பாக்கு பொறுக்குபவர்கள்

சந்தோஷ் ஏச்சிக்கானம்
தமிழாக்கம்: டாக்டர் ஜி. வி. ரகுராம்

பகிரு

மலையாளச் சிறுகதை

சில மனிதர்கள் இப்படித்தான். அவர்கள் வாழும் வாழ்க்கையின் மீது நீர்வாழ்ப்பூச்சிகளைப் போல் ஏதாவது எழுதி வரைந்தபடி இருப்பார்கள். ஆனால், ஒன்றும் சரியாக விளங்காது. ஒரு சித்திரமோ, குறைந்தது ஒரு வார்த்தைகூட உருவாக்க முடியாதபடி மொத்தமாக எல்லாவற்றிலும் ஒரு வெறுமை வந்து நிறைந்து அவர்களை முற்றிலும் தனிமைப்படுத்தி விடும். கடைசியில் கோடையில் வற்றிவிடும் சிறிய குட்டையோ குழியோ ஆக மாறி அவர்களின் உலகம் முடிவு பெறும். அப்படிப்பட்டவர்களில் ஒருவன் தான் சந்துரு அண்ணன்.

பத்தோ இருபத்தஞ்சோ வருஷங்களுக்கு முன் ஊரைவிட்டு ஓடிப்போன ஒரு மனிதன் இன்று காலை நான் ஷேவிங் க்ரீம் தடவியபடி நிற்கையில் திரும்பி வருகிறான். போகும்போது அவனிடமிருந்த அந்த  மஞ்சள் துணிப்பை திரும்பி வந்த போதும் கையில் இருந்தது.

“என்னங்க, வெளியிலே ஒருத்தர் பாக்க வந்திருக்காங்க,”உரக்கச் சொன்னாள் மனைவி.

“யாரு?”

“எனக்குத் தெரியாது. முன்னாடி உங்கள் கூடயிருந்த நண்பன்னு சொன்னார்.”

“என் நண்பனுங்க எல்லாரையும் உனக்குத் தான் தெரியுமே.”

“தெரியும்... ஆனா, இவர நான் பாத்ததில்லே.”

சவரம் செய்யும் ரேஸரால் க்ரீமை வழித்துவிட்டு வாஷ்பேசினில் தண்ணீரை ஓடவிட்டு டவலால் முகத்தைப் பொத்திக்கொண்டு வெளியே வந்தேன்.

“ஜெகன், என்னைத் தெரியுதா?”

ஒரு மஞ்சள் பையைச் சுருட்டிப் பிடித்தவாறு முன் வரிசையில் விழுந்துபோன இரண்டு பற்களின் இடை வெளியில் ஒருவர் முற்றத்தில் நின்றபடி சிரிக்கிறார். இந்த முகம் எதுவென்று என் மனதைக் குடைந்து பார்த்தேன்.

விரிவான தேடலில் எனக்கு முக்கியமான இரண்டு மூன்று தடயங்கள் கிடைத்தன. மூக்கின் கீழே இடது புறமாக ஒரு கரும்புள்ளி. புருவத்தில் வந்து விழுகின்ற குச்சி போன்ற முடி ஒரு பாம்பு படமெடுத்து நிற்பது போலக் கர்வமாகக் கொத்தத் தயாராக நிற்கும் அந்த மூக்கு. கண்டுபிடிக்கச் சிரமமான இந்த ஆள் சந்துரு அண்ணன்தான். அந்த நேரத்தில் ஒரு கடிகாரத்தை விடச் சுலபமாகப் பத்து இருபது வருஷங்களை என் உடம்பிலிருந்து எனக்கு அகற்றி விட முடிந்தது. தற்போது நான் சந்துரு என்ற வேலையாளுடன் சின்னச் சின்னச் சந்தேகங்கள் கேட்டுத் திரிந்து கொண்டிருக்கும் பத்து வயது சிறுவன். என் டவுசரின் பின் பக்கத்தில் ஒரு ஓட்டையிருக்கிறது. அதன் வழியாக ஐம்பது பைசா வட்டத்தில் என் புட்டத்தைப் பார்க்க முடியும். ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

சந்துரு அண்ணனின் கண்களுக்குள் பார்த்தபோது காற்றில் பாக்கு மரங்கள் மெல்ல அசைந்தன. அந்தக் கரங்களை நான் அழுத்திப் பிடித்தேன்.

அப்போது நினைவுகளில் ஒரு தீப்பொறி கீழே விழுந்து ஏதோ ஒரு பனிக்காலத்தில் நாங்கள் பெருக்கிக் கூட்டி வைத்த சருகுகள் பற்றிக்கொண்டன. மரத்துப் போன உள்ளங்கையில் தீயின் சுடர்கள் அன்று பகிர்ந்த இதமான வெம்மை இன்னும் மிச்சமிருக்கிறது. நான் அந்தக் கரத்தைப் பற்றிக்கொண்டு என் கன்னத்தில் சேர்த்து வைத்தேன். மெதுவாகக் கண்களை மூடினேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சந்துரு அண்ணன் எங்கள் வீட்டு ‘உரல் அறை’யில் (நெல் குத்தும் தனி அறை ) படுத்துக்கொண்டிருக்கிறார். கைக் குத்தலரிசியின் வாசனை கமழும் சிமென்ட் பூசாத அறையின் சுவரோடு ஒட்டியபடி களிமண்ணால் செய்த கோழிக்கூட்டுக்கு மேலே ஒரு சாக்குப் பையை விரித்து அதன் மேல் ஒரு கோரைப்புல் பாயும் விரித்துதான் என்னைவிடப் பத்து வயது மூத்தவனான சந்துரு அண்ணன் வழக்கமாகத் தூங்கினார்.

பொழுது விடிவதற்குள் எங்கள் தாத்தா, சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் சந்துரு அண்ணனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு பாக்கு பொறுக்கி சேகரிக்கத் தோப்புக்குப் போய்விடுவார். பனி படர்ந்த புல்லில் நடக்கப் பிடிக்கும் என்பதால் அவர்களைத் தொடர்ந்து  நானும்  கிளம்பி  விடுவேன்.

நாங்கள் நடந்து வரும் ஓசை கேட்டதும் பாக்கு மரங்களுக்கிடையே தேங்கி நிற்கும் மங்கலான அரை இருட்டிலிருந்து அலகில் பழுத்த பாக்கின் சாறு படிந்த வௌவால்கள் அங்குமிங்கும் பறக்கும்.

வௌவால்கள் கடித்துப் போட்ட பாக்கைத் தரையிலிருந்து பொறுக்கியெடுக்கையில் சந்துரு அண்ணன் சில சமயம் செக்கச் சிவந்த ஒன்றை எடுத்து என் கன்னத்தில் வைத்து மெதுவாக உரசுவார். அப்போது மிகப் பரவசமாக இருக்கும். பனித்துளிகளின் குளிருக்குள்ளேயே என் உடம்பு ஒரு நீர் நிலைக்குள் இறங்குவது போல் இருக்கும். ஒரு கத்தியைப் போல் அது அசையாமல் பலவகை மீன்களுக்கிடையில் நெடுநேரம் கிடக்கும். அப்போது என் கண்கள் மெல்ல மூடும்.

நாங்கள் பாக்கையெல்லாம் சேர்த்துக் கூடைக்குள் போட்டு வைப்பதற்குள் கோரைப் புற்களின் புதரிலிருந்து வெளியேறி நேராகக் கால்வாய்க்கு இறங்கிய தாத்தா உடம்பைச் சுத்தப்படுத்திக் கோமணத்தைக் கட்டிக்கொண்டு திரும்பி வருவார். அப்போது சென்ற இரவு நண்டுகளைத் தின்று பசியாறிய கொக்கொன்று தாத்தாவின் கருத்த ஒல்லியான உடம்பின் குறுக்காகப் பறந்து செல்லும். பள்ளியில் கறுப்புப் பலகையில் வெள்ளை ‘சாக்பீஸால்” வரைந்தது போல, இந்த வெண்மைக் கீற்று இன்னும் சற்றுநேரம் என் கண்களில் தங்கி நிற்கும்.

“இத்தனை நாளா எங்கிருந்தீங்க, சந்துரு  அண்ணா?” நான் கேட்டேன்.

பரிமாறி வைத்திருந்த காலை உணவிலிருந்து கண்ணை எடுக்காமல் அவர் தனக்குத் தானே சிரித்தார். மூக்கின் நுனியைத் தடவி சற்று நேரம் பேசாமல் இருந்து பிறகு இட்லியை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார்.

“உங்க குடும்பமெல்லாம்...” வீட்டுக்கு வந்த தன் கணவனின் பழைய நண்பனிடம் ஏதாவது கேட்க வேண்டுமே என்று நினைத்து ரேகா கொஞ்சம் சட்னியை அந்தப் பலகாரத்தின் மீது ஊற்றி நட்பு கலந்த உரையாடலை ஆரம்பித்தாள். சந்துரு அண்ணன் அதற்கும் பதிலேதும் சொல்லவில்லை. ஆனால்,  இம்முறை அவர் முகத்தில் சிரிப்பில்லை. சாப்பிட்ட பாத்திரத்தை எடுத்து வெளியே நடந்தார். மனைவி என்னைப் பார்த்தாள். சாப்பிட்ட பாத்திரங்களை அவரவர் துலக்கி வைக்க வேண்டும் என்பது எங்கள் ஊரில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்ட பழக்கம் என்பது அவளுக்குத் தெரியவில்லை. சந்துரு அண்ணா தன் ப்ளேட்டை சமையலறை மேடையில் கவிழ்த்து வைத்துவிட்டு முன் வாசலுக்கு வந்தார். தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துப் பற்ற வைத்தார். முற்றத்தைச் சுற்றியிருந்த சிறு மேட்டில் அமர்ந்தபடி தோப்பை ஒரு நோட்டம் விட்டு, இடையில் என்னை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்.

இந்தத் தோப்பை நீ இப்படிக் கவனிப்பாரற்று அலங்கோலமாக்கி விட்டாயே என்ற கோபமும் வருத்தமும் அந்தக் கண்களில் தெரிந்தது.

தாத்தா இறந்த பிறகு அம்மாவுக்குத் தன் பங்காகக் கிடைத்தது இந்தத் தோப்பு. என் அக்காவுடன் அவள் ஷார்ஜாவுக்குச் சென்று நிரந்தரமாகத் தங்கிவிட்ட பிறகு இந்தத் தோப்புக்கு நான் உரிமையாளன் ஆனேன். ஒரு புத்தகப் பதிப்பகத்தைச் சுமாராக நடத்திக் கொண்டு செல்கையில் எனக்கு இந்தத் தோப்பைக் கவனிக்க முடியாமல் போயிற்று. புதர் மண்டிக் காடாகக் கிடந்த இடத்தை வெட்டிச் சுத்தமாக்கி வருடம் இரண்டாகி விட்டது.

மரங்களைச் சுற்றி உரமிடும் குழிகளை எடுப்பதில்லை. உரம் போடுவதுமில்லை. வருடாவருடம் யாருக்காவது குத்தகைக்குக் கொடுத்து விடுவேன்.

கிடைக்கிற விளைச்சலை வாங்கி வைப்பேன். அதற்கிடையில் பல வியாதிகள் வந்து முக்கால்வாசி பாக்கு மரங்களின் மண்டை காய்ந்து விட்டது. பந்தல் போட, வேலி கட்ட என யார் யாரோ வந்து சில மரங்களை வெட்டிச் சென்றனர். தோப்பையே விற்று விடலாமென்று பார்த்தால் பட்டணத்திலிருந்து சற்றுத் தூரம் உள்நோக்கியிருந்தபடியால் யாருக்கும் வாங்க விருப்பமில்லை.

அதுவுமன்றி, தாத்தாவின் நினைவு இங்கே இருப்பதால் துச்சமான தொகைக்கு இதை விற்றுவிடவும் மனசு வரவில்லை.

“இவர் இன்னைக்குத் திரும்பிப் போயிடுவாரா?” ரேகா கேட்டாள்.

வெளிப்படையாக விருந்தாளியாய் வந்தவரிடம் கொஞ்சம் வாஞ்சையுடன் பேசியிருந்தாலும் முற்றிலும் பரிச்சயமில்லாத ஒருவரின் இருப்பு அங்கே அவளைப் பதட்டம் அடையச் செய்தது என்பது அந்தக் கேள்வியிலிருந்து புரிந்தது.

“தெரியாது,” என்றேன்.

அவள் என்னை முறைத்துப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் அடைக்கலம் கொண்டாள்.

பீடி பிடித்து முடித்ததும் சந்துரு அண்ணன் நேராகத் தோப்புப் பக்கம் போனார். போகிற வழியில் காடாகக் கிடந்த இடத்திலுள்ள புதர்களைக் கையால் வகிர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

மோட்டார் வைத்திருந்த சின்ன அறையெங்கும் சிதலெடுத்து ஒரு புறம் அப்படியே சரிந்து ஒடிந்து தொங்கிக்கொண்டிருந்தது.

துருப்பிடித்த குழாய்களின் மீது நிறைய மரத் தவளைகள் (தேரைகள் ) அமர்ந்திருந்தன. சந்துரு அண்ணனைப் பார்த்ததும் அவை உரக்கக் குரல் எழுப்பின. கிணறெங்கும் ஒரே பாசி. பாக்கு மரத்திலிருந்து எப்போதாவது ஒரு பழுத்த பாக்கு கீழே விழுந்து அந்தப் பாசியைச் சற்று விலக்கும். திரும்பப் பழையபடி ஆகிவிடும். அத்துடன் பாக்குமரமும் கிணறும் நடத்தும் உரையாடல் முடிவடையும்.

சந்துரு அண்ணனைத் தோப்பிலேயே விட்டுவிட்டு நான் காரைக் கிளப்பினேன். நேரம் தாமதமானதும் ஆபிஸிலிருந்து போன் அழைப்பு வந்திருந்தது.

இரவு திரும்பி வந்து காரைப் போர்ச்சில் ஏற்றி வைப்பதற்குள் மனைவி ஓடி வந்தாள். காலையில் அவள் முகத்திலிருந்த பயமும் எரிச்சலும் மாறி அவள் முற்றிலும் சந்தோஷமாகத் தெரிந்தாள்.

என் கையைப் பிடித்து நேராக ‘உரல் அறைக்கு அழைத்துச் சென்றாள். தன் கையால் மெதுவாகக் கதவை அழுத்தினாள். அதன் பலகை அசைந்ததும் கைக்குத்தல் அரிசியின் வாசனையும் தவிடின் வாடையும் எனக்கு மீண்டும் உணர முடிந்தது. நானே மறந்து போயிருந்தேன், எனினும் அந்த வாசனை அங்கே உள்ளேயே இருந்திருக்கிறது.

அவள் மின்விளக்கைப் போட்டாள். கோழிக் கூட்டுக்கு மீதாகப் பாயை விரித்துத் தூங்கிய படியிருந்தார் சந்துரு அண்ணன்.

சுவரிலிருந்த ஆணியில் அவரின் மஞ்சள் பை மாட்டப்பட்டிருந்தது. அப்போது எனக்குச் சந்துரு அண்ணனை எழுப்பிவிட்டுப் பச்சைப் புல்லின் பனித் துளிகளை மிதித்துச் சிதற வைத்தபடித் தோப்புக்கு ஓடவேண்டும் போலிருந்தது. பனியால் கழுவிய என் உள்ளங்கால்களில் ஒட்டியிருந்தன தொட்டால் சுருங்கி விதைகள். என் கால் கட்டை விரலைக் கடந்து ஊறுகிறது சிற்றெறும்பு.

“உள்ளே படுக்கச் சொல்லியிருக்கலாமே?” என்று மனைவியைக் கடிந்தேன்.

“சொன்னா கேட்டாத்தானே? இன்னைக்குப் பூரா தோப்பிலேயேதான் இருந்தார். காடாயிருந்ததை  எல்லாம் நிறைய வெட்டியாச்சு. மண்டையில்லாத இரண்டு பாக்கு மரங்களை வெட்ட ஆளுங்கள ஏற்பாடு பண்ணியாச்சு.”

எதற்காகச் சந்துரு அண்ணன் இத்தனை காலத்துக்குப் பிறகு இந்தத் தோப்பைத் தேடி வந்தார்? அவர் கால்படாத ஒருதுளி மண்கூட இந்தத் தோப்பில் இல்லை. வயோதிகம் என்பது பின்நோக்கிப் பாய்கிற ஒரு நதியே. வருடங்கள் பல கடந்து போன பயணத்தில் அவர் எங்கேயாவது மரணத்தை நேரில் சந்தித்து இருக்கலாம். மரணத்தின் கையில் நினைவுகளின் கற்கள் உண்டு. கல்வீச்சு அதிகமாகிவிடவே ஓரடி கூட முன்னால் வைக்க முடியாமல் அவர் திரும்பி ஓடி இருக்கக்கூடும். எது எப்படியானாலும் ஒரு மாதத்துக்குள் தோட்டத்தின் தோற்றமே மாறிவிட்டது. வரிசையாக நட்டு வைத்த புதிய பாக்கு மரக்கன்றுகள் காற்றிலாடின.

கிணற்றிலிருந்த சருகுகளையும் பச்சை இலைகளையும் அகற்றியாயிற்று. டீசல் மோட்டார் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

தெளிந்த நீரில் தவளைகள் குதித்து விளையாடின. ஓடையின் ஒரு பக்கத்தில் மதகு கட்டி நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒரு கொக்கு வந்து தண்ணீருக்குள் எட்டிப் பார்த்தது.

கேள்வியொன்றும் கேட்கவில்லை என்பதால் ஏராளமாகப் பீடி வாங்கிக் கொடுத்து ஒருத்தரைச் சும்மா இப்படி வேலை வாங்குவது சரிதானா? கூலியாக ஏதாவது ஒரு தொகையைப் பேசி விட யோசித்தேன். ஊதியத்தைப் பற்றிப் பேசியபோது சந்துரு அண்ணன் ஒன்றும் சொல்லாமல் வழக்கம் போல என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு வேலைக் கருவிகளுடன் தோப்புக்கு நடந்து விட்டார்.

“இந்தச் சந்துரு அண்ணன் ஒரு காலத்தில் திருடனாக இருந்தாரா?”

ஒரு நாள் இரவு உணவு சாப்பிடும்போது மனைவி சட்டென்று கேட்டாள்.

“அவருக்குத் திருட்டுத்தனம் இருந்ததுன்னு கேள்விப்பட்டேன். அக்கம்பக்கத்தில் இருந்தவங்க தான் சொன்னாங்க. உண்மையா?”

நான் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை.

“இங்கேயிருந்து என்னமோ திருடினதுக்குத் தானே தாத்தா அவரை விரட்டிவிட்டாரு?”

ஒரு விவாதத்துக்குத் தயாராக அவள் என் எதிரே அமர்ந்து தொடர்ந்தாள்: “ரொம்பவும் நம்பிடாதீங்க. நீங்க இல்லாத நேரம் பாத்து என் மண்டையிலே ஒரு போடு போட்டு இங்கே உள்ளதையெல்லாம் எடுத்துக்கிட்டு அய்யா கிளம்பினாலும் கிளம்பிடுவாரு. அவர் மனசுல என்னமோ ஒரு உத்தேசமிருக்கு, இல்லைன்னா ஒரு பைசா கூட வாங்காம அவர் ஏன் இங்கே கிடந்து வேர்த்து வேலை செய்யறார்?”

அன்றிரவு எனக்குத் தூக்கம் வரவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் காது முழுக்கச் சந்துரு அண்ணனின் அழுகைக் கூக்குரல்தான் கேட்டது. பாக்கு மரக் குலையின் குச்சிகளைக் கொத்தாகப் பிடித்து ஊர் போலீஸ்காரன் ராஜன் அவரைக் கண்மண் தெரியாமல் விளாசிக் கொண்டிருந்தான். அவர் உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லை.

“கொல்லுடா ராஜா, அவனை... அப்பனும் ஆத்தாவும் செத்த பிறகு அலைஞ்சு நடந்தவன் இவன்.  இங்கே கொண்டாந்து இந்த நாய்க்குச் சோறு போட்டேன் பாரு. என்னத்தான் ஒதைக்கணும்.”

தாத்தா கோபாவேசத்தில் ஆடினார்.

“அவன் முதுக ஒடிச்சு போடு, நிமிரக் கூடாது!”

தன் நிர்வாண உடம்பைப் பார்க்காமலிருக்கக் கால் முட்டுகளுக்கிடையில் முகத்தைப் புதைத்துத் தரையில் துடித்துக் கொண்டிருந்தார் சந்துரு அண்ணன்.

நான் உரக்க அழுதேன்.

அம்மா என் வாயைப் பொத்தினாள்.

“அவன் திருட்டு ஜாதி. நல்லா வேணும் அவனுக்கு,” என்றாள்.

அடித்து அடித்துக் குச்சிக் கொத்து பிய்ந்து போனதும் போலீஸ்காரன் தன் நெற்றியிலிருந்த வியர்வையை வழித்துக் காக்கிச் சட்டையில் துடைத்தான்.

சாக்ஸைக் காலில் இழுத்துப் போட்டுக்கொண்டு கூரான போலீஸ் தொப்பியைத் தலையில் பொருத்தி னான். போகிற போக்கில் திருடனின் இடுப்பைக் குறிவைத்து ஒரு உதை விட்டான்.

“அம்மா...” என்ற சந்துரு அண்ணனின் அலறல் பாதியில் நின்றுபோயிற்று.

நான் கண்களைப் பொத்திக்கொண்டேன்.

அதற்குப் பிறகு சந்துரு அண்ணனைப் பார்த்தது இப்போது தான்.

என்றாவது ஒரு நாள் தன் தலையில் பலமான அடி விழுமென்று பயந்து கொண்டே என் மனைவி ஐந்து வருடங்களை ஓட்டிவிட்டாள். அத்தனை நாட்களும் சந்துரு அண்ணனின் கோரைப்புல் பாய் கோழிக் கூட்டுக்கு மீதே எப்பவும் இருந்தது.

புத்தக வியாபாரத்தில் நேர்ந்த நஷ்டம் எனக்குப் பெரிய கடன் தொல்லை உண்டாக்கி விட்டது. அதற்குள் சந்துரு அண்ணா வளர்த்த பாக்கு மரங்கள் ஒன்றொன்றாகக் காய்த்துக் குலுங்கத் தொடங்கியது. பிய்ந்து விழுந்த பாளைகளும் பூங்கொத்தின் அரிசி போன்ற விதைகளும் எனக்கு ஆச்சரியமளித்தன. காற்றில் கமுகின் மட்டைகள் கீழே விழும்போது தூக்கத்தில் ஒவ்வொரு முறையும் சந்துரு அண்ணன் விழித்தெழுந்தார்.

நெஞ்சில் கைவைத்து அசையாமல் படுத்தார். தோப்பில் வௌவால்களின் சத்தம் அதிகமானதும் அவர் எழுந்து ஓடி வருவார்.

பாக்குகள் முத்தலாகிப் பழுக்கத் தொடங்கின.

பாக்கின் காய்களிலிருந்த பச்சைநிறம் மாறத் தொடங்கியது சில மாதங்களுக்குள் விளைச்சலைப் பறித்து எடுக்கத் தயாராகிச் செக்கச் சிவந்த நிறத்தில் துலங்கி நின்றன.

கீழே மரத்தைச் சுற்றி வெட்டப்பட்ட குழியில் பனியில் விழுந்து கிடந்த ஒரு பாக்கையெடுத்து சந்துரு அண்ணன் தெரிவித்தார்:

“நல்லா முத்திடுச்சு. இனி பாக்கை உரிச்சுப் போட ஆளக் கூப்பிடுங்க.”

சந்துரு அண்ணனின் தோளில் இரண்டு கைகளையும் அழுத்திப் பிடித்தேன். என் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. சாந்தமான ஒரு புன்சிரிப்பு மட்டும் அண்ணன் முகத்தில் எனக்குத் தெரிந்தது. பழுத்த பாக்கை எடுத்து என் ஈரமான கன்னங்களை மெல்லத் தடவினார். நான் சொக்கிய படி கண்களை மூடினேன்.

அடுத்த நாள் காலை மனைவி என்னை உலுக்கி எழுப்பினாள். சந்துரு அண்ணனைக் காணவில்லையாம்.

திடுக்கிட்டுப் படுக்கையிலிருந்து எம்பி எழுந்தேன்.

‘உரல் அறையின்’ பக்கம் வந்து பார்த்தபோது கோழிக்கூட்டின் மீது கோரைப்புல் பாய் மடித்து வைக்கப்பட்டிருந்தது. சுவரில் மாட்டியிருந்த மஞ்சள் பையும் காணோம். மனைவி அலமாரியையும் அங்குமிங்கும் தேடிப் பார்த்து நிம்மதியடைந்த பாவத்துடன் திரும்பி வந்தாள்.

சந்துரு அண்ணன் போய்விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பாக்கைப் பறித்து உரிக்க மரமேறும் கயிறும் கத்தியுமாக வாசலுக்கு வந்தவர்களை மனைவி தோப்புக்கு அனுப்பி வைத்தாள். சந்துரு அண்ணன் ஓடி மறைந்த விஷயம் அவளைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. நேரம் இருட்டியதும் முற்றத்தில் பறித்துப் போட்ட பாக்கு ஒரு குன்றாகக் கிடந்தது.

சிதறி ஓடிய பாக்குகளை ஒரு வாரியலால் மனைவி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். சிவப்புப் பிழம்பாகத் தோன்றிய பழுத்த பாக்கிலிருந்து ஒரு வெளிச்சம் மெதுவாக இருட்டைக் கலைக்கப்பொங்கி வந்தது.

அன்றைய வேலை முடித்த ஆட்கள் கலைந்து சென்றனர்.

இரவில் அதுவுமிதுவும் யோசித்தபடி கண் விழித்துப் படுத்துக் கிடந்த என்னைப் பார்த்து மனைவி சொன்னாள்: “சந்துரு அண்ணன் போன பிறகுதான் நேரா மூச்சுவிட முடிந்தது. அவர் நிஜமாகவே திருடன் தானா?” நான் எதுவும் சொல்லவில்லை. என் மௌனத்தைப் பார்த்து அவள் மீண்டும் கேட்டாள்: அவர் அந்தக் காலத்தில் இங்கேயிருந்து என்னதான் திருடினார்?”

“ஒரு குலை பாக்கு,” என்றேன்.

அப்போது இருட்டிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது.

சந்தோஷ் ஏச்சிக்கானம் (1971)

     கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் பிறந்தார். ஊடகத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். மலையாளப் பட்டதாரியான இவர் சிறுகதைகளுக்கும் திரைக்கதைக்கும் பெயர் பெற்றவர். 2008-ல் கேரள சாகித்ய அகாதெமி விருது சிறுகதைக்குப் பெற்றார். பத்து சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளும் திரைக்கதைகளும் எழுதியுள்ளார். 

டாக்டர் டி.எம். ரகுராம் (1954)  

தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மும்மொழிகளில் எழுதுபவர். இது வரையில் மொழிப்பெயர்ப்பு உட்பட பதினேழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் - மலையாள மொழிப்பெயர்ப்புக்கு திசையெட்டும் விருது உட்பட மூன்று விருதுகள் பெற்றுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மனநோய்ப்பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கேரளாவில் மஞ்சேரியில் வசிக்கிறார்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மும்மொழிகளில் எழுதுபவர். இதுவரையில் மொழிப்பெயர்ப்பு உட்பட பதினேழு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் - மலையாள மொழிப்பெயர்ப்புக்கு திசையெட்டும் விருது உட்பட மூன்று விருதுகள் பெற்றுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் மனநோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கேரளாவில் மஞ்சேரியில் வசிக்கிறார்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer