லெபனான்காரன்

இராகவன்

பகிரு

சிறுகதை

திருவிழாக்குப் போறமாதிரி ஊர்ச்சனம் முழுக்க எங்க படையெடுத்துப் போகுது? எண்டு பாத்தால், லெபனான்காரன் வீட்டை புதினம் பாக்கப்போறதாத் தெரிஞ்சுது. அங்கை அப்பிடியென்ன புதினம் எண்டு மாங்கொட்டை இளையாம்பியண்ணையை மறிச்சுக் கேட்டன்.

‘இதென்ன நாசமறுத்த கேள்வி கேக்கிறாய்? இண்டைக்குக் காலமை லெபனான்காரன் வீட்டை திரும்பி வந்திட்டானாம் எண்டு நியூஸ்பேப்பரில வராத குறையாச் சனங் கதைக்குது.

நீயென்ன கவட்டுக் கை கையை வைச்சுக் கொண்டிருக்கிறியே?’ எண்டு அந்தாள் என்னோட சாதுவாய் உரஞ்சிப் போட்டுப் போகுது. எனக்கெண்டால் உண்மையில அந்தாள் சொன்னதை நம்பேலாமலிருக்கு.

எங்கடை யூரிலயிருந்த இளந்தாரிப்பொடியளெல்லாம் 1983 யூலைக்குப் பிறகு சவூதி, குவைத், டோகா, கட்டார் எண்டு உருவிக்குடுக்க, இந்தப் பூனாமேன் லெபனா னுக்குப் போனான். போனவன் போனவன்தான். ஒரு அஞ்சாறு வரியமாய் ஒரு தொடர்புமில்லை.

இவன் போனநேரந்தான் லெபனானில கடுஞ்சண்டை யொண்டு நடந்தது. அந்தச் சண்டைக்குள்ள மாட்டுப்பட்டு ஆள் முடிஞ்சுதெண்டு வீட்டுக்காரர் முடிவெடுத்து அழுதுகிழுதுபோட்டு இருந்திட்டுதுகள்.

பின்னை அதுகள் வேறை என்ன செய்யிறது? இப்ப பாத்தால் ஆள் திரும்பி வந்திட்டானாம். இவன் எண்டைக்கு லெபனானுக்கு வெளிக்கிட்டானோ அண்டையிலயிருந்து ஊர்ச்சனம் முழுக்க ராஜசேகர் எண்ட இவன்ர சொந்தப் பெயரை மறந்து, லெபனான்காரன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டுதுகள்.

இவன் லெபனானுக்கு வெளிக்கிடேக்குள்ளையே அரைவாசிச் சனம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுதுகள். பிறகு, சண்டைக்குள்ள அகப்பிட்டு ஆள் முடிஞ்சுதாம் எண்டு கேள்விப்பட்டோண்ண ஊர்ச்சனம் முழுக்கப் புளுகிப் பூத்தில தட்டிக்கொண்டு திரிஞ்சுதுகள்.

குடிக்காத நேரத்தில இவனைப்போல ஒரு தங்கமான பிள்ளையை ஆரும் ஊருக்குள்ளை காட்டேலாது. ஆனால், ஒரு சொட்டுக் குடிச்சானெண்டால் கதை சரி. ஊருக்குள்ளை இவனைப்போலக் கடை கெட்டவன் ஆருமில்லையெண்டளவுக்குத் தம்பி அண்டப் பிரசண்டனாய் நாலுகாலில நிப்பான். கதை பேச்செல்லாம் முழுத்தூசணத்திலதான் நடக்கும்.

அதோட, “டேய்! தொட்டாக் காச்சல் வரும். நளத்திக்கும் ஓப்பன்!” எண்டு ஒரு மந்திரம் போல அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பான். தன்னோட தனகிற ஆக்களையெல்லாம் பச்சைத்தூசணத்தால இரவிரவாய்த் தொடர்ந்து புனிதப்படுத்திக்கொண்டிருப்பான்.

இடைக்கிடை பாட்டுகளும் பாடுவான். பெண்டிலுக்கு அடிச்ச  மாதிரி ஒண்டுரண்டு கல்லு அவனுக்கு மேலையும் விழத்தான்  செய்யும்.  அதோட பாட்டு நிண்டிடும்.

“டேய்! ஆரடா புண்டயாண்டி கல்லெறியிறவன்? நெஞ்சில துணிவிருந்தால் நேருக்கு நேராய் வாடா! உன்ரை சுண்ணியை வெட்டிச் சொதிவைச்சுத் தாறன்” எண்டு இன்னொரு பாட்டம் தொடங்குவான்.

இதால ஊருக்குள்ள காவாசிச் சனத்தின்ர நித்திரை குழம்பிப்போகும். இப்பிடிக்கொத்தவன் ஊரை விட்டுப் போறான் எண்டால் ஆருக்குத்தான் புளுகாயிருக்காது?

இதிலையும் குறிப்பாய் முன்சந்தியில பலசரக்குக்கடை வைச்சிருந்த இரத்தினசபாபதியருக்குத்தான் இறெக்கை முளைச்ச புளுகம். அந்தாள் கைக்கூழம் (வெள்ளாளரை விட உயர்ந்த சாதி) பகுதி.

ராஜசேகர் என்ன செய்வானெண்டால் தாமனிட்டப் போய்ப் புளிச்ச கள்ளெல்லாம் மூக்குமுட்ட வாத்துப் போட்டு இரத்தினசபாபதியின்ர கடையடியால வரேக்குள்ள, “குளா! குளா! கைக்குளா! குளத்து மீன்தின்னி!” எண்டு சிதம்பரம் ஜெயராமன்ர குரலில் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு வருவான்.

அந்தாளுக்கது பெரிய ஆக்கினையாயிருக்கும். இவன் பெரிய மல்லன்.

அந்தாள் ஒரு வாடல் கிழவன். இவனோட எதிர்க் கேலுமே? ஏதோ ஜேஆரின்ரை புண்ணியத்தில ஒரு கலவரம் வந்து இவன் ஒரு வழியாய் லெபனானுக்குப் போனான்.

அது இரத்தின சபாபதியருக்கு நெஞ்சில பாலை வாத்தது. பிறகு இவன் அங்கை சண்டைக்குள்ள அகப்பட்டு முடிஞ்சிட்டானாம் எண்ட தகவல் கிடைச் சாப்போல அவருக்கு பழம் நழுவிப் பாலில விழுந்த கணக்காய் இருந்திச்சுது.

இப்ப இவன் திரும்பி வந்திட்டான் எண்டதைக் கேள்விப்பட்டதுமே தனக்கு ஏழரைச்சனி தொடங்கிட்டுது எண்டு அந்தாள் முடிவு கட்டியிருக்கும். இவன் பிறந்தமூட்டம் இவன்ர மூத்த தமக்கை குட்டிப்பரமேஸ் பள்ளிக்குடத்தில படிச்சுக்கொண்டிருந்தவள். குஞ்சரம் ரீச்சர்தான் வகுப்பு ரீச்சர்.

“இப்ப பிறந்த உன்ர தம்பிக்கு என்ன பெயரடி?” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக் கேட்டிருக் கிறா. அவளும் வலு விலாசமாய் ‘டார்லிங் பேபிங் ராஜசேகர்’ எண்டு எடுத்துவிட்டிருக்கிறாள். “ம்...!

பீ குடிக்கிற மாடுகளுக்கெல்லாம் பேரைப் பாரன்!” எண்டு குஞ்சரம் ரீச்சர் குட்டிப்பரமேசைக்கலாய்ச்சதும்  ஊருக்குள்ள   எல்லாரும் அறிஞ்ச  கதை.

எங்கட வீட்டுக்கு மூண்டு வீடு தள்ளித்தான்  இவனின்ர வீடிருக்கு. ஊர்ச்சனம் முழுக்கப் புதினம் பாக்கப் போகுதுகள் எண்டாப்போல பின்னேரக்கையாய் நானும் போனன்.

ஆள் வீட்டு முத்தத்தில அட்டணக்கால் போட்டிருந்து கொண்டு மடியில ஒரு பிறவுண் கலர் ரூ பேன்ட் பிலிப்ஸ் றேடியோவை ஏரியல இழுத்துச் செங்குத்தாய் விட்டுட்டு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில நேயர் விருப்பம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கழுத்தில நார்த்தும்பு மாதிரி ஒரு மைனர்ச் செயின். உடம்பு மெலியவுமில்லைப் பெருக்கவுமில்லை. லெபனானுக்குப் போறதுக்கு முந்தி எப்பிடியிருந்தானோ அதேமாதிரியிருந்தான்.

வாய் நிறையச் சிரிப்பு. ஒரேயொரு மாற்றம். முதுகில வலப்பக்க விலாவில ஒரு நீட்டுப் பள்ளம். அதிலையொரு தையல்போட்ட அடையாளந் தெரிஞ்சுது. டக்கெண்டு பாத்தால் ஒரு திருநீலகண்டத்தைப் பிறவுண் கலரில பச்சை குத்தின மாதிரியிருக்கும். சனங்களெல்லாம் அதைத்தான் புதினம் பாத்துக்கொண்டு நிண்டுதுகள்.

“இது அங்கை லெபனான் ஆமியடிச்ச செல்பீஸ் பட்டு வந்த காயம். அப்பிடியே முதுகு பிளந்து போச்சு. எனக்கொண்டும் தெரியாது. முகங்குப்புற விழுந்திட்டன். வேர்க்சைட்டில நடந்தபடியால் உடனை கூட வேலை செய்தவங்கள் அம்புலன்ஸில  கொஸ்பிட்டலுக்குக் கொண்டு போட்டாங்கள்.

அஞ்சு நாள் கழிச்சுத்தான் கண் முழிச்சன். செத்துப் பிழைச்சு மறுபிறப்பெடுத்து வந்திருக்கிறன். நான் இஞ்சை திரும்பி வருவன் கனவிலயும் நினைக்கேல்ல. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில திரும்பி வந்திட்டன்.

இனிக்கனவிலயும் வெளிநாட்டை நினைச்சுப் பாக்கிறேல்ல எண்ட முடிவோட தான் வந்திருக்கிறன். என்ன நடந்தாலும் நடக்கட்டும். இனி வாழ்வும் சாவும் இஞ்சைதான்” எண்டொரு நீண்ட லெக்சர் அடிச்சான். போன சனமெல்லாம் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு நிண்டுதுகள்.

அதுக்குப்பிறகு லெபனான்காரன் ஊருக்குள்ள கொஞ்சக்காலம் புதுமாப்பிளை மாதிரித் திரிஞ்சான். குடிவெறியில்லை. சனங்களோட மட்டு மரியாதை யோட பண்பாய்ப் பிழங்கினான். ‘பரவாயில்லை, லெபனான் போய்வந்ததிலை ஆள் திருந்தியிட்டான்’

எண்டுதான் நானும் நினைச்சன். ஊர்ச்சனங்களும் நினைச்சுதுகள். ஒரு கொஞ்சக்காலம் ஊர் அமைதிப் பூங்காவாயிருந்தது. லெபனான்காரனின்ர தகப்பன் கோணர் சுந்தரம் பிள்ளை வண்டில்மாடு வைச்சுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்.

கொடிகாமம், எருவன், மாசேரி, மிருசுவில், எழுதுமட்டுவாழ், இயற்றாலை, மீசாலை, பளை எண்டு தென்மராட்சிப் பக்கமும், குடத்தனை, அம்பன், நாகர்கோவில், மாமுனை, செம்பியன்பற்று எண்டு கிழக்கூருக்கும் வண்டில்ல போய் தென்ன மட்டை, பொச்சுமட்டை, பனைமட்டை, கிடுகு, அலம்பல், வைக்கல் எண்டு பலதும் பத்தும் ஏத்தியந்த ஊருக்குள்ள விக்கிறதுதான் அவரின்ர தொழில். இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி தேப்பனோட உதவிக்கு வண்டில்ல போறவன்.

அப்பிடிப் போய்ப் போய்த்தான் குடிக்கப் பழகினவன். பிறகு இவன் லெபனானுக்குப் போனாப்போல இவனுக்கு நேரை மூத்தவன் சந்திரசேகரோ அல்லாட்டில் இவனுக்கு நேரை இளையவன் பாலசேகரோ தேப்பனோட உதவிக்கு மாறிமாறி வண்டில்ல போறது வழமையில இருந்தது. இவனைப் போலத்தான் அவங்களும் ஊருக்குள்ள புகழ்பெற்ற குடிகாரங்களாக வந்திட்டாங்கள். இப்ப இவன் வந்தாப்போல புதுமாப்பிள்ளைக் கணக்காய் சும்மா ஊர்சுத்தித் திரியிறான் எண்டிட்டுப் பழையபடி தகப்பன்காரன் வண்டில்ல உதவிக்குக் கூட்டிக்கொண்டு போகத் தொடங்கினார்.

பிறகென்ன பழைய குருடி கதவைத் திறவடியெண்டு வேதாளம் முருங்கைமரத்தில ஏறிட்டுது. லெபனான்காரன் வைபவரீதியாகக் குடியை ஆரம்பிச்சான்.

இவன் லெபனானுக்குப் போகமுந்திக் குடிச்சால் தமிழில உள்ள அத்தனை தூசணமும் பேசுவான். இப்ப லெபனான் போய் வந்தாப்போல அங்கத்தையத் தூசணத்தையும் கலந்தடிக்கத் தொடங்கிட்டான். ‘அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!’

எண்டொரு வார்த்தையைத் தமிழ்த் தூசணத்தோட கலந்தடிப்பான். அதின்ர மீனிங் அவனுக்கு மட்டுந்தான் தெரியும். அதின்ர மீனிங் என்ன? எண்டதை ஒருத்தரும் அவனிட்டக் கேக்கேல்ல.

கேட்டால் அவன் அதுக்கொரு மீனிங் சொல்லுவான். அதை நம்பவேண்டியதுதான். எது எப்பிடி யெண்டாலும் தூசணந்தானே! இதிலை டீப்பாத் திங் பண்ணத் தேவையில்லையெண்டு ஊர்ச்சனமும் பெரிசுபடுத்தேல்ல.

கோணர் சுந்தரம்பிள்ளைக்குக் காலப் போக்கில உடல்நலக்கேடு வந்தாப்போல வண்டில் மாடு எல்லாத்தையும் லெபனான்காரன்ர பொறுப்பிலயே விட்டுட்டார். அதுக்குப்பிறகு இவன் நினைச்ச நேரம் வண்டிலைப் பூட்டுவான்.

ஆரவாரமாய் வெளிக்கிடுவான். திரும்பி வாறதும் அப்பிடித்தான். இவன் வண்டில் கட்டித் திரும்பி வாறான் எண்டால் ஊருக்குப் பிறம்பாத் தெரியும். மெயின்றோட்டில வரேக்குள்ளயே, “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு லெபனான் தூஷணத்தால மாடுகளைப் பெலத்து விரட்டியடிச்சுக்கொண்டுதான் வருவான்.

ஊர்ச்சனங்கள் அலேட்டாகி ஒதுங்கி விடுங்கள். பிள்ளையார் கோயிலுக்கு முன்னால பாரவண்டிலைக் கொணந்து கல்லுக்கட்டி விட்டுட்டு, மாடுகளை அவிட்டுப் பிடிச்சுக்கொண்டு துவரங் கம்பால சளார்! சளார்! எண்டு இரண்டு வெளுவை வெளுப்பான்.

மாடுகள் வாலைக் கிளப்பிக்கொண்டு பறக்கும். இவன் “கெய்! கெய்! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு சொல்லிக்கொண்டு மாடுகளுக்குப் பின்னால குறுந்தூர ஓட்டவீரன்போலப் பறப்பான்.

வீடு வந்தோண்ண கயித்தை இழுத்துப்பிடிச்சுக்கொண்டு மாடுகளுக்குத் திரும்பவும் இரண்டு தரம் வெளுப்பான். உடனே சடுண்பிறேக் அடிச்ச மாதிரி மாடுகள் நிண்டிடும்.

லெபனான்காரன் ஊருக்குத் திரும்பிவந்த காலத்தில் இயக்கங்களின்ரை ஆதிக்கம் கொஞ்சம் மேலோங்கியிருந்ததால குடிச்சு வெறிச்சாலும் பெரிசாய் அட்டகாசம் செய்யாமல் அடக்கி வாசிச்சான்.

இதுக்கு இன்னுமொரு முக்கிய காரணமுமிருந்தது. இவன் லெபனானுக்குப் போறதுக்கு முந்தி, குடிச்சிட்டு அடிக்கடி வம்பிழுக்கிற அன்னமலரின்ரை கடைசிப்பொடியன் புலிகள் இயக்கத்தில் பெரிய தளபதியாயிருந்தான்.

போதாக்குறைக்கு அன்ன மலரும், “இனிமேல் இஞ்சை ஆரும் தண்ணியைப் போட்டிட்டு என்னோட தனகட்டன். வாழ்க்கையில சூரிய வெளிச்சத்தையே காணேலாமலுக்கு பங்கருக்கை போடுவிச்சு விடுறன்” எண்டு ஒரு ஸ்ரேற்மென்ரும் விட்டிருந்ததால இவன் என்னதான் நிறைவெறியில இருந்தாலும் அன்னமலரின்ரை பெயரை மறந்தும் உச்சரிக்கவே மாட்டான்.

மற்றும் படி பெரிசா மாற்ற மொண்டும் நடக்கேல்ல. ஆனால் ஊர்நிலைமை தான் கொஞ்சக்காலத்தால தலைகீழாய் மாறிட்டுது. சந்திரிகா ஆட்சிக்கு வந்து கொஞ்சக்காலம் பிரபா கரனோட தேன்நிலவு கொண்டாடினா.

பிறகு வழமை போலக் கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாய் இரண்டு பகுதியும் கீரியும் பாம்புமாகிச் சண்டை துவங்கிச்சுது. ஆமிக்காரர் பலாலியிலயிருந்து வெளிக்கிட்டுப் படிப்படியாய் வந்து சூரியக்கதிர் நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினாங்கள்.

பிறகு அங்கிருந்து தென்மராட்சிக்கு வந்து, அதால வடமராட்சிக்கு வந்து யாழ்ப்பாணக் குடாநாடு முழுக்கலையும் பிடிச்சிட்டாங்கள். புலிகள் இயக்கம் படகேறி வன்னிக்குப் போட்டுது. இதால மோசமாய்ப் பாதிப்புக்குள்ளானவர்களில் லெபனான்காரனு மொராள்.

முந்தினகாலங்கள் மாதிரிக் கிழக்கூருக்கும் தெற் கூருக்கும் வண்டில் கட்டிப் போகேலாது. எல்லாப்பக்கமும் ஆமிக்காறன் பண்டடிச்சு நிண்டுகொண்டு றூட்பாஸ் கேட்டான். இல்லையெண்டால் திருப்பிவிட்டான்.

அதால இவனுக்குத் தொழில் பாதிப்பு மட்டுமில்லை. கிழக்கூர், தெற்கூர் கள்ளுத் தவறணைகளையும் நெருங்க முடியேல்ல. எதைச் செய்தாலும் உள்ளூருக்குள்ளதான் செய்யவேண்டியிருந்தது. அதால ஆமிக்காரரைக் கண்டால் இவனுக்குச் சரியான கடுப்பாயிருக்கும்.

அதால உள்ளுர்த் தவறணையில போய்க் கள்ளடிச்சிட்டு, வெள்ளையையும் கூட்டிக்கொண்டு பொழுது படேக்குள்ள வீட்டுக்கு வருவான். வெள்ளைக்குக் கள்ளை மணந்தாலே உசாரேறி விடும். ஒண்டு ஒண்டரை அடிச்சால் என்ன நடக்கும்?

தவறணையிலேயே ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா!’ தொடங்கியிடும். இவன் என்ன செய்வானெண்டால் வெள்ளைக்குத் தன்ரை கணக்கில ஒண்டரைப் போத்தில் கள்ளை வேண்டிக் குடுத்திட்டு, பொழுது படேக்குள்ள வீட்டைக் கூட்டிக்கொண்டு வருவான். சொல்லி வேலையில்லை.

வெள்ளை பாடினால் தாளந்தப்பாது.  சும்மா அந்தமாதிரித்தான்  இருக்கும். ‘வெள்ளை! களத்தில் கேட்கும் கானங்களில் ஒண்டை எடுத்து விடுங்கோ!’ எண்டு இவன் அடியெடுத்துக் குடுப்பான். வெள்ளை இரண்டு நிமிசங்கள் அகவணக்கம் செலுத்திப்போட்டுத் துவங்கும்.

‘மறவர் படைதான் தமிழ்ப்படை
குலமானமொன்றுதான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை
அவர் வெல்வார் என்பது வெளிப்படை...
இதுமுடிஞ்ச கையோடை,
‘சிவலைமாடு கட்டியிருக்கிற
சலங்கை உடையட்டும்
சிங்களவன் கொட்டமடிக்கிற
இலங்கை உடையட்டும்...’
அடுக்க,
‘எங்கள் தலைவன் பிரபாகரன் என்று
முழங்கு சங்கே முழங்கு - அவன்
பொங்கி எழுந்தான் பொடிப்பொடியாய்
உடைந்தது பார் கைவிலங்கு
உடைந்தது பார் கைவிலங்கு
மக்களெல்லாம் மக்களெல்லாம்
பிரபாகரன் பக்கம்
மக்கள்படை என்றைக்கும்
அவன் பக்கம் தான் நிற்கும்
மக்கள்படை என்றைக்கும்
அவன் பக்கம் தான் நிற்கும்’

எண்டு வரிசையாய்க் காசியானந்தன்ர பாட்டுகள் வந்துகொண்டிருக்கும்.

இதுக்கெல்லாம் ஒரு வெற்றுத் தார்ப்பீப்பாவைக் கவிட்டுப்போட்டு லெபனான்காரன் அந்தமாதிரிப் பக்கவாத்தியம் வாசிப்பான். இதுமுடிய வெள்ளை புதுவை இரத்தினதுரையின்ர பாட்டுகளுக்குத் தாவும்.

‘பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே...’, ‘இந்தமண் எங்களின் சொந்த மண் இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்...’, ‘எதிரிகளின் பாசறையைத் தேடிப் போகிறோம் தமிழ் ஈழமண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம்...’, ‘ கடலதை  நாங்கள் வெல்லுவோம் கடற்புலி நாங்கள் ஆளுவோம்...’ எண்டு வரிசையாய்ப் பாடிக்கொண்டு வந்து கடைசியாய் இரண்டு பாட்டை லெபனான்காரனோட சேர்ந்து பாடுவான்.

முதல்ல, ‘வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம் தள்ளிவலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்...’ வரும். இதுமுடியத்தான் உச்சக் கட்டந் தொடங்கும். ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு...’ எண்டு வெள்ளை தொடங்கின கையோட,

‘வேங்கைகளானவர் நாங்கள்
எந்த வேளையும் சாகலாம் போங்கள்
வேங்கைகளானவர் நாங்கள்
எந்த வேளையும் சாகலாம் போங்கள்...’

வெள்ளையை மேவித் திரும்பத்திரும்ப உச்சத் தொனியில் லெபனான்காரன் பாடுவான். தொடர்ந்து, இரண்டும் சேர்ந்து கைத்தாளம் போட்டுக்கொண்டு,

‘தலைவன் வழியிலே தடைகள் இராது
தடைகள் இருப்பின் தலைவன் இரான்
புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகம் என்றே நீ கூறு...’

எண்டு பைலா அடிக்கத் தொடங்குவாங்கள்.

இனிப் பொறுக்கேலாது எண்ட கட்டத்தில லெபனான் காரன்ர கடைசித் தங்கைக்காரி பதுமினி அதுக்குள்ள என்ர பண்ணுவாள்.

“எடேய்! குறுக்காலையள்ளுவாரே! இப்ப ஆமிக்காறர் வந்தாங்கள் எண்டால் முழுப்பேருக்கும் தீட்டி போடுவாங்களடா! நிப்பாட்டுங்கோடா உங்கட கூத்துக் கும்மாளத்தை நாசங்கட்டுவாரே!”

அதைக் கேட்டோண்ண லெபனான்காரன் சும்மா இருப்பானே? அவனுக்கும் ஏறியிடும். “போடி அங்கால! அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!” எண்டு கத்துவான்.

“எனக்கு உன்னோட கதையில்ல! வெள்ளை யண்ணை நீ எழும்பி வீட்டை நட! தேடப் போகுதுகள்!” எண்டவள் வெள்ளையை உறுக்குவாள். வெள்ளை அதோட இருந்த இடந்தெரியாமல் நைசா நழுவியிடும்.

லெபனான்காரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில புதுமை மலரக்கா இருக்கிறா. எதிரிக்கும் இரங்கக் கூடிய தங்கமான மனிசி. அவவின்ர மனிசன்காரன் தில்லைநாதன் எண்டு சேவையராய் வேலை பார்த்தவர்.

அந்தாள் அன்ராயபுரம், வவுனியா, மதவாச்சி, புத்தளம், சிலாபம் எண்டு ரிற்ரயர் பண்ணும்வரைக்கும் வெளி மாவட்டங்களிலதான் வேலை செய்தது. ஒரு காலமும் சொந்த மாவட்டத்தில வேலை செய்யேல்ல.

பப்ளிக் கொலிடேயள், புதுவரியம், தீபாவளி, கிறிஸ்மஸ் எண்டு லீவுகாலங்களில வீட்டில வந்து நிக்கும். பிறகு போகிடும். புதுமை மலரக்காவுக்கு விசு, ராம் எண்டு இணைப்பொடியள்.

அந்த மனிசிக்கு மெல்லிசையில கொஞ்சம் ஈடுபாடு. அதுதான் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தியின் நினைவாகப் பிள்ளையளுக்கு விசு, ராம் எண்டு பேர் வைச்சிருக்கிறார்.

அவங்கள் ரெண்டு பேரும் லெபனான்காரனோட ‘ரஜினிமாமா! ரஜினி மாமா!’ எண்டு நல்ல வாரப்பாடு. சொல்ல மறந்திட்டன், லெபனான்காரன் அந்தக்காலத்தில பேமஸா ஓடின தர்மத்தின் தலைவன், குருசிஷ்யன், மனிதன் படங்களில வாற ரஜினி மாதிரித்தானிருப்பான்.

விசு, ராம் ரண்டுபேரும் எப்பவும் ரஜினி நடிச்ச படங்களைத் தான் பாப்பாங்கள். அதால அவங்கள் லெபனான் காரனை ‘ரஜினிமாமா!’ எண்டு கூப்பிடத் தொடங்கி, பிறகு அந்தப் பெயர் அவங்களுக்கிடையில நிலைச்சிட்டுது. லெபனான்காரன் தன்ரை புளுகு மூட்டை எல்லாத்தையும் அவங்களிட்டைத்தான்  அவிட்டு விடுவான்.

96 பிற்பகுதியில ஊருக்குள்ள ஆமி கால்வைச்ச நேரம். ஒருநாள் பின்னேரம் இவனுக்கு நிறைவெறி. கனகராவளவுப் பிள்ளையார்கோயில் வாசற்படியில வந்து இருந்துகொண்டு, ‘இந்த மண் எங்களின் சொந்த மண்! இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன்?’

எண்டு பாடத் தொடங்கினான். இந்தச் சத்தத்தைக் கேட்டிட்டு விசுவும், ராமும் ஓடிவந்திட்டாங்கள்.

இவன்  பாட்டுக்கு ஓரிடைவெளிவிட, விசு “ரஜினிமாமா! உங்களுக்கு ஆமிக்காரரைக் கண்டால் பயமில்லையோ?

எங்களுக்கெண்டால் சரியான பயம்” எண்டான். அதைக் கேட்டோண்ண இவனுக்கு உசார் ஏறியிட்டுது.

“எனக்கோ? ஆமிக்குப் பயமோ? அது என்ர அகராதியிலயே கிடையாது. ரண்டு ஆமிக்காரரைப் பிடிச்சு ஒருநாள் என்ர வண்டில் சில்லுகளில தேடா வளையக் கயித்தால கட்டிப்போட்டு மாட்டைப் பூட்டினன்.

மகத்தையா! மகத்தையா! மாட்டைப் பூட்ட வேண்டாம். எங்கள அவித்துவிடுங்க! எண்டு மண்டாடினாங்கள். பாக்கப் பாவமாயிருந்திச்சு. பிறகு அவிட்டுவிட்டிட்டன். இப்பவும் என்னைக் கண்டால் அவங்களுக்குத் தொடையள் நடுங்குமடா தம்பிமாரே!”

எண்டு ஒரு புளுகு மூட்டையை அவிட்டு விட்டான். அந்தநேரம் பாத்துக் கோயில் முன்வீதியால பத்துப் பதினைஞ்சு ஆமிக்காரர் ரோந்தில வந்திட்டாங்கள். அவங்களைக் கண்டோண்ண விசுவுக்கு ஒரே கொண்டாட்டமாய்ப் போச்சு.

“ரஜினி மாமா! இவையளில இரண்டுபேரைப் பிடிச்சுத் தேடா வளையக் கயிற்றால வண்டில் சில்லுகளில கட்டுவமே?” எண்டு கேட்டிட்டுத் திரும்பிப் பார்த்தால் லெபனான்காரனைக் காணேல்ல.

மாயமாய் மறைஞ்சிட்டான். விசுவுக்குச் சரியான ஏமாற்றமாய்ப் போச்சு. அடுத்தநாள் பின்னேரம் இவனைக் கோயிலடியில சந்திக்கேக்குள்ள விசு கேட்டான், “என்ன ரஜினிமாமா நேற்று ஆமிக்காரரைக் கண்டு பயந் தோடிட்டியள்?” எண்டு. இவனே இந்த மாதிரிக்கேள்விக்கெல்லாம் சளைக்கிறவன்?

“மண்ணாங்கட்டி! ஆமிக்காவது நானாவது பயப் பிர்றதாவது. பேப்பொடியா! நான் தேடாவளையக் கயிறெடுக்கப் போனனடா! வந்து பாத்தா ஆமிக்காற னெல்லாம் போகிட்டான். நீயெண்டாலும் அவங்களை மறிச்சு வைச்சிருக்கலாமே?

மறிச்சு வைச்சிருந்தால் நான் ஆரெண்டு காட்டியிருப்பன். இது அவங்களைப் போக விட்டிட்டு இப்ப விழல்கதை கதைக்கிறாய்!” எண்டான். விசுவால எதிர் நியாயங் கதைக்க முடியேல்ல.

இது நடந்து சரியாய் மூண்டாவது நாளிரவு லெபனான்காரன் வீட்டில எதிர்பாராதவிதமாய் ஓர் அசம்பாவிதம் நடந்தது. இதுக்கு முதல்நாள் கோப்பிறேசனில கள்ளடிச்சிட்டு முசுப்பாத்தி பண்ணின ஆக்களுக்கு ரோந்து போன ஆமிக்காறர் முதுகு முறிய வெளுத்திருக்கிறாங்கள்.

அதால கோப்பிறேசன் நடத்திற சின்னக்குட்டி, ‘அன்பார்ந்த தமிழீழப் பெருங்குடி மக்களே! கோப்பறேசனில் மது அருந்துவோரை அமைதி பேணும்படி பாதுகாப்புப் படையினர் அன்பாகக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

எனவே இவ்விடத்தில் அமைதி பேணுவதில் பெருஞ்சிரமத்தை எதிர்நோக்குவோர் கொள்கலன்களில் மதுவைப் பெற்றுச்சென்று தத்தமது வீடுகளில் வைத்து அருந்துமாறு தயவாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்’ எண்டு பொது அறிவித்தல் ஒன்றை விடுத்தாப்போல, இவன் பாத்தான் என்னத்துக்குத் தேவையில்லாத வீண்சோலியெண்டிட்டு மூண்டுபோத்தல் கள்ளும் அரை டிஷ் மாட்டிறைச்சிப் பொரியலும் வாங்கிக்கொண்டு பொழுது சுருங்க முன்னம் வீட்டை வந்து சேந்திட்டான்.

அண்டைக் கெண்டு இவன்ர தமையன் சந்திரசேகரும் வீட்டில நிண்டான். தமையனை விட்டுட்டுத்தான் மட்டும் தனியக் குடிக்கிறதோ?

எண்டிட்டு அவனையுங் கூப்பிட்டான். அவன் என்ன செய்தான்?

தகப்பனை விட்டுட்டுக் குடிக்கிறது சரியில்லை எண்டுட்டு, “அப்பு! நீயும் வாளை” எண்டு கூப்பிட்டான். இப்ப தேப்பன்காரன் நடுவில. வலப்பக்கம் தமையன்காரன்.இடப்பக்கம் எங்கடையாள். கச்சேரி ஆலாபரணத் தோட மெதுவாத் தொடங்கிச்சுது.

தேப்பன்காரன் தன்ர கையில வண்டில்மாட்டைத் தராமல் இவன்ர பொறுப்பில விட்டது சந்திரசேகருக்குச் சரியான கடுப்பு. அவனுக்குக் கொஞ்சம் உசார் ஏறினோண்ண, “கோணர் சுந்தரி! நீ செய்த வேலை சரியோ? மூத்தவன் நானொருத்தன் முழுசாய் இருக்கத் தக்கதாய் ஒரு பொறுப்பில்லாத முழுக் குடிகாரனிட்ட வண்டில் மாட்டைக் குடுத்திருக்கிறாய். அப்ப நான் என்ன சிரைக்கிறதுக்கே இருக்கிறன்?” 

எண்டொரு தொடக்கந் தொடங்கினான். தேப்பன்காரன் அரையுங் குறையுமான ஏற்றத்திலயிருந்ததால கொஞ்சம் அடக்கி வாசிச்சார். “எட விசர்க் கொந்தா! நீ சும்மா கல்லில குத்தாதை! இவன் செத்துப் பிழைச்சு வந்திருக் கிறான். பாவமெல்லே!

அதுக்கை உன்னைப்போல மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பேயனில்லையிவன். நல்ல வாயாடி. வியாபாரத்துக்குப் பொருத்தமான ஆள் எண்டிட்டுத்தான் வண்டில் மாட்டை இவன்ர கையில குடுத்தனான். சரியே! விளக்கப் பூழலில்லாமல் பேக் கதைபேசாதை  கண்டியோ?”

லெபனான்காரன் ஏற்கனவே செம ஏற்றத்தில இருந்தான். இதைக் கேட்டோண்ண அவனுக்கு இன்னும் ஏறியிட்டுது. “என்னடா சொன்னனீ அயர்லி சறுமூத்தா! மும்மூத்தா!....” எண்டு கத்திக்கொண்டே தமையன்காறனுக்குக் கன்னத்தைப் பொத்தியொண்டு குடுத்தான்.

ஏய்ம் தவறி தேப்பன்ர கன்னத்தில அச்சொட்டா விழுந்திச்சுது. பதிலுக்குத் தமையன், “பேப்பூழல்! முந்தநாள் பிறந்த மூத்திரச் சேங்கு!

எனக்குக் கைநீட்டிறியோ?” எண்டுட்டு லெபனான் காரனுக்குக் கன்னத்தில வெளுக்க, அதுவும் ஏய்ம் தவறித் தகப்பன்ர கன்னத்தில ஸிமூத்தா விழுந்திச்சுது. அந்தாள் பதகளிச்சுப்போய், “நாய் வேசைமக்களே! எனக்கேன்ரா அடிக்கிறியள்?” எண்டு மெல்ல விலத்தினாப்போல, இப்ப ஏய்ம் தவறாமல் இரண்டு பேரும் நேரடி மோதல்ல இறங்கிச்சினம். இரண்டாவது அடியில தமையன் நிலத்தில சரிஞ்சிட்டான்.

இவன் அவனுக்குமேல ஏறியிருந்து தொண்டையைத் திருகத் தொடங்கியிட்டான். இது விசயம் பிழைக்கப் போகுது எண்டுட்டு மூத்ததமக்கை குட்டிப்பரமேசும் கடைசித் தங்கை பதுமினியும் ஓடியந்து வெளி முத்தத்தில நிண்டு, “ஐயோ! ஐயோ! கொல்லுறான்! கொல்லுறான்! காப்பாத்துங்கோ!” எண்டு குழறிப் போட்டு இவனைப் பிடிச்சுத் தள்ளிவிட்டாகள்.

இவன்ர பிடி தளர்ந்தோண்ண அவன் இருமிக்கொண்டு  எழும்பி ஓடினான்.

“பறை வேசையள்! ஏனடி தள்ளி விழுத்தினனீயள்? இண்டைக்கு உவனைக் கொல்லாமல் விடன்!”

எண்டு பின்னால ஓடினான். இந்தக் களேபரத்தில புதுமை மலரக்கா பொடியளோட எங்கட வீட்டை யோடி வந்தா. சொல்ல மறந்திட்டன். எங்கட வீட்டுக்கு அடுத்த வீடுதான் புதுமை மலரக்கா வீடு.

அவ ஓடியந்து புட்டு அவிச்சுக்கொண்டிருந்த என்ரை அம்மாவை அருட்டினா.

“அக்காத்தை! அக்காத்தை! உவங்கள் குடிச்சிட்டுச் சண்டை பிடிக்கிறாங்கள். தமக்கையும் தங்கையும் குளறியடிக்கிறார்கள். வாவன் ஒருக்காப்போய் விலக்குப் பிடிச்சு விடுவம். அயலுக்கை சரியில்லை யெல்லே!

அம்மா இருந்த இடத்தால எழும்பாமலுக்கு, “என்னடி உனக்கு வேறை வேலையில்லையே? குடிகாரர் சண்டை தானாய் அடங்கியிடும். அதுக்கை இப்பிடிக் கொத்த இடத்துக்கு ஒருக்காலும் விலக்குப் பிடிக்கப் போகக்கூடா. அவங்கள் தலைகால் தெரியாமல் நிப்பாங்கள். என்னடி!

எண்டு ஏறுக்குமாறாய்க் கேட்டாலும் கேப்பாங்கள். அது எங்களுக்குத்தான் கடைசி வரைக்கும் சங்கையீனமாய்ப்போம். பேசாமல் போய் உன்ரை அலுவலைப் பார்!” எண்டு சொல்லிப் போட்டு அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா.

“என்னக்காத்தை உப்பிடிச் சொல்லுறாய்? நீ வராட்டில் இரு. நான் போறன். தம்பி நீ வாறியோ?” எண்டு என்னைக் கேட்டுட்டு லெபனான்காரன்

வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய்ப் பொடியனை இழுத்துக்கொண்டு போக, நானும் பின்னால புதினம் பாக்க ஓடினன். அங்கை சந்திரசேகர் கையில உலக்கையோட நிக்க, குட்டிப்பரமேஸ் அவனை இழுத்துப் பிடிக்க, லெபனான்காரன் ஒரு மொட்டைக் கத்தியோட நிக்க, அவனைப் பதுமினி இழுத்துப்பிடிக்க, ஒரே களேபரமாயிருந்திச்சுது. தகப்பன்காரன் “நாய் வேசைமக்களே! போங்கோடா அவர வரே!” எண்டு  தாவராத்தில  சரிஞ்சிருஞ்சு  கத்துறார்.

“ஐயோ! இதுகளைப் பெத்தநேரம் ரண்டு அம்மிக்குழவியைப் பெத்திருக்கலாம். மனிசர்  வீட்டில நிம்மதியாய் இருக்கேலுதே?” எண்டு தாய்க்காரி குஞ்சுப்பிள்ளை அலப்பாரிக்கிறா.

புதுமை மலரக்கா வைக் கண்டோண்ண பதுமினி லெபனான்காரனிட்ட, “அண்ணை! அங்கை பார் புதுமை மலரக்கா வந்திட்டா! கத்தியைக் கீழை போடு!” எண்டாள். லெபனான்காரன் நிமிர்ந்து வடிவாய்ப் புதுமை மலரக்காவைப் பாத்திட்டு, “அயர்லி சறுமூத்தா!

மும்மூத்தா! ஏன்ரி நான் புதுமை மலரக்காவுக்கு ஓக்கமாட்டன் எண்டு நினைச்சியோ? உனக்கு ஓப்பன். பக்கத்தில நிக்கிற மற்றவளுகளுக்கும் ஓப்பன். நான் லெபனான்காறிகளுக்கே ஓத்தவன்ரி. விடடி என்ர கையை நரிவேசை!” எண்டான். அதில நிண்ட எனக்கே பெருஞ் சங்கையீனமாப் போச்சுது. புதுமை மலரக்காவுக்கு  என்ன  மாதிரியிருந்திருக்கும்?

(இதோட கதை முடிஞ்சுது. இதைக் கேள்விப் பட்டுட்டு அம்மா என்ன சொல்லியிருப்பா எண்டது உங்களுக்குத் தெரியுந்தானே! இந்த அசம்பாவிதத்துக்குப் பிறகு புதுமை மலரக்கா பகலில எந்தவொரு பொது இடத்திற்கும் இரண்டு வரியமாப் போறேல்ல. மற்றது, லெபனான்காரனும் மூண்டுவரியத்தால வண்டில்ல தென்னம்பொச்சு ஏத்திக்கொண்டு வரேக்குள்ள தவறி விழுந்து செத்திட்டான். அவன் தவறி விழுந்து சாகேல்ல. ஆயத்துச் சந்திச் சென்றிக்குள்ள நிண்ட ஆமிக்காறர் இவனுக்குத் துவக்குச்சோங்கால வாகாய் வெளுத்ததாலதான் செத்தவன் எண்டொரு கதையுமிருக்கு. இதையெல்லாம் நான் கதைக் குள்ள சேர்க்கேல்ல)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer