ஹோஸே கார்சியா வில்லா
(டவ்கிலியன்) கவிதைகள்


பகிரு

அது நான் என்றுமே சொல்லாதது
நான் எப்போதும் பாட இருப்பது
அது தினங்களில் இல்லை
அது எப்போதும் தொடங்கும் ஒன்று
பாதி இருளிலும் பாதி ஒளியிலும்
அதன் ஒளிர்வு அத்தனை வளைவாய்
என்பினும் அத்தனை உயர்வாய் எழும்பிச் சொல்கிறது
எங்கே முதல் மலர் புறா
கடவுளின் கைகள் நேசத்தை இழந்தபோது
அது ஓர் ஒலியற்ற மகத்தான வார்த்தையை 
வெளிப்படுத்த எதிரொலியற்றதாய்
எங்கே சுகந்தம் கீழே சென்றதோ அங்கே
ஓ ஆனால் எல்லாமே அங்கே இருந்தது
என் கவிதைகளின் மேலே ஒரு மலர்வளையம்.
முதலில் ஒரு கவிதை கண்டிப்பாக ஜாலமாய் இருக்கவேண்டும்
பிறகு ஒரு கடற்காகம்  போல் இசைமயமாய்
ஒரு பிரகாசத்தின் இயக்கமாய் 
ஒரு பறவையின் மலர்வின் ரகசியம் பொதிந்ததாய்
அது ஒரு மணியைப் போல மெலிவாய் 
மற்றும் அது கண்டிப்பாக தீயையும் அத்துடன் கொண்டிருக்க
அதற்கு வில்களின் விவேகம் இருக்கவேண்டும்
அது ஒரு ரோஜாவைப் போல முழந்தாளிடவேண்டும்
அதனால் செவிகொள்ள முடியவேண்டும்
புறா மற்றும் மானின் ஒளிர்மையை
ஒரு கல்யாணப்பெண்போல 
தான் தேடுவதை மறைக்கவேண்டும்
எல்லாவற்றுக்கும் மேலாக நான்
கடவுளின் மீதாக மிதக்கவேண்டும்
கவிதைகளின் புத்தக அட்டையிலிருந்து அவர்
புன்னகை செய்தபடி இருக்க.
நிச்சலனம் என்பது சிந்தனையின் ஒருமித்தல்
படிவாகாதிருத்தல்
ஒரு கழைக்கூத்தாடி இறுக்கமான கயிற்றின் மேல் 
சமன்செய்தவாறு இருத்தல்
குன்றா வினைப்பொருள் மொட்டுப் போல
அவளது செயல் முடியும்வரை
ஓர் அழகிய தாவலில்
அவள் தரையில் இருக்கிறாள்
வளைந்து வணங்குகிறாள்
தன்னைப் பிரகாச கரவொலியில்
முங்கச் செய்கிறாள்
பிறகு நிசப்தம்
இனி இல்லை
இப்பொழுது அது பேச்சென்று அழைக்கப்படும் ரோஜா.
நான் எண்ணுகிறேன் ஆம், சோகமான நீலநிற சிறுத்தை
அதன் கண்கள் பச்சைநிறத்தில் இருந்தால் ஈடற்றதாய் இருக்கும்

மற்றும் மரணத்தை இரு பூக்களைப் போல் பார்க்க வேண்டும்
நானே கூட
அதற்குக் கொணர்வேன் திகைப்பூட்டும் தங்கம் அனைத்தையும்
கடவுளின் பொருட்டு அதன் காலடியில் கிடப்பேன்
மரணத்திற்காய் காத்திருந்து

அதன் நீலநிற விலங்குப் பாதம் 
தன் ஈடற்ற சட்டவிதியைக் கொண்டிருக்கும்
பச்சைநிறக் கண்கள் ஈடற்ற சொற்களை
என்னவிதமான குரல்
இந்த நீலம் இந்த பச்சை திரட்டும்
என்பது மாபேரளவான நேசம்
மற்றும் நானே கூட நேரம்
நானே காத்திருக்கிறேன்
இந்த அபரிமிதத்திற்கு. 
ஓ விரைந்து வீழ்வாயாக, தூய தாளே
தூய கண்களே 
வீழ்வாய் கனம் மிகுந்து 
அமரத்துவமான சிறுத்தையே
மரணத்திற்கிணையாக என்னை தூக்கி நிறுத்து
என்னை உனது ஒப்புமையின்மையுடன்
ஒப்புமைப்படுத்து.

புயல்களையும் சூரியனையும்  தாங்கிய
புராதன எறும்பைப் போல அழகாய் இரு

தலைக்கவசமோ அல்லது தளர் அங்கியோ அணியாது
அது தலைமை பிஷப்பாகவும் போர்வீரனாகவும்  இருந்தும் கூட
அது தன் தசையைத்தான் அணிந்தது

இனிய மரியாதையுடன் பாத்திரங்களுக்கு வணக்கம் செய்
இவை யாவும் என்னவென்பது உனது விளக்கத்திற்கு
விடப்பட்டிருப்பினும். மிகச்சரியாக
பிரபஞ்சம்
அவ்வளவு சிறிதில்லை ஆனால் இவை 
கண்டுபிடிக்கப்படும் எங்காவது
மிகச்சரியாக
அவை கண்டுபிடிக்கப்படும்
பெரும் நிதானத்துடன் பேசு
ஆனால் யோசி
மாபெரும் ஆவேசத்துடன் எரியும்
பேருணர்ச்சி
எறும்பு என்ன நினைத்தது என்று
எந்த ஆண்டுப்பதிவேடுகளும் வெளிப்படுத்தவில்லை என்பினும்
அதன் சந்ததியினர் முத்திரையை உடைக்காத போதிலும்

எறும்பின் தடயமற்ற தன்மையை அடியொற்றிப் பிரதியெடு
ஒவ்வொரு எறும்பும் இந்தப் பூரணத்தை எட்டிவிட்டது
அது வருகிறது அது போல அது செல்கிறது
தண்ணீர் வழிவது போல் வழிகிறது
அத்தியாவசியமாக
ஆனால் ரோஜாவைப் போல ரகசியமாக.
கடல்நீரில் செய்யப்பட்ட ஒரு ரேடியோ
இசைப்பதற்கு கடல்கன்னிகளைக்கொண்டிருக்கும்
அவர்கள் என்னை முத்தமிடும் சமயம்
எனது புலன்கள் அனைத்தும் வரவேற்கும்
பறவைகளால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ
திராட்சைகளின் இசையைக் கொண்டிருக்கும்
அவற்றின் விலாக்களுக்கு இடையே
மகிழ்ச்சிகளை சுமந்து செல்வர் இணைநிலையினர் இன்றி
ஆனால் ஒளியால் செய்யப்பட்ட ஒரு ரேடியோ
வில்லியம் பிளேக் -இன் இசையைக் கொண்டிருக்கும்
அவர் தன் மாபெரும் புலிவால்களால்
தோற்கடிப்பார் கடவுள் - இசைவிருந்துகளை.
எண் ஒன்றுக்கும் ஒன்றுக்குமிடையில்
ஒரு முற்றெண்ணுக்கும் மற்றொரு முற்றெண்ணுக்கும் இடையில்
அதுவே வெறுமையாக இருக்கிறது
அந்த அரூப பூஜ்யம்
நானுக்கும் நானுக்கும் இடையே
சுயத்துக்கும் சுயத்துக்கும் இடையே
அதுவே சர்வமானது
அந்த அரூப நாயகன்
அந்த சுயம் 
சமமாய் இருக்கக்கூடும்
அல்லது  என்றென்றுமாய் இரண்டாக இருக்கலாம்.
எனது நிலையான முகவரியை உங்களுக்கு
அளிக்க (அது)
உங்களைத் திகைப்பூட்டும்
நான் ஆனது போல (கொண்டது)
விலாசமற்ற நாட்கள்
அல்லது விசாரணையின் நாட்கள்
கடந்து போயின
கண்டுபிடிக்கப்பட்டன
ஏணி மூலம் மதிலேறிக் கடக்கும் 
இடப்பெயர்வு
மேலே அல்லது கீழே
ஆனால் எப்போதும் ஒரு பார்வைக்குவிப்பு
ஒரு எப்போதுமான - விலாசம்
கண்டுபிடிக்கப்பட்டது
காதல் என்னை வெற்றிகொள்ளாதிருந்திருப்பின் (அது)
மரணமாக இருந்திருக்கலாம்.
மரணத்தைவிடக்  கூடுதல்  அல்லது  குறைவாக
இருந்திருக்கலாம்
ஆனால் கடவுள் அதை செவியுற்றதும்
உடனே மாட்சிமையுடன் பதவி துறந்தார்
நான் அங்கே இருந்தேன் எந்த ஒலியுமின்றி
வார்த்தை.
பிக்காஸோவில் நீங்கள் காண்பது நீலம், ரோஜா நிறம் மற்றும்
கனசதுரங்களின் கன்னித்தன்மை
அவரது நிறங்களின் ஒலி 
இலையுதிர்காலம்

ஆப்ரிகாட் பழங்களின் மனச்சோர்வு
ஒவ்வொரு ஓவியத்தின் மேலும் ஷகாலின் தேவதைகள் போல்
தொங்குகின்றன
இந்த மனிதன் 
மில்ட்டன் கே என்பவன் 
மிக சோகமானவன்
மேலும் அவன் தேவதைகளையும் நிர்வாணிகளையும்
ஓவியம் தீட்டுவதில்லை என்றாலும்
அவை அவற்றைப் போலவே அவலமானவை

மிக நிச்சலனமான மணிகள்
இரங்கற்பாடல்களுக்கு ஒலிக்கின்றன
கனசதுரங்கள் 
துக்கத்தின் கனசதுரங்கள்

ஆனால் கன்னிகளாய் இருப்பதால் கனசதுரங்கள்
அதிக கவனத்துடன் எழுகின்றன

ஆனால் நிர்வாணிகள் அனைவரும் நிச்சலனமாய்
அவர்கள் கன்னிகளாய் இல்லாமையால்
இதை உள்வாங்க மென்மை தேவைப்படுகிறது
வர்ணங்களின் பொருட்டு

நிர்வாணிகள், கனசதுரங்களை பீடிக்க இருக்கின்றனர்
ஒருவர்
ஓவியக்கலையின் காளைச்சண்டையில் 
தேர்ச்சி பெற்றிருந்தால் ஒழிய.

பிறகு இணங்குவித்தல் உடனடியானது:
நீங்கள் கிடக்கிறீர்கள் வீழ்ச்சியுற்று,

வெற்றியாளராய், 
மிகத் துயரமான கொம்புகளைப்
பற்றிப் பிடித்தபடி.
ஒவ்வொருவரும் ஓர் அறையை தம்முடன் சுமக்கின்றனர்
இதை கேட்டலின் மூலமாய்க் கூட நிரூபிக்கலாம்
யாரோ ஒருவர் விரைந்து நடந்தால்
மற்றும் ஒருவர் காது கொடுத்து கூர்ந்து கேட்டால்
இரவில் சுற்றியெங்கும் சகலமும் அமைதியாய் இருக்கையில்
ஒருவர் செவியுறுகிறார்
எடுத்துக்காட்டாக
சரியாக சுவற்றில் இறுத்திக் கட்டப்படாத கண்ணாடியின்
சடசடப்பை.

From Franz Kafka’s  ‘First Octavo Note-book.’ Wedding Preparations (Secker and Warburg)

ஒரு வில்லாளனாக ஆதல்

ஒரு வில்லாளன் ஆவதற்கு
நீங்கள் ஒரு தறியின் அடியில் இரண்டு வருடங்கள்
முன்னும் பின்னுமாய் போய்வரும் ஓடக்கட்டையை
கண் இமைக்காமல் பார்க்க வேண்டும்
பிறகு மூன்று வருடங்கள்
உங்கள் முகம் ஒளியின் பக்கம் திருப்பப்பட்டு
ஒரு பட்டு நூலின் மேல் 
ஒரு பேன் மேலேறுவதைக் கவனிக்க வேண்டும்
ஒரு சக்கரத்தை விடப் பெரியதாய் அந்தப் பேன்
தோன்றும்
பிறகு ஒரு மலையைவிட
அது சூரியனை மறைக்கும் போது
நீங்கள் அம்பை விடலாம்
நீங்கள் இதயத்தின் மையப்புள்ளியைத்
தாக்குவீர்கள்.

From Lao-Tse, quoted in The Notebooks of Simone Weil, volume 1 (Putnam)

ரைம்போவின் பொன்மயமான பறவைகள்

அவனது கவிதைகளின் நிழலிலிருந்து விரைந்து பறந்து மறையும்
பொன்னாலான பறவைகள்
ரைம்போவின் அந்தத் தங்கப் பறவைகள் எங்கிருந்து வந்தன?
எங்கே பறந்து போகின்றன?
அவை புறாக்களோ அன்றி பருந்துகளோ அல்ல
அவை காற்றை வசிப்பிடமாய்க் கொண்டவை
இரவில் பொறிக்கப்பட்ட தனிநபர் தூதுவர்கள்
ஒளியூட்டத்தின் வெளிச்சத்தில் விடுவிக்கப்படுகின்றன
காற்றின் உயிரிகளுடன் அவற்றுக்கு
எந்த உருவ ஒற்றுமையும் இல்லை
அவை தேவதூதர்களும் கூட இல்லை
ஆன்மாவின் அரிய பறவைகள்
சூரியனிலிருந்து சூரியனுக்கு இடம்பெயரும் பறவைகள்
கவிதைகளில் சிறைப்பட்டிருப்பதில்லை
அங்கிருந்து விடுதலை அடைகின்றன.

From Henry Miller, The Time of the Assassins (New Directions).

மாந்ரியன் (Mondrian)

தனது ஓவியத்தட்டின் முதன்மை வர்ணங்களைத் தறித்தார்
மற்றும் அவரது அமைப்பாக்க உத்திகளில்
செங்குத்துக்களையும் கிடைத்தளங்களையும் கூட
இறுதியாக ஒரு புள்ளியை அடைந்தபோது
அவரால் பச்சை நிறத்தின் ஒழுங்குகளை 
அனுசரிக்க இயலாமல்
மரங்களைப் பார்க்காமலிருக்க
மேஜையருகே இருக்கையை மாற்றி அமர்ந்தார்
இந்த மந்திரவாதி அவரது 
ஆரம்பப் பணியில்
அதி நுட்பமான மரங்களின் ஆய்வுகளை
சாதித்தார்
அரூப கோணத்திற்கு முன்னேறி
எடுத்துக்காட்டு அடுத்த எடுத்துக்காட்டாய்
அவை சதுரங்களிலும் செவ்வகங்களிலும் 
மறையும் வரை.

From a book review by Howard Devree of Piet Mondrian by Michel Seuphor. New York Times Book Review, 1957.

பறவை

தாகமாயிருக்கும் ஒரு சிறு பறவை
அதன் மரணத்திலிருந்து ஒருவர்
எடுத்து விடுகிறார்
அதன் சிறிய இதயம் துடிக்கிறது படபடத்து
கதகதப்பான நடுங்கும் கை மீது
எந்த பிரம்மாண்டமான கடலின் கரையாக
நீங்கள் இருக்கிறீர்களோ அதன்
இறுதி அலையென
நீங்கள் திடீரென அறிகிறீர்கள்
இந்த சிறு உயிரி
தேறிவருகிறது என
வாழ்வு மரணத்திலிருந்து தேறுவதுபோல
மற்றும்
	நீங்கள் அதைப் பிடித்திருக்கிறீர்கள்
	பறவைகளின் தலைமுறைகள் மற்றும்
அவை பறக்கும் எல்லாக் காடுகளையும்
அவை பறந்து சென்று மேலேறும் அனைத்து சொர்க்கங்களையும்.

From a letter to Otto Modersohn. Letters of Rainer Maria Rilke, volume 1 (Norton).

ஆன்ட்டிபோலோ* நகருக்குச் செல்லும் ஒரு யுவதிக்கு

ஆன்ட்டிபோலோ நகரில் பல இளைய வயதினர் இருப்பார்கள்
அவர்கள் உன்னிடம் வருவார்கள்
அவர்களை நீ விரும்புவாய் காரணம்
அவர்களது நாவுகள் தேன்தடவியது போன்றவையாக இருக்கும்
அவர்களின் கால்கள் மென்மையாய் நடப்பவை
நீ என்னை மறந்துவிடுவாய்
உன்னால் மறக்கப்பட்ட என்னால்
உன்னை மறக்கவியலாது
நீ என்னை மறக்கும்போது நான் எனது நெஞ்சின் மேல்
விரல்களால் தட்டிக் கொள்வேன்
உன்னை அழைத்தபடி

மரங்களின் ஊடாய் நான் உன்னிடம் பேசுவேன்
நாட்டியக்காரர்களின் கைகளின் ஊடாய்
பல காதலர்களால் பேசப்பட்ட வார்த்தைகளின் ஊடாய்
உன்னிடம் பேசுவேன்
நாட்டியக்காரர்களின் கரங்கள்
உன் உடலைச் சுற்றி இருக்கும்
உன்னை வியந்து நோக்கும் ஆண்களின் கண்கள்
எனது கண்களாய் இருக்கும்
எனக்குப் பல கைகள், பல கண்கள் உள்ளன.
உன்னைக் காதலிப்பதால்
நான் பல காதலர்களாக ஆகிவிட்டேன்

கற்பனையில் 
காரணம் பிற ஆண்களின் கரங்கள்
உன்னைச் சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை
பல நாட்டியக்காரர்களை நானே உண்டாக்கி இருக்கிறேன்

அவர்கள் உனது வட்டவடிவான இடையைப் பற்றும்போது
பற்றிக் கொண்டிருப்பது நானாக இருக்கும்
அவர்கள் சொல்லும் காதலின் சொற்கள்
அவர்களது அல்ல மாறாக எனது

நான் பல காதலர்களாக இருக்கிறேன்
உனக்கு 
நீயும் கூட என்னை நேசிப்பாயானால்
பல நாட்டியக்காரர்களில் நீ என்னைக் காணலாம்
அவர்களின் உடல்களில், அவர்களின் சொற்களில்
நானே பல காதலர்கள்
காரணம் நான் உன்னைக் காதலிக்கிறேன்.

* பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு நகரம்
 

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer