ஸிபிக்நிஃப் ஹெர்பெர்த் கட்டுரை

எத்திராஜ் அகிலன்

பகிரு

ஆன்ட்டியஸ் எனும் மல்யுத்த வீரனைப் பற்றிய குறிப்பு கிரேக்க தொன்மத்தில் காணப்படுகிறது. இவன் கிரேக்க ஒலிம்பியக் கடவுளான பொஸைடனுக்கும் கிரேக்கர்களின் மண்மாதாவான கையாவுக்கும் பிறந்த அரைஅரக்கன். மல்யுத்தத்தில் இவனை யாரும் வென்றிட முடியாது எனும் பெயர் பெற்ற பராக்கிரமசாலி. கவிதையில் இவனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டிருப்பவர் என்று சக கவிஞர் ஒருவரைப் பற்றி நோபல் பரிசு பெற்ற கவிஞர் சீமஸ் ஹீனி குறிப்பிடுகிறார். அவர்தான் ஸிபிக்நிஃப் ஹெர்பெர்த் எனும் போலந்து நாட்டுக் கவிஞர். “போலந்து நாட்டின் மிக மரியாதைக்குரிய, தாக்கம் செலுத்தும் கவிஞர்களுள் ஒருவர்” என்று இவரைக் கவிஞர் ராபர்ட் ஹட்ஸிக் வர்ணிக்கிறார். அகில உலகப்புகழ் பெற்ற கவி ஹெர்பெர்த் ஒரு நாடகாசிரியராகவும், கட்டுரையாளராகவும் கூடப் பிரபலமாகப் பேசப்படுபவர்.

பதினேழு வயதிலேயே இவர் கவிதைகள் எழுதத்தொடங்கிவிட்டார். என்றாலும் 1956 ஆம் ஆண்டு வரையில் அவற்றை அவர் வெளியிடவில்லை. நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலும் போலந்து நாட்டில் நிலவிய அரசியல் சூழலே இதற்கான முக்கியக் காரணம். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இவருடைய சொந்த ஊரான லுவோவ் உக்ரேனிய நாட்டின் ஒரு பகுதியாகி, ரஷ்யர்களின் வசமாகிறது. ரஷ்யாவின் ‘தூய்மைப்படுத்தும் நடவடிக்கை’யின் விளைவாக அவ்வூர்க்காரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து க்ராக்கோவ் நகருக்கு அருகிலுள்ள ப்ராஸ்ஸோவைஸ் எனும் நகருக்குக் கவிஞர் ஹெர்பெர்த் குடிபெயர நேரிடுகிறது. பொருளாதார நிபுணராக விளங்கிய ஹெர்பெர்த் வழக்குரைஞராகத் தொழில் புரிந்து வந்தார். போலந்து நாட்டின் கம்யூனிச ஆட்சிக்கு எதிராகவும் இவர் குரல் கொடுத்து வந்தார். கலையிலும் இலக்கியத்திலும் அப்பொழுது கட்டாயமாக்கப்பட்டிருந்த சமத்துவ யதார்த்தம் எனும் பாணியோடு இவருடைய எழுத்து நடைபொருந்திப் போகவில்லை. அதனால் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் இவரால் ஒரு எழுத்தாளராக வாழ்க்கை நடத்த முடியாமல் போயிற்று. ‘1956 ஆம் ஆண்டிற்கு முன்னதாக எழுத்தாளராகப் பிரசுரம் செய்ய வேண்டுமென்றால், ஒருவர் தன்னுடைய ரசனையையே துறக்கவேண்டிய நிர்பந்தம் இருந்தது’ என்று ஹெர்பெர்த்தின் மொழிபெயர்ப்பாளரும் நோபல் விருதாளருமான கவிஞர் செஸ்லாவ் மிலோஸ் குறிப்பிடுகின்றார். அதனால் 1953 ஆம் ஆண்டில் ஸ்டாலினின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பிறகுதான் ஹெர்பெர்த் ஒரு கவிஞராகத் தலையெடுக்க முடிந்தது.

‘உலகப் போருக்கு முந்தைய ரொமாண்டிக் கவிதைகளுக்கு எதிரான நவீனப் போக்கிலிருந்து வேர் கொள்கிறது’ ஹெர்பெர்த்தின் கவிதை நடை என்று அவருடைய படைப்பை அறிமுகப்படுத்தும் தொகுப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவருடைய கவிதை நேரடியான மொழியில் பேசக்கூடியது. மிகத்தீவிரமான அறநெறி அக்கறைகளை வெளிப்படுத்துவது. நாஜிக்கள் மற்றும் சோவியத் சர்வாதிகாரிகள் ஆகியோருக்குக் கீழ் கிடைத்த அனுபவங்களால் உருப்பெற்றது. தான் அனுபவித்த அதிதீவிர அழிநிலை அனுபவங்களிலிருந்து ஆக்கபூர்வ தீர்மானங்களை மேற்கொள்ள ஹெர்பர்த் முயல்கிறார். உடன்பட இயலாததாகத் தோன்றும் எல்லைகளான, கடந்த
காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலும், அல்லலுக்கும் கவிதைக்கும் இடையிலும் அவர் பாலம் அமைக்கிறார். இருபத்தைந்து ஆண்டுக்கால வரலாறு பாய்ச்சியிருந்த வெளிச்சங்களை விமர்சன ரீதியாக மதிப்பிடவல்ல அதியுன்னதக் கவி என்று இவர் பெயர் பெற்றிருக்கிறார்.

நாஜிக்களின் ஆக்கிரமிப்பும், ஸ்டாலின் ஆட்சிக்கால அடக்குமுறையும் விதித்த தணிக்கை விதிகள் பிரசுரங்களை நசுக்கின. தமது மொழியை நாசமாக்கிய ஸ்டாலினை ‘மேதகு மொழியாளர்’ என்று ஹெர்பெர்த் நையாண்டி செய்கிறார். தனது படைப்புகளைப் பிரசுரிக்கப் பதினைந்து ஆண்டுக்காலம் காத்திருக்க நேர்ந்ததைக் குறித்து ஹெர்பெர்த்துக்கு எவ்விதப் புகாரும் இருக்கவில்லை. மாறாக, அந்தக் காலகட்டத்தை அவர் ‘விரதக் காலம்’ என்றே கருதுகிறார். புற உலக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தன்னுடைய மனோலயத்தைச் சீரமைத்துக் கொள்ளக் கிடைத்த அவகாசமாக அந்தப் பதினைந்தாண்டுக் காலகட்டத்தை அவர் பார்க்கிறார்.

தான் வாழ்ந்த காலத்தின் சாட்சியாகப் பார்க்கப்படும் ஹெர்பெர்த் ஓர் அரசியல் கவிஞர் என்றே கணிக்கப்படுகிறார். ஆனால், அரசியல் என்பது அனர்த்தம் தரும் சொல். ஏனெனில், இலட்சியங்கள் சிதைத்திருந்த ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளின் கவிதையை அந்தச் சொல் நினைவுக்குக் கொண்டு வருகிறது. சமகால வரலாற்றுச் சம்பவங்களை நேரடியாகக் கையாளும் எந்த ஒரு அரசியல் கவிஞனும் தோல்விக்கு இட்டுச் செல்லும் ஆட்டத்தையே வழக்கமாக ஆடுகிறான். ஒருவேளை அவனுடைய அறச்சீற்றம் அவனுடைய கவிதையை மூழ்கடித்துவிடுவதனால் இது நேரலாம். ஏனெனில், கவிஞனுடைய அறச் சீற்றமானது அவனுடைய கவிதையைச் சுயநேர்மை மிக்க, கணிக்க ஏதுவான, வீரிடலாக ஆக்கிவிடுகிறது. சமீப வரலாற்றின் கொடுங்கனாக்களைப் பேசுவதில் அது மும்முரமாக இருந்தபோதிலும், ஹெர்பெர்த்தின் கவிதையை மேடை முழக்கமாகப் பார்ப்பதற்கில்லை. பித்தேறிய நிலையையும், பேரழிவின் உக்கிரத்தையும் அடங்கிய, இயல்பான தொனியில் ஒலிக்கும் அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துவதில்லை. அவரை ஒரு முரண்நிலைக் கவிஞர் என்றும் தேவைக்கதிகமாய் உணர்வை வெளிப்படுத்தாதவர் என்றும் பிரபல அமெரிக்கக் கவி ராபர்ட் ஹாஸ் குறிப்பிடுகின்றார். உரத்த பொய்கள் நிறைந்திருக்கும் இவ்வுலகில் குறுக்கிவிட இயலாத உண்மையைச் சீரான குரலில் எடுத்தியம்புவதே ஒரு கவிஞனின் அசகாயப் பொறுப்பு என்பதைப் போல் எழுதுகிறவர் ஹெர்பர்த். மிகுந்த கவனத்துடனும், சந்தேக மனப்பாங்குடனும் எதிரணியிலேயே நிரந்தரமாக இருக்கும் தன்னுடைய இயல்பின் காரணமாக அரசியல் கவிஞர் எனும் அடையாளத்துக்கு ஹெர்பெர்த் உரியவராகிறார் என்று விமர்சகர் ஆல்வரஸ் கருதுகிறார். ஹெர்பெர்த்திடம் காணப்படும் எதிர்ப்புணர்வு முரட்டுத்தனமானதல்ல. நாஜிக்களின் ஆக்கிரமிப்பின்போது தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அவர் காட்டிக்கொண்டதில்லை. அதேபோன்று, ஸ்டாலின் காலத்திய அடக்குமுறையின் போதும் கூட, தன்னைக் கவனத்துக்குள்ளாகும் கத்தோலிக்கராகவோ, தேசியவாதியாகவோ அவர் காட்டிக்கொண்டதில்லை. ஹெர்பெர்த் சார்ந்திருக்கும் எதிரணியை ஒரு நபர் குழு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தான் உண்மை என்று கொண்டவற்றையும் தன்னுடைய நியதிகளையும் எவ்விதப் பிடிவாத நிலையின் முன்பாகவும் அவர் விட்டுக் கொடுத்ததேயில்லை. ஒரு கவிஞனுக்குரிய பங்கு பணி பற்றிய அவருடைய விளக்கங்களில் அவருடைய ‘அரசியல்’ மனோநிலையை நாம் காண வியலும். “போலந்து நாட்டில் கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் என்று கருதப்படுகிறார்கள்” என்று அவர் ஒரு முறை சொன்னார். கவிஞன் எனப்படுபவன் வெறும் சொல் உருவங்களை உருவாக்குபவனோ, மெய்மையைப் பிரதி எடுப்பவனோ இல்லை. ஒரு கவிஞன் மக்களின் அதியாழமான உணர்வுகளையும் அதியகலமான விழிப்புணர்வையும் வெளிப்படுத்துபவன். கவிதையின் மொழி அரசியலின் மொழியிலிருந்து மாறுபடுகிறது. என்ன இருந்தாலும், நாம் உணரக்கூடிய எவ்வித அரசியல் சிக்கலைக் காட்டிலும், கவிதை அதிகக் காலம் நீடித்து நிலைக்கக் கூடியது. மிக அகண்ட வெளியையும், அதி நீள கால ஓட்டத்தையும் கவிஞன் பார்வையிடுகிறான். தன் சமகாலத்திய இன்னல்களை அவன் நிச்சயமாகக் கவனித்துப் பதிவு செய்கிறான். ஆனால், அவன் உண்மைக்கு மட்டுமே பாரபட்சமாய் நிற்கிறான். அவன் சந்தேகங்களை எழுப்பி, நிச்சயமின்மைகளைச் சுட்டி, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறான்.” ஆனாலும் கூட, கவிதையின் தாக்கம் வரையறைக்கு உட்பட்டதே. கவிதை எழுதுவதின் மூலம் வரலாற்றின்போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி விட முடியும் என்று நினைப்பது அகம்பாவம். வானிலையை மாற்றுவது காற்றழுத்தமானி இல்லை. இப்படியான கருத்துகளையே கவி ஹெர்பெர்த் கொண்டிருந்தார்.

ஒரு கவிஞருக்கான நோக்கம் குறித்தும், கவிதைக்கான பாடுபொருள் குறித்தும் ஹெர்பெர்த் கொண்டிருந்த கருத்துகள் தீவிரமானவை. என்றாலும் நகைச்சுவையையும் அங்கதத்தையும் அவர் மிகச் சாதுர்யமாகக் கலந்து எழுதுகிறார். அதிதீவிர கொள்கைப் பிடிப்போடு, குறும்புத்தனமான, மென்மையான அபத்தத்தையும், துடுக்கான புனைதிறனையும் முதலீடு செய்வதுதான் ஹெர்பெர்த்தின் கற்பனைத் திறனின் கவனிக்கத்தக்க அம்சம் என்று அமெரிக்கக் கவி லாரன்ஸ் லிபர்மேன் கருத்துத் தெரிவிக்கிறார். அரசியல் அடக்குமுறையைத் தடுத்தாட்கொள்ள ஹெர்பெர்த்துக்கு உதவும் கேடயம் தான் இந்த நகைச்சுவை கலந்த கற்பனைத்திறன். உண்மையில் கற்பனைத்திறமே அவர் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான கருவி. அவருடைய கவிதைக்கான படைக்கொட்டிலில் இருக்கும் அதிமுக்கிய ஆயுதமாக விளங்குவதும் அதுவே. அதேசமயம், அவருடைய தனித்துவமான அடையாளத்தைக் காத்துக்கொள்ள உதவும் கேடயமும் அதுவே. சர்வாதிகார தேவாலயமும், தேசமும் நடைமுறைப்படுத்தும் மனரீதியான அடிமைத்தனத்திற்கு எதிரான அரணாகவும் அவருடைய நகைச்சுவை கலந்த கற்பனைத்திறன் அவருக்குத் துணை நிற்கிறது. ஹெர்பெர்த்தின் நகைச்சுவையுணர்வை தேசத்தின் மனிதத்தன்மைக்கு எதிரான, பாகுபாடற்ற பொது மொழியைத் தடுத்தாட்கொள்ளும் வழி என்று இலக்கிய விமர்சகர் ஸ்டீஃபன் மில்லர் கருதுகிறார்.

நகைச்சுவையுணர்வைக் கொண்டிருப்பதென்பது ஒரு நபர் தனக்கென ஓர் அந்தரங்கமான மொழியைக் கொண்டிருப்பது. ஒரு நபரின் சுயம் ஒட்டு மொத்தமாய் அரசியல் வயப்படுவதைத் தவிர்ப்பது. ஹெர்பெர்த்துடைய கவிதைகளில் விவிலிய, கிரேக்க தொன்மக் குறிப்பீடுகள் இழையோடியவாறிருக்கும். தொன்மம் எனும் குவி ஆடி சமகால அனுபவத்தின் கண்ணைக்கூச வைக்கும் ஒளியை மட்டுப்படுத்தும் உபாயம். இது தன்னுடைய நிதானத்தையும் நகைச்சுவையுணர்வையும் இழந்து விடாதபடிக்கு ஒரு பார்வைத்தளத்தில் ஹெர்பெர்த்தை நிலைபெற உதவுகிறது.
குறிப்பான வரலாற்று நிகழ்வுகளின் கட்டுப்படுத்தும் எல்லைகளுக்குள் இருந்து தொன்மங்களின் பயன்பாடு ஹெர்பெர்த்தை விடுதலைப் படுத்துகிறது. அதே நேரத்தில், அங்கதத்தின் மெல்லிய எலும்புகளுக்குத் தொன்ம பயன்பாடு சதைப்பற்றைச் சேர்க்கிறது. அதைக் கபடம் நிறைந்ததாகவும், அதே சமயத்தில் நளினம் கொண்டதாகவும் மாற்றுகிறது. ஹெர்பெர்த்தின் கவி உணர்வுக்குக் கட்டியங் கூறுபவையாக அவருடைய ஐந்து கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு இக்கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer