தமிழவனின் ‘கார்ல் மார்க்சும் தாணு ஆசாரியும்’
இன்மைகளைக் கட்டமைக்கும் பிரதி

க.பஞ்சாங்கம்

பகிரு

தமிழ்ச் சூழலில் இலக்கியமென்பது உணர்ச்சிப்பெருக்கில் தானாகப் பொங்கி வழிவது என்ற கருத்தாக்கம் இன்றும் பெரிய அளவில் நிலவிக்கொண்டிருக்கிறது; ஆனால் இலக்கியம் என்பது எழுதுகின்ற எழுவாய், வாழ்கின்ற சமூகம், பயன்படுத்துகின்ற மொழி முதலியன இணைந்து உழைக்கிற உழைப்பின் உற்பத்தி; இது ஓர் அறிவியல் செயல்பாடு என்கிற புதிய கருத்தாக்கம் இன்று தமிழவன் போன்றவர்களால் கட்டுரை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது; இந்த அடிப்படையில் தமிழவன் எழுத்துக்கள் பெரும்பாலும் கடும் மூளை உழைப்பினால் உற்பத்தி செய்யப்பட்டவைகளாக விளங்குகின்றன; இங்கே நாம் எடுத்துக்கொள்ளும் ‘கார்ல் மார்க்சும் தாணு ஆசாரியும்’ என்ற சிறுகதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்; உண்மையில் உணர்ச்சிப் பெருக்கில் வந்ததை, வந்த மொழியில் இறக்கி வைப்பது எளிது;

ஆனால், தமிழவன் மாதிரி ஒரு கோட்பாட்டுப் பின்புலத்தில் இலக்கியப் படைப்பை அறிவார்ந்த தளத்தில் ஒவ்வொரு சொல்லையும் செதுக்கிச் சொருகுவதுதான் மிகப்பெரிய வேலை; தமிழவன் தொடர்ந்து அதைச் செய்துகொண்டிருக்கிறார்; இதை ஏதோ மேலைநாட்டுக் கோட்பாடுகளைப் பார்த்துத்தான் செய்கிறார் என்று சொல்ல முடியாது; நம்முடைய அகப்புற இலக்கியங்கள் இப்படித்தான் கோட்பாட்டுப் பின்புலத்தில்தான் சொற்களை வடிவமைத்துத் தந்துள்ளன; தமிழவன், தமிழின் வேரைத் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் அடையாளம் கண்டுமேலெடுக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்; அந்த நோக்கிலான ஒரு வேலைப்பாடுதான் அவருடைய சிறுகதைகளும் என்று சொல்லலாம். சரி, சிறுகதைக்கு வருவோம்.

‘நாகர்கோவிலிலிருந்து விடுமுறையில் ஊருக்குவரும்போது தாணு ஆசாரியின் இரும்புப் பட்டறையில்தான் போய் அமர்வேன்’ என்று கதை தொடங்குகிறது. இந்த முதல் வாசகம், வாசகனாகிய என் சொந்த அனுபவத்தோடு உறவாடிவிடுவதால் கதையை ஆர்வத்தோடு மேலே வாசிப்பதற்கு மனம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுத் தயாராகிவிடுகிறது. அடுத்து தாணு ஆசாரியை வித்தியாசமான முறையில் வாசகருக்கு அறிமுகப்படுத்த முனைகிறார்; இவர்தான் கார்ல் மார்க்சு என்று புகைப்படத்தைக் காட்டியபோது, இவர் நம்ம தாணு ஆசாரி மாதிரி இருக்கிறாரே என்று பட்டதாம். தொடர்ந்து சொல்கிறார்:

“அந்தப் பரந்த முகத்தில் ஜொலிக்கும் கண்களும் வெள்ளையாய் அலை அலையாய் நெளியும் தாடியும் மாத்திரமல்ல, வேறு ஏதோ ஓர் ஒற்றுமை இருவருக்கும் இருப்பதாக என் மனதில் படும்.”

‘ஆனால் அவருக்குக் கார்ல்மார்க்சைத் தெரியுமோ என்னமோ. ஆனால் அவர் பேச்சுமட்டும் மனிதர்களின் ஆழமான குணங்களைத் தொட்டுத்தான் செல்லும்’ - என்று அறிமுகப்படுத்தும்போது ஒரு நிச்சயமற்ற தன்மையை, சந்தேக மனப்பான்மையை உருவாக்கிவிடுகிறார்.

அடுத்து ஓர் அறிமுகம், “செஸ் விளையாடுவதிலும் மனிதர் மன்னன்” என்கிறார். இரும்புப் பட்டறைத் தொழிலுக்கும் செஸ் விளையாட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று இங்கொரு சந்தேகத்தைக் கிளப்புவதோடு, மனிதர்கள் யாரும் இதுதான் என்று ஒற்றைப்பொருளில்லை; வேறு வேறாகப் பன்முகமாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்குத்தான் இவ்வாறு செஸ் விளையாட்டை இங்கு இழுக்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது; நிச்சயமற்ற தன்மையோடே பிரதி நகர்கிறது.

“ஆசாரிக்குத் தாம்ஸன் வைத்தியர் மீது தனிக்கவுரவம்; பார்த்தால் உடனே எழுந்து நின்றுவிடுவார்” என்கிறார்; யார் அந்த வைத்தியர்? கையைச் சுட்டிக் காட்டியவாறு காலும் கையும் நீட்டி நீட்டி நடந்து செல்லும் பைத்தியம்.

கதைசொல்லியாகிய தன்னிலை ஆசாரியைப் பார்த்து “வைத்தியர் விஷயம் தெரிந்தவர்னு சொல்றாங்களே” என்கிறார். ‘பெரிய மேதை’ என்று பதில் சொல்கிறார்; இந்தப் பதில் சொல்வதற்கு முன்பு ஆசாரியின் நடைத்தையியலை இப்படி வர்ணிக்கிறார்: “ஆசாரி வாயைப் பொத்திவிட்டு எழுந்து வெளியே சென்றார்; வெற்றிலையைப் பளிச்சென்று துப்பிவிட்டு வந்தார். பின்பு இரண்டு கன்னத்திலும் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்தார்; பிறகுதான் மேதை என்றார்; கூடவே செஸ் காயைக் காட்டி “இது எங்கே போகும்னு நமக்குத் தெரியுமா?” என்றொரு கேள்வியைப் போடுகிறார்; இவர் தெரியாது என்றவுடன் “தெரிந்த மனுஷன் அந்த ஆள்” என்கிறார். அதற்கு இவர் “என்ன இருந்தாலும் புத்தி பேதலிப்புதானே?” என்றவுடன், அவருடைய நடத்தையை இப்படி வர்ணிக்கிறார்: “

அப்போது உலைக்கருகில் வேலையில் ஈடுபட்டிருந்த ஆசாரி, என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டு ஒரு இரும்புத் துண்டைச் சிவக்கக் காய்ச்சி அடித்தார்; முகத்தில் சூட்டினாலும் களைப்பினாலும் வியர்வை வழிந்தது; தாடியில் கரித்தூள்…”

இப்பொழுது அவர் சொன்ன பதிலை முன்வைக்கிறார்:

“யாருக்குத்தான் புத்தி பேதலிப்பு இல்லை; சொல்லு ஒரே ஒருத்தனைச் சொல்லு”

என்று சொன்னவர் எதுவும் பேசாமல் இரும்புப் பாளத்தை அடிக்க ஆரம்பித்துவிட்டார்; இப்படி மௌனமான ஆசாரி, சிறிதுநேரம் கழித்து, அடிப்பதை நிறுத்தி விட்டு,

“பாரு இங்கே! நான் யாரை ரொம்பப் பெரிய சாகசக்காரன்னு சொல்வேன் தெரியுமா? கையில் அஞ்சு ரூவா மட்டும் வச்சிக்கிட்டு மெட்ராஸ் வரை போயிட்டு வர்றவனத்தான்”

என்று சொன்னது மட்டுமல்லாமல் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே இன்னொரு துண்டை எடுத்து நிலக்கரித் துண்டுகளுக்கிடையில் செருகினாராம்.

அவர் சொன்ன இரண்டு பதிலுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால் அதில் ஒரு சம்பந்தம் “இருக்கும்” என்று நினைத்துக்கொண்டராம் கதைசொல்லி; இந்த இடத்திலும் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிக் கதைக்குள் “இன்மைகளை - இடைவெளிகளை” சமைத்துக்கொண்டே வருகிறார் கதைசொல்லி; மேலும் இரும்புத் துண்டைச் சிவக்கக் காய்ச்சி அடிப்பதையும், நிலக்கரித் துண்டுகளுக்கு இடையில் செருகுவதையும் விழுந்து விழுந்து சிரிப்பதையும் பின்புலமாக அமைத்துக்கொண்டு நடக்கும் இந்த உரையாடல் முழுவதும் பல மௌனங்களையும் இன்மைகளையும் தனக்குள் கொண்டிருக்கின்றன.

பிறகு ஒருநாள் ஆற்றங்கரையில் வைத்தியரைச் சந்திக்கிறான்; “என்ன நாகர்கோவிலிலிருந்து எப்போ வந்தே” என்கிற ஒரே கேள்வியோடு பேச்சை முடித்துக்கொள்ளுகிறார். தன்னோடு மட்டும் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிற வைத்தியர், இந்தச் சந்திப்பை ஆசாரியிடம் வந்து சொன்னபோது, அவர் தன் மலையாள உச்சரிப்பில் அந்தக் கேள்வியின் அர்த்தம் உனக்குப் புரிந்ததா என்கிறார்; இல்லை என்றவுடன்,

“பாருப்பா! இருளிலிருந்து ஞானத்துக்கு எப்போது வந்தேன்னு கேட்டிருக்காரு. நகரத்தில் இருட்டில்லாம வெளிச்சமா இருக்கும்”

என்று சொல்லிவிட்டுக் குதிரையை நகர்த்தி இவனுடைய ராஜாவையும் ராணியையும் மடக்கினாராம்; இந்த இடத்தில் குதிரை, ராஜா, ராணி, இருட்டு, வெளிச்சம் எல்லாமே குறியீடுகளாக மாறி வாசகருக்குள் இன்னதுதான் என்று தெளிவாகச் சொல்ல முடியாத ஒரு வகையான இன்மையை உருவாக்குகின்றன. மேலும், “ஆசாரி, வேண்டுமென்றே பைத்தியக்காரன் பேசுவதற்கெல்லாம் வியாக்கியானம் கொடுக்கிறாரா? அல்லது அப்படி ஒரு அர்த்தம் இருக்குமோ என்று யோசித்தேன்” என்று பதிவு செய்வதன் மூலம் நிச்சயமற்ற தன்மையை நோக்கிப் பிரதி கட்டமைக்கப்படுவதை உணர முடிகிறது.

கதைசொல்லி இப்பொழுது மீண்டும் ஆசாரி நகர்த்திய குதிரை இடத்தைப் பார்க்கிறான்; தப்பிப்பதற்கு ஒரு வழி இருப்பது தெரிகிறது. ஆசாரி எதிரியைத் தோற்கடிக்க நாட்டம் காட்டுவதில்லை; புதிய புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்குவதிலேயே நாட்டம் காட்டுவாராம்; கேட்பதற்கு “எதிரி இருந்தாத்தானே தோற்கடிக்க” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். என்றொரு முக்கியமான ஆளுமைப் பண்பையும் சுட்டிக் காட்டுகிறார்; தோற்கடித்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும்; புதிய புதிய எதிர்பார்ப்புக்களோடு உயிரோட்டம் ஆடிக்கொண்டே இருக்கவேண்டும்;
ஆட்டம்தான் முக்கியம்.

காலம் ஓடுகிறது; கதைசொல்லி நீண்டநாள் கழித்து ஊருக்கு வருகிறார்; இடையில் திருமணம் முடித்து பிள்ளையோடு கோயம்புத்தூருக்கு வேலை நிமித்தமாகப் போய்விட்டார்; இப்பொழுது ஊரில் ஒரு திருமணத்திற்காக வந்தவர், ஆசாரி இறந்த செய்தியைக் கேள்விப்படுகிறார்; அது குறித்து யாரிடமாவது பேசவேண்டுமே என்று மனம் அலைபாய்கிறது; வைத்தியரை ஆற்றங்கரையில் சந்திக்கிறார்; முன்பு கேட்ட அதே கேள்வி, “நாகர்கோவிலிலிருந்து எப்ப வந்த?” தொடர்ந்து கல்யாணம் பற்றியெல்லாம் விசாரித்துக் கேட்டுக்கொள்கிறார்; இவன் தயக்கத்தோடு ‘ஆசாரியின் மரணம்’ என்று இழுத்தவுடன், தனக்குள் சிரித்தார்; பின்பு “அவன் ஒரு பைத்தியம்” என்றார்; வாசகருக்கு இந்தப் பைத்தியம் என்ற சொல்லாட்சி மனிதர்களின் வாழ்க்கை வெளி முழுவதும் பரவி நீக்கமற நிறைந்து கிடப்பது நினைவுக்கு வருகிறது; மனைவியைக் கணவன் ‘போடி, பைத்தியக்காரி’ என்கிறான். கணவனை மனைவி ‘பைத்தியம் மாதிரி உளறாதீரும்’ என்கிறாள்; அதிகாரியை ஊழியன் ‘அவனொரு பைத்தியம்’ என்கிறான்; ஊழியனை அதிகாரி ‘டேய் பைத்தியக்காரா, இங்கே வாடா!’ என்கிறார். சிறுகதைப் பிரதிக்குள் தாம்சன் வைத்தியரை ஒரு பைத்தியம் என்றுதான் இந்தச் சமூகம் அடையாளப்படுத்தி வைத்துள்ளது; இப்பொழுது அந்த அடையாளமே கேலிக்கூத்தாகிவிடுகிறது. பிரதி தன்னைத் தானே கட்டுடைத்துக் கொள்கிறது.

இறந்த ஆசாரியைப் பைத்தியம் என்ற வைத்தியர், “மறையும் சூரியனையே பார்த்தார்; என் கால்களை எதற்கோ பார்த்தார்” என்று சொல்வதன் மூலம் இந்த இடத்திலும் ஓர் இன்மையை உருவாக்கிவிடுகிறது. பிறகு “குழந்தை எத்தனை?” என்று கேட்டார்; ‘ஒரு பையன்’ என்று பதில் கிடைத்தவுடன் “சரி, வர்றேன்” என்று திடீரெனப் புறப்பட்டுப் போனவர், போகும்போது, “சைக்கிள் கடை ராமச்சந்திரன் மகன் சின்னப்பையனிடம் போய்க் கேள், ஆசாரியைப் பற்றிச் சொல்லுவான்” என்ற தகவலையும் சொல்லிவிட்டுச்செல்லுகிறார்.

அவன் 15 வயது பையன், இவரைப் போலவே ஆசாரியின் சீடன்; ஆசாரிக்கு இவர் எழுதிய மடலைக்கூட அந்தப் பையனிடம் காட்டியிருக்கிறாராம்; அவன் “ஆசாரி, தன் பையன் ஊரைவிட்டுப் போனவுடன்‘நடைபிணம்’ என்கிறான். இவரோ மகன் தறுதலை ஆனான் என்றோ, சம்பாதிப்பில் ஆசை இல்லையே
என்றோ ஒரு நாளும் அவர் வருத்தப்பட்டது மாதிரி தெரியவில்லையே! “சஞ்சலத்திற்கு வேறு காரணம் இருக்கவேண்டும்” என்று நினைக்கிறான்; இந்த இடத்திலும் ‘இன்மை’ கட்டமைக்கப்படுகிறது. மேலும் “நான் ஆசாரி பற்றி வைத்திருந்த பிம்பம் உடைந்தால் என் பிம்பமும் அல்லவா உடைகிறது; எனக்குத் தொண்டை வறண்டது… ஏதோ நழுவியது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது” என்று எழுதும்போதும் இடைவெளிகள் உருவாக்கப்பட்ட இன்மை வடிவமைக்கப்படுவதோடு இருப்பிற்குப் பிம்பங்கள்தான் தேவை; உண்மைகள் அல்ல என்பதும் புலப்படுத்தப்படுகிறது. பையன் சிரித்துக்கொண்டே விவரமாகச்சொல்கிறான் :

“ஆசாரிக்குப் பையன் ஓடிப்போனதால் அல்ல வருத்தம். திருட ஆரம்பிச்சுட்டான்; சொல்லிச் சொல்லிப் பார்த்தார்; கடைசியில் கைக்கடிகாரம் ஒண்ணு திருடினான்; போலீஸ் வந்துவிட்டது. இனி மாட்டிக்குவம்னு ஓடிவிட்டான்; அதன் பிறகு இரும ஆரம்பித்தார்; ரெண்டு மாதத்தில் போய்ச் சேர்ந்துவிட்டார்; மருந்து சாப்பிடவில்லை; தானாகவே மரணத்தை வரவழைத்தார்.”

‘பையன் ‘பொய்’ என்று தோன்றாதபடிச் சொன்னான்’ என்கிறார் கதைசொல்லி. இங்கேயும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறார்; புறப்படும்போது ஒரு நினைவு வந்து “ஆசாரி கடைசியிலும் செஸ் விளையாடினாரா?” என்று கேட்கிறார்; “அவர் செஸ் விளையாடுவதை விட்டுவிட்டார்” என்று பதில் சொன்ன பையன், ஏதோ அவரிடமிருந்து தெரிந்துகொண்ட பாவனையில் இவரைப் பார்க்கிறான்; “நான் கேட்காமலேயே ஏதோ ஒன்றைச் சொல்லி என்னைச் சுக்குநூறாக்கிவிடுவானோ என்ற பயம் வந்த போது ஒரு கணமும் அங்கு நிற்காமல் விடுவிடு என்று நடையைக் கட்டினேன்” என்று கதை முடிகிறது. இங்கேயும் நிச்சயமற்ற தன்மையையும் இடைவெளிகளால் இன்மையையும் அமைத்துக் காட்டுகிறார் கதைசொல்லி.

இவ்வாறு தொடக்கத்திலிருந்து சந்தேகங்களும் நிச்சயமற்ற தன்மைகளும் கொண்டு, பிரதி முழுவதும் இன்மைகளால் - இடைவெளிகளால் - நிறைந்து கிடக்கிறது; இப்படியான ஒரு பிரதியின் நோக்கமென்ன? வாசகரும் படைப்புச் செயல்பாட்டில் பங்கெடுத்துத் தானும் ஒரு வகையான உழைப்பைச் செலுத்தவேண்டும். பிரதியை வாசித்தல் என்பது சுகமாக அனுபவித்தல், அதன் ருசியைத் துய்த்தல் என்ற பழைய பார்வைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுப் பிரதியோடு வாசகரும் பயணம் செய்து தனக்கான பிரதியைத் தானே உருவாக்கிக்கொள்ளுதல் என்கிற புதிய பார்வை முன்வைக்கப்படுகிறது; சொல்லப்பட்டவைகளில் இல்லை; சொல்லப்படாத இடைவெளிகளில்தான் எழுதியவரும் வாழ்கிறார்; வாசிப்பவரும் வாழ்கிறார்; கல், மண், சிமண்ட், இரும்பு, தண்ணீர் என்று பணத்தைக் கொட்டிச் சுவர் எழுப்பி வீடு கட்டுகிறோம்; அந்தச் சுவரில் நாம் வாழ்வதில்லை; அந்தச் சுவர்கள் மூலம் உருவான வெற்றிடத்தில்தான் நமது இருப்பு நிகழ்கிறது; ஓர் ஆழமான பிரதிக்குள்ளும் இதுதான் நிகழ்கிறது.

இவ்வாறு பல்வேறு குறியீடுகளாலும் இடைவெளிகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பிரதியை நான் எப்படி வாசித்தேன் எனச் சொல்லவேண்டும். முதலில் இடைவெளிகளால் உருவாகும் தெளிவற்ற தன்மையே எனக்கு நாம் வாழும் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதால் நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்துவிடுகிறது; வாழும் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மைதானே நிறைந்து கிடக்கிறது; ஆனாலும் பிரதியை வாசிக்கிற மூளையும் மனமும் எதையும் அர்த்தப்படுத்திக் கொள்வதைத் தனது இயல்பாகவும் பழக்கமாகவும் கொண்டவை; அப்படிப் பார்க்கும்போது எனக்கு இந்தப் பிரதி தந்தைக்கும் மகனுக்குமான ஆதிப்பகைமை உணர்வின் மேல் எழுப்பப்பட்டிருக்கிறது எனப்படுகிறது; ஆசாரி, நோய்க்கு மருந்து சாப்பிடாமல் கிடந்து தன்னைக் கொலை செய்வதும், வைத்தியர் பைத்தியமாக அலைவதும் இந்த ஆதிப்பகைமையினால் விளைந்தவை தான்; ஆசாரிக்கு மகன்தான் எமனாக அமைந்தான் என்பது பிரதிக்குள் வெளிப்படையாக இருக்கிறது; ஆனால் பைத்தியமாக அலையும் தாமஸ் வைத்தியருக்கும் மகன்தான் பிரச்சினையாக இருந்திருப்பான் என்பதை, ஆற்றோரத்தில் வைத்தியரைக் கதைசொல்லி சந்திக்கும்போது, “குழந்தை எத்தனை” என்று கேட்டார் என்பதன் மூலம் நான் ஊகித்துக்கொள்கிறேன். இந்தக் குழந்தை உன்னை என்ன பாடுபடுத்தப்போகிறதோ என்று அவர் தனக்குள் எண்ணிச் சிரித்திருப்பார் என்று எனக்குப்பட்டது. இந்தப் பிரதி மட்டுமல்ல நமது வாழ்வும் இத்தகைய ஊகங்களால்தான் இங்கே நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். கிராமத்தில் இப்படிச் செல்லமே, தங்கமே என்று வளர்த்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆன பிறகு படுத்தும் பாட்டைப் பார்த்து மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள, “போன பிறவியில் நாம் செய்த பாவங்கள் எல்லாம் திரண்டுதான், இந்தப் பிறவியில் நம்மைத் தண்டிக்க மகனாகப் பிறந்திருக்கிறது” என்று சொல்லிக்கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கதைசொல்லி கார்ல்மார்க்சை எப்படி இங்கே கொண்டுவருகிறார் என்பதையும் கேட்காமல் இருக்க முடியவில்லை; ஒருவேளை தன் மகன் இறந்தபோது மார்க்சும் ஜென்னியும் புதைப்பதற்கான செலவை எதிர்கொள்ள முடியாமல் தவித்துத் துன்புற்ற அந்தச் சோகத்தை நினைவுபடுத்தும் விதமாகப் பயன்படுத்தி இருக்கிறாரோ? அல்லது திருடினான் மகன்; முதலாளிகள் உழைப்பைத் திருடுவதுபோல மகனும் திருடினான் என்ற ஒற்றுமையைப் புலப்படுத்த மார்க்சின் பெயரைப் பயன்படுத்தினாரோ? இப்படி வாழ்க்கைபோல வாசகர்களை நிச்சயமற்ற தன்மையிலேயே பயணிக்க வைப்பதில்தான் பிரதியின் வெற்றி அமைந்திருக்கிறது போலும். காலத்தால் அழியாமல் நிரந்தரம் பெற்ற பழைய பிரதிகளின், தொன்மங்களின், குணமும் இதுவாகத்தானே இருக்கிறது.

இந்தப் பிரதியில் ஆசாரி தனக்கு வந்த நோயைக் கருவியாக மாற்றித் தன்னைக் கொலை செய்துகொண்ட செய்தி கடந்துபோய்விடக் கூடியதாக இல்லை; வாழ்க்கை ஓர் அபத்தம்; அர்த்தம் அற்ற ஒன்று; செய்வதையே செய்து செத்துக்கொண்டிருப்பதுதான் இதன் இயல்பாக இருக்கிறது என்று உணர்ந்த கணத்தில் தற்கொலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது சரியான நடவடிக்கையாக இருக்கும்; அதைத்தான் ஆசாரி தேர்ந்தெடுக்கிறார்; ஆனால் அது பலராலும் முடிவதில்லை; கிரேக்க புராணத்தில் வரும் சிசிபஸ் (Sisyphus) பாறையை உருட்டிக் கொண்டு மலை உச்சிக்குக்கொண்டு போனவுடன் மீண்டும் தரைக்கு வந்துவிடும்; மீண்டும் மலை உச்சிக்கு உருட்டுவதையே செய்து கொண்டிருக்கிறார்; தற்கொலை செய்துகொள்ள முடியாதவர்கள், இப்படித்தான் இருக்கும் வாழ்க்கை என்று ஏற்றுக்கொண்டு சிலுவை சுமந்து வாழ்ந்து தீர்க்கிறார்கள்; இன்னும் சிலர் ஆன்மீகம், கடவுள் என்று தன்னை ஒப்புக்கொடுத்து விடுவதன் மூலம் இந்தத் தற்கொலைப் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் பலவாறு எழுதுகிறார் அபத்தக் கோட்பாட்டை முன்மொழிந்த பிரஞ்சு தத்துவவாதி ஆல்பர் கம்யு. இந்தச் சிறுகதை முழுவதும் இப்படியான அபத்தக்கோட்பாட்டைப் பற்றிய ஒரு மொழி விளையாட்டுதானோ என்றும் எனக்குப் படுகிறது.

தமிழவன் வாழ்வு குறித்த தேடலை எப்படியெல்லாமோ வகைவகையாக மாற்றி அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்; அவற்றில் ஒன்றுதான் இந்தச் சிறுகதையும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer