படிகப் பாடல்

அழகிய பெரியவன்

பகிரு

அம்மா சொற்களை இழந்திருந்த காலைப் பொழுதின் மௌனம் உக்கிரமாய் அழுத்தியது. அந்தக் காலையின் முந்தைய நாள் கூட அவர் சில சொற்களைத் திக்கித்திணறி பேசியதாக ஞாபகம். தொடர்ந்த நாட்களிலொன்றில் அம்மா என்னிடம் ரேடியோ வேண்டும் என்று கேட்டார். அவருடையத் திணறலிலும் சைகையிலுமிருந்து அதை நான் ஊகித்துக்கொண்டேன்.

அம்மா நெடுநாட்களாய்ப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றி வீசும் மூத்திர நாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு அவர் எதிரில் அமர்ந்து என்ன வேண்டும் என்று நான் விசாரிக்கும்போதெல்லாம் மாரி கோல்டு பிஸ்கெட், குலாப் ஜாமூன், நன்றாகக் கனிந்த சாம்பல் வாழைப்பழம், ஆட்டோ பயணம், மாத்திரை என்றெல்லாம் கேட்பார். இப்போது ரேடியோ வேண்டுமென்கிறார்.

அத்தருணத்தில் இலேசான வியப்பும் திகைப்பும் கொண்டு அம்மாவைப் பார்த்தேன். என் உட்செவியில் விரல் சூப்பும் குழந்தைச் சித்திரத்தை அடையாளச் சின்னமாகக் கொண்ட மர்பி ரேடியோ ஒன்று கரகரக்கும் குரலில் ஒலிஒழுக்கை வழியவிட்டபடி கண் சிமிட்டியது. அது மெள்ள டெசிபலைக் கூட்டி பல ஹெர்ட்ஸ்களை மாற்றித் தவளையின் அடித்தொண்டையில் கண்டங்காக்கையின் உலோகக் குரலில் பிறமொழியரின் மொழியில் விளங்கிக்கொள்ள முடியாதவற்றையெல்லாம் ஒலித்துக் கடைசியில் விரும்பிக் கேட்டதைப் பாடும் ஜீவனாய் நினைவில் சிரித்தது.

அம்மாவின் தொலைவுகள் இப்போது ஒரு கோரைப் பாய்க்குள் முடங்கிவிட்டன. அவருடைய பிரபஞ்ச வெளியே இப்போது அதுதான். அதற்கு உள்ளேயே அவர் வாழ்ந்து புனலாடிய பாலாறும் அதன் கரையோரத்து வீடும் அவர் கோலம் போட்ட வாசலும் அவர் அண்ணாந்து நோக்கிய வானமும் அவருடைய தோழிகளும் இருந்தனர். பின்னர் அதற்குள் அவர் வாழவந்த வீடும் அங்கவர் விறகுக்கும் கூலிக்கும் நீருக்கும் துவைப்புக்கும் நடந்த நிலங்களும் மலையும் இருந்தன. அம்மாவின் தற்போதைய ஒட்டுமொத்த வேதனைகளை நீக்கும் பரிகாரம் ஒரு சின்ன மாத்திரைக்குள் அடங்கி விடுவதைப் போல அவர் வாழ்வும் இன்று ஒரு கோரைச் சுருளுக்குள் அடங்கி விட்டது.

அம்மா ஏன் நடக்கவில்லை என்று வாதித்துக் கொண்டிருந்த நான் அம்மா ஏன் பேசவில்லை என்றும் கேட்டுக் கொண்டேன். நான் என்னுடைய தர்க்க அறிவைக்கொண்டு நிதம் நிதம் யோசித்தாலும் அம்மா நடக்கவில்லை எதுவும் நடக்கவில்லை அவர் பேசவில்லை என்பதுதான் உண்மைகளாக இருந்தன. உலகில் என் யோசனைகளுக்கு அப்பாற்பட்டவைகள் என்று எவ்வளவோ இருக்கின்றன தானே என்று எனக்கு நானே திருப்திபட்டுக்கொள்வதைத் தவிர வேறு நிஜமென்று எனக்கு ஒன்றில்லை.

அம்மாவின் ஊர் மலைகளற்றது. ஆற்றங்கரையில் இருப்பது. அவர் சிறுமியாக இருந்த காலத்தில் பரந்து விரிந்திருந்த தூயதும் வெண்மையும் கொண்ட பாலாற்றின் மணற் குன்றுகளில் நின்று பார்த்தால் வெகுதொலைவில் ஆட்டிடையன் கல்நிற்கும் மலை தெரியும். வேறு வகையில் எங்கும் அவர் மலைகளைப் பார்த்ததில்லை என்று சொல்வார். உறவுக்காரர்களின் வீடுகளும் கூட ஆற்றுக்கு இப்புறமும் அப்புறமும் தான். வீட்டிலிருந்தவரைக்கும் கால்நடையாகப் போகும் தொலைவுகளிலிருந்த ஒரு சில டெண்டுக் கொட்டகை சினிமாக்களுக்கும் திருவிழா கூத்துகளுக்கும் வீட்டாருடன் போய் வந்ததன்றி வேறு எங்கும் சென்றதில்லை என்றும் நினைவுகூர்வார்.

ஆற்றோரத்துக் கொருக்கைவேலி பாதுகாப்பிலிருந்த நிலத்தில் வடகிழக்கு மூலை நிலத்தில் கட்டியிருந்த பரணிலேறி உண்டிவில்லால் குருவியோட்டி சிறு பறைக் கொட்டி விலங்கு துரத்தி பசிய மலராயிருக்கும் கதிர் பழுப்பு வண்ணமாகும் வரை பொறுத்திருந்து கேழ்வரகு காத்த பொழுதுகளில் ஆற்றுச் சமவெளிக் காற்றுதான் அம்மாவுக்குப் பேச்சுத்துணை. அது வகை வகையான ஒலிக்கீற்றுகளைக் கம்பீர நாட்டையில் கொண்டு வந்து அவர் செவியில் சேர்த்தன. ஆலய மணியோசை கோயில் மணிச்சத்தம் அஜான் ஒலி எதிர்கரை நிலத்துப் பேச்சு வகைவகையான பறவை களின் கீசல்கள் தொலைதூர உலோகப்புனல் வழிய விடும் பாட்டு. எல்லாமே அம்மாவுக்குத் துணை. இவற்றுடன் சூரியன் உறங்கிடும் இரவுகளில் வீட்டுக்கு அருகிலிருந்த டெண்டுக்கொட்டகையில் பேசும் சித்திரங்களின் ஒலிகளையும் தினந்தோறும் காற்று கொணர்ந்து சேர்க்கும். காற்று வீசினால் அதை அனுபவிக்க முகம் திருப்பாமல் காதுகளைத் திருப்பிட அம்மா பழகியது அப்போதுதான்.

கங்காசர மலையடிவாரத்தில் ஒடுங்கியிருக்கும் அப்பாவின் கிராமத்துக்கு உறவுகள் சூழ முதன்முதலில் பேருந்திலேறி அம்மா வந்தபோது காற்று வீசவில்லையே என்றுதான் நினைத்தாராம். அப்பா வினுடைய கிராமத்தில் நான்கு தெருக்களைத் தள்ளி எழுந்து நின்று ஒரு மிருகம் போல முறைக்கும் மலை அங்கு வீசிடும் காற்றையெல்லாம் தடுப்பதாகவும் ஒலிகளனைத்தையும் உட்கிரகித்துக் கொள்வதாகவும் சொன்னபோது அவரை அப்பா முறைத்தாராம்.

மலைகளுள்ள ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த பின்னர் சமவெளிக்காற்று கொண்டுவரும் வெகு தூரத்து ஒலிக்கோவைகள் அம்மாவுக்குக் கிடைக்காமல் போனதால் முதன்முதலில் ரேடியோ ஒன்று வேண்டும் என அப்பாவிடத்தில் கேட்ட தருணத்தை அம்மா ஒரு முறை துல்லியமாய் என்னிடத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார்.

அதிகாலமே எழும்பி பீடி இலைகளின் நடு நரம்புகளைச் சிறுகத்தியால் சீவத்தொடங்கி அம்மா இலைகளை வெட்டும் நேரமும் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்புச் சேவை தொடங்கும் நேரமும் அனேகமாக ஒன்றாயிருக்கும். வானொலி நிலையத்தைத் திறக்கையில் ஏதோ ஒரு கருவி இசையை ரேடியோவில் ஒலிக்க விடுவார்கள். அப்போது ஊரின் வடக்கு மூலையில் கடை வைத் திருந்த செட்டியார் ஒருவர் கடையைத் திறக்கின்ற சம்பிரதாயம்தான் என் நினைவுக்கு வரும்.

கடைக் கதவின் குறுக்குச் சட்டமாகிய இரும்பு சட்டத்தைப் பிணைத்திருக்கும் பெரிய கருப்புப் பூட்டைத் திறந்த பின்னர்ப் பல காலமாகக் கையாண்டு இழைந்திருக்கும் எண்ணிலக்கம் இடப்பட்ட சிறு சிறு பலகைகளை நிலைப்படியிலுள்ள காடியிலிருந்து வரிசைக் கிரமமாக எடுத்து வெளியே வைப்பார். அதைப் பார்க்கையில் உலகிலேயே சிறந்த செயலெனத் தோன்றும்!

அப்பாவுடனும் எங்களுடனும் பேசிய நேரம் போக மிச்ச நேரங்களிலெல்லாம் அம்மா ரேடியோவுடன் தான் பேசினார். அவற்றில் ஒலிக்கும் பாடல்களை இழைந்து முணுமுணுத்தார். பாடல்களின் முன்னிசை ஒலிக்கும்போதே அந்தப் பாடலை இன்னதென்று எங்களுக்குச் சொன்னார். பாடல்களின் விவரங்களைச் சொல்வதற்கு வர்ணனையாளர்களை முந்திக் கொண்டார். அவர்கள் அரிதாகச் சொல்லும் சில தவறுகளை எங்களிடம் சுட்டிக்காட்டித் திருத்தினார். அந்தப் பாடல்களின் படங்களையும் பாடகர்களையும் நடிகர்களையும் குறித்த மேலதிக விவரங்களைத் தெரிவித்தார்.

“பேசாம அத நிறுத்தி வச்சிட்டு நீயே பேசி பாடிடேன்!”

அப்பா சொல்வதை ஒரு சிரிப்புடன் பீடியிலைக் குவியலில் தள்ளினார் அம்மா. அம்மாவுக்குக் கனதியாய் இழையும் குரல்கள் மீது தனிபிரியம் இருந்தது. சிதம்பரம் எஸ். ஜெயராமன், டி. ஏ. மோத்தி, திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராசன், மலேசியா வாசுதேவன் இப்படி. திணைப்புலம் காத்த வாழ்வு போய்ப் பீடியிலைகளை வெட்டியபடி நேரம் காக்கும் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்ட அம்மா சி. எஸ். ஜெயராமன் ரசிகையாக இருந்தது அப்பாவுக்கு விளங்க முடியாத புதிராய் இருந்தது. ரேடியோவில் வீணைக் கொடியுடைய வேந்தனே ஒலித்தால் பாடல் முடியும் வரை செய்து கொண்டிருக்கும் வேலை எதுவாயினும் அம்மா நிறுத்தி விடுவார். ஒருநாள் அப்பா சொன்னார்.

“என்ன கொரலிது? எதுவோ கத்துன மாதிரி?”

அம்மாவும் அப்பாவும் அன்று சண்டையிட்டார்கள்.

மணல் சுரண்டிக் கொழுத்தப் பின்னர் ஆறழிந்து சாக்கடை பிரயோகிக்கும் கரும்பரப்பில் இறங்கி ஏறிட்டுப் பார்க்கவொன்னா காலத்தில் அம்மா  சிறுமியாய் நோக்கிய ஆட்டிடையன் கல்லும் அங்கு இல்லாமற் போய்விட்டது.

நான் அம்மாவுக்கு ரேடியோ வாங்கச் சென்று வந்தேன்.

எல்லாவற்றையும் தயார் செய்த பிறகு எஃப்.எம் ரேடியோவை ஒலிக்க விட்டதும் சிதம்பரம் எஸ். ஜெயராமன்தான் அம்மாவுக்குப் பாடினார்.

“இன்று போய் நாளை வாராய் என
எனையொரு மனிதனும் புகலுவதோ”

தொல் நாளொன்றில் பீடியிலைகளை வெட்டிக் கொண்டிருக்கையில் ரேடியோவில் ஒலித்த அப்பாடலைக் கேட்டபோது மண்ணில் சிந்திய அம்மாவின் கண்ணீர்த் துளிகள் இரண்டு உறைந்த படிகங்களாய் எங்கள் முன் விழுந்து உடைந்தன. படிகத் துகள்கள் பொடிந்து நிர்மாணித்த காலத்தில் அம்மா சிறுமியானார். கடந்த காலத்தை ஒலிக்கும் பாடலும் இருக்குமா அம்மா? நாங்கள் உனக்காகக் கடந்த காலங்களைப் பாடுவோம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer