ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்


பகிரு

கதைகள் தேடி

உன் கதைகளையெல்லாம்
எங்கிருந்து தோண்டியெடுக்கிறாய்
அதனுலகம் நிச்சயமாக இதுவல்ல
பல்லடுக்குகளில் படைக்கப்பட்ட  பூமி ஒன்றிலிருந்து
உனக்கு யாரோ தூதனுப்ப வேண்டும்

என் பிரமிப்பைப் பார்க்கத்தான்
நீ அவைகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறாய்

யாரும் அறியா அமைப்பில் அது பனுவலாகிறது

ஒருவர் மனதிலிருந்தும் நீங்க முடியாத கதையாக
உருக்குலைத்துப் போடும் கனவின் வாதையாக

அடுத்தமுறையாவது 
உனக்கோலை வரும் தந்தி நரம்பில் 
என் பிராணனைப் பிணைத்துவை
உடலொழிந்தேனும்
அவ்வுலகின் சிருஷ்டிகளை நான் காணவேண்டும்
இந்நிலக்கோட்டின் கீழ் நம்மைவிட
என்ன கீழ்மை இருந்துவிடப் போகிறது.

விதைகளை
நீ கையிலே வைத்திருக்கிறாய்
ஊறிய சேற்றைக் காணும்போதெல்லாம்
ஒன்றிரண்டைத் தூவுகிறாய்
விருட்சமாவது பற்றி உனக்குக் கவலையில்லை
உன் கெண்டியில் அடர்த்திக்
குறையக் குறைய
சிறகுகள் பெறுகிறாய்
விடுதலைப் பறத்தலில் அல்ல என்கிறாய்
கால்தடம் பதியா நிலத்திலிருந்து
சிந்தியதைப் பார்க்கிறாய்
அங்கே உன் தசை நார்கள்
கடுகுருண்டையாய் மாறி நிற்கின்றன
புள்ளியிலும் புள்ளி
இந்த மன்னிப்புக்கான உன் அப்பியாசம்
மறவாதே சொப்பனமே
அதன் உயரம் காணவும் நேரம்வரும்.

சுனை

உன் பாதங்களைக் கிள்ளியது பற்றி 
என்ன நினைத்தாய்?

நாம் சாலையில் விழப் பார்த்தபோது
கவனக்குறையை எடையிட்டாயா?

பொடனி வியர்வையை நக்கிச் சுவைக்கையில்
ஏக்கப் பேர்வழி எனத் தோன்றியதா?

பரஸ்பரம் கீழ்மைகளை ஒப்புவிக்கும்
சுதந்திரம் நமக்குள் இருந்ததே
இல்லை, யோசித்தாயா?

உதடுகளைப் பொத்திக்கொண்டு
எச்சிலுக்குக் காத்திருப்பது
மார்பில் முகம் புதைத்ததற்கு
வருத்தப்படுவது எனப் பூப்படையாமலே
புதைந்துவிட்டது எல்லாமும்

அரூபமாய்த் தொட்டுக்கொள்வதுதான்
புனிதமென்றால்
பிறப்புறுப்புகளில் ஏனிந்த சுனைப் பெருக்கம் சகி.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer