விர்ஜீனியா உல்ஃப்
பூமிக்கு வர மறுத்த பறவை

சா. தேவதாஸ்

பகிரு

குகையில் முடவர்களைப் போலில்லாமல், முழுமையாகவும் சாகசத்துடனும் எப்போது வாழப்போகிறோம்?

-விர்ஜீனியா உல்ஃப்

பெரிய ஆளுமைகள் பிரிட்டனில் அருகிவந்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தீவிரமாகச் சிந்தித்தும் எழுதியும், இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளவர் விர்ஜீனியா

உல்ஃப் (1882-1941). நாவல், விமர்சனம், பெண் ணியம், வரலாறு என்னும் தளங்களில் புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியவராக, தனது ஆளுமைப்பொலிவோடு உருகொண்டதற்கிணங்க, தனது எழுத்தையும் உருகொள்ளவைத்தவர். வாழ்ந்தது போல் எழுதியவர். சிந்தித்தது போல் வாழ்ந்தவர். இறக்கவும் செய்தவர்.

அவரது கவனக்குவிப்பெல்லாம், “தற்போதைய கணம், புரிதலுடன் முழுதாக ஆழமாகப் பிரவாகிக்கும் வரை, கடந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலத்தால் இன்னும் முழுமையாக நிரம்புமாறு” செய்வதாக இருந்தது.

இதுதான் அவருக்கு இருந்த சவால் - எழுத்திலும் வாழ்விலும். இரண்டாம் உலகப்போர் கட்டவிழ்த்து விட்டிருந்த பீதியுணர்வு, இலக்கிய உலகில் நிலவிய காழ்ப்புணர்வுகள் - பாரபட்சங்கள், தன் உடல் சார்ந்த நோய் குறிகள் - மனநிலை பாதிக்கப்பட்ட துயரங்கள் ஆகியவற்றின் பின்புலத்தேதான் விர்ஜீனியா இயங்கினார். எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த தீவிர பற்றுதலும் அர்ப்பணிப்புமே அவரது கணிசமான பங்களிப்புக்கு அடிப்படை. நாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், பெண்ணிய விவாதங்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் என நிறையவே விட்டுச் சென்றுள்ளார்.

பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி என்பது போன்ற உடல் சார்ந்த பிரச்சனைகளுடன் குரல்களைக் கேட்பது போன்ற உளம் சார்ந்த பிரச்சனையும் இருந்து வந்தது. சீரிய இலக்கியவாதியான அவருக்கு, அவ்வப்போது வரும் இலக்கியவாதிகளின் கடுமையான விமர்சனங்களும் பாராமுகமும் பாதிப்பைத் தந்தன. சஞ்சலப்பட்டார். மனச்சிதைவு ஏற்பட்டது. தற்கொலை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றின. இதன் அதல பாதாள முடிவுதான் 1941இல் அவர் தன் கோட் பாக்கெட்டில் கற்களை நிரப்பி ஒயுஸ் நதியில் இறங்கி மூழ்கிப்போனது. அவரின் மனநிலைப் பிரதி அவதிப்பட மூலக்காரணம் அவரது குடும்பத்தில், குறிப்பாக அவரது தந்தையிடம் இருந்து வந்தது என்கிறார், விர்ஜீனியாவின் வாழ்க்கை வரலாற்றினை VIRGINIA WOLF: The Marriage Of Heavan and Hell / Peter Dally என்னும் தலைப்பில் எழுதியுள்ள உளவியல் மருத்துவர்.

விர்ஜீனியாவின் தந்தை வெஸ்லி ஸ்டீபன் பிரிட்டனில் இலக்கியவாதிகளது வாழ்க்கை வரலாறு சார்ந்த அகராதித் தொகுப்புகளை BIOGRAPHIA BRITANNICA என்னும் தலைப்பில் கொண்டுவரும் பணியில் ஆர்வம் கொண்டிருந்தவர். 1905இல் புற்றுநோய் கண்டு மடிந்தார். இரண்டு வருடங்களுக்குப்பின், அவரது மாற்றாந்தாய் சகோதரி ஸ்டெல்லா PERITONITIS என்னும் நோயால் இறந்துபோனார். விர்ஜீனியா 13 வயது யுவதியாக இருந்தபோது, அவரது மாற்றாந்தாய் சகோதரர்கள் ஜார்ஜ் மற்றும் ஜெரால்ட் டக்வொர்த்தால் பாலியல் இம்சைக்கு உள்ளாகியுள்ளார்.

பருவம் எய்தியபோது தாய் இறந்தது, தொடர்ந்து ஸ்டெல்லா இறப்பு, புற்றுநோய் காரணமாகத் தந்தை இறப்பது போன்ற காரணங்கள் விர்ஜீனியாவை கடுமையாகப் பாதித்துள்ளன. அத்துடன், தந்தை ஸ்டீபன், CYCLOTHYMIA என்னும் ஒருவித மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இப்படி அடுக்கடுக்காக உடல் சார்ந்தும், குடும்பம் சார்ந்தும், மரபணு சார்ந்தும், காலகட்டம் சார்ந்தும் உருகொண்ட மனச்சிதைவு / பைத்திய நிலை அவரது சமநிலை பிறழ்வில் ஓர் ஒழுங்கினை ஏற்படுத்த முற்பட்டபோது தீவிரமாய் எழுதினார். அது இல்லாத தருணத்தில் ஆற்றில் கரைந்துபோனார். அவரது சிக்கல் இரு துருவநிலை, ஆளுமைச் சீர்குலைவு எனப்படுகிறது.

விர்ஜீனியாவின் தாய் ஜூலியா ஜாக்சன், மேரி அண்டோய்னிட்டா என்னும் அரசிக்குப் பணி பெண்ணாய் இருந்தவரது பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், இந்தியாவில் பிறந்தவர்.

இதன் காரணமாக விர்ஜீனியாவின் இல்லம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் மையமாக இருந்தது. தந்தையால் உருவாக்கப்பட்ட பெரும் நூலகம் அரிய கருவூலமாகக் கருதப்பட்டது. விர்ஜீனியா தனது ஒன்பது வயதிலேயே The Hyde Park Gate News என்னும் குடும்பச் செய்திதாளை நடத்தியிருந்தார். பொருளியலாளர் கீன்ஸ், ஓவியர் கிராண்ட், தத்துவவாதிகள் ரஸ்ஸல், விட்ஜென்ஸ்டீன் போன்றோர் விர்ஜீனியாவின் அண்ணன் அட்ரியன் நடத்தி வந்த கூட்டங்களில் பங்கேற்றனர். சீக்கிரமே இக்குழு BLOOMSBURY என்றழைக்கப்பட்டது. இக்குழுவினர் கூடிய விர்ஜீனியாவின் இல்லம் ப்ளம்ஸ்பரியில் இருந்ததால்.

இப்படியான பிரச்சினைகள் மற்றும் சாதக நிலையிலிருந்து பறக்கத் தொடங்கியவர்தான் விர்ஜீனியா.

II

சார்லஸ் டிக்கின்ஸின் எழுத்தில் பிரச்சினைகள் அலசப்படும் அளவுக்கு புனைவம்சம் கூடி வரவில்லை, தன் நோக்குநிலையை / கருத்தியலை வற்புறுத்தியவர் டி.எச். லாரன்ஸ், கருத்துகளில் மட்டும் செழுமையானவர் ஆல்டஸ் ஹக்ஸ்லி என தனது நாட்டின் இலக்கியவாதிகளை மதிப்பிடும் விர்ஜீனியா, பாத்திரங்களின் அகஉலகை சித்தரிப்பதில் கவனக்குவிப்புச் செய்தார். அதற்கேற்ற உணர்வுக்கூர்மையும் துல்லியமும் கனபரிமாணமும் சேர்ந்த மொழியைக் கையாண்டார். கான்ஸ்டன்ஸ் கார்னட்டின் மொழியாக்கத்தில் வந்து கொண்டிருந்த ரஷ்ய இலக்கிய நூல்களை வாசித்து மனந்திறந்து பாராட்டினார், வரவேற்றார். மேற்கத்தைய எழுத்து, உலகியல் வாழ்வுடன் கட்டுண்டுவிட, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் ஆகியோரின் எழுத்து ஆன்மாவின் சஞ்சலங்களை / பாடுகளை / வரை களை / பரிசோதனைகளைப் பேசுகிறது என்றார். ரஷ்ய எழுத்து ஆன்மா நோயுற்றிருப்பதை, ஆன்மா குணப்படுத்தப்படாமலிருப்பதை அல்லது குணப்படுத்தப்படுவதைப் பதிவு செய்கின்றது. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் சீறிக் கொதித்தெழுந்து நம்மை உள்ளீர்த்து விடுவதான நீர்ச்சுழல்கள், மணற் புயல்கள், பெருக்கெடுத்தோடும் வெள்ளங்கள் என்று குறிப்பிட்டார். ஆங்கிலேய நாவலாசிரியனோ கருணை கொள்வதற்குப் பதிலாக அங்கதம் செய்வதிலும், தனிநபர்களைப் புரிந்துகொள்வதிற்குப் பதிலாகச் சமூகத்தைக் கூராய்வு செய்வதிலும் ஈடுபட்டுவிடுகிறான் என குறைப்பட்டார்.

தனது எழுத்து தனிநபரின் அக உலகத்தை விவரிப்பதாக அமைந்து, அவரது காலகட்ட சமூக வரலாறாக விரிவடையக் கூடியதாக இருக்குமாறு எழுதினார்.

“சாதாரண நாளில் சாதாரண மனதில் ஒரு கணத்தைப் பரிசீலனை செய்யவும், அற்பமானது, அதியதிசயமானது, தோன்றி மறைவது என பல்வேறான மனப்பதிவுகள் உண்டாகின்றன அல்லது உருக்கின் கூர்மையுடன் பொறிக்கப்படுகின்றன. நாலாபுறங்களிலிருந்தும் எண்ணற்ற அணுக்களின் இடையறாத பொழிவு; அவை வீழ்கையில், திங்கள் / செவ்வாயின் வாழ்வாக உருகொள்கின்றன; முக்கியத் தருணம் இங்கிருந்தல்லாமல், அங்கிருந்து வருகிறது; எனவே, ஓர் எழுத்தாளன் அடிமையாக இல்லாமல் சுதந்திரமனிதனாக விரும்பினால், தான் எழுதியாக வேண்டியதை அல்லாமல் தான் தெரிவு செய்ததை எழுத விரும்பினால், சம்பிரதாயத்தின் மீதல்லாமல் தனது உணர்வோட்டத்தின் மீது தன் எழுத்தை அமைத்துக்கொள்ள முடிந்தால், ஒத்துக்கொள்ளப்பட்ட பாணியில் கதைப்பின்னலோ இன்பியலோ துன்பியலோ நேசமோ விநாசமோ இருக்காது; வாழ்வென்பது ஒழுங்கில் நிறுத்தப்பட்டுள்ள விளக்குகளின் வரிசை அல்ல; பிரக்ஞையின் தொடக் கத்திலிருந்து முடிவு வரையில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டம், அரைபாதி தெரியும் உறை. இவ்வேறுபடுகின்ற, அறியப்படாத, பாதிப்புறாத ஆன்மாவைத் தொடர்புறுத்தச் செய்வது ஒரு நாவலாசிரியரின் பணியல்லவா?”

300 ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு நபரால், ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கின்ற சாத்தியத்தை ORLANDO நாவலில் முன்வைக்கிறார். ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றின் வடிவில் வந்துள்ளது இந்நாவல். 12 மணி நேரங்களில் கிலாரிஸ்ஸா டல்லாவே என்னும் பாத்திரத்தின் ஆளுமை கொள்ளும் வீச்சை விவரிப்பது Mrs. Dalloway நாவல்.

அவரது தலைசிறந்த நாவல் என்று கொண்டாடப்படுவது The Waves (1960). பெர்னார்ட், லூயி, நெவில்லே, சூஸன், ஜின்னே, ரோடா என்னும் ஆறு பாத்திரங்களின் அக உலகத் தனிமொழிகளாக இருக்கும்.

ஒரு நாளில் நிகழ்வதாக ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன்னர் இடம்பெறும் பகுதிதான் ஒருவரால்/ஆசிரியரால் எடுத்துரைக்கப்படுகிறது. மற்றபடி எடுத்துரைப்பு இன்றியே, பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களாகவே அமைந்திருக்கிறது. அத்தியாய முகப்பில் இடம் பெறுவது, ஆடல் சார்ந்த இயற்கை விவரிப்பின் நாடகமாகிவிடும். இறுதி அத்தியாயத்தில் பெர்னார்ட் என்னும் பாத்திரம், மற்ற பாத்திரங்களையும் தனக்குள் உள்ளடக்கிப் பேசுவதாக, ஆன்மிக இழைகளின் நேர்த்தியான நெசவாக, கவிதா பூர்வ சித்திரமாக, உரைநடையிலான கவிதையாக, வாழ்க்கை சார்ந்த ஒரு பரிசோதனையா அல்லது இலக்கியம் சார்ந்த பரிசோதனையா என்ற ஊடாட்டத்தைக்கொண்டிருக்கும்.

“என் நண்பர்களை ஒவ்வொருவராகப் பார்த்து, நடு நடுங்கும் விரல்களால் அவர்தம் பூட்டிய பெட்டகங்களைத் திறக்க முயன்றேன். என் துயரத்துடன் இல்லை, எனது துயரமில்லை மாறாக, எமது வாழ்வின் புரிந்துகொள்ள இயலாமையுடன் ஒருவரிடமிருந்து இன்னொருவரைப் பார்க்கப் போனேன். அவர்களைப் பரிசீலிப்பதற்காகச் சிலர் பாதிரியார்களிடம் செல்கின்றனர்; சிலர் கவிதையிடம்; நான் என் சிநேகிதர்களிடம், எனது இருதயத்திடம் துண்டு - துணுக்குகள், தொடர்களிடையே நொறுங்காத ஒன்றைத்தேடி - என்னைப் பொறுத்தவரை, நில விடமோ மரத்திடமோ அழகில்லை; இன்னொருவருடனான ஸ்பரிசமே ஒருவருக்குப் போதுமானது - இருந்தும், அதைக் கூடப் புரிந்துகொள்ள இயலாத, அவ்வளவு பரிபூரணமற்ற, பலவீனமிக்க, தனிமையானவன்  நான்.”

இன்னொரிடத்தில் ஒரு வாக்கியம்:

“ஒரு கணத்தில் ஒரு வரவேற்பறையில், மெது வாழ்க்கை, வாளின் ஊடேயான நாளின் பெருமித அணிவகுப்புடன்  தன்னைச்  சரிசெய்து  கொள்கிறது.”

பெர்னார்டின் அக மனத் தெறிப்புகளில் வேறோரு பதிவு :

“நான் திரும்பிப் பார்த்துக்கொள்வது ஒரு வாழ்வில்லை; நான் ஒரு நபரில்லை; நான் பலராக இருக்கிறேன்; நான் யாரென்று - ஜின்னியா, சூஸனா, நெவில்வேயா, ரோடாவா அல்லது லூயியா - முழுமையாகத் தெரியவில்லை; அல்லது அவர்களிடமிருந்து என்வாழ்வைப் பிரித்தறியத் தெரியவில்லை.”

III

பாலியல் நெருக்கடிக்குள்ளாகியிருந்த விர்ஜீனியா, மணமான பின், விட்டா சாக்வ்ல்லே-வெஸ்ட் என்னும் பிரெஞ்சு தோழியிடம் ஈர்ப்பு கொண்டிருந்தார். அவரை உத்வேக தேவதையாகக் கருதினார். அது தன்பால் உறவு வரை விரிந்தது. தன் கணவருக்கும் அது தெரியும் படி தயக்கமின்றி நடந்துகொண்டார். ‘ஒர்லாண்டோ’ நாவலை இத்தோழிக்குச் சமர்ப்பணம் செய்தார்.

லியோனார்ட் உல்ஃப் என்னும் யூதரை தன் 30வது வயதில் மணந்துகொண்டார். விர்ஜீனியாவின் மனச்சிதைவுப் பிரச்சனை, உடல்சார்ந்த நோய்க்கூறுகள், ஒருபால் உறவு என்பவற்றையெல்லாம் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுப் புரிந்துகொண்டார் லியோனார்ட். மனைவியுடன் சேர்ந்து ஹோகார்த் அச்சகத்தை (வெளியீட்டு நிறுவனம்) நிறுவி, டி.ஸ். இலியட், காதரின் மேன்ஸ்ஃபீல்ட் போன்றோரின் நூல்களுடன் விர்ஜீனியாவின் எழுத்துக்களையும் வெளியிட்டு வந்தார். இரண்டாம் உலகப்போரின் அழுத்தமும், தன் கணவர் யூதரென்பதால் நாஜிக்களுக்கு இலக்காக் கூடும் என்ற பயமும் சேர்ந்து விர்ஜீனியாவை வதைத்து, அவரைத் தற்கொலைக்கு உந்திய காரணிகளில் ஒன்றாய் இருந்தது. தன் கணவருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்  என்றுகூட  ஒருமுறை  திட்டமிட்டுள்ளார்.

IV

ஆற்றில் கரைந்து போகுமுன் இரு கடிதங்களை விட்டுச் சென்றுள்ளார் விர்ஜினியா. ஒன்று கணவருக்கு, இன்னொன்று சகோதரி வாரனஸ்ஸா பெல்லுக்கு.

கணவருக்கு எழுதிய கடிதத்தில் :

“மீண்டும் பைத்தியமாகப் போவதுபோல் உணர்கிறேன். அப்பயங்கரமான காலகட்டங்களில் மீண்டும் நம்மால் வாழமுடியும் என்று நான் எண்ணவில்லை. இப்போது என்னால் மீளமுடியாது. குரல்களைக் கேட்கத் தொடங்குகிறேன், என்னால் கவன குவிப்புச்செய்ய இயலவில்லை. ஆகவே என்னால் செய்யக் கூடிய சிறந்ததைச் செய்கிறேன். சாத்தியமாகிவிடும் அதிகபட்ச சந்தோஷத்தை அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விதத்திலும் யாரேனும் இருக்கக்கூடிய தன்மையில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இப்பயங்கர நோய் வரும்வரை, இருவர் இவ்வளவு சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணியதில்லை. இனியும் என்னால் போராட இயலாது. உங்கள் வாழ்வை பாழாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றறிவேன், நான் இன்றி உங்களால் செயல்பட முடியும். செயல்படுவீர்கள் என்றறிவேன். இதைச் சரியாகக்கூட எழுத முடியவில்லை என்பதைப் பார்க்கிறீர்கள். என்னால் வாசிக்க முடியவில்லை. நான் சொல்ல வருவது, எனது சந்தோஷங்களுக்கெல்லாம் நான் உங்களுக்கே நன்றி பாராட்ட வேண்டும். முற்றிலும் பொறுமை காத்து, நம்பமுடியாத விதத்தில் நல்ல வராக இருந்துள்ளீர்கள். யாரேனும் என்னைக் காப் பாற்றியிருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கமுடியும். உங்களது நல்லியல்பின் உறுதிப்பாடு தவிர்த்து எல்லாவற்றையும் இழந்துள்ளேன். இனி மேல் உங்கள் வாழ்வைப் பாழ்படுத்துவதை என்னால் தொடர இயலாது. நானும் நீங்களும் சந்தோஷமாயிருந்ததுபோல வேறிருவர் சந்தோஷமாயிருக்க முடியும் என்றெண்ணவில்லை நான்.”

விர்ஜீனியாவின் தற்கொலை சாதாரணமாக நிகழ்வது போன்றதில்லை. பிரச்சினைகளை எதிர்கொள்ள இல்லாமல் செய்துகொள்வதில்லை. உலகியல் காரணங்களால் மேற்கொண்டதல்ல. இவ்வளவுக்கும் தாம்பத்தியத்தில் உறவுகூட நெருடலன்றி இசைவாக இருந்துள்ளதை, அவரின் இறுதிக் கடிதமே தெரிவிக்கும்.

The Waves - நாவலில் ஓரிடம். அது விர்ஜீனியாவின் இன்னொரு முகத்தைக் காட்டும்.

“தொலைவில் ஒரு மணி அடிக்கின்றது, அது சாவுக்கல்ல. வாழ்வுக்காக அடிக்கின்ற மணிகள் உண்டு. ஓரிலை வீழ்கிறது, ஆனந்தத்திலிருந்து. ஓ, நான் வாழ்வில் நேசம் கொண்டிருக்கிறேன்!...” இதனை எதிரொலிப்பதுபோல 1937ஆம் ஆண்டில் ஒரு நாட்குறிப்புப் பதிவு உள்ளது :

“...எனது மகிழ்ச்சி குருட்டுத்தனமானதில்லை. எனது 55 ஆண்டுகளில் இன்று காலை மூன்றிலிருந்து நான்கு மணி வரை, அதுதான் சாதனை என்றெண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வளவு அமைதியுடன் நிறையாமல் விழித்திருந்தேன் சுற்றிச் சுழலும் உலகில் இருந்து ஆழ்ந்தமைதியான நீலவெளிக்குள் அடி யெடுத்து வைத்ததுபோல, தீங்கு நெருங்காதபடி திறந்த விழிகளுடன் இருந்தேன்; நிகழக்கூடிய அனைத்துக்கும் எதிராக ஆயுதம் தரித்திருந்தேன். எனது ஆயுளெல்லாம் இதற்குமுன் இத்தகு உணர்வைப் பெற்றிருந்ததில்லை. ஆனால் கடந்த கோடைகாலத்திலிருந்து பலமுறை பெற்றுள்ளேன். எனது மோசமான மனச்சிதைவில் அதனை நான் அடைகையில் மேலங்கியைத் தூக்கியெறிந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது போல...”

நட்சத்திரங்களைக் கண்டு அகத்தை விசாலமாக்கிக் கொள்ளும் விர்ஜீனியாவால்தான், ‘ஒரு பெண்ணென்ற வகையில் எனக்கொரு தேசமில்லை, எனது தேசம் ஒட்டுமொத்த உலகமே’ என்று கூற முடியும்.

ஆதாரங்கள் :

1.   Virgini Woolf / A Writer’s Diary / A Harvest Book - Harcourt INC, 1954

2.   Thw Waves / Virginia Woolf / The Hogarth Press, 1960

3.   Virginia Woolf on the creative benefits of keeping a diary / Haria popova / theguardian.com

4.   The Common Reader / Virginia woolf

5.   Virginia Woolf / biography.com

6.   The Lone Grey Woolf / Curtis sittenfelol / Deccan heralol / 27 Nov 2005

7.   Looking Through a Prism Of The Past / Halavika Karlekar / Biblio -Sep 1996

8.   A sense of emptiness / Ravi vyas / The Hindu, Nov 3, 1996

9.   Virginia woolf : The Marriage of Heaven and Hell / Peter Dally The feminist bible - Review of a Room of one’s own / Virginia Woolf / Ravi vyas / The Hindu - Aug 3, 1997

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer