நொய்யல்தொன்மம் சூழ் புதிர்வெளி...

சம்பு

பகிரு

நொய்யல் (நாவல்), தேவிபாரதி, தன்னறம் பப்ளிகேஷன், குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை-635307 &  98438 70059.  விலை: ரூ 800.

(27.11.22  ஒசூர் ‘புரவி-கூடுகை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

25 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த தேவி பாரதியின் கவிதைத்தொகுப்பான ‘கண்விழித்த மறுநாள்’ தொகுப்பின்பின் அட்டை உள்பக்கத்தில் அவரது அடுத்தபடைப்பு ‘நொய்யல்’ நாவல் எனும்குறிப்பு இருந்தது. அந்த நாவலை இவ்வளவு ஆண்டுகாலம் கழித்து இப்போதுதான் பார்க்க நேர்கிறது. இதற்கிடையில் அவர் சில சிறுகதை - நெடுங்கதைத் தொகுப்புகள் கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’, ‘நீர் வழிப்படூஉம்’ என மூன்று நாவல்களையும் எழுதிவிட்டார்.

பொதுவாகவே, தேவிபாரதியின் நெடுங்கதைகள் நவீனத்தமிழின் ஆற்றொழுக்கான நடையில் எழுதப் பட்டவையாகும். அவற்றில், வட்டார வழக்குகளின் மொழிப் பயன்பாடு பெரும்பாலும் குறைந்த அளவிலேயே இருக்கும். நெடுங்கதைகளில் அவர் கையாளும்மொழி முற்றிலும் நவீனத்துவம் சார்ந்த ஒன்றாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. தவிர, செழுமையான அந்த மொழிப்பின்புலத்தில் வைத்து மனிதவாழ்வு குறித்த பேரவலங்களையும், உன்னதங்களையும் தொடர்ந்து விசாரணை செய்கிற ஒன்றாகவும் அந்நெடுங்கதைகள் இருக்கின்றன. விசாரணை என்பது தத்துவங்களின் பாற்பட்ட அகவயப்பட்ட திறப்பிற்கான சாராம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

மனித வாழ்வின் இடர்பாடுகளை, நுண்ணுணர்வு களை எழுத முற்படுகையில் பல்வேறுவிதமான சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. சிலநேரம் மொழி நம்குறுக்கே வழிமறித்து நின்று எதனை- எப்படி பேசுவது என்கின்ற சிறிய குழப்பத்தை முன்வைக்கிறது. சொல்வதற்குகந்த மொழித் தேர்வினை அநாயசமாகத் துண்டித்துவிட்டு இவ்விடத்தில் இயங்குகிற ஆற்றலும் வல்லமையும்சாத்தியம் இல்லைதான். தவிர, படைப்பின் துல்லியவெளிப்பாட்டுக்கு - நம் உள்ளார்ந்து கிடக்கும்அர்த்தப் பொதிவுகளுக்கு - அந்தத் தருணத்தின், அந்த நொடியின் தீர்மானிப்பே படைப்பின் வடிவத்தை மெல்லத் தொட்டுணரச் செய்கிறது. பிறகுதான், அந்தப் பாதை படைப்பின் அடர்ந்த கனதியைப் பொறுத்து நீண்டு செல்கிறது.

நாவல்களைப் பொறுத்தவரை, தேவிபாரதி பெரும் பாலும் வட்டாரவழக்கின் மொழிநடையை மிகச் சரளமாகப் பயன்படுத்துகிறார்.

அவரது நாவலின் கதைக்களங்களுக்கு படைப்பின் நம்பகத்தன்மைக்கு உச்சபட்ச செறிவினையூட்டி, வாசகரை நெருக்கமாக உணரச் செய்கிற வட்டார மொழியின் தேவை அவ்வளவாக இருக்கிறது. அதை வாரியெடுத்துக் கைக்கொள்ளாமல் அந்த மனிதர்களின் கதைகளை, அந்நிலப்பரப்பின் கதைகளை ஒருபோதும் சொல்லிவிட முடியாதென உணர்ந்திருப்பதால்தான் இந்த மொழி அவருடைய நாவல்களில் பிரதானப்பட்டு இருக்கிறது.

இந்த ‘நொய்யல்’ நாவல் நிகழும் கதைக்களம் கொங்கு மண்டலத்தைச் சார்ந்ததாக இருப்பினும், கொங்குநிலப்பரப்பு என்பதை ஒரு முகமாக - ஒருபடித்தானதாக நாம் பொத்தாம் பொதுவாக முன்வைத்துவிட முடியாது. அரசு நிர்வாகக் காரணங் களுக்காகக் கொங்குமண்டலம் என்பது எட்டுமாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், வடபுலமான தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதியின் வழக்குமொழி முற்றிலும்பிற மாவட்ட எல்லைகளுக்குப் பொருந்தாத வேறொன்றாக இருக்கிறது. தென் புலமான ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் மொழிப்புழக்கம் இதிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.

அந்தவகையில் கொங்கு மண்டலத் தென்பகுதி யையும், வடபகுதியையும் பொதுவாக்கிவிட முடி யாது. பல்வேறு சொற்கள் இந்த நிலப்பரப்பினுள் மிகுந்த மாறுபாட்டுடனே புழக்கத்தில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஒருபடித்தானதாக ஒரே சொற் களின் புழங்குதன்மைகொண்ட நிலமாக கொங்கு நிலப்பரப்பு இல்லை.

இவ்விடத்தில், மனிதவாழ்வு சந்திக்கிற இடர்ப் பாடுகளையும், அதனுடைய மாயத் தன்மையான கற்பிதங்களையும் சொல்வதற்குரிய மொழியாக ஈரோடு, திருப்பூர் சார்ந்த கொங்குவட்டார வழக்கு மொழியினைத் தேவிபாரதி பயன்படுத்தி இருப்பதையும், அதைப் பரவலாக வாசகர்களுக்கு கடத்தும் படி செய்திருப்பதையும் இந்தநாவல் பெருமளவு சாத்தியப்படுத்தி இருக்கிறது.

மனிதகுலம் தத்தமது தொல்மரபுக்கதைகளை, நம்பிக்கைகளை, சடங்குகளை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு வெளிப்பாட்டு உத்திகளை கையாண்டு வருகிறது. ஆனால் அதைமொழியில் கொண்டு வரும்போது அதில் தனித்தியங்குவதற்கு எளிமையின் பூடகச் சொற்களைக் கொண்ட, நாம் சார்ந்த நிலத்தின் வட்டாரவழக்குமொழியைப் பயன்படுத்தி அந்தத் தொல்குடிக்கதைகளை அந்தரத்தில் ஒலிக்கும் ஓர் அசரீரியைப்போல் சொல்லிப் பார்ப்பதென்பது இந்த ’நொய்யல்’ நாவலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கொங்குத்தமிழின் நன்முயற்சியாகக் கருதலாம்.

‘நொய்யல்’நதி, அதன் கரையில் வாழும் மனிதர்களுடைய வாழ்வின் அங்கமாகவும், அவர்களுடன் பின்னிப்பிணைந்த உயிர்ப்புமிக்க ஒரு வஸ்துவாகவும், மேலும் அவர்களது எல்லாவித நம்பிக்கைகளின் சாரமாகவும் அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அது ஒற்றைநதியின் கதையாக மட்டுமே முன்நிறுத்தப்படாமல் அந்நிலப்பரப்பின் மனிதர்களதுஒட்டுமொத்தக் கதைகளாகக் கிளைத்துப் பரவி இருக்கிறது. இயல்பாகவே ஒருநிலப்பரப்பின் கதையைச் சொல்லும்போது, அங்கே குறிப்பிட்ட சாதியின் கதையாக அல்லது ஆதிக்கச் சாதிக்கும் அல்லது அதற்கு எதிர்நிலைச் சாதிக்கும் உண்டான பகைமுரண்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறஒன்றாக அமைந்துவிடுவது இருக்கும். ஆனால், இந்த ‘நொய்யல்’ முன்னிறுத்தும் கதைமாந்தர்கள் - சாதியின் பல்வேறு அடுக்குநிலைகள் அவர்களுக்குள் இருப் பினும்- புழங்குசாதி, புழங்குவதற்கு அப்பாற்பட்டசாதி என்ற படிநிலைகள் அவர்களுக்குள் மறை முகமாகவும் நேரிடையாகவும் இருந்தாலும்கூட, குறிப்பிட்ட சில அபூர்வமான தருணங்களில், அது ஒன்றை ஒன்று மீற முடியும் என்கிற இளகுத்தன்மை யையும் நாவல்  தனக்குள்  கொண்டிருக்கிறது.

அது சாத்தியப்படுவதற்கு மனிதவாழ்வு தனதுசாதிப் பெருமிதங்களையெல்லாம் கடந்து நிராதர வாக்கப்படும்போது அல்லது நிர்க்கதியாகக் கையளவு சோறுக்கு வழியின்றி நிற்கும் சூழல் நேர்ந்துவிடும் எனும் எதிர்கால அச்சம் பிடித்தாட்டும்போது அல்லது தாம் காப்பாற்றி வந்த ஆதிக்கச் சாதியின்பெருமைப் போர்வை கிழிந்து தொங்கும்போதுதான் அதுவரையிலான கௌரவத்தின் பிடிமானம் அற்றுப் போக நேர்கிறது... அப்படித்தான் நாட்டார் தெய்வங் களின் பின்புலத்தில் சாதி என்ற கனத்த திரை நாட்டார் தெய்வமாகிப்போன தேவனாத்தா கோயிலின் முன்பாக மெல்லக் கிழிபடுகிறது. அந்நேரம், அதி காரம் - கௌரவத்தில் உயர்ந்ததாகக் கருதப்பட்ட வெடத்தலாங்காட்டுப் பண்ணாடிகள் நாட்டார் தெய்வத்தின் ஆகிருதியில் கட்டுண்டு சிலையாக நிற்கிறார்கள்.

அதிலொன்றும் தவறில்லை, அவர்கள் அப்படியே நின்று கொண்டிருக்கட்டும்...

இந்த ’நொய்யல்’ நதி, அதனை ஒட்டி வாழ்கிற மனிதர்களின் சுபாவங்களில் உண்டாக்குகிற அபூர்வ மாற்றங்கள் - அதனுடன் பொருந்திப் போகிற நம்பிக்கைகள் - வாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் அலாதியானது. ஒரு சகமனிதனைப்போல அல்லது தனக்கு அணுக்கமான கடவுளைப்போல அல்லது நமது ஒட்டு மொத்த வாழ்வையும் நிர்மூலமாக்க வந்த ஒருகொடும் துயரமாக, யாவற்றையும் அழித்தொழித்து விடும் அடங்காத சூறையாக அல்லது ஊர்எல்லையில் வீற்றிருக்கும் நாட்டார் தெய்வமான தேவனாத்தாளே நொய்யல் நதியாகவும் மருவிக்கிடக்கிறது. நதியை, சூறைக்காற்றைக் கரங்கூப்புவது தொன்றுதொட்டு இயற்கையை வணங்கி வருகிற தொல்மரபின் நீட்சியாகும். அப்படியாகத்தான், உள்ளார்ந்த தெய்வத் தன்மையை ஒருநதியின் முகமாக உள்வாங்கிக் கொண்டே அந்நொய்யல்கரைவாசிகள் அங்கு நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். கரைகொள்ளாது ஊருக்குள் புகுந்து ஓடித் திரிந்தாலும் அல்லது காய்ந்துபோன வெம்பரப்புமணலாக திரிந்து கிடந்தாலும் எப்போதும் அது, அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே கிடக்கிறது.

நாவிதரான குமரப்பபண்டிதன் இந்த நாவலின் மிகமுக்கியமான பாத்திரம். சேவை சாதியைச் சார்ந்த அவர் சாதிரீதியாக கீழ்மைப்படுத்தப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒருவராக இருந்தாலும், தன் முனைப்பால் அவர் கற்றுக்கொண்டுள்ள ஜோதிட மற்றும் ஜாதக பலன்களை கணிக்கும் திறன், பிணிபோக்கும் மருத்துவஞானம் அல்லாமல் ஒருநல்ல வார்த்தை அவர் சொல்லிவிட்டால் தம்காரியத்தை அடுத்து தயங்காமல் பார்க்கலாம் என்கிறபண்ணாடிகளின் அசாத்திய நம்பிக்கை என ஒரு வித்தியாசமான பார்வையை நாவல் முன்னிறுத்துகிறது. வறட்சியின் கோரப்பிடியில் ஊர் சிக்குண்டிருக்கும்போது குமரப்ப பண்டிதனின் ஒற்றை வார்த்தையை நம்பித்தான் அந்தக் கிணற்றைத் தோண்டுகிறார்கள். இறுதியில், நீர்க் கண்கள் தட்டுப்படாமல் பரிதவித்து ‘ஓர் நல்வழி பிறந்துவிடாதா’ எனும் ஏக்கம் படரும்போது அவர்கள் குமரப்ப பண்டிதன் முன்னால் கிட்டத்தட்ட கையேந்திப் பிதற்றுகிறார்களே அக்கணத்தில் பண்டிதன் வெறும் ஓர் நாவிதன்தானா...? அதுகாறும் தன்மீது வாரியிறைக்கப்பட்ட கீழ்மையின் சகதிகளை முற்றிலுமாகத் துடைத்தெறிந்துவிட்டு நிற்கும் அவர்களின் கடவுள் அல்லவா...?

வேம்பணகவுண்டர் - சாமியாத்தாள், குமாரசாமி - பூபதி - வேலாத்தாள் - கிரிக்கவுண்டர் - காரிச்சி - சென்னிமூப்பன், நாய்க்கர்கள் என பலதரப்பட்ட பிரிவு மனிதர்களும் இந்த நாவலில் உலவுகிறார்கள். ஆனால்இந்த நாவல் சாதிகளுக்குள் இருக்ககூடிய ஏற்ற இறக்கங்களை பிரதானப்படுத்தி முன்னிறுத்துகிற ஒன்றாக தொழிற்படவில்லை. அதனுடைய ஏற்றஇறக்கங்களைக் கடுமையான மொழியில் விமர்சிக்கக்கூடிய ஒன்றாக இல்லை. ஆனால் அந்த சாதியப்படிநிலை உண்டாக்குகிற அவலத்தை வாசகர்கள் புரிந்துகொண்டு, தம் மனதளவில் விமர்சிக்கக்கூடியஒருவராக மாறும்படி அரவமின்றி நிர்பந்திக்கிறது. அந்த விமர்சன மனப்பான்மையிலிருந்து இந்தநாவலை விலக்கி வைத்துவிட்டு, சாதாரணமாக வெறுமனே ஒரு கதை சார்ந்ததாக, அதீதத்தின் உருவக மாக வெளிப்பட்டிருப்பதாகக் கருதி மேலெழுந்தவாரியாக ஒருவாசகன் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

‘சாமி எசமாங்களே ராசாங்கமே’ என்ற குரல் தனித்து ஒலிக்கும் குரல் அல்ல. அது கீழ்நிலைப் படுத்தப்பட்ட ஒருவன் தன் ஆழ் மனதிலிருந்து தன்னியல்பாகவே வெளிப்படுத்தி காலத்திற்கும் நான் உங்களுக்கு சேவகம் புரியவே உயிர்பிழைத்து இருக்கிறேன் என்பதனை நேரடியாகவே சொல்கிற வார்த்தையாகும். அந்த இழிவு சுபாவத்தில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதை அவ்வளவு சுலபத்தில் மாற்றி வைத்துவிட முடியுமா...? ஆனால் தெய்வம் அல்லது பிசாசு என்ற நம்பிக்கைகளின் வழி ஓர் ஊரே பிதிர் கெட்டு நிற்கும்பொழுது மாயத் தன்மையிலான அந்தச் ‘சங்கிலி’ உடைபடுகிறது தெய்வநிலை அல்லது தெய்வத்தன்மை அல்லது பயந்தடங்கும் படியான அமானுஷ்யமான பேயின் வருகையின் பொருட்டோ அந்தக் கண்ணி சட்டென உடைகிறது.

கூடியிருக்கும் சபையின் முன்பாக, மாதாரிப் பெண்காரிச்சி அவ்வளவு சுலபமாக கிரிக் கவுண்டரை - அது என்ன காரணமாக இருந்தாலும் அதைமுன்னிட்டு - நெஞ்சோடு சேர்த்து அணைத்துவிட முடியாது. வழிவழியாக வந்த அவர்களது நம்பிக்கை களின் பொருட்டு, தம்மை சூழ்ந்திருக்கக்கூடிய-ஊரைப் பிடித்திருக்கக்கூடிய தீவினைகளிலிருந்து வெளிவருவதற்கு ‘காரிச்சியின்’ மேல் இறங்கி இருக்கும் ‘பார்வதி’ எப்படியேனும் கிரிக்கவுண்டரை அடையாமல் விடமாட்டாள் என்கின்ற புரிதலிருந்தே சபை முன்பாக காரிச்சி கிரிக்கவுண்டரை அணைக்கிறாள். இதுவரையிலான கொங்குவட்டாரக் கதைகளில் காணப்படாத ஒன்று. ஆனால், அதை எந்தவிதமான நெருடலுமின்றி, அந்த ‘நொய்யல்’ நதிநீரின் விசைக்கேற்ப அதில் ஓடுகிற சிறிய உயிரினங்கள், மிதக்கும் சருகுகள்போல கடந்து போகும்படி பிரதியில் சாத்தியப்படுத்தி இருக்கிறார் தேவிபாரதி.

கட்டற்ற பாலுறவு வேட்கை ஒரு கொடிய விலங்கினைப்போல் குமாரசாமி - சாமியாத்தாளைச் சுற்றி, பூபதியைச்சுற்றி, ஏன் வேம்பணகவுண்டரையும் ஒருகாலத்தில் சுற்றிப்படர்ந்த சித்திரத்தை இந்தப் பிரதி குறிக்கிறது. ஆனால், அந்த வழிவந்த வெள்ளியங்கிரி என்கிற கிரிக்கவுண்டர், அவனைநெருங்க முடியாமல் உள்ளுக்குள் தவித்துக்கொண் டிருக்கும் காரிச்சி-இந்த இரண்டு பாத்திரங்களும் அதற்கு எதிர்முனையில் நின்று சம்பாஷிக்கின்றன. இதைப் பாலுறவு வேட்கையின் நிலம் என்று அணுக முயன்றால், அதற்கு மாறாக கணவனால் தீண்டப் படாமலேயே தன் உயிரை மாய்த்துக்கொள்கிற ‘பாரு’ என்கிற பார்வதியையும் எதிர்நிலையில் வைத்து சித்தரிக்கிறார் தேவிபாரதி. எவ்விதப் பழிபாவத்திலும் முகங்கொடுக்காத அவளுடைய தூயஆன்மா, காரிச்சியின் மூலமாகக் கணவனான கிரிக்கவுண்டரை தீண்ட முற்படுகிறது. ‘காரிச்சி - கிரி - பார்வதி’, இந்த மூன்று உடலங்களுமே ஒன்றுக்கொன்று புணர்ச்சியின் பொருட்டுத் தீண்டிக்கொள்ளாத தூய ஆன்மாக்களாக இருப்பதால்தான், இது அந்தச்சபையின் முன்பாக நொய்யலின் வெளியில் சாத்தியமாகிறது.

ஊருக்குள் புகுந்து அழிவினை உண்டாக்கி பேரச்சத்தை விளைவிக்கிற ‘நொய்யல்’ நதியும், மனிதர்கள் சூழுமிடங்களிலெல்லாம் அபாயத்தின் அறிகுறிபோல் வந்துபோகிற ‘சூறையும்’ அந்த மனிதர்களின் வழியே அமானுஷ்ய நிகழ்வாக உருவகிக்கப்படுகிறது. கண்ணி கண்ணியாகக் கிளைக்கதைகளை விரித்து செல்கிற இந்த நாவலின்நிலப்பரப்பு மனிதவாழ்வின் உயர்வினைக் கொண் டாடுதல் அல்லது பிழைப்பிற்காக வம்பாடு படுகின்ற அவலநிலை என இருமையுடனிருக்கிறது.

வாழ்வின் நிலையாமையை, மகாபாரத-ராமாயண கிளைக்கதைகளின் வழியாகப் பேசுதல் என்கிற தகவமைப்பினை நாவல் பெற்றிருக்கிறது. உதாரணங்களையும் உவமைகளையும் இதிகாசத்தின் கிளைக்கதைகளிலிருந்து அல்லது நம்பிக்கையின் பாற்பட்ட நாட்டார்வழக்குக் கதைகளிலிருந்து எடுத் தாள்கிற ’நொய்யல்’ நதிக்கரை மனிதர்கள், தமது வழிபாட்டிற்கு பெருந்தெய்வங்களன்றி நாட்டார் தெய்வங்களை மட்டுமே முன்னிறுத்தி தமதுவாழ்வை அதன் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அது சொல்கிற ஒருவாக்குக்காக, அதன்முன் தவம்கிடப்பவர்களாக இருக்கிறார்கள். நாட்டார் தெய்வங் களின் ஆகிருதியை, தொன்மக் கதையாடல் வழி யாக நிலைநிறுத்த இந்த ‘நொய்யல்’ நாவல் முற்பட்டிருக்கிறது. அதனாலேயே நம்பிக்கை மற்றும்அச்சவுணர்வு புதிர்க் கதைகளாகவிரிந்து இந்தப் பிரதியினுள் இழுத்துச் செல்கிறது. மருள் ஏறி சன்னதங் கொண்டு பழனி மூப்பன் அடிக்கிற உடுக்கை ஒலி வெடத்தலாங்காட்டு வெட்டவெளியெங்கும் காற்றில் பரவிக்கிடக்கிறது.

அந்த உடுக்கையொலியினூடாகவே, இந்த ‘நொய்யல்’ கரை வாழ்வின் கண்டுணரவியலாத சூட்சுமத்தை - அளவிடமுடியாத கொண்டாட்டத்தை-புறந்தள்ள முடியாத மனித அற்பத்தனங்களை-அவிழ்க்கவியலாத புதிர்களைச் சொல்வதற்குத் துணிந்திருக்கிறார் தேவிபாரதி...

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer