியல் கட்சிகள் இதைச் செய்யாது. ஜனநாயக வழியில், பாதிக்கப்பட்ட சாதியினர் இதை முன்னெடுத்து, அதிகாரத்திடம் போராடிப் பெறவேண்டிய ஒன்று.
பாதிக்கப்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் எனக் கேட்கலாம். 1915ஆம் ஆண்டு, பாதிக்கப்பட்டதாக உணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உரிமைகள் குறித்துப் போராடி, வெற்றி பெற்றார்கள் என்பதே அந்தக் கேள்விக்குப் பதில்.
ஜனநாயகத்தின் ஒரே சாதகமான அம்சம், நேர்மையான கோரிக்கைகளுக்காகப் போராடுகையில் வெற்றி பெறும் சாத்தியங்கள் அதிகம்.
அதே சமயத்தில், தமிழகம், கேரளம், மராத்தியம் போன்ற மாநிலங்கள் தாண்டிய தளங்களில், மத்திய அரசு நிறுவனங்களில் நிலைமை முற்றிலுமாக வேறு. இந்திய மக்கள் தொகை 100 கோடி பேர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசுகையில், தமிழகம், இந்திய மக்கள் தொகையில் 5% மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மத்திய அரசு நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக, ஐஐடி தில்லியின் தரவுகளைத் தருகிறேன், (படம் 3) (தகவல் உதவி: ஈகலட்டேரியன்ஸ்).
509 இடங்களில், 92.7% சதம் பேர் இந்தியாவில் 20 முதல் 30% வரை இருப்பதாகச் சொல்லப்படும் உயர்சாதியினர். 18% உள்ள தாழ்த்தப்பட்டவர்கள், 1.8% பேர் மட்டுமே உள்ளனர். 8% உள்ள பழங் குடியினர், 0.5% மட்டுமே உள்ளனர். 50% உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், 5% மட்டுமே உள்ளனர்.
இந்த சமநிலையின்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பழங்குடி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசியல் தலைமை வட மாநிலங்களில் இல்லை என்பது ஒரு நூற்றாண்டு சோகம்.
தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகையில், முன் வைக்கப் படும் இடைநிலைச் சாதிகளின் இன்றைய ஆதிக்கம்என்பது அவர்களின் ஜனநாயக அரசியல் எழுச்சியின் காரணமாக உருவானது.
அது மத்திய வடமாநிலங்களில் நிகழாததால், வழக்கமான சனாதனச் சாதிப் படிநிலைகள் இன்னும் அங்கே அப்படியே, மாறாமல் உள்ளன. உயர்சாதிகள், தங்கள் பாரம்பரிய மான சமூக, பொருளாதார அதிகாரங்களில் அமர்ந்துஇருக்கிறார்கள்.
20-30% உள்ள உயர்சாதிகள் 70-90% இடங்களைப் பிடித்திருப்பதைப் பல தரவுகள் பேசுகின்றன. மீதி உள்ள 70-80% பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்கள், 10-30%த்தையே பெற்றிருக்கிறார்கள் என்பது மிகவும் உரத்துப் பேசப்பட வேண்டிய விஷயம்.
மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதியத்தைப் பற்றி, அங்கே தலித்துகள், சிறு பான்மையினர் ஒதுக்கப்படுதல் பற்றி, பெங்களூரு மேலாண் கழகத்தின் பேராசிரியர் தீபக் மால்கன், “ When will Dalit Lives Matter ”, என்னும் ஒரு முக்கியமான கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
அதே போல, மத்திய அரசு நிர்வாகத்திலும், உயர் சாதியினர் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. இன்றைய மத்திய அரசில், 89 துறைச் செயலாளர்களில், 85 பேர் உயர் சாதியினர். உச்ச நீதிமன்றத்திலும், பன்மைத்துவக் குறைபாடு உண்டு.
ஐஐடி கரக்பூரில், அங்கே பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு என ஒரு ரகசிய கோட்டா இருந் திருக்கிறது. இது பற்றி அகமதாபாத் இந்திய மேலாண்கழகப் பேராசிரியர் ராம்மோகன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 88 பேருக்கு அட்மிஷன் கிடைத்திருக்கிறது. 12ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களும், ஐஐடி நுழைவுத் தேர்வை எழுதியதும் (வெற்றி பெறுவதல்ல) மட்டுமே தகுதி. வருடம் 10 மாணவர்கள், ஐஐடி இயக்குநரின் சிபாரிசில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
2005 ஆம் ஆண்டு தகவல் உரிமைச் சட்டம் வந்த பின்பு, அதன் வழியாகத் தரவுகள் திரட்டப்பட்டு கேள்விகள் எழுப்பப்பட்டவுடன், இது நின்றுவிட்டது.
கரிசல் இலக்கியப் பேராளுமை கி.ரா, கிராமத்துக்குப் பேட்டரி லைட் வந்த கதையைச் சொல்கையில், அது வந்த பின்பு, அய்யனார் இரவில் வேட்டைக்குப் போவது நின்றுவிட்டது என எழுதியிருப்பார்.
அது போன்ற கதை இது. தகவல் உரிமைச் சட்டம், இது போன்ற உண்மைகளை வெளிக் கொணர்கையில், ஊழல், சாதிய அய்யனார்கள் வேட்டைக்குப் போவது நின்று போகும் வாய்ப்புகள் உண்டு.
ஒப்பீட்டில், இந்தியாவில் சாதிய இழிவுகள் ஒரளவு குறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் கேரளத்திலும், முதலமைச்சரைப் பற்றிய சாதீய இழிவுகளை அவரின் அரசியல் எதிரிகள் பொதுவெளியில் பேச முடிகிறது.
தமிழகத்திலும், 2011 தேர்தலில், ஒரு முதுபெரும் தலைவரின் சாதி குறித்து இழிவாகப் பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேசியதைப் பார்த்தோம்.
தமிழகத்தில், தாழ்த்தப்பட்டவர்களின் சமூக நிலை இழிவாக இருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களின் நிலை, வட மாநிலங்கள் மற்றும் மத்தியக் கல்வி நிலையங்களை விட மேம்பட்டுள்ளது என்பதையே இதுவரை உள்ள தரவுகள் காட்டுகின்றன.
எனினும், மாநில வாரியாகத் தரவுகள் திரட்டப்பட்டு, அவை அனைத்து மக்களும் காணும் வகையில் பொது வெளி யில் வைக்கப்பட்டு அலசப்படவேண்டும்.
சாதியம் என்பது, அதன் அத்தனை அசிங்கங்களுடனும் ஆராயப்பட்டு, மக்கள் தொகைக் கணக்கெடுக்கப்பட்டு, சமூக நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஜனநாயக வழியில் வெளிப்படையாகத் தீர்க்கப் படுவதே சரியான வழியாகும்.
இதில் பாலினச் சமத்துவம் 50% கட்டாயமாகப் பேணப்பட வேண்டும். இன்று நிலவும் சாதீயப் பிரச்சினைகளுக்கு (ஒடுக்கப்பட்ட மக்களைத்தவிர), ஒரு தரப்பு, மற்றவர்களைக் காரணமாகச் சொல்வது ஒரு சாக்கு மட்டுமே. அது ஜனநாயக அறிதலின்மையில் இருந்து உருவாகும் ஒன்று.
The Revolt of the Upper Castes | The India Forum <https://www.theindiaforum.in/article/revolt-upper-castes>
When Will India's Educational Institutes Have Their 'Dalit Lives Matter' Moment? (thewire.in) <https://thewire.in/education/princeton-woodrow-wilson-caste-discrimination>
The Big Picture: IIT Kharagpur had quotas for faculty's children! (ttrammohan.blogspot.com) <http://ttrammohan.blogspot.com/2010/08/iit-kharagpur-had-quotas-for-facultys.html>
Of 89 secretaries in Modi govt, there are just 3 STs, 1 Dalit and no OBCs (theprint.in) <https://theprint.in/india/governance/of-89-secretaries-in-modi-govt-there-are-just-3-sts-1-dalit-and-no-obcs/271543/>
One Too Many Mishras: India's Supreme Court Is A Brahmin Bastion (buzzfeed.com) https://www.buzzfeed.com/ravikiranshinde/one-too-many-mishras-indias-supreme-court-is-a-brahmin
சாகும்வரை வரக்கூடாது என்றிருந்தேன் பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று மரங்களைப் பார்க்க ஆசைப்படுவதாக உற்சாகமானார்கள் உன்னைப் பார்க்கலாமென்றுதான் அந்த இடத்திற்கு நடந்தேன் நீ இருக்கப்போவதில்லைதான் நானும் இருக்கப்போவதில்லை ஸ்டீபன் ஹாக்கிங் கண்டுணர்ந்ததுதான் இது ஒரு மகா எந்திரம் சக்கரங்களில் நசுங்கிப் போகிறவர்களைப் பற்றி விசனப்பட நேரமில்லையதற்கு கைகோர்த்துக்கொண்டு கனவு காண்பது பாதுகாப்பாயிருந்தது நமக்குள் இருந்த நம்பிக்கை புவியடுக்குகளில் நிலவும் மெல்லிய நிலநடுக்கங்கள் போல் அனிச்சையாய் இந்த மரக்கிளைகளில் அசைந்தது பேராசிரியர் குனிந்து கையொப்பமிடும்போது சொல்லிடப்போறேன் என்ற ஒற்றைச் சொல்லை நீ முகம், முழுக்க அபிநயித்தாய் வேண்டாமே என்ற ஒற்றைச் சொல்லை நான் என் முகத்தில் பாவிக்க முயன்று தோற்றேன் அதற்குண்டான உன் முகபாவத்தை இந்தப் பவழமல்லி மரத்தில் விரல்களால் தேடுகிறேன் மரங்களின் காதலன் நான் எனச் சிரிக்கிறேன் இளைய மாணவர்கள் வானத்தில் கட்டப்பட்ட மேல் கட்டுமானம் தொடுக்கும் எந்தப் பேரழிப்பையும் தாங்கி நிற்கின்றன மனசுகளின் இருப்பு பூமியின் ஆகப்பெரும் இயங்குயிர் குழந்தை திமிங்கலமெனப் பாசாங்கு செய்வதில் லாபமென்ன பூமியின் ஆகப் பெரும் குழந்தையான மனசின் ட்ரில்லியன் டன் சுமையைச் சுமக்கும் மனிதக்கூட்டம் சாதிக்க இனியொன்றுமில்லை விடைபெறலில் மிதக்கும் கண்களைப் பார்த்துச் சொன்னேன் எந்தக் கண்ணீரிலும் கரையாத நினைவு அணு ஒன்றை கண்களில் சுமந்து போகாதீர்கள் கண்மணிகளே...
இறைஞ்சுவதில் ஒரு மண்டலம் பயிற்சி பெற்றவர்கள் சொல்லக் கேட்டு கேட்டுச்சொல்லி ஒவ்வொருவராய் வருகிறார்கள் கரகரவெனத் தீட்டப்படும் கத்தியை இந்த வைகறைப் பனியில் மங்கலாகப் பார்த்துவிட்டு தொர தொரவெனக் கிடாய் ஒன்று அழுவதாய் காட்சியொன்று விரிய என்னிடமும் குஞ்சுகள் இருக்கின்றன நத்தைகளை அடிமடியில் வைத்திருக்கிறேன் என் மேனியெங்கும் ‘பாசம்’ மிதந்தலைகிறது இரக்கமற்ற பூமி தாங்குவதற்கீடாக புதுப்புது ஜிஎஸ்டியால் என்னையும் உறிஞ்சிக்கொண்டேயிருக்கிறது வானத்திற்கும் வரி செலுத்தித் தொலைக்கிறேன் பாருங்கள் மீன்கொத்திப் பறவைகள் பசியோடு கிறங்குகின்றன என்னிடமே வந்து நீங்கள் கேட்டவண்ணமிருந்தால் எப்படி... இறைஞ்சுவதில் முன்அனுபவமே இல்லாத குளம் சாப்ளின் பகிர்ந்தது போல் தண்ணீருக்குள் தண்ணீராய் அழுது தீர்த்தது இறைஞ்சுவதற்கான பல பட்டறைகளில் கற்றவர்கள் முகாம்களில் தங்கிப் பயின்றவர்கள் என வருவோரின் சாமர்த்தியத்திற்கிணையான சமர்புரிய அங்கேயே கிடைக்கும் குளம் யாதுமறியவில்லை வெட்டிக் கொடுப்பதும் கட்டிக் கொடுப்பதும் தாய்மையின் பெருங்கருணையென்ற பரப்புரை அரசூடகங்களால் தீவிரமாக்கப்படுகிறது தான் வெட்டுண்டும் கட்டுண்டும் போவதைத் தடுக்கவோர் கரமின்றி இறைஞ்சுவோர்க்கு வழங்கிவிட்டு இறைஞ்சுவோர் கொண்டுசென்ற குளத்தின் குறும்பகுதியொன்று சமுத்திரமாக வளரும் வாய்ப்புளதான கற்பனையில் கிடந்தது அது.
கவிதைக்குள் நீந்துவது வழக்கமாகிவிட்டிருக்கிறது கடலில் மீன்கள் நீந்துவதைப்போல மீன்கள் கடலைக் குடிப்பதில்லை கடலும் மீன்களைத் தின்பதில்லை மீனும் கடலும் ஒன்றாயிருக்கின்றன கடலும் மீனும் வேறாய் நிற்கின்றன அத்வைதம் துவைதம் விசிச்டாத்வைதமல்ல பசிதான் பேசுபொருள் மீன்கள் கடலைக் கண்டுபிடித்து பிடித்துக் கடித்துத் தின்றுவிடலாமென்று விரட்டிக்கொண்டோடுகின்றன கடலும் தன்னைத் தான்குழைத்துத் திரித்து மீனுண்ணச் சுழல்கிறது இவைகளெல்லாம் அலைகளுக்குத் தெரிவதில்லை திருநாவுக்கரசரைப் போன்றதொரு பிரம்மாண்டப் பேருருக்கொண்ட காலம் காலம் காலமாய்ச் சாகரத்தின் விளிம்பிலமர்ந்துகொண்டு உழவாரப் படையொன்றால் அலைகளைச் செதுக்கிக்கொண்டேயிருக்கிறது சமுத்திரத்தை ஸ்படிகத் தெளிவாகப் பார்க்க கவிதைக்குள்ளும் நானப்படித்தான் நாளும் பொழுதுமாகத் திளைக்கிறேன் ஒரு நாளும் ஒரு துளிக்கவிதையைக்கூட பிய்த்துத் தின்றவனில்லை நானும்... நானும் கவிதைகள்தாம் கார்டூனில் வரும் முயல்குட்டி கேரட்டொன்றை மெல்வதைப் போல என்னை மென்றுகொண்டேயிருக்கிறது நாசமாய்ப் போக அது.
வாழ்வு பன்மைக் கலாச்சாரமாக்கத்தின் இழு விசையில் பயணிக்கும் தன்னிச்சை நிகழ்வாகிவிட்டது. தன்னைச் சுற்றிய இருத்தலில் நேரிடும் மாற்றங்களை விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஒருவன் உடன்படும்போது எழுகிற முரண்பாடுகளே ஒருவனின் அகம் சமநிலை இழக்கும் புள்ளி என வரையறுக்கலாம்.
எந்தவித மாற்றுச்செயலுக்கும் உடன்படாமல் ஒழுங்கு முறைக்குள் பயணிக்கும் ஒருவனின்யதார்த்தம் சலிக்கும்போதெல்லாம் அவனுக்குத் தனது அன்றாடங்களின்மீது உண்டாகும் விலகல்தன்மையே அக்குறிப்பிட்ட அகமானது மாற்றுக்கோணத்தில் உலகைக் காணத் தூண்டுகிறது.
கவிஞர். செல்வ சங்கரனின் ‘கண்ணாடிச் சத்தம்’ தொகுப்பையும் அங்கிருந்தே புரிந்துகொள்ள முடியுமெனத் தோன்றுகிறது. இந்தத் தொகுதியில் ‘தன்னு மொட்டை’ என்றொரு கவிதையில் ஒரு ஒன்றரை வயது குழந்தையைமடியில் வைத்துக் கொள்ளும் காட்சியொன்று அடுத்தடுத்து அந்தப் பேருந்திலிருக்கும் அனைத்து மனிதர்களைக் கொண்டும் நிகழ்த்தப்படுகிறது.
அனைவரும் ஒருவர் மடியில் மற்றொருவர் அமர்த்தப்படும் தொடர் காட்சிகள் அந்தக் கவிதைக்குள் ஒருவித ஐயத்தையும், வினோதத்தையும் உண்டாக்குகிறது. அதைப் போலவே ‘கடைசி வாழ்வு’ கவிதையில் “இறப்பை யாரிடமும் சொல்லாவிட்டால் அவர் இறக்கவில்லை என்றுதானே அர்த்தம்” என்று இறப்புச் செய்தி சொல்ல வந்த குழந்தையின் அறிவிப்புத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுகிறது.
இவ்வாறு கவிதையின் அடிநாதமாக வினோத சித்தரிப்புகளைக் கைக்கொள்கிற செல்வ சங்கரனிடம் தொழிற்படும் அபத்தம் என்பது சாதாரணங்களின் மிகைப்படுத்தலாக அதிகம் வெளிப்படுவதைக் காணலாம்.
ஆனால் உண்மையில் அபத்தம் பெரும்பாலும் கற்பனையின் (fantasy) யதார்த்த வடிவமாகவே இருந்துள்ளதைக் காண்கிறோம். காப்காவின் பட்டினிக் கலைஞன் கதையைப்போல, ஒருவனுக்குப் பசியே எடுக்காது என்று கூறுவது கற்பனை என்றால் அவனைக் கூண்டுக்குள் அடைத்து வைத்துக் காட்சிப்படுத்திக் காசு பார்ப்பது யதார்த்தத்தில் நிகழக்கூடிய சாத்தியங்களுக்கு உடன்பட்டது.
அபத்தம் என்னும் மையம் யதார்த்தத்தின் ஆரங்களால் சூழப்பட்டிருக்கும்போது அது (fantasy) என்ற உணர்வுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கப்படுகிறது. நான்கு கைகள் அல்லது இரண்டு தலைகொண்ட பிறவி என்பது ஒருகாலத்தில் கற்பனை உயிரி என்றால், இன்றோ அதுவொரு மரபணு பிழை என்றாகிறது.
கற்பனையின் வீச்சு மட்டுப்படுத்தப்படும்போது உண்டாகும் அபத்தம் என்பது கனவுலகை எதிர் கொள்ளப் பயன்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டு வடிவம். ஆனால் செல்வசங்கரனின் கவிதைகளோ இயல்புநிலைகளை, சாதாரணங்களை மற்றும் எளியவாழ்வியல் காட்சிகளை அபத்தமாகப் பாவிக்கிறது.
இவ்வாறு ஒரு எடையற்ற படிமம் வினோதமாக்கப்படும்போது அதற்கான நோக்கு (purpose) தீவிரத்துவத்தில் வெளிப்படாமல் அல்லது குறைந்த பட்சம் இருத்தலியல் குறித்த பெருங்கேள்விக்கான யோசனைகளுக்கும் இட்டுச்செல்லாதபோது கவிதைகளானது ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு உணர்வுக்கருகில் சென்று நிற்கிறது.
மேலும் இக்கவிதைகளின் வெளிப்பாடு ஒரு சாமான்யனின் கண்ணோட்டத்தில் முன்வைக்கப் படுகிறது என்பதையும் காணலாம். அதாவது தொல்காப்பியம் வகைப்படுத்துகிற உலக வழக்கு (பொதுவழக்கு) மற்றும் செய்யுள் வழக்கு என்ற சொல்லல் முறை பகுப்பில் பார்த்தோமேயானால் செல்வசங்கரன்பொதுவழக்கில் தன் கவிதை மொழியைக் கையாள்கிறார்.
கவிதைக்கே உண்டான மேட்டிமைகளைத் துறந்து ஒருவிதமான வெகுளித்தனத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதனாக வெளிப்படும் அவர்அந்தச் சாமான்யவேடத்தில் தான் காணும் சிக்கலான அனுபவங்களையும், நம்பிக்கைகளையும், தனதுபிரச்சினைகள் எதற்கும் தீர்வுகள் இல்லையென்று நம்பிக்கொள்ளும் நிலையோடு உலகை எதிர்கொள்கிறார்.
ஆகவேதான் இதில் வருகிற கவிஞரின்குரலில் உவகையான தொனி எதுவும் வெளிப்படுவதில்லை. அவரின் ‘பழைய உலகம்’ கவிதையில் அவரே கூறுவதுபோல “எல்லாம் பழையதாகிவிட்டது” என்றும், எல்லாவற்றையும் கண்டு சலித்தது போலவும் அதை ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.
அந்தப் பழையதைப் புத்துயிர்ப்பாக்கவோ அல்லது தன் கவிதைகளின் வழியே தீர்வுகாணவோகூட அவர் எந்தக் கணத்திலும் முயற்சிக்கவில்லை. தோராயமாக இந்தத் தொகுப்பிலுள்ள ஒட்டுமொத்த கவிதைகளிலும் ஒருவித சலிப்பு, விரக்தி மற்றும் அதிருப்தி போன்ற எதிர்மனோவியலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
தான் செல்லும் இடங்களிலெல்லாம் சந்திக்க நேரிடும் மனிதர்களின் மீதான விலகலும், அவர்களைத் தம் கவிதையின் வழியே எள்ளல் செய்யும் குரலே தீவிரமாக ஒலிக்கிறது.
இதை அன்றாடங்களினால் தொடர் தொந்தரவுக்கு உள்ளான ஒருவன் உண்டாக்கும் முரண் அழகியல் என்றும் புரிந்துகொள்ளலாம். எந்தவித மேற்பூச்சுகளும் இல்லாமல் வெளிப்படையான சொற்கள், வசவுகள் மற்றும் அப்பட்டத்தன்மைகளால் இதில் வருகிற வரிகளில் கவிதைசொல்லியின் ஆதிக்கம் வெளிப்படையாகக் காணமுடிகிறது.
இன்னமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் சில இடங்களைத் தவிர்த்துச் சின்னச் சின்ன உவமைகளோ, இடையீடுகளோ (தற்குறிப்பேற்றம்), உருவகமோ, அல்லது படிமங் களோ கூடக் காணக் கிடைப்பதில்லை.
ஒருவேளை அழகியலின்மீது கவிஞருக்கு இருக்கும் நம்பிக்கையின்மைதான் மனிதர்களின்மீதான எள்ளலாக மாறுகிறதோவெனவும் தோன்றாமலில்லை.
இந்த நிலையாமையான வாழ்வை நினைத்தும், சுற்றி நடக்கின்ற கேலிக்கூத்துகளை எண்ணி தலையில் அடித்துக்கொள்ளும் ஒருவனின் உடல்மொழியே இவரது கவிதைகள். அதேசமயம் சாராம்சத்தின் சாயலை ஒட்டி எழுதப்பட்ட ‘சொர்க்கபுரி’ கவிதையில் வருகிற உண்மை, ‘சாபக்கேடு’ கவிதையில் வருகிற இருள்/வெளிச்சம் பற்றிய அனுமானங்கள் இதர கவிதைகளைக் காட்டிலும் கூடுதல் அர்த்தங்களைக் கொண்டுள்ளதாக எழுதப்பட்டிருக்கின்றன.
ஒரு சின்னயோசனை தனக்குள் உருவாகி அதற்கான விளக்கங்களைத் தருவித்து அதன் உண்மை நிலையினைப் பாதியிலேயே உருமாற்றத்திற்குள்ளாக்கி வளர்த்தெடுப்பதன் மூலம் தன் படைப்புருவாக்கத்தை நிகழ்த்திக்காட்டுகிறார் கவிஞர்.
இவ்வாறு கணங்கள் ஒவ்வொன்றையும் தூரத்தில் வைத்து அதன் நடவடிக்கைகளை அறிவார்ந்த, தீவிர மனநிலைக்கு மாற்றான தரப்பில் நின்று கண்காணிக்கும் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு எனக் கண்ணாடிச் சத்தத்தை அணுகலாம்.
அதே நேரத்தில் வாழ்வையும், சுற்றியுள்ள மனிதர்களையும் தொடர்ச்சியாக ஒட்டுதலின்றியும், பகடித்தனமாகச் சந்திக்கும் போக்கு ஒருகட்டத்தில் தொந்தரவிற்குள்ளான (Irritations) மனோபாவத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும்.
பகடியின் அர்த்தமே தனக்கு ஒவ்வாத ஒன்றை எதிர்ப்பதற்கும், அதைநோக்கி கேள்வியெழுப்புதற்குக் கிடைத்த மாற்றுவடிவமே என்பதைப் புரிந்துகொள்ளவது அவசியமாகிறது.
ஏனெனில் கவிஞர் இந்தத் தொகுப்பில் பெரும்பாலும் சுய எள்ளலையோ அல்லது பெரும் சித்தாங்களை நோக்கி பகடி செய்வதில்லை. மாறாகத் தனது சூழலையும், அதில் வந்துசெல்லும் மானுடத்தின் இருப்பையுமே நகைப்பாக வினா எழுப்புகிறார் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
கவிஞர் செல்வசங்கரனின் கவிதைகள் பெரும்பாலானவை ஒற்றைச் சிந்தனையிலிருந்து உருக்கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பது இத்தொகுப்பிலும் நிரூபணமாகிறது.
துவங்குகிற புள்ளியிலிருந்து பாதை விலகாமல் கூறிச்செல்லும் இவரின் மொழியின் கட்டமைப்பு பாடுபொருளைவிட்டு பெரும்பாலும் வாசிப்பரின் கவனத்தைச் சிதறடிக்காமல்வைத்திருக்கும் போக்கைக் கடைபிடிக்கின்றன.
ஆகவேதான் இக்கவிதைகள் தனது முடிவினைக் காட்டிலும் துவக்கத்தில் சுவாரஸ்யங்கள் கொண்டதாக உள்ளன.
இன்னமும் கூறப்போனால் கவிதையின் மொத்த சூழலும் முதலிரண்டு வரிகளிலேயே துலக்கமாகி விடுகிறது. அதன்பிறகு நிகழ்வதெல்லாம் விவரிப்புகளாலும், அதிலிருக்கும் மெனக்கெடல்களாலும் எடுத்துரைப்பிலிருக்கும் ஆற்றலுக்கேற்ப தனது வலுவினை உறுதி செய்துகொள்கின்றன.
கவிதையில் இடம்பெறும் கூடுதலான சுட்டு எழுத்துகளும் மொழியைத் தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதைக் காணலாம். ஏனெனில் இவரின் கவிதைகளுக்குள் எதுவும் பொதுமையாக நடப்பதில்லை அல்லது அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
எல்லாமே கவிதையைச் சொல்பவரால் அந்தவானம், அந்தச் சத்தம் எனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வெளியில்தான் தன்னை அனுமதித்துக் கொள்கிறார்.
சுட்டிக்காட்டப்படுதல் என்று இங்குக்கூறுவது மேற்கூறியதுபோல முதலிரண்டு வரிகளில் கவிஞர் உருவாக்கிவிடுகிற காரண-வெளியைத்தான்.
அந்த வெளிதான் அக்கவிதையின் மையமாகவும் விளங்குகிறது. உதாரணமாக ‘பெரிய தவளை’ கவிதையில் ஆரம்பத்திலேயே தவளையை அறிமுகப்படுத்திவிடும்போது அதன்பிறகு நிகழும் அனைத்தும் அந்தத் தவளைப்பற்றியதாக மாறுகிறது.
இடையில் வேறெந்த சிந்தனைக் குறுக்கீடுகளோ, உவமைகளோ எதன்மீதும் அணுக்கமின்றிச் சொல்லுதலின் வாயிலாக மட்டும், உருவாக்கிய கணத்தின் அதிர்வுகளை முடிந்தவரைக்கும் நீட்டிப்பதன் வாயிலாக மட்டுமே கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.
இது ஒருவகையில் கவிதைக் கூறலில் கவிஞருக்கு இருக்கும் தீர்மானத்தையும் வெளிப்படுத்துகிறது. எதைச் சொல்லவேண்டும் என்பதற்கு ஈடாக எப்படிச் சொல்லவேண்டும் என்பதிலும் கூடுதல் பிரக்ஞையைக் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
உதிக்கும் யோசனைகளை மொழியாக்க முனையும் செயலில் தெரிகிற வேகமும் சொல்ல வந்ததைக் கச்சிதமாகச் சொல்லவிடாமல், சொல்லவந்ததிலிருக்கும் எல்லாவற்றையும் சொல்லி விடவேண்டும் என்கிற முனைப்பு முன்நிற்கிறது. அதாவது கற்பனை இடையீடுகளுக்குப் பதிலாக வியாக்கியான இடையீடுகள் நடக்கின்றன.
ஏனெனில் கவிஞரின் இந்தக் கவிதைகள் பெரும்பாலும் செயலாக (Action) இருக்கிறது. அதாவது காட்சியாக மாறாத செயல். ஒரு சட்டகத்திற்குள் வருவதற்கு முன்னரே நின்றுவிடும் செயல்.
ஆகச் செயல் காட்சியாக மாறாதவரை, வாக்கியங்கள் நியாபகமாக மாறுவதிலும் சிக்கல்கள் நேரிடலாம். ‘கடவுள் ரம்மி ஆடினார்’ கவிதையில் “கண்ணாடி போட்டவர்களைக் கடவுள் கண்ணைக் குத்த மாட்டார்” என்ற வரி உண்டாக்கும் சுவாரஸ்யத்தைப் படிக்கும் வாசகன் அதைத் தனது ஊகத்திற்குள் எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் “கண்ணாடி அணிந்தவர் - கடவுளின் தன்மை - விளையாட்டு” போன்றவற்றின் வழியே கவிதையின் உறைகணத்தைத் தொடர்ந்து நீட்டித்துச் சொல்கிறார்.
கவித்துவமிக்க வரிகளை உண்டாக்கி, அவற்றை முடிந்தவரை சொல்லுதலின் வழியே உறையச்செய்து, அவற்றின் நகர்வினை மெதுவாக்கிவிடுகிறார். ஆகையால் ஒவ்வொரு கவிதையும் தமக்குரிய எல்லைகளைத் தாமாகவே தீர்மானித்துக்கொள்கின்றன.
சொல்லுதல் சமயத்தில் விவரிப்புகளாக மாறிவிடுவதால் நேரிடும் இடர்பாடுகளாக இதனைப் பார்க்கத் தோன்றுகிறது. எனவேதான் முன்கூறியபடி கவிஞரின் முதல்வரியில் உருவாகும் வியப்பு என்பது வழக்கமாக ஒரு கவிதையின் இறுதியில் முடியக்கூடிய ஒன்று.
அதை முதல் வரியிலேயே உடைத்துச் சொல்லிவிட்ட பின்பு, கவிதை மொத்தமும் ஒரே பாடுபொருளில் நிலைத் திருப்பதாலும், முந்தைய வாக்கியங்களின் அதிர்வுக்குஈடான உணர்வினை உருவாக்கத் தவறி விடுவதாலும் விஷய நீட்டிப்பாகவும் மாறிவிடுகிறது. இவ்வாறுவிவரிப்புகள் இடையீடுகளாக முன்நிற்காதபோது, பூடகமான குறிப்பிடுதலும் இல்லாதபோது கிட்டத்தட்ட சில கவிதைகள் குறுங்கதையின் வடிவ நேர்த்திக்குத் தன்னை மடைமாற்றிக் கொள்வதையும் காணலாம்.
கவிதையின் வெளியை தீர்மானிப்பது நிச்சயம் அதை எழுதிய படைப்பாளியே. அந்த வகையில் கவிஞர் செல்வசங்கரனின் கவிதைகளின் எல்லைகள் உடைபடவேண்டியதும், தமது மையத்தைப் பெருக்கி பன்மையாக்குவதும் அல்லது அவற்றை மறைபொருளாக்குவதும், கருப்பொருளின் மும்முரத்தைக் கலைத்து விசாலமாக்குவது போன்ற கூறுகள் அவரின் படைப்புலகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகவும் அமையக்கூடும்.
2007-ல் பி.என்.சுந்தரம் அவர்கள் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட நேர்காணலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.
நன்றி : விஜயராஜ், சுபாகுணராஜன், தளவாய் ராஜன்
“தொழில்நுட்பம் அல்லது சினிமாவின் தொழிற்சாலைச் சார்ந்த கலை யுக்திகள் மேலைநாடுகளிலிருந்து வந்திருக்கலாம். ஆயினும் அதன் அழகியல் பண்பாடு சார்ந்து, மண்ணும் மாந்தர்களும் சார்ந்து அந்தந்த வெளிகளுக்கு ஏற்ப நுண்ணிய வடிவத்தை அடைகிறது.
ஒரு மேதையின் கையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சினிமாவை திரையில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அற்புத நிகழ்வாகப் பிரதியெடுத்து நகலாக்க முடியாத நிகழ்த்துக்கலையாக விரிகிறது.”
சொர்ணவேல்: ஒளிப்பதிவாளர் கர்ணணைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் ஸ்பேகெட்டி வெஸ்டர்ன்ஸ் என்று சொல்லப்படக்கூடிய அமெரிக்க ஸ்டூடியோக்களின் துணையுடன் இத்தாலியின் தெற்குப்பகுதிகளில் எடுக்கப்பட்ட செர்ஜியோ லியோனியின் வெஸ்டெர்ன்ஸ் ஞாபகத்தில் வருகின்றது. இசையைக் கூட அதிலிருந்தே எடுத்திருக்கிறார். என்னியோ மாரி கோனியின் இசையின் தாக்கம் தெளிவாக உள்ளது.
சுந்தரம்: சினிமாவே தொழில்நுட்பம் சார்ந்த கலைதானே. அது மேற்கிலிருந்து வந்திருக்கலாம். ஆயினும் ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் நலிவடைந்த 1950களின் இறுதியாண்டுகளில் வெஸ்டர்ன்ஸிற்கு உயிர் கொடுத்தது குறைந்த செலவில் இத்தாலியில் ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் உறுதுணையுடன் இத்தாலிய இயக்குனர்கள் எடுத்த ஸ்பேகட்டி வெஸ்டர்ன்ஸ்தான்.
லியோனியின் சினிமொழி அபூர்வமானது. அவரது 1960களில் எடுக்கப்பட்ட படங்களான பார் எப் பிஸ்ட் புள் ஆப் டாலர்ஸ் (1964), பார் எ ப்யூ டாலர்ஸ் மோர் (1965), மற்றும் த குட், த பேட், அண்ட் த அக்லி (1966) சினிமா சரித்திரத்தில் மைல்கற்கள்.
முக்கியமாக மிக அகலமான நிலக்காட்சிகளிலிருந்து மிக அருகிலிருந்து சட்டகப்படுத்தப்பட்டிருக்கும் அண்மைக்காட்சிக்குத் தாவுவது சினிமொழியில் பேசாமொழிக் காலத்தில் க்ரிப்பித்-ஐஸன்ஸ்டெயினின் காலம் தொட்டு உள்ளது தான் என்றாலும் லியோனி அதன் எல்லையை ஒரு படி விரிவுபடுத்திப் புதிய ரீதியில் வெளியை தொகுப்பின் மூலம் கட்டமைத்து சினிமாவின் ப்ளாஸ்டிக் தன்மையிலுள்ள சாத்தியங்களை முன்னிறுத்தினார்.
அத்தகைய ப்ளாஸ்டிக் தன்மையைச் சிசிலியிலுள்ள தொன்று தொட்ட வறண்ட நிலத்தின் மேல் அவர் ஊடாட விடும்பொழுது சினிமா அமெரிக்க வெஸ்டர்ன்ஸ் சரித்திரத்திலிருந்து வேறு பரிமாணம் கொள்கிறது.
அத்தகைய பரிமாணம் வெஸ்டர்ன்ஸின் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அதன் போக்கையே மாற்றுகிறது. தொழில்நுட்பம் அல்லது சினிமாவின் தொழிற்சாலைச் சார்ந்த கலை யுக்திகள் மேலைநாடுகளிலிருந்து வந்திருக்கலாம்.
ஆயினும் அதன் அழகியல் பண்பாடு சார்ந்து, மண்ணும் மாந்தர்களும் சார்ந்து அந்தந்த வெளிகளுக்கு ஏற்ப நுண்ணிய வடிவத்தை அடைகிறது. ஒரு மேதையின் கையில் உருவாக்கப்பட்ட அத்தகைய சினிமாவை திரையில் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒரு அற்புத நிகழ்வாகப் பிரதியெடுத்து நகலாக்க முடியாத நிகழ்த்துக்கலையாக விரிகிறது.
பார்க்கும் பொழுது கண்டுபாவித்து இதைப்போலவே ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஆவல் சினிமா எடுப்பவனுக்கும் பார்ப்பவனுக்கும் கூட ஏற்படுவது இயல்பானதே. நமது சகல உணர்வுகளையும் தூண்டக்கூடிய சினிமா நமது ஆழ் மனதை தீண்டும்பொழுது அத்தகைய உணர்வுகளின் எழுச்சி இயல்பானதே.
ஆயினும் அவ்வுணர்வுகளை வடிவமைத்துச் சினி மொழியில் கவிதையாகச் செதுக்கும் அழகியலும் லாவகமும் எல்லோருக்கும் கைகூடுவதில்லை.
ஜப்பானிய கலைஞன் அகிரா குரோசாவை எடுத்துக்கொண்டால் ஜான் போர்டின் வெஸ்டர்ன்ஸில் அவர் மனம் லயித்ததைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பின்னர் அவரது யோஜிம்போ (1961) பல மேலை நாட்டு இயக்குநர்களுக்கு வெஸ்டர்ன்ஸின் கதையாடலின் சூக்குமத்தை அதன் சினிமொழி மூலம் விளக்கியது.
அவரது ஹிடன் போர்ட்ரஸ் (1958) ஜியார்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ்க்குக் காரணமாகயிருந்தது என்று லூகாஸும் அவரது எல்லா நேர்காணல்களிலும் தவறாமல் பதிவு செய்திருக்கிறார்.
இவ்வாறு காற்றைப்போலப் பயணிக்கும் சினிமா அதன் மணத்தை அங்கங்கு எடுத்துச் சென்று நுண்ணிய மனங்களைப் பாதிப்பது இயல்பானதே.
ஆயினும் காற்றைக் காசாக்க விழையும்பொழுது நாம் மணத்தை மாசாக்கி சக்கையாக ஒன்றை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பது தொழிற்கூடம் சார்ந்த கலை என்ற சினிமாவின் தொழில் சார்ந்த, வியாபாரம் சார்ந்த தன்மையின் நிரந்தரமான யதார்த்தம்.
ஆயினும் தொழிலும் கலையும் முரணியங்கும் வெளிகளிலுள்ள கலை வெளிப்பாடுடன் கூடிய பொருளீட்டக் கூடிய சாத்தியங்களே சினிமாவை நோக்கி என்றும் பல கலைஞர்களையும், வியாபாரிகளையும், போலிகளையும், மற்றும் எல்லையில்லாமல் கலக்கும் இம்மூன்று பரிமாணங்களுடன் போராடும் மானுடர்களையும் தன்பால் இழுக்கிறது.
வியாபாரியாகப் பணம் பண்ண வரலாம், இல்லை இப்பணம் எனக்கு ஒரு நல்ல திரைக்கதையை அமைக்கக் கால அவகாசம் கொடுக்கிறது என்று கூறலாம் ஆயினும் அடிப்படையில் அதன் பொருளாதார அடிப்படையே அதன் ஈர்க்கும் சக்தியாக உள்ளது.
ஆயினும் அத்தகைய பொருளா தாரஅடிப்படையே ஒரு பிரமை, ஒரு மாயை என்பது எக்காலமும் — நான் சினிமா தொழிலுக்கு வந்த 1950களிலிருந்து — இது லாபமற்ற நசிந்துகொண்டிருக்கும் தொழில் — அது தன் இறுதி கட்டத்தில் இருக்கிறது என்ற சதா ஒலிக்கும் சொல்லாடல்கள் உரைக்கும்.
ஆயினும் இன்றளவும் அது செத்து பிழைத்து தழைத்துக்கொண்டுதான் உள்ளது. ஒரு குக்கிராமத்தின் சாலையோர மரத்தில் அமாவாசை இருட்டில் அமர்ந்திருக்கும் பேயையொத்த சினிமா திகிலுடன் பல கதைகளைத் தன்னைப் பற்றிப் பரப்பிக்கொண்டு பயணிகளின் மனதை ஆக்கிரமித்துத் தனது புதிர்நிலையில் மனம் லயித்துப் புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.
அங்கே பார்! என்ன நடக்கிறது என்கிறோம் நாம்!... ஐரோப்பாவில் பார் என்ன நடக்கிறது என்று மாய்ந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள்!... இங்குப் புதிய அலைகள் ஓய்ந்துவிட்டது... ஈரானையும் கொரியாவையும் பாருங்கள் என்கிறார்கள் பிரெஞ்சுக் காரர்கள்! கிரோஸ்தாமியையும் மக்பல்பாபையும் பாருங்கள் என்கிறார்கள் அவர்கள். கோதார் ஒரு படி மேலே சென்று சினிமா கிரிபித்துடன் ஆரம்பித்துக் கிரோஸ்தாமியுடன் முடிந்துவிட்டது என்கிறார்.
ஆயினும் டிஜிட்டல் வடிவிலுள்ள புதிய ஜின்னுடன் புதிய ஜீபூம்பாவாகப் பரிணமித்துப் புதிய கதையாடல்களுக்கான சாத்தியங்களுடன் கனவு எனும் மாயக்காற்றில் ஏறி என்றுமில்லாத அளவு இன்று சுறுசுறுப்பாகச் சினிமா பயணித்துக்கொண்டு தானிருக்கிறது.
சொர்ணவேல்: கர்ணன் அவர்களைப்போல வித்தியாசமான ஸ்டூடியோ ஒளிப்பதிவாளர்கள் என்று யாரைச் சொல்லலாம்?
சுந்தரம்: தம்பு, ஜி.கே. ராமு, கன்னட திரையுலகில் நிகரில்லாது விளங்கிய எஸ்.வி.ஸ்ரீகாந்த். நாங்கள் ஒரே அறையில் தங்கியிருந்து ‘பகல் பேச்சும் இரவில் கனவும்’ என்ற பாரதியின் பாங்கில் சினிமாவைப் பற்றிய கனவில் சஞ்சரித்த காலங்கள் ஞாபகம் வருகிறது.
ஸ்ரீகாந்த் மாமேதை புட்டண்ணா கனகலுடன் பணிபுரிந்தது அவர்கள் இருவர்களது பாக்கியம். கெஜ்ஜே பூஜே (1969) இன்றளவும் பேசப்படும் படம். ஸ்ரீகாந்தின் என்றும் அழியாத ஒளி ஓவியம். ராஜ்குமாரின் படங்கள் மற்றும் பல முக்கிய நடிகர்களை நட்சத்திரங்களாகப் பரிணமிக்க வைத்ததில் அவரது கைவண்ணத்தைக் காணலாம்.
மஸ்தானின் கைவண்ணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறப்பாக ஜொலித்ததைப் போன்று. அண்ணாவின் வேலைக்காரி (1949) தொட்டு மஸ்தானின் தனித்துவத்தைப் பார்க்கலாம். ஜி.கே. ராமு நாடோடி மன்னனில் (1958) தனது ஸ்டூடியோ கலாசாலை பயிற்சியைப் பெருமையுடன் வெளிப்படுத்தியிருப்பார்.
இன்றைய மாணவர்களைச் சந்திக்கும் பொழுது பழைய ஒளிப்பதிவாளர்களின் பெயர் கூட அவர்களுக்குத் தெரியாமல் இருப்பது விசனத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு வகையில் தேய்ந்து போன பிரிண்டுகளிலிருந்து எடுக்கப்பட்ட டிவிடிக்களில் அவர்களுக்குப் பழைய ஒளிப்பதிவாளர்களின் கலையம்சத்தில் எதுவும் இல்லாதது போன்று தோன்றலாம்.
நான் சமீபத்தில் கலந்து கொண்ட கல்லூரி விரிவுடையாடலில் 1980 களின் ஒளிப்பதிவில் கூட அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதைக் கேட்டுத் திகிலுற்றேன். இன்றைய டிஜிட்டல் சினிமாவின் சாத்தியங்கள் நாங்கள் அன்று
கண்ட கனவை நிறைவேற்றியிருக்கிறது என்பது உண்மை. ஆயினும் 1980களில் வந்த படங்களின் அன்றைய லேப்களில் ப்ராஸஸ் ஆகிவந்த பிரிண்டுகளைப்பற்றிப் பேசும்போது அழுக்குக் களையப் படாமல் லாண்ட்ரியிலிருந்து வந்த துணிகளைப் போல இருப்பதாக அவர்கள் பேசியது அவர்களது அறியாமையையே உணர்த்தியது.
இன்று ஒளிப்பதிவைவிட டிஜிட்டல் இண்டர்மீடியெட் என்பது படமெடுத்த பிறகு படத்தை வெளியிடும் தருணத்திற்கு ஊடாகப் பிரதியெடுப்பதற்கு முந்திய இடைநிலை கட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்டு ஒலி-ஒளியை சீரமைத்து அழகுபடுத்துவதைக் குறிக்கிறது.
அழுக்கும் மாசும் அகற்றி கடலையும் ஆகாயத்தையும் மாசற கட்டமைத்துச் சினிமாவில் போலல்லாது டிஜிட்டல் ஓவியத்திலுள்ளதைப் போல வடிவமைக்கிறார்கள். நமது வாழ்வில் நாம் காணும் சென்னையிலும் கிராமங்களிலும் உள்ள வீதிகளையும் வீடுகளையும் அதீத துப்புரவு செய்து செயற்கையாக அழகுபடுத்தி யதார்த்தத்திலிருந்து அவற்றை விலக்கிவிடுகிறார்கள்.
இத்தகைய அழகியலில் பல சமயங்களில் செயற்கையான ஒரு இருண்மையைத் தூவினாலும் ஒளிப்பதிவாளரின் தனித்திறன் என்று ஒன்று மனதில் நிற்க மறுக்கிறது. மொழியின் நுண்ணியச் சலனங்கள் மறைந்து எல்லாப் படங்களும் சலவைச் செய்யப்பட்ட ஒரு மொழியில் — எங்களது காலத்தைப் போலல்லாமல் — தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை வங்கியிலிருந்து தனித்துவமற்ற கணினியைக்கொண்டு கவிதை எழுதுவதாகப் படுகிறது.
டிஜிட்டல் சினிமாவிற்கான அழகியல் வருங்காலத்தில் வரலாம். தற்சமயம் அதன் சாத்தியங்கள் என்ற மாயையிலேயே பெரும்பாலானவர்கள் உழன்று கொண்டிருப்பதாகப்படுகிறது.
சொர்ணவேல்: ஆயினும் பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ரவி.கே. சந்திரன் ஆகியோரின் பெருவழக்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவு தனித்துவம் நிறைந்த ஒன்றாக இருப்பதாகவே எண்ணுகிறேன்.
சுந்தரம்: ஆமாம். நான் சினிமாவில் வேர் விட்டுவந்த அத்தகைய உயர்ந்த ஒளிப்பதிவாளர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஸ்ரீராமும் ரவி.கே. சந்திரனும் சட்டகப்படுத்துதலிலேயே அவர்களது பயிற்சியும் மெனெக்கெடலும் தெரியும்.
கே.ராமச்சந்திரபாபுவைப்பற்றியும் இங்குக் கூறவேண்டும். ஜான் அபிரஹாமின் படங்களிலிருந்து கே.ஜி.ஜியார்ஜின் ஸ்வப்னா தனம் (1976) மற்றும் ஹரிஹரனின் வடக்கன் வீரகதா (1989) வரை அவரது வீச்சு முக்கியமானது.
அத்தகைய தமையனைக் கொண்ட ரவி.கே.சந்திரனும் அக்கறையுடன் ஒளிப்பதிவு செய்வது நிறைவான விஷயம்.
சந்தோஷ் சிவன் யதார்த்தத்தையும் பரிட்சார்த்த அழகியலையும் ஒருங்கே இணைத்துச் செல்பவர். வண்ணங்களில் மூலம் ஆச்சரியத்தை அளிப்பவர். ஆயினும் ஸ்டூடியோவிலிருந்து வந்த எனக்கு அருகாமையிலிருப்பவராக நான் அணுக்கமாக உணர்வது ஸ்ரீராமைத்தான் — ஸ்ரீராமிலிருந்து இன்றைய இளைஞர்கள் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு ஆரம்பித்ததாக எண்ணுவது எனக்கு உடன்பாடு இல்லாதது என்ற போதிலும். ஸ்ரீராமின் சட்டகங்கள் க்ளாசிகல் ஹாலிவுட் சினிமாவை நினைவுறுத்துவது தற்செயலானதல்ல.
அவரது நேர்காணல்களில் சன் தியேட்டரிலும் மற்ற சென்னைத் தியேட்டர்களிலும் அவர் பார்த்த படங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஸ்பீல்பர்கின் க்ளோஸ் ‘என்கௌண்டர்ஸ் ஆப் தி தர்ட் கைண்ட்’ (1977) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
நான் அதை இங்குப் பிலிம் பெஸ்டிவலில் பார்க்கையில் என்னுடன் இருந்த இளம் ஒளிப்பதிவாளர்கள் அப்படத்தை எண்ணியெண்ணி வியந்ததைக் கண்டிருக்கிறேன்.
அப்பொழுது வந்த அமெரிக்கன் சினிமாட்டோகிராபர் இதழில் அதன் நிகரில்லா ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஜிக்மாண்டின் நேர்காணலிலிருந்து, எச்எம்ஐ என்கிற (ஹைட்ராஜிரம் மிடீயம் - ஆர்க் அயோடைட்) சூரிய வெளிச்சத்துக்கு நிகரான வெளிப்புற வெளிச்சத்தைத் தரக்கூடிய லைட்டுகளைப்பற்றித் தெரிந்துகொண்டேன்.
அவை அல்ட்ரா வயலட் வெளிச்சத்தை நீலவண்ணத்தில் அளிக்கும் தன்மையுடைத்தது. அத்தகைய லைட்டுகளின் ஒரு கனவில் தோய்ந்த நீலத்தன்மையில் நாங்கள் மயங்கினோம்.
மற்றும் எவ்வளவு நேரம் எரிந்தாலும் அந்த லைட்டுகள் சூடாகாதது ஒரு பெருங்கனவின் நிறைவே!
எங்கள் காலகட்டத்தில் வெளிப்புறப் படபிடிப்பில் அடர்த்தியான மேகங்கள் மேவும் மந்தமான நேரங்களில் வெளிச்சம் கொடுப்பது என்றால் டங்ஸ்டன் லைட் என்று சொல்லக்கூடிய உட்புற லைட்டுகளுக்கு நீல பில்டர் அல்லது ஜெல்கள் கொடுத்து லைட்டின் தன்மையை மாற்றிப் போராடவேண்டும்.
அத்தகைய காலகட்டத்தில் எச்எம்ஐ லைட்டுகள் 80களின் சினிமா அழகியலை மாற்றி யமைத்ததில் முக்கியப் பங்காற்றின. அதைக்கொண்டு வெளிப்புறங்களிலும் இரவு நேரக் காட்சிகளிலும் ஒளிப்பதிவாளர்கள் சினிமாவின் சாத்தியங்களை விரிவுபடுத்தி அசத்தினார்கள்.
சந்தேகமில்லாமல் அந்தக் காலக்கட்டத்து ஒளிப்பதிவு அழகியல் சாத்தியங்களைப் பரிசோதித்து சினிமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் பி. சி. ஸ்ரீராம் அவர்கள்.
அவர் இயக்குனர் மௌலியுடன் பணியாற்றிய கருப்பு-வெள்ளைப் படங்களிலும், மணிரத்தினத்தின் இயக்கத்தில், இளைய ராஜா அவர்களின் இசையில் உருப்பெற்ற படங்களான மௌன ராகம் (1986), நாயகன் (1989) தமிழ் மற்றும் இந்திய சினிமா சரித்திரத்தில் சாதனைகள். மௌன ராகம் சினிமாவிற்கான ஒரு யதார்த்த அழகியலைக் கொண்டிருந்தபோதிலும் அதிலும் நாயகனிலும் ஸ்ரீராமின் மிகையதார்த்த அழகியலைக் காணலாம்.
நாயகனில் வெண்கல, பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு டங்ஸ்டன் லைட் சார்ந்த ஒரு மஞ்சள் வண்ணத்துடன் எச்எம்ஐ லைட்டுகளின் நீல வர்ணத்தையும் கலந்து ஒரு நவீன ஓவியத்தைத் தனக்கேயுரிய பாணியில் வடித்திருப்பார்.
அவரது செவ்வியல் ஸ்டூடியோ சார்ந்த தாக்கம் அவர் கதாபாத்திரங்களின் தலைகளில் கொட்டும் நீல வெளிச்சத்தின் அழகியலில் காணலாம். அதற்குப் பின் வந்த அக்னி நட்சத்திரத்தில் (1988) அவரது ஒளியழகு அதீத நடைக்கொண்டு தாய் மொழியின் உக்கிரத்துடன் சத்தமாகப் பேசுவதை உணரலாம்.
நமது கலாச்சாரத்தின் மிகையதார்த்தம் அதன் க்ளைமேக்ஸில் தெரியும். அந்த ஒளி சார்ந்த மெலொடிராமாவே ஸ்ரீராமை ஒரு தனித்துவம் நிறைந்த தமிழ் கவிஞனாகவும் வெளிப்படுத்துகிறது.
பூனா இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வந்த உங்களது நண்பரான மாகலைஞன் மது அம்பாட்டிலிருந்து (1990) ஸ்ரீராம் இங்கு மாறுபடுகிறார்.
நானும் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ரகுவரன் மலையாளத்தில் நடித்த முதல் படமான காக்காவை (1982) இயக்கியிருக்கிறேன். அங்குக் கலை சினிமாவிற்கான ஒரு வெளி அப்பொழுது இருந்தது. கமர்ஷியல் படங்களும் சின்னப் பட்ஜட்டில் எடுத்து சில சோதனை முயற்சிகளில் இறங்க சாதகமாக இருந்த காலகட்டம் அது.
அங்குக் கலை சினிமாவில் மது அம்பாட் போன்றவர்கள் சினிமாவிற்கான ஒளிப்பதிவு அழகியலில் புதிய பரிமாணங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். புருஷார்த்தம் (1987), ஸ்வாதி திருநாள் (1987), வைஷாலி (1988), அமரம் (1991) போன்ற படங்களின் மூலம் ஒளிப்பதிவு அழகியலின் உச்சத்தைத் தொட்ட மது அம்பாட் உலகின் ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் என்பதில் எனக்கு ஐயமில்லை.
அவருடன் பணியாற்றிய நிகரில்லா ஓவியர் பி.கிருஷ்ணமூர்த்தியின் ஆர்ட் டைரக்ஷனும் இந்திய சினிமாவிற்கு ஒரு கொடை. ஓவியர் கிருஷ்ணமூர்த்தி 1970, 80களில் இந்திய புதுச் சினிமாவை வடிவமைத்த அதிமுக்கியமானவர்களில் ஒருவர். மௌனமாக இருப்பவர்.
நிறைகுடம் தளும்பாது என்பார்கள். அவர் அதற்கு உதாரணம்.
சொர்ணவேல்: ஆயினும் தற்கால மலையாள சினிமாவில் அன்றைய ஜான் ஆபிரஹாம், அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தனின் ஆழமான தடங்களைக் காணக் கிடைக்கவில்லையே?
சுந்தரம்: இந்திய புதுச் சினிமா இயக்கம் என்பது அந்த 1970/80 காலக்கட்டங்களில் உச்சத்தைத் தொட்டு மறைந்த ஒரு அலை. புதிய அலைகள் ஓயாமல் அடிப்பதுதானே கடல் உயிர்ப்புடன் இருப்பதற்கான சாட்சி.
இன்று அன்று இருந்த பிலிம் ஸொசைட்டிக்குச் சென்று படம் பார்த்து அளவளாவி கலை சினிமாவை ஆதரித்த நடுத்தர வர்க்கம் உலகமயமாதலின் அலையில் நுகர்வோராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கலைப்பாசாங்கு நிறைந்த படங்களில் மயங்கிக் கொண்டிருக்கையில் அதற்கேத்த படங்கள் தானே உருவாக்கம் பெறும்.
சினிமா என்பது சூனியத்திலோ வெற்றிடத்திலோ உருவாகக் கூடிய ஒன்றல்ல.
ஆயினும் என்னுடைய பார்வையில் இன்றைய மலையாள படங்கள் இன்றைய தமிழ் சினிமாவைப் போல நலமாகத் தழைத்துக்கொண்டுதானிருக்கின்றன. ராமு கரியத்தும், ஏ. வின்சென்டும், பரதனும், பத்மராஜனும் விட்டுச்சென்ற ஒத்தையடிப்பாதையில் லோஹித தாஸும், ஜயராஜும் மற்றவர்களும் பயணித்து அது மும்முரமாகவே உள்ளது.
கலை சினிமாவில் பொதுவாகச் சினிமாவின் வியாபார இயல்பு மறைக்கப்படுகிறது. அரசு ஸ்தாபனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை நம்பியோ அல்லது மரத்தொழில் அல்லது ரைஸ்மில்காரர் என்ற ஒரு சிறு தொழிலதிபர்/ வியாபாரியின் தலையில் பாரத்தைப்போட்டுப் பயணிப்பதோ மைய நீரோட்ட சினிமாவின் பேராசையைப் போன்றதே...
தனது மையத்தில் அது ஒரு இருண்மையைக் கொண்டுள்ளது. அதனாலேயே சினிமாவை வைப்பாட்டியாகக் கருதும் ஒரு போக்கு இங்கிருக்கிறது.
அந்த வகையில் மத்திமபாதை சினிமா எனக்கு ஏற்புடையதே. சினிமா எனும் பேயின் பெரும் தீனியை அது மறைக்க முயல்வதில்லை. வியாபார நோக்குடன் ஒரு கலையழகை நாடுவது நியாயமான ஒன்றாகவேபடுகிறது.
ஆயினும் 100 வருட சினிமா சரித்திரத்தில் பரதன், பத்மராஜன், மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே அங்கு ஆழமான தடத்தைப் பதித்திருப்பது அது எவ்வளவு நுண்ணியப் பயணம் என்பதை உணர்த்துகிறது.
என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கும் கேரளத்திற்கும் பயணித்துக்கொண்டிருந்தவன் என்றாலும் தமிழின் மைய நீரோட்ட சினிமாவிலேயே மனம் லயித்தேன். அது எனது ஸ்டூடியோ கால இளம் பருவத்தின் காரணமாக இருக்கலாம்.
சொர்ணவேல்: நாம் ஒளிப்பதிவாளர் கர்ணன் அவர்களைப் போல மற்ற ஒளிப்பதிவாளர்களைப் பற்றிப் பேச இந்த அமர்வை ...
சுந்தரம்: (உரத்த சிரிப்பொலியுடன்) மூன்றரை மணி நேர ஸ்டூடியோ சினிமாவைப் போல எனது கிளைக் கதைகள் நீண்டுகொண்டே போகிறது.
சொர்ணவேல்: ஆயினும் சுவாரசியம் நிறைந்த கதையாடலிது.
சுந்தரம்: ஆம். ஸ்டூடியோ வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் எதைச் சொல்வது எதை விடுவது என்கிற விஷயமே பொதுவாக அந்த ஞாபகங்களின் நுழைவாயிலிலேயே என் பின்னோக்கிய பயணத்தை நிறுத்திவிடுகின்றது.
பொதுவாக வருபவர்கள் நீ என்ன படங்களில் வேலை செய்தாய் என்பார்கள்.
நான் பதிலை முடிக்கும் முன்பே அடுத்தக் கேள்வியைக் கேட்பார்கள். எனக்கும் அது ஒரு சடங்காக ஆகிவிட்டது. உங்களுடன் இது தொந்தரவான ஆனால் இன்பகரமான நிகழ்வாக ஞாபகங்களின் இனிப்பை சுரக்க வைப்பதாகத் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது.
அந்தக் காலகட்ட ஒளிப்பதிவாளர்களில் எல்லாரும் அறிந்த கே. ராம்னாத்தைப் பற்றி இங்குக் கூறவேண்டும். திரைப்பள்ளிகள் வருவதற்கு முன்னரே திரைப்பள்ளி மாணவர்களை விட அதீத சினிமா தாகத்தில் இருந்தவர் அவர்.
அவருடன் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆயினும் அவரிடம் தொழில் புரிந்தவர்கள், இணை ஒளிப்பதிவாளர்களாகப் பணிபுரிந்தவர்களிடம் பணியாற்றியிருக்கிறேன்.
ரஷ்ய இயக்குனர்களான ஐஸன்ஸ்டெயினையும், டோவ் சென்கோவையும் அக்கறையுடன் அணுகிய ராம்னாத் அமெரிக்க கிங் விடோரையும் அதே அளவு நேசித்தார்.
ஏழை படும் பாடில் (1950) இந்தத் தாக்கங்களைக் காணலாம். இந்தியன் செசில் பி டீமெல்லி என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட பிரமாண்டத்திற்குப் பெயர் போன வாசனின் ஜெமினி ஸ்டூடியோவின் சந்திரலேகா போன்ற படங்களின் பிரமாண்டங்களின் மையத்திலிருந்த ஏ.கே. சேகர் என்ற நிகரில்லா கலை இயக்குனருடன் பணியாற்றிய ராம்னாத், அந்தக் காலத்து சுயாதீன சினிமாவான ஏழை படும் பாட்டை தயாரித்து இயக்கி பொருளிழந்து அவதிக்கு உள்ளானார்.
அவரது ஆன்மா இன்றளவும் தமிழ் சினிமாவையும் ஒளிப்பதிவாளர்களையும் வாழ்த்திக்கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். அவரது மற்றும் இசை அமைப்பாளர் எம்.பி.ஸ்ரீநிவாஸனின் தாக்கம் மற்றும் தொடர்பினால் ஒளிப்பதிவாளர்களுக்கு யூனியன் ஏற்பட ஆதிகாலம் தொட்டு நானும் போராடினேன்.
அன்று முதன்முதலில் சதர்ன் இண்டியா சினிமாட்டோகிராபர்ஸ் அசோசி யேஷனைப் பதிவுசெய்யும்போது அதை எனது வள்ளுவர் கோட்டம் வாட்டர்டாங்கின் அருகிலிருந்த வீட்டின் விலாசத்தில்தான் பதிவு செய்தோம்.
இன்றளவும் சீகா என்று சொல்லப்படக்கூடிய தெற்கிந்திய ஒளிப்பதிவாளர்களின் தொழிற்சங்க ரெஜிஸ்டர்ட் ஆபீஸ் அதுவாகவே உள்ளது. ஒளிப்பதிவாளராகத் தனது சுயதொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தப் பாடுபட்ட கே.ராம்னாத்தின், ஒளிப் பதிவாளர்களாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஆசியை நான் அவ்விலாசத்தைக் காணும் தோறும் உணர்வதுண்டு.
இரண்டு நுழைமாடங்களையும் ஒன்பது படுக்கை அறைகளையும் உடைய ஒரு மிகப்பெரிய வீட்டில் வசித்து வந்த, வாழ்க்கையில் வெறுப்புற்ற ஒரு விதவையான ரெபெக்கா, தெருவிலிருந்து கல் எறியப்பட்டதைப் போன்று திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தபோது, ஜூலையில் தொடங்கியது தொந்தரவு.
தனது படுக்கையறையில் இந்த முதல் கண்டுபிடித்தலை செய்யவும், தனது கணவன் இறந்தகாலம் தொட்டு அவளது வேலைக்காரியாகவும் நம்பிக்கைக்குரியவளாகவும் இருக்கும் அர்ஹேனீதாவிடம் இதனைக் குறித்துப் பேசியாக வேண்டும் என்றும் நினைத்தாள்.
பின்னர்ப் பொருட்களை நகர்த்தி வைத்துக்கொண்டிருக்கும்போது (ஒரு நீண்டகாலமாகவே ரெபெக்கா பொருட்களை இடம் மாற்றுவது அல்லது வேறு எதையும் செய்திருக்கவில்லை), படுக்கையறையில் உள்ள திரைச்சீலைகள் மட்டுமல்ல வீட்டில் இருந்த மற்ற அனைத்து திரைச்சீலைகளும் கூடக் கிழிக்கப் பட்டிருப்பதைக் கவனித்தாள்.
விதவையானவள் அறிவு செறிந்த உணர்வுடைய அதிகாரம் செலுத்துதலைக் கொண்டிருந்தாள், சுதந்திரப்போரில் இராயலிஸ்டுகளின் பக்கம் சேர்ந்து போரிட்டவரும் பிற்பாடு மூன்றாம் சார்லஸ் சான் இல்திஃ போன் சோவில் கட்டிய மாளிகையைச் சென்று காணும் ஒற்றை நோக்கத்துடன் ஸ்பெயினிற்கு எளிதில் செய்ய இயலாத பயணத்தை மேற்கொண்டவருமான ஒரு கிரியோலான, தந்தைவழிப் பூட்டனாரிடமிருந்து மரபுவழியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம் ஒருவேளை அது.
ஆகையால் மற்ற திரைச்சீலைகளின் நிலையை அவள் கண்டுபிடித்தபோது, அர்ஹேனீதாவிடம் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைத்தாள் என்றாலும், இன்னும் சரியாகச்சொல்வதென்றால், சின்னஞ்சிறு வெல்வெட் மலர்களுடன் இருந்த அவளது வைக்கோல் தொப்பியை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலைப் பற்றிய ஒரு தகவலைத் தெரிவிப்பதற்காக நகர மண்டபத்திற்குச் சென்றாள்.
ஆனால் அவள் அங்குச் சென்று அடைந்தபோது, மேற்சட்டையற்று, முடியடர்ந்து அவளுக்கு விலங்கியல்புடையதாகத் தோன்றிய ஒரு திண்மையுடன் இருந்த, மேயரையேக் கண்டாள், நகர மண்டபத்தின் திரைச்சீலைகளை, தன்னுடையதைப் போன்றே கிழிக்கப்பட்டிருந்தவற்றைச் செப்பனிட்டுக் கொண்டு பரபரப்பாக இருந்தவரை.
அழுக்காகவும் தாறுமாறான துப்புரவற்ற நிலையிலும் இருந்த அலுவலகத்திற்குள் பாய்ந்து நுழைந்தாள் ரெபெக்கா, அப்புறம் அவள் கண்ட முதல் விஷயம் மேசையின் மேலிருந்த இறந்த பறவைகளின் ஒரு குவியலாகும்.
ஆனால் அவள் ஒருங்கு குலைந்திருந்தாள், வெப்பத்தால் பகுதியளவிலும், அவளது திரைச்சீலைகளின் கேடுபாடு அவளுள் விளைவித்திருந்த உளக்கொதிப்பினால் பகுதியளவிலும், ஆகையால் மேசை மீதிருந்த இறந்த பறவைகளின் கேள்விப்பட்டிராத கண்காட்சியைக் கண்டு மனம் பதறுவதற்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை. படிக்கட்டின் உச்சியில், ஜன்னலின் உலோகக் கம்பியிழைகளைத் திரைச்சீலைத் துணியின் ஒரு சுருளினாலும் ஒரு திருப்புளியினாலும் செப்பனிட்டுக்கொண்டிருந்த, அதிகாரமிக்கவரின் சீரழிவின் அத்தாட்சியினால் அவள் மதிப்புக் குலைந்துவிடவும் இல்லை.
தனது சொந்த திரைச்சீலைகளால் எள்ளி நகையாடப்பட்ட, தன்னை அல்லாத வேறு எந்தவொரு மேன்மை மிக்கவரையும் பற்றி அவள் தற்போது எண்ணிக்கொண்டிருக்க வில்லை, அப்புறம் அவளது முழு ஈடுபாடானது தனது வீட்டின் ஜன்னல்களையும் நகர மண்டபத்திலிருந்த ஜன்னல்களையும் இணைத்துப் புரிந்துகொள்வதிலிருந்து அவளைத் தடுத்தது.
கதவிற்கு உள்ளாக இரண்டு அடிகள் எடுத்து வைத்து ஒரு கூரிய மதிப்பார்வத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அப்புறம் தனது கைக்குடையின் நீண்ட அலங்கரிக்கப்பட்ட பிடியில் சாய்ந்தவாறு, கூறினாள்:
“எனக்கு ஒரு புகார் அளிக்கவேண்டும்.”
படிக்கட்டின் உச்சியிலிருந்து, மேயர், வெப்பத்தினால் கன்றிச் சிவந்திருந்த தனது தலையைத் திருப்பினார்.
தனது அலுவலகத்தில் விதவையின் தானாக வலிந்து உண்டாக்கிய இருப்பிற்கு எதிராக மேயர் உணர்ச்சி எதையும் காட்டவில்லை.
மனச்சோர்வு தரும் அசட்டையுடன் பாழாக்கபட்டிருந்த திரைச்சீலையினை அவர் பிரித்துவிடுவதைத் தொடர்ந்தார், அப்புறம் மேலிருந்தே கேட்டார்:
“என்ன தொந்தரவு?”
“பக்கத்திலிருக்கும் பையன்கள் எனது திரைச் சீலைகளை முறித்துப் போட்டனர்.”
அவள் மேல் மேயர் வேறொரு நோட்டமிட்டார். அவளைக் கவனமாக ஆய்வுசெய்தார், நயநாகரீகமான சின்னஞ்சிறு வெல்வட் மலர்களிலிருந்து பழம் வெள்ளியின் வண்ணத்திலிருந்த அவளது ஷூக்கள் வரை, அப்புறம் அவரது வாழ்வில் அவளை அவர் முதன்முறையாகப் பார்த்தது போலிருந்தது அது.
மிக மெதுவான அசைவுடன், அவள் மீதிருந்த பார்வையை எடுக்காமலேயே அவர் கீழிறங்கி வந்தார்.
அப்புறம் அவர் கீழே வந்தடைந்ததும், தனது இடைவாரில் ஒரு கையை ஓய்வாக வைத்துக்கொண்டு, மேசையை நோக்கி திருப்புளியைக் காண்பித்து, அப்புறம் கூறினார்:
“அது பையன்களல்ல, சென்யோரா. அது பறவைகள்தாம்.”
அதற்குப் பிறகுதான் அவள் மேசையிலிருந்த இறந்த பறவைகளையும் படிக்கட்டுகளின் உச்சியில் இருந்த மனிதனையும், அப்புறம் அவளது படுக்கை அறைகளிலிருந்த முறிந்த திரைச்சீலைகளையும் இணைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டது.
அவள் கிடு கிடுத்தாள், அவளது வீட்டிலுள்ள படுக்கையறைகள் அனைத்தும் இறந்த பறவைகளாக நிறைந்திருப்பதைக் கற்பனை செய்தவாறு.
“பறவைகளா!” என்று வியந்தாள்.
“பறவைகளே” என்று மேயர் உடன்பட்டார். “பறவைகள் ஜன்னல்களை உடைப்பதும் வீடுகளின் உள்ளே இறப்பதுமான இந்தப் பிரச்சனை எங்களுக்கு மூன்று நாட்களாக இருப்பதால், நீங்கள் இதைக் கவனிக்காதிருந்தது வினோதமாக இருக்கிறது.”
ரெபெக்கா நகர மண்டபத்தை நீங்கியபோது, அவள் வெட்கமடைந்தவளாக உணர்ந்தாள், அப்புறம் நகரத்தின் புரளி அனைத்தையும் வீட்டிற்குள் கொண்டு வந்தவளும் எனினும் பறவைகளைப் பற்றி மூச்சே விட்டிருக்காதவளான அர்ஹேனீதாவைப் பற்றிக் கொஞ்சம் சீற்றமடைந்தவளாகவும் ஆனாள்.
அவளது கைக்குடையை விரித்தாள், வரவிருக்கும் ஆகஸ்டின் பிரகாசத்தினால் திகைத்தாள், அப்புறம் அவள் திணறடிப்பதும் ஆளரவமற்றதுமான தெருவினூடாக நடக்கும் போது அவளுக்கு அனைத்து வீடுகளின் படுக்கையறைகளும் ஒரு கடுமையானதும் மூக்கைத் துளைப்பதுமான இறந்த பறவைகளின் வீச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்ததான மனப்பதிவு ஏற்பட்டது.
இது ஜூலை கடைசியாக இருந்தது, அப்புறம் ஒருபோதும் நகரின் சரித்திரத்தில் அது இத்தனை சூடு மிக்கதாக இருந்ததில்லை.
ஆனால் பறவைகளின் மரணத்தினால் எச்சரிக்கை அடைந்திருந்த நகரவாசிகள், அதனைக் கவனிக்கவில்லை.
வினோதமானநிகழ்வானது நகரத்தின் நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பாதிக்கவில்லை என்ற போதிலும், ஆகஸ்டு மாத தொடக்கம் வரை இதனால் பெரும்பான்மையானவர்கள் தவிக்கும் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள்.
தமது அருட்திருநிலையை அந்தப் பெரும்பான்மையானவர்களுக்கு இடையில் சேர்த்துக் கொள்ளாதிருந்தவரான, காஸ்தானீதா இ மாண்டீய்தா பலிபீட புனித சமயத்துறை சடங்கைச் சேர்ந்த ஆந்தனி இசபெல், மென்னயம் வாய்ந்த வட்டார சமயத்துறைத் துறவியானவர், தொண்ணூற்றி நான்காம் வயதில், தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில்தான் கண்டிருக்கிறேன் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தார், அப்புறம் அப்படி இருந்தபோதும் அவர் இரண்டு இறந்த பறவைகளை மட்டுமே கண்டிருந்தார் என்றும், அவற்றிற்குக் குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக் கூடச் சேர்க்காமலும் தான். முதலாவதை திருப்பூட்டறையில் கண்டிருந்தார், ஒரு செவ்வாய்க்கிழமை திருப்பலி பூசைக்குப் பிறகாக,அப்புறம் அண்டையில் உள்ள ஏதோவொரு பூனையினால் அங்கே இழுத்து வரப்பட்டிருக்கும் என்றும் எண்ணினார்.
மற்றவொன்றை புதன் கிழமையில், சமயவட்டார திருச்சபை மனையின் தாழ்வாரத்தில் கண்டார், அப்புறம் தனது பூட்சின் முனையால் அதனைத் தெருவிற்குத் தள்ளிவிட்டார், பூனைகள் இருக்கவேண்டிய அவசியமே இல்லை என்று எண்ணியவாறு.
ஆனால் வெள்ளிக்கிழமை அன்று, அவர் இருப்புப்பாதை நிலையத்திற்கு வந்துசேர்ந்தபோது, அவர் அமர்வதற்காகத் தேர்ந்தெடுத்த நீள் இருக்கை ஒன்றில் மூன்றாவது இறந்த பறவையைக் கண்டுகொண்டார்.
அதன் சின்னஞ்சிறு கால்களைப் பிடித்து அதன் உடலை அவர் இழுத்தபோது அது ஒரு மின்னல் வெட்டைப் போன்று இருந்தது; அதனைத் தனது கண் மட்டத்திற்கு உயர்த்தினார், அதனைத் திருப்பினார், பரிசோதனை செய்தார், அப்புறம் மலைப்பூட்டும் விதமாக எண்ணிப் பார்த்தார், அருள் பாலிக்கட்டும், இந்த வாரம் நான் கண்ட மூன்றாவது ஒன்று இது.
அந்தக் கணம் தொட்டு நகரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார் அவர், ஆனால் மிகவும் நுட்பமாக இல்லாத ஒருவழியில்தான், தந்தை ஆந்தனி இசபெல், அவரது வயது காரணமான பகுதியும் அவர் தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில் கண்டிருந்தார் என்று சத்தியம் செய்ததால் மறு பகுதியும் (அந்த நகரத்திற்குப் பொருந்தாததாகத் தோன்றிய ஏதோவொன்று), திருச்சபை வட்டாரக் குடிகளால் ஒரு நல்ல மனிதர், அமைதியானவர் மற்றும் உதவும் மனப்பான்மையுடையவர், ஆனால் பழக்கத்திற்கு ஆளானபடியாகப் பகற்கனவு காண்பவர் என்று கருதப்பட்டார்.
பறவைகளுக்கு ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனித்தார், என்றாலும் அது அப்பொழுது ஒரு திருக்கோயில் மேடைப் பிரசங்கத்தை வேண்டும் அளவிற்கு அத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது என்பதை அவர் நம்பவில்லை.
அந்த நெடியை அனுபவித்த முதலாவது ஆள் அவர்தான். வெள்ளிக்கிழமை இரவன்று அவர் அதனை நுகர்ந்தார், எச்சரிக்கை உணர்வு மேலிட அவர் விழித்து எழுந்தபோது, அவரது நயநுட்பம் வாய்ந்த ஆழ்துயில் ஒரு குமட்டவைக்கும் நாற்றத்தினால் தடைபட்டது, ஆனால் அவருக்கு இதனை ஒரு கொடுங்கனவுடன் சேர்ப்பதா அல்லது அவரது உறக்கத்தைக் கலைப்பதற்கான தீய ஆவியின் அசலான தந்திரத்துடன் சேர்ப்பதா என்று தெரிந்திருக்கவில்லை.
அவரைச் சுற்றிலும் முகர்ந்து பார்த்தார், அப்புறம் படுக்கையில் புரண்டார், ஒரு திருச்சபை மேடைப் பிரசங்கத்திற்காக அந்த அனுபவம் உதவும் என்று எண்ணியவாறு.
அது, ஐம்புலன்களின் எந்தவொன்றின் வழியாகவும் மனித இதயத்தை ஊடுருவும் சாத்தானின் திறமையைப் பற்றிய ஒரு நாடகீயமான திருச்சபை பிரசங்கமாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.
அடுத்த நாள் திருப்பலி பூசைக்கு முன்பாக முன்றிலைச் சுற்றி அவர் உலவியபோது, எவரோ ஒருவர் இறந்த பறவைகளைப் பற்றி முதன்முறையாகப் பேசுவதைக் கேட்டார்.
அந்த வாரத்தில் சேகரிக்கப்பட்ட பறவைகளால் தான் கெட்ட இரவுநேர வாடை என்று எவரோ ஒருவர் கூறியதை அவர் கேட்டபோது தான் திருச்சபை பிரசங்கத்தைப் பற்றி, சாத்தானைப் பற்றி, அப்புறம் மோப்ப உணர்வினால் செய்யப்படக்கூடிய பாவங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தார்;
அப்புறம் அவரது தலையில் ஆவியெழுப்பும் முன்னெச்சரிக்கைளின் கூட்டவியல்கள், தீய மணங்கள், அப்புறம் இறந்தபறவைகள் உருக்கொண்டன. ஆகையால் அவருக்குஅந்த ஞாயிற்றுக்கிழமையில் அவரும் கூட மிகச் சரியாகப் புரிந்துகொள்ளாத மாண்பதை அன்பின் மீதான ஒரு நீண்ட பத்தியை மேம்படுத்தவேண்டி இருக்கும், அப்புறம் அவர் தீய ஆவி மற்றும் ஐம்புலன்களுக்கு இடையிலான உறவுகளை என்றென்றைக்குமாக மறந்துபோனார்.
இருந்தபோதிலும், அவரது சிந்தனையின் ஏதோவொரு தொலைப்புள்ளியில், அந்த அனுபவங்கள் பதுங்கி இருந்திருக்கவேண்டும்.
அது எப்பொழுதும் அவருக்கு நிகழ்ந்தது, எழுபது வருடங்களுக்கு அதிகம் முன்பாகக் குருமடப் பள்ளியில் மட்டுமல்ல,அவர் தொண்ணூறு வயது கடந்ததும் ஒரு குறிப்பிட்ட வழியில்.
குருமடப் பள்ளியில், ஒரு மிகப் பிரகாசமான பிற்பகலில் இடி முழக்கமற்று ஒரு கனத்த மழைப்பொழிவு உண்டான போது, அவர் சோபோக்ளீசிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்றை அதன் அசல் கிரேக்க மொழியில் படித்துக் கொண்டிருந்தபோது.
மழை பெய்து கழிந்த பிறகு, களைப்புற்ற வயலை அவர் ஜன்னல் வழியாக நோக்கினார், புதியதாகக் கழுவப்பட்ட பிற்பகலை, அப்புறம் அவர் பிரித்தறிந்து கொள்ள முடியாததாக இருந்த, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு பொதுப்படையான ரீதியில், “பழங்காலத்தைய சிறு பழங்கிரேக்கர்கள்” என்று அழைத்த கிரேக்க நாடக அரங்கத்தைப் பற்றியும் செவ்வியல் இலக்கியங்களைப் பற்றியும் முற்றிலும் மறந்து போனார்.
ஒரு மழையற்ற பிற்பகலில், ஒருவேளை முப்பதோ அல்லது நாற்பதோ ஆண்டுகள் பின்னர், அவர் வருகை புரிந்து கொண்டிருந்த ஒரு நகரம் ஒன்றின் உருளைக்கல் பாவப்பட்ட சதுக்கத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, அவர் குருமடப் பள்ளியில் வாசித்துக்கொண்டிருந்த சோஃபோக்ளீசிலிருந்து ஒரு பத்தியை மனப்பாடமாக ஒப்பித்தார்.
அதே அந்த வாரத்தில், பழங்காலத்தின் சிறு பழங்கிரேக்கர்களைப் பற்றிய ஒரு நீண்ட உரையாடலை, பேச்சளப்பவரும் எளிதாக உள்ளத்தில் எதையும் ஏற்றுக்கொள்பவரும், அவர், தான் கண்டுபிடித்ததாகக் கோரியதும் அது பிற்பாடு ஆண்டுகளுக்குப் பிறகு குறுக்குப்புதிர்கள் என்ற பெயரில் பிரபலமானதுமான குறிப்பிட்ட சிக்கலான புதிர்களின் பால் பிரியமாக இருந்த ஒரு கிழவரான, அப்போஸ்தல உதவியாளருடன் மேற்கொண்டிருந்தார்.
அந்த நேர்முகம் கிரேக்க செவ்வியல் இலக்கியங்கள் பாலான அவரது பழைய உள்ளங்கனிந்த நேசத்தை எல்லாம் ஓர் ஒற்றை அடியில் மீளெடுக்க அவருக்கு இசைவளித்தது. அந்த ஆண்டின் கிறிஸ்துமசில் அவர் ஒரு கடிதத்தைப் பெற்றார்.
அந்தச் சமயத்தில் அவர் இயல்புகடந்த கற்பனையுடனும், தனது விளக்கவுரைகளை அளிப்பதற்கான துணிபுடனும், அப்புறம் அவரது திருச்சபை பிரசங்கங்களின் ஒரு கொஞ்சம் முட்டாள்தனத்துடனும் இருப்பதன் திண்மையான கீர்த்தியை அவர் பெற்றார் என்ற விஷயத்திற்காக வேண்டி மட்டும் இல்லை என்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அவரை ஒரு மேற்றிராணியார் ஆக்கியிருப்பார்கள்.
1885ம் ஆண்டுப் போருக்கு நீண்டகாலம் முன்பாகவே அவர் அந்நகரத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டார், அப்புறம் அந்தச் சமயத்தில் பறவைகள் படுக்கையறைகளில் இறக்கத் தொடங்கியபோது அவருக்குப் பதிலாக ஒரு இளம் துறவியை அவர்கள் மாற்றிட வேண்டிக்கொண்டு வெகுகாலம் ஆகியிருந்தது,
குறிப்பாக அவர் தீய ஆவியைக் கண்டதாகக் கோரிய பிறகு. அந்தச் சமயம் தொட்டு அவர்கள் அவருக்குக் கவனம் கொடுக்காதவர்களாக ஆகத் தொடங்கினார்கள், கண் கண்ணாடிகள் இன்றியே அவரது திருச்சபை மறைநூலின் நுண்ணிய வரிவடிவங்களை அவருக்கு இன்னும் அடையாளம் கண்டுகொள்ளமுடியும் என்றபோதிலும் அவர் மிகத் தெளிவான வகையில் கவனித்திருக்காத ஏதோவொன்றாக இருந்தது அது.
ஒழுங்கான வழக்கங்களுடையவராக அவர் எப்பொழுதுமே இருந்தார். சிறியவராக, குறிப்பிடத் தக்கதல்லாதவராக, துருத்திய திடமான எலும்புகளுடனும் அமைதியான சைகைகளுடனும், உரையாடுவதற்கான ஓர் ஆறுதல்படுத்தும் குரலுடன் ஆனால் திருக்கோயில் உரைமேடைக்கு மிகஅதிகம் ஆறுதற்படுத்தும் குரலுடனும் இருந்தார்.
மதிய உணவு உண்ணும் வேளை வரையிலும் பகற்கனவு கண்டவாறு தனது படுக்கையறையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், கித்தான் நாற்காலி ஒன்றில் கவனமற்று நீட்டிக் கிடந்தவாறும் கணுக்கால்களில் அடிப்புறங்கள் கட்டப்பட்டிருந்த நீண்ட சாய்வரி கால் சராய்கள் அல்லாத வேறொன்றையும் அணியாதவாறு.
திருப்பலி பூசை செய்வதைத் தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை.
வாரம் ஒருமுறை பாவமன்னிப்புக் கூண்டில் அவர் அமர்ந்தார், ஆனால் பல வருடங்களாக எவரொருவரும் பாவமன்னிப்பைக் கேட்கவில்லை.
அவர் வெறுமனே எண்ணியது அவரது திருச்சபை வட்டாரக்காரர்கள் நவீன பழக்கவழக்கங்களால் கடவுள் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்று, அப்புறம் அதனால் தான் மூன்று சந்தர்ப்பங்களில் தீய ஆவியைக் கண்டதானது மிகவும் பொருத்தமான நிகழ்வு என்று அவர் நினைப்பது, சனங்கள் தனது வார்த்தைகளுக்குக் கிஞ்சித்தளவே நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள் என்ற போதிலும் அந்த அனுபவங்களைக் குறித்து அவர் பேசிய போது அவருக்கு அதனை மிகவும் ஒத்துக்கொள்ள வைப்பதற்கு முடியவில்லை என்பதையும் அவர் அறிந்தபோதிலும். அவரைப் பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிப்பது அவருக்கு ஒரு ஆச்சரியமாகவே இருக்கக்கூடும், கடைசி ஐந்து வருடங்களில் மட்டுமல்ல அவர் முதலிரண்டு பறவைகளைக் கண்டுபிடித்த அந்த வியக்கத்தக்க கணங்களிலும் கூடத்தான்.
அவர் மூன்றாவது பறவையைக் கண்டுபிடித்தபோது, அவர் வாழ்விற்குக் கொஞ்சமாகத் திரும்பிவந்தார், ஆகையால்தான் கடைசிச் சில நாட்களில் போற்றத்தக்க அளவில் இருப்புப்பாதை நிலைய நீளிருக்கையில் இறந்த பறவையைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார்.
தேவாலயத்திலிருந்து பத்து அடிகள் தொலைவில், தெருவை நோக்கிய ஒரு தாழ்வாரமும் அலுவலகமாகப் பயன்பட்ட இரண்டு அறைகளையும் படுக்கையறையையும் கொண்ட திரைச்சீலைகள் அற்ற ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்தார்.
ஒருவேளை குறைந்த துலக்கமான அவரது கணங்களிலாக இருக்கலாம், மிகவும் சூடாக இருக்காதபோது உலகில் மகிழ்ச்சியை அடைவதற்குச் சாத்தியம் என்று அவர் கருதினார், அப்புறம் இந்தக் கருத்து அவரைக் கொஞ்சம் குழப்பியது.
அப்பாலைத் தடங்களின் செல்வழிகளினூடாக அலைந்து திரிய அவர் விரும்பினார். ஒவ்வொரு காலையிலும், கதவைத் திறந்து வைத்து விட்டு, அவரது கண்களை மூடிக்கொண்டு, அவரது தசைகளை விறைப்பாகவும் வைத்துக்கொண்டு படுக்கையறையில் அவர் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது அவர் செய்துகொண்டிருந்தது என்னவென்றால் அது இதைத்தான்.
எனினும், குறைந்த பட்சம் மூன்று வருடங்களாக அவரது தியானத்தின் கணங்களில் அவர் இனிமேலும் எதையும் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை என்பதால் அவர் அவரது சிந்தனையில் மிகவும் நுணுக்கமாக மாறினார் என்பதை அவரே கூட உணர்ந்திருக்கவில்லை.
பன்னிரெண்டு மணிக்கு மிகச்சரியாக, ஒவ்வொரு நாளும் அதே பொருட்களைக் கொண்டிருந்த ஒரு பள்ளம் பள்ளமான தட்டத்துடன் ஒரு பையன் இடைநாழியைக் கடந்து வந்தான்: ஒரு துண்டு யுக்கா கிழங்குடன் எலும்பு வேகவைத்தச் சாறு, வெள்ளைச் சோறு, வெங்காயம் இன்றிச் சமைக்கப்பட்ட இறைச்சி, வாழைப்பழ பொறியல் அல்லது ஒரு வட்டமான சோள நெய்யப்பம், அப்புறம் பலிபீடத்தின் சமயமுறை சடங்குப் பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் ஒருபோதும் சுவைக்காத ஒரு சில அவரைகளையும்.
துறவி அமர்ந்திருந்த நாற்காலிக்கு அடுத்துத் தட்டத்தைப் பையன் வைத்தான், ஆனால் துறவி இடைநாழியில் இனிமேலும் காலடியோசைகளைக் கேட்காதவரையிலும் தனது கண்களைத் திறக்கவில்லை.
ஆகையால், நகரத்தில் அவர்கள் நினைத்தார்கள் தந்தை தனது உச்சிவேளை உறக்கத்தை மதிய உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார் (மிகவும் முட்டாள்தனமாகத் தோன்றிய ஒரு விஷயம்) என்று இரவிலும் கூட அவர் சாதாரணமாக உறங்குவதில்லை என்பது உண்மையானது என்று இருக்கும்போது.
அந்தக் காலவாக்கில் தான் அவரது பழக்கங்கள் மிகவும் குறைந்த அளவு சிக்கலுடைவையாக ஆனது, கிட்டத்தட்ட பழங்குடி நிலையில்.
தனது கித்தான் நாற்காலியிலிருந்து அசையாமலேயே மதிய உணவுஅருந்தினார், தட்டத்திலிருந்து உணவை எடுக்காமலேயே, பதார்த்தங்களையோ அல்லது முட்கரண்டியையோ அல்லது கத்தியையோ பயன்படுத்தாமல், ஆனால் அவர் தனது சூப்பைக் குடித்த அதே கரண்டியை வைத்து, பின்னர் அவர் எழுவார், கொஞ்ச தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொள்வார், மிகப்பெரிய சதுர ஒட்டுக்களால் புள்ளியிடப்பட்ட அவரது வெள்ளை குருமார் நீளங்கியை அணிந்து கொண்டு, அப்புறம் இருப்புப்பாதை நிலையத்திற்கு நகரின் மற்ற அனைவரும் உச்சிவேளை உறக்கத்திற்குச் சாய்ந்து கொண்டிருக்கும் மிகத் துல்லியமான வேளையில் செல்வார்.
பல மாதங்களாக இந்தப் பாதையில் அவர் சென்றுகொண்டிருக்கிறார், தீய ஆவி கடைசித் தடவை அவர் முன் தோன்றியபோது அவரே உண்டாக்கிய பிரார்த்தனையை முணுமுணுத்தபடி.
ஒரு சனிக்கிழமை - இறந்த பறவைகள் வீழ்வது தொடங்கிய ஒன்பது நாட்களுக்குப் பிறகு - பலி பீடத்தின் புனித சமய சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், ரெபெக்காவின் வீட்டின் நேர்முன்பாக, அவருடைய காலடியில் ஓர் இறந்துகொண்டிருக்கும் பறவை விழுந்தபோது இருப்புப்பாதை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.
உள்ளுணர்வின் ஒரு கணநேர அழற்பாய்ச்சல் அவரதுதலையில் வெடித்தது, அப்புறம் அவர் உணர்ந்தார் இந்தப் பறவையானது, மற்றவற்றிற்கு முரணாக, காப்பாற்றப்படலாம் என்று. அதனை அவர் தன் கரங்களில் ஏந்தி ரெபெக்காவின் கதவைத் தட்டினார் அவள் தனது உச்சிவேளை உறக்கத்தை உறங்குவதற்காகத் தனது இரவிக்கையை ஊக்கவிழ்த்துக் கொண்டிருந்தபோது.
அவளது படுக்கையறையில், விதவை தட்டப்படுவதைக் கேட்கவும் உள்ளுணர்வு சார்ந்து அவளது நோட்டத்தைத் திரைச்சீலைகளை நோக்கித் திருப்பவும் செய்தாள்.
இரண்டு நாட்களாக எந்தப் பறவையும் படுக்கையறைக்குள் வந்துவிட்டிருக்கவில்லை. ஆனால் திரைச்சீலையானது இன்னும் கிழிந்திருக்கிறது.
அவளைப் பதற்றத்துடனும் கவலையுடனும் வைத்திருந்த பறவைகளின் ஆக்கிரமிப்பு படையேற்றமானது தொடரும் வரை அவற்றைச் செப்பம் செய்வது வீணான செலவீனம் என்று அவள் கருதினாள்.
மின்சார விசிறியின் ரீங்காரத்திற்கு மேலாக, கதவு தட்டப்படுவதை அவள் கேட்கவும் தாழ்வாரத்தின் கோடியில் படுக்கையறையில் அர்ஹேனீதா உச்சிவேளை உறக்கத்தில் ஆழ்ந்திருப்பாள் என்பதைப் பொறுமையின்மையுடன் நினைவுகூரவும் செய்தாள்.
அந்த வேளையில் அவள்மீது வலிந்து சுமத்துவது யாராக இருக்கலாம் என்று வியப்படைவதற்கு அவளுக்குத் தோன்றக் கூட இல்லை.
அவளது இரவிக்கையின் ஊக்கை மீண்டும் மாட்டினாள்.
திரைசீலைக் கதவைத் தள்ளித் திறந்து, அப்புறம் இடைவழி தூரம் மொத்தம், விறைப்பாகவும் நேராகவும் நடந்து சென்று, பிறகு அறைகலன்களாலும் அலங்காரப் பொருட்களாலும் நெரிசலுற்றிருந்த வசிப்பறையைக் கடந்து அப்புறம், கதவைத் திறப்பதற்கு முன்னர், உலோக திரைச் சீலையின் வழியாக மிகுதியாகப் பேசாத தந்தை ஆந்தனி இசபெல் அவரது கண்களை மூடியவாறும் ஒரு பறவையைக் கைகளின் தாங்கியவாறும் நிற்பதைக் கண்டாள்.
அவள் கதவைத் திறப்பதற்கு முன்னால், அவர் கூறினார், ‘இதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரவும் பிறகு உண்பதற்குக் கொஞ்சம் தந்தோம் என்றால், இது நன்றாகும்.’ அப்புறம் அவள் கதவைத் திறந்தபோது, அச்சத்தினால் குலைந்து வீழ்வாள் என்று எண்ணினாள் ரெபெக்கா.
ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக அவர் அங்கே தங்கவில்லை.
சந்திப்பைச் சுருக்கியது தான்தான் என்றுநினைத்தாள் ரெபெக்கா. ஆனால் உண்மையில் துறவிதான் சுருக்கியது.
அந்தக் கணத்தில் அதனைப் பற்றி விதவை நினைத்துப் பார்த்திருந்தாள் என்றால், துறவி, நகரத்தில் அவர் வாழ்ந்துகொண்டிருந்த முப்பது வருடங்களில், அவளது வீட்டில் ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒருபோதும் செலவிட்டிருக்க வில்லை என்று உணர்ந்திருப்பாள்.
எத்தனை தூரம் என்றாலும், ஒவ்வொருவரும் அறிந்திருந்ததைப் போன்று அவள் மேற்றிராணியாருடன் சொந்த உறவாக இருந்தாள் என்ற போதிலும், வசிப்பறையின் அலங்காரங்களின் ஊதாரித்தனங்களுக்கிடையே வீட்டின் இல்லக்கிழத்தியின் பாலிணைவு விழையும் உள்ளுரு தன்னைத் தெளிவாகக் காட்டிக்கொண்டது என்றே அவருக்குத் தோன்றியது.
மேலும், ரெபெக்காவின் குடும்பத்தைப் பற்றிய கட்டுக்கதை (அல்லது ஒரு கதை) இருந்தது, அது நிச்சயமாக, விதவையுடைய பெற்றோரின் உடன்பிறப்பின் சேயான குடும்ப ஈடுபாட்டில் அக்கறை காட்டாதவர் என்று அவள் கருதிய கர்னல் அவ்ரலியானோ புயெந்தியா, ஒருமுறை மேற்றிராணியானவர் இந்நகரத்திற்கு வந்திருக்காதது அவரது உறவுக்காரர்களைக் காண்பதைத் தவிர்ப்பதற்கு வேண்டித்தான் என்று ஆணையிட்டுக் கூறினார் என்ற விஷயம் இருந்த போதிலும், மேற்றிராணியாரின் மாளிகையை அது அடைந்திருக்கவில்லை என்று நினைத்தார் தந்தை.
விஷயம் என்னவாக இருந்த போதிலும், அது வரலாறாகவோ அல்லது கட்டுக்கதையாகவோ இருக்கட்டும், தெய்வபக்தியின் எந்த அறிகுறிகளையும் காட்டாமலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பைக் கோரவும் ஆனால் அவர் அவளது கணவனின் மரணத்தைப் பற்றிய புதிரைப் பற்றிக் கட்டாயப்படுத்த முயன்றபோது தட்டிக்கழிப்பதான விடைகளை மட்டுமே எப்பொழுதும் பதிலளித்த அதன் ஒரேயொரு குடியிருப்பாளினியின், இந்த வீட்டில் பலிபீடத்தின் புனித சமயமுறை சடங்கைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் சௌகரியமாக உணரவில்லை. இறந்துகொண்டிருக்கும் பறவையைக் குளிப்பாட்டுவதற்காக ஒரு கிளாஸ் தண்ணீரை அவருக்குக் அவள் கொண்டு வருவதற்காக அவர் காத்துக்கொண்டு, அவர் அங்கே இருந்தார் என்றால், அவருக்குப் பொறுப்பில்லாத ஒரு தற்செயலான நிகழ்வின் விளைவாகத்தான் இருந்தது அது.
விதவை திரும்பி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, துறவி, ஆடம்பரமான செதுக்கப்பட்ட மர ஆடுநாற்காலி ஒன்றில் இருந்துகொண்டு, இருபது வருடங்களுக்கு அதிகம் முன்பாக, ஒரு கைத்துப்பாக்கி வேட்டு ஒலிக்கவும், அப்புறம் கர்னலின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானும் அவரது சொந்த மனைவியின் ஒன்று விட்ட உடன்பிறந்தானும் ஆன ஹோசே அர்காதியோ புயெந்தியா, அவன் அப்போதுதான் கழற்றியிருந்த இன்னும் கதகதப்பாக இருந்த கால்சராயில் இருந்த கொளுவிகள் மற்றும் குதிமுள்களின் கலகலப்பிற்கு இடையே தலைக் குப்புற விழுந்த காலம் தொட்டு அமைதியாக இருந்திராத அந்த வீட்டின் வினோதமான ஈரப்பதத்தை உணர்ந்தார்.
வசிப்பறைக்குள் ரெபெக்கா மீண்டும் பாய்ந்து வந்தபோது, அவளை அச்சுறுத்திய தெளிவற்ற தன்மையின் வாடையுடன் ஆடுநாற்காலியில் தந்தை ஆந்தனி இசபெல் அமர்ந்திருப்பதை அவள் கண்டாள்.
“விலங்கொன்றின் வாழ்வானது, ஒரு மனிதனுடையதைப் போன்றே அத்தனை நேசமிக்கது நமது கர்த்தாவுக்கு” என்றார் தந்தை.
அவர் சொன்னது போல, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவை நினைவு கூர்ந்திருக்கவில்லை. விதவையும்கூட அவனை நினைவு கூர்ந்திருக்கவில்லை. திருக்கோயில் சமய உரை மேடையிலிருந்து மூன்று முறை தீய ஆவிகள் அவர் முன் தோன்றியதை பேசியது முதற்கொண்டு தந்தையின் வார்த்தைகளுக்கு எந்த நம்பகத்தன்மையையும் அளிக்காமல் இருப்பதையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
அவருக்குக் கவனத்தைச் செலுத்தாமலேயே அவள் பறவையைத் தனது கையில் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் அதனை முக்கவும், அதற்குப் பிறகு அதனைக் குலுக்கவும் செய்தாள்.
அவளது செய்யும் முறையில் பணிவடக்கமின்மையும் கவனக்குறைவும் இருந்ததைத் தந்தை கவனித்தார், விலங்கதன் வாழ்வின் பாலான ஒரு முழுமுற்றான சலுகையின்மை.
“பறவைகளை உனக்குப் பிடிக்காதா” என்றார் மென்மையாக ஆனால் அழுத்தத்துடன்.
பொறுமையின்மை மற்றும் பகைமையின் குறிப்புணர்த்தும் விதமாகத் தனது கண்ணிமைகளை உயர்த்தினாள் விதவை.
“நான் அவற்றை ஒருபோது விரும்பி னேன் என்றாலும், நமது வீடுகளுக்கு உள்ளே இறக்கத் தொடங்கியதனால் தற்போது அவற்றை நான் வெறுக்கிறேன்.”
“பல இறந்துவிட்டிருக்கின்றன” என்று விட்டுக் கொடுக்காதவாறு கூறினார்.
அவரது குரலின் தொனியில் ஒரு மிகப்பெரும் புத்திசாலித்தனம் இருந்ததாக ஒருவருக்கு நினைக்க முடியும்.
“அவை எல்லாம்” என்றாள் விதவை. விலங்கதனை வெறுப்பினால் பிழிந்து அதனை ஒரு தட்டில் வைத்தபோது, “அப்புறம் அவை எனது திரைச் சீலைகளைக் கிழித்துவிட்டிருக்கவில்லை என்றாலும்கூட அது என்னைத் தொந்தரவு செய்து இருக்காது” என்று அவள் சேர்த்துக் கூறினாள்.
இதயத்தின் இத்தகைய கடுந்தன்மையை அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றே அவருக்கு தோன்றியது அப்புறம்.
ஒரு கணம் கழிந்து, சின்னஞ்சிறியதும் தற்காப்பற்றதுமான உடலைத் தனது சொந்தக் கரத்தில் தாங்கியவாறு, அது சுவாசிப்பதை நிறுத்திவிட்டிருப்பதாக உணர்ந்தார் துறவி. அப்புறம் அவர் அனைத்தையும் மறக்கவும் - வீட்டின் ஈரப்பதத்தை, மட்டுமீறிய சிற்றின்ப வேட்கையை, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவின் உடலின் மீதான வெடிமருந்தின் தாங்கவொண்ணா நெடியை - அந்த வாரத்தின் தொடக்கம் தொட்டு அவரைச் சூழ்ந்திருந்த அதிசயமான உண்மையை உணர்ந்தார்.
அங்கே, ஓர் அல்லற்படும் முகபாவத்துடனும் தனதுகரங்களில் இறந்த பறவையுடனும் அவர் வீட்டை நீங்கிச் செல்வதை விதவை கவனித்தபோது, நகரத்தின் மீது வீழ்ந்துகொண்டிருந்த இறந்த பறவைகளின் மழையானதின் ஓர் அற்புதகரமான வெளிப்பாட்டை அவர் கண்டுணர்ந்தார், அப்புறம் அவர், கடவுளின் செயற்பணியாளரானவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அது மிகவெப்பமாக இல்லாதபோது மகிழ்ச்சியை அறிந்திருந்தவர், இறுதி அழிவைப்பற்றிய திருவெளிப்பாட்டை முற்றாக மறந்து விட்டிருந்தார்.
எப்பொழுதையும் போலவே, அவர் நிலையத்திற்குச் சென்றார், ஆனால் அவரது செயல்பாடுகளைப் பற்றி முழுவதுமாக அவர் அறிந்திருக்கவில்லை.
உலகில் ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று துல்லியமற்ற வகையில் அறிந்திருந்தார், ஆனால் குழப்பமுற்றதாக உணர்ந்தார், பேச்சற்றுப் போனார், அந்தக் கணத்திற்கு ஒவ்வாதவராக ஆனார்.
நிலையத்தில் நீளிருக்கையில் அமர்ந்தவாறு, இறுதி அழிவைப் பற்றிய திருவெளிப்பாட்டில் இறந்தப்பறவைகளின் மழையைப் பற்றி ஏதாவது இருந்ததா என்று நினைவுகூர முயன்றார், ஆனால் அவர் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார்.
திடீரென்று ரெபெக்காவின் வீட்டில் ஏற்பட்ட தாமதமானது அவருக்கு இரயிலைத் தவறவிட வைத்தது என்று எண்ணினார், அப்புறம் அவரது தலையைப் புழுதியாகவும் உடைந்தும் இருந்த கண்ணாடிக்கு மேலாக நீட்டவும் பயணச்சீட்டு அலுவலகத்திலுள்ள கடிகாரத்தில் அது ஒரு மணி ஆவதற்கு இன்னமும் பன்னிரெண்டு நிமிடங்கள் இருந்தது என்பதைக்காணவும் செய்தார்.
நீளிருக்கைக்குத் திரும்பியபோது, அவர் மூச்சுத் திணறிக் கொண்டிருந்ததாக உணர்ந்தார். அந்தக் கணத்தில் அது சனிக்கிழமையாக இருந்தது என்று நினைவுகூர்ந்தார்.
அவரது பின்னல் கைவிசிறியை சிறிதுநேரம் ஆட்டினார், அவரது உள்வயமான மூடாக்கில் தொலைந்துபோனார்.
அப்புறம் அவர் அவரது நீளங்கியில் இருந்த பித்தான்களின் மேலும் தனது பூட்சுகளின் மேலுள்ள பித்தான்களிலும் அவரது நீண்ட, ஒயிலான, துறவியின் காற்சட்டைகளிலும் தனது விரல்களைக் கொண்டு உராய்ந்தார், அப்புறம் அவரது வாழ்வில் இத்தனை சூடாக அவர் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்பதை எச்சரிக்கையுடன் கவனித்தார்.
நீளிருக்கையிலிருந்து நகராமலேயே அவரது நீளங்கியின் கழுத்துப்பட்டையின் பித்தான்களைக் கழற்றினார், அப்புறம் தனது சட்டைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து, அப்புறம் வெளிச்சம் பாய்ச்சிய உணர்ச்சிக் கனிவின் ஒரு கணத்தில், அவர் ஒருவேளை ஒரு நிலநடுக்கம் வந்துகொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம் என்று எண்ணியவாறு, வெப்பத்தினால் கன்றியிருந்த தனது முகத்தைத் துடைத்தார்.
அவர் அதை எங்கேயோ வாசித்திருந்தார். இருந்தபோதிலும் வானம் தெளிந்து இருந்தது:
பறவைகள் அனைத்தும் கண்காணாது போயிருந்த தெள்ளத் தெளிந்த நீலவானம். நிறத்தையும் தெள்ளத் தெளிந்த தன்மையையும் அவர் கவனித்தார், ஆனால் ஒரு கணத்திற்கு இறந்த பறவைகளை மறந்திருந்தார்.
இப்பொழுது அவர் வேறு எதைப் பற்றியோ நினைத்துக்கொண்டிருந்தார்,
ஒரு புயல் வரப்போகும் சாத்தியத்தைப் பற்றி. இருந்தபோதிலும் வானமானது மெல்லியதாகவும் சாந்தமிக்கதாகவும் இருந்தது, அவர் ஒருபோதும் சூட்டை உணர்ந்திராத, வேறு ஏதோ நகரத்தின் மீதிருக்கும் வானம் அது என்பதைப் போன்று, தொலைவானதாகவும் வேறுபட்டதாகவும், அப்புறம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது, தனது அல்லாத வேறு எவருடையதோ கண்கள் என்பதைப் போன்று.
அப்புறம் அவர் வடக்குத் திசையில், பனையோலைகள் மற்றும் துருப்பிடித்தத் துத்தநாகத்தின் கூறைகளுக்கும் மேலாக நோக்கவும், மெதுவான, நிசப்தமான, பருந்துகளின் ஓசையொழுக்கான கொத்தைகளை மடுவிற்கு மேலாகப் பார்க்கவும் செய்தார்.
புதிரான சில காரணத்துக்காக, அவர் குருமடப்பள்ளியில், தனது சிறு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்குச் சற்றைக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று உள்ளத்தில் உணர்ந்த மனக்கிளர்ச்சிகளை அந்தக் கணத்தில் மீண்டும் நினைத்துப் பார்த்தார்.
தனது தனிப்பட்ட நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊர் வட்டகை குரு இவருக்கு அனுமதி கொடுத்திருக்கவும், பழம் மரக்கட்டையின் மணம் வீசும், ஊர் வட்டகைக் குருவின் கோணலான சின்னஞ்சிறு கிறுக்கலால் உரைவிளக்கம் எழுதப்பட்டிருந்த மஞ்சளேறிய புத்தகங்களை வாசிப்பதில் ஈர்ப்புற்ற வாறு இவர் மணிநேரங்களாக அங்கே வழக்கமாகத் தங்கிவிடுவார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒருநாள் முழுவதும் அவர் வாசித்ததற்குப் பிறகு, அவர்வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வெளிப்படையாக விழுந்து கிடந்த ஓர் அட்டையை எடுப்பதற்காக, ஊர் வட்டகைக் குருவானவர் அறைக்குள் நுழைந்து அவசரம் காட்டி, அதிர்ச்சியடைந்தார்.
அவரது திருமட முதல்வரின் குழப்பத்தை மிக எச்சரிக்கையான மெத்தனத்துடன் அவர் கவனித்தார் என்றாலும், அந்த அட்டையை அவருக்கு வாசிப்பதற்கு இயன்றது. ஓரேயொரு வாக்கியம் மட்டுமே அதில் இருந்தது, ஊதா மையில் எழுதப்பட்டிருந்த ஒரு தெளிவான, நேரான கையெழுத்தில்: “திருவாட்டி இவெத்தே இன்றிரவு இறந்தாள்.” ஓர் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கழிந்து, மறக்கப்பட்டிருந்த ஒரு நகரத்தின் மீதாகப் பருந்துகளின் கொத்தை ஒன்று பறப்பதைக் கண்டவாறு, மேசையின் முன்பாக ஊதா நிறத்தில், விளங்கிக்கொள்ள முடியாத வகையில் வேகவேகமான மூச்சிரைப்புடன், தன்முன் அமர்ந்திருந்த ஊர்வட்டகைக் குருவின் துயரம் நிரம்பிய முகவுணர்ச்சியை அவர் நினைவுகூர்ந்தார். அந்தக் கருத்துத் தொடர்பினால் உலுக்கப்பட்டவாறு, அதற்கு அப்புறம் அவர் உஷ்ணத்தை உணரவில்லை, ஆனால் இன்னுஞ்சரியாகச் சொல்வதென்றால் மிகச்சரியான எதிரிடையான, பனிக்கட்டியின் தேள்கொட்டலை தனது அடிவயிற்றிலும் தனது காலின் பாதங்களிலும் உணர்ந்தார்.
அந்தப் பேரச்சத்தின் மிகத்துல்லியமான காரணம் என்ன என்பதைப் பற்றி அறியாமலேயே அவர் அச்சமுற்றார், பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், அந்த நிகழ்வுக்குப் பாராமுகம் காட்டி, அப்போது அவர் இருந்தபோது, குழப்பமிக்கக் கருத்துகளின் ஒரு வலையில் சிக்கி, அவைகளுக்கிடையில், சகதியில் சிக்கிக்கொண்ட சாத்தானின் குளம்பிலிருந்து, உலகின் மேல் விழும் இறந்த பறவைகளின் ஒரு திரளிலிருந்து, ஒரு குமட்டும் உளப்பாட்டை வேறுபடுத்திக் கொள்வதற்கு இயலாததாக இருந்தது.
அப்புறம் அவர் நிமிர்ந்து இருந்தார், வெறுமையில் தொலைந்துபோன ஒரு வாழ்த்துதலைத் தொடங்குவதுபோல, வியப்பார்வத்தில் ஒரு கையை உயர்த்தி, அப்புறம் பேரச்சத்தில், “அலைந்துதிரியும் யூதன்” என்று கூக்குரலிட்டார்.
அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. பலவருடங்களில் முதன்முறையாக அவர் அதைக்கேட்கவில்லை.
புகையின் ஒர் அடர்த்தியான மேகத்தினால் சூழப்பட்டு, நிலையத்திற்குள் இழுக்கப்பட்டுக்கொண்டு வருவதை அவர் கண்டார், அப்புறம்துருப்பிடித்தத் துத்தநாகத் தகடுகளுக்கு மேலாகத் தணல் கரிக்கங்குகளின் மழை சொரிவதையும் கண்டார்.
ஆனால் நான்கு மணிக்கு சிறிதுநேரம்கழிந்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வழங்கப் போகும் உளத்தைப் பதியவைக்கும் பிரசங்கத்தின் இறுதி வடிவங்களை வடித்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பிற்பகல் நேரம்வரைக்கும் அந்தத் தொலைவானதும் விளங்கிக்கொள்ளமுடியாததுமான கனவிலிருந்து அவர் முற்றாக விழித்தெழுந்திருக்கவில்லை.
எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு, பெண் ஒருத்திக்கு கடைசி யான திருமுழுக்காட்டு கொடுக்கப்படுவதற்காக அவர் அழைக்கப்பட்டார்.
அதன் விளைவாக இரயிலில் அந்தப் பிற்பகலில்யார் வந்து சேர்ந்தது என்பதைத் தந்தைக்கு அறியஇயலாமல் போனது.
நீண்ட காலமாகவே இற்றுப் போய் விழும் நிலையில் இருப்பதும் வண்ணமற்றதுமான நான்கு இரயில்பெட்டிகள் கடந்து செல்வதைக்கவனித்தவாறு இருந்தார், அப்புறம் எவரொருவரும் தங்குவதற்காக இறங்கி வருவதை அவருக்கு நினைவுகூர முடியாமல் இருந்தது, குறைந்தபட்சம் சமீபத்தையவருடங்களில்.
முன்பு அது வேறுமாதிரியாக இருந்தது, ஒரு முழுப் பிற்பகலிலும் வாழைப் பழத் தார்கள் ஏற்றப்பட்ட இரயில் கடந்து செல்வதை அவர் காண்பதற்குச் செலவிட முடிந்தபோது; பழக்குலைகள் ஏற்றப்பட்ட ஒரு நூற்று நாற்பது இரயில் பெட்டிகள், இரவு நன்கு கவியும் வரைக்கும், ஒரு பச்சை இலாந்தர் விளக்கை ஆட்டும் மனிதன் இருந்த கடைசிப் பெட்டி கடந்து செல்லும் வரை, முடிவற்று கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
அப்புறம் அவர் இருப்புப்பாதையின் மறுபக்கத்திலிருந்த நகரத்தைக் கண்டார் - விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன இப்போது - அப்புறம் அவருக்குத் தோன்றியது, வெறுமே இரயில் கடப்பதைக் கண்டுகொண்டிருப்பதானது, வேறொரு நகரத்திற்கு அவரைக் கொண்டுசென்றதைப் போல ஆனது.
ஒருவேளை அதிலிருந்து வந்ததாக இருக்கலாம் ஒவ்வொரு நாளும் நிலையத்திற்கு அவர் வந்து இருப்பதான வழக்கம், அவர்கள் தொழிலாளர்களைச் சுட்டுக்கொல்லவும் வாழைப்பழத் தோட்டங்கள் அனைத்தும் அழிந்ததற்குப் பிறகும் கூட, அப்புறம் அதனுடன் அந்த நூற்றி நாற்பது இரயில் பெட்டிகளும் தீர்க்கப்பட்டன, அப்புறம் எஞ்சவிடப் பட்டது எவரொருவரையும் அழைத்துவரவோ எவரொருவரையும் அழைத்துச் செல்லவோ செய்யாத அந்த மஞ்சளேறிய, புழுதிபடிந்த இரயில் மட்டுமே.
ஆனாலும் அந்தச் சனிக்கிழமை எவரோவொருவர் வரத்தான் செய்தார்.
பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல்நிலையத்தை விட்டுச் சென்றபோது, தனது பசியை அல்லாத வேறு எதையும் பற்றிக் குறிப்பிடத்தகுந்ததாக இல்லாத அமைதியான பையன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் தொட்டு தான் உணவு ஏதும் உண்டிருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தபோதுதான் கடைசிப் பெட்டியிலிருந்து துறவியைக்கண்டான்.
துறவி ஒருவர் இருந்தார் என்றால், விடுதி ஒன்றும் இருந்தாகவேண்டும் என்று, அவன் எண்ணினான். அப்புறம் அவன் இரயிலிலிருந்து இறங்கி, உலோகம் போன்ற ஆகஸ்டுச் சூரியனால் கொப்புளமாகக் கொதித்துக் கிடந்த தெருவைக் கடந்து, அப்புறம் தேய்ந்துபோன கிராமபோனின் ஒலி வந்த நிலையத்தின் எதிரில் அமைந்திருந்த ஒரு வீட்டின் குளிர் நிழலுக்குள் நுழைந்தான்.
இருதினங்களின் பட்டினியால் கூர்மையாக்கப்பட்ட, அவனது நுகர்வுணர்வு, அது ஒரு விடுதிதான் என்று அவனிடம் கூறியது.
அப்புறம் அவன் தன் வாழ்நாளில் ஒருபோதும் படிக்கவே போகாததான ஓர் அடையாளமான, ‘ஹோட்டல் மக்காந்தோ’ என்ற அடையாளத்தைக் காணாமலேயே அதற்குள் சென்றான்.
அதன் உடைமையாளினி ஐந்து மாதங்களுக்கும் கூடுதலான கர்ப்பத்துடன் இருந்தாள்.
அவள் கடுகின் நிறத்தில் இருக்கவும், அவளது தாய் அவளைக் கர்ப்பமாகக் கொண்டிருந்த அதே போன்று மிகச்சரியாகவும் காணப்பட்டாள் (என்ன ஒரு கண்றாவியான மொழி பெயர்ப்பு).
அவன் உத்தரவிட்டான், “மதிய உணவு, உங்களால் இயன்ற அத்தனை சீக்கிரம்” அப்புறம் அவள், அவசரப்படுவதற்கு முயலாமல், வெறும் எலும்புடைய ஒரு சூப்பினையும் அதனுள் கொஞ்சம் வாழைக்காயையும் நறுக்கி இட்டுக்கொடுத்தாள்.
அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. சூப்பின் வெம்மையிலும் ஆரோக்கியமான ஆவியாலும் ஈர்க்கப்பட்டு, அவனுக்கும் நிலையத்திற்குமிடையில் கிடக்கும் தொலைவைக் கணக்கிட்டான், அப்புறம் தவறவிடும் ஒரு இரயில் விளைவிக்கும் பீதியின் குழப்பமான அந்த உணர்வுநிலை தன்னை ஆக்கிரமித்தது என்று உடனடியாக உணர்ந்தான்.
அவன் ஓடுவதற்கு முயன்றான்.
அவன் கதவை அடைந்தான், கடுவேதனையில், இரயிலைப் பிடிப்பதற்குத் தனக்கு நேரமில்லை என்று அவன் உணர்ந்தபோது வாயிற்படிக்கு அப்பால் அவன் ஒரு காலைக் கூட எடுத்து வைத்திருக்கவில்லை.
அவன் மேசைக்குத் திரும்பியபோது, தனது பசியை மறந்துவிட்டிருந்தான்; கிராமபோனுக்கு அடுத்து இருந்த பெண், தனது வாலை ஆட்டும் ஒரு நாயின் பயங்கரமான முகவுணர்வுடன் தன்னை இரக்கத்துடன் நோக்குவதை அவன் கண்டான்.
அப்புறம், அந்த முழுநாளில் முதன்முறையாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனது அம்மா அவனுக்குக் கொடுத்திருந்த அவனது தொப்பியைக் கழற்றினான், அப்புறம் அவன் உண்பதை முடிக்கும்போது அதனைத் தனது முழங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டான்.
அவன் மேசையிலிருந்து எழுந்தபோது, தவறி விட்ட இரயிலினாலோ, அல்லது அதன் பெயரைக் கண்டுபிடிப்பதற்கான சிரமத்தை மேற்கொள்ளாமல் அவன் இருந்த அந்நகரத்தில் வாரக்கடைசியைச் செலவழிக்கும் வாய்ப்பு பற்றியோ அவன் சஞ்சலம் அடைந்ததைப் போன்று தோன்றவில்லை.
அவனதுமுதுகின் எலும்புகள் ஒரு கடினமான, நேரான நாற்காலியினால் தாங்கப்பட்டு அறையின் ஒரு மூலையில் அவன் அமர்ந்தான், அப்புறம் நீண்ட நேரத்திற்கு அங்கே அமர்ந்திருந்தான், ரெக்கார்டு இசைக்குச் செவி கொடுக்காமல் அவற்றை எடுத்துக் கொண்டிருந்த பெண்:
“தாழ்வாரத்தில் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்” என்று அவனிடம் கூறும் வரை.
நோவுற்றதாக உணர்ந்தான் அவன். அந்நியர்களுடன் உரையாடலைத் துவக்குதற்கு ஒரு முயற்சி தேவைப்பட்டது.
ஆட்களை அவர்களின் முகத்தில் நோக்கு வதற்கு அவன் அச்சமடைந்தான், அப்புறம் அவனுக்கு பேசுவதை அல்லாத வேறு வழி இல்லாததனால், அவன் நினைத்ததைக் காட்டிலும் வேறுபட்டவகையில் சொற்கள் வெளிவந்தன. “ஆம்” என்று அவன் பதிலளித்தான்.
அப்புறம் அவன் ஒரு லேசான நடுக்கத்தை உணர்ந்தான். நாற்காலியில் ஆடுவதற்கு முயன்றான், அவன் ஓர் ஆடுநாற்காலியில் அமர்ந்திருக்கவில்லை என்பதை மறந்தவாறு.
“இங்கே வரும் ஆட்கள் தாழ்வாரத்திற்கு ஒரு நாற்காலியை இழுத்துச் செல்வார்கள் அங்கே குளிர்ச்சியாக இருப்பதால்” என்று சிறுமி கூறினாள்.
அப்புறம், அவளைக் கவனித்தவாறு, அவள் பேசுவதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள் என்று அவன் உணர்ந்தான்.
அவள் கிராமபோனைச் சுற்றிக்கொண்டிருந்ததால் அவளை முயன்று ஒரு நோட்டம் விட்டான்.
அவள் அங்கே பல மாதங்களாக அமர்ந்துகொண்டிருப்பதைப் போன்று தோன்றியது, வருடங்களாக இருக்கலாம் ஒருவேளை, அப்புறம் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்வதற்கு அவள் கிஞ்சித்து ஆர்வத்தையும் காட்டவில்லை.
அவள் கிராமபோனைச் சுற்றிக் கொண்டிருந்தாள் ஆனால் அவளது வாழ்வு அவனில் குவிந்திருந்தது. அவள் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.
“நன்றி உங்களுக்கு” என்றான் அவன், எழுவதற்கும் அவனது அசைவுகளில் கொஞ்சம் சௌகரியத்தையும் யதேச்சைத் தன்மையையும் கொடுப்பதற்கு முயன்றவாறு.
அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதில் இருந்து அந்தச் சிறுமி விலகவில்லை.
“அவர்கள் அவர்தம் தொப்பிகளைக் கொக்கிகளில் விட்டுச் செல்லவும் கூடச் செய்வார்கள்” என்று அவள் கூறினாள்.
இந்த முறை அவனது செவிகளில் ஓர் எரிச்சலை உணர்ந்தான். அவன் நடுங்கினான், விஷயங்களைப் பரிந்துரைக்கும் அவளது வழிமுறையைப் பற்றிஎண்ணியவாறு.
அசௌகரியமாக அடைபட்டுக் கொண்டு விட்டதைப்போன்று அவன் உணர்ந்தான், அப்புறம் தவறவிடப்பட்ட இரயிலைப் பற்றியபீதியை மீண்டும் உணர்ந்தான். ஆனால் அந்தக் கணத்தில் உடமையாளினி அறைக்குள் நுழைந்தான்.
“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் வினவினாள்.
“அவர்கள் எல்லாம் செய்வதைப் போன்றே, தாழ்வாரத்திற்கு அவர் ஒரு நாற்காலியை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்” என்று கூறினாள் சிறுமி.
அவளது வார்த்தைகளில் ஓர் ஏளனத்தின் தொனியை அவன் கண்டுகொண்டதாக எண்ணினான்.
“கவலை வேண்டாம்” என்றாள் உடைமையாளினி. “நான் உங்களுக்கு ஒரு ஸ்டூலினைக் கொண்டு வருகிறேன்.”
சிறுமி சிரிக்கவும் அவன் மனவுறுதி குலைந்ததாக உணர்ந்தான். அது உஷ்ணமாக இருந்தது.
ஒரு முறிவுபடாத, வறண்ட வெப்பம், அப்புறம் அவன் வியர்த்துக் கொண்டிருந்தான். உடமையாளினி தோல் இருக்கையுடன் இருந்த ஒரு மரஸ்டூலை தாழ்வாரத்திற்கு இழுத்து வந்தாள்.
சிறுமி மீண்டும் பேசத் தொடங்கும்போது அவளைப் பின்தொடர இருந்தான் அவன்.
“இதில் மோசமான விஷயம் என்னவென்றால் பறவைகள் இவரை அச்சுறுத்தும்” என்று கூறினாள்.
சிறுமியின் மீது உடைமையாளினி தனது கண்களைத் திருப்பியபோது உண்டான கடுத்தப் பார்வையை அவருக்குக் காண முடிந்தது.
அது ஒரு விரைவானதும் ஆனால் தீவிரமானதுமான பார்வையாக இருந்தது.
“நீ செய்யவேண்டியது அமைதியாக இருப்பதுதான்” என்று அவள் கூறினாள், அப்புறம் அவனை நோக்கி புன்னகையைத் திருப்பினாள்.
அப்புறம் அவனது தனிமை குறைந்ததைப் போன்று உணரவும் பேசுவதற்கான தூண்டுதலை பெறவும் செய்தான்.
‘அவள் கூறியதுதான் என்ன?’ என்று வினவினான்.
“அதாவது பகலின் இந்த வேளையில் தாழ்வாரத்தில் இறந்த பறவைகள் விழும்” என்று சிறுமி கூறினாள்.
“அவை அவளுடைய வெறும் எண்ணப்போக்குகள் மட்டுமே” என்றாள் உடைமையாளினி. அறைநடுவில் சிறுமேசையின் மீதிருந்த செயற்கை மலர்களின் ஒரு பூங்கொத்தை நேர்செய்வதற்காக அவள் குனிந்தாள்.
அவளது விரல்களில் பதட்டமான ஒரு வெட்டியிழுப்பு இருந்தது.
“எனது எண்ணப்போக்குகள், இல்லவே இல்லை” என்றாள் சிறுமி. “நீங்களே முந்தைய நாளுக்கு முன் தினம் அவற்றில் இரண்டை வாரி எடுத்தீர்கள். “
உடைமையாளினி அவளைக் கடுப்புடன் நோக்கினாள். சிறுமி ஒரு இரங்கத்தக்க முகபாவத்தை, அப்புறம் சந்தேகத்தின் இலேசான தடயம் கூட எஞ்சி இருக்காதவரைக்கும் அனைத்தையும் விளக்கும் வெளிப்படையான ஆர்வ வேட்கையையும் கொண்டு இருந்தாள்.
“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால், ஐயா, நேற்றைய முன் தினம் அவளைத் திகைக்க வைப்பதற்காகக் கூடத்தில் இரண்டு இறந்த பறவைகளைச் சில பையன்கள் வைத்தார்கள், அப்புறம் அவர்கள் கூறினார்கள் இறந்த பறவைகள் வானத்திலிருந்து வீழ்ந்துகொண்டிருந்ததாக.
சனங்கள் அவளிடம் சொல்லும் அனைத்தையும் அவள் விழுங்குகிறாள்.”
அவன் புன்னகைத்தான். விளக்கம் அவருக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது; அவன் தனது கைகளைத் தேய்த்துக் கொள்ளவும், அவனைக் கடும் மனவேதனையுடன் கவனித்துக்கொண்டிருந்த சிறுமியைக் காண்பதற்குத் திரும்பவும் செய்தான்.
கிராமபோன் இசைப்பதை நிறுத்திவிட்டிருந்தது. உடைமையாளினி வேறு அறைக்குச் சென்று விட்டிருந்தாள், அப்புறம் அவன் கூடத்தை நோக்கிச் சென்றபோது சிறுமி ஒரு தாழ்ந்த குரலில் வலியுறுத்தினாள்:
“அவை வீழ்வதை நான் பார்த்தேன். என்னை நம்புங்கள். எல்லோரும் அவற்றைக் கண்டார்கள்.”
அப்புறம் கிராமபோனுடனான அவளது பற்று தலையும், உடைமையாளினியின் கடுகடுப்பையும் அவன் புரிந்துகொண்டதாக நினைத்தான்.
“ஆம்” என்றான் அவன் பரிவிரக்கத்துடன். அதற்கு அப்புறம், கூடத்தை நோக்கி நகர்ந்தவாறு கூறினான்: ‘நானும் கூட அவற்றைக் கண்டிருக்கிறேன்.‘
வெளியே உஷ்ணம் குறைவாக இருந்தது, வாதுமை மரங்களின் நிழலில். கதவுச்சட்டத்திற்கு எதிராக ஸ்டூலைச் சாய்த்து வைத்துவிட்டு, தனது தலையைப் பின்னால் சாய்த்தான், அப்புறம் தனது அம்மாவைக் குறித்து நினைத்துப் பார்த்தான்: அவனது அம்மா, முற்றிலும் சோர்வுற்று, அவளது ஆடுநாற்காலியில், நீண்ட ஒரு விளக்குமாற்றை வைத்து கோழிகளை விரட்டியவாறு இருந்தாள், முதன் முறையாக அவன் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தபோது.
ஒரு வாரத்திற்கு முன்பு, கடைசி உள்நாட்டு யுத்தத்தின்போது ஒரு மழைகோர்த்த விடியலில் நாட்டுப்புற பள்ளிவீட்டின் மண்ணும் நாணற் புல்லினாலும் ஆன நான்கு சுவர்களுக்கிடையே அவன் உலகிற்கு வந்த நாள் முதல் அந்த ஜூன்மாத காலை நேரத்தில் அவனது இருபத்து இரண்டாம் பிறந்தநாளன்று அவனுடைய அம்மா அவனது ஹேம் மக்கில் அவனை அணுகி ஒரு வாழ்த்து அட்டை உள்ள ஒரு தொப்பியைக் கொடுத்தது வரை நீண்டிருந்த, தனது வாழ்வானது ஒரு மெல்லிழைவான நேர்சரடாகும் என்று நினைத்திருப்பான்: ‘எனது அன்பு மகனுக்கு, அவனது நாளில்.’
சமயங்களில் அவன் தனது செயலின்மையின் துருப் பிடித்த நிலையை உதறிவிட்டு பள்ளிக்கூடத்திற்காக ஏங்கினான், கரும்பலகைக்கும் ஈக்களின் எச்சத்தால் நெறிந்துகொண்டும் இருந்த நாட்டின் வரைபடத்திற்கும், அப்புறம் குழந்தைகளின் பெயர்களில் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்த கோப்பைகளின் நீண்ட வரிசைக்காகவும் ஏங்கினான்.
அங்கே அத்தனை உஷ்ணமாக இருக்கவில்லை. சாம்பல்நிறமான நீண்டகால்களை உடைய கோழிகள் கை கழுவும் நிலைச்சட்டத்திற்கு அடியில் முட்டைகள் இடுவதற்காகப் பள்ளிக்கூட அறைக்குள் நுழைந்த, அது ஒரு பசுமையான, சாந்தமிக்க நகரமாக இருந்தது.
அந்தக் காலத்தில் அவனது அம்மா ஒரு சோகமானவளும் சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய பெண்மணியாக இருந்தாள்.
காப்பித் தோட்டங்களின் ஊடாக அப்பொழுது சற்றைக்கு முன்பாக வந்த காற்றை உட்கொள்வதற்காக அவள் அந்தியில் அமரவும், ‘மனௌரெ தான் உலகத்தில் மிக அழகான நகரம்,’ என்று கூறவும் செய்வாள்.
‘நீ வளர்ந்தவனாக ஆகும் போது புரிந்துகொள்வாய்.’
ஆனால் அவன் எதையும் புரிந்துகொள்ளவில்லை. அவனது வயதைவைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே மிகவும் உயரமாகவும் சோம்பல் கொண்டுவரும் அந்தத்துடுக்குத்தனம் மற்றும் அசட்டையான உடல்நலத்தின் திடீர் பாய்ச்சலில், பதினைந்து வயதிலும் அவன் புரிந்துகொள்ளவில்லை.
அவனது இருபதாம் பிறந்த நாள் வரையிலும் வாழ்வானது அவனது ஹேமக்கில் கிடக்கும்போது செய்யும் ஒரு சில இடமாற்றங்களே என்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருந்திருக்கவில்லை.
ஆனால் இந்தச் சமயத்தில் அவனது அம்மா, கீல்வாதத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, பதினெட்டுவருடங்களாக அவள் பணியாற்றிய பள்ளியிலிருந்து விலகினாள், அதன் காரணமாக அவர்கள், பள்ளிக்கூட அறையில் கடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததைப் போன்ற சாம்பல்நிற கால்களை உடைய கோழிகளை அவர்கள் வளர்த்த, ஒரு மிகப்பெரிய உள்முற்றம் இருந்த இரண்டு - அறை வீட்டில் குடியேறினார்கள்.
கோழிகளைப் பேணுவதுதான் யதார்த்தத்துடனான அவனது முதன் தொடர்பாடலாக இருந்தது. அவனது அம்மா அவளது பணி ஓய்வினைக் குறித்தும் அதற்கு மனுக் கொடுப்பதை மேற்கொள்வதற்காக அவளது மகனை அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் எண்ணிய, ஜூலை மாதம் வரை அது மட்டும் ஒரேயொன்றாக இருந்தது.
ஆவணங்களைத் தயார் செய்வதற்காக ஒரு செயலூக்கமுள்ள வழியில் அவன் ஒத்துழைத்தான், அப்புறம் இன்னும் அவள் பணி ஓய்வு பெறும் அளவிற்கு வயதாகிவிட்டிருக்கவில்லை என்பதால் அவளுடைய தீக்கை சான்றிதழை ஆறு மாதங்கள் மாற்றுவதற்காக வட்டார சமயகுருவினை சம்மதிக்கச் செய்வதற்கான சாமர்த்தியத்தையும் கூடக்கொண்டிருந்தான்.
அவனது அம்மாவின் கல்வி கற்பிக்கும் அனுபவத்தை வழுவாமல் விவரித்த, அவனது இறுதியான வழிகாட்டல்களை வியாழக் கிழமை அன்று பெறவும், பன்னிரண்டு பெசோக்கள், மாற்றுவதற்கான ஓர் உடுப்பு, ஆவணங்களின் ஒரு கோப்பு மற்றும் அவனுக்கு ஒரு பன்றிப் பண்ணையைத் அமைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் அவனுக்குக் கட்டாயம் கொடுக்கும் ஒரு விஷயம் என்று அவன் விளங்கிக்கொண்டிருந்த, ‘பணி ஓய்வு’ என்ற வார்த்தையைப் பற்றிய முற்றிலும் வளர்ச்சியற்ற ஓர்எண்ணத்துடன் நகரத்திற்கான பயணத்தைத் தொடங்கினான்.
புழுக்கமான சூட்டினால் மந்தமாகி, விடுதித் தாழ்வாரத்தில் லேசாக மயங்கியவாறு, அவனதுநிலைமையின் தீவிரத்தைப் பற்றிச் சிந்திப்பதை அவன் நிறுத்தவில்லை.
எதிர்பாரா இடையூறானது அடுத்து வரும் நாளில், இரயில் திரும்பிவரும்போது சரியாகிவிடும் என்று கருதிக்கொண்டான், ஆகையால் இப்பொழுது அவனது ஒரே கவலை ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருப்பதும் தாங்கவொண்ணா அளவுக்கு வெப்பத்துடன் இருந்த இந்த நகரத்தை என்றென்றைக்குமாக மறந்துவிடுவதும் ஆகும்.
நாலுமணிக்கு சிறிது நேரம் முன்பாக, மகிழ்ச்சியற்றதும் மந்தமானதுமான உறக்கத்தில் ஆழ்ந்தான், அவனது ஹேம்மக்கைக் கொண்டுவராதது ஓர் அவமானம் என்று உறங்கும்போது எண்ணியவாறு. அப்புறம்தான் அவன் அனைத்தையும் உணர்ந்தான், துணிகளின் மூட்டையையும் பணி ஓய்வுக்கான ஆவணங்களையும் இரயிலில் மறந்துவிட்டிருந்தான் என்பதை உணர்ந்தான்.
திடுக்கிடலுடன் விழித்தெழுந்தான், அச்சமுற்று, அவனது அம்மாவைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தான், அப்புறம் பீதியினால் மீண்டும் நெரிக்கப்பட்டான்.
அவனது இருக்கையைத் திரும்பி உணவறைக்குஇழுத்து வந்தபோது, நகரத்தில் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டிருந்தன.
அவன் ஒருபோதும் மின்சார விளக்குகளைக் கண்டிருக்கவில்லை, ஆகையால் விடுதியின் புள்ளிகள் நிறைந்த எளியகுமிழ் விளக்குகளை கண்டபோது மிகவும் ஈர்ப்புக்கு உள்ளானான்.
அவனது அம்மா அவற்றைப்பற்றி அவனிடம் பேசியிருந்தாள் என்பதைப் பிறகுஅவன் நினைவுகூர்ந்தான், அப்புறம் துப்பாக்கிக் குண்டுகளைப் போன்று கண்ணாடிகளின் மீதுமோதிக்கொண்டிருந்த பெரிய ஈக்களைத் தட்டிவிடு வதற்கு முயன்றவாறு, உணவறையை நோக்கி இருக்கையை இழுப்பதைத் தொடர்ந்தான்.
அவனது நிலைமையின் தெளிவான அத்தாட்சியினால் குழம்பியவாறு, கடுமையான வெப்பத்தில், அவனதுவாழ்வில் முதன்முறையாக அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் தனிமையின் கொடுமையினால், பசியின்றியே உணவு கழித்தான்.
ஒன்பது மணிக்குப்பிறகு வீட்டின் பின்புறம் உள்ள, செய்தித் தாள்களினாலும் சஞ்சிகைகளினாலும் ஒட்டப்பட்டுஇருந்த ஒரு மரத்தாலான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
நள்ளிரவில், ஐந்து கட்டிடத் தொகுதிகளுக்கு அப்புறம், பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், தனது கட்டிலில் முகங்குப்புற படுத்தவாறு, காலை ஏழு மணிக்கு அவர் தயாராக்கியிருந்த திருச்சபை பிரசங்கத்தைச் சாயுங்காலத்தின் அனுபவங்கள் வலிமையூட்டின என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவன் ஒரு நச்சாவி கிளம்பும் மற்றும் சுரம் பிடித்ததுமான உறக்கத்தில் முழ்கியிருந்தான்.
பன்னிரண்டு மணிக்குசிறிது முன்பாக அவர் பெண் ஒருத்திக்கு ஒரு கடைசியான திருமுழுக்காட்டு செய்வதற்காக நகரத்தைக் கடந்து சென்றிருந்தார், அப்புறம் அவர் கிளர்வுற்றதாகவும் பதற்றமாகவும் உணர்ந்தார், அதன் விளைவாக அவரது கட்டிலின் அடுத்ததாகப் புனித பலிபூசைக்குரிய சாதனங்களை வைக்கவும் தனது திருச்சபை பிரசங்கத்தை நிகழ்த்தச் செல்வதற்காகப் படுத்துக் கிடக்கவும் செய்தார்.
பல மணிநேரங்களுக்கு அவர் அவ்வாறே இருந்தார், விடியலில் ஓர் உப்புக்கொத்திப் பறவையின் தொலைதூர அழைப்பை அவர் கேட்கும் வரையிலும் கட்டிலில் முகங்குப்புற கிடந்தார்.
அப்புறம் அவர் எழுவதற்கு முயன்றார், வலிமிகுந்து எழுந்து அமர்ந்தார், சிறுமணியின் மேல் மிதித்தார், அப்புறம் அவரது அறையின் குளிர்ந்த, கடினமான தரையில் தலைகுப்புற விழுந்தார்.
அவரது பக்கவாட்டில் எழுந்த ஒரு நடுக்கத்தை அவர் உணர்ந்தபோது அவர் சுயநினைவை மீண்டும் பெற்றிருக்கவில்லை.
அந்தக் கணத்தில் அவரதுமொத்த எடையைப் பற்றிய உணர்வு அவருக்குஏற்பட்டது: அவரது உடலின் எடை, அவரதுபாவங்கள், அப்புறம் அவரது வயது ஆகியஅனைத்தினைக் குறித்தும்.
அவரது பிரசங்கங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த போது அடிக்கடி நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைப் பற்றிய ஒரு துல்லியமான கருத்தை உருவாக்குவதற்கு அவருக்கு உதவிய கல் தரையின் கடினத்தன்மையை அவரது கன்னத்தில் உணர்ந்தார்.
‘கர்த்தாவே’ என்று அவர் முணுமுணுத்தார், பயந்து போனார்; அப்புறம் நினைத்தார், நான் ஒருபோதும் இனிமேல் எழுந்து நிற்கப்போவதில்லை என்று.
எதைப் பற்றியும் யோசிக்காமலும், ஒரு நல்லசாவுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் கூட நினைவின்றியும், தரையில் நெடுஞ்சாண் கிடையாக எத்தனை நேரம் கிடந்தார் என்பதை அவர் அறியவில்லை.
அது, உண்மையில், அவர் ஒரு நிமிடநேரத்திற்கு இறந்துபோனது போன்று இருந்தது. கதவின் அடியில் பிரகாசமான கதிரொளியைக் கண்டார்; தொலைவாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருந்த, சேவல்களின் கரகரப்பான இரைச்சலை அவர் கேட்டார், அப்புறம்தான் உணர்ந்தார் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் அவரது திருச்சபை பிரசங்கத்தின் வாக்குகளை மிகத் துல்லியமாக நினைவில் கொண்டிருக்கிறார் என்றும்.
கதவின் தாழ்ப்பாள் கட்டையை அவர் பின்னால் இழுத்தபோது, விடியல் புலர்ந்துகொண்டிருந்தது.
வேதனை உணர்வு அவருக்கு நின்றுவிட்டது, அப்புறம் அவரது அடியானது அவரது வயோதிகச் சுமையிலிருந்து அவரை அகற்றிவிட்டதாகக் கூடத் தோன்றியது. சேவல்கள் மொத்தம் நிறைந்திருந்த ஒரு துயரார்ந்த ஈரலிப்பான அந்தக் காற்றின் முதல் சுவாசத்தை அவர் வாய் நிறைய விழுங்கியபோது, நன்மைகள் அனைத்தும், ஒழுக்கக்கேடும், நகரத்தின் துயரங்களும் அவரது இதயத்தைத் துளைத்ததாகத் தோன்றியது.
அப்புறம் அவர் தன்னைச் சுற்றிக் கண்ணோட்டினார், தனிமையுடன் தன்னை இணக்கப் படுத்திக்கொள்வதைப் போன்று, அப்புறம் விடியலின் அந்தச் சாந்தமான நிழலில், தாழ்வாரத்தில், ஒன்று, இரண்டு, மூன்று இறந்த பறவைகளைக் கண்டார்.
இந்த மூன்று பறவைகளின் கூட்டு மரணமும், அவரது தயாரிக்கப்பட்ட திருச்சபை பிரசங்க உரைக்கு ஏற்ப, சில பரிகாரத்தை வேண்டுகிறது என்று எண்ணியவாறு, ஒன்பது நிமிடங்களுக்கு மூன்று உடல்களையும் அவர் கூர்ந்து ஆராய்ந்தார்.
அப்புறம் அவர் தாழ்வாரத்தின் மற்ற மூலைக்கு நடந்து சென்று, மூன்று இறந்த பறவைகளையும் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஜாடிக்குத் திரும்பினார், பச்சையாக அசையாது இருந்த தண்ணீருக்குள், ஒன்றை அடுத்து ஒன்றாகப் பறவைகளை எறிந்தார், அந்தச் செயல்பாட்டின் நோக்கத்தைச் சரியாக அறியாமலேயே.
மூன்றும் மூன்றும் அரை டஜன், ஒரு வாரத்தில், என்று அவர் எண்ணினார், அப்புறம் துலக்கத்தின் ஓர் அற்புதகரமான மின்வெட்டொளி அவரது வாழ்வின் மகத்தான நாளை அவர் அனுபவிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறார் என்று அவரிடம் கூறியது.
ஏழு மணிக்கு வெப்பம் தொடங்கியது. விடுதியில், ஒரேயொரு விருந்தினன் காலை உணவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான். கிராமபோன் சிறுமி இன்னும் விழித்தெழுந்திருக்கவில்லை.
உடமையாளினி நெருங்கினாள், அப்புறம் அந்தக் கணத்தில் கடிகார மணியின் ஏழு மணி அடிப்பொலிகள் அவளது புடைத்திருந்த வயிற்றிற்குள் ஒலித்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.
‘ஆக நீ இரயிலைத் தவறவிட்டுவிட்டாய்,‘ என்று அவள் ஒரு காலங்கடந்த பரிவிரக்கத்தின் தொனியில் கூறினாள். அதன் பிறகு அவள் காலை உணவை கொணர்ந்தாள்: காப்பிப் பாலுடன், ஒரு பொறித்த முட்டை, அப்புறம் வாழைக்காயின் சீவற்துண்டுகள்.
அவன் உண்பதற்கு முயன்றான், ஆனால் அவனுக்குப் பசியில்லை. வெப்பம் வந்துவிட்டது என்பதைப் பற்றிய எச்சரிக்கையுடன் இருந்தான் அவன்.
குடம் குடமாக வியர்த்துக்கொண்டிருந்தான். மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான். அவனது உடைகளை அணிந்தவாறே, மிகச்சிறிதளவே உறங்கியிருந்தான், அப்புறம் இப்போது சிறிதளவு காய்ச்சலையும் கொண்டிருக்கிறான்.
அவன் மீண்டும் பீதியை உணர்ந்தான், அப்புறம் மிகப்பெரும் பச்சை மலர்களுடைய அவளது புதிய ஆடையில் பளீரென்று, உடமையாளினி உணவுப் பாத்திரங்களை எடுப்பதற்காக மேசைக்கு வந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்.
உடமையாளினியின் ஆடை அதுஞாயிற்றுக்கிழமை என்று அவனுக்கு நினைவுபடுத்தியது.
‘திருப்பலி பூசை ஏதாவது இருக்கிறதா?’ என்று வினவினான்.
‘ஆம், இருக்கிறது’, என்று கூறினாள் பெண். ‘ஆனால் அது இல்லாததைப் போன்றுதான், ஏனென்றால் கிட்டத்தட்ட எவரொருவரும் போவதில்லை.
உண்மை என்னவென்றால் ஒரு புதிய துறவியை எங்களுக்கு அனுப்புவதற்கு அவர்கள் விரும்பாததால்.’
‘அப்புறம் இவருக்கு என்ன குறை?’
‘இவருக்குக் கிட்டத்தட்ட நூறு வயது, அப்புறம் அவர் அரைப்பைத்தியம்,’ என்று கூறினாள் பெண்;அசைவற்று நின்றாள் அவள், சிந்தனையில் மூழ்கிய வாறு, அனைத்துப் பாத்திரங்களையும் ஒரு கையில் தாங்கிக்கொண்டு.
அதன் பிறகு அவள் கூறினாள், ‘வேறு ஒரு நாள், தீய ஆவியை அவர் கண்டார் என்று திருச்சபை பிரசங்கமேடையில் இருந்து அவர் சத்தியம் செய்தார், அப்புறம் அதன் பின்னர் எவர் ஒருவரும் திருப்பலி பூசைக்குச் செல்வதில்லை.’
ஆகையால் அவன் தேவாலயத்திற்குச் சென்றான், பாதி நம்பிக்கையிழந்த நிலையினாலும் பாதி ஒரு நூறு வருடங்கள் வயதான ஒரு நபரைக் காணும் ஆர்வத்திலும்.
அது முடிவுறாத புழுதிபடிந்த தெருக் களும் ஆள்குடியிருப்பு அற்றதாகத் தோன்றும் துத்த நாகக் கூரைகளை உடைய அடர்ந்த மரத்தாலான வீடுகளும் உடைய, மரித்துப்போன நகரம் என்பதை அவன் கவனித்தான்.
ஞாயிற்றுக்கிழமையின் போது இருந்த நகரமாகும் அது: புற்களற்ற தெருக்கள், திரைச் சீலைகளற்ற வீடுகள், அப்புறம் திணறடிக்கும் வெப்பத்தின் மீதிருக்கும் ஓர் அடர்ந்த, அற்புதகரமான வானம்.
ஞாயிற்றுக் கிழமையை வேறு எந்தவொரு நாளிலிருந்தும் வேறுபடுத்துவதற்கு அனுமதிக்கும் எந்தவொரு அடையாளமும் இல்லை என்று அவன் எண்ணினான், அப்புறம் ஆளற்ற தெருவினூடாக அவன் நடந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்: ‘ஒவ்வொரு நகரத்திலுள்ள அனைத்து தெருக்களும் தேவாலயத்திற்கோ அல்லது கல்லறைமயானத்திற்கோ தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும்.’ அந்தக் கணத்தில் அவன் ஒரு கோபுரத்தையும் அதன் உச்சியில் மரத்தாலான ஒரு காற்றுத் திசைகாட்டியையும், பத்து மணி கழிந்து நான்கு நிமிடங்களில் நின்றுவிட்டிருந்த ஒரு கடிகாரத்தையும் கொண்டிருந்த வெள்ளையடிக்கப்பட்ட கட்டிடத்துடன் இருந்த உருளைக்கல் பாவப்பட்ட ஒரு சிறு சதுக்கத்திற்கு வந்தடைந்தான்.
அவசரமின்றி அவன் சதுக்கத்தைக் கடந்து, திருக்கோயில் மோடிட்ட வாயில் முகப்பின் மூன்று படிகளில் ஏறினான், அப்புறம் உடனடியாகச் சாம்பிராணியின் வாடையுடன் கலந்திருக்கும் வயதான மனித வியர்வையின் வாடையை முகர்ந்தான், அப்புறம் கிட்டத்தட்ட காலியாக இருந்த தேவாலயத்தின் வெதுவெதுப்பான நிழலுக்குள் சென்றான்.
பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் அப்பொழுதுதான் திருச்சபை பிரசங்கமேடையில் ஏறியிருந்தார்.
அவனது தொப்பியை அணிந்தவாறு பையன் ஒருவன் நுழைவதை திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கவிருந்த போதுதான் கண்டார்.
அவனது பெரிய, சாந்தமான, அப்புறம் தெளிவான கண்களை உடைய கிட்டத்தட்ட வெறுமையாக இருந்த நெற்றியை ஆராய்ந்தபடி அவனை அவர் கண்டார்.
அவனது தலையை ஒரு புறமாகவும் அவனது கைகளை முழங்கால்களிலும் வைத்துக்கொண்டு, திருக்கோயிலின் கடைசி வரிசை இருக்கையில் அமர்வதை அவர் கண்டார்.
இந்த நகரத்தில் அவன் ஓர் அந்நியன் என்று அவர் கண்டுகொண்டார்.
இந்நகரத்தில் அவர் முப்பது வருடங்களாக இருந்து வருகிறார், அப்புறம் அதன் எந்தவொரு குடியிருப்பாளர்களையும் அவனது வாடையினால் மட்டுமே அவருக்கு இனம் கண்டுகொண்டிருந்திருக்க முடியும்.
ஆகையால் அப்பொழுதுதான் வந்தடைந்திருந்த அந்தப் பையன் ஓர் அந்நியன் என்று அவர் அறிந்தார்.
ஒரு தீவிரமான, சுருக்கமான நோட்டத் தில், அவன் ஓர் அமைதியான ஆன்மா என்று அவர் கண்டறிந்தார், அப்புறம் சிறிதளவு சோகமுடையவனாகவும், உடைகள் அழுக்காகவும் சுருக்கம் விழுந்தும் இருக்கின்றன என்றும்.
அதாவது அவற்றை அணிந்துகொண்டு உறங்கியவாறே அவன் நீண்டகாலத்தைச் செலவிட்டான் என்பதைப் போன்று, அதனை அவர் அதீத வெறுப்பும் இரக்கமும் சேர்ந்து கலந்த ஓர் உணர்வுடன் எண்ணினார்.
ஆனால் அப்புறம், திருக்கோயில் நாற்காலி வரிசையில் அவன் அமர்ந்திருப்பதைக் காணும்போது, அவரது இருதயம் நன்றியுணர்வினால் பெருகி வழிந்தது, அப்புறம் அவர்அவரது வாழ்வின் மகத்தான திருச்சபைப் பிரசங் கத்தை அளிப்பதற்குத் தயாரானார்.
கர்த்தாவே, நான் அவனை இக்கோயிலில் இருந்து வெளியே எறியவேண்டியதில்லை என்பதற்காகத் தயைக் கூர்ந்து அவனுடைய தொப்பியை கழற்றுவதற்கு அவனுக்கு நினைவுபடுத்துங்கள் என்று அதேசமயத்தில் அவர் நினைத்தார்.
அப்புறம் தனது திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் அவர் என்ன சொல்லிக்கொண்டிருந்தார் என்பதை உணராமலேயே அவர் பேசினார்.அவர் தனக்கே கூடச் செவிகொடுக்கவில்லை.
உலகத்தின் தொடக்கம் தொட்டு அவரது ஆன்மாவில் ஒடுங்கியிருந்த ஒரு வசந்தத்திலிருந்து பாய்ந்தொழுகிய தெளிவானதும் சரளமானதுமான மெல்லிசையை அவர் கேட்கவே இல்லை.
அவரது வாக்குகளானவை, எதிர்பார்க்கப்பட்ட வரிசையிலும் இடத்திலும் மிகத் துல்லியமாகவும், பொருத்தமாகவும், மிகநுட்பமாக வும் முன்னால் பாய்ந்தொழுகியதாக ஐயுறவிலா உண்மையை அவர் குழப்பிக்கொண்டார்.
ஒரு வெதுவெதுப்பான ஆவி அவரது உள்ளிடங்களை அழுத்துவதாக அவர் உணர்ந்தார். ஆனால் அவரது ஆன்மாவானது வீண் தற்பெருமையற்றது என்பதை அவர் அறிந்திருந்தார், அப்புறம் அவரது உணர்ச்சிகளை முடமாக்கிய அந்த மனமகிழ்வின் உணர்ச்சியானது செருக்கோ கீழ்ப்படியாமையோ அல்லது வீண் தற்பெருமையோ அல்ல, மாறாக, நமது கர்த்தாவின் பாலான அவரது மெய்க்கருத்தின் தூய மகிழ்ச்சி கொண்டாட்டமாகும்.
ஒரு சில கணங்களில் வெப்பமானது மிக மோச மானதாக ஆகும் என்பதை அறிந்தவாறு, அவளது படுக்கையறையில், ரெபெக்கா மயக்கத்தை உணர்ந்தாள். புதுமைத்திறத்தின் ஒரு விளங்காத அச்சத்தினால் இந்நகரத்துடன் நிலைகொண்டிருப்பதாக அவள் உணர்ந்திருக்கவில்லை என்றால், அவளது துண்டு துணுக்குகளை அந்துருண்டைகள் உடையடிரங்குப்பெட்டியில் இட்டுக் கொண்டு வேறோர் வாழுலகை நோக்கிச் சென்றிருப்பாள், அவளது பூட்டனார் செய்தததைப் போன்று, அப்படித்தான் அவளிடம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்நகரத்தில், முடிவற்ற தாழ்வாரங்களுக்கும், வெப்பமானது நின்றுபோகும்போது திரைச்சீலைகளை ஒளியூடுருவும் கண்ணாடியை வைத்து அவர் மாற்றியிருக்கக்கூடிய ஒன்பது படுக்கையறைகளுக்குமிடையே மரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தாள் என்பதை உள்ளூர உணர்ந் திருந்தாள்.
அவள் அங்கேயே தங்கியிருப்பாள், என்று தீர்மானித்தாள் (அவள் தனது ஆடைகளைத் துணிமணிகளை வைக்கும் உள்ளறை நிலையடுக்கில் அடுக்கியபோது எப்போதும் எடுத்த ஒரு தீர்மானமாக அது இருந்தது), அப்புறம் ஓர் இளந்துறவியை அவர்களுக்கு அனுப்பிக் கொடுப்பதற்காக ‘எனது ஒப்புயர்வற்ற ஒன்றுவிட்ட உடன்பிறந்தாருக்கு’க் கடிதம் எழுதுவதற்கும் கூடத் தீர்மானித்தாள், ஆகையால் அவளுக்குச் சின்னஞ்சிறு வெல்வெட் மலர்கள் உள்ளதனது தொப்பியை அணிந்தவாறு மீண்டும் தேவாலயத்திற்கு வர முடியவும், ஒத்திசை வான திருப்பலி பூசையையும் பொருத்தமானதும் சமயத்தில் பற்றுறுதிக் கொள்ளச் செய்வதாகவும் இருக்கும் திருச்சபைப் பிரசங்கங்களை மீண்டும் கேட்கவும் முடியும். நாளை திங்கட்கிழமை, அவள் நினைத்தாள், அர்ஹேனீதா திடீரென்று திரைச்சீலை இடப்பட்டிருந்த கதவைத் திறந்து கத்தியபோது, மேற்றிராணியாருக்கான கடிதத்தின் முகமன்வாழ்த்தைக் குறித்துக் கட்டக்கடைசியாகச் சிந்திப்பதற்குத் தொடங்கியிருந்தாள் (அற்பமானதும் மரியாதைக் குறைவானதும் என்று கர்னல் புயெந்தியா அழைத்திருந்த ஒரு முகமன் வாழ்த்து):
‘சென்யோரா, சனங்கள் சொல்கிறார்கள் தந்தை திருச்சபை பிரசங்கமேடையிலிருந்து பைத்தியமானார் என்று!’
விதவை கதவை நோக்கி ஒரு குறிப்பிட்ட வகையில் வாடிச் சுருங்கியிருக்காததும் கடுமையானதுமான முகத்தைத் திருப்பினாள்.
‘கிட்டத்தட்ட அவர் ஐந்து வருடங்களாகப் பைத்தியமாக இருக்கிறார்,‘ என்று கூறினாள். அப்புறம் அவள் தனது துணிமணிகளை ஒழுங்குபடுத்தி வைப்பதைத் தொடர்ந்து செய்தவாறு, கூறினாள்:
‘தீய ஆவியை அவர் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்.’
‘இம்முறை தீய ஆவியை அல்ல.’ என்றாள் அர்ஹேனீதா.
‘பிறகு யாரை?’ என்று ரெபெக்கா வினவினாள், முறை பிசகாமலும் அலட்சியமாகவும்.
‘இப்போது அவர் சொல்கிறார் அலைந்து திரியும் யூதனை அவர் கண்டதாக.’
அவளது தோல் நெளிவதாக உணர்ந்தாள் விதவை.
அவளது கிழிந்த திரைச்சீலைகளை, வெப்பத்தை, இறந்த பறவைகளை, அப்புறம் கொள்ளைநோய் ஆகியவற்றை அவளுக்குப் பிரித்தறியாமல் இருந்ததற்கு இடையில், அவளது தொலைவான சிறுபிராயத் தின் மத்தியானங்களுக்கு அப்புறம் அவள் நினைவு கொண்டிராத அந்த வார்த்தைகளை அவள் கேட்ட போது, குழப்படியான எண்ணங்களின் ஒரு பல்திறம்அவளது தலை வழியாகக் கடந்துசென்றது: ‘அலைந்து திரியும் யூதன்.’ அப்புறம் அவள் நகரத் தொடங்கினாள், சீற்றமடைந்து, பனிக்கட்டியாக உறைந்தவாறு, அர்ஹேனீதா வாய்பிளந்து அவளை நோக்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி.
‘அது உண்மைதான், என்றாள் ரெபெக்கா’ அவளது இருத்தலின் அடியாழங்களிலிருந்து எழுந்து வந்த ஒரு குரலில். ‘இப்போது எனக்குப் புரிகிறது பறவைகள் ஏன் மரிக்கின்றன என்று.’
பேரச்சத்தினால் உந்தப்பட்டு, அவள் தன்னை ஒரு கருப்பு பூத்தையல் செய்யப்பட்ட சால்வையை வைத்து மூடிக்கொண்டு, மின்னற்பொழுதில், நீண்ட இடைநாழியையும் அலங்காரப் பொருட்களால் திணிக்கப்பட்டிருந்த வசிப்பறையையும், அப்புறம் வாயிற்கதவையும், பலிபீடத்தைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், மருரூபம் கொண்டும் ‘நான் அவனைக் கண்டேன் என்று சத்தியம் செய்கிறேன் உங்களிடம்.
இன்று காலை தச்சனான யோனாசின் மனைவிக்குக் கடைசியான திருமுழுக்காட்டைச் செய்துவிட்டு நான் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவன் என் பாதையில் கடந்து சென்றான் என்று நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன்.
அவனது முகமானது கர்த்தாவின் சாபத்தினால் கறுத்திருந்தது என்றும், அவனது நீத்தார் கண்விழிப்பில் எரியும் கங்குகளின் ஒரு தடத்தை அவன் விட்டுச் சென்றான்’ என்றும் கூறிக்கொண்டிருந்த தேவாலயத்திற்குச் செல்லும் இரண்டு கட்டிடத் தொகுதிகளையும் கடந்தாள்.
அவரது திருச்சபை பிரசங்கம் நின்றுபோனது, அந்தரத்தில் மிதந்தவாறு.
தனது கைகளின் நடுக்கத்தை அவருக்குக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார், அதாவது அவரது உடல் மொத்தமும் குலுங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அப்புறம் ஒரு உறைபனிக் குளிரான வியர்வையின் நூலிழை மெதுவாக அவரது முதுகுத்தண்டில் கீழிறங்கிக் கொண்டிருந்தது என்பதையும்.
அவர் நோவுற்றதாக உணர்ந்தார், நடுக்கத்தை உணர்ந்தவாறு, அப்புறம் தாகத்தையும், அப்புறம் தனது குடலில் ஒரு வன்மையான முறுக்கலையும், அப்புறம் அவரது அடிவயிற்றில் ஓர் ஆர்கன் குழாயின் அதிர் சுரத்தைப் போன்று எதிரொலித்த ஓர் இரைச்சலையும். அப்புறம் அவர் உண்மையை உணர்ந்துகொண்டார்.
தேவாலயத்தில் சனங்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டுகொண்டார், அப்புறம் அந்த ரெபெக்கா, இரங்கத்தக்க விதமாக, பகட்டாகக் காட்டிக்கொண்டு, அவளது கைகளை விரித்தவாறு, அப்புறம் கடுமையான, வாலுலகங்களை நோக்கித் திரும்பிய உறைந்த முகத்துடன், தேவாலயத்தின் நடுப்பகுதியில் முன்னேறி வருவதைக் கண்டார்.
என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர்குழப்பமாகப் புரிந்துகொண்டார், அவர் ஓர் அற்புதத்தைக் கண்டுகொண்டிருந்தார் என்பதை நம்புவதற்கு வீண்தற்பெருமையாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொள்ளும் அளவிற்குப் போதுமான தெளிவுடன் இருந்தார்.
தாழ்மையுடன் தனதுநடுங்கும் கரங்களைத் திருச்சபை பிரசங்க மேடையின் மரவிளிம்பில் வைத்துக்கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.
‘அப்புறம் அவன் என்னை நோக்கி நடந்துவந்தான்,’ என்றார் அவர். அப்புறம் இந்தத் தடவை அவர் நம்பவைப்பதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருந்த தனது சொந்தக் குரலைக் கேட்டார்.
அவன் என்னை நோக்கி நடந்து வந்தான், அப்புறம் அவன் மரகதக் கண்களையும் பரட்டையான தலை முடியையும், வெள்ளாட்டுக்கிடாவின் மணத்தையும் கொண்டிருந்தான்.
அப்புறம் நமது கர்த்தாவின் பெயரால் அவனைப் பழித்துரைப்பதற்காக என் கையை உயர்த்தி, அப்புறம் அவனிடம் கூறினேன்: “நில், ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியிடுவதற்கான நன்னாளாக ஒரு போதும் ஞாயிற்றுக்கிழமை இருந்ததில்லை.”
அவர் முடித்தபோது, வெப்பம் வந்துவிட்டிருந்தது.
அந்தத் தீவிரமான, கடினத்தன்மையான, அந்த மறக்க முடியாத ஆகஸ்டின் எரியும் வெப்பம்.
ஆனால் தந்தை இசபெல் ஆந்தனி இனிமேலும் வெப்பத்தைப் பற்றி அக்கறை கொண்டவராக இல்லை. அவர் அறிந்திருந்தார், அவரது முதுகிற்குப் பின்புறம், நகரமானது மீண்டும் பணிவுடன் இருந்தது என்று, அவரது திருச்சபை பிரசங்கத்தினால் பேச்சற்று, ஆனால் அவர் அதனால் கூட மகிழ்ச்சியடையவில்லை.
அவரது பாழ்பட்ட தொண்டைக்கு ஒயினானது இதமளிக்கும் என்ற உடனடியான எதிர்ப்பார்ப்பினாலும் கூடஅவர் மகிழ்ச்சியடையவில்லை.
அவர் அசௌகரியமாகவும் இடம் மாறி வந்தவராகவும் உணர்ந்தார். அவர் கவனம் சிதறியதாகவும் தியாகத்தின் உச்ச கணத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாதவர் ஆகவும் உணர்ந்தார்.
கொஞ்சகாலமாகவே இதே விஷயம் அவருக்கு நிகழ்ந்து கொண்டிருந்தது, ஆனால் தற்போது இது வேறுவகையான கவனச்சிதறலாக இருந்தது, ஏனென்றால் அவரது எண்ணங்கள் ஓர்உறுதி செய்யப்பட்ட மன உளைவினால் நிறைக்கப்பட்டிருந்தன.
பிறகு அவரது வாழ்க்கையில் முதன் முறையாக, அவர் கௌரவத்தை உணர்ந்தார். அப்புறம் அவர் கற்பனைசெய்திருந்ததையும் அவரது திருச்சபை பிரசங்கங் களிலும் வரையறுத்திருந்ததை அப்படிப் போலவே, தாகத்தைப் போன்று கௌரவமும் ஒர் உந்துதலே என்று உணர்ந்தார்.
நற்கருணைப் பேழையை ஊக்கத்துடன் அடைத்துவிட்டு அவர் கூறினார்:
‘பித்தகோரஸ்.’
மொட்டையடிக்கப்பட்டதும் பளபளப்பானதுமான தலையை உடைய ஒரு குழந்தையான, தந்தை ஆந்தனி இசபெல்லின் ஞானப்புதல்வனான, அவர் அவனுக்குப் பெயரிட்டிருந்தவனுமான, திருக்கோயில் ஏவலன், பலிபீடத்தை நோக்கி வந்தான்.
‘காணிக்கைகளை எடுத்துக்கொள்,’ என்றார் துறவி. குழந்தை முழித்தான், முற்றிலுமாகச் சுற்றித்திரும்பி விட்டு, அதன்பிறகு கிட்டத்தட்ட கேட்க முடியாததொரு குரலில் சொன்னான், ‘காணிக்கைத் தட்டு எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.’
அது உண்மையாக இருந்தது. காணிக்கைகள் எடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன.
‘அப்படியென்றால் திருப்பூட்டறைக்குச் சென்று ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு உன்னால் முடியும் அளவிற்குச் சேகரித்துக்கொள்,’ என்றார் தந்தை.
‘அப்புறம் நான் என்ன சொல்லவேண்டும்?’ என்றான் பையன்.
தந்தை எண்ணப்பூர்வமாக அவனது மொட்டை யடிக்கப்பட்ட, அதன் மேற்புடைப்பான பொருத்து வாய்களுடன் இருந்த நீலமண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தார்.
இப்போது முழிப்பது யாரென்றால் அது அவர்தான்:
‘அலைந்து திரியும் யூதனைத் துரத்துவதற்கு என்று சொல்,’ என்றார் அவர், அப்புறம் அவர் அதைக் கூறிய போது தனது இதயத்தில் ஒரு பெரும் சுமையைத் தாங்கிக்கொண்டிருந்ததாக உணர்ந்தார்.
ஒரு கணத்திற்கு அந்த நிசப்தமான ஆலயத்தின் மெழுவர்த்திகள் உருகிச்சொட்டும் ஒலியையும் தனது சொந்த உணர்ச்சிவயப்பட்டதும் கடினமானதுமான சுவாசத்தைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை.
அப்புறம், திருச்சபை ஏவலன் அவனது உருண்ட விழிகளைத் திகைப்புடன் அவரின் மீது வைத்து நோக்கியபோது, திருச்சபை ஏவலனின் தோளில் தனது கையை வைத்தவாறு, அவர் கூறினார்:
‘பிறகு பணத்தை எடுத்து தொடக்கத்திலிருந்தே தனியாக இருக்கும் அந்தப் பையனிடம் கொடு, நீ அவனிடம் சொல் இது துறவியிடமிருந்து என்றும், அப்புறம் அவன் ஒரு புதிய தொப்பியை கட்டாயம் வாங்கவேண்டும் என்றும்.’
One day after Saturday by Gabriel Garcia Marquez. English translation: J. S. Bernstein. From: Gabriel Garcia Marquez: Collected Stories (Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Jonathan Cape, 1991.
இன்று எனக்குச் செய்வதற்கு ஏராளம்:
நினைவை அதன் இறுதி வரை கொல்லவேண்டும்
மண்ணைக் கல்லாக்கவேண்டும்,
எவ்வாறு வாழ்வதென்று மீண்டும் கற்கவேண்டும்.”
அக்மதோவா
அன்னா அக்மதோவா (1889-1966) என்னும் ரஷ்யக்கவி அழகியாக மிளிர்ந்து, கவிதையாக ஒளிர்ந்தவர். அழகு, காதல், கவிதை ஒருங்கிணைய அற்புத ஆளுமை யாக விளங்கியவர்.
கொந்தளிப்பான காலகட்டத்தில் அசாதாரணமான வாழ்வை கடக்க முயன்றவர். துயரத்தில் உறைந்துபோன ஒரு தேவதை.
இசையா பெர்வின் (1907-1997) என்னும் ரஷ்ய-பிரித்தானிய சமூக - அரசியல் கோட்பாட்டாளர் 1945ல் ஒரு முறை லெனின் கிராடில் (பீட்டர்ஸ்பர்க்) அன்னா அக்மதோவாவை சந்தித்துப் பேசினார்.
போரினையும் ஒடுக்குமுறையினையும் பேசத் தொடங்கிய அவர்கள். தம் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.
சிறுமியாயிருந்தபோது தன் போக்கு, கவிஞர் குமிலோவை மணந்து கொண்டது, கணவன் தூக்கிலிடப்பட்டது பற்றியெல்லாம் குறிப்பிட்ட அக்மதோவா, பைரனின் டான் யுவான் கவிதை வரிகளை அவ்வளவு வேட்கையுடன் எடுத்துரைத்தார்.
அடுத்து தன் கவிதைகளில் ஒன்றிரண்டை காட்டி, தன் சகாக்களில் ஒருவர் அரசினால் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த போது அழுதுவிட்டார். முதல் நாள் மாலையில் தொடங்கிய இச்சந்திப்பு மறுநாள் காலை 4 மணியான பின்னும் முடியவில்லை.
அப்போது தான் அவர்கள் பேச்சில் புஷ்கினும் செக்காவும் இடம் பெற்றனர். இருவரும் இவ்விரு இலக்கியவாதிகள்பற்றி உடன்பாடான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
அடுத்து பெர்லினுக்குத் துர்கனேவிடம் அபிமானம் எனில், அக்மதோவாவுக்குத் தாஸ்தோயெவ்ஸ்கியிடம் ஈடுபாடு. ஒருவரின் ஏக்கத்தை/ துயரத்தை அடுத்தவர் புரிந்து கொண்டார்.
“அன்றிரவு பெர்வினது வாழ்வு, கலையின் பரிபூரணத்திற்கு அவ்வளவு நெருக்கமாக வந்துவிட்டது” என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாளர் மினகல் இக்னேஷியஃப். பெர்வின் தன்அறைக்குத் திரும்பியது காலை 11 மணிக்கு.
“மிகவும் தகுதியான அறிவு, தரவுகளில் இல்லை மாறாகப் பண்பாட்டின் மாபெரும் படைப்புகளிலும் மானுடம் சுவீகரித்துள்ள தார்மிக, உணர்வோட்ட, இருத்தலியல் ஞானத்திலும் உள்ளது” என்று அச்சந்திப்பை விளக்குகிறார் டேவிட் ப்ரூக்ஸ் என்னும் எழுத்தாளர்.
‘பெர்வினும் அக்மதோவாவும் அத்தகைய வாழ்க்கையை மாற்றும் உரையாடலை நிகழ்த்த முடிந்தது, அவர்கள் நிறைய வாசித்திருந்ததால்; ஆன்மிக ரீதியில் வேட்கை மிகுந்திருந்ததால்; நாம் நம்மைப் புரிந்து கொண்டிருப்பதை விடவும் மேலாகப் புரிந்துள்ள மேதைகள் எழுதிய இலக்கியத்தை அவர்கள் பொதுமொழியாகக் கொண்டிருந்ததால்’ என்கிறார் டேவிட் ப்ரூக்ஸ்.
*******
அக்மதோவாவின் தோழியும் அவரைப் போலவே இழப்புக்கும் உள்ளான அகோவ்ஸ்கயா தன் சிநேகிதி பற்றிய உருவச் சித்திரத்தை இப்படித் தீட்டுகிறார்:
“நாளுக்கு நாள், மாதாமாதம் என் துண்டு துணுக்கான குறிப்புகள், என் வாழ்வின் மறு உருவாக்கம் என்பது குறைந்து, அக்மதோவாவின் வாழ்க்கைச் சம்பவங்களாக மாறிக்கொண்டிருந்தன.
அவளது வார்த்தைகள், செயல்கள், தலை, தோள்கள், கைகளின் அசைவுகளெல்லாம் அவ்வளவு பூரணம்கொண்டிருந்தன.
அவை இவ்வுலகில் மாபெரும் கலைப் படைப்புகளுக்கே உரியவை. இதனால் அவள்பால் ஈர்க்கப்பட்டேன்.
என் கண்களுக்கு முன்பாகவே, அவளது ஆளுமையை விடவும் மிகப்பெரிதான அவளின் விதி, இப்புகழ்பெற்ற- புறக் கணிக்கப்பட்ட, வலுமிக்க, நிராதரவான பெண்ணில் இருந்து, துயரம், தனிமை, பெருமிதம், தீரமிக்கச் சிலையைச் செதுக்கிக்கொண்டிருந்தது.”
*******
அக்மதோவாவின் 14 வயதிலிருந்து அவரை விடாப்பிடியாகக் காதலித்து வந்துள்ளவர் கவிஞர் குமிலோவ். ஆனால் அக்மதோவாவுக்கு இன்னொருவர் மீது; தன் காதல் ஏற்கப்படாத நிலையில் வருந்தி இருந்தார்.
தான் காதலிக்கப்படாத நிலையில் இரண்டொரு முறை தற்கொலைக்கு முயன்றார் குமிலோவ். இதனால் குமிலோவை மணந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகினார் அக்மதோவா. இது குறித்த அவரது பதிவு:
“என் ஒட்டுமொத்த ஆயுளுக்காகவும் நஞ்சூட்டப் பட்டிருக்கிறேன்; ஏற்கப்படாத காதலின் நஞ்சு கசப்பானது! மீண்டும் என்னால் காதலிக்க முடியுமா? முடியவே முடியாது! ஆனால் குமிலோவ் எனது விதி, நான் அதனிடம் அடி பணிகிறேன்... மகிழ்ச்சியற்ற இம்மனிதன் என்னுடன் மகிழ்ச்சியடைவான்.”
இம்மூன்று குறிப்புகளும் சுட்டிக் காட்டும் ஆளுமை, அன்பும் சிநேகமும் கலந்த அறிவுஜீவியாக இருக்கவேண்டும்; ஒரு பண்பாட்டின் மலர்ச்சியாக இருக்கவேண்டும்; ஒரு கலைப்படைப்பாகத் திகழ்ந் திருக்கவேண்டும்; காதல் என்பது உணர்வோட்ட மட்டுமில்லை, ஆக்கபூர்வமானது எனக் கவிதைகள் எழுதியது, மற்றவருக்கு வாழ்வளித்தது.
******
அக்மதோவாவுக்கு 17 வயதாயிருந்த போது, அவர் எழுதிய கவிதைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அக்கவிதைகளைச் சகித்துக்கொள்ள முடியாத அவரது தந்தை ஆண்ட்ரெய் கோரென்கோ, தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்காமல் அப்பெயரில் (அன்னா கோரென்கோ) எழுதுவதைத் தவிர்க்குமாறு கண்டித்துவிட்டார்.
கலகக்குணமும் சுதந்திர மனோபாவமும் மிக்க அன்னா உடனே அப்பெயரை விட்டு விட்டு தாய்வழி கொள்ளுப்பாட்டியின் பெயரான அக்மதோவாவினை தெரிவு செய்துகொண்டார்.
இப்பெயருக்குப் பின்னே ஒரு வரலாற்றுக் குறிப்பும் உண்டு.
அவரது தாய்வழி மூதாதையர் செங்கிஸ்கான்மரபினர். அம்மரபில் வந்த தார்தாரிய குறுநில மன்னன் 1481இல் கொலையுண்ட கான் அஹ்மத். அஹ்மத்தின் விரிவாக்கமாக வந்த பெயர் அக்மதோவா.
கவிஞர் குமிலோவை 1910இல் மணந்துகொண்டார் அக்மதோவா. ராணுவத்தில் பணியாற்றிய குமிலோவ் எதிர்ப்புரட்சியாளர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
அதற்கு முன்னரே 1918இல் அக்மதோவாவும் குமிலோவும் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 1912இல் பிறந்த மகனே லெவ்.
1918லேயே அக்மதோவா, கவிஞரும் அஸ்ஸரிய அறிஞரும் பேராசிரியருமான ஸிலைகோவை மணந்து கொண்டார்.
1926ல் அவரிடமிருந்து பிரிந்தபின் இன்னொரு கவிஞர் நிகோலாய், நிகோலோவிச் புனினுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஏற்கனவே ஒரு குடும்பம் நடத்தி வந்திருந்தவர் புனின்.
இதற்கிடையே தேர்ந்த வரலாற்றாசிரியராக விளங்கிய லெவ், எதிர்ப்புரட்சியாளர் குமிலோவின் மகன் என்ற வகையிலேயே கைதாகி 1935-56 காலகட்டத்தில் கட்டாய உழைப்பு முகாம்களில் அடை பட்டவர்.
மகனுக்கு நேர்ந்த இச்சோகமே அக்மதோவாவை ஆட்டிப் படைத்தது. மகனைப் பார்க்க மணிக்கணக்கில் இறைவளாகங்களில் காத்திருந்தும் பதற்றப்பட்டதும் தவித்ததுமே அவரது முக்கியக் கவிதைகளுள் ஒன்றான Requiem-னை எழுத வைத்தது.
1925-ல் அவரது நூல்களெல்லாம் தடை செய்யப் பட்டன. அக்மதோவா ‘ஒரு பாதி வேசி- ஒரு பாதித் துறவுக்கன்னி’ என்ற குற்றச்சாட்டின் பேரில் ஸ்டாலின் காலத்தில் ஒதுக்கப்பட்டார்.
குறுகிய காலம் பார்த்த நூலகர் வேலையும் போனது.
சோவியத் எழுத்தாளர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். எந்த வழி வகையும் இல்லாத நிலையில் நண்பர்கள் ஆதரவைக் கொண்டே பிழைத்து வந்தார்.
இவ்வளவுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டு அக்மதோவாவின் தனிப்பட்ட ஒழுக்கநெறிச் சார்ந்தது. அது அரசியல் தளத்தில் எழுமுன்பு, இலக்கியத்தரத்திலேயே எழுந்துவிட்டது.
போரிஸ் மிகைலோவிச் எய்கன்பாம் என்னும் விமர்சகரே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தவர். இதற்கும் அக்மதோவாவின் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம்?
இரண்டாவது கணவர் ஸிலைகோ, பேராசிரியராகக் கவிஞராக அறிஞராக இருந்தபோதும், அக்மதோவா தன்னளவில் ஓர் அறிவுஜீவியாகக் கவிஞராக இயங்கு வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
White flock - தொகுதி 1919இல் மறுபதிப்பு வருவதற்கான ஒப்பந்தத்தில் அக்மதோவா தன் இரண்டாவது கணவர்பெயரைச் சேர்க்காமல், தன் பெயரிலேயே ஒப்பம் இட்டார். இதனால் ஆத்திரமுற்ற ஸிலைகோ, தன் மனைவி புதிதாய் கவிதைகள் எழுதக்கூடாது என்று சீறினார்.
அதனைப் புறக்கணித்து அக்மதோவா எழுதிய கையெழுத்துப்படிகளை எரித்துவிட்டார்.
அக்மதோவா அரசினால் ஒடுக்கப்பட்டதும் வதை பட்டதும் உண்மை. ஆனால் அதற்குத் தூபம் போட்ட தாக இலக்கியவாதி இருந்துள்ளார்.
முன்னோடித் தடையாளாராக ஒரு கவிஞர் இருந்து உள்ளார் என்பது அவ்வளவாகக் கவனிக்கப்படாத விஷயமே.
அவரிடம் உள்ள சுதந்திர உணர்வை தடை செய்பவராக அவரின் தந்தை இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
1921இல் அக்மதோவா எழுதிய கவிதை.
வாழ்வென்பது மற்றவர்களுக்காக
உனக்கானது அல்ல
பனியின் குளிரில் கிடக்கின்றாய்
துப்பாக்கி முனைகள் செய்தவை
இருபத்தெட்டுப் புண்கள்
துப்பாக்கிக்குண்டுகள் செய்தவை
இன்னொரு அய்ந்து
புதிய துயரின் ஆடையை நெய்தேன்
என் நேசத்திற்காக
ரஷ்யபூமி நேசிக்கிறது சுவையை
நேசிக்கிறது குருதியின் சுவையை
இக்கவிதை அக்மதோவாவின் தனிப்பட்ட துயரினை வலியை வெளிப்படுத்துவதுடன் ரஷ்யக் குடியானவரின் ரஷ்ய பூமியின் அவலங்களையும் வதைகளையும் வெளிப்படுத்திவிடுகிறது.
அக்மதோவாவின் வாழ்வில் 1936-41 காலகட்டம் கொந்தளிப்பானது. பீதியும் பதற்றமும் நிறைந்தது. அதே சமயம், படைப்பாக்க ரீதியில் வளமானதும்ஆகும். இது பற்றி அவரே சுட்டிக் காட்டியிருக்கிறார்:
“உயிர் வாழ்வோரின் பட்டியலிலிருந்து என் பெயர் நீக்கப்பட்டது... பீதி, அயற்சி, வெறுமை, மரணம் போன்ற தனிமை நிறைந்த அந்த ஆண்டுகளின் அனுபவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, 1936இல் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
ஆனால் என் கையெழுத்து மாறியிருந்தது, என் குரல் வேறுபட்டு ஒலித்தது... requiem எழுந்தது (1935-40) என் பழைய பாணிக்குத் திரும்ப வழியில்லை.
எது நல்லது, எது மோசமானது என்று நான் சொல்லக்கூடாது.
1940 உச்சமாயிருந்தது.
ஒன்றின் குதிகால்களை இன்னொன்று தொற்றியபடி விரைந்தும் மூச்சுத் திணறியும் கவிதைகள் ஒலித்தன இடையறாமல்...”
1937 ஸ்டாலின் ஆட்சியில் கட்சியினையோ ராணுவத்தையோ நம்பமுடியாத நிலையில் எவ்வளவு பேர் கைது செய்யப்படவேண்டும், எவ்வளவு பேர் நாடு கடத்தப்படவேண்டும் என்பதற்கு மண்டல ரீதியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
1937-38இல் தூக்கிலிடப்பட்டவர்கள் 6,81,692 பேர். நாட்குறிப்பில் அரசியல் நகைச்சுவையினைக் குறித்து வைத்து இருந்தால் கூடக் குற்றமாகக் கருதப்பட்டதன் உச்சபட்ச விளைவு இது.
அக்மதோவாவின் மகன் லெவ் சிறைப்பட்டதும் நண்பர் மேண்டல்ஸ்டாம் நாடு கடத்தப்பட்டதும் இக்காலக் கட்டத்தில்தான். கவிஞர் நிகோலாய் க்ளியுயேவும் தூக்கிலிடப்பட்டது இக்காலக்கட்டத்தில்தான்.
1925இல் தடைசெய்யப்பட்ட அக்மதோவா நூல்கள் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் 1940இல் தான் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மொழி பெயர்ப்புகள் வாயிலாக உலகமும் அப்போதுதான் விரிவாக அறிந்து கொள்கிறது.
காதலை கவிதையாக்கி கவிதையை வாழ்வாக்கிக் கொண்டிருந்த அக்மதோவா ‘வைரப்பனி’யாக ஒளிர்ந்தவர். அக்மதோவாவை இளமையில் பாரிஸில் சந்தித்த ஓவியரும் சிற்பியுமான மோதிக்ளியானி தன்னை அப்படியே மறந்து போனார்.
இருவரும் வெர்லெய்ன், பாதிலேர், மல்லார்மே போன்றவர்களின் பிரெஞ்சு கவிதைகளில் ஆழ்ந்தனர். அக்மதோவாவை எண்ணற்ற ஓவியங்களாக வடித்தார் மோதிக்ளியானி.
அவற்றில் நிர்வாண ஓவியங்களும் உண்டு. பல ஓவியங்களை அக்மதோவாவிடம் வழங்கவும் செய்தார். பெரும்பாலானவை காணாமல்போக, ஒன்றினை மட்டும் அக்மதோவா பெருமிதத்துடன் தன் அறையில் மாட்டியிருந்தார்.
பிரெஞ்சுபண்பாட்டில் வளர்க்கப்பட்டிருந்த அக்மதோவா வுக்குப் பிரெஞ்சு சூழலும் பிரெஞ்சு கவிதைகளும்மோதிக்ளியானி நட்பும் சேர்ந்து அவரை மெய்மறக்கச் செய்துவிட்டன.
இத்தகைய ஆளுமை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆட்பட்டது போல, தனிப்பட்ட நிலையில் நண்பர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டு முதல் கணவன் தூக்கிலிடப்பட்டு, ஒரே மகன் கட்டாய உழைப்பு முகாமில் வதைபட, தன் எழுத்து 15 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருக்க, அன்றாட வாழ்வுக்கான குறைந்த பட்ச வழிவகையும் பறிக்கப்பட்டு உறைநிலைக்குத் தள்ளப்பட்டார்.
என்றாலும் அவரது சக பயணிகள் போல, அதிருப்தி/ உடன்பாடின்மை காரணமாக ரஷ்ய மண்ணிலிருந்து புலம்பெயர விரும்பவில்லை. அவரது கண்ணீரும் கற்பனையும் கவிதையும் ரஷ்ய மண்ணின் வாசம் பெற்றிருந்தன.
புடம் போட்ட தங்கமாய் மீண்டெழுந்து அவர் எழுதிய Requiem, The Way of All the Earth, Poem Without a Hero என்னும் நீண்ட கவிதைகள் ரஷ்ய மண்ணின் துயரத்தை அவரது துயரத்துடன் ஊடு பாவாக்கி நெய்யப்பட்டவை.
தலைசிறந்த இக் கவிதைகள் தாந்தேயின் தெய்வீக நாடகத்தின் உத்வேகத்தில் பிறந்தவை என்பதால் உலக இலக்கிய வாசகனுக்கு எப்போதும் ஒளி பாய்ச்சும் மின்மினிகள்.
ஸ்டாலின் கால ஒடுக்குமுறை விபரங்களும் அக்ம தோவாவின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளும் அறியாத வாசகனுக்கு இக்கவிதைகள் புதிர்கள்தான். அதிலும் அக்மதோவா என்னும் ஆளுமை மர்மம்தான்.
அக்மதோவா தன் இறுதிக் காலத்தில் எழுதி வந்த குறிப்பேடுகளில் ஓரிடம். poem without a hero தொடர்பானது... ஆரம்பகட்ட மாயகோவ்ஸ்கி கணப் பருகே புகை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். என்னை அங்கே காணவில்லை, ஆனால் எங்கோ ஓரிடத்தில் என்னை ஒளித்து வைத்திருப்பேன் மோதி க்ளியானி ஓவியத்தின் நெஃபெர்டிடியாக இல்லாது போனால்.
1911இல் அவர் அப்படித்தான் எகிப்திய தலையலங்காரத்துடன் என்னைப் பலமுறை தீட்டியிருந்தார். தாள்களை நெருப்பு விழுங்கிவிடக் கனவு ஒன்று அவற்றிலொன்றை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.”
அக்மதோவாவின் உணர்வுநிலையைப் பிரக்ஞையோட்டத்தை ஆன்மாவின் தவிப்பைச் சொல்வதற்கு இணையான கவிதை பிரவாகத்தை ஈழப் போர்க்களத்திலிருந்து பாயவிடுகின்றார் கருணாகரன்.
கடந்துசெல்லும் ரெயினில் யாரும்
கையசைக்கவோ
புன்னகைக்கவோ இல்லை
சாவின் அதிர்ச்சியில் எல்லோரும்
உறைந்துவிட்டனர் போலும்
இறந்தவரைப் பற்றிய துக்கமும்
மரணத்தின் கலக்கமும்
எல்லோரையும் சோர்வடையச் செய்திருக்கிறது
துக்கம் அப்பிய கணங்களில் சுரக்கும்
இரக்கத்தை முகர்ந்து பார்க்கிறேன்
வேதனையின் வேர்கள் பரவிக்கிடக்கின்றன
எல்லா இடத்திலும்
அக்கணத்தில் ஒரு மின்னலாக
குறுஞ்செய்திகளில் ஒரு முத்தத்தைப்
பகிர்ந்துகொண்டிருக்கிறாள்
ஒரு பெண்
சாவுச் செய்தியில் செருகப்பட்ட மலராகியது
அவளுடைய அந்த முத்தம்
இறந்தவனின் உடல் வாசனைத் திரவமாகி
அந்த ரெயினைக் கரைத்தது.
(குறிப்பு: இலங்கைத் தமிழர் வழக்கில் ரெய்ன் என்பது ட்ரெய்ன்)
ஆணின் அதிகாரத்தையும் அரசின் அதிகாரத்தையும் எதிர்த்த கலகக் குரல் அக்மதோவாவினுடையது. அவர்“ரகசியத்திலிருந்து வெளிப்படும் மர்மம், மர்மத்திலிருந்து அவிழும் புதிர்”.
இப்புதிரை அறிந்தவர்களாக இசையா பெர்லின் இருக்கக்கூடும், மோதிக்ளியானி இருக்கக்கூடும்.
‘சூரியன் எழுந்தது நகரில் கலகக்காரனைப் போல்’என்னும் அக்மதோவாவின் வரி அவருக்கும் பொருந்தும்.
துயரத்தின் நிறங்கள்
மனித சமூகத்தில் உலகெங்கிலும் கறாரான இருமையின் எதிர்வுகளால்(0:1, ஆண்: பெண்) கடுமையான உடல் - மனச்சிதைவிற்கு ஆளாகிறவர்களாக பால்புதுமையினரே இருந்துகொண்டிருக் கிறார்கள்.
பருவ மாற்றங்களின்போதான உடலியல் முகிழ்வுகள் பொதுவாக மனிதர்களுக்கு புதுமையின் ஒளிர்வாக- பரவசமூட்டுவதாக - காலத்தின் வசந்தமாக அமைந்துவிடுகிறது.
ஆனால், அதுவே பால் புதுமையினருக்கு நரகத்தில் நுழையும் கொடுந்துயராக இருக்கிறது.
அத்தகைய நோவுகளையும் பாடுகளையும் உலகெங் கிலும் உள்ள பால்புதுமையினப் படைப்பாளர்கள் பல்லாயிரம் பக்கங்களில் எழுதி வைத்துள்ளனர்.
அதில் கவிதையில் எளிய சொற்களின் கோர்வையில் மிகப்பெரிய விசயங்களைச் சொல்லிச் செல்கின்றனர். அக்கவிதைகளில் படரும் துயரத்தின் சில நிறங்கள் ...
Allpoetry.com இணையத்தளத்திலிருந்து.
தடை செய்யப்பட்ட அப்பெயரை தட்டச்சு செய்கையில் நான் தொட்டப் பலகையின் ஒவ்வோர் விசையும் என் விரல் நுனிகளை எரித்தன உன் பெற்றோரின் கேள்வி “இதிலென்ன தவறு, நீயேன் இதை விரும்பவில்லை?” அவர்கள் உனக்குச் சொல்கிறார்கள் நீ ஒருபோதும் அவர்களது மகனாக இருக்க முடியாதென ஆனால், நான் எப்போதும் அவ்வாறுதான் இருக்கிறேன் அந்தப் பெண் இறந்து விட்டாள் வெகுகாலம் முன்பே அவள் மறைந்துவிட்டாள் ஆனால், அவன் இங்கேதான் வாழ்ந்துகொண்டு மற்றும் உயிருடன் இருக்கிறான் இறந்தவொரு உடலத்தைக் காட்டிலும் உயிருள்ள மகன் மேலன்றோ... உங்கள் மனங்களில் அவள் இறந்துவிடவே நான் விழைகிறேன் ஏனெனில், நான் அவளில்லை அவள் வெகுகாலம் முன்பே மறைந்துபோய் விட்டாள்.
- சலிம் வைஸர்
அந்தச் சிறுமி தன் முடிவற்ற இரவுகளை கண்ணாடிக்கு முன்பே கழித்தாள் தனது மாறுபட்ட பிறப்பினை விரும்பியவண்ணம் அவள் வேண்டுகிறாள் தனது குரல் தடித்த அழுத்தமான ஒன்றாக இருக்கலாகாது என தனது கணுக்கால்கள் மயிரடர்ந்ததாக இருக்கலாகாது என தனது தோள்கள் மிக அகன்றதாக இருக்கலாகாது என தனது மார்புகள் தட்டையானதாக இருக்கலாகாது என வேண்டினாள் யாசித்தாள் பிராத்தித்தாள் தன் மாறாத் துயர் மீண்டு வெறுமை அகன்று போகவென்று ஒரு நாள் அவளது இறந்த உடலத்தை அவர்கள் கண்டடைந்தனர் அவளது இறுதி அடக்கம் நடைபெறவுள்ளது - ஓர் ஆணின் உடலுக்கானதாக.
-டெஸ்மொமென்ட்
மக்கள் மென்மையான குரல்களைப் போற்றிப் புகழ்கின்றனர் அவை அன்பும் அரவணைப்பும் நிறைந்த குரல்கள் இனிமையும் நம்பிக்கையும் கொண்ட குரல்கள் கரகரப்பான குரல்களின் மீது அவர்கள் மையல் கொள்கிறார்கள் ஆண்மையும் ஆழமும் மிகுந்த குரல்கள் பாதுகாப்பு உணர்வு தரும் தொலைதூரக் குரல்கள் எனது கரடு முரடான குரல்களை எவரும் பொருட்படுத்துவதில்லை அது உடைந்து திரிபுற்ற குரல் ஆழமற்ற - அதே நேரம் பெரும் ஓசையற்ற குரல் அமைதியான ஆனால் மென்மையில்லாக் குரல் பாதுகாப்பான - ஆனால் ஆண்மையற்ற என் குரல் எவருமே பொருட்படுத்துவதில்லை ஆணாகப் பிறந்திடாத ஓர் சிறுவனின் குரலை.
-மெனோடொரா கெய்
கருத்த கோடுகளும் குறுகிய கம்பியிழைகளும் சிந்தனைக்குத் தடையாக வெளியே துருத்திக்கொண்டிருக்கும் ஓர் எளிய தொடுகை மட்டுமே போதும் அது கைகளின் அலைச்சலை நீக்கிப் பின் மனதை விழிப்புறச் செய்யும் ஓர் தகுதியான உடலில் இது முதிர்ச்சியின் அடையாளம் அழகான முரட்டுத்தனமான நிச்சயம் கவர்ச்சிகரமான அடையாளமே அது ஆனால் எனக்கோ அதுவொரு சாபம் என்றென்றைக்குமான ஓர் துயரத்தின் நினைவூட்டல் நீயொரு போலி நீயொரு தோல்வி என்பதாக அது சதியின் தோற்றுமுகமாயிருக்கிறது கண்ணாடியில் பார்க்கையில் பயங்கர நிழலெனத் தெரிகிறது சவரம் அவசியத் தேவை - ஒருவேளை அதைத் தீயிலும் பொசுக்கலாம் ரசாயனங்கள், இடுக்கி, லேசர் மற்றும் மெழுகு எல்லாம் எனக்கான ஆயுதங்கள் இவைகளின்றி என்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்மனம் பலவீனமானது அது உடைந்து நொறுங்குகிறது நினைவுகளின் வேதனை என்னை இருளுக்குள் தள்ளுகிறது மயிர்களும் கனத்த சதைகளும் கொண்ட கூண்டினுள் மீண்டும் நான் சிக்குண்டேன் எனது இடுப்பு மிகக் குறுகியது தோள்கள் நல்ல அகலமானவை என் மார்புகள் மிகத் தட்டையானவை வயிறு வீங்கிய வடிவிலானது என் மயிர் மெல்லியதாக இருக்கவேண்டும் அவை விரைவாக வளர்வதை நான் வெறுக்கிறேன் நீங்கள் நினைப்பதுபோல் இதுவென்றும் நகைச்சுவை அல்ல நான் அச்சம் கவலை மற்றும் மனச்சோர்வில் வீழ்ந்திடும்போது சில மயிர்களின் மேல் மட்டும் அதீத கவனம் செலுத்துகிறேன் இயற்கையன்னை உதவிக்கு வருவாள் மயிரின் நிறம் மெதுவாக மங்கும்போது அதன் ஒரு பகுதியை அவள் எடுத்துச் சென்றுவிடுகிறாள் நான் உடைந்து நொறுங்கி வீழும்பொழுதிலெல்லாம் எனக்குள் முணங்கிக்கொள்கிறேன் உறுதியுடன் இரு ஒன்பது ஆண்டுகளில் ஓர் மாற்றம் உருவாகும் நான் ஒவ்வொருமுறை கடந்து செல்லும்பொழுதும் கண்ணாடி என்னிடம் கிசுகிசுக்கிறது இறுதியில் அமைதியே நிலவுமென்று என் விருப்பங்களை நிலைநிறுத்த எனக்கேயான நங்கூரங்கள் இருக்கின்றன ஆனால் அவை அச்சத்தின் தொலைகாலத்திற்கு அப்பால் உள்ளன எனவே, இந்த மூடுபனிக்குள் சிக்குண்டவாறு நானிருக்கிறேன் எரியும் கோபத்தின் கடும் மன அழுத்தத்தின் வாழ்வினை நகர்த்தியவாறு.
-சராஃபியா
ஒன்பது கவை கொண்ட கல்மூங்கிலை வலது தோளில் சாய்த்து பிடித்தபடி முன்னால் நடந்தார் சாமியாடி சின்னப்பன், முதுகில் தொங்கிடும் தோல் பைக்குள் ஏழு பிரம்புகுச்சிகள் பளபளப்போடு நீட்டிக்கொண்டிருந்தன.
சின்னத் தொங்குகொண்டை பிடறியைத் தொடுகிறது. கரையின் இருபுறமும் நொச்சி மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மரங்களின் நிழல்களை மேற்கில் நீட்டி படுக்கவைத்திருக்கிறான்.
அந்த நிழல்களின் மீது மனித நிழல்கள் நகர்ந்தன. சின்னப்பனுக்குப் பின்னால் பெண்களும், பெரியவர்களும் வந்தார்கள்.
பேரன் காளிராசு வலது கையில் பொங்கல் செம்பையும், பூஜைபொருட்கள் இருக்கும் பையை இடது கையில் பிடித்தபடியும் ஓடை மணல் பாதங்களில் நெறநெறத்துப் பிதுங்க தாத்தாவின் பின்னால் பெருமிதத்தோடு நடந்தான்.
பூக்கள் நொச்சிக்கிளைகளின் நுனியெல்லாம் பூத்திருக்கின்றன. சின்னச் சின்னப் பூக்கள் மயில் விரிக்கும் தோகைபோல நீல நிறத்தில் மின்னின.
செம்மறியாடுகளும், வெள்ளையாடுகளும் கரைகளில் நுழைந்து ஏறி இறங்குவது வழக்கம் என்பதால் கொலைக்கொம்பு நொச்சியின் அடிக்கால்களில் பின்னியிருக்கவில்லை நொச்சிக் குச்சியை எந்த இடத்திலும் பிடித்து ஓடைக்கு வெளியில் வரும்படி சந்துகள் நிறைந்திருந்தன.
ஆடுகளின் மிதியடிகளில் உருண்ட கூழாங்கற்கள் சிவந்த மண்ணோடு கரையின் அடியோரம் கிடந்தன.
கருங்கல் பாலத்திற்குச் சற்று முன்னால் ஓடைக்கரையின் வலது பக்கம் சாய்வாக ஏறிச்செல்லும் பாதையில் சின்னப்பன் ஏறினார்.
இன்னும் உழாத செங்காட்டில் கால் வைத்ததும் நான்கு கல்தூண்களுக்கு மத்தியில் கிழக்கு பார்த்து கருப்பசாமி நிற்பது தெரிந்தது.
கையில் வைத்திருந்த ஆளுயர கல் மூங்கிலைத் தூக்கிக் காட்டினார். முப்பத்தேழாவது வயதாக இருக்கும்போது தன் ஐயா மாரியப்பன் கேரளாவில் நெடுங்கண்டத்தில் இருந்த கணபதியா பிள்ளையைப் பார்க்க அழைத்துப் போனார்.
நெடுந்தூரம் சென்று வந்தது அதுதான். ஐயாவிற்கும் வயதாகிக்கொண்டிருந்தது. அவர் வாலிபமாக இருக்கும் காலத்திலேயே ஊரில் இருந்த ஏழுகுடி பிள்ளைமார்களும் மெல்ல கேரளாவிற்குக் குடிபெயர்ந்து விட்டனர்.
மறவர்களும், நாடார்களும் சரிபாதியாக இருக்கும் ஊரில் இருபது பறையர்குடிகள் இருந்தாலும் பல வேலைகளில் ஈடுபட்டார்கள். அவர்களது வீடும் சின்னக் கோயிலும் கிழக்கோடியில் இருப்பதில் சில வசதிகளும் இருந்தன.
முக்கியமாக வெளிக்கிப் போவதற்குச் சின்னக் கம்மாய் இருந்தது.
கணபதியாபிள்ளை ஊரில் இருந்த காலத்தில் மாரியப்பன், செந்தட்டிச்செடிகள், பாப்பரங்காய் கொடிகள், நெருஞ்சித்தொட்டுக்கள் அடர்ந்திருக்கும் செடிகளைக் கொடை நாளில் செதுக்கித் தள்ளி சுத்தம் செய்து வைப்பார்.
பந்தல்கால் கொண்டுவருவது, வாழைமரம் கொண்டு வருவது, நான்கு முழ வேப்பிலைத் தோரணம் கட்டுவது என ஆட்களோடு சேர்ந்து செய்வார்.
கோயில் காரியம் முடியும் வரை எடுபிடி வேலைகள் அனைத்தும் மாரியப்பன் செய்வார். பின்னால் கருப்பசாமிக்கு கொடை விழா நடத்த ஆள் இல்லாமல் அப்படியே போட்டு விட்டார்கள், மாரியப்பன் இருந்தவரைக்கும் வருடம் ஒருமுறை விளக்குப் போட்டுவந்தார்.
மழைக் காலம் முடிகிற சமயம், குளிர்காற்றுக்கு வீட்டு முற்றங்களில் தூங்க முடியாது சாக்குகளைப் போர்த்திக் கூரைக் குடிலுக்குள் படுத்தால்தான் குளிருக்கு அடக்கமாக இருக்கும். தூக்கம் வரும்.
மந்தைத் தோட்டத்தை ஒட்டிப் பிள்ளைமார் வீடுகள் மேல் கடைவீடு சொக்கலிங்கம் பிள்ளை வீடு. அப்படியே பின்னால் தோட்டம், அவனுக்கு மூன்று பெண்பிள்ளைகள், மூன்றுவயது பிராயத்தில் பையனோடு, மேலும் தங்கம்மாள் இரண்டு மாத சூல் கொண்டிருந்தாள்.
இரவு மணமணக்க கருவாட்டுக் குழம்பைத் தொட்டு கேப்பக்களியை விழுங்கிவிட்டு முன்வராந்தாவிற்கு வந்து படுத்தார்கள்.
விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. மூத்திரம் போக எழுந்தவள் டிடிங் டங்கென்று அடுக்களையில் பாத்திரம் விழும் ஓசை கேட்டதும், கருவாட்டுக் குழம்பு வைக்கிற நாளில் இந்தப் பூனைகள் எங்கிருந்துதான் மோப்பம் பிடித்து வருமோ இப்படிபோட்டு உருட்டுது என்று ஜலதாரிக்குக்கூடப் போகாமல் அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.
அடுக்களையின் தெற்குச்சுவரில் பெரிய குகை வாயில்போல ஓட்டை விழுந்திருந்தது. தட்டுக்களில் பாத்திரபண்டங்கள் ஒன்றுகூட இல்லை, கேழ்வரகும் கம்பும் தரையெல்லாம் சிந்தியிருப்பதால் பார்த்ததும் பக்கென்றது.
மேல்சுவரில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலக்கும்பா மட்டும் புட்டியோரம் விழுந்து கிடக்கிறது. பதினேழு ரூபாய் வைத்திருந்த கடுகு டப்பாவும் போய்விட்டது.
‘ஐயோ கள்ளன்’ என்று அலரவும் முன்பக்கம் படுத்திருந்த சொக்கலிங்கம் தடியைத் தூக்கிகொண்டு அடுக்களைக்குள் நுழைந்தார்.
அரிக்கேன் விளக்கு ஆட்டத்தில் சொக்கலிங்கத்தின் நிழலுரு பெரிய கரிய பூதம்போலச் சுவரின் இருபுறம் அசைவது இன்னும் பயத்தைக் கொடுத்தது.
கன்னக்கோல் வைத்த மண்சுவரின் அந்தப் பக்கம் இருட்டு கருத்து அடர்ந்திருக்கிறது. மோசம் போய் விட்டதைக் கண்டதும் தெருவிற்கு ஓடி ‘கள்ளன் கள்ளன்’ என்று கத்தினார்.
ஏழு வீட்டு பிள்ளைமார்களும் அடுத்தத் தெருவில் இருந்த நாடாக்கமார்களும், பொன்னு ஆசாரியும் தேவர்களும் ஏத்தகுடி முந்திதான் நடந்திருக்கிறது.
கேகேவென்று ஆட்கள் கம்பும் தடியுமாக மந்தைத்தோட்டத்தில் திமுதிமுவெனப் புகுந்து தேடத்தொடங்கினார்கள். வானமெங்கும் வெள்ளிகள் வெள்ளை வெளேரென்று ஜொலிக்கின்றன.
நிலவு இல்லை, வரகின் மேற்பரப்புக் கடல்தளம் போலக் கருத்து விரிந்து கிடக்கிறது. வெகுதூரத்தில் நிற்கும் புளியமரக் கருத்தச் சின்னமலை அடுக்குபோலத் தெரிகின்றன.
வரகு பூட்டைவிடும் பருவத்தில் ஏகமாக நெஞ்சு உயரத்தில் தோகைவீசி நிற்கிறது. கண்ணருகாமை தாண்டியனால் கரம்பைக்காட்டு மேடுபோல விரிந்து தெரிகிறது, எங்கும் ஆள் அலுக்கு பலுக்குத் தென்படவில்லை, ஆனால் பிடி பிடிபிடிவென்று வரப்புகளின் வழியே சத்தமிட்டபடி வேகமாக முன்னேறிப் போனார்கள்.
கிழக்கில் சாம்பல் நிறமும் மெல்ல வருவதுபோலத் தெரிகிறது. விடிகிறது என்றாலும் கருமை வெளுத்துத் தோட்ட மெல்லாம் ததும்பி இருக்கிறது.
வீரபத்திர நாடார் பையன் பன்னீர் ‘அந்தா தெரியுது’ என்றான் எல்லோரும் தூரத்தில் தெரியும் வேப்பமரம் பக்கம் பார்க்கவும் சாம்பல்நிறமாக விடிந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கருத்த பெரிய குண்டுக்கல் போல வரகின் மேற்பரப்பில் நகர்ந்துபோவது தெரிந்தது.
‘அந்தா அந்தா’ சத்தமிட்டுக்கொண்டு அதனை நோக்கி ஓடினார்கள். கல் வேகமாக விரைந்து சென்றது. இந்தப் பக்கம் பாருங்க இன்னொன்று நகர்ந்து போகுது,
இடதுபக்கம் பார்க்க அந்தக் கல்லுக்கு ஐந்துகோல் இடைவெளியில் இந்தக் கல் நகர்ந்து. வரப்பு வழியாக நழுவி விழுந்தார்கள் எழுந்து துரத்துகிறார்கள் பின்தங்கி பெண்களும் துரத்திக்கொண்டு வந்தார்கள்.
கருது பரியும் பருவத்து வரகுவாசம் ஆவிபோலப் புடைகளிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. இளஞ்சூட்டோடு பச்சை மணம் தாக்கியது. வேகத்தில் சாம்பல் நிறம் வடிந்துகொண்டிருக்கிறது.
துரத்த துரத்த இரண்டு பாறைகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. இருட்டை துரத்த துரத்த அது புகையைபோல மாயமாகிக்கொண்டிருப்பதைப் போல நகர்ந்து போவது பாறையல்ல சாக்குமூட்டைகள் என்று தெரிய ஆரம்பித்தன.
‘அந்தா போறான் திருடன்’ அப்படி வளச்சுவா, இப்படி வளச்சுவா, ஒருமுகமாக ஓடினார்கள்.
நெருங்கநெருங்க கிழக்கால் பாதை வந்தது, திடுக்கென மூட்டையைச் சாலையோரம் போட்டுவிட்டு சட்டை போடாத கருத்த மனிதன் எழுந்தான்.
கருத்துப் பளக்கிறது உடம்பு “டேய் எவன் வந்தாலும் வெட்டிப் பொலி போடுவேன், வாங்கடா தாயோளிகளா” வீச்சருவாளைத் தூக்கி ஓங்கினான். மற்றொருவன் சற்றுத் தள்ளி எழுந்தான் வேர்வையால் நனைந்த திடகாத்திரமான நடுக்கட்டு வயதுக்காரன், அறுவாளைக் காட்டி “இந்தச் சாக்கு மூட்டையில் தலையை வெட்டிக் கொண்டுபோவேன் வாங்கடா என்னடா செஞ்சிருவீங்க, வாங்கடா தலையோட சுண்ணியையும் வெட்டி எடுக்கிறேன்” வாய்க்குவந்தபடி திட்டத் தொடங்கினான்.
பைசல் பாண்டித் தேவருக்கு முன் கம்போடு வந்துகொண்டிருந்த பாலுத் தேவர், “அவனுக கெட்டபயலுகளா இருக்கானுக. குன்னக்கோல் பயலுக ரெண்டு பொருள் போனா போகுது, களசானிப்பயலுக உசுர எடுத்திடுவாங்க, அந்தளவில வாங்கப்பா அப்பறம் பார்த்துக்கிடலாம்” என்றபடி அப்படியே நின்றார்.
விரட்டிக்கொண்டு முன்னால்போன சிவக் கொழுந்தை நோக்கி திருடன் அறுவாளை ஓங்கிக் கொண்டு ஓடிவந்தான், துரத்தி வந்த பெண்கள் ஐயோவென்று கத்தினார்கள். சிவக்கொழுந்து திரும்பி ஓடவும் துரத்தி வந்தவர்களும் திரும்பி ஓடினார்கள், வரகு காட்டில் தொலைவில் அங்கங்க நின்றவர்கள் திரும்புவதுபோலத் தோல்பட்டையைத் திருப்பினார்கள்.
திருடன் நின்றபடி “இன்னக்கி ரத்தப்பொலி போடுறேன்டா” பூமியில் கொத்துவதுபோலக் கொத்தினான். சிலர் நகராமல் அங்கங்கே நின்றார்கள்.
“டேய் பொன்னு ஆசாரி நீ எங்க ஊருக்குள்ள வாடா தலைய எடுக்கிறேனா இல்லையான்னு பாரு உன் முண்டம் ஓடையில் கெடக்கும்” கையில் வைத்த இரண்டு முழ குச்சியோடு பொன்னு ஆசாரி வரகு பயிரடியில் அப்படியே பதுங்கி ஊரை நோக்கி தலைதெரியா வண்ணம் வெள்ளாமைக் காட்டுக்குள் குனிந்தபடி ஓடத்தொடங்கினார்.
“டேய் நாடானுக்குப் பேர் சொல்லமாட்ட” என்றாலும் பன்னீர் மெல்லத் திரும்பிப் பார்த்து நடக்கத் தொடங்கினான்.
அங்கங்கு நின்றிருந்தவர்கள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துவிட முடியாத வண்ணம் சட்டென வரகுத்தாளடியில் குனிந்து ஊரை நோக்கி ஓடத் தொடங்கினர்.
வெகுதூரத்தில் சத்தம் கேட்டு வந்து நின்றவர்கள்கூட வெளிக்கு வந்ததுபோல அமர்ந்தார்கள்.
பக்கத்து ஊர்க்காரன்தான், துரத்தத் துரத்த பிடரியில் சாக்கு மூட்டையைப் போட்டு குனிந்தபடி சாரைப்பாம்பு போல ஓடியவர்கள் ஒரு எல்லை வரவும் திருடர்கள் மூட்டையைப் போட்டுவிட்டு மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்,
“இந்தாபாரு பொட்ட பிள்ளைக வச்சிருக்க எவனும் நிம்மதியா தூங்க முடியாம பண்ணிருவேன் கூதிகளா” வசைபாடத் தொடங்கினான் பின் சென்ற இரண்டாவது திருடன்.
ஊருக்குள் திருடிய பொருளோடு பயந்தோடி ஒளிவது அவமானம் என்றோ, இதற்குமேல் ஓடினால் பிடித்துவிடுவார்கள் என்றோ அரிவாளை எடுத்து நின்றுவிட்டார்கள்.
பின்தங்கி வந்த தங்கமணி “கன்னம் வச்சவன் நாசமா போவான் அவனுக்கப் பெண்டுபிள்ளைக வைசூரி கண்டு சாவாளுக, போற வழியில நல்லபாம்பு கடிச்சு சாவீங்கடா, சரியான ஆம்பளையா இருந்தா ஒன் சாதிசனத்தில் கொள்ளவையிடா பாப்போம் கொறஞ்ச சனமன்னு பார்க்கிறயா.
அந்தா நிக்கிறாண்டா கருப்பசாமி உன் சாமானத்த அறுத்து எடுக்க” ஆவேசமாகத் திட்டினாள்.
அவிழ்ந்த கொண்டையைச் சுழற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு சொக்கலிங்கத்தின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
பங்குனி உத்திரம் நாளில் கருப்பசாமிக்கு கடைசி வரைக்கும் ஒரு திரியையேனும் ஏற்றிவைத்து சென்றவர் கணபதியாபிள்ளை வீட்டம்மாள் தான், முதல் நாள் கோயில் களத்தைச் சுத்தம் செய்துவைக்கிற மாரியப்பனுக்கு ஐந்து ரூபாய் தருவார்.
ஆனால் கொடை எல்லாம் நடக்காது, தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களெல்லாம் அப்படியப்படியே நின்றுவிட்டார்கள், அதெல்லாம் அப்போதே நின்று விட்டது.
இருந்த மூனுகுடி பள்ளர்கள் கூட ஐந்துமைல் தூரத்தில் இருந்த காரமரத்தூருக்குப் பெயர்ந்து விட்டார்கள், பள்ளர்கள் செல்வாக்கு அதிகம் இருந்த ஊர் அது.
நெடுங்கண்டம் மோகன்ராஜ் எஸ்டேட்டிற்குக் கணக்குப் பிள்ளையாகப் போனார் கணபதியாபிள்ளை. வயதானபின் அவர் மகன் சாமிநாதப் பிள்ளைக்குப் பொறுப்பைத் தந்தார்கள்.
முந்தின வருசம் பங்குனி உத்திரத்திற்கு வராததால் மாரியப்பன் மகன் சின்னப்பனை அழைத்துக்கொண்டு கணபதியா பிள்ளையைப் பார்க்க நெடுங்கண்டம் போனார்.
“கருப்பசாமியை இனி நேரில் வந்து பாத்து திரும்பமுடியாது மாரியப்பா, இனி மனசில வேண்டிக்கிட வேண்டியதுதான். பிள்ளைகளும் விரும்புறதில்ல. வயசான காலத்தில அதிகப் பிரசங்கித் தனம் செய்யாம வீட்டில இருங்கன்னு திட்டுறாங்க, இனி ஒரே ஒருவாட்டி வந்து கருப்பசாமியை பாத்து வணங்கணும்னு நினைக்கிறேன்.
ஆனா நடக்காதுபோல, எங்க தாத்தா கட்டுனது. எங்க குடிக்கு ஒரு குலதெய்வம் மாதிரி, எப்படி விட்டுட்டு இருக்கிறதுன்னு தெரியல” கையைத் தொட்டி பக்கம் காட்டினார்.
வாழை இலையில் நல்ல சாப்பாடு போட்டு பேருந்து செலவிற்குப் பதிமூன்று ரூபாயும் கைச் செலவிற்கு ஏழு ரூபாயும் கொடுத்தார். வழி அனுப்பும் முன் ஆளுயர கல்மூங்கிலை வீட்டிலிருந்து எடுத்துவந்து அதற்குத் திருநீறு பூசி வணங்கி, “நான் வந்தா இந்தக் கம்பக் கருப்பனுக்கு முன்னால வச்சு ஒரு திரிபோடு” என்றார்.
மேற்கூரை இல்லாது கருப்பன் பீடத்தில் கம்பீர மாக நிற்கிறார். வலதுகையில் ஓங்கியபடி இருக்கும் வீச்சறுவாள்.
முழிதிரட்டி மிரட்டும் பெரிய கண்கள், புளி ஓடுபோல இருபுறமும் திருகி இருக்கும் மீசை. காலில் தண்டை இடது இடுப்பில் தொடை பக்கம் சாய்ந்து இருக்கும் சூரிக்கத்தி, உருட்டித் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டி வலது பிடரியில் கொண்டை கைப் பிடிக்குஞ்சம் இடது நெற்றிக்குமேல் எகிறி இருக்கக் கட்டிய முண்டாசு, மார்பும் வயிறும் இன்னொன்று இருக்கும் திடகாத்திரம், முகத்தில் தெரியும் ஆக்ரோசம் எல்லாம் துடிப்போடு இருக்கின்றன.
தனியாக யார் வந்து கருப்பன் முன் நின்றாலும் பயம் ஏற்படும், உடம்பில் எண்ணெய் மினுமினுப்பு இல்லாது காய்ந்து வெளிறிய கருப்பாக நிற்கிறார், உழுகிற காலத்தில் செம்மண் பூசிக்கொள்வார், மழைக்காலத்தில் அதைப் போக்கிக்கொள்வார்.
மேற்கூரை இல்லாது நான்கு தூண்கள் மட்டும் அடக்கமற்று நிற்கும் அலோதியான வெளி அச்சத்தைத் தந்தது, அதன் மேல் இருந்த இரு கருங்காலி விட்டங்களால் கூரை குப்பிற கவிழ்ந்தது.
முக்காலுக்கு முக்காலடி கொண்ட கனமான விட்டங்கள் மரத்தை அறுத்து விட்டமாகப் போட்டிருந்தால் இருந்திருக்கும் முற்றத்தைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கிறார் சின்னப்பன்.
வில்வமரத்தில் மெல்லியதாக வெண்மைபடர்ந்த குண்டுகுண்டான இளம்பச்சை காய்கள் தொங்குகின்றன. சுத்தம் செய்தபின்பும் மரத்தடியில் ஏழெட்டுக் காய்கள் கிடக்கின்றன.
கொஞ்சம் வாய் விட்டு காய்ந்து கிடக்கும் காயில் இரண்டு கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. வலது பக்கம் இலைகளை உதிர்த்துப் பட்டை பட்டை யான மஞ்சள் நெற்றுக்கள் காற்று வீசும்போது கிலுகிலுக்கின்றன. கிளைகள் நல்ல இடைவெளியோடு நாலாபுறமும் வான்நோக்கிச் செல்கின்றன.
சென்றவருடம் அதற்கு முந்தின வருடமும் கருப்பன் வேடம் தரித்து மறையாற்றில் தீர்த்தம் எடுத்து பறையர் தெருவழியாக ஆடிவந்தார். இந்த வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாட குறி கேட்க நினைத்தார்.
வேட்டையாடி நீரெடுத்து நடுத்தெரு வழியாகக் கருப்பன் கோலம் கொண்டு ஊரே வணங்கி கொண்டாடும்படி செய்யவேண்டும் என்று நினைத்தார்.
தூரத்தில் துணியில் சுற்றிய குழந்தையை மார்போடு அணைத்து தாயும் பெற்றெடுத்த மகளும் இளைஞனும் வருவது தெரிந்தது.
கோயிலைச் சுற்றிலும் நிலங்கள் உழாமல் தரிசாக விரிந்து கிடக் கின்றன. பழைய தட்டை தாள்களில் கரையான்கள் ஏறிக் கிடக்கின்றன.
அங்கங்கே வரப்பில் கருவேல மரங்களும் வேப்ப மரங்களும் நிற்கின்றன. வானில் கிரீச்சென்று கத்திக் கொண்டு செல்லும் செம்பருந்தை கண்ட பெண்களும் பெரியவர்களும் பெருமாளே என்று வணங்கினர்.
கருப்பசாமிக்கு ஏழடி முன் நிற்கும் விளக்குக் கல் குழியில் சின்னப்பன் மகள் வரதம்மா ஈயச் சொம்பிலிருந்து விளக்கெண்ணையை ஊற்றி திரி ஏற்றினாள். சின்னப்பன் தன் கொண்டையை அவிழ்த்து விட்டார்.
கணபதியாபிள்ளை பல வருடங் களுக்கு முன் தந்த கல் மூங்கிலை ஏழு படியையும் தொடும்படி வைத்தார்.
படியின் முன் அமர்ந்து தீபத்தை வணங்கினார். மரத்தடியில் அமர்ந்திருந்த அங்காளி பங்காளிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து சின்னப்பன் பின்னால் வந்து நெருக்கமாக அமர்ந்தார்கள்.
சின்னப் பனின் மீசை உதட்டோரம் இறங்கி கன்னத்தில் மேலேறுகிறது, சின்னப்பனைப் பார்த்தால் கண்ணுக்குள் உடனே பதிவது மீசையும் மூக்குத் துவாரங்களும் கண்களும்தான்.
மூக்குத்தண்டு நெற்றியிலிருந்தே எழுந்து வருவதால் அப்படிக் கவனிக்க வைக்கிறதோ என்னவோ நரைத்த மீசை என்றாலும் வெள்ளை வெளேர் என்று இல்லை, கருமை மங்கிய சாம்பல் நிறமும் மஞ்சள் ஏறிய வெள்ளை மயிர்களிலும்ஊடாடி இருந்தன. தலைமுடியைப் பின்னால் கோதி விட்டார்.
கொண்டு வந்திருந்த நவதானிய துணிப்பொட் டலத்தைப் படியில் பிரித்து வைத்தார். மடியிலிருந்து மல்லிப்பூ, ஊதாநிற சங்குப்பூ, ஆவாரம்பூ மூன்றையும் எடுத்து வெற்றிலையில் வைத்தார்.
சாணியைப் பிட்டு மூன்று உருண்டைகள் உருட்டி செய்தார். ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு பூக்களை வைத்து இதழ் தெரியாவண்ணம் இன்னும் சாணியை அப்பி மறுபடி உருட்டினார்.
இரு உள்ளங்கையில் மூன்றையும் போட்டு உருட்டினார். இரு உள்ளங்கைகளால் மூடியும் உருட்டினார், ஒவ்வொரு உருண்டையும் படியில் எடுத்து வைத்துவிட்டு கைகளைக் கழுவினார்.
தட்டில் திருநீற்றைப் பரப்பிச் சூடத்தை வைத்து சுடர் ஏற்றினார். சுடரை வணங்கி நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டார். கைப்பிரம்பு கட்டை எடுத்து ஆராதனைக் காட்டி படியில் வைத்தார். கண்மூடி வணங்கினார்.
புறங்கையால் விரல்களைக் கோர்த்திருந்த கை களைச் சுடருக்குமுன் விரைப்பாக நீட்டி, மணிக்கட்டை பின்புறம் சுழற்றி உள்ளங்கைகள் வெளியே தெரியவிரல்களை இறுக்கினார். சடக் சடக்கெனச் சொடக்குகள் போட்டன.
முதுகின் தசைகள் இறுகின. பற்கள் நறநறத்தன. விழிகளை உருட்டி செருக்கடிக்கும் காளை போல மூச்சை பட்டெனவிட்டு தலையை உலுக்கினார். விரல் கோர்த்து கைகளை நீட்டியபடி உடம்பு இடவலமாகச் சுழன்றதும் ‘அய்ய்ங்’ என்று நாக்கை சுடரைப் பார்த்து துருத்தினார்.
கண்களைத் தேனையால் இறுக்கி பல்லைக்கடித்தார், கோர்த்த கைகளை மேலே தூக்கி தலையைஒரு உலுக்கு உலுக்கினார். அந்த உலுக்கில் நெற்றியில் வைத்த திருநீறு மூக்கில் உதிர்ந்து படிந் திருக்கும். திரேகம் கிடுகிடுவென நடுங்கியது, கருப்பா சொல்லு நான் என்ன செய்ய அரற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அவரையே பார்த்தார்கள்.
படியில் கொத்து கொத்தாக வைத்திருந்த பிரம்புகளின் தூர்பக்கம் பற்றி எடுத்து வில்லாக வளைத்து விடப் பிரம்புகள் ஆடி அதிர்ந்தன.
வலக்கையில் இறுகப் பற்றித் தன் முதுகில் சடார் சடார் என அடிக்கத் தொடங்கினார். வெறிகொண்டு அடிக்கப் பின் இருந் தவர்கள் தங்கள் கண்களில் பிரம்படி பட்டுவிடும் என்பதால் தலையைப் பின்சாய்த்து எழுந்தனர்.
துரோகம் செய்த கொடூரனை அடிப்பதைபோலத் தன் முதுகில் தானே அடித்தார். பிரம்புகளின் அடிபட்டு பட்டு குறுக்கு மறுக்காகத் தடிப்புகள் சிவந்தன. இரண்டு மூன்று முறைகள் பிரம்படிகள் முதுகில்பட்டபோது வித்தியாசமாகப் பார்த்தவர்கள்.
நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து எப்போது நிறுத்துவார் என்பது போல மிரண்டார்கள். இருக்க இருக்க அடியின் வேகமும் கூடியது. பிரம்பின் நுனிபட்ட இடங்களில்தோல் கந்தி ரத்தம் கசிந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில்சங்கம்மா கிழவி “போதும்சாமி உன்னை நம்புதோம், நாங்க என்ன செய்யனும்னு சொல்லுசாமி” “கொடை எடுக்கணும்லா” “சரி அதுக்கு வழிகாட்டு சாமி” “மஞ்சள் பூ வந்தா கொடைக்கு வழி, மத்த பூ வந்தா கொடைக்குத் தடைலா” அமர்ந்தபடி வில்லாகக் குதித்தார். இரு ஆடவர்கள் பின்னால் விழாதபடி பிடித்தனர்.
சின்னப்பன் உடம்பு முழுக்க வேர்வை மினுமினுத்து வழுக்கியது. பாப்பாத்தி மகள் மருதாயியை அழைக்க அவள் நடுவிலிருந்த சாணி உருண்டையை எடுத்துப் பிரித்துக் காட்டினாள்.
அது மஞ்சள் நிறம் கொண்ட ஆவாரம்பூ அதைப் பார்த்ததும் பின்னால் அமர்ந்திருந்த ராமாயிக்கு சாமி வந்து கைகளை முறுக்கி எழுந்து குதித்தாள். கருப்பன் உத்திரவாதம் தந்தாலும் சின்னப் பனுக்கு மேனி முழுக்க ஜூம்ம் என்று சிலிர்த்துவிட்டது. ராமாயியைப் பெண்கள் ஓடிப் போய்ப் பிடித்தனர்.
நழுவி இறங்கிய சீலையை வாரி எடுத்துச் சொருகினால் மஞ்சள் பூ வந்ததும் எல்லோரும் பய பக்தியோடு விழுந்து வணங்கினார்கள்.
வெள்ளை வேட்டியை நான்காக மடித்துப் போட்டு அணைத்துக் கொண்டு வந்திருந்த ஒருமாத பெண் குழந்தையைத் தன் தாயிடமிருந்து வாங்கி வந்து சின்னப்பன் காலடியில் வைத்தாள் பெற்றவள் காமாட்சி.
அவளது கணவனும் விலகி முன் வந்தான். இருவரும் மண்டியிட்டு வணங்கினர். திருநீறு தூவி வாழ்த்தினார் சின்னப்பன். வண்ணாரகுடியைச் சேர்ந்த காமாட்சிக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் குழந்தைகள் இல்லாமல் வேதனைப்பட்டவள்.
சென்ற ஆண்டுச் சின்னப்பன் மீது கருப்பன் இறங்கி ஆடிவந்தபோது காமாட்சி விழுந்து வணங்கினாள், அவளது வேண்டுதல் வீண்போகாதபடி கருப்பன் கண் திறந்தார். காமாட்சியை முன்விட்டுப் பெண்கள் பின்னே போவாடியாகப் பேசிய பேச்சுக்களை அழித்துக் காட்டியதிலிருந்து அவளுக்குச் சாமியாடி சின்னப்பன் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டது.
தான் மலடி இல்லை என்பதை நிரூபித்துவிட்ட பெருமை இந்தச் சிசு, அதற்கு அருளை வாங்கிட பின்தொடர்ந்து வந்திருக்கிறாள். இந்தக் கருப்பசாமி மீது அவளுக்கு அந்தரங்கமான ஒரு பற்றும் பக்தியும் ஏற்பட்டது.
தன் கையாலாண்டதைச் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.
கருப்பனின் படியில் வைத்திருந்த நவதானியங்களை அள்ளிக்கொண்டு காடு நோக்கி நடந்தார். உழாத காட்டில் கிழக்குப் பார்த்து நின்றார்.
போன வெள்ளாமையின் தட்டை தாள் அங்கங்கே நொறுங்கிப்போய் கிடந்தன. குப்பைமேனி செடிகளும்கொளுஞ்சி செடிகளும் குத்துக்குத்தாகக் காடெங்கும் தெரிகின்றன.
“மேகம் கூடனும் களிஞ்சு பொழியனும், காடெல்லாம் பச்சை தளிர்க்கனும், ஆடும் மாடும் கூடும் குருவியும் தேடும் இரை திசையெல்லாம் கெடைக்கணும், மனுசங்க கூடனும், குடும்பத்த உயர்த்தனும் நாடு செழிக்கனும், நல்ல மழை பொழியனும்” முணுமுணுப்பை மீறி ராகமாகவே பாடி நவதானியங்களை நாலாதிசைகளிலும் வீசி விதைத்தார்.
காக்கி டவுசர் தெரிய வாரி சுருட்டிக்கொண்டு மஞ்சள் வேட்டி, மணிகோர்த்த இடுப்புவார், தலையில் பின் படிந்து இறங்கும் தொங்கு கொண்டை, கழுத்தில் சின்னச் செவ்வந்தி மாலை, ஒரு கையில் சாட்டை, ஒரு கையில் வீச்சறுவாள் ஏந்தி ஆடிவருகிறார்.
ஒரு கொட்டு ஒரு தவில் இரண்டின் அடிக்கு நீர்ச் சொட்ட சொட்ட சாமியாடி வருகிறார். திடும் திடும் திடும் திடும் திடுதிடுதிடுதிடு திடும் திடும் திடும் ரண்டக்கணக்க ரண்டக்கணக்க ரண்டக் கணக்க டங்க டங்க டங்க டங்க ரண்டக்குணக்கு ரண்டக் குணக்க முன்னடியும் பின்னடியும் தாளத்திற்கேற்ப போட்டுச் சுழன்றாடச் சுழன்றாடப் பெண்கள் உலுலல உலுலலவெனக் குலவைப் போட்டனர்.
கோட்டுக்கு முன் தலைமுடி லொக் லொக்கெனத் தோளில் குதிக்கச் சின்னப்பன் மனைவி வேம்பம்மா சாமிகுதிப்பாக ஆடிச் சென்றாள்.
பெண்கள் கொண்டுவரும் குடத்து நீரை ஊற்ற குனிந்து கொடுத்த சாமியாடி அப்படியே பின்எழுந்து முழிதிரட்டி தொங்கு கொண்டை இடத் தோளிலும் வலத்தோளிலும் பட்டென்று நீர் தெளிக்க தலையாட்டி குதிரைபோல வலக்காலை எகிறிப்போட்டு ஆடுகிறார்.
வீச்சறுவாளின் நுனிவேல் மூக்குபோல எட்டுத்திசை நோக்கி வெடுக் வெடுக்கெனத் திரும்புகிறது. முனியப்பனுக்குச் சாமியாடி வரும்போது வெளிப்படாத துடிப்பும், உற்சாகமும் மிரட்டலும் அடி விசையும் கலகலவென உடம்பதிர பீறிட்டுக் கிளம்பின.
மருமகனிடம் வீச்சருவாளைத் தந்துவிட்டு சாட்டையால் சுழற்றி படீர் படீர் என்று உடம்பில் அடித்து முறுக்குகிறார்.
சாட்டையை முதுகுப்பக்கம் போட்டு பிடித்து முன்னும் பின்னும் சென்றபடியால் சலங்கை குலுங்க வந்தபோது நாவிதர்சண்முகம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங் கினார்.
அவருடைய மகன் வேலாண்டி கைகட்டி நின்றிருந்தான் பெரிய பத்து படித்தும் வேலை இல்லாமல் தன்னுடன் குலத்தொழில் செய்துகொண்டிருக்கும் மகனுக்கு வேலை கிடைக்குமோ என்று பூமியை நோக்கிக் கேட்டார் சண்முகம்.
குதித்துச் சூறாவளி சூழல்வதுபோல உடம்பை சுழற்றினார். சாட்டையால் படீர் படீர் என்று அடித்தார். கிடுகிடுவெனத் திரேகமே “உண்டு மைய்யா உண்டு, நல்லகுறி சொல்லுது கருப்பன், ஐந்து விரல்விட்ட விரலி மஞ்சள் மூன்று, கிள்ளி வச்ச சுண்ணாம்போடு அரைச்சு மூன்று நாள், மூணுவேளை தண்ணியில கலந்து தலைக்கு ஊத்து, அப்புறம் வேட்டைக்குப் போகச் சொல்லு, வேட்டை விழும், கோட்டை புகும்,கருப்பன் சொல்றான்.
போமைய்யா போ” திருநீறு போட்டார்.
கருத்தரிக்க விடாது புகுந்த உதிரகாட்டேரி பேய் களுக்குச் சுடுகாட்டில் ரத்தச்சோறு படையலிடச் சொன்னார். வேண்டுதலுக்கு வாக்குகளைச் சொல்லி ஆவேசங்கொண்டு சாமியாடிச் சென்றார்.
கருப்பனே அருளாடிச் சென்றதாகப் பேச்சு எழுந்தது, சாமியாடி சின்னய்யன் கருப்பனசாமியாகவே மாறிப்போனார்.
வெள்ளாட்டுக் குட்டிகளின் பசிக்குரல் மெக மெக மெகமெகவெனப் பெரிய பஞ்சாரக் கூண்டுக் குள்ளிருந்து கிளம்பியது. எழ முயன்ற குட்டிக்கு முதுகு பஞ்சார வளையம் இடித்ததால் முன்னங்கால்களை மண்டிப் போட்டபடி கத்தியது.
ஆடுகளும் நான் இருக்கிறேன் என்று வாய் திறவாமல் ம்ம்மிக்கு ம்ம்மிக்கு வென மூக்குவழி குரல் கொடுத்தன. மூத்திரம் போன இடம் மஞ்சளாக இருந்தது. மடிகனத்துக் காம்புகள் புடைத்து பூமியை நோக்கி பாய்வது போல் இருந்தன.
பின்மடியில் ஒழுங்கோடு மயிர்கள் படிந்து மின்னுகின்ற, வேம்பாள் முகத்தை ஆடு பார்த்து, சோதிக்காதே என்பதுபோல அவள் முகத்தைப் பார்த்து முனகியது, அவளுக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பக்கம் கட்டியிருக்கும் இளஞ் சினையாட்டின் பின்தொடை மயிர்களை வெட்டி விட்டிருந்த அடையாளம் கூட மறைந்து வந்தது.
வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு வாசலுக்குச் சின்னப்பன் வந்தபோது வேம்பாள் பஞ்சாரத்தைத் திறந்துவிட்டாள். குட்டிகள் வாலை ஆட்டிக்கொண்டு தாய்மடி நோக்கி ஓடின.
பால்குடி மறக்கும் பருவத்தில் குட்டிகளை விற்றால் நான்கு காசுகள் கிடைக்கும். இளைய மகள் மயிலம்மாளுக்கு இலைத்தோடு எடுத்துத் தருவதாகக் கல்யாண சமயத்தில் சொன்னது, அந்தக் காரியத்தை இன்னும் முடிக்க முடியவில்லை, சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாள்.
சின்னப்பன் கழுத்தில் துண்டோடு வாசல்படி யோரம் அமர்ந்து குட்டிகள் முட்டி பால்குடிப்பதை பார்த்தபடி மடியிலிருந்து த.பி.சொக்கலால் பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். கொச்சைவாடை பீடி புகைக்குச் சற்று அடங்கியது.
வாலாட்டும் இடத்தில் முகர்ந்து பின் குட்டிகளின் முட்டலுக்கு இன்னும் சுரந்து தந்தது. மனம் முழுக்க அடுத்த ஆண்டுக் கருப்பசாமிக்கு இன்னும் மிகச்சிறப்பாக வேட்டையாடி, தீர்த்தம் எடுத்து ஊர்சுற்றி சாமியாட வேண்டும் என்பதிலேயே லயத்தது.
அலுப்பில் தாமாகத்தான் எழுந்தார்கள், இளம் வெயில் கூரைகள் எங்கும் படர்ந்து பளிச்சென ஆக்கியது.
“பீடிய பீடிய குடிச்சிட்டு அப்படியே உக்காந்திராத வெள்ளன போயி ரெண்டு கொலைகொம்பப் பறிச்சு கட்டிட்டு வா, தரை மேச்சல் எங்கயும் இல்ல, சும்மா அலச்சலுக்குத்தான் முடிக்கிட்டும் போகனும், மழைமாரி விழுந்து வேலி கீலி தரை பத்துத் தளிக்கட்டும், இதுகளும் வெடுக்வெடுக்கன்னு பிடுங்கி வாயில போட்டு ரொப்பும்”
“பாரு ஒரு வாரத்தில் மழைவிழுதா இல்லையான்னு. இந்தக் கோமரத்தாடி சொன்னா தப்பாது”“ஆமா எல்லாம் உன் வாக்குப்படி சரியாத்தான் நடந்திருக்கு ஒன் பொச்சுப் பவிசியதான் நொண நொணன்னு ஊரே சொல்லுதே” என்றாள் கிண்டலாக.
“தூ நாயே நான் யார் தெரியுமா” என்றார், ஓ இந்தச் சாமியாடிய கோமரத்தாடின்னு சொல்லனுமாக்கும் என்றவள் பேசாமல் விளக்குமாரை எடுத்து கூட்டத் தொடங்கினாள்.
பெரியவன் இசக்கிமுத்துப் பின்னால் ஒருவர் தாங்கித்தாங்கி நடந்து வந்தார். நெருங்கிவர சின்னய்யன் எழுந்து அவர் நடையையே கவனித்தார், ஏதோ முள்ளில் மிதித்துவிட்டவர்போல இடதுகாலை பொத்தினார்போல் வைத்து வைத்து வந்தார்.
அறுபத்தைந்து வயதிற்கும் மேல் இருக்கும், ஆள்நல்ல உடல்கட்டில் இருந்தாலும் நடையில் ஒருசலிப்பான தோற்றம் பூசியிருப்பதுபோல இருந்தது.நெருங்கி வந்தவர் வணக்கம் வைத்து “முத்லாபுரத்திலிருந்து வர்றேன், காலில் ஆணிகண்டு தீரவே மாட்டெங்கிது, இந்தமாதிரி சாமியாடி செஞ்சு தார செருப்பில சரியாயுடுதுன்னு மார்க்கையனூரில் சொன்னாங்க, சரி இதையும் ஒருதடவ பாத்திடலாமன்னு வந்தேன்”
“வரனும் சாமி” என்றான்.
உள்ளே போய்ப் பெரிய சாக்கை எடுத்துவந்து சுவரோரம் விரித்துப் போட்டார்.
“தொட்டியில்ரெண்டு பாதத்தையும் நன்றாகக் கழுவி வந்தா பெரிய தோல் பையில் கைச்சுத்தியல், ஊசி, நூல்கண்டு கையுளி, சிறுகத்தி, குறடு என என்னென்னவோ இருந்தன.
அவரை நிற்க வைத்து வெட்டிவைத்திருந்த தோலில் அவரது இடது பாதத்தை வைக்கச் சொன்னார், கையுளியால் பாதத்தைச் சுற்றியும் படம் போலக் கோடிழுத்து முடித்தார்.
விரல் நுனிகள் போலக் கோடு விழுந்திருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டார்.
இசக்கிமுத்து ஆளை ஒப்டைத்துவிட்டு எழுந்துநழுவப் பார்த்தான். “மனுஷனுக்குள்ள மாயக் கோலங்கள கண்ணு முன்னாடி கத்துக்கண்ணு சாமி அனுப்பிவச்ச வரம்டா, குண்டிய வச்சு கவனிக்கணும்டா. ஆசையும் பொறுமையும் இல்லன்னு காங்க முடியாது. உன்ன சாமி ஏமாத்திட்டு போயிடும் இருந்து பார்றா” முகத்தில் கசப்பான கவலைப் படர்ந்தது.
இசக்கிமுத்து ஒன்றும் சொல்லாமல் கவனிப்பது போல நின்றவன், மெல்ல நழுவினான். சாக்கில் அமர வைத்தார். இடது கால்பாத ஈரத்தை தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து நன்றாகத் துடைத்தார், துண்டை மடியிலேயே போட்டுக்கொண்டார். பெருவிரலுக்கு அடுத்தப் பாதமேட்டில் வெள்ளையாகப் புற்றுசதை ஏறியிருந்தது.
“ஆஸ்பத்திரியிலயும் காட்டிட்டேன், கொடஞ்சு எடுக்கிறாங்க மறுபடியும் வளந்திடுது, பாதத்த ஊன முடியல சுல்லுன்னு ஏறுது” என்றார். கத்தியின் நுனியால் ஆணி கண்ட இடத்தில் சதையை வட்டமாகப் பதித்துச் சீவி எடுத்தார் பெரிய ஊசி முனையால் கிளறி கிளறி பொதுப்பொதுவென விழுந்த வெண்ணிற சதைத்துகள்களை எடுத்தார்.
அடியாழத்தில் குருத்து முனைப்போலக் குழியைச் சுற்றிக் கீறிக்கீறிப் பக்குவமாக எடுத்தார்.
“சாமி உள்ளங்கை ரேகைபோலவே பாதத்திலும் ரேகை இருக்கு. அந்த ரேகையை சரியா வரஞ்சுட்டோமன்னா இந்தக் காலாணிபுத்து வராம பண்ணிறலாம் அதுக்கொரு மருந்தும் தடவிடனும்” அவரது பாதத்தை வலது துடைமீது தூக்கிவைத்து தன் விரல்
நுனியால் விரல்களிலிருந்து ரேகைகளைத் தடவித் தடவி குதிங்கால்வரை சென்றார். பின் பாம்பு விரலையும் மோதிரவிரலையும் பொருத்திக்கொண்டு மேலிருந்து பாதத்தில் ஓடும் ஒவ்வொரு ரேகையாகத் தடவித் தடவி அதன் நீளம் வளைவு நெளிவு தடிமன் எட்டுக்கால் பூச்சி நூலாகச் செல்லும் மெல்லிய தடங்கள், ரேகையின் ஆழ அகலங்கள் எல்லாவற்றையும் வைத்து தன் மனதில் ஒரு பாதத்தை வரைந்தார்.
பின் பாதங்களின் ரேகைகளைக் கண்ணால் பார்த் தும், மனதில் வாங்கியபடியும் இடதுபாதம் வரைந்த ரேகைகோடுகளைக் தோலில் கையுளியால் வரைந்தார்.
திரும்பத் திரும்பத் ரேகையையும் தடவிப் பார்த்தும் கண்ணால் கவனித்தும் சரிபார்த்து வரைந்தார்.
ஆணிக்கால் போட்டு வந்த செருப்பின் குதிங்கால் பக்கம் சமமாகத் தேயாமல் வெளிப்பக்கமாகத் தேய்ந்திருப்பதைக் கவனித்து மூன்று புள்ளிகளால் அடையாளமிட்டுக் கொண்டார்.
“உங்க குதிங்காலுக்கு தேயாத வண்ணம் செருப்பு ஏத்திக் கொடுத்து செய் யணும், இரண்டு குதிங்கால் பகுதியையும் பழக்கணும்” என்றார்.
ஆணி புற்று தழைக்கும் குறிப்பான இடத்தில் மூன்று புள்ளிகளை அடையாளப்படுத்திக்கொண்டார், தேங்காய் எண்ணெயைத் தொட்டு திரும்ப ரேகைகளை அடையாளங்கண்டு தோலின் வரைபடத்தோடு சரிபார்த்தபடி நகர்த்தினார்.
“சரி பண்ணிறலாம் சாமி, ரேகையோட பொருந்தி அமரும்படியாகச் செருப்பு செய்யனும் மருந்து தடவிக்கிடணும் ஏழுநாள் கழிச்சு வாங்க, உங்க பாதத்துக்கு அடிவாறு மேல்வாறு எல்லாம் வாங்கணும் வலதுகாலக் கொடுங்க” அதையும் விரல்களால் தடவிப் பார்த்தார்.
“இதில் ஒன்றும் குறை வராது” “நிஜமாசரியாயிடுமாப்பா.” “இந்தக் கோமரத்தாடி ஆகும்ன்னா ஆகும்பான் இல்லென்னா இல்லம்பான் சாமி. இது சரியாயிடும்.” என்றார்.
அவர் எழுந்து ஐம்பது ரூபாய்தாளைத் தந்தார்.
“இழுத்தடிக்கமாட்டியே” “நீங்க வர்றதுக்கு ஒரு நா முன்னமே செஞ்சுவப்பேன், எதுக்கும் ஒரு நா தள்ளிச் சொல்றது நல்லதுதானே சாமி” என்றார் அவர் தலையாட்டி வணக்கம் சொல்லி திரும்பி தாங்கி தாங்கி மிதித்துச் சென்றார்.
இரண்டு முழு அகலத்தில் இரண்டு முழுநீளத்தில் பிசிறு நீக்கி சுருட்டிவைத்திருந்த மாட்டுத்தோலைப் பார்த்ததும் பிடித்துவிட்டது.
நல்ல பக்குவத்தில் வந்திருந்தது. தொட்டதும் அதன் நெளுகல் தன்மைதெரிந்து, இறுகி விரைப்பில்லாமல் தொவளலாக நல்ல நிறத்தில் இருந்தது.
சில தோல்கள் கல்லைத்தொட்டதுபோலக் கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும், நயமான தோல் கிடைக்க மெனக்கிட்டால் தான் முடியும். மருமகன் அம்மாசி ஓவுலாபுரத்திலிருந்து வாங்கி வந்திருக்கிறான்.
சொல்லாமலே இந்த மாதிரி செய்வான். மறுபடி சுருட்டி கட்டுவதற்குக் கயிற்றை எடுத்தார்.
இரண்டு பேத்திகளும் தாத்தாவின் தோளில் நெஞ்சை சாய்த்து தாத்தா கட்டுவதைப் பார்த்தனர். அடுத்தப் பிரசவத்திலாவது நடுவலவள் ஆண்டி யம்மாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டார் மடியிலிருந்து இரண்டு இருபது பைசாக்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தவர்.
பெரியவள் இருபதுபைசா என்றதும் மகிழ்ந்து தாத்தாவைப் பார்த்தாள். சின்னவள் தாத்தாவின் கழுத்தைக் கட்டி முத்தம் கொடுத்தாள். அதைப் பார்த்து பெரியவளும் முத்தம் கொடுத்தாள்.
பிள்ளைகளுக்கு ஆண்டியம்மாள் அடம் பிடிக்கிற முதுகில் இரண்டு அடியோடு ஐந்து பைசா தருவார்.
சோளக்கஞ்சியைத் தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு கலக்கி பெரிய ஈயக்கிண்ணத்தில் தந்தாள் ஆண்டியம்மாள்.
கஞ்சியைக் குடித்துவிட்டுத் துண் டால் வாயைத் துடைத்துக் கிளம்பத் தயாரானார், சுருக்குப்பையில் வைத்திருந்த இரண்டு வெற்றிலையை எடுத்துத் தந்தார், “அப்பா அடுத்த வருசம் கருப்பசாமிக்கு இன்னும் நல்லா கொடை நடத்தணும், எட்டு ஊருக்கு பேரும் புகழுமா போகனும்” “அதெல்லாம் பண்ணிறலாம்” மெல்லிதாகச் சிரித்தார்.
இருட்டுவதற்கு முன் கிளம்பினால்தான் கண் வெளிச்சத்திலே ஊர்போய்ச் சேர தோதாக இருக்கும். பேத்திகளை இருபுறமும் அணைத்து ‘போயிட்டு வரட்டுமா’ என்றார் வாயில் போட்டிருந்த இருபது பைசாவை எச்சிலோடு எடுத்து சரி என்றாள் சின்னவள்.
“வாயில காசபோட்டு பழகாதன்னு எத்தன தடவ சொல்றது” மூக்கில் குத்தப் போனாள். “சரிசரி விடு” என்றார்.
வெளியே வந்து கூரையைப் பார்த்தார், ராகித் தாள் கீற்று கருத்து துரும்புகளாக நொறுங்கிப் போய் கிடக்கிறது.
“ஒரு வண்டி ராகித்தாள் கிடைக்கட்டும், வந்து நானே பிரிச்சு மேஞ்சு விட்றேன்” என்றார்.
ஊரைத்தாண்டி மேற்குத் தடத்தில் நடையைக் கட்டும்போது சூரியன் மறைந்துவிட்டது. நன்றாகவே வெளிச்சம் இருந்தது. இடப்பக்கம் பீமன் கடவு மிக அருகில் இருப்பது போலத் தோன்றியது.
அதன் ஓடைகள் எல்லாம் சுத்துவாங்கி ஆற்றில் போய் இறங்கும். அடுத்த இரண்டு கரடுகளுக்குள் இடையே வாய்போல அகன்ற கடவு தெரிகிறது. இரண்டு கரடுகளுக்கு இடையே அந்தப் பக்கம் போனால் மார்க்கையனூர் வந்துவிடும்.
ஆண்டியம்மாளை தங்கை மகனுக்கே கொடுத்தார். வெங்கடாபுரத்தில் நாயக்கமார்கள்தான் அதிகம். அப்படி இப்படிச் சாராயம் குடிக்கிறான்தான் சோம்பேறித்தனம் கிடையாது. வீட்டில் ஒருநாள் நிற்கமாட்டான்.
எப்படியும் வேலையைத் தேடிப் போய் விடுகிறான் வளப்பிற்கு இடம் இருந்தால் ஒரு ஆட்டைக்கூட இவளுக்குக் கொடுத்துவிடலாம் என்று தோன்றியது.
குச்சனூர் செல்லும் பாதையின் வளைவில் நிற்கும் ஆலமரத்தில் மைனாக்கள் கெச்சட்டம் போடுவது கேட்டது. அடிமரம் தெற்காக வளைந்து விழுதுகளால் ஊன்றி நிற்கிற பழையமரம், பழனியப்பச் செட்டியார் தோட்டத்து வரப்போரம் தோதகத்தி மரத்தின்மேல் போட்டி சிறிய பரண் கூரையில்லாமல் இருக்கிறது.
வெள்ளாமை காலத்தில் காவலுக்குப் போட்டது. மரம் இலைகளை உதிர்ந்து இளம்பச்சையில் புதிய தளிர்கள் தளிர்ந்திருந்தாலும் குரங்கு பிடித்தது போல இலைகள் சுருண்டு சுருண்டு இருந்தன.
தோதகத்தி மரத்தின் கிளைகள் கரியத்துண்டாக நல்ல விசாலத்தோடு இருப்பதால் பரண்போடுவது எளிது.
பாதைப் புழுதியில் பாம்புத்தடத்தைப் பார்த்த தும் நின்றார். பருவெட்டாக இருக்கும்போல. வடக்கிலிருந்து தெற்காகச் சாலையைச் சற்றுமுன்கடந்திருக்கிறது. ஆடுகளின் குளம்படியோ, கவுதாரியோ மிதித்து அழிக்கவில்லை.
உள்ளங்கை அகலத்தில் புழுதியின் மேல் வழுவழுவென நெளிந்துநெளிந்து போகும் தடத்தைப் பார்த்தாலே பெரிய லகுடாக இருக்கும் என்று தோன்றியது. கட்டைவண்டிகள் சென்று சென்று இரு சக்கரத் தடங்களிலும் புழுதி படிந்து கிடக்கிறது. இரு கரிச்சான் குருவிகள் தலைக்குமேல் கத்தியபடி வட்டமடித்து இறையைத் தேடிப் போனது.
கொக்கி வெள்ளைச் சோளக்காட்டின் மேல் பறக்கும் பூச்சிகளைக் கரிச்சான்கள் பறந்து செல்லும் போக்கிலேயே லாவகமாக அலகால் கவ்வி வேட்டையை விழுங்கியது. சோளம் நல்ல பால் பருவத்தில் நிற்கிறது.
புதரிலிருந்து வெளிவந்த குள்ளநரி நடுபாதையில் நின்னு சின்னப்பனைத் திரும்பிப் பார்த்தது. சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல்ச்சுருளை இடது தோளில் வைத்துக்கொண்டு நரியைப் பார்த்தார்.
மிகக்குள்ளமான நரி எந்தப் பதட்டமும் இல்லாமல் முன்னால் உடம்பை அலட்டாமல் மெல்ல ஓடியது. ஊளையிட்டால் எங்கெங்கிருந்தோ பதில் ஊளை வரும் ஒன்றுகூடினால் ஆளையே குதறி எடுத்துவிடும். நரி கைஓடையில் இறங்கி மறைந்தது.
இந்த ஓடைவழி முதன்முதலாகப் போனதை மறக்கவே முடியாது அதுமெல்ல வளைந்து கரட்டின்அடிவாரத்திலிருந்து இறங்குவது தெரியும், கொடிக் கொம்பை பறித்து வரலாமென்று போனபோதுதான் பச்சைபசேல் என்று அருகம்புல் பெரிய நாற்றங்கால் அளவு விரிந்திருந்தது.
அதன் கரைபோல அரைவட்ட வடிவில் பெரிய பெரிய குண்டுபாறைகளும் கிடந்தன. அதன் அடியில் பிரண்டைகள் செழித்து வளர்ந்திருந்தன. இரண்டு பாறைகளுக்குஇடையில் நின்ற வேப்பங்குட்டையில் கோவைக் கொடி படர்ந்து அப்பி இருந்தது. முன்னால் பெரிய புல்தரை மண்டிபோட்டு அறுத்தால் நாலு கட்டு புல்வரும் பன்னருவாளை எடுத்து வந்து கை வைத்துவிடத் தோன்றியது. அருகம்புல்லில் மிதித்துக்கோவைகொடிக்குப் போகலாம் என்று காலை வைத்ததும் லவக்கெனத் தண்ணீருக்குள் விழும்படி ஆனது.
தொடையைத் தொடுகிற அளவு தெப்பமாகத் தண்ணீர் இருந்திருக்கிறது. பச்சை பசேல் என்று நிற்கும் அருகம்புல்அடியில் தண்ணீர் இருந்தது தெரிய வில்லை. இரண்டு நாட்களுக்கு முன் விழுந்த மழையில் இந்தப் பள்ளத்தை நிரப்பித் தெற்குப்பக்க கல்லிடுக்கில் நீர் கிடந்திருக்கிறது.
தண்ணீர் அலுங்காமல் புல் வயல் போல இருந்ததால் கால்வைத்து ஏமாந்தது நினைவிற்கு வந்தது. பள்ளத்தில் வண்டல் மண் படிந்து இருந்த வளம் அருகம் புல்லை நல்ல அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்த் திருக்கிறது.
சோளக்காடுகள் இருபுறமும் செழிப்பாக இருந்தன. மாலை மங்கி இருட்டத் தொடங்கியது. இந்தப்பக்கம் இன்னும் கரண்ட் தொகுப்பு வரவில்லை,
கண்மாய்க்கரை ஏறியபோது கூகையின் அலறல்குளக்கருவேலா மரத்திலிருந்து வந்தது. மரங்கள்தூங்குவதற்கு இருட்டு தழுவும்போல மேற்பரப்புஅமைதியாக இருந்தது. குளத்தின் வெட்டுக் கிடங்குகளில் மட்டும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
நீர் வற்றி குளத்தின் மேற்புறம் தரையாக விரிந்துகிடக்கிறது. நட்சத்திரங்கள் மங்கித் தெரியத் தொடங்கின, வளர்நிலா உச்சியில் பாதியாகத் தெரிந்தது. நிலவு வெளிச்சமா மசங்கும் மாலை வெளிச்சமா என்பதுபோல மயக்கம் இருந்தது.
நிலவு வெளிச்சம் தனதாக்கிக்கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.
கண்மாய்க்கரையின் வடக்குப்பக்கம் இறைப் பொட்டி போகும் சத்தம் வந்தது. நிலவு வெளிச்சம் இன்னும் பளீரென்று பொழியும். பந்தம் ஏற்றாமல் நீர் இறைப்பது தெரிந்தது. அமாவாசை நாட்களில்தான் மதகின் இருபுறம் பந்தத்தை ஏற்றிவைத்து இறைப்பார்கள், மதகின் கண்ணிற்குக் கீழ் குளத்து நீர் இறங்கிவிட்டால் நீர் மேடேறி வெளியேறாது.
கண்ணைச் சுற்றி பெரிய கிண்ணிபோலக் கரையைக் கட்டி நீரை இறைத்து அதில் ஊற்ற மதகு கண்ணார் வழி வெளியேறும். காற்று கண்மாய் நீரில் தடவி வந்து இதமாகக் தாக்கியது.
ஒரு நரியின் ஊழை தெற்கில் இருந்து கிளம்பியது. பதிலுக்குக் கண்மாயின் மேற்குகரை பக்கமிருந்து ஊளை ஒலி வந்தது. இரண்டு கொக்குகள் வடக்காகப் பறந்து போகின்றன. கரையின் சரிவுகளில் உள்ள செடிகளிலிருந்து கோட்டான்கள் கிரிச் கிரிச் கிரிச்சென்று சொல்லி வைத்தது போலக் கத்தின. சட்டென ஒரு நொடி சத்தம் நின்று மறுபடி கத்தத் தொடங்கின.
மதகின் தெற்குப் பக்கம் நின்றிருந்தவர் “யார்ரா” என்று மிரட்டலோடு கேட்டபொழுதே பரமத்தேவர் குரல் என்று தெரிந்துவிட்டது.
“சின்னயன் சாமி” “ஓரமா வந்து நில்றா” சின்னயன் எதற்கு என்று விளங்காமல் பாதையின் ஓரம் நின்றார். இறைத்துக் கொண்டிருந்தவர்கள் இறைப்பெட்டியைத் திரட்டிக் கட்டிய ஈரமடைமீது வைத்துவிட்டு இந்தா வர்றோம் என்றார்கள்.
இறைத்து இறைத்து அந்த இடம் எல்லாம் சேறாக இருந்தது. இறைப்பொட்டியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.
“டேய் நீ சாமியாடியன்னா பெரிய புடுங்கி யாடா, ஒன் சாதி மயிரு என்னடா”
“...........................”
“டேய் கேட்டதுக்கு வாயத் தொறந்து சொல்லு”
“அண்ணே ஒரு அப்பு அப்பிக் கேளுண்ணே” சொல்லியபடி வேர்வை மினுங்க கரையேறி வந்தபடி கேட்டான்.
“சொல்றா கூதிமவனே”
“பறையன்”
“பறையன்தான. ஒனக்கும் அந்தக் கருப்பசாமிக்கும் என்னடா சம்பந்தம்”
“...........................”
“வாயத் தொறந்து பதில், சொல்லு. இல்ல அப்படியே குத்தி கொளத்தில் எறிஞ்சிடுவேன்”
“எங்க அப்பா காலத்திலிருந்து...”
“ஒங்க அப்பன் காலத்திலிருந்து சாமியாடியா? தோட்டி வேலை செஞ்சேன்னு சொல்லு”
“...........................”
“ஆமாவா இல்லையா”
“ம்ம்”
“ஏண்டா எடுபிடி, பிள்ளைமாரு கட்டுன கோயிலுக்கு நீ எப்படிடா சாமியாட முடியும்”
“சாமி அனாதரவா நிக்கிறத பாத்து...”
“அவங்க விட்டுவிட்டு ஊர காலி பண்ணி போயிட்டா நீ வேட்டை துள்ளுவியா நாயே. அதுவும் ஊராடி வர்ற ஒனக்கு குளிச்சிவிட்டுப் போச்சா, ஒன்னோட பறைச்சாதிக்கில்லடா ஆடனும். நீ வெள்ளாளனுக்கு பொறந்தியா, சொல்லுடா தாயோளி.”
சுண்டிப் போய் அவர்களையே பார்த்தார் சின்னப்பன்.
“கூதிமவனே இன்னைக்கு ராமுழுக்க நீ இறைப் பொட்டி போடனும், அந்தச் சாமி வந்து உன்ன எப்படிக் காப்பாத்துறான்னு பாக்கிறேன்.
ரா முழுக்க இறைப்பொட்டியில்தாண்டா நீ சாமியாடனும், அந்தமயிரு சாமிய இன்னக்கி நான் பாக்கனும்டா”
சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல் உருட்டைப் பிடிங்கி பிடறியில் ஒரு அடி வைத்துப் பள்ளத்திற்குத் தள்ளினார் பரமத்தேவர்.
“மீசையை முறுக்கிவிட்டிருக்கத் தொங்க விடுடாபன்னி பரதேசி, நறுக்கிப் போடுவேன் நறுக்கி, யாருக்கு யாருடா சாமியாடுறது. நீ சாமியாடுனாபெரிய புழுத்தியா இப்ப ஆடு, உன்ன செருப்பால அடிக்கிறேன் அந்தசாமி, என் மயித்த தொடுறானான்னு பாக்குறேன்”
மறுபடியும் பிடரியில் அடித்துத் தள்ளினார். இறைப்பொட்டி போய்வரும் இடமெல்லாம் ஈரமாகஇருந்தது. கச்சல் மண்ணுக்கு ஈரம்பட்டால் வழுக்கும்.
“இறைப்பொட்டி கயித்த பிடி, இல்ல இங்கயே உன் தலைய பொங்க வைக்கிறேன். பறப்பயலுக்கு என்ன துணிச்சல், டேய் நீங்க ரெண்டுபேரும் மாறிமாறி கயத்தப் பிடிங்கடா அவன் தாவு தீரணும் எந்த ஜென்மத்துக்கும் அவன் சாமியாடக் கூடாது.”
சின்னப்பனுக்கு ஆத்திரமும் பயமும் பதட்டமும் நிராதரவும் லேசான நடுக்கத்தைக் கொடுத்தது. அவமானம் கூனிக்குறுக வைத்தது. இனி சாமியாட மாட்டேன் சாமி என்று காலைப் பிடித்துக் கெஞ்சலாமா என்று தோன்றியது.
கால்களைப் பிடித்தாலும் அவர்கள் விடப்போவதில்லை என்று தெரிந்தது. பகலாக இருந்தால் என்ன சின்னப்பா நீ இங்க என்று கேட்பார்கள் நியாயத்தைச் சொல்லலாம் மனைவிபிள்ளைகளாவது ஓடி வருவார்கள், ஆளம்போடு வரிந்து கட்டி நிற்கிறார்கள். பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக மனம் தவித்தது.
ஒரு நாதியும் வராத இரவாகிவிட்டது. ‘கருப்பசாமி நான் என்ன செய்ய, எதற்குப் பித்தேறி உன் காலடிக்கு வந்தேன்?’ எதிராளி கழுவத்தேவனுடன் இறைப்பெட்டி பிடித்தார்.
மதகின் மீது பரமத்தேவரும் சிவனாண்டியும் அமர்ந்து இறைப்பொட்டி வீசி நீரை முகர்ந்துகண்ணார் மடையில் ஊற்றுவதையே பார்த்தனர். அது சோளக்காட்டிற்குப் பாய்ச்சலாகப் போனது.
“கூதிமவனே, நாளைக்கு உதடு மொலுக்கண்ணு இருக்கனும். மீசைய வச்சா நீ வலியசாதியின்னு நெனப்பாடா உனக்கு, சாதிகெட்ட நாயி. பறையன்னா பறையன் மாதிரி இருக்கணும். இல்லையன்னா காணா பிணமாக்கிருவேன்.
நீ சாமியாடிங்கிற பேருல அந்த ரெண்டுகுழி கோயில் நெலத்தை அமுக்கப் பாக்கிறயா தேவிடியா சிறுக்கி மவனே, நீ எதுக்குச் சாமியாடுனன்னு தெரியாதா நாதாரிப்பயலே.”
கோயிலுக்கு நிலம் இருப்பது நினைவிற்கே வரவில்லை. நிலம் இருக்கிறது என்பது தெரியும். கணபதியாபிள்ளை இருந்த காலத்தில் உழுது விதைத்தார். கருவேலமரங்கள் முளைத்து தெற்கே கடலாகக் கிடக்கிறது அதன்மேல் நினைவே இல்லை, கைவிடப்பட்டு நின்ற கருப்பசாமி மட்டும்தான்எப்போதும் நினைவிற்கு வந்தார்.
இறைப்பொட்டி போடப் போட சின்னப்பனுக்கு மூச்சிறைத்தது. சின்னப்பன் வாலிபனாக இருந்தபோது போட்டது, கை சலிக்கத் தொடங்கியது. இரவு தன் அவமானங்களை வெளியில் தெரியாமல் மறைப் பதுபோல இருந்தது. உடம்பில் வேர்வை ஊற்றாகக் கிளம்பியது.
கழுவனுக்கு முப்பத்தைந்து வயதிற்கு உள்ளாகத்தான் இருக்கும். ஆளும் திடகாத்திரமாக இருக்கிறான். அவன் நீரை கவிழ்த்து பெட்டியைத்தூக்கி வெட்டுக்கிடங்கில் வீசுவதிலேயே வேகம் காட்டினான்.
முடியாமல் தோற்றவனை, திரும்பத் திரும்ப மல்லுக்கு அழைத்து வீழ்த்தி மிதித்துச் சுகம் காணுபவனைபோல “ம்ம்... இழுடா... ம்ம்... இழுடா” என்று கேலியோடு வேலைக்குள் இழுத்தான். “அள்ளி எறிடா போத்தி அடுத்த எடம் பாத்தி” இறைப்பெட்டி நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான்.
இறுக்கிப் பிடித்து நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான், இறுக்கிப் பிடித்து நீர் அள்ள அள்ள உள்ளங்கை காந்தத் தொடங்கியது.
நீரை அள்ளி இறைப்பெட்டியை மேலே இழுத்து வரும்போதெல்லாம் கால்களை இழுத்து கழுவனின் கால்கள் தடுமாறாமல் உறுதியாக நின்றன.
இந்த வயதில் கழுவனோடு இறைத்து சிவனாட்டி யோடு இறைத்து வலுவெல்லாம் இழந்து வீழப் போவதை நினைத்தாலும் கால்கள் நடுங்கின.
ஆனாலும் அகதிபலம் மிச்சம் மீதி இருந்ததால் நீரை அள்ளி ஊஞ்சல் போலக் கொண்டுவந்து கவிழ்த்தி அதே வேகத்தில் வீச முடிந்தது.
ஆதரவற்று நிற்கிற தனிமை, வேதனையைக் கொட்டுவதற்கு இல்லாத ஆதரவெல்லாம் வாழ்வ தற்கான ஆசையை அழிக்கத் தொடங்கியது. முடியாது என்று முரண்டு பிடித்திருந்தால் பெரிய மனிதன் என்று பாராமல் விழப்போகிற அடிகள் நெஞ்சுக்குள்திடுக்கிடச் செய்கிறது.
இறைத்தவண்ணம் அப்படியே செத்துப்போனால் நிம்மதி ஏற்படும் என்று தோன்றி யது. சாவு வரட்டும் என்று இறைக்கத் தொடங்கினார். குளம் மேலும் கீழும் அசைவதுபோல இருந்தது. நிலைகொள்ளாது ஒரு பக்கம் குளம் கவிழ்வதுபோல ஆடியது.
ஆள்மாறி ஆள்மாறி இறைத்தார்கள், பரமத்தேவர் பாய்ச்சலைக் கண்டு வந்து அமர்வதும் தொடர்ந்தது. சின்னப்பன் வைராக்கியமாக இறைத்தார் அவர்களில் ஒருவர் மாறி ஒருவர் தூங்கவும் செய்தனர்.
வானில் நட்சத்திரங்கள் கிழக்கில் மேலேற மேற்கில் நட்சத் திரங்கள் இறங்கின. இன்னார வெள்ளி, தார்க்குச்சி வெள்ளி, கட்டில்கால் வெள்ளி, கோலவெள்ளி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தது.
விடியற் காலைஇறைக்க வலுவில்லாமல் சரிந்து விழுந்தார்,முட்டிகள் உடலைத் தாங்க முடியாது துவண்டன.தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு மீண்டும் இறைப் பொட்டி கயிற்றை வைராக்கியமாக எடுத்துப் பிடித்து வெட்டுக் கிடங்கில் வீசினார். கால்களை இறுக ஊன்றி இறைத்தார்.
வீட்டில் வந்து படுத்தவருக்குத் தூக்கம் வரவில்லை, கூரை முகட்டைப் பார்த்தபடி இருந்தார். உயிரோடு இருக்கவேண்டுமா என்ற வேதனை நெஞ்சை நிரப்பியது. முடியாது என்று ஓடிவந்திருக்க லாமா என்று தோன்றியது.
ஓடி வந்திருக்கவும் முடியாது. அப்படி முயன்றிருந்தால் அடித்து உதைத்து இழுத்து வந்து இறைப்பொட்டி போட வைத்திருப்பார்கள். அது இதைவிட அசிங்கமாகி இருக்கும். ஏனோ அந்தச் சமயத்தில் ஓடத் தோன்ற வில்லை, நான்கு இறைவைப் போட்டதும் போடா என்று அனுப்பிவிடுவார்கள் என்று ஒரு அற்பத்தனமும் தோன்றியது.
மீசையைத் தொட்டபோது முகமே துடித்தது, அடுத்த ஆண்டு வேட்டை துள்ளி துடியான சாமியாடியாகச் சுழன்று ஆடிவர நினைத்த கனவு கலைந்ததை நினைக்க நினைக்கக் கண்ணீர் வழிந்தது.
நான்கு நாளாக உண்ணுவதற்கு மனதே வரவில்லை, பெண்பிள்ளைகள் இரண்டுபுறம் அமர்ந்துசின்னய்யன் கையை நீவிவிட்டார்கள், சின்னவள்சாப்பாட்டுத் தட்டை மடியில் வைத்து “ரெண்டுவாய் சாப்பிடுப்பா” என்று கெஞ்சினான்.
அடிபட்டுவந்ததால் சாப்பிட்டிருந்தால் சாப்பிட்டிருக்கலாம் போகப்போகத் தன்னையே வெறுத்தார். உணவை உண்ண ரோசம் இடம் கொடுக்க மறுத்தது. பிள்ளைகள் பேரன் பேத்திகள் எவ்வளவோ கெஞ்சியும் சாப்பாட்டை வேண்டாம் என்றார், தான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டுமா?
பதினேழுவயதில் சாமியாடியாக எடுத்த இந்த வாழ்வை எப்படி விடுவது? அவமானம் மட்டுமே அழுத்திக்கொண்டுஇருந்தது. சாப்பாட்டில் மனமே செல்லவில்லை, சாப்பிட நினைத்தாலே நெஞ்சமெல்லாம் அதிர்ந்தது.
முடியாது என்று முரண்டு பிடித்திருக்கவேண்டும் அடித்துக் கொன்றிருந்தால் அந்த நேர வலியோடு அடங்கி நிம்மதியாகப் போயிருக்கும், நிம்மதியற்று இப்படிக் கிடக்க வேண்டியிருக்காது.
கோயில் நிலத்தை வெட்டி சுத்தம் செய்திருப்பதாகச் சொன்னார்கள், மறுகொடை விழா அடுத்தச் செவ்வாய்க்கிழமை எடுக்கப் போவதாக ஒரே பேச்சாக இருந்தது, அலுக்குப் பலுக்கு இல்லாமல் ஊர் அடங்கி இருந்தது.
தலைமாட்டில் அமர்ந்திருந்த வேம்பாளிடம் பெரியவனையும் சின்னவனையும் வரச் சொன்னார்.
இருவரும் வந்து அமர்ந்திருந்தார்கள், சின்னப் பனுக்குக் காது அடைத்தது விடவே இல்லை. மெல்ல “பெரிய சாதி இருக்கிற ஊருல சின்னசாதி வாழ்றது கஷ்டம்பா, டவுணுபக்கம் போயி நல்லபடியாபிழைக்கிறதுன்னா பிழைச்சுக்கோங்க, இனி இங்க நிம்மதியா இருக்க முடியாது” என்றவர் கண்மூடி மூச்சை இழுத்து விட்டார்.
நான்கைந்து மூச்சு வாங்கியப் பின் “கால் ஆணி கண்டவருக்குச் செருப்பு தச்சு தரமுடியல, வந்தாரன்னா ஊசி டப்பாவில அம்பது ரூவாயப் போட்டு வச்சிருக்கேன், எடுத்துத் தந்திடுங்க” என்றவர் பரணியில் வைத்திருந்த தோல் உருட்டைப் பார்த்தார். கண்களை மூடவேண்டும் போல் இருந்தது. சின்னவனைப் பார்த்து “யாரு கருப்பசாமிக்கு கோமரத் தாடியா வர்றது” என்றார்.
“கழுவன்” என்றான் மகன்.
Archibald Colquhoun and Peggy Wright ஆகியோர் இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்த Adam One Afternoon தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் ஆங்கிலப் பதிப்பு காலின்ஸ் பதிப்பகம் 1957. இந்த பதிப்பு 2000-இல் ரேண்டம் ஹவ்ஸில் வெளியிட்டது.
மிகத் தொலைவிலிருந்து இங்கே பார்ப்பது கடினம், மேலும் யாராவது ஒருவர் இங்கே ஒருமுறை வந்திருந்தாலும் கூடத் திரும்பிச் செல்லும் வழியை ஞாபகப்படுத்த முடியாது.
ஒரு காலத்தில் இங்கே ஒரு பாதை இருந்தது, ஆனால் முள்செடிகளை வளரவிட்டு நான் ஒவ்வொரு தடயத்தையும் அழித்தேன். இது நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, இந்த என் வீடு.
மஞ்சள் பூக்கும் காட்டுமுள் செடிகள் அடர்ந்த கரையில், ஒரே ஒரு தளம் கொண்டது, பள்ளத்தாக்கிலிருந்து இதைப் பார்க்க முடியாது, இந்த வீடு சுண்ணாம்பில் வெள்ளை அடித்திருப்பதையும் ஜன்னல்கள் சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருப் பதையும்.
இதைச் சுற்றி கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. லெட்டூஸ் கீரைகளை நத்தைகள் மெள்ளும் ஒரு துண்டு காய்கறிப்பாத்தி எனக்குப் போதுமானது.
சற்றே மேடாக்கப்பட்ட பூமியில் ஒரு முள் மண்வெட்டியைக் கொண்டு உருளைக்கிழங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறேன், எல்லாம் ஊதா நிறத்தில் மொட்டுவிட்டுக் கொண்டிருக்கின்றன.
நான் எனக்கு உணவளித்துக்கொள்ளும் பொருட்டு உழைத்தால் போதும், காரணம் எவரிடமும் எதையும் எனக்குப் பகிர்வதற்கு ஒன்றுமில்லை.
நான் முள்செடிகளை மீண்டும் வெட்டுவதில்லை, இப்போது வீட்டின் கூரையின் மீது ஏறிக்கொண்டிருப்பதையும் சரி, கொஞ்சம் கொஞ்சமாய் விழத்தொடங்கும் பனிச்சரிவு போல, சீர்ப்படுத்தப்பட்ட நிலத்தின் மேல் படர்ந்து வருபவற்றையும் சரி.
அவை சகலத்தையும் புதைத்துவிடுவதை விரும்புவேன், என்னையும் சேர்த்து. பல்லிகள் அவற்றின் கூடுகளைச் சுவர்களின் வெடிப்புகளில் வைத்திருக்கின்றன, எறும்புகள் தரையின் செங்கற்களின் அடியிலிருந்து தமது துளைகள் மிகுந்த நகரங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டுவிட்டன.
ஒவ்வொரு நாளும் புதிய வெடிப்புகள் வந்திருக்கின்றனவா என்று எதிர்பார்ப்பேன், மேலும் மனித இனத்தின் நகரங்களும் களைகளால் நிறைக்கப்பட்டு விழுங்கப்படுவதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.
என் வீட்டின் மேற்புறமாகக் கரடுமுரடான பள்ளத்தாக்குகளின் சில பகுதிகள் உள்ளன. அவற்றில் நான் எனது ஆடுகளைத் திரியவிடுகிறேன். அதிகாலை வேளையில் முயல்களின் வாசனையைப் பிடித்துக் கொண்டு சில சமயங்களில் நாய்கள், இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்.
அவற்றைக் கற்களை வீசி நான் துரத்துவேன். நாய்களை நான் வெறுக்கிறேன், அவற்றின் அடிமைத்தனமான மனித விசுவாசத்தையும். எல்லா வீட்டு மிருகங்களையும் நான் வெறுக்கிறேன், எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த தட்டுக்களின் மிச்சங்களை நக்குவதற்காக அவை மனிதர்களிடம் காட்டும் அவற்றின் கருணை போன்ற பாசாங்கினையும்.
நான் பொறுத்துக்கொள்ளக்கூடிய மிருகங்கள் ஆடுகள் மாத்திரமே, காரணம் அவை மனித நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை, எதையும் கொடுப்பதும் இல்லை.
என்னைக் காப்பதற்குச் சங்கிலியால் கட்டிய நாய்கள் எனக்குத் தேவையில்லை. உயிர்வேலிகளோ, பூட்டுகளோ கூட. அவை அருவெறுக்கத்தக்க மனிதரின் உபகரணங்கள்.
என்னுடைய தோட்டத்தைச் சுற்றிலும் தேனீக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒரு தேனீக்கூட்டத்தின் பறத்தல் என்பது முள்ளடர்ந்த உயிர்வேலி போன்றது. அதை நான் மட்டுமே கடக்க முடியும்.
இரவு நேரத்தில் தேனீக்கள் பீன்ஸ் விதைகளின் தோல்கள் மீது உறங்குகின்றன, ஆனால் எந்தமனிதனும் என் வீட்டினருகில் வருவதில்லை. அவர்களுக்கு என்னைப் பற்றிப் பயம், அதுவும் சரிதான். என்னைப் பற்றி அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட கதைகள் நிஜம் என்பதல்ல இதற்குக் காரணம்.
அவை பொய்கள் என்று நான் சொல்கிறேன், அவர்கள் எப்போதும் சொல்கிற விஷயங்கள்தான். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிப் பயப்படுவது சரிதான், அவர்கள் பயப்படவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
காலையில் நான் உச்சிப் பகுதிக்குச் செல்லும்போது, கீழே பள்ளத்தாக்கு விரிவதைப் பார்க்கிறேன், உயரமாக எல்லாப் பக்கமும் என்னைச் சுற்றியும் இந்த உலகினைச் சூழ்ந்தும் கடல் இருப்பதை என்னால் பார்க்க முடியும்.
மனித இனத்தின் வீடுகள் கடலின் விளிம்புகளில் அமைந்திருப்பதையும், அவற்றின் பொய்யான அண்டை வீட்டுத் தன்மையுடன் கப்பல் தகர்வடைந்தது போலிருப்பதையும். நான் பழுப்பு மஞ்சளானதும் சுண்ணாம்புக் கற்களால் ஆனதுமான நகரத்தையும், அவற்றின் ஜன்னல்களின் பளபளப்பையும், அவற்றின் நெருப்பின் புகையையும் பார்க்கலாம்.
ஒரு நாள் முள்செடிகளும் புல்லும் அவற்றின் சதுக்கங்களை மூடிவிடும், கடல் வந்து அவற்றின் சிதிலங்களைப் பாறைகளாக வடிவமைத்து விடும்.
இப்பொழுது தேனீக்கள் மட்டும்தான் என்னுடன் இருக்கின்றன. தேனடைகளில் நான் தேன் எடுக்கும் பொழுது என்னைக் கொட்டாமல் என் கைகளைச் சுற்றி ரீங்காரமிடுகின்றன, என் மீது ஒரு வாழும் தாடி போன்று படிந்துவிடுகின்றன.
நட்பான தேனீக்கள், எவ்வித வரலாறும் இல்லாத புராதன இனம். பல ஆண்டுகளாக இந்த மஞ்சள்பூ முள்செடிகளின் கரைப் பகுதியில் வாழ்ந்துவருகிறேன், ஆடுகளுடனும், தேனீக்களுடனும்.
கடந்து சென்ற ஒவ்வொரு வருடத்தையும் குறிக்கச் சுவற்றில் குறியிடும் வழக்கம் இருந்திருக்கிறது ஒரு சமயம். ஆனால் முள்செடிகள் இப்போது எல்லாவற்றையும் நெருக்கி மறைக்கின்றன.
நான் ஏன் மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகவேலை செய்யவேண்டும்?
நான் அவர்களின் வியர்வை மிகுந்த கைகளை வெறுக்கிறேன், அவர்களின் காட்டுமிராண்டித்தனமான சடங்குகளையும், அவர்களின் நடனங்களையும், தேவாலயங்களையும், அவர்தம் பெண்களின் அமில எச்சிலையும்.
ஆனால் அந்தக் கதைகள் நிஜமல்ல, என்னை நம்புங்கள், என்னைப் பற்றிய அந்தக் கதைகளை அவர்கள் எப்போதும் சொல்லி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய் சொல்லும் பன்றிகள்.
நான் எதையும் கொடுப்பதுமில்லை, நான் எவருக்கும் எதுவும் கடன்பட்டதுமில்லை. இரவு நேரங்களில் மழை பெய்தால், காலையில் கரையில் வழுக்கி நகர்ந்து வரும் பெரிய நத்தைகளைச் சமைத்து உண்கிறேன்.
காட்டின் தரையில் ஈரமான, மிருதுவான குடைக் காளான்கள் இரைந்து கிடக்கின்றன. எனக்குத் தேவைப்படும் மற்ற எல்லாவற்றையும் இந்தக் காடு தருகிறது. எரிப்பதற்கான குச்சிகளையும், பைன் காய்களையும், செஸ்ட்நட் கொட்டைகளையும். கண்ணி வைத்து நான்முயல்களையும் த்ரஷ் பறவைகளையும் கூடப் பிடிக்கிறேன்.
ஏன் எனில் எனக்குக் காட்டு விலங்குகளைப் பிடிக்காது, அல்லது இயற்கை பற்றிய உன்னத வழிபாட்டை - அது மனிதனின் அபத்தமான வெளிவேஷங்களில் ஒன்று.
இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கவேண்டும் என்பதையும், வலுவானவன் வைத்த சட்டமே நிலைக்கிறது என்பதையும் நான் அறிவேன். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மாத்திரமே கண்ணி வைத்துக் கொல்கிறேன், துப்பாக்கிகள் கொண்டல்ல, காரணம் அவற்றை எடுத்து வருவதற்கு வேறு மனிதர்களோ அல்லது நாய்களோ தேவை.
ஒவ்வொரு மரமாக அவர்கள் வெட்டும் கோடரிகளின் மழுங்கின ‘தட்’ ஓசையால் சில சமயங்கள் சரியான நேரத்தில் நான் எச்சரிக்கப்படாதுவிட்டால் காட்டில் சில மனிதர்களைச் சந்திக்கிறேன்.
அவர்களை நான் பார்க்காததுபோலப் பாசாங்கு செய்வேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் இந்தக் காடுகளுக்கு விறகு சேகரிக்க வருவார்கள், கற்றாழைகளின் பிடுங்கப்பட்ட தலைகளைப் போல அவர்கள் பிய்த்து எடுத்திருப்பார்கள்.
அடிமரங்கள் கயிறுகள் கொண்டு இழுத்துச் செல்லப்படுகின்றன, அவை உருவாக்கும் ஒழுங்கற்ற தடங்கள் புயல்காலத்தில் மழையைத் தேக்கி நிலச்சரிவுகளை உண்டாக்கத் தூண்டுகின்றன.
மனிதரின் நகரங்களில் உள்ள சகலமும் இத்தகைய அழிவுக்கே சென்று சேரட்டும். ஒரு நாள் நடந்து செல்லும்போது நான் பார்க்க வாய்க்குமா, வீட்டுப் புகைபோக்கிகள் பூமியிலிருந்து வெளிவருவதையும், படுபாதாளங்களில் விழும் தெருக்களின் பகுதிகளை நான் சந்திப்பேனா, காட்டின் மத்தியில் ரயில் பாதையின் துண்டுகளால் நான் தடுக்கி விழுவேனா?
கண்டிப்பாக நீங்கள் வியப்பீர்கள், இந்த என்னுடைய தனிமை என் மீது கனத்துக் கவிவதை நான் உணரவில்லையோ என்றும், ஏதோ ஒரு மாலையில் நீண்ட அந்திமயங்கும் நேரங்களில் ஒன்றில், நீண்ட வசந்தகாலத்தின் மாலை மயங்கும் நேரத்தில், எவ்வித குறிப்பிட்ட நோக்கமும் என் சிந்தனையில் இல்லாமல், மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் செல்லவில்லையா என்றும்.
நான் செல்லத்தான் செய்தேன், ஏதோ ஒரு மாலைவேளை, ஒரு நீண்ட கதகதப்பான மாலை மயங்கும் நேரத்தில், வசந்தத்தின் நீண்ட மாலை மயங்கும் சமயம் சென்றேன்.
கீழே இருக்கும் தோட்டங்களைச் சூழ அமைந்திருக்கும் சுவர்களை நோக்கிச் சென்று ‘மெட்லர்’ மரங்களின் வழியாகக் கீழே இறங்கினேன். ஆனால் பெண்கள் சிரிப்பதையும் ஒரு தூரத்துக் குழந்தையின் அழைப்பினையும் கேட்டவுடன் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.
அதுதான் கடைசித் தடவை. இப்பொழுது மேலே நான் தனியாக இருக்கிறேன். நல்லது, இப்பொழுதும் அப்பொழுதும் தவறுகள் செய்வது பற்றி நானும் பயந்துவிடுகிறேன் உங்களைப் போலவே. மேலும் உங்களைப் போலவே நானும் முன்புபோலவே தொடர்கிறேன்.
நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள், வாஸ்தவமாக, உங்கள் கணக்குச் சரிதான். அந்த விவகாரத்தினால் அல்ல, இருந்தாலும், அது எப்போதாவது நடந்ததா இல்லையா என்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது அது ஒரு விஷயமே இல்லை, எப்படி இருந்தாலும்.
அந்தப் பெண், நீண்ட புல்வெட்டும் ‘சைத்’ கருவியுடன் இங்கு மேலே வந்த அந்தக் கறுப்புப் பெண், அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது, அப்பொழுது இன்னும் கூட மனித உணர்ச்சிகளால் நிறைந்தவனாக நான் இருந்தேன்--நல்லது, அவள் அந்தச் சரிவின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன், என்னை அவள்கையசைத்து அழைத்தாள், ஆனால் நான் பதில் சொல்லாமல் கடந்து போய்விட்டேன்.
ஆமாம், நான் அப்பொழுது கூட இன்னும் மனித உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தேன், மேலும் அந்தப் பழைய கோபத்துடனும் கூட. மேலும் அந்தப் பழைய கோபத்தினால் - அவளுக்கு எதிராக இல்லை என்றாலும் கூட, அவளுடைய முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை - நான் அவளுக்குப் பின்புறம் சென்றேன், அவளுக்கு என் ஓசை கேட்காமல்.
இப்பொழுது மனிதர்கள் சொல்லும் கதைகள் வெளிப்படையாகவே பொய்யானவை, காரணம் அப்போது மிகவும் தாமதமாகி இருந்தது, பள்ளத் தாக்கில் ஒரு குஞ்சும் கூட இருக்கவில்லை, அவளுடைய குரல்வளையைச் சுற்றி என் கைகளைப்போடும்போது எவரும் அவள் சப்தத்தைக் கேட்க வில்லை.
ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள நான் என் கதையை ஆரம்பத்திலிருந்து சொல்லவேண்டியிருக்கும்.
ஆங், நல்லது, நாம் அந்த மாலை நேரத்தைப் பற்றி இனி குறிப்பிட வேண்டாம். இங்கே நான்வாழ்கிறேன், லெட்டூஸ் கீரைகளைத் துளையிடும் நத்தைகளுடன் எனது லெட்டூஸ் கீரைகளைப் பகிர்ந்து கொண்டு.
குடைக்காளான்கள் வளரும் எல்லா இடங்களையும் எனக்குத் தெரியும், அவற்றில் விஷக்காளான்களுக்கும் நல்லவற்றுக்கும் என்னால்வித்தியாசத்தைச் சொல்ல முடியும். பெண்களைப்பற்றியும் அவர்களின் விஷங்களைப் பற்றியும்நான் இனியும் சிந்திப்பது கிடையாது.
கற்புடன் இருப்பது என்பது ஒரு பழக்கமே தவிர வேறல்ல, எல்லா வற்றுக்கும் மேலாக.
அவள்தான் கடைசி ஆள், புல்வெட்டும் கருவியுடனிடருந்த அந்தக் கறுப்புப் பெண். வானம் மேகம் நிறைந்திருந்தது. நான் ஞாபகம் கொள்கிறேன், கறுப்பு மேகங்கள் கடந்து சென்றன.
அது போன்றதொரு விரையும் வானத்தின் கீழே, ஆடுகளினால் ஒட்டமேயப்பட்ட சரிவுகளில், முதல் மனிதத் திருமணங்கள் நடந்திருக்கவேண்டும். மனித ஜீவன்களுக்கிடையில் ஆன தொடர்பில் பரஸ்பர பயங்கரமும், அவமான மும் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது.
நான் விரும்பியதும்கூட அதைத்தான். பயங்கரத்தையும் அவமானத்தையும் காண்பதற்கு, அவள் கண்களில் வெறும் பயங்கரத்தையும் அவமானத்தையும் காண. அந்த ஒரு காரணம்தான் அதை நான் அவளுக்குச் செய்தது, என்னை நம்புங்கள்.
அதைப்பற்றி என்னிடம் ஒருவரும் ஒரு வார்த்தையும் என்றுமே சொல்லவில்லை. அவர்களால் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் இல்லை, அந்த மாலை பள்ளத்தாக்கே வெறிச்சோடிக் கிடந்தது.
ஆனால் ஒவ்வொரு நாளும் மலைகள் இருளில்மூழ்கும்போது, லாந்தர் விளக்கொளியில் அந்தப் பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நான் நகரத்தை உணர்கிறேன், அதனுடைய மனிதர்களுடனும், வெளிச்சங்களுடனும், இசையுடனும் கீழே அவர்கள் இருப்பதை உணர்கிறேன்.
உங்கள் குரல்கள் யாவும் என்னைக் குற்றம் சாட்டுவதை உணர்கிறேன்.
ஆனால் என்னைப் பார்ப்பதற்குப் பள்ளத்தாக்கில் ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் அந்த விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம் அந்தப் பெண் வீடு திரும்பவில்லை என்பதுதான்.
கடந்து செல்லும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் நின்று உறைந்துபோகின்றன, தரையைத் தம் கால்களால் கீறி ஊளையிடுகின்றன என்றால், அதற்குக் காரணம் அங்கே ஒரு வயதான குழிமுயலின் வளை இருப்பதுதான், நான் சத்தியம் செய்கிறேன், வயதான வெறும் குழிமுயலின் வளை.
தரை, கடல், வான் எனச் சாலைகளும் ஊர்திகளும் பெருகிவிட்ட சூழலில் உள்நாட்டிற்குள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்து பரவசம் அடையக்கூடிய வாய்ப்புகள் பின்காலனித்துவச் சமூகத்தில் வளர்ந்துவிட்டன.
இன்று பூமிக்கு வெளியே விண்வெளிச் சுற்றுலாப் பயணம் போய் வருவதும் நடந்துகொண்டிருக்கிறது; பழக்கப்பட்ட காட்சிகளைவிட மேற்கண்ட பயணங்களில் எதிர்கொள்ள நேரும் பழக்கப்படாத, அதிசயத்தில் ஆழ்த்தும் காட்சிகளாலும் மனிதர்களாலும் உள்ளத்தில் ஏற்படும் எல்லை இல்லாப் பரவசத்தையும் களிப்பையும் மற்றவர்களோடும் பகிர்ந்து இன்பம் காணத் துடிக்கும் ஒரு மன அமைப்பில் இருந்து பிறந்ததுதான் இந்தப் பயண இலக்கியம் எனக் கருதலாம்.
தமிழ் இலக்கிய மரபில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தொடங்கி ஐம்பெருங் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பலவற்றிலும் இந்தப் பயணம் என்பது ஒரு நிகழ்வாக இணைக்கப் பட்டுள்ளது.
(சிலப்பதிகாரத்தில் பயணங்கள் - என்றே இக்கட்டுரையாளர் ஒரு சிறுநூல் எழுதியுள்ளார்.) காப்பியத்தில் பயின்றுவரும் உறுப்புகளில் செலவு - அதாவது பயணம் என்பது ஒன்று என வகுத்தவர்களின் இலக்கிய அறிவைப் பாராட்டத் தோன்றுகிறது; ஆனாலும் 20ஆம் நூற்றாண்டின் காலனித்துவச் சமூகத்தில்தான் தனித்ததொரு இலக்கிய வகை எனச் சொல்லும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது; எனவே தொடக்கக் காலப் பயண இலக்கிய நூல்களாகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட முடிகிறது.
வீராசாமி ஐயர் எழுதிய ‘காசி யாத்திரை’ (1832) முதல் தமிழ்ப் பயண நூலாகக் கருதப்படுகிறது; தொடர்ந்து சேலம் நரசிம்மலு நாயுடு எழுதிய ‘ஆரிய திவ்விய தேச யாத்திரையின் சரிதம்’ (1885), துரைசாமி மூப்பனார் எழுதிய ‘கங்கா யாத்ரா ப்ரபாவம்’ (1887), கொ.சண்முகச்சுந்தர முதலியாரின் ‘காசி ராமேஸ்வர யாத்திரை’(1903) முதலிய நூல்கள் தமிழில் பயண இலக்கியம் என்கிற வகை உருவாகத் தொடக்கமாக அமைந்தன.
தொடர்ந்து ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்று 1940களிலேயே அறியப்பட்ட ஏ.கே.செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்) (1911-1983) ஏறத்தாழ பத்துப் பயண நூல்கள் எழுதியதோடு 1850க்கும் 1925க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பலருடைய கட்டுரைகளைத் (ஏறத்தாழ 140) தேடித் தொகுத்து, ‘பயணக்கட்டுரைகள்’ என்று ஆறு தொகுதிகளை வெளியிட்டார்.
இன்னும் திரு.வி.க. (இலங்கைச் செலவு), சி.சுப்பிர மணியன் (நான் கண்ட சில நாடுகள்), கவியோகி சுத்தானந்த பாரதியார் (நான் கண்ட ரஷ்யா), மு.வரத ராசனார் (யான் கண்ட இலங்கை), ம.பொ.சி. (மாஸ்கோ விலிருந்து இலண்டன் வரை), சாலை இளந்திரையன் (எங்கள் பயணங்கள்) எனப் பலரும் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர்.
பயண நூல் எழுதுவதற்காகவே உலகம் முழுவதும் பயணம் செய்த ‘இதயம் பேசுகிறது’ என்ற இதழை நடத்திய மணியன், 12 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். 1885 தொடங்கி 2008 வரை 600 பயண நூல்கள் வந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூகுள் கட்டுரையில் பதிவாகியுள்ளது.
இத்தகைய பயண இலக்கிய நூல் வரிசையில் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (1921-1982) நான்கு பயண இலக்கிய நூல்களும் தனித்து விளங்குகின்றன.
மேன்மையான ஒரு புனைகதையை எழுத்தாளருக்குரிய மொழிநயமும் நுட்பமான அவதானிப்பும் அங்கதம் வந்து அப்பும் நடையும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அள்ளி வழங்குபவையாக அமைகின்றன.
இந்திய வானொலி நிலையத்தின் நிர்வாகம் ஜப்பான் நாட்டு வானொலி நிலையத்தின் செயல் முறைகளை அறிந்து வர தி.ஜா.வை ஜப்பானுக்குச் சென்றுவரப் பணிக்கிறது.
அப்பொழுது தான் கண்ட ஜப்பானை, சுதேசமித்திரன் இதழில் தொடராக எழுதியுள்ளார்; தொடர்ந்து 1967இல் ஐந்திணைப் பதிப்பகம் ‘உதய சூரியன் - ஜப்பான் பயணக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணக் கட்டுரைகளைச் சிட்டியும் தி.ஜா.வும் சேர்ந்து எழுதியுள்ளனர். 1971ஆம் ஆண்டில் புக்வெஞ்சர் (Book Venture) என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தி.ஜா. நடை அவ்வளவாகப் புலப்படவில்லை.
அரசின் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ரொமானியாவுக்கும், செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்த பயண அனுபவத்தைக் கணையாழியில் தொடராக எழுதியுள்ளார்; 1974இல் புத்தகமாக வெளி வந்துள்ளது; வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற தலைப்பில்.
பத்து அதிசயங்களைக் கொண்ட ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற பயண நூலைச் சாவி இதழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்குச் சர்வதேசக் குழு ஒன்றுடன் சேர்ந்து சென்று வந்த அனுபவத்தைப் பேசுகிறது.
இந்த நான்கில் தி.ஜா.வின் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இந்தக் கருத்தரங்கிற்காகக் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற முக்கியமான ஒரு பயண நூலை மட்டும் மையப்படுத்தி இக்கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.
எடுத்துரைப்பின் அழகியலை அணுஅணுவாய் உணர்ந்து அறிந்த ஒரு கைதேர்ந்த கதைசொல்லி என்பதால், தொடக்கத்திலேயே வியக்கும்படியாக ரொமானியா
(ருமேனியா, உருமேனியா, உருமானியா, Romania )-வில் கண்ட காட்சியைப் பற்றிப் பேசுகிறார். வாசிக்கத் தொடங்கினால், காணாத ஒரு காட்சியைப் பற்றிப் பேசுகிறார். அது ஒரு சிகிச்சை விடுதி - ஆரோக்கிய விடுதி - பற்றியது. “அந்த விடுதியில் ஒரு மாதம் தங்கினால் கட்டிளங்காளையாகத் திரும்புவீர்கள்” என்றொரு ‘கவி’ பரிந்துரை செய்கிறார்.
“அந்த அளவிற்கு எங்களுக்கு நேரமும் இல்லை; டாலரும் இல்லை.” என்று தன்னிலையைப் பதிலாகச் சொல்லுகிறார். இந்தக் காயகல்ப சிகிச்சை விடுதிக்கு அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து முதலிய பல நாடுகளில் இருந்து வருகிறார்கள் என்ற தகவலையும் தருகிறார்.
இப்படியான தான் செல்லாத இடத்தைக் குறித்த ஓர் உரையாடல் மற்றும் கதை மூலமாகச் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைக்க நடக்கும் விளம்பர உத்தி இவையெல்லாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் தி.ஜா.
அவருடைய புனைவெழுத்துகளிலும் நீக்கமற இடம்பெறும் இத்தகைய சொல்முறை இந்தப் பயணநூலிலும் பரவிக்கிடப்பதால் கவனமாக வாசிக்கிறவர்களுக்கு வாசிப்பு இன்பம் பெருகிவரும் என்பது உண்மை.
ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போரை எதிர்கொண்ட வடுக்களால் நிரம்பிக் கிடப்பவை. தி.ஜா. வுக்கும் அந்த வடுக்கள்தான் முதலில் கண்ணில் படுகின்றன.
ப்ராஹாவில் தங்கியிருந்தபோது ஸாவர்னா என்ற உணவு விடுதிக்குச் சென்றால், உண்டு கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலோர் 60 - 70 வயதுதான கிழவர்கள்.
காரணம் கேட்டால், “இரண்டாம் உலகப் போரில் இளைஞர்களும் நடுவயதுக்காரர்களும் போர்முனையில் மாண்டுவிட்டனர்; இளைஞர்கள் இனிதான் பெருகவேண்டும்” என்றுபதில் கிடைக் கிறது; பதில் சொன்ன அந்த நண்பரிடம்தன்னுடைய டில்லி நண்பர் ஒருவர், “நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் போர்முனைக்குப் போகவேண்டும்; பட்டாளத்தில் சேர்க்கப்படவேண்டுமென்று உலக அளவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் போரே இந்த உலகத்தில் தோன்றாது” என்று சொன்னதைச் சொல்லுகிறார்; பதிலுக்கு அந்த நண்பர்,
“அருமையான யோசனை! உண்மைதான். உலகம் முழுவதும் அரசியல் நடத்துபவர்கள் பெரும்பாலும் நடுவயது அல்லது கிழத்தடியர்கள்தான். சண்டையைத் தொடங்குபவர்கள் அவர்கள்தான்.
ஆனால் அவர்களுடைய மடமைக்கும் வெறிக்கும் போர்க்களத்தில் பலியாகிறவர்கள் இளைஞர்கள்தான்” (ப.14)
என்று சொன்னதாகப் பதிவு செய்கிறார்; தொடர்ந்து அந்த நண்பரே ‘ஐக்கிய நாடுகள் இளைஞர் ஸ்தாபனம்’ என்று தனியாக இருக்கவேண்டும்; அல்லது இருக்கிற ஐ.நா. சபையே இளைஞர் ஸ்தாபனமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்; அப்பொழுதுதான் போர் ஒழியும்; அப்போதும்கூட வயதானவர்கள் வந்து சூழ்ச்சி செய்து இளைஞர்கள் மனதைக் கலைத்து விஷவித்துக்களை ஊன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறினாராம். இவ்வாறு தி.ஜா.,
போர் ஒழிப்புக் குறித்துத் தனது சிந்தனையைத்தான் இப்படியொரு நாடகப் பாங்காகப் புனைந்து கூறுகிறார். அவர் ஓர் அரசு ஊழியர். தன் செலவில் பண்பாட்டுப் பரிவர்த்தனை என்ற பேரில் அனுப்பி வைத்திருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கும்போதுதான், தி.ஜா. என்கிற பேராண்மையின் பெருமை புலப்படும்.
உணவு விடுதியில் முதியவர்களே உட்கார்ந்திருக்கும் அந்தக் காட்சி தொடர்ந்து அவருக்குள் தொல்லைப்படுத்திச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. இப்படி எழுதுகிறார்:
“என் ஊர், என் ஜில்லா, என் ராஜ்யம், என் தேசம் - இந்த எல்லா ‘என்’களும், நமது உலகம் என்ற பெரும் கலத்துள் முரண் இன்றி, உதைப்பின்றி அந்தந்த இடத்தில் ஆங்காங்கு அமர்ந்திருந்த கிழவர்களையும் கிழவிகளையும் பார்த்தோம். இத்தனை ‘என்’களுக்கும் தங்கள் வயிற்றில் பிறந்த இளைஞர்களை இரையாகக் கொடுத்தவர்கள் இவர்கள்” (ப. 14)
மேலும் இரவு வந்தால் திரைப்படம் போகலாமென்று அழைத்துச் செல்லுகிறார்கள். அங்கேயும் போர் விளைவித்த கொடூரமான கதைகள்; காட்சிகள்; ஓரிடத்தில் ‘அமைதியான காட்சிகள் நிறைந்த படங்களை எங்களுக்குக் காட்டுங்களேன்’ என்று தி.ஜா. வாய்விட்டுக் கேட்கும் அளவிற்குப் போரின் கொடூர நினைவுகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன; உலகப்போர் முடிந்த 1945-களுக்குப் பிறகு ஐ.நா. என்றும் உலக அரசாங்கம் என்றும் மானுட சமூகத்தில் போரே நடக்கக்கூடாது என்றும் (ஏறத்தாழ 5 கோடி மக்களைப் பலி கொடுத்த பிறகு) பெரும்பேச்சாகப் பேசப்பட்டது.
ஆனால் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுதான் கழிந்திருக்கிறது; அதற்குள் உலகம் முழுவதும் அமெரிக்கா உட்பட, மீண்டும் தேசிய வெறிகள், ஆக்ரமிப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டன; மனித இனத்திற்கு விமோசனம் என்பதே இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு மேன்மையான கலைஞனுக்கே உரிய கருணைக் கண்களைப் பெற்றவர் தி.ஜா. என்பதால் அதைக் கண்டுகொள்ளுகிறார்; அது குறித்த தன் சிந்தனையை இப்படியொரு நாடகப்பாங்கில் பதிவு செய்துகொண்டு போகிறார்; பொதுவாகவே தி.ஜா.வின் பயணக் கட்டுரைகள் முழுவதும், வெளிநாட்டில் தான் காணும் ஒரு காட்சி, தனக்குள் தூண்டிவிடும் சிந்தனைகளை உரையாடலாக வெளிப்படுத்துகிற முறையிலேயே அமைந்துள்ளது.
ரொமானியாவின் எழுத்தாளர்கள் சந்திப்புக் குறித்த பதிவில் இன்றியமையாத பல கருத்துக்களை முன் வைக்கிறார்; அங்கே எழுத்தாளர்கள் ‘டாக்டர் அல்லது இன்ஜினியரைவிட’ மூன்று மடங்கு வருவாயோடு நல்ல நிலையில் இருக்கிறார்கள்; எந்த நூலானாலும் குறைந்த பட்சம் 15 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள்; எல்லாம் ஓராண்டில் விற்றுவிடுகின்றன; காரணம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள். “பொதுவாகச் சோஷலிஸ்ட் நாடுகளில் புத்தகப்பசி அதிகம்” என்று பதிவு செய்கிறார்; புத்தக ஆக்கம் குறித்துப் பேசும் போது, அவருக்கே உரிய அங்கதம் மேலெழுந்து நமது பரிதாப நிலையைப் படம் பிடித்துவிடுகிறது.
“(அங்கே) புத்தக விலையும் மலிவு, புத்தகத்திற்குப் பயன்படும் காகிதங்கள் உயர்ந்த ரகம். மேலட்டைகளில் நவீன ஒவியக்கலை ஓங்கியிருக்கிறது. பெண்களின் முகத்தையோ, மற்ற அங்கங்களையோ பெரிதுபடுத்தி அட்டையில் போட்டால்தான் விற்கும் என்ற அவசியம் இல்லை.
பஞ்சாங்கக் காகிதங்களும், நைந்துபோகும் காகிதங்களும் ஒரு தடவை படித்ததும் அக்கக்காகக் கலையும் கட்டும், அச்சுப் பிழைகளும் இல்லை” (ப. 35)
இப்படியான அங்கதம் நூல் முழுவதும் பரவி கிடக்கிறது; அங்குள்ள துப்புரவான நகரம், சுத்தமான ரயில் நிலையம் முதலியவற்றைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்குள் நினைவுகள் குறுக்கே பாய்ந்து நம்மூர் கும்பகோணத்தையும் டில்லியையும் முன்னிறுத்தி அவர் எழுதிச் செல்லும் அங்கதம் அனைத்தும் தி.ஜா. என்ற மாபெரும் கலைஞனுக்குப் பெருமை சேர்க்கக் கூடியனவையாகும்.
ரொமானியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். க்ளூஷ் எழுத்தாளர் சங்கத்தில் சந்தித்த இளம் எழுத்தாளர்கள் வாஸிலே ரெப்ரியானு, அகஸ்டின் புஃபூரா யாய் செஃப், அயன் லுங்கு, (ப.95) இலக்கிய ஒப்பியல் விமர்சகர் டாக்டர் ஃடிஃபான பிட்டான், கவி வர்ஜில் தியோட ரெங்கு, கவி ட்யூடர் அர்கேசி, நாட்டுப்பாடல் வகைகளில் ஒன்றான தோய்னா - என்று பலவாறு பேசும்போது, அர்கேசியைப் பற்றி,
“ஐரோப்பிய கவிதை வரலாறு ஒன்று எழுதப்படுமானால் அர்கேசியின் பெயர் அதன் மகாகவிகளில் ஒன்றாக நிற்கும். ஐரோப்பிய இலக்கியத்திலேயே ஒப்பற்று ஜொலிக்கும் புதிய உருவகங்களைப் படைத்துக் குவித்திருக்கிறார்” (ப.103) என்று எழுதிவிட்டு தி.ஜா. தனக்கே உரிய பாணியில் இப்படி எழுதுகிறார்:
“அர்கேசி போன்ற ரொமானியாவின் இலக்கிய மேதைகள் நமக்குத் தெரியவில்லை. இன்னும் பல சிறிய நாடுகளின் தனிப்பட்ட அழகுகளை நாம் காணவில்லை. வல்லரசு நாடுகளின் படைப்புகள்தான் பிரபலமாகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ரஷ்யா. இப்படித் தன் அழகைக் காட்ட ஒவ்வொரு நாடும் வல்லரசாக ஆக முயலவேண்டும் போல் இருக்கிறது” (ப.103) என்று கிண்டலாக எழுதுகிறார்; மற்றொரு இடத்திலும் இதே கருத்தை வேறொரு விதமாகப் பதிவு செய்கிறார்:
“ஃபுக்கின் நாவல்களும் சரி, மற்ற செக் ஆசிரியர்களின் படைப்புகளும் சரி - இந்தியாவில் வரவில்லை. முன்பு கூறியவாறு நம் வரலாற்றில் ஏற்பட்ட வினை. ஆங்கில இலக்கியம்தான் மேற்கத்திய இலக்கியத்தின் உச்சம், பிரதிநிதி என்ற மயக்கம் இன்னும் நம்மை விடவில்லை” (ப. 125)
இவ்வாறு காலனித்துவத்தின் செல்வாக்கு ஒரு சிறிதும் குறையாமல் இங்கே இலக்கியத்துறையிலும் நீடிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ரொமானியாவிலிருந்து செக் நாட்டின் ‘ப்ராஹா’ வந்து தான் முதலில் இறங்குகிறார். அந்த நகரத்தின் இசையின் பெருமை பேசுகிறார்; இசைமேதை மோட்ஸா இதன் எழிலைக் கண்டு போதைகொண்டு விட்டான் என்றெழுதுகிறார்.
சிறுபத்திரிக்கை வாசகனான எனக்கு ‘ப்ராஹா’ என்றவுடன், அங்கு வாழ்ந்த பிரான்ஸ் காஃப்கா (1883-1924) குறித்துத் தி.ஜா. என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலோடு வாசிப்பில் வேகம் கூடியது.
செக் எழுத்தாளர் சங்கச் சந்திப்பில் திருமதி ஷெர்மா யானோவா என்ற நாவலாசிரியையைச் சந்திக்கிறார். “நான் சந்தித்த முக்கியமான எழுத்தாளர் இவர்” என்ற அறிமுகத்தோடு காஃப்கா குறித்து அவர் சொன்ன கருத்தாக இப்படி எழுதுகிறார்:
“காஃப்காவை உண்மையான செக் எழுத்தாளர் என்று நான் கருதுவதில்லை. அவருக்குக் காசநோயைத் தவிர, மனநோயும் அதிகம். தம்மையே தனித்துக் கொண்டு வலுவிழந்த மனத்தைச் சுமந்து துயர்பட்டவர்.
அவர் உலகைப் பார்த்த பார்வையும் மனப்பாங்கும் ஒருவித அச்சத்தின், மன அசௌக்யத்தின் அடிப்படையில் உருவானவை. ஆனால், செக் மக்கள் உல்லாசமானவர்கள். ஆரோக்ய உள்ளம் படைத்தவர்கள்; அதனால்தான் உண்மையான செக் படைப்பாளன் என்று காஃப்காவைக் கருத விருப்பமில்லை எனக்கு.
நாட்ஸிகள் யூதர்களைப் படுத்திய பாடும் கொடுமையும் காஃப்காவை அளவுக்கு மீறி உயர்த்த மறைமுகமாக உதவின.”
இப்படிச் சொன்ன அந்த நாவலாசிரியையிடம் தி.ஜா. கேட்கிறார்,
“இதனை எங்கள் நாட்டுச் சோதனைப் படைப்பாளர்களிடம் சொல்வீர்களா?”
அதற்கு அந்த அம்மையார், “சொல்லுகிறேன். என் தோலை உரித்துவிடுவார்கள். அவ்வளவுதானே. இங்கேயே அந்த மாதிரி பலர் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னாராம்; இந்த உரையாடல் முழுவதும் அப்படியே தி.ஜா.வின் தனித்தன்மையை, மொழியை வேலை வாங்கும் ஆளுமையைக் காட்டும் ஒரு சிறு துணுக்காகும்.
சோதனையைச் சோதனைக்காகச் செய்வது சரியல்ல (ப.127) என்ற தமிழ் சோதனை எழுத்தாளர்கள் குறித்த தன் விமர்சனத்தைத்தான் மேற்கண்டவாறு நாடகப் பாங்காகப் புனைந்து காட்டுகிறார்.
மொழிபெயர்ப்பாளர் நியாகு என்பவரோடு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். ‘டான்யூப்’ நதி வரப்போகிறது என்கிறார் அவர், தி.ஜா.வுக்குள் இருக்கும் குழந்தை வெளியே வந்துவிடுகிறது; அதன் முழுப் பிரவாகத்தையும் மயங்கிப்போய்ப் பார்த்துக்கொண்டேயிருந்த ஞாபகம் என்கிறார்;
மேலும் “நதிகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது; கடல், மலை, வயல் காட்சிகளுக்குச் சொற்கள் உண்டு. எனக்கு நதிகளை வர்ணிக்க முடிவதில்லை;
சும்மா பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்; ஒரு தாயை, கடவுளைப்போல நேரில் காண்கிற பிரமை. மன ஓட்டத்தை நிறுத்திவிடுகிற உயிர்க் காட்சி.
கடவுள் இல்லை என்று சொல்லு என இங்கர்சால் போன்ற பெரியார்கள் என்னைக் கட்டி வைத்து அடித்தாலும், கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாலும் நான் இல்லை என்று சொல்லமாட்டேன்.
கரை தவழும் வெள்ளத்தைச் சுமந்து செல்லும் ஆறு ஒரு மக்கள் கூட்டம், ஒரு உயிர் கூட்டம், அருள் கூட்டம் என்று மட்டும் சொல்கிறேன்” (ப.68) என்று கவிதை எழுதுகிறார் தி.ஜா. காவிரி ஆற்றின் குழந்தை அல்லவா அவர்!
இந்த இடத்தைப் போலவே வாய்ப்புக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பகுத்தறிவு இயக்கத்தினர்க்குக் ‘கொட்டு’ கொடுத்துக்கொண்டே போவதைப் பார்க்க முடிகிறது. ஓர் உரையாடலின் போது ஒரு நண்பரின் நண்பர், உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியுமா, வால்மீகி ராமாயணம், கீதை படித்ததுண்டா? வேதங்களைப் பற்றித் தெரியுமா? இப்படிப் பல கேள்விகள்; உடன்பாடான பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்; அப்படி என்றால், “நீர் பிராம்மணரா?” என்ற கேள்விக்கு “இல்லை” என்று கூறுகிறார்; ஏன்? என்ற அடுத்தக் கேள்விக்கு “பிராமண யோக்யதை ஒன்றும் கிடையாது. பிறந்தது அந்த ஜாதியில்.
ஆனால் பகுத்தறிவுவாதிகளும் அரசாங்க - கல்லூரி அதிகாரிகள் எல்லாம் என்னைப் பிராமணன் என்றுதான் கூறுகிறார்கள். பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட மூடநம்பிக்கைகள் சாத்தியம்” (ப.54) என்று ஒரு குட்டு வைக்கிறார்.
“உச்சிக் குடுமியை ஒழிக்கும் கோஷம்” (ப.15) என்று ஓரிடத்தில் சுட்டிச் செல்லுகிறார். இதுபோலவே மொழி அரசியலைப் பற்றிப் பேசும்போதும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
“மொழி உணர்ச்சி நெருப்புப்பெட்டி; விளக்கும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். எங்கள் மொழி உயர்த்தி என்று பல முட்டாள்கள் சொல்வதால்தான் உலகில் மொழிச் சண்டைகள், அதன்மூலம் நாட்டு - இனச் சண்டைகள் மூள்கின்றன... சுயநலக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உதவுகிற கோடரிகள்” (ப.122) என்றெல்லாம் ரொமானியாவிலுள்ள செக் - ஸ்லோவாக் என்ற இருமொழிகளைக் குறித்துப் பேசும் பின்புலத்தில் இதையும் பேசுகிறார்.
மற்றொரு இடத்தில் குழந்தைகள் பேசும் மொழி உலகமெங்கும் ஒன்றாகவே இருக்கிறது. அவர்கள் செய்வது எல்லாம் உலகம் எங்கும் ஒரே அச்சுதான்; வளர்ந்து ‘பாஷைகளாகக்’ கற்றுக்கொள்ளும்போது தான் பாஷைகளின் பின்னுள்ள சுவர்களும் எழுகின்றன என்கிறார்.
“இந்த ஒலிகளே எங்கள் மொழியில் கிடையாது” என்று ஷ, ஜ, ஸ போன்ற எழுத்துகள் அடங்கிய புத்தகங்களையே தடை செய்கிற டாக்டர் பேராசிரியர்களின் நினைவு வருகிறது.
‘இந்த ஒலி எங்களுக்குக் கிடையாது’ என்று சொல்லுவதைக் கேட்டால் நமக்கு “அடித்துக் கொண்டு அழ அறுபது கைகள் ஏன் இல்லை என்று குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது”.
இவ்வாறு தூரத்தில் எங்கோ சென்று யார் யாரோடோ உரையாடும்போதும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிகழ்த்திக் காட்டிய செயல்பாடுகள் கூடவே வந்து அவரைத் தொந்தரவு படுத்துவதையும் தி.ஜா. நினைவுகூர்கிறார்.
ஓரிடத்தில் தான் பாடும்போது ஏற்படும் முகக் கோணலைக் கண்டு, இரண்டு ரொமானியப் பையன்கள் சிரிப்பது தெரியாமல் சிரித்தார்களாம். அப்பொழுது “தம்பி, ஓடற பாம்புக்குக் கால் எண்ண வேண்டா” என்று தமிழில் சொன்னதாகப் பதிவு செய்கிறார்.
உண்மையிலேயே அவ்வளவு நுட்பமான பல பார்வைகள் இந்தப் பிரதி முழுவதும் விரவி கிடக்கின்றன. ஜார்ஜ் டான் என்ற ரொமானிய கப்பல் ஓட்டும் துறையிலிருந்து ஓய்வு பெற்றவரைக் குறித்துச் சொல்லும்போது மிக நுட்பமாக அவர் முகபாவத்தைக் கவனித்துப் பதிவு செய்கிறார். அவருக்கு, “ஆங்கிலம் தெரியாது. பிரஞ்சுதான் தெரியும்.
எனவே மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்னமே அவர் முகம் துடியாய்த் துடிக்கும்; என்ன இத்தனை நேரம் காக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு பரபரப்பும் குறையும் முகத்தில் கூத்தாடும்” (ப. 52) என்கிறார்.
ஒருநாள் வுல்த்தாவா (செக் நாட்டில்) நதிக்கரை ஓரமாக இருக்கும் பெத்ஸ்லோவா - என்பாரின் வீட்டிற்குப் போகிறார். அந்த நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார் தி.ஜா. “குளிர் காற்றைத் தடுப்பதற்காக ஆற்றையும் அதன் மீதுள்ள வீதியையும் நோக்கும் பெரும் சாளரத் திறப்பை மூடப் போனார் அவர்; அப்போது அடிவானம் செக்கரும் ஓரிரண்டு விண்மீனும் மோனமுமாகத் தவமிருந்தது.
மூச்சை நிறுத்தும் வனப்பாக அங்கு அந்தி மயக்கம் கண்மூடும் சமயம். பெத்ஸ்லோவாவும் அதைப் பார்த்துச் செயலற்று நின்றார். ஐந்து நிமிடம் கழித்துத்தான் திரையைத் தொங்கவிட முடிந்தது அவரால்” (ப.126)
இதுபோலவே ஐரோப்பிய ஆலயங்களில் இளைஞர்களைக் காண முடியவில்லை என்பதை அவதானித்துச் சொல்லுகிறார்; மேலும் “கண்ட கண்ட இடத்தில் எந்த உணவையும் தயார் செய்யும் அவசர யுகத்தில் ‘சுவை நஷ்டம்’ எற்படத்தான் செய்யும்.
ஓய்வின், அமைதியின் குறியீடுகளையும் பரபரப்பின் சின்னங்களையும் ஒரே சமயத்தில் அடைய முடியாது. கூழோ, மீசையோ - ஒன்றுதான் தேறும்” (ப.84) என்றெல்லாம் எழுதிச் செல்லும்போது கைதேர்ந்த எழுத்தின் வலிமையை உணரமுடிகிறது.
இன்னும் அங்கே உள்ள அரூபக் கலை, கிராம மியூசியம், கண்ணாடிச் சிற்பக் கூடம், ஓவியக் கூடம், இசைக் கூடம், கருங்கடல் காட்சி, நோய்க்கு மருந்தாகப் பயன்படும் நீர் ஊற்றுமலைகள், ஏரிகள் மறைந்து கட்டிடங்கள் எழும்பிய கதை, எலும்பைப் பதம் பார்க்கும் குளிர், இனக்காப்பு வரலாறு, போர்களால் அலைக்கழிக்கப்பட்ட மக்களின் மன நிலை, நாட்டுப்புறப் பாடல்கள், சூன்யமாகத் தெரியும் உள்ளொடுங்கிய தெருக்கள், வெங்காய வடிவக் கோபுரங்கள், பல்வேறு நூலகங்கள் எனப் பலவற்றையும் வெறுமனே வரிசை கட்டிச் சொல்வதிலிருந்து மாறுபட்டு, அந்த வேற்றுப் புலத்தில் வித்தியாசமான காட்சிகளால் தனக்குள் இருந்து புறப்பட்டு வந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் தனக்கே உரிய நக்கலும் கிண்டலும் அங்கதமும் கூடிய புனைவுமொழியில் எடுத்துரைத்துள்ளார் தி.ஜா. இதே பாணியிலேயே ரொமானியாவுக்கும் செக் நாட்டிற்கும் போய் வந்து ஓராண்டு கழித்து எழுதிய இந்தப் பதிவு குறித்தும் இப்படி எழுதுகிறார்.
“ஒரு ஆண்டுப் பூட்டி வைத்த மளிகைக் கடையைத் திறந்து பார்த்தால், என்னதான் காற்றுப் புகாமல் மூடியிருந்தாலும் புளி விறைத்திருக்கும், பருப்பில் சற்று புழு அந்துக்கள் விளையாடியிருக்கும். கற்பூரம் கரைந்திருக்கும், இல்லாவிட்டால் இப்படி மூடிவிட்டான்களே எனக் கோபக்கார இளம் எலிகள் சாக்குகளையாவது மர டப்பாக்களையாவது பல்லால் அறுத்திருக்கும். பூசணம் இருக்கும். எண்ணெய் பிசுக்கு வெடி சேர்ந்திருக்கும். நினைவும் அப்படித்தான். அப்படி அப்படியே இருந்து விடாது.
ஆனாலும் எத்தனையோ நினைவுகள் பசுமையாக, ஒரு அசைவு, மணம், ஓசை விடாமல் இருக்கின்றன. அப்படி மிக மிக ஓங்கி நிற்பது தெருக்களின் சூன்யம்” என்றும் எழுதுகிறார்.
இப்படி ஓர் அழகான உருவகம் மூலம் தன் எழுத்தின் தன்மையைப் போக்கைத் தானே விமர்சனம் செய்து கொள்ளும் மேன்மையான கலைஞராகத் தி.ஜா. உயர்ந்து நிற்கிறார்.
1. தி.ஜா., ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (மு.ப.1974), காலச்சுவடு, டிச.2017, நாகர்கோயில் - 629001.
2. தி.ஜா. நினைவு நூற்றாண்டுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை - சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சாகித்திய அகாடெமி, அக்.5, 6, 2021.
மதில் மேல் ஐந்து காகங்கள் அமர்ந்திருக்கின்றன ஆறாவதாய் ஒன்று வந்ததும் ஐந்தில் ஒன்று பறந்துவிட்டது மற்றொன்று வந்ததும் இன்னொன்று பறந்து போகிறது அரைமணி நேரமாய்க் கவனித்தும் ஐந்து மட்டுமே இருக்கிறது ஆறாவது காகம் அங்கு அமரவேயில்லை மாடியிலிருந்து இறங்கி வந்து போனைப் பார்த்தால் நண்பர் ஒருவர் ஐந்து முறை அழைத்திருக்கிறார் என்னவாயிருக்கும் என்ற கலக்கம் ஒரு பக்கம் காகம் ஒன்றின் குரல் போல ஒலிக்கிறது அசரீரி நல்லதே நடக்கும் அல்லது நடந்தது நல்லது.
தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு நடராஜ நாமகரணத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் அவனாலோ பதின் பருவம் நிறைவுறும் வரையிலுமே ‘ட’ எழுத்தை உச்சரிக்க முடியவில்லை நா சுழல மறுப்பது ஏன் ஏதேனும் சாமிக்குத்தமா என கலங்கினர் பெற்றோர் நதராஜன் என்றே கூறித் திரிந்தவனுக்கு ஒரு நாள் அதிசயமான ஒரு வாழைப்பழம் கிடைத்தது அதை உரித்தபோது உடைந்த ‘ட’ உண்ட போது ‘த’ என்றானது இப்போது பெயரை உச்சரித்து உச்சரித்து ஆஹா தேன் வாழை தேன் வாழை என்று துள்ளும்போது வாழைப்பழ திரைக்காட்சி நினைவிற்கு வந்து ஒரு விஷயத்தை அவனுக்கு உணர்த்தியது வருவது வரட்டும் என இரண்டில் ஒன்றை விழுங்கியவனின் துணிவுதான் மிகச்சிறந்த நகைச்சுவை.
சித்திரை ஒளி குற்றங்கள் இந்தச்சொற்கள் விடாது துரத்துகின்றன சித்திரை ஒளி கொண்டாட்டம் என்று உருக்கொண்டிருக்க வேண்டியவை கோடை வெயிலின் ஒளிக்கீற்று மணிக்கட்டை ஆழமாய்க் கீறியும் துரத்தலும் ஓட்டமும் நிற்காமல் தொடரும் சாலையில் விபத்திற்குள்ளாகி நசுங்கிக் கிடக்கும் ஆட்டோவின் தன்னம்பிக்கை வாசகம் இந்த நொடிக்கு துளியும் உதவாதது குற்றங்களும் கொண்டாட்டமும் எப்படி இடம் பெயர்ந்தது என்பது யாரும் அறியாதது.
பிரியாணி எனும் சொல் ஒரு பிசாசைப்போல் பிடித்துக்கொண்டிருந்த காலம் எதைப் பேசினாலும் பிரியாணி என்றே ஒலிப்பதாய் கூறினர் தூக்கத்தில் முனகுவதும் முணுமுணுத்து வணங்குவதும் பிரியாணியையே நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது என நினைத்தால் சிறிதும் பொருத்தமற்ற ஒரு சூழலில் என் இலையில் வந்து விழுகிறது பிசாசு நீங்கள்தானே அழைத்தீர் என்கிறார் சர்வர் சூழலைப் புறந்தள்ளி வரவழைத்துக்கொண்ட மனோதிடத்துடன் அதனுடன் மோதினேன் ஹோட்டல் அதிபரும் இன்னும் சிலரும் மகிழ்ந்து சிரித்தவண்ணம் இருக்கின்றனர் அதனிடம் தோற்றுக்கொண்டிருக்கும் எனக்கோ மிகுந்த துக்கமாயிருக்கிறது.
தமிழில் எண்பதுகளில் அறிமுகமான அமைப்பு இயல், பின்னமைப்பியல் கோட்பாட்டுப் பின்புலத்தில் தொன்னூறுகளின் உலகமயமாதலுடன் அறிமுகமான ஒரு கோட்பாடே பின்நவீனத்துவம் மற்றும் பின்காலனியம்.
இவ்விரண்டு சொற்களும் தமிழில் புதுக் கலைச்சொற்களாகப் பயிலப்படுவதற்கு முன்பாக ஒருவித ‘பேன்ஸி’ சொற்களாக மாறி, இன்று தேய் வழக்கான ஒருவகைக் குறிச்சொற்களாக (Buzz word) ஆளப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக இரண்டும் எந்தப் பறவைகள் வேண்டுமானாலும் எச்சமிட்டுச் செல்லும் தலைவர்கள் சிலைபோல ஆகி விட்டது. ஓர் இலக்கியவாதியின் அனைத்துக் குறைபாடுகளும் பின்நவீனம் என்று ஒதுக்கி ஓரங்கட்டும் நிலையே உள்ளது.
இயலாமையை, இயலமுடியாததை எல்லாம்பின்நவீனம், பின்காலனியத்தில் ஏற்றி, கடந்து சென்று தவிர்ப்பதான சூழல் உள்ளது. கவிதை புரியவில்லையா?
பின்நவீனத்துவம், பின்காலனியம்தான் காரணமென்று இவ்விரண்டு வார்த்தைகளை மட்டுமே அறிந்தவர்களின் கூற்று உலா வருகிறது. இதன் உச்சம் என்னவென்றால், புரியாமல் எழுதுவது அனைத்தும் பின்நவீனம் என்று கூறும் அளவிற்கு இது ஒரு சர்வரோக நிவாரணியாக மாறியுள்ளது.
இத்தனைக்கும் பின்நவீனம், பின்காலனியம் குறித்து நிறைய நூல்களும், கட்டுரைகளும் வந்து, உரையாடல்களும் நடந்துள்ளன. ஆனாலும், தமிழின் பழகிய மனம் ஆழமாக எதையும் உள்வாங்காமல், பனிச்சறுக்கில் விளையாடும் பிள்ளைகளைப்போல, மேலாகச் சறுக்கிச் செல்வதே சுகம் என்ற மனநிலைக்கு ஆழ்ந்துவிட்டது.
ஒருவகையில் அறிவு ஆழப்படாமல், மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்று அறிவித்த பின்நவீன நிலை தமிழ்ச் சூழலில் நிலவுகிறதோ? அதற்கிணங்க, தமிழ் அறிவுப் பரப்பு மேற்பரப்பில் மிதக்கும் ஒன்றாக மாறிவிட்டது என்பதே யதார்த்தம்.
அலைகுடிகள், நிலைகுடிகளாகி இன்று வலைகுடிகளாக மாறிவிட்டனர். எதையும் ஆழமாகவும், ஆழ்ந்தும் புரிந்துகொள்ளும் மனநிலை முற்றிலுமாக, தன்-மையவாத, தன்-முனைப்புவாத மனநிலையாக, நுகர்வை அடிப்படையாகக் கொண்டதாக மாறியுள்ளது.
அதன் விளைவு தமிழ் இலக்கியம் நுகர்விற்கானதாக மாறியுள்ளது. மந்தைகளின் மேய்ச்சல் நிலங்களாக உள்ளதே தவிரப் புதியன விளைவதற்கான விளைச்சல் நிலங்களாக இல்லை.
நுகர்வே அனுபவமாக, உயர் ரசனையாகக் கட்டப்பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு, பண்டங்களைப்போல நுகரப்படுகிறது. அந்நுகர்ச்சிக்கான ரசனைகளை உருவாக்குவதாகத் திறனாய்வு, விமர்சன, மதிப்புரை இத்யாதிகள் உருவாக்கப்படுகின்றன.
காத்திரமான இலக்கியங்களை உருவாக்கிய தமிழ் சூழலில், நீர்த்த, நுகர்வு சார்ந்த, ரசனைவாத தின்னிப்பண்டார இலக்கியங்கள் பெருகிவிட்டன. வெறும் விதந்தோதல், படைப்பாளிகள் ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து சுகம் காணுதல் என்பதாக மாறிவிட்டது. மெய்யிலக்கியம் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி நலம் விசாரிக்கும் ‘மொய்யிலக்கியமாக’ மாறிவிட்டது.
இதில் சாதி சார்ந்த, மதம் சார்ந்த, எழுத்தாளன் நட்புச் சார்ந்த குழுக்களாக, கூட்டங்களாக வாசகத்திரள் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது. விரல்நுனி ‘விக்கி’ விபரங்களே எழுத்தாளன், வாசகனின் அறிவுப்பரப்பாக, ஆச்சர்யம் தரும் படைப்புத் திறனாக மாறியுள்ளது.
இல்லாவிட்டால் பாலியல் சீண்டல்கள், மிகைப்பாலியல் ஃபேண்டஸிகள், குடும்பச் செண்டிமெண்ட், வரலாற்றுப் புனைகதைகள், மிகைஉணர்ச்சி காதல் நாடகங்கள் ஆகியவை இலக்கியங்களாக உள்ளன. தமிழில் இலக்கியப் பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் அவர்களது பல்லக்குத் தூக்கிகளும் நிறைவதற்கு இதுவே காரணம்.
தமிழ் இலக்கியச் சூழலின் இந்த நீர்த்த நிலை பல ரசனைவாத இலக்கியப் பீடங்களையும், மடங் களையும் உருவாக்கும் அரசியல் களமாக மாறிவிட்டது.
இலக்கியப் பீடங்கள் என்பவை ஒவ்வொரு காலத்தின் ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்தால் கட்டப்படுவதே. சான்றாக, தமிழ் இலக்கிய வரலாற்றை உற்று நோக்கினால் இந்தப் பீடங்களுக்கும், ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலத்திற்கும் உள்ள உறவு, மையமாகி சொல்லாடலாக மாறுவதையும் அறியலாம்.
சங்ககாலம் எனப்படும் பாட்டும் தொகையும் எழுதப்பட்ட காலத்தில் இயற்கையும், திணைகுடி வாழ்வும் ஆதிக்கம் வகிக்கும் மைய சொல்லாடல் புலமாக அமைந்தது. அதன்பின் வந்த கீழ்கணக்குக் காலங்களில் அறநெறி மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.
நாடுகளாக மாறிய நிலைகுடி வாழ்விற்கு அரசுருவாக்கத்திற்கான அறநெறிகள் தோன்றி அறிவுறுத்துவதாகவும், பௌத்த சமணச் சமய அறநெறி ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் புலமாகவும் அமைந்தன.
அடுத்துவந்த வேந்தர்கள் காலங்களில் குடிமக்கள் உருவாக்கத்திற்கான சமய வாழ்வியல் சார்ந்த காப்பியங்கள் இலக்கிய மையச் சொல்லாடல் புலமாக அமைந்தது. அதற்குப்பின் வந்த பேரரசு உருவாக்கத்திற்குத்தக இறை சார்ந்த பக்திநெறி இலக்கிய மையச்சொல்லாடல் புலமாக அமைந்தது.
பேரரசுகள் சிதைந்த பின்பு வந்த அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ப இலக்கிய மையச் சொல்லாடல் சிதைவுற்ற நிலையில் பல்வேறு இலக்கிய வகைமைகள் தோன்றின. சித்தர்களின் தனித்துவமான ஆதிக்க எதிர்ப்பு, நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் போன்றன மைய இலக்கியச் சொல்லாடலாக மாறியது.
18-19 ஆம் நூற்றாண்டில் உருவான காலனியத்திற்கு எதிரான தேசிய எழுச்சிக் காலத்தில் தேசியம் என்ற கருத்தியலே இலக்கியப்பீடத்தை தீர்மானிப்பதாக மாறியது. அதன்பின் வந்த திராவிட இயக்க எழுச்சியின்போது, எதிர்முரணாக, திராவிட எதிர்ப்பு இலக்கியம் என்பதே பீடமாக மாறியது.
அதாவது தேசிய எழுச்சி என்ற கருத்தியல் உயர்சாதி மற்றும் பார்ப்பனிய ஆதிக்க கருத்தியலாக இருந்ததால் அன்றைய இலக்கியப்பீடத்தைத் தீர்மானிப்பதாக மாறியது. ஆனால், திராவிட இலக்கியம் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் உருவானது என்பதால், தேசிய எழுச்சி இலக்கியம் சுத்த இலக்கியம், கலைமுதல்வாதம் என்கிற கலை அடிப்படைவாத ஆதிக்கமாக மாறியது.
திராவிட இலக்கியம் அதிகாரத்துடன் உறவுகொண்டிருந்ததால், ஆதிக்கம் வகித்த பார்ப்பனியச் சொல்லாடல் புலம் சிறுபத்திரிக்கை, மற்றும் சுத்த இலக்கியம் என்று அரசு அதிகார எதிர்ப்பு (இலக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்) இலக்கியமாக இருந்தது.
தமிழில் காலனிய ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்திய முதலாளிய ‘நவீனத்துவம்’ திராவிட அரசியலாகவும், இலக்கியத்தில் திராவிட எதிர்ப்பு பார்ப்பனியக் கலைமுதல்வாதமாகவும் வெளிப்பட்டது.
அதிகாரம் அரசுடன் உறவு கொண்டது என்றால், ஆதிக்கம் சமூகக் கருத்தியலுடன் உறவு கொண்டது. இலக்கியம் எப்பொழுதும் ஆதிக்கச் சொல்லாடலுடன் உறவு கொண்டு பீடமாக மாறுகிறது. அதனால்தான் ஆதிக்க இலக்கியப்பீடம் அதிகாரத்தைவிட ஆபத்துஆனதாக மாறுகிறது.
அது மக்களை இணக்கத் தன்னிலைகளாக அதாவது அரசதிகாரத்தை ஏற்கும் தன்னிலைகளாக மாற்றுகிறது. இலக்கியத்தின் இந்த முக்கியப்பணியைச் சமூகத் தொடர்ச்சியை மறுப்பதே ரசனைவாத இலக்கியக் கோட்பாடு.
எண்பதுகள் வரை தமிழ் இலக்கியத்தில் கலை முதல்வாதமே இலக்கியப்பீடமாக ஆதிக்கம் செய்துவந்தது. அது ஒருவகை மேட்டிமைவாத இலக்கிய மாகவும், இலக்கியத்தன்மை என்பது மேட்டிமை ரசனை சார்ந்ததாகவும் அமைந்தது.
இந்த மேட்டிமை வாதத்திற்கு எதிராக மக்கள் இலக்கியம் என்ற பரந்துபட்ட மக்கள் ரசனை என்பதாக மக்கள் இலக்கியம் என்ற ஓர் எதிர்ப்பிலக்கியம் உருவானது. இதனை பார்ப்பனிய மேட்டிமைவாதம், திராவிட வெகுசனவாதம் மற்றும் மாரக்சிய, இடதுசாரி சமூகவாதம் என்ற மூன்று போக்குகளாக வகைப்படுத்தலாம்.
எண்பதுகளில் இடதுசாரி சிந்தனையும், அமைப் பியலும், தமிழீழ எழுச்சியும் இணைந்து பார்ப்பனியக் கலை கலைக்காகவே, இடதுசாரி, திராவிடக்கலை மக்களுக்காகவே என்ற பிரிவினையைத் தகர்த்து, கலையின் சமூக விளைவை முதன்மைப்படுத்தியது.
இச்சூழலில், அமைப்பியலும், பின்னமைப்பியலும் தமிழ் இலக்கியப்பீட அரசியலை மேட்டிமையிலிருந்து விடுவித்து ஒருவகையில் ஜனநாயகப்படுத்தியது எனலாம். நாட்டார் மரபுகள் துவங்கி விளிம்பில் இருந்த பலவும் மையச் சொல்லாடலுக்கு வந்தன.
இச்சூழல் இலக்கியப்பீட அரசியல் என்ற மையத்தைத் தகர்த்தது. அதாவது இலக்கியத்தை உணர்வுப் புலத்திலிருந்து அறிவுப்புலத்திற்கு நகர்த்தியது. இதன் பொருள் இக்கோட்பாடுகள் உணர்வை மறுப்பதல்ல. அதனை அறிவுத்தளத்திலான உடலியக்கமாக மாற்றுபவை.
மீண்டும் இந்த மையம் வலதுசாரிகள் எழுச்சியுடன் 2000- த்திற்குப் பிறகு வலுவாகக் கட்டமைக்கப்படுகிறது. இச்சூழலில்தான் பின்நவீன மற்றும் பின் காலனியக் கோட்பாடுகள் இலக்கியப் பீடத்தகர்ப்பு என்ற அரசியலை மையம் X விளிம்பு என்ற முரணில், விளிம்பை முன்னெடுத்தது.
அதனால், இலக்கியப் பீடங்கள் இக்கோட்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் அதனை ஒரு பேஃஷனபுல் குறிச்சொல்லாக fashionable buzzword பயன்படுத்தி, அதனை ஒரு தேய்வழக்காக மாற்றிவிட்டனர். இது ஒருவகையில் பண்பாட்டுத் தளத்திலான குறியியல் சார்ந்த வர்க்கப் போராட்டமே.
இதன்விளைவு பின்நவீனம், பின்காலனியம் ஆகியவை குறித்த சரியான புரிதலற்ற ஒரு நிலையே பரவலானது. அதனைக் குறித்து வந்த நூல்கள் எழுத்துகள் பல்கலைக் கழகங்களில் பயன்பட்ட அளவிற்குக் கலை அடிப்படைவாத சிற்றிதழ்சார் தமிழ் இலக்கிய உலகில் பயன்படுத்தப்படவில்லை.
காரணம், கலை முதன்மைவாதம் என்றபெயரில் இங்கு அறிவார்ந்த கலைசார்ந்த பார்வையைவிட, ரசனை சார்ந்த உணர்வு சார்ந்த பார்வையே முதன்மையானதாக உள்ளது.
கலையின் முக்கியத்துவத்தை வெறும் அழகியல் சார்ந்ததாக முன்வைத்த இப்பார்வை, மதங்களைப்போலக் கலை அடிப்படைவாதமாகமாறி, அறிவு சார்ந்ததான கோட்பாட்டுப் பார்வைகளை விலக்கியது.
அதன் விளைவே அமைப்பியல் துவங்கி பின்காலனியம் வரை விலக்கப்பட்ட பார்வை உருவாகியது. கோட்பாடுகளைவிடப் படைப்பிலக்கியங்கள் அதிகம் வாசிப்பாளரிடம் உணர்வாக்கத்தை உருவாக்கி, கருத்தியலைச் சமூக வயப்படுத்திப் பண்பாட்டைக் கட்டமைப்பதாக உள்ளது என்பதால்தான், படைப்பாளிகளின் சமூகப் பொறுப்பும், கோட்பாடு சார்ந்த அறிவும் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியள்ளது.
தொழில் வளர்ச்சியடைந்த நவீனத்துவத் திட்டம் (modernist project) முழுமையடைந்த மேற்குலகில் பின்நவீனத்துவம் (post modernism), பின்நவீனம் (post modernity), பின்நவீனநிலை (post modern) என்பது சாத்தியம்.
வளர்ச்சியடையாத, காலனியத்தால் வீக்கம் அடைந்த, காலனிய எஜமானர்களால் திணிக்கப்பட்ட நவீனத்தை மேற்பரப்பில் ஏற்று மனதளவில் நிலவுடமை சார்ந்த பழைய மதிப்பீடுகளில் உள்ள இந்திய ஒன்றிய, குறிப்பாகத் தமிழகத்தில் பின் காலனிய சிந்தனையே பின்நவீனத்தின் குரலாக இடப்படுத்தக் கூடியது.
காரணம், கோட்பாட்டுச் சட்டகங் களில் பின்நவீனம், பின்காலனியம் இரண்டுமே பின்அமைப்பியல் சிந்தனைகள் உருவாக்கிய அடிப் படைகளோடு, திறனாய்வுச் சிந்தனையில், கருத்தாக்கங்களின் மூலம் உருவானவையே.
இதன் பொருள் இரண்டும் ஒன்றல்ல, ஆனாலும், இரண்டும் இரண்டு சமூகப்பின்னணிகள் குறித்த திறனாய்வுச் சிந்தனையை அளிப்பதே. நவீனம் முற்றுப்பெறாத, சுயவளர்ச்சியற்ற காலனிய சமூகங்களில் பின்நவீனத்துவம் பின்காலனியமாகவே தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. (இது எனது தனிப்பட்ட கருத்து என்பதால், இது விரிவாக விவரிக்கப்பட வேண்டும். ஆனால், அது மற்றொரு கட்டுரைக்கான திட்டம் என்பதால், இங்கு விவரிக்கவில்லை.)
அவ்வகையில் நம் சமூகத்திற்கு அதிகப் பொருத்தப்பாடு கொண்டது பின்காலனியமே என்பதால், அதன் அடிப்படையான காலனிய தன்னிலை உருவாக்கம் குறித்தும், அதில்இருந்து விடுபடுவது குறித்தும் சிந்திக்க முனைகிறது இக்கட்டுரை.
அது எப்படிக் கட்டுரை சிந்திக்கும், கட்டுரை எழுதுபவர்தானே சிந்திப்பார் என்ற கேள்வி பின் நவீன, பின்காலனிய சிந்தனையில் பொருளற்ற ஒன்று. ஏனென்றால், அகம் X புறம், உள் X வெளி, உள்ளடக்கம் X உருவம் போன்ற இருமைப் பிளவுகளை இக்கோட்பாடுகள் ஏற்பதில்லை.
மைய மற்ற ஒன்றிற்கு இத்தகைய இருமைப்பிளவுகள் சாத்தியமில்லை. மையங்களே இவற்றைத் தீர்மானிக் கின்றன. எழுத்தும், இலக்கியமும் ஆசிரியன், பிரதி, வாசகன் என்கிற ஓர் அமைப்பில் திரளும் (Assemblage) ஒன்று என்பதால், கட்டுரை தன்போக்கில் மொழியாக ஒழுங்கமைகிறது. எழுதுபவரின் உள்நோக்கம், மொழியின் சாத்தியப்பாட்டில், எழுத்தாக வெளிப் படுகிறது என்பதைக் கூறித் தொடரலாம்.
‘இந்தியப்பொதுபுத்தி’ எனும்பின் காலனிய தன்னிலை.
நமது பொதுபுத்தியில் படிந்துள்ள சில கேள்விகளுடன் இதனைத் துவங்கலாம்....
இத்தகைய பொதுபுத்தியில் பதிந்த நமது மன சாட்சியை விசாரணை செய்யும் ஒரு கோட்பாட்டுச் சட்டகமே பின்காலனியம். மேற்கண்ட கேள்விகளில் பொதிந்துள்ள எண்ணங்கள் உருவாகக் காரணமாக அமைந்த காலனியத்தன்னிலையைக் கேள்வி கேட்கும் ஒரு சிந்திக்கும் முறையே பின்காலனியம்.
அல்லது ‘பின்காலனியநோக்குதல்’ (postcolonial gaze) உருவாக்கும் தன்னிலை மீதான திறனாய்வாக (விமர்சனமாக) வெளிப்படுவதே இக்கேள்விகள். காலனியத்திலிருந்து விடுதலையடைந்த இந்தியாபோன்ற ஒன்றியநாடுகளில் உள்ள நமது தன்னிலை உருவாக்கத்தை, நமது சிந்தனையில் அமிழ்ந்துள்ள காலனிய அழுகலை, அதன் விளைவால் உருவான நமது அடிமை மனநிலையை, அடிமையாக இருப்பதில் காணும் சுகத்தைக் கட்டுடைத்து நம்மை, நமக்கு உணர்த்த முனையும் ஒரு கோட்பாடே பின்காலனியம். காட்டுமிராண்டித்தனமான, அநாகரீகமான, போரும், வன்முறையும், மூடநம்பிக்கையும் கொண்டதாக காலனிய எஜமானர்களால், காலனிய அறிவுஜீவிகளால் வரலாறாக நமக்கு சொல்லப்பட்டதைப் புறந்தள்ளி அதன் உள்ளே மறைக்கப் பட்ட நமக்கான வரலாற்றை எழுதுவதற்கான ஒரு கருவியே புதுகாலனியம்.
அல்ஜீரிய விடுதலைப் போராளியும் புரட்சிகர அரசியல் கோட்பாட்டுச் செயல்பாட்டாளருமான பிரான்ஸ்ஃபனான், பின்காலனியச் சிந்தனைக்கான கோட்பாட்டு அடிப்படைகளைத் தந்தவர்.
பிரான்ஸின் காலனியாக இருந்த அல்ஜீரியாவின் விடுதலைக்காகப் போராடிய உளவியல் மருத்துவரான அவர், காலனியத்தின் மிகப்பெரும் சிக்கலான காலனிய உளவியலை ஆய்வு செய்து, காலனியத் தன்னிலை எப்படிக் காலனிய நாடுகளின் மனிதர்களைத் தங்களது காலனிய தன்னிலைக்கு ஏற்பக் கட்டமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.
மேற்கண்ட அனைத்துக்கேள்விகளும் காலனிய நாடுகளின் ஆழ்மனதில் காலனியத்தை ஏற்கும் தன்னிலையாக, தன்னை அடிமையாக உணராத, எஜமான விசுவாசத் தன்னிலைகளாக இருப்பதை அம்பலப்படுத்தினார். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தன்னிலைகளாகக் காலனியத் தன்னிலைகள் அமைவுற்றிருப்பதை வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து “கீழ்த்திசைவியம்” (ஓரியண்டலிஸம்) மூலம் பின்காலனியச் சிந்தனை முறையைக் கோட்பாட்டாக்கம் செய்த எட்வர்ட்சைத், விளிம்புநிலை சிந்தனையை உருவாக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான காய்த்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பின்காலனியம் உருவாக்கிய கலப்பினம் பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த ஹோமிபாபா எனப் பலஆய்வாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே பின்காலனியம்.
காலனியம் எழுதிச் சென்ற,விட்டுச்சென்ற தன்னிலையிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு காலனிய எதிர்ப்பு மற்றும் உலகில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட விளிம்புநிலைத் தன்னிலையாக ஒருங்கிணையும் ஒருபுரட்சிகரசுயதன்னிலை பற்றியக் கோட்பாடே பின்காலனியக்கோட்பாடு.
17-ஆம்நூற்றாண்டு முதலாளிய புரட்சிகளுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் பிறகு உருவானதே காலனியம். அதற்கு முந்தைய சமூகங்கள் மதம் சார்ந்தும், நிலவுடமை உற்பத்தி முறையிலும் அமைந்த ஓர் உலகப்பார்வையைக் கொண்டிருந்தது.
புதிய ‘பகுத்தறிவு’ என்கிற அறிதல்முறை கட்டமைக்கப் பட்டு மொத்த உலகமும் அதன் அடிப்படையில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதுவரையிலான உயிர்கள், இயற்கை, அனைத்தும் முதலாளியக் கருத்தியலில், பகுத்தறிவுத் தர்க்கத்தில் மாற்றி அமைக்கப்பட்டன.
பல்வேறு குழுவாக, நிறமாக,இனமாக, மதமாக, மொழியாக அறியப்பட்டஉயிர்கள் உலகளாவிய ‘மனிதர்’ என்ற கருத்தாக்கத்தின் வழியாகப் பொதுமைப்படுத்தப்பட்டன. ஒரு வகையில் கடவுள் இறப்பும், கடவுளின் இடத்தை மனிதனும் மாற்றீடு செய்ததும் நடந்தன.
உலகம் என்ற ஒரு புவிப்பரப்பும், அதன் வரைபடங்களும், அதற்கான அறிவும் கண்டுபிடிக்கப்பட்டு கதைக்கப்பட்டது.
அதுவரையிலான பல இனங்களாக, குலங்களாக, குடிகளாக, நாடுகளாக இருந்த மக்கள் தேசங்களாக மாற்றப்பட்டனர். காலனியம் ஓர் உலகளாவிய வரலாற்றைக் கட்டமைத்தது. அனைத்துக் குடிகளின் வரலாறும், தேசங்களின் வரலாறாக மாற்றப்பட்டது.
இன்றைய உலகாக நாம் அறிவது 17ஆம் நூற்றாண்டு முதலாளியம் கட்டமைத்த உலகமே. அதுவரையில் மதங்களின் அதிகாரத்திலும், கடவுளின் ஆதிக்கத்திலும், நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் செயல்பட்ட மனித அறிவானது தேசியம், மனிதன், பகுத்தறிவு ஆகியவற்றால் மாற்றீடு செய்யப்பட்டது.
அதுவரையிலான இயற்கை சார்ந்த மனித உடல்கள், முதலாளிய உற்பத்திமுறைக்கான செயற்கை உடல்களாக மாற்றமடைந்தன. மனிதனின் ஆன்மீகம் என்று மதங்களின் கதையாடல்கள் முழுக்க, உற்பத்தி, உழைப்பு என்று மாறியது.
மனிதனின் ஆக்கபூர்வ உயிர்ப்பு என்பது, அந்நியமாக்கப்பட்ட உழைப்பாகமாறியது. மனித சக்தி உழைப்பு சக்தியாக மாறியது.
உழைப்பு சக்தி சந்தைகளால், முதலாளிய உற்பத்தி முறைகளால், அதன் உபரியால் தீர்மானிக்கப்பட்டது. இப்படியாக, இவ்வுலகம் உருவானதன் பின்னணியில் காலனியத்தின் அறிவுருவாக்கம் உள்ளது.
காலனியம் என்பது எஜமானர்கள் X அடிமைகள் என்ற இருமைப்பிளவில் கட்டமைக்கப்பட்ட ஓர் உலகப்பார்வை. காலனியத்தின் உச்சமாக உருவான வெவ்வேறு எஜமானர்களின் சந்தைப் போட்டிக்காக நடத்தப்பட்ட முதல், இரண்டாம் உலக யுத்தங்கள் காலனியத்தை முடிவிற்கு கொண்டுவந்தன. சுதந்திர தேசங்கள் என்ற பெயரில் உலகச் சந்தையானது மறுசீரமைப்புச் செய்யப்பட்டு உருவானதே புதுக் காலனியம்.
புதுகாலனியம் என்பது ஒரு நாடு அரசியலில் விடுதலை பெற்றாலும், தொடர்ந்து பொருளியல், சிந்தனை, கருத்தியலில் எஜமான தேசங்களால் ஆதிக்கம் செய்யப்படுவதே.
இப்புதுக்காலனியம் சர்வதேசம் என்கிற அமைப் பிற்குள் கொண்டுவரப்பட்டு, பல சர்வதேச அமைப்புகளால் (U.N.. World Bank. IMF. NATTO etc...) ஆளப் படுவதாக மாறியது. இப்புதுக்காலனியச் சமூகங்களின் எஜமானர்களுக்கு எதிரான மற்றும், காலனியத்தால் உருவாக்கப்பட்ட கலப்பினமான மனிதர்களின் தன்னிலையாக்கம் குறித்த ஒரு புதிய அறிவுருவாக்கக் கோட்பாடே பின்காலனியம்.
காலனியத்திலிருந்து விடுதலை அடைந்தாலும், காலனியத்தின் எச்சத்தை அகற்றி, காலனிய நீக்கத்துடன் எதிர்ப்புணர்வுடன் தனது சுதேசிய அடை யாளத்தையும், சர்வதேசிய அடையாளத்தையும் கலந்த ஒரு நாடாக இருக்கும் சமூகங்களின் தன்னுணர்வு சார்ந்த ஒரு கோட்பாட்டுத் திறனாய்வு சிந்தனையாக உருவானதே பின் காலனியம்.
‘பின்’ என்பது ‘ POST ’ என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழில் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இது
1. காலரீதியாக காலனியத்திற்கு பிந்திய என்ற பொருளிலும்,
2. கருத்தியல் ரீதியாக காலனியத்தை அகற்றிவிட்டு ஒரு புதிய தன்னடையாளத்தைப் பதிலீடு மற்றும் பதிவேற்றம் (post) செய்தல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதன்பொருள், காலனியத்தினை மறுப்பதும், காலனியத்தால் உருவான காலனிய தன்னிலைகளைக் கலைப்பதும், தகர்ப்பமைப்புச் செய்வதும் என்பதே. ஆக, காலனியம் என்பது, மேற்கத்தியம் தன்னை எஜமானனாக உருவாக்க, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளை அடிமைகளாகக் கட்டமைக்க, அதன் மூலவளங்களைச் சுரண்டிக் கொழிக்க உருவான ஒரு அதிகார அமைப்பு.
இந்த அதிகார அமைப்பின் ஒரு ஆதிக்க வடிவமாக உள்ள காலனியத் தன்னிலையைத் தகர்ப்பமைப்புச் செய்து புதிய தன்னிலைகளைக் கட்டமைப்பதற்கான முயற்சியே பின்காலனியக் கோட்பாடு.
பின்காலனியக் கோட்பாடு காலனியம் உரு வாக்கிய முரணான நாம் X பிறர் (Self X Other) என்ற அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கிறது. இதன் அடிப்படையில் மேற்கு X கிழக்கு, நாகரீகம் X காட்டுமிராண்டி உள்ளிட்ட முரண்கள் கட்டமைக்கப் படுவதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
இதன் வழியாகவே காலனியத் ‘தானுமை’ அல்லது சுயம் என்பது கட்டமைக்கப்படுகிறது. அதன் ஆதிக்கம் காலனியத் தன்னிலையாகக் காலனிய நாட்டு மக்களிடம் கட்டப்பட்டு அவர்கள் ‘பிறன்மை’யாக ஆக்கப்படுகிறார்கள் என்கிறது.
இம்மனநிலைதான் மேலே கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்குமான உளவியல் சார்ந்த பதிலாக அமைகிறது. இதன் வழியாக ‘வெள்ளைப் புராணம்’ (white mythology) உருவாக்கப்படுகிறது.
அப்புராணங்களில் பெருங்கதையாடல்களாக தேசியம், சர்வதேசியம் என்கிற கருத்தாக்கங்கள் அதற்கான கற்பிதப் புவியியல்கள் உருவாக்கப் படுகின்றன. இவ்வுலகம் ஒரு சர்வதேசிய அமைப்பாக கருதப்படுவதுடன், அதன் அடிப்படையில் உலகளாவிய கட்டப் பஞ்சாயத்து அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன.
இதன் தத்துவ விளைவாக அகிலத்துவவாதம் (Universalism) என்பது உருவாகிறது. அகிலத்துவ வாதத்தில் மேலாண்மையான ஒரு மாதிரியாக இருப்பது ஐரோப்பிய, அமெரிக்க வெள்ளையினம். உலகையே வெள்ளையின மாதிரியில் உருவாக்க முனைவதே இதன் அடிப்படை.
இதன் பின்னிருந்து இயக்குவது ஐரோப்பிய மையவாதம் (Euro-Centrism) என்பதை அம்பலப்படுத்துகிறது பின்காலனியம். அடிப்படையில் ஐரோப்பிய மையவாதத்தைத் தகர்ப்பதே பின்காலனியக் கோட்பாடு.
இது ஐரோப்பா உருவாக்கிய தான், பிறர் என்கிற தன்னிலைக்கட்டமைவைத் தகர்த்து, புதியதொரு விடுதலையான, சுதந்திரமான, அடிமைத்தனமற்ற தன்னிலையை உருவாக்க முனைகிறது.
இப்பொழுது இக்கட்டுரை ஒரு எச்சரிக்கையுடன் முடிகிறது. அதாவது, தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், பின்காலனியம் ஆகியவை இரண்டு தகவமைப்புகளைப் பெற்றுள்ளது. (‘தகவமைப்பு’ என்ற சொல். இவை சூழலுக்குத் தகத் தன்னை அமைத்துக்கொண்டன என்ற பொருளில்தான்.)
ஒன்று முன்நவீன மற்றும் முன் காலனிய சிந்தனைகள், பண்பாடுகள் என்கிற பழமைவாதத்தைச் சுய தேசிய அடையாளமாக முன்வைக்கும் ‘தேசபக்தி’ என்கிற பெருங்கதையாடல் போக்கு அதனை வலதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.
பிம்ப உடைப்பு, பழமை எதிர்ப்பு, புனிதக் கவிழ்ப்பு என்ற பெயரில் அனைத்தையும் அடித்து நொறுக்கி கட்டுடைப்போம் என்ற பெயரில் அறமற்றதாக வெளிப்படும் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்கிற பெருங்கதையாடல் போக்கு, அதனை இடதுசாரி பின்நவீன, பின்காலனியப் போக்கு எனக் குறிக்கலாம்.
பின்நவீன, பின்காலனியக் கோட்பாட்டில் பழமை, புதுமை என்ற எதிர்மைகள் கிடையாது. அவற்றை அதிகாரமும், ஆதிக்கமுமே தீர்மானிக்கிறது.
எனவே மேற்கண்ட இரண்டு போக்குகளும் எச்சரிக்கையுடன் நிராகரிக்கப்பட வேண்டியவை. இவை அதிகார அரசியலுடன், சமூக ஆதிக்கத்துடன் உறவு கொண்டவை.
இவ்விரண்டு போக்குகளுமே பின்நவீன மற்றும் பின்காலனியக் கோட்பாட்டின் அறம்சார் விடுதலைக்கு எதிரானது.
கலை இலக்கியம் என்பதை பின்நவீனம் மற்றும் பின்காலனியம் ஒரு சமூகச் செயல்பாடாக, உயிர்கள், இயற்கை, சமூகம் என்கிற மூன்று புலங்களின் அறம் சார்ந்த, அறிவுச் செயல்பாடாக முன்வைக்கிறது.
அச்செயல்பாடே அழகியலாக இலக்கியத் தன்மை கொண்டதாக இருக்கும் என்பதே நமக்கான பின்நவீனம் மற்றும் பின்காலனியம்.
சின்னப்பொன்னானுக்கு வயது எழுபதைத் தொட்டு இருக்கலாம் அல்லது தாண்டியுங்கூட இருக்கலாம். பரம்பரைச்சொட்டை நெற்றியிலிருந்து மேலேறி இருக்க காதுகளின் பக்கங்களில் பஞ்சுப்பொதிபோல முடிக்கற்றை அப்பியிருந்தது.
உள்ளூர் நாவிதன் ஊரின் தென்கடைசிக்கு மாதத்தில் இருமுறை மட்டுமே அடப்பப்பையுடன் வந்து போவதால் சின்னப் பொன்னான் தாவாங்கட்டையில் நீள நீளமான வெள்ளை முட்கள் குட்டானாய் முளைத்து நின்றிருந்தன.
சின்னப்பொன்னான் கண்களில் வெள்ளைப்புரை விழுவதாகவும், புகைபோன்று சிலரின் முக அடையாளம் தூரத்தே வருகையில் தெரிவதாகவும், சீக்கிரமாகக் கண்களை ஆப்ரேசன் செய்துகொள்ளணும் என்றும் பேச்சுக் கொடுப்பவர்களிடம் எல்லாம் சிலநாட்களாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
தூரத்திலிருந்து தன்னை நோக்கி வருபவர் ஆணா பெண்ணா என்ற சந்தேகமும், ஒருவேளை அது பேயாகவும்கூட இருக்கலாமெனவும் நினைப்பதாகவும் சொன்னவர் அப்படிச் சொல்லி முடித்ததும் சிரித்துக்கொள்வார்.
கிட்டே வந்துகொண்டிருக்கும் பேயை அவர், ‘யாரப்பா அது? வர்றது?’ என்று கேட்டு காதைத் தீட்டிக்கொண்டு எதிராளியின் பேச்சுக்குரலை வைத்து, “அட நீயாப்பா! தே... இன்னிக்கி பொழப்புக்கு எங்கீம் போவுலியா?
யாரப்பா உன்னி யாட்டம் இப்ப பொட்டிய முதுவுல கட்டீட்டு ஏணியைத் தூக்கீட்டு திரியறாங்க?
மரம் ஏறுன ஆக்கள் பூராவும் குழிக்குப் போயி படுத்துட்டாங்க! அங்கங்கெ ஊட்டுக்கு ரெண்டு தென்னைமரம் வச்சவவனுங்கெல்லாம் உன்னைக் கூப்பிட்டு ஏறச் சொல்லி தேங்காய் போட சொல்றாங்க!
காசுபணம் குடுப்பானுங்களா இல்லநாலு தேங்காயை எடுத்துட்டு போன்னு சொல்லீருவானுங்களா? நீயே கடையில புட்டுமா தின்னுட்டு திரியறே...
தேங்காயை வச்சி என்ன பண்டுவே?”
நான் சின்னவனா இருந்தப்ப ஊரைச்சுத்தியும் பனைமரம் காடுகாடா அத்தனை நின்னுட்டு இருந்துச்சுக! சில்லாங்காட்டுல நாப்பது மரத்துல தெளுவு எறக்கீட்டு இருந்துச்சு எங்கய்யன்.
அவுருக்குப்பொறவு நான் கலியாணம் கட்டுற வரைக்கிம் ஏறீட்டு இருந்தேன். மரம் ஏறுற மனுசனுக்குப் பொண்ணு குடுக்க மாட்டீனுல்லொ சொல்லீட்டானுங்க நசியனூர்ல!
அவிங்கூர்ல அவிங்க பங்காளிங்க நாலு பேரு பனையுச்சியில இருந்து பொத்து பொத்துனு உழுந்துஇடுப்பு போயி கெடக்கானுக...
அதே மாதிரி ஆயிப் போயிட்டா எம்புள்ளயில்ல இசி வழிக்கோணும்னு எம்பட மாமியாகாரி புள்ளையத் தரமாண்டீன்னு அவிங்கூட்டு வாசல்ல நின்னு குதிச்சா!
அவுனுக கள்ளை மூக்கு முட்ட ஏத்தீட்டு பனையேறி உழுந்தா அது அவுனுங்க கெரவம்! எல்லாருக்குமா அப்பிடி நடக்கும்?
அப்புறமென்ன... மயிலாவை நானு எப்பிடிக் கட்டுனேன்னு கேளு நீயி! எம்பட மாமியாகாரி கிட்ட பனையேறமாட்டேன்னு சத்தியம் பண்ணிக்குடுத்துல்லொ கட்டீட்டு வந்தேன்.”
இவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே சண்முகம்சென்றிருப்பான். இருந்தாலும் சின்னப்பொன்னான்சொல்ல வந்த விசயத்தை வேறு யாரேனும் இவரின் முதுகுக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருக்கலாமென முழுதாகவும் சொல்லி முடிப்பார்.
நிசமாலுமே இவருக்குக் கண்ணு கெட்டுப் போச்சா என ஊருக்குள் யாருக்கும் உறுதியாய் தெரியவில்லை.
ஊரின் தெற்கே கருப்பராயன் கோவில் அருகேதான் இவர் வீடு. கோவிலுக்கு அருகாமையில் அஞ்சுதலை நாகம் ஒன்று அப்பப்போ குறுக்கையும் மறுக்கையும் திரிவதாய் ஆடு மேய்ப்பவர்கள் சொல்வது இவர் காதிலும் விழும்தான். ஆட்டுக்குட்டி காணாமல் போனால் அந்த நாகம் தான் தூக்கிப்போய்ச்சாப்பிட்டுவிட்டதாய் சொல்லிக்கொள்வார்கள்.
இவரே தான் தனியாக இந்தப் பத்துப்பனிரெண்டு வருடங்களாகச் சமைத்து உண்டு வருகிறார். அரசாங்கம் கட்டிக் கொடுத்த பொட்டிவீடுதான். முன்பாகச் சாலை வீட்டினுள்தான் குடித்தனம் நடத்தினார்.
வீட்டினுள்ளே ரெண்டு தண்ணீர் குடமும் விறகடுப்பும் சமைத்துண்ண நான்கு போசியும் படுத்துறங்க ஒரு கயிற்றுக்கட்டிலும்தான் இருந்தன. இலவசமாய் வீட்டினுள் வந்து சேர்ந்திருந்த டிவி பொட்டியை பையன் முருகன் தூக்கிப்போய்விட்டான்.
சின்னப்பொன்னான் மயிலாவைக் கட்டிக்கொண்டு ஊருக்குள் வருகையில் அவளுக்கு வயது இருபது. பார்க்க முப்பது வயதுக்காரியாய் அப்போதே தெரிவாள். இவருக்கு இருந்தால் இருபத்தியெட்டு இல்லீன்னா முப்பது இருந்திருக்கலாம்.
மயிலா வந்தபிறகு மரம் ஏறிய ஏணியையும் பொட்டியையும் சாலையில் ஒசக்கே தூக்கிக் கட்டினார். எல்லோருமாய் யோசித்து முடிவெடுத்தப் பின் விசயமங்கலத்தில் தவுடு புண்ணாக்குக் கடை வைத்து முதலாளியாய் அமர்ந்தார் சின்னப்பொன்னான்.
பாவு காச்சிக்கொண்டிருந்த ட்ரம் சிலகாலம் சும்மாவே வீட்டின் பொறவுக்குக் கிடந்து துருப்பிடித்து அழிந்துவிட்டது. கருப்பட்டி அச்சுப் பலகையைக் கரையான் அரித்துத் தின்றுவிட்டது.
காடுகளில்உயரமாய் நின்றிருந்த பனைகள் காணாமல் போயிருந் தன. வெய்யில் காலங்களில் சிறார்களுக்கு வரும் வேர்க்குருவுக்குப் பெருவிரலால் நோண்டித்தின்றது போக மீதமான நொங்கை உடலெங்கும் பூசி வேர்க் குருவைப் போக்கடித்த காலம் மலையேறிப்போய் இப்போதைய குழந்தைகளுக்குக் குட்டிக்குரா பவுடர் பூசுகிறார்கள்.
பனங்கிழங்கை அறியாத சிறார்கள், அப்படின்னா என்ன அப்பாரு? அது மரத்துலயா காய்க்கும்? என்கிறார்கள்.
மயிலா ஒரு பெண்ணையும் மகனையும் அவருக் காக ஈன்றெடுத்தாள். பெண்ணை நசியனூருக்கே சொந்தத்தில் கட்டிக் கொடுத்திருந்தாள். மகன் உள்ளூரிலேயே காதல் வயப்பட்டு ஒருத்தியைக் கட்டிக்கொண்டான்.
அவன் திருமண விசயமே ஊரார்யாருக்கும் தெரியாமல் சிலகாலம் இருந்தது. திருமணம் செய்து கொண்ட விசயத்தை அந்தக் காதலர்கள் ஏன் ஊராருக்கு மறைத்தார்கள்? என்று, ஒருநாள் பெண் வீட்டார் தான் மகளின் அலைபேசியில் மாலையும் கழுத்துமாக மகளும் மருமகனும் நின்றிருந்த போட்டோ பார்த்து தெரிந்து ‘குய்யோ முய்யோ’வெனக் கதறினார்கள்.
எந்த நேரமும் நெஞ்சிலேயே வைத்திருந்த அலை பேசியை எப்போது ஏமாந்து டேபிளில் வைத்தோமென அந்தப்பெண் குழம்பியிருக்கையில் முதல் அடியை அம்மாவிடமிருந்து முதுகில் குப்பென வாங்கினாள்.
அழுகாச்சி எதுவும் அவள் வாயில்இருந்து வரவில்லை. உள்ளூர் சொந்தத்தில் சின்னப் பொன்னான் பையன் முருகன் இவளுக்கு அண்ணன் முறை வருகிறதாம். மற்றபடி காதலுக்கு ஊருக்குள் எந்த எதிர்ப்பையும் சனமே காட்டிக்கொண்டதில்லை இதுகாலம் வரை.
வீடு வீடுக்கு குட்டிக்குட்டியாய் சில பஞ்சாயத்துகள் நடந்து முடிந்து ஊரின் மேற்கே கடைசி வீட்டுக்குத் தனிக்குடித்தனம் செய்துகொள்ளக் காதலர்கள் பணிக்கப்பட்டார்கள். இப்போது அவர்களின் பையன்கூட உள்ளூர்பள்ளியில் ஆறாவது படிக்கப் போய்க் கொண்டிருந்தான் சைக்கிளில்! காதல் கண்மணியாய் இருந்த முருகனின் மனைவி சீதாலட்சுமி உடல்பெருத்து நூறுநாள் வேலைக்கு மம்பட்டி சட்டியோடு உள்ளூர் பெண்களோடு கதையடித்துக்கொண்டு செல்கிறாள்.
‘யக்கோவ்! எம்பட ஊட்டு முன்னால தக்கோளிச் செடி இருந்ததல்லக்கா, அதுல தெனமும் நாலு பழம் பொறிச்சுப் போடறனக்கா!
இப்பப்பாரு ஊருக்குள்ள ஆட்டோல கொண்டாந்து விக்கறவன் மூனுகிலோ நாப்பது ரூவாக்குக் குடுக்குறான்!
அட வெலெ எச்சா இருந்தப்ப நாலு நாலு பழம் தெனமும் பொறிக்கறாப்டி வந்து தொலைச்சிருக்கலாமுல்லோ! தேக்கா!
எல்லா நமக்குன்னு அப்பிடித்தான் நடக்கும் பாத்துக்குவே!’ முருகன் மாருதி வேன் ஒன்றைச் சொந்தமாய் வைத்து வாடகைக்குப் போய் வந்து கொண்டிருந்தான்.
சின்னப்பொன்னான் தன் மருமகளிடம் இது நாள் வரை ஒரு வார்த்தை பேசியதில்லை. முருகன் காதல் திருமணம் செய்துகொண்டது அவருக்குப் பிடிக்கவில்லை இன்றுவரை. அப்படியே காதலித்திருந் தாலும் அவரிடம் முன்பாகவே சொல்லியிருந்திருக்க லாம். அவர் ஒன்றும் மறுக்கப்போவதில்லை.
ஆனால் தங்கை முறையாகும் பெண்ணை எப்படி இவன் காதலிக்கலாம்? அந்தப் பெண்தான் கட்டாயப்படுத்திக் கழுத்தில் தாலி வாங்கிக்கொண்டிருந்திருக்கவேண்டும் என நினைத்தார். அந்தப் பெண்ணின் குடும்பத்தாரோடு உறவை முறித்துக்கொண்டார்.
இவர் இப்படிச் செய்கிறாரே என்று வேதனைப்பட்ட மயிலா, ‘என்ன இருந்தாலும் நம்ம பையன் முருகன்! இப்பிடி ஊருக்கு மேற்கேயெல்லாம் கொண்டி தனியா இருன்னு சொல்றது நல்லா யில்லங்கொ!
நம்மூடு கிடக்க நம்ம பையன் போயி வாடகையூட்டுல இருக்கோணுமா? நாலுசனம் காதுல கேட்டா என்ன சொல்லும்?’ என்றெல் லாம் பேசத் துவங்க மயிலாவின் இடுப்பில் ஒரு மிதி வைத்தார் சின்னப்பொன்னான்.
மயிலா கீழே விழுந்து அதிர்ச்சியில் பேபேபே... என உளறத் துவங்கினாள். அப்போது எழுந்து பையனிடம் போனவள்தான் மயிலா. இன்றுவரை பையனோடே இருக்கிறாள். எதிர்முட்டு எந்தச் சந்தி லாவது இருவரும் சந்தித்தாலும், ஒரு காறித்துப்பலோ அல்லது ‘க்கும்’ என்ற முனகலோ கூட இல்லாமல் ஒதுங்கிப் போகிறார்கள் இருவருமே.
ஆடுகள் பத்து உருப்படியை வைத்து மேய்த்துக் கொண்டு இருக்கும் மயிலா கூனு விழுந்த முதுகை வைத்துத் தடியூன்றித்தான் நடக்கிறாள். மயிலா இப்போது மயிலாக்கிழவி. கண்ணு பொரை விழுந்த தாகக் கோவை அரவிந்த் ஆஸ்பத்திரி போய் ஒரு கண்ணை ஆப்ரேசன் செய்து வந்திருந்தாள்.
இந்தவிசயத்தைக் காதில் கேட்டு அறிந்துகொண்டதில் இருந்துதான் சின்னப்பொன்னானும் பார்ப்போரிட மெல்லாம், கண்ணு பொட்டக்கண்ணு ஆயிட்டுவருது, எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
இவரே ரேசன் அரிசியில் கூட்டாஞ்சோறும் கஞ்சியும் வைத்துக் குடித்துக்கொண்டிருந்ததால் உடல் வற்றி காற்றடித்தால் பறந்துவிடும் நிலையில் இருந்தார்.
சின்னப்பொன்னானும் ஊன்றிக்கொள்ளக் கைத்தடி போட்டு மூன்று வருடங்களாகிவிட்டது. ஊராருக்கு இப்போது சின்னபொன்னப்பாரு ஆகிவிட்டிருந்தார்.
சின்னப்பொன்னப்பாரு பக்கத்து வீட்டில் மருதாயிக் கிழவி இருந்தாள். அவள் பையன் கோவையில் இஞ்ஜினியரிங் வொர்க்ஸ் வைத்திருந்தான். அங்கேயே நாயக்கமார் பெண்ணைக் காதலித்துக் கட்டிக்கொண்டு வாழ்கிறான்.
ஊருக்குள் மாரியம்மன் கோவில் சாட்டு நடந்ததென்றால் வருடம் தவறாமல் அம்மனுக்குக் கிடாவெட்டு நிகழ்த்த வந்து சேர்ந்துவிடுவான். அவன்தான் அம்மாவுக்குச் சின்னப்பொன்னான் வீட்டருகே மெத்தை வீடு கட்டிக் கொடுத்திருந்தான்.
மொசைக்கல்லில் நடந்தறியாத மருதாயிக்கிழவி அவ்வப்போது வீட்டினுள்ளேயே பொத்து பொத்தெனவிழுந்து விழுந்து எழுந்து மகனை கண்டபடி திட்டிக் கொண்டேயிருக்கும்.
தன்னை இருபது வருடங்கள் முன்பாக விட்டுச்சென்ற புருசனையும் கண்டபடி திட்டத் துவங்கும். மருதாயிக்கிழவியும் ஆடுகள் இருபது உருப்படியை மேய்த்துக்கொண்டிருந்தவள் தான்.
சீக்கு வந்து பத்து ஆடுகள் தினமும் ஒன்றாக இறந்துவிடவே, மீதமிருந்தனவற்றை உள்ளூர் வண்ணானை அழைத்து, ‘சந்தைக்குப் பிடித்துப்போய்விற்றுத் தொலையடா... பிள்ளைங்களாட்டம் வளர்த்துனேன்... ஒவ்வொன்னாச் சாவுதுக!
பாக்க பாக்க அழுவாச்சியா வருது எனக்கு!’ என்று தள்ளிவிட்டு விட்டது ஐந்து வருடம் முன்பாகவே. இப்போது கேபிள் கனெக்சன் போட்டு எல்ஈடி டிவியில் நாடகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
எந்தநேரமும் சட்டியில் வரட்டீயை வைத்திருந்து அவ்வப்போது சூடுபண்ணி சூடுபண்ணி அதில் எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டுக் குடிக்கப்பழகியிருந்த மருதாயிக்கிழவி, குளிக்கப் பாத்ரூமிற்குள் சென்றாள் என்றாள் குறைந்தது ஒன்னரைமணி நேரம் நிதானமாய்க் குளித்து முடித்து வெளிவரும் பழக்கம் வைத்திருந்தாள்.
வீட்டு முன்னால் இருக்கும் பைப்பில் தான் காலை நேரத்தில் தண்ணீர் நிற்கும்வரை குடம் குடமாய்ப் பிடித்துக்கொண்டு போய்ப் பாத்ரூம் தொட்டியை நிரப்புவாள்.
வீட்டின் முன் இருக்கும் காலியிடத்தில் கத்தரிச் செடியும் வெண்டைக்காய் செடியும் வளர்த்துகிறாள். அவைகளுக்கும் காலையில் குடம் குடமாய்க் கொண்டு போய் ஊற்றுவாள்.
சின்னப்பொன்னானப் பாரு வீட்டினுள் நுழைந்து அவரது இரு குடங்களைத் தூக்கி வந்து தண்ணீர் பிடித்துக்கொண்டுபோய் வைப்பதும் மருதாயிக்கிழவிதான். தண்ணீர் வரும் காலை நேரத்தில் அப்பாரு வாயைக் குவித்துப் புஸ்ஸ் புஸ்ஸ்செனக் காற்றை ஊதிக்கொண்டே கட்டில் குழியில் தூங்கிக்கொண்டிருப்பார்.
தூங்கும் சமயத்தில் நாய் நுழைந்து சோத்துச்சட்டியை கவிழ்த்தி சாப்பிட்டுவிட்டு சென்றால் கூட அவருக்கு எதுவும் தெரியாது.
மாரியம்மன் கோவில் கல்லுக்கட்டில் அமர்ந் திருந்தவர் சண்முகன் சென்ற பிறகும் தன் கதையை யாரேனும் கேட்பர் என நினைத்து சொல்லிமுடித்து அமைதியானார். அரசமரத்து நிழல் சொகுசாய் இருந்தாலும் காற்றுதான் இல்லை. கிழக்கே குடோனில் தறி ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் மட்டுமே இவர் காதுக்குக் கேட்டது.
சுளுக்கைகள் தன்னைச் சுற்றிலும் வந்துவிட்டன வோவென அப்போதைக்கப்போது தோளில் கிடந்ததுண்டால் திண்ணையில் இருபக்கமும் அடித்து அகற்றிக்கொண்டிருந்தார்.
சுளுக்கை கடி வாங்கிவிட்டால் கடிபட்ட இடம் இட்லி மாதிரி உப்பிக் கொள்கிறது! மாசத்தில் எப்படியும் ரெண்டுதடவையாச்சிம் அவைகள் இவரைக் கடித்து வைத்துவிட்டு மிக விரைவாய்ச் சென்றுவிடுகின்றன.
“இங்கெங்கடா சுளுக்கை கடி வாங்கீட்டு தன்னப் போலப் பேசீட்டு குக்கீட்டு இருக்கே?” ஆரப்ப அப்பாரு புறங்கை கட்டிக்கொண்டே இவர் அருகில் வந்து நின்றது. விரலிடுக்கில் பத்தாம்நெம்பரு பீடி புகைந்துகொண்டிருந்தது. ஆரப்ப அப்பாரு மருதாயிக்கிழவியின் அடுத்த வீடு. அவரும் இவரைப் போலவே தனி ஆள்தான்.
அவருக்கும் வீட்டினுள் சட்டி சாமான்கள் எல்லாம் குறைவுதான். ஆனால் இள வட்டங்கள் சிலர் ஆரப்ப அப்பாருவின் வீட்டுக்குத்தான் சீட்டாடவும் கேரம்போர்டு ஆடவும் சிலர் குடிக்கவும் வந்து போவார்கள்.
விடுமுறை நாட்களில் கறிவறுவல் செய்து காரஞ்சாரமாய்த் தின்பார்கள். அப்பாருக்கு அரைக் கட்டிங் கிடைக்கும். மிளகாய், தக்கோளி, பூண்டு, சீரகமென வாங்கவேண்டிய எந்தச்செலவும் ஆரப்ப அப்பாருக்கு இல்லை.
எல்லாம் அவர்களே வாங்கிவந்து வீட்டினுள் போட்டுவிடுவார்கள். அப்பாரு மகிழ்வான மனிதர். எந்த நேரமும் தலையில் உருமாலைக் கட்டு இருக்கும்.
ஒரே பெண்பிள்ளை கிணற்றில் தவறி விழுந்து இறந்து நாற்பது வருடங்கள் ஆகியிருக்கலாம். ஆரப்பஅப்பாருவின் வீட்டினுள் எந்த நேரமும் டிவி சப்தம் பெரிதாக இருக்கும். வீட்டின் சாவி கூட வெளித்திண்ணையில் தேங்காய்த் தொட்டியினடியில் தான் இருக்கும். யார் சென்றாலும் திறந்து கட்டிலில் படுத்து உறங்கலாம். சாப்பாடு செய்யலாம். சாப்பாடு சட்டியில் இருந்தால் போட்டும் சாப்பிடலாம்.
“தாரு ஆரப்பனா? ஊட்டுலதான் என்னேரம் கிடக்குறதுன்னு அப்பிடியே சித்தெ வெளிய வந்துட்டுப் போறதுதாண்டா! பீடி வாங்க வந்தியா கடைக்கி?”
“பீடிக்கி யாரு இங்க வந்தா? நம்ம பழனான் ஒருவாரமா வயித்துப்போக்குனு கெடையில கெடக் கான்னு பசங்க சொன்னானுங்க! அதான் ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்தேன்! பத்தாம் நெம்பரு பீடியாட்டமே கட்டல்ல கெடக்காண்டா! இன்னும் ரெண்டு நாள்ல கிழக்கெ சுடுகாட்டுல போயி படுத்துக்குவான்னு நினைக்கிறேன்!”
“பையன் பாத்துக்குவான்ல ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போயாச்சிம்! வேனு வேற வச்சிருந்தானே!”
“ஆஸ்பத்திரியெல்லாம் ரெண்டாம் நாளே கூட் டீட்டு போயிட்டு வந்துட்டாங்க!”
“பழனான் தண்ணி போடறவனாச்சே!”
“ஆமா! அப்படின்னு தான் நானு அவம் புள்ளை கிட்ட பையனுக்கு ஒரு போனை போடச் சொல்லி பேசினேன். அவன் என்னடான்னா முந்தா நேத்துஒரு கோட்டரு அப்படித்தான் வாங்கிக் குடுத்தனப் பாரு...
எச்சா வவுத்துல புடுங்க ஆரம்பிச்சிடுச்சு அப்படின்னான். அடக்கருமம் புடுச்சவனே நீயி ரம்மு வாங்கிக் குடுத்தியா?ன்னேன்! அப்படின்னா என்னுங்கப்பாரு?ங்கான். வயித்துல போறவனுக்குப் பிராந்தி குடுத்தா எச்சாத்தான போவும்!
மளார்னு ரம்முன்னு சொல்லி வெசீமங்கல கடையில வாங்கீட்டு வந்து உங்கொப்பனுக்குக் குடுடான்னு சொல்லி போனை வச்சேன். பழனான் கட்டல்ல அவட்டை போயிக் கெடந்தவன் மளார்னு எந்திரிச்சி உக்கோந்துட்டாண்டா! ‘இப்ப வந்துருமா சரக்கு?’ அப்பிடிங்கறான்.
தம்முக்கட்டி எந்திரிச்சி ஜன்னல் மேல பீடிக்கட்டை எடுத்து அதுல ஒன்னை உருவி பத்தவச்சி ஊதுறான்! உனக்கு வேணுமா ஒன்னு? அப்படின்னு எனக்குப் பீடிகட்டை நீட்டுறான்னா பாத்துக்க! ‘இப்ப பையன் வாங்கீட்டு வந்துருவானா? வந்துருவானா?’ன்னு சல்லை பண்ணினான். வாங்கீட்டு வந்துருவாண்டா சித்த கம்முனு கட்டல்ல கெட!” அப்படின்னுபோட்டு வந்தேன்.
“போயிருவானா? பொழைப்பானா?”
“தெரீல சந்தேகமாத்தான் இருக்குது! ரம்மு ஒரு வேள ஆளைக் காப்பாத்தினாலும் காப்பாத்திரும். அப்புறம் பாரு ஆடுகளை ஓட்டீட்டு மேய்க்கறதுக்குக் கிளம்பீருவான்”
“இன்னிக்கி பசகெல்லாம் வேலைக்கி போயிட்டானுங்களா?”
“போயிருப்பானுங்க! நேத்து எனக்கு அரை பாட்டிலு ராத்திரி குடுத்தானுங்க! நானு அதை இனி இன்னாரத்துக்கும் மேல ஏன் குடிக்காட்டின்னு ஊட்டுக்கு பொறவுக்கால ஊசிப்புல்லு மொளச்சிக் கெடந்ததுக்குள்ளார சாமத்துல வீசிட்டேன்.
ஊட்டுக் குள்ள வச்சிருந்தாத்தான் எவன் வந்தாலும் அன்னாந்து மடக்கு மடக்குனு குடிச்சுட்டுப் போயர்றானுங்களே! காத்தால ஞாவகம் வந்து புல்லுக்குள்ள தேடுறேன் சிக்குவனாங்குது! கெழபக்கத்துல இருந்து குக்கீட்டே புல்லு புடுங்கீட்டு தேடீட்டே வர்றேன் அரைமணி நேரம்.
கடைசியா பார்த்தா எங்க நின்னு வீசினனோ அவத்திக்கே காலுக்குள்ள கிடந்திருக்குது! ஊட்டுக்கு பொறவுக்கு நீயி இப்பப் போயிப்பாரு... பளிச்சுனு ஒரு புல்லு பூண்டு இருக்காது! அமட்டையும் புடுங்கித் தள்ளீட்டேன்!”
“அப்புறம் குடிச்சியா இல்லியா?”
“குடிக்கத்தானே அந்தப்பாடு பட்டு புல்லு புடுங்கி னேன்! அப்பவே மெட்டைக் கழட்டி அன்னாந்து ஊத்தீட்டேன்! அது கெடக்குது... ஆமா என்ன சொல்றா மருதாயி?”
“அவுளுக்கென்ன?”
“என்னடா இப்பிடிக் கேக்குறே? ஊட்டுக்காரனுக்குச் செய்யுறாப்டி உம்பட ஊட்டுக்குள்ளவந்து கொடம் தூக்கி தண்ணி புடிச்சு வெக்கிறா... நீயும் திடீருன்னு அவ ஊட்டுக்குள்ளார போயி டிவிபாத்துட்டு நெதானமா வர்றே... லவ் யூ சொல்லிட்டியா?”
“என்னத்தடா கேக்குறே? லவ் யூங்கறே... அப் பிடின்னா என்ன?”
“காதல்றா! உன்மேல அவளுக்கு நோட்டமிருக் குதுடா! நானா இருந்தன்னா எம்பட ஊட்டுல அடுப்பே பத்தவைக்க மாட்டேன்! அவளையே ஆக்கிப் போடச்சொல்லி அட்டனங்கால் போட்டுட்டு கட்டல்ல படுத்துக்குவேன் தெரிஞ்சிக்க!”
“டேய் ஏண்டா உனக்குப் புத்தி இப்பிடி கூறு கெட்டுப்போச்சு? கெழவிகிட்ட போயி லவ்யூ சொல்லச் சொல்றே? தண்ணி போட்டுப்போட்டு மண்டையில உனக்கு மசாலா இல்லாம போயிடுச்சுடா ஆரப்பா!”
“பின்ன எதுக்குடா உனக்கு அவ தண்ணி புடிச்சுக் கொண்டாந்து வெக்கிறா?”
“கெழவன் கொடம் தூக்க முடியாம அவட்டை போயி கிடக்கானேன்னு செய்வாடா!”
“நீ பெரிய சொத்துக்காரன் பாரு, உனக்குக் கடைசி காலத்துல செஞ்சு பத்தரத்துல கைநாட்டு வாங்கிப் பொழைச்சுக்க ஐடியா பண்டியிருக்கா!”
“நானே வெறுங்குண்டி அம்மணம்னு கிடக்கேன்! பொண்டாட்டியும் வெறச்சுட்டு போயி பத்து வருசமாச்சு!”
“தெரியுதில்ல! கோவிச்சுட்டு போன பொண்டாட்டி இனி உம்பட ஊடு தேடி வரவா போறா? கெடையில நாலு நாளு கெடந்துபாரு... அன்னிக்கித் தெரியும் உனக்கு! உன்னோட மருமக வந்து உனக்குச் சேவகம் பண்ணுறாளா இல்ல மயிலா வந்து சேவகம் பண்ணுறாளான்னு! ஒரு சனம் உம்பட ஊட்டுப்பக்கம்எட்டிப் பாக்காது.
சின்னப்பொன்னான் சீக்கிரம் போனான்னா தூக்கிக்கொண்டு பொதைச்சுட்டுசோலிகளைப் பார்ப்பம்னு இருப்பாங்க! இங்க மட்ட மத்தியானத்துல வந்து கல்லுக்கட்டுல உக்கோந்து சுளுக்கை கடி வாங்கீட்டு இருக்குற நேரம் மருதாயி ஊட்டுல உக்கோந்து அவகூடச் சாடை பேசீட்டு டிவில பொம்மை பார்த்துட்டு லவ்யூ சொல்றதை உட்டுட்டு திருவாத்தானாட்ட இருக்கான்!”
“டே, நீ என்னை இக்கட்டுல கொண்டி மாட்டி வச்சுட்டு வேடிக்கை பார்க்க பாக்கேடா ஆரப்பா!”
“நல்லபுத்தி சொன்னா இக்கட்டுங்காம்பாரு எருமை மேய்க்கி! கோயமுத்தூருல உக்கோந்துட்டு அவ பையன் சம்பாதிச்சி பணம் கொண்டாந்து அம்மாக்கு குடுத்துட்டு போயிட்டு இருக்கான்! ஒருத்தி அத்தாப்பெரிய ஊட்டுல உக்கோந்துட்டுச் செலவுபண்டத் தெரியாம வரக்காபி குடிச்சுட்டு உக்கோந் துட்டு இருக்கறா!
ஏண்டா அவ கறி எடுத்து திங்கறதை ஒரு விசுக்கா வாச்சிம் பார்த்திருக்கியாடா? போயி கிட்ட உக்கோந்து நல்லாப் பழகுடா சின்னப் பொன்னா... அப்பத்தான் வாயிக்கி ருசியா நாலு தீம்பண்டம் செஞ்சு அவுளும் திம்பா உனக்கும் குடுப்பாடா!”
“எறந்து திங்கச் சொல்றே என்னை?”
“இனி எனக்கு மசக்கோவம் வந்துரும். பாத்துக்கொ! எதோ நேக்கா பேசிப் பழகி நல்லசோறு தின்னு ஒடம்பை கவனிடா! இன்னும் பத்துவருஷம் சேர்த்தி ஊருக்குள்ள நல்லசேதி கெட்டசேதியெல்லாம் கேட்டுட்டு உசுரோட இருப்பே! போயி டிவி முன்னாடி உக்கோந்துட்டு மருதாயியோட பேச்சுக்குடு!
அவ குடுக்குற வரக்காபியே போதும்னு வாங்கி உருப்பு உருப்புன்னு குடிச்சுட்டு எந்திரிச்சிறாதே. மழை வர்றாப்டி மானம் இருக்குது... வெங்காயப் போண்டா தின்னா நல்லா இருக்கும்னு சொல்லு! அவளுக்கும் நாக்குல எச்சி ஒழுகும்ல! டிவில எத்தனை விளம்பரம் வருது திங்கறாப்ல!
இனி நீ போறப்ப எனத்தைக் கொண்டுட்டு போறே? வகுறு ரொம்ப ஒனத்தியா தின்னு! உனக்கெல்லாம் செஞ்சு தரமாட்டன்னு மருதாயி சொல்லவே மாண்டா! உம்மேல ஒரு கண்ணுடா அவுளுக்கு!
நீ அனுசரிச்சுப் போனீன்னா தங்கத் தாம்பாளத்தட்டுல உக்காத்தி நீவி நீவி உன்னைக் கவனிச்சுக்குவா! நான் சொல்றது நடக் கும்டா சின்னப்பொன்னா! மாரியம்மன் பாரு வடக்கு முகனா உக்கோந்துட்டு காது குடுத்து கேட்டுட்டுஇருக்குது இந்த ஆரப்பன் நல்லதுதான் சொல்றான்னு!”
“சேரி நீ சொல்றாப்டித்தான் கொஞ்சம் நாளு இருக்கப் பாக்குறனே! காசா பணமா! மொதலு எனத்த இதுல போடப்போறோம் நாம! சேரி நானு பொங்கும் பொங்குனு தெக்கெ நடையக் கட்டுறேண்டாஆரப்பா! நீ வரலியா?”
“எனக்கு மேக்கெ சோலி ஒன்னு இருக்குது! பார்த்துட்டு பொறவுக்கு வர்றேன்! போபோ! எல்லாம் ஆத்தா பாத்துக்குவா!” சொல்லிவிட்டு ஆரப்ப அப்பாரு நேராய் மயிலா வீட்டுக்குத்தான் கிளம்பினார். இன்னமும் கொஞ்சம் போதை அவருக்கு மீதமிருந்தது!
மூன்றாம் நாள் காலையில் ஊருக்குள் தெற்குக் கடைசி வீட்டின் முன்பாகப் பெரும் சண்டை துவங்கியிருந்தது. ஊருக்குள் வாசல்படியில் கிடந்த நாய்கள் எல்லாமும் கூட என்னவோ ஆகிவிட்டதெனக் குலைத்துக்கொண்டே தெற்கே ஓடின.
கட்டிலில் பச்சை மிளகாயோடு சேர்த்தி நெய்க்கருவாடு தின்னும் கனவில் இருந்த சின்னப் பொன்னானப்பாரு வீட்டின் முன் கூச்சலாக இருந்த தால் ‘அக்ஸ்! அக்ஸ்!’ என இரண்டு பெரும் தும்மல்களைப் போட்டுவிட்டு கட்டிலின் அடியில் கிடந்தகைத்தடியை எடுத்துக்கொண்டு எழுந்தார். அவருக்கு மயிலா அடித்தொண்டையிலிருந்து பெருங்குரல் எடுத்து சத்தமிடுவது கேட்டது.
இவ எங்க இங்க வந்து தொண்டையத் தொறந்துட்டு இருக்கா காலங் காத்தால! என்ன கேடு இவளுக்கு வந்துச்சு? நெகா எதுவும் சிக்காமல் வாசலுக்கு வந்தார். இவரது பச்சை வர்ண ப்ளாஸ்டிக் தண்ணீர்க் குடம் வாசலில் தண்ணீரோடு உருண்டு கிடந்தது.
“என்ன மயிருக்குளே எம்படக் கெழவனுக்கு நீயிதண்ணி சொமக்குறே? அவனெ ஏண்டி உம்பட ஊட்டுக்குள்ள வச்சு சோறு ஊட்டி உடறே? உனக்கெல்லாம் இந்த வயசிலயும் நெனப்பு மயிரப்பாரு! வகுந்து போடுவண்டி முண்டெ!
ஊட்டுக்காரன் செத்து இத்தினி வருஷங்கழிச்சி உனக்குத் தண்ணி ஊறுதா? மருகாதியா ஊட்டக் காலி பண்ணீட்டு உம்படப் பையங்கிட்ட ஓடீரு! மயிலான்னா ஆருன்னு நெனச்சே?”
மயிலா கூனிக்கொண்டே தடியூன்றியபடி வந்து மருதாயிக்கிழவியை ஒரு சாத்து சாத்தவே திரிந்தது. மருதாயிக்கிழவியும் ஒன்றும் சலைக்கவில்லை!
“ஆமாளே தொண்டுக்கெழவி! அப்பிடித்தான்லே ஊட்டி உடுவேன்! நீ கிழிக்கிறது கிழி போ! காத்தால ஏறீட்டு வந்துட்டா சண்டைக்கி. புருசனை உட்டுப் போட்டு ஊருக்கும் மேக்கெ ஓடிப்போனவதானடி நீயி! ஏண்டி நீ பேசுறியே இத்தனை பேச்சு, அதுல ஒரு நாயம்னு எதாச்சிம் இருக்குதா?
இன்னிக்கி எங்கிருந்துடி உனக்குப் புருசன் நெனப்பு தட்டிக்கிச்சு? முடியப் புடிச்சன்னா ஆட்டி யுட்டுறுவேன் பாத்துக்க! ஆருகிட்ட உன் பூலவாக்கைகாட்ட வந்துட்டே? உம்பட ஊட்டுக்காரன் வேணும்னா மடியில கட்டீட்டு போ!
ஆரு வேண்டாங்கறாங்க இங்க? ஆனா என்ன ஒரு ஏத்தமிருந்தா ஊட்டை காலி பண்ணீட்டு போவச் சொல்லுவேடி தொண்டுக்கெழவி!
நீ போடி ஊரை உட்டு! நடக்க மாட்டாதவன் சித்தப்பனூட்டுல பொண்ணு கட்டுன கதை எனக்குத் தெரியாதா?
எப்பிடியடி கெழவி உசிரை வச்சிட்டு இன்னும் சோறு திங்கறே? நானா இருந்திருந்தா அன்னிக்கே அரளி வெதை அரைச்சுக் குடிச்சுட்டு போயிருப்பேன்!”
நேரம் ஆக ஆகச் சனக்கூட்டம்தான் பெருகினதே யொழிய இரு கிழவிகளையும் கட்டுப்படுத்தி ஒதுக்கயாருக்கும் நினைப்பில்லை. ஆரப்ப அப்பாரு பீடிப் பொகை ஊதியபடியே நிம்மதியாய் கூட்டத்தின் முன்னால் நின்று ரசித்தார். நாய்ச்சண்டை ஒரு பக்கம்குட்டானாய் நிகழ்ந்து முடிந்திருந்தது.
அப்போதுமருதாயிக்கிழவி பொறுத்துப் பார்த்து சின்னப் பொன்னாக் கிழவன் அருகில் போய் அவரது கன்னத் தில் ஒரு உம்மா கொடுத்தாள்!
“போயிச்சாவுளே ஒய்யா! இத்தினி ஆனதுக்கப்புறம் உம்பிருசன் இனி எனக்குத்தான்!” என்று நடு வாசலில் நின்று கொக்கறித்தாள்.
மயிலாக்கிழவி தடியை ஒரு சொழட்டு சொழட்டி வீசியெறிந்துவிட்டு,
“ஐயோ! எம்பட ராசாவெ படங்காட்டி படங்காட்டி அமுத்திக்கிட்டாளே! கேக்க நாதியில்லியா! மாரியாத்தா கண்ணு பூத்துப்போச்சா உனக்கு?”
என்று ஒப்பாரி வைத்தபடி வாசலில் அமர்ந்தாள்.
சின்னப்பொன்னானப்பாரு அவளை நோக்கி தடி யூன்றிக்கொண்டே சென்று அவள் முதுகில் லொட்டுலொட்டென லேசாய் தட்டினார்.
மயிலாக் கிழவி ‘என்ன?’ என்பது மாதிரி தலையுயர்த்தி அவர் முகம் பார்த்தாள்.
“மயிலா! லேய்! லவ்யூடி!” என்றார்.
“என்னெ?” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயிலாக்கிழவி வாசலில் சாய்ந்தாள்.
உள்ளூர் வண்ணான் கூட்டத்தை ஒதுக்கிவிட்டு வந்து கிழவியின் அருகில் அமர்ந்து நாடி பிடித்துப் பார்த்தான்.
பின்பாகக் கூட்டத்தாரைப் பார்த்து உதடு பிதுக்கி மண்டையை இருபுறமும் ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டிவிட்டு எழுந்தான்.
“கெழவி போயிச் சேர்ந்துடுச்சுங்கொ!” என்றான்.
முழு ஆண்டு விடுமுறையைத் தடுக்கப் பார்க்கிறது அம்மாவின் ஓயாத முனகல் மெல்லிய கையுறைகளை முதன்முதலில் பார்க்கிறேன் ‘கையுறையுடன் தாதி’ நான் வரையப் போகும் எண்ணெய் ஓவியத்தின் பெயர் தாதிகளின் முலைகள் புட்டங்கள் என்று நூற்றுக்கணக்கான ஓவியங்கள் பின்தொடரும் நாளங்களில் புகுந்து இரத்த அணுக்களை ஏமாற்றிய ஊசிகளின் கதைகளை கேரள தாதிகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் உடைந்த பாறைத்துகள்கள் திடீரென நீரை உறிஞ்சியது போல மலத்துண்டுகள் வெல்டன் சேச்சி எனக்கு விடுமுறை கிட்டியது நாசித்துவாரங்களில் நிரந்தர குடல் மணம் கிளம்பும் முன் நான் தேர்ந்தெடுத்த சொற்கற்கள் அம்மாவின் நெத்தியை பதம் பார்த்திருக்க வேண்டும் இதயம் கசிந்தது என பின் ஒரு கனவில் வந்து சொன்னாள் வசதியாக அமர்ந்து ஆடை மாற்றும் உடல்களை வேடிக்கை பார்ப்பது போல ஜன்னல் இருக்கையில் இருந்து விடியலைக் காண்கிறேன் கருப்பு அடர் நீலத்தை ஒரு வெளிர் மஞ்சள் கீற்று குறுக்கிடும்போது அம்மா இறந்துவிட்டாள் என்று உறுதிகொண்டேன் வானம் விடிவதை என்னால் எழுத முடியும் பிறகு நான் என் விடுமுறைக்கான பரதீஸை அடைந்தேன் தாத்தா... என்று ஓடிச்சென்று செய்தி அறிவித்து அழைத்து வந்தேன் வார்த்தைகளில் இருந்த வயதிற்கு மீறிய பிரசங்கங்கள் விலகி தயை கூடிய நாள் அது.
ஒரு வெள்ளிக்கிழமை கதை
ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒருவன் / தன் கனவில் / தெரியாத ஒருத்தியின் பாதத்தை / நக்கிக்கொண்டிருந்தான் / அதே இரவு ஒருத்தி / தன் கனவில் / தெரியாத ஒருவனுக்காக / ஒரு மலையுச்சியிலிருந்து குதித்துக்கொண்டிருந்தாள் / அக்கணமே அனைத்தும் அறிந்த முகநூல் செயலி / ஸ்ட்லெட்டோ அணிந்த பெண்ணொருத்தி / மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளம்பரத்தை / இருவர் நேரக்கோட்டிலும் பகிர்ந்தது / அக்கணமே அவர்கள் / ஸ்ட்லெட்டோவை மலையுச்சியைத் / தேடத் தொடங்கினார்கள் / அக்கணமே முகநூல் செயலி / இருவர் நேரக்கோடுகளிலும் / ஸ்ட்லெட்டோ வகைகளை / மலைவாசஸ்தல பேக்கேஜ்களைக் / கொட்டிக் குவித்தது / அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு ஸ்ட்லெட்டோவைக் / கட்டியணைத்துக்கொண்டு தூங்கினான் அவன்/ அதேநாள் ஒரு மலையுச்சியிலிருந்து / அவள் குதித்து டிவி சானல்களில் செய்தியானாள் / இப்போது அவன் நேரக்கோட்டில் / நாவறட்சிக்கான மருந்துகளை / நிரப்புகிறது செயலி / அவள் நண்பர்களின் நேரக்கோடுகளில் / ஆவிகள் சம்பந்தமான காணொளிகளை நிரப்புகிறது / யாரும் திறக்காவிட்டாலும் பார்க்காவிட்டாலும் / அவை எல்லாவற்றிலும் அவள் / விழுந்த இடத்திலிருந்து / உச்சிக்கு ஏறிக்கொண்டிருக்கிறாள் (விளையாட வந்த எந்திரபூதம்)
மனித உயிரினம் பரிணாமம் அடைந்ததைப் பற்றிய கேள்வி ஒன்று எப்போதும் உண்டு. ஹோமா எரக்டஸ் ஹோமோ ஹெபலிஸ் என்ற உயிரிகளிடமிருந்து ஹோமோ செபியன்ஸாக மனிதன் உருவானதற்குப் பின்பு ஏன் அடுத்தக்கட்ட பரிணாமத்தை அவன் அடையவில்லை? பரிணாமத்தை எது தீர்மானிக்கிறது?
உயிர்வாழத் துவங்கியப் போராட்டத்தின் நிர்பந்தம், சூழலின் தனித்துவப்பண்பு, உயிரின் தகவமைப்பைத் தீர்மானித்ததன் விளைவு (Environmental Pressure) விலங்குப் பண்பை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்துக்கொண்டதன் முடிவு இன்றைய மனித இனம்.
இனி அவனுக்கு இயற்கையோ பிற இனங்களின் அச்சுறுத்தலோ பருவச்சூழலோ அவனது வாழ்வு குறித்த போராட்டத்தை மாற்றப் போவதில்லை. அதாவது (Environmental Pressure) சூழல் அழுத்தம் அவனுக்கு இனி கிடையாது. ஆக,
மனிதனின் பரிணாமம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது பௌதீகப் பரிணாமம்தான் physical Pressure) முடிவுக்கு வந்துள்ளதே தவிர, மூளைப் பரிணாமம் (Mind pressure) இன்னும் முடியவில்லை. சூழல் அழுத்தம் உடற்செயலியலின் பரிணாமத்தைப் பாதித்ததுபோலவே தொழில் நுட்ப அழுத்தம் (Technological Preesure) மூளையின்
பரிணாமத்தை மாற்றும் காரணியாக இருக்கிறது.
உடல் சார்ந்த மனிதனின் பரிணாமத்தை இனி மாற்றும் காரணிகள் அவனைச் சுற்றி இல்லை என்பதே நிதர்சனம். பிறகு, இப்போது நடந்துகொண்டிருப்பதெல்லாம் மூளையின் பரிணாமம் மட்டுமே. இத்தனை நூற்றாண்டுகளாக அது தனது பரிணாமச் சிருஷ்டியை மூளைக்குள் செய்துகொண்டிருக்கிறது.
இனி அதன் இயக்கத்தை நிறைவு(நிறுத்த?) செய்யும் அளவுக்குரிய (தொழில்நுட்ப) தகவமைப்பு உருவாக வாய்ப்பு இல்லை. சூக்கும இருப்புக்கு அழிவு இல்லை யென்று நமக்குத்தெரியும் (மூளையின் செயல்பாடுகள் இங்குச் சூக்குமம்). மேலும் இந்தச் சூக்கும இருப்பே தூல இருப்பை நிர்வகிக்கிறதென்கிற சித்தாந்தத்தைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மூளை பரிணாமத்திற்கு இயைந்து தனது சிருஷ்டிக்குள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று அவ்வித பரிணாமத்தின் உச்சம் என்னவென்றால் அது தன்னை மனித இனம் என்கிற பழைய நின்றுபோன பௌதீகப் பரிணாமத்தை அசைத்தேவிட்டது.
அதாவது தன் நிறைவு அடைந்த மனித உயிரின் தூல இருப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் பரிணாமத்தின் சிருஷ்டி நிலைக்கு ஏற்ப மாறியுள்ளது.
மூளை பரிணாமத்தின் விளைவால் மனிதன் எனும் உயிரின் “பண்புகள்” மாறத் துவங்கியிருக்கின்றன. முன்பு இத்தன்மையை நாம் எந்திரன் அல்லது ரோபாட்டிக் சென்ஸ் என்று உலகமயமாக்கலின் துவக்கத்தில் அழைத்துக்கொண்டோம்.
மனித யந்திரங்களின் வருகையால் நாம் அவ்வாறு அழைத்துக் கொள்வது ஒருவித கலாச்சார வழக்கமாக இருந்தது. ஏனெனில் ரோபோக்களின் பரிணாமம் அப்போது நிகழ்ந்துகொண்டிருந்தது. இன்று எந்த ரோபோவும் நமக்குத் தேவை இல்லை.
பொருள்களின் இருப்பே நமக்குத் தொந்தரவாக உள்ளது. நம்முடைய பிரக்ஞையின் விழிப்பு (attention) நம்மைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் அனுபவிக்கவேண்டும் ஆனால் அதற்காக அதைச் சுமந்துகொண்டு திரியலாகாது.
நினைக்கும்போது கண்முன் வரவேண்டும் வேண்டாம் என்றதும் அது தனது இடத்தைக் காலி செய்து கொள்ளக்கூடிய “இருந்தும் மறைந்துமான” உயிரியாக வேண்டும்.
இன்றைக்கு நம்முடைய அன்றாடங்களை வெளியே நின்று கவனித்தால் அந்த இருந்தும் மறைந்துமான உயிரியின் தடயங்கள் புலப்படும்.
இந்தப் பகுதியைத் தற்காலிகமாக இங்கு நிறுத்தி விட்டு அன்றாடத் தடயங்களின் சுட்டிகளைக் கவனித்துவிட்டு வரலாம். நாம் சக நண்பர்களுடன் உரையாடும் விதம் மாறியிருக்கிறது. நீண்ட வாக்கியங்களுக்கு நமது குறுஞ்செய்திகளில் இடமில்லை.
ஹாட்டினும், ஸ்மைலியும் அதை எடுத்துக்கொண்டு விட்டன. ஒரு கேள்வியைச் சில குறிப்பான்களால் உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு, பழைய ஃபோர்ன் இணையத்தைவிட வேறு என்ன உன்னிடம் இருக்கிறது என்பதைச் சில எமோஜிகளைப் பயன்படுத்திக் கேட்கிறேன்.
பதிலுக்கு அங்கிருந்து நண்பர் உபயோகிக்கும் புதிய இணையத்தின் படம் வருகிறது. அது எப்படிப்பட்டது என்று சில ஸ்மைலிகள் அனுப்புகிறேன் அவரிடமிருந்து நாக்கைத் தொங்கப்போட்ட நாய்க்குட்டி வருகிறது. அவ்வளவுதான் உரையாடல்.
குரல் பதிவு செய்திகள் இன்னும் நேரத்தைக் குறைத்திருக்கிறது. இறந்து விட்டதைத் தெரியப்படுத்த, காதலை அறிய, வெறுப்பை உமிழ என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாட்ஸ் அப் ஸ்டேடஸ் இருக்கிறது. நம்மைச் சுற்றி நிறைய செயலிகள் உள்ளன. நாம் செயலிகளுடன் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு ஒருவரது தனிமை என்று ஒன்று இல்லவே இல்லை. தனிமைக்குள் இந்தத் தொழில் நுட்பங்களெல்லாம் வருகின்றன. இவற்றின் இருப்பையும் சேர்த்தே தனிமைப் பொருள் கொள்ளப்படுகிறது. காதலிக்கப் பிறிதொரு உயிர் தேவையில்லை இணையம் போதும். புணர்ச்சிக்கு செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயலி போதும்.
தர்க்க உரையாடல் நிகழ்த்த தரவிறக்கம் செய்த நுண்ணறிவு மென்பொருள் சாதனம் இருக்கிறது (Intellectual Debate software). இந்த சாத்தியங்களின் உச்சம்தான் செயற்கை நுண்ணறிவு ஏஐ Artificila Intelligence - AI..
இளம் பெண் ஒருத்தியிடம் நீங்கள் அவளது தனிமைக்குக் காரணம் என நீங்கள் அடுக்கும் துயரமா, பரிவா, ஆற்றாமையா, காதலா, மகிழ்ச்சியா, அமைதியா என்று எதைக் கேட்டாலும், பதில் உதட்டைச் சுழித்து தோள்களை உதறிக்கொள்வாள்.
இந்த செய்கைக்கு விளக்கம் காண, அதற்கு மேலே கூறிய தொழில்நுட்பங்களின் உதவிகள் வேண்டும்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று புலப்படலாம் மனித உணர்வுகள் ஒரு செயலியைப் போன்றும், தகவல் தொழில்நுட்பங்களுடனும் எவ்வாறு பரிபாலிக்கிறது?
இப்படிச் செயல்படக்கூடாதென்றும் இப்படிச் செயல்பட வேண்டுமென்றும் அதை எது நிர்வகிக்கிறது?
பதில், நிச்சயம் ஒரு செயலியை, செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள உயிரிரை அனுபவிக்க, புரிந்துகொள்ள அதுபோன்ற இன்னொன்றால்தானே சாத்தியம்!
பெருந்தேவியின் கவிதைகள் இந்த பரிணாமத்தைத்தான் காட்டுகின்றன. “நீ ஒரு பரிணாமம் அடைந்த புதிய உலகத்தின் உயிரி” என்பதாக நம்மை நோக்கிச் சொல்கிறது, கூடவே தன்னையும் அவ்வாறு அடையாளப்படுத்தவும் செய்கிறது.
மானுட யத்தனம், மானுட தரிசனம், மானுட கீழ்மை, பரிவு, துக்கம், ஏக்கம், ஆற்றாமை, அபத்தம், காதல், காமம் இதெல்லாம் “மானுடத்தைக்” குறித்து இக்கவிதைகள் பேசவில்லை மாறாக, பரிணாமம் அடைந்த இப்புதிய யுக உயிரியின் நிலைபாட்டுடன்தான் நடத்துகிறது.
இந்தப் பரிணாம உயிரியைச் சாட்சிப்படுத்தும் கவிதை ஒன்று
எனக்கு எப்போதுமே வேலைகள் இருக்கின்றன கற்பனையான ஒட்டகச்சிவிங்கியின் மீது ஏறப் பார்ப்பது பகலில் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தேடி விசாரிப்பது இரவில் மேக மூட்டம் கவிந்த இரவில் காதலனோடு சண்டைப் போடுவது ஒரு மூட்டைத் தவறுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன் எதையும் சரி செய்துகொள்ளாதவன் சொல்ல மறந்துவிட்டேன் அவனைப் பின் தொடர்வது மூன்றாவது வேலை ஒருநாள் ஃபேஸ்புக்கில் எழுபத்தெட்டு பேருக்கு ஆர்ட்டின் போட்டான் நான் கத்தியைக் கையிலெடுத்தபடி மின்திரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் இன்னும் ஒன்று நீ தொலைந்தாய் நான்காவது வேலை தெருவில் அலைவது பையத்தியக்காரர்களால் வீடற்றவர்களால் பார்க்கப்படுவது அவர்களது கண்களுக்குள்தான் உட்கார்ந்திருக்கிறது உலகம் அவர்களிடம்தான் தெரிந்துகொள்கிறேன் அது எத்தனை துப்புக்கெட்டதென்று தோற்றவர்கள் இருக்கும் இடத்தில் ஜெயித்தவராக ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லையென்று ஐந்தாவது வேலை பின்னிரவில் அழுவது அதைச் செய்யாதவர்கள் இருக்கலாம் செய்ய நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.
அழுவதும் துக்கப்படுவதும் இங்குப் பாடுபொருள் அல்ல. மாறாக அதுவும் அன்றாடத்தின் ஒரு வேலை. ஏனெனில் கவிதை சொல்லிக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.
பைத்தியக்காரர்களும் வீடற்றவர்களும் இங்கே பரிணாமத்துக்கு உட்படாதவர்களாக வருகிறார்கள். இந்த உயிரிக்கு அவர்கள்மீது வாஞ்சை இல்லை, பரிவு கிடையாது. ஏக்கம் அறவே இல்லை (அது எத்தனை துப்புக்கெட்டதென்று)
மனிதனும் இயற்கையும் நேருக்கு நேராக எதிர்கொள்ளும் உலகம் அல்ல இந்த கவிதைசொல்லியினுடையது. மனிதன் அவன் உருவாக்கிய தொழில்நுட்ப உலகத்தின் கடைசிக்கு வந்துவிட்டான்,
இயற்கை சின்னஞ்சிறு புள்ளியாக கரைந்து பின் கண்ணுக்குப் புலனாகாத நுண் தகவல்களாக உருமாறி காலம் கடந்துவிட்டது. மெய்நிகர் உலகம் மெட்டாவர்ஸ்கள் இயற்கையின் இடத்தை பதிலீடு செய்துகொண்டிருக்கின்றன.
நிஜ உலகத்தில் இருக்கும் உங்களுக்கு மெட்டாவர்ஸ் உலகில் வேறொரு குணம், உருவம், கனவு, கற்பனைகள், ஆசைகள், குரோதம், காமம் என மெய்நிகரின் ‘அவதாருக்காக’ நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் (அதுதான் வசதியும்கூட). உங்கள் அவதார் உங்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்யத் தொடங்கும்.
இவ்விதமான உலகத்திலிருந்து இக்கவிதைகளை வாசிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அது இன்னொருவிதமான வாசிப்பை அளிக்கும்.
இன்னொரு கவிதை இந்த மனிதன் இயற்கை என்கிற துவந்தத்தை உதறிவிடுவதைக் காணலாம்.
நாம் மனிதர்களாக இருந்தாலும் மனிதர்களில்லை நாம் தவளைகள் ஒரு மந்திரத் தொடுகை நடந்தால் இதோ இளவரசர்களாகிவிடுவோம் சொகுசாகக் கனவு காண்கிறோம் ஒரு பெரிய குட்டையை நம்முடைய பாசிலோகத்தை பூச்சிகள் புழுக்கள் ஏழு சந்ததி தலைப்பிரட்டைகள் பரவசத்தோடு கத்தும்போது ஒரு நகரும் வாய் நம்மை விழுங்குகிறது நம் பிதுங்கிய முழி முழித்துப் பிதுங்குகிறது.
Update and Restart, Exhast, wired, Hang, Hangover, virtual world இந்தச் சொற்களெல்லாம் இப்போது சொல்லாடல்களாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன இவை நமது மொழிக் கிடங்கிற்கு (Langue) போய்விட்டன..
நாம் அனைவரும் ஒவ்வொரு முறையும் ‘அப்டேட் ரீஸ்டார்ட்’ செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மிகப்பெரும் துக்கமோ, ஏமாற்றமோ, இழப்போ ஒரு பெரு மூச்சில் வெளியேறுவதற்கு, கவனிக்கவேண்டும் பெருமூச்சிற்கு நிகரான இன்னொரு செயல் இக்காலக்கட்டம் நமக்கு அளித்த இச்சொற்கள்.
இவை வெறும் சொற்களாக இல்லாமல் உணர்வாக, கதையாக மாற்றம் பெறும் கவிதை ஒன்று.
ஒருமுறை தபால்காரர் வந்தார் தாத்தாவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு ஒருமுறை முகம் தெரியாத மொட்டைத் தாத்தா வந்தார் காப்பி ஷாப்பில் கல்லாவில் இருப்பவர் பிள்ளையார் கோவிலில் செருப்புகளைப் பார்த்துக்கொள்பவர் போத்தீஸில் திடகாத்திர புஜ அழகைக் காட்டும் Mannequin கூட வந்திருக்கிறான் நேற்று காதலனின் மனைவி வந்தாள் இன்று அவளுக்குப் போட்டியாகக் காதலனின் அம்மா வந்தாள் வந்தவள் இரு கையால் எனக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டாள் அவளைவிட என்னை ஆதரிக்கிறாள் போல காதலனும் வருகிறான் எப்போதாவது கலைந்த தலையோடு சமயத்தில் அடையாளத்தை மாற்றிக்கொண்டு என் இன்னொரு காதலனின் tuck in செய்யாத சட்டையோடு மூன்றாமவனின் செல்லத் தொந்தியோடு கலைந்த தலையைக் கோதியவுடன் சிரித்தான் எப்படியிருக்கிறாய் என்றேன் சந்தோஷமாக இருக்கிறேன் என்றான் இந்தக் காலை எனக்கும் அவனுக்கும் உவப்பான ஒரு பொய்யோடு தொடங்கியிருக்கிறது.
சியர்ஸ்
பெருந்தேவியின் கவிதையம்சங்களில் பொதுவாக வெளிப்படும் ஒரு பாவனை இருக்கிறது. அது கொண்டாட்ட செயல். பாய்ஸ் திரைப்படத்தில் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் (அபத்தம், வெற்றி, தோல்வி, சந்தோஷம் இத்தியாதி) ட்ரீட் கேட்கும் நண்பர்களின் ரசனைத்தனம் உண்டு.
அதாவது, நடந்ததைப் பற்றிய கவலையைத் துறந்துவிட்டு இந்த தருணத்தை அனுபவிக்கலாம் வா என்று. கிட்டத்தட்ட இன்றைய கேயாஸ் உலகத்தில் இந்த அனுபவம்தான் நமது இருப்பை கொஞ்சமாவது நோய் பீடிப்பதிலிருந்து ஆற்றுபடுத்தும் மருந்து. நிகழ்காலத்தில் உறைந்திருக்கும் அத்தகைய தருணத்தை அக்கணமே அனுபவிக்கும் கவிதை மனநிலை அலாதியானது.
பெருந்தேவி அவற்றை கடப்பதைக் கவனிக்கும்போது சில இடங்களில் வெளிப்படையாகவும் சில இடங்களில் மௌனமாகவும் எல்லாவற்றுக்கும் சியர்ஸ் கேட்கிறார்.முதலில் சியர்ஸ் என்கிற தலைப்பிட்ட பெருந்தொற்று காலக் கவிதை இப்படி முடிகிறது.
இன்று சாவுக்கணக்கைக் கேள்விப்படும்போது உயிரோடிருக்கும் கணக்கில் நானிருப்பது உறுதியாகிறது உயிரோடுக்கும் கணக்கில் நானிருப்பதை உறுதி செய்துகொள்ளாமல் நாளின் முதல் தேநீரை என்னால் அருந்த முடியாது
பெருந்தொற்று நமக்கு அளித்த நிச்சயமின்மையை உறுதி செய்துகொள்ளும் மனநிலையைக் கொண்டாடுகிறதென்றால் இன்னொரு கவிதை அபத்தத்தை ரசிக்கும் ஒரு நாளும் முட்டாளும் என்கிற கவிதையிலிருந்து
சில வரிகள். முட்டாள்கள் காலைகளில் அழுகிறார்கள் சில செம்பருத்திகள் தண்டுகளற்றுப் பூக்க முயல்கின்றன முட்டாள்கள் மாலைகளில் அழுகிறார்கள் யார் யாரோ யார் யாருக்காகவோ பொறுமையின்றிக் காத்திருக்கிறார்கள் முட்டாள்கள் நள்ளிரவுகளில் கண்களைத் துடைத்துக்கொள்கிறார்கள் தண்டுகளின்றிப் பூக்கப் போகும் செம்பருத்திகளாகத் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்
இந்தக் கவிதையில் வரிசைப்படுத்தப்படும் முட்டாள்களில் - இரவுக்குரியவர்கள் கண்களை துடைத்து கொள்கிறார்கள் என்று முடிக்கும் முன் வெளிப்படும் ஒருவித பரிகாசம் உணர்வும் சரி அடுத்தக் கவிதையில் வெளிப்படும் அங்கே பகல் இங்கே இரவை மாற்றிவிடப்போவதில்லை என்றும் முடிகிறபோது எதுவும் எதுவுமே என்னும் தனிமையின் ஓசையும் சியர்ஸை மௌனமாக உயர்த்திப் பிடிக்கின்றன.
இன்னொரு கவிதை இங்கே இரவாகும்போது அங்கே பகலாகிறது என்கிற கவிதை.
குளியல் தொட்டியிலிருந்து எழுந்து நின்ற அவள் தன்னைப் பார்த்துக்கொண்டாள் சில புதிய மச்சங்கள் சில பெரிய சிவப்புப் புள்ளிகள் உடல் மாறிவிடவில்லை வயது எங்கோ தூரத்தில்தான் குலைகிறது - கொன்றைகள் வாடிவிடவில்லை உடையணியும் முன் தன் இலையை இடப்பக்கம் சாய்த்து ஒரு செல்ஃபி எடுத்தாள் வேறொரு கண்டத்தில் ஒரு கடலில் நத்தைகள் மெதுவாகக் கடலேறின ஒரு மல்லிகைப்பந்துக்கும் இன்னொன்றுக்குமாக அவள் கை அலைந்தது குளியலறைக் கண்ணாடியில் வழக்கம்போல தனியாகச் சிதையில் இறங்கினாள் அங்கே பகல் இங்கே இரவை/ மாறிவிடப்போவதில்லை எதுவும் எதுவும்
எதுவும் எதுவும் என்கிற சொற்கள் மௌனமாக சியர்ஸ் என்பதை உயர்த்திப் பிடிக்கும் உணர்வுகளை அளிக்கின்றன. பிரிவு பிரிவாகவும் துக்கம் துக்கமாகவும் ஏமாற்றம் ஏமாற்றமாக பெருந்தேவியின் கவிதைகளில் வருவதில்லை.
அப்படியான சொற்கள் அர்த்தமிழக்கின்றன, பதிலாக அவை கொண்டாட்டமாக மாறுகிறது. ஆனால் இதுமட்டுமே இக்கவிதை சொல்லியைப் பரிணாமம் அடைந்த உயிரி என முடிவுக்கு வந்துவிட அனுமதிப்பதில்லை. மாறாக இக்கவிதைசொல்லி கொண்டிருக்கும் மற்றவர்களுடனான துவந்தத்தையும் பார்க்கலாம்
இரு தரப்பினர்
இக்கவிதை சொல்லிக்கு இரண்டே தரப்பினர்களுடன்தான் துவந்தம்.
1. முதல் தரப்பினர் தன்னைப்போன்று பரிணாமம் அடைந்த சக புதிய யுக உயிரிகள். அவர்களுடன் இவர் நட்புப் பாராட்டுகிறார், ஆதுரமாக அரவணைக்கிறார், காதல் வயப்படுகிறார், பரிவு காட்டுகிறார். “நீங்கள் இந்த யுகத்திற்கு வந்துவிட்டீர்கள் நன்றி. இங்கு சில நிபந்தனைகள் உண்டு. நாம் நிபந்தனைகளோடு வாழ்வைத் தொடங்குவோம். தகுதிகளை உறுதி செய்வோம். கனவுகள் இருக்கின்றன. அக்கனவுகளை இடம் பெயர்த்துவோம்.”
2. இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (அது அவர்களது தரப்பு). “நீங்கள் ஏன் இன்னும் மாறவில்லை. பரிணாமத்தின் காலம் முடிந்துகொண்டிருக்கிறது. முடிந்துவிட்டால் பின் உங்களுக்கு இடம் மியூசியம்தான். அங்கும் ஒன்றும் சிறப்பான வாழ்க்கை அமைந்துவிடாது. அதில் தொல்பொருளாகிவிடுவீர்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார், பகடி செய்கிறார்.
முதல் தரப்பினரை அடையாளப்படுத்தும் சில கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகள்
ஒரு மல்லிகைப் பந்துக்கும் இன்னொன்றுக்குமாக அவள் கை அலைந்தது குளியலறைக் கண்ணாடியில் வழக்கம் போல் தனியாகச் சிதையில் இறங்கினாள் அங்கே பகல் இங்கே இரவை மாற்றவிடப்போவதில்லை எதுவும் எதுவுமே
இதே போன்று இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கவிதைத் தொகுப்பில் கலவிக்குத் தயாராகும் கவிதையில் எல்லா உறுப்புகளும் தனித்தனியாகக் கழட்டப்பட்டு கலவிக்குத் தயாராதல் நிலையைச் சொல்லும் கவிதை இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் சித்திரமே அபாரமானது.
இங்குக் கவனிக்க வேண்டியது இரு மனங்களும் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. அதாவது, கலவிக்கு மனம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. இதுமட்டுமின்றி இவ்வாறு முதல் தரப்பினாராக வகைப்படுத்த சில கவிதைகளும் இருக்கின்றன. ( இன்னும் தொள்ளாயிரம் உண்டு, முட்டைக்கோஸாக )
இரண்டாம் தரப்பினர்
இரண்டாம் தரப்பினர் முன்னமே கூறியதுபோல இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வெளியே போ, ஒன்றைப் போன்றவர்கள், விஷேசச் சலுகை... போன்ற கவிதைகள்)
சில கவிதைகளிலிருந்து வரிகள் இங்கே...
உன் உதடுகள் கோணுகின்றன உன்னை நினைத்துக்கொள்ள யாராவது இருக்கிறார்களா உன்னில் நீயென எதுவும் மிச்சமில்லை ஒரு பெருமூச்சு எழும்புகிறது
உன்னை நினைத்துக்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்கிற இக்கவிதை கடைசியில் இவ்வாறு முடிகிறது
.... உனக்குத் தெரியும் சில மணி நேரங்களுக்குப் பின்னர் ஒரு பொய்யான காலை கிறுக்குப் பிடிப்பதிலிருந்து உன்னைக் காப்பாற்றிவிடும்
பொதுவாக கவிதையின் பண்பு என்பது அது தன்னை யாருடனும் ஒட்டிக்கொள்ளாது. அது தனது ஒத்தப்பிரிவு எனச் சுட்டும் பிறிதொன்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளும். காரணம் கவிதை இயங்கிக்கொண்டிருக்கும் காலத்தை நம்மால் துல்லியமாகப் பிடித்துவிட முடியாது. அதில் காலத்தொடர்ச்சி இருக்காது.
அதாவது, கால வரிசைப் பற்றிய பிரக்ஞைக் கிடையாது. ஓர் இயக்கம் காலவரிசையில் இருக்கும்போது மட்டுமே அது மற்றதுடன் இயங்கியல் தன்மை கொண்டிருக்கும். கவிதை செயல்படும் நிகழ்காலம். பிரவுனிய இயக்கம் மாதிரி.
அனைத்து திசைகளிலும் சீர்மையற்ற இயக்கத்தை அது பதிவு செய்ய நினைக்கும் நிகழ்காலத்துடன் தொடர்புப்படுத்துகிறது. அதனாலயே கவிதையை இங்கு பிரவுனிய இயக்கம் என உதாரணத்துடன் சுட்டுகிறேன்.
எப்படியென்றால், கவிதை தொழிற்பட்ட உடனே, நீரில் மகரந்தத் தூள்கள் கொட்டியதும் அங்குமிங்கும் அவை நீர் மூலக்கூறுகளால் மோதப்பட்டு அலைவதைப்போல கவிதை அந்த நிகழ்காலத்தில் வெவ்வேறு திசைகளில் மோதிப் படிமங்களையும் பெயர்களையும் பொருட்களையும் சில சமயம் வேறொரு காலத்தையுமே (இங்கு அதுவும் இன்னொரு வஸ்துவாக) தனது இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறது. பிரவுனியன் இயக்கத்தில் மகரந்தத் தூள் நீர் மூலக்கூறுகளை உடைப்பதுமில்லை நீர் மூலக்கூறுகள் மகரந்தத் தூளைச் சிதைப்பதுமில்லை. கவிதை அவ்வாறுதான் நிகழ்காலத்துக்குள் செயல்படுகிறது.
இன்றைய உலகத்தின் நிகழ்கால மனநிலையையும் அதேநேரம் எதிர்காலத்தின் நிழலையும் துல்லியமாக பிரதிபலிக்கும் சமகாலத்தில் அரிதினும் அரிதான கவிதையில் மாறிய போக்கிற்கு பெருந்தேவியின் கவிதைகள் முன்னோடி என நிச்சயமாகச் சொல்ல முடியும்.
(இவை பெருந்தேவியின் பெண் மனசு ஆழம், விளையாடவந்த எந்திர பூதம், தட்டாமாலை ஆடும்போது, உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளை எடுத்துக்கொண்டு வாசிக்கப்பட்டு எழுதப்பட்டது)
திருவிழாக்குப் போறமாதிரி ஊர்ச்சனம் முழுக்க எங்க படையெடுத்துப் போகுது? எண்டு பாத்தால், லெபனான்காரன் வீட்டை புதினம் பாக்கப்போறதாத் தெரிஞ்சுது. அங்கை அப்பிடியென்ன புதினம் எண்டு மாங்கொட்டை இளையாம்பியண்ணையை மறிச்சுக் கேட்டன்.
‘இதென்ன நாசமறுத்த கேள்வி கேக்கிறாய்? இண்டைக்குக் காலமை லெபனான்காரன் வீட்டை திரும்பி வந்திட்டானாம் எண்டு நியூஸ்பேப்பரில வராத குறையாச் சனங் கதைக்குது.
நீயென்ன கவட்டுக் கை கையை வைச்சுக் கொண்டிருக்கிறியே?’ எண்டு அந்தாள் என்னோட சாதுவாய் உரஞ்சிப் போட்டுப் போகுது. எனக்கெண்டால் உண்மையில அந்தாள் சொன்னதை நம்பேலாமலிருக்கு.
எங்கடை யூரிலயிருந்த இளந்தாரிப்பொடியளெல்லாம் 1983 யூலைக்குப் பிறகு சவூதி, குவைத், டோகா, கட்டார் எண்டு உருவிக்குடுக்க, இந்தப் பூனாமேன் லெபனா னுக்குப் போனான். போனவன் போனவன்தான். ஒரு அஞ்சாறு வரியமாய் ஒரு தொடர்புமில்லை.
இவன் போனநேரந்தான் லெபனானில கடுஞ்சண்டை யொண்டு நடந்தது. அந்தச் சண்டைக்குள்ள மாட்டுப்பட்டு ஆள் முடிஞ்சுதெண்டு வீட்டுக்காரர் முடிவெடுத்து அழுதுகிழுதுபோட்டு இருந்திட்டுதுகள்.
பின்னை அதுகள் வேறை என்ன செய்யிறது? இப்ப பாத்தால் ஆள் திரும்பி வந்திட்டானாம். இவன் எண்டைக்கு லெபனானுக்கு வெளிக்கிட்டானோ அண்டையிலயிருந்து ஊர்ச்சனம் முழுக்க ராஜசேகர் எண்ட இவன்ர சொந்தப் பெயரை மறந்து, லெபனான்காரன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டுதுகள்.
இவன் லெபனானுக்கு வெளிக்கிடேக்குள்ளையே அரைவாசிச் சனம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுதுகள். பிறகு, சண்டைக்குள்ள அகப்பிட்டு ஆள் முடிஞ்சுதாம் எண்டு கேள்விப்பட்டோண்ண ஊர்ச்சனம் முழுக்கப் புளுகிப் பூத்தில தட்டிக்கொண்டு திரிஞ்சுதுகள்.
குடிக்காத நேரத்தில இவனைப்போல ஒரு தங்கமான பிள்ளையை ஆரும் ஊருக்குள்ளை காட்டேலாது. ஆனால், ஒரு சொட்டுக் குடிச்சானெண்டால் கதை சரி. ஊருக்குள்ளை இவனைப்போலக் கடை கெட்டவன் ஆருமில்லையெண்டளவுக்குத் தம்பி அண்டப் பிரசண்டனாய் நாலுகாலில நிப்பான். கதை பேச்செல்லாம் முழுத்தூசணத்திலதான் நடக்கும்.
அதோட, “டேய்! தொட்டாக் காச்சல் வரும். நளத்திக்கும் ஓப்பன்!” எண்டு ஒரு மந்திரம் போல அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். தன்னோட தனகிற ஆக்களையெல்லாம் பச்சைத்தூசணத்தால இரவிரவாய்த் தொடர்ந்து புனிதப்படுத்திக்கொண்டிருப்பான்.
இடைக்கிடை பாட்டுகளும் பாடுவான். பெண்டிலுக்கு அடிச்ச மாதிரி ஒண்டுரண்டு கல்லு அவனுக்கு மேலையும் விழத்தான் செய்யும். அதோட பாட்டு நிண்டிடும்.
“டேய்! ஆரடா புண்டயாண்டி கல்லெறியிறவன்? நெஞ்சில துணிவிருந்தால் நேருக்கு நேராய் வாடா! உன்ரை சுண்ணியை வெட்டிச் சொதிவைச்சுத் தாறன்” எண்டு இன்னொரு பாட்டம் தொடங்குவான்.
இதால ஊருக்குள்ள காவாசிச் சனத்தின்ர நித்திரை குழம்பிப்போகும். இப்பிடிக்கொத்தவன் ஊரை விட்டுப் போறான் எண்டால் ஆருக்குத்தான் புளுகாயிருக்காது?
இதிலையும் குறிப்பாய் முன்சந்தியில பலசரக்குக்கடை வைச்சிருந்த இரத்தினசபாபதியருக்குத்தான் இறெக்கை முளைச்ச புளுகம். அந்தாள் கைக்கூழம் (வெள்ளாளரை விட உயர்ந்த சாதி) பகுதி.
ராஜசேகர் என்ன செய்வானெண்டால் தாமனிட்டப் போய்ப் புளிச்ச கள்ளெல்லாம் மூக்குமுட்ட வாத்துப் போட்டு இரத்தினசபாபதியின்ர கடையடியால வரேக்குள்ள, “குளா! குளா! கைக்குளா! குளத்து மீன்தின்னி!” எண்டு சிதம்பரம் ஜெயராமன்ர குரலில் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு வருவான்.
அந்தாளுக்கது பெரிய ஆக்கினையாயிருக்கும். இவன் பெரிய மல்லன்.
அந்தாள் ஒரு வாடல் கிழவன். இவனோட எதிர்க் கேலுமே? ஏதோ ஜேஆரின்ரை புண்ணியத்தில ஒரு கலவரம் வந்து இவன் ஒரு வழியாய் லெபனானுக்குப் போனான்.
அது இரத்தின சபாபதியருக்கு நெஞ்சில பாலை வாத்தது. பிறகு இவன் அங்கை சண்டைக்குள்ள அகப்பட்டு முடிஞ்சிட்டானாம் எண்ட தகவல் கிடைச் சாப்போல அவருக்கு பழம் நழுவிப் பாலில விழுந்த கணக்காய் இருந்திச்சுது.
இப்ப இவன் திரும்பி வந்திட்டான் எண்டதைக் கேள்விப்பட்டதுமே தனக்கு ஏழரைச்சனி தொடங்கிட்டுது எண்டு அந்தாள் முடிவு கட்டியிருக்கும். இவன் பிறந்தமூட்டம் இவன்ர மூத்த தமக்கை குட்டிப்பரமேஸ் பள்ளிக்குடத்தில படிச்சுக்கொண்டிருந்தவள். குஞ்சரம் ரீச்சர்தான் வகுப்பு ரீச்சர்.
“இப்ப பிறந்த உன்ர தம்பிக்கு என்ன பெயரடி?” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக் கேட்டிருக் கிறா. அவளும் வலு விலாசமாய் ‘டார்லிங் பேபிங் ராஜசேகர்’ எண்டு எடுத்துவிட்டிருக்கிறாள். “ம்...!
பீ குடிக்கிற மாடுகளுக்கெல்லாம் பேரைப் பாரன்!” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக்கலாய்ச்சதும் ஊருக்குள்ள எல்லாரும் அறிஞ்ச கதை.
எங்கட வீட்டுக்கு மூண்டு வீடு தள்ளித்தான் இவனின்ர வீடிருக்கு. ஊர்ச்சனம் முழுக்கப் புதினம் பாக்கப் போகுதுகள் எண்டாப்போல பின்னேரக்கையாய் நானும் போனன்.
ஆள் வீட்டு முத்தத்தில அட்டணக்கால் போட்டிருந்து கொண்டு மடியில ஒரு பிறவுண் கலர் ரூ பேன்ட் பிலிப்ஸ் றேடியோவை ஏரியல இழுத்துச் செங்குத்தாய் விட்டுட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கழுத்தில நார்த்தும்பு மாதிரி ஒரு மைனர்ச் செயின். உடம்பு மெலியவுமில்லைப் பெருக்கவுமில்லை. லெபனானுக்குப் போறதுக்கு முந்தி எப்பிடியிருந்தானோ அதேமாதிரியிருந்தான்.
வாய் நிறையச் சிரிப்பு. ஒரேயொரு மாற்றம். முதுகில வலப்பக்க விலாவில ஒரு நீட்டுப் பள்ளம். அதிலையொரு தையல்போட்ட அடையாளந் தெரிஞ்சுது. டக்கெண்டு பாத்தால் ஒரு திருநீலகண்டத்தைப் பிறவுண் கலரில பச்சை குத்தின மாதிரியிருக்கும். சனங்களெல்லாம் அதைத்தான் புதினம் பாத்துக்கொண்டு நிண்டுதுகள்.
“இது அங்கை லெபனான் ஆமியடிச்ச செல்பீஸ் பட்டு வந்த காயம். அப்பிடியே முதுகு பிளந்து போச்சு. எனக்கொண்டும் தெரியாது. முகங்குப்புற விழுந்திட்டன். வேர்க்சைட்டில நடந்தபடியால் உடனை கூட வேலை செய்தவங்கள் அம்புலன்ஸில கொஸ்பிட்டலுக்குக் கொண்டு போட்டாங்கள்.
அஞ்சு நாள் கழிச்சுத்தான் கண் முழிச்சன். செத்துப் பிழைச்சு மறுபிறப்பெடுத்து வந்திருக்கிறன். நான் இஞ்சை திரும்பி வருவன் கனவிலயும் நினைக்கேல்ல. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில திரும்பி வந்திட்டன்.
இனிக்கனவிலயும் வெளிநாட்டை நினைச்சுப் பாக்கிறேல்ல எண்ட முடிவோட தான் வந்திருக்கிறன். என்ன நடந்தாலும் நடக்கட்டும். இனி வாழ்வும் சாவும் இஞ்சைதான்” எண்டொரு நீண்ட லெக்சர் அடிச்சான். போன சனமெல்லாம் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு நிண்டுதுகள்.
அதுக்குப்பிறகு லெபனான்காரன் ஊருக்குள்ள கொஞ்சக்காலம் புதுமாப்பிளை மாதிரித் திரிஞ்சான். குடிவெறியில்லை. சனங்களோட மட்டு மரியாதை யோட பண்பாய்ப் பிழங்கினான். ‘பரவாயில்லை, லெபனான் போய்வந்ததிலை ஆள் திருந்தியிட்டான்’
எண்டுதான் நானும் நினைச்சன். ஊர்ச்சனங்களும் நினைச்சுதுகள். ஒரு கொஞ்சக்காலம் ஊர் அமைதிப் பூங்காவாயிருந்தது. லெபனான்காரனின்ர தகப்பன் கோணர் சுந்தரம் பிள்ளை வண்டில்மாடு வைச்சுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்.
கொடிகாமம், எருவன், மாசேரி, மிருசுவில், எழுதுமட்டுவாழ், இயற்றாலை, மீசாலை, பளை எண்டு தென்மராட்சிப் பக்கமும், குடத்தனை, அம்பன், நாகர்கோவில், மாமுனை, செம்பியன்பற்று எண்டு கிழக்கூருக்கும் வண்டில்ல போய் தென்ன மட்டை, பொச்சுமட்டை, பனைமட்டை, கிடுகு, அலம்பல், வைக்கல் எண்டு பலதும் பத்தும் ஏத்தியந்த ஊருக்குள்ள விக்கிறதுதான் அவரின்ர தொழில். இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி தேப்பனோட உதவிக்கு வண்டில்ல போறவன்.
அப்பிடிப் போய்ப் போய்த்தான் குடிக்கப் பழகினவன். பிறகு இவன் லெபனானுக்குப் போனாப்போல இவனுக்கு நேரை மூத்தவன் சந்திரசேகரோ அல்லாட்டில் இவனுக்கு நேரை இளையவன் பாலசேகரோ தேப்பனோட உதவிக்கு மாறிமாறி வண்டில்ல போறது வழமையில இருந்தது. இவனைப் போலத்தான் அவங்களும் ஊருக்குள்ள புகழ்பெற்ற குடிகாரங்களாக வந்திட்டாங்கள். இப்ப இவன் வந்தாப்போல புதுமாப்பிள்ளைக் கணக்காய் சும்மா ஊர்சுத்தித் திரியிறான் எண்டிட்டுப் பழையபடி தகப்பன்காரன் வண்டில்ல உதவிக்குக் கூட்டிக்கொண்டு போகத் தொடங்கினார்.
பிறகென்ன பழைய குருடி கதவைத் திறவடியெண்டு வேதாளம் முருங்கைமரத்தில ஏறிட்டுது. லெபனான்காரன் வைபவரீதியாகக் குடியை ஆரம்பிச்சான்.
இவன் லெபனானுக்குப் போகமுந்திக் குடிச்சால் தமிழில உள்ள அத்தனை தூசணமும் பேசுவான். இப்ப லெபனான் போய் வந்தாப்போல அங்கத்தையத் தூசணத்தையும் கலந்தடிக்கத் தொடங்கிட்டான். ‘அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!’
எண்டொரு வார்த்தையைத் தமிழ்த் தூசணத்தோட கலந்தடிப்பான். அதின்ர மீனிங் அவனுக்கு மட்டுந்தான் தெரியும். அதின்ர மீனிங் என்ன? எண்டதை ஒருத்தரும் அவனிட்டக் கேக்கேல்ல.
கேட்டால் அவன் அதுக்கொரு மீனிங் சொல்லுவான். அதை நம்பவேண்டியதுதான். எது எப்பிடி யெண்டாலும் தூசணந்தானே! இதிலை டீப்பாத் திங் பண்ணத் தேவையில்லையெண்டு ஊர்ச்சனமும் பெரிசுபடுத்தேல்ல.
கோணர் சுந்தரம்பிள்ளைக்குக் காலப் போக்கில உடல்நலக்கேடு வந்தாப்போல வண்டில் மாடு எல்லாத்தையும் லெபனான்காரன்ர பொறுப்பிலயே விட்டுட்டார். அதுக்குப்பிறகு இவன் நினைச்ச நேரம் வண்டிலைப் பூட்டுவான்.
ஆரவாரமாய் வெளிக்கிடுவான். திரும்பி வாறதும் அப்பிடித்தான். இவன் வண்டில் கட்டித் திரும்பி வாறான் எண்டால் ஊருக்குப் பிறம்பாத் தெரியும். மெயின்றோட்டில வரேக்குள்ளயே, “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு லெபனான் தூஷணத்தால மாடுகளைப் பெலத்து விரட்டியடிச்சுக்கொண்டுதான் வருவான்.
ஊர்ச்சனங்கள் அலேட்டாகி ஒதுங்கி விடுங்கள். பிள்ளையார் கோயிலுக்கு முன்னால பாரவண்டிலைக் கொணந்து கல்லுக்கட்டி விட்டுட்டு, மாடுகளை அவிட்டுப் பிடிச்சுக்கொண்டு துவரங் கம்பால சளார்! சளார்! எண்டு இரண்டு வெளுவை வெளுப்பான்.
மாடுகள் வாலைக் கிளப்பிக்கொண்டு பறக்கும். இவன் “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு சொல்லிக்கொண்டு மாடுகளுக்குப் பின்னால குறுந்தூர ஓட்டவீரன்போலப் பறப்பான்.
வீடு வந்தோண்ண கயித்தை இழுத்துப்பிடிச்சுக்கொண்டு மாடுகளுக்குத் திரும்பவும் இரண்டு தரம் வெளுப்பான். உடனே சடுண்பிறேக் அடிச்ச மாதிரி மாடுகள் நிண்டிடும்.
லெபனான்காரன் ஊருக்குத் திரும்பிவந்த காலத்தில் இயக்கங்களின்ரை ஆதிக்கம் கொஞ்சம் மேலோங்கியிருந்ததால குடிச்சு வெறிச்சாலும் பெரிசாய் அட்டகாசம் செய்யாமல் அடக்கி வாசிச்சான்.
இதுக்கு இன்னுமொரு முக்கிய காரணமுமிருந்தது. இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி, குடிச்சிட்டு அடிக்கடி வம்பிழுக்கிற அன்னமலரின்ரை கடைசிப்பொடியன் புலிகள் இயக்கத்தில் பெரிய தளபதியாயிருந்தான்.
போதாக்குறைக்கு அன்ன மலரும், “இனிமேல் இஞ்சை ஆரும் தண்ணியைப் போட்டிட்டு என்னோட தனகட்டன். வாழ்க்கையில சூரிய வெளிச்சத்தையே காணேலாமலுக்கு பங்கருக்கை போடுவிச்சு விடுறன்” எண்டு ஒரு ஸ்ரேற்மென்ரும் விட்டிருந்ததால இவன் என்னதான் நிறைவெறியில இருந்தாலும் அன்னமலரின்ரை பெயரை மறந்தும் உச்சரிக்கவே மாட்டான்.
மற்றும் படி பெரிசா மாற்ற மொண்டும் நடக்கேல்ல. ஆனால் ஊர்நிலைமை தான் கொஞ்சக்காலத்தால தலைகீழாய் மாறிட்டுது. சந்திரிகா ஆட்சிக்கு வந்து கொஞ்சக்காலம் பிரபா கரனோட தேன்நிலவு கொண்டாடினா.
பிறகு வழமை போலக் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாய் இரண்டு பகுதியும் கீரியும் பாம்புமாகிச் சண்டை துவங்கிச்சுது. ஆமிக்காரர் பலாலியிலயிருந்து வெளிக்கிட்டுப் படிப்படியாய் வந்து சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினாங்கள்.
பிறகு அங்கிருந்து தென்மராட்சிக்கு வந்து, அதால வடமராட்சிக்கு வந்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுக்கலையும் பிடிச்சிட்டாங்கள். புலிகள் இயக்கம் படகேறி வன்னிக்குப் போட்டுது. இதால மோசமாய்ப் பாதிப்புக்குள்ளானவர்களில் லெபனான்காரனு மொராள்.
முந்தினகாலங்கள் மாதிரிக் கிழக்கூருக்கும் தெற் கூருக்கும் வண்டில் கட்டிப் போகேலாது. எல்லாப்பக்கமும் ஆமிக்காறன் பண்டடிச்சு நிண்டுகொண்டு றூட்பாஸ் கேட்டான். இல்லையெண்டால் திருப்பிவிட்டான்.
அதால இவனுக்குத் தொழில் பாதிப்பு மட்டுமில்லை. கிழக்கூர், தெற்கூர் கள்ளுத் தவறணைகளையும் நெருங்க முடியேல்ல. எதைச் செய்தாலும் உள்ளூருக்குள்ளதான் செய்யவேண்டியிருந்தது. அதால ஆமிக்காரரைக் கண்டால் இவனுக்குச் சரியான கடுப்பாயிருக்கும்.
அதால உள்ளுர்த் தவறணையில போய்க் கள்ளடிச்சிட்டு, வெள்ளையையும் கூட்டிக்கொண்டு பொழுது படேக்குள்ள வீட்டுக்கு வருவான். வெள்ளைக்குக் கள்ளை மணந்தாலே உசாரேறி விடும். ஒண்டு ஒண்டரை அடிச்சால் என்ன நடக்கும்?
தவறணையிலேயே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா!’ தொடங்கியிடும். இவன் என்ன செய்வானெண்டால் வெள்ளைக்குத் தன்ரை கணக்கில ஒண்டரைப் போத்தில் கள்ளை வேண்டிக் குடுத்திட்டு, பொழுது படேக்குள்ள வீட்டைக் கூட்டிக்கொண்டு வருவான். சொல்லி வேலையில்லை.
வெள்ளை பாடினால் தாளந்தப்பாது. சும்மா அந்தமாதிரித்தான் இருக்கும். ‘வெள்ளை! களத்தில் கேட்கும் கானங்களில் ஒண்டை எடுத்து விடுங்கோ!’ எண்டு இவன் அடியெடுத்துக் குடுப்பான். வெள்ளை இரண்டு நிமிசங்கள் அகவணக்கம் செலுத்திப்போட்டுத் துவங்கும்.
‘மறவர் படைதான் தமிழ்ப்படை குலமானமொன்றுதான் அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படை அவர் வெல்வார் என்பது வெளிப்படை... இதுமுடிஞ்ச கையோடை, ‘சிவலைமாடு கட்டியிருக்கிற சலங்கை உடையட்டும் சிங்களவன் கொட்டமடிக்கிற இலங்கை உடையட்டும்...’ அடுக்க, ‘எங்கள் தலைவன் பிரபாகரன் என்று முழங்கு சங்கே முழங்கு - அவன் பொங்கி எழுந்தான் பொடிப்பொடியாய் உடைந்தது பார் கைவிலங்கு உடைந்தது பார் கைவிலங்கு மக்களெல்லாம் மக்களெல்லாம் பிரபாகரன் பக்கம் மக்கள்படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும் மக்கள்படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்’
எண்டு வரிசையாய்க் காசியானந்தன்ர பாட்டுகள் வந்துகொண்டிருக்கும்.
இதுக்கெல்லாம் ஒரு வெற்றுத் தார்ப்பீப்பாவைக் கவிட்டுப்போட்டு லெபனான்காரன் அந்தமாதிரிப் பக்கவாத்தியம் வாசிப்பான். இதுமுடிய வெள்ளை புதுவை இரத்தினதுரையின்ர பாட்டுகளுக்குத் தாவும்.
‘பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே...’, ‘இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்...’, ‘எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம் தமிழ் ஈழமண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம்...’, ‘ கடலதை நாங்கள் வெல்லுவோம் கடற்புலி நாங்கள் ஆளுவோம்...’ எண்டு வரிசையாய்ப் பாடிக்கொண்டு வந்து கடைசியாய் இரண்டு பாட்டை லெபனான்காரனோட சேர்ந்து பாடுவான்.
முதல்ல, ‘வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம் தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்...’ வரும். இதுமுடியத்தான் உச்சக் கட்டந் தொடங்கும். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு...’ எண்டு வெள்ளை தொடங்கின கையோட,
‘வேங்கைகளானவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள் வேங்கைகளானவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்...’
வெள்ளையை மேவித் திரும்பத்திரும்ப உச்சத் தொனியில் லெபனான்காரன் பாடுவான். தொடர்ந்து, இரண்டும் சேர்ந்து கைத்தாளம் போட்டுக்கொண்டு,
‘தலைவன் வழியிலே தடைகள் இராது தடைகள் இருப்பின் தலைவன் இரான் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு...’
எண்டு பைலா அடிக்கத் தொடங்குவாங்கள்.
இனிப் பொறுக்கேலாது எண்ட கட்டத்தில லெபனான் காரன்ர கடைசித் தங்கைக்காரி பதுமினி அதுக்குள்ள என்ர பண்ணுவாள்.
“எடேய்! குறுக்காலையள்ளுவாரே! இப்ப ஆமிக்காறர் வந்தாங்கள் எண்டால் முழுப்பேருக்கும் தீட்டி போடுவாங்களடா! நிப்பாட்டுங்கோடா உங்கட கூத்துக் கும்மாளத்தை நாசங்கட்டுவாரே!”
அதைக் கேட்டோண்ண லெபனான்காரன் சும்மா இருப்பானே? அவனுக்கும் ஏறியிடும். “போடி அங்கால! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு கத்துவான்.
“எனக்கு உன்னோட கதையில்ல! வெள்ளை யண்ணை நீ எழும்பி வீட்டை நட! தேடப் போகுதுகள்!” எண்டவள் வெள்ளையை உறுக்குவாள். வெள்ளை அதோட இருந்த இடந்தெரியாமல் நைசா நழுவியிடும்.
லெபனான்காரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில புதுமை மலரக்கா இருக்கிறா. எதிரிக்கும் இரங்கக் கூடிய தங்கமான மனிசி. அவவின்ர மனிசன்காரன் தில்லைநாதன் எண்டு சேவையராய் வேலை பார்த்தவர்.
அந்தாள் அன்ராயபுரம், வவுனியா, மதவாச்சி, புத்தளம், சிலாபம் எண்டு ரிற்ரயர் பண்ணும்வரைக்கும் வெளி மாவட்டங்களிலதான் வேலை செய்தது. ஒரு காலமும் சொந்த மாவட்டத்தில வேலை செய்யேல்ல.
பப்ளிக் கொலிடேயள், புதுவரியம், தீபாவளி, கிறிஸ்மஸ் எண்டு லீவுகாலங்களில வீட்டில வந்து நிக்கும். பிறகு போகிடும். புதுமை மலரக்காவுக்கு விசு, ராம் எண்டு இணைப்பொடியள்.
அந்த மனிசிக்கு மெல்லிசையில கொஞ்சம் ஈடுபாடு. அதுதான் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தியின் நினைவாகப் பிள்ளையளுக்கு விசு, ராம் எண்டு பேர் வைச்சிருக்கிறார்.
அவங்கள் ரெண்டு பேரும் லெபனான்காரனோட ‘ரஜினிமாமா! ரஜினி மாமா!’ எண்டு நல்ல வாரப்பாடு. சொல்ல மறந்திட்டன், லெபனான்காரன் அந்தக்காலத்தில பேமஸா ஓடின தர்மத்தின் தலைவன், குருசிஷ்யன், மனிதன் படங்களில வாற ரஜினி மாதிரித்தானிருப்பான்.
விசு, ராம் ரண்டுபேரும் எப்பவும் ரஜினி நடிச்ச படங்களைத் தான் பாப்பாங்கள். அதால அவங்கள் லெபனான் காரனை ‘ரஜினிமாமா!’ எண்டு கூப்பிடத் தொடங்கி, பிறகு அந்தப் பெயர் அவங்களுக்கிடையில நிலைச்சிட்டுது. லெபனான்காரன் தன்ரை புளுகு மூட்டை எல்லாத்தையும் அவங்களிட்டைத்தான் அவிட்டு விடுவான்.
96 பிற்பகுதியில ஊருக்குள்ள ஆமி கால்வைச்ச நேரம். ஒருநாள் பின்னேரம் இவனுக்கு நிறைவெறி. கனகராவளவுப் பிள்ளையார்கோயில் வாசற்படியில வந்து இருந்துகொண்டு, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்! இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்?’
எண்டு பாடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்டிட்டு விசுவும், ராமும் ஓடிவந்திட்டாங்கள்.
இவன் பாட்டுக்கு ஓரிடைவெளிவிட, விசு “ரஜினிமாமா! உங்களுக்கு ஆமிக்காரரைக் கண்டால் பயமில்லையோ?
எங்களுக்கெண்டால் சரியான பயம்” எண்டான். அதைக் கேட்டோண்ண இவனுக்கு உசார் ஏறியிட்டுது.
“எனக்கோ? ஆமிக்குப் பயமோ? அது என்ர அகராதியிலயே கிடையாது. ரண்டு ஆமிக்காரரைப் பிடிச்சு ஒருநாள் என்ர வண்டில் சில்லுகளில தேடா வளையக் கயித்தால கட்டிப்போட்டு மாட்டைப் பூட்டினன்.
மகத்தையா! மகத்தையா! மாட்டைப் பூட்ட வேண்டாம். எங்கள அவித்துவிடுங்க! எண்டு மண்டாடினாங்கள். பாக்கப் பாவமாயிருந்திச்சு. பிறகு அவிட்டுவிட்டிட்டன். இப்பவும் என்னைக் கண்டால் அவங்களுக்குத் தொடையள் நடுங்குமடா தம்பிமாரே!”
எண்டு ஒரு புளுகு மூட்டையை அவிட்டு விட்டான். அந்தநேரம் பாத்துக் கோயில் முன்வீதியால பத்துப் பதினைஞ்சு ஆமிக்காரர் ரோந்தில வந்திட்டாங்கள். அவங்களைக் கண்டோண்ண விசுவுக்கு ஒரே கொண்டாட்டமாய்ப் போச்சு.
“ரஜினி மாமா! இவையளில இரண்டுபேரைப் பிடிச்சுத் தேடா வளையக் கயிற்றால வண்டில் சில்லுகளில கட்டுவமே?” எண்டு கேட்டிட்டுத் திரும்பிப் பார்த்தால் லெபனான்காரனைக் காணேல்ல.
மாயமாய் மறைஞ்சிட்டான். விசுவுக்குச் சரியான ஏமாற்றமாய்ப் போச்சு. அடுத்தநாள் பின்னேரம் இவனைக் கோயிலடியில சந்திக்கேக்குள்ள விசு கேட்டான், “என்ன ரஜினிமாமா நேற்று ஆமிக்காரரைக் கண்டு பயந் தோடிட்டியள்?” எண்டு. இவனே இந்த மாதிரிக்கேள்விக்கெல்லாம் சளைக்கிறவன்?
“மண்ணாங்கட்டி! ஆமிக்காவது நானாவது பயப் பிர்றதாவது. பேப்பொடியா! நான் தேடாவளையக் கயிறெடுக்கப் போனனடா! வந்து பாத்தா ஆமிக்காற னெல்லாம் போகிட்டான். நீயெண்டாலும் அவங்களை மறிச்சு வைச்சிருக்கலாமே?
மறிச்சு வைச்சிருந்தால் நான் ஆரெண்டு காட்டியிருப்பன். இது அவங்களைப் போக விட்டிட்டு இப்ப விழல்கதை கதைக்கிறாய்!” எண்டான். விசுவால எதிர் நியாயங் கதைக்க முடியேல்ல.
இது நடந்து சரியாய் மூண்டாவது நாளிரவு லெபனான்காரன் வீட்டில எதிர்பாராதவிதமாய் ஓர் அசம்பாவிதம் நடந்தது. இதுக்கு முதல்நாள் கோப்பிறேசனில கள்ளடிச்சிட்டு முசுப்பாத்தி பண்ணின ஆக்களுக்கு ரோந்து போன ஆமிக்காறர் முதுகு முறிய வெளுத்திருக்கிறாங்கள்.
அதால கோப்பிறேசன் நடத்திற சின்னக்குட்டி, ‘அன்பார்ந்த தமிழீழப் பெருங்குடி மக்களே! கோப்பறேசனில் மது அருந்துவோரை அமைதி பேணும்படி பாதுகாப்புப் படையினர் அன்பாகக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
எனவே இவ்விடத்தில் அமைதி பேணுவதில் பெருஞ்சிரமத்தை எதிர்நோக்குவோர் கொள்கலன்களில் மதுவைப் பெற்றுச்சென்று தத்தமது வீடுகளில் வைத்து அருந்துமாறு தயவாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’ எண்டு பொது அறிவித்தல் ஒன்றை விடுத்தாப்போல, இவன் பாத்தான் என்னத்துக்குத் தேவையில்லாத வீண்சோலியெண்டிட்டு மூண்டுபோத்தல் கள்ளும் அரை டிஷ் மாட்டிறைச்சிப் பொரியலும் வாங்கிக்கொண்டு பொழுது சுருங்க முன்னம் வீட்டை வந்து சேந்திட்டான்.
அண்டைக் கெண்டு இவன்ர தமையன் சந்திரசேகரும் வீட்டில நிண்டான். தமையனை விட்டுட்டுத்தான் மட்டும் தனியக் குடிக்கிறதோ?
எண்டிட்டு அவனையுங் கூப்பிட்டான். அவன் என்ன செய்தான்?
தகப்பனை விட்டுட்டுக் குடிக்கிறது சரியில்லை எண்டுட்டு, “அப்பு! நீயும் வாளை” எண்டு கூப்பிட்டான். இப்ப தேப்பன்காரன் நடுவில. வலப்பக்கம் தமையன்காரன்.இடப்பக்கம் எங்கடையாள். கச்சேரி ஆலாபரணத் தோட மெதுவாத் தொடங்கிச்சுது.
தேப்பன்காரன் தன்ர கையில வண்டில்மாட்டைத் தராமல் இவன்ர பொறுப்பில விட்டது சந்திரசேகருக்குச் சரியான கடுப்பு. அவனுக்குக் கொஞ்சம் உசார் ஏறினோண்ண, “கோணர் சுந்தரி! நீ செய்த வேலை சரியோ? மூத்தவன் நானொருத்தன் முழுசாய் இருக்கத் தக்கதாய் ஒரு பொறுப்பில்லாத முழுக் குடிகாரனிட்ட வண்டில் மாட்டைக் குடுத்திருக்கிறாய். அப்ப நான் என்ன சிரைக்கிறதுக்கே இருக்கிறன்?”
எண்டொரு தொடக்கந் தொடங்கினான். தேப்பன்காரன் அரையுங் குறையுமான ஏற்றத்திலயிருந்ததால கொஞ்சம் அடக்கி வாசிச்சார். “எட விசர்க் கொந்தா! நீ சும்மா கல்லில குத்தாதை! இவன் செத்துப் பிழைச்சு வந்திருக் கிறான். பாவமெல்லே!
அதுக்கை உன்னைப்போல மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பேயனில்லையிவன். நல்ல வாயாடி. வியாபாரத்துக்குப் பொருத்தமான ஆள் எண்டிட்டுத்தான் வண்டில் மாட்டை இவன்ர கையில குடுத்தனான். சரியே! விளக்கப் பூழலில்லாமல் பேக் கதைபேசாதை கண்டியோ?”
லெபனான்காரன் ஏற்கனவே செம ஏற்றத்தில இருந்தான். இதைக் கேட்டோண்ண அவனுக்கு இன்னும் ஏறியிட்டுது. “என்னடா சொன்னனீ அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!....” எண்டு கத்திக்கொண்டே தமையன்காறனுக்குக் கன்னத்தைப் பொத்தியொண்டு குடுத்தான்.
ஏய்ம் தவறி தேப்பன்ர கன்னத்தில அச்சொட்டா விழுந்திச்சுது. பதிலுக்குத் தமையன், “பேப்பூழல்! முந்தநாள் பிறந்த மூத்திரச் சேங்கு!
எனக்குக் கைநீட்டிறியோ?” எண்டுட்டு லெபனான் காரனுக்குக் கன்னத்தில வெளுக்க, அதுவும் ஏய்ம் தவறித் தகப்பன்ர கன்னத்தில ஸிமூத்தா விழுந்திச்சுது. அந்தாள் பதகளிச்சுப்போய், “நாய் வேசைமக்களே! எனக்கேன்ரா அடிக்கிறியள்?” எண்டு மெல்ல விலத்தினாப்போல, இப்ப ஏய்ம் தவறாமல் இரண்டு பேரும் நேரடி மோதல்ல இறங்கிச்சினம். இரண்டாவது அடியில தமையன் நிலத்தில சரிஞ்சிட்டான்.
இவன் அவனுக்குமேல ஏறியிருந்து தொண்டையைத் திருகத் தொடங்கியிட்டான். இது விசயம் பிழைக்கப் போகுது எண்டுட்டு மூத்ததமக்கை குட்டிப்பரமேசும் கடைசித் தங்கை பதுமினியும் ஓடியந்து வெளி முத்தத்தில நிண்டு, “ஐயோ! ஐயோ! கொல்லுறான்! கொல்லுறான்! காப்பாத்துங்கோ!” எண்டு குழறிப் போட்டு இவனைப் பிடிச்சுத் தள்ளிவிட்டாகள்.
இவன்ர பிடி தளர்ந்தோண்ண அவன் இருமிக்கொண்டு எழும்பி ஓடினான்.
“பறை வேசையள்! ஏனடி தள்ளி விழுத்தினனீயள்? இண்டைக்கு உவனைக் கொல்லாமல் விடன்!”
எண்டு பின்னால ஓடினான். இந்தக் களேபரத்தில புதுமை மலரக்கா பொடியளோட எங்கட வீட்டை யோடி வந்தா. சொல்ல மறந்திட்டன். எங்கட வீட்டுக்கு அடுத்த வீடுதான் புதுமை மலரக்கா வீடு.
அவ ஓடியந்து புட்டு அவிச்சுக்கொண்டிருந்த என்ரை அம்மாவை அருட்டினா.
“அக்காத்தை! அக்காத்தை! உவங்கள் குடிச்சிட்டுச் சண்டை பிடிக்கிறாங்கள். தமக்கையும் தங்கையும் குளறியடிக்கிறார்கள். வாவன் ஒருக்காப்போய் விலக்குப் பிடிச்சு விடுவம். அயலுக்கை சரியில்லை யெல்லே!
அம்மா இருந்த இடத்தால எழும்பாமலுக்கு, “என்னடி உனக்கு வேறை வேலையில்லையே? குடிகாரர் சண்டை தானாய் அடங்கியிடும். அதுக்கை இப்பிடிக் கொத்த இடத்துக்கு ஒருக்காலும் விலக்குப் பிடிக்கப் போகக்கூடா. அவங்கள் தலைகால் தெரியாமல் நிப்பாங்கள். என்னடி!
எண்டு ஏறுக்குமாறாய்க் கேட்டாலும் கேப்பாங்கள். அது எங்களுக்குத்தான் கடைசி வரைக்கும் சங்கையீனமாய்ப்போம். பேசாமல் போய் உன்ரை அலுவலைப் பார்!” எண்டு சொல்லிப் போட்டு அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா.
“என்னக்காத்தை உப்பிடிச் சொல்லுறாய்? நீ வராட்டில் இரு. நான் போறன். தம்பி நீ வாறியோ?” எண்டு என்னைக் கேட்டுட்டு லெபனான்காரன்
வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய்ப் பொடியனை இழுத்துக்கொண்டு போக, நானும் பின்னால புதினம் பாக்க ஓடினன். அங்கை சந்திரசேகர் கையில உலக்கையோட நிக்க, குட்டிப்பரமேஸ் அவனை இழுத்துப் பிடிக்க, லெபனான்காரன் ஒரு மொட்டைக் கத்தியோட நிக்க, அவனைப் பதுமினி இழுத்துப்பிடிக்க, ஒரே களேபரமாயிருந்திச்சுது. தகப்பன்காரன் “நாய் வேசைமக்களே! போங்கோடா அவர வரே!” எண்டு தாவராத்தில சரிஞ்சிருஞ்சு கத்துறார்.
“ஐயோ! இதுகளைப் பெத்தநேரம் ரண்டு அம்மிக்குழவியைப் பெத்திருக்கலாம். மனிசர் வீட்டில நிம்மதியாய் இருக்கேலுதே?” எண்டு தாய்க்காரி குஞ்சுப்பிள்ளை அலப்பாரிக்கிறா.
புதுமை மலரக்கா வைக் கண்டோண்ண பதுமினி லெபனான்காரனிட்ட, “அண்ணை! அங்கை பார் புதுமை மலரக்கா வந்திட்டா! கத்தியைக் கீழை போடு!” எண்டாள். லெபனான்காரன் நிமிர்ந்து வடிவாய்ப் புதுமை மலரக்காவைப் பாத்திட்டு, “அயர்லி சறுமூத்தா!
மும்மூத்தா! ஏன்ரி நான் புதுமை மலரக்காவுக்கு ஓக்கமாட்டன் எண்டு நினைச்சியோ? உனக்கு ஓப்பன். பக்கத்தில நிக்கிற மற்றவளுகளுக்கும் ஓப்பன். நான் லெபனான்காறிகளுக்கே ஓத்தவன்ரி. விடடி என்ர கையை நரிவேசை!” எண்டான். அதில நிண்ட எனக்கே பெருஞ் சங்கையீனமாப் போச்சுது. புதுமை மலரக்காவுக்கு என்ன மாதிரியிருந்திருக்கும்?
(இதோட கதை முடிஞ்சுது. இதைக் கேள்விப் பட்டுட்டு அம்மா என்ன சொல்லியிருப்பா எண்டது உங்களுக்குத் தெரியுந்தானே! இந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு புதுமை மலரக்கா பகலில எந்தவொரு பொது இடத்திற்கும் இரண்டு வரியமாப் போறேல்ல. மற்றது, லெபனான்காரனும் மூண்டுவரியத்தால வண்டில்ல தென்னம்பொச்சு ஏத்திக்கொண்டு வரேக்குள்ள தவறி விழுந்து செத்திட்டான். அவன் தவறி விழுந்து சாகேல்ல. ஆயத்துச் சந்திச் சென்றிக்குள்ள நிண்ட ஆமிக்காறர் இவனுக்குத் துவக்குச்சோங்கால வாகாய் வெளுத்ததாலதான் செத்தவன் எண்டொரு கதையுமிருக்கு. இதையெல்லாம் நான் கதைக் குள்ள சேர்க்கேல்ல)
1947-ல், ஒரு புத்தம்புது தேசமாக இந்தியா விடியல் கண்டபோது, நீண்ட காலனியாதிக்க உறக்கத்திலிருந்து விழித்திருந்த அந்த தேசம், சுதந்திரத்தின் விளைவாய் தன் முன்னின்ற சவால்களை எதிர்நோக்க இருந்தது. பின்வாங்கிய பிரிட்டிஷ் அதிகாரம் மற்றும் அதனைத் தொடர்ந்த பிரிவினையின் குரூர குருதிப் புனல், இந்தியா பாகிஸ்தான் என இரு தேசங்களாக மதத்தின் பேரிலான பிளவுகோட்டிற்கு இருபுறமும் உருவாக சாட்சியாக இருந்தன.
பாகிஸ்தான் இசுலாமிய அடையாளத்தை பற்றிக் கொள்ள, இந்தியா தனது வருங்காலத்தினை தொலை நோக்கில் கொண்டு, தனது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் மதச்சார்பின்மையை தெரிவு செய்தது.
வேற்றுமையில் ஒற்றுமை எனும் அவரது அரசியல் நெறியே, பன்மைத்தன்மைக்கு, வெவ்வேறு மதங்களும் ஒன்று கூடி வாழ்ந்து, ஒன்றாக ஏற்றம் காணும் நோக்கில், அனைத்து வகையினருக்குமான ஒரு தேசம் எனும் அடையாளத்திற்கு வித்திட்டது.
இப்புது இந்தியா, பிரிட்டிஷ் அரசின் அதிகாரப் பிடியின் அடையாளத்தை உதறிவிட்டு, புதிதாய் உருவான குடியரசின் பெரும் அறைகூவலாய் அமைந்திட, தனக்கென ஒரு புது கலை வடிவத்தை நாடியது.
ஆசிய சமூக அருங்காட்சியகத்தில் நடப்பிலிருக்கும் “இந்தியாவிற்கான நவீனக்கலை : ஒரு முற்போக்கு புரட்சி (The Progressive Revolution: Modern Art for a New India) கலை கண்காட்சி நிகழ்வானது, இந்திய தேச கட்டுமான பணிகளுக்கிடையேயும், பிரிவினையின் கோரத்தினடையேயும் உயிர்கொண்டு தேசத்தின் கலையாற்றல் திறத்தின் அடையாளமாக உருவான நவீன கலைதனை அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது.
இந்நிகழ்வின் நாயகர்கள் எனப்பட்டவர்கள், கலை, அரசியல், புரட்சி மீதான காதலினால் உந்தப்பட்டு ஒன்று சேர்ந்த கலகக்காரர்கள். இவ்விளைஞர் பட்டாளம் தங்களை முற்போக்கு கலைஞர்கள் அமைப்பு ( Progressive Artists ’ Group (PAG) ) என்று அடையாளப்படுத்திக்கொண்டனர்.
பீஏஜி (PAG) அனைத்து மத, சாதி, இன, குல பின்னணியிலிருந்தும் வந்த கலைஞர்களை உள்ளடக்கி ஒரு நுண்ணிய இந்திய தேசமாய் இருந்தது. இதுவே நேருவின் மதசார்பின்மை நெறியினை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும், தூதுவர்களாக இவர்களை மாற்றியது எனலாம்.
இவர்களில் பலர் இந்தியாவின் இண்டு இடுக்கிலிருந்து வந்தாலும், இவர்கள் ஒன்று சேர்ந்து புழங்கிய நிலம் பம்பாய் (தற்போது மும்பை) பெருநகரமாகும்.
இக்கலைஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வங்காள சிந்தனைப் பள்ளியின் தேசிய கலை இயக்கங்களையும், இயல்மெய்வாதத்தின் மீதான நாட்டத்தை நிராகரித்திருந்தாலும், அவற்றிலிருந்து ஒரு சாராம்சத்தை மட்டும் சுவீகரித்துக் கொண்டனர்.
அது முந்தைய கலைவடிவங்களில் இருந்து மீட்டுருவாக்குவது ஆகும்.
முன்காலனியாதிக்க கால தரவுகளை நாடி செல்வது இந்திய கருத்தாக்கங்களின் மீள்புனைவிற்கு வழிவகுப்பது, கலைஞர்கள் தம் சுயநிர்ணயத்திற்கு அத்தியாவசியமாகும்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவிலும் அதன் தேவை இன்றியமையாததே.
ஏகாதிபத்தியத்தின் கீழ் புழங்கிக்கொண்டிருந்த கல்விசார் யதார்த்தவாதத்தினை ஓரங்கட்டும் நோக்கில் கலைஞர்கள் புதுப்புது மரபுகளை உருவாக்க முனைந்தனர்.
தனிநபர், அரசியல், கதையாடல், வரலாறு, கருத்தியல் ஆகிய கோட்பாடுகள் மேலும் இந்திய அழகியல், சர்வதேச நவீனத்துவம் என பலவற்றைக் கொண்டு புதிய பொருளாக்கங்களை, வடிவங்களை, பாணிகளை சமைத்து நவீன இந்திய வட்டார கலைக்கு வித்திட்டனர்.
முப்பரிமாணம், அழகியல் நிலை, வண்ணங்கள், உட்கூறுகள் என வெகுசில நிரந்தர வரையறைகளுக்கு மட்டும் உட்பட்டு முழுமுதல் சுதந்திரத்துடன் கருப்பொருள் மற்றும் உத்தியினை கையாண்டு, ஓவியங்களை படைப்பதே அவர்கள் நோக்கம்.
மேற்கத்திய நவீனத்துவ வளர்ச்சியில் பாரிஸ் கலை சிந்தனைப் பள்ளியின் பங்களிப்பு, ஆப்பிரிக்க மற்றும் ஓசனிக் கலை சிந்தனைப் பள்ளிகளின்பால் கொண்டிருந்த பெருங்கடன் என்பதை நூற்றாண்டுகள் பழமையான ஐரோப்பிய இயற்கை வாதத்தினை (naturalism), மேற்கத்திய நுண்கலை வடிவங்களுக்கு தொடர்பில்லாத தெறிக்கும் வண்ணக்கூறுகளும், புடைப்பில்லா சித்திரத்தன்மையினையுடையதுமான (pictorial flatness), ஐரோப்பிய நுண்கலை கலைஞர்களை தகவமைக்க செய்தது, ஆப்ரிக்க கலைவடிவங்களின் மீதும் ஆசிய வடிவங்கள் மீதும் ஒரு சேர இருந்த ஈர்ப்பும் ஈடுபாடும் ஆகும். வான்கா (VonGogh) ஜப்பானிய படைப்புகளால் உந்தப்பட்டது மட்டுமல்ல அவற்றைச் சேகரிக்கவும் செய்தார்.
காகின் (Gaugin) கூட பொலினீசிய குறியீட்டியலையும் அழகியலையும் சுவீகரித்துக்கொண்டார்.
இந்திய நுண்கலை படைப்புலகம் மேற்கை மட்டும் நோக்கியிருக்கவில்லை, கிழக்கையும் கூட ஏன் ஒரு வகையில் தன்னையுமே நோக்கி இருந்தது.
நிகழ்வின் அருங்காட்சி நிர்வாகிகள் Dr செஹரா ஜுமாபாய் (Dr.Zehra Jumabhoy), கோர்டால்ட் கலை கல்லூரி இணை விரிவுரையாளர் (Courtauld Institute of Art) மற்றும் தான் பூண் ஹ¨ய் (Tan Boon Hui), ஆசிய சமூக அருங்காட்சியகத்தின் இயக்குநர் (Asia Society Museum) ஆவர்.
இக்கலைப்படைப்புகளை வெறும் பிரதிகளாக பார்ப்பதை தவிர்த்து தொகுப்புகளாக கண்டுகொள்ளுதலே சரியான முறைமை என்று அவர்கள் வலியுறுத்தவே செய்கின்றனர்.
அக்கருத்தை காண்பவர் மனதில் பதியச்செய்யவே, நேர்த்திகொண்ட முன்நவீன ஆசிய படைப்புகளை, பெரும்பாலும் ப்ளான்ச்செட் (Blanchette), ஜான் டி ராக் பெல்லேர் (John D Rockefeller) ஆகியோரின் களஞ்சியங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை இந்திய கலை படைப்புகளுக்கு இடையிடையே காட்சிபடுத்தினர்.
ஒரு ஜப்பானிய ஸ்க்ரால் வகை (Japanese Scroll), ஒரு பகரி நுண்ணோவியம் (Pahari miniature), ஒரு சோழ வெண்கலம் என காட்சிப்படுத்தி இவைகளுக்கும் இந்திய நுண்கலை வடிவத்திற்கும் இடையேயான உறவினை, வெறுமனே கிழக்கு மேற்கு எனும் எதிரெதிர் / இருநிலை கூறுகளாக அடையாளம் கொள்ளாமல், பின்னிப்பிணைந்த பல கூறுகள் கொண்ட இந்திய நுண்கலையாகவே காண வழிவகை செய்யவே இம்முயற்சியாகும்.
கண்காட்சியில் முதல் அரங்கம், 1949 - இல் பம்பாய் கலை சமூகக்கூடத்தில் நிகழ்ந்த PAG-இன் முதல் கண்காட்சியினை மீட்டுருவாக்கம் செய்ய முனைந்துள்ளது.
பிரான்சிஸ் நியூட்டன் சௌசாவின் (Francis Newton Souza) மிதுனா (1949) (Mithuna - Lovers) இவற்றில் முக்கியமானது. கண்கள் அகலமாக, தனிப்பாங்கில் அமைந்து, ஆடம்பரமான உருவமைப்புடன், பதினேழாம் நூற்றாண்டின் பஞ்சாப் மலைகளின் பகரி ஓவியங்களின் சாயலிலும், இந்து ஜைன கோயில்களின் புடைப்போவியங்களின் சாயலிலும் மற்றும் பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso), ஜோர்ஜஸ் ப்ராக் (Georges Braque) ஆகியோரின் ஐரோப்பிய கியூபிசத்தின் உட்கூறு களையும் கொண்டு மாதிரி வடிவமற்று திகைப்பூட்டும்வண்ணம் உள்ளது.
போர்ச்சுகீசிய கோவாவில், ஒரு ரோமன் கத்தோலிக்க குடும்பப் பின்னணியிலிருந்து, வறுமையின் பிடியில் கலகக்காரனாக உருவான சௌசாவிற்கு, இங்கிதம், பாங்கு கற்று இயங்க நேரமிருக்கவில்லை.
இவர்தம் படைப்புகள் பற்றுதல், பாரம் பரியங்கள் இவற்றை ஒதுக்கியே அமைந்தன. அதே ஆண்டில் (1949) வரைந்த இவரது இன்னொரு ஓவியத்தில், கையில் தூரிகையுடன் ஒரு நாயகனைப் போல் தன்னையே தீட்டியுள்ளார்.
அம்மணமாக, எலும்பும் தோலுமாக தோன்றினாலும், அந்த இளைஞனின் தெனாவெட்டு அவரது நேர்கொண்ட பார்வையில் உணரமுடிகிறது. ஒரு தேர்ந்த கலைஞனை, அவன் கொண்ட உத்வேகத்தை வெற்று பாசாங்கை உதறித் தள்ளும் அவனது திமிறிடும் பார்வைகள் அறிவிக்கிறது.
இத்தருணம், டோன டெல்லாவின் (Donatello) வெண்கல சிற்பமான கோலியாத்தை வதம் செய்யும் டேவிட்டை நினைவுபடுத்துகிறது.
இவ்விதத்தில், இது பிரிட்டிஷ் பேரரசிற்கும் இந்திய குடியரசிற்கும் இடையிலான உறவை சுட்டும் உவமையென எடுத்தாகவேண்டும். ஆனால் அவ்வோவியம் நிறுவ இருந்த கவித்துவ மான நியாயம் பொதுவெளியில் எடுபடாமல் போனதோடு, தவறான கற்பிதங்களால் கலகங்களுக்கு வித்திட்டது.
பம்பாய் நிர்வாகத்திடம் உண்டான உரசலில், இந்தியாவை விட்டு ஐரோப்பிய கரையை நோக்கி சௌசாவினை அனுப்பி வைத்தது. அவர் பாரிஸுக்கு, பின் அங்கிருந்து நியூயார்க்கிற்கு சென்றடைந்தார்.
இது PAG-க்கு ஒரு பேரிழப்பு. சௌசா இன்றி, அந்த தீவிர கொள்கைவாதியின்றி, அவ்வமைப்பு பிடிப்பற்றுபோனது. கண்காட்சியின் இன்னொரு ரத்தினம்சம் அக்பர் பதம்சீயின் (Akbar Padamsee) 1952 -இல் தீட்டப்பட்ட ‘காதலர்கள்’ (Lovers) ஆகும்.
1954-இல் பம்பாய் ஜஹாங்கிர் கலை அரங்கத்தில் காட்சிப்படுத்தியபோது சௌசாவிற்கு நேர்ந்த கொடுமை இந்த வண்ண ஓவியத்திற்கும் விதிக்கப்பட்டது. வெய்யில் குளித்து மஞ்சளும் மாநிறமுமாய் மண்மணத்துடன் ஆணும் பெண்ணும், வெண்ணிற காளையின்மீது அமர்ந்து, ஆண் பெண்ணின் மார்பகங்களை கூப்பி அணைத்தபடி சரசம் பேசுகிறது இப்படைப்பு.
தனித்தன்மைகொண்ட முகவடிவமும், ‘நீட்சிபெற்ற உருவங்களும், பனிரெண்டாம் நூற்றாண்டு சோழ வெண்கல சிற்பமான சிவபெருமானை நினைவூட்ட, இவற்றின் ஒற்றுமையை விளக்க வெண்கல சிற்பமும் ஓவியத்திற்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்து மத மறைகளிலிருந்து சிவன் பார்வதியின் தற்கால உருவகமாக, தம்பதிகளாக பதம்சீ வடிக்க முனைந்ததே எதார்த்தம் ஆனாலும் அவ்வட்டார நிர்வாகிகள் இதனை சிவபெருமான், தேவி பார்வதியின் நிர்வாணத்தையும், உடலுறவையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி, உள்ளுணர்ந்தே இறைமீது கலங்கம் செய்ததாக முடிவு செய்தனர்.
இருநூறு வருட பிரிட்டிஷ் ஆட்சியின் அளவு கடந்த ஒழுங்குகள், இந்திய கலைவடிவங்களில் சாதாரணமாக பொதிந்திருந்த சரச, காம, உணர்வுகளை சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து நீக்கியிருந்தது. இன்றளவிலும் கோவில்கட்டிட, சிற்ப சாத்திரங்களில், பழங்கால இந்து மறைநூல் சாத்திரங்களில், ஏன் மொகலாய நுண்ணோவியங்களிலும் கூட இவை நிறைந்து காணப்படுகின்றன.
(சௌசாவைப் போலல்லாமல் பதம்சீ, அவர்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நீதிமன்றத்தில் எதிர்த்து போராடி வென்றார். அதோடல்லாமல் அவ்வழக்கு இன்றளவிலும் நவீன இந்தியாவில் கருத்து சுதந்திரத்தின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது)
வாசுதேவ் கெய்ட்டோண்டே (Vasudeo S Gaitonde), இக்குழுவின் ஆன்மீகவாதியானவர், பரிபூரணமான சுருக்கமான நடையில் இயங்குபவர். ஜென் பௌத்தம், கிழக்கு ஆசிய ஸ்க்ரால்கள் (East Asian scrolls) மற்றும் வனப்பு எழுத்தியல் (calligraphy) இவற்றின் மீதிருந்த ஈர்ப்பில், தொன்ம நிலப் பரப்புகளை எளிமையான குறிப்பியல் கொண்டு இவர் வரைந்தது மார்க் ரோத்கோ (Mark Rothko)- வுடன் ஒப்பிடப்பட்டிருகிறது.
1964-இல் கெய்ட் டோண்டே நியூயார்க் சென்றபோது அவர்கள் இருவரும் சந்தித்து அவர்தம் படைப்புகளுக்கான அகத்தூண்டுதல்களை பரஸ்பரம் செய்துகொண்டனர்.
செறிவான இந்திய கலாச்சார கலைச் சூழலின் அடையாளமாக, பல்வகை கலை சாராம்சங்களின் அயற்சேர்க்கையாக, கூட்டுருவாக்கமாக காட்சிப்படுத்தும் மற்றொரு முயற்சியில், 1962-ஐ சேர்ந்த சாம்பல் நிறத்தால் தோய்ந்த நீலம், வெள்ளை பின்னணியில் பறவையும் சூரியனும் காணப்படும் கெய்ட்டோண்டேவின் குறிப்பியல் சித்திரத்தை, பூத்துக் குலுங்கும் மரக்கிளையின் மீதிருக்கும் நீல வெள்ளி நிற பறவையுடைய மெல்லிய படைப்பான பதினாறாம் நூற்றாண்டின் ஜப்பானிய ஸ்க்ரால் ஓவியத்தின் அருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சையத் ஹைதர் ரசா (Syed Haider Raza) - இன் காஷ்மீர் (1949) ஓவியத்திலும் இது போன்ற தெளிவுடைய, ஒத்திசைவான கூடுகைகள் புலப்படுகின்றன. துவக்க காலத்தில், தாளில் தீட்டப்பட்ட குவாச்சே வகையை சேர்ந்த இது, செசான்னேக்கு வந்தனை (Homage to Cezanne)- யினைப் போன்று புண்ணிய பூமிக்கான வாழ்த்துப் பாவாக அமைகிறது.
இருள் படர்ந்த ஆறுகள் இரண்டு, குறுக்கும் நெடுக்குமாக சங்கமிக்கின்றன. இரவு வெளியிலே தூரத்தில் இருக்கும் காடு, மலைகளுக்கு சவாலாக, கூரை வீடுகள் வெகுவாக பரவி வருகின்றன. இது ஒரு துவக்க கால பரிசோதனை.
ஒரு புறம், துணிவுடன் கூடிய பிரகாசமான வண்ணங்களையும் வலிய கோடுகளையும் கொண்டு ஓவியத்தின் தளத்தை சிதறுண்டாக்கியும் கூட மறுபுறம் மனச் சலனத்துடன் வரைபட நோக்கு நிலையை, விடாமல் பற்றிக்கொண்டிருப்பது விளங்குகிறது.
ரசா இசுலாமியர் என்றாலும், சராசரி இந்திய மனநிலையில் பொதிந்திருக்கும் பண்டைய கால நம்பிக்கை முறைமைகளிலிருந்து ஈர்க்கப்பட்ட பேதங்கள் இல்லாமல் இயல்பாக ஊறிய தாக்கங்களே. இதுவே மதசார்பற்ற / மதநல்லிணக்க கொள்கைகள் பின் காலனியச்சமூகத்தில் வேரூன்றியிருந்ததற்கு ஆதாரம்.
ரசாவின் பின்நாள் இணைப்பாக்க படைப்புகளில் தெள்ளிய எடுத்துக்காட்டு சாத்புரா (1984). நிலப்பரப்பையும் குறிப்பியலையும் கலந்து உருவாக்கி தாந்திரீக பௌத்தமும், இந்து மதமும் சமரசத்துடன் ஒன்றிணைத்து குறியீட்டியலாக்கி அதீதத் தனித்தன்மை கொண்ட, தனி மொழியாக உருவகிக்கப்பட்டதுதான் சாத்புரா.
இவ்வோவியத்தில், விந்தையான கருஞ்சூரியன் ஒன்று கிடை, மூலமட்டங்களில் சிதறுண்டு கிடக்கும், ஒளி மங்கிய சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களிலான தளங்களை கொண்ட சிதிலமடைந்த வடிவியல் நிலப்பரப்பை நிரப்பு கிறது.
கீழிருக்கும் தகவல், இது மத்தியபிரதேச காடுகளை, ஓவியர் பிறந்து வளர்ந்த வட்டாரத்தின் நினைவூட்டல் என்கிறது. ஓவியத்தின் வடிவியல் கட்டமைப்பு இந்துமத எந்திரங்களை குறிக்கையில், வடிவியல் குறியீடுகள் தேவசக்தியினை உருவகப்படுத்துகிறது. அதே வேளையில், வண்ணங்களும் தூரிகைகொடுகளின் மிடுக்கும் வலிமையும் உலகப்போரின் பிற்கால அமெரிக்காவின் குறியீட்டியலாக கொள்ளப்படுகிறது.
மூன்றாம் தளத்தில் காட்சியிலுள்ள ராம்குமாரின் பெனாரஸ் (1964), இதே பாணியில் வாரணாசி நகரத்தின் நிலப்பரப்பை காட்டுகிறது. பெனாரஸ் இவருக்கு அதீத இஷ்டமானதாகவும், இவரது ஏனைய நிலப்பரப்புகளும் இந்தியாவை சுற்றியே இருக்கும்.
மேலும் குமாரின் வர்ண கட்டமைப்புகள் காலப்போக்கில் வரைபட வடிவத்தை அணைத்துக்கொண்டது. அழியா அச்சாக இருக்கும் இருபதாம் நூற்றாண்டின் முற் பகுதியின் மேற்கத்திய நவீனத்துவம் குமாரின் கலைப்பயணம் முழுக்க, அவரது மரணம் வரை ( கடந்த ஏப்ரல் மாதம்) தொடர்ந்து உணரப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின்னான சமூக நிகழ்வுகளையும், நவீன இந்தியாவை உருவமைத்த குரூர நிகழ்வு களையும் கையாண்ட விதத்தில் முற்போக்கு புரட்சி அமைப்பு இன்றியமையாததாகிறது.
1950களில், சமூக அரசியல் தளத்தின் மீதும் மற்றும் அதன் பொருளாதார இக்கட்டின் மீதுமிருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், தங்களை சுற்றி நடந்தவற்றை, நடைமுறை யதார்த்தங்களை கலைஞர்கள் ஆவணம் செய்துகொண்டுதானிருந்தனர்.
அவர்கள் கண்டறிந்த அவை யாவும் அவர்கள் கலைப் படைப்புகளில் தலையங்கங்களாக இருந்தன.
இக்கால கட்டத்தின் வலிமை வாய்ந்த படைப்பினை கொண்டு வந்தவர் மக்பூல் பிதா ஹுசைன் (Maqbool Fida Husain), பீஏஜி-இன் உறுப்பினர்களிடையே சர்வதேச அளவில் அதிகமாக அறியப்பட்ட கலைஞர்.
அறிவிப்பு பதாகைகள் தீட்டுவதில் தனது கலைத்தொழிலை தொடங்கியவர், அவரது யாத்ரா (1955) மற்றும் ஹோலி (1951) ஆகிய ஓவியங்களில் வீடு வாசலை, கிராமப்புறங்களை கவித்துவமாக காட்சிப்படுத்தியதில், பசோஹ்லி ஓவியங்கள், ராஜஸ்தான், மொகலாய நுண்ணோவியங்கள் மற்றும் ஜைன கையெழுத்து படிவங்கள் ஆகிய நாட்டார் மற்றும் மத சடங்கு சம்பிரதாயங்களில் இருந்தும் மேற்கத்திய பாணிகளிலிருந்தும் ஈர்ப்பு கொண்டார்.
ஹ§சைனின் மேதாவித்தனமும், வெளிப்படையான பாணிகளும், நவீன இந்திய கலையாக பல இந்தியர்களுக்கு அடையாளம் காட்டியது. அவரை இந்தியாவின் பிக்காஸோ என்றழைப்பது முறையாக இருந்தாலுங்கூட, அவ்வகை அடையாளபடுத்துதல் என்பது, அருங்காட்சியக காப்பாளர்களை முகம் சுளிக்க வைக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
மிகப்பெரும் பிரபலமான பின்னும்கூட, ஒரு வேளை அதனால்தானோ என்னவோ, 1996-இல் இந்துமத பெண் தெய்வத்தை, நிர்வாணமாக வரைந்ததற்கு, ஹுசைன் தீவிர வலதுசாரிகளால் குறி வைக்கப்பட்டார்.
இசுலாமியர் என்பதால் மட்டுமே, தவிர எந்த வகையிலும் தீங்கிழைத்திராத அவ்வோவியம் வெறும் பலிகிடா மட்டுமே, அதனால் கலைஞரும் பலிகிடாவானார். அதன் விளைவாக, நாட்டை விட்டு வெளியேறி, கத்தாரில் புகலிடம் கோரி, அந்நாட்டு குடிமகனாவே இறந்தார்.
சம்பந்தப்பட்ட ஓவியம் மற்றும் ஐம்பதுகளில் வெளிவந்த அவரது முக்கியமான படைப்புகளான சிலந்தியும் விளக்கும் (Spider and the Lamp) 1956 மற்றும் நிலம் (Zameen) 1955 ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்படவில்லை.
ஆனாலும் முழுமை யற்ற மதசார்பின்மை கொள்கையுடன் விளங்கும் தேசத்தில், இந்தியக்கலையை சுற்றி சுற்றி வலம் வரும் ஆவியாகவே திரிகிறார்.
தேசத்தின் ஆன்மீகத் தந்தையான மகாத்மா காந்தி மீது, ஒரு தீவிர வலதுசாரி இந்து வெறியனால் 1948-இல் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு பிறகு, தனிநாடாக வங்காளதேசம் உருவாவதற்கு முன் நிகழ்ந்த கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை என பேரழிவு சம்பவங்களை துல்லியமாக சித்தரிக்கும் க்ரிஷன் கண்ணாவின் படைப்புகள்... (Krishen Khanna), காந்திஜியின் ரணச்செய்தி (1948) ( News of Gandhiji’s Death 1948) மற்றும் இருள் பொதிந்த, MN உறையச்செய்யும் இரு படைப்புகளான ஆட்டம் ஒன்று 1978 (Game-I), உடற்கூறியல் பாடம் 1972 (The Anatomy Lesson). ஆகியனவாகும்.
“காந்தியின் மரணச்செய்தியில்”, பீதியடைந்த ஒரு பொது இட காட்சி, இந்து, முஸ்லீம், சீக்கிய, கிறிஸ்துவ மதங்களிலிருந்து, பல்வேறு வாழ்நிலைகளை சார்ந்தவர்கள் தெருவிளக்கின் கீழ் குழுமி, அந்த பெருந்துக்க செய்தியை வாசிக்கின்றனர்.
மதநல்லிணக்கம் எனும் குடையின்கீழ் கூடியிருந்தாலுங்கூட ஒவ்வொருவரும் அவர்தம் எதார்த்த நிலையினுள் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். காந்தியக் கனவான பல சமயக்குழுக்களிடையே நல்லிணக்கம், பிரிவினை கலவரத்தின் தருணத்தில் உடைபட்டு போன பொழுதின் அச்சுறுத்தும் காட்சியிது.
ஆட்டம் ஒன்றில், மேஜையைச் சுற்றி சீருடையில் அமர்ந்திருக்கும் ராணுவத்தளபதிகள் பலர், போர் எனும் ஆட்டத்தை தொடங்குகின்றனர், தங்கள் இடையே வெள்ளை காகிதத்தைக் கடத்துகிறார்கள், வங்காள இனப்படுகொலையினை அரங்கேற்றுவதற்கு கதை வசனம் எழுதுகிறார்கள்.
பின்பு அவர்கள் உடற்கூறியல் பாடத்தில், நாட்டினைக் கூறுகூறாக துண்டாடிவிட்டு, பிரேதத்தினை மிரட்சியுடன் நோக்குகின்றனர்.
நவீன வாழ்க்கையின் இரட்டை கவலைகள், வறுமையும் அந்நியமாக்கலும், ராம்குமாரின் அரிதான உருவகப் படைப்பான வேலையில்லா பட்டதாரிகள் (unemployed Graduates) 1956 ஆகும்.
அமைப்புமுறைகளின் ஈவிரக்கமற்ற தன்மை, வாய்ப்புகளின்றியிருக்கும் நகர்ப்புற இந்தியாவின் கீழ் நடுத்தர வர்க்கத்தினரை சுட்டிக்காட்டும் வண்ணம் ஒரே உருவங்கொண்ட தொளதொளவென உடுப்புகள் அணிந்து நம்மை நோக்கி நிற்கும் நான்கு இளைஞர்கள், உலர்ந்த திராட்சை போல தோன்றும் அவர்களின் கருவிழிகள், நம்மிடம் வேண்டி மன்றாடும் வெறுமையாலான அவர்களது பார்வைகள்.
இதே தொனியில் எதிரொலிக்கும் மற்றுமொரு தீவிரமான படைப்பு சௌசாவின் இரட்டை உருவப் படம், தொழிலதிபரும் பஞ்சபராரியும் 1956 (Tycoon and the Tramp). கலைஞரின் தேர்ந்த தெளிவான நடையினை எடுத்துக்காட்டும் சீறிய வடிவங்கள், வன்மையான கோடுகள், மேலும் இருண்ட வண்ணங்கள்.
இடதுபுறம் நன்கு பேணப்பட்டு, வெள்ளைத்தோலுடன் நிற்கும் ஒரு கணவானும், வலது புறம் கருத்த தோலுடன், தாடியுடன் ஒழுங்கின்றி நிற்கும் மனிதனும் கொண்டு, அவர்களின் உடை, தோல் நிறம், சீர்மை, ஒழுங்கு கொண்டு, இந்த அமைப்பு முறையில் கீழ்தரவர்க்கம் படும் இன்னல்களும், அதன்மூலம் நன்மையடைந்து, நன்கு உண்டு, செழித்த செல்வந்தர்களும் கைகாட்டப்படுகிறார்கள்.
சுதந்திரத்திற்கு பின் ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆனபோதிலும், ஏகாதிபத்தியத்திலிருந்து எதுவும் பெரிதாக மாறியிருக்கவில்லை. இன்றளவிலும் இந்தியாவில் காணப்படும் இனபேதத்தை, பரந்து பெருகி வரும் வறுமையை, ஊழலை, இவற்றால் அன்றாட வாழ்க்கையில் திண்டாடும் அநேக இந்தியர்களை இவ்வோவியம் மறைமுகமாக அடிக்கோடு இடுகிறது.
1953-இல் நிகழ்ந்த கடைசி ஓவியக்கண்காட்சிக்கு பிறகு, பீஏஜி, 1954-இல் முறையாக கலைக்கப்பட்டது. அச்சமயத்திற்கு எல்லாம், முக்கியமான ஆளுமைகள், சௌசா, ரசா, எஸ்.கே.பக்ரே போன்றோர் லண்டன், பாரிஸ் நியூயார்க் என்று இந்தியாவை விட்டு வெளியேறி வேர்விடத் தொடங்கிவிட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த எல்லைகளை கணக்கில் எடுக்கையில், முற்போக்கு புரட்சி குழுமம் நவீன இந்திய கலையின் ஆசான்களின் வரலாற்று சிறப்பு மிக்க படைப்புகளை அமெரிக்க மண்ணில் காட்சிபடுத்த ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியக காப்பாளர்களின் முயற்சியால் ஆச்சர்யமூட்டும் ஒரு தருணமுள்ளது. இந்த குழுவின் ஒரே பெண் கலைஞரான பானு ராஜுபாத்யாய், உறுப்பினராக மட்டும் அல்லாமல் கடைசி கண்காட்சியில் அவரது படைப்புகளும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்சியில் அவரது படைப்புகள் இடம்பெறவில்லை, சில காலமே ஓவியராக இருந்தாலும், படைப்புகளின் படப்பிரதிகள், குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்து ஜூமாபாய், ராஜுபாத்யாயின் படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கிறார்.
அவற்றில் குறிப்பாக பெண்களின் மிகையதார்த்த உருவப்படங்களும் அடங்கும். (ராஜுபாத்யாய் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற உடை வடிவமைப்பாளராக வலம் வந்தார். காந்தி படத்தில் பணி ஆற்றிய அவருக்கு 1983 ல் ஆஸ்கர் விருது கிடைத்தது.)
படைப்புகளை வரிசைப்படுத்துவதில் உள்ள சவால்கள், ஒரு பின்காலனிய சமூகத்தினை ஒன்றிணைந்த சொல்லாடல் மூலம் நவீனமயமும், நவீனத்துவமும் கடந்து, தற்கால கலைஞர்களுக்கு உறைக்கும் வண்ணம், படைப்புத்திறனுக்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையான சிக்கல் நிறைந்த தொடர்பை எடுத்துரைப்பது என திடுக்கிடச் செய்யும் திருப்புமுனைகள், மேடுபள்ளங்கள் நிறைந்த பாதை.
எதிர்வரும் ஆய்வுகள், தேர்வுகள், வங்காள சிந்தனைப் பள்ளிகளின் பங்களிப்புகளையும், இந்தியாதுணைக் கண்டத்திற்கும் இந்தியாவிற்கும் இடையான உறவு, மற்றும் புலம்பெயர்ந்தோரிடம் கண்டு கொள்ளப்படாத வழக்கங்கள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு இயங்குதல் அவசியம்.
முற்போக்கு புரட்சி: புதிய இந்தியாவிற்கான நவீன கலை, ஆசிய சமூக அருங்காட்சியகத்தில் நடந்து வருகிறது.
ஜீவன் பென்னியின் கவிதை சார்ந்த அனுபவங்களும் பார்வைகளும் கோட்பாடுகளை உட்செரிக்க முயன்றவை. அவற்றின் தோல்விகளையும் அறிந்தவை. எந்த நியதிகளுக்கும் அப்பால் இயங்கும் வாழ்பனுவத்தை அதன் தன்மையுடனே பதிவு செய்ய முற்பட்டதுதான் அவருடைய கவிதை மொழியின் தொடக்கமாக இருக்குமென நினைக்கிறேன்.
எனினும் அன்றாடங்களின் மீது தாக்குறவு ஏற்படுத்தும் எந்தவொரு அறிவார்ந்த சிந்தனையையும் செயல்பாடுகளையும் அவர் அவதானிக்காமல் இருந்ததில்லை.
நுணுக்கமாகப் பகுத்துப் பார்க்க முற்படுவோமாயின் பென்னியின் படைப்புகளில் காணப்படும் கவிதை சொல்லி மிகத் தாமதமாக உதிர்க்கப்படும் தத்துவங்களை எப்போதோ கடந்து அதன் தோல்விகளை ஆராய்ந்து அதிலிருந்து விலகி தூரத்தில் அமர்ந்திருக்கும் பார்வையாளனின் மனநிலையில் இயங்குவதைப் புரிந்துகொள்ளலாம்.
கவிதைகளில் தொடங்கும் எந்த நிகழ்வுக்கும் பௌதீக முடிவையோ தீர்வையோ மறுத்துவிடுவதிலிருந்தே இதனை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
மேலும் காட்சிகளைச் சீராக அடுக்குவதிலும் ஜீவன் பென்னி நம்பிக்கையற்றவராகக் காணப்படுகிறார். இறைவனிடம் வைக்கப்படும் கடைசி நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனைகளைப் போலவே இவரது கவிதைகளில் மொழியானது கையாளப்படுகிறது.
நவீன தமிழ்க் கவிதையின் இயக்கப் பாதையில் ஜீவன்பென்னி சித்தாந்தவாதிகளின் பால் ஈர்ப்புக் கொண்டவரென்பது அவரது கவிதைகள் வழியே உணர்த்தப்படும் செய்தி.
யதார்த்த நிகழ்வுகளின் மீதான விலகலும் அனுபவமுமே ஒவ்வொருவருக்கும் கவிதையின் கச்சாப்பொருளாக இருந்தபோதிலும் வெளிப்பாட்டுமுறைமையின் மூலமே அவற்றின் மீதான படைப்பாளனின் நெருக்கத்தையும், தீவிரத் தன்மையையும் புரிந்துகொள்ளலாம்.
கவிதையென அறியப்பட்ட வடிவங்களிலிருந்தும் சொல் முறைமையிலிருந்துமே ஒவ்வொரு படைப்பாளனும் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் எத்தனை விரைவில் பழக்கப்பட்ட அந்தப் பாதையில் அவன் சலித்துவிடுகிறான் என்பதை வைத்தே அவனுடைய அடுத்தடுத்த நகர்வுகள் நிகழ்கின்றன.
‘நான் இறங்கும் நிறுத்தத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது’ என்ற தொகுப்பிலிருந்தே ஜீவன் பென்னி தமிழ்க் கவிதை வெளியில் தனித்த அடையாளத்துடன்தான் தென்பட்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேற்பட்டது அவரின் இலக்கியப் பயணம். நூல் மதிப்புரைகள் விமர்சனங்கள் என்பதிலும் அவரது பாணி தனித்ததுதான்.
பொதுவாக இலக்கியம் அல்லது படைப்பாளன் போன்ற கட்டமைப்புகளின் மீதான கேள்விகளிலிருந்தே அவரது அபுனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
அதுவும் தனித்த புனைவு போலத் தென்படுவதுதான் அவற்றின் சிறப்பு.
நவீன கருதுகோள், இலக்கிய மதிப்பீட்டு அலகுகள் போன்றவற்றை வைத்து உரையாடாது எப்போதும் இலக்கியம் அல்லது வாழ்வின் மீதான அவரின் பார்வையிலிருந்தே அவை எழுதப்பட்டிருக்கின்றன.
மொத்தமாகத் தொகுத்துப் பார்க்க முற்பட்டால் அவற்றில் இலக்கியத்திற்கான அழகியல் பார்வையே மேலோங்கி இருக்குமென்பது என் கருத்து.
அவரது மொழி தீவிரத்தையும் கவிதையின் இயங்கியலையும் கழித்துவிட்டுப் பார்த்தால் ஜீவன் பென்னியின் படைப்புலகம் வண்ணதாசன் பாணியிலான மிகைநவிற்சியின் வெளிப்பாடாகதான் இருந்திருக்கும்.
ஏனெனில் ஜீவன் பென்னியின் படைப்புலகமும் முழுக்க முழுக்க மனிதப் பிறவியின் ஆதார சுருதியாகக் கருதப்படும் அன்பும் அதற்கான தவிப்பும் அதில் நிகழும் புறக்கணிப்பும், நிராகரிப்பும்தான்.
என்றாலும் இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்த படைப்பாளி என்ற அடிப்படையில் இதனைத் தனக்கு மட்டுமேயான அந்தரங்கமாக முன்வைக்காமல் அதனை விளிம்புநிலையெனக் கருதப்படும் சமூகத்தின் அத்தனை அடுக்குகளுக்கும் விரிவாக்குகிறார்.
அதுவே அவரது கவிதையின் சிறப்பம்சமாக மாறுகிறது. இயல்பான காட்சி விவரணைகளைத் தவிர்த்துவிட்டு படிமக்கூறுகளிலிருந்தே தன் பாடுபொருளை உணர்த்த முற்படுகிறார்.
உதிர்ந்த இலைகள், இறகுகள், மீன்கள் போன்ற படிமங்களல்லாத பென்னியின் கவிதைகளைக் காண்பது அரிதுதான். சாராம்சத்தில் ஜென் கவிதைகள் போன்றும், புத்த தத்துவங்கள் போன்றும் காட்சியளிக்கக்கூடியது பென்னியின் கவிதைகள்.
பௌத்தம் குறித்த அதிகப் புரிதலென்பது இல்லாவிட்டாலும் ஒரு பொதுச் சமூகத்தில் புத்தர் என்ற சொல் பூசல்களைத் தவிர்த்த அமைதியின் குறியீடாகக் கொள்ளப்படுவதை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.
மேலும் வாழ்வின் சாகரத்தில் ஞானத்தைத் தேடியடைய முடியும் என்று வலியுறுத்திய சமயமும் பௌத்தம் தான்.
வழிபாடுகளைக் கூறும் சமயங்களுக்கிடையே பௌத்தம் போதனைகளைத் தேர்ந்தெடுத்தது. அது உண்மை மற்றும் அன்பு குறித்ததாக இருந்தது. இன்றைக்கு ஜீவன் பென்னியின் கவிதைகளைச் சற்று விலகி நின்று வாசிக்கும் போது அவற்றில் ஒரு வாசகனாக என்னை ஈர்க்கச் செய்தது அனுபவத்தை முதன்மைப்படுத்தும் இந்தத் தன்மையாகதான் இருக்கும்.
‘புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருக்கக் கூடும்’ ‘புத்தனை சரிபாதியாக வெட்டிய மாலைநேர வானவில்’ போன்ற கவிதைத் தலைப்புகளின் மூலம் பென்னிக்கு புத்தர் குறித்த அவதானிப்பும் அத்தத்துவம் மீதான ஈர்ப்பும் இருப்பதை உணர முடிகிறது.
துரோகங்களை நேசிப்பவன் பழைய உதிரி காகிதங்களைச் சேகரிக்கிறான் வேறேதுமில்லை உதிரிகளாக்கப்பட்ட வொரு சந்தோசத்தை இரவு முழுவதும் ஒளித்து வைத்துக்கொண்டே அலைகிறான் விரல்களுக்குள் கூழாங்கற்களை ஒளித்து வைப்பது போல முத்தங்களைக் கண்களில் பரவவிடுவது போல பூஞ்சையொன்றின் செதில்களாகயிருக்கிறது துரோகங்களை நேசிப்பவனினுடல் ........................... பழைய உதிரி காகிதங்களைச் சேகரிப்பவன் துரோகங்களையே நேசிக்கிறான் இரவுகளையே நேசிக்கிறான்.
‘அளவில் சிறியவை அக்கறுப்பு மீன்கள்’ தொகுப்பில் காணப்படும் முதல் கவிதை இது.
துரோகம் என்பதை பேசும் ஞானக்கூத்தனின் கவிதையொன்றும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. வரிகள் மறந்து விட்டாலும் கிட்டத்தட்ட இப்படி இருக்கும் ‘துரோகத்தின் முதல் நாள் எவ்வளவு குருதி பெருக்கினாய்..
பின்னால் ஒரு ரப்பர் இதயம் போலப் பழகிக்கொண்டது’ துரோகத்தின் முதல் அனுபவத்தையும் வாழ்வு மெதுவாக அதற்குப் பழகிக்கொள்வதையும் இவ்வாறாக முன் வைத்திருப்பார்.
சென்ற தலைமுறையான ஞானக்கூத்தனின் பார்வைக்கும் பென்னிக்குமான இடைவெளியை இக்கவிதையின் வாயிலாக உணர்ந்துகொள்ளலாம். துரோகம் என்பதன் அனுபவத்தை நேரடியாக முன்வைக்காமல் அதன் அடர்த்தியை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது பென்னியின் கவிதை.
அதன் வலியை நேரடியாகப் பகிர மறுக்கும் கவிதை அதனை நிகழ்த்திக்காட்ட விரும்புகிறது ‘எவ்வளவு குருதி பெருக்கினாய்’ என்பதற்கும் ‘பழைய உதிரி காகிதங்களைச் சேகரிக்கிறான் வேறேதுமில்லை’ என்பதற்குமான இடைவெளிதான் பென்னியின் தனித்துவமாகும். சொல்லப்போனால் தமிழ் நவீனக் கவிதையின் வளர்ச்சியாகும்.
பழைய உதிரி காகிதங்கள் சேகரிப்பவன் என்னும் விளிம்பு நிலை வாயிலாகத் துரோகத்தை எளிமைப்படுத்துவதன் மூலம் துரோகத்தை அமைதியாக எதிர்ப்புணர்வின்றிச் சந்திப்பதன் வலியை அடர்த்தியுடையதாக்குகிறது.
தொடர்ந்த அடுக்கடுக்கான காட்சிகள் தங்களுக்குள் தர்க்கப்பூர்வமான பிணைப்பை கொண்டிராவிட்டாலும் ‘முத்தங்களைப் பரவவிடுவதுபோல’ என்ற உவமையாட்சியை ஒரு வாசகன் அனுபவிக்காமல் இருக்க முடியாது.
இவ்வாறு கவிதையின் உணர்வுப்பரப்பை விரிவடையச் செய்ததிலும் கவிதை வாசகனை மேலும் பக்குவப்பட்ட வாசிப்பிற்கு முன்னேற்றியதிலும் பென்னியின் தொகுப்புகள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கின்றன.
நகரமயமாதல் என்பதில் மனிதனின் ஆசாபாசங்கள் பாதிப்புறுவது ஒரு பக்கமெனில் அதன் மறுபக்கம் மண்ணின் பூர்வகுடிகளை அந்நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் அவனை நிலமற்றவனாக்குதல் போன்ற அநீதிகளும் நிகழ்த்தப்படுகின்றன.
தொண்ணூறுகளுக்குப் பிறகான தாராளமயவாத கொள்கையினால் இந்தியா போன்ற சந்தை மதிப்புமிக்க நாட்டில் தங்கள் உற்பத்தியை தொடங்க பெரும் நிறுவனங்கள் முனைப்புக் காட்டின (வாஸ்கோடகாமாவின் கடற்பயணத்திலிருந்தே இந்தியாவிற்கு இது தொடர்கதைதான்). பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலப்பரப்புகள் பெரும்பாலும் பழங்குடியினரிடமிருந்தே பறிக்கப்பட்டன.
ஜனநாயக அளவில் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கான வலுவான அரசியல் இயக்கங்களோ கட்சிகளோ இல்லாத நிலையில் அரசியந்திரத்துக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது சிரமமில்லாத செயலாக அமைந்தது.
தொண்ணூறுகளுக்குப் பிறகு தேசிய கட்சியான காங்கிரஸ் மீது சமூக ஆர்வலர்கள் வைத்த விமர்சனங்களில் முக்கியமானது அது பழங்குடியினரை நடத்திய விதம்தான்.
இத்தகைய நிலையில் அவை இலக்கியங்களிலும் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்ச் சிற்றிதழ்கள் வழியை அறிமுகமான கோட்பாடுகளில் ‘மாயயதார்த்தவாதம்’ தொல்குடிகளின் கதைகள்தான் ஆதிக்க கருத்திற்கெதிரான அசல்கருவியாக இருக்க முடியுமென நம்பியது.
அவற்றை நவீன இலக்கியத்திற்கான அம்சங்களாகப் பயன்படுத்திக்கொண்டது. ‘பழங்குடிகளின் ஆறு பாடல்கள்’ என்ற பென்னியின் கவிதையை இந்தப் பின்புலத்தில் அணுகலாம்.
ஆனால் இக்கவிதையில் இடம்பெறும் நான்காவது பகுதியானது பொதுவாகக் கவிதைகளில் ஏற்றப்படும் மிகையுணர்ச்சியாலும் பாடுபொருளுக்கு ஒவ்வாத கற்பனைகளாலும் இயற்றப்பட்டுள்ளது.
அப்படியாக அந்தக் கடைசிக் கையெறிகுண்டு மிகக் கொடூரமாக நெருங்கி வரும்பொழுது அவர்கள் கனவுதான் கண்டுகொண்டிருப்பார்கள் இந்தக் கருமேகங்களெல்லாம் எப்படி மழையாகின்றதென்று அந்தக்கரையில் முழுவதுமாகச் சரிந்து விழும்போதும் அவர்கள் கனவுதான் கண்டுகொண்டிருப்பார்கள் நிலங்களில் பயிர்கள் எப்படி முளைத்தெழுகின்றதென்று வானைப்பார்த்தபடி மரணித்த பிறகும் அவர்களின் கண்கள் கனவுகள் தான் கண்டுகொண்டிருக்கும் வெட்டப்பட்ட பெரும் மரத்தின் சிறு சிறு பொந்துகளிலிருந்த கிளிக்குஞ்சுகள் பற்றி சிசுவோடு கொல்லப்பட்ட நிறைமாத காட்டெருதுகள் பற்றி.
பழங்குடியினர் பற்றிய நகரவாசிகளின் பொதுவான மதிப்பீடுதான் இந்தக் கவிதை.
பழங்குடியினர் பொதுவாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைத்து உயிர்கள் மீதும் காருண்யம் மிக்கவர்களாகதான் இருப்பார்களென்பது நம்முடைய ஆசையாகவோ கனவாகவோதான் இருக்க முடியும்.
மேலும் கவிதையோ பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கருணை சாயம் பூசுகிறது.
ஒருவேளை அவர்கள் இப்படியெல்லாம் இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய உரிமைகள் பறிக்கப் படக்கூடாதென்பதுதான் நியாயமான குரலாக இருக்கும். ஆனால் கவிதை வாசிப்பென்பது பொதுவாக இம்மாதிரியான மென் உணர்வுகளை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்துவிடுகிறது.
மொழியில் ஏற்படும் போதாமையின் கடைசி விளைவாகதான் கவிஞன் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுக்கிறான். அது சமூகத்தில் அறம் சார்ந்த அனைத்து போலித்தனங்களையும் தன் மொழியலகாலேயே மீறுகிறது.
ஆனால் தமிழ்ச்சூழலில் கவிதை தணிந்த குரலில் பேசுவதாகவே புனையப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை முன்வைத்து சுகிர்தராணி அவர்கள் முகநூலில் எழுதிய கவிதையும் அப்படியான ஒன்றுதான்.
ஆனால் அது பல தோழர்களாலும் நவீன இலக்கியவாதிகளாலும் பகிரப்பட்டதும் விரும்பப்பட்டதும் தமிழ்ச்சூழலில் கவிதை என்னவாகப் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
ஜீவன் பென்னியின் இக்கவிதையில் ஆறு பகுதிகள் (அ) பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் இதுபோன்ற பலவீனங்கள் இல்லாதவைதான் என்றாலும் இந்த நான்காம் பகுதி ஏனைய பகுதிகளின் மீதான நன்மதிப்பை குறைப்பதாக அமைகிறது.
அதிகமும் பெருநகரச் சூழலின் தாக்கத்தாலும், பிரிவின் வலியாலும் அதன் மௌனங்களாலும் நிரம்பியவை ஜீவன் பென்னியின் இரண்டாம் தொகுப்பான ‘அளவில் சிறியவை அக்கறுப்பு மீன்கள்’.
பரிச்சயமில்லாத ஒரு பெருநகரத்தில் நிகழும் தனக்கான சிறு பிணைப்பு திடீரென அஸ்தமிக்கும் அதிர்ச்சியும், நகர உருவாக்கத்தின் இயல்பான அந்நியமாதலும் பெரும்பாலான கவிதைகளில் பேசப்படுகின்றன. பென்னியின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் ‘மிதங்களினாலான உதிரிகளின் வாழ்வு’.
‘உதிரிகளின் வாழ்வு’ என்பது ஒரு பின்நவீனத்துவப் பார்வையாகத்தான் விரிகிறது. இது குறிப்பாகத் தற்போது நவீன இலக்கியச் சூழலில் புழங்குபவர்களின் பொது ‘தன்னிலை’யாகவே மாறியுள்ளது.
சிறுகதை வடிவத்திலும் இதன் தாக்கம் அதிகமாகப் பிரதிபலிப்பது இக்கருத்தை உறுதி செய்கிறது. பொதுவாகப் பெரும் நிறுவனங்களின் காவலாளிகள், தூய்மைப்பணியாளர்கள் போன்றவர்கள் தற்காலச் சூழலின் விளிம்புநிலையினராகக் கருதப்படுகின்றனர்.
மேற்கத்திய பாணியில் தொடங்கப்படும் உணவகங்கள், அடுமனைகள், பழச்சாறகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் கீழ்நிலைப்பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் இதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்குமிடையே எப்போதும் நவீன தீண்டாமை கடைபிடிக்கவே படுகிறது.
ஒரு தொன்மம் வாய்ந்த சிறிய நகரத்திற்கும் வணிகத் தேவைக்காக உருவாக்கப்படும் மெட்ரோ நகரத்திற்குமிடையிலான பண்பாட்டு உறவுகளும், தொடர்புகளும் வெவ்வேறானவை.
இத்தகைய பொருந்தாத வேறு பாடுகள் புதிய விளிம்புநிலையினரை உருவாக்குகிறது. இலக்கியம் அவர்களை மையப்படுத்துகிறது.
எப்போதும் எச்சில்படிந்த காலிக்குவளைகளைக் கழுவிக்கொண்டிருப்பவன் இம்மாநகரின் கடைசியான மீதியையே அருந்திக்கொள்கிறான் எதுவுமற்ற அவன் வாழ்வின் எண்ணிலடங்கா சந்தோசங்களை அவற்றிலிருந்தே தொடங்கிக்கொள்கிறான் முழுவதும் அழுக்குகளப்பிய ஆன்மாக்கள் நிறைந்த இம்மாநகரைத்தான் அவன் எப்போதும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறான்.
ஜீவன்பென்னி கனலி மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறுவது போலக் கவிதைக்கும் ‘ SURUVIVAL OF THE FITTEST ’ பொருந்துமெனில் ஜீவன் பென்னியின் கவிதைகள் அதில் நிச்சயம் உயிர்த்திருக்கும்.
நாற்கரச் சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தையும் உணவகத்திற்கு அழைக்குமாறு கையசைத்துக் கொண்டிருக்கும் நபர் குறித்த கவிதையும் இதேபோன்று தனித்துவம் வாய்ந்தது.
பொதுவாக அவரின் பணியை என்னவென்று அழைக்க முடியும் அவருக்குக் காவலாளி சீருடை கொடுக்கப்பட்டாலும் அவர் காவலாளியல்ல. ஏனைய வணிக நிறுவனங்களுக்கு உள்ளது போன்று அவர் விற்பனையாளருமல்ல.
நவீன சந்தைப் பெருக்கம் இத்தகைய புதிய வர்க்கத்தினரை உருவாக்குகிறது.
சமகாலக் கவிதைகளில் பெரும்பாலும் இன்னும் விவரணை பாணியினைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் சூழலில் வாக்கியச் சிக்கனம் மூலம் கவிதையின் தொனியை அர்த்தச்செறிவுள்ளதாக்குகிறார் ஜீவன்பென்னி.
எந்த நவீன கவிதைக்கும் பின்னால் ஒரு கோட்பாடு இயங்கவே செய்கிறதென்று பிரம்மராஜன் கூறுவது போல ஜீவன் பென்னியின் கவிதைகளில் சமகால விளிம்புநிலைக் குறித்த பின்நவீனத்துவ வாசிப்புத் தென்படுகிறது.
இவையெல்லாம் கவிதையின் பாடுபொருள் மற்றும் பின்புலம் குறித்த புரிதல்கள் எனில் மறுபுறம் கவிதையின் தொடக்கம், முடிவு மற்றும் வாசகனிடம் ஆற்றும் வினை ஆகியவற்றைத் தனியே பேச வேண்டியுள்ளது.
பொதுவாகக் கவிதையை அவ்வளவு இனிமையாக, அவ்வளவு மென்மையாக, அவ்வளவு தனிமையாக என்ற ஒற்றை மையவாத சொல்லாடல்களுடன் முடிபுபடுத்துவதைத் தவிர்க்கலாம்.
இக்கட்டுரைக்காக மீண்டும் வாசிக்கும்போது இத்தகைய முடிவுகள் கவிதைக்கு அத்தனை அர்த்தப் பரிணாமத்தை வழங்குவதில்லை என்பது புலனாகிறது.
தன் ஆரம்பக் காலங்களில் காத்திரமாக இயங்க வந்த படைப்பாளர்கள் பலரும் தனது பிந்தைய தொகுப்புகளில் இத்தகைய எளிமையான புனைவுகளுடன் சிக்குண்டு விடுகின்றனர். ஒரு தேர்ந்த வாசகனுக்கு அதைவிடத் தீவிரமான முடிவு தேவைப்படுகிறது.
தன்னால் யூகிக்க முடியாத ஏதோ ஒன்றை கவிதை பொதிந்து வைத்திருப்பதாக ஆச்சர்யத்துடன் அவன் வாசிப்பை துவங்குகிறான் அத்தகைய இடத்தில் இதுபோன்ற முடிபுகள் அவனுடைய தேடலுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. மட்டுமில்லாமல் சமகாலத்தில் மனுஷ்யபுத்திரனுக்குப் பிறகு இச்சொற்களை அதிகம் பயன்படுத்துவது ஜீவன் பென்னியாகதான் தெரிகிறார்.
மனுஷ்யபுத்திரன் ஓரளவிற்கு வெகுஜனப் பரப்பிற்கான கவிஞராய் மாறிவிட்ட பிறகு இத்தகைய சொல்வழக்குகள் தேய்வழக்குகளாகவே பார்க்கப்படுகிறது.
இன்றைக்கு சமகாலப் புரிதலுடன் கவிதைப் படைக்கும் இளங்கவிஞர்கள் சிலர் தங்களது படைப்புகளில் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை தவிர்ப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.
ஏனெனில் ஒரு சமகால வாசகனுக்கு இதைவிடத் தன்னை உருக்குலைக்கும் எத்தனையோ வகையான முடிபுகளைக் கொண்ட கவிதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன.
அவன் இன்னும் ‘அவ்வளவு’ என்ற பாந்தமான சொல்லுடன் நிறைவடைபவனாக இருக்க முடிவதில்லை என்பதையும் இங்கு கூற வேண்டியுள்ளது.
வழக்கமான சொற்களையும், குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றிய கவிதைகளாகவுமே பார்ப்பதற்குத் தெரிந்தாலும். தனக்கென ஒரு படைப்பாளன் கொண்டிருக்கும் சிறிய உலகம் போலானதுதான் அவரது படைப்புகள்.
சருகுகளையும், மீன்களையும், செடிகளையும் இந்த அளவிற்குத் தன் கவிதைகளில் புழங்குபொருளாக்கிய தமிழ்க் கவிஞர் பிறிதொருவர் இல்லையெனலாம். ‘சிறிய சருகுகளிடம் உங்களைக் கொண்டு சேர்க்கும் / பாதைகள்தான் / புத்தம்’ என்கிறார் ஜீவன் பென்னி.
‘சிறிய இறகுகளின் திசைகள்’ பென்னியை முதன்முதலாகப் பரிச்சயம் செய்துகொள்ளும் வாசகனுக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால் பொதுவாக நவீன கவிதைகள் அதன் கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கும் ‘தத்துவம்’ என்ற புள்ளியை தொட்டு நிற்பதாகவே இத்தொகுப்பு அமைந்துள்ளது.
ஆரம்பம் முதலே பென்னிக்குத் தத்துவச் சார்பு உண்டென்றாலும் இத்தொகுப்பு முழுக்க ஒரு போதனை அம்சமாகவே மாறி நிற்கிறது. தனது அனுபவத்தைப் பகிர்வதிலிருந்து அதனைத் தான் கண்டடைந்த தத்துவமாக்குதல் என்னும் எல்லைக்கு இக்கவிதைகள் நகர்ந்துள்ளன.
கிட்டத்தட்ட சமகாலத்தின் ஊடாட்டங்கள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளன. முற்றிலுமாகத் தன்னைக் காலத்திலிருந்து அவை துண்டித்துக்கொண்டுள்ளன.
‘கூழாங்கல் பேசுதல்’ நான் மிகச்சிறிய கூழாங்கல்லாயிருந்தபோதுதான் இப்பிரபஞ்சம் உருவானது ஆனால் நான் இவ்வளவு பெரிய மலையாகிவிட்ட பிறகும் அதன் காரணம்தான் தெரியவில்லை.
கூழாங்கல் என்னும் உருவகத்தைத் தவிர்த்துவிட்டு வாசித்தோமானால் நேரடியாகப் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியாதெனும் ஆன்மீக உபதேசத்தைதான் கவிதைப் பேச வருகிறது.
விளிம்புநிலை வாசிப்பென்பது முழுக்க முழுக்க அனைத்து பிரதிமைகளையும் மறுதளிப்பது புனிதமெனச் சொல்லப்பட்ட அனைத்தையும் கேள்வி கேட்பது.
ஆனால் இப்பிரதியோ தன்னையொரு உபதேசமாகவே முன்வைத்துக்கொள்கிறது. அது நல்லொழுக்கம் சார்ந்த போதனை இல்லையென்றாலும் முதலில் தான் காணுமனைத்துக்கும் ஒரு ரகசியம் இருப்பதாக நம்புகிறது.
இரண்டாவது அவை புனிதமானதெனச் சொல்ல முற்படுகிறது. மேற்கூறிய கவிதையில் பிரபஞ்சம் குறித்துக் கூழாங்கல் புரிந்துகொள்ள வேண்டியது அது கூழாங்கல்லாய் இருப்பதற்கான ரகசியமாகதான் இருக்க முடியும் மாறாக அது பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது.
‘பிரபஞ்சம்’ என்ற ஒன்றை தனது இருப்புக்கு மேலானதாக நம்பும் இதுபோன்ற ஆன்மீகவாதம் தான் நடைமுறையில் எளிய மக்களை நசுக்கும் அரசியல் வடிவங்களாக இன்று நிலைபெற்றிருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஜீவன்பென்னியின் முந்தைய தொகுப்புக்கு எதிரான மனநிலையாகவே அமைந்துள்ளது.
அவர் எப்போதும் ‘சிறிய’வைகளுக்கான கவிஞராக இருப்பதைதான் ஒரு வாசகனாக நான் விரும்புகிறேன்.
‘கூழாங்கல்லோடு பேசிக்கொண்டிருத்தல்’ நீ இவ்வளவு குளிர்ந்துவிட்டாய் இந்நதியின் கரையொதுங்கும்போது காலத்தை எப்படி புரிந்துகொள்வாய்? நான் காய்ந்து மேலுமிறுகி உன் காலத்தைச் சமன் செய்துகொள்வேன் ஆனால் ஒருபோதும் அதைப் புரிந்துகொள்ள முயலவே மாட்டேன்.
மேற்கூறிய வகைமையின் நீட்சியாக எழுதப்பட்டிருந்தாலும் இது கவிதைக்கான உணர்வுகளைக் கையளிப்பதாக இருக்கிறது.
‘காய்ந்து மேலுமிறுகி காலத்தைச் சமன்செய்வது’ பொதுப்புத்திக்கு சாத்தியம் இல்லாத வடிவமாகும். காலம் குறித்துக் கூட்டு நனவிலியில் உருவாக்கப்பட்டிருக்கும் வரையறையினை மீறுகிறது. காலத்தைச் சமன்செய்வதில் இதுவரை அறிந்திராத வழியினைக் கண்டடைந்துள்ளது.
‘ஒரு போதும் அதைப் புரிந்துகொள்ளவே மாட்டேன்’ என்ற இறுதி வரி முழு நிறைவுடன் கவிதையை முடித்து வைப்பதாக இருக்கிறது. காலத்தைப் புரிந்துகொள்வதைக் கூழாங்கல் கைவிடுகிறது.
இதுவும் ஒருவகையிலான புத்தம்தான். எந்தவொரு மையமும் கவிதையாவதற்கும் கவிதையாகாது போவதற்குமான இடைவெளி மிகச் சிறியதுதான். அதைப் புரிந்துகொள்ளும் படைப்பாளன் தனது திருப்தியை அடைந்துவிடுகிறான்.
இக்கவிதை மட்டுமில்லாது தூரத்து அடரிருள், பூ-1, பூ-2 ஆகிய கவிதைகளும் இத்தொகுப்பில் மேற்கூறிய படைப்பாக்க அம்சங்களுடன் இருக்கின்றன. ஆனால் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். மேலும் தொடர்ந்து எழுத்துப் பயிற்சியால் வசப்பட்டுவிடும் கவிதை போன்ற வடிவங்களையும் இத்தொகுப்பில் காண முடிகிறது.
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே பென்னியின் ‘பிரபஞ்சத்தின் கடைசிப் படிக்கட்டு’ என்ற தொகுப்பும் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தொகுப்புகளில் அவர் தனது தத்துவவிசாரங்களின் அளவினை படைப்பளவில் கட்டுப்படுத்துதல் சூழலுக்கு நல்லதென்ற ஒன்றை மட்டும் முடிவாகக் கூறலாம்.
எழுத்தை சுய அடையாளமாக மாற்ற முயற்சிக்காமல் எழுத்திற்காகத் தன்னைப் பொதுவாகத் திறந்து வைத்திருக்கும் படைப்பாளர்கள் சூழலில் வெகு குறைவாகதான் தென்படுகிறார்கள் எழுத்தின் திசைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதும் அதன் தூரங்களை மேலும் மேலும் தனது வாசிப்பால் புரிந்துகொள்வதுமான உயிரோட்டமான நிகழ்வை சிலரால் மட்டுமே தொடர்ந்து செய்யமுடிகிறது.
அந்த வகையில் ஜீவன்பென்னி நவீன இலக்கியச்சூழலுக்கு அவசியமான படைப்பாளர் ஆவார்.
பரேஷ் மைத்தி, சமகால இந்தியாவில், தனது துடிப்பான ஓவியங்களின் ஊடாக அறியப்படுபவர். தொடர்ந்து ஓவியக் கலையில் புதிய பரிமாணங்கள் முன்னெடுப்பவர்
களில் ஆகச்சிறந்த சீரிய படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படுபவர்.
இவரது தொடக்ககால ஓவியங்கள் நீர் வண்ணச் சாயத்தில் வரையப்பட்டவை. அவற்றில் விரிந்த நிலப்பரப்புகள், JMW டர்னர், வின்ஸ்லோ ஹோமர் ஆகியோரின் உணர்வு பதிவிய படைப்புகளை நினைவுக்கூருவதாய் அமைந்திருந்தன.
இவரது உருவக படைப்போவியங்கள், ரெம்ப்ராண்ட், பிகாஸோ மற்றும் இந்திய கவிஞரும், ஓவியருமான, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் தாக்கத்தால் உருவானவையாகும். இன்றைய தேதியில் இவரது பிரபலமான படைப்பு, இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் எண்ணூறு அடி நீளத்தில் அமைந்த, உலகின் நீண்ட சுவரோவியங்களில் ஒன்றான இந்திய ஒடிசி (Indian Odyssey 2010) ஆகும்.
இந்த சுவரோவியம், இந்தியாவின் பல்வகை கலாச்சாரங்களை, அடையாளங்களை, உயிர்ப்பான ஓவிய, சிற்ப, கட்டிட சாத்திரங்களை மேலும் இந்திய குடிகளை ஒரு நீண்ட திரைசீலையில் உருவகிக்கிறது.
இவரது ஓவியங்கள் உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களில், குறிப்பாக பிரிட்டிஷ் மியூசியம், ரூபின் மியூசியம் மற்றும் புது தில்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட் (National Gallery of Modern Art), என காணக் கிடைக்கின்றன. இவரது படைப்புக்களை அங்கீகரித்து, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கையினுள் ஒரு தீக்குச்சி, முதலில் வெண்மையாய் தீச்சுடராய் வெடிக்குமுன் அதன் நாக்குகள் எல்லாப் பக்கங்களிலும் பாய்கின்றன எனவே வட்டத்தின் உள்பக்கம் நெருக்கியடிக்கும் பார்வையாளர் கூட்டம் சூடாக, பிரகாசமாய் மேலும் அவளது ஆவலூட்டும் வட்ட நடனம் சுடர்விட்டு வீசுகிறது திடீரென எல்லாமும் தீச்சுடராகிறது மேல் நோக்கி வீசிய ஒற்றைப் பார்வை வீச்சில் அவள் தன் கூந்தலைப் பற்ற வைக்கிறாள் மேலும் திடீரென்ற துணிகரத் துரித கதியில் சுழல்கிறாள் தன் ஆடை முழுவதையும் தீயான குதூகலத்துடன் சுழற்றுகிறாள் அதிலிருந்து திடுக்கிட்டுக் கிளம்பும் பாம்புகளென அவளது நிர்வாணக் கைகள் நீள்கின்றன உணர்ச்சி கிளர்ந்து சொடுக்குகின்றன பிறகு தீ மிகவும் இறுக்கமாய் அவளது உடலைச் சுற்றி வளர்வது போல உணர்ந்தவளாய் அவற்றை ஒன்றாய்த் திரட்டி வெளியே வீசியெறிகிறாள் ஏளனமாய் ராஜரீக அங்க அசைவுடன் கீழ்நோக்குகிறாள் அது தரை மேல் கிடக்கிறது சீறியபடி மேலும் தீச்சுடர்கள் அணைய மறுக்கின்றன ஆனால் அவள் முழுத் தன்னம்பிக்கையுடன் இனிய, திளைப்புறும் புன்னகையில் அவள் ஏறிட்டுப் பார்த்து இறுதியில் சினமிகு தனது சிறிய கால்களால் மிதித்தணைக்கிறாள்.
கம்பிகளைப் பார்த்துப் பார்த்து அதன் கண்கள் அத்தனை களைப்புற்றதால் இனி அது எதையும் காண்பதேயில்லை கம்பிகள்தான் அதன் உலகம் ஒரு நூறு ஆயிரம் கம்பிகள் இருப்பது போல் தோன்றுகின்றன கம்பிகளின் பின்னால் எந்த உலகும் இல்லை லயமிகு எளிய நடையின் லகுவான அசைந்தாட்டம் சின்னஞ்சிறிய மையம் வரை அது சுழன்றடைகிறது ஒரு புள்ளியைச் சுற்றிலுமான சக்தியின் நடனத்தை அது நிகர்த்திருக்கிறது அதில் ஓர் மகத்தான மனத்திட்பம் திகைப்புற்று நிற்கிறது எப்போதாவது அதன் கருவியின் திரைகள் ஓசையின்றி உயர்கின்றன . . .பிறகு ஒரு காட்சி உள்ளே நுழைகிறது தோள்களின் இறுகிய நிசப்தத்தினூடாய் நழுவி இதயத்தை அடைந்து பின் இல்லாது போகிறது.
இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு பார் எவ்வளவு சிறியதாய் உள்ளது உன்னால் பார்க்க முடிகிறதா மொழியின் இறுதி தான்ய சேமிப்புக் கிடங்கை அதற்கும் மேலே இன்னும் துணுக்காய் உணர்ச்சியின் கடைசிக் களஞ்சியம் இதற்கு முன்பே பார்த்திருக்கிறாயா? இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு கையினடியில் கடினமான பாறை உண்மைதான் இங்கும் கூட ஏதோ ஒன்று மலர்கிறது ஊமை மலையின் செங்குத்துச் சரிவில் ஒரு அறியாமைமிகு சிறு செடி மலர்ந்து காற்றினில் பாடிக்கொண்டிருக்கிறது ஆனால் அந்தப் பிரக்ஞை மனிதன்? ஆங், அவன் அறியத் தொடங்கி பிறகு நிசப்தமானான், இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு பல ஆடுகளும் மான்களும் இங்கு வருகின்றன அவற்றின் அறிதல் முழுமையாய் ஸ்திரமிக்கக் கால்கொண்ட பல மலை விலங்குகள் மேய்ச்சல் நிலத்தை மாற்றுகின்றன அல்லது தங்கிவிடுகின்றன மேலும் அந்த நன்கு பேணப்பட்ட பெரும் பறவை சிகரத்தின் தூய மறுப்பினை வட்டமிட்டுப் பறக்கிறது ஆனால் பேணப்படாமல், இங்கே இதயத்தின் மலைகளின் மேல் விடப்பட்டு...