தேனீக் கூடுகளின் வீடு

இட்டாலோ கால்வினோ
தமிழாக்கம்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கச் சிறுகதை

Archibald Colquhoun and Peggy Wright ஆகியோர் இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்த Adam One Afternoon தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் ஆங்கிலப்  பதிப்பு காலின்ஸ் பதிப்பகம் 1957. இந்த பதிப்பு 2000-இல் ரேண்டம் ஹவ்ஸில் வெளியிட்டது.  

மிகத் தொலைவிலிருந்து இங்கே பார்ப்பது கடினம், மேலும் யாராவது ஒருவர் இங்கே ஒருமுறை வந்திருந்தாலும் கூடத் திரும்பிச் செல்லும் வழியை ஞாபகப்படுத்த முடியாது.

ஒரு காலத்தில் இங்கே ஒரு பாதை இருந்தது, ஆனால் முள்செடிகளை வளரவிட்டு நான் ஒவ்வொரு தடயத்தையும் அழித்தேன். இது நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, இந்த என் வீடு.

மஞ்சள் பூக்கும் காட்டுமுள் செடிகள் அடர்ந்த கரையில், ஒரே ஒரு தளம் கொண்டது, பள்ளத்தாக்கிலிருந்து இதைப் பார்க்க முடியாது, இந்த வீடு சுண்ணாம்பில் வெள்ளை அடித்திருப்பதையும் ஜன்னல்கள்  சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருப் பதையும்.

இதைச் சுற்றி கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. லெட்டூஸ் கீரைகளை நத்தைகள் மெள்ளும் ஒரு துண்டு காய்கறிப்பாத்தி எனக்குப் போதுமானது.

சற்றே மேடாக்கப்பட்ட பூமியில் ஒரு முள் மண்வெட்டியைக் கொண்டு உருளைக்கிழங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறேன், எல்லாம் ஊதா நிறத்தில் மொட்டுவிட்டுக் கொண்டிருக்கின்றன.

நான் எனக்கு உணவளித்துக்கொள்ளும் பொருட்டு உழைத்தால் போதும், காரணம் எவரிடமும் எதையும் எனக்குப் பகிர்வதற்கு ஒன்றுமில்லை.

நான் முள்செடிகளை மீண்டும் வெட்டுவதில்லை, இப்போது வீட்டின் கூரையின் மீது ஏறிக்கொண்டிருப்பதையும் சரி, கொஞ்சம் கொஞ்சமாய் விழத்தொடங்கும் பனிச்சரிவு போல, சீர்ப்படுத்தப்பட்ட நிலத்தின் மேல் படர்ந்து வருபவற்றையும் சரி.

அவை சகலத்தையும் புதைத்துவிடுவதை விரும்புவேன், என்னையும் சேர்த்து. பல்லிகள் அவற்றின் கூடுகளைச் சுவர்களின் வெடிப்புகளில் வைத்திருக்கின்றன, எறும்புகள் தரையின் செங்கற்களின் அடியிலிருந்து தமது துளைகள் மிகுந்த நகரங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டுவிட்டன.

ஒவ்வொரு நாளும் புதிய வெடிப்புகள் வந்திருக்கின்றனவா என்று எதிர்பார்ப்பேன், மேலும் மனித இனத்தின் நகரங்களும் களைகளால் நிறைக்கப்பட்டு விழுங்கப்படுவதை  நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

என் வீட்டின் மேற்புறமாகக் கரடுமுரடான பள்ளத்தாக்குகளின் சில பகுதிகள் உள்ளன. அவற்றில் நான் எனது ஆடுகளைத் திரியவிடுகிறேன். அதிகாலை வேளையில் முயல்களின் வாசனையைப் பிடித்துக் கொண்டு சில சமயங்களில் நாய்கள், இந்தப் பகுதியைக் கடந்து செல்லும்.

அவற்றைக் கற்களை வீசி நான் துரத்துவேன். நாய்களை நான் வெறுக்கிறேன், அவற்றின் அடிமைத்தனமான மனித விசுவாசத்தையும். எல்லா வீட்டு மிருகங்களையும் நான் வெறுக்கிறேன், எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த தட்டுக்களின் மிச்சங்களை நக்குவதற்காக அவை மனிதர்களிடம் காட்டும் அவற்றின் கருணை போன்ற பாசாங்கினையும்.

நான் பொறுத்துக்கொள்ளக்கூடிய மிருகங்கள் ஆடுகள் மாத்திரமே, காரணம் அவை மனித நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை, எதையும் கொடுப்பதும் இல்லை.

என்னைக் காப்பதற்குச் சங்கிலியால் கட்டிய நாய்கள் எனக்குத் தேவையில்லை. உயிர்வேலிகளோ, பூட்டுகளோ கூட. அவை அருவெறுக்கத்தக்க மனிதரின் உபகரணங்கள்.

என்னுடைய தோட்டத்தைச் சுற்றிலும் தேனீக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன, ஒரு தேனீக்கூட்டத்தின் பறத்தல் என்பது முள்ளடர்ந்த உயிர்வேலி போன்றது. அதை நான் மட்டுமே கடக்க முடியும்.

இரவு நேரத்தில் தேனீக்கள் பீன்ஸ் விதைகளின் தோல்கள் மீது உறங்குகின்றன, ஆனால் எந்தமனிதனும் என் வீட்டினருகில் வருவதில்லை. அவர்களுக்கு என்னைப் பற்றிப் பயம், அதுவும் சரிதான். என்னைப் பற்றி அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட கதைகள் நிஜம் என்பதல்ல இதற்குக் காரணம்.

அவை பொய்கள் என்று நான் சொல்கிறேன், அவர்கள் எப்போதும் சொல்கிற விஷயங்கள்தான். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிப் பயப்படுவது சரிதான், அவர்கள் பயப்படவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.

காலையில் நான் உச்சிப் பகுதிக்குச் செல்லும்போது, கீழே பள்ளத்தாக்கு விரிவதைப் பார்க்கிறேன், உயரமாக எல்லாப் பக்கமும் என்னைச் சுற்றியும் இந்த உலகினைச் சூழ்ந்தும் கடல் இருப்பதை என்னால் பார்க்க முடியும்.

மனித இனத்தின் வீடுகள் கடலின் விளிம்புகளில் அமைந்திருப்பதையும், அவற்றின் பொய்யான அண்டை வீட்டுத் தன்மையுடன் கப்பல் தகர்வடைந்தது போலிருப்பதையும். நான் பழுப்பு மஞ்சளானதும் சுண்ணாம்புக் கற்களால் ஆனதுமான நகரத்தையும், அவற்றின் ஜன்னல்களின் பளபளப்பையும், அவற்றின் நெருப்பின் புகையையும் பார்க்கலாம்.

ஒரு நாள் முள்செடிகளும் புல்லும் அவற்றின் சதுக்கங்களை மூடிவிடும், கடல் வந்து அவற்றின் சிதிலங்களைப் பாறைகளாக வடிவமைத்து விடும்.

இப்பொழுது தேனீக்கள் மட்டும்தான் என்னுடன் இருக்கின்றன. தேனடைகளில் நான் தேன் எடுக்கும் பொழுது என்னைக் கொட்டாமல் என் கைகளைச் சுற்றி ரீங்காரமிடுகின்றன, என் மீது ஒரு வாழும் தாடி போன்று படிந்துவிடுகின்றன.

நட்பான தேனீக்கள், எவ்வித வரலாறும் இல்லாத புராதன இனம். பல ஆண்டுகளாக இந்த மஞ்சள்பூ முள்செடிகளின் கரைப் பகுதியில் வாழ்ந்துவருகிறேன், ஆடுகளுடனும்,  தேனீக்களுடனும்.

கடந்து சென்ற ஒவ்வொரு வருடத்தையும் குறிக்கச் சுவற்றில் குறியிடும் வழக்கம் இருந்திருக்கிறது ஒரு சமயம். ஆனால் முள்செடிகள் இப்போது எல்லாவற்றையும் நெருக்கி மறைக்கின்றன.

நான் ஏன் மனிதர்களுடன் வாழ்ந்து அவர்களுக்காகவேலை செய்யவேண்டும்?

நான் அவர்களின் வியர்வை மிகுந்த கைகளை வெறுக்கிறேன், அவர்களின் காட்டுமிராண்டித்தனமான சடங்குகளையும், அவர்களின் நடனங்களையும், தேவாலயங்களையும், அவர்தம் பெண்களின் அமில எச்சிலையும்.

ஆனால் அந்தக் கதைகள் நிஜமல்ல, என்னை நம்புங்கள், என்னைப் பற்றிய அந்தக் கதைகளை அவர்கள் எப்போதும் சொல்லி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய் சொல்லும் பன்றிகள்.

நான் எதையும் கொடுப்பதுமில்லை, நான் எவருக்கும் எதுவும் கடன்பட்டதுமில்லை. இரவு நேரங்களில் மழை பெய்தால், காலையில் கரையில் வழுக்கி நகர்ந்து வரும் பெரிய நத்தைகளைச் சமைத்து உண்கிறேன்.

காட்டின் தரையில் ஈரமான, மிருதுவான குடைக் காளான்கள் இரைந்து கிடக்கின்றன. எனக்குத் தேவைப்படும் மற்ற எல்லாவற்றையும் இந்தக் காடு தருகிறது. எரிப்பதற்கான குச்சிகளையும், பைன் காய்களையும், செஸ்ட்நட் கொட்டைகளையும். கண்ணி வைத்து நான்முயல்களையும் த்ரஷ் பறவைகளையும் கூடப் பிடிக்கிறேன்.

ஏன் எனில் எனக்குக் காட்டு விலங்குகளைப் பிடிக்காது, அல்லது இயற்கை பற்றிய உன்னத வழிபாட்டை - அது மனிதனின் அபத்தமான வெளிவேஷங்களில் ஒன்று.

இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கவேண்டும் என்பதையும், வலுவானவன் வைத்த சட்டமே நிலைக்கிறது என்பதையும் நான் அறிவேன். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மாத்திரமே கண்ணி வைத்துக் கொல்கிறேன், துப்பாக்கிகள் கொண்டல்ல, காரணம் அவற்றை எடுத்து வருவதற்கு வேறு மனிதர்களோ அல்லது நாய்களோ தேவை.

ஒவ்வொரு மரமாக அவர்கள் வெட்டும் கோடரிகளின் மழுங்கின ‘தட்’ ஓசையால் சில சமயங்கள் சரியான நேரத்தில் நான் எச்சரிக்கப்படாதுவிட்டால் காட்டில் சில மனிதர்களைச் சந்திக்கிறேன்.

அவர்களை நான் பார்க்காததுபோலப் பாசாங்கு செய்வேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் இந்தக் காடுகளுக்கு விறகு சேகரிக்க வருவார்கள், கற்றாழைகளின் பிடுங்கப்பட்ட தலைகளைப் போல அவர்கள் பிய்த்து எடுத்திருப்பார்கள்.

அடிமரங்கள் கயிறுகள் கொண்டு இழுத்துச் செல்லப்படுகின்றன, அவை உருவாக்கும் ஒழுங்கற்ற தடங்கள் புயல்காலத்தில் மழையைத் தேக்கி நிலச்சரிவுகளை உண்டாக்கத் தூண்டுகின்றன.

மனிதரின் நகரங்களில் உள்ள சகலமும் இத்தகைய அழிவுக்கே சென்று சேரட்டும். ஒரு நாள் நடந்து செல்லும்போது நான் பார்க்க வாய்க்குமா, வீட்டுப் புகைபோக்கிகள் பூமியிலிருந்து வெளிவருவதையும், படுபாதாளங்களில் விழும் தெருக்களின் பகுதிகளை நான் சந்திப்பேனா, காட்டின் மத்தியில் ரயில் பாதையின் துண்டுகளால் நான் தடுக்கி விழுவேனா?

கண்டிப்பாக நீங்கள் வியப்பீர்கள், இந்த என்னுடைய தனிமை என் மீது கனத்துக் கவிவதை நான் உணரவில்லையோ என்றும், ஏதோ ஒரு மாலையில் நீண்ட அந்திமயங்கும் நேரங்களில் ஒன்றில், நீண்ட வசந்தகாலத்தின் மாலை மயங்கும் நேரத்தில், எவ்வித குறிப்பிட்ட நோக்கமும் என் சிந்தனையில் இல்லாமல், மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் செல்லவில்லையா என்றும்.

நான் செல்லத்தான் செய்தேன், ஏதோ ஒரு மாலைவேளை, ஒரு நீண்ட கதகதப்பான மாலை மயங்கும் நேரத்தில், வசந்தத்தின் நீண்ட மாலை மயங்கும் சமயம் சென்றேன்.

கீழே இருக்கும் தோட்டங்களைச் சூழ அமைந்திருக்கும் சுவர்களை நோக்கிச் சென்று ‘மெட்லர்’ மரங்களின் வழியாகக் கீழே இறங்கினேன். ஆனால் பெண்கள் சிரிப்பதையும் ஒரு தூரத்துக் குழந்தையின் அழைப்பினையும் கேட்டவுடன் நான் இங்கே திரும்பி வந்துவிட்டேன்.

அதுதான் கடைசித் தடவை. இப்பொழுது மேலே நான் தனியாக இருக்கிறேன். நல்லது, இப்பொழுதும் அப்பொழுதும் தவறுகள் செய்வது பற்றி நானும் பயந்துவிடுகிறேன் உங்களைப் போலவே. மேலும் உங்களைப் போலவே நானும் முன்புபோலவே தொடர்கிறேன்.

நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள், வாஸ்தவமாக, உங்கள் கணக்குச் சரிதான். அந்த விவகாரத்தினால் அல்ல, இருந்தாலும், அது எப்போதாவது நடந்ததா இல்லையா என்பதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது அது ஒரு விஷயமே இல்லை, எப்படி இருந்தாலும்.

அந்தப் பெண், நீண்ட புல்வெட்டும் ‘சைத்’ கருவியுடன் இங்கு மேலே வந்த அந்தக் கறுப்புப் பெண், அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது, அப்பொழுது இன்னும் கூட மனித உணர்ச்சிகளால் நிறைந்தவனாக நான் இருந்தேன்--நல்லது, அவள் அந்தச் சரிவின் உச்சியில் வேலை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன், என்னை அவள்கையசைத்து அழைத்தாள், ஆனால் நான் பதில் சொல்லாமல் கடந்து போய்விட்டேன்.

ஆமாம், நான் அப்பொழுது கூட இன்னும் மனித உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தேன், மேலும் அந்தப் பழைய கோபத்துடனும் கூட. மேலும் அந்தப் பழைய கோபத்தினால் - அவளுக்கு எதிராக இல்லை என்றாலும் கூட, அவளுடைய முகம் கூட எனக்கு ஞாபகம் இல்லை - நான் அவளுக்குப் பின்புறம் சென்றேன், அவளுக்கு என் ஓசை கேட்காமல்.

இப்பொழுது மனிதர்கள் சொல்லும் கதைகள் வெளிப்படையாகவே பொய்யானவை, காரணம் அப்போது மிகவும் தாமதமாகி இருந்தது, பள்ளத் தாக்கில் ஒரு குஞ்சும் கூட இருக்கவில்லை, அவளுடைய குரல்வளையைச் சுற்றி என் கைகளைப்போடும்போது எவரும் அவள் சப்தத்தைக் கேட்க வில்லை.

ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள நான் என் கதையை ஆரம்பத்திலிருந்து சொல்லவேண்டியிருக்கும்.

ஆங், நல்லது, நாம் அந்த மாலை நேரத்தைப் பற்றி இனி குறிப்பிட வேண்டாம். இங்கே நான்வாழ்கிறேன், லெட்டூஸ் கீரைகளைத் துளையிடும் நத்தைகளுடன் எனது லெட்டூஸ் கீரைகளைப் பகிர்ந்து கொண்டு.

குடைக்காளான்கள் வளரும் எல்லா இடங்களையும் எனக்குத் தெரியும், அவற்றில் விஷக்காளான்களுக்கும் நல்லவற்றுக்கும் என்னால்வித்தியாசத்தைச் சொல்ல முடியும். பெண்களைப்பற்றியும் அவர்களின் விஷங்களைப் பற்றியும்நான் இனியும் சிந்திப்பது கிடையாது.

கற்புடன் இருப்பது என்பது ஒரு பழக்கமே தவிர வேறல்ல, எல்லா வற்றுக்கும் மேலாக.

அவள்தான் கடைசி ஆள், புல்வெட்டும் கருவியுடனிடருந்த அந்தக் கறுப்புப் பெண். வானம் மேகம் நிறைந்திருந்தது. நான் ஞாபகம் கொள்கிறேன், கறுப்பு மேகங்கள் கடந்து சென்றன.

அது போன்றதொரு விரையும் வானத்தின் கீழே, ஆடுகளினால் ஒட்டமேயப்பட்ட சரிவுகளில், முதல் மனிதத் திருமணங்கள் நடந்திருக்கவேண்டும். மனித ஜீவன்களுக்கிடையில் ஆன தொடர்பில் பரஸ்பர பயங்கரமும், அவமான மும் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது.

நான் விரும்பியதும்கூட அதைத்தான். பயங்கரத்தையும் அவமானத்தையும் காண்பதற்கு, அவள் கண்களில் வெறும் பயங்கரத்தையும் அவமானத்தையும் காண. அந்த ஒரு காரணம்தான் அதை நான் அவளுக்குச் செய்தது, என்னை நம்புங்கள்.

அதைப்பற்றி என்னிடம் ஒருவரும் ஒரு வார்த்தையும் என்றுமே சொல்லவில்லை. அவர்களால் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் இல்லை, அந்த மாலை பள்ளத்தாக்கே வெறிச்சோடிக் கிடந்தது.

ஆனால் ஒவ்வொரு நாளும் மலைகள் இருளில்மூழ்கும்போது, லாந்தர் விளக்கொளியில் அந்தப் பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் நான் நகரத்தை உணர்கிறேன், அதனுடைய மனிதர்களுடனும், வெளிச்சங்களுடனும், இசையுடனும் கீழே அவர்கள் இருப்பதை உணர்கிறேன்.

உங்கள் குரல்கள் யாவும் என்னைக் குற்றம் சாட்டுவதை உணர்கிறேன்.

ஆனால் என்னைப் பார்ப்பதற்குப் பள்ளத்தாக்கில் ஒருவரும் இருக்கவில்லை. அவர்கள் அந்த விஷயங்களைச் சொல்வதற்குக் காரணம் அந்தப் பெண் வீடு திரும்பவில்லை என்பதுதான்.

கடந்து செல்லும் நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எப்போதும் நின்று உறைந்துபோகின்றன, தரையைத் தம் கால்களால் கீறி ஊளையிடுகின்றன என்றால், அதற்குக் காரணம் அங்கே ஒரு வயதான குழிமுயலின் வளை இருப்பதுதான், நான் சத்தியம் செய்கிறேன், வயதான வெறும் குழிமுயலின் வளை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer