எளியவைகளிலிருந்து இப்பிரபஞ்சத்தை உருவாக்கிக் காண்பிக்கும் கதைகள்

ஜீவன் பென்னி

பகிரு

வைக்கம் முகம்மது பஷீர் இந்த நூற்றாண்டின் யாரைப்போலுமில்லாத, அசலான தனிப்படைப் பாளுமை. எளிய மனிதர்களின் மனங்களையே அவர் இடைவிடாது வாசித்துக்கொண்டிருந்தார், அதன்வழியே தன் அனுபவங்களின் நீட்சியில் படர்ந்திருந் தவைகளை கதைகளாக விரித்திடும்போது அவர் உருவாக்கும் நிலையமைதியும், பேரன்பின் நுட்ப மான கணங்களும், ஹாஸ்ய உரையாடல்களும், குழந்தைமையின் மனங்களும், கச்சிதப் புனைவுகளின் நெருக்கமும், அந்த மண்ணிற்கான பொதுவான வாசக சாளரங்களை திறந்துவிட்டவராக மட்டுமல்லாமல். உலகின் எல்லோருக்குமான கதைகளுக்கான செவ் விலக்கிய எழுத்தாளராக அவரை பரிணமித்துக் காண்பிக்கிறது. வாழ்விலக்கிய எழுத்து வகைமைகளில் நம் காலத்தின் முன்னோடி அவர். அவரே அவருக்கான மொழியை உருவாக்கினார். அது, தன் முன் அமர்ந்திருப்பவர்களிடம் அவர் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் அசலான தருணத்தின் பிரதிபலிப்புமாதிரியானது.

எல்லாக் கதைகளிலும் அவரும் இருக்கிறார். அவரோடு தொடர்புடைய எல்லோரின் வழியாகவும்அந்தத் தருணங்களை, அந்த நெருக்கடியை அவர் கடந்த விதங்களை எந்தவித ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்து கொள்கிறார். யாரையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சொல்லும் ஒரு சொல்லும் அவரிடம் இருக்கவில்லை. தன்னைப் போலவே மற்றவரையும் நேசிக்கும் ஒற்றைப்புள்ளியில் அவரதுகதைகள் தொடங்குகின்றன அல்லது முடிகின்றன.வாழ்வின் போதாமைகளுக்காக நாம் தேடிக்கொண்டிருக்கும் எல்லாமும் இவரது கதைகளில் தேவையான இடங்களில், பல்வேறு வடிவங்களில் காணக் கிடைக் கின்றன. மனித குலத்தின் இடைவிடாத பலகீனங் களையும், அங்கலாய்ப்புகளையும், எளிய மனிதர்கள் தோற்கடிக்கப்பட்ட தருணங்களையும், இழப்பு களின் வெறுமைகளையும், உறவுகளின் நெருக்கங் களையும் களமாகக் கொண்டவையாக அவரது கதைகள் இருந்தபோதும் அதற்குள்ளிருக்கும் மனிதத்துவ மீட்சிக்கான சந்தர்ப்பங்களின் சிறந்த பேரமைதி களாலும், நெகிழ்ச்சி நிறைந்த மனவோட்டங்களின் நெருக்கங்களாலும் மானுடத்தின் பொதுத்தன்மை நிறைந்ததாக மாறிக்கொள்கின்றன.

மேலும் சமூக மனதின் ஏற்றத்தாழ்வு நிறைந்தபார்வைகளிலிருந்து, கீழ்மைகளின் தூய்மைவாதத்திலிருந்து அம்மனிதர்களை முற்றிலுமாக விடுவித்துக் காண்பிப்பதுமே  மைய அழகியலாக,  படைப்புவாதமாக இக்கதைகள் முழுவதிலும் பரவிக்கிடக்கின்றன. பொறுக்கிகள், வேசிகள், ஆபாசங்கள் நிகழ்த்துவோர், ஓரினப்புணர்ச்சியாளர்கள், பாக்கெட்திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் இன்னும் எவ்வாறெல்லாமோ சமூகம் பிரித்து கீழ் அடுக்கில் வைத்திருப்பவர்களிடமும் இந்த உலகத்திற்கு சொல்வதற்கென ஏதாவதொன்றிருக்கிறது என்ற புரிதலை சமூகத்தில் திடமாக ஏற்படுத்தி, அதற்கான பெரிய கதவுஒன்றைத் திறந்துவிட்டதே பஷீரின் எழுத்துக்கானமாபெரும் வெற்றி. நாகரீகத்தை, அதன் அடையாளத் தை வெறுமனே புறச் சுத்தத்திலிருந்து மட்டுமே அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும் எண்ணற்ற மக் களுக்கு, எளிய மக்களின் அகத்தூய்மையை அவர்கைகளிலெடுத்துக் காண்பித்தார். நீங்கள் சென்று கொண்டிருக்கும் வழிகளில் தேங்கிக் கிடக்கும் அசுத்தங்களில் படிந்திருந்த மானுடத்தின் சுத்தத்தை அவர்  விரிவாக்கிக் காண்பித்தார்.

வாழ்விலிருந்து வடிந்திடும் அகவேதனைகளின் துல்லியத்தை மிக சாதாரணமாகக் கைக்கொண்டுஅதை களங்கமற்ற மொழியில் கூர்மையாக்கி உலகிற்கு எடுத்துக் காட்டியவர்களில் பஷீரே மிகச் சிறந்தவராகிறார். தனது பார்வையில் விரிந்திடும் உலகின் எல்லாவித நோய்மைகளிலிருந்தே அதைஅவர் புரிந்து கொள்ள முற்படுகிறார்.வெறுமனே கனவுலகின் புனைவுகளை அவர் ஒரு போதும் முன்னிறுத்திக் காண்பித்ததில்லை. மற்றவர்கள் தங்களின் அனுபவங்களை கதைகளாக மாற்றும் போது நிகழ்த்திடும் இலக்கிய ஜோடனைகளை, அதில் உலாவிடும்மனிதர்களை வெளிப்படுத்துவதில் செய்திடும்ஒப்புமை மற்றும் பாரபட்ச நோக்குகளை அவர் ஒருபோதும் செய்ய முற்படவில்லை. மேலும் அதன் தூயதும், அசலானதுமான உயிரோட்டமான விசயங்களையே அவரெப்போதும் முதன்மை படுத்தினார். அதுதான் அவரது தனித்துவமான தன்மையாகஅவரது  கதைகளில்  பரவிக்கிடக்கின்றன.

வாழ்வின் மீது அவருக்கிருந்த இயல்பான தேடல்களின் அறிவு சார்ந்த, மெய்மை சார்ந்த கண்ணோட்டம் கருணையின் எல்லையற்ற கரங்களினாலானது. விடாப்பிடியாக அவர் இலக்கியத்தில் நின்றுகொண்டிருந்த, பேசி மகிழ்ந்த புள்ளியும் அதுதான். சகமனிதனை நேசிக்கச் சொல்லும் அந்தஉண்மையின் பரிவான ஒரு தளத்திலிருந்துதான் அவரது எழுத்துக்கள் உருவாகி இத்தனை பிரம்மாண்டமாக மாறியிருக்கின்றன. உண்மையில் எளியமனிதர்களிலிருந்து பரவி உருவாகிடும் ஒரு உலகின் நெருக்கத்தையும், பேரன்பின் முழுமையையுமே இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கின்றன இக்கதைகள். குழந்தைமைகளின் மனநிலையினாலான உரையாடல்களை இவ்வளவு நுட்பமாக, கச்சிதமாக, அதன் ஹாஸ்ய பிரதிபலிப்புடன் கதைகளில் விரித்திருப்பவர் பஷீரைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் கணவன் மனைவிக்குள் – சில கதைகளில் பஷீர் மற்றும் அவரது துணைவி– நிகழ்ந்திடும் அன்னோன்யமான உரையாடல் களையும், வாத பிரதி வாதங்களையும், காதலின் உள்ளுணர்வு நிறைந்திருக்கும் செய்கைகளுடனான வாக்கியக் கூற்றுக்களையும் வாசகர்கள் ஒரு போதும் அவ்வளவு எளிதாக மறந்தும், கடந்தும் போக முடியாது.

பஷீருடன் பயணிக்கும் கதைமாந்தர்களும், எளிய கதைகளும் :

நேரடியான அனுபவங்களின் வழியே பஷீருக்குக் கிடைத்திருந்த வாழ்வெளிகள் மிகவும் எளிமை யானவை. அதற்குள் உலவிக்கொண்டிருந்த மனிதர் களும் மிகவும் சாதாரணமானவர்கள். மனித பலவீனங் களை மறைத்திடாதவர்கள். இவற்றை வைத்துக்கொண்டு பஷீர் தனது கதைகளை எளிய கூறல் முறையில், எவ்வித சிக்கலுமற்று, நேர்த்தியான தடத்தில், சமூக பொது மனதின் வெறுப்புணர்வுகளைக் கடந்து,கருணையின் ஏதாவதொரு புள்ளியில் அவற்றை இணைத்து, ஹாஸ்ய உரையாடல்களுடன் அசாதா ரண கதைகளாக மாற்றிக் காண்பிக்கிறார். கலையின் அழகியல் ரீதியான வடிவங்களைக் கொண்டோ, அலங்கார சொற்களை வைத்தோ அவர் இக்கதைகளைச் சொல்லவில்லை. மாறாக அந்த மனிதர்களின் மகத்தான மனவெளியை, துயரத்தின் ரேகைகளை, அவர்களின் இயலாமைக்கான சமூக நெருக்கடிகளை ஒரு அர்த்தத்தின் வழியே பொது வெளியில் பகிர்ந்து கொள்வதைப்போலவும், சில போலிகுறியீடுகளைக் களைந்திடுவது போலவுமே அவர்செய்து காண்பித்திருக்கிறார்.

இத்தன்மையே நவீன மலையாள எழுத்துலகில் தனித்த பாணி கொண்டஎழுத்தாளராக அவரை மாற்றிக் காண்பித்தது. வாழ்விலிருந்து இலக்கியத்தை மிக நேரடியாக அவர் காண்பித்திருந்த இந்த முறையைப் பின்பற்றி நிறைய்ய எழுத்துக்கள் பிறகுதோன்றின. பஷீர் எப்போதும் நிகழ்காலத்தின் மீதிருந்து, முற்போக்குத் தன்மையிலாலான கருத்தாழ மிக்க எழுத்துக்களை தன் கதைகளில் படரவிட்டிருந்தார்.

மனித மனத்திலிருந்த கருணையின் வடிவத்தைக் கொண்டு, சமூக பொது மனதின் ஏற்றத்தாழ்வுநிறைந்திருந்த எல்லாவிதமான சட்டகத்தையும் உடைத்துக் கொண்டிருந்தார். பஷீரின் எழுத்துக் காலம் மிக முக்கியமானது, கடந்த நூற்றாண்டின் முதல் நாற்பது வருடங்களுக்குப் பிறகான சூழலிலிருந்து வெளியான இக்கதைகள் அப்போதிருந்த சமூகவெளியின் அடிப்படைவாத கேள்விகளுக்கு எல்லாவிதமான கறாரான பதில்களாகவும் அமைந்தபடியிருக்கின்றன. அதுவரையிலிருந்த கருத்தியல் தளங்களுடன் பஷீர் மிக லாவகமாக முரண்பட்டு, அதிலிருந்து தனது படைப்புகளை உருவாக்கி, அதன் வழியே வாசகர்களையும் பயணப் பட வைத்திருக்கிறார். அன்பும், கருணையும், திருட்டும், இரக்கமும், கண்ணீரும், ஏமாற்றமும் ஒரு கால இடைவெளியில் நிகழ்த்திக் காண்பித்திடும் மாபெரும் உலகத்தை அப்பட்டமாகக் காணத்தருபவை பஷீரீன்கதைகள். இந்த உலகம் என்பது எப்போதும் முழுமையற்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது, இதில் நிறைந்திருக்கும் தீமைகளும், கீழ்மைகளும் சமூகத்தின் அடிப்படையான புரிதல்களிலிருந்து உருவாகும் அகச்சிக்கல்கள் சார்ந்திருப்பது என்பதை அவர் திடமாக நம்பிக்கொண்டிருந்தார். அதனால்தான் சமூகம் இவ்வாறு பிரித்து வைத்திருக்கும் மனிதர்களை அவர்கதைமாந்தர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்களில் நிறைந்திருக்கும் மானுடத் தன்மையின் ஆகிருதியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்வதாகவே இவற்றைத் தன் கதைகளாக அமைத்துக் காண்பித்திருக்கிறார். மனிதப் பலகீனங்களை அவர்ஒரு போதும் எள்ளல் செய்யவில்லை, யாரிடமும் முறையிடவில்லை மாறாக அதன் அடியாழத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதத்துவத் தன்மையிலான உணர்வுகளால் இரக்கம் கொள்ள வைக்கிறார். அவர்களை கைத்தாங்களாகப் பிடித்த படி சமூகத்தில் உலவ விட முற்படுகிறார்.

தனது பிறந்த நாளில் சிங்கிள் சாயா குடிக்க வழியற்ற நபராக பஷீர் இருக்கிறார். எப்போதுமிருந்திடும் பசியின் குறியீட்டை நிறைய்ய கதைகளில் அவர் சொல்லியிருக்கிறார். ஆடம்பரமான வாழ்க்கை வாழும் மாணவர்களான மாத்யூ மற்றும் அவனின் நண்பர்களுடன் பஷீர் உரையாடுவதான - ‘ஜென்ம தினம்’ – கதையில், மிதியடிகள் விற்க வரும் ஏழைக் குழந்தைகளைக் காண்பிக்கிறார். பகட்டான உலகில் இருக்கும் மாத்யூம் அவனது நண்பர்களும் அடிமட்ட விலைக்கு அதுவும் செல்லாத நாணயம் கொடுத்துஅந்த மிதியடிகளை வாங்கிக்கொண்டு அக்குழந்தைகளை ஏமாற்றி அனுப்புகின்றனர். மேலும் பஷீர் கேட்கும் சிறு தொகையையும் கொடுக்காமல் எல்லோர் முன்பாகவும் அதை வெளிப்படுத்தி அனுப்புகின்றனர். பசியின் காரணமாக, அவர்களுக்கென சமைத்து வைத்திருக்கும் உணவை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் செல்லும் பஷீர். இந்த உலகில் கைவிடப்பட்டிருக்கும் எல்லோரின் மனநிலையையும் நம் முன்பாகக் காண்பிக்கிறார். போலீஸ் ஸ்டேசனை வாழ்விடமாகக்கொண்ட ‘டைகர்’ கதையில் மனிதர்களுக்கும் - திருடர்களுக்கும் – மேலாகக் கவனிக்கப்பட்டு வளர்க்கப்படும்,

சுதந்திரமாக தின்று அலையும் அந்த நாயை குற்றவாளிகள் இருவர் துன்புறுத்துகின்றனர். இதனால் இன்ஸ்பெக்டரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகும் கைதி தனது சக கைதியை காண்பித்துக் கொடுத்திடாதத் தன்மையையும் இறுதியில் அவனது காயம் பட்ட உள்ளங்கால்களை நக்கியபடியிருக்கும் டைகரின் கருணையையும் காணத்தருகிறார்.

‘கள்ள நோட்டு’ கதையில், ஏழை ஒருவளிடம் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றி அவளது மூத்த மகளை – அவளது விருப்பமில்லாமல்-அழைத்துக்கொண்டு செல்லும் ஒரு பெரிய மனிதரைக் காண முடிகிறது. மேலும் இறுதியாக கள்ளநோட்டுக்களை மார்பில் சுமந்தபடி ஒரு வயல் பரப்பில், ரத்தத்தில் தோய்ந்திருந்த உடலுடன் உயிரற்று அவள் கிடக்கும் நிலைதான் எவ்வளவு பரிதாபமானது. ‘செகண்ட் ஹாண்ட்’ கதையில், சாரதாவிற்கும் கோபிநாதனுக்குமான காதல் நிறைந்த உரையாடல்களின் வழியே அவர்கள் மனதின் வெறுமைகளை உடைத்து நெருக்கமாகிக் கொள்வதையும், லட்சியவாதி கவிஞன் ஒருவன், முன்பு சாரதாவை ஏமாற்றியிருக்கும் தருணங்களையும் காணமுடிகிறது. ‘ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்’ கதையில் மரியம்மாவிற்கும், சிறையிலிருக்கும் ஜோஸப்பிற்குமான கடிதப் போக்குவரத்தின் வழியே நிகழ்ந்திடும் காதலின் கணங்களை மிக நுட்பமாக அறியத்தருகிறார் பஷீர். சாகும்வரை ஜோஸப்பிற்காக காத்திருக்கும் மரியம்மாவும், அவனது வருகைக்காகக் காத்திருக்கும் ஜோஸப்பின் அம்மாவும் நிரந்தரமாக மனதில் நின்றிடும் பாத்திரங் களாகி விடுகின்றனர்.

‘மனைவியின் காதலன்’ வெளியான ஆண்டு 1945.ஆண்-பெண் உறவுகளில் எவ்வாறு ஆண் பெண்ணைவிட உயர்ந்தவனாகி விடுகிறான் மேலும் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் எவ்வாறு ஆணுக்கு ஒருமாதிரியாகவும், பெண்ணுக்கு வேறு மாதிரியாகவும் மாறிக்கொள்கிறது என்பதை கேள்வியாகஎழுப்புகிறார். இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன அக்கேள்விகள். ‘அம்மா’ கதையில் பஷீர், வைக்கம் சத்தியாக்கிரகக் காலத்தை காட்சிகளாகக் காண்பித்திருக்கிறார். காந்தியின் வருகையால் களைக்கட்டியிருந்த கூட்டத்தில் பஷீரும் ஒருவராக இருக்கிறார். காந்தியைத் தொட்டு உணர்ந்ததையும் பிறகு பற்றி எரிந்துகொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள படிப்பை உதறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய கதைகளையும் சொல்லிச்செல்லும் பஷீர் இறுதியில் சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் இரவில், அவளது அம்மா தினமுன் சோறும் குழம்பு வைத்து அவருக்காகக் காத்திருந்ததை அறிந்து கொள்கிறார். ‘போலீஸ்காரனின் மகளி’ல் அரசியல் போராளி யான ஜகதீசனை போலீஸிடமிருந்து காப்பாற்றிடும் – போலீஸின் மகளான – பார்கவியின் திடமான அன்பைக் காண்பிக்கிறார். பின்பு இருவரும் காதல்கொண்டு சேர்ந்திடும் தருணங்கள் மிகவும் உருக்க மானவை.

‘மூடர்களின் சொர்க்கம்’ கதையில் உணர்ச்சிகளின் பிடியில் கதையின் நாயகியை கட்டிப்புணர விரும்பும் கதை நாயகன், அவளது குடும்ப பின்னனியும் வாழ்வும் குறித்து தெரிந்திடும்போது தனது கை களிலிருக்கும் ரூபாய் நோட்டுக்களை அவளிடம் கொடுத்து விட்டு, இந்த விசித்திரமான வாழ்வு குறித்து யோசித்தபடியே மழையில் நடந்து செல்கிறான். ‘கால் சுவடு’ கதை இலக்கியவாதிக்கும் அவரது நண்பனான கறுப்பு இயக்கவாதிக்குமான உரையாடல்களால் தொகுக்கப்பட்டது.

‘நீல வெளிச்சம்’ கதையில் – இறந்த பின் - அமானுஷ்ய தன்மைகொண்டவளான பார்கவியின் தூய மனதும், அவளது அன்புமே காணக்கிடைக் கின்றன. அதுவே நீல வெளிச்சமாக அந்த இருளில் வீடு முழுவதும் படர்ந்து ஒளிபரப்பு கின்றன. ‘போலீஸ்காரனின் மகனி’ல் போலீஸ் விசாரணையில் நடந்திடும் கருணையும் இரக்கமுமற்ற காரியங்களை யும், குற்றவாளியின் மனிதாபமற்ற செய்கைகளையும் காணமுடிகிறது - அக்குற்றவாளி போலீஸ்காரனின் மகன் – நாணயத்தின் இருபக்கங்கள் போல சமூகத்தில் நன்மையும் தீமையுமாக கலந்த மக்கள் இருபக்கங்களிலும் இருக்கின்றனர் என்பதாகவே காணத்தருகிறார். பெண்களின் அகஉலகம் சார்ந்த ஏக்கங்களை, பிரிவின் வலிகளை, சக பெண்களிடம் அவர்கள் கொள்ளும் பெருமை சித்தரிப்புகளை உரையாடலின் சொற்களாக மாற்றி அதன் ஆழ்ந்த அனுபவங்களை காணத் தருகிறார் – ‘ஐசுக் குட்டி’,‘செகண்ட் ஹாண்ட்’, ‘ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘பூவன் பழம்’, ‘ரேடியோகிராம் என்னும் ரதம்’ – போன்ற கதைகளில் வந்திடும் பெண் கதாப்பாத்திரங்களின் உணர்வுகள் சார்ந்திருக்கும் வெளியும் அதை அவர்சொல்லிச்செல்லும் பாவனையும் மிகவும் குறிப்பிடத் தக்கது. வெறுமனே பெண் சுதந்திரம் சார்ந்த அறைகூவல் பேச்சாக, கதையாக அதை சுருக்கிடாமல் இந்த சமூகம் பெண்களை எப்படி பார்த்துக் கொண் டிருக்கிறது என்பதன் பட்டவர்த்தமான அம்சத்தின் தொனியிலே இதை தன் கதைகளில் நிகழ்த்திக் காண்பித்திருக்கிறார். மேலும் பெண்கள் சார்ந்த குறைகளைச் சொல்லிடும் நகைச்சுவையான உரையாடல்களில் இச்சமூகத்தின் சமமற்ற கண்களுக்கான பதில்களாகவே அவர் அமைத்திருக்கிறார்.

மாய யதார்த்த / மிகுபுனைவு வகைமை கொண்டபஷீர் எழுத்துக்கள் மிகக் கச்சிதமானவை. எந்த அளவிற்கு கதையில் அவற்றின் யுத்திகளைப் பயன்படுத்தவேண்டும் என்பதையும், அதன் தேர்ந்த மொழியையும் அவர் மிகச்சிறப்பாக செய்து காண்பித்திருக்கிறார். – ‘பூ நிலவில்’, ‘ஆளரவமற்ற வீடு’, ‘நீலவெளிச்சம்’, முதலிய கதைகள் – நிகழ்ந்து கொண்டிருப்பதில் இருக்கும் புலப்படாத அம்சத்தின் ஓர்மையை, புனைவின் வசீகரத்தோடு அவர் சொல்லியிருக்கும் மொழி மிகவும் நுட்பமானது. ரகசியங்களின் மெல்லிய அலைகளைக் கொண்டே இவற்றை கோர்த்து கதையாடலின் வழியே அதன் பரவசத்தை நமக்குக் கடத்துகிறார் அவர்.

தன் அனுபவங்களிலிருந்து வெளிப்படுபவை புனைவாக மாறிடும் இடத்தின் தன்மையை மிகவும் நுட்பமாகத் தன் கதைகளில் அமைத்திருக்கிறார் பஷீர். கருணையின் வழியான இடத்தில் எங்கேயும் அது துளியும் துருத்திக்கொண்டு வெளியே தெரிவ தில்லை. வெறுமனே செயல் அலகிற்கான, பகட்டுவிளம்பர யுத்தி போலும் அது கதைகளில் அமைக்கப் பட்டிருக்கவில்லை. சில கதைகளில், நடந்து முடிந்த காரியங்களில் அவர் பார்வையாளராகி தள்ளி நின்று அதனுள் செயற்பட்டுகொண்டிருந்த வாழ்வியலின் ஒரு அர்த்தத்தை சொல்ல முற்படுகிறார். மேலும்சில கதைகளில் அவரும் சார்ந்திருந்தத் தருணங் களில் நிகழ்ந்தவற்றை ஒளிவுமறைவின்றி வெளிப் படுத்தியிருக்கிறார். கதை நிகழும் தருணங்களில் உட்சரடுகளாகச் சொல்லப்படும் இலக்கிய மற்றும்அரசியல் நண்பர்கள் குறித்த தகவல்கள் மிக முக்கியமானவை. அவர்களனைவரும் ஏதோவொரு வழியில் அப்பிரதேசத்தில் முக்கியமான ஆளுமைகளாக இருந்தவர்கள் / இருக்கின்றவர்கள். புனைவின் வழியாக அவர்களை சொல்லும்போது அவர் களின் குணாதிசயங்களை மிக லாவகமாக நகைச் சுவையுணர்வுடன் வெளிப்படுத்துகிறார் பஷீர்.

பஷீரின் எண்ணற்ற கதைகளிலிருந்து, அதன் சொல்முறை, கதைக்களம், கதைகளின் உள்ளார்ந்த தன்மைஆகியவற்றின் அடிப்படையில் மிக நுட்பமாகக் கவனித்து சுகுமாரன் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இது தொகுக்கப்பட்டிருக்கிறது. பஷீரை மொழிபெயர்ப்பதென்பது வெறுமனே ஒரு மொழி பெயர்ப்பு வேலை மட்டுமல்ல அவ்வெழுத்துக்கள் சார்ந்திருக்கும் பண்பாடு, கலாச்சார மற்றும் அவரின் தனித்த வழக்காற்று சொற்களை பிரதிநிதித்துவம் செய்யும் அபாரமான வேலை. குளச்சல் யூசுப் அவர்கள் பஷீரை நமது மண்ணின் எழுத்தாளராகவே வாசகர்கள் உணர்ந்துகொள்ளும் அளவிற்கு தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் பஷீரின் சில உரையாடல்களில் வந்திடும் பேச்சு வழக்கு சொற்களையும், பகடி சார்ந்த தனித்த சொற்களையும் அதன் உள்ளார்ந்த தன்மை மாறிடாமல் அசலாக வாசகனுக்குக் கடத்தியுமிருக்கிறார் அவர். ‘பூமியின் வாரிசுதாரர்கள்’ கதையில் வருவது போல்அனைத்து ஜீவராசிகளின் இருப்பையும், வாழ்வையும், அவற்றின் அழகுகளையுமே தொடர்ச்சியாக நேசித்துக் கொண்டிருந்ததன் இயல்பின் விளைவாகவே அவருடைய இத்தகைய எழுத்துக்கள் முழுவதும், அடியாழத்தில் எல்லையற்ற கருணைகளினால் கட்டப்பட்டிருக்கும் தனித்த கலையின் வடிவமாகநம் முன் மாறியிருக்கின்றன.  

பஷீர் கதைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட  நாற்பது கதைகள், 
தேர்வும் தொகுப்பும் : சுகுமாரன்,மலையாளத்திலிருந்து தமிழில் : குளச்சல் யூசுஃப் 
காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2020,  ரூ. 575/-

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer