கல்வியதிகாரம்

ஞானயூனன்

பகிரு

கல்வியும் கைப் பொருள்இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ
                                                                                                  - வளையாபதி 

கல்வி செல்வமாகப் போற்றப்பட்ட அதே காலகட்டத்தில் எழுந்த இலக்கியம் வளையாபதி. செல்வமில்லாவிட்டால் கற்ற கல்வியும் பயன் தராது என்ற இதன் அர்த்தம் சட்டென வசீகரிக்கிறது. எங்கோ ஏதோ ஒரு பொது நியாயத்திலிருந்து விலக்கப்பட்ட இக்குரல் சமகாலத்துடன் அவ்வளவு சரியாக பொருந்தி போகிறது. சாதிய விடுதலை பொருளாதார, சமூகசமத்துவங்களுக்கான கருவியாக மொழியப்படும் கல்வி நாட்டின் பொருளாதாரம் போலவே சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் பின்னதிற்கு எழும் வாதங்களை, எதிர்ப்புகளைப் பார்க்கும்போது கல்வி அவ்வளவு கவனத்துக்குரியதாக இல்லை என்பது நிதர்சனம். ஒரு மதத்தின் பரவலுக்கு ஆயுதமாக பொதுவெளிக்கு வந்த கல்வி இன்னொரு மதத்தின் வளர்ச்சிக்காக அதன் ஜனநாயகத்தன்மையை இழந்து வருகிறது.

பயின்ற கல்வியைப் பொருளாதார வளர்ச்சிக்கு உரியதாக மாற்றுவது ஒரு பக்கம் இறுகிவரும் சூழ்நிலையில் கல்விபெறுவதும் போராட்டமாக மாறிவிடும் சூழல் வெற்றிகரமாக நடந்தேறுகிறது. பல்கலைக்கழகங்களின் இருக்கைகளுக்கான விலையென்பது அவ்வப்போது செய்தி ஊடகங்கள் வழியாகவும் செவிவழியாகவும் அறியக்கிடக்கின்றன.

ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்றவனாக பல அதிர்ச்சிகளை சந்தித்து பிறகு அதற்கு பழகியிருக்கிறேன். கல்வியின் மீது நடத்தப்படும் அத்துமீறலை ஏகபோகமாக கல்விபுலத்தில் இருப்பவர்கள் உணராதவர்களாகவும் அல்லது அதற்கு மௌனம் சாதிப்பவர்களாவுமே இருப்பதை பார்க்க முடிகிறது. கல்விப் பணியை மற்றொரு தொழிலாக கருதும் தொண்ணூறு சதவீதம் பேரை நோக்கி இதை சொல்வது சரியாக இருக்காது. இதை அனுமானிக்கும் திறன் வாய்ந்த சில அறிஞர்களும் தனக்கான அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தாதிருப்பதுதான் வேதனைக்குரியது. ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பதுபோல, ஆட்சியாளர்கள் கொள்கை அதிகாரிகளின் கடமையாக மாறுகிறது.

கடந்த பிப்ரவரியில் பல்கலைக்கழகங்களில் கூடுதலாக இருக்கும் நூற்றுக்கு மேலான பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். வெறும் இருபது மாணவர்கள் பயிலும் ஒரு துறையில் எட்டுப் பேராசிரியர்கள் பணியாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துறையிலும் அதிகமாகி வரும் சூழ்நிலையில் எங்கிருந்து கூடுதல் பேராசிரியர்கள் என்ற நிலை வருகிறது. நான் பயின்ற பல்கலைக்கழகத்தின் ஒரு பேராசிரியர் தொலைநிலைக் கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அந்தத் துறையில் எனக்குத் தெரிந்து பணிஒய்வு பெற்ற மூன்று பேராசியர்களின் காலி பணியிடங்கள் இன்றுவரை நிரப்பப்படவில்லை. வெறும் மூன்று பேராசிரியர்களுடன் பல்கலைக்கழகத்தின் ஒரு துறை இயங்கி வருகிறது. தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பணிகள் அத்துறையில்தான் மேற்கொள்ளப்பட்டன. பதினைந்து பேராசியர்களுடன் இயங்கிய துறைகளும் இன்று அதில் பாதிக்கும் குறைவான பேராசிரியர்களைக் கொண்டே செயல்பட்டு வருகின்றன. வேலையை உருவாக்குதல் என்பது இன்றைக்கு அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்து அனைவரையும் ஒரு முதலாளியின் கீழ் அடிமையாக வாழ வைப்பதே என்ற தொனியில் பார்க்கப்படுகிறது. இதில் அரசிற்கு கூர்ந்த கண்ணோட்டம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.

வரவு என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் முனைவர் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் அதற்கு எதிர்மறையாக பணிவாய்ப்பு என்பது இறங்கு முகமாகவே உள்ளது. ஆய்வாளர்களிடமும் குறைந்தபட்ச அறிவு செயல்பாட்டிற்கான ஊக்கத்தைக் காண முடியவில்லை.

பொருளாதார மந்தநிலைமட்டுமல்லாது அறிவு செயல்பாட்டிலும் இத்தகைய மந்தநிலையே போற்றி பாதுகாக்கப்பட்டு போதிக்கப்பட்டும் வருகிறது இதற்கு மாறாக விழிப்புணர்வு பெற்றவர்களும் தன்னுடைய அறிவு விளம்பரத்திற்காக சில செயல்களை செய்வதன்றி விளைவுகளுக்கான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில்லை.

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பொது முடக்கம் நீடித்திருந்த காலத்தில் மீண்டும் புதிய கல்விக்கொள்கை அமல் பற்றிய சலசலப்புகள் எழுந்தன. கூடிய விரைவில் வந்துவிடும் என்பது ஒரு புறம் இருக்கும் நெருக்கடி. இதை எழுத எடுத்துக்கொண்ட பத்து நாட்களுக்குள் தமிழக அரசு கல்லூரிகளில் சுழற்சிமுறை என்பதை ரத்து செய்து அறிவித்துள்ளது. இதற்கு கல்வியாளர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. எவ்வளவு எதிர்ப்பிற்குள்ளாகவும் தன்னுடைய கல்வியழித்தொழிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தியே வருகிறது அரசு. மேற்கூறிய அறிவிப்பால் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தனது பொருளாதாராத்திற்குள்ளான உயர் கல்வி கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்கள். மட்டுமில்லாது கிட்டத்தட்ட இத்தகைய செயலென்பது அரசு கல்லூரிகள் இனி செயல்படாது என்பது போன்றதுதான் என்கிறார்கள் ஒரு சாரார்.

ஆயிரக்கணக்கான விரிவுரையாளர்களும் வேலையிழக்கும் அபாயமும் உண்டு. தொடர்ந்து நுழைவுத்தேர்வுகள் புதிய கல்விக்கொள்கை உயர் கல்வியில் நியாயமற்ற அறிக்கைகள் என கல்வியின் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களை சரியாக குவித்து ஒரே புள்ளியில் காணவேண்டியுள்ளது.

இந்துத்துவா எப்படி பாசிஸ மனநிலையில் இயங்குகிறது என குறிப்பிடும் சசிகாந்த் ஐ.ஏ.எஸ். ஒரு பாசிஸ ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் தடையாயிருப்பது தன்னாட்சியாய் விளங்கும் ஒரு சில துறைகளின் சுதந்திரம்தான். சுயசிந்தனையும் சுதந்திரமும் ஒற்றை தன்மைக்கு அனைத்தையும் மாற்ற முனையும் பாசிஸ சித்தாந்தத்திற்கு தலைவலியாக அமைவன. எனவே அவற்றின் நடவடிக்கைகள் சுதந்திர அமைப்புகளை முதலில் காலி செய்வதாகவே அமையும் என்கிறார். கல்வியின் மீது நிகழ்த்தப்படும் இவ்வளவு வன்மத்தையும் இந்தப் பின்னணியிலிருந்தே பார்க்கவேண்டியுள்ளது. இடஒதுக்கீடுகளை முறியடிக்க தனியார் மயம் என்பதை முன்னெடுக்கும் இதே அரசு சுயசிந்தனைகளுக்கு அடிப்படையாய் அமையும் கல்வியை ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்குரியதாய் மாற்ற முயல்கிறது.

இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிர்கட்சியினரோ சமூக ஆர்வலர்களோ வேறு இயக்கத்தினரோ தான் இதுவரை குரலெழுப்பி வருகிறார்கள். ஒவ்வொரு பிரச்சனையின்போதும் வெவ்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்புகிறதே ஒழிய இவையனைத்தையும் ஒருங்கிணைத்த ஒரு குரல் எழுவதில்லை. இது கல்விப்புலத்திலிருந்து எழுவதே சரியாக இருக்கும். பேராசிரியர்கள் இதில் தொடர்பேயில்லை என்பது போல விலகியிருப்பது இதையெல்லாம் அங்கீகரிப்பதற்கு சமமானதுதான். ஒரு இன அழிப்பைப் போல கல்வியுரிமை மீதான தாக்குதல் தீவிரம் பெற்றுள்ளது. இதனை எழுதி முடிப்பதற்குள் பலவகைகளில் பல ஊடகங்களில் கல்லூரிப் பேராசிரியர்களின் விட்டேற்றிதனத்தைப் பார்த்து வருகிறேன். மேற்கூறிய அரசு கல்லூரியில் சுழற்சி முறை ரத்து எனக்கூறிய அடுத்த நாளே ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் பிரபல நாளிதழில் மத்தியஅரசின் 20 லட்சம் கோடி ஏமாற்று வேலைக்கு வலு சேர்க்கும் கட்டுரை ஒன்றை எழுதுகிறார். அரசின்செயல்பாடு மட்டுமல்லாது கல்விப்புலத்திற்குள்ளாகவே இத்தகைய சீர்கேடுகள் நடந்து வருகின்றன. எக்காலத்திலும் கல்விப்புலம் மீது விமர்சனம் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இதுநாள்வரை கல்வித்துறையின் தரம் குறித்ததாகவே இருந்து வருகின்றன. ஆனால் இன்று பரப்பப்படவேண்டிய விழிப்புணர்வு தரம் தரமற்றது என்பதைத் தாண்டி அதுவொரு அடிப்படை உரிமை என்பதுதான்.

மீண்டும் மீண்டும் கல்விப்புலத்தைக் கூற ஒரு காரணமுள்ளது. எத்தகைய அமைப்புக்கு எதிராகவும் செயலாற்றக்கூடிய சுதந்திரம் ஓரளவிற்கு கல்விப்புலத்திலேயே மிஞ்சியுள்ளது.

திராவிடம் என்ற சொல் புழங்கத் தொடங்கி அது குறித்த பெரும்பான்மையான ஆய்வுகளை செய்தது பல்கலைக்கழகங்கள்தான். எப்போதும் ஆய்வுலகத்தின் செயல்பாடுகள் சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்து வருகின்றன. அதை அவதானிப்பவர்கள் எப்போதும் ஒரு மாற்று சிந்தனைக்கு ஆயத்தமானவர்களாக இருக்கிறார்கள். அதன் மூலம் அரசியல் ரீதியாகவும் அறிவுப்புலத்திலும் ஒரு தாக்கம் நிகழ்வதை மறுக்க முடியாது. எனவேதான் இந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு நெருக்கடியில் கல்வியாளர்களிடையே ஒரு அசைவு தேவைப்படுகிறது. எஞ்சியிருக்கும் கொஞ்ச சுதந்திரத்தை வைத்து இத்தகைய நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. இந்தக் குறுகிய காலத்தில் அவதானித்த விடயங்களை நிரல்படுத்தினால் பேராசிரியர்களின் ஒட்டு மொத்த செயல்பாட்டின் மீது விமர்சனம் வைப்பதாக அது நீளும். இன்னும் நான் சில கல்வியாளர்களை நம்புகிறேன். இது பற்றியெல்லாம் கேள்வியெழுப்பும் ஒரு அறிவியக்கம் தலையெடுக்க வேண்டியுள்ளது. இனிமேலும் கல்வி புலத்தில் விட்டேற்றிதனங்களே தொடர்ந்து இருக்குமானால் ஒரு பெரிய அநீதிக்கு துணை போன பழியே சந்திக்க வேண்டியிருக்கும்.

இதில் தனியார் கல்லூரிகள் தனது துறைகளுக்கான முழு சுதந்திரத்தை வழங்கவேண்டும். இன்றும் பல கல்லூரிகளில் நிறுவனரின் கொள்கைகளுக்கு எதிரான கருத்தரங்குகள் அல்லது வகுப்பறை பாடங்கள் அமையக்கூடாது என்பது போன்ற மனப்பான்மையுடன் இயங்குகின்றன. ஒரு வகையில் இதுவும் உயர்கல்வியின் பயனைத் தடுக்கும் செயல்தான். எனவே தன்னாட்சிக் கல்லூரிகள் இதில் தங்கள் இறுக்கத்தை தளர்த்தவேண்டும். உள் அரசியல்கள் களையப்படவேண்டும். கல்வியென்பதே ஒரு அரசியலாக மாறிவிட்ட சூழலில் அரசியல் பேசுவதும் ஒரு கல்விதான் என்ற விழிப்புணர்வு ஏற்படவேண்டும். இல்லையெனில் மேற்சொன்ன இலக்கிய வரிகளை இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு மெய்ப்பித்த பெருமை கல்விப்புலத்திற்கும் உரியதாகவே அமையும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer