கரை காணா ஏரி
(கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார், தப்பு விதை, கவிதைகள், ஸ்ரீநேசன்)

மு. குலசேகரன்

பகிரு

மதிப்புரை

முன்பு கவிதைகள் தனி மனிதப் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசின. அவை கவிஞன் என்னும் தனி நபர் வழி நுட்பமாக அணுகப்பட்டன. ஆளுமைப் பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், காமம் போன்றவை பாடுபொருள்கள். அவற்றின் மொழி இறுக்கமானதும், உள்வயமானதுமாயிருந்தது. காலவோட்டத்தில் கவிதைகளில் சமூகப் பார்வை உருவானது. அரசியல், சூழலியல், எளியோர் பிரச்சினைகள் மேலுக்கு வந்தன. தனியான பிரச்சினைகளும் சமூக நோக்குடன் வெளிப்பட்டன. அவை உள்ளடக்கங்களாக இல்லாவிட்டாலும் நுண் அம்சங்களாயிருந்தன. தனிப்பட்ட சிக்கல்களுடன் தொடர்புபடுத்தியும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. கவிதை மொழியும் சற்று எளிதானதும் வெளிப்படையானதுமானது.

ஸ்ரீநேசன் கவிதைகளின் ஆரம்பம் பெரும் அகப்போராட்டத்தில் துவங்குவது. முதலிலுள்ள “சிக்கல்” கவிதை, பைத்திய நிலையை அண்மிப்பதன் மூலம் அதை அடையும் முயற்சி. அதுவே அவருக்கு “எல்லையற்ற தர்க்கம், அர்த்தமின்மை, துயரம், அலைக் கழிப்பு” கொள்வதற்கான வழியாகிறது. “குருவி மற்றும்” கவிதையில் குருவியும், மாடும் மற்றொன்றாக மாறி விடுகின்றன. இது இயற்கையில் விளையும் அழகான விந்தைப் படிமம். மேலும் பல மாயைகள் தனக்குள் நிகழ கவிதைசொல்லி காத்திருப்பதாயிருக்கிறது. “நான் சலனமுறும்போது / எங்கேயோ ஓர் இடர்ப் பாடு இயக்கத்தில் / நிகழ்ந்து விடுகிறது” என்று தொடக்கத்திலேயே அவர் அறிகிறார். எனினும் “என்னைச் செலுத்தத் தொடங்குகிறேன் / தன்னுள் வெளியில்” என்பது ஆழ் விருப்பமாயிருக்கிறது. “உள் வெளிப் பயணம்” போன்ற கவிதைகளும் அவர் தன்னுள் தன்னைத் தேடுவன எனலாம்.

தொடக்கக் காலக் கவிதைகள் தன்னடையாளம் கொள்ள அலைந்தன. அடைய முடியாதது என உணருகையில் அவற்றுள் உளப் போராட்டங்கள் உருவாகின. தனிமையும் சுயவிரக்கமும் கவிந்தன. அனைவரின் துயருக்குக் காரணம் இது எனவும் அறிந்தன. துக்கம் தனியாகவே அனுபவிக்க முடிவது. எனவே அக்கவிதைகள் முழுதும் தன்னிலையில்  எழுதப்பட்டன. எப்போதாவது தன்னிலையையே முன்னிலைப்படுத்தியும் கொண்டன.

அவை தன்னிலிருந்து விரிந்த உலகத்தைக் கண்டன. தன்னிலை ஓர் அறையாக, சுவர்கள் சூழ்ந்த இடமாக, மூளையாக, குகையாக, கருப்பையாய் இருந்தது. “கூட்டத்திலிருந்த தனியான / குஞ்சு மீனொன்று / அழைக்க / அதன் ஆழத்திற்குப் போனேன்” (ஆழ் மாற்றம்). இதில் கூட்டமாயுள்ள மீன் ஒன்று தனியாக அழைத்துச் செல்வது உதாரணம். இவற்றின் காலமும் நள்ளிரவு, இருட்டு, அமானுஷ்ய வேளையாயிருக்கின்றன. அதனால் “தன் விடிவு காலத்தைத் தேடுகிறேன்” என்பது நோக்கமாகிறது. அப்போது கவிதைகள் தன்னுடன் பேசிக் கொள்வதாக, தன்னைப் பற்றிச் சொல்வதாயின. மொழிப் பித்தேறி தம்போக்கில் கட்டுப்பாடில்லாமல் ஓடின. எதிர்பாரா இடங்களில் சொற்கள் உடைபட்டு வரிகள் சிதைந்தன. சிக்கலும் சிடுக்குகளும் நிரம்பிய தம் அகத்தை வல்லமையோடு வெளிப்படுத்துவதாகத் தோன்றின. ஒரே சமயத்தில் பல அர்த்தங்களைத் தொனிக்க முயன்றன. “விழி (கிழி)த்து, பட / படக்கும், இரத்தத்தில் குளித்துக் கொன்று” போன்றவை உதாரணங்கள். இவை கவிஞனில் நிகழும் மனப் போராட்டங்களின் சாட்சியங்களாகலாம்.

ஸ்ரீநேசன் கவிதைகளில் தொன்மப் படிமங்கள் அபூர்வமாகவே வெளிப்பட்டு முழுக் கவிதையையும் கட்டமைக்கின்றன. பழைய தொன்மங்கள் மறுவுருவாக்கமும் செய்யப்படுகின்றன. அவை பெருந்தெய்வ மரபுகளுடையவையாக அல்லாமல் நாட்டார் தன்மையைக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் எழுதப்பட்ட “நள்ளிரவில் இயேசு இளம் பெண்ணை அழைத்துச் செல்கிறார்” கவிதையில் தொன்மத்தை அவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை. அதில் வரும் பாத்திரமான இளம் பெண்தான் இயேசு படிமத்தைப் படைப்பவளாயிருக்கிறாள். முதலில் சைக்கிள்காரனாலும், பிறகு இளம் பெண்ணாலும் கவிதை சொல்லப்படுகிறது. அவன் சாத்தானாக மாறிவிடும் சாத்தியமுள்ளவனாயிருப்பவன். அவள் மீதிக் கவிதையைத் தானே கூறி முடிக்கிறாள். தன்னைப் பாதுகாக்க நல்லெண்ணமுள்ள இயேசுவை “இயேசுவே வந்தீர்கள்” என்று உருவாக்குகிறாள். அவளின் ஆழ்ந்த நம்பிக்கை இயேசுவைத் தோற்றுவித்துவிடுகிறது. அதை எக்காலத்திலும் சைக்கிள்காரன் பொய்ப்பிக்கவும் மாட்டான். அந்த என்றுமுள அறத்தால்தான் இளம்பெண்களால் நள்ளிரவில் தனியே நடமாட முடிகிறது. இது எளிய சொற்களால் இயல்பாகத் தோன்றும்படி எழுதப்பட்ட ஒரு கவிதை. மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்திப் பெரும் அர்த்தங்களை உருவாக்கிவிடும் சிறந்த கவிதைகளிலும் ஒன்று.

“குறத்தியின் நரி” என்ற மற்றொரு கவிதையில், தான் குறத்தியிடம் பெற்ற ஒரு நரிப் பல்லிலிருந்து முழு நரியை உருவாக்குகிறார் கவிதை சொல்லி.

பரியை நரியாக்குகிற புராணப் படிமம் இங்கு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. அந்த நரி இங்குத் தனித்திருக்க முடியாததைக் காட்டித் தப்பித்து ஓலத்துடன் ஓடுகிறது. “கன்னியாகுமரி” கவிதையில் என்றென்றும் மாபெரும் தனிமையில் காத்திருக்கும் குமரி காட்டப்படுகிறாள். அதைப்போல், அந்தக் கடைக் கோடிக்குச் சென்றும் அவருடைய தனிமையும் நீங்குவதில்லை. அது சுற்றிக் கடலெனப் பெருகுகிறது.

முதலிலேயே ஸ்ரீநேசன் கவிதைகளின் மையப் படிமமான ஏரி அடையப்பட்டுவிடுகிறது (அந்தி). அப்போதும் தனியனான ஒருவனின் கண்களால் பார்க்கப்படுகிறது. அதே போல், தானற்ற பிறவற்றிலும், “மீனாக நான் / நானாக மீன்” (ஆழ் மாற்றம்) என்று தன்னை அடையாளப்படுத்தியும் கொள்ள முயலுகிறது. மலையும் அவரின் மற்றொரு மையப் படிமமாக இருப்பது. ஒரு கவிதையில், உயர்ந்த மலையை அடைந்து, அதன் அங்கமான ஒரு பாறையாக மாறியும் விடுகிறார் கவிதை சொல்லி. அதனால் எவ்வித அடையாளமுமற்ற தன்னை அறிய ஒண்ணாத நிலை கிட்டுகிறது. “ஞாபகங்கள் சிறகென விரித்த / ஒரு பறவை பறந்து / எள்ளும் என் இருப்பு” என்பது அப்போது அவர் கவிதைகளின் வழி அடையும் ஞானமாகிறது. மொத்த அகத் தேடல்களையும் காட்டிவிடுகிற உன்னதக் கவிதை “திரும்ப முடியாத பாறை”. நீண்ட, வளமான இலக்கிய மரபின் தொடர்ச்சியில் வருபவர்களால் மட்டும் எழுதப்பட முடிவது. அதே சமயத்தில் நவீனத்துவத் தன்மையையும் சுலமபமாகக் கடந்துவிடுகிறது.

இவ்வாறாகக் கவிதை சொல்லி, தான் முழுதாகப் பிறவற்றில் கலக்கிறார். பின் எழுதப்படும் கவிதைகளில் தனிமை மெல்ல உதிர்ந்து மற்றவையாக விரும்புகிறது. தாயாக, தாரமாக, சேயாகத் தன்னை உணர்கிறது. அது அம்மனாக, ஏரியாக, அதில் நீந்தும் மீனாக, கோயிலாக மாறுகிறது. அம்மனுடன் சேர்த்துத் தன்னைக் காண்பதுபோல், வெயில், பறவை, இலை, நிலவு என்று கவிதையுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. கவிதைகள் ஒருவித மீமெய்மைத் தன்மையை அடைகின்றன. அது மிகு கவித்துவம் கொண்ட அதி கற்பனை நிலை. அதனால், தன் சொந்த துக்கம், அனைவருடைய துயரமுமாகிறது. அல்லது பிறர் துயரெல்லாம் தனதாகிறது. மற்றோருடையதைச் சுமக்கும் தானடைகிற விரிவால் அவருக்குத் துயரமும் இன்பமாகத் தோன்றுகிறது. தன்னையே கவிதையிடம் ஒப்படைத்துக்கொண்டு எழுதப்படுவதாக மொழியும் மாறுகிறது. அற்புதப் படிமங்களும், மிகு புனைவுகளும், செறிந்த சொற்களும் உருவாகி வருகின்றன. எம்மொழியிலும் உயர்வாக வைக்கத்தக்க கவிதைகள் படைக்கப்படுகின்றன.

இந்த மீமெய்மை உணர்வே “நனைக்க இயலாத மழை” கவிதையில் நரிக்குறவர்கள் மேல் கொள்ளும் நேசமாகிறது. அது விலகியிருந்து காணும் வெறும் பரிவாக இல்லை. இதில் கொட்டும் மழையில், வெட்ட வெளியிலுள்ள அவர்கள் நனைவதில்லை. அவர்களுடைய அடுப்பு அணைவதில்லை. நரிக் குறவர்களின் நாடோடி இயல்பைப் பெருவாழ்வாகப் படைக்கிறார் கவிதைசொல்லி. மனம் பெருக “திரவ மலை” ஒன்றை உருவாக்கி உச்சிக்கும் செல்கிறார். இதுவரை வறண்ட பருண்மையான மலைகளைக் காட்டியவர், அதனால் தனது, வறண்ட கவிதை என்றவர், இதை நீர்ம நிலையாகக் காண்கிறார். அம்மலை முன்பு போல் தன்னந்தனியாகச் சென்றதாயில்லை. அது காதலியின் உடலாக இருக்கிறது. “வெறுங்காலை எடுத்து வைத்த முதற் பாறை தன் கடினத்தை இழந்து விட்டிருந்தது” (அவனதன் காமம்). ஆனாலும் அடைந்த மலை ஒருபோதும் நிரப்பப்பட முடி யாதென அவரால் உணரவும்படுகிறது. இம்மலை அவருடைய காதல் / காமமாக வளர்ந்து நிற்கிறது.

தன்னுணர்வு மிக முதலில் எழுதப்பட்ட கவிதைகள், தம் நீண்ட பயணத்தில் காதலி, மனைவி, குழந்தை, நண்பர்கள் என்று மற்றவர்களோடு பிணைகின்றன. அவற்றின் போக்கில் சமூக நுண் அலகுகளான குடும்பம், பள்ளி, வேலையிடம் போன்றவை, அவலமும் அபத்தமும் மிக்கதாகக் தோன்றுகின்றன. “கடவுளின் தூளி” அத்தகைய புனைவுக் கவிதை. இதில் குடும்பம் விபத்தில் சிக்கியதில் பெற்றோரை இழந்த குழந்தை அழுகிறது. கடவுள் தூளியில் ஆட்டுகிறாள். நரகத்திலும் சொர்க்கத்திலுமுள்ள அப்பாவையும் அம்மாவையும் கண்டு குழந்தை அமைதியுறுகிறது. கடவுள் ஓய்ந்து தூளி ஆட்டுவதை நிறுத்த, மீண்டும் குழந்தை அழுகிறது. “பாவம் கடவுள் நல்லதாக்குவதா / கெட்டதாக்குவதா / என்பதையே மறந்துவிட்டுத் / தூளியை ஆட்டத் தொடங்கி / ஆட்டிக்கொண்டே இருக்கிறாள்” எனக் கவிதை முடிகிறது. கடவுள் நிலையையும் கடந்த இக்குழந்தைமையே சொர்க்க / நரகப் பாகுபாடுகளை அழிக்க வல்லவை. அதனால் நல்லதும் கெட்டதும் கூட இல்லாமலாகின்றன. “வானேகுதல்” என்ற தொன்மமும் இவர் கவிதைகளில் அவ்வப்போது ஊடாடி வருவது. “சிறு காற்றுக்கும் புரளும் இலைச்சருகென / நான் புரண்டு மிதந்து பறந்து / திரும்புதலே இல்லாது வானேகவும் செய்யலாமென” (ஓர் இலைச்சருகு) என இனிய சந்தத்துடன் மந்திரம் போல் ஒலிக்கிறது கவிதை. வானேகல் இறத்தலுக்குச் சமமானது. அது மறத்தலுக்கும் துறத்தலுக்கும் கூட ஈடாகிறது. அனைத்தையும் விட்டு விடுதலையாதலை எதிர்நோக்கியிருப்பதுமாகிறது. இத்தகையவை புனைகதைகளாகப் புறத்தில் தோன்றினாலும், நிகழ்த்தும் தன்மையால் அனுபவமாவதால் மிகுந்த கவித்துவமுடையதாகின்றன.

இக்கவிதைகளில் நனவுக்கும் கனவுக்குமான மாயத் திரை விலகுகிறது. அவை இரண்டும் எதுவெதுவென அறிய முடியாதபடி ஒன்றாகின்றன. “கனவுப் பெண்ணிசை” என்ற ஆரம்பக் கால கவிதையென்றில் மற்றவர்களைத் துலக்கமாக அடையாளப்படுத்துவதன் மூலம், “என் பின்னே எதுவோ பவனி வர” என்று தன் அடையாளத்தைத் தேட முயலுவதாயிருக்கும். முன்பு எழுதப்பட்ட “நினைவி” கவிதையில் “உனை அறியாத ஒருவர் / நினைவிலும் நினைக்க நீ / இல்லை எனில் அவர்களுமில்லை” என்ற நிலை மாறி, இப்போதைய “கனவு மலை” கவிதை முற்றிலும் வேறொன்றாகக் கனவு காண்கிறது. தன் ஜடத்தன்மையை இழந்து சம்பந்தமில்லாத உயிரிகளாக மாறுகிறது. “இது கனவில்லை என நான் / உங்களுக்கு எதைச் சொல்லி நிரூபிப்பேன்” (யதார்த்தம் என யோசித்தால்) என எதிர்நிலையில் மொத்த வாழ்வையும் கனவாக நினைக்கிறது. இந்த மாய யதார்த்தச் சொல்லாடல்கள் பல அர்த்தங்களைப் பெறுகின்றன. இவற்றால் அசாதாரணத் தருணங்கள் அடையப்படுகின்றன. இப்படியான, ஆண்டன் செகாவை வாசித்தல் பற்றிய கவிதையில், எழுத்திலுள்ள மெழுகுவர்த்தி வெளியிலும் எரிகிறது. வாழ்க்கை அர்த்தம் பெரும் படைப்பூக்கத்துடன் தேடப்படுகிறது. “வாழ்வமைவு” கவிதையில் “கனவு காண்பதை நிறுத்திக்கொண்ட எனக்கு / நேற்றிரவு ஒரு கனவு / மலையாடிவாரக் கிராமத்தில் / மூன்று ஏக்கர் நிலம் வாங்கி / கல்லூரி ஒன்றைத் தொடங்கி யிருந்தேன்” என்று இதுகாறும் காணப்பட்ட கனவிலிருந்து பிற்பாடு விலகுகிறது. இதற்கு முந்தைய கனவு நிலை, நனவாகவே பார்க்கப்பட்டது என்றால், பின்னால் “அங்குத்திச் சுனை” கவிதையில் மாபெரும் துர்க்கனவாகிறது.

இக்கவிதைகளில் சாதாரண மனிதர்களுடன் அசாதாரண மனிதர்கள் இயல்பாகப் புழங்குகிறார்கள். அது தன்னை அதி மனிதனாக உணர்வது. “பறவை மனிதன்,” தான் நடப்பதால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகப் பறப்பவனாயிருக்கிறான். “மேகங்களில் நடை பயில்பவன்” கவிதையில், முதலில் கடவுளும் இல்லை, மற்றவர்களும் இல்லை என்பதால் அவன் மேகங்களில் நடைபயில்பவன்தான் எனப்படுகிறது. தன்னை மேன்மேலும் வளர்த்தி அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சி கவிதையாகிறது. அதி மனிதரால்தான் மீட்சி சாத்தியம் என்ற கூற்றையும் நினைவூட்டுகிறது.

ஆரம்பக்காலக் கவிதையொன்றில், சிக்கல்கள் நிறைந்த வறண்ட நிலைக்கும் வறண்ட கவிதைகளுக்கும் காரணம் வறண்ட ஏரி என்று நம்பப்பட்டது. பிந்தைய கவிதைகளில் அந்நிலை மாறி வறண்ட ஏரி நிரம்பத் தொடங்குகிறது. ஏரி பெருகாமலும் வற்றாமலும் கண்காணிக்க ஏரிக்கரையில் மனிதரால் நிறுவப்பட்டது அம்மன் தெய்வம். அவள் சதா சர்வகாலமும் ஏரியைக் காப்பவள். அந்த ஏரியை நள்ளிரவில் அடைகையில் அம்மன் நீராடுகிறாள். அதுவே படைத்தலும் காத்தலுமான செயலாக இருக்கிறது. அவளைத் தாயாக, மனைவியாகத் தரிசிக்கிறார் கவிதைசொல்லி. தன்னை மறந்து அவர்களுடன் இணைகிறார். அம்மனாக, ஏரியாக, ஏரியின் அனைத்துமாக மாறுகிறார். புறத்திலுள்ள ஏரியும் அகத்தில் உயிர் பெற்ற அம்மனும் ஒன்றாகிறார்கள். முன்பு ஏரி அவர் படைப்பின் ஊற்றுக்கண்ணாகக் காணப்பட்டது என்றால் இப்போது படைப்புச் சக்தியின் வெள்ள மெனப் புலனாகிறது. இதில் சொற்கள் வெவ்வேறாக உருமாற்றி எழுதப்படுவதன் வாயிலாகப் பொருள் மாறி வெளிப்படும் மாயம் நிகழ்கிறது. சொல்லும் பொருளும் பிரிக்கவியலா ஒரு கவிதையின் எடுத்துக் காட்டு இது.

பிற்காலக் கவிதைகள் பெரும்பாலும் தூய சொற்களைக்கொண்டு எழுதப்படும் விவரணைகளா கின்றன. அவை வெளிப்படையான கூரிய உரை நடைத் தன்மையோடு இயங்குகின்றன. படிமங்கள், குறியீடு களைத் தவிர்த்து நேரடியாக எழுதப்படுகின்றன. தொடர்புறுத்தல் அவற்றின் முக்கிய நோக்கமாகிறது. ஓர் அனுபவத்தைப் பல கருத்துகளாக மாற்றிச் சொல்லிச் செல்வன. அதன் குரல் தனித்து ஒலிக்கும் உச்சாடனமாயிருக்கிறது. முன்வைக்கப்படும் அனைத்தும் நிதரிசனங்களாயிருக்கின்றன. புது வகை நவீனச் செய்யுள்கள் படைக்கும் செயலாகின்றன. தர்க்க ஒழுங்கு கொண்ட அறிவார்த்தக் கவிதைகள் உருவாக் கும் முயற்சிகள் எனவும் சொல்லலாம்.

கவிதை சொல்லி சில சமயங்களில் சமூக மனசாட்சியான பழைய கவி மரபை மீட்கிறார். அவர் எளியோர்பால் நிற்க வேண்டும் என்ற கடப்பாட்டைக் கொள்கிறார். சிறு விவசாயிகள், இடையர், பறவைகள், தூசிகள், கைக்குட்டைகள், குச்சிகள் என்று எல்லாமும் மேலெழுந்து பேச வைக்கப்படுகின்றன. அக்குரல் சுற்றுச்சூழல் பற்றிய ஆழ்ந்த கரிசனமாயிருக்கிறது. அதிகாரம் நேரடியாகக் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அரசியல் கசந்து விமரிசிக்கப்படுகிறது. அப்போது கவிதைகள் ஆதிக்க முகத்திற்கு நேர் நின்று ஏசுவதாயிருக்கின்றன. அவை நவீன அறம் பாடுவதாகி விடுகின்றன. இதுவே பீடத்திலுள்ளோரை அழிக்கும் பெரும் போராட்டமாகிறது.

இக்காலக் கவிதைகள் நீண்ட வாழ்க்கைக் குறிப்புகளாகவும் முதிர்வடைகின்றன. உண்மையான நபர்கள், இடங்கள் பதிவாகின்றன. துல்லியத் தகவல்கள் வெளிப்படுகின்றன. கவிதை எழுதுதல், நிகழ்ச்சிகள், பயணங்கள் என்று சுயஅனுபவங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவை பிறகு புரட்டிப் பார்க்கும் தேர்ந்த ஆவணப்படுத்தலாகிறது. அனைத் தும் இணைந்து கவிதை சொல்லியின் தன் வரலாற்றுக் கவிதைகளாகின்றன. இத்தகைய சரித்திரத்தில் மூதாதைகள் பெருமிதத்துடன் மீட்கப்படுகிறார்கள். “மூன்று பாட்டிகள்” கவிதையில் சாதாரணத் தருணங் கள் அசாதரணமாக்கப்பட்டு அவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். “நரகத்தார்” கவிதையில் “மூன்று நூற் றாண்டுகளுக்கு மேலாய் வாழ்ந்த / எங்கள் குடும்ப மூதாய் ஒருவர்” என்று ஆரம்பித்துக் காட்டப்படுகிறார். அவரின் தொன்மை அதி புனைவால் முழுதாக வெளியாகிவிடுகிறது.

ஒரு தொன்மப் படிமம் “பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் படகு” (பிறவிக் கல்). இங்கு நகரம் சார்ந்த வேறொரு ஏரி காட்டப்படுகிறது. கரையில் அம்மன் சிலை இல்லை. மாறாக ஏரி நடுவில் ஒரு பாறை தென்படுகிறது. வெண்கொக்குகள் எச்சமிட்டு அயல்

நாட்டு நாரை போலுள்ளது. அதுவே பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் படகாகிறது. “கவித்தல விருட்சம்” கவிதையில் நெடுங்காலமாக விருட்சம் நிற்கிறது. மதுக்கூடத்தின் ஓரமாக ஜன்னலையொட்டி அமைந் துள்ளது. தல விருட்சங்கள் அனைத்தும் கோயில்கள் தோன்றக் காரணமானவை. அனாதி காலம் தொட்டு வருவன. இவ்விருட்சம் தொடர்ந்து மதுக்கூடத்துக்கு வருகிற சிறந்த கவிஞர்களின் வரிசையைக் காட்டு கிறது. தன்னையும் அப்பெருங்கவி மரபில் வைத்து அடையாளம் காண்கிறது.

ஒரு நீண்ட கவிப் பயணத்தில் தானாக அடைகிற மாற்றம் ஒன்று. சுற்றி நிகழ்பவற்றால் பெறுகிற மாறுதல் இன்னொன்று. இவை இணைந்த பெரும் நீரோட்டமாக, தனக்கேயான சொல்முறையையும், பொருள் கொள்ளலையும் கொண்டு ஸ்ரீநேசன் கவிதைகள் வெளிப்படுகின்றன. இவற்றாலெல்லாம் அவர் கவிதைகள் மிக முக்கியமானவையாக, மிகவும் சிறந்தவையாக விளங்குகின்றன.

(ஓசூரில் மாதந்தோறும் நிகழும் ‘புரவி’ இலக்கியக் கூடுகையில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் )

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer